Category: மே

தோற்றம் மறைவு (கவிதைகள் ) / ப.மதியழகன்

download (26)

1

இந்த இரவு மிகவும்
துக்ககரமானது
அதிர்ஷ்டத்தின் கதவுகள்
என் வரையில் திறக்கப்படவில்லை
இலைகள் சருகுகளாகும் போது
காலடியில் மிதிபடத்தான் செய்கிறது
வேருக்கு எதிராக இலைகள் எங்கேயாவது
போராட முடியுமா
ஆயுள் முழுவதும்
உடலின் தேவைகளைத்தானே நாம்
பூர்த்தி செய்து வருகிறோம்
கடவுள் சென்ற பாதையில்
வேறு காலடிகள் காணப்படுவதில்லை
எனக்கு முன்னே உள்ள
பாதைகள் அடைக்கப்பட்டுவிட்டன
இருளின் கோரப்பிடியில்
நிற்கதியாய் நின்றுகொண்டிருக்கிறேன்
என்னை எதிர்ப்பவர்கள்
என் பலவீனத்தையறிய
இடங்கொடுத்துவிட்டேன்
வாழ்க்கைப் பந்தயத்தில்
ஜெயித்தவர்கள் கொண்டாடப்படுகின்றனர்
தோற்றவர்கள் முயற்சியைக் கைவிட்டு
விதியை நொந்து கொள்கின்றனர்
கனவான்கள் ஏழைகளிடம்
கருணை காட்டினால்
இன்று நான் கையேந்த நேர்ந்திருக்காது
மறதி என்ற ஒன்று இல்லாவிட்டால்
மனிதர்கள் தற்கொலை
செய்து கொள்வதைத் தவிர
வேறுவழி இல்லை
ஞானியர்கள் கூட
உடலைவிட்டுச் செல்ல
தயக்கம் காட்டுகின்றனர்
உலக சட்டதிட்டங்களால்
ஆன்மாவை சிறைப்படுத்த முடியாது
என்பதால் தான் நான்
இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.

2

ஆன்மாவின் பாடல்களை
யாராவது கேட்க நேர்ந்தால்
அவர்களால் அழுகையை
அடக்க முடியாது
அடியாழத்திலிருந்து கிளம்பும்
அந்த ராகம் உயிர்களின் மேல்
அன்பைப் பொழிகிறது
உதடுகளிலிருந்து வெளிப்படும்
வார்த்தைகள் உச்சரித்தவுடன்
மரித்து விடுகின்றன
சூரியன் உதித்த உடனே
ரோஜா இதழில் படிந்துள்ள
பனித்துளி விடைபெற்றுச் சென்றுவிடும்
இந்த உலகம் அமைதியை
தொலைத்து விட்டது
சத்தமற்ற சில நொடிகளைக்கூட
மனிதனால் சகித்துக் கொண்டிருக்கமுடியாது
மற்றவர்கள் வழிவிடுவார்கள்
என எதிர்பார்த்தால் நாம்
காத்துக்கொண்டிருக்கத்தான் வேண்டும்
கல்லறைத் தோட்டத்தில்
காலங்களின் சமாதி
இருந்ததே தவிர
அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின்
பெயர்கள் பொறிக்கப்படவில்லை
கடல் நடுவில் என்
எண்ணப்படகு அலையில்
சிக்கித் தவிக்கிறது
காதலில் வீழ்ந்த என்னை
மண்மகள் முத்தமிட்டுச்
சொன்னாள் காதலின் பாதை
மரணத்தில் முடிகிறதென்று
அதலபாதாளத்தில் வீழ்ந்து
கொண்டிருந்த நான்
மரக்கிளையைப் பற்றினேன்
கடவுளை நம்பி கைப்பிடியைத்
தளர்த்தினேன் என் கபாலம் சிதறியது
அவ்வோசை கடவுளுக்கும் கேட்டிருக்கும்.

3

கடவுளுக்கு விசுவாசமாக இருக்கிறோம்
என்று சொல்லிக் கொள்பவர்கள்
நான்கு பேர் நம்ப வேண்டும்
என்பதற்காகவே இப்படி
நடிக்கிறார்கள்
கடவுளின் பெயரால்
வெகுஜனத்தை சுலபமாக
அடிமைப்படுத்தலாம் என்று
அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது
கடவுளுக்கு முன்னால்
கொசுவைவிட மனிதன்
மேலானவனா அப்படி நினைத்தால்
அவன் கடவுளே அல்ல
கண்ணுக்குப் புலப்படாத
சட்டமொன்று இம்மண்ணில்
இயங்கிக் கொண்டிருக்கிறது
சாக்ரடீஸுக்கு விஷமும்
இயேசுவுக்கு சிலுவையும் தந்தது
அந்த விதிதான்
மரத்தில் பல கிளைகள்
இருப்பதைப் போன்றது தான்
தெய்வச் சிலைகள்
ஆதாரம் வேரில் இருக்கிறது
என்பதை அறியாதவர்களா நாம்
கொடிய சிந்தனை
செயல்படுத்தாவிட்டாலும் கூட
அதுவொரு பாப காரியமே
வாழ்க்கையின் நிழலை நாம்
கவனிக்கத் தவறிவிடுகிறோம்
பேய்கள் தன்னைக் கண்டு
அஞ்சுபவனிடத்தில் தான்
ஆட்டம் காட்டுகிறது
அழிவுசக்திகளுக்கு எதிராக
கடவுள் உனக்குத் துணை
நிற்க மாட்டார்
பிரபஞ்ச அதிபதிக்கு மனிதன்
ஒரு பொருட்டேயில்லை
அரசனா ஆண்டியா
பூமியில் அவன் வாழ்க்கை எப்படிபட்டது
என்ற கோப்புகளை இறைவன்
படித்துப் பார்ப்பதே இல்லை
பரிசோதனை எலிகள்
எப்போது வேண்டுமானாலும்
மரணத்தை எதிர்கொள்ள
தயாராய் இருக்க வேண்டும்
ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த இவ்வுலகத்தில்
சமரசத்தை கொண்டுவரும்
மரணச் சட்டம் புனிதமானதாக
கொண்டாடப்பட வேண்டும்.

4

துயரநீர்ச்சுழலில் எனது வாழ்க்கைப்படகு
அகப்பட்டுக் கொண்டது
இந்த உலகில் பிரவேசித்த
ஒவ்வொருவரும் பிறரைப் பார்த்து
தாமும் மாம்சத்தை திருப்திபடுத்தவே
கற்றுக் கொள்கிறார்கள்
போகத்தில் திளைக்கும் மக்கள்
கடைத்தேற்ற வந்த உத்தமர்களின்
அழைப்புக்கு செவி கொடுப்பதில்லை
இருண்டகாலங்களில் மாபெரும்
வெளிச்சத்தை நோக்கி நாம்
முன்னேற வேண்டும் என்ற
நோக்கம் அவர்களுக்கு இருக்காது
துக்க ஆறு ஒருபோதும்
மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கிற்கு நம்மை
அழைத்துச் செல்லாது
அன்பெனும் ஓடையில்
நீந்திப் பாருங்கள்
துக்கத்தின் புதல்வர்கள்
இரட்சிக்கப்படுவார்கள்
வாழ்க்கைப் பாதையில்
எந்த மரணக்கிணற்றில்
தடுக்கி விழுவோம் என
யாருக்கும் தெரியாது
நரகத்தில் வீழ்ந்துபடுவோம் என்று
தெரிந்தும் போகத்தின் பாதையையே
தேர்ந்தெடுக்கிறது மனிதமனம்
வாலிபத்தில் நெறிமுறைகளைப்
பின்பற்றாமல் வயோதிகத்தில்
வானத்தைப் பார்த்து கதறுவதால்
பயனொன்றுமில்லை
துயரக் கடலில் நீந்துவோருக்கு
மரணமே விடுதலையை
பரிசளிக்கும்
உடல் நோய்களின் கூடாரம்
வியாதி ஒன்றே ஞானத்தைப்
பரிசளிக்கும்
சிலந்தி வலையில் சிக்கிய
பூச்சிகள் கடவுளிடம்
பாரத்தைப் போட்டு
முயற்சியைக் கைவிடுமா
காரிருள் பாதையில்
துணிந்து நடப்பவனுக்கு
விமோசனம் மிக அருகில்
இருக்கின்றது
வாழ்நாளில் ஆணிகளைநிறைய
சேகரித்துக் கொள்
நீ விருப்பப்பட்டாலும்
சவப்பெட்டியிலிருந்து
வெளியே வரமுடியாதபடி.

ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும் / உதயசங்கர்

download (22)

நீல நிற வானத்திலிருந்து நேரே சரிந்து இறங்கியது போலிருந்த பூங்கா சாலையின் துவக்கத்தில் ஏஞ்சல் தோன்றிவிட்டாள். வழியெங்கும் குல்மொகர் மரங்கள் ரத்தச்சிவப்பாய் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்தன. தர்ச்சாலை தெரியாதபடிக்கு தரையில் பூக்கள் சிதறிக்கிடந்தன. மஞ்சள் கலந்த சிவப்பு தரையில் பளீரிட்டது. மரத்திலும் சிவப்பின் நிழல் அடர்ந்து பார்ப்பதற்கு சாலை முழுவதும் சிவப்புக்கம்பளம் விரித்தது போல இருந்தது. மகேஷ் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தச்சாலையின் கீழ்புறத்தில் பூங்காசாலை நகரின் முக்கியச்சாலையோடு இணைகிற இடத்தில் ஒரு ஆலமரம் விருட்சமாய் படர்ந்திருந்தது. அந்த ஆலமரத்தின் கீழே தான் மகேஷூம் அவனது நண்பனும் பைக்கை நிறுத்தி அதில் சாய்ந்துக்கொண்டு ஒரு காலை பைக்கின் பெடலிலும் இன்னொரு காலை தரையிலும் ஊன்றி நின்று கொண்டிருந்தார்கள். ஆள் நடமாட்டம் உள்ள சாலை தான். ஆனால் மகேஷுக்கு மட்டும் எப்படி என்றே தெரியாது, ஏஞ்சலின் தலை சாலைமேட்டில் தோன்றும்போதே மகேஷ் பார்த்து விடுவான். மகேஷ் அவளைப்பார்த்தவுடன்,

“ டேய் மக்கா…மக்கா… அங்க பார்டா… என்னமா ஜொலிக்கிறா! பின்னாடி அந்த சூரியஒளி அவ மேலே பட்டுத்தெறிக்கிறத பாருடா…”

என்று அவனுடைய நண்பனிடம் பரவசமாய் புலம்புவான். மகேஷின் நண்பன் சிரிப்பான். அவன் சிரிப்பில் ஒரு கைப்பு இருக்கும். ஆனால் அந்த பரவசமனநிலையை மகேஷ் கைவிடுவதாக இல்லை. இருநூறு மீட்டர் தூரத்தில் இறங்கி வந்து கொண்டிருக்கும் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஏஞ்சல் அன்று நீல நிறத்தில் புடவை உடுத்தியிருந்தாள். எப்போதும் போல் முந்தானையைப் பறக்க விட்டிருந்தாள். சிறகுகள் அடிக்க மெல்ல இறங்கிய மயில்போல ஒயிலாக நடந்து வந்து கொண்டிருந்தாள் ஏஞ்சல். மஞ்சள்கலந்த கோதுமை நிறத்தில் இருந்த அவள் ஒரு போதும் கண்ணைப்பறிக்கும் நிறத்தில் உடை உடுத்துவதில்லை. மென்மையான நிறங்களில் அவள் உடுத்திய உடைகள் அவளைப்பளிச்சென்று காட்டியது. பின்னியும் பின்னாமலும் ஈரம் ததும்பி நிற்கும் அவளுடைய தலைமுடி பின்னால் இடுப்புக்குக்கீழே இறங்கியிருந்தது. அவள் அருகில் வரவர மகேஷூக்கு ரத்தஓட்டம் அதிகரிக்கும். உடம்பெங்கும் ஒரு படபடப்பும் நடுக்கமும் தொற்றிக்கொள்ளும். அவளுக்கும் இது தெரியும் அவனைக்கடந்து செல்லும்போது தலையைத் திருப்பாமலே ஒருபார்வை பார்ப்பாள். மகேஷின் ஈரக்குலையைக் கவ்வும். அவன் முகத்தில் ரத்தம் ஊறுவதை உணர்வான். அந்த உணர்வோடு திரும்பி அவனது நண்பனைப் பார்ப்பான். அவன் முகத்தில் வெறுப்பு கடலென பொங்கிக்கொண்டிருக்கும். அப்படியே காறித்துப்புவான்.

” என்னடா ஆச்சு..? ஏண்டா இப்படி பண்றே..”

“ எலேய் உனக்குத்தெரியலையா…? அவகூட ஒருத்தி வாரா பாருடா.. அவளும் அவள் முகரக்கட்டையும்…பாக்கச்சகிக்கல..”

“ எங்கடா வாரா… அவ மட்டும் தானே வாரா..”

“ கண்ணைத்திறந்து நல்லாப்பாரு…”

“ எனக்கு ஒண்ணுமே தெரியல..”

“ தெரியாதுடா..தெரியாதுடா… இப்ப உங்கண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது…”

தூரத்தில் ஏஞ்சல் மட்டுமே தெரிய அருகில் வர வர ஏஞ்சலின் முதுகிலிருந்து பிறந்தவள் மாதிரி அவளுடைய தோழி வருவாள். கட்டையான பரட்டைத் தலைமுடியும், பெரிய தடித்த உதடுகளும் சப்பையான மூக்கும், அகன்று விரிந்த இடுப்பும், எப்போதும் சிடுசிடுத்தமுகமும் கொண்ட ஏஞ்சலின் தோழி எப்போதும் அடர்ந்த நிறத்திலேயே சுடிதார் அணிந்திருப்பாள். இன்று கரும்பச்சை நிறத்தில் அவள் அணிந்திருந்த சுடிதார் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. அவள் பார்வையில் ஒரு சந்தேகத்தேள் கொட்டுவதற்குத் தயாராக எப்போதும் தன் கொடுக்கைத் தூக்கி வைத்திருக்கும். ஒருபோதும் சிரித்திராத அந்த முகம் பாறையைப் போல இறுகிப் போயிருக்கும். நடந்து வரும்போதோ அல்லது போகும்போதோ ஏஞ்சலும் அவளது தோழியும் ஒரு பொழுதும் பேசிக்கொண்டதாகப் பார்த்ததில்லை. ஆனால் அவளின் ஒவ்வொரு பார்வையையும் ஏஞ்சல் உணர்ந்திருந்தாள்.

