Category: முதன்மை 3

ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும் / உதயசங்கர்

download (22)

நீல நிற வானத்திலிருந்து நேரே சரிந்து இறங்கியது போலிருந்த பூங்கா சாலையின் துவக்கத்தில் ஏஞ்சல் தோன்றிவிட்டாள். வழியெங்கும் குல்மொகர் மரங்கள் ரத்தச்சிவப்பாய் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்தன. தர்ச்சாலை தெரியாதபடிக்கு தரையில் பூக்கள் சிதறிக்கிடந்தன. மஞ்சள் கலந்த சிவப்பு தரையில் பளீரிட்டது. மரத்திலும் சிவப்பின் நிழல் அடர்ந்து பார்ப்பதற்கு சாலை முழுவதும் சிவப்புக்கம்பளம் விரித்தது போல இருந்தது. மகேஷ் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தச்சாலையின் கீழ்புறத்தில் பூங்காசாலை நகரின் முக்கியச்சாலையோடு இணைகிற இடத்தில் ஒரு ஆலமரம் விருட்சமாய் படர்ந்திருந்தது. அந்த ஆலமரத்தின் கீழே தான் மகேஷூம் அவனது நண்பனும் பைக்கை நிறுத்தி அதில் சாய்ந்துக்கொண்டு ஒரு காலை பைக்கின் பெடலிலும் இன்னொரு காலை தரையிலும் ஊன்றி நின்று கொண்டிருந்தார்கள். ஆள் நடமாட்டம் உள்ள சாலை தான். ஆனால் மகேஷுக்கு மட்டும் எப்படி என்றே தெரியாது, ஏஞ்சலின் தலை சாலைமேட்டில் தோன்றும்போதே மகேஷ் பார்த்து விடுவான். மகேஷ் அவளைப்பார்த்தவுடன்,

“ டேய் மக்கா…மக்கா… அங்க பார்டா… என்னமா ஜொலிக்கிறா! பின்னாடி அந்த சூரியஒளி அவ மேலே பட்டுத்தெறிக்கிறத பாருடா…”

என்று அவனுடைய நண்பனிடம் பரவசமாய் புலம்புவான். மகேஷின் நண்பன் சிரிப்பான். அவன் சிரிப்பில் ஒரு கைப்பு இருக்கும். ஆனால் அந்த பரவசமனநிலையை மகேஷ் கைவிடுவதாக இல்லை. இருநூறு மீட்டர் தூரத்தில் இறங்கி வந்து கொண்டிருக்கும் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஏஞ்சல் அன்று நீல நிறத்தில் புடவை உடுத்தியிருந்தாள். எப்போதும் போல் முந்தானையைப் பறக்க விட்டிருந்தாள். சிறகுகள் அடிக்க மெல்ல இறங்கிய மயில்போல ஒயிலாக நடந்து வந்து கொண்டிருந்தாள் ஏஞ்சல். மஞ்சள்கலந்த கோதுமை நிறத்தில் இருந்த அவள் ஒரு போதும் கண்ணைப்பறிக்கும் நிறத்தில் உடை உடுத்துவதில்லை. மென்மையான நிறங்களில் அவள் உடுத்திய உடைகள் அவளைப்பளிச்சென்று காட்டியது. பின்னியும் பின்னாமலும் ஈரம் ததும்பி நிற்கும் அவளுடைய தலைமுடி பின்னால் இடுப்புக்குக்கீழே இறங்கியிருந்தது. அவள் அருகில் வரவர மகேஷூக்கு ரத்தஓட்டம் அதிகரிக்கும். உடம்பெங்கும் ஒரு படபடப்பும் நடுக்கமும் தொற்றிக்கொள்ளும். அவளுக்கும் இது தெரியும் அவனைக்கடந்து செல்லும்போது தலையைத் திருப்பாமலே ஒருபார்வை பார்ப்பாள். மகேஷின் ஈரக்குலையைக் கவ்வும். அவன் முகத்தில் ரத்தம் ஊறுவதை உணர்வான். அந்த உணர்வோடு திரும்பி அவனது நண்பனைப் பார்ப்பான். அவன் முகத்தில் வெறுப்பு கடலென பொங்கிக்கொண்டிருக்கும். அப்படியே காறித்துப்புவான்.

” என்னடா ஆச்சு..? ஏண்டா இப்படி பண்றே..”

“ எலேய் உனக்குத்தெரியலையா…? அவகூட ஒருத்தி வாரா பாருடா.. அவளும் அவள் முகரக்கட்டையும்…பாக்கச்சகிக்கல..”

“ எங்கடா வாரா… அவ மட்டும் தானே வாரா..”

“ கண்ணைத்திறந்து நல்லாப்பாரு…”

“ எனக்கு ஒண்ணுமே தெரியல..”

“ தெரியாதுடா..தெரியாதுடா… இப்ப உங்கண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது…”

தூரத்தில் ஏஞ்சல் மட்டுமே தெரிய அருகில் வர வர ஏஞ்சலின் முதுகிலிருந்து பிறந்தவள் மாதிரி அவளுடைய தோழி வருவாள். கட்டையான பரட்டைத் தலைமுடியும், பெரிய தடித்த உதடுகளும் சப்பையான மூக்கும், அகன்று விரிந்த இடுப்பும், எப்போதும் சிடுசிடுத்தமுகமும் கொண்ட ஏஞ்சலின் தோழி எப்போதும் அடர்ந்த நிறத்திலேயே சுடிதார் அணிந்திருப்பாள். இன்று கரும்பச்சை நிறத்தில் அவள் அணிந்திருந்த சுடிதார் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. அவள் பார்வையில் ஒரு சந்தேகத்தேள் கொட்டுவதற்குத் தயாராக எப்போதும் தன் கொடுக்கைத் தூக்கி வைத்திருக்கும். ஒருபோதும் சிரித்திராத அந்த முகம் பாறையைப் போல இறுகிப் போயிருக்கும். நடந்து வரும்போதோ அல்லது போகும்போதோ ஏஞ்சலும் அவளது தோழியும் ஒரு பொழுதும் பேசிக்கொண்டதாகப் பார்த்ததில்லை. ஆனால் அவளின் ஒவ்வொரு பார்வையையும் ஏஞ்சல் உணர்ந்திருந்தாள்.

ஏஞ்சலின் தோழி ஒரு போதும் மகேஷையோ, அவனது நண்பனையோ சிநேகமாக இல்லையில்லை சுமூகமாகக்கூடப் பார்த்ததில்லை. அவள் பேசுகிற மாதிரி தெரியாது. தடித்த உதடுகள் அசையும். அவ்வளவு தான் ஏஞ்சல் மகேஷின் நண்பனைப் பார்ப்பாள். அதுவரை இருந்த வெளிச்சம் மறைந்து முகம் இருண்டு விடும். லேசான நடுக்கம் உடலில் பரவியது. மகேஷ் கூட அவனது நண்பனை விட்டு விட்டு வர நினைத்தான். அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? மகேஷின் தைரியமே அவன் தானே.

ஏஞ்சல் முக்கியசாலையில் திரும்பும்போது மகேஷைப்பார்த்து ஒரு சிரிப்பைச் சிந்துவாள். அதுபோதும். மகேஷும் அவனுடைய நண்பனும் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். மறுபடியும் மறுநாள் காலையில் அந்த பூங்காசாலையில் ஆலமரவிருட்சத்தினடியில் காத்திருப்பார்கள். மகேஷின் நண்பனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் பாலியகாலத்திலிருந்தே அவனுடைய நெருங்கிய நண்பன் மகேஷ். இருவரும் ஒன்றாகவே படித்தார்கள். ஒரே மார்க் வாங்கினார்கள். மகேஷ் கொஞ்சம் குட்டை. சற்று ஒல்லி. பயந்தாங்கொள்ளி. ஆனால் வசீகரமான முகம். மகேஷின் நண்பன் கருப்பாக இருந்தாலும் உயரமாக ஜிம்பாடியுடன் இருந்தான். மகேஷின் நண்பனின் முரட்டுத்தனம் அவனுடைய உடல்மொழியில் தெரியும். முகத்தில் யாரையும் மதிக்காத ஒரு அலட்சியபாவம். மகேஷோடோ இல்லை அவனோடோ யாராவது எதிர்த்துப்பேசினால் கூடப் பிடிக்காது. உடனே கையை ஓங்கி விடுவான். எந்த வம்புச்சண்டைக்கும் தயாராக இருப்பவன்.

ஏஞ்சல் வேலைபார்க்கிற கம்ப்யூட்டர் செண்டருக்கு அடிக்கடி மகேஷும் அவனது நண்பனும் அவனுடைய வேலைக்காக ரெசியூம் பிரிண்ட் அவுட் எடுக்கப்போவார்கள். மகேஷ் அப்போது தான் ஏஞ்சலைப்பார்த்தான். கண்டதும் காதல் தான். ஆனால் ஏஞ்சல் அவ்வளவு எளிதாக பிடி கொடுக்கவில்லை. அவள் யாரைக்கண்டோ பயந்தாள். மகேஷின் நண்பன் தான்

“ அவ அந்தக் குட்டச்சியைப்பார்த்து பயப்படுதா… பரட்டைத்தலைக்கு இருக்கிற திமிரப்பாரேன்..”

என்று திட்டினான். மகேஷ் இல்லையில்லை என்று தலையாட்டினான். ஆனால் அவனுக்கும் அந்த அச்சம் இருந்தது. யார் இந்தத்தோழி? கரிய நிழல்போல எப்போதும் கூடவே வருகிறாள்? ஏஞ்சல் அந்தத்தோழி இல்லாமல் தனியே வருவதே இல்லை. அப்போது மகேஷின் நண்பன் சொன்னான்.

“ ஏன் நீ கூடத்தான் நான் இல்லாமல் தனியா எங்கேயும் போறதில்லை..”

அதைக்கேட்டதும் மகேஷ் முகம் சுளித்தான். ஞாயிற்றுக்கிழமை கம்ப்யூட்டர் செண்டர் லீவு. அன்று ஏஞ்சலைப்பார்க்க முடியாது. பார்க்க முடியாத அந்த நாளில் மகேஷ் ஏங்கிப்போவான். அன்று முழுவதும் அவனுடைய நண்பனிடம் அவளைப்பற்றிப் பேசிக்கொண்டேயிருப்பான். மகேஷின் நண்பனும் அவன் பேசுவதை தலைகுனிந்தவாறு கேட்டுக்கொண்டேயிருப்பான். எப்போதாவது,

“ கூட அவ ஃபிரெண்டும் இருக்கா பாத்துக்கோ…” என்று எச்சரிப்பான்.

அதற்கு மகேஷ் சிரித்தவாறே

“ அவ இருந்தா அவபாட்டுக்கு இருந்துட்டுப்போறா…”

என்று அலட்சியமாகச் சிரிப்பான்.

“ நீ எப்பயுமே வெளிச்சத்தை மட்டுமே பாக்கே… பக்கத்திலேயே இருட்டும் இருக்கு.. பாத்துக்க..”

என்று கட்டைக்குரலில் சொன்னான் மகேஷின் நண்பன்.

ஒரு ஞாயிறு காலைப்பொழுதில் பூங்காசாலையில் சும்மா அந்த ஆலமரத்தடியில் வந்து நின்றிருந்தான். அன்று அபூர்வமாக அவன் மட்டுமே தனியாக வந்திருந்தான். சூரியன் அப்போது தான் எழுந்து சுதாரித்துக்கொண்டிருந்த வேளை. குல்மொகர் மரங்களின் சிவந்த பூக்களில் சூரியனின் காலைக்கிரணங்கள் பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. மஞ்சள் வெயில் தார்ச்சாலையை மென்மையாக மாற்றிவிட்டிருந்தது. கூட்டம் கூட்டமாய் மேகங்கள் தங்கச்சரிகை விளிம்பிட்டு மெல்ல ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன. அந்த வேளையில் தந்தத்தின் நிறத்தில் சுடிதார் அணிந்து மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தாள் ஏஞ்சல். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளும் தனியாக அவளுடைய தோழி இல்லாமல் வந்து கொண்டிருந்தாள்.

இடது பக்கம் லேசாகச் சாய்ந்த அவளுடைய நடையில் ஒரு பாந்தம் இருந்தது. அவளும் அவனைப்பார்த்து விட்டாள். அவள் திடுக்கிட்டது தெரிந்தது. இடது கையால் அவளுடைய துப்பட்டாவின் முனையைப் பிடித்துக்கொண்டு வலது கையில் மார்போடு பைபிளை அணைத்துக் கொண்டே மெல்ல நடந்து வந்தாள். அவளுடைய மெலிந்த விரல்களிலிருந்து வெளிப்பட்ட அன்பினால் பைபிள் துடித்துக்கொண்டிருந்தது. மகேஷ் அந்தக்கணத்தில் இயேசுவைத் தன் ஜீவனாக ஏற்றுக்கொள்ளத் தயாரானான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் நடமாட்டம் அதிகம் இல்லை.

மகேஷின் இதயம் துடிக்கிற சத்தம் அவனுக்கு வெளியில் கேட்டது. அவளை நிறுத்திச் சொல்லிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவள் அருகில் வந்தபோது ஓரடி அவளைப்பார்த்து நெருங்கியும் விட்டாள். படபடப்புடன் அவள் அவனை ஏறிட்டுப்பார்த்தாள். அந்தக்கண்களில் அன்பின்ஓளியைப் பார்த்தான். சூரியனின் கதிர்கள் விளிம்பிட்ட அவளைப்பார்க்கும்போது அவனுக்குள் தீராத தாகம் எழுந்தது. நா வறண்டது. எச்சிலை ஊற வைத்து விழுங்கினான். அவள் உண்மையில் அந்த ஓளியில் தேவதை போலவேத் தோன்றினாள். மகேஷுக்கு நடந்து கொண்டிருப்பது கனவா என்று கூடச் சந்தேகம் வந்தது. முன்னால் நிழல் விழுந்த அவள் உருவத்தின் அழகு அவனை மெய்மறக்கச்செய்தது. அந்தக்கணத்தில் அவன் ஏஞ்சலின் பரிபூர்ண அன்பை உணர்ந்தான். இது போதும். அந்தக்கணம் இனி வாழ்வில் என்றாவது வருமா?

அன்று மகேஷ் முடிவெடுத்தான். வாழ்ந்தால் இனி ஏஞ்சலோடு தான் வாழவேண்டும். அதைக்கேட்ட மகேஷின் நண்பன் கோபப்பட்டான்.

“ நீ அவளோட வாழ்றதுக்காக நான் அவ ஃப்ரெண்ட் …அதான்..அந்தப்பரட்டைத்தலை பிசாசோட வாழணுமா? “

என்று கேட்டான். மகேஷுக்கு அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. மலங்க மலங்க விழித்தான். ஆனால் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. மகேஷின் நண்பன் அவனை விட்டு எங்கேயும் போகமாட்டான். போகவும் முடியாது.

மகேஷுக்கு சென்னை ஐ.டி. கம்பெனியில் சுமாரான சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆரம்பத்தில் குறைவான சம்பளமாக இருந்தாலும் போகப்போக சம்பளம் அதிகமாகும் வேலைப்பாதுகாப்பும் உண்டு என்ற தைரியத்தில் சேர்ந்து விட்டான். ஆறுமாதம் கழிந்த பிறகு ஊருக்குச் சென்றான். அவனுடைய நண்பனுடன் ஏஞ்சலின் வீட்டுக்குச் சென்றான். ஏஞ்சலின் அம்மா கார்மெண்ட்ஸிலும், அப்பா ஜவுளிக்கடையிலும் வேலை பார்த்தார்கள். ஒரு தம்பி ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அங்கே ஏஞ்சலும் அவளது தோழியும் இருந்தார்கள். கொஞ்சம் தயங்கினாலும் அவர்களுக்குச் சம்மதம். மகேஷும் வீட்டில் பேசி வற்புறுத்தித் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

ஒரு வழியாகத் திருமணம் முடிந்து சென்னைக்கு தனிக்குடித்தனம் போனார்கள். புதுமணத்தம்பதிகளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வர சம்பந்திகளும் போயிருந்தார்கள். ஏஞ்சலின் தோழியும், மகேஷின் நண்பனும் இல்லாமலா. அவர்களும் உடன் போயிருந்தார்கள். எல்லோரும் திரும்பி விட்டார்கள். ஏஞ்சலின் தோழி ஏஞ்சலோடேயே தங்கி விட்டாள். மகேஷின் நண்பனும் மகேஷோடு தங்கி விட்டான்.

எப்படி நான்குபேரும் ஒரே வீட்டில் ஒரே படுக்கையறையில் இருக்கமுடியும் என்று சந்தேகப்படும் வாசகர்களுக்கு ஏஞ்சலும், மகேஷும், சேர்ந்து ஒரே குரலில்

“ எப்போது நாங்கள் தனியாக இருந்தோம்? “ என்று கேட்கிறார்கள்.

•••

இளம்பெண் ( சிறுகதை ) : ஜமைக்கா கின்கெய்டு / தமிழில் / சமயவேல்

download (23)

எழுத்தாளர் குறிப்பு

ஜமைக்கா கின்கெய்ட் 1949ல் மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான அன்டிஹுவா நாட்டில் பிறந்தவர். கரீபிய-அமெரிக்க எழுத்தாளரான இவர் தற்பொழுது அமெரிக்காவில் உள்ள வடக்கு பென்னிங்க்டனில் வசிக்கிறார். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இவர் குடும்பத்தால் புறக்கனிக்கப்பட்டு, 17 வயதில், அமெரிக்காவுக்கு வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். ஆனால் இதைப் பொறுக்க முடியாமல் குடும்பத்துடனான தொடர்பை துண்டித்து விடுகிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகே அன்டிஹுவா திரும்புகிறார். இடையில் படித்து, எழுதத் தொடங்கி 1979ல் ஒரு இசையமைப்பாளரைத் திருமணம் செய்துகொள்கிறார். ‘தி நியூ யார்க்கர்’ இதழில் பணிபுரிகிறார். இவரது கதைகள் ‘பாரிஸ் ரெவ்யூ’ மற்றும் ‘தி நியூ யார்க்கர்’ இதழ்களில் வெளியாகின்றன. ‘லூஸி’ என்ற இவரது நாவல் ‘தி நியூ யார்க்கர்’ இதழில் தொடராக வந்தது.

‘அன்னி ஜான்’ ‘லூஸி’ ‘எனது அம்மாவின் சுயசரிதை’ ‘திருவாளர் போட்டர்’ ‘பார் இப்பொழுது பிறகு’ ஆகியவை இவரது நாவல்கள். ‘நதியின் அடியாழத்தில்’ இவரது சிறுகதைத் தொகுப்பு. ‘ஒரு சின்ன இடம்’ ‘எனது சகோதரன்’ ‘சொல் கதைகள்’ ‘எனது தோட்டப் புத்தகம்’ ‘மலர்கள் நடுவே: இமயமலையில் ஒரு நடை’ ஆகியவை இவரது உரைநடை நூல்கள். தொகுக்கப்படாத கதைகளும் கட்டுரைகளும் நிறைய இருக்கின்றன.

அம்மாவுக்கும் மகளுக்குமான ஆழமான, சக்திமிக்க உறவைப் பதிவு செய்த இவரது எழுத்துக்களை பெண்ணிய எழுத்துக்கள் என்பதோடு கறுப்பின எழுத்து என்பதையும் இணைத்தே பார்க்க வேண்டும் என்கிறார் இவர். காலனியம், காலனியப் பாரம்பர்யம், பின்காலனியம், நவ-காலனியம், பால் மற்றும் பாலியல், பிரிட்டீஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம், காலனியக் கல்வி, இனம், வர்க்கம், அதிகாரம் என்று பல பகுதிகளில் பயணம் செய்கிறது இவரது எழுத்து. அண்மையில் இவர் எழுதியிருக்கும் ‘பார் பிறகு இப்பொழுது’ என்னும் நாவல் காலத்தை ஆய்வு செய்கிறது.

