Category: இலக்கியம்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

download (14)

பெயர்ப்பலகைகளுக்கு அப்பால்….

பின்கட்டிலிருந்த மராமரத்தில் வழக்கம்போல்

துள்ளிவிளையாட வந்த குட்டி அணிலைத்

தடுத்துநிறுத்தினாள்

கத்துக்குட்டிப் பெண்ணொருத்தி.

வீட்டின் உரிமையாளர்கள் மாறிவிட்டார்களாம்.

?இனி நான் சொல்லும் நேரத்தில்தான்

மராமரம் பக்கம் வரவேண்டும் தெரியுமா?

என்னிடம் அனுமதி பெற்றே இதில் ஏறவேண்டும்.

வருபோதெல்லாம் எனக்கு ‘சலாம்’ போடவேண்டும்.

உன் புட்டத்தை ஆட்டியாட்டி நடனமாடி

என்னை மகிழ்விக்கவேண்டும்.

இதிலுள்ள பழத்தை என்னைக் கேட்காமல் பறிக்கக் கூடாது;

இன்னொரு மரத்தின் பழத்தைக் கவ்வி வந்து

இதில் அமர்ந்து கொறிக்கக்கூடாது.

தெரியுமா? தெரியுமா? தெரியுமா….? வென

அடுக்கிக்கொண்டே போனவளை

துடுக்காகப் பார்த்தச் சொன்னது குட்டி அணில்.

வீட்டுரிமையாளர் காட்டுரிமையாளரல்ல;

காட்டிற்கும் மரத்திற்கும்

பெயர்ப்பலகைகளுக்கு அப்பாலான வாரிசுமையாளர்கள்

நாங்கள்.

வாலுள்ள என்னிடமே வாலாட்டுகிறாயே –

எதற்கிந்த வீண்வேலை?

என் முதுகிலுள்ள மூன்றுகோடுகளுக்கும்

மராமரங்களுக்கும் உள்ள பந்தத்தைப்

புரிந்துகொள்ள முயன்றுபார்.

முடியவில்லையென்றால்

முசுக்கொட்டைப் பழம் பறித்துவருகிறேன்

தின்றுபார்.

download (43)


மராமரமும் மராமத்துவேலையும்

இரு மரமென நின்றிருந்த உடல்களுக்கிடையில்

பெருகிக்கொண்டிருந்தது

சிற்றோடையோ

சாகரமோ

சுட்டெரிக்கும் எரிமலைக்குழம்போ…

கண்விரியப் பார்த்துக்கொண்டிருந்த கேனச்சிறுக்கியொருத்தியின்

காணெல்லைக்கு அப்பாலான

மாயவெளியொன்றில்

அவ்விரு தருக்களும் என்னென்னவோ பறவைகளின்

சரணாலயமாய்,

கிளைகளும், இலைகளும் காய்கனிகளுமாய்

உயிர்த்திருந்தன வண்ணமயமாய்.

சட்டென்று அற்புதங்கள் நிகழ்த்திவிட முடியும்

மாயக்கோல்கள் சில

அவற்றின் வேர்களில் இடம்பெற்றிருப்பதை

பிறரால் காணவியலாது.

போலவே அவளாலும்.

வண்டுதுளைத்த கர்ணன் மடிவலியை

வாழ்ந்துதான் அனுபவிக்கமுடியும்.

புகைப்படக்கருவிக்குள் சிறைப்பிடிக்கவியலாக்

காலத்துணுக்குகளை

தன் சிறுபிள்ளைத்தனமான செயல்களால்

கோர்க்க முடியுமென்று நம்பியவள்

தன் அகன்ற விழிகளால் அத இரண்டு மரங்களையும்

திரும்பத் திரும்பப் படமெடுத்துக்கொண்டிருக்கிறாள்

பலகோணங்களில்.

வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்த புள்ளினங்களால்

வந்திறங்க முடியவில்லை.

விதவிதமாய்க் கீச்சிட்டன.

அண்ணாந்துபார்த்தவள்

துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுவதுபோல் அவற்றையும்

படம்பிடிக்கத்தொடங்க

அலறியடித்து அப்பால் சென்றுவிட்டன பறவைகள்.

’இவள் காலைக் கட்டெறும்பு கடிக்காதா’ என்று

ஆற்றமாட்டாமல் முனகிக்கொண்டிருந்திருக்கக்கூடும்

அடிவேர்கள்.

இளந்தென்றல் வீசினாலே போதும் _

இருமரங்களின் கிளைகளும், இலைகளும் உரசிச் சிலிர்க்க

வழிபிறக்கும்……

கேனச்சிறுக்கியோ தன்னை யொரு காங்க்ரீட் தடுப்பாக

நடுவில் நிறுத்துக்கொண்டு

இருமரங்களின் நீளமான கிளைகளை

எக்கியெக்கித் தேடி

அவற்றைப் பிணைத்து முடிச்சிடப் பிரயத்தனப்படுகிறாள்

முழுமனதுடனோ முக்காலுக்கும் கீழான மனதுடனோ…

அவள் இழுக்க

சில இலைகள் கிழிபடுகின்றன

சில கிளைகள் முறிந்துவிடுகின்றன.

வார்தாப் புயலால் விழுந்தாலும்

ராட்ஷஸ ரம்பத்தால் வெட்டுப்பட்டுச் சரிந்தாலும்

சாவு நிச்சயம்தானே….

இரண்டு மரங்களையும் வெட்டி

ஒன்றின் மீது ஒன்றைக் கிடத்தி

இணைத்துவிட முடியுமே என்ற விபரீத எண்ணத்தில்

கோடரியைக் கொண்டுவந்துவிடுவாளோவென

விசனப்பட்டுப்பட்டு

என்றைக்குமாய் பட்டுப்போய்க்கொண்டிருக்கிறது

இரண்டிலொன்று.

வழிப்போக்கனின் குறிப்புகளிலிருந்து / நிஷா மன்சூர்

கவிஞர்  நிஷா மன்சூர்

கவிஞர் நிஷா மன்சூர்

****
ஒருமுறை திருவண்ணாமலைக்கும் அரூருக்கும் இடைப்பட்ட தண்டராம்பட்டு எனும் சிற்றூரை மாலைத்தொழுகை நேரம் கடக்க நேரிட்டது.பள்ளியைத் தேடித் தொழுதுவிடலாம் என்று பைக்கில் வந்துகொண்டிருந்த ஒரு இளைஞனிடம் மசூதி எங்கிருக்கு தம்பி என்று கேட்க,அவன் தெரிலண்ணா என்றுவிட்டு விரைந்தான்.பின்னர் ஜோடிபோட்டுக்கொண்டு எதிர்ப்பட்ட மூவரிடம் கேட்கலாமென்றால் அவர்கள் நெருங்கும்போதே டாஸ்மாக் வாடை காற்றில் ஆக்ரோசமாகக் கலக்க,இவங்ககிட்ட கேக்க வேணாம்ப்பா என்று முன்னகர்ந்து சாலையோரம் புர்கா அணிந்து நடந்துகொண்டிருந்த ஒரு பெரியம்மாவிடம் கேட்டபோது,
” திருவண்ணாமலை ரோட்டாண்ட போனீங்கன்னா லெஃப்ட்ல ஒரு ரோடு வரும் அது உள்ற போனா ஒரு பிரிட்ஜத் தாண்டுனதும் இருக்கு” என்றார்.

கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றபிறகும் பாலமேதும் வந்தபாடில்லை.அடுத்திருந்த பெட்ரோல் பங்க்கில் விசாரித்தபோது “இந்தாண்ட ஒரு கிலோமீட்டர் போனா இருக்கு,இல்லேன்னா நீங்க வந்த ரோட்டுலயே போனா தண்டராம்பட்டுலயும் இருக்கு” என்றாள் அங்கிருந்த சிறுமி.மீண்டும் வந்தவழியே திரும்பியபோது தாடிவைத்த ஒரு குடும்பஸ்தர் பைக்கில் புர்கா அணிந்த இரு பெண்குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தார்.அவரை மறித்துக் கேட்டபோது ” என்னை ஃபாலோ பண்ணுங்கோ பாய்” என்று முன்னே சென்றார்.
அவர்வழி சென்றபோது நாங்கள் வந்த ரோட்டுக்கு இடதுபக்கம் மறைவாக ஒரு சிறுபாதை சரேலெனப் பிரிந்தது.அதைத்தான் அந்தப் பெண்மணி சொல்லியிருக்கிறார், நாங்கள் கவனிக்காமல் மெயின் ரோட்டிலேயே சென்றிருந்திருக்கிறோம்.

கொஞ்சதூரத்திலேயே ஒரு சிறு சந்தைக் காண்பித்து “கடைசீல இருக்குங்க மசூதி” என்றுவிட்டு நன்றியையும் புன்னகையையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றார். அந்தச் சந்தின் கடைசியில் பள்ளி இருந்தது.ஆனால் கேட் இழுத்துச் சாத்தப்பட்டு பூட்டப்பட்டிருந்தது.சமயங்களில் சில பள்ளிகளில் பூட்டை வெறுமனே பூட்டிவிட்டு தாழ்ப்பாளைத் திறந்து வைத்திருப்பார்கள்.பரிசோதித்துப் பார்க்கையில் அப்படியெல்லாம் இல்லாமல் தெளிவாகப் பூட்டியிருந்தார்கள்.தலை முக்காடிட்டு ஒரு இளம்பெண் ஒருகையில் குழந்தையுடனும் இன்னொரு கையில் குழந்தைக்கான சோற்றுக் கிண்ணத்துடனும் வந்துகொண்டிருக்க ” என்னம்மா மசூதி பூட்டியிருக்காங்களேம்மா” என்றேன்.
“நமாஸ் படிச்சுட்டு ஹஜ்ரத் பூட்டிட்டு போயிட்டிருப்பாரு” என்றாள் அந்தப்பெண்.
” எங்களை மாதிரி வழிப்போக்கருங்க கொஞ்சம் லேட்டா வந்தா எங்கம்மா நமாஸ் படிக்கறது,உள்ள போறதுக்கும் வேற வழி ஏதும் இருக்கா..??இல்லன்னா வேறு யார்கிட்டயாவது ஸ்பேர் சாவி இருக்கா இவ்வளோ பெரிய மதில் சுவரா இருக்கே ஏறியும் குதிக்க முடியாதேம்மா” என்றதுக்கு
” அதெல்லாம் கெடையாது, ஒரு தடவ மைக் காணாமப்போச்சு அது அப்புறம் பைக் காணாமப்போச்சு அதுனால இப்பல்லாம் நமாஸ் படிச்சதும் பூட்டிடறாங்க” என்றாாள்.
காருக்கு வந்து தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு கொஞ்சம் பின்பக்கம் லக்கேஜ்களை ஒழுங்குபடுத்திவிட்டு கிளம்பும்போது பார்த்தால் அந்தப்பெண் தன் சோற்றுக்கிண்ணத்தை காரின் பேனட்டில் வைத்துவிட்டு மடியிலிருந்த குழந்தைக்கு வேடிக்கை காண்பித்தபடி சோறூட்டிக்கொண்டிருந்தாள்.
” ஏம்மா பதினாலு லட்ச ரூபா காரு உம்புள்ளைக்கு சோறு வைக்கற ஸ்டேண்டாம்மா,இதுக்கு நீ ஆயிரம் ரூபா ஃபீஸ் கொடுக்கணும் இப்போ” என்றேன் சிரித்தபடி.
” ஆய்ரம் ரூபா போதுமா,ஐயாயிரமா வாங்கிங்கண்ணா” என்று வெட்கப் புன்னகையுடன் சோற்றுக் கிண்ணத்தை எடுத்து நகர்ந்தபோது மடியிலிருந்த குழந்தை என்னைப் பார்த்து கெக்கலிபோட்டுச் சிரித்தது .வானில் ஒளிர்ந்த முழுநிலவு வெளிச்சத்தில் குழந்தையில் ஈர உதடுகளிலிருந்து நட்சத்திரங்கள் ஒளிர்ந்து மின்னின.

நேரம்தான் எல்லோரையும் பாடாகப் படுத்துகிறது. எதற்கும் நேரமில்லாதது போல பாவனை செய்துகொள்வது நாகரீகமாகவே மாறிவிட்டது.

ஒரு சுருக்கு வழியில் தினமும் கடக்கும் ஒரு எளிய ஈமுகோழி கொட்டகைக் காவலாளியிடம் ஈமுகோழிகள் அளிக்கும் மிகைப்படுத்தப்பட்ட வருமானம் குறித்துக் கேட்கவேண்டும் ஒருநாள் என்று நினைத்திருந்தேன். அப்படிக் கேட்பதற்கு ஒரு வாய்ப்பளிக்காமல் சில நாட்களுக்குப் பிறகு அந்தக் குடிசையும் அகற்றப்பட்டு கொட்டகையையும் சிதிலமாகிக் கிடந்தது

அடுத்திருந்த சின்னஞ்சிறு கிராமமொன்றில் இடப்புறம் என்னமோ சுவாமிகள் என்று மிச்சமான பெயிண்ட்டில் எண்ணெய் டின்னில் எழுதப்பட்ட சிறு குடிலில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருப்பார்.சமயங்களில் அவரை கண்ணுக்குக் கண் சந்திக்க நேர்ந்தால் புன்னகைத்த முகத்துடன் இரு கைகளையும் உயர்த்தி ஆசிர்வதிப்பதுபோல சைகை செய்வார்.நவீன கார்ப்பரேட் சுவாமிஜிகளின் அதீத பாவனைகளின்றி இயல்பான கிராமத்துக் குறிசொல்லியின்/ சாமியாடியின் உடல்மொழியுடன் காலில் ஏதோ நோவுடன் தத்தித்தத்தி நடக்கும் நெற்றி முழுக்க திருநீறணிந்த அந்த பெண்மணியை என்றாவது ஒருநாள் வாகனத்தை நிறுத்திச் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசி கைச்செலவுக்குப் பணமோ அல்லது போர்வை சேலை எதாகிலுமோ கொடுக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. நேர நெருக்கடியில்லாத அந்த ரிலாக்ஸான நாள் வராமலே போய்விட்டது.
கடந்த சில வாரங்களாக அந்தச்சிறு குடில் பூட்டப்பட்டு குப்பைகளண்டிக் கிடக்கிறது. அந்தக் குறிசொல்லி இறந்து மாசக்கணக்குல ஆச்சே என்று யாரும் சொல்லிவிடுவார்களோ என்று பதட்டமாக இருக்கிறது.

யாரைக் கடக்கிறோம் எதனைக் கடக்கிறோம் என்கிற புரிதல் இல்லாமலேயே வாழ்வின் நுணுக்கமான நெகிழ்வான எல்லாப் பகுதிகளையும் கடந்துசென்று கொண்டிருக்கிறோம்.என்றாவது ஒருநாள் ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கும்போது வெறுமையின் நிராதரவில் அரவமற்றுக் கிடக்கும் நெடுஞ்சாலையை மட்டும்தான் பார்க்கமுடியும் என்று தோன்றுகிறது.

#வழிப்போக்கனின் குறிப்புகளிலிருந்து……

சூரர்பதி கவிதைகள்

download (31)

1.வலசை

======

பன்னெடுங்காலமாக விதிக்கப்பட்டிருப்பது இந்தப்பாதைதான்

எனக்கும் இந்த சூரியனுக்கும்

சத்தியத்தைத் தேடும் பாதையற்ற பயணமில்லை

பிழைப்பு நாடும் அன்றாடம்தான்

ஒரு நாளும் ஒரு குழந்தைக்கும் கையசைத்ததில்லை

வழித்துணையாய் ஒருவரும் ஏற்பில்லை

எதையும் பிரசவிக்காத நிலங்களின் மௌனம் திகைப்பூட்ட

காலை முதல் மாலை வரை

மலைகளை கலைத்து அடுக்குகிறேன்

எருக்கிலையில் ஓளிந்திருக்கும் சீமத்தம் வண்டுகளைத் தவிர

வழியெங்கும் இறைந்து ஓலிக்கும் சீத்தளாங் குருவிகளைத்தவிர

ஆறுதலாய் முளைத்துள்ள புற்களைத் தவிர

ஆயிரமாயிரம் பார்வைக்கரங்களை வீசீக்கொண்டேதான் செல்கிறேன்

பாழடைந்த வீடுகளின் இண்டு இடுக்கின் இருளைத் தாண்டி

பார்வைக்கரங்கள் பீதிக்குள்ளாகித் திரும்புகின்றன

பள்ளிகளின் கோரஸும்

கோயில்களின் பஜனையும்

கட்சிகளின் கோஷங்களும்

வானை முட்டி என்னை எட்டுகிறது

நீர் வற்றியும் காத்திருக்கும் கொக்காய்

என்னினிந்த பாதைதான்

எத்தனை குழிகள் மேடுகள் பள்ளங்கள் சரிவுகள்

அன்றாடங்களை அன்றாடங்களே அன்றாடமும் உற்பவிக்குமிந்த

சூரியனை துணைக்கழைத்து

ஓரேயோரு நாளாவது சுடுகாட்டில் வண்டியை நிறுத்தி

கரமைதுனம் பழக வேண்டும் – அப்போதாவது இந்த

வாழ்வு சுவாரசியமளிக்கிறதா என்று.


