ஷேக்ஸ்பியரின் மாக்பெத் ( அங்கம்-3 ) மொழியாக்கம்-சத்தியப்பிரியன்.

[ A+ ] /[ A- ]

download

காட்சி-1

இடம்: பாரஸ் அரண்மனை

( பாங்கோ உள்ளே நுழைகிறான். )

பாங்கோ :இதோ நீ கேட்டதெல்லாம் கிடைத்து விட்டது. நீதான் காடர்; நீதான் கிளாமிஸ்; நீதான் அரசன். அந்த மூன்று சூனியக்காரிகள் சொன்னது போலானது.எனக்கு ஒரு சந்தேகம் நீ அவர்கள் வாக்குப் பலிக்கத் தப்பாட்டம் ஆடிவிட்டாயோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் உன் வாரிசுக்கு அரச பதவி இல்லை என்பதும் அவர்கள் சொன்னதுதானே. நான் ஒரு அரச பரம்பரையின் மூத்த அரசனின் தந்தை. உன்னைப் பற்றி சொன்னது உண்மையென்றால் என்னைப் பற்றிச் சொன்னதும் உண்மைதானன்றோ? போதும் இதோடு என் வாயை மூடிக்கொள்கிறேன்.

( துந்துபி முழங்க அரசர்க்குரிய உடையில் மாக்பெத் வருகிறான். உடன் திருமதி.மாக்பெத் அரசி உடையில் வருகிறாள். லெனாக்ஸ் ராஸ் பிரபுக்கள் மற்றும் சீமாட்டிகள் உடன் வருகின்றனர். )

மாக்பெத் ( பாங்கோவைச் சுட்டியபடி ): இதோ நமது சிறப்பு விருந்தினர்.

திருமதி.மாக்பெத் : நாம் அவரை மறந்திருந்தால் அது நல்லதில்லை. விருந்து முழுமையடையாமல் போய்விடும்.

மாக்பெத் ( பாங்கோவிடம்) இன்று மதியம் சிறப்பு விருந்திற்கு ஏற்பாடாகி இருக்கிறது பாங்கோ தாங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

பாங்கோ : தங்கள் ஆணைக்குக் கட்டுப்படுவதைத் தவிர எனக்கு என்ன செய்யமுடியும் அரசே ?

மாக்பெத் :இன்று மாலை சவாரிக்குச் செல்கிறாயா ?

பாங்கோ : ஆம் பிரபு.மாக்பெத் : உன்னுடைய மேலான அறிவுரைகளைக் கேட்கக் காத்திருக்கிறோம். உன்னுடைய அறிவுரை என்றுமே ஆழமானதாகவும் பிரச்சனைக்குத் தீர்வாகவும் இருக்கும். போகட்டும். நாளை கேட்டுக் கொள்கிறோம். எது வரையில் சவாரி ? தொலைதூரமோ?

பாங்கோ : மாலையில் தொடங்கி இரவு உணவு வரும்வரை சற்று தூரப் பயணம் மேற்கொள்ளலாம் என்று இருக்கிறேன். நான் நினைத்ததைவிட என் குதிரை வேகமாகச் செல்லுமென்றால் நான் நினைத்த நேரத்தைவிட ஓரிரு மணித்துளிகள் முன்பாகவே வந்துவிடுவேன்.

மாக்பெத் : எமது விருந்தை மறந்து விடாதீர்கள்.

பாங்கோ :அரசே கண்டிப்பாக மாட்டேன்.

மாக்பெத் : அந்த இளவரசர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் பதுங்கியிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. எம்மேல் படையெடுக்கத் திட்டமிட்டுள்ளனராம்.இது குறித்து அதாவது நமது இருவரையும் இணைக்கும் இந்த அரசப் பதவி குறித்து நாளை நாம் ஆலோசிப்போம். செல். உன் குதிரையை அவிழ்த்து உன் பயணத்தைத் தொடங்கு.நல்வரவு. ஆமாம் ஃ ப்லீன்சும் உன்ன்டுடன் பயணிக்கிறானா?

பாங்கோ : ஆம் அரசே ! பாதையை நாங்கள் முத்தமிடும் தருணம் வந்துவிட்டது.

மாக்பெத் : ஓட்டமும் , சாட்டமும் கொண்ட குதிரைகள் சென்று வாருங்கள்.

( பாங்கோ மறைகிறான். )

மாக்பெத் : இரவு விருந்து வரும்வரை அனைவரும் உங்கள் வசதிக்கேற்ப இருங்கள். நானும் சற்றுத் தனிமையில் இருக்க உத்தேசித்துள்ளேன். கடவுள் உங்களுக்குத் துணை புரியட்டும்.

( மாக்பெத்தையும் அவன் வேலைக்காரனையும் தவிர அனைவரும் மறைகின்றனர் )

வேலைக்காரன் : அரண்மனை வாயிலுக்கு வெளியில் அவர்கள் காத்திருக்கின்றனர் அரசே

மாக்பெத் :எம்மிடம் அழைத்து வா.

( வேலைக்காரன் மறைகிறான் )

மாக்பெத் : உன்னைப்போல அரசனாக இருப்பது கடினமில்லை ; ஆனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவனிடம் ஏதோ ஒன்று என்னை அச்சப்பட வைக்கிறது. அஃது அவனுக்கே உரியது. அவன் புத்திசாலி. முடிவெடுக்க அஞ்சாதவன்.. அவனைத் தவிர வேறு எவரிடமும் எனக்கு அச்சமில்லை. அவன் அருகில் என் துணிச்சல் மிரள்கிறது. மார்க் ஆண்டனி ஆக்டேவியஸ் சீசரிடம் மிரண்டது போலே.அந்தச் சூனியச் சகோதரிகள் மன்னனாக என் பெயரை முன்மொழிந்ததும், அவன் அவர்களைக் கோபித்துக் கொண்டான். அதன் பின்னரே தன் எதிர்காலத்தை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவர்களும், திரிகால ஞானிகளைப் போல; அவன் ஒர் அரச பரம்பரை வரிசையின் முதல் அரசனின் தந்தை என்றனர். நான் என் வாரிசுகளுக்கு அளிக்க முடியாத மகுடத்தையும், செங்கோலையும் எனக்கு அளித்தனர். என் குடும்பத்தைச் சாராத அந்நியன் ஒருவன் இத்தனையையும் அள்ளிக் கொண்டு போகப் போகிறான். என் வாரிசுகளுக்கு அவை இல்லை.இது நடக்கக்கூடும் என்றால், என் மனசாட்சியைக் கொன்று டங்கனை கொலை செய்தது பாங்கோவின் வாரிசுகள் அரசர்களாக வழி செய்வதற்கா? என் அமைதியான மனதில் நெருப்பை அல்லவா கொட்டியிருக்கிறேன் ? எதற்காக? அவர்களுக்காக. என் ஆருயிரை எமன் கைகளில் அல்லவோ தாரை வார்த்திருக்கிறேன் ? எதற்காக ? அவர்களை அரசர்களாக்க. பாங்கோவின் வித்துக்கள். இதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக விதியைச் சவாலுக்கு அழைப்பேன்; மரணத்துடன் மோதுவேன். யாரங்கே ?( ஏவலாள் இரண்டு கொலையாளிகளுடன் வருகிறான் ) ஏவலனே ! நீ சென்று மருத்தவரிடம் போய் இரு . கூப்பிடும்போது வந்தால் போதும்.(ஏவலால் மறைகிறான். )

