Category: நாடகம்

ஆலமரத்தை வெட்டி ரோஜா நட்டு மகிழ்கின்றோம்… / ந.பெரியசாமி

பிரளயன்

பிரளயன்

பார்வைகள் உண்ணும் புறக்காட்சிகள் அகத்துள் இருக்கும் துயர்களையும் வலிகளையும் கலைந்துபோகச் செய்யக் கூடியதெனும் உண்மையை உணர்ந்து இருந்தபோதும் நாம் இயற்கையின் மீது செலுத்தும் வன்முறை காலாதி காலத்திற்கும் கேடுகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும் என்பதை உணர்த்தியது பிரளயன் இயக்கிய ‘ஜென்ம கடன்’ நாடகம். திருவண்ணாமலை பத்தாயத்தில் ஜூலை-15 மாலை பவா.செல்லதுரை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் திருவண்ணாமலை டி.வி.எஸ் பள்ளி மாணவ மாணவியர்களால் இந்நாடகம் நிகழ்த்தப்பட்டது.

அபிதகுஜலாம்பாள் தன் பேரப்பிள்ளைகளிடம் தன் ஊரைப்பற்றிய பெருமிதங்களைக் கூறிக்கொண்டிருக்க, அது அவர்களின் மனதில் எப்போ பார்ப்போம் என்ற ஆர்வத்தில் இருக்க 25 ஆண்டுக்குப் பின் தன் பூர்விகமான திருவண்ணாமலைக்கு வருகிறாள். அங்கு அவள் காலத்தின் அற்புதங்கள் ஏதுமற்றிருக்க பேரதிர்ச்சிக்கு உள்ளாகிறாள். நிலமையை அறிந்துகொள்ள தன் தோழி கமலாவை சந்திக்கின்றாள். அங்கு நிகழ்ந்த மாற்றங்களைக் கூறியதைக்கேட்டு அவ்வூரின் சூழலைக் காப்பாற்ற அவர்களோடு இணைந்து போராட முடிவு செய்கிறாள் என்பதே கதை. அபிதகுஜலாம்பாள் அங்கிருக்கும் ஒரு சிறு தெய்வத்தின் பெயர் என்பதும், அம்மலையில் மரங்களை நட்டு வளர்த்தவர் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த அபிதா என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரம்மாவிற்கும் திருமாலுக்கும் இடையே உண்டான பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு தலையையும் (முடியையும்) பாதத்தையும் (அடியையும்) கண்டடையச் சொல்லி சிவபெருமான் அக்னியாக உருமாறி திருவுரு கொண்டது என மக்கள் நம்பும் திருவண்ணாமலையின் சூழல்கேட்டை நாடகம் சித்தரித்தபோதும் அதை எல்லா ஊர்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். காலப்போக்கில் எல்லா ஊர்களுமே மாற்றம் அடையத்தான் செய்யும், அம்மாற்றம் அவ்வூரின் தனித்துவத்தை தொலைத்து ஏற்பட்டிருப்பின் அம்மாற்றம் எவ்விதமான கேடுகளையெல்லாம் உருவாக்கும் என்பதை நம் காலத்தில் நாம் கண்கூடாக பார்த்துவருகிறோம். பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் மாற்றங்கள் அவ்வூரின் தனித்துவத்தை தொலைத்ததாவே இருக்கிறது என்பதை ‘ஜென்ம கடன்’ காட்சிபடுத்துகிறது.


பங்கேற்ற மானவ மாணவியர் தங்களின் பாத்திரங்களை உணர்ந்து வெளிக்காட்டியிருப்பது நாடகத்திற்கு பெரும் பலம். தங்கள் ஊரின் பிரச்சினை என்பது அவர்களுக்கு உணர்வுபூர்வமான பிணைப்பையும் லயிப்பையும் ஏற்படுத்தி இருக்கக்கூடும். ஏணி, கோல், சேலைகள், பிளாஸ்டிக் பொருட்கள் இவையே மலையாகவும், அருவியாகவும், உட்காரும் பலகையாகவும், பல்லக்காகவும் மாறி மாறி பார்வையாளரின் மனதுள் சித்திரங்களை தீட்டிக்கொண்டே இருந்தன. ‘பிளாஸ்டிக் துஷ்டன் நானே’ பாடல் பார்வையாளர்களை நாடகத்தில் ஒன்றச்செய்தது.

‘பேக்’கிங் கலாச்சாரத்திற்கு நாம் தள்ளப்பட்டதால் பிளாஸ்டிக் நொடிக்கு நொடி குப்பைகளாக சேர்ந்தபடியே இருக்கிறது. இக்குப்பை சாம்பலாகாத குப்பை. பொசுங்கி பொசுங்கி சூழலை பொசுக்கி மாசாக்கும் இந்தக்குப்பையின் ஆபத்தை மாணவர்கள் தங்களின் நடிப்பால் உணர்த்தினர். அருவி என்னென்ன காரணிகளால் சிறைபிடிக்கப்படுகிறது என்பதை விளக்கும் நாடக காட்சி நம்மையும் குற்றவாளிகளாக உணரச்செய்தது.

அபித குஜலாம்பாள் பேரக்குழந்தைகளோடு கோயிலைப் பார்க்க வருகிறாள். அங்கிருக்கும் கூட்டத்தை பார்த்து மிரண்டு போகிறாள். பன்னீர் பூச்சியை காட்டச் சொல்லியும் அருவிக்கு போகலாமென்றும் பேரப்பிள்ளைகள் அடம் கொள்ள எல்லாம் காணாமலாகிப்போனதை உணர்ந்து அதிர்வுகொள்கிறாள். அமைதி வழியவேண்டிய சூழல் அமைதியற்று தட்சணைக் குரலாகவும் பிச்சை கேட்போர் குரலாகவும் மாறிப்போனது. சாமியார்கள் குறித்த நாடகக் காட்சிகள் சமகால அரசியல் கோமாளித்தனங்களை அம்பலப்படுத்தின. கோவில்கள் காலத்தின் அடையாளம். அக்காலத்தின் தன்மையோடு அவை பராமரிக்கப்படுதல் வேண்டும். அது குறித்தெல்லாம் கிஞ்சித்தும் பிரக்ஞையற்று சந்தைச் சாவடிகளாக மாற்றி வைத்துள்ளோம். எதுவும் தன் காலத்தியது இல்லாதிருக்க அபிதகுஜலாம்பாள் தன் தோழி கமலா இல்லம் அடைகிறாள்.

கமலாவின் இல்லத்தில் மரத்தை வெட்டி பில்டிங் கட்டி, மலையை வெட்டி பில்டிங் செய்து என பேரப்பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்த அவர்களின் தாத்தா எரிச்சலடைந்து திட்டும் காட்சி நம்மை திட்டுவது போன்றே இருந்தது. குழந்தைகளுக்கு எவ்விதமான விளையாட்டை சொல்லிக் கொடுக்கின்றோமென கவனிப்பை ஏற்படுத்தியது. படைப்பூக்கமிக்க குழந்தைகளின் மனதில் விளையாட்டில் எதை கற்றுத் தருகிறோம் என்பது குறித்த அக்கறையை செலுத்தக்கோரியது அக்காட்சி.

அக்கோவிலின் சூழலைக் காக்க எவ்விதமான போராட்டங்களை அடுத்து எடுக்க வேண்டுமென்ற கலந்துரையாடலில் அங்கிருந்த அபிதா தன் பேரப்பிள்ளைகளை ஊரில் விட்டு வந்து தானும் அப்போராட்டக் குழுவில் கலந்து கொள்கிறேன் எனக்கூறும் இடம் நாம் நம் சமகால போராட்டங்களில் எவ்விதமான பங்களிப்பை செலுத்துகிறோம் என்ற கேள்வியை எழுப்பியது.

சமீபத்தில் கிரிவலப்பாதையை பெரிதுபடுத்தும் நோக்கில் அங்கிருக்கும் மரங்களை வெட்டியும் குளங்களை தூர்க்கும் நடவடிக்கையிலும் அரசு இறங்க, சூழல் மற்றம் சமூக அக்கறையுள்ளோர் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி அதை நிறுத்தி வைத்துள்ளச் இச்சூழலில் அப்போராட்டக்காரர்களை கௌரவப்படுத்தும் வகையிலும், அவர்களின் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் இந்நாடகம் இருப்பதாக பார்வையாளர்களால் உணரமுடிந்தது.

துக்ளக் நகரம் ( இந்தியில் – பாரதேந்து ஹரீஷ்சந்த்ர ) தமிழில் – நாணற்காடன்

துக்ளக்

துக்ளக்

கதாபாத்திரங்கள்

மஹந்த் – குரு

நாராயந்தாஸ், கோவர்தன்தாஸ் – சிஷ்யர்கள்

மற்றும்

காய்கறிக்காரன், இனிப்புக்கடைக்காரன், ராஜா, புகாரோடு வருபவன், வியாபாரி, கொத்தனார், சுண்ணாம்புக்காரன், தண்ணீர் ஊற்றுபவன், கசாப்புக்காரன், ஆட்டுக்காரன், காவல் அதிகாரி, சிப்பாய்கள்

( இடம் – நகரத்திற்கு வெளியே )

குரு மஹந்தும், சிஸ்யர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

மஹந்த் – குழந்தாய்… இந்த நகரத்தைத் தூரத்திலிருந்து பார்த்தால் மிகவும் அழகாகத் தெரிகிறது. பார்ப்போம் வாருங்கள். ஏதேனும் பிச்சை கிடைத்தால் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யலாம்

நாராயண் தாஸ் – ஆம் குருவே… நகரம் அழகாக இருக்கிறது. பிச்சையும் கிடைத்தால் மிகுந்த ஆனந்தம்.

மஹந்த் – கோவர்தன் தாஸ் நீ மேற்குப் பக்கம் போ. நாராயண் தாஸ் நீ கிழக்குப் பக்கம் போ.

( இருவரும் போகிறார்கள் )

கடைவீதியில் கோவர்தன் தாஸ் ஒரு காய்கறி கடை முன் நின்றிருக்கிறான்

கோவர்தன் தாஸ் – ( காய்கறிக்காரனிடம் ) ஐயா, காய்கறி விலை என்ன?

காய்கறிக்காரன் – சாமி…. எதை எடுத்தாலும் கிலோ ஒரு பைசா…

கோவர்தன் தாஸ் – எதை எடுத்தாலும் கிலோ ஒரு பைசாவா? ரொம்ப சந்தோசம். எந்தப் பொருள் எடுத்தாலும் கிலோ ஒரு பைசாவா? ( பக்கத்திலிருந்த இனிப்புக்கடைக்கு நகர்ந்து போய் )… ஐயா, இனிப்பு விலை என்ன?

இனிப்புக்கடைக்காரன் – எதை எடுத்தாலும் கிலோ ஒரு பைசா..

கோவர்தன் தாஸ் – அடடா… அடடா… எதை எடுத்தாலும் கிலோ ஒரு பைசா.. ரொம்ப சந்தோசம்.. ஏனய்யா இந்த நகரத்தோட பெயர் என்ன?

இனிப்புக்கடைக்காரன் – துக்ளக் நகரம்.

கோவர்தன் தாஸ் – ராஜாவின் பெயர் என்ன?

இனிப்புக்கடைக்காரன் – அன்பூஜ் ராஜா

கோவர்தன் தாஸ் – துக்ளக் நகரம், அன்பூஜ் ராஜா, எதையெடுத்தாலும் ஒரு பைசா..

இனிப்புக்கடைக்காரன் – சாமி, எதுவும் வாங்கலையா?

கோவர்தன் தாஸ் – ஐயா, பிச்சையெடுத்ததில் ஏழு பைசா கிடைத்திருக்கிறது. மூன்றரை பைசாவுக்கு இனிப்பு கொடுங்கள்

குரு மஹந்தும் நாராயண் தாசும் ஒரு பக்கமிருந்து வருகிறார்கள். இன்னொரு பக்கமிருந்து கோவர்தன் தாஸ் வருகிறான்

மஹந்த் – குழந்தாய்… பிச்சை கிடைத்ததா? பொட்டலம் பெரிதாக இருக்கிறதே?

கோவர்தன் தாஸ் – குருவே ஏழு பைசா பிச்சையாகக் கிடைத்தன. மூன்றரை பைசாவுக்கு மட்டும் இனிப்புகள் வாங்கி வந்திருக்கிறேன்

மஹந்த் – குழந்தாய்… இங்கு எந்தப் பொருள் எடுத்தாலும் கிலோ ஒரு பைசா என்று நாராயண் தாஸ் சொன்னான். என்னால் நம்ப முடியவில்லை. இந்த நகரத்தின் பெயர் என்ன? ராஜா யார்?

கோவர்தன் தாஸ் – துக்ளக் நகரம், அன்பூஜ் ராஜா, எதையெடுத்தாலும் ஒரு பைசா..

மஹந்த் – குழந்தாய்…. இந்த மாதிரி நகரத்தில் இருப்பது நல்லதில்லை. இந்த நகரத்தில் இனி நான் ஒரு கணம் கூட இருக்க மாட்டேன்.

கோவர்தன் தாஸ் – குருவே… இந்த நகரத்தை விட்டு நான் இனி நகர்வதாயில்லை. வேற இடங்களில் எவ்வளவு தான் சுற்றிப் பிச்சையெடுத்தாலும் வயிறு நிரம்புவதேயில்லை. நான் இங்கேயே தான் இருப்பேன்.

மஹந்த் – என் பேச்சைக் கேள். இல்லையென்றால் பின்னால் வருந்துவாய். இப்போது நான் போகிறேன். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அப்போது என்னை நினை. வருவேன். ( சொல்லிவிட்டு குரு மஹந்த் போகிறார் )

ராஜா, மந்திரிகள் மற்றும் வேலைக்காரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். திரைக்குப் பின்பக்கம் ”காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்” என்ற சத்தம் கேட்கிறது

ராஜா – யாரங்கே கத்திக்கொண்டிருப்பது? கூப்பிடுங்கள்

(இரண்டு காவலாளிகள் ஒருவனை அழைத்துவருகிறார்கள)

புகாரோடு வந்தவன் – காப்பாற்றுங்கள் ராஜா…. என்னைக் காப்பாற்றுங்கள்

ராஜா – சொல்… என்ன ஆயிற்று?

வந்தவன் – ஒரு வியாபாரியின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டது. எனது ஆடுகள் அதற்கடியில் சிக்கி இறந்துவிட்டன. எனக்கு நியாயம் வேண்டும் ராஜா..

ராஜா – ஓ…. அந்த வியாபாரியைப் பிடித்து வாருங்கள்

( காவலாளிகள் ஓடிப்போய் அந்த வியாபாரியைப் பிடித்து வருகிறார்கள்)

ராஜா – ஏய் வியாபாரியே… இவனது ஆடுகள் உனது வீட்டுச் சுவர் விழுந்து செத்துவிட்டன. அதற்குக் காரணம் நீ தான். குற்றத்தை ஏற்றுக்கொள்கிறாயா?

வியாபாரி – ஐயோ…. அதில் என் குற்றம் ஏதுமில்லை ராஜா.. இடிந்துவிழுமளவிற்கு சுவரைக் கட்டியது கொத்தனார் தான். என்னை விட்டுவிடுங்கள்.

ராஜா – சரி இவனை விட்டுவிடுங்கள். அந்தக் கொத்தனாரைப் பிடித்து வாருங்கள்.

( வியாபாரி விடுவிக்கப்படுகிறான். காவலாளிகள் கொத்தனாரைப் பிடித்து இழுத்து வருகிறார்கள்)

ராஜா – ஏய் வியாபாரி.. இவனது ஆடுகள் எப்படி செத்தன?

கொத்தனார் – மகாராஜா… சுண்ணாம்பு கலப்பவன் தான் சுவர் இடிந்துவிழும்படி குறைந்த அளவில் சுண்ணாம்பு கலக்கிவிட்டான். ஆடுகள் செத்ததற்கு அந்த சுண்ணாம்புக்காரன் தான் காரணம். என்னை விட்டு விடுங்கள்.

ராஜா – நல்லது. இவனை விட்டுவிட்டு அந்தச் சுண்ணாம்புக்காரனை இழுத்து வாருங்கள்.

( கொத்தனார் விடுவிக்கப்படுகிறான். காவலாளிகள் சுண்ணாம்புக்காரனைப் பிடித்து இழுத்து வருகிறார்கள்)

ராஜா – ஏய் சுண்ணாம்புக்காரனே… இவனது ஆடுகளை ஏன் கொன்றாய்?

சுண்ணாம்புக்காரன் – மகாராஜா….. இதில் என்னுடைய குற்றம் ஒன்றுமில்லை. நீர் இறைத்து ஊற்றுபவன் அதிகமாக நீரை ஊற்றிவிட்டான். அதனால் தான் சுண்ணாம்பு பசையில்லாமல் போய்விட்டது. அவன் தான் குற்றவாளி. என்னை விட்டுவிடுங்கள்.

ராஜா – ஓ… இவனை விட்டுவிட்டு அந்தத் தண்ணீர் இறைப்பவனைப் பிடித்து வாருங்கள்.

( தண்ணீர் இறைப்பவன் இழுத்து வரப்படுகிறான் )

ராஜா – ஏய்… சுவர் இடிந்து விழுந்து ஆடுகள் செத்துப்போகுகளவிற்கு சுண்ணாம்பில் அதிகமாக தண்ணீரை ஏன் ஊற்றினாய்?

தண்ணீர் இறைப்பவன் – மகாராஜா… இந்த அடிமையின் மேல் எந்தக் குற்றமுமில்லை. கசாப்புக்காரன் பெரிய அளவில் தோல்வாளி செய்துகொடுத்துவிட்டான். அதனால் தான் தண்ணீரின் அளவு அதிகமாகிவிட்டது. கசாப்புக்காரன் தான் குற்றவாளி. என்னை விட்டுவிடுங்கள்.

ராஜா – சரி… இவனை விட்டுவிடுங்கள். கசாப்புக்காரனை இழுத்து வாருங்கள்.

( கசாப்புக்காரன் இழுத்து வரப்படுகிறான்)

ராஜா – இப்படியொரு தோல் வாளியை ஏன் தயாரித்துக் கொடுத்தாய்?

கசாப்புக்காரன் – மகாராஜா… ஆட்டுக்காரன் ஒரு பெரிய ஆட்டை ஒரு பைசாவுக்குக் கொடுத்துவிட்டான். அதனால் இவ்வளவு பெரிய தோல் கிடைத்துவிட்டது. அதனால் தான் இவ்வளவு பெரிய தோல் வாளியைச் செய்யும்படி ஆகிவிட்டது. ஆட்டுக்காரன் தான் குற்றவாளி. என்னை விட்டு விடுங்கள்.

ராஜா – சரி சரி… அந்த ஆட்டுக்காரனை இழுத்து வாருங்கள்

( அடுத்ததாக ஆட்டுக்காரன் இழுத்து வரப்பட்டான் )

ராஜா – ஏய் ஆட்டுக்காரனே… இவ்வளவு பெரிய ஆட்டை ஏன் விற்றாய் அவனுக்கு?

ஆட்டுக்காரன் – மகராஜா… அந்த சமயத்தில் சிப்பாய்கள் அணிவகுப்பு செய்து வந்தார்கள். அவங்க வந்த சத்தத்தில் ஆட்டின் அளவைப் பார்க் மறந்துவிட்டேன். என் குற்றம் இதில் எதுவுமில்லை.

ராஜா – சிப்பாய்களின் தலைவனை பிடித்து வாருங்கள்

( சிப்பாய் தலைவன் பிடித்து வரப்பட்டன் )

ராஜா – ஏய்…. அணி வகுப்பு நடத்தும்போது அவ்வளவு சத்தத்தை ஏன் போட்டீர்கள். உங்களால் தான் இந்த ஆட்டுக்காரன் பெரிய ஆட்டை விற்று இருக்கிறான். அந்த ஆடுகள் செத்ததற்கு நீ தான் காரணம்.

சிப்பாய் தலைவன் – மகாராஜா… நான் குற்றம் எதுவும் செய்யவில்லை

ராஜா – இனி பேச ஒன்றுமில்லை. இவனை இழுத்துப் போய் தூக்கில் ஏற்றுங்கள்.

( சிப்பாய் தலைவன் இழுத்துச் செல்லப்படுகிறான் )

கோவர்தன் தாஸ் ஓரிடத்தில் உட்கார்ந்து இனிப்பு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.

கோவர்தன் தாஸ் – குரு எனக்கு இங்கே தங்கி இருக்கக்கூடாது எனக் கட்டளையிட்டார். இது மோசமான நாடு என்று நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், நான் மிகவும் நன்றாக அல்லவா இருக்கிறேன். நன்றாக சாப்பிட- குடிக்க இங்கே அனைத்தும் கிடைக்கின்றன இல்லையா?

( நாலாப்புறமுமிருந்து நான்கு சிப்பாய்கள் வந்து கோவர்தன் தாஸைப் பிடிக்கிறார்கள் )

சிப்பாய் – வா வா… நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாக இருக்கிறாய். இன்று உனக்கு தண்டனை கிடைக்கப் போகிறது

கோவர்தன் தாஸ் – ( பயந்தபடி ) இந்த ஆபத்து ஏன் வந்தது? என்னை ஏன் பிடிக்கிறீர்கள்? நான் என்ன தவறு செய்தேன்?

சிப்பாய் – நேற்று சிப்பாய் தலைவனுக்கு தூக்கு தண்டனை கிடைத்தது. தூக்குக் கயிற்றில் தொங்கவிட அவரை இழுத்துப்போன போது கயிற்றில் தொங்கவிட முடியாதபடி அவர் எலும்பும் தோலுமாக இருந்தார். நாங்கள் மகாராஜாவிடம் இது பற்றி கூறினோம். அவர் தான் யாரேனும் ஒரு குண்டு மனிதனைப் பிடித்துவந்து சிப்பாய் தலைவனுக்குப் பதில் தூக்கில் ஏற்றுங்கள் என்று உத்தரவிட்டார். ஏனெனில் ஆடுகள் செத்ததற்கு யாராச்சும் ஒருவருக்கு தண்டனை கொடுத்தே தீர வேண்டும். இல்லையென்றால் அது நியாயமாக இருக்காது.

கோவர்தன் தாஸ் – ஐயோ கடவுளே…. நான் சாகப் போகிறேனே…. இது ஒரு இருண்ட நகரமாக இருக்கிறதே…. குருவே… நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்… என்னைக் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…

( கோவர்தன் தாஸ் கத்தக் கத்த அவனை இழுத்துப் போகிறார்கள் )

கோவர்தன் தாஸ் – ஐயோ… ஒரு குற்றமும் செய்யாத என்னைத் தூக்கில் போடப் போகிறீர்களே..

சிப்பாய் – ஏய்… கத்தாதே… ராஜாவின் உத்தரவு தப்பாக இருக்காது.

கோவர்தன் தாஸ் – ஐயோ.. குரு சொன்னதை நான் கேட்காமல் விட்டுவிட்டேனே.. குருவே…. என்னைக் காப்பாற்றுங்கள்.

( குரு மஹந்த் வருகிறார்கள் )

மஹந்த் – அடே கோவர்தன் தாஸ்… ஏன் உனக்கு இந்த நிலை

கோவர்தன் தாஸ் – ( பயந்தபடி ) குருவே… சுவர் இடிந்துவிழுந்து ஆடுகள் செத்துவிட்டன. அதற்காக எனக்குத் தூக்குத் தண்டனைத் தரப்பட்டுள்ளது. என்னைக் காப்பாற்றுங்கள் குருவே.

மஹந்த் – கவலைப் படாதே… ( சிப்பாய்களைப் பார்த்து ) இதோ பாருங்கள்…. என் சிஷ்யனுக்குக் கடைசி உபதேசம் செய்ய வேண்டியுள்ளது. கொஞ்சம் விலகியிருங்கள் ( குரு தன் சிஷ்யனின் காதில் ரகசியமாக எதையோ சொன்னார் )

கோவர்தன் தாஸ் – சரி குருவே…. அப்படியென்றால் நான் இப்போதே தூக்கில் ஏறுகிறேன்

மஹந்த் – இல்லை சிஷ்யா… எனக்கு வயதாகிவிட்டது. நான் தூக்கிலேறி செத்துப் போகிறேன்.

( இவ்வாறாக இருவரும் வாதம் செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ராஜா, சிப்பாய் தலைவன், கொத்தனார் எல்லாரும் அங்கே வருகிறார்கள் )

ராஜா – இங்க என்ன நடக்கிறது?

சிப்பாய் – மகாராஜா… சிஷ்யன் நான் தான் தூக்கிலேறுவேன் என்கிறான். இல்லையில்லை நான் தான் தூக்கிலேறுவேன் என்கிறார் குரு. ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

ராஜா – ( குருவைப் பார்த்து ) குருவே சொல்லுங்கள்… நீங்கள் ஏன் தூக்கிலேறி மரணமடைய விரும்புகிறீர்கள் ?

மஹந்த் – இந்த நல்ல நாளில் நல்ல நேரத்தில் மரணமடைபவர்கள் நேராக சொர்க்கத்திற்கே போய் விடுவார்கள் என்பதால் நான் தூக்கிலேற விரும்புகிறேன் மகாராஜா

மந்திரி – அப்படியென்றால் என்னைத் தூக்கிலிடுங்கள் மகாராஜா

கோவர்தன் தாஸ் – இல்லை இல்லை…. நான் தான். என்னைத் தூக்கிலிடுங்கள்

கொத்தனார் – நான் தொங்குகிறேன். என்னால் தான் சுவர் இடிந்துவிழுந்தது. என்னைத் தூக்கிலிடுங்கள் ராஜா

ராஜா – அமைதியாக இருங்கள் அனைவரும். ராஜா நான் இருக்கும்போது சொர்க்கம் செல்லும் உரிமை வேறு யாருக்கிருக்கிறது? நான் தான் தூக்கிலேறுவேன். ம்… சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள்.

( ராஜா தூக்கிலேற்றப்படுகிறார். திரை விழுகிறது )

***

நெடும்பயணம நாடக நிகழ்வு, ஒரு சிறு குறிப்பு : ப்ரசன்னா ராமஸ்வாமி

15380378_10154093334586074_1187748858722956855_n

வல்லாதிக்கத்தின் ஆணவத்தில் எழும் பேராசை பெண்ணாசையாகவும் மண்ணாசையாகவும் வெறி கொண்டு அலைகிறது, வஞ்சகமும் சூழ்ச்சி வலையும் பின்னுகிறது.
அந்த வெறி, மண் வளத்தையும் பெண்ணையும் பண்டமாக்காமல் வாழ்வின் பகுதியாகக் கொண்ட குறுங்குடியை வேட்டையாடுவதுதான் கதைக்களம்.

முப்பேரரசும் மலையாண்ட பாரியும் அவன் குடிகளும் இவ்வுரப்டு கூறுகளின் ப்ரதிநிதிகளாக்கப் பட்டிருக்கிறார்கள்.

வாழிடம் பறிக்கப்பட்டு வாழ்வாதாரமிழந்து காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் துரத்தப்பட்டு நகரங்களில் கட்டிடத் தொழிலாளிகளாக அலையும் ஆதிக்குடிகள், சமகாலத்தில் ஜவ்வாதுமலையிலிருந்து வந்தவர்கள், பாரியின் குடிகளோடு ஒத்த அடையாளத்தைப் பெறுகின்றனர். அடையா்ளங்கள் அசைய அசைய, பாரியின் குடிகளின் கதையும் சுதந்திர இந்தியாவில் சுற்றுச் சூழலுக்கும் ஆதிக்குடிகளுக்கும் நேர்ந்ததும் ஊடும் பாவுமாக இழைகிறது. பறம்பின் கதையாடலிலும் கதை கூறலிலும் வசனங்களில் பழந்தமிழும் கபிலரின் பாடல்கள் எடுத்தாளப்பட்டிருக்கும் விதமும் சிறப்பு.

15327340_10154093334976074_6722977862376861181_n
சமகாலக் கதையாடலில் காட்சிகளுக்குப் பொருத்தமான பாடல்கள் எழுதி இசைக்கப்படுகின்றன.
பாரியின் கதையை மக்கள் பரவுவதும் சோழப்பேரரசனை கூத்து வடிவத்தைப் பயன்படுத்தி அலங்காரங்களினாலும் புஜகீர்த்திகளாலும் ஆகிருதி கூட்டப்பட்டவனாகவும அவனது இழிகுணத்தைக் கட்டியக்கரனின் கூற்றுக்களின் வழியாக ஏகடியத்துக்கு உள்ளாக்கியும்
வெளிப்படுத்தியிருக்கும் விதம் இயக்குனரின் வடிவம் சார்ந்த சிந்தனைகளைப் புலப்படுத்துகிறது.

உணர்வு நிலைகளைப் பிரதிபலிக்கும் குழுக்கூற்றுக்களாக வரும் பாடல்களுக்கான அசைவுகள் சிறபாகச் செய்யப் பட்டிருக்கின்றன. அவற்றின் நேர்த்தியும் தாளக்கட்டும் பேராசான் ராமானுஜத்தை நினைவு படுத்தியதில் ஆச்சர்யமில்லை….அவற்றை அவருடைய மகள் கிரிஜா அமைத்திருக்கிறார்.

ஒரே ஒரு உயர்த்தப்பட்ட தளமும் கிடுகு வேலியும் தவிர சாதாரணமான பொருட்களே பயன்படுத்தப்பட்டு பல்வேறு வெளிகளை உருவாக்கிய விதம் நன்று.

நாற்பத்தியைந்து பேர் கொண்ட, மாணவ நடிகர்கள், தொழில்முறை இசைக்கலைஞர்கள் என்ற குழுவைக் கொண்டு பார்த்திபராஜா உருவாக்கியிருக்கிறார். அவருடைய இந்த இளம் வயதில் ப்ரமிக்கத்தக்க வேலை இது.

15326546_10154093334736074_1253576445868279537_n
மாணவர்கள் அவ்வளவு எளிதாக, சரளமாக இல்லாத தமிழைப் பிழையறப் பேசினார்கள். இயன்ற அளவு சிறப்பாகவே நடித்தார்கள். எல்லாவற்றையும் தாண்டி ஒரு innocence, அதைத் தமிழில் எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை…அவர்களிடம் இருந்தது. நாடகம் பேசும் அரசியல் அவர்களுக்குக் கதைதான்.
இன்னொரு விதத்தில் கல்லூரி வளாக நாடக இயக்கத்தை முன்னெடுக்கும் போது இப்படிப்பட்ட கதையாடல்களுக்குள் அவர்கள் கவனத்தைக் கொண்டு வருவது மிக முக்கியமான வேலைதான்.

கட்டியக்காரனாக பார்த்திபராஜா தோன்றியதும் மேடையில் இடியிடித்து மின்னலடித்து மழை பொழிந்தது…அற்புதமான ஆட்டம். குரல்வளம்.
என்னுடைய ‘மீண்டும் மீண்டும்’
நாடகத்தின் ஒரு பகுதியில் கிரேக்கத் தளபதி கொடூரன் மெனலாஸாக பல்கலைக்கழக இளம் மாணவனாக இருந்த அவர் நடித்திருந்தார்…அந்த இளம் வயதிலேயே அந்தப் பாத்திரத்தின் வலுவை அவர் பிடித்திருந்தார்…

நெடும் பயணத்துக்கு இசைவாக
சிறப்பான இசை, நல்ல குரல் வளமும் பாவமும் உள்ள பாடகர். தாளவாத்தியமாக தவிலைத் தேர்வு செய்திருந்தது சிறப்பு.

தேர்ந்தெடுத்த அழகியலும் கூர்மையான அரசியலும் கூடியதான நெடும்பயணம் நாடகத்தை எழுதி, இயக்கி, நடிக்கவும் செய்திருக்கும் பார்த்திபராஜாவுக்கு நிறைந்த பாராட்டுக்கள்.

ஒவ்வொரு காலத்திலும் யாராவது ஒருவர் தமிழ் நாடகச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, முன்னெடுக்க ஒரு செயல்பாட்டை மேற்கொள்கிறார்கள்…சில ஆண்டுகள் மு ராமசாமி நிஜ நாடக இயக்கத்தின் விழாக்களில் அதைச் செய்தார். இப்போது சில ஆண்டுகளாக பார்த்திபராஜா திருப்பத்தூரில் அந்த வேலையை சிறப்பாகச் செய்து வருகிறார்.

அவர் பணியாற்றும் கல்லூரியும் இதற்கிசைந்து ஆதரவாக இருப்பது பெரும் கொடை. தான் சார்ந்திருக்கும் பல்கலைக்கழகம் போன்ற பெரிய அமைப்புகளின் சகலமான வசதி வாய்ப்புகளனைத்தையும் தனக்கும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் பயன்படுத்துவது, எல்லாவற்றிலும் நாடகமாற்றும் ஏனையவர்களுக்கெதிராக அரசிியல் செய்வது என்றெல்லாம் இல்லாமல் இவ்வளவு இளம் வயதில் நாடக அர்ப்பணிப்புடன் செயல்படும் பார்த்திபராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

•••

மாக்பெத் அங்கம்-5 ( இறுதிப் பகுதி ) / மொழியாக்கம் – சத்தியப்பிரியன்.

download

காட்சி-4.

பிர்னாம் காடுகளின் அருகில் ஒரு பாசறை.

(மால்கம், மூத்த சிவார்ட், அவர் மைந்தன் மாக்டப், மென்டீத், கெய்த்னெஸ், ஆங்கஸ், லெனாக்ஸ், ராஸ் மற்றும் போர்வீரகள் போர்முரசு முழங்கப் போர்க்கொடியுடன் அணிவகுத்துச் செல்கின்றனர் )

மால்கம் : உற்றோர்களே! நேரம் நெருங்கிவிட்டது நமது மாளிகைகளின் படுக்கையறைகளில் அமைதி திரும்ப நேரம் நெருங்கிவிட்டது.

மென்டீத் : அதில் என்ன சந்தேகம் ?

சிவார்ட் : இந்தக் காட்டிற்குப் பெயர் என்ன?

மென்டீத் : பிர்னாம் காடு என்று பெயர்.

மால்கம் : நமது வீரகளிடம் சொல்லி இந்த மரங்களின் கிளைகளை உடைத்து ஒவ்வொருவரும் தங்களை இந்தக் கிளைகளால் மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். அப்போதுதான் மாக்பெத்தின் ஒற்றர்களுக்கு வீரர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியாமல் போகும். தவறான தகவலே மாக்பெத்தைச் சென்றடையும்.

வீர்கள் : அப்படியே செய்கிறோம்.

சிவார்ட் : கட்டுக்கடங்காத் தன்னம்பிக்கையுடன் மாக்பெத் தன்சினேன் கோட்டைக்குள் இருக்கிறான் என்பதைத் தவிர நமக்கு வேறு தகவல்கள் இல்லை. நமது முற்றுகையை அவனால் தடுக்க முடியாது.

மால்கம் : நாம் முற்றுகையிட வேண்டும் என்பதைத்தான் அவன் எதிர்பார்க்கிறான். அவனுடைய வீரர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவனைவிட்டு நீங்குவதில் குறியாக இருக்கிறார்கள். இதயமற்றவர்கள் மட்டுமே அவனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.

மாக்டப் : எல்லாம் சரி. ஆனால் நமது இலக்கை அடையும் முன்பு நாம் தீர்மானிக்க எதுவுமில்லை.

சிவார்ட் : நேரம் நெருங்குகிறது. இன்னும் சிறிது நேரத்தில் நமக்குச் சொந்தமானது எது பகைமை எது என்பது தெரிந்துவிடும். சும்மா உட்கார்ந்து இன்பக்கனா கண்டு கொண்டிருந்தால் நம்பிக்கை பிறக்கும்; நிஜம்தான். வெற்றிக்குக் கனவு கான்பதுமட்டும் போதாதே. வெற்றிக் கனியைப் பறிக்க வன்முறையே சிறந்த வழி. எனவே நாம் நம் படையுடன் முன்னேறுவோம் .

( வீரர்கள் கைகளில் மரக்கிளைகளுடன் முன்னால் செல்கின்றனர்.)

திரை.

காட்சி-5

(தன்சினேன் கோட்டை. மாக்பெத், சேட்டன் மற்றும் வீர்கள். இங்கும் போர் முரசும், கொடிகளின் அணிவகுப்பும்.)

