வானம்பாடி இளமுருகு / சென்னிமலைதண்டபாணி

[ A+ ] /[ A- ]

இளமுருகு

இளமுருகு

மப்பும் மந்தாரமுமாக இருந்த கவிதை வானில் பேரிடி இடித்துப் பெருமழை பெய்த காலம் வானம்பாடிக் கவிதைக் காலம்தான்.. நமுத்துப் போன சிந்தனைகளைச் சலித்துப் போன சொற்களில் சிலர் எழுதிக் கொண்டிருந்தபோது மகாகவி பாரதி, புரட்சிக்கவிஞர் வழியில் பயணித்த வானம்பாடி புதிய திசைகளைக் கவியுலகில் அறிமுகப்படுத்திவைத்தது. மானுட எழுச்சியைப் பாடிப் பறந்த அந்தப் பறவைக்கு “வானம்பாடி” என்று பெயர் சூட்டிய பெருமகனார் நம் கவிஞர் இளமுருகு அவர்கள். அதற்கு “மானுடம் பாடும்” என்று சிறகு சேர்த்தவர் கவிஞர் சிற்பி. வானம்பாடிக்கு முன்னோடி இதழாக மரபுக் கவிதைகளைச் சுமந்து கொண்டு தேனீ பறந்தது.

அதைப் பறக்கவிட்டவர்கள் நம் கவிஞர்கள் இளமுருகு அவர்களும் புவியரசு அவர்களும். வானம்பாடி என்று பெயர் வைத்தபின்னால் நடந்த இரண்டாவது கூட்டம் கோவை என்.டி.சி. கல்வியகத்தில் நடந்தபோது புவியரசு, சிற்பி, இளமுருகு, முல்லை ஆதவன்,அக்கினிபுத்திரன்,மேத்தா, ஜன.சுந்தரம், ஞானி,சி.ஆர்.ரவீந்திரன்,நித்திலன்,சிதம்பரநாதன், சக்திக்கனல், தேனரசன், கங்கைகொண்டான், சி.வேங்கடசாமி, ஆதி ஆகியோர் கலந்துகொள்ள அந்தக் கூட்டத்தில் கவிஞர் இளமுருகு, மலையாளக் கவிஞர் வயலாரின்

”பூந்தேனருவி பூந்தேனருவி
பொன்னிற நதியின் தங்கையே
நமக்கொரே மோகம்
நமக்கொரே தாகம்
நமக்கொரே பிராயம்”
என்ற பாடலைப் பாடுகிறார். இதுவே வானம்பாடி இயக்கத்தின் இலட்சியப் பாடலாக இருந்தது என்கிறார் கவிஞர்.

எப்படி வானம்பாடி இயக்கம் உருப்பெற்றது? கவிதைகளை எவரும் அரங்கேற்றலாம். விமர்சனம் செய்யலாம். அதனால் புதிய புதிய கவிஞர்கள் புறப்பட்டு வந்தார்கள். எவருடைய கருத்துக்கும் தடையில்லை. எனவேதான் மக்களிடத்திலும் மாணவர்களிடத்திலும் வானம்பாடி நிலைத்து நின்றது. முல்லை ஆதவனும், அக்கினிபுத்திரனும் புதுக்கவிதைக்கான களம்காணக் கிளைஅசைத்த போது வானம்பாடி வந்தமர்ந்து பாடியது. இது ஒரு சுருக்க வரலாறு. இந்த வரலாற்றின் பக்கங்கள் தோறும் பாடி நடந்தவர் இளமுருகு.

இன்றைக்கு வரையிலும் வானம்பாடிகளைக் குறித்து நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. என்ன காரணம்? அவர்கள் பெற்ற வெற்றிதான். வேறென்ன? மிகச்சிறந்த கவிஞர்களை,அறிஞர் ஞானி போன்ற தேர்ந்த திறனாய்வாளர்களை, சி.ஆர்.ரவீந்தரின், நண்பர் சூர்யகாந்தன் போன்ற மிகச்சிறந்த கதையாளர்களை வானம்பாடித் தமிழுக்குத் தந்திருக்கிறது என்பதுதான்.

அன்றைய காலகட்டக் கவிதை எப்படி இருந்தது?கலாநிதி கைலாசபதி மிக அழகாகச் சொல்வார்

“புதுக்கவிதைகள் வெளிவந்த தாசப்தத்திலே, அவற்றில் தன்னுணர்ச்சிப் பண்பு குறைாகவே காணப்பட்டது. அதீத நம்பிக்கை வறட்சி, அந்நியமயப்பாடு, பாலியற்பிறழ்ச்சி, மனோவிகாரம், போலி மேதாவித்தன்மை முதலியவற்றால் உந்தப்பெற்று, மேனாட்டு நாகரிகப் பேதலிப்பில் பிறந்த “ஒலிமுறிவுக் கவிதைகளை”க் கண்மூடித்தனமாக நகல் செய்யப்பட்டது.

