Category: சிறுகதை

ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும் / உதயசங்கர்

download (22)

நீல நிற வானத்திலிருந்து நேரே சரிந்து இறங்கியது போலிருந்த பூங்கா சாலையின் துவக்கத்தில் ஏஞ்சல் தோன்றிவிட்டாள். வழியெங்கும் குல்மொகர் மரங்கள் ரத்தச்சிவப்பாய் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்தன. தர்ச்சாலை தெரியாதபடிக்கு தரையில் பூக்கள் சிதறிக்கிடந்தன. மஞ்சள் கலந்த சிவப்பு தரையில் பளீரிட்டது. மரத்திலும் சிவப்பின் நிழல் அடர்ந்து பார்ப்பதற்கு சாலை முழுவதும் சிவப்புக்கம்பளம் விரித்தது போல இருந்தது. மகேஷ் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தச்சாலையின் கீழ்புறத்தில் பூங்காசாலை நகரின் முக்கியச்சாலையோடு இணைகிற இடத்தில் ஒரு ஆலமரம் விருட்சமாய் படர்ந்திருந்தது. அந்த ஆலமரத்தின் கீழே தான் மகேஷூம் அவனது நண்பனும் பைக்கை நிறுத்தி அதில் சாய்ந்துக்கொண்டு ஒரு காலை பைக்கின் பெடலிலும் இன்னொரு காலை தரையிலும் ஊன்றி நின்று கொண்டிருந்தார்கள். ஆள் நடமாட்டம் உள்ள சாலை தான். ஆனால் மகேஷுக்கு மட்டும் எப்படி என்றே தெரியாது, ஏஞ்சலின் தலை சாலைமேட்டில் தோன்றும்போதே மகேஷ் பார்த்து விடுவான். மகேஷ் அவளைப்பார்த்தவுடன்,

“ டேய் மக்கா…மக்கா… அங்க பார்டா… என்னமா ஜொலிக்கிறா! பின்னாடி அந்த சூரியஒளி அவ மேலே பட்டுத்தெறிக்கிறத பாருடா…”

என்று அவனுடைய நண்பனிடம் பரவசமாய் புலம்புவான். மகேஷின் நண்பன் சிரிப்பான். அவன் சிரிப்பில் ஒரு கைப்பு இருக்கும். ஆனால் அந்த பரவசமனநிலையை மகேஷ் கைவிடுவதாக இல்லை. இருநூறு மீட்டர் தூரத்தில் இறங்கி வந்து கொண்டிருக்கும் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஏஞ்சல் அன்று நீல நிறத்தில் புடவை உடுத்தியிருந்தாள். எப்போதும் போல் முந்தானையைப் பறக்க விட்டிருந்தாள். சிறகுகள் அடிக்க மெல்ல இறங்கிய மயில்போல ஒயிலாக நடந்து வந்து கொண்டிருந்தாள் ஏஞ்சல். மஞ்சள்கலந்த கோதுமை நிறத்தில் இருந்த அவள் ஒரு போதும் கண்ணைப்பறிக்கும் நிறத்தில் உடை உடுத்துவதில்லை. மென்மையான நிறங்களில் அவள் உடுத்திய உடைகள் அவளைப்பளிச்சென்று காட்டியது. பின்னியும் பின்னாமலும் ஈரம் ததும்பி நிற்கும் அவளுடைய தலைமுடி பின்னால் இடுப்புக்குக்கீழே இறங்கியிருந்தது. அவள் அருகில் வரவர மகேஷூக்கு ரத்தஓட்டம் அதிகரிக்கும். உடம்பெங்கும் ஒரு படபடப்பும் நடுக்கமும் தொற்றிக்கொள்ளும். அவளுக்கும் இது தெரியும் அவனைக்கடந்து செல்லும்போது தலையைத் திருப்பாமலே ஒருபார்வை பார்ப்பாள். மகேஷின் ஈரக்குலையைக் கவ்வும். அவன் முகத்தில் ரத்தம் ஊறுவதை உணர்வான். அந்த உணர்வோடு திரும்பி அவனது நண்பனைப் பார்ப்பான். அவன் முகத்தில் வெறுப்பு கடலென பொங்கிக்கொண்டிருக்கும். அப்படியே காறித்துப்புவான்.

” என்னடா ஆச்சு..? ஏண்டா இப்படி பண்றே..”

“ எலேய் உனக்குத்தெரியலையா…? அவகூட ஒருத்தி வாரா பாருடா.. அவளும் அவள் முகரக்கட்டையும்…பாக்கச்சகிக்கல..”

“ எங்கடா வாரா… அவ மட்டும் தானே வாரா..”

“ கண்ணைத்திறந்து நல்லாப்பாரு…”

“ எனக்கு ஒண்ணுமே தெரியல..”

“ தெரியாதுடா..தெரியாதுடா… இப்ப உங்கண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது…”

தூரத்தில் ஏஞ்சல் மட்டுமே தெரிய அருகில் வர வர ஏஞ்சலின் முதுகிலிருந்து பிறந்தவள் மாதிரி அவளுடைய தோழி வருவாள். கட்டையான பரட்டைத் தலைமுடியும், பெரிய தடித்த உதடுகளும் சப்பையான மூக்கும், அகன்று விரிந்த இடுப்பும், எப்போதும் சிடுசிடுத்தமுகமும் கொண்ட ஏஞ்சலின் தோழி எப்போதும் அடர்ந்த நிறத்திலேயே சுடிதார் அணிந்திருப்பாள். இன்று கரும்பச்சை நிறத்தில் அவள் அணிந்திருந்த சுடிதார் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. அவள் பார்வையில் ஒரு சந்தேகத்தேள் கொட்டுவதற்குத் தயாராக எப்போதும் தன் கொடுக்கைத் தூக்கி வைத்திருக்கும். ஒருபோதும் சிரித்திராத அந்த முகம் பாறையைப் போல இறுகிப் போயிருக்கும். நடந்து வரும்போதோ அல்லது போகும்போதோ ஏஞ்சலும் அவளது தோழியும் ஒரு பொழுதும் பேசிக்கொண்டதாகப் பார்த்ததில்லை. ஆனால் அவளின் ஒவ்வொரு பார்வையையும் ஏஞ்சல் உணர்ந்திருந்தாள்.

ஏஞ்சலின் தோழி ஒரு போதும் மகேஷையோ, அவனது நண்பனையோ சிநேகமாக இல்லையில்லை சுமூகமாகக்கூடப் பார்த்ததில்லை. அவள் பேசுகிற மாதிரி தெரியாது. தடித்த உதடுகள் அசையும். அவ்வளவு தான் ஏஞ்சல் மகேஷின் நண்பனைப் பார்ப்பாள். அதுவரை இருந்த வெளிச்சம் மறைந்து முகம் இருண்டு விடும். லேசான நடுக்கம் உடலில் பரவியது. மகேஷ் கூட அவனது நண்பனை விட்டு விட்டு வர நினைத்தான். அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? மகேஷின் தைரியமே அவன் தானே.

ஏஞ்சல் முக்கியசாலையில் திரும்பும்போது மகேஷைப்பார்த்து ஒரு சிரிப்பைச் சிந்துவாள். அதுபோதும். மகேஷும் அவனுடைய நண்பனும் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். மறுபடியும் மறுநாள் காலையில் அந்த பூங்காசாலையில் ஆலமரவிருட்சத்தினடியில் காத்திருப்பார்கள். மகேஷின் நண்பனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் பாலியகாலத்திலிருந்தே அவனுடைய நெருங்கிய நண்பன் மகேஷ். இருவரும் ஒன்றாகவே படித்தார்கள். ஒரே மார்க் வாங்கினார்கள். மகேஷ் கொஞ்சம் குட்டை. சற்று ஒல்லி. பயந்தாங்கொள்ளி. ஆனால் வசீகரமான முகம். மகேஷின் நண்பன் கருப்பாக இருந்தாலும் உயரமாக ஜிம்பாடியுடன் இருந்தான். மகேஷின் நண்பனின் முரட்டுத்தனம் அவனுடைய உடல்மொழியில் தெரியும். முகத்தில் யாரையும் மதிக்காத ஒரு அலட்சியபாவம். மகேஷோடோ இல்லை அவனோடோ யாராவது எதிர்த்துப்பேசினால் கூடப் பிடிக்காது. உடனே கையை ஓங்கி விடுவான். எந்த வம்புச்சண்டைக்கும் தயாராக இருப்பவன்.

ஏஞ்சல் வேலைபார்க்கிற கம்ப்யூட்டர் செண்டருக்கு அடிக்கடி மகேஷும் அவனது நண்பனும் அவனுடைய வேலைக்காக ரெசியூம் பிரிண்ட் அவுட் எடுக்கப்போவார்கள். மகேஷ் அப்போது தான் ஏஞ்சலைப்பார்த்தான். கண்டதும் காதல் தான். ஆனால் ஏஞ்சல் அவ்வளவு எளிதாக பிடி கொடுக்கவில்லை. அவள் யாரைக்கண்டோ பயந்தாள். மகேஷின் நண்பன் தான்

“ அவ அந்தக் குட்டச்சியைப்பார்த்து பயப்படுதா… பரட்டைத்தலைக்கு இருக்கிற திமிரப்பாரேன்..”

என்று திட்டினான். மகேஷ் இல்லையில்லை என்று தலையாட்டினான். ஆனால் அவனுக்கும் அந்த அச்சம் இருந்தது. யார் இந்தத்தோழி? கரிய நிழல்போல எப்போதும் கூடவே வருகிறாள்? ஏஞ்சல் அந்தத்தோழி இல்லாமல் தனியே வருவதே இல்லை. அப்போது மகேஷின் நண்பன் சொன்னான்.

“ ஏன் நீ கூடத்தான் நான் இல்லாமல் தனியா எங்கேயும் போறதில்லை..”

அதைக்கேட்டதும் மகேஷ் முகம் சுளித்தான். ஞாயிற்றுக்கிழமை கம்ப்யூட்டர் செண்டர் லீவு. அன்று ஏஞ்சலைப்பார்க்க முடியாது. பார்க்க முடியாத அந்த நாளில் மகேஷ் ஏங்கிப்போவான். அன்று முழுவதும் அவனுடைய நண்பனிடம் அவளைப்பற்றிப் பேசிக்கொண்டேயிருப்பான். மகேஷின் நண்பனும் அவன் பேசுவதை தலைகுனிந்தவாறு கேட்டுக்கொண்டேயிருப்பான். எப்போதாவது,

“ கூட அவ ஃபிரெண்டும் இருக்கா பாத்துக்கோ…” என்று எச்சரிப்பான்.

அதற்கு மகேஷ் சிரித்தவாறே

“ அவ இருந்தா அவபாட்டுக்கு இருந்துட்டுப்போறா…”

என்று அலட்சியமாகச் சிரிப்பான்.

“ நீ எப்பயுமே வெளிச்சத்தை மட்டுமே பாக்கே… பக்கத்திலேயே இருட்டும் இருக்கு.. பாத்துக்க..”

என்று கட்டைக்குரலில் சொன்னான் மகேஷின் நண்பன்.

ஒரு ஞாயிறு காலைப்பொழுதில் பூங்காசாலையில் சும்மா அந்த ஆலமரத்தடியில் வந்து நின்றிருந்தான். அன்று அபூர்வமாக அவன் மட்டுமே தனியாக வந்திருந்தான். சூரியன் அப்போது தான் எழுந்து சுதாரித்துக்கொண்டிருந்த வேளை. குல்மொகர் மரங்களின் சிவந்த பூக்களில் சூரியனின் காலைக்கிரணங்கள் பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. மஞ்சள் வெயில் தார்ச்சாலையை மென்மையாக மாற்றிவிட்டிருந்தது. கூட்டம் கூட்டமாய் மேகங்கள் தங்கச்சரிகை விளிம்பிட்டு மெல்ல ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன. அந்த வேளையில் தந்தத்தின் நிறத்தில் சுடிதார் அணிந்து மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தாள் ஏஞ்சல். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளும் தனியாக அவளுடைய தோழி இல்லாமல் வந்து கொண்டிருந்தாள்.

இடது பக்கம் லேசாகச் சாய்ந்த அவளுடைய நடையில் ஒரு பாந்தம் இருந்தது. அவளும் அவனைப்பார்த்து விட்டாள். அவள் திடுக்கிட்டது தெரிந்தது. இடது கையால் அவளுடைய துப்பட்டாவின் முனையைப் பிடித்துக்கொண்டு வலது கையில் மார்போடு பைபிளை அணைத்துக் கொண்டே மெல்ல நடந்து வந்தாள். அவளுடைய மெலிந்த விரல்களிலிருந்து வெளிப்பட்ட அன்பினால் பைபிள் துடித்துக்கொண்டிருந்தது. மகேஷ் அந்தக்கணத்தில் இயேசுவைத் தன் ஜீவனாக ஏற்றுக்கொள்ளத் தயாரானான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் நடமாட்டம் அதிகம் இல்லை.

மகேஷின் இதயம் துடிக்கிற சத்தம் அவனுக்கு வெளியில் கேட்டது. அவளை நிறுத்திச் சொல்லிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவள் அருகில் வந்தபோது ஓரடி அவளைப்பார்த்து நெருங்கியும் விட்டாள். படபடப்புடன் அவள் அவனை ஏறிட்டுப்பார்த்தாள். அந்தக்கண்களில் அன்பின்ஓளியைப் பார்த்தான். சூரியனின் கதிர்கள் விளிம்பிட்ட அவளைப்பார்க்கும்போது அவனுக்குள் தீராத தாகம் எழுந்தது. நா வறண்டது. எச்சிலை ஊற வைத்து விழுங்கினான். அவள் உண்மையில் அந்த ஓளியில் தேவதை போலவேத் தோன்றினாள். மகேஷுக்கு நடந்து கொண்டிருப்பது கனவா என்று கூடச் சந்தேகம் வந்தது. முன்னால் நிழல் விழுந்த அவள் உருவத்தின் அழகு அவனை மெய்மறக்கச்செய்தது. அந்தக்கணத்தில் அவன் ஏஞ்சலின் பரிபூர்ண அன்பை உணர்ந்தான். இது போதும். அந்தக்கணம் இனி வாழ்வில் என்றாவது வருமா?

அன்று மகேஷ் முடிவெடுத்தான். வாழ்ந்தால் இனி ஏஞ்சலோடு தான் வாழவேண்டும். அதைக்கேட்ட மகேஷின் நண்பன் கோபப்பட்டான்.

“ நீ அவளோட வாழ்றதுக்காக நான் அவ ஃப்ரெண்ட் …அதான்..அந்தப்பரட்டைத்தலை பிசாசோட வாழணுமா? “

என்று கேட்டான். மகேஷுக்கு அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. மலங்க மலங்க விழித்தான். ஆனால் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. மகேஷின் நண்பன் அவனை விட்டு எங்கேயும் போகமாட்டான். போகவும் முடியாது.

மகேஷுக்கு சென்னை ஐ.டி. கம்பெனியில் சுமாரான சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆரம்பத்தில் குறைவான சம்பளமாக இருந்தாலும் போகப்போக சம்பளம் அதிகமாகும் வேலைப்பாதுகாப்பும் உண்டு என்ற தைரியத்தில் சேர்ந்து விட்டான். ஆறுமாதம் கழிந்த பிறகு ஊருக்குச் சென்றான். அவனுடைய நண்பனுடன் ஏஞ்சலின் வீட்டுக்குச் சென்றான். ஏஞ்சலின் அம்மா கார்மெண்ட்ஸிலும், அப்பா ஜவுளிக்கடையிலும் வேலை பார்த்தார்கள். ஒரு தம்பி ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அங்கே ஏஞ்சலும் அவளது தோழியும் இருந்தார்கள். கொஞ்சம் தயங்கினாலும் அவர்களுக்குச் சம்மதம். மகேஷும் வீட்டில் பேசி வற்புறுத்தித் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

ஒரு வழியாகத் திருமணம் முடிந்து சென்னைக்கு தனிக்குடித்தனம் போனார்கள். புதுமணத்தம்பதிகளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வர சம்பந்திகளும் போயிருந்தார்கள். ஏஞ்சலின் தோழியும், மகேஷின் நண்பனும் இல்லாமலா. அவர்களும் உடன் போயிருந்தார்கள். எல்லோரும் திரும்பி விட்டார்கள். ஏஞ்சலின் தோழி ஏஞ்சலோடேயே தங்கி விட்டாள். மகேஷின் நண்பனும் மகேஷோடு தங்கி விட்டான்.

எப்படி நான்குபேரும் ஒரே வீட்டில் ஒரே படுக்கையறையில் இருக்கமுடியும் என்று சந்தேகப்படும் வாசகர்களுக்கு ஏஞ்சலும், மகேஷும், சேர்ந்து ஒரே குரலில்

“ எப்போது நாங்கள் தனியாக இருந்தோம்? “ என்று கேட்கிறார்கள்.

•••

‘எனக்கு அடுத்திருந்த அறை’ / கபில் ஸ்ரனிஸ்லஸ்

download (20)

எனது பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் பதிவு செய்துவிட்டு அந்த ஏழாம் நம்பர் அறைக்குத் திரும்பி ஒரு இளநீர் ஓர்டர் செய்யும் வரையில் யாவும் சரியாகவே நடந்தது.அதன் பிறகு ஹோட்டல் பரிசாரகன் கதவைத் தட்டி உள்ளேவர அனுமதி கேட்டான்.நான் அனுமதி கொடுத்ததும்,அவன் கதவை திறந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது பிரச்சினை.சரி,நான் இப்போது யாவற்றையும் ஒழுங்கு வரிசையில் ஞாபகப் படுத்துகிறேன்.

நான் கொளுவியிருந்த முதுகுப்பையில் இரண்டு லினன் சட்டைகளையும் ஒரு அரைக்கால் சட்டையையும் இரண்டு ஆணுறைகளையும் தவிர குறிப்பிடும்படி வேறெதுவும் இருக்கவில்லை.பயணங்களின் போது தேவையற்ற பாரங்களை சுமப்பதில் எனக்கு விருப்பமிருந்ததில்லை.நான் அணிந்திருந்தது கூட ஒரு கையில்லாத பனியனும் சாம்பல் நிற அரைக்கால் சட்டையும் தான்.வெய்யிலுக்காக கூலிங் க்ளாஸும் அணிந்திருந்தேன்.

இலங்கை நாட்டின் காலநிலைக்கு அதுவே பொருத்தாமாயிருந்தது.எனது ஸ்பானிய நண்பன் சொன்னது போலவே அந்த ஹோட்டலின் முகப்பில் ‘ஓல்ட் டச்’ என எழுதப்பட்டிருந்தது.டச்சுக் காலனித்துவ காலத்துக்குரிய கூரை அமைப்பையே அது கொண்டிருந்தது என்பதை தூரத்தில் வரும்போதே கண்டு கொண்டிருந்தேன்.சுவற்றில் வெள்ளை அடிக்கப்பட்டிருந்ததையும் நேர்த்தியாக வெட்டிப் பராமரிக்கப்பட்ட பசுமையான புற் கூட்டத்தையும் தவிர அந்த கட்டடம் உருமாறாமல் அப்படியேதான் இருந்தது.

வரவேற்பறையிலிருந்த சிங்களத் தேசத்து பெண்ணுக்கு எனது பெயர் புரியவில்லை.இரண்டாம் முறையும் உச்சரிக்கச் சொன்னாள்.வலதுகாதை என்பக்கம் திருப்பி புரியாதது போல் பாவனை காட்டினாள்.கடைசியில் நானாகவே எனது ஸ்பானியப் பெயரை குறிப்பேட்டில் எழுதிக் காட்டினேன்.அவள் சிரமம் ஏற்படுத்தியதற்கு வருந்துவதாக ஆங்கிலத்தில் சொன்னாள்.எனக்குரிய ஏழாம் நம்பர் அறைச் சாவியை கையில் தந்துவிட்டு முழுப் பற்களும் தெரிய தொழில் முறைப் புன்னகை ஒன்றைச் செலுத்தினாள்.

என் நண்பன் வர்ணித்தது போலவே அந்த அறை சொகுசு மெத்தையை உடைய கட்டிலையும் திறந்தால் கடல் காற்று அடிக்க கூடிய விசாலமான யன்னலையும் பெற்றிருந்தது.அசதியில் கட்டிலில் சரிந்தேன்.தொண்டை வறண்டு தாகம் எடுத்தது.தோலில் முளைத்திருந்த பொன்னிற உரோமங்களைப் பொசுக்கிய இலங்கை வெய்யில் என்னை உருக்குலைத்துப் போட்டிருந்தது.அருகிலிருந்த தொலைபேசியை எம்பி எடுத்து ஹோட்டலுக்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.விரலால் சுற்றி பயன்படுத்தும் பழைய பாணியிலான தொலைபேசி எரிச்சலைத் தந்தது.மறு முனையில் ஆண்குரல் ஒலித்ததும்,ஒரு இளநீர் வேண்டுமென ஆங்கிலத்தில் கேட்டேன்.கண நேரத்துக்குப் பதில் வரவில்லை.

பிறகு,சிங்கள மொழியில் ஏதோ சொன்னது அந்தக் குரல்.’ட்ரிங்’ என நான் ஆங்கிலத்தில் அழுத்திச் சொன்னதும் அந்தக் குரல் மதுபான வகைகளின் பெயரை அடுக்கிக் கொண்டே போனது.முதுகுப்பையிலிருந்த தண்ணீர் போத்தல் ஞாபகம் வந்து இளநீர் குடிக்கும் ஆசையைக் கைவிடவிருந்த சமயத்தில் இன்னொரு குரல் என்ன வேண்டுமென ஆங்கிலத்தில் பேசியது.தேவையைச் சொன்னேன்.உடனே ஏற்பாடு செய்கிறோம் சிரமத்துக்கு மன்னிக்கவும் என்றவுடன் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

காத்திருப்பை அடுத்து ஹோட்டல் பரிசாரகன் இருமுறை கதவைத் தட்டினான்.நான் அனுமதி கொடுத்ததும்,உள்ளே வந்தவன் என்னைப் பார்த்த மாத்திரத்தில் திரும்பவும் காதவைப் பூட்டிவிட்டு வெளியேறிவிட்டான்.நான் எதையுமே கணிக்க முடியாத புதிர் நிறைந்த கண்களோடு அப்படியே கட்டிலில் கிடந்தேன்.மீண்டும் கதவு தட்டப்பட்டது.ஒரு கடலாமையைப் போல தலையை மட்டும் அறைக்குள் நீட்டிய பரிசாரகன் ‘சிரமத்துக்கு மன்னிக்கவும்’ என கொச்சை ஆங்கிலத்தில் கூறிவிட்டு பழையபடி கதவைச் சாத்த போனான்.

நான் கட்டிலிலிருந்து துள்ளி எழுந்து அவனை நிறுத்தினேன்.எனது கண்களிலிருந்து புதிர் மறைந்து கோபம் உருப்பெற்றது.யன்னல் ஊடாக வந்த கடல் காற்றையும் மிஞ்சும்படி மிகக் கடுமையாக “வட் த ஃபக்’ என கத்தினேன்.முழுமையாக திறக்கப்பட்டிருந்த கதவின் எதிரே மரத்துப் போன கைகளில் இளநீரை ஏந்தியபடி அவன் நின்றிருந்தான்.பதில் சொல்லத் தெரியாமல் கூச்சமடைந்த மண்புழுவைப் போல அவன் நெளிந்து கொண்டிருந்தான்.

சற்று முன்னர் தொலைபேசியில் சிங்களத்தில் பேசியவன் அவனாகத்தான் இருக்க வேண்டுமென ஊகித்துத் கொண்டேன்.விரலால் அடுத்த அறையைச் சுட்டிக் காட்டிய அவன்,அங்கு கொண்டு போக வேண்டிய இளநீர் அதுவென வலியுறுத்தினான்.நான் கதவை வேகமாக சாத்தியபோது ஏற்பட்ட பெரும் சப்தம் அவனது முகத்தில் அறைந்திருக்க வேண்டும்.அடுத்த அறையை நோக்கித் தாவிய அவனது காலடி ஓசைகள் என் காதில் விழுந்தது.ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் பிரச்சினையைச் சொல்லத் தோன்றவில்லை.

விரல்களால் சுற்ற வேண்டிய தொலைபேசியின் நினைப்பே சலிப்பை உண்டு பண்ணியது.நானாகவே என் வாயால் ஓர்டர் செய்த இளநீர் எப்படி இன்னொருவரின் வாய்க்குள் போகும் என்பது தெளிவில்லாமலேயே இருந்தது.நடக்கவிருக்கும் குழப்பங்களின் ஆரம்ப முடிச்சு அதுவென அறியாமலேயே தண்ணீரைக் குடித்துவிட்டுக் கட்டிலில் படுத்தேன்.

காலையில் வரவேற்பறையில் இருந்தவளிடம் விசயத்தைச் சொன்னதும் அந்த ஹோட்டலில் ஏழாம் நம்பரில் இரண்டு அறைகள் உள்ளதாக விளக்கினாள்.கட்டட உரிமையாளரான டச்சுக் காரருக்கு ஏழு அதிஷ்டமான நம்பர் என்பதால் அந்த நம்பரையே இரண்டு அறைகளுக்கு வழங்கியதாகவும்,பின்னர் அதையே ஒரு மரபாகப் பேணுவதாகவும் சொன்னாள்.நல்ல வேளையாக அந்த ஹோட்டலிலுள்ள அனைத்து அறைகளுக்கும் ஒரே இலக்கம் வழங்கப்படவில்லை என்பதையிட்டு திருப்தி அடைந்தேன்.

வரவேற்பறையில் இருந்தவள் இளநீரை ஓர்டர் செய்தது நானல்ல,அந்த இன்னொரு ஏழாம் நம்பர்காரர் தான் என அழுத்தமாகக் கூறிக் கொண்டிருந்தாள்.முதல் நாள் இரவே இந்தச் சர்ச்சையான விவகாரம் கலந்து பேசிய பின் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது எனத் தெரிந்தது.நான் தொடர்ந்து வாக்குவாதம் பண்ண விரும்பவில்லை.பயணங்களின் போது தேவையற்ற பாரங்களைச் சுமப்பது எனக்குப் பிடிக்காது.நான் கடுமையாக நடந்து கொண்ட பரிசாரகனிடம் மன்னிப்பைத் தெரிவிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

கடற்கரை மணல் துகள்கள் காலில் ஒட்டுவதை விரும்பியதால் செருப்பைக் கழற்றிக் கையிலெடுத்துக் கொண்டேன்.நான் கடந்து வந்த பாதை கடைகளால் நிரம்பியிருந்தது.கோடை காலமாதலால் நிறைய வெளிநாட்டவர்களின் பளிச்சிடும் முகங்களைக் காண நேர்ந்தது.

லூஸியானா இஸபெல்லா குறிப்பிட்டிருந்த கடற்கரையோர உணவு விடுதியைக் கண்டுபிடிக்கச் சிறிது நேரம் எடுத்தது.விடுதியில் அவளுக்காக காத்திருந்த நிமிடங்கள் பதட்டத்தை அளித்தன.ஆனாலும் நான் பொறுமை இழக்க முன்னதாகவே அவள் அங்கு வந்துவிட்டிருந்தாள்.முதன் முறையாக நேரில் சந்தித்ததால் வெட்கமும் சந்தோஷமும் பரவிய கைகளைக் குலுக்கிக் கொண்டோம்.மிக மெல்லிய பருத்தியால் நெய்யப்பட்ட சட்டையை அவள் அணிந்திருந்தாள்.உள்ளே அணிந்திருந்த ஊதா நிற மார்புக்கச்சை அதனூடாக தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

கடல்காற்று என்னை விடவும் மூர்க்கமாக அவளது பருத்திச் சட்டையை தன்பக்கம் இழுத்துக் கொண்டிருந்தது.முலைகளின் பிளவின் ஆரம்பத்திலிருந்து கழுத்தின் முடிவு வரை மஞ்சள் நிறப் புள்ளிகளைப் பெற்றிருந்தது அவளது உடல்.ஒருவாரமாக இன்டர்நெட்டில் பேசிய நாங்கள் அன்று முதல் தடவையாக ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துப் பரஸ்பரமாகப் பேசிக் கொண்டோம்.ஒரு அந்நிய தேசத்தில் ஸ்பானிய மொழியைக் கேட்பதில் அவளுக்கும்,ஒரு அந்நிய தேசத்தில் பெண்குரலில் ஸ்பானிய மொழியைக் கேட்பதில் எனக்கும் பூரிப்பாயிருந்தது.

எலுமிச்சை சாறில் ஊறிய அவித்த நண்டு வாங்கிச் சாப்பிட்டோம்.வெய்யில் ஏறிய நேரத்தில் கடலில் ஒன்றாகக் குளித்தோம்.நீச்சல் உடையில் லூஸியானாவின் இடை நான் சற்றுமுன்னர் கடைத் தெருவில் பார்த்த தன்னிச்சையாக கழுத்தை ஆட்டும் பொம்மையைப் போல் ஆடிக் கொண்டிருந்தது.அவளது மார்புகள் கடற்கரையில் சிறுவர்கள் குவித்து வைத்திருந்த மணல் மேடுகளை ஒத்திருந்தது.நீரில் நனைந்து அலுத்த பின்னர் ‘ஸ்டவுட்’ பியர் வாங்கி அருந்தினோம்.

கூச்சம் கலைந்து நெருக்கமாக உணரத் தொடங்கியதும் அதுவரையில் யாருக்கும் சொல்லத் துணியாத கதைகளைப் பரிமாறிக் கொள்ளத் தலைப்பட்டோம்.கடலின் நிறம் மங்கி அலையின் சீற்றத்தை மட்டும் கேட்கக் கூடிய இருள் கவிந்தது வரையில் மணலிலேயே குந்தியிருந்தோம்.நான் உப்புப் படிந்திருந்த அவளது கழுத்தில் மெதுவாக முத்தமிட்டேன்.தயக்கமின்றி அவள் அதை ஏற்றுக் கொண்டாள்.