மாக்பெத் : நமது போர்க்கொடிகளைக கோட்டை மதிலின் வெளியில் தோரணங்களாகக் கட்டித் தொங்க விடுங்கள். அவை நாம் வருவதை அறிவிக்கட்டும். முட்டி நுழையும் முற்றுகையை நமது இரும்புக்கோட்டை எள்ளி நகையாடட்டும். முற்றுகையின்போது அவர்கள் பசியாலும்,பிணியாலும் மடியட்டும். நமது கயவர்கள் அவர்களுடன் கைகோர்த்திராவிட்டால் இந்நேரம் அவர்களைக் கதற கதறத் துரத்தியிருப்பேன்.( பெண்களின் அழுகையொலி கேட்கிறது) என்ன சப்தம் அங்கே ?

சேட்டன் : அரண்மனை மகளிரின் அழுகையொலி மன்னா.(உள்ளே போகிறான். )

மாக்பெத் : அச்சத்தின் பிடியிலிருந்து வெளிவந்துவிட்டேன். இரவில் எழும் ஒரு கூக்குரலுக்குக் கூட நடுங்கிய என் பழைய பால்ய காலங்கள் மடிந்துவிட்டன. என் ரோமக்கால்கள் உயிர் பெற்றுக் குத்திட்டு நிற்கும் அப்போது. ஆனால் இப்போதோ என் வாழ்வே திகில் நிறைந்ததாக மாறிவிட்டது. பயங்கர நிகழ்வுகள் வழக்கமான பின்பு இனி எதற்கு அச்சப்படவேண்டும் ? ( சேட்டன் வருகிறான்) ஏன் இந்த அழுகை ஓலம் சேட்டன்?

சேட்டன் : நமது அரசியார் இறந்துவிட்டார் மன்னா.

மாக்பெத் : எப்படியும் இறக்கப்போகின்றவள். என்றாவது ஒருநாள் இந்தச் சேதியைக் கேட்கவிருந்தேன். நாளை நாளை நாளை. மரணத்தை நோக்கி மெல்லப் பரவும் வாழ்வெனும் கொடி.. சென்ற நாட்கள் பேதைகளை மரணத்திற்குக் கொண்டு சென்ற நாட்கள். போ போ நலிந்த மெழுகுவர்த்தியே. நீண்ட நிழல் போல் ஓடி மறையும் வாழ்க்கை. ஒரு நாடக நடிகனைப் போலப் பாடும் ஆடும் முடிவில் முற்றிலும் மறக்கப்பட்டுவிடும். வாழ்க்கை ஒரு முட்டாள் சொன்ன ஆங்காரமும், கூக்குரல்களும் நிறைந்த கதை.(தூதுவன் வருகிறான்) ஏதோ கூறவேண்டும் என்று வந்திருக்கிறாய். என்னவென்று கூறு.

தூதுவன் : என் கருணைமிக்கப் பிரபு. நான் பார்த்ததை எப்படிக் கூறுவேன் என்று தெரியவில்லை.

மாக்பெத் : பரவாயில்லை கூறு.

தூதுவன் : நான் மலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என் கண்களை என்னால் நம்பமுடியாமல் போனது. பிர்னாம் காடு இடம்பெயர்ந்து நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மாக்பெத் : பொய் பேசும் அடிமை.

தூதுவன் : நான் சொல்வது பொய் என்றால் எனக்குத் தண்டனை அளியுங்கள். மூன்று கல்தொலைவுகளுக்கு அப்பாலிலிருந்து அந்தக் காடு நகர்ந்து வருவதை உங்கள் கண்களால் காண முடியும். நகரும் காடு.

மாக்பெத் : நீ மட்டும் தவறான தகவலைக் கூறினால் உன்னை அருகில் இருக்கும் மரத்தில் சாகும்வரை கட்டித் தொங்கவிட்டுவிடுவேன். நீ சொன்னது உண்மையென்றால் அதையே நீ எனக்குச் செய்யலாம்.( தனக்குள் ) என் நம்பிக்கை தகரத் தொடங்கிவிட்டது. அந்தச் சூனியக்காரப் பிசாசு சொன்னதை மனம் நம்பத் தொடங்கிவிட்டது.” அடர்ந்த பிர்னாம் காடுகள் நோக்கி நகர்ந்து வரும்வரையில், மாக்பெத் நீ அச்சப்படத் தேவையில்லை” இப்போது மரங்கள் தன்சினேனை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆயுதம் ஏந்திப் போருக்குக் கிளம்புவோம். அந்தத் தூதுவன் கூறுவது நிஜமென்றால் இங்கிருந்து ஒடுவதாலோ இருப்பதாலோ ஒரு பயனும் இல்லை. நான் வாழ்ந்து சலித்துவிட்டேன். இந்தப் பூமி கலகத்தில் திணறுவதைப் பார்க்க ஆசைப்படுகிறேன். அபாய மணியை எழுப்புங்கள். ஆயுதம் தாங்கி போருக்குக் கிளம்புங்கள். தாக்குங்கள். நமது மரணம் கவசமணிந்த உடலுக்கு வரட்டும்.

திரை.

காட்சி-6

( தன்சினேன் கோட்டைக்கு முன்பு ஓர் இடம். போர்முரசின் முழக்கம் போர்க்கொடிகளின் அணிவகுப்பு. மால்கம் , முதிய சிவார்ட் , மாக்டப் மற்றும் போர்வீரர்கள் கைகளில் மரக்கொப்புகளை ஏந்தியபடி வருகின்றனர்.)

மால்கம் : கோட்டையின் அருகில் வந்துவிட்டோம். நமது கைகளில் உள்ள மரக்கிளைகளைக் கீழே போட்டுவிட்டு நாம் யாரென்று அடையாளம் காட்டுவோம். மாமா சிவார்டும் அவர் மகனும் முதல் படைக்குத் தலைமை தாங்கட்டும். நானும் தீரன் மாக்டப்பும் இரண்டாவது அணியை நடத்திச் செல்கிறோம். இதுதான் நமது போர்த்தந்திரம்.

சிவார்ட் : நாங்கள் கிளம்புகிறோம். இன்றிரவிற்குள் அந்தக் கொடுங்கோலனின் படைகளை நாம் தூள் தூளாக்கி விட்டால் வெற்றி நிச்சயம்.

மாக்டப் : நமது போர்முரசுகள் ஒலிக்கட்டும். நமது பேரிகைகள் முழங்கட்டும். இரத்தத்துடன் மணக்கும் மரணத்தின் கட்டியத்தை அவனுக்கு ஆரவாரத்துடன் தெரிவியுங்கள்.(அகல்கின்றனர்).

திரை.

காட்சி-7

(இடம்: போர்க்களம். போர் முரசுகளும் பேரிகைகளும் முழங்குகின்றன. மாக்பெத் நுழைகிறான்.)

மாக்பெத் : அவர்கள் என்னை ஒரு முளையில் கட்டிவிட்டனர். என்னால் பறக்க முடியாது. ஒரு சர்க்கஸ் கரடியைப் போல நான் நாய்களை எதிர்த்துப் போரிடத்தான் வேண்டும். பெண்ணின் மூலம் பிறக்காத அந்த மனிதன் எங்கே ? அப்படி ஒருவனைக் கண்டுதான் நான் அஞ்சுகிறேன். வேறு ஒருவரையும் கண்டு எனக்குப் பயமில்லை.( இளைய சிவார்ட் வருகிறான்.)

இளைய சிவார்ட் : உன் பெயர் என்ன?

மாக்பெத் :அதைக் கேட்டால் நீ அச்சமடைவாய்.

இளைய சிவார்ட் : நிச்சயம் மாட்டேன். நீ நரகத்தின் கொடிய சாத்தானாக இருந்தாலும் எனக்குப் பயமில்லை.

மாக்பெத் : என் பெயர் மாக்பெத் .

இளைய சிவார்ட் : சாத்தான் கூட நான் மிகவும் வெறுக்கும் ஒரு பெயரை இப்படி உச்சரிக்க முடியாது.

மாக்பெத் : எனக்கு உச்சரிக்க அச்சமில்லை.

இளைய சிவார்ட் :பொய் பேசாதே கொடுங்கோலனே . என் வாளின் மூலம் நான் அச்சமற்றவன் என்று நிரூபிக்கிறேன் : ( வாள்சண்டையில் மாக்பெத் இளைய சிவார்டைக் கொல்கிறான். )

மாக்பெத் : நீ ஒரு பெண்மூலம் பிறந்தவன். வாள்களைக் கண்டு புன்னகைப்பவன் நான். பெண்மூலம் பிறந்த எவனுடைய ஆயதத்தைக் கண்டும் நான் எள்ளி நகையாடுவேன். ( மாக்பெத் மறைகிறான்.)

(போர் முழக்கம் கேட்கிறது. மாக்டப் உள்ளே நுழைகிறான். )

மாக்டப் :அங்கேயிருந்துதான் போர்முழக்கம் கேட்கிறது. கொடுங்கோலனே எங்கிருக்கிறாய் ? என்னைத் தவிர வேறு ஒருவன் உன்னைக் கொன்றால் என் மனைவி மக்களின் ஆவிகள் என்னைகே கேலிசெய்யும்; துரத்தியடிக்கும். கூலிக்குத் தண்டால் பிடிப்பவர்களுடன் எனக்குப் போர் புரிய விருப்பமில்லை. போர்புரிந்தால் உன்னுடன் போர்புரியவேண்டும் மாக்பெத். இல்லையென்றால் என வாளினால் பயன் ஏதும் இல்லை. நீ அங்கேதான் இருக்க வேண்டும். பேரிகைகள் முழங்குவதைப் பார்த்தால் அடுத்து உயர் பதவியில் உள்ள தளபதியின் பெயர் அறிவிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். இதோ செல்கிறன். அதிர்ஷ்டமே மாக்பெத்தை சந்திக்கும் வாய்ப்பை எனக்குத் தா.( மாக்டப் மறைகிறான். மேலும் பல பேரிகைகள் முழங்குகின்றன. மால்கமும், முதிய சிவர்டும் வருகின்றனர். )

முதிய சிவார்ட் : இந்த வழியில் வாருங்கள் பிரபு. இதோ கோட்டை மெதுவாகக் கைப்பற்றப்படுகிறது. கொடுங்கோலனின் வீரர்கள் கோட்டையின் இருபுறம் இருந்தும் தாக்குகின்றனர். நமது வீர்ர்கள் கடுமையாகப் பதில் தாக்குதல் நடத்துகின்றனர். இந்த வெற்றி முழுமையாக உங்களுக்குச் சொந்தம். இனி செய்வதற்கு அதிகமில்லை.

மால்கம் : நம்மைத் தாக்கக் கூடாது என்று போரிடும் பகைவர்களுடன் போரிட வேண்டியிருக்கிறது.

சிவார்ட் : அதோ கோட்டை வந்துவிட்டது.

(அவர்கள் மறைகின்றனர். போர்புரியும் ஒலிகள் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளன. )

(திரை).

காட்சி-8.

( இடம் : போர்க்களத்தில் வேறொரு பகுதி. மாக்பெத் நுழைகிறான் )

மாக்பெத் : பண்டைய ரோமானியக் கோழைகளைப் போல நான் ஏன் வாள்கொண்டு தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? நான் உயிருடன் இருக்கும்வரை அவர்கள் உடலில் வெட்டுக்காயங்கள் உறுதி. ( மாக்டப் நுழைகிறான்)

மாக்டப் : திரும்பிப் பாரடா நாயே திரும்பிப்பார்.

மாக்பெத் : உன் ஒருவனைத்தான் நான் தவிர்க்க எண்ணினேன். ஆனால் நீயே என்முன்னால் வந்து நிற்கிறாய். கொதிப்பேறிய ரத்தத்தால் நீ என் ஆத்மாவை உசுப்பேற்றிவிட்டாய்.

மாக்டப் : என்னிடம் வார்த்தைகள் இல்லை. வாய்மொழி தேவையில்லை உனக்கு வாள்மொழி போதும்.( இருவரும் சண்டையிடுகின்றனர் )

மாக்பெத் : என்னைக் காயப்படுத்தவேண்டும் என்று உன் நேரத்தை வீணடிக்காதே. உன் வாள்வீச்சினால் காற்றைக் காயப்படுத்த முயற்சி எடுத்தால் நல்லது.போ காயப்படுத்த வேறு முகத்தைத் தேடு. என் உற்சாக வாழ்வை முடிக்க வருபவன் ஒரு பெண்வயிற்றில் பிறந்தவனாக இருக்கமுடியாது.

மாக்டப் : உன் உற்சாகம் நாசமாகப் போகட்டும். உனக்கு வேதம் ஓதும் சாத்தான் நான் பெண்ணின் கர்ப்பத்திலிருந்து வந்தவன் இல்லை என்பதையும் சொல்லட்டும். தரிக்க முடியாத என் கர்ப்பத்தை என் தாயிடமிருந்து தனியாகப் பிரித்து எடுத்து அதன் மூலம் பிறந்தவன் நான். தெரிந்துகொள்.

மாக்பெத் : என்னிடம் இப்படிக் கூறிய உன் நாவை அறுத்தெறிவேன். ஒரு மனிதனுக்குத் தேவையான துணிச்சலை உன் வார்த்தைகள் எடுத்துவிட்டன. மீண்டும் அந்தச் சூனியக்காரிகளை நான் நம்புவதாக இல்லை. அவர்கள் வார்த்தை விளையாட்டால் என்னை ஏமாற்றி விட்டனர். வார்த்தைகள் மூலம் செவிகளை நம்ப வைப்பது. பிறகு அந்த நம்பிக்கையைக் குலைப்பது என்று சிலேடை விளையாட்டு விளையாடி விட்டனர். போதும். இனி நான் உன்னுடன் போரிடப் போவதில்லை.

மாக்டப் : அப்படியென்றால் சரணடை கோழையே. உன்னைக் கூண்டில் அடைத்து காட்சிப்பொருளாக வைக்கிறோம் . கூண்டின் மேலே “ இது ஒரு அபூர்வமான கொடுங்கோலன்“ என்று எழுதித் தொங்க விடுகிறோம்.

மாக்பெத் : நான் சரணடைய மாட்டேன். மால்கம் பாதம் தொடும் மண்ணை முத்தமிட எனக்கு விருப்பமில்லை. மக்கள் என் மீது காறி உமிழ்வது எனக்குத் தேவையில்லை. பிர்னாம்காடுகள் தன்சினேன் வந்தாலும், பெண்வயிற்றில் பிறவாத ஒருவன் என்னை எதிர்த்தாலும் பரவாயில்லை நான் இறுதி வரையில் போரிடுவேன். என் கவசத்தைக் களைகிறேன். சாவதற்கு முன் நான் யாரென்று உனக்குக் காட்டுகிறேன். போதும் விட்டுவிடு என்ற முதல் குரல் உன்னுடையதாகத்தான் இருக்கும்.

( சண்டையிட்டபடி அவர்கள் காட்சியிலிருந்து அகல்கின்றனர். யுத்தபேரிகைகளும், போர் ஒலிகளும் மிகுந்து கேட்கின்றன. ஒரு படையின் பின்வாங்கும் முழக்கம். ஒரு படையின் வெற்றி முழக்கம் இரண்டும் கேட்கின்றன. வெற்றி முழக்கமிட்ட அணி உள்ளே நுழைகின்றது. அந்த அணியில் முதிய சீவார்ட், மால்கம், ராஸ் பிரபு, குறுநில மன்னர்கள், வீரர்கள் முதலியோர் உள்ளனர்.)

மால்கம் : நமது நண்பர்கள் அனைவரும் இந்தச் சண்டையில் உயிர் பிழைத்துள்ளனர் என்று நம்புகிறேன்.

சிவார்ட் : போர் என்றால் வீர்ர்கள் மரணம் தவிர்க்க முடியாதது. ஆனால் இந்தபோரில் குறைந்த உயிர் இழப்புடன் நாம் வெற்றிக் கனியைப் பறித்து விட்டோம்.

மால்கம் : மாக்டப்பைக் காணவில்லை. அதேபோல முதியவரின் மகனையும் காணவில்லை.

ராஸ் : முதியவரே உங்கள் மகன் ஒரு வீரனுக்குரியப் பரிசை பெற்றுவிட்டான். ஒரு முழு மனிதனாக வாழ்ந்து மடிந்துவிட்டான். ஓர் ஆண்மகனாக இறுதி வரையில் போராடி விழுப்புண் தாங்கி வீரமரணம் அடைந்துவிட்டான்.

முதிய சிவார்ட் : இறந்து விட்டானா?

ராஸ் ; ஆமாம் அவனைப் பாசறைக்குக் கொண்டு சென்றுவிட்டனர். அவன் வீரத்தை உங்கள் துக்கத்தை அளக்கலாம் என்றால் அது நடவாத செயல்.

முதிய சிவார்ட் : அவனுடைய விழுப்புண் அவன் மார்பில்தானே உள்ளது?.

ராஸ் : ஆம் அவன் மார்பில்தான் உள்ளது.

முதிய சிவார்ட் : நல்லது. கடவுளுக்குக் காவல் இருக்கச் சென்றுவிட்டான். என் ரோமங்களின் அளவிற்கு எனக்குப் புதல்வர்கள் பிறந்தாலும் ஒருவருக்கும் இவனுடைய மரணம் போல ஓர் உன்னத மரணம் ஏற்பட்டிருக்காது. அவன் சாவுமணி தேவமணியாக ஒலிக்கிறது.

மால்கம் : அவனது மரணம் மேலும் போற்றப்பட வேண்டியது. அவனுக்காக நான் துக்கம் கொண்டாடுகிறேன்.

முதிய சிவார்ட் : போதும். இனி அவன் எந்த துக்கத்திற்கும் தகுதியுடையவன் இல்லை. அவர்கள் அவன் மரணம் பூரணமாக இருந்தது என்று கூறிவிட்டனர். அவன் கடவுளிடம் சேர்ந்து விட்டான். இதோ நல்ல செய்தி ஒன்று வந்திருக்கிறது.

(மாக்டப் மாக்பெத்தின் தலையுடன் உள்ளே வருகிறான். )

மாக்டப் : (மால்கமைப் பார்த்து ) வாருங்கள் அரசே . இனி உங்களை அவ்வாறுதான் அழைக்க வேண்டும். என் கையில் இருப்பது என்னவென்று பாருங்கள். சபிக்கப்பட்ட மாக்பெத்தின் தலை. காலம் விடுதலையடைந்து விட்டது.அவன் கொடுங்கோன்மை முடிவுக்கு வந்துவிட்டது. உங்களைச் சுற்றிலும் நல்முத்துக்கள் போன்ற சீமான்கள் உள்ளனர். நான் நினைப்பதைத்தான் அவர்களும் நினைக்கின்றனர். அவர்களும் என்னுடைய இந்த மகிழ்ச்சி கோஷத்தில் கலந்து கொள்ளட்டும். ஸ்காட்லாந்து மன்னர் வாழ்க. ஸ்காட்லாந்து மன்னர் வாழ்க (கோஷமிடுகிறான்.)

அனைவரும் : ஸ்காட்லாந்து மன்னர் வாழ்க.

(துந்துபி முழங்குகின்றது)

மால்கம் : தகுதியடிப்படையில் உங்கள் அன்பை அளந்து என்னுடன் சேர்த்துக் கொள்ள நான் அதிக நேரம் எடுத்துகொள்ளப் போவதில்லை. என் உற்றோர்களே என் தளபதிகளே இனி நீங்கள் ஸ்காட்லாந்தின் கோமகன்கள் என்ற பட்டத்துடன் உலா வருவீர்கள். இப்படி ஒரு பட்டம் ஸ்காட்லாந் சரித்திரத்தில் வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். மேலும் என்ன செய்யவேண்டும் என்பதை நம்முடைய காலத்தில் யோசித்து செயலாற்ற வேண்டும். மாக்பெத்தின் கொடுங்கோலிலிருந்து தப்பியோடிய நமது நண்பர்களை மீண்டும் நம் நாடு திரும்புமாறு அழைப்பு அனுப்பவேண்டும். இந்தக் கொடுங்கோலானின் பேச்சைக் கேட்டுக்கொண்டு,, தன் கைகளால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ராட்சசி போன்ற அவனுடைய மனைவியின் பேச்சையும் கேட்டுக்கொண்டு அநியாயம் செய்த அக்கிரமக்கார மந்திரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதுவும் இது போன்ற மேலும் பல நல்ல கடவுளின் கருணைக்குப் பாத்தியப்பட்ட செயல்களையும் இடம் பொருள் ஏவல் அறிந்து செய்வோம் என்று கூறிக் கொள்கிறேன். என்னுடைய நன்றி உங்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தாகட்டும். ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள என்னுடைய முடிசூட்டு விழாவிற்கு வருமாறு உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன்.

(வெற்றி முரசும், துந்துபியும் முழங்குகின்றன.)

அங்கம் ஐந்து நிறைவுற்றது.

( முற்றும் )

மாக்பெத் அங்கம்-5 / மொழியாக்கம் – சத்தியப்பிரியன்.

download

அங்கம் -5.

காட்சி-1

இடம்: தன்சினேன் கோட்டையில் ஓர் அறை.

(மருத்துவர் ஒருவரும் அரசியைப் பார்த்துக் கொள்ளும் தாதி ஒருத்தியும் வருகின்றனர்.)

மருத்துவர் : தாதி கடந்த இரண்டு இரவுகள் உன்னுடன் நான் இருக்கிறேன். நீ சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. சொல் எப்போது அரசியார் இரவில் நடக்கத் தொடங்குகிறாள்?

தாதி : அவளுடைய பெருமைக்குரிய கணவர் மாக்பெத் போருக்குச் சென்றதிலிருந்து இவள் இவ்வாறுதான் தனது படுக்கையை விட்டு இரவில் எழுகிறாள்; தனது இரவு அங்கியை அணிந்து கொள்கிறாள்; தனது அலமாரியைத் திறக்கிறாள்; சில காகிதங்களை எடுக்கிறாள்; எழுதுகிறாள்; மடிக்கிறாள்; முத்திரை இடுகிறாள். பிறகு படுத்துக் கொள்கிறாள். இவை எல்லாவற்றையும் தெளிவாகத் தூக்கத்தில் செய்கிறாள்.

மருத்துவர் : இயற்கைக்கு மாறான நடவடிக்கை இது. ஒரே நேரத்தில் தூக்கத்தில் இருந்தபடி விழித்திருப்பது போலச் செயலாற்றுவது. சரி நடப்பது அமர்வது போன்று இல்லாமல் அரசி தூக்கத்தில் எப்போதாவது பேசியதுண்டா?

தாதி : ம் பேசியிருக்கிறாள். அதை உங்களிடம் முடியாது மருத்துவரே.

மருத்துவர் : இது முக்கியம் தாதி. நிச்சயம் இதை நீ என்னிடம் கூறத்தான் வேண்டும்.

தாதி : உங்களிடமோ வேறு ஒருவரிடமும் கூறமுடியாத நிலையில் இருக்கிறேன் மருத்துவரே. அவள் கூறியதற்கு நான் ஒருத்திதான் சாட்சி.

( திருமதி. மாக்பெத் கையில் ஒரு மெழுகுவர்த்தியுடன் வருகிறாள் . )

அதோ பாருங்கள் அவள் வருகிறாள். இதுதான் அவளுடைய நான் சொன்ன தோற்றம். உறுதியாகச் சொல்கிறேன் இப்போது அவள் தூக்கத்தில் இருக்கிறாள். மறைந்திருந்து கவனியுங்கள்.

மருத்துவர் : அவளுக்கு மெழுகுவர்த்தி எப்படிக் கிடைத்தது ?

தாதி : மெழுவர்த்தி எப்போதும் அவள் அருகில் இருக்கவேண்டும் என்பது அரசியின் உத்தரவு.

மருத்துவர் : அவள் கண்கள் விழித்திருக்கின்றன.

தாதி : விழிகள் திறந்தும் புலன் மூடியும் உள்ளன.

மருத்துவர் : என்ன செய்யப் போகிறாள்? பார் அவள் தனது கரங்களை எப்படி தேய்த்துக் கொள்கிறாள்.

தாதி : இது எப்போதும் செய்து கொள்வதுதான். கரங்களில் உள்ள கறையைக் கழுவிக் கொள்வது போல இப்படிதான் பதினைந்து நிமிடங்கள் செய்வாள்.

திருமதி. மாக்பெத் : ச்சை இந்தக் கறை போகவில்லையே !

மருத்துவர் : இதோ அரசி பேசுகிறாள். அவள் என்ன பேசுகிறாள் என்று குறிப்பு எடுத்துக் கொள்கிறேன். பின்னால் எனக்கு இது உதவும்.

திருமதி.மாக்பெத் : ச்சை என்ன இந்தக் கறைபோகமாட்டேன் என்கிறதே. போ சனியனே போய்த்தொலை. சீச்சீ அன்பரே நீங்கள் ஒரு மாவீரர்தானே? பயப்படலாமா? ஒருவரும் நம் மீது பழி போடாதபோது நாம் எதற்காகக் குற்ற உணர்ச்சியுடன் பயந்து சாக வேண்டும் ? யாருக்குத் தெரியும் அந்த கிழவர் உடலில் இவ்வளவு இரத்தம் இருக்கும் என்று ?

தாதி : கேட்டாயா ?

திருமதி. மாக்பெத் : ஃபைஃப் குறுநில மன்னனுக்கு ஒரு துணைவியிருந்தாளே எங்கே அவள்? என்னது ? இந்தக் கரங்களின் கறை போகவே போகாதா? போதும் பிரபு இது போதும். நீங்கள் தொடங்கி வைத்ததுதான் இப்படிப் பாழ்பட்டுக் கிடக்கிறது பிரபு.

மருத்துவர் : பார் என்ன ஆயிற்றென்று பார். எதை நீ கேட்கக்கூடாதோ அதைக் கேட்கும்படியானது.

தாதி : எதை வெளியில் சொல்லக் கூடாதோ அதனை இவள் கூறுகிறாள். அந்த இறைவனுக்குதான் வெளிச்சம் இவள் மனதில் உள்ள இரகசியம்.

திருமதி.மாக்பெத் : இது என்ன ரத்த வாடை இன்னும் போகமாட்டேன் என்கிறதே. அரபுநாடுகளில் உள்ள அத்தனை வாசனை திரவியங்களைக் கொண்டு கை கழுவினாலும் இந்த ரத்தவாடை போகாது போலிருக்கிறதே .ஐயோ ! ஐயோ ! ஐயோ !

மருத்துவர் : கடவுளே இது என்ன இப்படி ஒரு காட்சி! மனதிற்கு மிகவும் பாரமாக இருக்கிறதே.

தாதி : இவளைப் போல நான் அரசியாக இருந்தால் இத்தனை பலவீனமான மனதுடன் இருக்கமாட்டேன்..

மருத்துவர் : நல்லது. நல்லது. நல்லது..

தாதி : கடவுளே நீதான் வழி விடணும்.

மருத்துவர் : என் மருத்துவத்தில் சந்தித்திராத நோய்வகை இது. தூக்கத்தில் நடப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் குற்றஉணர்வுடன் தூக்கத்தில் நடப்பவரை சந்திப்பது இதுதான் முதல்முறை.

திருமதி. மாக்பெத் : கைகளை நன்றாகக் கழுவு. உன் இரவு அங்கியை அணிந்துகொள். இப்படி முகம் வெளிறி நிற்காதே. மீண்டும் ஒருமுறை உறுதியாகக் கூறுகிறேன். பாங்கோவைப் புதைத்து விட்டார்கள். தனது கல்லறையை உடைத்துக் கொண்டு அவனால் மீண்டும் வரமுடியாது.

மருத்துவர் : இது நிஜமா?

திருமதி.மாக்பெத் : படுக்கைக்குப் போ படுக்கைக்குப் போ ! யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்கிறது. வா வா வா கையைக் கொடு. நடந்தவை நடந்தவையே மாற்ற முடியாது. படுக்கைக்குபோ படுக்கைக்குப் போ.(திருமதி.மாக்பெத் மறைகிறாள். )

மருத்துவர் : இப்போது அரசி படுக்கைக்குச் செல்வாளா?

தாதி : நிச்சயமாக.

மருத்துவர் : தவறான வதந்திகள் உலாவத் தொடங்கிவிட்டன. இயற்கைக்குப் புறம்பான செயல்களே அமானுஷ்ய விஷயங்களில் கொண்டு விடுகின்றன. மூளைக்கோளாறு உள்ளவர்கள் தங்கள் ரகசியங்களைச் செவிகளற்றத் தலையணைகளிடம் சொல்லிப் புலம்புவார்கள். இவளுக்குத் தேவை மருத்துவர் இல்லை. மதபோதகர். ஆண்டவரே எங்களை மன்னியுங்கள் ( தாதியை நோக்கி ) கவனமாகப் பார்த்துக் கொள் தாதி. ஆபத்தான பொருட்களை அவள் கைக்கு எட்டும் இடத்தில் வைக்காதே. எப்போதும் அவள் மீது ஒரு கண் இருக்கட்டும். சரி இரவு வணக்கம். என் மனதை இவள் தடுமாறச் செய்துவிட்டாள். என் விழிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டாள். எதுவென்று தெரிகிறது. ஆனால் வாய் மூடிக் கிடப்பது நல்லது.

தாதி : நல்லது.இரவு வணக்கம்.( மறைகின்றனர்)

திரை.

•••

காட்சி-2

இடம் : தன்சினேன் பகுதியில் ஓர் இடம். மென்டீத், கெய்த்னெஸ் , ஆங்கஸ் , லெனாக்ஸ் மற்றும் சில படைவீரர்கள் கொடியுடன் வருகின்றனர்.

மென்டீத்: ஆங்கிலப்படைகள் வந்து கொண்டிருக்கின்றன. தலைமையேற்றிருப்பது மால்கம் .அவன் சிற்றப்பன் சிவார்ட் மற்றும் மாக்டப். பழிஉணர்வு அவர்களிடம் கொழுந்து விட்டு எரிகிறது. அவர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமைகளைக் கேட்டால் கல்லறைப்பிணம் கூட எழுந்து வந்து போரிடும்.

ஆங்கஸ் : நாம் அவர்களை பிர்னாம் காடுகளில் சந்திப்போம். அது வழியாகத்தான் அவர்கள் வருகின்றனர்.

கெய்த்னெஸ் : யாருக்காவது டொனால்பெயின் தனது சகோதரனுடன்தான் இருக்கிறான் என்பது தெரியுமா?

லெனாக்ஸ் : நிச்சயமாக அவன் அங்கே இல்லை. என்னிடம் ஒரு பட்டியல் உள்ளது. மூத்த சிவார்டின் மகன் இருக்கிறான். அவர்களைப்போல இன்னும் நிறையப் பொடிப் பிள்ளைகள் தாடி கூடச் சரியாக முளைக்காமல் இந்தப்போரில் அவனுக்கு எதிராகக் கிளம்பி விட்டனர்.

மென்டீத் : அந்தக் கொடுங்கோலன் என்ன செய்து கொண்டிருக்கிறான் ?

கெய்த்னெஸ் : தன்சினேன் கோட்டையை பலப்படுத்துவதில் அவன் மிகுந்த பிரயத்தனப்படுகிறான். சிலர் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்கின்றனர். அவனால் அதிகம் பாதிக்கப்படாதவர்களில் சிலர் இது அவனுடைய கொடுங்கோபம் என்கின்றனர். ஒன்று மட்டும் உறுதி. அவன் கட்டுக்குள் காரியங்கள் அடங்கவில்லை.

ஆங்கஸ் : அவனுடைய மர்மக்கொலைகளின் குருதி அவன் கையில் படர்ந்திருக்கிறது. அவன் செய்த துரோகத்திற்குப் பழி வாங்க எதிரிகளின் படைகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. அவன் படைகள் அவன் ஆணைக்குக் கட்டுப்படுகின்றவே அன்றி அன்புக்கு இல்லை. மன்னன் என்ற பட்டம் அரக்கனின் உடையைக் குள்ளன் போட்டுக் கொண்டதைப் போல அவனுக்குச் சற்றும் பொருந்தாமல் இருக்கிறது.

மென்டீத் : அவன் அக உணர்ச்சிகள் அனைத்தும் அவனைக் குற்றம் சாட்டும்போது அவன் புறச் செயல்களுக்கு அவனைக் கோபித்துப் பயன் இல்லை.

கெய்த்னெஸ் : வாருங்கள் அணிவகுத்து முன்னேறுவோம். எங்கு நமது விசுவாசம் மதிக்கப்படுகிறதோ அவர்களுக்குத் துணை நிற்போம். நமது தேசத்தின் அடிமை நோயைக் குணப்படுத்தும் அருமருந்தைத் தேடிச் செல்வோம்.அவருக்காக நமது கடைசிச் சொட்டு இரத்தத்தையும் சிந்த ஆயத்தமாவோம்.

லெனாக்ஸ் : ராஜமலர் மலர்வதற்கும், களைகளைப் பூண்டோடு அடித்துச் செல்லவும் இரத்தம் வெள்ளமெனப் பெருகி ஓடினால்தான் முடியும். வாருங்கள் பிர்னாம் நோக்கி முன்னேறுவோம்.

( அணிவகுத்து மறைகின்றனர். )

திரை.

காட்சி-3.

அரண்மனையின் ஒரு பகுதி.

( மாக்பெத் மருத்துவருடனும், பணியாட்களுடனும் நுழைகிறான்.)

மாக்பெத் : போதும் மேலும் மேலும் போர்ச் செய்திகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள். அவர்கள் பறந்தோடட்டும். தன்சினேன் நோக்கி பிர்னாம் காடுகள் நகர்ந்து வந்தால் ஒழிய நான் அஞ்சப்போவதில்லை. பொடியன் மால்கம் யார் ? அவனும் ஒரு தாயின் கர்பத்திலிருந்து வந்தவன்தானே? மனிதனின் முக்காலமும் உணர்ந்த ஆவிகள் எனக்கு ஏற்கனவே சொல்லி விட்டன, ”மாக்பெத் நீ பயப்படத் தேவையில்லை. பெண் வயிற்றிலிருந்து பிறந்த எந்த மனிதனாலும் உனக்கு அழிவு நேராது என்று. ஓடிப்போய்விடுங்கள் குறுநில மன்னர்களே . ஆங்கிலச் சாப்பாட்டு ராமன்களுடன் ஒன்று சேருங்கள். என் அசைந்தாடும் எண்ணங்களும், நிலை கொண்டுள்ள என் இதயமும் அச்சத்தினால் ஒரு போதும் அசையாது.

( சேவகன் ஒருவன் நுழைகிறான். ) சாத்தான் உன் முகத்தில் கருமையைப் பூசட்டும். ஏன் உன் முகம் இப்படி வெளிறிப்போய்க் கிடக்கிறது ? அச்சம் கொண்ட மடவாத்தினைப் போல ஏன் இப்படி பயந்து கிடக்கிறாய் ?

சேவகன் : மொத்தம் பதினாயிரம் ….

மாக்பெத் : பதினாயிரம் வாத்துக்களா ?

சேவகன் : வீரர்கள்.

மாக்பெத் : போ கோழையே உன் முகத்தைப் பிறாண்டிக் கொண்டு இழந்த நிறத்தைப் பெறு. என்னது வீர்ர்களா? இருக்கட்டுமே ! கோழையே உன் அச்சம் அடுத்தவர் முகங்களில் வெளுப்பாய்ப் படராமல் பார்த்துக்கொள். எந்த நாட்டு வீரர்கள்?

சேவகன் : ஆங்கிலப்படையினர்.

மாக்பெத் : என் முன் நிற்காதே . ஓடிப்போய்விடு. ( சேவகன் மறைகிறான். ) சேட்டன் ( தனது அந்தரங்கக் காரியதரிசியை அழைக்கிறான் ) என் இதயத்தில் நோய் கண்டுள்ளது சேட்டன். இதோ. இந்த யுத்தம் ஒன்று என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அல்லது அரியணையிலிருந்து வீழ்த்தும். ஒரு நீண்ட வாழ்வை வாழ்ந்துவிட்டேன்.ஒரு பழுத்த இலையைப் போல என் வாழ்வு உதிரும் நிலைக்கு வந்துவிட்டது. முதுமையின் அடையாளங்களான கௌரவம், கருணை, பணிவு, கைகோர்க்கும் தோழமை ஆகியவற்றுள் ஒன்று கூட என்னிடம் இல்லை. என் விருப்பத்திற்கு மாறாக எனக்குக் கிடைத்துள்ளவை சாபங்களும், உதட்டளவு கௌரவங்களும், அற்ப ஆயுளும்தான்.

சேட்டன் (வந்தபடி ) கூப்பிட்டீர்களா அரசே? என்ன வேண்டும் சொல்லுங்கள்.

