Category: இதழ் 26

அறிவிப்பு அசோகன் முத்துசாமி முதலாமாண்டு நினைவுச் சொற்பொழிவு

92V57Tgr43F2FWAN4fbtRBCM

அங்கீகாரத்தின் தூதுவன் சத்யஜித் ரே. நேர்காணல் சத்யஜித் ரே. தமிழில் ஜா. தீபா

download (12)

தன்னுள் கரைந்து விட்ட புத்தகத்தின் பக்கங்களை நேர்த்தியான காட்சிகளாக மாற்றித் திரையில் தந்த தேர்ந்த கதை சொல்லி சத்யஜித் ரே. எந்தப் பகட்டுமின்றி நகர்கிற காட்சிகள் வழியே அவர் நமக்கு சொன்ன ஒவ்வொன்றுமே இன்று வரை திரைக் காவியங்களாகாவே இருக்கின்றன. வாழும் காலத்தில் எத்தனையோ விமர்சனங்களை எதிர்கொண்டவர். அவற்றுக்கெல்லாம் மீண்டும் மீண்டும் படைப்புகள் மூலமாகவே தனது விடைகளை பதிவு செய்துவிட்டுப் போனவர். அவர் குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்களும், அது சார்ந்த அவரது பார்வைகளுமாய் இருக்கிறது இந்த நேர்காணல் ….

உங்கள் படங்கள் இந்தியாவுக்கு வெளியே இத்தனை பெரிய அங்கீகாரம் பெறும் என்பதை எதிர்பார்த்தீர்களா?
எல்லோருக்கும் பொதுவான உணர்ச்சிகளை, உணர்வுகளை, கதாபாத்திரங்களை வடிவமைக்கும்போது எல்லாத் தடைகளையும் நாம் தாண்டி விடுகிறோம்.

நீங்கள் உருவாக்கியதில் திருப்தியடையாத படம் எது?
‘chiriyakhana’ (The Zoo) படம் தான். இந்தப் படம் நான் தேர்ந்தெடுத்து அல்ல. என் சூழல் காரணமாகவே இயக்கினேன். என்னுடைய உதவியாளர்கள் தான் இதனை இயக்குவதாக இருந்தது. அவர்களுக்கு திடீரென நம்பிக்கை போய்விட்டது. அதனால் தான் நான் பலவந்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

உங்கள் படத்தின் பெண் கதாபாத்திரங்கள் வலுவானவர்களாக இருக்கின்றனர். வங்காளத்தினுடைய சமூக வரலாற்றின் பாதிப்பா இது?
நான் எந்தக் கதையை படமாக எடுக்கிறேனோ அந்தப் படத்தின் எழுத்தாளரின் ‘பார்வை’யைத் தான் நான் சார்ந்திருக்கிறேன். தாகூரும், பக்கிம்ச்சந்திரரும் உறுதியான பெண் கதாபாத்திரங்களையே படைப்பார்கள். பெண்களிடம் எனக்கு இருக்கிற தனிப்பட்ட அனுபவங்களும், எண்ணங்களும் கூட இதில் பிரதிபலிக்கின்றது.

அவர்கள் உடலளவில் ஆண்களைப் போல உறுதியானவர்கள் இல்லையென்றாலும் இயற்கை அவர்களுக்கு அதனை ஈடுகட்டிவிடுகிறது. எல்லாப் பெண்களையும் பற்றி நான் சொல்லவில்லை. என்னை ஈர்த்தப் பெண்களைப் பற்றி மட்டுமே சொல்கிறேன். என்னுடைய படங்களில் வருகிற பெண்கள் ஆண்களைக் காட்டிலும் சூழலை லாவகமாக கையாள்பவர்கள்.

‘The music room’ தொடங்கி ‘The chess players ‘ வரை பழைய, புதிய கலாசாரத்திற்குப் போயும், வந்து கொண்டும் இருக்கிறீர்கள். நீங்கள் பழைய பண்பாடு குறித்து தான் அதிக அக்கறை செலுத்துவது போல் தோன்றுகிறது.
தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்கிற கவலை ஜமின்தார்களுக்கு கிடையாது என்பதை ‘the chess players’ படத்தில் சொல்லியிருக்கிறேன். அவர்கள் மோசமானவர்களாக இருந்தாலும் அவர்கள் குணாதிசயங்கள் பரிதாபத்திற்குரியவை. அவர்களின் வாழ்க்கை முறை என்னை ஆர்வப்படுத்துகிறது. எழுத்தாளர் செகொவினுடைய ‘the cherry orchard’ கதை கூட இது போன்ற ஒரு நிலை தான்.

ஒரு செத்த குதிரையை அடிப்பதைக் காட்டுவதன் மூலமாக இந்த ஜமீன் வழக்கம் முட்டாள்தனமானது, தவறானது என்பதை சொல்லிவிட முடியும். ஆனால் இந்தப் படங்களின் கதாபாத்திரங்களை நீங்கள் உணரவேண்டும். தான் ஏன் இந்த உலகத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டோம் என்பது தெரியாத டைனோசர்களைப் போன்றவர்கள் ஜமீன்தார்கள்.

ஒரு படைப்பாளி எது நல்லது, எது கெட்டது என்பதற்கு பதிலும், தீர்ப்புகளும் சொல்ல வேண்டியதில்லை என அடிக்கடி சொல்வீர்கள். முக்கியமான அரசியல் கருத்துக்களை விட்டு விலகியே இருக்கிறீர்கள்..
மிருணாள் சென்னை விடவும் என்னுடைய கருத்துக்களை நான் தெளிவாக சொல்லியிருக்கிறேன்.

‘middlemen’ படத்தில் காங்கிரஸ் குறித்த நீண்டதொரு உரையாடல் இருக்கும். அந்தக் கதாபாத்திரம் பொய்யாகவும், முட்டாள்தனமாகவும் கூட பேசி இருக்கலாம்.ஆனால் அவன் இருப்பு அங்கு முக்கியமானது. வேறு ஏதாவது இயக்குனர் இயக்கி இருந்தாளல் இதனை அனுமதித்திருக்கவே மாட்டார்கள்.

ஒரு இயக்குனர் என்ன சொல்லவேண்டுமென்பதில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. சில கருத்துக்கள் தணிக்கையைத் தாண்டி வெளியே வருவதில்லை என்கிறபோது , எதற்காக சொல்ல வேண்டும்?

இந்திய அரசியல் சூழலில் ஒரு திரைப்பட இயக்குனரின் பங்கு செயல்படுவதா? அல்லது பார்வையாளனாக இருப்பதா?
‘The kingdom of Diamonds’ (Hirak rajar Deshe) படம் பார்த்தீர்களா? அதில் ஏழைகளை அவர்கள் இடத்திலிருந்து அப்புறப்படுத்துகிற காட்சி ஒன்று இருக்கும். இந்திராகாந்தியின் ஆட்சியின் போது டெல்லியிலும் மற்ற நகரங்களிலும் நடைபெற்றதின் நேரடியான பாதிப்பு தான் இது. சமகால கதைகளைக் கையாளும்போது ஒரு கட்டத்திற்கு மேல் வெளிப்படையாக சொல்ல முடியாது. அதிகாரத்தில் உள்ளவர்களை நேரடியாக தாக்க முடியாது. ‘The Story of Chair’ படத்தில் இதை முயற்சித்தேன். என்ன நடந்தது? முழுப் படமும் வீணானது. என்ன செய்ய முடியும் எங்களால்? சுற்றி நடக்கிற பிரச்சனைகள் தெரியும். ஆனாலும் எதற்கும் எல்லை இருக்கிறது. அதைத் தாண்டி நம்மால் போக முடியாது.

குறிப்பாக வங்காள விமர்க்சகர்கள் உங்களுக்கு அரசியல் அறிவுப் பற்றாக்குறை இருப்பதாக சொல்கிறார்கள்…
அதிகார வர்க்கத்தை நோக்கி கேள்வி எழுப்புவதும் , தாக்குவதும் கஷ்டமான காரியம் அல்ல. நம்மைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவர்கள் அவர்கள். நாம் என்ன பேசினாலும் கண்டுகொள்ளாதவர்களாகவே இருக்கிறார்கள். இப்படி இருக்கிற சூழலில் என்ன செய்ய முடியும்?

திரைப்படங்கள் சமூகத்தை ஒருபோதும் மாற்ற முடியாது. சமூகத்தை மாற்றி அமைத்த ஒரு திரைப்படத்தைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

Sergei Eisenstein, Leni Riefenstahl போன்றவர்கள் திரைப்படங்களை புரட்சிக்கான ஊடகமாக கையாண்டார்களே?
ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த புரட்சிக்கு நடுவில் , திரைப்பட இயக்குனரால் சாத்தியமானவற்றை செய்ய முடியும். புரட்சியே இல்லாத இடத்தில் என்ன செய்து விட முடியும்?

பாசிசத்தின் ஆரம்ப கால கட்டத்தில் அறிவு ஜீவிகள் கூட குழப்பத்தில் தான் இருந்தார்கள். தாகூர் கூட முசோலினி ஏதோ அற்புதத்தை செய்து கொண்டிருக்கிறார் என்று தான் நம்பினார். ரோமைன் ரோலாண்ட் வந்து சொல்லும்போது தான் தவறு என்று புரிந்து கொண்டார். அதுவரை அவருக்கு பாசிசம் பற்றிய முழுத் தெளிவு இல்லை.

ஒரு திரைப்பட படைப்பாளியாக உங்களது சமூக பங்கு தான் என்ன?
‘The adversary’ படத்தில் இரண்டு சகோதர்கள் இருப்பார்கள். அதில் தம்பி ஒரு நக்சலைட். தம்பியின் தைரியமும் , உறுதியும் அண்ணனை ஈர்க்கிறது. இதைத் தெளிவாகவே காட்டியிருக்கிறேன். ஒரு படைப்பாளியாக எனக்கு அண்ணன் கதாபாத்திரம் தான் பிடித்திருக்கிறது. ஏனென்றால் அவன் நம்மைப் போலவே ஸ்திரமில்லாத, அலைபாயும் மனதைக் கொண்டவனாக இருக்கிறான் . உளவியல் ரீதியாகப் பார்த்தாலும் அவன் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரம். தம்பி, தான் எப்படிபட்டவன் என்பதை ஏற்கனவே நிறுவிவிட்டான் என்பதனாலேயே அவன் முக்கியமில்லாதவனாக நமக்கு ஆகிவிடுகிறான்.

கொள்கை ரீதியிலான வெளிப்பாடுகளுக்கும், உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாட்டினை சொல்ல முடியுமா? கொள்கை உடையவன் அறிவாளியாகவும் இருக்கிறானா? எப்படி இரண்டையும் பகுத்துக் கொள்கிறீர்கள்?
ஒரு இயக்கத்தோடு தொடர்பு கொண்டு அதைச் சார்ந்திருப்பவர்கள் , அதன் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் கட்டளைகளைக் கேட்டே நடந்து கொள்கிறார்கள். இப்படி கட்டுப்படுத்துபவர்கள் தான் சுவாரஸ்யதிற்குறியவர்கள். .. இப்போது நீங்கள் நக்சலைட் பற்றியோ புரட்சிகளைப் பேசும் Eisenstein படங்களைப் போலவோ ஒரு படம் எடுத்து விட முடியும். ஆனால், இப்போதுள்ள இந்திய சூழலில் நம்மால் எதுவும் செய்ய முடியாது.

 

நீங்கள் கோட்பாடுகளைப் பேசுவதை விட, உணர்ச்சிகரமான அனுபவங்களையே அதிகம் வெளிப்படுத்துகிறீர்கள் என்று பலரும் நினைக்கிறார்கள்..
இந்தக் கருத்து தவறானது. என்னுடைய படங்களில் நான் அழுத்தமாக வலியுறுத்துவது நடத்தைச் சார்ந்த கோட்பாடுகளைத் தான்.

 

நீங்கள் வளர்ந்த பிரம்ம சமாஜத்தின் சூழல் காரணமாக இப்படி நடந்ததா?
நான் அப்படி நினைக்கவில்லை. ‘பிரம்ம’ என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. பதினான்காவது வயதிலேயே பிரம்ம சமாஜத்துக்கு போவதை நிறுத்திக் கொண்டேன். முறைப்படுத்தப்பட்ட மதத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. மதம் என்பது அந்தரங்கமானது. ஒரு அரசியல் பார்வையை வெளிப்படுத்துவதை விடவும் நடத்தைக் குறித்த பார்வைகளைத் தான் கொண்டு வர விரும்புகிறேன்.

 

உங்களுடைய தனிப்பட்ட மனோபாவங்கள் உங்கள் கதாபாத்திரங்களை எப்படி பாதிக்கிறது? ‘கங்காசரண்’ (‘the distant thunder’) கதாபாத்திரம் உங்களுடைய பலவீனத்தையும் குற்ற உணர்வையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது என விமர்சகர் பாலின் காயல் சொல்லியிருக்கிறார்..
நான் மற்றவர்களின் கதையைத் தான் அதிகமாக படமாக எடுக்கிறேன். ‘The distant thunder’ படத்தில் கங்காசரண் கதாபாத்திரம் விபூதி பூஷனின் கருத்துக்கு நெருங்கியவனாக இருக்கிறான். அவருக்கு இப்படியான பலவீனமும், குற்ற உணர்வும் இருந்ததா என்பது தான் கேள்வியாக இருக்க முடியும். நான் அந்தக் கதையை உருவாக்குபவன் அல்ல.

ஒரு புரிதலும், அடையாளமும் உள்ள கதாபாத்திரத்தினைத் தான் தேர்ந்ததெடுத்திருக்கிறேன்.

