வார்த்தை ( சிறுகதை ) : ஜீ.முருகன்

[ A+ ] /[ A- ]

download (33)

அவள் எழுப்பினாளா, அவனே எழுந்தானாத் தெரியவில்லை, அவன் விழித்துப் பார்த்த போது கணினி மேஜையின்மேல் காப்பியைக் கொண்டு வந்து வைத்துவிட்டு அவள் நின்றிருந்தாள். அவள் கண்கள் அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தன. இது வழக்கத்துக்கு மாறான ஒன்று. அவள் பார்வையை அந்த விதமாக எதிர்கொள்ள அச்சப்பட்டவனாக என்ன என்பது போல அவனும் பார்த்தான். அவள் முகம் கோபத்திலும் துக்கத்திலும் துடித்துக்கொண்டிருந்தது.

பதைத்துப் போனான். அவன் மீதான, அவன் பொருட்டான கோபம்தான் அது. ஏன் என்பதுதான் அவனுக்கு விளங்கவில்லை.

அவன் கேட்டான், “என்ன…?”

இக்கேள்விக்காகவே காத்திருந்தது போல அவள் உடைந்து நொறுங்கினாள், “என்னவா? என்ன மனுஷன் நீ, என்ன யாருன்னு நெனச்சி அந்த வார்த்தையச் சொன்ன?”

அவனுக்கு விளங்கவில்லை. “நான் என்ன சொன்னேன்?”

“என்ன சொன்னயா? ராத்திரி முழுக்க நான் தூங்கலத் தெரியுமா?” அவள் அழுதாள். இது அவனை நிலைகுலையச் செய்தது. படுக்கையிலிருந்து எழுந்து கால்களைத் தரையில் வைத்து அவள் பக்கம் திரும்பி உட்கார்ந்தான். யோசித்தான், அப்படி சொல்லியிருந்தால் இரவுதான் அவன் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். ஆனால் ஞாபகம் வரவில்லை.

“நான் என்ன சொன்னேன்? புரியல சித்ரா”

பதில் பேசாமல் உடல் குலுங்க அவள் அழுதுகொண்டிருந்தாள். இப்போது எதுவும் சொல்ல மாட்டாள் என்பது தெரிந்தது. அவளுடைய குணத்துக்கு அது பொருத்தமானதில்லை. அப்படி சொல்லிவிட்டால் அது அவனோடு சமரசம் சொய்து கொண்டதற்கு ஒப்பானதாகும், அதற்கு அவள் தாயாரில்லை. அவளுடைய கோபம் அதற்கும் அப்பாற்பட்டது. அப்படி ஒரு வார்த்தையை அவன் சொல்லியிருக்கிறான். என்னதான் வார்த்தை அது, இது வரை அவளை நோக்கி சொல்லியிருக்காத அந்த வார்த்தை?

அவள் சொல்லவில்லை என்றாலும் அவளை சமாதானப் படுத்த வேண்டிய நிலையில் அவன் இருந்தான். இந்த சச்சரவு இந்த அறையோடு முடிந்துவிட வேண்டும். அதுதான் பாதுகாப்பானது. அவன் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. எவ்வளவோ நாட்கள் இந்த அறையில் அவர்கள் சண்டையிட்டுக்கொண்டுள்ளார்கள். அனால் எதுவும் மற்றவர்களின் இடையீட்டுக்கு வழி வகுக்கும்படி ஆனதில்லை. ஒரு வேளை இருவருடைய முகபாவங்களை, வார்த்தையாடல்களை வைத்து இருவருக்குள் ஏதோ நடந்திருக்கிறது என அவர்கள் யூகிக்கும்படி இருந்திருக்கலாம், அவ்வளவுதான். அவளும் அவன் குறித்து எந்தக் குற்றச் சாட்டையும் அவன் பெற்றோரிடமோ, அவளுடைய பெற்றோரிடமோ கொண்டுசென்றதில்லை. நேற்று இரவு அவர்களுக்குள் வழக்கமான மோதல் இருந்துதான். ஆனால் அவள் இவ்வளவு புண்படும்படி எதுவும் சொல்லியதாக நினைவில் தங்கயிருக்கவில்லை.