மாக்பெத் : அவர்கள் என்னுடைய எலும்பையும் தசையையும் தாக்கும்வரை போரிடுவேன். கொண்டுவா என் ஆயுதங்களை. என் கவசத்தை

சேட்டன் : உங்களுக்கு அவை தேவையில்லை.

மாக்பெத் : கொடு கவசங்களை அணிந்துகொள்கிறேன். மேலும் குதிரைப்படைகளை ஆயத்தப்படுத்து. வேகமாக அனைவருக்கும் சேதி அனுப்பு. அச்சத்தால் இருப்பவர்களை அழித்துவிடு. என் ஆயுதங்களையும், கவசங்களையும் கொடு. ( மருத்துவரை பார்த்து ) உங்கள் நோயாளி எப்படி இருக்கிறார் மருத்துவரே ?

மறுத்தவர் : நோய் இல்லை அரசே . தீவிர கற்பனைகள் ஓயாது அவரிடம்மனதில் தோன்றி அவர் அமைதியைக் குலைக்கிறது.

மாக்பெத் : சிகிச்சை அளியுங்கள். உங்களைப் போன்ற மருத்துவர்களுக்கு மனதின் ஆழத்தில் உள்ள கவலையை வேருடன் பிடுங்கிக் களைய இயலாதா? மூளைக் கொதிப்புகளை அழித்து எழுத இயலாதா? மாற்று மருந்தின் மூலம் மன வேதனைகளை நெஞ்சிலிருந்து எடுக்க இயலாதா?

மருத்துவர் : அப்படி ஒரு சிகிச்சையை நோயாளிதான் செய்துகொள்ள வேண்டும்..

மாக்பெத் : உங்கள் மருந்துகளை நாய்களுக்குப் போடுங்கள். எனக்கு அவற்றால் ஒரு பயனும் இல்லை. வா சேட்டன் வந்து என் கவசங்களை அணிந்துவிடு .என் ஈட்டியைக் கொடு. அப்படியே அந்த வீரகளை அனுப்பிவிடு. (மருத்துவரிடம் ) மருத்துவரே என்னிடம் இருந்த குறுநில மன்னர்கள் ஓடிவிட்டனர்.(சேட்டனிடம் ) வா சேட்டன் சீக்கிரம்.(மருத்துவரிடம் ) என் தேசத்தின் இரத்தத்தை உங்களால் பரிசோதிக்கமுடியுமானால் அவளுக்கு என்ன நேர்ந்தது என்று கண்டுபிடியுங்கள். அதன் கழிவுநீரிளிலிருந்து அதன் நோய் இன்னதென்று கண்டுபிடிக்க முடியுமானால் என் கைத்தட்டல் பரிசாகக் கிடைக்கும்.(சேட்டனிடம் ) இழுத்துப்பிடி சேட்டன். ( மருத்துவரிடம் ) எந்த பேதி மருந்து கொடுத்தால் அது இங்கிருந்து ஆங்கிலேயர்களை விரட்டும் ? அப்படி ஒரு மருந்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மருத்துவர் : மன்னா நீங்கள் போருக்கு ஆயத்தமாகின்றீர்கள் என்பது தெரிகிறது.

மாக்பெத் ( சேட்டனிடம்) கவசத்தை எடுத்துக் கொண்டு என்னுடன் வா. பிர்னாம் காடுகள் தன்சினேன் பகுதிக்குள் வரட்டும் பிறகு நான் சாவிற்கும் என் அழிவிற்கும் அச்சப்படுகிறேன்.

மருத்துவர் ( தனக்குள் ) போதுமடா சாமி. அடுத்தமுறை எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் இந்தத் தன்சினேன் அரண்மனை பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்கமாட்டேன்.

( அனைவரும் அகல்கின்றனர் )

திரை.

காட்சி-4.

பிர்னாம் காடுகளின் அருகில் ஒரு பாசறை.

(மால்கம், மூத்த சிவார்ட், அவர் மைந்தன் மாக்டப், மென்டீத், கெய்த்னெஸ், ஆங்கஸ், லெனாக்ஸ், ராஸ் மற்றும் போர்வீரகள் போர்முரசு முழங்கப் போர்க்கொடியுடன் அணிவகுத்துச் செல்கின்றனர் )

மால்கம் : உற்றோர்களே! நேரம் நெருங்கிவிட்டது நமது மாளிகைகளின் படுக்கையறைகளில் அமைதி திரும்ப நேரம் நெருங்கிவிட்டது.

மென்டீத் : அதில் என்ன சந்தேகம் ?

சிவார்ட் : இந்தக் காட்டிற்குப் பெயர் என்ன?

மென்டீத் : பிர்னாம் காடு என்று பெயர்.

மால்கம் : நமது வீரகளிடம் சொல்லி இந்த மரங்களின் கிளைகளை உடைத்து ஒவ்வொருவரும் தங்களை இந்தக் கிளைகளால் மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். அப்போதுதான் மாக்பெத்தின் ஒற்றர்களுக்கு வீரர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியாமல் போகும். தவறான தகவலே மாக்பெத்தைச் சென்றடையும்.

வீர்கள் : அப்படியே செய்கிறோம்.

சிவார்ட் : கட்டுக்கடங்காத் தன்னம்பிக்கையுடன் மாக்பெத் தன்சினேன் கோட்டைக்குள் இருக்கிறான் என்பதைத் தவிர நமக்கு வேறு தகவல்கள் இல்லை. நமது முற்றுகையை அவனால் தடுக்க முடியாது.

மால்கம் : நாம் முற்றுகையிட வேண்டும் என்பதைத்தான் அவன் எதிர்பார்க்கிறான். அவனுடைய வீரர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவனைவிட்டு நீங்குவதில் குறியாக இருக்கிறார்கள். இதயமற்றவர்கள் மட்டுமே அவனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.

மாக்டப் : எல்லாம் சரி. ஆனால் நமது இலக்கை அடையும் முன்பு நாம் தீர்மானிக்க எதுவுமில்லை.

சிவார்ட் : நேரம் நெருங்குகிறது. இன்னும் சிறிது நேரத்தில் நமக்குச் சொந்தமானது எது பகைமை எது என்பது தெரிந்துவிடும். சும்மா உட்கார்ந்து இன்பக்கனா கண்டு கொண்டிருந்தால் நம்பிக்கை பிறக்கும்; நிஜம்தான். வெற்றிக்குக் கனவு கான்பதுமட்டும் போதாதே. வெற்றிக் கனியைப் பறிக்க வன்முறையே சிறந்த வழி. எனவே நாம் நம் படையுடன் முன்னேறுவோம் .

( வீரர்கள் கைகளில் மரக்கிளைகளுடன் முன்னால் செல்கின்றனர்.)

திரை.

(தொடரும் )

மாக்பெத் அங்கம்-4 மொழியாக்கம் – சத்தியப்பிரியன்.

images

காட்சி-1

இடம் : காட்டில் ஒரு குகை .

( ஒரு கொப்பரையில் திரவம் ஒன்று கொதித்துக் கொண்டிருக்கிறது. இடி, மின்னல் முழங்க மூன்று சூனியக்காரிகள் நுழைகின்றனர்.

முதல் சூனியக்காரி : அந்தப் பழுப்பு மஞ்சள் நிறப் பூனை மூன்று முறை கத்தியது.

இரண்டாம் சூனியக்காரி :மூன்று முறை . அந்த முள்ளம்பன்றி ஒருமுறை அலறியது.

மூன்றாம் சூன்யக்காரி : என் ஆவி நண்பன் ஹார்பியர் ‘இது நேரம் இது நேரம்’ என்று ஊளையிட்டது.

முதல் சூனியக்காரி : கொப்பரையைச் சுற்றி வந்து நாம் பாடுவோம்.

கொடுமையான நஞ்செடுத்து நாம் ஊற்றுவோம்.

( ஒரு பெரிய தவளையைக் கைகளில் தூக்கி )

முப்பதுநாளாய்த் தின்று கொழுத்த தவளையிது

கொப்பரை நீரை விடமாய் மாற்றும் நேரமிது.

மூவரும் : கங்கு கங்கு கங்கு பற்றியெரியும் கங்கு.

தீங்கு போல எங்கும் பொங்கிப் பரவும் கங்கு.

இரண்டாவது சூனியக்காரி ( நீளமான ஏதோ ஒன்றை உயர்த்திப் பிடித்து ) அடுத்ததாகப் பாரு. ஓர் அருமையான பாம்பு. கொப்பரையில் பாய்ந்து நீ மேலும் விஷமாய் மாறு. உடும்பின் கண்ணெடுத்து போடு; உடன் தவளையின் நாவறுத்துப் போடு; வௌவாலின் சிறகில் கொஞ்சம்; நாயின் நாக்கில் கொஞ்சம்; மரவட்டைக் கால்களில் கொஞ்சம்; பல்லியின் கால்களில் கொஞ்சம்; ஆந்தையின் சிறகில் கொஞ்சம் ( மசாலா பொருட்களைப் போட்டபடி) நன்றாய்க் கொதிக்கும் நஞ்சினைச் சுவையாய் மாற்றுங்கள் பருகவே .

மூவரும் : கங்கு கங்கு கங்கு பற்றியெரியும் கங்கு.

தீங்கு போல எங்கும் பொங்கிப் பரவும் கங்கு.

மூன்றாவது சூனியக்காரி : நஞ்சை மேலும் நஞ்சாக்க இன்னும் கொஞ்சம் இருக்கிறது. கொஞ்சம் டிராகனின் மேல்தோல்; ஓநாயின் பற்களில் கொஞ்சம்; சூனியக்காரியின் உலர்ந்த சதையில் கொஞ்சம்; சுறாமீனின் இரப்பையில் கொஞ்சம்; இரவில் பதியன் போடப்பட்ட கள்ளிச்செடியின் வேர்களில் கொஞ்சம்; ஒரு யூதனின் கணையம்; ஓர் ஆட்டின் கணையம்; ஒரு வான்கோழியின் மூக்கு; ஒரு தார்த்தாரியின் பற்கள்; ஊசியிலை மரத்தின் ஒடிந்த கிளைகள்; பரத்தை சாக்காடையில் வீசிய சிசுவின் விரல் ஒன்று;( மசாலா பொருட்களை கலந்தபடி) குழம்பே மேலும் இறுகு; மேலும் மயமாக மாறு. இதோ இன்னும் கொஞ்சம் புலியின் குடலைச் சேர்ப்போம்.

மூவரும் : கங்கு கங்கு கங்கு பற்றியெரியும் கங்கு.

தீங்கு போல எங்கும் பொங்கிப் பரவும் கங்கு.

இரண்டாவது சூனியக்காரி : இதனை ஒரு மனிதக்குரங்கின் இரத்தம் ஊற்றி குளிர்விப்போம். அதன் பிறகு இந்த விஷக்குழம்பு முற்றிலும் விஷமாகி விடும்.

(சூனியக்காரிகளின் தலைவி ஹெக்கேட் உள்ளே நுழைகிறாள் )

ஹெக்கேட்: மிக்க நன்று ! உங்கள் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். உங்கள் உழைப்பிற்குத் தக்க சன்மானம் வழங்கப்போகிறேன்; வாருங்கள் கொப்பரையைச் சுற்றிப் பாடுங்கள்; குட்டிப் பிசாசுகள், தேவதைகள் போலக் களிப்புடன் நடனமாடுங்கள். நீங்கள் கலந்த விஷப்பொருட்களை மேலும் விஷமாக்க மந்திர உச்சாடானம் செய்யுங்கள்.

( இசைக்கருவிகள் முழங்க அவர்கள் ‘கறுத்த ஆவிகள்’ என்ற பேய்ப்பாடலைப் பாடுகின்றனர். பிறகு ஹெக்கேட் மறைகிறாள் . )

இரண்டாவது சூனியக்காரி : என் கட்டை விரல்கள் துடிக்கின்றன. ஏதோ கொடிய செயல் நடக்கப் போகிறது. தட்டபட்டவுடன் கதவுகளே திறந்து கொள்ளுங்கள். ( கதவு தட்டப்படுகிறது. மாக்பெத் உள்ளே நுழைகிறான். )

மாக்பெத் : இரவினில் அலையும் கெட்ட எண்ணம் கொண்ட சூனியக்காரிகளே, இந்த இரவில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? இது என்ன?

மூவரும் : நாங்கள் செய்யும் செயலை வெளியில் சொல்ல முடியாது.

மாக்பெத் : உங்கள் செய்கை உங்களுக்கு விளங்காமல் போகலாம் பரவாயில்லை ,என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். உங்கள் பில்லி சூனியத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். சூறாவளியை உங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து தேவாலயங்களின் மேல் ஏவினாலும் சரி கடலைப் பொங்கியெழச் செய்து கப்பலையும் அதன் பயணிகளையும் விழுங்கினாலும் சரி, மரங்களையும், செடிகொடிகளையும் வேருடன் பிடுங்கி எறிந்தாலும் சரி , கோட்டைகளைத் தரைமட்டமாகி அதனுள் வசிப்பவர்கள் தலையில் விழ வைத்தாலும் சரி, அரண்மனைகளையும், பிரமிடுகளையும் தரைமட்டமாக்கினாலும் சரி, இயற்கை படைப்புகள் அத்தனையும் அழித்தாலும் சரி சொல்லுங்கள் நான் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்று சொல்லுங்கள்.

முதல் சூனியக்காரி : கேள்

இரண்டாவது சூனியக்காரி : உரிமை கோரு

மூன்றாவது சூனியக்காரி :கண்டிப்பாக விடை கூறுகிறோம்.

முதல் சூனியக்காரி : இதனை எங்கள் வாயிலிருந்து எதிர்பார்க்கிறாயா/? அல்லது எங்களுக்கெல்லாம் தலைவி ஒருத்தி இருக்கிறாள் அவள் விடை கூறட்டுமா ?

மாக்பெத் : கூப்பிடுங்கள் அவளை.

முதல் சூனியக்காரி : தன் குட்டிகள் ஒன்பதைத் தின்ற பன்றியின் குருதியை ஊற்றுங்கள். தூக்குமரத்தில் தொங்கிய பிணத்தின் வேர்வையை வழித்து நெருப்பில் ஊற்றுங்கள்.

மூவரும் : திறமையுள்ளவையோ, சற்றுக் குறைந்தவையோ எதுவாக இருப்பினும் ஆவிகளே உங்கள் பரிவாரங்களுடன் வந்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று காட்டுங்கள்.

( இடி முழங்க முதல் மாயத் தோற்றம் தோன்றுகிறது )

மாக்பெத்: விளங்கிக் கொள்ள முடியாத தோற்றமே சொல்…

முதல் சூனியக்காரி : இது உன் எண்ணத்தைப் படிக்கும் வல்லமை கொண்டது. நீ பேசாதே அது சொல்லும்.

முதல் மாயத்தோற்றம் : மாக்பெத்.மாக்பெத்.மாக்பெத்’. மாக்டப் மீது கவனம். ஃபைஃபை மன்னனிடம் சற்று எச்சரிக்கையுடன் இரு. போதும். நான் செல்கிறேன் ( முதல் மாயத்தோற்றம் மறைகிறது .)

மாக்பெத் : நீ யாராக இருப்பினும் நன்றி. நீ சொன்னதுதான் எனக்குள்ளும் ஓடுகிறது. ஆனால் மேலும் ஒரே ஒரு வார்த்தை.

முதல் சூனியக்காரி : உன் ஆணைக்கு அது கட்டுப்படாது. இதோ அடுத்த ஒன்று. முதலாவதாக வந்த அருவத்தை விட இது சக்தி வாய்ந்தது.

( இரண்டாவது மாயத்தோற்றம் ஒரு இரத்தம்வடியும் குழந்தையின் தோற்றத்துடன் தோன்றுகிறது. இடி முழக்கம். )

இரண்டாவது மாயத்தோற்றம் : மாக்பெத்,மாக்பெத், மாக்பெத்.

மாக்பெத் : எனக்கு மூன்று காதுகள் இருந்தால் முழுவதும் கேட்பேன்.

இரண்டாவது மாயத்தோற்றம் : இரத்தவெறியுடன் இரு; துணிவுடன் இரு; உறுதியுடன் இரு. உன் எதிரியின் பலத்தை எள்ளிநகையாடு. மாக்பெத்தை அழிப்பதற்கு இன்னொரு மனிதப்பிறவி இன்னும் பிறக்கவில்லை.( இரண்டாவது மாயத்தோற்றம் மறைகிறது. )

மாக்பெத் :பிழைத்து போ மாக்டப் . உன்னிடம் எனக்கு இனி ஏது அச்சம்? இருப்பினும் இரட்டிப்பு முன்னெச்சரிக்கை வேண்டும். என் விதிக்கு உத்திரவாதம் தேவை. எனவே நீ மடிவது உறுதி. உன் மரணம் என் மனதின் அச்சங்களை அழித்து எனக்கு அமைதியான உறக்கத்தை அளிக்கும்.

( மூன்றாவது இடி முழக்கம். இந்தமுறை மாயத்தோற்றம் மகுடம் தாங்கி, கைகளில் மரக்கிளை பிடித்தபடி வரும் ஒரு சிறுவனின் உருவில் தோன்றுகிறது.)

இது என்ன ஓர் அரச வாரிசு எழுவதைப் போன்ற தோற்றம் ? இதன் சின்னஞ்சிறு தலையில் மகுடம் தாங்கித் தோன்றுகிறதே இதன் பொருள் என்ன?

மூவரும்: பேசாதே கேள்.

மூன்றாவது மாயத்தோற்றம் : சிங்கத்தைப் போலத் துணிவுடன் உலாவு . அகந்தை கொள்.. உன்னை வெறுப்பவர்களையும், கடுஞ்சினம் கொள்பவர்களையும், உனக்கு எதிராகச் சதிசெய்பவர்களையும் நீ கவலைப்படத் தேவையில்லை. அடர்ந்த பிர்னாம் காடுகளும், உயர்ந்த டன்சினேன் மலையும் உன்னை நோக்கி நகர்ந்து வரும்வரையில், மாக்பெத் நீ அச்சப்படத் தேவையில்லை.( மூன்றாவது மாயத் தோற்றம் மறைகிறது. )

மாக்பெத் : நிச்சயமாக அது நிகழப்போவதில்லை. காட்டுமரங்களின் வேர்களுக்கு நகர்ந்து செல்லும் ஆற்றலை அளிக்கவல்லவர்கள் யார் இருக்கிறார்கள்? ஒ இனிய சகுனங்களே ! நல்லது. கொடும் சாவே பிர்னாம்காடு வேருடன் நகர்ந்து என்னை நோக்கி வரும்வரையில் நீ என்னை நெருங்க முடியாது. இருப்பினும் ஒரே ஒரு விஷயத்தை அறிந்துகொள்ள என் நெஞ்சம் அடித்துக் கொள்கிறது. என் அச்சத்தை அறியும் ஆற்றல் உள்ள கெட்ட ஆவிகளே சொல்லுங்கள் பாங்கோவின் புதல்வர்கள் அரசாள முடியுமா?

மூவரும் : இனி எதுவும் அறிய முயற்சிக்காதே .

மாக்பெத் : இதை அறிந்துகொண்டால் என் மனம் சமாதானமடையும். இதை மறுத்தால் நீங்கள் சபிக்கப்படுவீர்கள். ஏன் இந்தக் கொப்பரை மூழ்குகின்றது? இது என்ன சப்தம் ?

( இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்படும் ஷெனாய் இசை கேட்கிறது.)

முதல் சூனியக்காரி : காட்டு.

இரண்டாவது சூனியக்காரி : காட்டு.

மூன்றாவது சூனியக்காரி : காட்டு.

மூவரும் : கண்களைக் காணச் செய்; நெஞ்சத்தைப் புழுங்கச் செய். நிழல் போல் தோன்றி நிழல் போல் மறையுங்கள்.

(எட்டு அரசர்களின் மாயத்தோற்றம். கடைசி அரசனின் கைகளில் ஒரு கண்ணாடி. இவர்களை பாங்கோ முன்நாடத்திச் செல்கிறான். )

மாக்பெத் : நீ பாங்கோவின் ஆவியைப் போலத் தோன்றுகிறாய். ஓடிப் போ.(முதல் அரசத் தோற்றத்திடம் ) உன் காட்சி என்கண்களை உறுத்துகிறது போ.(இரண்டாவது ஆவியைப் பார்த்து) உன் பொன்னிற முடிக்கற்றை ஒரு மகுடம் போல தோன்றுகிறது. நீ முதல் அரசனின் தோற்றம் போலவே இருக்கிறாய். அதைப்போலவே மூன்றாவது தோற்றமும். நாசமாய்ப் போகும் தோற்றங்கள். இவை எதற்காக எனக்குக் காட்டப்படுகின்றன? ஒ என் விழி விரிந்து கண்ணின்மணி வெளியில் விழுந்துவிடும் போலிருக்கிறது. இது என்ன மேலும் ஒரு மன்னனின் தோற்றம்? இன்னொன்று. இதோ ஏழாவது. இனி நான் பார்க்கமாட்டேன். இதோ எட்டாவது . கையில் ஒரு கண்ணாடி வேறு. அந்தக் கண்ணாடிக்குள் தெரிவது என்ன ? மேலும் மன்னர்கள். அனைவரும் இருமடங்கு பந்துக்களையும், மும்மடங்குச் செங்கோல்களையும் சுமந்து செல்கின்றனரே .என்ன கொடுமையான தோற்றம். இது நிஜத் தோற்றம்தான். அதோ இரத்தம் படிந்த முடியுடன் பாங்கோ என்னைப் பார்த்து அவை அத்தனையும் தன்னுடையது என்பது போலப் புன்னகைக்கிறானே. இவை நிஜமா?

( மன்னர்கள் மற்றும் பாங்கோவின் மாயத் தோற்றங்கள் மறைகின்றன)

முதல் சூனியக்காரி : ஆம் நீங்கள் கண்டது நிஜம்தான். ஆனால் மாக்பெத் ஏன் வாயடைத்துப் போய் நிற்கிறான்? வாருங்கள் சகோதரிகளே அவருக்கு உற்சாகமூட்டுவோம். நமது திறமைகளைக் காட்டுவோம். நான் காற்றில் வினோதமான இசையொலி எழுப்புகிறேன். நீங்கள் அந்த இசைக்கு ஆனந்தத் தாண்டவம் புரியுங்கள். நாம் நம் கடமையைப் புரிந்ததற்கு மன்னன் மகிழ்ச்சியடையட்டும்.

(இசை முழங்க அவர்கள் நடனமாடிப் பின் மறைகின்றனர். .

மாக்பெத் : அவர்கள் எங்கே ? மறைந்து விட்டார்களா ? இந்தப் பொல்லாத நேரம் நாட்காட்டியில் சபிக்கப்பட்ட நேரமாகக் குறித்துவைக்கப்படட்டும். (குகையின் வெளிவாசலைப் பார்த்து) நீங்கள் உள்ளே வரலாம்.

(லெனாக்ஸ் உள்ளே நுழைகிறான். )

லெனாக்ஸ்: மன்னா தங்கள் சித்தம் என்னவோ ?

மாக்பெத் : அந்தச் சூனியக்காரிகளைப் பார்த்தீர்களா?

லெனாக்ஸ் ; இல்லை மகராஜா.

மாக்பெத் : அவர்கள் உன்னைக் கடந்து சென்றனரா?

லெனாக்ஸ் : இல்லை மன்னா.

மாக்பெத் : காற்றை நச்சுபடுத்தும் விஷமிகள் அவர்கள். அவளைப்போன்ற சூனியக்காரிகளை நம்புவர்களைச் சிறையில் அடையுங்கள். குதிரையின் கனைப்பொலி கேட்கிறதே. யார் வந்திருப்பது ?

லெனாக்ஸ் : ஓரிரு அரண்மனைச் சேவகர்கள் . மாக்டப் இங்கிலாந்திற்குத் தப்பியோடியச் செய்தியுடன் வந்திருக்கின்றனர்.

மாக்பெத் : என்னது இங்கிலாந்திற்குத் தப்பி ஓடி விட்டானா?

லெனாக்ஸ் : ஆம் என் வணக்கத்துக்குரிய மன்னா.

மாக்பெத் : காலமே என்னுடைய அருஞ்செயலின் தீரத்தைச் சோதித்துப் பார்க்கிறாயா? நினைத்த உடன் நிறைவேற்றப்படாத செயல் பயனற்றது. இன்று முதல் என் இதயத்தின் துடிப்பு என் கரங்களின் துடிப்பாகும். என் செய்கை என் எண்ணத்தின் பிரதிபலிப்பு. மாக்டப்பின் கோட்டைக்கு தீ மூட்டுங்கள்.அவன் மனைவி மக்களை வாளுக்கு இரையாக்குங்கள். அவனைப் பின்பற்றுபவர்களைக் கொன்றுவிடுங்கள்.இனிமேல் முட்டாள் பேச்சுகளுக்கு இடமில்லை..எந்த நோக்கத்திற்காக இந்தச் செயல் புரியப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படும். இனி தவறான கண்ணோட்டத்திற்கு இடமில்லை. எங்கே மற்ற கனவான்கள்? அவர்களை அழைத்து வாருங்கள். (அனைவரும் மறைகின்றனர். )

திரை.

காட்சி-2.

(ஃபைஃபை நகரில் மாக்டப்பின் கோட்டை.. திருமதி மாக்டப், அவள் புதல்வன் மற்றும் ராஸ் வருகின்றனர்.).

திருமதி மாக்டப்? அப்படி என்ன செய்தார் இந்த நாட்டை விட்டு ஓடும்படியாக?

ராஸ்: அமைதி. சீமாட்டி சற்றுப் பொறுமையுடன் இருங்கள்.

திருமதி.மாக்டப் : அவருக்குதான் பொறுமையில்லை. பைத்தியக்காரத்தனமாக நாட்டைவிட்டு ஓடிவிட்டார். நமது எண்ணங்கள் துணிவுடன் இருப்பினும் நமது செய்கையில் பயம் இருந்தால் நாம் நம்பிக்கைத் துரோகிகள் என்றே அழைக்கப்படுவோம்.

ராஸ்: விவேகமா அச்சமா எது அவரைத் துரத்தியது என்பது தெரியாது சீமாட்டி.

திருமதி.மாக்டப் : விவேகம். மனைவியையும் குழந்தைகளையும் விட்டு விட்டு ஓடுவதற்கு ஒரு விவேகம். அவர் எங்களை நேசிக்கவில்லை. மனைவி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற இயற்கை உந்துதல் அவரிடம் இல்லை. சின்னஞ்சிறு குருவி கூடத் தன் குஞ்சுகளைக் காப்பாற்றக் கழுகுடன் சண்டையிடும். அச்சம் நிறைந்தவர்; காதலற்றவர். ஓடிப்போனது பகுத்தறிவற்ற செயல் . இதில் எங்கே இருக்கிறது விவேகம் ?

ராஸ் : என் நேசத்திற்குரிய சகோதரி. சற்று கண்ணியம் காக்க மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கணவர் தீரர்; விவேகி; நீதி தவறாதவர். காலத்தின் தேவையை உணர்ந்தவர். இனிமேல் என்னால் வாய்விட்டு எதையும் பேசமுடியாது. நம்மைப் பற்றிப் பிறருக்குத் தெரியாதபோது மற்றவர் முன்னால் நாம் துரோகிகளாகச் சித்திரிக்கப்படுவது காலத்தின் கோலமன்றி வேறு என்ன? இது போன்ற நேரங்களில் வதந்திகளுக்கு அஞ்சும் நமக்கு அச்சத்தின் காரணம் கூடத் தெரியாமல் போய்விடுகிறது. கடல் அலைகளில் அலைந்து அலைந்து கரைசேராமல் போவதைப் போல்தான் இதுவும். நான் உங்களிடமிருந்து பிரியாவிடை பெறுகிறேன். காத்திருங்கள் வெகுநேரம் ஆக்காமல் உடனே வந்துவிடுகிறேன். துன்ப நிலை மாறும். மீண்டும் எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பும். என் இனிய ஒன்றுவிட்ட சகோதரி. என் ஆசீர்வாதம் என்றும் உனக்கு உண்டு.

திருமதி.மாக்டப் : தந்தையிருந்தும் என் மகன் அனாதை.

ராஸ்: நான் கிளம்புகிறேன் அம்மா. இங்கிருந்தால் கழிவிரக்கத்தில் நான் கண்ணீர் சிந்த நேரிடும். (ராஸ் செல்கிறார்.).

திருமதி மாக்டப் : சீரா ! உன் தந்தை இறந்துவிட்டார். நீ இப்போது என்ன செய்வாய் மகனே? எப்படி இந்த உலகில் வாழ்வாய்?

மகன் : பறவைகளைப் போல வாழ்வேன் அம்மா.

திருமதி. மாக்டப் : புழுக்களையும், பூச்சிகளையும் இரையாகக் கொண்டா?

மகன் : பறவைகள் கிடைத்தவற்றை உண்டு வாழ்வதுபோல நானும் கிடைத்தவற்றை உண்டு வாழ்வேன்.

திருமதி.மாக்டப் : நீ ஒரு வறிய பறவை. வேடர்கள் விரிக்கும் வலையைப் பற்றி அறியாத பறவை.

மகன்: நான் எதற்கு அச்சப்படவேண்டும் அம்மா? பலவீனமான பறவைகளுக்கு வேடர்கள் வலைவிரிக்க மாட்டார்கள். நீங்கள் நினைப்பது போல தந்தை இறந்திருக்க மாட்டார். உயிருடன்தான் இருப்பார்.

திருமதி.மாக்டப்: இல்லை உன் தந்தை இறந்துவிட்டார். இனி நீ தந்தைக்கு எங்கு செல்வாய் மகனே ?

மகன் : அதே கேள்வியை நீ கேட்டுப் பார் தாயே. உன் கணவருக்கு நீ எங்கு போவாய்?

திருமதி. மாக்டப் : சந்தையில் எனக்கு இருபது கணவன்மார்கள் கிடைப்பார்கள்.

மகன் :அப்படி என்றால் சந்தையில் கணவர்களைப் பெறுவது மீண்டும் விற்பதற்கா அம்மா?

திருமதி.மாக்டப் : சிறுபிள்ளைத்தனமான பேச்சில் கூட உன்னுடைய புத்திசாலித்தனம் தெரிகிறது.

மகன் :என் தந்தை ஒரு தேசத் துரோகியா அம்மா?

திருமதி.மாக்டப்: ஆமாம் துரோகிதான்.

மகன் : துரோகி என்றால் என்ன அர்த்தம் அம்மா?

திருமதி.மாக்டப் : ஒருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொய்யாகும்போது அவர் துரோகி என்றழைக்கப்படுகிறார்.

மகன் ; பொய்யான வாக்களிக்கும் அனைவரும் துரோகிகள்தானா?

திருமதி.மாக்டப் : வாக்குத் தவறுபவர்கள் அனைவரும் துரோகிகள்தாம். அவர்கள் தூக்கிலிடப்படவேண்டும்.

மகன் : இதுபோலச் சத்தியம் செய்பவர்களும் அந்தச் சத்தியத்தை மீறுபவர்கள் அனைவரும் தூக்கில் இடப்பட வேண்டியவர்களா?

திருமதி.மாக்டப்: ஒவ்வொருவரும்.

மகன் : யார் அவர்களைத் தூக்கில் இடுவார்கள்?

திருமதி.மாக்டப் : ஏன் ? நேர்மையானவர்கள்.

மகன் : அப்படி என்றால் துரோகிகள் முட்டாள்கள். வாக்குத் தவறுபவர்கள் அதிகம் உள்ள இந்த பூமியில் நேர்மையானவர்களை அடித்துத் துரத்த இயலாத துரோகிகள் முட்டாள்களில்லாமல் வேறு என்னவாம் ?

திருமதி. மாக்டப் : (சிரித்து ) கடவுளே இந்த முட்டாள் கழுதையை நீதான் காப்பாற்றவேண்டும் ( மீண்டும் சோகத்தில் ஆழ்ந்து ) தந்தையில்லாமல் என்ன செய்வாய் ?

மகன் : என் தந்தையின் மறைவிற்கு நீ அழவேண்டும். நீ அழவில்லை. எனவே எனக்கு இன்னொரு தந்தை கிடைப்பார்.

திருமதி. மாக்டப்: திருட்டுப்பயலே பேச்சைப் பாரு பேச்சை.

( தூதுவன் ஒருவன் வருகிறான். )

தூதுவன் : வணக்கம் அம்மணி. உங்களுக்கு நான் யாரென்று தெரியாது. உங்கள் நிலையும் அந்தஸ்தும், செல்வாக்கும் நானறிவேன். உங்களுக்குப் பேராபத்து நெருங்குகிறது என்று எண்ணுகிறேன். இந்த எளியவனின் வார்த்தைகளில் நம்பிக்கை இருந்தால் துன்பம் நேரும் முன் இந்த இடத்தைவிட்டு அகன்று விடுங்கள்.உங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இந்த இடத்தைவிட்டு அகன்று விடுங்கள். உங்களை இந்த அளவிற்கு அச்சப்படுத்த கூடாதுதான். ஆனால் உங்களுக்கு வரும் இடரைப் பார்த்து எதுவும் செய்யமுடியாமல் வருத்தப்படுவதற்கு இது மேல். ஆபத்து நெருங்குகிறது. வானகம் உங்களை ரட்சிக்கட்டும். (தூதுவன் மறைகிறான் )

திருமதி மாக்டப் :எங்கே ஓடுவது ? நான் எந்தத் தவறும் செய்யவில்லையே ? என்ன உலகம் இது ? துரோகம் செய்தால் வாழ்த்துகிறார்கள். நல்லது செய்தால் துரத்துகிறார்கள். பிறகு நான் பெண்களைப்போல நான் குற்றமற்றவள் என்று கெஞ்ச வேண்டும் ?( கொலைகாரகள் நுழைகின்றனர்) யார் இவர்கள்?

முதல் கொலைகாரன்: உன் கணவன் எங்கே ?

திருமதி மாக்டப் : உன் போன்ற புல்லர்களின் கண்களுக்கு அவர் தென்படமாட்டார்.

முதல் கொலைகாரன் : அவன் ஒரு தேசத் துரோகி.

மகன் : நீ பொய் சொல்லாதே வீணனே!

முதல் கொலைகாரன் : ( கத்தியால் அவனைக் குத்துகிறான் ) பொடிப்பயலே ! நம்பிக்கைத்துரோகியின் கொழுந்துதானே நீ?

மகன் : அம்மா அவன் என்னைக் கொன்றுவிட்டான். ஓடு நீ தப்பிப் பிழைத்துகொள். ஓடும்மா ஓடு.

திருமதிமாக்டப் : ஐயோ கொலை கொலை ( அலறியபடி அவள் ஓடுகிறாள். கொலைகாரகள் துரத்துகிறார்கள். மகன் இறந்து விழுகிறான். )

திரை.

காட்சி-3.

இடம் : இங்கிலாந்தின் அரச சபை

(மால்கமும் மாக்டப்பும் நுழைகின்றனர் ).

மால்கம் : ஒரு மறைவான இடத்தில் அமர்ந்து நமது இதயத்தில் உள்ள குமுறல்களைக் கொட்டித் தீர்ப்போம்

மாக்டப் : கோழைகளைப் போலக் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பதை விட்டு வீரர்களைப் போலத் தாய்நாட்டைக் காக்க நமது போர்வாள்களை உயர்த்திப் பிடிப்போம். ஒவ்வொரு நாளும் புதிய விதவைகளின் கதறல்ளுடனும், புதிய அனாதைகளின் அழுகுரலுடனும்தான் விடிகிறது. புதிய துக்கத்தின் ஓலம் சொர்கத்தின் கதவை அறைகிறது. சுவர்க்கம் முழுவதும் ஸ்காட்லாந்தின் வேதனைக்காக வழியில் அலறுவது போலத் தோன்றுகிறது.

மால்கம் : எனக்குத் தவறு என்று படுபவற்றை நான் தட்டிக் கேட்காமல் இருக்கமாட்டேன். எனக்குச் சரி எனப்படுபவற்றை நான் நம்புவேன். நேரம் வரும்போது அனைத்தையும் சரியாக்குவேன். நீ கூறியது சரியாக இருக்கலாம். இந்தக் கொடுங்கோலனின் பெயரும் கூட உச்சரிக்கக் கொடூரமாக உள்ளது. ஒருகாலத்தில் இவன்தான் நேர்மையானவன். நீயும் அவன் மீது பற்று வைத்திருந்தாய். இன்னும் அவன் மூலம் உனக்குக் கெடுதி எதுவும் நேரவில்லை. எனக்கு அனுபவமில்லை. உன்னை என்னுடைய தேவைகளுக்காக அவன் கைகளில் பிடித்துக் கொடுக்க நினைத்தால் அது ஆங்காரம் கொண்ட கடவுளுக்குப் பலி கொடுக்க ஒரு சின்னஞ்சிறு ஆட்டை இழுத்துச் செல்வது போலாகும்.

