Category: மொழிபெயர்ப்பு

மிட்நைட் எக்ஸ்பிரஸ் – ஆல்பிரட் நோயிஸ் / தமிழில்: பெரு.முருகன்

images (1)

அதுவொரு பழைய, நைந்துபோன, சிவப்பு முரட்டுத்துணியால் மேலட்டை இடப்பட்ட புத்தகம். அவன் தனக்கு பனிரெண்டு வயதாக இருக்கும்போது, தன் தந்தையின் நூலகத்து மேல்அலமாரியில், அதைக் கண்டெடுத்தான்;மற்றும், எல்லா விதிகளுக்கும் புறம்பாக, அவன் தன் படுக்கையறைக்கு கொண்டுபோய் மெழுகுவர்த்தியின் ஒளியில் படிப்பான், அச்சமயம் அந்த அறையை தவிர்த்து, பழைய எலிசபெத் வீடு முழுக்க இருளில் ஆழ்ந்திருக்கும்.

இப்படித்தான் இளம் மார்டிமர் நினைத்துக் கொண்டிருப்பான்.அவனது அறை தனித்துவிடப்பட்ட சின்னஞ்சிறு பெட்டியாகும், அதில் திருடப்பட்ட மெழுகுவர்த்திகளின் ஒளியால், சூழும் இருளை கடல்வரை துரத்திவிடுவான், அதேநேரம் மற்றவர்கள் எல்லாரும் உறக்கத்திற்கு அடிமையாகி, வெளிப்புற இருளை உள்ளே வரவிட்டிருப்பர். தன்னுணர்வை நீக்கிய அவன் மூத்தோர்க்கு எதிராக, அப்போது அவன் இளம்மூளையில், ஒவ்வொரு நாடிநரம்பும் உச்சபட்ச உயிருடன் இருக்கும். கீழிருக்கும் கூடத்தில் அவன் தாத்தாவின் கடியாரம் துடிக்கும் ஓசை, தன் இதயம் துடிக்கும் ஓசை, தூரப் பிரதேசத்தின் கடலலைகளின் இடைவிடாத `ஹா’என்ற ஓசை, இவையெல்லாம் அவனையொரு பெரும் மர்மத்தில் ஆழ்த்தும். அவன் நூலை படிக்கும்போது, குருட்டு விட்டில் பூச்சியொன்று, மெழுகுவர்த்திக்கு மேலுள்ள சுவரில், மென்மையுடன் மோதி எழும் ஓசையால், காட்டில் சுள்ளிஉடையும் சப்தத்தை உன்னிப்புடன் கேட்கும் ஜந்துவென திடுக்கிட்டுப் போவான்.

நைந்துப்போன பழைய புத்தகம் அவனுக்கு விநோதமான ஆர்வத்தை தந்தாலும், அந்நூலின் சாரம் மட்டும் பிடிபடவேயில்லை. அது மிட்நைட் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்பட்டது. அதன் ஐம்பதாவது பக்கத்தில், ஒரு படம் இருந்தது, அதை அவன் பார்க்கவே மாட்டான். ஏனெனில் அது அச்சத்தை தந்தது.
அந்த படத்தின் தாக்கத்தைப் பற்றி இளம்வயது மார்டிமர் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அவன் கற்பனைவளம் மிகுந்தவன். ஆனால் பித்துப்பிடித்தவன் அல்லன், அவன் ஆறுவயது சிறுவனாக இருந்தபோது,வளர்ந்தவொரு மனிதனாக தனிமையான சாலையிலோ, இருளான படிக்கட்டு மூலையிலோ சடாலென்று வந்துவிடுபவன்போல், புராதன கடலோடி சுற்றிலும் பார்த்துவிட்டு வந்துவிடுவதைபோல், அந்த ஐம்பதாவது பக்கத்தை கடந்துவிடுவான்.அந்த படத்தில் ஒன்றுமேயில்லை -வெளிப்படையாக -அமானுஷ்யத்தனமாக இல்லை. அதன் பிரதானமான கருத்தானது இருள், அதுமட்டுமே; அதுவொரு சூனியமான இரயில்வே நிலைய நடைபாதையை காட்டியது -இரவில் -அதில் ஒரேவொரு சாரமில்லாத விளக்கு: அது ஏதோவொரு நாட்டின், ஆளில்லா பகுதியில் அமைந்திருந்த, தனிமையான கூட்டுப்பாதையின், சூனியமான இரயில்வே நடைபாதை. அங்கே நடைபாதையில் ஒரேஒரு உருவம் இருந்தது:ஒரு மனிதனின் கருத்த நிழலுருவம், ஏறத்தாழ விளக்குக்கு அடியில் நின்றிருந்த அவன், இரயில்வரும் குகைப்பாதையை நோக்கி தன்முகத்தை திருப்பியிருக்க-அதன் விநோதமான காரணத்தினால் -சிறுவனை அதீத பயங்கரத்தில் அப்படம் ஆழ்த்தியிருந்தது .

அந்த மனிதன் எதையோ கேட்டுக்கொண்டிருப்பதை போல் தோன்றியது. அவனுடைய தோரணை குழப்பமாக, பயங்கர நிகழ்வை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதாகவும் தோன்றியது. சிறுவன் படித்தவரையில், எழுத்தில் எதுவும் சொல்லப்படாததால், விழித்துக்கொண்டிருக்கும் பயங்கர கனவைப்பற்றி, அவனால் எதையும் புரிந்துக்கொள்ள முடியவில்லை .அவனால் புத்தகத்தைப்பற்றிய ஆர்வத்தை அடக்க முடியவில்லை, அதேநேரம் இரவின் தனிமையில், பீதியில் அப்படத்தை ஏறெடுத்தும் பார்க்க இயலவில்லை.

எனவே அவன் இரண்டு ஊசிகொண்டு அப்பக்கத்தை தைத்துவிட, இனி அவனால் ஏதேச்சயாகக்கூட அப்படத்தை பார்க்க முடியாது. பிறகு அக்கதையை முழுக்க படித்துவிடுவதென அவன் தீர்மானித்துக் கொண்டான். ஆனால் ஐம்பதாவது பக்கத்தை தொடும்போது அவன் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவான்; அவன் அதுவரை படித்ததெல்லாம் கனவுபோல் நிழலாடும்; அடுத்த நாள் இரவில் திரும்பவும் தொடங்குவான்; ஆனால் ஐம்பதாவது பக்கம் வரும்போது திரும்பவும் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவான்.

அவன் வளர்ந்ததும், அந்த புத்தகத்தை, படத்தைப்பற்றி எல்லா விஷயத்தையும் மறந்துவிட்டான். ஆனால் தன்வாழ்வின் பாதிகட்டத்தில், விநோதமான சர்ச்சைக்குரிய நேரத்தில், மார்டிமர் ஒரு அடர்ந்த காட்டிற்குள் நுழைந்து, நேரான பாதையை விட்டுவிட்டு, நள்ளிரவுக்கு சற்றுநேரம் முன்பாக, ஆளில்லா கூட்டுப்பாதையில், தானொரு இரயிலுக்கு காத்திருப்பதைக் கண்டான்; மேலு‌ம், நிலையத்தின் கடியாரம் பனிரெண்டை தொட்டு மணியடித்தபோது பழைய ஞாபகம் வந்தது; நீண்டதொரு கனவிலிருந்து விழித்துக்கொண்ட ஒரு மனிதனின் ஞாபகமென அவன் நினைவுகூர்ந்தான்.

அங்கே, மங்கலான விளக்குக்கு அடியில், நீண்டதொரு, ஒளிமங்கிய நடைபாதையில், அவன் முன்பே அறிந்த, கறுப்பான உருவம் தனிமையில் நின்றிருந்தது. அதன் முகம் ,அவனுக்கு எதிர்புறமாக, குகைப்பாதையின் கறுத்த வாயிலை பார்த்திருந்தது.அது, முப்பதெட்டு வருடங்களுக்கு முன்பிருந்ததைப்போல, அதன் தோரணை குழப்பமாக, எதையோ கேட்டுக்கொண்டிருப்பதைபோல் தோன்றியது.

ஆனால் அவன் குழந்தைப் பருவத்தில் இருந்ததைப்போல் இப்போது அச்சம்கொள்ளவில்லை. அவன் அந்த கறுத்த உருவத்திடம் போவான், அதன் எதிரே நிற்பான், நீண்டகாலமாக மறைந்திருந்த, அவன் பார்க்கவண்ணம் தடுக்கப்பட்டிருந்த, அதன் முகத்தைப் பார்ப்பான். அவன் அமைதியாக நடந்துசென்று, அதனிடம் பேச, ஏதேனும் விஷயத்தை தேர்ந்தெடுப்பான். உதாரணமாக, இரயில் வர இன்னும் நேரமாகுமா என்று . ஒரு வளர்ந்த மனிதனுக்கு இதையெல்லாம் செய்வது மிகச்சுலபம். ஆனால் முதலடி எடுத்துவைக்கும்போதே, அவன் கைகள் கோர்த்துக் கொண்டன.

அதாவது அவனுங்கூட, குழப்பத்தில் ஆழ்ந்தவனைப்போல், எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனைப்போல்; ஆனால் தேய்ந்துபோன பழைய ஞாபகம் அவனை எழுப்பிவிட்டதைப்போல், விளக்குக்கு அடியில் நின்றிருந்த அவ்வுருவத்தை நோக்கி அவன் நடந்துசென்று, அதைக் கடந்து, தடாலென்று திரும்பி அதனோடு பேசுவதற்கு முயன்றான்; பிறகுதான் அதைப் பார்த்தான் – ஒரு வார்த்தைகூட பேசாமல், பேசவேமுடியாமல்-
அது இவனேதான் – இவனை வெறிக்கப் பார்க்கிறது – கேலிபேசும் நிலைக்கண்ணாடியென, அவன் தன் சொந்தக் கண்கள் அவன் தன் வெண்ணிற முகத்திலிருக்க, அவை இவன் கண்களுக்குள் பார்த்தன, உயிர்கொண்டு-

அவன் இதயத்தின் நாடி நரம்புகள் துடிக்கத் தொடங்கி, ஸ்தம்பிக்கச் செய்வனபோல் தெரிந்தன. பீதியின் அலைகள் அவனுக்குள் அடித்தன. அவன் திரும்பி, மூச்சிரைத்து, தடுக்கியபடி, கண்மண் தெரியாமல், ஆளற்ற எதிரொலி உண்டாக்கும், டிக்கெட் பதிவுசெய்யும் அலுவலகத்தை கடந்து, நிலையத்தின் பின்புற நிலவொளி வீசும் சாலையில் ஓடினான். அந்த பகுதி முழுவதுமே ஆளரவமற்று காணப்பட்டது. நிலவொளி கதிர்கள் தனிமையில் ஒளிவீசிக்கொண்டிருந்தன.
அவன் சற்றுநேரம் நின்று, தன் காலடி சப்தங்களைப் போலவே, பதிவுசெய்யும் அலுவலகத்தின் மரத்தரைக்கு உள்ளே, தடுக்கி விழும் காலடி சப்தத்தைக் கேட்டான். உடனே வெட்கமறியாது பயத்திற்கு தன்னை விட்டுக்கொடுத்த அவன், பயங்கொண்ட மிருகமென வியர்த்து, நீண்டதொரு நேரான கால்வாய் என, முடிவற்ற வெண்ணிற சாலையின் இருபுறமும் அடர்ந்திருந்த பாப்லர் மரங்களுக்கிடையே, ஒருபுறத்து பாப்லர் மரங்கள் பிரதிபலிக்கும் சாலையில் ஓடினான்.

அவன் காலடி சப்தங்கள் தனக்கு பின்னால் எதிரொலித்ததைக் கேட்டான். அது மெல்ல ஆனால் அழுத்தமாக அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. கால்மைல் தூரம் தாண்டி, சாலையின் ஓரத்தில், ஒரு சிறு வெண்ணிற வீட்டைக் கண்டான், அந்த வெண்ணிற வீடு, இரண்டு இருட்டைந்த சாளரங்களையும், ஒரு கதவையும் கொண்டிருந்தது, அவனுக்கு மனிதமுகத்தை நினைவுபடுத்தியது. குறித்த காலத்திற்குள், அந்த வீட்டை மட்டும் அடைந்துவிட்டால், புகலிடமும், பாதுகாப்பும் கிடைத்துவிடும் – தப்பித்தல் – என நினைத்துக் கொண்டான்.

மெலிதான, அமைதிப்படுத்த முடியாத அந்த காலடியோசைகள், அவனுடையதாக எதிரொலித்து, இன்னும் கேட்டுக்கொண்டிருக்க, அவன் முன்புறம் சாய்ந்து, சிறுவாயிலுக்குள் மூச்சிரைத்தான்; கலக்கமாக,தாழ்ப்பாளை பிடித்தாட்டினான், பின் கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டான். தட்டப்படுவதற்கு சாதனமோ,ஒலிப்பதற்கு மணியோ கிடையாது.அவன் கைமுட்டியால், இரத்தம் வரும்வரை, கதவை பலமாக குத்தினான். உள்ளிருந்து பதிலேதும் வரவில்லை. இறுதியில் வீட்டினுள்ளே, பலத்த காலடியோசைகள் அவன் கேட்டான். கரகரக்கும் படிக்கட்டுக்களில் அவை மெல்லமாக இறங்கின. பின் மெதுவாக கதவுகள் திறந்தன. உயரமான நிழலான உருவம் அவன்முன்னே நின்று,எரிகின்ற மெழுகுவர்த்தியைப் பிடித்திருந்தது; அது நின்றிருந்த தோரணையில் அதன் முகத்தையோ அல்லது உருவத்தையோ பார்க்க இயலவில்லை. ஆனால் அதன் முகத்தை சுற்றி மெழுகிடப்பட்ட துணியால் போர்த்தி,ஒரு அமைதியான பயங்கரத்தை தந்தது.
இருவருக்குமிடையே எந்தவொரு வார்த்தையும் எழவில்லை.உருவம் அவனை உள்ளே வரும்படி சைகை செய்தது;அவன் அதற்கு அடிபணியவே,அது கதவை பூட்டியது.பின் அது திரும்பவும் சைகை செய்து,பின்னொரு வார்த்தையும் இன்றி, உருவம் கோணலாகி படிக்கட்டுகளில் ஏற,பேய்த்தனமான மெழுகுவர்த்தியின் ஒளியானது, வெண்ணிற சுவர்களிலும், விதானத்திலும்,பெரும் ,அஷ்டகோணலான நிழல்களை காட்டியது.

அவர்கள் மேல்மாடியின் அறையை அடைந்தனர், அங்கே கணப்பு அடுப்பில் பிரகாசமாக தீயெரிந்துக் கொண்டிருந்தது,அதன் இருபக்கங்களிலும் கைப்பிடி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன,இடையில் சிறு ஓக்மர மேஜை இருந்தது, அதன்மேலே, பழைய நைந்துபோன புத்தகம், ஆழ்ந்த சிவப்புநிறத்துணியால் அட்டையிடப்பட்டிருந்தது.அவன் வருகையை நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருந்ததைபோல்,எல்லாம் தயார்நிலையில் வைத்திருந்தது.

உருவம் ஒரு நாற்காலியை சுட்டிக்காட்டியது,பின் மெழுகுவர்த்தியை புத்தகத்தின் அருகே மேஜையின் மேல் வைத்தது. [அவ்விடத்தில் நெருப்பை தவிர்த்து வேறெந்த விளக்கொளியும் இல்லை] பிறகு மறுவார்த்தை ஏதுமின்றி, அவனுக்குப்பின் கதவை பூட்டிவிட்டுப்போனது.
மார்டிமர் அந்த மெழுகுவர்த்தியை பார்த்தான்.அது முன்னமே பார்த்ததுபோல் தெரிந்தது.சாக்கடையான அந்த மெழுகின் நாற்றம், பழைய எலிசபெத் வீட்டின் சின்னஞ்சிறு அறையை ஞாபகத்திற்கு கொண்டுவந்தது. அவன் நடுங்கும் விரல்களால் அந்த புத்தகத்தை எடுத்தான்.நெடுங்காலத்திற்கு முன்னே அந்தக் கதையை பற்றிய விவரங்களை மறந்திருந்திருந்தாலும்,இப்போது சட்டென உணர்ந்துகொண்டான்.

அவன் புத்தகத்தின் தலைப்பிடப்பட்ட பக்கத்திலிருந்த மைக்கறையை ஞாபகம் செய்துக்கொண்டான்;பின், அதிர்ச்சிக்குள்ளாக்கும்விதமாக, குழந்தைப்பருவத்தில் தான் ஊசிகொண்டு தைத்திருந்த ஐம்பதாவது பக்கத்திற்கு வந்தான்.ஊசிகள் இன்னும் அங்கிருந்த. அவற்றை அவன் தொட்டான்-சிறுவனாக இருந்தபோது நடுங்குகின்ற விரல்களால் தொட்ட அதே ஊசிகள்தான் அவை.
அவன் திரும்பவும் தொடக்கத்திற்கு வந்தான்.அவன் புத்தகத்தை படித்து ,அதிலிருப்பதென்னவென்று கண்டுபிடிக்க தீர்மானம் கொண்டான்.அது அச்சினில் இருக்கவேண்டும் எனவும் உணர்ந்தான்;குழந்தையாக இருக்கும்போது புரிந்துக்கொள்ள முடியாவிட்டாலும், இப்பொழுது அதன் ஆழத்தை தொடபோகிறான்.
அந்நூலின் பெயர் மிட்நைட் எக்ஸ்பிரஸ் என்பதாகும்.அவன் முதல்பத்தியை படித்துமுடித்துபோது, மெல்லமெல்ல, தவிர்க்கமுடியாத பயங்கரத்தோடு ,விளங்கியது.
அதுவொரு மனிதனின் கதையாகும், அவன் நீண்டகாலத்திற்கு முன் சிறுவனாக இருந்தபோது,ஒரு புத்தகத்தை படிக்கவே,அதிலிருந்த ஒருபடம் பயங்கரத்தை ஊட்டியது.பின் அவன் அதை அறவே மறந்துபோனான்.ஒருநாள் இரவு,வெறிச்சோடிய இரயில்நிலைய நடைபாதையில், அவன் அந்த படத்தைப்பற்றி ஞாபகம் செய்து கொண்டான்.அவன் விளக்குக்கு அடியில் நின்றிருந்த உருவத்தைப் பார்த்தான் :உடனே அதைஉணர்ந்துகொண்டதும் பீதியில் ஓடினான்.வழியில் ஒருவீட்டில் அடைக்கலம் புகுந்தான்: மேல்மாடி அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டான்,அங்கே அந்த புத்தகம் இருக்க,உடனே எடுத்து படிக்க ஆரம்பித்து,கடைசியில் முடித்தே விட்டான்-இந்த புத்தகத்தின் பெயரும் மிட்நைட் எக்ஸ்பிரஸ். அதன் கதையும் ஒரு மனிதனுடையது, அவன் சிறுவனாக இருந்தபோது-இவ்வாறு அப்புத்தகம் சென்றுகொண்டே இருந்தது, முடிவேயில்லாமல்.தப்பிப்பதற்கு ஒருவழியுமில்லை.

ஆனால் கதையானது சாலையிலுள்ள வீட்டைப்பற்றி வருகையில்,மூன்றாவது முறையாக,ஒரு ஆழ்ந்த ஐயம் அவனுள் மெல்ல, தவிர்க்கவியலாமல்,அச்சமுடன் எழுந்தது-தப்பிப்பதற்கு வழியில்லாமல் இருந்தபோதிலும்,குறைந்தபட்சம் அவன் நகர்ந்துகொண்டிருக்கும்,அச்சம்தரும் சக்கரத்தை,விநோதமான வட்டச்சுழலைப்பற்றியாவது ,தெளிவான பார்வையை பெறலாம்.
விவரங்கள் பற்றி புதிதாக விவரங்கள் ஏதுமில்லை. அவை அங்கேயே இருந்துகொண்டிருக்கும்;ஆனால் அவை என்னசொல்ல வருகின்றன.அவைதான் அவனுக்கு வேண்டும்.ஏறுமாறான படிக்கட்டுக்களில் அவனை வழிநடத்திய விநோதமான பயங்கர ஜந்து -யாரது?அல்லது என்ன அது?

அவனிடமிருந்து விடுபட்டவொன்றை கதையானது சொல்கிறது.அந்த விநோத உபசாரகன், அடைக்கலம் தந்தவன்,ஏறத்தாழ அவன் உயரமிருப்பான். எனில், அதுவே அவனாக இருப்பானோ- அதனால்தான் முகம் மறைக்கப்பட்டிருக்கிறதோ?
இக்கேள்வியை கேட்டுக்கொண்ட அதே கணத்தில், பூட்டப்பட்டிருந்த கதவில் சாவியை நுழைக்கும் ஓசை கேட்டது.

விநோத உபசாரகன் உள்ளே நுழைந்தான் -அவன் பின்புறமிருந்து வந்து கொண்டிருந்தான்-அவலட்சணமான நிழலை வீசினான்,மின்னிய மெழுகுவர்த்தியின் ஒளியில், வெண்ணிற சுவரில் தெரிந்த அது மனிதவுருவை காட்டிலும் பெரிதாக இருந்தது.
அது நெருப்பின் அந்தபுறமாக அவனை பார்த்தவண்ணம் அமர்ந்தது.திடுக்கிடவைக்கும் அமைதியில், ஒரு பெண்ணானவள் ஆடையை விலக்குவதுபோல், அது கைகளை உயர்த்தி தன் முகத்திலிருந்த திரையை விலக்க சென்றது.அந்த முகம் எவருக்கு சொந்தமானது என்பதை அவனறிவான்.ஆனால் அது செத்துப்போனதா? அல்லது உயிருடன் இருக்கிறதா?

அதைஅறிந்து கொள்ள ஒரேஒரு வழி தானுள்ளது. அந்த கொடூரனின் கழுத்தை மார்டிமர் பிடித்து அழுத்தியவிநாடியில், அவனுடைய கழுத்தும் அதேஅழுத்தமான பிடியில் சிக்கிகொண்டது. இருவரின் கூக்குரல்களும் பிரித்துபார்க்க முடியாதவாறு ஒன்றிணைந்து ஒலித்தன;குழப்பமான அவ்வொலிகள் ஓய்ந்துபோன அக்கணத்தில், அந்த அறையின் ,எதுவுமே அசையாத நிலைத்ததன்மை, முப்பதெட்டு வருடங்களுக்குமுன்,வயதுமுதிர்ந்த தாத்தாவின் சுவர்கடியாரத்தின் டிக்டிக் ஓசை, தூரத்தே ,ஹா என்று அலறும் தூரத்து கடலோசை,முதலானவற்றை நீங்கள் கேட்கலாம்.

ஆனால் இறுதியில் மார்டிமர் தப்பித்தேவிட்டான்.ஒருவேளை அவன் மிட்நைட் எக்ஸ்பிரஸ் இரயிலை பிடித்துவிட்டிருக்கலாம்.
அதுவொரு பழைய நைந்துபோன, சிவப்புநிற முரட்டுத்துணியால் அட்டையிடப்பட்ட புத்தகம்.

*

இந்தக் கதை திஸ் வீக் என்ற இதழில் 1935ஆம் ஆண்டு வெளியானது. 1968இல், ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் தொகுத்த BAR THE DOORS என்ற நூலில் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.

•••••

விஸ்லவா சிம்போர்ஸ்கா (Wislawa Szymborska 1923-2012 ) மூலம் போலந்து : ஆங்கிலம் : கிளாரே காவென் மற்றும் ஸ்டனிஸ்லா பாரன்செக் [Clare Cavanagh and Stanislaw Baranczak ] தமிழில் : தி.இரா.மீனா

download (1)

விஸ்லவா சிம்போர்ஸ்கா போலந்து மொழி பெண்கவிஞர். கட்டுரை, மொழி பெயர்ப்பு ஆகிய துறைகளிலும் பங்களிப்புச் செய்தவர். 1996 ல் இலக்கியத் திற்கான நோபல்பரிசு பெற்றவர். The Goethe Prize,The Herder Prize உள்ளிட்ட பல விருதுகளும் பெற்றுள்ளார். People on a Bridge,View with a Grain of Sand: Selected Poems , மற்றும் Monologue of a Dog ஆகியவை ஆங்கிலத்தில் வெளி வந்துள்ள அவரது கவிதைத் தொகுப்புகளில் சிலவாகும்..

****


மேகங்கள்

மேகங்களை என்னால்

மிக வேகமாக வர்ணிக்க முடியும்–

வேறுருவாக மாற அவைகளுக்கு

நொடிப்பொழுது போதுமானது.

அவற்றின் முத்திரை :

வடிவம், நிழல்,காட்சியாகும்விதம் அமைப்பு என்றவை

எதையும் இரண்டாம் முறையாக மீட்டுருச் செய்வதில்லை.

எவ்வித நினைவுகளின் சுமையுமின்றி

உண்மைகளின் மேல் அவை மிதந்துசெல்லும்.

பூமியில் அவை எதற்கு சாட்சியாகவேண்டும்?

ஏதாவது நிகழும்போது அவைசிதறுகின்றன.
மேகங்களோடு ஒப்பிடும்போது,

வாழ்க்கை திடமான நிலத்திலிருக்கிறது,

பெரும்பாலும் நிரந்தரமாக, ஏறக்குறைய சாஸ்வதமாக.

மேகங்களுக்கு அருகில்

ஒரு கல்கூட சகோதரனாகத் தெரிகிறது,

நீங்கள் நம்பக்கூடிய

சராசரி இடைவெளி உடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள்

விருப்பமிருப்பின் மனிதர்கள் வாழலாம்

பிறகு ஒருவர் பின் ஒருவராக இறக்கலாம்.

கீழ் என்ன என்பது பற்றி

மேகங்களுக்குக் கவலையில்லை

அதனால் அவை கர்வம் கொண்ட படைகளாய்

பூர்த்தியடையாத நம் முழுவாழ்க்கையின் மீது பயணிக்கலாம்,

நாம் போனபிறகு அவைகளுக்கு மறைய வேண்டிய கட்டாயமில்லை

பயணிக்கையில் அவைகள் பார்க்கப்பட வேண்டுமென்பதில்லை.

—-

எதுவும் இருமுறையில்லை

எதுவும் இரண்டாம் முறையாக நிகழமுடியாது
உண்மை எதுவெனில்
மேம்படுத்திக் கொள்ளவரும் நாம்
பயிற்சிக்கு வாய்ப்பளிக்கப்படாமல் வெளியேறுகிறோம்

மூடராக யாரும் இல்லையெனினும்
கோளின் மிகப் பெரிய முட்டாளெனினும்
கோடையில் மீண்டும் வகுப்புக்குச் செல்லமுடியாது.
இந்தப் பாடத்திட்டம் மட்டும் வழங்கப்படுவது ஒருமுறைதான்.

எந்த நாளும் முன்தினம் போலிருப்பதில்லை
எந்த இரண்டுஇரவுகளும் எது ஆனந்தம் என்பதைச் சொல்வதில்லை
துல்லியமாக அதேவழியில்,
துல்லியமாக அதேமுத்தங்களுடன்

ஒருநாள், யாரோ அர்த்தமின்றி
யதேச்சையாய் உன் பெயரைக் குறிப்பிடலாம்;
மணமும் நிறமுமாய் ஒரு ரோஜா
அறைக்குள் வீசப்பட்டது போலுணர்வேன்.

அடுத்த நாள் நீ என்னுடன் இருந்த போதும்,
கடிகாரத்தைப் பார்ப்பதை என்னால் தவிர்க்கமுடியாது;
ஒரு ரோஜா? ஒரு ரோஜா?அது எதுவாக இருக்கமுடியும்?
அது புஷ்பமா? அல்லது பாறையா?

விரைந்தோடும் நாளை நாம் ஏன்
தேவையற்ற அச்சத்தோடும் துக்கத்தோடும் கடத்துகிறோம்?
அதன் இயற்கை என்பது தங்காமலிருப்பதுதான்
இன்று என்பது எப்போதும் நாளையாகிவிட்டதுதான்.

நாம் வித்தியாசமானவர்களாக இருந்தாலும்( ஒத்துப் போகிறோம்)
புன்முறுவலோடும் முத்தங்களோடும்,
நட்சத்திரங்களின் கீழே இசைவானவர்களாகிறோம்
இருதுளி தண்ணீர் போல.

