Category: டிசம்பர்

கடைசி நேர படைப்பாளி / சிபிச்செல்வன்

1471805_645023605548633_185624657_n

இதழைப் பதிவேற்றம் செய்கிற இறுதி நிமிடங்களில் தன் கவிதைகளை ( அது கவிதைகளாகவும் தெரியவில்லை ) அனுப்பி எதிர் கவிதைகள் இலக்கியத்தின் இன்றைய நிலையை கேள்வி கேட்பவை என்ற ரீதியில் தொடர்ந்த டார்ச்சர் செய்கிற இந்த உட்டாலக்கிடியான் கவிதைகளை வெளியிடுவதற்கு எனக்கு விருப்பமில்லையென்றாலும் மாற்று வகை இலக்கியத்திற்கும் இடமளிக்கவேண்டிய பத்திரிகை நோக்கில் தொடர்ந்து இடமளிக்க வேண்டிய நிலை

நண்பர்கள் அவர்களின் படைப்புகளை தொடர்ந்து உற்சாகமாக அனுப்பிவைத்து ஒத்துழைப்பினை நல்குகிறார்கள்
இவர்களின் நட்பும் அன்பும் இல்லாமல் மலைகள் 112 ஆவது இதழ் சாத்தியமில்லை
வழக்கம்போல அவர்களுக்கும் இதை வாசிக்கிற இலக்கிய வாசகர்களுக்கும் என் நன்றி

அன்போடு

சிபிச்செல்வன்

இடுப்பை வளைத்து நக்கி கொடுக்கும் பயிற்சிகள் இலவசம் ( உட்டாலக்கிடி கவிதைகள் ) / உட்டாலக்கிடியான்

images-13

வணக்கம் வணக்கம்
இடுப்பை இவ்வளவு வளைத்ததுபோதுமா?
இன்னும் கொஞ்சம் கூடுதலாக வேண்டுமா?
அட இது அரசியல் இடுப்பில்லைங்கோ
இது இலக்கிய இடுப்பு
அரசியல்வாதி பல கோடிகள் சம்பாதிக்க இடுப்பை வளைத்து குனிவான்
இலக்கியவாதியோ சில நூறுகளுக்கும் ஒரு குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கே அப்படி குனிவான்
நீங்கள் விருது கொடுத்தால் போதும் உங்கள் காலை நக்குவான்
உங்களுக்கு அடிமை சேவகம் செய்ய பின்னாலேயே அலைவான்
நீங்களும் சலித்துப்போய
இந்த உன் விருது என வீசியெறிய அதை ஒரு நாயின் லாவகத்தோடு எலும்புத்துண்டை கவ்வி பிடிப்பான்

வாலை குழைத்து
கால்களை தொற்றி உங்கள் முகத்தை நக்கிக்கொடுப்பான்
நாய் இதைப் பார்த்து நாணும்
ஆனால் கவலையே சிறிதும் படாமல் பெற்ற விருதை காட்டி பல்லையிளிப்பான

அவனைக் கொண்டாட ஒரு கூட்டம் விருதுகளை வென்ற வீரன் என்று கொண்டாடும்
அதைப் பார்த்து எதிரணியினர் சினத்தோடும் பொறாமையோடும்
அடுத்த வருடம் இந்த விருதை இவனைவிட பலமடங்கு போராடி ( நக்கி ) பெற்றுவிட திட்டமிட
இந்தக் கவிதையும் நீங்களும்
டும்மா டும்மக்கா
டுபுக்கு
லாலக்கு போலி குப்பி
போடா நாயே என்று கவிதையை முடிக்கு
இதற்கு லாவணி பாடும் ஒரு கூட்டம்
எதிர் கவிதையெழுதி கும்மியடிக்க
நீங்களே
ஒரு நான்கு அறைகள் கொண்ட மாடியில் குழுவினருக்கு மது விருந்தை கொடுப்பீர்கள்
இதற்கு எதிராக எந்த மயிரானாவது வாயை திறப்பான் என்றால் அவன் நக்கீரன் பரம்பரையில் வராதவன் என்ற அவப்பெயரை நீக்க போராடி தோற்ப்பீர்கள்

•••

போடா வெண்ணெய்
உனக்கெதற்கு இந்த வெட்டிவேலை என்று ஒருவன் கூவுகிறான்
நானாடா என்று ஒருவன் திருப்பி கூச்சலிட
எதிரில் வந்தவன் திரும்பி போகிறான்
நானில்லையென்று துப்பியபடிக்கு
இவனும்
அவனும்
உவனும்
நீயும் நானும்
அவளும் இவளும்
எவளும் என்று பெயர்கள் இல்லாமல் போய்க்கொண்டிருக்க
திருநங்கைகள் கூட்டமாக வந்து எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்
அவர்களையும் சமத்துவமாக கவிதைக்குள் கொண்டுவந்தாகிவிட்டதால்
இனி டிவிகளை பார்க்கவேண்டியதுதான்
கணிணி பார்க்காமல் விட்டுவிடாதே என்கிறாள் இன்னொருத்தி
இவை வரிசையில் வரவேண்டிய அவசியமில்லை என்கிறான் பின் நவினத்துவவாதி
அவன் கோணல் புத்திக்காரன் என்கிறார் பேரளம்பெண்
அவள் பிதற்றுகிறாள் என்கிறார் இளம் நரை முடிகொண்ட நடுநிலை நாடகக்காரன்
அவனுக்கு நடுவில் ஒன்றுமில்லை வெறும் பொக்கையென்று சொல்லி கோபக்காரன் அழுகிறான்
இவர்கள் இவ்வாறு அழுகிப் போனார்கள் என்று சொல்லி அறுவை சிகிச்கை செய்ய வந்த மருத்துவர் விருந்து கேட்கிறார்
நீங்களும் சரியென்று சொல்லி
ஒரு முழுப்பாட்டில் மூத்திரத்தை அவருக்கு அருந்த கொடுக்க அவர் அதை தேவாமிர்தம் என்று சொல்லிக்கொண்டே அருந்துகிறார்
அப்போதுதான் உங்களுக்கு உறைக்கிறது
உங்கள் மூத்திரத்தை நீங்கள் அவனுக்கு கொடுக்காமல் நீங்களே குடிக்க வேண்டும் என்ற மருத்துவகுணமிகந்த மூத்திரத்தை அவனுக்கு கொடுத்துவிட்டதால் இனி அந்த நடுநிலை விமர்சக மண்டையன் தன் கொட்டையிலிருந்து வடிநீரைப் பிடித்து சுவையான காபியை கொட்டை வடிநீர் குளம்பி புலம்பி ஊருக்கு அறிவிப்பான்
தான் தெரியாமல் செய்துவிட்டதாக எவரும் நினைக்காமல் இருக்க தன் வார்த்தைகளில் வழக்கமான சர்க்கரையைவிட கூடுதலாக சாக்ரீன் தடவிய வார்த்தைகளை ஏற்றுமதி செய்வதற்கு இலவச பயிற்சிகளை ஊர் ஊராக ஹோட்டல்களில் பயிற்சிமுகாம் நடத்தி நல்ல கொழுத்த லாபத்தை தனக்கும் தன் குழுவினருக்கும் சம்பாதித்துகொடுப்பான்
கொட்டை மண்டையன்
இவனை அங்கேயிங்கேயெங்கேயென்று தேடாமல் பாருங்கள்
ஒருவேளை அவன் நீங்களாகவும் இருக்கலாம் அல்லது உங்கள் ரயில் பயணத்தில் அருகில் அமர்ந்து உங்களைப்போலவே நல்லவனாக நடித்துக்கொண்டுவருபவனாகவும் இருக்கலாம்
ஆடைகள் இவனுக்கு இல்லாமல் இருக்கலாம்
மூக்கும் அவனுக்கு இல்லாமல் இருக்கலாம்
நாக்கும் இல்லாமல் இருக்கலாம்
(அதை கால்களை நக்கி நக்கி சொர சொரப்பு போய் துண்டாகிப் போயிருக்கலாம் )
அவனின் குசுவை நீங்கள் பிரமாதம் பிரமாதம் என்று கூவி கூச்சலிட்டு கொண்டாட வேண்டும்
ஆக இவையும் இன்னும் சில எழுதப்படாத விதிமுறைகளும் உண்டு
அவற்றை கற்றுக்கொள்ள அடுத்த ஊரில் அடுத்த ஞாயிறு வெளிவரும் செய்தித்தாள் விளம்பரத்தில் கண்டு அங்கே கட்டணம் செலுத்தி காத்திருந்தால் மிச்சம் மீதியை அங்கே பெற்றுக்கொள்ளலாம்.( மன்னிக்க கற்றுக்கொள்ளலாம் )
இதைப் படிக்கிற எருமைத்தோல் வாசகனை திட்டி நடுநிலையாள மண்டையன்கள் கூப்பாடு போட்டால் உங்கள் நாக்கை சுழற்றினால் அவன் சைகையை சரியாகப் புரிந்தகொள்வான்
இவனும் அவனும் எவனும் நம்ம ஆட்கள் என்பதையும்
அவன் ஜாதியை சேர்ந்தவன் நீயென்றும்
அவன் குழுவை சேர்ந்தவன் நீயென்றும்
அவன் நிறத்தை சேர்ந்தவன் நீயென்றும்
அவன் குறியும் உன் குறியும் ஒரேமாதியிருப்பதாக நினைப்பதும் நிறுவ நீயென்றும் அடிமையாக அவனுக்கும் உவனுக்கும் எவனுக்கும்
அல்லது
பிற பாலினங்களுக்கும்
மற்றும்
விலங்குகளுக்கும் ( அவை இழிவு செய்ய நேர்ந்தவற்றிற்காக இந்த எதிர் கவிஞன் வருத்தம் கொள்கிறான். எல்லாவற்றையும் விட மோசமானவர்கள் இந்த மனிதர்கள் என்ற பெயரில் உலவுகிற குறுபுத்திக்காரர்கள்
)

இரண்டு நாட்களுக்குபின்னால் மரணித்துப்போகிற எவருக்கும் இரண்டு ஏக்கர் காடு கூட
கூட வராது
நேற்றியில் வைக்கிற ஒரு ரூபாய் காயினைக்கூட வட்டிலில் எடுத்துபோட்டு அவன் வாரிசுகளுக்கு கொடுத்து விடுவார்கள்
என்ற ஞானோதயம் பெற்ற எவனும் அல்லது எவளும் எழுவுவீட்டில் நியாயம் பேச மாட்டார்கள்
அடப் போடா
நீ ஒரு கவிஞனா என்று கெக்கலிகொட்டி சிரிப்பவர்களுக்குமத்தியில்
நான் எதிர் கவிஞன்டா என சொல்லி
என் பெயர் உட்டாலக்கியடியான்
என் கவிதைகளின் பெயர் உட்டாலக்கி கவிதைகள் என்று தினவெடுத்த நாக்கை சுழட்டி
கணிணியில் கவிதையை வார்ப்பிர்கள்
வர்தா புயல்போல மரங்களை வேரோடு புரட்டிப் போட்டு
கவிதையை நிர்வாணமாக்கி நிக்கும் நடுத்தெருவில்
ஆணிவேரறுந்த மரம்

••

உமைக்குள்ளே சிவனாடும்.. ( கவிதைகள் ) / சக்தி ஜோதி

download-35


1. உமைக்குள்ளே சிவனாடும்..

தேன் பெருக்கி, பால் கசியப் பூத்திருக்கும்
செவ்வரளி வனத்தில்
தன்னை இருத்தியிருந்தாள்.
குங்குமப் பூவும் கற்பூரமும் கூட்டிய
செஞ்சந்தனக் களபம்
சேர்த்தரைத்து வழித்தெடுத்துச்
சேகரித்தாள்
நரம்பு புடைத்த வில்வ இலையில்.
தண்மை படர்ந்து மையல் மினுங்கும்
நதிக்கரை மணல் அள்ளி
இருகைகளால் கூட்டிச் சமைத்தாள்
ஏகாந்த லிங்கம்.
அரைத்த சந்தன விழுதை
அமைத்த லிங்கத்தின் மேனி பூசி
தன்மேலும் அப்பித்
தகதகத்தாள் தேவியென.
உச்சிக்கால பூசைக்கு உகந்தவளாக
உணர்ந்தபடியே
நெய் வழியும் கல்விளக்கில் திரியிட்டாள்.
ஒற்றை நிமிர்சுடரில் துவங்கியது
உமைக்குள்ளே சிவனாடும்
ஊர்த்துவ தாண்டவம்.

%

2. ஆதிரூபம் காட்டி..

சித்தம் முழுக்க சிவனை ஏந்தி
பித்தாகி பெருநிலையடைந்த உமை
அவன் தலைமீது பாதம்வைத்து
போகத்தில் தோய்ந்திருந்த கணத்தில்
பனித்த கண்களில் செவ்வரியோட விரிந்து
தன்னுள்ளிருந்த சிவத்தை உணர்ந்து
அவனிடம் தன் ஆதிரூபம் காட்டி
முன்பு அவன் அருந்திய நஞ்சை
அச்சிறு கணத்தில்
அமுதாக்கினாள்.
%

3.. அவனோடு பிதற்றி..

ஆதியும் அந்தமுமில்லா காதலில்
அவனை நினைத்து
அவனால் நினைக்கப்படத் தவித்து
அவனைக்கண்டு
அவனுக்கே தன்னைத் திறந்து
அவனோடு பிதற்றி
அவனில் பித்தேறி
என்பும் உள் உருக
உருகி உயிராய் வழிய
சிவன் பாதம் சரண் புகுந்தாள்.
%

நான்கு கவிதைகள் / கருணாகரன் ( இலங்கை )

images-10

மீட்பர்

குற்றவாளிகளைத் தெரிந்தவன்
நீதி மன்றத்தின் வெளி நடையிலிருந்து கவனிக்கிறேன்

குற்றங்களை மறைக்கும் முயற்சியில்
சற்றும் தளராமல்
விவாதங்களை முன்னிறுத்திச் சமராடுகிறார்
வக்கீல்
அவருடைய வார்த்தைகள் உலர்ந்து
நீதிமன்றமெங்கும் சிதறுகின்றன.

குற்றங்களை முன்னிறுத்தித்
தண்டனையை நெருக்கிக் கொண்டிருக்கிறார்
எதிர் வக்கீல்

மூண்டெரியும் விவாதக்கனலில்
எந்த நேரமும் நீதிமன்றம் தீப்பற்றி எரியக்கூடும்

இந்த நிலையிலும்
பழுப்படைந்த கண்ணாடிக் கூண்டினுள்ளே
நிறுத்தப்பட்டிருக்கும் நீதிபதிக்கு
எதுவும் புலப்படவில்லை.

எழதுவுமே சொல்லத்தோன்றாமல்
விசாரணை நரம்புகளின் வழியே
தேடிச் செல்கிறார் தீர்ப்பாயத்தின் மையத்தை நோக்கி
என்றபோதும் அவருடைய காலடியில்
வழுகிச் செல்கின்றன
அவர் உணரத்தவறிய உண்மையின் தடயங்கள்

திடீரென
உறைந்த குருதி பெருக்கெடுத்துப் பாய்ந்து
குற்றவாளிகளை மூழ்கடிக்கக் கண்டேன்

சட்டெனப் பாய்ந்து வந்த நீதிபதி
அவர்களை மீட்டுச் சட்டத்தைப் பாதுகாத்தார்
நீதியையும்கூடத்தான்.

பெருக்கெடுத்த குருதி
உறைய மறுத்து தழும்பிக்கொண்டிருக்கிறது
கண்ணீரின் மையத்தில்

பதறும் என்னிதயத்தை அந்தக் கல்லறையில்
வைத்துவிட்டு வந்தேன் ஒரு சாட்சியமாக இருக்கட்டுமென்று.

