வெந்துருதி தி(த்)றைஸ் – ( சிறுகதை ) – கோமகன்.

[ A+ ] /[ A- ]

download (30)

முடிவு.

ஹொப்பித்தால் ஃவிஷா(L’hôpital Bichat):

அந்த ஆஸ்பத்திரியின் அவசரப்பிரிவு பலரின் அழுகுரலில் திணறியது. மதுமிதா செய்வதறியாது அழுதவாறே நின்றிருந்தாள். இந்த அல்லோல கல்லோலத்திற்குள்ளும் ஆஸ்பத்திரியின் அந்தப்பிணவறையில் அமைதியின் ஆட்சி அள்ளித்தெளிந்திருந்தது. அந்த நீண்ட அறையின் மாபிள் பதித்த தரையின் மேல் பலவகை அடுக்குகளில் லாச்சிகள் இருந்தன. லாச்சிகளின் முனையில் இருந்து மைனஸ் 20பாகை உறை குளிரின் வெண்புகை கசிந்து கொண்டிருந்தது. சிறிது மணித்துளிகளுக்கு முன்பு ஆயிஷா, சுலைமான், டோலி, ரத்தினசிங்கம் என்ற ரட்ணா என்று நால்வராக இருந்த நாங்கள் இப்பொழுது ‘அவைகளாக’ இலக்கங்களுடன் லாச்சிகளில் உறைந்து போயிருந்தோம். இந்த இலக்கங்கள் எல்லாமே முழு உருவங்களாக இல்லாது குவியல்களாக இருந்தன. பின்னர் அவை மருத்துவர்களால் சீர்செய்யப்பட்டு உருப்பெறலாம்.

0

அல்ஜீரியாவின் வடக்கு பிராந்தியமான கபிலி-யில் (Kabylie) மார்க்க சிந்தனைகளில் ஊறித்திளைத்த அபூபக்கர் பாத்திமா தம்பதிகளின் மூத்த புதல்வியாக பிறந்த ஆயிஷா பாரிஸ் வந்து பதினைந்து கோடைக்காலங்களைக் கடந்து விட்டாள். தானும் தன்பாடும் என்றிருந்த ஆயிஷா கோடை விடுமுறையின் பொழுது தனது அப்பா அம்மாவைப் பார்ப்பதற்காக அல்ஜீரியா சென்றிருந்தவேளை, நீண்ட காலத்தின் பின்னர் தனது கல்லூரித்தோழனான சுலைமானை ஓர் தேனீர்விடுதியில் சந்தித்தாள். சுலைமான் முகத்தில் அடர்தாடி அப்பியிருந்தது.உடலை ஓர் வெள்ளை நிற நீண்ட அங்கி மறைத்திருந்தது. தலையை ஓர் தொப்பி மறைத்திருந்தது. மொத்தத்தில் அவனது சிவந்த முகமே ஆயிஷாவுக்கு தெரிந்தது. அவன் சாதாரண இளைஞனாக இல்லாது ரிப்பிக்கல் இஸ்லாமியனாகவே இருந்தான். அந்த தேனீர்விடுத்திச் சந்திப்பில்தான் அப்பாவியான ஆயிஷாவின் வாழ்வில் விதி தனது விளையாட்டை ஆரம்பிக்கப்போவதை அவள் அறிந்திருக்கவில்லை. சுலைமான் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர ஆவி தள்ளிய தேனீரையும் வெளியே இருந்த தெருவையும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் அவனது அமைதியைக் குலைக்க விரும்பி ……

“நீ இப்பொழுது முன்பு போல் இல்லை “.

“எப்படியில்லை”?

“படிக்கும் பொழுது எவ்வளவு கலகலப்பாய் இருப்பாய்.? ”

“நாம் நினைப்பது போலவா வாழ்க்கை அமைக்கின்றது? ”

“ஏன் நன்றாகத்தானே இருக்கிறாய்?”

“நாம் மட்டும் இருந்தால் சரியாகப் போகுமா? எம்மை சுற்றியுள்ளவர்களை பார். எவ்வளவு இழிநிலையில் இருக்கின்றார்கள்?”

