Category: மொழிபெயர்ப்பு சிறுகதை

எனது அம்மா ( சிறுகதை ) ஜமைக்கா கின்கெய்ட் / தமிழில்: சமயவேல்

download (23)

எனது அம்மா இறப்பதை நான் விரும்பிய உடனே, அது அவளுக்குக் கொடுத்திருந்த வலியைப் பார்த்தபடி, நான் வருந்தினேன் மற்றும் அழுதேன், ஏராளமான கண்ணீர், என்னைச் சுற்றியிருந்த எல்லா பூமியும் நனைந்தது. எனது அம்மாவின் முன்னாள் நின்றபடி, நான் அவளது மன்னிப்பைக் கோரிக் கெஞ்சினேன், நான் மிக மனப்பூர்வமாகக் கெஞ்சினேன் அதனால் அவள் என் மேல் இரக்கம் கொண்டாள், என் முகத்தை முத்தமிட்டபடி என் தலையை அவளது மார்பகத்தில் சாய்த்தாள். அவளது கைகளால் என்னை சுற்றி வளைத்து. எனது தலையை அவளது மார்பகத்துக்கு நெருக்கமாக மிக நெருக்கமாக, நான் மூச்சுத் திணறும் வரை அவள் இழுத்தாள். நான் அவளது மார்பகத்தில் கிடந்தேன், மூச்சில்லாமல், எவ்வளவு காலம் எனத் தெரியாத அளவுக்கு, ஒரு தினம் வரை, அவள் அவளுக்குள் வைத்திருந்த ஒரு காரணத்திற்காக, அவள் என்னை வெளியே உதறினாள், ஒரு மரத்துக்கடியில் என்னை நிற்க வைத்தாள், நான் மீண்டும் மூச்சுவிட ஆரம்பித்தேன்.

நான் ஒரு கூர்மையான பார்வையை அவள் மேல் எறிந்தேன், “ஆகையால்.” உடனடியாக நான் எனது சொந்த மார்பகங்களை வளர்த்தேன், சிறு மேடுகள் முதலில், அவைகளுக்கு நடுவில் ஒரு சிறிய மென்மையான இடத்தை விட்டு, அங்கே, எப்பொழுதாவது தேவைப்பட்டால், எனது சொந்தத் தலையையே சாய்த்துக் கொள்ள முடியும். இப்பொழுது எனது அம்மாவுக்கும் எனக்கும் நடுவில் நான் அழுத கண்ணீர்கள் இருந்தன, நான் சில கற்களைப் பொறுக்கி, அவை ஒரு சிறிய குளம் உண்டாக்குமாறு அடுக்கினேன்.

குளத்தில் இருந்த தண்ணீர், பெயர்களற்ற முதுகெலும்பில்லாத பிராணிகள் மட்டுமே வாழ முடிகிறபடி, அடர்த்தியாகவும் கருப்பாகவும் விஷமுடையதாகவும் இருந்தது. காதல் மற்றும் அன்பின் சொற்களாலும் செயல்களாலும் அடுத்தவர் நனைவதை எப்பொழுதும் உறுதிப்படுத்திக் கொண்டு இப்பொழுது நானும் எனது அம்மாவும் ஒருவரையொருவர் கவனமாகப் பார்த்துக் கொள்கிறோம்.

oooooo

என்னை நன்கு பார்க்க முயற்சித்தவாறு நான் அம்மாவின் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறேன். இது ஒரு பெரிய படுக்கை, ஒரு பெரிய, முழுக்க இருண்ட அறையின் மத்தியில் இது இருக்கிறது. அறை முழுக்க இருட்டாக இருந்தது ஏனெனில் எல்லா ஜன்னல்களும் உயரே ஏற்றப்பட்டு, எல்லா சந்துகளும் கறுப்புத் துணியால் திணித்து அடைக்கப்பட்டு இருந்தன. என் அம்மா சில மெழுகுவர்த்திகளை ஏற்றியதும் திடீரென அறை, ஒரு பிங்க்-போன்ற, மஞ்சள்-போன்ற ஜொலிப்பால் நிரம்பியது. எங்களுக்கு மேல் பயமுறுத்தியபடி, எங்களைவிடவும் மிகப் பெரியதாக அசைந்தன எங்கள் நிழல்கள்.

நாங்கள் மனோவசியப்பட்டு உட்கார்ந்திருந்தோம் ஏனெனில் எங்கள் நிழல்கள் தங்களுக்கு நடுவில் ஒரு இடத்தை ஏற்படுத்தியிருந்தன, யாரோ ஒருவருக்காக அவைகள் அறையை ஏற்படுத்திக் கொண்டிருப்பது போல. அவைகளுக்கு நடுவில் இருந்த வெளியை எதுவுமே நிரப்பவில்லை, மற்றும் எனது அம்மாவின் நிழல் பெருமூச்சு விட்டது. எனது அம்மாவின் நிழல் அறைக்குள் சுற்றிலும் நடனமாடியது எனது சொந்த நிழல் பாடிய இசைக்கு, பிறகு அவை நின்றுவிட்டன. தொடக்கத்திலிருந்து, எங்கள் நிழல்கள், பகலின் ஒளியால் கட்டுப்படுத்தப் பட்டன போல, அடர்த்தியாகவும் ஒல்லியாகவும் வளர்ந்தன, நீளமாகவும் குட்டையாகவும், அவை ஒவ்வொரு கோணத்திலும் வீழ்ந்தன, திடீரென என் அம்மா எழுந்து மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தாள் அதனால் எங்கள் நிழல்கள் மறைந்தன. என்னையே நான் நன்கு பார்க்க முயற்சித்தபடி நான் தொடர்ந்து படுக்கையில் உட்கார்ந்திருந்தேன்.

௦௦௦௦௦௦

என் அம்மா அவளது உடைகளைக் களைந்துவிட்டு அவளது தோல் முழுவதையும் ஒரு அடர்ந்த தங்க-நிற எண்ணையால், அது சமீபத்தில் தொங்கு தோற்பைத் தொண்டைகளுடன் கூடிய ஊர்ந்து செல்லும் ஜந்துகளின் ஈரல்களில் இருந்து ஒரு சூடான வாணலியில் செய்யப்பட்டது. அவள் அவளது முதுகின் மேல் உலோக-நிற செதிள்களின் தகடுகளையும், ஒளியையும் வளர்த்தாள், இந்த மேற்பரப்பின் மீது மோதும் போது, சிதறி சின்னஞ்சிறு புள்ளிகளாக உடைந்து போகும். அவள் அவளது தலையிலிருந்து முடியை அவிழ்த்து விட்டாள் பிறகு அவளது முடியை மொத்தமாகக் கூட்டி நீக்கினாள்.

அவளது அகன்ற உள்ளங்கைகளில் அவளது தலையை வைத்து, அவளது கண்கள், அவை இப்பொழுது பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தன, இரு சுழலும் பந்துகள் போல அவை தலையின் உயரே வந்து உட்காருமாறு அவள் அதைத் தட்டையாக்கினாள், பிறகு, ஒவ்வொரு பாதத்திலும் உள்ள குதிங்கால்களால் இரண்டு கோடுகளை இழுத்து, அவளது பாதங்களை சந்திப்புகளாக வகுத்தாள். மௌனமாக, அவளைப் பின்பற்றுமாறு எனக்கும் உத்தரவிட்டாள். இப்பொழுது நானும் கூட எனது வெள்ளை அடிவயிற்றை இழுத்துக் கொண்டு, வெப்பக் காற்றில் எனது நாக்கை துருத்தி சுழற்றியவாறு பயணித்தேன்.

௦௦௦௦௦௦

நானும் எனது அம்மாவும் கடற்கரையில் ஒட்டி ஒட்டி நிற்கிறோம், எனது கைகள் அவளது இடையை தளர்வாக சுற்றியிருந்தன, எனக்கு ஆதாரம் தேவைப்பட்டதாக, எனது தலை அவளது தோளில் பத்திரமாக சாய்ந்திருந்தது. எனது பலவீனத்தை அவள் கண்டிப்பாக நம்ப வேண்டும் என்பதற்காக நான் அவ்வப்பொழுது பெருமூச்சுவிட்டேன்—மிருதுவான நீண்ட பெருமூச்சுகள், வெகுகாலத்திற்கு முன்பு அவள் எனக்கு கற்றுக் கொடுத்திருந்த இரக்கத்தை வரவழைக்கக் கூடிய வகையிலான பெருமூச்சுகள். உண்மையில், நான் எவ்வாறு நிஜமாகவே உணர்ந்தேன் என்பது தேற்ற முடியாதது. இனிமேலும் நான் குழந்தை இல்லை, ஆனால் நான் இன்னும் ஒரு பெண்ணாகவும் ஆகவில்லை. எனது தோல் கறுத்தும் வெடிப்புற்றும் உதிர்ந்து கொண்டும் இருந்தது.

எனது குறை சொல்ல முடியாத ஆமை ஓட்டுக் கவசம் முழுப்பொறுப்பு எடுத்திருந்தது. எனது மூக்கு சப்பளிந்துவிட்டது; எனது கேசம் தலையிலிருந்து நேர்குத்தி சுருள்சுருளாக நின்றது, எனது பலவரிசைப் பற்கள் அவைகளின் மாற்றியமைக்க முடியாத பெட்டிக்குள் அதனதன் இடத்தில் இருந்தன. நானும் எனது அம்மாவும் சொற்கள் இன்றி ஒரு ஒப்பந்தம் செய்திருந்தோம்—எனது அழகான பெருமூச்சுகளை வெளியே அனுப்பினேன், அவள் அவைகளைப் பெற்றுக் கொண்டாள். எப்பொழுதும் இல்லாதவாறு நான் அவள் மேல் மிகப் பாரமாக சாய்ந்திருந்தேன். அவள் அவளது தோள்பட்டையைக் கொடுத்தாள், அது விரைவாக ஒரு கனத்த பலகை அளவுக்கு வளர்ந்திருந்தது. ஒரு கனகாலம் கடந்திருந்தது, அதன் இறுதியில் எனது அம்மா நிரந்தரமாக கடற்கரை மணற்படுகையில் பூசப்பட்டு விடுவாள் என நம்பினேன்.

ஒரு சமாதானப்படுத்தும் சைகையாக ஒரு கையால் எனது தலையைத் தடவிக்கொடுப்பதற்காக அவள் என்னை நெருங்கினாள். ஆனால் நான் விலகி ஒதுங்கி நின்று மிக வேகமாகச் சிரித்தேன். நான் கொடூரமாகக் கூச்சலிட்டேன். பிறகு ஒரு சுய பச்சாதாப ஓலம். நான் பெரிதாக வளர்ந்துவிட்டேன், ஆனால் அம்மா அதைவிடப் பெரிதாக இருந்தாள் மற்றும் அது எப்போதும் அப்படித்தான் இருந்தது. நாங்கள் பழங்களின் தோட்டத்திற்குள் நடந்தோம், அங்கு எங்கள் இதயங்கள் திருப்தி அடையும்வரை சாப்பிட்டோம். வழக்கம் போல நாங்கள் தென்மேற்கு வாசல் வழியே எங்கள் வழித்தடத்தில் புழுக்களின் சிறிய கூட்டங்களை விட்டுவிட்டுக் கிளம்பினோம்.

௦௦௦௦௦௦
10387318_692355457468193_1627100695237812223_n

விருப்பமே இல்லாமல் நான் அம்மாவோடு பள்ளத்தாக்கைக் கடந்தேன். ஒரு ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம், எங்களது காலடிச் சப்தங்களை கேட்டதும் அது மேய்வதை நிறுத்தி தலையைத் தூக்கி எங்களைப் பார்த்தது. ஆட்டுக்குட்டியைப் பார்க்க பாவமாகவும் பரிதாபமாகவும் இருந்தது. நான் எனது அம்மாவிடம் கூறினேன், “ஆட்டுக்குட்டி பாவமாக பரிதாபமாக இருக்கிறது. எனது இயல்புக்குப் பொருந்தாத சூழலில் வசிக்க வேண்டி இருந்ததால், நானும் கூட அதே மாதிரி தான்.” இப்பொழுது நானும் அம்மாவும் குகைக்குள் நுழைந்தோம். அது இருண்ட குளிரும் குகையாக இருந்தது. எனது கால்களுக்கடியில் எதோ வளர்வது போல நான் உணர்ந்தேன். அதைத் தின்பதற்காக நான் கீழே குனிந்தேன். எனது கால்களுக்கடியில் வளரும் எதைக் கண்டாலும் கீழே குனிந்து தின்றவாறு நான் ஆண்டுக்கணக்கில் இருந்து வருகிறேன்.

இறுதியாக, இருட்டான இருட்டிலும் என்னைப் பார்க்க அனுமதிக்கிற ஒரு சிறப்பு லென்ஸை நான் வளர்க்கிறேன். இறுதியாக, குளிரான குளிரிலும் என்னை வெதுவெதுப்பாக வைத்திருக்கும் ஒரு கோட்டையும் நான் வளர்க்கிறேன். ஒருநாள் எனது அம்மா ஒரு பாறை மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். அவள் கூறினாள், “மிகப் பாவமாக, மிகப் பரிதாபமாக, நீ உன் இயல்புக்குப் பொருந்தாத ஒரு சூழலில் வசித்தவளைப் போல, என்ன ஒரு விசித்திரமான பாவனையை நீ உன் முகத்தில் கொண்டிருக்கிறாய்.” சிரித்தபடியே, அவள் மறைந்து போனாள். நான் ஆழ ஆழத்திற்கு ஒரு குழியைத் தோண்டினேன். ஆழ ஆழக் குழியின் மீது நான் கட்டினேன் ஒரு அழகிய வீடு, ஒரு தளம் இல்லாத வீடு. எனது அம்மாவுக்குப் பிடித்தமான கிராதி வைத்த ஜன்னல்களை வைத்தேன், வெளியில் செல்லும் மக்களை பார்ப்பதற்கு, அவள் அவர்களைப் பார்க்கிறாள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள முடியாத முற்றிலும் பொருத்தமான ஜன்னல்கள் அவை. நான் வீட்டையே மஞ்சள் பெயிண்டால் பூசினேன், ஜன்னல்களுக்குப் பச்சை.

இவை அம்மாவை மகிழ்ச்சியூட்டும் வண்ணங்கள் என்பது எனக்குத் தெரியும். கதவுக்கு வெளியே நின்றபடி, வீட்டைப் பார்வையிடுமாறு அவளை வேண்டினேன். நான் பார்க்க முடியாதவாறு ஒரு கடவாய்ச் சிரிப்போடு அவள் உள்ளே காலடி எடுத்து வைத்தாள். நான் கதவுக்குச் சற்று வெளியே நின்று கொண்டு, ஆழ ஆழக் குழியின் அடியில் அவள் தொப்பென்று விழும் சப்தத்தைக் கேட்கும் நம்பிக்கையில் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். பதிலாக, அவள் மேலும் கீழும் எல்லாத் திசைகளிலும் நடந்தாள், அவளது குதிங்கால்களால் காற்றின் மேல் உதைக்கக்கூட செய்தாள். என்னை வாழ்த்துவதற்காக வெளியே வந்து அவள் கூறினாள், “இது ஒரு அற்புதமான வீடு, இதில் வசிப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.” பிறகு மறைந்துவிட்டாள். நான் அந்தக் குழியை மூடி அது தரைமட்டமாகும்வரை தீயிட்டுக் கொளுத்தினேன்.

௦௦௦௦௦௦

எனது அம்மா ஒரு மிகப்பெரிய உயரத்திற்கு வளர்ந்தாள். நானும் மிக உயரமாக வளர்ந்து வந்தேன். ஆனால் எனது அம்மாவின் உயரம் என்னுடையதைவிட மூன்று மடங்கு பெரியது. சில சமயங்களில் அவளை அவளது மார்புக்கு மேலே பார்க்கவே முடியாது அந்த அளவுக்கு அவள் காற்று மண்டலத்துக்குள் காணாமல் போயிருப்பாள். ஒருநாள் அவள் கடற்கரையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன், அவளது கை வெகு ஆழத்திற்கு நீண்டு கொண்டிருந்தது, ஒரு வரிவரியான மீனின் அடிவயிற்றைத் தடவிக் கொடுப்பதற்காக ஏனெனில் அது இரண்டு கடல்கள் சந்திக்கும் ஒரு இடத்திற்குள் நீந்தியதால், நான் கோபத்தில் செந்தணலாக ஒளிர்ந்தேன். கொஞ்ச காலம், எட்டு பௌர்ணமிகள் வரை, ஒரு தீவில் தனியே வசித்தேன். ஒவ்வொரு நிலவின் முகத்தையும், அம்மா முகத்தில் நான் பார்த்திருக்கிற வெவ்வேறு தோற்றங்களைக் கொண்டு அலங்கரித்தேன்.

எல்லாமே எனக்குப் பிடித்த முகங்கள். இப்படியாக வாழ்வது அலுத்துப்போய் என் அம்மாவின் பக்கமே திரும்பி வந்தேன். தொடர்ந்து நான் கோபத்தில் செந்தணலாய் ஒளிர்ந்து கொண்டே இருந்தேன், எனது அம்மாவும் நானும் சாவுக்குளத்தின் எதிரெதிர் கரைகளில் வீடுகளைக் கட்டினோம். சாவுக்குளம் எங்கள் இருவருக்கும் நடுவில் கிடந்தது; அதில் விஷ முட்களைக் கொண்ட முதுகெலும்பற்ற பிராணிகள் மட்டுமே வசித்தன.

எனது அம்மா, நாங்கள் வெகுகாலமாக வளர்த்திய உறவினர்களோடு அதே அறையில் தான் இருப்பதைத் திடீரெனக் கண்டுபிடித்ததைப் போல, அவைகளிடம் அவள் நடந்துகொண்டாள். அவைகளின் இருப்பை நான் வாஞ்சையுடன் ஏற்றுக்கொண்டு அவைகளுக்குப் பெயர் வைத்தேன். இருப்பினும் எனது அம்மாவின் அன்யோன்யமான உறவுக்காக அவளை நான் தேடினேன், அவளுக்காக நான் விடாமல் அழுதேன், ஆனால் ஒவ்வொரு நாள் முடிவிலும், அவளது வீட்டுக்கு அவள் திரும்புவதைப் பார்த்தபோது அவளது வழித்தடத்தில் நம்பவே முடியாத மாபெரும் செயல்கள், அவைகளில் ஒவ்வொன்றும் அவளைப் புகழ்ந்து உரக்கப் பாடின, நான் கோபத்தில் செந்தணலாக ஒளிர்ந்தேன் மற்றும் மீண்டும் ஒளிர்ந்தேன். இறுதியில் நான் களைத்துப்போய், ஒரு ஆழமான, மிக ஆழமான தூக்கத்தில் மூழ்கினேன், நான் ஒருபோதும் அடையாத கனவுகளற்ற ஒரேயொரு தூக்கம்.

௦௦௦௦௦௦

ஒருநாள் எனது அம்மா எனது பொருட்களை ஒரே பிடியில் அள்ளி மூட்டை கட்டினாள், எனது கைகளைப் பிடித்துக் கொண்டு படகுத்துறைக்கு என்னைக் கூட்டிப் போனாள், ஒரு படகில் என்னை ஏற்றி அதன் கேப்டனின் பொறுப்பில் என்னை ஒப்படைத்தாள், அம்மா எனது கன்னங்களையும் தாடையையும் தடவிக் கொடுத்தவாறு சில அன்பான சொற்களைக் கூறினாள், ஏனெனில் இதற்கு முன்பு நாங்கள் ஒருபோதும் பிரிந்ததில்லை. எனது நெற்றியின் மேல் அவள் முத்தமிட்டாள், திரும்பினாள், நடந்து வெளியேறினாள். மிக அதிகமாக நான் அழுதேன், எனது நெஞ்சு மேலும் கீழும் இறங்கியது, அவளது முதுகு என்னை நோக்கி திரும்பியதைப் பார்த்ததும் எனது முழு உடம்பும் நடுங்கியது, இதற்கு முன்னால் அவளது முதுகு என்னை நோக்கி திரும்புவதை ஒருபோதும் நான் பார்த்ததில்லை என்பது போல. படகிலிருந்து இறங்கிவிட திட்டங்களைத் தீட்டத் தொடங்கினேன், ஆனால் படகு ஒரு அடுப்பங்கரை அலமாரியை அலங்கரிக்கப் போவதைப் போல, ஒரு பெரிய பச்சை பாட்டிலுக்குள் அடைக்கப்பட்டு இருந்ததால், அது சேரும் இடத்தை அடையும்வரை நான் தூக்கத்தில் விழுந்தேன், அது ஒரு புதிய தீவு. படகு நின்றதும் நான் கீழே இறங்கினேன், என்னுடையதைப் போன்ற–குறிப்பாக உட்பாத வளைவு–கால்களுடன் கூடிய ஒரு பெண்ணைப் பார்த்தேன்.

முகம் எனக்குப் பழக்கமானதைவிட முற்றிலும் வித்தியாசமாக இருந்த போதும் இந்தப் பெண்ணை எனது அம்மாவாக அடையாளமிட்டேன். முதலில் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த எச்சரிக்கையுடனும் பண்புடனும் முகமன் கூறிக் கொண்டோம், ஆனால் நாங்கள் நடக்கத் தொடங்கிய போது, எங்களது காலடிகள் ஒன்றாக மாறின. மற்றும் நாங்கள் பேசியபோது எங்கள் குரல்கள் ஒரே குரலாய் மாறியது. இதர பிற எல்லா வழிகளிலும் நாங்கள் முழுமையாக இணைந்திருந்தோம். எங்கே அவள் மறைந்து போனாள், நான் தொடங்கினேன் அல்லது எங்கே நான் மறைந்து போனேன், அவள் தொடங்கினாள் என்பதை நான் பார்க்க முடியாமல் போனதற்காக, பிறகு வந்தது என்ன ஒரு அமைதி எனக்குள்!

௦௦௦௦௦௦

எனது அம்மாவும் நானும் அவளது வீட்டின் அறைகளுக்குள் இருக்கிறோம். தரையில் உள்ள ஒவ்வொரு வெடிப்பும் ஒரு முக்கிய நிகழ்வை வைத்திருக்கிறது. இங்கே, ஒரு தெளிவான ஆரோக்யமுள்ள இளைஞன் திடீரென செத்து விழுந்தான்; ஒரு இளம்பெண் அவளது அப்பாவை எதிர்த்து, தடுக்கப்பட்ட காதலனைச் சந்திக்கும் இடத்துக்கு சைக்கிள் ஓட்டிப் போகும் போது, ஒரு செங்குத்துப் பாறையிலிருந்து கீழே விழுந்தாள், எஞ்சிய ஒரு நீண்ட வாழ்க்கை முழுவதையும் ஒரு முடமாகவே இந்த இடத்தில் கழித்தாள். எனது அம்மாவும் நானும் இதை ஒரு அழகிய வீடாகக் கண்டோம். அறைகள் விசாலமாகவும் காலியாகவும், ஒன்று மற்றதற்கு வழியுடையதாக, தங்களை நிரப்பிக் கொள்ள ஆட்களுக்காகவும் பொருட்களுக்காகவும் காத்துக் கொண்டிருந்தன.

எங்கள் வெள்ளை மஸ்லின் ஸ்கர்ட்கள் எங்கள் கணுக்கால்களைச் சுற்றி அலை புரண்டன, எங்களது கைகள் நேராக எங்கள் பக்கவாட்டில் தொங்குவதைப் போல எங்கள் கூந்தல் எங்கள் முதுகின் கீழே நேராகத் தொங்கின. எனது அம்மாவின் வயிற்றுக் குழிவுக்குள்ளும், அவளது முதுகின் வளைவுக்குள்ளும், அவளது கைகளின் வளைவுக்குள்ளும் நான் கச்சிதமாகப் பொருந்தினேன். நாங்கள் ஒரே தட்டில் சாப்பிட்டோம்; ஒரே கப்பில் குடித்தோம்; நாங்கள் தூங்கும்பொழுது ஒரே தலையணையில் எங்கள் தலைகளைச் சாய்த்தோம். அறைகளுக்குள் நடக்கையில் நாங்கள் கலந்து பிரிந்தோம், பிரிந்து கலந்தோம்; எங்களது பரிணாம வளர்ச்சியின் இறுதிக் கட்டத்திற்குள் நாங்கள் விரைவில் நுழைந்துவிடுவோம்.

௦௦௦௦௦௦

மீனவர்கள் கடலிலிருந்து வருகிறார்கள்; எனது அம்மா அதைப் பார்த்தவாறு இருக்கிறாள். அலைகள் ஒன்றுக்கொன்று ப்ளாப் ப்ளாப் சொல்வதால் கடல் அமைதியாக இருக்கிறது என மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அம்மா மீனவர்களை எனக்குக் காட்டினாள். அவர்களது மனநிறைவு எனது மனநிறைவுக்கு மூலாதாரமாக இருந்தது. எனது அம்மாவின் ஆகப்பெரிய மடியில் நான் உட்கார்ந்திருக்கிறேன். எனக்காக அவளது தலைமுடியினால் அவள் செய்த பாயின் மேல் சில சமயங்களில் உட்கார்ந்திருக்கிறேன். எலுமிச்சை மரங்கள், எலுமிச்சம் பழங்களால் கனத்துக் கீழே வளைகின்றன—நான் ஏற்கனவே அவைகளின் பூக்களைக் கொண்டு என்னை மணமூட்டிக் கொண்டிருந்தேன்.

ஒரு பாடும்பறவை எனது வயிற்றில் கூடுகட்டியிருக்கிறது, எனது உயிர்ச்செழுமையின் ஒரு குறியீடு. எனது அம்மாவும் நானும் வாடாத இதழ்களைக் கொண்ட பூக்களால் செய்த ஒரு பசுங்கொடிப்பந்தல் வீட்டில் குடியிருக்கிறோம். கூரிய ஈட்டிகளாக குறுக்கும்மறுக்குமாக அலையும் ஒளியுடன் கடலின் பளபளப்பான நீலம் அங்கே இருக்கிறது. அங்கே ஆமணக்குப் புதர்க் கூட்டங்களின் மேல் வெதுவெதுப்பான மழை விழுந்து கொண்டிருக்கிறது, அங்கே புல்வெளியின் குறுக்கே துள்ளிக் குதிக்கும் சின்னஞ் சிறிய ஆட்டுக்குட்டி இருக்கிறது, எனது ரோஜாப் பாதங்களை வரவேற்க மிருதுவான பூமி இருக்கிறது. இப்பொழுது ஒரு நீண்ட காலத்திற்கு நானும் எனது அம்மாவும் இந்த மாதிரிதான் வாழ்ந்து வருகிறோம்.

௦௦௦௦௦௦

மாதுளை / யசுநாரி கவாபட்டா Yasunari Kawabatta ஆங்கிலம் : எட்வர்டு ஜி. சீய்டன்ஸ்டிக்கர் Edward G. Seidensticker / தமிழில் : ச.ஆறுமுகம்

download (90)

இரவு அடித்த பெருங்காற்றில் மாதுளை மரத்தின் இலைகள் அனைத்தும் ஆடைகளைப் போல் உருவப்பட்டன.

இலைகள் அடிப்பாதத்தைச் சுற்றி வட்டமாகக் கிடந்தன.

கிமிகோ, காலையில் அந்த மரத்தை நிர்வாணமாகப் பார்த்து அதிர்ந்தாள்; வட்டத்தின் குறையற்ற முழுமையைக் கண்டு வியந்தாள். காற்று அந்த வட்டத்தைக் குலைத்திருக்குமென அவள் எதிர்பார்த்திருப்பாளாக இருக்கலாம்.

மிகவும் அழகான மாதுளம்பழம் ஒன்று மரத்திலேயே விடப்பட்டிருந்தது.

“அம்மா, இங்கு வந்து பாரேன்,” அவள் அம்மாவை அழைத்தாள்

“மறந்து விட்டிருக்கிறேன்” அம்மா, மரத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் அடுக்களைக்குத் திரும்பினாள்.

அது கிமிகோவை, அவர்களுடைய தனிமை பற்றிச் சிந்திக்கவைத்தது. மாதுளம் பழமும் தாழ்வாரத்திலிருந்து பார்க்கும்போது தனிமையாகவும் மறக்கப்பட்டுவிட்ட ஒன்றாகவும் தோன்றியது.

ஒரு இரண்டு வாரம் போல இருக்கும், அவளுடைய வீட்டுக்கு வந்திருந்த ஏழு வயது மருமகன், உடனடியாகவே மாதுளம் பழங்களைக் கண்டுவிட்டான், அவ்வளவுதான், மரத்தின் மேலே தொற்றிப்பிடித்து ஏறிவிட்டான். கிமிகோவுக்கு வாழ்க்கையின் முன்னால், உயிர்ப்புடன் நிற்பது போலிருந்தது.

“மேலே ஒன்று, பெரிதாகக் கிடக்கு, பாரு,” அவள் தாழ்வாரத்திலிருந்து கூவினாள்.

“அது சரி. ஆனால், அதைப் பறித்துவிட்டு, நான் கீழே இறங்க முடியாதே.“

அது உண்மை. இரண்டு கைகளிலும் மாதுளைகளை வைத்துக்கொண்டு, இறங்குவதென்பது எளிதில்லைதான். கிமிகோ புன்னகைத்தாள். அவன் மனதுக்கு நெருக்கமானவன்.

வீட்டுக்கு, அவன் வருகிறவரையில், அவர்கள் மாதுளையை மறந்துதான் விட்டிருந்தார்கள்; மீண்டும் இவ்வளவுநேரம் வரையில் கூட மறந்துதான் இருந்தார்கள்.

அதன் பின்னர் பழம், இலைகளுக்கிடையே மறைந்துபோயிருந்தது. இப்போது, வானத்திற்குச் சவால்விட்டுக்கொண்டு தெள்ளத்தெளிவாகத் தொங்குகிறது.

பழத்திலும் அடிப்பாதத்திலிருந்த இலைவட்டத்திலும் உயிர் இருந்தது. கிமிகோ மூங்கில் கழி ஒன்றை எடுத்துவந்து, பழத்தை அடித்து வீழ்த்தினாள்.

அது நன்கு பழுத்து, உள்ளிருக்கும் விதைகள் தாம் அதனை வெடிக்கச்செய்தது போலத் தோன்றியது. கிமிகோ அதைத் தாழ்வாரத்தில் வைத்தபோது, விதைகள் வெயிலில் மினுமினுத்தன. வெயில், விதைகளுக்குள் ஊடுருவிச்செல்ல முயற்சிப்பதாகத் தோன்றியது.

ஏதோ ஒருவகையில் அவள் தவறுசெய்துவிட்டதாக, அவளுக்குள் தோன்றியது.

பத்து மணி வாக்கில், அவள் மாடியில் தையல் வேலையிலிருந்தபோது , கெய்கிச்சியின் குரலை, அவள் கேட்டாள். கதவு தாழிடப்படாமலிருந்தாலும், அவன் தோட்டத்துக்குச் சுற்றுவழியில் வந்ததாகத் தோன்றியது. அவன் குரலில் அவசரம் தெரிந்தது.

”கிமிகோ, கிமிகோ!” அம்மா கூப்பிட்டாள். “கெய்கிச்சி வந்திருக்கிறான்.”

கிமிகோ நூலிலிருந்தும் ஊசியை உருவினாள். அதனை ஊசிமெத்தையில் குத்தி நிறுத்தினாள்.

“ நீ போவதற்கு முன்பு உன்னை ஒருமுறை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று கிமிகோ சொல்லிக்கொண்டிருந்தாள். “கெய்கிச்சி, போருக்குப் போய்க்கொண்டிருக்கிறாய். இருந்தாலும், யாரும் கூப்பிடாமல் நாங்களாக வந்து உன்னைப் பார்க்கவும் முடியாது. நீயும் வரவில்லை. இன்று நீயாகவே வந்துவிட்டாய். உனக்கு நல்ல மனசு.”

மதியம் சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு அம்மா எவ்வளவோ சொன்னாள்; ஆனால், அவன் அவசரப்பட்டான்.

“நல்லது, ஒரு மாதுளம் பழமாவது சாப்பிடு. நம்ம வீட்டிலேயே விளைந்தது.” அவள் கிமிகோவை மீண்டும் அழைத்தாள்.

அவள் இறங்கிவரும் வரையில் காத்திருப்பதற்கு, அது எவ்வளவோ மேலென்பதைப் போல, அவன் அவளைக் கண்களாலேயே வரவேற்றான். அவள் படிக்கட்டிலேயே நின்றுகொண்டாள்.

அவன் கண்களுக்குள் ஏதோ ஒன்று வெதுவெதுப்பாக நிறைவது போலத் தோன்றியது. அப்படியே, அவன் கைதவறி, மாதுளை கீழே விழுந்தது.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்து முறுவலித்தார்கள்.

தான் புன்னகைத்துக்கொண்டிருப்பதாக, அவள் உணர்ந்தபோது, வெட்கத்தில் சிவந்தாள். கெய்கிச்சி தாழ்வாரத்திலிருந்தும் எழுந்தான்.