எனக்கு கங்காசரணின் நடத்தை, அவனது எதிர்வினைகள் எல்லாமே தெரியும். என்னைப் பொறுத்தவரை அவன் நம்பத் தகுந்தவன். முழுமையான கதாபாத்திரம். முடிவில் அவனுடைய மாற்றம் உணர்வுபூர்வமானது. ஆனால் கண்டிப்பாக அவன் என்னுடைய பிரதிபலிப்பு கிடையாது.

 

நீங்கள் படமாக்க எடுத்துக் கொள்ளும் புத்தகங்களைப் படிக்காதவர்களால் அந்தப் படங்களைப் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கும் என நினைக்கிறீர்களா?
ஆம். எதனால் அப்படி நினைக்கிறேன் என்றால் அவர்கள் அந்த எழுத்தாளரைப் புறக்கணித்து விடுகிறார்கள். ஒரு இயக்குனர் தொடக்கம் முதல் முடிவு வரை கதை சொல்லும் விதத்தை மட்டுமே தான் முழுமையான படைப்பாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. கதை மற்றும் நாவலில் உள்ள சில அம்சங்கள் தான் என்னை ஈர்க்கின்றன. திரைக்கதையாக அவற்றை மாற்றும்போது சில கருத்துக்கள் மாரறுபடுமே தவிர கரு அப்படியே இருக்கும். சில சமயங்களில் அசல் புத்தகத்துக்கு சொல்லப்பட்ட விமர்சனத்தில் இருந்து கூட திரைக்கதை உருவாகும்.

பல தடவை கதையை வாசித்த பின்பு சில கதாபாத்திரங்களின் தன்மை எழுத்தாளர் உருவாக்கியபடி இருக்க வேண்டாம் எனத் தோன்றும். அப்போது சில மாற்றங்கள் நடக்கும்.

ஒரு கதையை வாசித்த பின், ஆரம்பத்தில் இருந்து முடிகிற வரை அதைப் படமாக வரைந்து பார்ப்பேன். பின்பு சில மாற்றங்களை செய்து கொண்டு அசலான படைப்பை மறந்துவிடுவேன்.

நீங்கள் வறுமையையும், துயரத்தையும் கூட அழகியலோடு பதிவு செய்கிறீர்கள் என்ற விமர்சனம் இருக்கிறதே..
‘பதேர் பாஞ்சாலி’ படத்தில் வறுமையின் கோரத்தை அப்பட்டமாகத் தான் காட்டி இருப்பேன். அந்த அம்மா, பாட்டியிடம் காட்டுவது அப்பட்டமான குரூரம் தான். நாம் யாரும் இப்படியொரு குரூரத்தை நமது குடும்பத்தில் உள்ள வயதானவர்களிடம் காட்டுவதில்லை.

‘The distant thunder’ படத்தில் வருகிற பபிதாவை பொம்மை போல் இருக்கிறாள் என விமர்சகர்கள் சொன்னார்கள். உங்களுக்குத் தெரியுமா? கிராமங்களில் இருக்கும் வங்காள பிராமணப் பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள்.

 

ஃபெலினி, குரோசாவா, பெர்க்மன், நீங்கள் எல்லோரும் ஒரே காலகட்டத்தில் படம் இயக்கத் தொடங்கினீர்கள். ஃபெலினியோ, பெர்க்மேனோ கதை சொல்லும் விதத்தில் எடுத்துக் கொண்ட புதிய முயற்சிகளை நீங்கள் கையாளவில்லை என்றும் பின் தங்கிவிடீர்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றன.. படம் இயக்கத் தொடங்கிய முப்பது ஆண்டுகள் கடந்த பின் பின்னோக்கிப் பார்க்கும்போது உங்கள் படங்களை எப்படி ஒப்பிடு செய்து கொள்கிறீர்கள்?
மிக சீக்கிரமே நான் முதிர்சியடைந்துவிட்டதாகவே நினைக்கிறேன். எளிமையாக கதை சொல்வதின் மூலம் அடர்த்தியான விஷயங்களை சொல்லிவிட முடியும் என்பதில் தீர்மானமாக இருந்தேன்.

எனது படங்களை உருவாக்கும்போது மேற்கத்தியப் பார்வையாளர்களை நான் நினைத்துக் கொள்வதில்லை. எனது வங்காளிகள் தான் என்னுடைய பார்வையாளர்கள்.

அவர்களை என்னுடனேயே பயணத்தில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. மெதுவாகத்தான் இந்த மாற்றம் நடந்தது.

இந்தப் பிரச்சனை ஃபெலினிக்கோ, பெர்க்மேனுக்கோ இல்லை. பெர்க்மன் தீவீரமானவர். அவருக்கு நல்ல ஒளிப்பதிவாளர்களின் உதவி இருக்கிறது.

ஃபெலினியை பொறுத்தவரை ஒரே படத்தையே அவர் திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய படங்களில் புத்திசாலித்தனம் இருக்கும். அவருடைய படங்களைக் கதைக்காக மக்கள் பார்க்கவில்லை. அதில் தெரிகிற புத்திசாலித்தனத்திற்காகவேப் பார்த்தார்கள்.

பெர்க்மன், ஃபெலினி செய்வதையே நானும் பின்பற்ற வேண்டியதில்லை. அவர்களது பார்வையாளர்களுக்கும் இங்கிருப்பவர்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.

முப்பது வருடங்களாக இந்தியப் பார்வையாளர்களோடு வேலை செய்து வருகிறேன். இந்தக் காலகட்டங்களில் சினிமாவின் பார்வை மாறவே இல்லை. அதிலும் வங்காளத்தில் கண்டிப்பாக இல்லை.

முட்டாள்தனமாகவும், பின்னுக்கு இழுக்கும் வேலைகளையும் இங்குள்ள இயக்குனர்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள். என்னுடைய படங்களைப் பாதுக்காக்கும் இடத்திற்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.

ஆனாலும் என்னுடைய படங்கள் வெளிப்படுத்தும் அர்த்தங்கள், கருத்துகள், தன்மைகள் என எல்லாவற்றையும் மக்களோடு தொடர்புப்படுத்திக்கொண்டே இருக்கும்.

 

தேவகிருபை இந்தியில் சரத் உபாத்யாய் தமிழில் நாணற்காடன்

tr

நகரத்தைத் தாண்டி நதிக்கரையில் அந்தச சிறிய கோயில் இருந்தது. பிரகாரச் சுவர்கள் நாலாப்புறமும் உயரவுயரமாக இருந்தன. வலது சுவரையொட்டிச் செல்கிற அந்தச் சாலை மரங்களடர்ந்த புதருக்குள் ஒளிந்துகொள்கிறது. சாலையின் மறுபக்கம் சில பெஞ்சுகள் போடப்பட்டிருக்கின்றன. அந்தி மசங்கும் நேரத்தில் கோயிலுக்கு வரும் மக்கள் பெஞ்சுகளை நிரப்பிவிடுவார்கள். பெஞ்சுகளையொட்டி இரண்டு மரங்கள் இருந்தன. அதற்கும் சற்றுத் தள்ளி கருவேலம் புதர்.

அந்த மரங்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய உருவம் கொண்டு அடர்ந்திருக்கவில்லை. இருவர் மட்டுமே உட்கார்ந்துகொள்ளும் அளவிற்கு சிக்கனமாக நிழல் தந்தன அவை. அந்த மரத்தடியில் தான் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். இருவரும் தம்முன் அலுமினியத் தட்டு வைத்திருப்பார்கள். பக்கத்திலேயே ஆளுக்கொரு இரும்பு வாளி இருக்கும். இருவரும் இடுப்பில் கந்தலாய் வேட்டியைச் சுற்றியிருப்பார்கள். இருவருக்கும் உருவத்தில் நிறையவே வித்தியாசமுண்டு. தன்னா எலும்புந் தோலுமாக, கலைந்த தலைமுடியோடு இருப்பான். அவனது அம்மைத் தழும்புகளால் விகாரமாக இருக்கும். ஏதோ விசித்திர நோயால் பீடிக்கப்பட்டு அவனது உடல் முழுக்க சிவந்த கொப்பளங்களும், காயங்களுமாக இருக்கும். கழுத்து, வயிறு, உள்ளங்கால்வரையிலும் சீழ்வடியும் காயங்களும், இரத்தம் வடியும் கொப்பளங்களுமாய் பார்க்கவே அறுவெறுப்பாயிருக்கும் அவனது தோற்றம். ஆனால், பக்தியோடு கோயிலுக்கு வருபவர்களுக்கு அவனது தோற்றம் அறுவெறுப்புக்கு பதிலாக பரிதாபத்தையே உண்டாக்கியது. அந்த பரிதாபம் அவனது அலுமினியத் தட்டில் சில்லறைகளாக மாறியது.

ஆனால், பிர்ஜீவின் நிலைமையோ வேறு. பார்க்க கொழுகொழுவென்று இருந்தான். வேட்டிக்கு மேல் கட்டுக்கோப்பான உடம்பு; உப்பிய கன்னங்கள். அவனது தோற்றம் பரிதாபத்தை உண்டாக்கக் கூடியதாக இல்லை. ஆனாலும், தன்னாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதால் பிர்ஜீவிற்கும் ஏதாவது கிடைக்கும். காயமும், தழும்புகளும் கொண்ட கோரமான உடம்புக்குத்தான் இங்கே மதிப்பு. தன்னாவின் தட்டை விட பிர்ஜூவின் தட்டு குறைவான வருமானத்தையே பெற்றுத்தருகிறது. சொல்லப்போனால் பிர்ஜூவின் தட்டு பெரும்பாலும் உதாசீனங்களால் தான் நிறைகிறது. பிர்ஜீவின் உடம்பில் எந்தக் காயங்களும், தழும்புகளும் இல்லாதது தான் இதற்குக் காரணம் போல.

தன்னாவைப் பார்த்து யாரும் பரிதாபப்படாமல் இருக்க முடியாது. அதிலும் பெண்கள் தன்னாவைப் பார்த்துவிட்டால் உருகிப் போய்விடுகிறார்கள். ஆனால் தன்னாவின் வாழ்க்கை நிலையோ முற்றிலும் வேறானது. காயங்களையும், கொப்பளங்களையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் தன்னாவின் வாழ்க்கை செழிப்பு மிக்கதாகவே உள்ளது. போதுமான அளவுக்கு தன்னாவுக்கு உணவு கிடைத்துவிடுகிறது. அது மட்டுமா? அவனது அலுமினியத்தட்டு அவனுக்கு மது குடிக்கவும், கஞ்சா குடிக்கவும் தேவையான வருமானத்தையும் பெற்றுவிடுகிறது. பிர்ஜூவின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது. பல நேரங்களில் பட்டினி தான்.

இந்த இரண்டு பிச்சைக்கார்களின் உலகமும் மிகவும் சிறியது தான், எனினும் அவர்களது தொழிலில் போட்டி உருவாகிவிட்டது. அது நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவிட்டது. தன்னாவின் சீழ்வடியும் காயங்களும், கொப்பளங்களும் அவனுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. ஒரு நடிகை தனது அழகை எண்ணி கர்வம் கொள்வதுபோல, தன்னா தழும்புகளும், காயங்களும் கொண்ட தனது உடலை நினைத்துக் கர்வம் கொண்டிருந்தான். தன்னாவின் உடம்பிலிருக்கும் கொப்பளங்களை நினைக்கும்போதெல்லாம் பிர்ஜூவுக்கு பொறாமை பொங்கி வழிந்தது. அழகே இல்லாத யுவதியொருத்தி, அழகு தேவதை ஒருத்தியைக் கண்டு வெறுப்பது போல பிர்ஜூவுக்கு தன்னாவின் உடம்பின் மீது வெறுப்பு குடி கொண்டுவிட்டது.

நாளுக்கு நாள் இந்த வெறுப்பு பிர்ஜூவைப் பாடாய்ப்படுத்தியது. தன்னாவின் அலுமினியத்தட்டில் விழும் ஒவ்வொரு நாணயமும், பிர்ஜூவின் மேல் ஈட்டியாய் இறங்கியது. நாணயம் விழும் சத்தம் ஒவ்வொன்றும் பிர்ஜூவின் இதயத்தை குண்டு விழுந்ததைப் போல உலுக்கியது.

எப்படியாவது தன்னாவை விட அதிகமாக பிச்சையெடுத்து வருமானத்தைப் பெருக்க வேண்டுமென்ற பேராசையில், கோயிலுக்கு வருபவரின் மனத்தைக் கரைக்கும்படி வலியால் துடிப்பது போல நடிப்பது… என பலவிதத்திலும் முயற்சிகள் செய்துவிட்டான் பிர்ஜூ. ஆனாலும் தன்னாவின் தழும்புகளுக்கு முன் பிர்ஜூவின் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீரானது.

தன்னாவின் மேல் இவ்வளவு வெறுப்பும், பொறாமையும் பிர்ஜூவுக்கு உண்டாக, தன்னாவும் தான் காரணம். தன்னா கறியும் சோறும் சாப்பிடும்போது, பிர்ஜூ காய்ந்த ரொட்டித் துண்டை அதக்கிக் கொண்டிருப்பான். ரெண்டு கறித்துண்டுகளை பிர்ஜூவுக்குத் தரலாமெனவும் தன்னா எண்ணியதில்லை. அவன் ஒருவனே தான் சாப்பிடுவான். மது அருந்தும்போதும் அப்படித் தான். ஒரு மிடறு கூட தர மாட்டான். மதுவின் வாடையோ பிர்ஜீவை சுண்டி இழுக்கும். தன்னா இப்படி சுயநலமா இருப்பதால் தான் பிர்ஜூவின் மனசில் இவ்வளவு வெறுப்பும், பொறாமையும்.

