Category: மொழிபெயர்ப்பு கவிதை

செஸ்லா மிலாஷ் கவிதைகள் ( போலந்து மொழி கவிதைகள் ) : Czeslaw Milosz ஆங்கிலம் : ராபர்ட் ஹாஸ் ,ராபர்ட் பின்ஸ்கி Robert Hass and Robert Pinsky. / தமிழ் : தி.இரா.மீனா

Czeslaw Milosz

Czeslaw Milosz

செஸ்லா மிலாஷ் [ Czeslaw Milosz 1911–2004 ] 1980 ல் போலந்து மொழி யில் இலக்கியத்திற்கான் நோபெல் பரிசு பெற்றவர்.கவிதை, நாவல்கள், கட்டுரைகள்,மொழிபெயர்ப்பு என்று பலதுறை பங்களிப்பாளர்.

எதிர்பார்ப்பு

நீ நம்பும் பொழுதில் நம்பிக்கை உன்னிடமிருக்கிறது

பூமி என்பது ஒரு கனவில்லை ஆனால் வாழும் சதை

அந்தக் காட்சி , தொடுவுணர்வு, பொய்யின்மை

அங்கு நீ பார்த்த எல்லாமும்

கதவிலிருந்து பார்க்கும் தோட்டம் போன்றது.

நீ நுழையமுடியாது.ஆனாலது அங்கிருக்கிறதென்று உனக்குத் தெரியும்

மிகத் தெளிவாகவும் தீட்சண்யமாகவும் பார்க்கமுடியும்

ஒரு புதிய வித்தியாசமான மலரையும் பெயரில்லாத நட்சத்திரத்தையும்

அந்தத் தோட்டத்தில் நாம் கண்டுபிடிக்கலாம்.

நம் கண்களை நாம் நம்பக் கூடாதென்று சிலர் சொல்வார்கள்,

அங்கு ஒன்றுமில்லை,இருப்பதாகத் தெரிகிறது,.

அவர்கள்தான் எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள்.

நாம் திரும்பும் கணத்தில் நம் பின்னாலிருக்கிற

உலகத்தை திருடர்கள் பறித்துக் கொண்டது போல அவர்கள் நினைக்கின்றனர்

நம்பிக்கை

உனக்குள் இருக்கும் நம்பிக்கை என்பது

நீ பனித்துளியை அல்லது மிதக்கும் இலையைப் பார்ப்பதானது.

அவை அப்படித்தான் இருக்கவேண்டும் என்பதால் அப்படியிருக்கின்றன.

நீ கண்களை மூடிக் கொண்டு கனவு கண்டாலும்

உலகம் எப்போதும் தானிருப்பது போலவேயிருக்கும்

இலை ஆற்றுநீரால் சுமந்து செல்லப்படும்.

உன்காலைக் கூரானகல்லால் நீ காயப்படுத்திக் கொள்ளும்போதும்

கல்லிருப்பது நம்பாதங்களைக் காயப்படுத்தத்தான் என்பது உனக்குத் தெரியும்.

மரத்தால் உருவான நீண்ட நிழலைப் பார்

நாமும் மரங்களும் பூமியில் நிழலை வீசுகிறோம்

எதற்கு நிழலில்லையோ அதற்கு வாழ்வதற்கான வலிமையில்லை.

எதிர்கொள்ளல்

வைகறையில் பனியுறைந்த வயல்களினூடே

வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு சிவப்பு இறக்கை இருளிலிருந்து எழுந்த்து.

திடீரென ஒரு முயல் சாலையின் குறுக்கில் ஓடியது

எங்களில் ஒருவர் தன் கையால் சைகை காட்டினார்.

அது பல காலத்திற்கு முன்பு. இன்று இருவரும் உயிருடனில்லை

முயலுமில்லை, சைகை காட்டியவருமில்லை.

அன்பே, அவர்கள் எங்கே, அவர்கள் எங்கே போகின்றனர்

கையின் சைகை அசைவின் கீற்று, கூழாங்கல்லின் சலசலப்பு

நான் துக்கத்தால் கேட்கவில்லை ஆச்சர்யத்தில் கேட்கிறேன்.

மேலும் ஒரு முரண்பாடு

ஆறுகள் பாய்ந்தகொண்டிருக்கிற ,புற்கள் தம்மை புதுப்பித்துக்கொண்டிருக்க்கிற

வெள்ளை மேகங்களின் கீழேயுள்ள ஒரு வீட்டின் விருந்தாளி நான்.

இங்கே பூமியில் நான் செய்ய வேண்டியதை நிறைவேற்றினேனா?

எனக்குத் தெரியாமலேயே நான் அழைக்கப்பட்டுவிட்டால் என்ன ஆகும்

அடுத்த முறை விரைவிலேயே நான் ஞானத்தைத் தேடுவேன்

நான் மற்றவர்களைப் போலத்தான் என்று நடிக்கமாட்டேன்

அதிலிருந்து கேடும் துயரமும்தான் வரும்.

துறக்கும்போது கீழ்ப்படிதலின் விதியை நான் தேர்ந்தெடுப்பேன்

என் பொறாமைக்கண்ணையும் கெட்டநாவையும் ஒடுக்குவேன்

கீழே மின்னும் நகரங்களை அல்லது ஓடை ,

ஒரு பாலம் மற்றும் பழைய தேவதாருக்களைக் காணும் நோக்கத்தோடு

துறவுக் கன்னியர்மாடத்தின் ஒருகுடியிருப்பாளர் வானில் பறக்கிறார்

என்னால் ஒரு பணியில்தான் செயல்பட முடியும்.

எனினும் அதுவும் நிறைவேற்ற முடியாதது.

மறந்துவிடு

மற்றவர்களுக்கு நீ தந்த

துன்பங்களை மறந்துவிடு.

மற்றவர்கள் உனக்குச் செய்த

துன்பங்களை மறந்து விடு.

தண்ணீர் ஓடிக் கொண்டேயிருக்கும்,

வசந்தம் பிரகாசித்து முடியும்

நீ மறந்த பூமியிலேயே நடந்து கொண்டிருப்பாய்.

சில சமயங்களில் தொலைவில் நீ ஒரு பல்லவியைக் கேட்கலாம்

யார் பாடுகிறார்கள் அதன் பொருளென்ன என்று நீ கேட்கலாம்

குழந்தை போலான சூரியனின் இளம்சூடு வளர்கிறது.

பேரனும் கொள்ளுப் பேரனும் பிறக்கின்றனர்

கரங்களால் நீ மீண்டும் வழிநடத்தப்படுகிறாய்.

ஆறுகளின் பெயர்கள் உன் நினைவில் தங்கியிருக்கும்

எத்தனை முடிவற்றவையாய் அந்த ஆறுகள் தெரிகின்றன!

உன் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன.

நகரத்தின் கோபுரம் முன்னிருந்ததைப் போலில்லை

நீ தொடக்க நிலையில் ஊமையாக நிற்கிறாய்.

என்னுடையதல்ல

அவர்களின் உலகம் என்னுடையது என்று நான் வாழ்க்கை முழுவதும்

நடித்தால் அந்த நடிப்பு அவமானகரமானது

ஆனால் நான் என்ன செய்யமுடியும்?ஒரு வேளை நான் திடீரென அலறி

குறிசொல்லத் தொடங்கி விட்டால்.யாரும் என்னைக் கேட்க மாட்டார்கள்.

