ஹா ஜின் ( மூடுபனிக் கவிகள்-6 ) – தமிழில்: சமயவேல்

[ A+ ] /[ A- ]

ஹா ஜின்

ஹா ஜின் 1956ல் சீனத்தில் லியவோனிங்கில் பிறந்தார். இவரது அப்பா ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தார். பள்ளி மாணவராக இருந்த போது, 13 வயதில், சீனக் கலாச்சாரப் புரட்சிக் காலத்தில் மக்கள் விடுதைப் படையில் (செஞ்சேனை) சேர்ந்து மூன்று ஆண்டுகள் தந்தி அடிப்பவராகப் பணி புரிந்தார். ராணுவத்தில் இருந்த போது, தனது படிப்பைத் தானே படித்து, 16 வயதுக்குள் பள்ளிக் கல்வியை முடித்தார். 19வது வயதில் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ஹைலாங்ஜியாங் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பட்டப் படிப்பை முடித்தார். பிறகு ஷாண்டோங் பல்கலைக் கழகத்தில் ஆங்கில-அமெரிக்க இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஜின், முந்தைய கம்யூனிஸ்ட் சீனாவில் குழப்பமான காலகட்டத்தில் வளர்ந்தார். 1989ல் தியானமென் சதுக்கப் போராட்டம் நிகழ்ந்த போது அமெரிக்காவில் ப்ராண்டைஸ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்தார். இவரது ஆய்வு பவுண்டு, எலியட்ஸ், ஆடன், யீட்ஸ் ஆகிய கவிஞர்களைப் பற்றியது. இந்த நால்வரிடமும் சீனப் பிரதிகளுடனும் கவிதைகளுடனும் கலாச்சாரத்துடனும் தொடர்புடைய கவிதைகள் இருந்தன. சீனப் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிக்கு வேலைக்குச் செல்லும் திட்டத்துடன் இருந்ததாகக் கூறுகிறார். ஆனால் அவரும் அவரது மனைவியும் தொலைக்காட்சியில் தியானமென் சதுக்க நிகழ்வுகளைப் பார்த்த பிறகு, அவர்கள் சீனாவுக்குத் திரும்ப வேண்டாம் என்ற முடிவு செய்தார்கள். அமெரிக்கவிலேயே புலம்பெயர்ந்தவர்களாக இருக்க முயற்சி செய்தார்கள். 1992ல் அவர் முனைவர் பட்டம் பெற்றார். இதற்கிடையில் 1990ல் “மௌனங்களுக்கு இடையில்” என்னும் அவரது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். 1996ல் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு “நிழல்களை எதிர்கொள்ளுதல்” வெளியாகியது. அண்மையில் 2018ல் வெளியாகிய இவரது “ஒரு தூரத்து மையம்” தொகுப்புடன் சேர்த்து மொத்தம் ஏழு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. மூலத்தில் சீன மொழியில் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்ட “ஒரு தூரத்து மையம்” தொகுப்பு பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.

1990களின் மத்தியில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். பிறகு நாவல்களும் எழுதினார். முக்கியமான பல இலக்கிய விருதுகளைப் பெற்றார்.

சொற்களின் சமுத்திரம் (1996)- சிறுகதைத் தொகுப்பு- பென்/ஹெமிங்வே விருது.

சிவப்புக் கொடிக்குக் கீழ்(1997) – சிறுகதைத் தொகுப்பு – ஓ’கானரி விருது.

மணமகன் (2000) – சிறுகதைத் தொகுப்பு – ஆசியன் அமெரிக்கன் இலக்கிய விருது.

காத்திருத்தல் (1999) – நாவல் – தேசிய நூல் விருது மற்றும் ‘பென்/ஃபாக்னர் விருது’

யுத்தக் குப்பை (2004) – நாவல் – பென்/ஃபாக்னர் விருது.

கடந்த இருபது ஆண்டுகளில் மிக அதிகமாக எழுதும் நாவலாசிரியராக ஜின் மாறியிருக்கிறார்.