“ஏன் எல்லோரும் நன்றாகத்தானே இருக்கின்றார்கள் “?

“இந்த பிரெஞ் வெள்ளை நாய்கள் எங்கள் நாட்டிலும் அக்கம் பக்கம் நாடுகளிலும் எங்களை படுகொலை செய்வது உனக்கு தெரியவில்லையா? இவர்களை எல்லாம் ஓட ஓட கொளுத்தி எரிக்கவேணும். இதை புனிதப்போரால்தான் செய்ய முடியும் “.

என்று கண்கள் பிதுங்க தொடர்ந்த சுலைமானை இடைவெட்டிய ஆயிஷா, “எமது மார்க்கத்தில் இப்படியெல்லாம் இல்லை. உன்னை யாரோ சரியாகக் குழப்புகின்றார்கள். வயதான உனது அம்மாவை தவிக்கவிடாதே” என்ற அவளை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த சுலைமானின் மூளை வேறு வழியாக செயல்பட்டு கொண்டிருந்தது.

“உன்ரை பாரிஸ் ரெலிபோன் நம்பரை ஒருக்கால் தா” என்று வாங்கி குறித்துக் கொண்டான்.

0

அமெரிக்காவின் வெர்ஜினியாவைச் சேர்ந்த அந்த வீடு குழந்தைகளின் கலகலப்பால் அமளிதுமளிப்பட்டது. ஜோனஸ் சாரா தம்பதிகளும் தங்களது குழந்தைகளுடன் குழந்தைகளாக மாறியிருந்தனர். அந்த வீட்டில் ஓர் புதிய வரவு வருவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது.குழந்தைகளுக்கு வரப்போகும் புதிய வரவுக்கு என்ன பெயர் வைப்பது என்ற குழப்பங்களே மிஞ்சி இருந்தன. நிறைமாதக்கர்ப்பணியான மிமி அந்த வீட்டின் வெளிப்புறத்தே ஓர் மூலையில் இருந்த சிறிய கூட்டினுள் படுத்திருந்து, குழந்தைகளது விளையாட்டில் தானும் விளையாட முடியாத ஆயாசத்தால் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. எதற்கும் கைகாவலாக ஜோனஸ் தனது நண்பனான டொக்டர் நிகேலையும் அழைத்து வந்திருந்தான். நிகேலின் உதவியுடன் அன்று இரவே மிமி கருப்பு நிறத்தில் ஒருசில நிமிட இடைவெளிகளில் மூன்று குட்டிகளை ஈன்றது. அருகில் இருந்த நிகேல் குட்டிகளை பார்த்து விட்டு,

“ஹேய் ……. ஜோனஸ் யு கொட் த்ரீ போய்ஸ்”.

குட்டிகளின் அழகில் மயங்கிய அவன் தனக்கொன்றை எடுத்துக் கொண்டான். நிகேலின் ஆலோசனையின்படி மூத்த குட்டிக்கு ‘டோலி’ என்று பெயர் வைக்கப்பட்டது. காவல் துறையில் இருந்த ஜோனஸின் பராமரிப்பில் சில மாதங்களைத் தத்தெடுத்துக் கொண்ட டோலி, பிரான்ஸ் காவல்துறையின் சிறப்பு கொமோண்டோ படையணிகளின் பொறுப்பாளர் பாஸ்கலின் விசேட அழைப்பின் பேரில் பிரான்ஸ் பயணமாகியது. பல சிறப்பு பயிற்சிகளைப் பெற்ற டோலி கமாண்டோ படையணிகள் உற்ற தோழனாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் தன்னை வளர்த்துக்கொண்டது.