பிர்ஜூ சில நேரங்களில் யோசிப்பதுண்டு. தன்னாவின் இந்த நோய் எவ்வளவு காலம் நீடித்துவிடப் போகிறது? இந்தக் கொப்பளங்களும், காயங்களும் நிலையானதா என்ன? என்றாவது ஒருநாள் இந்த நோய் முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும்? பிர்ஜீ தன்னாவிடம் இந்த நோய் பற்றி பலமுறை விசாரித்திருக்கிறான். அப்போதெல்லாம் , தனக்கு உடம்பில் எவ்விதமான வலியோ, வேதனையோ கிடையாது என்றே தன்னா கூறுவான். இது ஒருவிதமான தொற்று நோய். தொட்டால் ஒட்டிக்கொள்ளும். கோயிலைச் சுற்றி வீடுகள் எதுவும் இல்லாததால் இந்த நோய் பரவும் அபாயம் இல்லை என்பான் தன்னா. வாழ்நாள் முழுவதும் இந்த நோயோடுதான் தன்னா இருப்பான் என்பதை நினைக்கும்போது பிர்ஜூவுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. வேறு இடத்திற்குப் போய் விடலாமா என்றுகூட பிர்ஜீ யோசித்தான். நகரத்தைத் தாண்டி இருப்பதால் தான் இங்கே பிச்சைக்காரர்கள் கூட்டம் மொய்ப்பதில்லை. வேறு இடங்களில் போட்டி அதிகமாக இருக்கும். இங்கே தன்னாவைத் தவிர போட்டிக்கு யாருமில்லை. அதனால், வேறு இடம் தேடும் முடிவைக் கைவிட்டான்.

ஒருநாள் இரவு முழுதும் பிர்ஜீக்கு தூக்கமே வரவில்லை. எதையெதையோ யோசித்துக் கொண்டிருந்ததில் விடிந்தேவிட்டது. அந்த விடியல் பிர்ஜூவுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுப்பதாக இருந்தது. இன்னமும் தன்னா தூங்கிக்கொண்டிருந்தான. சுள்ளிகள் எரித்து தேநீர் தயாரித்தான் பிர்ஜூ. தன்னா எழுந்ததும் தேநீர் டம்ளரை அவனிடம் நீட்டினான். தன்னாவுக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. எதுவும் பேசாமல் தேநீர் அருந்தினான் தன்னா. அன்றிலிருந்து பிர்ஜூ தன்னாவிடம் நெருங்கிப் பழகத் தொடங்கினான். அவனோடு சேர்ந்தே சாப்பிட்டான். இரவிலும் வெகு நேரம் வரை தன்னாவோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு தன்னாவின் கம்பளி விரிப்பிலேயே உறங்கிவிடுவான். “ அடடே, உன் காயத்திலிருந்து இரத்தம் வருது பார். கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைத்துவிடுகிறேன் வா” என்று தன்னாவுக்கு பணிவிடைகளும் செய்தான்.

”வேண்டாம் பிர்ஜீ..இது தொற்று வியாதி. உனக்கும் ஒட்டிக்கொள்ளும்” என்று தன்னா மறுத்தாலும், பிர்ஜீ காயங்களைச் சுத்தம் செய்து எண்ணெய் வைத்துவிடுவான். கொஞ்சமும் தயங்காமல் காயங்கள் துடைத்த தன் கைகளைத் தனது வேட்டியிலேயே துடைத்துக்கொள்வான்..

எந்த எதிர்பார்ப்புமில்லாமல் பிர்ஜீ பழகுவதை தன்னாவால் சகஜமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இனி சாப்பிடும்போது பிர்ஜூவுக்கும் கொடுத்துவிட்டுச் சாப்பிடுவது என நினைத்தான் தன்னா. ஆனாலும், நினைத்ததோடு சரி.. பிர்ஜூவோ எவ்வித மாற்றமுமில்லாமல் சகஜமாகவே தன்னாவுடன் பழகினான்.

ஒருநாள் காலை தூங்கியெழுந்த பிர்ஜூவின் பாதங்களில் ஏதோ ஊர்வதுபோல இருந்தது. பூச்சி புழு ஏதேனும் ஊர்கிறதா என தடாலென எழுந்து வேட்டியை உதறிப் பார்த்தான். எதுவும் தட்டுப்படவில்லை. ஆனால், அவனது இடுப்பில் சின்னச் சின்னதாய் சிவந்த கொப்பளங்கள் தென்பட்டன. உடனே அவன் தன்னாவை எழுப்பினான். எழுந்து உட்கார்ந்த தன்னா அந்தக் கொப்பளங்களைப் பார்த்ததும்,” சொன்னேனே கேட்டியா? உனக்கும் வந்துவிட்டது இந்த வியாதி. என் கிட்ட வராதேன்னு எத்தனை முறை சொன்னேன்? என் காயங்களைத் தொடாதேன்னு சொன்னேன்…கேட்டியா நீ? இப்ப பாரு…..” என்று கத்தினான் தன்னா.

“ உனக்கும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்ததா தன்னா?” என்று கேட்டான் பிர்ஜீ.

அந்தக் கொப்பளங்களைக் கூர்ந்து பார்த்த தன்னா,” ஆமாம்… இதே மாதிரிதான் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தது” என்றான் தன்னா.

பிர்ஜூ எதுவும் பேசவில்லை. அமைதியாக எழுந்து கோயிலை நோக்கி நடந்தான். கோயிலுக்குள் சென்று தன் வேட்டி முனையில் முடிந்து வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தை கடவுள் சிலைக்கு முன் வைத்துவிட்டு கைகள் கூப்பி, தளுதளுத்த குரலில்,” கடவுளே, என் மேல் இரக்கம் காட்டியதற்கு நன்றி. என் வேண்டுகோளை ஏற்று எனக்கும் இந்த வியாதியைக் கொடுத்து என் மேல் கிருபை காட்டிவிட்டாய் கடவுளே. இன்னும் சில நாள்களில் என் உடம்பும், தன்னாவின் உடம்பைப் போல் ஆகிவிடும். கோயிலுக்கு வருவோர் இனி என்னைக் கண்டும் பரிதாபப் படுவார்கள். என் அலுமினியத் தட்டும் இனி நிறையும்…….” மேற்கொண்டு பேசமுடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது பிர்ஜீவுக்கு. பிர்ஜூ ரொம்பவும் சந்தோசமாக இருந்தான்

சாத்தானும் சிறுமியும் ’யூமா வாசுகி’யின் கவிதைத்தொகுப்பு _ லதா ராமகிருஷ்ணன்

 

download (6)

 

கல்லூரி நாட்களில், தாகூரின் கீதாஞ்சலி கவிதை கவிதைத்தொகுப்பைப் பற்றிய தனது முன்னுரையில் W.B. யேட்ஸ் என்ற புகழ்பெற்ற கவிஞர், ‘பேருந்தில் பயணமாகும்போது கீதாஞ்சலிக் கவிதைகளைப் படிப்பது தன் வழக்கம் என்றும் அப்படிப் படித்துக்கொண்டே வரும்போது ஒரு கட்டத்தில் தவிர்க்கமுடியாமல் கண்களில் நீர் நிரம்பிவிடும் என்றும் எழுதியிருந்ததைப் படித்து, ‘இது என்ன மிகையான விவரிப்பு என்று மனதில் எதிர்வினையாற்றி அதைப் பொய்யென்று நிரூபிப்பதாய் பேருந்தில் கீதாஞ்சலி கவிதைகளைப் படிக்கத் தொடங்கி, ஒவ்வொரு முறையும் அதேவிதமாய் கண்களில் நீர் நிறைந்துவிடும் ஒருவித ‘மனம் வெளுத்தல்’ அனுபவத்தைப் பெற்றதுண்டு. கவிஞர் யூமா வாசுகியின் ‘சாத்தானும் சிறுமியும்’ கவிதைத்தொகுப்பைப் படித்தபோதும் அதேவிதமான நெகிழ்ச்சி யும் ‘மனம் வெளுத்தலும்’ ஏற்பட்டது.

 

நவீன தமிழிலக்கிய வெளியில் கவிதை, கதை, குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு என பல பிரிவுகளிலும் ஆரவாரமில்லாமல் தடம்பதித்திருப்பவர் தோழர் யூமா வாசுகி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவருபவர்; தரம் நீர்த்துப்போகாமல் இயங்கி வருபவர். அவருடைய ‘இரவுகளின் நிழற்படம்’, ‘என் தந்தையின் வீட்டை சந்தையிட மாக்காதீர்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகள் இடம்பெறும் இத்தொகுப்பு – சாத்தானும் சிறுமியும் – நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளின் நலவாழ்வுக்காக மனமுருக, ஒரு ஆத்மார்த்தமான பிரார்த்தனையேபோல் குரல்கொடுக் கின்றன.

 

இந்தக் கவிதைகளில் இடம்பெறும் குழந்தைகளை, அவர்களின் அற்புதக் கனவுகளை, அவை குரூரமாகக் கலைக்கப்படும் அவலத்தை, குழந்தைகளுக்கு நாம் அளித்திருக்கும் சீர்கெட்ட சமூகச்சூழலை, அதற்குள்ளாக குழந்தைகள் தங்களுக்கென்று கட்டியெழுப்பிக்கொள்ளும் மாயக்கோட்டைகளை, குழந்தைகளின் பல முகங்களை, சிரிப்பின் வாசனையை, அழுகையின் வேதனையை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்; அவற்றின் மத்தியில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், நம்முடைய வாழ்வின் அவசரங்களில் அவற்றை நின்று நிதானித்து உள்வாங்கிக்கொள்ளப் பொழுதற்று, பொறுமையற்று, கடந்துபோய்க் கொண்டேயிருக்கிறோம். அவ்வப்போது குற்றவுணர்வின் கனம் தாங்கமுடியாமல் போவதும் நடக்கிறது. இத்தனை விஷயங்களையும் யூமா வாசுகியின் ’சாத்தானும், சிறுமியும்’ நமக்கு மிக நுட்பமாகப் புலப்படுத்துகிறார்கள். குழந்தைகளின், பெரியவர்களின் பல முகங்கள் இந்தக் கவிதைகளில் துல்லியமாக வெளிப்படுகின்றன.

 

குழந்தைகளின் அண்மையில் குதூகலங்கொள்ளும் கவிமனம் அவர்களின் ஏமாற்றங்களிலும், காயங்களிலும் தீராத வலியுணர்கிறது.

 

‘பத்து வயது கூட நிரம்பாத மீனா பக்கத்து வீட்டில்

வேலைக்காரியாகப் பாடுபடுகிறாள்

 

அரைத்த மாவு நிரம்பிய வாளியை எங்கிருந்தோ

சுமக்கமுடியாமல் கொண்டுவருகையில்,

என் தங்கையாயிருந்து திருவிழா களித்து

பரிசுகளுடன் திரும்புவதாய் சமாதானங்கொள்வேன்’

 

என்று தொடங்கும் தொகுப்பின் முதல் கவிதை தொடங்கி இறுதிக் கவிதை வரை, பல்வேறு சமூக அவலங்களில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் நம்மை மனசாட்சி யென்னும் நீதிதேவனின் முன்னிலையில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மௌனமாய்க் கேள்விகேட்கிறார்கள்; தீர்ப்பளிக்கிறார்கள். சமயங்களில் நம்மைக்கைபிடித்து அழைத்துச் சென்று அவர்களுக்காகவும், நமக்காகவும் நம் கண்களில் நிறைந்துவழியும் கண்ணீரை அன்போடு துடைத்துவிட்டு அதியழகாய்ச் சிரிக்கிறார்கள்!

 

பூமொழி, மதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள், சாத்தானும் சிறுமியும், மாலை நேர வீடு, ஒரு மனிதன் முயலான போது, ஈரம், மற்றும், தலைப்பிடப்படாத சில கவிதைகள் என இருபது இருபத்தியிரண்டு கவிதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் அனாவசியம் அல்லது ‘மெலோடிராமா’ என்று சொல்லத்தக்க ஒரு வரியோ, வார்த்தையோ கிடையாது. நம் அடிமனதை ஊடுருவி ‘மனம் வெளுக்க’ வழிசெய்யும் கவிதைகள் இவை.

”பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்

உன் குழந்தை என் கால்களைத் தொட்டு

கை மலர்த்தும்படி செய்தாயே,

பரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது

எவ்வளவு பாடுபட்டது…

அதைவிடவும் நீ என்னை

முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்”

 

என்று கூறுவதிலுள்ள பரிதவிப்பை வாசக உள்ளம் ஒவ்வொன்றிலும் கண்டிப்பாக பரிவதிர்வை உண்டாக்கும்.

 

“ஏதொரு குழந்தையும்

எங்கோ கனவில் துடித்தழுதால்

எப்படிப் போய்த் தேற்றுவேன் கர்த்தரே

 

என்று எத்தனை கலங்கிப்போகிறது கவிமனம்! இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளை வாசிக்க வாசிக்க கவிமனதின் பரிதவிப்பு நம் மனதில் பாரமாய் இறங்கிக்கொண்டே போகிறது. [இந்த மனபாரத்தை உணரவில்லையானால் நாம் மனிதனாயிருந்து என்ன பயன்?]

 

ஆனால், இதே குழந்தைகளே கவிஞரின் மனபாரத்தை மயிலிறகாக்கிவிடுபவர்களாகவும் இருக்கிறார்கள்!

 

‘இன்றைய பகலெல்லாம்

சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்தவன் யார் என்று

அகால இரவுக் கனவில்

தேடியலைந்தது ஒரு குழந்தை.

 

என்று தொடங்கும் கவிதை

 

 

“நீ தானே?” என்றது குழந்தை.

“ஆம்!” என்றேன் நான்.

தூக்கச் சொல்லிக் கை விரித்தது.

அள்ளி அணைத்துக்கொண்டேன்.

கனவின் கடைசி நொடியில் ஒரே ஒரு முத்தம்.

விடிந்தது.

காலையில் மனம் தெளிந்திருந்தது

 

_ என்று முடிகிறது.

