வீட்டிலிருந்து கடிதம் ( சிறுகதை ) : ஜமைக்கா கின்கெய்ட் தமிழில்: சமயவேல்

[ A+ ] /[ A- ]

Jamaica Kincaid

நான் பசுக்களில் பால் கறந்தேன், நான் வெண்ணெய் கடைந்தேன், நான் பாலடைக்கட்டியைப் பத்திரப்படுத்தினேன், ரொட்டி சுட்டேன், தேநீர் தயாரித்தேன், குழந்தைகளுக்கு உடைகள் போட்டுவிட்டேன்; பூனை மியாவ் என்று கத்தியது, நாய் குரைத்தது, குதிரை கனைத்தது, எலி கிறீச்சிட்டது, ஈ ரீங்கரித்தது, ஒரு குவளைக்குள் வசிக்கும் தங்கமீன் அதன் தாடைகளை விரித்தது; கதவு பலமாக அடித்து மூடியது, படிகள் கிரீச்சிட்டன, குளிசாதனப்பட்டி ஹம் ஒலி எழுப்பியது, திரைச்சீலைகள் அலைந்து உயர்ந்தன, அடுப்பிலிருந்து எரிவாயு உஸ் என்று சீறியது, உறைபனியால் கனத்த மரக்கிளைகள் ஒடிந்து கூரை மேல் விழுந்தன; எனது இதயம் தட்! தட்! என்று சப்தமாகத் துடித்தது, தண்ணீரின் மிகச்சிறிய மணிகள் எனது மூக்கின் மேல் துளிர்த்தன, எனது முடி துவண்டது, எனது இடுப்பு மடிப்புகளை வளர்த்தது, நான் எனது தோலை உதிர்த்தேன்; உதடுகள் நடுங்குகின்றன, கண்ணீர் வழிகிறது. கன்னங்கள் ஊதிவிட்டன, வயிற்றுக்குள் வலி புரள்கிறது; நான் ஊர்ப்பக்கம் போனேன், எனது கார் பழுதாகி நின்றது, நான் திரும்ப நடந்தேன்; படகு கிளம்பியது, அலைகள் விட்டுவிட்டு எழுந்தன, அடிவானம் கவிழ்ந்திருந்தது, துறைமுகத் தளம் சிறிதாகிக் கொண்டே போனது. காற்று பயமூட்டியது, சில தலைகள் குலுங்கின, சில கைக்குட்டைகள் படபடத்தன. இழுப்பறைகள் மூடப்படவில்லை, குழாய்கள் ஒழுகின, பெயிண்ட் உரிந்திருந்தது, சுவர்கள் கீறல் விட்டிருந்தன, புத்தகங்கள் குலைந்து கிடந்தன, தரை விரிப்பு இனியும் வெளியே சமதளத்தில் கிடக்காது; நான் எனது உணவைச் சாப்பிட்டேன், ஒவ்வொரு கவளத்தையும் முப்பத்து இரண்டு முறைகள் மென்றேன், நான் கனமாக விழுங்கினேன், எனது குதிங்கால் குணமாகிவிட்டது; அங்கு, ஒரு இரவு இருந்தது, அது இருட்டாக இருந்தது, அங்கு ஒரு நிலவு இருந்தது, அது பூரணமாக இருந்தது, அங்கு ஒரு படுக்கை இருந்தது, அது தூக்கத்தைப் பிடித்து வைத்திருந்தது, அங்கு அசைவு இருந்தது, அது விரைவாக இருந்தது, அங்கு ஒரு உயிர் இருந்தது, அது அசையாமல் நின்றது, அங்கு ஒரு வெளி இருந்தது, அது நிறைந்திருந்தது, பிறகு அங்கு எதுவுமே இல்லை; ஒரு மனிதன் வாசலுக்கு வந்து கேட்டான், “குழந்தைகள் இன்னும் தயாராகவில்லையா? அவர்கள் தங்களது அம்மாக்களின் பெயர்களைக் கொண்டிருப்பார்களா? அடுத்தற்குப் பிறகு வரும் திங்கட்கிழமை எனது பிறந்தநாள் வருகிறது