அவர்களின் திரைகளும் மைக்ரோபோன்களும் அதற்கானவையல்ல.

என்னைப் போன்ற மற்றவர்கள் வீதிகளில் அலைந்து

தனக்குள்ளாகவே பேசுவார்கள்.பூங்காக்களின் பெஞ்சுகளில்.

அல்லது சந்துகளின் நடைபாதைமேல் தூங்குவார்கள்.

எல்லா ஏழைகளையும் அடைப்பதற்கு

போதுமான சிறைகளில்லை.நான் சிரித்து அமைதியாகிறேன்.

அவர்களால் என்னைப் பிடிக்க முடியாது

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடு விருந்து—நான் அதை நன்றாகச் செய்கிறேன்.

பொருள்

நான் இறக்கும்போது, உலகின் உள்பூச்சைப் பார்ப்பேன்.

மற்றொரு புறத்தில் பறவைகள்,மலைகள்,சூரியாஸ்தமனத்திற்கப்பால்

உண்மையான பொருள் குறிவிலக்கிற்காகத் தயாராக இருக்கும்

எது சேர்க்க முடியாமலிருந்ததோ அது சேர்க்கப்படும்

எது புரிந்து கொள்ளமுடியாத்தாக இருந்ததோ அது புரியும்

-இந்த உலகிற்கு உள்பூச்சே இல்லையெனில்?

மரத்தின் கிளையிலிருக்கும் பறவை அடையாளமில்லையெனில்,

ஆனால் கிளையின் மேல் பறவையெனில்?இரவும் பகலும்

ஒன்றையொன்று தொடர்வதில் பொருளில்லையோ?பொருளில்லையெனில்?

இந்த பூமியின் மேல் பூமியைத் தவிர எதுவுமில்லையெனில்?

-அப்படி இருந்தாலும் அது தொடரும்

உதடுகளிலிருந்து பிறந்த வார்த்தை அழியும்

விண்மீன்களினூடே சுழலும் அண்டங்களுக்கிடையே

சலிப்பின்றி ஓடிக்கொண்டேயிருக்கும் தூதுவர்

அழைத்தும், எதிர்த்தும் ,கதறியும்.

மிகச் சிறிய அளவில்

நான் மிகச் சிறிய அளவு சொன்னேன்

நாட்கள் குறுகின

குறுகிய நாட்கள்

குறுகிய இரவுகள்

குறுகிய ஆண்டுகள்.

நான் மிகச் சிறியஅளவு சொன்னேன்

நான் அவற்றைப் பின்பற்ற முடியவில்லை.

மகிழ்ச்சியில்

கசப்பில்

ஆசையின் தீவிரத்தில்

நம்பிக்கையில்

என் இதயம் களைப்புற்றது.

திமிங்கலத்தின் தாடைகள்

என்னைக் நெருக்குகின்றன.

பாலைவனத் தீவுகளின் கரையில்

நிர்வாணமாய் படுத்துக் கிடக்கிறேன்.

உலகின் வெள்ளை திமிங்கிலம்

என்னைத் தன் குழிக்குள் இழுக்கிறது.

எனக்கு இப்போது தெரியவில்லை

அதற்குள் இருந்த எல்லாமும் உண்மையென்று.

———————————

நிகனோர் பார்ரா கவிதைகள் ( 2 ) – தமிழில் : ராஜேஷ் சுப்ரமணியன்

நிகனார் பார்ரா

நிகனார் பார்ரா

நிகனோர் பார்ரா கவிதைகள்

தமிழில்: ராஜேஷ் சுப்ரமணியன்

1.

கட்டு விரியன்

பல வருடங்களுக்கு, வெறுக்கத்தக்க ஒரு பெண்ணை
ஆராதிக்க நான் சபிக்கப்பட்டேன்.

என்னையே அவளுக்குத் தியாகம் செய்தேன் ,

முடிவில்லா அவமானங்களையும் பரிகாசங்களையும்
பொறுத்துக்கொண்டு ;

இரவும் பகலும் உழைத்தேன் அவளுக்கு

உணவும், தேவையான உடைகளையும் அளிக்க,

பல குற்றங்கள் செய்தேன் , தகாத பல

செயல்களையும் செய்தேன்,

நிலவொளியில் சிறு கொள்ளைகளிலும் ஈடுப்பட்டேன்,

ஆவணங்களில் போலிகள் செய்து மோசடி செய்தேன்

அவளின் உள்ளம் கொள்ளை கொள்ளும் கண்களில்
இருந்து

வரக்கூடிய ஒரு இகழ்ச்சியான பார்வைக்குப் பயந்து.

ஒருவருக்கொருவர் புரிந்துக் கொண்ட சில

அதிசய சிறு தருணங்களில், பூங்காக்களில் நாங்கள் சந்தித்து

ஒன்றாக இயந்திரப் படகை ஓட்டும்

காட்சியைப் புகைப்படம் எடுத்துக்கொள்வோம்.

அல்லது ஒரு இரவு நேர கேளிக்கை விடுதிக்குச் சென்று

விடியலைத் தாண்டியும் களியாட்டம் போடுவோம்.

பல வருடங்களுக்கு, அந்தப் பெண்ணின் வசியத்தில் இருந்தேன்.

என்னுடைய அலுவலகத்திற்கு முழு நிர்வாணமாக வருவாள்,

வந்து,கற்பனைகூட செய்ய இயலாத வகையில்

உடலை வளைத்து ஜாலம் காட்டுவாள்,

அவளுடையப் பாதையில் இழுக்க.

எல்லாவற்றிற்கும் மேல் என்னிடம் இருக்கும்

கடைசித் துளிப் பணத்தையும் பிழிந்து எடுத்து செல்ல.

என்னுடைய குடும்பத்துடன் எந்தவிதத் தொடர்பும்

வைத்துக் கொள்வதைத் தடை செய்தாள் .

என்னுடைய நண்பர்களை என்னிடமிருந்து பிரித்துவிட

என்னைப் பற்றி அவதூறுப் புரளிகளைத்

தனக்கு சொந்தமான நாளிதழில் வெளியிட்டாள் .

வெறி மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்புடன்

ஒரு கணம் கூட இடைவெளிவிடாமல் அவளுடைய வாயில்

முத்தமிட எனக்குக் கட்டளையிட்டாள் .

அவளுடைய அறிவற்ற கேள்விகளுக்கும்

உடனே பதில் அளிக்க சொன்னாள்;

அவளுடைய அந்தக் கேள்விகள், மற்றவற்றுடன் கூடவே,

நித்யத்துவம் பற்றியும், மரணத்திற்குப் பின்னரான வாழ்வு

பற்றியும், அதுபோன்ற என் மன அமைதியைக் கெடுக்கும்படி

இருந்த , காதில் நாராசுரமாக விழுந்த விஷயங்கள்.

அவற்றால் அடிக்கடி குமட்டலும், திடீர் மயக்கங்களும்

ஏற்பட்டன எனக்கு. அதையே, தனக்கே உரியத் தனித்துவமான

பாணியில் காரணமாகக் காட்டி ஒரு கணமும் வீணாக்காமல்

ஆடைகளை அணிந்து, என்னுடைய வீட்டிலிருந்து அவள்

வெளியேறியபொழுது, வீழ்ந்துப் போனேன் நான்.