2. யாப்புக்குள் அடங்கா வாழ்வு

1

கண்ணில் நிறையுது வானம் – அதன்

கீழே உறைவது அடவி – அதன்

உள்ளிருந்து கேவுவது மயிலின் அகவல்

ஓரத்தே தெரிவது ஒரு குளம்

அங்கே துணிகளை வெளுப்பது வண்ணாத்தி

ஆங்கே அலை உசுப்பி கெளுத்தி – ஓரத்தே

நுணல் நிரம்பி ஓய்வெடுப்பது நீர்ப்பாம்பு

2

யாப்புக்குள் அடங்கா வாழ்வு

துள்ளத் துவள

தற்செயலாய் அணில் பிள்ளையை

பிடித்து விட்டது காகம்

கால்களுக்குள் இடுக்கி

குதறிக் குதறி

இதோ இந்த நண்பகலை

உண்டு பசியாறத் தொடங்கிவிட்டது

3

இதோ இந்தக் கவிதையின்

தாழ்வான மின்கம்பியில் கூடுகட்டி

அந்தரத்தில் ஊசலாடும் சிலந்திதான் என்ன செய்யும்

மழை பிசுபிசுத்து தூறி

இருள் கவியும்

இந்த மாலை ஒரு சாம்பல்மேடு

வயதேறிய பறக்க இயலா கினிகோழியே

மரத்தின் மேலிருந்து துயர சிம்பொனி ஒலிக்கத் தொடங்கிவிட்டது

முள்காட்டில் கைவிடப்பட்ட பூனைக்குட்டியாய்

இந்த இரவுக்கு இதுபோதும்

இதயத்தின் மீது பாறாங்கல்லை ஏற்றி வைக்க

4

என் செல்வக்குழந்தையே

இனிய பொன்வண்டே

செல்வ மூசே

பிரிய தேசமே

உன்னை அருகணைந்து விட்டேன்

பதறாதே உன்னைச் சமீபிப்பேன்

உன் பிஞ்சுப்பாதம் தொட்டுத்தூறுவேன்

அதுவரை கண்ணுறங்கு மகளே

சுழிக்கும் உன் அதரச் சுனையில் மீள

வரும் வழியில்தான் பார்த்தேன்

எனையீன்ற குட்டி நாயொன்றை

இந்தத் தார்ச்சாலை கூளமாக்கி புசிப்பதை

==

ரெட்டைவால்குருவி ( குறுநாவல் ) – ஆத்மார்த்தி

ஆத்மார்த்தி

ஆத்மார்த்தி

ரெட்டைவால்குருவி

1
இந்தக் கதையின் நாயகன் பெயர் ராஜராஜசோழன்.அவன் பிறந்த வருடம் 1970.அவருடைய தந்தையும் தாயும் அன்பில் குலாவியதன் எட்டாவது சாட்சியம் சோழனாகப் பிறப்பெடுக்க நேர்ந்தது.இதில் வேடிக்கை என்னவென்றால் நாலு அண்ணன் மூணு அக்காள்கள் என்று எப்போதும் கூச்சலும் கும்மாளமுமாக இருந்த வீட்டில் கடைக்குட்டி என்பதால் அவரொரு விளையாட்டுப் பொம்மையாகவே வளர்ந்தார்.செல்வந்தத்துக்குக் குறைவில்லை என்பது ஒரு பக்கம்.அவருக்குப் பின்னால் அந்த வீட்டில் குழந்தை ஏதும் பிறக்கவில்லை என்பதால் அவரது வருகைக்குப் பிற்பாடு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தன் நிலை என்பது ஒரு கடைக்குட்டி என்றே பார்க்கப்படுவதை அவர் உணர்ந்து கொண்ட போது ராஜராஜசோழனுக்கு வயது பதினாறு ஆகி இருந்தது.
சோழன் அந்த வருடம் தான் எஸ்.எஸ்.எல்.சி எழுதி பெருத்த தோல்வி ஒன்றை அடைந்திருந்தார்.அந்த ரிசல்ட் மே பதினாறாம் தேதி வெளியாகி இருந்தது.தன் தோல்வி துக்கத்தை இரண்டு தினங்கள் கொண்டாடி விட்டு பதினெட்டாம் தேதி தான் வெளியே வந்தார் சோழன். தமிழில் மாத்திரம் எழுபத்து ஏழு மார்க்குகள் வாங்கிய சோழன் ஆங்கிலத்தைத் தன் உயிர் மூச்சைக் கொண்டு எதிர்த்திருந்தார்.வெறும் ஏழு மார்க்குகள் தான்.அதும் அந்தப் பட்டியலிலேயே கம்மி மார்க்குகள் அந்த ஏழு தான்.கணக்கு அவருக்கு வருமா வராதா என்பதைப் பற்றிய பிணக்கு அவருக்கு இருந்தது.அதில் முப்பத்தோரு மார்க்குகள் பெற்றிருந்தார்.ஒருவேளை கூட்டல் மிஸ்டேக் ஆகியிருக்கும் என்று ஒரு தரப்பாரும் இல்லை இல்லை.இது பரீட்சைகளைத் திருத்துவதில் ஒரு மெத்தட் என்று ஒரு தரப்பாரும் பேசினர்.அவர்களது சொந்த ஊரான நல்லூர்க்கோட்டையில் அதுவரைக்கும் எத்தனையோ பேர் எசெல்ஸி எழுதிப் பாஸ்களும் ஃபெயில்களும் ஆகி இருந்தாலும் இப்படி முப்பத்தி ஒரு மார்க்கு வாங்கி ஃபெயிலான ஒரே ஒருவராக சோழனைத் தான் சுட்டினர்.அதனாலேயே சோழன் இன்னம் நாலு மார்க்குக்குப் படிக்காமல் போனது பெரும்பிழை என்று வாதிட்டனர்.இன்னொரு தரப்பு இது அதிகார வர்க்கத்தின் ஆணவம் என்றது.இதைக் கேட்டதும் சில்க் ஸ்மிதா படத்தை மறைத்துக் கொண்டு சிங்கப்பூர் சலூன் பெஞ்சியில் அமர்ந்தபடி அப்படித் தனக்கு ஆதரவான பெரும் கூற்றினைப் பகர்ந்தது யார் என்று ஆவலோடு பார்த்தார் சோழன்.
அதான் நான் சொல்லிட்டேன்ல..?அவம் பாஸ் தாம்லே..அவன் விதி அவனோட பேப்பர் போய்ச்சேர்ந்த எடம் கெரகம்குறேன்.அந்த வாத்திக்கு பொஞ்சாதிக்கும் சண்டையா இருந்திருக்கும்.அவன் சின்ன வயசில எத்தனை டேக்கு வாங்குனாம்னு யாரு கண்டது..?அதுமில்லாட்டி தங்கத்துக்கு பதிலா கவரிங்க சாட்டிருப்பான் மாமன்மச்சினன்..அங்கன எதுத்து பேச வக்கில்லாம இந்தப் பய்யன் பேப்பர்ல காட்டிட்டான் அவனொட கோபத்தை..அதாம்லே விசயம் என்றார் ஆர்ப்பாட்டமாக..
எலே இங்கன வாடா எட்டாவதா பொறந்தவனே என்று அழைத்ததும் போய் நிற்க வேண்டியதாயிற்று.அவன் கேட்காமலேயே அவன் வழக்கை எடுத்து வாதிட ஆரம்பித்திருந்தவர் வேறு யாருமில்லை.சோழனின் அப்பாவோடு பியூஸி வரை படித்த கார்மேகம்.நல்லூர்க்கோட்டைக்கு அருகாமை நகரமான உலகளந்த ராஜபுரம்என்கிற ராஜபுரம் கோர்ட்டில் பேர் போன வக்கீலான சம்சுதீன் அகமதுவின் ஆஸ்தான குமாஸ்தா என்கிற பதவியில் பல காலமாய் இருந்து வருபவர் என்பதால் நல்லூரில் அவருக்கு சம்சுதீன் அகமதுவிற்கு நிகரான சபை மரியாதைகள் கிட்டி வந்தன.
உங்களுக்குத் தெரியாதா..?எவ்ளோ பெரிய ஆளோட இருக்கீர் என்று கும்பிடுவார்கள்.சம்சுதீன் பாய்க்கு சற்றும் தெரியாமல் அந்தக் குறுநிலத்தை ஆண்டுகொண்டிருந்தார் கார்மேகம்.அதாவது நல்லூர்க்கோட்டைக்குள் நுழைந்து விட்டாரானால் தானொரு வக்கீல் என்ற எண்ணம் கூட அல்ல தானொரு ஜட்ஜ் என்ற எண்ணம் தான் அவருக்குள் மேலோங்கும்.அவர் அப்பியர் ஆகிறார் என்றால் பெரும்பாலான வழக்குகள் அவரிடமே சரண்டர் ஆகும்.நீங்க சொல்றது தான் சரி என்று திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு அவருக்குள்ளேயும் ஆமாம்ல நாஞ்சொல்றது தான் சரி என்றே தீர்மானமாயிருந்தது.வாரா வாரம் சனி ஞாயிறுகளில் மாத்திரம் தான் அவர் நல்லூருக்கு வருவார்.,கார்மேகமும் பெரிய சம்சாரி தான்.வசதி கொஞ்சம் சோழன் குடும்பத்தை விடக் குறைச்சல்.ஆகவே விவசாய வியாஜ்ஜியங்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்.எலே என்னை ஏமாத்த பாக்குறியா..?இத்தனை மாமரம் இத்தனை மாங்காய் எதும் தப்பக் கூடாது தெரியுதா என்று அதட்டிக் கொண்டே இருப்பார்.என் மேல நம்பிக்கை இல்லையா ஆண்டவரே என்று குத்தகை தாரன் சொல்லும் வரை அவனை சந்தேகப் பட்டுவிட்டு அதுக்கில்லடா ஈஸ்வரா போன வாரம் ஆழ்வார் அக்ரகாரத்துலேருந்து பங்கஜம் மாமி வந்து மாயெலை வாங்கிட்டு போனாங்களா இல்லையா..?அது கணக்குலயே வர்லியே என்று சன்னமான குரல்ல கேட்க என்னங்கய்யா சும்மா பறிச்சிட்டு போன மா எலைய எண்ணனும்னா சொல்றீக என்று திருப்ப அடப்பாவி எட்டணாவாச்சும் வாங்கிருக்க வேண்டாமாடா என்று அங்கலாய்த்தவர் இனிமே யாராச்சும் கேட்டா மா எலை எட்டணா வெலை குடுத்தாத் தான் தருவேன்னு கண்டிப்பா சொல்லிடு என்று அவனை ஒருதடவை மா இலைகளை ரெண்டு மூணுதடவை எனப் பார்த்துக் கொண்டே இதுகளை எல்லாம் எப்படிக் கணக்கு வச்சிக்கிறது என்று தன்னை நொந்தபடி திங்கட்கிழமை அதிகாலை கிளம்பி ராஜபுரம் செல்வார் கார்மேகம்
தோட்டத்தைப் பராமரிக்கிறவனுக்கு சமர்த்துப் போதாது என்பது அவரது முதல் நம்பிக்கை.மாவிலைக்கும் ஒரு விலை உண்டு என்பது இரண்டாவது.எப்படியானாலும் தனக்குப் பிதுரார்ஜிதமாக வழங்கப்பட்ட ஏழு ஏக்கர் நிலம் அதன் உள்ளே இருக்கக் கூடிய ஆழத்தின் மறுபகுதி உலகத்தின் எந்த நாட்டின் எந்த இடத்தின் ஏழு ஏக்கரைப் போய்ச் சேர்கிறதோ அதுவரைக்குமான கனிம வளம் தாதுக்கள் எரிவாயு பெட்ரோல் டீஸல் க்ரூடாயில் என எல்லாமும் தனக்குத் தான் சொந்தம் என்பது அவரது மூன்றாவது மாபெரும் நம்பிக்கை.மேலும் அந்த ஏழு ஏக்கருக்கு சமமான வானமும் அவருடையது தானே..?தனக்குச் சொந்தமான பல கோடி பெறுமிதமுள்ள அந்த நிலத்திலிருந்து கிடைப்பது எதுவானாலும் அது சொற்பசொச்சம் தான் என்பது குறித்து மாபெரும் அங்கலாய்ப்பு அவருக்குள் உண்டு.அதன் விளைவாகவே கிடைத்த வரைக்கும் லாபம் என்று அலைவார்.எதெதையோ கண்டுபிடிக்கிறாங்கியள் இந்த மா இலையிலிருந்து தைலம் சோப்பு என்று எதாவது உருவாக்கத் திராணி இருக்கிறதா.?மட சாம்பிராணிகள் என்று உரக்க வைதார்.யாரை வையுறீய என்று சேர்மக்கனி எதிர்த்துக் கேட்டாள்.கார்மேகத்துடன் வாழ வந்த இல்லற நல்லாளான சேர்மக்கனிக்கு எப்போதும் ஒரே நம்பகம் தான்.அது கார்மேகத்துக்குத் துப்புப் பற்றாது.அல்லது துப்பே கிடையாது என்பது அது.
உன்னை இல்லட்டீ.நா கெடந்து மொனகுறேன் என்றதும் சமாதானமாகாமல் எங்க வீட்டாளுகளை வையுறதே உங்களுக்கு ரசமாப் போச்சி என்று விளக்குமாற்றை அதனிடத்தில் இருத்தி விட்டு வெடுக்கென்று தோளில் முகத்தை வெட்டியவாறு உள்ளே போனாள்.அடுத்து காப்பி தரவேண்டிய ஸ்தானாதிபதியாக சேர்மக்கனி இருந்தபடியால் அவசரமாக ஒரு சமாதானத்தை உண்டுபண்ண வேண்டிய கட்டாயத்தில் இருந்த கார்மேகம எடீ நாஞ்சொன்னது எதெதையோ கண்டுபிடிக்கிறாங்கியள்ல அந்த விஞ்ஞானிகளை.உன் சொந்தக்காரங்களை இல்லட்டீ என்றார்.இதை இறைஞ்சுகிற பிரார்த்தித்தலாய்த் தான் சொன்னார்.அதற்கு காப்பியை ஆற்றிக் கொண்டே எதிர்ப்பட்ட மனையரசி க்கும்…எல்லாந்தெரியும் என்னை வாயடைக்க எதாச்சும் ஞானி கோணின்னு பேசிடுவீகளே என்று மேலும் கோபத்தோடு அவர் முன் வட்டையையும் தம்ப்ளரையும் வைத்து விட்டுக் கிளம்பினாள்.