பின் மிக இரகசியமாக எனது காதில் “நாம் இன்னமும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்” எனச் சொல்லிவிட்டு எழுந்திருந்த போது அவளது புட்டத்தில் ஒட்டியிருந்த மணல் துகள்கள் உதிர்ந்தன.உடையை அணிந்ததன் பின் நானும் அவளோடு சேர்ந்து அவளது வாடகை மோட்டார் பைக் நிறுத்தப் பட்டிருந்த இடத்திற்குப் போனேன்.எனது நடத்தைக்காக மன்னிப்புக் கோரினேன்.ஹெல்மட்டை மூடும் முன் ஒருதடவை சிரித்துவிட்டு இன்னமும் ஈரம் காயாத ஊதாநிற மார்புக்கச்சை உடையோடு ஒட்டியபடியிருக்க திமிறிய மார்புகளோடு அங்கிருந்து விரைந்தாள்.

நான் அங்கிருந்து ‘ஓல்ட் டச்’ ஹோட்டலுக்குத் திரும்பினேன்.வரவேற்பறைப் பெண் முன்பைவிட அழகாக வீற்றிருந்தாள்.”சிங்கள தேசத்துப் பெண்கள் இவ்வளவு அழகானவர்கள் என எனக்குத் தெரியாது” என்றேன்.தெத்திப்பல் மட்டும் ஓரமாகத் தெரிய புன்னகைத்தாள்.அந்தப் புன்னகை தொழில்முறை சார்ந்ததாக இல்லாமல் ஒரு ஸ்பானிய குடிமகனான எனக்கே உரிய பரிசாக அமைந்திருந்தது.அறைக்குப் போய் ஒரு முழுச் சூரை மீன் ஓர்டர் செய்தேன்.தங்கள் ஹோட்டலில் அது கிடைக்காதெனச் சொன்னார்கள்.ஞாபகம் வைத்திருக்கக் கூடியளவேனும் சுவையற்ற ஏதோவொரு உணவை வரவழைத்துச் சாப்பிட்டேன்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு அடுத்திருந்த இன்னொரு ஏழாம் நம்பர் அறையில் பசியில் கத்தும் பூனையில் குரல் கேட்டது.கட்டிலில் விழுந்து கிடந்த போது ஒரு பூனை-அடுத்த அறையில் கத்திய அதே பூனையாக இருக்க வேண்டும்-பெரிய மீன் முள் ஒன்றை வாயில் கவ்வியபடி வந்து எனது அறை யன்னலில் குந்தியிருந்து நக்கிச் சாப்பிட்டது.நான் அரை மயக்கமுற்றிருந்த நேரம் அது ஒரு இராணுவ வீரனின் தோரணையில் என் அறையெல்லாம் சுற்றி வந்ததை உணர முடிந்தது.

முதுகுப் பையைத் துழாவியது.என் காலிலிருந்து முகமெல்லாம் நக்கிப் பிரேதத்தைப் போல என்னை ஆராய்ந்தது.நான் துணுக்குற்று விழித்த சமயத்தில் அறையின் இருட்டில் தனது பச்சைக் கண்கள் ஒளிரும்படி என்னை உற்று நோக்கியது.பின்னர் விருட்டென யன்னல் வழியாகப் பாய்ந்து ஓடி விட்டது.சற்றுக் கழித்து எனக்கு அடுத்திருந்த அறையில் அது அன்போடு ‘மியாவ் மியாவ்’ எனக் குழைந்த வண்ணமிருந்தது.

அடுத்த நாள் மாலையில் ஒரு ‘ஸ்டவுட்’ பியருடன் கடற்கரையில் உலாத்திக் கொண்டிருந்தேன்.லூஸியானா இஸபெல்லா தன்னால் அன்று வரமுடியாதென முன்னறிவித்திருந்தும் நான் ஏன் அங்கு போனேன் என்பது புலப்படாமலே இருந்தது.பலவித வண்ணங்கள் பூசிய மனித முகங்களை சுய பிரக்ஞை இன்றி கடந்தேன்.இனம் புரியாத குற்றவுணர்வு என்னுள் படர்ந்து வந்தது.தன்னால் வர முடியாததற்கு லூஸியானா சொன்ன காரணம் உண்மையானது தானா அல்லது புனையப்பட்டதா என ஆராய்ந்து பார்த்தேன்.சிறிது நேரமாகவே தென்னை ஓலைகளைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்யும் வியாபாரி ஒருவன் என்னைப் பின்தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தான்.நான் வேண்டாமென மறுத்ததையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை.கையிலிருந்த போத்தலை மண்டையில் ஓங்கி அடிப்பதைப் போல பாவனை காட்டிய பிறகே அவன் என்னிடமிருந்து நகர்ந்தான்.நான் ஆவேசத்துடன் சனத்திரளிலிருந்து விலகி காற்று சுதந்திரமாக அலைந்து கொண்டிருந்த இடத்துக்குப் போனேன்.

அங்கிருந்து கண்ணுக் கெட்டிய தூரத்தை இலக்காக வைத்து நடந்து கொண்டேயிருந்தேன்.இருளடைந்த போது தான் நான் நீண்ட தூரம் நடந்து வந்துவிட்டதையும் அங்கிருந்து ஹோட்டலுக்குப் போக ஓட்டோ பிடிப்பது கடினம் என்பதையும் அறிந்து கொண்டேன்.தொலைவில் கடைகளின் மின்விளக்குகள் நம்பிக்கை தருவனவாய் ஒளிர்ந்தன.வந்த பாதையிலேயே திரும்பி நடந்தேன்.வழியில் இருட்டில் செய்த பொம்மை போல ஒரு பெண் நின்றிருந்தாள்.அவள் தோளில் ஒரு கைப் பையும் முழங்காலுக்கு மேலேறிய குட்டைப் பாவாடையும் அணிந்திருப்பதாய் புலப்பட்டது.

இறுக்கமான மேற் சட்டை அவளுக்குத் தொப்பை விழுந்ததைக் காட்டிக் கொடுத்தது.நேராக நடந்தால் அவளை எதிரே சந்திக்க நேரும் என்பதால்,விலகி கால்கள் அலையோடு தழுவ நடந்து அவளைக் கடந்தேன்.பின்னால் ஏதோ அவரம் கேட்டது.தலையைத் திருப்பாமல் கால்களுக்கு வேகம் கொடுத்தேன்.ஆனால் தீடீரென ஒரு மந்திரப் பிசாசைப் போல அவள் எனக்கு முன்னே தோன்றி மூச்சு வாங்கினாள்.ஓடி வந்திருக்க வேண்டும்.தான் களைத்துப் போயிருப்பதை மறைத்தபடி ஒரு பாலியல் தொழிலாளிக்குரிய மிடுக்குடன் என்னிடம் சிங்களத்தில் பேசினாள்.நான் மறுத்துவிட்டு தொடர்ந்து நடந்தேன்.

அவள் விடாமல் என் பின்னாலேயே வந்தாள்.இதற்குள்ளாக நான் கடைத்தெருவை அண்மித்திருந்தேன்.மங்கிய மின்விளக்கு வெளிச்சத்தில் அவளது முகத்தைப் பார்த்தேன்.அதிலிருந்த பகட்டுத்தனம் மறைந்து அவள் என்னிடம் இரஞ்சிக் கொண்டிருந்தாள்.நான் முற்று முழுதாக விளக்கொளி நிறைந்த பகுதியை அடைந்ததும் அவள் என்னைப் பின் தொடர்வதைக் கைவிட்டாள்.இருள் உலகின் ராணியாக அங்கேயே நின்று கொண்டாள்.ஹோட்டல் அறையில் முதுகுப் பையிலிருந்த ஆணுறை ஞாபகம் வரவே சிறிது தயங்கினேன்.பின்னர்,ஒரேடியாக வேண்டாமென முடிவெடுத்து ஹோட்டலுக்குப் போக ஒரு ஓட்டோவை தேடினேன்.

லூஸியானா பற்றிய ஏக்கம் என்னைப் பீடித்திருக்க தூக்கம் வராத இரவிடம் சிக்கிக் கொண்டு விழித்தேன்.எனக்கு அடுத்திருந்த அறையிலிருந்து ஒரு பெண் முனகும் சப்தம் வந்தது.கடல் காற்றின் இரைச்சலில் அது தெளிவில்லாமல் கேட்கவே யன்னலை அடைத்து விட்டுக் காதை அறைச் சுவரில் வைத்தேன்.அவளது முனகலில் செயற்கைத் தனமிருந்தது.ஒரு பாலியல் தொழிலாளிக்குரிய மிடுக்குடன் அவள் வாயிலிருந்து ஒலிகள் புறப்பட்ட வண்ணமிருந்தன.மீள இயலாத வெறுப்புடன் யன்னலைத் திறந்து விட்டேன்.கட்டிலில் விழுந்து போர்வையால் தலையை மூடி இழுத்துப் போர்த்தினேன்.எந்தப் பலனையும் அடைய இயலவில்லை.அந்த அறையிலிருந்து வந்த ஒலிகளின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இரவு முழுவதும் திணறிக் கொண்டிருந்தேன்.

காலையில்,எனக்கு அடுத்திருந்த அறையில் வசிப்பவன் யார் என்று அறிய ஆர்வம் உண்டாயிற்று.அறைக்குள்ளிலிருந்தபடியே பக்கத்து அறையின் கதவு திறக்கப்படும் ஓசைக்காகக் காத்திருந்தேன்.ஓடிப் போய் எட்டிப் பார்ப்பதற்கு முன்னேற்பாடாக எனது அறைக் கதவை அகலத் திறந்து வைத்தேன்.நீண்ட நேரமாக சிறு அசைவு ஏற்படும் அறிகுறியும் தென்படவில்லை.அடிக்கடி தேய்ந்து தேய்ந்து வந்த பூனையின் குரல் மட்டுமே அந்த அறையில் யாரோ இருப்பதாக நம்பிக்கை தந்தது.எனது அறைத் தொலைபேசி மணி அடித்தது.

ஹோட்டல் விருந்தினர்களுக்காக இலவச மது விருந்து ஏற்பாடு செய்திருப்பதால் என்னையும் வரச் சொல்லி அழைத்தார்கள்.வருவதாகச் சம்மதம் தெரிவித்தேன்.அவர்கள் எப்படியும் அடுத்த அறையிலிருந்தவனையும் விருந்துக்கு அழைப்பார்களென நினைத்து அந்த அறைத் தொலைபேசி ஒலிக்கும் சப்தத்தைக் கேட்க ஆர்வமுற்றிருந்தேன்.நெடு நேரமாக அது நடக்கவேயில்லை.ஒருவேளை அவன் முன்னரே அங்கு போயிருக்கலாம் அல்லது தாமதமாகவேனும் அங்கு வந்துதானே ஆகவேண்டுமென்று கணக்கிட்டுக் கொண்டு அறையிலிருந்து வெளியேறினேன்.

அதிசயக்கத்தக்க வகையில் விருந்து ஏற்பாடகியிருந்த இடத்தில் பரிசாரகர்களைத் தவிர்த்து என்னோடு சேர்த்து நான்கு பேர்தான் இருந்தோம்.அதில் இரண்டு பேர் இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியினர்.நானாகவே போய் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்தேன்.ஐஸ் கட்டிகள் நிறைந்த குளிர்ச்சியான மது தொண்டைக்குள் இறங்க இலங்கையின் சுற்றுலா மையங்கள் பற்றி உரையாடினோம்.கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்த இங்கிலாந்துக் கணவர் தனது பழைய நாள் வேட்டை அனுபவங்களைக் கற்றை கற்றையாக பிரித்து வைக்கத் தொடங்கினார்.கண்களை கூர்மையாக வைத்தபடி ஏதோ முன்பின் கேட்டிராத கதைகளைக் கேட்கும் ஆர்வத்தில் அவரது மனைவி அவருக்கு எதிரே அமர்ந்திருந்தார்.

நான் மிகவும் சலிப்புற்று எனது பார்வையை அந்த நான்காவது நபரின் மீது செலுத்தினேன்.இலங்கையைச் சேர்ந்த ஐம்பது வயது மதிக்கக் கூடிய அவர் எழுந்து அறைக்குப் போக தயாராகினார்.மிதமிஞ்சிக் குடித்திருந்தும் உதவி புரிய வந்த பரிசாரகனை இருக்கச் சொல்லிவிட்டு தனியாகவே எழுந்து தவ்வி தவ்வி நடக்க ஆரம்பித்தார்.நான் சத்தமில்லாமல் அவரைப் பின் தொடர்ந்தேன்.நேராக அறைக்குப் போகாமல் சில இடங்களில் நின்று நிதானித்தும்,குந்தியிருந்தும் எனது பொறுமையை எல்லை மீறச் செய்து கொண்டிருந்தார்.

இறுதியில் அவர் இருபதாம் இலக்கமிடப்பட்ட அறையின் கதவை திறந்து வாசலிலேயே முகம் அடிபட விழுந்தார்.நான் உதவி செய்ய நினைத்து நான்கு அடிகள் நடப்பதற்குள் எழுந்து கதவைச் சாத்திக் கொண்டார்.நான் திரும்பி வந்து அந்த இன்னொரு ஏழாம் நம்பர் அறையைப் பார்த்தேன்.என்றுமே திறக்கப்படாததைப் போல் அடித்துச் சாத்தப்பட்டிருந்தது.

குழப்பத்திலிருந்து வெளியேற முடியாமல் அறையிலிருந்த போது லூஸியானா என்னைச் சந்திக்க வருவதாக செய்தி அனுப்பினாள்.விரல்கள் நடுநடுங்க ஒரு ஆணுறையை எடுத்து கால்சட்டைப் பையினுள் வைத்தேன்.அவளே ‘ஓல்ட் டச்’ ஹோட்டலுக்கு மோட்டார் பைக்கில் வந்து என்னை அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள்.மிகவும் குட்டையாகவிருந்த டெனிம் கால்சட்டையிலிருந்து வெளித் தெரிந்த அவளது எலுமிச்சை வண்ணத் தொடைகளில் எனது முழங்கால்கள் உரசிக் கொண்டிருந்தன.

சுற்றுலாப் பயணிகளுக்கென்றே வாடகைக்கு விடப்படும் வீட்டில் அவள் தங்கியிருந்தாள்.அவளது வீட்டில் அவளோடு சேர்த்து ஆண்களும் பெண்களும் அடங்கலாக ஏழெட்டு வெளிநாட்டவர்களும் இருந்தனர்.அவர்கள் இலங்கை முழுவதும் சுற்றிவிட்டு நேற்று காலையில்தான் அங்கு வந்ததாகத் தகவல் சொன்னாள் லூஸியானா.அன்று இரவே அவளும் அவர்களோடு சேர்ந்து ஸ்பானியாவுக்கு பயணப்படவிருப்பதாகவும் கூறினாள்.

இலங்கையிலிருந்து நீங்குவதற்கான சிலமணி நேரங்களை அவர்கள் கொண்டாடித் தீர்க்க முடிவு கட்டியிருந்தனர்.விருந்தில் கலந்து கொள்ள எனக்கும் அழைப்பு விடுத்தார்கள்.லூஸியானா எல்லோரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.கைலாகு கொடுக்கும் போது எனது கை மிகவும் இறுக்கமான இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.உதட்டில் செயற்கையான புன்னகையை வரவழைக்கவும் பெரும்பாடு பட்டேன்.ஒரு க்ளாஸில் மதுவை ஊற்றி அதையே நீண்ட நேரமாக உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.

அங்கங்கள் குலுங்க லூஸியான வெறி கொண்டு நடனமாடினாள்.எனக்கும் அவளோடு சேர்ந்து ஆடவேண்டும் போலிருந்தது.விட்டு விட்டு எரிந்த வண்ணமயமான மின்விளக்கு ஒளியில் அவள் ஒரு பச்சோந்தியைப் போல உருமாறிக் கொண்டிருந்தாள்.எல்லோரும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த சமயத்தில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நான் வீட்டை விட்டு வெளியேறினேன்.

லூஸியானாவுடன் இருந்த அதே கடற்கரையில் காற்று தலை முடியைக் குழப்ப நடந்து கொண்டிருந்தேன்.இருட்ட ஆரம்பித்திருந்ததால் சனத்திரள் வடிந்தபடியே இருந்தது.லூஸியானாவிடம் கடுங் கோபம் மூண்டிருந்தது.உடலை இருளில் கரைத்துவிடும் நோக்கில் இருள் கம்மியிருந்த இடங்களாகப் பார்த்து நடந்தேன்.முன்பு பார்த்ததைப் போலவே இருளில் ஒரு உருவம் குந்தியிருப்பதை கண்ணுற்றேன்.ஆர்வத்தோடு அந்த உருவத்திடம் நெருங்கிப் போனேன்.ஒரு ஆண் கடலைப் பார்த்தபடி ஏதோவொரு சிந்தனையில் லயித்திருந்தான்.ஏமாற்றத்தில் எனது செயலை நினைத்து நானே வெட்கத்துக்கு உள்ளானேன்.ஒரு குப்பைத் தொட்டியை தேடிப் பிடித்து பையிலிருந்த ஆணுறையை அதனுள் எறிந்தேன்.கடலின் அலைகள் காதில் இரைந்தது சகிக்க முடியாமலிருந்தது.விரைவாக அங்கிருந்து வெளியேறி ஹோட்டலுக்குப் போனேன்.

அகோரமாய் பசித்தது.சாப்பாடு ஓர்டர் செய்ய விருப்பமில்லாமல் கட்டிலிலேயே படுத்திருந்தேன்.அடுத்திருந்த அறையில் மீண்டும் ஒரு பெண் முனகுவது போன்ற குரல் காதில் விழுந்து மேலும் மேலும் எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தது.யன்னலைத் திறந்து விட்டால் கடல் காற்றின் இரைச்சலில் அந்தக் குரல் கேட்காது என நினைத்து எழுந்தேன்.யன்னல் மூடித்தானிருந்தது.அடுத்து என்ன செய்வதெனப் புரியாமல் சுவரில் காலால் உதைக்கப் போனேன்.அப்போதுதான் அந்தப் பெண் குரல் சில ஸ்பானியச் சொற்களை உச்சரிப்பதைக் காதுபடக் கேட்டேன்.

எந்தவிதப் பிறழ்வுமில்லாமல் அந்தப் பெண் ஸ்பானிய மொழியில் முனகினாள்.நான் உறைந்து போய் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.பின்,ஓடிப்போய் கட்டிலில் விழுந்து போர்வையால் உடல் முழுவதும் போர்த்திக் கொண்டேன்.அந்தச் சொற்கள் விடாமல் துரத்தி வந்து போர்வைக்கு மேலாகவும் என்னை மூடிப் பிடித்து துன்புறுத்தின.இரவின் ஒவ்வொரு துளிகளிலும் விஷம் போல் அவை பரவியிருந்தன.வெப்பத்தால் உடலில் கசிந்த வியர்வை கழுத்து வழியாக ஓடிக் கொண்டிருந்தது.

போர்வயை விலக்க முடியவில்லை.மூச்சை உள்வாங்கக் கடினப் பட்டேன்.அரை மணித்தியாலத்துக்கும் மேலாக அந்த அவஸ்தையிலிருந்து நீங்க முடியாதவனாக உழன்றபடியிருந்தேன்.இறுதியில்,ஒரு இசைக் கருவிக்குரிய உச்சஸ்தானியில் குரலெடுத்துக் கத்திய அந்தப் பெண் ஒருவழியாக அடங்கிப் போனாள்.யன்னலைத் திறந்தவுடன் வந்த குளிர்ந்த காற்று என்னில் உயிராக ஒட்டிக் கொண்டது.இன்டர் நெட்டில் அடுத்த நாள் காலையே ஸ்பானியா திரும்புவதற்கான விமான டிக்கட்டைப் பதிவு செய்த பின்னரே கொஞ்சம் ஆறுதலடைய முடிந்தது.அங்கு நடந்த எதைப் பற்றியும் ஆராயாமல் மனதை கட்டுப்படுத்த தீவிரமாக முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன்.இதயம் அடித்துக் கொள்ளும் ஓசையைக் கேட்குமளவிற்கு அங்கே அமைதி குடியேறியிருந்தது.

விடிந்து விட்டது எனத் தெரிந்ததும் நாடு திரும்பப் போகிறேன் என்று சந்தோஷம் அடைந்தேன்.அவசர

அவசரமாக முதுகுப் பையை கொளுவியபடி வரவேற்பறைப் பெண்ணிடம் சென்று அறையைக் காலி செய்வதாகச் சொன்னேன்.கையடக்கத் தொலைபேசியை மறந்து வைத்து விட்டது ஞாபகம் வரவே திரும்பவும் அறைக்கு விரைந்தேன்.மேசையில் அது இருந்தது.எதேச்சையாக கட்டிலைப் பார்த்தேன்.

சுருண்டு கிடந்த எனது போர்வையோடு போர்வையாக பெண் ஒருத்தியின் உள்ளாடைகள் கிடந்தன.அந்த மார்புக்கச்சை லூஸியானா என்னோடு கடலில் குளிக்கும் போது அணிந்திருந்த அதே ஊதாநிற மார்புக்கச்சைதான் என்பதை என்னால் உறுதியாக அடையாளம் காண முடிந்தது.குடிக்காமலே தலை கிறுகிறுத்தது.திடீரென யன்னலில் அந்தப் பூனை தோன்றி என்னைப் பார்த்து அன்பாகக் குழைந்தது.நான் பயத்தில் கதவை படாரெனச் சாத்திவிட்டு வரவேற்பறையை நோக்கி ஓடினேன்.

ஆரம்பத்தில் நாகரிகம் கருதி எனக்கு அடுத்த அறையிலிருந்தவன் பற்றிய விபரங்களைக் கேட்காமல் விட்டிருந்தேன்.ஆனால்,இனிமேல் இலங்கைக்கு வரவே போவதில்லை என முடிவெடுத்திருந்தபடியால் வரவேற்பறைப் பெண்ணிடம் அந்த விபரங்களைக் கூச்சமின்றிக் கேட்டேன்.முதலில் அவள் என்னை சந்தேகக் கண்ணோடு பார்த்தாள்.பின்,நான் ஒரு வெளிநாட்டவன் என்பதாலும் என்மேலிருந்த நட்பிலும் அதைச் சொன்னாள்.”இளநீர் பற்றிய சச்சரவு நடந்ததற்கு அடுத்த நாளே அந்த அறையிலிருந்தவர் அறையைக் காலி செய்து விட்டார்.அந்த அறையில் இப்போது யாருமே இல்லை.”

நான் விமான நிலையம் நோக்கிப் பயணித்தேன்.எனது முதுகுப் பையில் இரண்டு லினன் சட்டைகளும் ஒரு அரைக்கால் சட்டையும் ஒரு ஆணுறையும் இன்னும் தீராத குழப்பம் ஒன்றும் கனத்துக் கொண்டிருந்தன.

•••

ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெண் / சுரேஷ்குமார இந்திரஜித்

download (17)

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவளைப் பார்த்தான், சிவசங்கரன். அவள்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அவள்தான் என்ற எண்ணம் ஏற்பட்டது. பேரிளம் பெண்ணாக, அப்பருவத்திற்குரிய அழகுடன் இருந்தாள். அவள் அருகே சென்று தயக்கத்துடன் “தப்பா நெனைச்சுக்காதீங்க.. நீங்க அமிர்தாதானே” என்றான், சிவசங்கரன். அவள் சற்று யோசித்துப் பின் “சந்திரசேகரன்தானே உங்கள் பெயர்” என்றாள். “இல்லை, சிவசங்கரன்” என்றான். தன் பெயரை அவள் மறந்திருந்தாள் என்பது, அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. சந்திரசேகரன் என்பது அவனுடைய நண்பனின் பெயர்.

சந்திரசேகரன் தற்போது உயிருடன் இல்லை. சிவசங்கரன் பணியில் சேர்ந்தபோது, சந்திரசேகரன் ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருந்தான். சந்திரசேகரனுக்கு நகரத்திலிருந்த, பெண்கள் தங்கிக் செல்லும், பெண்களை எப்போதும் வைத்திருக்கும் விடுதிகள் அனைத்தும் பழக்கம். அடிக்கடி போய் வந்து கொண்டிருப்பான். அவனுக்குத் திருமணமாகி ஒரு பையனும், பெண்ணும் இருந்தார்கள். சிவசங்கரனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை. சந்திரசேகரன்தான் சிவசங்கரனுக்கு, தங்கும் விடுதிகளில் இருக்கும் பெண்களிடம் தொடர்பு ஏற்படுத்தியிருந்தான். சந்திரசேகரனின் துணை இல்லாமல், சிவசங்கரன் தனியே சென்றதில்லை. பயம்தான் காரணம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஏதாவது ஒரு வழியில் அதிலிருந்து வெளியே வருவதில் சந்திரசேகரன் சமர்த்தன்.

இருவரும் ஒரு தங்கும் விடுதிக்குச் சென்றபோதுதான் அமிர்தா பழக்கமானாள். இரண்டு பேருக்குமே அவளைப் பிடித்துப் போனது. சந்திரசேகரனும், சிவசங்கரனும் கலந்துபேசி ஒரு முடிவு எடுத்தார்கள். அதன் பேரில் சந்திரசேகரன், புரோக்கரிடம் பேசினான். சிவசங்கரனும் கூட இருந்தான். இருவரும் ஒரு வீடு பிடித்து, அமிர்தாவை அதில் குடியிருத்துவது, இருவரும் அவர்களுக்கு வசதியான சமயத்தில் அவளிடம் வந்து தங்கிச்செல்வது, மாதாமாதம் ஒரு தொகையை அவருக்கும், புரோக்கருக்கும் கொடுத்துவிடுவது, இந்த ஒப்பந்தம் ஆறு மாத காலத்திற்கு இருக்கவேண்டியது. அந்த ஆறுமாத காலத்தில் அவள் வேறு யாருடனும் தொழில் செய்யக்கூடாது என்று பேசினார்கள். புரோக்கர், அமிர்தாவைக் கூட்டிவந்தான். அவளுக்கும் இந்த ஏற்பாடு, சம்மதமாக இருந்தது. கொடுக்கவேண்டிய தொகை தொடர்பாக சற்று இழுபறி ஏற்பட்டு, பிறகு முடிவானது.

குடும்பம் நடத்துவதற்குத் தேவையான பொருட்களை வாங்கி, வீடு பிடித்து, அவளைக் குடியமர்த்தினார்கள். அவர்களின் ஏற்பாடு பிரச்சினையில்லாமல் சென்று கொண்டிருந்தது. சந்திரசேகரன், அவளுக்கு மதுப்பழக்கம் ஏற்படுத்த எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தான். அவள் மறுத்துவிட்டாள். வீட்டில் மது அருந்தக்கூடாது என்ற கட்டுப்பாட்டையும் விதித்தாள். எனவே இருவரும் வெளியே குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார்கள். மற்றபடி அவர்களின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தாள். இன்பத்தை வழங்கினாள். நன்றாக சமைப்பாள். அய்யனார் கோயில் கறிச்சாப்பாடு என்ற பெயரில் கறிக்குழம்பு வைப்பாள். அந்தக் குழம்பு இருவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. வீட்டிற்கு வரும் நாளையும், நேரத்தையும், இருவரும் பகிர்ந்துகொண்டார்கள்.

சிவசங்கரனைப் பொறுத்தவரை தன்னைப் பண்புள்ளவன் என்றும் அறிவாளி என்றும், சந்திரசேகரனைப் பண்பற்றவன் என்றும் முட்டாள் என்றும் நினைத்திருந்தான், அமிர்தாவிற்கும் தன்னைத்தான் பிடித்திருந்தது என்று நினைத்திருந்தான். ஆறுமாத ஒப்பந்த காலத்திற்குப் பின், புரோக்கர் அவளை, பெங்களுருக்குக் கூட்டிச்சென்றுவிட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் அவளை, சிவசங்கரன் சந்திக்கிறான். ‘என்னை நினைவிருக்கிறதா’ என்றான். ‘உங்களை மறக்கமுடியுமா… பெயரைத்தான் மாற்றிச் சொல்லிவிட்டேன். உங்க பிராண்டு நல்லா இருக்காரா’ என்று கேட்டாள்.

சந்திரசேகரன் பணியில் இருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும், அவனுடைய வேலையை அரசாங்கத்தில், அவனுடைய மனைவிக்குக் கொடுத்திருப்பதாகவும் கூறினான். அவள், அவனை நினைவு கூர்ந்தவளாக சிந்தனைவயப்பட்டு, பின் வருத்தப்பட்டாள். ‘ஓவரா தண்ணி அடிப்பாரு எங்கிட்டேயும் அத்து மீறுவாரு.. நான் விடமாட்டேன். அப்புறம் பணிஞ்சு போவாரு’ என்றார்.

அவள், சிவசங்கரனைப் பற்றி விசாரித்தாள். திருமணமாகி இரண்டு பையன்கள் இருப்பதாகவும், மனைவி வங்கியில் வேலை பார்ப்பதாகவும் கூறினான். பிறகு அவளைப் பற்றி விசாரித்தான்.

