வயோதிபமும் சேரியலிஸ சிந்தனைகளும். பகுதி – 3 / பொ.கருணாகரமூர்த்தி ( பெர்லின் )

[ A+ ] /[ A- ]

பொ.கருணாகரமூர்த்தி

பொ.கருணாகரமூர்த்தி

இன்றும் Polimar பராமரிப்பகத்தில் பணி.

முதலில் Peter Birlem இன் அறைக்குப் போனேன். மனிதர் வெகு உற்சாகமாக என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். நான் அறைக்குள் நுழைந்தவுடன்

“நான் இன்றைக்கு அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன்……தெரியுமோ ” என்றார்.

“ஏனாக்கும்……………?”

“ யாரோ என் கண்ணில் மேலும் கீழுமாக கறுப்பு நிறத்தில் கொழுப்புமாதிரி பட்டையாக எதையோ பூசிவிட்டார்கள்…….மேலே தூங்கமுடியவில்லை” என்றார்.

“ உம் தோழி எவளாவது வந்து உமக்கு மைதீட்டியிருப்பாள் ” சீண்டினேன்.

“ அட நீயொன்று…………… அது என் கண்ணாடியில் அல்லவா பூசியிருந்தது” என்றார்.

அப்போது அங்கே அவரது செவிலி வரவும் அவளிடம் “ Birlem சொல்வது நிஜந்தானா” என்று கேட்டேன். அவள் அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு அவரது தலைக்குமேல் ‘வட்டம்’ போட்டுக்காட்டினாள்.

“ சரி……. ஏதோ வாசித்துப்பிடுங்குகிறவர் மாதிரி……… இனிமேல் கண்ணாடியோடு தூங்காதீரும்………” என்றேன்.

வழமையான முகமனுக்குப்பிறகு ஒருவித உரிமையுடன்

“ தோழர் இன்று என்ன எனக்குக் கொண்டுவந்தாய்…………?” என்றார்

“ செப்டெம்பர் மாதத்தின் வெயிலைத்தான் ஏராளம் கொண்டுவந்திருக்கிறேன்” என்றுவிட்டு அவருக்கு நான் எடுத்துப்போயிருந்த திராட்சையையும் பியர்க்குப்பியையும் கொடுத்தேன். முதலில் பியர்க்குப்பியை எடுத்து அதன் குளிர்ச்சியைக் கன்னத்தில் வைத்து அனுபவித்துவிட்டு அதற்கொரு முத்தம் கொடுத்தபடி “ இதை இப்போதே நான் குடிக்கவா” என்றார்.

“ இப்ப எதுக்கு மதிய உணவுக்கு முன்னதாகக்குடித்தால் கொஞ்சம் பசி எடுக்கும்” என்றேன்.

“அதுவும் சரிதான்” என்றுவிட்டு அதைக்குளிர்பதனப்பெட்டியுள் வைத்து மூடிவிட்டு கோடைக்கான மேலங்கி ஒன்றை எடுத்து அணிந்துகொண்டார்.

வெளியே உலாத்தப் புறப்பட்டோம். வெளியே முகத்தில் வெயில் பட்டதும்

“எனக்குச் சீக்கிரம் Winter வந்துவிடவேண்டும்…….. போலிருக்கு” என்றார்.

“ஏனோ………..” என்றேன்.

“ பனியைப் பார்க்க ஆசையாயிருக்கு, அதைக்கைகளில் அள்ளவேண்டும் போலிருக்கு ”

“ இப்போதுதான் கோடைமுடிகிறது……இனி Herbst (இலையுதிர்காலம்) வந்துதானே Winter வரும்” என்றேன்.

“ஏன் அப்படி……….” என்றார் வெள்ளந்தியாய்.

‘மூன்றாம்பிறை’ கமல் ஞாபகத்துக்கு வரவும் “ அது அனாதியிலிருந்தே அப்படித்தான் ” என்றேன்.

“ அப்பச்சரி………….” என்றார்.

Polimar பராமரிப்பகத்திற்கு அணுக்கமாக Marzahner Park என்றோரு பூங்கா அமைந்திருக்கிறது. அதையே நோக்கியே நடந்தோம்.