“ உடம்பைப் பார்த்துக்கொள், கிமிகோ.”

‘நீயும் தான், நன்றாகப் பார்த்துக்கொள்.”

அவன் அதற்குள்ளாகவே எழுந்து, அந்தப் பக்கமாகத் திரும்பி, அவளிடம் கையசைத்து விடைபெற்றுக்கொண்டிருந்தான்.

அவன் சென்ற பிறகு, கிமிகோ தோட்டத்துக் கதவினை ஏறிட்டுப் பார்த்தாள்.

”அவனுக்கு அவ்வளவு அவசரம் போல,” என்றாள், அம்மா. “ ம், எவ்வளவு அழகான ஒரு மாதுளம்பழம்.”

அவன், அதைத் தாழ்வாரத்திலேயே வைத்துவிட்டுப் போயிருந்தான்.

அவன் கண்களுக்குள் ஏதோ ஒன்று வெதுவெதுப்பாக நிறையும் போதே, பழத்தை இரண்டாகப் பிளக்கத் தொடங்கிய நிலையிலேயே, அவன் அதைத் தவறவிட்டிருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. அவன் அதனை முற்றாக, இரண்டாகப் பிளந்துவிடவில்லை. விதைகள் மேலே தெரிய அது, தாழ்வாரத்தில் கிடந்தது.

அம்மா, அதனை அடுக்களைக்கு எடுத்துச் சென்று கழுவித் துடைத்து, கிமிகோவிடம் கொடுத்தாள்.

கிமிகோ முகம் சுழித்து ஒரு அடி பின்வாங்கிப் பின், மீண்டுமொரு முறை முகம் சிவந்து, சிறிது குழப்பத்துடனேயே அதைக் கையிலெடுத்தாள்.

கெய்கிச்சி அதிலிருந்து ஒன்றிரண்டு விதைகளை எடுத்திருப்பான் போலென அவளுக்குத் தோன்றியது.

அம்மா முன்பாக, அதைச் சாப்பிட மறுப்பது கிமிகோவுக்கு என்னவோ போலத் தோன்றியிருக்கவேண்டும். அவள் விருப்பமற்று, அதனுள் சிறிது கடித்தாள். புளிப்பு அவள் வாய்க்குள் பரவியது. அது, அவளுக்குள் அடிவரைக்கும் துளைத்து இறங்குவதாக அவள் ஒரு வருத்தமான மகிழ்ச்சியை உணர்ந்தாள்.

அம்மா, அங்கு ஆர்வமில்லாமல், வெறுமனேதான் நின்றுகொண்டிருந்தாள்.

அம்மா கண்ணாடி முன் சென்று அமர்ந்தாள். “ என் தலையைத் தான் பாரேன், கிமிகோ, இந்தப் பரட்டைத்துடைப்பத் தலையோடுதான் நான் கெய்கிச்சியை வழியனுப்பியிருக்கிறேன்.”

தலை வாரும் ஒலி கிமிகோவின் காதில் விழுந்தது.

”உன் அப்பா இறந்தபோது,” அம்மா மெல்லிய குரலில் சொன்னாள், “என் தலையை வாருவதற்குப் பயந்தேன். தலை வாரத் தொடங்கும்போது, நான் என்னசெய்துகொண்டிருக்கிறேனென்பதையே மறந்துவிடுவேன். தன்னுணர்வுக்கு வரும்போது, நான் தலைவாரி முடிக்கட்டுமென்று உன் அப்பா காத்திருந்தது போலத் தோன்றும்.”
images (66)
அப்பா, சாப்பிட்டுவிட்டுத் தட்டில் மீதி வைத்திருப்பதை அம்மா வழக்கமாக உண்பதை கிமிகோ பார்த்திருக்கிறாள்.

அவளை ஏதோ ஒன்று உள்ளிழுப்பதாக, அவளுக்கு அழவேண்டும்போல் தோன்றச்செய்கிற ஒரு மகிழ்ச்சியினை உணர்ந்தாள்.

மாதுளையைத் தூர எறிவதற்கு மனமில்லாமல், அம்மா அவளிடம் அதனைக் கொடுத்திருக்கலாம். பொருட்களை வீணாகத் தூக்கியெறியாமலிருப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. அதனாலேயே அவள் அதை அவளுக்குக் கொடுத்திருப்பாள்.

கிமிகோ, அவளுடைய தனிப்பட்ட மகிழ்ச்சியினாலேயே, அம்மாவின் முன்பாக, வெட்கமாக உணர்ந்தாள்.

கெய்கிச்சி அறிந்திருந்த வழியனுப்புகைகளுக்கெல்லாம் மேலானதாக, இது அமைந்துவிட்டதாகவும், அவன் திரும்பிவருவதற்கு எவ்வளவு நீண்ட காலமானாலும் அவளால் காத்திருக்கமுடியுமென்றும் அவள் நினைத்தாள்.

அவள் அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள். அம்மா அமர்ந்திருந்த கண்ணாடிக்கு அப்பால் காகிதத் தோரணங்கள் மீது வெயில் வீற்றிருந்தது.

இருந்தாலும், எதனாலோ, அவள் மடியிலிருந்த மாதுளையை எடுத்துக் கடிக்கப் பயந்தாள்.

*****

ஹோவர்ட் ஹிப்பெட் தொகுத்த சமகால ஜப்பானிய இலக்கியம் (நியூயார்க் : A.A.Knopf, 1977) பக்கம் 293 – 295.

http://afe.easia.columbia.edu/special/japan_1950_kawabata.htm

லாட்டரி ( சிறுகதை ) ஷிர்லே ஜாக்சன் / தமிழில் – ஸ்ரீதர்ரங்கராஜ்

download (78)

ஜூன் 27ஆம் தேதியின் காலை மேகமற்று வெளிச்சமாக ஒரு முழுமையான கோடைநாளின் வெம்மையோடு இருந்தது; மலர்கள் அபரிமிதமாக மலர்ந்தன புற்களின் பச்சை மிகுந்தது. கிராமத்துமக்கள், காலை பத்துமணிக்கெல்லாம் தபால் நிலையத்துக்கும் வங்கிக்கும் இடையிலிருந்த சதுக்கத்தில் கூட ஆரம்பித்தனர்; சில நகரங்களில் மக்கள்தொகை அதிகம் என்பதால் லாட்டரிக் குலுக்கல் இரண்டுநாள் நடைபெறும், எனவே ஜூன் 26ஆம் தேதியே அது ஆரம்பிக்கப்படும், ஆனால், இங்கே கிராமத்தில் கிட்டத்தட்ட முன்னூறு பேர்தான், எனவே மொத்த குலுக்கலும் இரண்டு மணிநேரத்திற்குள் முடிந்துவிடும் என்பதால் நிதானமாகப் பத்துமணிக்கு ஆரம்பித்தாலும் கிராமவாசிகள் மதியச்சாப்பாட்டுக்கு வீட்டிற்குப் போய்விடலாம்.

வழக்கம்போல, முதலில் குழந்தைகள் கூடினார்கள். பள்ளிக்கூடம் கோடைகாலத்திற்காக சமீபத்தில்தான் மூடப்பட்டது, எனவே சுதந்திர உணர்ச்சி அவர்களில் பெரும்பாலானோரிடையே அசௌகரியமாகத்தான் அமர்ந்திருந்தது; கும்மாளமிட்டு விளையாடுவதற்கு முன்பாக முதலில் அமைதியான முறையில் சிறிதுநேரம் ஒன்றுகூட நினைத்தனர், அவர்கள் இன்னமும் வகுப்பறை மற்றும் ஆசிரியர் பற்றி, புத்தகங்கள் மற்றும் கண்டிப்புகள் குறித்துப் பேசினர்.

பாபி மார்ட்டின் ஏற்கெனவே தன் பைகளுக்குள் கல்லை நிரப்பி வைத்திருந்தான், மற்றவர்கள் அவனை உதாரணமாகக் கொண்டு தொடர்ந்தனர், உருண்டையான மற்றும் வழுவழுப்பான கல்லையே தேர்ந்தெடுத்தனர்; பாபி மற்றும் ஹாரி ஜோன்ஸ் மற்றும் டிக்கி டெலக்ரோஸ் – அதைக் கிராமவாசிகள் “டெலக்ரோய்” என்று உச்சரிப்பார்கள் – ஆகியோர் சதுக்கத்தின் மூலையில் சிறு குவியலாகக் கற்களைச் சேகரித்து அதை மற்றசிறுவர்கள் கைபடாவண்ணம் பாதுகாத்தனர். சிறுமிகள் தனியாக நின்றுகொண்டிருந்தனர், தங்களுக்குள் பேசிக்கொள்வது, தங்கள் தோள்களின் வழி பயல்களைப் பார்ப்பது என, சிறு குழந்தைகள் புழுதியில் புரண்டு கொண்டிருந்தனர் அல்லது தன் அக்கா அல்லது அண்ணன்களின் கையைப் பிடித்தபடி இருந்தனர்.

சீக்கிரமே ஆடவர்கள் குழும ஆரம்பித்தனர், அவரவர் குழந்தைகளைக் கவனித்தபடி, தங்களின் நடவு மற்றும் மழை குறித்தும் டிராக்டர்கள் மற்றும் வரி குறித்தும் பேசினர். சதுக்கத்தின் மூலையிலிருந்த கற்குவியலிலிருந்து தள்ளி, ஒன்றாக நின்றுகொண்டனர், அவர்களின் நகைச்சுவைகள் அமைதியாக இருந்தன, வாய்விட்டுச் சிரிப்பதற்குப் பதிலாகப் புன்னகைத்தனர். பெண்கள் மங்கிய வீட்டுஉடைகளையும் கம்பளி ஆடைகளையும் அணிந்தபடி அவர்களது ஆண்கள் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் வந்து சேர்ந்தனர்.

தங்கள் கணவரோடு சேர்ந்து கொள்ளும்முன் ஒருவருக்கொருவர் முகமன் கூறி வாழ்த்தியபடி சில புரணிகளையும் பரிமாறிக்கொண்டனர். சீக்கிரமே, தங்கள் கணவன்மார்களின் அருகில் நின்றுகொண்டிருந்த பெண்கள், தத்தம் குழந்தைகளை அழைக்க ஆரம்பித்தனர், குழந்தைகளும் வர மனதில்லாமல் அவர்கள் நான்கைந்து முறை அழைத்தபின் வந்துசேர்ந்தனர். பாபி மார்ட்டின், தன்னைப் பிடிக்க வந்த அம்மாவின் கைப்பிடியிலிருந்து தப்பி கற்குவியலை நோக்கி ஓடினான். ஆனால், அவன் அப்பா கடிந்துசொன்னதும் ஓடிவந்து பெற்றோருக்கிடையே, தன் மூத்த சகோதரனுக்கு அருகில் வந்து நின்றுகொண்டான்.

குலுக்கல் நிகழ்ச்சியை – நடனம், பதின்ம வயதினர் குழு, ஹாலோவீன் நிகழ்ச்சிகள் போல – நடத்திக் கொடுப்பவர் திரு.சம்மர்ஸ், இதுபோன்ற பொதுநடவடிக்கைகளில் ஈடுபட அவருக்கு நேரமும் தெம்பும் இருந்தது. அவருக்கு வட்டவடிவிலான முகம், கலகலப்பான மனிதர், நிலக்கரி வியாபாரம் செய்து கொண்டிருந்தார், எல்லோரும் அவருக்காகப் பரிதாபப்பட்டனர், ஏனெனில் அவருக்குக் குழந்தைகள் இல்லை, அவர் மனைவி ஒரு சண்டைக்காரி. அவர் கருப்பு மரப்பெட்டியைச் சுமந்தபடி சதுக்கத்துக்கு வந்தபோது கிராமவாசிகள் முணுமுணுவெனப் பேசிக்கொண்டிருந்தார்கள், அவர் வந்ததும் கையைவீசி, “சற்று தாமதமாகிவிட்டது நண்பர்களே.” என்றார்.

போஸ்ட்மாஸ்டர் திரு.க்ரேவ்ஸ், அவரைத்தொடர்ந்து ஒரு முக்காலியைச் சுமந்தபடி வந்தார், அந்த முக்காலி சதுக்கத்தின் நடுவில் வைக்கப்பட்டதும் திரு.சம்மர்ஸ் அந்தக் கருப்புப் பெட்டியை அதில் இருத்தினார். கிராமவாசிகள் முக்காலிக்கும் தங்களுக்கும் இடையே சற்று இடைவெளிவிட்டு தாங்கள் நிற்கவேண்டிய தொலைவில் நின்றனர், திரு.சம்மர்ஸ், “நீங்கள் யாரேனும் எனக்கு உதவ விரும்புகிறீர்களா?” என்று கேட்டதும், சிறு சலசலப்புக்குப் பிறகு இருவர், திரு.மார்ட்டின் மற்றும் அவரது மூத்தமகன் பாக்ஸ்டர் ஆகியோர், திரு.சம்மர்ஸ் பெட்டியிலுள்ள காகிதங்களைக் கலக்கும்போது பெட்டி முக்காலியின்மீது அசையாமல் பிடித்துக்கொண்டனர்.

ஆரம்பத்தில் லாட்டரிக் குலுக்கலுக்குப் பயன்படுத்தப்பட்ட பெட்டி வெகுகாலம் முன்பே போய்விட்டது, இப்போது முக்காலியின் மீது அமர்ந்திருக்கும் இப்பெட்டியும் வயசாளியான வார்னர் பிறப்பதற்கு முன்பே உபயோகத்திற்கு வந்தது, வார்னர்தான் ஊரிலேயே வயது முதிர்ந்த ஆள். திரு.சம்மர்ஸ், பெட்டியை மாற்றுவது குறித்து அவ்வப்போது ஊரிலுள்ளவர்களிடம் பேசிக்கொண்டுதான் இருந்தார், ஆனால், யாருமே அந்தக் கருப்புப்பெட்டி வழிவழியாக வகித்து வரும் வழக்கத்திற்குக்கூட ஊறுவிளைவிக்கும் விதமாக நடந்துகொள்ள விரும்பவில்லை. இப்போதுள்ள பெட்டி, இதற்கு முன்பாக இருந்த பெட்டியின், அதாவது முதன்முதலாக இங்கேவந்து தங்கி கிராமம் ஒன்றை ஏற்படுத்திய மக்கள் உருவாக்கிக்கொண்ட பெட்டியின் சில பாகங்களைக்கொண்டு உருவானது என்றொரு கதை உண்டு.

ஒவ்வொரு வருடமும் லாட்டரி முடிந்தபின் திரு.சம்மர்ஸ் புதியபெட்டி குறித்துப் பேசத்துவங்குவார், ஆனால் ஒவ்வொரு வருடமும் அதுகுறித்த எந்தவிதமான செயல்பாடும் இல்லாமல் அப்பேச்சு மறைந்துவிடும். கருப்புப்பெட்டி ஒவ்வொரு வருடமும் நசிந்துகொண்டே வந்தது; இப்போதோ, அது முழுவதுமாகக் கருப்பு என்று சொல்லமுடியாத அளவில் ஒருபக்கம் சிதைந்துபோய் மரத்தின்நிறம் வெளியில் தெரிந்தது, மற்ற பகுதிகள் மங்கலாகவோ அல்லது கறை படிந்தோ இருந்தன.

திரு.மார்ட்டின் மற்றும் அவர்களின் மூத்தமகன் பாக்ஸ்டர் ஆகிய இருவரும் திரு.சம்மர்ஸ் தன்கையால் பெட்டியிலுள்ள காகிதங்களை நன்றாகக் கலக்கும்வரை பெட்டியைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டனர். பல சடங்குகள் ஏற்கெனவே மறக்கப்பட்டுவிட்டன அல்லது தவிர்க்கப்பட்டுவிட்டன, திரு.சம்மர்ஸ் பல தலைமுறைகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த மரச்சில்லுகளுக்குப் பதிலாக காகிதத்தைப் பயன்படுத்த வைப்பதில் வெற்றிகண்டார். கிராமம் சிறியதாக இருந்தவரையில் மரச்சில்லுகளைப் பயன்படுத்தியது சரிதான், ஆனால் இப்போது மக்கட்தொகை முன்னூறைத் தாண்டிவிட்டது, இன்னமும் வளரும் எனும்போது கருப்புப் பெட்டிக்குள் எளிதாகப் பொருந்தும் ஒன்றுதான் சரி என வாதிட்டார். குலுக்கல் நடைபெறுவதற்கான முந்தைய இரவில் திரு.சம்மர்ஸ் மற்றும் திரு.க்ரேவ்ஸ் இருவரும் சீட்டுகளைத் தயாரித்து பெட்டிக்குள் போட்டுவைப்பார்கள், பிறகு அது திரு.சம்மர்ஸ்சின் நிலக்கரி நிறுவனத்தில் உள்ள பெட்டகத்தில், மறுநாள் காலை திரு.சம்மர்ஸ் அதை சதுக்கத்திற்கு எடுத்து வரும்வரை, பத்திரமாக வைக்கப்படும்.

வருடத்தின் பிறநாட்களில் அப்பெட்டி சமயத்தில் இங்கேயும் சமயத்தில் அங்கேயுமாகக் கிடக்கும்; ஒருவருடம் அது திரு.க்ரேவ்ஸ்சின் பண்ணையில் கிடந்தது, அடுத்தவருடம் தபால்நிலைய மேசையின் கீழ் கால்வைக்குமிடத்தில் இருந்தது, ஒருசமயம் அது மார்ட்டினின் மளிகைக்கடை அலமாரியில் வைக்கப்பட்டது.

திரு.சம்மர்ஸ், சீட்டுக்குலுக்கலை அறிவிப்பதற்கு முன் நிறையத்தயாரிப்புகள் தேவைப்படும். குடும்பத்தலைவர்களின் பட்டியல், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தலைக்கட்டுகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தலைக்கட்டுகளில் உள்ள நபர்களின் எண்ணிக்கை என நிறையப்பட்டியல்கள் தயாரிக்கவேண்டும். லாட்டரியை நடத்தும் அலுவலர் என்ற முறையில் ஓர் உறுதிமொழியும் போஸ்ட்மாஸ்டர் முன்னிலையில் திரு.சம்மர்ஸ் எடுக்கவேண்டும்; ஒருமுறை, அதற்கென ஒருவகையான ஒப்பித்தல் வரிகள் இருந்தன, அலுவலர்கள் அதை நடத்திவைப்பார்கள், ஒரு சடங்குபோல, அதற்கென இசைத்தன்மை ஏதும் இல்லாத ஓதுதல், ஒவ்வொரு வருடமும் ஓதப்படும் என்று சிலர் நினைவுகூர்ந்தனர்; சிலர், அலுவலர் அதை வாசிக்கும்போது அல்லது ஓதும்போது அசையாமல் நிற்கவேண்டும் என நம்பினர், மற்றவர்கள் அலுவலர் மக்களிடையே நடந்து செல்லவேண்டும் என்றனர், ஆனால், வருடங்கள் செல்லசெல்ல இந்தச்சடங்கு தொடர்ச்சியற்று கைவிடப்பட்டுவிட்டது.

18300852_1070384146427620_7726105906220831506_n

அதுபோலவே சடங்குமுறை வணக்கச்செயல் ஒன்றும் இருந்தது, பெட்டியிலிருந்து சீட்டை எடுக்கப்போகும் நபரின் பெயரை அழைக்கும்போது அலுவலர் இதைப் பயன்படுத்துவார், ஆனால் இதுவும் காலத்தோடு மாறிவிட்டது, இப்போதுவரை சீட்டை எடுக்கவருபவரிடம் அலுவலர் கட்டாயமாகப் பேசவேண்டும் என்ற அளவிலேயே இருந்துவருகிறது. திரு.சம்மர்ஸ் இதிலெல்லாம் தேர்ந்தவராக இருந்தார்; அவரது தூய வெள்ளைச்சட்டை மற்றும் நீலக்கலர் ஜீன்ஸுடன், ஒருகை இயல்பாக பெட்டியின் மீதிருக்க, இடைவிடாமல் திரு.க்ரேவ்ஸ் மற்றும் மார்ட்டின்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் இதற்குப் பொருத்தமானவராக மற்றும் முக்கியமானவராகத் தெரிந்தார்.

திரு.சம்மர்ஸ் பேசிமுடித்து, கூடியிருந்த கிராமவாசிகள் பக்கம் திரும்பும்போது, திருமதி.ஹட்சின்ஸன் வேகமாக சதுக்கத்தின் பாதைக்குள் நுழைந்தாள், அவளது கம்பளி மேலாடை தோள்மீது கிடந்தது, கூட்டத்தின் பின்புறம் கிடைத்த இடைவெளிக்குள் நுழைந்து உள்ளே வந்தாள். “இன்று என்ன நாள் என்பதை சுத்தமாக மறந்துவிட்டேன்,” என்று தன்னருகில் நின்று கொண்டிருந்த திரு.டெலக்ரோஸிடம் சொல்லிக்கொண்டாள், இருவரும் மெதுவாகச் சிரித்துக் கொண்டனர். “என் வீட்டுக்கிழவர் பின்பக்கம் விறகு அடுக்கச் சென்றிருந்தார்,” திருமதி.ஹட்சின்ஸன் தொடர்ந்தாள். “சன்னல் வழியாகப் பார்த்தால் குழந்தைகளைக் காணோம், பிறகுதான் இன்று இருபத்தியேழாம் தேதி என்று ஞாபகம் வந்தது, அவசரமாக ஓடிவந்தேன்.” தான் கட்டியிருந்த மேலங்கியில் கையைத் துடைத்துக்கொண்டாள், திரு.டெலக்ரோஸ், “இருந்தாலும், நீங்கள் சரியான நேரத்திற்கு வந்துவிட்டீர்கள். மேடைமேல் அவர்கள் இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.” என்றார்.

திருமதி.ஹட்சின்ஸன் கழுத்தைவளைத்து கூட்டத்தைத்தாண்டி தன் கணவரும் குழந்தைகளும் முன்வரிசையில் இருப்பதைப் பார்த்துவிட்டு. விடைபெறும் விதமாக திரு.டெலெக்ரோஸின் கைகளில் லேசாகத் தட்டிவிட்டு கூட்டத்தினுள் நுழைந்தாள். கூட்டத்தினர் மகிழ்வோடு அவளுக்கு வழிவிட்டனர்; இரண்டு அல்லது மூன்றுபேர், கூட்டத்திற்குள் மட்டுமே கேட்கும்படியான குரலில், “இதோ உங்கள் திருமதி, ஹட்சின்ஸன்” என்றும் “பில், இதோ அவர் வந்து சேர்ந்துவிட்டார்,” என்றும் கூறினர். திருமதி.ஹட்சின்ஸன் தன் கணவரை நெருங்கியதும், அவள் வருகைக்காகக் காத்திருந்த திரு.சம்மர்ஸ் சந்தோஷமாகக் கூறினார்.

”நீ இல்லாமலே ஆரம்பிக்க வேண்டிவரும் என்று நினைத்தேன் டெஸ்ஸி.”. திருமதி.ஹட்சின்ஸன் இளித்தபடி, “கழுவவேண்டிய பாத்திரங்கள் என்னை விடவில்லை, இப்போது ஆரம்பிக்கிறீர்களா, ஜோ?” என்றாள், மெல்லிய சிரிப்பலை கூட்டத்தில் பரவியதோடு அவளின் வருகையால் சற்றே கலைந்திருந்த கூட்டம் மீண்டும் ஒழுங்குக்கு வந்தது.

“சரி, இப்போது.” திரு.சம்மர்ஸ் நிதானமான குரலில் தொடங்கினார், “ஆரம்பித்துவிடலாம் என்று நினைக்கிறேன், சீக்கிரமாக முடித்துவிட்டால், எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போகலாம். இன்னும் யாராவது வரவேண்டுமா?”

“டன்பர்,” என்று நிறைய குரல்கள் எழுந்தன. “டன்பர், டன்பர்.”

திரு.சம்மர்ஸ் தன் கையிலிருந்த பட்டியலைப் பார்த்துவிட்டு, “க்ளைட் டன்பர்.” என்றார். “ஆமாம். அவருக்குக் கால் உடைந்துவிட்டது சரிதானே? அவருக்குப் பதிலாக சீட்டு எடுக்கப்போவது யார்?”

“நான்தான் எடுக்கவேண்டும்,” என்றாள் ஒரு பெண், திரு.சம்மர்ஸ் அவள் பக்கம் பார்த்தார். “மனைவி கணவனுக்காகச் சீட்டு எடுக்கப்போகிறார், “சீட்டை எடுப்பதற்கு உனக்கு வளர்ந்த மகன்கள் யாரும் இல்லையா ஜெனி?” என்றார் திரு.சம்மர்ஸ். அவருக்கும் கிராமத்தில் இருக்கும் எல்லோருக்கும் அதற்கான பதில் தெரியும் என்றாலும் அலுவலக முறைமைக்காக அதைக்கேட்டாக வேண்டும். திருமதி.டன்பரின் பதில் வரும்வரை திரு.சம்மர்ஸ் அமைதியான ஆர்வத்துடன் காத்திருந்தார்.

“ஹோரேஸ்சுக்கு இன்னும் பதினாறு வயதாகவில்லை,” வருந்தும் குரலில் திருமதி.டன்பர் கூறினாள். “எனவே, இந்தவருடம் அவருக்காக நான்தான் எடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.”

”சரிதான்,” என்றார் திரு.சம்மர்ஸ். தன்னுடைய பட்டியலில் அதைக் குறித்துக்கொண்டார். பிறகு, “வாட்சனின் பயல் இந்த வருடம் எடுக்கப்போகிறானா?”

ஓர் உயரமான பையன் கூட்டத்திலிருந்து கையை உயர்த்தி “இங்கே,” என்றான். “நான் எனக்காகவும் என் அம்மாவுக்காகவும் எடுக்கப்போகிறேன்.” கூட்டத்திலிருந்து பல குரல்கள், “நல்ல விஷயம் ஜாக்,” என்றும் “உன் அம்மாவுக்கென்று சீட்டு எடுக்க ஒரு ஆண் இருப்பதில் சந்தோஷம்,” என்றெல்லாம் குரல்கள் கேட்டதும் பதட்டமாகக் கண்களைச் சிமிட்டியபடி தலையைக் குனிந்து கொண்டான்.

“சரி,” என்றார் திரு.சம்மர்ஸ். “எல்லோரும் வந்தாயிற்று என்று நினைக்கிறேன். முதியவர் வார்னரால் வர முடிந்ததா?”

“இதோ,” என்று குரல் வந்ததும் திரு.சம்மர்ஸ் தலையசைத்தார்.

திரு.சம்மர்ஸ் தொண்டையைக் கனைத்துக்கொண்டு பட்டியலைப் பார்க்க ஆரம்பித்ததும் திடீரென கூட்டத்தில் ஒரு மௌனம் பரவியது. “எல்லோரும் தயாரா?” என்றார். “இப்போது நான் பெயர்களை வாசிப்பேன் – குடும்பத் தலைவர்களின் பெயர்கள் – அவர்கள் மேலே வந்து பெட்டியிலிருந்து ஒரு சீட்டை எடுக்கவேண்டும். சீட்டைப்பிரிக்காமல் மடித்தபடி கையில் வைத்திருக்க வேண்டும், எல்லோரும் எடுத்து முடியும்வரை பிரித்துப்பார்க்கக் கூடாது. எல்லாம் புரிந்ததா?”

எல்லோரும் இதைப் பலமுறை செய்தவர்கள் என்பதால் பாதிதான் காதில் வாங்கிக் கொண்டனர்; பெரும்பாலானோர் அமைதியாக, தங்கள் உதடுகளை ஈரப்படுத்தியபடி, அக்கம் பக்கம் பார்க்காமல் இருந்தனர். திரு.சம்மர்ஸ் தன் ஒருகையை உயர்த்தி, “ஆடம்ஸ்” என்றார். ஒரு மனிதர் கூட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு முன்னே வந்தார். “ஹாய், ஸ்டீவ்.” என்றார் திரு.சம்மர்ஸ். பதிலுக்கு திரு. ஆடம்ஸ், “ஹாய், ஜோ.” என்றார். இருவரும் மகிழ்ச்சியற்ற பதட்டமான புன்னகையைப் பரிமாறிக்கொண்டனர். பிறகு திரு.ஆடம்ஸ் கருப்புப்பெட்டியை அடைந்து மடிக்கப்பட்ட ஒரு தாளை எடுத்துக்கொண்டார். அதன் ஒருமுனையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, வேகமாகக் கூட்டத்தில் தன்னுடைய இடத்திற்குச் சென்று, தன் குடும்பத்திலிருந்து சற்றுத்தள்ளி தன் கைகளைக் குனிந்து பார்க்காமல் நின்று கொண்டார்.

“ஆலன்.” என்று அழைத்தார் திரு.சம்மர்ஸ். “ஆண்டர்சன். . .பென்தம்.”

“லாட்டரிகளுக்கிடையே இடைவெளியே இல்லாததுபோல் தோன்றுகிறது,” திரு.டெலக்ரோஸ், பின்வரிசையில் அமர்ந்திருந்த திரு.க்ரேவ்ஸ்சிடம் கூறினார். “கடந்த லாட்டரி ஏதோ போனவாரம்தான் முடிந்ததுபோல் இருக்கிறது.”

“காலம் உண்மையில் வேகமாகத்தான் நகர்கிறது.” என்றார் திரு.க்ரேவ்ஸ்.

“க்ளார்க். . . டெலக்ரோஸ்”

“அதோ என் கணவர் போகிறார்,” என்றார் திருமதி.டெலக்ரோஸ். தனது கணவன் முன்னே செல்லும்போது மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டார்.

“டன்பர்,” திரு.சம்மர்ஸ் அழைத்ததும் திருமதி.டன்பர் உறுதியோடு கருப்புப் பெட்டியை நோக்கிப் போகும்போது ஒருத்தி, “தைரியமாக ஜேனி,” என்றாள், மற்றொருத்தி “அதோ போய்விட்டாளே.” என்றாள்.

“அடுத்து நாங்கள்தான்.” என்றார் திருமதி.க்ரேவ்ஸ். பெட்டியின் பக்கவாட்டிலிருந்து திரு.க்ரேவ்ஸ் நடந்து வந்து திரு.சம்மர்ஸ்சுக்கு முகமன் கூறிவிட்டு ஒருதாளை எடுக்கும்வரை அவரையே பார்த்துக்கொண்டிருந்தார். இப்போது, கிட்டத்தட்ட கூட்டம் முழுவதிலும் உள்ள ஆண்கள் கையில் சீட்டு இருந்தது, அதைப்பதட்டத்தோடு திருப்பித்திருப்பி வைத்துக்கொண்டிருந்தனர். திரு.டன்பரும் அவரது இருமகன்களும் ஒன்றாக நின்றிருந்தனர், திரு.டன்பரின் கையிலும் ஒரு சீட்டு இருந்தது.

“ஹார்பர்ட். . . .ஹட்சின்ஸன்.”

“மேலே போ பில்,” என்றாள் திருமதி.ஹட்சின்ஸன், அவருக்கு அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.

“ஜோன்ஸ்.”

“நான் கேள்விப்பட்டது, வடக்குப்புற கிராமங்களில் எல்லாம் லாட்டரியைக் கைவிடுவது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.” திரு.ஆடம்ஸ் தனக்கருகில் நின்றுகொண்டிருந்த முதியவர் வார்னரிடம் கூறினார்.

முதியவர் வார்னர் செறுமிக்கொண்டார். “முட்டாள் இளையவர்களின் கூட்டம்,” என்றார். “இளையவர்களின் பேச்சைக் கேட்கிறார்கள், அது அவர்களுக்கு நல்லதல்ல. அடுத்தது என்ன தெரியுமா, அவர்கள் குகைகளில் சென்று வாழவேண்டும் என்று சொல்வார்கள், ஒருபயலும் வேலை செய்வது இல்லை, அப்படி வாழ்வது யாராலும் முடியாத காரியம். பழமொழியே இருக்கிறது, ‘ஜூனில் லாட்டரி, நல்ல சோளவிளைச்சலின் அறிகுறி’, ஒன்றைத் தெரிந்துகொள், இது இல்லையென்றால் நாமெல்லாம் களையையும் ஓக் விதையையும்தான் வேகவைத்துத் தின்னவேண்டும். லாட்டரி என்பது எப்போதுமே இருந்து வந்துள்ளது,” என்றார் எரிச்சலுடன். “இந்த ஜோ சம்மர்ஸ் மேடைமேல் இருந்துகொண்டு எல்லோரிடமும் சிரித்துப்பேசுகிறான் என்பதே போதுமான அளவு கெடுதல் நடந்துவிட்டதன் அறிகுறி.”

“சில இடங்கள் லாட்டரியைக் கைவிட்டுவிட்டன.” என்றார் திரு.ஆடம்ஸ்.

“அதில் சங்கடங்களைத் தவிர வேறெதும் வரப்போவதில்லை,” முதியவர் வார்னர் உறுதிபடப் பேசினார். “முட்டாள் இளையவர்களின் கூட்டம்.”