ஏஞ்சலின் தோழி ஒரு போதும் மகேஷையோ, அவனது நண்பனையோ சிநேகமாக இல்லையில்லை சுமூகமாகக்கூடப் பார்த்ததில்லை. அவள் பேசுகிற மாதிரி தெரியாது. தடித்த உதடுகள் அசையும். அவ்வளவு தான் ஏஞ்சல் மகேஷின் நண்பனைப் பார்ப்பாள். அதுவரை இருந்த வெளிச்சம் மறைந்து முகம் இருண்டு விடும். லேசான நடுக்கம் உடலில் பரவியது. மகேஷ் கூட அவனது நண்பனை விட்டு விட்டு வர நினைத்தான். அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? மகேஷின் தைரியமே அவன் தானே.

ஏஞ்சல் முக்கியசாலையில் திரும்பும்போது மகேஷைப்பார்த்து ஒரு சிரிப்பைச் சிந்துவாள். அதுபோதும். மகேஷும் அவனுடைய நண்பனும் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். மறுபடியும் மறுநாள் காலையில் அந்த பூங்காசாலையில் ஆலமரவிருட்சத்தினடியில் காத்திருப்பார்கள். மகேஷின் நண்பனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் பாலியகாலத்திலிருந்தே அவனுடைய நெருங்கிய நண்பன் மகேஷ். இருவரும் ஒன்றாகவே படித்தார்கள். ஒரே மார்க் வாங்கினார்கள். மகேஷ் கொஞ்சம் குட்டை. சற்று ஒல்லி. பயந்தாங்கொள்ளி. ஆனால் வசீகரமான முகம். மகேஷின் நண்பன் கருப்பாக இருந்தாலும் உயரமாக ஜிம்பாடியுடன் இருந்தான். மகேஷின் நண்பனின் முரட்டுத்தனம் அவனுடைய உடல்மொழியில் தெரியும். முகத்தில் யாரையும் மதிக்காத ஒரு அலட்சியபாவம். மகேஷோடோ இல்லை அவனோடோ யாராவது எதிர்த்துப்பேசினால் கூடப் பிடிக்காது. உடனே கையை ஓங்கி விடுவான். எந்த வம்புச்சண்டைக்கும் தயாராக இருப்பவன்.

ஏஞ்சல் வேலைபார்க்கிற கம்ப்யூட்டர் செண்டருக்கு அடிக்கடி மகேஷும் அவனது நண்பனும் அவனுடைய வேலைக்காக ரெசியூம் பிரிண்ட் அவுட் எடுக்கப்போவார்கள். மகேஷ் அப்போது தான் ஏஞ்சலைப்பார்த்தான். கண்டதும் காதல் தான். ஆனால் ஏஞ்சல் அவ்வளவு எளிதாக பிடி கொடுக்கவில்லை. அவள் யாரைக்கண்டோ பயந்தாள். மகேஷின் நண்பன் தான்

“ அவ அந்தக் குட்டச்சியைப்பார்த்து பயப்படுதா… பரட்டைத்தலைக்கு இருக்கிற திமிரப்பாரேன்..”

என்று திட்டினான். மகேஷ் இல்லையில்லை என்று தலையாட்டினான். ஆனால் அவனுக்கும் அந்த அச்சம் இருந்தது. யார் இந்தத்தோழி? கரிய நிழல்போல எப்போதும் கூடவே வருகிறாள்? ஏஞ்சல் அந்தத்தோழி இல்லாமல் தனியே வருவதே இல்லை. அப்போது மகேஷின் நண்பன் சொன்னான்.

“ ஏன் நீ கூடத்தான் நான் இல்லாமல் தனியா எங்கேயும் போறதில்லை..”

அதைக்கேட்டதும் மகேஷ் முகம் சுளித்தான். ஞாயிற்றுக்கிழமை கம்ப்யூட்டர் செண்டர் லீவு. அன்று ஏஞ்சலைப்பார்க்க முடியாது. பார்க்க முடியாத அந்த நாளில் மகேஷ் ஏங்கிப்போவான். அன்று முழுவதும் அவனுடைய நண்பனிடம் அவளைப்பற்றிப் பேசிக்கொண்டேயிருப்பான். மகேஷின் நண்பனும் அவன் பேசுவதை தலைகுனிந்தவாறு கேட்டுக்கொண்டேயிருப்பான். எப்போதாவது,

“ கூட அவ ஃபிரெண்டும் இருக்கா பாத்துக்கோ…” என்று எச்சரிப்பான்.

அதற்கு மகேஷ் சிரித்தவாறே

“ அவ இருந்தா அவபாட்டுக்கு இருந்துட்டுப்போறா…”

என்று அலட்சியமாகச் சிரிப்பான்.

“ நீ எப்பயுமே வெளிச்சத்தை மட்டுமே பாக்கே… பக்கத்திலேயே இருட்டும் இருக்கு.. பாத்துக்க..”

என்று கட்டைக்குரலில் சொன்னான் மகேஷின் நண்பன்.

ஒரு ஞாயிறு காலைப்பொழுதில் பூங்காசாலையில் சும்மா அந்த ஆலமரத்தடியில் வந்து நின்றிருந்தான். அன்று அபூர்வமாக அவன் மட்டுமே தனியாக வந்திருந்தான். சூரியன் அப்போது தான் எழுந்து சுதாரித்துக்கொண்டிருந்த வேளை. குல்மொகர் மரங்களின் சிவந்த பூக்களில் சூரியனின் காலைக்கிரணங்கள் பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. மஞ்சள் வெயில் தார்ச்சாலையை மென்மையாக மாற்றிவிட்டிருந்தது. கூட்டம் கூட்டமாய் மேகங்கள் தங்கச்சரிகை விளிம்பிட்டு மெல்ல ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன. அந்த வேளையில் தந்தத்தின் நிறத்தில் சுடிதார் அணிந்து மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தாள் ஏஞ்சல். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளும் தனியாக அவளுடைய தோழி இல்லாமல் வந்து கொண்டிருந்தாள்.

இடது பக்கம் லேசாகச் சாய்ந்த அவளுடைய நடையில் ஒரு பாந்தம் இருந்தது. அவளும் அவனைப்பார்த்து விட்டாள். அவள் திடுக்கிட்டது தெரிந்தது. இடது கையால் அவளுடைய துப்பட்டாவின் முனையைப் பிடித்துக்கொண்டு வலது கையில் மார்போடு பைபிளை அணைத்துக் கொண்டே மெல்ல நடந்து வந்தாள். அவளுடைய மெலிந்த விரல்களிலிருந்து வெளிப்பட்ட அன்பினால் பைபிள் துடித்துக்கொண்டிருந்தது. மகேஷ் அந்தக்கணத்தில் இயேசுவைத் தன் ஜீவனாக ஏற்றுக்கொள்ளத் தயாரானான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் நடமாட்டம் அதிகம் இல்லை.

மகேஷின் இதயம் துடிக்கிற சத்தம் அவனுக்கு வெளியில் கேட்டது. அவளை நிறுத்திச் சொல்லிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவள் அருகில் வந்தபோது ஓரடி அவளைப்பார்த்து நெருங்கியும் விட்டாள். படபடப்புடன் அவள் அவனை ஏறிட்டுப்பார்த்தாள். அந்தக்கண்களில் அன்பின்ஓளியைப் பார்த்தான். சூரியனின் கதிர்கள் விளிம்பிட்ட அவளைப்பார்க்கும்போது அவனுக்குள் தீராத தாகம் எழுந்தது. நா வறண்டது. எச்சிலை ஊற வைத்து விழுங்கினான். அவள் உண்மையில் அந்த ஓளியில் தேவதை போலவேத் தோன்றினாள். மகேஷுக்கு நடந்து கொண்டிருப்பது கனவா என்று கூடச் சந்தேகம் வந்தது. முன்னால் நிழல் விழுந்த அவள் உருவத்தின் அழகு அவனை மெய்மறக்கச்செய்தது. அந்தக்கணத்தில் அவன் ஏஞ்சலின் பரிபூர்ண அன்பை உணர்ந்தான். இது போதும். அந்தக்கணம் இனி வாழ்வில் என்றாவது வருமா?

அன்று மகேஷ் முடிவெடுத்தான். வாழ்ந்தால் இனி ஏஞ்சலோடு தான் வாழவேண்டும். அதைக்கேட்ட மகேஷின் நண்பன் கோபப்பட்டான்.

“ நீ அவளோட வாழ்றதுக்காக நான் அவ ஃப்ரெண்ட் …அதான்..அந்தப்பரட்டைத்தலை பிசாசோட வாழணுமா? “

என்று கேட்டான். மகேஷுக்கு அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. மலங்க மலங்க விழித்தான். ஆனால் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. மகேஷின் நண்பன் அவனை விட்டு எங்கேயும் போகமாட்டான். போகவும் முடியாது.

மகேஷுக்கு சென்னை ஐ.டி. கம்பெனியில் சுமாரான சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆரம்பத்தில் குறைவான சம்பளமாக இருந்தாலும் போகப்போக சம்பளம் அதிகமாகும் வேலைப்பாதுகாப்பும் உண்டு என்ற தைரியத்தில் சேர்ந்து விட்டான். ஆறுமாதம் கழிந்த பிறகு ஊருக்குச் சென்றான். அவனுடைய நண்பனுடன் ஏஞ்சலின் வீட்டுக்குச் சென்றான். ஏஞ்சலின் அம்மா கார்மெண்ட்ஸிலும், அப்பா ஜவுளிக்கடையிலும் வேலை பார்த்தார்கள். ஒரு தம்பி ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அங்கே ஏஞ்சலும் அவளது தோழியும் இருந்தார்கள். கொஞ்சம் தயங்கினாலும் அவர்களுக்குச் சம்மதம். மகேஷும் வீட்டில் பேசி வற்புறுத்தித் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

ஒரு வழியாகத் திருமணம் முடிந்து சென்னைக்கு தனிக்குடித்தனம் போனார்கள். புதுமணத்தம்பதிகளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வர சம்பந்திகளும் போயிருந்தார்கள். ஏஞ்சலின் தோழியும், மகேஷின் நண்பனும் இல்லாமலா. அவர்களும் உடன் போயிருந்தார்கள். எல்லோரும் திரும்பி விட்டார்கள். ஏஞ்சலின் தோழி ஏஞ்சலோடேயே தங்கி விட்டாள். மகேஷின் நண்பனும் மகேஷோடு தங்கி விட்டான்.

எப்படி நான்குபேரும் ஒரே வீட்டில் ஒரே படுக்கையறையில் இருக்கமுடியும் என்று சந்தேகப்படும் வாசகர்களுக்கு ஏஞ்சலும், மகேஷும், சேர்ந்து ஒரே குரலில்

“ எப்போது நாங்கள் தனியாக இருந்தோம்? “ என்று கேட்கிறார்கள்.

•••

சித்தாந்தங்களின் குகை / சூர்யா

download (21)

1.சித்தாந்தங்களின் குகை

இத்தனை நாள் அக்குகையினுள் பதுங்கி கிடந்தேன்
பெருநிழலை தந்த குகை பிரம்மாண்ட சலிப்பை தரத் தொடங்கியபோது
குகையை விட்டு வெளியேற ஓர் அடி எடுத்து வைத்தேன்
வரலாற்றின் விரல்கள் என்னை இறுக பிடித்து பின்னே இழுத்தன
குகையை விட்டு வெளியேற மற்றொரு அடியை எடுத்து வைத்தேன்
அடையாள அட்டைகளின் சிம்பொனிகள் என் காதுகளை இறுக பிடித்து பின்னே இழுத்தன
குகையை விட்டு வெளியேற மற்றொரு சக்திவாய்ந்த அடியை எடுத்து வைத்தேன்
அறத்தின் வியர்வை வாடை என் நாசிகளை இறுக பிடித்து பின்னே இழுத்தது
குகையை விட்டு வெளியேற இன்னொரு அடியை எடுத்து வைத்தேன்
அதிகாரத்தின் பற்கள் என் நாக்கினை இறுக கவ்வி பின்னே இழுத்தன
குகையை விட்டு வெளியேற மற்றொரு அடியை எடுத்து வைத்தேன்
மொழியின் கண்கள் என் பார்வையை கவர்ந்து பின்னே இழுத்தன
கடைசியாக கடைசியாக என் மற்றுமொரு அடியை எடுத்து வைத்தபோது
சித்தாந்தங்களின் குகைகளை விட்டு வெளியே வந்திருந்தேன்
யாவும் உன்னத அழகியலோடு இயங்கத் தொடங்கியது

**

2.அரூபினி

அவளுடைய ஓசையிலி பாடலை
உங்கள் செவிகளின் செவிகள் வழியே தான் கேட்க முடியும்
அவளுடைய அரூப சொரூபத்தை
உங்கள் விழிகளின் விழிகள்
வழியே தான் பார்க்க முடியும்
அவளுடைய நீலப்பரிமளத்தை உங்கள் நாசிகளின் நாசிகள்
வழியே தான் முகரமுடியும்
அவளுடைய கலவர முலைகளை உங்கள் வாய்களின் வாய்
வழியே தான் சுவைக்கமுடியும்
இப்படியும் ஒரு பெண்ணா யென சிந்திக்கிறீர்களா
சிந்தனைகள் தேவையில்லை
அறிவுக்கோ அவசியமில்லை
ஒருவேளை போற்றி போற்றி யென வெட்டவெளியில் நின்று
உரக்க சொல்வீர்கள் யெனில்
அப்பெண்ணின் அதரங்கள்
உங்கள் அதரங்களின் மீது துயில் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது

**

3.விளக்கங்களுக்கு எதிரான மனநிலையின் குறிப்புகள்

- ஜீவன்-சூர்யா

1
ஒரு மரம்
எப்படி இருக்கிறதென ஏன் உங்களிடம் விளக்க வேண்டும்
அதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது இப்போது
அதை விளக்காவிடில் அது மரமாக இல்லாமல் போய்விடுமா என்ன
அது ஒரு மரம் அவ்வளவு தான்

2
ஏன் அனைத்திடமிருந்தும்
அர்த்தத்தை எதிர்பார்க்கிறீர்கள்
சற்று அர்த்தத்தை மறந்து வாழ்ந்தால் தான் என்ன
மாற்றங்கள் வருகிறது போகிறது
ஏன் மாற்றங்களை அறிவித்துக்கொண்டு கணத்தை வீணாக்குகிறீர்கள்
உங்களைத் தான் கேட்கிறேன்

3
அது ஒரு உதிர்ந்த இலை அவ்வளவு தான்
அந்த இலை விளக்கங்கள் இல்லாதபோது அழகாகத் தான் இருந்தது
நீங்கள் விளக்க தொடங்கியபோது தான் அந்த இலை தன் உன்னதத்தை இழந்திருந்தது
விளக்கமளித்து விளக்கமளித்து சலிக்கவில்லையா உங்களுக்கு
எதையும் விளக்க உதவாத மொழியை எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம் ?