00

கடவுளின் காலடி

இறங்கிச் செல்லும் படிக்கட்டில்தான்
உங்களைச் சந்தித்தேன்
ஏறிக்கொண்டிருக்கும் உங்கள் கண்களில்
பார்வைப்பரப்பு விரிந்து கொண்டேயிருந்தது.

பெரும்பரப்பின் மேலே நீங்கள் நின்றபோது
வானம் அண்மித்திருந்தது
நட்சத்திரங்கள் சிரித்துப் பேசும் குரல் கேட்டது
பறவைகளின் சிறகுகள் உங்கள் தோள்களிலும் முளைத்தது.

கடவுளின் தோற்றம்
அதிசயமானதொன்றல்ல
அதுவாகவே நீங்கள் ஆகிய பிறகு

இறங்கிக் கொண்டிருக்கும் என் கண்ணறிந்தது
காலடியில் சிரித்தபடியிருக்கும் முள்ளின் முனையே

ஏறிக்கொண்டிருக்கும் படிக்கட்டில்தான்
உங்களிடமிருந்து விடைபெற்றேன்

00

காணாமல் போனவன்

முருக்கம் பிஞ்சுக் கட்டுகளை வைத்துச் சென்றவன்
இன்னும் வரவில்லை
காத்திருக்கிறாள்
இரவழிந்து பகலாகி
பகல் உருகி இரவாகி
காலம் நீண்டு புதராகியது.

மாடவிளக்கு அவளோடு உருகிக் காய்கிறது
எத்தனை நாளென்று தெரியவில்லை
எத்தனை யுகமென்றும் புரியவில்லை

காத்திருப்பின் அடியில் வேர்கள் முளைத்து
அவள் பெருங்காடாகினாள்

அவனின்னும் வரவில்லை

நிலவு கரைந்து அலையாகிறது
நுரைகள் திரண்டு நிலவாகிறது
ஓயாத அலையாகிக் கடலில் புத்தவள்
அவன் வரவைக் காணாத கரையை மோதிச் சரிக்கிறாள்
கடலில் தேடித் தேடிச் சலிக்கிறாள்

அவன் வரும்போது
காத்திருப்பின் கனல் எங்கே செல்லும்?

அம்மா என்றொரு சொல்லறிய
அவள் காடாகிக் கடலாகி
வெயிலாகி மழையாகி
தெருவாகி வெளியாகி
இரவாகிப் பகலாகி
அலையாகி
கரையேற விதியற்றுக் காத்திருந்து
பெருந் தீயாகினாள்

வராமலே சென்றவன்
வளர்த்த தீ
அதுவென்றறியாதவளாக இருந்தாள்
தீ.

00

கூடாரத்தின் கீழே

கூடாரத்தின் கீழே
இரவுகளை வைத்து மூடிவிட்டுச் செல்லும்
பெண்ணைப் பின்தொடர்ந்து சென்றவன்,
இடையில் வழி தவறிச் சென்று
கடிகார முட்களின் முனைகளில் சிக்கினான்

வெள்ளரிப் பழங்கள் வெடித்து மலர்ந்த தோட்டத்தில்
அவள் கத்தரிப்புவாகிக் கனிந்திருந்தாள்
பருத்திச் செடிகள் புத்துக் களித்த வளவில்
அவள் பலாப்பழமாகிப் புத்துக் களித்தாள்

கடிகார முட்களிலிருந்து விடுவித்துக் கொண்டோடி வந்தவன்
அவளருகே வர
அவள் பகலாக மாறினாள்
திகைத்தவன், ஒளியின் விநோதம் கண்டு
தன்னுடலையும் ஒளியாக்கினான்

ஒரு பெரிய படையணி
அவர்களைச் சுற்றி வளைத்தது

மூடிவைத்த இரவை எடுத்து
அதுவே தன்னுடைய காதற் பரிசென்று
தம்மைச் சுற்றிவளைத்த ஒவ்வொருவருக்கும்
பகிரந்து கொடுத்தாள்

கூடாரத்தை எடுத்து அவர்களைச் சுற்றி மூடினாள்
ஒளியைப் பெருக்கி
தன்னை விடுவித்தாள்

ஒளிக்குச் சுவடு இல்லை என்பதால்
அதைத் தொடர்ந்து
அவர்களைப் பிடிக்க முடியவில்லை
என்று எழுதி வரலாற்றிடம் கையளித்த படையணி
அவள் கொடுத்த காதற் பரிசோடு
உறங்கியது கூடாரத்தினுள்.

•••

அன்னா அக்மதோவா கவிதைகள் / தமிழில் தி.இரா. மீனா ( பெங்களூர் )

download-34

“You live by the sun and I live by the moon
but one love is alive in us”

அன்னா அக்மதோவா [ Anna Akhmatova ]

அன்னா அக்மதோவா (1889 – 1966) மிகச் சிறந்த ரஷ்யக் கவிஞர்.கவிதையைத் தவிர உரைநடை,வாழ்க்கை வரலாற்று விளக்கம், கட்டுரைகள் ஆகியவை அவருடைய படைப்பாக்க வகைகளுக்குச் சான்றுகளாகும். இத்தாலி, ருமே னியம்,கொரியம் ஆகிய மொழிகளில் கவிதைகளை மொழி பெயர்த்தவர். வாழும்காலத்தில் இரண்டு விதமான நிலைகளில் சோவியத் ரஷ்யாவைக் கண்டிருந்தாலும் அவரது படைப்புகள் இருபதாம் நூற்றாண்டைப் பிரதிபலிக் கின்றன. தன் சமகாலத்தவர்களான Osip Emil’evich Mandel’shtam, Boris Leonidovich Pasternak, and Marina Ivanovna Tsvetaeva ஆகியோரின் வழியில் நவீன பாணியில் அவர் கவிதைகள் அமைந்தன.அவர் நீண்ட காலம் வாழ்ந்தாலும் இருண்ட தன்மையான வாழ்நாளே அதிக அளவில் இருந்தது.

உக்ரைனில் [ Ukraine ] மிக செல்வந்த நிலையிலிருந்த குடும்பத்தில் பிறந் தவர் தந்தை Andrei Antonovich Gorenko கடற்படை அதிகாரி. தாய் Inna Erazmovna. அக்மதோவாவின் இயற்பெயர். Anna Andreevna Gorenko இளம் வயதிலேயே கவிதைகள் எழுதுவதில் அவருக்கு பெரிய ஆர்வமிருந்தது. அவர் கவிதை எழுதுவதை விரும்பாத தந்தை குடும்பப்பெயரை அதற்குப் பயன்படுத்தக் கூடாது எனக் கண்டிப்பாகச் சொல்ல தாய்வழிப் பாட்டியின் பெயரான Akhmatova வைப் புனைபெயராக்கிக் கொண்டார்.கவிஞர் Nikolai Gumilevவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 11 வயதில் கவிதை எழுத ஆரம் பித்தார்.17 வயதில் “’Evening” (1912) என்ற அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.அது காதலின் மகிழ்வற்ற நிலையை மிக வெளிப் படையாகச் சொல்லும் பிரபலமான கவிதைகளை உள்ளடக்கியது. அதை யடுத்து “Rosary ”(1914) என்ற இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளியானது. இதில் காதலின் மகிழ்வு,சோகம் என்ற இரண்டு நிலைகளும் ஆழ்மனவுணர் வுப் பின்புலத்தில் வெளிப்படுகின்றன.இதுவும் மிகப் பரவலாகப் பேசப்பட்ட தொகுப்பாகும். தொடக்கத்திலிருந்தே எளிதில் மனதைப் பறிகொடுக்கும் தன்மை-உணர்ச்சிகளின் நிலைப்பாடின்மை அவருக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. அவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர்

ஜெர்மனி ரஷ்யாவின் மீதான போரை அறிவித்த சூழல் அவரால் பொறுக்க முடியாததாகும்.இந்த உணர்வு ”காலையில் பொதுவான விஷயங்கள் குறித்த மென்மையான கவிதைகள் படைப்பு..ஆனால் மாலைக்குள் முழு உலகமே தகர்ந்தது “என்பதில் வெளிப்படுகிறது..அதுமுதல் கவிதைகளின் பார்வை அவர் என்றைக்குமே விட்டுச் செல்ல விரும்பாத,மிகவும் பிடித்தமான ரஷ்யாவைப் பற்றியே இருந்தது.பல ஆண்டுகளுக்குப் பிறகு James Joyce ’ன் Ulyssesல் சொல் லப்பட்டிருந்த ”உன் தாயை உன்னால் அனாதையாக்கி விட முடியாது” என்ற கருத்தை”உன் தாய்நாட்டை உன்னால் அனாதையாக்கி விடமுடியாது “ என்று தனக்குப் பிடித்தபாணியில் சிறிது மாற்றிச் சொன்னார்.அவரது “Poem without Hero,”(1940-1962 )என்ற படைப்பு மிகச்சிறந்த உலகளாவிய இலக்கியப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.22 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு அவர் எழுதிய படைப்பாகும்.அதன் கதாநாயகன் கவிதைதான்.லெனின்கார்டு, டாஷ்கண்ட் ,மாஸ்கோ என்று பல்வேறு இடங்களில் அது எழுதப்பட்டது. பல வகையான குரல்களின் வெவ்வேறு வகை வெளிப்பாடாக அது அமைந்தது. தன் காலத்தின் சிக்கலான பகுப்பாய்வை தீவிரமான பார்வையில் அவர் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் இருபதாம் நுற்றாண்டின் முதல் நாற்பது ஆண்டுகளை அது மிக விரிவாகப் பிரதிபலிப்பதாகவும் விமரிசகர்கள் குறிப்பி டுகின்றனர்.அவருடைய இறப்பிற்குப் பிறகே அது வெளிவந்தது.

My Half Century,” என்ற அவருடைய உரைநடை மற்றும் சுயசரிதை நூலை “ A real achievement” என Robert P. Hughes பாராட்டியுள்ளார்.அதில் கடிதங்கள், புஷ்கின் பற்றிய கட்டுரைகள். தன் காலத்து கவிஞர்களுடனான சந்திப்புகள், ,பெண் படைப் பாளிகளை கவனத்திற்குரியவர்களாக ஏற்காத அன்றைய சூழல் ஆகியவற்றைப் பற்றி மிக எளிமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

தன் மகன் ஸ்டாலின் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டபோது அக்மதோவா ஏறக்குறைய பதினேழு மாதங்கள் நாள்தோறும் சிறை வாசலுக்குச் சென்று காத்திருந்த காலகட்டத்தில் அவரை அடையாளம் கண்டு கொண்ட ஒரு பெண்மணி அவரது அனுபவங்களை எழுதும்படி வேண்ட அந்த அடிப்படையில் Requiem (1935-1940 ) கவிதைத் தொகுப்பு உருவானது.அது ஐந்து வருட காலகட்டத்தில் உருவான உணர்வுகளை மனனம் செய்து நினைவிலிருத்திப் பின்னாளில் அவரால் எழுதப்பட்டதாகும்.

Pushkin, Racine மற்றும் Evgeny Baratynsky அவருடைய முன்னோடிகளாவார்கள். கவிஞர் என்ற நிலையை மாறுபடுத்தித் தன்னைப் பெண் கவிஞர் [poetess] என்று மற்றவர்கள் குறிப்பிடுவதை அவர் விரும்பவில்லை. அவருடைய கவிதைகளின் உன்னதமும் ,அருமையும் உணர்ந்த அவருடைய சமகாலப் படைப்பாளிகள் அவரை Queen of the Neva” மற்றும் “Soul of the Silver Age” என்றே அழைத்தனர். தன் எழுத்துகள் தடை செய்யப்பட்டிருந்த காலகட்டத்தில் அவர் மொழி பெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுத் தன் வாழ்க்கைத் தேவைகளைச் சமாளித் தார். எண்பதுகளில் அவர் படைப்புகளுக்கான அங்கீகாரம் அரசால் வழங் கப் பட்டது .1964 ல் அவருக்கு Etna Taormina International Prize in Poetry விருது கிடைத்தது. 1965 ல் ஆக்ஸ்போர்டு பலகலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டமளித்தது.இன்று அவர் படைப்புகள் குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன.

சில கவிதைகள்;

பிரிவு

இந்த நிலம் எனதில்லை எனினும்

நான் இந்த உள்கடலை

குளிர்ச்சியான தண்ணீரை.

பழைய எலும்புகள் போன்ற வெள்ளை மணலை

சூரியன் மறையும்போது வித்தியாசமாய்ச் சிவப்பாகும்

பைன்மரங்களை நினைவில் வைத்திருப்பேன்.

நம் காதலோ அல்லது நாளோ

எது முடிகிறது என்று என்னால் சொல்லமுடியாது

அந்த எதிரொலி

கடந்த காலத்திற்கான பாதைகள் என்றோ மூடப்பட்டுவிட்டன
நான் இறந்த காலத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்யமுடியும்?
அதில் என்ன இருக்கிறது?இரத்தத்தால் உரசப்பட்ட கற்கள்
அல்லது சுவறான கதவுச்சிறை
அல்லது எதிரொலி ,அதுதான் என்னை எப்போதும் வருத்துகிறது
அமைதி, உறுதி என்று நான் பிரார்த்தனை செய்தபோதும்
எதிரொலி ஒரு பழங்கதையாகவே இருக்கிறது.

அதையும் என்நெஞ்சில் மட்டுமே சுமக்கிறேன்.

•••

நான் உன்னைப் பார்க்கவில்லையெனில்

நான் உன்னைப் பார்க்கவில்லையெனில்–
நிமிடங்களை நூற்றாண்டுகளாக முடிவற்றவைகளாக உணர்வேன்
ஒரு முறை உன்னைப் பார்த்திருந்தால்—
மீண்டும் இரக்கமற்ற வகையில் நெஞ்சுக் காயத்தோடு.
நான் உன்னைப் பார்க்கவில்லையெனில்-
இருட்டிலும் உறைபனியிலும் காற்றாய்க் கிடப்பேன்
ஒரு முறை உன்னைப் பார்த்து விட்டால்—
ஏதோ ஒன்றால் கருக்கப்பட்டு சுருங்குவேன்

நான் உன்னைப் பார்க்க விரும்பினால்—
தேவதைகளின் கரங்கள் சொர்க்கத்திற்கு என்னை அனுப்பும்
நான் ஒருமுறை உன்னை பார்த்திருந்தால்-
நரகத்தின் கொடுமைகள் தரப்பட்டிருக்கும்
என் அமைதிக்குத்தான் இழப்பு
உன்னுடனோ அல்லது நீயில்லாமலோ—அது சிதைவுதான்
எனக்கு பூமி கிடைக்கவில்லை

நான் சொர்க்கத்திலிருந்து விலக்கப்பட்டவள்

••

அந்த வார்த்தை

அந்தக் கல் வார்த்தை

என் நெஞ்சில் விழுந்தது.

பரவாயில்லை ,நான் தயார்தான்

சமாளித்துக் கொள்வேன்.

இன்று நான் செய்ய வேண்டியது அதிகமுள்ளது;

ஞாபகங்களைக் ஒரேயடியாகக் கொன்றாக வேண்டும்

என் ஆத்மாவை கல்லாக்க வேண்டும்

மீண்டும் வாழக் கற்கவேண்டும்.

என் ஜன்னலின் வெளியே விழாவாய் கோடையின்

உற்சாகக் சலசலப்பு கேட்கும் வரை..

பல காலமாகவே முன்னுணர்வு,

திறமிக்க நாளும், கைவிடப்பட்ட வீடும்..