இனி அவளைச் சமாதானம் ஆக்க நேரம் பிடிக்கும் என்பதை தன் அத்தனை வருஷ சம்சார அனுபவத்திலிருந்து உணர்ந்து கொண்ட கார்மேகம் சரித்தான் கெளம்பி சாவடிப் பக்கம் சென்று வரலாம் என வந்தார்.அவருக்கு எப்போதெல்லாம் மனசு ஈரங்குறைந்து நடுக்கம் கொள்கிறதோ அப்போதெல்லாம் தன்னை வணங்கும் ஊர்ச்சாவடிக்கு வருவதும் சார்ஜ் செய்து கொள்வதுமாய் பல வருடங்களை அப்படித் தான் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.இன்னிக்கு என்னவே ப்ராது எனக் கேட்காத குறையாய் வந்ததும் வராததுமாய் சின்னப்பய்யன் .ராஜராஜசோழனது பத்தாப்பு மார்க்கு குறித்த பஞ்சாயத்தில் நுழைந்து தான் அப்படியொரு அதிரடி ஸ்டேட்மெண்டை தந்து சூழலைத் தகர்த்தார்.
உங்கொப்பன் எப்படி சவுக்கியமா என்று கேட்பதன் மூலமாய்த் தனக்கு நெடுநாள் வேண்டப்பட்டவன் எதிரே நிற்கும் குமரன் என்பதை ஊருக்கு உணர்த்தினார்.அவனை அடையாளம் தெரியாத சிலரும் கூட ஓரிரு புன்னகைகளை நல்கினர்.அது சோழனுக்கு பெரும் கூச்சத்தை உண்டாக்கிற்று
நல்லா இருக்கார் மாமா என்ற சோழன் சரி நா கெளம்புறேன் என்றான்.இர்றா போலாம்.நாஞ்சொல்றது புரியுதா..?மத்த எல்லாத்துலயும் பாஸ் ஆன நீ சரியா கணக்குல அதும் முப்பத்தொண்ணு எடுத்திருக்கேன்னா என்ன அர்த்தம்..?திருத்தினவன் சரியாத் திருத்தலை.எளவு எட்டு மார்க்கை குறைச்சு இருபத்தியேளுன்னு போட்டிருந்தான்னா சரி பெயிலுன்னு சமாதானம் ஆகலாம்.இல்லை நாலைக் கூட்டி பாஸ்னுல்ல போட்டிருக்கணம்..?இவன் பாக்கெட்டுலேருந்தா தாரான்..?இன்னம் ரசிக்கத் தேடிருந்தாம்னா எதாச்சும் எடங்கள் இல்லாமயா போயிருக்கும்.?பரீச்சப் பேப்பரை கருணையோட பார்த்தா நூத்துக்கு எரனூறு மார்க்குக் கூடத் தரலாம்..எல்லாம் கெரகம் காலநேரம் சரியில்லாட்டி இப்படித் தான் நடக்கும்.நீ விடக் கூடாது.உங்கப்பன் கிட்ட சொல்லி மறு கூட்டுக்கு அப்ளை செய்யி..எல்லாம் நல்ல ரிசல்ட் வரும்.நம்பிக்கையா இருக்கணும் என்ன எனும் போது அவர் தான் லேசாய்த் தழுதழுத்தார்.அந்தக் காலத்தில் பியூசி ரெண்டு அட்டை வாங்கிய தன் ஜாதகம் அவருக்கு தோணிற்றோ என்னவோ.
கல்லுளி மங்கன் போலத் தான் நின்று கொண்டிருந்தான் சோழன்.தமிழ்ல எவ்ளோ என்றார் கார்மேகம்.எழுபது மாமா என்றான்.குரல் ஜாக்கிரதையாயிற்று.கணக்கில் காய்த்ததும் தமிழில் பழுத்ததும் இருவேறு நிஜங்கள்.இனி மிச்ச மூணு சப்ஜெக்டுக்குள் போனால் தன் லட்சணம் நல்லூர்க்கோட்டை முச்சூடும் பரவிக் கெடுமே என்று பதற்றமானான்.இன்னொரு பக்கம் நாம சொல்லாட்டி அட்டையை வாங்கியா பார்க்கப் போறாங்க..?சும்மா மிச்சத்துல எல்லாம் பாஸ்னு சொல்லிட வேண்டியது தான் என்று முடிவு செய்தான்.
இங்கிலீசுலே என ஆரம்பிக்கும் போது சரியாக ஜீப் வந்து நின்றது.வக்கீல் சம்சுதீன் பாயின் அலுவலக ஜீப்பை அவரது ட்ரைவர் மணி கொணர்ந்திருந்தான்.
ஐயா வரச்சொன்னாவ என்றான்.சொற்சிக்கன மணி அவன்.
இவர் எதும் பேசாமல் எல்லாரையும் பொதுவாய்ப் பார்த்து வணக்கம் வைத்தவாறே ஜீப்பில் முன்பக்கம் ஏறிக் கொண்டார்.வழக்கமாக எப்போதும் எந்த ஸ்டாஃபாக இருந்தாலும் ஜீப்பில் முன் ஸீட்டில் ஏற மாட்டார்கள்.கார்மேகமும் அப்படித் தான்.இருந்தாலும் மணியை அப்பைக்கப்போது சிகரட் எல்லாம் தந்து தயாரித்து வைத்திருந்தார்.தனக்கு அனுசரணையாக ஒருவன் வேண்டும் அதும் அய்யாவின் ஆஸ்தான வாகன ஓட்டி மணி தன் ஆளாக இருக்கணும் என்பது அவரது கனவின் திட்டம்.அதனால் தன் ஊரிலிருந்து ராஜபுரம் செல்லக் கிளம்புகையில் முன் பக்கம் ஏறிக் கொள்வார்.ஊர் தாண்டியதும் சரியாக ஒரு மைல் தாண்டியதுமே ஒண்ணுக்கிருக்கணும் என்று மரத்தடி எங்கேயாவது நிறுத்தி விட்டு பின்னால் மாறிக் கொள்வார்.எதற்குமே ஏன் எனக் கேட்க மாட்டான் மணிப்பயல்.ஊரார்கள் கண்ணுக்கு ஏதோ சம்சுதீன் பாய்க்கு அடுத்த ஸ்தானாதிபதி கார்மேகம் என்றாற் போல தோற்றமளிக்கும்.அது தானே அவர் லட்சியம்.
நல்லவேளை கிளம்பினார் ஹப்பா என்று தனக்குள் மூச்சு விட்டுக் கொண்ட ராஜராஜசோழனுக்கு அடுத்த கண்டம் பகவதியண்ணன் ரூபத்தில் வந்தது.
நீ எங்கப்பே இருக்க உன்னை உங்கப்பார் உடனே அளச்சிட்டு வரச்சொன்னார் என்றதும் சட்டென்று நியாபகம் வந்தவனாய் நா அப்பறம் வரேன்.முடி வெட்டணும் என்று
சிங்கப்பூர் சலூனுக்குள் நுழைந்து முதல் ரொடேசன் சேரில் அமர்ந்து கொண்டான்.கட்டிங்கா சேவிங்கா என்று பழக்க தோசத்தில் கேட்டான் புதிதாக வேலைக்கு சேர்ந்தவன்.இவன் ஙே என விழிக்க முதலாளி கிட்டு வந்து அவனை சிவபார்வையால் எரித்துவிட்டு கேக்கான் பாரு கொளந்தை கிட்ட என்றவாறே உக்காரும் துரைவாள்..இதோ வந்தாச்சி என்று சொல்லி விட்டு கத்திரி இத்யாதிகளை எடுக்க உள்பக்கம் சென்றார்.
கண்ணாடியில் இன்னமும் பெரிய தோற்றத்துக்கு வந்துசேராத தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சோழன் திடீரென்று ஒலித்த ரேடியோ செய்தியால் ஒரு கணம் தடுமாறினான்.
தமிழ்நாட்டில் அசாதாரணமான அரசியல் சூழல் நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் தெரியப்படுத்துகிறார்கள்.திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி எம்.எல்.சியாக இருப்பதாலேயே மேலவையைக் கலைத்திருப்பதாகவும் இது முழுவதுமாக அதிமுக அரசின் விஷமத்தனம் என்றும் பேராசியர் அன்பழகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரியப்படுத்தினர்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எம்ஜி.ராமச்சந்திரன் இது நெடுங்காலமாக பரிசீலிக்கப் பட்ட ராஜாங்க முடிவு என்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக எடுக்கப் பட்டதில்லை என்றும் தெரிவித்தார்.வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில் திரு கருணாநிதி உள்ளிட்ட யாரும் தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டப்பேரவைக்கு வருவதைத் தான் ஆட்சேபிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…..”
இவனைப் பார்த்துப் புன்னகைத்தவாறே தன் அலங்காரவித்தையைத் தொடங்கினார் கிட்டு.
எதிரே வாசலுக்கு அந்தப்பக்கம் அமர்ந்திருந்த பரசுராமன் வாத்தியார் என்னமா பதில் சொல்லிருக்கார் பார்த்தீங்களா என்றார்.கிட்டு திமுக அனுதாபி என்னத்தை வாத்தியாரு.?வாத்தியாருன்னா ஒழுங்கா நேர்மையா மார்க்கு போடணும்வே.எடுத்த மார்க்கை குறைக்கிறதா நல்ல வாத்திக்கு அளகு..?என்ன இருந்தாலும் கருணாநிதி எம்மெல்சியா இருக்கச்சே மேலவையைக் கலைச்சது எந்த வகையிலயும் நாயமில்லை.நாளைக்கு ஒர்த்தருக்கொருத்தர் முளிச்சிக்கிடணும்ல..?ஒரு நட்புக்காகவாச்சும் இப்பிடி பண்ணாம இருந்திருக்கலாம் என்று லேசாய்க் கலங்கினார்.
அப்போது அங்கே வந்து சேர்ந்த எஸ்.எம்.மில்ஸ் யூனியன் லீடர் ஜேம்ஸூம் சேர்ந்து கொண்டார்.நாங்க மறுபடி வராமயா போவம்..?திரும்பவும் மேலவையைக் கொண்டாந்தே தீருவம்..பார்க்கத் தானே போறீங்க என்று ஆளே இல்லாத திசையில் சொல்லிக் கொண்டிருந்தார்.
சோழனுக்கு எம்ஜி.ஆரும் மார்க்கு கம்மியா போடும் வாத்தியார் என்ற தகவலே அதிர்ச்சியாக இருந்தது.அதற்கு முன்பே கார்மேகம் சொன்னதிலிருந்தே தனக்கு வழங்கப்பட்ட்ட அநீதியாகவே கணக்கில் தனக்களிக்கப்பட்ட முப்பத்தி ஒரு மார்க்கைக் கருத ஆரம்பித்திருந்தார்.எதிர் வீட்டு ஜக்கு என்கிற ஜகன்னாதனில் தொடங்கி ஜெர்மனி இத்தாலி உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் வரைக்கும் பலரின் பன்னெடுங்காலச் சதி தான் தனக்குக் கணக்கில் இழைக்கப் பட்ட அநீதி என்பது சோழனுக்குத் தோன்றிய நம்பகம்.அதே நேரம் அதை விடக் குறைவாகத் தான் எடுத்த மிச்ச பேப்பர் மார்க்குகள் எந்த நாட்டின் சதித் தலையீடும் இல்லாமல் பெற்ற தன் சொந்த ஜாதக விசேசங்களின் பலாபலன் தான் என்பதையும் அவர் மனம் ஒத்துக் கொள்ளாமல் இல்லை.
முடி வெட்டிக் கொண்டு வேறொரு புதிய மனிதனாக அவதரித்த சோழன் நேரே தன் தந்தை முன் சென்று நின்றார்..வாடா எட்டுக்குட்டி என்றார் தந்தை.அவரது வாஞ்சை சோழனை எரிச்சலூட்டியது.தந்தை மகாலிங்கம் மாபெரிய ரசனைக்காரர்.நல்லூர்க்கோட்டை தாண்டி உலகளந்த ராஜபுரம் வரைக்கும் அவர்கள் குடும்பம் அதிபிரபலம்.எப்படி என்றால் தன் பிள்ளைகளுக்கு மகாலிங்கம் சூட்டிய பெயர்களாலே தான்.
குண்டப்பா விஸ்வநாத் வெங்கட்ராகவன் கவாஸ்கர் மதன்லால் என நாலு அண்ணன்கள்.லலிதா பத்மினி ராகினி என மூன்று அக்காக்கள்.என ஏழுக்கு அப்பால் எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததும் என்ன பேர்வைக்கலாம் என்று நிசமாகவே குழப்பமானார்கள்.தன் விருப்பப் படி கிரிக்கெட் வீரர் பேர்களை வழக்கம் போல முன் வைத்தார் மகாலிங்கம்.இல்லையில்லை தம்பிக்கு நாங்க தான் பேர் வப்பம் என நாலு அண்ணாஸ் ஒரு அக்காஸ் எனப் பேசத்தெரிந்த பேச்சுரிமையாளர்கள் கொடி பிடித்து ஆளுக்கொரு பேரை டப்பாவில் போட்டுக் குலுக்கினர்.அதிலிருந்து வெளிப்பட்ட பேர் தான் ராஜராஜசோழன் எனும் நாமகரணம்.இந்த இடத்தில் தான் படத்தில் பேர் போடும் படலம்.
இதில் தன்னை எட்டுக்குட்டி என்று அழைப்பது எந்த விதத்தில் நியாயம் என்றறியாத சோழன் அப்பா முன் உர்றென்று நிற்க ஏண்டா குட்டி உம்முன்னு இருக்கே..?என்றதும் என்னவோ நியாபகத்தில்
யப்பா எம்ஜி.ஆர் வாத்தியாராப்பா..?என்றார் சோழன்..
அவரை வாத்தியாருன்னு செல்லமா கூப்டுவாங்கப்பா…பள்ளிக்கூட வாத்தியாரு இல்லை.அவரு வாத்தியாருக்கெல்லாம் வாத்தியாருடா என்ற மகாலிங்கம் எம்ஜி.ஆர் பற்றித் தன் மகனுக்கு சொல்லக் கிடைத்த வாய்ப்பை எண்ணிப் பூரித்தார்.
என்னைய எந்த வாத்தியாரு மார்க் கம்மியா போட்டு பெயிலாக்குனாருன்னு தெரிஞ்சுக்க முடியுமாப்பா.?என்றார் சோழன்.
தெரிஞ்சு என்ன பண்ணப் போற..?
அதை விடுப்பா மறு கூட்டுக்கு அப்ளை பண்ணட்டா?கார்மேகம் மாமா சொன்னாப்டி
மறுகூட்டுக் கூட்டி ஒருவேளை இருக்கிற முப்பத்தி ஒண்ணும் கொறஞ்சிட்டா..?பணம் வேஸ்ட்டு மனசும் வலிக்கும்ல
அதும் சரியாத் தான் பட்டது 1989 ஆமாண்டு மே மாதம் வெளியான எஸ்.எஸ்.எல்.சி ரிசல்டுகள் குறித்து உங்கள் யாருக்கும் எந்தவிதமான அபிப்ராய பேதங்கள் இருக்கலாம் இல்லாமல் போகலாம்.ஆனால் அது ஒரு உலக அதிசயத்தின் தோற்றுவாய்.ஒரே அட்டெம்டில் நாலு பேப்பர்களிலும் நாற்பதுக்கு அதிகமான மார்க்குகள் பெற்றுத் தன் இரண்டாவது அட்டையோடு பத்தாப்பு படிப்பை முடித்திருந்தார் சோழன்.தனது மதிப்பெண் சான்றிதழில் இருக்கும் தன் பெயர் உள்ளிட்ட விபரங்களை எல்லாம் பல முறைகள் சரிபார்த்த பிற்பாடும் கூட நம்பிக்கை வராமல் இது தன் சர்ட்டிபிகேட்டுத் தானா.?இதிலிருக்கும் மார்க்குகள் தனக்கு சொந்தமாய் வழங்கப்பட்டவை தானா என்றெல்லாம் பலவிதமாய் சிந்தித்து அதன் நம்பகத் தன்மை குறித்த எந்தவிதமான முடிவுகளுக்கும் வர இயலாமல் சரி இதான் உண்மையா இருக்கும் போல என்று நம்பத் தொடங்கினான்.