ஜின்னுடைய புனைவின் களம் சீனாவாக இருந்தாலும், சிறுகதைகளும் நாவல்களும் கம்யூனிச ஆட்சிக்குக் கீழுள்ள வாழ்க்கையின், வெறும் சமூக அரசியல் இழைகள் மட்டுமல்ல. ஒரு அபத்தமான சமூகத்தில் தனது அடையாளம், பாதுகாப்பு, சுயமரியாதை ஆகியவற்றை நிறுவ ஒரு தனிமனிதன் நடத்தும் போராட்டம், அரசியல்-கலாச்சார-பூகோள எல்லைகளையும் தாண்டியவை. சில வழிகளில் இவரது எழுத்து குந்தர் கிராஸ், ஃப்ரான்ஸ் காஃப்கா ஆகியவர்களின் எழுத்து போல இருக்கிறது எனக் குறிப்பிட்டார்கள். இவரது முதல் நாவல் “குளத்தில்” கம்யூனிச சீனாவையும் தாண்டி உலகளாவிய புதிர்களையும் சிக்கல்களையும் பற்றிப் பேசுகிறது. “உன்மத்தம் பிடித்தவர்கள்” நாவல் ஜ்யார்ஜ் ஆர்வெல்லின் “1984” நாவலின் நீட்சியாக இருக்கிறது. இவரது “காத்திருத்தல்” நாவல் சாமுவெல் பெக்கட்டின் “கோடார்டுக்குக் காத்திருத்தல்” நாடகத்தை விடவும் பெரிய அபத்ததைச் சித்தரிக்கிறது. சமூக மரபு அல்லது அரசியல் மட்டுமே சரி தவறுகளைத் தீர்மானிப்பதையும் கட்டளையிடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஆண்களும் பெண்களும், வாழ்வை எதிர்கொள்ளும் இருத்தலியல் தவிப்பைப் பேசும் நாவலாக இருக்கிறது “காத்திருத்தல்”.

ஜின்னைப் பொறுத்தவரை வாழ்வின் மதிப்பு, அதை வாழ்பவர்களால் மட்டுமே உருவாக்கப்படுவது, அநீதியான விதிகளுடன் கூடிய ஒரு மூடிய அமைப்பை எதிர்த்துப் போராடுவது அவரது கதபாத்திரங்களுக்கு ஒரு கௌரவத்தைத் தருகின்றன என்கிறார். மேலும் ஜின் கூறுகிறார்: “வாழ்க்கை, இயல்பாகவே பல துயரங்களை உள்ளடக்கியது. தங்களது வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்ள தாங்களே முயற்சிப்பதும் போராடுவதும் தவிர்க்க முடியாதது என்னும் உண்மையை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இத்தகைய எழுத்துக்கள் வாசகர்களுக்கு உவப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் இன்று எழுதுவதற்கான தகுதி கொண்டது, இந்த வகையான இலக்கியம் மட்டுமே என்பதை உறுதியாகக் கூறுவேன்.”

”நான் புலம் பெயர்ந்தவன், நாடு கடத்தப்பட்டவன் அல்ல” என்கிறார் ‘பாரிஸ் ரெவ்யூ’ இதழுக்குக் கொடுத்த நேர்காணலில். “ ஒரு நாடு கடத்தப்பட்டவருக்கு ஒரு அர்த்தமுள்ள கடந்த காலம் இருக்கிறது: அவர் பெரும்பாலும் கடந்த காலத்திலேயே வாழ்கிறார். அரசியல் அதிகாரத்தின் சூழலுக்கு உள்ளே அவர், அவரையே வரையறை செய்ய வேண்டியிருக்கிறது.” என்கிறார். ஆனால், 1980களின் மத்தியில் சீனாவை விட்டு வந்தவர் மீண்டும் சீனாவுக்குப் போகவே முடியாதவாறு ஆனது. அவரது அம்மா இறந்த போது கூட சீன அரசு விசா தர மறுத்தது. புலம்பெயர்ந்தவர், நாடுகடத்தப்பட்டவர் என இரண்டுமாகவும் வாழ நேர்ந்தது.