0

வெறும் ஆறே மாதத்தில் மதுமிதாவைக் கலியாணம் கட்டிய ரட்ணா பாரிஸின் சாதாரண தமிழ் சனங்களின் இயல்புடன் பத்துடன் பதினொன்றாக இருந்தான். ஆம் ……. அவன் ஓர் பிரெஞ் பாரில் பார்மன்(Barman) ஆக வேலை செய்து கொண்டிருந்தான். கடந்த இருபது வருடங்களாக அந்த பாரே அவனது சொர்க்க புரியாக இருந்தது. சிறிய வயதில் தந்தையைப் போருக்குப் பறிகொடுத்து தன்னுடன் கூடப்பிறந்த சகோதரிகளுக்கு ஓர் வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்குமட்டும் தன்னை ஒறுத்து முப்பத்தி ஏழாவது வயதில் மதுமிதாவைக் கலியாணம் செய்திருந்தான். பக்கத்தில் மதுவென்ற போதை இருந்தாலும் அதனை முழுதாக அனுபவிக்க வக்கில்லாதவகையில் அவனது வேலை நேரம் இரண்டு நேரங்களாக இருந்தது. அவளை விட அவனே இதுபற்றி அதிகம் கவலை கொண்டவனாக இருந்தான். எங்கே அவளைத் தன்னால் சந்தோசப்படுத்த முடியாமல் போய் விடுமோ என்ற ஆண் மையச் சிந்தனை அவனக்கலங்கடித்தது.

அவன் வேலை செய்த பாரில் ஒவ்வரு வெள்ளிக்கிழமை பின்னேரங்களிலும் “ஹப்பி அவேர்ஸ்” என்றொரு நேரம் உண்டு. கிழமை நாட்களில் வேலை செய்து அலுத்துக்களைத்த வெள்ளையர்கள் ஆண் பெண் பேதமின்றி கிழமை முடிவை கொண்டாட அன்றிரவே தயாராகுவார்கள். பியரும் கொக்டெயிலும் இளையவர்கள் கையில் கஞ்சாவும் தாராளமாகவே புழங்கும். ரட்ணாவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உயிர் போய் வரும். ஆனாலும், அவனது முதலாளியின் அதிகப்படியான சம்பளமும் வாடிக்கையாளர்களது டிப்ஸ் காசும் அவனது உடல் வலிகளை மறக்கடித்திருந்தன.

0
சுலைமான் ‘இப்றகீம்’ என்ற பெயரில் கபிலியில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் வந்து வருடம் ஒன்றைக் கடந்து விட்டிருந்தான். அவன் சார்ந்த ஜிகாத் இயக்கமான இ.பொ.மு-வின் அசைன்மென்ருக்காக பிரான்ஸ் வந்து, முதலில் பிரான்சின் தென்கோடியில் உள்ள ‘மார்செய்ல்’ நகரில் சில காலம் இருந்தான். பின்னர் கட்டளைப்பீடத்தின் உத்தரவின் படி பாரிஸ் வந்து விட்டான். அவன் இப்பொழுது ஓர் கைதேர்ந்த கெரில்லா போராளி. சிரியாவில் விசேட பயிற்சி பெற்றவன். நவீன பாணிக் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதிலும், தாக்குதல்களுக்கு ரெக்கி எடுப்பதிலும், அதியுயர் அழுத்தமான வெடிகுண்டுகளை(சக்கைகளை) தயாரிப்பதிலும் இ.பொ.மு-வில் இவன் தனிக்காட்டு ராசா. அவனை சுட்டுக் பொசுக்கினாலும் அவனிடம் இருந்து ஒரு உண்மையையும் எடுக்கமுடியாத விசேட தகமைகளால் இ.பொ.மு ஓர் முக்கிய அலுவலக சுலைமானை பிரான்ஸ் அனுப்பி வைத்திருந்தது. சுலைமான் பல முக்கிய ரெக்கிகளை இ.பொ.மு-வுக்கு அனுப்பிக் கொண்டே அதன் புதிய உத்தரவுக்காகக் காத்திருந்தான். நேர காலம் வரும் வரைக்கும் அவன் ஆயிஷாவுடன் தொடர்புகளை எடுக்க விரும்பவில்லை.