மாக்பெத் ( கொலைகாரர்களைப் பார்த்து ) நேற்றுதானே நாம் பேசிக் கொண்டிருந்தோம்?

முதல் கொலைகாரன் :: ஆம் வேந்தே ! நேற்று பேசினோம்.

மாக்பெத் : நான் சொன்னவற்றை யோசித்துப் பார்த்தீர்களா? உங்கள் வாழ்க்கையை இத்தனை காலமும் நாசமடையச் செய்ததவன் பாங்கோ. இதில் எனக்கு எதுவும் தொடர்பில்லை. யான் ஒன்றுமறியாதவன். போன சந்திப்பில் நான் சில சான்றுகளுடன் நீங்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டீர்கள், யார் உங்களை ஏமாற்றியது, எவ்வாறு அனைத்துமே உங்களுக்கு எதிரான சாட்சியங்களாக மாறியது போன்ற பலவற்றைச் சொன்னதைப் பார்த்து ஓர் அரைப் பைத்தியம் கூட ‘ பாங்கோ அவ்வாறு செய்தான்’ என்று கூறிவிடும்.

முதல் கொலைகாரன் : ஆமாம் நீங்கள் விளக்கிச் சொன்னீர்கள்.

மாக்பெத் : ஆம் நான் விளக்கினேன். இப்போது மேலும் ஒரு படி சென்றுள்ளேன். அதற்குத்தான் இந்தச் சந்திப்பு. நீங்கள் அத்தனை பொறுமைசாலிகளா அவனை எளிதில் தப்ப விடுவதற்கு ? உங்களைப் படுகுழியில் தள்ளி உங்கள் குடும்பத்தைப் பட்டினி போட்ட அந்த மாபாவியை மன்னிக்கும் அளவிற்கு நீங்கள் இருவரும் அத்தனை நல்லவர்களா?

இரண்டாவது கொலைகாரன் : நாங்கள் மனிதர்கள் அரசே !

மாக்பெத் : மனிதன் என்பது பெயரளிவில்தான். வேட்டைநாய், வெறிநாய், சொறிநாய், ஓநாய், நீர்நாய் என்று பலரகம் இருந்தாலும் மொத்தமாக அவற்றை நாய் என்பதைப் போல நீங்களும் மனிதர்கள்தாம்.. நாய்களை அவற்றின் குணத்திற்கேற்ப தரம் பிரித்தால் எது வேட்டையாடும், எது காவல் காக்கும், எது சாடும், எது ஓடும், எது புத்திகூர்மையுள்ளது என்பது தெரியவரும். இயற்கை கொடுத்த சக்தியின் காரணமாக ஒரு நாய் மற்றொரு நாயிடமிருந்து வேறுபடுகிறது. மனிதர்கள் பட்டியலில் நீங்கள் கடைசியாக இடம்பெறவில்லை என்றால் சொல்லுங்கள் நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன். அதன் மூலம் உங்கள் எதிரியை விரட்டுவதோடு எனக்கு நெருக்கமாகவும் வரலாம். எவன் வாழ்வதால் நான் நலிகிறேனோ அவன் இறப்பதால் நான் உயிர்க்கிறேன்.

இரண்டாவது கொலைகாரன் : நான் இந்த உலகத்தினரால் பந்தாடப்பட்டவன். நான் ஆத்திரமடைந்துள்ளேன் . என்ன வேண்டுமானாலும் செய்வேன்.

முதல் கொலைகாரன் : நானும் அப்படியேதான் மகாராஜா.. துன்பங்கள் என்னைச் சோர்வடையச் செய்துவிட்டன. அதிர்ஷ்டம் என்னை இழுத்துக்கொண்டே இருக்கிறது. எந்த ஒரு சந்தர்ப்பத்திற்கும் நான் தயார். வாழ்வா சாவா எதுவானாலும் சரி.

மாக்பெத் : உங்கள் இருவரின் பொது எதிரி பாங்கோ என்பது தெரியுமில்லையா?

இருவரும் : தெரியும் மகாராஜா.

மாக்பெத் : அவன் எனக்கும் எதிரி.. அவனை எந்த அளவிற்கு வெறுக்கிறேன் என்றால் அவனுடைய இருப்பு என் இதயத்தைத் தின்றுவிடும்போல் இருக்கிறது. என் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவனை என் பார்வையிலிருந்து தூக்கி எறிந்துவிட முடியும். இருந்தாலும் அதை நான் செய்யப்போவதில்லை. அவனுக்கும் எனக்கும் பொதுவான நண்பர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் முன்னிலையில் அவன் மரணத்திற்கு, அவனை நான்தான் கொன்றாலும், நான் புலம்பவும் கண்ணீர் விடவும் வேண்டியிருக்கும். இதற்குதான் உங்கள் உதவியை நாடியுள்ளேன். இந்த வியாபாரம் சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக மக்களின் கவனத்திற்குச் செல்லக் கூடாது.

இரண்டாவது கொலைகாரன் : நீங்கள் ஆணையிடுங்கள் மன்னா நாங்கள் முடித்து வருகிறோம்.

முதல் கொலைகாரன் : எங்கள் உயிருக்கு…

மாக்பெத் ( இடைமறித்து ) உங்கள் உறுதி உங்கள் விழிகளில் மின்னுவது தெரிகிறது. இன்னும் ஒருமணிநேரத்தில் நீங்கள் எங்கே செல்லவேண்டும், எப்படித் தாக்க வேண்டும் என்று சொல்கிறேன். இது சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றி நடைபெறவேண்டும். இந்தத் திட்டம் சரியாக நடைபெற நீங்கள் பாங்கோ, அவன் மகன் ஃப்ளீன்ஸ் இருவரையும் கொல்ல வேண்டும். பாங்கோவைக் கொல்வது எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு ஃப்ளீன்சையும் கொல்வது எனக்கு முக்கியம். முடிவு செய்யுங்கள். உங்களிடம் மீண்டும் வருகிறேன்.

