விஷ்ணுகுமார் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

images (37)

போராளி…!!!

தினமும் பாத்திரம் கழுவ
தலைதிரும்பாத குழாயோடு
போரிடவேண்டியிருக்கிறது
மழையில் ராணுவ வீரனோ
செய்வதறியாது தவிக்கின்றான்
அவனுக்கு இந்த
இரண்டாம் அமர்வு சண்டையை
சீக்கிரம் முடித்துவிட்டு
கொஞ்சநேரம் மறைவான
இடத்திற்குப்போய் மூச்சுவாங்க
நடனமாடவேண்டும்போலிருக்கிறது

°°°
பாத்திரங்கள் இன்னும்
கழுவப்படாமலேயே கிடக்கின்றது
குழாய் திரும்பிப்பார்க்கும்வரை
கொஞ்சம் பொறுத்திருங்கள்
எப்போதும் யாரையோ
குறிவைப்பதுபோல
கைநீட்டிக்கொண்டிருக்கும்
பீரங்கியின் பைனாக்குலரில்
வீரர்கள் வரிசையாக கொஞ்சநேரத்தில்
சிதறிப்போக வாய்ப்பிருக்கும்
தன்வீட்டை குறிவைக்கின்றனர்
அச்சமயம் வெயிலில் அப்படியே
போட்டுவந்த பாத்திரங்கள் இங்கு
பைனாக்குலரில் கண்கூசச்செய்ய
மீண்டும் போர்க்கொடி அரக்கப்பறக்க ஏறத்தொடங்கியது
எதிரில் நிற்கும் பீரங்கியில்
ஒலித்துக்கொண்டிருந்த மெல்லடியான
பாடல் வேகமெடுக்கிறது

°°°°°

மழைசமயம் போர்செய்வதுதான்
பாத்திரம் கழுவுவதுபோல எவ்வளவு
சித்ரவதையானது
கையில்எதையோ தூக்கிக்கொண்டு
கொட்டும் நீரில் எத்தனைவிதமான
பதுங்குக்குழிக்குள்தான் போய்வருவது

சிறிது நேரத்தில்
கரிப்பிடித்த-புகைமூட்டம்
பாத்திரம் முழுதும்
களம்முழுதுமாக பரவலாக
யார் எதிரில்போய் நிற்பது என்ற
குழப்பத்தில் போர் தற்காலிகமாக
நிறுத்திவைக்கப்பட
அப்பாடாஆஆஆ….

பீரங்கியில்
மீண்டும் பாடல் மெல்லடியாகிறது

°°°°

குழாயை இறுக்கி மூடிவிட்டு சில
நாட்களுக்குபின் பீரங்கியிலிருந்து
கழுவிய பாத்திரங்களோடு
இறங்குகிறாள்
என்னசெய்ய போர் நடக்கையில்
அதிகபட்ச குற்றமாக
கலந்துகொள்ளாமலிருக்கலாம்
ஆனால் கண்டுகொள்ளாமலிருக்க முடியாது

இதுவரை சேனலை மாற்றக்கூட
தெரிந்துகொள்ளாத அவள்
தன் சமயலறையிலிருந்து
எதிரியொருவன் மறைந்திருக்கும்
பதுங்குக்குழிபோலிருக்கும்
குப்பைத்தொட்டியில்
ஆப்பிளின் காம்பைக்கடித்துப் பார்த்து
கெட்டுப்போனதென வீசுகிறாள்
அவளுக்கென்ன தெரியும்
அதென்ன வெடிக்கவா போகிறது

•••

Comments are closed.