ஆயினும் புதிய தலைமுறை, வானம்பாடி,தாமரை, செம்மலர் முதலிய சிற்றேடுகள் புதுக்கவிதைகளை நெறிப்படுத்தத் தொடங்கிய பின் தத்துவ வீச்சும், தமிழ்த்திறனும்,தனித்துவமும், பொருள்தெளிவும், கருதது அழுத்தமும் வாய்க்கப்பெற்ற புதுக்கவிதைகள் பல தோன்றியுள்ளன. நா.காமராசன் முதல் சி.ஆர்.ரவீந்திரன் வரை புதுக்கவிதை வளர்ச்சி இன்று இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. மானுடத்தின் குரலே தன்னுணர்ச்சிப் பாடலாக ஒலிக்கிறது என்பதில் ஐயமில்லை.” (கவிதைநயம்பக் 71). என்றார். அதுமட்டுமல்ல

ஓசைநயம் முற்றிலும் புறக்கணிக்கப்படுமாயின், வசன கவிதை எனப்படும் வெற்றுச் சொற்கூட்டம் கிடைக்கும். ஓசைநயத்தை அளவுமீறிப் பிரதானப் படுத்தினால், தெளிவு குன்றிய சலங்கை நாதம் பெறப்படும். ஓசை வறுமையுடைய வசனக் கவிதைகள் போலவே,கருத்துத் தெளிவில்லாத கிண்கிணிச் சிலம்பல் ஒலி்ப்பாட்டுகளும் தரம் குறைந்தவையே. இவற்றைப் பாகுபடுத்திக் காணப் பழகுவது சிறந்த விமர்சனப் பயிற்சியாகும்” (பக் 133) என்று சொல்லிவிட்டு

‘நாட்டுப்பாடல்களுக்குள்ள மரபாற்றலையும் வெகுஜனப் பண்பையும் உணர முற்பட்டதாலேயே யாப்பிலாக் கவிதை எழுத ஆரம்பித்த புதுக்கவிதையாளர்கள் கூட நாளடைவில் நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து உயிர்ச்சத்துப் பெற விரும்பினர்.

நாட்டுப்பாடல்களில், பேச்சு வழக்கில் உள்ள வசனநடை வடிகட்டப்பட்டு இயல்பாக அதே நேரத்தில் சொற்களுக்குள்ளே உள்ள ஒலிநயச் சேர்க்கை குன்றாத அளவுக்கு நாட்டுப்புறக் கவிதைகளாக உதடுகளில் வாழ்கின்றன. இதனால்தான் நா.காமராசன். சிற்பி, இன்குலாப், செந்தமிழ்மாறன். புவியரசு போன்ற புதுக்கவிஞர்கள் நாட்டுப்புறக் கவிதைகளை(பாடல்களை)ப் பின்பற்றி எழுதுகின்றனர்(பக் 177) இவ்வுணர்வு பரவலாகச் செயற்பட்டால் தற்காலக் கவிதை ஆரோக்கியமான பாதையில் நடைபோடுகிறது என்று துணிந்து கூறலாம்(பக் 177). என்கிறார்.

பல ஆண்டுகளுக்குமுன் நான் ஒரு கவிதைப்பிரதியைப் படித்தேன். பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை தமிழ் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் எழுதிய கவியரங்கக் கவிதை. அற்புதமான மரபுக் கவிதை. விருத்தத்திலும் சிந்திலும் விளையாடியிருந்தார். இந்தி எதிர்ப்பின்போது கொந்தளித்த அவர் மனஉணர்வுகள் அந்தக் கவிதைக்குள் கொதித்துக் கிடந்தன. அதைப் பல ஆண்டுகளுக்கு முன்னால் அவரே மறந்துபோன அந்தக் கவிதையை ஒளிநகல் எடுத்து அவருக்கு அனுப்பியிருந்தேன். அது ஒர் இனிய தருணம். அவர்தான் வானம்பாடிக் கவிதை இயக்கத்துக்கு விதைபோட்ட கவிஞர் முல்லை.

ஆதவன் அவர்கள்.. சில காலம் என் வாசலுக்கு வரவில்லை.அப்போது அதைப் பறக்கவைத்தவர் அண்ணன் சிற்பி அவர்கள்.. உடனே கடிதம் எழுதினேன். உடனடியாகச் சில நாள்களில் உள்நாட்டு அஞ்சலில் பதில் பறந்து வந்தது. வானம்பாடி அமர்ந்து அமர்ந்து பறந்து வருகிறது. எல்லாம் என் தோள்களில் நானாகப் போட்டுக்கொண்டது.என்று எழுதியிருந்தார் அண்ணன் சிற்பி அவர்கள்.. வெள்ளிக்கிழமை எங்களூர்ச்சந்தையில் புத்தகங்களை விரித்து வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள்.

அங்கே வாங்கினேன். அண்ணன் புவியரசு அவர்களின் முதல் சிறிய நூலை. இப்படித்தான் வானம்பாடிக் கவிஞர்களின் தொடர்பு எனக்கு நீண்டகால உறவானது. அதனால்தான் அவர்களின் தோள்களில் நின்று என்னால் எழுத முடிகிறது. இந்த நேரத்தில் பின்னாளில் சுதந்திரம் என்ற தலைப்பில் எழுதிய அண்ணன் அக்கினிப்புத்திரன் அவர்கள் எழுப்பிய கலகக் குரல் நமுத்துப்போன கவிஞர்களை எல்லாம் நடுங்க வைத்தது..நமக்குச் சுதந்திரம் கிடைத்து என்ன பயன்? வாக்குச்சீட்டுப் போடுவதுதான் கண்டபலன். யாருக்காக? யாருக்கோ ஒருவருக்காக. நம்மை ஆட்டிப் படைப்பவனுக்காக. நமக்குச் சுதந்திரம் உண்டா? உண்மையில் இல்லை. இதை

“கூண்டு திறந்தது
சிறகு விரிக்கவா
ம்..ம்..ம்
சீட்டெடுக்க”
என்கிறார்.