என்பதை ஒருவேளை நீ மறந்துவிட்டாயோ? என்னைப் பார்க்க நீ மருத்துவ மனைக்கு வருவாயா?”; நான் எழுந்து கொண்டேன், நான் உட்கார்ந்தேன், நான் மீண்டும் எழுந்து கொண்டேன்; கடிகாரம் மெதுவாக ஓடியது, தபால் தாமதமாக வந்தது, மதியம் குளுமையாக மாறியது; பூனை அவனுடைய கோட்டை நக்கியது, நாற்காலியைக் கிழித்துக் குதறியது, மூடியிருக்காத ஒரு இழுப்பறையில் படுத்துத் தூங்கியது; நான் ஒரு அறைக்குள் நுழைந்தேன், எனது தோல் நடுங்குவதை உணர்ந்தேன், பிறகு மறைந்தது, நான் ஒரு மெழுகுவர்த்தியைப் பொருத்தினேன், ஏதோ நகர்வதை நான் பார்த்தேன், நிழல், எனது சொந்தக் கையாக இருப்பதை நான் அறிந்து கொண்டேன், நான் என்னையே ஒரு பொருளாக இருப்பதாக உணர்ந்தேன்; காற்று கடினமானதாக இருந்தது, வீடு ஆடியது, தோல்மூடிய விதைகள் செழித்து வளர்ந்தன, பாலூட்டிகள் போன்ற ஊர்ந்து செல்லும் ஜந்துகள் மறைந்தன ( சொர்க்கம் மேலே இருக்க வேண்டுமா? நரகம் கீழிருக்கிறதா? ஆட்டுக் குட்டிகள் இன்னும் சாதுவாகக் கிடக்கின்றனவா? சிங்கம் கர்ஜிக்கிறதா? ஓடைகள் எல்லாம் தெளிவாக ஓடுகின்றனவா? பின்னர் நாம் ஒருவரை ஒருவர் ஆழமாக முத்தமிட்டுக் கொள்ளலாமா?); தீபகற்பத்தில் சில புராதனக் கப்பல்கள் நங்கூரமிட்டு நிற்கின்றன, வயலில் எருமை அசையாமல் நிற்கிறது, கிராமத்தில் சிறுத்தை அதன் இரையைத் துரத்துகிறது; கட்டிடங்கள் உயரமாக இருக்க வேண்டும், கட்டுமானங்கள் திடமுடன் இருக்க வேண்டும், படிக்கட்டுகள் வளைந்து வளைந்து இருக்க வேண்டும், அறைகளில் சிலநேரங்களில் அங்கொரு பிரகாசம் இருக்க வேண்டும்; தொப்பிகள், தொப்பி-தாங்கி மேலேயே இருக்க வேண்டும், கோட்டுகள் கொக்கிகளிலேயே இறந்து தொங்க வேண்டும், பூங்கோரைகள் பூக்கப் போவது போலத் தோன்றும்—அவைகளின் நறுமணம் தோற்கடித்துவிடும் என்பதை நான் அறிவேன்; பூமி அதன் அச்சில் சுழல்கிறது, அச்சு கற்பனையானது, பள்ளத்தாக்குகள் மலைகளுடன் உரையாடும், மலைகள் கடலுடன் உரையாடும், கடல் உலர் நிலங்களோடு உரையாடும், உலர் நிலங்கள் இப்பொழுது கைகால்கள் தரிக்கப்பட்ட பாம்புகளுடன் உரையாடும்; நான் ஒரு மனிதனைப் பார்த்தேன், அவன் ஒரு போர்வைக்குள் இருந்தான், நான் ஒரு துடுப்புப் படகில் உட்கார்ந்திருந்தேன், எனக்காக அவன் இனிமையாய் விசிலடித்தான், நான் எனது கண்களைச் சுருக்கிக் கொண்டேன், அவன் எனக்கு சைகை செய்தான், வா இப்பொழுது; நான் திரும்பினேன், நான் என்ன செய்கிறேன் என்பதை அறியாதவள் போல நான் துடுப்பைச் செலுத்தி வெளியேறினேன்.

௦௦௦௦௦௦ .

Comments are closed.