••

வெள்ளை இரவு

நான் கதவைப் பூட்டவில்லை

மெழுவர்த்திகளையும் ஏற்றவில்லை,

நீ அறியவும் மாட்டாய் ,கவலையுமில்லை

தூங்கப் போகுமளவுக்கு

எனக்கு பலமில்லை

வயல்வெளிகள் நிறமிழந்தன

சூரியாஸ்தமனம் பைன்மரங்களை இருளாக்கியது

எல்லாம் இழந்த நிலைதான்

இந்த வாழ்க்கை சாபமான நரகம்தான்

கதவருகில் உன்குரல் கேட்டு போதையாகிறேன்.

நீ வருவாயென நிச்சயம் தெரியும்

•••

எளிய வாழ்க்கையும் உலகமும் எங்கோ இருக்கிறது.

வெளிப்படை,இரக்கம்,மகிழ்ச்சி ..

எளிய வாழ்க்கையும் ,உலகமும் எங்கோ இருக்கிறது.

மாலையில் அண்டைவீட்டுக்காரர் பெண்ணோடு பேசுகிறார்;

மிகமென்மையான முணுமுணுப்பு,

வேலிக்கு அப்பாலிருக்கும் தேனீக்களுக்கு மட்டுமே கேட்கும்.

நம் கசப்பான சந்திப்புகளின் சடங்குகளை உற்றுப்பார்த்து,

ஆனால் கஷ்டத்தோடு சம்பிரதாயமாக வாழ்கிறோம்

அப்போதுதான் தொடங்கிய வாக்கியத்தை

இரக்கமற்ற திடீர் காற்று முறித்துவிடும்.

ஜொலிக்கிற பனியுடனான அகன்ற ஆறுகள்,

வெளிச்சமற்ற அடர்ந்த தோட்டங்கள்,

கேட்க முடியாத மெல்லியகலையின் அற்புதக் குரல்..

ஆனால் எதற்காகவும் இந்த அற்புதப்புகழும்

ஆபத்தும் கொண்ட நகரத்தை எங்களால் பரிமாற்றம் செய்யமுடியாது.

•••

எப்படிப் பிரியாவிடை கொடுப்பது என்று நமக்குத் தெரியாது

எப்படிப் பிரியாவிடை கொடுப்பது என்று நமக்குத் தெரியாது

தோளோடு தோள் சேர்த்து அலைவோம்.

சூரியாஸ்தமனம் வந்துவிட்டது.

நீ உற்சாகமிழந்து , நான் உன் நிழலாய்.

தேவாலயத்திற்குள் போய் ஞானஸ்நானங்கள்,

திருமணங்கள், இறப்புக்கூட்டங்கள் பார்ப்போம்

நாம் ஏன் மற்றவர்களிடமிருந்து மாறுபடவேண்டும்?

வெளியே வந்து அவரவர் தலை திருப்பி…

அல்லது இடுகாட்டில் உட்கார்வோம்

பனியில் ஒருவரைப் பார்த்தொருவர் பெருமூச்சு விடுவோம்

உன் கைக் குச்சி மாளிகைகளை அடையாளம்காணும்

அதில் எப்போதும் நாம் இணைந்திருப்போம்

••

இரண்டுமுறை சொல்லப்படாத வார்த்தைகள்

இரண்டுமுறைகள் சொல்லப்பட முடியாத வார்த்தைகளுண்டு

ஒருமுறை அப்படிச் சொன்னவன் புலன்களை இழந்தவன்

இரண்டு விஷயங்கள் மட்டும் முடிவில்லாதவை

நீலமான சொர்க்க படைப்பவனின் அருளும்.

சில மேற்கோள்கள்:

“இடியின் முழக்கம் கேட்கும் போது உங்களுக்கு என் நினைவு வரும்,

அவள் விரும்பியது புயல் என்று தோன்றும்.”

“எதிர்காலம் இறந்த காலத்தால் பக்குவமடைகிறது,

எனவே கடந்தகாலம் எதிர்காலத்தில் கெடுகிறது-

செத்தை இலைகளின் ஒரு கொடுமையான விழா..”

“உண்மை மென்மை என்பது குழப்பமில்லாதது; அது அமைதியானதும் கேட்க

முடியாததுமாகும்.”

———

டியர் ஜிந்தகி ( ஹிந்தி திரைப்பட விமர்சனம் ) / லாவண்யா சுந்தரராஜன்

download-31

சமீப காலமாக ஹிந்தியில் கதாநாயகிகளை முன்னிலை படுத்தும் திரைகதைகளை மிக அதிகமாக திரையாக்கம் செய்து வருகிறது காகனி, இங்கிலீஸ் விங்கிலிஸ், குயின், என்.ஹெச் 4, பின்ங் என்று நீளும் அந்த பட்டியலில் அடுத்து வந்திருக்கிறது டியர் ஜிந்தகி. அன்பான வாழ்க்கையே என்று தலைப்பிட்ட இந்த படம் தலைப்பிலேயே நம்மில் பலரை “உங்களில் எத்தனை பேர் உங்கள் வாழ்கையை அன்புகுரியதாக பார்க்கிறீர்கள், அதனை காதலிப்பர்வர்களாக இருக்கின்றீர்கள்” என்று கிண்டலாக கேட்கிறது.

ஆம் நாம் தேவையற்ற துக்கம், சோகம், போறாமை, கோவம், துவேசம் என்று எண்ணற்ற குப்பைகளை மனதிலும் தலையிலும் சுமந்து கொண்டிருக்கிறோம். அடுத்தவர்கள் மேல் கொண்டுள்ள பல்வேறு தேவையற்ற உணர்வினும் நம்முள்ளேயே எத்தனை மன அழுத்தங்களை, வேண்டியே வேண்டாமலோ தேவையற்ற பயங்களை சுமந்து திரிகிறோம். அவற்றை எல்லாம் விட்டொழித்து கடலலைகளோடு கபடி ஆட வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது டியர் ஜிந்தகி.

இந்த தலைப்பினை திரைப்படத்தின் நாயகி (ஆல்யா பட்) சிறுவயதில் நூற்றுகணக்கான கடிதங்களை தன்னை பெற்றோருக்கு எழுதுபவளாக சித்திரித்தப்பதால் அந்த கோணத்தில் வாழ்க்கைக்கு ஒரு கடிதம் என்று எடுத்துக் கொண்டு பார்த்தால், நாயகி தன் வாழ்க்கைக்கு தானே எழுதிக்கொள்ளும் கடிதம். அந்த கடிதத்தை எழுத அவள் தன் வாழ்வின் ஒரு பகுதியோடு நடத்தும் பயணமே இந்த திரைப்படம்.

அது நம் அனைவருக்கும் வாழ்க்கையின் வேறொரு கோணத்தை சித்தரிப்பது சிறப்பானது.. நாம் எதை சிந்திக்கிறோம் எதன் பின்னால் நம் அனைத்து நம்பிக்கையையும் வைக்கிறோம். எதற்காக எல்லா உழைப்பையும் கொட்டி அதன் பின்னர் அலைந்து திரிகிறோம். அத்தனை உயர்வாக எந்த விசயங்களும் இல்லை. வாழ்க்கை சுமக்கப்பட வேண்டியது அல்லது நேசிக்கப்பட வேண்டியது என்று காட்சிப்படுத்தி இருக்கின்றார்கள் திரைப்படக் குழுவினர். ஹிந்திபடங்களில் நான் எப்போதும் காண்பது சிறப்பான தெய்வற்ற திரைக்கதை. இந்த படத்திலும் அப்படியே அமைந்திருப்பது கூடுதல் பலம். பிண்ணனி இசை காட்சியமைப்பு என்று எதிலும் மிகையற்ற திரையாக்கம்.

கதையின் நாயகி கதைப்படி ஒரு கேமிரா உமன்(நன்றி: கௌரி சின்டே) முதலிரு காட்சிகளுக்குள்ளே அவளுடைய திறமையான காட்சியமைப்புகளை, காட்சி வழி உணர்வை கடத்தும் கலையை கொண்டவள் என்பதை பார்வையாளர்கள் உணரும் வண்ணம் சிறந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வளவு திறமையான, முக்கியமாய் தன்னுடைய திறமையை முழுமையாக உணர்ந்த அந்த நாயகியின் வித்தியாசமான நடவடிக்கைகள் ஆரம்ப காட்சிகளிலேயே பதிவாகிறது. வீட்டில் எந்த பொருட்களிலும் ஒழுங்கின்மையே அவள் ரசிக்கிறாள். அவளே ஒரு ஒழுங்கின்மையின் அடையாள போல் காட்சியளிக்கிறாள். மிகவும் கிழந்த ஜீன்ஸ் போட்டுக் கொள்கிறாள், பிறர் சரி சரி செய்ய செய்ய அலங்கார பொருங்களை கவிழ்ந்தி வைக்கிறாள். நாற்காலி படுத்துக் கொள்கிறாள்.

தான் ரசிக்கும் போட்டோக்களை தலைகீழாக வைத்திருக்கிறாள்.(படுத்துக் கொண்டு பார்க்கும் போது அவை நேராக தெரியலாம்) பொற்றோரிடம் பேசவே பிடிக்காதா கசப்புணர்வோடு இருக்கிறாள். அவள் மிகவும் கலை உணர்வு மிக்கவள். ஆனால் உள்ளுக்குள் மிகவும் தன்னைத் தானே அசிக்கமாய் தன் ஒழங்கற்றவள் என்று நினைக்கிறாள் என்பதை உணர்த்தும் பல காட்சிகளை அமைத்திருக்கிறது இந்த திரைக்கதை.

இத்தனையாக ஜீனியஸ் மற்றும் வியேர்ட் தன்மைகளின் கலவையான நாயகி பார்க்க மிக அழகாக இருக்கிறாள். மேலும் அந்த அழகில் பலர் மயங்கி சரிகின்றனர் என்பதையும் கூடவே அறிந்திருக்கிறாள். எல்லாரையும் ஆண் நண்பர்கள் ஆக்கிக் கொள்கிறாள். ஆனால் நெருக்க நினைக்கும் போது தானே விட்டு விட்டு ஓடிவிடுகிறாள். தன்னுடைய திறமையும் அழகையும் மிக துல்லியமாக கணித்திருந்தாலும் அவள் முக்கியமான தருணங்களில் உளருகிறாள்.

தன்னால் நினைத்தை சொல்ல முடியாமல் தவிக்கிறாள். காரணமெல்லாம் ஒரு ப்ரேக் அப். இந்த ப்ரேக் அப், காதல் தோல்வியிலிருந்து அவளுடைய வாழ்க்கையின் வேறு ஒரு பயத்தை, தெளிவின்மையை எப்படி ப்ரேக் அப் செய்கிறது என்பதே திரைக்கதை. டியர் ஜிந்தகி வாழ்க்கையின் சில முக்கிய கூறுகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

சில சமயங்களில் எளிதான வழியை விடுத்து மிக கடினமான வழியை ஏன் தேர்ந்தெடுக்கிறோம். முக்கியமாய் அந்த கடினப்பாதையில் செல்ல தேவையான ஆயத்தங்கள் இல்லை என்றே நமக்கே தெரிந்தாலும் அப்படி செய்வதன் மூலம் நம்மை நாமா தண்டித்துக் கொள்வதாக குரூர திருப்தி அடைகிறோமோ? அதனை நியாயப்படுத்த லட்சியம் அதற்காக தானே இந்த நாள் முயற்சியும் உழைப்பும் என்று பிதற்றிகிறோம். பின்னர் அதன் சுமையை சுமக்க முடியாமல் கடக்க முடியாமல் தவிக்கிறோம். சில இடங்களில் அன்பை பின் பொருட்டோ அல்லது வேறு எந்த காரணத்தின் பொருட்டோ அல்லது காயப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் பெயரில் மௌனமாக துயரப்படுகிறோம்.

அப்படி நம்மை நாமே வருத்தி கொள்வதிலும் ஒரு முறையாவது துயரப்படுகிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறோம். இதெல்லாம் எந்த கட்டாயத்தால் செய்கிறோம். தேவையே இல்லாத பயங்கள் தவறான புரிதல்கள் இன்னும் என்ன என்ன குழப்பங்களை கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் ஒரு மனநோயின் கூறுகள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

மனநோய் என்பது பைத்தியமில்லை. நம்மில் தவறான கற்பிதங்களோடு, கற்பிக்கப்பட்ட கோட்பாடுகளோடு இருக்கும் அனைவரும் மன நோயாளிகளே. இப்படித் தான் எனக்கு தெரிந்த மன நல ஆலோசகர் ஒருவர் சொல்வார். அவர் என்னுடைய நண்பர். இந்த படத்தின் மிக முக்கியமான திருப்பமாக நாயகி மனநோய்க்கு ஆலோசனை அல்லது தெரப்பி வழங்கும் ஒருவரின் பேச்சினால் ஈர்க்கபடுவதே. “ஒருவருக்கு கிட்னி பழுதாகி விட்டது அதை மாற்றிக் கொள்ள மருத்துவமனையில் இருக்கிறேன் என்று சொல்வதற்கு எந்த தடையும் இல்லை.

ஆனால் மன அழுத்தத்தை தீர்த்து கொள்ள அல்லது மூளையின் வேதியல் மாற்ற நிலையை சீர் செய்ய ஒரு மனநல மருத்துவரிடமோ அல்லது தெரப்பிஸ்ட்களிடலோ சென்றால் அதனை மறைக்கவே செய்கிறோம். அதாவது மூளை நமது உடலின் பகுதி இல்லை என்பது போல” என்று பேசப்படும் வசனம் எவ்வளவு முக்கியமானது. நாம் அனைவருமே அப்படித்தானே. யாரும் மன நல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவர்கள் என்றால் அவர்களை பைத்தியங்கள் போலன்றோ பார்க்கிறோம். மன நல ஆலோசகர்களிடம் (தெரப்பிஸ்ட்) செல்பவர்கள் எல்லோருமே மனநலம் பாதிப்பப்பட்டவர்கள் என்றோ பைத்தியங்கள் என்றோ நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அவர்களுக்குள் இருக்கும் மன அழுத்தம் அல்லது இயற்கைக்கு எதிரான விசயங்கள் எல்லாமே அவர்களுக்குள் இருக்கும் ஏதோ ஒரு மனத்தடையின் காரணமாக அல்லது மிக சிறு வயது பாதிப்பாக இருக்கலாம். வளர்ந்து விட்ட பிறகும் அந்த சிறு வயது பாதிப்பானது அவர்களது பல்வேறு நடவடிக்கைகளில் வெளிபடலாம். அந்த நடவடிக்கைகள் சம்மந்தப்படவர்களுக்கே புரியாத புதிராக இருக்கலாம். அந்த புதிர் நடவடிக்கைகள் இன்னும் பல்வேறு சிக்கல்களை அவர்களுக்கு கொண்டு வரலாம்.

உதாரணமாக இந்த படத்தில் நாயகி தன்னுடைய அம்மா, அப்பாவிடம் பேசுவதை மிகப் பெரிய சுமையாகவும், அம்மாவிடம் எப்போதும் சிடுசிடுப்பளானவளாகவும், தன்னுடைய பெற்றோர் இருக்கும் ஊரான கோவாவிற்கு செல்வதற்கே பிடிக்காதவளாகவும் இருப்பாள். அதற்கான காரணம் அந்த மன நல ஆய்வின் மூலமாக தெரியவரும் போது அவளுக்கு அது மாபெரும் அதிர்ச்சியாகவும் பின்னர் அதுவே தெளிவாகவும் ஆக்கும்.