••••••••••

திங்கள் கிழமை வெள்ளைத் துணிகளைத் துவைத்து கற்குவியலின் மேல் காயப் போட வேண்டும்; செவ்வாய்க்கிழமை கலர் துணிகளைத் துவைத்து கொடிக்கம்பியில் உலரப் போட வேண்டும்; கொளுத்தும் வெயிலில் வெறுந் தலையுடன் நடக்கக் கூடாது; பூசணிக் கழிவுகளை சூடான இனிப்பு எண்ணெய்களில் சமைக்க வேண்டும்; உனது சிறிய துணிகளைக் கழற்றி எடுத்த உடனே நீரில் ஊற வைத்துவிடு; ஒரு அருமையான ப்ளவ்ஸ் தைப்பதற்காக பருத்தித் துணியை நீ வாங்குகிற போது, அதில் பசை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள், ஏனெனில் ஒரு துவைப்புக்குப் பிறகு அதனால் தாங்க முடியாது; கருவாட்டை நீ சமைப்பதற்கு முந்திய இரவே ஊற வைத்துவிடு; ஞாயிறுப் பள்ளியில் நீ பென்னா பாடுவது உண்மையா?; எப்பொழுதுமே நீ உன் உணவை அது யாரோ ஒருவருடைய வயிறாக மாறிவிடாத வகையில் சாப்பிடு; ஞாயிறுகளில் ஒரு பெண்மணியைப் போல நடக்க முயற்சி செய், நீ மிக உருப்படாமல் ஆகிக் கொண்டிருக்கும் வேசியைப் போல அல்ல; ஞாயிறு பள்ளியில் பென்னா1 பாட வேண்டாம்; துறைமுக-எலிப் பையன்களிடம் நீ பேசக் கூடாது, திசைகள் கூட காட்டக் கூடாது; தெருவில் பழங்களைச் சாப்பிடாதே—ஈக்கள் உன்னைத் துரத்தும்; ஆனால் நான் ஞாயிறுகளில் பென்னா பாடுவதே கிடையாது மற்றும் ஞாயிறு பள்ளியில் ஒருபோதும் இல்லை; இவ்வாறு தான் ஒரு பித்தானைத் தைக்க வேண்டும்; நீ சற்று முன்பு தைத்த பித்தானுக்கு இவ்வாறு தான் பட்டன்துளை செய்ய வேண்டும்; ஒரு உடைக்கு, அதன் கரை கீழே இறங்குவதைப் பார்க்கும் பொழுது, இவ்வாறு தான் கரை அடிக்க வேண்டும், ஒரு வேசி போல தெரிவதை நீயே தடுப்பதற்காக, நீ அப்படி ஆவதற்குத்தான் உருப்படாமல் போய்க் கொண்டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்; உனது அப்பாவின் காக்கி சட்டையை ஒரு சுருக்கமும் இல்லாதவாறு இப்படித்தான் அயன் பண்ண வேண்டும்; உனது அப்பாவின் காக்கி கால்சராய்களை ஒரு சுருக்கமும் இல்லாதவாறு இப்படித்தான் அயன் பண்ண வேண்டும்; இவ்வாறுதான் நீ ஒக்ராவை2 வளர்—வீட்டிலிருந்து தூரத்தில் , ஏனெனில் ஒக்ரா மரத்தில் சிவப்பு எறும்புகள் குடியிருக்கும்; நீ டஷீனை3 வளர்க்கும்போது, அதற்கு நிறைய தண்ணீர் கிடைக்குமாறு உறுதிசெய்; இல்லாவிட்டால் நீ அதை சாப்பிடும் பொது உனது தொண்டை அரிக்கும்; ஒரு மூலையை இவ்வாறுதான் நீ பெருக்க வேண்டும்; ஒரு முழு வீட்டை இவ்வாறுதான் நீ பெருக்க வேண்டும்; ஒரு முற்றத்தை இவ்வாறுதான் நீ பெருக்க வேண்டும்; உனக்கு மிக அதிகமாகப் பிடிக்கும் ஒருவரிடம் இவ்வாறுதான் நீ புன்னகைக்க வேண்டும்; உனக்கு பிடிக்கவே செய்யாத ஒருவரிடம் இவ்வாறுதான் நீ புன்னகைக்க வேண்டும்; நீ முழுவதுமாக விரும்புகிற ஒருவரிடம் இவ்வாறுதான் நீ புன்னகைக்க வேண்டும்; தேநீருக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; டின்னருக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; முக்கிய விருந்தினருடன் டின்னருக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; லஞ்சுக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; காலை உணவுக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; உன்னை அவ்வளவாகத் தெரியாத ஆண்கள் இருக்கும்போது நீ இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும், இவ்வகையில் நீ ஆகுவதற்கு எதிராக உன்னை எச்சரிக்கை செய்து வந்த வேசியை, அவர்கள் உடனடியாக அறிந்துகொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் உன்னைக் கழுவிக் கொள், உனது சொந்த எச்சிலைக் கொண்டாவது; பளிங்குக் குண்டுகள் விளையாட கீழே சம்மணம்போட்டு உட்கார்ந்துவிடாதே—நீ ஒன்றும் பையனில்லை, உனக்குத் தெரியும்; ஜனங்களது பூக்களைப் பறிக்காதே- உன்னை ஏதேனும் பிடித்துவிடலாம்; கரும்பறவைகளின் மேல் கற்களை எறியாதே, ஏனெனெனில் அது ஒரு கரும்பறவையாகவே இல்லாமல் இருக்கலாம்; ரொட்டிப் புட்டை4 இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; டவ்கொனாவை5 இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; மிளகுப் பானையை இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; ஜலதோஷத்திற்காக ஒரு நல்ல மருந்தை இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; ஒரு குழந்தையை அது குழந்தையாவதற்கு முன்பே வெளியே எறிய ஒரு நல்ல மருந்தை இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; ஒரு மீனை இவ்வாறுதான் பிடிக்க வேண்டும்; உனக்குப் பிடிக்காத ஒரு மீனை, அந்த வகையில் உனக்குக் கெட்டது எதுவும் நேராதபடி இவ்வாறுதான் நீ திரும்ப எறிய வேண்டும்; ஒரு ஆணை இவ்வாறுதான் அடாவடியாக அச்சுறுத்த வேண்டும்; இவ்வாறுதான் ஒரு ஆண் உன்னை அச்சுறுத்துவான்; இவ்வாறுதான் ஒரு ஆணை நீ காதலி, இது வேலை செய்யாவிட்டால் வேறு வழிகள் இருக்கின்றன, அவைகளும் வேலை செய்யாவிட்டால் விட்டுத் தள்ளுவது பற்றி மோசமாக உணராதே; இவ்வாறுதான் நீ காற்றில் மேலே துப்பு, அதை நீ விரும்பினால், மற்றும் அது உன் மேல் விழுந்துவிடாதபடி இவ்வாறுதான் விரைவாக நகர்ந்துவிட வேண்டும்; இவ்வாறுதான் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும்; எப்பொழுதுமே ரொட்டியை அமுக்கிப் பார்க்க வேண்டும் அது புதியதாக இருக்கிறதா என உறுதிப்படுத்த; ஆனால் ரொட்டிக்காரர் ரொட்டியைத் தொட என்னை அனுமதிக்கா விட்டால்?: நீ சொல்வதின் பொருள், ரொட்டிக்காரர் ரொட்டியின் அருகில் அனுமதிக்க விடாத பெண்ணாக அல்லவா நீ உண்மையில் இருக்கப் போகிறாய்?

—-

download (24)

Jamaica Kincaidன் “At the Bottom of the River” என்னும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள முதல் கதை. ஆங்கிலத்தில் Girl என்று இருக்கிறது.பெண் குழந்தை என்றுதான் கூற வேண்டும். ஆனால் கதையில் வரும் பெண் பதின்ம வயதுப் பெண்ணாக இருக்கிறார்.

1. Benna என்பது ஒருவகை நாட்டுப்புறப் பாடல். கேள்வி பதில் வடிவில் கிறிஸ்துவத்தை பகடி செய்யும் பாடல்கள்.

2. Okra: இது உண்மையில் வெண்டைச் செடி. ஆனால் கதையில் மரம் என்று வருகிறது. வெள்ளை நைல் நதிக் கரைகளில் மரம் அளவுக்கு வளர்வதாகவும் இணையத்தில் வாசித்தேன்.

3. Dasheen: நமது சேப்பங்கிழங்கு. அரிப்புத் தன்மையுடையது.

4. Pudding: இது புட்டு என மொழிபெயர்ப்பதில் தவறில்லை.

5. doukona: இதுவும் ஒரு வகைப் புட்டுதான். ஆனால் மீனிலிருந்து செய்யப்படுகிறது. கேரளத்தில் இதே போன்று ஒரு மீன் புட்டு இருக்கிறது.

—-

( மலைகள் ஆசிரியர் குறிப்பு
இந்தக் கதை ஒரே பாராவாகதான் இருக்கிறது )

அவர்கள் நம் அயல்மனிதர்கள் – 01 ( தொடர் ) தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி / தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

download (19)

இலங்கையில் தினந்தோறும் அவர்களைக் காண்கிறோம். பேரூந்துகளில், அலுவலகங்களில், வியாபார ஸ்தலங்களில், சந்தைத் தெருக்களில் எல்லா இடங்களிலும், அவர்களும், அவர்களது மொழியும் வியாபித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையின் மூன்று தசாப்த காலப் போரின் வடுக்களாக, அவர்களையும், அவர்களது மொழியையும் கொடூர எதிரிகளாக சித்தரித்துக் காட்டியுள்ளன சர்வதேச ஊடகங்கள். அதன் பலனாக, இன்றும் கூட தமிழ் வாசகர்களிடத்தில் பரிச்சயமாக உள்ள ரஷ்ய இலக்கியங்கள், ஆங்கில மற்றும் பிற மொழி இலக்கியங்களுக்கு மத்தியில், புறக்கணிக்கப்பட்டு, தொலைவாகிப் போயுள்ள மொழியாக சிங்கள மொழி மாறி விட்டிருக்கிறது.

சிங்கள மொழி, உலகில் இலங்கை எனும் நாட்டில் மாத்திரமே பாவனையிலுள்ள ஒரு பிரத்தியேகமான மொழி என்பதில் நாம் அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அவ்வாறே சிங்கள மொழி இலக்கியங்களும், நம் வாழ்வியலோடு மிகவும் நெருக்கமானதாகவே இருக்கின்றன. நம் மூதாதையர்கள் கூறி மகிழ்ந்த எத்தனையோ நாட்டுப்புறக் கதைகளை இன்னும் பொக்கிஷமாக நினைவில் வைத்திருக்கிறோம் இல்லையா?

இந்தப் பத்தித் தொடர் மூலமாக, நம் பழங்கால வாழ்வியலை, நிகழ்கால ஜீவிதத்தை சிங்களக் கவிதைகளினூடாக உணரத் தலைப்படும் அதே வேளை, தமிழ் வாசகர்கள் பெரிதும் அறிந்திராத சிங்கள மொழிக் கவிஞர்களை அறியச் செய்யும் முயற்சியாகவும் அமைகிறது.

எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்று, பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாகி, தற்போது ஆசிரியையாகக் கடமையாற்றி வரும் கவிஞரும், எழுத்தாளருமான தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி, நவீன தலைமுறை சிங்களக் கவிஞர்களில், படைப்புக்கள் மூலம் குறிப்பிடத்தகுந்த ஒருவராகத் திகழ்கிறார். ஆசிரியையாக இருப்பதால், சமகால சிறுவர்கள், மாணவர்களின் உளப்பாங்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இவரது கவிதைகள் யதார்த்தமாக வெளிப்படுத்தி, வளர்ந்தவர்களுக்கு அறிவுறுத்துகின்றன.

சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதிவரும் இவர், இதுவரையில் 3 கவிதைத் தொகுப்புகள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 2 சிறுவர் இலக்கியப் பிரதிகள், 3 சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல் என பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். இவரது கவிதையொன்றைக் கீழே தருகிறேன்.

உதிக்காதே சூரியனே

வேண்டாம் சூரியனே நீ உதிக்க
எனக்குப் பிடித்திருக்கிறது
இப்படியே சுருண்டு படுத்திருக்க
உதிக்கவே இல்லையாயின் சூரியன்
உலகம் எவ்வளவு அழகானதாயிருக்கும்

சூரியன் உதித்ததுமே
ஓடத் தொடங்குவாள் எனது தாய்
என்னையும் இழுத்தபடி.

கழிவறைக்குப் போனாலும் அம்மா கத்துவாள்
‘சீக்கிரம் வா… தாமதமாகுது’
வழிநெடுக காலையுணவைப் பாதி தின்றவாறு
சீருடையைச் சரி செய்தபடி ஓடிப் போய் நின்றால்
தடியை நீட்டியவாறு அதிபர் கேட்கிறார்
‘விரைவாக வரத் தெரியாதா… தாமதிக்கிறாய்’

தாமதமானவர்களின் வரிசையில் காத்திருந்து
வகுப்பறைக்குப் போனால்
ஆசிரியை உத்தரவிடுகிறாள்
‘வீட்டுப் பாடம் செய்யவில்லைதானே
முழங்காலில் நில் வெளியே போய்’

பள்ளிக்கூடம் விட்டு
பிரத்தியேக வகுப்புக்கும் சென்றுவிட்டு
வீட்டுக்கு வந்தால்
அப்பாவின் கட்டளை
‘விளையாடப் போகக் கூடாது,
தொலைக்காட்சி பார்க்கக் கூடாது,
புத்தகத்தைக் கையிலெடு’

உதிக்காதே சூரியனே
எனக்கு சுருண்டு படுத்திருக்க
இரவு எவ்வளவு அழகானது
***

ஒரு சிறுபராயத்துப் பிள்ளையின் மனப்பாங்கில் எழுதப்பட்டுள்ள இக் கவிதை, தற்கால சமூகத்தில், அனைத்து மொழி பேசுபவர்களுக்கும் மிகவும் பொருந்துகிறது அல்லவா? குழந்தைகளுக்கான எல்லாச் சட்டங்களும் பெற்றவர்களாலேயே இயற்றப்படுகின்றன. குழந்தைகளை, குழந்தைகளாக வாழ விடுவதிலேயே அவர்களது எதிர்காலத்தின் வெற்றி அமைந்திருக்கிறது என்பதை மறந்து விடுபவர்களுக்கு, இவ்வாறான கவிதைகளே அதை நினைவுபடுத்துகின்றன.

••••

images (14)

mrishanshareef@gmail.com

ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெண் / சுரேஷ்குமார இந்திரஜித்

download (17)

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவளைப் பார்த்தான், சிவசங்கரன். அவள்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அவள்தான் என்ற எண்ணம் ஏற்பட்டது. பேரிளம் பெண்ணாக, அப்பருவத்திற்குரிய அழகுடன் இருந்தாள். அவள் அருகே சென்று தயக்கத்துடன் “தப்பா நெனைச்சுக்காதீங்க.. நீங்க அமிர்தாதானே” என்றான், சிவசங்கரன். அவள் சற்று யோசித்துப் பின் “சந்திரசேகரன்தானே உங்கள் பெயர்” என்றாள். “இல்லை, சிவசங்கரன்” என்றான். தன் பெயரை அவள் மறந்திருந்தாள் என்பது, அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. சந்திரசேகரன் என்பது அவனுடைய நண்பனின் பெயர்.

சந்திரசேகரன் தற்போது உயிருடன் இல்லை. சிவசங்கரன் பணியில் சேர்ந்தபோது, சந்திரசேகரன் ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருந்தான். சந்திரசேகரனுக்கு நகரத்திலிருந்த, பெண்கள் தங்கிக் செல்லும், பெண்களை எப்போதும் வைத்திருக்கும் விடுதிகள் அனைத்தும் பழக்கம். அடிக்கடி போய் வந்து கொண்டிருப்பான். அவனுக்குத் திருமணமாகி ஒரு பையனும், பெண்ணும் இருந்தார்கள். சிவசங்கரனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை. சந்திரசேகரன்தான் சிவசங்கரனுக்கு, தங்கும் விடுதிகளில் இருக்கும் பெண்களிடம் தொடர்பு ஏற்படுத்தியிருந்தான். சந்திரசேகரனின் துணை இல்லாமல், சிவசங்கரன் தனியே சென்றதில்லை. பயம்தான் காரணம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஏதாவது ஒரு வழியில் அதிலிருந்து வெளியே வருவதில் சந்திரசேகரன் சமர்த்தன்.

இருவரும் ஒரு தங்கும் விடுதிக்குச் சென்றபோதுதான் அமிர்தா பழக்கமானாள். இரண்டு பேருக்குமே அவளைப் பிடித்துப் போனது. சந்திரசேகரனும், சிவசங்கரனும் கலந்துபேசி ஒரு முடிவு எடுத்தார்கள். அதன் பேரில் சந்திரசேகரன், புரோக்கரிடம் பேசினான். சிவசங்கரனும் கூட இருந்தான். இருவரும் ஒரு வீடு பிடித்து, அமிர்தாவை அதில் குடியிருத்துவது, இருவரும் அவர்களுக்கு வசதியான சமயத்தில் அவளிடம் வந்து தங்கிச்செல்வது, மாதாமாதம் ஒரு தொகையை அவருக்கும், புரோக்கருக்கும் கொடுத்துவிடுவது, இந்த ஒப்பந்தம் ஆறு மாத காலத்திற்கு இருக்கவேண்டியது. அந்த ஆறுமாத காலத்தில் அவள் வேறு யாருடனும் தொழில் செய்யக்கூடாது என்று பேசினார்கள். புரோக்கர், அமிர்தாவைக் கூட்டிவந்தான். அவளுக்கும் இந்த ஏற்பாடு, சம்மதமாக இருந்தது. கொடுக்கவேண்டிய தொகை தொடர்பாக சற்று இழுபறி ஏற்பட்டு, பிறகு முடிவானது.

குடும்பம் நடத்துவதற்குத் தேவையான பொருட்களை வாங்கி, வீடு பிடித்து, அவளைக் குடியமர்த்தினார்கள். அவர்களின் ஏற்பாடு பிரச்சினையில்லாமல் சென்று கொண்டிருந்தது. சந்திரசேகரன், அவளுக்கு மதுப்பழக்கம் ஏற்படுத்த எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தான். அவள் மறுத்துவிட்டாள். வீட்டில் மது அருந்தக்கூடாது என்ற கட்டுப்பாட்டையும் விதித்தாள். எனவே இருவரும் வெளியே குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார்கள். மற்றபடி அவர்களின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தாள். இன்பத்தை வழங்கினாள். நன்றாக சமைப்பாள். அய்யனார் கோயில் கறிச்சாப்பாடு என்ற பெயரில் கறிக்குழம்பு வைப்பாள். அந்தக் குழம்பு இருவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. வீட்டிற்கு வரும் நாளையும், நேரத்தையும், இருவரும் பகிர்ந்துகொண்டார்கள்.

சிவசங்கரனைப் பொறுத்தவரை தன்னைப் பண்புள்ளவன் என்றும் அறிவாளி என்றும், சந்திரசேகரனைப் பண்பற்றவன் என்றும் முட்டாள் என்றும் நினைத்திருந்தான், அமிர்தாவிற்கும் தன்னைத்தான் பிடித்திருந்தது என்று நினைத்திருந்தான். ஆறுமாத ஒப்பந்த காலத்திற்குப் பின், புரோக்கர் அவளை, பெங்களுருக்குக் கூட்டிச்சென்றுவிட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் அவளை, சிவசங்கரன் சந்திக்கிறான். ‘என்னை நினைவிருக்கிறதா’ என்றான். ‘உங்களை மறக்கமுடியுமா… பெயரைத்தான் மாற்றிச் சொல்லிவிட்டேன். உங்க பிராண்டு நல்லா இருக்காரா’ என்று கேட்டாள்.

சந்திரசேகரன் பணியில் இருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும், அவனுடைய வேலையை அரசாங்கத்தில், அவனுடைய மனைவிக்குக் கொடுத்திருப்பதாகவும் கூறினான். அவள், அவனை நினைவு கூர்ந்தவளாக சிந்தனைவயப்பட்டு, பின் வருத்தப்பட்டாள். ‘ஓவரா தண்ணி அடிப்பாரு எங்கிட்டேயும் அத்து மீறுவாரு.. நான் விடமாட்டேன். அப்புறம் பணிஞ்சு போவாரு’ என்றார்.

அவள், சிவசங்கரனைப் பற்றி விசாரித்தாள். திருமணமாகி இரண்டு பையன்கள் இருப்பதாகவும், மனைவி வங்கியில் வேலை பார்ப்பதாகவும் கூறினான். பிறகு அவளைப் பற்றி விசாரித்தான்.

