வாழ்வின் வாசல்களால் நிறைந்த கதைகள் ( கவிதா சொர்ணவள்ளியின் பொசல் ) / யாழன் ஆதி

[ A+ ] /[ A- ]

கடந்த ஓராண்டுக்கு மேல் உடல்நல்க்குறைவால் நெடுந்தொலைவுப் பயணங்களையும் கூட்டங்களையும் கொஞ்சமாய் தள்ளிவைத்து இருக்கின்றேன். அதனால் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குக் கூட போக முடியாத சூழல்தான் ஏற்பட்டது. புதிய புத்தகங்களை வாங்குவது நதீம் போன்ற அன்பு நண்பர்களால் சாத்தியமானது. தேவையானப் புத்தகங்களைப் பட்டியல் போட்டுக்கொடுத்தால் தோழர் அவற்றை வாங்கித் தந்துவிடுவார்.

சில பதிப்பக நண்பர்களைக் கேட்க அவர்களும் புத்தகங்களை அனுப்பி உதவினார்கள். நிறைய புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. எல்லாவற்றையும் படித்துக்கொண்டிருக்கிறேன். வாசிப்புதான் மிக முக்கியமாக பலமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதன் அத்தனை ஆற்றலும் உடலுக்குள் புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் எழுதத் தூண்டுகிறது. புதியதாக வந்திருகும் தமிழ்க்கவிஞர்கள் நிகழ்த்தும் மொழிசார்ந்த விளையாட்டுகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், கதைகள் , புதிய புத்தக வடிவாக்கங்கள் என எல்லாம் மனத்தைக் கவர்கின்றன.

நான் படித்த சில புத்தங்கங்களைப் பற்றி உங்களோடு பகிர்ந்துக்கொள்வது தான் என் கட்டுரையின் நோக்கம்.

பொசல் என்னும் கவிதா சொர்ணவள்ளியின் தொகுப்பு. டிஸ்கவரி வெளியீடு

முகநூலில் கவிதா பொசலைப் பற்றிப் பேசிய ஒரு காணொளியைக் கண்டேன். அவர்களிடத்தில் பேசி தொகுப்பினைக் கேட்டுப்பெற்றேன். பொசல் என்னும் சொல்லுக்கு புயல் என்று அர்த்தம். ஒருவகையில் இச்சொல்லை எங்கள் பகுதியில் பயன்படுத்துகிறோம். புயலுக்கு பொசல் போல முயலுக்கு மொசல் என்னும் சொல் எங்கள் வழக்கில் இருக்கிறது.

நவீன வாழ்வு வாழக்கூடிய படைப்பாளர் தன் வாழ்நாளில் தான் அனுபவித்த வாழ்க்கையை மிகவும் அப்பட்டமாக கதையாக்கி இருக்கிறார்கள். தனக்குக் கிடைத்த வாழ்க்கையை யாருக்கும் பயப்படாமல் அதே நேரத்தின் வாழ்வின் எந்தக் கணத்திற்கும் துரோகம் இழைக்காமல் இந்தக் கதைகள் வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட வாழ்வு என்பது கல்வி சாத்தியப்பட்ட ஐந்தாம் தலைமுறை பெண்ணுக்குக் கிடைத்திருக்கிறது. வாசிப்பும் நூல்களும் வசப்பட்ட ஒரு வாழ்க்கை, நிலம் நீர் என பணம் கொழிக்கும் வாழ்வு. அதன் சுற்றுச்சூழல் ஆண் பெண் உறவு நிலை எல்லாம் கதைகளில் மிக இயல்பாக வந்துபோகிறது. ஒருபெண்ணுக்குள்ள ஆணின் உறவு அப்படியே ஆணுகும் அமைந்துவிடுகிறது என்பதுதான் மிக யதார்த்தமான உண்மை. அண்ணனைக் காதலிப்பதும் அக்காவைக் காதலிப்பதும் சமுக யதார்த்தம் என நாம் கவிதா சொர்ணவள்ளியின் கதைகளைப் பேசிக்கொண்டே போகலாம்.

ஆனால் அதுமட்டுந்தான் அந்தக் கதைகளில் இருக்கிறதா என்றால் மிக நுட்பாமான அரசியல் எல்லாக் கதைகளிலும் இருக்கிறது/ அது கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்த்தப்பட்ட திராவிட அரசியல் இந்தச் சமூகத்தின் மிக கமுக்கமாக நடத்தியிருக்கிற சமூக மாற்றங்களுக்கானக் குறியீடுகள் இக்கதைகளில் ஒரு காபி ஷாபில் கிடைக்கும் அருமையான முந்திரி கலந்த பிஸ்கட்டைப் போலவே நமக்குக் கிடைக்கிறது. பொசலின் முதல் கதையிலிருந்து கடைசிக் கதை வரை இதை நாம் காணலாம். முதல் கதையில் கிராமத்து சிறுதெய்வங்களைப் போல அவ்வளவு அன்பாக பிரமாண்டமானக் கோயில்களில் இருக்கும் பெருநகர பெருந்தெய்வங்களிடம் இல்லை. கோயிலை அணுகுவது என்பது பெண்களுக்கான ஒன்றா என்றால் அது சில ஆண்களுக்கானதாகவே கூட இல்லை என்பது தான் உண்மை. ஆனால் படித்த அந்தப் பெண்ணுக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.