கிளி என்ற புறப்பொருளைக்கூடக் குறிக்கவில்லை. ஆனால் கிளி என்று குறிக்கப்படுவது நாம்தான் என்பது தெளிவாகிவிடுகிறது. உலகெங்கும் சுதந்திரம் கிட்டியும் மேடேறாத மனிதர்களின் நிலையைச் சுருக்கமாகச் செறிவாகச் சொல்லிவிடுகிறார். இப்படித்தான் வானம்பாடிக் கவிஞர்கள் செம்மாந்த சிந்தனைகளை முன்னெடுத்தார்கள். மூடுமந்திர முணுமுணுப்புகள் இல்லை. வெடிப்புறப் பாடினார்கள்.

கைலாசபதியின் கருத்துக்களின் வழியே வானம்பாடிக் கவிதைகளைப் பார்த்தால், அவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளைப் பாடுபொருளாக்கினார்கள். ஓசைநயத்தை முற்றாக ஒதுக்கவில்லை. வெறும் உரைநடையைக் கவிதையாக்க முயற்சிக்கவில்லை. உலகப்பார்வை அவர்களுக்கு இருந்தது. உள்ளூர்ப்பிரச்சனைகளும் அவர்கள் கவிதையாக்கினார்கள்.

பல புதிய சோதனை முயற்சிகளைச் செய்தார்கள் கவிதையை நாட்டுப்புறப்பாடல் வடிவில் வானம்பாடிகள் மிகச்சிறப்பாகக் கையாண்டார்கள் என்பதற்கு கவிஞர் அண்ணன் சிதம்பரநாதன், எளிய நாடோடி மக்களின் வலிமிகுந்த வாழ்க்கையைக் கண்முன்னே காட்சிப்படுத்துகிற கவிதையே சாட்சி.

“கோழிக் குழம்பா வச்சா குறத்தி
குறவனையும் புடிச்சாங்க தொரத்தி
டேசனிலே கொண்டுபோயி அடைச்சு
கேசு போட்டு மாட்டுனாங்க அடிச்சு
கோர்ட்டுள கொண்டுவந்து நிறுத்தி
குத்தத்தைச் சாட்டுனாங்க வருத்தி
புள்ளத்தாச்சிக் காரியவ சொன்னா
புருஷன்மேலே சத்திய மின்னா
எங்களுக்குத் தெரியாது எசமா
கோழி திருடவில்லை நெசமா
காளான் குழம்பு வச்சா வாசம்
கோழிக் குழம்பாட்டம் வீசும்”

நம் கண்முன்னால் அந்தக்காட்சியை இப்படித்தான் புதுக்கவிதை விரித்துக் காட்டுகிறது. சமகாலப் பிரச்சனைகளைப் பாடாமல் கவிஞனால் இருக்க முடியாது. முணுமுணுத்துக் கொண்டிருப்பது கவிதையாகாது. பணத்துக்கு விலைபோகும் மனிதர்களும் அவர்களைப் பகடைக்காய்களாக உருட்டிவிளையாடும் அரசியல்வாதிகளையும் விமர்சிக்காமல் கவிதை இருக்க முடியாது.

இப்போது தன் எண்பத்தாறு வயதில், தான் நடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்த்து, தன் திசைகளில் பூத்துக் கிடந்த மலர்களைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார் கவிஞர் “வானம்பாடி” இளமுருகு அய்யா அவர்கள்.

கலை இலக்கியம் யாவும் மக்களுக்காக என்கிற தெளிவு கவிஞருக்கு இருந்தது. அந்தத் தெளிவு பெற இயலாதவர்கள் கவிதையில் வெற்றிபெற முடியவில்லை. சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தவர்கள் வானம்பாடிகள். மூன்றாண்டுகளுக்குமுன்

(ஹரியாணவில் சாமியார்(?) ராம்பாலைப் பிடிக்க ஹரியாணா அரசு 15.43 கோடி பஞ்சாப் 4.34கோடி..சண்டீகர் நிர்வாகம் 3.29 கோடி, மத்திய அரசு 3.35 கோடி என்று மொத்தம் 26.61 கோடி செலவிட்டிருக்கிறதாம்… செய்தி தி இந்து நாளிதழ் 29.11.2014) இப்போது அதே ஹரியானாவில் ராம்-ரகீம் என்கிற சாமியார் ஆடியிருக்கிறார் சகிக்கமுடியாத சல்லாபங்கள். என்ன காரணம்? மூடநம்பிக்கைதான் வேறென்ன? எனவேதான் எல்லாக் கட்டுகளையும் தகர்த்தெறிய அறிவியல்,சமூக விஞ்ஞானச் சிந்தனைகளை முன்னெடுத்தார் நம் கவிஞர்..

