திலகபாமா கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download

சிலுவையில் காதல்

தனிமையில் சொற்களை விட்டு விடு.

அவை அவைகளாகவே இருந்து விட்டு

போகட்டும்

உன் கண்ணீர் உவர்ப்பில் ஊற வைத்து

தனிமை கசிவில் நெகிழ வைத்து

கோப தாப தகிப்பில் உலர விட்டு

இன்னொன்றாய் மாறிப்போகும் சொற்களை.

என்னது என எப்படி கட்டியங் கூறுவேன்

சொற்களின் நிர்வாணத்தில்

என் காதலை வாசி

உணர்வுகளை உடுத்திக் கொண்ட சொற்கள்

பெருஞ்சுவராய் ஆகி கணக்கின்றன

அதைவிட அவள் மெளனம்

இன்னும் ஈரமாகவே இருக்கிறது.

ஒட்டிக் கொள்ள மறுத்து விட்ட உன்னை.

கட்டிக் கொண்டதற்காய் ஒரு முறையும்

விட்டு விலகிய அன்பிற்காய் மறுமுறையும்

சிலுவை அறைகிறாய்.

இரத்த கவுச்சியில் காதல்

புலிகள்

எதிரிகள் கண்ணில் படும் வரை

பாதங்களை மெத்தெனவே வைத்திருக்கின்றன

கூர் நகங்கள் வெளி வந்த நேரம்

எதிரியின் நேரமா

இரையின் நேரமா

புலிகளின் இதயமும் வயிறுமே அறிந்திருந்தன.

குறத்திகளின் கைகளில் புலி நகங்கள்

வெறும் கண்ணூறு கழிப்பதாயும்

ஐம்பது ரூபாய் காசாவும் மாறி இருந்தன.

கழுத்திலிட்டு முத்தமிட்டு

புலியின் வீரத்தை தனக்குள்

திணித்துக்கொண்டு இருந்தான் ஒருவன்

புலிநகங்களைப் போல

ஆணும், பெண்ணும் சொற்களையும்

சம்பவங்களையும் தலைமாத்திக்

கொண்டிருந்தனர்.

என் சொற்கள் என்னதுவாக இல்லாது

இன்னொருவரானதாய் மாறிப்போய் இருக்க

இரத்த கவுச்சியில் மறைகிறது

காதல் சுக வாசம்

கியூப்

அந்த கனசதுரத்தின்

வர்ணங்களை சுழற்றிக் கொண்டிருந்தாள்

உடையும் சிறு சதுரங்கள்

பெரிய ஒரு சதுரமாக சுழன்றன

கலந்திருந்த வர்ணங்களை

பிரித்திடுவதே வெற்றியாக அறிவித்து விட

அவளோ

கலந்து இருப்பதையே இருப்பாக்கியிருந்தாள்

தோல்வியாய் அடையாளப்படுத்த

வெற்றியாய் எல்லா வர்ணமோடும்

கலந்து கொண்டிருந்தாள்

ஒற்றைப்படை காதலில் இல்லையென்பதை

கனசதுரத்திற்குள் சொல்லியிருந்தாள்

விளையாட்டில் அவனின் தோல்வியை

ரசிக்கவில்லை அவள்

வெற்றியை ரசித்தாள்

தோல்வியென அறிவித்தானவன் அவளை

Comments are closed.