வெங்கடேஷ் கவிதைகளைப் பற்றிய முன்னுரை / சிபிச்செல்வன்

[ A+ ] /[ A- ]

ஆர்.வெங்கடேஷ்

ஆர்.வெங்கடேஷ்

எளிய கவிதைகளை எழுதுவதுதான் கடினம். எளிமைபோல எழுதுவது நிறைய பேருக்கு சாத்தியம். ஆனால் அவை எல்லாம் கவிதை என்ற வடிவில்தான் இருக்கும்.மாறாக அதில் உயிர் இருக்காது.

தமிழில் எழுதப்படுகிற பெரும்பாலான கவிதைகள் இந்த வரையறைக்குள்தான் அடங்கிவிடுகின்றன. எளிமையாக இருப்பதெல்லாம் கவிதை அல்ல . இந்தப் புரிதல் கவிதை எழுதுகிற பெரும்பாலானவர்களுக்கு இல்லை. அவர்கள் எழுதுவதெல்லாம் கவிதைதான் என்ற மயக்கத்தில் இருந்துவிடுகிறார்கள்.

இதற்கு அவர்களின் நண்பர்கள் அல்லது அவர்களுடைய குழுவினரின் மேலதிகமான பாராட்டுகளும் அதை நம்பிவிடுகிற கவிஞர்களின் இயல்புகளுமே தமிழில் மோசமான கவிதைகளின் , கவிஞர்களின் எண்ணிக்கைக்குக் காரணங்கள்.

மற்ற மொழிகளின் கவிதைகளுக்கு இல்லாத , கவிஞர்களுக்கு இல்லாத சவால் தமிழ் கவிஞர்களுக்கு உண்டு. அது தமிழ்க் கவிதையின் வரலாறுதான். இரண்டாயிரம் வருட கவிதையின் வரலாறு. சங்க கவிதைகளின் காலத்திலிருந்து இன்றைய கவிதை வரை நீண்ட நெடிய பாரம்பர்யம் கொண்டது தமிழ்க் கவிதை.
தமிழ்க் கவிதையின் பாரம்பர்யம் தெரிந்து கவிதை எழுதுகிற கவிஞர்களுக்குத் தமிழ்க் கவிதையின் வடிவங்களும் தமிழ்க் கவிதையின் போக்குகளும் மாற்றங்களும் தெளிவாகப் புரிந்துவிடும். மற்ற மொழிகளில் இல்லாத நெடிய வரலாறே தமிழ்க் கவிதையின் இத்தனை வடிவங்களுக்கும் பெயர்களுக்கும் காரணங்கள்.

ஆம் கவிதைக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒரு பெயர் இருந்திருக்கின்றன. ஒரு வசதிக்காக மரபுக் கவிதை ( செய்யுள் ) புதுக்கவிதை என இரண்டாக பிரித்தாலும் அது ஒரு வசதிக்காக தானேயொழிய மற்றபடி புதுக்கவிதை , பழைய கவிதை ( மரபுக் கவிதை ) என்பதெல்லாம் கிடையாது. கவிதையை எந்தப் பெயரில் சுட்டினாலும் எழுதினாலும் பேசினாலும் பொதுவாக அவை கவிதைதான்.
குறுந்தொகையில் இருக்கிற ஒரு பாடல் அல்லது கவிதை அல்லது பாட்டு இதில் எந்தப் பெயரைச் சுட்டி நாம் வசதிக்காக அழைத்தாலும் அது படிக்கும்போது நம்மோடு அனுபவத்திற்கு இயைந்து போகிறதோ அதை நாம் கவிதை என சொல்கிறோம்.

தமிழ்க்கவிதையின் நீண்ட பாரம்பர்யத்தை உணர்கிற பெரும்பாலானவர்களுக்குக் கவிதை எழுதுவதற்கே தயங்குவார்கள். அவ்வளவு வகைகளை நமது முன்னோடி கவிஞர்கள் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்பது நமது முன்னால் இருக்கிற நிதர்சனமான உண்மை. இந்த உண்மையை அறிந்துகொண்டு நமது கவிதைகளின் சவால்களை மீறி கவிதையைப் படைக்கிற வலிமையைக் கவிஞன் கொண்டிருக்க வேண்டும்.

தமிழ்ப்புதுக்கவிஞரான ஞானக்கூத்தனைத் தன் ஆதர்சமாகக் கொண்டிருக்கிற துளசி என்கிற ஆர்.வெங்கடேஷ் தன் கவிதைகளைக் கடந்த மூன்ற தசாப்தங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார், இது இவரின் இரண்டாவது கவிதை தொகுப்பு.அவருடைய நீண்ட கால நகர வாசம் அவரை நகரவாசியின் மனோபாவத்திற்குக் கொண்டு செலுத்தியிருக்கிறது.