0

நிகழ்வு 01:

அன்றைய வெள்ளிக்கிழமை ரட்ணாவுக்கும் மதுமிதாவுக்கும் திருமண நாளாக விடிந்தது. முதல்நாள் இரவே முதலாளிடம் இரண்டு மணித்தியாலங்கள் முன்னதாக சொல்லி விட்டு வீடு வந்த ரட்ணாவுக்கு அன்று என்னமோ மதுமிதா மிகவும் அழகாக இருந்தது போல் இருந்தது. இது சிலவேளைகளில் அவன் கொஞ்ச நேரத்துக்கு முதல் முதலாளியுடன் சேர்ந்து குடித்த சிவந்த சோமபானத்தின் எதிர்விளைவுகளில் ஒன்றாகவும் இருக்கலாம். அவளும் ஒருவித மார்கமாகவே. இருந்தாள். ஹோர்மோன் சுரப்புகள் இருவர் பக்கத்தாலும் கலவையில் வேறுபடக் கட்டில் முயங்கலில் போர்க்களமாக மாறியது. முயங்கிய களைப்பில் நித்திரையாகி இருந்த மதுமிதாவைக் குழப்பாது வேலைக்கு செல்வதற்காக குளியலறைக்குள் புகுந்து கொண்டான். அவன் குளித்து முடித்து வெளிக்கிட்டு வெளியால் வர கபேயுடன் இரண்டு கப்புகளுடன் அவள் ஓர் கள்ளச் சிரிப்புடன் நின்றிருந்தாள். கபேயை அவசரமாகக் குடித்து விட்டு அவளது நெற்றியில் ஓர் முத்தத்தைப் பதித்து விட்டு வேலைக்கு ஓடினான் ரட்ணா.

வழக்கத்தை விட அந்த வெள்ளிக்கிழமை மாலை பாரில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. வெள்ளிக்கிழமைகளில் பதின்மூன்றாம் திகதி வந்தால் அது அபசகுனமான நாள் என்ற செய்தி பிரெஞ் மக்களின் மனதில் காலங்காலமாகப் பதியப்பட்டதாகும். ஆனாலும், இளசுகளின் வருகை அந்த பாரை கலகலப்பாக வைத்திருந்தது. இரவு நேரம் பதினொன்றரையைத் தாண்டும் பொழுது உச்ச ஸ்தாயியில் வந்த பாட்டும் அதற்கேற்ற இளசுகளின் நடனங்கள் என்றும் அந்த பார் உச்சத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது. பாரில் ரட்ணா பம்பரமாக நின்றிருந்தான். அவனுடன் உதவிக்காக அலெக்ஸ்-உம் சேர்ந்து கொண்டாள்.

0

ஓர் கறுப்புநிற றெனோ கார் அந்த பாரை மூன்று தடவைகள் கடந்து சென்று கொண்டிருந்தது. அதை சுலைமானின் நண்பன் அபூபக்கர் ஓட்டிக்கொண்டிருந்தான். அந்தக் காரின் டிக்கியினுள் சுலைமானின் செய்நேர்த்தி கலக்கலாக இருந்தது. பாரில் நின்றிருந்த ரட்ணாவுக்கு இந்த ரெனோவின் வழமைக்கு மாறான சுற்றுகை ஒருவிதமான சஞ்சலத்தைக் கொடுத்தது. ஆனாலும் பார்க்கிங் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் யாராவது அலைந்து கொண்டிருப்பார்கள் என்று அவன் அலையும் மனத்தைத் தேற்றிக்கொண்டான். சுலைமானின் உத்தரவு கிடைத்ததும் நான்காவது சுற்றில் பாரை அண்மித்திருந்த அந்த றெனோ மின்னல் வேகத்தில் பாரின் எதிர்ப்பக்கம் திரும்பி நுழைவாயிலை உடைத்துக்கொண்டு சென்று வெடித்தது. பார் கரும்புகையினால் சூழப்பட்டு ரணகளமாக மாறியது.

0

நிகழ்வு 02:

அன்றைய மாலைப்பொழுதில் சுலைமான் தனது அலைபேசியினால் ஆயிஷா முன்பு கபிலியில் தந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தினான். றிங் சென்று கொண்டிருந்தது.

“ஹலோ………….. ”

“நான் சுலைமான் பேசிறன் “.

“நீ எங்கை நிக்கிறாய் “?

“பாரிசிலைதான் நிக்கிறன். உன்னைப் பாக்க வேணும் போலை கிடக்கு “.

“எப்ப பிரான்சுக்கு வந்தனி? நீ ஏன் எனக்கு சொல்லேலை “?