மாக்டப் : நான் அந்த அளவிற்கு மோசமான நம்பிக்கைத் துரோகி இல்லை.

மால்கம் :ஆனால் மாக்பெத் ஒரு நம்பிக்கை துரோகி. சில நேரங்களில் நல்லவர்களும் நேர்மையானவர்களும் கூட நம்பிக்கை துரோகிகளாவதுண்டு.. ஆனால் நான் சத்தியமாகச் சொல்கிறேன் என் அச்சங்கள் உங்களுக்குத் தீங்கு ஏற்படுத்தாது. விடிவெள்ளி வீழ்வதால் வானம் இருட்டுவதில்லை. தீயவை எல்லாமே நல்லவையாகத் தோன்ற நினைக்கும்போது நல்லவை நல்லவையாகத்தானே தோன்றும் ?

மாக்டப் : எனக்கு நம்பிக்கை போய்விட்டது.

மால்கம் : உனக்கு என்மேல் நம்பிக்கை இல்லை எனக்கும் அதுபோல் உன்மேல் நம்பிக்கை போய்விட்டது. உன் வாழ்வின் ஆதாரமான மனைவி குழந்தைகளை ஏன் அப்படி ஒரு பாதுகாப்பற்ற இடத்தில் விட்டு விட்டு வந்தாய்? நான் உன்னைச் சந்தேகிக்கிறேன் என்று தவறாக எண்ணாதே .நான் உன்னைப் பாதுகாப்பதை நீ நம்ப வேண்டும். நீ நிஜமாகவே நேர்மையுள்ளவனாக இருக்கலாம்.

மாக்டப் :இரத்தம் சிந்து. இரத்தம் சிந்து. பாவப்பட்ட தாயகமே ! இரத்தம் சிந்திக்கொண்டே இரு. கொடுங்கோலனே உன் இருப்பின் அஸ்திவாரத்தை நீயே தனியாக பலப்படுத்திக்கொள். நல்லவர்கள் உன் அருகில் நிற்க அஞ்சுகின்றனர். உன் திருட்டுப்பதவிகளை நீயே அனுபவித்துக்கொள். நல்லது தலைவா. எனக்கு விடைகொடு. மற்றவர்கள் சொல்வதுபோல் நான் உன் எதிரி இல்லை. இந்த மாநிலத்தைக் கொடுத்தாலும், கிழக்கின் செல்வாக்குள்ள சமஸ்தானங்களைக் கொடுத்தாலும் நான் உனக்கு எதிராகச் செயல்படமாட்டேன்.

மால்கம் : வருத்தப்படாதே. நான் உன்னைப் புண்படுத்தும் நோக்குடன் சொல்லவில்லை. நமது நாடு மாக்பெத் என்ற நுகத்தடியின் கீழ் நசுங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்பட்ட புண்ணில் குருதி வழிகிறது; கண்ணீர் பெருகுகிறது; தினம் தினம் புதிய நிணங்கள் தோன்றிய வண்ணம் உள்ளது. என்னுடன் போரிட மேலும் பல கைகள் தயாராக உள்ளன என்று எனக்குத் தெரியும். இங்கிலாந்தும் ஆயிரக்கணக்கில் வீரகளை அளித்து உதவி செய்ய முன்வந்துள்ளது. என் காலில் அவனுடைய தலை நசுங்கும் முன்பு, என்னுடைய வாள் அவன் கழுத்தில் குத்திட்டு நிற்கும் முன்பு, என்னுடைய இனிய தாயகம் இன்னும் என்னென்ன இன்னல்களைச் சந்திக்க நேரிடுமோ தெரியவில்லை. இவனுக்குப் பிறகு எந்த அரசன் வந்தாலும் இவன் அளவிற்கு என் நாடு பாதிப்புகளைச் சந்திக்காது என்று நினைக்கிறேன்.

மாக்டப்: எதைப்பற்றி கூறுகிறீர்கள்?

மால்கம் : நான் என்னைப் பற்றிதான் கூறுகிறேன். என்னிடம் பலகெட்ட குணங்கள் உள்ளன. அவற்றை மக்கள் காண நேரிடும்போது அந்தக் கரியன் மாக்பெத் என்னைவிடத் தூய்மையானவனாகத் தெரிவான்.. பாவப்பட்ட ஸ்காட்லாந்து மக்கள் என் தீய குணங்களைப் பார்த்துவிட்டு மாக்பெத்தை ஓர் அப்பாவி ஆடு என்றுதான் கூறுவார்கள்.

மாக்டப்: நரகத்தில் கூட இவன் போன்ற கொடியவனைப் பார்ப்பது அரிது.

மால்கம் : கொலைகாரன்; ஒழுக்கங்கெட்டவன்; பேராசைக்காரன்;பொய்யன்; கபடதாரி; கொடுங்கோலன்; கெட்டபுத்திக்காரன்; எல்லாப் பாவங்களின் பெயர்களை உடையவன். ஆனால் இவற்றையெல்லாம் விட என்னுடைய காமவெறிக்கு முடிவே இல்லாமல் உள்ளது. நான் ஒரு காமதூரன்.. உங்கள் மனைவியர், பெண்கள்,கிழவிகள், அடிமைப்பெண்கள் மொத்தமாக வந்தாலும் என் காமப்பசி அடங்காது. போகட்டும் என்னை விட மாக்பெத்தே இந்த நாட்டை ஆளட்டும்.

மாக்டப் : முடிவற்ற பேராசையும், காமமும் ஒருவித கொடுங்கோன்மைதான். பெண்ணாசை பல மன்னர்களை வீழ்த்தியிருக்கிறது. இதற்காக உங்கள் மகுடம் பறிபோய்விடும் என்று கவலைப்பட வேண்டாம். சில அந்தரங்க வழிகளில் உங்கள் ஆசைகள் தணிக்கப்பட்டு அரங்கத்தில் நீங்கள் தூயவராகத் தோன்ற வழிகள் உள்ளன. விரும்பிவரும் பெண்கள் ஏராளம் இங்குண்டு. உங்கள் ஆசை தணிந்தாலும் தணியுமே அன்றி, தணிக்க வரும் பெண்களின் எண்ணிக்கை தணியாது.

மால்கம் : தணியாத காமவெறியுடன் அளவில்லாத பொன்னாசை, மண்ணாசை உடையவன் நான். நான் அரசரானால் உயர்ந்தவர்களின் நிலங்களைப் பறித்துக் கொள்வேன்; நல்லவர்களின் நகைகளைக் கொள்ளையடிப்பேன். வீடுகளை ஆக்கிரமிப்பேன். என் பசி அடங்காமல் நீளும். என்னுடைய ஒழுக்கமுள்ள குடிமக்கள் நடுவில் தேவையற்ற பொய்க்கலகங்களைக் கிளப்பிவிட வேண்டும். அவர்கள் சொத்திற்காக அவர்களை அழிக்கவேண்டும்.

மாக்டப் : நீங்கள் குறிப்பிடும் இந்தப் பேராசை முதலில் சொன்ன காமவெறியைவிட மோசமானது. இதன் வேர் ஆழமானது. பேராசை பல மன்னர்களின் மகுடத்திற்குக் குறிவைப்பது. இருப்பினும் நீங்கள் அஞ்சவேண்டாம். ஸ்காத்லாந்தில் போதுமான அளவிற்குச் செல்வவளம் உள்ளது. உங்களது நல்ல பக்கங்களைப் பார்க்கும்போது இந்தப் பக்கங்கள் சகித்துக் கொள்ளக்கூடியவையே .

மால்கம் : ஆனால் என்னிடம் நல்ல பக்கங்கள் இல்லை. ஒரு மன்னனுக்குத் தேவையான நற்குணங்களான நீதி, சத்தியம், பொறுமை, உறுதி,தயாளகுணம், விடாமுயற்சி, கருணை, எளிமை, ஈடுபாடு, பொறுமை, துணிவு , மனோதைரியம் போன்ற எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் நானோ தீயகுணங்கள் நிரம்பி வழிபவனாக இருக்கிறேன். வேண்டாம். நான் மன்னனானால் அமைதி என்ற சொல்லை இங்கிருந்து பிடுங்கி நரகத்தில் போட்டுவிடுவேன்.

மாக்டப் : என் இனிய ஸ்காட்லாந்தே ! என் இனிய ஸ்காட்லாந்தே.

மால்கம் ; நான் கூறியதைப் போல ஒருவன் ஆளத்தகுந்தவன் என்றால் சொல் நான் ஆள்கிறேன்.

மாக்டப் : ஆளத் தகுந்தவனா நீங்கள்? வாழ்த்தகுந்தவரே இல்லை. பின் எங்கிருந்து ஆள்வது ? ஒ பாவப்பட்ட தாயகமே ! கொடுங்கோலர்களாலும், பேராசைக்காரர்களாலும் அல்லலுறும் நீ எப்போது ஒரு நல்ல தலைவனைச் சந்திக்கப் போகிறாய்? யாருக்கு ஆளத் தகுதி இருக்கிறதோ அவரே தன் வாயால் தனது தீய குணங்களைப்\ பட்டியலிடுகிறார். உனது தந்தை டங்கன் எவ்வளவு உன்னதமான மன்னர். உன் தாய் தனது பாதங்களில் நின்றதைவிட இறைவன் முன் தொழுதபடி மண்டியிட்டு நின்ற நேரம்தான் அதிகம். அப்படி ஒரு தெய்வ பக்தியுடன் வாழ்ந்தவள். மிக்க வந்தனம் ஐயா. நீங்கள் பட்டியலிட்ட தீய குணங்கள் என்னை இந்த நாட்டை விட்டுத் துரத்துகின்றன. என் இதயமே உன் நம்பிக்கைகள் பொடிப்பொடி ஆகிவிட்டன.

மால்கம் : மாக்டப் உன்னுடைய இந்த நேர்மையான வெளிப்பாடு உன்னை ஒரு உண்மையான தேசபக்தனாகக் காட்டிவிட்டது. உன் மீது எனக்கிருந்த சந்தேகங்கள் அகன்று விட்டன. நீ நேர்மையானவன். நம்பத்தகுந்தவன். கெட்டஎண்ணம் படைத்த மாக்பெத் தன் குயுக்தியாலும், ஏமாற்றும் வல்லமையாலும் பலமுறை என்னை நம்பவைத்துக் கழுத்தறுத்தவன். எனக்கு எவர் மீதும் நம்பிக்கை என்பதே இல்லாமல் போனது. கடவுள் சாட்சியாக நான் உன் சொல்படி நடக்கிறேன். என் பாவ மன்னிப்பை திரும்பப்பெற்றுக் கொள்கிறேன். என்னைப் பற்றி நான் பட்டியலிட்ட அனைத்துத் தீய குணங்களையும் நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். நான் பட்டியலிட்ட குற்றங்கள் என்னுடைய குணத்தில் கிடையாது. நான் இதுவரை தூய்மையானவன். பொய் கூறியதில்லை. என்னிடம் இருப்பதில் எனக்கு கவனம் இருந்தால் போதும். அடுத்தவர் பொருள் மீது எனக்கு ஆசையில்லை. சாத்தானை வஞ்சிக்கவேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வந்ததில்லை. எந்த அளவிற்கு வாழ்வை நேசிகிறேனோ அந்த அளவிற்கு உண்மையை நேசிக்கிறேன். நான் பட்டியலிட்ட தீய குணங்கள் அத்தனையும் நான் கூறிய முதல் பொய்களாகும். நான் உங்களுக்காகவும், இந்த தேசத்திற்காகவும் கடமையாற்றப் பிறந்தவன். எளியவன். நீ இங்கு வரும் முன்னர் முதியவர் சிவார்ட் பத்தாயிரம் குதிரை வீரகளுடன் தனது சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார். நாம் இனைந்து மாக்பெத்துடன் போரிடுவோம். நமது லட்சியத்தின் நோக்கத்தைப் போலவே நமது வெற்றியும் விளங்கட்டும். ஏன் மெளனமாக இருக்கிறாய் ?

மாக்டப்: இரு வெவ்வேறு கதைகளை ஒரே நேரத்தில் நம்ப முடிவதில்லை.

( ஒரு மருத்துவர் நுழைகிறார். )

மால்கம் ; சரி நாம் பிறகு பேசுவோம் ( மருத்துவரை நோக்கி ) எட்வர்ட் மன்னர் வருகிறாரா?

மருத்துவர் ; ஆம் ஐயா. ஒரு நோயாளிக் கூட்டமே அவருடைய சிகிச்சைக்காகக் காத்திருக்கிறது. அவர்களது நோய்களோ நவீன மருத்துவ சிகிச்சைகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன. ஆனால் அவருடைய தெய்வீகக் கரங்கள் பட்டதும் நோய்கள் பறந்துவிடுகின்றன.

மால்கம் : நன்றி மருத்துவரே .( மருத்துவர் மறைகிறார். )

மாக்டப் : எந்த நோயைப்பற்றி மருத்துவர் பேசினார் ?

மால்கம் : அந்த நோயின்பெயர் ஊறு. மன்னர் எட்வர்டின் வருடலின் அழகை நான் இங்கிலாந்து வந்திருந்தபோது பார்த்திருக்கிறேன். இந்த அற்புத சக்தியை அவருக்கு வானகம்தான் வழங்கியிருக்கிறது. எவ்விதமான நோயாக இருப்பினும் இவர் கை பட்டால் மாயமாக மறைந்துவிடும். வீங்கி, அறுவைசிகிச்சியால் கூட குணப்படுத்தமுடியாத கோரமான நோய்கள் கூட இவர் கைபட்டதும் சரியாகிவிடும். இத்தனைக்கும் நோயாளியின் கழுத்தில் ஒரே ஒரு தங்கக்காசை வைத்துக் கண்களை மூடி பிரார்த்திப்பார். அவ்வளவுதான். அவர் இந்த அற்புத தொடுசக்தியைத் தனது அரசு வாரிசுகளுக்கு விட்டுச் செல்வார் என்று பேசிக் கொள்கிறார்கள். இந்த அற்புத சக்தி மட்டுமில்லை அவரிடம் தீக்க தரிசனம் போன்று இன்னும் பல ஆச்சரியமூட்டும் சக்திகளும் உள்ளன. இந்தக் குணங்களால் அவர் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றே அழைக்கப்படுகிறார்.

( ராஸ்பிரபு உள்ளே நுழைகிறார். )

மாக்டப் : பாருங்கள் யார் வருகிறார் என்று.

மால்கம் : உடையைப் பார்த்தால் என் நாட்டைச் சேர்ந்தவன் மாதிரி தெரிகிறது. ஆனால் யார் என்று அடையாளம் தெரியவில்லை.

மாக்டப் : எனது பெருமைக்குரிய உறவினன். அவனுக்கு என் வந்தனம்.

ராஸ் ; ஐயகோ என்னருமை ஸ்காட்லாந்து தேசமே ! அச்சத்தில் தன் பெயரை இழந்துவிடுவாயா?. ஸ்காட்லாந்து தாயின் மடியில் இனி மழலைகள் கிடையாது. மனிதப் பிணங்களே உண்டு. அவள் மடி இனி ஒரு கல்லறை பூமி. ஒருவர் முகத்திலும் புன்னைகை இல்லை.. பெருமூச்சுகளும், புலம்பல்களும், கூக்குரல்களும் காற்றைக் கிழித்தாலும் கேட்க ஆளில்லை. ஆழ்ந்த துயரம் அன்றாட உணர்ச்சியாகிப் போயிற்று. சவ ஊர்வலம் சென்றாலும் செத்தது யார் என்று கேட்க நாதியில்லை. நல்லவரின் தொப்பியில் உள்ள மலர் வாடும் முன்னர் அவர் உயிர் வாடிவிடுகிறது. நோயின்றி மனிதர் இறப்பது மிகுந்துவிட்டது.

மாக்டப் : ஒரு துன்பியல் கவிதையைப் போல உன் வர்ணனை நெஞ்சை அறுக்கிறது. ஆனால் அத்தனையும் உண்மை.

மால்கம் : இறுதியாகக் கொண்டுவந்துள்ள துன்பச் செய்தி என்ன?

ராஸ் ; புதியது என்பதன் ஆயுள் ஒருமணி நேரம் மட்டும்தான். அடுத்த ஒருமணியில் வேறொரு புதிய செய்தி.

மாக்டப்: என் மனைவி எப்படி இருக்கிறாள்?

ராஸ் ; ஏன் ? நலமுடன் இருக்கிறாள்.

மாக்டப் : என் பிள்ளைகள் ?

ராஸ் ; அவர்களும் நலமுடன் இருக்கிறார்கள்.

மாக்டப்: அவர்கள் நிம்மதியில் கொடுங்கோலன் மாக்பெத் கை வைக்கவில்லையா?

ராஸ் ; நான் பார்த்தவரை அவர்கள் பேரமைதியில் ஆழ்ந்திருக்கின்றனர்.

மாக்டப் : வார்த்தை ஜாலம் வேண்டாம். நிஜமாக நடந்ததைக் கூறுங்கள்.

ராஸ் : நான் உங்களிடம் துன்பச் செய்தியைக் கொண்டுவரும் நேரம் நல்லோர் பலர் மாக்பத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போர் புரியத் தயாராக உள்ளனர் என்ற வதந்தி பரவியது. மாக்பெத்தின் படை தயார் நிலையில் வைக்கப்படுவதைக் கண்ட பின்தான் அது வதந்தி இல்லை உண்மை என்று தெரிந்து கொண்டேன். நீங்கள் அங்கு வந்து நின்றால் போதும் ஸ்காட்லாந்து வீரர்கள் போரிட முன்வருவார்கள். பெண்கள் கூட போர்ப்படையில் சேரத் துடிப்பார்கள்.

மால்கம் : அவர்கள் நலமுடன் இருக்கட்டும். நான் ஸ்காட்லாந்து திரும்புகிறேன். மன்னரும் மாட்சிமை மிகுந்த மன்னர் எட்வர்ட் பத்தாயிரம் வீரர்கள் கொண்ட குதிரைப்படையை அனுப்பிக் கொடுத்திருக்கிறார். முதியவர் சிவார்ட் போல அனுபவமும், திறமையும் உள்ள போர்த்தளபதி இந்த மொத்த கிறிஸ்து உலகிலும் கிடையாது.

ராஸ் : இந்த நல்ல செய்திக்கு பதில் நன்றியாக நான் ஒரு நல்ல செய்தி கூறுகிறேன்.என்னிடம் உள்ள நல்ல செய்தியை நான் ஆளரவமற்ற ஒரு பாலைவனத்தில் அறைகூவ வேண்டும். .

மால்கம் : என்ன செய்தி அது ? பலரைப் பாதிக்கும் செய்தியா? இல்லை ஒருவரை மட்டும் பாதிக்கக்கூடியதா?

ராஸ் : எந்த நல்ல உள்ளமும் வலி இல்லாமல் இருந்ததில்லை. நான் சொல்லப்போகும் செய்தி உங்கள் சொந்த வலி.

மாக்டப் : என்னைப்பற்றிய செய்தி என்றால் தாமதிக்காமல் உடனே சொல்.

ராஸ் : உன் செவிகளில் நான் கூறப்போகும் செய்தி விழுந்ததும் அவை என் நாவினை வெறுக்காமல் இருக்கட்டும். இனி நான் கூறப்போவது உன் வாழ்நாளில் நீங்கள் இதுவரை கேட்டிராத, கேட்கக்கூடாத செய்தி.

மாக்டப் : ஒருமாதிரி என்னால் அனுமானம் செய்ய முடிகிறது.

ராஸ் ; உங்கள் கோட்டை தகர்க்கப்பட்டது; ஈவிரக்கமின்றி உன் மனைவியும் மக்களும் கொல்லப்பட்டனர்; எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதைக் கேட்டால் உன் உயிரையும் அது பலி வாங்கும்.

மால்கம் : வானகம் கருணை மிக்கது. ( மாக்டப்பை அனைத்து ) நண்பனே தயங்காதே. உன் சோகத்தை மூடி வைக்காதே. வார்த்தைகளால் வெளிப்படுத்து. வெளிப்படுத்தாத சோகம் இதயத்தை வெடிக்கச் செய்ய வல்லது.

மாக்டப் : என் குழந்தைகளையுமா?

ராஸ் ; மனைவி மக்கள் பணியாட்கள் என்று கண்ணில் தென்பட்டவர்கள் அனைவரையும்.

மாக்டப் : நான் அப்படியென்றால் மறைந்திருக்க வேண்டும். என் மனைவியையும் கொன்று விட்டானா?

ராஸ் : ஆம் கொன்றுவிட்டான் .

மால்கம் : சாதாரணமாக இரு மாக்டப். இந்த மரண வேதனையைப் பழிவாங்குதல் என்ற மருந்தின் மூலம் ஆற்றிக் கொள்வோம்.

மாக்டப் : அவனுக்குக் குழந்தைகள் இல்லை. எனது அத்தனைச் செல்வங்களையுமாக் கொன்று விட்டான் ? அத்தனைக் குழந்தைகளையும் என்றா சொன்னீர்கள்? நாசமாய்ப் போகும் வல்லூறே! அத்தனைக் குஞ்சுகளையும் தாய்க்கோழியுடன் ஒரே விழுங்காக விழுங்கி விட்டாயா?

மால்கம் : புலம்பாமல் ஒரு ஆண்மகனைப் போல் செயலாற்று.

மாக்டப் : செய்யத்தான் போகிறேன். இருந்தாலும் ஒரு மனிதனைப்போல உணர்ச்சிவசப்படுவதில் தவறில்லை. ஐயோ ! அவை என்னுடைய உயிரினும் மேலான செல்வங்கள் என்று தெரியாமல் இருந்துவிட்டேனே. வானகம் காப்பாற்ற எவரையும் அனுப்பாமல் அந்தக் கொடூரத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததா? எல்லாம் நீ செய்த பாவம் மாக்டப் உன் பிள்ளைகள் தலையில் விழுந்தது. நீ ஒரு துஷ்டன் மாக்டப். இந்தத் தண்டனை அவர்களுக்கு இல்லை;உனக்கு. இறைவா அவர்கள் ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்.

மால்கம் : இந்தக் கோபம் உன் வாளைக் கூர்மையாக்கட்டும். இதயத்தைக் கூர்ப்பாக்கும் நேரம் இது. மொன்னையாக்கும் நேரமன்று.

மாக்டப் : ஒரு பெண்ணின் நாவினைப் பெற்று புலம்பித் தீர்க்கிறேன்; ஒரு பெண்ணின் விழிகளைப் பெற்று அழுது தீர்க்கிறேன். வானகமே ! எனக்கு இனி ஓய்வில்லை. என்னைக் கொடியவன் மாக்பெத் முன் கொண்டு நிறுத்துங்கள்.என் வாளால் அவனை அளக்கிறேன். அவன் தப்பிவிட்டால் அவனையும் மன்னியுங்கள்.

மால்கம் : இது ஆண்மகனுக்கு அழகு.வா நாம் இப்போது எட்வர்ட் மன்னரைச் சென்று சந்திப்போம். நமது நிறை நமது சக்தி; நமது குறை பிரியாவிடை. கிள்ளிக் களையப்படும் பக்குவத்தை மாக்பெத் அடைந்துவிட்டான். நாம் கடவுளின் தூதுவர்களைப் போலச் செயலாற்றுவோம். உன்னை எவ்வளவுக்கெவ்வளவு உற்சாகபடுத்திக் கொள்ளமுடியுமோ அவ்வளவுக்கவ்வளவு உற்சாகபடுத்திக் கொள். விடியலைக் காணாத நீண்ட இரவு என்பதே கிடையாது.

திரை.

அங்கம் – 4 நிறைவுற்றது.

••••

அணையும் நெருப்பு.. அணையாத கேள்விகள் – கரிகாலன்

download (5)

பெண்ணின் வலி தொட்டு இமையம் எழுதிய அற்புதமான சிறுகதை அணையும் நெருப்பு.இந்நாடகம் விருத்தாசலத்தில் நடைபெற்ற களம்புதிது விருது விழா அரங்கில் நிகழ்த்தப்பட்டது.இமையத்தின் கதை அதன் அத்தனை பரிமாணங்களோடும் கண்முன் நிறுத்தியிருந்தனர் புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறை மாணவர்கள். இதற்கு முன்பாக இவர்கள் இமையத்தின் பெத்தவன்,ஆகாசத்தின் உத்தரவு போன்ற கதைகளையும் இதே அரங்கில் வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தனர்.இந்த மூன்று நாடகங்களும் கிராமத்துப் பின்னணியில் அதன் நிலப்பிரபுத் துவ மதிப்பீடு சார்ந்த விழுமியங்கள் மீது ஆழ்ந்த நுணுக்கமான விமர்சனங்களை முன்வைப்பவை.’பெத்தவன்’ காதலுக்குத் தடையாய் இருக்கும் சாதி ஆணவத்தையும், ‘ஆகாசத்தின் உத்தரவு’ வயிற்றுப்பாட்டுக்குத் திருடும் ஒருவன் தன் குலதெய்வத்திடம் தொழிலுக்குச் செல்லும் முன் குறிகேட்பதின் வழி வெளிப்படும் அவனுடைய வாழ்வின் அவலத்தையும் ,’அணையும் நெருப்பு’ கைவிடப்பட்ட பெண்ணின் துயரையும் பேசுபவை.

download (1)

சித்தர்கள் தொடங்கி பெண்ணை பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு பொருளாக மட்டுமில்லை காமவேட்கை கொண்ட உயிரினமாகவே பார்த்து வந்துள்ள சூழலில் மிகுந்த பண்பாட்டு இறுக்கமுடைய நமது சூழலில் பெண்ணின் ச்தவிப்புகளை,ஆதங்கங்களை, கோவங்களை உரத்து பேசியிருக்கிறார் இமையம். இதன் நாயகி ஒரு சாதாரண அதிகம் படிக்காத பெண்.அவளுக்கு பெண்ணியம்,நீதி?அறம் குறித்தெல்லாம் பெரிய பார்வைகளொன்றுமில்லை.அவள் பேசும் சொற்கள் எளிமையானவை.சத்தியம் நிரம்பியவை.அனுபவத்தின் தகிப்புகளிலிருந்து வெளிபடுபவை.நமது மனசாட்சியின் ஆழம்வரை ஊடுறுவக்கூடியவை.கலைப் படைப்புகள் நீதி மறுக்கப்பட்டவர்களுக்கான குரலாக அமைய வேண்டும்.அவ்வகையில் இமையம் தனது படைப்புகளின் வழியாகத் தொடர்ந்து பெண்களுக்காக பெண்களின் குரலிலேயே பேசுகிறார்.அதற்குப்பின்னால் ஆணின் தந்திரங்கள் எதுவுமில்லை.
download (4)

பெண்ணை வெறும் நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் சமூகம்,ஊடகம், ஆணாதிக்கப் பண்பாடு என அனைத்து நிறுவனங்கள் மீதும் இதன் நாயகி எழுப்பும் வினாக்களுக்கு நம்மிடம் பதிலில்லை.இங்கு காதலாகட்டும்,பாலின்ப விழைவாகட்டும் இவற்றின் விளைவால் ஏற்படும் வலிகளைப் பெணகளே சுமக்கும்படி நமது பண்பாட்டு மதிப்பீடுகள் அமைந்திருக்கின்றன. இளம் வயதில் கைம்பெண்ணாகும் அணையும் நெருப்பின் நாயகி,அவள் கட்டுடல் பொருட்டு தொடர்ந்து வீதியின் கண்களால் வேட்டையாடப் படுகிறாள்.எந்த உதவியை அவள் நாடினாலும் அவள் உடலை விலையாகக் கேட்கப்படுகிறது. இந்நிலையில் காவல் துறை ஆய்வாளரொருவர் அவளுக்கு உதவுகிறார்.இதனால் அவருடைய மனைவி தற்கொலை செய்து கொள்ள ஊடகங்கள்,சமூகம் அவளை வில்லியாக சித்தரிக்கின்றன.தனித்து நிற்பவள் அழைத்தால் வருவாள் எனும் தட்டையான ஆணாதிக்க ஒற்றை பார்வையோடு அவளை அணுகுகின்றனர். பருவத்தின் சுமை பொறுக்காத விடலைப் பையனொருவன் அவள் பின்னால் சுற்ற, வெடித்து எழுகிறாள்..அனாதரவான பெண்ணிடம் இருளில் சுகம் தேட அலைபவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளாதத் தன்மை குறித்து வினா எழுப்புகிறாள். பெண்ணின் பார்வையில் ஆணுக்கு தனி முகமில்லை.பெண்ணை எதிர்கொள்ளும் சமூகத்துக்கு தனித்த சொற்களில்லை.இதை வெளிப்படுத்தும் வண்ணம் இந்நாடகத்தின் மையப்பாத்திரம் தவிர்த்து அனைத்து பாத்திரங்களும் முகத்தை கருப்புத் துணியால் மறைத்திருந்தனர்.ஒரு அபலைப் பெண்ணின் வாழ்வைத் தொடர்ந்து வேட்டையாடும் வெளியாக நாம் வாழும் சமூகம் ஏன் மாறிப்போனது எனும் குற்ற உணர்வை இந்நாடகம் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியது.

ஒரு பெண் ரௌத்திரம் கொண்டு பொங்கி எழுந்தால் ஆண் எப்படி சிறுமை அடைவான் என்பதின் கலைசாட்சி அணையும் நெருப்பு. ஒரு மூன்றாம் அரங்கை எப்படி அமைப்பது என்பது நாடகத்தை இயக்கிய பேராசிரியர் ராஜு அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. மேடை, நுகர்வர்கள் எனும் எல்லைக்கோட்டை முற்றிலுமாக நாடகம் அழிந்திருந்தது.நாடகக் காட்சிகள் பார்வையாளர் ஒவ்வொருவரின் சுய அனுபவத்தோடும் ஏதோ ஒரு வகையில் அடையாளப்படுத்திக்கொண்டிருந்தது. மையப் பாத்திரத்தை ஏற்றிருந்த அருணா எரியும் நெருப்பாகவே சுடர்விட்டுப் பிரகாசித்தார்.

நந்தினி,இளம்பரிதி,முத்துக்குமார்,சந்தோஷ்,மனீஷ்,தவச்செல்வி,சதீஷ்குமாரு போன்றோரும் தம் நடிப்பின் முழு சாத்தியங்களையும் வெளிப்படுத்தினர். தேவையான அளவில் ஒளியூட்டியிருந்த பாலாபாராட்டுக் குரியவர்.இசையை ஒரு பாத்திரமாக்க முடியும் என நிரூபித்திருந்தார்கள் முருகவேல், சமணராஜா,விநாயகம் மூவரும். இனி இலக்கிய அரங்குகளில் நிகழ்த்து கலைகளின் அவசியத்தை இந்த நாடக முயற்சி யோசிக்க வைத்திருக்கிறது.அணையும் நெருப்பு முடிந்ததும் பார்வையாளர்களின் கைத்தட்டலில் சுடு பறந்தது.அதுவே கதையின் – நாடகத்தின் – கலையின் வெற்றி!

*******

ஷேக்ஸ்பியரின் மாக்பெத் ( அங்கம்-3 ) மொழியாக்கம்-சத்தியப்பிரியன்.

download

காட்சி-1

இடம்: பாரஸ் அரண்மனை

( பாங்கோ உள்ளே நுழைகிறான். )

பாங்கோ :இதோ நீ கேட்டதெல்லாம் கிடைத்து விட்டது. நீதான் காடர்; நீதான் கிளாமிஸ்; நீதான் அரசன். அந்த மூன்று சூனியக்காரிகள் சொன்னது போலானது.எனக்கு ஒரு சந்தேகம் நீ அவர்கள் வாக்குப் பலிக்கத் தப்பாட்டம் ஆடிவிட்டாயோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் உன் வாரிசுக்கு அரச பதவி இல்லை என்பதும் அவர்கள் சொன்னதுதானே. நான் ஒரு அரச பரம்பரையின் மூத்த அரசனின் தந்தை. உன்னைப் பற்றி சொன்னது உண்மையென்றால் என்னைப் பற்றிச் சொன்னதும் உண்மைதானன்றோ? போதும் இதோடு என் வாயை மூடிக்கொள்கிறேன்.

( துந்துபி முழங்க அரசர்க்குரிய உடையில் மாக்பெத் வருகிறான். உடன் திருமதி.மாக்பெத் அரசி உடையில் வருகிறாள். லெனாக்ஸ் ராஸ் பிரபுக்கள் மற்றும் சீமாட்டிகள் உடன் வருகின்றனர். )

மாக்பெத் ( பாங்கோவைச் சுட்டியபடி ): இதோ நமது சிறப்பு விருந்தினர்.

திருமதி.மாக்பெத் : நாம் அவரை மறந்திருந்தால் அது நல்லதில்லை. விருந்து முழுமையடையாமல் போய்விடும்.

மாக்பெத் ( பாங்கோவிடம்) இன்று மதியம் சிறப்பு விருந்திற்கு ஏற்பாடாகி இருக்கிறது பாங்கோ தாங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

பாங்கோ : தங்கள் ஆணைக்குக் கட்டுப்படுவதைத் தவிர எனக்கு என்ன செய்யமுடியும் அரசே ?

மாக்பெத் :இன்று மாலை சவாரிக்குச் செல்கிறாயா ?

பாங்கோ : ஆம் பிரபு.மாக்பெத் : உன்னுடைய மேலான அறிவுரைகளைக் கேட்கக் காத்திருக்கிறோம். உன்னுடைய அறிவுரை என்றுமே ஆழமானதாகவும் பிரச்சனைக்குத் தீர்வாகவும் இருக்கும். போகட்டும். நாளை கேட்டுக் கொள்கிறோம். எது வரையில் சவாரி ? தொலைதூரமோ?

பாங்கோ : மாலையில் தொடங்கி இரவு உணவு வரும்வரை சற்று தூரப் பயணம் மேற்கொள்ளலாம் என்று இருக்கிறேன். நான் நினைத்ததைவிட என் குதிரை வேகமாகச் செல்லுமென்றால் நான் நினைத்த நேரத்தைவிட ஓரிரு மணித்துளிகள் முன்பாகவே வந்துவிடுவேன்.

மாக்பெத் : எமது விருந்தை மறந்து விடாதீர்கள்.

பாங்கோ :அரசே கண்டிப்பாக மாட்டேன்.

மாக்பெத் : அந்த இளவரசர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் பதுங்கியிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. எம்மேல் படையெடுக்கத் திட்டமிட்டுள்ளனராம்.இது குறித்து அதாவது நமது இருவரையும் இணைக்கும் இந்த அரசப் பதவி குறித்து நாளை நாம் ஆலோசிப்போம். செல். உன் குதிரையை அவிழ்த்து உன் பயணத்தைத் தொடங்கு.நல்வரவு. ஆமாம் ஃ ப்லீன்சும் உன்ன்டுடன் பயணிக்கிறானா?

பாங்கோ : ஆம் அரசே ! பாதையை நாங்கள் முத்தமிடும் தருணம் வந்துவிட்டது.

மாக்பெத் : ஓட்டமும் , சாட்டமும் கொண்ட குதிரைகள் சென்று வாருங்கள்.

( பாங்கோ மறைகிறான். )

மாக்பெத் : இரவு விருந்து வரும்வரை அனைவரும் உங்கள் வசதிக்கேற்ப இருங்கள். நானும் சற்றுத் தனிமையில் இருக்க உத்தேசித்துள்ளேன். கடவுள் உங்களுக்குத் துணை புரியட்டும்.

( மாக்பெத்தையும் அவன் வேலைக்காரனையும் தவிர அனைவரும் மறைகின்றனர் )

வேலைக்காரன் : அரண்மனை வாயிலுக்கு வெளியில் அவர்கள் காத்திருக்கின்றனர் அரசே

மாக்பெத் :எம்மிடம் அழைத்து வா.