இருவரும் : ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம் வேந்தே.

மாக்பெத் : இன்னும் சிறிதுநேரத்தில் உங்கள் இருவரையும் கூப்பிடுகிறேன். இப்போது செல்லுங்கள்.( கொலைகாரகள் மறைகின்றனர். ) ஒரு வழியாக ஒப்பந்தம் முடிந்தது. உன் ஆத்மா சொர்கத்தை அடைய ஆசைப்பட்டால் பாங்கோ இன்றைய இரவுதான் சரியான இரவு.

(மாக்பெத் மறைகிறான். )

திரை.

காட்சி -2

(ஏவலாளும் திருமதி.மாக்பெத்தும்)

இடம் : அரண்மனையின் ஒருபகுதி.

திருமதி. மாக்பெத் : பாங்கோஅரசவையிலிருந்து கிளம்பி விட்டாரா?

ஏவலாள்: ஆம் சீமாட்டி. ஆனால் இன்றிரவு வந்துவிடுவார்.

திருமதி.மாக்பெத் : உங்கள் அரசரிடம் சென்று சொல், நான் அவருடன் தனிமையில் கொஞ்சம் பேச வேண்டுமென்று.

ஏவலாள் : இதோ இப்போதே சீமாட்டி. ( அகல்கிறான். )

திருமதி.மாக்பெத் : பெறுவது சிறிது; இழப்பது அதிகம். இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை பிறக்கும். கொள்பவனாக இருப்பதைவிட இறப்பவனாக இருப்பது உத்தமம்.(மாக்பெத் உள்ளே நுழைகிறான். )

என்ன நடக்கிறது அன்பரே ? ஏன் எப்போதும் உங்களுடன் உங்கள் சோக எண்ணங்களையே துணையாகக் கொள்கிறீர்கள்? எவரைப்பற்றி வருத்தபட்டீர்களோ அவரைக் கொன்ற பிறகு உங்கள் சோக எண்ணங்களும் இறந்திருக்க வேண்டாமா? மாற்ற முடியாது என்னும்போது நிகழ்ந்தவற்றை நினைத்து என்ன பயன் ? நடந்தவை என்றும் நடந்தவையே.

மாக்பெத் : நாம் நாகத்தை அடித்தோம்; கொல்லவில்லை. காயம் ஆறிய பின்பு நம்முடைய பழைய வன்மம் அதன் நஞ்சுப் பற்களை மீண்டும் சந்திக்க நேரிடும். அண்டசராசரங்கள் பிளக்கட்டும், இருவேறு உலகங்களும் அல்லலுரட்டும் எது நடந்தாலும் என் உணவை நான் அஞ்சியபடிதான் உண்ண வேண்டியிருக்கும். என் தூக்கத்தை இந்த ஓய்வில்லாத பரவசம் வதைப்பதற்கு பதில் நான் இறந்திருக்கலாம். அவர்களைக் கொன்று பேரமைதிப்படுத்திவிட்டு நாம் அமைதியைத் தேடுகிறோம். டங்கன் சமாதியில் உறங்குகிறார். வாழ்வின் துன்பங்களுக்கு நடுவில் அவர் அமைதியாக உறங்குகிறார். ராஜதுரோகம் அவருக்குச் செய்யவேண்டியதைச் சிறப்பாகச் செய்துவிட்டது.. வாளோ , விஷமோ, உள்நாட்டுக் கலகமோ, வெளிநாட்டினரின் முற்றுகையோ இனி அவரை அண்ட முடியாது.

திருமதி.மாக்பெத் : வாருங்கள் அன்பரே ! சற்று மந்தகாசமாக இருங்கள். சற்று சிரித்த முகத்துடன் கலகலப்பாக இருங்கள் இன்று உங்கள் நபர்களுடன் இரவு விருந்து இருக்கிறது.

மாக்பெத்: நான் அவ்வாறுதான் இருக்கப் போகிறேன் கண்ணே . மறந்துவிடாதே நீயும் அப்படிதான் இருக்க வேண்டும். பாங்கோவை நன்றாகக் கவனி. உன் விழிகளும் நாவும் அவனுக்குச் சிறந்தவற்றையே வழங்கட்டும். இதயத்தைத் திரையிட்டு மூடி, பார்வையால் குளிப்பாட்டுவதுதான் நாம் செய்யும் சிறந்த முகத்துதியாக இருக்கும். இதயத்திற்கு முகமூடி போட்டுவை.

திருமதி. இது போன்று பேசுவதை நிறுத்தப் போகிறீர்களா? இல்லையா?

மாக்பெத் : என் நெஞ்சம் முழுவதும் விஷக்கொடுக்குகள் கொண்ட தேள்களால் நிரம்பியுள்ளது. உனக்குத் தெரியுமா பாங்கோவும் அவன் மகன் ஃப்ளீன்சும் நம் கண் எதிரில் இன்னும் உயிருடன் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று ?

திருமதி. மாக்பெத்: அவர்கள் என்ன சிரஞ்சீவிகளா இயற்கையை வெல்வதற்கு?

மாக்பெத் : இதமளிக்கிறது இஃது. அவர்களைக் கொல்லமுடியும். நிஜம். சந்தோஷப்படு. வௌவால்கள் இரவு வந்ததை அறிவிக்கும்பொருட்டு இந்தக் கோட்டையில் பறக்கும் முன்பாக, வண்டுகள் ரீங்காரமிடும் முன்பாக ஒரு கொடூரக் கொலை நிகழ்த்தபட்டிருக்கும்.

திருமதி.மாக்பெத் : என்ன செய்யப் போகிறீர்கள்?

மாக்பெத் : நீ ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கும்வரையில் என்ன நடக்கப் போகிறதென்பது உனக்குத் தெரியாமலே இருக்கட்டும்.( இரவினைக் குறித்து ) பகலின் கருணை விழிகளை மெல்லிய துணியால் மூடு. இரத்தக்கறை படிந்த ,மறைந்திருக்கும் உன் கொலைக்கரங்களால் என்னைச் சவம்போல் வெளுக்கச் செய்யும் எனக்கும் அவனுக்கும் உள்ள இணைப்பை அறுத்து எறி. ஆகாயம் கறுக்கத் தொடங்கிவிட்டது. பறவைகள் கூடு திரும்பத் தொடங்கிவிட்டன. பகலின் நல்லவை மயங்கத் தொடங்கும் நேரம். இரவின் கரும்பிரதிநிதிகள் விழித்துக்கொண்டு இறைதேடக் கிளம்பிபிட்டன. ( திருமதி. மாக்பெத்தைநோக்கி ) என் வார்ர்த்தைகள் உனக்கு வியப்பளிக்கலாம். ஆனால் என்னிடம் கேள்விகள் எதுவும் கேட்காதே. தீயவை தீய தன்மையால் மேலும் தீயதாகும்.எனவே தயைகூர்ந்து என்னுடன் வா.