2.ஒருவழியாகப் பதினோறாம் வகுப்பு படிக்கிறதற்காக ராஜபுரம் ஹைஸ்கூலில் விண்ணப்பித்து வக்கீல் சம்சுதீன் பாய் லெட்டர் கொடுத்த ஒரே காரணத்துக்காக அந்தப் பள்ளியின் சட்ட ஆலோசகர் அவர் என்பது மாத்திரமல்ல.அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும் கூட.அடுத்து பள்ளியின் தலைவராக அவரைத் தான் அன் அபோஸ்ட் ஆக தேர்ந்தெடுக்க உள்ளதாக அப்பா யாரிடமோ ஃபோனில் சொல்லி விட்டு அப்படியான பெருமைகளைக் கொண்ட அவரது சிபாரிசுடன் படிக்கத் தொடங்கி இருப்பதனால் தன் எட்டுக்குட்டி பிரமாதமாக வருவான் என்று தானே சொல்லி விட்டு எதிராளியின் பதில் பற்றி யாதொரு அபிப்ராயமும் கொள்ளாமல் கட் செய்தார்.
ராஜபுரம் ஐஸ்கூலில் நாலாவது க்ரூப்பில் சேர்த்துக் கொள்ளப் பட்ட சோழன் இயல்பாகவே தன் உயரம் காரணமாக கடைசி பெஞ்சியில் சென்று ஸெட்டில் ஆக அங்கே உடன் வந்தமர்ந்தான் நடேசன்.உன் பேரென்ன எனக் கேட்ட போது நட்டேஷ் என்றான்.இரண்டொரு ஷ் அழுத்தியே சொன்னான்.எழுதும் போது நடேசன் என்று தான் எழுதினான்.பதிலுக்கு தன் பெயரைச் சொன்ன சோழனைப் பார்த்து இதான் நெசம்மாவே உன் பேரா ஆமடா நா என்ன பொய்யா சொல்றேன் என்றதற்கு கோச்சுக்காத…எத்தினியோ பேர் இருக்கு.இதும் ஒரு பேர்னு விட்டுறமுடியுமா..?எம்மாம் பெரிய ராசா பேரு தெரியும்ல என்றான்.அப்போது தான் தன் பெயரைச் சுமக்க முடியாமல் திணறினான் சோழன்.
ஒரு நாள் ராஜராஜ சோழன் நான் என்று பாட்டுப் பாடினான் நடேஷ்.ஏண்டா கிண்டல் பண்றே என்றதற்கு நீ இந்தப் படம் பார்த்ததில்லயா..மோகன் ஒரு புளுகுணி.கல்யாணம் ஆகலைன்னு பொய் சொல்லி ராதிகாவோட காதலாய்டுவாப்ல…அர்ச்சனா மொதல் தாரம்.ஏக தமாஷா இருக்கும்.ஒரே நேரத்ல ரெண்டு பேரும் கர்ப்பமாய்டுவாங்க…என்று கெக்கெக்கே எனச் சிரித்தான்.ரெண்டு பேரும்னா..?என அப்பாவியாய்க் கேட்ட சோழனுக்கு நீ வளர்ந்தியா இல்லை வளராம அதே எடத்துல நிண்டுட்டிருக்கியா எனக் கேட்டவாறே அந்த கணம் முதல் இரு உன்னைய நான் பலவிதமாக் கெடுத்துப் பட்டையக் கெளப்புறேன் என நல்லாசானாக மாறினான் நடேஷ்.
அது முதல் நடேஷே தன் கூட்டுக்காரன் என்றானான் ராஜராஜசோழன்.பன்னிரெண்டாவது வகுப்பு எழுதி எப்படியோ தக்கி முக்கி பாஸ் ஆன பிறகு மதுரையில் அஜ்மா கல்லூரியில் பி,ஏ சேர்ந்தார்கள் இருவரும்.ஆச்சர்யமாய் பீ.ஏ பாஸ் செய்து எம்.ஏ சேர்ந்தது வரை காலம் உருண்டு உருண்டு ஓடியது.
ஆஸ்டலில் தங்கிப் படிக்க வேண்டி இருந்தாலும் எப்போதெல்லாம் லீவு கிடைக்குமோ அப்போதெல்லாம் நல்லூர் போய்விடுவார்கள்.அதில் மாத்திரம் நடேஷூம் சோழனும் ஒரு பொழுதும் முரண்பட்டதில்லை.மற்ற எதுவாக இருந்தாலும் இரண்டு பேரும் சண்டை தான் சச்சரவு தான்.
எம்.ஏ முடித்தது 1996 ஆமாண்டு ஏப்ரலில்.சரி போதும் படித்தது என்றான பின் ஊரிலேயே எதாச்சும் வேலை பார்க்கலாமா எனக் கிளம்பினான்.பெப்ஸி ஏஜன்சி பெட்ரோல் பங்க் சிமெண்ட் டீலர்ஷிப் என பட்டையைக் கிளப்பி வந்த நவரத்தின பாண்டியன் என்ற தொழில்மேதை தன் சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க ஒரு தளபதி வேண்டும் எனத் தன் வக்கீலான சம்சுதீன் பாயிடம் அங்கலாய்த்தது ஒரு கிருஷ்ணாஷ்டமி அன்று.அதென்னவோ பாய் அன்றைக்கு ரொம்பவே நல்ல மூடில் இருந்தபடியால் அவர் தன் சொந்தத் தளபதியான கார்மேகத்தை அழைத்து யாராச்சும் நம்பிக்கையான ஆள் இருக்கானாவே எனக் கேட்டது யாருக்கு எப்படியோ ராஜராஜசோழனுக்கு நல்ல நேரமாய் இருந்திருக்க வேண்டும்.
நம்ம மகாலிங்கம் மகன் ராஜான்னு ஒரு பய்யன் இருக்கான்.நல்லா படிச்சவன்.நல்ல பய்யன் ஒரு கெட்டபளக்கமும் இல்லை அதிர்ந்து பேசமாட்டான்.ஜம்முன்னு இருப்பான் என்று அடுக்கிக் கொண்டே போனார் கார்மேகம்.அதற்குத் தன் கையிலிருந்த ஃபில்டர் சிகரட்டை சுண்டியபடியே “ஸ்டுப்பிட் நானென்ன நவரத்தின பாண்டியன் மகளுக்கு மாப்பிள்ளையா பார்க்க சொன்னேன்..?சம்பளத்துக்கு தக்கன வேலை பார்ப்பானா ஒளுக்கமானவனா..தட்ஸ் மை நீட்.சரியா..?ஸ்டுப்பிட்” என்றார்.இதுவரை அவர் கார்மேகத்தைப் பார்த்துச் சொன்ன ஒவ்வொரு ஸ்டுப்பிடுக்கும் நாலணா வீதம் அவரே மறுபடி கொள்முதல் செய்வதாக வைத்துக் கொண்டாலும் ஒரு நாளைக்கு நூறு ஸ்டுப்பிட் வீதம் லீவு நாளெல்லாம் கழித்தாலும் வருஷத்துக்கு முன்னூறு நாட்கள் ஆக முப்பதாயிரம் ஸ்டுப்பிட் இதோடு நாற்பது ஆண்டுகளாக வேலை பார்ப்பவர் என்பதால் கிட்டத் தட்ட பன்னெண்டு லச்சம் ஸ்டுப்பிட் சொல்லி இருப்பார்.அதற்கு மூணு லச்சமாவது தந்தாக வேண்டும்.சம்மந்தமே இல்லாமல் கார்மேகத்துக்குத் தான் விற்றுக் கை மாற்றிய மாந்தோப்பின் உதிர்ந்த இலைகள் மனமுன் ஆடின.அந்த இலைகளைப் போலத் தான் இந்த ஸ்டுப்பிட் என்ற பதமும்.என்ன பிரயோசனம்…தண்டமாய் யாதொரு பயனுமில்லாமல் அல்லவா இதைக் கேட்க வேண்டி இருக்கிறது..?
ஆனால் அவர் அறியாத உண்மை என்னவென்றால் ராஜா என்று அவர் சுருக்கிச் சொன்ன ராஜராஜசோழனை மாப்பிள்ளையாக இந்தப் பிறவியில் அடைய வேண்டிய பாக்கியமோ அல்லது எதோ ஒன்று நவரத்தின பாண்டியனின் மகள் ஜாதகம் வழியாக அவரது ஜாதகத்திலும் எழுதப்பட்டிருந்ததோ என்னவோ.வேலைக்கு சேர்ந்த ரெண்டாவது நாளே சாவி கொடுக்க சென்றவன் வீட்டு வாசலில் கதவைத் தட்டி விட்டு நிற்க திறந்தது அவள்.நீங்க என்று தயங்கியவளிடம் நான் ராஜா என்றான்.என்னவோ பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மூன்றாவது ஜார்ஜ் என்றாற் போல் அவன் சொன்னான்.ஏன் என்றே இந்த உலகத்தில் அறுதியிட முடியாத விசயங்களில் ஒன்று கதையின் நாயகி நாயகன் அறிமுகக் காட்சியில் மாத்திரம் அவனைக் கண்டதும் கொள்கிற வெட்கம்.அதும் முகமெல்லாம் அலர்ஜி வந்தாற் போல சிரித்துக் கொண்டே பாதி மூஞ்சை பொத்திக் கொண்டு மிச்சத்தாலும் முழுசாகவும் சிரித்தபடி சடசடவென்று ஓடிப் படாரென்று எதன் பின்னாலாவது மறைந்து நின்று கொண்டு பாதி முகம் தெரிகிறாற் போல் பார்த்து அப்போதும் இன்னும் கொஞ்சம் சிரித்து மகா கன்றாவியான பல முகபாவங்களின் அடுக்குத் தொடர்ச்சியாகச் செய்து காண்பிக்கிற கொனஷ்டைகளின் தொகுப்பே வெட்கம் என்றழைக்கப்படும்.அப்படித் தான் அவளும் ஓடிக் காணாமல் போனாள்.இவன் நானென்ன பிழை செய்தேன் என்றாற் போல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
ரெண்டு நிமிஷம் கழித்து அவளே திரும்பி வந்து சாவியை வாங்கிக் கொண்டு நீங்க தான் புதுசா சேர்ந்திருக்கிற மேனேஜரா எனக் கேட்டாள்.அப்போது தான் தானொரு மேனேஜர் என்ற விஷயமே தெரிந்துகொண்ட ராஜராஜசோழன் அடடே நாம எடுத்த எடுப்பிலேயே மேனேஜர் ஆகிட்டமே என்று தனக்குள் வியந்துகொண்டு வெளியே காட்டிக் கொள்ளாமல் பார்டன் என்றான்.96இல் பார்டன் என்பதெல்லாம் மாபெரும் இங்கிலீஷ்.,அதற்கு பதிலாக அவள் ஐம் ராதா என்றாள்.ராஜா ராதா என்றெல்லாம் இன்னமுமா காம்பினேசம்ன்கள் அமைகின்றன என்றெல்லாம் தனக்குள் வியந்தவாறே தேங்க்ஸ் என்று எதற்குமற்ற நன்றியை நவின்று விட்டு நேரே சிங்கப்பூர் சலூனுக்கு வந்து சேர்ந்தான் சோழன்.
டெல்லிக்குப் போறேன்.கலெட்டர் ஆகப் போறேன் என்று கிளம்பிய நடேசனை இதோ பார் நடேஷா நீ பல நாட்களாக பரீட்சைகளில் காபி அடித்துத் தான் பாஸ் ஆனது உன் வரலாறு.இந்த லட்சணத்ல ஐயேஎஸ் ஒன்றும் சாதா பரீட்சை கிடையாது.வேணாம் போகாத சொல்லிட்டேன் என்றதும் ஒரே ஒரு நிமிடம் யோசித்தவன் சரி அப்டின்னா நீயே எனக்கொரு வேலை வாங்கித் தந்திடு என்றான்.
முதலில் எனக்கு வேலை கிடைக்கட்டும் என்று அஸால்டாக எடுத்துக் கொண்டான் சோழன்.ஆனால் யாரோ மந்திரம் போட்டாற் போல் நாலே நாட்களில் அவனுக்கு வேலை கிடைத்து அதும் மேனேஜர் பதவியில் சேர்ந்து விட்டான் என்று தெரிந்து கொண்டு அமைதியாக தினமும் சாயந்திரங்களில் சிங்கப்பூர் சலூனுக்கு வந்து இரண்டொரு மணி நேரங்கள் காத்திருந்துவிட்டு போவதை ஒரு வழக்கப்பழக்கமாக வைத்திருந்தான்.இன்னிக்கும் வராட்டி நாளைக்கு அவன் வேலை பார்க்கும் பெப்ஸி ஏஜன்ஸிக்கே நேரே சென்றுவிட வேண்டியது தான் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டிருந்த போது தான் தன் புது சமுராயில் அங்கே வந்து சேர்ந்தான் சோழன்.
என்ன மாப்ளே ஆளே மாறிட்ட என்றான் நடேஷ்.என்னடா அப்டி மாற்றத்தை கண்டே என சிரித்த சோழன் கிட்டண்ணே டீ சொல்லுங்க..அப்டியே பஜ்ஜி எதுனா கொண்டாரச் சொல்லுங்க என்றான்.ஆள் இல்லாத நேரங்களில் சலூனுக்குள் டீ பஜ்ஜி தொடங்கி பொங்கல் ப்ரோட்டா வரை எல்லாம் சப்ளாய் ஆகும்.கிரிக்கெட் என்ற வஸ்து வந்த பிற்பாடு அங்கேயே நாலு பேர் குளித்து தலைதுவட்டி நீங்க எதுனா ஊருக்கு போகணும்னா போயிட்டு வாங்க கிட்டண்ணா நாங்க பார்த்துக்குறோம் என்று சொல்லும் அளவுக்கு ஜொலித்தார்கள்
வழக்கமா ஃபங்க் கட்டிங் தான் உன் அடையாளமே இப்ப அட்டாக் அடிச்சிருக்க என்றான்.அதாவது பிடரியில் வழிந்த கூந்தல் இப்போது ஒட்ட வெட்டப் பட்டிருக்கிறதல்லவா அதைச் சொல்கிறான்.அதற்கு காரணம் ராதா.முந்தைய தினம் பின் முடியை ஒட்ட வெட்டிக் கொள்ளவும் நல்லாவே இல்லை என்று எழுதி ஒரு துண்டுச் சீட்டை அவன் சாவி தரும் போது கையில் திணித்தாள்.இவன் என்னவோ லவ் லெட்டராயிருக்கும் என அதிலிருந்த ஒவ்வொரு லெட்டரையும் துப்பறிந்து உளவறிந்து எந்தெந்த விதங்களிலெல்லாமோ முயன்றுவிட்டு மறு நாள் காலை சாவி வாங்கச் சென்றான்.
ஏன் முடி வெட்டலை என்றாள்.அவன் அதற்கு நேத்து மாத்திரம் எழுதிக் குடுத்தீங்க..?இப்ப பேசுறீங்க என்றான்.ஏன் எழுதினா பேசக் கூடாதா அப்டி இல்லைங்க..நேத்தே பேசி இருக்கலாமே நேத்து நா மௌனவிரதம் அதான் எழுதிக் கொடுத்தேன்.இவனுக்கு சப்பென்றாகி விட்டது.தனக்குத் தரப்பட்ட முதல் கடிதம் அது துண்டுக்கடிதமாக இருந்தாலும் பரவாயில்லை பொறுத்துக் கொள்ளலாம்.இதென்னடா என்றால் எல்லாருக்குமே எழுதித் தருவாள் எனத் தெரிந்த பிற்பாடு அவனுக்குள் ஏற்கனவே கனிந்த ஒரு இதயம் உடைந்தது.
நாளைக்கு வெட்டிர்றேங்க என்றான்..ஏன் இன்னிக்கு நீங்க எதும் விரதமா.?போயி வெட்டிட்டு வாங்க.எங்கப்பாவுக்கு ஃபங்க் வச்சிருந்தா சுத்தமா பிடிக்காது என்றவாறே உள்ளேகினாள்.
அவனது கவனத்தை கலைத்த நடேஷ் என்னடா சிந்தனை?ஒண்ணுமில்லடா நானும் வந்ததுலேர்ந்தே பாக்குறேன்.எதுமே பேச மாட்டேங்குறே என்றான்.என்ணடா வம்பா போச்சி வந்து பத்து நிமிஷம் கூட ஆகலியேடா என்றதற்கு முந்தியெல்லாம் ஒத்தை நிமிஷத்துக்குள்ள ஒலகத்தையே பேசிருப்ப இப்ப முழுசா பத்து நிமிசமாகியும் எதுமே பேச மாட்றேடா…நீ மாறலைன்னு நீயே சொன்னாக் கூட எப்டி நம்புறது என்ற நடேஷின் நா லேசாகத் தழுதழுத்தது.
எனக்கு வேலை என்னடா ஆச்சு என்றான்.
இர்றா இவன் ஒருத்தன்..நானே நாலு நாளைக்கு முந்தி தான் சேர்ந்திருக்கேன்.அதுக்குள்ள சிபாரிசு பண்ண முடியுமா..?கொஞ்ச நாள் ஆகட்டும்.செய்வம்..என்றவன் சட்டென்று நடேஷ் மனம் கோணக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் நீ கவலைப் படாத மாப்ளே நாந்தானடா மேனேஜர்…உன்னைய உள்ள இழுத்துற மாட்டேனா..?
சம்சுதீன் பாயின் ஜீப்பில் வந்து இறங்கிய கார்மேகம் சுற்றிலும் பார்த்துக் கொண்டே நேரே சிங்கப்பூர் சலூனுக்கு வந்தார்.
வாங்கி வந்த டீயை அப்பு எல்லாருக்கும் தர எதும் சொல்லாத கார்மேகம் தானும் ஒரு குவளையை ஏந்தி சர்ரென்று உறிஞ்சிக் குடித்தார்.
ஏம்டே மருமகனே…உங்காளு அரசியலுக்கு வருவாரா..?என ஆரம்பித்தார்.விஷயம் இது தான்.எதிலுமே ஒத்துப் போகாத நடேஷூம் சோழனும் ஒத்துப் போவது ஒரு அல்லது இரண்டு விஷயங்களில் மாத்திரமே.அவற்றுள் முதன்மையானது ரஜினி.இருவருமே வெறியர்கள்.
உற்சாகமான சோழன் அதெல்லாம் வந்துருவார்..பாருங்க..என்றான்.
டக்கென்று ஆமா வருவேன் வருவேன்னு சொல்வாரு..வரமாட்டாரு என்றான் நடேஷ் படக்கென்று.மின்னல் வெட்டி கடல் கொந்தளித்து மேகம் உருண்டு நிலம் பிளந்தது சோழனுக்குள்.அட துரோகியே என நம்ப முடியாமல் பார்த்தான்.
இவன் ஏன் இப்படி மாற்றிப் பேசுகிறான் எனத் தெரியாமல் கிட்டண்ணன் முதற்கொண்டு அப்பு வரதன் என எல்லாருமே ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாய் மௌனிக்க நான் பந்தயமே கட்டுறேன் வரவே மாட்டாப்ள..இன்னும் இருபது வருஷம் ஆனாலும் ரஜினி பாலிடிக்ஸ்க்கு வரமாட்டாப்ள..ஒருவேளை கமல் வந்தாக் கூட வரலாம் என்றான்.
நிறுத்துடா என பொங்கினான் சோழன்.. நீயெல்லாம் ஒரு ரஜினி ரசிகனாடா..? என ஆரம்பிக்க ஸ்டைலாக அவன் முன் தன் தலைமுடியை அதும் பின்னால் வழிந்த தன் ஃபங்க் கூந்தலை நீவிக் கொண்டே யார் சொன்னது ஐம் எ கமல் ஃபேன் என்றான்.
நொறுங்கிப் போன சோழனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.என்ன காரணம் என்றே தெரியாமல் நடேஷூக்கு பைத்தியம் எதும் பிடித்து விட்டதா என்று தீவிரமாக யோசித்தான்.பைத்தியமே பிடித்தால் கூட ரஜினி தானே பிடிக்கும் அந்த அளவுக்குத் தன்னை விட அவன் உற்றபற்றாளன் ஆயிற்றே எனக் குழம்பினான்.அன்றிரவு வெகு நேரம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.
இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்க நானும் பல அடுக்கு மாடி ஓட்டல்களைக் கட்டி என கனவில் அண்ணாமலை கெட் அப்பில் கமல் சவால் விட்டுக் கொண்டிருந்தார்.எதிரே செய்வதறியாது சரத்பாபு விழித்துக் கொண்டிருக்க கமல் கூடவே சிரித்தபடி ரஜினி நின்றுகொண்டிருந்தார்.இவனுக்கு மிச்ச சொச்ச தூக்கமும் விட்டுப் போயிற்று.
அடுத்த ஆறாவது நாள் கள அலுவலர் ஜானகிராமன் முதலாளியைப் பார்க்கணும் என்று பொங்கிப் போய் வந்தான்.இவன் தனது அறையில் எதோ கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் எழுந்து வர உள்ளே வா சோழா என்றார் நவரத்தினப் பாண்டியன்.
என்ன ஜானி என்றதும்
இதென்ன மொதலாளி நியாயம்..?நம்ம கூலரை எடுத்து வச்சிட்டு கொக்கோகோலா ஃப்ரிஸரை வச்சிட்டுப் போயிருக்கானுங்க..நாம பத்து சிப்பத்துக்கு ஒண்ணுன்னு ஆஃபர் குடுத்தா அவன் இருபது சிப்பத்துக்கு மூணுன்னு குடுக்குறான்..எப்பிடி தொளில் பண்றதுன்னே தெரியலை.இத்தனைக்கும் நம்ம சேல்ஸ் ரெப்புகள்ல ஆறேழு பேரு கோக்குல போயி சேர்ந்துட்டாங்க மொதலாளி என்றான்.
அவனை அமரச்சொல்லி அமைதியா இரு ஜானி என்ற முதலாளி என் தங்கச்சி புருஷன்னு ரொம்பத் தான் விட்டுக் குடுத்துப் போயிட்டிருக்கேன் சோழா…ஒரு அளவுக்கு மேல பொறுமை கிடையாது எனக்கு தெரியும்ல என்று அவனைத் தன் சிவந்த விழிகளால் எச்சரித்தார்.
இதெல்லாத்துக்கும் காரணம் புதுசா கோக்கு ஏஜன்ஸில மேனேஜரா சேந்திருக்கிற ஒரு ஒன்றைக் கண்ணன் தான் மொதலாளி…அவனை நம்ம பசங்க கிட்ட சொல்லி ரெண்டு தட்டு தட்டிட்டா எல்லாம் மறுபடி கட்டுக்குள்ள வந்திரும் என்று ஆத்திரமாய் கூவினான் ஜானி
அட இருய்யா…நான் என் மச்சானையே மெண்டு திண்டுறலாமான்னு யோசிக்கிறேன்..மேனேஜர் எம்மாத்திரம்..?அவன் யாரு எந்தூருக்காரன் என்றார்.
நம்ம நல்லூர்க்காரன் தான் முதலாளி பேரு நடேசனாம் என்றதும் சோழனின் இதயம் சுக்கு நூற்றி இருபத்தி ஐந்தாக உடைந்தது.