“அந்த புரோக்கர் நல்லவன்தான் மனுசங்க எப்ப மாறுவாங்கன்னு கண்டுபிடிக்கவே முடியாது. திடீர்னு மாறிட்டான். எல்லாம் பணம்தான். என்னை இன்னொருத்தவனுக்கு வித்துட்டு ரூபாய் வாங்கிட்டுப் போயிட்டான். அவன் மகா கெட்டவன்.. என்னை அடிமை மாதிரி நடத்தினான்.. கஸ்டமருங்களும் நெறையப்பேர் வந்தாங்க.. ஒருநாள் இருபத்தைஞ்சு பேரு வந்தாங்கன்னா பாத்துக்குங்க.. நாம எப்படி சந்தோஷமா இருந்தோம். அங்கே ஒரே நரகம்… கஸ்டமருங்களும் லோகிளாஸ்காரங்களா வருவாங்க.. எனக்குப் பணமும் சரியாக கொடுக்கமாட்டான்.. நான் எங்க அம்மாவுக்கும் பாட்டிக்கும் எப்படி பணம் அனுப்புவேன். அவுங்க ரெண்டு பேரும் என்னை நம்பி இருக்கறவங்க… நல்லவேளையா எனக்கு பிள்ளைப்பேறு இல்லாமப் போச்சு. உங்க ரெண்டு பேரு கூட இருந்தப்ப புள்ளைப் பெத்துக்கலாம்னு ஆசை வந்துச்சு… டாக்டரைப் போயி பார்த்தேன். அவரு எனக்குக் குழந்தைப்பேறு இல்லைன்னு சொல்லிட்டாரு… இல்லைன்னா, உங்க ரெண்டு பேருக்கும், யாருன்னு தெரியாது. ஒரு மகனோ மகளோ இருந்திருக்கும். அந்த புரோக்கரு, அவன் சொன்னதை கேக்கலைன்னா, கன்னா பின்னான்னு அடிக்க ஆரம்பிச்சிருவான். இந்தா பாருங்க கன்னத்துலே அடிச்சதுலே ஒரு பல் விழுந்துருச்சு. இடையிலே பாட்டி செத்துப்போச்சு.. லெட்டரு அந்த புரோக்கர் அட்ரசுக்குத்தான் வரும். அவன் அதைப் பிரிச்சுப் பாத்துட்டுத்தான் எங்கிட்டே கொடுப்பான். வீட்டுக்கு பணம் அனுப்பறப்ப, கூட வருவான்…

ஒரு தடவை போலீஸ் எங்களை சுத்தி வளைச்சுருச்சு.. போலிசுக்காரங்க விபச்சாரத்தை ஒழிக்கவா வந்தாங்க… புரோக்கருங்க சரியா காசு கொடுக்கலை. எங்களை மட்டுமில்லை நெறையப் பேரைப் பிடிச்சாங்க… போலிசுக்காரன் ஒருத்தன் சந்தடி சாக்குலே என் கூட உறவு வைச்சுக்கிட்டான்… ஜெயில்லே போட்டாங்க… கோர்ட்டுக்கு அலைஞ்சேன்… ஜாமீன் எடுக்கக்கூட ஆளில்லை. அந்த புரோக்கர் ஜாமின்ல போனவன் ஆக்ஸிடெண்ட்லே செத்துப் போயிட்டான். எனக்கு நல்ல காலம். ஆனா எனக்கு அந்த ஊர்லே யாரையும் தெரியாது. ஜெயில்லேருந்து வந்த பின்னாலே அந்த இன்ஸ்பெக்டர், நாங்க திரும்பவும் தொழில் பண்ணுவோம்னு சொல்லி என்னையும் வேறு சிலரையும் புடிச்சு, உக்கார வைச்சு, ஒரு பார்பரை வரச்சொல்லி எங்களையெல்லாம் மொட்டை அடிச்சான். உங்களுக்குத் தெரியும் எனக்கு எவ்வளவு நீளமான கூந்தல்னு.. அவனுகளுக்குத் தெரியுது. கூந்தல்தான் அழகுன்னு. கூந்தலை எடுத்துட்டோம்னா கஸ்டமருங்க வரமாட்டாங்கன்னு.. மொட்டைத்தலையோட கண்ணாடியிலே பாக்கறப்ப தற்கொலை பண்ணிக்கிட்டு சாகலாம் போல இருந்துச்சு.. அவ்வளவு அசிங்கமா இருந்தேன். ஜெயில்லே இருந்தப்ப எங்க அம்மா என்னாச்சுன்னே தெரியலே.. அப்பறம்தான் தெரிஞ்சுக்கிட்டேன் அதுவும் செத்துப்போச்சுன்னு.. அது முகத்தைக் கூட பாக்கக் கொடுத்து வைக்கலை…

வேண்டுதலுக்கு மொட்டை அடிச்சிருக்கேன்னு சொல்லி ஒரு கடைலே வேலை பாத்தேன். சேரியிலே குடியிருந்தேன். காலப்போக்கிலே முடி வளந்துருச்சு.. அந்தக் கடைக்கு வழக்கமா ஒரு கஸ்டமரு வருவாரு.. அவருக்கு நான் வேலை பாக்கறவிதம் பிடிச்சுப்போச்சு.. அவரு பணக்காரரு, கார்லேதான் வருவாரு, அவரே ஓட்டிக்கிட்டு வருவாரு.. ஒருநாள் என்னைப் பத்தி விசாரிச்சாரு.. நான் பழைய கதையெல்லாம் சொல்லலை. தனி ஆளா இருக்கேன்னும் எனக்கு வேற யாரும் இல்லைன்னும் சொன்னேன். ஒரு லீவு நாள்லே என்னை ஒரு ரெஸ்டாரெண்ட்டுக்கு வரச்சொன்னாரு.. எதுக்குன்னு தெரியாம நானும் போனேன். ஏ.சி.ரூம்ல உக்காந்தோம். அவர் நேரடியாகவே விஷயத்துக்கு வந்துட்டாரு.. என்னை சின்னவீடா வைச்சுக்கனும்னு அவர் ஆசைப்படறதை சொன்னாரு.. எனக்கு அவ்வளவு சந்தோஷம்.. இந்த மாதிரி வாழ்க்கை கிடைக்கிறதுக்கு நான் எவ்வளவு கொடுத்து வைச்சிருக்கனும். தனிவீடு, வசதிகள் எல்லாம் பண்ணிக் கொடுப்பதாச் சொன்னாரு.. எனக்கு மெடிக்கல் டெஸ்ட்டுக்கு ஏற்பாடு பண்றதா சொன்னார். எனக்கு பயம் வந்துருச்சு.. உடம்புலே ஏதாவது கோளாறு இருக்குமோன்னு.. அவரே ஏற்பாடு பண்ணினார். நல்லவேளையா கோளாறா ஒன்னும் இல்லை. கல்யாணம்னு பண்ணலே.. பாக்கறவங்களுக்கு வித்தியாசமா தெரியக்கூடாதுங்கிறதுக்காக, அவரே ஏற்பாடு பண்ணி தாலிச்செயின் வாங்கிக் கொடுத்து என்னைப் போட்டுக்கச் சொன்னார். எட்டுப் பவுன் செயின்.. பாருங்க வாழ்க்கை எப்படி மாறுதுன்னு.. அவரோட சொந்த வாழ்க்கையைப் பத்தி நான் எதுவுமே கேக்கலை. அவரும் சொன்னதில்லை. ஒரு நாள் உடம்பு சரியில்லாமப் போச்சுன்னு போன் பண்ணினார். அப்புறம் ஏதோ ஆப்பரேஷன்னாரு.. ஒரு மாசம் ஆகும்.. நீ ஒன்னுக்கும் கவலைப்படாதே உடம்பைப் பாத்துக்க என் மனைவி ஒரு ஹிஸ்டிரியா கேஸ். என்னைப் பாக்க முயற்சிக்க வேண்டாம்னு சொன்னார்…

திடீர்னு ஒரு நாள், ஒரு கார் வந்து வாசல்லே நின்னுச்சு.. செவப்பா ஒரு பையன் காரைவிட்டு இறங்கி வந்து பெல்லை அடிக்கிறான். எனக்கு ஜன்னல் வழியே தெரியுது. நான் கதவைத் திறக்கிறேன். உங்க ஹஸ்பண்டோட முதல் மனைவியோட மகன் நான். அப்பா ஆஸ்பத்திரியிலே இருக்காரு உங்களை கூட்டிக்கிட்டு வரச்சொன்னாருன்னு சொன்னான். தங்கமான பையன். நான் பதறியடிச்சு வீட்டை பூட்டிட்டு அவன்கூட கார்லே போனேன். ஆஸ்பத்திரியிலே அவரைப் பாத்தேன். ரொம்ப மெலிஞ்சு போயிருந்தாரு.. என்னைப் பாத்ததும் அவருக்கு கண்லே தண்ணி வந்துருச்சு. நான் பொழைக்கமாட்டேன்னு டாக்டர் மறைமுகமாக சொல்லிட்டாருன்னு அழுதார். நானும் அழுதேன். இவன் என் பையன். பேரு ஆனந்தகுமார். இவன் உன்னைக் கவனிச்சுக்குவான். கவலைப்படாதே. உன் வாழ்க்கை முழுக்க இவன் கவனிச்சுக்குவான்னு சொன்னாரு.. பிறகு என்னை வீட்டுக்குப் போகச் சொன்னாரு..

கொஞ்சநாள்லே அந்தப் பையன் ஆனந்தகுமார் போன் பண்ணி அவர் செத்துப் போயிட்டதைச் சொன்னான். வீட்டுக்கு வரச்சொன்னான். நானும் போயி அவரு செத்த உடம்பைப் பாத்தேன். சிலநாள் கழிச்சு அந்தப் பையன் வீட்டுக்கு வந்தான். எனக்கு செலவுக்குப் பணம் கொடுத்தான். எனக்கு ஒரு பிஸினஸ் ஏற்படுத்திக் கொடுப்பதாகச் சொன்னான். அதேமாதிரி ஒரு பிஸினஸ் ஏற்படுத்திக் கொடுத்தான். இப்ப நான் பத்துப் பேருக்கு சம்பளம் கொடுக்கிறேன். ஆனந்தகுமார் அப்பப்ப வந்து பாத்துக்கறான். பிஸினஸையும் பாத்துக்கறான். நல்லவிதமாக ஓடிக்கிட்டு இருக்கு வாழ்க்கை.. வந்த பாதையை நெனைச்சுப்பாத்தா ஒரு நாவலே எழுதலாம். எவ்வளவு திருப்பம் எவ்வளவு புதிர் இந்த வாழ்க்கை… வாங்க நம்ம காருக்கிட்டே போவோம்” என்று எழுந்து நடந்தான். சிவசங்கரனும் உடன் சென்றான்.

download (18)

பெரியகார் நின்றிருந்தது. காரில் ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. டிரைவர் இருந்தான். பின் ஸீட்டில் ஒரு பெண் ஆங்கிலப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தது. காரின் அருகே சென்றதும் அமிர்தா நின்று சிவசங்கரனைப் பார்த்தாள்.

‘என் மனசு கேக்கலை… அந்தப் பெண்ணை பாத்துக்குங்க’ என்றாள். அவன், அந்தப் பெண்ணைப் பார்த்தான். அந்தப் பெண் அவனைப் பார்த்துவிட்டு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள். அமிர்தாவின் முகம் மாறியது. உடல் இறுக்கம் கொண்டது.

சிவசங்கரன் ‘என்ன? என்றான். அமிர்தா, மெதுவான குரலில் ‘அந்தப்பெண், உங்க ரெண்டு பேருலே. ஒருத்தரோட பெண்.. எனக்கு குழந்தைப்பேறு இல்லைன்னு நான் சொன்னது பொய். இந்த பெண்ணை வளக்க நான் பட்ட கஷ்டத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்வளவு கஷ்டம் ரொம்ப நன்றி.. வரட்டா…” என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறி டிரைவருக்குப் பக்கத்து ஸீட்டில் உட்கார்ந்தாள். கதவைச் சத்தத்துடன் சாத்தினாள். டிரைவரைப் பார்த்து காரை ஓட்டச்சொன்னாள். கார் நகர்ந்தது. சிவசங்கரன் ஓடிக்கொண்டிருந்த காரைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

****

வரும்போது இருந்த வெயில். / வண்ணதாசன்.

18157841_10213179660225259_5741567510453736258_n

இந்திரா கதவைத் திறக்கும் போது பெருமாள் மட்டும் இல்லை. அவளுடன் ஒரு பையனும் நின்றுகொண்டு இருந்தான். நாரத்தை இலையா எலுமிச்சையா என்று தெரியவில்லை, பெருமாள் தன் விரல்களுக்கு இடையில் வைத்து நசுக்கிக்கொண்டு இருந்தாள்.

அவர்கள் இரண்டு பேருக்கும் பின்னால் , அவர்களோடு சேர்ந்து வீட்டிற்குள் நுழைவதற்குத் தயாராக இருந்த வெயிலின் மேல் அந்த நசுங்கின வாசனை பூசப்பட்டிருந்தது. பெருமாள் அந்தப் பையனின் உச்சந்தலையில் கை வைத்து, ‘குடையை எடுத்துட்டு வந்திருக்கலாம். சொல்லச் சொல்ல வேண்டாம்னுட்டே. தீயா பொரிக்கி.’ என்று சொன்னாள். அந்தப் பையன் குனிந்துகொண்டே கலைந்த தலையைச் சரி செய்து வகிட்டில் கை வைத்து ஒதுக்கி நீவிவிட்டுக்கொண்டான். இந்திராவை அவன் பார்க்கவே இல்லை.

‘ரெண்டு பேரும் உள்ளே வாங்க, ஏன் வெளியிலேயே நீக்கீங்க?’ இந்திரா கூப்பிடும் போதும் பெருமாள் அந்த இலையை இப்போது சிறு குளிகையாக உருட்டி முகர்ந்துகொண்டு இருந்தாள். வெயில் அதன் பச்சைச் சாறு கசிய அவள் விரல்களுக்கு இடையில் இருந்தது.

‘அதைத் தூரப் போட்டுட்டு வா, பெருமாக்கா” இந்திரா சொன்னதும் பெருமாள் வெளியே போய் அதை உதறினாள். அந்தப் பையன் அப்படியே நின்றுகொண்டு இருந்தான். சாயம் போயிருந்த அவனுடைய நீல முழுக் கால்சட்டை கரண்டைக்கு மேல் இருந்தது. அவனைப் பொறுத்தவரை ஒரு புதிய சணல் சாக்கு போல அடித்துக்கொண்டிருந்த வெயிலின் வாடை ரொம்பப் பிடித்திருந்தது. வீட்டிற்குள் போக விருப்பம் இல்லாததற்கு அதுவும் ஒரு காரணம்.

பெருமாள் கையை மட்டுமல்ல, முகத்தையும் வெளியில் இருக்கிற குழாய்த் தண்ணீரில் கழுவி, வளைந்த சுட்டு விரலால் ஒரு சிறிய தகடாகத் தண்ணீரை வழித்து எடுத்தபடி,’ நான் சொன்னேன் லா இந்திராம்மா?’ என்றாள். அந்தப் பையன் இப்போது இந்திராவை ஒரு சிறிய பொழுது பார்த்துவிட்டுக் குனிந்துகொண்டான். இந்த இடத்தைவிட்டு அகன்றுவிடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

பெருமாள் அத்தை அவனிடம் எல்லாவற்றையும் சொல்லித்தான் கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். இன்றைக்கு அவனைக் கூட்டிக்கொண்டு வந்திருப்பது சும்மா தான். அந்த வீட்டில் இருக்கிற ஜன்னல் கதவுகளையும், ஒவ்வொரு அறையிலும் இரண்டு இரண்டாக ஓடிக் கொண்டு இருக்கிற விசிறிகளில் படிந்திருக்கும் தூசியையும் துடைத்துக் கொடுக்க வேண்டும். அவனுக்கு அதைப் பற்றி ஒன்றும் இல்லை என்றால் கீழே மூன்று, மச்சில் இரண்டு என்று இருக்கிற ‘பாத் ரூமை’யும் கழுவிக் கொடுக்கலாம். பெருமாள் அத்தை மிகுந்த சங்கடத்துடன் ‘பாத் ரூம்’ என்றுதான் சொன்னாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவனுக்குப் புரியாமல் இல்லை.

‘மத்த வீட்டு ஆட்கள் மாதிரி இல்லை இந்த வீட்டு ஐயாவும் அம்மாவும். நான் இந்த வீட்டில் பத்துப் பன்னிரண்டு வருஷமா வேலைக்கு நிக்கேன். உண்கிற சோத்துக்கும் உடுத்துகிற துணிக்கும் தரித்திரியமில்லாமல் இண்ணையத் தேதி வரைக்கும் கழிஞ்சுக்கிட்டு இருக்கு. அக்காங்கிற சொல்லுக்கு அடுத்த சொல் சொல்வார் கிடையாது. இங்கே நிக்கப் படாது, அங்கே உக்காரப்படாதுண்ணு ஒரு நாள்க் கூட சொன்னது இல்லை. நாமளும் உப்புக்கு உப்பா, உரைப்புக்கு உரைப்பா, அது அதுக்குத் தக்கன குனியுறதுக்குக் குனிஞ்சு, நிமிர்கிறதுக்கு நிமிந்து நடமாடிக்கிடுதோம். அதையும் சொல்லணும்’லா”.

இதை எல்லாம் இவனிடம் சொல்வது போல, பெருமாள் அத்தை இவனுடைய அம்மாவிடம்தான் சொல்லிக்கொண்டு இருந்தாள். அம்மாவின் முகத்தை இவன் பார்க்கவே இல்லை. அம்மா மூக்கை உறிஞ்சிக்கொள்வதையும் சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொள்வதையும் பார்த்துத்தான் அவன் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?. பெருமாள் அத்தை சொல்வதை அவளால் தாங்க முடியவில்லை. அப்புறம் எதற்கு, பெருமாள் அத்தை சொல்கிற ஒவ்வொன்றுக்கும் ‘அது சரி’, ‘அது சரி’ என்று சொல்லவேண்டும்.? எல்லாம்சரியாக இருப்பதற்கு ஏன் தொண்டை கம்ம வேண்டும்?

அம்மாவிடம் பெருமாள் அத்தை இதை எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கையில், இவனுக்கு சிமெண்டுத் தொட்டித் தண்ணீரில் விழுந்திருக்கிற வெயில் நெளிந்து தொந்தரவு செய்தது. எழுந்திருந்து போய், ஒரு செம்பில் தண்ணீரைக் கோதி, வாசல் சுவரில் தகர டப்பாவில் வைத்திருக்கிற டேபிள் ரோஸ் செடிகளுக்கு ஊற்றிவிட்டு வந்தான். எல்லா வாடகை வீட்டுச் சுவர்களிலும் அடர்ந்த கருஞ்சிவப்புப் பூக்களோடு இப்படிச் சில செடிகள் இருப்பதற்கு அவசியம் உண்டு என நினைத்தான். இக்கட்டான சமயங்களில் எழுந்துபோய் அதற்குத் தண்ணீர் வார்த்துவிட்டு, அந்த இடத்திலேயே அசையாமல் நின்று ஒரு சிகரெட் புகைத்துவிட்டு வரும் பழக்கம் உள்ள அப்பாவின் முகம், அப்போது அவனுக்கு மிக அருகில் தெரிந்தது.

download (26)

‘வா,உள்ளே வா’ என்று இந்திரா அவனுடைய தோளில் கையை வைத்துக் கூப்பிட்டாள். மணிக்கட்டுக்கு உள்ப்பக்கமாகக் கடிகாரம் கட்டியிருக்கும் முருகேஸ்வரி டீச்சர் தான் இப்படி அவனுடைய தோளில் கைவைத்து எப்போதும் பேசுவாள். ஜவஹர் ஸ்கூலை விட்டு அவனை அனுப்பவே மாட்டேன், டி.சி. கொடுக்கக் கூடாது என்று கட்டாயப் படுத்தி, பத்தாவது வரை அங்கேயே ‘ நீ எதைப் பத்தியும் கவலைப் படாமல் படி, உன் படிப்புக்கு நான் ஆச்சு’ என்று சொன்னது முருகேஸ்வரி டீச்சர்தான். இதை அப்பாவும் அம்மாவும் இருக்கும் போதுதான் வீட்டில் போய்ச் சொன்னான். அப்பா மறு நாளே, சாயுங்காலம் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்க்கூடத்துக்கு வந்து டீச்சரைக் கும்பிட்டார்.

செம்பருத்திப் பூக்கள் மூங்கில் பட்டிகளுக்கு ஊடாக எட்டிப்பார்த்திருக்கிற முன் தாழ்வாரத்தில் அப்பா முருகேஸ்வரி டீச்சரைக் கும்பிட்ட தோற்றம் இன்னும் அப்படியே இருக்கிறது. அப்பா குரல் கலங்கியிருந்தது. யாரோ பிடித்து உலுப்பியது போல, அவருக்குள் நிரம்பியிருந்தவை எல்லாம் அப்போது உதிர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். அப்பாவின் இரண்டு கைகளின் முழங்கையும் மணிக்கட்டு வரை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடந்தது. உள்ளுக்குள் ஒரு மொக்கையோ பூவையோ வைத்திருக்கும் தினுசில் கூப்பியிருந்த கைகளுடன் அவர் டீச்சரைக் கும்பிட்டார். அடுத்த கணத்தில், டீச்சரின் கைகளைப் பற்றி, தன் நெற்றியில் வைத்துக்கொண்டார்.

‘ நல்லா இருங்க தாயி. எம் புள்ளை இனிமேல் கரையேறியிருவான்’ என்று சொல்லி, எடுத்த இடத்தில் வைப்பது போல், முருகேஸ்வரி டீச்சரின் கைகளை மெதுவாகத் தளரவிட்டார். டீச்சர் தன்னுடைய கைகளை அதற்கு அப்புறம் என்ன செய்வது என்று தெரியாமல், இயல்பில்லாமல் நெஞ்சோடு மடித்துக் கட்டுவதும் தளர்த்துவதுமாக இருந்தார்.

இந்திரா அவனை அப்படித் தோளில் கை வைத்துக் கூட்டி வருவதை பெருமாள் அத்தை பார்த்துக்கொண்டு நின்றாள். கால் சட்டையில் இருந்து ஒரு திரிபோலப் பிரிந்து தொங்கிய நூல் மேல் பாதத்தில் உரசி ஒரு வித அசௌகரியத்தை உண்டு பண்ணியது. குனிந்து அதைச் சுண்டியிழுத்து அத்துப் போடவேண்டும் போல இருந்தது அவனுக்கு.

பெருமாள் அத்தைக்கு என்ன தோன்றியதோ? இவனுக்குத் தாகமாக இருப்பதாகவும், பேசமுடியாத அளவுக்குத் தொண்டை உலர்ந்துவிட்டதாகவும் நினைத்து, உள்க் கட்டு வரை போய் ஒரு கண்ணாடி ஜாடியில் தண்ணீரும் அதைக் குடிப்பதற்கு ஒரு கண்ணாடி டம்ளரும் கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தாள். வெள்ளையும் நீலமுமாகக் கொடி போலச் சுருண்டு மேலேறிக் கொண்டிருந்த அந்தக் கண்ணாடி டம்ளரை அவனுக்குப் பிடித்திருந்தது. அப்படி மேலேறிய கொடிகள். அந்தக் கண்ணாடி டம்ளரின் விளிம்புகளுக்கும் வெளியே வளர்ந்து அந்த அறை முழுவதும் படர்ந்திருப்பது போல இருந்தது. குடித்தது போக, டம்ளரைப் பெருமாள் அத்தையிடம் நீட்டினான். இன்னும் ஒரு மடக்குக்கு மேல் மிச்சம் இருந்த தண்ணீரை, அண்ணாந்து பெருமாள் அத்தை குடித்துவிட்டுச் சிரித்தாள். இந்தச் சிரிப்புதான் அந்த டம்ளரின் படர்ந்திருந்த கருநீலக் கொடிகளில் காய்த்துத் தொங்கும் குலைகளாக இருக்கும். அப்படித்தான் அவனுக்குப் பட்டது. அவன் பெருமாள் அத்தையின் கழுத்துக்குக் கீழேயே பார்த்தபடி இருந்தான். பெருமாள் அத்தை தன் மேல் படர்ந்திருந்த கொடிகளை விலக்குவது போல, சேலைத் தலைப்பை அள்ளிப் போட்டுக்கொண்டாள்.