“அந்த புரோக்கர் நல்லவன்தான் மனுசங்க எப்ப மாறுவாங்கன்னு கண்டுபிடிக்கவே முடியாது. திடீர்னு மாறிட்டான். எல்லாம் பணம்தான். என்னை இன்னொருத்தவனுக்கு வித்துட்டு ரூபாய் வாங்கிட்டுப் போயிட்டான். அவன் மகா கெட்டவன்.. என்னை அடிமை மாதிரி நடத்தினான்.. கஸ்டமருங்களும் நெறையப்பேர் வந்தாங்க.. ஒருநாள் இருபத்தைஞ்சு பேரு வந்தாங்கன்னா பாத்துக்குங்க.. நாம எப்படி சந்தோஷமா இருந்தோம். அங்கே ஒரே நரகம்… கஸ்டமருங்களும் லோகிளாஸ்காரங்களா வருவாங்க.. எனக்குப் பணமும் சரியாக கொடுக்கமாட்டான்.. நான் எங்க அம்மாவுக்கும் பாட்டிக்கும் எப்படி பணம் அனுப்புவேன். அவுங்க ரெண்டு பேரும் என்னை நம்பி இருக்கறவங்க… நல்லவேளையா எனக்கு பிள்ளைப்பேறு இல்லாமப் போச்சு. உங்க ரெண்டு பேரு கூட இருந்தப்ப புள்ளைப் பெத்துக்கலாம்னு ஆசை வந்துச்சு… டாக்டரைப் போயி பார்த்தேன். அவரு எனக்குக் குழந்தைப்பேறு இல்லைன்னு சொல்லிட்டாரு… இல்லைன்னா, உங்க ரெண்டு பேருக்கும், யாருன்னு தெரியாது. ஒரு மகனோ மகளோ இருந்திருக்கும். அந்த புரோக்கரு, அவன் சொன்னதை கேக்கலைன்னா, கன்னா பின்னான்னு அடிக்க ஆரம்பிச்சிருவான். இந்தா பாருங்க கன்னத்துலே அடிச்சதுலே ஒரு பல் விழுந்துருச்சு. இடையிலே பாட்டி செத்துப்போச்சு.. லெட்டரு அந்த புரோக்கர் அட்ரசுக்குத்தான் வரும். அவன் அதைப் பிரிச்சுப் பாத்துட்டுத்தான் எங்கிட்டே கொடுப்பான். வீட்டுக்கு பணம் அனுப்பறப்ப, கூட வருவான்…

ஒரு தடவை போலீஸ் எங்களை சுத்தி வளைச்சுருச்சு.. போலிசுக்காரங்க விபச்சாரத்தை ஒழிக்கவா வந்தாங்க… புரோக்கருங்க சரியா காசு கொடுக்கலை. எங்களை மட்டுமில்லை நெறையப் பேரைப் பிடிச்சாங்க… போலிசுக்காரன் ஒருத்தன் சந்தடி சாக்குலே என் கூட உறவு வைச்சுக்கிட்டான்… ஜெயில்லே போட்டாங்க… கோர்ட்டுக்கு அலைஞ்சேன்… ஜாமீன் எடுக்கக்கூட ஆளில்லை. அந்த புரோக்கர் ஜாமின்ல போனவன் ஆக்ஸிடெண்ட்லே செத்துப் போயிட்டான். எனக்கு நல்ல காலம். ஆனா எனக்கு அந்த ஊர்லே யாரையும் தெரியாது. ஜெயில்லேருந்து வந்த பின்னாலே அந்த இன்ஸ்பெக்டர், நாங்க திரும்பவும் தொழில் பண்ணுவோம்னு சொல்லி என்னையும் வேறு சிலரையும் புடிச்சு, உக்கார வைச்சு, ஒரு பார்பரை வரச்சொல்லி எங்களையெல்லாம் மொட்டை அடிச்சான். உங்களுக்குத் தெரியும் எனக்கு எவ்வளவு நீளமான கூந்தல்னு.. அவனுகளுக்குத் தெரியுது. கூந்தல்தான் அழகுன்னு. கூந்தலை எடுத்துட்டோம்னா கஸ்டமருங்க வரமாட்டாங்கன்னு.. மொட்டைத்தலையோட கண்ணாடியிலே பாக்கறப்ப தற்கொலை பண்ணிக்கிட்டு சாகலாம் போல இருந்துச்சு.. அவ்வளவு அசிங்கமா இருந்தேன். ஜெயில்லே இருந்தப்ப எங்க அம்மா என்னாச்சுன்னே தெரியலே.. அப்பறம்தான் தெரிஞ்சுக்கிட்டேன் அதுவும் செத்துப்போச்சுன்னு.. அது முகத்தைக் கூட பாக்கக் கொடுத்து வைக்கலை…

வேண்டுதலுக்கு மொட்டை அடிச்சிருக்கேன்னு சொல்லி ஒரு கடைலே வேலை பாத்தேன். சேரியிலே குடியிருந்தேன். காலப்போக்கிலே முடி வளந்துருச்சு.. அந்தக் கடைக்கு வழக்கமா ஒரு கஸ்டமரு வருவாரு.. அவருக்கு நான் வேலை பாக்கறவிதம் பிடிச்சுப்போச்சு.. அவரு பணக்காரரு, கார்லேதான் வருவாரு, அவரே ஓட்டிக்கிட்டு வருவாரு.. ஒருநாள் என்னைப் பத்தி விசாரிச்சாரு.. நான் பழைய கதையெல்லாம் சொல்லலை. தனி ஆளா இருக்கேன்னும் எனக்கு வேற யாரும் இல்லைன்னும் சொன்னேன். ஒரு லீவு நாள்லே என்னை ஒரு ரெஸ்டாரெண்ட்டுக்கு வரச்சொன்னாரு.. எதுக்குன்னு தெரியாம நானும் போனேன். ஏ.சி.ரூம்ல உக்காந்தோம். அவர் நேரடியாகவே விஷயத்துக்கு வந்துட்டாரு.. என்னை சின்னவீடா வைச்சுக்கனும்னு அவர் ஆசைப்படறதை சொன்னாரு.. எனக்கு அவ்வளவு சந்தோஷம்.. இந்த மாதிரி வாழ்க்கை கிடைக்கிறதுக்கு நான் எவ்வளவு கொடுத்து வைச்சிருக்கனும். தனிவீடு, வசதிகள் எல்லாம் பண்ணிக் கொடுப்பதாச் சொன்னாரு.. எனக்கு மெடிக்கல் டெஸ்ட்டுக்கு ஏற்பாடு பண்றதா சொன்னார். எனக்கு பயம் வந்துருச்சு.. உடம்புலே ஏதாவது கோளாறு இருக்குமோன்னு.. அவரே ஏற்பாடு பண்ணினார். நல்லவேளையா கோளாறா ஒன்னும் இல்லை. கல்யாணம்னு பண்ணலே.. பாக்கறவங்களுக்கு வித்தியாசமா தெரியக்கூடாதுங்கிறதுக்காக, அவரே ஏற்பாடு பண்ணி தாலிச்செயின் வாங்கிக் கொடுத்து என்னைப் போட்டுக்கச் சொன்னார். எட்டுப் பவுன் செயின்.. பாருங்க வாழ்க்கை எப்படி மாறுதுன்னு.. அவரோட சொந்த வாழ்க்கையைப் பத்தி நான் எதுவுமே கேக்கலை. அவரும் சொன்னதில்லை. ஒரு நாள் உடம்பு சரியில்லாமப் போச்சுன்னு போன் பண்ணினார். அப்புறம் ஏதோ ஆப்பரேஷன்னாரு.. ஒரு மாசம் ஆகும்.. நீ ஒன்னுக்கும் கவலைப்படாதே உடம்பைப் பாத்துக்க என் மனைவி ஒரு ஹிஸ்டிரியா கேஸ். என்னைப் பாக்க முயற்சிக்க வேண்டாம்னு சொன்னார்…

திடீர்னு ஒரு நாள், ஒரு கார் வந்து வாசல்லே நின்னுச்சு.. செவப்பா ஒரு பையன் காரைவிட்டு இறங்கி வந்து பெல்லை அடிக்கிறான். எனக்கு ஜன்னல் வழியே தெரியுது. நான் கதவைத் திறக்கிறேன். உங்க ஹஸ்பண்டோட முதல் மனைவியோட மகன் நான். அப்பா ஆஸ்பத்திரியிலே இருக்காரு உங்களை கூட்டிக்கிட்டு வரச்சொன்னாருன்னு சொன்னான். தங்கமான பையன். நான் பதறியடிச்சு வீட்டை பூட்டிட்டு அவன்கூட கார்லே போனேன். ஆஸ்பத்திரியிலே அவரைப் பாத்தேன். ரொம்ப மெலிஞ்சு போயிருந்தாரு.. என்னைப் பாத்ததும் அவருக்கு கண்லே தண்ணி வந்துருச்சு. நான் பொழைக்கமாட்டேன்னு டாக்டர் மறைமுகமாக சொல்லிட்டாருன்னு அழுதார். நானும் அழுதேன். இவன் என் பையன். பேரு ஆனந்தகுமார். இவன் உன்னைக் கவனிச்சுக்குவான். கவலைப்படாதே. உன் வாழ்க்கை முழுக்க இவன் கவனிச்சுக்குவான்னு சொன்னாரு.. பிறகு என்னை வீட்டுக்குப் போகச் சொன்னாரு..

கொஞ்சநாள்லே அந்தப் பையன் ஆனந்தகுமார் போன் பண்ணி அவர் செத்துப் போயிட்டதைச் சொன்னான். வீட்டுக்கு வரச்சொன்னான். நானும் போயி அவரு செத்த உடம்பைப் பாத்தேன். சிலநாள் கழிச்சு அந்தப் பையன் வீட்டுக்கு வந்தான். எனக்கு செலவுக்குப் பணம் கொடுத்தான். எனக்கு ஒரு பிஸினஸ் ஏற்படுத்திக் கொடுப்பதாகச் சொன்னான். அதேமாதிரி ஒரு பிஸினஸ் ஏற்படுத்திக் கொடுத்தான். இப்ப நான் பத்துப் பேருக்கு சம்பளம் கொடுக்கிறேன். ஆனந்தகுமார் அப்பப்ப வந்து பாத்துக்கறான். பிஸினஸையும் பாத்துக்கறான். நல்லவிதமாக ஓடிக்கிட்டு இருக்கு வாழ்க்கை.. வந்த பாதையை நெனைச்சுப்பாத்தா ஒரு நாவலே எழுதலாம். எவ்வளவு திருப்பம் எவ்வளவு புதிர் இந்த வாழ்க்கை… வாங்க நம்ம காருக்கிட்டே போவோம்” என்று எழுந்து நடந்தான். சிவசங்கரனும் உடன் சென்றான்.

download (18)

பெரியகார் நின்றிருந்தது. காரில் ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. டிரைவர் இருந்தான். பின் ஸீட்டில் ஒரு பெண் ஆங்கிலப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தது. காரின் அருகே சென்றதும் அமிர்தா நின்று சிவசங்கரனைப் பார்த்தாள்.

‘என் மனசு கேக்கலை… அந்தப் பெண்ணை பாத்துக்குங்க’ என்றாள். அவன், அந்தப் பெண்ணைப் பார்த்தான். அந்தப் பெண் அவனைப் பார்த்துவிட்டு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள். அமிர்தாவின் முகம் மாறியது. உடல் இறுக்கம் கொண்டது.

சிவசங்கரன் ‘என்ன? என்றான். அமிர்தா, மெதுவான குரலில் ‘அந்தப்பெண், உங்க ரெண்டு பேருலே. ஒருத்தரோட பெண்.. எனக்கு குழந்தைப்பேறு இல்லைன்னு நான் சொன்னது பொய். இந்த பெண்ணை வளக்க நான் பட்ட கஷ்டத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்வளவு கஷ்டம் ரொம்ப நன்றி.. வரட்டா…” என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறி டிரைவருக்குப் பக்கத்து ஸீட்டில் உட்கார்ந்தாள். கதவைச் சத்தத்துடன் சாத்தினாள். டிரைவரைப் பார்த்து காரை ஓட்டச்சொன்னாள். கார் நகர்ந்தது. சிவசங்கரன் ஓடிக்கொண்டிருந்த காரைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

****

மேட்னி ( சிறுகதை ) அறிமுகப் படைப்பாளி / சித்ரன்

download (38)

வெக்கை அருந்தி வியர்வையாய் கசிந்த அத்திரையரங்கம் அம்மதிய வேளையில் ஒரு சோம்பல் மிருகமாய் மௌனித்திருந்தது. மயிர் நீத்த கிழட்டுச் சருமமாய் நிறப்பூச்சு உதிர்ந்த அதன் சுவர்களில் பெரும் ஓசையுடன் சுழன்றன ஆதி காலத்தைய மின்விசிறிகள். அச்சுழற்சியின் சொற்பக் கருணையை பொருட்படுத்தாத வெப்பத்தில் இருக்கைகளும் சூடேறிக் கிடக்க மேற்சட்டையை கழட்டலாமா என யோசித்தவன் இரு பொத்தான்களை மட்டும் கழட்டினான்.

திரையரங்கப் பார்வையாளர்களின் எண்ணிக்கை இருபத்தொன்பது என்ற ஒற்றைப் படையாயிருக்க அவனே காரணம். வெப்பம் குறித்தான பிரக்ஞையற்று ஆங்காங்கே உரையாடியவாறிருந்த இளஞ்சோடிகளை விரோததுடன் அவன் வெறித்திருக்க உள்நுழைந்த ஒரு ஜோடி சட்டென எதிர்கொண்ட இருளை சமாளிக்க கைகளைக் கோர்த்தவாறு ஓர இருக்கைகளைத் தேடி அமர்ந்தது. சிலந்திவலை அசையுமளவு கூட காற்று வர வாய்ப்பற்ற அவ்விடத்தில் வியர்வை வழிய உறுப்புகளைப் பிசைந்து முத்தமிட்டு எனத் தொடர்ந்த எண்ணங்களில் எரிச்சலடைந்தவன் வெளியில் நிற்கலாமென எழுந்தான்.

சீர்காழி கோவிந்தராஜன் ‘கணபதி இருக்கும் வரை கவலையில்லை’ எனப் பாடத் தொடங்கினார். தேய்ந்து போன ஒலிநாடா ஒலிப்பெருக்கியின் கரகரப்போசையோடு அவனை மேலும் இம்சித்தது. அவனது சிறுவயதிலிருந்து அத்திரையரங்கின் முதல் பாடலாய் ஒலிக்கும் பாடலது. ஒருவேளை அத்திரையங்கம் இருக்கும் வரையிலும் அதுவே முதல் பாடலாய் ஒலிக்கக் கூடும். இருபதடி நடந்ததற்கே அவனது மார்பிலும் முதுகிலும் வியர்வை ஒரு கோடாய் வழிந்து உள்ளாடைக்குள் சேகரமாகி லேசான நமைச்சலைக் கிளப்பியது. கண்களை கூசச் செய்த வெயிலை புருவங்களைச் சுருக்கி நிதானித்தான்.

புது நூற்றாண்டு தொடங்கி ஐந்து மாதங்களுக்குள் எல்லாக் கனவுகளும் சிதைந்து விடுமென அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. “டேய் மாணிக்கம் எனக்கப்புறம் இந்த ஷெட்டு ஒனக்குத் தான்டா” என ஒவ்வொரு முறையும் கிரீஸ் அப்பிய சட்டையும் அதற்குள் போதையில் தள்ளாடும் உடலுமாய் முதலாளி சொன்னபோதெல்லாம் அவரது ஒரே மகள் சுலோக்சனா அவன் மனதிற்குள் சாப்பாட்டுக் கூடையை கேரியரில் வைத்தவாறு சைக்கிளை ஓட்டி வருவாள். அவளை மனதில் ஆராதித்தவாறு வீட்டில் பார்த்திருந்த எத்தனை பெண்களை இவன் நிராகரித்திருப்பான். தற்போது அவன் வாழ்வு கண்களை குருடாக்கிய பின் சூனியத்திற்குள் திசைகளை அறிய நிர்பந்திக்கப்பட்டவனுடையதாய் அல்லாடிக் கொண்டிருந்தது.

எதிரே சுவரையொட்டிய வேம்பின் அருகிலிருந்த சிறு நுழைவாயிலில் டிக்கெட் கிழிக்கும் கிழவன் பார்வையாளர்களுக்காகக் காத்திருந்தான். வேம்பின் மஞ்சள் இலைகள் தரை முழுதும் உதிர்ந்து கிடக்க அவற்றில் சில பழுப்பேறியிருந்தன. கணிசமான இலைகளை உதிர்த்திருந்த வேம்பு மொட்டைத் தலையில் ஈர்க்குக் குச்சிகளைச் சொருகியதைப் போல் காட்சியளித்தது. அநாதரவாய் வெயிலில் காய்ந்திருந்த வேம்பும் தான்தான் என சுய அனுதாபம் கொண்டான். வேம்பிலிருந்து வெயிலில் மினுங்கிய ஒரு நுண்ணிய கோடு புலனாகியது.

பார்வையின் நுண்புலத்தை அவன் கூராக்க தனது உமிழ்நீரை கயிறாக்கி புழு ஒன்று தரையை நோக்கி இறங்கியது. இவன் ஒரு மலையுச்சியிலிருந்த பாறையில் கயிற்றைக் கட்டி பள்ளத்தாக்கில் இறங்கினான். தரையிறங்கிய புழு ஒரு பெண்ணின் மிதியடியின் கீழ் அகப்பட்டது. இவன் பள்ளத்தாக்கில் தரையிறங்க ஒரு மதயானை அவனுக்காகக் காத்திருந்து மார்பில் மிதித்தது. புழுவை மிதித்தவள் சற்று மிகையாக தன்னை அலங்கரித்திருந்தாள். இந்த மேட்னி ஷோவிற்கு இவ்வளவு சிங்காரத்துடன் தனியாய் ஒருத்தி வருவதைக் கண்டதும் எதற்கெனப் புரிந்தவனாய் அவளையே வெறித்தான். அரங்கிற்குள் நுழையும் முன்பே வாடிக்கையாளன் கிடைத்த மகிழ்ச்சியை கட்டுப்படுத்தியவள் புருவங்களை உயர்த்தி சைகை செய்தவாறு அவனைக் கடந்து உள்நுழைந்தாள். அத்திரையரங்கின் பொது விதியின் படி அடுத்த பாடலாக ‘முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே’ என சீர்காழி கோவிந்தராஜன் வெங்கலப் பானையை உருட்டினார்.

பாடல் வரிகளையும் இரண்டாவதாக அப்பாடல் ஒலிபரப்பப்படுவதற்குமான முரணையும் நினைத்துச் சிரித்துக் கொண்டவன் உள்ளே சென்றவள் எங்கு அமரப் போகிறாள் எனப் பார்வையால் பின்தொடர்ந்தான். அவள் பின்னிருக்கைகளுக்குச் செல்லாமல் திரையை நோக்கியவளாய் நடந்து சென்று பத்தாவது வரிசையின் வலப்புறம் திரும்பி நான்கு இருக்கைகளை காலியாக விட்டு அமர்ந்தாள். அமரும் முன்பு இவன் தன்னை கவனிக்கிறான் என்பதை ஒருமுறை உறுதிபடுத்திக் கொண்டாள்.

செய்வதற்கு ஏதுமின்றி யோசித்திருக்கும் போதெல்லாம் அவனது விரல்கள் அனிச்சையாய் சிகரெட்டைத் துழாவுவது இம்முறையும் நடந்தது. தீப்பெட்டியில் கடைசித் தீக்குச்சி மட்டும் எஞ்சியிருக்க ஒரு பெண் சிலையின் நாசியைச் செதுக்கும் சிற்பியின் நேர்த்தியோடு அத்தீக்குச்சியை தீப்பெட்டியில் உரசினான். தீப்பற்றிக் கொள்ள எங்கிருந்தாவது காற்று வீசி தீச்சுடரை அணைத்து விடக் கூடுமென்ற பதைபதைப்போடு சிரத்தையாக தனது சிகரெட்டை பற்ற வைத்தான். நெருப்பு ஊர்ந்த சிகரெட்டின் நுனியைக் கண்டு ஆசுவாசமடைந்தவன் தலையை நிமிர்த்தி புகையை வெளியிட எதிரே ஜீன்ஸ் அணிந்த நடுத்தர வயதுக்காரன் வெறும் சிகரெட்டைக் கையில் வைத்துக் கொண்டு அவனிடம் நெருப்பை யாசித்தான். இவனது சிகரெட் நுனி அவனது சிகரெட்டை முத்தமிட்டது. எரியத் தொடங்கிய சிகரெட்டை அவன் உறிஞ்ச நெருப்பு அவனது கருத்த உதடுகளை நோக்கி ஊர்ந்தது. புகையால் சூழப்பட்ட அவன் வெக்கையோடு வெக்கையாக கழிவறையை நோக்கிச் சென்றான்.

மாணிக்கத்தைச் சுற்றிலும் அவன் உதிர்த்த சாம்பல் துகள்கள் பரவிக்கிடக்க திரைப்படம் துவங்கவிருப்பதற்கான இசையோடு வெண்திரையை மூடியிருந்த திரைச்சீலை ஒளிரும் விளக்குகளால் மினுமினுத்தபடி விலகியது. நெருப்பு சிகரெட்டின் புகையிலையை கரித்து பஞ்சைத் தீண்ட இன்னும் இரண்டு இழுப்புகள் மீதமிருந்தன. அதை ஒரே இழுப்பில் கருக்கி விடும் முடிவோடு புகையை ஆழமாய் அவன் உள்ளிழுக்க “யோவ் மாணிக்கம்” என்ற அழைப்புக் குரல் கேட்டது. இவனோடு பள்ளியில் படித்த சேகர் நின்றிருந்தான். கடைசியாக இருவரும் பேசி ஆறு வருடங்களாவது கடந்திருக்கும். எப்போதாவது சாலையில் எதிர்படக் கூடியவர்களென்றாலும் யதேச்சையாக தலையை வேறு பக்கம் திருப்பிச் செல்லும் நடைமுறை அவர்களுக்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்திருந்தது. அந்த சேகர் இங்கு திடீரென அழைத்ததில் ஆச்சரியமடைந்தான். “என்ன சேகரு எப்படியிருக்க?” எனக் கேட்டு அவனருகில் செல்கையில் அவன் இங்கு ஆபரேட்டராக இருப்பது நினைவில் எழுந்தது. “நல்லா இருக்கேன் சரி மேல ஆபரேட்டர் ரூமுக்கு வா படத்த ஆரம்பிக்கனும்” என்று இவனை அழைத்துச் சென்றான்.

துருவேறிக் கிடந்த நாற்காலியைக் காட்டி சேகர் அமரச் சொல்ல “இருக்கட்டும்யா” என மாணிக்கம் ஒரு குழந்தையின் ஆவலுடன் அவ்வறையின் இயந்திரங்களை பார்வையால் ஆராயத் தொடங்கினான். திரைச் சீலைகள் இழுபடும் ஓசையோடு கதவுகள் சாத்தப்படும் ஓசையும் கேட்க சுவரிலிருந்த பெரிய துளையின் வழி எட்டிப் பார்த்தான். முழுமையாக இருளடைந்திருந்த திரையரங்கத்தில் இனம்புரியாத ஒரு அடர்த்தியான மௌனம் நிலவியது. சேகர் வட்ட வடிவத் தகரப் பெட்டிக்குள் ஒரு கருநாகமாய் சுருண்டிருந்த திரைச்சுருளை ப்ரொஜக்டரில் பொருத்தி அதை இயக்கினான். அரங்கத்தில் நிறைந்திருந்த மௌனத்தை குலைத்தவாறு ப்ரொஜக்டர் இயங்கத் தொடங்கியது. தூசிகள் நீந்திய ஒளிவெள்ளம் வெண்திரையில் காட்சிப் பிம்பமாய் குவிந்தது. தணிக்கைச் சான்றிதழில் படத்தின் பெயரைத் தேடிப்படித்து மனதிற்குள் இருமுறை சொல்லிக் கொண்டான்.

கதாநாயகனின் அடைமொழியோடு படத்தின் தலைப்பு மின்னல் வெட்டுவதைப் போல் இடிமுழக்கத்துடன் தோன்றியது. மாணிக்கத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை நினைவில் எழ “ஒரு ஷோவிற்கு அறுநூறு ரூவா கட்டுப்படியாகுமாய்யா?” எனக் கேட்டான். “ஆகாதுதான் என்ன பன்றது அப்பப்ப மேட்டர் படம் போட்டு லாபம் பாத்துக்க வேண்டியது தான்” எனக் கண் சிமிட்டியவன் “என்ன ஷெட்டுக்கு வண்டி ஏதும் வரலையா மேட்னிக்கு வந்திருக்க?” என்றான்.

“ஓனர் பொண்ணுக்கு இன்னக்கு கல்யாணம் அதான் லீவு”

“ஒனக்கு எப்பய்யா?”

“பண்ணுவோம்” என்று அசிரத்தையாய் பதிலளித்தவன் “ஒனக்கு எத்தனக் குழந்தைய்யா?” எனக் கேட்டான்.

“சம்சாரம் இரண்டாவது பிரவசத்துக்கு அம்மா வீட்டுக்கு போயிருக்கா முதல்ல ஒரு பையன்”

திரையில் கதாநாயகனின் பெருமைகளை ஊரே புகழ்ந்து பாட அதை ஏற்றுக் கொண்ட நாயகன் அவனும் தனது பங்கிற்கு அவனது பெருமைகளை பாட ஆரம்பித்தான்.

இருவரும் பத்தாவதோடு படிப்பை நிறுத்தியவர்கள் சேகர் பத்தாவதை பாதியிலே நிறுத்தியவன். பள்ளித் தோழர்களின் பெயர்களைச் சொல்லி அவர்கள் எங்கிருக்கிறார்கள் என சேகர் அடுக்கிச் செல்ல அந்நபர்களின் பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே இவன் நினைவில் தங்கியிருந்தது.

மொத்தப் பார்வையாளர்களையும் காண்பதற்குத் தோதாய் சுவரிலிருந்த நான்கு துளைகளின் மூலம் இருவரும் பார்வையாளர்களின் செயல்களை ஆராயத் தொடங்கினர். திரை பிரதிபலித்த வெளிச்சத்தற்கு மாணிக்கத்தின் கண்கள் பழக சற்று தாமதித்தது. நண்பர்களாக வந்திருந்த சில ஆண்கள் மட்டுமே திரையைக் கவனித்தனர். மற்ற ஜோடிகள் யாரும் தன்னை கவனிக்கவில்லையென்ற நினைப்போடு முத்தமிட்டுக் கொண்டோ கொங்கைகளைப் பிசைந்தவாறோ இருந்தனர்.

“இப்பல்லாம் எவன் குடும்பத்தோட வரான் இதுங்கதான் வருதுங்க எந்தப் படத்தையும் இருவது நாளத் தாண்டி ஓட்ட முடியிறதில்ல. கடைசியா எந்தப் படம் இங்க நூறுநாள் ஓடிச்சின்னு முதலாளிக்கே ஞாபகம் இல்ல”

ஒரு படம் நூறுநாள் ஓடியதென்றால் ஆப்ரேட்டர் அப்படத்தை நானூறு முறை பார்க்க வேண்டியிருக்குமே என மாணிக்கம் அனுதாபப்பட்டான். “ஒரே படத்தை திருப்பித் திருப்பி பார்க்க எரிச்சலா இருக்காதாய்யா?” என மாணிக்கம் கேட்க “முதல் தடவை மட்டும் ஆர்வமா பாப்பேன் அப்புறம் எவன் யாரைக் கூட்டிக்கிட்டு எந்த பக்கம் ஒதுங்கிறான்னு படம் போடுறதுக்கு முன்னாடியே பாத்து வைச்சிக்குவேன்.

படம் ஆரம்பிச்சோனே அவங்கள தான் பாத்துக்கிட்டு இருப்பேன். சில பேரு செம குட்டியா கூட்டிக்கிட்டு வருவாங்க சேர்ல ஒக்காந்து உருட்டிக்கிட்டு இருந்தாங்கன்னா விட்டிருவேன். நடுவிலே படுக்க வைச்சாங்கன்னா புகைச்சலா இருக்கும். ஒடனே அவன் தலைக்கு மேல இருக்க பல்ப போட்டு விட்டுருவேன். பதறிப் போய் எந்திரிச்சு உக்காருவாங்க. நான் மட்டும் தனியா சிரிச்சிக்கிட்டு இருப்பேன்” என்றவன் “இப்ப அதையும் செய்றதில்ல முதலாளி இருக்குறப்ப ஒருமுறை அப்படி செஞ்சேன் அவரு டேய் சேகரு நம்ம தியேட்டருக்கு இவங்க வர்ரதே இதுக்குத் தான் அவங்கள தொந்தரவு பண்ணினா உனக்கு சம்பளம் கொடுக்குறதுக்கு கூட இந்த தியேட்டர ஓட்ட முடியாதுன்னாரு” என்றான்.

திரைப்படத்தின் உரையாடல்களை மிஞ்சி ப்ரொஜக்டரின் ஓசையிலே மாணிக்கத்தின் கவனம் குவிந்தது. மீண்டும் அரங்கத்தின் மெல்லிய ஒளிப்பரவலில் சிதறியிருந்த பார்வையாளர்களை ஆராய்ந்தான். மனிதர்களின் ஒழுக்க மதிப்பீடுகள் கள்வனாய் தன்னைப் பதுக்கிக் கொண்ட அவ்விருள் அவனை மென்மேலும் விரக்தியடையச் செய்தது.

“இது பரவால்லயா மேட்டர் படம் போட்டா ஆளுக உக்காந்த சீட்டுக்கு முன்னாடி சீட்டு முழுக்க கரையாத்தான் இருக்கும். நம்மாளுக இங்கயே கைவேலை பாத்துட்டு போயிருவாங்க” என்ற சேகர் சட்டென அமைதியடைந்து வலது மூலையில் பெண்ணின் முலைகளைச் சுவைத்துக் கொண்டிருந்த ஒருவனைச் சுட்டிக் காட்டினான். சுவரின் இடது ஓரத் துளையின் மூலம் இருவரும் வலது மூலையை கவனித்திருக்க “அடுத்த முறை மேட்டர் படம் போட்டா வா மூணு பிட்டாச்சும் ஓட்டிரலாம்” என்ற சேகரின் வலது புறங்கை மாணிக்கத்தின் தொடையிடுக்கைத் தீண்டிச் சென்றது. கை எதேச்சையாய் பட்டிருக்கக் கூடுமென பின்னகர்ந்தவன் மீண்டும் துளையின் மூலம் வலது மூலையை உற்று நோக்கினான்.