அவன் எழுந்தான். அவளை நோக்கிப் போனான், தோளின் மேல் கை வைத்தான்.

“என்ன சித்ரா சொன்னேன்? சத்தியமா எனக்கு ஞாபகம் இல்ல”

இந்த சமாதானத்துக்கு ஈடானதில்லை அவளுடைய கோபம். அதைப் புலப்படுத்தும் விதமாக அவள் அவன் கையை உதறிவிட்டு கண்களை துடைத்துக்கொண்டே கதவை நோக்கி நகர்ந்தாள்.

பின்னர் திரும்பி அவனை நோக்கி ஆத்திரத்துடன் சொன்னாள், “இவ்வளவு நாள் என் பையனுக்காகத்தான்பொறுத்துக்கிட்டிருத்தேன். ஆனா இனிமே என்னால இருக்க முடியாது.”

கதவைத் திறந்து கொண்டு அவள் அங்கிருந்து வெளியேறினாள்.

அவன் அந்நிலையிலேயே சிறிது நேரம் உறைந்து நின்றிருந்தான். பின்னர் திரும்ப வந்து கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டான். கணினி மேஜையின்மீது காப்பி ஆறிக்கொண்டிருந்தது.

‘என்ன எழவு வார்த்தை அது?’ தலையைப் பிடித்துக்கொண்டு யோசித்தான். இரவு நடந்ததை திரும்பவும் ஞாபகத்தில் கொண்டு வர முயன்றான். சமீப நாட்களில் அவன் அதிகம் குடிக்கத் தொடங்கியிருந்தான். வீட்டுக்கு வரும்போது குடித்துவிட்டு வருவது சகஜமாகி விட்டது. சில நாட்களில் அவளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருக்கும். சில நாட்கள் ‘நீ இப்படித்தான், நான் என்ன செய்வது?’ என்பது போல அவள் வெறுப்புடன் கீழே பாய் விரித்துப் படுத்துக்கொள்வாள். போதை குறைவாக இருந்தால் அவளே உணவு பறிமாற விரும்புவான். சாப்பாட்டு மேஜையில் போய் உட்கார்ந்துகொள்வான். கொஞ்சம் அதிகமாகிவிட்டால் அவனே போட்டுக்கொண்டு சாப்பிட்டுவான். சில பொழுது பசியுடனேயே படுத்துக்கொண்டிருக்கிறான். பெரும்பாலும் வெளியே அவன் சாப்பிடுவதில்லை. நேற்று இரவு அவனே போட்டு சாப்பிட்டு வந்துதான் படுத்தான். மகன் குறித்து எதையோ அவன் கேட்க வேண்டியிருந்தது. அதுதான் வாக்குவாதத்தில் கொண்டுபோய் நிறுத்தியது. வழக்கம் போல அது சற்று உச்சத்துக்குப்போய் அவனுடைய பின்வாங்கலோடு முடிந்து போனது. இதற்கு நடுவே அவன் அவளை என்ன சொன்னான் என்பது நினைவுக்கு வரவில்லை. ஏதோ அவள் மனம் நோகும்படி சொல்லியிருக்கிறான். இல்லையென்றால் அவள் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்ய நேர்ந்திருக்காது. பாழாய்ப் போன என்ன வார்த்தைதான் அது?