வீட்டுக்குள் வருகிற புது ஆட்களிடம் நின்று பேச, ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். வெளிப்பக்கத்தில் இருந்து வருகிற வெளிச்சத்தில் இவர்கள் மூன்று பேருடைய நிழல்களும் தரையில் விழுந்து மேகமாகிக் கிடந்தன. கிருஷ்ணனும் ராதையும் ஊஞ்சலாடுகிற ஒரு படமிருந்த சுவர்ப்பக்கம் வந்ததும் மேற்கொண்டு நகராமல் நின்று, அந்த இடத்திலிருந்து பேசத் துவங்குவது உகந்தது என்று தீர்மானித்த முகத்துடன், ‘உம் பேரு என்ன ப்பா?’ என்று கேட்டாள். கேட்கும் போதே ,’எம் பேரு இந்திரா’ என்று சொல்லிச் சிரித்தாள், களக்காட்டு மாமா வீட்டில் யாரோ ஒருத்தருக்கு இதே மாதிரிச் சிரிப்பு உண்டு. குருவ மண் வாசனையை பக்கத்தில் நடமாடும் போது எல்லாம் உண்டாக்குகிற அந்த முகத்துக்கு இதே போல நெருக்கமான மஞ்சள் பற்கள் இருந்திருக்கிறது.

‘திரிகூடம்’ என்று சொன்னான். அவனால் இப்போது மறுபடியும் இந்திராவைப் பார்க்க முடிந்தது. இதுவரை முகமற்றவனாக இருந்தவனுக்கு, இந்தப் பெயரைச் சொல்லும் போது ஒரு சரியான அடையாளம் வந்துவிட்டது. பள்ளி ஆண்டு விழாப் பரிசளிப்புகளில் திரும்பத் திரும்ப மேடைக்கு அழைக்கப்படும் அந்தப் பெயரை, இந்த வீட்டு ஹாலில் அப்படி யாரோ உச்சரித்துக் கூப்பிடுகையில் ஒலிபெருக்கிக் கோளாறில் கொஞ்ச நேரம் உய்யென்று ஒரு விசில் சத்தம் மட்டும் வந்து, மறுபடியும் அவன் பெயர் சொல்லப்படுவது போல, அவனே மீண்டும் ‘திரிகூடம்’ என்றான்.

பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த பெருமாள் அத்தை, ‘வீட்டில ராஜன்’னு கூப்பிடுவாங்க. பள்ளிக்கூடத்தில ‘திரிகூடம்’ ‘என்று சிரித்தாள். அவளுக்குத் தானும் இந்திராவைப் போல, அந்த இடத்தில் அவன் தோளில் கையைப் போட்டபடி பிரியமாக ஏதாவது பேசவேண்டும் போல ஆசை உண்டாயிற்று. தான் நின்ற இடத்தை மாற்றி அவன் வலது தோளுக்குப் பக்கமாகப் போய் நின்று, ‘ அம்மா கேக்கதுக்குப் பதில் சொல்லு, ராஜன்’ என்றாள்.

‘திரிகூடம் ணா வெறும் திரிகூடமா? திரிகூட ராஜன், திரிகூட ராசப்பன் … அந்த மாதிரியா?’ – இந்திரா கேட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை. பெருமாள் அத்தை தான் இப்போதும் ‘ வெறும் திரிகூடம் தான் இந்திராம்மா.’ என்று சிரித்தாள். பெருமாள் அத்தை அப்படிச் சிரித்ததும் அவனுக்குப் பிடிக்கவில்லை. பெருமாள் அத்தை அவனுடைய அப்பாவிடமும் இப்படித்தான் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். அவன் பார்க்க, சமீபத்தில் அம்மா கூட அப்படிச் சிரித்துப் பேசிப் பார்த்தது கிடையாது.

இனிமேல் பெருமாள் அத்தையைப் பேச விடக்கூடாது, தானே பதில் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ‘நீ போய் பாத்திரம் எல்லாத்தையும் நனைச்சு வச்சிட்டு, துணியை சர்ஃப்ல முக்கி வச்சிட்டு வா பெருமாக்கா. நான் இவன் கூடக் கொஞ்சம் விசாரிச்சுக்கிடுதேன். நீ வந்த பிறகு என்ன ஏதுண்ணு விபரம் சொல்லிக்கிடலாம்’ என்று இந்திராவே சொல்லி அவளை அனுப்பிவைத்தது நல்லதாகப் போயிற்று.

தானும் உட்கார்ந்துகொண்டு இவனையும் நாற்காலி ஒன்றில் உட்காரச் சொன்ன இந்திராம்மா, ‘வசதியா இருக்கா? இல்லை இப்படிக் கீழே உட்கார்ந்துக்கிடுவமா?’ என்று இவன் பதில் சொல்வதற்கு முன்பே, எழுந்துவந்து தரையில் உட்கார்ந்துகொண்டாள். ஒவ்வொரு கட்டாக, எந்தக் கதவும் மூடப்படாமல் திறந்து கிடக்க இப்படித் தரையில் உட்கார்ந்தது திரிகூடத்திற்குப் பிடித்திருந்தது. நின்றுகொண்டு இருந்ததை விட, உட்கார்ந்ததும் இந்த வீடு வேறொரு வீடாக மாறிவிட்டதாகக் கூடத் தோன்றியது. அம்மா பெரும்பாலும் மத்தியானத்தில் படுத்துத் தூங்குகிற அடுக்களைத் தரையின் சிமெண்ட் சொரசொரப்பு அவன் விரல்களுக்குத் தெரியும். திரும்பத் திரும்ப வழவழப்பான இந்த ஹாலின் தரையை அவன் தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அப்படிப் படுத்திருக்கும் போது எல்லாம் அம்மா அழுதுகொண்டும் இருந்திருக்கிறாள்.

திரிகூடம் இந்திராவின் கண்களைப் பார்த்துக் கொண்டான். சற்று ஒடுங்கியவையாக அவை இருந்தன. சிரிப்பு, அழுகை என்று அதற்கென்று பிரத்யேகமாக எதுவும் வைத்திருக்கவில்லை. கண்ணாடி அணிகிறவர்கள் கண்ணாடியைக் கழற்றி வைத்திருக்கும் நேரத்துக் கண்கள் போல சோர்வும் ஆதுரமும் படிந்தவை. அவனுடைய அப்பாவைப் பெற்ற ஆச்சியின் கண்கள் அப்படித்தான் இருக்கும்.

‘எங்க அப்பாச்சி முகம் மாதிரி இருக்கு, உங்களுக்கு” எடுத்த எடுப்பில் அவனுக்கு இதை எப்படி இந்திராவிடம் சொல்லத் தோன்றியது என்று தெரியவில்லை. அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறதே என்று எல்லாம் சொல்கிற அமைதியான ஒரு சிரிப்பு இந்திராவிடம்.

’உங்க ஆச்சி பேரு என்ன? ‘ என்ற கேள்வி திரிகூடத்திற்கு மிகுந்த உற்சாகம் கொடுத்தது. அவளுடைய பெயரைச் சொல்வதன் மூலமே அவளுடைய முழுச் சித்திரத்தை வரைந்துவிட முடியும் என்று தோன்றிற்று. யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைவாக நிறுத்திவைத்திருந்த தேரை ஒற்றை ஆளாக இழுத்து வருகிற மாதிரி சொன்னான், ‘ஆச்சி பேரு மந்திரம். சீட்டுக் கம்பேனி மகராச பிள்ளை கேள்விப்பட்டு இருக்கேளா? அது எங்க அப்பாத் தாத்தா ல்லா!’

இந்திராவுக்கு அவளைச் சுற்றிய உலகம் அப்படியே ஒரு பனிக்கட்டியாக உறைந்துவிட்டது. ஆனால் பளிங்கு மாதிரி எல்லாம் தெரிகிறது. சீட்டுக் கம்பெனி நொடித்துப் போனது. மந்திரத்துப் பெரியம்மை வீட்டு வெள்ளிப் பாக்குவெட்டி பழைய விலைக்கு வந்தது, எம்.டி.ட்டி 2992 வண்டிச் சாவியைப் பிடுங்கிக்கொண்டு மகராசப் பெரியப்பாவை தச்சநல்லூர் ரயில்வே கேட் பக்கம் இறக்கிவிட்டுவிட்டுப் போனது எல்லாம் இடது கையின் குழிவில் ஐஸ்கட்டியை வைத்து, எலுமிச்சம் பழம் பிழிகிற கட்டையால் அடித்துப் பொடியாக்குகிற மாதிரிச் சிதறின. வைரம் நொறுங்கி வைரம் மினுங்கி வைரம் கரைந்தது.

’ சேது ராமன், மத்தியார்ஜுனன், அன்ன ராஜு எல்லாம்….?’ இந்திரா திரிகூடம் முகத்தைப் பார்த்துக்கொண்டு கேட்கும் போது, இந்த அறை, அடுத்த அறை, மொத்தமாக இந்த வீடு முழுவதுமே கனவு போல உருகியோடிக் கொண்டிருந்தது அவளைச் சுற்றிலும்.

‘எங்க அப்பா தான் சேது’ என்று சொல்கிறவனின் கையை இந்திரா எட்டிப் பிடித்துக்கொண்டாள். மந்திரத்துப் பெரியம்மை வீட்டு வேப்பமரக் காற்றில் கலைந்த சிகையை அவளால் லேசில் ஒதுக்கிவிட முடியவில்லை. மந்திரத்துப் பெரியம்மை வீட்டுக் கொலு பொம்மைகள் செந்தாமரை நிறத்தில் அவளுக்கு முன்னால் நிரம்பிக்கொண்டே போயின. மூக்கு, முகவாய் எதிலும் ஒரு ரோம இழை கூடக் கோரை இல்லை. சரஸ்வதி, லட்சுமி சிரிப்பு எல்லாம் அப்படியே உதட்டோரத்துப் புள்ளியோடு மிதந்தன. வாசலில் மந்திரத்துப் பெரியம்மை கல்யாணத்துக்குக் கட்டின மணமேடை அப்படியே சச்சதுரமாகக் கிடந்தது. இந்திரா அதைச் சுற்றிச் சுற்றிச் சீட்டிப் பாவாடையோடு ஓடிக்கொண்டு இருந்தாள். மகராசப் பெரியப்பா போட்டிருக்கிற அத்தரும் ஜவ்வாதும் ஒரு நீராவி போலப் படர்ந்துகொண்டிருந்தது.

images (7)

‘சேதுவோட பிள்ளையா நீ?’ இந்திரா வாய்விட்டுக் கேட்கவில்லை. ஆனால் திரிகூடத்தின் இரண்டு கையையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டாள். தன் உதடுகளில் ஒவ்வொரு கையாக வைத்து முத்திக்கொண்டாள். நெஞ்சில் வைத்துக் கொண்டாள். அவளுடைய கை சுடுகிறதா தன்னுடைய கை சுடுகிறதா என்று திரிகூடத்திற்குத் தெரியவில்லை. ஒரு கையை மெதுவாக உருவிக் கொண்டான். இன்னொரு கையைப் பிடித்திருந்த இந்திராவின் கை அப்படியே அவளுடைய சம்மணமிட்ட இடது முழங்கால் சேலை மடிப்பில் கிடந்தது.

‘மத்திச் சித்தப்பா செத்துப் போச்சு’ என்று திரிகூடம் சொன்னதும், இந்திரா அவனுடைய கையை நழுவவிட்டுவிட்டு, ‘ஐயோ’ என்று வாயைப் பொத்திக்கொண்டாள். இதுவரை இல்லாத ஒரு தீர்க்கமான முகம் அப்போது வந்திருந்த இந்திரா, ‘நானும் அவனும்தாம் ஒண்ணாப் படிச்சோம். ஆனால் சேதுதான் எப்போ பார்த்தாலும் எங்கூடச் சண்டை இழுத்துக்கிட்டே இருப்பான்.’ என்று சிரித்தாள். ‘அவன்கிட்டே எவ்வளவு அடி பட்டிருக்கிறேன் தெரியுமா?’ என்று மேலும் சிரித்தாள். ‘சீட்டு, கேரம் எல்லாத்திலேயும் சேது ரொம்பக் கள்ள ஆட்டை விளையாடுவான்’. இந்திராவுக்குச் சிரித்துச் சிரித்து இப்போது அழுகை வந்திருந்தது.

திரிகூடம் இந்திரா முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுடைய அப்பாவை சேது, சேது என்றும் அவன் அவன் என்றும் சொல்லிக்கொண்டு அடுக்கடுக்காகச் சிரிக்கிற இந்திராவின் முகம் அடைந்துகொண்டே போன ஒரு பிரகாசத்தில் அவனுடைய உடம்பு சொடுக்கியது. முதலில் ஒரு சந்தோஷம் போல இருந்து, தாங்க முடியாக துக்கத்தை உண்டாக்கத் துவங்குவதை உணர்ந்தான். அவனுக்கு அவனுடைய அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

‘பெருமாள் அத்தை உள்ளே ஜோலியா இருக்காங்களா? அவங்க கிட்டே சொல்லீருங்க’ திரிகூடம் இந்திராவிடம் சொல்லிக்கொண்டே எழுந்திருந்தான்.

வரும்போது இருந்த வெயில் இன்னும் அப்படியே இருந்தது. கொஞ்சம் கூடத் தணியவே இல்லை.

‘%

****

ஆக்டவியோ பாஸ் கவிதைகள் ( Octavio Paz 1914 – 1998 ) ஸ்பானியக் கவிதைகள் ( மூலம் ) : ஆங்கிலம் : எலியட் வெயின்பெர்கர்( Eliot Weinberger) / தமிழில் : தி.இரா.மீனா

download (18)

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஆக்டவியோ பாஸ் ஸ்பானியமொழிக் கவிஞர் களான Gerardo Diego , Juan Ramón Jiménez, மற்றும் Antonio Machado ஆகியோரின் தாக்கத்தாலும்,பாப்லோ நெருடாவின் தூண்டுதலாலும் இருபதுவயதில்கவிதை யுலகில் நுழைந்தவர். Luna silvestre (1933).என்பது அவரது முதல் கவிதைப் புத்தகமாகும்.நவீனத்துவம் சர்ரியலிசம் இயக்கங்களின் தாக்கம் பெற்றவர். Eagle or Sun? என்ற தொடர்வரிசை உரைநடைக் கவிதை மெக்சிகோ நாட்டின் இறந்த,நிகழ்,எதிர்காலத்தின் தொலைநோக்கு வரைபடமாக மதிப்பிடப்படுகிறது. The Labyrinth of Solitude ,அவரை இலக்கிய உலகின் சிறந்த படைப்பாளியாக அடையாளம் காட்டியது.படைப்புகள் அனைத்தும் அவர் அறிவின் ஆழத்தை இனம் காட்டுவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர் தத்துவம்,மதம், கலை, அரசியல்,தனிமனிதனின் பங்கு என்று எல்லாவற்றையும் ஆழமாகக் காணும் பார்வை அவருடைய படைப்புகளுக்கிருந்தது. ”வாழ்க்கையை கவிதையாக்கு வதை விட,கவிதையாக வாழ்க்கையை மாற்றுவது உன்னதமானதல்லவா?” என்ற கேள்வியை தன் காலத்துப் படைப்பாளிகளிடம் கேட்டவர்.நவீனத்துவம் என்பது இறந்த காலமின்றி உருவாக முடியாதது. நவீனத்துவத்தின் தேடல் என்பது வம்சாவளியின் தொடக்கம்தான்.”என் தொடக்கத்தையும்,தொன்மத்தை யும் நோக்கி என்னை இயக்கவைத்தது நவீனத்துவம்” என்று In Search of the Present ல் குறிப்பிடுகிறார்.மனதின் வாழ்க்கை என்பது உடலின் வாழ்க்கை என்பதிலிருந்து மிக வேறுபட்டதல்ல.அறிவு,அரசியல்,உடல் என்று எல்லாம் ஒன்றே என்பதும் அவர் சிந்தனையாகும். மொழியியல், பண்பாடு, இலக்கியக் கொள்கைகள்,வரலாறு ,அரசியல் என்று பலதுறைகளிலும் கட்டுரைத் தொகுப் புகள் வெளிவந்திருக்கின்றன.கிடைத்த பல விருதுகளில் Cervantes award , Neustadt International Prize for Literature மற்றும் 1990 ல் பெற்ற நோபெல் பரிசு ஆகியவை குறிப்பிடத்தக்கவை..

•••••

போவதற்கும் இருப்பதற்கும் இடையில்

போவதற்கும் இருப்பதற்கும் இடையில்

தனக்கான தன்மையில்

நாள் நிலையின்றித் தள்ளாடுகிறது.

மதியத்தின் சுற்றறிக்கைபடி இப்போது

கல்லாய் உலகம் அசைவற்றிருக்கிறது.

எல்லாம் புலனாகிறது, பிடிபடாமலிருக்கிறது

எல்லாம் அருகிலிருக்கிறது தொடமுடியாதிருக்கிறது.

தாள் ,புத்தகம், பென்சில் ,கண்ணாடி

இன்னபிற தனக்கான பெயர்நிழலில் இருக்கின்றன

அதே மாறாத குருதியோட்டத்தை

காலம் என் நெற்றியில் மீள்செயலாக்குகிறது.

பாரபட்சமற்ற சுவற்றை

ஒளி பேயரங்காக மாற்றுகிறது. .

ஒரு கண்ணின் மையத்தில் என்னைக் கண்டுபிடிக்கிறேன்.

அதன் வெறித்தநோக்கில் என்னைப் பார்க்கிறேன்

அந்தக் கணம் சிதறுகிறது.அசைவற்றிருக்கிறது.

நான் இருக்கிறேன் போகிறேன் ; நான் ஓர் இடைநிறுத்தம்.

கடைசி வைகறை

உன் கூந்தல் காட்டில் தொலைந்துபோனது,
உன் கால் என்னைத் தொடுகிறது.
நீ இரவைவிடப் பெரியவள்,
ஆனால் உன் கனவுகள் இந்த அறைக்குள் அடக்கம்.
சிறியவர்களாக இருப்பினும் நாம் எவ்வளவு பெரியவர்கள் !

ஆவிகளைச் சுமையாகக் கொண்டு
வெளியே ஒரு கார் கடக்கிறது.
ஓடும் ஆறு
எப்போதும் மீண்டோடிக் கொண்டிருக்கிறது.
நாளை இன்னொரு நாளாக இருக்குமா?

பாலம்

இப்போதுக்கும் இப்போதுக்கும் இடையில்,
எனக்கும் உனக்கும் இடையில்,
சொல்தான் பாலம்.

அதற்குள் நுழைந்த பிறகு
நீ உனக்குள் நுழைகிறாய் :
உலகம் இணைகிறது
வட்டம் போல நெருங்குகிறது.

ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு
எப்போதும் ஒரு திரள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது:
ஒரு வானவில்.
நான் அதன் வளைவுகளின் கீழ் உறங்குகிறேன்.

இனி பழைய பஞ்சாங்கமில்லை

அழகான முகம்
சூரியனுக்கு தன் இதழ் விரிக்கும் அல்லிபோல
நீயும்.
நான் பக்கத்தைப் புரட்டும்போது எனக்கு உன்முகம் காட்டுகிறாய்
மயக்கும் புன்னகை
எந்த மனிதனும் உன்னிடம் வசியப்படுவான்
ஓ, பத்திரிகையின் அழகு.
எவ்வளவு கவிதைகள் உனக்கு எழுதப் பட்டிருக்கின்றன?
தாந்தே உனக்கு எத்தனை கவிதைகள் எழுதியிருக்கிறான் பியட்ரைஸ்?
உன்னுடைய ஆட்டிப் படைக்கிற மாயைக்கு
நீ உருவாக்கும் கற்பனைக்கு.

ஆனால் இன்று இன்னுமொரு
பழைய கவிதையை உனக்கு எழுதமாட்டேன்.
இல்லை. இனி பழைய பஞ்சாங்கமில்லை.
தங்கள் அறிவுக் கூர்மையில்
தங்கள் குணத்தில்
அழகை வெளிப்படுத்தும் பெண்களுக்கு
இந்தக் கவிதை அர்ப்பணம்
ஜோடிக்கப்பட்ட தோற்றங்களுக்கல்ல.

இந்தக் கவிதை உங்களுக்கு பெண்களே
ஒவ்வொரு காலையிலும் சொல்வதற்கு
புதிய கதையோடு எழும் ஷஹ்ரஆசாத் போல
மாற்றத்திற்காகப் பாடப்படும் கதையாய்
போராட்டங்களுக்கான நம்பிக்கையாய் ;
ஒன்றிணைந்த உறவுகளின் காதல் போராட்டங்கள்
புதிய நாளுக்கான உணர்வெழுப்பும் போராட்டங்கள்
புறக்கணிக்கப்பட்ட உரிமைகளுக்கான போராட்டம்
அல்லது இன்னொரு இரவுமட்டும் பிழைத்திருப்பதற்கான போராட்டங்கள்.

ஆமாம். உலகில் இருக்கும் பெண்களே உங்களுக்காக
மின்னும் நட்சத்திரமாக பிரபஞ்சத்தில் இருக்கும் உங்களுக்காக ஆயிரத்தோரு போராட்டங்களில் போராளியினியான உங்களுக்காக
என்நெஞ்சம் கவர்ந்த சினேகிதிக்காக.

இந்தக் கணத்திலிருந்து என்தலை புத்தகத்தில் கவிழாது
மாறாய் அது இரவைப் பற்றியும்
மின்னும் நட்சத்திரங்கள் பற்றியும் சிந்திக்கும்
அதனால் இனி பழைய பஞ்சாங்கமில்லை.

அந்த வீதி

இங்கே ஒரு பெரிய அமைதியான வீதி
நான் இருட்டில் நடந்து தடுமாறி விழுகிறேன்
எழுந்து குருட்டுத்தனமாக நடக்கிறேன்,என் பாதம்
அமைதியான கற்களையும் காய்ந்த இலைகளையும் நசுக்குகிறது.
என் பின்னால் வரும் யாரோ ஒருவரும் நசுக்குகிறார்
இலைகளையும், கற்களையும்.
நான் மெதுவாக நடந்தால் அவரும் மெதுவாக நடக்கிறார்.
நான் ஓடினால் அவரும்.நான் திரும்புகிறேன்;ஒருவருமில்லை
எல்லாம் கருமையாகவும் எல்லையின்றியும்,
என் காலடிகளுக்கு மட்டும் என்னைத் தெரியும்,
தெருவிற்குப் போகும்
மூலைகளினிடையே திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
யாரும் காத்திருக்கவில்லை,யாரும் என்னைப் பின்தொடரவுமில்லை,
நசுக்கியும் எழுந்தும் என்னைத் துரத்தியும் பார்த்தும் : ஒருவருமில்லை.
சகோதரத்துவம்

நான் ஒரு மனிதன்; செய்யமுடிவது சிறிதுதான்

இரவு பேரளவானது;

ஆனால் மேலே பார்க்கிறேன்;

நட்சத்திரங்கள் எழுதுகின்றன.