*******

குறிப்பு:
இதில் இடம்பெறும் மூன்றாவது கவிதை நானும் எனது நண்பரான ஜீவனும் இணைந்து எழுதியது.

இளம்பெண் ( சிறுகதை ) : ஜமைக்கா கின்கெய்டு / தமிழில் / சமயவேல்

download (23)

எழுத்தாளர் குறிப்பு

ஜமைக்கா கின்கெய்ட் 1949ல் மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான அன்டிஹுவா நாட்டில் பிறந்தவர். கரீபிய-அமெரிக்க எழுத்தாளரான இவர் தற்பொழுது அமெரிக்காவில் உள்ள வடக்கு பென்னிங்க்டனில் வசிக்கிறார். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இவர் குடும்பத்தால் புறக்கனிக்கப்பட்டு, 17 வயதில், அமெரிக்காவுக்கு வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். ஆனால் இதைப் பொறுக்க முடியாமல் குடும்பத்துடனான தொடர்பை துண்டித்து விடுகிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகே அன்டிஹுவா திரும்புகிறார். இடையில் படித்து, எழுதத் தொடங்கி 1979ல் ஒரு இசையமைப்பாளரைத் திருமணம் செய்துகொள்கிறார். ‘தி நியூ யார்க்கர்’ இதழில் பணிபுரிகிறார். இவரது கதைகள் ‘பாரிஸ் ரெவ்யூ’ மற்றும் ‘தி நியூ யார்க்கர்’ இதழ்களில் வெளியாகின்றன. ‘லூஸி’ என்ற இவரது நாவல் ‘தி நியூ யார்க்கர்’ இதழில் தொடராக வந்தது.

‘அன்னி ஜான்’ ‘லூஸி’ ‘எனது அம்மாவின் சுயசரிதை’ ‘திருவாளர் போட்டர்’ ‘பார் இப்பொழுது பிறகு’ ஆகியவை இவரது நாவல்கள். ‘நதியின் அடியாழத்தில்’ இவரது சிறுகதைத் தொகுப்பு. ‘ஒரு சின்ன இடம்’ ‘எனது சகோதரன்’ ‘சொல் கதைகள்’ ‘எனது தோட்டப் புத்தகம்’ ‘மலர்கள் நடுவே: இமயமலையில் ஒரு நடை’ ஆகியவை இவரது உரைநடை நூல்கள். தொகுக்கப்படாத கதைகளும் கட்டுரைகளும் நிறைய இருக்கின்றன.

அம்மாவுக்கும் மகளுக்குமான ஆழமான, சக்திமிக்க உறவைப் பதிவு செய்த இவரது எழுத்துக்களை பெண்ணிய எழுத்துக்கள் என்பதோடு கறுப்பின எழுத்து என்பதையும் இணைத்தே பார்க்க வேண்டும் என்கிறார் இவர். காலனியம், காலனியப் பாரம்பர்யம், பின்காலனியம், நவ-காலனியம், பால் மற்றும் பாலியல், பிரிட்டீஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம், காலனியக் கல்வி, இனம், வர்க்கம், அதிகாரம் என்று பல பகுதிகளில் பயணம் செய்கிறது இவரது எழுத்து. அண்மையில் இவர் எழுதியிருக்கும் ‘பார் பிறகு இப்பொழுது’ என்னும் நாவல் காலத்தை ஆய்வு செய்கிறது.

••••••••••

திங்கள் கிழமை வெள்ளைத் துணிகளைத் துவைத்து கற்குவியலின் மேல் காயப் போட வேண்டும்; செவ்வாய்க்கிழமை கலர் துணிகளைத் துவைத்து கொடிக்கம்பியில் உலரப் போட வேண்டும்; கொளுத்தும் வெயிலில் வெறுந் தலையுடன் நடக்கக் கூடாது; பூசணிக் கழிவுகளை சூடான இனிப்பு எண்ணெய்களில் சமைக்க வேண்டும்; உனது சிறிய துணிகளைக் கழற்றி எடுத்த உடனே நீரில் ஊற வைத்துவிடு; ஒரு அருமையான ப்ளவ்ஸ் தைப்பதற்காக பருத்தித் துணியை நீ வாங்குகிற போது, அதில் பசை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள், ஏனெனில் ஒரு துவைப்புக்குப் பிறகு அதனால் தாங்க முடியாது; கருவாட்டை நீ சமைப்பதற்கு முந்திய இரவே ஊற வைத்துவிடு; ஞாயிறுப் பள்ளியில் நீ பென்னா பாடுவது உண்மையா?; எப்பொழுதுமே நீ உன் உணவை அது யாரோ ஒருவருடைய வயிறாக மாறிவிடாத வகையில் சாப்பிடு; ஞாயிறுகளில் ஒரு பெண்மணியைப் போல நடக்க முயற்சி செய், நீ மிக உருப்படாமல் ஆகிக் கொண்டிருக்கும் வேசியைப் போல அல்ல; ஞாயிறு பள்ளியில் பென்னா1 பாட வேண்டாம்; துறைமுக-எலிப் பையன்களிடம் நீ பேசக் கூடாது, திசைகள் கூட காட்டக் கூடாது; தெருவில் பழங்களைச் சாப்பிடாதே—ஈக்கள் உன்னைத் துரத்தும்; ஆனால் நான் ஞாயிறுகளில் பென்னா பாடுவதே கிடையாது மற்றும் ஞாயிறு பள்ளியில் ஒருபோதும் இல்லை; இவ்வாறு தான் ஒரு பித்தானைத் தைக்க வேண்டும்; நீ சற்று முன்பு தைத்த பித்தானுக்கு இவ்வாறு தான் பட்டன்துளை செய்ய வேண்டும்; ஒரு உடைக்கு, அதன் கரை கீழே இறங்குவதைப் பார்க்கும் பொழுது, இவ்வாறு தான் கரை அடிக்க வேண்டும், ஒரு வேசி போல தெரிவதை நீயே தடுப்பதற்காக, நீ அப்படி ஆவதற்குத்தான் உருப்படாமல் போய்க் கொண்டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்; உனது அப்பாவின் காக்கி சட்டையை ஒரு சுருக்கமும் இல்லாதவாறு இப்படித்தான் அயன் பண்ண வேண்டும்; உனது அப்பாவின் காக்கி கால்சராய்களை ஒரு சுருக்கமும் இல்லாதவாறு இப்படித்தான் அயன் பண்ண வேண்டும்; இவ்வாறுதான் நீ ஒக்ராவை2 வளர்—வீட்டிலிருந்து தூரத்தில் , ஏனெனில் ஒக்ரா மரத்தில் சிவப்பு எறும்புகள் குடியிருக்கும்; நீ டஷீனை3 வளர்க்கும்போது, அதற்கு நிறைய தண்ணீர் கிடைக்குமாறு உறுதிசெய்; இல்லாவிட்டால் நீ அதை சாப்பிடும் பொது உனது தொண்டை அரிக்கும்; ஒரு மூலையை இவ்வாறுதான் நீ பெருக்க வேண்டும்; ஒரு முழு வீட்டை இவ்வாறுதான் நீ பெருக்க வேண்டும்; ஒரு முற்றத்தை இவ்வாறுதான் நீ பெருக்க வேண்டும்; உனக்கு மிக அதிகமாகப் பிடிக்கும் ஒருவரிடம் இவ்வாறுதான் நீ புன்னகைக்க வேண்டும்; உனக்கு பிடிக்கவே செய்யாத ஒருவரிடம் இவ்வாறுதான் நீ புன்னகைக்க வேண்டும்; நீ முழுவதுமாக விரும்புகிற ஒருவரிடம் இவ்வாறுதான் நீ புன்னகைக்க வேண்டும்; தேநீருக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; டின்னருக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; முக்கிய விருந்தினருடன் டின்னருக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; லஞ்சுக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; காலை உணவுக்காக நீ ஒரு மேஜையை இவ்வாறுதான் ஒழுங்கு செய்ய வேண்டும்; உன்னை அவ்வளவாகத் தெரியாத ஆண்கள் இருக்கும்போது நீ இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும், இவ்வகையில் நீ ஆகுவதற்கு எதிராக உன்னை எச்சரிக்கை செய்து வந்த வேசியை, அவர்கள் உடனடியாக அறிந்துகொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் உன்னைக் கழுவிக் கொள், உனது சொந்த எச்சிலைக் கொண்டாவது; பளிங்குக் குண்டுகள் விளையாட கீழே சம்மணம்போட்டு உட்கார்ந்துவிடாதே—நீ ஒன்றும் பையனில்லை, உனக்குத் தெரியும்; ஜனங்களது பூக்களைப் பறிக்காதே- உன்னை ஏதேனும் பிடித்துவிடலாம்; கரும்பறவைகளின் மேல் கற்களை எறியாதே, ஏனெனெனில் அது ஒரு கரும்பறவையாகவே இல்லாமல் இருக்கலாம்; ரொட்டிப் புட்டை4 இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; டவ்கொனாவை5 இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; மிளகுப் பானையை இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; ஜலதோஷத்திற்காக ஒரு நல்ல மருந்தை இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; ஒரு குழந்தையை அது குழந்தையாவதற்கு முன்பே வெளியே எறிய ஒரு நல்ல மருந்தை இவ்வாறுதான் தயாரிக்க வேண்டும்; ஒரு மீனை இவ்வாறுதான் பிடிக்க வேண்டும்; உனக்குப் பிடிக்காத ஒரு மீனை, அந்த வகையில் உனக்குக் கெட்டது எதுவும் நேராதபடி இவ்வாறுதான் நீ திரும்ப எறிய வேண்டும்; ஒரு ஆணை இவ்வாறுதான் அடாவடியாக அச்சுறுத்த வேண்டும்; இவ்வாறுதான் ஒரு ஆண் உன்னை அச்சுறுத்துவான்; இவ்வாறுதான் ஒரு ஆணை நீ காதலி, இது வேலை செய்யாவிட்டால் வேறு வழிகள் இருக்கின்றன, அவைகளும் வேலை செய்யாவிட்டால் விட்டுத் தள்ளுவது பற்றி மோசமாக உணராதே; இவ்வாறுதான் நீ காற்றில் மேலே துப்பு, அதை நீ விரும்பினால், மற்றும் அது உன் மேல் விழுந்துவிடாதபடி இவ்வாறுதான் விரைவாக நகர்ந்துவிட வேண்டும்; இவ்வாறுதான் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும்; எப்பொழுதுமே ரொட்டியை அமுக்கிப் பார்க்க வேண்டும் அது புதியதாக இருக்கிறதா என உறுதிப்படுத்த; ஆனால் ரொட்டிக்காரர் ரொட்டியைத் தொட என்னை அனுமதிக்கா விட்டால்?: நீ சொல்வதின் பொருள், ரொட்டிக்காரர் ரொட்டியின் அருகில் அனுமதிக்க விடாத பெண்ணாக அல்லவா நீ உண்மையில் இருக்கப் போகிறாய்?

—-

download (24)

Jamaica Kincaidன் “At the Bottom of the River” என்னும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள முதல் கதை. ஆங்கிலத்தில் Girl என்று இருக்கிறது.பெண் குழந்தை என்றுதான் கூற வேண்டும். ஆனால் கதையில் வரும் பெண் பதின்ம வயதுப் பெண்ணாக இருக்கிறார்.

1. Benna என்பது ஒருவகை நாட்டுப்புறப் பாடல். கேள்வி பதில் வடிவில் கிறிஸ்துவத்தை பகடி செய்யும் பாடல்கள்.

2. Okra: இது உண்மையில் வெண்டைச் செடி. ஆனால் கதையில் மரம் என்று வருகிறது. வெள்ளை நைல் நதிக் கரைகளில் மரம் அளவுக்கு வளர்வதாகவும் இணையத்தில் வாசித்தேன்.

3. Dasheen: நமது சேப்பங்கிழங்கு. அரிப்புத் தன்மையுடையது.

4. Pudding: இது புட்டு என மொழிபெயர்ப்பதில் தவறில்லை.

5. doukona: இதுவும் ஒரு வகைப் புட்டுதான். ஆனால் மீனிலிருந்து செய்யப்படுகிறது. கேரளத்தில் இதே போன்று ஒரு மீன் புட்டு இருக்கிறது.

—-

( மலைகள் ஆசிரியர் குறிப்பு
இந்தக் கதை ஒரே பாராவாகதான் இருக்கிறது )

றாம் சந்தோஷ் கவிதை ( அறிமுகக் கவிஞர் )

images (18)

திணை: நீட்
துறை: தேர்வெழுதவந்து எரிச்சலுற்றுத் திரும்புதல்

இந்நூற்றாண்டிலும் நெய்யிட்டு,
வகுடெடுத்தனுப்பும் தம் தாய்களுக்கு
டாடா பகன்றுவிட்டு செலுத்துகின்றனர் பைக்-ஐ.
காலையின் ஒரு தேர்வுக்கு வைகறை புறப்பாடு
நன்நிமித்தம்தானா என்பது தாய்களுக்கு
ஒரு கேள்வியாகவே மீந்திருந்தது.