இதே போன்று பலமுறை அவன் தவிப்புறும்படி அவள் நிறுத்தியிருக்கிறாள். அவனைப் பழிவாங்கும் ஒரு வழிமுறைதான் இது. அவன் நடவடிக்கைகளுக்குப் பொறுத்துப் போகிறாள் என்றாலும் அவள் அவ்வளவு அப்பாவி இல்லை. அவளுக்குள்ளும் சிறுசிறு தந்திரங்களும், சிறு சிறு பொய்களும், அவள் தரப்பு பலவீனப்படும்போது பேச்சை கீழ்நிலைக்கு கொண்டுபோய் வீழ்த்தும் சாகசமும் தெரிந்தவள்தான்.

அவர்கள் இருவருக்குள் காதல் மீதுரும் பிணைப்பு எப்போதும் நிரந்தரமாக இருந்ததில்லை. படுக்கையில்கூட அவள் தனக்காக இல்லாமல் அவன் பொருட்டே இணக்கம் காட்டுகிறாளோ என்றும் நினைப்பதுண்டு. அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருக்க வாய்க்கப் பெற்றவர்கள் அவ்வளவுதான். அவனுக்கு மனைவி, குழந்தை என ஒரு குடும்பம் தேவை. அவளுக்கும் அப்படித்தான். இந்த வாழ்க்கையை இப்படி வாழ விதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.

எவ்வளவு உச்சபட்ச சண்டையின் போதும் ஒருமுறை கூட அவன் கை நீட்டியதில்லை. அவனுடைய இயல்புக்கு அது பொருத்தமற்றது. யாருடனும் சண்டையை அவன் வெறுத்தான. அலுவலகத்திலோ, வெளியிலோ அதற்கான சூழல் ஏற்பட்டால் கவனமாக தயக்கமின்றி பின்வாங்கிவிடுவான். அவனுக்கு எதிராக சதியை நிகழ்த்தியிருந்தாலும், தந்திரங்களை பிரயோகித்திருந்தாலும், தவறு இழைத்திருந்தாலும் அவர்கள் முகத்துக்கெதிரே தன் கோபத்தைக் காட்டி அவர்கள் அவமானத்தில் குன்றுவதை அவனால் பார்க்க இயலாது. அவன் போய் அவன் மனைவியை என்ன வார்த்தை சொல்லி இப்படி புண்படுத்தியிருக்க முடியும்?

அவளுடைய இவ்விதமான தாக்குதல் அவனை அதிகம் வருத்தியது. சில நாட்களுக்கு முன்புகூட அவள் இப்படியான நிலைக்கு அவனை தள்ளிவிட்டு நின்றாள். யாரோ அவன் குறித்து அவளிடம் சொல்லியிருக்கிறார்கள். மதுவிடுயிலிருந்து தடுமாறிக்கொண்டே அவன் வெளியே வந்தானாம். இருசக்கர வாகனத்தில் ஏறுவதற்குக் கூட அவனால் முடியவில்லையாம். அப்படி நிலை தவறும் அளவுக்கு எப்போதும் அவன் குடித்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டு அதிகப்படியானது; அவனைக் குறித்த தரம் தாழ்ந்த விமர்சனம். அது அவளை அதிகம் அவனமானப்படுத்திவிட்டதாக அவள் சொன்னாள். ‘ஏன் இவ்வளவு கீழ்த்தரமா நடந்துகிற?’ என்று கேட்டு அவள் அழத்தொடங்கிவிட்டாள். கடைசி வரை அது யார் என்று அவள் சொல்லவில்லை. இந்தக் குற்றச்சாட்டை அவன் கழுத்தில் போட்டு அவள் இறுக்கத் தொடங்கிவிட்டாள். அவன் மூச்சுத் திணறிப் போனான்.

