இரத்தம் விற்பவனின் சரித்திரம் – யூ ஹூவா (தமிழில் யூமா வாசுகி) / கார்த்திக் பாலசுப்பிரமணியன்

[ A+ ] /[ A- ]

download (16)

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளையும், அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, அன்றாட வாழ்க்கை முறைகளையும் பற்றி நாம் அறிந்த அளவுக்கு, சீனாவைப் பற்றி அறிந்ததில்லை. சீனா ஒரு இரும்புத்திரை கொண்ட நாடு. இப்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்றே நினைக்கிறேன். பன்னாட்டு வியாபாரத் தொடர்புகள் நிமித்தமாக சீனா தன் திரையைக் கொஞ்சம் விலக்கிக் கொண்டிருக்கிறது. மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏதொன்றையும் திறந்து பார்க்க விழையும் இயல்பான ஆர்வமே சீனாவைப் பற்றிய புத்தகங்களைப் பார்க்கும் போதும் எழுகிறது.

பல்லவி ஐயர் எழுதிய ‘சீனா விலகும் திரை’ புத்தகம், ஒரு இந்திய எழுத்தாளரின் பார்வையில், உலகமயமாக்கலுக்குப் பிந்தைய சீனாவைப் பற்றி பேசும் நூல். ஆனால், இது சீன எழுத்தாளரால், உலகமயமாக்கலுக்கு முந்தைய சீனாவின் உட்பகுதியின் வரலாற்றை ஒரு தனிமனித வரலாற்றுடன் இணைத்து எழுதப்பட்டிருக்கும் நாவல்.

இந்நாவல், சீனாவில் வாழும் ஒரு சாதாரணனின் போராட்டமிக்க வாழ்வைச் சித்தரிக்கிறது. அதன் வழியே, சீனாவின் அரசும், அரசின் அமைப்புகளும் தனிமனித வாழ்வில் ஏற்படுத்தும் நேரடியான மற்றும் மறைமுக பாதிப்புகளையும் பேசுகிறது.

பெரும் இலக்கியங்களிலில் இருந்து சமூக நாவல்கள் வரை பெரும்பாலான நாவல்கள் பெண் ஒருத்தியை மையப் படுத்தியே நகரும். ஆனால் இந்த நாவல் ‘ஸூ ஸன்க்வான்’ என்ற ஆணை மையப் படுத்தி நகர்கிறது. சீனாவின் உட்பகுதி ஒன்றில் நடக்கும் கதை. அங்கு, மனித இரத்ததிற்கு மிகப் பெரிய தேவை இருக்கிறது. இரண்டு கிண்ண இரத்ததின் மதிப்பு, கிட்டத்தட்ட ஆறுமாத அறுவடையில் கிடைக்கும் தொகையைவிட அதிகம். ஆனால், இப்படி இரத்தம் விற்பது அங்கு மிகவும் இழிவான செயலாகக் கருதப்படுகிறது. “நீ வியர்வையை விற்கலாம். அது உன்னுடையது. ஆனால், இரத்தம் உன்னுடைய மூதாதையர்கள் உனக்குக் கொடுத்த கொடை” என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆனால், கதை நாயகன் பல்வேறு சமயங்களில் வேறு வழியேயின்றி இரத்தம் விற்க நேர்கிறது. ஒரு முறை பஞ்ச காலத்தில் தன் குடும்பத்துக்குக் கிடைக்கூடிய ஒரு வேளை நல்ல உணவுக்காக, தன் வளர்ப்பு மகனின் (அவனுடைய மனைவியின் மகன்) பொருட்டு எழும் சிக்கலைத் தீர்ப்பதற்காக, தான் ஆசை கொண்ட பெண்ணுக்காக, தன் மகனின் இடமாற்றத்துக்காக, அதே வளர்ப்பு மகனின் உயிரைக் காப்பதற்காக என்று பல்வேறு சமயங்களில் இரத்தம் விற்றுக் கொண்டே இருக்கிறான். கடைசியாக, அவனுக்காக விற்கச் செல்லும் பொழுது, மூப்பின் காரணமாக அவனுடைய இரத்ததுக்கு விலை இல்லாமல் போகிறது. நடுத்தெருவில் நின்று அழுகிறான்.

பெரும்பான்மையான ஆண்களின் வாழ்க்கை இப்படித்தானே போகிறது. ஆண் என்பவன் கடைசி வரையில் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்காகவே வாழ்ந்து கழிக்கிறான். ஒரு பெண்ணின் துயர் பேசப்பட்ட அளவுக்கு ஆணின் துயரம் எங்குமே பேசப்படுவதில்லை. அதைப் பேசும் வகையில் இது முக்கியமான நாவல்.

ஸூ ஸன்க்வானின் மனைவி திருமணத்துக்குப் பின்னே வேறு ஒருவனின் குழந்தையைச் சுமக்க நேரிடுகிறது. இந்த உண்மை அந்தக் குழந்தைக்கு எட்டு வயது ஆகும் போதுதான் ‘ஸூ ஸன்க்வானுக்கே’ தெரிகிறது. தன் மனைவியின் மூலம் வேறு ஒருவனுக்குப் பிறந்த குழந்தையை தன்னுடைய குழந்தையாக ஏற்றுக் கொள்வதில் அவனுக்கு இருக்கும் அகச் சிக்கல்கள் இதில் சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது.

கம்யூனிச சித்தாந்தங்களை நடைமுறைப் படுத்துவதில் அரசுக்கு ஏற்படும் குழப்பத்தையும், அப்படியான அரசின் முடிவுகள் ஒரு சாதாரண குடிமகனை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது நாவல் முழுவதும் ஊடு பாவாக ஆங்காங்கே கதைப் போக்கில் சொல்லப்பட்டிருக்கிறது.

சீனர்கள் பார்ப்பதற்குத்தான் நமக்கு ஒரே மாதிரித் தெரிகிறார்கள் என்றால், அவர்களின் பெயர்கள் கூட ஒரே போலவே உச்சரிப்பு கொண்டிருக்கின்றன. அவை மட்டுமே இது ஒரு சீன நாவல் என்பதை நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றன. யூமா வாசுகி மொழிப் பெயர்த்து நான் வாசிக்கும் இரண்டாவது நூல் இது. கடினமான வார்த்தைகள் இல்லாமல் எளிமையாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

சீனாவில் ‘அவமானம்’ என்பதைச் சுட்ட ‘முகத்தை தொலைத்தல்’ என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள். உன்னால் நான் அவமானப்பட்டேன் என்று சொல்வதற்குப் பதிலாக உன்னால் நான் என் முகத்தை இழந்தேன் என்று சொல்கிறார்கள். இது எனக்கு நம் ஊர்ப்புறங்களில் ‘என் முகத்த எங்க போயி வச்சுக்கிறது’ என்ற பொதுவாக வழங்கப்படும் ஒரு சொல்லாடலை நினைவுபடுத்திச் சென்றது. இடங்கள் தாம் வேறு வேறு எல்லாவிடங்களிலும் மனிதர்கள் ஒன்று போலவே இருக்கிறார்கள். அங்கும் விவசாயிகளும், ஏழைத் தொழிலாளர்களுமே இரத்தம் விற்கிறார்கள். எளியவர்களே பஞ்சத்தில் சாகிறார்கள். பெண்களே இழிவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

* * *

Comments are closed.