 

ஓவியர் மணிவண்ணனின் கைவண்ணங்கள் யூமா வாசுகியின் கவிதைகளுக்கு உரிய மரியாதை செய்வதோடு தம்மளவில் தனிக்கவிதைகளாகவே விளங்குகின்றன எனலாம்! என்றாலும், குழந்தைகளைப் பற்றிய கவிதைகள் இடம்பெற்றிருக்கும் தொகுப்பில் குழந்தைகளின் முகபாவங்களும், அசைவுகளும், இடம்பெற்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றியது. அப்படி இருக்கலாகாது என்று பிரக்ஞாபூர்வமாகவே முடிவெடுத்திருக்கக் கூடும் கவிஞரும் ஓவியரும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

 

தொகுப்பிற்கு எழுத்தாளர் கவின்மலர் அத்தனை அருமையான முன்னுரை எழுதியிருக்கிறார்! ‘முன்னுரையின் அரசியல்’ குறித்து நிறைய எழுதலாம். ஆனால், கவின்மலரின் முன்னுரை அன்பும், தெளிவும் நிறைந்த ஒரு வாசக மனதிலிருந்து ஆத்மார்த்தமாக வெளிப்பட்டிருக்கிறது.

 

“உயிரை உலுக்கும் வரிகளை எழுதிவிட்டு யூமா வாசுகி அவர் பாட்டுக்குத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். எப்போதும் கிரீடத்தை கீழே வைக்காமல் சுமந்துகொண்டு திரிகிறவர்கள் இருக்கும் இச்சமூகத்தில் ‘நான் எழுத்தாளன் என்கிற கர்வமோ, கவிஞன் என்கிற செருக்கோ அற்ற எளிமையான மனிதராகவே எப்போதும் இருக்கிர யூமாவை வாழ்த்தும் தகுதி எனக்கில்லை. வாசிப்பின் மீது தீராத தாகத்தை ஏற்படுத்திய யூமா வாசுகி என்கிற அற்புத மனிதருக்கு, அவருடைய எழுத்துக்கு, அவர் அளித்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பிற்குப் பரிசாக அல்ல…. கைமாறாக, பெரும் அன்பும், முத்தங்களும் தவிர வேரெதுவும் கைவசம் இல்லை”, என்ற கவின்மலர் முத்தாய்ப்பாக எழுதியுள்ள வரிகள் இந்தத் தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொரு வாசக மனதிலும் கண்டிப்பாக எதிரொலிக்கும்!

***

download (5)

 

சாத்தானும் சிறுமியும்

 

’யூமா வாசுகி’யின் கவிதைத்தொகுப்பு

[வெளியீடு: குதிரைவீரன் பயணம் , முதல் பதிப்பு : டிசம்பர் 2012, விலை: ரூ.75.]

 

 

 

புதிர்தேசத்தின் மன்னன் – கிறிஸ்தோபர் நோலன் கிருஷ்ணமூர்த்தி

download (4)

புதிர் என்பதனை கடக்காத மனிதர்களை நாம் காணவே முடியாது. . இந்த புதிர்களினால் ஏகப்பட்ட விஷயங்கள் நம்முள் நடக்கிறது. தோல்வியுற்றாலும் அப்படி அதில் என்ன இருக்கிறது ஏன் நாம் தோல்வியுறுகிறோம் என மீண்டும் விளையாடுவோம். ஜெயித்துவிட்டாலும் இதனைவிட கடினமானதான ஒரு புதிரினை முயற்சிக்கலாமே என்ன அடுத்த கட்டத்தினை எதிர் கொள்வோம். சின்ன உதாரணம் இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்னும் புதிரினை தெரிந்து கொள்ள பல்லாயிரம் கோடி மக்கள் ஆவலாய் இருக்கிறார்கள். சொல்ல வரும் விஷயம் மிகவும் சின்னது – புதிர் அழகியலின் மறு வெளிப்பாடு.

இந்த அழகியலின் முக்கியத் தன்மை உலகத்தினை மறக்கச் செய்தல். முழு உலகத்தின் பிரக்ஞையினை இழந்தால் மட்டுமே நம்மால் புதிரினை உள்வாங்க முடியும். புதிர்களை பற்றி இது போதும் என நினைக்கிறேன். இந்த புதிர்களை ஏன் இவ்வளவு நேரம் சொல்லிவந்தேன் என கேள்வி எழலாம். அதற்கான பதில் கேள்வி – இந்த புதிர்களை சினிமாவில் வைக்க முடியுமா ?

ஒரு கொலை சம்மந்தமான படம் ஒன்றினை எடுத்துக் கொள்வோம். அதில் நாயகனுக்கு துப்புகள் கிடைக்கிறது. படத்தின் கடைசிவரை அவனுக்கு துப்புகள் கிடைத்து கடைசியில் அதன் வில்லனை நாயகன் பிடிப்பான். இந்த துப்புகள் மூலம் பார்வையாளன் அந்த வில்லன் அல்லது கொலைகாரன் யாராக இருக்கக்கூடும் என சிந்திப்பார்கள். கதை எழுப்பும் புதிர்களை அவிழ்க்கப் பார்ப்பார்கள். நான் சொல்ல வருவதோ இந்தப் புதிர்கள் கிடையாது. திரைக்கதையில் வைக்கப்படும் புதிர்கள்.

சின்ன உதாரணம் எனில் நான் லீனியர் திரைக்கதை. இதில் காட்சிகளை மாற்றிப் போடும் போது பார்வையாளன் என்ன கதை என சிந்திக்க தொடங்குகிறான். கதைக்குள் இருக்கும் தேடல் சற்று மாறி கதைக்கான தேடல் ஆரம்பிக்கிறது. இது பல இடங்களில் ஜெயிப்பதில்லை. ஆனால் இதில் சுவாரஸ்யத்தினையும் திகிலினையும் வைத்து திரைக்கதையும் படமும் இயக்குபவர் கிறிஸ்தோபர் நோலன். .

ஆரம்ப கால சினிமா இவருக்கு குறும்படங்கள் மூலமாகவே ஆரம்பித்திருக்கிறது. மூன்று குறும்படங்களை எடுத்திருக்கிறார். அவை tarantella(1989), larceny(1996),doodlebug(1997). இதில் doodlebug மட்டுமே காணக் கிடைக்கிறது. .

இந்த doodlebug நோலனின் வெற்றி என்று சொல்ல மாட்டேன். காரணம் சொல்கிறேன். மனிதன் காலங்காலமாக அதிகாரத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறான். இந்த குடும்ப சமூக அதிகாரங்களிலிருந்து விடுபட்டுக் கொள்ள தனக்குள் ஒரு வெளியினை அவனே அமைத்துக் கொள்கிறான். அது தான் உலகம் என புற உலகினை புறக்கணித்து சந்தோஷம் கொள்கிறான். ஆனால் அவன் வெறுக்கும் உலகில் நடக்கும் கால நிலை மாற்றங்கள் அவனின் கனவுலகினையும் பாதிக்கிறது. அதிலிருந்து விடுபட அவன் போராடுகிறான். என்னதான் போராடினாலும் இரு கண்ணாடிகளுக்கிடையே சிக்கிக் கொள்ளும் பொருளினை போல உண்மையினை தேடியே அவனின் வாழ்க்கை அலைகிறது. இதனை சொன்னவர் ஃப்ரான்ஸ் காஃப்கா. இதன் பெயர் Kafkaesque. இந்த தத்துவத்தினையே அவர் படமாக்க முயன்றிருக்கிறார். அதுவும் மூன்று நிமிடத்தில். உண்மையினை அப்படியே சொல்ல வேண்டுமெனில் இந்த தத்துவத்தினை கொஞ்சமும் பிசகாமல் அப்படம் எடுத்து செல்கிறது. இந்த தத்துவம் அதனை அப்படியே திரையில் துயிலுரித்தல் போன்றனவெல்லாம் தேடி சென்று அறிந்து கொள்ளும் போது மட்டுமே நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த காரணத்தினால் தான் இப்படம் நோலனின் வெற்றி என சொல்ல மறுக்கிறேன். இதில் பாராட்டக் கூடிய விஷயம் முன்று நிமிடங்களும் சற்றும் சலிப்பினை தராமல் ஒரு தேடலை பார்வையாளனுக்கு வைப்பது தான்.

இந்த தேடலையும் முன் சொன்ன திரை நுட்பங்களையும் நோலன் தன் முதல் முழு நீளப் படமான following(1994) இலேயே ஆரம்பித்துவிட்டார். இந்தப்படம் உலகின் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கிறது. கணக்குகளின் படி ஒரு வருடம் இப்படத்தினை எடுத்திருந்தாலும் எடுக்கபட்ட நாட்கள் இருபத்தி இரண்டு நாட்களே. நோலனே இப்படத்தினை தயாரித்திருந்ததால் பணக்கஷ்டம் ஏற்படவே இந்த இருபத்தி இரண்டு நாட்கள். அது மட்டுமின்றி இப்படம் திரை அல்லாது கல்வி சார்ந்து உபயோகபடுத்தப்படும் 16mm திரையில் எடுக்கப்பட்டது. இப்படம் மக்களை பின்தொடர்ந்து அவர்களின் வாழ்வினை நூதனமாக கவனித்து அதனை தன் நாவல்களுக்கு கச்சாப் பொருளாக்கும் ஒரு எழுத்தாளனின் கதை. அவன் ஒரு கொள்ளைக்காரனை பின் தொடர்ந்து மாட்டிக் கொள்கிறான். பின் நடப்பது மீதக்கதை.

இப்படத்தில் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது. இது தான் கதை என எழுதபட்டு அதன் காட்சிகள் மாற்றிப் போடப்பட்டால் எப்படி இருக்குமோ அதன் வெளிப்பாடே இப்படம். இந்த முறை எதற்கு என அவரிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில் மிக சுவாரஸ்யமானது

“ஒரு காட்சியினை எடுக்கிறோம் அல்லது பார்வையாளன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்போது அந்த காட்சியினை அறுத்து சம்மந்தமில்லாத வேறு காட்சியினை காண்பிக்கிறோம். இப்படி தொடர்ந்து கொண்டே செல்கிறது. அந்நேரத்தில் முதலில் அறுபட்ட காட்சியின் நீட்சியினை காண்பிக்கிறோம். குறிப்பான விஷயம் அது சரியான நீட்சி அல்ல. அஃதாவது அறுபட்ட இடத்திற்கும் இந்த ஆரம்பத்திற்கும் இடையே கோர்க்கப்படும் விஷயம் மறைமுகமாக இருக்கிறது. ஆனால் திரையில் காட்டப்படவில்லை. ஏன் எனில் பார்வையாளன் காட்சிகள் மாற்றி மாற்றிக் காட்டப்படுவதால் அவனே அந்த நீட்சியினை உருவாக்கிக் கொள்கிறான்.”

இதைத் தாண்டி நான் லீனியருக்கு அருமையான விளக்கத்தினை நான் கண்டதில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த நான் லீனியர் தன்மையினை அல்லது பார்வையாளனின் முட்டாள்தனத்தினை உபயோகித்துக் கொள்ளும் நுட்பத்தினை memento(2000) படத்தில் வித்தியாசமாக கையாள்கிறார். இந்த படத்தில் கருவும் கட்டமைப்பும், அஃதாவது திரைக்கதையும் இரண்டறக் கலந்து பிணைந்திருக்கிறது. கதைப்படி நாயகனுக்கு Anterograde amnesia. அதன் விளைவு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தாண்டி எதனையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. இதில் தன் மனைவியினை கற்பழித்து கொன்றவனை தேடி அலைகிறான். இது தான் கதை.

இதன் திரைக்கதை எப்படி இருக்கிறதெனில் அவனின் வியாதியின் படி காட்சிகள் ஒவ்வொன்றும் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே நீள்கிறது. பின் காட்சிகள் அறுபட்டு கறுப்பு வெள்ளை காட்சிகளில் அவன் யாருடனோ நடத்தும் தொலைபேசி உரையாடல்கள் காண்பிக்கப்படுகிறது. அதில் Anterograde amnesia வியாதியினை கொண்ட ஒருவனின் கதை நகர்கிறது. இதைவிட பெரிய விஷயம் அந்த பத்து நிமிட காட்சிகள் அனைத்தும் பின்னிலிருந்து முன்னோகி(backward) நகரும் திரைக்கதை. இந்த கறுப்பு வெள்ளை காட்சிகளோ முன்னிலிருந்து பின்னோக்கி(forward) நகரும் திரைக்கதை. இப்படி பின்னி பிணைந்திருப்பதால் ஒரு இடத்தில் காட்சியினை விட்டால் கூட நம்மால் படத்தினை பின்தொடர முடியாது.

இப்படி இருந்தாலும் நோலன் இப்படத்தினை பற்றி சொல்வது இது நான் லீனியரே அல்ல என. அவர் வாதப்படி இதில் கலைத்து போடபட்ட காட்சிகள் எதுவும் இல்லை. காட்சிகள் முடிவிலிருந்து ஆரம்பம் நோக்கி பயணிக்கிறதே அன்றி கலைத்து போடப்படவில்லை. மேலும் இப்படி ஏன் திரைக்கதையில் குழப்பங்களை உருவாக்க வேண்டும் என கேட்ட போது அவர் சொன்ன பதில்

“பார்வையாளன் முதல் முறை என் படத்தினை பார்க்கும் போது திரையில் ஒரு சுவாரஸ்யமும், படம் முடியும் போது மீண்டும் இப்படத்தினை பார்க்க வேண்டும் என்னும் ஆர்வமும் வர வேண்டும். அப்படி பார்ப்பதன் மூலமே முழுப் புரிதல் கொண்டு வர வேண்டும். அதற்கு இன்னமும் பல யுக்திகளை கையாள்வேன்” என்கிறார்.