குடும்ப விஷயங்கள் எதையாவாது கோடிட்டு காட்டிவிட்டு, முழு விவரங்களைச் சொல்லாமல் சொல்வாள், ‘இதோல்லாம் உனக்கு எதுக்கு? எதையும் காதுல போட்டுக்காத. உன் வேலை, உன் குடின்னு இப்படியே இருந்துடு.’ அவனை பெரிய குற்ற உணர்ச்சியில் ஆழ்த்திவிடுவாள். என்ன விஷயம் என வற்புறுத்திக் கேட்டாலும் கடைசிவரை சொல்லமாட்டாள். அது போன்ற ஒன்றுதான் இது என்றாலும், இதில் ஏதோ விபரீதம் கலந்திருக்கிறது. அவன் என்ன சொன்னான் என்பது தெரிந்தால்தான் அதற்குரிய பதிலைச் சொல்லவோ, மன்னிப்புக் கேட்கவோ முடியும். அதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைக்குமா எனத் தெரியவில்லை. அவளை தனியே சந்தித்தால் மட்டும்தான் அதை செய்ய முடியும். இந்த அறைக்கு இப்போது அவள் வரமாட்டாள். பிறகு எங்கே பேசுவது?

அவன் வெளியே வந்தான். அவள் சமையல் அறையில் இருப்பது தெரிந்தது. அவன் வரவேற்பறையில் சோபாவில் போய் உட்கார்ந்தான். அங்கே வழக்கத்துக்கு மாறான எந்த அறிகுறியும் இல்லை. அவன் அம்மாவும் சமையல் அறையில் இருப்பது தெரிந்தது. அங்கே போய் அவளை சமாதானப்படுத்த முடியாது. அவனுடைய மகனுக்கு காலையிலேயே பள்ளிப் பேருந்து வந்துவிடும். அவன் சென்றுவிட்டிருந்தான். அவனும் அலுவலகம் கிளம்பியாக வேண்டும். அவளை இதே நிலையில் விட்டுவிட்டுச் செல்ல அவனுக்குத் தயக்கமாக இருந்தது. ஏதாவது விபரீதம் நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சினான். அந்த யோசனையுடனேயேக் குளிக்கப் போனான். அந்த குழப்பமான மனநிலையிலேயே பல் துலக்கினான், கழிவறையைப் பயன்படுத்தினான், குளித்தும் முடித்தான்.

உடை மாற்றிக்கொண்டு வந்து பார்த்த போது அவள் வீட்டில் இல்லையோ என்ற சந்தேகம் எழுந்தது. அவன் அம்மாதான் அவனுக்கு உணவு பறிமாறினாள். அவள் எங்கே என்று கேட்டான். மார்க்கெட் போயிருப்பதாகச் சொன்னாள். வழக்கமாக மார்க்கெட் போக வேண்டும் என்றால் அவன் அலுவலகம் கிளம்பியப் பிறகுதான், துணியெல்லாம் துவைத்துவிட்டுப் போவாள். இவ்வளவு காலையில் அவள் ஏன் கிளம்பிப் போக வேண்டும்?

உணவு குறைவாகவே இறங்கியது. அதில் கவனம் இல்லை. போயிருந்தால் வழக்கமாக அவள் போகும் பல்பொருள் அங்காடிக்குத்தான் போயிருக்க வேண்டும். காய் கறி, மளிகை சாமான் எல்லாம் ஒரே இடத்தில்தான் அவள் வாங்குகிறாள். இதையே சாக்காக வைத்து அவள் வேறு எங்காவது சென்றுவிட்டிருந்தால்? அவள் என்ன மனநிலையில் வீட்டிலிருந்துக் கிளம்பிப் போனாள் என்று தெரியவில்லை.

