ரியோனோசுகே அகுதகவாவின் தற்கொலைக் கடிதம் / பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

[ A+ ] /[ A- ]

images (6)images (6)

ஒரு குற்றத்தைக் (சட்டப்படியும், உணர்வின் படியும்) குறித்துச் சிந்திப்பதே அந்த குற்றத்தை பாதி செய்ததைப் போன்ற ஒரு எண்ணமும், அப்படிச் சிந்தித்ததைக் குறித்த குற்ற உணர்வும், அந்தக் குற்றத்தைச் செய்கிறவர்கள், செய்யத் தூண்டுபவர்கள், அதனால் பயனடையப் போகிறவர்கள், அதனை ஒரு தத்துவார்த்த, சட்ட நடைமுறைப் பிரச்சனையாக அணுகுகின்றவர்கள், எழுதுபவர்கள் என மேற்சொன்னவர்களைத் தவிர்த்து ஏனையோருக்கு எழவே செய்யும். தற்கொலைகளைக் குறித்துச் சிந்திப்பதும் அவ்வாறே.

ஏன் தற்கொலைக் குறிப்புகள் ஒரு கவிதைக்குரிய அம்சங்களைக் கொண்டிருக்கின்றன? இக்கேள்வி வெகுநாட்களாக பதிலளிக்கப்படாமல் என்னிடமிருக்கிறது. நிச்சயமாக அவை ஒரு பிரகடனத்தின், அறிக்கையின், வேண்டுகோளின் தொனியைக் கொண்டிருப்பதில்லை. நான் வாசித்த ஒரே தற்கொலைக் குறிப்பில் இப்படியிருந்தது:

“நான் என் தந்தைக்குத் தகுந்த மகனுமல்ல, மயானத்திற்குத் தகுந்த பிணமுமல்ல”.

குறிப்பின் இந்த வரி தற்கொலை செய்து கொண்டவரின் மொத்த வாழ்க்கையை, ஆளுமையை, உபயோகத்தை எடைபோட்டுப் பார்த்து, மிகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டது. சுருக்கமாக, துல்லியமாக தன்னுடைய வாழ்வை மிகப் பொருத்தமாகச் சொல்லிவிட வேண்டுமென்ற முனைப்பு இதிலிருக்கிறது. கவிதைக்கான அடிப்படைகளாகவும் இவை இருப்பதை வியப்போ, மிகையுணர்ச்சியின்றியோ அறிய முடியும்.

Patricide, Matricide இரண்டும் தந்தையை, தாயைக் கொல்வதைக் குறிக்கும் சொற்கள். இந்தியப் புராணங்களின் படி முதல் Matricide செய்தவர் பரசுராமர். குற்றவுணர்வு கூட எழத் தேவையிருந்திருக்காத கொலை அது. குற்றத்திலிருந்து மட்டுமல்ல குற்றவுணர்விலிருந்தே விடுவிக்கப்பட்டவர் அவர். மிசேல் ஃபூக்கோவின் Parricide ஆய்வு நூலான I, Pierre Riviere குற்றத்தை வாசிக்கும் குறுகுறுப்பையும், ஒரு குற்றத்தை அணுகும் முறைகளை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. பியர்ரி ரிவ்யே அவனுடைய தாயை, சகோதரியை, சகோதரனைக் கொன்றதும் வீட்டிலிருந்து தப்பித்து ஓடி காட்டில் ஒளிகிறான். குற்றவுணர்வால் பீடிக்கப்பட்ட அவன் தலைமறைவுக் காலத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து கடவுளின் தீர்ப்பிற்குப் பயந்து அம்முடிவைக் கைவிடுகிறான்.

பசியாற்ற இலைகளை, வேர்களை, காளான்களை உண்ணும் அவன் இயற்கையைப் பற்றிச் சிந்தித்தும், விண்மீன்களை ஆராய்ந்தும் நாட்களைக் கழிக்கிறான். ஊர்களுக்கு இடையிலான பயணத்தில் அவன் செய்த குற்றத்தை இரண்டு பெண்கள் பேசுவதைக் கேட்கிறான். அவனது பெயர் சொல்லி அழைக்கும் குரல்களுக்கு நிற்காமல் பயணிக்கிறான். நீந்தியே கடலைக் கடந்து, வரைபடத்தில் பார்த்திருந்த இங்கிலாந்தின் தீவுகளில் ஒன்றிற்குச் செல்லத் திட்டமிடுகிறான். பைத்தியம் பிடித்த பெண்கள் நிறைந்த சிறைச்சாலைக் காலத்தை மனதில் நிகழ்த்துகிறான். ஃபிரான்ஸிற்கு ராணி என்றும், போப் ஜோன் என்றும் தங்களை அழைத்துக் கொள்ளும் பெண்கள் உள்ள சிறை. தனது செயல் கடவுளின் வெளிப்பாடு என்று சொல்வது எளிதானதென்றும் சிந்திக்கிறான். குற்றம் நிகழ்ந்த நாளும், அதன் பின்னான தலைமறைவுக் காலத்தில் உலகை, தன்னை, தான் செய்த குற்றத்தை ஒரு கோட்டில் இணைத்து, அறவுணர்வின் படியும், சட்டத்தின் படியும் ஒரு மனிதன் தன்னுடைய குற்றக் கறைபடிந்த இருப்பிலிருந்து தப்பிக்கும் பல வழிகளை ஆராய்கிறான்.

