லாவண்யா கவிதைகள்

[ A+ ] /[ A- ]

images (34)

சாம்பல் சதுரம்

அரைநிலா மேகத்துண்டில்
முகம் துடைத்துக் கொள்ளுமொரு தருணம்
பகை தீராதவொரு மாந்த்ரீகன்
புகையுலவும் மயானத்தில் நுழைகிறான்
எரிந்தணைந்த சிதையின் சாம்பலையள்ளி
சதுரமொன்றைச் செய்கிறான்.
சதுரத்தின் சதுர்மூலைகளில்
பெயரிழந்த கபாலங்களை யமர்த்துகிறான்.
கருப்புத் துணிகளால் கபாலங்கள்மீது
நெருப்புப் பந்தங்களை எரியவிடுகிறான்
மந்திரச் சொற்களால் காளியை அழைக்கிறான்.
மண்டையோடுகளின் நடுவில்
மாவினால் செய்த பொம்மையை நிறுத்துகிறான்.
அதற்கென் பெயரை வைக்கிறான்.
கம்பளிச்சரடால் மாலையணிவிக்கிறான்
குண்டூசிகளால் பொம்மையைக்
குத்திக் குத்தி நிரப்புகிறான்.
மந்திரச் சொற்களால் காளியையழைக்கிறான்.
அந்த நேரத்தில் காளி
எனக்கு கவிதைகளை தந்துகொண்டிருந்தாள்.
•••

அப்பாத்தாளும் ஆறு வருடங்களும்

அப்பாத்தாளுக்கு வயது எழுபது
அம்பதென்கிறாள். நம்புகிறார்கள்.
அவள் தோற்றம் நம்பவைக்கும்.
அவள் மனதுக்கு வயது இருபது.
அப்பாத்தாளுக்கு கற்பனைத் திறனதிகம்
சொல்சோர்விலாத பேச்சுத்திறன்
அதைவிட அதிகம்.
தன்னைச் சுற்றி ஒளிவட்டங்களை
சுழலவிடிவாள் சளைக்காமல்
முத்துமணியெனும் தன்பெயர்
முத்தரையர் பரம்பரையைக் குறிக்குதென்பாள்
வெள்ளைக் குதிரைமீது சவாரிசெய்து
பிள்ளைப் பருவத்தில் பள்ளிக்குச்சென்ற
வீரக்கதையை வாண்டுகள் வியக்க விவரிப்பாள்
ஆனைபோலொரு பிள்ளையை ஆவென்றலறாமல்
தான் பெற்ற அற்புத்தஃதை ஒரு நாள் மதியம்
பணிப்பெண் பாப்பாத்தியிடம் பகிர
வலிக்காமல் பிள்ளை பெற வழிகேட்டாள் அவளும்
ஓலைச்சவடியை மீண்டும் படித்து
ஓரிருநாளில் சொல்கிறேனென்றாள் தயங்காமல்
அப்பாவுக்குஆறுவருடங்கள்
தாய்ப்பால் தந்த்தாய் தழைத்திருக்கிறாள் சமீபத்தில்
மாதமாயிருக்குமென் புதுமனைவியதைநம்பி
முலைகள் பெரிதாக முருங்கைக்கீரையை
கட்டிக்கொண்டிருக்கிறாள் இரண்டின்மீதும்.

Comments are closed.