இதனை தெரப்பியில் ப்ரேக் அப் என்பார்கள். அந்த “பிரேக் அப்” பிறகு தன்னுடைய சிறு சிறு முயற்சிகளால் அம்மாவிடமும் அப்பாவிடமும் அவள் மிகவும் நெருக்கமாகிவிடுவாள். தன்னை தானே மாபெரும் சுமையாக நினைத்தவள் தன்னோடு அன்றாடம் போரிட்டு கொண்டிருந்தவள் தன்னுடைய வாழ்க்கையை இலவம் பஞ்சு போல உணர ஆரம்பிப்பாள்.

என்னுடைய நண்பருடன்(மன நல ஆலோசகர்) பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய சில அனுபவங்களை பேச்சின் தேவைக்கேற்ப பகிர்ந்து கொள்வார். அவரிடம் ஆலோசனை பெறும் ஒரு பெண் தன்னுடைய அம்மாவிடமும் கணவரிடமும் ஓயாமல் சிடுசிடுப்பவள். அதன் பின்னர் ஏன் இப்படி ஓயாமல் சிடுசிடுத்து துன்பபடுத்துகிறோம் என்று குற்ற உணர்விலும் தவிப்பாள்.

இதே போலொரு ஆய்வினால் தன்னுடைய அம்மா தன்னை சிறுவயதில் வீட்டில் யாரிடமோ விட்டு விட்டு வேலைக்கு சென்றதும், மூன்றாவது பெண் குழந்தை என்று அவளை உதாசீனம் செய்துமே காரணம் என்பதை கண்டறிய உதவியதாகவும் அந்த ஆலோசனைக்கு பிறகு தன்னுடைய அம்மா மற்றும் கணவரிடம் சிடுசிடுபதில்லை என்றும் சொன்னாள்.

இன்னொரு முறை வேறு ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவரும் மன நல ஆலோசனை பெற்றும் தன்னுடைய அனுபவத்தை என்னுடம் பகிர்ந்து கொண்டார். அவர் தன்னுடைய மன நல ஆலோசகரிடம் என்னிடம் பிரச்சனை இருக்கிறதா என்று எப்படி அறிவீர்கள் என்று கேட்டதற்கு நீங்கள் பேசும் விதம், அதன் வேகம், அதற்குள் இருக்கும் படபடப்பு எல்லாம் உங்கள் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று காட்டிக் கொடுக்கும் என்று சொன்னதாக சொன்னார்.

அப்படித் தான் இந்த படத்தில் முதலில் தன்னுடைய பிரச்சனை இன்னது என்று சொல்ல ஆரம்பிக்கும் போது மிக வேகமாக, படபடப்பாக, ஏதோ மாபெரும் தவிப்போடு நாயகி மனநல ஆலோகரிடம் பேசுவாள். பேசி முடிக்கும் முன்னரே பல்வேறு நாற்காலிகளில் மாறி மாறி அமர்வாள்.

அதே போல் மற்றவர்கள் தன்னை ஏதோ தவறாக நினைக்கிறார்கள் என்று நாயகி அவளாக நினைத்துக் கொள்கிறாள் என்று அவள் கண்ட கனவின் விளக்கமாக அவளே உணர்ந்து கொள்வது போலும், இந்த உலகில் தவறு சரி என்று எதுவும் இல்லை எல்லாம் சமூகம் கற்பித்ததே என்றும் மன நல ஆலோசகர் சொல்வார். மேலும் “why sliently suffering? Speak out” என்றும் இந்த திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். இந்த எல்லா விசயங்களுமே எனது நண்பர்கள் மூலம் மன ஆலோசனைகளாக நான் ஏற்கனவே அறிந்திருந்தேன்.

திரைப்படத்தில் பல காட்சிகள், மன ஆலோசனை வழங்கும் எனது நண்பரையும், கவிஞர் ஆனந்த அவர்களையும் அதிகம் நினைவூட்டினாலும் ஒரே ஒரு காட்சி கவிஞர் இசையை என்கிற சத்தியமூர்த்தியை நினைவுபடுத்தியது. அவர் லூஸ் ஹேர் கவிதையில் சில வரிகள் இந்த திரைப்படத்தில் காட்சியாகி இருக்கிறது.

நாயகியின் மனம் கவர்ந்த ஒருவன் அந்த லூஸ் ஹேரை கொஞ்ச நேரம் கட்டி வையேன் என்பான். மேலும் நாயகியின் உடல் மொழி அனைத்து ஒரு திறமையான ஒளிப்பதிவாளர் ஒருவரின் உடல்மொழியை ஒத்திருந்தது. அவள் படம் எடுக்கும் விதம் மற்றும் ரெக்காடிங் செய்யும் விதம், ஒளி, ஒலியை கூட்டும், குறைக்கும் விதம் எல்லாம் அதி கச்சிதமாக இருந்தது.

மன தடுமாற்றம் உள்ளவர்கள் அமர்ந்தால் கிரிச்சிடும் நாற்காலி படத்திலேயெ எனக்கு மிக பிடித்த ஒன்றாக இருந்தது. மேலும் மனநல ஆலோசனையின் போது மனநல ஆலோசகர்கள் சொல்லும் Session, Pattern என்ற வார்த்தைகளும் திரைப்படத்தில் வருகின்றது. மேலும் moral of the story ஆக genius knows where to stop” என்ற வசனம் மிகவும் நறுக்கானது. வாழ்க்கையில் எல்லோரும் மிகவும் தேவைப்படுவது.

எந்த ஒரு கலையும் அனுபவத்திலிருந்து உதிப்பதே. அதே போல் அந்த கலையில் சொல்லப்பட்ட அனுபவத்தை நாம் உணர்ந்து பார்க்கும் கூடு விட்டு கூடு பாயும் அந்த தருணமே மிக நெகிழ்வானது. இந்த திரைப்படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றில் ஒரு பெண் தான் காயப்பட்டதாக உடன் வரும் ஆணை மறுத்துக் கொண்டே வருவாள்.

எப்படியாவது சமாதானம் செய்து விட வேண்டும் என்ற செல்ல அணைப்பை வழங்கும் தருணம் அவள் மிகவும் வெறுமையாக பார்ப்பது போலிருக்கும் காட்சியை, அந்த பெண் அவள் வேண்டாமென்று சொல்லும் இளைஞனின் அணைப்பிலிருந்தபடியே கடக்கும் மற்றுமொரு இளைஞனை கண்டு மித மிஞ்சிய புன்னகையை பரவிட்டு பார்ப்பது போல் நாயகி மாற்றி அமைப்பாள். அந்த காட்சிக்கு பிறகு நாயகியிடம் இது உங்கள் வாழ்வனுபத்திலிருந்து அமைக்கப்பட்ட காட்சியா என்று தயாரிப்பாளர் கேட்பான்.

அதே போல் அவர் எடுக்கும் குறும்படத்தில் வரும் போர்ச்சுகீஸ் முதல் பெண் கமாண்டோ தன் பாதுகாப்பை கருதி தான் பெண் என்பதை மறைத்து பதினான்கு வருடம் போரிடுவதும் அந்த சமயத்தில் எல்லாம் அவள் மிகவும் குற்ற உணர்வால் தன்னிடம் தானே போரிட்டுக் கொண்டிருந்தாள் என்பது போல் காட்சி அமைத்து, பின்னர் ஒரு மருத்துவரின் ஆலோசனையும் அவர் தரும் மனதிடமும் அவளை பெண் காமாண்டோவாகவோ போரினை தொடர செய்வதாக எடுத்திருப்பாள்.

அதுவும் உங்களுடைய வாழ்க்கையிலிருந்து தானா என்று கேட்பான் மற்றும் ஒருவன். ஆம் வாழ்க்கையிலிருந்து உதிக்கும் கலை அதி அற்புதமாக இருக்கும். வாழ்க்கை அனுபவத்தை புரட்டும் கலை இன்னும் அற்புதமாக இருக்கும். அப்படி பல சந்தர்பங்களின் நான் பேசி கேட்டறிந்த விசயங்களை, அனுபவங்களை, படித்த கவிதையை திரையில் கண்டதால் இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமாக தோன்றியது.

•••

ஐந்து கவிதைகள் ( அறிமுகப் படைப்பாளி ) – தமிழ் உதயா ( இலங்கை )

download-3

01

ஆசீர்வாதத்தின்
ஆதாமும் ஏவாளும் ஆக
இருந்து விட
அங்கே பரிசளிக்கப்பட்ட
கனிவும் காதலும் பேரழகும்
இன்பமாய் இருக்கக் கூடும்.
இறந்த காலத்தின்
எதிர்காலத்தின் கிண்ணங்கள்
வெறுமையாக்கப் படலாம்.
நிகழ்காலத்தால் நிரப்பப் பட்ட
அன்பின் கிண்ணம்
எப்போதும்
நிரம்பியதாகவே இருக்கட்டும்.
துன்பக் கிண்ணங்கள்
அருகிலேயே அமர்ந்திருக்கக் கூடும்
அப்போது தான்
துயரங்களின் வெறுமையும்
நிரம்பிய மகிழ்வின் தருணமும்
காத்திருக்கின்றன
என்பதை உணர்ந்து கொள்கிறோம்
அது
வாழ்க்கை நழுவும்
தருணமாகவும் இருக்கக் கூடும்.

02

துடித்தலையும்
ஓர்
ஈனக்காற்று
துயரக் கடல்கள்
நிறை
பிரிவின் வனம்
கொண்டாட்டம்
ஒன்றின்
மகிழ்வின் மரணம்
உடன்பாடு இல்லாத
உணவின்
வெறுப்பு
அன்பின் கொதி உலையில்
வெந்து உருக்கிய
உயிர்
வளர்ந்து செழித்த
ஒரு காதல்
வேர் நுனி
தவித்துப் பசித்திருந்த
ஒரு வயிற்றின்
கருணை
ஆதரவாக ஆசுவாசமாய்
கொட்டித் தீர்க்கும்
ஒரு தோள்
மெல்ல மெல்ல அசையும்
ஓர் அலைபேசியின்
இனிய நா
ஒற்றை
யன்னலும்
அதன் திரையும்
தனித்தலையும்
கதவும் அதன்
குருவிக் கீச்சொலியும்
கதை
கதையாய்
பேசித் தீர்க்கிறது
இந்த
சிறையற்ற சிறையின்
ஒவ்வொரு நான்கு சுவர்கள்
நிலா இருட்டில்
ஒரு தனிமையின்
கொடிய மௌனத்தை !

03

நீ
இல்லாத
இந்த இருண்ட வானவில்லை
கலைத்துக் கொண்டு போ
நான்
துடிதுடித்து
மடிந்து விடுகிறேன்
மண்ணின் ஈரத்தோடு
என் மீது
நீ போர்த்திய கார் மேகங்கள்
நீ என்னில் வீழ்ந்து உதிர்த்த
நிலவொளிப் பனித்துளிகள்
சிலிர்க்கும் அடர்ந்த விடியலாய்
மழைத்துளி
ஒன்றின் ஈரத்தை
அதன் நெடு சுவாசத்தை
அதனிலிருந்து பிரிக்கவா முடியும்
அலைகளை உறிஞ்சி
விரிந்த மெத்தையின்
வெண் திட்டுக்களாய்
நிழலென பூத்துக் கிடக்கிறாய்
உதறிய காற்றை
இழுத்து இழுத்துப் பிடித்து
தொடர்ந்திட அலைகிறது
இந்த நதிக்கரையின் காலக் கண்கள்
ஆகாயச் சிறகை விரித்து
ஆயிரம் இரவுகளை
ஏன் கொணர்கிறாய்
ஓர் ஆலண்டாப் பறவையென
காதல் முத்தத்தால் பற்றிச் செல்லவா
உனக்கான சொற்களை
கோர்த்துக் கோர்த்து பார்க்கிறேன்
பெரு வனத்தின் பேரன்பை
கொட்டிக் கொட்டி சாய்க்கின்றேன்
அந்த
இராட்சதப் பறவையின்
கொடூர அன்பை விஞ்சுவதாயில்லை
உனக்கான எந்த மறுபெயரும்

04

மரத்தின் கிளைகளில்
பறந்து தாவும்
ஒரு சிட்டுக்குருவியின் நெஞ்சம் போல
எத்தனை கர்வமற்ற சிலிர்ப்பு
இந்த வைகறை வெயிலும்
விரிந்த மரங்களும்
தனக்கே உரிமையென
சொந்தம் கொண்டாடும்
அதைப் போல எத்தனை
உயிர்ப்பான தேடல்
இந்த சிட்டுக்குருவிகள் இல்லாத
வானத்தை
மரங்களை
பூமி மண்ணை
என் முற்றத்தை
யாரேனும் பரிசளிக்க முடியுமா
அந்த சோகத்தை
யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை
இது பிரக்ஞையான
ஒரு கவிதைத் தேடலின்
சோகம் நிறைந்த வானம்
அது அதை விட பெரியதாகவே இருக்கும்

05

நீ வருவாயா
ஒரு கிளை பரப்பிய
மௌனங்களின் நிழலில்
உலர விடாத மழையென
சொற்கேசம்
அற்ற படிமங்களால்
புள்ளிக் கோலமிட்டு நிரப்பும்
பூக்களை காவிக் கொண்டு
பித்தன் போல சுற்றும் பட்டாம்பூச்சியென
ஒரு
புல்லாங்குழல்
நனைக்கும் ஈர சுவாசத்தை
இட்டு நிரப்பிவிட்டு
இசை தழுவிய உடலோடு நீ
உன்
நினைவுகளை
காற்றின் மீது அலையவிட்டு
தூவி விடுகிறேன் என்னுள்
மிச்சமாக கிடக்கும் சொற்களையும்
உன்
அன்பு வாசலின்
மெல்லிய கனவுகளை
சுமந்து வரும் இமைகளை
இந்த ஏகாந்தங்கள் வருடி விடக் கூடும்
அதை விடுத்து
பிரபஞ்சத்தின் தளிர்த்தலில்
அசையும் கவிதைச் சிறகொன்றைத்
தூக்கி தூரப் பறந்து விடலாம்
ஒரு
குழந்தை போல
வளர்ந்து கொண்டே இருக்கும்
ஈரம் தேடும் சுவாசங்களை
இறக்கி வைத்து விட்டு வேர் கொள்
சொற்களற்ற
மிதந்து வரும் சௌந்தர்யத்தை
விரிந்த வெற்றுப் புத்தகமாய்
முடியாத இரவொன்றில்
விடிய விடிய வாசித்துப் போகிறேன்

****

தட்டான்களும் வண்ணாத்துப் பூச்சிகளும் / கோவை எம் தங்கவேல்

download-33

வீட்டின் எதிரில் பெரிய ஓட்டு வீடு. யாரோ ஒரு தேவரின் வீடு. அதை முஸ்லிம் ஒருவரிடம் விற்று விட்டு தெற்கே குடி போய் விட்டார். வீட்டு வாசலின் இடது பக்கமாக மூன்று நாவல் மரங்கள் இருந்தன. ஒன்று முஸ்லீம் வீட்டாருக்கு பாகம். இன்னொன்று வீட்டின் இடது பக்கமாய் இருக்கும் மாமாவுக்கு பாகம். மேற்கு பக்கத்தில் இருக்கும் மரம் என் தாத்தாவுக்கு பாகம்.

எதிர் வீடு பெரிய கட்டு வீடு. கிழக்குப் புறத்தில் ஒருவர் குடியிருந்தார். மேல்புறத்தில் ஆசாரி குடியிருந்தார். அவருக்கு மூன்று ஆண் பசங்க. அதில் ஒருவன் என்னோடு படித்தான். எங்கே படித்தான்? படிக்கிறேன் பேர்வழி என புத்தகமட்டையைத் தூக்கிக் கொண்டு திரிந்தான். ஆசாரி வீட்டின் எதிரே பெரிய மாமரம் ஒன்று அகல விரிந்து கொண்டிருந்தது. அதன் நிழலில் தான் ஆசாரி மர வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்.