****

மூன்று வினோதமான சொற்கள்

எதிர்காலம் என்னும் சொல்லை நான் உச்சரிக்கும்போது
முதல் அசை இறந்த காலத்திற்குச் சொந்தமாகிறது.
அமைதி என்னும் சொல்லை நான் உச்சரிக்கும்போது
நான் அதை அழித்துவிடுகிறேன்.
ஒன்றுமில்லை என்னும் சொல்லை நான் உச்சரிக்கும்போது
எதுவுமற்ற நிலை இருக்கமுடியாததைச் சொல்கிறேன்.
வெறுமையான குடியிருப்பில் ஒரு பூனை
சாவு — ஒரு பூனைக்கு அதைச் செய்யக்கூடாது.

***

ஒரு காலியான வீட்டில்

ஒரு பூனை என்ன செய்யமுடியும்?

ஒரு காலியான வீட்டில்

ஒரு பூனை என்ன செய்யமுடியும்?

சுவற்றில் ஏறுமா?

மரச்சாமான்களின் மீது உரசுமா?

எதுவும் இங்கே வித்தியாசமாகயில்லை,

ஆனால் எதுவும் வழக்காமாயுமில்லை

எதுவும் அசைக்கப்படவில்லை

ஆனால் நிறைய இடமிருக்கிறது.

இரவில் விளக்குகளெதுவும் ஏற்றப்படவில்லை.

மாடிப்படிகளில் அடிச்சுவடுகள்

ஆனால் அவை புதியவை.

கோப்பையில் மீனைவைக்கும்

கையும் மாறிவிட்டது.

வழக்கமான நேரத்தில்

ஏதோ ஒன்று தொடங்கவில்லை

நடக்க வேண்டிய ஏதோ

ஒன்று நடக்கவில்லை.யாரோ எப்போதும் இங்கேயிருந்தார்கள்..

திடீரென மறைந்தார்கள்

பிடிவாதமாக மறைந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு மறைவறையும் சோதிக்கப்பட்டுவிட்டது

ஒவ்வொரு அலமாரியும் ஆய்வுக்குள்ளாகி விட்டது

கம்பளத்தின் அடி அகழாய்வும் எதையும் சொல்லவில்லை

கட்டளையும் கூட பழுதாகிப் போனது;

தாள்கள் எங்கும் சிதறிக்கிடந்தன.

என்ன செய்ய வேண்டுமெனத் தெரியவில்லை

தூங்கிக் காத்திருக்கலாம்

அவன் திரும்பி வரும்வரை காத்திருக்கலாம்

அவன் தன் முகத்தைக் காட்டட்டும்

ஒரு பூனைக்கு என்ன செய்யக்கூடாது

என்பது பற்றிய பாடத்தை அவன் எப்போதாவது அறிவானா.

குறைந்தபட்சம்

விருப்பமில்லாதது போல

மிக மெதுவாய்

வெளிப்படையாகத் தெரியும் புண்பட்ட கையோடு

தாவுதலோ அல்லது கிறிச்சிடலோ இன்றி

அவனை நோக்கிப் பக்கவாட்டில் போகலாம்.

——

அஷமஞ்சா பாபுவின் நாய் / சத்யஜித் ரே பெங்காலியிலிருந்து ஆங்கில மொழியாக்கம் – சத்யஜித் ரே. / தமிழில் – ஸ்ரீதர்ரங்கராஜ்

download (21)

ஹஷிமாராவில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்கு செல்லும்போது, அஷமஞ்சா பாபு தன் நெடுநாளைய அவாவினைத் தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அமைந்தது. பவானிபூர், மோஹினிமோஹன் சாலையில் உள்ள ஒரு சிறிய ஃப்ளாட்டில்தான் அஷமஞ்சா பாபு குடியிருந்தார். லஜ்பத் ராய் தபால் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை, அலுவலகத்திற்கு கல்கத்தாவின் நெரிசலான பஸ்ஸிலோ, ட்ரெய்னிலோ சண்டை போடாமல் வீட்டிலிருந்து கால்நடையாகவே ஏழு நிமிடத்தில் போய்விடலாம் என்று அமைந்தது அவர் அதிர்ஷ்டம்தான். எனவே பாபுவின் வாழ்க்கை கவலைகள் இல்லாதது, அவரும் ‘வாழ்க்கை தனக்கு இவ்வாறு அமையாதிருந்தால்’ என்றெல்லாம் யோசித்து அலட்டிக் கொள்கிறவரில்லை. ஆக மொத்தத்தில் இருப்பதில் சந்தோஷப்பட்டுக் கொள்கிறவர். மாதத்திற்கு இரண்டு ஹிந்திப்படம், ஒரு டஜன் சிகரெட் பாக்கெட், வாரம் இரண்டுமுறை மீன் – இது அவரை சந்தோஷப்படுத்தப் போதுமானது. அவரைத் தொந்திரவு செய்து கொண்டிருந்த ஒரே விஷயம், ஒரு துணை இல்லாததுதான். சில நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்களோடு வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருக்கும் பிரம்மச்சாரியான அவருக்கு, ஒரு நாய், தனக்குத் துணையாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இரண்டுவீடு தள்ளி இருந்த தாலுக்தார் வளர்ப்பதுபோல, அல்சேஷன் போன்ற பெரியவகை நாய்கள் அவருக்குத் தேவையில்லை. அவர் ஆசையெல்லாம், காலையும் மாலையும் அவர் பின்னால் சுற்றி வந்துகொண்டு, அவர் வேலைமுடிந்து வீட்டுக்கு வருகையில் வாலை ஆட்டியபடி வரவேற்று, அவர் இடும் கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்யும் ஏதேனும் ஒரு சிறியவகை நாய். பாபுவின் ரகசிய ஆசை என்னவென்றால் அவர் தன் நாயிடம் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்பது. ‘ஸ்டாண்ட் அப்!’, ‘சிட் டௌன்’, ‘ஷேக் ஹேண்ட்ஸ்!’ – அவருடைய இக்கட்டளைகளை அது கேட்டு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அஷமஞ்சாபாபு, நாய்கள் ஆங்கில இனத்தைச் சேர்ந்தவை என்று நம்ப விரும்பினார். ஆம், ஒரு ஆங்கில நாய், அதற்கு அவர் எஜமானன். அந்த எண்ணமே அவருக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது.

மழை தூறலாக விழுந்துகொண்டிருந்த ஒருநாளில், ஹஷிமாராவில் உள்ள சந்தைக்கு ஆரஞ்சுப் பழங்கள் வாங்கச் சென்றிருந்தபோது, சந்தையின் மூலையிலுள்ள குட்டையான இலந்தை மரத்தடியில் பூட்டானைச் சேர்ந்த ஒருவன் கையில் சிகரெட்டோடு அமர்ந்திருந்தான். கண்கள் சந்தித்துக் கொண்டபோது ஒரு புன்னகை செய்தான். பிச்சைக்காரனா? அவன் உடைகள் அவனை அப்படித்தான் நினைக்க வைத்தது. உடைகளில் குறைந்தது ஐந்து தையல்போட்ட இடங்கள் இருந்ததை பாபு கவனித்தார். ஆனால் பிச்சைப்பாத்திரம் எதுவும் அவனிடத்தில் இல்லை. பதிலாக, பக்கத்தில் காலணிகள் வைக்கும் அட்டைப்பெட்டியில் இருந்து நாய்க்குட்டி ஒன்று எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.

‘காலை வணக்கம்’’ என்று ஆங்கிலத்தில் சொன்னான், கண்கள் சிரிக்கும்போது கீறலாக மாறின. பாபுவும் மறுபடி வணக்கம் சொல்ல வேண்டியதாயிற்று.

‘பை டாக்? டாக் பை? வெரிகுட் டாக்’, பெட்டியில் இருந்த நாயை எடுத்து தரையில் விட்டான், ‘வெரி சீப், குட் டாக், ஹேப்பி டாக்’.

நாய்க்குட்டி வெளியே வந்ததும் தன் உடலில் இருந்த மழைத்துளிகளை உலுக்கி உதறிவிட்டு பாபுவைப் பார்த்து தன் இரண்டு இஞ்ச் வாலை வேகமாக ஆட்டியது. பாபு அதனருகில் சென்று குனிந்து தன் கைகளை நீட்டியதும் தன் இளஞ்சிவப்பு நாவால் அவர் கைகளை நக்கியது, நட்பான நாய்தான்.

“விலை என்ன? ஹவ் மச்?”

“டென் ருபீஸ்”

சிறிதுநேர விவாதத்திற்குப்பிறகு ஏழு ஐம்பதுக்கு இறங்கிவந்தான். காசைக் கொடுத்ததும் பாபு நாய்க்குட்டியை அதே பெட்டிக்குள் வைத்து, மழைத்துளி படாமலிருக்க மூடி, ஆரஞ்சுப் பழங்களை மறந்து வீட்டை நோக்கி நடந்தார்.

ஹஷிமாரா ஸ்டேட் வங்கியில் வேலைபார்க்கும் பிரேன் பாபுவுக்கு தன் நண்பனுக்கு ஒரு நாய் வாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது தெரியாது என்பதால் பெட்டிக்குள் இருந்த நாயைப் பார்த்ததும் ஆச்சரியமும் கவலையும் உண்டானது. ஆனால், விலையைக் கேட்டதும் ஆறுதலான பெருமூச்சு விட்டுக் கொண்டார். மெலிதாய் கடிந்துகொள்ளும் தொனியில், “இந்த நாட்டுநாயை வாங்க ஹஷிமாரா வரை வர வேண்டுமா? பொவானிபூரிலேயே வாங்கியிருக்கலாமே?”

ஆனால் அது உண்மையில்லை என்று அஷமஞ்சா பாபுவுக்குத் தெரியும். அவர் அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள நாட்டு நாய்களைப் பார்த்திருக்கிறார். எந்த நாயும் அவரைப்பார்த்து இப்படி நட்போடு வாலை ஆட்டியதோ அல்லது கைவிரல்களை நக்கியதோ கிடையாது. பிரேன் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இந்த நாய் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆனால் அது நாட்டுநாய் என்று தெரிந்ததில் அஷமஞ்சா பாபுவுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது, அதைச் சொல்லவும் செய்தார். ஆனால் பிரேன் பாபு உடனே கிண்டலான குரலில், “உயர்சாதி நாய்களை வளர்ப்பது என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு? உன் சம்பளத்தில் பாதியை மிருக வைத்தியருக்கு கொடுத்துவிட வேண்டியிருக்கும். இந்தவகை நாய்களால் உனக்கு அந்தத்தொல்லை இல்லை. இவைகளுக்கென்று தனி உணவுப்பழக்கம் கிடையாது . நீ என்ன சாப்பிடுகிறாயோ அதையே இதுவும் சாப்பிடும். ஆனால் மீன் மட்டும் கொடுக்காதே. மீன் பூனைகளுக்குத்தான்; மீனின் எலும்புகள் நாயை சிரமப்படுத்திவிடும்”.

கல்கத்தாவுக்கு வந்ததும், அஷமஞ்சா பாபுவுக்கு நாய்க்குட்டிக்கு ஒருபெயர் வைக்க வேண்டுமென்று தோன்றியது. அது ஒரு ஆங்கிலப் பெயராக இருக்கவேண்டுமென்று நினைத்தார், ஆனால் டாம் என்ற பெயரைத் தவிர வேறு எந்தப்பெயரும் அவருக்குத் தோன்றவில்லை. பிறகு, ஒருநாள் அந்தக்குட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, திடீரென, அது பழுப்பு நிறத்தில் இருப்பதால் ப்ரௌனி என்பது பொருத்தமான பெயர் என்று அவருக்குத் தோன்றியது. அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவரிடம் இருந்த ஆங்கிலேயத் தயாரிப்பான கேமெராவுக்குப் பெயர் ப்ரௌனி, எனவே அந்தப் பெயரும் ஆங்கிலமாகத்தான் இருக்கமுடியும். பெயரை முடிவு செய்த கணமே, அதை நாய்க்குட்டியின் மேல் பரீட்சித்துப் பார்த்தார், உடனே அது பிரம்பு முக்காலியில் இருந்து தவ்வி, அவர் அருகில் வந்து வாலாட்டியது. அஷமஞ்சா பாபு இப்போது, “சிட் டவுன்.” என்றார், உடனே அது பின்னங்காலில் உட்கார்ந்து வாயைத் திறந்து சின்னதாகக் கொட்டாவி விட்டது. அஷமஞ்சா பாபுவுக்கு, ப்ரௌனி நாய்களுக்கான போட்டி ஒன்றில் புத்திசாலித்தனத்திற்கான முதல் பரிசைத் தட்டிச்செல்வது கண்ணுக்குத் தெரிந்தது.

அவருடைய வேலைக்காரன் பிபினும் நாய்களை விரும்புபவனாக இருந்தது அவரின் அதிர்ஷ்டம். அஷமஞ்சா பாபு வேலைக்குப் போனதும், ப்ரௌனியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவனாகவே ஏற்றுக்கொண்டான். அஷமஞ்சா பாபு, பிபினை எச்சரித்திருந்தார், நாய்க்கு கண்டதையும் கொடுக்கக் கூடாது. ‘அப்புறம் அவன் தெருவுக்குச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள். இப்போதெல்லாம் கார் ஓட்டுபவர்கள் கண்ணுக்குப் பட்டை மாட்டிக்கொண்டுதான் ஓட்டுகிறார்கள்.’ எவ்வளவுதான் சொல்லிவிட்டு வந்தாலும் வேலைமுடிந்து திரும்பும்போது ப்ரௌனி அவரைப்பார்த்து அளவற்ற மகிழ்ச்சியில் வேகமாக வாலாட்டும்வரை அவருக்குக் கவலையாகத்தான் இருக்கும்.

000

அந்தச் சம்பவம் நடந்தது ஹஷிமாராவிலிருந்து வந்த மூன்றாம்மாதம். அதுவொரு சனிக்கிழமை, நவம்பர்மாதம் இருபத்து மூன்றாம் தேதி. அஷமஞ்சா பாபு அப்போதுதான் வேலையிலிருந்து திரும்பிவந்து, பழைய மரநாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். கட்டிலையும் பிரம்பு முக்காலியையும் தவிர அந்த அறையில் இருந்த ஒரே மரச்சாமான் அதுதான்; அது திடீரென அவருக்கடியில் உடைந்து, கைகால்களைப் பரப்பியபடி அவரைத் தரைக்கு அனுப்பியது. உண்மையில் அவருக்குப் பலமான அடி, சொல்லப்போனால் மரக்காலைப்போலத் தன் முழங்கையும் இடம்விட்டு நகர்ந்துவிட்டதோ என்று நினைக்கும்போது அந்த எதிர்பாராத சத்தம் வலியை மறக்கச் செய்துவிட்டது.

அது படுக்கையிலிருந்து வந்தது. ஒரு சிரிப்பொலி அல்லது சரியாகச் சொல்லவேண்டுமென்றால் அதுவொரு இளிப்பு, அது தோன்றிய இடம் சந்தேகமே இல்லாமல் ப்ரௌனி, கட்டிலில் உட்கார்ந்திருந்த அதன் உதடுகள் இன்னமும் வளைந்திருந்தன.

அஷமஞ்சா பாபுவுக்குப் பொதுஅறிவு சற்று விசாலமாக இருந்திருந்தால், நாய்கள் ஒருபோதும் சிரித்ததில்லை என்று தெரிந்திருக்கும். கொஞ்சமேனும் கற்பனைவளம் இருந்திருந்தால் இச்சம்பவம் அவர் தூக்கத்தைப் பறித்திருக்கும். இரண்டுமே அவரிடம் இல்லை என்பதால் அஷமஞ்சா பாபு, ஃப்ரீ ஸ்கூல் தெருவின் பழைய புத்தகக்கடை ஒன்றில் இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிய All About Dogs என்ற புத்தகத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு மணிநேரம் தேடியும் அந்தப்புத்தகத்தில் சிரிக்கும் நாய் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனாலும் ப்ரௌனி சிரித்தது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அதுமட்டுமல்ல, சிரிப்பதற்கு ஒரு காரணம் இருப்பதால் சிரித்தது. இது அஷமஞ்சா பாபுவுக்கு, அவரது சிறுவயது நிகழ்ச்சியொன்றை ஞாபகப்படுத்தியது. சந்தர்நகோரிலுள்ள அவரது வீட்டிற்கு ஒரு மருத்துவர் வந்திருந்தார், அப்போது அவர் உட்கார்ந்திருந்த நாற்காலி உடைந்து விழுந்தது. அஷமஞ்சா பாபு அடக்கமுடியாமல் வெடித்துச் சிரித்தார் என்பதால் அவரது காதுகளைத் திருகினார் அப்பா.

புத்தகத்தை மூடிவிட்டு ப்ரௌனியைப் பார்த்தார். அவர்களின் கண்கள் சந்தித்துக்கொண்டதும், ப்ரௌனி தன் முன்னங்காலை எடுத்துத் தலையணையில் வைத்து அவரைப்பார்த்து வாலாட்டியது, மூன்றுமாதத்தில் அதன் வால் ஒன்றரை இஞ்ச் வளர்ந்துவிட்டது. இப்போது அதன் முகத்தில் சிரிப்புக்கான சுவடே இல்லை. ஏன் இருக்கவேண்டும்? காரணமில்லாமல் சிரிப்பது பைத்தியத்தின் அடையாளம். ப்ரௌனி ஒரு பைத்தியம் பிடித்த நாயில்லை என்பதில் அஷமஞ்சா பாபு ஆசுவாசமாய் உணர்ந்தார்.

இது நடந்த ஒரு வாரத்திற்குள் இன்னும் இரண்டு நிகழ்ச்சிகளில் ப்ரௌனிக்கு சிரிப்பதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. முதலாவது இரவினில் நடந்தது, ஒன்பதரை மணி வாக்கில். அஷமஞ்சா பாபு அப்போதுதான் ப்ரௌனி படுப்பதற்காக வெள்ளை விரிப்பொன்றைத் தரையில் விரித்திருந்தார், ஒரு கரப்பான்பூச்சி எங்கிருந்தோ பறந்து வந்து சுவரில் அமர்ந்தது. அஷமஞ்சா பாபு தன் செருப்பை எடுத்து அதன்மீது வீசினார். செருப்பு குறிதவறி மாட்டப்பட்டிருந்த கண்ணாடியில் இறங்கி, அதைக் கீழேயனுப்பி நொறுக்கியது. இம்முறை ப்ரௌனி சிரித்த சிரிப்பு, அவருடைய கண்ணாடி உடைந்ததற்கான இழப்பீட்டை விட அதிகமானது.

இரண்டாவது முறை வந்தது பெருஞ்சிரிப்பல்ல, சின்னதாய் ஒரு எக்கலிப்பு. எதுவும் நடக்கவில்லையே என்று அஷமஞ்சா பாபுவுக்குக் குழப்பமாக இருந்தது. பிறகு ஏன் இந்தச் சிரிப்பு? அவரின் வேலையாள் பிபின் வந்ததும் அதற்கான விடை தெரிந்துவிட்டது. அவரைப் பார்த்ததும் புன்னகையோடு ‘உங்கள் காதுக்குப் பக்கத்தில் ஷேவிங் சோப்பு ஒட்டியிருக்கிறது, அய்யா’ என்றான். கண்ணாடி உடைந்து போனதால் சன்னல் கண்ணாடியில்தான் அவர் சவரம் செய்ய வேண்டியிருந்தது, கைகளை வைத்துப்பார்த்து பிபின் சொன்னது உண்மை என்று தெரிந்துகொண்டார்.

அற்பமான விஷயங்களுக்குக் கூட ப்ரௌனி சிரிக்கிறது என்பது அஷமஞ்சா பாபுவுக்கு ஆச்சரியமாகப் பட்டது. தபால் அலுவலகத்தில் அவர் மேசையில் அமர்ந்திருந்தபோது, அவர் சிந்தனை மீண்டும் மீண்டும் ப்ரௌனியின் முகத்திலிருந்த சிரிப்பிலும் அந்த எக்கலிப்பின் ஒலியிலுமே இருந்தது. நாய்களின் சிரிப்பு பற்றி All About Dogs எதுவும் சொல்லாமல் இருக்கலாம், நாய்களைப் பற்றிய என்சைக்ளோபீடியா போல ஒன்று கிடைத்தால், நிச்சயமாக அதில் இந்த சிரிப்பைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். பவோனிபூரில் இருந்த நான்கு புத்தகக்கடையிலும் – புது மார்க்கெட்டில் இருந்த அத்தனை கடைகளிலும் – அப்படியொரு என்சைக்ளோபீடியா கிடைக்கவில்லை. அஷமஞ்சா பாபு, திரு. ரஜனி சாட்டர்ஜியைப் பார்க்கலாமா என்று யோசித்தார். அந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் அவர் தெருவில், பக்கத்திலேயேதான் வசித்து வந்தார். ரஜனிபாபு எந்தப்பாடத்தைப் போதித்தார் என்று அஷமஞ்சா பாபுவுக்குத் தெரியாவிட்டாலும், ஒரு பேராசிரியரின் படிப்பறையில் இருப்பது போலவே தடித்தடியான புத்தகங்கள் ஒரு அலமாரியில் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறார்.

000

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், இந்தச் சாகசத்துக்குத் துணையிருக்கும்படி மௌனமாக துர்க்கையை வேண்டிக்கொண்டு, பேராசிரியர் சாட்டர்ஜியின் வீட்டுக்குக் கிளம்பினார். நிறையமுறை அவரைத் தூரத்திலிருந்து பார்த்திருந்தாலும், அவருக்கு இவ்வளவு அடர்த்தியான புருவங்களும், கரகரப்பான நடுங்கவைக்கும் குரலும் இருக்குமென்று தெரியாது. பேராசிரியர் அவரை வாசலோடு துரத்தவில்லை என்பதால் தைரியமாக உள்ளே நுழைந்து சோஃபாவில் உட்கார்ந்து கொண்டார். பிறகு சின்னதாக ஒருமுறை இருமிவிட்டுக் காத்திருந்தார். பேராசிரியர் தான் வாசித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை வைத்துவிட்டு வந்திருப்பவரைக் கவனித்தார்.

“உன் முகம் பரிச்சயமானதாகத் தெரிகிறது.”

“நான் இங்கே பக்கத்தில்தான் இருக்கிறேன்.”

“அப்படியா? என்ன விஷயம், சொல்லு.”

“உங்கள் வீட்டில் ஒரு நாயைப் பார்த்திருக்கிறேன்: அதனால்தான். . .”

“அதனாலென்ன? எங்களிடம் இரண்டு இருக்கிறது ஒன்றல்ல.”

“ஓ. . . என்னிடமும் ஒன்று இருக்கிறது.”

“உனக்கு என்ன ஊரிலுள்ள நாய்களை எண்ணும் வேலையா?”

அஷமஞ்சா பாபு அந்தக்கேள்வியில் இருந்த எள்ளலைக் கவனிக்கவில்லை. “நான் தேடிக்கொண்டிருப்பது உங்களிடம் இருக்குமா என்று பார்க்கவந்தேன்.” என்றார்.

“என்ன அது?”

“உங்களிடம் நாய்கள் பற்றிய என்சைக்ளோபீடியா இருக்கிறதா?”

“இல்லை. என்னிடம் இல்லை. அது உனக்கெதற்கு?”

“அதிலே பாருங்கள். . . என் நாய் சிரிக்கிறது. ஆகவே நாய்கள் இப்படிச் சிரிப்பது இயற்கையானதுதானா என்று தெரிந்துகொள்ளவேண்டும். உங்களுடைய நாய்கள் சிரிக்கின்றனவா?”

அறையில் மாட்டியிருந்த கடிகாரம் எட்டு அடித்து ஓயும்வரை பேராசிரியர் நிலைகுத்திய பார்வையில் அஷமஞ்சா பாபுவைப் பார்த்தார். பிறகு “உன் நாய் இரவில் சிரிப்பதுண்டா?” என்று கேட்டார்.

“நிச்சயமாக, ஆமாம், இரவிலும்தான்.”

“போதைவஸ்துக்களில் உனக்கு என்ன பிடிக்கும்? கஞ்சாவினால் மட்டும் இப்படிப்பட்ட விளைவுகளைக் கொடுக்கமுடியாது. ச்சரஸ், ஹஷிஷ் சேர்த்து எடுத்துக்கொள்வாயோ?”

அஷமஞ்சா பாபு தனக்குள்ள ஒரே கெட்டபழக்கம் புகைபிடிப்பதுதான் என்று அடங்கிய குரலில் சொன்னார் – நாய் வந்ததிலிருந்து அதையும் கூட வாரத்திற்கு மூன்று பாக்கெட்டிலிருந்து இரண்டாக்கி விட்டதைத் தெரிவித்தார்.

“ஆனாலும் உன் நாய் சிரிக்கிறது என்கிறாய்?”

“அது சிரிப்பதை என் கண்களால் பார்த்தும் காதால் கேட்டுமிருக்கிறேன்.”

“கவனி”. பேராசிரியர் சாட்டர்ஜி தன் கண்ணாடியை கழற்றினார், அதைத் தன் கைக்குட்டையால் துடைத்து, மீண்டும் மாட்டிக்கொண்டு அஷமஞ்சா பாபுவை உன்னிப்பாகப் பார்த்தார். பிறகு வகுப்பில் விரிவுரையாற்றும் தொனியில் உணர்ச்சி முழக்கமிட்டார்:

“இயற்கையின் அடிப்படை விதிகள் குறித்து உனக்கிருக்கும் அறியாமையைக் கண்டு வியக்கிறேன். கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் மனிதனே சிரிக்கத் தெரிந்தவன். இது மற்ற ஜீவராசிகளுக்கும் ஹோமோசேப்பியன்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடுகளில் ஒன்று. ஏன் அப்படி இருக்கிறது என்று கேட்காதே, ஏனென்றால் எனக்குத் தெரியாது. கடலில் வாழக்கூடிய டால்பின்களுக்கு நகைச்சுவை உணர்வு உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன். டால்பின்கள் மட்டும் ஒரேயொரு விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் அவற்றைத் தவிர வேறு இல்லை. மனிதர்கள் ஏன் சிரிக்க வேண்டும் என்பதும் தெளிவாகப் புரியவில்லை. எவ்வளவோ தத்துவவாதிகள் ஏனென்று மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்திருக்கிறார்கள்; ஆனால் விடை தெரியவில்லை. உனக்குப் புரிகிறதா?”

அஷமஞ்சா பாபுவுக்குத் தெளிவாகப் புரிந்தது; கூடவே அவர் இப்போது அந்த இடத்தைக்காலி செய்ய வேண்டும் என்பதும் புரிந்தது, ஏனென்றால் பேராசிரியர் மீண்டும் செய்திதாளுக்குப் பின்னால் காணாமல் போயிருந்தார்.

டாக்டர் சுகோமோய் பௌமிக் – சிலர் அவரை டாக்டர் பவ்-வவ்-மிக் என்றும் அழைப்பதுண்டு – நகரத்தில் சிறந்த மிருக வைத்தியர். மற்றவர்கள் காதுகொடுத்துக் கேட்காததை நிச்சயம் ஒரு மிருக வைத்தியர் கேட்பார் என்ற நம்பிக்கையில் அஷமஞ்சா பாபு அவரிடம் டெலிபோனில் நேரம் கேட்டுக்கொண்டு கோகலே ரோட்டிலுள்ள அவர் வீட்டுக்கு ப்ரௌனியையும் அழைத்துச் சென்றார். ப்ரௌனி கடந்த நான்கு மாதத்தில் பதினேழுமுறை சிரித்திருக்கிறது. அவர் கவனித்தவரை சிரிக்கும்படியாக ஏதாவது சொன்னால் ப்ரௌனி சிரிப்பதில்லை; கோமாளித்தனமான நிகழ்வுகளுக்கு மட்டுமே சிரிக்கிறது. அஷமஞ்சா பாபு, ப்ரௌனியின் முன்பாக ’கிங் ஆஃப் பம்பார்டியா’ – நான்சென்ஸ் ரைம்ஸ்’சைச் சொல்லிக் காட்டினார், ஆனால் அதனிடத்தில் எந்த விளைவையும் அது ஏற்படுத்தவில்லை. ஆனால் குழம்பிலிருந்த ஒரு உருளைக்கிழங்கு அஷமஞ்சா பாபுவின் கையிலிருந்து நழுவி, தயிர் வைத்திருந்த தட்டில் விழுந்தபோது, கிட்டத்தட்ட மூச்சு நிற்குமளவு சிரித்தது. பேராசிரியர் சேட்டர்ஜி கடவுளின் படைப்பு குறித்து அவருக்கு வகுப்பெடுத்தார், ஆனால் அந்த மெத்தப்படித்தவர் சொன்னது தவறு என்பதற்கு இங்கே உயிருள்ள ஒரு சாட்சி இருக்கிறது.