தற்போது சேகரின் சூடான சுவாசத்தை கன்னத்தில் உணர்ந்தவன் நிதானிப்பதற்குள் அவனது கைவிரல்களின் வருடலை தனது ஆணுறுப்பில் உணர்ந்தான். பதறிப் பின்வாங்கியவன் திகைப்புடன் சேகரின் கண்களை நோக்கினான். முகத்தசைகள் அவனது கட்டுப்பாடின்றித் துடிக்க வலிந்து வரவழைத்ததைப் போன்ற உணர்ச்சித் ததும்பலில் சேகர் இவனிடம் ஒரு ஏக்கத் தலையசைவின் மூலம் முறையிட்டான். இதைச் சற்றும் எதிர்பார்த்திராத மாணிக்கம் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். ஒப்பாரி ஓய்ந்த இழவு வீடாய் அங்கு சகிக்கவியலா ஒரு அமைதி நிலவியது. சில மணித்துளிகள் இருவரும் வேறு வேறு திசைகளில் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த பின் “நான் போயி படம் பாக்குறேன்யா” என மாணிக்கம் வெளியேறினான்.

அவனுள் மீண்டும் முதலாளி பெண்ணிற்கு திருமணம் நிச்சயமானதை அறிந்த அன்று ஏற்பட்ட பதற்றம். இயலாமை வெறுப்பாய் கொதித்தெழ படியில் இறங்கும் போது அவனது கால்கள் தடதடத்தன. இழு என்று எழுதியிருந்த கதவின் கைப்பிடியை சற்று நேரம் வெறித்தவன் பிறகு ஏதோ உத்தரவுக்கு பணிந்தவன் போல் தலையசைத்தவாறு அதை பிடித்திழுத்தான். அலை அலையாய் ஆடிய கருந்திரை அவனறியா ஒரு இருள் உலகிற்கு சாமரம் வீசியது. உள்ளே நுழைந்த மாணிக்கம் திரையை நோக்கி நடந்து பின் வலதுபுறம் உட்சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தான். இவ்வளவு நாட்கள் கழித்து சேகர் இதற்குத்தான் அழைத்திருக்கிறான் என்பதை உணர்ந்ததும் இவனுள் ஒருவித கூச்சமும் அருவருப்பும் தோன்றி உடலை சிலிர்க்கச் செய்தது.

இவனது முன்னிருக்கையில் ஒருவன் தனியாய் அமர்ந்தவனாய் இருபுறமுமுள்ள காலி இருக்கைகளிலும் கைகளை விரித்திருந்தான். திரையிலிருந்து கசிந்த ஒளியில் மெல்ல துள்ளியெழ முயற்சிக்கும் அவனது இயக்கம் புலனாகியது. பிறகு அவனது இடக்கையை அருகிலிருந்த இருக்கைக்கு கொண்டு சென்று எதையோ துழாவினான். சற்று நேரம் கழித்து அடுத்த இருக்கையிலிருந்து நிமிர்ந்த ஒரு பெண் தோள்பட்டையின் முன் சரிந்து கிடந்த அவளது சடையை பின்னுக்குத் தள்ளியவளாய் மீண்டும் அவனிடம் மண்டியிட்டாள். திரையில் நாயகனும் நாயகியும் பனிப்பிரதேசத்தில் ஒரு மெல்லிசைப் பாடலைப் பாடித் திரிந்தனர். மாணிக்கம் கண்களை மூடியவாறு இருக்கையில் தலை சாய்த்தான். முன்னிருக்கையில் மண்டியிட்டவள் புழுவை மிதித்த சிங்காரி. உச்சத்தை எட்டிய முனகலும் பின் தொண்டையிலிருந்து எச்சிலைக் காறி உமிழும் ஓசைகளும் கேட்டு இவன் கண்விழித்தான். சிகரெட்டிற்கு நெருப்பை யாசித்தவன் முன்னிருக்கையிலிருந்து எழும்பி வெளியே சென்றான்.

images (12)

காமம் வாணியொழுகும் வேட்டை நாயாய் அலைந்த அவ்விருள் அவனுள் ஒருவித ஒவ்வாமை உணர்வைக் கிளர்த்தியது. தசைகள் அனிச்சையாய் துடித்த சேகரின் முகம், இருளுக்குள் முயங்கும் உடல்கள் என பிம்பங்கள் சுருளில் பதிந்து சுழல்பவையாய் அவன் மனதிற்குள் திரையிடல் நிகழ்த்தின. சேகரின் கைவிரல்கள் அடுத்து செய்திருக்கக் கூடிய சாத்தியங்களில் அவனது வேட்டை நாயும் இரை தேட முயற்சித்தது. மன ஓட்டங்களைக் கட்டுப்படுத்தும் விதமாய் தலையைக் குலுக்கியவன் திரையைக் கவனிக்க முயற்சித்தான். வலது முன்னிருக்கையில் பெருமூச்செறிந்த சிங்காரி ஆதுரமாக இருக்கையில் தலைசாய்த்தாள். பின் அவளது முதுகில் கழட்டப்பட்டிருந்த ஜாக்கெட் கொக்கியை மாட்டுவதற்கு முயன்றவாறு ஒருக்களித்தவள் இவனைக் கண்டதும் தன் செயலை விடுத்து திரையின் பக்கம் திரும்பாமல் இவனையே வெறிக்கத் தொடங்கினாள். அவளின் பார்வையில் நிலைகுலைந்த மாணிக்கம் உன்னிப்பாக படத்தைக் கவனிப்பவன் போன்ற பாவனையுடன் திரையின் மீது பார்வையை நிலைத்தான்.

உறவில் பால் முரண்கள் பேதமற்ற சேகரின் அழைப்பிலிருந்து விடுபடாதவன் ஒரு எதிர் பால் முறையீட்டையும் திகைப்பினூடாகவே அணுகினான். தன் இருக்கையிலிருந்து அவள் எழுந்ததும் லேசாக ஆசுவாசமடைந்தவனின் மனஅவசம் அடங்குவதாயில்லை. எதிர்பாரா கணத்தில் அவனது அருகாமை இருக்கையில் வந்து அமர்ந்தவளின் வியர்வை நெடி அவனைத் துணுக்குறச் செய்தது. தான் அணிந்திருந்த சேலையை முறையாக கட்டிக் கொள்வதைப் போன்றும் நெற்றியில் வழியும் வியர்வை கழுத்தினூடாக மார்பில் இறங்குவதைத் துடைப்பதைப் போன்றும் அவனைச் சீண்டியவாறிருந்தாள். வெறுப்பூட்டும் நிகழ்வுகளால் துரத்தப்பட்டவன் முதன் முதலாய் ஒரு பெண்ணின் அருகாமையில் அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வின் இன்ப நுகர்வுக்கு மெல்ல மெல்ல ஆட்படத் தொடங்கினான்.

தொடையில் ஊர்ந்த விரல்களின் மென்மையான ஸ்பரிசத்தில் திடுக்கிட்டவனிடம் “அம்பது ரூவா மட்டும் கொடு போதும்” என காதில் முனுமுனுத்தாள். பதிலற்று அவளை வெறித்தவனின் கையைப் பற்றியவள் அவன் இதுவரை அறிந்திரா பெண்ணுடலின் வடிவமைப்பை உணரச் செய்தாள். கண்களை மூடியவாறே இயந்திரத்தை உதிரிகளாக பிரித்தறியும் அவனது கை முதன் முதலாய் ஒரு பெண்ணுடலின் குழைவை ஸ்பரிசித்ததன் மூலம் அவனை இன்னதென்று உணர முடியா திகைப்பில் ஆழ்த்தியது.

அவளின் செயல்களுக்கு எதிர்ப்பேதும் தெரிவிக்காத மாணிக்கத்திற்கு அவளது பெயரைத் தெரிந்து கொள்ளும் ஆசை எழுந்தது. “உன் பேரென்ன?” எனக் கேட்க அவள் தனது செயல்களை சற்று நிறுத்தி இவனது கண்களில் ஊடுருவி “வாடா மலர்” என்றாள். மலரின் ஈரப்பதத்தைக் குறித்த அப்பெயர் மலரை ஆண்பாலாகவும் விளித்தது. அப்பெயரை எங்கோ கேட்டிருப்பதாக உணர்ந்தவன் சற்று நேரத்திற்கு முன் காதலர்கள் பனிப்பிரதேசத்தில் பாடித்திரிந்த பாடலின் முதல் வரி என்பதை அறிந்து அவளை எரிச்சலோடு முறைத்தான். அவள் சிரித்தவாறே “பேரைத் தெரிஞ்சு என்ன பண்ணப் போற” என அவனது மார்க்காம்பினைக் கிள்ளினாள்.

மாணிக்கத்திற்கு முதன் முதலாய் அவளை முழுதாய் ஆட்கொள்ள வேண்டுமென்ற இச்சை சுரக்க தனது கைகளில் வலுவேற்றினான். அவனது செயல்களுக்கு பற்களால் உதட்டைக் கடித்தவாறு வலியைப் பொறுத்தவள் அவனது இடது கையை கொங்கையிலிருந்து விடுவித்தவாறு “அந்த நாய் பய நகத்தால கீறிட்டான் எரியுதுய்யா” என்றாள். இவனோ ஜீன்ஸ் அணிந்தவனுக்கு நாய் பயல் என்ற பெயரைப் பொருத்திக் கொண்டான்.

“காச இப்பவே குடுத்துரு” என கெஞ்சும் குரலில்லாமல் காமத்தில் கிறங்கியவளைப் போன்ற பாசாங்குடன் அவள் கேட்க இவன் சட்டையின் உள்பாக்கெட்டிலிருந்து கத்தையாக பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்தான். ஐந்தை எண்ணி மாணிக்கம் வாடாமலரிடம் நீட்ட அவள் பணத்தை பிடுங்குவதைப் போல் வாங்கினாள். அவளது கவனம் மீண்டும் இவன் உள்பாக்கெட்டிற்கு கொண்டு சென்ற பணத்தின் மீதே குவிந்திருப்பதை உணர்ந்தவன் மேலுமொரு பத்து ரூபாயை அவளிடம் நீட்டினான். உற்சாகமடைந்த வாடாமலர் பாவாடையை விரல்களால் விலக்கி உள்ளாடைக்குள் பணத்தை பத்திரப்படுத்தினாள். தற்போது மாணிக்கத்தின் கையைப் பற்றியவள் நாய்பயலின் நகக்கீறல்களையும் பொறுத்துக் கொண்டாள்.

ரவுடிக் கும்பலொன்று நாயகனைச் சூழ்ந்து மிரட்ட முன்னிருக்கையின் பின்னுள்ள சிறிய இடைவெளியில் வாடாமலர் தனது உடலை லாவகமாக பொருத்தினாள். வரிசையில் நின்று ரவுடிகள் உதை வாங்கும் பின்னனி இசைக்கேற்ப கராத்தே அசைவுகளைப் போன்று மாணிக்கத்தின் புடைத்த குறியோடு சண்டையிட்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். ஒரு சிறுமியின் உற்சாகத்தோடு அவள் செயல்படுவதில் ஆச்சரியமடைந்தவனுக்கு இருக்கையின் சிறிய அகலம் மீதான பிரக்ஞை அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இவனது குறியை முத்தமிட்டவள் மூச்சை வேகமாய் வெளியில் தள்ளி “மூத்திரம் பேஞ்சா சாமானக் கழுவுய்யா” என்றவாறு அவனது சட்டையால் அதைத் துடைத்தாள். இவனுக்கு முதன் முதலாய் அவள் மீது எரிச்சல் ஏற்பட்டது.

தனது உதடுகளால் ஒவ்வொரு அங்குலமாக அவள் ஒத்தியெடுத்த பின் நுனியின் மீது நாவின் அடிப்பாகம் உரசுமாறு நாவை இடப்புறம் வலப்புறம் என அசையச் செய்தாள். முன்விளையாட்டுகள் முடிவை எட்டியதன் அடையாளமாய் இவனது உடல் முறுக்கிக் கொள்ள மலரின் இதழ்களினூடாக இவனது மகரந்தக் காம்பு உள்நுழைந்தது.

ரவுடிகளைத் துவம்சம் செய்த நாயகன் நாயகியோடு அயல்நாடு கிளம்பிவிட்டான். பளபளப்பான சாலைகளில் மிடுக்கான வாகனங்கள் விரைந்து கொண்டிருக்க நடைபாதைகளில் அவர்கள் பாடி ஆடித் திரிந்தனர். வாடாமலர் குழலிசைக்க இவனது உடலின் நரம்புகளனைத்தும் அந்த நாதத்தில் அதிரத் தொடங்கின. யாரோ தங்களை கவனிப்பதை உணர்ந்த மாணிக்கம் தலையைத் திருப்ப நாய்ப்பயல் இவர்களை பார்த்தவாறு நின்றிருந்தான். வாடாமலரின் நாதமீட்டலில் முயங்கியிருந்த இவனால் அவளை விலக்க முடியாமல் நாய் பயலை பதிலுக்கு வெறித்தான். அவன் திரையை நோக்கித் தலையைத் திருப்பி இவர்களுக்கு இரண்டு வரிசைகளுக்கு முன்சென்று அமர்ந்தான். தற்போது வாடாமலர் தலையை உயர்த்தி புன்னகை செய்தவாறு தன்னை ஆசுவாசப்படுத்தினாள். பிறகு மாணிக்கத்தின் கண்களை ஊடுருவியவாறு அவனது விதைகளை வருடிக் கொடுத்தாள்.

நாயகியின் அப்பா அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகத் தெரிவிக்க மகளின் காதல் விவகாரம் வெளியாகி வீடு களேபரமாகியது. சுலோக்சனாவிற்கு இவன் மீதிருந்த நாட்டத்திற்கு இவனைக் கிறங்கடித்த அவளது ஓர விழிகளைத் தவிர வேறெது சாட்சி. அனைத்தும் தானாய் நடக்கும் என்பதாக இவன் அதீத நம்பிக்கை வைத்திருந்தான். இப்படி எதிர்மறையாய் நிகழும் என அவன் முன்னுணரவில்லை.

மண்டபத்திலிருந்து கிளம்பும் முன்பாக முதலாளியிடம் விடைபெற்றுச் செல்கையில் கலங்கிய கண்களுடன் “மாணிக்கம் இனிமே ஷெட்டு ஒனக்குத் தாண்டா” என அவர் தழுதழுத்தது நினைவில் எழுந்து இவனை மேலும் எரிச்சலுக்குள்ளாக்கியது. முதலாளியும் சுலோக்சனாவும் ஷெட்டும் நாசமாய் போக என மனதில் கருவினான். வாடாமலர் மீண்டும் குழலூதத் தொடங்கினாள். இவளையே திருமணம் செய்து கொள்வோமா என்ற எண்ணம் மாணிக்கத்திற்கு எழுந்தது. பிறகு தன் மீதே எழுந்த கோபத்துடன் என்ன இது மடத்தனமென்று நினைத்துக் கொண்டான். எங்கெங்கோ அலைபாய்ந்த மனதின் எல்லா ஏமாற்றங்களையும் வெறுப்புகளையும் உதறித் தள்ளி வாடாமலரின் அதரத்தில் தனது ஆணுடம்பை முழுமனதாய் இணைத்தான்.

உடலின் இரத்த ஓட்டமனைத்தும் மூலாதாரத்தை நோக்கிக் குவிவதாகத் தோன்றிய வேளையில் அவனது அகம் ஒரு வட்ட வடிவ வெளிச்சப் பரப்பின் மையத்தில் இருப்பதை உணர்ந்தது. நிகழ்வதை முற்றாய் அறிய அவனது நுண்ணுணர்வு தாமதித்தாலும் கூச்சம் ஓர் அருவ கம்பளிப் புழுவாய் அவனது உடல் முழுதும் இழைந்து மயிர்கால்களை சிலிர்க்கச் செய்தது. வேகமாய் வாடாமலரை அவனிடமிருந்து பிரித்து பக்கத்து இருக்கையில் அமர வைத்தான். தற்போது அந்த வெளிச்சம் மறைந்தது. என்ன நிகழ்ந்ததென அறிந்தவனாய் ஆபரேட்டர் அறையைத் திரும்பிப் பார்த்தான். திரையரங்கின் மெலிதான ஒளிப்பரவலில் அவ்வறையின் சுவரிலிருந்த ஒரு துளையில் சேகரின் தலை தெரிந்தது.

“என்னய்யா ஆச்சு?” என மாணிக்கத்தின் கையை ஆதுரத்துடன் பற்றிய வாடாமலரிடம் “நான் பாத்ரூம் போவனும்” என அவளது கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கிளம்பினான். இவனது சட்டை முழுவதுமாய் நனைந்து முதுகோடு ஒட்டியிருக்க அரங்கத்து இருளிலிருந்து வெளிவந்ததும் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்தது. வெக்கையில் புழுங்கிய மாணிக்கத்திற்கு சேகர் இவ்வளவு நேரமும் அனைத்தையும் கவனித்திருக்கிறான் என்பதை உணர்ந்ததும் வன்மம் ஒரு வெப்ப நீரூற்றாய் உள்ளிருந்து கொப்புளிக்கத் தொடங்கியது.

இடைவேளைக்கான வாடிக்கையாளர்களை எதிர்நோக்கி அமர்ந்திருந்த கேன்டீன் பணியாளனிடம் தீப்பெட்டியை வாங்கி தனது சிகரெட்டை பற்ற வைத்தான். சுலோக்சனாவின் சைக்கிள் மலை உச்சியிலிருந்த ஒற்றை மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க அதை எடுத்து சரிவினூடாய் ஓட்டிச் சென்றான். அந்த தார்ச்சாலை மலையை இரண்டாய் பிளந்ததைப் போன்ற செங்குத்தான பள்ளத்தாக்கில் முடிந்தது. பாதாளத்தின் மறுபுறமிருந்த மலையிலும் அச்சாலை தொடர வாடாமலர் அங்கே இவனுக்காக காத்திருந்தாள்.

முழுதாய் புகைத்த சிகரெட்டை கால்களால் நசுக்கியவன் கழிவறையை நோக்கிச் சென்றான். மூத்திரநெடியின் காரம் உக்கிரத்துடன் இவனது நாசியைத் துளைத்தது. பீங்கான் குடுவைகளற்ற சிறுநீர் கழிக்கும் பகுதி சுவரோடு பொருத்தப்பட்ட கான்கிரீட் தடுப்புகளால் பிரிக்கப்பட்டிருந்தது. துளி நீர்ப்பசையற்று மூத்திர உப்புகள் மஞ்சள் நிறத்திட்டுகளாக மினுங்கிக் கொண்டிருந்தன.

மேற்கூரையற்ற சிறுநீர் கழிக்கும் பகுதியை ஒட்டினாற் போல் பாதி நீர் நிறைந்த தொட்டியிருந்தது. அதனருகில் வரிசையாய் கழிவறைகள். அதன் மேலாய் இன்னும் முழுதாய் இலைகளை உதிர்க்காத வேம்பு கிளைகளை பரப்பியிருந்தது. அவன் மனதில் பள்ளி நாட்களில் கூட்டமாய் சினிமா பார்க்க வருகையில் காசு பற்றாக்குறையென்றால் ஒன்றிரண்டு பேர் இதன் வழியாய் ஏறிக் குதித்து அரங்கினுள் நுழைந்தது நிழலாடியது.

ஒவ்வொரு கழிவறையாகத் திறந்து பார்த்தவனுக்கு அதன் பயனாளிகள் தனது உடலை மட்டுமாவது நீர் தீண்ட அனுமதிப்பார்களாவென சந்தேகம். தொட்டியிலிருந்த நீரில் பெயின்ட் டப்பா ஒன்று மிதந்து கொண்டிருக்க அதிலிருந்து மூன்று முறை நீரை முகர்ந்து ஒரு கழிவறைக்குள் ஊற்றினான். பிறகு மீண்டும் நீரை முகர்ந்து கழிவறைக்குள் சென்று தாழிட்டான்.

மாணிக்கம் தனது கண்களை மூடியவாறு கால்சட்டையின் ஜிப்பை விரல்களால் கீழிழுத்தான். சேகர் ப்ரொஜக்டரில் திரைச் சுருளைப் பொருத்தினான். ஆய்வுக் குடுவைக்குள் வேதிக் கரைசல் கொதிநிலையை அடைந்த ஓசையுடன் ப்ரொஜக்டர் இயங்க ஆரம்பித்தது. ஒளி ஓர் நீர்மத்தின் வேகத்தில் தூசுகளை ஏந்தியவாறு பயணித்து காட்சிப் பிம்பமாய் திரையில் குவிந்தது. திரையில் சுலோக்சனா மிதிவண்டியை ஓட்டிவந்தாள். தகப்பனிடம் சாப்பாட்டுக் கூடையை நீட்டியவளின் ஓரவிழிகள் இவன் மீது. காற்று விலக்கிய சேலை மறைப்பினுள் மார்பின் மேடுகள்.

பொருட்கள் வைக்கும் அறைக்குள் சென்றவளை இவன் பின்தொடர்ந்தான். உள்ளே அவளைக் காணவில்லை. ஆனால் வாடாமலர் சுவரோரமாக நின்றிருந்தாள். அருகில் சென்றதும் இவன் முன் முழங்காலிட்டவள் இவனது கால்சட்டை ஜிப்பை கோலமிடும் விரல்களின் நேர்த்தியோடு அவிழ்த்தாள். அவனது உடலின் புலனாகாத் தளத்திலிருந்து குறியிலோடிய ரத்தநாளத்தின் மீது அவளது நடுவிரலை ஓடச்செய்தாள்.

மாணிக்கத்தின் சிசினம் உயிரற்ற சர்ப்பம் மறுபிறப்பெடுத்ததைப் போலக் கிளர்ந்தெழுந்தது. தற்போது மாணிக்கத்தின் பிரக்ஞை திரையிலிருந்து ப்ரொஜக்டர் அறையை கவனித்தது. சதுரத் துளையினுடாகத் தெரிந்த சேகரின் முகத்தில் ஒரு குறுநகை. அரங்கமெங்கும் அம்மண உடல்கள் களியாட்டம் நிகழ்த்தின.

இருக்கையிலிருந்து எழுந்த நாய்பயல் இவர்களை நோக்கியவாறு நடந்து வந்தான். திரை புதைமணலாய் அவனையும் உள்ளிழுத்தது. அவனது கண்கள் மாணிக்கத்தின் மீதே நிலைத்திருக்க அவனது அரவம் புறத்தூண்டலுக்காக காத்திருந்தது. இருவருக்குமிடையில் முழங்காலிட்டிருந்த வாடாமலர் அவனை நோக்கி புன்னகைத்தாள்.

மாணிக்கத்தின் ஆணுடம்பைச் சீண்டிய கையை மாற்றி அக்கையை அவனை நோக்கி கொண்டு சென்றாள். அவளது விரல்களின் நளினத் தூண்டலுக்கு அவனது சிசினம் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. அவனது கண்கள் இவனிடம் எதையோ யாசித்தன. தற்போது மாணிக்கம் உள்ளங்கையின் கணத்த பற்றுதலை உணர்ந்தான்.

பிறகு அதன் இயக்கத்திற்கு ஒத்திசைவாக தனது இடையை அசைக்கத் தொடங்கினான். நாய்பயலின் குறியோ வாடாமலரின் விரல் தூண்டல்களுக்கு நரம்பறுந்த இசைக் கருவியாய் அதிர்வின்றிக் கிடந்தது. சற்றுநேரம் பொறுத்திருந்த அவன் தனது முழுபலத்துடன் அவளது பிடரியில் அரைந்தான்.

இருகைகளாலும் பின்னந்தலையை பற்றிய வாடாமலர் மாணிக்கத்திடம் “நான் சொல்லல இவன் நாய்பயல்னு” என்றவாறு அவ்விடத்தை விட்டு அகன்றாள். தற்போது இருவர் மட்டும் தனித்திருந்தனர். அவனது கண்கள் யாசிப்பது எதை என்பது மாணிக்கத்தின் உள்ளுணர்வு உணரத் தொடங்கியது. ஆகாயத்தை நோக்கிய தனது குறியின் திசையை அவனை நோக்கித் திருப்பினான். இருவருக்குமிடையேயான இடைவெளி கனம் தோறும் குறைய இவனது சிசினத்தால் மரஅட்டையைப் போல் சுருண்டிருந்த அவனது சிசினத்தைத் தீண்டி பின்வாங்கினான்.

மின்சாரம் பாய்ந்ததைப் போல் உடலை உதறியவாறு குறி சிலிர்த்துக் கிளம்பியது. மேல் நோக்கிய அதன் திசையை மாணிக்கத்தை நோக்கித் திருப்பினான். மீண்டும் அவற்றிற்கான இடைவெளி குறைய இவனது சூட்டை உள்வாங்கிய அவனது குறியின் நுனி தீக்கங்கால் சுடர்விடத் தொடங்கியது. இவன் ஆச்சரியத்துடன் வெறித்திருக்க அவனோ தனது குறியை ஒரு தனித்த இயந்திரப் பொறியைப் போலத் திருகத் தொடங்கினான். விடைத்த குறி அவனது உடலிலிருந்து தனியாய் கழன்று ஒரு சுருட்டைப் போல் புகை விடத் தொடங்கியது.

பிறகு அச்சுருட்டை அவனது வாயில் வைத்து உறிஞ்ச நெருப்பு அவனது கருத்த உதடுகளை நோக்கி ஊர்ந்தது. புகையால் சூழப்பட்டவன் வெக்கையோடு வெக்கையாக அவ்விடத்தை விட்டு அகன்றான். எங்கும் இருள் சூழ்ந்த வெளியில் மாணிக்கம் தனித்து நிற்க இருளிலிருந்து அவனது ஆணுடம்பை சில விரல்கள் ஆதுரத்துடன் தடவியவாறு விதைகளை வருடின. அந்த ஸ்பரிசம் அவன் ஏற்கனவே உணர்ந்தது.

இப்போது அவனைச் சுற்றிலும் ஒரு வட்ட வெளிச்சப் பரப்பு தோன்றியது. வாடாமலர் முழங்காலிட்டவாறு அவனது லிங்கத்தை முத்தமிட்டாள். “பரவால்லயே சாமானக் கழுவிட்டியா?” என அவள் கேட்க இவன் ஆமென்று தலையசைத்தான். சூழ்ந்திருந்த இருளிலிருந்து சேகர் கண்காணிப்பதை இம்முறை அவன் பொருட்படுத்தவில்லை. காமத்தின் நீர்மத்தை துளி மிச்சமற்று உறிஞ்சிட அவள் எத்தனித்தாள். மெதுமெதுவாய் இவன் வேகமெடுத்தான்.

இவனது மனத்தோற்றங்கள் மாயவெளிக்குள் மறைய இயக்கமொன்றே பிராதனமானது. உடலின் அனைத்து இரத்த ஓட்டமும் இதயத்தை விடுத்து மூலாதாரத்தை நோக்கி விரைந்தது. இவனது உடலில் உயிர் ஓர் புள்ளியாய் அவ்விடத்தில் குவிந்தது. இன்னும் சில மணித்துளிகளே மீதமிருந்தன. அத்தருணத்தை பார்வைப் புலனால் நுகர்ந்து விட வேண்டுமென கண்களைத் திறந்தான். தற்போது மண்டியிட்டிருந்தது வாடாமலரல்ல சேகர். இவன் திடுக்கிட்டு தன்னை விடுவிக்க முயன்றும் இவனது கட்டுப்பாட்டை மீறியிருந்த உடல் இச்சையின் நீர்ச்சுழலுக்குள் மூழ்கியது.

சேகர் ஆக்ரோஷமாய் கண்களை மூடியவாறு இவனது ஆணுடம்பைச் சுவைத்துக் கொண்டிருந்தான். அத்தருணம் நிகழ்ந்தது. இவன் உச்சத்தை அடைந்தான். இவர்களைச் சூழ்ந்த வெளிச்சப்பரப்பின் விட்டம் மேலும் நீள அங்கு வாடாமலர் நின்றிருந்தாள். அவளது பாவாடைக்குள்ளிருந்து பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்தவள் மாணிக்கம் அதிகப்படியாய் கொடுத்த ஒரு நோட்டை சேகரிடம் நீட்டினாள். அதை வாங்கியவன் தொண்டையிலிருந்து காறி உமிழ்ந்தவாறு அவ்விடத்தை விட்டு அகன்றான். வெயிலில் மினுங்கிய புழுவின் நூலாம்படையாய் இவனது விந்துத் துளி சுவரில் வழிந்தது.

கழிவறையின் கதவைத் திறக்க வெயில் மீண்டும் கண்களைக் கூசினாலும் அவன் மனம் அமைதியடைந்திருந்தது. வீட்டிற்குச் செல்வோமென முடிவெடுத்து சிறு நுழைவாயிலை நோக்கி நடந்தான். கேன்டீன் பணியாளன் காலி குளிர்பானப் பாட்டில்களை ஒரு பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான். வேம்பின் அருகிலிருந்த நுழைவாயிலின் இரும்புக் கதவு வெளிப்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது.

இவன் கதவிடுக்கின் வழி பார்வையைச் செலுத்த கிழவன் ஒரு ஸ்டூலில் அமர்ந்திருந்தான். கதவைத் திறக்கச் சொல்லி இவன் தட்டியதும் கிழவன் எழுந்து வந்து கதவிடுக்கின் வழி “இப்பல்லாம் கதவைத் தொறக்க முடியாது படம் முடிஞ்சோனே தான் தொறப்பேன்” என மீண்டும் ஸ்டூலில் சென்று அமர்ந்தான். தலைக்கேறிய கோபத்துடன் “நான் வீட்டுக்கு போகனுங்க” என உக்கிரமாய் இவன் கதவைத் தட்ட சற்றுநேரம் அமைதியாய் அமர்ந்திருந்த கிழவன் மெதுவாய் எழுந்து தனதுடலில் நெட்டி முறித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். ‘அவனது ஆயாவை யாரேனும் வன்புணர்வு கொள்க’ என்ற பொருள் தரும் வசைச் சொல்லால் கிழவனைத் திட்டியவன் அரங்கத்திற்குத் திரும்பினான். கதவின் கைப்பிடியை பற்றியிருந்தவனின் மனம் அதில் எழுதியிருந்த ‘இழு’ என்ற சொல்லுக்கு எதிராக அவனைத் தூண்டியது. மீண்டும் கழிவறையை நோக்கி நடந்தான்.