தெருவுக்குத் தெரு “கடவுள்” என்று எழுப்பப்படும் எல்லா மூடத்தனங்களையும் “சாலைக்கடவுள்” என்ற கவிதையில் முன்வைக்கிறார். ஒருகாலத்தில் பக்திமானாகக் கோயில் கோயிலாகச் சென்று பேசியவர்தான் கவிஞர் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

“சாலைக் கடவுள்களே— நடுச்
சாலைக் கடவுள்களே

வழியில் தடையாய் முள்ளைப் பரப்பி
வளர்ந்து நிற்கும் கள்ளிகளே!

என்று கவிதையைத் தொடங்குகிறார்.

“மாதா கோவிலாய் மசூதித் தளமாய்
மாரியாய் காரியாய் மாதவன் கோயிலாய்
எங்கோ மூலையில் இருந்த நீங்கள்
எங்கள் வழிகளில் ஏன் முளைக்கின்றீர்?” என்ற கேட்கிறார். இந்த நிலைமை எதற்காக?

“இன்று
சுயநலக் கைகளின் கேடயம் நீங்கள்
வஞ்சகர் மார்புக் கவசம் நீங்கள்
ஊரை விழுங்கும் மூர்க்க முதலைகள்
உறங்கும் ஆழ்ந்த அகழிகள் நீங்கள்”
என்ற உண்மையைச் சொல்கிறார். இன்று நாட்டில் நடக்கும் நாசகார அரசிலுக்கு எது மூல முதலீடாக இருக்கிறது என்பதை அறியாதவர் யார்? இன்று நாடெங்கும் முற்போக்குப் படைப்பாளிகள் திட்டமிட்டுத் தாக்கப்படுவதைப் பாரத்துக் கொண்டுதான் இருக்கிறோம். என்றாலும்

“ஆயிரம் யானைப் பலத்தொடு நிற்கும்
நவீன விஞ்ஞான வாகன மேறி
நாளை நாங்கள் பயணம் தொடர்கையில்
நீங்கள் எங்கள் கால்களில் சிக்கி
நிச்சயம் நிச்சயம் அழியப் போகிறீர்”
என்று நாளை நடக்கவிருப்பதை அன்றே அறிவிப்பு செய்திருக்கிறார்.

அதனால்தான்
“மடாதிபதிகள் காலில்விழும்
ஜனாதிபதிகள் வேண்டாம்”
என்று கவிஞரால் துணிந்து சொல்ல முடிகிறது.

கவிஞரின் உழைப்பும் சுயசிந்தனையும் அவரை நெஞ்சுயர்த்திப் பாடவைக்கிறது.

“சருகல்ல நான்
காற்றில் மிதக்க
காலில் மிதிக்க
காலக் கரையான்
அரிக்காத வைரம்நான்”

என்று பாடுகிறார்.. அழகியல் உணர்வோடு உணர்ச்சி ததும்பக் கவிதை படைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் கவிஞர்.
தன் வாழ்வின் ஒவ்வோர் அடியையும் திட்டமிட்டு எடுத்துவைத்துச் சிந்தனைகளைச் செதுக்கிச் செதுக்கிச் சீர்படுத்தி செழுமை கண்டவர் கவிஞர் என்பதை
“மனமே விழியாய்
ஒவ்வோர் இரவிலும்
உறுதி நிரப்பி
எடுத்து வைத்தேன்
இரவிலும் கூட…

ஒழுகும் இருளில்
நட்சத்திரங்கள்
வழிகாட்ட
நடந்து வந்தேன்
வனப்பிரதேசம்.

இரவு கிழித்து
உதயம் அறிவிக்கும்
விடிவெள்ளி”
என்கிற வரிகள் எதிரொலிக்கின்றன. பத்துப்பேர் கொண்ட பெரிய குடும்பத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில் கவிஞர் சலிப்படையவில்லை. சலியா உழைப்பில் களிப்படைந்திருக்கிறார். எப்படிப்பட்ட பின்னணி கவிஞருக்கு இருந்தது?

கோவைக்கு அருகில் மங்கலப்பாளையம் என்ற கிராமத்தில் படிப்பறிவற்ற எளிய குடும்பத்தில் பிறந்து நான்காம் வகுப்புக்கு மேல் படிக்க வழியின்றி, வறுமையின் கைகளில் வதைபட்டு, தானே தக்கிளி தயாரித்து விற்று காலணா ஒண்ணே காலணா சம்பாதித்து எட்டாம் வகுப்பை எட்டிப் பிடித்து, அதற்குப்பின் பக்கத்தில் குடியிருந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், குதிரைவண்டிக் காரர்களின் குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்துத் தன் படிப்புக்கான செலவைத் தானே தேடிக் கொண்டு பேரூர்த் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவரான அவர் வாழ்க்கையை, அழுக்குப்படாமல் அலங்கரித்துக் கொண்டிருந்தது கவிதைதான்.

