Category: இதழ் 40

பிரேம பாசம் – ஒரு பழைய திரைப்படம். – வண்ணதாசன்.

 download (4)

 

வராந்தா ரொம்ப ஒடுக்கம். ஒரு சைக்கிள் நிறுத்தக்கூட இடம் பற்றாது. அங்கே கிடந்த நாற்காலியில்தான் கணேசன் உட்கார்ந்து இருந்தான்.

அந்த மர நாற்காலியை அவனுக்குப் பிடித்திருந்தது. ஓரமாகக் கட்டியிருந்த கொடியில் தொங்கின துணிகளில் இருந்து புழுங்கல் வாடை வருவது கூடக் கணேசனுக்கு அவனுடைய ரெங்கசமுத்திரம் அத்தை வீட்டில் இருக்கிற உணர்வை உண்டாக்கியது. இவன் இங்கே உட்கார்ந்திருக்கிறான் என்று மகாலிங்கம் அவளிடம் சொல்லியிருக்கவேண்டும். பிரேமா சிரித்துக்கொண்டே வந்து, ‘ என்ன இங்கேயே உட்கார்ந்துட்டீங்க. உள்ளே வந்தால் என்ன?’ என்றபடி கொடியில் கிடந்த அவளுடைய உள்பாவாடை போன்றவைகளை உருவிக்கொண்டு போனாள். அவள் போன பிறகு கொடி அதிர்ந்து அடங்குகிற அசைவில் கீழே விழுந்த துண்டை கணேசன் முகர்ந்து பார்த்துவிட்டுக் கொடியில் போட்டான். சுருக்கு இல்லாமல் அதை விரிக்கும் போது திரும்பத் திரும்ப துண்டின் கீழ்ப்பகுதியில் இருந்த குஞ்சங்கள் அவன் முகத்தில் பட்டுக்கொண்டே இருந்தன.

அவள் உள்ளே வரச் சொன்னாலும் கணேசன் ஒருபோதும் உள்ளே  போவதில்லை. பிரேமாவும் மகாலிங்கமும் உள்ளே பேசிக்கொண்டு இருப்பது கேட்கும். மகாலிங்கம் தன்னுடைய சொந்த வீட்டில் கூட இப்படித் தாராளமாகவும் உரக்கப் பேசிக்கொண்டும் இருக்கமாட்டான். சொல்லப்  போனால் வீட்டுக்குள் நுழையும் போதே கடுகடுவென்று ஆகிவிட்ட முகத்துடன்தான் சாப்பாட்டுப் பையை மேஜையில் வைப்பான். ‘வரும்போது  கடைச் சாமான் வாங்கிட்டு வரச் சொல்லி லிஸ்ட் கொடுத்தேனே. வாங்கிட்டு வரலையா?’ என்று மெதுவாகத்தான் சரஸ்வதி கேட்பாள். அவள் அப்படிக் கேட்பதும், ‘வாங்க அண்ணாச்சி. மதினி பிள்ளைகள் எல்லாரும் நல்லா இருக்காங்களா? ‘ என்று கணேசனைக் கேட்பதும் ஒன்று போலத்தான் இருக்கும். ‘வந்து நுழைகிறதுக்கு உள்ளேயே உன் புராணத்தை ஆரம்பிச்சுட்டியா?’ என்று மகாலிங்கம் தேவையில்லாமல் சத்தம் போடுவான். ஆனால் இங்கே ஆளே மாறிப் போய்விடுகிறான். ‘இந்தப் பாட்டைக் கேட்டியா பிரேமா. நல்லா இருக்குல்லா? என்று அதன் முதல் இரண்டு அடியைப் பாடியபடியே போய் அடுப்படியில் நின்று பேசுவது கேட்கிறது. சமயத்தில் தேங்காய் துருவிக்கொடுத்துக்கொண்டே அவன் பேசுகிறானோ என்பது போலக் கூடக் கணேசனுக்குத் தோன்றும்.

கண் கண்ணாக வராந்தா பக்கவாட்டில் பதித்துக் கட்டியிருந்த சிமெண்ட் ஜாலி வழியாகக் கையை விட்டு கணேசன் நாரத்தை இலையைப்  பறித்துக் கசக்கிக்கொண்டு இருக்கையில், ‘கணேசா, பைக் சாவியைக் கொடு. வெளியே போயிட்டு வந்திருதோம்’ என்று மகாலிங்கம் கேட்கும் போது பிரேமா ஒரு பிக் ஷாப்பர் பையைக் கையில் வைத்தபடி கணேசனைப் பார்த்துச் சிரித்தாள். ‘அம்மா நல்லா தூங்குதா’ என்றாள். ‘ஒன்றும் தொந்தரவு இராது. கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்பதைச் சொல்லவில்லை. அதுதான் அர்த்தம் அதற்கு.

வெளிவாசல் நிலையைப் பிடித்து, ஓரமாகப் போட்டிருந்த செருப்புக்குள் அனிச்சையாகக் காலை நுழைத்தபடியே அவள் மகாலிங்கத்திடம் பேசுகிற  தோற்றத்தைக் கணேசனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பைக் உதைபட்டு ஸ்டார்ட் ஆகும் சத்தத்தைக் கேட்டதும் கணேசனுக்கு உடம்புக்குள் சிலீர் என்று ஆயிற்று. மகாலிங்கமும் பிரேமாவும் பைக்கில் போவதைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. இடது கைவிரல்களுக்குள் மொடுக்கென்று ஒடிந்து கசங்கி உருண்டையாகி இருந்த நாரத்தை இலையை அவன் பார்த்துக்கொண்டே இருந்தான். அதைத் தூரப் போட அவனுக்கு மனசு வரவில்லை.