தலைவி தன் கடமையாற்ற
தேர்வுவறையின் முன்போய் சலாம் இட்டபோது
அதுபோதாது, உன் உயரம் ஆகாது,
கொஞ்சம் மண்டியிடேன் என்று கட்டளை இடப்பட்டது.
தலைவி தன் கடமையாற்றுவதில்
சற்றும் சளைக்காதவள் என்பதால்
அவள் வளையத் தலையைக் கொடுக்க
கொடுத்த தலையின் மயிர்ப் பரப்பில்
பிரேதப் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தேறியது.

மயிர்ப்பரப்பில் சோதனை செய்ய என்ன மயிர் இருக்கிறது
என்று தலைவிக்குப் பலமுறை கேள்வி வந்தது
அவள் வந்த கேள்விகளை டேக்-டைவர்ஷன் போர்டு காண்பித்து
திரும்பவும் தொண்டைக்குள்ளேயே திருப்பி அனுப்பிவிட்டாள்.
ஆகையால், அவள் தேசதுரோகி இல்லை என்பது நிறுவப்பட்டு தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டாள்.
அவள் எழுதி முடித்துவிட்டு எழுத்து வந்தபோது
தம் எஜமான நாய்களைப் பார்த்து
கொஞ்சம் எச்சிலை மெல்லத் துப்பி
தன் எரிச்சலை வேகமாய் ஆற்றுப்படுத்தினாள்.
அதற்கும்மேல் தன்னால் என்னதான் முடியும்
என்று நொந்தும் கொண்டாள்.

இஃதோர் புறமிருக்க -
அதன் எதிர்ப் புறம்,

தலைவனின் கைச்சட்டை கிழித்தெறிய
அவனோ கொஞ்சமும் புறமுதுகிடாது
தன் காற்சட்டைக் கிழித்தெறிந்தாலும்
தனக்கோர் களங்கமுமில்லை என நினைத்துக்கொண்டான்.
அவன் தன் அம்மணத்திற்கு அருகில் சென்றபோது
அதைக் கொஞ்சம் பார்த்துத் தொலைத்தாள் தலைவி;
அவளொடு இன்னொரு கிழவியும் அதையே.

தலைவன் தன் கடமையாற்றவா அல்லது காதலுறவா என்று
பலமுறை நினைத்துக்கொண்டான். அவனுக்கு,
ஏதோ கருமம் எழுதிவிட்டுபோகலாம்
என்ற பழக்க உணர்வு தலைவனின் உடலில் படர்ந்து படர்ந்தது.
அவன் நாயொன்று மல்லாக்க ரோட்டில் புரள்வதுபோல்
மூளையைப் பைத்தியமாய் புரட்டப் புரட்டினான்.

புரட்டப் புரட்டியவன் அதை முடித்துவிட்டு புறப்படும் வேகத்தில்
இமைகளை வில்களாக்கிப் பார்வையை வேக எய்தினான்
அவை தலைவி தாங்கியிருந்த டேக்-டைவர்ஷன் போர்டைப் பார்த்து
திரும்பி வந்து அவனையே தாக்கின
அதனால் தலைவன் தன்னையே காதலுற்றான்
தலைவியோ உசாராக மீந்துபட்டாள்.

•••

பாதுகாப்பானது எனக் குறிக்கப்பட்டது (BRIYANA NASEER) பாகிஸ்தானிய பெண் கவிஞர் / தமிழில் / பத்மஜா நாராயணன்

images (13)

எனக்கு பத்து வயதாய் இருக்கும்போது
காரில் என் அருகில் அமர்ந்திருந்த
எங்களில் பெரியவளான
மாமன் மகள் கூறுவாள்
‘ஓரினச் சேர்க்கையாளர்களை நான் வெறுக்கிறேன்
அவர்கள் அனைவரும்
இறந்து போகவேண்டுமென
நான் விரும்புகிறேன்’ என
அதை பெரியவர்களில் ஒருவர் கூட
மறுக்கவில்லை.

இஸ்லாத்தைப் பற்றி எனக்கு
கொஞ்சம் தான் தெரியும்
ஆனால் அது எனக்கு
வெறுப்பைக் கற்றுத்தரவில்லை.

எனக்கு பதிமூன்று வயதாய் இருக்கும் போது
என் நெருங்கிய தோழியும்
நானும் தரையில் படுத்திருந்தோம்
என் பள்ளித் தோழர்களைப் பற்றி
அவளிடம் அளந்து கொண்டிருந்தேன்
அதில் ஒருத்தி இருபாலின சேர்க்கை
உடையவள் என்று குறிப்பிடட போது
தோல் வியாதி இருப்பவள் போல்
என்னை வெறுப்புடன் நோக்கி
நான் யாருடன் பழகுகிறேன்
என்பதில் கவனமாய் இருக்க வேண்டும்
என்றெச்சரிக்கிறாள்

கடவுள் நம் அனைவர் மேலும்
அன்புள்ளவர் தானே?
அவர் கருணையுள்ளவர் அல்லவா?

எனக்கு பதினாறு வயதாகும் போது
என் முதல் முத்தத்தை
பெற்று விட்டேனா
என்றவள் கேட்கிறாள்.
ஒரு பொய்யை நான் பொய்யுரைக்கிறேன்
அது இரு பக்கங்களிலும்
வேதனையளிக்கிறது.
ஏனெனில்
ஒரு பெண்ணை முத்தமிட்டதை
அவளிடம் கூறவே விரும்புகிறேன்
ஆனால் அதற்காக
அவள் என்னை வெறுப்பதை
விரும்பவில்லை .

அன்பு எவ்விதமாய்
இருப்பினும்
கடவுளதை தீயதென்று
காணமாட்டார் என
எனக்குள் கூறிக்கொள்கிறேன் .

எனக்கு பதினெட்டு வயதாகும் போது
சொந்த ஊரான ஃ ப்ளோரிடா மாலில்
கைகோர்த்து நடந்து கொண்டே
உள்ளாடை அணிந்து நிற்கும்
பொம்மைகளைக் கண்டு சிரிக்கும் போது ,
அவள் எனக்காக
திருமணத்திற்கு முன்பான
ஒரு கன்னிவிருந்தை
அளிக்கப்போவதாய் உறுதியளிக்கிறாள்
நான் வெளியே புன்னகைத்தாலும்
அது இரண்டு கன்னிகளாய்
இருக்கும் பட்சத்தில்
தரமுடியாதே என்று
நினைப்பதை தவிர்க்க முடியவில்லை.

என்னைப் போலுள்ளவரெல்லாம்
எங்கிருக்கின்றனரோ
என்று வியக்கிறேன்.
என்னை போலவே அனைவரும்
அமைதியாய் உள்ளனரோ?

எனக்கு இருபத்தி ஒன்று வயதாகும் போது
ஓரின பாலர் மணம்
ஐம்பது மாநிலங்களில்
சட்டத்தால் செல்லுபடியாகிறது.
அப்பா ஓரின பாலர் அனைவரும்
பெண் உடலில் சிறைப்பட்டிருக்கும்
ஆண்கள் என்றும்
அதைப் போலவே
ஓரின சேர்க்கை விரும்பும் பெண்களும்
என்றுரைக்கிறார்
இவ்வாறானவர்கள்
திருமணம் செய்து கொள்வதற்கு பதில்
செத்து தொலைக்கலாம் என்கிறார்

என் அறையில் நான் ஒளிந்து கொள்கிறேன்
என்னை ஒரு பந்து போல் சுருட்டிக் கொள்கிறேன்
ஏனெனில் என்னால் விலக முடியாது.

என் இருபத்தி ஓறாவது வயதில்
திரும்பிய இடமெல்லாம்
‘பிரைட் கொடிகள்’** பறந்து கொண்டிருக்கும்
சிக்காகோவிற்கு ஓடிப் போகிறேன்
இங்குஎன்னைப் போலவே
பலரைக் காண்கிறேன்
எனக்கு நானே பொய் பேசிக்கொள்ளவில்லை
என்பதை இறுதியாக உணர்கிறேன்.

எனக்கு இருபத்தி இரண்டு வயதாகும் போது
நான் பிறந்த வீட்டின் அருகே
இருந்த ஓரினச் சேர்க்கை கிளப் ஒன்றில்
ஐம்பது பேரை
ஒரு முஸ்லீம் கொல்கிறான் .

என் இதயம் பலமிழக்கிறது
என் மூளை
இது ரமலான் மாதமாயிற்றே
என்பதிலேயே நிலைத்து நிற்கிறது.

அது இறப்பை மாற்றியா விடும்?
அல்லது
அமைதியாக இருக்கும் படி
நினைவுறுத்தப்பட்ட
எங்களைப் போன்றோரைக்
காப்பாற்றியா விடும்?

என் கர்வம்
என் பயத்தை விட அடர்த்தியானது
என எங்காவது
என்னால் வாழ இயலுமென்றால்
அவ்வாழ்விடம் எங்கிருக்கிறதென்பது தான்
எனக்கு தெரியவே இல்லை.!!

•••

குறிப்பு.
பிரைட் கொடிகள்.—-வானவில் நிறத்திலான ஓரினச் சேர்க்கைக்கான கொடி

•••
ப்ரியானா நஸீர் அமெரிக்க பாகிஸ்தானியக் கவிஞர்
உளவியல் பட்ட மேற்படிப்பு .மேற்கொண்டுள்ளவர் .

அவர்கள் நம் அயல்மனிதர்கள் – 01 ( தொடர் ) தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி / தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

download (19)

இலங்கையில் தினந்தோறும் அவர்களைக் காண்கிறோம். பேரூந்துகளில், அலுவலகங்களில், வியாபார ஸ்தலங்களில், சந்தைத் தெருக்களில் எல்லா இடங்களிலும், அவர்களும், அவர்களது மொழியும் வியாபித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையின் மூன்று தசாப்த காலப் போரின் வடுக்களாக, அவர்களையும், அவர்களது மொழியையும் கொடூர எதிரிகளாக சித்தரித்துக் காட்டியுள்ளன சர்வதேச ஊடகங்கள். அதன் பலனாக, இன்றும் கூட தமிழ் வாசகர்களிடத்தில் பரிச்சயமாக உள்ள ரஷ்ய இலக்கியங்கள், ஆங்கில மற்றும் பிற மொழி இலக்கியங்களுக்கு மத்தியில், புறக்கணிக்கப்பட்டு, தொலைவாகிப் போயுள்ள மொழியாக சிங்கள மொழி மாறி விட்டிருக்கிறது.

சிங்கள மொழி, உலகில் இலங்கை எனும் நாட்டில் மாத்திரமே பாவனையிலுள்ள ஒரு பிரத்தியேகமான மொழி என்பதில் நாம் அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அவ்வாறே சிங்கள மொழி இலக்கியங்களும், நம் வாழ்வியலோடு மிகவும் நெருக்கமானதாகவே இருக்கின்றன. நம் மூதாதையர்கள் கூறி மகிழ்ந்த எத்தனையோ நாட்டுப்புறக் கதைகளை இன்னும் பொக்கிஷமாக நினைவில் வைத்திருக்கிறோம் இல்லையா?

இந்தப் பத்தித் தொடர் மூலமாக, நம் பழங்கால வாழ்வியலை, நிகழ்கால ஜீவிதத்தை சிங்களக் கவிதைகளினூடாக உணரத் தலைப்படும் அதே வேளை, தமிழ் வாசகர்கள் பெரிதும் அறிந்திராத சிங்கள மொழிக் கவிஞர்களை அறியச் செய்யும் முயற்சியாகவும் அமைகிறது.

எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்று, பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாகி, தற்போது ஆசிரியையாகக் கடமையாற்றி வரும் கவிஞரும், எழுத்தாளருமான தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி, நவீன தலைமுறை சிங்களக் கவிஞர்களில், படைப்புக்கள் மூலம் குறிப்பிடத்தகுந்த ஒருவராகத் திகழ்கிறார். ஆசிரியையாக இருப்பதால், சமகால சிறுவர்கள், மாணவர்களின் உளப்பாங்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இவரது கவிதைகள் யதார்த்தமாக வெளிப்படுத்தி, வளர்ந்தவர்களுக்கு அறிவுறுத்துகின்றன.

சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதிவரும் இவர், இதுவரையில் 3 கவிதைத் தொகுப்புகள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 2 சிறுவர் இலக்கியப் பிரதிகள், 3 சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல் என பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். இவரது கவிதையொன்றைக் கீழே தருகிறேன்.

உதிக்காதே சூரியனே

வேண்டாம் சூரியனே நீ உதிக்க
எனக்குப் பிடித்திருக்கிறது
இப்படியே சுருண்டு படுத்திருக்க
உதிக்கவே இல்லையாயின் சூரியன்
உலகம் எவ்வளவு அழகானதாயிருக்கும்

சூரியன் உதித்ததுமே
ஓடத் தொடங்குவாள் எனது தாய்
என்னையும் இழுத்தபடி.

கழிவறைக்குப் போனாலும் அம்மா கத்துவாள்
‘சீக்கிரம் வா… தாமதமாகுது’
வழிநெடுக காலையுணவைப் பாதி தின்றவாறு
சீருடையைச் சரி செய்தபடி ஓடிப் போய் நின்றால்
தடியை நீட்டியவாறு அதிபர் கேட்கிறார்
‘விரைவாக வரத் தெரியாதா… தாமதிக்கிறாய்’

தாமதமானவர்களின் வரிசையில் காத்திருந்து
வகுப்பறைக்குப் போனால்
ஆசிரியை உத்தரவிடுகிறாள்
‘வீட்டுப் பாடம் செய்யவில்லைதானே
முழங்காலில் நில் வெளியே போய்’

பள்ளிக்கூடம் விட்டு
பிரத்தியேக வகுப்புக்கும் சென்றுவிட்டு
வீட்டுக்கு வந்தால்
அப்பாவின் கட்டளை
‘விளையாடப் போகக் கூடாது,
தொலைக்காட்சி பார்க்கக் கூடாது,
புத்தகத்தைக் கையிலெடு’

உதிக்காதே சூரியனே
எனக்கு சுருண்டு படுத்திருக்க
இரவு எவ்வளவு அழகானது
***

ஒரு சிறுபராயத்துப் பிள்ளையின் மனப்பாங்கில் எழுதப்பட்டுள்ள இக் கவிதை, தற்கால சமூகத்தில், அனைத்து மொழி பேசுபவர்களுக்கும் மிகவும் பொருந்துகிறது அல்லவா? குழந்தைகளுக்கான எல்லாச் சட்டங்களும் பெற்றவர்களாலேயே இயற்றப்படுகின்றன. குழந்தைகளை, குழந்தைகளாக வாழ விடுவதிலேயே அவர்களது எதிர்காலத்தின் வெற்றி அமைந்திருக்கிறது என்பதை மறந்து விடுபவர்களுக்கு, இவ்வாறான கவிதைகளே அதை நினைவுபடுத்துகின்றன.