தன் தாயின் பெயரைக் கண்டறியும் மகளின் தேடல், அது திராவிட செல்வி என்று அறியப்படும்போது அம்மா அதை எப்போதும் காட்டிக்கொள்ளாதவளாக இருந்தது எண்ணியும் அவளுக்கு ‘பொசல்’ன்னு ஒரு பெயர் இருக்க தாயின் வாழ்வு எத்தகைய அரசியலைக்கொண்டிருக்கிறது என்பெதெல்லாம் நாம் அறிய வேண்டிய உண்மைகள். பெட்டி நிறைய புத்தகங்கள், சான்றிதழ்கள் என அம்மாவின் உடைமைகளைப் பார்த்த அவள் விழி அவள் மணிமேகலையப் போல வருவாள் என்று நினைத்திருந்த நேரத்தில் அவளுக்கு நேர்ந்தத் திருமணம் எல்லாவற்றையும் கலைத்துப்போட்டிருக்கிறது. எத்தகைய வாழ்விலிருந்து ஒரு பெண்ணைத் தூக்கி அடித்திருக்கிறார்கள். பொசலாக இருந்திருக்க வேண்டியவள்.

யட்சி ஆட்டம் பாலியியல் வன்கொடுமைகளுக்கு எதிரானக் கதை. அரளிப்பூவின் வாசத்தில் ஒருவனை வேரறுக்கும் யட்சியின் ஆட்டம் மகளுக்குப் புதுகதைதான்.

கவிதா சொர்ணவள்ளியின் கதைகளில் ஆண் பெண் உறவுகுறித்த இருமை மிகவும் லாவகமாக்க் கையாளப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் ஒருகாதல் தற்காலிகமாக ஏற்படும் இன்னொரு காதல் அதை ஒப்புக்கொள்ளும் பெண்மனம், தன் காதலால் தன் வேலைகளை இழக்கிறேன் என்று சொன்னவனுக்குச் சரிசொல்லும் இன்னொரு காதல் என இந்த உறவுநிலையைத் தன் சுயம் என்ற இடத்தில் பாராமல் பொது என்னும் சமூகத்தின் ஊடாகப் பார்த்து விடைதேர்வது கதைகளாகி இருப்பது குறிப்பிடத் தக்கது.

கவிதாவின் எழுத்து சில இடங்களில் அபாரமாக வந்து விழுகிறது. தேர்ந்த கதைச்சொல்லிக்கான அத்தனைக் கூறுகளையும் அவர் அவ்விடங்களில் காட்டி விடுகிறார்.

”யாருமற்ற அந்த வீடு இருட்டைத் தின்றுகொண்டிருந்தது. வேர்த்து வழிந்திருந்த உடலில் இருட்டின் வாசம் படர்ந்து இலேசான நடுக்கத்தைக் கொண்டிருந்தது.”

கதைகளை முடிக்கும்போது அவற்றிற்கான ஒரு முத்தாய்ப்போடு கதைகளை முடிக்கும் போக்கும் நன்றாகத்தான் இருக்கிறது.

பொசலை படித்து முடித்தபிறகு இந்தக் கதைகள் சுட்டுகின்ற வாழ்க்கை யாருடையது. யாருடையதாகினும் இருக்கலாம். ஆனால் ஒரு பெண் என்னும் பொதுநிலை அடையாளத்தைத் தாண்டி சில குறிப்புகளில் சொல்லப்படும் தனித்த அடையாளங்களில் இது ஒரு தலித் வாழ்க்கை என்னும்போது இத்தகைய கொண்டாட்டங்களிலும் அம்மக்கள் இருந்திருக்கிறார்கள், பத்துபேர் உட்கார்ந்து சாப்பிடும் சமையலறைக்கொண்ட வீடு, சாரட் வண்டியில் போன தாத்தா, சமையல் நன்றாக வருவதற்காக பச்சைப்பாம்பினை நீவும் பெண்கள் அவர்களின் உரையாடல் என எல்லாவற்றையும் பார்க்கையில் கவிதா சொர்ணவள்ளியில் கதைகள் தலித் வாழ்வின் கொண்டாட்டங்களைப் பேசுகின்ற பான்மைக் கொண்டவை.

••

Comments are closed.