தெருவடி வீடுதான் இது. கணேசன் இப்படி உட்கார்ந்திருப்பதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். போன தடவையும் இதே இடம்தான். ஆனால் இந்த நாற்காலி உட்பக்கம்  பார்க்கத் திருப்பிப் போடப்பட்டு இருந்தது. ‘பிரேமாக்கா இல்லையா?’ என்று யாரோ கேட்டார்கள். கணேசன் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்தப் பாப்பா, முதல் கட்டு நிலைப்பக்கம் இருந்த ஆணியில் ஒரு சாவி வளையத்தைத் தொங்கப் போட்டுவிட்டு, ‘ அக்கா வந்தால், சாவி வச்சிருக்கேன்னு சொல்லீருங்க. தெரியும்’ என்று போய்விட்டது. நிற்கக் கூட இல்லை. வழக்கமாக தபால்காரர் வாசல் கதவு அழிக்கம்பிகளுக்குள் வளைவாகச் செருகிவைத்துவிட்டுப் போவார் போல. இவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும், அப்படிச் செருகியதை எடுத்து ‘இந்தாங்க சார்’ என்று  ஒரு தடவை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். எதற்கு இப்படி மகாலிங்கத்தைத் தேவையே இல்லாமல் தன்னுடைய பைக்கில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு தானும் இங்கே வந்துகொண்டு இருக்கிறோம் என்று கணேசனுக்கு மனதுக்குள் அரிச்சலாக இருந்தது.

மகாலிங்கம் பிரேமாவுக்காகத்தான் கணேசனிடம் அடிக்கடி கைமாற்று வாங்குகிறான் என்று தெரியும். ஒரு தடவை ஐநூறு அவசரமாகவேண்டும் என்றும், பிரேமா ஆபீசில் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லியிருப்பதாகவும், ஆயிரம் ரூபாயாகக் கிடைத்தால் கூட நல்லது என்றும் கணேசனிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தான். சொல்லிவைத்தது போல, மதியம் சாப்பாட்டு வேளையில் வந்து, ‘அவள் வந்து போஸ்ட் ஆபீஸ் பக்கம் வெயிட் பண்ணுதா. வா. மூணு பேரும் வசந்தா கேஃப்ல சாப்பிட்டுக்கிடலாம்’ என்று மகாலிங்கம் கூப்பிட்டபோது கணேசனுக்கு பிரேமாவைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது.

கணேசன், கணேசனுக்கு அடுத்து  மகாலிங்கம், அவனுக்கு எதிரே  பிரேமா என்று உட்கார்ந்துதான்  சாப்பிட்டார்கள். வேறு எப்படியெல்லாமோ பிரேமா இருப்பாள் என்று  கணேசன் நினைத்திருந்தான். அதற்கு நேர் மாறாக அவள் இருந்தாள். ஒல்லியான உடலில் மிகச் சாதரணமாகத்தான் ஒரு புடவையைக் கட்டியிருந்தாள்.  பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும் , மகாலிங்கமும் அவளும் சிரித்துச் சிரித்துப் பேசியபடியே சாப்பிட்டபோது கணேசன் அவளையே பார்க்கும்படி ஆயிற்று.

ஒரு அப்பளத்தைக் கடித்தபடியே, ‘உங்களுக்கு வேறு ஏதாவது கொண்டுவரச் சொல்லணுமா சார்?’ என்று நேரடியாக அவள் கேட்டதும் கூச்சமாகிவிட்டது. கட்டின பெண்டாட்டியைப் போல, எச்சில் கையை லேசாகக் குவித்து மடக்கியபடி, அவளைக் கூட்டிக்கொண்டு மகாலிங்கம் கை கழுவப் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

சாப்பாட்டுக்குப் பணத்தைத் தான் கொடுக்கிறதாக முதலில்  கணேசனுக்கு யோசனையே இல்லை. பீடா, பழம் எல்லாம் இருக்கும்  ஒரு தட்டில் பரிமாறுகிறவர்  பில்லை மேஜையில் வைத்ததும்  மகாலிங்கம் கையை விலக்கிவிட்டு. ‘நான் கொடுத்துருதேன்’ என்று கணேசன் பர்சை எடுத்தான். மகாலிங்கம் ஒரு பாவனை போல அதைத் தடுத்த சமயம், ’இருக்கட்டும் மகா’ என்று சிரித்தான். மகாலிங்கத்தை இதுவரை ‘மகா’ என்று எல்லாம் அவன் கூப்பிட்டதே இல்லை. பிரேமா அவனை அப்படித்தான் கூப்பிடுவாள் என்று கணேசனுக்குத் தோன்றியது. அடக்கமுடியாத ஒரு பெரும் வேட்கையுடன் கணேசன் பிரேமாவைப் பார்த்த அந்தச் சில நொடிகளில், அவளை அவன் முழுமையாக அறிந்துவிட்டது போலவும், மகாலிங்கம் இத்தனை தூரம் ஆட்படுவதற்கு பிரேமாவிடம் ஏதோ இருப்பதாகவும் அவன் முடிவுக்கு வந்துவிட்டான்.