அவர் நகர நகராட்சிப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தஞ்சைப் புயலின் தாக்கத்தில் எழுந்த முதல் கவிதை “ சமுதாயம்” இதழில் வெளிவந்து இவரை வெளிச்சப்படுத்தியது. கல்லூரிக் காலத்திலேயே இவரும் கவிஞர் புவியரசும் சேர்ந்து புத்தகம் எழுதினார்கள். இருவரும் கோவையின் இரட்டைப் புலவர்களாகப் புகழ்பெற்றவர்கள். “கோவைமலர்” “பூ” என்ற இதழ்களுக்குத் துணை ஆசிரியர்களாக இருந்து, பின் தேனீ இதழைப் பதினொரு முறை பறக்க விட்டார்கள். நடைமுறை வாழ்க்கையில் வறுமையைத் தோற்கடித்த இவர் உழைத்த கடும் உழைப்பு கவிதையைக் கைகழுவிவிடவில்லை. மரபில் ஆழங்கால்பட்ட இவர் புதுக்கவிதையில் சிறகு விரித்தவர். வானம்பாடிக் கவிஞர்களிலேயே ஆரம்பநாள்களிலேயே அறிவியல் சிந்தனைகளை அதிகம் பதிவுசெய்த கவிஞர் இவர் என்று நாம் மனந்திறந்து சொல்லலாம்.

”ஓராணை உடன்பிறந்தே
ஓரானை தனைப்புணர்ந்த
சீரானை திருச்செந்தில்
ஊரானை தேன்கடப்பந்
தாரானை இளமுருகுப்
பேரானை, பேசுவன்என்
பிஞ்சுக்கவி கனியவே”

என்று 1959ல் மரபு வழிப்பட்ட சிந்தனைகளோடு “காந்தி பிள்ளைத் தமிழ்” எழுதிய விரல்கள்தான் கால மாற்றத்திற்கேற்ப
”தமிழ் இனப்படுகொலையும்
நிச்சயம் பிரசவிக்கும்
தமிழ் ஈழம்…
நகரும் சரித்திரம்
இனி அந்தத்
திசைநோக்கித்தான்”
என்றும் எழுதியிருக்கின்றன.

சிறுவயது நிகழ்வு ஒன்றை மிக அழகாகக் “கரியக்கா” என்ற கவிதையில் பதிவு செய்கிறார் கவிஞர்.
தவளையைப் பிடித்துவிளையாடும் விளையாட்டு சிறுவர்களுக்குத் தனிவிளையாட்டு. இவரும் பிடிக்கத் தாவுகிறார். அது குட்டைக்குள் தாவிவிடுகிறது. இவரும் விழுகிறார். சகதி. எழமுடியில்லை. கூடவந்த சிறுவர்கள் ஓடிப்போய்விடுகிறார்கள். உதவிக்காகக் கத்துகிறார். கைகொடுத்துக் காப்பாற்ற வருகிறாள் வேலியோரம் ஆடுமேய்க்கும் கரியக்கா. வரும்போதே ஒப்பாரி வைத்தபடியே வருகிறாள். ஆனால் கவிஞரைக் காப்பாற்றிக் கரைசேர்த்து விடுகிறாள். இந்த நிகழ்வை மிக இயல்பாக,

“திட்டிக் கொண்டே கையால்
சேந்தினாள் கரையில் சேர்த்தாள்.
திட்டும் வாய்.. தேன்சிந்தும் கைகள்”

என்கிறார். இன்றைய வாழ்வை

”மீன்கள் தூங்கும் குளம்போல்
சலனப்படக் கூடாத இந்த வயதிலும்
எதைஎதையோ பிடிக்க
எட்டிக் குதிக்கிறேன்.
பறப்பதைப் பிடிக்க
இருப்பதை இழந்து
நழுவிப் புதைமணல்
வீழ்ந்து தவிக்கிறேன்”
என்று படம்பிடித்துக் காட்டுகிறார்.

”உள்ளிருந்த சக்தி
உந்தியது என்னை
புதைமணல் நீந்தி நீந்தி
மீண்டுநான் கரையெழுந்தேன்,
இப்பொழுதும் என்நெஞ்சில்
ஆடு மேய்க்கும் கரியக்கா”
என்று தன் வாழ்வையே ஒரு கவிதைச் சித்திரமாக்கிக் காட்டுகிறார். தவளை என்பதை ஒரு குறியீடாகக் கொண்டு அவரவர் அவரவர்க்குக் கிட்டிய வாழ்க்கை அனுபவத்தை அசைபோட்டுப் பார்த்தால் .இந்தக் கவிதையின் ஆழம் புரியும். இந்தக் கவிதையைத் தன் அனுபவமாக மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனின் அனுபவமாகவும் மாற்றிவிடுகிற ரசவாதத்தைக் கவிஞர் செய்துவிடுகிறார்.

.இப்படிப்பட்ட அனுபவங்களின் வழியே கவிஞர் வாழ்க்கையைக் கடந்து வந்ததால்தான்
”அனுபவமே
என் வாழ்வு
அதுவேதான் என் செல்வம்” என்கிறார். அதனால்தான் இளைய தலைமுறைக்கு இதயம் திறந்து

“முன்னோர் செல்வம்தின்று
முடமாகிப் போனவனே!
மண்ணுலகே உனக்காக
மலர்ந்து கிடக்கிறது
சிறகுகள் விரியட்டும்
திசைதோறும் பாடிச்செல்” என்கிறார்.

மரபுக் கவிதையிலும் சரி புதுக்கவிதையிலும் சரி தன் சோதனை முயற்சிகளைச் செய்தவர் கவிஞர்.அறிவியல் உண்மைகளை அழகியல் அனுபவமாக மாற்றி இயற்கையின் இயக்கத்தைப் பாடுபொருளாக்கிவிடுகிறார். சூரியனையும் பூமியையும் தாயும் சேயுமாக வைத்துப் பாடுகிறார்.