( வேலைக்காரன் மறைகிறான் )

மாக்பெத் : உன்னைப்போல அரசனாக இருப்பது கடினமில்லை ; ஆனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவனிடம் ஏதோ ஒன்று என்னை அச்சப்பட வைக்கிறது. அஃது அவனுக்கே உரியது. அவன் புத்திசாலி. முடிவெடுக்க அஞ்சாதவன்.. அவனைத் தவிர வேறு எவரிடமும் எனக்கு அச்சமில்லை. அவன் அருகில் என் துணிச்சல் மிரள்கிறது. மார்க் ஆண்டனி ஆக்டேவியஸ் சீசரிடம் மிரண்டது போலே.அந்தச் சூனியச் சகோதரிகள் மன்னனாக என் பெயரை முன்மொழிந்ததும், அவன் அவர்களைக் கோபித்துக் கொண்டான். அதன் பின்னரே தன் எதிர்காலத்தை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவர்களும், திரிகால ஞானிகளைப் போல; அவன் ஒர் அரச பரம்பரை வரிசையின் முதல் அரசனின் தந்தை என்றனர். நான் என் வாரிசுகளுக்கு அளிக்க முடியாத மகுடத்தையும், செங்கோலையும் எனக்கு அளித்தனர். என் குடும்பத்தைச் சாராத அந்நியன் ஒருவன் இத்தனையையும் அள்ளிக் கொண்டு போகப் போகிறான். என் வாரிசுகளுக்கு அவை இல்லை.இது நடக்கக்கூடும் என்றால், என் மனசாட்சியைக் கொன்று டங்கனை கொலை செய்தது பாங்கோவின் வாரிசுகள் அரசர்களாக வழி செய்வதற்கா? என் அமைதியான மனதில் நெருப்பை அல்லவா கொட்டியிருக்கிறேன் ? எதற்காக? அவர்களுக்காக. என் ஆருயிரை எமன் கைகளில் அல்லவோ தாரை வார்த்திருக்கிறேன் ? எதற்காக ? அவர்களை அரசர்களாக்க. பாங்கோவின் வித்துக்கள். இதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக விதியைச் சவாலுக்கு அழைப்பேன்; மரணத்துடன் மோதுவேன். யாரங்கே ?( ஏவலாள் இரண்டு கொலையாளிகளுடன் வருகிறான் ) ஏவலனே ! நீ சென்று மருத்தவரிடம் போய் இரு . கூப்பிடும்போது வந்தால் போதும்.(ஏவலால் மறைகிறான். )

மாக்பெத் ( கொலைகாரர்களைப் பார்த்து ) நேற்றுதானே நாம் பேசிக் கொண்டிருந்தோம்?

முதல் கொலைகாரன் :: ஆம் வேந்தே ! நேற்று பேசினோம்.

மாக்பெத் : நான் சொன்னவற்றை யோசித்துப் பார்த்தீர்களா? உங்கள் வாழ்க்கையை இத்தனை காலமும் நாசமடையச் செய்ததவன் பாங்கோ. இதில் எனக்கு எதுவும் தொடர்பில்லை. யான் ஒன்றுமறியாதவன். போன சந்திப்பில் நான் சில சான்றுகளுடன் நீங்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டீர்கள், யார் உங்களை ஏமாற்றியது, எவ்வாறு அனைத்துமே உங்களுக்கு எதிரான சாட்சியங்களாக மாறியது போன்ற பலவற்றைச் சொன்னதைப் பார்த்து ஓர் அரைப் பைத்தியம் கூட ‘ பாங்கோ அவ்வாறு செய்தான்’ என்று கூறிவிடும்.

முதல் கொலைகாரன் : ஆமாம் நீங்கள் விளக்கிச் சொன்னீர்கள்.

மாக்பெத் : ஆம் நான் விளக்கினேன். இப்போது மேலும் ஒரு படி சென்றுள்ளேன். அதற்குத்தான் இந்தச் சந்திப்பு. நீங்கள் அத்தனை பொறுமைசாலிகளா அவனை எளிதில் தப்ப விடுவதற்கு ? உங்களைப் படுகுழியில் தள்ளி உங்கள் குடும்பத்தைப் பட்டினி போட்ட அந்த மாபாவியை மன்னிக்கும் அளவிற்கு நீங்கள் இருவரும் அத்தனை நல்லவர்களா?

இரண்டாவது கொலைகாரன் : நாங்கள் மனிதர்கள் அரசே !

மாக்பெத் : மனிதன் என்பது பெயரளிவில்தான். வேட்டைநாய், வெறிநாய், சொறிநாய், ஓநாய், நீர்நாய் என்று பலரகம் இருந்தாலும் மொத்தமாக அவற்றை நாய் என்பதைப் போல நீங்களும் மனிதர்கள்தாம்.. நாய்களை அவற்றின் குணத்திற்கேற்ப தரம் பிரித்தால் எது வேட்டையாடும், எது காவல் காக்கும், எது சாடும், எது ஓடும், எது புத்திகூர்மையுள்ளது என்பது தெரியவரும். இயற்கை கொடுத்த சக்தியின் காரணமாக ஒரு நாய் மற்றொரு நாயிடமிருந்து வேறுபடுகிறது. மனிதர்கள் பட்டியலில் நீங்கள் கடைசியாக இடம்பெறவில்லை என்றால் சொல்லுங்கள் நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன். அதன் மூலம் உங்கள் எதிரியை விரட்டுவதோடு எனக்கு நெருக்கமாகவும் வரலாம். எவன் வாழ்வதால் நான் நலிகிறேனோ அவன் இறப்பதால் நான் உயிர்க்கிறேன்.

இரண்டாவது கொலைகாரன் : நான் இந்த உலகத்தினரால் பந்தாடப்பட்டவன். நான் ஆத்திரமடைந்துள்ளேன் . என்ன வேண்டுமானாலும் செய்வேன்.

முதல் கொலைகாரன் : நானும் அப்படியேதான் மகாராஜா.. துன்பங்கள் என்னைச் சோர்வடையச் செய்துவிட்டன. அதிர்ஷ்டம் என்னை இழுத்துக்கொண்டே இருக்கிறது. எந்த ஒரு சந்தர்ப்பத்திற்கும் நான் தயார். வாழ்வா சாவா எதுவானாலும் சரி.

மாக்பெத் : உங்கள் இருவரின் பொது எதிரி பாங்கோ என்பது தெரியுமில்லையா?

இருவரும் : தெரியும் மகாராஜா.

மாக்பெத் : அவன் எனக்கும் எதிரி.. அவனை எந்த அளவிற்கு வெறுக்கிறேன் என்றால் அவனுடைய இருப்பு என் இதயத்தைத் தின்றுவிடும்போல் இருக்கிறது. என் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவனை என் பார்வையிலிருந்து தூக்கி எறிந்துவிட முடியும். இருந்தாலும் அதை நான் செய்யப்போவதில்லை. அவனுக்கும் எனக்கும் பொதுவான நண்பர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் முன்னிலையில் அவன் மரணத்திற்கு, அவனை நான்தான் கொன்றாலும், நான் புலம்பவும் கண்ணீர் விடவும் வேண்டியிருக்கும். இதற்குதான் உங்கள் உதவியை நாடியுள்ளேன். இந்த வியாபாரம் சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக மக்களின் கவனத்திற்குச் செல்லக் கூடாது.

இரண்டாவது கொலைகாரன் : நீங்கள் ஆணையிடுங்கள் மன்னா நாங்கள் முடித்து வருகிறோம்.

முதல் கொலைகாரன் : எங்கள் உயிருக்கு…

மாக்பெத் ( இடைமறித்து ) உங்கள் உறுதி உங்கள் விழிகளில் மின்னுவது தெரிகிறது. இன்னும் ஒருமணிநேரத்தில் நீங்கள் எங்கே செல்லவேண்டும், எப்படித் தாக்க வேண்டும் என்று சொல்கிறேன். இது சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றி நடைபெறவேண்டும். இந்தத் திட்டம் சரியாக நடைபெற நீங்கள் பாங்கோ, அவன் மகன் ஃப்ளீன்ஸ் இருவரையும் கொல்ல வேண்டும். பாங்கோவைக் கொல்வது எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு ஃப்ளீன்சையும் கொல்வது எனக்கு முக்கியம். முடிவு செய்யுங்கள். உங்களிடம் மீண்டும் வருகிறேன்.

இருவரும் : ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம் வேந்தே.

மாக்பெத் : இன்னும் சிறிதுநேரத்தில் உங்கள் இருவரையும் கூப்பிடுகிறேன். இப்போது செல்லுங்கள்.( கொலைகாரகள் மறைகின்றனர். ) ஒரு வழியாக ஒப்பந்தம் முடிந்தது. உன் ஆத்மா சொர்கத்தை அடைய ஆசைப்பட்டால் பாங்கோ இன்றைய இரவுதான் சரியான இரவு.

(மாக்பெத் மறைகிறான். )

திரை.

காட்சி -2

(ஏவலாளும் திருமதி.மாக்பெத்தும்)

இடம் : அரண்மனையின் ஒருபகுதி.

திருமதி. மாக்பெத் : பாங்கோஅரசவையிலிருந்து கிளம்பி விட்டாரா?

ஏவலாள்: ஆம் சீமாட்டி. ஆனால் இன்றிரவு வந்துவிடுவார்.

திருமதி.மாக்பெத் : உங்கள் அரசரிடம் சென்று சொல், நான் அவருடன் தனிமையில் கொஞ்சம் பேச வேண்டுமென்று.

ஏவலாள் : இதோ இப்போதே சீமாட்டி. ( அகல்கிறான். )

திருமதி.மாக்பெத் : பெறுவது சிறிது; இழப்பது அதிகம். இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை பிறக்கும். கொள்பவனாக இருப்பதைவிட இறப்பவனாக இருப்பது உத்தமம்.(மாக்பெத் உள்ளே நுழைகிறான். )

என்ன நடக்கிறது அன்பரே ? ஏன் எப்போதும் உங்களுடன் உங்கள் சோக எண்ணங்களையே துணையாகக் கொள்கிறீர்கள்? எவரைப்பற்றி வருத்தபட்டீர்களோ அவரைக் கொன்ற பிறகு உங்கள் சோக எண்ணங்களும் இறந்திருக்க வேண்டாமா? மாற்ற முடியாது என்னும்போது நிகழ்ந்தவற்றை நினைத்து என்ன பயன் ? நடந்தவை என்றும் நடந்தவையே.

மாக்பெத் : நாம் நாகத்தை அடித்தோம்; கொல்லவில்லை. காயம் ஆறிய பின்பு நம்முடைய பழைய வன்மம் அதன் நஞ்சுப் பற்களை மீண்டும் சந்திக்க நேரிடும். அண்டசராசரங்கள் பிளக்கட்டும், இருவேறு உலகங்களும் அல்லலுரட்டும் எது நடந்தாலும் என் உணவை நான் அஞ்சியபடிதான் உண்ண வேண்டியிருக்கும். என் தூக்கத்தை இந்த ஓய்வில்லாத பரவசம் வதைப்பதற்கு பதில் நான் இறந்திருக்கலாம். அவர்களைக் கொன்று பேரமைதிப்படுத்திவிட்டு நாம் அமைதியைத் தேடுகிறோம். டங்கன் சமாதியில் உறங்குகிறார். வாழ்வின் துன்பங்களுக்கு நடுவில் அவர் அமைதியாக உறங்குகிறார். ராஜதுரோகம் அவருக்குச் செய்யவேண்டியதைச் சிறப்பாகச் செய்துவிட்டது.. வாளோ , விஷமோ, உள்நாட்டுக் கலகமோ, வெளிநாட்டினரின் முற்றுகையோ இனி அவரை அண்ட முடியாது.

திருமதி.மாக்பெத் : வாருங்கள் அன்பரே ! சற்று மந்தகாசமாக இருங்கள். சற்று சிரித்த முகத்துடன் கலகலப்பாக இருங்கள் இன்று உங்கள் நபர்களுடன் இரவு விருந்து இருக்கிறது.

மாக்பெத்: நான் அவ்வாறுதான் இருக்கப் போகிறேன் கண்ணே . மறந்துவிடாதே நீயும் அப்படிதான் இருக்க வேண்டும். பாங்கோவை நன்றாகக் கவனி. உன் விழிகளும் நாவும் அவனுக்குச் சிறந்தவற்றையே வழங்கட்டும். இதயத்தைத் திரையிட்டு மூடி, பார்வையால் குளிப்பாட்டுவதுதான் நாம் செய்யும் சிறந்த முகத்துதியாக இருக்கும். இதயத்திற்கு முகமூடி போட்டுவை.

திருமதி. இது போன்று பேசுவதை நிறுத்தப் போகிறீர்களா? இல்லையா?

மாக்பெத் : என் நெஞ்சம் முழுவதும் விஷக்கொடுக்குகள் கொண்ட தேள்களால் நிரம்பியுள்ளது. உனக்குத் தெரியுமா பாங்கோவும் அவன் மகன் ஃப்ளீன்சும் நம் கண் எதிரில் இன்னும் உயிருடன் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று ?

திருமதி. மாக்பெத்: அவர்கள் என்ன சிரஞ்சீவிகளா இயற்கையை வெல்வதற்கு?

மாக்பெத் : இதமளிக்கிறது இஃது. அவர்களைக் கொல்லமுடியும். நிஜம். சந்தோஷப்படு. வௌவால்கள் இரவு வந்ததை அறிவிக்கும்பொருட்டு இந்தக் கோட்டையில் பறக்கும் முன்பாக, வண்டுகள் ரீங்காரமிடும் முன்பாக ஒரு கொடூரக் கொலை நிகழ்த்தபட்டிருக்கும்.

திருமதி.மாக்பெத் : என்ன செய்யப் போகிறீர்கள்?

மாக்பெத் : நீ ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கும்வரையில் என்ன நடக்கப் போகிறதென்பது உனக்குத் தெரியாமலே இருக்கட்டும்.( இரவினைக் குறித்து ) பகலின் கருணை விழிகளை மெல்லிய துணியால் மூடு. இரத்தக்கறை படிந்த ,மறைந்திருக்கும் உன் கொலைக்கரங்களால் என்னைச் சவம்போல் வெளுக்கச் செய்யும் எனக்கும் அவனுக்கும் உள்ள இணைப்பை அறுத்து எறி. ஆகாயம் கறுக்கத் தொடங்கிவிட்டது. பறவைகள் கூடு திரும்பத் தொடங்கிவிட்டன. பகலின் நல்லவை மயங்கத் தொடங்கும் நேரம். இரவின் கரும்பிரதிநிதிகள் விழித்துக்கொண்டு இறைதேடக் கிளம்பிபிட்டன. ( திருமதி. மாக்பெத்தைநோக்கி ) என் வார்ர்த்தைகள் உனக்கு வியப்பளிக்கலாம். ஆனால் என்னிடம் கேள்விகள் எதுவும் கேட்காதே. தீயவை தீய தன்மையால் மேலும் தீயதாகும்.எனவே தயைகூர்ந்து என்னுடன் வா.

திரை

காட்சி -3

இடம் : அரண்மனைக்கு வெளியில் ஓர் இடம்.

(மூன்று கொலைகாரகள் வருகின்றனர் )

முதல் கொலைகாரன் : உன்னை இங்கு வந்து எங்களுடன் சேரும்படி கட்டளையிட்டது யார்?

மூன்றாம் கொலையாளி : மாக்பெத்.

இரண்டாம் கொலைகாரன் :நமக்கு என்ன கட்டளைகள் விதிக்கப்பட்டிருக்கிறதோ அதே கட்டளைகள்தாம் இவனுக்கும் இடப்பட்டுள்ளன. இவனைச் சந்தேகிக்க வேண்டாம்.

முதல் கொலைகாரன் : அப்படியானால் எங்கும் நகராமல் எங்களுடனே இரு. மேல்திசையில் ஒளியின் கீற்று இன்னும் மங்கலாகவில்லை.வெளியில் சென்றவர்கள் தங்கள் கூடு தேடித் திரும்பும் நேரம். அதோ பாங்கோ வருவது போலிருக்கிறது.

மூன்றாவது கொலைகாரன் : ஆம் குளம்பொலி கேட்கிறது.

பாங்கோ (குரல் மட்டும் ): ஹேய் யாரது இங்கே தீவட்டிக் கொண்டு வாருங்கள்.

இரண்டாவது கொலைகாரன் : அவனாகத்தான் இருக்கவேண்டும். மற்ற விருந்தினர் அனைவரும் அரண்மனைக்குள் சென்றுவிட்டனர்.

முதல் கொலைகாரன் : உன்னிப்பாகக் கேள். அவன் குதிரைகளைத் தொழுவத்திற்குக் கொண்டும் செல்லும் ஓசை கேட்கிறது.

மூன்றாவது கொலைகாரன் : குதிரை லாயம் இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ளது. பாங்கோவும் மற்றவர்களைப் போல அந்தத் தூரத்தைக் கடப்பதற்கு நடந்துதான் வருவான்.

இரண்டாவது கொலைகாரன் : வெளிச்சம் வருகிறது. அதோ அவன் வருகிறான்.

மூன்றாவது கொலைகாரன் : ஆம் அவன்தான்.

முதல் கொலைகாரன் : ஆயத்தமாக இருங்கள்.

பாங்கோ : இன்று இரவு மழை வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

முதல் கொலைகாரன் : வரட்டும் அந்த மழை (மூவரும் பாங்கோவைத் தாக்குகின்றனர் )

பாங்கோ : இது நம்பிக்கைத் துரோகம். ஓ ஃப்ளீன்ஸ் ! நீ தப்பி ஓடு போ. பிறகு வந்து பழி வாங்கு .அடிமை நாய்களா!(பாங்கோ இறக்கிறான். ஃப்ளீன்ஸ் தப்பிச் செல்கிறான். )

மூன்றாவது கொலைகாரன் : இங்கே விளக்கை அணைத்தது யார் ?

முதல் கொலைகாரன் : விளக்கை அணைத்தது சரிதானே ?

இரண்டாவது கொலைகாரன். : நமது திட்டத்தில் பாதிதான் முடிந்திருக்கிறது.

முதல் கொலைகாரன் : வாருங்கள் இங்கிருந்து போய்விடலாம். மாக்பெத்திடம் நாம் எதுவரை முடிதுள்ளோமோ அதனைக் கூறி வருவோம்.( அகல்கின்றனர். )

திரை.

காட்சி -4

(அரண்மனையில் ஓரிடம்.. அரன்மைனையின் விருந்திற்கு மேடை தயாராக உள்ளது. மாக்பெத், திருமதி. மாக்பெத், லெனாக்ஸ் , ராஸ் , பிரபுக்கள் மற்றும் ஏவலால்கள் நுழைகின்றனர்.)

மாக்பெத் : அவரவர் தகுதி வரிசை அவரவருக்குத் தெரியும். எந்த இடத்தில் அமரவேண்டும் என்பது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதன்படி அமருங்கள். முதலிலிருந்து இறுதிவரையில் உள்ள அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரபுக்கள் : ( மொத்தமாக ) நன்றி அரசே.

மாக்பெத் :உங்களில் ஒருவனாகக் கலந்து கொண்டு ஓர் எளிய உபசரிப்பவனாக இருக்கப் பிரியப்படுகிறேன். இந்த விருந்தின் மனையாட்டி அதாவது என் மனைவி அவளுக்குரிய அரச நாற்காலியில் அமர்ந்திருப்பாள். அதற்குரிய நேரம் வந்த பின்பு உங்களை வரவேற்பாள்.

திருமதி. மாக்பெத் : என் சார்பாக அவர்களுக்குச் சிறப்பு வரவேற்பு அளியுங்கள் பிரபு. என் இதயத்தில் அவர்களை நான் ஏற்கனவே வரவேற்றுவிட்டேன்.( முதல் கொலைகாரன் வாயில் அருகே நிற்கிறான். )

மாக்பெத் : பார் அவர்கள் உன் வரவேற்பை ஏற்றுக்கொண்டுவிட்டனர். விருந்து மேஜை இருபுறமும் நிரம்பி வழிகிறது. அனைவரும் தயங்கவேண்டாம். சந்தோஷமாக இருங்கள். இதோ இப்போது விருந்து பரிமாறப்படும்.( முதல் கொலைகாரன் அருகில் சென்று ) உன் முகத்தில் இரத்தக்கறை படிந்திருக்கிறது.

முதல் கொலைகாரன் : அப்படி என்றால் அது பாங்கோவினுடையது.

மாக்பெத் : அவன் நாளங்களில் ஓடவேண்டிய ரத்தம் உன் முகத்தில்…அதுவும் நல்லதுதான். முடித்துவிட்டாயா?

முதல் கொலைகாரன் : அரசே அவன் கழுத்து அறுக்கப்பட்டது. நான்தான் அதைச் செய்தேன்.

மாக்பெத் :கழுத்தறுப்பதில் நீ கெட்டிக்காரன் அல்லவா??. அதேபோல ஃப்ளீன்ஸ் கழுத்தையும் அறுத்து விட்டீர்களா? அதையும் நீதான் செய்துள்ளாய் என்றால் சரியான கழுத்தறுப்பு என்ற பெயர் உனக்குதான்.

முதல் கொலைகாரன் :அரசே ஃப்ளீன்ஸ் தப்பிவிட்டான்.

மாக்பெத் : ஐயோ நான் அச்சப்பட மீண்டும் ஒரு சந்தர்ப்பம். இல்லையென்றால் பளிங்கைப் போல உறுதியுடனும், பாறையைப் போல வலிமையுடனும், காற்றைப் போலச் சுதந்திரமாகவும் இருந்திருப்பேனே. நான் அச்சத்தினாலும் பயத்தினாலும் அடைக்கப்பட்டேன்; மடக்கபட்டேன்; ஒடுக்கபட்டேன். பாங்கோ பத்திரமாக இருக்கிறானா?

முதல் கொலைகாரன் : ஒரு சாக்கடையின் அடியில் தலையில் இருபது வெட்டுக் காயங்களுடன் பத்திரமாக இருக்கிறான். இரண்டில் ஒன்று போதும் அவன் கதையை முடிக்க.

மாக்பெத் : அதற்கு முதலில் நன்றி. அடிபட்ட பெரிய பாம்பு சாக்கடையில் செத்துக் கிடக்கிறது. தப்பியோடிய குட்டிப் பாம்பு வளர்ந்து விஷமுள்ளதாகி பயமுறுத்தும். இப்போது அதற்கு இன்னும் விஷப்பல் முளைக்கவில்லை. இங்கிருந்து போய்விடு. நாளை உன்னைச் சந்திக்கறேன்.( முதல் கொலைகாரன் மறைகிறான். )

திருமதி.மாக்பெத் : அன்பரே விருந்தினருக்கு நீங்கள் சரியான உற்சாகத்தையளிக்கவில்லை. உற்சாக வரவேற்பு அளிக்கப்படவில்லை என்று கருதிவிட்டால் உங்கள் விருந்தினர்கள் விருந்திற்குப் பணம் கொடுக்க நேருமோ என்று சந்தேகப்பட்டு விடுவார்கள். பசிக்கும்போது சாப்பிட என்றால் அதனை வீட்டில் சென்று சாப்பிடலாம். விருந்துக்கு எதற்கு வரவேண்டும்? விருந்து என்றால் அதில் சிறிது கொண்டாட்டம் இருக்க வேண்டும்; உற்சாகம் பீறிடவேண்டும். இல்லையென்றால் சிறப்பு விருந்துகள் சலிப்பூட்டும்.

மாக்பெத் : நினைவூட்டியதற்கு நன்றி பிரியசகி ( விருந்தினரைப் பார்த்து ) நல்ல பசி நல்லஜீரணசக்தியைக் கொடுக்கும். உடல்நலத்திற்கு இவை இரண்டும் அவசியம். இங்கே அந்த மூன்றும் உள்ளன.

லெனாக்ஸ் : உங்கள் ஆசனத்தில் அமரலாமே மன்னா.( பாங்கோவின் ஆவி உள்ளே நுழைந்து மாக்பெத்தின் இருக்கையில் அமர்கிறது)

மாக்பெத் : பாங்ன்கோவும் இருந்திருந்தால் மொத்த ஸ்காட்லாந்தும் இங்கேதான் உள்ளது என்று கூறுவேன். அவனுக்கு என் மேல் இரக்கம் இல்லை அதனால் வரவில்லை. அவனுக்குத் தீங்கு எதுவும் நேர்ந்திருக்காது. என்று எண்ணுகிறேன்.

ராஸ் : அவன் வரவில்லை என்றால் வார்த்தை தவறிவிட்டான் என்று அர்த்தம். விடுங்கள். இந்த விருந்தைச் சிற்பிக்க நீங்களும் எங்களுடன் அமருங்கள் மகாராஜா.

மாக்பெத் : உணவுமேசை நிரம்பிவிட்டது.

லெனாக்ஸ் : உங்களுக்கென்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அரசே

மாக்பெத் : எங்கே ?

லெனாக்ஸ்( ஆவி அமர்ந்திருக்கும் இருக்கையைக் காட்டி ) அதோ அந்த இருக்கைக் காலியா உள்ளது.

மாக்பெத் (ஆவியைப் பார்த்து ) உங்களில் இதைச் செய்தது யார் ?

பிரபுக்கள்: எதைக் கேட்கிறீர்கள் அரசே?

மாக்பெத் (ஆவியை நோக்கி ) : நீ சொல்லாதே செய்தது நீயென்று.

ராஸ் : ஒ கனவான்களே! எழும்திருங்கள். நமது அரசருக்கு உடல்நிலை சரியில்லை.

திருமதி.மாக்பெத் : எனதருமை முக்கிய நண்பர்களே. அமருங்கள். என் பிரபு எப்போதும் இப்படித்தான். இது போல அவர் நடந்துகொள்வது புதிதல்ல. இளம்வயதிலிருந்து தொடரும் வழக்கம். தயைகூர்ந்து அமருங்கள். இஃது ஒரு சாதாரண வலிப்பு நோய். இன்னும் சிறிது நேரத்தில் அவர் பழையபடி ஆகிவிடுவார். நீங்கள் அவர் மீது அதிக அக்கறை கொள்ளகொள்ள அவரது கோபம் அதிகமாகி இந்த வியாதி உடனே குணமாகாமல் போய்விடும். நீங்கள் சாப்பிடுங்கள். அவரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்.(மாக்பெத்தை நோக்கி அவனுக்கு மட்டும் கேட்கும்விதமாக ) மனிதன் மாதிரியா நடந்து கொள்கிறீர்கள்?

மாக்பெத் : சாத்தனை எது அச்சப்படுத்துமோ அதை உற்றுப்பார்ப்பவனே துணிவுள்ளவன்.

திருமதி.மாக்பெத் : மண்ணாங்கட்டி. இதுவும் உங்கள் பிரமைகளில் ஒன்று. அன்று சொன்னீர்களே அந்தரத்தில் மிதந்தக் குறுவாள் டங்கனைக் குத்தியது என்று அதுபோல இதுவும் ஒருவகைப் பைத்தியக்காரத்தனம். உங்களது இந்த வெளிப்பாடு நிஜமான பயம் போலவும் இல்லை. ஒரு சிறுமி கணப்பின் முன்பு அமர்ந்து தன் பாட்டியிடம் பேய்க்கதை சொல்வது போல இருக்கிறது. சுத்த சிறுபிள்ளைத்தனம். வெட்கமாக இல்லை? ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? ஏன் இத்தனை முகம் காட்டுகிறீர்கள்? எல்லாம் முடிந்த பின்பும் ஒரு நாற்காலியை இப்படி வெறிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

மாக்பெத் : அதோ அதோ பார் பார் ( ஆவியிடம் ) என்ன சொல்ல நினைக்கிறாய்? சொல்லு. உன்னால் தலையசைக்க முடியுமென்றால் பேசவும் முடியும். பேசு. நமது கல்லறைகளின் சவக்குழிகள் பிணங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நமது கல்லறைகள் பிணந்தின்னிக் கழுகளின் கூடாரமாகிவிடும். ( ஆவி மறைகிறது. )

திருமதி.மாக்பெத் : உங்களுடைய முட்டாள்தனம் உங்களை முற்றிலும் பைத்தியமாக்கிவிட்டதா?

மாக்பெத் : இங்கிருந்து பார்த்தால் அவன் என் கண்களுக்குத் தெரிகிறான்.

திருமதி.மாக்பெத் : அறிவீனம்.

மாக்பெத் : முன்பு மனித வாழ்வை வளமானதாக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அன்றிலிருந்து கொலைகளையும் , கொலைகாரகளையும் பற்றிக் கேட்பது செவிகளுக்கு அச்சமூட்டுபவையாகவே உள்ளது. காலம் காலமாக ஒரு மனிதனின் கபாலத்தைப் பிளந்தால் அவன் மூளை சிதறி இறப்பான் என்பது தெரிந்த விஷயம். ஆனால் இப்போது தலையில் இருபது வெட்டுக்காயங்களுடன் இறந்த பிணம் எழுந்து வந்து நமது இருக்கைகளில் அமரவிடாமல் தள்ளுகிறது. இது கொலையைவிட விநோதமாக உள்ளது.

திருமதி.மாக்பெத் :என் பெருமைக்குரியவரே உங்கள் மேலான நண்பர்கள் உங்களுடன் இணைசேர காத்திருக்கிறார்கள்.

மாக்பெத்: ஓ அதனை மறந்துவிட்டேன் (விருந்தினரை நோக்கி ) என் ஆருயிர் நண்பர்களே என்னை அப்படிக் குறுகுறுவென்று பார்க்காதீர்கள். என்னிடம் ஒரு வினோத மனத்தடுமாற்றம் உள்ளது. என்னை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். சிறிது நேரத்தில் சரியாகிவிடும்.( தன் கையில் உள்ள கண்ணாடி மதுக்குவளையை உயர்த்திக் காட்டியபடி ) வாருங்கள் நலம்பாராட்டி இந்த மதுவைப்பருகுவோம். நலமும் வளமும் உங்களுக்கு. அமருங்கள். விருந்து தொடங்கட்டும். என் குவளையை மதுவால் நிரப்புங்கள்.( மீண்டும் பாங்கோவின் ஆவி மாக்பெத்தின் நாற்காலியில் தோன்றுகிறது.) நான் உங்கள் நலனுக்காவும், இப்போது நம்முடன் இல்லாத பாங்கோவின் நலனுக்காவும் இதனை நான் அருந்துகிறேன்.

பிரபுக்கள்: எங்கள் கடமை; உறுதிமொழி (மது அருந்துகின்றனர்.)

மாக்பெத் ( ஆவியைப் பார்த்து ) போ என் பார்வையிலிருந்து அகன்றுவிடு. பூமியில் புதையுண்டு கிட. உன் எலும்புகளில் மஜ்ஜை இல்லை. உன் இரத்தம் குளிர்ந்துவிட்டது. வெற்றுப் பார்வையால் என்னை வெறித்துப் பார்ப்பதை நிறுத்து.

திருமதி.மாக்பெத் :நல்ல நண்பர்களே ! இதனை ஒரு சிறிய குறைபாடாக எண்ணி விட்டுவிடுங்கள் வேறு எதுவும் இல்லை. இந்த இரவின் கொண்டாட்டத்தை இது கெடுக்கிறது.. அவ்வளவுதான்.

மாக்பெத் : ஒரு மனிதனுக்கு எவ்வளவு துணிச்சல் உண்டோ அவ்வளவு துணிச்சல் எனக்கும் உண்டு. ஒரு முரட்டு ருஷிய நாட்டுக் கரடியைப் போல வா, கொம்பென்னும் ஆயுதம் ஏந்திய காண்டாமிருகத்தைப் போல வா; ஓர் இராணியதேசத்து கடும்புலியைப் போல வா. எந்த வடிவிலும் வந்தாலும் என் உறுதியான நாடிநரம்புகள் தளராது. இல்லையென்றால் உயிருடன் வா ஆளரவமற்ற ஒரு தனியிடத்தில் என்னுடன் வாட்சண்டைக்கு வா. அப்படி நான் உன்னிடம் தோற்றுவிட்டால் என்னை ஒரு பேதை என்று அழை. போ மாயத்தோற்றமே கெட்ட ஆவியே பார்வையிலிருந்து விலகிப்போ. (ஆவி மறைகிறது) அப்பா போயாச்சு. அப்பா போயாச்சு. நான் மீண்டும் மனிதனாகிவிட்டேன். அனைவரும் இருக்கையில் அமருங்கள்.

திருமதி.மாக்பெத் : உங்கள் பித்துக்குளித்தனத்தால் மற்றவர்களுக்கு ஒரு காட்சிப்பொருளாக மாறி இந்தக் கொண்டாட்டத்தைப் பாழ்படுத்திவிட்டீர்கள். (விருந்தினரைப் பார்த்து )

மாக்பெத் : இதுபோன்ற விஷயங்கள் சொல்லாமல் வரும் கோடைமழையைப் போல வருமா? என்ன நடக்கிறது என்று புரியாமல் செயல்படும் என்னை ஒரு விநோதப்பொருளாகப் பார்க்கிறீர்கள் இது போன்ற ஒரு காட்சியைக் காண நேரிட்டால் உங்கள் கன்னங்கள் என் கன்னங்களைப் போல வெளுக்காமல் இயல்பான சென்னிறத்திலேயே இருக்குமா?

ராஸ் : என்ன காட்சி என் பிரபுவே?

திருமதி. மாக்பெத் : அவரிடம் பேச்சு கொடுக்காதீர்கள். அவர் மேலும் மேலும் பித்தாகிறார். கேள்வி அவரை வளர்க்கிறது. அனைவரும் கலைந்து செல்லுமாறுத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் பதவிகேற்ப எழுந்து வழிவிட்டுச் செல்லுங்கள்.

லெனாக்ஸ் : மன்னர் விரைவில் குணமடையட்டும்.

திருமதி.மாக்பெத் : உங்கள் அனைவருக்கும் நல்லிரவு வணக்கம்.

(அனைவரும் அகல மாக்பெத்தும், திருமதி.மாக்பெத் இருவர் மட்டுமே மேடையில் உள்ளனர்.)

மாக்பெத் : ஒரு பழமொழி உண்டு இரத்தம் பழிவாங்காமல் விடாது என்று. இரத்தம் இரத்தத்தை வாங்கும். காலரிகள் அசைந்தால்தான் , வனங்கள் பேசத் தொடங்கினால்தான் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும். கோட்டான்களின் கூவலும், கூகைகளின் அலறலும், அண்டங்காக்கைகளின் இரைச்சலும் எந்தத் திறமையான கொலைகாரனையும் காட்டிக் கொடுத்துவிடும். இரவு நெடுநேரம் ஆகிவிட்டதா?

திருமதி.மாக்பெத் : கிட்டத்தட்ட விடிந்துவிட்டது. இரவா பகலா என்று கூற முடியாத ஒரு பொழுது இது.

மாக்பெத் : மாக்டப்பிறகு அழைப்பு விடுத்திருந்தபோதும் அவன் விருந்திற்கு வராததைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய் ?

திருமதி.மாக்பெத் : அவருக்கு அழைப்பு அனுப்பியிருந்தீர்களா?

மாக்பெத் :மறைமுகமாக என் காதில் விழுந்தது. அழைத்துவர ஆள் அனுப்புகிறேன். ஒவ்வொரு பிரபுக்களின் இல்லங்களிலும் எனக்குச் சேதி அனுப்ப ஓர் ஒற்றனை நியமித்துள்ளேன். நாளை விடிவதற்கு முன் நான் அந்தச் சூனியக்காரிகளைப் பார்த்து வர உத்தேசித்துள்ளேன். அவர்களிடம் நிறையக் கேட்கவேண்டும். என் நிலைமை இப்போது அவர்களிடம் கேட்கும்படி உள்ளது. எவ்வளவு கொடுமையாக நடக்க இருப்பினும் நான் அதைத் தெரிந்து கொள்ளவேண்டும். என் பாதுகாப்பே இப்போதைக்கு எனக்கு முக்கியம். மற்றவை பிறகுதான். இரத்த ஆற்றில் நான் நெடுந்தூரம் நீந்திவந்து விட்டேன். இனி முடியாது. திரும்புவது என்றால் அது கடப்பதைவிடக் கடினமானது. என் மனதில் சில திட்டங்கள் உள்ளன அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். யோசிக்கும் முன்பு செய்யவேண்டிய விஷயங்கள் அவை.

திருமதி.மாக்பெத் : இயற்கையை எதிர்க்காதீர்கள். சென்று உறங்குங்கள்.

மாக்பெத் :வா. உறங்கச் செல்லலாம். என் அனுபவமின்மை காரணமாகவே இதுபோன்ற மாயத்தோற்றங்கள் எனக்குத் தோன்றுகின்றன. குற்றங்கள் புரியும்போது நாம் மேலும் சிறுவர்களாகி விடுகிறோம்.( மறைகின்றனர் )

திரை.

காட்சி – 5.

இடம் : பாலைவனத்தில் பாழடைந்த மண்டபம்.