அறியாது புரிந்துகொள்கிறேன்;

நானும் எழுதியிருக்கிறேன்.

இந்தக் கணத்தில்

யாராவது என்னை நினைக்கலாம்.

—————————–

முன்றில் நினைவுகளும் மா அரங்கநாதனும்… / அழகியசிங்கர்

download (20)

நான் டில்லியில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். அந்த ஒரு வாரத்தில் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. முகநூல் பார்க்கவில்லை. நான் வைத்திருந்த இரண்டு தொலைபேசிகளில் ஒன்றுதான் உபயோகத்தில் இருந்தது. ரவி சுப்பிரமணியன் போன் ஒரு முறை வந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் மூலம்தான் எனக்குத் தெரிந்தது மா அரங்கநாதன் இறந்து விட்டார் என்பது. என்னால் நம்ப முடியவில்லை.

மா அரங்கநாதனுக்கு 85 வயது ஆகிவிட்டது. ஆனால் என் அப்பா பொதுமருத்துவமனைக்கு ஒரு முறை சென்றபோது, ஒரு வாக்கியத்தை அடிக்கடி படிப்பார். ஒருவர் 60 வயதுக்குப் பிறகு வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் அவனுக்குப் போனஸ் என்று. என்ன இப்படி சொல்கிறாரே என்று தோன்றும். இதைக் குறிப்பிட்ட என் அப்பா 94 வயது வரை இருந்தார். அப்பா சொன்னது உண்மை என்பதை என்னுடன் அலுவலகத்தில் பணிபுரிந்த பல நண்பர்கள் 60 ஆண்டுகள் முடிந்த சில ஆண்டுகளிலேயே இறந்து போவதைப் பார்த்து நினைத்துக்கொள்வேன்.

மா அரங்கநாதனுக்கு 85 வயது ஆனாலும் அவர் மரணத்தை என்னால் நம்ப முடியவில்லை. காரணம் அவர் சுறுசுறுப்பானவர். தடுமாறாமல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடக்கக் கூடியவர். தெளிவாகப் பேசக் கூடியவர். அளவுக்கு மீறி சாப்பிட வேண்டுமென்று ஆசை இல்லாதவர். மிக எளிமையான பழக்கவழக்கங்களைக் கொண்ட எளிய மனிதர். அவர் எப்படி மரணம் அடைந்திருக்க முடியும். 100 வயது வரை அவர் வாழ்ந்திருக்க வேண்டியவர். அதானல்தான் ரவிசுப்பிரமணியம் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை.

மேலும் மா அரங்கநாதனுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது, தன் உடம்பில் ஏற்படும் அவதிகளை ஒருபோதும் அவர் தெரிவித்ததில்லை. அவருடைய மனைவியின் உடல்நிலை அவர் கவலைப்படும்படி சொல்வார். அதுவும் என்ன செய்வது என்பார். அவர் சென்னை வாசியாப இருந்து, பாண்டிச்சேரி வாசியாக மாறியபிறகு, அவரைச் சந்திப்பது என்பது சிரமமாகப் போய்விட்டது. அதனால் போனில் பேசுவதோடு என் தொடர்பு எல்லை குறுகிவிட்டது.

download (21)
ஆரம்ப காலத்தில் நான் மா அரங்கநாதனை மின்சார ரயிலில் பயணம் செய்யும்போது அடிக்கடி சந்தித்திருக்கிறேன். அவர் பூங்கா ரயில் நிலையத்தில் இறங்கி சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்றுவிடுவார். நான் அவரைத் தாண்டி என் வங்கிக்குச் செல்வேன். அப்போதெல்லாம் அவரைப் பார்க்கும்போது இருவரும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொள்வோம். பேசிக்கொள்வோம். இரண்டொரு முறை அவருடைய அலுவலத்தில் அவரைச் சந்தித்திருக்கிறேன்.

அதன்பின் அவரைச் சந்தித்தது, ரங்கநாதன் தெருவில் உள்ள முன்றில் அலுவலகத்தில். அந்த அலுவலகம் ஒரு விசித்திரமான அலுவலகம். அப்போதெல்லாம் அங்கே வைத்திருக்கும் புத்தகங்களையோ பத்திரிகைகளையோ யாரும் வாங்க வருவதில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அங்கே எழுத்தாளர்கள் கூடுவது வழக்கம். மா அரங்கநாதன் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் முன்றில் அலுவலகத்திற்கு வந்து விடுவார். 60 வயதுக்கு மேல் அவர் அங்கு வந்தாலும், அவரிடம் சாப்பாடு விஷயத்தில் ஒரு ஒழுங்கு இருக்கும். வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து விடுவார். மேலும் மா அரங்கநாதன் யாருடன் பேசினாலும் அவர்களுடைய மனதைப் புண்படுத்துபம்படி பேச மாட்டார். தான் சொல்ல வேண்டிய கருத்தில் உறுதியாக இருப்பார்.
இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும். அரங்கநாதன் முன்றில் என்ற பத்திரிகை நடத்திக்கொண்டு வந்தார். முதலில் அப் பத்திரிகையின் ஆசிரியர் க.நா.சு. அதன் பின் அசோகமித்திரன். மா அரங்கநாதனுக்கு கநாசு மீதும், அசோகமித்திரன் மீதும் அளவுகடந்த மரியாதை உண்டு. ஒரு முன்றில் இதழ் வந்தவுடன், விருட்சம் இதழ் தொடர்ந்து வரும். இரண்டும் அளவில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பக்க அளவும் அதிகமாகப் போகாது. இரண்டு பத்திரிகைகளுக்கும் ஆதிமூலம்தான் லெட்டரிங் எழுதியிருப்பார். அசப்பில் பார்த்தால் இரண்டு பத்திரிகைகளும் ஒரே மாதிரியாகத்தான் ùதியும். ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு பத்திரிகைகளும் ஒரே அச்சகத்தில் அச்சடிக்கப் பட்டிருக்கும். சில ஆண்டுகளுக்குப் பிறகு மா அரங்கநாதனே அந்தப் பத்திரிகை ஆசிரியராக இருந்தார்.

அப்போதெல்லாம் அவரைப் பார்க்கும்போது, üஇந்த வயதில் இதத்னை துடிப்புடன் இருக்கிறாரேý என்று தோன்றும். கிட்டத்தட்ட அசோகமித்திரனை விட ஒரு சில ஆண்டுகள்தான் குறைவான வயது உள்ளவராக இருந்தார். இருந்தாலும் அவரைப் பார்க்கும்போது ஒரு இளைஞனாகத்தான் காட்சி அளித்தார்.

அவருடன் பேசும்போது அவருக்குக் கோபம் வருமா என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி தோன்றும். எதையும் நிதானமாகத்தான் பேசுவார். அவர் பேசும்போது யார் மீதும் அவருக்கு அன்பு உள்ளதுபோல் உணரமுடியும். அவர் சிறுகதைகள் எழுதுவதில் நிபுணர் என்பதை அப்போதெல்லாம் நான் உணரவில்லை. ஏன்என்றால் எப்போதும் தன்னைப் பற்றி பெருமையாகப் பேச மாட்டார்.
ஒருமுறை அவருடைய சிறுகதைத் தொகுதியை என்னிடம் கொடுத்தார். அந்தப் புத்தகத்தின் விமர்சனம் விருட்த்தில் வர வேண்டுமென்று விரும்பினார். நான் கொடுக்கக் கூடாத ஒருவரிடம் அவர் புத்தகத்தை விமர்சனத்திற்காகக் கொடுத்து விட்டேன். அவரும் அந்தப் புத்தகத்தை தேவையில்லாமல் தாக்கி எழுதியிருந்தார். எனக்கு சங்கடமாகப் போய்விட்டது. நானே கூட அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கலாம், ஏன் இப்படி செய்தோம் என்று வருத்தமாக இருந்தது. மா அரங்கநாதனிடம் அவர் எழுதிய விமர்சனத்தைக் கொடுத்தேன். அதைப் படித்து மா அரங்கநாதனுக்கும் சற்று வருத்தமாக இருந்தது.
‘அவர் எழுதிய விமர்சனத்தை விருட்சத்தில் பிரசுரம் செய்ய மாட்டேன்,’ என்று அவரிடம் கூறினேன்.

அந்த விமர்சனத்தை மட்டும் நான் பிரசுரம் செய்திருந்தால் மா அரங்கநாதன் என்ற நல்ல நண்பரின் நட்பை இழந்திருப்பேன். ஒரு சமயம் நான் பிரசுரம் செய்திருந்தால் அவர் அதைக் கூட பெரிசாக எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். என்னால் எதுமாதிரி நடந்திருக்கும் என்று இப்போது யூகிக்க முடியவில்லை.

விருட்சமும் முன்றிலும் இரண்டு சகோதரிகள் போல் ஒன்று மாற்றி ஒன்று வந்தாலும், இரண்டும் வேறு விதமான பத்திரிகைகள்.ஒரு சந்தர்ப்பத்தில் முன்றில் ஒரு இலக்கிய விழா நடத்தியது. அது பெரிய முயற்சி. அதன் தொடர்ச்சிதான் காலச்சுவடு தமிழ் இனி 2000 என்று விழா நடத்தியதாக எனக்குத் தோன்றுகிறது.

மா அரங்கநாதனிடம் ஒரு எழுத்தாளர்தான் ரொம்ப ஆண்டுகளாக தொடர்பு இல்லாமல் இருந்தார் என்று நினைத்தேன். ஆனால் சிலகாலம் கழித்து அந்த எழுத்தாளரும் முன்றில் அலுவலகத்தில் மா அரங்கநாதனுடன் பேச ஆரம்பித்துவிட்டார். அவர் வேறு யாருமில்லை. பிரமிள்தான். பிரமிளுடன் யார் பேசினாலும் தொடர்ந்து நட்புடன் இருக்க முடியுமா என்பது சந்தேகம். மா அரங்கநாதன் எப்படி பிரமிளை சமாளிக்கப் போகிறார் என்று கவலையுடன் இருந்தேன். ஒரு முறை பிரமிளிடம் நான் கேட்டேன். ‘மா அரங்கநாதனின் கதைகள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’ என்று. ‘நான் இப்போது ஒன்றும் சொல்ல மாட்டேன்,’ என்றார் பிரமிள். கொஞ்சங்கூட உயர்வாக சொல்ல மனம் வரவில்லையே என்று எனக்குத் தோன்றியது. மா அரங்கநாதன் எழுத்தை அசோகமித்திரன், நகுலன் போன்ற எழுத்தாளர்கள் புகழ்ந்து எழுதவும் எழுதியிருக்கிறார்கள். க நாசுவும் எழுதியிருக்கிறார்.

பிரமிளுக்கும் மா அரங்கநாதனுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு விட்டது. முன்றில் பத்திரிகையில் அது எதிரொலிக்க ஆரம்பித்தது. உண்மையில் பிரமிள் படைப்புகள் மீது மா அரங்கநாதனுக்கு அபாரமான லயிப்பு உண்டு. சண்டைப் போட்டாலும் பிரமிள் கவிதைகளைப் புகழ்ந்து சொல்வார். ஆனால் கருத்து வேறுபாடு வந்தபோது, பிரமிளைப் பற்றி தனக்கு ஒவ்வாத கருத்துக்களையும் அவர் எழுதத் தவறவில்லை. உண்மையில் கொஞ்சம் தைரியயமாக எழுதியவர் மா அரங்கநாதன்தான். அப்போது அதையெல்லம் படிக்கும்போது, ஐயோ ஏன் இப்படி எழுதிகிறார், அவருடன் மோத முடியாதே என்று எனக்குத் தோன்றும். யாராவது பிரமிள் மீது ஒரு அடி பாய்ந்தால் பிரமிள் 10 ஆடி பாய்வார். மேலும் பிரமிள் ஒரு பத்திரிகையைப் பற்றி எதாவது எழுத ஆரம்பித்துவிட்டால், அந்தப் பத்திரிகை தொடர்ந்து வராமல் நின்றுவிடும். இது என் கற்பனையாகக் கூட இருக்கலாம். பிரமிள் உள்ளே புகுந்து கலகம் செய்ததால் பல சிறு பத்திரிகைகள் நின்றே விட்டன என்று கூறுவேன். முன்றில் எள்ற எளிய பத்திரிகைக்கும் அதுமாதிரி நடந்துவிட்டதோ என்று எனக்குத் தோன்றியது. விருட்சத்துடன் தொடர்ந்து வந்துகொண்டிருந்த முன்றில் என்ற சகோதரி பத்திரிகை நின்று போனதில் விருட்சத்திற்கு வருத்தம். அதேபோல் முன்றில் கடையும் முடப்பட்டுவிட்டது. தொடர்ந்து நஷ்டத்துடன் வாடகைக் கொடுத்துக்கொண்டு நடத்துவது என்பது முடியாத காரியம். அதை அவர்கள் நிறுத்தும்படி ஆகிவிட்டது.

அதன் பின்னும் மா அரங்கநாதன் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்திருக்கிறார். சிறுகதை எழுதுவதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். 90 கதைகள் எழுதியிருக்கிறார்.

மா அரங்கநாதன் படைப்புகள் என்ற புத்தகத்தில் மா அரங்கநாதன் இப்படி எழுதி உள்ளார் :
üகதை என்றால் என்ன – கவிதை என்றால் என்ன – கடவுள் என்றால் என்ன என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்க விரும்புகிறேன்,ý என்று.
மா அரங்கநாதனை நான் அடிக்கடி சந்திக்க முடியாமல் போய்விட்டாலும், தொலைபேசியில் என்னை விஜாரிக்காமல் இருக்க மாட்டார். விருட்சம் பத்திரிகையை அவர் முகவரிக்குக் கட்டாயம் அனுப்பச் சொல்வார். ‘நீங்கள் ஏன் எனக்கு கதைகள் அனுப்பக் கூடாது,’ என்பேன். எனக்கு இரண்டு மூன்று கûதாகள் அனுப்பியிருக்கிறார்.
எதை எழுதி அனுப்பினாலும் அதில் அவர் திறமை வெளிப்படும்.

பொதுவாக என் அலுவலகத்திற்குப் போன் செய்து பென்சன் கிரிடிட் ஆகிவிட்டதா என்று விஜாரிப்பார். அப்போதுதான் அவர் கணக்கில் ஒன்றை கவனித்தேன். அவர் பென்சன் கணக்கில் நாமினேஷன் இல்லாமல் இருந்தது.
“சார் நாமெல்லாம் எத்தனை வருஷம் இருப்போம்னு சொல்ல முடியாது.. நாமினேஷனில் உங்கள் பையன் பெயரையோ பெண் பெயரையோ போடாமல் இருக்காதீர்கள்?” என்று சொல்லிக்கொண்டிருப்பேன். நாமினேஷன் இல்லாமல் இருந்தால் அவருடைய பணத்தை அவருக்குப் பின் வாங்குவதில் பிரச்சனையாக இருக்கும்.

நான் சொன்னபடி அவர் நாமினேஷன் போட்டிரு&ப்பார் என்றுதான் நினைக்கிறேன்.
நாம் ஒரு எழுத்தாளரைப் பற்றி பேசுகிறோம் என்றால் அவர் ஒன்று எதாவது பரிசு வாங்கியிருக்க வேண்டும். அதாவது சாகித்திய அகாதெமி பரிசுபோல் ஒன்று வாங்கியிருக்க வேண்டும். அல்லது அந்த எழுத்தாளர் மரணம் அடைந்திருக்க வேண்டும். மா அரங்கநாதனைப் பற்றி நாம் அவர் மரணம் அடைந்த பிறகுதான் பேசுகிறோம். இது வருத்தத்தற்குரிய விஷயம். அவருடைய முழு தொகுதி வந்தபோது அது குறித்து எதாவது கூட்டம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஏனோ யாரும் கண்டுகொள்ளவில்லை.

நற்றினை என்ற பதிப்பகம் மா அரங்கநாதன் படைப்புகள் என்ற புத்தகத்தை 1022 பக்கங்களில் அற்புதமாக அச்சடித்து கொண்டு வந்திருக்கிறது. ரூ890 கொண்ட இப்புத்தகம் முக்கியமான புத்தகம் என்று நினைக்கிறேன். மா அரங்கநாதனை முழுவதுமாக இதன் மூலம் அடையாளம் காண முடியும். இது அவருக்குக் கிடைத்த கௌரவம் என்று நினைக்கிறேன். அதேபோல் ரவி சுப்பிரமணியன் அவரைக் குறித்து எடுத்து ஆவணப்படமும் முக்கியமானதாக நினைக்கிறேன். எஸ் சண்முகம் அவரைப் பேட்டி கண்டு அற்புதமான புத்தகம் ஒன்று கொண்டு வபந்திருக்கிறார். அதில் மா அரங்கநாதனின் புகைபடங்கள் அற்புதமாக பதிவு ஆகியிருக்கும்.

மா அரங்கநாதன் கதைகளில் எப்படியும் முத்துக் கருப்பன் என்ற பெயர் வராமல் இருக்காது. அந்த முத்துக் கருப்பன் என்பவர் யார்? அவர் வேறு யாருமில்லை மா அரங்கநாதன்தான். ஆரம்பத்திலேயே அவருடைய எல்லாக் கதைகளைப் படித்திருக்கிறேன். திரும்பவும் இப்போது அவர் கதைகளைப் படிக்கத் தோன்றுகிறது. அதற்கு ஏற்றார்போல் மா அரங்கநாதன் படைப்புகள் என்ற புத்தகமும் என்னிடம் இருக்கிறது.

download (22)
இங்கு வருவதற்கு முன் கண்ணை மூடிக்கொண்டு ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தேன். அலுப்பு என்பது அந்தக் கதை. கதை ஆரம்பிக்கும்போது முத்துக்கருப்பன் என்ற பெயர் எங்கும் வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு படித்தேன். கதை படித்துக்கொண்டே இருக்கும்போது முத்துக்கருப்பன் வந்துவிட்டார். மா அரங்கநாதன் முத்துக் கருப்பனாக என் கண்ணில் தென்பட்டார். இந்தக் கதையை இங்கு வருவதற்குள் மூன்று முறை படித்துவிட்டேன். அக் கதையில் வருகிற முத்துக்கருப்பன் அதாவது மா அரங்கநாதன் இறந்து விடுகிறார். அந்தக் கதையை அவர் எழுதிக்கொண்டு போகிற விதம் அபாரம். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கலந்து கலந்து எழுதியிருக்கிறார். அவர் எழுத்தில் நான் காண்பது மனித நேயம். இந்தக் கதையிலும் அது தென்படாமல் இல்லை. மனித நேயம் சிலசமயம் நம்மை ஏம்மாற்றவும் ஏமாற்றி விடும்.

பெரும்பாலபன எழுத்தாளர்கள் துரோகத்தைதான் அடிப்படையாகக் கொண்டு கதைகள் எழுதுவார்கள். அல்லது வருமைச் சித்தரிப்பை கதைகளாகக் கொண்டு வருவார்கள். இந்தக் கதையை அவர் 1988ல் எழுதியிருக்கிறார். இந்தக் கதையை இன்னொரு முறை படித்தாலும் அதில் எதாவது தென்படுகிறதா என்பதை ஆராய்ந்து பார்க்கலாம்.
இத் தொகுப்பில் 90 கதைகள் உள்ளன. தன் வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு கதைகயாக எழுதிப் பார்த்திருக்கிறார்.

சமீபத்தில் நவீன விருட்சம் பத்திரிகையைத் தொடர்ந்து அனுப்பச் சொல்லி ஒரு செக் அனுப்பியிருந்தார். அவர் அனுப்பாவிட்டாலும் பத்திரிகையை அவருக்கு அனுப்பியிருப்பேன். இனிமேல் யாருக்கு பத்திரிகையை அனுப்புவது.

•••

(26.04.2017 அன்று கவிக்கோ அரங்கத்தில் மா அரங்கநாதன் குறித்து நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய கட்டுரை)

•••

இதழாசிரியர் குறிப்பு

கட்டுரை முழுவதும் மா . அரங்கநாதன் என்றே வருகிறது. ஆனாலும் அவர் ம.அரங்கநாதன்தான். அரங்கநாதனின் அப்பா பெயர் மகாதேவன். அந்தப் பெயரைதான் அவருடைய மகனுக்கு மகாதேவன் என பெயரை சூட்டியுள்ளார். இந்த மகாதேவன் தற்போது சென்னையில் நீதியரசராக இருக்கிறார்.

நிலவின் மகள்கள் THE DAUGHTERS OF THE MOON இத்தாலிய மொழி : இடாலோ கால்வினோ Italo Calvino ஆங்கிலம் : மார்ட்டின் மெக்லாஃப்லின் Martin McLaughlin. / தமிழில் / ச.ஆறுமுகம்

images (10)

பாதுகாப்புக் கவசமாக வெற்றுக் காற்று மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதில், தனக்கு நீதி மறுக்கப்பட்டுவிட்டதான உணர்வில் கவன்றுகொண்டிருந்த நிலவுக்கு, விண்கற்களின் தொடர்ச்சியான வீழ்பொழிவுத் தாக்குதலுக்கும் சூரியக் கதிர்களின் எரித்தரிக்கும் கொடுமைக்கும் தொடக்க காலத்திலிருந்தே எப்போதும் ஆட்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றியது. கோர்னெல் பல்கலைக்கழகத்தின் தாமஸ் கோல்டு கூறுவதன்படி, விண்கல் துகள்கள் தொடர்ச்சியாகப் படிந்துராய்வதில் நிலவின் மேற்பரப்பிலுள்ள பாறைகள் பொடிப்பொடியாகி மாவாகிவிட்டன. சிக்காகோ பல்கலைக்கழக ஜெரார்டு குய்ப்பரின் ஆய்வுப்படி, நிலவின் கற்குழம்பிலிருந்து வெளியான வாயுக்களே, அந்தத் துணைக்கோளுக்கு படிகக்கல்லில் வெளிப்படுவது போன்றதொரு நுண்துளைகளுடன் கூடிய ஒரு பிசுபிசுப்பினை, ஒரு ஒளியினை அளித்திருக்கலாம்.