எதிர் வீட்டுக்கு தென்புறமாக சலுவாவின் வீடு. கிழக்குப் பார்த்த வீடு. அங்கு அதிகம் பேர் வாழ்ந்தார்கள். சலுவா தான் எதிர் வீட்டையும் வாங்கினார். சல்வா வீட்டுக்காரர் மலேசியாவில் வேலை பார்த்தார். அவருக்கு நிறைய பெண்களும், ஆண்களும் இருந்தனர்.

நாவல் மரத்தில் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்து தொங்கும். குருவிகளும் இன்னபிற பறவைகளும் விடாது சத்தம் எழுப்பியபடி பழங்களை ருசிக்க வந்து விடும். கல் வாசலில் நாவல் பழங்கள் வந்து விழும். மண் ஒட்டாது இருப்பதால் அடிக்கடி நான் அவைகளை எடுத்து தின்பதுண்டு. மண்ணில் விழுந்தால் அதை நாசூக்காக எடுத்து விட்டு சாப்பிடுவதுண்டு. இருந்தாலும் மண்ணும் வயிற்றுக்குள் சென்று விடும். அதையெல்லாம் நாக்கு கண்டு கொள்வதே இல்லை.

ருசி என்று வந்து விட்டால் மண்ணாவது ஒன்னாவது? இரவுகளில் வவ்வால்கள் வந்து நாவல் பழங்களைக் கொத்துக் கொத்தாகச் சப்பி போட்டு விட்டு சென்று விடும். ஒரு முறை வடக்கித் தெருவில் இருக்கும் ஒருவரைக் கொண்டு வந்து மரத்தைச் சுற்றி வலைகளைக் கட்டி வைத்து விட்டோம். மூன்று வவ்வால்கள் மாட்டின. அதை வறுவல் செய்ய அறுக்கும் போது தான் அருகில் இருந்து பார்த்தேன். அதன் கலரும் மூஞ்சியும் சகிக்காது.

அன்றிலிருந்து எனக்கு வவ்வால்களைக் கண்டாலே ஆகாது. நான் ஆவலுடன் சாப்பிடும் நாவல் பழங்களை அவைகள் தின்று விடுவது ஒரு காரணம். மரத்தில் இருந்து பழங்களை உலுப்பி எடுத்து தண்ணீரில் அலசி கொஞ்சம் உப்புத்தூள் தூவி குலுக்கி வைத்து விட்டு அரை மணி நேரம் சென்று எடுத்துச் சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். சட்டி சட்டியாகச் சாப்பிட்டிருக்கிறேன்.

ஆசாரி வீட்டில் விசேசம் போல. வாசலில் பந்தல் போட்டார்கள். பந்தலில் அழகான ஓலைகள் தொங்க விடப்பட்டன. ஒலிப்பெருக்கியை வைத்துப் பாடல் போட ஆரம்பித்தார்கள். பெரும் சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. இன்னும் இரண்டு நாட்களுக்கு ஒலிபெருக்கிகள் விடாது பாடல்களை ஒலித்துக் கொண்டிருக்கும். தீன் சவுண்ட் சர்வீஸ்காரர்கள் தான் வருவார்கள். கருப்பு கலரில் இருக்கும் தட்டுகளிலிருந்துதான் பாடல்கள் ஒலிக்கும். நான் சென்று பார்த்து வருவதுண்டு.

ஆச்சரியத்தில் விழிகள் பிதுங்கியபடி தட்டையான கலர் படங்கள் பதிந்த கவருக்குள் இருக்கும் தட்டுகளை எடுத்து எடுத்துப் பார்ப்பதுண்டு. மைக் செட்டுக்காரர் ’பக்கத்தில் உட்கார்ந்து இரு’ என்றுச் சொல்லி விட்டு பீடி குடிக்கப் போய் விடுவார். கிராம போன் பாடி முடித்ததும் மீண்டும் ஒரு தட்டை எடுத்து மாட்டி நானே பாட விடுவேன். நான் சரியாகச் செய்கிறேனா என்று மைக் செட்டுக்காரர் மேற்பார்வை பார்ப்பார். குஷியாக இருக்கும். அம்மாவிடம் வந்து, ”அம்மா, இது நான் போட்ட பாட்டு எப்படி இருக்கு?” என்று பெருமிதமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

ஆசாரி வீட்டு விசேசத்தில் இரவுகளில் பளீரென்று வெளிச்சம் அடிக்கும் ஒரு வஸ்துவை நான் பார்த்தேன். அதுதான் பெட்ரோமாக்ஸ் லைட். விஸ் என்ற சத்தத்துடன் ஒளி வீசிக் கொண்டிருக்கும். பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருக்கும். அதில் ஒளி வீசும் பகுதி ஒன்றிருக்கும். அதன் பெயர் மேன்டில். வலை போன்றிருக்கும். மண்ணெண்ணெய் தான் எரிபொருள். ஒரு லிட்டர் பிடிக்கும். ஆனால் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருக்கும். விசேசங்கள் என்று வந்து விட்டால் கடைத்தெருவில் இருந்து வாடகைக்கு கொண்டு வந்து இரவுகளில் வைத்து விடுவார்கள்.

எங்கள் வீட்டிலும் சலுவா வீட்டிலும் தான் கரண்ட் இருக்கும். நான்கு பல்புகள் அவ்வளவுதான் வீடு முழுமைக்கும். டியூப் லைட் ஒன்று இருந்தது. அது நீண்ட நாட்களாக எரிவதில்லை. அம்மா வீடு கூட்டிப் பெருக்கும் போது கரண்ட் மீட்டரில் ஒரு அடி வைப்பார். அது ஏன் என்று ரொம்ப நாட்களுக்கு முன்பு வரை தெரியாது. பின்னர் தெரிந்த பிறகு அம்மாவின் சிக்கனத்தை நினைத்துச் சிரித்துக் கொள்வேன். ”அதை தொட்டுக்கிட்டு விடாதேடா, புடிச்சுக் கொன்னுடும்” என்று என்னிடம் சொல்லி வைப்பார். அது எனக்கு எட்டாது. அதனால் அதைத் தொட்டுப்பார்ப்பது பார்ப்பதோ அல்லது அது என்னைப் புடிச்சுக்கொல்வதோ ஆகாத காரியம்.

நான் தான் தட்டான்கள், வண்ணாத்துப்பூச்சிகள், பொன்வண்டுகளைப் பிடித்துக் கொண்டு வந்து கொன்று கொண்டிருந்தேனே? அவ்வப்போது கரட்டான்களை வேறு கொலைகள் செய்து கொண்டிருந்தேன்.

வீட்டின் இடது புறமிருந்த கொல்லையில் தும்பைச் செடிகள் அதிகம் இருக்கும். கடுகு போன்ற ஒரு செடியும் இருக்கும். அது பெயர் என்னவென்றுதான் தெரியவில்லை. தும்பைப்பூவில் தேன்குடிக்க வரும் வண்ணாத்துப்பூச்சிகளை சத்தமே காட்டாமல் உட்கார்ந்து அமுக்கிப் பிடித்து விடுவேன். மூன்று தும்பைச் செடிகளைப் பிடித்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வண்ணாத்துப் பூச்சி வந்து அமரும் போது ஒரே அமுக்கு. அது செத்தே போய் விட்டோம் என்று மயக்கத்தில் இருக்கும். பிடித்து விடுவேன். அதைக் கொண்டு வந்து அதன் பின்புறம் நூலைக் கட்டிப் பறக்க விடுவேன். சிலதுக்கு பின்புறம் நூலோடு வந்து விடும். வெறும் தலையோடு பறந்து போய் விடும். எனக்குத்தான் எரிச்சலாக இருக்கும். மீண்டும் பிடிக்க வேண்டும். தட்டான்களில் நூல் கட்டுவது என்பது பெரும்பாடு.

வீட்டு வாசலில் பறக்கும் தட்டான்களைப் பிடிப்பதே பெரும் கலையம்சம் பொருந்தியது. பெரிய துண்டாக வைத்துக் கொண்டு சத்தமே காட்டாமல் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அருகில் பறக்கும் போது ஒரே அடி. துண்டுக்குள் சிக்கி விடும். சில தட்டான்கள் செடிகளில் உட்காரும் போது சத்தமே காட்டாமல் அதன் வாலைப் பிடித்து அமுக்கி விடுவேன்.

மாமா பையன் விட்டியன் தான் பொன்வண்டுகளையும் அதுகள் சாப்பிடும் இலைகளையும் கொண்டு வந்து தருவான். அதன் கழுத்தில் நூலைக் கட்டி ஒரு சுற்றுச் சுற்றினால் சும்மா விர்ரென்று சுற்றும். ஆனால் அதன் கழுத்தில் மட்டும் விரலை வைத்து விடக்கூடாது. ஒரே கடி என்று விட்டியன் என்னை பயமுறுத்தி வைத்தான். நானா அடங்குவேன். கையில் துணியைச் சுற்றிக் கொண்டு விரலை வைப்பதுண்டு. பொன்வண்டு மஞ்சள் கலரில் முட்டைபோடும். இதெல்லாம் விளையாட்டு எனக்கு.

எங்களூரில் ஆட்டக்குதிரைகளை வியெஸெம் ராவுத்தர் வளர்த்து வந்தார். அந்தக் குதிரை எம்.ஜி.ஆர் படத்தில் கூட நடித்திருக்கிறது என்றார்கள். நான் டியூசன் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது வியெஸெம் ராவுத்தர் வெள்ளைகலரில் இருக்கும் குதிரைக்கு ஆடச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். வேடிக்கைப் பார்ப்பதுண்டு. ஒரு தாம்பாளத்தட்டில் கால்களை வைத்து ஆடிக் கொண்டிருக்கும் அந்தக் குதிரை. ராவுத்தர் கையில் சாட்டை ஒன்று இருக்கும். சாட்டையால் ஒரு விளாசு விளாசுவார்.

குதிரை கனைத்துக் கொண்டே கால்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கும். முஸ்லிம் வீட்டு விசேசங்களில் மாப்பிள்ளை முகம் முழுவதும் சரம் சரமாய் தொங்கும் பூக்களை அணிந்து கொண்டு குதிரை மீது வருவார். குதிரையின் முன்னே பெட்ரோமாக்ஸ் லைட்டுகளை தலை மீது வைத்துக் கொண்டு ஆட்கள் செல்ல பாண்டு வாத்தியங்களுடன் ஊர்வலம் சலுவா வீடு வரைக்கும் வந்து திரும்பிச் செல்லும்.

அம்மா என்னைத் திட்டி விட்டால் அருவாளைத் தூக்கிக் கொண்டு வீட்டின் இடது புறம் இருந்த நீண்டு வளர்ந்த பனை மரத்தின் அடியில் இருந்த மஞ்சமினா மரத்தினை வெட்டிச் சாய்த்து விடுவேன். அது வளரும் வரை எனக்கு கோபம் வராது. மீண்டும் கோபம் வந்தால் மீண்டும் வெட்டிக் குதறிவிடுவேன். அந்த மரமும் விடாது துளிர்ப்பதும் நான் கோபம் வந்தால் வெட்டுவதுமாய் எனக்கு விபரம் தெரிந்த நாள் வரைக்கும் தொடர்ந்தது. கல்லூரிக்குச் சென்ற பிறகு அந்த மஞ்சமினா மரம் வளர்ந்து படர்ந்து நின்றது. மாமா ஒரு நாள் அதையும் வெட்டி விட்டார். வீட்டைச் சூழ்ந்த கொடத்தடி மாமரம், காசாலட்டு, பெரிய மாமரம், பாவக்காய் மாமரம், தேத்தாமரம், வேப்பமரங்கள் எல்லாம் கவர்மெண்டு போட்ட ஆழ்துளைகுழாயினால் பட்டுப் போயின. இப்போதும் ஊருக்கு அந்தக் ஆழ்துளைக் கிணற்றிலிருந்துதான் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் ஊரெங்கும் இருந்த பச்சை காணாமல் போய் விட்டது அத்துடன் தட்டான்களும், வண்ணத்துப்பூச்சிகளும், பொன்வண்டுகளும், பெட்ரோமாக்ஸ் லைட், கிராம போன் மற்றும் ஆட்டக்குதிரையும் தான்.

•••

முருக தீட்சண்யா கவிதைகள் ( அறிமுகப் படைப்பாளி ) மயிலாடுதுறை

images-9

01

சேகுவாரவைக் கூட
அவள் தான்
அறிமுகம் செய்தாள்,
மாக்சிம் கார்க்கியின்
தாய் படி என்றாள்,
மார்க்சின் மூலதனம்
வாழ்வை மாற்றும்
வாசித்துப்பார் என்றாள்.
இப்போது
ஒரு பெல்லாரி
வெங்காயத்துக்கே
அழுதுவிடுகிறாள்,
அடி வயறு கனக்க
அழுக்குத் தாலி சுமக்கும்
அந்த புரட்சிக்காரி …… !

02

கூடடைதல் குறித்த
அச்சமற்ற பறவைகள்
எப்போது திரும்பக் கூடும்
இன்றா நாளையா
இந்த வனபபின்
மெளனங்களை
யார் உடைக்கக் கூடும்
ஒரு தனிமையை
விடவும்
மேலான நரகத்தை
யார் பரிசளிக்கக் கூடும்
கொஞ்சம் திறந்து
விடுங்களேன்
ஒரு பூட்டப்பட்ட கதவின்
வெளிப்புறத்தை விடவும்
உட்புறம் ஒன்றும் அத்தனை
கொடுமையானது இல்லை

03

சூழ்ச்சி வலைகளில்
சிக்க வைத்தல்
எளிதாய்
கைகூடி விடுகிறது
உனக்கு.
நம்ப வைத்து
கழுத்தறுக்கும்
நயவஞ்சக
விளையாட்டுக்கள்
ஒன்றும்
புதிதில்லை
உன் நாட்காட்டியில்.
விடம் தோய்ந்த
வார்த்தைகளில் தான்
இருக்கிறது
உன் விசாரிப்புகள்
எப்போதும்.
முதுகுக்கு பின்னே
உன் சிரிப்பொலிகள்
கேட்டுக் கொண்டேதான்
இருக்கிறது.
நீ எப்படியும்
என்னை
புதைத்துவிடத்தான்
போகிறாய்
என்பதும் புரிகிறது.
ஆனாலும்
வாழப்பிடிக்கிறது
நிறைய,
உன்
ஒரு துரோகத்தையாவது
வென்றுவிட
முடியுமெனில் …… !

04

வெயிலுக்கு மகள்
வைத்த பெயர்
இந்துமதி மிஸ்
யதேச்சையாய்
வகுப்பறையை
கடக்கிறபோது தான்
கவனித்தேன்
அடடா
வெயில் தான்
எத்தனை அழகு

05

ஏதேன் தோட்டத்து
ஆப்பிள்களை உனக்கு
பரிசளிக்க முடியாது
என்னால்,
சிலுவைப்பாடு தான்
என்னோடு வந்தால்.
எப்போதும்
உயிர்க்கும்
நம்பிக்கையின்
சிறு வெளி
ஒரு ஒற்றை
மின்மினி நான்
என்னை
நட்சத்திரங்களில்
புதைப்பதை
ஏற்பதில்லை
எப்போதும்.
இந்த பெருங்காட்டின்
வனத்தில்
காற்றோ
மழையோ
வெயிலோ
போதவில்லை
நமக்கு
இந்த முரண்களின்
கூடாரம்,
வெளியே வருகிறேன்
அணைத்துக் கொள்கிறது
ஒப்பீடுகளற்ற ஒரு வானம் …..