(இடியுடன் கூடிய பெருங்காற்றில் மூன்று சூனியக்காரிகளும் வருகின்றனர்.)

முதல் சூனியக்காரி: என்ன ஹெக்கேட் ஏன் நீ இவ்வளவு கோபத்துடன் காணப்படுகிறாய்?

ஹெக்கேட் : உங்களைப்போல எனக்குக் காரணமில்லாமல் கோபம் வராது கிழவிங்களா? எப்படி என்னிடம் எதுவும் கேட்காமல் மாக்பெத்திற்கு அவன் வருங்காலத்தைப் பற்றிய கணிப்புகளைக் கூறுவீர்கள்? நான் உங்களுடைய தலைவி. உங்கள் மகிழ்ச்சியின் தலைவி. உங்கள் பில்லி சூனிய சக்திகளின் அதிபதி நான். என்னை வெறும் வாய்வார்த்தைக்குக் கூட அழைக்கவில்லை. என் சக்தியை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அளிக்கவில்லை. இதில் முத்தாய்ப்பாக எவனுக்காக நீங்கள் நன்மை செய்திருக்கிறீர்களோ அவன் ஒரு வழிதவறிய மைந்தனைப் போலக் கெட்ட குணங்களும், பேராசையும் நிறைந்தவன். தன் வழியைப் பார்த்துக் கொள்வானே தவிர அவனால் நமக்கு ஒரு பயனும் இல்லை. இருந்தாலும் இதை நீங்கள் சரிசெய்து விடலாம்.இப்போது செல்லுங்கள். நாளை நரகத்தில் ஓடும் ஆற்றின் அருகில் உள்ள பள்ளத்தில் சந்திப்போம். மாக்பெத் தன் வருங்காலத்தை அறிந்துகொள்ள அங்கே வருவான். வரும்போது உங்கள் கொப்பரைகளையும், சூனியமந்திரங்களையும், வசீகரத்தையும் மேலும் தேவையான அனைத்தையும் கொண்டுவாருங்கள். நான் இப்போது பறந்து செல்ல இருக்கிறேன். இன்றிரவு முழுவதும் என் சக்தியை உபயோகப்படுத்திப் பெரிய கேடு விளைவதற்கான செயலில் ஈடுபடப்போகிறேன். பகல் மறைவதற்குள் எனக்குச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். நிலவின் ஓரத்தில் ஒரு பனித்துளி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பூமியில் அது வீழும் முன்பு அதனைப் பிடிக்கவேண்டும். என்னுடைய மந்திரங்களைப் பிரயோகித்தால் அவைகளிலிருந்து கிளம்பும் ஆவிகள் மேலும் பல மாயத்தோற்றங்களை மாக்பெத்திற்குக் காட்டும். விதியை வெல்லக்கூடியவன் தான் என்று அவன் நம்பத் தொடங்குவான். மரணத்தைத் துச்சமாக மதிப்பான். ஞானம் கருணை அச்சம் இவற்றிற்கு மேலானவன் தான் என்ற எண்ணம் அவனிடம் ஓங்கத் தொடங்கும். உங்கள் அனைவருக்கும் தெரியும், பாதுகாப்பே மனிதனின் முதல் எதிரி.( வரவேண்டும் வரவேண்டும் என்று ஒரு பாடல் ஒலிக்கிறது) அதோ கேளுங்கள் என்னை அழைக்கிறார்கள். நான் போகவேண்டும். என்னுடைய சின்னஞ்சிறு ஆவி ஒரு பனிமூட்டத்தின் மேல் அமர்ந்து கொண்டிருக்கிறது.( ஹெக்கேட் கிளம்பிச் செல்கிறாள்.)

முதல் சூனியக்காரி : வாருங்கள் கிளம்புவோம். இல்லையென்றால் போனவள் மீண்டும் வந்துவிடப்போகிறாள். (மறைகின்றனர்)

திரை.

காட்சி-6

இடம் : பாரஸ் அரண்மனையின் ஒரு பகுதி.

லெனாக்ஸ் பிரபுவும் வேறொரு பிரபுவும் வருகின்றனர்.

லெனாக்ஸ் : நான் ஏற்கனவே சொன்னதிலிருந்து நானும் நீங்களும் ஒரே விதமாகத் தான் சிந்திக்கிறோம் என்பது தெரிகிறது. நான் மீண்டும் மீண்டும் சொல்வது என்னவென்றால் நம்பமுடியாத விஷயங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன என்பதுதான். டங்கன் இறந்தபின்பு மாக்பெத் பதவிக்கு வந்தான். பாங்கோ இரவு நெடும்பயணம் மேற்கொண்டான். நீ விரும்பினால் ஃப்லீன்ஸ் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று கூறலாம். ஏன் என்றால் ஃப்ளீன்ஸ் கண்ணில் தென்படவில்லை. குற்றம் நிகழ்ந்த இடத்திலிருந்து ஓடிவிட்டான். இரவில் வெகுநேரம் மனிதர்கள் நடைபயணம் மேற்கொள்ளக் கூடாது. பெற்ற தகப்பனையே கொல்லும் அளவிற்கு மால்கமும் டொனால்பெயினும் துணியவில்லையா? பாவம் இந்த நினைப்பு மாக்பெத்தை எவ்வளவு வாட்டியிருக்கும்? குடியினால் மயங்கிக் கிடந்த இரு பாதுகாவலர்களைக் கொல்வதன் மூலம் மாக்பெத் தனது அரச விசுவாசத்தைக் காட்டவில்லையா? அவர் செய்தது சரியான நடவடிக்கைதானே? ஆமாம் அது சரியான நடவடிக்கைதான். இல்லையென்றால் அந்தக் குற்றத்தைத் தாங்கள் செய்யவில்லை என்ற அவர்கள் இருவரின் புலம்பலை நாம் கேட்க நேர்ந்திருக்குமே. இதையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது மாக்பெத் செய்ததெல்லாம் சரியாகச் செய்திருக்கிறான் என்றுதான் தோன்றுகிறது. டங்கனின் புதல்வர்களைச் சிறையில் மாக்பெத் அடைத்திருந்தால்- நல்லவேளை அப்படி எதுவும் நேரவில்லை- இருவருக்கும் தந்தையைக் கொல்வது எவ்வளவு பெரிய குற்றம் என்று தெரிந்திருக்கும். ஓடி விட்டார்கள். ஃப்ளீன்சும் ஓடிவிட்டான். போதும் என் மனம் அமைதியை நாடுகிறது. மாக்டப் மன்னரின் ஆதரவை இழந்துவருகிறான் என்று தோன்றுகிறது. காரணம் மாக்டப் மனதில் இருப்பதை ஒளிக்காமல் பேசுபவன். அதனால்தான் அந்தக் கொடுங்கோலன் அளித்த விருந்தில் மாக்டப் கலந்து கொள்ளவில்லை. உனக்குத் தெரியுமா அவன் எங்கே மறைந்திருக்கிறான் என்று?

பிரபு : டங்கனின் அரியணை செங்கோல் மீது உரிமை கொண்டாடவேண்டிய மால்கம் அதனை மாக்பெத்திடம் பறிகொடுத்துவிட்டு ஆங்கில அரசிடம் தஞ்சமடைந்துள்ளான். கடவுள் நம்பிக்கையுள்ள எட்வர்ட் மன்னன் இவனது விதியின் குரூரத்தை நன்றாகப் புரிந்துகொண்டு சிறிதுகூட மரியாதை குறையாத அடைக்கலத்தை மால்கத்திற்கு வழங்கியிருக்கிறார்.மாக்டப் அங்குதான் போயிருக்கிறார். நார்த்தம்பர்லாந்து பிரபுவையும் அதன் மக்களையும் உதவி கேட்கப் போகிறார். அவர்களின் துணையுடன்-இத்தனைக்கும் மேலான துணையான ஆண்டவரின் துணையுடன்-அவர் மீண்டும் நம் உணவுமேசையில் உணவு பரிமாறுவார்; நம் இரவுகளுக்கு அமைதியை மீட்டுக் கொண்டுவருவார்; நமது விருந்துகளில் கொடியவர்களைத் தடுப்பார்; மறைந்த நம் மன்னருக்கு நம்முடைய சிறந்த அஞ்சலியைக் கொண்டுசேர்க்க உதவுவார்; பட்டங்களையும் பதவிகளையும் திறமையுள்ளவர்கள் எளிதில் அடையமுடியும்.. இப்போதைக்கு நம் மனங்கள் ஏங்குவது இதற்குமட்டும்தான். மாக்பெத்திற்கு இந்தத் தகவல்கள் தெரியும். அவரும் கோபத்துடன் போருக்கு ஆய்த்தமாகிக் கொண்டிருக்கிறார்.

லெனாக்ஸ் : மாக்டப்பை அழைத்துவர ஆள் அனுப்பியிருந்தானே அந்தக் கொடுங்கோலன்? அவனும் அங்கே போய் அவன் அழைத்தானாம்.. முடியாது என்று ஒற்றை வார்த்தையில் அவனைத் திருப்பி அனுப்பிவிட்டார் மாக்டப். மன்னரின் கைத்தடியும் கடுமையாக முகம் காட்டியிருக்கிறான் “ ‘இந்த வார்த்தைக்கு நீங்கள் வருத்தப்படுவீர்கள் ‘ என்று மிரட்டிவிட்டு வந்ததாக வேறு கேள்வி.

பிரபு : அவருக்காக நான் பிராத்தனை செய்கிறேன். ( மறைகிறார்கள்)

திரை

அங்கம் மூன்று நிறைவுற்றது.

•••••••••••

மேக்பெத் – ஷேக்ஸ்பியரின் நாடகம் – ஆங்கிலவழி தமிழாக்கம் – சத்தியப்பிரியன்.

download

காட்சி-1

அடர்ந்த காடு. மழையும், மின்னலும் தோன்றி மிரட்டும் ஓர் இரவுப்பொழுது. மூன்று சூனியக்காரிகள் மேடையில் தோன்றுகின்றனர்.

சூனி-1: மீண்டும் நாம் எப்போது சந்திப்பது? மழையிlலா? மின்னலிலா? இடியிலா?

சூனி-2 : போர்முழக்கங்கள் ஓய்ந்தபின்பு. போர் தனது வெற்றி தோல்விகளை சந்தித்த பின்பு.

சூனி-3 :அது இன்று சூரியன் மேற்கில் விழும் முன் நிகழ்ந்துவிடும்.

சூனி-1 : எங்கே வைத்துக் கொள்ளலாம் ?

சூனி-2 :ஒரு திறந்த வெளியில்

சூனி-3 :அங்கு நாம் மேக்பெத்தை சந்திப்போம்.

( சூனியக்காரிகள் இப்போது ஆவியுலக நண்பர்களை அழைக்கின்றனர். ஆவிகள் பார்ப்பதற்கு நாய்கள் போலவும், பூனை போலவும் தோன்றுகின்றன.)

சூனி-1 தன்னுடைய பூனையை அழைத்து ) இதோ வருகிறேன் கிரேமால்கின்

சூனி-3 என்னுடைய தேரை அழைக்கிறது.

சூனி-3 : (தனது ஆவியிடம் ) இதோ வருகிறேன்.

மூவரும் ( பாடுகின்றனர்) நன்றே தேது; தீதே நன்று. பனிமூட்டத்தில் பறந்து சென்றும் கலப்போம் அந்த காற்றின் ஊடே .( மறைகின்றனர் )

திரை.

காட்சி—2

போர் முழக்கங்கள் மேடைக்கு வெளியில் கேட்கின்றது. ஸ்காட்லாந்து நாட்டு அரசன் டங்கன் , மன்னனின் மூத்த மகன் மால்கம், டொனால்பெயின், லெனாக்ஸ் பிரபு மற்றும் உதவியாளர்கள் அனைவரும் வாள்காயம் பட்ட தளபதி ஒருவனைப் பார்க்க வருகின்றனர்.

டங்கன் : கொடுமை. என்ன ஒரு இரத்தம் ? ஆனால் இவன் இருக்கும் நிலையில் என்ன நேர்ந்தது, போர் குறித்த தற்சமய நிலை என்ன என்பது குறித்து பேச முடியும் என்று நினைக்கிறேன்.

மால்கம் : இவன் ஒரு ராணுவ அதிகாரி. இவன் சிறந்த வீரன். என்னைக்கூட ஒருமுறை கைதிலிருந்து காப்பாற்றியவன். வீரனே ! நீ படைக்களத்திளிருந்து கிளம்பியவரையில் போர்க்களத்தில் என்ன நிகழ்ந்தது என்று மன்னரிடம் கூறுவாயாக.

இராணுவத் தலைவன் : அப்படி ஒரு உக்கிரமான போர். எவர் பக்கம் வெற்றி என்று நிர்ணயிக்க முடியாத நிலை. இரண்டு நீச்சல் வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்துவதற்கு நீச்சல் இட்டு முடிவில் மூச்சு திணறி நின்றது போல இருபடைகளும் இருந்தன. மூர்கனுக்கு நிகரான கருணையற்ற மாக்டொனால்ட் ஐயர்லாந்திலிருந்தும், ஹெப்ரைடிலிருந்தும் வந்து குவிந்த குவிந்த காலாட்படை வீரர்களும், குதிரைப்படை வீர்களும் புடைசூழ நின்றிருந்தான். முகத்தில் அதிர்ஷ்ட ரேகைகள் ஓடிக் கொண்டிருந்தன. அதிர்ஷ்ட தேவதை அவன் ஆசைநாயகி ஆனது போல அவன் முகத்தில் ஒரு மந்தஹாசம். மாவீரன் மேக்பெதின்- ஆமாம் அவன் ஒருவனே மாவீரன் என்ற அழைக்கப்பட தகுதியானவன்- முன்பு மக்டோனால்டின் வீரமும், அதிர்ஷடமும் ஒன்றுமில்லாமல் போயின. தனது வாளை மின்னல் வேகத்தில் சுழற்றியபடி அதிர்ஷ்டத்தை எள்ளி நகையாடியபடி முன் சென்ற அவனது வாள், ஒரு எழுத்தாணி வீர பக்கங்களில் காவியம் தீட்டியபடி செல்வதுபோல அந்த அடிமையின் முன்சென்று நின்றது. அந்த அடிமைக்கு வணக்கம் சொல்லவோ, வந்தனம் சொல்லவோ கூட நேரமில்லாமல் மேக்பெத் அவனை நாபியில் தொடங்கி தாடை வரை தனது வாளால் வகுந்துவிட்டான். அவனது தலையை துண்டித்து நமது கோட்டை மதிலில் தொங்க விட்டான்.

டங்கன் : என் உறவினன் அவன் சிறந்த வீரன்.

இராணுவத் தலைவன் : சூரியன் வலிமை குன்றும்போது கலம் கவிழ்க்கும் புயலும், மிரட்டும் இடிமுழக்கமும் எழுவதை போன்று, வசந்தம் வரும்போது சௌகரியங்களுடன் சில அசௌகரியங்களும் நேர்வது போன்று மக்டொனால்ட் சில கெடுதிகளையும் புரிந்துவிட்டான். கேளுங்கள் அரசே ! நார்வே தேசத்து படைகளை நாம் மும்முரம் காட்டியபோது நார்வே மன்னன் மேலும் சில புது படைகளுடனும், வலுவான புதிய ஆயுதங்களுடனும் மேலும் ஒரு தாக்குதலை நிகழ்த்தினான்.

டங்கன் : ஒ நமது தளபதிகளான மேக்பெத்தும் பாங்கோவும் அச்சமடைந்தனரா ?

இராணுவத் தலைவன் : ஆம் அச்சம் அடைந்தனர். ஒரு பருந்து குருவியை பார்த்து பயப்படும் அளவு. ஒரு சிங்கம் முயலைப் பார்த்து அடையும் அளவிற்கு பயந்தனர். முழங்கும் பீரங்கி குண்டுகளைப் போல இருமடங்கு ஆவேசத்துடன் எதிரி மீது பாய்ந்தனர். எதிரிகளின் இரத்தத்தில் குளிக்கச் சென்றவர்கள் போல போரிட்டனர். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின் நிகழ்ந்த போரில் கோல்கோத்தா நகரின் பெயர் வழக்கொழிந்தது போல அவர்களுடன் போரிட்டனர். ஓ! என்னால் முடியவில்லை. என் காயங்கள் வேதனை அளிக்கின்றன. மயக்கம் வரும்போல உள்ளது.

டங்கன் : உன் பெயரும் உன் காயங்களைப் போல வீரம் செறிந்து விளங்கட்டும். யாரங்கே இவருக்கு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

( உதவியாளர்கள் இராணுவத் தலைவனை மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்கின்றனர்.-

( ராஸும், ஆங்கசும் வருகின்றனர்)

மால்கம் : தானைத் தலைவர் ராஸ்.

லெனாக்ஸ் : என்ன ஒரு ஆவேச வெறி அவன் கண்களில். ஒரு விநோதக் கதையை கூற வருபவனின் ஆர்வம் அவன் கண்களில் மின்னுகிறதே.

ராஸ் : கடவுளே மன்னரை காப்பாற்றும்.

டங்கன் : தானைத் தலைவனே எங்கிருந்து வருகிறாய் ?

ராஸ் : மன்னா நான் ஃபிஃ பே சமஸ்தானத்திலிருந்து வருகிறேன். அங்குதான் நமது கொடி இறக்கப்பட்டு நார்வே தேசத்து கொடி பறக்கிறது. அங்குதான் நமது மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். அங்குதான் நமது தேசத்தின் மானம் பறக்கவிடப்பட்டு சிரிப்பாய் சிரிக்கிறது. விசுவாசமற்ற துரோகி காடர் என்பவனின் தலைமையில் பெரும்படையுடன் ஒரு கிளர்ச்சியற்ற போர் துவங்கியது. ஒவ்வொரு அடிக்கும் பதில் அடி கொடுத்து முன்னேறிய மேக்பெத் இன்று போர் தேவதையின் மணாளன் போல காட்சியளித்தார். இறுதியாக வெற்றிதேவதை நம் கழுத்தில் வாகைமாலையைச் சூட்டினாள்.

டங்கன் : ஓ மிக்க மகிழ்ச்சி.

ராஸ்: நார்வே மன்னர் நம்மிடம் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டுள்ளார். அவன் தன் படையுடன் பின்வாங்கி ஐயர்லாந்திற்கு திரும்பிச் செல்லாவிட்டால் அவருடைய இறந்த வீரர்களை எரிப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறோம். மேலும் சமாதான உடன்படிக்கைகாக பணயப் பணமாக பத்தாயிரம் டாலர்கள் வேண்டுமென்று கூறிவிட்டோம்.

டங்கன் : போ போய் அந்தத் துரோகி காடரிடம் சொல் அவன் நமது நம்பிக்கையை இழந்துவிட்டான் என்று.. விரைவில் அவன் உயிரிழப்பான் என்றும் சொல். அதோடு காடரின் தானைத் தலைவன் பட்டம் இனிமேல் மேக்பெதிற்கு உரியது என்றும் சொல்.

ராஸ் : இதோ இப்போதே மன்னா.

டங்கன் : எதனை தானைத்தலைவன் காடர் இழந்தானோ அதனை மேக்பெத் அடைந்தான்.

திரை

காட்சி-3.

காட்டினில் இடிமின்னலுடன் கூடிய இரவு. மூன்று சூனியக்காரிகள் வருகின்றனர்.

சூனி-1 : எங்கே சென்றிருந்தாய் என் சகோதரி ?

சூனி-2 : பன்றிகளைக் கொல்வதற்கு.

சூனி-3 :நீ எங்கே போயிருந்தாய் அக்கா?

சூனி-1 :ஒரு கடலோடியின் மனைவி மடி நிறைய பாதாம் கொட்டைகளை வைத்துத் தின்று கொண்டிருந்தாள். நான் ரொம்ப சாதாரணமாக அவளிடம் எனக்கு இரண்டு கொட்டை தின்ன கேட்டேன். அவள் பெரிய இவளாக என்னை போ போ சூனியகிழவி என்று விரட்டி விட்டாள். போகிறேன் ஒரு வீட்டு உபயோகச் சல்லடையை படகாகக் கொண்டு, வாலில்லா எலியை வாகனமாகக் கொண்டு போகிறேன். போய் அவள் கணவன் புலி என்ற பெயரையுடைய கப்பலில் மாலுமியாக பயணம் மேற்கொண்டுள்ளான். அவனை என்ன செய்கிறேன் பார்.

சூனி-2 : நான் உனக்கு ஒரு புயலைத் தருகிறேன்.

சூனி-3 : நானும் ஒன்றை அளிக்கிறேன்.

சூனி-1 : நான் மற்ற வாயுக்களை என் பிடியில் கொண்டு வருவேன். அனைத்து துறைமுகங்களையும் என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவேன். காற்று செலுத்தும் திசைகளையும், அவனுடைய திசை காட்டும் கருவியின் முள்ளையும் என் ஆணையின் கீழ் கொண்டு வருவேன். அவனை ஒரு காய்ந்த புல்லை போல கதறடிப்பேன். இரவு பகல் இரண்டிலும் அவன் உறக்கத்தை உறிஞ்சி விடுவேன். அவன் கப்பல் மேல்கூரையைப் பிடித்து தொங்கவேண்டும். எவர் கண்ணுக்கும் புலப்பாடாமல் இனி அவன் ஒன்பதற்கு ஒன்பது இரவுகள் என்னிடம் வைத்து செய்யப்பட்டு சீரழியப் போகிறான் . அவனை அழிக்கமுடியாது என்றாலும் அவன் கப்பல் என் கையில் சிக்கி படப்போகும் இன்னல்களை பாருங்கள்.

சூனி-2 : நல்லா வேணும். நல்லா வேணும்.

சூனி-1 : இதோ என்னிடம் ஒரு இறந்த மாலுமியின் விரல் உள்ளது.

( முழவொலி தூரத்தில் கேட்கிறது. )

சூனி-3: முரசொலி முரசொலி அதோ மேக்பெத் வந்துவிட்டான்.

மூவரும் : கை கோர்த்தபடி ஆடுகின்றனர். ) மூவரும் இணைவோம் கைகளுக்குள்

தரையும், கடலும் நம் ஆளுகைக்குள்

மூவரும் மூவரும் மூவருமாய்

நவமாய் சேர்வோம் நாயகியாய்.

போதும் நமது கொண்டாட்டம்.

( மேக்பெதும் பாங்கோவும் வருகின்றனர். )

மேக்பெத் : ( பாங்கோவைப் பார்த்து ) இப்படி ஏமாற்றமும், சந்தோஷமும் நிறைந்த ஒரு நாளை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.

பாங்கோ: ஃ பாரஸ் நகரம் கண்ணுக்குத் தென்படவில்லையே இன்னும் . ( அந்த மூன்று சூனியக்காரிகளைப் பார்த்து ) யார் இவர்கள்?இப்படி வற்றி சுருங்கி போய் … கொடூரமான பார்வையுடன்.. பார்த்தால் வேற்றுகிரக வாசிகளைப் போல இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள்? (சூனியக்காரிகளைப் பார்த்து ) உயிருடன் இருக்கிறீர்களா? நான் சொல்வது காதில் விழுகிறதா? விழுகிறது என்றுதான் நினைக்கிறேன் பாருங்கள் வாயில் விரலை வைத்து பார்ப்பதை. உங்களை பெண்கள் என்று நம்புவதற்கு உங்கள் தாடி தடுக்கிறது.

மேக்பெத் : சொல்லுங்கள் நீங்கள் எந்தவகை ஜீவராசிகள் என்று.

சூனி-1 : வரவேண்டும் மேக்பெத். கிளாமிஸ் தானைத் தலைவனே வருக.

சூனி-2 :வரவேண்டும் மேக்பெத். காடரின் தானைத்தலைவனே வருக.

சூனி-3 : வரவேண்டும் மேக்பெத் . வருங்கால மன்னனே வருக.

பாங்கோ : என் அன்பிற்குரிய மேக்பெத் ? அவர்கள் கூறியதை கேட்டு மகிழாமல் ஏன் அச்சத்தில் விழிக்கிறாய் ? ( சூனியக்காரிகளை நோக்கி ) சொல்லுங்கள் நீங்கள் நிஜமாகவே மானுடப் பிரவிகல்தானா? இல்லை மாயத்தோற்றங்களா ? பாருங்கள் என் தலைவனை அவனுடைய இப்போதைய பதவியையும், இனி அவன் ஏற்றுக் கொள்ளும் பதவியையும் சிறப்பாக வருமுன் உரைத்த உங்கள் வார்த்தைகள் அவன் வாயை அடைத்து விட்டன.எனக்கு எதுவும் ஆருடம் சொல்லவில்லையே . காலத்தின் விதிகளை ஊடுருவி பார்த்து உங்களால் வருவது உரைக்க முடியும் என்றால் கூறுங்கள் எந்த விதை முளைக்கும் எந்த விதை கருகும் என்று. என்னிடம் கூறுங்கள். உங்கள் வார்த்தைகள் மீது எனக்கு எதிர்பார்ப்பும் இல்லை. வருத்தமும் இல்லை. விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை.

சூனி-1 : ஹாய்.

சூனி-2 : ஹாய்.

சூனி-3 : ஹாய்.

சூனி-1 : மேபெத்தைவிட நீ தாழ்ந்தவன் ஆனால் உயர்ந்தவன்.

சூனி-2 :அத்தனை மகிழ்ச்சி உனக்கு இருக்காது; ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பாய்.

சூனி-3 : உன் வாரிசுகள் மன்னராவர். நீ ஆக மாட்டாய். வாழ்த்துகிறோம் உங்கள் இருவரையும் நாங்கள் மூவரும்.

சூனி-1 ; மேக்பெத் பாங்கோ வாழிய நீங்கள் இருவரும்.

மேக்பெத்: நில்லுங்கள் அரைகுறை ஆருடம் கூறுபவர்களே . என் தந்தை சிநேலின் மரணத்திற்கு பின்பு அவருடைய வாரிசு என்ற அடிப்படையில் கிளைம் நகரின் குறுநில மன்னனானேன் . ஆனால் எப்படி காடர் நாரின் மன்னனாக முடியும் ? காடரின் மன்னர் இன்னும் உயிருடன் இருக்கிறார். மிகச் சிறந்த வீரமும் தீரமும், பதவியும் அதிகாரமும் மிக்கவர். இந்த வினோத குயுக்தி எப்போதிலிருந்து கைவரப் பெற்றீர்கள் ? எங்களை இந்தபுதர் மண்டிக்கிடக்கும் பாழ்இடத்தில் நிறுத்தி எதற்காக வருமுன் வாழ்த்துரை வழங்கினீர்கள் ? சொல்லுங்கள் இல்லையெனில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்.

( சூனியக்காரிகள் அங்கிருந்து மறைகின்றனர். )

பாங்கோ : பூமிக்கும் நீரில் தோன்றுவது போல குமிழிகள் உள்ளன போலும். இவர்கள் அப்படிப்பட்டவைகள். எங்கே திடீரென்று காணாமல் போனார்கள் ?

மேக்பெத் : காற்றில் பனிமூட்டம் போல கரைந்து விட்டனர். இன்னும் சிறிதுநேரம் இருந்திருக்கலாம்.

பாங்கோ : நாம் இப்போது பார்த்தது நிஜமா? இல்லை போதைச் செடியின் சாற்றினை பருகிவிட்டோமா?

மேக்பெத் : உன் பிள்ளைகள் அரசர்கள்.

பாங்கோ : ஆனால் நீங்களோ அரசர்.

மேக்பெத் : காடரின் குறுநில மன்னனும் கூட. அதுவும்தானே சொன்னார்கள்.

பாங்கோ : அதே வார்த்தைகளைத்தான் சொன்னார்கள்.

(ராஸும் ஏங்கசும் வருகின்றனர் )

ராஸ் : மன்னர் உன்னுடைய வெற்றியை கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சி கொண்டுள்ளார் மேக்பெத். போர்க்களத்தில் நீ எதிரிகளை பந்தாடும் சாகசங்களை கேள்விப்படும்போது உன் வெற்றியை தன் வெற்றியாக நினைத்து அவர் வியக்கிறார்; வாயடைத்து நிற்கிறார். எதிரிகளை வீழ்த்திய அன்றே நீங்கள் நார்வே நாட்டின் படையையும் வென்றுவிட்டீர்கள் என்பதை கேள்விப்பட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார். உங்கள் எதிரிகளின் நடுவில் கூட மரணம் உங்களை அச்சபடுத்தவில்லை என்பது அவரது ஆச்சரியத்தை அதிகபடுத்திவிட்டது. ஒரு நீண்ட கதை கூறுவது போல செய்தி சொல்பவர்கள் . வரிசையில் நின்று உங்கள் வெற்றிகளை கூறிக் கொண்டே இருந்தனர். உங்கள் போர்த்திறமையின் பாராட்டு செய்திகள் மடல்களின் குவியல் மன்னரின் காலடியில் மலை போல் கிடக்கிறது.

ஏங்கஸ் : மன்னர் எங்களை உங்களிடம் அனுப்பி தமது ராஜநன்றியை தெரிவிக்கச் சொன்னார். நாங்கள் வந்திருப்பது உம்மை அழைத்து செல்ல மட்டுமே; வெகுமதி அரசரிடம் காத்திருக்கிறது.

ராஸ் : ஒரு பெரிய கௌரவத்தின் முன்னோட்டமாக அவர் தங்களை காடரின் மன்னன் என்று அழைக்க சொன்னார். காடரின் தானைத் தலைவரே வருக வருக. இந்தப் பட்டம் உமக்குரியது.

பாங்கோ : சாத்தான் கூறியது நிஜமாகுமா?

மேக்பெத். காடரின் மன்னர் இன்னும் உயிருடன் இருக்கிறார். ஓர் உடையை இருவர் அணிய இயலாது. என் உடை எனக்கு. மாற்றுடை எனக்கெதற்கு?

ஏங்கஸ் : அவர் உயிருடன் இருக்கிறார். நீதியின் கடுமையான தீர்ப்பில் அவர் உயிர் போகப்போகிறது. அவர் நார்வே படைகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கைகோர்த்த குற்றத்திற்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தாய்மண்ணிற்கு துரோகம் இழைத்த குற்றத்தை அவரே ஒப்புக் கொண்டதால் இந்த மரணதண்டனை அவருக்கு அளிக்கப்படுகிறது.

மேக்பெத் : ( தனியாக )கிளைம்ஸ் காடர் இரண்டின் பதவியும் எனக்கு. நாளை இதைவிட பெரிய பதவி ( ராஸ் ஏங்கஸ் இருவரையும் நோக்கி ) தங்கள் சிரமத்திற்கு நன்றி. ( பாங்வோவிடம் தனியாக ) இப்போது நம்புகிறாயா பாங்கோ உன் பிள்ளைகள் அரசாளுவார்கள் என்று ? இவர்கள் எனக்கு காடரின் மன்னன் என்ற பதவியை அளிக்கும்போது உன் பிள்ளைகளுக்கு இதை விடச் சிறந்த பதவி கிடைக்கும் என்பதை நம்புகிறாய் அல்லவா?( ராஸ் ஏங்கஸ் இருவரை நோக்கி ) கனவான்களே ஒரு நிமிடம்.

( ராஸ் ஏங்கஸ் மற்றும் பாங்கோ சற்று தள்ளி நிற்கின்றனர். )

மேக்பெத் ( தனிமையில் ) ஒரு அரச காவியத்தின் முன்னுரையாக இரண்டு உண்மைகள் கூறப்பட்டுள்ளன.( ராஸ் மற்றும் ஏங்கசைப் பார்த்து ) நன்றி கனவான்களே. ( தனிமையில் ) அந்த அமானுஷ்ய தீர்ப்பு எனக்கு தீமையும் விளைவிக்காது; நன்மையும் விளைவிக்காது. தீமைஎன்றால் பிறகு எனக்கு எதற்கு காடரின் குறுநில மன்னர் பதவி ? ஹா ! நான் காடரின் மன்னன். நன்மை என்றால் என் மனதில் இயற்கைக்கு விரோதமாக எழுந்துள்ள கெட்ட எண்ணம் ஏன் என் மயிர்க்கால்களை சிலிர்ப்பிக்க வேண்டும் ? ஏன் என் இதயம் அதன் கூட்டில் வேகமாக அடித்துக்கொள்ள வேண்டும் ? நிகழ்கால அச்சங்களே போதும்; என் தீய எண்ணங்களின் கற்பனையினால் ஏற்படும் அச்சம் வேண்டாம். கொலை செய்யவேண்டும் எனத் தோன்றும் என்னுடைய பைத்தியக்கார கற்பனை என் மனிதத்தின் அடித்தளத்தை ஆட்டுவிக்கிறது. என் அடிப்படை செயல்களை என் கற்பனை திணற வைத்துவிடும் போலிருக்கிறது.

பாங்கோ : பாருங்கள் மேக்பெத் திணறுவதை.

மேக்பெத் : அதிர்ஷ்ட தேவதை எனக்கு வெற்றிமாலை சூடும்போது நான் செயலாற்ற என்ன இருக்கிறது ?

பான்க்வோ :புதிய பதவிகள் அவனை தேடி வருகின்றன. விந்தையான ஆடைகள் நமது முயற்சியின்றி நமக்கு பொருந்தாது.

மேக்பெத் : எது வந்தாலும் வரட்டும். நடப்பது நடந்துதானே தீரும் ?

பாங்கோ : சொல்லு மேக்பெத் நீ தயாரானதும் செல்வோம்.

மேக்பெத் : மன்னியுங்கள். என்னவோ என் சோம்பேறி மூளை மறந்த செயல்களை நினைவூட்டிக் கொண்டிருந்தது. என் ஒவ்வொருநாளும் நீங்கள் எனக்காக எடுத்துக் கொண்ட சிரமங்களை பற்றியே எண்ணிக்கழிகிறது. வாருங்கள் மன்னரை பார்க்க செல்லலாம். ( பாங்கோவிடம் )இன்று நிகழ்ந்தவைகளை அசைபோடு பாங்கோ. மேலும் நேரம் கிடைக்குமானால் மேற்கொண்டு நடக்கவேண்டியவைகளை மனம் விட்டு பேசுவோம்.

பாங்கோ : கண்டிப்பாக.

மேக்பெத் : அதுவரையில் இது போதும். ( மற்ற இருவரை பார்த்து ) வாருங்கள் நண்பர்களே கிளம்பலாம்.

திரை

காட்சி-4.

அரண்மனையில் அரசகூடம். அரசன் டங்கன், மால்கம் லெனாக்ஸ், டொனால்பெயின் மற்றும் ஊழியர்கள்.

டங்கன் : காடர் தானைத்தலைவனின் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டதா? தூக்கிலிடும் காவலர்கள் திரும்பி விட்டனரா?

மால்கம் : மாண்புமிகு மன்னா! அவர்கள் இன்னும் திரும்பவில்லை. ஆனால் ஒரு பணியாளனிடம் கேட்டதற்கு அவன் காடரின் தானைத்தலைவனின் தூக்கி உறுதிபடுத்தினான். இறப்பதற்கு முன்னர் அவன் நமக்கிழைத்த துரோகத்தை ஒப்புக்கொண்டுவிட்டானாம். தங்களின் மேலான மன்னிப்பை கோரினனானம். கதறி அழுதானாம். அவன் இறந்த செயலைவிட அவன் வாழ்வில் எதுவும் சிறப்பாக செய்யவில்லையாம்.அவன் இறந்தது தான் பொக்கிஷமாக கருதவேண்டிய ஒன்றை குப்பையாக தூக்கி எறிந்ததைப் போல இறந்ததாக பார்த்தவர்கள் கூறுகின்றனர்.,

டங்கன் : மனதில் இருப்பதை முகத்தில் அறிய கலை எதவும் இல்லை. அவன் ஒரு கனவான் என்று நம்பி என் மொத்த நம்பிக்கையையும் அவன் மேல் வைத்திருந்தேன்.

( மேக்பெத், பாங்கோ ராஸ், மற்றும் ஏங்கஸ் வருகின்றனர். )

டங்கன் .( மேக்பெத்தை நோக்கி ) என் உயிரினும் மேலானவனே ! என் நன்றிகெட்டதனத்தின் பாவம் என்னைக் கொல்கிறது மேக்பெத். உன்னுடைய புயல் வேகச் செயலுக்கான வெகுமதி மட்டும் மந்தமாகவே இருக்கிறது. நான் கொடுக்கும் சன்மானம் கண்டிப்பாக உன் செயலுக்கான ஊதியம் இல்லை. உன்னுடைய செயல் பாராட்டுக்கு தகுதியானது இல்லை எனில் என்னுடைய நன்றியும் , வெகுமதியும் பெரிதாக போயிருக்கும். ஆனால் இப்போது உன் செயல் என்னுடைய வெகுமதியை விட மிகப்பெரியது என்று மட்டுமே இப்போது என்னால் சொல்ல முடிகிறது.

