வேல் கண்ணன் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download (89)

1. அவள் பெயர் எனக்கு தெரியாது

முழு நிலவு நாளில்

கடற்கரை செல்லும் போதெல்லாம்

அந்த சிறுமியை பார்ப்பேன்.

கரையில் விளையாடிக் கொண்டிருப்பாள்

சக குழந்தைகளுடன்.

யாரென வினாவினேன்.

பதிலாக, ஓர் பறவையைப் பற்றிச் சொல்லத் துவங்கினாள்.

சிறகசைக்காமல் ரொம்ப தூரம் பறக்கும்..

சிச்சிறுமிகளை கண்டால் கொண்டாட்டம் கொள்ளும்..

கடல்நீரில் உப்பை பிரித்து நன்னீராய் அருந்தும்

அழகுடல்

நீளிறகு

செங்கால்

மஞ்சள் கூர் மூக்கு

இன்னும்.. இன்னும்..

முழு நிலவிலிருந்து அந்தப் பறவை உதித்ததாம்.

இருகைகளாலும் அளந்தபடியே

நிலவிலிருந்து பறந்து வந்ததென

மண்ணில் பாவித்தபடியே கூறினாள்.

பிரதி மாதம் அதேநாளில்

விருப்ப மனிதஉருகொள்ளுமாம்.

கால் மட்டும் ஒன்றாம்..

ஏனென்றேன்

நிற்கத்தானே.. ஒன்று போதும்

சொல்லிய கணத்தில் மஞ்சள் நிறமாய் மினுக்கினாள்

பறவையின் பெயரை சொல்லவே இல்லை.

அவள் பெயரும் எனக்குத் தெரியாது.

2. கதிரொளியால் உருகாத உறைபனி கட்டிகள்

உன்னுடன்

கடற்கரை சாலையில் நடந்தேன்.

அங்காடித் தெருக்களைக் கடந்தேன்.

திரையரங்குகளை விமர்சித்தேன்.

கோவில்களை வலம் வந்தேன்.

குளங்களை நேசித்தேன்.

குறிப்பாக, அந்த வில்வ மரத்தடி குளம்.

கனமற்று போன கணத்தில்

ஒரே ஒரு பொழுதையேனும் குற்றமில்லா

நகரத்தில் வாழ்வதை அறிந்தேன்.

எல்லா பொழுதுகளும் வெண்மையில்

கழிக்க விரும்பினாலும்,

இடர் செய்யும் அந்நியர்களின் தலையிடும்

அனுமதியுடனே நிகழ்ந்தது.

உன்னிடமிருந்து வரப்பெற்ற

இந்த வெறிச்சோடிய குறுஞ்செய்தியில்

யாதொன்றையும் அறியேன்

எதனின் பொருட்டு பித்தாக வேண்டும் என்பதை.

3. மெல்லிசை

கனலென ஒளிர்ந்த தருணத்தில்

சருகென உதிர்ந்த பொழுது

அந்த நட்சத்திரத்தைப்

பார்த்திருக்க வேண்டும்.

வைகறைக் கீற்றில்

அந்திப் பனியில்

அந்தக் கவிதையைப்

படித்திருக்க வேண்டும்.

கணநேரத்தில் தாழ்ந்திறங்கி

சூட்சுமமாய் எழும்பிக் கரைந்த நொடிகளில்

அந்தப் பறவையின் மீச்சிறு ஒலியைக்

கேட்டிருக்க வேண்டும்.

நமக்கான பொதுவானவைகள் எல்லாம்

கலந்த பிறகும், இந்த இரவின் மீது

உன் வருகையின் மெல்லிசை

படர ஆரம்பிக்கிறது.

4. கண்டடையும் உன்மத்தம்

இரவு பனியாய்

நோய்மையின் பேரச்சம் நீக்கமற்று கிடக்கிறது.

அரவம் தழுவிடிலோர் மேனி

உடற்கவசங்களை தரித்துக் கொண்டது.

முன் இறந்த காட்டுயுயிர் ஆவிகளின் தாகத்திற்கு

வற்றாத நீருற்றுகளை அடைய இன்னும் சில

கணங்களே.

மிகு உலகில் மிகு வெக்கையில்

மிகு அலைதலில் மிகு தனிமையில்

கண்டடைய கூடும் முரண்களின் அடையாளம்.

•••

Comments are closed.