”மார்ட்டின்.” பாபி மார்ட்டின் தன் அப்பா முன்னே செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தான். “ஓவர்டைக். . . .பெர்சி.”

”இவர்கள் சீக்கிரம் முடித்தால் பரவாயில்லை,” திருமதி.டன்பர் தன் மூத்த மகனிடம் சொன்னார். “சீக்கிரமாக முடித்தால் நல்லது.”

“அநேகமாக முடித்துவிட்டார்கள்,” என்றான் அவரது மகன்.

“நீ ஓடிச்சென்று அப்பாவிடம் சொல்லத் தயாராக இரு,” என்றார் திருமதி.டன்பர்.

திரு.சம்மர்ஸ் தன் பெயரை அழைத்துக்கொண்டு துல்லியத்தோடு நடந்துவந்து பெட்டிக்குள்ளிருந்து ஒரு சீட்டை எடுத்துக்கொண்டார். பிறகு, “வார்னர்.” என்றழைத்தார்.

“எழுபத்து-ஏழாவது வருடம் நான் லாட்டரியில் கலந்துகொள்வது,” முதியவர் வார்னர் கூட்டத்தினூடாகச் செல்லும்போது சொல்லிக்கொண்டே சென்றார். “எழுபத்தேழாவது முறை.”

“வாட்சன்.” அந்த உயரமான பையன் அசௌகரியமாக கூட்டத்தினுள் நடந்து வந்தான். யாரோ, “பதட்டமாகாதே, ஜாக்” என்றார்கள் திரு.சம்மர்ஸ், “வேண்டிய நேரத்தை எடுத்துக்கொள், மகனே.” என்றார்.

”ஸனினி.”

அதன்பிறகு, அங்கே நீண்டஅமைதி நிலவியது, மூச்சற்ற அமைதி, திரு.சம்மர்ஸ் தன் கையிலிருந்த சீட்டை உயர்த்திப் பிடித்தபடி, “நல்லது நண்பர்களே.” என்றார். ஒருநிமிடம், யாருமே அசையவில்லை, பிறகு அனைத்து சீட்டுகளும் திறக்கப்பட்டன. உடனே பெண்கள் அனைவரும் பேச ஆரம்பித்தனர், “யாரது?” “யாரது?”, “அது டன்பரா?”, “அது வாட்சனா?” பிறகு அனைத்துக் குரல்களும், “அது ஹட்சின்ஸன். அது பில்.” “பில் ஹட்சின்ஸனுக்குக் கிடைத்துள்ளது,” என்றன.

“உன் அப்பாவிடம் போய்ச்சொல்,” திருமதி.டன்பர் தன் மூத்தமகனிடம் சொன்னார்.

மக்கள் திரு.ஹட்சின்ஸனைத் தேடி அங்குமிங்கும் பார்த்தனர். பில் ஹட்சின்ஸன் அமைதியாக நின்றுகொண்டு, தன் கையிலிருந்த தாளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென, டெஸ்ஸி ஹட்சின்ஸன் சத்தம்போட ஆரம்பித்தாள், “அவர் விரும்பிய தாளை எடுக்குமளவு நேரத்தை நீங்கள் அவருக்கு வழங்கவில்லை. நான் அதைக்கவனித்தேன். இது நியாயமில்லை!”

“இலகுவாக எடுத்துக்கொள் டெஸ்ஸி,” என்றார் திருமதி டெலக்ரோஸ். திருமதி.க்ரேவ்ஸ், “எல்லோருக்கும் ஒரே மாதிரியான சாத்தியம்தான் இருந்தது,” என்றார்.

“வாயை மூடு டெஸ்ஸி,” என்றார் பில் ஹட்சின்ஸன்.

“நல்லது நண்பர்களே,” திரு.சம்மர்ஸ் ஆரம்பித்தார், “இது சீக்கிரமாக நடந்தது. இதை முடித்துவைக்க நாம் இன்னும் சற்று விரைவாகச் செயல்படவேண்டும்.” என்றார். பிறகு, தனது அடுத்த பட்டியலைப் பார்த்தார். “பில்,” என்றழைத்தார். “நீங்கள் ஹட்சின்ஸன் குடும்பத்துக்காக சீட்டை எடுத்திருக்கிறீர்கள். ஹட்சின்ஸன் குடும்பத்தில் வேறு தலைக்கட்டுகள் உண்டா?”

“டான் மற்றும் ஈவா, அவர்களுக்காவது போதுமான வாய்ப்பை வழங்குங்கள்,” திருமதி.ஹட்சின்ஸன் கத்தினாள்.

“பெண்கள் தங்கள் கணவன் குடும்பத்தாரோடு எடுப்பார்கள் டெஸ்ஸி,” திரு.சம்மர்ஸ் கனிவாகச் சொன்னார், “எல்லோரையும் போல உனக்கும் அது தெரியும்.”

“இது நியாயமில்லை.” என்றாள் டெஸ்ஸி.

“நான் அப்படி நினைக்கவில்லை ஜோ,” பில் ஹட்சின்ஸன் வருந்தும் குரலில் கூறினார். “என் மகள் அவளது கணவன் குடும்பத்தாரோடுதான் எடுக்கவேண்டும்; அதுதான் நியாயமானது. என் குழந்தைகளைத்தவிர எனக்கு வேறு குடும்பம் இல்லை.”

”அப்படியென்றால், குடும்பத்திற்காக என்று பார்த்தால் நீங்கள்தான்,” என்று விளக்கும் விதமாகச் சொன்னார் திரு.சம்மர்ஸ். “தலைக்கட்டுக்காக என்று பார்த்தால் அது மறுபடியும் நீங்கள்தான். சரிதானே?”

”சரிதான்.” என்றார் பில் ஹட்சின்ஸன்.

“எத்தனை குழந்தைகள், பில்?” திரு.சம்மர்ஸ் முறைமைக்காகக் கேட்டார்.

“மூன்று,” என்றார் பில் ஹட்சின்ஸன். பில் ஜூனியர்., நான்சி, மற்றும் இளையவன் டேவ். அப்புறம் டெஸ்ஸியும் நானும்.”

”அப்படியென்றால் சரி,” என்றார் திரு.சம்மர்ஸ். “ஹேரி, அவர்களது சீட்டைத் திரும்ப வாங்கிக்கொண்டீர்களா?”

திரு.க்ரேவ்ஸ் ஆமோதிப்பாகத் தலையசைத்து தாள்களை உயர்த்திக் காட்டினார். “அதைப் பெட்டிக்குள் போடுங்கள்,” திரு.சம்மர்ஸ் வழிநடத்தினார். “பில்லின் சீட்டையும் வாங்கி உள்ளே போடுங்கள்.”

“மீண்டும் முதலிலிருந்து நடத்தவேண்டும் என்று நினைக்கிறேன்,” என்று எவ்வளவு நிதானமாகச் சொல்லமுடியுமோ அவ்வளவு நிதானமாகச் சொன்னார் திருமதி.ஹட்சின்ஸன். “இது நியாயமாக நடக்கவில்லை. அவர் சீட்டைத் தேர்ந்தெடுப்பதற்கான நேரத்தை நீங்கள் அவருக்குத் தரவில்லை. எல்லோரும் அதைப் பார்த்தார்கள்.”

திரு.க்ரேவ்ஸ் ஐந்து சீட்டுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பெட்டியிலிட்டார், அவற்றைத் தவிர மற்ற சீட்டுகளை கீழே எறிந்தார், அவற்றைக் காற்று அடித்துக்கொண்டு போனது.

“எல்லோரும் கவனியுங்கள்,” திருமதி.ஹட்சின்ஸன் தன்னைச்சுற்றி நின்றிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“தயாரா பில்?” திரு.சம்மர்ஸ் கேட்டதும், பில் ஹட்சின்ஸன் ஒருமுறை தன் மனைவி குழந்தைகளைப் பார்த்துவிட்டு, தலையசைத்தார்.

“ஞாபகமிருக்கட்டும், எல்லோரும் சீட்டை எடுக்கும்வரை பிரிக்காமல் கையில் வைத்திருக்க வேண்டும். ஹேரி, நீங்கள் குழந்தை டேவ்வுக்கு உதவுங்கள்.” திரு.க்ரேவ்ஸ் அச்சிறுவனின் கைகளைப் பிடித்துக்கொண்டார், அவன் விருப்பமாக கருப்புப்பெட்டி இருக்குமிடத்திற்கு நடந்து வந்தான். “ஒரு சீட்டை பெட்டியிலிருந்து எடு டேவ்,” என்றார் திரு.சம்மர்ஸ். டேவ் பெட்டிக்குள் கையை விட்டதும் சிரித்தான். “ஒரேயொரு தாளை மட்டும் எடு,” என்றார் திரு.சம்மர்ஸ். “ஹேரி, அவனுக்காக நீங்கள் அதை வைத்திருங்கள்.” திரு.க்ரேவ்ஸ் குழந்தையின் கையை வெளியே எடுத்து அவன் இறுகப்பிடித்திருந்த சீட்டை வாங்கி வைத்துக்கொண்டார், டேவ் அவருக்கு அருகில் நின்றுகொண்டு அவரை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அடுத்தது நான்சி,” திரு.சம்மர்ஸ் அழைத்தார். நான்சிக்கு பன்னிரண்டு வயது, அவளது பள்ளி நண்பர்கள், பாவாடையைச் சரிசெய்தபடி பெட்டியை நோக்கிச்செல்லும் அவளை வேகமாக மூச்சிரைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தனர், அவள் வேண்டாவெறுப்பாக பெட்டியிலிருந்து ஒரு சீட்டை எடுத்தாள். ”பில் ஜூனியர்.,” திரு.சம்மர்ஸ் அழைத்ததும் பில்லி வேகமாகப் பெட்டியில் மோதுவதுபோலச் சென்று சீட்டை எடுத்தான். “டெஸ்ஸி,” என்றார் திரு.சம்மர்ஸ். அவள் ஒருநிமிடம் தயங்கினாள், விரோதமாகச் சுற்றிலும் பார்த்தாள், பிறகு இறுக்கமாக உதட்டை வைத்தபடி பெட்டிக்கு அருகில் சென்று, அதிலிருந்து பிடுங்குவதுபோல ஒரு சீட்டை எடுத்துப் பின்பக்கம் கையை வைத்துக்கொண்டாள்.

“பில்,” என்றார் திரு.சம்மர்ஸ், பில் ஹட்சின்ஸன் பெட்டிக்குள் கையைவிட்டுத் துழாவி, கடைசியில் ஒரு சீட்டோடு கையை வெளியிலெடுத்தார்.

கூட்டம் அமைதியாக இருந்தது. ஒரு பெண், “அது நான்சி அல்ல என்று நம்புகிறேன்,” என்று கிசுகிசுத்தாள், அந்த ஒலி கூட்டத்தின் கடைசி வரை கேட்டது.

“இது இப்படி நடத்தப்படுவதே இல்லை. மக்கள் முன்பு எப்படி இருந்தார்களோ இப்போது அப்படி இல்லை.” முதியவர் வார்னர் உறுதிபடச் சொன்னார்.

“நல்லது, சீட்டைப் பிரித்துப்பாருங்கள். ஹேரி, நீங்கள் டேவ்வின் சீட்டைப் பிரியுங்கள்.” திரு சம்மர்ஸ் கூறினார்.

திரு.க்ரேவ்ஸ் அந்தச்சீட்டைப் பிரித்து உயர்த்திக் காட்ட, அது வெறுமையாக இருப்பதைப் பார்த்து கூட்டத்தில் எல்லோரும் பெருமூச்செறிந்தனர். நான்சி மற்றும் பில் ஜூனியர் இருவரும் ஒரேநேரத்தில் தங்கள் சீட்டைப் பிரித்து, இருவரும் மகிழ்வோடு சிரித்தனர், தங்கள் சீட்டை கூட்டத்தை நோக்கித் திருப்பி தலைக்குமேல் உயர்த்திப் பிடித்தனர்.

“டெஸ்ஸி,” என்றார் திரு.சம்மர்ஸ். ஒருகணம் அமைதி நிலவியது, திரு.சம்மர்ஸ் பில் ஹட்சின்ஸனைப் பார்க்க, பில் தனது சீட்டைப் பிரித்துக்காட்டினார். அது வெறுமையாக இருந்தது.

“அது டெஸ்ஸிதான், அவளது சீட்டை எங்களுக்குக் காண்பியுங்கள் பில்” என்றார் திரு.சம்மர்ஸ், அவரது குரல் அமைதியாக இருந்தது.

பில் ஹட்சின்ஸன் தன் மனைவியை நெருங்கி அவளது கையிலிருந்த தாளை வலுக்கட்டாயமாகப் பிடுங்கினார். அதில் ஒரு கரும்புள்ளி இருந்தது, திரு.சம்மர்ஸ் தனது நிலக்கரி அலுவலகத்திலுள்ள கரிய பென்சிலால் முதல்நாள் இரவு வரைந்த கரும்புள்ளி. பில் ஹட்சின்ஸன் அதை உயர்த்திப்பிடிக்க கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.

“சரி… சரி… மக்களே, சீக்கிரம் முடிக்க வேண்டும்.” திரு.சம்மர்ஸ் கூறினார்.

கிராமவாசிகள் சடங்குகளை மறந்து, உண்மையான கருப்புப்பெட்டியைத் தொலைத்திருந்தாலும், இன்னமும் கற்களை உபயோகப்படுத்துவதை ஞாபகம் வைத்திருந்தார்கள். முன்பு சிறுவர்கள் குவித்து வைத்திருந்த கற்குவியல் தயாராக இருந்தது; சதுக்கம் முழுவதும் கற்களும் பெட்டியிலிருந்து எறியப்பட்ட தாள்களும் இறைந்து கிடந்தன. திருமதி.டெலக்ரோஸ் தேர்ந்தெடுத்த கல் மிகப்பெரியது, இரண்டு கைகளாலும் அதைத் தூக்கியபடி திருமதி.டென்பரைப் பார்த்து, “வேகமாக வா, சீக்கிரம்,” என்றார்.

திருமதி.டன்பர் இரண்டு கைநிறைய சிறு கற்களை வைத்துக்கொண்டு மூச்சிரைக்கச் சொன்னார், “என்னால் ஓடமுடியாது. நீங்கள் முன்னால் போங்கள், நான் பின்னால் வருகிறேன்.”

குழந்தைகள் கற்களை ஏற்கெனவே எடுத்துவைத்திருந்தனர். யாரோ டேவி ஹட்சின்ஸனின் கையில் சில கூழாங்கற்களைக் கொடுத்தனர்.

இதற்குள் டெஸ்ஸி யாருமில்லாத ஒரு இடத்தின் மையத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்தாள், கிராமவாசிகள் அவளை நெருங்கும்போது தனது கைகளை நம்பிக்கையற்று விரித்தபடி, “இது நியாயமே இல்லை,” என்றாள். ஒரு கல் அவளது தலையின் பக்கவாட்டில் வந்து அடித்தது.

முதியவர் வார்னர் சத்தமிட்டார், “வேகமாக… வேகமாக மக்களே.” ஸ்டீவ் ஆடம்ஸ் மக்கள் கூட்டத்தின் முதல் வரிசையில் இருந்தான், அவனுக்குப் பின்னால் திரு.க்ரேவ்ஸ்.

“இது நியாயமே இல்லை, இது சரியானதல்ல,” திருமதி ஹட்சின்ஸன் கிறீச்சிட, அவர்கள் அவளைச் சூழ்ந்தனர்.

000

ஷிர்லே ஜாக்சன் 1916-1965 – அமெரிக்காவில் பிறந்த புகழ்பெற்ற நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். இவருடைய The Haunting of Hill House புகழ்பெற்ற நாவலாகும். சிறந்த அமெரிக்கச் சிறுகதையாளர் விருதைப் பலமுறையும், ஓ.ஹென்றி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் குவித்த இவரது பெயரிலேயே தற்போது விருதுகள் வழங்கப்படுகின்றன.

வெள்ள நிவாரண முகாம் (சிங்கள மொழிச் சிறுகதை) – அஜித் பெரகும் திஸாநாயக / தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

download (92)

நயனா வீட்டுக்குள் நுழையும்போது அது சகதிக் குவியலாகக் கிடந்தது. அவள் எப்போதும் பெருக்கித் துடைத்து தூய்மையாக வைத்திருந்த பளிங்குத் தரையானது, கோப்பி நிற அழுக்குச் சேறு படிந்து சேற்று வயல்வெளி போல ஆகியிருந்தது. வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த சோபா கதிரையின் இருக்கைகள் சேற்றிலும் தண்ணீரிலும் ஊறிப் போயிருந்தன. பிளாஸ்டிக் கதிரைகள், புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் எல்லாம் மிதந்து சென்று ஆங்காங்கே ஒதுங்கியிருந்தன. சுவரில் கழுத்தளவு உயரத்தில் மஞ்சள் நிற நீரின் அடையாளம் படிந்திருந்தது.

அறையிலிருந்த அலுமாரியைத் திறந்து பார்த்தவளின் நெஞ்சம் அதிர்ந்து போனது. சேலைகள், சட்டைகள், பிள்ளைகளின் ஆடைகள் அனைத்திலிருந்தும் அழுக்குத் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அலுமாரியின் இழுப்பறையைத் திறந்து பார்த்தாள். முக்கியமான பத்திரங்கள் அனைத்துமே நனைந்து போயிருந்தன. அவற்றுக்கிடையே தங்க நகைகளை அடகு வைத்தமை சம்பந்தமான முக்கியமான காகிதங்களும் அடங்கியிருப்பது நினைவுக்கு வந்து அவளது கை தானாகவே கழுத்தை நோக்கிச் சென்றது.

அவள் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டாள். அதிலும் ஈரத்தை உணர்ந்தவள் உடனே எழுந்து நின்றாள். எழுந்ததுமே கட்டில் ஒரு புறமாக சாய்ந்து கொண்டது. அட்டைப் பலகைகளால் செய்யப்பட்ட அதை மீண்டும் பாவிப்பது சாத்தியமில்லை. அது இப்போது நனைந்து ஊறி பப்படத்தைப் போல உப்பிப் போய்விட்டிருந்தது. வீட்டுச் சாதனங்களை வாங்குவதற்காகப் பெற்றுக் கொண்ட கடனைக் கூட இன்னும் செலுத்தி முடிக்கவில்லை.

பிள்ளைகளின் அறை முழுவதும் புத்தகங்களும், கொப்பிகளும் பரந்து கிடந்தன. அவற்றின் மேலே அடுக்கடுக்காக சேறும் சகதியும் படிந்திருந்தன. கறுப்பு நிற அழுக்குச் சேற்றிலிருந்து மூக்கைத் துளைக்கும் நாற்றம் கிளம்பியதால் அவள் மூக்கைப் பொத்திக் கொண்டாள். அழுக்காகி, சகதி படிந்து அறையின் மத்தியில் வீழ்ந்து கிடந்த மகளின் பொம்மையொன்றைக் கண்டதும், அண்மையில் இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொல்லப்பட்ட குழந்தையொன்றின் சடலம் நினைவுக்கு வந்தது. அவளுக்கு வெள்ள நிவாரண முகாமில் விட்டுவந்த மகள் நினைவில் வந்தாள்.

நண்டொன்று குறுக்கே அடி வைத்து புத்தகங்களின் மேலால் ஓடியது. ‘பாம்புகளும் இருக்குமோ தெரியாது’ எனப் பயந்து சடுதியாக பின்புறம் அடியெடுத்து வைத்தவள் சகதியில் வழுக்கினாள். சட்டென நிலைக் கதவைப் பற்றிப் பிடித்து கீழே விழாது தன்னைப் பாதுகாத்துக் கொண்டாள். சுவரிலிருந்த அட்டைப் புழுவொன்று நசுங்கி அவளது கைகளில் அதன் சதைத் திரவம் படிந்தது. மிகுந்த அறுவெறுப்பாக உணர்ந்தாள். சுவரிலேயே பல தடவைகள் கையைத் தேய்த்தாள். ஏனைய நாட்களில் சுவரை அழுக்காக்க வேண்டாம் என மகனை மிரட்டுபவள் அவள்.

அவளது கணவன் சேறாலும் சகதியாலும் மூடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மிகவும் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டை விட்டுச் செல்லும்போதே வயல்வெளியின் மத்தியில் செல்லும் பாதை கழுத்தளவு நீரில் மூழ்கிப் போயிருந்தது. அவர்களை கடற்படையின் படகொன்று வந்து வெள்ள நிவாரண முகாமுக்கு அழைத்துச் சென்றது. எதையுமே எடுத்துச் செல்ல வழியிருக்கவில்லை. வாழ்நாளில் பாடுபட்டு வாங்கிய தமது முதல் வாகனத்தை வீட்டிலேயே விட்டுச் செல்ல அன்று நேர்ந்தது. இப்போதும் பஸ் செல்லும் தெருவுக்குச் செல்ல ஒரு கிலோமீற்றர் தூரம் சேற்றில் தவழ்ந்து செல்ல வேண்டியிருக்கும். அயல்வீட்டுத் தம்பி நுவன் வாடகைக்கு ஓட்டும் முச்சக்கரவண்டிக்கும் கூட மோட்டார் சைக்கிளுக்கு ஏற்பட்ட கதியே நிகழ்ந்திருக்கிறது.

அவள் தையல் இயந்திரத்தின் போர்வையை அகற்றினாள். தண்ணீர் உள்ளே சென்றிருந்த போதும் சகதி சொற்பமாகவே படிந்திருந்தது. மின்சார மோட்டார் பழுதடைந்திருக்கக் கூடும். புதிய மின்சார மோட்டார் எவ்வளவு விலை வரும் என அவளுக்கு ஒரு கணம் யோசனை எழுந்தது. தைக்கும் புடவைகளை வைத்திருந்த பெட்டியில் படிந்திருந்த சேற்றினிடையே சிறு குழந்தையின் சட்டையொன்றில் பதிக்கப்பட்டிருந்த உருவம் தெளிவாகத் தெரிந்தது. கார்ட்டூன் கதாபாத்திரமொன்று தூண்டிலிடப் போகும் காட்சி அங்கிருந்தது.

சமையலறைப் பக்கம் எட்டிப் பார்க்கவேனும் அவளுக்குத் தோன்றவில்லை. சமையலறை ஒரு படிக்கட்டின் கீழாக அமைந்திருந்தது. அதைப் பார்த்தால் தனக்கு மயக்கமே வரக் கூடுமென அவள் அச்சமுற்றாள். கணவன் குளியலறையை எட்டிப் பார்ப்பதைக் கண்டதும் அவனது தோளின் மேலாக அவளும் எட்டிப் பார்த்தாள். கழிவறையில் தண்ணீர் வற்றியிருக்கவில்லை.

‘கடவுளே, வாழ்நாள் முழுதும் தேடி சம்பாதிச்சது எல்லாமே தண்ணில.. நாங்க திரும்பவும் தலை தூக்குறது எப்படி?” என அவளது வாய் தானாக முணுமுணுத்தது. மாதவிடாய் தோன்றக்கூடிய அறிகுறிகளை இன்று காலையிலிருந்து அவளது உடல் அறிவித்துக் கொண்டிருக்கிறது. அடுக்கடுக்காக சேறும் சகதியும் மூடியிருந்த துண்டுகள், உள்ளாடைகள், சட்டைகள், சேலைகள், கட்டில் விரிப்புகள், தலையணைகள், பிள்ளைகளின் ஆடைகள், கணவனின் ஆடைகள், சட்டிகள், பானைகள், நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த மசாலா, மிளகாய்த் தூள்களிட்ட போத்தல்கள் போன்ற இன்னும் பலவும் அவளது நினைவில் தோன்றிக் கொண்டேயிருந்தன.

“இதையெல்லாம் நாம துப்புரவாக்க முடியாது. எனக்கு இங்க இருக்கவும் பயமா இருக்கு.. வாங்க போகலாம்” என்றாள். சுற்றுச்சூழல் முழுவதும் பாழடைந்து, மர்மமான துயரம் நிரம்பி, பரிதாபத்துக்குரியதாகவிருந்தது. வானம் கூட கரிய மேகங்களால் கனத்துப் போயிருந்தது. மீண்டும் பலத்த மழை பெய்யக் கூடும். அமைதியான துயரம் சூழ்ந்து பாழடைந்த அமைதியைக் குழப்பியவாறு வெட்டுக்கிளியொன்று சிறகடிக்கும் ஓசை கேட்டது.

“நீ போ” என அவளது கணவன் சந்தன கவலை தோய்ந்த கோபத்தோடு கூறுவது கேட்டது.

நிச்சயமாக அவள் போயாக வேண்டும். பன்னிரண்டு வயதான மகளையும், எட்டு வயது மகனையும் பக்கத்துவீட்டுப் பெண்ணின் பாதுகாப்பில் விட்டு வந்திருந்தாள். கணவனினதோ, அவளதோ ஊர்களுக்குச் செல்லக் கூட அவர்கள் எவரிடமும் நல்ல ஆடைகள் எவையும் இப்போது இல்லையென்பது அவளுக்குத் தோன்றியது. எனினும், அவ்வாறு இலகுவில் விட்டுச் சென்றுவிடவும் முடியாத அளவுக்கு அவர்களது வாழ்க்கையானது கொழும்போடு கட்டிப் போடப்பட்டிருக்கிறது. கணவனின் தொழில், அவளது தையல் பணி, பிள்ளைகளின் கல்வி என அனைத்துமே அழுக்கு வாடை வீசும், வடிகான்கள் பெருக்கெடுக்கும், வாகன நெருக்கடியில் இளைப்பாறும், சுவாசிக்கக் கூட முடியாதளவு உஷ்ணமான இக் கொழும்பு நகரத்திலேயே தங்கியிருக்கின்றன.

மகளுக்கு கழிப்பறைக்குப் போக வேண்டிய தேவையேற்பட்டால் கூட அவள் தனியாக வெள்ள நிவாரண முகாமிலிருக்கும் கழிப்பறைக்குச் செல்ல விரும்புவதில்லை. நாலாபக்கமும் மலமும், சிறுநீரும், எச்சிலும், பீடி சிகரெட் துண்டுகளும் பரந்திருக்கும் அப் பாடசாலைக் கழிப்பறைக்குச் செல்ல விருப்பமற்றதால் மகள் மாத்திரமல்லாது அவளும் கூட அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் மாத்திரமே கழிப்பறைக்குச் செல்கின்றனர்.

“ஆஹ் தங்கச்சி… இப்ப நாங்களும் இங்கேதான்… நீங்களும் இங்கேதான் இல்லையா?” என மகள் மாலைவகுப்புக்கு போய் வரும் வேளைகளில் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் முரட்டுப் பையன் ஒரு நாள் அவளுக்கும் கேட்கவே கூறியிருந்தான். எனவே மகளின் பாதுகாப்பு குறித்து நயனாவுக்கு அச்சம் தோன்றியிருக்கிறது.

மகனுக்கு தடிமன் பிடித்திருக்கிறது. மூக்கைச் சிந்தித் துடைக்கவேனும் கைக்குட்டையொன்று இருக்கவில்லை. தண்ணீரில் இறங்கி ஓடியாடி நடப்பதால் அவனது கால்களும் அரிப்பெடுத்திருக்கின்றன. பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு வந்திருந்த வயதான பெண்மணியும் ஒரு நோயாளி. நீரிழிவுக்கும், உயர் குருதியழுத்தத்துக்கும் மருந்து பாவித்துக் கொண்டிருப்பவளின் அனைத்து நோய் மருத்துவப் பத்திரங்களும் கூட வெள்ளத்தில் போய்விட்டிருந்தன.

மகனின் ஆரம்பப் பாடசாலையே வெள்ள நிவாரண முகாமாக ஆகியிருந்தது. வகுப்புக்களிலிருந்த பிள்ளைகளின் உபகரணங்கள், புத்தகங்கள், படைப்புக்கள் ஆகியவை முழுவதுமாக சேதமாகிப் போயிருந்தன. பாதிக்கப்பட்ட இம் மக்கள் இம் முகாமிலிருந்து முழுமையாக வெளியேறும் வரைக்கும் பிள்ளைகளுக்கு பாடசாலை இல்லை. மகனுக்கென்றால் இப் புதிய அனுபவம் மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் இருக்கிறது.

எனினும், மஞ்சள் நிற இருள் சூழ்ந்த மின்குமிழ் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருக்கும், பூச்சிகளும் நுளம்புகளும் நிறைந்த, மக்கள் முணுமுணுக்கும், இருமும், காரித் துப்பும், குடிகாரர்களின் புலம்பும் ஓசைகளும் நிறைந்த முகாமில், இரும்புக் கால்களைக் கொண்ட பாடசாலைக் கதிரைகள் தரையோடு உரசுவதால் உடைந்து போன தரையின் மீது பன்சலை விகாரையால் தரப்பட்ட அழுக்குப் பாயில் உறங்குவதற்கென படுத்திருக்கும்போது ‘அம்மா, நாங்க நம்ம வீட்டுக்குப் போறது எப்போ?’ என மகன் எப்போதும் கேட்பான்.

சந்தன கோபத்திலிருந்தான். நிவாரண முகாமுக்குக் கொண்டு வந்து பகிரப்படும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அவன் பெரிதும் விருப்பமின்றியே வரிசையில் நிற்பான். உணவும், குடிநீரும் தவிர்ந்த வேறெதற்கும் அவன் வரிசையில் நிற்பதில்லை.

‘நாங்க பிச்சைக்காரர்களில்ல.. எங்களுக்கு வேறொண்ணும் தேவையில்ல’ என கோபமாகச் சொல்வான்.

நிவாரணப் பொருட்களைப் பகிரும் குழுவினர் வந்தால் அயல்வீட்டுப் பெண்மணி பிள்ளைகளை மறந்து வரிசையில் முண்டியடிக்கச் சென்றுவிடக் கூடும். உடல் பலம் கொண்ட முரட்டு ஆண்கள் வந்து கொடுக்கப்படுபவற்றைப் பறித்துக் கொண்டு செல்வர். அவர்களில் பலரும் வெள்ளத்தில் சிக்கியவர்களல்ல என பக்கத்து வீட்டுப் பெண்மணி கூறியிருக்கிறாள். பல ஊர்மக்கள் சேர்ந்திருக்கும் முகாம் மிகவும் சிக்கலானது. கிராம சேவக அதிகாரியான பெண்மணியால் மாத்திரம் அச் சிக்கலைத் தீர்ப்பது சிரமமானது.

பக்கத்து வீட்டு பெண்மணியைச் சூழவும் எப்போதும் நிவாரணப் பொருட்கள் நிறைந்திருந்தன. பால்மா, பருப்பு, மீன் டின்கள், சீனி, தேயிலை, ஆடைகள், பயிற்சிப் புத்தகங்கள், பேனைகள், பென்சில்கள், வர்ணப் பெட்டிகள், விளையாட்டுப் பொருட்கள் எனப் பலவற்றையும் பொலிதீன் பைகளில் சேகரித்து வைத்திருந்தாள். அவள் பாவாடை சட்டை அணிபவள். எனினும் மகளிர் அமைச்சினால் கொண்டு வந்து கொடுக்கப்பட்டிருந்த இளம்பெண்களின் உள்ளாடைகளையும் ‘மகளுக்குக் கொடுக்கலாம்’ என இலவசமாக வாங்கி வைத்திருந்தாள். மகள் வந்து நிவாரணப் பொருட்கள் நிரம்பிய பொதிகளை வாங்கிச் சென்றாளே தவிர, தாயை தன்னோடு கூட்டிக் கொண்டு போகவில்லை.

அயலில் வசித்து வந்த திலினி இப்போது ஐந்து மாதக் கர்ப்பிணி. கர்ப்பிணிப் பெண்களை வைத்தியசாலையில் சென்று தங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அவள் அங்கு சென்றால் அவளது ஏனைய இரண்டு குழந்தைகளையும் அவளது கணவனே கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். பிறகு வெள்ளத்தில் சிக்கியுள்ள அவர்களது வீட்டை துப்புரவு செய்வது யார்?

‘கீழே படுக்க, உட்கார, எழுந்திருக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு அக்கா’ என திலினி எப்போதும் கூறுவாள். முகாமில் ஆடை மாற்றுவதில் கூட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மோசமான ஆண்களின் காமப் பார்வை எல்லாப் புறத்திலிருந்தும் மின்சார விளக்குகளைப் போல பளிச்சிட்டுக் கொண்டேயிருக்கின்றன. எவ்வாறாயினும் அதுதான் இப்போது இவர்களின் இருப்பிடம்.

“நாங்கள் போவோம்” எனக் கூறியவாறு நயனா தனது கணவனின் கையைப் பிடித்தாள்.

“நீ போ… என்னால முடியாது” என அவன் கையைத் தட்டி விட்டான்.