அதிகாரத்தை எல்லைக்கோடுகளாகக் கொண்ட வல்லரசுகளின் ரத்தப் பசிக்குத் தப்பி, ஒரு கவிஞன்/கதைசொல்லியின் ஆத்மா எவ்வளவு காலம் தான், உறைபனியில் கறுத்த அன்னிய நிலத்தில் அலைய வேண்டும்?

000

பிரிக்கப்பட்டவர்கள்

அந்தப் பிரிக்கப்பட்டவர்களை இன்னும் நான் புகழ்கிறேன்

எந்த நிலத்திலிருந்தும், அவர்கள், பிறந்ததிலிருந்து,

தொலைதூரங்களுக்குப் பயணிக்கத் தீர்மானித்துவிட்டார்கள்

வீட்டைத் தேடி. அவர்கள், அவர்களுடைய நிலையை

நட்சத்திரங்களால் அடைகிறார்கள். அவர்களது வேர்கள்

கற்பனை ஆகாயத்தின் கடைசி முனையில் வளர்கின்றன.
அவர்களுக்கு, வாழ்க்கை ஒரு கோணலான பயணம்

மேலும் ஒவ்வொரு நிறுத்தமும் ஒரு புதிய புறப்பாடு. அவர்களுக்குத்

தெரியும், அவர்கள் சாலையில் மறைந்து விடுவார்கள் என்று,

ஆனால் அவர்கள் உயிருள்ள வரைக்கும்

அவர்கள் மரணத்துடன் பயணம் செய்தாக வேண்டும்

அவர்கள் கற்பனையில் கண்ட சேருமிடம் வரை

அவர்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என்றாலும்

அவர்களது நிலவரைபடங்களை அவர்களது காலடித்தடங்கள் புதுப்பிக்கலாம்.

தொலைந்த நிலா
உன்னைப் போலவே, நானும் கூட எனது நிலவைத் தொலைத்தேன்.

விரிந்த கண்ணுடன் ஒரு புன்னகைக்கும் முகம் கொண்டேன்

எல்லா ஒளியின், நம்பிக்கையின் மூலாதாரமாக இருப்பதற்காக

அது என்னை ஒரு இருண்ட காட்டிற்குள் அழைத்துச் சென்றது.

அதற்குப் பிறகு, நான் ஒருபோதும் பார்க்க முடியாமல் போனது

ஆகாயத்தின் ஆச்சர்யங்களை.

எவ்வளவு கடினமாய் இருந்தாலும் நான் பிரயாசையுடன் நடந்து தேடினாலும்,

நான் ஏறி விளையாடிய குன்றுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்பொழுது, இரவுக்கும் பகலுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை

—நான் அவற்றை எனது கணினியிலும் அலைபேசியிலும் செலவழிக்கிறேன்.

உண்மையில், வெகுகாலம் முன்பே நான் அறிவேன்

புன்னகைக்கும் முகம் வெறும் ஒரு கானல் நீரே.

எனினும் என்னால் ஒருபோதும் நிலவை ஏறிட்டுப் பார்க்க முடியாது

எனது மூதாதையர்கள் செய்தது போல

சாலையோரம் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு

வீட்டுக்கு அல்லது ஒரு நண்பனுக்கு ஒரு வார்த்தையை அஞ்சல் செய்ய.

நானொரு இடத்தில் இறங்கிவிட்டேன்

எனது மூதாதையர்கள் ஒருபோதும் கேள்விப்படாத—

ஒரு புதிய முதுகெலும்பை நான் வளர்க்க வேண்டும்.

முற்காலம்

எனது முற்காலம் என்னின் ஒரு பகுதி என எண்ணிக் கொள்ள வேண்டும்.

நான் வெயிலில் இருக்கும் போது எனது நிழல் தோன்றுவது போல

முற்காலத்தைத் தூக்கி எறிய முடியாது மேலும் அதன் கனத்தை

நான் தாங்கிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் நான் வேறொரு மனிதாகி விடுவேன்.