••••

images (14)

mrishanshareef@gmail.com

முத்தொள்ளாயிரம் எளிய உரை ( 2 ) / வளவதுரையன் ( கடலூர் )

download (16)

முத்தொள்ளாயிரம்—5 வெண்சங்கும் நித்திலமும்

பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்
நீர்படுப வெண்சங்கும் நித்திலமும்—சாரல்
மலைபடுப யானை வயமாறன் கூர்வேல்
தலைபடுப தார்வேந்தர் மார்பு
வயமாறன்னா வலிமையான பாண்டியனுங்க; அவனோட நாட்டுல இருக்கற நெலத்துல செம்பொன் வெளையுது; அவனோட ஊரெல்லாம் முத்தமிழ் வளருதாம்; கடலிலே அதிகமான சங்கு முத்து எல்லாம் கெடக்குது; அவனோட மலையிலே யானைக்கூட்டம் வளருதுங்க; அவனோட கூர்மையான வேலு எதிரிங்களோட மார்பையே பொளந்துடுமாம்;
இந்தப்பாட்டுல பாண்டியனோட நெலவளம், தமிழ்வளம், கடல்வளம், மலைவளம், வேல்வளம் எல்லாம் நல்லாவே தெரியும்

முத்தொள்ளாயிரம்—6 ஐந்தலை ஆடரவம்

அருமணி ஐந்தலை ஆடரவம் வானத்[து]
உருமேற்றை அஞ்சி ஒளிக்கும்; செருமிகுதோள்
செங்கண் மாறன் சினவேல் கனவுமே
அங்கண்மா ஞாலத் தரசு
நாம நம்பறமோ இல்லியோ இந்தப் பாட்டுல ஒரு செய்தி சொல்லப்படுதுங்க; அதாவது பாம்போட தலையில மணி உண்டாகுமாம். பாம்போட தலைக்கு மின்சார ஆற்றலுண்டாம். அதால மின்னல் மின்னும்போது பாம்பு வெளியில வந்தா அது தலையில வந்து இறங்கிடுமாம். அதேபோல இடியும் தலையில் விழுந்திடுமாம். அது பாம்புக்கும் நல்லாவே தெரியுமாம். பாம்பு மழைக்காலத்துல அதாலதான் புத்த விட்டே வெளியில வராதாம்; ஆடரவம்னா ஆடுகின்ற பாம்பு; உருமேற்றைன்னா சத்தம் போடற இடி.
அதாவது ஐஞ்சு தலை இருக்கற பாம்பு சத்தம் போட்டு இடிக்கற இடிக்குப் பயந்து ஒளிஞ்சு கெடக்கும்; அதேபோல செவந்த கண்ணும் எப்பவும் வெற்றியுமே இருக்கற பாண்டியனோட கோபமான வேலைக் கனவில கண்டா கூட பயந்துகிட்டு ஒலகத்துல இருக்கற அவனோட எதிரிங்க பயந்துகிட்டுக் கெடப்பாங்களாம்.

முத்தொள்ளாயிரம்—7 திரு உத்திராடத் திருநாள்

கண்ணார் கதவம் திறமின் களிறொடுதேர்
பண்ணார் நடைப்புரவி பண்விடுமின்—நண்ணாதீர்
தேர்வேந்தன் தென்னன் திருஉத்தி ராடநாள்
போர்வேந்தன் பூசலி லிலன்
இந்தப் பாட்டுல ஒரு முக்கியமான செய்தி திருவிழா காலங்கள்ள அரசன் போர் செய்ய மாட்டான்.
பாண்டிய மன்னன் எதிரியோட மதிலை வளைச்சு முற்றுகை போட்டுட்டான். எல்லாப்படைகளையும் தயாரா கொண்டு வந்து நிறுத்திடான்; அப்ப நாள் பாத்துச் சொல்றவன் வந்து அன்னிக்கு திரு உத்திராடம்னு சொல்லிட்டான்; அதுதாங்க பாண்டியன் பிறந்த நாளு;
அப்ப பாண்டியனோட வீரன் ஒருத்தன் சொல்றான், “அய்யா எதிரிங்களே! எங்க அரசரு திரு உத்திராடத்தில போர் செய்ய மாட்டாரு; அதால யானை, தேரு, குதிரை எல்லாத்திலயும் போருக்காகச் செஞ்சிருக்கறதெல்லாம் எடுத்திடுங்க; ஒங்க கோட்டைக் கதவெல்லாம் தெறந்து வச்சிடுங்க: பயப்படாதீங்க”

முத்தொள்ளாயிரம்—8 நாடு

முத்தம்போல் தோன்றும்
நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும்—சிந்தித்
திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றெ தென்னன்
நகை முத்த வெண்குடையான் நாடு
இந்தப்பாட்டுல பாண்டியனோட நாட்டு வளம் பற்றிச் சொல்லப்படுது; [நந்து=சங்கு; பந்தர்=பந்தல்; செம்மற்று= தலைமையை உடையது]
ஒரு பொண்ணு தன் ஊரைவிட்டு அசலூருக்குப் போறா; அங்க போயி வேற ஒரு பொண்ணுகிட்ட தன் நாட்டைப் பத்திச் சொல்றா. “எங்க அரசனோட கொடை அழகான வெண்கொற்றக்கொடையாகும். ஏன் தெரியுமா? அதுகூட முத்துகளால அழகு செய்யப்பட்டிருக்கும்; அது மட்டும் இல்லீங்க; எங்க நாட்டுல சங்கிலேந்து பிறந்த முத்துகள் எல்லா இடத்திலேயும் சிதறிக் கெடக்கும். புன்னை மரத்துலேந்து சிந்திய அரும்பெல்லாம் பாக்கறதுக்கு முத்துகள் போலவே கெடக்கும்; பந்தல் போலே அழகா இருக்கற கமுகோட பாளை இருக்குல்ல; அதிலேந்து உதிர்ந்து போன மணிகளெல்லாம் கூட பாக்கறதுக்கு முத்துகள் போலவே கெடக்கும்; எங்கே பாத்தாலும் என்னா இவ்வளவு முத்துகளே கெடக்குதுன்னு நெனச்சிப்பே”
முத்துக்களாலான் கொடையைக் கொண்ட அவன் நாட்டுல எல்லாமே முத்துகள்தான்னு சொல்றது எவ்வளவு அழகா இருக்குல்ல;

முத்தொள்ளாயிரம் 9.நகர்

மைந்தரோ[டு ஊடி மகளிர் திமிர்ந்திட்ட
குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறிழுக்கி—எங்கும்
தடுமாற லாகிய தன்மைத்தே தென்னன்
நெடுமாடக் கூடல் அகம்
[திமிர்ந்திட்ட=சிதறிவிட்ட; ஈர்ஞ்சாந்து=குளிர்ந்த சந்தனம்; இழுக்கி=வழுக்குதலால்]
இந்தப்பாட்டுல பாண்டிய மன்னனோட நகர் எப்படி வளமா இன்பமா இருந்ததுன்னு சொல்லப்படுது;
”பாண்டியனோட மதுரையில இருக்கற வீதியெல்லாம் பெரிய ஒசரமான மாடங்கள்ளாம் இருக்குது; அந்த வீதிகள்ள போறவங்க எல்லாம் வழுக்கி விழுந்துடுவாங்களாம்; ஏன் தெரியுமா? மாட மாளிகையில்ல இருக்கற பொண்ணுங்க அவங்க கணவனோட ஊடல்சண்டை போட்டுக்கிட்டுக் கோபத்துல குங்குமத்தையும், சந்தனத்தையும் சன்னல் வழியா வீதியில் எறிஞ்சுடுவாங்களாம். அதெல்லாம் ஒண்ணா சேந்து ஒரே சேறா இருக்குமாம். அதுல போறவங்க நேராப் போக முடியாம தடுமாறுவாங்களாம்.

முத்தொள்ளாயிரம்
திறை

10.பூமி மிதியாப்பொருள்

நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்
காமர் நெடுங்குடைக் காவலன்—ஆணையால்
ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி
பூமி மிதியாப் பொருள்
[நேமி=பூமி; தார்=மாலை; ஏமமணிப்பூண்=பொன்னாலும் மணியாலும் செய்த அணிகலன்; இமையார்=கண் இமைக்காத தேவர்; திருந்தடி=நல்ல அழகான காலடி]
ஒரு படைவீரன் பாண்டியனோட உத்தரவைப் புகழ்ந்து பேசறான். “ஏம்பா அரசருங்களே! நீங்க நெலத்துல அதாவது பூமியில காலு வச்சுட்டா ஒடனே எங்க பாண்டியனுக்குக் கப்பம் கொடுத்திட வேண்டியதுதானே? அவன்தானே இந்த ஒலகம் பூரா தாங்கறன்; ஆளறான்; தாங்கற தோளெல்லாம் வெற்றி மாலைதானே போட்டிருக்கான்; கண் இமைக்காத தேவருங்க எல்லாம் ஏன் ஆகாயத்துலியே இருக்காங்க தெரியுமா? அவங்க எல்லாம் இந்த மண்ணில கால வச்சுட்டா ஒடனே எங்க பாண்டியன் அவங்கள புடிச்சுச் சிறையிலே போட்டுட்டு அவங்க போட்டிருக்கற பொன்னாலும் மணியாலும் ஆன நகையெல்லாம் எடுத்து வச்சிக்குவான்; அதாலதான் அவங்களே பயந்துகிட்டு ஆகாயத்துலேயே இருக்காங்க; நீங்கள்ளாம் எம்மாத்திரம்? ஒடனே கப்பம் கட்டிடுங்க”

=====

‘எனக்கு அடுத்திருந்த அறை’ / கபில் ஸ்ரனிஸ்லஸ்

download (20)

எனது பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் பதிவு செய்துவிட்டு அந்த ஏழாம் நம்பர் அறைக்குத் திரும்பி ஒரு இளநீர் ஓர்டர் செய்யும் வரையில் யாவும் சரியாகவே நடந்தது.அதன் பிறகு ஹோட்டல் பரிசாரகன் கதவைத் தட்டி உள்ளேவர அனுமதி கேட்டான்.நான் அனுமதி கொடுத்ததும்,அவன் கதவை திறந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது பிரச்சினை.சரி,நான் இப்போது யாவற்றையும் ஒழுங்கு வரிசையில் ஞாபகப் படுத்துகிறேன்.

நான் கொளுவியிருந்த முதுகுப்பையில் இரண்டு லினன் சட்டைகளையும் ஒரு அரைக்கால் சட்டையையும் இரண்டு ஆணுறைகளையும் தவிர குறிப்பிடும்படி வேறெதுவும் இருக்கவில்லை.பயணங்களின் போது தேவையற்ற பாரங்களை சுமப்பதில் எனக்கு விருப்பமிருந்ததில்லை.நான் அணிந்திருந்தது கூட ஒரு கையில்லாத பனியனும் சாம்பல் நிற அரைக்கால் சட்டையும் தான்.வெய்யிலுக்காக கூலிங் க்ளாஸும் அணிந்திருந்தேன்.

இலங்கை நாட்டின் காலநிலைக்கு அதுவே பொருத்தாமாயிருந்தது.எனது ஸ்பானிய நண்பன் சொன்னது போலவே அந்த ஹோட்டலின் முகப்பில் ‘ஓல்ட் டச்’ என எழுதப்பட்டிருந்தது.டச்சுக் காலனித்துவ காலத்துக்குரிய கூரை அமைப்பையே அது கொண்டிருந்தது என்பதை தூரத்தில் வரும்போதே கண்டு கொண்டிருந்தேன்.சுவற்றில் வெள்ளை அடிக்கப்பட்டிருந்ததையும் நேர்த்தியாக வெட்டிப் பராமரிக்கப்பட்ட பசுமையான புற் கூட்டத்தையும் தவிர அந்த கட்டடம் உருமாறாமல் அப்படியேதான் இருந்தது.

வரவேற்பறையிலிருந்த சிங்களத் தேசத்து பெண்ணுக்கு எனது பெயர் புரியவில்லை.இரண்டாம் முறையும் உச்சரிக்கச் சொன்னாள்.வலதுகாதை என்பக்கம் திருப்பி புரியாதது போல் பாவனை காட்டினாள்.கடைசியில் நானாகவே எனது ஸ்பானியப் பெயரை குறிப்பேட்டில் எழுதிக் காட்டினேன்.அவள் சிரமம் ஏற்படுத்தியதற்கு வருந்துவதாக ஆங்கிலத்தில் சொன்னாள்.எனக்குரிய ஏழாம் நம்பர் அறைச் சாவியை கையில் தந்துவிட்டு முழுப் பற்களும் தெரிய தொழில் முறைப் புன்னகை ஒன்றைச் செலுத்தினாள்.

என் நண்பன் வர்ணித்தது போலவே அந்த அறை சொகுசு மெத்தையை உடைய கட்டிலையும் திறந்தால் கடல் காற்று அடிக்க கூடிய விசாலமான யன்னலையும் பெற்றிருந்தது.அசதியில் கட்டிலில் சரிந்தேன்.தொண்டை வறண்டு தாகம் எடுத்தது.தோலில் முளைத்திருந்த பொன்னிற உரோமங்களைப் பொசுக்கிய இலங்கை வெய்யில் என்னை உருக்குலைத்துப் போட்டிருந்தது.அருகிலிருந்த தொலைபேசியை எம்பி எடுத்து ஹோட்டலுக்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.விரலால் சுற்றி பயன்படுத்தும் பழைய பாணியிலான தொலைபேசி எரிச்சலைத் தந்தது.மறு முனையில் ஆண்குரல் ஒலித்ததும்,ஒரு இளநீர் வேண்டுமென ஆங்கிலத்தில் கேட்டேன்.கண நேரத்துக்குப் பதில் வரவில்லை.