அவன் தன் இருசக்கர வாகனத்தைக் கிளப்பினான். ஆனால் அதை அவன் அலுவலகம் இருக்கும் திசையில் செலுத்தவில்லை. அவன் யோசனை முழுவதும் மனைவி குறித்தும் அவள் எங்கு போயிருப்பாள் என்றே இருந்ததால் அந்த பல்பொருள் அங்காடி இருக்கும் திசையில் சென்றுகொண்டிருந்தான். காலையில் அலுவலகம் புறம்படும்போது அன்று செய்யக்கூடிய முக்கிய வேலைகள் பற்றியே அவன் கவனத்தில் இருக்கும். அது சுமையாக அழுத்த அது பற்றியச் சிந்தனையிலேயேச் செல்வான். ஆனால் இன்று அதையும் தாண்டி அவன் மனைவி குறித்த அச்சம் பிரக்ஞையை ஆக்கிரமித்திருந்தது. வேறு எதுவும் அவனுக்கு இப்போது ஒரு பொருட்டல்ல. அந்த பல்பொருள் அங்காடிக்குப் போய் அவள் அங்கே இருக்கிறாளா என்பதை அவன் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தால் அங்கேயே அவளை சமாதானப்டுத்தி விட வேண்டும். அவள் சம்மதித்தால் எங்கேயாவது அழைத்துக்கொண்டு போய் பேசிவிட்டும் வரலாம். அது என்ன வார்த்தையோ அதை தெரிந்து கொள்ளாமலேயே மன்னிப்பு கேட்கவும் அவன் தயார்.

அந்த பல்பொருள் அங்காடி சற்று அருகில்தான் இருந்தது. வெளியே வண்டியை நிறுத்திவிட்டு அங்காடிக்குள் நுழைந்த போது திகைப்பாக இருந்தது. இவ்வளவு காலையில் இத்தனை கூட்டமா? விடுமுறை நாட்களில்தான் இப்படிப் பார்த்திருக்கிறான். அன்று ஏன் எனத் தெரியவில்லை. அந்த அங்காடி மிக விஸ்தீரணமானது; பல அடுக்குகள், பல பிரிவுகள் கொண்டது. அவள் எங்கே இருக்கிறாள் என்று எப்படி தேடுவது? அவள் காலையில் வந்தால் காய்கறி வாங்கத்தான் வருவாள். மற்றப் பொருள்களை மாதத்தின் முதல் வாரமோ, ஞாயிற்றுக்கிழமைகளிலோ வாங்குவாள். உடன் அவனும் பையனை அழைத்துக்கொண்டு வருவதுண்டு.

காய்கறி வைத்திருந்தப் பகுதியைத் தேடி அவன் போனான். அது கீழ்த் தளத்தில்தான் இருந்தது. அங்கும் ஆட்கள் அதிக அளவிலேயே காணப்பட்டார்கள். ஆனால் தேடுவதற்கு அவ்வளவு சிக்கலை ஏற்படுத்தாத விதத்திலேயே அது அமைக்கப்பட்டிருந்தது. அவள் அங்கு இல்லை. கீழ்த்தளத்தில் எங்கும் இல்லை என்பதும் உறுதியானது. இங்கு வேறு பகுதிகள் எதுவும் இல்லை. மேல்தளங்களில் ஏதாவது ஒன்றில்தான் அவள் இருக்க வேண்டும். அங்கு போவதற்கான படி இடது புறம் தொடங்குகிறது. அவன் அதில் ஏறினான்.

இந்நேரம் அவன் அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டும். அவனுக்காக பல வேலைகள் அங்கே காத்திருக்கின்றன. அற்ப விஷயங்களுக்கெல்லாம் விடுப்பு எடுத்துவிட முடியாது. சில வேலைகள் தள்ளிப்போகும். அது அலுவலகத்துக்கோ அவனுக்கோ நன்மை பயக்காது. ஆனால் இன்று அவன் மனநிலையை திசைத் திருப்பி இங்கு கொண்டுவந்து அவள் சேர்த்திருக்கிறாள் அல்லது அந்த வார்த்தை. என்ன வார்த்தை அது? அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