இதே சூழ்நிலை ஐந்து வருடங்களுக்கும், அதற்கு மேலும்

அவ்வாறே இழுத்துச் சென்றது.

இடையே, சில சிறு காலக் கட்டங்களில்

நாங்கள் ஒரு சிறிய வட்ட அறையில் ஒன்று சேர்ந்து

வாழ்ந்தோம், கல்லறைக்கு அருகில் இருந்த சொகுசு நிறைந்த

ஒரு பகுதியில், வாடகையைப் பகிர்ந்துக் கொண்டு.

(சில இரவுகளில், எங்கள் தேனிலவில் சிலக் குறுக்கீடுகள்

செய்ய வேண்டியிருந்தது, ஜன்னல்கள் வழியே விடாது

உள்நுழைந்த எலிகளை சமாளிக்க).

கட்டுவிரியன், தான் பராமரித்த மிகத் துல்லியமான கனக்குப்

புத்தகத்தில்,நான் அவளிடமிருந்து கடன் வாங்கிய

ஒவ்வொரு பைசாவையும் குறித்து வைத்துக் கொண்டாள் .

நான் தான் அவளுக்கு வாங்கித் தந்தேன் என்றபொழுதும்

பல் பிரஷை நான் உபயோகப்படுத்தக் கூடாதாம்.

அவளுடைய இளமையை நான் பாழடித்து

விட்டதாகவும் குற்றம் சாட்டினாள்.

கண்களில் அனல் பொங்க பயமுறுத்தினாள்

என்னுடைய கடனின் ஒரு பகுதியை ஒரு

நியாயமான அவகாசத்திற்குள் நான்

செலுத்துவதற்கு,

அவள் மேற்கொண்டு படிக்க அந்தப் பணம் தேவைப்பட்டதால்.

வேறு வழியில்லாமல் தெருவிற்குத் தள்ளப்பட்டேன்
பொது மக்கள் அளித்த நன்கொடைப் பணத்தில் வாழும்படி.

பூங்காக்களின் இருக்கைகளில் உறங்கிய பொழுதுகளில்

காவலர்கள் என்னை மீண்டும் மீண்டும் கண்டெடுப்பர்

இலையுதிர் கால முதல் இலை உதிர்வில்
இறக்கும் நிலையில் இருப்பவனாக.

அதிர்ஷ்ட வசமாக,அந்த நிலை நீண்ட நாள் தொடரவில்லை;

மீண்டும் ஒரு பொழுது , பூங்காவில் நான் இருந்த போது

ஒரு புகைப்படைக்கலைஞர் என்னைப்
படமெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது

சுவை மிகுந்த ஒரு ஜோடிப் பெண்மைக் கரங்கள்
என் கண்களை மூடின. நான் மிகவும் நேசித்த ஒரு குரல் கேட்டது

“நான் யார்?” என.

“நீ, என் காதலி” நான் அமைதியாக சொன்னேன்.

என் தேவதையே ! என்றாள் அவள் பதட்டத்துடன் .

உன்னுடைய கால் முட்டிகளின் மேல் மீண்டும் நான் அமர விடு.

அப்போதுதான் நான் உணரமுடிந்தது அவள்

உடலோடு ஒட்டிய குட்டை ஆடையை அணிந்திருந்தாள் என்பதை.

அது, ஒரு நினைவில் நிற்கும் சந்திப்பு,

முரணான பேச்சுகள் நிறைந்திருந்தது எனினும்.

“நான் ஒரு சிறியத் துண்டு நிலம் வாங்கி இருக்கிறேன்

இறைச்சிக் கூடத்திற்கு அருகில் ” என்றாள் அவள்
உரக்கமாக . ” அங்கு ஒரு வகையான பிரமிட் கட்ட விரும்புகிறேன்

நமது எஞ்சிய காலத்தைக் கழிக்க உதவும் வகையில்.

நான் எனது படிப்பை முடித்து விட்டேன்;

வழக்கறிஞராகப் பதிவும் பெற்று விட்டேன்,

கொஞ்சம் நன்றாகவே பணமும் சேர்த்து விட்டேன் ,

அதை நல்ல லாபகரமான வியாபாரத்தில் முதலீடு செய்வோம்,

நாம் இருவரும், என் அன்பே ” என்றவள் சொன்னாள் மேலும்.

“இந்த உலகிலிருந்து தூரத்தில் நாம் நமது கூட்டைக் காட்டுவோம்”.

“போதும் உனது முட்டாள்தனம்; உனது திட்டங்களில்
எனக்கு நம்பிக்கை இல்லை ” என்று பதிலளித்தேன் நான்.

“மனதில் நன்றாக வைத்திரு,

எனது உண்மையான மனைவி நம் இருவரையும் ,

அஞ்சக் கூடிய வறுமையில் எந்த நேரமும் விட்டுவிடக்கூடும்.

எனது குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள்;
காலம் கடந்து விட்டது;

முற்றிலும் சோர்வடைந்தவனாக நான் உணர்கிறேன்;

ஒரு நிமிடம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்;

பெண்ணே, சிறிது தண்ணீர் எடுத்து வா,

நான் உண்ண எங்கிருந்தேனும் ஏதாவது எடுத்து வா,
நான் பட்டினியில் வாடுகிறேன் ,

உனக்காக நான் இனி மேலும் வேலை செய்ய இயலாது,

நம் இருவரிடையே எல்லாம் முடிந்து விட்டது”.

(ஆங்கில மொழியாக்கம்: W S மெர்வின் )

*********

2.

பியானோவில் தனி வாசிப்பு

மனிதனின் வாழ்க்கை என்பது வேறொன்றுமில்லை

சற்று தொலைவில் நடக்கும் கொஞ்சம் செய்கைகள் என்பதால்;

ஒரு கண்ணாடி கோப்பையின் உள்ளே பளபளக்கும்
கொஞ்சம் நுரை ;

மரங்கள், நடக்கும் மரங்களேயேன்றி

வேறொன்றுமில்லை என்பதால்

தொடர் நகர்வில் இருக்கும் மேஜைகளும்,

நாற்காலிகளும்

அன்றி வேறொன்றில்லை.

ஏனெனில் நாமும் கூட, உயிர்களேத் தவிர
வேறொன்றுமில்லை

(எப்படி கடவுட் தன்மை என்பது , கடவுளே அன்றி வேறொன்றுமில்லையோ );

நாம் பேசுவது, கேட்கப்படுவதற்காக மட்டும் அல்ல

மற்றவர்களும் பேசட்டும் என்பதற்காக

எதிரொலி, தன்னை உருவாக்கிய குரலை முந்தி செல்லுகிறது;

பெரும் குழப்பங்கள் கொடுக்கக்கூடிய ஒரு ஆறுதல் கூட நமக்கில்லை என்பதால்

காற்றால் நிறைத்து, கொட்டாவி விடும் தோட்டத்தில்;

நமது மரணத்திற்கு முன்பு தீர்க்கவேண்டியப் புதிர்
பின்னர் ஆசுவாசமாக புத்துயிர் கொடுக்கலாம் என்பதால்

நாம் பெண்ணை மிகுதிக்கு அழைத்துச் சென்றவுடன்;

நரகத்திலும் ஒரு சொர்க்கம் இருப்பதால் ,
ஒரு சில விஷயங்களை முன்மொழிய அனுமதியுங்கள்

நான் என் பாதங்களால் ஓசை எழுப்ப விரும்புகிறேன்

எனது ஆன்மா அதற்குத் தகுந்த உடலை
கண்டடைய வேண்டும் என விரும்புகிறேன்.