பெர்லினுக்கு சுற்றுலா வந்தவர்களாயிருக்கவேண்டும் ஆணும் பெண்ணுமாக இரு இளைஞர்களின் வழிநடத்தலில் இருபத்தைந்துபேர் வரையில் பள்ளிச்சிறுவர்கள் வரிசையில் எங்களை முந்திக்கொண்டு சென்றார்கள். Birlem அவ்வழிகாட்டிகளைச் ‘ஹலோ மெஸூர், மெடம்’ என்று சத்தமாகக் கூப்பிட்டார். நான் அவர்களிடம் என்னதான் கோளாறு வலிக்கப்போகிறாரோ என்று பயந்தபடி இருந்தேன். அவர்களும் குழந்தைகளை அப்படியே ‘நில்லுங்கள்’ என்றுவிட்டு அவரிடம்வந்து மரியாதையுடன் “என்ன பெரியவரே’ என்று விசாரித்தனர்.

“ நீங்கள் குழந்தைகளை வழிநடத்திச்செல்லும் முறை சரியில்லை, தயவுசெய்து வரிசையின் முன்னாக ஒருவரும், கடைசியில் ஒருவருமாக நின்று குழந்தைகளை அழைத்துச்செல்லுங்கள். நீங்கள் முன்னே சென்றுகொண்டிருந்தால் பின் தொடரும் குழந்தைகளுக்கு எதுநடந்தாலும் உங்களுக்குத் தெரியாதல்லவா” என்று கண்டிக்கும் குரலில் சொல்லவும் அவர்களும் சிரித்து நன்றிசொல்லிவிட்டு அப்படியே நடத்திச்சென்றனர்.

வழிநடத்துபவர்களில் அந்தப்பெண் பம்பாய் (பஞ்சு) மிட்டாய் வர்ணத்தில் தலைக்குச்சாயம் பூசியிருந்ததக்கவனித்த Biirlem

“அவள் தலையிலுள்ள பேன்கள்தான் பாவம்” என்றார்.

“புரியலை…………”

“பேன்கள் எல்லாம் நாம் இன்னும் அவள் தலையில்தான் இருக்கிறோமா……….. இல்லைத் தவறி பஞ்சுமிட்டாய்ப்பெட்டிக்குள் எதுக்குள்ளும் விழுந்துவிட்டோமோவென்று ஏங்கித் தவிக்கப்போகுதுகள் ” என்றார்.

பூங்காவுக்குள் போய் மரவாங்கொன்றில் அமர்ந்தோம். Birlem சிகரெட் ஒன்றைப் பொருத்தினார்.

“Birlem நீரும் மழலையர் பள்ளிக்குச் சென்றிருக்கிறீரா” என்று கேட்டேன்.

“ இல்லை, அது என் பப்பாவுக்குப்பிடிக்கவில்லை…….. நான் தனிப்பிள்ளைதானே……… அதனால் தனியாக ஒரு ஆசிரியை நியமித்து என்னை வீட்டிலேயே கவனித்துக்கொண்டார்.”

“அதுக்கெல்லாம் நிறைய பொருண்மியப் பின்னணி இருந்திருக்கவேணுமே……. பப்பா என்ன பணியிலிருந்தார்.”

“ எங்களுக்குப் பொருண்மியக் குறைகளிருக்கவில்லை, போருக்கு முன்னிருந்தே எங்கள் நிலங்களிலிருந்து கரியைவெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள், அந்தவகையில் எங்களுக்கு ஆண்டாண்டு நிறையப்பணம் வந்துகொண்டிருந்தது.” என்றார்.

*

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது விமானமொன்று இரைச்சலுடன் வானில் சென்றுகொண்டிருந்தது. தலையை நிமிர்த்தி அண்ணார்ந்து அதைப்பார்க்க முயன்றார் Birlem. அன்றையநாள் மப்பும் மந்தாரமாயும் இருந்ததால் ஒன்றுந்தெரியவில்லை. அதன் இரைச்சல் கடந்து போனபின்னால் “ நான் ஒரு தடவையாவது விமானத்தில் பறந்ததில்லை தெரியுமோ……….மூர்த்தி.” என்றார்.