திரை

காட்சி -3

இடம் : அரண்மனைக்கு வெளியில் ஓர் இடம்.

(மூன்று கொலைகாரகள் வருகின்றனர் )

முதல் கொலைகாரன் : உன்னை இங்கு வந்து எங்களுடன் சேரும்படி கட்டளையிட்டது யார்?

மூன்றாம் கொலையாளி : மாக்பெத்.

இரண்டாம் கொலைகாரன் :நமக்கு என்ன கட்டளைகள் விதிக்கப்பட்டிருக்கிறதோ அதே கட்டளைகள்தாம் இவனுக்கும் இடப்பட்டுள்ளன. இவனைச் சந்தேகிக்க வேண்டாம்.

முதல் கொலைகாரன் : அப்படியானால் எங்கும் நகராமல் எங்களுடனே இரு. மேல்திசையில் ஒளியின் கீற்று இன்னும் மங்கலாகவில்லை.வெளியில் சென்றவர்கள் தங்கள் கூடு தேடித் திரும்பும் நேரம். அதோ பாங்கோ வருவது போலிருக்கிறது.

மூன்றாவது கொலைகாரன் : ஆம் குளம்பொலி கேட்கிறது.

பாங்கோ (குரல் மட்டும் ): ஹேய் யாரது இங்கே தீவட்டிக் கொண்டு வாருங்கள்.

இரண்டாவது கொலைகாரன் : அவனாகத்தான் இருக்கவேண்டும். மற்ற விருந்தினர் அனைவரும் அரண்மனைக்குள் சென்றுவிட்டனர்.

முதல் கொலைகாரன் : உன்னிப்பாகக் கேள். அவன் குதிரைகளைத் தொழுவத்திற்குக் கொண்டும் செல்லும் ஓசை கேட்கிறது.

மூன்றாவது கொலைகாரன் : குதிரை லாயம் இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ளது. பாங்கோவும் மற்றவர்களைப் போல அந்தத் தூரத்தைக் கடப்பதற்கு நடந்துதான் வருவான்.

இரண்டாவது கொலைகாரன் : வெளிச்சம் வருகிறது. அதோ அவன் வருகிறான்.

மூன்றாவது கொலைகாரன் : ஆம் அவன்தான்.

முதல் கொலைகாரன் : ஆயத்தமாக இருங்கள்.

பாங்கோ : இன்று இரவு மழை வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

முதல் கொலைகாரன் : வரட்டும் அந்த மழை (மூவரும் பாங்கோவைத் தாக்குகின்றனர் )

பாங்கோ : இது நம்பிக்கைத் துரோகம். ஓ ஃப்ளீன்ஸ் ! நீ தப்பி ஓடு போ. பிறகு வந்து பழி வாங்கு .அடிமை நாய்களா!(பாங்கோ இறக்கிறான். ஃப்ளீன்ஸ் தப்பிச் செல்கிறான். )

மூன்றாவது கொலைகாரன் : இங்கே விளக்கை அணைத்தது யார் ?

முதல் கொலைகாரன் : விளக்கை அணைத்தது சரிதானே ?

இரண்டாவது கொலைகாரன். : நமது திட்டத்தில் பாதிதான் முடிந்திருக்கிறது.

முதல் கொலைகாரன் : வாருங்கள் இங்கிருந்து போய்விடலாம். மாக்பெத்திடம் நாம் எதுவரை முடிதுள்ளோமோ அதனைக் கூறி வருவோம்.( அகல்கின்றனர். )

திரை.

காட்சி -4

(அரண்மனையில் ஓரிடம்.. அரன்மைனையின் விருந்திற்கு மேடை தயாராக உள்ளது. மாக்பெத், திருமதி. மாக்பெத், லெனாக்ஸ் , ராஸ் , பிரபுக்கள் மற்றும் ஏவலால்கள் நுழைகின்றனர்.)

மாக்பெத் : அவரவர் தகுதி வரிசை அவரவருக்குத் தெரியும். எந்த இடத்தில் அமரவேண்டும் என்பது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதன்படி அமருங்கள். முதலிலிருந்து இறுதிவரையில் உள்ள அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரபுக்கள் : ( மொத்தமாக ) நன்றி அரசே.

மாக்பெத் :உங்களில் ஒருவனாகக் கலந்து கொண்டு ஓர் எளிய உபசரிப்பவனாக இருக்கப் பிரியப்படுகிறேன். இந்த விருந்தின் மனையாட்டி அதாவது என் மனைவி அவளுக்குரிய அரச நாற்காலியில் அமர்ந்திருப்பாள். அதற்குரிய நேரம் வந்த பின்பு உங்களை வரவேற்பாள்.

திருமதி. மாக்பெத் : என் சார்பாக அவர்களுக்குச் சிறப்பு வரவேற்பு அளியுங்கள் பிரபு. என் இதயத்தில் அவர்களை நான் ஏற்கனவே வரவேற்றுவிட்டேன்.( முதல் கொலைகாரன் வாயில் அருகே நிற்கிறான். )

மாக்பெத் : பார் அவர்கள் உன் வரவேற்பை ஏற்றுக்கொண்டுவிட்டனர். விருந்து மேஜை இருபுறமும் நிரம்பி வழிகிறது. அனைவரும் தயங்கவேண்டாம். சந்தோஷமாக இருங்கள். இதோ இப்போது விருந்து பரிமாறப்படும்.( முதல் கொலைகாரன் அருகில் சென்று ) உன் முகத்தில் இரத்தக்கறை படிந்திருக்கிறது.

முதல் கொலைகாரன் : அப்படி என்றால் அது பாங்கோவினுடையது.

மாக்பெத் : அவன் நாளங்களில் ஓடவேண்டிய ரத்தம் உன் முகத்தில்…அதுவும் நல்லதுதான். முடித்துவிட்டாயா?

முதல் கொலைகாரன் : அரசே அவன் கழுத்து அறுக்கப்பட்டது. நான்தான் அதைச் செய்தேன்.