முதல் தளம் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பாத்திரங்கள் பகுதி. கீழ்த்தளத்தை விட இங்கே ஆட்கள் குறைவாகவே காணப்பட்டார்கள். சிறிது நேரத்திலேயே அவள் அங்கே இல்லை என்பதை அவனால் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. அதற்கு மேல் இன்னொரு தளம் இருக்கிறது. ஆனால் அங்கே என்ன இருக்கிறது என அவனுக்குத் தெரியவில்லை. திரும்பவும் இடது பக்கமாகச் சென்று படியை அடைந்தான். அதில் கால் வைத்த போது மேலிருந்து கீழ் நோக்கி கையில் கூடையுடன், நன்கு அறிமுகமான ஒருத்தி வந்தாள். பக்கத்து வீட்டுக்காரி. அவனைப் பார்த்ததும் அவள் புன்னகைத்தாள். இவளுடன்தான் அவன் மனைவி வந்திருக்க வேண்டும். இருவரும் சினேகிதிகள். ஏனோ அவளை அவனுக்குப் பிடிப்பதில்லை. அவளிடம் ஏதோ கள்ளத்தனம், விஷமம் கலந்திருப்பதாக அவனுக்குத் தோன்றும். இவளுடன் எதற்குப் போய் அவன் மனைவி பழகுகிறாள் என்ற கேள்வி எழும். அவனைக் குறித்து அந்த மதுவிடுதி சம்பவத்தைச் சொன்னவள் இவளாகவே இருக்க வேண்டும் என்பது அவன் யூகம். வேறு யாரும் சொல்வதற்கு வாய்ப்பில்லை. அவள் பார்த்திருக்க வேண்டும் அல்லது அவளுடைய கணவன் பார்த்துவிட்டு வந்து அவளிடம் சொல்லியிருக்க வேண்டும்.

வெட்கப் புன்னகையுடன் அவள் படி இறங்கி வருகிறாள். அவளுடன் அவன் அதிகம் பேசியதில்லை என்பதால் அவன் மனைவி குறித்துக் கேட்பதா வேண்டாமா என யோசித்தான். இவளுடன்தான் அவள் வந்தாள் என்றால் அவள் எங்கே போனாள்?

அவன் கேட்காமலேயே அவள் சொன்னாள், “வினோத் அம்மா மேலதான் இருக்காங்க.”

அவள் அவனை கடந்து போய் விட்டாள். மனம் சற்று நிம்மதி கண்டது. அவள் இங்கு தான் இருக்கிறாள். அந்த வார்த்தை அவளை ஒன்றும் செய்துவிடவில்லை. அவன் மேலே ஏறினான். ஏதோ ஒரு பொருளை வாங்குவதற்காக அவள் இவ்வளவு மேலே வந்திருக்கிறாள். இருவரும்தானே ஒன்றாக வந்திருக்கிறார்கள், ஏன் பக்கத்து வீட்டுக்காரி மட்டும் தனியாக கீழே இறங்கிப் போகிறாள்?

மேலே அவளைப் பார்த்ததும் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தால் போதும். எதுவும் பேச வேண்டியதில்லை. பதறிப் போய் அலுவலகம் கூட போகாமல் அவளைத் தேடி அவன் வந்திருக்கிறான் என்பதே அவளுக்குத் திருப்த்தியைத் தந்துவிடலாம். அந்த வார்த்தை குறித்துகூட எந்த சமாதானமும் தேவை இருக்காது. அவனும் கேட்காமல் அவளும் சொல்லாமல் நாட்களில் கரைந்து போய்விடலாம். ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் அவனை வீழ்த்த வேண்டிய நிலையில் அது அவளுக்குப் பயன்படும். பெண்கள் எதையும் மறப்பதில்லை. வார்த்தைகளின் வீரியம் தெரிந்தவர்கள் அவர்கள்; அவற்றுடனேயே வாழ்பவர்கள்; அதை ஆயுதமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்.

அவன் இரண்டாவது தளத்திற்குப் போனான். அதுதான் கடைசி தளமா எனவும் அவனுக்குத் தெரியவில்லை. அந்த கட்டடத்தில் உணவகம், திரையரங்கம், ஜவுளிக்கடை என பலப் பகுதிகள் இருந்தன. எது எங்கே இருக்கிறது என அவனுக்குத் தெரியவில்லை.