‘அனுப்பிவிட்டு வந்திருதேன்’ என்று மகாலிங்கம் புறப்பட்டபோது, பிரேமா ‘போய் வருகிறேன்’ என்று சொல்வது போல சிரித்துக்கொண்டே தலையை அசைத்தாள். இது போன்ற சமயங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அவளுக்குத் தெரிந்திருப்பதும், மூன்றாவது நபர் யாரேனும் பார்க்க நேர்ந்தால் கணேசனுக்கு எந்த ஒரு அவச் சொல்லும் வந்துவிடாமல், பொது இடத்தில் மிகவும் கவனமாக அவள் நடந்துகொள்வதாகவும் கணேசனுக்குத் தோன்றியது.

சாப்பிடும் போது ஏற்கனவே  போட்டிருந்த பீடா தவிர, ஒரு  சிகரெட்டையும் புகைத்துக்கொண்டே எதிரே திரும்பிவருகிற மகாலிங்கத்தைப் பார்த்ததும் கணேசனுக்குச் சொல்லமுடியாத சந்தோஷம் உண்டாயிற்று. ‘மருதகுளம் வண்டி வந்துது. ஏத்தி விட்டுட்டேன்’ என்று மகாலிங்கம் சொல்லும் போது. ஒன்றுமே சொல்லாமல் பிரேமாவை நினைத்துக்கொண்டே, பாராட்டுவது போல அவன் தோளை கணேசன் தட்டிக் கொடுத்தான். மகாலிங்கம் கடைசி இழுப்பை இழுத்து, சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு அவனும் பதிலுக்குச் சிரித்தான். அப்படித் தட்டிக்கொடுத்ததன் மூலம் எல்லாவற்றையும் கணேசன் சொல்லிவிட்டது போலவும், இப்படிச் சிரித்ததன் ஊடாக அப்படிச் சொன்னதை எல்லாம் மகாலிங்கம் புரிந்துகொண்டதாகவும் அது இருந்தது.

இப்படிப் பழசு பூராவும் நினைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தோம் எனக் கணேசனுக்குத் தெரியவில்லை. அவனுடைய பைக் சத்தம் போலவே கேட்டதும் கணேசன் ஆசுவாசம் அடைந்து , எழுந்து வாசலுக்கு வந்தான். அப்போது கூட, வண்டியை நிறுத்தி இறங்குவதற்குள் பிரேமா ஒருச்சாய்ந்து உட்கார்ந்திருக்கிற விதத்தைப் பார்த்துவிட கணேசன் விரும்பினான். அது அவனுடைய வண்டியின் சத்தம் மாதிரி இருந்ததே தவிர, அவனுடையது இல்லை.

‘இவ்வளவு நேரம் ஆக்குவதா? சீக்கிரம் வரவேண்டாமா?’ என்று மகாலிங்கத்தைச் சத்தம் போடவேண்டும் என்றும், பிரேமா முன்னால் தனக்கு அப்படிச் சத்தம் போடத் தோன்றாது என்றும் சங்கடமாகக் கணேசன் நினைத்துக் கொண்டான். ‘ஸார் தான் பாவம். போர் அடிச்சிருக்கும்’  என்பதை எப்படி மன்னிப்புக் கேட்கிற குரலில், சிரித்துக்கொண்டே சாமர்த்தியமாக பிரேமா சொல்வாள் என்பதைக் கூட கணேசனுக்குக் கற்பனை செய்ய முடிந்தது. சற்று அதிகப்படியாக, அவள் நேரடியாகக் கணேசனிடம் வந்து கையைப் பிடித்துக்கொண்டு, ‘ஸாரி, ஸாரி’ என்று சொல்வதாக நினைத்துக்கொள்ளப் பிடித்திருந்தது.

வாசல் கொண்டியைக் கதவோடு அடித்து, ‘வாட்டர் கேன்’ என்று சத்தம் கொடுத்தவர் தோளில் தண்ணீர் ஜாடி குறுக்குவாட்டில் இருந்தது. சிராய்ப்புகள் கோடு கோடாகத் தெரிகிற பிளாஸ்டிக் சுவருக்குள் வளைவும் புடைப்புமாகத் தண்ணீர் அலம்பியது. அது மகாலிங்கம்தான் என்றும், அந்தக் கண்ணாடிக் குடுவைக்குள் பிரேமாவை அடைத்துத் தோளில் வைத்துக்கொண்டு அவன் நிற்கிறான் என்றும் நினைத்தபடி, கணேசன் கதவுகளை அகலமாக இரண்டு சிறகுகளாகத் திறந்தான்.

வழக்கமாக வருகிறவர் போல. ‘எம்ப்டி கேனை எடுத்துக்கிடுதேன்  சார்’ என்று நேரே வீட்டுக்குள் போனார். தோளில் இருக்கும் தண்ணீர் ஜாடிக்குள் இருக்கிற பிரேமாவின் அழைப்புக்குக் கீழ்ப்படிய நேரிட்டது போல, கணேசன் அந்த வீட்டின் இதுவரை போகாத அடுத்தடுத்த அறைகளுக்குப் போனான். வராந்தாவின்  வெளிச்சம் நீர்த்து சற்று இருட்டாக இருக்கும் இரண்டு சிறு அறைகளில் எந்த அறையில் பிரேமாவின் அம்மா உறங்குகிறாள் என்று அவனுக்குத் தெரியவில்லை.