மாக்பெத் :கழுத்தறுப்பதில் நீ கெட்டிக்காரன் அல்லவா??. அதேபோல ஃப்ளீன்ஸ் கழுத்தையும் அறுத்து விட்டீர்களா? அதையும் நீதான் செய்துள்ளாய் என்றால் சரியான கழுத்தறுப்பு என்ற பெயர் உனக்குதான்.

முதல் கொலைகாரன் :அரசே ஃப்ளீன்ஸ் தப்பிவிட்டான்.

மாக்பெத் : ஐயோ நான் அச்சப்பட மீண்டும் ஒரு சந்தர்ப்பம். இல்லையென்றால் பளிங்கைப் போல உறுதியுடனும், பாறையைப் போல வலிமையுடனும், காற்றைப் போலச் சுதந்திரமாகவும் இருந்திருப்பேனே. நான் அச்சத்தினாலும் பயத்தினாலும் அடைக்கப்பட்டேன்; மடக்கபட்டேன்; ஒடுக்கபட்டேன். பாங்கோ பத்திரமாக இருக்கிறானா?

முதல் கொலைகாரன் : ஒரு சாக்கடையின் அடியில் தலையில் இருபது வெட்டுக் காயங்களுடன் பத்திரமாக இருக்கிறான். இரண்டில் ஒன்று போதும் அவன் கதையை முடிக்க.

மாக்பெத் : அதற்கு முதலில் நன்றி. அடிபட்ட பெரிய பாம்பு சாக்கடையில் செத்துக் கிடக்கிறது. தப்பியோடிய குட்டிப் பாம்பு வளர்ந்து விஷமுள்ளதாகி பயமுறுத்தும். இப்போது அதற்கு இன்னும் விஷப்பல் முளைக்கவில்லை. இங்கிருந்து போய்விடு. நாளை உன்னைச் சந்திக்கறேன்.( முதல் கொலைகாரன் மறைகிறான். )

திருமதி.மாக்பெத் : அன்பரே விருந்தினருக்கு நீங்கள் சரியான உற்சாகத்தையளிக்கவில்லை. உற்சாக வரவேற்பு அளிக்கப்படவில்லை என்று கருதிவிட்டால் உங்கள் விருந்தினர்கள் விருந்திற்குப் பணம் கொடுக்க நேருமோ என்று சந்தேகப்பட்டு விடுவார்கள். பசிக்கும்போது சாப்பிட என்றால் அதனை வீட்டில் சென்று சாப்பிடலாம். விருந்துக்கு எதற்கு வரவேண்டும்? விருந்து என்றால் அதில் சிறிது கொண்டாட்டம் இருக்க வேண்டும்; உற்சாகம் பீறிடவேண்டும். இல்லையென்றால் சிறப்பு விருந்துகள் சலிப்பூட்டும்.

மாக்பெத் : நினைவூட்டியதற்கு நன்றி பிரியசகி ( விருந்தினரைப் பார்த்து ) நல்ல பசி நல்லஜீரணசக்தியைக் கொடுக்கும். உடல்நலத்திற்கு இவை இரண்டும் அவசியம். இங்கே அந்த மூன்றும் உள்ளன.

லெனாக்ஸ் : உங்கள் ஆசனத்தில் அமரலாமே மன்னா.( பாங்கோவின் ஆவி உள்ளே நுழைந்து மாக்பெத்தின் இருக்கையில் அமர்கிறது)

மாக்பெத் : பாங்ன்கோவும் இருந்திருந்தால் மொத்த ஸ்காட்லாந்தும் இங்கேதான் உள்ளது என்று கூறுவேன். அவனுக்கு என் மேல் இரக்கம் இல்லை அதனால் வரவில்லை. அவனுக்குத் தீங்கு எதுவும் நேர்ந்திருக்காது. என்று எண்ணுகிறேன்.

ராஸ் : அவன் வரவில்லை என்றால் வார்த்தை தவறிவிட்டான் என்று அர்த்தம். விடுங்கள். இந்த விருந்தைச் சிற்பிக்க நீங்களும் எங்களுடன் அமருங்கள் மகாராஜா.

மாக்பெத் : உணவுமேசை நிரம்பிவிட்டது.

லெனாக்ஸ் : உங்களுக்கென்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அரசே

மாக்பெத் : எங்கே ?

லெனாக்ஸ்( ஆவி அமர்ந்திருக்கும் இருக்கையைக் காட்டி ) அதோ அந்த இருக்கைக் காலியா உள்ளது.

மாக்பெத் (ஆவியைப் பார்த்து ) உங்களில் இதைச் செய்தது யார் ?

பிரபுக்கள்: எதைக் கேட்கிறீர்கள் அரசே?

மாக்பெத் (ஆவியை நோக்கி ) : நீ சொல்லாதே செய்தது நீயென்று.

ராஸ் : ஒ கனவான்களே! எழும்திருங்கள். நமது அரசருக்கு உடல்நிலை சரியில்லை.

திருமதி.மாக்பெத் : எனதருமை முக்கிய நண்பர்களே. அமருங்கள். என் பிரபு எப்போதும் இப்படித்தான். இது போல அவர் நடந்துகொள்வது புதிதல்ல. இளம்வயதிலிருந்து தொடரும் வழக்கம். தயைகூர்ந்து அமருங்கள். இஃது ஒரு சாதாரண வலிப்பு நோய். இன்னும் சிறிது நேரத்தில் அவர் பழையபடி ஆகிவிடுவார். நீங்கள் அவர் மீது அதிக அக்கறை கொள்ளகொள்ள அவரது கோபம் அதிகமாகி இந்த வியாதி உடனே குணமாகாமல் போய்விடும். நீங்கள் சாப்பிடுங்கள். அவரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்.(மாக்பெத்தை நோக்கி அவனுக்கு மட்டும் கேட்கும்விதமாக ) மனிதன் மாதிரியா நடந்து கொள்கிறீர்கள்?

மாக்பெத் : சாத்தனை எது அச்சப்படுத்துமோ அதை உற்றுப்பார்ப்பவனே துணிவுள்ளவன்.