ஒரு குற்றத்தைத் திட்டமிடும் காலத்திலும், அதை நிறைவேற்றும் காலத்திலும் ஓய்வின்றிக் கொந்தளிக்கும் உன்மத்தமும், உடலில் பெருகும் அதிகபட்ச சக்தியும் அக்குற்றம் நிறைவேறியதும் மிகக் குறைந்து மனம் அமைதி அடைகிறது. குற்றத்தை அச்சாகக் கொண்டு நாம் சுழல ஆரம்பித்து விடுகிறோம். நமது வாழ்வை இயக்கும் விசையாக அக்குற்றமே பின்னாட்களில் இருக்கிறது. நமது இருப்பின் ஒரே இயக்கு விசை. குற்றத்தில் இருந்தல்ல மாறாக குற்றமிழைப்பதிலிருந்து தப்பிப்பதே அறவுணர்வு. ஆகவே அறவுணர்வற்றவர்கள் ஆர்வமூட்டக் கூடிய வெறுப்பிற்கு உரியவர்களாகிறார்கள்.

மேற்கத்திய கிருத்துவ மனது தற்கொலையை எப்படி அணுகுகிறது என்பதற்கு மேற்சொன்ன பியர்ரி ரிவ்யேவை ஓர் அணுகுமுறைப் பொருளாக எடுத்துக் கொண்டால் அவன் தற்கொலை செய்து கொள்வதை ஒரு பாவமாகக் கருதும் அதன் கருத்தாக்கங்களுக்கு முழுதும் பொருத்தமாகிறான். தற்கொலையும், கொலையும் கடவுளின் தீர்ப்பில் ஒருவேளை ஒரே தண்டனைக்கு உரிய சமமான குற்றங்களாக அவனால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம்.

இதற்கு முற்றிலும் நேரெதிராக கிழக்கின் மனம் இயங்குகிறது. இங்கே நவீன காலத்திற்கு முன்பாக தற்கொலை என்பது ஒரு மதச் சடங்காகவும், தூய்மையானதாகவும் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதற்கு சமணர்களின் வடக்கிருத்தலே ஓர் உதாரணம். இந்து மதப் பிரதிகளில் தற்கொலை எவ்வாறு அணுகப்பட்டிருக்கிறது என்பதற்கு தற்சமயம் என்னிடம் வாசிப்பில்லை.

இதனை ஒட்டித்தான் நாம் ரியோனோசுகே அகுதகவாவின் தற்கொலையை, அவரது தற்கொலைக் குறிப்பை வாசிக்க முடியும். நமக்கு நன்கு அறிமுகமான “ரஷோமான்” இவரது படைப்பே. 35 வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்த அகுதகவாவின் தற்கொலைக் குறிப்பில் மேற்கத்தியர்களைப் போல நான் தற்கொலையை பாவமென்று கருதவில்லை என்று எழுதியிருக்கிறார். ஒரு சில பத்திகளில் மட்டுமே எழுதப்பட்ட அவரது தற்கொலைக் குறிப்பு கவித்துவத்தை விடவும் தத்துவச் சாயலுடையதாக எனக்குத் தோன்றுகிறது. அதன் இறுதிப் பத்தியில் ஒரு மனித இருப்பு கோரி நிற்பது எதுவெல்லாம் என்று மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்.

“நான், மற்றவர்களை விட அதிகப்படியாக அன்பு செலுத்தப்பட்டவனாகவும், புரிந்து கொள்ளப்பட்டுமிருக்கிறேன்”.

மனித இருப்பே அன்பிற்காகவும், புரிந்து கொள்ளப்படுவதற்காகவுமான நிரந்தர ஏக்கத்தினால் சோர்வடைந்திருக்கிறது வெகுகாலமாக.

•••

Comments are closed.