விமானத்தில் பறக்காததை விடவும் அவர் என் பெயரை ஞாபகம் வைத்துச்சொன்னதுதான் எனக்கு ஆச்சரியம்.. யாழ்ப்பாணத்தில் பிறந்ததிலிருந்தே தொடரியிருப்புப்பாதை அருகில் வாழ்ந்திருந்த ஒரு தோழி ஒருமுறை என்னிடம் “ நான் ஒரு தடவைகூட ரயிலில் போனதில்லை ” என்றிருக்கிறார். சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் அமைவதில்லை தமிழகத்தில் நாகையருகில் வாழும் ஒரு மூதாட்டி. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “ நான் இன்னும் ரயிலையே பார்த்ததில்லீங்க ” என்றதும் ஞாபகத்துக்கு வந்தது.

வெளியுலகத்தொடர்புகள் குறைந்த கிழக்கு ஜெர்மனியில் வாழநேர்ந்த பலரும் இவரைப்போலவே அன்னாசி, மாம்பழம், வாழைப்பழம், மாதுளை, பப்பாளி, மங்குஸ்தான், றம்புட்டான், கொடித்தோடை, பலா /டோறியான், , தேங்காய், கிவி போன்ற பழங்கள் எதையுமே கண்ணாலே காணாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

“ விமானத்தில் பறப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை Birlem. இன்னும் இந்தியாவிலும் ஆபிரிக்கநாடுகளிலும் ரயிலையோ விமானத்தையோ கண்டிராத பலர் இருக்கிறார்கள்” என்று சமாதானம் செய்தேன்.

“மெய்யாலுமோ………………” என்றவர் கொஞ்சம் திருப்தியடைந்ததைப்போல் இருந்தது.

“ சரி……… இதைப்போல் வேறும் நிறைவேறாத ஆசைகள், விருப்பங்கள் இப்படி ஏதும் இருக்கிறதா?” என்றேன்.

“ வேறெதையும் பெரிதாகச் சொல்லமுடியாது ” என்றவர் கண்களைமூடிச் சற்று யோசித்துவிட்டு “வேண்டுமானால் நான் ஒருபோதும் கடற்பரப்பில் Surfing செய்ததில்லை என்பதைச் சொல்லலாம்” என்றார். (Surfing on Segel boat > பாய்மர மிதவைச் சறுக்கல்)

“ இவ்வளவும் உனக்காகச் செய்த உன் பப்பா Surfing க்கு மட்டும் அனுமதிக்கவில்லையா என்ன……………….” என்றேன்.

“ இல்லை இல்லை…… பப்பாவுக்கு இதில் பங்கொன்றுமில்லை, Birlem க்குத்தான் நீந்தவே தெரியாதே, பின்னே Surfing….. செய்வதெப்படி……?” என்றுவிட்டு அவரே குலுங்கிக்குலுங்கிச் சிரித்தார். நான் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கவும் “உனக்குத்தான் Lichtenberg இல் Siegfried Strasse யிலிருக்கும் பேருந்துச்சாவடி தெரியுமே………….. அதன் அருகில் அப்போது நீச்சல்தடாகங்கள் இருந்தன. நீந்தப்பழகப்போவதாக சொல்லிவிட்டு நேராகப்போய் 5 மீட்டர் ஆழமுள்ள தடாகத்தில் மற்றவர்களைப்போல் உயரமான தளத்தில் ஏறித் தலைகீழாகக் குதித்தேன், மேலே வரத்தெரியவில்லை, முக்குளித்துத் ‘தனி’ வாசித்துக்கொண்டிருக்கையில் என்னைக் கவனித்துவிட்ட நீச்சல்பயிற்றுனன் பாய்ந்துவந்து என்னைத்தூக்கி எடுத்து ‘இனிமேல் இந்தப்பக்கம் தலைகாட்டப்படாது’ என்று எச்சரித்து வீட்டுக்கு விரட்டிவிட்டான். அதன் பின்னர் நீந்துவதற்காக நான் தடாகங்களுக்கோ, கடலுக்கோ போனதேயில்லை” என்றார்.