எனவே அஷமஞ்சா பாபு, ஒருமுறைக்கு இருபது ரூபாய் வாங்கினாலும் பரவாயில்லை என அந்த மிருகவைத்தியரைப் பார்க்கப் போகிறார். ஆனால் நாயின் தனித்தன்மையான குணத்தைச் சொல்லும்முன்பே நாயின் தோற்றத்தைப் பார்த்தவுடன் அவர் புருவம் உயர்ந்துவிட்டது. “நாட்டுநாய்களை நிறையப் பார்த்திருக்கிறேன், ஆனால் இதுபோலப் பார்த்ததில்லை.” என்றார்.

நாயைத் தூக்கி மேசையின்மீது வைத்தார். ப்ரௌனி தன் காலடியில் இருந்த பித்தளை பேப்பர் வெயிட்டை முகர்ந்து கொண்டிருந்தது.

“என்ன சாப்பிடக் கொடுப்பீர்கள்?”

“நான் சாப்பிடும் எல்லாமும் சாப்பிடுவான் சார், உயர் ஜாதி நாய் இல்லையே. . .”

டாக்டர் பௌமிக்கின் நெற்றி சுருங்கியது. மிக ஆர்வமாக நாயைப் பார்க்கத் தொடங்கினார். “நல்ல ஜாதி நாய் ஒன்றைப் பார்த்ததும் சொல்லிவிடலாம். ஆனால் சிலசமயம் உறுதியாகச் சொல்ல முடியாது. உதாரணமாக இது. இது நாட்டுநாய் என்று என்னால் சொல்லமுடியவில்லை. நீங்கள் இதற்கு அரிசியும் பருப்பும் கொடுப்பதை நிறுத்தவேண்டுமென்று சொல்லுவேன். இவனுக்கான உணவுப்பட்டியல் ஒன்றைத் தருகிறேன்.”

அஷமஞ்சா பாபு தான் அங்குவந்ததற்கான உண்மையான காரணத்தைச் சொல்ல ஆயத்தமானார். “நான் – வந்து, என் நாயிடம் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது – அதனால்தான் உங்களிடம் கொண்டுவந்தேன்.”

“முக்கியத்துவமா?”

“இந்த நாய் சிரிக்கிறது.”

“சிரிக்கிறதா–?”

“ஆமாம், சிரிக்கிறது. உங்களையும் என்னையும் போல.”

“நம்பமுடியவில்லை! இப்போது சிரிக்கவைக்க முடியுமா, நான் பார்க்க வேண்டும்?”

இப்போது அஷமஞ்சா பாபு திகைத்துப்போய் நின்றுவிட்டார். இயல்பாக அவர் ஒரு கூச்சசுபாவி, ப்ரௌனியிடம் கோணங்கிச் சேட்டைகள் காண்பித்து அதைச்சிரிக்க வைக்க அவரால் முடியாது, போலவே அந்த இடத்தில் அந்நேரத்தில் சிரிக்கும்படியாக எதுவும் நிகழவும் வாய்ப்பில்லை. எனவே டாக்டரிடம் ப்ரௌனி சிரிக்கச்சொன்னால் சிரிக்காது என்றும் ஏதாவது சிரிக்கும்படியான சம்பவம் நடக்கவேண்டும் என்று விளக்கினார். அதன்பிறகு டாக்டர் பௌமிக்குக்கு, அஷமஞ்சா பாபுவிடம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை. “உன் நாய் ஏற்கெனவே போதுமான அளவு விநோதமாயிருக்கிறது; அது சிரிக்கிறது என்று சொல்லி இன்னும் விநோதமாக்கவேண்டாம். என்னுடைய இருபத்தியிரண்டு வருட அனுபவத்தில் சொல்கிறேன், நாய்கள் அழும், பயப்படும், கோபம், வெறுப்பு, நம்பிக்கையின்மை மற்றும் பொறாமையை வெளிப்படுத்தும். நாய்கள் கனவுகூடக் காணும் ஆனால் சிரிக்காது.”

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அஷமஞ்சா பாபு யாரிடமும் ப்ரௌனியின் சிரிப்புபற்றிப் பேசவேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார். அதை நிரூபிக்க முடியவில்லை எனும்போது சபையில் வைத்து அவமானப்படுவானேன்? யாருக்கும் இந்த விஷயம் தெரியாமல் போனால்தான் என்ன? அவருக்குத் தெரியும். ப்ரௌனி அவருடைய நாய், அவரின் சொத்து. அவர்களின் தனிப்பட்ட உலகத்தில் வெளியாட்களை இழுப்பானேன்?

000

ஆனால் விஷயங்கள் நம் விருப்பத்திற்கேற்ப நடப்பதில்லை. ஒருநாள் ப்ரௌனியின் சிரிப்பு வெளியாள் ஒருவருக்குத் தெரிந்துவிட்டது.

சிலநாட்களாகவே அஷமஞ்சா பாபு, ப்ரௌனியை மதியநேரங்களில் விக்டோரியா மெமோரியல் அருகே நடைக்கு அழைத்துச்செல்லும் பழக்கத்திற்கு ஆளாயிருந்தார். ஒரு ஏப்ரல் நாளில், நடையின் நடுவே, திடீரென்று புயல்காற்று ஆரம்பமானது. அஷமஞ்சா பாபு வானத்தைப் பார்த்து, வீட்டுக்குத் திரும்புவது பாதுகாப்பானதல்ல, எந்தநேரமும் மழை வந்துவிடலாம் என்று கணித்தார். எனவே ப்ரௌனியுடன் பளிங்கு வளைவோடு கூடிய கருப்புநிறக் குதிரைவீரன் சிலையின் கீழ் ஒதுங்குவதற்காக விரைந்தார்.

இதற்கிடையே, மழை பெருந்துளிகளாக விழ ஆரம்பித்ததும் மக்கள் ஒதுங்க இடம் தேடத்தொடங்கினர். வளைவுக்கு இருபதடி தள்ளி, வெள்ளைச்சட்டையும் ட்ரவுசரும் அணிந்த ஒரு குண்டான மனிதர் தன் குடையை விரித்தபோது திடீரென காற்றின் வேகம்கூடி குடையைத் தலைகீழாக்கியது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அஷமஞ்சா பாபு வெடித்துச் சிரிக்க இருந்தார், ஆனால் ப்ரௌனி அவரை முந்திக்கொண்டு சத்தமாக புயல்காற்றின் சத்தத்தையும் மீறி வெடிவெடித்ததுபோலச் சிரித்தது அந்தப் பரிதாபமான நபருக்கும் கேட்டுவிட்டது. அம்மனிதர் குடையை மடிப்பதை விட்டுவிட்டு வியப்புடன் ப்ரௌனியைப் பார்க்க ஆரம்பித்தார். ப்ரௌனியால் தனது சிரிப்பை அடக்கமுடியவில்லை. அஷமஞ்சா பாபுவும் கிறுக்குத்தனமாக ப்ரௌனியின் வாய்க்கு முன்பாகத் தன் கையைத்தட்டி அமைதிப்படுத்தப் பார்த்தார், ஆனால் அது உதவவில்லை. வாயடைத்துப்போன அம்மனிதர் அஷமஞ்சா பாபுவை நோக்கி ஏதோ பேயைப் பார்த்தவரைப்போல நடந்துவந்தார். ப்ரௌனி இப்போது அமைதியடையத் தொடங்கியிருந்தது என்றாலும் அதுவே அம்மனிதரின் விழிபிதுங்கப் போதுமானதாக இருந்தது.

“சிரிக்கும் நாய்.”

“ஆமாம், சிரிக்கும் நாய்.” என்றார் அஷமஞ்சா பாபு.

“ஆனால் இது எவ்வளவு விநோதமானது.”

அஷமஞ்சா பாபுவுக்கு அந்நபர் பெங்காலிக்காரர் அல்ல என்று தெரிந்தது. குஜராத்தி அல்லது பார்சியாக இருக்கவேண்டும். அஷமஞ்சா பாபு தன்னை நோக்கி சரமாரியாக வந்து விழப்போகும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்க தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.

தூறல் இப்போது கனமான மழையாகிவிட்டிருந்தது. அஷமஞ்சா பாபுவோடு மழைக்கு ஒதுங்கியிருந்த அக்கனவான், பத்தே நிமிடத்தில் ப்ரௌனியைப் பற்றி என்னவெல்லாம் உண்டோ எல்லாமும் தெரிந்து கொண்டுவிட்டார். கூடவே, அஷமஞ்சா பாபுவின் முகவரியையும் எழுதி வைத்துக்கொண்டார். தன்னுடைய பெயர் பில்லூ போக்கன்வாலா என்றார், நாய்களைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்த அவர் அவ்வப்போது அவை குறித்து எழுதுவதும் உண்டு, இன்றைய நாளின் அனுபவம் அவர் இதற்குமுன் கண்டதையெல்லாம் தாண்டிச் சென்றுவிட்டது, அநேகமாக, இனி எதிர்காலத்தில் கூட இப்படி ஒரு சம்பவம் நடக்காது என்றார். தான் எப்பேர்ப்பட்ட அதிசயச் சுரங்கத்தை வைத்துக்கொண்டிருக்கிறோம் என்று அஷமஞ்சா பாபுவுக்கே தெரியவில்லை, இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

மழை நின்ற சிறிது நேரத்தில், திரு. போக்கன்வாலா சௌரிங்கீ ரோட்டின் குறுக்கே கடக்கும்போது ஒரு மினிபஸ் ஒன்றில் அடிபட்டதற்கும் ப்ரௌனிக்கும் தொடர்புண்டு என்றால் அது தவறாகாது – சிரிக்கும் நாய் பற்றிய சிந்தனைகள் சாலையில் போய்க்கொண்டிருக்கும் வாகனங்களைக் கவனிப்பதை மறக்கடித்துவிட்டது. மருத்துவமனையில் இரண்டரை மாதங்கள் இருந்த பின், உடல் தேறுவதற்காக போக்கன்வாலா நைனிடால் சென்றார். மலைவாசஸ்தலத்தில் ஒருமாதத்தைக் கழித்தபின் கல்கத்தா வந்த அன்று மாலை பெங்கால் க்ளப்பில் உள்ள தன் நண்பர்களுக்கு சிரிக்கும் நாய் பற்றிய சம்பவத்தை விவரித்தார். திரு.பாலபோரியா மற்றும் திரு.பிஸ்வாஸ். அடுத்த அரைமணி நேரத்தில் க்ளப்பிலுள்ள இருபத்தியேழு உறுப்பினர்கள் மற்றும் மூன்று பேரர்களின் காதுகளுக்கு இந்த விஷயம் போய்ச் சேர்ந்தது. அடுத்தநாள் காலை கல்கத்தாவிலுள்ள குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்கு இச்சம்பவம் தெரிந்துவிட்டது.

000

இந்த மூன்றரை மாதங்களில் ஒருமுறை கூட ப்ரௌனி சிரிக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் வேடிக்கையான சம்பவம் எதுவும் அதன்முன்னே நிகழவில்லை. அஷமஞ்சா பாபுவுக்கு இது கவலைப்பட வேண்டிய விஷயமாகத் தோன்றவில்லை; ப்ரௌனியின் இந்தத் தனித்துவமான கொடையைக் காசாக்கும் எண்ணம் அவருக்கு எப்போதுமே வந்ததில்லை. அவருடைய வாழ்க்கையில் இருந்த வெறுமையான இடத்தை ப்ரௌனி நிரப்பிவிட்டதில் அவர் மகிழ்ச்சியோடு இருந்தார். சொல்லப்போனால் எந்த மனிதப்பிறவியின் மீதும் அவருக்கு ஈர்ப்பு இருந்ததில்லை.

சிரிக்கும்நாய் பற்றிய சம்பவத்தைக் கேள்விப்பட்டவர்களில் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கையின் உயரதிகாரியும் ஒருவர். அஷமஞ்சா பாபுவைப் பேட்டியெடுக்கும்படி நிருபரான ரஜத் சௌத்ரியை அனுப்பினார். அஷமஞ்சா பாபு லஜ்பத் ராய் தபால் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைபார்க்கும் விஷயத்தை அவருக்குச் சொன்னது போக்கன்வாலா.

ஒரு நிருபர் தன்னைச் சந்திக்க நினைத்ததே அஷமஞ்சா பாபுவுக்கு மிகுந்த ஆச்சரியமாய் இருந்தது. ரஜத் சௌத்ரி, போக்கன்வாலாவின் பெயரைக் குறிப்பிட்டதும்தான் அவர் எதற்காக தன்னைச் சந்திக்க வருகிறார் என்று விளங்கிவிட்டது. அஷமஞ்சா பாபு, நிருபரைத் தனது படுக்கையறைக்குள் அழைத்து வந்தார். அந்த மரநாற்காலி இப்போது சரிசெய்யப்பட்டு புதிய கால் பொருத்தப்பட்டிருந்தது, அஷமஞ்சா பாபு நிருபரை அதில் அமரும்படி சொல்லிவிட்டுத் தான் படுக்கையில் அமர்ந்துகொண்டார். ப்ரௌனி, சுவரில் ஏறிக்கொண்டிருந்த எறும்புகளின் வரிசையொன்றை கவனித்துக் கொண்டிருந்தது; இப்போது உடனே படுக்கையில் தவ்வி அஷமஞ்சா பாபுவுக்கு அருகே அமர்ந்து கொண்டது.

ரஜத் சௌத்ரி தனது ரெக்கார்டரின் பொத்தானை அழுத்தப் போகும்போது ஒரு எச்சரிக்கையை முன்பே கொடுத்துவிடுவது நல்லது என்று அஷமஞ்சா பாபுவுக்குத் தோன்றியது. எனவே, “அதாவது சார், என்னுடைய நாய் முன்பெல்லாம் அடிக்கடி சிரித்துக் கொண்டிருந்தது, ஆனால் கடந்த சில மாதங்களாக சிரிக்கவே இல்லை. ஒருவேளை நீங்கள் அது சிரிப்பதைப் பார்க்கவேண்டுமென வந்திருந்தால் அது உங்களுக்கு ஏமாற்றமாக அமையலாம்,” என்றார்.

ஒரு நல்ல விஷயம் கிடைத்ததும் சந்தோஷமான புன்னகையை வெளியிடும் துடிப்பான நிருபர்களைப் போல ரஜத் சௌத்ரி ஒரு புன்னகையைத் தவழவிட்டார். அந்தச் செய்தி அவருக்குக் கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் அது வெளியில் தெரியக்கூடாதென கவனமாக இருந்துகொண்டார். “அதனாலென்ன, பரவாயில்லை. நான் உங்களிடமிருந்து சில விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவே. ஆரம்பிக்கும் முன், இவனது பெயர். நீங்கள் உங்கள் நாயை என்னவென்று கூப்பிடுகிறீர்கள்?”

அஷமஞ்சா பாபு மைக்கின் அருகில் செல்வதற்காக கழுத்தை நீட்டி, “ப்ரௌனி” என்றார். ”ப்ரௌனி…” நிருபரின் கழுகுக்கண்கள் நாய் தன் பெயரைச் சொன்னதும் வாலாட்டுவதைக் கவனித்தன. “இவனுக்கு என்ன வயதாகிறது?”

“பதிமூன்று மாதம்.”

“இந்த நாயை எ-எ-எங்கே கண்டெடுத்தீர்கள்?”

இதற்கு முன்பும் இவ்வாறு நடந்திருக்கிறது. ரஜத் சௌத்ரியின் இந்தப் பெரிய குறைபாடு பேட்டிகளின்போது இடையே தலைகாட்டி அவரை சங்கடத்தின் உச்சிக்குக் கொண்டுசெல்லும். இங்கும் அதேதான் நடந்திருக்கும், ஆனால் அப்படித் திக்கியது எதிர்பாராத விதமாக ப்ரௌனியின் அதிசயமான குணத்தை வெளிக்கொண்டு வர உதவியது. அந்தவகையில் போக்கன்வாலாவுக்கு அடுத்து ப்ரௌனியின் மனிதர்களைப் போன்ற சிரிப்பைக் கண்ணால் பார்த்த வெளிநபர் ரஜத் சௌத்ரிதான்.

அடுத்துவந்த ஞாயிறு காலை, க்ராண்ட் ஹோட்டலின் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்த அமெரிக்காவின் சின்சினாட்டியைச் சேர்ந்த திரு.வில்லியம்.பி.மூடி, செய்தித்தாளில் சிரிக்கும் நாயைப் பற்றிப் படித்ததும் ஹோட்டல் ஆபரேட்டருக்கு அழைத்து இந்தியச் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த திரு.நேண்டியை உடனடியாக அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். கடந்த இரு தினங்களில் திரு.மூடி, திரு.நேண்டியின் சேவையைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றபோது, நகரத்தின் அனைத்து விஷயங்களையும் அவர் தெரிந்து வைத்திருப்பதைக் கண்டார். ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை சிரிக்கும் நாய்க்கு சொந்தமானவரின் பெயரையும் முகவரியையும் கொடுத்திருந்தது. திரு.மூடி அந்தக் கதாபாத்திரத்தைச் சந்திக்க ஆவலாக இருந்தார்.

அஷமஞ்சா பாபு ஸ்டேட்ஸ்மேனைப் படிக்கவில்லை. தவிரவும், ரஜத் சௌத்ரி அந்த நேர்காணல் எப்போது வெளிவரும் என்று சொல்லவில்லை, சொல்லியிருந்தால் ஒரு பிரதி வாங்கியிருப்பார். அவரது அண்டை வீட்டுக்காரரான காளிகிருஷ்ண தத் மீன் மார்க்கெட்டில் வைத்து அதைப்பற்றிச் சொன்னார்.

“நீங்கள் ஒரு நல்ல குணமுள்ள மனிதர்,” என்றார் திரு.தத். “இப்படி ஒரு பொக்கிஷத்தை ஒரு வருஷத்திற்கும் மேலாக வீட்டிலேயே வைத்திருக்கிறீர்கள், அதைப்பற்றி யாரிடமும் மூச்சுக்கூட விடவில்லையே? இன்றைக்கு சாயங்காலம் போல உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் நாய்க்கு ஒரு ஹலோ சொல்லியே ஆகவேண்டும்.” அஷமஞ்சா பாபுவின் இதயம் கலவரமானது. நிச்சயமாக இதுவொரு பிரச்சினையாக ஆகப்போகிறது என்று அவருக்குத் தெரிந்தது. திரு.தத் போலவே அக்கம்பக்கத்தில் நிறையபேர் ஸ்டேட்ஸ்மேன் வாசிப்பவர்கள்தான், எல்லோரும் அவர் வீட்டுக்கு வந்து அவரது நாய்க்கு ஹலோ சொல்ல விரும்புவார்கள். இது அவரை சோர்வடையச் செய்யுமொரு நிகழ்வு.

மஞ்சா பாபு உடனடியாக சுதாரித்துக் கொண்டு, அன்றைய நாளை வீட்டிலிருந்து தள்ளி இருந்தபடி கழிப்பது என்று முடிவு செய்தார். எனவே, ப்ரௌனியை தனது கக்கத்தில் இடுக்கியபடி, வாழ்வில் முதன்முறையாக ஒரு டாக்சியில் ஏறி, நேராக பாலிகஞ்ச் ஸ்டேஷனுக்குச் சென்று அங்கிருந்து போர்ட் கேனிங் செல்லும் ரயிலில் ஏறிக்கொண்டார். பாதிதூரம் சென்றதும் ரயில் பால்சிட் என்ற ஸ்டேஷனில் நின்றது. அந்த இடம் பார்க்கப் பிடித்திருந்ததால் அஷமஞ்சா பாபு அங்கேயே இறங்கிக் கொண்டார். அன்றைய நாள் முழுவதையும் அமைதியான மூங்கில் தோட்டத்திலும் மாந்தோப்பிலும் கழித்தபின் புத்துணர்ச்சியை உணர்ந்தார். ப்ரௌனியும் அந்த இடத்தை நன்றாக ரசிப்பது போலிருந்தது. அதன் இதழ்க்கடையில் தவழ்ந்த மெல்லிய புன்னகை இதற்குமுன் அஷமஞ்சா பாபுவே பார்த்திராதது. அதுவொரு மாசற்ற புன்னகை, அமைதியின், மனநிறைவின் புன்னகை, உள்ளிருக்கும் மகிழ்ச்சியினால் உருவான புன்னகை. நாய்களின் ஒரு வருடம் என்பது மனித வாழ்க்கையில் ஏழு வருடத்திற்குச் சமம் என்று எங்கோ அவர் படித்திருக்கிறார். ஆனாலும் சுற்றியும் மரங்களடர்ந்த இதுபோன்ற இடத்தில் இவ்வளவு அமைதியான நடத்தையை ஏழு வயது மனிதக் குழந்தையிடம் எதிர்பார்க்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது.

000

அஷமஞ்சா பாபு வீட்டிற்குள் நுழையும்போது மணி ஏழைத் தாண்டியிருந்தது. யாரேனும் அழைத்திருந்தார்களா என்று பிபினிடம் கேட்டார். குறைந்தது நாற்பது முறை அவரைத்தேடி வந்தவர்களுக்காகக் கதவைத் திறக்க வேண்டியிருந்தது என்றான். அஷமஞ்சா பாபுவால் தன்னுடைய முன்னெச்சரிக்கைக்காகத் தன்னைத்தானே பாராட்டிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஷூவைக் கழற்றியபடி பிபினிடம் ஒரு டீ கேட்டபோது யாரோ கதவைத் தட்டினார்கள். “அடச் சை!” என்று நொந்து கொண்டார் அஷமஞ்சா பாபு. கதவைத் திறந்ததும் அவர் பார்த்தது ஒரு வெள்ளைக்காரரை. “ராங் நம்பர்.” என்று சொல்ல நினைத்து பின்னால் நின்றிருந்த பெங்காலிக்காரரைப் பார்த்ததும் “யார் வேண்டும்?” என்றார்.

“நீங்கள்தான்,” என்றார் இந்தியச் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ஷ்யாமோல் நேண்டி, “அதாவது, உங்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் நாய் உங்களுடையது என்றால், இன்றைக்குப் பேப்பரில் எப்படிச் சொல்லியிருந்ததோ அப்படியே இருக்கிறது. நாங்கள் உள்ளே வரலாமா?”

அஷமஞ்சா பாபு அவர்களைத் தனது படுக்கையறைக்குள் வரும்படி பெருந்தன்மையோடு அழைக்க வேண்டியதாயிற்று. அந்த வெளிநாட்டுக்காரர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார், திரு.நேண்டி பிரம்பு முக்காலியில் அமர்ந்துகொள்ள, அஷமஞ்சா பாபு தன் கட்டிலில் அமர்ந்து கொண்டார். ப்ரௌனி சற்றே அசௌகரியமாகத் தென்பட்டது, அறையின் வாசற்படிக்கு வெளியிலேயே நின்று கொண்டது; அறைக்குள் இரண்டு அந்நியர்கள் இருப்பதை அது இதற்குமுன் பார்த்ததில்லை என்பதால் இருக்கலாம்.

“ப்ரௌனி! ப்ரௌனி! ப்ரௌனி! ப்ரௌனி!” வெளிநாட்டுக்காரர் அறைக்குள் அதை வரவைப்பதற்காக அதை நோக்கிக் குனிந்து மீண்டும் மீண்டும் கூப்பிட்டுப் பார்த்தார். ப்ரௌனி அந்த அந்நியரை உறுத்துப் பார்த்தபடி நகராமல் நின்றது.

யார் இவர்களெல்லாம்? என்று இயல்பாக அஷமஞ்சா பாபுவுக்குள் எழுந்த கேள்விக்கு திரு.நேண்டி பதிலளித்தார். அந்த வெளிநாட்டுக்காரர் அமெரிக்காவின் குறிப்பிடத்தகுந்த பணக்காரர், இந்தியாவுக்கு பழைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்குவதற்காக வந்திருக்கிறார்.

அந்த அமெரிக்கர் இப்போது நாற்காலியிலிருந்து எழுந்து குத்துக்காலிட்டு அமர்ந்தபடி நாய்க்கு முன்னால் விதவிதமான முகச்சேட்டைகளைச் செய்து கொண்டிருந்தார்.

மூன்று நிமிட தோல்விகரமான கோமாளித்தனங்களுக்குப் பின் முயற்சியைக் கைவிட்டு அஷமஞ்சா பாபுவைப் பார்த்து, “இதற்கு உடம்பு ஏதும் சரியில்லையா?” என்றார்.

அஷமஞ்சா பாபு இல்லையெனத் தலையசைத்தார்.

“இவன் உண்மையிலேயே சிரிப்பானா?” என்றார் அமெரிக்கர்.

அஷமஞ்சா பாபுவுக்கு அமெரிக்கப் பேச்சு புரியுமோ புரியாதோ என திரு.நேண்டி அவருக்காக மொழிபெயர்த்தார்.

“ப்ரௌனி சிரிக்கும்,” என்றார் அஷமஞ்சா பாபு, “ஆனால் அது வேடிக்கையென்று எதையாவது உணர்ந்தால்தான்.”

அஷமஞ்சா பாபுவின் பதிலை நேண்டி மொழிபெயர்த்துச் சொன்னபோது அமெரிக்கரின் முகத்தில் செம்மை படர்ந்தது. தெளிவாகத் தெரியாத சூழ்நிலையில், அந்த நாய் சிரிக்கக்கூடியது என்ற நிரூபணம் கிடைக்காத வரையில் அவர் அந்த நாய்க்காகப் பணத்தை வீசியடிக்க விரும்பவில்லை. பின்னால் அவரைத் தர்மசங்கடப்படுத்தக் கூடிய எந்தவொரு நிலையையும் அவர் உருவாக்கிக் கொள்ளத் தயாராக இல்லை. மேலும் தனது வீட்டில் சீனத்திலிருந்து பெரு வரை உள்ள அரிதான பொருட்களும், லத்தீன் மொழி மட்டுமே பேசக்கூடிய கிளியும் வைத்திருக்கிறார். “சிரிக்கும் நாயை வாங்குவதற்காக என்னுடைய செக் புத்தகத்தைக் கையோடு எடுத்து வந்திருக்கிறேன், ஆனால் அது உண்மையிலேயே சிரிக்கும் என்ற ஆதாரம் கிடைக்கவேண்டும்.” என்றார்.

பிறகு தான் சொன்னதை நிரூபிக்கும் விதமாக தனது பாக்கெட்டிலிருந்து நீலநிற செக் புத்தகம் ஒன்றை வெளியிலெடுத்துக் காட்டினார். சிட்டி பேங்க் ஆஃப் நியூயார்க் என்று அதன்மேல் எழுதியிருந்தது.

“அதன்பிறகு நீங்கள் காற்றில் மிதப்பீர்கள்,” தூண்டும் விதமாகக் கூறினார் திரு.நேண்டி. “அந்த நாயைச் சிரிக்க வைக்கும் விதம் உங்களுக்குத் தெரிந்தால் போதும். இந்தக் கனவான் 20,000 டாலர்கள் தரத் தயாராக இருக்கிறார். அதாவது இரண்டு லட்சம் ரூபாய்கள்.”

கடவுள் ஏழுநாளில் உலகைப் படைத்ததாக பைபிள் கூறுகிறது. ஒரு மனிதன், தன் கற்பனா சக்தியினால் அதே விஷயத்தை ஏழு விநாடியில் செய்துவிட முடியும். திரு.நேண்டியின் வார்த்தைகள் அஷமஞ்சா பாபுவின் மனதில் உருவாக்கிய சித்திரங்கள், அவர் ஒரு விசாலமான குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கிறார், சுழலும் நாற்காலியில் அமர்ந்தபடி, கால்கள் மேசைமீது இருக்க, ஹசுநோ-ஹானாவின்* நறுமணம் அறையை நிறைக்கிறது. ஆனால் அடுத்த நொடி இந்தச் சித்திரம் திடீரென்று எழுந்த ஒரு ஒலியால் ஊசியால் குத்தப்பட்ட பலூன்போல மறைந்தது. ப்ரௌனி சிரித்துக் கொண்டிருந்தது.