நிலவு, கிழடு தட்டிக் குண்டும் குழியுமாகப் பொள்ளல் விழுந்து முற்றிலும் தளர்ந்துள்ளதை ஆஃப்வஃப்க் ஒப்புக்கொள்கிறார். அது, வானம் முழுக்க நிர்வாணமாக உருண்டு, உருண்டு, தசை முழுவதும் கரம்பப்பட்டுவிட்ட ஒரு எலும்புத்துண்டாக இற்றுப்போயுள்ளது. இப்படியான நிகழ்வு இப்போது தான் முதன்முதலாக நடக்கிறதென்பதில்லை. இதைவிடவும் வயதாகி, உருக்குலைந்த பல நிலவுகள் என் நினைவுக்கு வருகின்றன. `டன்` கணக்கில் நிலவுகளை நான் பார்த்திருக்கிறேன்; அவை பிறந்துகொண்டிருப்பதையும் வானத்தில் குறுக்கு மறுக்காக ஓடித்திரிந்து மரித்துப் போவதையும், எரிநட்சத்திரங்களின் வேகப்பொழிவில் துளைகளாகிப்போன ஒரு நிலவையும், இன்னொன்று, அதனுடைய சொந்த எரிவாயுக்களாலேயே வெடித்துச் சிதறியதையும், இன்னுமொன்றில் கோமேதக நிற வியர்வைத் துளிகள் உருவாகிச் சொட்ட, அவை உடனடியாக ஆவியாவதையும், பின்னர் அந்த நிலவு பச்சை நிற மேகங்களால் சூழப்பட்டு முழுவதுமாக மறைக்கப்பட்டுக் காய்ந்து போன கடற்பஞ்சாகச் சுருங்குவதையும் கண்டிருக்கிறேன்.

ஒரு நிலவு மரணிக்கும் போது பூமிக்கோளில் நிகழும் மாற்றங்களை விவரிப்பது எளிதானதல்ல; என் நினைவுக்கெட்டிய வகையில் கடைசியாகப் பார்த்த ஒரு நிகழ்வினைக் கொண்டு நான் உங்களுக்கு விளக்க முயல்கிறேன். மிக நீண்ட பரிணாம வளர்ச்சிக் காலத்தின் தொடர்ச்சியாக பூமிக்கோள் இப்போது நாமிருக்கிற இந்த நிலைக்குக் கூடவோ குறையவோ வந்திருந்தது; அதையே, காலணிகள் தேய்ந்து உயிர்விடுவதைவிடவும் அதிவேகமாகக் கார்கள் தேய்ந்து போகும் ஒரு காலத்துக்கு பூமி வந்துசேர்ந்திருந்ததென்றும் கூறலாம். மனித உழைப்பில் உற்பத்தியாகிற, வாங்கவும் விற்கவுமான பண்டங்கள் மற்றும் ஒளிமிக்க வண்ணங்களால் கண்டங்களை மறைத்துநிற்கும் நகரங்களைப் போன்ற ஒரு நிலையேதான் அப்போதுமிருந்தது. கண்டங்களின் வடிவங்கள் பல்வேறாக, எந்த அளவிலிருந்தபோதும் அந்த நகரங்கள், அநேகமாக தற்போது நமது நகரங்கள் இருக்கின்ற அதே இடங்களில் தான் உருவாகி வளர்ந்திருந்தன. அங்கே ஒரு புதிய நியூயார்க், உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த நியூயார்க்கை ஒருவிதத்தில் ஒத்திருந்த, ஆனால் மிகவும் புதிதாக அல்லது, புத்தம் புதிய தயாரிப்புகள், புதிய பல் துலக்கிகளால் ஏற்பட்ட ஒரு கூடுதல் பளபளப்புடன் அந்தப் புதிய நியூயார்க், புத்தம் புது வரவான புதிய பல் துலக்கியின் நைலான் குறுமுடிகள் போன்று மினுங்கிக்கொண்டிருந்த வான்தொடும் கட்டிடக் காடுகள் அடர்ந்து தனித்துத் தெரியும். அதன் எப்போதுமான மன்ஹாட்டனுடனான ஒரு புதிய நியூயார்க்காக இருந்தது.

எந்தவொரு பொருளும் மிக இலேசான ஒரு கீறல் அல்லது நாட்பட்டது போல் தோன்றும் முதல் கணம், முதல் வடு அல்லது முதல் கறை கண்ணில்பட்ட உடனேயே தூக்கியெறிந்துவிட்டு, அதற்குப் பதிலாகப் புத்தம் புதியதும் முழுநிறைப் பொருத்தமானதுமான மாற்றுப்பொருள் ஒன்றினைக் கொணர்ந்துவிடுகிற இந்த உலகில், தவறான ஒற்றை இராகமாக, நிழல்படிவு ஒன்று இருந்ததென்றால் அது நிலவு மட்டுமே. அடிபட்டுத் தேய்ந்து, நரைத்து வெளிறி, அதன் கீழிருக்கும் பூமிக்கு மேலும் மேலும் அந்நியமாகி, நாட்பட்டுக் காலாவதியான ஒரு நிலையில், நீடிக்கும் ஒரு தலைவலியாக அது வானம் முழுக்க நிர்வாணமாக அலைந்து திரிந்தது.

`முழு நிலவு`, `அரைநிலவு`, `பிறைநிலவு`, `நிலவுக்கீற்று` போன்ற புராதனத் தொடர்களெல்லாம் உண்மையில் வெறும் அலங்காரப் பேச்சின் அணிகளாகத் தொடர்கின்றனவே தவிர வேறொன்றுமில்லை. முழுவதுமாகவே வெடிப்புகளும் குண்டு குழிகளுமாகவும் எந்நேரமும் இடிந்து இடிபாடுகளாக நம் தலையில் கொட்டப் போவதாகத் தோன்றும் ஒன்றினை எப்படி `முழுமை` யானதென நாம் அழைக்க இயலும்? அதுவே மரணித்துக்கொண்டிருக்கும் ஒரு நிலவாக இருப்பதானால் சொல்லவேண்டிய அவசியம் எழவேயில்லை! அது மேற்புறம் கொறிக்கப்பட்ட பாலாடைக்கட்டியாக உருமாறியிருந்ததோடு, நாம் எதிர்பார்க்காத ஒரு தருணத்திலேயே, எப்போதும் மறைந்துவிடுவதாக இருந்தது. ஒவ்வொரு அமாவாசையின் போதும், அது எப்போதுதான் மீண்டும் தோன்றுமோவென ஆர்வத்தோடு வியந்தேயிருந்திருக்கிறோம் (பிறகென்ன, அது திடுதிப்பென மறைந்துவிடுமென்றா நம்பினோம்?) என்பதோடு அது மீண்டும் தோன்றியபோது, பற்களை இழந்த சீப்பிற்கும் கேவலமாக, படுகேவலமாகத் தெரியவே, அதிர்ச்சியில் நாம் கண்களை வேறுபக்கம் திருப்பினோம்.

அது ஒரு சோர்வூட்டும் காட்சி. இரவும் பகலுமாக எந்நேரமும் திறந்திருக்கும் பெரிய, பெரிய பல்பொருள் அங்காடிகளுக்கு உள்ளும் வெளியிலுமாக எடை மிகுந்த பொதிகளைச் சுமக்கும் கைகளுடன், நாம் மக்கள் திரள்களினூடாகச் செல்கையில், வான்தொடும் கட்டிடங்களுக்கும் மேலாக, உயரத்தில், இன்னும் உயரத்தில் ஒளிர்ந்துகொண்டிருக்கின்ற நியான் விளம்பரங்களில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புத்தம் புதிய வரவுகளை, நமக்கென்றே நிரந்தரமாகத் தெரிவிக்கப்பட்டவற்றை, நாம் ஊடுருவித் துருவித் துருவிக் கூராய்ந்துகொண்டிருக்கும்போதே, அந்தக் கண்ணைப் பறிக்கும் விளக்கொளிகளின் மத்தியிலேயே திடீரென அது வெளிறி, மெதுமெதுவாக நோய்ப்பட்டுத் தேய்வதை நம் கண்ணாலேயே காண்பதோடு, நம் தலைக்குள் திணிக்கப்பட்ட அந்த ஒவ்வொரு புதிய பொருளையும் தலையைவிட்டும் வெளிக்கொணர இயலாதிருப்பதோடு, அப்போதுதான் நாம் வாங்கியிருந்த ஒவ்வொரு பொருளும் அப்படிக்கப்படியே பழையனவாகி, பயனற்றதாகி வெளிறிப் போக, ஓடித்திரிந்து தேடித்தேடிப் பொருட்களை வாங்கிய, ஒருவித ஆசைவெறிகொண்டு பணியாற்றிய ஆர்வத்தை இழந்துநிற்போம் – அது, தொழில்துறைக்கோ, வர்த்தகத்துறைக்கோ எந்தப் பாதிப்பினையும் ஏற்படுத்தாத ஒரு இழப்பு.

இதை வைத்துக்கொண்டு `என்னடா` செய்வதென நாம் திகைக்கத் தொடங்குகிறோமே அதுபோன்ற ஒரு பிரச்னையாகத்தான் அந்த எதிர்மறைப்பயன் விளைக்கின்ற துணைக்கோளும் இருந்தது. அதனால் எந்தப் பயனுமில்லை; பயனற்றுப் பாழாகிப்போன ஒன்றாகத்தான் அது இருந்தது. அதன் எடை குறையவே, அதன் சுற்றுவட்டம் பூமியை நோக்கிச் சாயத் தொடங்க, மற்றெல்லாவற்றையும் விட மோசமான ஒரு அபாயமாகியது. அப்படியே, பூமியின் பக்கம் வரவர, அது, தன் வேகத்தைக் குறைத்தது; அதன் போக்கினை எங்களால் கணிக்கமுடியாமலிருந்தது. மாதங்களின் ஒழுங்குவரிசை காட்டும் நாட்காட்டி கூட வெறும் மரபாகிப் போனது; நிலவு, இடிந்து விழுந்துவிடுவது போன்று நடுக்கத்திற்காளாகியது,

ஒளிகுன்றிய இந்த நிலவுநாட்களின் இரவுகளில், சிறிது மேலதிகமான, உறுதிகுலைந்த மனப்போக்குடையவர்கள் விசித்திரமாகச் செயல்படத் தொடங்கினர். தூக்கத்தில் நடக்கும் நோயர் ஒருவர் நிலவை நோக்கி நீட்டிய கரங்களுடன் வான்தொடும் கட்டிட விளிம்பின் சுற்றுச்சுவர் முனைவரைக்கும் வந்துவிடுவது, அல்லது, பரபரப்பான டைம் சதுக்கத்தின் மத்தியில் கிழஓநாய் ஊளையிடத் தொடங்குவது, அல்லது நெருப்புப்பித்தர் ஒருவர் துறைமுகக் கிடங்குகளுக்குத் தீவைத்துவிட்டது போன்ற நிகழ்வுகள் எப்போதுமிருந்தன. ஒரு கட்டத்தில் இவையெல்லாம் மிகமிகச் சாதாரணமாகி, வழக்கமாக அமானுடச் செய்திகளுக்காக அலையும் கூட்டத்தை ஈர்க்கவியலாமற் போயிருந்தனதாம். ஆனாலும், மத்திய பூங்காவிலுள்ள இருக்கைப் பலகை ஒன்றின் மீது முழுக்க முழுக்க நிர்வாணமாக, ஒரு பெண் அமர்ந்திருந்ததைப் பார்த்தபோது, நான் நின்றேயாக வேண்டியிருந்தது.

அவளைப் பார்ப்பதற்கு முன்பாகவேகூட, புரியாத, மிகப் புதிரான ஏதோ ஒன்று நிகழவிருப்பதுபோன்ற ஒரு உணர்வு எனக்குள் இருக்கத்தான் செய்தது. என் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய வட்டினைக் கைக்கொண்டு, நான் மத்திய பூங்காவுக்குள் ஓட்டி வந்தபோது, ஒளிர்வாயுவிளக்கு ஒன்று முழுவதுமாக ஒளிரத் தொடங்கும் முன் விட்டுவிட்டுத் தொடர்ச்சியாக மின்னி வெளியிடும் ஒளிச்சிதறல் போன்ற ஒரு சிமிட்டொளியில் குளிப்பதுபோல் நான் உணர்ந்தேன். என்னைச் சுற்றிலுமிருந்த காட்சித்தோற்றம் நிலவுப்பள்ளத்துக்குள் மூழ்கிப்போன ஒரு தோட்டக் காட்சியினைப் போன்றிருந்தது. நிலவுக் கீற்று ஒன்றைப் பிரதிபலித்துக்கொண்டிருந்த நீர்க்குட்டை ஒன்றின் அருகே அந்த நிர்வாணப் பெண் அமர்ந்திருந்தாள். நான் தடைக்கட்டையை மிதித்தேன். ஒரு கணம் நான் அவளைத் தெரிந்துகொண்டதாகவே நினைத்தேன். காரை விட்டிறங்கி அவளை நோக்கி ஓடினேன்; ஆனாலும் மறுகணம் உறைந்துபோய் நின்றேன். அவள் யாரென்று எனக்குத் தெரியவில்லை; அவளுக்கு உடனடியாக, அவசரமாக ஏதாவது செய்தாகவேண்டுமென்று மட்டும் உணர்ந்தேன்.

இருக்கைப்பலகையைச் சுற்றிலும் புற்களின் மீது அனைத்தும் சிதறிக்கிடந்தன; அவளது ஆடைகள், இங்கொன்றும் அங்கொன்றுமாக அரணக் காலணி மற்றும் காலுறைகள், அவளுடைய காதணி வளையங்கள், கழுத்தணிமாலை மற்றும் முன்கை அணிவளைகள், கைச்சிறு பணப்பை, பொருட்கள் அனைத்தையும் ஒரு பரந்த வட்டத்தின் வில்வடிவத்தில் சிதறவிட்டுக் கிடந்த ஒரு மளிகைப்பை, எண்ணிலடங்காத சிறு பொட்டலங்கள் மற்றும் பொருட்கள், அநேகமாக அந்த ஜீவன் ஆர்வமிக்க ஒரு தாராளமான வாங்கிக் குவித்தல் முடித்த கணத்தில் அந்தக்கணத்திலேயே திரும்ப வருமாறு அழைக்கப்பட, இந்தப் பூமியோடு அவளைத் தொடர்புறுத்துகின்ற அனைத்துப் பொருட்களையும் அடையாளங்களையும் உதறித் தொலைத்தேயாகவேண்டுமென்ற நிர்ப்பந்தப் புரிதலில், அனைத்தையும் உதறியெறிந்துவிட்டு, நிலவின் உலகத்துக்குள் நுழைவதற்காகக் காத்திருப்பது போலிருந்தது.

“என்னவாயிற்று” நான் திக்கித் திணறிக்கேட்டேன். ” நான் ஏதேனும் உதவி செய்யலாமா?”

“உதவியா?” மேல்நோக்கி வெறித்த கண்களுடன் அவள் உச்சரித்தாள். “யாராலும் உதவமுடியாது. யாராலும் எதுவும் செய்யமுடியாது.” அவள், அவளைப்பற்றியல்லாமல் நிலவினைப் பற்றியே பேசுவது நன்றாகவே புரிந்தது.

நிலவு எங்கள் தலைக்கு மேலாக, ஒரு குவி வடிவில் பாழடைந்த ஒரு கூரையாக துளைகள் நிறைந்த ஒரு பாலாடைக்கட்டித் துண்டினைப் போல இருந்தது. அந்தக்கணத்தில் உயிர்க்காட்சிப் பூங்காவிலிருந்த உயிரினங்கள் ஊளையிடத்தொடங்கின.

“இதுதான் முடிவுக்காலமா?” இயந்திரத்தனமாகத் தான் கேட்டுவிட்டேன். ஆனால், நான் என்ன சொன்னேனென்று எனக்கே புரியவில்லை.

“இதுதான் ஆரம்பம்,” அல்லது அதுமாதிரியான ஏதோ ஒன்றை அவள் பதிலாகச் சொன்னாள். (அவள் எப்போதுமே அநேகமாக உதடுகளைத் திறக்காமலேதான் பேசினாள்.)

“நீ என்ன சொல்கிறாய்? முடிவின் தொடக்கமா அல்லது வேறு ஏதோ ஒன்றின் தொடக்கமா?”

அவள் எழுந்து புல்லின் மேலாக நடந்தாள். அவளது செம்பு நிறத் தலைமுடி தோள்களுக்கும் கீழாக வழிந்து தொங்கியது. தீமைக்கு எளிதில் ஆட்படும் அபாயத்தில் இருந்த அவளுக்கு ஏதோ ஒரு சிறிய அளவிலாவது பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அவள் கீழே விழுந்துவிடுவதாக இருந்தால் உடன் பிடித்துக்கொள்ளவும், அவளைத் துன்புறுத்துவதாக ஏதேனும் நெருங்கிவந்தால் அதனைத் துரத்துவதாகவும் என் கைகளை அவளைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவச வளையம் போல் அசைக்கத் தொடங்கினேன். ஆனால், அவள் மேனியை மறந்தும் தொட்டுவிட அல்லது உரசிவிட என் கைகள் துணியவில்லை என்பதோடு, அவள் மேனியிலிருந்து சில சென்டிமீட்டர்கள் தொலைவிலேயே அவை எப்போதும் இயங்கின. அப்படியே அவளைப் பின்தொடர்ந்த நான் பூந்தோட்டப் பாத்திகளைக் கடந்ததும் தான், அவளுடைய அசைவுகளும் என்னுடையதைப் போலவே, எளிதில் உடைந்துவிடப்போகின்ற ஏதோ ஒன்றை, தரையில் விழுந்து துண்டுதுண்டுகளாகச் சிதறப்போகும் ஒன்றினை, அவள் தொட்டுவிடக்கூடாத அதனைக் கையசைவுகள் மற்றும் அடையாளங்கள் மூலமாக மட்டுமே அது தெம்புடன் அமர்கிற ஒரு இடத்துக்கு நகர்த்திக் கொண்டுசெல்வது அவசியமாக இருந்த அதனைப் பாதுகாக்க முயற்சிப்பதை, நான் உணர்ந்தேன்: அது நிலவுதான்.

நிலவு தொலைந்துபோனதாகத் தோன்றியது. அதன் சுற்றுக்கோள வழியினை விட்டகன்ற அதற்கு எங்கு செல்வதென்று தெரிந்திருக்கவில்லை; காய்ந்த ஒரு சருகினைப் போலத் தன்னை எடுத்துச்செல்ல அது அனுமதித்தது. சிலநேரங்களில் அது பூமியை நோக்கி அசைந்துவருவதாகத் தோன்றியது, வேறுசில நேரங்களில் திருகுச் சுருள் வடிவ இயக்கத்தில் திருகப்படுவது போலும் இன்னும் வேறான நேரங்களில் வெறுமனே மிதப்பது போலும் தோன்றியது. அதன் இருப்பிட உயரமும் குறைந்துவந்ததென்பது நிச்சயம் தான்: ஒரு கணம் பிளாசா ஹோட்டல் மீது இடிந்துவிழுந்துவிடுவது போல் தோன்றினாலும், அதற்குப் பதிலாக, அது இரண்டு வான்தொடு கட்டிடங்களுக்கிடையிலான ஒரு இடைவெளிப்பகுதிக்குள் நுழைந்து ஹட்சன் வளைகுடாத் திசையில் மறைந்துபோனது. சிறிது நேரத்திலேயே மீண்டும் தோன்றிய அது, நகரத்திற்கு எதிர்ப்புறமாக ஒரு பெரிய மேகத்தின் பின்னாலிருந்து தலைகாட்டி மீண்டும் வெளிப்பட்ட அது வெண்ணிற ஒளியில் ஹார்லேம் மற்றும் கிழக்கு ஆற்றில் மூழ்கிக் குளித்துக்கொண்டே, காற்றின் அலை ஒன்றில் அகப்பட்டுக்கொண்டது போல, அது பிரான்க்ஸ் பகுதி நோக்கி உருண்டது.

“அதோ, அங்கே!” என்று நான் கத்தினேன். ”அங்கேயே – அது அப்படியே நின்றுவிட்டது!”

“அது நிற்கவே முடியாதே!” என அந்தப் பெண் வியந்துகொண்டதோடு, புல்லின் மீது வெற்றுக்கால்களால் நிர்வாணமாக ஓடவும் செய்தாள்.

“ஏய், நீ எங்கே போகிறாய்? இப்படியெல்லாம் நீ ஓடக்கூடாது! நில்! ஏய், உன்னிடம்தான் சொல்கிறேன்! உன் பெயர் என்ன?”

டயானா அல்லது டியானோ போன்ற ஒரு பெயரைக் கத்திச் சொன்னாள்; அதுவும் கூட ஏதாவதொரு வேண்டுதல் வாசகமாகவும் இருக்கலாம். அதோடு அவள் மறைந்துவிட்டாள். அவளைப் பின்தொடர்வதற்காகக் காருக்குள் குதித்த நான் மத்திய பூங்காவின் கார்ச்சாலைகளில் தேடத் தொடங்கினேன்.