பிறகு,சிங்கள மொழியில் ஏதோ சொன்னது அந்தக் குரல்.’ட்ரிங்’ என நான் ஆங்கிலத்தில் அழுத்திச் சொன்னதும் அந்தக் குரல் மதுபான வகைகளின் பெயரை அடுக்கிக் கொண்டே போனது.முதுகுப்பையிலிருந்த தண்ணீர் போத்தல் ஞாபகம் வந்து இளநீர் குடிக்கும் ஆசையைக் கைவிடவிருந்த சமயத்தில் இன்னொரு குரல் என்ன வேண்டுமென ஆங்கிலத்தில் பேசியது.தேவையைச் சொன்னேன்.உடனே ஏற்பாடு செய்கிறோம் சிரமத்துக்கு மன்னிக்கவும் என்றவுடன் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

காத்திருப்பை அடுத்து ஹோட்டல் பரிசாரகன் இருமுறை கதவைத் தட்டினான்.நான் அனுமதி கொடுத்ததும்,உள்ளே வந்தவன் என்னைப் பார்த்த மாத்திரத்தில் திரும்பவும் காதவைப் பூட்டிவிட்டு வெளியேறிவிட்டான்.நான் எதையுமே கணிக்க முடியாத புதிர் நிறைந்த கண்களோடு அப்படியே கட்டிலில் கிடந்தேன்.மீண்டும் கதவு தட்டப்பட்டது.ஒரு கடலாமையைப் போல தலையை மட்டும் அறைக்குள் நீட்டிய பரிசாரகன் ‘சிரமத்துக்கு மன்னிக்கவும்’ என கொச்சை ஆங்கிலத்தில் கூறிவிட்டு பழையபடி கதவைச் சாத்த போனான்.

நான் கட்டிலிலிருந்து துள்ளி எழுந்து அவனை நிறுத்தினேன்.எனது கண்களிலிருந்து புதிர் மறைந்து கோபம் உருப்பெற்றது.யன்னல் ஊடாக வந்த கடல் காற்றையும் மிஞ்சும்படி மிகக் கடுமையாக “வட் த ஃபக்’ என கத்தினேன்.முழுமையாக திறக்கப்பட்டிருந்த கதவின் எதிரே மரத்துப் போன கைகளில் இளநீரை ஏந்தியபடி அவன் நின்றிருந்தான்.பதில் சொல்லத் தெரியாமல் கூச்சமடைந்த மண்புழுவைப் போல அவன் நெளிந்து கொண்டிருந்தான்.

சற்று முன்னர் தொலைபேசியில் சிங்களத்தில் பேசியவன் அவனாகத்தான் இருக்க வேண்டுமென ஊகித்துத் கொண்டேன்.விரலால் அடுத்த அறையைச் சுட்டிக் காட்டிய அவன்,அங்கு கொண்டு போக வேண்டிய இளநீர் அதுவென வலியுறுத்தினான்.நான் கதவை வேகமாக சாத்தியபோது ஏற்பட்ட பெரும் சப்தம் அவனது முகத்தில் அறைந்திருக்க வேண்டும்.அடுத்த அறையை நோக்கித் தாவிய அவனது காலடி ஓசைகள் என் காதில் விழுந்தது.ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் பிரச்சினையைச் சொல்லத் தோன்றவில்லை.

விரல்களால் சுற்ற வேண்டிய தொலைபேசியின் நினைப்பே சலிப்பை உண்டு பண்ணியது.நானாகவே என் வாயால் ஓர்டர் செய்த இளநீர் எப்படி இன்னொருவரின் வாய்க்குள் போகும் என்பது தெளிவில்லாமலேயே இருந்தது.நடக்கவிருக்கும் குழப்பங்களின் ஆரம்ப முடிச்சு அதுவென அறியாமலேயே தண்ணீரைக் குடித்துவிட்டுக் கட்டிலில் படுத்தேன்.

காலையில் வரவேற்பறையில் இருந்தவளிடம் விசயத்தைச் சொன்னதும் அந்த ஹோட்டலில் ஏழாம் நம்பரில் இரண்டு அறைகள் உள்ளதாக விளக்கினாள்.கட்டட உரிமையாளரான டச்சுக் காரருக்கு ஏழு அதிஷ்டமான நம்பர் என்பதால் அந்த நம்பரையே இரண்டு அறைகளுக்கு வழங்கியதாகவும்,பின்னர் அதையே ஒரு மரபாகப் பேணுவதாகவும் சொன்னாள்.நல்ல வேளையாக அந்த ஹோட்டலிலுள்ள அனைத்து அறைகளுக்கும் ஒரே இலக்கம் வழங்கப்படவில்லை என்பதையிட்டு திருப்தி அடைந்தேன்.

வரவேற்பறையில் இருந்தவள் இளநீரை ஓர்டர் செய்தது நானல்ல,அந்த இன்னொரு ஏழாம் நம்பர்காரர் தான் என அழுத்தமாகக் கூறிக் கொண்டிருந்தாள்.முதல் நாள் இரவே இந்தச் சர்ச்சையான விவகாரம் கலந்து பேசிய பின் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது எனத் தெரிந்தது.நான் தொடர்ந்து வாக்குவாதம் பண்ண விரும்பவில்லை.பயணங்களின் போது தேவையற்ற பாரங்களைச் சுமப்பது எனக்குப் பிடிக்காது.நான் கடுமையாக நடந்து கொண்ட பரிசாரகனிடம் மன்னிப்பைத் தெரிவிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

கடற்கரை மணல் துகள்கள் காலில் ஒட்டுவதை விரும்பியதால் செருப்பைக் கழற்றிக் கையிலெடுத்துக் கொண்டேன்.நான் கடந்து வந்த பாதை கடைகளால் நிரம்பியிருந்தது.கோடை காலமாதலால் நிறைய வெளிநாட்டவர்களின் பளிச்சிடும் முகங்களைக் காண நேர்ந்தது.

லூஸியானா இஸபெல்லா குறிப்பிட்டிருந்த கடற்கரையோர உணவு விடுதியைக் கண்டுபிடிக்கச் சிறிது நேரம் எடுத்தது.விடுதியில் அவளுக்காக காத்திருந்த நிமிடங்கள் பதட்டத்தை அளித்தன.ஆனாலும் நான் பொறுமை இழக்க முன்னதாகவே அவள் அங்கு வந்துவிட்டிருந்தாள்.முதன் முறையாக நேரில் சந்தித்ததால் வெட்கமும் சந்தோஷமும் பரவிய கைகளைக் குலுக்கிக் கொண்டோம்.மிக மெல்லிய பருத்தியால் நெய்யப்பட்ட சட்டையை அவள் அணிந்திருந்தாள்.உள்ளே அணிந்திருந்த ஊதா நிற மார்புக்கச்சை அதனூடாக தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

கடல்காற்று என்னை விடவும் மூர்க்கமாக அவளது பருத்திச் சட்டையை தன்பக்கம் இழுத்துக் கொண்டிருந்தது.முலைகளின் பிளவின் ஆரம்பத்திலிருந்து கழுத்தின் முடிவு வரை மஞ்சள் நிறப் புள்ளிகளைப் பெற்றிருந்தது அவளது உடல்.ஒருவாரமாக இன்டர்நெட்டில் பேசிய நாங்கள் அன்று முதல் தடவையாக ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துப் பரஸ்பரமாகப் பேசிக் கொண்டோம்.ஒரு அந்நிய தேசத்தில் ஸ்பானிய மொழியைக் கேட்பதில் அவளுக்கும்,ஒரு அந்நிய தேசத்தில் பெண்குரலில் ஸ்பானிய மொழியைக் கேட்பதில் எனக்கும் பூரிப்பாயிருந்தது.

எலுமிச்சை சாறில் ஊறிய அவித்த நண்டு வாங்கிச் சாப்பிட்டோம்.வெய்யில் ஏறிய நேரத்தில் கடலில் ஒன்றாகக் குளித்தோம்.நீச்சல் உடையில் லூஸியானாவின் இடை நான் சற்றுமுன்னர் கடைத் தெருவில் பார்த்த தன்னிச்சையாக கழுத்தை ஆட்டும் பொம்மையைப் போல் ஆடிக் கொண்டிருந்தது.அவளது மார்புகள் கடற்கரையில் சிறுவர்கள் குவித்து வைத்திருந்த மணல் மேடுகளை ஒத்திருந்தது.நீரில் நனைந்து அலுத்த பின்னர் ‘ஸ்டவுட்’ பியர் வாங்கி அருந்தினோம்.

கூச்சம் கலைந்து நெருக்கமாக உணரத் தொடங்கியதும் அதுவரையில் யாருக்கும் சொல்லத் துணியாத கதைகளைப் பரிமாறிக் கொள்ளத் தலைப்பட்டோம்.கடலின் நிறம் மங்கி அலையின் சீற்றத்தை மட்டும் கேட்கக் கூடிய இருள் கவிந்தது வரையில் மணலிலேயே குந்தியிருந்தோம்.நான் உப்புப் படிந்திருந்த அவளது கழுத்தில் மெதுவாக முத்தமிட்டேன்.தயக்கமின்றி அவள் அதை ஏற்றுக் கொண்டாள்.

பின் மிக இரகசியமாக எனது காதில் “நாம் இன்னமும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்” எனச் சொல்லிவிட்டு எழுந்திருந்த போது அவளது புட்டத்தில் ஒட்டியிருந்த மணல் துகள்கள் உதிர்ந்தன.உடையை அணிந்ததன் பின் நானும் அவளோடு சேர்ந்து அவளது வாடகை மோட்டார் பைக் நிறுத்தப் பட்டிருந்த இடத்திற்குப் போனேன்.எனது நடத்தைக்காக மன்னிப்புக் கோரினேன்.ஹெல்மட்டை மூடும் முன் ஒருதடவை சிரித்துவிட்டு இன்னமும் ஈரம் காயாத ஊதாநிற மார்புக்கச்சை உடையோடு ஒட்டியபடியிருக்க திமிறிய மார்புகளோடு அங்கிருந்து விரைந்தாள்.

நான் அங்கிருந்து ‘ஓல்ட் டச்’ ஹோட்டலுக்குத் திரும்பினேன்.வரவேற்பறைப் பெண் முன்பைவிட அழகாக வீற்றிருந்தாள்.”சிங்கள தேசத்துப் பெண்கள் இவ்வளவு அழகானவர்கள் என எனக்குத் தெரியாது” என்றேன்.தெத்திப்பல் மட்டும் ஓரமாகத் தெரிய புன்னகைத்தாள்.அந்தப் புன்னகை தொழில்முறை சார்ந்ததாக இல்லாமல் ஒரு ஸ்பானிய குடிமகனான எனக்கே உரிய பரிசாக அமைந்திருந்தது.அறைக்குப் போய் ஒரு முழுச் சூரை மீன் ஓர்டர் செய்தேன்.தங்கள் ஹோட்டலில் அது கிடைக்காதெனச் சொன்னார்கள்.ஞாபகம் வைத்திருக்கக் கூடியளவேனும் சுவையற்ற ஏதோவொரு உணவை வரவழைத்துச் சாப்பிட்டேன்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு அடுத்திருந்த இன்னொரு ஏழாம் நம்பர் அறையில் பசியில் கத்தும் பூனையில் குரல் கேட்டது.கட்டிலில் விழுந்து கிடந்த போது ஒரு பூனை-அடுத்த அறையில் கத்திய அதே பூனையாக இருக்க வேண்டும்-பெரிய மீன் முள் ஒன்றை வாயில் கவ்வியபடி வந்து எனது அறை யன்னலில் குந்தியிருந்து நக்கிச் சாப்பிட்டது.நான் அரை மயக்கமுற்றிருந்த நேரம் அது ஒரு இராணுவ வீரனின் தோரணையில் என் அறையெல்லாம் சுற்றி வந்ததை உணர முடிந்தது.

முதுகுப் பையைத் துழாவியது.என் காலிலிருந்து முகமெல்லாம் நக்கிப் பிரேதத்தைப் போல என்னை ஆராய்ந்தது.நான் துணுக்குற்று விழித்த சமயத்தில் அறையின் இருட்டில் தனது பச்சைக் கண்கள் ஒளிரும்படி என்னை உற்று நோக்கியது.பின்னர் விருட்டென யன்னல் வழியாகப் பாய்ந்து ஓடி விட்டது.சற்றுக் கழித்து எனக்கு அடுத்திருந்த அறையில் அது அன்போடு ‘மியாவ் மியாவ்’ எனக் குழைந்த வண்ணமிருந்தது.

அடுத்த நாள் மாலையில் ஒரு ‘ஸ்டவுட்’ பியருடன் கடற்கரையில் உலாத்திக் கொண்டிருந்தேன்.லூஸியானா இஸபெல்லா தன்னால் அன்று வரமுடியாதென முன்னறிவித்திருந்தும் நான் ஏன் அங்கு போனேன் என்பது புலப்படாமலே இருந்தது.பலவித வண்ணங்கள் பூசிய மனித முகங்களை சுய பிரக்ஞை இன்றி கடந்தேன்.இனம் புரியாத குற்றவுணர்வு என்னுள் படர்ந்து வந்தது.தன்னால் வர முடியாததற்கு லூஸியானா சொன்ன காரணம் உண்மையானது தானா அல்லது புனையப்பட்டதா என ஆராய்ந்து பார்த்தேன்.சிறிது நேரமாகவே தென்னை ஓலைகளைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்யும் வியாபாரி ஒருவன் என்னைப் பின்தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தான்.நான் வேண்டாமென மறுத்ததையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை.கையிலிருந்த போத்தலை மண்டையில் ஓங்கி அடிப்பதைப் போல பாவனை காட்டிய பிறகே அவன் என்னிடமிருந்து நகர்ந்தான்.நான் ஆவேசத்துடன் சனத்திரளிலிருந்து விலகி காற்று சுதந்திரமாக அலைந்து கொண்டிருந்த இடத்துக்குப் போனேன்.