download (27)

அதே சிங்கப்பூர் சலூன்
நல்லாருக்கியா
இருக்கேன்
எப்ப வந்தே
இப்பத்தான்
ஏன் இப்டி
வேலை
நட்பை யோசிச்சிருக்கணும்
இதையே நானுஞ்சொல்லலாம்ல
முடிவா என்ன சொல்றே
முடிச்சிக்கலாம்னு சொல்றேன்
பழசை நினைச்சிப் பாரு நடேஷ்
என் பேரை சொல்லக் கூட உங்களுக்கு அருகதை இல்லை மிஸ்டர் முன்னாள் நண்பரே…அதெப்படி..?எனக்கு நீ மேனஜரா வர ஆசைப்பட்டேல்ல..?நானும் ஒரு மேனேஜர் தான்னு உனக்கு தோணலைல்ல..?உனக்குள்ள தூங்கிட்டிருக்கிற அதே மேனேஜர் தான் எனக்குள்ள முளிச்சிட்டும் இருந்தான் மிஸ்டர் முன்னாள் நண்பன்…அதான் பெப்சிக்கு கோக்கு ரஜினிக்கு கமல் உனக்கு ஹஹஹ என்று கமல் குரலில் சிரித்து விட்டு நானு என்றவாறே வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
நில்லுடா..என்னையப் பார்த்து எழுதின மக்குப்பய தானே நீ என்றான் சோழன்.
செய்த உதவியை சொல்லிக் காட்டிட்டேல்ல..?அடுத்து நீ எந்தப் பரீட்சை எழுதுறதா இருந்தாலும் சொல்லு.நானும் அப்ளை பண்றேன்.நீ என்னையப் பார்த்து எழுதிக்க.இனி உனக்கும் எனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று அன்றைய காலை நாளிதழை எடுத்து சிம்பாலிக்காக டர்ரென்று இரண்டாய்க் கிழித்து விட்டுக் கிளம்பினான் நடேஷ்,ஒற்றுமையாக இருந்த இரண்டு நண்பர்கள் பிரிந்துவிட்டார்களே என்று நல்லூரே கண் கலங்கிற்று.
அடுத்த நாலாவது நாள் சோழனை அழைத்த நவரத்தின பாண்டியன் ஏம்பா சோழன்…நாளைக்கு வீட்ல ஒரு சின்ன விசேசம்..மதிய சாப்பாட்டுக்கு வந்திரு என்றார்.
இவனும் வேலை நிமித்தத்தில் மறந்து விட சரியாக ஒரு மணிக்கு ஃபோன் வந்தது மேனேஜர் சோழனா..?வர்லியா இன்னம்..?அப்பா கேக்குறாங்க என்றது கிளிக்குரல்.அதாவது கிளிராதா.
இதோ வரேங்க என்றவன் அடுத்த ஐந்தாவது நிமிடம் சென்று இறங்கினான்.அங்கே ஏற்கனவே நவரத்தின பாண்டியனின் மைத்துனரும் நல்லூர்க்கோட்டை கொக்கோகோலா ஏஜன்சி உரிமையாளருமாகிய சந்தனராஜவேலுவும் அவரது ஒன் அண்ட் ஒன்லி மேனேஜருமாகிய நடேஷூம் அமர்ந்திருந்தனர்.
வா சோழா என்ற நவரத்தின பாண்டியன் உக்காரு உக்காரு என உபசரித்தார்.எல்லாரும் சாப்பிட ஆரம்பிக்க
அதான் அயித்தான் நம்ம பசங்க ரெண்டு பேரும் துடியானவனுக தான்.வெட்டியா ஒருத்தனுக்கொருத்தன் வெட்டிக்கிடக் கூடாதேன்னு தான் உண்மையைச் சொல்லிப்புடலாம்னு முடிவெடுத்தேன் என்றார் சந்தனம்
இரு சந்தனம் நானே சொல்றேன் என்ற நவரத்தினப்பாண்டியன் இந்தாருங்க மேனேஜருங்களா..நானும் என் மச்சானும் எப்பவுமே ஒண்ணுமண்னு தான்.ரெண்டு பேரும் சேர்ந்து பெப்ஸி ஏஜன்சியை எடுக்க போனம்..அப்ப எனக்குத் தெரிஞ்ச ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் சொன்னாப்டி எப்பிடியும் அதே ஊர்ல கோக்கும் ஏஜன்சி குடுப்பான்..அதை வேற ஒருத்தன் எடுப்பான்.ரெண்டு பேருக்கும் முட்டும்.பிசினஸூம் லாபமும் நட்டமா மாறுர வரைக்கும் எல்லாமே தீர்மானிக்கப் பட்ட ஆட்டம் இது….அதுனால நீயே உனக்கு எதிரியா இருந்தாத் தான் உனக்கு நல்லது.நட்டமில்லாம வாழ முடியும்னாப்டி..அன்னைக்கு தான் கோக்கு ஏஜன்ஸியை எம்மச்சானுக்கு எடுத்துக் கொடுத்தேன்.நானும் அவனும் சண்டை போடுறாப்ல காமிச்சிக்கிட்டம்..இந்த மாதிரி விசேசம்ன்ற போர்வைல எப்பனாச்சியும் சந்திச்சுக்குவம்.அதும் நாலாவது ஆளுக்குத் தெரியாம…இதை உங்க ரெண்டு பேருக்கும் ஏன் சொல்றம்னா…நீங்க ரெண்டு பேரும் இதை புரிஞ்சுக்கணும்..வெளில விட்டுக் குடுத்திறாம சண்டை போடுறாப்ல நடிச்சிக்கங்க..ஒருத்தருக்கொருத்தர் அண்டர்ஸ்டாண்டிங்குல இருந்துக்கங்க..விசாரிச்சப்ப ரெண்டு பேரும் போன மாசம் வரைக்கும் எல்லாத்திலயும் ஒண்ணாத் தான் இருந்தீகளாம்..என்னமோ ரஜினி கமல் அபிமானத்துல மாத்திரம் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்குன்னு கேள்விப்பட்டம்..இதான் விசயம்..என்ன புரிஞ்சுதா..?
டக்கென்று எழுந்துகொண்டான் சோழன்.எதிரே நடேஷூம் எழுந்து கொண்டான்.
ஐயா நீங்க ரெண்டு பேரும் சொந்தக்காரங்க…அதாவது ரிலேஷன்ஸ்.பட் நாங்க நண்பங்க.அதாவது ஃப்ரெண்ட்ஸ்..ரிலேஷன்ஸ்க்குள்ளே உறவும் பிரிவும் சகஜமா இருக்கலாம்.ஏன்னா அது சப்பாத்தி மாவும் தண்ணியும் மாதிரி..ஒட்டிக்கும்.பட் நட்புன்றது பைக்ல இருக்கிற ரியர் மிரர் மாதிரி.ரசம் போயிடுசின்னா பார்க்க முடியாது.என்னை மன்னிச்சிடுங்க..நீங்க சேர்ந்தே இருங்க…எங்களை சேர்க்க நினைக்காதீங்க..என்னோட நாடி நரம்பு ரத்தம் புத்தி சதை எல்லாத்துலயும் பெப்ஸி வெறி ஊறிப் போச்சி.”எனக் கிளம்ப எத்தனிக்க
நடேஷ் கமல் ஸ்டைலில் “ஐயா பெப்ஸியும் கோக்கும் காந்தத்தோட ரெண்டு துருவங்கள்.கின்லேயும் அக்வாஃபினாவும் உங்களைப் பொறுத்தவரைக்கும் வெறும் தண்ணியா இருக்கலாம்.பட் அது ரெண்டும் ரெண்டு துருவங்கள்.என்னிக்குமே சேராது.சேரவும் முடியாது.நான் கெளம்புறேன்.பெப்ஸிக்கும் கோக்குக்கும் நடக்குற தர்ம யுத்தத்துல ஒண்ணு நான்..இல்லைன்னா”என்று முறைத்துவிட்டு கிளம்பினான்.
இரண்டு பேரும் கிளம்பி ஆளுக்கொரு பைக்கில் ஏறி ஆளுக்கொரு திசையில் நகர்ந்தார்கள்.
அயித்தான்.நெசம்மாவே ரெண்டு பேரும் எதிரிங்க தான் போல…இனி ரஜினி கமல் சேர்ந்து நடிச்சா கூட இவனுங்க சேர்ந்து அந்தப் படத்தப் பாக்க போமாட்டானுங்க..என்ற சந்தனத்தின் தோளைத் தட்டிய நவரத்தின பாண்டியன் டே மச்சான் நல்ல வேலைக்காரனுங்க டா..இவனுகளை அப்டியே தக்க வச்சிக்கணும்.அடுப்புகளை அணையாம பார்த்துக்க அது முக்கியம்..அவன் சொன்னது சரி தாண்டா பெப்ஸியும் கோக்கும் சேர்ந்தாக் கூட அக்வாஃபினாவும் கின்லேயும் சேர முடியாதுடா…எனத் தன் மீசையை முறுக்கிக் கொண்டார்.
நல்லூர்க்கோட்டையிலிருந்து உலகளந்த ராஜபுரம் செல்வதற்கு வடக்கே சென்றால் ரயில்வே கேட்டுக்காக காத்திருக்க வேண்டி வரும்.அதனால் நடுநதிக்குக் குறுக்கே சிறு ஊர்ப்பாலம் கட்டப்பட்டிருந்தது.அதன் கீழ்ப்புறம் தான் அரசல் புரசல்களுக்கான அண்டர்வேல்ட்.அங்கே அடுத்த நாள் மதியப்பொழுது.டல் லைட்டிங்கில் எதிரெதிரே இரு உருவங்கள்.
ரெண்டு பேரும் இன்னைக்குத் தாண்டா இண்டர்வ்யூவிலயே பாஸ் ஆயிருக்கம்..இனி இவனுகளை வச்சி நாலு காசு பார்த்துக்குற வரைக்கும் இப்டியே ரெண்டு பேரையும் கொளப்பிட்டே இருக்க வேண்டியது தான் என்ன மச்சி என்றான் நடேஷ்.
பெரிய பைப்புகளில் ஒன்றில் அமர்ந்து இன்னொன்றின் மேல் கால்களை நீட்டியபடி தம் அடித்து புகையை வெளியேற்றிய சோழன்..எல்லாம் ராதாவுக்குத் தாண்டா நன்றி சொல்லணும்..அவ மாத்திரம் என்னை அலர்ட் செய்திருக்காட்டி நம்ம ரெண்டு பேருக்கும் வேலை போயிருக்கும்டா மச்சி..
ஆமா நீ அவளை உண்மையாவே லவ் பண்றியாடா என்றான் நடேஷ்.
அவ என்னைய நெசம்மா லவ் பண்றா…நானும் பண்ணிருவேன்னு நினைக்கிறேண்டா…என்றவாறே கண்களை மூடிக் கொண்டான் சோழன்.
இங்க யாரும் வரமாட்டாங்கள்லடா…..இங்க யார்றா சோழா வரப்போறா என்று சிரித்தான் நடேஷ்
அவர்களின் தலைக்கு மேல் அதாவது ஊர்ப்பாலத்தின் மேற்புறம் மிகச்சரியாக கார்மேகம் பயணித்து வந்த சம்சுதீனின் ஜீப் பஞ்சராகி நின்றுவிட சீக்கிரம் ஸ்டெப்னியை மாத்து மணி என்றவாறே இரு ஒண்ணுக்கிருந்திட்டு வந்திர்றேன் என்று பாலத்தின் சைடில் இறங்கிய மண்சரிவில் நெடுநெடுவென்று நடந்து கீழ்ப்பக்கம் இறங்கினார் கார்மேகம்.