துளசியின் கவிதைகள் எல்லாமே நகர அனுபவங்களையே சார்ந்து எழுதப்பட்டுள்ளன. அவற்றை ஒரு வசதி கருதி சில வகைகளாகப் பிரித்துக்கொள்ளலாம்.

குழந்தைகள் பருவத்தினைப் பற்றியது. நடுத்தர வயது அல்லது விடலைப் பருவத்திற்கானது. மற்றொன்று முதியவர்களின் மனநிலையைப் பற்றியதாக இருக்கின்றன. பெரும்பாலான கவிதைகள் இந்த மூன்று வகைகளில் அடங்கிவிடுகின்றன.

இவற்றில் குழந்தைகள் பற்றியோ அல்லது குழந்தைகளுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிற கவிதைகளும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவனவாக இருக்கின்றன. இயற்கை என்ற கவிதையை இந்த வகையில் சிறப்பானதாகச் சொல்லலாம்.
அதேபோல நீண்ட கவிதைகளின் மீது இவருக்கு ஆர்வமிருக்கிறது. அதில் பெரும்பாலான கவிதைகளில் எண்களிட்டு எழுதப்பட்டுள்ளன.

அந்த எண்களில் குறிக்கப்பட்டுள்ள சில அனுபவங்கள் நமது வாசக மனதோடு நல்ல அனுபவங்களாக மாறிகிற வலிமையைப் பெற்றுள்ளன.

விலங்குகளைப் பற்றி, பறவைகளைப் பற்றி துளசி எழுதியிருக்கிற கவிதைகளிலும் இவரின் நுட்பமான பார்வைகள் கவிதைகளாக உருமாறி வாசகனுக்கு நல்ல அனுபவங்களாகியுள்ளன. இதற்கு உதாரணமாக பூனை மற்றும் யானை கவிதைகளைச் சொல்லலாம். அக்கவிதைகளை இங்கே ஒருமுறை சொல்ல நான் விரும்பவில்லை.தொகுப்பிற்குள் நீங்களே வாசித்து உணர்ந்துகொள்ளலாம்.

நகரத்தின் இன்னொரு இயல்பான போக்குவரத்து சாதனங்களைப் பற்றிய இவரின் கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. பேருந்து பயணத்தைப் பற்றிய கவிதைகளும் அந்த அனுபவங்கள் முயன்றால் உங்களுடையதாகவும் மாற வாய்ப்புள்ளன.
அலுவலகங்கள் அவற்றின் இயக்கங்களைப் பற்றிய அனுபவங்களும் எழுதப்பட்டுள்ளன.கணிணிகள் மற்றும் பைல்கள் , மேஜைகள் பற்றியும் இவரின் கவிதைகளில் பரவலாக இடம் பிடித்துள்ளன.

கடந்த மூன்று தசாப்தங்களாகத் துளசி எழுதிய கவிதைகளின் இரண்டாவது தொகுப்பாக இங்கே தொகுக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் திட்டமிட்டு வலிந்து எழுதப்பட்டவையல்ல. என்றாலும் அந்தந்தக் காலத்தில் தொகுப்பாக வெளிவந்திருந்தால் வாசகர்களுக்கு இன்னும் எளிதாக சென்றடைந்திருக்கும் என்பதே உண்மை.

கவிதையைவிட வெங்கடேஷ் என்ற பெயரில் உரைநடையைதான் இவர் அதிகமானதாக எழுதி வந்திருக்கிறார். நாவல் சிறுகதை கட்டுரை என பல்வேறு வடிவங்களிலும் இயங்கி வந்துள்ள இவருக்கு இது இரண்டாவது கவிதை தொகுப்பு என்பது கொஞ்சம் குறைவாகதான் படுகிறது.

உரைநடையில் நிறைய எழுதியிருக்கிறதாலேயே இந்தக் கவிதைகளிலும் நிறைய சிறுகதை வடிவங்களில் கதை சொல்லும்பாணி கவிதைகளை முயற்சித்துள்ளார். அந்த முயற்சிகள் எப்படியுள்ளன என்பதை நீங்களே வாசித்து ஒரு முடிவிற்கு வர இக்கவிதை தொகுப்பைப் பரிந்துரை செய்கிறேன்.

துளசி நிறைய நல்ல கவிதைகளை எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்.

05 / 11 / 2017
சேலம்
சிபிச்செல்வன்

Comments are closed.