அங்கிருந்து கண்ணுக் கெட்டிய தூரத்தை இலக்காக வைத்து நடந்து கொண்டேயிருந்தேன்.இருளடைந்த போது தான் நான் நீண்ட தூரம் நடந்து வந்துவிட்டதையும் அங்கிருந்து ஹோட்டலுக்குப் போக ஓட்டோ பிடிப்பது கடினம் என்பதையும் அறிந்து கொண்டேன்.தொலைவில் கடைகளின் மின்விளக்குகள் நம்பிக்கை தருவனவாய் ஒளிர்ந்தன.வந்த பாதையிலேயே திரும்பி நடந்தேன்.வழியில் இருட்டில் செய்த பொம்மை போல ஒரு பெண் நின்றிருந்தாள்.அவள் தோளில் ஒரு கைப் பையும் முழங்காலுக்கு மேலேறிய குட்டைப் பாவாடையும் அணிந்திருப்பதாய் புலப்பட்டது.

இறுக்கமான மேற் சட்டை அவளுக்குத் தொப்பை விழுந்ததைக் காட்டிக் கொடுத்தது.நேராக நடந்தால் அவளை எதிரே சந்திக்க நேரும் என்பதால்,விலகி கால்கள் அலையோடு தழுவ நடந்து அவளைக் கடந்தேன்.பின்னால் ஏதோ அவரம் கேட்டது.தலையைத் திருப்பாமல் கால்களுக்கு வேகம் கொடுத்தேன்.ஆனால் தீடீரென ஒரு மந்திரப் பிசாசைப் போல அவள் எனக்கு முன்னே தோன்றி மூச்சு வாங்கினாள்.ஓடி வந்திருக்க வேண்டும்.தான் களைத்துப் போயிருப்பதை மறைத்தபடி ஒரு பாலியல் தொழிலாளிக்குரிய மிடுக்குடன் என்னிடம் சிங்களத்தில் பேசினாள்.நான் மறுத்துவிட்டு தொடர்ந்து நடந்தேன்.

அவள் விடாமல் என் பின்னாலேயே வந்தாள்.இதற்குள்ளாக நான் கடைத்தெருவை அண்மித்திருந்தேன்.மங்கிய மின்விளக்கு வெளிச்சத்தில் அவளது முகத்தைப் பார்த்தேன்.அதிலிருந்த பகட்டுத்தனம் மறைந்து அவள் என்னிடம் இரஞ்சிக் கொண்டிருந்தாள்.நான் முற்று முழுதாக விளக்கொளி நிறைந்த பகுதியை அடைந்ததும் அவள் என்னைப் பின் தொடர்வதைக் கைவிட்டாள்.இருள் உலகின் ராணியாக அங்கேயே நின்று கொண்டாள்.ஹோட்டல் அறையில் முதுகுப் பையிலிருந்த ஆணுறை ஞாபகம் வரவே சிறிது தயங்கினேன்.பின்னர்,ஒரேடியாக வேண்டாமென முடிவெடுத்து ஹோட்டலுக்குப் போக ஒரு ஓட்டோவை தேடினேன்.

லூஸியானா பற்றிய ஏக்கம் என்னைப் பீடித்திருக்க தூக்கம் வராத இரவிடம் சிக்கிக் கொண்டு விழித்தேன்.எனக்கு அடுத்திருந்த அறையிலிருந்து ஒரு பெண் முனகும் சப்தம் வந்தது.கடல் காற்றின் இரைச்சலில் அது தெளிவில்லாமல் கேட்கவே யன்னலை அடைத்து விட்டுக் காதை அறைச் சுவரில் வைத்தேன்.அவளது முனகலில் செயற்கைத் தனமிருந்தது.ஒரு பாலியல் தொழிலாளிக்குரிய மிடுக்குடன் அவள் வாயிலிருந்து ஒலிகள் புறப்பட்ட வண்ணமிருந்தன.மீள இயலாத வெறுப்புடன் யன்னலைத் திறந்து விட்டேன்.கட்டிலில் விழுந்து போர்வையால் தலையை மூடி இழுத்துப் போர்த்தினேன்.எந்தப் பலனையும் அடைய இயலவில்லை.அந்த அறையிலிருந்து வந்த ஒலிகளின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இரவு முழுவதும் திணறிக் கொண்டிருந்தேன்.

காலையில்,எனக்கு அடுத்திருந்த அறையில் வசிப்பவன் யார் என்று அறிய ஆர்வம் உண்டாயிற்று.அறைக்குள்ளிலிருந்தபடியே பக்கத்து அறையின் கதவு திறக்கப்படும் ஓசைக்காகக் காத்திருந்தேன்.ஓடிப் போய் எட்டிப் பார்ப்பதற்கு முன்னேற்பாடாக எனது அறைக் கதவை அகலத் திறந்து வைத்தேன்.நீண்ட நேரமாக சிறு அசைவு ஏற்படும் அறிகுறியும் தென்படவில்லை.அடிக்கடி தேய்ந்து தேய்ந்து வந்த பூனையின் குரல் மட்டுமே அந்த அறையில் யாரோ இருப்பதாக நம்பிக்கை தந்தது.எனது அறைத் தொலைபேசி மணி அடித்தது.

ஹோட்டல் விருந்தினர்களுக்காக இலவச மது விருந்து ஏற்பாடு செய்திருப்பதால் என்னையும் வரச் சொல்லி அழைத்தார்கள்.வருவதாகச் சம்மதம் தெரிவித்தேன்.அவர்கள் எப்படியும் அடுத்த அறையிலிருந்தவனையும் விருந்துக்கு அழைப்பார்களென நினைத்து அந்த அறைத் தொலைபேசி ஒலிக்கும் சப்தத்தைக் கேட்க ஆர்வமுற்றிருந்தேன்.நெடு நேரமாக அது நடக்கவேயில்லை.ஒருவேளை அவன் முன்னரே அங்கு போயிருக்கலாம் அல்லது தாமதமாகவேனும் அங்கு வந்துதானே ஆகவேண்டுமென்று கணக்கிட்டுக் கொண்டு அறையிலிருந்து வெளியேறினேன்.

அதிசயக்கத்தக்க வகையில் விருந்து ஏற்பாடகியிருந்த இடத்தில் பரிசாரகர்களைத் தவிர்த்து என்னோடு சேர்த்து நான்கு பேர்தான் இருந்தோம்.அதில் இரண்டு பேர் இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியினர்.நானாகவே போய் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்தேன்.ஐஸ் கட்டிகள் நிறைந்த குளிர்ச்சியான மது தொண்டைக்குள் இறங்க இலங்கையின் சுற்றுலா மையங்கள் பற்றி உரையாடினோம்.கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்த இங்கிலாந்துக் கணவர் தனது பழைய நாள் வேட்டை அனுபவங்களைக் கற்றை கற்றையாக பிரித்து வைக்கத் தொடங்கினார்.கண்களை கூர்மையாக வைத்தபடி ஏதோ முன்பின் கேட்டிராத கதைகளைக் கேட்கும் ஆர்வத்தில் அவரது மனைவி அவருக்கு எதிரே அமர்ந்திருந்தார்.

நான் மிகவும் சலிப்புற்று எனது பார்வையை அந்த நான்காவது நபரின் மீது செலுத்தினேன்.இலங்கையைச் சேர்ந்த ஐம்பது வயது மதிக்கக் கூடிய அவர் எழுந்து அறைக்குப் போக தயாராகினார்.மிதமிஞ்சிக் குடித்திருந்தும் உதவி புரிய வந்த பரிசாரகனை இருக்கச் சொல்லிவிட்டு தனியாகவே எழுந்து தவ்வி தவ்வி நடக்க ஆரம்பித்தார்.நான் சத்தமில்லாமல் அவரைப் பின் தொடர்ந்தேன்.நேராக அறைக்குப் போகாமல் சில இடங்களில் நின்று நிதானித்தும்,குந்தியிருந்தும் எனது பொறுமையை எல்லை மீறச் செய்து கொண்டிருந்தார்.

இறுதியில் அவர் இருபதாம் இலக்கமிடப்பட்ட அறையின் கதவை திறந்து வாசலிலேயே முகம் அடிபட விழுந்தார்.நான் உதவி செய்ய நினைத்து நான்கு அடிகள் நடப்பதற்குள் எழுந்து கதவைச் சாத்திக் கொண்டார்.நான் திரும்பி வந்து அந்த இன்னொரு ஏழாம் நம்பர் அறையைப் பார்த்தேன்.என்றுமே திறக்கப்படாததைப் போல் அடித்துச் சாத்தப்பட்டிருந்தது.

குழப்பத்திலிருந்து வெளியேற முடியாமல் அறையிலிருந்த போது லூஸியானா என்னைச் சந்திக்க வருவதாக செய்தி அனுப்பினாள்.விரல்கள் நடுநடுங்க ஒரு ஆணுறையை எடுத்து கால்சட்டைப் பையினுள் வைத்தேன்.அவளே ‘ஓல்ட் டச்’ ஹோட்டலுக்கு மோட்டார் பைக்கில் வந்து என்னை அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள்.மிகவும் குட்டையாகவிருந்த டெனிம் கால்சட்டையிலிருந்து வெளித் தெரிந்த அவளது எலுமிச்சை வண்ணத் தொடைகளில் எனது முழங்கால்கள் உரசிக் கொண்டிருந்தன.

சுற்றுலாப் பயணிகளுக்கென்றே வாடகைக்கு விடப்படும் வீட்டில் அவள் தங்கியிருந்தாள்.அவளது வீட்டில் அவளோடு சேர்த்து ஆண்களும் பெண்களும் அடங்கலாக ஏழெட்டு வெளிநாட்டவர்களும் இருந்தனர்.அவர்கள் இலங்கை முழுவதும் சுற்றிவிட்டு நேற்று காலையில்தான் அங்கு வந்ததாகத் தகவல் சொன்னாள் லூஸியானா.அன்று இரவே அவளும் அவர்களோடு சேர்ந்து ஸ்பானியாவுக்கு பயணப்படவிருப்பதாகவும் கூறினாள்.

இலங்கையிலிருந்து நீங்குவதற்கான சிலமணி நேரங்களை அவர்கள் கொண்டாடித் தீர்க்க முடிவு கட்டியிருந்தனர்.விருந்தில் கலந்து கொள்ள எனக்கும் அழைப்பு விடுத்தார்கள்.லூஸியானா எல்லோரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.கைலாகு கொடுக்கும் போது எனது கை மிகவும் இறுக்கமான இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.உதட்டில் செயற்கையான புன்னகையை வரவழைக்கவும் பெரும்பாடு பட்டேன்.ஒரு க்ளாஸில் மதுவை ஊற்றி அதையே நீண்ட நேரமாக உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.

அங்கங்கள் குலுங்க லூஸியான வெறி கொண்டு நடனமாடினாள்.எனக்கும் அவளோடு சேர்ந்து ஆடவேண்டும் போலிருந்தது.விட்டு விட்டு எரிந்த வண்ணமயமான மின்விளக்கு ஒளியில் அவள் ஒரு பச்சோந்தியைப் போல உருமாறிக் கொண்டிருந்தாள்.எல்லோரும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த சமயத்தில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நான் வீட்டை விட்டு வெளியேறினேன்.

லூஸியானாவுடன் இருந்த அதே கடற்கரையில் காற்று தலை முடியைக் குழப்ப நடந்து கொண்டிருந்தேன்.இருட்ட ஆரம்பித்திருந்ததால் சனத்திரள் வடிந்தபடியே இருந்தது.லூஸியானாவிடம் கடுங் கோபம் மூண்டிருந்தது.உடலை இருளில் கரைத்துவிடும் நோக்கில் இருள் கம்மியிருந்த இடங்களாகப் பார்த்து நடந்தேன்.முன்பு பார்த்ததைப் போலவே இருளில் ஒரு உருவம் குந்தியிருப்பதை கண்ணுற்றேன்.ஆர்வத்தோடு அந்த உருவத்திடம் நெருங்கிப் போனேன்.ஒரு ஆண் கடலைப் பார்த்தபடி ஏதோவொரு சிந்தனையில் லயித்திருந்தான்.ஏமாற்றத்தில் எனது செயலை நினைத்து நானே வெட்கத்துக்கு உள்ளானேன்.ஒரு குப்பைத் தொட்டியை தேடிப் பிடித்து பையிலிருந்த ஆணுறையை அதனுள் எறிந்தேன்.கடலின் அலைகள் காதில் இரைந்தது சகிக்க முடியாமலிருந்தது.விரைவாக அங்கிருந்து வெளியேறி ஹோட்டலுக்குப் போனேன்.

அகோரமாய் பசித்தது.சாப்பாடு ஓர்டர் செய்ய விருப்பமில்லாமல் கட்டிலிலேயே படுத்திருந்தேன்.அடுத்திருந்த அறையில் மீண்டும் ஒரு பெண் முனகுவது போன்ற குரல் காதில் விழுந்து மேலும் மேலும் எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தது.யன்னலைத் திறந்து விட்டால் கடல் காற்றின் இரைச்சலில் அந்தக் குரல் கேட்காது என நினைத்து எழுந்தேன்.யன்னல் மூடித்தானிருந்தது.அடுத்து என்ன செய்வதெனப் புரியாமல் சுவரில் காலால் உதைக்கப் போனேன்.அப்போதுதான் அந்தப் பெண் குரல் சில ஸ்பானியச் சொற்களை உச்சரிப்பதைக் காதுபடக் கேட்டேன்.

எந்தவிதப் பிறழ்வுமில்லாமல் அந்தப் பெண் ஸ்பானிய மொழியில் முனகினாள்.நான் உறைந்து போய் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.பின்,ஓடிப்போய் கட்டிலில் விழுந்து போர்வையால் உடல் முழுவதும் போர்த்திக் கொண்டேன்.அந்தச் சொற்கள் விடாமல் துரத்தி வந்து போர்வைக்கு மேலாகவும் என்னை மூடிப் பிடித்து துன்புறுத்தின.இரவின் ஒவ்வொரு துளிகளிலும் விஷம் போல் அவை பரவியிருந்தன.வெப்பத்தால் உடலில் கசிந்த வியர்வை கழுத்து வழியாக ஓடிக் கொண்டிருந்தது.