ஆனால் யாரோ ஒருவர் அவரது முற்காலத்தை ஒரு தோட்டத்துக்குள் பாதுகாப்பதை

நான் பார்த்தேன்,

அதன் உற்பத்தி எப்போதும் நாகரிகமாக இருந்தது.

நீங்கள் அனுமதி இல்லாமல் அவரது சொத்துக்குள் நுழைந்தால்

உங்களை ஒரு வெறி நாயுடன் அல்லது ஒரு துப்பாக்கியுடன் அவர் வரவேற்பார்.

யாரோ ஒருவர் அவரது முற்காலத்தை ஒரு துறைமுகமாக அமைத்திருந்ததை நான்

பார்த்தேன்.

எங்கு பயணித்தாலும், அவரது படகு பாதுகாப்பாக இருந்தது—

ஒரு புயல் வருகிறது என்றால், எப்போதுமே அவர் வீட்டுக்கு வந்துவிட முடியும்.

அவரது கடற்பயணம் ஒரு பட்டத்தின் சாகசமாக இருந்தது.

எவரோ ஒருவர் அவரது முற்காலத்தை குப்பையைப் போலக் கொட்டுவதைப் பார்த்தேன்.

அவர் அதைப் புதைத்து ஒட்டு மொத்தமாகத் தூக்கி எறிந்தார்.

முற்காலம் இல்லாமலே ஒருவர் முன்னேறிச் செல்லவும்

எங்காவது சென்றுவிடவும் முடியும் என அவர் எனக்குக் காண்பித்தார்.

ஒரு சவச்சீலையைப் போல முற்காலம் என்னைச் சுற்றியிருக்கிறது,

ஆனால் நான் அதைக் கத்தரிப்பேன் மேலும் அதைத் தைப்பேன்,

அதைக் கொண்டு ஒரு நல்ல காலணியைச் செய்வதற்கு,

எனது பாதங்களுக்குப் பொருந்தும் காலணிகள்.

உயிர்த்தியாகத்தை நோக்கி நடத்தல்

படைத் தலைவர் ஆணைகள் பிறப்பித்தார்

நாங்கள் நடையைத் தொடங்கினோம்.

நாங்கள் எங்களது இரண்டாவது பித்தான்கள் வரை பலமாக எங்கள் கைககளை வீசினோம்,

மேலும் எங்கள் கண்களின் மூலைகள் வழியாக ஒருவரையொருவர் கவனித்தோம்

எங்கள் உடல்களை ஒரு நேர் கோட்டில் வைத்திருப்பதற்கு.

நாங்கள் அணிவகுப்பில் இருப்பது போல நடந்தோம்,

இவை பயிற்சிகள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

ஆனால் நாங்கள் ஒரு ஆழமான குப்பைக் குழியின் முன் நிறுத்தப்பட்டோம்,

அதன் விளிம்பில் கொண்டு போய் எங்கள் நடையை வைத்தோம்.

“முன்னேறிச் செல்லுங்கள்! யார் உங்களை நிறுத்தச் சொன்னது?

நீங்கள் உங்களைக் கொன்று கொண்டால்

நீங்கள் உயிர்த்தியாகிகள் என்று உங்களது குடும்பங்கள் அறியும்!”

நாங்கள் தொடர்ந்து நடந்தோம்.

ஒரு உயிர்த்தியாகியாக மாறுவது மிக எளிதாக இருந்தது,

மேலும் அங்கே பற்பல வழிகள் இருந்தன.

ஏனெனில் நான் மௌனமாக்கப்படுவேன்

ஒருமுறை எனக்குப் பேசுவதற்கான சுதந்திரம் இருந்தால்

எனது நாக்கு அதன் சக்தியை இழந்துவிடும்.

எனது கவிதைகள் மக்களின் குரல்களைத் துண்டிக்கும்

அந்த சுவர்களை உடைக்கப் போராடியதால்,

துளைப்பான்களாகவும் சுத்தியல்களாகவும் மாறின.

ஆனால் நான் மௌனமாக்கப்படுவேன்.