இப்போது அவன் மிகவும் கோபமுற்றிருக்கிறான். முகாமில் ஒருவன் திடீரென கதிரைகளைக் கீழே தள்ளிப் பாய்ந்து தனது மனைவியைத் தாக்கியதை அவள் நேற்று காண நேர்ந்தது. ஏனையவர்கள் அவனைப் பிடித்து வேறு புறத்துக்கு இழுத்துச் சென்றனர். குழப்பத்தைக் கண்ட பொலிஸ் அதிகாரி சப்பாத்துக் கால்களுடன் நயனாவின் பாயை மிதித்தவாறு கடந்து சென்றார். அந்தச் சப்பாத்துக்களில் என்னென்ன அழுக்குகள் மிதிபட்டிருக்கக் கூடும்?

முகாமுக்குச் சென்ற நாளிலிருந்து குளிக்கவில்லை. பாடசாலையில் புதிதாக இணைக்கப்பட்டிருந்த தண்ணீர்க் குழாயினருகே கால்களில் ஒட்டிக் கொள்ளுமளவுக்கு சேறு நிறைந்திருந்தது. அவளது தலை அரிப்பெடுத்தது. தலைமயிர்களிடையே விரலை நுழைத்துப் பார்த்தாள். அழுக்கு எண்ணெய்ப் பிசுக்கு அங்கிருந்தது. கால்களும் அரிப்பெடுத்தன.

“மகளை நினைச்சாப் பயமாயிருக்கு… வீட்டைத் துப்புரவாக்க உதவுங்கன்னு, உதவிக்கு வந்திருக்குற அந்தத் தம்பிகள்ட சொல்லுவோம். வாங்க இப்ப போகலாம்.”

மகளின் நிலையைப் பற்றிச் சொன்னதும் சந்தனவின் மனம் மாறுவதை நயனா உணர்ந்தாள்.

***************
mrishanshareef@gmail.com

பெருந்தலைக் காதல் ( FAT FACED PASSION ) ருஷ்ய மொழி : மாக்சிம் கார்க்கி MAXIM GORKY / ஆங்கிலம் வழி தமிழில் ச.ஆறுமுகம்

download (62)

அது, கோடைகாலப் புழுக்கமான இரவு. குடிகாரப் பெண் ஒருத்தி சேற்றுக் குட்டைக்குள் முழங்கால் மூழ்க, இறங்கி நின்று விரசப்பாடல் ஒன்றின் இராகத்துக்கு உடலசைத்து ஆடிக்கொண்டிருக்கிறாள். அந்தவழியே வருகிற அந்நியன், இருபத்தொரு வயது லியோனிட், அந்தப்பெண் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கிவிடுவாளோவெனப் பயந்து, அவளைக் குட்டையைவிட்டு வெளியே இழுக்கிறான். அவளோ, அந்த அந்நியனை முறைத்து விரட்டி, உதவி,உதவியெனக் கூச்சலிட்டு, மீண்டும் குட்டைக்குள் செல்ல விரைகிறாள். இரவுக் காவலன் அங்கு வந்து, அந்தப் பெண் உள்ளூர் மாஷா தான் எனக் கண்டுகொள்கிறான். கால்கள் ஊனமுற்ற ஒரு மகனிருக்கிற அவள் தினமும், ஒருநாள் இரவு கூடத் தவறாமல் இப்படித்தான் பிரச்சினை செய்கிறாள். இருவருமாகச் சேர்ந்து அவளை வீட்டில்கொண்டுபோய்ச் சேர்த்துவிடலாமென லியோனிட் யோசனை சொல்கிறான். அவனுக்கு விருப்பமானால், அவன் அப்படிச் செய்துகொள்ளலாமென்றும், ஆனால், அதற்குமுன் அவள் முகத்தை ஒருமுறை பார்த்துவிடுமாறும் அறிவுரை சொல்லிவிட்டு, அந்த இரவுக்காவலன் இடத்தை விட்டகன்று செல்கிறான்.

மீண்டும் மாஷாவைத் தண்ணீரிலிருந்து இழுத்துக்கொணர்ந்த லியோனிட் இம்முறை அவளது முகத்தைப் பார்க்கிறான் – தழும்புகள் நிறைந்து, விகாரமாகச் சிதைந்த ஒரு முகம். லியோனிட் அவளை, அவளுடைய தூய்மையற்ற அடித்தளக் குடியிருப்பில்லத்துக்கு அழைத்துச் செல்கிறான். அவர்கள் உள்ளே நுழையும்போது, மாஷாவின் 12 வயது மகன், அவன் பெயரும் லியோனிட்தான், லயாங்கா எனச் சுருக்கமாக அழைக்கப்படுபவன் விளக்கினை ஏற்றுகிறான். மாஷா, அப்படியே படுக்கையில் விழுந்து, ஆழ்ந்து உறங்கத் தொடங்குகிறாள். லியோனிட் அவளது ஈர உடையைக் களைந்து சூட்டடுப்பின் மீது காயப் போடுகிறான். அவன் அங்கேயே தங்கி, மாஷாவுடன் படுத்துக்கொள்ளப் போகிறானாவென, லயாங்கா கேட்கிறான். ………. அப்படித்தான் எல்லோரும் செய்வதாகச் சொல்கிறான், சிறுவன், லயாங்கா.

அவனுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பினை மறுதளித்த லியோனிட், கால்கள் இழந்த சிறுவனுடன் பேசுவதற்காக அமர்கிறான். சிறுவன் மகிழ்ச்சியோடு அவனது உயிரினச் சேகரிப்புகளைக் காட்டுகிறான்: சிறுசிறு பெட்டிகளில் ஈ, கரப்பான், பூச்சிகள், வண்டுகள்; பல்வகைப் பண்பியல்புகளையும் அவற்றின் மீது ஏற்றி, அதற்கேற்ப அவற்றுக்குப் பெயர்களையும் சூட்டியுள்ளான். ஒரு இராணுவத்தான் போல் தற்புகழும் அனிசிம் என்ற பெயரில் ஒரு கரப்பான், ஒன்றுக்கும் உதவாத ஒரு உண்மையான கழிசடை `அதிகார வர்க்கத்தினன்` (பியூரோகிரட்) என்ற பெயரில் ஒரு ஈ, எதற்குமே பயனில்லாத, வெட்கங்கெட்ட ஒரு குடிகார `நிலப்பிரபு` என மற்றொரு கரப்பான். விட்டில் மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் தாம் அங்கே இல்லை. அது துரதிர்ஷ்டம் தான்.

நெஞ்சு நிமிர்ந்த ஒரு புன்னகை முகத்தோடு, அவனது அம்மா ஒரு மாபெரும் ஆளுமை என்கிறான், லயாங்கா. கொஞ்சம் அதிகக் குடி அவ்வளவுதான், என்றும் சொல்கிறான்.

லியோனிட் ஒரு திருடன் போலிருப்பதாக லயாங்கா நினைக்கிறான்; ஆனால், அவன் ஒரு க்வாஸ் மது விற்கும் பணியாளன்தானென்பதைப் பின்னர் கண்டுகொள்கிறான். அந்தச் சிறுவனை லியோனிடுக்கு மிகவும் பிடித்துவிட, அவன் கண்டிப்பாக மீண்டும் வந்து பார்ப்பதாகச் சிறுவனுக்கு உறுதி கூறுகிறான். சிறுவன் அவனிடம், கொஞ்சம் க்வாஸும் அவனது பூச்சிகளுக்காகக் கொஞ்சம் பெட்டிகளும் கொண்டுவருமாறு கேட்கிறான்.

வீட்டுக்குத் திரும்பியபின், லியோனிட் ஒரு கடைக்குச் சென்று, அழகும் நேர்த்தியும் கொண்ட சில பெட்டிகளை வாங்குகிறான். அவன் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள சிறுவர்களிடம் பூச்சிகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளைப் பிடித்துவரச் சொல்கிறான். பின்னர், பூச்சிகள், பெட்டிகள், அப்பங்களுடன் வட்டரொட்டிகளையும் எடுத்துக்கொண்டு லயாங்காவிடம் செல்கிறான். பரிசுப் பொருட்களைக் கண்டதும் வியப்பில் அதிர்ந்துபோகிற லயாங்கா, அந்தப் பெட்டிகளைத் தொடும் முன்பு கைகளைக் கழுவிவிடச் சொல்கிறான். மாஷா, மகனைக் கட்டிப்பிடித்துச் செல்லம் கொஞ்சுகிறாள். புதுவரவுப் பூச்சிகளில் ஒன்று, பெண் தோழிகளைப் பிந்திய இரவுகளில் சந்திப்பதற்காகச் சாளரங்களில் ஏறுவதற்கு வசதியாகக் கயிற்று ஏணி செய்யுமாறு மாஷாவைக் கூலிக்கமர்த்திய துறவியைப் போலவே இருப்பதாக, லயாங்கா, அவளிடம் சொல்கிறான். தேநீர்ப் பானையை அடுப்பில் ஏற்றுமாறும் சொல்கிறான். சர்க்கரை வாங்கிவருமாறு மாஷாவிடம் லியோனிட் காசு கொடுக்கிறான். புறப்பட்டுச் செல்கிற மாஷாவிடம், லயாங்கா, அவனது அடித்தளச் சாளரத்தை, வெளி உலகத்தைப் பார்க்க வசதியாக, அப்படியே சுத்தம் செய்துவிடுமாறு சொல்கிறான்.

அவள் சென்ற பின்னர், அவனது அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடல்களில் ஒன்றைப் பாடத் தொடங்குகிறான், லயாங்கா; இருந்தாலும், வெளியே ஒரு ஆர்மோனியத் தெருப்பாடகன் பாடும் சத்தத்தைக் கேட்டு, பாடுவதை நிறுத்துகிறான். சாளரம் வழியாகப் பார்ப்பதற்காக, அவனைத் தூக்கிக் காட்டுமாறு லியோனிடைக் கேட்கிறான். லியோனிட் அப்படியே செய்கிறான். அக்கம்பக்கத்தினர் சிலர், அந்த ஆர்மோனியத் தெருப்பாடகனை அங்கிருந்து துரத்துகின்ற வரையில், அவன் இசைப்பதைப் பார்த்தும் இசையினைக் கேட்டும் பரவசமாகிறான், லயாங்கா.

பின்னர், லயாங்கா, அவனுக்கு ஏற்படும் திகில் கனவுகளைப் பற்றி லியோனிட்டிடம் சொல்கிறான். ஒரு முறை அவன் தலைகீழாக வளரும் ஒரு மரத்தைக் கனவுகண்டான்; வேறொரு நாள் நாய் ஒன்று அவனது அம்மாவின் குடலைக் கடித்துத் தின்று, தின்று வெளியே துப்பியது. ஆனாலும், அவனொன்றும் அந்தத் திகில் கனவுகளால் பயந்துவிடவில்லை, என்கிறான், அவன்.

லியோனிட் கொண்டுவந்த மிட்டாய்களில் ஒன்றைத் தின்றுமுடித்த அவன், தாளினைக் கவனமாகத் தடவி, அழுத்திச் சமப்படுத்துகிறான். அவனது ஒரே தோழியான தண்ணீர் சுமக்கும் கட்காவுக்கு ஏதேனும் அழகுப்பொருள் செய்வதற்கு, அவன் அதை உபயோகப்படுத்திக்கொள்வான். கண்ணாடித் துண்டுகள், மண்பாண்டம் மற்றும் அட்டைத் தாள் துண்டுகள் போன்ற அழகான பொருட்களை மட்டுமே அவள் விரும்புகிறாள்.

பின்னர் லயாங்கா, “ கரப்பான் பூச்சி ஒன்றுக்குப் போதிய அளவுக்குத் தீனி கொடுத்தால் ஒரு குதிரை அளவுக்குப் பெரியதாக வளருமா?” எனக் கேட்கிறான். அந்தச் சிறுவன் அதனை நம்புவதைப் பார்த்து, லியோனிட் `ஆம்` என்கிறான். லயாங்காவுக்கு மகிழ்ச்சி; அவனது அம்மா இந்தப் பேச்சினைக் கேட்டு நகைப்பதாகக் கூறுகிறான். ஈக்களை நாய்கள் அளவுக்கும் கரப்பான்களை குதிரைகள் அளவுக்கும் பெரியனவாக வளரச்செய்வதாகக் கனவுகாண்கிறான். அந்தக் கரப்பான்களை செங்கல் இழுக்கப் பயன்படுத்த முடியும்; அதற்கான கட்டுக்கயிறுகளாக அவற்றின் உணர்கொம்புகள் பயன்படும். அப்படியான இராக்கதக் கரப்பான்களை விற்று அந்தப் பணத்தை, லயாங்கா, அவனது அம்மாவுக்காக திறந்த வெளியில் ஒரு வீடு வாங்குவதற்குப் பயன்படுத்தமுடியும்.

லியோனிட் எப்போதாவது திறந்த வயல்வெளிக்குச் சென்றிருக்கிறானாவென சிறுவன் கேட்க, அவன், வயல்களையும் சமவெளிகளையும் விவரிப்பதைக் கண்ணிமைக்காமல், ஆர்வத்துடன் கேட்கிறான். திறந்த ஒரு வெளியினை அவன் பார்க்க விரும்புவதாகவும், அப்படி எப்போதாவது அங்கு செல்ல நேர்ந்தால், அவனுடைய உயிரினச் சேகரிப்புகளையும் எடுத்துச் சென்று, வயலில் விட்டுவிடுவானென்றும் கூறுகிறான்.

மாஷா, சர்க்கரை மற்றும் வோட்காவுடன் வீடு திரும்புகிறாள். அம்மா, அவனது சாளரத்தைத் தூய்மைப்படுத்தாதபோது மட்டும் அவனுக்கு அம்மா மீது கிறுக்குத்தனமான கோபம் ஏற்படுகிறதென்கிறான், லயாங்கா. தேநீர் வழங்கப்படுகிறது. லயாங்கா பெரியவனாக வளரும்போது, அம்மா, அவனுக்கு ஒரு வண்டி செய்து தருவாளென்றும் அதில் சென்று அவன் நகருக்குள் பிச்சையெடுப்பானென்றும் அவன் சொல்கிறான். அதோடு, அவன் ஒரு திறந்த வெளி வயலையும் பார்ப்பானாம். திறந்த வயல் என்னமோ சொர்க்கமாக இருக்குமென்று அவன் கற்பனைசெய்வதாகச் சொல்லிச் சொல்லி, அம்மா சிரிக்கிறாள். அங்கே, தொல்லைகொடுக்கும் இராணுவத்தான்களோடு குடிகார உழவர்களையும் சிறைமுகாம்களையும் அவன் காணவேண்டியிருக்குமென்று அம்மா நினைவூட்டுகிறாள். அவர்களும் குழந்தைகளாகிவிட்டதைப் போலவே இது குறித்த விவாதத்தில் ஈடுபட்டனர்.

லயாங்கா நன்கு களைத்துவிட்டிருந்தான்; இருந்தாலும், லியோனிட் அவனைவிட்டுப் போய்விடுவானென்ற பயத்தினால் தூங்க விரும்பவில்லை. அவனைத் தங்கச்செய்வதாக மாஷா வாக்குறுதி கொடுக்கிறாள். தூங்கிவிழும் முன்பு, லயாங்கா, அம்மாவிடம், அவள் லியோனிடைத் திருமணம்செய்ய வேண்டுமென்கிறான்…. அவன் நல்லவன், அவளை அடிக்க மட்டுமே செய்கிற மற்றவர்களைப் போல் இல்லை.

சிறுவன் ஆழ்ந்து தூங்கியதும், வாழ்க்கையில் அவளுக்கான ஒரே ஆறுதல் லயாங்கா தானென்றும் அவனை நினைத்து அவள் ரொம்பவே பெருமைப்படுவதாகவும் மாஷா, லியோனிட்டிடம் கூறுகிறாள். அவனுடைய தந்தை, அவள் பணிப்பெண்ணாக வேலை பார்த்த பழைய நோட்டரி என்றும் கூறுகிறாள்.

அந்த நாளினை லயாங்காவுக்கான விடுமுறை நாளாகச் செய்ததற்காக, மாஷா, லியோனிட்டுக்கு நன்றி சொல்கிறாள். அவளது கையினை, அவனது மூட்டின் மீது வைத்துக்கொண்டு, அவனுக்குத் திருப்பிச் செலுத்த விரும்புவதாக அவள் பரிவுடன் சொல்கிறாள். லியோனிட் அந்த வாய்ப்பினை மறுதளிக்க, அவன் விரும்பினால் அவள் தனது முகத்தைக் கூட மூடிக்கொள்வதாகக் கூறுகிறாள். அப்போது தான், லயாங்கா தூக்கத்தில் ஏதோ முணுமுணுக்கிறான். மாஷா அன்பு மேலிட, மகனருகில் செல்கிறாள். அமைதியாக அங்கிருந்து கிளம்பிய லியோனிட் அடித்தளச் சாளரத்தைக் கடக்கும்போது, மாஷா அவளது மகனுக்காகப் பாடும் வித்தியாசமான ஒரு தாலாட்டு அவன் காதில் விழுகிறது.

பெருந்தலைக் காதல்கள் எழுந்துவருகின்றன

வரும்போதே பேரழிவைக் கொண்டுவருகின்றன

அவை பேரழிவைக் கொண்டுவருகின்றன

உன் இதயத்தை, அவை, சுக்குநூறாக்கும்!

ஓ, துரதிர்ஷ்டமே, ஓ, துரதிர்ஷ்டமே,

நாங்கள் எங்கே போய் ஒளிந்துகொள்வது, எங்கே?

துக்கத்தில் எழுகின்ற ஓலத்தைத் தடுக்க, பல்லைக் கடித்துக்கொண்டு அவன் விரைந்தோடுகிறான்.

*****

இத்தமிழாக்கம், நொய்டா, மாப்பிள் பிரஸ் பிரைவேட் லிட், தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷிய சிறுகதைகள், 2017 தொகுப்பிலுள்ள Fat Faced Passion ஆங்கிலப் பிரதியை அடிப்படையாகக் கொண்டது.

கடவுளின் பறவைகள் / மியா கூட்டோ (மொஸாபிக், தென்கிழக்கு ஆப்ரிக்கா) / தமிழில்: பாலகுமார் விஜயராமன்

download (53)

மியா கௌட்டோ (1951) தென்கிழக்கு ஆப்ரிக்க நாடான மொஸாம்பிக்கைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் மற்றும் எழுத்தாளர்.

இவர் பிறந்தது, கல்வி பயின்றது, மொஸாம்பிக்கின் இரண்டாவது பெரிய நகரமான பெய்ரியில். இவரது பதினான்ங்காவது வயதில், இவரது கவிதைகள் சில உள்ளூர் செய்தித்தாளான “நோட்டிஸியாஸ் டா பெய்ரா”வில் வெளியாகியது. மார்சிஸ்ட் ராணுவ பரப்புரையின் ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட, இவரது முதல் கவிதைத் தொகுப்பு 1983ம் ஆண்டு பிரசுரமாகியது.

மொஸாம்பிக்கின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக போற்றப்படுகின்ற மியா கௌட்டோவின் படைப்புகள், இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில், ஆங்கிலம், ஃபிரன்ச், ஜெர்மன், செக், இட்டாலியன், செர்பியன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மொஸாம்பிக்கில் உள்ள வட்டார சொல் அகராதியிலும், அமைப்பிலும் போர்ச்சுகீய மொழியை உள்ளீடு செய்து அதனை மீளுருவாக்கம் செய்யும் கலை, இவரது பல படைப்புகளில் காணப்படுகின்றது. ஸிம்பாவே சர்வதேச புத்தக விழாவில் அமையப்பெற்ற சர்வதேச சான்றாயத்தால், இவரது முதல் புதினமான, “உறக்கத்தில் நடக்கும் நிலம்” இருபதாம் நூற்றாண்டு ஆப்ரிக்க இலக்கியத்தின் மிகச்சிறந்த 12 புத்தகங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்பொழுது, இவர் தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்தவாறே, உயிரியல் வல்லுநராகவும் பணியாற்றி வருகிறார். சினுவா ஆச்செபே மற்றும் சி.எல்.இன்னெஸ் 1992ம் ஆண்டு தொகுத்த, ”தற்கால ஆப்ரிக்க சிறுகதைகள்” தொகுப்பில் “கடவுளின் பறவைகள்” என்னும் இக்கதை இடம்பெற்றுள்ளது.

••••

மன்னித்துக் கொள்ளுங்கள், ஒரு யாத்திரிகனைப் போல எனக்கு நதியைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. நீரலைகள் முடிவற்ற பயணத்தில் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. எவ்வளவு காலமாக இப்படி பயணித்துக் கொண்டே இருப்பது, நீரின் வேலையாக இருந்திருக்கிருக்கும்? தனது பழைய வள்ளத்தில் தனியாக அமர்ந்திருந்த எர்னெஸ்டோ டிம்பா, தனது வாழ்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். பனிரெண்டாவது வயதில், நதியிலிருந்து மீன்களைப் பிடிக்கும் தொழிலுக்குள் வந்தான். கடந்த முப்பது வருடங்களாக, எப்பொழுதும் அவனது நிழல், நதியின் நீரோட்டத்தின் அலைவுகளிலும், ஒரு நதிவாசியின் விதிமுறைகளையே பிரதிபலித்திருக்கிறது. ஆனால், இது எல்லாம் எதற்காக? பஞ்சம் பூமியை சாரமிழக்கச் செய்துவிட்டது, விதைகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டன. மீன் பிடித்தலில் இருந்து அவன் திரும்பிய பொழுது, தங்கள் பார்வையால் அவனைக் கழுவேற்றும் அவனது மனைவியிடமிருந்தும், குழந்தைகளிமிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள அவனிடம் எதுவுமில்லை. அவர்களின் கண்கள் நாயினுடையதைப் போல இருக்கும். அதனை ஒத்துக் கொள்ள அவன் மனம் விரும்புவதில்லை, ஆனால் உண்மையில், பசி மனிதர்களை மிருகங்களைப் போல ஆக்கிவிடுகிறது.

தனது துயரங்களைப் பற்றி யோசித்தவாறே, டிம்பா லாவகமாகவும் மெதுவாகவும் துடுப்பை இயக்கினான். அவன் தனது சோக எண்ணங்களை மறக்க எண்ணியவனாக, மஃபூர்ரெய்ரா மரத்தின் கீழ், நதி குறுகலாக ஓடும் பகுதியின் கரையில் வள்ளத்தை நிறுத்தினான். துடுப்பு நீரைக் கொந்திபபடி இருக்க, வள்ளம் அசையாமல் நின்றது. ஆனால் அவனால் தனது எண்ணங்களை நிறுத்த முடியவில்லை.

’என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்? தண்ணீர், தண்ணீர், அது தவிர வேறொன்றுமில்லை.’

அந்த நினைவுகள் அவனை முன்னும் பின்னுமாய் அலைக்கழிக்க, வள்ளம் அவனது வேதனையைப் பெருக்குவதாய்த் தோன்றியது.

”ஒரு நாள், இவை நதிக்குள் மூழ்கி, என்னை தண்ணீருக்கு வெளியே தூக்கி எறியத்தான் போகின்றன”

நீரின் வேர்களில் இருந்து கிழித்தெடுக்கப்படுவனைப் போல, அவன் சகதியிலிருந்து இழுக்கப்படுவதை அவனது மனைவியும் குழந்தைகளும் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல முன்னுணர்ந்தான்.

தலைக்கு மேலே மஃபூர்ரெய்ரா, சூரியனின் கடுமையான வெப்பத்தை மறைத்து நின்று கொண்டிருந்தது. ஆனால் டிம்பா மரத்தை கவனிக்கவில்லை, அவனது கண்கள் ஆன்மாவிற்குள் உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அவனது வலி, பார்வையின் ஒளியை மறைக்கும் தூசாகவும், அதனால் அவன் கண்கள் பார்வையிழந்ததைப் போலவும் உணர்ந்தான். பொழுது, இன்னும் மேலே சென்று கொண்டிருந்தது, வானம் அடர் நீலமாய் மாறுவதை அவன் உணர்ந்தான்.

’நான் கடல்வாழ் உயிரனமாக இருந்திருந்தால்,’ அவன் பெருமூச்செறிந்தான்.

அவன் தனது வாழ்வின் முப்பது வருடக் களைப்பின் பாரத்தை உணர்ந்தான். அவனுக்கு தைரியத்தைக் கற்றுத் தருவதற்காக அவனது அப்பா சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தான்.

”அங்கே, வேட்டைக்காரனைப் பார், அவன் என்ன செய்கிறான்? மானைப் பார்த்த நொடி, தனது வேல்கம்பில் குறிபார்க்கத் தயாராகிறான். ஆனால் மீனவனால், நதியினுள் இருக்கும் மீனைப் பார்க்க முடியாது. மீனவன் தன்னால் காணமுடியாத ஒன்றை நம்பி களத்தில் இறங்குகிறான்.’

விதிக்கப்பட்ட வாழ்க்கைக்கான பாடமும் அது தான். அவன் தந்தையின் அறிவுரையை இப்பொழுது நினைத்துப் பார்த்தான். நேரமாகிக் கொண்டே இருந்தது, வீட்டுக்குப் போகும் நேரம் ஆகிவிட்டது என்பதை பசி அவனுக்கு உணர்த்தியது. மேகங்களைத் தாண்டி, மேலே வெற்றுப் பார்வை பார்த்தபடி, அவன் கையை அசைக்கத் துவங்கினான். அப்பொழுது, ஒரு பெரிய பறவை ஆகாயத்தில் பறந்தது. ஆளுமை பொருந்திய ஒரு பேரரசனைப் போல அது தோற்றம் கொண்டிருந்தது. உயரே சிறகு விரித்துப் பறந்த பறவை, அவனது பார்வையில் பட்டது. அவனையும் அறியாமல் உள்ளூர ஓர் ஏக்கம் அவனுள் வேர்விட்டது. அவன் நினைத்தான்:

’இப்பொழுது அந்தப் பறவை, எனது வள்ளத்தில் விழுந்தால் எப்படி இருக்கும்!’

அவன் அந்த வார்த்தைகளை உரக்கக் கூறினான். அவன் சொல்லி முடிப்பதற்குள், அந்தப்பறவை தனது பெரிய சிறகுகள் துடிதுடிக்க, வேகமாக சுழன்றபடி, அவனது வள்ளம் நோக்கி கீழ்நோக்கி விழத்துவங்கியது. அது ஏறக்குறைய இறந்ததைப் போல, வள்ளத்தில் விழுந்தது. டிம்பா காயம்பட்ட பறவையை எடுத்துக் கைகளில் ஏந்தினான். இரத்தவோட்டம் இயங்க, பறவை உயிரோடு தான் இருந்தது. சிறிது நேரத்தில், மெதுவாக உடல்நலம் தேறிய அப்பறவை, பிழைத்துக் கொண்டதற்கு அறிகுறியாக, வள்ளத்தின் முன்முனையில் ஏறி நின்றது. டிம்பா அதனைப் பிடித்து, அதன் மாமிசம் எத்தனை நேர சாப்பாட்டுக்கு வரும் என்று எண்ணியவாறு அதன் எடையை கணக்கிட்டான். நொடியில் அவன் அந்த எண்ணத்தை மனதில் இருந்து அகற்றி, சிறு உற்சாகத்தோடு, அந்தப்பறவை பறந்து செல்ல உதவினான்.

’உன் வாழ்க்கைக்குத் திரும்பிப் போ, பறவையே!’

ஆனால் ஒன்றும் ஆகவில்லை. அந்தப்பறவை அசையக் கூட இல்லை. அதைப்பார்த்து அவன் அதிசயித்தான்: அது பறவையே அல்ல, அது கடவுளின் சமிக்ஞை. ஆகயத்திலிருந்து வரும் எச்சரிக்கை, தனது மன அமைதியை என்றென்றுக்குமாய் அழித்து விடும் என்று நம்பினான்.

அந்த பறவையை எடுத்துக்கொண்டு, அவன் தனது கிராமத்திற்குத் திரும்பினான். அவனது வருகையை அவன் மனைவி கொண்டாடினாள்:

’இந்தப் பறவையை மதிய உணவுக்குத் தயார் செய்யலாம்!’

பரவசமடைந்தவளாய், அவள் குழந்தைகளை அழைத்தாள்:

’குழந்தைகளே, இங்கே வந்து கொழுத்த பறவையைப் பாருங்கள்.’

பதிலேதும் சொல்லாமல், டிம்பா பறவையை விரிப்பின் மீது வைத்து விட்டு, வீட்டின் பின்புறம் சென்று மரத்தட்டிகளையும், கம்பிகளையும், நாணல்களையும் சேகரித்தான். பின் அவற்றைக் கொண்டு, ஒரு மனிதன் தாராளமாக நிமிர்ந்து நிற்கும் அளவிற்கான பெரிய கூண்டு ஒன்றைத் தயாரித்தான். அவன் அந்தப்பறவையை கூண்டிற்குள் விட்டு, அன்று பிடித்து வந்த மீனை அதற்கு உணவாகக் கொடுத்தான்.

அவனது செய்கை கண்டு அவனது மனைவி திடுக்கிட்டாள்: அவனுக்குப் பைத்தியம் தான் பிடித்து விட்டது. நேரம் கடந்தது, டிம்பா மட்டுமே அந்தப்பறவையை கவனித்துக் கொண்டான்.

அந்தப்பறவையைப் பார்த்தவாறு அவனது மனைவி கேட்பாள்:

’பசி நம்மை எப்படி வாட்டி வதைக்கிறது. இதனைக் கொன்று உணவாக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?’

டிம்பா வேகமாக கையை ஓங்குவான், ‘ஒரு போதும் இல்லை! பறவை மீது யார் கை வைக்கிறார்களோ, அவர்கள் கடவுளால் தண்டிக்கபடுவார்கள், வாழ்க்கை முழுதும் அவர்கள் சீரழிவார்கள்.’

நாட்கள் சென்றன, மீனவன் தெய்வீக எண்ணங்களுக்கான புதிய சமிக்ஞைகளுக்காக காத்திருந்தான். எண்ணற்ற தடவைகள், வியர்க்கும் மதிய வெப்பத்தில், அமைதியான நதியின் முன் அமர்ந்து, மருகியபடி இருந்தான். சூரியன் மறைந்த பிறகு, அவன் கூண்டிற்கு அருகில் சென்று, பறவை நன்றாக வளர்ந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருப்பான். சிறிது சிறிதாக, அந்தப் புனதப்பறவையின் மேல், சோகத்தின் நிழல் படிவதை அவன் கவனித்தான். பறவை, தனிமையினால் அவதியுறுவதை அவன் புரிந்து கொண்டான். ஓர் இரவு அவன் கடவுளிடம், தனித்திருக்கும் பறவைக்கு ஒரு துணையை அனுப்புமாறு வேண்டினான். அடுத்த நாள், கூண்டுக்குள் ஒரு புதிய பெண் பறவை இருந்தது. டிம்பா அந்த புதிய பரிசிற்காக கடவுளுக்கு மனதுக்குள் நன்றி கூறினான். அதே நேரம் பதட்டம் அவனுள் வேர்விட்டது: இந்தப்பறவைகளை பாதுகாக்கும் பொறுப்பை கடவுள் ஏன் தன்னிடம் ஒப்படைத்தார்? அவை கொண்டுவந்திருக்கும் செய்தி என்னவாயிருக்கும்?

அவன் யோசித்துக் கொண்டே இருந்தான். அந்த சமிக்ஞை, அந்த பளிச்சிடும் வெள்ளை இறகுகள், அவை எல்லாம் கடவுளின் விருப்புவெறுப்புக்கூறு மாறப்போவதை உணர்த்துவதாகவே தோன்றியது. மனிதர்கள் ஆகாயத்திலிருந்து வந்திருக்கும் அந்தத் தூதுவர்களிடம், தங்கள் கருணையைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயாரானால், பஞ்சம் முடிவுக்கு வந்து, மழைக்கான பருவம துவங்கி விடும். நதியின் ஏழை மீனவன், கடவுளின் தூதுவர்களுக்கான பாதுகாவலனாக நியமிக்கப்பட்டிருக்கிறான். மனிதர்கள் இன்னும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள் என்று நிரூபிக்க வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது. ஆம், இத்தையை உண்மையான நற்குணங்கள், செழிப்பாக இருக்கும் நேரங்களில் அளவிடப்படுவதில்லை, மாறாக மனிதர்களின் உடல்களில் பசி நாட்டியமாடும் பொழுது தான் கணக்கிடப்படுகின்றன.

வயலில் இருந்து திரும்பி வந்த அவனது மனைவி, அவனது எண்ணங்களை இடைமறித்தாள்:

’என்ன, இப்பொழுது இரண்டு பறவைகளாகி விட்டதா?’

அவள் அவன் அருகே வந்து, அவன் உட்கார்ந்திருந்த அதே பாயில் தானும் உட்கார்ந்து, அவன் கண்களை ஆழமாக ஊடுருவிப் பார்த்தபடி கேட்டாள்:

’இங்கே பார், வெறும் பானை அடுப்பில் காய்கிறது. இதில் ஒன்றைக் கொடுத்தாலும் சமையலாக்கி விடலாம், ஒன்றே ஒன்று.’