தண்ணீர் கேனை இறக்கிவைத்து, தலைகீழாக்க் கவிழ்த்திய முதல் நிமிடங்களின் களகளப்பு பிரேமாவின் சிரிப்பு போல  இருக்கிறதா என ஒப்பிட்டு, இல்லை. தான் அறிய அவள் உரக்கச் சிரிப்பதே  இல்லை என்றும் கணேசன் முடிவு செய்தான். அவளைப் பற்றி தான் சரியாக இப்படித் தீர்மானித்துவிடுவதில்  ஒரு திருப்தி உண்டானது அவனுக்கு. வாட்டர் கேன் கொண்டுவந்தவர் காலி தண்ணீர் ஜாடியின் அடிப்பாகத்தில் தொம் தொம் என்று தாளம் இட்டபடி, ஒவ்வொரு அறையின் இருட்டிலிருந்து விலகி வாசல் வெளிச்சத்திற்குப் போவதையே பார்த்த கணேசனுக்கு, விலகிக் கொண்டே போகிறவருடைய தோற்றம், ஒரு புள்ளியில் காணாமல் போனது ஒரு கனவு போல இருந்தது.

குனிந்து குழாயைத் திருகி ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு டம்ளர்கள் தண்ணீர் குடிக்கையில் கொஞ்சம் சிந்தியது. வேண்டும் என்றே மிச்சம் இருந்த தண்ணீரைக்  கணேசன் தன் மேல் சிந்திக்கொண்டான். அது சட்டையின் மேல் பொத்தானை ஒட்டிய திறப்பின் வழியாக உடம்பில் வழிந்து குளிர்கையில் ஒரு முனகல் கேட்டது.

கீழ்க் குரலில் இருந்து  அது கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி, யாரையோ அழைப்பது போல  இருந்தது. கணேசன் உற்றுக்  கேட்டபோது, அது தெலுங்கில் திருப்பதி வெங்கடாசலபதியை மீண்டும் மீண்டும் கூப்பிடுவது  தெரிந்தது. மிகவும் தீனமாகவும் நெருக்கமாகவும் வருகிற அந்தக் குரலின் திசையை கணேசன் அனுமானித்துக்  கொண்டு , வலது பக்க அறையின்  கதவுப் பக்கம் போய் நின்றான்.

மல மூத்திர வாடையா, பினாயில் வாடையா என்று சொல்ல முடியவில்லை. மிகவும் தொந்தரவுடன் அந்த வாடையைச் சகித்துக்கொண்டு கணேசன் அழுத்தமாகக் கதவுகளை உட்பக்கமாகத் தள்ளினான்.

வெளியே பைக் சத்தம் கேட்டது. வாசல் நடையில் காலை ஊன்றி, மகாலிங்கம் நிறுத்திய பைக்கில் இருந்து பிரேமா இறங்குவதை  கணேசன் பார்த்தான். தனக்குச் சம்பந்தமே இல்லாத யாரோ இருவர் வருவது போல நினைத்துக்கொண்டே திறந்த அறைக்குள் நுழைந்தான்.

அவனுக்குத் தெரிந்த அளவு தெலுங்கில், ‘வந்துவிட்டேன், வந்துவிட்டேன்’ என்று சொல்லியபடி கட்டிலைப் பார்க்கக் குனிந்தான்.

முதல் உத்தேசத்திலேயே, இரண்டு மெலிந்த கைகளையும் அவனால் பற்றிவிட முடிந்தது.

 

••• 

 

உலக சினிமா இயக்குநர் வரிசை – ஸ்டான்லி குப்ரிக் நேர்காணல் – தமிழில். ஜா.தீபா

 download (1)

 

 

 

 

 

 

 

 

அமெரிக்க  இயக்குனர்களின் ‘மாஸ்டர்’ என விமர்சகர்கள் இவரைப் பற்றி ஒருமித்த கருத்தை  சொல்கிறார்கள். ‘சினிமா இயக்குவதற்காகவே  பிறந்தவர்’ என்கின்றனர்  இவரது ரசிகர்கள். ‘இவரது பாதிப்பு இல்லாமல் திரைப்படம் எடுக்கமுடிவதில்லை’ என்கிறார்கள் இவரது சமகால படைப்பாளிகள்.

ஸ்டான்லி  குப்ரிக் – திரைப்பட நுணுக்கங்கள் அனைத்தையும் தன்வசப்படுத்தியவர். பெரும்பாலும் சிறுகதைகளையும், புதினங்களையுமே திரைப்படமாக மாற்றிய குப்ரிக்கின் ஆர்வம் கட்டுங்கடங்காமல் போனதன் நல்ல விளைவை உலகத் திரைப்பட ரசிகர்கள் கொண்டாடினார்கள். பதிமூன்று படங்களை இயக்கியுள்ள இவரின் ஒவ்வொரு படங்களுமே சினிமா உலகிற்கு புதிய யுக்திகளைக் கற்றுத் தந்திருக்கிறது. 1980ல் ‘The shining’ படத்தில் தான் ஸ்டெடிகாம் தொழில்நுட்பத்தை சினிமா உலகம் முதன் முதலில் கண்டுகொண்டது.