மேக்பெத் : உங்கள் கீழ் பணிபுரிவதே எனக்கு சிறந்த வெகுமதி மன்னா. எங்கள் கடமைகளை ஏற்றுக் கொள்வது ஒன்றே உங்கள் கடமையாகும் மன்னா. பிள்ளைகள் வளர்ந்து தகப்பனுக்கு ஆற்றும் கடமையைப் போலதான் எங்கள் பணியும். உங்கள் அன்பிற்கும் சொல்லுக்குமே நாங்கள் கட்டுப்பட்டு பணியாற்றுகிறோம் மன்னா.

டங்கன் : வா அருகில். சில தலைமை பொறுப்புகளை உனக்குள் விதைக்கிறேன். அவை வளர்ந்து விருட்சமாகட்டும்.( பாங்கோவை நோக்கி ) வீரனே பாங்கோ ! நீ மேக்பெதிற்கு எந்தவிதத்திலும் சளைத்தவன் இல்லை. உன் செயலும் சற்றும் குறைத்து மதிப்பிடத் தக்கது அன்று. உன்னை என் கைகளில் அனைத்து என் இதயத்தில் வைத்துள்ளேன்.

பாங்கோ : நான் செழித்தாலும் அறுவடை உங்களுடையது மன்னா.

டங்கன் : என் மகிழ்ச்சி உச்சத்தை அடைந்து கண்ணீர்த் துளிகளாக வெடிக்கக் காத்திருக்கிறது. என் புதல்வர்களே, என் உறவினர்களே, பிரபுக்களே மற்றும் எனக்கு நெருக்கமானவர்களே இன்று என் மூத்த மகன் மால்கத்திற்கு கம்பர்லாந்தின் மன்னர் பதவியை அளிக்கிறேன். ஆனால் மால்கம் மட்டும் பட்டங்களை அனுபவிக்கபோவதில்லை. பட்டம் தகுதியானவர் அனைவர் மீதும் நட்சத்திரம் போல ஜ்வலிக்கும்.( மேக்பெதை நோக்கி ) வா உன்னுடைய இன்வென்ஸ் மாளிகைக்கு செல்வோம். உன் விருந்தோம்பலுக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள்.

மேக்பெத் : உங்களுக்கு ஆற்றும் பணியே என்னுடைய ஓய்வு. நான் கட்டியம் கூறவேண்டும் என் மனைவிக்கு தங்கள் வருகை குறித்து. அவள் முகம் மலரப்போவதை காண வேண்டும் எனக்கு. எனவே நான் செல்ல அனுமதியளியுங்கள்.

டங்கன் : நல்லது என் உயிரினும் மேலான காடர் நிலா மன்னனே !

மேக்பெத் ( தனியாக ) கம்பர்லாந்தின் இளவரசன். என் முன்னே இருக்கும் படிக்கல்லில் ஒன்று நான் தடுக்கி விழவேண்டும். அல்லது உந்தி மேலே செல்ல வேண்டும். கிரகங்களே மறைந்து கொள்ளுங்கள். ஒருவருக்கும் என் மனதில் எரியும் நெருப்பின் ஜூவாலை தெரியவேண்டாம். கண்மூடித் திறப்பதற்குள் விழிகள் கூட பார்க்க அச்சப்படும் செயலை செய்துமுடிக்க வேண்டும். ( மறைகிறான். )

டங்கன் ( பாங்கோவிடம் பேசியபடியே இருக்கும் பாதி உரையில் ) நீ சொல்வது சரிதான் பாங்கோ . மேக்பெத் சரியா தீரன்தான். இந்தப் பாராட்டுகள் அவனுக்கு தகுதியானவைதாம். எனக்கு மிக்க மகிழ்ச்சி. என் மகுடத்தில் அவன் ஒரு மாணிக்கக்கல் அவன் அன்பு நம்மை வரவேற்க முன்னால் சென்று விட்டது. ஒப்புவமை இல்லாத சுத்த வீரன்.

( துந்துபிமுழங்க சபை கலைகிறது. அவர்கள் அகல்கின்றனர். )

திரை.

காட்சி -5.

( மாஎக்பெதின் மாளிகை.

திருமதி. மேக்பெத் உள்ள வருகிறாள் . )

திருமதி. மேக்பெத் ( கையில் ஒரு கடிதத்தை வாசிக்கிறாள் . ) “ அவர்கள் என்னுடைய வெற்றி தினத்தன்று என்னை சந்தித்தனர். அவர்கள் என்னை பற்றி கூறியதை கேட்டபோதுதான் அவர்களுடைய அமானுஷ்ய சக்தி எனக்கு தெரியவந்தது. என் அவா நெருப்பென பற்றி எரிய, மேலும் கேள்விகளை கேட்க முன்விழையும்போது அவர்கள் எங்கிருந்து தோன்றினார்களோ அந்தக் காற்றில் கரைந்து விட்டனர்., வாயடைத்து நான் நின்ற சமயம் மன்னரின் ஆட்கள் வந்து நான் காடரின் மன்னன் மகுடம் சூட்டபட்டதைச் சொன்னார்கள். காடரின் மன்னனே என்றுதான் என்னை அந்த சூனியக்காரிகள் அழைத்தனர். மேலும் வருங்கால மன்னனே என்றும் அழைத்தனர். உன்னிடம் இதனை பகிர்ந்து கொள்ள பிரியாப்படுகிறேன். என் இன்பத்தின் சரிபாதி நீயன்றோ ? உனக்கு கிடைக்கப்போகும் பெரிய பதவி குறித்த தகவலை அறிந்து நீ மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வேண்டும் என்பதால்தான் இதனை உனக்கு முன்பே தெரிவிக்கிறேன். இது உனக்கு மட்டும் தெரிந்த இரகசியமாக இருக்கட்டும். வருகிறேன் . “( கடிதத்தை தூக்கி பிடித்தபடி ) கிளைம்சின் மன்னரும் நீங்கள்; காடரின் மன்னரும் நீங்கள்; இவ்வளவு ஏன் இந்த நாட்டின் மன்னராகவும் ஆகவேண்டியவர் நீங்கள். ஆனால் உங்கள் இயல்புதான் எனக்கு வருத்தமளிக்கிறது. கருணையில் நிரம்பி வழியும் உங்கள் பால்மனம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பற்றுமா என்பது சந்தேகம்தான். ஒரு செயலின் வெற்றி, விருப்பம் இருப்பதால் இல்லை குயுக்தி இருப்பதாலேயே வெற்றியடைகிறது. உங்களைப் பொறுத்தவரையில் உயர் பதவியும் வேண்டும். அது புனிதமாகவும் பெறப்படவேண்டும். குறுக்குவழியில் நீங்கள் போகமாட்டீர்கள். தவறான வழியில் கிடைத்தால் மறுக்கவும் மாட்டீர்கள். பதவியும் வேண்டும்; அவற்றை அடையும் வழியினால் பாவம் உங்களுக்கு வரக்கூடாது. பழியும் நேராமல் உங்களுக்கு உங்கள் ஆவலும் பூர்த்தியாக வேண்டும். விரைவில் நம் இல்லம் வாருங்கள். உங்கள் செவிகளில் என் நம்பிக்கைகளை விதைக்கிறேன். என் போதனைகளால் மகுடத்தை அடையும் தடைகளைக் களைந்து எறிகிறேன். விதியும், பில்லிசூனியமும் உங்களை மன்னர் ஆக்குவதாக உறுதியளிக்கின்றன.

( ஒரு சேவகன் உள்ளே நுழைகிறான் . )

திருமதி. மேக்பெத் : என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய் ?

சேவகன் இன்றிரவு மன்னர் இங்கு வருகிறார்.

திருமதி.மேக்பெத் : உனகென்ன பைத்தியமா இப்படி ஒரு சேதி சொல்ல? மேக்பெத் மன்னருடன்தானே இருக்கிறார்? அவர் முதலில் தகவல் சொல்லியிருப்பாரே

சேவகன் : என்னை மன்னியுங்கள் ஆனால் இதுதான் நிஜம். மேக்பெத் வருகிறார் மேடம். அவர் விரைவாக செல்லும் ஒரு தூதுவனை அனுப்பினார். அவன் வந்த வேகத்தில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி பேசமுடியாமல் நிற்கிறான்.

திருமதி.மேக்பெத் : அவனை பார்த்துக் கொள். நல்ல செய்தி கொண்டுவந்திருக்கிறான்.

( சேவகன் மறைகிறான். ) குரல் கம்மிய அண்டங்காக்கையை போல மன்னர் டங்கன் என் கொத்தளதிற்குள் வரும் தகவலை கூறிவிட்டு சென்றிருக்கிறான். வாருங்கள் கெட்ட ஆவிகளே ! என்னை மரண எண்ணங்களால் நிரப்புங்கள். என் பாலினத்தை மாற்றுங்கள். என் முடியிலிருந்து அடிவரை கடுமையான கொடூரத்தை நிரப்புங்கள். என் குருதியை கடினமாக்குங்கள். கழிவிரக்கத்திற்கான பாதையை மூடுங்கள். இயற்கையாக நேரிடும் மனசாட்சியின் உறுத்தல் எந்த வகையிலும் என்னை அசைத்து , என் செயலை தடுக்காமல் இருக்கட்டும். என் அமுதக்கலசங்களில் இருக்கும் தாய்ப்பாலை விஷமுள்ள அமிலமாக மாற்றுங்கள். கண்களுக்கு தெரியாமல் அமானுஷ்யமாக இருக்கும் ஆவிகளே வாருங்கள். கனத்த இரவே வா ! நரகமெனும் புகையினால் இந்த உலகை மூடு. என் குறுவாள் அது கீறப்போகும் காயத்தை பார்க்க கூடாது. வானகம் இருளைப் பிளந்து என் செயலை தடுத்து ‘ நில் ! நில் !’ என்று தடுக்கக் கூடாது.

( மேக்பெத் நுழைகிறான். ) ஆஹா கிளைம்சின் தலைவனே காடரின் தலைவனே ! அரசனான பின்பு இந்தப் பதவிகள் சிறியதாகி விடும்.உங்கள் கடிதம் என்னை என்னுடைய அப்பாவி நிலையிலிருந்து வேறுநிலைக்கு மாற்றிவிட்டது. வருங்காலம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

மேக்பெத் : என்னுடைய பிரியமான சகி ! இன்றிரவு டங்கன் இங்கே விருந்திற்கு வருகிறார்.

திருமதி. மேக்பெத் : எப்போது திரும்புவார் ?

மேக்பெத் : நாளை கிளம்ப திட்டமிட்டுள்ளார்.

திருமதி.மேக்பெத் : ஓ இப்படி ஒரு பொன்னான நாள் மீண்டும் வராது. உங்கள் முகம் ஒரு புத்தகத்தை போல வினோத விஷயங்களால் நிறைந்திருக்கிறது. காலத்தை ஏமாற்ற நீங்கள் காலமாக மாறவேண்டும். பூநாகத்தை உள்மறைத்த மலரினைப்போல் தோற்றம் அளியுங்கள். மன்னர் வருகிறார். அவரை நன்றாக கவனிக்க வேண்டும். இந்த இரவின் பொறுப்புகளை என்னிடம் விட்டு விடுங்கள் . ஏன் எனில் இந்த இரவு நமக்கு இனிவரும் இரவுகளையும் பகல்களையும் மாற்றியமைக்க போகிறது.

மேக்பெத் : இது குறித்து நாம் மேலும் பேசவேண்டியுள்ளது.

திருமதி.மேக்பெத் : தெளிவான பார்வையுடன் இருங்கள். அச்சமே சந்தர்ப்பத்தின் எதிரி. மற்ற எல்லாவற்றையும் என்னிடம் விட்டுவிடுங்கள்.

திரை.

காட்சி-6.

( மேடை விளக்குகளால் ஒளிமயமாக்கபட்டுள்ளது. அரசர் வருவதை இசைக்கருவிகள் அறிவிக்கின்றன. மன்னர் டங்கன், மால்கம், டொனால்பெயின், பங்க்வோ, லெனாக்ஸ், மாக்டஃப், ராஸ், ஏங்கஸ் மற்றும் உதவியாளர்கள் நுழைகின்றனர். )

டங்கன் : இந்த மாளிகை மனதுக்கு உகந்ததாக உள்ளது. இதில் உள்ள நறுமணம் மனதில் நல்ல எண்ணங்களை தூண்டுவதாக உள்ளது.

பாங்கோ : கோடைபறவையான வீட்டு மைனாவின் கூடு இங்கு சொர்கத்திலிருந்து வீசும் அன்பான காற்றை அடையாளம் காட்டுகிறது. இந்த மைனாக்கள் எங்கே கூடு கட்டுகின்றனவோ அங்கு காற்று மணம் மிக்கதாக இருக்கும் என்று நான் கேள்வி பட்டிருக்கிறேன்.

( திருமதி.மேக்பெத் வருகிறாள் )

டங்கன் : அதோ நம் மனைத்தலைவி வருகிறாள்.நமது அன்பர்கள் நமக்கு அன்பென்று தொந்தரவு கொடுத்தாலும் நாம் அதனை அன்பாகவே ஏற்றுக் கொள்கிறோம். இதன்மூலம் எங்கள் வருகையை தொந்தரவாகக் கொள்ளாமல் அன்பாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திருமதி.மேக்பெத் : எங்கள் செய்கையெல்லாம் உங்களுக்காகத்தான் . அவை இரட்டிப்பானாலும், மேலும் இரட்டிப்பானாலும் எங்கள் இல்லத்திற்கு நீங்கள் அளித்துள்ள கௌரவத்திற்கு அது ஈடாகாது. நீங்கள் இதுவரை அளித்த கவுரவத்திற்கும் இதோ சற்று முன் அளித்த கவுரவத்திற்கும் நாங்கள் நன்றி செலுத்தும் விதமாக உங்கள் அனைவரையும் எங்கள் விருந்தினராய் வரவேற்கிறோம்.

டங்கன் : எங்கே காடரின் தலைவன் ? அவன் பின்னால் குதிரையில் வேகமாகத் தொடர்ந்தோம். அவனை முந்திவிடலாம் என்றிருந்தோம். ஆனால் அவன் விரைந்து வந்துவிட்டான். அவனுடைய தார்க்குச்சியை விட கூர்மையான அன்பு எங்களை வரவேற்க முன்னமே வந்துவிட்டது போலும். மரியாதைக்குரிய அழகிய சீமாட்டி இன்றிரவு நாங்கள் உங்கள் இல்ல விருந்தினர்.

திருமதி.மேக்பெத் : உங்கள் அடிமைகளான எங்களுக்குன்று உடைமைப்பொருள் எதுவுமில்லை. இங்கிருபதெல்லாம் உங்களுடையதுதான். நாங்கள் அவற்றை பத்திரமாக வைத்திருப்பது உங்களிடம் திருப்பி கொடுக்கத்தான்.

டங்கன் : தங்கள் கையை நீட்டி என்னை பற்றி தங்கள் இல்லத்தலைவன் மேக்பெத்திடம் என்னை அழைத்து செல்லுங்கள் சீமாட்டி. நாங்கள் அவனை மிகவும் நேசிக்கிறோம். அவன் மீது எங்கள் கருணை எப்போதும் உண்டு. நீங்கள் தயாரானதும் உபசரிக்கலாம்.

( அனைவரும் மறைகின்றனர். )

காட்சி -7.

இடம்: மேக்பெத்தின் மாளிகை.

( மேக்பெத்தின் மாளிகையில் விருந்து நடக்கிறது. ஒரு பரிசாரகன் வருகிறான். இரண்டு மூன்று பணியாளர்கள் உணவு மேசையை சுத்தம் செய்கின்றனர். இறுதியாக மேக்பெத் நுழைகிறான். )

மேக்பெத் :நடப்பது நடந்தே தீரும் என்னும்போது நடப்பது விரைவாக நடப்பது நல்லது. இந்த மரணம் ஒரு வலைபோல வீசப்பட்டு பின் நிகழ்பவற்றை தடுத்து, இறுதி வெற்றியை முடிவாகத் தரும் இப்போது கொடுக்கப்படும் அடி இருப்பான இருப்பாகவும், , முடிவான முடிவாகவும் இருக்கவேண்டும் . கால வெள்ளத்தில் மூழ்கி, வரவிருக்கும் வாழ்வுடன் வெளிவரவேண்டும். இருப்பினும் இந்தக் கொலைநிகழ்வுகளுக்கு நியாயம் வழங்கப்படும்; ஒவ்வொரு இரத்த செயலும் எய்தவனைத் தாக்கும் கொடியவிஷம் போன்றது. வன்முறை என்றுமே சொல்லிக் கொடுப்பவரை தாக்கும் தன்மையுடையது. நியாயம் பொதுவானது என்பதால் பிறருக்கு வழங்கப்பட்ட நஞ்சு நம் உதட்டை நெருங்க நேரமாகாது. இதோ மன்னர் இருமடங்கு நம்பிக்கையுடன் வருகிறார். ஒன்று நான் அவரின் உறவினன்; இரண்டு நான் ஒரு குறுநில மன்னன். இரண்டுமே இந்தச் செயலுக்கு எதிரானது. இன்று அவர் என் விருந்தினர் நான் மனைத்தலைவன். அவரைக் கொலைசெய்ய வருபவனுக்கு வாள்வீச வேண்டியவன் அவருக்கே வாள்வீசக் கூடாது. மேலும் டங்கன் சாந்தகுணமுள்ளவர்; தனது அரசு கடமைகளில் அப்பழுக்கற்றவர்; அவர் துர்மரணமடைந்தால் அவருடைய நற்குணங்கள் தேவதைகளைப் போல் மேல் எழும்பும்; உலகிற்கு பறைசாற்றும். பச்சாதாபம் சிறகடித்து எங்கும் வியாபிக்கும்; மக்களின் கண்ணீர் வெள்ளம் காற்றையும் நனைக்கும். இந்தச் செய்கையை தூண்டிவிட என்னிடம் என்னுடைய பேராசையைத் தவிர வேறு உபாயம் எதுவும் இல்லை. என் பேராசை பெரிதாகி பெரிதாகி சுமப்பவனை வீழ்த்தப் போகிறது.

( திருமதி மேக்பெத் வருகிறாள். )

மேக்பெத் : வா! வா! ஏதாவது சேதி உண்டா?

திருமதி. மேக்பெத் : மன்னர் இரவு உணவை முடிக்கப் போகிறார். ஆமாம் எதற்காக உணவுக் கூடத்திலிருந்து வெளியேறினீர்கள் ?

மேக்பெத் : மன்னர் என்னைத் தேடினாரா?

திருமதி. மேக்பெத் : அவர் தேட மாட்டாரா என்ன?

மேக்பெத் : சீமாட்டி போதும் இந்தச் செயலை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். அவர் என்னை வேண்டுமென்ற அளவிற்கு கௌரவப் படுத்தியிருக்கிறார். எனக்கும் என் பிரஜைகளிடம் நற்பெயர் உள்ளது. புதிதாக கிடைத்த கௌரவத்தை நினைத்து நான் திளைக்கவேண்டும். அதை என்னால் உதறிவிட முடியாது.

திருமதி. மேக்பெத் : இதற்கு முன்னாள் நன்றாகத்தானே இருந்தீர்கள்? குடித்திருக்கிறீர்களா? அல்லது உறங்கச் சென்று அச்சத்தில் எழுந்ததால் முகம் வெளுத்துக் கானப்படுகிறீர்களா? இந்தக் கணத்திலிருந்து உங்கள் காதலை நான் எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்வது ? ஆசைப்படும்போது வீரனாகவும், செயலில் இறங்கும்போது கோழையாகவும் மாறலாகுமா? எந்த மகுடத்தின் மீது ஆசை பட்டீர்களோ அதனை எப்படியாவது பறிப்பீர்களா அல்லது ஒரு கோழையைப் போல ஆசைமட்டும் ப்டுவேன் ஆனால் செயலில் இறங்கமாட்டேன் என்று புலம்பிக் கொண்டிருக்கப் போகிறீர்களா ? இது என்ன மதில் மேல் பூனையைப் போல ?

மேக்பெத் : சகி போதும் நிறுத்து. ஒரு மனிதனாக என்ன செய்யமுடியுமோ அதைச் செய்கிறேன் . அதற்கும் அதிகமாக செய்யும்போது நான் மனிதத்தை இழந்து விடுவேன்.

திருமதி.மேக்பெத் : மனிதன் செய்யும் செயல் என்றால் பிறகு எதற்கு உங்களுடைய பேராசையை என் தலையில் ஏற்றினீர்கள் ? இந்தச் செயலைப் புரியப்போகிறேன் என்று சொன்னபோது நீங்கள் மனிதராக இருந்தீர்கள். எதைச் செய்யவேண்டுமோ அதற்காக நீங்கள் எடுத்து வைக்கும் மேலும் ஒரு அடியினால் நீங்கள் மனிதனை விட மேலாக மாறி விடுவீர்கள். காலமும் இடமும் இப்போது கூடி வந்திருக்கிறது. என் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது பால் உரியும் குழந்தை மீது எனக்கு அவ்வளவு ஆசை இருக்கும்? . என் முகம் பார்த்து சிரிக்கும் குழந்தையை என் முலைக்காம்பிலிருந்து அதன் உதடுகளைப் பிரித்து அதனை தரையில் மோதி மூளையை சிதறடித்தால்தான் என்னுடைய ஆசை நிறைவேறும் என்பது என்னுடைய வரமானால் நான் அப்படி செய்வதற்குக் கூட சிறிதும் தயங்கமாட்டேன்.

மேக்பெத் : இம்முயற்சியில் நாம் தோற்று விட்டால்?

திருமதி.மேக்பெத் : தோல்வியா? உங்கள் துணிச்சலை முறுக்கேற்றிக் கொண்டால் நாம் தோற்க மாட்டோம். டங்கன் இன்று முழுவதும் அலைந்து கொண்டிருந்ததால் விரைவில் உறங்கச் சென்றுவிடுவார். அவருடைய அந்தரங்கக் காவலர்கள் இருவருக்கும் அளவுக்கு அதிகமாக மது அளித்து அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி விடுகிறேன். அவர்கள் நினைவு புகைபோக்கியின் வெளியில் செல்லும் புகை போல மிதக்குமே அன்றி நிலைக்காது. குடித்துவிட்டு பன்றிகளைப் போல் தூங்கப்போகும் அவர்கள் முற்றிலும் இறந்தவர்களுக்கு சமம். பிறகு நம்மால் பாதுகாப்பற்ற டங்கனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். செயலாற்ற அந்த அந்தரங்க காவலர்கள் மீது நாம் பழியைப் போடுவது அத்தனை கடினமாகவா இருக்கும்?

மேக்பெத் : உனக்கு கண்டிப்பாக ஆண்மகவுதான் பிறக்கும். உன்னுடைய இந்த அச்சமற்ற உத்வேகம் ஆண்மகவைத் தவிர வேறு எதையும் உண்டாக்காது. அவர்களைக் கொன்றுவிட்டு அவர்கள் கத்தியாலேயே மன்னனை கொன்றுவிட்டால் இந்த நாடு கொலையை அந்தரங்கக் காவலர்களே செய்ததாகத்தானே நம்பும் ?

திருமதி.மேக்பெத் : வேறு எப்படி மாற்றி எண்ண முடியும்? அவர் இறந்த தகவலைக் கேட்டதும் வருத்தத்துடன் கதறி அழவேண்டும்.

மேக்பெத் :நான் துணிந்துவிட்டேன். என் உடலின் ஒவ்வொரு தசையும் இந்த செய்கைக்காக ஆயத்தமாகிவிட்டது. போ உள்ளே சென்று நல்ல மனைத்தலவி போல் நடித்து காலத்தை ஏமாற்று. போலியான இதயத்தை மறைக்க போலியான முகம் வேண்டும்.

திரை.

முதல் அங்கம் நிறைவுற்றது.

.

ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் ( அங்கம் -5. ) ஆங்கில வழி மொழியாக்கம் – சத்தியப்பிரியன்

ROMEO-JULIET-Amber

அங்கம் -5.

காட்சி-1

மான்சுவா நகரின் ஒரு வீதி. ரோமியோ நுழைகிறான்.

ரோமியோ :இரவில் தூக்கத்தின் முகஸ்துதியாய் விளங்கும் கனவுகளை நான் நம்பினால் என் கனவுகள் என்னிடம் சில சந்தோஷ செய்தியை கொண்டு சேர்த்திருக்கிறது.என் மனமெனும் சிம்மாசனத்தில் காதல் மென்மையாக அமர்ந்திருக்கிறது. இந்தநாள் முழுவதும் இனம்புரியாத உணர்வு என்னை பாதம் படாமல் பூமியின் மீது சில சந்தோஷ நினைவுகளுடன் மிதக்க வைக்கிறது. என் கதாநாயகி என்னை வந்து பார்க்க வரும்போது நான் இறந்துகிடப்பதைப் போல கனா கண்டேன். என்ன ஒரு அதிசயமான கனவு. இறந்தவன் சிந்திப்பது போன்றொரு அதிசயம்………அவள் அருகில் வந்தாள் தன் இதழ் எனும் அமுதத்தால் என்னை உயிர்பித்தாள். நான் ஒரு மன்னவனாக உயிர் பெற்று எழுந்தேன். காதலின் சாயலுக்கே இத்தனை ஆனந்தம் என்றால் காதல் தன்னிடம் இன்னும் எவ்வளவு இனிமையை கொண்டிருக்கும். ( ரோமியோவின் உதவியாளன் பால்தசார் வருகிறான். ) வெரோனாவிலிருந்து ஏதாவது செய்தி உண்டா பால்தசார் ? பாதிரியாரிடமிருந்து கடிதம் உண்டா ?என் மனைவி எப்படி இருக்கிறாள் ? என் தந்தை நலமா? ஜூலியட் எப்படி இருக்கிறாள் ? திருப்பி திருப்பி இதை ஏன் கேட்கிறேன் என்றால் அவள் நலமாக இருந்தால் வேறு எந்தக் கெடுதியும் நேராது.

பால்தசார் : அப்படி என்றால் ஜூலியட் நலமாக இருக்கிறாள். அவள் உடல் கபுலெட் கல்லறையில் துயில் கொண்டுள்ளது: அவள் ஆவி வானுலகில் இளைப்பாறுகிறது. அவள் அவர்களது குடும்பத்தினருக்கு சொந்தமான கல்லறைப் பகுதியில் ஒரு பேழையில் வைத்து மண்ணில் வைக்கப்பட்டுள்ளதை என் கண்களால் பார்த்தேன். நீங்கள் எனக்கு இடப்பட்ட பணி என்பதால் இந்தத் துயரச் செய்தியை உங்களிடம் கூறாமல் என்னால் இருக்க முடியவில்லை.

ரோமியோ : அப்படியா ? ஓ கிரகங்களே உங்களை நான் மீறுவேன். நான் எங்கிருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியாது. உடனே எனக்கு ஒரு பேனாவும் காகிதமும் கொண்டு வா. ஒரு குதிரையை கொண்டு வா. நான் இன்றிரவே வெரோனாவிற்குக் கிளம்புகிறேன்.

பால்தசார் : ஐயா உங்களை மன்றாடிக் கேட்கிறேன். கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள். உங்கள் கண்கள் சிவந்து மிகவும் வெறியுடன் தோற்றம் கொண்டிருக்கிறீர்கள். பெரிய இடரில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

ரோமியோ : தவறு. என்னை தனிமையில் இருக்க விடு. நான் இட்ட கட்டளைகளைச் செய். பாதிரியாரிடமிருந்து எனக்கு கடிதம் உள்ளதா?

பால்தசார் : இல்லை ஐயா.

ரோமியோ :பரவாயில்லை. நீ கிளம்பு இப்போது. நான் சொன்னதுபோல குதிரை ஒன்றைக் கொண்டு வா. இன்றிரவு நாமிருவரும் நேராக வெனோரா கிளம்புகிறோம். ( பால்தசார் கிளம்புகிறான் ) ஜூலியட் ! இன்றிரவு நான் உன்னுடன் பள்ளி கொள்வேன். எப்படி என்று யோசிக்கிறேன். ச்சை ! நம்பிக்கையிழந்தவனிடம் குழப்பம் மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விடுகின்றது. எனக்கு ஒரு மருந்துக்கடைக்காரரைத் தெரியும்.மூலிகைகளிலிருந்து மருந்து தயாரிப்பவர். இங்கேதான் எங்கோ அருகில் இருக்கிறார். கந்தல் ஆடையும் அடர்த்தியான புருவமுடையவர் என்பது நினைவில் உள்ளது. வறியவர் போன்ற தோற்றமுடையவர். அவர் பார்வை பரிதாபமாக இருக்கும். பெரும்இன்னல் அவரை எல்லும்தோலுமாக ஆக்கியிருக்கும். அவருடைய மருந்துக்கடையில் ஆமை ஓடு ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். பாடம்பண்ணபட்ட முதலையின் உருவம் ஒன்று இருக்கும். அதிசய மீன் ஒன்றின் உடலும் பாடம் செய்யப்பட்டு வைக்கபட்டிருக்கும். காலியான அட்டைபெட்டிகள், பச்சைநிறக் களிமண் பானைகள், தோல் பைகளும், பூஞ்சைக்காளான் பிடித்த விதைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டு ஒரு மருந்துக்கடை என்பதை கூறிக் கொண்டிருக்கும். பழைய நூல் கண்டுகள், அழுத்தி வைக்கப்பட்ட ரோஜா இதழ்கள்…என்று அவனுடைய வறுமையை காணுற்ற நான் ஒருமுறை எனக்கு நானே ‘ இந்த மான்சுவா நகரில் தடை செய்யப்பட்டுள்ள விஷம் வாங்க வேண்டுமென்றால் இந்த வறியவன் அதனை விற்பதற்கு தயாராக இருப்பான் ‘ என்று கூறினேன். அப்போது இந்த எண்ணம் தோன்றியபோது எனக்கு விஷம் தேவையிருக்கவில்லை. இப்போது அவரிடம் நிச்சயம் விஷம் இருக்கும். இதுதான் அவர் வீடாக இருக்கும். விடுமுறைதினம் என்பதால் கடை மூடியிருக்கிறது. கூப்பிடலாம். மருந்துக் கடைக்காரரே !

( மருந்துக்கடைக்காரர் வெளியில் வருகிறார் )

மருந்துக்கடைக்காரர் : யாரது இப்படி உரக்க அழைப்பது ?

ரோமியோ :இங்கே வாருங்கள் மருந்துக்கடைக்காரரே ! நீங்கள் வறியவர் என்பது தெரிகிறது. இந்தாருங்கள் பிடியுங்கள் இதில் நாற்பது டியூகட் பணம் உள்ளது. எனக்கு சிறிதளவு நஞ்சு கொடுங்கள்.அந்த நஞ்சு நாவில் பட்டதும் உடலில் உள்ள நாளங்களில் பரவி உட்கொண்டவனை பீரங்கியிலிருந்து கிளம்பிய குண்டு எவ்வாறு சர்வநாசம் செய்யுமோ அப்படி ஒரு நாசத்தை விளைவித்து இறக்க செய்ய வேண்டும்.

மருந்துக்கடைக்காரர் : அப்படிப்பட்ட கொடிய விஷம் என்னிடம் உள்ளது. ஆனால் மான்சுவா நகரில் விஷம் விற்பவர்களுக்கு தண்டனை என்ன தெரியுமா? ….மரணம்.

ரோமியோ : வறுமையின் காரணமாக கேடு கெட்டு போயிருக்கும் உங்களுக்கு மரணம் மேலும் அச்சம் கொடுக்குமா என்ன? பஞ்சத்தின் கொடுமையை உங்கள் கன்னங்கள் சொல்லும். தேவையும், மாளாத்துயரும் உங்கள் கண்களில் தெரிகின்றன. வெறுப்பும், பிச்சைக்காரத்தனமும் உங்கள் முதுகில் நடமிடுகின்றன. இந்த உலகம் உங்கள் நண்பனில்லை. அதைப்போல அதன் சட்டமும். உங்களைப் போன்றவர்களை வளமுடையவராக்க உலகில் எந்தச் சட்டமும் கிடையாது. பிறகு வறுமையில் இருப்பதால் என்ன பயன் ? உடைத்துக் கொண்டு வெளியில் வாருங்கள். இந்தக் காசை பிடியுங்கள். ( கைகளில் பணத்தை நீட்டிக் காட்டுகிறான் )

மருந்துக்கடைக்காரர் : இதனை என் வறுமை ஒப்புக்கொள்ளும் . ஆனால் என் கொள்கை ஒப்புக்கொள்ளாது.

ரோமியோ : நான் கொடுப்பது உங்கள் வறுமைக்கு உங்கள் கொள்கைக்காக இல்லை.

மருந்துக் கடைக்காரர் ( ரோமியோவிடம் நஞ்சை நீட்டியபடி ) இதை எந்த பானத்திலும் கலக்கி குடி. உனக்கு இருபது மனிதர்களின் சக்தி இருந்தாலும் இந்த விஷம் உன்னை பரலோகம் அனுப்பிவிடும்.

ரோமியோ : ( அவர் கைகளில் பணத்தை கொடுக்கிறான் ) இந்தாருங்கள் இது உங்கள் தங்கம். இந்தப் பணம் மனிதனுக்கு நஞ்சை விடக் கொடியது. இந்த துன்பம் நிறைந்த உலகில் பணம் செய்யும் கொலைகள் நீங்கள் விற்க மறுக்கும் நஞ்சு செய்யும் கொலைகளைவிட அதிகம். நான்தான் உங்களுக்கு நஞ்சை கொடுத்துள்ளேன். நீங்கள் என்னிடம் கொடுத்தது நஞ்சில்லை. வருகிறேன். நல்ல உணவு வாங்கி சாப்பிட்டு வற்றிய உடம்பைத் தேற்றுங்கள். வா என்னுடைய உற்சாக பானமே ! நீ நஞ்சில்லை. ஜூலியட்டின் கல்லறையில் உன்னை உட்கொள்கிறேன்.( இருவரும் அகல்கின்றனர் )

திரை.

காட்சி-2

( வெனோரா நகரில் பாதிரியார் லாரன்ஸ்ஸின் இல்லம். பாதிரியார் ஜான் உள்ளே நுழைகிறார்.)

ஜான் : வணக்கம் அருட்தந்தை லாரன்ஸ் ( உள்ளிருந்து பாதிரியார் லாரன்ஸ் வருகிறார் )

பாதிரியார் லாரன்ஸ் : ( வந்து கொண்டே ) இது அருட்சகோதரர் ஜானின் குரல் அல்லவா? மான்சுவாவிலிருந்து வருகிறீர்கள் அல்லவா ? வாருங்கள்.ரோமியோ என்ன சொல்கிறான் ? அவன் எண்ணங்களை கடிதமாக வடித்திருந்தான் என்றால் அந்தக் கடிதத்தை கொடுங்கள்.

ஜான் : நான் எனக்குத் துணையாக மேலும் ஒரு அருட்சகோதரரைத் தேடி போனேன். அவருக்கு நோயாளிகளை சந்தித்து சிகிச்சை அளிப்பது பணியாக இருந்தது. எங்கள் இருவரையும் பார்த்த நகர சுகாதார அதிகாரிகள் நாங்கள் குடியிருக்கும் இல்லங்களில் பெருநோய் இருப்பதாக ஐயம் கொண்டு எங்கள் இருவரையும் என் இல்லத்திலிருந்து வெளியேற விடாமல் உள்ளே வைத்து பூட்டி விட்டனர். எனவே என்னுடைய மான்சுவா பயணம் தடைபெற்று விட்டது.

பாதிரியார் லாரன்ஸ் : பிறகு என் கடிதத்தை ரோமியோவிற்கு யார் கொண்டு போனது ?

ஜான் : அதனை என்னால் எடுத்து செல்ல முடியவில்லை. இதோ.( பாதிரியார் லாரன்ஸிடம் ஒரு கடிதத்தை நீட்டுகிறார். ) அங்கிருந்தும் உங்களுக்கு தகவல் கொண்டுவர என்னால் முடிய்டவில்லை. தோற்று நோய் உடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுகாதார அதிகாரிகளின் செய்கையால் இவ்வாறு நேர்ந்து விட்டது.