அது வெறும் நேர விரயம். யாராவது அந்த தெய்வீகப் பறவைகளை மோசமாக நடத்தினால், அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்குமென்று அவன் எச்சரித்தான்.

சிறிது நாட்களில் அந்த ஜோடிப்பறவைகளுக்கு குஞ்சுகள் பொரித்தன. மொத்தம் மூன்று குஞ்சுகள், அவை அருவருப்பாகவும், அசிங்கமாகவும் தோற்றமளித்தன. அவற்றின் அலகுகள் எப்பொழுதும் உணவுக்காக திறந்தபடியும், நதியையே உட்கொள்ளும்படியான பசியோடும் இருந்தன. அந்தக் குஞ்சுகளின் பெற்றோர்கள் சார்பாக, டிம்பா கடுமையாக உழைத்தான். ஏற்கனவே தட்டுப்பாடாய் இருந்த வீட்டு உணவுப்பொருட்கள் அனைத்தையும் பறவைகளுக்கே அளித்தான்.

கிராமம் முழுவதும் வதந்தி பரவியது: எர்னெஸ்டோ டிம்பா முற்றிய பைத்தியமாகிவிட்டான். அவனது சொந்த மனைவியே பல எச்சரிக்கைகளுக்குப் பிறகு, குழந்தைகள் அனைத்தையும் அழைத்துக் கொண்டு, வீட்டை விட்டு சென்றுவிட்டாள். குடும்பம் தன்னுடன் இல்லாததைக் கூட டிம்பா கவனிக்கவில்லை. அவன் பறவைகளைப் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். அவன் தன்னைச்சுற்றி வஞ்சம் தெறிக்க, பொறாமையின் நிழல் படிவதை உணர்ந்தான். அவன் தேர்ந்தெடுக்கப்பட்டது அவனுடைய குற்றமா? அவனுக்குக் கிறுக்குப்பிடித்துவிட்டதென ஊரார் கூறினர். ஆனால் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன், எப்பொழுதும் தனிவழியே சஞ்சரிப்பவனாகவே இருப்பான்.

பிறகு, ஒரு மதியப்பொழுதில் அவன் நதியில் தன் வேலையை முடித்தபிறகு, நிலையாமையின் எண்ணம், அவன் மனதில் கொழுந்து விட்டு எரிந்தது: பறவைகள்! அவன் வீட்டிற்கு விரைந்து செல்ல முடிவெடுத்தான். அவன் கரையை நெருங்குகையில், அவன் வீட்டைச் சுற்றியிருந்த மரங்களிலிருந்து புகை மேல் எழும்பி வருவதைப் பார்த்தான். அவன் நதிக்கரையை நோக்கி வேகமாக வள்ளத்தை துடுப்புப் போட்டு இயக்கினான். கரையை அடைந்ததும், வள்ளத்தைக் கூட கட்டாமல், வேகமாக குதித்து, துயர நிகழ்வை நோக்கி ஓடினான். அவன் வீட்டை அடைந்ததும், அங்கே பார்க்கக் கிடைத்ததெல்லாம், வெறும் சிதைவுகளும், சாம்பலும் மட்டுமே. மரத்தட்டிகளும், கம்பிகளும் தீயினால் முற்றிலுமாக அழிந்து போயிருந்தன. எரிந்து போன மரத்துண்டுகளுக்கு நடுவே, ஒரே ஒரு இறக்கை மட்டும், நெருப்பு தீண்டாமல், தன்னைக் காத்துக் கொண்டது போலக் கிடந்தது. பறவை நெருப்புப் பிழம்பிலிருந்து தப்பிப்பதற்காக தன் உடலை உதறியிருக்கலாம், அதில் ஒரு இறக்கை மட்டும் தனியே விழுந்திருக்கும், அதிலொரு சிறகு கெடுநிமித்தமாக பேரழிவைக் குறிப்பது போலக் கிடந்தது. இறந்த உயிர்களின் மன உறுத்தலைப் போல, அது இங்குமங்கும் அசையாமல், விறைப்போடு, நிண்ணயத்தை போதிப்பது போலக் கிடந்தது.

டிம்பா திகைத்துப் போய் பின்வாங்கினான். அவன் மனைவியை, குழந்தைகளை நோக்கிக் கத்தினான். பின் அங்கு ஒருவரும் இல்லையென்பதை உணர்ந்து, தாரை தாரையாக கண்ணீர் வழிய, கண்கள் ரணமாகும் வரை அழுதான்.

ஏன்? ஏன் அவர்கள் அந்தப்பறவைகளைத் துன்புறுத்தினார்கள்? அவை எவ்வளவு இனிமையாக இருந்தன? பிறகு அவன், அங்கே சாம்பலுக்கும் புகைக்கும் நடுவில் நின்றபடி, கடவுளிடம் மன்றாடத்துவங்கினான்:

‘நீங்கள் கோபமாகத் தான் இருப்பீர்கள், எனக்குத் தெரியும். நீங்கள் உங்கள் குழந்தைகளை தண்டிக்கப்போகிறீர்கள். ஆனால், இங்கே பாருங்கள்: நீங்கள் அவர்களை மன்னிக்க வேண்டுமென்று நான் வேண்டுகிறேன். அவர்களுக்காக நான் இறக்கிறேன், நான்… ஏற்கனவே துன்பத்தில் உழழும் அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். நீங்கள் மழையைக் கூட பொழியாமல் செய்யுங்கள், புழுதி படிந்து வறண்ட நிலம் கூட அப்படியே கிடக்கட்டும், ஆனால் தயவுசெய்து நீங்கள் மட்டும் இந்த மண்ணின் மக்களை தண்டித்துவிடாதீர்கள்.’

மறுநாள், அதிகாலைப் பனிமூட்டத்தினூடாக, எர்னெஸ்டோ நதியின் நீரோட்டத்தைக் கட்டியணைத்தபடி கிடப்பதை ஊரார்கள் பார்த்தனர். அவர்கள் அவனைத் தூக்க முயற்சிக்கும் பொழுது, அவன் மிக கனமானவனாகத் தோன்றினான். அவர்களால் அவனை நீரில் இருந்து பிரிக்க முடியவில்லை. ஊரிலுள்ள பலமிக்க மனிதர்கள் வந்து முயற்சித்த பொழுதும், அவர்கள் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. நதியின் நீர்ப்பரப்பில் அவனது உடல் நன்றாக ஒட்டிப்போய் இருந்தது. பேரச்சத்தின் விநோத உணர்ச்சி, அங்கிருந்தவர்களின் மத்தியில் பரவியது. தங்களது பயத்தை மறைத்துக் கொள்ள, யாரோ ஒருவன் கத்தினான்:

’போய், இவன் மனைவியிடம் கூறுங்கள். ஊர் மக்களிடமும் கூறுங்கள், கிராமத்தின் பைத்தியக்காரன் இறந்துவிட்டான் என்று.’

பின்னர் அவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர். அவர்கள் நதியை விட்டு கரையேறும் பொழுது, மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன, வித்தியாசமான நிகழ்வாக வானம் திடீரென இருட்டத் துவங்கியது. மற்ற சமயங்களாய் இருந்திருந்தால், மழை வரப்போவதை எண்ணி அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் மனநிலை அவ்வாறில்லை. முதன் முறையாக, அவர்களின் நம்பிக்கைகள் ஒன்று கூடி, மழை பெய்ய வேண்டாம் என்று பிரார்த்திக்கத் துவங்கின.

மெதுவான, நெடுந்தூரப் பயணத்திலிருந்த நதி, மனிதர்களின் அறியாமையை எண்ணி புன்னகைத்தது. எர்னெஸ்டோ டிம்பா, நீரோட்டத்தின் இதமான தாலாட்டில், நீர்வழிதிசையில், தனது கனவுகளில் மட்டும் மங்கலாய் கண்ட தனிவழியில் கொண்டு செல்லப்பட்டான்.

•••

வெறும் நுரை, அவ்வளவுதான் (Just Lather, That`s All) ஸ்பானியம் (கொலம்பியா) : ஹெர்னாண்டோ டெல்லெஸ் ( Hernando Tellez ) ஆங்கிலம் : டொனால்டு ஏ. யேட்ஸ் (Donald A. Yates ) / தமிழில் / ச. ஆறுமுகம்.

hernando-tellez-calamo-blog-literatura1

ஹெர்னாண்டோ டெல்லெஸ் (மார்ச், 22, 1908 – 1966) – கொலம்பிய நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் நூலாசிரியர். 1950 இல் இவரது சிறுகதைத் தொகுதி Cenizas para el viento (Ashes to the Wind and other stories) வெளியானதும் இவரது பெயர் பரவலாக வெளிப்பட்டது. இன்ப, துன்பக் கலவையான இவரது கதைகள், சமகால வாழ்க்கையை, குறிப்பாக அவரது சொந்த நாட்டின் அவலநிலை குறித்த அவரது கூர்ந்த அவதானிப்புகளுக்குச் சான்றுகளாக விளங்குகின்றன. கொலம்பியாவுக்கான ஐ.நா. தூதராகவும் பணியாற்றிய இவரது சிறுகதைகளில் உலகம் முழுவதும் அதிகம் வாசிக்கப்பட்ட கதையாக தற்போது தமிழாக்கம் செய்யப்பட்ட கதை திகழ்கிறது. இக்கதை அவரது Lather and Nothingelse தொகுதியிலுள்ளது.

********

அவன் உள்ளே நுழைந்த போது, எதுவும் சொல்லவில்லை. என்னிடம் இருந்த சவரக்கத்திகளிலேயே சிறந்ததைத் தேய்ப்புத்தோலில் முன்னும் பின்னுமாக இழுத்துத் தீட்டிக்கொண்டிருந்தேன். அவன்தானெனக் கண்டுகொண்டபோது, நடுங்கிவிட்டேன். ஆனால், அவன் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. எனது உணர்வுகளை மறைத்துக்கொள்வதான நம்பிக்கையுடன், நான் கத்தியைத் தீட்டினேன். என் பெருவிரல் தசையில் பதம்பார்த்துப் பின்னர், வெளிச்சத்தில் தூக்கிப்பிடித்துக் கூர்ந்து நோக்கினேன்.

அதே கணத்தில் குண்டுகள் கோர்த்து, கைத்துப்பாக்கி தொங்கும் அவனது இடுப்புக்கச்சினை அவிழ்த்துச் சுவரிலிருந்த கொக்கி ஒன்றில் மாட்டியதோடு, இராணுவத் தொப்பியினையும் அதன் மீது மாட்டினான். பின்னர் என்பக்கம் திரும்பி, கழுத்துப் பட்டையினைத் தளர்த்திக்கொண்டே, “நரகம் மாதிரிக் கொதிக்கிறது, முகத்தை மட்டும் மழித்துவிடு.” என்றவன் நாற்காலியில் உட்கார்ந்தான்.

அது, நான்குநாள் தாடியெனக் கணக்கிட்டேன் – எங்கள் போராளிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான நான்கு நாட்கள். அவன் முகம் வெயிலில் வறண்டு, சிவந்து தோன்றியது. நான் மிகக் கவனமாகச் சோப்பினைத் தயார்செய்யத் தொடங்கினேன். சில சுருள்களைச் சீவிக் கிண்ணத்தில் போட்டு, கொஞ்சமாகச் சுடுநீர் சேர்த்துக் குறுமுடிக் குஞ்சம் கொண்டு உருட்டித் தேய்க்கத் தொடங்கினேன். உடனடியாகவே நுரை எழும்பத் தொடங்கியது.

“எங்களின் மற்ற பயல்களுக்கும் இதேயளவு தாடி இருக்கும்.” என்றான், அவன். நான் எதுவும் பேசாமல் சோப்பு நுரையைக் கலக்கிக் கலக்கித் தேய்த்துக்கொண்டிருந்தேன்.

“ ஆனால், நாங்கள் செம்மையாகச் செய்தோம், தெரிந்துகொள். முக்கியமான தலைகளையெல்லாம் பிடித்துவிட்டோம். கொஞ்சம் பேரைப் பிணமாகத் தான் கொண்டுவந்தோம். உயிரோடு சிலரும் பிடிபட்டார்கள். ஆனால், எல்லோருமே வெகுசீக்கிரத்திலேயே இறந்துவிடுவார்கள்.”

“எத்தனை பேரைப் பிடித்தீர்கள்?” எனக் கேட்டேன், நான்.

“பதிநான்கு. அவர்களைப் பிடிக்கக் காட்டுக்குள், நடுக்காட்டுக்கும் உள்ளே செல்லவேண்டியிருக்கிறது. எப்படியும் அவர்களைப் பிடித்துவிடுவோம். ஒருவன் கூட, ஒரே ஒருவன் கூட உயிர் தப்ப முடியாது.”

கையில் சோப்பு நுரை தளும்பும் குறுமுடிக் குஞ்சத்துடன் என்னைக் கண்டதும், அவன் நாற்காலியில் பின்புறமாகச் சாய்ந்தான். நான் அப்போதும் அவன் மீது துணியைப் போர்த்தியிருக்கவில்லை. சந்தேகமேயில்லை, நான் குழம்பித்தான் போயிருக்கிறேன். இழுப்பறையிலிருந்து போர்த்தும் துணி ஒன்றை எடுத்து, அவன் கழுத்தில் சுற்றி முடிச்சிட்டேன். அவன் பேச்சை நிறுத்துவதாகத் தெரியவில்லை. ஒருவேளை, நானும் அவனுடைய கட்சி அனுதாபியென, அவன் நினைத்திருக்கலாம்.

“எங்கள் செய்கையிலிருந்து இந்த ஊர் ஒரு பாடம் படித்திருக்கவேண்டுமே.” என்றான், அவன்.

“ஆமாம்,” என்றேன், நான், வியர்த்துக் கறுத்திருந்த அவனது கழுத்தின் அடிப்பக்கமாக முடிச்சினை இறுக்கிக்கொண்டே.

‘’அது நல்ல, செமைய்ய்யாகக் காட்டிய காட்சி, ஹூம்?”

‘’ரொம்ப நன்றாக இருந்தது.” என்றவாறே குறுமுடிக்குஞ்சத்திற்காகத் திரும்பினேன்.

அந்த மனிதன் சோர்வின் சிறு வெளிப்பாடாகக் கண்களைச் சிறிது மூடி, சோப்பு நுரையின் மென்குளிர் சுகத்துக்காகக் காத்திருந்தான். அவனை இவ்வளவு அருகாக நான் பார்த்ததேயில்லை. தொங்கவிடப்பட்டிருந்த நான்கு போராளிகளையும் காண, மொத்த ஊரையும் பள்ளி மைதானத்தில் வரிசையாக நிற்குமாறு அவன் ஆணையிட்ட நாளில், அவன் முகத்தை நேருக்கு நேராக ஒரு கணம் பார்த்தேன். ஆனால், சிதைக்கப்பட்ட உடல்களின் காட்சி, இதற்கெல்லாம் ஆணையிட்ட மனிதனின் முகத்திற்கப்பால் என்னை விலக்கியது; அதே முகம் இப்போது என் இரண்டு கைகளுக்குள்ளும் அகப்படுகிறது.

அது விரும்பத்தகாத ஒரு முகமாக இல்லை; அவனது வயதினைச் சிறிது அதிகமாகக் காட்டினாலும் அந்தத் தாடி அவன் முகத்துக்கு முழுப் பொருத்தமில்லாமலும் இல்லை. அவன் பெயர் டோரெஸ் – காப்டன் டோரெஸ். மிகுந்த கற்பனைத் திறனுள்ளவன், ஏனெனில் போராளிகளை நிர்வாணமாக்கித் தொங்கவிட்டதோடு, அவர்களின் உடல்களைத் துப்பாக்கிப் பயிற்சிக்கு இலக்காக்கும் எண்ணம் யாருக்கு வரும்?

நுரையின் முதல் படிவினை அவன் முகத்தில் தேய்க்கத் தொடங்கினேன். கண்களைத் திறக்காமலேயே, அவன் தொடர்ந்தான், “எந்தச் சிக்கலுமில்லாமல் அப்படியே போய்த் தூங்கிவிடுவேன், ஆனால் பிற்பகலுக்கென நிறைய வேலை இருக்கிறது.”

நுரையிடுவதை நிறுத்திவிட்டு, ஆர்வமற்ற பாவனையில், ”மரணதண்டனை நிறைவேற்றும் துப்பாக்கிப் படை அணிவகுப்பா?” எனக் கேட்டேன்.

”அதுமாதிரிதான், ஆனால், அவ்வளவு வேகமாக இல்லை, கொஞ்சம் தாமதமாகிற ஒன்று.”

அவன் தாடியில் நுரையிடும் வேலையைத் தொடர்ந்தேன். என் கைகள் மீண்டும் நடுங்கத் தொடங்கின. அந்த மனிதன் அதை உணரும் நிலையில் இல்லை; அது எனக்கு நல்லதுதான். ஆனாலும் அவன் வராமல் இருந்திருக்கக்கூடாதா என்றுதான் நினைத்தேன். அவன் உள்ளே நுழைந்ததை எங்கள் எதிரெதிர் கும்பல்கள் பலரும் பார்த்துத்தானிருப்பார்கள். அதுவுமில்லாமல், ஒருவனின் வீட்டுக்குள்ளேயே எதிரி வந்துவிடுவதென்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது.

அந்தத் தாடியினை வேறெந்தத் தாடியையும் போல கவனமாகவும் மென்மையாகவும், எந்தவொரு வாடிக்கையாளரையும் போல எந்தவொரு மயிர்க்காலிலும் நுண்துளை ஏற்பட்டு அதிலிருந்து ஒரு துளி இரத்தமும் முகிழ்த்துவிடாதபடி சிரத்தையெடுத்து மழிப்பதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன். சிறுசிறு குறுமுடித் திட்டுகளும் கத்திக்குத் தப்பிவிடாதபடி கவனமாயிருக்கவேண்டும். அவரது முகத்தை என் கையின் பின்புறத்தால் தடவி, எந்தவொரு முடியும் தட்டுப்படாத வகையில் அவரது தோல் சுத்தமாகவும் மென்மையாகவும், நலம் பெறுமாறும் செய்யவேண்டும். ஆம், நான் ஒரு ரகசியப் போராளி, ஆனால் மனச்சான்றுடைய முடிதிருத்தும் தொழிலாளியாகவுமிருப்பதோடு, என் தொழிலுக்குத் தேவைப்படும் நுண்திறனுமுடையவனென்பதில் பெருமிதம் கொண்டவனாகவும் இருக்கிறேன்.

சவரக்கத்தியை எடுத்து அதனுடைய இரு பாதுகாப்புக்கரங்களையும் இழுத்து, கத்திப்பகுதியை வெளிப்பட எடுத்து, கீழ்நோக்கி இறங்கும் கிருதாக்களில் ஒன்றிலிருந்து என் வேலையைத் தொடங்கினேன். கத்தி அழகாகப் படிந்து வேலைசெய்தது. அவனது தாடி விறைப்பாகவும் கடினமாகவும், அதிக நீளமில்லாமல், ஆனால் தடிமனாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தோல் வெளிப்பட்டது. கத்தி அதன் வழக்கமான சத்தத்துடன் மெல்ல வழுக்கி இறங்க, இறங்க, மழித்தமுடியும் உலர்கின்ற சோப்பு நுரையுமாகக் கலந்த பசை கத்தி ஓரமாகச் சேர்ந்துகொண்டே வந்தது.

அதை வழித்தெறிவதற்காக ஒரு கணம் தாமதித்த நான் கத்தியை மீண்டும் தீட்டுவதற்காகத் தேய்ப்புத்தோலைக் கையிலெடுத்தேன்; ஏனெனில் வேலையைத் துப்புரவாகச் செய்து முடிக்கிற ஒரு முடிதிருத்தும் கலைஞன் நான். கண்களை மூடியேயிருந்த அந்த மனிதன், இப்போது கண்களைத் திறந்து, போர்த்திய துணிக்குள்ளிருந்து ஒரு கையை வெளியே நீட்டி சோப்பு நீக்கப்பட்ட பகுதியைத் தடவிக்கொண்டே, ”இன்று மாலை ஆறு மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு வா.” என்றான்.

“அன்றைக்கு மாதிரியான அதே விஷயம்தானா?” பதறிப்போய்க் கேட்டேன்.

“அதைவிடவும் சிறப்பாக இருக்கும்,” என்றான், அவன்.

‘’ என்ன செய்வதாகத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?”

“இந்த நிமிடம் வரை எனக்குத் தெரியவில்லை; ஆனால் நாங்கள் வேடிக்கை விளையாட்டின் உச்சத்துக்கே போவோம்.” மீண்டும் அவன் பின்பக்கமாகச் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். கத்தியை உயர்த்தியபடி அவனை நெருங்கினேன்.

“அவர்கள் எல்லோரையும் தண்டிக்கப் போகிறீர்களா?” அச்சத்துடனேயேதான் கேட்டேன்.

“எல்லோரையும் தான்”

அவன் முகத்தில் சோப்பு உலர்ந்துகொண்டிருந்தது. நான் வேகமாகச் செய்து முடிக்க வேண்டும். கண்ணாடியில் தெரிந்த தெருவை உற்றுப் பார்த்தேன். அது எப்போதும் போலவே இருந்தது; மளிகைக்கடையில் இரண்டு மூன்று வாடிக்கையாளர்கள். பின் மணியைப் பார்த்தேன்; 2.20. பிற்பகல்.

கத்தி அதன் கீழ்நோக்கிய மழிப்பினைத் தொடங்கியது. இப்போது அடுத்த பக்கக் கிருதா வழியாகக் கீழிறங்கியது. தடித்த நீலநிறத் தாடி. யாராவது கவிஞர் அல்லது மதகுருவைப் போல அவன் அதை வளர்த்திருக்கவேண்டும். அது அவனுக்கு நன்கு பொருத்தமாகவே இருந்தது. அநேகம் பேருக்கு அவனைக் கண்டுகொள்ள முடியாது. அவனுக்கு அது நல்லதுதானே என்று நினைத்துக்கொண்டே, அவனது முன்கழுத்துப் பகுதியை இன்னும் மென்மையாகக் கையாள முயற்சித்தேன்.

அங்கேதான், கத்தியைத் திறமையாகப் பயன்படுத்தவேண்டும்; அங்கே முடி மென்மையாக இருந்தாலும் சுருள், சுருள்களாக அடர்ந்திருந்தது. சுருள் தாடி. மயிர்க்கால்களில் ஒன்று திறந்துகொள்ள, இரத்தத்துளி ஒரு முத்துப் போல முகிழ்த்துவிடலாம்; ஆனால் வாடிக்கையாளருக்கு அப்படி நிகழவே நிகழாமல் பார்த்துக்கொள்வதில்தான் நல்ல ஒரு முடிதிருத்தும் கலைஞன் பெருமிதம் கொள்கிறான்.

எங்களில் எத்தனை பேரைச் சுடுவதற்கு அவன் ஆணையிட்டிருக்கிறான்? எங்களில் எத்தனை பேரைச் சிதைப்பதற்கு அவன் ஆணையிட்டிருக்கிறான்? அதைப்பற்றி நினைக்காமலிருப்பதே நல்லது. நான் அவனுக்கு எதிரானவனென்று டோரெசுக்குத் தெரியாது. அவன் அதை அறியமாட்டான்; அதன் பின்னாலுள்ள எதனையும் அவன் அறியமாட்டான். அது மிக மிகச் சிலருக்கே தெரிந்த ரகசியம், நகருக்குள் டோரெஸ் என்ன செய்கிறான், போராளி வேட்டைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவன் என்னென்ன திட்டமிடுகிறான் என்பவற்றையெல்லாம் மிகத் துல்லியமாகப் போராளிகளுக்குத் தெரிவிப்பது நான்தான்.

என் கைக்குள்ளேயே வந்த அவன், எந்தச் சேதாரமும் இல்லாமல், உயிரோடு நலமாக, அதுவும் மழித்த முகத்துடன் திரும்பிச் செல்வதை நான் எப்படி நியாயப்படுத்தி என்ன விளக்கம் அளிக்கமுடியும்? இயலவே இயலாத ஒன்று.

தாடி முழுவதும் அநேகமாக அகற்றப்பட்டுவிட்டது. அவன் உள்ளே வந்தபோதிருந்த வயதில் சில ஆண்டுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, இளமையாகிவிட்டதாகத் தோன்றினான். முடிதிருத்தகம் செல்லும் எல்லா ஆண்களுக்கும் வழக்கமாக இப்படித்தான் நிகழுமென்று, நான் நினைக்கிறேன். டோரெஸ் புத்துயிர் பெற்றிருக்கிறான் – புத்துயிர் பெற்றானா? எப்படியென்று கேட்டால், எப்போதும் நான் சொல்லிக்கொள்வது போல், நகரத்திலேயே நான் ஒரு சிறந்த முடிதிருத்தும் கலைஞன் என்பதால்தான்.

சே! வெய்யில் எவ்வளவு கொதிக்கிறது? என்னைப் போலவே டோரசுக்கும் வியர்த்துக் கொட்டும்; ஆனால், அவன் ஒரு அமைதியான மனிதன்; பிடிபட்டவர்களை இன்று மாலை என்னசெய்யலாமென்று கூட இன்னும் நினைத்துப்பார்க்காதவன். ஆனால், அதற்கு மாறாக நானோ, கையில் கத்தியை வைத்துக்கொண்டு, அவன் முகத்தில் மேலும் கீழுமாக மழித்துக்கொண்டு, சிந்திக்கக்கூட முடியவில்லை.

என்னிடம் வந்தான் பார்! ஒழியட்டும், அவன்! நான் ஒரு போராளி, கொலைகாரனல்ல. ஹூம், அவனைக் கொல்வதுதான் எத்தனை எளிதானது; அதற்குத் தகுதியானவனும் கூட; சரிதானா? இல்லை! என்ன இழவு சனியன்! யாரோ ஒரு பிற மனிதனைக் கொலைகாரனாக்கித் தியாகம்செய்யச் சொல்லும் தகுதி எவருக்கும் இல்லை. அதனால் நீ பெறப்போகும் பயன்தான் என்ன? எதுவுமில்லை. அடுத்தவர்கள், வருவார்கள்; இன்னும் அடுத்தவர்கள், முதலில் வந்தவர்கள் அடுத்து வந்தவர்களைக் கொல்வார்கள், அப்படியே, அடுத்தடுத்து – அப்படியே அது, எல்லாமே இரத்தப் பெருங்கடலாகச் சங்கமிக்கும் வரை போய்க்கொண்டேயிருக்கும்.

இந்தத் தொண்டைக்குழியை, மூச்சுக்குழலை, `ஜிப், `ஜிப்` என இப்படி அறுத்துவிடலாம்தான்! அவன் தடுப்பதற்கு நான் நேரமே கொடுக்கப் போவதில்லை, அவன் கண்களை மூடியேயிருப்பதால், பளிச், பளிச்சென மின்னும் கத்தியையோ அல்லது என் கண்களையோ பார்க்கப்போவதில்லை. ஆனால், நானோ உண்மையான கொலைகாரனைப் போல நடுங்குகிறேன். அவன் கழுத்திலிருந்து பெருகும் இரத்தம் துணிக்கு மேலாகக் குமிழியிட்டு, நாற்காலி மீது, என் கைகளில், தரையில் எங்கும் இரத்த மயமாகும். நான் கதவைச் சார்த்த வேண்டும். இளஞ்சூடான இரத்தம் தடுக்கவியலாதபடித் தொடர்ந்து அங்குலம், அங்குலமாகப் பரவித் தரையில் அழிக்க முடியாத, சிவப்புச் சிற்றோடையாகித் தெருவரையிலும் போய்விடும்.

எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது, அழுத்தமாக ஒரே இறுக்கு, ஆழமான ஒரே வெட்டு, வலியே இல்லாமல் கச்சிதமாக முடிந்துவிடும். அவன் துடித்துவிட மாட்டான். ஆனால், அவன் உடலை, பிணத்தை என்ன செய்வது? எங்கே கொண்டுபோய் ஒழித்துவைப்பது? எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நான் தப்பி ஓடி, எங்காவது தலைமறைவாகித் தஞ்சம் புகவேண்டும். ”கொலைகாரன், காப்டன் டோரசைக் கொலைசெய்தவன். முகம் மழிக்கும்போது தொண்டைக்குழியை அறுத்துவிட்டான் – கோழை.”

அப்புறம் இன்னொரு பக்கம், “நம் எல்லோருக்குமாகப் பழிதீர்த்தவன். மறக்கவே கூடாத பெயர். அவன் தான் நகர முடிதிருத்துபவன். அவன் நமது கொள்கைக்காரனென்று யாருக்கும் தெரியாது.”

கொலைகாரனா, அல்லது தியாக வீரனா? என் விதி இந்தக் கத்தியின் கூரான விளிம்பில் அமர்ந்திருக்கிறது. என் கையை இன்னும் கொஞ்சமாக, சிறிது திருப்பி, கத்தியைக் கொஞ்சம் அழுத்தி அப்படியே இறக்கிவிட முடியும். பட்டுப் போல, இரப்பர் போல மேல்தோல் பிளவுபட்டு வழிவிடும். மனித மேல்தோலைவிடவும் மென்மையானது வேறெதுவுமில்லை; அதுவும் எப்போதும் இரத்தம் வெளிப்படத் தயாராக இருக்கும்.

ஆனால், நான் ஒரு கொலைகாரனாக விரும்பவில்லை. நீ இங்கே ஒரு முக மழிப்புக்காக வந்தாய். நானும் என் பணியை நன்மதிப்புடன் செய்கிறேன். ……… என் கைகளில் இரத்தம் வேண்டவே வேண்டாம்; வெறும் நுரை, அவ்வளவுதான். நீ மரண தண்டனை நிறைவேற்றுபவன். நான் வெறும் முடிதிருத்தும் தொழிலாளி. சமூகப் படிநிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கேயான இடம் இருக்கிறது.

இப்போது அவன் தாடி சுத்தமாக மழிக்கப்பட்டு, நாடி வழுவழுப்பாகிவிட்டது. அந்த மானிடன் நிமிர்ந்து உட்கார்ந்து கண்ணாடியில் உற்றுப் பார்த்தான். கன்னத்தில் உள்ளங்கைகளைத் தேய்த்து, புத்தம் புதியதைப் போல புது மலர்ச்சியை உணர்ந்தான்.

”நன்றி” என்றான், அவன். அவனது இடுப்புக்கச்சு, கைத்துப்பாக்கி, தொப்பிக்காகக் கொக்கியில் மாட்டியிருந்த இடத்திற்குச் சென்றான். என் முகம் வெளிறியிருக்கவேண்டும்; என் சட்டை நனைந்துவிட்டது. கச்சின் கொளுவிகளைச் சரிசெய்து மாட்டி முடித்துவிட்டு, டோரெஸ் துப்பாக்கியை அதன் உறைக்குள் இட்டு இழுத்து நேர்படுத்தியதும் தன்னிச்சையாகத் தலைமுடியைப் பணியத் தடவிவிட்டு, தொப்பியை அணிந்துகொண்டான். அவனுடைய காற்சட்டைப் பைக்குள்ளிருந்து நாணயங்களை வெளியே எடுத்த அவன், நேராக வாயிலை நோக்கி நடந்தான்.

வாயிலில் ஒரு கணம் நின்ற அவன், ”நீ என்னைக் கொன்றுவிடுவாய் என்றார்கள். அதைத் தெரிந்துகொள்ளத்தான் வந்தேன். ஆனால், கொல்வது ஒன்றும் எளிதானதில்லை. நான் சொல்வதை நீ உறுதியாக எடுத்துக்கொள்ளலாம்.” என்றதோடு, அப்படியே திரும்பி, நடந்து சென்றான்.

•••

(இக்கதையின் ஆங்கிலப் பிரதி, நொய்டா, மேப்பிள் பிரஸ் 2009 இல் வெளியிட்டுள்ள `சமகால லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்` நூலிலுள்ளது.)

இளம்பெண் ( சிறுகதை ) : ஜமைக்கா கின்கெய்டு / தமிழில் / சமயவேல்

download (23)

எழுத்தாளர் குறிப்பு

ஜமைக்கா கின்கெய்ட் 1949ல் மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான அன்டிஹுவா நாட்டில் பிறந்தவர். கரீபிய-அமெரிக்க எழுத்தாளரான இவர் தற்பொழுது அமெரிக்காவில் உள்ள வடக்கு பென்னிங்க்டனில் வசிக்கிறார். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இவர் குடும்பத்தால் புறக்கனிக்கப்பட்டு, 17 வயதில், அமெரிக்காவுக்கு வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். ஆனால் இதைப் பொறுக்க முடியாமல் குடும்பத்துடனான தொடர்பை துண்டித்து விடுகிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகே அன்டிஹுவா திரும்புகிறார். இடையில் படித்து, எழுதத் தொடங்கி 1979ல் ஒரு இசையமைப்பாளரைத் திருமணம் செய்துகொள்கிறார். ‘தி நியூ யார்க்கர்’ இதழில் பணிபுரிகிறார். இவரது கதைகள் ‘பாரிஸ் ரெவ்யூ’ மற்றும் ‘தி நியூ யார்க்கர்’ இதழ்களில் வெளியாகின்றன. ‘லூஸி’ என்ற இவரது நாவல் ‘தி நியூ யார்க்கர்’ இதழில் தொடராக வந்தது.