மூத்திர நெடியின் அடர்த்தி அதற்குள் மேலும் அதிகரித்து விட்டிருந்தது. தொட்டியின் மீது கால் வைத்து ஏறியவன் கழிவறையின் மேல்திட்டைப் பற்றி அதன் உச்சியில் ஏறினான். வேம்பிலைகள் சருகுகளாகக் குவிந்து கிடந்தன. கழிவறை மீது விரிந்திருந்த வேம்பின் கிளைகளில் ஒன்றைத் தொற்றி அதன் மீதேறி அதற்கு மேலுள்ள கிளையைக் கைகளால் பற்றினான். இப்போது மெதுவாக நடுமரத்தை நோக்கி நடுந்தவனின் முகத்தில் படர்ந்த சிலந்தியின் நூலாம்படைகளை ஒதுக்கித் தள்ளியவாறு நடுமரத்தை அடைந்தான். வேம்பின் பின்னே இருந்த பெரிய காலிமனை முழுதும் எருக்கஞ் செடிகளும் சீமைக் கருவேலமும் புதர்களாக மண்டிக் கிடந்தன. வேம்பின் மிக அருகில் ஒரு ஊமத்தஞ் செடி மிக உயரமாக வளர்ந்திருந்தது. இறங்கலாமென நினைத்த தருணத்தில் இடபுறமாய் சென்ற கிளையைக் கவனித்தான். அது பெண்கள் கழிவறையை நோக்கிச் சென்றது.

அவனுள் எழுந்த இச்சையில் பரபரப்படைந்தவன் இருவேறு நபர்களாகப் பிரிந்து தனக்குள் வாதாடினான். முடிவை எட்டுவதற்குள் தானாக அவனது உடல் மரப்பல்லியைப் போல் அக்கிளையைப் பற்றியது. அக்கிளைக்கு மேலாக வெகு உயரத்தில் அடுத்த கிளை இருந்ததால் இருபுறமும் கால்களைத் தொங்கவிட்டவாறு ஊர்ந்து சென்றான். புலனாகத் தொடங்கிய கழிவறையை வனத்தினுள் மலையருவியின் பேரழகை ரசிப்பதைப் போல் எட்டிப் பார்த்தான். சற்று நேரத்திற்கெல்லாம் அவனது படபடப்பு அடங்கியது. ஆண்கள் கழிவறையைப் போன்றே சிறுநீர் கழிக்கும் பகுதி சுவரோடு பொருத்தப்பட்ட கான்கிரீட் தடுப்புகளால் பிரிக்கப்பட்டிருந்தது.

எதற்குள்ளும் பீங்கான் மூத்திரக் குடுவை இல்லை. வெயிலில் காய்ந்த மூத்திர உப்புகளின் நெடி முகத்தில் அறைந்தது. இன்னும் சில நிமிடங்களில் இடைவேளை வந்து விடும். காத்திருக்கலாமா என யோசித்தான். வேண்டாமென பின்புறமாக நகர்ந்து நகர்ந்து செல்கையில் தலைகுப்புற விழக்கூடுமென அச்சப்பட்டான். நடுமரத்தை அடைந்தவன் ஊமத்தஞ் செடிக்குள் விழுந்து விடாமல் வலதுபுறக் கிளைக்குச் சென்று கீழிறங்கினான். திரையரங்கின் காம்பவுன்ட் சுவரை ஒட்டிய பகுதி ஒற்றையடிப் பாதை போல் நடப்பதற்கு தோதாக இருந்தது.

திரையரங்கின் பின்புறத்திலிருந்து வெளிவந்து சாலையை அடைந்தவன் வலப்புறமாய் திரும்பினான். வாகை மரங்களின் நிழல் சாலையை முழுதாய் ஆக்கிரமித்திருக்க இதமாய் மனதிற்குள் ஒரு பாடலை முனுமுனுத்தவாறு இடப்புறமாய் திரும்புவதற்கு முன் எதேச்சையாய் தான் நடந்து வந்த சாலையைத் திரும்பிப் பார்த்தான். யாரோ இருவர் திரையரங்கின் பின்புறமாய் செல்வது தெரிந்தது. அவனது கால்கள் அனிச்சையாய் வந்த வழியில் மீண்டும் திரும்பின. திரையரங்கின் காம்பவுன்ட் சுவர் மூலையிலிருந்து தலையை மட்டும் நீட்டிப் பார்த்தான்.

இரண்டு ஆண்கள் வேம்பின் கிளைகளைத் தொற்றி ஏறுவது தெரிந்தது. இவன் பின்புறம் காலிமனையில் மண்டிக் கிடந்த புதர்களுக்குள் நுழைந்தான். சீமைக் கருவேல முட்களில் உடல் கிழிபடாமல் லாவகமாய் நுழைந்தவன் எருக்கஞ் செடிகளினூடாக உட்சென்று வாகான இடத்தில் மலங்கழிப்பதைப் போல் குந்தினான். அவர்கள் இருவரின் உடல்வாகும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களாக இருக்கக் கூடுமென உணர்த்தியது. பெண்கள் கழிவறையை நோக்கிச் சென்ற வேம்பின் கிளையில் இருபுறமும் கால்களைத் தொங்கவிட்டவாறு நகர்ந்து சென்று கிளையின் ஓரிடத்தில் அமைதியாய் காத்திருந்தனர்.

மாணிக்கம் அவர்களைத் தெளிவாக கண்காணிக்க தனக்கு முன்பிருந்த எருக்கஞ் செடியின் சிறிய கிளையை ஒடித்தான். அதிலிருந்து பால் சொட்டத் தொடங்கியது. குறிப்பிட்ட இடைவெளியில் மலத்தின் வீச்சம் இவன் நாசியைத் துளைத்தது. அவர்கள் வெகு இயல்பாய் கிளையின் இருபுறமும் தொங்கவிட்டிருந்த கால்களை ஆட்டிக் கொண்டிருந்தனர். ஆறேழு நிமிடங்கள் இவ்வாறு கடந்திருக்கும். திரையரங்கில் இடைவேளை விட்டதன் அடையாளமாய் ‘நான் உள்ளேயிருந்து வெளியே வந்தேன் உலகம் தெரிந்ததடா’ என்ற பாடல் சன்னமாக ஒலிக்கத் தொடங்கியது. அவர்கள் பரபரப்படைந்தார்கள். இருவரின் கழுத்தின் நீளமும் இயல்பை விட மூன்றங்குலமாவது நீண்டிருக்கும். அவர்களது முகபாவனைகளை பார்க்க முடியவில்லையே என இவன் ஆதங்கப்பட்டான்.

ஏதோ பேரதிசயத்தைப் பார்ப்பதைப் போல் அவர்கள் பெண்கள் கழிவறையை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்திருப்பவன் மேலும் நகர்ந்து தனது தொடையிடுக்கை முன்னாலிருப்பவனின் புட்டத்தோடு சேர்த்தழுத்தினான். பிறகு அவனது கன்னத்திலும் காதுமடல்களிலும் இவன் முத்தமிட இருவரும் ஐந்து நிமிடங்கள் வரை அவ்வாறே இருந்தனர். இடைவேளை முடிந்ததற்கான மணிச்சத்தம் ஒலித்தது. பிறகு இருவரும் பின்புறமாய் ஊர்ந்து பின்னாலிருப்பவன் நடுமரத்தில் சாய்ந்து கொள்ள முன்னாலிருப்பவன் இவனைப் பார்த்தவாறு திரும்பி அமர்ந்தான். உயரமாய் வளர்ந்திருந்த ஊமத்தஞ் செடிகளினூடாக அவர்கள் மாணிக்கத்தின் பார்வைக்கு புலனான போது இருவரும் மூர்க்கமாய் முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். இரண்டு ஆண்கள் காமத்தோடு முத்தமிட்டுக் கொள்வதை முதன் முறையாய் நேரில் பார்த்த மாணிக்கத்திற்கு உடல் நடுங்கத் தொடங்கியது.

இருவரும் தனது கால்சட்டைக்குள்ளிருந்து ஆணுறுப்பை வெளியில் எடுத்து மாறி மாறி மைதுனம் செய்யத் தொடங்கினர். முன்னாலிருந்தவனது குறி இரு ஊமத்தங்காய்களின் மேலாகத் தெரிய முட்கள் அடர்ந்த ஊமத்தங்காய்களை அவன் விதைகளாகப் பெற்றிருப்பதைப் போன்றதொரு மாயக்காட்சி. இவனது விதைப்பையில் வாடாமலரின் ஸ்பரிசத்தை மீண்டும் உணர்ந்தான். ஒருவேளை விதைப்பை இந்த ஊமத்தங்காய்களை ஒத்திருந்தால் அவளது விரல்களை கீறியிருக்கும் பிறகு தன்னையும் நாய்பயல் என்று திட்டியிருப்பாள் என நினைத்துக் கொண்டான். இவனது சட்டை வியர்வையில் மீண்டும் முழுதாய் நனைந்திருந்தது. அவர்கள் உச்சத்தை அடைவதை கையை விடுவித்து தள்ளிப் போட்டனர். எருக்கஞ் செடியின் பால் குறிப்பிட்ட இடைவெளியில் சொட்டிக் கொண்டிருந்தது. இவன் கிளம்பலாமென யோசித்த நேரத்தில் அவர்கள் உச்சத்தை அடைந்து பின் கைக்குட்டையால் துடைத்தனர்.

பிறகு இருவரும் வேம்பிலிருந்து கீழாக இறங்கினர். இவன் இரண்டு விசயங்களை யோசித்தான். ஒன்று அவர்கள் சென்ற பின் செல்வது மற்றொன்று திடீரென அவர்கள் முன்சென்று அதிர்ச்சிக்குள்ளாக்குவது. ஆனால் அவர்களை ஏன் திகைப்புள்ளாக்க வேண்டுமெனவும் யோசித்தான். அவர்கள் இவனைக் கடந்து செல்ல சில வினாடிகள் தான் இருந்தன. அவர்கள் சென்ற பிறகு செல்வோமென முடிவெடுத்தான். ஆனால் அவனது உடல் திடுதிப்பென பாய்ந்து அவர்கள் முன்சென்று நின்றது. மிரட்சியடைந்த இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். இவன் விறைப்பாக அவர்களை முறைத்துப் பார்த்தான்.

இருவருக்கும் பதினாறு வயதிருக்கும். பூனை மீசை லேசாக அரும்பியிருந்தது. ஊமத்தங்காய் விதைப்பைக்காரன் ஓடிவிடுவோமா என எருக்கஞ்செடிப் புதரைத் திரும்பிப் பார்த்தான். ஆனால் இடப்புறம் மிரட்சியோடு நின்றிருந்தவன் வெகு இயல்பாய் புன்னகை செய்யத் துவங்கினான். பிறகு அவனது கண்கள் நேசத்தோடு மாணிக்கத்தின் அடிவயிற்றின் கீழ் சென்று நிலைத்தன.

****

வரும்போது இருந்த வெயில். / வண்ணதாசன்.

18157841_10213179660225259_5741567510453736258_n

இந்திரா கதவைத் திறக்கும் போது பெருமாள் மட்டும் இல்லை. அவளுடன் ஒரு பையனும் நின்றுகொண்டு இருந்தான். நாரத்தை இலையா எலுமிச்சையா என்று தெரியவில்லை, பெருமாள் தன் விரல்களுக்கு இடையில் வைத்து நசுக்கிக்கொண்டு இருந்தாள்.

அவர்கள் இரண்டு பேருக்கும் பின்னால் , அவர்களோடு சேர்ந்து வீட்டிற்குள் நுழைவதற்குத் தயாராக இருந்த வெயிலின் மேல் அந்த நசுங்கின வாசனை பூசப்பட்டிருந்தது. பெருமாள் அந்தப் பையனின் உச்சந்தலையில் கை வைத்து, ‘குடையை எடுத்துட்டு வந்திருக்கலாம். சொல்லச் சொல்ல வேண்டாம்னுட்டே. தீயா பொரிக்கி.’ என்று சொன்னாள். அந்தப் பையன் குனிந்துகொண்டே கலைந்த தலையைச் சரி செய்து வகிட்டில் கை வைத்து ஒதுக்கி நீவிவிட்டுக்கொண்டான். இந்திராவை அவன் பார்க்கவே இல்லை.

‘ரெண்டு பேரும் உள்ளே வாங்க, ஏன் வெளியிலேயே நீக்கீங்க?’ இந்திரா கூப்பிடும் போதும் பெருமாள் அந்த இலையை இப்போது சிறு குளிகையாக உருட்டி முகர்ந்துகொண்டு இருந்தாள். வெயில் அதன் பச்சைச் சாறு கசிய அவள் விரல்களுக்கு இடையில் இருந்தது.

‘அதைத் தூரப் போட்டுட்டு வா, பெருமாக்கா” இந்திரா சொன்னதும் பெருமாள் வெளியே போய் அதை உதறினாள். அந்தப் பையன் அப்படியே நின்றுகொண்டு இருந்தான். சாயம் போயிருந்த அவனுடைய நீல முழுக் கால்சட்டை கரண்டைக்கு மேல் இருந்தது. அவனைப் பொறுத்தவரை ஒரு புதிய சணல் சாக்கு போல அடித்துக்கொண்டிருந்த வெயிலின் வாடை ரொம்பப் பிடித்திருந்தது. வீட்டிற்குள் போக விருப்பம் இல்லாததற்கு அதுவும் ஒரு காரணம்.

பெருமாள் கையை மட்டுமல்ல, முகத்தையும் வெளியில் இருக்கிற குழாய்த் தண்ணீரில் கழுவி, வளைந்த சுட்டு விரலால் ஒரு சிறிய தகடாகத் தண்ணீரை வழித்து எடுத்தபடி,’ நான் சொன்னேன் லா இந்திராம்மா?’ என்றாள். அந்தப் பையன் இப்போது இந்திராவை ஒரு சிறிய பொழுது பார்த்துவிட்டுக் குனிந்துகொண்டான். இந்த இடத்தைவிட்டு அகன்றுவிடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

பெருமாள் அத்தை அவனிடம் எல்லாவற்றையும் சொல்லித்தான் கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். இன்றைக்கு அவனைக் கூட்டிக்கொண்டு வந்திருப்பது சும்மா தான். அந்த வீட்டில் இருக்கிற ஜன்னல் கதவுகளையும், ஒவ்வொரு அறையிலும் இரண்டு இரண்டாக ஓடிக் கொண்டு இருக்கிற விசிறிகளில் படிந்திருக்கும் தூசியையும் துடைத்துக் கொடுக்க வேண்டும். அவனுக்கு அதைப் பற்றி ஒன்றும் இல்லை என்றால் கீழே மூன்று, மச்சில் இரண்டு என்று இருக்கிற ‘பாத் ரூமை’யும் கழுவிக் கொடுக்கலாம். பெருமாள் அத்தை மிகுந்த சங்கடத்துடன் ‘பாத் ரூம்’ என்றுதான் சொன்னாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவனுக்குப் புரியாமல் இல்லை.

‘மத்த வீட்டு ஆட்கள் மாதிரி இல்லை இந்த வீட்டு ஐயாவும் அம்மாவும். நான் இந்த வீட்டில் பத்துப் பன்னிரண்டு வருஷமா வேலைக்கு நிக்கேன். உண்கிற சோத்துக்கும் உடுத்துகிற துணிக்கும் தரித்திரியமில்லாமல் இண்ணையத் தேதி வரைக்கும் கழிஞ்சுக்கிட்டு இருக்கு. அக்காங்கிற சொல்லுக்கு அடுத்த சொல் சொல்வார் கிடையாது. இங்கே நிக்கப் படாது, அங்கே உக்காரப்படாதுண்ணு ஒரு நாள்க் கூட சொன்னது இல்லை. நாமளும் உப்புக்கு உப்பா, உரைப்புக்கு உரைப்பா, அது அதுக்குத் தக்கன குனியுறதுக்குக் குனிஞ்சு, நிமிர்கிறதுக்கு நிமிந்து நடமாடிக்கிடுதோம். அதையும் சொல்லணும்’லா”.

இதை எல்லாம் இவனிடம் சொல்வது போல, பெருமாள் அத்தை இவனுடைய அம்மாவிடம்தான் சொல்லிக்கொண்டு இருந்தாள். அம்மாவின் முகத்தை இவன் பார்க்கவே இல்லை. அம்மா மூக்கை உறிஞ்சிக்கொள்வதையும் சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொள்வதையும் பார்த்துத்தான் அவன் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?. பெருமாள் அத்தை சொல்வதை அவளால் தாங்க முடியவில்லை. அப்புறம் எதற்கு, பெருமாள் அத்தை சொல்கிற ஒவ்வொன்றுக்கும் ‘அது சரி’, ‘அது சரி’ என்று சொல்லவேண்டும்.? எல்லாம்சரியாக இருப்பதற்கு ஏன் தொண்டை கம்ம வேண்டும்?

அம்மாவிடம் பெருமாள் அத்தை இதை எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கையில், இவனுக்கு சிமெண்டுத் தொட்டித் தண்ணீரில் விழுந்திருக்கிற வெயில் நெளிந்து தொந்தரவு செய்தது. எழுந்திருந்து போய், ஒரு செம்பில் தண்ணீரைக் கோதி, வாசல் சுவரில் தகர டப்பாவில் வைத்திருக்கிற டேபிள் ரோஸ் செடிகளுக்கு ஊற்றிவிட்டு வந்தான். எல்லா வாடகை வீட்டுச் சுவர்களிலும் அடர்ந்த கருஞ்சிவப்புப் பூக்களோடு இப்படிச் சில செடிகள் இருப்பதற்கு அவசியம் உண்டு என நினைத்தான். இக்கட்டான சமயங்களில் எழுந்துபோய் அதற்குத் தண்ணீர் வார்த்துவிட்டு, அந்த இடத்திலேயே அசையாமல் நின்று ஒரு சிகரெட் புகைத்துவிட்டு வரும் பழக்கம் உள்ள அப்பாவின் முகம், அப்போது அவனுக்கு மிக அருகில் தெரிந்தது.

download (26)

‘வா,உள்ளே வா’ என்று இந்திரா அவனுடைய தோளில் கையை வைத்துக் கூப்பிட்டாள். மணிக்கட்டுக்கு உள்ப்பக்கமாகக் கடிகாரம் கட்டியிருக்கும் முருகேஸ்வரி டீச்சர் தான் இப்படி அவனுடைய தோளில் கைவைத்து எப்போதும் பேசுவாள். ஜவஹர் ஸ்கூலை விட்டு அவனை அனுப்பவே மாட்டேன், டி.சி. கொடுக்கக் கூடாது என்று கட்டாயப் படுத்தி, பத்தாவது வரை அங்கேயே ‘ நீ எதைப் பத்தியும் கவலைப் படாமல் படி, உன் படிப்புக்கு நான் ஆச்சு’ என்று சொன்னது முருகேஸ்வரி டீச்சர்தான். இதை அப்பாவும் அம்மாவும் இருக்கும் போதுதான் வீட்டில் போய்ச் சொன்னான். அப்பா மறு நாளே, சாயுங்காலம் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்க்கூடத்துக்கு வந்து டீச்சரைக் கும்பிட்டார்.

செம்பருத்திப் பூக்கள் மூங்கில் பட்டிகளுக்கு ஊடாக எட்டிப்பார்த்திருக்கிற முன் தாழ்வாரத்தில் அப்பா முருகேஸ்வரி டீச்சரைக் கும்பிட்ட தோற்றம் இன்னும் அப்படியே இருக்கிறது. அப்பா குரல் கலங்கியிருந்தது. யாரோ பிடித்து உலுப்பியது போல, அவருக்குள் நிரம்பியிருந்தவை எல்லாம் அப்போது உதிர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். அப்பாவின் இரண்டு கைகளின் முழங்கையும் மணிக்கட்டு வரை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடந்தது. உள்ளுக்குள் ஒரு மொக்கையோ பூவையோ வைத்திருக்கும் தினுசில் கூப்பியிருந்த கைகளுடன் அவர் டீச்சரைக் கும்பிட்டார். அடுத்த கணத்தில், டீச்சரின் கைகளைப் பற்றி, தன் நெற்றியில் வைத்துக்கொண்டார்.

‘ நல்லா இருங்க தாயி. எம் புள்ளை இனிமேல் கரையேறியிருவான்’ என்று சொல்லி, எடுத்த இடத்தில் வைப்பது போல், முருகேஸ்வரி டீச்சரின் கைகளை மெதுவாகத் தளரவிட்டார். டீச்சர் தன்னுடைய கைகளை அதற்கு அப்புறம் என்ன செய்வது என்று தெரியாமல், இயல்பில்லாமல் நெஞ்சோடு மடித்துக் கட்டுவதும் தளர்த்துவதுமாக இருந்தார்.

இந்திரா அவனை அப்படித் தோளில் கை வைத்துக் கூட்டி வருவதை பெருமாள் அத்தை பார்த்துக்கொண்டு நின்றாள். கால் சட்டையில் இருந்து ஒரு திரிபோலப் பிரிந்து தொங்கிய நூல் மேல் பாதத்தில் உரசி ஒரு வித அசௌகரியத்தை உண்டு பண்ணியது. குனிந்து அதைச் சுண்டியிழுத்து அத்துப் போடவேண்டும் போல இருந்தது அவனுக்கு.

பெருமாள் அத்தைக்கு என்ன தோன்றியதோ? இவனுக்குத் தாகமாக இருப்பதாகவும், பேசமுடியாத அளவுக்குத் தொண்டை உலர்ந்துவிட்டதாகவும் நினைத்து, உள்க் கட்டு வரை போய் ஒரு கண்ணாடி ஜாடியில் தண்ணீரும் அதைக் குடிப்பதற்கு ஒரு கண்ணாடி டம்ளரும் கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தாள். வெள்ளையும் நீலமுமாகக் கொடி போலச் சுருண்டு மேலேறிக் கொண்டிருந்த அந்தக் கண்ணாடி டம்ளரை அவனுக்குப் பிடித்திருந்தது. அப்படி மேலேறிய கொடிகள். அந்தக் கண்ணாடி டம்ளரின் விளிம்புகளுக்கும் வெளியே வளர்ந்து அந்த அறை முழுவதும் படர்ந்திருப்பது போல இருந்தது. குடித்தது போக, டம்ளரைப் பெருமாள் அத்தையிடம் நீட்டினான். இன்னும் ஒரு மடக்குக்கு மேல் மிச்சம் இருந்த தண்ணீரை, அண்ணாந்து பெருமாள் அத்தை குடித்துவிட்டுச் சிரித்தாள். இந்தச் சிரிப்புதான் அந்த டம்ளரின் படர்ந்திருந்த கருநீலக் கொடிகளில் காய்த்துத் தொங்கும் குலைகளாக இருக்கும். அப்படித்தான் அவனுக்குப் பட்டது. அவன் பெருமாள் அத்தையின் கழுத்துக்குக் கீழேயே பார்த்தபடி இருந்தான். பெருமாள் அத்தை தன் மேல் படர்ந்திருந்த கொடிகளை விலக்குவது போல, சேலைத் தலைப்பை அள்ளிப் போட்டுக்கொண்டாள்.

வீட்டுக்குள் வருகிற புது ஆட்களிடம் நின்று பேச, ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். வெளிப்பக்கத்தில் இருந்து வருகிற வெளிச்சத்தில் இவர்கள் மூன்று பேருடைய நிழல்களும் தரையில் விழுந்து மேகமாகிக் கிடந்தன. கிருஷ்ணனும் ராதையும் ஊஞ்சலாடுகிற ஒரு படமிருந்த சுவர்ப்பக்கம் வந்ததும் மேற்கொண்டு நகராமல் நின்று, அந்த இடத்திலிருந்து பேசத் துவங்குவது உகந்தது என்று தீர்மானித்த முகத்துடன், ‘உம் பேரு என்ன ப்பா?’ என்று கேட்டாள். கேட்கும் போதே ,’எம் பேரு இந்திரா’ என்று சொல்லிச் சிரித்தாள், களக்காட்டு மாமா வீட்டில் யாரோ ஒருத்தருக்கு இதே மாதிரிச் சிரிப்பு உண்டு. குருவ மண் வாசனையை பக்கத்தில் நடமாடும் போது எல்லாம் உண்டாக்குகிற அந்த முகத்துக்கு இதே போல நெருக்கமான மஞ்சள் பற்கள் இருந்திருக்கிறது.

‘திரிகூடம்’ என்று சொன்னான். அவனால் இப்போது மறுபடியும் இந்திராவைப் பார்க்க முடிந்தது. இதுவரை முகமற்றவனாக இருந்தவனுக்கு, இந்தப் பெயரைச் சொல்லும் போது ஒரு சரியான அடையாளம் வந்துவிட்டது. பள்ளி ஆண்டு விழாப் பரிசளிப்புகளில் திரும்பத் திரும்ப மேடைக்கு அழைக்கப்படும் அந்தப் பெயரை, இந்த வீட்டு ஹாலில் அப்படி யாரோ உச்சரித்துக் கூப்பிடுகையில் ஒலிபெருக்கிக் கோளாறில் கொஞ்ச நேரம் உய்யென்று ஒரு விசில் சத்தம் மட்டும் வந்து, மறுபடியும் அவன் பெயர் சொல்லப்படுவது போல, அவனே மீண்டும் ‘திரிகூடம்’ என்றான்.

பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த பெருமாள் அத்தை, ‘வீட்டில ராஜன்’னு கூப்பிடுவாங்க. பள்ளிக்கூடத்தில ‘திரிகூடம்’ ‘என்று சிரித்தாள். அவளுக்குத் தானும் இந்திராவைப் போல, அந்த இடத்தில் அவன் தோளில் கையைப் போட்டபடி பிரியமாக ஏதாவது பேசவேண்டும் போல ஆசை உண்டாயிற்று. தான் நின்ற இடத்தை மாற்றி அவன் வலது தோளுக்குப் பக்கமாகப் போய் நின்று, ‘ அம்மா கேக்கதுக்குப் பதில் சொல்லு, ராஜன்’ என்றாள்.

‘திரிகூடம் ணா வெறும் திரிகூடமா? திரிகூட ராஜன், திரிகூட ராசப்பன் … அந்த மாதிரியா?’ – இந்திரா கேட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை. பெருமாள் அத்தை தான் இப்போதும் ‘ வெறும் திரிகூடம் தான் இந்திராம்மா.’ என்று சிரித்தாள். பெருமாள் அத்தை அப்படிச் சிரித்ததும் அவனுக்குப் பிடிக்கவில்லை. பெருமாள் அத்தை அவனுடைய அப்பாவிடமும் இப்படித்தான் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். அவன் பார்க்க, சமீபத்தில் அம்மா கூட அப்படிச் சிரித்துப் பேசிப் பார்த்தது கிடையாது.

இனிமேல் பெருமாள் அத்தையைப் பேச விடக்கூடாது, தானே பதில் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ‘நீ போய் பாத்திரம் எல்லாத்தையும் நனைச்சு வச்சிட்டு, துணியை சர்ஃப்ல முக்கி வச்சிட்டு வா பெருமாக்கா. நான் இவன் கூடக் கொஞ்சம் விசாரிச்சுக்கிடுதேன். நீ வந்த பிறகு என்ன ஏதுண்ணு விபரம் சொல்லிக்கிடலாம்’ என்று இந்திராவே சொல்லி அவளை அனுப்பிவைத்தது நல்லதாகப் போயிற்று.

தானும் உட்கார்ந்துகொண்டு இவனையும் நாற்காலி ஒன்றில் உட்காரச் சொன்ன இந்திராம்மா, ‘வசதியா இருக்கா? இல்லை இப்படிக் கீழே உட்கார்ந்துக்கிடுவமா?’ என்று இவன் பதில் சொல்வதற்கு முன்பே, எழுந்துவந்து தரையில் உட்கார்ந்துகொண்டாள். ஒவ்வொரு கட்டாக, எந்தக் கதவும் மூடப்படாமல் திறந்து கிடக்க இப்படித் தரையில் உட்கார்ந்தது திரிகூடத்திற்குப் பிடித்திருந்தது. நின்றுகொண்டு இருந்ததை விட, உட்கார்ந்ததும் இந்த வீடு வேறொரு வீடாக மாறிவிட்டதாகக் கூடத் தோன்றியது. அம்மா பெரும்பாலும் மத்தியானத்தில் படுத்துத் தூங்குகிற அடுக்களைத் தரையின் சிமெண்ட் சொரசொரப்பு அவன் விரல்களுக்குத் தெரியும். திரும்பத் திரும்ப வழவழப்பான இந்த ஹாலின் தரையை அவன் தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அப்படிப் படுத்திருக்கும் போது எல்லாம் அம்மா அழுதுகொண்டும் இருந்திருக்கிறாள்.

திரிகூடம் இந்திராவின் கண்களைப் பார்த்துக் கொண்டான். சற்று ஒடுங்கியவையாக அவை இருந்தன. சிரிப்பு, அழுகை என்று அதற்கென்று பிரத்யேகமாக எதுவும் வைத்திருக்கவில்லை. கண்ணாடி அணிகிறவர்கள் கண்ணாடியைக் கழற்றி வைத்திருக்கும் நேரத்துக் கண்கள் போல சோர்வும் ஆதுரமும் படிந்தவை. அவனுடைய அப்பாவைப் பெற்ற ஆச்சியின் கண்கள் அப்படித்தான் இருக்கும்.