••••

தாச்சி – ( சிறுகதை ) – சத்தியப்பிரியன்.

images-8

முதல்நாளே எதிர் போர்ஷன் பானு வீட்டிலிருந்து ஃபோன் மூலம் தகவல் வந்துவிட்டது . “மல்லிகா ! நாளைக்கு மறந்துடாதே . நான் வேணா அவர்கிட்ட சொல்லி கார் அனுப்பச் சொல்லட்டுமா?” என்று நாகா மன்னி குழைய குழையக் கூப்பிட்டு விட்டாள். “ காரெல்லாம் எதுக்கு மன்னி ? நான் வந்திடுவேன் “ என்றாள் மல்லிகா. கார் ஜெய்ஹிந்துபுரம் குறுகிய வீதிகளில் நுழையாது. தேவையில்லாமல் டிரைவர் முகம் காட்டுவான். இரண்டு நாட்கள் முன்னால்தான் மல்லிகா கண்ணனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் “ உங்க மன்னி கூப்பிட்டு நாளாச்சே பங்குனியில் அவங்க வீட்டில் தெவசம் வருமே “ என்று. இதோ நேற்று அழைப்பு வந்துவிட்டது.

போட்டது போட்டபடி போக முடியாது. பெரியவள் மீனாவுக்குப் பதின்மூன்று வயதாகிறது என்று பெயர் ஒருகாரியம் அம்மாவுக்கு ஒத்தாசையாகச் செய்யவேண்டும் என்று கிடையாது. குடித்த காபி டம்ளரை அலம்பி கவிழ்த்த அம்மா வேண்டும். கேட்டால் படிப்பு மற்ற இரண்டும் அவளுக்கும் கீழே சின்னதுகள். பிரபாகருக்கு இன்னமும் தனியாக மலம் கழுவி கொள்ளத் தெரியாது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம்.

உனக்குக் காரணம் எதுவும் இல்லையா மல்லிகா என்று ஓட்டை கண்ணாடியைப் பார்த்து கேட்டாள். கண்ணாடி பதிலுக்கு இளித்தது. இன்று மீனாவுக்கு வகுப்பு தேர்வோ, மாதிரி தேர்வோ இருக்கக் கூடாது . இருந்தால் இப்படிச் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பியதற்கு மாலை வீட்டு வாசலில் நிற்க வைத்துக் கேள்வி கேட்பாள். இது போன்ற நாட்களில் தினப்படி ஒழுங்கு மாறிப்போய்விடுகிறது. திருநகரிலிருந்து இரண்டு பஸ் மாறிவரவேண்டும். அல்லது மீனாட்சி மில் கேட்டிலிருந்து நடந்து வரவேண்டும். வரவர ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க முடிவதில்லை. இதுபோன்ற நாட்களில் கண்ணன் முனகியபடி பஸ் நிறுத்தத்தில் கொண்டு விடுபவன் மாலையில் கண்டுகொள்ளவே மாட்டான். எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் மதி புத்தகக் கடைக்காரருடன் சீட்டு விளையாடுவது மட்டும் நிற்காது. பள்ளிக்கூடத்திலிருந்து வந்த மூன்றுபிள்ளைகளின் யூனிஃபாரம் அத்தனையையும் அவள்தான் துவைத்துப் போடவேண்டும். முற்றத்தில் விழும் அத்தனை பாத்திரங்களையும் அலம்பிக் கவிழ்த்தினால்தான் மறுநாள் வண்டி ஓடும். இதில் யாரிடம் எந்த உதவியை எதிர்பார்ப்பது ?

கண்ணன் வாசலில் சைக்கிளில் ஸ்டாண்டை எடுத்துவிட்டு ஒரு காலால் ஊன்றியபடி நின்று கொண்டிருந்தான். மல்லிகா தன் கையில் ஒரு புடவை ஒரு உள்பாவாடை ஒரு ஜாக்கட் மடித்துச் சுருட்டித் திணித்து வைத்திருந்த மஞ்சள் துணிப்பையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறுகையால் சைக்கிள் சீட்டின் பின்பகுதியைப் பிடித்துக் கொண்டு ஒரு குதி குதித்துப் பின் சீட்டில் அமர்ந்தாள். அவள் அமரும்போது ஊன்றிய காலுக்குக் கண்ணன் அதிக அழுத்தம் கொடுத்தான். இருப்பினும் சைக்கிள் சற்றுத் தடுமாறியது.

“ நீங்க வருவேளா? “ என்றாள் மல்லிகா எதிர் சுவரில் ஒட்டப்பட்டிருந்த எங்கள் தங்க ராஜா போஸ்டரைப் பார்த்தபடி..

“ எனக்கு ஆடிட்டர் ஆபீசில் வேலையிருக்கு. போகணும். “ இது கண்ணனின் ரெடிமேட் பதில்.

இதுபோல் நான்கைந்துமுறை ஆகிவிட்டது. கண்ணனின் கொள்ளுப்பாட்டியும், சுந்தரத்தின் கொள்ளுபாட்டியும் கூடப்பிறந்த சகோதரிகள். நேரே பிறந்ததுகளே முகம் கொடுத்துப் பேச யோசிக்கும் காலத்தில் இரண்டு தலைமுறை தாண்டிய உறவு எப்படி ஒட்டும்? ஒட்டத்தான் செய்கிறது. நாகுதான் காரணம். அவளுடைய சுழலும் நாக்கு காரணம். அப்புறம் கண்ணனும் ஒரு காரணம். சுந்தரத்திற்கு பேங்க் மேனேஜெர் உத்தியோகம். ஊர் ஊராகச் சுற்றிவிட்டு மதுரையில் தண்டு இறங்கியாச்சு. நாகா மன்னி பர்சிலிருந்து வெளியில் எடுக்கும் ஒவ்வொரு நயாபைசாவிற்கும் கணக்கு பார்க்கும் ரகம். காரியமும் ஆகவேண்டும் காசும் செலவழியக் கூடாது. கூப்பிட்டக் குரலுக்கு செய்து கொடுத்துவிட்டு போக ஒன்றுவிட்ட இரண்டு விட்ட ஓரகத்தி இருப்பது வசதியாகப் போனது. கண்ணனும் தாயாதிக்கார உறவு விட்டுப்போகக் கூடாது என்று நாகாமன்னி சொல்லும் அத்தனைக்கும் தலையாட்டுவான்.

விடிகாலை ஐந்துமணி என்று பெயர் இப்போதே உஷ்ணக்காற்று வீச ஆரம்பித்தாயிற்று. கண்ணனின் முதுகு பக்கச் சட்டை ஈரமாகி முதுகோடு ஒட்டி நின்றிருந்தது.அவளை ஆண்டாள்புரம் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டான். ”ரெண்டு ஸ்டாப்புன்னு திருப்பரங்குன்றம் பஸ்ஸில் ஏறி அங்கிருந்து லொங்கு லொங்குன்னு திருநகர் ரெண்டாவது ஸ்டாப் வரைக்கும் நடக்காதே . லேட்டானாலும் இருபத்திரெண்டோ பதினாலோ வந்து அதில் ஏறிப்போ “ என்றான். பதினாலுதான் வந்தது. இருபத்திரண்டு புதூரிலிருந்து வரும். கூட்டம் இருக்கும். நல்லவேளை பதினாலாம் நம்பர் பஸ்ஸில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. பஸ்ஸில் உட்கார்ந்ததும் முகத்தில் குளிர்ந்த காற்று வீசியவுடன் கண் அயர்ந்த மல்லிகா ஹார்விபெட்டி ஸ்டாப்பில்தான் கண் விழித்தாள்.

அக்னி எறிவது போல மல்லிகாவிற்குப் பசித்தது. கையில் கிடைத்ததையெல்லாம் தின்ன வேண்டும் என்ற வெறி வந்தது. பால் கூஜாவில் தண்ணீர் கொண்டு வந்திருந்தாள். நல்லதாகப் போயிற்று. நாகா மன்னி ஒரு ஹார்லிக்ஸ் கலந்து கொடுக்காமலா வேலை வாங்கப் போகிறாள் என்று சமாதானபடுத்திக் கொண்டு தண்ணீரைக் குடித்தாள். ஓரளவு பசியடங்கியது போலிருந்தது.

ஸ்டாப்பிலிருந்து நூறடி தூரத்தில் நாகா மன்னியின் வீடு. நாகா மன்னி வேலைக்குப் போகவில்லை. மன்னிக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு பெண். மூத்தவன் என்ஜினியரிங் படிக்கிறான். இரண்டாவது பையன் பத்தாவது. பெண் எட்டாவது படிக்கிறாள். பாட்டு டான்ஸ் எல்லாம் உண்டு. ஒவ்வொரு சுமங்கலி பிரார்த்தனையின்போது ஸ்ருதியும் தாளமும் சேராத பாடலை மல்லிகா கேட்டு விட்டு ,“முன்ன பாடினதுக்கு இப்போ ரொம்ப நன்னா பாடறாளே” என்பாள். “உனக்குத் தெரியறது மல்லிகா பள்ளி ஆண்டுவிழா ஜட்ஜுக்குத் தெரியலியே. பாரு கரஸ்பாண்டன்ட் சொந்தக்கார பொண்ணுக்குத்தான் இந்த வருஷமும் முதல் பரிசு.” என்று ஒவ்வொரு வருடமும் நாகாவும் ஒரே பதிலைத்தான் சொல்லுவாள்.

ஸ்டாப்பிலிருந்து நூறடி தொலைவில் நாகா மன்னியின் வீடு. நாடார் கடையைத் திறந்து சுவரில் மாட்டி வைக்கபட்டிருந்த பெரிய சைஸ் செந்திலாண்டவன் படத்திற்கு ஊதுபத்திப் புகையைக் காட்டிக் கொண்டிருந்தார். திரும்பினால் மன்னி வீடு. மன்னி வீட்டின் முன்னால் பெரிய தோட்டம் உண்டு. சப்போட்டா மரம் ஒன்று; நான்கைந்து அரளிச் செடிகள், ஒரு வேப்ப மரம், துளசிமாடம் எல்லாம் உண்டு. ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் எப்போதும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கும். மணி என்றுதான் கூப்பிடுவார்கள். ஒவ்வொருமுறை அவள் உள்ளே நுழையும்போதும் அது தாவி வந்து கழுத்தளவு எழும்பி நிற்கும்போது உயிர்க்குலை தொண்டையில் ஆடுவதை மல்லிகா உணர்வாள். ஒவ்வொருமுறையும் சுந்தரம் ஒரு அரை டிராயரை மாட்டிகொண்டு மணியைக் கூப்பிட்டுக் கழுத்து பெல்டை பிடித்து இழுத்துச் செல்வான்.

நாகா மன்னிதான் கதவைத் திறந்தாள் .” நூறாயிசு மல்லிகா உனக்கு. சமையல் மாமியையும் காணோம். உன்னையும் காணோம் . சாஸ்த்ரிகள் சரியா பத்து மணிக்கு பிராமணா வந்திடுவான்னு சொன்னார். அவர் பதினொரு மணிக்கு வந்துடறேன்னு சொல்லியிருக்காரே மணி இப்பவே ஏழு ஆயிடுத்தே எப்படிடாப்பா சமாளிக்கப் போறேன்னு-மணி ஆறு கூட ஆகியிருக்கவில்லை- நினைச்சேன். வா வா “ என்றாள். மணியின் குரல் மட்டும் கேட்டது. முகத்தில் பீதியை வெளிப்படுத்திய மல்லிகாவை நாகா மன்னி சமாதானம் செய்யும் விதமாக, “ வரவா போறவா எல்லாரையும் பார்த்துக் குலைக்கிறதுன்னு மாடிப்படிக்குக் கீழே மணிக்கு தனியா ரூம் கட்டி அதில் போட்டு வச்சிருக்கு. “ என்றாள்.

ஒரு சிரார்த்த வீட்டின் அறிகுறி எதுவுமின்றி அந்த ஹால் விளங்கியது. சோபா செட்டு அப்படியே இருந்தது.ஒரு ஈஸிச்சேர், டீபாய் எல்லாம் அப்படி அப்படியே இருந்தன.

“ குளிச்சிட்டியோ ? “ என்றாள் நாகா.

“ ஆச்சு. மடிப்புடவை எடுத்துண்டு வந்திருக்கேன் “

“ அது இருக்கட்டும். முதலில் சமையலுக்குக் கறிகாய் எடுத்து வச்சிருக்கேன் . நறுக்கிடு. தேங்காய் மட்டும் அப்புறம் துருவிக்கலாம்.” என்றாள் நாகாமன்னி.

“ சமையல் மாமி வருவா இல்லியோ மன்னி ?” என்றாள் மல்லிகா உடனே. நாகா மன்னி மல்லிகாவை ஒரு பார்வை பார்த்தாள். உடனே கேட்டிருக்கக் கூடாதோ ? மல்லிகா நாக்கை மனத்தைக் கடிந்து கொண்டாள்.

“ மாமி எந்த சிரார்த்ததிற்குதான் சரியான நேரத்துக்கு வந்திருக்கா? வருவா ஆறுமணிக்கு மேல. நீ காயை நறுக்கு மல்லிகா “ என்று தனது கோரிக்கை வாக்கியங்களை நாகா மன்னி கட்டளை வாக்கியங்களாக மாற்றிக் கொள்ளத் தொடங்கினாள்.

சமையல்கூடத்தில் ஒரு பக்கம் பெரிய உணவு மேஜை போடப்பட்டிருந்தது. அடுப்படியில் பெரிய மேடை. தலைகீழான ஆங்கில எழுத்து எல் வடிவில் அடுப்பின் இரு மருங்கிலும் பெரிய பெரிய ஷெல்ஃபுகள் உள்ளே தனியாக ஒரு சேமிப்பு அறை. நாகா மன்னி தனது ஸ்டோர் ரூமை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பாள். பண்டங்கள் எல்லாம் தனிதனி பாத்திரங்களில் நிரப்பப்பட்டு மூடி போட்டு வைக்கபட்டிருக்கும். மிகப்பெரிய குளிர்சாதன பெட்டி. முதல் முறை ஆர்வக்கோளாறில் மல்லிகா தானே ஃபிஜிடேரைத் திறந்துவிட்டாள். உள்ளே சிவப்பு நிற வைன் பாட்டில் ஒன்று இருந்தது. அதன் பிறகு ஒருமுறை கூட நாகாமன்னி மல்லிகாவை குளிர்சாதன பெட்டியைத் திறக்க அனுமதித்தே இல்லை. முதல்நாள் வாங்கிய கறிகாய்களை இரண்டு செய்தித் தாள்களைப் பிரித்து அதன் மேல் பரத்தி வைத்திருப்பாள். உணவுமேசை நாற்காலியில் அமர்ந்துகொண்டு நாகாமன்னி மல்லிகா காய்களை நறுக்கிக் கொண்டிருக்கும்போது பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பாள். பெரும்பாலும் சுய புராணமாக இருக்கும். போன வருடம் விடுமுறையில் பார்த்த இடங்கள், பார்த்த சினிமா, கொஞ்சம் உறவுக்கார வம்பு என்று எதையெல்லாம் மட்டும் மல்லிகாவிடம் சொல்லலாமோ அவற்றை மட்டும் சொல்லுவாள்.

“ வாழைக்காயைப் பொடிப் பொடியாவே நறுக்கிடு . போன தடவை பொடிமாஸ் மாதிரி பண்ணி பிராமாணார்த்தத்திற்கு உட்கார்ந்த பிராமணா தொட்டுக்கவே இல்லை. அப்படியே மாட்டுக்குப் போடறா மாதிரி ஆச்சு.”