அது இதற்குமுன் சிரித்த எந்தச் சிரிப்பையும் போல் இல்லை. “ஆமாம் இந்த நாய் சிரிக்கிறது.”

திரு.மூடி முழங்காலிட்டு அமர்ந்தபடி, பரவசத்தினால் உண்டான பதட்டத்தோடு அந்த அபூர்வமான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். செக் புக் மீண்டும் வெளியே வந்தது, அதோடு, அவருடைய தங்க பார்க்கர் பேனாவும் வந்தது.

ப்ரௌனி இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தது. அஷமஞ்சா பாபுவுக்கு அதன் சிரிப்பிற்கான காரணம் புரியவில்லை, யாரும் திக்கவில்லை, யாரும் தடுமாறி விழவில்லை, யாருடைய குடையும் காற்றில் திரும்பவில்லை, சுவரில் உள்ள எந்தக் கண்ணாடியிலும் செருப்பு விழவில்லை. ஆனால் ஏன் ப்ரௌனி சிரிக்கிறது?

“நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி,” என்றார் திரு.நேண்டி. “இந்த வியாபாரத்தில் எனக்கென்று குறிப்பிட்ட சதவீதம் கிடைக்க வேண்டுமென்று நினைக்கிறேன் – நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?”

திரு.மூடி இப்போது தரையிலிருந்து எழுந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டார். “அவர் தன்னுடைய பெயரை எப்படி எழுதுகிறார் என்று கேள்.” என்றார்.

திரு.நேண்டி அக்கேள்வியை பெங்காலியில் ஒலிபரப்பிய பின்னரும் அஷமஞ்சா பாபு பதில் கூறவில்லை, காரணம் இப்போதுதான் அவர் ஓர் ஒளியைக் கண்டிருந்தார், அவ்வொளி அவரது இதயத்தை வியப்பினால் நிறைத்திருந்தது. தன்னுடைய பெயரை எப்படி எழுதவேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக, பெங்காலியில், “அந்தக் கனவானிடம் சொல்லுங்கள். உண்மையில் அந்த நாய் ஏன் சிரித்தது என்று தெரிந்தால் அவர் தனது செக் புத்தகத்தைத் திறந்திருக்க மாட்டார்.” என்றார்.

வறண்ட குரலில் கூர்மையாக “ஏனென்று நீங்கள் சொல்லலாமே?” என்றார் திரு.நேண்டி, இந்த விஷயம் போகிற விதம் அவருக்கு நிச்சயமாகப் பிடிக்கவில்லை. இந்தத் திட்டம் தோல்வியடைந்தால் அமெரிக்கரின் கோபம் தன் மேல்தான் இறங்கும் என்ரு அவருக்குத் தெரியும். ப்ரௌனி ஒருவழியாக சிரிப்பதை நிறுத்தியிருந்தது. அஷமஞ்சா பாபு தைத் தூக்கி, தன் மடியில் வைத்துக்கொண்டு, அதன் கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சொன்னார், “என்னுடைய நாய் ஏன் சிரிக்கிறதென்றால், இந்தக் கனவான் பணத்தால் எல்லாவற்றையும் வாங்கமுடியும் என்று நம்புகிறார்.”

“ஓஹோ,” என்ரார் திரு.நேண்டி. “அப்படியென்றால் உன்னுடைய நாய் ஒரு தத்துவவாதி, அப்படித்தானே?”

“ஆமாம், சார்.”

“அதன் அர்த்தம் அந்த நாயை நீ விற்கமாட்டாய் என்பதா?” நேண்டியின் முகம் இறுகியது.

“மாட்டேன் சார்.”

திரு.மூடியிடம் ஷ்யாமோல் நேண்டி நாயின் உரிமையாளருக்கு அதை விற்கும் எண்ணம் இல்லை என்று மட்டும் சொன்னார்.

திரு.மூடி செக் புத்தகத்தை மீண்டும் தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, முழங்காலில் இருந்த தூசியைத் தட்டிவிட்டு, அறையிலிருந்து வெஇயேறும் வழியில் தலையை அசைத்தபடி கூறினார். “இந்த ஆள் பைத்தியமாகத்தான் இருக்கவேண்டும்.”

அமெரிக்கரின் கார் சத்தம் தேய்ந்து மறைந்தபிறகு அஷமஞ்சா பாபு ப்ரௌனியின் கண்களைப் பார்த்தபடி கேட்டார், “நீ ஏன் சிரித்தாய் என்பதற்கு நான் சரியாம முறையில் விளக்கம் கொடுத்தேன் இல்லையா?”

ப்ரௌனி ஆமோதிப்பாக மெல்லச் சிரித்தது.

000

* ஜப்பானிய பெர்ஃப்யூம். தாமரை மற்றும் அல்லி மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் புராதனமான வகை வாசனைத் திரவியம்.

••••

அந்தச் சிறு அனாதை / பியோதர் தஸ்தயேவ்ஸ்கி Fyodor Mikhailovich Dostoevsky / தமிழில் : தி.இரா.மீனா

download (23)

தத்துவம்,உளவியல்,மதம் உள்ளிட்ட துறைகளை முன்வைத்து ரஷ்யமொழில் நாவல், சிறுகதை உலகில் அற்புதமான படைப்புகளைத் தந்தவர் பியோதர் தஸ்தயேவ்ஸ்கி (1821 – 1881) Crime and Punishment The Idiot Demons The Brothers Karamazov ஆகியவை அவருடைய அற்புதமான படைப்புகளில் சிலவாகும். யதார்த்தமே அவரது எழுத்தின் சிறப்பம்சமாகும்.

I
அந்தப் பெரிய நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முன்பான குளிர் நாளில் நான் அந்த ஆறுவயது குழந்தையைப் பார்த்தேன்.ஆறுவயதை விடக் கூட குறைவாக இருக்கலாம்.தெருவில் பிச்சை எடுக்க அனுப்பமுடியாத அளவுக்கு சிறிய குழந்தை .ஆனால் இன்னும் ஓரிரு வருடங்களில் கண்டிப்பாக அவன் விதி அப்படித்தானிருக்கும்.
ஒருநாள் காலையில் குழந்தை ஈரமான நடுக்குகிற நிலவறையில் அவன் கண் விழித்தான். அழுக்கான ஆடை அங்கியால் அவன் சுற்றப்பட்டிருந்தான். எனினும் நடுங்கிக் கொண்டிருந்தான்.வெள்ளை ஆவிபோல அவன் மூச்சு வந்து கொண்டிருந்து.;ஒரு பெட்டி மேல் உட்கார்ந்திருந்தான்.நேரத்தைக் கடத் துவதற்காக அவன் வாயிலிருந்து மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான்.அது வெளி யேறுவதை வேடிக்கை போலப் பார்த்துக்கொண்டிருந்தான்.ஆனால்அவனுக்கு அதிகமாகப் பசித்தது.காலையிலிருந்து சிலதடவை வைக்கோல் படுக்கையில் சீக்காய்ப் படுத்திருந்த அம்மாவின் அருகே போக முயற்சித்துக் கொண்டிருந் தான்.அம்மாவின் தலை தலையணைக்கு பதிலாக துணிமூட்டையில் கிடந் தது
அவள் அங்கே எப்படி வந்தாள்? வேறு எங்கிருந்தோ அங்கு வந்த அவள் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும்.அந்த மோசமான விடுதியின் முதலாளி இரண்டு நாட்களுக்கு முன்னால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் இருக்கிறான்.இன்று விடுமுறை நாள்.மற்ற குடியிருப்புக்காரர்கள் வெளியே போயிருக்கின்றனர்.ஒருவர் மட்டும் விடுமுறைக்காகக் காத்திருக்காமல் இருபத்து நான்கு மணி நேரமாக குடிபோதையில் படுக்கையில் கிடக்கிறார்.

இன்னொரு மூலையில் எண்பது வயதான கிழவி மூட்டுவலியால் பாதிக்கப் பட்டு படுத்துக் கிடக்கிறாள்.அவள் எங்கேயோ குழந்தைகளின் செவிலியாக வேலை பார்த்தவள்;அவள் இப்போது தனியாகத் தவித்துக்கொண்டிருக்கிறாள் .புலம்பியும், முனகியும், உறுமியும் அந்தச் சிறிய குழந்தையை பயமுறுத்து கிறாள்.அவள் தொண்டையிலிருந்து வரும் கடகட ஒலியால் அந்தச் சிறுவன் அவள் அருகே வர பயப்படுகிறான்.நடை வழியில் குடிப்பதற்கு ஏதோ இருப்பதை அவன் கண்டுபிடித்தாலும்,கைநீட்டி அவனால் அதைத் தொட முடியவில்லை பத்தாவது முறையாக அவன் தாயின் அருகே நகர்ந்து அவளை எழுப்பப் பார்க்கிறான்.இருளில் நடுங்கிப் போகிறான்.

இருட்டு வந்து விட்டதெனினும் விளக்கேற்ற யாரும் வரவில்லை.உற்றுப் பார்த்து அம்மாவின் முகத்தை அறிகிறான். அவளிடமிருந்து எந்த அசைவு மில்லை.சுவரைப் போல அவள் குளிர்ந்து கிடந்தாள்.
“மிகவும் குளிராக இருக்கிறது”அவன் நினைத்தான்.
அசையாமல் சிறிதுநேரம் இருந்தான்.சவத்தின் தோள்மீது அவன் கையிருந் தது.தன் கைவிரல்களை உஷ்ணப்படுத்திக் கொள்ள அவன் வாயால் ஊதி னான்.அப்போது படுக்கையில் கிடந்த தன் குல்லாவைப் பார்த்து விட்டான் கதவை பார்த்தான்.விடுதியின் தரைதளத்தில் அவர்களிருந்தனர்.

பக்கத்து வீட்டு கதவருகே இருந்து இருபத்து நான்கு மணி நேரமும் நாய் குரைத்துக் கொண்டிருக்கும் அதைக் கண்டு பயமில்லாமலிருந்தால் அவன் அங்கு போயிருப்பான்.
ஓ! என்ன நகரம்! இதைப் போல அவன் இதற்கு முன்பு பார்த்த்தில்லை.அவன் இருந்த இடத்தில் கும்மிருட்டாக இருக்கும்.அந்த முழுவீதிக்கும் ஒரு விளக் குத்தான்.;சிறிய தாழ்வான மரவீடுகள்,எப்போதும் ஷட்டர் போட்டு மூடப்பட்டி ருக்கும் ; இந்த நேரத்திலேயே இருட்டத் தொடங்கிவிடும்..யாருமிருக்க மாட் டார்கள்.எல்லோரும் வீட்டிற்குள் முடங்கவிடுவார்கள்;நாய்கள் கூட்டம் மட்டும் ஊளையிட்டுக் கொண்டிருக்கும்.,நூறு ,ஆயிரம் என்று அவை இரவு முழுவ தும் ஊளையிட்டுக் கொண்டும்,குரைத்துக் கொண்டுமிருக்கும்.ஆனாலும் அங்கு மிக வெதுவெதுப்பாக இருக்கும்!சாப்பிட ஏதாவது கிடைக்கும்.இங்கு,.. ஆ! சாப் பிட ஏதாவது கிடைத்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்!சத்தம் என்றால் இங்கே பரபரப்புத்தான்..என்ன அற்புதமான விளக்கு,மனிதர்கள் கூட்டம்! குதிரைகள்..வண்டிகள்!அதோடு குளிர் .. குளிர்..! களைப்பான குதிரைகளின் உடல்களில் அழுக்கு படிந்திருக்கும். மூக்குகளிலிருந்து உஷ்ணமான காற்று வரும்.அவற்றின் கால்கள் மென்மையான பனியில் படியும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் எப்படி தள்ளிக் கொள்கிறார்கள்! “ஓ!இப்போது சாப்பிட ஏதாவது கொஞ்சம் கிடைத்தால் கூட எவ்வளவு நன்றாயிருக்கும்.அதனால் தான் என் விரல்கள் வலிக்கின்றன.”

II

ஒரு போலீஸ்காரன் தலையைத் திருப்பிக் கொண்டு அந்தக் குழந்தையைப் பார்க்கக் கூடாதென அந்த இடத்தைக் கடந்தான்.

:இங்கு இன்னொரு வீதி இருக்கிறது.ஓ!எவ்வளவு அகலமானது!இங்கே நான் நசுங்கிச் செத்து விடுவேன்.எப்படி எல்லோரும் கூப்பாடு போடுகிறார்கள்.ஓடு கிறார்கள்,உருள்கிறார்கள்! விளக்கு..விளக்கு!அது என்ன?ஓ! எவ்வளவு பெரிய கண்ணாடி ஜன்னல்!,ஓர் அறை,அந்த அறையின் கூரையைத் தொடுமளவுக்கு ஒரு மரம்;அது கிறிஸ்துமஸ் மரம்.மரத்தினடியில் எவ்வளவு விளக்குகள்! தங்கக் காகிதங்கள்,ஆப்பிள்கள் !சுற்றிலும் அழகான பொம்மைகள், சிறிய குதிரை வண்டிகள்.. சிரித்தும் ,விளையாடியும், சாப்பிட்டுக் கொண்டும் அழகான உடையணிந்த சுத்தமான குழந்தைகள்.ஒரு சிறிய பெண் குழந்தை ஒரு சிறுவனோடு நடனமாடுகிறாள்.எவ்வளவு அழகாயிருக்கிறாள் அவள்! அங்கிருந்து இசையும் கேட்கிறது. கண்ணாடியின் வழியாக நான் கேட்கிறேன்.
அந்தக் குழந்தை ரசிக்கிறான்..சிரிக்கவும் செய்கிறான்.அவன் இப்போது தன் விரல்களிலோ ,பாதங்களிலோ எந்த வலியையும் உணரவில்லை.கை விரல் கள் சிவப்பாகி விட்டன.அவற்றை அசைப்பது வேதனையாக இருக்கிறது; அவைகளை இனி மடக்க முடியாது.ஒரு நிமிடம் அழுகிறான்.பிறகு நடந்து மற்றொரு அறையில் உள்ள ஜன்னலருகே போகிறான் அவன்.அங்கும் மரங் களைப் பார்க்கிறான் மேஜையின் மேல் கேக்குகள், சிவப்பு மற்றும் மஞ்சள் பாதாம் பருப்புகள் போன்றவை இருப்பதைப் பார்க்கிறான்.நான்கு அழகான பெண்கள் அங்கிருக்கின்றனர். யார் வந்தாலுமவர்களுக்கு கேக் கொடுக்கின் றனர்; ஒவ்வொரு நிமிடமும் கதவுதிறக்க மனிதர்கள் வந்தவண்ணமிருக்கின் றனர்.அந்தச் சிறுவன் தவழ்ந்து முன்னேபோய் திடீரெனக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான்.ஓ! அவன் உள்ளே போன போது அவனைப் பார்த்தவுடன் எத்தனை சப்தம்,,குழப்பம்!உடனடியாக ஒரு பெண் எழுந்து வந்து ஒரு கோபெக்கை {நாணயம்}.அவன் கையில் வைத்தாள். வெளியே வருவ தற்கு வாசல் கதவைத் திறந்து விட்டாள்.அவன் எப்படி பயந்து போனான்!

III

அந்த கோபெக் அவன் கையிலிருந்து தவறி மாடிப்படியில் உருண்டது.அந்த நாணயத்தை கெட்டியாகக் கையில் அவனால் பிடித்துக் கொள்ள முடிய வில்லை.அவன் வெளியே வேக,வேகமாக நடக்கிறான்.அவன் எங்கே போகி றான்? அவனுக்குத் தெரியவில்லை.அவன் ஓடிக் கொண்டேயிருக்கிறான். கைகளை ஊதிக் கொள்கிறான்.அவன் கஷ்டத்திலிருக்கிறான். அவன் தனியாக உணர்கிறான்,பயமாக இருக்கிறது! திடீரென இது என்ன ! கூட்டமாக மக்கள் நின்றுகொண்டு ரசித்தபடியிருந்தனர்.
“ஒரு ஜன்னல்!கண்ணாடியின் பின்னால், சிவப்பு மற்றும் மஞ்சள் உடைகளில் உயிருடன் இருப்பது போலவே மூன்று அழகான பொம்மைகள்! உட்கார்ந்தி ருந்தன. வயதான மனிதன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்.வேறு இரண்டு பேர் நின்று கொண்டு இசைக்குத் தகுந்தவாறு தலையாட்டி வயலின் வாசித் தார்கள்.அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உதடுகளை அசைத் தனர்.அவர்கள் உண்மையில் பேசுகிறார்களா?கண்ணாடி மூலமாக அவர்கள் பேசுவது மட்டும் கேட்கவில்லை.”

IV

அவன் திடீரென யாரோ பறிப்பது போல உணர்கிறான்..ஒரு பெரிய வலிமை யான பையன் அவனருகே நின்று கொண்டு தலையில் ஓர் அடி கொடுத்து அவன் தொப்பியைப் பறித்துக் கொள்கிறான்.
அவன் கீழேவிழுகிறான்..அதே சமயத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்கிறது.; அவன் பயத்தால் ஓரிரு கணம் அசையமுடியாமலிருக்கிறான்.பிறகு மெது வாகத் தன்னைச் சுதாரித்துக் கொண்டெழுந்து ஓடுகிறான்.நீண்ட தூரம் குறுக்கு பாதையில் ஓடி மரங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய முற்றத்தில் ஒளிந்து கொள்கிறான்.மூச்சு விடுவது கூட கஷ்டமாகிறது.
திடீரென அவன் மிக வசதியாக உணர்கிறான்.அவனுடைய சிறிய கைகளி லும்,காலகளிலும் எந்த வலியுமில்லை;ஒரு அடுப்பின் அருகே இருப்பது போல அவன் வெம்மையாக உணர்கிறான்.அவனுடல் நடுங்குகிறது.
“ஓ! நான் தூங்கப் போகிறேன்! தூங்குவது எவ்வளவு அற்புதமானது! சிறிது நேரமிருந்து விட்டு பிறகு மீண்டும் அங்கு போய் அந்தச் சிறிய பொம்மை களைப் பார்ப்பேன்.”அந்தச் சிறுவன் தனக்குள் சொல்லிச்,சின்ன பொம்மை களைப்பற்றி நினைத்துச் சிரித்துக் கொண்டான்.”அவைகள் உயிருடன் இருப்பது போலவே இருக்கின்றன!”

பிறகு அவனுக்கு அம்மா பாடுவது கேட்டது.”அம்மா!நான் தூங்கப் போகி றேன்.இங்கு தூங்குவது எவ்வளவு அருமையானது!”
“கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்க்க எங்கள் வீட்டிற்கு வா “என்று ஒரு மென் மையான குரல் கேட்டது.
அது தன் அம்மாவாக இருக்கவேண்டுமென்று முதலில் நினைத்தான்;ஆனால் அது அம்மாவல்ல.
அப்படியானால் யார் அவனைக் கூப்பிடுவது?அவனால் பார்க்கமுடியவில்லை ஆனால் யாரோ ஒருவர் இருட்டில் குனிந்து தன்னைத் தழுவித், தோளில் தூக்கிக் கொள்வதாக உணர்கிறான்;அவன் தன் கையை விரிக்கிறான். உடனே.. ஓ..!என்ன வெளிச்சம்!என்ன ஓர் அருமையான கிறிஸ்துமஸ் மரம்!இல்லை, இது கிறிஸ்துமஸ் மரமில்லை;இது போல அவன் பார்த்ததேயில்லை.

அவன் இப்போது எங்கேயிருக்கிறான்?எல்லாம் பிரகாசமாக இருக்கிறது, எல் லாம் வெளிச்சமாக இருக்கிறது, சுற்றி பொம்மைகள் இருக்கின்றன.ஆனால்.. இல்லை, பொம்மைகள் இல்லை. சிறுவர்கள்,சிறுமிகள் ;அவர்கள்தான் மிகப் பிரகாசமாகத் தெரிகிறார்கள்.அவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி வந்து நிற்கின்றனர்.அவர்கள் பறக்கின்றனர். அவனை அணைத்துக் கொள்கின்றனர்; அவனைத் தூக்கிக் கொள்கின்றனர்.அவனும் பறக்கிறான்.அம்மா தன்னைப் பார்ப்பதையும், மகிழ்ச்சியாகச் சிரிப்பதையும் பார்க்கிறான்.
“அம்மா !அம்மா! இங்கு எவ்வளவு நன்றாக இருக்கிறது!”சிறுவன் அவளிடம் சொல்கிறான்.

அவன் குழந்தைகளை அணைத்துக் கொள்கிறான்.கண்ணாடி ஜன்னலுக்குப் பின்னாலிருக்கிற பொம்மைகளைப் பற்றி அவர்களிடம் சொல்ல விரும்பு கிறான். “நீங்களெல்லாம் யார்?” அன்பாகக் கேட்கிறான்.
இது இயேசுவிடமிருக்கிற கிறிஸ்துமஸ் மரம். தங்களுக்கு என்று எதுவுமே இல்லாத குழந்தைகளுக்காக இயேசு எப்போதும் வைத்திருக்கிற மரம் அது.
அங்குள்ள சிறுவர் .சிறுமியர் எல்லோரும் அவனைப் போன்றே இறந்தவர்கள் என்று தெரிந்து கொண்டான்.சிலர் செயின்ட் பீட்டர்பர்க் நகரத்தின் பொது இடங்களில் கூடைகளில் வைத்து கைவிடப்பட்டவர்கள்; சிலர் பசியால் செத்தவர்கள். இங்கிருக்கும் எல்லோரும் சின்ன தேவதைகள்.. கிறிஸ்துவுட னிருப்பவர்கள்,அவரும் அவர்களில் ஒருவராகத்தானிருக்கிறார்.

தன் கைகளை அவர்கள் மேல் விரித்து,அவர்களையும் அவர்களின் பாவப்பட்ட தாய்களையும் ஆசீர்வதித்து..
அந்தக் குழந்தைகளின் தாயரும் அங்கிருக்கின்றனர்.அழுகின்றனர். தங்களு டைய மகன் அல்லது மகளை அடையாளம் கண்டு அவர்களருகே போய் தழுவிக் கொள்கின்றனர்;தாயரின் கண்ணீரைச் சிறுகைகளால் துடைக்கின் றனர்.அழவேண்டாமென்று கெஞ்சுகின்றனர்.

கீழே ,பூமியில் காலையில் அந்த விடிதியின் காவலர் குழந்தையின் சடலத்தை முற்றத்தில் பார்க்கிறார். அது மரக் குவியல்களுக்குப் பின்னால் விறைத்தும், இறுகியும் கிடக்கிறது.

தாயும் அங்கேயே கிடக்கிறாள்.அவள் அவனுக்கு முன்னால் இறந்து விட்டாள்; கடவுளின் சந்நிதானத்தில் அவர்கள் மீண்டும் இணைந்திருக்கின்றனர்.

——-

மழை ( மலையாளம் ) : சாரா ஜோசப் ஆங்கிலம் :ஜே.தேவிகா தமிழில் :தி.இரா.மீனா

download (18)

அந்த மத்தியானத்தில் திடீரென்று மழை பெய்யத்தொடங்கிய போது ஹாலிற் குப் போகும் வழியிலிருந்த அந்தச் சிறிய அறையின் கதவு, ஜன்னல்களை அவள் சாத்தினாள். ஒரேயொரு ஜன்னலை மட்டும் திறந்து வைத்து அங்கு நின்று கொண்டு பெரும் ஓலமிட்டு வீசியடிக்கும் மழையைப் பார்த்தாள். மலைச்சரிவில் வெடிச் சத்தத்தோடு தன் பொருமலை மழை வெளிப்படுத் தியது.

“கடவுளே! ’அவள் முணுமுணுத்துக் கொண்டு தன்கையை நெஞ்சினருகே கொண்டுபோனாள்.கைவிடப்பட்டு இந்த மாதிரி—இந்த மாதிரி மழை ஓலமிட் குரல் கொடுக்கும்போது நானும் அழ வேண்டும்.அவள் தன் கன்னத்தை இரும்பு ஜன்னலில் வைத்து அழுத்தித் தேய்த்தாள்.தன் சக்தியை முழு வதுமாக இழந்து ஜன்னலில் சாய்ந்து உட்கார்ந்தாள். முழங்காலில் முகம் புதைத்துக்கொண்டாள்.

அவள் கணவன் ஹாலில் மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்து செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார்.மேகங்கள் மழை பெய்யக் கூடியபோதே அவர் ஹால்லைட்டைப் போட்டு விட்டார்..மோதும் ஓசையோடு கனமாக மழை பெய்தது. குளிர்காற்றில் வாசல் மிதியடியும்,திரைச் சீலைகளும் நனை யத் தொடங்கிய போது அவர் எழுந்து முன் கதவைச் சாத்தினார் காற்றில் திரைச்சீலைகள் தொடர்ந்து உக்கிரமாகப் படபடத்தன.அவள் படித்து விட்டுக் கீழேதரையில் பரத்திப் போட்டிருந்த புத்தகங்களை நனையாமலிருக்க பக்கத் தில் உள்ள அலமாரியில் அடுக்கி வைத்தார்.பிறகு அந்த நாற்காலியில் சாய்ந்து செய்தித்தாளை மீண்டும் படிக்கத்தொடங்கினார்.

குழந்தைகள் ஓடிவந்து அவரருகே தரையில் உட்கார்ந்து பழைய பேப்பர் துண்டுகளிலிருந்து படகுகள் செய்யத் தொடங்கினர்.

“அப்பா, கதவைத் திறந்து வையுங்கள்”மகன் கொஞ்சிய குரலில் கேட்டான். இடதுகையால் பேப்பர் படகைத் தூக்கியும் ,வலது கையால் நழுவி விழும் நிக்கரைச் சரிசெய்யவும் முயன்று கொண்டிருந்தான்.அவர் அதைச் சிறிதும் சட்டை செய்யாததால் அவர் கையைப் பிடித்து மீண்டும் இழுத்தான்.

“அப்பா!”

“என்னடா?”

“கதவு…”

“கதவா?”

“தயவுசெய்து திறங்கள் அப்பா”

“எதற்கு?”

“இந்தப் படகுகள் விட வேண்டும்”.

“ போடா,மழையில் நனைந்தால் ஜூரம் வரும்.நீயும் உன் படகும்!””

அவர் கண்கள் செய்தித்தாளில் இருந்து சிறிதும் விலகவில்லை.சிறுவன் கோபமும் ஏமாற்றமும் கலந்த நிலையில் தன் அக்காவைப் பார்த்தான்.” அடுத்து என்ன செய்யலாம்?அழத் தொடங்கலாமா ?”என்று கேட்பதுபோல அவன் பார்வை இருந்தது.;நல்ல கவனம் எடுத்து மிக அழகான முறையில் படகைச் செய்திருந்தாள். பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்வது போலத் தம்பியைப் பார்த்தாள்.தன் படகைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்;அது கசங்கி விடாமல் கவனமாக அழுத்தி மடித்துக் கொண்டிருந்தாள்.அவன் அதைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனுக்குக் கோபம் வந்தது. அவளும் அவள் படகும்! மழை இப்போது நின்று விடப்போகிறது.மழை நின்று விட்டால் அவள் தன் அழகான படகை எங்கே விட முடியும்?

“அக்கா!இங்கே வா’

“இரு. இதோ முடிந்து விட்டது! வருகிறேன்”.

அப்பா பார்த்துவிடாதபடி மிக கவனமாக இருவரும் ஜன்னல் கம்பியில் ஏறி கையை இயன்றவரை வெளியே நீட்டிப் படகுகளை விட்டனர்.

அவன் படகு மழைத் தண்ணீரில் சாய்ந்து அசையாமல் நின்றுவிட்டது.அவள் படகு நல்ல வடிவத்திலும், சிறகு போல மெல்லிதாகவுமிருந்த்து.ஒரு வினாடி நடுங்குவது போல இருந்து பின்பு மழைத்தண்ணீரில் செல்ல ஆரம்பித்த்து.