எனது கழுத்தைச் சுற்றியிருக்கும் நட்சத்திரப் பட்டை

எந்தக் கணத்திலும் ஒரு நல்ல பாம்பாக மாறி இறுகலாம்.

எவ்வாறு நான் காஃபியைப் பற்றியும் பூக்களைப் பற்றியும் பேச முடியும்?

அவர்கள் வருகிறார்கள்

சிலவேளைகளில் நீங்கள் தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது,

வீட்டுக்குத் திரும்புகையில் அல்லது ஒரு நண்பரைப் பார்க்கக் கிளம்புகையில்,

அவர்கள் வருகிறார்கள். மரங்களுக்கும் தூண்களுக்கும் பின்னாலிருந்து அவர்கள்

தோன்றுகிறார்கள்,

ஒரு மானைக் கவ்வும் ஒரு வேட்டை நாய்க் கூட்டம் போல உங்களை நெருங்குகிறார்கள்,

ஓடிப் போவதிலோ ஒளிந்து கொள்வதிலோ பயனில்லை என்று நீங்கள் அறிவீர்கள்,

எனவே நில்லுங்கள் ஒரு சிகரட்டைப் பற்ற வையுங்கள், அவர்களுக்காகக் காத்திருங்கள்.

சிலவேளைகளில் நீங்கள் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,

உங்களுடைய சூப் பரிமாறப்பட்டது உங்கள் உண்வு இன்னும் தயாராகவில்லை,

அவர்கள் வருகிறார்கள். ஒரு திடமான கை உங்கள் தோள் மேல் விழுகிறது.

அத்தகைய ஒரு கை உங்களுக்குப் பழக்கமானது தான்

முகத்தைச் சந்திப்பதற்காக நீங்கள் திரும்ப வேண்டிய அவசியம் இல்லை.

பயந்து போன சாப்பிடுபவர்கள் ரகசியமாக எட்டிப் பார்க்கிறார்கள்,

பரிமாறுகிறவள் பேசும் போது அவளது தாடை நடுங்குகிறது,

ஆனால் நீங்கள் அங்கே பில்லுக்காகப் பொறுமையாக காத்திருக்கிறீர்கள்.

அதைக் கணக்கு முடித்து, நீங்கள் அவர்களோடு நடந்து வெளியேறுவீர்கள்.

சிலசமயங்களில் நீங்கள் உங்கள் அலுவலகத்தைத் திறக்கும் போது,

ஒரு கட்டுரையை மூன்று மணி நேரத்துக்குள் முடிக்கும் திட்டத்துடன்,

அல்லது ஒரு மதிப்புரையை வாசிப்பது, ஆனால் முதலில் கொஞ்சம் தேநீர் தயாரிக்கையில் அவர்கள் வருகிறார்கள். கதவுக்குப் பின்னாலிருந்து அவர்கள் முளைக்கிறார்கள்,

பேய்கள் தஙகளது குகைக்கு ஒரு குழந்தையை வரவேற்பது போல,

நீங்கள் தரையில் கப்களும் காகிதங்களும் சிதறிக் கிடப்பதைப் பார்த்து வெளியேறுகிறீர்கள்.

எவ்வாறு ஒரு செய்தியை வீட்டுக்கு அனுப்புவது என்று கற்பனை செய்கிறீர்கள்.

சிலசமயங்களில் நீங்கள் இரவும் பகலுமாக வேலை செய்து விட்டு,

நாய்க் களைப்பு, ஒரு நல்ல தூக்கத்திற்காக ஆசைப்படுகிறீர்கள்

ஒரு குளியலுக்குப் பிறகு கூடுதலாகக் கொஞ்சம் மதுவருந்தல், அப்போது

அவர்கள் வருகிறார்கள். உங்கள் கனவின் வண்ணத்தையே மாற்றிவிடுகிறார்கள்:

உங்களது உடம்பில் உள்ள காயங்களுக்காக முனகுகிறீர்கள்,

மற்றவர்களின் விதியை எண்ணி அழுகிறீர்கள்,

இப்பொழுது மட்டுமே உங்கள் கைகளைக் கொண்டு திருப்பி அடிக்க விரும்புகிறீர்கள்,

ஆனால் ஒரு துப்பாக்கி வெடிக்கும் சப்தம் அல்லது ஒரு “ஊச்”

உங்களை மீண்டும் மௌனமாக்குகிறது மேலும் மீண்டும் தூக்கமில்லாமல் செய்கிறது.