பாதிரியார் லாரன்ஸ் : என்ன ஒரு துரதிர்ஷ்டம். அருட்சகோதரரே ! அது கடிதம் மட்டுமில்லை. பல தகவல்கள் அடங்கியது. அது அவன் கையில் கிடைக்காத பட்சத்தில் பல ஊறுகள் நேரலாம். அருட்சகோதரர் ஜான் உடனே சென்று ஒரு இரும்பு கடப்பாறை ஒன்றை என் அறைக்குள் எடுத்துக் கொண்டு வாருங்கள்.

ஜான் : இதோ இப்பொழுதே கொண்டு வருகிறேன் ( ஜான் மறைகிறார் )

பாதிரியார் லாரன்ஸ் : கல்லறைக்கு நான் மட்டும் தனியாகப் போக வேண்டும். இன்னும் மூன்று மணி நேரத்தில் ஜூலியட் விழித்துக் கொண்டுவிடுவாள். ரோமியோவிற்கு இந்த நிகழ்வு தெரிவிக்கப்படவில்லை என்பதற்கு அவள் என் மேல் கடுங்கோபம் கொள்வாள். நான் மீண்டும் ஒருமுறை மான்சுவாவிற்கு கடிதம் அனுப்ப வேண்டும். ரோமியோ வரும்வரை ஜூலியட்டை என் குடிலில் மறைத்து வைத்திருக்க வேண்டும். இறந்தவனின் கல்லறையில் கிடத்தப்பட்ட பாவம் அவள் ஒரு வாழும் பிணம்.( பாதிரியார் அகல்கிறார். )

.காட்சி-3

கபுலெட்டின் கல்லறை .பாரிஸ் ஒரு வேலைக்காரனுடன் நுழைகிறான்.

பாரிஸ் : அந்த விளக்கை என்னிடம் கொடுத்துவிட்டு தூரப் போ. உன்னிடம் உள்ள விளக்கை அனைத்து விடு. அப்போதுதான் நான் மற்றவர் கண்களுக்கு தெரியமாட்டேன். தூரத் தெரியும் ஊசியிலை மரங்களின் அடியில் உன்னை மறைத்துக் கொள். உன்னை மறைத்துக் கொள். கீழே படுத்துக் கொண்டு நெகிழ்வான தரையில் காதுகளை வைத்துக் கொண்டு கவனமாக இரு. இந்தக் கல்லறைக்குள் வேறு காலடி சத்தம் கேட்கக் கூடாது. அப்படி வேறு யாராவது உள்ளே வருகின்றனர் என்றால் எனக்கு மெல்லிய விசில் மூலம் தகவல் தெருவி. உன் கையில் உள்ள மலர்களை என்னிடம் கொடு. போ நான் சொன்னதுபடி செய்.

( வேலைக்காரன் விளக்கை அணைத்துவிட்டு பாரிசிடம் மலர்களை கொடுக்கிறான் ).

வேலைக்காரன் : இந்த மயானத்தில் காத்திருப்பது எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இருந்தாலும் சவாலாக எதிர்கொள்ள வேண்டும்.( வேலைக்காரன் அகல்கிறான். ).

பாரிஸ் ( மலர்களை அவளுடைய பேழையின் மேல் தூவியபடி ) இனிமையான மலர்களே . என் மணமகளின் படுக்கையில் சிதறியிருங்கள். உனது சப்ர மஞ்சம் மண்ணாலும் கல்லினாலும் ஆனது. இதனை நான் தினமும் நறுமணமுள்ள நீரினால் உன் மஞ்சத்தை நனைப்பேன். இல்லையெனில் வருத்தத்தில் தோய்ந்த என் கண்ணீரால் கழுவுவேன். அதுவும் இல்லையென்றால் என் இரவுநேர ஈமைச் சடங்கு உன் கல்லறை மீது மலர் தூவி கண்ணீரால் நனைப்பதுதான்.( வேலைக்காரன் விசில் ஒலி எழுப்புகிறான். ) யாரோ வருகிறார்கள். வேலைக்காரன் சமிக்ஞை செய்கிறான். இந்த இரவில் வருவது யாராக இருக்கும் ? இந்த இரவு வேளையில் என் ஈமைச் சடங்குகளை செய்யவிடாமல் குறுக்கிடுபவர்கள் யாராக இருக்கும் ? விளக்கு வெளிச்சத்துடன் வருகிறார்கள். இதோ இந்த இருட்டில் ஒளிந்து கொள்கிறேன்.

(பாரிஸ் ஒளிந்து கொள்கிறான். ரோமியோவும் பால்தசாரும் வருகின்றனர். )

ரோமியோ :அந்த கடப்பாரையையும் மண்வெட்டியையும் என்னிடம் கொடு( பால்தசாரின் கையிலிருக்கும் கருவிகளை வாங்குகிறான். ) இந்தா இந்தக் கடிதத்தை பிடி. நாளை காலை பாதிரியாரிடமும் , என் தந்தையிடமும் கொண்டு போய்க்கொடு. அந்த விளக்கை என்னிடம் கொடு ( விளக்கை அவனிடமிருந்து வாங்குகிறான். ) என் உயிரின் மீது ஆணையிட்டு சொல்கிறேன். நீ இங்கு எதை பார்த்தாலும் எதுவும் பேசாமல் தனியாக இருக்க வேண்டும். என் முயற்சியில் நீ குறிக்கிடக் கூடாது.இந்தக் கல்லறைக்குள் நுழைந்து என் மனைவியின் முகத்தை கைகளில் ஏந்திக் கொள்ள போகிறேன். நான் ஒரு முக்கிய காரணத்திற்காக கல்லறைக்குள் இறங்குகிறேன். என் ஆருயிரின் கை விரலில் ஒரு மோதிரம் உள்ளது. அதனை கழற்றி எடுக்க வேண்டும். வேறு ஒரு செயலுக்காக எனக்கு அந்த மோதிரம் தேவைப் படுகிறது . ஆனால் நீ என் மீது சந்தேகம் கொண்டு என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தாய் என்றால் பிறகு அந்தக் கடவுள் மீது ஆணை உன்னை நார் நாராக கிழித்து இந்த மயானத்தில் உலவும் கொடிய மிருகங்களுக்கு இரையாக போட்டு விடுவேன். ஜாக்கிரதை. என் நோக்கம் கொடியதும் காட்டுமிராண்டித்தனமுமாகும் ஒரு கொடும் புலியை விடவும் கொந்தளிக்கும் கடலையும் விடவும் என்னுடைய சீற்றம் அதிகமாக உள்ளது.

பால்தஸார் :நான் சென்று விடுகிறேன் ஐயா. உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.

ரோமியோ : நட்புக்கு இதுதான் அழகு ( அவனிடம் கொஞ்சம் பணம் கொடுக்கிறான் ) இந்தா இதை வாங்கிக் கொள். போ! நன்றாக இரு. உனக்கு என் வந்தனம்.

பால்தஸார் ( தனக்குள் ) நான் சொன்னது போலில்லாமல் நான் இங்கே மறைந்து கொள்கிறேன். அவர் பார்வை என்னக்கு அச்சமூட்டுகிறது. அவர் செய்கை என்னை ஐயப்பட வைக்கிறது.( பால்தஸார் அங்கிருந்து விலகி படுத்து தூங்கத் தொடங்குகிறான். )

ரோமியோ ( கல்லரையை பார்த்து ) ஓ ! நிரம்பாத இரைப்பையே ! இந்த உலகின் அழகிய படைப்பை விழுங்கி விட்டாய். நான் உன் தாடையைப் பிளந்து உன் இரைப்பைக்குள் மேலும் ஒரு இரையை போடப்போகிறேன். ( ரோமியோ கையிலிருந்த கருவிகளால் கல்லறையை உடைக்கத் தொடங்குகிறான். )

பாரிஸ் ( மெதுவான குரலில் ) இது நாடுகடத்தப்பட்ட அந்த யோக்கியன் ரோமியோ அல்லவா? இவன்தான் என்னுடைய காதலியின் உறவினன் டிபல்டை கொலை செய்தவன். அவர்கள் என்னடா என்றால் அவள் தன் ஒன்றுவிட்ட சகோதரனுக்காக அழது அழுது உயிரை விட்டதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். இவன் இங்கே ஏதோ அக்கிரமம் செய்ய வந்திருக்கிறான். இதோ அவனை கையும் களவுமாக பிடிக்கிறேன் ( ரோமியோவை நோக்கி ) உன்னுடைய பாதகச் செயலை நிறுத்து மாண்டேகு.மரணத்தையும் தாண்டிய வஞ்சம் உண்டா என்ன? அயோக்கியப் பதரே உன்னை கைது செய்கிறேன். நான் சொல்வதை கேட்டு என்னுடன் வா. இல்லை யென்றால் உனக்கு மரணம்தான் முடிவு.

ரோமியோ : நான் எதை எண்ணியிருக்கிறேனோ அதை செய்வதற்கு வந்திருக்கிறேன். நல்ல இளைஞனாக தெரிகிறாய். பெரும் துயரத்தில் ஆழ்ந்தவர்களை தொந்தரவு செய்யக் கூடாது. இங்கிருந்து ஓடி விடு. என் போக்கில் என்னை விடு. இறந்தவர்களை பற்றி கொஞ்சம் யோசித்து பார். அவர்கள் உனக்கு அச்சமூட்டட்டும். எனக்கு கோபமூட்டி மேலும் ஒரு குற்றம் புரிய வைத்து விடாதே ! எனவே இங்கிருந்து போய் விடு . நான் என்னையும் விட உன்னை அதிகம் நேசிக்கிறேன். இந்த ஆயுதங்கள் என் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறேன். இங்கே நிற்காதே . போய் விடு. ஒரு பைத்தியக்காரனின் கருணையால் தப்பித்து வந்ததாக நீ வாழப்போகும் நாட்களில் மற்றவரிடம் கூறு,

பாரிஸ் உன் வேண்டுகோள் நிராகரிக்கப்படுகிறது. நான் உன்னை கைது செய்கிறேன்.

ரோமியோ : நீ என்னை தூண்டுகிறாயா? அப்படியென்றால் வா ஒரு கை பார்க்கிறேன் ( இருவரும் சண்டையிடுகின்றன்மார் )

வேலைக்காரன் : ஐயோ அவர்கள் இருவரும் சண்டையிடுகின்றனர். நான் காவலாளிகளை அழைத்து வருகிறேன் .( வேலைக்காரன் மறைகிறான். )

பாரிஸ் ( கீழே விழுந்து சரிந்தபடி ) கடவுளே நான் செத்தேன். முடிந்தால் என்னை அந்தக் கல்லறையைத் திறந்து என் ஜூலியட்டின் அருகில் படுக்க வை. ( பாரிஸ் இறக்கிறான். )

ரோமியோ :இவன் யாரென்று பார்க்கிறேன். அட இது மெற்குஷியோவின் உறவினன் மேன்மை பொருந்திய பிரபு பாரிஸ் அல்லவா? இவன் என்ன சொன்னான் ? நாங்கள் சண்டை போட்டபொழுது சரியாக கவனிக்கவில்லை. பாரிஸ் ஜூலியட்டை மணக்க இருந்ததாக அல்லவா கூறினான் ? இல்லை அது கனவில் சொன்ன வார்த்தைகளா? உன் கரங்களைக் கொடு. உன் கதையும் என் கதையும் ஒன்றுதான். உன்னை ஒரு பிரமாண்ட கல்லறைக்குள் கிடத்துகிறேன். ( ரோமியோ ஜூலியட் இருக்கும் கல்லறையை உடைத்து உள்ளே இருக்கும் ஜூலியட்டின் உடலைப் பாக்கிறான். ) இது கல்லறையா என்ன? ஒளிவிளக்கு பாரிஸ் ! ஜூலியட் இங்கே கிடப்பதால் இந்தக் கல்லறை பிரகாசமாக ஒளிர்கிறது. இறந்தவனை இறப்பவன் புதைக்கும் இடம் இது.( பாரிசை அந்தக் கல்லறையில் கிடத்துகிறான். )மரணம் நிகழும் அந்த கணத்தில் இறப்பவனின் முகத்தில் என்ன ஒரு பிரகாசம். மரணத்திற்கு முன்பு தோன்றும் மின்னல் என்பார்கள். ஓ ! இவள் முகத்தில் மிளிர்வதை மின்னல் என்று கூற முடியுமா என்ன? மரணம் உன் உயிர்த்தேனை உறிஞ்சு விட்டு உன் வனப்பை மட்டும் வெல்லமுடியாமல் விட்டு வைத்திருக்கிறது. அழகிய பூங்கொடியே உன் கன்னங்களிலும் இதழ்களிலும் இன்னும் செந்நிறம் மிச்சம் இருக்கிறது. மரணத்தின் சவ வெளுப்பு இன்னும் உன்னை முற்றுகையிடவில்லை. டிபல்ட் ! நீ இரத்தப் போர்வையில் மரித்து கிடக்கிறாயா? உன்னைக் கொன்று உன் இளமையை அழித்த அந்தக் கொலைகாரனை என் கைகளினால் கொள்வதைத் தவிர உனக்கு நான் வேறு என்ன கைமாறு செய்ய முடியும் நண்பா? என் உறவினனே என்னை மன்னித்து விடு. ஓ ஜூலியட் ! நீ ஏன் இன்னமும் அழகாக இருக்கிறாய் ? மரணம் உன்னை நேசித்து உன்னை தன் மனைவியாக்கி வைத்துக் கொண்டிருக்கிறதா? தனியாக இருப்பதற்கு அஞ்சாதே. நானும் உன்னுடன் இங்கே உனக்குத் துணையாக இந்த இரவில் இருப்பேன். இனி உன்னை பிரிய மாட்டேன்.உன் அறைத்தோழிகளான புழுக்களுடன் நான் இருப்பேன். என்னுடைய இறுதி ஒய்வு இங்குதான். என்னை துன்புறுத்திய அந்த இராசியில்லாத கிரகங்கள் குறித்து நான் கவலைப்பட போவதில்லை. கண்கள் இறுதியாக ஒருமுறை உன்னை பார்க்கட்டும்; உன் இறுதித் தழுவலை கரங்கள் பெறட்டும்; சுவாசத்தின் கதவுகள் போன்ற இதழ்களே ஓர் விருப்ப முத்தம் கொடுத்து மரணத்துடன் முடிவில்லாத ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.( ஜூலியட்டை முத்தமி.ட்டுவிட்டு நஞ்சினை கையில் எடுக்கிறான் ). துன்பத்திற்கு வழிகாட்டும் வழித்துணையே ! இனிமையற்ற நண்பனே ! ஆற்றல்மிக்க மாலுமியே வா ! வாழ்க்கைக்கடலில் தத்தளிக்கும் இந்த படகினை மரணம் என்ற பாறையின் மீது வலுவுடன் மோதுவோம். என் காதலிக்காக ( நஞ்சை அருந்துகிறான். ) ஓ அந்த மருத்துக்கடைக்காரர் சொன்னது சரிதான் . நஞ்சு விரைந்து வேலை செய்யத் தொடங்கி விட்டது. ஒரு முத்தத்துடன் என் வாழ்வை முடித்துக் கொள்கிறேன். ( ரோமியோ இறக்கிறான்.)

( பாதிரியார் லாரன்ஸ் கையில் விளக்கு , மண்வெட்டி , கடப்பாரையுடன் வருகிறார். )

பாதிரியார் லாரன்ஸ் : புனித பிரான்சிஸ் நீங்கள்தான் அருள் பாலிக்க வேண்டும். இந்த முடியாத வயதில் என் பாதங்கள் எத்தனை முறை இன்று ஒருநாள் மட்டும் இந்த மயானத்தில் அலைந்திருக்கும் ?

பால்தஸார் : ஐயா எனக்கு உங்களை நன்கு தெரியும்.

பாதிரியார் : கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக. நண்பனே சொல்லு அங்கே தெரியும் விளக்கு எதற்காக உள்ளது ? கல்லறையில் உள்ள புழுக்களுக்கும், கபாலங்களுக்கும் ஒளி கொடுப்பதற்காகவா? எனக்கு தெரிந்தவரை அந்த விளக்கு கபுலெட் கல்லறையிலிருந்துதானே எரிகிறது ?

பால்தஸார் : என் எஜமானன் அங்கே இருக்கிறார். உங்களுக்கு வேண்டப்பட்டவர்.

பாதிரியார் : யார் அது ?

பால்தஸார் : ரோமியோ.

பாதிரியார் : எத்தனை நாழிகையாக அவன் அங்கே இருக்கிறான் ?

பால்தஸார் : சரியாக அரைமணி நேரமிருக்கும்.

பாதிரியார் :அந்தக் கல்லறைக்கு என்னுடன் வா.

பால்தஸார் :மாட்டேன் ஐயா. என் எஜமானனுக்கு நான் இருப்பது தெரியக் கூடாது. இந்த இடத்தை விட்டு அகலவில்லையென்றால் என்னைக் கொன்று விடுவதாக மிரட்டியிருக்கிறார். நான் வர மாட்டேன்.

பாதிரியார் :அப்படியானால் இங்கேயே இரு. இது என்ன திடீரென்று பய உணர்வு ஏற்படுகிறது ? நடக்கக்கூடாத எதுவோ நடந்திருக்குமோ ?

பால்தஸார் : நான் இங்கே படுத்து பாதி தூக்கத்தில் இருந்தபோது என் எஜமானர் வேறு ஒருவருடன் சண்டையிட்டு அவரைக் கொன்று விட்டது போல கனா கண்டேன்.

பாதிரியார் : ( கல்லறையை நெருங்குகிறார் ) ரோமியோ ஓ ரோமியோ ! ஆ இது என்ன இரத்தம் கல்லறையின் வாயிலை நனைத்தபடி ? சமரசம் உலாவும் இந்த இடத்தில் இரண்டு வாட்கள் கீழே கிடக்கின்றனவே? ( கல்லறைக்குள் எட்டி பார்க்கிறார் ) ரோமியோ ! ஓ ! ரோமியோ !வேறு யார் உள்ளே கிடக்கின்றனர்? பிரபு பாரிசுமா? ஓ பாரிஸ் குருதியில் நனைந்திருக்கிரானே?எப்போது இந்த துக்ககரமான விஷயம் நடைபெற்றது ? அந்தப் பெண் அசைகிறாள் .( ஜூலியட் கண் விழிக்கிறாள் )

ஜூலியட் :என் அன்பிற்குரிய அருட்தந்தையே என் பிரபு எங்கே ? நான் எங்கிருக்க வேண்டுமோ அங்’கே இருக்கிறேன் என்பது தெரிகிறது.என் ரோமியோ எங்கே ?( கல்லறையின் வெளியில் குரல் கேட்கிறது )

பாதிரியார் : ஏதோ ஓசை கேட்கிறது. மரணத்தின் கூண்டிலிருந்து நீ முதலில் வெளியில் வந்து விடு பெண்ணே. தொற்று நோயிலிருந்தும் இயற்கைக்கு முரணான தூக்கத்திலிருந்தும் வெளியில் வா. நாம் வெல்ல வேண்டும் என்று எண்ணிய மகாசக்தி நமது எண்ணங்களை பொடி பொடியாக்கி விட்டது. வா வெளியேறு. உன் நெஞ்சில் குடி கொண்டுள்ள உன் தலைவன் உள்ளே இறந்து கிடக்கிறான். உடன் பாரிசும் இறந்து கிடக்கிறான். வா ! நான் உன்னை கன்னியாஸ்த்ரீகள் தங்கி இருக்கும் இடத்தில் பாதுகாப்பாக சேரக்கிறேன். கேள்வி எதுவும் கேட்காதே. காவலர்கள் வந்து விடுவார்கள். வா ஜூலியட் . இங்கே அதிகம் தங்கியிருப்பது உசிதமில்லை.

ஜூலியட் : போங்கள் இங்கிருந்து போய்விடுங்கள் . நான் எங்கும் வருவதாக இல்லை.

( பாதிரியார் மறைகிறார் )அது என்னது என் அன்பிற்குரியவன் கைகளில் உள்ள குப்பி? நஞ்சு. இவனுடைய காலமற்ற முடிவுக்கு இந்த நஞ்சுதான் காரணமா? இரக்கமற்றவன் எனக்கு துளி கூட வைத்திராமல் அனைத்தையும் குடித்திருக்கிறான். உன்னுடைய இதழ்களை முத்தமிடுகிறேன் அவற்றில் இன்னும் சிறிது விஷம் மிச்சமாக ஒட்டிக் கொண்டிருக்கும்.( அவன் இதழ்களில் முத்தமிடுகிறாள் ) உன் இதழ்களில் கதகதப்பு இன்னும் குறையவில்லை ரோமியோ.

( காவலாளிகளும், பாரிசின் வேலைக்காரனும் நுழைகின்றனர் )

முதன்மைக் காவலாளி : எந்தப் பக்கம் ?

ஜூலியட் : என்ன சப்தம் ? சீக்கிரம் செயலாற்ற வேண்டும்.என் இனிய குறுவாளே இனி இதுதான் உறை. என் வயிற்றில் இறங்கி என்னை இறக்க அனுமதி.( ரோமியோவின் குறுவாளால் தன வயற்றில் குத்திக் கொண்டு மடிந்து விழுகிறாள் )

வேலைக்காரன் : இதோ இதுதான். விளக்கு எரியும் கல்லறை.

முதன்மைக் காவலாளி : கீழே இரத்தம் சிந்தியிருக்கிறது. ஓடுங்கள். இந்த மயானம் முழுவதும் தேடுங்கள். கண்ணில் தென்படுபவர்களை கைது செய்யுங்கள்.( சில காவலாளிகள் ஓடுகின்றனர். ) பரிதாபமான காட்சி. பிரபு இறந்து விட்டார். ஜூலியட்டின் ரத்தம் இன்னும் கதகதப்பாக இருப்பதால் இரண்டு நாட்களுக்கு முன்பே அவள் புதைக்கபட்டிருந்தாலும் இப்போதுதான் இறந்திருக்க வேண்டும். ஓடு. இளவரசருக்கு தகவல் தெரிவி. கபுலெட்டுகளுக்கு தகவல் அளியுங்கள். மாண்டேகுகளை எழுப்புங்கள். மேலும் வேறு சிலரைத் தேடுங்கள்.( மேலும் சில வேலைக்காரர்கள் நகர்கிறார்கள் ) இந்த துக்க செயலுக்கு காரணம் எதுவென்று புரிகிறது. இருப்பினும் முழுக் கதையையும் துப்பு துலக்காமல் எளிதில் கண்டு பிடிக்க முடியாது.( இரண்டாவது காவலாளி ரோமியோவின் வேலைக்காரன் பால்தசாரை பிடித்துக் கொண்டு வருகிறான். )

இரண்டாவது காவலாளி : இதோ பால்தஸார் ரோமியோவின் பணியால். இங்கேதான் மயானத்தில் இருந்தான்.

முதன்மை காவலாளி : இளவரசர் இங்கே வரும்வரை பத்திரமாக அவனைக் காவலில் வைத்திருங்கள்.

( மூன்றாவது காவலாளில் பாதிரியார் லாரன்சுடன் வருகிறான். )

மூன்றாவது காவலாளி : இதோ இங்கே இந்தப் பாதிரியார் நடுங்கிக் கொண்டும், பெருமூச்சு விட்டு கொண்டும் அழுது கொண்டும் இருக்கிறார். அவர் மயானத்தை ஒட்டியிருந்த பகுதியிலிருந்து வரும்போது மண்வெட்டி ஒன்றையும், கடப்பாறை ஒன்றையும் அவரிடமிருந்து கை பற்றியிருக்கிறோம்.

முதன்மைக் காவலாளி : பெருத்த ஐயத்தை ஏற்படுகிறது. அவரையும் பிடித்து வையுங்கள்.

( இளவரசரரும் அவரது சேவகர்களும் வருகின்றனர். )

இளவரசர் : இந்த அதிகாலை வேளையில் என் காலைநேர தூக்கத்தை கெடுத்க்கும் அளவிற்கு அப்படி என்ன விபரீதம் நேர்ந்துள்ளது ?

( திருவாளர் கபுலெட்டும் திருமதி கபுலெட்டும் வருகின்றனர். )

கபுலெட் : வெளியில் உள்ளவர்கள் கூச்சலிடும் அளவிற்கு அப்படி என்ன விபரீதம் இனி நடப்பதற்கு உள்ளது ?

திருமதி, கபுலெட் : என் வீதியில் சிலர் ரோமியோ என்றும், ஜூலியட் என்றும், பாரிஸ் என்றும் கூச்சலிடுகிறார்கள். அவர்கள் அனைவரும் கிளர்ந்தெழுந்து மயானம் நோக்கி வருகின்றனர்.

இளவரசர் : எந்த பயங்கரம் இவர்களை இப்படி கூச்சலிட வைக்கிறது ?

முதன்மை காவலர் : அரசே ! இங்கே பிரபு பாரிஸ் இறந்து கிடக்கிறார். ரோமியோவும் இறந்துகிடக்கிறான். இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்தவள் என்று புதைக்கப்பட்ட ஜூலியட் சற்று முன்புதான் இறந்திருக்கிறாள்.

இளவரசர் : இந்த முறை தவறிய கொலை எப்படி என்று கண்டுபிடியுங்கள்.

முதன்மைக் காவலர் : இதோ ரோமியோவிற்கு நெருங்கியவரான பாதிரியார் லாரன்ஸ். இந்தக் கல்லறைகளை பிளந்து திறக்க இவர் கைகளில் இருந்த மண்வெட்டியையும் கடப்பாரையையும் கைப்பற்றி இருக்கிறோம்.

திருவாளர் கபுலெட் : என்ன கொடுமை இது. மணவாட்டி பார் நம் அருமை மகள் ஜூலியட் இன்னும் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறாள். அந்த கேடு கேட்ட மாண்டேகுவின் முதுகில் இருக்க வேண்டிய கத்தி என் மகளின் நெஞ்சில் உள்ளது.

திருமதி.கபுலெட் : ஐயோ இந்தக் காட்சி என்னை கல்லறைக்குக் கொண்டு செல்லும் சாவு மணி போல உள்ளதே.

( மாண்டேகு உள்ளே வருகிறார் )

இளவரசர் : வாருங்கள் மாண்டேகு. இத்தனை வேகமாக அதிகாலையில் எழுந்து வந்தது இத்தனை வேகமாக’ உங்கள் மகனும் வாரிசுமான ரோமியோ வீழ்ந்து கிடப்பதைக் காணவா?

மாண்டேகு ஐயோ இளவரசரே ! ! இன்று இரவுதான் என் மனைவி தன் மகன் நாடு கடத்தபட்டான் என்பதை கேட்டு அதிர்ச்சி தாங்கமுடியாமல் இறந்தாள். இந்த வயாதான காலத்தில் எனக்கு இன்னும் வேறு என்ன துன்பம் நேரிட வேண்டும் ?

இளவரசர் :பாருங்கள் எதுவென்று தெரியும்.

மாண்டேகு : ( ரோமியோவின் இறந்த உடலைப் பார்த்து ) அட அறியாத மகனே ! இது என்ன நாகரீகம் மகனே உன் தந்தை நான் உயிருடன் இருக்கும்போது நீ ஏனப்பா கல்லறைக்குள் சென்றாய் ?

இளவரசர் : உங்கள் ஆற்றொணா துயரத்தின் வாயை சற்று ஆறவிடுங்கள். இது எங்கு தொடங்கியது எப்படி நடந்தது எப்படி முடிந்தது என்பனவற்றை ஆராயுந்து அறியவேண்டும். அது முடிந்த பின்னரே நான் உங்கள் துயரத்தில் பங்கு கொள்ள முடியும். அதன் பிறகு உங்களுக்கு இறுதி வரையில் துணை வருவேன். அதுவரையில் பொறுமையாக இருங்கள். யார் அங்கே சந்தேகப்படும் நபர்களை அழைத்து வாருங்கள்.

பாதிரியார் லாரன்ஸ் :நான் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் கீழ்த்தரமான செயல்கள் புரியக்கொடியவன் என்ற குற்றத்துடன் இருக்கிறேன். காலமும் சூழலும் இடமும் என்னை சந்தேகத்திற்குரியவனாக என்னை உங்கள் முன்னால் கொண்டு நிறுத்தியிருக்கிறது.. நீங்கள் என்னை விசாரணை செய்யலாம். தண்டனை அளிக்கலாம். என்னை நானே கடிந்து கொண்டு சுய மன்னிப்பு கேட்டு கொண்டு விட்டேன்.

இளவரசர் : அப்படி என்றால் இதில் உங்களுக்கு தெரிந்தவற்றை இப்போதே கூறுங்கள்.

பாதிரியார் லாரன்ஸ் :சொல்கிறேன் . என்னுடைய இரைக்கும் மூச்சின் அளவு இந்த சோர்வுமிக்க நீண்ட கதையைவிட குறைந்தது. அங்கு இறந்து கிடக்கும் ரோமியோ ஜூலியட்டின் கணவன். அவனருகில் கிடக்கும் ஜூலியட் ரோமியோவின் பத்தினி. நான்தான் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தேன். அந்த ரகசிய திருமணம் நடந்த அன்றுதான் டிபல்டின் துர்மரணம் நிகழ்ந்தது. அந்த மரணம் மணமகனை நாடு கடத்தியது. ஜூலியட்டின் வருத்தம் எல்லாம் டிபல்ட் இறந்ததினால் இல்லை. ரோமியோ நாடு கடத்தபட்டதற்குதான். அவள் சோகத்தை போக்குவதற்காக நீங்கள் அவளுக்கும் பிரபு பரிசுக்கும் திருமண ஏற்பாடுகளைச் செய்தீர்கள். அவள் நேரே என்னிடம் வந்தாள்.அவளுடைய கடுமையான பார்வை தன்னை இந்த இரண்டாவது திருமணத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வழி கேட்டு மிரட்டியது. நான் மறுத்தால் என் அறையிலேயே தற்கொலை செய்து கொள்வதாகச் சொன்னாள். அப்போதுதான் என் நிபுணத்துவத்தில் உருவாக்கிய நெடுநேரம் இறந்தவர் போல தூங்கச் செய்யும் நஞ்சு போன்ற மருந்தை கொடுத்தேன். நான் எண்ணியது போலவே சாவு போன்ற தூக்கத்தை அந்த மருந்து அவளுக்கு அளித்தது. இதற்கு நடுவில் நான் ரோமியோவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினேன். அவன் இங்கே வரவேண்டும் மருந்து தனது வீரியத்தை இழக்கும் கால அவகாசத்திற்குள் இந்த போலியான மரணத்திலிருந்து அவளை எழுப்பிக் கொண்டு செல்லவேண்டும் என்று . ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தக் கடிதத்தை கொண்டு சென்ற சகோதரர் ஜான் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டு கடிதத்தை கொடுக்காமல் திருப்பி கொண்டுவந்து விட்டார்.அந்த நேரம்தான் நான் அவளை அவர்கள் குடும்பக் கல்லறையிலிருந்து வெளியில் எடுத்து என் அறையில் ரோமியோ வரும்வரை மறைத்து வைக்கலாம் என்று கிளம்பினேன். நான் இங்கு வந்த நேரம் அதாவது ஜூலியட் நீண்ட உறக்கம் தெளிந்து எழுவதற்கு சிறிது நேரம் முன்பு இங்கு வந்து பார்த்தால் ரோமியோவும் பாரிசும் இறந்து கிடந்தனர். உள்ளே கல்லறைக்குள் ஓசை கேட்டது. எழுந்து வந்த ஜூலியட் மிக்க மனவேதனை காரணமாக என்னுடன் வர மறுத்து விட்டாள். இதைப் பார்க்கும்போது அவளே தனக்கு ஊறு விளைவித்துக் கொண்டுவிட்டாள் என்று நினைக்கிறேன். இவை அனைத்தும் எனக்குத் தெரியும். அவர்கள் இல்லத்தில் இருக்கும் செவிலிக்கும் இந்த அந்தரங்க விஷயங்கள் தெரியும். இந்த விபரீதம் என்னால்தான் நிகழ்ந்தது என்று நீங்கள் முடிவு செய்தால் சட்டத்திற்கு மதிப்பளித்து நன் இறக்கவும் சம்மதிக்கிறேன்.

இளவரசர் : எங்களை பொறுத்தவரை நீங்கள் புனிதமான மதகுருதான். ரோமியோவின் வேலைக்காரன் எங்கே ? அவன் சொல்வதையும் கேட்போம்

பல்தசார் :நான் என் எஜமானனுக்கு ஜூலியட் இறந்த செய்தியைக் கொண்டு போனேன். அதன்பிறகு அவர் மான்சுவாவிலிருந்து இங்கே கிளம்பி வந்தார்.( ஒரு கடிதத்தை காட்டுகிறான் ) இந்தக் கடிதத்தை அவர் தனது தந்தையிடம் கொடுக்க சொன்னார். என்னை இவ்விடத்தை விட்டு அகலச் சொன்னார் மறுத்தால் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்.

இளவரசர் : கொஞ்சம் அந்தக் கடிதத்தை நான் பார்க்கிறேன்.( பால்தசாரிடமிருந்து கடிதத்தைப் பெறுகிறான் ) பிரபு பாரிசின் வேலைக்காரன் எங்கே ? அவன்தானே காவலர்களை அழைத்தது ? சிரா உன் எஜமானருக்கு இங்கே இந்த இரவில் ஏன் வரவேண்டும் என்று தோன்றியது ?

வேலைக்காரன் : அவர் மலர்களை எடுத்துக் கொண்டு கல்லறையின் மேல் தூவுவதற்கு வந்தார். என்னை தனியாக இருக்கச் சொன்னார். நானும் விலகி இருந்தேன். அதன் பிறகு யாரோ ஒருவர் கையில் விளக்குடன் வந்தார். என் எஜமானர் அவர் மேல் பாய்ந்தார். நான் உடனே காவலர்களை அழைக்க ஓடினேன்.

இளவரசர் ( கடிதத்தை வெளியில் எடுத்து மேலோட்டமாக படித்தபடி ) ம்ம் இந்தக் கடிதம் பாதிரியார் சொல்வதைத்தான் உறுதி செய்கிறது. அவர்கள் இருவரின் காதலை, ஜூலியட்டின் மரணத்தை இந்தக் கடிதம் சொல்கிறது. ரோமியோ ஒரு ஏழை மருந்துக் கடைக்காரரிடம் விஷம் வாங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நஞ்சுடன் இந்தக் கல்லறைக்கு வந்து ஜூலியட் அருகில் இறப்பதற்கு வந்திருக்கிறான். எங்கே அந்த இரு பகைவர்களும் ? கபுலெட் மாண்டேகு பாருங்கள் உங்கள் பகைமை இரண்டு உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. காதல் மூலம் உங்கள் சந்தோஷங்களை அழிக்க அந்த கிரகங்கள் முடிவு செய்திருக்கின்றன. உங்கள் பகைமையை நான்தான் முடிவுக்குக்கொண்டு வராமல் இருந்து விட்டேன். அதனால் என்னுடைய சில உறவுக்காரகள் இறந்து விட்டனர். அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட்டு விட்டது.

கபுலெட் : மாண்டேகு ! என் சகோதரனே கையைக் கொடுங்கள். இதுதான் என் மகளுக்கு நீங்கள் அளிக்கும் ஜீவனாம்சம். வேறு ஏதும் நான் கேட்கவில்லை.

மாண்டேகு : ஆனால் நான் உங்களுக்கு இதைவிட அதிகம் தருவேன்.அவள் சிலையை முழுவதும் பொன்னில் வார்ப்பேன். வெனோரா நகரம் இருக்கும் வரை ஜூலியட் போன்று உண்மையும் நேர்மையும் கொண்ட மனைவி இல்லை என்ற பெயரும் நிலைத்திருக்கும்.

கபுலெட் : ஜூலியட்டின் அருகில் கிடக்கும் துர்பாக்கியசாலி ரோமியோவிற்கு நான் அதனை விட சிறந்த சிலை எழுப்புவேன். நமது பகைமையினால் இரண்டு உயிர்கள் பலியாகி விட்டன.

இளவரசர் : இந்தக் காலை ஒரு ஒளியற்ற சமரசத்தை கொண்டு வந்திருக்கிறது. சூரியன் இந்த சோகத்தினால் தலைகாட்டது. வாருங்கள் இந்த சோகத்தின் பரிமாணங்களை மேலும் பேசுவோம். சிலர் மன்னிக்கப்படுவார்கள்: சிலர் தண்டிக்கப்படுவார்கள். ரோமியோ ஜூலியட் இருவரின் கதையை போல இவ்வளவு சோகமான கதை வேறு இல்லை.

( அனைவரும் அகல்கின்றனர் )

திரை

நிறைவுற்றது.