இந்த யுக்திகளுக்கு நான் லீனியர் முறைகள் தான் தேவையா என யோசிக்கவும் வேண்டும். அதை அவரின் படங்களே செய்கிறது. நான் லீனியர் அல்லாது ஒரு மீள் பார்வைக்கான எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும் படைப்பு the prestige(2006). இது பழிவாங்குதலை மையமாக கொண்டு எழுதபட்ட கதை தான் ஆனால் இத்திரைக்கதையில் நோலன் ஒரு obsession ஐ உருவாக்குகிறார். கருத்து திணிப்பு. பழிவாங்குதல் என்பதைவிட வெறி என்பது இன்னமும் சரியான வார்த்தையாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தினை ஒரு படைப்பு மிகத் தீவிரமாக கையாள்கிறதெனில் அதனை விவாதிக்குமளவு பார்வையாளனுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும். வன்முறையினை ஆதரிக்கும் மனப்பாங்கினை உருவாக்கும் என்று கூட சொல்ல்லாம். இப்படம் வெறியினை வைத்திருந்தாலும் அதனை மேஜிக்கின் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கும் முறை உண்மையில் அலாதியானது. ஏனெனில் எந்த காட்சியினை எடுத்தாலும் ஒரு சூது துரத்திக் கொண்டே இருக்கும். இதனால் பார்வையாளனும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரமும் கருத்து ரீதியாக நண்பர்களாகின்றனர்.

உலக திரைப்படங்கள் வெற்றியினை அடைவதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது பார்வையாளனை சிந்திக்கவிட்டு அப்படி சிந்திப்பவைகளை காட்சியாக்காமல் காட்சியின் வழியில் பார்வையாளனை பயணிக்க வைக்கும் முறை. இது இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் காண முடியும். இப்ப்படத்தில் அநேக இடங்களில் are you watching carefully என்ற வசனம் வரும். இவையும் மாஜிக் சார்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் பார்வையாளனிடம் நேரடியாக சில புதிர்களை வைக்கும் தருணமாகவே கருதுகிறேன். இத்தனை மெல்லிய கதைக்கும் வலைபின்னல்களால் ஆன திரைக்கதை ஆச்சர்யத்தினை மட்டுமே அளிக்கிறது.

இதுவரை வாசித்து வந்த உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் நோலன் எடுத்த படங்களின் வரிசைப்படி எதனையும் எழுதவில்லை என. அதற்கு காரணம் மேலே சொன்னதோடு நோலனின் திரை நுட்பங்கள் முடிந்துவிட்டதோ என சந்தேகம் வருகிறது. காரணம் இவையனைத்தின் பாதிப்பினையே என்னால் inception(2010) படத்தில் காண முடிகிறது.

அப்படம் கனவுகளை திருடும் நுட்பத்தினை பிரதானபடுத்துகிறது. அதில் நாயகன் ஒவ்வொருவரின் கனவுகளுக்குள் சென்று அங்கிருந்து வேறொருவரின் கனவுகளுக்கு பிரயாணிக்கிறான். இதனை அப்படியே காட்சியாக்கியிருப்பது தான் இப்படத்தின் உச்சபட்ச ஆச்சர்யம். அப்படி ஆக்கியதால் எது கனவு எது உண்மை என பிரித்தறியமுடியாத ஒரு குழப்பத்தினுள் நாம் தள்ளப்படுகிறோம். இந்த ஒரு படத்திற்காக கூட நோலனுக்கு இக்கட்டுரையின் தலைப்பு சாலப் பொறுத்தமாகும். இதில் நோலன் ஒரே ஒரு புதிரினை மட்டுமே பார்வையாளனுக்கு வைக்கிறார் – எது கனவு எது யதார்த்தம் ? இதை விடுவிப்பதற்குள்ளாகவே படம் முடிந்துவிடுகிறது. இப்படத்தினை என்னால் அதிகம் பாராட்ட முடிந்தாலும் நோலனின் பெஸ்ட் என சொல்ல் முடியவில்லை.

இது நோலனின் ஆராய்ச்சியோ எனவும் சந்தேகம் வருகிரது. அப்படி கனவுகள் சார்ந்து இருக்கும் விஷயங்களை படத்தினுள் வைத்திருக்கிறார். முன் சொன்ன நான் லீனியர், படத்தினை மீள் பார்வை பார்க்க வைக்கும் நுட்பம் போலவே தன் batman trilogy இல் ஒன்று சொல்லியிருக்கிறார். .

“ஒரு சூப்பர் ஹீரோ படத்தினை 3டி யில் வைக்கிறோம் எனில் பார்வையாளர்களின் ஆச்சர்யம் பிரம்மாண்டம் அனைத்தும் 3டியில் இருக்குமே ஒழிய கதையில் இருக்காது. இந்த ஒரு காரணத்தினால் பேட்மேனுக்கு 3டி இல்லை!”

ஒருவேளை இந்த காரணமாகக் கூட இருக்கலாம் என்னுள் பேட்மேன் குழந்தைகளுக்கான படம் இல்லை என சொல்லத் தோன்றுகிறது. சாம் ரெய்மி எடுத்த ஸ்பைடர் மேன் படங்களில் பார்த்தால் பிரம்மாண்ட வில்லன்களினால் அதிக சண்டைகளினால் குழந்தைகளுக்கு ஏற்றாற் போல இருக்கும். இங்கோ ஆழமான கதையினையே மூன்று பாகங்களும் சுமந்து வருகிறது. மேலும் முதல் இரண்டு பாகத்தினை பார்த்தால் தான் மூன்றாவதை பார்க்க முடியும். இல்லையெனில் அரைவேக்காட்டு புரிதல் தான்! மேலும் இதில் வசன்ங்கள் அதிகம். எந்த குழந்தைகளுக்கு வசனம் பேசும் சூப்பர் ஹீரோ தேவை ? பாவம் நோலன் குழந்தைகளிடம் லேசாக ஆட்டம் காணுகிறார்.

.அவர் எடுத்த insomnia(2002). தூக்கமின்றி இருக்கும் வியாதியினை இப்படம் அழகுற எடுத்துரைக்கிறது. அதற்கு ஒரு கொலை, துப்பறிதல் பிண்ணனியாக இருக்கிறது. கொலைகாரன் இவன் தான் என துப்பறிபவனுக்கும் பார்வையாளனுக்கும் பாதி படத்திலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. அதன்பின் தூக்கமில்லா வியாதியின் காட்சிகள் தான். இதனால் சுவாரஸ்யம் மிஸ்ஸிங்! நோலனின் எந்த திரை நுட்பமும் இப்படத்தில் இல்லை. ..

அவரின் அனைத்து படங்களை பற்றி எழுதினாலும் எனக்கு பிடித்தது following தான். பலமுறை பார்த்தும் அதன் தாக்கம் இன்னமும் என்னுள் குறையவில்லை. ..

***
.

கார்த்திக் பாலசுப்பிரமணியன் ஃப்ராய்டின் பார்வையில் தி.ஜாவின் ‘அம்மா வந்தாள்’:

download (3)

இதுவரையில் விடையே கண்டறியப்படாத மிகப்பெரிய கேள்வி ஒன்று உண்டு. எனது முப்பது வருட ஆராய்ச்சியாலும் என்னால் பதில் கண்டறிய முடியவில்லை. ‘ஒரு பெண் எதை விரும்புகிறாள்?’ ” – சிக்மண்ட் ஃப்ரய்ட்

இன்றுதான் தி.ஜா.வின் அம்மா வந்தாள் வாசித்து முடித்தேன். இப்படியொரு கதைக் கருவை எடுத்துக் கொள்வதற்கே பெரும் துணிச்சல் வேண்டும். அவரின் மாக்னம் ஓபஸான “மோகமுள்ளை” முன்பே வாசித்திருக்கிறேன். ஆண்,பெண் உறவுமுறைச் சிக்கல்களை கையாண்ட விதத்தில் மோகமுள்ளைவிட அம்மா வந்தாள் மிக முக்கியமான ஒன்றாகப் படுகின்றது.

அப்பு தன் சிறு பிராயத்திலேயே வேதம் பயில குருகுலம் போன்ற பாட சாலை ஒன்றிற்கு அனுப்பப் படுகிறான். அந்தப் பாட சாலையை நடத்தி வரும் பவானி அம்மாள். இளவயதில் கணவனை இழந்த பவானியம்மாளின் உறவுக்கார பெண் இந்துவும் அங்கேயே வளர்ந்து வருகிறாள். அந்தப் பெண்ணிற்கு அப்புவின் மீது காதல். ஆனால் அப்பு தான் வேதம் பயில வந்ததே அம்மாவிற்காக என்பதனால் இந்துவை விட்டு விலகிப் போகிறான். படிப்பு முடிந்து சொந்த ஊருக்குத் திரும்புகிறான்.

அப்போதுதான், அப்புவிற்குத் தன் அம்மாவிற்கு(அலங்காரம்) தவசு என்பவனுடன் இருந்த தகாத உறவு பற்றித் தெரிய வருகிறது. தான் தான், தன் அப்பாவிற்குப் பிறந்த கடைசி மகன் என்பதையும் அறிகிறான். அது வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. அதிர்ச்சியும் குழப்பமும் கோபமும் அவனை ஆட்டிப்படைக்க மீண்டும் வேத பாட சாலைக்கேத் திரும்பிச் செல்கிறான். அங்கு இந்துவின் அன்பை ஏற்றுக் கொள்கிறான். இப்படியாக முடிகிறது கதை.

மேம்போக்கான வாசிப்பில் நேரிடையான கதை சொல்லல் முறை போன்று தோன்றினாலும், இந்நாவலின் கதாப்பாத்திரங்கள் அவ்வளவு வெளிப்படையானவர்கள் அல்லர். அவ்விதமே அவர்களைச் சுற்றி பின்னப்பட்ட கதையும். எனவே இந்நாவலை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள ஒரு சாதாரண நாவல் வாசிப்புக்கான உழைப்பு போதாது. பல இடங்களில், நுட்பமான வார்த்தை ஜாலங்களில் கதையைச் சொல்லிச் செல்கிறார் தி.ஜா. இன்னும் அடுத்தடுத்த வாசிப்புகளில் மட்டுமே சில முடிச்சுக்களை என்னால் அவிழ்க்க முடியும் என்று நினைக்கிறேன்.

ஃப்ராய்டின் கோட்பாடுகளை மட்டும் வைத்து, பெண்களை வரையறுத்துவிட முடியாது என்பதற்கு இந்நாவலில் வரும் இந்துவும், அலங்காரமுமே சாட்சி. ஃப்ராய்டின் பெண்களைப் பற்றிய கருத்துக்கள் அக்காலத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ‘பாலின வேறுபாட்டின் காராணமாக எழுந்த மன விளைவுகள்’ என்ற ஃப்ராய்டின் கட்டுரையில் அவர் இப்படிக் கூறுகிறார்.

” பெண்கள் மாற்றங்களை விரும்புவதில்லை. இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள். மேலும் அதில் அவர்களாக எதையும் சேர்ப்பதுமில்லை “.

மேற்கண்ட கோட்பாட்டின் உள்ளடங்கும் பாத்திரப் படைப்பு தான் ‘அலங்காரம்’. சாதாரணமாகப் பார்க்கும் பொழுது, இப்படியும் ஒரு பெண் செய்வாளா? கணவன் இருக்கும் பொழுதே இன்னொருவனுக்குப் பிள்ளை பெற்றெடுப்பாளா? எனத் தோன்றும். அப்படியிருக்கையில் கணவனை, கண் கண்ட தெய்வமாக கருதும் வழமையை மீறியவளாகவும், ப்ராய்டின் கோட்பாட்டை அவள் இங்கேயே உடைத்தவள் போன்றும் தோன்றும். ஆனால் கொஞ்சம் கூர்ந்து அவதானித்தால், அவளால் மாற்றங்களை ஏற்க இயலவில்லை. தண்டபாணி போன்ற ஒரு ஐடியல் மேனுடன் அவளால் குப்பை கொட்ட முடியவில்லை என்பதே இங்கு வெளிப்படும் உண்மை. இங்கே அலங்காரத்தின் கணவனான “தண்டபாணி”யே மாற்றம். அவரை(அம்மாற்றத்தை) அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவள் விரும்புவது எல்லாம் ஒரு சாதாரண லெளகீக வாழ்க்கையைத்தான். அதை அவள் கண்டறியும் இடம்தான் தவசு. எனவே மேற்பார்வைக்கு வழமையை மீறியது போல் தோன்றினாலும் அலங்காரம் ஃப்ராய்டின் கோட்பாட்டினுள் அடங்குகிறாள்.

வேதத்தில் மூழ்கித் திளைத்து முத்தெடுத்த தண்டபாணியிடமிருந்து அலங்காரம் உடலளவில் விலகுகிறாள். தண்டபாணியிடம் ஏற்பட்ட அந்த வெறுப்பும் விரிசலும் அவளுக்கு ஏனோ வேதத்திடம் ஏற்படவில்லை. தன் மகனான அப்புவை அவள் வேதம் பயில அனுப்புகிறாள். உண்மையைச் சொல்லப் போனால், எந்த ஐடியலிசத்தை அவள் வெறுத்தாளோ அதே ஐடியலிசத்தை நோக்கி தன் மகனைச் செலுத்துகிறாள். தவசியிடம் கண்ட லெளகீக வாழ்வைப் பின்பற்றி வாழும் தன் மற்ற பிள்ளைகளை அவள் இரண்டாம் பட்சமாகவே எண்ணுகிறாள். இது தான் செய்த துரோகத்திற்கு பிராயச்சித்தம் என்றும் நினைக்கின்றாள்.