****

மூன்று கவிதைகள் / கருணாகரன் ( இலங்கை )

download (25)

துயரின் இனிய கீதம்

மழைக்காற்றில்
வாழைகள் சரிந்து வீழ்கின்றன
இல்லையில்லை எழுந்து பறக்கின்றன.

முப்பதாண்டுகளின் முன்னே நான் விட்ட காகிதக்கப்பல்
ஏற்றிச் செல்ல வந்திருக்கிறது என்னை.

பெய்து கொண்டிருக்கிறது மழை
காலடியில் பொங்கிய ஈரத்தில்
முளைத்து நிற்கிறாள் அன்புச் செடி

அக்கணத்தில்தான்
சொல்லாமல் சென்றவள்
பேசத் தயங்குகிறாள்

காயத்தின் வலி என்னவென்று கேட்கிறேன்
மழை பாடிக் கொண்டிருக்கிறது அவளைப் பற்றி

ஈர விறகுகளை எரிக்கும் வித்தையை
அறிந்திருந்த அம்மாவிடம் நான் கற்றதென்ன? பெற்றதென்ன?
என்ற கேள்வி எழுந்து மழையில் நனைகிறது.

நீரின் குரலை நீ அறிய வேண்டும்
என்று சொன்ன தேவதையை நினைக்கிறேன்.

மழையில் முளைத்துக் கொண்மேயிருக்கிறாள்
காயமுடையாள்

முடிவேயில்லாமல்
இனிய துயரின் சங்கீதத்தைப் பாடிக் கொண்டிருக்கிறது மழை.

00

அன்பின் சிறகு

சைக்கிளில் வந்திறங்குகிறது புறா
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

கடையோரமாக அதை நிறுத்தி விட்டு
பறந்து போய்த் தன்னுடைய இணையுடன் சேர்கிறது மரத்தில்

பொங்கியுற்றும் காதல் ரசத்தில்
பழங்கள் மலர்ந்து கொண்டிருக்கின்றன
கிளைகளெங்கும்

எனக்குப் பழங்களும் மலர்களும் ருசிக்கின்றன
அன்பின் வாசனையைக் கொண்டலைகிறேன்
தெரு முழுதும் காலந்தோறும்

அதோ சேர்ந்து பறக்கின்றன புறாக்கள்
ஓ…..
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளும் கூடவே பறந்து கொண்டிருக்கிறது

அது அதிகாலையா அந்தி மாலையா
என்று குழப்பமாகவுள்ளது

அந்த ஓவியனுக்கு எல்லாமே நன்றாகத் தெரியும்.

ஆனால், அவன் அந்தப் புறாக்களோடு பறந்து போய்விட்டானே!

00
உலகின் முதல் ரகசியம்

அவர்கள் வந்து விட்டனர்
நானின்னும் வரவில்லை

அவளும் வந்து விட்டாள்
நானின்னும் வரவில்லை.

ஆனால், அவர்களுடனேயே நானிருந்தேன்

அது ஒரு சிறிய முற்றம்
பிறகு அதை வசதிக்கேற்றவாறு பெருக்கிக் கொண்டோம்
அங்கே ஒரு மரம் முளைத்துப் பழங்களை நிறைத்தது
புக்களைச் சூடினாள் அவள்
வாசனையை உண்டாக்கினேன் நான்
தோட்டமும் முற்றமுமாகிய அந்த இடத்தில்
ஒரு படகின் வடிவத்தில் அமர்ந்திருந்தோம்

மெல்ல அசைந்தபடி நகர்ந்தன எல்லாம்

எல்லோரும் கூடி
ஒன்றாகவே விருந்துண்டோம்
ஒன்றாகவே சேர்ந்து பாடினோம்.
ஒன்றாகவே ஆடி மகிழ்ந்தோம்
இரவின் ஆழத்துள் சென்று
ஒன்றாகவே கனவுகள் கண்டோம்

அவள் என்னை முத்தமிட்டது மட்டும்
தனித்து நடந்தது

யாருமறியாத அத்த முத்தமே
ரகசியமாகியது இந்த உலகத்தில்

அவள் சென்று விட்டாள்
அவர்களும் சென்று விட்டனர்

நான் எங்கே செல்வது?

அந்த ரகசியத்தோடு நானிருக்கிறேன்
யாருமறியாத தொரு ரகசியமாக.

00

வான்மதி செந்தில்வாணன் கவிதைகள் ( அறிமுகப் படைப்பாளி

download (26)

1. பச்சைக் காரத்தின்

பழிச்சொல் தாளாமல்

தலைகவிழ்ந்தே பூக்கின்றன

மிளகாய்ப் பூக்கள்.

2.

தெரியவில்லை

இத்தனை அழகாய்

ஓவியம் தீட்டும் மேகம்

எங்கு ஒளித்து வைத்திருக்கிறதோ

அதன் தூரிகையென!!!

3.

நெடுஞ்சாலையின் நடுவே

குருதிப் பிரவகித்தோட

குடல்சரிந்து வீழ்ந்து கிடந்த

ஒரு செவலை நாயை

எவரோ

சாலையோரமாய் பூத்திருந்த

அந்தச் செவ்வரளிச் செடிக்குக் கீழாக

இழுத்துப் போட்டிருக்கக்கூடும்.

தகவல் தெரிவிக்கும் பொருட்டு

அலுவலகம் விரைகையில்

வழியெங்கும் செத்துக் கிடந்தது

மா நகராட்சி.

4.

இருவரித் தண்டவாளம் ஒன்றினை

தற்காலிகமாய் வானில்

புகைத்துப் போனது

உயரம் தாங்கிய

ஜெட் விமானமொன்று.

ஒரு பறவை

தனக்குத் தெரிந்த ஆகாயத்தை

அதில் எழுதிக்கொண்டிருந்தது.

5.

எழுத அமர்ந்தேன்

வீட்டினுள்

ஒரு கவிதை.

வராமலே நிற்கிறது

வெளிவாசல் கோலமாக!!!

6.

எதிர்பாரா

கை விசுறலில்

வீழ்ந்து கிடக்கிறது

வெண்காகிதத் தாள்மீது

என்னவென்றே தெரியாத

ஒரு எழுத்தாய்

“கொசு”

7.

அலைகள் ஆர்ப்பரிக்காத

வானத்தை

அவசரமாய் விழுங்கியதில்

ஆர்ப்பரித்துக் கிடக்கிறது

ஒரு கடல்

8.

இப்போதைக்கு

நான் எங்கு செல்லவேண்டும் என்பதை

உறுதி செய்தது

பேருந்துப் பயணச்சீட்டு.

ஒருவேளை

எனக்கான

நிறுத்தத்தைத் தாண்டி

இந்தப் பாழும் தூக்கம்

பயணித்துக் கொண்டிருக்குமாயின்

எழுப்பிட வேண்டாம்

என்னை எவரும்.

ஏனெனில்

இதுவே

என் பயணத்தின்

இறுதிச்சுற்றாகவும் இருக்கலாம்

9.

வறண்ட நாவுடன்

சிறிதளவே தண்ணீர் தேங்கிய

அக் குளத்தின்

படித்துறையில் அமர்ந்து

ஒவ்வொரு கல்லாய் வீசிக்கொண்டிருந்தேன் .

கற்குவியலை விழுங்கியும் நிரம்பவில்லை

அதன் வயிறு .

நெடுநேர முயற்சிக்குப் பின்

கல்லடிபட்டுக் கசிந்த

சிற்றுயிர்களின் குருதி கலந்து

செங் குட்டையாய்க் காட்சியளித்தது

மேலெழும்பிய குளத்து நீர் .

சொட்டு உமிழ்நீர்கூட

விழுங்கத் திராணியற்று

ஓடுகிறேன் இப்போது

குளத்திலிருந்து ஆதிக் குளத்திற்கு

சில கற்களுடன்….

10.

வேறொன்றுமில்லை.

திசையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

பயணிக்கவென

நொடிக்கொரு திசையை

சுட்டுகின்றன கைகள்.

மறுத்தலித்து எப்போதும்

பாதைகளற்ற திசையில்

பயணிக்கத் துணிகின்றன கால்கள்.

எட்டாத திசைக்கு ஏணி வைக்க

சிரத்தை கொள்கிறது

எப்போதும் மனது.

முடிவு செய்துவிட்டேன்.

திசைகள் பலவாய் இருந்தால் என்ன?

இருக்கும் இந்த ஒற்றை வானின்கீழ்

சளைக்காமல்

வாழ்ந்துவிட்டுப் போவதென.

••••

_

இராசேந்திர சோழனின் யுத்தக் களம் / நாகரத்தினம் கிருஷ்ணா

images (2)

அஸ்வகோஷ் என்ற புனைமெயரில் எழுதியவர். இராசேந்திர சோழனும் புனைபெயாக இருக்கலாம். பெயருக்கேற்ப, எதிராளியை வீழ்த்த மற்போரிலோ, சொற்போரிலோ இறங்க வேண்டிய அவசியங்களற்ற அரச குல பண்பை உடலிலும் முகத்திலும் தாங்கும் கம்பீரமானத் தோற்றம். தம் தோற்றத்தைக்கொண்டே எதிராளியை சுலபமாகத் தோற்கடிக்க இயலும், அனல்வாதம் புனல்வாதம் போன்றவற்றிர்க்கு எவ்விதத் தேவையுமில்லை. நல்ல உயரம், அதற்கேற்ப உடல்வாகு, ஈரத்துடன் மினுங்கும் கண்கள், கூரிய மூக்கு, அதை உதட்டிலிருந்து பிரிக்க வரப்புபோல ஒரு மீசை. இடையில் வாளும், தலையில் கிரீடம் மட்டுமே இல்லை, இருந்திருந்தால் இராசேந்திர சோழனல்ல, இராஜராஜ சோழன்.

இராசேந்திர சோழன்போல கம்பீரமானதொரு எழுத்தாளரை நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோருக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்ல யாருமில்லைஅவருடைய சிறுகதையொன்றில் . « தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார் » என்று ஒரு வரியைப் படித்த நினைவு. அதுபோலத்தான் முதன் முதலில் சந்தித்தபோது இருந்தார்.

அன்று எழுத்தாளர் பிரபஞ்சனுடன் கடற்கரையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தேன். தலைமைத் தபால் நிலையத்திற்கு எதிரே சரியாகச் சொல்ல வேண்டுமெனில், மத்திய தொலைபேசி இணைப்பக அலுவலகத்திற்கு எதிரில், AITUC கொடிக்கம்பத்திற்கு அருகில் அவரைச் சந்தித்தேன். ஒரு தொழிற்சங்கவாதிபோலவே இருந்தார். கணிரென்ற குரல். பிரபஞ்சன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். இரண்டொரு நிமிடங்கள் உரையாடியிருப்போம்,பின்னர் அவர் கிழக்கு திசையிலும், நாங்கள் மேற்கு திசையிலுமாக நடந்தோம். சில ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் ஹைக்கூ தமிழ் மணி, மொழிபெயர்ப்பாளர் வெங்கட சுப்புராய நாயகர் ஆகியோர் உதவியால் மயிலத்தில் அவருடையை இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இனிய குடும்பம், அன்பான உபசரிப்பு, என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் அதுவுமொன்று.

2017 இரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு.மேற்குலகையும் அமெரிக்காவையும் வீழ்த்த மாசேதுங்கின் சீனா தனியுடமையை சுவீகாரம் எடுத்துக்கொண்டிருக்க, லெனின் அறைகூவலில் கிளர்ந்தெழுந்த சோவியத் மண்ணில் சோஷலிஸம் இன்று நேற்றய சரித்திரம். பனிப்போரை மறந்து, உலகமயமாக்கலுக்கு உரமூட்டுவதெப்படி என்ற விடயத்தில் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு பேதமின்றி நாடுகள் கைகோர்த்துள்ள 21ஆம் நூற்றாண்டு. அல்பெர் கமுய்யில் ஆரம்பித்து இராசேந்திர சோழன்வரை பொதுவுடமை ஸ்தாபனத்தின் மீதும், அதன் அபிமானிகளித்திடத்திலும், கொண்ட கோபமும் குமுறலும் நியாயமானவை என்பதை வரலாறு உறுதிசெய்துள்ள காலகட்டம் இத்தகைய சூழலில் இராசேந்திர சோழனைப் பற்றி எழுதுவதும் பொருத்தமானதுதான்

இராசேந்திர சோழன் மற்றுமொரு சு. சமுத்திரம். கலையும் படைப்பிலக்கியமும் மக்களுக்காக என வாதிடும் பரம்பரையைச் சார்ந்தவர்கள். தங்கள் படைப்புக்களை அத்தகைய கண்ணோட்ட த்துடன் படைத்தவர்கள். மனித வாழ்க்கையின் அலங்காரத்தை மட்டுமின்றி அவலங்களையும் தமது படைப்பில் சொல்லப்வேண்டிய கடமை படைப்பிலக்கியவாதிக்கு இருக்கிறது. அறுபதுகள் வரை நவீன தமிழ் இலக்கியம் மேலை நாடுகளில் ஆரம்பத்தில் எழுதப் பட்டதைப்போலவே மேட்டுக்குடியினரின் வாழ்க்கை முறையை, வாழ்க்கைப் பார்வையை படைப்பில் மையப்படுத்தி அல்லது அவைகளை மையமாக வைத்து, விளிம்பு நிலை மக்களை முற்றாக நிராகரித்து இதுதான் தற்கால தமிழர்களின் வாழ்வியல், சமூக நெறிகள் என்று சொல்லப்பட்டன. கர்நாடகச் சங்கீதம், அலுவலகம், வற்றல் குழம்பு, சந்தியா வந்தனம் அத்திம்பேர், பட்சணங்கள் புனைவுகளிலும், சிறுகதைகளிலும் சாகாவரம் பெற்றிருந்தன. இவற்றிலிருந்து முரண்பட்டு ஜெயகாந்தன் சேரி மக்களுக்கு இலக்கியத்தில் இடம் அளித்திருந்தார். அவரும் பொதுவுடமை ஸ்தாபனத்தின் பிரதி நிதி என்றபோதிலும் எஜமான் தொனியில் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதினார். விளிம்பு நிலை மக்களை புரிந்துகொள்ள அவரெடுத்த முயற்சிகள் எல்லாம், பரிசோதனை முயற்சிகள்.

அவர்களில் தன்னை ஒருவராகக் கண்டு எழுதியதல்ல. ஆனால் சு. சமுத்திரம் போன்றவர்கள் தாங்களும் அந்த அடித்தட்டு மக்களில் ஒருவர் என்ற உணர்வுடன் படைத்தவர்கள். அத்தகைய பண்பை நமது இராசேந்திர சோழனிடம் காண முடிந்தது. அதேவேளை எழுத்தாற்றல்,கதை சொல்லும் திறன் இரண்டிலும் தனித்தன்மையுடன் பிரகாசிக்கிறார். இது இராசேந்திர சோழனுடைய பலம் மட்டுமல்ல பலவீனமும் ஆகும்.

படைப்பாளியின் குடும்பம் மற்றும் சமூகச் சூழல், கல்வி, அக்கல்வியைக்கொண்டு அவர் வளர்த்துக்கொண்ட சிந்தனை, அலுவலகம், அவர் தெரிவு செய்த நண்பர்கள், வாசித்த நூல் கள் அனைத்திற்கும் படைப்பை உருவாக்கியதில் பங்கிருக்கின்றன. ஒரு பக்கம் அதிகாரம் அ நீதி, அறசீற்றம் என வெகுண்டெழும் எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கை என்ற ‘ யாக அவிற்பாகத்திற்கு’ வரிசையில் நிற்பதை காண்கிறோம். இராசேந்திர சோழனின் சிறுகதைகள் ஆகட்டும், நெடுங்கதைகள் ஆகட்டும் இரண்டுமே அவரை சமூக உணர்வுள்ள மனிதராக, சகமனிதன் கரையேற கைகொடுக்கும் மனிதராகச் அடையாளப்படுத்துகின்றன.