பலமான படகு செய்யத் தெரியாதா உனக்கு?பார், அதனால்தான் அசையாமல் நின்று விட்டது” அவள் சொன்னாள்

“ஏய்! மழைத்தண்ணீர் வருகிறது. இரண்டு பேரும் உள்ளே வாருங்கள்!”அப்பா சத்தமாகக் கூப்பிட்டார்,கண்களைப் பேப்பரிலிருந்து எடுக்காமலே.எதுவும் பேச வேண்டாம் என்பது போல அக்காவுக்குச் சிறுவன் ஜாடை செய்தான். அசையா மல் அங்கே நின்றனர். .

மழை வலுவானது.பூமியிலிருந்து பனி நீராவியாக எழுந்தது.மேற்கு பகுதியில் வானம் கனமானது.மலைகள் உப்பியது போலவும்,பனியில் மூழ்கியது போல வும் தெரிந்தன.அந்த நடுக்கம் தரும் மழை அவளை இன்னமும் பலவீனமாக் கியது .வேறு வழியில்லை என்று அவள் தன்னைச் சமாதானம் செய்து கொண்டாள்.

“நான் ஏன் அழுகிறேன்? ஏன் ? ஏன்?”

திடீரென்று தோட்டத்திலிருந்த சப்போட்டா மரக்கிளையிலிருந்து கோழியின் முட்டை அளவு கூட இல்லாத ஒருசிறுபறவை நடுங்கியபடி கீழே விழுவ தைப் பார்த்தாள்.ஒரு வினாடிதான்.மரத்தினடிப் பகுதிக்கு அது மழை வேகத் தில் அடித்துச் செல்லப்பட்டது.அது செத்துக் கொண்டிருக்கிறதென்று அவள் நினைத்தாள்.கதவைத் திறந்து கொண்டு ஹாலுக்கு வந்தாள். மூச்சிறைக்க வாசல்கதவைத் திறந்துகொண்டு மழையில் ஓடினாள்.முன் வாசலிலுள்ள துள சிச்செடி மேடையின் அருகே அது உருண்டு கொண்டிருந்தது.அவள் அதைக் கையிலெடுத்தாள்.சேற்றுத் தண்ணீர் அவள் காலை நீர்ச்சுழல்போலச் சுற்றி யது.பறவை மிகவும் சிறியதாக இருந்தது.அவள் கலக்கமடைந்தாள் .அது நடுங்கியது. தண்ணீரில் ஊறியிருந்தது.துக்கத்தை விட ஒருவித பிரிவுணர்வு அவளை வருத்தியது..பறவைகள் மரத்தைச் சுற்றி கவலையோடு சிறகுகள் படபடக்கப் பறப்பதைப் பார்த்தாள்.

“உனக்கு என்ன ஆயிற்று?இந்த மழையில் நனைந்து கொண்டிருக்கிறாயே?”

அவர் கோபத்தோடு கதவருகில் நின்றிருந்தார்.

“அம்மா!மழையில் நனையாதீர்கள்”மகன் கூப்பிட்டான்.அப்பாவின் காலருகே கிடந்த தன் படகை எடுத்து மீண்டும் தண்ணீரில் விட இதைச் சிறந்த ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டான்.அது சுருண்டு பேப்பர்ப்பந்து போல இருந்தது.”ஐயோ, மக்கு! உன் படகைப் பார்”என்று அக்கா கேலி செய்தாள். அவனுக்கு அவமானமாகி விட்டது.கோபமாக அவளைப் பார்த்தான்.அவளைப் பழிவாங்க நினைத்து ஹாலுக்குள் வரத் தொடங்கியபோது “அப்பா,பாருங்கள்! சுரேஷ் மழையில் நனைகிறான்.அவன் தலை முழுவதும் நனைந்து விட்டது!” என்று அக்கா சொன்னாள்.

“உம்!அவன் நனையட்டும்.மற்றவர்கள் செய்வதைத்தான் குழந்தைகள் காப்பி அடிப்பார்கள். சரியா?’

அவளுக்கு திடீரென்று கோபம் வந்தது.தன் இடதுகையில் அந்தச் சிறிய பற வையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.சுரேஷை நோக்கி வேகமாக நடந் தாள்.அவன் தொடையில் பலமாக அடித்தாள்.

”போ! மழையில் நிற்காமல் உள்ளே போ!”

அவன் பெரிதாக அழுதான்.அவள் அடித்ததை விட அம்மாவின் முகமாற்றம் அவனை அழவைத்தது.”நான் செத்துவிடுவேன். நீங்கள் எல்லோரும் என்னைக் கொன்று விடுவீர்கள்” வெறியோடு சொன்னாள்.

“நீ உள்ளே வரப் போகிறாயா இல்லையா?”அவர் எரிச்சலடைந்து கேட்டார்.

“இல்லை.நான் மழையில்தான் நனைவேன்”.

“உண்மையாகவா?”கேலியாக,அலட்சியமாக கேட்டார். அந்த பாவங்கள் அனைத்தையுமே அவள் வெறுத்தாள்.அவள் முன்வாசலில் கோபத்தோடு இறங்கினாள்.

”அம்மாவுக்கு என்ன ஆனது?”குழந்தைகள் குழம்பினர் .தங்களுக்குள் மெது வாகக் கேட்டுக் கொண்டனர்.

“ஆமாம்.கேளுங்கள்.!நான் பலவகையான பித்துக்களைப் பார்த்திருக்கிறேன். இது கொஞ்சம் வித்தியாசமானது”

அவள் தன் மகளை முறைத்தாள்.சிறுமி சிறிது பின்வாங்கி “ஜூரம் வந்தால் நீங்கள்தான் கஷ்டப் படுவீர்கள் “என்றாள்.

அவள் எதுவும் பேசவில்லை.தென்னைமட்டையால் தலையை மறைத்தபடி தோட்டவேலை செய்யும் பெண்கள் அவளைக் கடந்து போனார்கள்.அவர்கள் அவளை வெறிப்பதைப் பார்த்துவிட்டு“ நீ உள்ளே வரப்போகிறாயாஇல்லையா பத்மா?” என்று அவர் கேட்டார்.

அவள் அமைதியாக இருந்தாள்.திரும்பிப் பார்க்கவில்லை.சிறிய பறவையை நெஞ்சில் அணைத்தபடி, அவமானமடைந்தவளாக அந்த கொட்டும் மழையில் நின்றிருந்தாள்.வீட்டைக் கடந்தவர்கள் அவளை வெறிப்பதைப் பார்த்து விட்டு அவர் ’வேசி” என்றுதிட்டினார்.

விரக்தியிலும் ,வெறுப்பிலும் என் மனம் வருந்துகிறது என்று நினைத்தாள் .பறவையைப் பிடித்திருந்த இடது கையை இறுக்கினாள்.அதன் எலும்புகள் நொறுங்குவது அவளை இயல்புநிலைக்குக் கொண்டு வந்தது.அவர் கதவை பலம் கொண்டமட்டும் அறைந்து சாத்தினார்.அவள் கையிலிருந்த பறவை சில நிமிடம் தத்தளித்துத் தவித்தது. அவள் கையை லேசாக்கி ஆட்டினாள். அது சிறிது தொலைவில் சென்று விழுந்தது.அசைவின்றி.இறந்து கிடந்த அதை மற்ற பறவைகள் சூழ்ந்தன.அவற்றின் சிறகுகள் நனைத்தும் பிசுபிசுத்து மிருந் தன அவற்றின் புலம்பல் மழைச் சத்தத்தை விடப் பெரிதாக இருந்தது .ஒரு கொலையாளியின் பதற்றம் அவளுக்குள் எழுந்தது.பறவையின் ஈரம் இன்னும் கையிலிருந்தது. அவள் தன் இரு கைகளையும் தேய்த்துக் கொண்டாள். அந்தப் பறவைகளின் புலம்பல் அவள் மீதே அவளுக்கு வெறுப்பையும் இகழ்வையும் ஏற்படுத்தின.வேதனை மனதைப் பிசைய கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.திடீரென்று அவளுக்கு சுரேஷைக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.காரணமின்றி சின்னக் குழந்தையை அடித்தது வருத் தமாக இருந்தது.பித்துப் பிடித்தவள்போல ஓடிவந்தாள். ஒடி வரும்போது சில தடவைகள் ஈரப்புடவை காலை தடுக்கியதால் மூடியிருந்த கதவின் மேல் பலமாகச் சாய்ந்தாள்.அவள் தலையிலிருந்து மழைத் தண்ணீர் சொட்டியது. புடவை உடம்போடு ஒட்டியிருந்தது.அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

’போதுமா ,இப்போது?”

அவர் ஏளனமாகக் கேட்டார்.அவர் ஏளனத்தில் கொடூரமிருந்தது.அவள் தனக் குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டாள்.சுரேஷிடம் போகும் விருப்பம் அவ்வளவு அவசரமாக இப்போது இல்லாமலிருக்கலாம் அவர் ஏளனத்தை பொறுக்க முடியாமல் இருக்கலாம்.அல்லது ..

“கதவை திறங்கள்”அவள் முணுமுணுத்தாள்.அவளது பலவீனமான குரல் மழையின் ஒலிக்கு முன்னால் மெலிதாக இருந்தாலும் அவருக்குக் கேட் டது.எழுந்து வந்து ”பெண்கள் இப்படித் திமிரெடுத்து இருக்கக் கூடாது. புரிந்ததா?”.என்று கேட்டபடி கதவைத் திறந்தார்.

அவள் பதில் சொல்லவோ அவர் பேச்சுக்கு கவனம் காட்டவோ இல்லை. தலையைத் துவட்டிக் கொண்டு படுக்கை அறைக்குள் போனாள்.

சுரேஷ் அழுதபடியே தூங்கியிருந்தான்.குழந்தையைப் பார்த்தபடி அவள் வெகு நேரம் அங்கு நின்றிருந்தாள்.அவன்முகம் அவளுக்கு பரிச்சயம் இல்லாதது போலவும் கூட உணர்ந்தாள்.தன்னை உலுக்கிக் கொண்டு அவன் முகத்தருகே முத்தம் கொடுக்கக் குனிந்தாள்.ஆனால் முடியவில்லை.நான் ஏனிப்படி இருக் கிறேன்.!அவளுக்கு வலித்தது.சிறுமி அறைக்குள் வந்து அம்மாவின் அருகில் உட்கார்ந்தாள்.அவள் முகம் வாடியிருந்தது.தன் மகளின் சின்னமுகத்தைப் பார்த்ததும் அவளுக்கு அந்தச் சிறியபறவையின் ஞாபகம் வந்தது.மிக மென் மையாக அன்போடு”சுதா, தூங்கும் நேரம் வந்து விட்டது.போ” என்றாள்.

சிறுமி அமைதியாக அம்மாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டாள்..படுத்துக் கொண்ட பிறகும் அந்தப் பெரியவிழிகள் அம்மாவின் முகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன.அந்த முகபாவத்திலிருந்து சிறுமியால் எதுவும் கண்டுபிடிக்க முடிய வில்லை. குழந்தைகளுக்குப் போர்த்தி விட்டு அவள் களைப்போடு நாற்கா லியில் சாய்ந்தாள்.

இந்தக் குழந்தைகள்…

அவர்களின் துரதிர்ஷ்டம் நான் அவர்களின் தாய் என்பதுதான்.. நான் அவர்கள் மீது அன்பு காட்டவில்லை.கடவுளே!நான் அவர்களை நேசிக்கவில்லையா?

ஆமாம். .இல்லை. ஆமாம்.இல்லை.

ஆமாம். கடவுளே! அவர்கள்தான் என் வாழ்க்கை.

ஆனால் அவர்களுக்கு என்னைவிட ஒரு நல்லதாய் கிடைத்திருக்கலாம். அவர்கள் அருமையான குழந்தைகள்.

எப்படியானாலும் நான் அவர்களை நேசிக்கிறேன்.உண்மையாக.. அவர்களின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.

தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் முகம் மீண்டும் சிறிய பறவையை நினைவூட்டியது.சுரேஷின் கழுத்தை நெறிப்பது போலவும்,சுதாவின் மென் மையான எலும்புகளை உடைப்பது போலவும் பிரமை ஏற்பட்டது .வேதனை பெருகத் தன் இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கொண்டாள்.

ஹாலில் கணவன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.அவளுக்கு சிறிதும் பிடிக்காத பாப்இசை அவருக்கு மிகவும் பிடிக்கும்.இது அவளை ஏளனம் செய்யத்தான்.முன்பை விட அதிகம் ஏளனம் செய்யதான் இப்போது இந்த இசை என்பது அவளுக்குத் தெரியும்.

“இந்தக் கொடூரமான உதாசீனத்தைப் பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு எனக்குத் தெம்பில்லை”முணுமுணுத்தாள்.

இந்த இடத்தில் நான் எவ்வளவு அற்பமாக இருக்கிறேன்!

கடவுளே !எப்படி இங்கு மட்டும்?

அவள் கையைத் தூக்கினாள்.

“நான் இறந்து விடுவேன்”தீர்மானித்தாள்

’பாவம் என் குழந்தைகள்!அவர்களுக்கு யாருமில்லை”

தரையில் சாய்ந்து முகம் மிதியடியில் புதைய திடீரென்று அழத்தொடங் கினாள்.

————————-

எலும்பில்லா மனிதர்கள் – Alfred Hitchcock ( The Stories that even scared me ) / .தமிழில்.பெரு.முருகன்.

download (17)

பியூர்டோ போர்பரில் உள்ள கிளேர் டாட்ஜில் நாங்கள் வாழைப்பழங்களை ஏற்றிக்கொண்டிருக்கும்போது,ஜூரத்தால் அடிக்கப்பட்ட சின்னஞ்சிறு மனிதன் ஒருவன் கப்பலுக்குள் வந்தான்.எல்லோரும் அவன் கடந்துபோக வழிவிட்டனர்-நிக்கல் உலோகம் பதித்திருந்த ரெமிங்டன் ரைபிளை தாங்கியபடியும், மெருகிடப்பட்ட தோல் காலுறைகளை பூட்சுகள் இல்லாமல் அணிந்திருந்த, அந்த துறைமுகத்தை காவல்காத்த காவலாளிகளும் அவனை விட்டுவிட்டனர். அவர்கள் அவனிடமிருந்து தள்ளியே நின்றனர்; காரணம்,அவன் கடவுளால் இன்னலுக்கு ஆட்பட்டவன், பித்துப்பிடித்தவன், தீங்கேதும் விளைவிக்காதவன் ,ஆனால் அபாயகரமானவன்;என்று நம்பினர்.அதனால் விட்டுவிடுவதே சிறப்பு.

அப்போது இரசக்கற்பூரவாசனையெழும் நெருப்பு புகைப்போக்கியிலிருந்து எழ, அடிமட்ட ஆட்களின் கூட்டம் ,கீழேயிருந்து பெருங்குரலெடுத்து கத்தியது.”புரூட்டா!புரூட்டா!புரூட்டா!”கூட்டத்தின் தலைவனும் அதேபோல் குரலெழுப்பி, பளீரென்றிருக்கும் பச்சைவாழைப்பழத்தார்களை தூக்கி எறிந்துக்கொண்டிருந்தான்.வேறுஎதற்காகவது இல்லாவிட்டாலும்,இந்த நிகழ்வு அதற்காகவே மனதில் நின்றது -அதாவது, விரிந்துபரந்த இரவு,நெருப்பில் ஒளிர்ந்த நீக்ரோக்களின் வெண்கல உடல்கள், பழங்களின் பச்சைநிறம்,கப்பலின் அடியிலிருந்த நீரின் கலவையான நாற்றம். வாழைத்தாரின் ஒன்றிலிருந்து மயிரடர்ந்த சிலந்தியொன்று ஓடி,மாலுமிகளை பயமுறுத்தி தார்களின் போக்குவரத்தை தடைசெய்தது, உடனே ஒரு நிக்ராகுவா பையன் சிரித்த
படியே, தன் காலால் நசுக்கி கொன்றான். அது தீங்கற்றது, என அவன் சொன்னான்.

பிறகே அந்த பைத்தியக்காரன்,யாரும் தடைசெய்யாமல், தளத்திற்கு வந்து என்னை கேட்டான்:”எங்கே போகிறது? ”

அவன் நிதானமாகவும்,எச்சரிக்கையான பண்படுத்தப்பட்ட குரலிலும் கேட்டான்.ஆனால் அவனிடத்தில் ஏதோ வெறுமை இருந்தது, கண்கள் எங்கேயோ வெறிக்க,அவை பறவையை உண்ணும், மயிரடர்ந்த, சாம்பல்வண்ண சிலந்தியை நினைவுப்படுத்தி,அவன் ஓய்வறியாமல் அசைந்து கைகளை கொண்டிருக்க, சற்றுநான் தள்ளியே இருக்கவேண்டுமென ஞாபகப்படுத்தியது.

“மொபைல், அலாபமா”,நான் சொன்னேன்.

“என்னை அழைத்துபோக முடியுமா? “அவன் கேட்டான்.

“அது என் வேலையில்லை. மன்னிக்கவேண்டும், நானே ஒரு பயணி “,என்று நான் பதிலளித்தேன்.”கப்பல்தலைவன் கரையில் இருக்கிறார்.நீங்கள் துறையிலேயே அவருக்காக காத்திருந்தால் நல்லது.அவரே எல்லோருக்கும் தலைவர் “.

“சரிசரி போகட்டும்.குடிப்பதற்கு ஏதேனும் மது இருக்கிறதா? ”

அவனிடம் கொஞ்சம் ரம்மதுவை கொடுத்துவிட்டு கேட்டேன்.”உங்களை எப்படி கப்பலின்மேலே விட்டார்கள்? ”

“நானொன்றும் பைத்தியமல்லன். உண்மையில் இல்லை….சற்று ஜூரம் அவ்வளவுதான். மலேரியா, டெங்கு காய்ச்சல், காடுகளில் வரும் ஜூரம், எலிகடித்த ஜூரம். இந்த இடமே ஜூரம், மற்றும் எங்குபார்த்தாலும் ஜூரம்.என்னை அறிமுகப்படுத்துகிறேன்.என்பெயர் குட்பாடி,ஓஸ்பால்டெஸ்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பட்டம் பெற்றிருக்கிறேன்.உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா? இல்லையா? அப்படியானால் இதை சொல்லவேண்டும், நான் பேராசிரியர் யோவர்ட் க்கு உதவியாளன்.இப்போதாவது புரிகிறதா? ”

“யோவர்ட், பேராசிரியர் யோவர்ட்? ஆமாம்.அவர் தொலைந்து போய் விட்டார்.ஏமர் ஆற்றின் மூலத்திற்கப்பால், காட்டின் நடுவில் எங்கோ ஓரிடத்தில்? அப்படித்தானே?”நான் கேட்டேன்.

“சரிதான் “.குட்பாடி என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொண்ட அம்மனிதன் கூவினான்.”அவர் இவ்வுலகைவிட்டுப்போனதை நான் பார்த்தேனே “.

புரூட்டா!-புரூட்டா! -புரூட்டா! -புரூட்டா! மனிதர்களின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.கூட்டத்தின் தலைவனுக்கும், கூட்டத்திற்கும் இடையே போட்டி நடப்பதை போலிருந்தது.புகைபோக்கி ஓலமிட்டது . பச்சை வாழைப்பழங்கள் கப்பலேறிக்கொண்டிருந்தன.காட்டிலிருந்து அசெளகரியமான காற்று அடித்துக்கொண்டிருந்தது, நதிபடுகையில் நெளியவைக்கும் நாற்றம் -காற்றோ,தென்றலோ இல்லை -உச்சபட்ச ஜூரத்தின் அறுவெறுப்பான நாற்றம்.

எதிர்பார்த்தலின் நடுக்கம் காரணமாக, அதேசமயம் ஜூரத்தின் குளிரால்,அவன் தம்ளரை இருகரத்தாலும் உதடுவரை உயர்த்தினான்-எனினும் பெருமளவு இரம்மை கீழே சிந்திவிட்டான் -டாக்டர் குட்பாடி சொன்னான். “கடவுளின் பெயரால் கேட்கிறேன், உடனே இந்நாட்டைவிட்டு என்னை அழைத்துச்செல்லுங்கள்-மொபைல் பிரதேசத்திற்கு அழைத்துச்செல்லுங்கள்-உங்கள் கப்பலறையில் என்னை ஒளித்துவைத்துக்கொள்ளுங்கள் “.

“எனக்கு அவ்வாறு செய்ய அதிகாரமில்லை “.என்று நான் சொன்னேன்.”ஆனால் நீங்களொரு அமெரிக்க குடியுரிமை பெற்ற நபர்;உங்களை நீங்களே அடையாளப்படுத்திக்கொள்ள இயலும்; கவுன்சில் உம்மை வீட்டிற்கு அனுப்பிவைக்கும்”.

“சந்தேகமில்லை. ஆனால் அதற்கு காலம் ஆகுமே.எனக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக கவுன்சில் நினைக்கலாம்.நான் இங்கிருந்து போகவிட்டால் உண்மையிலேயே எனக்கு பைத்தியம் பிடிக்கும்.நான் பயந்து போயிருக்கிறேன். உண்மையிலேயே நீங்கள் எனக்கு உதவமுடியாதா “.

நான் அவருக்கு பதில் சொன்னேன்.”இதோ பாருங்கள் ,நான் அருகே இருக்கும்வரையில் யாரும் உங்களுக்கு தொந்தரவு கொடுக்க முடியாது. நீங்கள் எதற்காக பயப்படுகின்றீர்கள்? ”

“எலும்பில்லா மனிதர்கள் “,என்று அவன் சொன்னான், அப்போது அவன்தன் குரலின் தொனியானது என்பின்னங்கழுத்தினில் இருந்த மயிர்களை நெட்டுக்குத்தாக நிற்க செய்தது.”சின்னஞ்சிறு, தடிமனான, எலும்பில்லா மனிதர்கள் “.

நான் அவனையொரு போர்வையால் போர்த்தி,கொஞ்சம் க்வைனான் மருந்தை தந்து, நடுக்கத்தில் வியர்க்கும்படி விட்டுவிட்டு,பிறகு நகைச்சுவையாக கேட்டேன்.”எலும்பில்லாமல் என்ன மாதிரியான மனிதர்கள்? ”

அவன் திரும்பவும் ஜூரம் வந்து வலிப்புவந்தவனாக,சித்தப்பிரமை கொண்டவன்போல் உளறினான்.

“…..எலும்பில்லாமல் என்ன மாதிரியான மனிதர்கள்? ……நிஜத்தில் அவர்களைபார்த்து அச்சம் கொள்ள தேவையில்லை. அவர்கள்தாம் உம்மைக்கண்டு அச்சப்பட வேண்டும். நீங்கள் உங்கள் கால்பூட்சுகளால் அல்லது ஒரு கொம்பினால் அவர்களை கொன்று விடலாம். …அவர்கள் ஜெல்லி போல் கொழகொழப்பானவர்கள்.இல்லை,அது பயம் கிடையாது, அது கெட்டதொரு நாற்றம், அவர்களிடம் இருப்பது.அது மகாநாற்றம்.அது ஸ்தமபிக்கச்செய்துவிடும்.நான் சிறுத்தையை பார்த்திருக்கிறேன், முழுவதும் வளர்ந்த சிறுத்தை -அது உறைந்துபோய் நின்றுவிட, நூற்றுக்கணக்கில் அவர்கள் அதைப்பற்றி, உயிருடன் தின்றுவிட்டனர்!என்னை நம்புங்கள், நான் அதைப்பார்த்தேன்.ஒருவேளை அவர்கள் எண்ணெய் போன்ற பொருளை, ஏதோ நாற்றத்தை. …எனக்குத் தெரியவில்லை. …”

பின் தேம்பியவாறு டாக்டர் குட்பாடி சொன்னார். “ஓஓஓ, பயங்கரக்கனவு,பயங்கரக்கனவு,பயங்கரக்கனவு!ஒரு மேன்மைதாங்கிய விலங்கானது பசியின்கொடுமையால் இப்படி அழிந்துபோவதா! பயங்கரம், பயங்கரம் !”

“ஏமர் ஆற்றின் மூலத்திற்கப்பாலுள்ள காட்டில் ,உயிரின் சிதைந்த மாறிய உயிர்களை கண்டாயோ?”
என்று கருத்துரைத்தேன்.”மனிதக்குரங்கின் வகையில் ஏதேனும் உருமாறிய இனம்? ”

“இல்லை, இல்லை, இல்லை.மனிதர்கள்.பேராசிரியர் யோவர்டின் இனஅறிவியலின் பயணத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள்? ”

“இல்லை “,இது நான்.

நானும் அவர்கூட “,என்று அவன் சொன்னான். ….”எங்களுக்கு துரதிர்ஷ்டம். அனானா ஆறு வேகமாக பாய்கையில் நாங்கள் இரண்டு படகுகளை இழந்தோம்,அவற்றுடன் எங்களின் பாதிபொருள்களும், சாதனங்களில் பெரும்பாலானவையும் போயின அவற்றுடன் டாக்டர் டெர்ரி,ஜேக் லேம்பர்ட்,மற்றும் எட்டு வாகனங்களும். …

“பிற்பாடு நாங்கள் அஹூ பிரதேசத்திற்கு போனோம் ,அங்கே இந்தியர்கள் விஷஅம்புகளை பயன்படுத்துவார்கள், ஆனால் நாங்கள் அவர்களை நண்பர்களாக்கி, இலஞ்சம் கொடுத்து,காட்டினூடே மேற்குதிசைபுறமாக,எங்கள் பொருட்களை சுமைதூக்க செய்தோம்….நீங்கள் அறிந்தமட்டில், எல்லா அறிவியல் கண்டுபிடிப்பும் ஒரு யூகத்தில், வதந்தியில், பழைய மனைவியரின் கதையில் கண்டுபிடிக்கப்படுகிறது.பேராசிரியர் யோவர்டின் பயணநோக்கம், இந்திய பழம்பெரும் கதைகள் உண்மையானவா என்று கண்டுபிடிப்பது.இந்த உலகம் துவக்ககாலத்தில் இருந்தபோது, வானிலிருந்து பெரும் தீயில், கடவுளர்கள் இறங்கிவந்தனரா என்பதே. ….

“நேர்க்கோட்டிலும் குறுக்கிலும்,வட்டவட்டமாக இட்டு அதன் மையத்திலும், யோவர்ட் இக்கதைகளின் மூலத்தை ஒரேஇடத்தில் கொண்டுவந்து, கண்டுபிடிக்கமுடியாத இடத்தை கண்டுபிடித்தார்; அதற்கு பெயரேதும் இல்லை, ஏனெனில் இந்தியர்கள் அதற்கு பெயர் தரமறுத்துவிட்டார்கள்,அது `துன்பமான இடம் ‘என்று அவர்கள் அழைத்தனர்.

அவனுடைய குளிர்ச்சி குறைந்துகொண்டே வர,ஜூரமும் மட்டுப்பட,டாக்டர் குட்பாடி இப்போது அமைதியாகவும் நம்பத்தகுந்தமாதிரியாகவும் பேசினார்.அவர் குறுஞ்சிரிப்பின் ஊடே பேசினார்.”இந்த ஜூரம் என்னை தாக்கும்போதெல்லாம், எலும்பில்லா மனிதரின் ஞாபகம் பயங்கரகனவுகளாக வந்து எனக்கு பீதியை அளிக்கின்றது…..

“எனவே,அந்த இரவில் கடவுளர் தீயாகவந்த இடத்தை தேடிக்கொண்டு சென்றோம்.பச்சைக்குத்தியிருந்த சின்னஞ்சிறு இந்தியர்கள், அஹூ பிரதேசத்தின் எல்லைவரை அழைத்துச்சென்று, பொருட்களை இறக்கிவைத்துவிட்டு, கூலியை கேட்டனர், மேற்க்கொண்டு வருவதற்கு நாங்கள் எவ்வளவுசொல்லியும் அவர்கள் வரவில்லை. நாங்கள் துன்பமயமான இடத்திற்கு செல்கிறோம் என அவர்கள் கூறினார்கள்.அவர்கள் காலத்தில் தலைசிறந்தவனாக விளங்கிய அவர்தம் தலைவன், ஒரு சுள்ளியை எடுத்து ஏதோவொன்றை வரைந்து, தானும் அவ்விடத்தில் ஒருமுறை இருந்திருப்பதாக கூறினான்.அவன் அப்படத்தை நீள்வட்டமாக வரைந்து நான்கு கைகால்களை வரைந்தான்.பின் எச்சில்துப்பி காலால் அந்த படத்தை அழித்தான்.சிலந்தியா?என்று நாங்கள் கேட்டோம்.நண்டா?என்னது?