அதே நேரத்தில் அலங்காரத்திற்கு நேர்மாறானதொரு பாத்திரப் படைப்பு ‘இந்து’. மனதில் அப்புவைச் சுமந்தாலும், அத்தை சொல்லியவனை மணந்து, இளவயதில் கணவனை இழந்து, விதவைக் கோலம் பூணுகிறாள். எனவே சமூகத்தின் கட்டுப்பாடுகளை உடைக்கத் துப்பில்லாமல், ஃப்ராய்டின் வரையறைக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவள் போன்று தோன்றினாலும் இந்துவை அவ்வகையினுள் அடக்கிவிட முடியாது. அத்தைக்காக வேறு வழியின்றி திருமணத்திற்கு ஒத்துக் கொண்ட பொழுதும், இந்து அவளது கணவனின் திருவில் அப்புவையே பார்க்கிறாள். மனதளவில் அவனுடனே வாழ்கிறாள். திருமணம் முடியும் கடைசித் தருணம் வரையிலும் அப்பு வந்து தன்னைக் காப்பாற்றிக் கரம் பற்றி விட மாட்டானா என ஏங்குகிறாள். அது நடக்காத பொழுது (வழமையில் மாட்டிக் கொண்டு) கணவனைக் கட்டிக் கொண்டு வாழ்வது போல் தோன்றினாலும் அவள் இங்கு வழமையை மீறவே செய்கிறாள்.

” இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள். மேலும் அதில் அவர்களாக எதையும் சேர்ப்பதில்லை ” என்ற ஃப்ராய்டின் வாக்கியத்தை அலங்காரம், இந்து என இருவரும், முழுவதும் பொய்யாக்குகிறார்கள்.

அதிகார வர்க்கத்தினரையே அதிகாரம் செய்யும் தண்டபாணி வீட்டில் அலங்காரத்திடம் பெட்டிப் பாம்பாய் குழைந்து கிடக்கிறார். வேதத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறார். ஆனால் வேதத்தை வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்கத் தெரியாத வேதாந்தம் அவருடையது. அவரே தான் வேதத்தில் சாதித்த அளவிற்கு வாழ்க்கையில் சாதிக்கவில்லை என்றெண்ணுகிறார் போலும். அந்த ஆற்றாமையே தன்னிடம் வேதம் கற்க வரும் அதிகார மற்றும் பணம் படைத்தவர்களிடம் அவர் காட்டும் கோபமாக வெளிப்படுகிறது.

அப்பு தான் வேதத்திற்கு இணையாக நேசித்த அம்மாவின் மற்றொரு முகத்தைக் கண்டு பொருமுகிறான். இருந்தாலும் அவளது தேஜஸிலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை. இந்துவின் காதலை முதலில் மறுக்கும் அப்பு, தன் அம்மாவைப் பற்றி அறிந்து கொண்ட பின்பு அதை ஏற்றுக் கொள்கிறான். வேதத்தை முறையாகப் பயிலாத இந்துவிடம் இருந்த அந்தத் தெளிவு ஏனோ அவனிடம் இல்லை. அவனிடமிருந்த அந்தக் குழப்பத்திற்குக் காரணமே அவன் படித்த வேதம் தானோ !

கொஞ்சம் பிசகினாலும் ஆபாசமாய், அபத்தமாய் மாறிவிடக் கூடிய கதை. அதை அவ்விதம் ஆகாமல் காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறார் தி.ஜா. ஆகச் சமீபத்தில் இத்தனை விறுவிறுப்பாக ஒரு நாவலை வாசிக்கவில்லை. இத்தனை அழுத்தமான கதையையும், பாத்திரப் படைப்புகளையும் வெறும் பக்கம் பக்கமாக, வரி வரியாக விவரித்துச் சொல்லாமல், கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான உரையாடல் மூலமே விளக்கியிருப்பார் தி.ஜா. அதுதான் அவரின் பலம்.

அலங்காரம் தண்டபாணிக்குச் செய்த துரோகத்தை, வேதத்திற்குச் செய்ததாகவே கருதுகிறாள். அதை நிவர்த்தி செய்யும் பொருட்டே அப்புவை வேதம் பயில அனுப்புகிறாள். அவன் வேதம் பயின்று நெருப்பு போல் வந்து நிற்பான். அதன் முன் தனது பாவங்களைக் கழுவிக் கொள்ளலாம் என்று நினைக்கிறாள். ஆனால் அங்கு அவன் வேதத்தோடு சேர்த்து இந்துவின் காதலையும் பழகி வருகிறான். அவள் நினைத்த விமோசனம் அவளுக்கு கைகூடவில்லை. இதன் பொருட்டே கடைசியில் அலங்காரம் காசிக்குச் செல்வதாக கதை முடிகிறது.

“தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியார்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும் பொழுது அதில் தனித்துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் நிறைந்து கிடக்கும்” என்கிறார் தி.ஜா.

இந்நாவலில் அவை கொட்டிக் கிடக்கின்றன.

* * *

 

 

சற்றே இளைப்பாறுவோம் – 4 கோயில்கள் -சுரேஷ்குமார இந்திரஜித்

images (4)

 

கடலும், கோயிலும் இருக்கிற ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தாலும், எனக்குக் கோயில்கள்தான் பிடிக்கிறது, கடலில் இருக்கும் பெரும் நீரைப் பார்த்தால் பயம் தான் ஏற்படுகிறது. நான் படகில் செல்வதைத் தவிர்க்கவே வ¨ரும்புவேன். ஒரு தடைவ துhத்துக்குடி கடலில் உள்ள சிறு மண்திட்டுக்கு, உல்லாசப்பயணம் சென்ற போது, படகில் உயிரைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். எனக்கு நீச்சல் தெரியாது. எதனால் இப்படி என்று யோசித்துப் பார்த்தேன். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, கூடப்படிக்கும் பையன்களுடன் குளத்திற்குக் குளிக்கச்சென்றேன். முன்பக்கமும், பின்பக்கமும் தலையணை போன்றிருக்கும் – அதைக் கழுத்தில் மாட்டிக்கொண்டால் – நீரில் மிதக்கமுடியும், நீச்சல் கற்றுக்கொள்ளலாம் என்று அந்த உபகரணத்தைக் கொண்டு வந்தவன் கூறினான். நான் அதை மாட்டிக்கொண்டு குளத்தில் குதித்தால் நான் மிதக்கவில்லை. மாறாக அதன் கனம் என்னைக் கீழே இழுத்துச் செல்கிறது. நீரைக் குடித்துத் தத்தளித்த என்னை நண்பர்கள் காப்பாற்றி வெளியே போட்டார்கள். ஒருவன் வயிற்றை அமுக்கி நீரை வெளியேற்றினான். இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் எனக்கு நீச்சல் கற்றுக் கொள்ளும் எண்ணம் போய்விட்டது. நீரைப் பார்த்தால் பயம் வந்துவிடுகிறது.

இது ஒருபுறம் இருக்க ராமேஸ்வரம் கோயில், பெரிய கோவில்; பிரகாரம் உலகிலேயே பெரியது என்கிறார்கள் யாத்ரீகர்கள் பெரும் எண்ணிக்கையில் வருகிறார்கள். கோவிலுக்குள்ளே பல தீர்த்தக்கிணறுகள் உள்ளன. இன்றளவும் தினமும் இரைத்து ஊற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனாலும் எப்படியோ ஊறிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தக் கிணறுகளைத் தோண்டி எத்தனை ஆண்டுகள் இருக்குமென்று தெரியவில்லை. இந்த வற்றாத ஊற்றுக்கிணறுகள் இருப்பது அழகாகத்தான் இருக்கின்றது. தீர்த்தமாடுவதால் கோயில் தரை முழுக்க கீழே ஈரத்துடன் நச நச என்று இருக்கும். செருப்பில்லாமல் வேறு நடக்க வேண்டும். கோயிலின் பிரமாண்டத்தின் மீது ஈர்ப்பு இருந்தாலும் எப்போதும் தரை நனைந்து கிடப்பதால் இந்தக் கோயிலுக்குள் செல்வதில் எனக்கு விருப்பமில்லை,

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதில்லை. என் முன்னோர்களும் சென்றதில்லை. நானும் செல்வதில்லை. என் பின்னோர்களும் செல்லப் போவதில்லை. ஆத்திகத்துக்கு எதிரான நாத்திகன் என்று என்னைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. எதையுமே மறுத்துக் கொண்டேயிருப்பது என் வேலையில்லை. ஆனாலும் ஆத்திகர்களின் முட்டாளத்தனங்களைப் பார்க்கும் போது எரிச்சலும் ஆத்திரமும் தான் ஏற்படுகின்றன.

பெரிய கோவில்கள் மீது எனக்கு லயிப்பு உண்டு. ஏதோ மீயூசியத்துக்குள் செல்வது போன்ற உணர்வு. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவேடகம் சிவன் கோயில், திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோயில் .. .. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் பார்த்து வந்தேன். தீட்சிதர்களின் குடுமி அமைப்பு கேரளா நம்பூதிரிகளின் குடுமி அமைப்பை நினைவுப்படுத்தியது. இங்கு கருவறை என்ற ஒன்றே இல்லை. மேடை போன்ற சிறு பிரகாரத்தில் நடராஜர் விக்கிரகம் இருக்கிறது. சிலையைப் பார்க்க முடியாமல் அதன்மேல் வஸ்திரங்கள் ஏதேதோ ஆபரணங்கள். அதற்குள் நடராஜர் புதைந்து கிடக்கிறார்.

கோயிலின் சிற்ப வேலைப்பாடுகளும், பிரம்மாண்டமும்தானே எனக்குப் பிடிக்கிறது. அதனால் சிறு தெய்வங்களின் லேட்டஸ்ட் கோயில்களைப் பார்த்ததால் அசூயைதான் ஏற்படுகிறது. செங்கற்களால் கட்டப்பட்ட கோயில் எப்படி வசீகரம் தர இயலும். தவிர ஆடு, கோழிகளைப் பலியிட்டுச் சாப்பிடுகிறார்கள். டாஸ்மாக் சரக்குகளைக் கூட படையல் செய்கிறார்கள். இத்தகைய கோயில்களை நேசிப்பவர்களுக்குப் பெரிய கோயில்கள் அன்னியமாகக் கூடத் தெரியலாம்.

பல கிராமங்களில் சிவன் கோயில் பாழடைந்து கிடக்கின்றன. சோழவந்தானில் சிவன் கோயில் பாழடைந்து கிடக்கிறது. சமீபத்தில் கட்டப்பட்ட மாரியம்மன் கோயில் பிரசித்து பெற்று பெரும் விழாக்கள் நடக்கின்றன. சிவன் கோயில் பல இடங்களில் பாழடைந்து கிடப்பதற்கு என்ன காரணங்கள் என்று தெரியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களை உறவினர்களுடன் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்போது நான் தாராசுரம் கோயிலைப் பார்க்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன். கிராமத்துக்குள் சிறுவீடுகள், கருவேலஞ்செடிகளைக் கடந்து கோயிலை அடைந்து விட்டோம். கோயில் இருந்த “”””லட்சணத்தை”” பார்த்தவுடனேயே யாருக்கும் வேனை விட்டு இறங்க மனமில்லை. நான் மட்டும் இறங்கி வாசலில் தேங்கியிருந்த சேறையும் நீரையும் தாண்டி உள்ளே நுழைந்தேன். தொல்பொருள்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் இருந்தது, ஊழியர் யாரும் இல்லை. ஊர்க்காரர்கள் யாரும் இல்லை. சிற்ப நுட்பங்கள் நிறைந்த கோயில். நாலைந்து வெளிநாட்டுக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் உட்கார்ந்திருக்கிற விதத்தைப் பார்த்தால் இந்தச் சூழ்நிலையை அனுபவிப்பதற்காக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதாகத் தோன்றியது.

அதில் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன். மேற்கு ஜெர்மனியிலிருந்து வந்திருப்பதாகவும், வண்ணத்திரைச்சீலை வரைந்து கொடுப்பவர் என்றும் இந்தக் கோயிலின் சிறப்பைக் கேள்விப்பட்டுக் குழுவாக வந்திருப்பதாகவும் தெரிவித்தார். சற்று நேரம் இருந்துவிட்டு வெளியே வந்தேன். கருவேலஞ்செடிகளைப் பார்த்தேன். வேனில் இருப்பவர்கள் சீக்கிரம் வரச்சொல்லி கையசைத்தார்கள். நான் வேனை நோக்கிச் சென்றேன்.
,•••

 

 

இப்போதே, ஒரு நாளில் … கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் தமிழில் ச. ஆறுமுகம்.

mark

(1982 ல் மார்க்வெஸின் நாவல்களுக்காகவும் சிறுகதைகளுக்காக, அவரது புனைவுலகம், யதார்த்தமும் கற்பனையும் ஒருங்கிணைந்து ஒரு கண்டத்தின் வாழ்க்கையையும் சிக்கல்களையும் பிரதிபலிக்கச் செய்வதாக அறிவித்து, நோபெல் பரிசு வழங்கப்பட்டது. மாய யதார்த்தவாதம் அவரிடமிருந்துதான் பிரபலமானது. அவரது ONE OF THESE DAYS என்ற சிறுகதை மலைகள். காமுக்காகத் தற்போது தமிழாக்கம் செய்யப்படுகிறது.)

திங்கட்கிழமை மழை இன்றி வெப்பத்தோடேயே விடிந்தது. அவ்ரேலியா எஸ்கோவர் ஒரு பட்டம் பெறாத பல்வைத்தியர். அதிகாலையில் எழுந்திருக்கும் அவர் காலை ஆறு மணிக்கு அவரது அலுவலகத்தைத் திறந்தார். அப்போதும் அரைவைச் சாந்து வார்ப்புகளின் மேலாகப் பொருத்தப்பட்டிருந்த சில பொய்ப்பற்களைக் கண்ணாடி மாடத்திலிருந்து எடுத்து, அவற்றோடு ஒரு கைப்பிடியளவுக்கான கருவிகளையும் மேஜை மீது அவற்றின் அளவுக்கேற்ப ஒரு ஒழுங்குமுறையோடு காட்சிக்கு வைப்பதுபோலப் பரப்பினார். பட்டை இல்லாத கழுத்துப் பகுதியை தங்கப் பொத்தான் இணைத்திருந்த பட்டைக்கோடுகளிட்ட சட்டையும் குறுக்கு வார்க் காற்சட்டையும் அணிந்திருந்தார். எலும்பும் தோலுமாக நிமிர்ந்து நின்ற அவர் அந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லாமல், மிகமிகக் கொஞ்சமாகப் பொருத்தமளிக்கின்ற வகையில், காதுகேட்காதவர்கள் விழிப்பார்களே, அப்படியான ஒரு தோற்றத்திலிருந்தார்.

