ரோபெர்தோ போலான்யோ / தமிழில் : ஆகி

[ A+ ] /[ A- ]

ரோபெர்தோ போலான்யோ

ரோபெர்தோ போலான்யோ

பாதாளமொன்று உனக்கான என் அன்பளிப்பாயிருக்கும், என்றாளவள்,

ஆனாலிது மிகவும் நுட்பமானதாயிருக்கு மென்பதால்

வருடங்கள் பல கடந்த பிற்பாடு

மெக்சிகோவையும் என்னையும் நீ விட்டகன்று

தொலைவிலிருக்கும் பொழுதே நீயிதை அறிந்து கொள்வாய்.

உனக்கிது மிகவும் அவசியப்படுகையில் நீயிதை கண்ணுறுவாய்,

ஆனால் அந்நிகழ்வு மகிழ்ச்சிகரமான முடிவாயிருந்திடாமல்

இன்மை மற்றும் இன்பத்தினோர் கணப்பொழுதுதாயிருக்கும்.

ஒருவேளை அப்பொழுது நீ என்னை நினைவுகூர்வாய்,

சற்றைக்கே யெனினும்.

இலக்கியதினூடாகவொரு சிற்றுலா (பத்திகள் 31-46)

31.

பூலோகம் முடிவுற்றதாய் நான் கனவுற்றேன். மற்றும் அம்முடிவை

கருத்தில் கொண்டிருந்த ஒரே மனித இருப்பாய் பிரான்ஸ் காஃப்கா.

பரலோகத்தில் மரணிக்குமட்டும் டைட்டன்கள் போரிட்டனர்.

செண்ட்ரல் பார்க்கின் தேனிரும்பு இருக்கையொன்றிலிருந்து

உலகம் பற்றியெரிவதை காஃப்கா அவதானித்தார்.

32.

கனவுறுவதாய் கனவுற்று மிகவும் தாமதமாய் நான்

வீடு வந்தடைந்தேன். என் படுக்கையில் மார்ஜு டி ச-கர்னிய்ரு

எனது முதற்காதலுடன் படுத்திருப்பதைக் கண்ணுற்றேன்.

போர்வையை நான் அகற்றியதும் அவர்கள் மரணித்திருப்பதை

அவதானித்து, என் உதடுகளை குருதியொழுகுமட்டும்

கவ்விக்கொண்டு, நான் தெருக்களுக்குத் திரும்பினேன்.

33.

பொட்டல் குன்றொன்றின் முகட்டில் தன் அரண்மனையை

அனக்கிரியான் எழுப்புவதை, பிறகதை அழிப்பதை நான் கனவுற்றேன்.

34.

என்னை மிகவும் வயதானவொரு லத்தீன் அமெரிக்க

துப்பறிவாளனாய் நான் கனவுற்றேன்.. முகமற்ற ஒருவரின் உயிரைப்

பாதுகாக்க நியூயார்க்கில் வாழ்ந்த என்னை மார்க் ட்வைன்

பணியிலமர்த்தினார். நான் அவரிடம் ”திருவாளர் ட்வைன் அவர்களே,

இதொரு மிகக் கடினமான வழக்காயிருக்கப் போகிறது” என்றேன்.

35.

ஆலிஸ் ஷெல்டனிடம் நான் காதலுறுவதாய் கனவுற்றேன். அவர்

என்னை விரும்பிடவில்லை. ஆதலால் மூன்று கண்டங்களில்

நான் உயிர்துறக்க முயற்சித்தேன். வருடங்கள் கடந்தன. முடிவில்,

எனக்கு மிகவும் வயதானபோது, நியூயார்க் உல்லாசவீதியின்

மறுமுனையில் அவர் தரிசனமளித்து சமிக்ஞைகளால் (விமானிகள்

இறங்க விமானத்தளக்கப்பல்களில் கையாளப்படுமே அவ்வண்ணம்)

அவர் தெரிவித்தார் என்னை அவர் எப்பொழுதும் காதலித்ததாய்.

36.

மிகப்பெரிய எரிமலைப்பாறையினாலான கொடிக்கல்லொன்றின்மீது

நான் அனாய்ஸ் நின்னுடன் 69 நிலையில் துய்ப்பதாய் கனவுற்றேன்.

37.

மங்கலாய் ஒளியூட்டப்பட்ட அறையொன்றில் கார்சன்

மெக்கல்லர்ஸை நான் புணர்வதாய் கனவுற்றேன். மற்றும் நாங்கள்

இருவரும் மகிழ்ச்சியாய் உணர்ந்தோம், காரணமேதுமின்றி.