தொலைந்த காலம்

எனது நோட்டுப்புத்தகம் பல மாதங்களாகக் காலியாகவே கிடக்கிறது

என்னைச் சுற்றிலும் உனது ஒளிப் பொழிவுக்கு

நன்றி. எனது பேனாவுக்கு என்னால்

ஒரு பயனும் இல்லை, அது வருத்தம் இல்லாமல்

தளர்ந்து கிடக்கிறது.

எழுதாமல் இருப்பது தேவைப்படும் அர்த்தமற்ற,

ஒரு கதையற்ற வாழ்வை வாழ்வதை விடச் சிறந்தது

எதுவுமில்லை—

நான் போய்விட்ட பிறகு, மற்றவர்கள் கூறட்டும்

அவர்கள் ஒரு மகிழ்ச்சியான மனிதனை இழந்துவிட்டார்கள்,

நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன் என்பதை எவராலும் கூற முடியாது எனினும்.

மீண்டும், இந்த நாட்களில் நான் உன்னைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்

1

ராணுவத்திற்குச் செல்ல நாம் வீட்டைவிட்டுக் கிளம்பிய போது

ரயிலில் நீ கண்ணீரில் வெடித்தாய்.

நீ கூறினாய்: “நான் எனது பெற்றொர்களைத் தேடுவேன்,

இவ்வளவு தொலைவு நான் ஒரு போதும் பயணித்ததில்லை.”

ஆனால் நீயே உரிமை கொண்டாடினாய்

தேசத்தைக் காப்பது ஒவ்வொருவரின் கடமை,

ருஷ்யத் திருத்தல்வாதிகளுடன் நீ கடைசி வரையிலும்

போரிடுவாய் என்று.

நான் எனது தலையைத் தாழ்த்திக் கொண்டேன், அழவில்லை.

ஆனால் கன்ணீரில் மங்கிய எனது அம்மாவின் கண்கள்

குளிர் காற்றுடன் போராடியது

வடக்கு நோக்கிச் செல்லும் ரயிலை நிறுத்துவதற்கு.

2

வடக்கத்தி நிலத்தில்

நமது காலடித் தடங்கள்

உறைபனியில் மறைந்தன.

கடினமான பனிக்கட்டி மெள்ள

அதன் பாளங்களை இழந்து கொண்டிருந்தது.

நாம் கம்பளித் தொப்பிகளை அணிய வேண்டியதில்லை

எல்லைக்கோடு நெடுக நமது ரோந்தின் போது,

சிறிய நீரூற்றுகளீல் நமது குதிரைகளுக்கு நீர் அளித்தோம்.

3

கடைசியாக மழை கறுப்பு பூமியை குழைய வைத்தது.

மலைச் சரிவுகளில் அஸலியாக்கள் பூத்தன.

வனங்கள் யுத்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை.

மலைகளும் ஆறுகளும் யுத்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை.

ஆனால் ஒவ்வொரு இரவிலும் நாம் தூங்கினோம்

நமது ஆடைகளை அணிந்து கொண்டே.

நாம் போரிடத் தயாராக இருந்தோம்.

4

பகைவருடன் மோதிக் கொண்டிருந்த டாங்குகள்,

பள்ளத்தாக்கு வழியே ஓடிக் கொண்டிருந்தன.

மரக் கையெறி குண்டுகளும் அண்மை-ஏவுகணைகளும்

அவர்களை நோக்கிப் பொழியத் தொடங்கின.

ஒவ்வொன்றும் பிழையாக இருந்தது,

ஆனால் நாம் அதைத் தீவிரமாகச் செய்தோம்.