(ஆங்கில மொழியாக்கம்: வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )

 ராஜேஷ் சுப்ரமணியன்

ராஜேஷ் சுப்ரமணியன்

**********

நிகனோர் பார்ரா கவிதைகள் – தமிழில் : ராஜேஷ் சுப்ரமணியன்

images (1)

1.

என்னுடன் கவிதைகளும் முடிகின்றன

நான் எதையும் ஒரு
முடிவுக்குக் கொண்டுவரவில்லை .
அதைப்பற்றி எந்த
கற்பனைகளும் எனக்கில்லை.
கவிதைகள் எழுதிக்கொண்டே இருக்கவே
நான் விரும்பினேன்.
ஆனால் மன உத்வேகம்
நின்றுவிட்டது.
கவிதைகள் தம்மை சிறப்பாகவே
வெளிக்கொணர்ந்திருக்கின்றன.
நான் தான் மிக மோசமாக
நடந்துக் கொண்டிருக்கிறேன்.

நான் தான் சிறப்பாக செயல்பட்டேன்
கவிதைகள்தான் மோசமாக
நடந்துக்கொண்டன என்று சொல்வதில்
எனக்கு என்ன லாபம்,
குற்றம் சாட்டப்படவேண்டியவன்
நான்தானென்று
அனைவரும் அறிந்திருக்கும்பொழுது ?

ஒரு முட்டாளுக்குத் தகுதியானது
இதுதான் !

கவிதைகள் தம்மை சிறப்பாகவே
வெளிக்கொணர்ந்திருக்கின்றன.
நான் தான் மிக மோசமாக
நடந்துக் கொண்டிருக்கிறேன்.
என்னுடன் கவிதைகளும்
முடிகின்றன.

***

2.

உயரும் விலைவாசி

ரொட்டி விலை மேலே ஏறுகிறது
ஆகவே ரொட்டி விலை மீண்டும் மேலே ஏறுகிறது
வாடகை உயருகிறது
உடனே எல்லா வாடகைகளும் இரட்டிப்பாகுகின்றன.
துணிகளுக்கான செலவு மேலே போகிறது
உடனே துணிகளுக்கான செலவு மீண்டும்
மேலே ஏறுகிறது.
வேறு வழியே இல்லை
ஒரு விஷச் சுழியில் நாம் மாட்டிக்கொண்டுள்ளோம் .
கூண்டில் உணவு உள்ளது.
அதிகமில்லை, ஆனால் உணவு உள்ளது.
வெளியேவோ, நீண்டுக் கிடைக்கும்
சுதந்திரம் மட்டுமே உள்ளது.

***

3.

அமைதி வழியில் எனக்கு நம்பிக்கை இல்லை

வன்முறை வழியில் எனக்கு நம்பிக்கை இல்லை
ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை வைக்கவே
விரும்புகிறேன் – ஆனால் செய்வது இல்லை.
எதையேனும் நம்புவது என்றால்,
கடவுளை நம்புவதற்கு ஒப்பாகும்.
தோள்களைக் குலுக்கிச் செல்வது மட்டுமே
நான் செய்யக்கூடியது.
பட்டவர்த்தனமாக சொல்லிவிடுவதற்கு
என்னை மன்னிக்கவும்.
பால் வீதியில் கூட
எனக்கு நம்பிக்கை இல்லை.

*****

4.

ரோலர் கோஸ்டர்

அரை நூற்றாண்டுக்கு
கவிதைகள், கடைந்தெடுத்த முட்டாள்களின்
சொர்க்கமாக இருந்தது.
நான் வரும் வரை.
வந்து, எனது ரோலர் கோஸ்டரைக்
கட்டமைத்தேன்.
உயரே செல்லுங்கள்,
நீங்கள் அவ்வாறு விரும்பினால்.
எனது தவறு அல்ல,
மூக்கிலும் வாயிலும் ரத்தம் வடிய
நீங்கள் கீழே வர நேர்ந்தால்.

5.

உண்மையில் உங்களிடம் என்ன
சொல்வதென்று தெரியவில்லை.
மூன்றாம் உலகப்போரின்
விளிம்பில் நாம் இருக்கிறோம்.
யாரும் ஏதும் கவலைப்பட்டதாகத்
தெரியவில்லை.
நீங்கள் உலகத்தை
அழித்தீர்கள் என்றால்
நான் அதை மீண்டும் உருவாக்குவேன்
என்றா நினைக்கிறீர்கள் ?

**

6.

பறவைகள்
கோழிகள் அல்ல, புனிதத் தந்தையே !
கோழிக்கூட்டின் எல்லைகளுக்கு உள்ளே
கட்டற்ற சுதந்திரம் நடமாடுவதற்கு.

***

7.

உணவுக்காக,
உடைக்காக, தங்குமிடத்திற்காக
நாங்கள் கூக்குரலிடவில்லை,
சுவாசிக்க சிறுவெளி மட்டும்
கொஞ்சம் கொடுங்கள்
மேதகு பொருந்தியவரே !

***********
Note:
( Spanish to English translation: Miller Williams, David Unger)

************

நிக்கனார் பார்ரா கவிதைகள் / தமிழில் / ஜி. விஜயபத்மா

நிக்கனார் பார்ரா

நிக்கனார் பார்ரா

சில வருடங்களுக்கு முன்

அகாசிஸ் பூக்கள் பூத்திருந்த சாலையோரம்

நான் உலா வரும் பொது

நம்மை அறிந்த நண்பர் சொல்லக் கேட்டேன்

‘நீ யாரையோ திருமணம் செய்து கொண்டாய்’ என !

இதில் நான் சொல்வதற்கு எதுவுமில்லை

நான் ஒருபோதும் உன்னை காதலிக்கவில்லை

என்று நண்பருக்கு பதில் கூறினேன் .

- என்னைப் பற்றி என்னைவிட உனக்கு நன்றாகத் தெரியும்

ஒவ்வொரு வசந்தத்திலும் அகாஸிப் பூக்கள் சாலையோரம் பூக்கும் தருணங்களில்

வருடங்கள் கடந்தும் உணர்வு மாறாது அப்படியே இருக்கிறது என்பதை

நீ நம்புவாயா என்று தெரியவில்லை

ஆனாலும்

அந்த அகாஸிப் பூக்கள்

என்னை சுட்டி காட்டி

என் இதயத்தைப் பிளக்கும் அந்த செய்தியை

என்னிடம் வருடம் தோறும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன

- நீ வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டாயா ? என்று !

•••••

அவர்கள் நம் அயல் மனிதர்கள் 08 – எம்.ரிஷான் ஷெரீப்

கவிஞர் மஹேஷ் முணசிங்ஹ

கவிஞர் மஹேஷ் முணசிங்ஹ

பத்திக் கட்டுரைத் தொடர்

இலங்கையை ஆட்கொண்டிருந்த யுத்த மேகம் அகற்றப்பட்டு வருடங்களாகின்றன. போர் சூழ்ந்த தீவின் தேகம், நோய் நீங்கி படிப்படியாக ஆரோக்கியத்தின் பக்கம் மீண்டு கொண்டிருக்கிறது. பழைய காயங்களின் தழும்புகள் இப்பொழுதும் இருக்கின்றனதான். தேசத்தின் ஆயுட்காலம் முடிவதற்குள் அவற்றைக் காலம் ஆற்றியும், மாற்றியும் விடும். அடுத்தடுத்த தலைமுறைகள் நாட்டின் புது மினுமினுப்பிலும், பளபளப்பிலும் அமர்ந்து இலங்கையின் போர் வரலாற்றை பாடப் புத்தகங்களில் படித்துக் கொண்டிருக்கக் கூடும்.