38.

மீண்டும் என் பழைய உயர்நிலைப்பள்ளியில் நானிருப்பதாய்

அல்ஃபோன்ஸ் டூடேயை எனது ஃப்ரெஞ்ச் ஆசிரியராய் நான்

கனவுற்றேன். புலப்படாத ஏதோவொன்று நாங்கள் கனவுறுவதாய்

எங்களை உணரவைத்தது. ஜன்னலினூடே நோக்கியவண்ணம் டூடே

டார்டாரினது குழாயைப் புகைத்துக் கொண்டிருந்தார்.

39.

நான் உறக்கத்திலாழ்ந்திருக்க என் வகுப்பர்கள் தெரெஸின்

வதைமுகாமிலிருந்து ரோபேர் டிஸ்னூஸை விடுவிக்க

முயற்சிப்பதாய் நான் கனவுற்றேன். எனக்கு விழிப்புத்தட்டவும்

குரலொன்று என்னிடம் ஆயத்தமாக சொன்னது. ”விரைவாக,

போலான்யோ, விரயமாக்க நேரமில்லை.” நானங்கு சென்றபோது

கண்டதென்னவோ தாக்குதலால் புகையும் இடிபாடுகளூடே வயதான

துப்பறிவாளனொருவன் பொறுக்கியெடுத்துக் கொண்டிருப்பதையே.

40.

பூலோகம் முடிவுற்று மூன்று பில்லியன் வருடங்கள் கடந்த

பிற்பாடு பூத எண்களின் புயலொன்றே மனித இருப்புகளின்

எச்சமாயிருப்பதாய் நான் கனவுற்றேன்.

41.

கனவுறுவதாய் கனவுற்று அக்கனவுச் சுரங்கங்களில் ரோக்கி

டால்டோனின் கனவை நான் கண்ணுற்றேன்: பாழாய் போனவொரு

மாயைக்காய் தங்கள் உயிர்களை ஈந்த வீரர்களின் கனவு.

42.

என்னை 18 வயதினனாய் நான் கனவுற்று, வால்ட் விட்மனுடன்

கலவி செய்தபடியிருந்த, எனது அச்சமயத்து 18 வயதின

உயிர்த்தோழமையை கண்ணுற்றேன். புயலார்ந்த

சிவிட்டவேக்கிய அந்திப்பொழுதைக் கருத்தில் கொண்டவாறு,

அவர்கள் கை நாற்காலியில் கலவியிலிருந்தனர்.

43.

என்னையொரு கைதியாய் போயிதியஸை என் சிறைத்தோழராய்

நான் கனவுற்றேன். ”போலான்யோ, இதோ பார்,” என்றவர்,

நிழல்களினூடே தனது கையையும் எழுதுகோலையும் நீட்டி: ”அவை நடுங்கவில்லை! அவை நடுங்கவில்லை!” என்றார். (சற்றைக்கு பின்,

அவர் தன் மென்குரலில் தொடர்ந்தார்: ”ஆனால் அவ்வேசிமகன்

தியோடொரிக்கை அவை கண்டுணர்ந்ததும் அவை நடுங்கும்.”)

44.

கோடரி வீச்சுகளால் மார்க்கி து ஸாதை நான் மொழிபெயர்ப்பதாய்

கனவுற்றேன். நான் கானகத்தில் வாழ்ந்து வந்தேன்,

மனப்பிறழ்வுற்றவனாய்.

45.

சிவிட்டவேக்கியா மதுவகமொன்றில் பாஸ்கல் அச்சம் குறித்து

தெள்ளத் தெளிவான வார்த்தைகளில் கதைப்பதாய்

நான் கனவுற்றேன்: அற்புதங்கள் நிலைமாற்றுவதில்லை,

அவை கண்டனம் செய்கின்றன, என்றாரவர்.

46.

என்னை வயதானவொரு லத்தீன் அமெரிக்க துப்பறிவாளனாய்

நான் கனவுற்றேன் மற்றும் பறக்கும் ஸ்பானியர்களின் இறப்புச்

சான்றிதழ்களைக் கண்டுபிடிக்க புதிரான நிறுவனமொன்று என்னை

பணியிலமர்த்தியது. உலகமெங்கும் நான் பயணித்தபடியிருந்தேன்:

மருத்துவமனைகள், போர்க்களங்கள், பூல்கே மதுவகங்கள்,

கைவிடப்பட்ட பள்ளிக்கூடங்களென்று.

……

ஸ்பானியம் வழி ஆங்கிலத்தில்: லோரா ஹீலி (Laura Healy)

Comments are closed.