ஒரு பிரம்மாண்டமான அரிவாள் போலச் சுழலும் பீரங்கிக் குழல் கொண்ட

அந்தப் படையூர்தியை ஏன் தேர்ந்தெடுத்தாய்

அதன் முதுகில் ஒரு வெடிகுண்டுச் சிப்பத்தை நிரப்ப?

அது உன்னை மண்ணில் சாய்த்தது

அதன் கம்பளிப் பூச்சி உன் கால்கள் மேல் ஓடியது.

நாங்கள் உன்னைக் குன்றுக்குக் கீழே கொண்டு சென்றோம்

உனது ரத்தம் கீழ் நோக்கி ஒரு சிறிய ஓடைக்குள்

ஆமூரை நோக்கிப் பாய்ந்தது.

5

வெள்ளைக் கூரை,

வெள்ளைச் சுவர்கள்,

வெள்ளைச் செவிலியர்கள்.

உனது கறுப்பு விழிகள் மட்டும் மெள்ளச் சரிகின்றன

நமது கண்கள் மோதிக்கொண்டன.

நீ என்னை வெறித்துப் பார்த்தாய்

கொடிய அமைதியில்.

உன்னால் பேச முடியுமா?

மற்றவர்கள் கூறுவதை நீ கேட்க முடிகிறதா?

நீ முன்பைவிட இரண்டு அடிகள் குள்ளமாகிவிட்டாய்.

நீ வார்டுக்குள் மந்தமாகத் தலையைத் திருப்பிக் கொள்கிறாய்

ஒரு திடுக்கிட்ட ஆமை போல.

உனது வளைந்த முதுகைக் கவனித்தவாறே

ஒரு சகாப்தத்தை நான் வழியனுப்பிக் கொண்டிருந்தேன்.

6

நீ இன்னும் உயிரோடு இருக்கிறாயா?

எனது மனசாட்சியின் கதவில்

அடிக்கடி வலியில் முனகும்

ஒரு கைவிடப்பட்ட நாய்க்குட்டி நீ.

000

இன்றிரவு, நீண்ட அமைதியில்

நான் மீண்டும் உன்னைப்பற்றி நினைக்கிறேன்.

பேசுதலின் வழிகள்

துக்கம் பற்றிப் பேசுதல் நமக்குப் பழகிப்போனது

இழப்புகள், குற்றச்சாட்டுகள், துயரங்கள் ஆகியவற்றால்

நமது இதழ்களும் எழுத்துக்களும் நிரம்பியிருந்தன.

எந்தத் துக்கமும் அங்கு இல்லாமல் இருந்தால் கூட

வருந்துவதை நாம் நிறுத்தப் போவதில்லை

ஒரு துயர்படும் முகத்தின்

அழகுக்காக ஏங்குதல் போல.

பிறகு நாம் துக்கத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது

எச்சரிக்கை செய்யாமல் ஏராளமான விஷயங்கள் இறங்கின:

வீணாகிய உழைப்பு, இழந்த காதல், வீடுகள் அழிந்தன,

திருமணங்கள் உடைந்தன, நண்பர்கள் பிரிந்தார்கள்,

உடனடித் தேவைகளால் லட்சியங்கள் வெளிறிப் போயின.

நமது தொண்டைகளில் சொற்கள் அணிவகுத்து நின்றன

ஒரு நல்ல அழுகைக்காக.

துக்கம் ஒரு முடிவற்ற நதி போலக் காணப்பட்டது—

வாழ்வின் ஒரே அநித்திய ஓடை.

ஒரு நிலத்தை இழந்துவிட்ட பிறகு, ஒரு நாக்கையும் கொடுத்துவிட்ட பிறகு,

நாம் துக்கம் பற்றிப் பேசுவதை நிறுத்தினோம்

புன்னகைகள் நமது முகங்களை ஒளிர்விக்கத் தொடங்கின.

நாம் நிறையச் சிரித்தோம், நமது சொந்தக் குளறுபடிகள் மீது.

பொருட்கள் அழகாக மாறின,

ஸ்ட்ராபெர்ரி வயல்களில் விழும் ஆலங்கட்டி மழை கூட.

****

Comments are closed.