‘எங்க அப்பாச்சி முகம் மாதிரி இருக்கு, உங்களுக்கு” எடுத்த எடுப்பில் அவனுக்கு இதை எப்படி இந்திராவிடம் சொல்லத் தோன்றியது என்று தெரியவில்லை. அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறதே என்று எல்லாம் சொல்கிற அமைதியான ஒரு சிரிப்பு இந்திராவிடம்.

’உங்க ஆச்சி பேரு என்ன? ‘ என்ற கேள்வி திரிகூடத்திற்கு மிகுந்த உற்சாகம் கொடுத்தது. அவளுடைய பெயரைச் சொல்வதன் மூலமே அவளுடைய முழுச் சித்திரத்தை வரைந்துவிட முடியும் என்று தோன்றிற்று. யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைவாக நிறுத்திவைத்திருந்த தேரை ஒற்றை ஆளாக இழுத்து வருகிற மாதிரி சொன்னான், ‘ஆச்சி பேரு மந்திரம். சீட்டுக் கம்பேனி மகராச பிள்ளை கேள்விப்பட்டு இருக்கேளா? அது எங்க அப்பாத் தாத்தா ல்லா!’

இந்திராவுக்கு அவளைச் சுற்றிய உலகம் அப்படியே ஒரு பனிக்கட்டியாக உறைந்துவிட்டது. ஆனால் பளிங்கு மாதிரி எல்லாம் தெரிகிறது. சீட்டுக் கம்பெனி நொடித்துப் போனது. மந்திரத்துப் பெரியம்மை வீட்டு வெள்ளிப் பாக்குவெட்டி பழைய விலைக்கு வந்தது, எம்.டி.ட்டி 2992 வண்டிச் சாவியைப் பிடுங்கிக்கொண்டு மகராசப் பெரியப்பாவை தச்சநல்லூர் ரயில்வே கேட் பக்கம் இறக்கிவிட்டுவிட்டுப் போனது எல்லாம் இடது கையின் குழிவில் ஐஸ்கட்டியை வைத்து, எலுமிச்சம் பழம் பிழிகிற கட்டையால் அடித்துப் பொடியாக்குகிற மாதிரிச் சிதறின. வைரம் நொறுங்கி வைரம் மினுங்கி வைரம் கரைந்தது.

’ சேது ராமன், மத்தியார்ஜுனன், அன்ன ராஜு எல்லாம்….?’ இந்திரா திரிகூடம் முகத்தைப் பார்த்துக்கொண்டு கேட்கும் போது, இந்த அறை, அடுத்த அறை, மொத்தமாக இந்த வீடு முழுவதுமே கனவு போல உருகியோடிக் கொண்டிருந்தது அவளைச் சுற்றிலும்.

‘எங்க அப்பா தான் சேது’ என்று சொல்கிறவனின் கையை இந்திரா எட்டிப் பிடித்துக்கொண்டாள். மந்திரத்துப் பெரியம்மை வீட்டு வேப்பமரக் காற்றில் கலைந்த சிகையை அவளால் லேசில் ஒதுக்கிவிட முடியவில்லை. மந்திரத்துப் பெரியம்மை வீட்டுக் கொலு பொம்மைகள் செந்தாமரை நிறத்தில் அவளுக்கு முன்னால் நிரம்பிக்கொண்டே போயின. மூக்கு, முகவாய் எதிலும் ஒரு ரோம இழை கூடக் கோரை இல்லை. சரஸ்வதி, லட்சுமி சிரிப்பு எல்லாம் அப்படியே உதட்டோரத்துப் புள்ளியோடு மிதந்தன. வாசலில் மந்திரத்துப் பெரியம்மை கல்யாணத்துக்குக் கட்டின மணமேடை அப்படியே சச்சதுரமாகக் கிடந்தது. இந்திரா அதைச் சுற்றிச் சுற்றிச் சீட்டிப் பாவாடையோடு ஓடிக்கொண்டு இருந்தாள். மகராசப் பெரியப்பா போட்டிருக்கிற அத்தரும் ஜவ்வாதும் ஒரு நீராவி போலப் படர்ந்துகொண்டிருந்தது.

images (7)

‘சேதுவோட பிள்ளையா நீ?’ இந்திரா வாய்விட்டுக் கேட்கவில்லை. ஆனால் திரிகூடத்தின் இரண்டு கையையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டாள். தன் உதடுகளில் ஒவ்வொரு கையாக வைத்து முத்திக்கொண்டாள். நெஞ்சில் வைத்துக் கொண்டாள். அவளுடைய கை சுடுகிறதா தன்னுடைய கை சுடுகிறதா என்று திரிகூடத்திற்குத் தெரியவில்லை. ஒரு கையை மெதுவாக உருவிக் கொண்டான். இன்னொரு கையைப் பிடித்திருந்த இந்திராவின் கை அப்படியே அவளுடைய சம்மணமிட்ட இடது முழங்கால் சேலை மடிப்பில் கிடந்தது.

‘மத்திச் சித்தப்பா செத்துப் போச்சு’ என்று திரிகூடம் சொன்னதும், இந்திரா அவனுடைய கையை நழுவவிட்டுவிட்டு, ‘ஐயோ’ என்று வாயைப் பொத்திக்கொண்டாள். இதுவரை இல்லாத ஒரு தீர்க்கமான முகம் அப்போது வந்திருந்த இந்திரா, ‘நானும் அவனும்தாம் ஒண்ணாப் படிச்சோம். ஆனால் சேதுதான் எப்போ பார்த்தாலும் எங்கூடச் சண்டை இழுத்துக்கிட்டே இருப்பான்.’ என்று சிரித்தாள். ‘அவன்கிட்டே எவ்வளவு அடி பட்டிருக்கிறேன் தெரியுமா?’ என்று மேலும் சிரித்தாள். ‘சீட்டு, கேரம் எல்லாத்திலேயும் சேது ரொம்பக் கள்ள ஆட்டை விளையாடுவான்’. இந்திராவுக்குச் சிரித்துச் சிரித்து இப்போது அழுகை வந்திருந்தது.

திரிகூடம் இந்திரா முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுடைய அப்பாவை சேது, சேது என்றும் அவன் அவன் என்றும் சொல்லிக்கொண்டு அடுக்கடுக்காகச் சிரிக்கிற இந்திராவின் முகம் அடைந்துகொண்டே போன ஒரு பிரகாசத்தில் அவனுடைய உடம்பு சொடுக்கியது. முதலில் ஒரு சந்தோஷம் போல இருந்து, தாங்க முடியாக துக்கத்தை உண்டாக்கத் துவங்குவதை உணர்ந்தான். அவனுக்கு அவனுடைய அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

‘பெருமாள் அத்தை உள்ளே ஜோலியா இருக்காங்களா? அவங்க கிட்டே சொல்லீருங்க’ திரிகூடம் இந்திராவிடம் சொல்லிக்கொண்டே எழுந்திருந்தான்.

வரும்போது இருந்த வெயில் இன்னும் அப்படியே இருந்தது. கொஞ்சம் கூடத் தணியவே இல்லை.

‘%

****

புத்திசாலித்தனம் (சிறுகதை) / செல்வராஜ் ஜெகதீசன்

images (5)

(பொறியியல் துறை சாராதவர்க்கும் இக்கதை புரியும் என்றே நினைக்கிறேன்)

“பிடிக்காததை செய்யறதுதான் புத்திசாலித்தனம்”

அப்துல்லாவிடம் இருந்து பேச்சுவாக்கில் ஏதாவது ஒரு அரிய வாக்கியம் இப்படி வந்து விழும்.

நாலைந்து நண்பர்கள் கூடும் அபுதாபியின் வாராந்திர தேநீர் கடை சந்திப்பில் எப்போதாவது துபாயில் இருந்து வந்து கலந்து கொள்ளும் அப்துல்லா.

பிடித்தது பிடிக்கவில்லை என்பதை எல்லாம் தாண்டி, அமீரகத்தில் கால்பதித்த நாள் முதல், கொடுக்கப்பட்ட (முற்றிலும் என் அனுபவத்திற்கு சம்பந்தமில்லாத) வேலையை இரண்டு வருடங்களாக ஒட்டிக் கொண்டிருந்த எனக்கு அந்த வாசகம் ஏதேதோ பொருள் தந்தது. கொடுத்த வேலையை பிடிக்கவில்லை என்று சொல்லி அடம்பிடித்திருந்தால் இந்நேரம் வந்த வேகத்திலேயே திரும்பி தாய்நாடு போயிருப்பேன். கடந்த இரண்டு வருடங்களை அப்படி இப்படி ஒட்டியதில் சொந்த ஊரில் ஏற்பட்ட அனுகூலங்கள் கணிசம்.

மேலும் மனதை விட்டு அகலாத பின்வரும் நிகழ்வுபோல் எத்தனையோ.

இன்னமும் நினைவில் உழலும் அந்த நிகழ்வு, அமீரகத்தின் சூடான ஒரு மாதத்தில் நடந்தது. கிழமை கூட நன்றாக நினைவில் உள்ளது. ஞாயிறு. வெள்ளி சனி விடுமுறை முடித்து கொஞ்சம் மந்தமாக தொடங்கிய ஞாயிறு.

அன்று காலை ஒன்பது மணிக்கே நல்ல வெயில். அயல் நாட்டு வேலை என்று வந்து இறங்கியபோது கொளுத்தி எடுத்து பின் கொஞ்சம் கொஞ்சமாய் பழகிப்போன வெயில். ஜேசிபி இயந்திரத்தின் மேல் அமர்ந்தபடி முத்து வெயிலை ரசித்தபடி என்னுடைய உத்தரவுக்காக காத்திருந்தான்.

சூப்பர்வைசர் வேலையில் முதல் நாள் அன்று. அயலக வேலையில் இது இரண்டாவது மாற்றம்.

முதல் மாற்றம் இரண்டு வருடங்களுக்கு முன் வேலையில் சேர்ந்த பொழுதில் நிகழ்ந்தது. டிசைன் என்ஜினீயர் என்ற கனவுகளோடு வந்தவன் ப்ராஜெக்ட் கண்ட்ரோல் செக் ஷனில் அமர்த்தப்பட்டேன். அப்படி இப்படி என்று இரண்டு வருடங்களை ப்ராஜெக்ட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவதில் ஒட்டியாகி விட்டது. அமீரகத்தில் ஐந்தாறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட உயர் மின்னழுத்த சப்ஸ்டேஷன்கள், ஒன்றுடன் ஒன்று இணைப்பு கொடுக்கப்பட்ட ப்ராஜக்ட்.

அந்தப் ப்ராஜக்ட் முடிந்ததும் அடுத்ததில் டிசைன் என்ஜினியர் வேலைக்கு மாற்றுவோம் என்று சொல்லப்பட்ட உறுதி, அமீரகப் புழுதிக்காற்றோடு போனதில், இதோ இங்கே சைட் சூப்பர்வைசராய். எதிரே முத்து ஜேசிபி யுடன்.

காலையிலேயே முதல் வேலையாய் கன்சல்டன்ட் அலுவலகம் போய் ஜேசிபி உபயோகித்து தோண்டுவதற்கு பெர்மிட் வாங்கியாகி விட்டது. அந்த ப்ராஜெக்ட் சைட்டில் பூமிக்கடியில் மின்சாரக் கேபிள்கள் ஏதாவது உள்ளதா என்று கண்டுபிடிக்க ஆங்காங்கே தோண்டிப் பார்த்து உறுதி செய்ய வேண்டும். எதுவும் இல்லை என்றானதும் அந்த இடத்தில் ஒரு புதிய சப்ஸ்டேஷன் கட்டப்பட உள்ளது.

பார்க்கும் தூரத்தில் இருந்த சைட் அலுவலகத்தில் இருந்து யாராவது வருகிறார்களா என்று பார்த்தேன். ஒரு கொரியனின் தலையும் தென்படவில்லை. முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் “கிம்”களும் “பார்க்”களும் நிரம்பிய அந்தக் கொரிய கம்பெனியில் இந்த சைட் வேலையை மேற்பார்வை செய்ய, அனுபவம் உண்டோ இல்லையோ, என்னை மாதிரி ஒரு இந்தியன் இருக்கும்போது, அவர்கள் அங்கே அலுவலகத்தில் காலைக் காப்பியை அருந்தியபடி இன்டர்நெட்டில் எதையாவது துழாவிக் கொண்டிருப்பார்கள்.

“சார் ஆரம்பிக்கலாமா?” என்றான் முத்து.

‘ஆரம்பி’ என்று முத்துவை நோக்கி சிக்னல் காட்டிவிட்டு சற்று தள்ளி, அந்த வெயிலிலும் பிழைத்து ஆங்காங்கே கொஞ்சம் இலைகளோடு இருந்த மரத்தடியில், போடப்பட்டிருந்த ஸ்டூல் ஒன்றில் அமர்ந்தேன்.

தரையைக் கொத்தி மண்ணை வாரி ஒரு பக்கமாக போட்டபடி நகரும் இயந்திரத்தை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அலுவலகத்தில் இருந்து வரும்போது யாருக்கும் தெரியாமல் இன்டர்நெட்டில் இருந்து பிரிண்ட் பண்ணிக் கொண்டு வந்த ஓஷோவின் தியானம் பற்றிய சொற்பொழிவைப் படிக்க ஆரம்பித்தேன். மூன்றாவது பக்கத்தைப் படித்துக்கொண்டிருந்தவன் “சார்…தண்ணீ…” என்ற முத்துவின் குரலில் தலை நிமிர்ந்தேன்.

download (4)
தோண்டிய குழியில் இருந்த தண்ணீர் பைப் ஒன்று உடைந்து தண்ணீர் குபுகுபுவென்று வெளிவந்து கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் ஆபீசை நோக்கி ஓடினேன். கன்ஸ்ட்ரக்சன் மேனேஜரை (ஒரு கிம்) அணுகி விஷயத்தை சொன்னேன். அவன் கைகாட்டிய பைப்பிங் என்ஜினீரிடம் ஓடி (இன்னொரு கிம்) விஷயத்தைச் சொன்னேன்.

பரபரப்பு ஏதும் இல்லாமல், “என்ன பைப்பு” என்றான்.

“பீ வீ சி”

“ஆனா…நான் ஸ்டீல் பைப் என்ஜினீயர்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்க்க ஆரம்பித்தான்.

மறுபடியும் நான் கன்ஸ்ட்ரக்சன் மேனேஜரை அணுகி வேறொரு ஆளோடு சைட்டுக்கு விரைந்து போனபோது தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டிருந்தது. முத்து ஓடிப்போய் யாரையோ அழைத்து வந்து, பைப் லைனில் இருந்த தண்ணீர் வால்வைக் கண்டுபிடித்து மூடியிருந்தான்.

பிடிக்காததை செய்ததால்தானே இது போன்ற “ஸ்டீல் என்ஜினீயரை எல்லாம் பார்க்கக் கிடைத்தது?

இப்போது சொல்லுங்கள்.

பிடிக்காததை செய்வது புத்திசாலித்தனமா இல்லையா?

o

கைவிடப்பட்ட ஒரு கதை ( சிறுகதை ) : ஜீ.முருகன்

download (24)

‘நாயர் மெஸ்’ என்று ஒரு கதை எழுதி நண்பர் ஒருவருக்கு படிக்க அனுப்பியிருந்தேன். ‘கதை சரியாகவே வந்திருக்கிறது. ஆனால் உயிர்ப்பில்லாமல் இருக்கிறது’ என்றார். அவர் சொன்ன பிறகு எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அதனால் வழக்கம் போல அதை கிடப்பில் போட்டுவிட்டேன். இப்படித்தான் கதைக்களத்தின் தேர்வு நம்மை ஏமாற்றிவிடும். அதை எப்படி எழுதினாலும் பல்லிளித்துவிடும். ஆனால் ‘நாயர் மெஸ்’ கதையை எதற்காக எழுதினேன் என்பது முக்கியமாகப்பட்டது. அது பற்றி எழுதலாமே என ஒரு யோசனை. அதாவது கைவிடப்பட்டக் கதையைப் பற்றிய ஒரு கதையை. அப்படியே அக்கதையை சொல்லிவிடும் வாய்ப்பும் அமைந்துவிடுகிறதல்லவா.

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது நண்பர்களுடன் ஒரு மதுவிடுதியைத் தேடிப் போனாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊரில், அதுவும் மதுவிடுதிக்குச் சென்று குடிப்பது அதுதான் முதல் முறை. சிலருடைய வழி காட்டுதல் எங்களை பழைய நாயர் மெஸ்ஸுக்குத்தான் இட்டுச் சென்றது. அது டாஸ்மாக் பாராக மாற்றப்பட்டது அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. நண்பர்களுடன் அங்கிருந்து கிளம்பி வந்தப் பிறகும் நாயர் மெஸ் ஞாபகத்தில் வந்துகொண்டே இருந்தது. அது ஒரு டாஸ்மாக் பாராக மாறிப்போன இன்றைய நிலை ஏதோ ஒரு காவியத் தனமான வீழ்ச்சிப் போலவேத் தோன்றியது. அக்கதையை எழுதத் தூண்டியது அதுதான். அதன் காவிய நாயகியாக அன்னம்மா மாறினாள். அவள் நாயரோடு வாழ வந்ததும், நாயருக்குப் பின் நாயர் மெஸ்ஸின் உரிமையாளரானதும், அவளின் மரணமும் ஏனோ ஜெயலலிதாவின் வாழ்வோடு ஒப்புமை கொண்டு நின்றன. அப்போது அவர் மருத்துவமனையில் இருந்தார். இந்த ஒப்புமைகூட அக்கதையை எழுதியதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

கதையை எப்படித் தொடங்குவது என யோசிக்கையில், அன்னம்மா என்ற பேரழகிக்கு நகரத்தில் நிறைய காதலர்கள் இருக்கிறார்கள். அவளின் நினைவாக அவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் அன்னம் சைக்கிள் கடை, அன்னம் சலூன், அன்னம் மளிகை, அன்னம்மா பழக்கடை, அன்னம்மா உணவகம் என்பது போல பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

இவ்விதமான ஆரம்பம் கதையின் போக்கில் பொருத்தமில்லாமல் போனதால் நீக்க வேண்டியதாகிவிட்டது. மேலும் படர்க்கையில் சொன்னதால் கதையின் வசீகரம் குறைவது போலவும் இருந்தது.

பிறகு ஒரு காதல் காவியத்தின் தொடக்கம் போல முன்னிலையில் எழுதிப்பார்க்கப்பட்டது. அன்னம்மா இறந்த பிறகு அவளது சடலம் படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கிறது. அவளுடைய மரணம் அறிவிக்கப்படாததால் அவள் தனியாகவே படுத்திருக்கிறாள். அவளை அந்நிலையில் காணும் நாயரின் ஆவி ஆற்றாமையில் புலம்பந்தொடங்குகிறது.

நாயரின் ஆவி பேசுகிறது:

“நான் முதன் முதலில் பார்த்த அன்னம்மாதான் நீ என்றால் காலம்தான் எவ்வளவு கொடியது. உன் அழகிய முகத்தை வெளிறிப் போகச் செய்து, உதடுகளை ஊதா நிறமாக்கிய மரணம்தான் எவ்வளவு இரக்கமற்றது. உன்னை இந்த கதிக்கு ஆளாக்கிய அந்த சதிகாரர்களை நான் வணங்கிய அந்த ஐயப்ப சாமி தண்டிக்காமல் விட மாட்டர்.

நீ எப்போது என் வாழ்க்கையில் வந்தாயோ அப்போதே என் வீழ்ச்சியும் நாயர் மெஸ் வீழ்ச்சியும் தொடங்கி விட்டதென்று பாம்பே சலூன் சாத்தான் கதை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை உன் வரவு ஒரு வசந்தம், பெருமகிழ்ச்சியின் தொடக்கம்.”

பாம்பே சலூன் சாத்தானை உங்களுக்குத் தெரியாது இல்லையா? இந்த இடத்தில் நான் யார், நாயர் மெஸ்ஸுக்கும் எனக்கும் என்ன உறவு, பாம்பே சலூன் சாத்தான் யார் என்பதை சுருக்கமாகத் தெளிவுபடுத்திவிடுவது நல்லது. இது கதையின் கதையாக இருந்தாலும் உங்களை குழப்பக் கூடாது இல்லையா?

அப்போது நான் மேல் நிலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். கணேசன் எனக்கு வகுப்பு தோழனாகவும் நண்பனாகவும் இருந்தான். இருவரும் “லைட் ஹவுஸ்” என அழக்கப்பட்ட பிரம்மச்சாரிகள் மட்டுமே தங்கும் ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களுக்கு டியூஷன் படித்துக்கொண்டிருந்தோம் என்பதால் இந்த ஏற்பாடு. வேறுவேறு கிராமத்தைச் சேர்ந்த நாங்கள் காலையில் சைக்கிளில் புறப்பட்டு டியூஷன் வந்துவிட்டு பள்ளிக்குச் செல்ல வேண்டும். இது சிரமமாக இருந்ததால் அறை எடுத்துத் தங்கும் யோசனையை கணேசன்தான் சொன்னான்.

கணேசனுக்கு குடும்ப நண்பராக இருந்த ராஜா சார் தான் விடுதி உரிமையாளரிடம் பேசி அறையைப் பிடித்துக் கொடுத்தது. மாடியில் இருந்த அறை ஒன்றில் தங்கி, தேசிய வங்கி ஒன்றில் காசாளராகப் பணியாற்றி வந்தார் அவர். நாயர் மெஸ்ஸில் கணக்குத் தொடங்குவதற்கு சிபாரிசு செய்ததும் அவர்தான். அந்த மெஸ்ஸின் நீண்ட கால வாடிக்கையாளராக அவர் இருந்தார். மெஸ் இயங்கி வந்த தெருவில்தான் எனது பள்ளியும் இருந்தது.

முன்னால் விஸ்தீரணமாக இடம் விட்டு (இப்போது யாருக்கும் இவ்வளவு தாராளம் வருவதில்லை) உள் ஒடுங்கிக் கட்டப்பட்டிருந்த ஒரு பழையப் பாணி மச்சுவீட்டுக்கு முன்புதான், ஒரு ஆஸ்பெட்டாஸ் கூரைக்குக் கீழே நாயர் மெஸ் செயல்பட்டு வந்தது. வலது முன்புறத்தில் வெளியே பார்த்தவாக்கில் டீக்கடை இருந்தது. இடது பக்கத்தில் கல்லா மேஜை. அதைக் கடந்தால் இடப்பக்கம் நடக்க இடம்விட்டு வலது பக்கம் வரிசையாக நான்கு சாப்பிடும் பென்ஞ்சுகள். சமையல் எல்லாம் வீட்டுக்குள்தான்.

download (25)

மெஸ்ஸில் முதன் முதலாக அன்னம்மாவைப் பார்த்த போது ராஜா சார் சொன்னது போல ஒரு காலத்தில் அவள் பேரழகியாக இருந்தாள் என்பதை நம்ப முடியவில்லை. நல்ல அலங்காரத்துடன், எடுப்பான வண்ணத்தில் சேலை உடுத்தி குடை பிடித்தபடி அவள் தெருவில் நடந்து சென்றால் எல்லோரும் வேடிக்கைப் பார்ப்பார்களாம். இப்போது “பெரிய” அழகியாக மாறிப்போயிருந்த அவளின் எந்தெந்தப் பகுதிகள் முன்னர் அவளை அழகியாகக் காட்டியது என்பதை யூகிக்க முடியவில்லை. அந்த இழப்பைச் சரி செய்வது போலவோ என்னவோ அவள் எப்போதும் அலங்கார ரூபினியாகக் காட்சி தருவாள். பெரும்பாலும் கல்லா மேஜைக்கு பின்னாலோ, சாப்பிடும் இடத்தையும் வீட்டையும் இணைத்த வாசலுக்கு அருகில் இருக்கும் மர நாற்காலியிலோதான் அவள் காணப்படுவாள். இரவு உணவின் போது மட்டும் அவள் மாயமாகிப்போவாள் (ஏன் என்ற மர்மம் பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது). அந்த உணவகத்தின் பெரும்பாலான வாடிக்கையாளர் அவள் நடப்பதைப் பார்த்திருக்கவே முடியாது. ஆனால் நான் சில சமயத்தில் அந்த “அன்னம்” நடப்பதைப் பார்த்திருக்கிறேன். அது அந்த முன்னாள் பேரழகியின் மீதான இயற்கையின் கேலி என்றே சொல்லும்படி இருக்கும்.

‘அங்க தண்ணி வையி, இந்த டேபிளுக்கு இலையப் போடு, சாம்பார் கேட்கறாங்க பாரு’ இப்படியான வாய்மொழி உத்தரவுகளும், பார்வையால் ஆன உத்தரவுகள் மட்டும் அவளிடமிருந்து வந்து கொண்டிருக்கும். அத்தோரணை காலத்தின் நிரந்தர உணவகம் ஒன்றின் நிரந்தர உரிமையாளரும், நிரந்தர நிர்வாகியும் அவள்தான் என்பது போல் இருக்கும். அவளுடைய அதிகாரக் குரல், நிகழ் காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் சென்று ஒலிக்கும்படி தொனிக்கும். அவளுடைய குரல் ஜெயலலிதாவின் போலவே இருந்ததுதான் ஆச்சர்யம்.

கல்லா மேஜைக்கு பின்னால் ராமன் நாயர் படமாகத் தொங்கிக்கொண்டிருந்தார். இருமுடி தரித்தக் கோலத்தில் தன்னால் உருவாக்கப்பட்ட மெஸ்ஸை மேற்பார்வைப் பார்த்துக்கொண்டிருப்பது போல அத்தோற்றம் இருக்கும். அந்த நகரத்துக்கு ஐயப்ப சாமியை அறிமுகப்படுத்தியவர் அவர்தானாம். புனிதப் பயணம் செல்பவர்களுக்கு கருப்பு உடை மாட்டி புரட்சி செய்தவர் அவர்தான். குருசாமியான அவருடைய தலைமையில் ராஜா சார் கூட ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வந்திருக்கிறாராம். பின்னர் அவர் ‘சக்தி’ தாசனாகி சிவப்புக்கு மாறிவிட்டார் என்பது வேறுகதை.

நாயர் மெஸ் என்றாலே அன்னம்மாதான் என்பது ஒரு மாயத் தோற்றம். அதன் வாடிக்கையாளர்கள் பலருக்கும் இப்படியான ஒரு எண்ணம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அன்னம்மாவின் உத்தரவுகளை வடிவமைப்பதும், அதை செயலாக்கம்செய்வதும் அவளுடைய தங்கை செல்விதான் என்று சொல்லப்பட்டது. இந்த இடத்தில் நீங்கள் செல்வி பாத்திரத்தோடு சசிகலாவை பொருத்திப் பார்ப்பீர்கள் என்பது தெரியும். ஆனால் அவ்வளவு பொருத்தம் வராது என்பதே உண்மை. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனால் துரத்தப்பட்ட அவளுக்கு அன்னம்மாதான் அடைக்களம் கொடுத்திருக்கிறாள். அவளுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் ராஜா சார் சொல்லியிருக்கிறார்.

சற்றே கறுத்த நிறம் என்றாலும் செல்வியும் ஒரு அழகிதான். அந்த மெஸ்ஸின் – கோழிக் குழம்பைவிட பெரிய வசீகரம் அவள்தான். மை பூசாத கண்களுடன் அவளைப் பார்ப்பது மிக அபூர்வம். அதனால் ‘மைக்கண்ணி’ என்றே பலராலும் அழைக்கப்பட்டாள். ஆண்களிடம் அவள் பேசும் விதம், காட்டும் புன்னகை, வெட்கம் எல்லாமே தனி ரகம். ஏற்கெனவே பெண் பித்தராக இருந்த ராஜா சாருக்கு அவள் மீது ஈர்ப்பு ஏற்பட்டதில் ஆச்சர்யமில்லை. அவரின் நண்பர்கள் என்பதாலேயே மெஸ்ஸில் எனக்கும் கணேசனுக்கும் தனி கவனிப்பு இருக்கும். மற்றவர்களுக்கு சிக்கன் சேர்வா கிடைத்தால் எங்களுக்கு சிக்கன் கிரேவி கிடைக்கும். சில நேரங்களில் சிக்கனும் அதில் இருக்கும். அவருக்கு முன்பாகவே நாங்கள் சென்றுவிட்டால் “உங்க சார் வர்லயா?” என்று விசாரிப்பாள். அவருடன் சென்று விட்டால் நாங்களும் அந்த காதல் அலைகளுக்குள் சிக்கிக்கொள்வோம்.

நாயர் மெஸ்ஸுக்கு எதிர் வரிசையில் சற்று தள்ளி “பாம்பே சலூன்” என்ற முடித்திருத்தகம் இருந்தது. வாய் பேசமுடியாத ஐந்து சகோதரர்களுக்குச் சொந்தமானது அது. நானும் கணேசனும் அந்த முடித்திருத்தகத்தின் வாடிக்கையாளர்களாக இருந்தோம். மேலும் மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு அங்கு போய் பேப்பர் படிப்பதுண்டு. எங்களுக்கு அந்த ஊமைச் சகோதரர்கள் வணக்கம் வைத்துச் சிரிப்பார்கள். “சாப்பிட்டாச்சா?” என ஜாடையில் விசாரிப்பார்கள். இந்த வரவேற்பு எங்களை மகிழ்விக்கும். அங்கு வரும் எல்லோருக்குமே அந்த வரவேற்பு கிடைக்கும் என்றாலும் அதில் குறைகாண முடியாது.