“ சரி “

“ மா இஞ்சியை நன்னா தோல் எடுத்துக் குடுத்துடு “

“ சரி “

“ அவரைக்காயைக் கூட்டுக்கு நறுக்கிடு. பாவக்காயைப் பிட்லைக்கு நறுக்கிடு. வாழைத்தண்டு பச்சடிக்கு. சேப்பங்கிழங்கை நன்னா அலம்பி வச்சுடு “

“ சரி “

இதுபோல மல்லிகா நிறைய சரிகள் சொல்லிக் கொண்டிருந்தபோது “ எட்டு ஊருக்குக் கேக்கறா மாதிரின்னா மணி குலைக்கறது. நாந்தான் வருஷா வருஷம் உங்காத்து ரெண்டு தெவசத்துக்கும் வரேனே அதுக்கு இன்னும் மூளையில் ரெஜிஸ்டர் ஆகலியா? “ என்று கேட்டுக் கொண்டே சமையல் மாமி உள்ளே நுழைந்தாள்.

“ இங்க இருக்கற பழங்கானத்தத்துக்குப் படுபாவி இருபது ரூபா ஆட்டோ வாங்கிட்டான் மாமி “ என்றாள் நாகாமன்னியைப் பார்த்து.

“ எந்த பிராமணா வீட்டில் எந்திருந்தவுடனே காபி சாப்பிடாம இருக்கா ? பங்குனி மாசம் மதுரைன்னா கேட்கணுமா ? ஆட்டோவில் வந்தாலும் படபடன்னு வரது “ என்றதும் நாகாமன்னி உணவுமேசையின் மேல் தனியாக ஒரு சிலிண்டர் அடுப்பு எடுத்து வைத்திருந்ததிலிருந்து சமையல் மாமிக்கு ஒரு டம்ளர் தளும்பத் தளும்ப காபி போட்டுக் கொடுத்தாள்.

“ காபிக்கு தோஷமில்லைன்னு ஆத்து வாத்தியாரே சொல்லுவார். இந்தா மல்லிகா காபி “ என்று நாகா அரை டம்ளர் காபியை நீட்டினாள். மல்லிகாவிற்கு மன்னியிடம் கேட்டு ஒரு டம்பளர் ஹார்லிக்ஸ் குடித்தால் பரவாயில்லை என்று தோன்றியது. மன்னியிடம் எனக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுங்கோன்னு எப்படி கேட்க முடியும்? நடுவில் மீண்டும் பசி வந்துவிட்டால் என்ன செய்வது என்று அச்சமானது.

“ வேண்டாம் மன்னி . தெவசம் முடியட்டும் “ என்றாள். மன்னி உடன் ஹார்லிக்ஸ் வேணுமான்னா கலந்து தரட்டுமா என்ற கேள்வியைக் கேட்பாள் என்று எதிர்பார்த்தாள். மன்னி கேட்கவில்லை.

கறிகாய்களை நறுக்கி உரிய பாத்திரங்களில் சீராக அடுக்கி வைக்க மல்லிகாவிற்கு அரைமணி நேரமாயிற்று. தேங்காய் மட்டும் குளித்தபின்தான் துருவ வேண்டும்.

“ மல்லிகா சித்த ஹாலுக்கு வாயேன் “ நாகாமன்னியின் குரல் ஹாலிலிருந்து கேட்டது.

“ இன்னிக்குக் காளியம்மாவை உள்ளே வர வேண்டாம்னுட்டேன். இந்த சோபா ரெண்டையும் ரேழி வழியா வெளில எடுத்துண்டு போய் மாடிப்படிக்குக் கீழ வைக்கணும். ஈசிச்சேரை ஸ்ரீராம் ரூமில் வைக்கணும். டீபாயை நகர்த்தி சாமி ரூம் பக்கம் வச்சிடு. முக்கியமா ஹால் சாமானெல்லாம் ஒழிஞ்சவுடனே ஒரு சின்ன முடிகூட இல்லாம பெருக்கித் துடைக்கணும். போனவாட்டி ஹோமம் பண்ணின்டிருக்கறச்சே ஒரு கொத்து தலைமுடி சாஸ்திரிகள் கண்ணில் பட்டுடுத்து. மடி ஆச்சரத்தோட சுத்தமும் வேணும்னு வியாக்கியானம் பண்ணத் தொடங்கிட்டார். இதையெல்லாம் நீ ஒண்டியா செய்யணும்னு இல்லை. அவரும் ஒரு கை பிடிப்பார்.” என்றாள் நாகா மன்னி.

“ ஸ்ரீராமை எழுப்பி இதையெல்லாம் எடுத்துப் போட சொல்லக் கூடாதா? இவளை எதுக்குக் கஷ்டபடுத்துவானேன் ?“ என்றான் சுந்தரம்.

“ நேத்திக்குப் படிச்சுப் படிச்சு சொன்னேன். இன்னிக்கு சிரார்தம் டி.வி பார்க்கவேண்டாம்னு. என்னவோ முக்கியமான மாட்சாம். ரவி சாஸ்த்ரி செஞ்சுரி அடிக்கறதைப் பார்த்துட்டுதான் படுத்துப்பேன்னான். அவனை எழுப்ப முடியுமா இப்போ? மல்லிகா வேண்டாம்னா நான் ஒரு கை பிடிக்கறேன் . வாங்கோ “ என்று நாகாமன்னி தனது பாரி உடம்பை குலுக்கிக் கொண்டு எழுந்தாள்.

மல்லிகாவிற்கு மன்னியின் சுழலும் நாக்கைப் பார்த்து மாய்ந்து போனது. எழுந்து சோபாவை நகர்த்தினாள். உடனே சுந்தரம் உதவிக்கரம் நீட்டினான். எல்லா சோபாக்களும் அந்தக்கால பர்மா தேக்கில் செய்யப்பட்டதால் இருவராகத் தூக்கினாலும் மல்லிகாவிற்கு வலித்தது. சோபாக்களும் மற்ற பொருட்களும் அகற்றப்பட்டதும் ஹால் மேலும் பெரிதாகத் தெரிந்தது. இன்னும் இரண்டடி இருந்தால் மல்லிகாவின் முழுவீடும் இந்த ஒரு ஹாலுக்குள் அடங்கிவிடும். ஹாலில் சோபா இருந்த இடங்களில் எல்லாம் குப்பையும் முடிச்சுருளும் மிகுந்து கார்ப்பரேஷன் பஸ்ஸ்டாண்ட் போலக் காணப்பட்டது. மல்லிகா ஒன்றுமே சொல்லாமல் வாஷ் பேசின் கீழே இருந்த தடுக்கிலிருந்து விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு வந்து கூட்டத் தொடங்கினாள். இரண்டு சாக்ஸ், ஒரு கர்சீப் இரண்டு பிரேசியர் ஒரு ஜட்டி இவ்வளவும் சோபாக்களின் மறைவுகளுக்குப் பின் கிடைத்தன.

“ வீட்டு மனுஷாளுக்கு இருக்கும் அக்கறை சம்பளம் வாங்கிக்கிற வேலைக்காரிகளுக்கு இல்லை. நீ பெருக்கினா எப்படி இருக்கு பாரு தரை. காளியம்மாவும் பெருக்கறாளே. அப்படியே அந்த டி.வி மேஜையை நகத்திட்டுப் பெருக்கு மல்லிகா . அதுக்கு அடியில்தான் இதைவிடக் குப்பை இருக்கும். நகர்த்த முடியுமோன்னோ அந்த மேஜையை, இல்லாட்டி நான் ஒரு கை கொடுக்கட்டுமா? “

மல்லிகா ஹாலைச் சுத்தம் செய்து முடித்தபோது பசிக்கத் தொடங்கியது. பரவாயில்லை என்று ஒருவாய் காபி குடித்தால் தேவலை என்று வந்தது. பெரும்பாலும் குழந்தைகளுக்கும் கண்ணனுக்கும் டிபன் பாக்ஸ் கட்டி முடித்தவுடன் ஒரு இடைவெளி இருக்கும். அதன்பிறகு வீடு கூட்டி, பாத்திரம் கழுவி, துணி துவைத்து என்று வேலைகள் வரிசையில் நின்றாலும் ஒரு டம்ளர் காபி குடிக்கவேண்டும் மல்லிகாவிற்கு. காஞ்சிபுரம் மடத்திலிருந்து பெரியவா காபியை விடுன்னு சொல்றார். ஆனால் கண்டிப்பாக மல்லிகாவால் முடியாது.

“ எங்க மாமியாருக்கு மடி ஆச்சாரம் ஜாஸ்தி மல்லிகா . சட்டுன்னு பிராமணா ஏதாவது சொல்லிட்டா அவர் வருஷம் பூரா என்னைச் சொல்லிக் காட்டிண்டே இருப்பார். ப்ளீஸ் குளிச்சிட்டு வந்துடு” என்று நாகாமன்னி அடுத்தக் கட்டளைக்குத் தாவினாள்.

மல்லிகா அவர்கள் வீட்டில் எப்போதும் குளிக்கும் குளியறைக்குள் போக எத்தனித்தபோது நாகா மன்னி , “ உள்ளே சமையல் மாமி குளிச்சிண்டிருக்கா . நீ மாடி பாத்ரூமில் ஆனந்தி பெட்ரூம் பக்கத்தில் போய்க் குளிச்சிக்கோ “என்றாள்.

மல்லிகா கையிலிருந்த மஞ்சள் பையுடன் மாடி அறைக்குச் சென்றாள். மின்விளக்கைப் போட்டதும் ஓர் அனிச்சைச் செயலாக நாகா மன்னியின் பெண் ஆனந்தி எரிச்சலுடன் போர்வையை விலக்கி , “ புல்ஷிட் ! ஹூ இஸ் திஸ் ? “ என்றாள். குளியலறை போகும் வழியை ஒரு நொடியில் அனுமானித்துக் கொண்ட மல்லிகா படக்கென்று விளக்கை அணைத்தாள். “ மல்லிகா சித்திம்மா ஆனந்தி “ என்றதற்கு அந்தப் பெண் மேலும் கடுப்பாகி “போர் “ என்று இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத் தொடங்கியது.

குளியலறை மல்லிகா வீட்டில் ஓர் அறை அளவிற்கு இருந்தது. ஒரு பாத் டப். ஒரு ஷவர் குழாய். ஓர் ஓரத்தில் டாய்லெட் க்ளாசெட் இருந்தது. சுவரோடு ஒரு குழாயும் அதன் இருமருங்கிலும் இரண்டு திருகும் அமைப்புகளும் இருந்ததன. மஞ்சள் பையை வைப்பதற்கு இடம் தேடினாள். பளிங்குக் கல்லினால் இழைக்கபட்டிருந்த இரண்டு ஸ்டாண்டுகளிலும் விதம் விதமாக சோப்பு, ஷாம்பு வகையறாக்கள் இருந்தன. இரண்டு இரும்புக் கம்பிகளில் விதம் விதமாக உள்ளாடைகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. இதில் மடி எது ஆச்சாரம் எது ? யாருக்காக இந்த ஏமாற்று வேலை என்று மல்லிகா சிரித்துக் கொண்டாள். அவள் ஓர் ஓரமாக மஞ்சள் பையை வைத்தாள். நனைந்துவிடாமல் இருக்க வேண்டும் என்ற பதைப்பு ஏற்பட்டது. திருகுகளில் ஒன்றைத் திருகினாள்.

சோ என்று மேலே இருந்த ஷவரிலிருந்து நீர் கொட்டியது. விபத்திற்கு முன்னால் பதட்டத்தில் ப்ரேக் கட்டைக்குப் பதில் ஏக்சிலரேஷன் கட்டையை அழுத்திவிடுவதைப் போல மல்லிகா பதறிப்போய்த் திருகினை மேலும் திறக்க மேலும் சோ. அவளுக்கே அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. எப்படியும் இரண்டு மணிக்குக் குறையாமல் நாகாமன்னி விடப்போவதில்லை. மல்லிகா இருக்கட்டும் என்று ஷவரை பெரிது படுத்திக் குளிக்கத் தொடங்கினாள். குளித்துக் கொண்டிருக்கும்போது ஜெய்ஹிந்துபுரத்தில் இன்று அவர்கள் ஏரியாவிற்குத் தண்ணீர் லாரி வரும் என்ற காலக்கெடு நினைவில் எழுந்தது. காபி டம்ளரை அலம்பிவைக்க முகத்தைத் தூக்கும் பெண்ணிடம் தண்ணீர் லாரியில் நீர் சேமித்து வைப்பதை எதிர்பார்க்க முடியாது. இன்னும் இரண்டு நாளைக்கு நல்ல தண்ணீர் கிடையாது. கார்ப்பரேஷன் அடி பம்பிலிருந்துதான் நீர் கொண்டுவரவேண்டும். அதை நினைத்தால் மல்லிகாவிற்கு இப்போதே தோள்பட்டை வலியெடுக்கத் தொடங்கியது. அவசர அவசரமாகக் குளித்து விட்டு மடிப்புடவையைக் கட்டிக்கொண்டு வந்தாள். மல்லிகா ஒருவாய் தண்ணீரை வாயில் விட்டுப் பார்த்தாள். தண்ணீர் கரிக்கவில்லை.

உள்ளே புடவையை மாற்றிக் கொண்டு வந்ததும் சமையல் மாமி “ மல்லிகா இந்தத் தேங்காய் ரெண்டையும் துருவிக் கொடு “ என்றாள். நாகாமன்னி தேங்காய்த் திருவலகையையும் ஒரு தாம்பாளத்தையும் நான்கு தேங்காய் மூடிகளையும் கொண்டுவந்து வைத்தாள். நல்ல பெரிய தேங்காய் . பருப்பும் கெட்டியாக இருந்தது. மல்லிகா இப்படித் தேங்காய் வாங்கிச் சமைக்க மாட்டாள். சேர்மன் கடையிலிருந்து தேங்காய்ப் பத்தைதான் வாங்கிச் சமைப்பாள். “ நீ பண்ற சட்னி திரிதிரியா நன்னாவே இல்லை” என்று இரண்டாவது மகன் எப்போதும் குறை சொல்வான்.

“நன்னா அடியொட்டத் துருவிடு மல்லிகா . கூட்டு மோர்க்குழம்பு , கரி, பிட்ளை எல்லாத்துக்கும் வேணும். இன்னும் ஒரு தேங்காய் தரேன். அதையும் துருவிடு. மாமி கொஞ்சம் நெய் சீனி கலந்து பாகுவச்சுத் தேங்கா பார்ஃபி கிளறடிங்கோ . ஸ்ரீராமுக்கு பர்ஃபின்னா அவ்வளவு இஷ்டம்.” என்றாள்.

“ மாமி தெவசச் சமையலுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய்னு பேசியிருக்கு. பர்ஃபி கிளறணும்னா தனியா நூறு ரூபாய் ஆகும் “ என்றாள் சமையல் மாமி. நாகாமன்னி சமையல் மாமிக்குத் தெரியாமல் மல்லிகாவை ஒரு பார்வை பார்த்தாள். மல்லிகாவும் அப்படி ஒரு பார்வை வரும் என்று நாகா மன்னியைப் பார்த்தாள்.

“ தேங்காய் பர்ஃபி பண்றதுக்குப் பெருசா என்ன மெனக்கெடணும் மாமி? தேங்காயோ மல்லிகா துருவித் தரப்போறா. சர்க்கரைப்பாகு வைக்க எவ்வளவு நாழியாகப்போறது ? “நாகா மன்னி விடவில்லை.