திருமதி.மாக்பெத் : மண்ணாங்கட்டி. இதுவும் உங்கள் பிரமைகளில் ஒன்று. அன்று சொன்னீர்களே அந்தரத்தில் மிதந்தக் குறுவாள் டங்கனைக் குத்தியது என்று அதுபோல இதுவும் ஒருவகைப் பைத்தியக்காரத்தனம். உங்களது இந்த வெளிப்பாடு நிஜமான பயம் போலவும் இல்லை. ஒரு சிறுமி கணப்பின் முன்பு அமர்ந்து தன் பாட்டியிடம் பேய்க்கதை சொல்வது போல இருக்கிறது. சுத்த சிறுபிள்ளைத்தனம். வெட்கமாக இல்லை? ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? ஏன் இத்தனை முகம் காட்டுகிறீர்கள்? எல்லாம் முடிந்த பின்பும் ஒரு நாற்காலியை இப்படி வெறிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

மாக்பெத் : அதோ அதோ பார் பார் ( ஆவியிடம் ) என்ன சொல்ல நினைக்கிறாய்? சொல்லு. உன்னால் தலையசைக்க முடியுமென்றால் பேசவும் முடியும். பேசு. நமது கல்லறைகளின் சவக்குழிகள் பிணங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நமது கல்லறைகள் பிணந்தின்னிக் கழுகளின் கூடாரமாகிவிடும். ( ஆவி மறைகிறது. )

திருமதி.மாக்பெத் : உங்களுடைய முட்டாள்தனம் உங்களை முற்றிலும் பைத்தியமாக்கிவிட்டதா?

மாக்பெத் : இங்கிருந்து பார்த்தால் அவன் என் கண்களுக்குத் தெரிகிறான்.

திருமதி.மாக்பெத் : அறிவீனம்.

மாக்பெத் : முன்பு மனித வாழ்வை வளமானதாக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அன்றிலிருந்து கொலைகளையும் , கொலைகாரகளையும் பற்றிக் கேட்பது செவிகளுக்கு அச்சமூட்டுபவையாகவே உள்ளது. காலம் காலமாக ஒரு மனிதனின் கபாலத்தைப் பிளந்தால் அவன் மூளை சிதறி இறப்பான் என்பது தெரிந்த விஷயம். ஆனால் இப்போது தலையில் இருபது வெட்டுக்காயங்களுடன் இறந்த பிணம் எழுந்து வந்து நமது இருக்கைகளில் அமரவிடாமல் தள்ளுகிறது. இது கொலையைவிட விநோதமாக உள்ளது.

திருமதி.மாக்பெத் :என் பெருமைக்குரியவரே உங்கள் மேலான நண்பர்கள் உங்களுடன் இணைசேர காத்திருக்கிறார்கள்.

மாக்பெத்: ஓ அதனை மறந்துவிட்டேன் (விருந்தினரை நோக்கி ) என் ஆருயிர் நண்பர்களே என்னை அப்படிக் குறுகுறுவென்று பார்க்காதீர்கள். என்னிடம் ஒரு வினோத மனத்தடுமாற்றம் உள்ளது. என்னை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். சிறிது நேரத்தில் சரியாகிவிடும்.( தன் கையில் உள்ள கண்ணாடி மதுக்குவளையை உயர்த்திக் காட்டியபடி ) வாருங்கள் நலம்பாராட்டி இந்த மதுவைப்பருகுவோம். நலமும் வளமும் உங்களுக்கு. அமருங்கள். விருந்து தொடங்கட்டும். என் குவளையை மதுவால் நிரப்புங்கள்.( மீண்டும் பாங்கோவின் ஆவி மாக்பெத்தின் நாற்காலியில் தோன்றுகிறது.) நான் உங்கள் நலனுக்காவும், இப்போது நம்முடன் இல்லாத பாங்கோவின் நலனுக்காவும் இதனை நான் அருந்துகிறேன்.

பிரபுக்கள்: எங்கள் கடமை; உறுதிமொழி (மது அருந்துகின்றனர்.)

மாக்பெத் ( ஆவியைப் பார்த்து ) போ என் பார்வையிலிருந்து அகன்றுவிடு. பூமியில் புதையுண்டு கிட. உன் எலும்புகளில் மஜ்ஜை இல்லை. உன் இரத்தம் குளிர்ந்துவிட்டது. வெற்றுப் பார்வையால் என்னை வெறித்துப் பார்ப்பதை நிறுத்து.

திருமதி.மாக்பெத் :நல்ல நண்பர்களே ! இதனை ஒரு சிறிய குறைபாடாக எண்ணி விட்டுவிடுங்கள் வேறு எதுவும் இல்லை. இந்த இரவின் கொண்டாட்டத்தை இது கெடுக்கிறது.. அவ்வளவுதான்.

மாக்பெத் : ஒரு மனிதனுக்கு எவ்வளவு துணிச்சல் உண்டோ அவ்வளவு துணிச்சல் எனக்கும் உண்டு. ஒரு முரட்டு ருஷிய நாட்டுக் கரடியைப் போல வா, கொம்பென்னும் ஆயுதம் ஏந்திய காண்டாமிருகத்தைப் போல வா; ஓர் இராணியதேசத்து கடும்புலியைப் போல வா. எந்த வடிவிலும் வந்தாலும் என் உறுதியான நாடிநரம்புகள் தளராது. இல்லையென்றால் உயிருடன் வா ஆளரவமற்ற ஒரு தனியிடத்தில் என்னுடன் வாட்சண்டைக்கு வா. அப்படி நான் உன்னிடம் தோற்றுவிட்டால் என்னை ஒரு பேதை என்று அழை. போ மாயத்தோற்றமே கெட்ட ஆவியே பார்வையிலிருந்து விலகிப்போ. (ஆவி மறைகிறது) அப்பா போயாச்சு. அப்பா போயாச்சு. நான் மீண்டும் மனிதனாகிவிட்டேன். அனைவரும் இருக்கையில் அமருங்கள்.

திருமதி.மாக்பெத் : உங்கள் பித்துக்குளித்தனத்தால் மற்றவர்களுக்கு ஒரு காட்சிப்பொருளாக மாறி இந்தக் கொண்டாட்டத்தைப் பாழ்படுத்திவிட்டீர்கள். (விருந்தினரைப் பார்த்து )

மாக்பெத் : இதுபோன்ற விஷயங்கள் சொல்லாமல் வரும் கோடைமழையைப் போல வருமா? என்ன நடக்கிறது என்று புரியாமல் செயல்படும் என்னை ஒரு விநோதப்பொருளாகப் பார்க்கிறீர்கள் இது போன்ற ஒரு காட்சியைக் காண நேரிட்டால் உங்கள் கன்னங்கள் என் கன்னங்களைப் போல வெளுக்காமல் இயல்பான சென்னிறத்திலேயே இருக்குமா?

ராஸ் : என்ன காட்சி என் பிரபுவே?

திருமதி. மாக்பெத் : அவரிடம் பேச்சு கொடுக்காதீர்கள். அவர் மேலும் மேலும் பித்தாகிறார். கேள்வி அவரை வளர்க்கிறது. அனைவரும் கலைந்து செல்லுமாறுத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் பதவிகேற்ப எழுந்து வழிவிட்டுச் செல்லுங்கள்.