ஆனாலும், நாம் மறந்து விடக் கூடாத, மறந்து விட முடியாத போர் வீரர்கள் இரு தரப்பிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள். தமது மொழிக்காகவும், தமது மண்ணுக்காகவும், தமது மக்களுக்காகவும் தாம் கொண்ட இலட்சியத்துக்காகவும் எந்தப் பிரதிபலனையும் பாராது தமது உயிர், பலம், இளமை, ஆரோக்கியம் என அனைத்தையும் அர்ப்பணித்து யுத்தம் செய்தவர்கள் ஒரு புறம். வறுமை, வேலை வாய்ப்பின்மை, அரச உத்தியோகம், நல்ல வேதியம், சமூகத் தொண்டு, ஒரே தாய்நாடு போன்ற பல காரணங்களுக்காக அரசாங்கத்தோடு இணைந்து போராடியவர்கள் மறுபுறம்.

இரு தரப்பினரையுமே போர் மிக ஆழமாகவும், மோசமாகவும் மென்றது. அதன் பற்களில் அகப்பட்டு உயிரோடு எஞ்சிய போர் வீரர்கள் பலரும் தம் வாழ்நாள் முழுவதும் அங்கவீனர்களாக வாழ விதிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த மக்களது சௌபாக்கிய வாழ்க்கைக்காக தமது உயிரைக் கொடுத்துப் போராடினார்களோ அந்த வீரர்களது கண்ணீருக்கும், உயிர்களுக்கும், காயங்களுக்கும் மதிப்பற்றுப் போன ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இலங்கையின் பெருநகரங்களை விடவும், வறுமை சூழ்ந்த கிராமங்களிலிருந்து தமது வாழ்வாதாரத்துக்காக வேண்டி இராணுவத்தில் இணைந்து போரிட்ட இளைஞர்களே அதிகம். அவர்களுள் பலரும் இன்றும் கூட உடலின் பாகங்களை இழந்து ஊனமுற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதிகாரம் படைத்தவர்கள் கூட அவர்களைப் புறந் தள்ளிவிடும் உலகில், அவர்கள் வழிபடும் தெய்வங்கள் மாத்திரமே அவர்களை இன்னும் வாழ்க்கையில் நம்பிக்கை கொள்ளச் செய்து, வாழச் செய்து கொண்டிருக்கின்றன.

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்

அவ்வாறாக ஊனமுற்றுள்ள இராணுவ வீரனது ஒரு நாள் வாழ்வியலை எடுத்துச் சொல்கிறது கவிஞர் மஹேஷ் முணசிங்ஹவின் இக் கவிதை.

ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும்

முதியோர்

காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்

குழந்தைகள் – வயதுவந்தோர்

பிணக்குவியல்களை

நிறைய நிறையக் கண்ணுற்றேன்

பாவங்களை ஊக்குவிக்கும்

துறவிகளின் உருவங்களைக் கண்டேன்

*பிரித் நூலும் கட்டப்பட்டது

‘நாட்டைக் காக்கும்’ எனக்கு காவல் கிட்டவென

பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து

விழி சதை இரத்தமென தானம் செய்து

உங்களிடம் வந்துள்ளேன்

ஆனாலும் புத்தரே

உங்களது பார்வை மகிமைமிக்கது

கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்

மனைவி குழந்தைகளோடு

நலம் வேண்டிப் பாடும்

சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே

எனது தலையை ஊடுருவும்

உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்

கண்ணெதிரே தோன்றுகின்றனர்

என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்

ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த

அவர்கள் மெலிந்தவர்கள்

துயருற்ற ஏழைகள்

ஒரே நிறம்

ஒரே உருவம்

எல்லோருக்குமே

எனது முகம்

நூறு ஆயிரமென

நான் கொன்றொழித்திருப்பது

என்னையேதானா

பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற

சிறிய பிக்குகள்

பின்னாலிருந்து

நீங்கள் தரும் புன்முறுவல்

தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்

கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்

வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்

****

* பிரித் நூல் – பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.

அரச கட்டளைக்கிணங்க தான், தேடித் தேடிக் கொன்றொழித்த தன் தேச மக்களது ஆத்மாக்கள், நினைவுகள் வழியாக அந்த இராணுவ வீரனை கணந்தோறும் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. அந்த ஞாபகங்கள் கொடியவை. யுத்தம் செய்து அங்கவீனத்தோடு மீண்டு வந்துள்ள ஒவ்வொரு போர்வீரனுக்குள்ளும் இவ்வாறான காயங்களுடனான பல ஞாபகங்கள் உள்ளன. அவை ஒரு போதும் ஆற்ற முடியாதவை.

••••

mrishanshareef@gmail.com

தர்ம சாலாவில் மழை விழும்போது.. ( திபேத்திய கவிதைகள் ) / பூச்சிங் டீ சோனம். / தமிழில் விஜயராகவன் ( ஈரோடு )

download (84)

தர்மசாலாவில் விழும் மழைத்துளிகள்
குத்துசண்டை கையுரைகளை போட்டு கொள்கின்றன
ஆயிரக்கணக்கான துளிகள்
எனது அறையை பாய்ந்து சாடும்.
தகரகூரையின் கீழே அறை சாடல் பொறாமல் உள்ளிருந்து கதறும்.
மழை எனது படுக்கையையும்
எழுதிய தாள்களையும்
நனைத்துவிடும்.
சில நேரங்களில் இந்த புத்திசாலி மழை எனது அறையின் பின்புறமாக வரும்போது இந்த நன்றிகெட்ட சுவர்கள் அனுமதிப்பதால் எனது அறையில் சிறு வெள்ளமே வந்துவிடும்.

எனது தீவுநாடாக மாறிய படுக்கையில் இருந்து கொண்டு
வெள்ளம் என் தேசத்தை சூழ்வதை பார்ப்பேன்.
சுதந்திரம்பற்றிய பதிவுகள்,
எனது சிறைநாட்களின் நினைவுகுறிப்புகள்,கல்லூரி நண்பர்களின் கடிதங்கள்,
மேகி நூடிலும், ரொட்டி துணுக்குகளும், இந்த ஜலபெருக்கில் மறந்தநினைவுகள் திடீரென வருவதுபோல் மேலே வந்து
மிதக்கும்.

மூன்று மாத சித்ரவதை
பருவமழையானது ஹிமாலயத்தின் ஊசியிலை பைன் மரங்களை கழுவி சுத்தபடுத்தி விடுவது மாலை
சூர்யஒளியில் ஒளிர்கிறது.

பிரித்தானிய அரசாட்சி காலம்தொட்டு பயனிலுள்ள
எனது அறைத்தகர கூரையை
மாரிக்காலம் அடித்து அடங்குமட்டும் நான் சமாதானம் செய்ய வேண்டியுள்ளது.
இந்த அறை பல வீடற்ற அபலைகளுக்கு இடமளித்துள்ளது.