“பூமிக் குழந்தை புலம்பலொலி.. மேனியெலாம்
முத்து வியர்வைத்துளிகள் மூச்சற்றுப் போனதுபோல்
மட்ட மலாக்காக வான்பார்த்துக் கிடக்கிறது”
என்று பூமியின் தோற்றத்தைப் புலப்படுத்துகிறார். சூரியன் தவிக்கும் தவிப்பை
“வாரி எடுத்துன்னை மார்போடு சேர்த்தணைத்து
முத்தமிட என்நெஞ்சில் மூளுதடி பேராசை
என்செய்வேன் என்மகளே..என்மேனி தீப்பந்தம்”
என்று இயற்கையைப் பாடுபொருளாக்கிப் பாடுகிறார். பூமியைக் குழந்தையாகக் கருதிய கவிஞர் தாயாக வைத்துப் படிமக் கவிதையைப் படைக்கிறார்

“ஆயிரம் மானிட நெஞ்சுகளாலும்
அளந்தள வறியா வான்வெளிப்பரப்பில்
தேகம் தீயினில் வேகும் ஆதவன்
திசைதடு மாறிச் செல்கையில் என்றன்
அன்னையைத் தூக்கி வெளியில் எறிந்தான்
அக்கினிச் சேறாய் அவளிங்கு வந்தாள்”

அழகாய் படிம அடுக்குகளை அடுக்கிக்கொண்டே வருகிற கவிஞர்
”என்றோ ஒருநாள் எதிர்பாராமல்
கால வெள்ளக் கரையில் எங்கோ
பூத்தது மானிடப் புதுமலர்… அன்னை
பார்த்துப் பார்த்துப் பனிநீர் அரும்ப
எடுத்துத் தொடுத்த மானிட மாலையில்
இருக்கும் எளிய ஒருசிறு மலர்நான்”
என்று பிரபஞ்ச வரலாற்றையே பிழிந்து தருகிறார். அன்றைய காலகட்டத்தில் இத்தகைய சிந்தனை அபூர்வமானது. அறிவியல் பார்வையின் வழியே சமூக விமர்சனத்தை முன்னெடுத்தவர் கவிஞர்.

அதன் வழியே தன்னையே தான் சுயவிமர்சனம் செய்து கொள்கிறார். அவரின் உள்மன விமர்சனம்

“எனக்குள் ஒருகுரல்.

எல்லாம் தெரிந்தவனென்று
பீற்றிக்கொண்டாய்
எனக்கெவர் நிகரெனப்
போற்றிக் கொண்டாய்.

“எல்லாம் இரவல்தானா
சுயம் அற்ற சுடலை மண்ணா நீ?”
என்று கேட்டுவிட்டு

“அனுபவச் சூட்டில்….
விழித்த மனவெளியில்
அதோ என் அறிவு தேவதை
விளக்கேந்தி வருகிறாள்.”
என்கிறார்.

கவிஞர் நகைப்பட்டறையின் அனுபவங்களைப் பெற்றவர். படிக்க முடியாமல் தவித்த பால்யகால நினைவுகளை
“பால பருவத்தில்
படிக்காத காலத்தில்
ஊர் ஊராய்
ஓடிய வாழ்க்கை
ஊக்கம் தந்தது” என்கிறார். இது சுயபுலம்பல் அன்று. வாழ்வின் உண்மை தரிசனம். அவர் வாழ்வில் உற்ற துணையாய் இருந்து வழிகாட்டி வழிநடத்தியவர் நண்பர் ஜன.சுந்தரம். தீர்க்கமான சிந்தனையாளர்.. அதனால்
“உள்ளமும் வாழ்வும்
ஒன்றிய நட்பு
உறுதுணையானது” என்று சொல்லிவிட்டு

“அலைஅலையாய்ப்
பொங்கும் வெளிச்சம்
வெளியிலும் என்னுள்ளம்.
மனம் தோகைவிரித்தாடியது.”
என்று கண்முன்னால் தன் வாழ்வையே சித்தரித்துக் காட்டுகிறார்.

தன் மாணவர் இறந்த போது மனங்கசிந்த கவிஞர் “பூமி நமக்கு குருசேத்ரம்” என்று எழுதுகிறார். அக்கவிதையில்
”ஓ! காலமே!
உனக்கும் எனக்கும் உறவுண்டு
உள்ளே நமக்குள் பகையுண்டு
என்னில்நீ…. உன்னுள்நான்..
பூமி நமக்கு குருசேத்ரம்”
என்கிறார். “பிரகலாதன்” என்கிற கவிதை வர்க்கப்போராட்டம் குறித்த படிமக் கவிதையாக மிளிர்கிறது.