பிளாஸ்டிக் காகித மாலையுடன் பெரியார், அண்ணா இருவரின் புகைப்படங்கள் பெரிய அளவில் தொங்கும். பக்கத்திலேயே திமுக துண்டுடன், நடத்தர வயதுடைய ஒருவரின் புகைப்படம். முகச்சாயல் ஒத்துப் போனதால் அது அந்தச் சகோதர்களின் அப்பாவாகவோ மூத்த அண்ணனாகவோ கூட இருக்கலாம் எனத் தோன்றும். அந்த முடித்திருத்தகத்தின் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் அங்கு எப்போதும் காணப்படும் கிழவன். அது போன்ற முடித்திருத்தகங்களிலோ தேனீர் கடைகளிலோ வழக்கமாகக் காணப்படக்கூடிய ஆள்தான் அவன். தினசரிகளை படித்துக் கொண்டோ யாருடனாவது விவாதம் பண்ணிக்கொண்டோ இருப்பான். அவனுக்கு எண்பது வயதிருக்கும். கைத்தடி ஒன்றும் அவன் கூடவே இருக்கும். அழுக்கான ஒரு வேட்டியும் பழப்பு வண்ண சட்டையும்தான் அவனுடைய நிரந்தர உடை. அந்த சகோதர்களிடம் சைகை பாஷையில் பேசுவான். அந்த சகோதரர்களும் தங்களுக்குள் ‘சப்சப்’ என்ற உதட்டசைவிலும் கையசைவிலும் உரையாடிக்கொள்வார்கள். சிரிப்பை பரிமாறிக்கொள்வார்கள், சண்டையிட்டுக்கொள்வார்கள். அங்கு வந்துவிட்டால் வாடிக்கையாளர்களும் அவர்களுடன் அதே பாஷையில்தான் பேசவேண்டியிருக்கும். அந்தச் சூழல் நம்மை ஒரு வேற்று மொழிப் பிரதேசத்துக்குள் சென்றுவிட்ட ஒரு அந்நியன் போல உணரச் செய்துவிடும்.

கிழவன் ஒருநாள் என்னை அருகில் அழைத்துப் பேசினான். நான் பக்கத்தில் போய் உட்கார்ந்ததும், “அந்த கரகாட்டக்காரியோட ஓட்டல்லதான் சாப்பட்றியா தம்பி?” எனக் கேட்டான்.

இக்கேள்வி எனக்கு வியப்பாகவும், அத்தகவல் புதிதாகவும் இருந்தது. என் வியப்பை போக்கும் கடமை அவனுக்கு இருந்தது. அதில் அவன் அதிக ஆர்வமுடையவனாகவும் இருந்தான். என்னிடம் மட்டுமல்ல பலரிடமும் இந்தக் கதையைச் சொல்லி அவன் சந்தோஷமடைந்திருக்க வேண்டும்.

ராமன் நாயரும் அவனும் ஆரம்ப காலத்தில் நண்பர்களாக இருந்தவர்களாம். பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு டீக்கடையில்தான் நாயர் டீ மாஸ்டராக வந்து சேர்ந்திருக்கிறார். பின்னர் அந்த ராஜ வீதியில் வேறு ஒரு இடத்தில் தனியாகக் டீ கடை ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு இப்போது மெஸ் இருக்கும் வீட்டை நாயருக்காக கிழவன்தான் வாடகைக்குப் பிடித்துக்கொடுத்தானாம். இந்த வீட்டுக்கு எதிரே ஒரு கீற்றுக்கொட்டை போட்டு டீக்கடையையும் இட்லிக் கடையையும் ஆரம்பித்திருக்கிறார் நாயர். பின்னர் ஏறுமுகம்தான். அவருக்கு திருமணம் செய்து வைத்தது, இந்த வீட்டையே கிரயம் பேசி வாங்கிக் கொடுத்தது எல்லாமே அந்த கிழவன்தானாம். கருட சேவை திருவிழாவில் கரக்காட்டம் ஆட வந்தவள்தான் இந்த அன்னம்மா என்றான் கிழவன்.

“என்ன பேசினாளோ, என்ன சொக்குப்பொடி போட்டாளோ, இந்த மலையாளத்தான் அவ வலையில போய் விழுந்துட்டான்” என்றான் கிழவன்.

“உனக்கு பொண்டாட்டி, ரெண்டு கொழந்தைங்க இருக்காங்க. ஊர்ல நல்ல பேரு இருக்கு. இதையெல்லாம் கெடுத்துக்காதேன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அந்த ஆளு கேக்கல.” என்று வருத்தத்துடன் சொன்னான் கிழவன். இந்த விவகாரத்தால் அவர்களுடைய நட்பிலும் விரிசல் விழுந்துவிட்டதாம்.

அன்னம்மாவுக்கு தினமும் இரவில் சாராயமும், கோழிக் குழம்பும் வேண்டுமாம். இந்த படையலுடனேயே அன்னம்மாவை நாயர் ஆராதித்து வந்திருக்கிறார். பிறகு சைவ ஓட்டலாக இருந்த நாயர் மெஸ் அசைவத்துக்கு மாறிவிட்டதாம். இதனால் அது பல நல்ல வாடிக்கையாளர்களை இழந்து நாசமாகிவிட்டதாக கிழவன் வருத்தத்துடன் சொன்னான். குருசாமி அந்தஸ்தைத் துறந்து, அவளுடன் குடித்து, அதற்கு அடிமையாகி குடல் வெந்து செத்தாராம் நாயர். அவருடைய அழிவுக்கு முழு காரணமும் அந்த கரகாட்டக்காரிதான் என்றான் கிழவன். “இவளால அந்தாளுடைய குடும்பமே சீரழிஞ்சி போச்சி. மெஸ் இருக்கிற இந்த வீட்டையும் தன் பேருக்கு எழுதி வாங்கிக்கிட்டா. அந்த குடும்பமே இப்ப நடுத்தெருவுல நிக்குது” என்றான் வருத்தத்துடன்.

நாயர் இறந்த பிறகு அவருடைய மனைவியும் மகனும் அந்த வீட்டின் மீது வழக்குப் போட்டிருக்கிறார்களாம். கிழவன்தான் அவர்களுக்கு உதவியிருக்கிறான். “இப்ப இந்த கரகாட்டக்காரிக்கு நான் பரம விரோதியாயிட்டேன்” என்றான் கிழவன்.

பிறகு ராஜா சாரிடம் இது குறித்துக் கேட்ட போது, “உங்களுக்கு இதையெல்லாம் அந்த கிழட்டு ராஸ்கேல்தானே சொன்னான்?” எனக் கேட்டார். பிறகு இந்த விஷயம் செல்வி வழியாக அன்னம்மா காதுக்குச் சென்றதா அல்லது கிழவனைப் பற்றி வேறு யாராவது அவளிடம் போட்டுக்கொடுத்தார்களாத் தெரியவில்லை, அன்னம்மா அந்த முடித்திருத்தகத்துக்குப் போய் விளக்குமாறால் கிழவனை சாத்தினாளாம், கணேசன் சொன்னான். “அய்யோ என்னக் கொல்றாளே, என்னக் கொல்கிறாளே, யாராவது காப்பாத்துங்களேன்” என தெருவே கேட்கும்படி அலரினானாம் கிழவன்.

இத்தெளிவு போதும் என நினைக்கிறேன். இப்போது நாயரின் ஆவி தன் புலம்பலைத் தொடர்கிறது:

“அன்னம்மா உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அது கருடசேவைத் திருவிழாவின் இரண்டாவது நாள். நடு இரவைத் தாண்டிய நேரம். வாணவேடிக்கையும் சுவாமி ஊர்வலம் நடந்துகொண்டிருந்தன. தெருக்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. சாப்பாடு முடிந்து போனதால் மற்றவர்கள் தூங்கச் சென்றுவிட நான் டீக் கடையை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அப்போது மெஸ் வாசலில் நீ வந்து விழுகிறாய். கரகாட்டக்காரிகள் உடுத்தும் உடை அலங்காரத்தோடும் அலங்கோலமாகவும் நீ கிடந்தாய். நீ அளவுக்கு அதிகமாக குடித்திருந்தாய். பலரும் உன்னை வேடிக்கைப் பார்த்தபடிச் சென்றார்கள். திருவிழாக் கொண்டாட்டத்தில் இளைஞர்களுக்கு இதுவும் கேளிக்கையாகிக்கொண்டிருந்தது. பெண்கள் கூட வெட்கத்துடன் உன்னைக் கடந்து செல்கின்றனர். இக்காட்சியை என்னால் பார்த்துக்கொண்டிக்கு முடியவில்லை. உன்னை இழுத்துச் சென்று வேறு இடத்தில் படுக்க வைத்துவிடலாம் என முடிவுக்கு வருகிறேன். அருகில் வந்து சிறிது நேரம் யோசனையுடன் நிற்கிறேன். அங்குப் பரவியிருந்த அலங்கார விளக்கொளியில் உன் முகம் வசீகரமாகத் தோன்றுகிறது. குழந்தைமையும் பெண்மையும் கலந்த உன் முகத்தை யாரால் புறக்கணித்துவிட முடியும்?

உனது கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டு வந்து மெஸ்ஸின் உள்ளே போடுகிறேன். வாசலை சாத்தினேன். பொழுது விடியும்வரை நீ தரையிலேயே படுத்திருந்தாய். முதல் ஆளாக வந்து பார்த்த டீ மாஸ்டர் ராமசாமிக்கு அதிர்ச்சி. இதெல்லாம் என்ன என்பது போல என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திலேயே நீயும் எழுந்துவிட்டாய். தூக்கத்திலிருந்து எழுந்து ஒரு குழந்தையைப் போல திகைப்புடன் சுற்றும்முற்றும் பார்க்கிறாய். உன்னை வீட்டின் பின்பக்கம் அழைத்துச் சென்று குளியல் அறையைக் காட்டும்படி ராமசாமியிடம் சொல்கிறேன். நீ சங்கோஜத்துடனும் மன்னிப்புக் கோரும் தோரணையுடன் அவனுக்குப் பின்னால் போகிறாய். நீ அங்கிருந்துத் திரும்பி வரவேற்பறை வழியாக வந்த போது எதிரில் வந்து நிற்கிறேன். உன்னுடையப் பெயரைக் கேட்கிறேன். வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே சொல்கிறாய் ‘அன்னம்மா’. சுவரில் சாய்ந்து நின்று கொள்கிறாய்.

அலங்கோலமான, தெளிவற்ற, யூகிக்க மட்டுமே முடிந்த உன் வாழ்வின் பின்னணியிலிருந்து சோகமும் தனிமையும் கொண்ட ஒரு முகம் எனக்கு முன் மலர்ந்துத் தோன்றுகிறது. உன்னுடைய சீரழிந்த வாழ்க்கை குறித்து எந்தக் கேள்விகளையும் நான் எழுப்பவே இல்லை. அதுவே என்னை கடந்து போகாமல் உன்னைத் தயங்கி நிற்கச் செய்ததோ என்னவோ.

நான் கேட்கிறேன், “எப்ப ஊருக்கு?”

நீ சொல்கிறாய், “மதியமே கிளம்பனும். எங்க ஊருக்கு பக்கத்துல இன்னிக்கு இராத்திரி திருவிழாவில எங்க ஆட்டம் இருக்கு.”

“இந்த ஊருக்கு எப்ப திரும்ப வருவே?”

நீ என்னைக் வியப்புடன் பார்க்கிறாய். என் கேள்விக்குப் பின்னால் உள்ள அர்த்தம் உன்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.

நீ கேட்டாய், “நீங்க அய்யரா?”

நான் சொன்னேன், “இல்லே மலையாளி, நாயர். ஏன் கேக்கிற?”

நீ யோசனையுடனும் சங்கடத்துடனும் என்னைப் பார்க்கிறாய்.

நான் சொல்கிறேன், “உனக்கு விரும்பம்ன்னா எப்ப வேணா வரலாம்”

யோசிப்பதற்கு நான் கொடுத்த இடைவெளி என் பைத்தியக்காரத்தனத்தை புரிந்துகொள்ள உனக்கு உதவியிருக்க வேண்டும். நீ வேடிக்கையாகக் கேட்கிறாய், “எனக்கு தினமும் சாராயம் குடிச்சாத்தான் தூக்கம் வரும். வாங்கிக்கொடுப்பிங்களா?”

இந்த வடிவத்திலான கதை சொல்லலையும் இடையில் நிறுத்த வேண்டியதாகிவிட்டது. காரணம் இதில் கதை சொல்லியின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. எல்லை வகுக்கப்பட்டுவிடுகிறது. அன்னம்மாவின் மீது அளவற்ற பித்து கொண்ட ஒருவன், தன் வாழ்க்கையையே அழித்துக்கொண்ட ஒருவன் கதையைச் சொன்னால் அது ஒரு காதல் கதையாகவே முடிந்து போகும் ஆபத்தும் உண்டு. அந்த ரொமாண்டிஸ காலமெல்லாம் எப்போதோ காலாவதியாகிவிட்டதால், நானே தன்னிலையில் கதை சொல்வதென முடிவு செய்கிறேன். அதன் தொடக்கம் இப்படி இருந்தது:

அன்னம்மாவின் மரணம் ஒரு அபத்த காவியம். அதை இவ்விதம் உணர்த்தவே சீக்கிரம் சென்று சேர்ந்தாளோ என்னவோ. வாழ்ந்த காலத்தில் அவளின் திறமை, சாதுர்யம், தைரியம் பலரால் சிலாகிக்கப்பட்டது. ஆனால் அவள் மீது பிரகாச ஒளி எதுவும் படிந்திருந்ததாகத் தெரியவில்லை. ஒரு குடும்பத்தையே சிதைத்த பாவம் பலரது வார்த்தைகளாகவும் சாபமாவும் மாறி அவளைச் சுற்றி சுழன்று கொண்டிருந்தது. ராமன் நாயர் என்ற மதிப்பு மிக்க மனிதரை தரம் தாழ்த்தி சுடுகாட்டுக்கு அனுப்பி வைத்த புண்ணியவதியாகவும் அவள் பார்க்கப்பட்டாள். குடிக்கு அடிமையான, ஒழுக்கம்கெட்ட பெண்ணாகவும் அவள் அறியப்பட்டாள். பிறகு அவளுடைய மரணம் எப்படி முக்கிய நிகழ்வானது, இழப்பானது?

அவளுக்குப் பின் நாயர் மெஸ் என்னவாகும் என்ற கேள்வியை பலரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சந்தேகமில்லாமல் அது மிகையான எதிர்வினைதான். அது வாடிக்கையாளர்களின் உடனடி ஆதங்கம்தானே தவிர அவர்களின் சிந்தனையிலிருந்து முளைத்தக் கேள்வியாக இல்லை. அந்த நகரத்தில் அப்போது இயங்கி வந்த எவ்வளவோ உணவகங்களில் ஒன்றுதான் நாயர் மெஸ். அதற்கென்று சில வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். அதற்கு மேல் அதற்கு பெரிய முக்கியத்துவம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அங்கே பரிமாறப்பட்ட இட்லிக்கோ, பூரிக்கோ, பரோட்டாவுக்கோ, சிக்கன் குழம்புக்கோ எந்தத் தனித் தன்மையும் இருந்த்தாகத் தெரியவில்லை. அதே போலத்தான் அன்னம்மாவும். அது ஒரு நிகழ்வு. நாயர் மெஸ் தொடர்ந்து இயங்கி வந்திருக்கலாம் இல்லாமல் போயிருக்கலாம், அன்னம்மா என்ற ஒரு ஜீவன் அங்கு வாழ்ந்திருக்கலாம், அப்படி ஒரு வரவு அதற்கு நிகழாமல் போயிருக்கலாம். இந்த கதையில் இடம்பெறுகிறது என்பதற்கு மேல் இப்போது அதற்கெல்லாம் என்ன பெரிய முக்கியத்துவம் இருக்கிறது? கணக்கு வைத்து மூன்று வேளை உணவை அங்கு சாப்பிட்டு வந்தோம் என்பதற்கு மேல் அதற்கும் எங்களுக்கும் என்ன உறவு? செல்வியுடனான தொடர்பு காரணமாக ராஜா சாருக்கு ஒருவேளை அது முக்கியமானதாக இருந்திருக்கலாம். அவர் மூலம் அன்னம்மா குறித்த சில ரகசியங்கள் எங்களுக்குத் தெரிய வந்ததென்னவோ உண்மைதான். அதானாலேயே பிணைப்பின் இறுக்கம் கூடி விடுமா என்ன?

கிழவன் சொன்னதை ஒரு நாள் ராஜா சார் உறுதிப்படுத்தினார். தினமும் கால் பாட்டில் பிராந்தி சாப்பிட்டால்தான் அன்னம்மாவுக்குத் தூக்கம் வரும் என்றார். டீ மாஸ்டர் ராமசாமிதான் அவளுக்கு வாங்கி வந்து கொடுப்பாராம். “அந்த ஆளு டீ மட்டுமா போட்றான்…”என அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

நாயர் காலத்திலேயே வேலைக்குச் சேர்ந்தவர் ராமசாமி. நாயர் இறந்த பிறகு அன்னம்மாவின் தீவிர விசுவாசியாகவே மாறிவிட்டிருந்தார். செல்விகூட அவருக்கு அடுத்த நிலைதான் எனத் தோன்றும். அன்னம்மாவின் விசுவாசிகளில் இன்னொருவன் சங்கர். நாயர் மெஸ்ஸுக்காகவே பிறப்பெடுத்து வந்தவன் அவன். ராஜா சாரிடம் அவன் அதிக மரியாதைக் காட்டுவான். ஆனால் எரிச்சலான ஒரு எதிர்வினைதான் அவரிடம் வெளிப்படும். அவன் எப்போதும் செல்வியோடே இருக்கிறானே என்ற பொறாமையாக இருக்கலாம்.

மெஸ் கட்டடத்தின் மீதான வழக்கில் தீர்ப்புத் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதாகப் பேசப்பட்டது. அதன் பரபரப்பு நாயர் மெஸ் ஆட்களிடமும் காணப்பட்டது. அன்னம்மாவிடம் தனது விசுவாசத்தை காட்டும் வகையில் ராமசாமி திருப்பதிக்குப் போய் வெங்கடேஷ்பெருமாளை தரிசித்துவிட்டு மொட்டை போட்டுக்கொண்டு வந்தார்.

எதிர்பார்த்தது போலவே வழக்கில் அன்னம்மா ஜெயித்து விட்டாள். இதனால் ஆத்திரமடைந்த நாயர் மகன், அன்னம்மாவை கொல்லாமல் விடமாட்டேன் என நீதிமன்ற வளாகத்திலேயே சபதம் போட்டுவிட்டுச் சென்றானாம். நாயரின் மனைவி மண்ணை வாரித் தூவி “நீ நாசமாத்தான் போவ” என சாபமிட்டபடியே சென்றாளாம்.

இந்த இடத்தில் இந்த வழக்கோடு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஒப்பிட வேண்டாம். அப்படி எழுதும் யோசனையும் எனக்கில்லை. அப்படி எழுதினால் கதை அளவுக்கு அதிகமான அபத்த நாடகமாக போய்விடும் ஆபத்து இருந்தது. நிஜ வாழ்க்கையில், வரலாற்றில் இது போல ஆயிரம் அபத்தங்கள் அரங்கேறிக்கொண்டுதானே இருக்கின்றன. அதை எல்லாம் கதையாக்கினால் கதை சீக்கிரத்திலயே அழுகிப்போய்விடுமல்லவா.

இனி கதையின் போக்கு எப்படி அமைந்தது என்று பார்ப்போம். கதைச்சொல்லி கதையைத் தொடர்கிறார்:

எங்களுக்குப் பொதுத் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மாதம் இருக்கும் போதுதான் ஒரு நாள் காலை ராஜா சார் வந்து ரகசியமாகச் சொன்னார் அன்னம்மா இறந்துவிட்டாள் என்று. அளவுக்கு அதிகமான போதை அவளைக் கொன்றுவிட்டதாகச் சொன்னார். நடு இரவைத் தாண்டி அவளுடைய மரணம் நிகழ்ந்திருந்தது.

images (6)

மெஸ்ஸின் முன் வாசலைப் பூட்டியிருந்தார்கள். பின்பக்கமாக உள்தள்ளியிருந்த வீட்டின் பின்வாசலை திறந்து வைத்து அடுத்தத் தெரு வழியாக சங்கரும் ராமசாமியும் வெளியே போய் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கென அவசரமான சில வேலைகள் இருந்தன. செல்வி வீட்டிலேயே இருந்தாள். அவள் சில உத்தரவுகளை அவர்களுக்கு அளித்துக்கொண்டிருந்தாள். ராஜா சாரின் ஆலோசனையின் பேரில் அன்னம்மாவின் மரணச் செய்தியை மாலையில் சொல்வதென முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்குள் குளிர்பதனப் பெட்டி முதலான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட வேண்டும். முக்கியமாக அன்னம்மாவுக்கு வரவேண்டிய பெரிய அளவிலான தொகையை இரண்டு பேரிடம் வாங்கிவிடவேண்டும் என்பதே அவர்களின் திட்டம். இல்லையென்றால் அது வராமலேயே போய்விடுமோ என்ற அச்சம். அன்னம்மாவின் மரணச் செய்தி தள்ளிப்போனது அதனால்தான்.

அன்று மாலை அன்னம்மாவின் மரணம் ஊருக்குத் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் மதியம் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. நாயரின் கல்லறைக்குப் பக்கத்திலேயே அன்னம்மா புதைக்கப்பட்டவில்லை, எரிக்கப்பட்டாள்.

பலரும் எதிர்பார்த்தபடியே அன்னம்மா இறந்து ஒரு மாத காலத்துக்குள் சம்பவங்கள் நடக்கத் தொடங்கின. எங்களை ஆச்சர்யப்படுத்திய விஷயம், செல்வி மீது காவல் நிலையத்தில் ராமசாமி புகார் கொடுத்தார் என்பதுதான். அன்னம்மா அதிக குடிபோதையில் இறக்கவில்லை. சொத்துக்கு ஆசைப்பட்டு செல்விதான் பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து அன்னம்மாவைக் கொன்றுவிட்டாள். அதனால் தான் அவசரஅவசரமாக சடலத்தை கொண்டு போய் எரித்துவிட்டார்கள் என்று.

ராஜா சாரின் ஆலோசனையின் பேரில் செல்வி ஒரு புகார் கொடுத்தாள். அதில், ஏற்கெனவே திருமணமான என்னை ராமசாமி திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார். இரவில் படுக்கைக்கு அழைத்துத் தொல்லைத் தருகிறார். சம்மதிக்கவில்லை என்றால் கொலை சேய்துவிடுவதாக மிரட்டுகிறார். அவரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு வேண்டும் என புகாரில் சொல்லியிருக்கிறாள்.

இதனால் ராமசாமி நிலைகுலைந்து போனார். ராஜா சாரிடம் வந்து, அந்த மெஸ்ஸை நம்பியே கல்யாணம் கூட பண்ணிக்கொள்ளாமல் வாழ்க்கையை வீணடித்துவிட்டதாகவும் தனக்கு ஒரு தொகையைப் பெற்றுத்தந்தால் இந்த ஊரைவிட்டேப் போய்விடுவதாகவும் கண்ணிர்விட்டு கெஞ்சினார். அதன்படி ஒரு தொகையை தர செல்வி சம்மதிக்க பிரச்சினை முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் செல்வியும் சங்கருமே அந்த மெஸ்ஸை நிர்வகித்து வந்தாகவும் அன்னம்மாவின் ஒரே வாரிசு செல்வி என்பதால் அந்த சொத்து செல்விக்கே சென்றுவிட்டதாகவும் கணேசன்தான் எனக்குச் சொன்னான். சென்னை வந்த பிறகு அவனுடையத் தொடர்பும் அறுந்துவிட்டது.

டாஸ்மாக் பாராக மாறிப்போன அந்த நாயர் மெஸ்ஸில் போடப்பட்டிருந்த மேஜைக்கு எதிரே உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்த போது ஒரு கற்பனைத் தோன்றியது. அதையே கதையின் முடிவாகவும் வைத்திருந்தேன். அது இப்படி அமைந்திருந்தது:

குடிகாரர்களெல்லாம் கிளம்பிப் போனப் பிறகு நாயரின் ஆவியும் அன்னம்மாவின் ஆவியும் ஒரு மேஜைக்கு எதிரெ உட்கார்ந்து குடித்துக்கொண்டிருக்கின்றன. பழைய நினைவுகளை அசைப் போட்டு மகிழ்கின்றன. சில பொழுது நாயர் மெஸ்ஸின் இன்றைய நிலையை எண்ணி கண்ணீர் விட்டு அழுகின்றன. புகை மண்டலம் ஒன்று எழுந்து பாரை நிறைக்க அது ஒரு கனவுப் பிரதேசமாக மாறிவிடுகிறது. சினிமாவில் எம்ஜியாரும் ஜெயலலிதாவும் நடனமாடுவது போல அங்கே நாயரும் அன்னம்மாவும் பளப்பளப்பான ஆடைகளை அணிந்து ஓடிப் பிடித்து ஆடத் தொடங்குகின்றனர்.

0

ஒத்திகை ( சிறுகதை ) / சமயவேல்

10387318_692355457468193_1627100695237812223_n

ஒத்திகை கடந்த பத்து நாட்களாக நடக்கிறது. இன்று இறுதி ஒத்திகை நடக்க இருக்கிறது என்றும் கண்டிப்பாக நீ வந்து பார்த்து உனது திருத்தங்களைக் கூறலாம் என டீச்சர் ஒரு பையன் மூலம் செய்தி அனுப்பி இருந்தார். அதிகாலைக் கனவிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் தீபியின் ஞாபகம் பெருகப் பெருக, உள்மன பூமித்தகடுகள் நகரத் தொடங்கியிருந்தன. தீபி என் இளம் தோழிகளில் ஒருத்தி. எனது விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கான கணித வகுப்புகளைத் தொடங்கியபோது, ஒரு வெட்கம் நிறைந்த சிறுமியாக தீபி வகுப்பில் இணைந்து கொண்டாள்.

ஒரு சொல் கூடத் தெரியாத ஊமைப்பெண் போல உட்கார்ந்து கொண்டிருப்பாள். நவீன கணிதம் என்ற முள்காட்டுக்குள் அவள் தைர்யமாக நடமாடத் தொடங்கி, அது ஒரு எளிமையான இசைக்கோர்வை என ஆகிய பிறகுதான் கொஞ்சங் கொஞ்சமாக எல்லோரிடமும் பேசத் தொடங்கினாள். இரண்டாம் பருவத் தேர்வில் செண்டம் வாங்கிய பிறகு, அவளிடம் ஒரு சிறப்பான ஆளுமை உருவாகத் தொடங்கியது. எல்லோருக்கும் தோழியாக மாறி முழுவகுப்பையே ஆக்கிரமிக்கத் தொடங்கினாள். ஒரு தருணத்தில் இனி நீயே படித்துக் கொள்ளலாம் என்றும், வகுப்புக்கு வரத்தேவையில்லை என்றும் தேவைப்பட்டால் என்னை வந்து சந்திக்கலாம் என்றும் கூறினேன். ஒன்றுமே பேசாமல் ஒரு முறைப்பை மட்டும் என்மேல் வீசிவிட்டு விருட்டென்று ஓடி மறைந்தாள்.

தீபி சமீபத்தில்தான் ருதுக்குளியல் முடித்து சடங்குகளின் பாதுகாப்பில் இருந்தாள். தற்செயலாக அந்தத் தெருவில் நடந்து கொண்டிருந்த என்னை, தீபியின் அம்மா, சும்மா வாப்பா, என்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். பெரிய திண்ணை முழுவதும் மக்காச்சோளக் கதிர்களைப் பரப்பி இருந்தார்கள். பரல் வரிசைகளின் மஞ்சள் குவியல்களுக்குள் பார்வை நகர வீட்டுக்குள் நுழைந்தேன். பெரிய கூடத்தில் நடக்கக் கொஞ்சம் பாதைவிட்டு வெங்காயத்தைப் பரப்பியிருந்தார்கள். வெங்காயக் கந்தக வாசம் சூழ்ந்த கூடத்தைக் கவனமாகக் கடந்தபோது நாகமலைப் பாறையிடுக்கு ஒன்றில் பூத்திருந்த கந்தகத்தின் பசுமஞ்சள் ஞாபகம் வந்தது.

தீபி, திறந்தவெளித் தொட்டி முற்றத்தில் நின்று கொண்டிருந்தாள். ‘என்ன மாமா, எப்படி இருக்கீங்க?’ என்றவளின் முகத்தைப் பார்த்ததும் திகைத்து வீழ்ந்த என் பார்வை திசைகளறச் சுழன்றது. எல்லாத் திசைகளிலும் தீபி நின்றாள். அந்த இடம் ஒரு வெண்கலச்சிலை மோஹினியின் ஒளிரும் நந்தவனமாக மாறியிருந்தது. வஸந்தருது தன் செழித்த இலைகளால் நந்தவனம் நிறைக்க அவளது முழுவுடலும் பூத்தலின் ரசாயனத்தில் மிதந்தபடி இருந்தது. முற்றம் தாண்டி சுற்றுச்சுவருக்கு வெளியே பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கும் முழு அரசமரமும் பசுந்தளிர்களால் சலசலக்கும் ரகஸ்யம் அவளது அசைவுகளில் துலங்கத் தொடங்கியது.

ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து அத்தை என்னை உட்காரச் சொன்னாள். மாமாவுக்கு காப்பி கொடுடி என்று கூறிவிட்டு எதோ அவசரமென வெளியேறிப் போனாள். வனத்துக்குள் தொலைந்தவளாக தீபி ஏதோ ஒரு அறைக்குள் நுழைந்திருந்தாள். தொட்டிமுற்றத்தில் வெங்காய வாசனையோடு காப்பியின் வாசம் கலந்தபோது தீபி என் முன்னால் நின்றிருந்தாள். மாமா இந்த பைனாமியல் தியரம் மட்டும் ஒருமுறை நீங்கள் நடத்துவீர்களா? என்று கேட்டாள். இப்பொழுது சின்னஞ்சிறு தீபியாக தன்னை உருமாற்றியிருந்தாள். ஓ அடுத்த வாரம் நடத்தீரலாம், வீட்டுக்கே வந்துடுறேன். சரி என்று நின்றுகொண்டே இருந்தாள். தம்ளரைக் கொடுத்துவிட்டு, வரட்டுமா என்று வேகமாகக் கிளம்பினேன்.