மேஜை மீது அவருடைய பொருட்களையெல்லாம் தயார்ப்படுத்தி வைத்தபின், துளையிடுங்கருவியை பல்சிகிச்சை நாற்காலியை நோக்கி இழுத்துக்கொண்டு, இருக்கையில் அமர்ந்து பொய்ப்பற்களைத் தேய்த்துப் பளபளப்பாக்கத் தொடங்கினார். என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்ற உணர்வில்லாமலேயே, ஆனால், தீர்மானமாக, அவருக்குத் தேவைப்படாதென்றாலும் துளையிடுங் கருவியைக் காலால் உதைத்து இயக்கிச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்.

எட்டு மணிக்குப் பின் சாளரம் வழியாக வானத்தைப் பார்ப்பதற்காகச் சிறிது நிறுத்தினார். பக்கத்து வீட்டுக் கூரைக் கம்பத்தில் கனவுக்கண்களுடன் இரண்டு துருக்கியப்பருந்துகள் வெயில் காய்ந்துகொண்டிருந்ததைக்கண்டார். மதியச் சாப்பாட்டுக்கு முன் மீண்டும் மழை பெய்யப்போகிறதென்ற எண்ணத்தோடேயே அவர் தன் வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்தார். அவரின் வேலையொன்றிய மனநிலையைப் பதினொரு வயதுள்ள அவரது மகனின் காதைத் துளைக்கும் குரல் இடைமறித்தது.

‘’அப்பா.’’

” என்ன?’’

‘’ பல் பிடுங்குவீர்களா என மேயர் கேட்கிறார்.’’

‘’நான் இங்கே இல்லையென்று சொல்லிவிடு.”

அவர் ஒரு தங்கப்பல்லைப் பளபளப்பாக்கிக் கொண்டிருந்தார். கையை நீட்டி, அதைப் பிடித்துக்கொண்டு, அரைக் கண்ணால் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அந்தச் சிறிய காத்திருப்பு அறையிலிருந்து அவரது மகன் மீண்டும் கத்தினான்.

‘’ நீ இங்கே இருப்பதாக அவர் சொல்கிறார். அதிலும் நீ பேசுவதை அவரால் கேட்க முடிகிறது.’’

பல்வைத்தியர் தங்கப்பல்லைப் பரிசோதித்துக்கொண்டே இருந்தார். அவருடைய வேலையை முடித்துவிட்டதாக அந்தப்பல்லை மேஜையின் மீது வைத்துவிட்டுப் பின்னர்தான், அவர் சொன்னார் : ‘’ அப்படியா, நிரம்ப நல்லது.’’

அவர் துளையிடுங்கருவியை மீண்டும் இயக்கினார். இன்னும் பளபளப்பாக்க வேண்டிய பொருட்களை இட்டு வைத்திருந்த ஒரு அட்டைப்பெட்டிக்குள்ளிருந்து ஒரு மூக்குத்தண்டின் பாகங்களை எடுத்து மேஜை மீது வைத்தார். மீண்டும் தங்கப்பல்லைப் பளபளப்பாக்கத் தொடங்கினார்.

‘’அப்பா.‘’

‘’என்ன?’’

‘’ அவர் போகிற மாதிரி இல்லை. நீ, அவர் பல்லைப் பிடுங்காவிட்டால், உன்னைச் சுட்டுவிடுவாராம்.’’

எந்த அவசரமும் இல்லாமல், ஒரு அமைதியின் உச்சக்கட்ட அசைவாக அவர் துளையிடுங்கருவி மிதிப்பதை நிறுத்தி, அதை நாற்காலியிலிருந்தும் தூரத் தள்ளிவிட்டு மேஜையின் இழுப்பறையைத் திறந்து எல்லாவற்றையும் இழுத்து வெளியே போட்டார். உள்ளே ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. ‘’சரி. வந்து என்னைச் சுடச் சொல்’’ என்றார்.

இழுப்பறை ஓரத்திலிருந்து கையை எடுக்காமல், நாற்காலியை வாசலுக்கு நேராக உருட்டி நிறுத்தினார். மேயர் வாசலில் தோன்றினார். முகத்தின் இடது பக்கத்தை மழித்திருந்தார். இன்னொரு பக்கம் வலியில் வீங்கி, ஐந்து நாள் தாடியோடு இருந்தது. அவரது மங்கிய கண்களில் பல நாட்கள் தூங்காத துயரத்தைக் கண்ட பல்வைத்தியர் மேஜை இழுப்பறையை விரல்களால் தள்ளி மூடிவிட்டு, மென்மையாகக் கூறினார்:

‘’உட்காருங்கள்.’’

‘’காலை வணக்கம்.’’ என்றார், மேயர்.

‘’ வணக்கம்’’ என்றார், பல்வைத்தியர் .

கருவிகள் கொதித்துக்கொண்டிருக்கும்போது, மேயர் நாற்காலியின் தலைச்சாய்வில் தலையைச் சாய்த்தார். கொஞ்சம் இதமாகத் தோன்றியது. அவரது சுவாசம் ஐஸ்கட்டியாகக் குளிர்ந்திருந்தது.

அது ஒரு அய்யோப் பாவம் அலுவலகம். ஒரு மர நாற்காலி, காலால் இயக்கித் துளையிடுங் கருவி, பீங்கான் புட்டிகள் அடுக்கிய கண்ணாடி மாடம். நாற்காலிக்கு எதிரில் தோள்-உயரத் துணித்திரையுடன் ஒரு சன்னல். பல்வைத்தியர் வருவதாகத் தோன்றியதும், மேயர் குதிங்கால்களை இழுத்துச் சேர்த்துக்கொண்டு, வாயைப் பிளந்து காட்டினார்.

அவ்ரேலியா எஸ்கோவர், மேயரின் தலையை வெளிச்சத்தின் பக்கமாகத் திருப்பினார். சொத்தையாகியிருந்த பல்லைப் பரிசோதித்து முடித்து, மேயரின் தாடையை விரல்களில் ஒரு எச்சரிக்கையான அழுத்தத்துடன் மூடினார்.

‘’ மயக்க மருந்து இல்லாமல்தான் செய்ய வேண்டியிருக்கிறது.’’ என்றார்.
‘’ ஏன்?’’
‘’ ஏனென்றால், சீழ் கோர்த்திருக்கிறது.’’
மேயர் அவரை நேருக்கு நேராகக் கண்களில் நோக்கினார். ’’ சரி.’’ என்று கூறிப் புன்னகைக்க முயன்றார். வைத்தியர் பதிலுக்கு முறுவலிக்கவில்லை. அவர் கொதிக்க வைத்த கருவிகளிருந்த அகலப் பாத்திரத்தை சிகிச்சை மேஜைக்குக் கொண்டுவந்து குளிர்ந்த ஒரு சாமணத்தால் எந்த அவசரமும் இல்லாமல் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். பின்னர், எச்சில் துப்பும் பாத்திரத்தைக் காலால் தள்ளிக் கொணர்ந்துவிட்டு, கைகளைக் கழுவுவதற்காகக் கைகழுவுமிடத்துக்குச் சென்றார். அவர் இதையெல்லாம் மேயரின் பக்கம் பார்க்காமலேயே செய்துகொண்டிருந்தார். ஆனால், மேயரோ அவர் மீது வைத்த கண்களை அசைக்கவேயில்லை.

அது ஒரு கீழ்வரிசை ஞானப்பல். வைத்தியர் கால்களை அகல வைத்துக் கொண்டு, பல்லைச் சூடான இடுக்கியால் பற்றிப்பிடித்தார். மேயர் நாற்காலியின் கைகளைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, சக்தியை எல்லாம் ஒன்றாக்கிப் பாதங்களை இழுத்துச் சேர்த்து அமுக்கியவாறிருந்தார். அவரது சிறுநீரகங்களில் ஒரு பனிக்குளிரை உணர்ந்தார். ஆனாலும் அவர் எந்த ஒரு குரலும் எழுப்பவில்லை. வைத்தியர் அவரது மணிக்கட்டை மட்டுமே அசைத்தார். எந்த வெறுப்பையும், சிறு கசப்பு கூட வெளிக்காட்டாமல், அவர் சொன்னார்: ‘’ இப்போது, எங்களில் இறந்தவர்கள் இருபது பேர்களுக்கான விலையை நீங்கள் தரவேண்டும்.’’

மேயர் அவரது தாடையில் எலும்புகள் நொறுங்குவதாக உணர்ந்தார். அவரது கண்கள் நீரால் நிறைந்தன. ஆனால், பல் வெளியே வந்துவிட்டதை உணரும் வரை அவர் மூச்சு கூட விடாமல் இழுத்துப் பிடித்திருந்தார். பின்னர் அதனைக் கண்ணீரின் வழியாகக் கண்டார். அது அவரது வலிக்கும் வேதனைக்கும் அப்பாற்பட்டதாகத் தோன்றியது. முந்தைய ஐந்து இரவுகளின் கொடிய வேதனையின் காரணத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

உமிழ்க்குடுவையில் குனிந்தவாறே வியர்த்து, மூச்சு வாங்கி, மேலங்கியின் பொத்தான்களைத் திறந்து காற்சட்டைப் பைக்குள் கைக்குட்டையை எடுக்கக் கையை நுழைத்தார். வைத்தியர் சுத்தமான ஒரு துணியை நீட்டினார்.

‘’ கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்.’’ என்றார்.

மேயர் கண்ணீரைத் துடைத்தார். அவர் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வைத்தியர், கைகளைக் கழுவும்போது பொடிந்து உதிரும் மேற்கூரையை நோக்கினார். அங்கே சிலந்தி முட்டைகளும் இறந்த பூச்சிகளுமாகத் தூசு படிந்த ஒரு சிலந்தி வலையைக் கண்டார்.

வைத்தியர் கைகளைத் துடைத்துக்கொண்டார். ‘’வீட்டுக்குப் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள்’’ என்றவர், ‘’ உப்புத் தண்ணீரில் கொப்புளியுங்கள்.’’ என்றும் நினைவூட்டினார். மேயர் எழுந்து நின்று, அலுவல் சார்பற்ற ஒரு இராணுவ வணக்கம் செய்து, விடைபெற்றார்; மேலங்கியைப் பொத்தானிடாமலே கால்களை எட்டிப் போட்டு, வாயிலை நோக்கி நடந்தார்.
‘’ பில் அனுப்புங்கள்,’’ என்றார், போகிற போக்கில்.
‘’ உங்களுக்கா, அல்லது நகரமன்றத்துக்கா?’’
மேயர், வைத்தியரைப் பார்க்கவே இல்லை. அவர் கதவைச் சார்த்திவிட்டு, திரை வழியாகச் சொன்னார்:
‘’ எல்லாம் ஒரே இழவுதான்.’’
•••
நன்றி : http://www.classicshorts.com/authors/Gabriel_Garcia_Marquez.html
web
classicshorts.com

மற்றமைகளுடன் பேசுவது எச்.முஜீப் ரஹ்மான்

images (3)

பேசுவது என்பது எல்லாவற்றுக்கும் மேலாக மற்றவர்களுடன் பேசுவது என்பார் லக்கான்.இன்றைய சூழலில் காட்டாக எயிட்ஸ் நோயாளிகளை எடுத்துக்கொள்வோம்.எயிட்ஸ் பாதித்த அந்த நோயளிகளிடம் நாம் பேசாமல் அவர்களை தனிமைபடுத்தி விடவேண்டும் என்ற எண்ணம் நமக்கு எப்படி வருகிறது.நமக்கு தெரிந்தவரோ அல்லது நண்பரோ அல்லது உறவினராக இருக்கும் அந்த நோயாளியை நாம் பேசமறுப்பதன் மூலம் என்ன சொல்லவிழைகிறோம்?நீ புரிந்து வைத்த அந்த நபர் உனது சமூக அறத்துக்கு எதிராக செயல்பட்டார் என்பதால் தானே நீ பேச மறுக்கிறாய்?அப்போது உன்னிடம் அதிகாரம் தானே செயல் படுகிறது.

அப்படியானால் நீ பேச்சை எப்படி புரிந்து வைத்திருக்கிறது.நமது மனம் யாரிடம் பேசவேண்டும் யாரிடம் பேசக்கூடாது என்று பட்டியல் இட்டுவைத்திருக்கிறதல்லவா?நீ பேசும் நபர் எப்படிப்பட்ட ஒழுக்கங்களை கொண்டிருக்கவேண்டும் என்று தீர்மானித்து வைத்துள்ளாய் என்று தானே அர்த்தம்.சமூக விதிகளை நீ பின்பற்றுவதாக கூறிக்கொண்டு ஒரு அதிகாரத்தை கையில் எடுத்ததை நீ கவனித்தாயா?நம்மிடம் அடிக்கடி இப்படி சொல்லப்படுவதுண்டு.அதிகாரத்தை கையில் எடுக்காதே.அதாவது நீ எதிர்வினை செய்து சட்டத்துக்கு புறம்பாக நின்றுகொள்ளாதே என்பதாகும்.ஆனால் நீ ஏன் இப்படி எதிர்வினையாற்றுகிறாய் என்பதை யாரும் சிந்திப்பதில்லை.சிலர் நமக்கேன் வம்பு என்று இருந்துவிடுவார்கள்.