‘அன்னி ஜான்’ ‘லூஸி’ ‘எனது அம்மாவின் சுயசரிதை’ ‘திருவாளர் போட்டர்’ ‘பார் இப்பொழுது பிறகு’ ஆகியவை இவரது நாவல்கள். ‘நதியின் அடியாழத்தில்’ இவரது சிறுகதைத் தொகுப்பு. ‘ஒரு சின்ன இடம்’ ‘எனது சகோதரன்’ ‘சொல் கதைகள்’ ‘எனது தோட்டப் புத்தகம்’ ‘மலர்கள் நடுவே: இமயமலையில் ஒரு நடை’ ஆகியவை இவரது உரைநடை நூல்கள். தொகுக்கப்படாத கதைகளும் கட்டுரைகளும் நிறைய இருக்கின்றன.

அம்மாவுக்கும் மகளுக்குமான ஆழமான, சக்திமிக்க உறவைப் பதிவு செய்த இவரது எழுத்துக்களை பெண்ணிய எழுத்துக்கள் என்பதோடு கறுப்பின எழுத்து என்பதையும் இணைத்தே பார்க்க வேண்டும் என்கிறார் இவர். காலனியம், காலனியப் பாரம்பர்யம், பின்காலனியம், நவ-காலனியம், பால் மற்றும் பாலியல், பிரிட்டீஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம், காலனியக் கல்வி, இனம், வர்க்கம், அதிகாரம் என்று பல பகுதிகளில் பயணம் செய்கிறது இவரது எழுத்து. அண்மையில் இவர் எழுதியிருக்கும் ‘பார் பிறகு இப்பொழுது’ என்னும் நாவல் காலத்தை ஆய்வு செய்கிறது.

••••••••••

திங்கள் கிழமை வெள்ளைத் துணிகளைத் துவைத்து கற்குவியலின் மேல் காயப் போட வேண்டும்; செவ்வாய்க்கிழமை கலர் துணிகளைத் துவைத்து கொடிக்கம்பியில் உலரப் போட வேண்டும்; கொளுத்தும் வெயிலில் வெறுந் தலையுடன் நடக்கக் கூடாது; பூசணிக் கழிவுகளை சூடான இனிப்பு எண்ணெய்களில் சமைக்க வேண்டும்; உனது சிறிய துணிகளைக் கழற்றி எடுத்த உடனே நீரில் ஊற வைத்துவிடு; ஒரு அருமையான ப்ளவ்ஸ் தைப்பதற்காக பருத்தித் துணியை நீ வாங்குகிற போது, அதில் பசை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள், ஏனெனில் ஒரு துவைப்புக்குப் பிறகு அதனால் தாங்க முடியாது; கருவாட்டை நீ சமைப்பதற்கு முந்திய இரவே ஊற வைத்துவிடு; ஞாயிறுப் பள்ளியில் நீ பென்னா பாடுவது உண்மையா?; எப்பொழுதுமே நீ உன் உணவை அது யாரோ ஒருவருடைய வயிறாக மாறிவிடாத வகையில் சாப்பிடு; ஞாயிறுகளில் ஒரு பெண்மணியைப் போல நடக்க முயற்சி செய், நீ மிக உருப்படாமல் ஆகிக் கொண்டிருக்கும் வேசியைப் போல அல்ல; ஞாயிறு பள்ளியில் பென்னா1 பாட வேண்டாம்; துறைமுக-எலிப் பையன்களிடம் நீ பேசக் கூடாது, திசைகள் கூட காட்டக் கூடாது; தெருவில் பழங்களைச் சாப்பிடாதே—ஈக்கள் உன்னைத் துரத்தும்; ஆனால் நான் ஞாயிறுகளில் பென்னா பாடுவதே கிடையாது மற்றும் ஞாயிறு பள்ளியில் ஒருபோதும் இல்லை; இவ்வாறு தான் ஒரு பித்தானைத் தைக்க வேண்டும்; நீ சற்று முன்பு தைத்த பித்தானுக்கு இவ்வாறு தான் பட்டன்துளை செய்ய வேண்டும்; ஒரு உடைக்கு, அதன் கரை கீழே இறங்குவதைப் பார்க்கும் பொழுது, இவ்வாறு தான் கரை அடிக்க வேண்டும், ஒரு வேசி போல தெரிவதை நீயே தடுப்பதற்காக, நீ அப்படி ஆவதற்குத்தான் உருப்படாமல் போய்க் கொண்டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்; உனது அப்பாவின் காக்கி சட்டையை ஒரு சுருக்கமும் இல்லாதவாறு இப்படித்தான் அயன் பண்ண வேண்டும்; உனது அப்பாவின் காக்கி கால்சராய்களை ஒரு சுருக்கமும் இல்லாதவாறு இப்படித்தான் அயன் பண்ண வேண்டும்; இவ்வாறுதான் நீ ஒக்ராவை2 வளர்—வீட்டிலிருந்து தூரத்தில் , ஏனெனில் ஒக்ரா மரத்தில் சிவப்பு எறும்புகள் குடியிருக்கும்; நீ டஷீனை3 வளர்க்கும்போது, அதற்கு நிறைய தண்ணீர் கிடைக்குமாறு உறுதிசெய்; இல்லாவிட்டால் நீ அதை சாப்பிடும் பொது உனது தொண்டை அரிக்கும்; ஒரு மூலையை இவ்வாறுதான் நீ பெருக்க வேண்டும்; ஒரு முழு வீட்டை இவ்வாறுதான் நீ பெருக்க வேண்டும்; ஒரு முற்றத்தை இவ்வாறுதான் நீ பெருக்க வேண்டும்; உனக்கு மிக அதிகமாகப் பிடிக்கும் ஒருவரிடம் இவ்வாறுதான் நீ புன்னகைக்க வேண்டும்; உனக்கு பிடிக்கவே செய்யாத ஒருவரிடம் இவ்வாறுதான் நீ புன்னகைக்க வேண்டும்; நீ முழுவதுமாக விரும்புகிற ஒருவரிடம் இவ்வாறுதான் நீ புன்னகைக்க வேண்டும்; தேநீருக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; டின்னருக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; முக்கிய விருந்தினருடன் டின்னருக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; லஞ்சுக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; காலை உணவுக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; உன்னை அவ்வளவாகத் தெரியாத ஆண்கள் இருக்கும்போது நீ இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும், இவ்வகையில் நீ ஆகுவதற்கு எதிராக உன்னை எச்சரிக்கை செய்து வந்த வேசியை, அவர்கள் உடனடியாக அறிந்துகொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் உன்னைக் கழுவிக் கொள், உனது சொந்த எச்சிலைக் கொண்டாவது; பளிங்குக் குண்டுகள் விளையாட கீழே சம்மணம்போட்டு உட்கார்ந்துவிடாதே—நீ ஒன்றும் பையனில்லை, உனக்குத் தெரியும்; ஜனங்களது பூக்களைப் பறிக்காதே- உன்னை ஏதேனும் பிடித்துவிடலாம்; கரும்பறவைகளின் மேல் கற்களை எறியாதே, ஏனெனெனில் அது ஒரு கரும்பறவையாகவே இல்லாமல் இருக்கலாம்; ரொட்டிப் புட்டை4 இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; டவ்கொனாவை5 இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; மிளகுப் பானையை இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; ஜலதோஷத்திற்காக ஒரு நல்ல மருந்தை இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; ஒரு குழந்தையை அது குழந்தையாவதற்கு முன்பே வெளியே எறிய ஒரு நல்ல மருந்தை இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; ஒரு மீனை இவ்வாறுதான் பிடிக்க வேண்டும்; உனக்குப் பிடிக்காத ஒரு மீனை, அந்த வகையில் உனக்குக் கெட்டது எதுவும் நேராதபடி இவ்வாறுதான் நீ திரும்ப எறிய வேண்டும்; ஒரு ஆணை இவ்வாறுதான் அடாவடியாக அச்சுறுத்த வேண்டும்; இவ்வாறுதான் ஒரு ஆண் உன்னை அச்சுறுத்துவான்; இவ்வாறுதான் ஒரு ஆணை நீ காதலி, இது வேலை செய்யாவிட்டால் வேறு வழிகள் இருக்கின்றன, அவைகளும் வேலை செய்யாவிட்டால் விட்டுத் தள்ளுவது பற்றி மோசமாக உணராதே; இவ்வாறுதான் நீ காற்றில் மேலே துப்பு, அதை நீ விரும்பினால், மற்றும் அது உன் மேல் விழுந்துவிடாதபடி இவ்வாறுதான் விரைவாக நகர்ந்துவிட வேண்டும்; இவ்வாறுதான் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும்; எப்பொழுதுமே ரொட்டியை அமுக்கிப் பார்க்க வேண்டும் அது புதியதாக இருக்கிறதா என உறுதிப்படுத்த; ஆனால் ரொட்டிக்காரர் ரொட்டியைத் தொட என்னை அனுமதிக்கா விட்டால்?: நீ சொல்வதின் பொருள், ரொட்டிக்காரர் ரொட்டியின் அருகில் அனுமதிக்க விடாத பெண்ணாக அல்லவா நீ உண்மையில் இருக்கப் போகிறாய்?

—-

download (24)

Jamaica Kincaidன் “At the Bottom of the River” என்னும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள முதல் கதை. ஆங்கிலத்தில் Girl என்று இருக்கிறது.பெண் குழந்தை என்றுதான் கூற வேண்டும். ஆனால் கதையில் வரும் பெண் பதின்ம வயதுப் பெண்ணாக இருக்கிறார்.

1. Benna என்பது ஒருவகை நாட்டுப்புறப் பாடல். கேள்வி பதில் வடிவில் கிறிஸ்துவத்தை பகடி செய்யும் பாடல்கள்.

2. Okra: இது உண்மையில் வெண்டைச் செடி. ஆனால் கதையில் மரம் என்று வருகிறது. வெள்ளை நைல் நதிக் கரைகளில் மரம் அளவுக்கு வளர்வதாகவும் இணையத்தில் வாசித்தேன்.

3. Dasheen: நமது சேப்பங்கிழங்கு. அரிப்புத் தன்மையுடையது.

4. Pudding: இது புட்டு என மொழிபெயர்ப்பதில் தவறில்லை.

5. doukona: இதுவும் ஒரு வகைப் புட்டுதான். ஆனால் மீனிலிருந்து செய்யப்படுகிறது. கேரளத்தில் இதே போன்று ஒரு மீன் புட்டு இருக்கிறது.

—-

( மலைகள் ஆசிரியர் குறிப்பு
இந்தக் கதை ஒரே பாராவாகதான் இருக்கிறது )

கோமலி இந்தி மூலம் – யாத்வேந்திர சர்மா “சந்த்ர” / தமிழில் – நாணற்காடன்

images (15)

கோமலி

மதிய நேரம். சுட்டெரிக்கும் வெயில். வீசாமல் காற்று. திணறலும், வெக்கையும், வெறுமையும், வாதையும்.

இப்படியான மனசுக்கு ஒவ்வாத நேரத்தில் கோமலி கிணற்றின் இடது வாசற்படி வழியாக மேலே வந்தாள். அவளது தலைமேலிருந்த இரும்புக் குடம் பூவேலைப்பாடுகளோடு இருந்தது.

கிணறு சிதிலமடைந்திருந்தது. இடதுபக்கமும், வலதுபக்கமும் வாசற்படிகள் இருந்தன. சுற்றுச் சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம்.

ஆளரவமற்ற ஒற்றையடிப்பாதை வெயிலின் காரணமாக மேலும் வெறுமை பூசிக்கிடந்தது. கிணற்றுக்கு அக்கம்பக்கத்தில் குடியிருப்புகள் எதுவுமில்லை. கொஞ்ச தூரத்தில் கீழ்சாதிக்காரர்களின் குடியிறுப்புகள், தோட்டக்காரர்கள், துதிபாடிகள், கொல்லர்கள் பகுதி அது.

கோமலி கொல்லர் சாதியைச் சேர்ந்தவள்.

அந்தத் தெருவிலேயே மிகவும் மோசமான, ஒழுக்கங்கெட்ட பெண் அவள். அவள் தன் கணவன் உயிரோடு இருக்கும்போதே ஒரு குதிரைக்காரனை காதலித்துவிட்டாள். காதல் மட்டுமா… அவனோடு குடித்தனமே தொடங்கிவிட்டாள். குதிரைக்காரன் ஒரு போக்கிரி என்பதால் தான் தெருவிலிருக்கும் உயர்சாதிக்காரர்கள் வாயைப் பொத்திக்கொண்டு இருந்தனர். அவன் மட்டும் கொஞ்சம் வலிமையற்றவனாக இருந்திருந்தால் தெருக்காரர்கள் இவர்களை அங்கே குடியிருக்கவிட்டிருப்பார்களா என்ன? இந்நேரம் தெருவை காலி செய்துவிட்டு ஓட வைத்திருப்பார்கள். கோமலியை தூரத்திலிருந்தபடி திட்டவும் செய்தனர். அதுபற்றி தெரிந்திருந்தால் இந்நேரம் குதிரைக்காரன் தாந்து யாரையாவது அடித்து ரத்தம் பார்த்திருப்பான். கோமலி அவனிடம் எதுவும் சொன்னாளா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது தெருக்காரர்களுக்கு. அதனால் அவர்கள் மனசுக்கு பிடிக்காவிட்டாலும் கூட வேறு வழியின்றி கோமலிக்கு மரியாதை கொடுத்தனர். கோமலியும் தெருக்காரர்கள் யாருக்கு எதுவென்றலும் ஓடி ஓடிப் போய் உதவி செய்து வந்தாள்.

தாந்து ஏற்கனவே மனைவியை இழந்தவன். அவன் மனைவி வாழ்க்கைப் பயணத்தின் இரண்டு படிகளைக் கடப்பதற்குள் ஒரேயடியாக உடைந்து போய்விட்டாள். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் லேசான காய்ச்சல் வந்தது. இரவு தாந்து அவளுக்குப் பால் குடிக்கவைத்து உறங்க வைத்தான். அதுவே அவளது கடைசி உறக்கமாக ஆகிப்போனது. தாந்து விற்கு அவள் மேல் பச்சாதாபம் இருந்தது. ஆனால், அவன் கண்களில் கண்ணீர் வரவே இல்லை. அவனுக்கு அவள் மேல் விருப்பம் இருந்ததில்லை. அவனது மனத்தில் கங்கலா வின் இளம் மனைவி கோமலியின் உருவமே நிறைந்திருந்தது. அவன் மோகத்தின் மாடியில் உட்கார்ந்திருந்தான். அங்கே கோமலி உட்கார்ந்துகொண்டு தனது கூந்தலை உலர்த்திக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அந்தக் கூந்தல் மாடியிலிருந்து கீழ்த்தளம் வரை நீண்டிருந்தது. ஒரு ராஜகுமாரி ஒவ்வொரு நாளும் இரவில் ஜன்னலருகே அமர்ந்து தனது கூந்தலைத் தொங்கவிட்டிருப்பாள். அவளின் காதலன் அந்தக் கூந்தலைப் பிடித்துக்கொண்டு மேலேறி அவளது அறைக்குச் செல்வானாம்.. என்றெல்லாம் கேட்ட கதைகளை தாந்து இப்போது நம்பத் தொடங்கிவிட்டான். அவ்வப்போது காற்றிலலைகிற கூந்தலின் வாசனை அவனுக்கு போதையூட்டியது. அப்போதெல்லாம் அவன் ஒரு சிலையைப்போல கிடப்பான்.

கங்கலா எலும்பும் தோலுமாக இருப்பான். பாவச்செயல்கள் செய்பவன். எந்த வேலையும் செய்யாமல் வாழ்க்கையை வாழ்பவன். கெட்ட சகவாசத்தால் அபின் சாப்பிடுபவன். அபின் சாப்பிடுவதால் அவன் பார்ப்பதற்கு பலவீனமாக இருப்பான். அதனால், கோமலியின் படுக்கைப் பூக்கள் தீண்டப்படாமலே காய்ந்துகொண்டிருந்தன. ஆனாலும், கோமலி தன் கணவன் கங்கலாவை எதுவும் சொன்னதில்லை. சேணம் பூட்டப்பட்ட செக்கு மாடு போல வேலை செய்தபடியே இருந்தாள். காலையில் எழுந்து கிணற்றிற்குப் போய் பானையில் தண்ணீர் கொண்டுவருவது, கடைவீதிக்குப்போய் பொருள்கள் வாங்கிவருவது, மாவு அரைப்பது, சாணி தட்டுவது. நு}ல் நு}ற்கப் போவது என வேலைகளுக்கு குறைவில்லை. முகத்தில் போட்டிருக்கும் முக்காட்டை மட்டும் எடுக்கவே மாட்டாள். பெண்கள் அவளை கூச்ச சுபாவமுள்ளவள் என்பார்கள். பஞ்சாலையின் முதலாளி மனோகர் கோமலியைத் தவறhன பார்வையிலேயே பார்ப்பான். ஆனால், கோமலி மனோகரை கண்டுகொண்டதில்லை. தனது வேலையில் மட்டுமே கவனமாக இருப்பாள். உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு. தாந்து வை நினைத்தால் தான் பயமாக இருக்கும் கோமலிக்கு. தாந்து அவளை கையசைத்து கூப்பிடுவான். வழியை மறித்து நின்று காதலைச் சொல்லுவான். அப்போதெல்லாம் பயம் கொண்ட மானைப் போல ஓடிவிடுவாள். அவனுக்கு எந்த பதிலும் சொன்னதில்லை. தாந்து வுக்கு கோமலியின் மௌனம் மிகவும் துன்புறுத்தியது,

மனைவி இறந்து இரண்டு மாதங்களுக்குப் பின் தாந்து வெறி பிடித்த மிருகத்தைப்போல் ஆகிவிட்டான். பைத்தியம் பிடித்துவிடுமோ என நினைத்தான். கோமலி இல்லாவிட்டால் தலை வெடித்துவிடும் என்று தோன்றியது. அலைகளில் மிதக்கும் முழுநிலாவைப் போல் அவளது முகம் எங்கும் அலைந்துகொண்டிருந்தது. கடைசியில் ஒருநாள் அவன் கோமலியின் கைகளைப் பிடித்துவிட்டான்.

இன்று போலவே ஒரு பகல் வேளையில் வானமும், பூமியும் சுட்டெரித்துக்கொண்டிருந்த நாளில் ஆடு மாடு பறவைகள் எதுவும் தென்படவில்லை. சிவப்பு பர்தாவில் தனது அழகை ஒளி வீசச்செய்தபடி கடைவீதிக்குப் போய்க்கொண்டிருந்தாள். தாந்து அவளைப் பிடித்து தனது வீட்டுக்கு இழுத்துப் போனான். அவளை எதுவும் பேசவிடாமல் வாயைப் பொத்திக்கொண்டான். அவனது இந்த போக்கிரித்தனத்தால் நிலைகுலைந்து போனாள் கோமலி.

முதல்முறையாக அவள் தனது மௌனத்தை உடைத்தாள். ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டாள், அவளது பொன்நிற நெற்றியில் வியர்வைத்துளிகள் ஒளிர்ந்தன. ஏரியைப் போல் ஆழ்ந்த அன்பு கொண்ட அவளது கண்களில் இனம்புரியாத துக்கம் படர்ந்தது. நடுங்கிய குரலில் “ இன்னொருவன் மனைவியை இப்படி பலவந்தப்படுத்துவது தர்மமில்லை “ என்றாள்.

தாந்து தனது கைகளை உதறிக்கொண்டு “ நான் உன்னை விரும்புகிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது. இரவும், பகலும் உனது முகம்தான் தெரிகிறது கோமலி…” என்றபடி அவனது கைகள் கோமலியின் பட்டுடலைத் தழுவத் தொடங்கியது. கோமலி தீனக் குரலில் “ அடுத்தவரின் மரியாதையை இப்படி மண்ணாக்கவோ, நல்ல மனிதர்களின் தலைப்பாகையை உருவிவீசவோ கடவுள் உனக்கு இந்த வலிமையைத் தரவில்லை. இது அநியாயம் தாந்து, காதலை அன்பால் வெல்ல வேண்டும். அடக்குமுறையால் அல்ல. இதற்கு மேல் என்னை பலாத்காரத்தால் அடைய முற்பட்டால் எனது உடம்பை தீயில் எரித்துவிடுவேன்,” என்றாள். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தன. விம்மி விம்மி அழுதாள். விம்மியபடி தாந்துவைப் பார்த்தாள். உலகத்தின் எல்லாத் துயரங்களும் கோமலியின் கண்களில் தேங்கியிருப்பதாக தாந்து விற்குத் தோன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் தளர்ந்துபோனான். அவனது ஆத்மா அவனை இகழத் தொடங்கியது. ஆசைத் தீக்குச்சிகள் அணைந்து போயின. காற்றைப் போல் அவன் அவளை விட்டு விலகிப்போனான்.

“ என் மனைவி போகும் வரும்போது அவளை வழி மறித்து துன்புறுத்தாதே “ என்று தாந்துவை எச்சரித்து வைக்குமாறு கோமலி தன் கணவன் கங்கலா விடம் சொன்னாள். கங்கலாவும் தாந்துவிடம் போய் அவனை எதுவும் எச்சரிக்காமல் இரண்டு ரூபாய் காசு வாங்கிக்கொண்டு வந்துவிட்டான். அந்த இரண்டு ரூபாய்க்கு நன்கு சாராயம் குடித்தான். போதையில் அவன் தாந்துவை “ அவன் ஒரு நல்ல மனிதன். இன்று என்னை திருப்தியாகக் குடிக்க வைத்தான்” என்று பாராட்டி பேசினான். கங்கலாவின் முகம் சொரணையற்று இருந்தது.

தன் கணவன் மேல் மிகுந்த வெறுப்பு மூண்டது கோமலிக்கு. என்ன கணவன் இவன்? கோழை, ஆண்மையற்றவன், கொஞசம் கூட பொறுப்பு இல்லாதவன்.

நாளாக நாளாக கங்கலா விடம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இப்போதெல்லாம் அவனிடம் நிறைய பணம் புழங்கியது. கோமலி கேட்டபோது “ நான் மனோகர் முதலாளியிடம் வேலைக்கு சேர்ந்துவிட்டேன்” என்று பதிலளித்தான். கோமலி வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டாள். கணவன் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு வேலைக்கு ஏன் போக வேண்டும்?

மறுபக்கம் தாந்து வின் வாழ்க்கையும் மாறிப்போனது. அதிகாலையிலேயே எழுந்து வண்டியெடுத்துக்கொண்டு வேலைக்குப் போகிறான். யாரிடமும் சண்டையிடுவதில்லை. அப்படி ஒரு நினைப்பே வருவதில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பின் கோமலியின் இதயத்தில் ஒரு மெல்லிய உணர்வு உதயமாகியிருந்தது. தாந்து வின் மாற்றங்களும், அவன் விலகியிருப்பதும் கோமலிக்கு பிடித்திருந்தது. “ இப்போதெல்லாம் தாந்து கிணற்றுப்பக்கம் ஏன் வருவதில்லை. என்னை ஏன் பார்ப்பதில்லை? “ என்கிற கேள்விகள் அவள் மனத்தில் எழுந்தன. வெகு நேரம் வரை கிணற்றடியில் உட்கார்ந்திருந்தாள். ஆனால் தாந்து வருவதில்லை. இவளைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. அதனால், கோமலியின் மனத்தில் பெரும் துக்க அலைகள் வீசத்தொடங்கின. கோபமும், கழிவிரக்கமும் கொண்டாள். தாந்துவின் கையைப் பிடித்துக் கொண்டு “ ஏன் என்னைப் பார்ப்பதைத் தவிர்க்கிறாய்?” என கேட்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு

அடுத்த நாள் அவளே ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தாள். குளித்துவிட்டு படியேறி மேலேறி வந்தாள். தாந்து அங்கே விளக்குமாறு பின்னிக்கொண்டிருந்தான். கோமலி முன்பு போல தயக்கம் கொள்ளவில்லை. விளக்குமாறு பின்னிக்கொண்டிருந்த தாந்துவை சில கணங்கள் வெறித்துப் பார்த்தாள். பார்க்கப் பார்க்க அவள் மனத்தில் அவன் மேல் கருணை சுரக்கத் தொடங்கியது. உணர்வுகள் கிளம்பி எழுந்தன. தொண்டையைக் கனைத்து பலமாக சத்தம் எழுப்பினாள். தாந்து அவளை நோக்கி ஒரு பார்வையைப் பறக்க விட்டுவிட்டு மீண்டும் தனது வேலையில் மூழ்கிப்போனான்.

கோமலிக்கு எரிச்சலாகவும், கோபமாகவும் இருந்தது. ஆயினும், உள்ளுக்குள் அவன் மேல் கருணை பொங்கிக்கொண்டிருந்தது. அவள் சேலையைக் காய வைத்துவிட்டு போனாள்.

மதியம்

இன்று தாந்து சீக்கிரமே வந்துவிட்டான். வண்டியிலிருந்து குதிரையை அவிழ்த்துவிட்டு குளிப்பாட்டத் தொடங்கினான்.

தெரு வெறிச்சோடி கிடந்தது. குதிரையைக் குளிப்பாட்டி நீர் அருந்த குதிரையை கிணற்றருகே ஓட்டி வந்தான். கோமலி தலையில் தண்ணீர் பானையைச் சுமந்து கொண்டு வருவதைப் பார்த்தான். தனது பார்வையை ஆகாயத்தின் பக்கமாக வீசினான். கோமலி வந்தாள். கிணற்றிலிருந்து பானையில் நீர் நிரப்பிக்கொண்டாள். தாந்துவின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. அகத்திய முனிவர் போல பார்வையால் கோமலியின் முழு அழகின் கடலையும் குடித்து விட முடியாதா? ஆனால், தன் மனத்தில் எழுந்த புயலை தடுத்து நிறுத்தினான். எல்லாவற்றையும் தொலைத்துவிட்ட சூதாடியைப் போல சென்றான்.

இரண்டடி எடுத்து வைத்ததுமே கோமலி கூப்பிட்டாள் “ ரொம்ப தான் திமிர் வந்துவிட்டது.. கண்ணால பார்க்கக் கூட மாட்டேன்ற,,, “

தாந்துவின் கால்கள் நின்றுவிட்டன.

“ கொஞ்சம் பானைய தூக்கிவிடு “

தாந்து அவளருகில் வந்தான். பானையைத் தூக்கிவிட்டான். கணநேரம் அவனது பார்வை நிலா போன்ற அவளது முகத்தில் நிலைத்து நின்றது. கோமலியின் உதட்டில் பிசாசின் மயக்கும் சிரிப்பு ஒட்டிக்கொண்டது.

“என் மேல் கோபமா?”

“ இல்லை “

“அப்புறம் ஏன் இப்போதெல்லாம் நீ இவ்வளவு மாறிவிட்டாய்”

“ உன்னோடு வாழ்வதற்காக “ சொல்லிவிட்டு தாந்து வேகமாக கிணற்றில் இறங்கினான்

கோமலி கொள்ளை கொடுத்தவள் போல நின்றாள். தாந்துவின் அன்பை அவள் ஏற்றுக் கொண்டதைப் போலவே அங்கிருந்து அவள் மெல்ல மெல்ல சென்றாள்.

இரவு மலைப்பாம்பு போல சின்னச் சின்ன வீடுகளை விழுங்கிவிட்டிருந்தது. தாந்து இரவுக்காட்சி சினிமா பார்த்துவிட்டு வந்தான். குதிரையின் உடம்பைத் தடவிக்கொடுத்தான். வீட்டிற்குள் போய் மண் விளக்கேற்றினான்.

அப்போது தான் அவனுக்கு காலடிச் சத்தம் கேட்டது.

“யார் ?”

“நான் தான் “

“கோமலி?”

“ஆமாம் “

“இந்த ராத்திரியில ஏன்?”

“மனம் தாங்க முடியல தாந்து. நீ என்னை அன்பால் வென்றுவிட்டாய். நான் தோற்றுவிட்டேன். நான் தோற்றுவிட்டேன்” அவள் அழுதவாறு அவன் காலடியில் விழுந்தாள். அவள் முகத்திலிருந்த அன்பு, முடிவு, தெளிவு யாவும் மண் விளக்கின் வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது.

“ கோமலி,,, நீ கல்யாணம் ஆனவள் “

“அன்புக்கு நடுவில் கல்யாணம் எனபது சுவராக இருக்க முடியாது “

“ நீ என்னை ரொம்பவும் விரும்புகிறாயா?”

“விரும்பாமல் தான் உன் காலடியில் கிடக்கிறேனா?”

“ஆனால்,,,, “

“என்னை மறுபடி அதிகமா துன்புறுத்தாத,, நான் உண்மையிலேயே தோற்றுவிட்டேன்”

“ உன் கணவனை விட்டுவிட்டு நிரந்தரமாக வந்துவிட்டாய். அப்படித்தானே…” தாந்து சுவர்ப்பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு கேட்டான்.

கோமலியின் ஆசைகள் ஒரேயடியாகத் தொலைந்து போயின. அவள் சட்டென்று எழுந்து “ ஏன் ?” என்று கேட்டாள்

“நீ எப்போதும் என்னுடனே இருக்க வேண்டுமென விரும்புகிறேன்”

“இல்லை இல்லை,,, “ கத்தினாள்

“பக்கத்தில் வீடுகள் இருக்கின்றன” என்று கோமலியை எச்சரித்தான்

“ நீ,,, ரொம்ப மோசமான ரௌடி, பாறைக் கல் உன்னோட மனசு “ சொல்லிவிட்டு கோமலி சென்றுவிட்டாள்

தாந்து அதே மௌனத்தோடும், அதே மாறாத மனத்தோடும் இருந்தான். எப்போதும் போல வேலை செய்து வந்தான். ஆனால், கோமலி தன் இதயத்தின் சத்தத்திற்கு எதிராக கலகம் செய்தாள். அவளும் அதே போல நடந்து கொண்டாள். அவளும் தாந்துவிடம் பேசவில்லை. அவனோ ஒரு போக்கிரி. எந்த மாற்றமும் அவனிடத்தில் ஏற்படவில்லை. அவன் ஒரு கெட்ட பெயரை ஊருக்குள் உண்டாக்க விரும்புகிறான். அவளோ அதை விரும்பவில்லை

ஆனால், ஒரு விசயம் நடந்தது.

தாந்து ஒரு ஊர்வலத்திற்காக வெளியே போயிருந்தான். கங்கலா அபின் குடித்திருந்தான். ஆனாலும் து{}ங்காமல் விழித்திருந்தான். இரவு பன்னிரண்டு மணிவாக்கில் யாரோ கதவு தட்டினார்கள். கங்கலா எழுந்துபோய் கதவு திறந்தான்

“மனோகர் முதலாளி,,, வந்துட்டீங்களா?”

“ஆமா “

“நான் சொம்பு எடுத்துக்கிட்டு காட்டுப்பக்கமா ஓடிப் போறேன். நீங்க? “

“நான் எங்க,,,,, “ என்று இழுத்தான் மனோகர்

“கவலப்படாதீங்க, அவ எதுவும் சொல்லமாட்டா,,, நான் எல்லா ஏற்பாடும் செஞசி வெச்சிட்டேன் “

“நான் உன்னோட எல்லாக் கடனையும் தீர்த்துத்தரேன் “

“ஒரு அம்பது ரூவா கேட்டனே,,, “

“அதுவும் தரேன் “

கங்கலா போய்விட்டான்.

நிலவொளியின் வெளிச்சத்தில் தூங்கிக்கொண்டிருந்த கோமலியின் முகம் தெளிவாக இருந்தது. மனோகர் அவளருகே அமர்ந்தான். கோமலி கண்விழித்தாள். அவனைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்றாள்.

“யார் நீ? “

“ஏய்,,, என்னைத் தெரியலயா? நான் இன்னிக்கி வருவேன்னு கங்கலா சொல்லலயா? “

கோமலி கங்கலாவை எட்டிப் பார்த்தாள்

“அவரு வெளிய போயிட்டாரு் என்றாள். மனோகர் சிரித்தபடி “ நாளைக்கே உன்ன ஊருக்கு வெளிய மாளிகைல கொண்டு போய் வெக்கறேன். இங்க தாந்து வால பிரச்சினை வரும் “ என்றபடி கோமலியின் கையைப் பிடித்தான்

கோமலியின் உடம்பெல்லாம் சூடானது. கையை உதறிவிட்டு “ மரியாதையா இப்பயே திரும்பிப் போயிடு “ என்றாள்

“அப்ப என் பணம்ட?”