எனது முகப்பு விளக்குகளின் ஒளித்தூண்கள் வேலிகள், மலைகள், நான்முனைக் கம்பத் தூபிகளிலெல்லாம் ஒளியேற்றின; ஆனால் அந்தப் பெண் டயானாவை எங்குமே காணவில்லை. அதிலும் அந்த நேரத்தில் நான் வெகுதூரம் கடந்துவிட்டிருந்தேன்: நான் அவளைக் கடந்து வந்திருப்பேனோ; வந்த வழியே திரும்பிச் சென்று பார்க்க அப்படியே வட்டமடித்துத் திரும்பினேன். என் பின்னாலிருந்து வந்த ஒரு குரல் சொன்னது, “இல்லை, இல்லை, அது அங்கே தான் இருக்கிறது, போய்க்கொண்டேயிரு!”

எனது கார் டிக்கியின் மேற்புறமாக, நிலவை நோக்கி நீட்டிய கரங்களுடன் நிர்வாணமாக அவள் அமர்ந்திருந்தாள்.

அவளை அப்படித் தெளிவான காட்சியாக, அவள் அமர்ந்திருந்த அந்த நிலையில் அவளையும் வைத்துக்கொண்டு நகர் முழுதும் நான் காரோட்ட முடியாதென்பதை அவளுக்கு விளக்கிச் சொல்வதற்காக, அவளை கீழே இறங்கச் சொல்லவேண்டுமென நான் விரும்பினாலும் கார்ச்சாலை முடிவில் தோன்றுவதும் மறைவதுமாக இருந்த அந்தத் தண்ணொளி வண்ணத்திலிருந்தும் பார்வையை ஒருபோதும் அகற்றத் தயாரில்லாமலிருந்த அவளைத் திசைதிருப்பும் துணிவு எனக்கு இல்லாமற்போனது. அதுவுமின்றி எந்தவொரு நிலையிலும் – அந்நியனென்றாலும்கூட – வழிப்போக்கன் யாரும் எனது கார் டிக்கியின் மேல் அமர்ந்திருக்கும் இந்தப் பெண்ணுருவினைக் கவனித்திருந்ததாகத் தெரியவில்லை.

மன்ஹாட்டனை முக்கிய நிலப்பகுதியுடன் இணைக்கும் பாலங்களில் ஒன்றினை நாங்கள் கடந்தோம். இப்போது நாங்கள் பல்முனை நெடுஞ்சாலையில் இருமருங்கிலும் பலப் பல கார்கள் நெருக்கமாக அணிவகுக்கப் போய்க்கொண்டிருந்தோம்; நாங்கள் இருவரும் இருந்த காட்சி எங்களைச் சுற்றியிருந்த கார்களில் சந்தேகத்திற்கிடமின்றித் தோற்றுவிக்கும் சிரிப்பலைகள் மற்றும் குரூரப் பேச்சுக்கணைகளுக்குப் பயந்து நான் என் கண்களைச் சாலையில் மட்டுமே அப்படி இப்படி அசைக்காமல் நேராகச் செலுத்தியிருந்தேன். ஆனால், பெருடிக்கிக் கார் ஒன்று எங்களை முந்திச்சென்றபோது ஆச்சரியத்தில் நான் சாலையை விட்டுக் கீழேயே இறங்கிச் செல்லவிருந்தேன்: அதன் கூரை மீது காற்றில் பறக்கும் தலைமுடியுடன் அமர்ந்திருந்தது ஒரு நிர்வாணப் பெண். ஒரு கணம், என் காரிலிருந்த பயணிதான் ஓடும் காரிலிருந்து இன்னொரு காருக்குத் தாவிவிட்டாளோவென நினைத்துவிட்டேன்; ஆனால், டயானாவின் கால் மூட்டுகள் என் மூக்குக்கு நேரான சமநிலையில் அசைவின்றியிருந்ததைக் காண்பதற்கு என் தலையை மட்டும் இலேசாகச் சாய்த்துத் திருப்பவேண்டியிருந்தது. அவளது உடல் மட்டுமே என் கண்முன்பாக ஒளிவீசிக்கொண்டிருந்தது என்பதில்லை; அப்போது நான் எங்கெங்கு நோக்கினும் விதம் விதமாக நினைத்துப் பார்க்கவே இயலாத வித்தியாசமான சாய்வு மற்றும் அமர் நிலையில், அவர்களது இளஞ்சிவப்பு அல்லது கருநிற நிர்வாண மேனிப் பளபளப்புக்கு எதிர்நிலையில் பொன்னிற அல்லது இருள் நிறத் தலைமயிர்க் கற்றைகளுடன் பறக்கும் கார்களின் ரேடியேட்டர் மறைப்புகள், கதவுகள், முட்டுத் தாங்கிகள், சக்கர மூடுதளங்களில் பற்றிப்பிடித்துத் தொங்கிய நிர்வாணப் பெண்களைக் கண்டேன். ஒவ்வொரு காரிலும் இப்படியான புதிர் நிறைந்த பெண் பயணிகள் முற்சாய்ந்த நிலையில் அவரவர் காரோட்டிகளை நிலவைப் பின்தொடருமாறு அவசரப்படுத்திக்கொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவருமே அபாயத்திலிருந்த நிலவால் அழைப்பு அனுப்பப்பட்டவர்கள்தாம்; அதில் நான் உறுதியாகவே இருந்தேன். அப்படி எத்தனை பேர் இருந்தனர்? எந்த இடத்திற்கு மேலாக நிலவு நின்றிருப்பதாகத் தோன்றியதோ அந்த இடத்திற்கு நகரத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் வந்து சேருகின்ற கூட்டுச் சாலைகள் மற்றும் , குறுக்குச் சாலைகள் அனைத்திலும் நிலவுப் பெண்களைச் சுமந்திருந்த கார்கள் பெருவாரியாகச் சேர்ந்திருந்தன. நகரத்தின் விளிம்பில், ஓட்டை உடைசல் தானியங்கிக் களத்தின் முன்பாக நாங்கள் வந்து சேர்ந்திருந்ததைக் கண்டோம். சிறுசிறு பள்ளத்தாக்குகள், வரப்பு மேடுகள், குன்றுகள் மற்றும் முகடுகளுடன் விளங்கிய ஒரு பகுதியில் சாலை முடிந்துபோனது; ஆனால், அந்தச் சமநிலையற்ற மேற்பரப்பு நிலத்தின் கூறுபாடாகத் தோன்றியதல்ல; அதற்கு மாறாக, வீசியெறியப்பட்ட பொருட்களின் படிம அடுக்குகள் மற்றும் குவியல்களால் அப்படியாகியிருந்தது. நுகரும் நகரம் பயன்படுத்தி முடித்து, புதிய வரவுகளைக் கையாளும் மகிழ்வினை உடனடியாகக் கொண்டாடுவதற்காகவே வெளித்தள்ளிய ஒவ்வொரு பொருளும், இந்த, முன்னெப்போதும் யாருக்கும் சொந்தமாக இராத ஊரக நிலத்துக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.

பற்பல ஆண்டுகளில் சேர்ந்துவிட்ட நொறுக்கியெறியப்பட்ட குளிர்பெட்டிக் குவியல்கள், லைஃப்மேகஸீன் வெளியிட்ட மஞ்சள் பக்கங்கள் மற்றும் எரிந்துபோன மின் குமிழ் விளக்குகள் இந்த மாபெரும் குப்பைக் கிடங்கினைச் சுற்றிலும் இரைந்துகிடந்தன. இந்தக் கூர்க் குவடுகளாகத் துருவேறிக்கிடந்த நிலப்பகுதியின் மீதுதான் நிலவு அப்போது ஒளிவீசிக்கொண்டிருந்ததோடு, நொறுங்கிய உலோகச் சிதறல்கள் பெரும் அலையொன்றில் அடித்துச் செல்லப்படுவதுபோல் ஊதிப்புடைத்து மேடாகின. சிதைந்த நிலவும், உலோகச் சிதைவுகளின் குவியல்களால் பற்றவைக்கப்பட்டு, பூமியின் முகடாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இப்பகுதியும் ஒன்றையொன்று பெரிதும் ஒத்திருந்தன. உலோகக் கழிவுத் துணுக்குகளின் குவியல் மலைகள் ஒரு சங்கிலித் தொடராக வட்ட வடிவில் இணைந்து ஒரு திறந்தவெளி அரங்கம்போல் உருவாகி அது எரிமலைப்பள்ளம் அல்லது நிலவிலுள்ள கடலினை மிகச் சரியாக ஒத்திருக்கின்ற வடிவத்தில் அமைந்திருந்தது. இந்த நிலப்பரப்பிற்கு நேர் மேலாகத்தான் அந்த நிலவு மிதந்துகொண்டிருந்ததோடு, அவை ஒரு கோளும் துணைக்கோளும் ஒன்றையொன்று பிரதிபலிக்கும் கண்ணாடிப் பிம்பங்கள் போல விளங்கித் தோன்றின.

எங்கள் கார் இயந்திரங்கள் அனைத்தும் தாமாகவே நின்றுவிட்டன. அவ்வவற்றின் சொந்தக் கல்லறைகளாகத் தோற்றமளித்த அவற்றை வேறெதுவும் அச்சுறுத்திவிடவில்லை. டயானா காரிலிருந்து இறங்கியதும் மற்ற அனைத்து டயானாக்களும் அவளைப் பின்தொடர்ந்து இறங்கினார்கள். ஆனால் அவர்கள் ஆற்றல் முழுவதும் வடிந்துவிட்டது போல் தோன்றியது; அந்த இரும்புத் துணுக்குக் கழிவுக் குவியல்கள் மத்தியில் சென்றதும் திடீரென அவர்கள் தங்கள் சொந்த நிர்வாணம் பற்றிய உணர்வினால் தாக்குண்டது போல, நிச்சயமற்ற மென்காலடிகளெடுத்து நகர்ந்தனர்; அவர்களில் பலரும் குளிரில் நடுங்குவதுபோல் குன்றி, மார்புகளை மறைத்துக்கொள்ளக் கைகளைப் பெருக்கல் குறிகளாக மடித்துக்கொண்டனர். அப்படியே, அங்கு அவர்கள் சிதறிப் பரந்து அந்தப் பயனற்ற உலோகத் துணுக்கு மலைகள் மீது ஏறியிறங்கி, திறந்தவெளி அரங்கத்தினுள் நுழைந்ததும் அதன் நடுவில் அவர்களாகவே ஒரு மிகப் பெரிய வட்டமாக உருவாக்கிக்கொண்டனர். பின்னர் அவர்கள் எல்லோரும் கைகளை உயர்த்தி நின்றனர்.

நிலவு, அவர்களின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்தது போல் ஒரு குலுங்குக் குலுங்கி, அங்கிருந்தும் மேலேறிச் செல்வதற்காக, அது தன் ஆற்றல் முழுவதையும் திரட்டிக்கொள்வதுபோல் ஒரு கணம் தோன்றியது. பெண்கள்வட்டம் நீட்டிய கைகளுடன், அவர்களின் முகங்களும் மார்புகளும் நிலவை நோக்கியிருக்குமாறு திரும்பியது. அப்படிச் செய்யுமாறு அந்த நிலவா சொன்னது? வானத்தில் அவர்களின் உதவி நிலவுக்குத் தேவைப்பட்டதா? இந்தக் கேள்விகளுக்குள் நுழைந்து துருவுவதற்கு எனக்குப் போதிய நேரம் இல்லை. அந்தக் கணத்தில் தான் பாரந்தூக்கிக் கிரேன் ஒன்று அங்கே நுழைந்தது.

வானத்தின் அழகினைக் கெடுப்பதோடு ஒரு சுமையாகவும் ஆகிப்போன அதனை அப்புறப்படுத்தித் தூய்மையாக்கியே தீருவதென முடிவெடுத்த அதிகாரிகளால் அந்த கிரேன் வடிவமைத்து உருவாக்கப்பட்டிருந்தது. புல்டோசர் வகை நிலச்சமன் பொறியான அதிலிருந்து நண்டின் கொடுக்கு மாதிரியான ஒன்று மேலெழுந்தது. கம்பளிப்பூச்சி நடையில் ஊர்ந்து வந்த அது குள்ளமாகப் பெருத்த ஒரு எடைக்கோளமாக, நண்டினைப் போலவே இருந்தது. திட்டத்தைச் செயல்படுத்துவதற்கெனத் தேர்ந்தெடுத்துத் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அது வந்து சேர்ந்தபோது இன்னும் அதிகக் குள்ளமாகிவிட்டது போல அதன் மொத்த எடையையும் பூமியில் பரப்பி அமர்ந்தது போலத் தோற்றமளித்தது. இழுவைத் திருகு உருளை வேகமாக இயங்க, கிரேன் அதனுடைய கரத்தை வானத்தை நோக்கி உயர்த்தியது; அவ்வளவு நீண்ட ஒரு கரம் கொண்ட அவ்வளவு பெரிய ஒரு கிரேனை உருவாக்கிவிடமுடியுமென யாருமே நம்பியதில்லை. நீண்ட கரத்தின் வாய் திறந்து அதன் பற்களெல்லாம் வெளிப்பட, நண்டு ஒன்றின் கொடுக்கினைப் போலத் தோற்றமளித்த அது, இப்போது சுறாவின் வாய் போலத் தோன்றியது. நிலவு அங்கே, அப்படியேதான் இருந்தது; அது தப்பிக்க விரும்பியது போலச் சிறிது அசைந்ததாகத் தெரிந்தது. ஆனால், கிரேனின் கரநுனிவாய் காந்த ஆற்றல் கொண்டதாக இருந்தது. நாங்கள் பார்க்கும்போதே, எங்கள் கண்முன்பாகவே, நிலவு இருந்த இடம் வெற்றிடமாகி, அது கிரேனின் பிளந்த வாய்க்குள் விழ, அது `க்ராக்` என்ற ஒரு வறண்ட ஒலியுடன் மூடிக்கொண்டது. முட்டைக்கேக் போல, நிலவு பொடிப் பொடியாகியிருக்குமென்று ஒரு கணம் தோன்றினாலும், அது வாய்க்குள் பாதி உள்ளேயும் பாதி வெளியேயுமாக அப்படியேதான் இருந்தது. அது செவ்வகவடிவுக்கு அமுங்கிப் போய், கிரேனின் வாயில் கனத்த ஒரு சுருட்டுப் போலத் தோன்றியது. சாம்பல் நிறப் பொழிவு ஒன்று பெருமழை போல் கீழிறங்கியது.

இப்போது கிரேன், நிலவினை அதன் சுற்றுக்கோளத்திலிருந்தும் வெளியே இழுக்க முயற்சித்தது. இழுவை உருளை பின்பக்கமாகச் சுற்றத் தொடங்கியது; அந்தக் கட்டத்தில் இழுவைச்சுற்றுக்கு மேலதிக ஆற்றலும் பெருமுயற்சியும் தேவைப்பட்டது. இத்தனை நடவடிக்கைகளுக்கும் நடுவே டயானாவும் அவளது தோழிகளும் அவர்களது பெருவட்டத்தின் வலிமையினாலேயே எதிரியின் ஊடுருவலை வென்றுவிடமுடியுமென்ற நம்பிக்கையில் தூக்கிய கைகளுடன் அமைதியாக அசைவற்று நின்றிருந்தனர். துகள், துகளாகச் சிதைந்து சிதறிக்கொண்டிருந்த நிலவின் சாம்பல் அவர்களின் முகங்களின் மீதும் மார்புகள் மீதும் மழையாகப் பொழிந்தபின்னர் தான் அவர்கள் அங்கிருந்து கலைந்துசெல்லத் தொடங்கினர். டயானாவிடமிருந்து மிகப் பெரும் அவலத்துடன் அழுகைச் சப்தமொன்று வெடித்தது.

அந்தக் கட்டத்தில், சிறைப்பட்ட நிலவு அதனிடம் எஞ்சியிருந்த மிகக் குறைந்த எடையினையும் இழந்தது; அது கறுப்பான வடிவமற்ற ஒரு பாறையாக உருமாறியது. கிரேனின் கரவாய்ப் பற்கள் மட்டும் அதனை இறுகப் பற்றியிருக்காவிட்டால் அது பூமியில் விழுந்து சிதறியிருக்கும். அதன் நேர் கீழே பூமியில் கிரேன் அதன் எடை முழுவதையும் இறக்கிவைப்பதற்கான பரப்பில் ஒரு பெரிய உலோக வலை ஒன்றினை உருவாக்கிய கைவினைத் தொழிலாளர்கள் தரையில் நீள ஆணிகள் அடித்து அதில் பொருத்தி விரித்துக்கொண்டிருந்தனர்.

தரைக்கு வந்து சேர்ந்தபோது, அம்மைத் தழும்புகள் நிறைந்த மணற் பாறையாக, மங்கலாக, நிறமேயற்று, இதுவா அதன் பளபளக்கும் பிரதிபலிப்பால் வானத்துக்கு ஒளியேற்றிய நிலவெனச் சிறிதும் நினைத்துப்பார்ப்பதற்குக்கூட நம்ப இயலாதபடி இருந்தது. கிரேனின் தாடைகள் திறந்தன; சுமை முழுவதும் திடீரென இறக்கப்பட்டதும் புல்டோசர் அதிர்ந்து அதன் கம்பளிப்பூச்சி நகர்வினை மீண்டுமொரு முறை நிகழ்த்திக்காட்டியது. கைவினைத் தொழிலாளர்கள் வலையுடன் தயார்நிலையில் நின்றிருந்தனர்; நிலவினை வலைக்குள் முழுவதுமாகச் சிறைப்பிடித்துச் சுற்றிக் கட்டினர்.

நிலவு இரும்புவலைக்குள் தத்தளித்தது; பெரும் பனிப்பாறைச் சரிவுகளை ஏற்படுத்துகின்ற பூமி அதிர்ச்சி போன்ற ஒரு நடுக்கத்தில் குப்பை மலைகளிலிருந்து வெற்று டப்பாக்கள் சரிந்து, உருண்டோடின. பின்னர் எல்லாமே அமைதியானது. நிலவில்லாத வானம் பெரியபெரிய விளக்குகளிலிருந்தும் வெடித்துச் சிதறிய ஒளிமழையில் நனைந்தது. ஆனால், இருள் ஏற்கெனவேயே மங்கி, வெளுக்கத் தொடங்கியிருந்தது.

அந்தக் கார்களின் கல்லறை மேற்கொண்டும் ஒரு இடிபாட்டு உடைசலைச் சேர்த்துவைத்திருந்ததை, அந்த விடிகாலை கண்டது. அக்கல்லறை மத்தியில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலவு, அங்கே வீசியெறியப்பட்டிருந்த மற்ற பொருட்களிலிருந்தும் அநேகமாக வேறுபடுத்திக் காணவியலாததாகத்தான் கிடந்தது. அதே நிறம், புதிதான ஒன்றாக எப்போதாவது இருந்திருக்குமென்று கூட நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கான அதே பாழடைந்த தோற்றம். மெல்லிய முணுமுணுப்பு ஒன்று அந்த புவிக்குப்பைப் பெரும் பள்ளம் முழுவதுமாகக் கேட்டது. உயிரினங்களின் பெருங்கூட்டமொன்று மெல்லக் கண்விழிப்பதை விடிகாலை ஒளி வெளிக்காட்டியது. குடல் உருவப்பட்ட டிரக்குகளின் மிச்சம் மீதி உடல்கள், நெளிந்து உருக்குலைந்த சக்கரங்கள், நொறுங்கிய உலோகத்துணுக்குகள் மத்தியிலிருந்து பரட்டைத்தலை உயிரினங்கள் முன்னேறி வந்துகொண்டிருந்தன.

வீசியெறியப்பட்ட பொருட்கள் நடுவே வீசியெறியப்பட்ட மக்களின் சமுதாயம் ஒன்று வாழ்கிறது – ஆம், ஒதுக்கப்பட்ட மக்கள், அல்லது தாங்களாகவே முழுவிருப்பத்துடன் ஒதுங்கிக்கொண்ட மக்கள், உடனுக்குடனேயே காலாவதியாகிப் போகுமாறு விதிக்கப்பட்டிருந்த புதிய பொருட்களை வாங்கவும் விற்பதற்குமாக நகரம் முழுக்க அலைந்து திரிந்து அலுத்துப்போன மக்கள், வீசியெறியப்பட்ட பொருட்களே உலகின் உண்மையான செல்வமென முடிவெடுத்துவிட்ட மக்கள் சமுதாயம். அந்தத் திறந்த வெளி அரங்கு முழுவதுமாக, இந்த குச்சிகுச்சியாக நீண்டு மெலிந்த உருவங்கள், தாடி மறைத்த முகங்கள் அல்லது பரட்டைத் தலைகளுடன் நிலவைச் சுற்றி வட்டமாக அமர்ந்தும் அல்லது நின்றுமிருந்தனர். அது ஒரு கந்தலாடை அல்லது வினோதமாக உடையணிந்த ஒரு கும்பல் என்பதோடு அதன் மத்தியில் தான் எனது நிர்வாண டயானாவும் இதர அனைத்துப் பெண்களும் அந்த இரவு முழுவதும் இருந்துள்ளனர். அவர்கள் எழுந்துவந்து, இரும்பு வலையின் கம்பிகளை, அவற்றைப் பிணைத்துத் தரையில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளிலிருந்தும் தளர்த்தி அவிழ்க்கத் தொடங்கினர்.

உடனேயே, கட்டுகள் அவிழ்த்துவிடப்பட்ட உளவு விமானம் போல், அந்தப் பெண்களின் தலைக்கு மேலாக, அந்த நாடோடிப் பெருங்கூட்டத்துக்கு மேலாக, டயானாவும் அவளது தோழிகளும் சிலநேரங்களில் இழுத்தும் சிலநேரங்களில் தளர்வாக விட்டும் பின்னலவிழ்த்துக்கொண்டிருந்த இரும்பு வலையோடு உயர்ந்தெழுந்து, பின் அப்படியே மிதந்து நின்ற நிலவு, அந்தப் பெண்கள் கம்பியும் கையுமாக இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கியபோது, அதுவும் அவர்களைப் பின்தொடர்ந்தது.