“ நீர் போயிருந்த தடாகத்தில் பயிலுனர்களுக்கான வேறு ஆழங்குறைவான தடாகங்கள் இருக்கவில்லையா…….?”

“ இல்லாமல் எப்படி…… எல்லாமும் இருந்திருக்கும், அதையெல்லாம் தேடிப்பார்க்கும் பொறுமை எனக்கு இருந்தால்த்தானே……..இப்ப தெரிஞ்சென்ன ” என்றுவிட்டு மீண்டும் குலுங்கிச் சிரித்தார்.

பப்பாவுக்கு புகைப்பழக்கம் இல்லை, அவருடைய சிற்றுந்தில் முன் ஆசனத்தில் ஏறியமர்ந்துகொண்டு புகைத்தேனாகில் என்னைப் ‘பின்னுக்குப்போடா பன்றிக்குப்பிறந்த பன்றி’ என்று விரட்டுவார்…………….. அப்படி விரட்டினான்பா அந்த நீச்சல்பயிற்றுனன் ” என்றுவிட்டு மீண்டும் குலுங்கினார்.

“ இப்போ எதுக்காம்…………………?”

“ அன்றைக்கு 2 மீட்டர் உயரப்பன்றிகளும் இருக்கோ பப்பா…….. என்று கேட்டுவிட்டேன்…………. இருக்கும் நிதானமாக தேடிப்பார்த்துக்கொண்டு வீட்டுக்கு வா என்று என்னைப் பாதிவழியில் வண்டியால் இறக்கிவிட்டுவிட்டான்……….. தடியன்.”

“ ஏதோ ஒரேபிள்ளையானபடியால் அன்று தப்பித்தீர்……… என்னுடைய அப்பாவானால் என்னை அதில வைத்தே வகுந்து போட்டிருப்பார்” என்றேன்.

என் அப்பாவுக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டு நான் புகைவிட்டிருப்பேனாகில் என் பிடரிக்கு எப்படியான பூரணகும்பமரியாதை நடந்திருக்கும் என்பதை நினைத்துப்பார்த்தேன். எனக்கும் சிரிப்பு வந்தது. “ இப்போ எதுக்குச்சிரிகிறாய் ” என்றார் Birlem.

” வேறு என்ன ஆசைகள்………..?”

“எனக்கொரு தம்பியோ தங்கையோ பெற்றுக்கொடு என்று நான் பலதடவை பப்பா,மமாவிடம் கேட்டேன், எவ்வளவு முயன்றும் அவர்களால் அதுவும் முடியவேயில்லை” என்றுவிட்டு உதட்டைப்பிதுக்கினார்.

*

நாம் இவ்வாறு பழமைபாடுகள் பேசிக்கொண்டிருக்கையில் எமக்கருகாக கரியநிறத்தில் இரட்டைவால்க்குருவியின் தோற்றத்தில் ஆனால் ஒரு குயிலளவு பருமனுடைய பறவையொன்று தத்திக்கொண்டு வந்தது.

Eurasian Magpie

Eurasian Magpie

அணுக்கத்தில் அதன் இறக்கைகளின் மறைவுப்பகுதியும் நெஞ்சும் பால்வெள்ளையாயிருந்தன. சற்று நேரத்தில் அதைத்தேடிக்கொண்டு அதன் இணையும் வந்து சேர்ந்தது. ‘அட இவைகள் வருமென்று தெரிந்திருந்தால் கொஞ்சம் விதைகள் வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம்………..ம்ம்ம்ம் அந்தப்பறவைக்கு என்னபெயர்’ என்று கேட்டார். ஜெர்மனில் அதற்கு என்ன பெயரென்று எனக்கும் தெரியவில்லை. Magpie யின் சாயல்கள் கொஞ்சம் இருந்தன. எங்களூர் ‘இரட்டைவால்க்குருவி’யின் சாயலும். பூங்காவின் ஒரு பக்கமாக விளையாடிக் கொண்டிருந்த பையன்களிடம் ‘அந்தக்குருவிக்கு என்ன பெயர்’ என்று கேட்டோம். ‘அது Estel’ என்றுவிட்டுக் கேலியாகச் சிரித்தார்கள். ‘ம்ம்ம்………இரண்டு பெரிசுகளுக்கும் Estel ஐத்தெரியவில்லையாம்’. கூகிளில் Estel ஐத்தேடியபோது அதை Eurasian Magpie என்றும் அதன் உயிரியல் பெயர் Pica Pica என்றுங்கூறியது.