இரண்டாவது தளத்தில் பீரோ கட்டில் என மரத்திலும், இரும்பிலும் செய்யப்பட்ட ஏராளமான வீட்டு உபயோகப் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இங்கு எதற்கு வந்தாள் என அவனுக்குப் புரியவில்லை. அங்கே எளிதாக ஊடுருவிப் பார்க்க முடியாத அளவுக்கு பொருள்கள் இருந்தன. ஏதோ புதிருக்குள் அகப்பட்டவன் போல அதன் மத்தியில் தேடிக்கொண்டு நகர்ந்தான். எவ்வளவு பொருள்கள்! அவனுக்கு வியப்பாக இருந்தது. ஒரு பெரு நகரத்தின் மாதிரி வடிவம் போலவும் அதில் வழி தவறிவிட்டவன் போலவும் அது அவனை திணறிப்போகச் செய்தது.

யாரையாவது கேட்கலாம் என்றாலும் அங்கு யாரும் இல்லை. காலை வேளையில் இப்பகுதிக்கு பணியாளர்கள் யாரும் வருவதில்லையா? யோசனையுடன் அவன் நடந்தான். தொலைவில் ஒரு பெரிய கதவும் அங்கே கொஞ்சம் ஆட்களும் தென்பட்டார்கள். அது வேறு பகுதி போலத் தோன்றியது. அதை நெருங்க நெருங்க ஆட்களின் சப்தம் அதிகரிக்கத் தொடங்கியது. கதவை அடைந்த போதுதான் அது கை கழுவும் இடம் என்பது தெரிந்தது. வரிசையாக குழாய்களும் கழிப்பறைகளும் இருந்தன. அந்த ஆண்களும் பெண்களும் உடை உடுத்தியிருக்கும் விதம் பக்கத்தில் திருமண மண்டம் இருப்பதை உணர்த்தியது. அவள் திருமணத்துக்கா வந்திருக்கிறாள்? யாருடைய திருமணம்? இது குறித்து அவளோ, வீட்டிலோ யாரும் சொல்லவில்லையே.

அவன் அந்த இடத்தைக் கடந்து மண்டபத்துக்குள் நுழைந்தான். அது உணவு பரிமாறும் பகுதி. அங்கே ஏராளமான ஆட்கள் உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். சீருடை அணிந்த பணியாளர்கள் அவர்களுக்கு பரிமாறிக்கொண்டிருந்தனர். அழைக்காத ஒரு திருமணத்துக்கு, எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் வந்திருக்கிறான். இது அவனை அதிகமே சங்கடப்படுத்தியது. ஏதோ பின்வாசல் வழியாக ஒரு வீட்டுக்குள் நுழைந்துவிட்டது போல இருந்தது. அவன் மனைவி வந்திருந்தால் மண்டபத்தின் பிரதான வாசல் வழியாகத்தான் வந்திருக்க வேண்டும். பிறகு அந்த பக்கத்துவீட்டுக்காரி எப்படி அந்த வழியாக இறங்கிப் போனாள்?

அப்பகுதியைக் கடந்து படியேறி திருமணம் நடைபெறும் இடத்தை நோக்கி நடந்தான், அவள் அங்குதான் இருக்க வேண்டும். ஆண்கள் தூய வேட்டி சட்டை அணிந்திருக்க, பெண்கள் பகட்டான உடையலங்காரத்துடன் போவதும் வருவதுமாக இருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த நகைகளின் பளிச்சிடல் அந்த மண்டபத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. அவர்களில் சிலரை அவன் பார்த்திருக்கிறான். அவன் ஊர் பெண்கள்தான் அவர்கள்.