லெனாக்ஸ் : மன்னர் விரைவில் குணமடையட்டும்.

திருமதி.மாக்பெத் : உங்கள் அனைவருக்கும் நல்லிரவு வணக்கம்.

(அனைவரும் அகல மாக்பெத்தும், திருமதி.மாக்பெத் இருவர் மட்டுமே மேடையில் உள்ளனர்.)

மாக்பெத் : ஒரு பழமொழி உண்டு இரத்தம் பழிவாங்காமல் விடாது என்று. இரத்தம் இரத்தத்தை வாங்கும். காலரிகள் அசைந்தால்தான் , வனங்கள் பேசத் தொடங்கினால்தான் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும். கோட்டான்களின் கூவலும், கூகைகளின் அலறலும், அண்டங்காக்கைகளின் இரைச்சலும் எந்தத் திறமையான கொலைகாரனையும் காட்டிக் கொடுத்துவிடும். இரவு நெடுநேரம் ஆகிவிட்டதா?

திருமதி.மாக்பெத் : கிட்டத்தட்ட விடிந்துவிட்டது. இரவா பகலா என்று கூற முடியாத ஒரு பொழுது இது.

மாக்பெத் : மாக்டப்பிறகு அழைப்பு விடுத்திருந்தபோதும் அவன் விருந்திற்கு வராததைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய் ?

திருமதி.மாக்பெத் : அவருக்கு அழைப்பு அனுப்பியிருந்தீர்களா?

மாக்பெத் :மறைமுகமாக என் காதில் விழுந்தது. அழைத்துவர ஆள் அனுப்புகிறேன். ஒவ்வொரு பிரபுக்களின் இல்லங்களிலும் எனக்குச் சேதி அனுப்ப ஓர் ஒற்றனை நியமித்துள்ளேன். நாளை விடிவதற்கு முன் நான் அந்தச் சூனியக்காரிகளைப் பார்த்து வர உத்தேசித்துள்ளேன். அவர்களிடம் நிறையக் கேட்கவேண்டும். என் நிலைமை இப்போது அவர்களிடம் கேட்கும்படி உள்ளது. எவ்வளவு கொடுமையாக நடக்க இருப்பினும் நான் அதைத் தெரிந்து கொள்ளவேண்டும். என் பாதுகாப்பே இப்போதைக்கு எனக்கு முக்கியம். மற்றவை பிறகுதான். இரத்த ஆற்றில் நான் நெடுந்தூரம் நீந்திவந்து விட்டேன். இனி முடியாது. திரும்புவது என்றால் அது கடப்பதைவிடக் கடினமானது. என் மனதில் சில திட்டங்கள் உள்ளன அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். யோசிக்கும் முன்பு செய்யவேண்டிய விஷயங்கள் அவை.

திருமதி.மாக்பெத் : இயற்கையை எதிர்க்காதீர்கள். சென்று உறங்குங்கள்.

மாக்பெத் :வா. உறங்கச் செல்லலாம். என் அனுபவமின்மை காரணமாகவே இதுபோன்ற மாயத்தோற்றங்கள் எனக்குத் தோன்றுகின்றன. குற்றங்கள் புரியும்போது நாம் மேலும் சிறுவர்களாகி விடுகிறோம்.( மறைகின்றனர் )

திரை.

காட்சி – 5.

இடம் : பாலைவனத்தில் பாழடைந்த மண்டபம்.

(இடியுடன் கூடிய பெருங்காற்றில் மூன்று சூனியக்காரிகளும் வருகின்றனர்.)

முதல் சூனியக்காரி: என்ன ஹெக்கேட் ஏன் நீ இவ்வளவு கோபத்துடன் காணப்படுகிறாய்?

ஹெக்கேட் : உங்களைப்போல எனக்குக் காரணமில்லாமல் கோபம் வராது கிழவிங்களா? எப்படி என்னிடம் எதுவும் கேட்காமல் மாக்பெத்திற்கு அவன் வருங்காலத்தைப் பற்றிய கணிப்புகளைக் கூறுவீர்கள்? நான் உங்களுடைய தலைவி. உங்கள் மகிழ்ச்சியின் தலைவி. உங்கள் பில்லி சூனிய சக்திகளின் அதிபதி நான். என்னை வெறும் வாய்வார்த்தைக்குக் கூட அழைக்கவில்லை. என் சக்தியை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அளிக்கவில்லை. இதில் முத்தாய்ப்பாக எவனுக்காக நீங்கள் நன்மை செய்திருக்கிறீர்களோ அவன் ஒரு வழிதவறிய மைந்தனைப் போலக் கெட்ட குணங்களும், பேராசையும் நிறைந்தவன். தன் வழியைப் பார்த்துக் கொள்வானே தவிர அவனால் நமக்கு ஒரு பயனும் இல்லை. இருந்தாலும் இதை நீங்கள் சரிசெய்து விடலாம்.இப்போது செல்லுங்கள். நாளை நரகத்தில் ஓடும் ஆற்றின் அருகில் உள்ள பள்ளத்தில் சந்திப்போம். மாக்பெத் தன் வருங்காலத்தை அறிந்துகொள்ள அங்கே வருவான். வரும்போது உங்கள் கொப்பரைகளையும், சூனியமந்திரங்களையும், வசீகரத்தையும் மேலும் தேவையான அனைத்தையும் கொண்டுவாருங்கள். நான் இப்போது பறந்து செல்ல இருக்கிறேன். இன்றிரவு முழுவதும் என் சக்தியை உபயோகப்படுத்திப் பெரிய கேடு விளைவதற்கான செயலில் ஈடுபடப்போகிறேன். பகல் மறைவதற்குள் எனக்குச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். நிலவின் ஓரத்தில் ஒரு பனித்துளி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பூமியில் அது வீழும் முன்பு அதனைப் பிடிக்கவேண்டும். என்னுடைய மந்திரங்களைப் பிரயோகித்தால் அவைகளிலிருந்து கிளம்பும் ஆவிகள் மேலும் பல மாயத்தோற்றங்களை மாக்பெத்திற்குக் காட்டும். விதியை வெல்லக்கூடியவன் தான் என்று அவன் நம்பத் தொடங்குவான். மரணத்தைத் துச்சமாக மதிப்பான். ஞானம் கருணை அச்சம் இவற்றிற்கு மேலானவன் தான் என்ற எண்ணம் அவனிடம் ஓங்கத் தொடங்கும். உங்கள் அனைவருக்கும் தெரியும், பாதுகாப்பே மனிதனின் முதல் எதிரி.( வரவேண்டும் வரவேண்டும் என்று ஒரு பாடல் ஒலிக்கிறது) அதோ கேளுங்கள் என்னை அழைக்கிறார்கள். நான் போகவேண்டும். என்னுடைய சின்னஞ்சிறு ஆவி ஒரு பனிமூட்டத்தின் மேல் அமர்ந்து கொண்டிருக்கிறது.( ஹெக்கேட் கிளம்பிச் செல்கிறாள்.)