பனிரெண்டாவது  வயதில் குப்ரிக்கின் அப்பா  கற்றுக் கொடுத்த செஸ் விளையாட்டைப் பற்றி இப்படி சொல்கிறார் குப்ரிக், “செஸ்சுக்கும் திரைப்பட உருவாக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இரண்டு வாய்ப்புகள் உங்கள் முன் இருக்கும்போது சரியானதைத் தேர்ந்தெடுக்கும் பொறுமையையும், ஒழுக்கத்தையும் கற்றுக்  கொடுக்கும். அதே சமயம்  உங்கள் உள்ளுணர்வு வேகமான முடிவை எடுக்கும்” என்கிறார். இவரின் பால்யகால நண்பர்கள் குப்ரிக்கைப் பற்றித் தவறாமல் குறிப்பிடுகிற ஒரு விஷயம் , ‘எந்த நேரமும் கதைப் புத்தகங்களை சுமந்தபடி திரிந்துகொண்டிருப்பார்’ என்பது.

நெப்போலியன் பற்றி திரைப்படம் எடுக்கவேண்டுமென்பது  குப்ரிக்கின் கனவு. நெப்போலியனின்  வாழ்க்கைசுவடுகளை முழுமையாகத்  தெரிந்து கொள்வதற்காக இரண்டு வருடங்களை செலவு செய்தார். அதற்கான திரைக்கதையும் எழுதிமுடித்துவிட்டார். முன்தயாரிப்பு வேலைகளுக்காக மட்டும் ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்ட அவரது நிதானத்தையும் , அதுவரை ஏற்பட்ட பொருட்செலவையும் பார்த்து எம்ஜிஎம் தயாரிப்பு நிறுவனம் திடிரென பின்வாங்கிவிட்டது.

கடந்த மார்ச் 2013ல் குப்ரிக் எழுதிய நெப்போலியன் திரைக்கதையை தொலைக்காட்சித் தொடராக இயக்கப்போவதாக இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அறிவித்துள்ளார்.

குப்ரிக்கின்  படங்கள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது உண்டு. ‘A Clockwork orange’ திரைப்படத்திற்கும் அதிகமான கண்டனங்கள் எழுந்தன. வெளிப்படையாகக் காட்டப்படுகிற வன்முறைகள் மக்களைத் திசைத் திருப்பும் என்கிற வாதத்திற்கு, ‘வன்முறைக் குற்றங்களை நினைத்தவுடனே எல்லாம் செய்துவிட முடியாது. அதற்கும் கூட நீண்ட நெடிய வன்முறை சரித்திர பின்னணி வேண்டும்’ என்றார் அழுத்தமாக.

 

கேள்வி : ‘அண்டர்கிரௌண்ட்’ படங்களில் உங்களுக்கு எப்போதாவது ஆர்வம் வந்திருக்கிறதா?

நான் நல்ல ‘அண்டர் கிரௌண்ட்’ படங்கள் பார்த்ததில்லை. அந்த மாதிரியான படங்களை  உருவாக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். சரியான தொழில்நுட்பம்  கொண்டு தான் அது ஒரு முட்டாள்தனமான  படம் என்கிற சாயலில் இருந்து  வேறுபடுத்திக் காட்ட முடியும்.

இந்தப் படங்களில்  வரும் கதாபாத்திரங்கள்  நம்மிடமிருந்து வேறுபடுகிறார்கள், அவர்களுக்கென பிரத்யேக வாழ்க்கை வாழுகிறார்கள் போன்றவை கொஞ்சம் ஆர்வம் தரக்கூடியது என்றாலும் ஒரே மாதிரியான சம்பவங்களைக் கொண்டவை தான்.

 

கேள்வி : கொப்பலோ, ஸ்க்ரடர், ஸ்பீல்பெர்க், ஸ்கார்சி, டி பால்மா போன்றவர்கள் புதிதாக ஹாலிவுட்டில் முயற்சிகள் செய்து வருகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீண்ட நாட்களுக்கு  முன்பு ஒரு அமெரிக்க படம் பார்த்தேன். கிளாடியா வெய்ல் இயக்கிய அந்தப் படத்தின் பெயர் ‘Girlfriends’. அமெரிக்காவின் தீவிரமான, புத்திசாலித்தனமான உணர்வுப்பூர்வமான திரைப்பட படைப்புகளில் வெகு அரிதான படம் இது. இந்தப் படத்தை நான் மிகச் சிறந்த ஐரோப்பிய படங்களோடு ஒப்பிடுவேன். ஏனோ இந்தப் படம் அமெரிக்காவில் வெற்றி பெறவில்லை. கதையின் உள்ளார்ந்த உண்மைத் தன்மையோடு எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காத படம்.

மிகப்பெரும் இலக்கியங்களில் காணக்கிடைக்கிற உண்மைத்தன்மையோடும், பார்வையோடும் பெரும்பான்மையான  மக்களைக் கவர்வது போல் எடுப்பது சிரமமானது. லாபம் இல்லாமல் அமெரிக்காவில் உங்களால் படம் எடுக்கவே முடியாது.
ஏனென்றால் செலவு செய்தால் தான் அங்கு படமே எடுக்க முடியும். அங்குள்ள பார்வையாளர்களை என்ன செய்தால் ஈர்க்கலாம் என்று தான் இயக்குனர்கள் நினைப்பார்கள். ஏதாவது புதிதாக முயற்சி செய்யலாம் தான். ஆனால் அது கஷ்டம்.