தற்போது கீரிகளும்,எலிகளும்,
பல்லிகளும்,சிலந்திகளும்,
கைப்பற்றியுள்ள இதில் நானும் வாடகைக்குள்ளேன்.

இல்லம் என குடியிருக்க வாடகை அறை எடுப்பது
தாழ்வான பிழைப்புதான்.
எண்பது வயதான எனது காஷ்மீரி வீட்டு சொந்தகாரி
தனது சொந்த பூமிக்கு திரும்ப முடியவில்லை.
அடிக்கடி திபேத்தா,காஷ்மீரா
எது சிறந்த அழகு என
விவாதித்துகொள்வோம்.

ஒவ்வொரு சாயங்காலமும்
எனது வாடகை அறைக்கு திரும்ப வருவேன்.
ஆனால் நான் இப்படியே இருந்து இறக்கப்போவதில்லை.

இங்கிருந்து அகல ஏதாவது
ஒரு வழி இருக்கத்தான் செய்யும்.

எனது அறையை போல என்னால் அழ முடியாது.
வேண்டுமென்கிற அளவிற்கு சிறைச்சாலைகளிலும்,எனது
இக்கட்டுகளிலும் அழுதிருக்கிறேன்.

இங்கிருந்து அகல ஏதாவது ஒரு வழி இருக்கத்தான் செய்யும்.

நான் அழப்போவதில்லை,
போதுமான அளவிற்கு எனது
அறையே ஈரமாகத்தான் உள்ளது…

••••

சிங்களக் கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்ன / அவர்கள் நம் அயல்மனிதர்கள் 07 – எம்.ரிஷான் ஷெரீப்

download

பத்திக் கட்டுரைத் தொடர்

சிறைச்சாலைகளைத் தாண்டிச் செல்ல நேரும்போதெல்லாம் ஒரு வாக்கியம் அதன் வாயிலில் எழுதப்பட்டிருப்பதைக் கண்ணுற்றிருக்கிறோம். எல்லோருக்குமே கண்கள் இருக்கின்றன. ஆனாலும் எம்மைப் பாதிக்காதவற்றை நாம் காண்பதில்லை என்பதே நிதர்சனம். ‘சிறைக்கைதிகளும் மனிதர்களே’.

இந்த வாக்கியத்தை வெறும் வாக்கியமாகக் கருதி நாம் இதனை வாசித்து விட்டு எளிதாகக் கடந்து விடுகிறோம். ஆழ்ந்து நோக்கும்போதே இதன் உள்ளார்ந்த அர்த்தம் எமக்குப் புலப்பட ஆரம்பிக்கிறது.

சடுதியாக மனிதனுக்கு ஏற்படக்கூடிய கோபத்தின் காரணமாகவும், உணர்ச்சிக் கொந்தளிப்பாலும், போதையின் தாக்கத்தாலும், வலியவர்களது தூண்டுதல்களின் காரணத்தாலும் சிறியதாகவும், பாரதூரமாகவும் குற்றங்களைச் செய்துவிட்டு, எம்மைப் போன்ற சக மனிதர்கள் பலரும், இதனை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் கணத்திலும் கூட சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சிறைச்சாலைக்கு வெளியே வெகு சுதந்திரமாக உலவித் திரியும் பயங்கரமான குற்றவாளிகளைப் போலவே, நீதி தேவதையின் கண்கள் பணத்தினாலும், அதிகாரத்தினாலும் கட்டப்பட்டிருப்பதன் காரணத்தால் அநீதமாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிரபராதிகள் பலரும் நம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில், நடுத்தர மக்களையும், வறியவர்களையும் குற்றவாளிகளாக்குவதில் பெரும் பங்கு மதுவிடம் இருக்கிறது. மதுபோதை ஏற்படுத்தும் தாக்கத்தினால் குற்றங்களைச் செய்து சிறைக்குச் சென்று பின்னர் தமது நிலைமைக்காகவும், தாம் செய்த குற்றத்துக்காகவும் வருந்துவோர் அநேகம். சடுதியாக சிறைக்குச் சென்று அங்கு தமது ஜீவிதத்தைத் தொடர நேரும் இவ்வாறான சிறைக் கைதிகளை விடவும், தமது வாழ்வாதாரங்களுக்காக இவர்களையே நம்பியிருந்த குடும்பங்கள்தான் இவ்வாறான கைதுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இந்த சூழ்நிலையையே சிங்களக் கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்னவின் ‘அந்தகாரத்துக்கு முன்பு’ எனும் சிங்கள மொழிக் கவிதை மிகத் தெளிவாகவும் காத்திரமாகவும் எடுத்துரைக்கிறது.

அந்தகாரத்துக்கு முன்பு

வாசலருகே மலர்ச்செடியின்

பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே

கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ

அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு

பாடப்படப்போகும் போதனை கீதங்களை

கொழும்புக்குச் சென்று

அப்பாவிடம் உரைப்பீரோ

அமாவாசைக் கனவுகள் வந்து

தம்பியை அச்சுறுத்துகையில்

நள்ளிரவில் தாலாட்டுக் கவிகள் பாட

யாருமில்லை வீட்டில் இப்பொழுது

இன்றிரவு சொந்தங்கள்

எம் குடிசையில் விழித்திருப்பர்

எவ்வாறிருக்குமோ நாளை

நாம் உணரும் அந்தகார இருள்

வண்ணத்துப் பூச்சிகளே

மெதுமெதுவாக

மறைந்துகொண்டிருக்கிறான் சூரியன்

இனி

பாழடைந்த வெண்ணிலவின் உச்சியில்

உறைந்துவிடும் அம்மாவின் வாசனை

அனைத்தும் வீழ்ந்தழிவதற்கு முன்பு

மயானத்துக்கு வந்து நாளை

கூட்டிச் செல்லுங்கள் அப்பா

சிறைச்சாலைக்கு எம்மையும்

மது போதை ஏற்படுத்திய தாக்கத்தில் மனைவியைத்தாக்கி, அதில் படுகாயமடைந்த மனைவி இறந்து விடுகிறாள். அத் தம்பதிகளுக்கு வண்ணத்துப்பூச்சியோடு கதைத்துத் திரியும் பருவத்திலொரு மூத்த குழந்தையும், அதற்குத் தம்பியொன்றும் இருப்பது கவிதையின் வரிகளில் புலப்படுகிறது. தந்தையைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு சென்றிருப்பதுவும், தாயின் இறுதிச் சடங்குகள் முடிந்ததன் பிறகு அக் குழந்தைகள் துணைக்கு யாருமற்று தனித்து விடப் போவதையும் இக் கவிதை காத்திரமாக எடுத்துரைக்கிறது அல்லவா?

இவ்வாறாக சிதைந்து போகும் வாழ்வியல், ஒரு சமூகத்துக்கு மாத்திரமானதல்ல. உலகில் போதையின் பிடியில் செய்யப்படும் குற்றங்களே அநேகமானவையாக இருக்கின்றன. கவிதைகள் வாழ்வியலையே எடுத்துரைக்கின்றன. அவ்வாறான கவிதைகள் மனிதர்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்துமானால் அவை மிகச் சிறந்த கவிதைகளாக மாறி விடுகின்றன. அவ்வாறாக, கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்னவின் மிகச் சிறந்த கவிதைகளிலொன்று இது.

கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்ன 1980 களில் நடைபெற்ற புரட்சிகளில் பங்குகொண்ட முக்கியமான இலக்கியவாதி ஒருவர். சந்திரே என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அவர் இடதுசாரிப் போராளியாகத் திகழ்ந்தவர். அதனால் அவரது கவிதைகள் அனைத்துமே மக்களின் மீட்புக்காகவே இருந்தன. அவரைக் குறித்து அச்சம் கொண்ட அப்போதைய அரசால் எண்பதுகளின் இறுதியில் அவர் கடத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் கொல்லப்பட்டிருந்தார்.

••••

mrishanshareef@gmail.com

நிகனோர் பார்ரா கவிதைகள் / தமிழில்: ராஜேஷ் சுப்ரமணியன்

நிகனோர் பார்ரா

நிகனோர் பார்ரா

1.

என்னுடன் கவிதைகளும் முடிகின்றன

நான் எதையும் ஒரு
முடிவுக்குக் கொண்டுவரவில்லை .
அதைப்பற்றி எந்த
கற்பனைகளும் எனக்கில்லை.
கவிதைகள் எழுதிக்கொண்டே இருக்கவே
நான் விரும்பினேன்.
ஆனால் மன உத்வேகம்
நின்றுவிட்டது.
கவிதைகள் தம்மை சிறப்பாகவே
வெளிக்கொணர்ந்திருக்கின்றன.
நான் தான் மிக மோசமாக
நடந்து கொண்டிருக்கிறேன்.

நான் தான் சிறப்பாக செயல்பட்டேன்
கவிதைகள்தான் மோசமாக
நடந்துகொண்டன என்று சொல்வதில்
எனக்கு என்ன லாபம்,
குற்றம் சாட்டப்படவேண்டியவன்
நான்தானென்று
அனைவரும் அறிந்திருக்கும்பொழுது ?

ஒரு முட்டாளுக்குத் தகுதியானது
இதுதான் !

கவிதைகள் தம்மை சிறப்பாகவே
வெளிக்கொணர்ந்திருக்கின்றன.
நான் தான் மிக மோசமாக
நடந்து கொண்டிருக்கிறேன்.
என்னுடன் கவிதைகளும்
முடிகின்றன.

***

2.

உயரும் விலைவாசி

ரொட்டி விலை மேலே ஏறுகிறது
ஆகவே ரொட்டி விலை மீண்டும் மேலே ஏறுகிறது
வாடகை உயருகிறது
உடனே எல்லா வாடகைகளும் இரட்டிப்பாகுகின்றன.
துணிகளுக்கான செலவு மேலே போகிறது
உடனே துணிகளுக்கான செலவு மீண்டும்
மேலே ஏறுகிறது.
வேறு வழியே இல்லை
ஒரு விஷச் சுழியில் நாம் மாட்டிக்கொண்டுள்ளோம் .
கூண்டில் உணவு உள்ளது.
அதிகமில்லை, ஆனால் உணவு உள்ளது.
வெளியேவோ, நீண்டு கிடக்கும்
சுதந்திரம் மட்டுமே உள்ளது.

***

3.

அமைதி வழியில் எனக்கு நம்பிக்கை இல்லை

வன்முறை வழியில் எனக்கு நம்பிக்கை இல்லை
ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை வைக்கவே
விரும்புகிறேன் – ஆனால் செய்வது இல்லை.
எதையேனும் நம்புவது என்றால்,
கடவுளை நம்புவதற்கு ஒப்பாகும்.
தோள்களைக் குலுக்கிச் செல்வது மட்டுமே
நான் செய்யக்கூடியது.
பட்டவர்த்தனமாக சொல்லிவிடுவதற்கு
என்னை மன்னிக்கவும்.
பால் வீதியில் கூட
எனக்கு நம்பிக்கை இல்லை.

*****

4.

ரோலர் கோஸ்டர்

அரை நூற்றாண்டுக்கு
கவிதைகள், கடைந்தெடுத்த முட்டாள்களின்
சொர்க்கமாக இருந்தது.
நான் வரும் வரை.
வந்து, எனது ரோலர் கோஸ்டரைக்
கட்டமைத்தேன்.
உயரே செல்லுங்கள்,
நீங்கள் அவ்வாறு விரும்பினால்.
எனது தவறு அல்ல,
மூக்கிலும் வாயிலும் ரத்தம் வடிய
நீங்கள் கீழே வர நேர்ந்தால்.

 ராஜேஷ் சுப்ரமணியன்

ராஜேஷ் சுப்ரமணியன்


5.

உண்மையில் உங்களிடம் என்ன
சொல்வதென்று தெரியவில்லை.
மூன்றாம் உலகப்போரின்
விளிம்பில் நாம் இருக்கிறோம்.
யாரும் ஏதும் கவலைப்பட்டதாகத்
தெரியவில்லை.
நீங்கள் உலகத்தை
அழித்தீர்கள் என்றால்
நான் அதை மீண்டும் உருவாக்குவேன்
என்றா நினைக்கிறீர்கள் ?

**

6.

பறவைகள்
கோழிகள் அல்ல, புனிதத் தந்தையே !
கோழிக்கூட்டின் எல்லைகளுக்கு உள்ளே
கட்டற்ற சுதந்திரம் நடமாடுவதற்கு.

***

7.

உணவுக்காக,
உடைக்காக, தங்குமிடத்திற்காக
நாங்கள் கூக்குரலிடவில்லை,
சுவாசிக்க சிறுவெளி மட்டும்
கொஞ்சம் கொடுங்கள்
மேதகு பொருந்தியவரே !

***********
Note:
( Spanish to English translation: Miller Williams, David Unger)

************

வில்லியம் பிளேக் கவிதைகள் / தமிழாக்கம்: ஆகி

download

காதல்தேவனொரு சிறுவனாய் ஏனிருந்தான்

ஏன் காதல்தேவனொரு சிறுவனாயிருந்தான்,

ஒரு சிறுவனாய் அவன் ஏனிருந்தான்?

நானறிந்த வரையில் அவனொரு

சிறுமியாயிருந்திருக்க வேண்டும்.

ஏனெனில் தன் வில்லால் அவன் எய்கையில்

அவள் தனது கண்களினால் எய்து,

அவர்களிருவரும் அகமகிழ்ந்து களிகூர்ந்து

கலகலக்கின்றனர், நாம் கண் கலங்குகையில்.

காதல்தேவனையொரு சிறுவனாக்கியது

காதல்தெய்வச் சிறுமியின் விகடத் திட்டம்;

ஏனெனில் சிறுவனொருவனால் அவ்விடயத்தை

உய்த்தறியவியலாது தான் மனிதனாகும் வரை.

பிறகவன் அக்கறைகளால் ஊடுருவப்பட்டு

கூரியக் குத்தல்களால் ஊறுபட்டு,

அவனின் வாழ்நாளெலாம் அம்புகளின்

நுனிகளைக் களைவதெனக் கழியும்.

கிரேக்கர்களின் போர் மீதானக் காதல்

காதலையொரு சிறுவனாய்,

பெண்ணையொரு கற்சிலையாய்

உருமாற்றியதால் அப்பால் சென்றது இன்பமெலாம்.

……………………………………………..

காதற்தோட்டம்

காதற்தோட்டத்தினுள் நான் செல்கையில்,

இம்மட்டும் கண்டிராதவொன்றைக் கண்டேன்;

வழக்கமாக நான் களித்துத் திரியும் பசுமையினூடாக

தேவாலயமொன்று எழுப்பப் பட்டிருந்தது.