“ பார்க்கலாம் மாமி. பாகு லூசா இருக்குன்னோ, இறுகிப்போய் மிட்டாய் மாதிரி இருக்குன்னோ ஆயிரம் சொல்வேள். பார்க்கலாம். “ சமையல் மாமி சமைப்பதை நிறுத்திவிட்டு ஒரு பெரிய டம்ளர் நிறைய ஹார்லிக்ஸ் போட்டு நிதானமாகக் குடிக்க ஆரம்பித்தாள்.

சுந்தரத்தின் தலை சமையல்கட்டில் எட்டிப்பார்த்து “ பிராமணா வந்துட்டா “ என்றது.

“ உள்ள வரச் சொல்லுங்கோ அதுக்கும் நான்தான் வரணுமா? மல்லிகா வாசலில் ஒரு பிளாஸ்டிக் வாளியில் கால் அலம்ப ஜாலம் பிடிச்சு வைக்கச் சொன்னேனே செஞ்சுட்டியா? “ என்றாள்.

தேவ பாவத்திற்கும், பித்ரு பாவத்திற்கும் வந்த பிராமணர்களுக்கு மல்லிகா இரண்டு தம்ளர்களில் ஹார்லிக்ஸ் கொண்டு போய்க் கொடுத்தாள் நாகா மன்னியின் மற்றொரு உத்தரவிற்குப் பணிந்து முதல்நாள் வாங்கி வைத்திருந்த புது வேட்டிகள் .இரண்டை பெரிய வாளியில் நனைத்து முறுக்கிப் பிழிந்து மொட்டை மாடியில் உள்ள கம்பிக் கொடியில் உலர்த்தினாள். அதன்பிறகு சிறிதுநேர இடைவெளி கூட இல்லாமல் அந்த பிராமணர்கள் குளித்து வந்தபின் அவர்கள் கேட்ட மனைப்பலகை, பிளாஸ்டிக் தடுக்கு, மணல், சிராய், பசுஞ்சாணியில் தட்டிய எருவாட்டி, என அதனதன் இடத்திலிருந்து எடுத்துக் கொடுத்தவண்ணம் இருந்தாள். வாழையிலை பழம் வெற்றிலை போன்றவற்றை நாகா மன்னி எடுத்துக் கொடுப்பாள். மல்லிகா கொண்டுபோய்க் கொடுப்பாள். “ தத்ததிற்கு அரிசி பாசிப்பருப்பு வெல்லம் கேப்பா . நான் எடுத்து வச்சிருக்கேன் . அதைக் கொடு போதும். “ என்றாள். எடுத்துவைத்த அளவையில் நாகா மன்னியின் காருண்யமும், தாராளமும் தெரிந்தது.

இதற்கு நடுவில் உணவு மேஜையில் வைத்திருந்த தனி காஸ் அடுப்பில் ஒரு இருப்புக் கல்லை போட்டு நாகா மன்னி எடுத்துக் கொடுத்த ரொட்டித் துண்டுகளை நெய் விட்டு வாட்டி ஒரு சிற்றுண்டி பாத்திரத்தில் போட்டு மூடி, மாடியில் ஆனந்தியின் அறையில் கொண்டு வைத்ததும் ஆனந்தி “ ஜாம் பாட்டிலை யார் கொண்டு வருவா? “ என்றாள். மல்லிகா தனது மறதிக்குத் தன்னை நொந்து கொண்டு மீண்டும் ஒருமுறை கீழே போய் ஜாம் பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்தாள். “ குழந்தைகள் பசி பொறுக்காதுன்னு என் மாமியாருக்குத் தெரியும் “ என்றாள் நாகா மன்னி இந்த முறையும். அப்போது ஒருமுறை மல்லிகாவிற்குப் பசி ஆவேசமாகத் தலை தூக்கியது.

சாஸ்திரிகள் வருவதற்குள் சுந்தரம் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு தயாரானான். நாகா மன்னி “இந்த ஒம்போது கெஜம் மட்டும் சரியாக் கட்டிக்க வரமாட்டேங்கறது . மல்லிகா நீ சின்னப் பொண்ணா இருந்தாலும் நன்னா பாந்தமா கட்டிக்கற “ என்றாள். தான் அழைக்கப்படாத விசேஷங்களின்போது நாகா மன்னி எப்படி மடிசார் புடவை கட்டிக் கொள்வாள் என்று மல்லிகா ஆச்சரியப்பட்டுக் கொண்டே நாகா மன்னியின் உடலைச் சுற்றி மடிசார் கட்டி விட்டாள். மடிசார் கட்டிக் கொள்ளத் தெரியவில்லை என்பது ஒரு அந்தஸ்தின் அடையாளம் என்று மல்லிகாவிற்குத் தெரியவில்லை.

“ சாட்சாத் மகாலட்சுமி மாதிரி இருக்கு “ என்று இந்தமுறையும் சாஸ்த்ரிகள் மறக்காமல் சொன்னார். மகாலட்சுமி இவ்வளவு குண்டாகவா இருப்பாள் என்று மல்லிகாவிற்குத் தோன்றியது.

பிராமணர்களுக்குக் கால் அலம்பி விட்டு இலையில் அன்னம் பரிமாறும் மதியம் ஒரு மணிக்குள்ளாக மல்லிகாவிற்கு இரண்டு முறை அளவுக்கதிகமாகப் பசித்தது. கந்தர்வன் கவர்ந்து சென்ற காயசண்டிகைக்கும் இப்படித்தான் பசித்ததாக மணிமேகலையில் படித்திருக்கிறாள். இடைப்பட்ட நேரத்தில் சாஸ்திரிகள் ஒரு லோட்டா நிறைய ஹார்லிக்ஸ், நறுக்கி வைத்த ஆப்பிள் துண்டங்கள் இவற்றைச் சாப்பிட்டார். ஆசீர்வாதம் பண்ணும் நேரத்திற்கு மட்டும் ஆனந்தியும், ஸ்ரீராமும் வெளியில் வந்தனர். “ பாடிண்டிருக்கியோ ஆனந்தி?“ என்று சாஸ்திரிகள் கேட்டதும் எங்கே ஆனந்தி பாடிவிடுவாளோ என்ற பயம் மல்லிகாவிற்கு வந்தது.

சாஸ்திரிகள் கிளம்பிப்போனதும் சமையல் மாமி பர்ஃபி பண்ணியதற்கு என்று தனியாக இருநூறுரூபாய் வாங்கிக் கொண்டு ஒரு பிளாஸ்டிக் பையில் பர்ஃபிகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். “ இப்படித்தான் மெட்ராஸில் அவருக்கு ஜாலியா இருக்கறச்சே ஒரு மாமி வந்தா . போறப்போ நன்னா புடவை தலைப்பை மடியில் இழுத்துச் சொருகிண்டு போனா. போனதுக்கப்பறம்தான் வீட்டில் கடலைப் பருப்பு துவரம்பருப்பு சீனி எல்லாம் புதுசா வாங்கணும்னு தெரிஞ்சுது “ என்றாள் .

“ ஸ்ரீராம் ஆனந்தி எல்லோரும் வாங்கோ . நீங்களும் உட்காருங்கோ . நானும் மல்லிகாவும் பரிமாறறோம்“ என்றாள் நாகா மன்னி.

மல்லிகா “ வேண்டாம் மன்னி நீங்க உட்காருங்கோ நான் பரிமாறறேன்” என்றாள்.

“ சொன்னா நீ கேக்கவே மாட்ட “ என்று நாகா மன்னி உணவு மேஜையில் நான்கு வாழையிலைகளை விரித்தாள். மல்லிகா அவர்களுக்குப் பரிமாறினாள்.

அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் இலைகளை ஒரு வாளியில் போட்டு பாத்ரூம் அருகே கொண்டு வைத்தாள்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் முகத்தைக் கடுகடு என்று மாற்றிக் கொண்டு நாகா மன்னி கீழ்க்குரலில் சுந்தரத்திடம் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க நேரிட்டது.” சும்மா இருங்கோ. உங்க யாருக்கும் கை வணங்காது. ஒவ்வொரு தெவசம் முடிஞ்சதுக்கப்புறம் அவள்தானே எலுமிச்சை மரத்து மூட்டில் குழி தோண்டி பிண்டங்களையும் பிராமணா சாப்பிட்ட இலையையும் போட்டு மூடுவது வழக்கம்? இன்னிக்கு என்னவோ சாஸ்திரிகள் வர நாழியாயிடுச்சு. அவளுக்கு இதெல்லாம் பழக்கம்தான். நான் சொல்ற விதத்தில் சொல்லிக்கிறேன். ஸ்கூல் பீஸ் கட்டணும், வீட்டுச் செலவுக்கில்லைன்னு உங்க தம்பி வந்து நிற்கறச்சே தாராளமா கொடுக்கறப்போ நான் கையைப் பிடிக்க மாட்டேன் “.

ஒருமுறை பெரியவனுக்குப் பள்ளிகூடத்தில் ஏதோ ஒரு ஸ்பெஷல் பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டும் என்றதும் கண்ணனுடன் மல்லிகாவும் இதே வாசலில்தான் வந்து நின்றாள். “அவனுக்கு எதுக்குடா சயன்ஸ் டாலண்ட் எக்ஸாம் எல்லாம்? பத்தாவது முடிஞ்சா ஒரு பாலிடெக்னிகில் சேர்த்துவிட்டு நாலு காசு சம்பாதிக்க அனுப்பறதை விட்டுட்டு “ என்று இதே வாய்தான் மாற்றிப் பேசியது.

எதற்கு என்ற கேள்வி மல்லிகாவிற்குத் தோன்றியது. எதற்கு? எதற்கு இப்படி உள்ளொன்று வைத்து புறமொன்று வைத்துப் பேசுபவர்களின் சவகாசத்தை ஒழிக்க முடியாமல் இறைவன் செய்கிறான்? பலவிதமான விடைகள் வந்துபோனாலும் அவள் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தடுமாறினாள். நாகா மன்னி சொல்லும் முன்பாகவே கரைப்பதற்கு வைத்திருந்த பிண்டம், பிராமணர்கள் சாப்பிட்ட இலை எலாவற்றையும் எடுத்துக் கொண்டு எலுமிச்சை மரத்தின் நிழலுக்குச் சென்றாள்.

“ மல்லிகா சாப்பிட்டுட்டுச் செய்யட்டுமே “ என்றான் சுந்தரம்.

“ சாப்பிட்டாச்சுன்னா சித்தநாழி கண் அசரலாம்னுதான் வரும். அது வரைக்கும் இருந்த வேகம் இருக்காது. பாவம் அவதான் ஒரேடியா கை வேலையை முடிச்சிட்டு சாப்பிடறேன்னு கிளம்பறவளை எதுக்கு சிரமப்படுத்தறீங்க ? “ என்று நாகா மன்னியின் வார்த்தையில் சர்க்கரைப் பாகு கலந்தது.

எலுமிச்சைச் செடி மூட்டில் ஓங்கி ஓங்கி இரும்புக் கரண்டியால் கிளறி பள்ளம் பறித்து இலைகளையும் பிண்டங்களையும் போட்டு மூடும்போது மீண்டும் ஒரு முறை மல்லிகாவிற்கு அகோரப் பசி ஏற்பட்டது. மல்லிகா எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு உள்ளே வந்ததும் நாகா மன்னி இலை போட்டாள் .

மணியைப் பார்த்தாள். மணி மதியம் மூன்றைத் தாண்டியிருந்தது.

“ மணி இப்பவே மூணு ஆறது மன்னி. எனக்கு எல்லாத்தையும் ஒரு கேரியரில் போட்டுக் கொடுத்துடுங்கோ மீனா ஸ்கூலிலிருந்து வந்துட்டு நான் இல்லைன்னா வீட்டை உண்டு இல்லைன்னு பண்ணிடுவா “

இரண்டு கேரியர் நிறைய நாகலக்ஷ்மி உணவுப் பதார்த்தங்களை நிறைத்தபடி மல்லிகாவைப் பார்த்துக் கேட்டாள். “ கண்ணன் வேலைக்குப் போயிண்டிருக்கானோ ? “

மல்லிகா நாகலக்ஷ்மியின் கண்களைச் சந்திக்காமல் “ இல்லை. அந்த மெடிகல் கம்பனி வேலையை விட்டுட்டார். இப்போ ஏதோ ஆடிட்டர் கிட்ட போறேன்னு பேர் பண்ணிண்டிருக்கார். எத்தனை நாளோ ? “ என்றாள்.

“ மறக்காம ரெண்டு கேரியரையும் இந்த வாரதுக்குள்ள கொடுத்து விட்டுடு மல்லிகா . அவருக்கு அடுத்த வாரத்திலிருந்து ஆபீஸ் போயாகணும்.” என்றாள் நாகா மன்னி.

கிளம்பும் போது வெற்றிலைப்பாக்குத் தட்டில் தாம்பூலத்துடன் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை நாகலக்ஷ்மி வைத்து நீட்டினாள்.

மல்லிகா ரூபாய் நோட்டுக்களை எடுத்து வைத்துவிட்டுத் தாம்பூலத்தை மட்டும் எடுத்துக் கொண்டாள்.

“ மஞ்சள் குங்குமம்பூ போதும் மன்னி. நான் வேறொரு வீட்டிலா உதவி செஞ்சு கொடுக்கன்னு வந்திருக்கேன் ? “ என்று உறுதியாக மறுத்துவிட்டுக் கிளம்பினாள். செய்தது தவறோ என்றது வயிறு. செய்தது சரி என்றது நெஞ்சு.

பள்ளிவிடும் நேரம் என்பதால் எல்லா பஸ்களும் நிரம்பிவழிந்தபடி வந்தன. இரண்டு கேரியர்களையும் சுமந்துகொண்டு ஆண்டாள்புரம் வரையில் அவள் பஸ்ஸில் நின்று கொண்டே பயணித்தாள். அங்கிருந்து ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு வழியாக நடந்து வீடு போய்ச் சேர மேலும் கால்மணி நேரமானது. பிள்ளைகள் உணவைப் பார்த்ததும் அதிகம் தொந்தரவு கொடுக்காமல் சாப்பிட்டன. கண்ணன் பலகாரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு இரவில் சாப்பிடுவதாகச் சொன்னான்.

மல்லிகா இனியும் பொறுக்க முடியாதவளாக ஒரு தட்டை எடுத்துச் சோற்றைக் கொட்டிக் கொண்டாள். பிட்லை பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டுக் கொண்டாள். கண்ணன் அவள் அருகில் வந்து அமர்ந்து “ நீ இப்பதான் சாப்பிடறியா? “ என்றான்.

“ ஆமாம் “ என்றாள் மல்லிகா.

“ மன்னிகிட்ட சொல்லலியா ? “

“இல்லை “

“ மன்னி கேட்கலியா ? “

“இல்லை. சொன்னா மட்டும் என்ன சொல்லிடப் போறா ? கிச்சாவை வயதில் பிள்ளையாண்டிருந்தப்பவே உனக்கெல்லாம் எதுக்கு மல்லிகா மூணு? எனக்குத் தெரிஞ்ச டாக்டர்கிற அழைச்சிண்டு போறேன். கலைச்சிடு அப்படின்னா “

மல்லிகா அவன் பதிலுக்குக் காத்திராமல் அள்ளி அள்ளி இரண்டு வாய் சோற்றை விழுங்கினாள். புரைடேரும்படி உண்டதால் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

ஒரு கையால் வயிற்றைத் தடவியபடி “ சாரிடா கண்ணா காக்க வச்சு உனக்கும் பசின்னா என்னன்னு காட்டிட்டேன். எனக்குப் பிறக்க ஆசைபட்டா இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமா? கோச்சுக்காதே “ என்று மூன்று மாத சிசுவை சமாதானம் செய்தாள் அந்தப் பிள்ளைத்தாச்சி.

—————————————————-