நிலவு நகர்ந்ததுமே, குப்பைப் பள்ளத்தாக்குகளிலிருந்து ஒருவித அலை எழும்பத் தொடங்கியது. அக்கார்டியன் இசைக்கருவிகளைப் போல நசுங்கிக்கிடந்த பழைய கார்களின் பிண உடல்கள் அணிவகுக்கத் தொடங்கி, அவைகளாகவே ஒரு ஊர்வலமாகச் செல்ல கிரீக் சப்தத்துடன் தயாராகிக்கொண்டன; பொளிந்து நசுங்கிய டப்பாக்களின் நீரோடை ஒன்று மேல் ஒன்றாக உருண்டு இடி இடிப்பது போன்ற சப்தத்தை ஏற்படுத்தின; அவை இழுத்துச் சென்றனவா அல்லது வேறு ஏதேனுமொன்றால் இழுத்துச் செல்லப்பட்டனவா என்று மட்டும் யாராலும் சொல்லமுடியவில்லை. அந்தக் குவியல்களில் சேர்ந்திருந்த அத்தனைக் குப்பைகளோடு அப்படி மூலையில் தூக்கி வீசப்பட்டதில் வெறுத்துப் போயிருந்த மனிதர்கள் அனைவருமாக நிலவைத் தொடர்ந்து சாலையில் நகரத்தொடங்கியதோடு நகரத்தின் செல்வமிக்க குடியிருப்புப் பகுதிகளை நோக்கிப் படையெடுத்தனர்.

அந்தக் காலை நேரத்தில், நகரம் `நுகர்வோருக்கு நன்றி தெரிவிக்கும் நாள்` கொண்டாடிக்கொண்டிருந்தது. விற்பனை வணிகர்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் எவ்விதச் சோர்வுமின்றி நிறைவேற்றிக்கொடுத்த `உற்பத்தி`க் கடவுளுக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட இந்த விழா விருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் வருகிறது. நகரத்தின் மிகப்பெரிய பல்பொருள் விற்பனை அங்காடி ஒன்று ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் அணிவகுப்பு ஒன்றினை ஒழுங்கமைத்துவந்தது; இசைக்குழு ஒன்றின் பின் அணிவகுத்துவரும் ஜிகினா உடையணிந்த அழகுப் பெண்கள் கண்ணைப்பறிக்கும் பட்டொளி வண்ணப் பொம்மை ஒன்றின் வடிவத்தில் மாபெரும் பலூன் ஒன்றின் கயிறுகளைப் பிடித்திருக்க, அந்த பலூன் அணிவகுப்பு முக்கியத் தெருக்களின் வழியாகச் செல்வது வழக்கமாக இருந்தது. அந்த நாளில், அந்த ஊர்வலம் ஐந்தாவது நிழற்சாலை வழியாக வந்துகொண்டிருந்தது; இசைக்குழுவின் தலைமைப் பெண் கையிலிருந்த வண்ணக்கோலைத் தலைக்கு மேலாகச் சுழற்றி வர, பெரும் டிரம்கள், முரசுகள் அதிர, படைத்துறைச் சீருடை, தொப்பிகள், இறகுகள், வண்ணக் குஞ்சங்கள் மற்றும் தோள்பட்டை அணிகலங்கள் அணிந்து இருசக்கர ஊர்திகளில் பெருமிதம் தொனிக்க வந்த பெண்களின் கைகளிலிருந்த இழுப்புவார்களுக்கு இசைந்து, இசைந்து, `திருப்தியடைந்த வாடிக்கையாள`ரைக் குறிக்கும் பெரும் பலூன் மனிதர் வான்தொடு கட்டிடங்களுக்கிடைய பணிவுடன் மிதந்து வந்துகொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் மற்றொரு அணிவகுப்பு மன்ஹாட்டனைக் கடந்துகொண்டிருந்தது. அடிபட்ட கார்கள் மற்றும் டிரக்குகளின் எலும்புக்கூடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் பின் தொடர, மெல்ல மெல்லப் பெரிதாகிக்கொண்டிருந்த மக்கள் கூட்டம் ஒன்று அமைதியாக நடந்து வர, நிர்வாணப் பெண்களால் முன்னிழுக்கப்பட்ட வெளிறிய சாம்பல் நிற நிலவும் வான்தொடு கட்டிடங்களிடையே நீந்தி, முன்னேறிக்கொண்டிருந்தது. நிலவினைப் பின்தொடர்ந்த மக்கள் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், அனைத்து நிற மக்களும் குடும்பத்துடன் அத்தனை வயதுக் குழந்தைகளுடனும் அதுவும் ஹார்லேமின் கறுப்பு நிறத்தவர் மற்றும் போர்ட்டோரீக்கன் பகுதிகளில் ஊர்வலம் அடியெடுத்துவைத்த போது மக்கள் காலையிலிருந்தே, கூட்டம் கூட்டமாக அணிசேர்ந்தனர்.

நிலவு ஊர்வலம் நகரின் மையப் பகுதியில் வளைந்து வளைந்து பின் பிராட்வேயை நோக்கி இறங்கி, ஐந்தாவது நிழற்சாலையில் பெரும் பலூனை இழுத்துவந்துகொண்டிருந்த ஊர்வலத்தோடு அமைதியாக இணைந்து கலந்துவிடுவதற்காகவே விரைந்துவந்தது.

மாடிசான் சதுக்கத்தில் இரு ஊர்வலங்களும் ஒன்றையொன்று சந்தித்தன; அல்லது துல்லியமாகச் சொல்வதானால் அவையிரண்டும் ஒரே ஊர்வலமாகின. திருப்தியடைந்த வாடிக்கையாளர், நிலவின் சொரசொரப்பான மேற்பரப்பில் மோதியதாலேயோ என்னவோ, காற்றிழந்து வெறும் ரப்பர் கந்தையானார். இரு சக்கர ஊர்திகளின் மீது இப்போது டயானாக்கள் அமர்ந்து பல்வண்ண இழுப்பு வார்களால் நிலவை இழுத்துப் பிடித்திருந்தனர். அல்லது, இருசக்கர ஊர்திகளில் வந்த பெண்களும் அவர்களின் வண்ணத் தொப்பி, சீருடைகளைக் களைந்தெறிந்துவிட்டு நிர்வாணமாகியிருக்கவேண்டும்; அப்போது நிர்வாணப் பெண்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருந்தது; அதனால் அது அப்படித்தான் நிகழ்ந்திருக்கவேண்டும். இருசக்கர ஊர்திகளில் நிகழ்ந்ததைப் போன்ற ஒரு மாற்றம் ஊர்வலத்திலிருந்த கார்களிலும் நிகழ்ந்திருக்கவேண்டும். ஊர்வலத்தில் வந்த கார்களில் எது புதிது, எது பழையதென யாராலும் கூறிவிடமுடியாது. நெளிந்த சக்கரங்கள், துருவேறிய சக்கர மறைப்புகள் எல்லாமே கண்ணாடி போல் பளபளத்து எனாமல் போல் எண்ணெய்வண்ணம் பூசப்பட்ட கார்களும் கலந்திருந்தன.

அத்துடன், ஊர்வலத்தின் தொடர்ச்சியாக, கடைச்சாளரங்களில் சிலந்திவலைகள் படிந்தன; வான்தொடு கட்டிடங்களின் மின்னேற்றிகள் கிரீச்சிட்டு முனகத் தொடங்கின; விளம்பரப் பலகைகள் மஞ்சளாக மாறி வெளுத்தன; குளிர்பெட்டிகளின் முட்டைத்தாங்கிகளில், அவை என்னவோ குஞ்சுபொரிக்கும் இயந்திரங்கள் போல கோழிக்குஞ்சுகள் நிறைந்தன; வானிலை மாற்றத்தில் சூறாவளிப் புயல்கள் சுழன்றடிப்பதாக தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

வெற்று டப்பாக்களின் முழக்க முரசொலியில், அந்த ஊர்வலம் புரூக்லின் பாலத்தை வந்தடைந்தது. டயானா அவள் கையிலிருந்த தலைமை வண்ணக்கோலினை உயர்த்தினாள்; அவள் தோழிகள் வண்ண நாடாக்களை வீசி அசைத்தனர். நிலவு அதன் கடைசி மோதலை பாலத்தின் வளைந்த இரும்பு வேலைப்பாட்டு கிராதித் தடுப்பில் நிகழ்த்தி கடல் நோக்கித் திரும்பி, ஒரு செங்கலைப் போல வேகமாக விழுந்து ஆயிரக்கணக்கான நீர்க்குமிழிகளை மேற்பரப்பில் எழுப்பி, தண்ணீருக்குள் மூழ்கியது.

இதற்கிடையில், இழுப்பு வார்களை விட்டுவிடுவதற்குப் பதிலாக, அவற்றை இறுகப் பற்றியிருந்த பெண்களை, நிலவு உயரத் தூக்கி, பாலத்தின் கைப்பிடிச் சுவரிலிருந்தும் அவர்களை இழுத்து, பாலத்திற்கப்பால் பறக்கச்செய்தது; அவர்கள் பாய்ச்சல் வீரர்களைப் போல காற்றில் வில்லாக வளைந்து, தண்ணீரில் விழுந்து மறைந்துபோயினர்.

புரூக்லின் பாலத்தின் மீதாகச் சிலரும் அணைக்கரை மடைவாய்களின் மீது சிலருமாக நின்றிருந்த நாங்கள், அவர்களைத் தொடர்ந்து நீரில் குதிக்கத் துடிக்கும் உந்துதல் மற்றும் அவர்கள் மீண்டும் தண்ணீரிலிருந்து முன்போலவே வெளித்தோன்றுவார்களென்ற நிச்சய நம்பிக்கைக்கிடையில் அகப்பட்டு, ஆச்சரியத்தில் அதிர்ந்து அப்படியே வெறித்து நின்றோம்.

நாங்கள் நீண்டநேரம் காத்திருக்குமாறு நேரவில்லை. வட்ட வடிவத்தில் விரிந்த அலைகளுடன் கடல் அதிர்வுறத் தொடங்கியது. அந்த வட்டத்தின் மையத்தில் ஒரு தீவு தோன்றி, அது, ஒரு மலையைப் போல, அரைக்கோளவடிவு போல, தண்ணீரில் மிதக்கும் ஒரு கோளம் போல வளர்ந்தது; அல்லது அப்போதுதான் தலைதூக்கியது போல; இல்லை, வானத்தில் ஒரு நிலவு முகிழ்ப்பது போல. ஒரு சில கணங்களுக்கு முன்பு கடலின் ஆழத்துக்குள் மூழ்கிய அந்த ஒன்றை எந்தவிதத்திலும் ஒத்தில்லாதிருந்தபோதும் அதை நான் ஒரு நிலவு என்கிறேன்; எப்படியிருந்தாலும், இந்தப் புதிய நிலவு வேறுபட்டிருப்பதிலும் ஒரு வேறுபட்ட வகையிலிருந்தது. கடலுக்குள்ளிருந்து வெளிப்பட்ட அது பச்சைப் பசேலென மினுங்கும் கடற்பாசி வாரி ஒன்றினை வழியவிட்டுக்கொண்டிருந்தது; அதன் மேனியில் ஊற்றெடுத்துப் பாயும் நீர்த் தாரை அதற்கு ஒரு மரகதத் தோற்றத்தை வழங்கியிருந்தது. நீராவி வெளிப்படும் காடு ஒன்று அதன் மீது மூடியிருந்தது; ஆனால், அந்தக் காடு தாவரங்களாலானதல்ல. இந்தப் படிவு மயிற் தோகைப் பீலிகளால் செய்யப்பட்டது போல வட்டக் கண்களும் மின்னும் வண்ணங்களும் கொண்டதாக இருந்தது.

அந்தக் கோளம் வேகமாக வானத்திலேறி மறைவதற்குள் எங்களால் கண்டுகொள்ளமுடிந்த அளவிலான நிலப்பரப்பு இதுதான்; மேற்கொண்டு நுண்விவரங்கள் அனைத்தும் அதன் புத்தம்புதிதான தன்மையும் தாவரச் செழிப்பும் இணைந்த பொதுவான மனப்பதிவிற்குள் கரைந்துவிட்டன. அப்போது அந்திக் கருக்கலாகிவிட்டிருந்தது; வண்ணங்களின் முரண்களெல்லாம் விரைந்து வரும் ஒரு மேகமூட்ட இருளுக்குள் மங்கிக்கொண்டிருந்தன. நிலவுப்புலங்களும் காடுகளும் அந்தப் பளபளக்கும் கோளத்தின் மேனியில் வெறுமனே எல்லாமே ஒன்றான ஒரு பொதுத் தோற்றமாக மட்டுமே தெரிந்தன. ஆனாலும் காற்று தாலாட்டும் கிளைகளில் சில மஞ்சங்கள் தொங்குவதை எங்களால் காணமுடிந்ததோடு எங்களை இங்கே அழைத்துவந்த பெண்கள் அவற்றில் அமர்ந்திருப்பதையும் நான் கண்டேன். நான் டயானாவைக் கண்டுகொண்டேன்; ஒருவழியாகக் கடைசியில், நிம்மதியாக, ஒரு இறகு விசிறியால் தனக்குத் தானே விசிறிக்கொண்டு, ஒரு வேளை, அது, என்னைப் புரிந்துகொண்டதைத் தெரிவிக்கும் அசைவாகவும் இருக்கலாம்.

“அதோ, அவர்கள் அங்கிருக்கிறார்கள்! அதோ, அவள்!’’ நான் கத்தினேன். நாங்கள் எல்லோரும் கத்தினோம்; அவர்களை மீண்டும் பார்க்க முடிந்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சி, அவர்களை முழுவதுமாக என்றென்றைக்கும் இழந்துவிட்டதான வலியில் ஏற்கெனவே மங்கத் தொடங்கிற்று; இருண்ட வானத்தில் எழுந்துகொண்டிருந்த நிலவு சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பைத் தானே ஏரிகள் மீதும் நிலப்பகுதி மீதும் காட்டிக்கொண்டிருந்தது!

‘’நாங்கள் ஒருவித வெறியால் பீடிக்கப்பட்டிருந்தோம்: நகரங்கள், சாலைகள் அவை தொடர்பான அனைத்துத் தடயங்களையும் புதைத்துவிட்டு பூமியை மீட்டுத்தந்திருந்த சாவன்னா புல்வெளிகள் மற்றும் காடுகளின் வழியாக, கண்டத்தின் குறுக்காக, நாங்கள் விரைந்தோடத் தொடங்கியிருந்தோம். அத்துடன் வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியிருப்பதையும் நாம் ஆசைப்படுவதை ஒரு போதும் நாம் பெறப்போவதில்லையென்றும் இளம் மம்மத்துகளாகிய நாங்கள் புரிந்துகொண்டபோது, பெரும் வெறியோடு எங்கள் பெரும் உடல்களின் மீது காடாக அடர்ந்திருந்த மயிர்க்கற்றைகளை உலுக்கிக்கொண்டு, வானத்தை நோக்கி எங்கள் தும்பிக்கைகளையும் நீண்டு மெலிந்த தந்தங்களையும் உயர்த்திப் பிளிறினோம்.”

(Translated, from the Italian, by Martin McLaughlin.)

விஷ்ணுகுமார் கவிதைகள்

images (2)

ஒளிவட்டம்..!!!

1.)

என் வலது காலின்-எண் நான்கு இடது காலின்-எண் பத்து சும்மா இல்லாமல் வேண்டுமென்றே சகதியில் குதித்தேன் உம் முகத்தில் தெறிக்க பின்பு அதை மின்கம்பத்தில் இழுகிவிட்டுச் சென்றேன் மேலும் தடயமாக என் உணவுக்கூடை சிக்கிக்கொண்டது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கால்தடத்தை மட்டும் உற்றுநோக்கி இரு நபரென்று துப்பறிந்து செல்கிறீர்

2.)

தேர்வின்போது தினமும் மடிதெரியாதபடி அமர்ந்திருக்கும் பசுவைத் தொட்டு வணங்கிப்போவோம் அன்றைய நாள்தோறும் எழுதும்போது ரெட்டைக் கொம்புகளை அதிகமாக பயன்படுத்துவோம் இப்போது ஆரம்ப காலத்து தொலைபேசியின்மீது படுத்திருக்கும் ரெட்டைக்கொம்பையெடுத்து பேசுகிறார் அவர், அடுத்த தடயம் இன்று தொழுவமில்லாமல் மாடு மின்கம்பத்தில் கட்டப்பட்டிருக்கிறது

3.)

இந்த மைதானம் இப்படியொரு விளையாட்டை பார்த்திருக்காது ” நிண்டா ஒதை ”
அதாவது
எது நடந்தாலும் நீங்கள் குத்தவைத்து அமர்ந்தேயிருக்கவேண்டும்
யாராவது எழ யோசித்தால்கூட முதுகெலும்பு ஒட்டடையாடும்
என்ன செய்ய
பெரும்பாலும் கேள்விகேட்கயெழும்நாம் நிறம்பியிருக்கும் நம் கைகளிலிருந்து ஏதேனுமொரு எழுத்தைச் சிந்திவிடுகிறோம் நம் கேள்வியும் பொருளற்று
புரியாமலேயே போகிறது
அதாவது பேசிக்கொண்டிருந்த அவர் ரிசிவரை பெட்டியின்மீது சரியாக வைக்காததைப்போன்று

4.)

ஒளிவட்டத்தை
ஓளிவிட்டம் என்றெழுதும்
ஐந்தாறு ஜோடிக்கால்களை
வகுப்பிற்கு வெளியே
எரிக்கப்போகும் விறகுக்கட்டைகளைப்போல் வரிசையாகக் கிடத்தப்பட்டன
அவற்றிலிருந்து தப்பியோடிய
ஒரு ஜோடிக்கரிக்கட்டை மட்டும்
கழிப்பறை சுவற்றில் ஓளிவிட்டத்தைப் பற்றி கெட்டவார்த்தையில் எழுதிக்கொண்டிருக்கிறது
அதும் அவரை அருகில் வைத்துக்கொண்டே
கரிக்கட்டைக்கு எவ்வளவு கொழுப்பு

5.)

மழைமுடிந்தநேரம் மென்ற
வெத்தலயைைத் துப்ப வீடுமுழுதும் சேறு
இந்த காலத்திலெல்லாம் வெத்தலைக்கறையோடு வெளியேறும் எறும்புகளில் வர்ணபேதமெல்லாம்
ஒரு மயிறுயுமில்லை

நம் நிலம்
நம் சேறு
நம் சுவர்
ஆனால் பெரும்பாலனோர் பதற்றமுற்று தொடர்ந்து கையொப்பமிடுகிறோம் ஆனால் வெகுசிலரே கெட்டவாரத்தையை எழுதி வைப்பது அல்லது மூஞ்சியை அருகில் கொண்டுவரும்போது சேற்றில் குதிப்பது

சின்னஞ்சிறு (சிசி) கதைகள்/ செல்வராஜ் ஜெகதீசன்

download (4)

சின்னஞ்சிறு (சிசி) கதை-1

அபிப்பிராயம்
#

எல்லாரிடமும் அபிப்பிராயம் கேட்டாகி விட்டது. என்னைத் தவிர. …
விஷயம் இதுதான். கலாவிற்கு இப்போதை விட கூடுதல் சம்பளத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் வேலை ராஜஸ்தானில்.
சென்னையில் இருந்து ராஜஸ்தான். போகலாமா வேண்டாமா?

எல்லாரிடமும் கேட்டானபின் என் முறை. எதிரில் கலா.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது? ஒன்று நீங்கள் கவனிக்க வேண்டும் கலா. நான் ஏதாவது சொன்னாலும், அது, நான் அந்த நிலையில் இருந்தால் என்ன செய்வேன் என்பதாகவே இருக்கும். அது உங்களுக்கு எப்படி பொருந்தும்? ஆகவே நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு இது. நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா?”

அவள் எழுந்து போன வேகத்தில் ஏதோ புரிந்த மாதிரி தான் தெரிந்தது.

o

சின்னஞ்சிறு (சிசி) கதை-2

மௌனமே காதலாய்

#

கண்ணீரை திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தது தொலைக்காட்சி. …
எந்தவிதக் கண்ணீருமின்றி, அமைதியாய் இருந்தது எங்கள் அடுத்த வீட்டு நாய் ஒன்று, அதன் துணை இறந்த நாளிலிருந்து.
அடுத்தடுத்த நாட்களில்தான், அனைவருமே கவனித்தோம். எப்போதும் குறைக்குமந்த நாயின் இடைவிடாத மௌனத்தை.

o

சின்னஞ்சிறு (சிசி) கதை-3

காதல் கடிதம்
#

அடுத்த வீட்டிலிருந்து அப்படியொரு சத்தம். ஓடிப்போய் பார்த்தபோது உதைபட்டுக் கொண்டிருந்தான் சக்கரை. எங்களுக்கு தெரிந்த நாளிலிருந்து புத்தி சரியில்லாதவன். காதல் கடிதம் ஒன்றைக் காட்டி, எவர் கொடுக்கச் சொன்னதென்று, கேட்டுக் கேட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நாள் முன்பு, என்னிடம் கடிதம் போலொன்றை, அடுத்த வீட்டு அக்காவிடம், கொடுக்கச் சொன்னவன்தான், அங்கு அதிகமாக சக்கரையை அடித்துக் கொண்டிருந்தான்.

o

சின்னஞ்சிறு (சிசி) கதை-4

விழிகள்

#

பயணங்களில் பெரும்பாலும் வாசிப்பது அவன் வழக்கம். அன்றைய வாசிப்பில் ஆழ முடியாமல், ஈர்த்தன அந்த விழிகள். இடைப்பட்ட பயணிகளின் அசைவுகளின் ஊடே அப்படியொரு நிலைத்த பார்வை. பயணம் முடிந்த பின்னும், நெடுநேரம் நினைவில் இருந்தது, கன்னத்தில் ஒரு கறுப்புப் பொட்டோடு, அவ்வப்போது சிரித்தும் வைத்த, அந்த குழந்தை (யின்) கண்கள்.

o