இத்தேவாலயத்தின் வாயிற்கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன,

கதவின் மீது ”நீயதைச் செய்யாதே” என்ற நீதிப்பேராணையுடன்;

ஆதலால் எண்ணிறந்த இனிய மலர்களைத் தாங்கிநின்ற

காதற்தோட்டத்திற்கு நான் திரும்பி வந்தேன்.

அங்கே அது கல்லறைகளால் நிறைந்திருப்பதைக் கண்டேன்,

மலர்கள் மலர்ந்திருக்குமிடமெங்கும் நடுகற்களாய்;

கருப்பு அங்கியணிந்த பாதிரிகள் கண்காணித்தவண்ணம் சென்றனர்,

எனதின்பங்களையும் இச்சைகளையும் முட்புதர்களால் கட்டியெடுத்து.

……………………………………………..

Why was Cupid a Boy மற்றும் The Garden of Love என்ற கவிதைகளின் தமிழாக்கம்

என் அம்மாவுக்குத் தெரியும் / இந்தியில் – தாரோ சிந்திக் / தமிழாக்கம் – நாணற்காடன்

download

தாரோ சிந்திக் – அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த முதல் இந்தி கவிஞர். சாகித்ய அகாதமியின் 2017 க்கான யுவபுரஸ்கார் விருது பெற்ற இந்தி கவிஞர். 13 ஆகஸ்ட் 1986 ல் பிறந்தவர். அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தில் டோன்யி போலோ அரசுக் கல்லூரியில் இந்தித் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார்

••••

என் அம்மாவுக்குத் தெரியும்

என் அம்மா

சொற்களுக்கு முன் குருடியாகிவிடுகிறாள்

ஆனால் அந்தக் கறுப்பு எழுத்துகளுக்கு நடுவில்

ஒளிந்திருக்கும் வெளிச்சமான நாளைய தினம்

என் அம்மாவுக்குத் தெரியும்

என் அம்மா

விதவைகளுக்கான அந்த வரிசைகளில் ஒருத்தியாக இருக்கிறாள்

அவர்களுக்கு மொத்த உலகமும்

கதவில்லாச் சிறைச்சாலையாய் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது

ஆனால் இந்தப் பாதையிலிருந்து விலகிச் செல்ல

என் அம்மாவுக்குத் தெரியும்

என் அம்மா

குழந்தைகளுக்கு சிறு அடி விழுந்தாலும் காயமாகிவிடுகிறாள்

ஆனால் மரபின் ஒவ்வொரு போர்க்களத்திலும்

ஆயுதங்களைப் பயிரிட்டு வளர்க்க

என் அம்மாவுக்குத் தெரியும்

என் அம்மா

பூவாக இருந்தவள் இப்போது கல்லாக இருக்கிறாள்

மென்மையை அவளது வயது கைது செய்து தண்டனை தந்திருக்கிறது

ஆனால் பூவுக்கும் கல்லுக்குமிடையில் கழிந்துபோன வரலாற்றை

என் அம்மாவுக்குத் தெரியும்

என் அம்மா

அந்த நூலறுந்த பட்டம் போன்றவள்

ஆனால் அம்மாவிலிருந்து அப்பா ஆக

என் அம்மாவுக்குத் தெரியும்

என் அம்மா

பண்பாட்டின் உச்ச யுகத்தில் இருந்தும் கூட

புத்தகங்களின் உலகில் புதியவளாக இருக்கிறாள்

ஆனால் வாழ்வை எப்படி படிக்கவேண்டுமென்பது

என் அம்மாவுக்குத் தெரியும்

——————

குளிர்ந்த நெருப்பு

நீ எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில்

வெப்பமும், புகையும் இல்லை

இல்லை, இதில் ஆச்சரியமாக சிந்திப்பதற்கு

எந்த விசயமுமில்லை

இப்படி கூட இருக்கலாம் –

தேகத்திற்கு பதில் புத்தி எரியும்போது

ஆசைகளின் ஒளி ஊடுருவும் விரிப்பில்

கண்கள் எப்போதும் மூடியிருக்கும்போது

உணர்வுத் தூக்கத்தின் பெயரற்ற வீதிகளில்

வாரிசற்ற இலைகளாகி பறக்கும்போது

கோழைத்தனத்தின் வலுவற்ற கை விலங்குகளால்

கைகள் கட்டப்படும்போது

மேலும்

அழுத்தி வைக்கப்பட்ட பாதங்களின் சங்கிலிகள் ஆகும்போது

அந்த நேரத்தில்

புகையற்ற நெருப்பில் நீ சந்தோசமாக எரிகிறாய்

அந்த குளிர்ந்த நெருப்பின் எண்ணையில் கீழ்மைப்படுகிறாய்

என்பதைக்கூட நீ உணரவில்லை

அந்த நேரத்தில்

உன் தினசரி வேலைகள் ஒரு வளர்ப்பு விலங்கு போலாகின்றன

ஏனெனில் மண்ணால் பிசையப்பட்ட உன் உடல்

அப்போது பலமிழந்துவிடுகிறது

உன் வலுவற்ற எலும்புகள் அப்போது கொழுப்பை அதிகமாக்குகிறது

……………………….

இறந்த காலத்தின் கூக்குரல்

காடு, மலை, ஆறு, அருவி

மற்றும் வியாபித்திருக்கும் இந்தக் காற்றில்

இலையுதிர் கால காய்ந்த இலைகள் போல்

சட சடவென உதிரும்

காலத்தின் தடையில்லாச் சக்கரத்தில்

கடந்த காலத்தின் கூக்குரலை

மௌனப் புலம்பலை, அழுகுரலை

கேட்டுக்கொள் .

இன்று உனது இறுமாப்பு

வெவ்வேறு வடிவங்களில் ஊடுருவி

தங்கக் கூண்டுகளை

பலமாக உடைத்துக்கொண்டிருக்கிறது

துண்டுத் துண்டாகப் பிரித்து

சாபமும், தண்டனையும் போல

மறக்கப்பட்ட நம் முன்னோர்களின் மீதியை

மிஞ்சியிருந்த பெருமையை

செல்வத்தை, பொருளை

பெற்று வீணடித்து

அதன் முக்கியத்துவத்தை

மண்ணோடு மண்ணாக்கிவிட்டது

இறுமாப்பின் வழியாக

பண்பாட்டின் வழியாக

மிஞ்சியவற்றை மீண்டும் தொகுத்தளி

காட்டருவின் சக்தியை உருவாக்கு

புதிதாய்ப் படைக்க கதவு திற

கனவின் மூடநம்பிக்கையை உடைத்துப்போடு

சத்தியத்தின் கண்ணாடியைக் காட்டு

ஏனெனில் –

காலனி ஆதிக்கம் இன்று

உனது புத்தியைப் பூட்டிவைத்திருக்கிறது

மேற்கு மீண்டும்

கிழக்கின் பக்கம் ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிட்டது

ஆடம்பரங்களும், ஊழல்களும் செல்வாக்கு பெற்றுவிட்டன

மதம் நமது பண்பாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது

( 2017 யுவபுரஸ்கார் விருதுபெற்ற இந்தி கவிதை நூல் “ அக்‌ஷரோ கீ வினதி “ நூலிலிருந்து…. )

•••