முதல் சூனியக்காரி : வாருங்கள் கிளம்புவோம். இல்லையென்றால் போனவள் மீண்டும் வந்துவிடப்போகிறாள். (மறைகின்றனர்)

திரை.

காட்சி-6

இடம் : பாரஸ் அரண்மனையின் ஒரு பகுதி.

லெனாக்ஸ் பிரபுவும் வேறொரு பிரபுவும் வருகின்றனர்.

லெனாக்ஸ் : நான் ஏற்கனவே சொன்னதிலிருந்து நானும் நீங்களும் ஒரே விதமாகத் தான் சிந்திக்கிறோம் என்பது தெரிகிறது. நான் மீண்டும் மீண்டும் சொல்வது என்னவென்றால் நம்பமுடியாத விஷயங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன என்பதுதான். டங்கன் இறந்தபின்பு மாக்பெத் பதவிக்கு வந்தான். பாங்கோ இரவு நெடும்பயணம் மேற்கொண்டான். நீ விரும்பினால் ஃப்லீன்ஸ் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று கூறலாம். ஏன் என்றால் ஃப்ளீன்ஸ் கண்ணில் தென்படவில்லை. குற்றம் நிகழ்ந்த இடத்திலிருந்து ஓடிவிட்டான். இரவில் வெகுநேரம் மனிதர்கள் நடைபயணம் மேற்கொள்ளக் கூடாது. பெற்ற தகப்பனையே கொல்லும் அளவிற்கு மால்கமும் டொனால்பெயினும் துணியவில்லையா? பாவம் இந்த நினைப்பு மாக்பெத்தை எவ்வளவு வாட்டியிருக்கும்? குடியினால் மயங்கிக் கிடந்த இரு பாதுகாவலர்களைக் கொல்வதன் மூலம் மாக்பெத் தனது அரச விசுவாசத்தைக் காட்டவில்லையா? அவர் செய்தது சரியான நடவடிக்கைதானே? ஆமாம் அது சரியான நடவடிக்கைதான். இல்லையென்றால் அந்தக் குற்றத்தைத் தாங்கள் செய்யவில்லை என்ற அவர்கள் இருவரின் புலம்பலை நாம் கேட்க நேர்ந்திருக்குமே. இதையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது மாக்பெத் செய்ததெல்லாம் சரியாகச் செய்திருக்கிறான் என்றுதான் தோன்றுகிறது. டங்கனின் புதல்வர்களைச் சிறையில் மாக்பெத் அடைத்திருந்தால்- நல்லவேளை அப்படி எதுவும் நேரவில்லை- இருவருக்கும் தந்தையைக் கொல்வது எவ்வளவு பெரிய குற்றம் என்று தெரிந்திருக்கும். ஓடி விட்டார்கள். ஃப்ளீன்சும் ஓடிவிட்டான். போதும் என் மனம் அமைதியை நாடுகிறது. மாக்டப் மன்னரின் ஆதரவை இழந்துவருகிறான் என்று தோன்றுகிறது. காரணம் மாக்டப் மனதில் இருப்பதை ஒளிக்காமல் பேசுபவன். அதனால்தான் அந்தக் கொடுங்கோலன் அளித்த விருந்தில் மாக்டப் கலந்து கொள்ளவில்லை. உனக்குத் தெரியுமா அவன் எங்கே மறைந்திருக்கிறான் என்று?

பிரபு : டங்கனின் அரியணை செங்கோல் மீது உரிமை கொண்டாடவேண்டிய மால்கம் அதனை மாக்பெத்திடம் பறிகொடுத்துவிட்டு ஆங்கில அரசிடம் தஞ்சமடைந்துள்ளான். கடவுள் நம்பிக்கையுள்ள எட்வர்ட் மன்னன் இவனது விதியின் குரூரத்தை நன்றாகப் புரிந்துகொண்டு சிறிதுகூட மரியாதை குறையாத அடைக்கலத்தை மால்கத்திற்கு வழங்கியிருக்கிறார்.மாக்டப் அங்குதான் போயிருக்கிறார். நார்த்தம்பர்லாந்து பிரபுவையும் அதன் மக்களையும் உதவி கேட்கப் போகிறார். அவர்களின் துணையுடன்-இத்தனைக்கும் மேலான துணையான ஆண்டவரின் துணையுடன்-அவர் மீண்டும் நம் உணவுமேசையில் உணவு பரிமாறுவார்; நம் இரவுகளுக்கு அமைதியை மீட்டுக் கொண்டுவருவார்; நமது விருந்துகளில் கொடியவர்களைத் தடுப்பார்; மறைந்த நம் மன்னருக்கு நம்முடைய சிறந்த அஞ்சலியைக் கொண்டுசேர்க்க உதவுவார்; பட்டங்களையும் பதவிகளையும் திறமையுள்ளவர்கள் எளிதில் அடையமுடியும்.. இப்போதைக்கு நம் மனங்கள் ஏங்குவது இதற்குமட்டும்தான். மாக்பெத்திற்கு இந்தத் தகவல்கள் தெரியும். அவரும் கோபத்துடன் போருக்கு ஆய்த்தமாகிக் கொண்டிருக்கிறார்.

லெனாக்ஸ் : மாக்டப்பை அழைத்துவர ஆள் அனுப்பியிருந்தானே அந்தக் கொடுங்கோலன்? அவனும் அங்கே போய் அவன் அழைத்தானாம்.. முடியாது என்று ஒற்றை வார்த்தையில் அவனைத் திருப்பி அனுப்பிவிட்டார் மாக்டப். மன்னரின் கைத்தடியும் கடுமையாக முகம் காட்டியிருக்கிறான் “ ‘இந்த வார்த்தைக்கு நீங்கள் வருத்தப்படுவீர்கள் ‘ என்று மிரட்டிவிட்டு வந்ததாக வேறு கேள்வி.

பிரபு : அவருக்காக நான் பிராத்தனை செய்கிறேன். ( மறைகிறார்கள்)

திரை

அங்கம் மூன்று நிறைவுற்றது.

•••••••••••

Comments are closed.