தக்கத் திமி தக்கத் திமி தக்கத் திமிதா. யௌனத்தின் மஞ்சள் நதிச்சுழல் மூச்சைக் கௌவியது. திமி திமி திமி திமிதா. பருவத்தின் யௌனச் சவுக்கு சடேரென அடிக்கிறது நெற்றிப்பொட்டில். வளைந்து நெளியும் கைகளில் விரல்களின் ஜாலம். வளைந்து வளைந்து நிற்காமல் ஆடும் சலங்கைக் கால்கள். அவயங்களின் லயம். நீண்ட ஜடை பல்திசையிலும் சுழன்று சுழன்று அவளை விழுங்கி விடுமோ என்ன. ஜதிக்கேற்ப சுழலும் கண்களைப் பற்ற முடியாத அந்தரவெளி. பலவாறாக அசையும் ஒய்யாரத் தலைகளை, முகங்களை எண்ணிவிட முடியுமோ. புருவக் குறியீடுகளின் வழியே ஊடாடும் பார்வையின் பாவுகளில் எதை நெய்கிறாள்?

திக்குகளையும் டீச்சரையும் வணங்கிவிட்டு, தீபி அமர்கிறாள். சலங்கைச் சப்தம் காதுகளுக்குள் நின்றபாடில்லை. கண்களுக்கப்பால் ஒரு நடனம் தொடங்கியிருந்தது. டீச்சர் ஏதோ கேட்கிறார். நானும் ஏதோ சொல்கிறேன். அப்படியானால் ஒத்திகை போதும் அல்லவா. தீபி விழாவுக்கு தயாராகிவிட்டாள். எனது கண்கள் தீபியைவிட்டு அகலவே இல்லை. தீபி நீ போகலாம் என்கிறார் டீச்சர். தீபி மீண்டும் வணங்குகிறாள். ‘மாமா வரட்டுமா?’ என்று கூறிவிட்டு, அனாயசமாக ஒரு சிரிப்பையும் என் மேல் எறிந்துவிட்டுக் கிளம்புகிறாள். நானும் ‘டீச்சர் கிளம்புகிறேன். நடனம் சிறப்பாகவே அமைந்துவிட்டது. நல்ல வொர்க்’ எனப் பாராட்டிவிட்டுக் கிளம்பினேன். வெளியே வந்தால் அந்தச் சிறு மஞ்சள் வெயிலிலும் கூட கண்கள் கூசின. தீபி எந்தப் பக்கம் போனாள். உடனே அவளைப் பார்க்க வேண்டும். பேச வேண்டும். எங்கே போனாள் தீபி?

download (33)

சப்தத்தின் திசை கொண்டு குறுக்கும் நெடுக்குமாக விழுந்தடித்து ஓடுகிறேன். தோப்பு முடிவதற்குள் அவளைப் பிடித்துவிட வேண்டும். தோப்பைக் கடந்து கண்மாய்க்கரை ஏறி இறங்கினால் வரும் தெருவில் இருக்கிறது அவள் வீடு. தீபி தீபி தீபி என்று சப்தம் வராமல் கத்துகிறேன். அந்தராத்மாவின் குரல் எப்படியும் அவளைச் சேர்ந்துவிடும். சலங்கைச் சப்தம் நின்றுவிட்டது. தீபி நிற்கிறாள். எனது குரல் அவளைத் தொட்டுவிட்டது. அப்படியானால்? அதோ, தீபி. புளியமரத்தடியில் நின்று ஒரு தாழ்ந்த கொப்பை வளைத்து புளியம் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கிறாள்.

சிவப்பும் மஞ்சளும் கலந்த நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட மந்திரப் பூக்களல்லவா அவை? என்னைப் பார்த்ததும், கொப்பை விடுவித்துவிட்டு, பாராதவளாக நடக்கத் தொடங்கினாள். புளியம்பூக்கள் நசுங்கிவிடாமல் உள்ளங்கையை ஒரு பந்தாக்குகிறாள். பந்துக்குள் என் இதயமும் சுருள்கிறது. ஏன் இவ்வளவு வேகமாக நடக்கிறாள். தோப்பு முடிந்து போகிறது. கண்மாய்க்கரையில் ஏறி மிதக்கிறாள். நானும் அவளைப் பார்த்தபடியே நடக்கிறேன். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு கண் சிமிட்டும் நேரத்தில் எங்கோ மறைந்து போனாள். சலங்கை சப்தமும் நின்றுவிட்டது. கண்மாய்க் கரையில் சறுக்கி அடுத்த பக்கம் இறங்கிவிட்டாளா. அடுத்த பக்கம் தண்ணீர் அல்லவா இருக்கிறது. கரை உச்சிப் பகுதியில் நின்று நாலாபுறமும் சுற்றிப் பார்க்கிறேன். எங்கும் அவள் இல்லை.

அந்த நாளும் இரவும் அமைதியற்றுப் போனது. தொலைக்காட்சியைக் கூட போடாமல் படுக்கையில் வெகுநேரம் புரண்டு கொண்டே இருக்கிறேன். எப்பொழுது தூங்கினேன் எனத் தெரியவில்லை. நான் தோப்புக்குள் நடந்து கொண்டிருக்கிறேன். எனக்கு முன்னால் சலங்கைச் சப்தம். தீபி தீபி தீபி என்று சப்தம் வராமல் கத்துகிறேன். ஆத்மாவின் அடிக்குரல் எப்படியும் அவளைச் சேர்ந்துவிடும். சலங்கைச் சப்தம் நின்றுவிட்டது. தீபி நிற்கிறாள். எனது குரல் அவளைத் தொட்டுவிட்டது. அப்படியானால்? அதோ, தீபி. புளியமரத்தடியில் நின்று ஒரு தாழ்ந்த கொப்பை வளைத்து புளியம் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கிறாள். சிவப்பும் மஞ்சளும் கலந்த நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட மந்திரப் பூக்களல்லவா அவை? என்னைப் பார்த்ததும், கொப்பை விடுவித்துவிட்டு, பாராதவளாக நடக்கத் தொடங்கினாள்.

புளியம்பூக்கள் நசுங்கிவிடாமல் உள்ளங்கையை ஒரு பந்தாக்குகிறாள். பந்துக்குள் என் இதயமும் சுருள்கிறது. ஏன் இவ்வளவு வேகமாக நடக்கிறாள். தோப்பு முடிந்து போகிறது. கண்மாய்க்கரையில் ஏறி மிதக்கிறாள். நானும் அவளைப் பார்த்தபடியே நடக்கிறேன். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு கண் சிமிட்டும் நேரத்தில் எங்கோ மறைந்து போனாள்.

அவள் மறைந்த திசையில் ஒரு வினோத மரம் நிற்கிறது. பக்கத்தில் போய் நிற்கிறேன். ஒரு பெண்ணைப் போலவே நின்ற அந்த மஞ்சள் மரத்தின் எல்லா இலைகளிலும் ஒரு கண் சிரித்துக் கொண்டிருந்தது. கிளைகள் தீபியின் கைகள் போலவே மஞ்சள் நிறத்தில் வழுவழுப்பாக ஒளிர்ந்தன. மரம் முழுவதுமே தசைமரமாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை. ‘மாமா’ என்று ஒரு குரல் மரத்துக்குள்ளிருந்து வந்தது. மரம் தீபி ஆகிவிட்டதா அல்லது தீபி மரம் ஆகிவிட்டாளா? ஒரு கிளை அசைந்து தாழ்ந்து என்னை நோக்கி நீண்டது. தீபீ என்று கத்தியபடி விழித்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாக நான் தீபியை சந்திக்கவே இல்லை.

௦ ௦ ௦ ௦ ௦ ௦

சூஹா ஜால் ( சிறுகதை ) / சத்யானந்தன்

download (12)

“மாமா… எந்திரிங்க​… டீ ரெடி,” வேலு என்கிற​ வேலப்பன் என்னை எழுப்பிய​ போதுதான் நான் விழுப்புரத்தில் இல்லை, நள்ளிரவே சென்னைக்கு வந்து விட்டேன் என்பது உறைத்தது. இரவு எட்டு மணிக்கே செண்பகா என்னுடைய​ பயணப் பையைத் தயார் செய்து விட்டாள்.

“பசங்க​ ஸ்கூலுக்குப் போவ​ என்ன​ பண்ணுவாங்க​?” என்ற​ என் ஒரே ஆயுதத்தை அவள், “பக்கத்து வீட்டுப் பசங்களோட​ ஷேர் ஆட்டோவுல​ போவாங்க​,” என்று நொடியில் மழுங்கடித்தாள். ஐநூறு ரூபாயை எங்கே ஒளித்து வைத்திருந்தாளோ என் கையில் திணித்தாள்.

கோயம்பேட்டில் இருந்து எந்தப் பேருந்தில் அரும்பாக்கத்தில் உள்ள​ வேலுவின் வீட்டுக்குப் போகலாம் என​ விசாரித்து விட்டாள். அதற்கு முன்பே அவள் வேலுவிடம் நான் இல்லாத​போது பேசி இருக்க​ வேண்டும்.

“அக்கா போடற​ டீ போல​ இருக்காதுன்னு பாக்காதீங்க​…இவன் பீகார் ஆளு. அவங்க​ ஊர்ல​ போடற​ மாதிரி இஞ்சி டீ நல்லாதான் போடுவான்.” சுமார் ஐந்தடி இருக்கும். இருபது வயது இளைஞன் என்னளவு கருப்பானவன். கை கூப்பி வணங்கினான்.

வேலுவின் அறையை நோட்டம் விட்டேன். எனக்காக​ நேற்று நள்ளிரவில் அவன் விட்டுக் கொடுத்த​ நாடாக்கட்டில் தவிர​ இரண்டு ‘பிளாஸ்டிக்’ நாற்காலிகள். அவற்றுள் ஒன்றின் மீது அவன் கையில் தினத்தந்தியுடன் இருந்தான். சுவரில் நான் செண்பகா மற்றும் குழந்தைகள் இருக்கும் படம், வேலு – செண்பகாவின் தாய்​ தந்தையர் இருக்கும் படம் இரண்டும் இருந்தன​.

அறையின் ஒரு மூலையில் சிறிய​ சமையல் மேடை. அதன் எதிர்புறமாக​ சிறிய குளியல் மற்றும் கழிப்பறை.​ மற்றொரு மூலையில் நான்கு தட்டு கொண்ட​ ஒரு சிமெண்ட் பலகைகளாலான​ சுவர் அலமாரி. அதன் மேற்தட்டில் வினாயகர் படம் வெங்கடாஜலபதி படம் வைக்கப்பட்டிருந்தன​. சிறிய​ பித்தளை விளக்கு ஒன்றும் இருந்தது. அடுத்த​ தட்டில் சமையற்பாத்திரங்கள், சாப்பாடு வைக்கும் நான்கு அடுக்கு ‘டிபன் கேரியர்’. அடுத்த​ தட்டில் பெரிய​ பயணப் பெட்டி அருகில் பெரிய​ பயணப் பை. அதை ஒட்டி ஒழுங்காக​ அடுக்கிய​ உள்ளாடைகள். கீழ்த் தட்டில் பழைய​ செய்தித் தாட்கள். அருகே ஒரு பெரிய​ தகரத்திலான​ பயணப் பெட்டி. பீகார்ப் பையன் மிகவும் மரியாதையானவன் போல​. அறையின் வாயிலை ஒட்டிய​ வராண்டாவில் அமர்ந்து கொண்டான். பையில் பல்துலக்கியைத் தேடினேன். “டீ ஆறிடும். வாயை கொப்பிளிச்சிட்டுக் குடிங்க​. பிறகு பல் துலக்கி இன்னொரு டீ குடிப்போம்.”

“நீ சீக்கிரமே குளிச்சிட்டியா வேலு…?”

“இல்ல​ மாமா. வழக்கம் போலதான். இப்போ மணி எட்டாவுது. நாம் சுமார் ஒம்பது மணிக்கிக் கிளம்பினம்னா பத்து மணிக்குள்ளே நா வேல​ பாக்குற​ ஓட்டலுக்குப் போயிரலாம். கண்ஷ்யாம்” ”

வேலைக்காரப் பையன் வந்தான். “நீ கெளம்பு. மாமா ஸாப் என்னோட​ வருவாரு,” என்றபடி சுவர்க் கொக்கியில் தொங்கிக் கொண்டிருந்த​ தனது சட்டையில் இருந்து இரு பத்து ரூபாய்த் தாட்களை எடுத்துக் கொடுத்தான். வாங்கிக் கொண்டு அவன் மாடிப்படியில் பாதி இறங்கி இருக்க​ மாட்டான் அறை வாயில் வரை போய், “சூஹாஜால் வெச்சியா?” என்றான். “வச்சிருக்கு ஸாப்.”

“சூஹா ஜால்னா என்ன​?” என்று நான் கேட்க​ வாயெடுப்பதற்குள், “மாமா நீங்க​ உள்ளே தாப்பாப் போட்டுக்கிட்டுக் குளிங்க​. நான் மொபைல் டாப் அப் பண்ணிக்கிட்டு வரேன்,” என​ சட்டையைக் கொக்கியிலிருந்து எடுத்தவன் அதை மாட்டியபடியே படி இறங்கி விட்டான்.

இரவில் முழுத்தூக்கம் இல்லை. கண் எரிச்சல். அரும்பாக்கத்தில் இருந்து வெகு நேரம் நத்தை போல ஊர்ந்து சென்ற பயணத்தில் வேலு தனது இருசக்கர வாகனத்தை பல பெரிய வாகனங்களுக்கு இடையே நுழைத்து முன் சென்று வித்தை காட்டினான். விழுப்புரத்தில் நான் பயன்படுத்துவது சிறிய மொபெட் வண்டி. வேலு அதனுடன் ஒப்பிட மிகுந்த சக்தி உடைய மோட்டர் சைக்கிள் வைத்திருந்தான்.

முடியவே முடியாது நீளுமோ எனத் தோன்றிய அந்தப் பயணம் வண்டி ஒரு ரயில் பாதைக்குக் கீழ்ப்பட்ட பாலத்தைக் கடந்த பின் விரைவு பட்டது. ஒரு நாற்சந்தியில் சற்றே சிக்கினோம். அதன் பிறகு வளைந்து நெளிந்த சாலையின் முடிவில் இடது பக்கம் கூவம் வந்த பின் நேரான சாலை தென்பட்டது.

“இதுதான் கிரீம்ஸ் ரோடு” என்றான் வேலு. அதில் நுழைந்து சிறிது தூரத்தில் வலது பக்கம் காட்டி, “இது தன் அப்போல்லோ ஆஸ்பத்திரி,” என்றான். அதைப் பார்ப்பதற்குள் அதுவும் கடந்து விட்டது. இது பிஎஸ் என் எல், இது பிரஸ்டீஜ் பல்லடியம் என்று சொல்லிக் கொண்டே வந்தான் . எல்லாமே நான் பார்ப்பதற்குள் காணாமற் போயிருந்தன. உயரமான கட்டிடங்கள் அவை என்பது மட்டும் பிடிபட்டது.

ஒரு வழியாக ஓர் இடத்தில் வண்டி நின்றது. நடைமேடையின் மீது நான் இறங்கிய பின் வண்டியை ஏற்றி நிறுத்தினான் வேலு. உணவகம் வித்தியாசமாகவே இருந்தது. நுழைந்த உடன் இடது கைப்பக்கம் பெரிய தோசைக்கல் மட்டுமே ஒரு மூலையில் இருந்தது. அதைச் சுற்றி எவர்சில்வர் மேஜைகள் அதில் உணவை அட்டைப் பெட்டிகளில் அடைத்துக் கொண்டே இருந்தார்கள். ஓர் அடைப்பின் பின் பக்கம் அவை இருக்க முன்பக்கத்தில் கண்ணாடிக் கூண்டுக்குள் வரிசையாக எவர்சில்வர் அடுக்குகளுக்குள் சட்டினி, சாம்பார், பலவகை சாதங்கள், தயிர் வடை, சாம்பார் வடை எல்லாமே காட்சிக்கு இருந்தன.

அந்த அடைப்பு ஒரு பெரிய கூடத்தின் பாதிப்பகுதி. மீதிப்பகுதியில் ஒரு சிறிய நடை போக நான்கு அடி உயரத்துக்கு எவர்சில்வரில் செய்யப்பட்ட வட்டவடிவ மேஜைகள் நின்றன. அதில் ஒருவர் நின்றபடியே சாப்பிடலாம். நான் அப்படி ஒரு மேஜை அருகில்தான் இருந்தேன்.

பரோட்டாவின் மாவை நான் வழக்கமாக எப்போதுமே சிறு வளையங்களைப் போல வரிசையாக வைத்து விடுவேன். பிறகு கும்பலைப் பொருத்து அதைச் சுழற்றிச் சுழற்றிப் பிறகு மெதுவாக சப்பாத்திக் கட்டையில் சமன் படுத்தி கல்லில் இட்டு எடுப்பேன். இங்கேயோ ஏற்கனவே சமைக்கப்பட்ட பரோட்டாவை வெறுமனே கல்லின் மீது சூடு செய்வது மட்டுமே இவர்கள் வேலை.

“சாப் ..இட்டிலி சாப்டு,” வேலு வீட்டு வேலைக்காரப் பையன். இரண்டு இட்டிலி வடை இருந்த தட்டை நின்றபடி சாப்பிடும் மேஜை மீது வைத்தான். கை கழுவுமிடம் ஒரு நீண்ட நடையின் முடிவில் இருந்தது. அதன் இடப்புறம் பரிசகர்கள் பரிமாறும் மேஜைகள் நிறைந்த கூடம். விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

நான் சாப்பாட்டு மேஜையை நெருங்கியபோது வேலு அங்கே இருந்தான். “இந்தப் பையன் எப்படி இங்கே?” என்ற என் கேள்விக்கு, “அவன் வேலை பாக்குறதே இங்கினதான். தங்கறதுதான் என் ரூம்ல,” என பதிலளித்தான்.

“வாடக குடுப்பானா?”

“வாடகயெல்லாம் தரமாட்டான். இவுங்க தர்ற ஆறாயிரத்துல ஐயாயிரத்தை வீட்டுக்கு அனுப்பிடுவான். மிச்சம் ஆயிரம்தான். சாப்பாடு இங்கயே கெடைச்சிரும்.”

“உனக்கும் வீட்டு வேலைக்கு ஆளாச்சு.”

“அவன் கிடைச்சதக்கு இங்கே வேல பாக்கற தமிழ் பசங்கதான் காரணம்,”

அப்போதுதான் கவனித்தேன். தென்பட்ட இருபது பேரில் தமிழ் ஜாடை இருந்தவர்கள் மூன்று நான்கு பேர்தான்.

“இந்தத் தமிழ்ப் பசங்களோடதான் இவன் இருந்தான்.” தொடர்ந்தான் வேலு, “ராத்திரில அவனுங்க தொல்ல தாங்காம என் கிட்டே அடைக்கலமானான்.”

“குடிச்சிட்டு கலாட்டாப் பண்ணுனானுங்களா?”

“அதில்ல. நாலு பேருல ஒருத்தன் நடுராத்திரி இவன் தனியா இருக்கும் போது தொந்தரவு செஞ்சதுல இவன் அலறி அடிச்சிக்கிட்டு எங்கிட்ட ஓடி வந்திட்டான்.”

அவனுடைய கைபேசி ஒலிக்கவே நகர்ந்தான். வேலைக்காரப் பையனையும் காணவில்லை. திடீரெனத் தனியானேன். கிரீமஸ் ரோடில் ஒரு சுற்று சென்று வந்தேன். வேலு காட்டிய உயரமான கட்டிங்களில் இருந்து மதியம் ஒரு மணி சுமாருக்கு பலவித ஆடைகளில் ஆண்களும் பெண்களும் ஆங்கிலத்தில் கைபேசியில் வெளுத்துக் கட்டியபடி வந்தார்கள். சிலர் கைபேசியை கவனித்தபடியே மெதுவாக நடந்து உணவகம் வந்தார்கள். பெண்கள் ஆண்கள் தோளில் கூச்சமில்லாமல் கைபோட்டபடி வந்தது போதாதென்றால் ஒரு பெண் புகை பிடித்தது எனக்கு மிகவும் அதிர்ச்சி.

மதிய உணவுக்கும் வேலுவின் உணவகத்தில் சென்று நிற்க எனக்கு விருப்பமில்லை. சந்து ஒன்றில் கால் பிளேட் பிரியாணி 50 ரூபாய்க்குக் கிடைத்தது. இரண்டரை மணிவரை அந்த உணவகத்துக்கு நிறையவே கூட்டம். வசதியானவர்கள் நிறைய.

வேலு திடீரென கைபேசியில் அழைத்தான். “மாமா… சாப்பிட்டீங்களா?”

“ம்,” என்று பொதுப்படையாக பதிலளித்தேன்.

“மாமா… இங்கே மானேஜர் இன்னிக்கி ஊர்ல இல்லே. நாளைக்கி உங்கள அவருக்கிட்டே கூட்டிட்டுப் போறேன். ஏழு மணி சுமாருக்கு இன்னிக்கி வீட்டுக்குப் போலாம். சினிமா எதாவது பாக்குறீங்களா?”

“சரிப்பா,” என்று பதிலளித்தேனே ஒழிய எனக்கு சினிமாவில் நேரம் போக்க விருப்பமில்லை. எம்ஜியார் சமாதிக்குப் போய் வெகுநாட்களாயிற்று. அப்படியே கடற்கரையையும் பார்க்கலாம்.

மெரினாவில் எப்படி எந்த நாளிலுமே கும்பல் கூடுகிறது என்பது ஆச்சரியமாக இருந்தது. மெரினாவில் சுற்றித்திரிந்து எம்ஜியார் சமாதியில் வணங்கி வெளியே வந்தபோது 27பி என்னும் பஸ் கண்ணில் பட்டது.

கோயம்பேடு போகிற பேருந்து அது. கொண்டு வந்திருந்த பயணப்பையில் மற்றுமொரு மாற்றுடை உண்டு. பணம் ஏதுமில்லை. இப்போது விழுப்புரம் போனால் வேலு அக்காவைப் பார்க்க வரும்போது அந்தப் பையைக் கொண்டு வரட்டுமே. ஏறி அமர்ந்தேன். சற்று நேரத்தில் ஆழ்ந்து உறங்கியும் விட்டேன்.

“கோயம்பேடு வந்துடிச்சு.இறங்கு,” என்று ஒருவர் தோளில் தட்டி விட்டு இறங்கிய போதுதான் விழித்தேன்.

டீ குடிக்க வேண்டும் போலிருந்தது. கைக்கு டீ வரும் முன்பே செண்பகாவிடமிருந்து ஃபோன்.

“மாமா எங்கே இருக்கீங்க? வேலு ஃபோன் பண்ணினாமே? நீங்க எங்கன்னு தவிச்சிட்டான்”

“தூங்கிட்டேன்.”

“எங்க தூங்கினீங்க? நீங்க ரூம்ல இல்லியாமே?”

“கோயம்பேடு வர்றப்போ டவுன் பஸ்ஸுல தூங்கிட்டேன்.”

“எதுக்குக் கோயம்பேடு?”

“என்னடி கேள்வி? விழுப்புரத்துக்கு பஸ் ஏறத்தான்.”

“பாருங்க மாமா… விழுப்புரம் சின்ன ஊரு… நீங்க சண்டைக்காரன்னு பேச்சுப் பரவியிருக்கு. இங்க வந்து வீட்டில உக்காந்து என்ன பண்ணப் போறீங்க?”

“என்னடி நீ ஸ்கூல்ல ஆயா வேல செய்யுற திமிரா? மூட்டை தூக்குவேண்டி.”

“சும்மா பேசாதீங்க மாமா… அதுக்கெல்லாம் உங்களுக்குப் பழக்கமே கிடையாது. பலமும் இருக்காது. இன்னிக்கி ஒரு நாள் இருங்க வேலுவோட. நாளைக்கி அவனோட மானேஜருக்கிட்டே இட்டுக்கிட்டுப் போவான்.”

“நா இன்னிக்கி வரக்கூடாதா?” என்னையும் அறியாமல் குரலை உயர்த்திக் கத்தினேன்.

“பசங்க கிட்டே நீங்க அங்கே வேலை பாக்கப் போறீங்க. வர்ற வாரம் எங்களுக்கெல்லாம் மெட்ராஸ் சுத்திக் காட்டுவீங்கன்னு சொல்லிட்டன்.”

“……………………….”

“கொஞ்ச நேரத்தில வேலுவை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்டாண்ட வரச்சொல்லுறேன், மாமா. வாசல்ல நில்லுங்க” அவள் போனை வைத்து விட்டாள்.

வேலு திரும்பப் போகும் வழியிலேயே உணவு வாங்கிக் கொடுத்தான். வீட்டை அடைய மணி பதினொன்றாகி விட்டது. கட்டிலில் அமர்ந்த உடன் ‘கீச் கீச் என்னும் சத்தம் கேட்டு பதறி அடுத்து எழுந்தேன். “கண்ஷ்யாம்,” வேலு அடித்தொண்டையில் கத்தினான்.

பதிலே இல்லை. “நவருங்க மாமா,” என்று கட்டிலுக்குக் கீழே குனிந்த வேலு ஒரு எலிப்பொறியை எடுத்தான்.உள்ளே ஓர் அணில். வேலு அதை அறை வாயிலில் வைத்தான்.

சற்று நேரத்தில் கையில் கொசுவத்தி டப்பாவுடன் அந்த வேலைக்காரன் தென்பட்டான்.

வேலு எலிப்பொறியைக் காட்டி, “சூஹாஜால்,” என்றான்.

“அச்சா,” என்று குனிந்து பார்த்த அவன் முகம் பிரகாசமானது. அதை எடுத்துக் கொண்டு படிகளில் இறங்கினான்.

•••••

சத்யானந்தன்

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீனவிருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு, தீராநதி உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையத்தளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி). இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் பெரும்பாலும் திண்ணை இணைய இதழில் பிரசுரங்கண்டன. நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர். வாசிப்பையும் எழுத்தையும் இருகரைகளாகக் கொண்டு ஆரவாரம் இல்லாத மிக அமைதியான ஆறாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் இவர் சமகால எழுத்துக்களை அலுக்காமல், சளைக்காமல், அமைதியாகத்தன் போக்கில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, விமர்சித்து, கவனப்படுத்தி வருகிறார்.

sathyanandhan.mail@gmail.com
sathyanandhan.tamil@gmail.com

சின்னஞ்சிறு (சிசி) கதைகள்/ செல்வராஜ் ஜெகதீசன்

download (4)

சின்னஞ்சிறு (சிசி) கதை-1

அபிப்பிராயம்
#

எல்லாரிடமும் அபிப்பிராயம் கேட்டாகி விட்டது. என்னைத் தவிர. …
விஷயம் இதுதான். கலாவிற்கு இப்போதை விட கூடுதல் சம்பளத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் வேலை ராஜஸ்தானில்.
சென்னையில் இருந்து ராஜஸ்தான். போகலாமா வேண்டாமா?

எல்லாரிடமும் கேட்டானபின் என் முறை. எதிரில் கலா.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது? ஒன்று நீங்கள் கவனிக்க வேண்டும் கலா. நான் ஏதாவது சொன்னாலும், அது, நான் அந்த நிலையில் இருந்தால் என்ன செய்வேன் என்பதாகவே இருக்கும். அது உங்களுக்கு எப்படி பொருந்தும்? ஆகவே நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு இது. நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா?”

அவள் எழுந்து போன வேகத்தில் ஏதோ புரிந்த மாதிரி தான் தெரிந்தது.

o

சின்னஞ்சிறு (சிசி) கதை-2

மௌனமே காதலாய்

#

கண்ணீரை திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தது தொலைக்காட்சி. …
எந்தவிதக் கண்ணீருமின்றி, அமைதியாய் இருந்தது எங்கள் அடுத்த வீட்டு நாய் ஒன்று, அதன் துணை இறந்த நாளிலிருந்து.
அடுத்தடுத்த நாட்களில்தான், அனைவருமே கவனித்தோம். எப்போதும் குறைக்குமந்த நாயின் இடைவிடாத மௌனத்தை.

o

சின்னஞ்சிறு (சிசி) கதை-3

காதல் கடிதம்
#

அடுத்த வீட்டிலிருந்து அப்படியொரு சத்தம். ஓடிப்போய் பார்த்தபோது உதைபட்டுக் கொண்டிருந்தான் சக்கரை. எங்களுக்கு தெரிந்த நாளிலிருந்து புத்தி சரியில்லாதவன். காதல் கடிதம் ஒன்றைக் காட்டி, எவர் கொடுக்கச் சொன்னதென்று, கேட்டுக் கேட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நாள் முன்பு, என்னிடம் கடிதம் போலொன்றை, அடுத்த வீட்டு அக்காவிடம், கொடுக்கச் சொன்னவன்தான், அங்கு அதிகமாக சக்கரையை அடித்துக் கொண்டிருந்தான்.

o

சின்னஞ்சிறு (சிசி) கதை-4

விழிகள்

#

பயணங்களில் பெரும்பாலும் வாசிப்பது அவன் வழக்கம். அன்றைய வாசிப்பில் ஆழ முடியாமல், ஈர்த்தன அந்த விழிகள். இடைப்பட்ட பயணிகளின் அசைவுகளின் ஊடே அப்படியொரு நிலைத்த பார்வை. பயணம் முடிந்த பின்னும், நெடுநேரம் நினைவில் இருந்தது, கன்னத்தில் ஒரு கறுப்புப் பொட்டோடு, அவ்வப்போது சிரித்தும் வைத்த, அந்த குழந்தை (யின்) கண்கள்.

o