அது ஒரு சின்ன மண்டபம்தான். ஆனால் அதில் ஆட்கள் நிறைந்து காணப்பட்டார்கள். பாதி பேருக்குமேல் நின்றபடி பேசிக்கொண்டிருந்தார்கள். சந்தேகமே இல்லை, அது அவனுடைய உறவினர் வீட்டுத் திருமணம்தான். அவனுடைய சொந்தங்களும் அவன் மனைவியின் சொந்தங்களும் அங்கே காணப்பட்டார்கள். அவர்களுக்குள் தேடியதில் அவள் தென்பட்டுவிட்டாள். தொலைவில் பெண்களுக்கு மத்தியில் அவள் தெரிந்தாள். மிக சாதாரண உடையிலேயே அவள் இருந்தாள். திருமணத்துக்கு வந்தது போலத் தெரியவில்லை. அதனாலேயே அவள் தனித்துத் தெரிந்தாள். அவளுடைய முகம் மட்டும் வாடிய நிலையிலேயே, அந்தத் துயரத்தையும், கோபத்தையும் சுமந்தபடி இருந்தது. அவளை இந்த நிலையில் பார்க்கும் அவர்கள் என்ன நினைப்பார்கள்? ஏன் அவள் இங்கு வந்தாள்? அவனை பழிவாங்க அவளுக்கு இதைவிட வேறு வழியில்லையா என்ன?

அவளை நோக்கி அவன் போனான். யாரிடமோ பேசிக்கொண்டிருந்தவள் திரும்பி அவனைப் பார்க்கிறாள். அவளிடம் எந்த வியப்புமில்லை. அவனை அங்கு எதிர்பார்த்தவள் போலவே காணப்பட்டாள். அந்தக் கூட்டத்தில் அவளை தவற விட்டுவிடுவோமோ என்பது போல அவளைப் பார்த்துக்கொண்டே அருகே போனான். ஆனால் அவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அந்தப் பெண்களை விலக்கிக்கொண்டு திருமண மேடை இருக்கும் திசையை நோக்கி நடந்தாள். அவனும் பின் தொடந்தான். படியில் கால் வைத்து மேடை மீது ஏறினாள். அவள் இருக்கும் கோலத்தில் எதற்காக அங்கெல்லாம் போகிறாள்? அவன் வேகமாக அவளைப் பின்தொடர்ந்தான். அவள் அங்கு நின்றிருந்த பெண்களை விலக்கிக்கொண்டு மணமகள் அறையை நோக்கி நடந்தாள். இவளுக்கு என்ன ஆனது? திறந்திருந்த அந்த அறைக்குள் நுழைந்தவள் கதவைச் சாத்திக்கொண்டாள். அவன் கதவைத் தள்ளினான். அது திறக்கவில்லை. மெல்ல தட்டினான். “சித்ரா” மெல்ல அவன் கூப்பிட்டான். கதவுத் திறக்கவில்லை. செய்வதறியாது நின்றான். இங்கு நடப்பதைப் பார்த்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? கதவுக்கு மிக அருகில் முகத்தை வைத்துச் சொன்னான், “சித்ரா கதவத் தெற, இது நம்ம வீடு இல்ல. சொந்தகாரங்கெல்லாம் இருக்காங்க, அவுங்க என்ன நினைப்பாங்க, தயவுசெய்ஞ்சி கதவத் திற” அவள் திறக்கவில்லை. கதவை முழு விசையுடனும் ஆத்திரத்துடனும் அவன் தள்ளினான். கதவு திறந்து கொண்டது.

அது அவர்களின் படுக்கையறைப் போலவே தெரிந்தது. அதே கட்டில். கணினி மேஜையில் அவன் காலையில் குடிக்காமல் விட்டிருந்த காபி டம்ளர். சுவரில் சாய்ந்து நின்று அவள் அழுதுகொண்டிருந்தாள். மேலே மின் விசிறியிலிருந்து ஒரு புடவை முடிச்சிட்டுத் தொங்கிக்கொண்டிருந்தது, அந்த விபரீத வார்த்தை அதுதானோ என்பது போல.

0***

Comments are closed.