இராசேந்திர சோழன் சிறுகதைகள்

முனைப்பு : தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டும், என்ற உணர்வில் எழுதப்பட்ட கதை. தமிழ் இன உணர்வாளர்கள் கூட்டிய மாநாட்டில் சிறுகதை நாயகனும் கலந்துகொள்கிறான் நண்பகல் இடைவேளையின்போது வழங்கப்பட்ட உணவுப்பொட்டலத்தைப் பிரித்தவண்ணம் :

« அதே பேச்சாளர்கள் அதேபேச்சு இப்படி மாநாடு நடத்திக்கினு இருந்தா எப்பத்தான் விடிவு காலமோ.. » என்கிறான். « நம்மகிட்ட என்ன செயல் திட்டம் இருக்கு அதை நடைமுறை படுத்த. அது இல்லாத வரைக்கும் சும்மா வாயாலேயே பேசிக்கினு இருக்க வேண்டியது தான் » என்ற நண்பரின் பதிலுக்கு, « எல்லாரையும் ஒரு சேர சந்திக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு அதை த் தாண்டி வேற என்ன ? » என்பது அவன் அங்கலாய்ப்பு. தம்முடைய அன்றாட வாழ்க்கையில் தமிழ்ச் சொற்களை மட்டுமே பாவிப்பது எனத் தீர்மானித்து அவன் படும் சங்கடங்களை ஆசிரியர் அழகாகச் சொல்லிக்கொண்டு போகிறார்.

சூரப்பன் வேட்டை : பெயரைக்கொண்டே சட்டென்று நம்மால் எதைப்பற்றி ஆசிரியர் பேசுகிறார் என்பதைச் சுலபமாக விளங்கிக் கொள்கிறோம். நாட்டின் அத்தியாவசிய பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்ப அன்றைய அரசு எடுத்துக்கொண்ட முயற்சியே வீரப்பன் வேட்டை என்பதை த் துணிச்சலுடன் சொல்லும் கதை. நேர்மையான சமூக உணர்வுள்ள எழுத்தாளனுக்கு வரும் கோபத்துடன் எழுதியிருக்கிறார். அந்தக் கோபத்திலும் இராசேந்திர சோழன் தமது வழக்கமான எள்ளல் மொழியைக் கையாள மறப்பதில்லை. ஏமாளிதேசம், ஏமாற்று தேசம் வஞ்ச்சகப் பேரரசு, சூரப்பன், தடாலடிப்படை என்ற உருவகப்படைப்பில் ஒளிந்திருப்பவர்கள் யார் என்பதை விளங்கிக்கொள்வதில் அதிக சிக்கல்களில்லை. இக்கதையில் :

« தேடுதல் வேட்டையின் போது ரம்மியமான காலைப்பகுதியில் வீசும் மெல்லிய இளங்க்காற்றில் இயற்கைக்கு மாறான ஏதோ ஒரு துர் நாற்றமும் கலந்து வருவதாக உணர்ந்த தடாலடிப் படைத் தலைவர்……..இது காட்டு விலங்குகள் விட்டதாகவே இருக்க முடியாதென்றும், அதே வேளை இது பருப்பு, சாம்பார், காய்கறி உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருபவர்கள் விட்டதாகவும் தெரியவில்லை. காடை, கௌதாரி…..உடும்பு அயிட்டங்களாகவே தெரிகிறது என்றும்…..தொடர்ந்து காட்டில் வாழ்பவர்களுக்கே இது சாத்தியமென்றும், எனவே சூரப்பனோ அல்லது அவர் கும்பலைச் சேர்ந்தவர்களோ விட்டதாகத்தான் இருக்க முடியுமென்றும் சொன்ன அவர் இதை உறுதிச் செய்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அயிட்டத்தை ஆய்வுக்காக கண்ணாடிக் குப்பியில் அடைத்து வல்லுனர் முடிவுக்கு அனுப்பியுள்ளதாகவும் ….உறுதியானால் இன்னும் ஆறுமாதத்திற்குள் அவனைப் பிடித்து விடுவது நிச்சயம் என்றும் அறிவித்திருந்தார் » என்பது எள்ளலின் உச்சம்.

சவாரி :

இராசேந்திர சோழனின் சிறுகதைகளில் நான் மிகவும் விரும்பி வாசித்த சிறுகதை. கி மாப்பசானை நினைவூட்டும் மொழி நடை.

த.கு கட்சியின் தலைமைக் குழு கூட்டம். « அஜண்டாவைச் சொல்லுங்க தோழர் » என்கிறார், உறுப்பினர்களில் ஒருவர். « வழக்கமான அரசியல் போல அறிக்கை எல்லாம் வேணாம். இண்ணையக் கூட்ட த்துலே ஒரே ஒரு சப்ஜெக்ட் தான், குதிரைப் பிரச்சினைன்னு அது மட்டும் போதும், அதுலியெ உட்பிரிவா அ.முகம், ஆ.வயிறு, இ.கால்கள், ஈ. வால், உ. சூத்துன்னு அத மட்டும் போட்டுக்குங்க போதும் », என்கிறார் மற்றவர்

« இயக்கப்பணிகள் பொருட்டு தலைமைக்குழு தோழர்கள் அவ்வப்போது வெளியூர் பயணங்களை மேற்கொள்வதில் பல்வேறு இடர்ப்பாடு…..இச்சிக்கலைத் தீர்க்க கட்சிக்கு குதிரை ஒன்று வாங்குவது என்றும், முக்கியமான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் த.கு தோழர்கள் இக்குதிரையைப் பயன்படுத்திக்கொள்வது என்றும், த.கு.வில் முடிவு செய்து » தலைமைகுழுப் போட்ட தீர்மானத்தை மாவட்ட வட்ட குழுக்களும் வழிமொழிகின்றன. பிறகு வழக்கமான அரசியல் கூத்துகள். ஒரு நல்ல சாதிக்குதிரையை வாங்க ‘குதிரை நிதி’ திரட்ட அது குறித்த ஆதரவுகள் எதிர்ப்புகள் என்று நீளும் கதையில் நாம் செய்தி த் தாள்களில் வாசிக்கிற அத்தனை அசிங்கங்களும் அரங்கேறுகின்றன. நல்லதொரு அரசியல் நையாண்டி கதையை படித்த மகிழ்ச்சி.

பிரார்த்தனைகளும் பிரசாதங்களும் :

மா நாடுகளைப் பகடி செய்யும் கதை. அரசியல் மா நாடு என்றில்லை, பொதுவாக இங்கு அனைத்துமே கிடைத்த நிதியை செலவு செய்ய அரங்கேற்றும் காரியங்கள். எவனோ செத்திருப்பான், ஈமச் சடங்குகளில் தங்கள் தங்கள் உறவுக் காரர்களுக்கு தலைக்கட்டுதல் கன ஜோராக நடைபெறும். அதன் மாற்று காட்சிதான் இந்த மா நாடுகள். இந்த லட்சணத்தில் மைக்கைப் பிடித்துக்கொண்டு அடுத்தவன் முதுகில் அழுக்கைத் தேடுவார்கள். மா நாட்டின் முடிவில் என்ன உருப்படியாக நடந்தது, எனத் தேடினால் ஒன்றுமிருக்காது.

« என்னப்பா மா நாடெல்லாம் எப்படி » என நண்பனைக் கேட்கிறான் மா நாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாத கதை நாயகன்.

« ரொம்ப சிறப்பா இருந்த து. மூன்று நாளும் என்.வி. தான். மொத நாள் மீன் குழம்பு. ரெண்டாம் நாள் சிக்கன் , மூணாவது நாள் மட்டன் கூடவே வட பாயாசம் வேற » என் கிறான் சினேகிதன். இவன் சிரித்து « ஏம்பா அதையா கேட்டேன் மாநாடு எப்படி இருந்த துன்னா » என் கிறான். « எல்லாம் வழக்கம் போலத்தான் » என்கிறவன், « மா நாட்டிலே எல்லாருக்கும் பஞ்ச்சாமிர்தம் கொடுத்தாங்க . நம்ப தோழர் ஒருத்தர் பஞ்சாமிர்த வியாபாரம் பண்றாராம். வெளி மார்க்கட்டுல வெல அமபது ரூபா. நம்ப தோழர்களுக்கு பத்து ரூபா சலுகை » என இராசேந்திர சோழன் எழுதுகிறபோது, சோரம் போகாத எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேர் எக்காலத்திலும் தோன்றுவார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கிறார்.

விசுவாசம் : தெரு நாய் ஒன்றின் விசுவாசம் பங்களா நாயாக மாறியதும் இடம் மாறும் அழகு மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ள து. தெரு நாய்தான் கதை நாயகன் அல்லது கதை நாய்கன். நாய், குரைப்பு, அதனை அறிந்த மனிதர்கள் என்று மூன்று தரப்பினருக்கிடையே நிகழும் சம்பவக் கோர்வை ஆழமான சமூக பார்வையுடன் கதையாகச் சொல்லப்படுகிறது. இராசேந்திர சூழன் படைப்பு குறித்து ஆய்வு செய்பவர்கள், சிறுகதை எழுத ஆர்வமுள்ள இளைஞர்கள் கட்டாயம் படித்துப் பார்க்கவேண்டிய கதை.


இராசேந்திர சோழனின் நெடுங்கதைகள்

தமிழினி வெளியீடான ஒரு நூலில் அவருடைய மூன்று குறு நாவல்கள் உள்ளன. சிறகுகள் முளைத்து, 21 வது அம்சம், பரிதாப எழுத்தாளர் திருவாளர் பரதேசியார் பண்டித புராணம்.


சிறகு கள் முளைத்து :

அக்காள், அம்மாள் என பாஸ்கரன் என்ற இளைஞனுக்கு ஆதரவாக இருந்த பெண்கள் இருவரும் அவர்கள் சேர்ந்த சமூகம் எதிர்பார்க்கிற அல்லது விதி திருக்கிற நெறிமுறைகளை மீறுகிறார்கள். இம் மெய் நிகழ்வினை ஏற்றுக்கொள்ள திரானியின்றி மனதில் ரணத்துடன் நாட்களைக் கழிக்கிற இளைஞன் வாழ்க்கையில், அவனுக்கு ஆறுதலாக இளம்பெண் ஒருத்தி குறுக்கிடுகிறாள். இவனும் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை மறந்து காதல் வயப்படுகிறான். கடைசியில் அவளுங்கூட முதல் காதல் நிறைவேறாதுபோனதால் தன்னிடம் வந்தவள் என்ற உண்மையை அறியவரும்போது, அதனை பேரிடியாக நெஞ்சில் வாங்கிக்கொள்கிறான். அழுதகண்ணீரும், சிந்திய மூக்கும் என்கிற வாய்ப்பாடுகளை மறந்து, எளிமையான மொழியில் சொல்லப்பட்ட கதை.

21 வது அம்சம்

எழுபதுகளின் மத்தியில் அமலான நெருக்கடி நிலையையும், அப்போதைய மத்திய அரசின் இருபது அம்சத் திட்டங்களையும் பரிகசிக்கும் கதை. இக்கதை பிரச்சினையுள்ள காலத்தில் வெளிவரவில்லை என்று தெரிகிறது. வந்திருந்தால் எழுதியவருக்கும் பெரும் பிரச்சினையாக மாறியிருக்கும். சுப்பராயன் என்ற ஏழை குடியானவனுக்கு கரம்பாக க் கிடக்கும் நிலங்களை உழுது பயிரிட கடனுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று முனைப்புடன் ஆசிரியர் பணியிலிருக்கும் ராமச்சந்திரன் என்பவர் எடுக்கும் முயற்சிகளையும், அவருடன் சுப்பராயனும் அவன் தகப்பனும் ஒவ்வொரு வங்கியாக ஏறி இறங்கி படும் துயரங்களையும் ஆசிரியர் சொந்த அனுபவம்போல சித்தரிக்கிறார்.இப்பிரச்சினைக்கிடையில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் குறியீட்டை எட்ட அறுவைச் சிகிச்சைக்கு ஆட்களைப் பிடிக்க ஆசிரியர்கள் பட்ட வேதனைகளையும் பார்க்கிறோம். வாசக்டமி என் கிற ஆண்களுக்கான அறுவைச் சிகிச்சைக்குக் கிழம் கட்டைகளையெல்லாம் ஏமாற்றி அறுவைச் சிகிச்சை செய்த கதைகள் ஏராளம்.

இராசேந்திர சோழன் குறு நாவல்களிலும் பார்க்க சிறுகதைகளில் கூடுதலாகப் பிரகாசிக்கிறார்.

உதவியவை :

1. http://www.sirukathaigal.com

2. இராசேந்திர சோழன் குறு நாவல்கள், தமிழினி , சென்னை 14

-

சுரேஷ் பரதன். கவிதைகள்

download (42)

1. இரகசியங்கள் ஜொலிக்கின்றன…

இரகசியமாய் ஒளித்து வைத்திருக்கிறேன்
சில இரகசியங்களை இதயத்தின்
ஓர் அறையில்.

அவ்வறையில்
ஒரு இரகசியத்தின் இரகசியம்
இன்னொரு இரகசியம்
அறியா வண்ணம்
ஒவ்வொன்றிற்கும் காவலாய்
ஒரு தேவதை இருக்கிறாள்.

அந்தத் தேவதையோ
தான் காவல்புரியும்
இரகசியத்தின் சாரங்களை
அணிகலனென அணிந்திருக்கிறாள்.

ஒவ்வோரு தேவதைக்கும்
ஒவ்வொரு அணிகலன்.

அந்த தேவதைகள் தங்கள்
இரகசியத்தின் கானங்களை
என் காதோரம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சில சமயங்களில் அப்பாடல்கள்
இரகசியத்தின் விடுதலை
குறித்தவையாய் இருக்கின்றன.

என்றைக்கு ஒரு இரகசியம்
விடுதலையடைகிறதோ
அன்றைக்கு அந்த தேவதை
என்னிலிருந்து பறந்து செல்கிறாள்.

இதோ எப்போதும் என்னைச் சுற்றிப்
பறக்கும் தேவதைகளைப் பாருங்கள்.
அவர்களின் அணிகலன்கள்
எவ்வளவு அழகாய் ஜொலிக்கின்றன.

2. குரூரத்தின் மிகுதி

உடலின் குருதியை
நெற்றி வியர்வையாய்
உருமாற்றியவன்
நிலத்தை ஈரப்படுத்தி
பசியோடு கண் துஞ்சுகிறான்.

புறங்கையை தலையணையாய் மாற்றி
உறங்குபவனின் அருகில்
அமைதியாக படுத்திருக்கிறது
சமூகப் பிறழ்வின் அகங்காரங்களைச்
சுக்குநூறாய் உடைத்தெரியும்
கனத்த சுத்தியல்.

சற்றுமுன்னர் அவன்
உடைத்த பாறையிலிருந்து
சிதறி தனியே தெறித்து விழுந்த
சிறுகல்லொன்று
பொருளாதார கோலியாத்தின்
நெற்றிப் பொட்டை
குறியாய் தாக்கும்
டேவிட்டின் கவணுக்கென
காத்திருக்கிறது.

3. தவறாத குறி

இதோ இந்த மேஜை மேல்
வைக்கப்பட்டிருக்கும் தோட்டா
ஒரு நைன் எம்மெம் ரிவால்வரிலிருந்து
வெளி வந்த ஒன்று.

சுற்றியிருக்கும் இரத்தக் கறை
அது சுடப்பட்டு நேரமாகவில்லை யென
தெரிவிக்கிறது.

இந்த தோட்டாவைக் கொண்டு
அதன் உரிமையாளரை வெகுச்
சுலபமாக கண்டுபிடித்துவிட முடியும்.
சுட்டவனை அல்ல.

அந்த இரத்தக்கறைகளை துடைத்து பாருங்கள்.
ஒருவேளை அதில் பெயரெழுதியிருக்கக் கூடும்.

ஒவ்வொரு கோதுமையிலும் அதைப்
புசிப்பவனின் பெயரிருக்குமாமே
அதைப் போல.

நிசமாகத்தான் சொல்கிறீர்களா..

நீங்கள் ஏன் உங்கள் தொப்பிகளை
கழற்றிக் கையிலடுத்து நெஞ்சோடு
அணைத்துக் கொள்கிறீர்கள்..