போர்வயை விலக்க முடியவில்லை.மூச்சை உள்வாங்கக் கடினப் பட்டேன்.அரை மணித்தியாலத்துக்கும் மேலாக அந்த அவஸ்தையிலிருந்து நீங்க முடியாதவனாக உழன்றபடியிருந்தேன்.இறுதியில்,ஒரு இசைக் கருவிக்குரிய உச்சஸ்தானியில் குரலெடுத்துக் கத்திய அந்தப் பெண் ஒருவழியாக அடங்கிப் போனாள்.யன்னலைத் திறந்தவுடன் வந்த குளிர்ந்த காற்று என்னில் உயிராக ஒட்டிக் கொண்டது.இன்டர் நெட்டில் அடுத்த நாள் காலையே ஸ்பானியா திரும்புவதற்கான விமான டிக்கட்டைப் பதிவு செய்த பின்னரே கொஞ்சம் ஆறுதலடைய முடிந்தது.அங்கு நடந்த எதைப் பற்றியும் ஆராயாமல் மனதை கட்டுப்படுத்த தீவிரமாக முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன்.இதயம் அடித்துக் கொள்ளும் ஓசையைக் கேட்குமளவிற்கு அங்கே அமைதி குடியேறியிருந்தது.

விடிந்து விட்டது எனத் தெரிந்ததும் நாடு திரும்பப் போகிறேன் என்று சந்தோஷம் அடைந்தேன்.அவசர

அவசரமாக முதுகுப் பையை கொளுவியபடி வரவேற்பறைப் பெண்ணிடம் சென்று அறையைக் காலி செய்வதாகச் சொன்னேன்.கையடக்கத் தொலைபேசியை மறந்து வைத்து விட்டது ஞாபகம் வரவே திரும்பவும் அறைக்கு விரைந்தேன்.மேசையில் அது இருந்தது.எதேச்சையாக கட்டிலைப் பார்த்தேன்.

சுருண்டு கிடந்த எனது போர்வையோடு போர்வையாக பெண் ஒருத்தியின் உள்ளாடைகள் கிடந்தன.அந்த மார்புக்கச்சை லூஸியானா என்னோடு கடலில் குளிக்கும் போது அணிந்திருந்த அதே ஊதாநிற மார்புக்கச்சைதான் என்பதை என்னால் உறுதியாக அடையாளம் காண முடிந்தது.குடிக்காமலே தலை கிறுகிறுத்தது.திடீரென யன்னலில் அந்தப் பூனை தோன்றி என்னைப் பார்த்து அன்பாகக் குழைந்தது.நான் பயத்தில் கதவை படாரெனச் சாத்திவிட்டு வரவேற்பறையை நோக்கி ஓடினேன்.

ஆரம்பத்தில் நாகரிகம் கருதி எனக்கு அடுத்த அறையிலிருந்தவன் பற்றிய விபரங்களைக் கேட்காமல் விட்டிருந்தேன்.ஆனால்,இனிமேல் இலங்கைக்கு வரவே போவதில்லை என முடிவெடுத்திருந்தபடியால் வரவேற்பறைப் பெண்ணிடம் அந்த விபரங்களைக் கூச்சமின்றிக் கேட்டேன்.முதலில் அவள் என்னை சந்தேகக் கண்ணோடு பார்த்தாள்.பின்,நான் ஒரு வெளிநாட்டவன் என்பதாலும் என்மேலிருந்த நட்பிலும் அதைச் சொன்னாள்.”இளநீர் பற்றிய சச்சரவு நடந்ததற்கு அடுத்த நாளே அந்த அறையிலிருந்தவர் அறையைக் காலி செய்து விட்டார்.அந்த அறையில் இப்போது யாருமே இல்லை.”

நான் விமான நிலையம் நோக்கிப் பயணித்தேன்.எனது முதுகுப் பையில் இரண்டு லினன் சட்டைகளும் ஒரு அரைக்கால் சட்டையும் ஒரு ஆணுறையும் இன்னும் தீராத குழப்பம் ஒன்றும் கனத்துக் கொண்டிருந்தன.

•••

காட்டின் சித்திரம் ( அறிமுகக் கவிஞர் ) / சூ.சிவராமன்

images (16)

1.அழைப்பு..

காளைகளின் கழுத்து இறுக்கிய நுகத்தடி கயற்றில்
இந்த பூமியைப்போல வட்டவடிவிலான
அழகிய சுருக்கொன்றை போடக்கற்றுத் தேர்ந்திருக்கிறான்
நடவுப்பாட்டை நாட்டுப்பாட்டை பாடிவரும்
மாமன்மகளை விடவும் நேசித்த..
நிலத்தின் நிர்வாணம் சகிக்கவியலாததது
வயிற்றுப்பாட்டை முன்னிருத்தி
விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தனவோவென்றிருக்க
நாக்குத்துருத்தி நிமிர்ந்த கதிரென
அந்தரத்தில் நெட்டுக்குத் தொங்குகிறான்
பாரந்தாளாமல் உச்சிக்கொம்பு வளைந்திருக்கிறது
சட்டைப்பையிலிருந்து கைபேசி ஒலித்தபடியிருக்கிறது
இருண்ட குடிசையில்
மரணத்தின் சூரியனென வெளிச்சமிடும் திரையில்
அழைத்தபடி இருக்கிறார் வங்கி மேலாளர்.

2.காட்டின் சித்திரம்

உடும்புக்கறி சமைக்கும் சோன்பேட்
அருகமர்ந்து
தாழைக்கோழியை தனலில் வாட்டி சூப் தயாரிக்கிறாள் தலைவி
அணில்களின் வால் நுனி பஞ்சு
காக்கையின் இறகுகள்
கெளதாரி அலகுகள்
நரியின் பற்கள்
பனங்காடைகளின் கால்கள் சிதறியிருக்கின்றன வாழிடமெங்கும்
குடியிருப்பு நெடுக
குயிலாக
மயிலாக குரலெழுப்பும் சகபாடிகள்
மடையான்,நாரை கொக்கென
சீழ்க்கையொலிக்கு
வலசைப் பறவைகள் தரையிறங்கக்கூடும்
கிளிகள் அழகாக தமிழ் பேசுகின்றன
மைனா தோளமர்ந்து இசைபாடுகிறது
சிறுவர்கள் உண்டிவில்லோடு திரிய
சிறுமிகள் மணிமாலை கோர்க்கப் பழக
அவர்களின் வேட்டைக்கான காடு
தொலைவிலிருப்பதான நம்பிக்கை சாகாதிருக்கிறது
இரவுதோறும்
கள் பருகி உலர்ந்த தேனடையைப் பிழிய வழியும் சொட்டுகளை
உச் கொட்டி பாடியபடி
காடா விளக்கொளி படர கரிக்கோடுகளால்
சுவரெங்கும் தீட்டுகிறான் பெருங்காட்டின் சித்திரத்தை
அச்சித்திரத்தில் மரங்கள் செடிகள் கொடிகள்
பறவைகள் இருக்கின்றன
விலங்குகள் எறும்புகள் பூச்சிகளிருக்கின்றன
ஒரு மனிதனைக் கூட காணவுமில்லை
அவன் தீட்டவுமில்லை.

3.நானொரு நல்நிலத்து வாரிசு

பாட்டனின் நினைவான
இம் மா மரத்தின் பூக்கள் ஒரு வண்டை ஈர்க்கிறது
நாங்கள் காத்திருந்தோம்
காயிலேயே பழுக்கவைக்கும் பீய்ச்சு மருந்திற்கு
உள்ளங்கால்களின் கொப்புளங்களுக்கு
வேப்பிலைகளும் மஞ்சளும் சேர்த்தரைக்கும் முயற்சியிலிருந்தோம்
மருந்துக்குப்பிக்கு காப்புரிமையும் விலைநிர்ணயமும் செய்துவிட்டுச் சிரிக்கிறார்கள்
நஞ்சை பரவலாக்கியவர்களின் கரங்களில்
மரபணு மாற்றப்பட்ட விதைகள்
புல்மேயாத மாட்டின் பாலை நெகிழிப்பைகளில் அடைத்து வீசுகிறார்கள் வீடு வீடாக
விடலைகள் அணையாத காளைகளோ ஆண்மையிழந்துவிட்டிருந்தன
மொழியும் இனமும் பட்டழிவதெண்ணி திகைக்கையில்
எழுந்துவருகிறது தேவநாகரி
தானியக்குதிர்களின் கதகதப்பிற்குள்
முளைவிடத்துடிக்கும் உழவனின் விந்தணுக்கள்
பழக்கத்தில் மண்வெட்டியோடு மடைதிறக்கப் போனவன்
ஆற்றைப் பார்த்தான்
அண்ணாந்தும் பார்த்தான்
சுருண்டு விழுந்து செத்தான்
மீதமிருப்பவர்கள் செய்வதறியாது ஓடிப்போய்
வங்கி வரிசையில் நின்றுகொண்டார்கள்.

4.நிலமும் உழவனும் நிர்வாணத்தில்..

நீரற்ற மணலற்ற கரைகளற்ற மரங்களற்ற ஒன்று
நிலத்தின் மீது வகிடென நீண்டுகிடக்கிறது
மண்ணுயிர் வாழ ஓடும் ரத்தநாளங்கள் சிதிலமடைந்துவிட்டன
சுரண்டப்பட்ட வளங்கள் சாமானியர்களின்
வயிற்றிலடிக்கிறது
குடிசை வாயிலில் தொங்கும்
நெற்கதிர்களும் இன்றில்லை.
இந்த தை”யில் கருக்கரிவாள் தொடாத கரங்கள்
உளுந்து பயறு தெளிக்காத விரல்கள்
துயரத்தின் நெடுவாசல்களில் அல்லாடுகின்றன
ஆற்றுக்குட்டைகள் தேடியலைந்த கால்கள்
இந்நிலம் நெடுகிலும்
ஈரம் தேடி மாடாடுகள் நா வறண்டு கதறும்
நீதி பன்னாட்டு நிறுவனங்களின் பக்கமாய் சாய்கிறது
அதிகாரத் தலைமையும் சாமியார்களை தேடியலைகிறது
கடவுள்களை குடியேற்றுவதற்கு
கோயில்களும்,மசூதிகளும்,தேவாலயங்களும்
கட்டிவிடத் துடிக்கிற பதர்களே
ஒருபோதும் விளைவிக்க முடியாது உங்களால்
ஒரு பிடி தானியத்தை.

5.எரியவிடு சொற்களை..

புதைத்து விடலாமாவென்றால்..
வேண்டாமென்றேன்
புழுக்கள் துளைக்கும்
நாய்கள் நரிகள் கிளற வாய்க்கும்
வெய்யிலில் புழுங்கி வெக்கையில் தவிக்கும்
கீரிகள் புதைமேட்டை துளைக்கும்
ஓணான்கள் முட்டையிடும்
குழிச்சிலந்தி இரைபிடிக்கும்
அடிக்கடி சாவு விழுந்தோ மழை கரைத்தோ
அடையாளமிழக்கும் ‘புதையலை’
தவிர்த்துவிடலாமென்றேன்
இப்போது சொற்கள் சுடலையாகி நாட்டியமாட
மூன்றாம்நாள் நினைவைத் தெளித்துவிட
எலும்பின் ரூபத்தில்
கொஞ்சம் மீதமிருக்கின்றன சொற்கள்.

6.நிகழ்

அன்று ஞாயிறு கிழமை
வேலைக்கழைக்கிறான் வலிய
வயிறு தள்ளி நகரும் சிசுவை
ஒப்படைத்திருந்தாள் கால்கள் உப்பிய தாயிடம்
இரண்டு குவளை நீரால் வயிற்றை நிரப்பி
நித்தம் கூட்டிப் பெருக்கத்திறக்கும் கதவுகள் ஒருக்களித்திருக்க
நுழையுமவளை
வாய்பொத்தி பணியச்செய்யும் கரங்கள்
உடைகள் நெகிழ்த்தப்பட்ட அவ்வுடல் அதிர அதிர
உக்கிரமாய் இயங்குகிறான்
கண்ணீர் வழிந்து தரைத்துணி கசங்கி அழும்
உடல் கூசியது போகப் போக நீர்குடித்த பாலை
திருப்தியா..திருப்தியா..முனகினான் உச்சத்தில்
மூடிய இமைகளுக்குள் வாழ்வின் சித்திரம்
ஈனசுரத்தில் இறைஞ்சினாள்
“கொழந்தைக்கு புதுத்துணி எடுக்கணும்
நூர்ருபா தர்றீங்களா சார்..”

7.நான்

தட்டித் தட்டி தட்டுத்தடுமாறி
சென்றுகொண்டிருக்கிறேன்
எங்கோ என்றோ திறக்கும் கதவுக்காக
ஒன்றில் கலவிமுனகல்
ஒன்றில் இல்லறச்சண்டை
பாலியல் அத்துமீறல்
அரசியல் கூச்சல்
பதவிப் பேராசை
உழைப்புச் சுரண்டல்
சாதிச்சண்டை
மதச்சண்டை
இலக்கிய அடிதடி
மனமுறிவு
என் கதவுத்தட்டல் ஒலிக்கு காதுகொடுக்காத
ஆயிரம் சிக்கல்கள் மனச்சிடுக்குகளுக்குள்
ஒளிந்துகொண்டிருப்பவர்களே..
உங்கள் ஒவ்வொருவர் வாயிலிலும் வந்துபோனது யாரென அறியாமல்
காலத்தில் கரைந்துபோன ஓசைகளை விலக்கி
இயல்பில் இயங்கும்போது
புயலெனக் கிளம்பி
உங்கள் கூரைகளை பிய்த்தெரியத்துவங்குகிறேன்
இப்போது நன்றாகத் தெரிகிறது
நீங்கள் நடுங்கியபடி அமர்ந்திருப்பது.

•••