“தந்தையே
உமது கைகளில் பகடைக்காய்களாய்
உமது காலில் பிய்ந்த செருப்பாய்
உமது வாயில் சாராய நெடியாய்
நாங்கள் எத்தனை காலம் இருப்பது?” என்கிற கேள்வி தந்தையிடம் மகன் கேட்கும் கேள்விமட்டுமல்ல..தொழிலாளி, முதலாளி வர்க்கத்திற்குள் கேட்கப்பட்டுக்கொண்டேயிருக்கிற கேள்வி. இன்றைய இளைய உள்ளங்கள் எப்படியெல்லாம் கற்பனைக் குதிரையில் பறந்து கொண்டிருக்கின்றன… காலத்திற்கேற்ப மாறமுடியாத மனங்கள். சமுதாயக் கண்ணோட்டத்தில் கவிதையைப் படைக்கிறார் கவிஞர்

“நீ ஆசைப்படும் வேலை
யார்கொடுப்பார் மகனே?
வாழ்க்கை நெருப்பு
எரியவில்லையா உன்னுள்?
காலங்கள் தோறும் மாறும் தொழில்கள்
மாறுந் தொழிலுக்கு மாறா மனிதர்கள்
தார்மெழுகிய நகரத் தெருக்களில்
காகிதம் மேயும் தொழிலற்ற வண்டிக்
குதிரைகள் போலக்
காலப் போக்கில் காகிதம் தின்பர்.” என்று விமர்சிக்கிறார். அதுமட்டுமல்ல..

“உறவும் நட்பும் தரும்
அவமானங்களின்
ஆலகாலம் விழுங்கு
அமுதாய் மாற்று” என்று அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுக்கிறார்.

பங்களாதேஷ் பிரிவிணையின் போது

“.இனியும் இவனொடு வாழ்க்கை நடத்த
என்னால் முடியாது
இதயம் முழுதும் நெருஞ்சிக் காடு
இரத்தம் கசிகிறது,”
என்று பாடுகிறார். இதைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்கையில் அலைஅலையாய் எத்தனை எண்ணங்கள் எழுகின்றன? பங்களாதேசுக்கு மட்டும்தானா பொருந்தும் இந்த வரிகள்? அதிகார மையம் ஓரிடத்தில் மட்டும் குவிக்கப்படுகிற பொழுது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்ள இந்த வரிகளே போதும்.

நிலவில் மனிதன் முதன்முதல் கால்பதித்ததைப் பதிவு செய்யும் கவிதை “விஞ்ஞானக் கன்னி”. அதில்
“காலத்தின் நெற்றியிலே
கருஞ்சாந்துப் பொட்டான
கோல நிகழ்ச்சி” என்கிறார்.

இப்படிப்பட்ட பார்வை கவிஞரின் கவிதைகள் பெரும்பாலானவற்றில் காணக் கிடைக்கின்றன. செம்மொழி என்று நம் தமிழைச் சிறப்புச் செய்த காலத்திற்கு வெகு முன்பே கவிஞர்
“என்னெதிரில் கைகட்டி
.இருந்தமொழிச் சோதரிகள்
ஏழடுக்கு மாளிகையில்
எனைப்பார்த்துச் சிரிக்கின்றார்” என்கிறார்.

அன்றைய இந்தி எதிர்ப்பில் எத்தனைபேர் வெந்து மடிந்தார்கள். அவையெல்லாம் விழலுக்கிரைத்த நீராகிவிட்டது இன்று. இந்த வரிகளுக்குள் இன்றைய நிலையைப் பொருத்திப் பாருங்கள். கவிதையின் சூடு நம்மைச் சுடும். மனிதனைப் பற்றிப் பாடுகிற பொழுது கவிஞர் பெருமிதம் ததும்ப

“மானிட வீணையின் கானம் எழுந்தே
வானைத் தொடுகிறது—இந்த
மண்ணில் விண்ணில் காற்றில் மனிதன்
சுவடுகள் தெரிகிறது” என்கிறார்.
அதனால்தான்

“உழைப்பின் காலில் முத்தமிடும் சொர்க்கம்
வேட்டுவன் நாவில் உதிக்கும் காவியம்”

என்கிறார். இந்த வரிகளுக்குள் எத்தனையோ வரலாறுகள் உறவாடிக் கொண்டிருக்கின்றன. சமூகநீதியைச் சமாதிக்குள் தள்ள நடத்தப்படுகிற நாடகங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடிக் கொண்டிருக்கும் ஊமைகளைக் குறித்து நாம் என்ன சொல்ல? கவிஞரின்

”பதவிகளின் காலில் விழும்
மனிதன் சொன்னான்
நான்
யாருக்கும் அடிமையில்லை”
என்கிற வரிகள் எத்தகைய அர்த்த அடர்த்தி நிரம்பியவையாக இன்று விளங்குகின்றன? மரபில் ஆழக் காலூன்றிக் கவிபடைத்த கவிஞர் அண்ணல் காந்தியடிகளைப் பாடுகிறபோது
“கள்ளிருக்கும் மலர்களிலே
உள்ளிருக்கும் வண்டுகள்போல்
காசுகுறி கொண்டிருக்கும் உலகம்—அதைக்
கண்டுவிட்டால் வந்துவிடும் கலகம்” என்கிறார்.

குற்றவாளிகள் சிறைக்குள்ளும் குதூகலத்துடன்தான் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கொடுமைகளையெல்லாம் தட்டிக்கேட்கக் கவிஞரின்
“வெட்டிப் புதைத்தாலும்
மண்ணில் நிழல்பரப்பி
விழுதூன்றுவேன்”
என்ற வரிகளை இதயத்தில் ஏந்தியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கவிஞர் இளமுருகு மலையாளக் கவிஞர் குமாரன் ஆசானின் ”மாறுதல்” கவிதையை நண்பர் ஜன.சுந்தரத்தின் உதவியோடும் வால்ட்விட்மனின் “முடிவற்று ஆடும் தொட்டில்” கவிதையை “நவஇந்தியா” துணைஆசிரியரும் முதுபெரும் படைப்பாளருமான அறிஞர் டி.சி. இராமசாமி அவர்களின் உதவியோடும் மிக அழகாக மொழிபெயர்த்திருக்கிறார்.