“முதிய தலைவனால், எங்களால் தூக்கமுடியாததை அங்கேயே விட்டுவிட்டு , மேலே செல்ல நிர்பந்திக்கப்பட்டோம்,யோவர்ட்டும் நானும் உலகிலேயே மோசமான காட்டில் முப்பது மைல்களுக்கு பிரயாணம் செய்தோம்,ஒருநாளைக்கு கால்மைல் தூரம் என்றளவில். ..தொற்றுவியாதிகள் நிறைந்த அந்த இடத்தினூடே! அந்த காட்டில் மோசமான காற்று வீசும்போது நான் மரணம் பீதியை தவிர்த்து வேறெதையும் நுகரவில்லை. …

இறுதியில் நாங்கள் அந்த பீடபூமியை கண்டறிந்து மேட்டில் ஏறியபோது, அற்புதமான விஷயத்தை கண்டோம்.அதுவொரு பிரம்மாண்டமான இயந்திரம்.மூலத்தில் அது முத்துவடிவில் இருந்திருக்க வேண்டும்,குறைந்தபட்சம் ஆயிரம் அடி நீளத்திலும் அகலத்திலும்,சுற்றளவில் அறுநூறு அடிகள் இருந்தது.அது எவ்வகை உலோகத்தால் செய்யப்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை ஏனெனில் அதன்மேலே தூசு அடர்ந்திருந்தது,தவிர ஒருவித அமானுஷ்யமும், இதுவரையில் பார்க்காத அளவுக்கு ,நம்பமுடியாத சிக்கலான இயந்திரமும் இருந்தன . அது எங்கிருந்து வந்திருக்கும் என யூகிக்க முடியவில்லை; ஆனால் அது இறங்கியதால் அந்த பிரதேசத்தில் பெரியதொரு பள்ளத்தாக்கு ஏற்பட்டிருந்தது.

“அக்காலத்தில் அதுவொரு பிரமாதமான கண்டுபிடிப்பு!அது பலநூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்டிருந்தது என நிரூபித்தது, இந்த கிரகத்திற்கு நட்சத்திரத்தில் இருந்து மனிதர்கள் வந்திருக்கின்றனர்.கணக்கிடமுடியாத சந்தோஷத்தில் நானும் யோவர்ட் டும்
அந்த இயந்திரத்தற்குள் இறங்கினோம் ஆனால் எதைத்தொட்டாலும் அது மாவாக உதிர்ந்தது.

கடைசியில் மூன்றாவது நாளன்று,யோவர்ட் அரைவட்ட வடிவிலிருந்த, தெரியாத, அற்புதமான, கடினமான உலோகத்தால் ஆன தகடொன்றை கண்டெடுத்தார், அதில் நன்கறிந்த வரைபடங்கள் இருந்தன.நாங்கள் அதை சுத்தப்படுத்த, இருபத்திநாலு மணி நேரமாக சிறிதளவே உணவு உண்டோம்.யோவர்ட் அதை படித்து பார்த்தார்.பிறகு ஐந்தாம்நாள் காலை என்னை எழுப்பி, பெரிதாக கத்திக்கொண்டே சொன்னார். `இதுவொரு வரைபடம், வானத்தின் வரைபடம்,அதாவது செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வழி சொல்லும் வரைபடம்!’

“மற்றும் அவர் பண்டைய கண்டுபிடிப்பாளர்கள் எப்படி வான்வழி யே செவ்வாய்கிரகத்திலிருந்து,நிலவின் வழியாக, பூமிக்கு வந்தனர் என்று விளக்கினார்….அப்போது இந்த பச்சை நரக காட்டின் சமவெளியில் அது மோதி இருக்கவேண்டும்?என்று நான் நினைத்தேன். `ஆஆ அப்போது இந்த இடம் காடாக இருந்திருக்க கூடுமோ?’என்று யோவர்ட் கேட்டார்.இது நடந்து ஐம்பது இலட்சம் வருடங்களாகி இருக்கும்! ‘

அப்போது நான் சொன்னேன் :ஓஓஓ. நிச்சயமாக!இரோம் நகரம் புதையுருவதற்கு சிலநூறு வருடங்கள் பிடித்தன.ஐம்பது இலட்சம் வருடங்களை விட்டுவிடலாம் ,குறைந்தபட்சம் ஐயாயிரம் வருடங்கள் இது பூமிக்கு மேல் எப்படி இருந்திருக்கக்கூடும்?’யோவர்ட் பதிலளித்தார்:”அப்படியில்லை. பூமியானது பொருட்களை அப்படியே விழுங்கும் மீண்டும் வெளிதள்ளும். இது எரிமலை பிரதேசம்.ஒரு சிறு கிளர்வுபோதும் ஒரு நகரையே விழுங்க, பூமியின் குடலானது பொருட்களை விழுங்கி மீண்டும் வெளிதள்ள ஒரு இலட்சம் வருடங்களாவது ஆகியிருக்கும். செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருக்கும் இந்த இயந்திரத்திற்கும் அதேகதி வாய்த்திருக்கும்….”

“அதனுள்ளே யார் இருந்திருப்பார்கள் ?”என்று நான் கேட்டேன். யோவர்ட் சொன்னார் :”பூமியின் சூழலை தாக்குப்பிடிக்க முடியாத ஏதேனும் அயல்கிரகத்து உயிரினம் இருந்திருக்கும், அவை இறந்திருக்கலாம், அல்லது மோதியதனால் விபத்தில் மரணமடைந்து இருக்கலாம்.இந்த காலவெளி ஓட்டத்தில் எலும்பு கூட மிஞ்சி இருக்காது ‘.

பின் நாங்கள் நெருப்பு மூட்டினோம், யோவர்ட் உறங்க சென்றார்.அவர் தூங்க நான் கண்காணித்தேன், எதை கண்காணித்தேன், எனக்கு தெரியாது. சிறுத்தை, காட்டுப்பன்றிகள், பாம்புகள்? ஆனால் இந்த விலங்குகள் இந்த மேட்டினில் ஏறி வர முடியாது;வந்தாலும் இரையேதும் கிடைக்காது.இருந்தும் விவரம் புரியாமல் நான் பயந்திருந்தேன்.

அந்த இடம் பலகாலங்களை பார்த்திருக்கிறது. பழங்காலத்திற்கு மரியாதை தர வேண்டுமென யாரோ ஒருவர் சொன்னார், எவ்வளவு காலங்கள் பழமையோ அந்தளவு மரியாதை செலுத்த வேண்டுமாம்;ஆனால் மரியாதை அல்ல அது,காலத்தை கண்டு ஏற்படும் பயம், மரணம், ஐயா! ….நான் தூக்கத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும், ஏனெனில் தீயின் அளவு குறைந்திருந்தது-எனவே நான் விழித்துக்கொண்டிருந்து நெருப்பை நன்கு எரியவிட வேண்டும் -அப்போதுதான் முதன்முறையாக எலும்பில்லாத மனிதர்களை பார்த்தேன்.

“திடுக்கிட்டுப் போய் அவைகளை பார்த்தபோது,மேட்டுநிலத்தின் விளிம்பில் குறைந்திருந்த நெருப்பின் ஒளியில் ஒளிரும் ஜோடி கண்களை பார்த்தேன்.ஒருவேளை சிறுத்தையாக இருக்கும் என்று நம்பி துப்பாக்கியை எடுத்தேன்.ஆனால் அது சிறுத்தையாக இருக்கமுடியாது, ஏனெனில் இடமும் வலமுமாக அவைகளின் ஒளிரும் கண்கள் தெரிந்தன.-கோமேதக கண்கள்; அப்போது என் மூக்கில் வாசம்பிடித்த நாற்றம் என்னவென்பதை கடவுள் மட்டுமே அறிவார்.

“விலங்கு பயிற்சியாளர், பயம் என்பதின் வாசத்தை கூறுவார். உடல்நலக்குறைவால் உண்டாகும் நாற்றத்தை -செவிலியர்கள் கூறுவார்கள். ஆரோக்கியமான மிருகம் இவைபோன்ற நாற்றத்தை உணர்ந்தவுடன் தப்பியோடும், அல்லது சண்டைபோடும்.இவை இரண்டும் சேர்ந்த நாற்றத்தோடு அழுகிப்போன மாமிச நாற்றமும் சேர்ந்துக்கொண்டது.நான் முதலில் பார்த்த ஒருஜோடி கண்களை சுட்டேன்.உடனே எல்லா கண்களும் அவ்விடத்தில் மறைந்து போய் விட்டன, அப்போது காட்டில் குரங்குகளின் பறவைகளின் சலசலப்பொலி கேட்டு, குண்டுவெடிப்பின் எதிரொலி உண்டானது.

“கடவுளுக்கு நன்றி, ஏனெனில் விடியல் வந்தேவிட்டது.கண்களின் நடுவில் சுட்ட அந்த ஜந்துவின் ஒளியை நான் விரும்பவே இல்லை.

“அது பழுப்புநிறமாக ,தோல் வழவழப்பாகவும் கடினமாகவும் இருந்தது.இருப்பினும் உருவஅமைப்பு மனிதகுலத்தை சேர்ந்ததாக இல்லை.அதற்கு கண்கள் இருந்தன-மற்றும் தலை, கழுத்து, கைகால்கள் போன்று ஏதோ இருந்தன.

யோவர்ட் என்னை ஆசுவாசபடுத்திக்கொள்ள சொன்னார். குழந்தைப்பருவத்தில் இருந்த பயம் என்னை தொடர்வதாகவும் கூறினார்.பின்பு அந்த மிருகத்தை ஆராய்ந்தார்.நான் அவ்விலங்கின் உடலை திறந்தபோது அவர் அப்பால் விலகினார் என்பதை நான் சொல்லியாக வேண்டும். உயிரியல் ஆராய்ச்சியாளர் என்ற முறையில் நான் அதை ஆராயவேண்டும். நுண்பெருக்கிகளும் மற்ற சாதனங்களும் படகோடு போய்விட்டன.அதனால் கத்தி மற்றும் குறடுகொண்டு ஆராய்ந்தேன். நான் கண்டுபிடித்தது?ஒன்றுமேயில்லை. ஜீரண உறுப்பும், நரம்பு மண்டலம் போன்ற ஏதோவொன்று அவ்விலங்கிற்கு இருந்தன.மற்றும் மூளை சிறுபாக்கு வடிவில் இருந்தது.ஒட்டுமொத்த உருவமே நான்கடி இருந்தது.

சோதனைக்கூடம் இருந்தால்-கூடவே ஒன்றினண்டு உதவியாளர்கள் இருந்தால்- அதைப்பற்றி உங்களிடம் ஏதாவது சொல்லியிருப்பேன்.ஆனால் இல்லையே!அதனால் வேட்டையாடும் கத்தி மற்றும் குறடுகொண்டு, அதனுடலை கிழித்தேன். அந்தசமயம் எழுந்த நாற்றத்தை கஷ்டப்பட்டு பொறுத்துக்கொண்டேன்.ஆனால் சூரியன் எழ எழ, அந்த ஜந்து நீர்மமாக ஆகிவிட்டது,ஒன்பது மணி ஆனபோது,அது கரைந்து நீராக மாறி அதில் இரண்டு கண்களும் மிதந்தன.அந்த கண்கள் வீங்கிப்போய் நீச்சலடித்து கொண்டிருந்தன.

பிறகு அப்பால் விலகிவிட்டேன்.பின் நான் திரும்பி வந்தபோது அவ்விடத்தில் சூரியன் எல்லாவற்றையும் குழம்புபோல் மாற்றிவிட, அது கடற்கரையில் செத்துப்போய்கிடக்கும் ஜெல்லி மீனை நினைவுபடுத்தியது.சகதி, மொத்தத்தில் சகதி.யோவர்டின் முகம் வெளுத்துப்போக அவர் என்னிடம் கேட்டார்.`என்ன இழவு இது? ‘அதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை எனவும்,என் அனுபவத்தில் அதுபோல் பார்த்ததில்லை என்று நான் பதிலளித்தேன்.நான் அறிவியலை நம்பும் மனிதன் என்றாலும் மறுபடியும் அந்த ஜந்துவை நான் தொட வில்லை.

யோவர்ட் சொன்னார். `நீ பைத்தியமாக போக போகிறாய்.அதை சரிபடுத்திக்கொள்.நம்மை நாமே பார்த்துக்கொள்ள இவ்விடத்திற்கு வரவில்லை. அறிவியல் தம்பி அறிவியல்.அந்த ஜந்துவை விட மோசமான பொருளை எல்லாம் மருத்துவர்கள் சோதித்து பார்த்திருக்கிறார்கள்.”நான் அவருக்கு பதில் சொன்னேன் :”புரபசர் யோவர்ட் அவர்களே, நான் வாழ்நாளில் சிலபல விநோதமான ஜந்துக்களை சோதித்து இருக்கிறேன்.ஆனால் இந்த ஜந்து விநோதத்தில் விநோதம்….இவ்விடத்திற்கு நம்முடன் ஒரு மனநல மருத்துவரை அழைத்து வந்திருக்கலாம்.நான் அதை ஆராய்ந்தபோது நீங்கள் அப்பால் சென்றுவிட்டதை நான் கவனித்தேன்.மேற்க்கொண்டு அந்த ஜந்துவை பற்றி தெரியவேண்டுமானால் நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்!’

அந்த உலோக தகட்டில் தன் கவனம் உள்ளதாக யோவர்ட் தெரிவித்தார். அந்த இயந்திரம் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்திருப்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றும் கூறினார். ஆனால் அதேநேரம் அந்த ஜந்துவை நான் தொட்டிருப்பதனால் எங்கள் இருவருக்கும் இடையே நெருப்பு இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.

யோவர்ட் தனக்குத்தானே பேசிக்கொண்டு அந்த இடிபாடுகளை ஆராய்ந்து பார்த்தார்.நான் என் வேலையை -மிருகங்களின் வாழ்க்கையை ஆராயும் -பார்க்கச்சென்றேன்.நான் என்ன கண்டுபிடித்தேன் என்று தெரியாது -ஆனால் துணையேதுமில்லை அதனால் பீதிக்குள்ளானேன்.

ஒருநாள் காலையில் அது நடந்தது . நான் சுற்றியிருந்த காட்டிற்குள் நடந்து சென்று என்னை பீடித்திருந்த பயத்தை விரட்ட முயன்றேன்.சிறுவயதில் உண்டான பயத்தை மட்டுமல்ல,என்னை அங்கிருந்து துரத்த முயன்ற அச்சத்தையும் ஓட்ட முயன்றேன்.உங்களுக்கு தெரியுமோ அல்லது தெரியாதோ,காட்டில் இருக்கும் எல்லா மிருகங்களிலும் தேவாங்கு இனத்தை சார்ந்த ஒருவகை மிருகம் அசைக்கவொண்ணாதது.அது பெரியதொரு மரக்கிளையில் ஏறி, தன் பனிரெண்டு இரும்புக்கரங்களால் பற்றிக்கொண்டு தொங்கும்.அது உறுதியானது, துப்பாக்கி குண்டு அதன் இதயத்தை துளைத்தாலும் கூட அது தன்னிருப்பிடத்திலிருந்து விலகாது . இதுபோன்ற மிருகத்திடம் சிறுத்தையோ அல்லது கருஞ்சிறுத்தையோ ஒன்றும் செய்ய முடியாது. அது பெரியதொரு மரக்கிளையை தேர்ந்தெடுத்து அதிலுள்ள இலைகளை எல்லாம் தின்றபின்,பிறகு தன் கனத்தை தாங்கும் மரக்கிளையில் படுத்துறங்கும்.

இந்த அறுவெறுப்பான காட்டினில் ,என்தன் சுருக்கமான தேடுதலின் போது, சுருக்கமான தேடுதல் என்று சொன்னேன், காரணம் பயம்-அப்போது ஒரு பிரம்மாண்டமான தேவாங்கு இன விலங்கு பாதியுண்ட மரக்கிளையில் படுத்துறங்கி கொண்டிருப்பதைக் கண்டேன்.பிறகுதான் எங்கிருந்தோ நாற்றமடிக்கும் அந்த ஜெல்லி மீன் வகைகள் ஒளியாக வந்தன.அவை மரத்தின் மீது பரவிக்கொண்டே நெளிந்தன.

பயமறியாத அந்த விலங்கும் அப்போது மிகவும் பயந்துபோனது. அது ஓடமுயற்சித்து மெலிதான மரக்கிளையை பற்ற, அது உடைந்துபோனது.உடனே அது கீழேவிழ பொங்கியெழுந்த ஜெல்லிகளால் பிடிக்கப்பட்டது. அந்த எலும்பில்லா மனிதர்கள் கடிக்கவில்லை மாறாக உறிஞ்சினார்கள்;அவர்கள் உறியும்போது உடல்நிறம் சாம்பல்நிறத்திலிருந்து ஒருவித சிவப்பாக மாறி பின்னர் பிரவுனாக மாறியது.

அதேசமயம் அவர்கள் எமைக்கண்டு அஞ்சினார்கள்.அங்கே ஒருவிதமான இனப்போராட்டம் இருந்தது.நாங்கள் அவர்களை தடுக்கமுயல,அவர்கள் எங்களை தடுத்தார்கள்.அவர்கள் நானிருப்பதை உணர்ந்தபோது, ஓட்டம்பிடித்து, நடனமாடும் காட்டின் நிழல்களூடே ஒளிந்துகொண்டனர்.உடனே என்னை பயங்கரமானது சூழ்ந்துக்கொள்ள முள்ளெல்லாம் முகத்தில் பட்டு இரத்தம் வழிய களைப்புமேற்பட,கூடாரத்திற்கு ஓடிவந்து விட்டேன்.

யோவர்ட் தன் கணுக்காலில் ஈட்டியால் குத்திக் கொண்டிருந்தார்.அவரின் முட்டிக்கு கீழே கட்டொன்று போடப்பட்டிருந்தது.அருகில் ஒரு செத்த பாம்பு கிடந்தது.அவர் அதை உலோக தகட்டால் அடித்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் அதுதான் முதலில் அவரைக் கடித்து விட்டிருக்கின்றது.அவர் சொன்னார் :இதன் பெயர் என்னவென்று நீ சொல்வாய்? அது விஷம் வாய்ந்தது என்று நான் அஞ்சுகிறேன்.என் கன்னங்கள் மார்பு மற்றும் கைகளில் மரத்துப்போய் கொண்டே வருகிறது ‘.

“நான் சொன்னேன் :ஐயோ கடவுளே! கட்டுவிரியன் உங்களை கடித்து விட்டிருக்கின்றது! ‘

`வருத்தம் மேலிட அவர் சொன்னார்:”நாம் இச்சமயம் மருந்துகளை இழந்து விட்டிருக்கிறோம்.செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. ஐயோ, என்ன ஆனாலும் சரி, இதை மட்டும் கொண்டுசென்று விடு ‘

“அவர் புனிதமான பொருளைப்போல் அந்த அரைவட்ட தகட்டை என்னிடம் அளித்தார்.பிறகு இரண்டுமணி நேரம் கழித்து அவர் இறந்துபோனார்.அன்றிரவு ஒளிரும் கண்கள் அருகில் நெருங்கி வந்தன.உடனே நான் குண்டுகள் தீரும்வரை துப்பாக்கியால் சுட்டேன்.விடியலின்போது எலும்பில்லா மனிதர்கள் காணாமல் போனார்கள்.

கற்களை கொண்டு யோவர்டின் உடலை மூடினேன். அவர் உடலை சுற்றிலும் கற்களை கோபுரம் போல் சுற்றிவைத்து விட்டேன்,எனவே எலும்பில்லா மனிதர்கள் அவரை தின்ன முடியாது.பின் பயங்கர தனிமை என்னை துரத்த நான் பயத்தில் ஆழ்ந்தேன். -நான் உடனே பையை, துப்பாக்கியை ,கத்தியை எடுத்துக்கொண்டு,குத்துமதிப்பாக நாங்கள் வந்தவழியில் ஓடினேன்.ஆனால் வழி தவறவிட்டேன்.

“கேனிலிருந்த உணவை எடுத்து உண்டு உண்டு நான் உடல் பெருத்தேன்.பிறகு என் துப்பாக்கியும் வெடிமருந்துகளும் போனது . அதன்பின் வேட்டைக்கத்தியும்; பின் நெடுநேரம் கழித்து அந்த அரைவட்ட தகட்டையும் தூக்கமுடியாமல், ஒரு மரத்தின் கொடியில் கட்டி தொங்கவிட்டு ,பின் நடந்தேன்.

“பிற்பாடு நான் அஹூ பிரதேசத்தை அடைந்தேன், அவ்விடத்தில் பச்சைகுத்திக்கொண்டிருந்த மனிதர்கள் மரியாதையாக நடந்துகொண்டு என்னை பராமாரித்தனர்.பெண்கள் தங்கள் வாயினால் உணவை மென்று பின் எனக்கு ஊட்டினார்கள், பிறகு நான் பழைய உடல் வலிமையை அடைந்தேன்.நாங்கள் விட்டுச்சென்ற பொருட்கள் அங்கேயே இருந்தன, தேவையான பொருட்களை நான் எடுத்துக்கொண்டு மீதத்தை வழிகாட்டிகளே எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டேன்,ஆற்றில் இருந்த படகையும் எடுத்துக்கொள்ள சொல்லி விட்டேன். பிறகு காட்டினில் இருந்து வெளியே வந்தேன்….

“தயைசெய்து இன்னும் கொஞ்சம் இரம் தரவும் “அதைக்குடித்தபோது அவன் கைகள் உறுதிப்பட்டு கண்கள் தெளிவடைந்தன.

நான் அவனை பார்த்து சொன்னேன்:”நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையென கருதுகிறேன் :அந்த `எலும்பில்லா மனிதர்கள் ‘செவ்வாய் கிரகத்து மனிதர்கள் என யூகிக்கிறேன், இல்லையா? முதுகெலும்பில்லாத அவர்கள் அதிக நாற்றம் பிடித்து -”

உடனே டாக்டர் குட்பாடி கூக்குரலிட்டார்.”செவ்வாய் கிரகத்து வாசிகளை பற்றி யார் சொன்னார்கள்.இல்லை, இல்லை,இல்லை! செவ்வாய்கிரகத்து மனிதர்கள் இங்கே வந்து புதியதொரு சூழலுக்கு தங்களை பழக்கிக்கொண்டார்கள்.அற்பமனிதர் அவர்கள், மிகவும் கீழாகசென்று வலிநிறைந்த இந்த மாற்றத்திற்கு உட்பட்டு பூமியில் வாழப்பழகி கொண்டார்கள்.முட்டாள்,முட்டாள் நான் சொல்ல வந்தது என்னவென்றால், நானும் யோவர்ட்டும் செவ்வாய்கிரகத்துவாசிகளை கண்டுபிடிக்கவில்லை.அந்த எலும்பில்லாதவர்கள் `மனிதர்கள் ‘ஆவார்கள்.நாங்கள் தான் செவ்வாய்கிரகத்து வாசிகள்! ”

••••

ஒரு கிராமத்திற்கு இரு ஆண்கள் வந்தடைந்தனர் / ஜேடி ஸ்மித் / தமிழில்- க.ரகுநாதன்

052616-AuthorsVoice-WP-320x240-1464303143சில சமயங்களில் குதிரையின் மீது, சில நேரம் கால்நடையாக, காரில் அல்லது மோட்டார் பைக்குகளில், எப்போதாவது டாங்குகளில், அவ்வப்போது ஹெலிகாப்டர்களின் மூலமும் தங்களது படைப்பிரிவிலிருந்து வழி தவறி தொலைதூரம் கடந்து இரு ஆண்கள் வந்தடைகிறார்கள். ஆனால் நாம் நிகழக்கூடிய சாத்தியங்களின்படி பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் நடந்தே வருகிறார்கள் என்பதை குறைந்தபட்சம் இந்த முறையாவது ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். உண்மையில் இது பைபிள் நீதிக் கதை போல வெளிப்படையாக உள்ளது. இரு ஆண்கள் ஒரு கிராமத்திற்கு நடந்தே வந்து சேருகிறார்கள்; ஆம், எப்போதும் கிராமத்திற்கு, நகரத்திற்கல்ல. அதே நேரம் இரு ஆண்கள் ஒரு நகரத்திற்கு வந்து சேர்ந்தால் அவர்கள் வெளிப்படையாகவே அதிக நபர்களுடனும் பரிவாரங்களுடனும் இன்னபிற பொருட்களுடனும் தான் வருவார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் அந்த இரு ஆண்கள் ஒரு கிராமத்திற்கு வந்து சேரும் போது அழுக்கடைந்த கைகளுடனோ, வெளுத்த கைகளுடனோ, பெரும்பாலும் அந்தக் கைகளில் ஏதோவொரு வகைக் கத்தியோ, கோடரியோ, நீளமான வாளோ, குத்துவாளோ, வெட்டுக் கத்தியோ, பட்டாக் கத்தியோ, மடக்குக் கத்தியோ அல்லது குறைந்தபட்சம் ஒரு ஜோடி துருப்பிடித்த பழைய சவரக் கத்தியோ இருக்கும். சில நேரங்களில் துப்பாக்கி. அது சூழ்நிலையைப் பொருத்தது. அது அப்படித்தான் தொடர்ந்து கொண்டுமிருக்கிறது. பக்கத்து கிராமத்திற்குச் செல்லும் இந்நீண்ட சாலையானது அஸ்தமிக்கும் கதிரவனைச் சந்திக்கும் இடத்தில் தொடுவானத்தில் இந்த இருவரையும் நாங்கள் கண்டோம் என்பதை உறுதிபடக் கூறமுடியும்.

இந்த நேரத்திற்கு அவர்கள் வருவதின் அர்த்தத்தை நாங்கள் புரிந்து கொண்டோம். அவர்கள் எங்கு வந்து சேர்ந்தாலும் அஸ்தமன நேரம் அவர்களுக்கு சரியான நேரமாகவே இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம். பெண்கள் எல்லோரும் அப்போதுதான் பாலையிலிருந்தோ, பண்ணையிலிருந்தோ, நகரத்தின் அலுவலகங்களிலிருந்தோ, பனிமலைச் சாரல்களிலிருந்தோ வந்திருந்தார்கள். குழந்தைகள் கோழிகளுக்கருகே புழுதியிலோ உயரமான அடுக்குமாடி கட்டிடங்களுக்கு வெளியிலுள்ள பூங்காக்களிலோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் கொடுமையான வெக்கையிலிருந்து தப்பிக்க முந்திரி மரங்களின் நிழலிலும் ரயில்வே பாலத்தின் அடியிலும் படுத்துக் கிடந்தனர். மிக முக்கியமாக இளம்பெண்கள் தங்கள் குடிசைகள் அல்லது வீடுகளுக்கு வெளியே ஜீன்ஸ் அணிந்தோ, முகத்திரை அணிந்தோ அல்லது லைக்ரா குட்டைப் பாவாடை அணிந்தவாறு சுத்தம் செய்தல் அல்லது சமையல் செய்வதோ, இறைச்சி அரைப்பதோ, தங்கள் செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பியபடியோ இருந்தனர். அது அந்த நேரத்தைப் பொறுத்தது. தீரமான வலிமை கொண்ட ஆண்கள் இன்னும் அவர்கள் சென்றிருந்த இடத்திலிருந்து திரும்பவில்லை.