“ பார்த்தியா எவ்வளவு பெரிய விளையாட்டுமைதானம், பள்ளிகளுக்கும் விடுமுறைக்காலம் மூன்றேமூன்று சிறுவர்கள்தான் விளையாடுகிறார்கள் ”

என்றார் வருத்தமாக.

“என்ன……….. மீதிப்பேர் வீட்டிலிருந்து தொலைக்காட்சி, கணினி, ஐ-பாட், இணைவலை விளையாட்டுக்கள் எதிலாவது கண்ணாடியைப் போட்டுப் பூஞ்சிப்பார்த்தபடி விளையாடிக் கொண்டிருப்பார்கள்” என்றேன்.

பொழுதும் ஏறிக்கொண்டிருந்தது. 12:00 மணி, அவரை மதியபோசனத்துக்கு எதிர்பார்க்கப்போகிறார்கள். நாம் மெல்ல எழுந்து தத்தத்தொடங்கினாலே அங்கு நேரத்துக்குப் போகலாம்.

“ கிளம்புவோம் ” என்றேன்.

“அதற்கிடையில் இன்னொன்று புகைக்கட்டுமா” என்றுவிட்டு சிகரெட் பெட்டியை எடுத்து முகர்ந்தார்.

மனிதர்களிடம் ஏதாவது கொறிப்பதற்கு இருக்கும் என்கிற நினைப்பில் வழியில் இரண்டு காகங்களும் எங்கூடத்தத்திக்கொண்டு பின் தொடர்ந்தன.

nebelkraehe_klein

இங்கத்தைய காகங்கள் நம்மவூர்க்காகங்களைப்போல் கருமை இல்லை, , வெண்சாம்பல் நிறம். அவற்றின் தொண்டையும் வயிற்றுப்பகுதியும் பழுப்பு கலந்த வெண்ணிறத்தில் இருக்கும். கரைவதும் மிகக்குறைவு. சும்மா சும்மா குருவிகளைப்போலத் தம்பாட்டுக்கு வந்து போய்க்கொண்டிருக்கும். உபத்திரவம் எதுவுமில்லை. வழமையில் காகத்தைக்கூட விநோதமாகப்பார்க்கும் Birlem இன்றைக்கு அக்காகங்களைக் கண்டதும் “இவை என்ன அந்த Estel களின் அம்மா அப்பாவா” என்றார்.

“இல்லையே வடிவாகப்பார்த்துச் சொல்லும்”

“ஆஹா………… எனக்குத்தெரியுமே…… இதுதான் Rabe (காகம்)” என்று ஒரு சிறுவனுக்குரிய குதூகலிப்புடன் சொல்லிவிட்டு “ எனக்குக் காகத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லேன்” என்றார். உடனே மனதில் எதுவும் வரமறுத்தது.

பாட்டி வடைசுட்ட கதையைக் கொஞ்சம்மாற்றி ஒரு பாட்டி ’டோனட் ’ விற்றுக் கொண்டிருந்ததாகச்சொன்னேன்.

என்னை மடக்குவதுபோல் ”பாட்டிமாரையும் வேலைசெய்ய அனுமதிப்பார்களா” என்றார்.