“ மரியாதையா போயிடு, இல்லைனா சத்தம் போட்டு ஊர கூட்டி உன் மரியாதைய கெடுத்துடுவேன்”

“உன் வூட்டுக்காரன் வரச் சொன்னான், நீ வேண்டாம்கற,, கோமலி,,, நான் முதலாளி, தாந்துவோட இருந்தா உனக்கு கடத்த தவிர வேற எதுவும் கிடைக்காது, எங்கூட இரு, சந்தோசமா இருக்கலாம், கங்கலாவும் அத தான் விரும்பறான் “

“ போயிடு இங்கயிருந்து “ என்றபடி திரும்பிக்கொண்டாள்

மனோகர் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடுமென்ற பயத்தில் சென்றுவிட்டான். அவன் போனதும் கோமலி உடைந்து போய் அழுதாள். கங்கலா எதுவும் தெரியாதவன் போல் வந்து தூங்கிவிட்டான். அழுது அழுது அவளது கண்கள் வீங்கிவிட்டன. காலை கங்கலா கொஞ்சமும் வெட்கமில்லாமல் கோமலியிடம் டீ கொடு என்று கேட்டான்.

கோமலி அவனை எரித்துவிடும்படி பார்த்துவிட்டு டீ வைக்கப் போனாள்

தாந்து திரும்பி வந்தான். கோமலியைச் சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் அவளை அவனால் சந்திக்க முடியவில்லை. என்ன ஆச்சு? அவன் துடித்துப்போனான். ஊர்வலத்திற்குப் போனபோது அவனுக்குக் கிடைத்த வெள்ளித்தட்டை அவளுக்குக் கொடுக்க விரும்பினான். அந்தத் தட்டு மிகவும் அழகாக இருந்தது.

இரவு வெகுநேரமாகிவிட்டது. விடியும் போல ஆகிவிட்டது. அவனால் தன் மனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கங்கலா காட்டுப்பக்கம் போனதும் அவன் கோமலியைத் தேடி வந்தான், “ கங்கலா,, கங்கலா “ என்று கூப்பிட்டபடி வீட்டிற்குள் நுழைந்தான். காய்ந்த மலர் போல கோமலி உட்கார்ந்திருந்தாள். அவனைப் பார்த்ததும் செயலற்று திகைத்துப் போனாள் அவள்.

“உடம்பு சரியில்லையா? “ என கனிந்த பார்வையோடு கேட்டான்.

அவள் அமைதியாக இருந்தாள். பார்வையைச் சுவர் பக்கமாக ஓடவிட்டாள். கால் மெட்டியால் தரையைக் கீறினாள்.

“ஏன் எதுவும் பேச மாட்டேங்கற, நான் உன் காதலன், ம்,,, பேசு “

கோமலி உடைந்து அழுதாள். அவள் விம்மியழுதது இதயத்தைக் கரைப்பதாக இருந்தது. தாந்து அவளைத் தன் மார்பில் புதைத்துக்கொண்டான்.

“என்னாச்சு கோமலி?”

அழுதபடியே எல்லாவற்றையும் சொன்னாள். தாந்துவின் மனம் கோபத்தால் நிறைந்தது. வெள்ளித்தட்டை தரையில் வீசியெறிந்து ” அவன் உயிர எடுக்காம விட மாட்டேன், அவன துண்டுத்துண்டா வீசிடறேன் “ என்று கத்தினான்

கோமலி நடுங்கிவிட்டாள்

“ நான் அவன் கண்ண பிடுங்கிப்போடறேன். கவல படாத, “ சொல்லிவிட்டு அவன் வெளியே போனான்

கோமலி அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து தாந்து மறைந்த பிறகு தான் அவளுக்கு சுய நினைவே வந்தது. வெளியே ஓடிவந்தாள். ஆனால், தாந்து போய்விட்டிருந்தான். அவள என்ன தான் செய்ய முடியும்? அவனை எப்படி தடுத்து நிறுத்துவது? சுழலில் சிக்கிய படகு போல சுற்றினாள். கடைசியில் மனோகரின் பஞ்சாலையை நோக்கி ஓடினாள்.

அவள் போனபோது அங்கே பெருங்கூட்டம் கூடியிருந்தது. தாந்துவை பலர் பிடித்துக்கொண்டிருந்தனர். மனோகரின் தலையிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. தாந்துவின் காதுக்குப் பக்கமிருந்தும் இரத்தம் வழிந்தோடியது. “ மறுபடி அந்தப் பக்கம் உன்ன பார்த்தேன்,,, உசுரோட விட மாட்டேன். கோமலிய தப்பா புரிஞ்சிகிட்ட நீ, கொன்னுடுவேன் உன்ன “ என்று கத்திக்கொண்டிருந்தான் தாந்து. பிற ஒரு சிங்கத்தைப் போல அங்கிருந்து திரும்பினான். கோமலியும் அங்கிருந்து மறைந்து போனாள்,

வீட்டிற்குள் நுழைந்தபோது அங்கே கோமலி உட்கார்ந்திருந்தாள். இரத்தம் சொட்டி சொட்டி அவனது பனியனை நனைத்துக்கொண்டிருந்தது இன்னும். கோமலியின் இதயம் அன்பால் நிறைந்திருந்தது. கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது. தாந்துவை கட்டிப்பிடித்து “ இனி எப்போதும் உங்கூட தான் இருப்பேன். சொந்த பந்தம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். நான் இனி உனக்கானவள். உனக்கு மட்டுமே உரியவள். உனக்கு மனைவியாக இருக்கும் தகுதியோடு வந்திருக்கிறேன். இந்த மனசையும். உடம்பையும் உன்னால் மட்டும்தான் காக்க முடியும்,” என்றாள்

அப்போதிருந்து இருவரும் ஒன்றாகிவிட்டனர். கங்கலா வேறு தெருவுக்குப் போய்விட்டான். கிணறு மூடப்பட்டுவிட்டது.

•••

“தலித் பெண்ணியக் கதைகள்” தொகுப்பிலிருந்து

யாத்வேந்திர சர்மா “சந்த்ர”

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். சாகித்ய அகாதமி உள்பட பல விருதுகள் பெற்ற எழுத்தாளர். பதினைந்து சிறுகதைத் தொகுப்புகளும் அறுபது நாவல்களும், ஏழு நாடக நு}ல்களும் எழுதியுள்ளார். ராஜஸ்தானின் முதல் வண்ணத் திரைப்படத்தை எடுத்தவர். மூன்று தொலைக்காட்சிப் படங்கள் இயக்கியுள்ளார்,

நிலவின் மகள்கள் THE DAUGHTERS OF THE MOON இத்தாலிய மொழி : இடாலோ கால்வினோ Italo Calvino ஆங்கிலம் : மார்ட்டின் மெக்லாஃப்லின் Martin McLaughlin. / தமிழில் / ச.ஆறுமுகம்

images (10)

பாதுகாப்புக் கவசமாக வெற்றுக் காற்று மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதில், தனக்கு நீதி மறுக்கப்பட்டுவிட்டதான உணர்வில் கவன்றுகொண்டிருந்த நிலவுக்கு, விண்கற்களின் தொடர்ச்சியான வீழ்பொழிவுத் தாக்குதலுக்கும் சூரியக் கதிர்களின் எரித்தரிக்கும் கொடுமைக்கும் தொடக்க காலத்திலிருந்தே எப்போதும் ஆட்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றியது. கோர்னெல் பல்கலைக்கழகத்தின் தாமஸ் கோல்டு கூறுவதன்படி, விண்கல் துகள்கள் தொடர்ச்சியாகப் படிந்துராய்வதில் நிலவின் மேற்பரப்பிலுள்ள பாறைகள் பொடிப்பொடியாகி மாவாகிவிட்டன. சிக்காகோ பல்கலைக்கழக ஜெரார்டு குய்ப்பரின் ஆய்வுப்படி, நிலவின் கற்குழம்பிலிருந்து வெளியான வாயுக்களே, அந்தத் துணைக்கோளுக்கு படிகக்கல்லில் வெளிப்படுவது போன்றதொரு நுண்துளைகளுடன் கூடிய ஒரு பிசுபிசுப்பினை, ஒரு ஒளியினை அளித்திருக்கலாம்.

நிலவு, கிழடு தட்டிக் குண்டும் குழியுமாகப் பொள்ளல் விழுந்து முற்றிலும் தளர்ந்துள்ளதை ஆஃப்வஃப்க் ஒப்புக்கொள்கிறார். அது, வானம் முழுக்க நிர்வாணமாக உருண்டு, உருண்டு, தசை முழுவதும் கரம்பப்பட்டுவிட்ட ஒரு எலும்புத்துண்டாக இற்றுப்போயுள்ளது. இப்படியான நிகழ்வு இப்போது தான் முதன்முதலாக நடக்கிறதென்பதில்லை. இதைவிடவும் வயதாகி, உருக்குலைந்த பல நிலவுகள் என் நினைவுக்கு வருகின்றன. `டன்` கணக்கில் நிலவுகளை நான் பார்த்திருக்கிறேன்; அவை பிறந்துகொண்டிருப்பதையும் வானத்தில் குறுக்கு மறுக்காக ஓடித்திரிந்து மரித்துப் போவதையும், எரிநட்சத்திரங்களின் வேகப்பொழிவில் துளைகளாகிப்போன ஒரு நிலவையும், இன்னொன்று, அதனுடைய சொந்த எரிவாயுக்களாலேயே வெடித்துச் சிதறியதையும், இன்னுமொன்றில் கோமேதக நிற வியர்வைத் துளிகள் உருவாகிச் சொட்ட, அவை உடனடியாக ஆவியாவதையும், பின்னர் அந்த நிலவு பச்சை நிற மேகங்களால் சூழப்பட்டு முழுவதுமாக மறைக்கப்பட்டுக் காய்ந்து போன கடற்பஞ்சாகச் சுருங்குவதையும் கண்டிருக்கிறேன்.

ஒரு நிலவு மரணிக்கும் போது பூமிக்கோளில் நிகழும் மாற்றங்களை விவரிப்பது எளிதானதல்ல; என் நினைவுக்கெட்டிய வகையில் கடைசியாகப் பார்த்த ஒரு நிகழ்வினைக் கொண்டு நான் உங்களுக்கு விளக்க முயல்கிறேன். மிக நீண்ட பரிணாம வளர்ச்சிக் காலத்தின் தொடர்ச்சியாக பூமிக்கோள் இப்போது நாமிருக்கிற இந்த நிலைக்குக் கூடவோ குறையவோ வந்திருந்தது; அதையே, காலணிகள் தேய்ந்து உயிர்விடுவதைவிடவும் அதிவேகமாகக் கார்கள் தேய்ந்து போகும் ஒரு காலத்துக்கு பூமி வந்துசேர்ந்திருந்ததென்றும் கூறலாம். மனித உழைப்பில் உற்பத்தியாகிற, வாங்கவும் விற்கவுமான பண்டங்கள் மற்றும் ஒளிமிக்க வண்ணங்களால் கண்டங்களை மறைத்துநிற்கும் நகரங்களைப் போன்ற ஒரு நிலையேதான் அப்போதுமிருந்தது. கண்டங்களின் வடிவங்கள் பல்வேறாக, எந்த அளவிலிருந்தபோதும் அந்த நகரங்கள், அநேகமாக தற்போது நமது நகரங்கள் இருக்கின்ற அதே இடங்களில் தான் உருவாகி வளர்ந்திருந்தன. அங்கே ஒரு புதிய நியூயார்க், உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த நியூயார்க்கை ஒருவிதத்தில் ஒத்திருந்த, ஆனால் மிகவும் புதிதாக அல்லது, புத்தம் புதிய தயாரிப்புகள், புதிய பல் துலக்கிகளால் ஏற்பட்ட ஒரு கூடுதல் பளபளப்புடன் அந்தப் புதிய நியூயார்க், புத்தம் புது வரவான புதிய பல் துலக்கியின் நைலான் குறுமுடிகள் போன்று மினுங்கிக்கொண்டிருந்த வான்தொடும் கட்டிடக் காடுகள் அடர்ந்து தனித்துத் தெரியும். அதன் எப்போதுமான மன்ஹாட்டனுடனான ஒரு புதிய நியூயார்க்காக இருந்தது.

எந்தவொரு பொருளும் மிக இலேசான ஒரு கீறல் அல்லது நாட்பட்டது போல் தோன்றும் முதல் கணம், முதல் வடு அல்லது முதல் கறை கண்ணில்பட்ட உடனேயே தூக்கியெறிந்துவிட்டு, அதற்குப் பதிலாகப் புத்தம் புதியதும் முழுநிறைப் பொருத்தமானதுமான மாற்றுப்பொருள் ஒன்றினைக் கொணர்ந்துவிடுகிற இந்த உலகில், தவறான ஒற்றை இராகமாக, நிழல்படிவு ஒன்று இருந்ததென்றால் அது நிலவு மட்டுமே. அடிபட்டுத் தேய்ந்து, நரைத்து வெளிறி, அதன் கீழிருக்கும் பூமிக்கு மேலும் மேலும் அந்நியமாகி, நாட்பட்டுக் காலாவதியான ஒரு நிலையில், நீடிக்கும் ஒரு தலைவலியாக அது வானம் முழுக்க நிர்வாணமாக அலைந்து திரிந்தது.

`முழு நிலவு`, `அரைநிலவு`, `பிறைநிலவு`, `நிலவுக்கீற்று` போன்ற புராதனத் தொடர்களெல்லாம் உண்மையில் வெறும் அலங்காரப் பேச்சின் அணிகளாகத் தொடர்கின்றனவே தவிர வேறொன்றுமில்லை. முழுவதுமாகவே வெடிப்புகளும் குண்டு குழிகளுமாகவும் எந்நேரமும் இடிந்து இடிபாடுகளாக நம் தலையில் கொட்டப் போவதாகத் தோன்றும் ஒன்றினை எப்படி `முழுமை` யானதென நாம் அழைக்க இயலும்? அதுவே மரணித்துக்கொண்டிருக்கும் ஒரு நிலவாக இருப்பதானால் சொல்லவேண்டிய அவசியம் எழவேயில்லை! அது மேற்புறம் கொறிக்கப்பட்ட பாலாடைக்கட்டியாக உருமாறியிருந்ததோடு, நாம் எதிர்பார்க்காத ஒரு தருணத்திலேயே, எப்போதும் மறைந்துவிடுவதாக இருந்தது. ஒவ்வொரு அமாவாசையின் போதும், அது எப்போதுதான் மீண்டும் தோன்றுமோவென ஆர்வத்தோடு வியந்தேயிருந்திருக்கிறோம் (பிறகென்ன, அது திடுதிப்பென மறைந்துவிடுமென்றா நம்பினோம்?) என்பதோடு அது மீண்டும் தோன்றியபோது, பற்களை இழந்த சீப்பிற்கும் கேவலமாக, படுகேவலமாகத் தெரியவே, அதிர்ச்சியில் நாம் கண்களை வேறுபக்கம் திருப்பினோம்.

அது ஒரு சோர்வூட்டும் காட்சி. இரவும் பகலுமாக எந்நேரமும் திறந்திருக்கும் பெரிய, பெரிய பல்பொருள் அங்காடிகளுக்கு உள்ளும் வெளியிலுமாக எடை மிகுந்த பொதிகளைச் சுமக்கும் கைகளுடன், நாம் மக்கள் திரள்களினூடாகச் செல்கையில், வான்தொடும் கட்டிடங்களுக்கும் மேலாக, உயரத்தில், இன்னும் உயரத்தில் ஒளிர்ந்துகொண்டிருக்கின்ற நியான் விளம்பரங்களில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புத்தம் புதிய வரவுகளை, நமக்கென்றே நிரந்தரமாகத் தெரிவிக்கப்பட்டவற்றை, நாம் ஊடுருவித் துருவித் துருவிக் கூராய்ந்துகொண்டிருக்கும்போதே, அந்தக் கண்ணைப் பறிக்கும் விளக்கொளிகளின் மத்தியிலேயே திடீரென அது வெளிறி, மெதுமெதுவாக நோய்ப்பட்டுத் தேய்வதை நம் கண்ணாலேயே காண்பதோடு, நம் தலைக்குள் திணிக்கப்பட்ட அந்த ஒவ்வொரு புதிய பொருளையும் தலையைவிட்டும் வெளிக்கொணர இயலாதிருப்பதோடு, அப்போதுதான் நாம் வாங்கியிருந்த ஒவ்வொரு பொருளும் அப்படிக்கப்படியே பழையனவாகி, பயனற்றதாகி வெளிறிப் போக, ஓடித்திரிந்து தேடித்தேடிப் பொருட்களை வாங்கிய, ஒருவித ஆசைவெறிகொண்டு பணியாற்றிய ஆர்வத்தை இழந்துநிற்போம் – அது, தொழில்துறைக்கோ, வர்த்தகத்துறைக்கோ எந்தப் பாதிப்பினையும் ஏற்படுத்தாத ஒரு இழப்பு.

இதை வைத்துக்கொண்டு `என்னடா` செய்வதென நாம் திகைக்கத் தொடங்குகிறோமே அதுபோன்ற ஒரு பிரச்னையாகத்தான் அந்த எதிர்மறைப்பயன் விளைக்கின்ற துணைக்கோளும் இருந்தது. அதனால் எந்தப் பயனுமில்லை; பயனற்றுப் பாழாகிப்போன ஒன்றாகத்தான் அது இருந்தது. அதன் எடை குறையவே, அதன் சுற்றுவட்டம் பூமியை நோக்கிச் சாயத் தொடங்க, மற்றெல்லாவற்றையும் விட மோசமான ஒரு அபாயமாகியது. அப்படியே, பூமியின் பக்கம் வரவர, அது, தன் வேகத்தைக் குறைத்தது; அதன் போக்கினை எங்களால் கணிக்கமுடியாமலிருந்தது. மாதங்களின் ஒழுங்குவரிசை காட்டும் நாட்காட்டி கூட வெறும் மரபாகிப் போனது; நிலவு, இடிந்து விழுந்துவிடுவது போன்று நடுக்கத்திற்காளாகியது,

ஒளிகுன்றிய இந்த நிலவுநாட்களின் இரவுகளில், சிறிது மேலதிகமான, உறுதிகுலைந்த மனப்போக்குடையவர்கள் விசித்திரமாகச் செயல்படத் தொடங்கினர். தூக்கத்தில் நடக்கும் நோயர் ஒருவர் நிலவை நோக்கி நீட்டிய கரங்களுடன் வான்தொடும் கட்டிட விளிம்பின் சுற்றுச்சுவர் முனைவரைக்கும் வந்துவிடுவது, அல்லது, பரபரப்பான டைம் சதுக்கத்தின் மத்தியில் கிழஓநாய் ஊளையிடத் தொடங்குவது, அல்லது நெருப்புப்பித்தர் ஒருவர் துறைமுகக் கிடங்குகளுக்குத் தீவைத்துவிட்டது போன்ற நிகழ்வுகள் எப்போதுமிருந்தன. ஒரு கட்டத்தில் இவையெல்லாம் மிகமிகச் சாதாரணமாகி, வழக்கமாக அமானுடச் செய்திகளுக்காக அலையும் கூட்டத்தை ஈர்க்கவியலாமற் போயிருந்தனதாம். ஆனாலும், மத்திய பூங்காவிலுள்ள இருக்கைப் பலகை ஒன்றின் மீது முழுக்க முழுக்க நிர்வாணமாக, ஒரு பெண் அமர்ந்திருந்ததைப் பார்த்தபோது, நான் நின்றேயாக வேண்டியிருந்தது.

அவளைப் பார்ப்பதற்கு முன்பாகவேகூட, புரியாத, மிகப் புதிரான ஏதோ ஒன்று நிகழவிருப்பதுபோன்ற ஒரு உணர்வு எனக்குள் இருக்கத்தான் செய்தது. என் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய வட்டினைக் கைக்கொண்டு, நான் மத்திய பூங்காவுக்குள் ஓட்டி வந்தபோது, ஒளிர்வாயுவிளக்கு ஒன்று முழுவதுமாக ஒளிரத் தொடங்கும் முன் விட்டுவிட்டுத் தொடர்ச்சியாக மின்னி வெளியிடும் ஒளிச்சிதறல் போன்ற ஒரு சிமிட்டொளியில் குளிப்பதுபோல் நான் உணர்ந்தேன். என்னைச் சுற்றிலுமிருந்த காட்சித்தோற்றம் நிலவுப்பள்ளத்துக்குள் மூழ்கிப்போன ஒரு தோட்டக் காட்சியினைப் போன்றிருந்தது. நிலவுக் கீற்று ஒன்றைப் பிரதிபலித்துக்கொண்டிருந்த நீர்க்குட்டை ஒன்றின் அருகே அந்த நிர்வாணப் பெண் அமர்ந்திருந்தாள். நான் தடைக்கட்டையை மிதித்தேன். ஒரு கணம் நான் அவளைத் தெரிந்துகொண்டதாகவே நினைத்தேன். காரை விட்டிறங்கி அவளை நோக்கி ஓடினேன்; ஆனாலும் மறுகணம் உறைந்துபோய் நின்றேன். அவள் யாரென்று எனக்குத் தெரியவில்லை; அவளுக்கு உடனடியாக, அவசரமாக ஏதாவது செய்தாகவேண்டுமென்று மட்டும் உணர்ந்தேன்.

இருக்கைப்பலகையைச் சுற்றிலும் புற்களின் மீது அனைத்தும் சிதறிக்கிடந்தன; அவளது ஆடைகள், இங்கொன்றும் அங்கொன்றுமாக அரணக் காலணி மற்றும் காலுறைகள், அவளுடைய காதணி வளையங்கள், கழுத்தணிமாலை மற்றும் முன்கை அணிவளைகள், கைச்சிறு பணப்பை, பொருட்கள் அனைத்தையும் ஒரு பரந்த வட்டத்தின் வில்வடிவத்தில் சிதறவிட்டுக் கிடந்த ஒரு மளிகைப்பை, எண்ணிலடங்காத சிறு பொட்டலங்கள் மற்றும் பொருட்கள், அநேகமாக அந்த ஜீவன் ஆர்வமிக்க ஒரு தாராளமான வாங்கிக் குவித்தல் முடித்த கணத்தில் அந்தக்கணத்திலேயே திரும்ப வருமாறு அழைக்கப்பட, இந்தப் பூமியோடு அவளைத் தொடர்புறுத்துகின்ற அனைத்துப் பொருட்களையும் அடையாளங்களையும் உதறித் தொலைத்தேயாகவேண்டுமென்ற நிர்ப்பந்தப் புரிதலில், அனைத்தையும் உதறியெறிந்துவிட்டு, நிலவின் உலகத்துக்குள் நுழைவதற்காகக் காத்திருப்பது போலிருந்தது.

“என்னவாயிற்று” நான் திக்கித் திணறிக்கேட்டேன். ” நான் ஏதேனும் உதவி செய்யலாமா?”

“உதவியா?” மேல்நோக்கி வெறித்த கண்களுடன் அவள் உச்சரித்தாள். “யாராலும் உதவமுடியாது. யாராலும் எதுவும் செய்யமுடியாது.” அவள், அவளைப்பற்றியல்லாமல் நிலவினைப் பற்றியே பேசுவது நன்றாகவே புரிந்தது.

நிலவு எங்கள் தலைக்கு மேலாக, ஒரு குவி வடிவில் பாழடைந்த ஒரு கூரையாக துளைகள் நிறைந்த ஒரு பாலாடைக்கட்டித் துண்டினைப் போல இருந்தது. அந்தக்கணத்தில் உயிர்க்காட்சிப் பூங்காவிலிருந்த உயிரினங்கள் ஊளையிடத்தொடங்கின.

“இதுதான் முடிவுக்காலமா?” இயந்திரத்தனமாகத் தான் கேட்டுவிட்டேன். ஆனால், நான் என்ன சொன்னேனென்று எனக்கே புரியவில்லை.

“இதுதான் ஆரம்பம்,” அல்லது அதுமாதிரியான ஏதோ ஒன்றை அவள் பதிலாகச் சொன்னாள். (அவள் எப்போதுமே அநேகமாக உதடுகளைத் திறக்காமலேதான் பேசினாள்.)

“நீ என்ன சொல்கிறாய்? முடிவின் தொடக்கமா அல்லது வேறு ஏதோ ஒன்றின் தொடக்கமா?”

அவள் எழுந்து புல்லின் மேலாக நடந்தாள். அவளது செம்பு நிறத் தலைமுடி தோள்களுக்கும் கீழாக வழிந்து தொங்கியது. தீமைக்கு எளிதில் ஆட்படும் அபாயத்தில் இருந்த அவளுக்கு ஏதோ ஒரு சிறிய அளவிலாவது பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அவள் கீழே விழுந்துவிடுவதாக இருந்தால் உடன் பிடித்துக்கொள்ளவும், அவளைத் துன்புறுத்துவதாக ஏதேனும் நெருங்கிவந்தால் அதனைத் துரத்துவதாகவும் என் கைகளை அவளைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவச வளையம் போல் அசைக்கத் தொடங்கினேன். ஆனால், அவள் மேனியை மறந்தும் தொட்டுவிட அல்லது உரசிவிட என் கைகள் துணியவில்லை என்பதோடு, அவள் மேனியிலிருந்து சில சென்டிமீட்டர்கள் தொலைவிலேயே அவை எப்போதும் இயங்கின. அப்படியே அவளைப் பின்தொடர்ந்த நான் பூந்தோட்டப் பாத்திகளைக் கடந்ததும் தான், அவளுடைய அசைவுகளும் என்னுடையதைப் போலவே, எளிதில் உடைந்துவிடப்போகின்ற ஏதோ ஒன்றை, தரையில் விழுந்து துண்டுதுண்டுகளாகச் சிதறப்போகும் ஒன்றினை, அவள் தொட்டுவிடக்கூடாத அதனைக் கையசைவுகள் மற்றும் அடையாளங்கள் மூலமாக மட்டுமே அது தெம்புடன் அமர்கிற ஒரு இடத்துக்கு நகர்த்திக் கொண்டுசெல்வது அவசியமாக இருந்த அதனைப் பாதுகாக்க முயற்சிப்பதை, நான் உணர்ந்தேன்: அது நிலவுதான்.

நிலவு தொலைந்துபோனதாகத் தோன்றியது. அதன் சுற்றுக்கோள வழியினை விட்டகன்ற அதற்கு எங்கு செல்வதென்று தெரிந்திருக்கவில்லை; காய்ந்த ஒரு சருகினைப் போலத் தன்னை எடுத்துச்செல்ல அது அனுமதித்தது. சிலநேரங்களில் அது பூமியை நோக்கி அசைந்துவருவதாகத் தோன்றியது, வேறுசில நேரங்களில் திருகுச் சுருள் வடிவ இயக்கத்தில் திருகப்படுவது போலும் இன்னும் வேறான நேரங்களில் வெறுமனே மிதப்பது போலும் தோன்றியது. அதன் இருப்பிட உயரமும் குறைந்துவந்ததென்பது நிச்சயம் தான்: ஒரு கணம் பிளாசா ஹோட்டல் மீது இடிந்துவிழுந்துவிடுவது போல் தோன்றினாலும், அதற்குப் பதிலாக, அது இரண்டு வான்தொடு கட்டிடங்களுக்கிடையிலான ஒரு இடைவெளிப்பகுதிக்குள் நுழைந்து ஹட்சன் வளைகுடாத் திசையில் மறைந்துபோனது. சிறிது நேரத்திலேயே மீண்டும் தோன்றிய அது, நகரத்திற்கு எதிர்ப்புறமாக ஒரு பெரிய மேகத்தின் பின்னாலிருந்து தலைகாட்டி மீண்டும் வெளிப்பட்ட அது வெண்ணிற ஒளியில் ஹார்லேம் மற்றும் கிழக்கு ஆற்றில் மூழ்கிக் குளித்துக்கொண்டே, காற்றின் அலை ஒன்றில் அகப்பட்டுக்கொண்டது போல, அது பிரான்க்ஸ் பகுதி நோக்கி உருண்டது.

“அதோ, அங்கே!” என்று நான் கத்தினேன். ”அங்கேயே – அது அப்படியே நின்றுவிட்டது!”

“அது நிற்கவே முடியாதே!” என அந்தப் பெண் வியந்துகொண்டதோடு, புல்லின் மீது வெற்றுக்கால்களால் நிர்வாணமாக ஓடவும் செய்தாள்.

“ஏய், நீ எங்கே போகிறாய்? இப்படியெல்லாம் நீ ஓடக்கூடாது! நில்! ஏய், உன்னிடம்தான் சொல்கிறேன்! உன் பெயர் என்ன?”

டயானா அல்லது டியானோ போன்ற ஒரு பெயரைக் கத்திச் சொன்னாள்; அதுவும் கூட ஏதாவதொரு வேண்டுதல் வாசகமாகவும் இருக்கலாம். அதோடு அவள் மறைந்துவிட்டாள். அவளைப் பின்தொடர்வதற்காகக் காருக்குள் குதித்த நான் மத்திய பூங்காவின் கார்ச்சாலைகளில் தேடத் தொடங்கினேன்.

எனது முகப்பு விளக்குகளின் ஒளித்தூண்கள் வேலிகள், மலைகள், நான்முனைக் கம்பத் தூபிகளிலெல்லாம் ஒளியேற்றின; ஆனால் அந்தப் பெண் டயானாவை எங்குமே காணவில்லை. அதிலும் அந்த நேரத்தில் நான் வெகுதூரம் கடந்துவிட்டிருந்தேன்: நான் அவளைக் கடந்து வந்திருப்பேனோ; வந்த வழியே திரும்பிச் சென்று பார்க்க அப்படியே வட்டமடித்துத் திரும்பினேன். என் பின்னாலிருந்து வந்த ஒரு குரல் சொன்னது, “இல்லை, இல்லை, அது அங்கே தான் இருக்கிறது, போய்க்கொண்டேயிரு!”

எனது கார் டிக்கியின் மேற்புறமாக, நிலவை நோக்கி நீட்டிய கரங்களுடன் நிர்வாணமாக அவள் அமர்ந்திருந்தாள்.

அவளை அப்படித் தெளிவான காட்சியாக, அவள் அமர்ந்திருந்த அந்த நிலையில் அவளையும் வைத்துக்கொண்டு நகர் முழுதும் நான் காரோட்ட முடியாதென்பதை அவளுக்கு விளக்கிச் சொல்வதற்காக, அவளை கீழே இறங்கச் சொல்லவேண்டுமென நான் விரும்பினாலும் கார்ச்சாலை முடிவில் தோன்றுவதும் மறைவதுமாக இருந்த அந்தத் தண்ணொளி வண்ணத்திலிருந்தும் பார்வையை ஒருபோதும் அகற்றத் தயாரில்லாமலிருந்த அவளைத் திசைதிருப்பும் துணிவு எனக்கு இல்லாமற்போனது. அதுவுமின்றி எந்தவொரு நிலையிலும் – அந்நியனென்றாலும்கூட – வழிப்போக்கன் யாரும் எனது கார் டிக்கியின் மேல் அமர்ந்திருக்கும் இந்தப் பெண்ணுருவினைக் கவனித்திருந்ததாகத் தெரியவில்லை.