வானம்பாடிக் கவிஞர்கள் வாழ்வை நேசித்தவர்கள். அதோடு போராடியவர்கள். வாழ்வின் மீது நம்பிக்கையை ஊட்டியவர்கள். சொற்களில் சூடேற்றிக் கவிதையில் வைத்தவர்கள். அறிவியல் சிந்தனைகளை, சமுதாயச் சிந்தனைகளைக் கவிதையில் கொணர்ந்தவர்கள். அதனால்தான் இன்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கவிஞர்களாக இருக்கிறார்கள். இந்த இடத்தில் பேராசிரியர் தமிழவன் தீராநதி பிப்ரவரி 2017 இதழில் எழுதிய “வாசகன் முக்கியம் ஆசிரியன் அல்ல“ என்கிற கட்டுரை வரிகளை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. என்ன சொல்கிறார் பேராசிரியர்? “கல்லூரி விடுதிகளில் வசிக்கும் இலக்கியப் படைப்பு ஆர்வம் இருக்கும் இளைஞர்கள் தமிழ்க்கவிஞர்கள் எங்கே வந்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்” என்கிறார்.

எப்படிப்பட்ட கவிஞர்களை என்பதை விளக்கமாக எழுதியிருக்கிறார். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே பட்டியலிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் அன்றைய வானம்பாடிக் கவிஞர்களுக்கு மாணவர்கள்,இளைஞர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்புக்கு என்ன காரணம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இங்கே போலிப் படைப்பாளிகளை நம்பிக்கை வரட்சியாளர்களைக் குறித்து “சவாரி” என்ற கவிதையில் சரியாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் இளமுருகு.

“இருளிலே நீந்திப்பறக்கும்
மனக்குதிரையே!
சாட்டைச் சொடுக்கில்
உன்னை வழிநடத்திச் செல்லும்
மாயமனிதர்கள் யார்?
அவர்களையும்
ஆட்டிப்படைக்கும்
சூத்திரதாரிகள் யார்?

இந்தக் கவிதைவரிகளோடு இன்றைய அரசியல்நிலையையும் ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

கவிஞர் எப்படி இருக்கிறார் தெரியுமா? அவர் முகத்தைக் கொஞ்சம் பாருங்கள். கவிதையின் கம்பீரத்தைக் காணமுடியும்.அவர்யார்?
“காட்டாற்றங்கரையில்
காத்துக் கி்டக்கிறேன்
கால காலமாய்ப்
பூத்துக் கிடக்கிறேன்” என்கிறார். வாழ்வின் ஏற்ற இறக்கங்களைப் பார்த்தவர் கவிஞர். அதனால்தான்

“எண்ணங்கள் ஆயிரம்
கோடிகள் என்னுள்
ஏமாற்றங்களே
சிரித்தன என்முன்…

வீட்டு முல்லையாய்ப்
பூத்துச் சொரிய
விம்மி எழுகின்ற
ஆசைப்பெருக்கில்…

இன்றும் தளிர்க்கிறேன்
இனியும் தளிர்ப்பேன்”

என்று கம்பீரமாகப் பிரகடனம் செய்கிறார். இது வெற்று கோசமோ முழுக்கமோ அல்ல. அவர் வாழ்க்கையின் துடிப்பு. வளர்ச்சியின் துடிப்பு.

”ஒரு கவிதையைப் படிக்கும்போது அதன் தலைப்பையோ அல்லது சிற்சில சொற்களையோ பார்த்த மாத்திரத்தில் ஒரு முடிவுக்கு வராதுஈ நுட்பமாகப் பாடலைப் பலமுறை படித்தல் வேண்டும்.” (கவிதை நயம் பக் 129) என்பார் கலாநிதி கைலாசபதி. இந்தக் கவிதைத் தொகுப்பையும் திரும்பத்திரும்பப் படிக்கவேண்டும். சமகாலத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் கவிதை எப்படிக் காலம் கடந்து நிற்கிறது என்பதைக் காண முடியும். கவிஞனின் கவிதை மட்டுமல்ல அவன் வாழ்வும் அழகு மிக்கதாக இருக்க வேண்டும். இங்கே கவிஞர் இளமுருகுவின் கவிதைகள் அழகொளிர மிளிர்கின்றன… அவரின் வாழ்க்கையைப் போலவே.

மற்றவர்கள் நடைபயிலப் பாதையைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. நம் கவிஞர் ஒரு காவியத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். அதையும் விரைவில் வெளிக்கொணர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு “வெள்ளைப் பறவை“க்குப்பின் சாகித்ய அகாதமி விருதை அதிகம் பெற்றவர்கள் வானம்பாடி இயக்கக் கவிஞர்கள்தான் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதிர்காலத்திலும் வானம்பாடிகளின் குரல் ஒலித்துக்கொண்டுதானிருக்கும்.அந்தக் கவிதையை முன்னெடுப்பவர்கள்தான் கவிதையில் வெற்றிபெற முடியும், வெற்றி பெறுகிறார்கள் .

Comments are closed.