இரவுக்கென்று சில சாதகங்கள் உள்ளன. வியப்பின் கூறுகளை சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் அந்த இருவரும் குதிரையின் மீதோ, வெற்றுக் காலில் நடந்தோ, இருவரும் ஒருவரையொருவர் பிடித்தபடி சுசுகி ஸ்கூட்டரிலோ அல்லது ராணுவ ஜீப்பின் மீது ஏறி நின்றபடியோ நள்ளிரவில் வந்து சேர்ந்தார்கள் என்பதை மறுப்பார் எவருமில்லை. ஆனால் இருளுக்கென்று சில பாதகங்களும் உள்ளன. ஏனெனில் அவர்கள் இருவரும் எப்போதும் கிராமங்களுக்கே வருகின்றனர், நகரங்களுக்கு அல்ல. உலகின் எப்பகுதி என்பதோ நீண்ட வரலாற்றில் எப்பகுதியில் என்பதோ இங்கு முக்கியமல்ல. அவர்கள் நள்ளிரவில் வந்தால் ஒரு முழுமையான இருளையே சந்திக்கிறார்கள். அந்த மாதிரியான இருளில் நீங்கள் உங்கள் மனைவியுடையதா தாயுடையதா அல்லது கன்னிமைப் பருவத்தின் இளஞ்செழுமையில் இருக்கும் பெண்ணுடையதா அல்லது யாருடைய கணுக்காலைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களால் மிகச் சரியாகச் சொல்ல முடியாது.

அவர்களில் ஒருவன் உயரமாக- அழகென்று சொல்ல முடியாது- சிறிது இருண்ட முகமும் கொடூரன் போலவும், மற்றவன் குட்டையாக தந்திரசாலியான நரிமுகம் கொண்டவன் போலவும் இருந்தனர். குட்டையன் கிராமத்தின் நுழைவாயில் போன்று காட்சியளித்த கோககோலா பதாகையின் மீது சாய்ந்தபடி நட்பாக வணங்குவது போல கையுயர்த்த அவனது கூட்டாளி எதையோ மென்றபடி தன் கையிலிருந்த குச்சியைத் துக்கி வீசியவாறே அவனிடம் புன்னகைத்தான். அவர்கள் ஒரு விளக்குக் கம்பத்தின் மீது சாய்ந்தபடி சூயிங்கம் மென்று கொண்டிருக்க போர்ஷ்ட் சூப்பின் மணம் காற்றில் மிதந்து வந்தது. ஆனால் நாங்கள் எங்கள் கிராமத்தில் போர்ஷ்ட் சூப் செய்வதில்லை. நாங்கள் காஸ்காஸ், டைல் மீன்கள் உண்பதால் அந்த மணமும் காற்றில் தவழ்ந்தது. டைல்மீனின் வாசத்தினை எங்களால் இன்று கூட இயல்பாக ஏற்று சுவாசிக்க முடிவதில்லை. ஏனென்றால் அந்த வாசம் இந்த இரு ஆண்களும் எங்கள் கிராமத்திற்கு வந்து சேர்ந்த நாளை நினைவூட்டியபடியே இருக்கிறது.

நெட்டை மனிதன் நட்பாக தன் கைகளை உயர்த்தியபோது பக்கத்துக் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த கிராமத் தலைவரின் மனைவியின் சொந்தக்காரி வேறு வழியில்லாமல் நெட்டையன் முன்பு நிற்க வேண்டியதானது. அவனுடைய பட்டாக் கத்தி சூரிய ஒளியில் மின்னுவதைப் பார்த்ததும் உயர்த்திய அவள் கை முழுவதும் நடுங்கியது.

ஏறக்குறைய நட்பு ரீதியிலான வாழ்த்துக்களுடன் தான் அந்த இரு ஆண்களும் கிராமத்திற்கு வந்து சேர்வதை விரும்புகிறார்கள். அது வெறுக்கப்படுவதற்கு முன்போ அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முன்போ சில மணி நேரங்களாவது அவர்கள் மட்டுமல்ல, எல்லோரும் தாங்கள் விரும்பப்படவே நினைக்கிறார்கள் என்பதை எங்களுக்கு உணர்த்தியது. அவர்கள் மீது விருப்பம் அல்லது ஆர்வத்தை ஏற்படுத்துவதை விட அச்சத்தை ஏற்படுத்துவதே அவர்களுக்கு உவப்பானதாக இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் நாங்கள் அவர்களைப் பார்த்து அச்சமடைவதுதான் அவர்களின் இறுதி நோக்கமாக இருக்கிறது.

அவர்களுக்காக உணவு சமைக்கப்பட்டது. நேரத்திற்கேற்ப உணவு சமைக்கிறோம் என்றோம். அல்லது உணவு கொடுங்கள் என்று அவர்களே வேண்டிக் கொண்டார்கள். சில நேரங்களில் அருகில் உள்ள கைவிடப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் 14வது மாடியில் உள்ளே நுழைந்த இருவரும் சோபாவை இழுத்து வந்து, ஓடிக் கொண்டிருக்கும் டி.வி. முன்பு போட்டுப் படுத்தபடி, புரட்சியின் மூலம் தாங்கள் அமைத்த புதிய அரசாங்கத்தின் புதிய தலைவரானவர் கோமாளி போன்ற தொப்பியை அணிந்து கொண்டு அணிவகுப்பை முன்னும் பின்னும் நடந்து கொண்டே பார்த்துப் பேசுவதைக் கண்டு சிரித்தனர். அந்த வீட்டின் வயதான பெண்மணியை தோழமையுடனும் அழுத்தமாகவும் அணைத்தபோது அவள் அழுதாள். (“நாம் தோழர்கள் அல்லவா? நாமெல்லோரும் இங்கு தோழர்கள் இல்லையா? என்று கேட்டான் நெட்டை மனிதன்.)

இப்படி ஒரு வகையில் அவர்கள் வந்தார்கள். இந்த கிராமத்திற்கு அவர்கள் அது போன்று வரவில்லை என்றாலும் இது போன்ற வகையிலும் வந்தார்கள்.எங்களிடம் தொலைக்காட்சி இல்லை. பனி இல்லை. நாங்கள் தரைத் தளத்திற்கு மேல் குடியிருந்ததும் இல்லை. இருந்தாலும் விளைவுகள் ஒன்று போலத்தான் உள்ளன. என்னவென்று தெரியாத அமைதி கலந்த அச்சமும் எதிர்பார்ப்பும் கலந்திருந்தது. எங்கள் கிராமத்து வழக்கப்படி ஒரு இளம் பெண் அவர்களுக்கு ஒரு தட்டில் உணவை எடுத்து வந்தாள். “என்ன கருமம்டா? என்றவாறு நெட்டையன் தன் அழுக்கான விரல்களால் பட்டும் படாதவாறு அவள் கொண்டு வந்த டைல் மீன் துண்டினை எடுத்தான். “ஓ…எங்கம்மா இதை அடிக்கடி செய்வா. நல்ல வேளை அவள் ஆன்மாவை ஆண்டவன் அடக்கிவிட்டான்! என்றான் ஓநாய் முகம் கொண்ட குட்டையன். சாப்பிட்டு முடித்தவுடன் அந்த இளம்பெண்ணை தங்கள் மடியின் மீது மாற்றி மாற்றித் துக்கிப் போட்டு விளையாடியபோது வயதான பெண்கள் எல்லோரும் சுவற்றோரம் ஒட்டி நின்றபடி அழுது கொண்டிருந்தனர்.

உணவுக்குப் பிறகு அந்த கிராமத்தில்- மது அனுமதிக்கப்பட்டிருந்தால்- குடித்துவிட்டு வந்து வெளியே பார்க்க என்ன உள்ளது என்று தெரிந்து கொள்ள அவ்விருவரும் ஒரு நடை செல்வார்கள். அதுதான் திருடுவதற்கு ஏற்ற நேரம். அந்த இரு ஆண்களும் எப்போதும் திருடுவார்கள்- இந்த சொல்லை சில காரணங்களுக்காக பயன்படுத்துவதை அவர்கள் விரும்பாவிடிலும் உங்களுடைய கடிகாரத்தையோ, சிகரெட்டையோ, பணப்பையையோ, தொலைபேசியையோ அல்லது மகளையோ பறிக்கும் போது மறக்காமல் “உங்கள் பரிசுக்கு நன்றி! என்றோ “லட்சியத்திற்காய் செய்த தியாகத்தை நாங்கள் பாராட்டுகிறோம்! எனச் சொல்லும் போது நெட்டையன் நக்கலாகச் சிரித்து வைப்பதால் குட்டையன் தங்களது செயலை என்னதான் பெருந்தன்மையுடையதாக்க நினைத்தாலும் அது வீணாகிவிடும். சில இடங்களில் தங்களுக்கு விருப்பமானதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வீடு செல்கையில் ஒரு தைரியமான சிறுவன் தன் தாயின் பின்னாலிருந்து பாய்ந்து வந்து ஓநாய் முகம் கொண்ட குட்டையனைத் தள்ள முயற்சிப்பான். எங்கள் கிராமத்தில் 14 வயது கொண்ட இந்தப் பையனை நாங்கள் கிங் ஃபிராக் என்றழைப்போம். ஒருமுறை அவன் நான்கைந்து வயது சிறுவனாக இருந்தபோது நமது கிராமத்தில் யார் பெரும் சக்தி கொண்டவர் என்று யாரோ சிலர் கேட்டபோது வாசலில் இருந்த அறுவறுப்பான பெரிய தேரையைக் காட்டி “இந்தக் கிங் ஃபிராக் தான், ஏன்னா என் அப்பா கூட இவனைப் பார்த்துப் பயப்படுவார்” என்றான். 14 வயதுடைய அவன் தைரியமானவன் என்றாலும் கூட அஜாக்கிரதையானவன் என்பதால் தான் அவன் தாய் அவனை ஒரு குழந்தை போல தனக்குப் பின்னால் நிறுத்தி மறைத்துக் கொள்வாள்.

ஆனால் இது போன்ற தைரியமான செயல்கள் உண்மையாகவும் தொடர்ந்தும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கின்றன என்பதை விளக்குவது கடினமானாலும் அந்த தைரியம்- எதற்கும் உதவாது என்றாலும் கூட- ஒரு அழகிய மலையை அல்லது முகத்தைப் பார்த்தால் எப்படி எளிதில் மறக்க முடியாதோ அதுபோல இதையும் மறக்க முடியாது. அது எப்படியோ உங்களுக்கு நீங்களே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை எப்படியோ மெலிதாக அறிந்த நெட்டையன் பளபளக்கும் பட்டாக் கத்தியை ஓங்கி சிரமமில்லாமல் ஒரு மலரைக் கொய்வது போல அச் சிறுவனை அவன் வாழ்விலிருந்து பிரித்தான்.

ரத்தம் சிந்தத் துவங்கியவுடன், அதுவும் பெருகியோடும் ரத்தத்தில் ஏற்பட்ட பெருங்குழப்பம் அதுவரை நிகழ்ந்த விருந்துபசாரத்தையும் அச்சத்தையும் கரையச் செய்தது. அப்போது மிக அதிகமாகக் குடித்தவர்கள், அதிலும் புதுமையாக, பாதுகாப்பற்ற வயதான ஆண்கள் பாட்டில் பாட்டில்களாக குடித்துவிட்டு அழுதார்கள். இப்படியொரு கொடூரத்தினை நிகழ்த்த மட்டுமல்ல அது நடக்கும்போது அருகிலிருந்து வெறுமனே வேடிக்கை பார்க்கவும் அசாத்திய துணிச்சல் தேவை. ஆனால் பெண்கள்! எங்கள் பெண்களை நினைக்கும் போது பெருமிதமாக உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு தங்கள் பெண்களைப் பாதுகாக்க சுற்றி நின்று கொண்டிருந்ததைப் பார்த்த நெட்டையன் கடுப்பாகி தரையை ஓங்கி உதைத்தபடி, ‘இந்தப் பொட்டைங்களுக்கு என்னாச்சு? இதோட முடிஞ்சுது, நான் ரொம்பக் குடிச்சிட்டேன்” என்றான்.

குட்டையன் கிராமத் தலைவரின் மனைவியின் அத்தை மகளின் முகத்தில் குத்தியபடி (தலைவரின் மனைவி பக்கத்து கிராமத்தில் உறவினர்களைச் சந்திக்கச் சென்றுவிட்டார்) அவளருகே வந்து புரட்சியின் கரங்கள் வருவதை அறிவித்தான். இது போல பெண்கள் முன் காலத்திலும் அண்மைக் காலத்தில் யானைக் கடவுளின் கிராமத்திலும் பல பழைய புதிய ஊர்களிலும் நின்றிருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம். அந்த சமயத்தில் ஏனென்று அறிய முடியாத பெண்களின் மனோதைரியம் பெரிய விஷயம் இல்லையென்றாலும் – அந்த இருவரையும் இந்த கிராமத்திற்கு வருவதைத் தடுப்பதோ அல்லது மோசமான கொடுமைகள் செய்வதைத் தடுப்பதோ இயலாது என்றபோதும்- எப்போதும் நிகழ்வதில்லை. ஒரு பெண் இருண்ட முகம் கொண்ட நெட்டையனைப் பார்த்து காறி உமிழ்ந்தாள். அதைப் பார்த்த குட்டையன் அப்பெண்ணின் யோனியில் எட்டி உதைத்தபோது அவர்கள் செய்ய வேண்டிய குருரங்களுக்கான வழி கிடைத்தது. பாதுகாப்பு அரண் சிதறியது.

அடுத்த நாள் கிராமத்தில் என்ன நடந்தது என்பதைக் கேட்டவர்களுக்கேற்ப ஒவ்வொருவரும் கூடக் குறைய சொல்லிக் கொண்டிருந்தனர். படைவீரன், பெண்மணி, பக்கத்து கிராமத்திலிருந்து ஆர்வத்துடன் வந்த ஒருவன் அல்லது தனது நாத்தனார் வீட்டிலிருந்து திரும்பி வந்த கிராமத் தலைவரின் மனைவி என பெரும்பாலும் எல்லோரும் கேட்கும் கேள்வி- யார் அவர்கள்? இந்த ஆண்கள் யார்? அவர்கள் பெயர் என்ன? என்ன மொழி பேசினார்கள்? அவர்களுடைய முகத்திலும் கைகளிலும் என்ன அடையாளம் இருந்தது?- ஆனால் எங்கள் கிராமத்தில் அதிகாரவர்க்கம் என்ற ஒன்று இல்லாததும் ஒரு அதிர்ஷ்டம்தான். எல்லாவற்றையும் சொன்னபிறகு கிராமத் தலைவரின் மனைவி தலைவரைவிட உண்மையான தலைமையாக மாறிப்போனார். அவள் உயரமாகவும், அழகாகவும், தைரியசாலியாகவும் இருந்தாள். சில இடங்களில் வெம்மையாகவும் சில இடங்களில் கூதலாகவும் வீசும் பாலைவனச் சூறைக்காற்று கா ஹரமாட்டனை எல்லோரும் வேறு வழியில்லாமல் சுவாசிப்பது போல்- ஒரு சிலராலேயே இது போன்ற ரத்தக் களறியில் சுவாசிக்க முடியும் என்றாள். அது போன்ற மனிதர்கள் கா ஹரமாட்டன் போல தங்களையும், அடையாளங்களையும், பெண்களையும் இழப்பார்கள். அவர்கள் எந்த சுழற்காற்றையும் ஏற்படுத்தமாட்டார்கள்.

மாறாக அந்தக் காற்றாகவே அவர்கள் இருப்பார்கள் என்றாள். இது ஒரு உண்மை உருவகம். ஆனால் அவள் அப்படித்தான் இருந்தாள். அவள் நேராக இளம்பெண்களிடம் சென்று நடந்ததைக் கூறுமாறு கேட்டாள். கடுமையான அவள் வார்த்தைகளில் மனமுருகிய பெண்ணொருத்தி பேசினாள். அந்தக் குட்டையன் தானாக ஒருதலைக் காதல் கொண்டவனாக என் மார்பின் மீது தலைசாய்த்து தனது கதையை- தான் ஒரு அநாதை என்றும் பல்லாண்டுகள் அநாதையாகவே வாழ்வதாகவும் எல்லா ஆண்களையும் போல வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்தாகவும் பயங்கரங்களைச் சந்தித்துள்ளேன் என்றும் இப்போது தனக்கு இந்தப் பெண்கள் மூலம் குழந்தைகள் வேண்டும், நிறைய ஆண் குழந்தைகள், அழகான, வலிமையான ஆண்- ஆம். பெண் குழந்தைகளும் கூட…இந்தக் குழந்தைகள் படையுடன் நாங்கள் கிராம நகரங்களுக்கு அப்பால் சென்று வாழ்வோம் என்று பிதற்றினான். அவன் பெயரை நானறிய வேண்டும் என்று விரும்பினான் என்று வியப்புடன் கூறினாள் அப்பெண். அவனுக்கு வெட்கமே இல்லை. அவன் இந்த கிராமத்தையோ, என் உடல் மீதோ கடந்து சென்றதை நினைத்துப் பார்க்க விரும்பவுமில்லை; மற்றவர்கள் தன்னை எவ்வாறு அழைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படவுமில்லை. அநேகமாக அது அவனுடைய உண்மையான பெயரில்லை, ஆனால் அவன் என் பெயர் ————— என்றான்” என்று கூறினாள்.

இதைக் கேட்ட தலைவரின் மனைவி சட்டென்று அறையை விட்டு வெளியேறி வேகமாகச் சென்றாள்.

••••

ஏப்ரல் மாதக் காலையில் 100 % பொருத்தமான பெண்ணைப் பார்த்து ( ஜப்பானிய மொழி சிறுகதை ) மூலம் : ஹாருகி மு ராமி [ Haruki Murakami ] ஆங்கிலம் : ஜே .ருபின் [ Jay Rubin ] / தமிழில் : தி.இரா.மீனா

download

ஜப்பானிய எழுத்தாளரான ஹாருகி முரகாமி[ 1949]சர்வதேச அளவில் புகழ் பெற்ற படைப்பாளி. சிறுகதை,நாவல்,கட்டுரை ,மொழி பெயர்ப்பு என்ற பன்முகம் கொண்டவர்.இவர படைப்புகள் 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. World Fantasy Award, Frank O’ Connor International Short Story Award உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். A Wild Sheep Chase , Norwegian Wood, The Wind – Up Bird Chronicle ,Kafka On the Shore , IQ84 ஆகியவை அவருடைய சிறந்த படைப்புகளில் சிலவாகும்.

••••

ஓர் ஏப்ரல் மாதத்தின் காலைப் பொழுதில் டோக்கியோ நகரின் நாகரிகமான ஹருஜூக்கு பகுதியின் குறுக்குத்தெருவில் 100 % பொருத்தமான பெண்ணைக் கடந்தேன்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவள் அப்படி ஒன்றும் அழகி யில்லை.அழகு என்று கூட சொல்லமுடியாது.அவள் உடைகள் விஷேசமா னவையல்ல.தூக்கத்திலிருந்து எழுந்து வந்தது போல அவள் பின்புறத் தலை முடியின் வடிவம் வளைந்தேயிருந்தது.அவள் இளமையானவளுமில்லை. முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கலாம்.தெளிவாகச் சொன் னால் இளம்பெண் என்றுகூடச் சொல்லமுடியாது.ஆனாலும் ஐம்பது அடி தூரத்தி லிருந்து பார்க்கும்போதே அவள் எனக்கு 100 % பொருத்தமானவள் என்று தெரிந்தது.அவளைப் பார்த்த கணத்தில் நெஞ்சு குறுகுறுக்க வாய் வறண்டு போனது.

உங்களுக்குப் பிடித்த பெண் என்பவள் — மெலிதான கணுக்கால்கள் அல்லது பெரிய கண்கள் அல்லது நீண்ட விரல்கள் ,அதிக நேரம் சாப்பிடும் இயல்பு என்று எந்த அம்சம் கொண்டவளாகவுமிருக்கலாம்.ஒரு பெண்ணைப் பிடிக்க எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.எனக்கென்று சில அபிப்பிரா யங்களுண்டு.சில சமயங்களில் ஹோட்டலில் பக்கத்து மேஜையருகே உட்கார்ந்திருக்கும் பெண்ணை வெறித்தபடி இருப்பேன்.அவளுடைய மூக்கின் வடிவம் பிடித்திருப்பதால் அவ்வாறு இருக்கலாம். முன்கூட்டியே முடிவு செய்த தன்மையோடு 100 % பொருத்தமாக தனக்குப் பிடித்த பெண் இருக்க வேண்டுமென்று யாரும் கட்டாயப்படுத்துவதில்லை.எனக்கு மூக்குகளின் மேல் ஒரு விதக் கவர்ச்சியிருப்பதால் அவளுடைய உருவத்தை நினைவில் வைத் திருக்க முடியவில்லை.எனக்கு ஞாபகத்திலிருப்பது அவள் பேரழகியில்லை. அது வினோதமானதுதான்.

“நான் நேற்று தெருவில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவள் 100 % பொருத் தமானவளாகத் தெரிந்தாள்.”நான் யாரிடமோ சொல்வேன்..

“அப்படியா? மிகவும் அழகா?” அவன் கேட்கிறான்.

“அப்படி ஒன்றும் சொல்ல முடியாது”

“அப்படியானால் உனக்குப் பிடித்த வகையோ?”

“எனக்குத் தெரியவில்லை.எனக்கு அவள் கண்கள், தோற்றம் ,மார்பு என்று எதுவும் நினைவிலில்லை.”

“விசித்திரம்”

“ஆமாம்.விசித்திரம்தான்”.

“சரி. என்ன செய்தாய்? பின் தொடர்ந்து போனாயா? பேசினாயா?”அவன் உற்சா கமிழந்து கேட்பான்.

“இல்லை.தெருவில் அவளைக் கடந்து போனேன் ”.

அவள் கிழக்கிலிருந்து மேற்கே நடந்தாள்.நான் மேற்கிலிருந்து கிழக்கே போனேன்.அது ஓர் அற்புதமான ஏப்ரல் மாதக் காலைநேரம்.

நான் பேசியிருக்க வேண்டும்.அரைமணி நேரம் அதிகம்தான். அவளைப் பற்றிக் கேட்டிருக்கலாம்.என்னைப் பற்றிச் சொல்லியிருக்கலாம்—நான் என்ன செய்ய விரும்புகிறேன்… ஓர் ஏப்ரல் மாதக் காலை நேரத்தில் ஹஜுருக்கு தெருவில் இருவரும் ஒருவரை ஒருவர் கடக்க நேர்ந்த விதியின் தன்மையைச் சொல்லியிருக்கலாம்.இந்த விஸயத்தில் மென்மையான ரகசியங்கள் புதைபட்டிருக்கும் என்று தோன்றுகிறது.உலகில் அமைதி நிறைந்திருந்த நாளில் ஒரு மிகப் பழமையான கடிகாரம் உருவாக்கப்பட்டது போல.

பேசியதற்குப் பிறகு மதிய உணவு எங்காவது சாப்பிட்டிருக்கலாம்.உடி ஆலா னின் படம் பார்த்திருக்கலாம்.பிறகு காக்டெயிலுக்காக ஒரு ஹோட்டல் பாருக் குப் போயிருந்திருக்கலாம்.அதிர்ஷ்டமிருந்திருந்தால் இருவரும் சேர்ந்தும் இருந்திருக்கலாம்.

சாத்தியக்கூறுகள் என் நெஞ்சக் கதவைத் தட்டின.

எங்கள் இருவருக்கும் இடையிலான தூரம் பதினைந்து அடியாகக் குறைந்த்து.

எப்படி அவளை அணுவது? என்ன பேசுவது ?

காலை வணக்கம்.ஓர் அரைமணி நேரம் என்னோடு பேசமுடியுமா?

கேலியாகிவிடும். இது இன்ஷுரன்ஸ் வியாபாரி பேசுவது போல இருக்கும்.

மன்னியுங்கள்.இங்கு பக்கத்தில் யாராவது இஸ்திரி செய்ப்பவர்கள் இருக்கி றார்களா?

இல்லை. இதுவும் வேடிக்கையாகிவிடும். என்கையில் எந்தத் துணியுமில்லை தவிர யார் அப்படிப் பேச விரும்புவார்கள்.

நேரடியாக விஷயத்திற்கு வருவதே சரி.”வணக்கம்.நீங்கள் எனக்கு 100 % பொருத்தமான பெண்”

அவள் நம்பமாட்டாள். நம்பினாலும் என்னோடு பேச விருப்பமில்லாமல் இருக் கலாம்.மன்னிக்கவும். நான் உங்களுக்கு 100 % பிடித்த பெண்ணாகத் தெரிய லாம்.ஆனால் நீங்கள் எனக்கு 100 % பொருத்தமானவரில்லை என்று அவள் சொல்லலாம்.அப்படிஒரு சூழ்நிலை வந்தால் நான் உடைந்து போய்விடுவேன் அந்த அதிர்விலிருந்து மீளமுடியாது.எனக்கு 32 வயதாகி விட்டது.

ஒரு பூக்கடையைக் கடந்தோம்.மெல்லிய இளங்காற்று என்னைத் தழுவியது. என்னால் அவளோடு பேசமுடியவில்லை.அவள் வெள்ளை நிற ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். வலதுகையில் ஒரு வெள்ளைக் கவர் வைத்திருந்தாள். அதற்குத் தபால்தலை ஒட்ட வேண்டும் போலிருக்கிறது. அவள் யாருக்கோ கடிதம் எழுதியிருக்கிறாள்.இரவு முழுதும் தூங்காமல் எழுதியது போலக் கண்கள் தூக்கக் கலக்கத்திலிருந்தன.அவள் ரகசியங்கள் அனைத்தையும் தாங்கியதாக அந்தக் கடிதம் இருக்கவேண்டும்.

நான் மேலும் சில அடிகள் நடந்தேன்.அதற்குள் அவள் கூட்டத்தில் காணாமல் போயிருந்தாள்.

இப்போது அவளிடம் என்ன சொல்லியிருக்க வேண்டுமென்று தெரிந்து விட்ட. அது ஒரு ஓர் எளிய உரையாக இருந்திருக்கும்.அதைச் சரியாகச் சொல்ல எனக்கு நேரமாகியிருந்திருக்கலாம்.எனக்கு வந்த சிந்தனைகள் மிக மிக இயல்பானவை.

அது இப்படித்தான் ஆரம்பித்திருக்கும்.”ஒரு காலத்தில் “என்று தொடங்கி” “சோகமான கதைதான் இல்லையா”என்று முடிந்திருக்கும்.

ஒரு பையனும் பெண்ணும் வசித்து வந்தனர்.அவனுக்கு 20 வயது. அவளுக்கு 18 வயது.அவன் பெரிய அழகனில்லை.அவளும் மிகச் சாதாரணமானவள். இரு வரும் தனியாகவே இருந்தனர்.தனக்கு 100 % பொருத்தமானவன் கிடைப் பான் என்று அவளும்,தனக்கு தனக்கு 100 % பொருத்தமானவள் கிடைப்பாள் என்று அவனும் முழுமையாக நம்பினார்கள்.அந்த அற்புதம் நிகழ்ந்தது.

ஒரு நாள் இருவரும் தெருவில் சந்தித்தனர்

“இது அற்புதமானது.”அவன் சொன்னான்” இவ்வளவு நாட்கள் உனக்காகத்தான் காத்திருந்தேன்.நீ நம்பமாட்டாய்.ஆனால் நீதான் எனக்கு 100 %பொருத்தமான பெண்”என்றான்.

“நான் எனக்குள் கற்பனை செய்து வைத்திருந்தவனைப் போலவே நீ இருக் கிறாய்.நீ எனக்கு 100 % பொருத்தமானவன்.இது ஒரு கனவு போல இருக் கிறது.”என்றாள் அவள்.

பார்க் பெஞ்சில்உட்கார்ந்து கைக்குள் கைகோர்த்தபடி இருவரும் தங்கள் கதை களைப் பரிமாறிக்கொண்டனர்.அவர்கள் இப்போது தனியானவர்களில்லை100 % பொருத்தமானவரை இருவரும் கண்டுபிடித்து விட்டனர். 100 % பொருத்த மானவரைக் கண்டுபிடிப்பது எவ்வளவு உன்னதமான விஷயம்.! அற்புதம்..இது உலக விந்தை!

அவர்கள் பேசியபடி இருந்தனர்.என்றாலும் இருவர்மனதிற்குள்ளும் மெல்லிய இழையாய் ஒரு சந்தேகம்.ஒருவரின் கனவு இவ்வளவு எளிதாக உண்மையா வது சாத்தியமாகுமா? சரியானதாகுமா?

இந்த எண்ணத்தால் அவர்கள் சம்பாஷணை தடைப்பட்டது.”ஒரு சிறிய பரி சோதனை செய்வோம்.நாம் இருவரும் ஒருவருக்கொருவர் 100 % பொருத்த மானவர்கள் என்றால் எங்கேயாவது ,எப்போதாவது மீண்டும் சந்திப்போம். அப்படிச் சந்திக்கும்போது நாம் 100 % பொருத்தமானவர்கள் என்பது உறுதி யாகும். உடனே திருமணம் செய்து கொண்டு விடுவோம்.என்ன சொல்கி றாய்?” என்று அவன் கேட்டான்.