அதில் … அதில்…

என் பெயரா எழுதியிருக்கிறது.

~~~

அலையுமொரு இலையாய் கவிதைச் சொல்லியின் குரல். : எஸ்.சண்முகம்

download (40)

விதானத்துச் சித்திரம்
ரவிசுப்பிரமணியன்

1.

நமது அன்றாட வாழ்வின் நிச்சயமற்ற கணங்களை ஒரு சில தருணங்களில்தான் நாம் விழிப்புடன் எதிர்கொள்கிறோம். பல சமயங்களில் அவை நமது நினைவிலியில் தேங்கிவிடுகின்றன. பெருநகரத்தின் மிதமிஞ்சிய ஒலிப்பெருக்கத்தின் மத்தியில், மனம் விழையும் துளி நிசப்தத்தைத் தரக்கூடிய யாவுமே நமக்கு அணுக்கமானதுதான். ஒரு நெடிய நாளை; நாம் விரும்பாத பலவற்றுடன் செலவழித்துவிட்டு திரும்பி பார்க்கையில் எஞ்சும் பூதாகாரமான வெறுமையின் இருள் படர்ந்து விடுகிறது. இந்நிலையில் பரவசமளிக்கும் ஒரு மெல்லொளியாய் சில கவிதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. அப்படியொரு கவிதைத் தொகுதியை ’விதானத்துச் சித்திரம்’ சமீபத்தில் நமக்கு வழங்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன்.

தனது முந்தைய கவிதைகளின் மொழியின் கவித்துவப் பண்புகளிலிருந்து முற்றிலும் விடுப்பட்ட கவிதைகள் இப்புதிய தொகுதி நமக்களிக்கிறது. கவிதைசொல்லியின் மொழி வாசக மனதில் கட்டமைக்கும் ஒரு காட்சிப் படிமத்திற்கும் அதன் வாசகனுக்கும் இடையே நிலவும் வெளியை ரவிசுப்பிரமணியத்தின் கவிதைப் பிரதிகள் அழிப்பாக்கம் செய்துள்ளன. அதீதமான வெளிப்பாட்டு பதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. கவிதை தோற்றுவிக்கும் உணர்வு வெளியும் பிரதியும் ஒருவித மொழி இணக்கத்துடன் இயங்குகின்றன. படிமங்கள், உருவகங்கள், குறியீடுகள் என இனம்காணும் பிரயத்தனத்தையும் இவை தவிர்த்துள்ளன. கவிதைப் பிரதிகளை வாசித்து முடித்ததும் அதன் சுழற்சியின் விளைவாக படிமங்கள் மனவெளியில் கிளர்ந்தெழுந்து கவிதையனுபவத்தைக் கூட்டுகிறது. ஏற்கனவே நினைவில் பதிந்திருந்தவை மீள் -நினைவுறுத்தல் போன்று கவிதை சொல்லியின் குரல் ஒலிக்கிறது.

2.

விதானத்துச் சித்திரம் கவிதைத் தொகுதியில் உள்ள சில கவிதைகள் குறித்து இங்கு பேசலாம். ’அவ்வளவுதான் எல்லாம்’ என்ற கவிதையைக் காண்போம். நித்தம் நாம் எதிர்கொள்ளும் மின்வெட்டு எனும் நிகழ்வு இவ்வாறு கவிதை இயக்குகிறது.

மின்சாரம் போய்விட்டது
கதவுகளைச் சாத்தாதே
மெழுகுவத்தி வேண்டாம்
சீமெண்ணை விளக்கைத் தேடாதே

***************************

********************************

இருள்
திகில் கலந்த அமானுஷ்யமானதால்
காற்று நின்று விடுகிறதா என்ன?

ஒளி அடங்கிய பின்
புது ஒலிகள்
புறத்தில் கேளா ஒலிகள் அகத்தில்

இதோ மின்சாரம் வந்துவிட்டது
சிரிக்கிறாய்
அவ்வளவுதான் எல்லம்.

ஒளிநிறைவிலிருந்து ஒரு மின்வெட்டால் உருவாகும் இருள் என்ற வெளியில் கவிதைத் தன்னைக் கட்டியமைக்கிறது. இது அமானுஷ்யம் என்ற உணர்வினைத் தோற்றுவிக்கிறது. பின்னர் ஒளி அடங்கிய பின் என விரிந்து புறத்தில் கேளாத ஒலிகள் அகத்தில் என்பதினால்; மேலே சொல்லப்பட்ட அமானுஷ்யம் அக – ஒலிகளாக இங்கு பதிலியாகப் படிவப்படுத்தப்படுகிறது. மனித உணர்வின் எல்லையைத் தகர்க்கும் விதமாக மீண்டும் மின்சாரம் வருகிறது. ‘அவ்வளவுதான் எல்லாம்’ எனும்படியான அமானுஷ்யம் இடையறாது நிகழ அல்லது அதைத் தோற்றுவித்த இருள் / திகில் / ஒளி அடக்கம் / ஆகிய சொற்கள் எல்லாம் அவ்வளவுதான் என்று கவிதை மொழிந்து முடிகிறது. இக்கவிதை நிகழ்த்தும் ஒருவகை மொழியாட்டத்தின் திறவுகோலை ரவிசுப்பிரமணியன் ’கண்களை மூடு’ என தனது கவிதையில் பொதிந்து வைத்துள்ளார். இதேபோல் இவரது மற்றொரு கவிதையையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ’முதல் தகவல் அறிக்கை’ பிரதியில் வரும்

அவன் இறந்து போனான்
அவ்வளவுதான் சொல்ல முடியும்.

என வருகிறது. இந்த ’அவ்வளவுதான்’ என்ற சொல்லை இவர் பிரயோகிக்கும் விதம் மிகவும் பிரத்யேகமானது; அவ்வளவுதான் என்பதில் அளவற்ற அர்த்த சாத்தியங்கள் அடங்கியுள்ளன. ஒரு தத்துவார்த்தமான சமனைக் கொண்ட மனோநிலையில் பெரும் பேசாமையை முன்நிறுத்துகிறது.

download (39)

3.

நகர சாலைகளில் அன்றாடம் சுயம் தொலைத்து திரும்பும்போது குறுக்கும் மறுக்குமான சாலைகள் தெளிவின்மையின் வரைபடமாய் உருப்பெறுகிறது.

நமது தன்னிலையானது சிதறடிக்கப்பட்டு பன்மைப்படுகின்றன. பூர்வ – நிலத்திலிருந்து பெயர்ந்து நகரத்தின் தார்ச்சாலையின் ஓரங்களில் பதுமையாய் நடப்பட்டிருக்கும் செடிகளாய் நம்மை நாமே சில தருணங்களில் உணர்கிறோம். அவ்வாறான வேர்பிடிப்பற்ற நகர வாழ்வின் அவலத்தை முன்னிறுத்தும் மற்றொரு கவிதை :

மெல்லிய இலையும்
நறுமணப் பூவும்
துளிர்க்கும் அழகும்
செளந்தர்யம்

வேரோடு பிடுங்கி
துர்நாற்ற நதியோடு
அழுக்கு நீரைக் குடித்தன வேர்கள்
அமிலக்காற்றில் ஆடின இவைகள்
கறுத்து சிறுத்து சுருங்கின தளிர்கள்
எல்லாம் கொஞ்சம் காலம்தான்

இலையும் மணமும் குணமும் மாறி
தளுதளுத்து வளர்கிறது
மேலும் ஒரு மாநகரச் செடி.

இக்கவிதை தன்னளவில் ஒரு காட்சியை நமக்கு புலப்படுத்துகின்றன. இதன் அடிநாதமாக வேறொரு குரலை கவிதைசொல்லி மீட்டுகிறார். அது இடம்பெயர்ந்து மாநகரத்தில் தனது பூர்வாங்கத்தின் சகல பிரத்யேகத் தன்மைகளாலான நிலத்தின் குணத்தையும் / மணத்தையும் மாற்றிக் கொள்ளும் சூழலில் தனித்து நிற்கும் ஒருவனைக் குறியீடாக்குகிறது ’மாநகரச் செடி’.ஒரு வாசிப்பில் இடம்பெயர்ந்த ஒருவனின் அகமும் மற்றும் புறமும் அந்நியத்தைக் கவிதை அத்துணைக் கச்சிதமாக மொழிவயப்படுத்தி உள்ளது.

மாநகரச் செடி கவிதையின் புலம் என்பது மறக்கப்பட்ட நிலையின் வடிவமாக ‘கிரஹ சுழற்சி’ யில்

குளத்துநீர் ஸ்படிக நன்னீராய் மாறுகிறது
மேனியழகைப் பருகிய மீன்கள்
எம்பித் துள்ளிக் குதூகலிக்கின்றன
மென்முலைகள் தளும்பக் கண்டு
சூரியனும் இளம் பதத்திற்கு மாறுகின்றன

ஈர அடியைக் கரையில் வைக்க
மண்ணெல்லாம் புல்லாகிச் சிரிக்கிறது.

என்ற வரிகளில் மாநகரம் என்பதின் எதிரிடையான நிலப்பரப்பின் ஒருபகுதியை சித்தரிக்கிறது. வறட்சியான நகரத்திற்கு நேரெதிர் பண்பின் குறியீடாக ஸ்படிக நன்னீர் விரிகிறது. நினைவு தொலைந்த நிலத்தின் மீதான நாட்டத்தை ரவிசுப்பிரமணியனின் கவிதையாடலாக உருமாற்றுகிறது.

4.

கவிஞர் ரவிசுப்பிரமணியனின் விதானத்துச் சித்திரம் கவிதைத் தொகுதியில் அதிகமாய் பயின்றுவரும் இசையைக் குறிக்கும் பகுதிகளைப் பற்றி; இசையை நன்கறிந்தவர்கள் விரித்து எழுத வேண்டும். ஆகையால் அப்பகுதிகளைக் குறித்து இங்கு நான் விவாதிக்கவில்லை.

5.

மற்றைய கவிதைகளில் பிரதானமாக வெளிப்படும் கவித்துவ புலங்களில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இத்தொகுதியை மீண்டும் மீண்டும் வாசித்ததில் என்னை ஈர்த்த கவிதைகளில் கவிதைசொல்லியின் (ரவிசுப்பிரமணியனின்) ’தன்னிலை’ என்பது நகரத்திற்கும் / பூர்வநிலத்திற்கும் இடையே எவ்வாறு பரிதவிக்கிறது என்பதே முக்கியமாகப்பட்டது. மேலும் அரூபமானவைகளுக்கும் பருண்மையானவைகளுக்கும் மத்தியில் இவரது கவிதைமொழி இடையாடுகிறது. அணிலாய் உருவெடுத்த அன்பு / முகம் தெரியா அதிதி ஆயினும் / புலன்களுக்கும் அகப்படாத ஸ்தூலமான பிறவி அவன் / பார்வைக்கு அறியா தளத்தில் அவனும்/ என வரும் இவ்வரிகள் கவிதைகள் பலவற்றிலும் வருபவை. அரூபமும் x பருண்மையும் மொழியுள் இயைந்து உருவாக்கியுள்ள இடையறாத கவித்துவ இடையாட்டம் ரவிசுப்பிரமணியனின் கவிதைப் பிரதிகள், இறுதியாக

கவிந்த மெளனத்தை

நீளும் அமைதியைச்

சரசரவென கீறியபடி

இருவருக்குமிடையில்

காற்றில் அலையுதொரு இலை.

கவிதைப்பிரதிக்கும் x வாசகனுக்கும் இடையே அலையுமொரு இலையாய் கவிதைசொல்லியின் குரல்.

நான்கு கவிதைகள் – ஷாஅ

images (1)

மற்ற மழை

யாருமில்லை. தெருவில்

தனியாகப் பெய்து கொண்டிருக்கிறது மழை

எங்கோ ஒண்ணு ரண்டு குடையின் கீழ்

நிதானமாக

நகர்கிறது ராத் திரி

அப்போதிருந்து ஒருக்களித்து நிற்கும் வாசலில்

ஆயீரம் துளியையும் தொட்டுச்

சுடர் விடுகின்றன கண்கள். அம்

மின்னல் வெட்டிய ஓரிமைப் பிறப்பில்

அங்கிருந்தும் இங்கிருந்தும்

மேல் உரசாமல் உள்ளே

மர்மமாய் நுழைந்தது எத்தனை மழை

ஒரு மழை கண்ணாடி

ஒரு மழை நாற்காலி

ஒரு மழை வரியோடும் தாள்

ஒரு மழை படுக்கை

மற்ற மழை

மற்ற மழையாக தூங்கச் செல்கிறது

திறந்து திறந்து வளரும் அறையில்,

தவிர

யாருமில்லை

அந்தப் பக்கம்

மூன்று நான்கு சுற்று நடந்து வந்து

மரமருகே

கூடிப்பேச அமர்கிறார்கள் அவர்கள்

பின்னால்

நீளமான கற்சுவர்

ஒருவன் நினைக்கிறான்

சுவற்றின் அந்தப் பக்கம் என்ன இருக்கிறது

மற்றவரில் அடுத்தவன்

மற்றவர்க்கு முகம் திரும்பிக் காட்டுகிறான்

காற்று மரம் புகுந்து சலசலத்தது

கீழே

வரிசையாக நான்கு நிழல் ஒரு கல்லிருக்கை

முன்னால் மைதானம்

பிடிபடாமல் தாண்டி ஓடுவது ஒவ்வொன்றும்

அந்தப் பக்கம் மறைந்தது

சுவற்றுக்கு

எந்தப் பக்கம் அந்தப் பக்கம்

பறத்தலின் நிறம்

படவில்லை பார்க்கவில்லை

பறந்துபோகும் பச்சைக் கிளியின்

நிறம் என்ன

தோன்றி மறைந்து தோன்றி

மறையும் ஆகாயக் கோட்டினுள்

சிமிட்டலின் தூரிகை பிடித்து

யாரேனும் வரைந்து காட்டுங்களேன்

ஒரு சொட்டு நொடி தெறித்தாலே போதும்

ஒப்பிலா வடிவில்

காத்திருந்து கனிந்த பழத்தைக்

கை நீட்டி

கொத்தும் அலகிற்குக் கொண்டு தருவேன்

ருசி பற்றி

சிலிர்க்கும் அச்

சித்திரத்தைப் பார்த்து

நானும் அப்போது குதூகலம் ஆவேன் சொல்வேன்

தையல் புரியாத வானில்

கிளி விட்டுச்செல்லும் பறத்தலின் நிறம்

பசேல்

மலை ஏறும் நண்பன்

மலை ஏறும் நண்பா

எனக்கும் ஏறத் தோணுது என்றதும்

இந்த ஒற்றைக்கல் நெடும் மலையில்

என்னைச் சுமந்து செல்ல நீ குதூகலமானாய்

விடியற்காலையில் இன்று

மலை ஏறும்போது என் வயதை நான் குனிந்து

பார்த்துக்கொண்டு வருகிறேன்

பக்கவாட்டு இரும்புக்குழாய் தான் பயம் என்றது

பிடித்துக் கொண்டேன்

பாதுகாப்புக்கும் தள்ளாடி விழாதிருக்கவும்.

நீயோ லேசாக மூச்சு வாங்கி கொஞ்சம் நின்று

பின் மெது மெதுவாக

மலைப் படிக்கட்டுகளின் மீது ஏறுகிறாய்

ஏதோ பாதியில், கீழே அமரட்டுமாவென நினைத்தபோது

இல்லை மேலே போகலாம் என்பதுபோல்

மெளனமாக வருடுகிறாய்.

தனி ஆளாய்

உச்சியிலிருக்கும் கோட்டையைச் சேர்கிறாய்

கம்பீர வாசலில் துரு. திறந்தே இருக்கு

மன்னனும் இல்லை மற்ற ஒருத்தரும் இல்லை

உள்ளே சிதிலங்களையும் மனிதமீறலின் அவமானங்களையும்

நான் பார்க்கும்போது

நீ மலையைச் சுற்றி விரிந்திருக்கும் ஊர்களையும்

அரவணைத்து எழுப்பும் சூரியனையும்

தொடுவானில் கண்விட்டுத் துழாவுகிறாய் மலர்கிறாய்

சரிவில் ஓரிடம் கோட்டையினுள் பார்க்கிறேன்

ஆதியந்த தரிசியின் தியான இருப்பிடம்போல்

அமைதியைப் போர்த்தியிருக்கும் சிறு ஆல் நிழல்

மெள்ள என்னை இறக்கிய அங்கு

பசுந்தளிர் ஒன்றை குனிந்து எடுத்துத்

திரும்புகிறேன். காணோமே நீ,

எங்கே போனாய் திடுமென்று என் நண்பா

திடுக்கிட்டுச் சுற்றுமுற்றும் அலை பாய்கிறேன்

நாழி பல கழிந்து

முகமிலாத் தொலைவிலிருந்து

ஒரு குரல் தருகிறாய்

இப்போதும் உன்

உள்ளேதான் உள்ளேன்

நெகிழும் மலையினின்று தெம்புடன் இறங்கி வா

/