இவர்கள் சட்டத்தை மதிப்பதற்க்காக அப்படி இருக்கவில்லை என்பது தெரியும்.நீ எதிர்வினையாற்றிய போது சட்டத்தைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லைதான்.ஆக எதிர்வினையாற்றினாலும் ஆற்றாமல் இருந்தாலும் சட்டத்தை பற்றி நினைப்பது இல்லை.ஆனால் ஆற்றுபவர் அதிகாரத்தை பயன்படுத்துபவராகவும் ஆற்றாதவர் அதிகாரத்துக்கு அடிபணிந்தவராகவும் இருக்கிறார்.இதை லக்கான் ஆண்டான் அடிமை உளவியல் என்கிறார்.நீ சமூக விதிகளை பின்பற்றுவதால் தான் பேச்சு நடவடிக்கையில் விலகி இருக்க அல்லது பேசமறுக்க துணிந்துவிட்டாய்.அதிகாரம் இன்னொருபுறம் அரசு இயந்திரங்களான காவல்,சட்டம்,நீதிமன்றம்,தண்டனைகள்,ஜெயில் போன்றவற்றைக்கொண்டு எல்லோரையும் அடிபணியவைக்கிறது.நீ பேசமறுக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக பொது அல்லது சமூக அதிகாரம் நினைக்கவில்லை என்றாலும் நீ அதிகாரத்தை கையில் எடுக்க சமூக அதிகாரம் காரணமாக இருக்கிறது என்பதையும் சமூக அதிகாரம் அறிந்திருக்கவில்லை.

சட்ட,ஒழுங்கு பிரச்சனையை தான் அது மையப்படுத்துகிறது.இதை ஒரு முறை கூட படி சட்ட,ஒழுங்கு பிரச்சனை.நீ பேசமறுப்பதற்க்கும் உன்னிடம் செயலாற்றும் சட்ட அல்லது விதியொழுக்க மனநிலையே காரணம்.ஆக சமூக அதிகாரமும் நீயும் ஒரே திசையில் இருக்கிறீர்கள் அல்லது நீங்கள் சமூக அதிகாரத்தின் தனிநபர் அதிகாரம் ஆவீர்கள்.அதிகாரம் என்பது எப்போதும் உள்ளேயும் வெளியேயும் செயல்படுகிறது.அகம்/புறம் என்றும் சொல்லலாம்.இன்னும் சொல்லபோனால் நாம் சமூகத்தின் அதிகாரத்தின் ஒரு பாகமாக இருக்கிறோம்.இனி நாம் யார் யாரிடமெல்லாம் பேசுகிறோம் யாரிடமெல்லாம் பேச தயங்குகிறொம் அல்லது யாரிடமெல்லாம் பேசமறுக்கிறோம் என்று பார்த்தால் அதிகாரத்துக்கு முன்பாக நாம் பேச தயங்குகிறோம்.

நம் அதிகாரத்துக்கு கீழ் உள்ளவர்களிடம் பேச மறுக்கிறோம்.நம் அதிகாரத்திற்கு கீழ் வருவது என்பது நேரடியாக அல்ல.கீழ்பணிய அதிகாரத்தை பயன்படுத்துகிறோம்.அங்கு மற்றவர்களின் பேச்சு மறுக்கப்படுகிறது.அதிகாரத்தை அதிகம் கேள்விக்குள்ளாக்கியவர் பூக்கோ.அதிகாரம் இல்லாமலே நாம் சமூகத்தின் அதிகாரிகளாக உள்ளோம் என்பது கவனிக்கப்படவேண்டிய விசயமாகும்.மற்றவர்களுடன் பேசுவது என்றால் என்ன? அரசு தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்துவதில்லை.ஜெயில் அதிகாரி ஒரு கைதியிடம் பேச்சு நடத்துவதில்லை.ஒரு குடும்பஸ்தன் விபச்சாரிகளிடம் பேச்சு நடத்துவதில்லை.ஒரு எஜமானன் தனது வேலையாளுடன் பேச்சு நடத்துவதில்லை.ஒரு டாக்டர் பையித்தியத்துடன் பேச்சு நடத்துவதில்லை.ஆக சமூகத்தில் ஒருசிலர் ஒருசிலருடன் பேசுவது இல்லை.ஆர்பாட்டக்காரர்கள் ஆர்பாட்டம் நடத்தினாலும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறார்கள்.பேச்சு ஒரு அதிகாரமாக அல்லது புனிதமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.பேச்சு மொழியின் ஒரு செயல்பாடாக இருந்தாலும் அது ஒரு ஆயுதமாக,கருவியாக செயல்படுகிறது.அதனால் பேச்சு விதிகளாலும்,ஒழுக்கங்களாலும் ஆனது எனப்படும்.

இது மொழியின் இலக்கணவிதியையோ,ஒழுங்கையோ சார்ந்ததல்ல.அவை வேறு.பேச்சு இன்னும் ஜனநாயகப்படுத்தப்படவில்லை என்பதே இங்கு முக்கியமானது.பாலியல் என்பதே ஒரு சமூக கட்டமைப்பாக இருந்தாலும் பாலியல் பேச்சின் பொருளாகாது.பொதுவில் பாலியல் பேசுவது தவறானது.ஒரு பெண் அதுவும் பாலியலை பேசுவது பெருந்தவறு.சிறுவர்கள் பாலியல் பேசக்கூடாது.ஆசிரியர்கள் பாலியல் பேசக்கூடாது.அரசியல்வாதிகள் பாலியல் பேசக்கூடாது.மதவாதிகள் பாலியல் பேசக்கூடாது.ஆக பாலியல் பேச்சு மறுக்கப்படுகிறது அல்லது தடுக்கப்படுகிறது.அதனால் தான் எம் டிவியையும் மிட்நைட் மசாலாவையும் பார்க்க நமக்கு ஆசை.பேச்சு விதிகளாலும்,ஒழுங்குகளாலும் ஆனது என்று சொல்ல இதுவே காரணம்.பாலியல் மட்டுமல்ல இன்னும் விதிகளாலும் ஒழுங்குகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த ஒரு விசயத்தையும் பேச பேச்சு அனுமதிப்பதில்லை.நமது சமூகத்தில் வளவள என்று பேசுபவரை யாரும் விரும்புவது இல்லை.ஏனெனில் அடிப்படையில் நாம் பேச்சுக்கு எதிரானவர்களாக கட்டமைக்கப்படுகிறோம்.பெண்கள்,விதி மீறியவர்கள்,விளிம்புநிலை மக்கள் போன்ற எண்ணற்ற மக்கள் திரளினரிடம் நாம் பேச தயங்குகிறோம்.அவர்களது பிரச்சனையை பேச நாம் மறுக்கிறோம்.

பேச்சு என்ற இந்த நடவடிக்கைக்கு காரணமான மொழியை கொஞ்சம் அலசவேண்டியிருக்கிறது.மொழி நம்மை அந்நியமாக்குகிறது.நம் அனைவரிடமும் மொழியால் ஆன அகம் இருக்கிறது.இந்த அகம் குறிப்பானால் உணர்த்தப்படுகிறது.மொழியால் இணைப்பு நடந்தாலும் மொழியால் நாம் அன்னியப்பட்ட அகநிலையாக ஆகிக்கொண்டிருக்கிறோம் என்கிறார் லக்கான்.மொழி நம்மை அன்னியபடுத்த வேண்டியது ஏன் என்றால் நாம் பேசும் மொழியானது மற்றவர்களின் மொழியை போல இல்லை.உயர் மொழியும்,இழிமொழியும் இருக்கிற போது நாம் அன்னிய படுவது இயல்பாகிவிடும்.அகநிலை என்பது வரலாறு,பண்பாடு,அரசியல் என்று எண்ணற்ற விஷயங்களால் உருவாவது.நாம் சொல்லும் குறிப்பான்கள் அகநிலையை சரியாக விளக்க முடியாததாக இருக்கிறது.இதனால் அகநிலை நம்மை அன்னியபடுத்துகிறது.நமது அகத்தை மற்றவர்களால் புரிய முடியாமல் போனால் அல்லது நிராகரிக்க கூடுவதாய் அமைந்தால் நம்மை அந்நியமயமாக்கிவிடும்.நாம் பாலியலை அகமாக வைத்திருந்தாலும் மற்றவர்களிடம் நேரடியாக பேசமுடியாமல் குறிப்பான்கள் வழியாக பேசுகிறோம்.

ஆனால் மற்றவர்கள் குறிப்பான்களை புரிந்து கொள்ளமுடியாதாகையால் மொழியால் அந்நியபடுத்தப்படும் நிலைக்கு ஆளாகிறோம்.உனக்கு அவளை பிடிக்கிறது அவளுடன் உடலுறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறாய்.உனது மொழியால் அதை அவளிடம் சொல்லிவிட முடியுமா என்று யோசித்துப்பார்.எனவே நீ அவளை விரும்புவதாக கூறுகிறாய்.அவளோ உன்னை விரும்பலாம் அல்லது நிராகரிக்கலாம்.ஆனால் நீ உத்தேசித்த உடலுறவுக்கு அழைப்பதை அவளால் புரியவே முடியாது.இது மொழி உன்னை அன்னியப்படுத்திய இடமாகும்.அதே சமயம் உன்னால் ஒரு விபச்சாரியிடம் நேரடியாக கேட்க முடியும்.ஆனால் சமூகம் அதை அனுமதிக்காது.நீ இங்கு விதிகளாலும்,ஒழுங்குகளாலும் ஆன அமைப்பை மீற முடியாமல் தவிப்பதை காணலாம்.நமது மொழியும்,சமூக அமைப்பும் திருமணத்துக்கு பிறகு தான் உடலுறவு என்ற கருத்தியலை கொண்டிருப்பதால் உன்னால் காதல் நாடகம் தான் முடிகிறது.இங்கு இன்னொரு விசயத்தை கவனிக்கவேண்டும்.உனக்கு அடிமையானவர்களிடம் காட்டாக உனது வீட்டு வேலைக்காரியை பேச்சு மறுக்கப்பட்ட அடிமையை உனது மொழியின் துணையில்லாமலே பாலியல் அத்துமீறல் செய்து கொள்ளமுடியும்.இங்கே மொழி அந்த பெண்ணுக்கு தீங்கீழைக்கப்பட்டதை சொல்ல முடியாதவகையில் அந்நியப்படுவதை காணலாம்.நீ உடலுறவுக்கு அழைக்க முடியாத அந்த ஏமாற்றம் உன்னை வக்கிரத்துக்கு கொண்டு செல்கிறது.உன்னை பாலியல் அத்துமீறலை செய்யும் படியாக உனது மொழி அகநிலை அப்படி செய்கிறது.மொழி இங்கே அதிகாரமாக உன்னை செயல்படவைக்கிறது.பல சமயங்களிலும் சமூக அதிகாரம் தன்னிலைகளை இணைத்துக்கொண்டு ஒரு பெண்ணை பலர் பாலியல் வல்லுறவுக்கு கொண்டு செல்லுவதை ஊக்கப்படுத்துகிறது.

இங்கே பேச்சு முற்றிலுமாக மறுக்கப்படுகிறது.மொழி அந்நியமாக்குகிறது.ஆக பாலியல் இச்சை மொழியால் பேசமுடியாத அல்லது மொழியை பேச மறுக்குகிற அகநிலைகளை உருவாக்குகிறது.இதனால் தான் அதிகாரம் மொழியை விட சக்திமிக்கதாக உடலை ஆட்படுத்தவும்,ஆட்கொள்ளவும் மிக்கதாக இருக்கிறது.நாம் மற்றவர்களிடம் சுதந்திரமாக பாலியல் அல்லது உந்துதலைகளை பேசமுடியுமென்றால் அங்கே அதிகாரமோ,அத்துமீறல்களோ நிகழவாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.மற்றவர்களிடம் பேச மொழி ஒரு தடையாக இருப்பது போல அதிகாரமும் ஒரு தடையாக இருக்கிறது.அதிகாரம் மிக்கவர்கள் மொழியால் பேச மறுக்கப்படுபவர்களை ஆட்கொள்ள மொழியோ,பேச்சோ தேவையில்லாமலே அதிகாரத்தால் ஆட்கொள்ளமுடியும்.காவல்துறையினர் பல இடங்களிலும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்த அதிகாரம் ஒரு முக்கிய காரணமாகிறது.ஒரே மொழியால் ஆட்கொள்ளவும் அனுமதிக்கவும் ஆவதால் மொழி ஏக காலத்தில் அதிகாரமிக்கதாகவும்,ஒடுங்கிபோகவும் தயாராக இருக்கிறது.மொழி அதிகாரமாக மாறும் போது உடல் அங்கே அதிகாரம் செலுத்துமிடமாக மாறுகிறது.உடல் அதிகாரத்தை அனுமதிக்கிறபோது மொழி மறுக்கப்படுகிறது.இன்னும் சொல்லப்போனால் பெண்ணில் உடல் மொழியை மொழி இல்லாமலே வாசிக்கவும்,ஆட்கொள்ளவும் மொழியால் ஆன சமூகமும் மொழியால் ஆன அதிகாரமும் அனுமதிக்கிறது.

பெண்ணின் உடல் மொழியால் தீர்மானிக்கப்படுவது போல பாலியல் அத்துமீறலை மொழி அகமாக இருந்து செய்கிறது.மொழியும்,பேச்சும் இல்லாதபோதும் மொழி செயல் படும் தருணம் இதுவாகும்.ஏனெனில் பெண்ணைகுறித்த அத்துணை விசயங்களையும் மொழி நமக்கு ஏற்கனவே சொல்லித் தந்திருக்கிறது.மொழியால் நேரடியாக மற்றவர்களிடம் பேச முடியவில்லை என்றாலும் அதிகாரம் மூலமாக செயல்படமுடியும்.பேச்சு அங்கே முக்கியமில்லை.ஆக மொழியால் பேசமுடியாது என்பதே உண்மையாகும்.

 

***

புகைப்படங்கள்: நித்தி ஆனந்த்

 

download (10)

 

 

 

 

 

 

 

download (9)