“சரி.அப்படியே செய்யலாம்”

அவர்கள் பிரிந்தனர்.அவள் கிழக்கும்,அவன் மேற்குமாக.அவர்கள் மேற் கொண்ட சோதனை தேவையில்லாதது.அவர்கள் இருவரும் ஒருவருக்கொ ருவர் 100 % பொருத்தமானவர்கள்.அவர்கள் சந்தித்தது அற்புதம்தான்.அவர் கள் மிக இளையவர்கள் என்பதால் இதைப் புரிந்துகொள்ளமுடியாமல் போனது.விதி இரக்கமற்று அவர்களைப் பிரித்தது.

ஒரு குளிர்காலத்தில் இருவருக்கும் கடும் காய்ச்சல் வந்தது.வாழ்வுக்கும் சாவுக்குமிடையே இருவரும் போராடினார்கள்.நோயின் தீவிரத்திலிருந்து மீண்டபோது அந்த நினைவுகள் நீங்கியிருந்தன.இளம் டி.எச்.லாரன்சின் பிக்கி பாங்க் போல. தலை காலியானது.

இருவரும் புத்திசாலிகள் என்பதால் கடுமையான முயற்சிகள் செய்து தங்களை ஒரு சமுதாயத்திற்கு எல்லா வகையிலும் தகுதியுடையவர்க ளாக்கிக் கொண்டனர்.ஒரு வழியிலிருந்து மற்றொரு வழிக்கு தங்களை மாற்றிக் கொள்ளும் பிரஜைகளாய் மாறியிருந்தனர். 75 % அல்லது 85 % அளவு காதலுணர்வை அனுபவித்திருந்தவர்களாயிருந்தனர்..

காலம் கடந்தது. அவனுக்கு முப்பதிரண்டு வயது. அவளுக்கு முப்பது.ஒரு ஏபரல் மாத காலம்.அவன் மேற்கிலிருந்து கிழக்கும்,அவள் கிழக்கிலிருந்து மேற்கும் நடந்து வந்தனர். அவள் கையில் ஒரு கவரோடு வந்தாள்.தெருவின் பிரதான சாலையில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்தனர்.ஒரு நொடி இருவரின் மனதிலும் தொலைந்து போன நினைவு ஓரிழையாக ஓடியது. நெஞ்சு படபடப்பதை இருவரும் உணர்ந்தனர். அவர்களுக்குத் தெரியும்.

அவன் எனக்கு 100 % பொருத்தமானவன்.

அவள் எனக்கு 100 % பொருத்தமானவள்.

ஆனால் அந்த ஞாபகங்களின் இழை மிக பலவீனமாகிவிட்டது. பதினான்கு வருடங்களுக்கு முன்பிருந்த தெளிவு இல்லை.ஒரு வார்த்தை பேசாமல் இருவரும் ஒருவரையொருவர் கடந்தனர்; கூட்டத்தில் கலந்து மறைந்தனர்.

ஒரு சோகமான கதைதான்.இல்லையா?

ஆமாம். அதுதான்.அதுதான் அவளிடம் நான் சொல்லியிருக்க வேண்டியது.

———————————

காதல் பாடல் – ஜோசப் பிராட்ஸ்கி / தமிழில்: வே.நி.சூர்யா

download (38)

ஒருவேளை நீ மூழ்கிக் கொண்டிருந்தால் நான் உன்னை காப்பாற்றி என் போர்வையில் உன் தலையை துடைத்து ஒரு சூடான தேநீரை பருகத் தருவேன்.
ஒருவேளை நான் ஷெரிப் ஆகயிருந்தால் உனை கைது செய்து பூட்டும் சாவியும் உள்ள சிறையில் அடைப்பேன் .

ஒருவேளை நீ பறவையாக இருந்தால் நான் என் இசைத்தட்டை நிறுத்தி இரவெல்லாம் உன்னுயர்ந்த கீச்சுக்குரலை கேட்பேன்.
ஒருவேளை நான் ராணுவ அதிகாரியாக இருந்தால் உன்னை பணியமர்த்தி ஒரு பையனாக உறுதியளிப்பேன் நீ பயிற்சியை விரும்புவாய்.

ஒருவேளை நீ சீனாவை சேர்ந்தவளாக இருந்தால் நான் மொழியை கற்றுக்கொண்டு நறுமண தூபங்களை ஏராளமாய் எரிப்பேன், நகைப்பூட்டும் உடைகளை அணிவேன் .
ஒருவேளை நீ கண்ணாடியாக இருந்தால் மற்ற பெண்களை தாக்குவேன், என் சிவப்பு உதட்டுச்சாயத்தை தருவேன் மற்றும் உனது நாசியின் மீது பூசவும் செய்வேன்.
ஒருவேளை நீ எரிமலைகளை நேசித்தாயெனில் நான் தீக்குழம்பாக இருந்து அயராது என் மறைவிடத்திலிருந்து வெளிவருவேன்.
மேலும் ஒருவேளை நீ என் மனைவியாக இருந்தால் நான் உன் காதலனாக இருப்பேன்
ஏனெனில் தேவாலயம் உறுதியாக விவாகரத்திற்கு எதிரானது

Original:

LOVE SONG – Joseph Brodsky

If you were drowning, I’d come to the rescue,
wrap you in my blanket and pour hot tea.
If I were a sheriff, I’d arrest you
and keep you in the cell under lock and key.

If you were a bird, I ‘d cut a record
and listen all night long to your high-pitched trill.
If I were a sergeant, you’d be my recruit,
and boy i can assure you you’d love the drill.

If you were Chinese, I’d learn the languages,
burn a lot of incense, wear funny clothes.
If you were a mirror, I’d storm the Ladies,
give you my red lipstick and puff your nose.

If you loved volcanoes, I’d be lava
relentlessly erupting from my hidden source.
And if you were my wife, I’d be your lover
because the church is firmly against divorce.

மேற்கண்ட கவிதை So Forth தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது
ஆசிரியர் குறிப்பு:
ஜோசப் ப்ராட்ஸ்கி ரஷ்யாவில் 1940ல் பிறந்தார். அவர் தன்னுடைய பதின்ம வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். சுய சார்பற்ற தன்மை, காஸ்மோபாலிட்டன் தன்மை ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி 1972ல் சோவியத் அரசு அவரை சோவியத் ரஷ்யாவை விட்டு வெளியேற அழைப்பு விடுத்தது. பின்பு வியன்னா ,லண்டன் ஆகிய இடங்களில் சிறிது காலம் தங்கி பின் W.H.ஆடன் உதவியுடன் அமெரிக்கா சென்றார். 1977ல் அமெரிக்க பிரஜை ஆகி 1987ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றார். ஜோசப் ப்ராட்ஸ்கியின் கவிதைகள் செவ்வியல் தன்மை மிக்கது.

••••

ஒரு பின்-உண்மை உலகில் கவிதையின் உண்மை அன்னா சிட்ரினொ / தமிழில் ஷமீலா யூசுப் அலி

download (23)

ஒரு பூங்காவின் நீண்ட இருக்கையில் தூங்கிறது புலி
ஒரு மிகவுயர்ந்த முதிர்ந்த பெண்
அதன் மடியில்; அவள் மிக உயர்ந்தவள்
(இரைச்சல் மிக்கவள்) அவள் முழங்கால்கள்
இழுத்து வந்தன ஒரு ஜோடி ஓலமிடும் ஆந்தைகளை
ஆடிக் கொண்டிருக்கும் கூடொன்றைக் கட்ட

கென்னத் பாட்சனின் ‘பார்க் பெஞ்சில்’ On the Parkbench கவிதையிலிருந்து

பாட்சனின் கவிதையிலிருக்கும் தறிகெட்டோடும் விசித்திரமான இந்தக் காட்சி உடல்சார்ந்த உணர்வுகளை தூண்டுகின்றது,நம்பமுடியாததை விவரிக்கின்றது, நாங்கள் மகிழக் கூடி கற்பனை விளையாட்டின் உலகத்துக்கு எங்களை அழைக்கின்றது.

கொஞ்ச நேரத்துக்கு முன்னர் நான் பேகர் வீதி,லண்டனிலிருக்கும் ஷெர்லொக் ஹோம்ஸ் நூதனசாலைக்கு விஜயம் செய்தேன்.ஐந்தாம் வகுப்பில் ஷெர்லொக் ஹோம்ஸின் சாகசங்கள் நூலை என்னுடைய சகோதரன் எனக்குப்பரிசாக வழங்கியதிலிருந்து நான் ஷெர்லாக்கின் நெருங்கிய அவதானிப்புக்கான கூர்ந்த திறன்,மற்றவர்கள் புறக்கணித்துச் செல்லும் விடயங்களில் சம்பந்தப்படும் தகவல்களைக் காண்பதும் அவற்றிலிருது முடிவுகளுக்கு வருவதும் போன்ற அம்சங்களின் ரசிகையாக இருந்திருக்கிறேன்.

யாருமே தற்செயலாகக் கூட அவதானிக்காத தெளிவான விடயங்களால் உலகம் நிரம்பியிருக்கிறது என்று ஹோம்ஸ் ஹொன்ட் ஒப் பாஸ்கவில்லி யில் கூறுகிறார்.டொய்லின் ஹோம்ஸ்க்கு பல்வேறு தகவல்கள் வரிசைகளை ஒன்றுக்கு இணைக்கக் கூடிய அற்புதமான ஆற்றல் வாய்த்திருக்கிறது. அந்த இடத்தில் தன்னை கற்பனையாக நிறுத்தி,மற்றவர்கள் தாண்டிச் செல்லும் விடயங்களின் அடியில் இருக்கும் கதையின் உண்மையைக் கண்டு பிடிக்கவும் அவரால் முடியும்.
அவருடைய வீட்டிலுள்ள அறையொன்றுக்குள் நுழையும் போது அங்கிருந்த வழிகாட்டிகள் ‘இங்கு தான் ஷெர்லொக் தூங்கினார், இங்கு தான் உட்கார்ந்திருந்தார் என்று உண்மையாகவே ஒரு வாழ்கின்ற மனிதனைப் பற்றிச் சொல்வது போன்று தீவிரத்தன்மையுடன் சொன்னது தான் அருங்காட்சியக விஜயத்திலேயே என்னை அசர வைத்த சுவாரசியமான விடயம்.

இங்கு லண்டனில் நான் ஹான்டில்,ஜிமி ஹென்ட்ரிக்ஸ்,சாமுவேல் ஜோன்ஸன்,தோமஸ் கார்லைல்.லேடன் போர்ட் போன்றவர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்துள்ளேன்.அங்கு அவர்களுடைய வாழ்வைப் பற்றி வாசிக்கலாம், படைப்புக்களைக் காணலாம்.
இவர்கள் உண்மையிலேயே பிரத்தியேகமான நாற்காலிகளில் அமர்ந்தவர்கள், கட்டில்களில் உறங்கியவர்கள்.
உதாரணமாக ஹென்ட்ரிக்ஸ் அவரது அதிகமான நேரத்தை கட்டிலில் உட்கார்ந்து எழுதுவதற்குச் செலவிட்டார் என்கிறார்கள்.

ஹோம்ஸ் உண்மைகளைப் பற்றி அக்கறையுள்ளவ்ராக இருந்தாலும், அவர் ஒரு புனைவுக் கதாபாத்திரமே, எங்களுடைய கற்பனைகளில் தெளிவான உயிரோட்டதுடன் இருந்தாலும் கூட. ‘ஸைன் ஒப் போர்’ வில் ஹோம்ஸ் ‘ மற்ற எல்லா விடயங்களையும் அகற்றுங்கள், எஞ்சியிருக்கும் அந்த ஒன்று தான் உண்மையாக இருக்க வேண்டும்’ எனச் சொல்கிறார்.
ஷேர்லொக் ஹோம்ஸ் அருங்காட்சியகம் ஒரு சுற்றுத்தலமாகவும் எல்லோரும் விரும்புகின்ற அந்தப் பாத்திரத்திற்கான உரைகல்லாகவும் மக்களின் தேவையை நிவர்த்திக்கின்றது என்பதை நான் உணரும் அதே வேளை, ஹோம்ஸ் வாழ்ந்தது போல தரப்படும் தகவல்களைக் கேட்பதில் விசித்திரம் என்னைத் திகைக்கச் செய்கிறது. அது என்னை நமது வாழ்க்கையில் புனைவுகளில் பங்கைப் பற்றி யோசிக்கச் செய்கிறது.

ஷெர்லொக் ஹோம்ஸ் அருங்காட்சியகம் போலல்லாது,ஐக்கிய இராச்சியத்திலுள்ள வோர்னர் பிரதர்ஸின் ஹெர்ரி பொட்டர் கலையகத்தில், ஜே கே ரோவ்லிங் கின் புத்தகங்களை நேசிப்பவர்கள், கலைஞர்களும் அரங்க அமைப்பாளர்களும் எப்படி நாவலிலுள்ள புனைவுக் காட்சிகளை திரைப்படத்திற்காகத் தொட்டுணரக் கூடிய மெய்மைகளாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை அங்கு போய் அனுபவிக்கலாம்.
வியப்பூட்டக் கூடிய வெளிச்சத்தில் குளித்திருக்கும் ஹொக்வொர்ட்ஸ் அரண்மனையைக் காணலாம்,டம்பிள்டோரினுடைய படிக்கும் அறை உள்ளே நுழையலாம், க்விடிச் என்ற விளையாட்டுக்காகச் செய்யப்பட்டிருக்கும் தங்க பந்துகளைக் காணலாம். இது உருவாக்கப்பட்ட உண்மை. எங்களுக்குத் தெரியும்,எல்லா நல்ல இலக்கியங்களையும் போல, பொட்டர் நூல்களில் இருக்கின்ற கற்பனைக் கதையில் நாங்கள் கற்றுக்கொள்ளக் கூடிய நட்பின் பெறுமதி,உங்களுக்கு உண்மையாக இருத்தல் போன்ற வாழ்க்கைக்கான பாடங்கள் இருக்கின்றன.

புனைவுகள் உண்மைகளைத் தருகின்றன, நாங்கள் யார் மற்றும் நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பவை பற்றி யோசிக்க வைக்கின்றன.ரால்ப் எலிசன் எழுதினார் ‘நல்ல புனைவுகள் எவை யதார்த்தமானவையோ அவைகளிலிருந்து உருவானவை, யதார்த்தம் வெளிவருவதற்கு கடினம்’ இன்றுள்ள சமூக நிலவரங்களுக்கு கொஞ்சம் பொருந்திப் போகக் கூடிய ஒரு கூற்று.

சூஸான் பீ கிளாஸர், பொலிடிகோ சஞ்சிகையில் அவரது கட்டுரையில் ‘பின் உண்மை அமெரிக்காவில் அரசியலை அறிக்கையிடுவது’ பற்றிப் பேசும் போது எப்படி ‘ ஒக்ஸ்ஃபர்ட் டிக்ஸனரி, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு 2016 க்கான சொல்லாக பின்-உண்மை என்ற சொல்லை அறிவித்தது என்பதைச் சொல்கிறார், ஒக்ஸ்ஃபர்ட் அதை ‘பொதுக் கருத்துக்களை வடிவமைப்பதில் உணர்வுகள் மற்றும் பிரத்தியேகமான நம்பிக்கைகளுக்கு இருக்கின்ற ஈர்ப்போடு பார்க்கும் போது புறநிலை தரவுகள் குறைந்தளவு ஆதிக்கமே செலுத்துகின்ற நிலமை’ என்று வரைவிலக்கணப்படுத்தியது.

யதார்த்தங்கள் எங்களது வாழ்க்கைக்கு இன்றியமையாதவை, அவை முக்கியமாகக் கவிதைகளுக்கு அத்தியாவசியம். கவிதை அவைகளின் உண்மைகளைச் சொல்வதற்கு அவற்றின் யதார்த்தங்களிலேயே தங்கியிருக்கின்றன. இலக்கியத்தின் அதி உன்னத நோக்கங்களிலொன்று, வெறுமனே செய்திகளை வாசிக்கும் போது எங்களால் தெரிந்து கொள்ள முடியாத எங்களைப் பற்றிய உண்மைகளை பார்ப்பதற்கு எங்களுக்கு உதவுவது. கவிதை இலக்கியரீதியான யதார்த்தங்களைப் பாவிப்பதன் ஊடாக மனித வாழ்க்கையின் பெரிய உண்மைகளை குறிவைக்கிறது. நீங்கள் கெரால்ட் ஸ்டேர்னை வாசித்தால்,உதாரணமாக,அவரது கவிதை ‘ தி டான்ஸிங்’ நீங்கள் கவிதையின் தரவுகளூடாக இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குள்ளால் கொண்டுவரப் படுகிறீர்கள். பீச்வூட் போலிவார்டிலுள்ள சின்ன அபார்ட்மென்டில் அவரது தந்தையை விவரிக்கும் போது,

அவருடைய இடக்கை அவரது அக்குளுக்கடியில், செய்தது நடனத்தை
பழைய உக்ரைனின், அவரது தோலுடைய ஒலி பாதி முரசு,
பாதி குசு, உலகம் கடைசியில் ஒரு புள்வெளி
மூவர் நாம் சுழன்றோம் பாடினோம், நாம் மூவர்
கத்தினோம் விழுந்தோம்,சரியாகச் சாவதைப் போல்,
எங்களால் ஒருபோதும் நிறுத்தவே முடியாததைப் போல, 1945 இல்
பீட்ஸ்பர்க், அழகிய விகாரமாமான பிர்ஸ்பர்க்,வீடு
தீய மெல்லன்களின், 5000 மைல்களுக்கப்பால்
இன்னுமொரு நடனத்தில் –போலந்திலும் ஜெர்மனியிலும்
ஓ கருணையில் கடவுளே, குரூரக் கடவுளே.

தந்தையின் அக்குள்ளிக்கடியிலிருந்து வரும் ‘பாதிக் குசு’ சப்தங்களால் சொல்லப்படும் நடனத்துக்கும்,5000 மைல்களுக்கப்பால் போலந்தினதும் ஜெர்மனியினதும் மரண முகாம்களிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக யூதர்கள் ஆடிக் கொண்டிருந்த நடனத்துக்கும் இடையிலிருக்கும் பதட்டத்தை கவிதையில் எம்மால் உணர முடிகிறது. குடும்பம் நடனமாடிக் கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறது,சாவதைப் போல் விழுவது என்பது உலகத்தின் திகில்களைக் கையாள்வதற்கான ஒரு வழிமுறை. வாசகர்களாக நாம், வரிகளுக்கிடையிலிருக்கும் வலியை உணர்கிறோம், எப்படி குடும்பம் வறுமையிலும் துன்பத்திலும் உழன்று கொண்டிருந்தது,அதை விட பெரிய இழப்பு, எங்களோடு சம்பந்தப்பட்டதாக நாங்கள் உணரும் உலகிலுள்ள மற்றவர்கள்,அவர்கள்,உண்மையில் இறந்து கொண்டிருந்தார்கள். ஷெர்லொக் ஹோம்ஸினது முயற்சிகளைப் போலவே,கவிஞர்கள் எங்களுடைய உள் உலகத்தை வெளியுலகின் யதார்த்தங்களோடு தொடர்புபடுத்தும் பெரிய இணைப்புக்களைப் பற்றி விழிப்புணர்வூட்ட உழைக்கிறார்கள்.அதனால் உண்மைகளை எங்களுடைய சொந்த அனுபவங்களூடாகப் பார்க்க வைக்கக் கூடிய விபரங்களை எம்மால் வெளிக்கொண்டுவர முடிகிறது. உணர்வுகளை வலியுறுத்துவதாக இருந்தாலும்,இந்த வகையில் கவிதை,தரவுகளை விட உணர்வுகளுக்கு அதிகம் கவனம் கொடுக்கப்படும் பின் உண்மை உலகத்திற்கு ஒரு வகையான மருந்து.

ஒன் பீயிங்க் “The Vitality of Ordinary Things என்ற கிரிஸ்ட டிப்பெட்டின் நிகழ்ச்சியில் மைக்கல் லோங்லீயுடனான அண்மைய நேர்காணலில் டிப்பெட் கேட்கிறார்’ கவிதை என்ன செய்யும்? எதற்காக அது வேலை செய்யும்,நிம்மதிக்கன்றி?~
லோங்லீ ‘நீங்கள் ஒரு உடைந்த வயலினைக் கண்டால், அதை ஒத்திசை பண்ணி சரி செய்ய வேண்டும், நான் அது தான் கலை என்று நினைக்கிறேன், அது தான் கலை செய்து கொண்டிருப்பது. நல்ல கலைகள்,நல்ல கவிதைகள் மனிதர்களை இன்னும் மனிதத்தன்மையுடையவர்களாக மாற்றுகின்றது, அவர்களை இன்னும் புத்திக்கூர்மையுடையவர்களாக்குகிறது,அவர்களை இருந்ததை விட இன்னும் உணர்ச்சிவயப்படுவர்களாகவும் உணர்வுத் தூய்மையுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.’

இது தான் இதயத்தின் துணியில் செய்யப்பட்ட உண்மை,லுசில் கிலிப்டன், 1990 களில் ‘கவிதை மனிதனாக்குகிறது’ என்ற அவரது எழுதும் மனது சம்பந்தமான கோடைகாலப் பயிற்சிப்பட்டறையில் நான் கலந்து கொண்ட போது இதே விடயத்தைச் சொன்னதை நினைவு கூர்கிறேன்.

லோங்லீ டிப்பெட் உடனான நேர்காணலில் லோங்லீ இன்னும் சொல்கிறார். ‘ கவிதை சம்பந்தமான அற்புதமான விடயங்களில் ஒன்று அது பயனற்றது, அது பயனற்றது. ‘கவிதையின் பயன் என்ன’ மனிதர்கள் என்னிடம் இடைக்கிடை கேட்கிறார்கள், கசாப்புக் கடையில் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்னிடம் வந்து,சொல்கிறார்கள்’ கவிதையினால் என்ன பயன் ஏற்படப் போகிறது? பதிலால் ஒரு பிரயோசனமும் இல்லை., அதனால் அதற்குப் பெறுமதியில்லை என்று சொல்ல முடியாது.அதற்குப் பயன் இல்லை,ஆனால் பெறுமதி இருக்கிறது. அது விலைமதிப்பில்லாதது. அது தான் முதல் விடயம்,அல்லது சர்வாதிகாரிகளிகள் முதலில் ஒழிக்க விரும்புவது கவிஞர்கள்,கலைஞர்கள், நாவலாசிரியர்கள்,வசனகர்த்தாக்கள் இவர்களைத் தான். அவர்களுடைய புத்தகங்களை எரிப்பார்கள். ஏனெலில் அவர்கள் கவிதையால் செய்யக் கூடிய விடயங்களைப் பற்றிப் பேரச்சம் கொண்டிருக்கிறார்கள். கவிதை உங்களுக்காக சிந்திப்பதை ஊக்குவிக்கின்றது.
எனக்கு மிகப் பிடித்தமான ஒரு உவமை.
சிரில் கொன்னொலி என்ற ஆங்கில விமரிசகருடையது, அவர் கலைகளை உடம்பிலுள்ள சிறியதொர் உறுப்புக்கு,முள்ளந்தண்டில் அடியில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி போன்ற ஒன்றுக்கு ஒப்பிடுகிறார். அது மிக சின்னதாகவும் முக்கியமில்லாததாகவும் தோன்றுகின்றது, ஆனால் அதை அகற்றினால் உடம்பு இறந்து விடுகிறது’

பின்- உண்மை மனோபாவத்தைப் பிரதிபலிப்பவர்கள் போலன்றி, கவிதையின் கற்பனை , அணியிலக்கணத்துக்கு அடியிலிருக்கும் மனித அனுபவங்களின் யதார்த்ததைக் காண்பதற்கு வாசகர்களுக்கு உதவுவதில் முன்னிற்கிறது. தரவுகள் தேவையானவை தான். நோக்கமும் முக்கியமானது. கவிதை எங்கள் வாழ்க்கையில் விவரங்களையும் அவை நெய்யும் துணிகளையும் ஆராயுமாறு எங்களைக் கேட்கிறது. எது தேவையானதோ அதைப் பற்றிச் சிந்திக்குமாறும் எங்களைச் சுற்றியுள்ள உலகத்தோடுள்ள உறவுக்குள் நுழையுமாறும் கவிதை எங்களை அழைக்கின்றது.

லோங்லீ அவருடைய ‘காயங்கள்’ என்ற அவருடைய கவிதையில்

செத்த பிட்டங்கள் நிறைந்ததோர் நிலத்தில்
என் தந்தை அவனை பின்தொடர்ந்தார் ஐம்பது வருடங்களாக
கடைசியில், ஒரு காலந்தாழ்த்திய இழப்பு
அவர் சொன்னார்- சுவடுகளை பின்தொடர் கூசி அவை வலிக்கும் வரை
‘’நான் சாகிறேன் நாட்டுக்காயும் அரசனுக்காயும்,மெதுவாய்’
நான் அவரது கைகளைத் தொட்டேன், மெலிந்த தலையை தொட்டேன்.

இப்போது, இராணுவ மரியாதை ஒரு வகை,
அவரது சின்னங்களுடன், பதக்கங்கள் வானவில்லாய்,
அவரது சுழலும் திசைகாட்டி, நான் அவரது பக்கத்தில் புதைக்கிறேன்..
மூன்று பதின்வயது வீரர்கள்,வயிறுகள் நிரம்பிய
புல்லட்களும் ஐரிஸ் பியரும்,விரட்டப்படாத ஈக்கள்.
ஒரு பக்கட் வூட்பைன் சிகரட்களை வீசுகிறேன்,
லூசிபர், ஏசுவின் புனித இதயம்
முடங்கியிருந்தது கனரகத் துப்பாக்கிகள் வெடிக்க
இரவு விளக்கு எப்போதைக்கும் ஒரு மழலைப்பள்ளியில்
ஒரு பஸ்நடத்துனரின் சீருடை
அவன் சரிந்தான் அவனுடைய கம்பளச்செருப்புக்கருகே
ஒரு முணுமுணுப்பின்றி, தலையூடே சுடப்பட்டு
அலைந்து திரிந்த ஒரு நடுங்கும் பையனால்
அவர்கள் தொலைக்காட்சியை அணைக்கும் முன்
அல்லது இரவுணவின் பாத்திரங்களைத் துப்பரவாக்கும் முன்
பிள்ளைகளுக்கும், அதிர்ந்து குழம்பி நின்ற மனைவிக்கும்
நான் நினைக்கிறேன் ‘மன்னிக்கவும் மிஸஸ்’ என்பது தான் அவன் சொன்னது.

லோங்லீயுடைய கவிதையில், நாங்கள் நாட்டுக்காக இறப்பதில் உள்ள மனிதத்தின் பக்கத்தைக் காண்கிறோம். ஒரு காயப்பட்ட இளைஞனின் காட்சிப்படம்,
எப்படி’ முடங்கியிருந்தது கனரகத் துப்பாக்கிகள் வெடிக்க
இரவு விளக்கு எப்போதைக்கும் ஒரு மழலைப்பள்ளியில்’
இது போன்ற விடயங்களை அதிகாரத்தை அடையவும் தக்கவைத்துக்கொள்ளவும் ஆன தங்கள் நோக்கங்களுக்காக இளைஞர்களை யுத்தத்திற்கு அனுப்பும் அரசியல்வாதிகள் கண்டு கொள்வதில்லை.

கவிஞர்கள் தங்களுடைய மெய்மைகளை ஊன்றிக் கவனித்து அதை தங்களுக்குத் தெரிந்த மிக உண்மையான சொற்களைக் கொண்டு சொல்ல வேண்டும்.

கவிஞர்கள் உண்மையைச் சொல்வதை நோக்கமாகக் கொள்ள வேண்டும், நாங்கள் மறக்காமல் இருப்பதற்காகவும், மிக முக்கியமான அந்த விஷயங்களை அழித்து விடும்

நாங்கள் இருண்ட கஷ்டமான காலங்களில் நம்பிக்கையை அடைவதற்காகவும்.

•••••