கேள்வி : உங்களுடைய பெரும்பாலான படங்கள் நாவலில் இருந்து உருவாக்கப்பட்டவை. இலக்கியத்தில் இருந்து கையாள்வது உங்களுக்கு சுலபமானதாக இருக்கிறதா?
ஒரு கதையை நீங்களாக யோசிக்கத் துவங்கினால், அது நன்றாக வருமா, மோசமாக இருக்குமா என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் உருவாக்க ஆரம்பித்து விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் கதையைப் படிக்கும்போதே முதன் முதலில் ஒரு உள்ளுணர்வு தோன்றும். முதல் தடவைப் படிக்கும்போதே நாம் எப்படி உணர்ந்தோம், என்ன நினைத்தோம் என்பதெல்லாம் ஞாபகத்தில் இருக்கும். மற்றவர்களின் கதையை படிக்கும்போது நமக்கு இருக்கிற உணர்வு தான் படம் பார்ப்பவர்களுக்கும் இருக்கும் என்கிற பெரிய சாத்தியம்  இலக்கியத்தைக் கையாளும்போது கிடைக்கிறது.
கேள்வி : Nobokovன் ‘Lolitha’, Fastனுடைய ‘Spartacus’, Thackerayவினுடைய ‘Barry Lundon’ Kingன் ‘The Shining’ என திரைப்படங்களாக எடுத்த இந்தப் புதினங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகின்றன. ஒரு படத்தை உருவாக்குவதற்கு ஏற்ற புத்தகம் என எப்படி தீர்மானிக்கிறீர்கள்?
தனிப்பட்ட முறையில் அந்தக் கதைகளுக்கு நான் பொறுப்பாளி என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இதுவே என்னை பலவிதங்களில் எளிமையாக்கிவிடுகிறது. இரண்டாவது  கேள்வி என்னவென்றால், அந்தக் கதை என்னை பரவசப்படுத்துமா என்பதும், இரண்டு வாரங்கள் கழிந்த பின்னும் அதே பரவச மனநிலையைத் தக்கவைக்குமா என்பதும். இதற்கு நேர்மறையான பதில் கிடைத்துவிட்டால்’, இந்தக் கதையை என்னால் திரைப்படமொழியாக்க மாற்ற முடியுமா என்று யோசிப்பேன்.. ஏனென்றால் சில புதினங்கள் நன்றாக இருக்கும். ஆனால் கதாபத்திரங்கள் செய்கிற செயல்களை விட அவற்றின் உள்மன ஆழங்களை அதிகமாக பேசிக் கொண்டிருக்கும். ஒரு நாவலின் மையத்தையோ, கதாபாத்திரத்தையோ தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்டு எளிமைப்படுத்துவது தான் பெரிய சவால். நல்ல வரவேற்பைப் பெறாத நாவல்கள் கூட திரைப்படமாக மாறும்போது வெற்றி பெற்றிருக்கிறது. அதில் நடிகர்களுக்குத் தேவையான சாத்தியங்கள் இருக்கின்றதா? நாம் திரைக்கதையாக மாற்றியபின் வேறொருவரும் இதற்கான முயற்சியில் இருப்பாரா போன்ற கேள்விகள் தோன்றும். மொத்தத்தில் ஒரு கதை உள்ளுணர்வைத் தொட வேண்டும். நான் அந்தக் கதையோடு ஒன்றாய் இணைய வேண்டும்.
கேள்வி : ‘The Shining’ நாவலில் உங்களை எது ஈர்த்தது?

வார்னர் பிரதர்ஸின் செயலரான ஜான் கெய்லி தான் அந்த நாவலை எனக்கு அனுப்பிவைத்தார். எனக்கும் பிடித்திருந்த ஒரு நாவலை அவர்கள் எனக்கு அனுப்பியது அது தான் முதல் முறை. பல நாவல்களை நான் சில பக்கங்கள் கடந்த பிறகு நேரத்தை இனி இதில் வீணாக்கக் கூடாது என மூடி வைத்திருக்கிறேன். ‘The Shining’ என்னைப் படிக்கும்படி தூண்டியது. கதை, சிந்தனைகள், கதையமைப்பு எல்லாமே கற்பனைச் செறிவோடு இருந்தன. சிறந்த திரைப்படத்தை அதிலிருந்து உருவாக்கிவிடமுடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது.

இதற்கு முன்பு அவர் எழுத்தில் ‘CARRIE’ படம் பார்த்திருக்கிறேன். ஆனால் அவரது நாவல்கள் எதுவும் படித்ததில்லை. கிங்கின் பெரிய பலமே கதையை அமைக்கும் விதத்தில்] தான் இருக்கிறது. எழுதுவதற்கு அதிக நேரம் அவர் எடுத்துக் கொள்வதில்லையோ என்று தோன்றும். ஒரு முறை எழுதுகிறார், அதை முழுவதுமாக படிக்கிறார் சில நேரங்களில் திரும்ப எழுதிப்பார்க்கிறார். பிறகு பதிப்பாளரிடம் கொடுத்துவிடுகிறார். புதுப்புது கண்டுபிடிப்பில் அவர் காட்டுகிற அக்கறையும், அதில் அவர் தெளிவாகவும் இருப்பதும் தான் அவரது பரந்துபட்ட கற்பனைகளுக்குக் காரணம்.

கேள்வி : இந்த நாவல் வாசிப்பதற்கு முன்பு ஒரு திகில் படம் எடுப்போம்  என நினைத்திருந்தீர்களா?

ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே இன்னொரு  கதையை நான் தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லை. நான் ஏற்கனவே  இயக்கிய என்னுடைய மற்ற படங்களில்  சாயல் வந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் தான் நான் தீவிரமாக இருப்பேன். அடுத்த படம் எப்படி இருக்கப் போகிறது  என்பதைப் பற்றிய முன்தீர்மானம் எதையும் நான் உருவாக்கிக் கொள்வதில்லை. இது எனக்கு நேரத்தை மிச்சப்படுத்தும்.

இந்த வகையான படங்களுக்கு  ஒத்துப் போகிற விதி என்னவென்றால், நீங்கள் எதையும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவே ஒருவித அமானுஷ்யத் தன்மையை ஏற்படுத்திவிடுகிறது. அமானுஷ்யத்தன்மைப் பற்றி  ஃபிராய்ட் ஒரு கட்டுரையில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்.“அமானுஷ்யத்தன்மை என்பது ஒரு உணர்ச்சி மட்டுமே. நிஜ வாழ்க்கையைக் காட்டிலும் கலைகளில் தான் மிகத் தீவிரமாக எடுத்தாளப்படுகிறது”. என்றிருக்கிறார். இந்த வார்த்தைகள் என்னைக் கவர்ந்தன. இந்த வகையான படங்களுக்கே உள்ள ப்ரத்யேக பார்வை இது. அதே போல் மேதையான ஹெச்.பி. லவ்கிராஃப்ட் சொன்ன விஷயமும் முக்கியமானது. என்ன நடந்தது என மக்களுக்கு விவரிக்க வேண்டியதில்லை. என்ன நடந்திருக்கும் என்பதை மக்களே தங்களின் பயத்தையும், பதட்டத்தையும் கொண்டு கற்பனையில் தீர்மானிக்கட்டும் என்கிறார் அவர். இது போன்ற கதைகளை மக்கள் நன்றாக ரசிப்பார்கள். படம் முடிகிறபோது அவர்களின் கற்பனையே அவர்களுக்கு திருப்தியைத் தந்துவிடும். அவர்களை ஏமாற்றவோ, முட்டாளாக்கிவிடவோ கூடாது அவ்வளவு தான்.

கேள்வி : சாதாரணப் படங்களிலிருந்து தப்பிப்பதற்காகத் தான் வித்தியாசமாக திகில் படங்களை இயக்குகிறீர்களா?

ஒரு புத்தகத்தில் இருந்து  திகில் பக்கங்களை மட்டும்  எடுத்து திரைப்படமாக எடுக்கிறேன் என நினைக்கிறீர்களா? அது தவறு. ஒரு குழந்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சுவற்றில் எல்லா இடங்களிலும் ரத்தம் தெளிக்கிறது என்பதும், பனியில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, பக்கத்ததில் எங்கேயோ பெரிய குழாயிலிருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்கிறது போன்றவை புத்தகத்தில் படிப்பதை விட காட்சியாக பார்க்கும்போது கூடுதலான திகிலாக இருக்கும்.

புத்தகத்தில் இல்லாத எத்தனையோ விஷயங்களை திரைக்கதைக்காக சேர்த்திருக்கிறேன்.
கேள்வி : உங்களுடன் சேர்ந்து திரைக்கதை எழுதுகிற Diane Johnson பற்றி சொல்லுங்கள்..
அவர் நல்ல நாவலாசிரியை. ஐந்தாறு  புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒரு நாவலைப் படித்து  பிடித்துப் போய் அவரைத் தொடர்பு கொண்டேன். அப்போது தான் தெரிந்தது, அவர் கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் கோதிக் நாவல்களை பாடமாக சொல்லிகொடுக்கிறார் என்பது. அவருடன் சேர்ந்து பணிசெய்தால் நன்றாக இருக்கும் என விரும்பினேன். அவரின் நாவலை எடுத்துக் கொண்டு சில விஷயங்களை எளிமைப்படுத்தி திரைக்கதையாக எழுதினோம்.
கேள்வி : Dr. strangelove முழுக்கவே வசனங்களை அதிகம் கொண்ட படம். 2001 படமோ இதற்கு முந்தைய உங்களது முந்தைய படங்களை விட முழுக்கவே மாறுபட்டதாய் இருந்தது.

ஆமாம். நானும் அதை உணர்ந்தேன். Dr. strangelove படத்தில் வசனங்கள் அதிகமாய் இருந்ததினால் வேறு மொழிகளில் அதிகமாய் தப்புதப்பாய் மொழிமாற்றம்  செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ‘2001’ படமோ இதற்கு நேர்மாறாய் அமைந்திருக்கிறது. காட்சிரீதியிலான அனுபவம் கொண்டது. இந்தப் படத்தில் அறிவார்ந்த வசனங்களைப் புகுத்தாமல் பார்வையாளர்களின் ஆழ்மனதை ஒரு இசை பரவுவது போல, ஒரு ஓவியம் நுழைவது போல தத்துவார்த்தமாக அடையமுடிந்தது. ஒரு கலாசார தடுப்பை உடைத்து நம்முடைய மனதின் உணர்வுகளை உலுக்க கூடியது.

வார்த்தைகளைக் கொண்டு நிரப்பாமல் எந்த ஒரு  சிக்கலான கருத்தையும் நம்மால்  காட்சிபடுத்தி விட முடியும். இரண்டு மணி நாற்பது நிமிடங்களில், மொத்தமே நாற்பது நிமிடங்கள் தான் படத்தில் வசனங்கள் வருகின்றன.