“ இது பலநூறு வருடங்களுக்கு முந்திய கதைதானே……….. சட்டக்கெடுபிடிகள் அத்தனை இருந்திருக்காது” என்றேன். ‘ஆமோ’ என்றார். என்னோடு சேர்ந்த பின்னால் Birlem மும் இப்போ படுபுத்திசாலியாகிவிட்டார், ஆதலால் பெம்மான் எக்குத்தப்பாக ”நரி எப்படிக் கதைக்கும்” என்று கேட்டுக் கதையை நிராகரித்துவிடுவாரோ என்ற பயமும்கூட வந்தது. நல்லகாலம் அவர் ஏனோ அன்று அத்தனை ஆழத்துக்குப் போகவில்லை.

மிகுதித் தூரத்துக்கு எதைச்சொல்லலாம் என்று சிந்திக்கையில் என்.எஸ்.கிருஷ்ணன் “இந்த ஊரில் எத்தனை காக்காக்கள் இருக்கு சொல்லுபார்க்கலாம்” என்று ஒரு புதிர் போட்டு அதை எஸ்.பாலச்சந்தர் நடித்துக்காட்டியது ஞாபகம் வந்தது.

“காகங்கள்பற்றிய ஒரு ஜோக் இருக்கு சொல்லட்டுமா?” என்றேன்.

“ சொல்லு…. சொல்லு…. சொல்லு…. நீ நல்லாவே சொல்லுவாய்”

“ ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்தவொரு ‘பரதேசி’ என்னிடம் இந்த ஊரில் எத்தனை காக்காக்கள் இருக்கு சொல்லு பார்க்கலாம் என்று புதிர்போட்டான், நல்லாய் யோசித்துப்பார்த்துவிட்டு தொள்ளாயிரத்து தொண்ணூத்து ஏழு என்றேன்.”

“அதெப்படி அவ்வளவு கரெக்டா சொல்றே……… எண்ணிப்பார்க்கையில் எட்டுப்பத்து அதிகமாயிருந்திச்சின்னா………. என்றான் பரதேசி”

“அதிலென்ன அதிசயம்……… அவையெல்லாம் வெளியூரிலிருந்து இங்கே விருந்தாட வந்தவையாயிருக்கும் என்றேன்”

“அப்ப……….. கொறச்சலா இருந்திச்சின்னா…………….”

“ அட…….. நம்மவூர்க் காக்காக்கள் வெளியூருக்கு விருந்தாடப்போயிருக்கும்பா…… என்றேன்……..பரதேசி வாயடைத்துப்போனான் ”

“அப்பச்சரி………..நீ சாமர்த்தியசாலி” என்றுவிட்டுப் புன்னகைத்தார் Birlem.

‘இன்னொன்று தன் உணவை அது எங்காவது களவெடுத்தாலும் தட்டிப்பறித்தாலும் உலகத்திலேயே காகம் ஒன்றுதான் பகிர்ந்துண்ணும் பறவை’ என்பதைச்சொல்லி அவை எங்கேயாவது உணவைக் கண்டுவிட்டால் தானே தனித்து உண்ணாமல்……… கரைந்து தம் சுற்றத்தவர் அனைவரையும் அழைத்தே உண்ணும்’ என்று அதன் குணத்தைப்பற்றி ஒரு சிற்றுரையாற்றிவிட்டு. ’பராசக்தி’யில் வரும் சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் ‘ஆகாரமுண்ண எல்லோரும் நீங்க அன்போடு ஓடிவாங்க’ என்றபாடலை மெட்டைக்கொஞ்சம் மாற்றி சொற்களிடையே கார்வை சேர்த்து ஒரு மெலோடிராமாப் பாடலைப்போல இழுத்துக்காட்டவும் Polimar பராமரிப்பகம் வந்துவிட்டது

*.

என் திவ்யவகீதம் நிறைகையில் அதன் சந்தங்கள்தான் உருக்கியதோ, இல்லை மனிதனிடங்கிடையாத காக்கையின் அருங்குணம் நெகிழ்த்தியதோ, அல்லது அடுத்த செவ்வாய்க்கிழமை வரையில் அவரை வருத்தப்போகும் தனிமையின் துயரத்தை நினைத்தாரோ……… விடைபெறுகையில் Birlem இன் கண்கள் பனித்திருந்தன.

#*#

Comments are closed.