“உனக்கு நேரை சொல்லுறன்”.

“சரி இப்பவாவது என்ரை நினைப்பு வந்திதே. உடனை வீட்டை வா “.

“அட்ரஸை சொல்லு “.

அட்ரஸைக் குறித்துக்கொண்டு சுலைமானின் கரியநிற மெர்ஸ்டெஸ் பென்ஸ் செயின்டெனியில் இருக்கும் அவளது வீடு நோக்கிச் சென்றது. ஆயிஷாவின் வீட்டை அடைந்த அவன் வழக்கத்தை விட கலகலப்பாக ஆயிஷாவுடன் பழைய கதைகளைக் கதைத்துக்கொண்டிருந்தான். ஆயிஷாவும் அவனின் பகிடிக்கதைகளை தன்னிலைமறந்து கேட்டுக்கொண்டிருந்தாள். இடைக்கிடை அவன் அவளது ரொயிலெட்-க்குள் சென்று அவனது அலைபேசியில் செய்திகளைத் தனது நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளாக அனுப்பிக் கொண்டிருந்தான். அவனது மேற்பார்வையில் அதுவரை பாரிஸின் வேறு வேறு இடங்களில் அவனது நண்பர்கள் வெற்றிகரமாக தங்கள் உயிரிழப்புகளுடன் பாரிய தாக்குதல்களை நடாத்தி விட்டிருந்தனர். எல்லாத்திலும் சூராதி சுரனான அவனுக்கு அப்பனுக்கு அப்பர்களும் பிரெஞ் உளவுத்துறையில் இருப்பார்கள் என்பது எனோ தெரியாமல்ப் போனது. அவனது அலைபேசி உரையாடல்களை அட்சரம் பிசகாது ஒட்டுக் கேட்டிருந்த அவர்கள் அவனுக்கு செயின்டெனியில் முடிவுரை எழுதத் தயாரானார்கள்.

0
download (31)
அந்த அதிகாலை இரவு சுற்றுச்சூழல் நிகழப்போகும் விபரீதத்தை அறியாது அமைதியாக இருந்தது.சுற்றுச் சூழலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சனங்களின் உறக்கத்தைக் கெடுக்காது மூன்றே தளங்களைக் கொண்ட அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தை பயங்கரவாதத் தடுப்புக் கொமாண்டோக்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்கள். தொடர்மாடிக் கட்டிடத்தின் கூரையிலும் பக்க வாட்டிலும் முன்பாகவும் அவர்கள் தயார் நிலையில் நிரவியிருந்தார்கள். அவர்களது முகங்கள் உருமறைப்பு செய்திருந்தன. அந்த ஏரியாவின் மின்சாரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. அவர்களது கருத்த சீருடை இருட்டுடன் இருட்டாக இருந்தது. அவர்களுக்குள் சைகை மொழியே வழக்காக இருந்தது.

எடுவாவின் கைகளில் இருந்த டோலி திமிறிக்கொண்டு இருந்தது. அது சத்தமிட்டு நிலைமையை குழப்பிவிடுமே என்பதற்காக அதன் வாய் தோல் மூடியினால் கட்டப்பட்டிருந்தது. எல்லோருமே அணியின் தலைவன் பஸ்காலின் சமிக்கைக்காகக் காத்திருந்தார்கள். பஸ்கால் உளவுத்துறையின் உத்தரவு கிடைத்ததும் கைகளை உயர்த்தினான். கதவின் பக்கத்தில் இருந்தவன் கதவை உடைக்க, எடுவாவின் கைகளில் இருந்து விடுபட்ட டோலி முன்னால் பாய்ந்து சென்ற அதே வேளை தொடர்மாடிக் கட்டிடத்தின் உள்ளே இருந்து வெடித்த வெடியினால் எல்லோருமே குவியலாகினார்கள். மறுநாள் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக டோலியே முக்கியமாகப் படத்துடன் இருந்தது. சனங்கள் அதற்கு மெழுகு திரியும் மலர்வளையங்களும் சாத்திக்கொண்டிருந்தனர்.

கலவை:

99 வீதம் உண்மை 01 விதம் கற்பனை.

•••

Comments are closed.