மன்ஹாட்டனை முக்கிய நிலப்பகுதியுடன் இணைக்கும் பாலங்களில் ஒன்றினை நாங்கள் கடந்தோம். இப்போது நாங்கள் பல்முனை நெடுஞ்சாலையில் இருமருங்கிலும் பலப் பல கார்கள் நெருக்கமாக அணிவகுக்கப் போய்க்கொண்டிருந்தோம்; நாங்கள் இருவரும் இருந்த காட்சி எங்களைச் சுற்றியிருந்த கார்களில் சந்தேகத்திற்கிடமின்றித் தோற்றுவிக்கும் சிரிப்பலைகள் மற்றும் குரூரப் பேச்சுக்கணைகளுக்குப் பயந்து நான் என் கண்களைச் சாலையில் மட்டுமே அப்படி இப்படி அசைக்காமல் நேராகச் செலுத்தியிருந்தேன். ஆனால், பெருடிக்கிக் கார் ஒன்று எங்களை முந்திச்சென்றபோது ஆச்சரியத்தில் நான் சாலையை விட்டுக் கீழேயே இறங்கிச் செல்லவிருந்தேன்: அதன் கூரை மீது காற்றில் பறக்கும் தலைமுடியுடன் அமர்ந்திருந்தது ஒரு நிர்வாணப் பெண். ஒரு கணம், என் காரிலிருந்த பயணிதான் ஓடும் காரிலிருந்து இன்னொரு காருக்குத் தாவிவிட்டாளோவென நினைத்துவிட்டேன்; ஆனால், டயானாவின் கால் மூட்டுகள் என் மூக்குக்கு நேரான சமநிலையில் அசைவின்றியிருந்ததைக் காண்பதற்கு என் தலையை மட்டும் இலேசாகச் சாய்த்துத் திருப்பவேண்டியிருந்தது. அவளது உடல் மட்டுமே என் கண்முன்பாக ஒளிவீசிக்கொண்டிருந்தது என்பதில்லை; அப்போது நான் எங்கெங்கு நோக்கினும் விதம் விதமாக நினைத்துப் பார்க்கவே இயலாத வித்தியாசமான சாய்வு மற்றும் அமர் நிலையில், அவர்களது இளஞ்சிவப்பு அல்லது கருநிற நிர்வாண மேனிப் பளபளப்புக்கு எதிர்நிலையில் பொன்னிற அல்லது இருள் நிறத் தலைமயிர்க் கற்றைகளுடன் பறக்கும் கார்களின் ரேடியேட்டர் மறைப்புகள், கதவுகள், முட்டுத் தாங்கிகள், சக்கர மூடுதளங்களில் பற்றிப்பிடித்துத் தொங்கிய நிர்வாணப் பெண்களைக் கண்டேன். ஒவ்வொரு காரிலும் இப்படியான புதிர் நிறைந்த பெண் பயணிகள் முற்சாய்ந்த நிலையில் அவரவர் காரோட்டிகளை நிலவைப் பின்தொடருமாறு அவசரப்படுத்திக்கொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவருமே அபாயத்திலிருந்த நிலவால் அழைப்பு அனுப்பப்பட்டவர்கள்தாம்; அதில் நான் உறுதியாகவே இருந்தேன். அப்படி எத்தனை பேர் இருந்தனர்? எந்த இடத்திற்கு மேலாக நிலவு நின்றிருப்பதாகத் தோன்றியதோ அந்த இடத்திற்கு நகரத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் வந்து சேருகின்ற கூட்டுச் சாலைகள் மற்றும் , குறுக்குச் சாலைகள் அனைத்திலும் நிலவுப் பெண்களைச் சுமந்திருந்த கார்கள் பெருவாரியாகச் சேர்ந்திருந்தன. நகரத்தின் விளிம்பில், ஓட்டை உடைசல் தானியங்கிக் களத்தின் முன்பாக நாங்கள் வந்து சேர்ந்திருந்ததைக் கண்டோம். சிறுசிறு பள்ளத்தாக்குகள், வரப்பு மேடுகள், குன்றுகள் மற்றும் முகடுகளுடன் விளங்கிய ஒரு பகுதியில் சாலை முடிந்துபோனது; ஆனால், அந்தச் சமநிலையற்ற மேற்பரப்பு நிலத்தின் கூறுபாடாகத் தோன்றியதல்ல; அதற்கு மாறாக, வீசியெறியப்பட்ட பொருட்களின் படிம அடுக்குகள் மற்றும் குவியல்களால் அப்படியாகியிருந்தது. நுகரும் நகரம் பயன்படுத்தி முடித்து, புதிய வரவுகளைக் கையாளும் மகிழ்வினை உடனடியாகக் கொண்டாடுவதற்காகவே வெளித்தள்ளிய ஒவ்வொரு பொருளும், இந்த, முன்னெப்போதும் யாருக்கும் சொந்தமாக இராத ஊரக நிலத்துக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.

பற்பல ஆண்டுகளில் சேர்ந்துவிட்ட நொறுக்கியெறியப்பட்ட குளிர்பெட்டிக் குவியல்கள், லைஃப்மேகஸீன் வெளியிட்ட மஞ்சள் பக்கங்கள் மற்றும் எரிந்துபோன மின் குமிழ் விளக்குகள் இந்த மாபெரும் குப்பைக் கிடங்கினைச் சுற்றிலும் இரைந்துகிடந்தன. இந்தக் கூர்க் குவடுகளாகத் துருவேறிக்கிடந்த நிலப்பகுதியின் மீதுதான் நிலவு அப்போது ஒளிவீசிக்கொண்டிருந்ததோடு, நொறுங்கிய உலோகச் சிதறல்கள் பெரும் அலையொன்றில் அடித்துச் செல்லப்படுவதுபோல் ஊதிப்புடைத்து மேடாகின. சிதைந்த நிலவும், உலோகச் சிதைவுகளின் குவியல்களால் பற்றவைக்கப்பட்டு, பூமியின் முகடாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இப்பகுதியும் ஒன்றையொன்று பெரிதும் ஒத்திருந்தன. உலோகக் கழிவுத் துணுக்குகளின் குவியல் மலைகள் ஒரு சங்கிலித் தொடராக வட்ட வடிவில் இணைந்து ஒரு திறந்தவெளி அரங்கம்போல் உருவாகி அது எரிமலைப்பள்ளம் அல்லது நிலவிலுள்ள கடலினை மிகச் சரியாக ஒத்திருக்கின்ற வடிவத்தில் அமைந்திருந்தது. இந்த நிலப்பரப்பிற்கு நேர் மேலாகத்தான் அந்த நிலவு மிதந்துகொண்டிருந்ததோடு, அவை ஒரு கோளும் துணைக்கோளும் ஒன்றையொன்று பிரதிபலிக்கும் கண்ணாடிப் பிம்பங்கள் போல விளங்கித் தோன்றின.

எங்கள் கார் இயந்திரங்கள் அனைத்தும் தாமாகவே நின்றுவிட்டன. அவ்வவற்றின் சொந்தக் கல்லறைகளாகத் தோற்றமளித்த அவற்றை வேறெதுவும் அச்சுறுத்திவிடவில்லை. டயானா காரிலிருந்து இறங்கியதும் மற்ற அனைத்து டயானாக்களும் அவளைப் பின்தொடர்ந்து இறங்கினார்கள். ஆனால் அவர்கள் ஆற்றல் முழுவதும் வடிந்துவிட்டது போல் தோன்றியது; அந்த இரும்புத் துணுக்குக் கழிவுக் குவியல்கள் மத்தியில் சென்றதும் திடீரென அவர்கள் தங்கள் சொந்த நிர்வாணம் பற்றிய உணர்வினால் தாக்குண்டது போல, நிச்சயமற்ற மென்காலடிகளெடுத்து நகர்ந்தனர்; அவர்களில் பலரும் குளிரில் நடுங்குவதுபோல் குன்றி, மார்புகளை மறைத்துக்கொள்ளக் கைகளைப் பெருக்கல் குறிகளாக மடித்துக்கொண்டனர். அப்படியே, அங்கு அவர்கள் சிதறிப் பரந்து அந்தப் பயனற்ற உலோகத் துணுக்கு மலைகள் மீது ஏறியிறங்கி, திறந்தவெளி அரங்கத்தினுள் நுழைந்ததும் அதன் நடுவில் அவர்களாகவே ஒரு மிகப் பெரிய வட்டமாக உருவாக்கிக்கொண்டனர். பின்னர் அவர்கள் எல்லோரும் கைகளை உயர்த்தி நின்றனர்.

நிலவு, அவர்களின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்தது போல் ஒரு குலுங்குக் குலுங்கி, அங்கிருந்தும் மேலேறிச் செல்வதற்காக, அது தன் ஆற்றல் முழுவதையும் திரட்டிக்கொள்வதுபோல் ஒரு கணம் தோன்றியது. பெண்கள்வட்டம் நீட்டிய கைகளுடன், அவர்களின் முகங்களும் மார்புகளும் நிலவை நோக்கியிருக்குமாறு திரும்பியது. அப்படிச் செய்யுமாறு அந்த நிலவா சொன்னது? வானத்தில் அவர்களின் உதவி நிலவுக்குத் தேவைப்பட்டதா? இந்தக் கேள்விகளுக்குள் நுழைந்து துருவுவதற்கு எனக்குப் போதிய நேரம் இல்லை. அந்தக் கணத்தில் தான் பாரந்தூக்கிக் கிரேன் ஒன்று அங்கே நுழைந்தது.

வானத்தின் அழகினைக் கெடுப்பதோடு ஒரு சுமையாகவும் ஆகிப்போன அதனை அப்புறப்படுத்தித் தூய்மையாக்கியே தீருவதென முடிவெடுத்த அதிகாரிகளால் அந்த கிரேன் வடிவமைத்து உருவாக்கப்பட்டிருந்தது. புல்டோசர் வகை நிலச்சமன் பொறியான அதிலிருந்து நண்டின் கொடுக்கு மாதிரியான ஒன்று மேலெழுந்தது. கம்பளிப்பூச்சி நடையில் ஊர்ந்து வந்த அது குள்ளமாகப் பெருத்த ஒரு எடைக்கோளமாக, நண்டினைப் போலவே இருந்தது. திட்டத்தைச் செயல்படுத்துவதற்கெனத் தேர்ந்தெடுத்துத் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அது வந்து சேர்ந்தபோது இன்னும் அதிகக் குள்ளமாகிவிட்டது போல அதன் மொத்த எடையையும் பூமியில் பரப்பி அமர்ந்தது போலத் தோற்றமளித்தது. இழுவைத் திருகு உருளை வேகமாக இயங்க, கிரேன் அதனுடைய கரத்தை வானத்தை நோக்கி உயர்த்தியது; அவ்வளவு நீண்ட ஒரு கரம் கொண்ட அவ்வளவு பெரிய ஒரு கிரேனை உருவாக்கிவிடமுடியுமென யாருமே நம்பியதில்லை. நீண்ட கரத்தின் வாய் திறந்து அதன் பற்களெல்லாம் வெளிப்பட, நண்டு ஒன்றின் கொடுக்கினைப் போலத் தோற்றமளித்த அது, இப்போது சுறாவின் வாய் போலத் தோன்றியது. நிலவு அங்கே, அப்படியேதான் இருந்தது; அது தப்பிக்க விரும்பியது போலச் சிறிது அசைந்ததாகத் தெரிந்தது. ஆனால், கிரேனின் கரநுனிவாய் காந்த ஆற்றல் கொண்டதாக இருந்தது. நாங்கள் பார்க்கும்போதே, எங்கள் கண்முன்பாகவே, நிலவு இருந்த இடம் வெற்றிடமாகி, அது கிரேனின் பிளந்த வாய்க்குள் விழ, அது `க்ராக்` என்ற ஒரு வறண்ட ஒலியுடன் மூடிக்கொண்டது. முட்டைக்கேக் போல, நிலவு பொடிப் பொடியாகியிருக்குமென்று ஒரு கணம் தோன்றினாலும், அது வாய்க்குள் பாதி உள்ளேயும் பாதி வெளியேயுமாக அப்படியேதான் இருந்தது. அது செவ்வகவடிவுக்கு அமுங்கிப் போய், கிரேனின் வாயில் கனத்த ஒரு சுருட்டுப் போலத் தோன்றியது. சாம்பல் நிறப் பொழிவு ஒன்று பெருமழை போல் கீழிறங்கியது.

இப்போது கிரேன், நிலவினை அதன் சுற்றுக்கோளத்திலிருந்தும் வெளியே இழுக்க முயற்சித்தது. இழுவை உருளை பின்பக்கமாகச் சுற்றத் தொடங்கியது; அந்தக் கட்டத்தில் இழுவைச்சுற்றுக்கு மேலதிக ஆற்றலும் பெருமுயற்சியும் தேவைப்பட்டது. இத்தனை நடவடிக்கைகளுக்கும் நடுவே டயானாவும் அவளது தோழிகளும் அவர்களது பெருவட்டத்தின் வலிமையினாலேயே எதிரியின் ஊடுருவலை வென்றுவிடமுடியுமென்ற நம்பிக்கையில் தூக்கிய கைகளுடன் அமைதியாக அசைவற்று நின்றிருந்தனர். துகள், துகளாகச் சிதைந்து சிதறிக்கொண்டிருந்த நிலவின் சாம்பல் அவர்களின் முகங்களின் மீதும் மார்புகள் மீதும் மழையாகப் பொழிந்தபின்னர் தான் அவர்கள் அங்கிருந்து கலைந்துசெல்லத் தொடங்கினர். டயானாவிடமிருந்து மிகப் பெரும் அவலத்துடன் அழுகைச் சப்தமொன்று வெடித்தது.

அந்தக் கட்டத்தில், சிறைப்பட்ட நிலவு அதனிடம் எஞ்சியிருந்த மிகக் குறைந்த எடையினையும் இழந்தது; அது கறுப்பான வடிவமற்ற ஒரு பாறையாக உருமாறியது. கிரேனின் கரவாய்ப் பற்கள் மட்டும் அதனை இறுகப் பற்றியிருக்காவிட்டால் அது பூமியில் விழுந்து சிதறியிருக்கும். அதன் நேர் கீழே பூமியில் கிரேன் அதன் எடை முழுவதையும் இறக்கிவைப்பதற்கான பரப்பில் ஒரு பெரிய உலோக வலை ஒன்றினை உருவாக்கிய கைவினைத் தொழிலாளர்கள் தரையில் நீள ஆணிகள் அடித்து அதில் பொருத்தி விரித்துக்கொண்டிருந்தனர்.

தரைக்கு வந்து சேர்ந்தபோது, அம்மைத் தழும்புகள் நிறைந்த மணற் பாறையாக, மங்கலாக, நிறமேயற்று, இதுவா அதன் பளபளக்கும் பிரதிபலிப்பால் வானத்துக்கு ஒளியேற்றிய நிலவெனச் சிறிதும் நினைத்துப்பார்ப்பதற்குக்கூட நம்ப இயலாதபடி இருந்தது. கிரேனின் தாடைகள் திறந்தன; சுமை முழுவதும் திடீரென இறக்கப்பட்டதும் புல்டோசர் அதிர்ந்து அதன் கம்பளிப்பூச்சி நகர்வினை மீண்டுமொரு முறை நிகழ்த்திக்காட்டியது. கைவினைத் தொழிலாளர்கள் வலையுடன் தயார்நிலையில் நின்றிருந்தனர்; நிலவினை வலைக்குள் முழுவதுமாகச் சிறைப்பிடித்துச் சுற்றிக் கட்டினர்.

நிலவு இரும்புவலைக்குள் தத்தளித்தது; பெரும் பனிப்பாறைச் சரிவுகளை ஏற்படுத்துகின்ற பூமி அதிர்ச்சி போன்ற ஒரு நடுக்கத்தில் குப்பை மலைகளிலிருந்து வெற்று டப்பாக்கள் சரிந்து, உருண்டோடின. பின்னர் எல்லாமே அமைதியானது. நிலவில்லாத வானம் பெரியபெரிய விளக்குகளிலிருந்தும் வெடித்துச் சிதறிய ஒளிமழையில் நனைந்தது. ஆனால், இருள் ஏற்கெனவேயே மங்கி, வெளுக்கத் தொடங்கியிருந்தது.

அந்தக் கார்களின் கல்லறை மேற்கொண்டும் ஒரு இடிபாட்டு உடைசலைச் சேர்த்துவைத்திருந்ததை, அந்த விடிகாலை கண்டது. அக்கல்லறை மத்தியில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலவு, அங்கே வீசியெறியப்பட்டிருந்த மற்ற பொருட்களிலிருந்தும் அநேகமாக வேறுபடுத்திக் காணவியலாததாகத்தான் கிடந்தது. அதே நிறம், புதிதான ஒன்றாக எப்போதாவது இருந்திருக்குமென்று கூட நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கான அதே பாழடைந்த தோற்றம். மெல்லிய முணுமுணுப்பு ஒன்று அந்த புவிக்குப்பைப் பெரும் பள்ளம் முழுவதுமாகக் கேட்டது. உயிரினங்களின் பெருங்கூட்டமொன்று மெல்லக் கண்விழிப்பதை விடிகாலை ஒளி வெளிக்காட்டியது. குடல் உருவப்பட்ட டிரக்குகளின் மிச்சம் மீதி உடல்கள், நெளிந்து உருக்குலைந்த சக்கரங்கள், நொறுங்கிய உலோகத்துணுக்குகள் மத்தியிலிருந்து பரட்டைத்தலை உயிரினங்கள் முன்னேறி வந்துகொண்டிருந்தன.

வீசியெறியப்பட்ட பொருட்கள் நடுவே வீசியெறியப்பட்ட மக்களின் சமுதாயம் ஒன்று வாழ்கிறது – ஆம், ஒதுக்கப்பட்ட மக்கள், அல்லது தாங்களாகவே முழுவிருப்பத்துடன் ஒதுங்கிக்கொண்ட மக்கள், உடனுக்குடனேயே காலாவதியாகிப் போகுமாறு விதிக்கப்பட்டிருந்த புதிய பொருட்களை வாங்கவும் விற்பதற்குமாக நகரம் முழுக்க அலைந்து திரிந்து அலுத்துப்போன மக்கள், வீசியெறியப்பட்ட பொருட்களே உலகின் உண்மையான செல்வமென முடிவெடுத்துவிட்ட மக்கள் சமுதாயம். அந்தத் திறந்த வெளி அரங்கு முழுவதுமாக, இந்த குச்சிகுச்சியாக நீண்டு மெலிந்த உருவங்கள், தாடி மறைத்த முகங்கள் அல்லது பரட்டைத் தலைகளுடன் நிலவைச் சுற்றி வட்டமாக அமர்ந்தும் அல்லது நின்றுமிருந்தனர். அது ஒரு கந்தலாடை அல்லது வினோதமாக உடையணிந்த ஒரு கும்பல் என்பதோடு அதன் மத்தியில் தான் எனது நிர்வாண டயானாவும் இதர அனைத்துப் பெண்களும் அந்த இரவு முழுவதும் இருந்துள்ளனர். அவர்கள் எழுந்துவந்து, இரும்பு வலையின் கம்பிகளை, அவற்றைப் பிணைத்துத் தரையில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளிலிருந்தும் தளர்த்தி அவிழ்க்கத் தொடங்கினர்.

உடனேயே, கட்டுகள் அவிழ்த்துவிடப்பட்ட உளவு விமானம் போல், அந்தப் பெண்களின் தலைக்கு மேலாக, அந்த நாடோடிப் பெருங்கூட்டத்துக்கு மேலாக, டயானாவும் அவளது தோழிகளும் சிலநேரங்களில் இழுத்தும் சிலநேரங்களில் தளர்வாக விட்டும் பின்னலவிழ்த்துக்கொண்டிருந்த இரும்பு வலையோடு உயர்ந்தெழுந்து, பின் அப்படியே மிதந்து நின்ற நிலவு, அந்தப் பெண்கள் கம்பியும் கையுமாக இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கியபோது, அதுவும் அவர்களைப் பின்தொடர்ந்தது.

நிலவு நகர்ந்ததுமே, குப்பைப் பள்ளத்தாக்குகளிலிருந்து ஒருவித அலை எழும்பத் தொடங்கியது. அக்கார்டியன் இசைக்கருவிகளைப் போல நசுங்கிக்கிடந்த பழைய கார்களின் பிண உடல்கள் அணிவகுக்கத் தொடங்கி, அவைகளாகவே ஒரு ஊர்வலமாகச் செல்ல கிரீக் சப்தத்துடன் தயாராகிக்கொண்டன; பொளிந்து நசுங்கிய டப்பாக்களின் நீரோடை ஒன்று மேல் ஒன்றாக உருண்டு இடி இடிப்பது போன்ற சப்தத்தை ஏற்படுத்தின; அவை இழுத்துச் சென்றனவா அல்லது வேறு ஏதேனுமொன்றால் இழுத்துச் செல்லப்பட்டனவா என்று மட்டும் யாராலும் சொல்லமுடியவில்லை. அந்தக் குவியல்களில் சேர்ந்திருந்த அத்தனைக் குப்பைகளோடு அப்படி மூலையில் தூக்கி வீசப்பட்டதில் வெறுத்துப் போயிருந்த மனிதர்கள் அனைவருமாக நிலவைத் தொடர்ந்து சாலையில் நகரத்தொடங்கியதோடு நகரத்தின் செல்வமிக்க குடியிருப்புப் பகுதிகளை நோக்கிப் படையெடுத்தனர்.

அந்தக் காலை நேரத்தில், நகரம் `நுகர்வோருக்கு நன்றி தெரிவிக்கும் நாள்` கொண்டாடிக்கொண்டிருந்தது. விற்பனை வணிகர்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் எவ்விதச் சோர்வுமின்றி நிறைவேற்றிக்கொடுத்த `உற்பத்தி`க் கடவுளுக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட இந்த விழா விருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் வருகிறது. நகரத்தின் மிகப்பெரிய பல்பொருள் விற்பனை அங்காடி ஒன்று ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் அணிவகுப்பு ஒன்றினை ஒழுங்கமைத்துவந்தது; இசைக்குழு ஒன்றின் பின் அணிவகுத்துவரும் ஜிகினா உடையணிந்த அழகுப் பெண்கள் கண்ணைப்பறிக்கும் பட்டொளி வண்ணப் பொம்மை ஒன்றின் வடிவத்தில் மாபெரும் பலூன் ஒன்றின் கயிறுகளைப் பிடித்திருக்க, அந்த பலூன் அணிவகுப்பு முக்கியத் தெருக்களின் வழியாகச் செல்வது வழக்கமாக இருந்தது. அந்த நாளில், அந்த ஊர்வலம் ஐந்தாவது நிழற்சாலை வழியாக வந்துகொண்டிருந்தது; இசைக்குழுவின் தலைமைப் பெண் கையிலிருந்த வண்ணக்கோலைத் தலைக்கு மேலாகச் சுழற்றி வர, பெரும் டிரம்கள், முரசுகள் அதிர, படைத்துறைச் சீருடை, தொப்பிகள், இறகுகள், வண்ணக் குஞ்சங்கள் மற்றும் தோள்பட்டை அணிகலங்கள் அணிந்து இருசக்கர ஊர்திகளில் பெருமிதம் தொனிக்க வந்த பெண்களின் கைகளிலிருந்த இழுப்புவார்களுக்கு இசைந்து, இசைந்து, `திருப்தியடைந்த வாடிக்கையாள`ரைக் குறிக்கும் பெரும் பலூன் மனிதர் வான்தொடு கட்டிடங்களுக்கிடைய பணிவுடன் மிதந்து வந்துகொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் மற்றொரு அணிவகுப்பு மன்ஹாட்டனைக் கடந்துகொண்டிருந்தது. அடிபட்ட கார்கள் மற்றும் டிரக்குகளின் எலும்புக்கூடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் பின் தொடர, மெல்ல மெல்லப் பெரிதாகிக்கொண்டிருந்த மக்கள் கூட்டம் ஒன்று அமைதியாக நடந்து வர, நிர்வாணப் பெண்களால் முன்னிழுக்கப்பட்ட வெளிறிய சாம்பல் நிற நிலவும் வான்தொடு கட்டிடங்களிடையே நீந்தி, முன்னேறிக்கொண்டிருந்தது. நிலவினைப் பின்தொடர்ந்த மக்கள் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், அனைத்து நிற மக்களும் குடும்பத்துடன் அத்தனை வயதுக் குழந்தைகளுடனும் அதுவும் ஹார்லேமின் கறுப்பு நிறத்தவர் மற்றும் போர்ட்டோரீக்கன் பகுதிகளில் ஊர்வலம் அடியெடுத்துவைத்த போது மக்கள் காலையிலிருந்தே, கூட்டம் கூட்டமாக அணிசேர்ந்தனர்.

நிலவு ஊர்வலம் நகரின் மையப் பகுதியில் வளைந்து வளைந்து பின் பிராட்வேயை நோக்கி இறங்கி, ஐந்தாவது நிழற்சாலையில் பெரும் பலூனை இழுத்துவந்துகொண்டிருந்த ஊர்வலத்தோடு அமைதியாக இணைந்து கலந்துவிடுவதற்காகவே விரைந்துவந்தது.

மாடிசான் சதுக்கத்தில் இரு ஊர்வலங்களும் ஒன்றையொன்று சந்தித்தன; அல்லது துல்லியமாகச் சொல்வதானால் அவையிரண்டும் ஒரே ஊர்வலமாகின. திருப்தியடைந்த வாடிக்கையாளர், நிலவின் சொரசொரப்பான மேற்பரப்பில் மோதியதாலேயோ என்னவோ, காற்றிழந்து வெறும் ரப்பர் கந்தையானார். இரு சக்கர ஊர்திகளின் மீது இப்போது டயானாக்கள் அமர்ந்து பல்வண்ண இழுப்பு வார்களால் நிலவை இழுத்துப் பிடித்திருந்தனர். அல்லது, இருசக்கர ஊர்திகளில் வந்த பெண்களும் அவர்களின் வண்ணத் தொப்பி, சீருடைகளைக் களைந்தெறிந்துவிட்டு நிர்வாணமாகியிருக்கவேண்டும்; அப்போது நிர்வாணப் பெண்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருந்தது; அதனால் அது அப்படித்தான் நிகழ்ந்திருக்கவேண்டும். இருசக்கர ஊர்திகளில் நிகழ்ந்ததைப் போன்ற ஒரு மாற்றம் ஊர்வலத்திலிருந்த கார்களிலும் நிகழ்ந்திருக்கவேண்டும். ஊர்வலத்தில் வந்த கார்களில் எது புதிது, எது பழையதென யாராலும் கூறிவிடமுடியாது. நெளிந்த சக்கரங்கள், துருவேறிய சக்கர மறைப்புகள் எல்லாமே கண்ணாடி போல் பளபளத்து எனாமல் போல் எண்ணெய்வண்ணம் பூசப்பட்ட கார்களும் கலந்திருந்தன.

அத்துடன், ஊர்வலத்தின் தொடர்ச்சியாக, கடைச்சாளரங்களில் சிலந்திவலைகள் படிந்தன; வான்தொடு கட்டிடங்களின் மின்னேற்றிகள் கிரீச்சிட்டு முனகத் தொடங்கின; விளம்பரப் பலகைகள் மஞ்சளாக மாறி வெளுத்தன; குளிர்பெட்டிகளின் முட்டைத்தாங்கிகளில், அவை என்னவோ குஞ்சுபொரிக்கும் இயந்திரங்கள் போல கோழிக்குஞ்சுகள் நிறைந்தன; வானிலை மாற்றத்தில் சூறாவளிப் புயல்கள் சுழன்றடிப்பதாக தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

வெற்று டப்பாக்களின் முழக்க முரசொலியில், அந்த ஊர்வலம் புரூக்லின் பாலத்தை வந்தடைந்தது. டயானா அவள் கையிலிருந்த தலைமை வண்ணக்கோலினை உயர்த்தினாள்; அவள் தோழிகள் வண்ண நாடாக்களை வீசி அசைத்தனர். நிலவு அதன் கடைசி மோதலை பாலத்தின் வளைந்த இரும்பு வேலைப்பாட்டு கிராதித் தடுப்பில் நிகழ்த்தி கடல் நோக்கித் திரும்பி, ஒரு செங்கலைப் போல வேகமாக விழுந்து ஆயிரக்கணக்கான நீர்க்குமிழிகளை மேற்பரப்பில் எழுப்பி, தண்ணீருக்குள் மூழ்கியது.

இதற்கிடையில், இழுப்பு வார்களை விட்டுவிடுவதற்குப் பதிலாக, அவற்றை இறுகப் பற்றியிருந்த பெண்களை, நிலவு உயரத் தூக்கி, பாலத்தின் கைப்பிடிச் சுவரிலிருந்தும் அவர்களை இழுத்து, பாலத்திற்கப்பால் பறக்கச்செய்தது; அவர்கள் பாய்ச்சல் வீரர்களைப் போல காற்றில் வில்லாக வளைந்து, தண்ணீரில் விழுந்து மறைந்துபோயினர்.

புரூக்லின் பாலத்தின் மீதாகச் சிலரும் அணைக்கரை மடைவாய்களின் மீது சிலருமாக நின்றிருந்த நாங்கள், அவர்களைத் தொடர்ந்து நீரில் குதிக்கத் துடிக்கும் உந்துதல் மற்றும் அவர்கள் மீண்டும் தண்ணீரிலிருந்து முன்போலவே வெளித்தோன்றுவார்களென்ற நிச்சய நம்பிக்கைக்கிடையில் அகப்பட்டு, ஆச்சரியத்தில் அதிர்ந்து அப்படியே வெறித்து நின்றோம்.

நாங்கள் நீண்டநேரம் காத்திருக்குமாறு நேரவில்லை. வட்ட வடிவத்தில் விரிந்த அலைகளுடன் கடல் அதிர்வுறத் தொடங்கியது. அந்த வட்டத்தின் மையத்தில் ஒரு தீவு தோன்றி, அது, ஒரு மலையைப் போல, அரைக்கோளவடிவு போல, தண்ணீரில் மிதக்கும் ஒரு கோளம் போல வளர்ந்தது; அல்லது அப்போதுதான் தலைதூக்கியது போல; இல்லை, வானத்தில் ஒரு நிலவு முகிழ்ப்பது போல. ஒரு சில கணங்களுக்கு முன்பு கடலின் ஆழத்துக்குள் மூழ்கிய அந்த ஒன்றை எந்தவிதத்திலும் ஒத்தில்லாதிருந்தபோதும் அதை நான் ஒரு நிலவு என்கிறேன்; எப்படியிருந்தாலும், இந்தப் புதிய நிலவு வேறுபட்டிருப்பதிலும் ஒரு வேறுபட்ட வகையிலிருந்தது. கடலுக்குள்ளிருந்து வெளிப்பட்ட அது பச்சைப் பசேலென மினுங்கும் கடற்பாசி வாரி ஒன்றினை வழியவிட்டுக்கொண்டிருந்தது; அதன் மேனியில் ஊற்றெடுத்துப் பாயும் நீர்த் தாரை அதற்கு ஒரு மரகதத் தோற்றத்தை வழங்கியிருந்தது. நீராவி வெளிப்படும் காடு ஒன்று அதன் மீது மூடியிருந்தது; ஆனால், அந்தக் காடு தாவரங்களாலானதல்ல. இந்தப் படிவு மயிற் தோகைப் பீலிகளால் செய்யப்பட்டது போல வட்டக் கண்களும் மின்னும் வண்ணங்களும் கொண்டதாக இருந்தது.

அந்தக் கோளம் வேகமாக வானத்திலேறி மறைவதற்குள் எங்களால் கண்டுகொள்ளமுடிந்த அளவிலான நிலப்பரப்பு இதுதான்; மேற்கொண்டு நுண்விவரங்கள் அனைத்தும் அதன் புத்தம்புதிதான தன்மையும் தாவரச் செழிப்பும் இணைந்த பொதுவான மனப்பதிவிற்குள் கரைந்துவிட்டன. அப்போது அந்திக் கருக்கலாகிவிட்டிருந்தது; வண்ணங்களின் முரண்களெல்லாம் விரைந்து வரும் ஒரு மேகமூட்ட இருளுக்குள் மங்கிக்கொண்டிருந்தன. நிலவுப்புலங்களும் காடுகளும் அந்தப் பளபளக்கும் கோளத்தின் மேனியில் வெறுமனே எல்லாமே ஒன்றான ஒரு பொதுத் தோற்றமாக மட்டுமே தெரிந்தன. ஆனாலும் காற்று தாலாட்டும் கிளைகளில் சில மஞ்சங்கள் தொங்குவதை எங்களால் காணமுடிந்ததோடு எங்களை இங்கே அழைத்துவந்த பெண்கள் அவற்றில் அமர்ந்திருப்பதையும் நான் கண்டேன். நான் டயானாவைக் கண்டுகொண்டேன்; ஒருவழியாகக் கடைசியில், நிம்மதியாக, ஒரு இறகு விசிறியால் தனக்குத் தானே விசிறிக்கொண்டு, ஒரு வேளை, அது, என்னைப் புரிந்துகொண்டதைத் தெரிவிக்கும் அசைவாகவும் இருக்கலாம்.

“அதோ, அவர்கள் அங்கிருக்கிறார்கள்! அதோ, அவள்!’’ நான் கத்தினேன். நாங்கள் எல்லோரும் கத்தினோம்; அவர்களை மீண்டும் பார்க்க முடிந்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சி, அவர்களை முழுவதுமாக என்றென்றைக்கும் இழந்துவிட்டதான வலியில் ஏற்கெனவே மங்கத் தொடங்கிற்று; இருண்ட வானத்தில் எழுந்துகொண்டிருந்த நிலவு சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பைத் தானே ஏரிகள் மீதும் நிலப்பகுதி மீதும் காட்டிக்கொண்டிருந்தது!

‘’நாங்கள் ஒருவித வெறியால் பீடிக்கப்பட்டிருந்தோம்: நகரங்கள், சாலைகள் அவை தொடர்பான அனைத்துத் தடயங்களையும் புதைத்துவிட்டு பூமியை மீட்டுத்தந்திருந்த சாவன்னா புல்வெளிகள் மற்றும் காடுகளின் வழியாக, கண்டத்தின் குறுக்காக, நாங்கள் விரைந்தோடத் தொடங்கியிருந்தோம். அத்துடன் வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியிருப்பதையும் நாம் ஆசைப்படுவதை ஒரு போதும் நாம் பெறப்போவதில்லையென்றும் இளம் மம்மத்துகளாகிய நாங்கள் புரிந்துகொண்டபோது, பெரும் வெறியோடு எங்கள் பெரும் உடல்களின் மீது காடாக அடர்ந்திருந்த மயிர்க்கற்றைகளை உலுக்கிக்கொண்டு, வானத்தை நோக்கி எங்கள் தும்பிக்கைகளையும் நீண்டு மெலிந்த தந்தங்களையும் உயர்த்திப் பிளிறினோம்.”

(Translated, from the Italian, by Martin McLaughlin.)