மனிதனின்  விதியும், பிரபஞ்சத்தில்  அவனுடைய பங்கு குறித்தும் சாதாரண வாழ்க்கைமுறையை அமைத்திருக்கும்  மக்களின் மனதுகளை தொட்டுப் பார்த்தது தான் ‘2001’ படத்தினுடைய வெற்றி என நம்புகிறேன். உதாரணத்திற்கு, மற்றவர்களின் பார்வையில் மிகக் குறுகிய பாவையைப் பெற்றிருக்கிற அலபாமாவில் ட்ரக் ஓட்டுகிற ஒரு ஓட்டுனரும், கேம்ப்ரிட்ஜில் படித்த ஒரு அறிவாளியும் பீட்டில்ஸ் இசையை ஒரே விதமான மனநிலையில் தான் ரசிக்கிறார்கள். ஏனென்றால் மனிதர்களின் ஆழ்மனதிற்கும் அறிவுக்கும் சம்பந்தமேயில்லை. இந்த இடத்தைத் தான் இந்தப் படம் எடுத்துக் கொண்டது.

பேசும்  படங்கள் வந்த காலந்தொட்டே சினிமாத் துறை கட்டுப்பெட்டிக்குள் மாட்டிக்கொண்டுவிட்டது. மூன்று அடுக்கு திரைக்கதை மட்டுமே நம்முடைய மாதிரியாக இருக்கிறது. அந்த மரபை விட்டு வெளியே வரவேண்டும். முப்பது வயதிற்கு மேல் உள்ள நிறைய பேர் இது போன்ற மரபுகளைக் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சில பேர் திரைப்படத்தை வெறிக்கிறார்களே  தவிர அதில் கவனத்தை ஈடுபடுத்த  மாட்டேன் என்கிறார்கள். திரைப்படம் என்பது கண்களால் மட்டும்  பார்ப்பது அல்ல என்பது அதனைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படை பாடம்.

 

கேள்வி : திரைப்படம் வெளிவந்தும் கூட ஏன் சில காட்சிகளை நீக்குகிறீர்கள்?

ஒரு படம் முழுமையடைந்துவிட்டால், திரும்பவும்  புதிதாக பார்ப்பது போல் பார்ப்பேன். தனியாகவோ, பார்வையாளர்களுடனோ சில வாரங்கள் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துவிடுவேன். இப்படிப் பார்க்கிறபோது படத்தின் நீளம் எங்கெல்லாம் குறைக்கப் படவேண்டும் எனத் தெரிந்துவிடும்.

கேள்வி : Dr.Strangelove தீவிரத்தன்மை கொண்ட நாவல். எப்படி அதை நகைச்சுவையான படமாக மாற்றமுடியும் என நினைத்தீர்கள்?

அணு ஆயுதப் போரின் பதிப்புகளை சொல்லக்கூடிய படமாக இருக்கவேண்டும் என தான் திரைக்கதையை எழுதத் தொடங்கினேன். எந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கும் என கற்பனை செய்கிறபோது அவை ஏதோ பொருந்தாதன்மையுடன் இருந்தன. ‘இதை என்னால் செய்யவே முடியாது..மக்கள் என்னைப் பார்த்து சிரித்துவிடுவார்கள் ‘ என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.  அதன் பிறகு ஒரு மாதம் கழித்து தான் எனக்கு புரிந்தது எதையெல்லாம் நான் வேண்டாமென்று தூக்கிப் போட்டேனோ அவையெல்லாமே உண்மையானவை என்பது. நான் தான் தவறாக புரிந்துகொண்டேன் என்பது தெரிந்தது. அதனால் ஒரு பயங்கரத்தை சொல்லுகிற ஒரு நகைச்சுவைப் படமாக மாற்ற முடிவு செய்தேன். அதாவது நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கும்போதே அதன் ஆபத்துகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி : எப்படி நடிகர்களிடமிருந்து அவர்களது திறமையை வெளிக் கொண்டு வருகிறீர்கள்?

இயக்குனரின் வேலை என்பது கதாபாத்திரம் எப்படிப்பட்ட உணர்ச்சியை ஒரு காட்சியில் கொண்டு வரவேண்டுமென்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வது. அதை நடிகர்கள் வெளிப்படுத்தும்போது அதை சரியாக உள்வாங்கி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஒரு நடிகரின் பலம் மற்றும் பலவீனங்களைத் தெரிந்து கொள்வதன் மூலம் அவர்களின் திறமை வெளிக்கொண்டு வருவதற்கு இயக்குநர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இது மட்டும்  தான் இயக்குனரின் முக்கியமான வேலை என்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு இயக்குனரின் ரசனையும், கற்பனை சக்தியும் ஒரு படத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இது அர்த்தமுள்ளதா? இது நம்பக்கூடியதா? இது ஆர்வம்தரக்கூடியதா? போன்ற கேள்விகளுக்கு ஒரு நாளில் பல நூறு முறை இயக்குனர் தனக்குள்ளேயே பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

கேள்வி : ஒரு திரைப்படம் படைப்பாக்கத்தோடு, தொழினுட்பமும் இணைந்தது. இங்கு வேகம் மிக முக்கியம். சரியான முடிவுகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும்.

படப்பிடிப்பு  என்பது ஒரு இயக்குனருக்கு  பெரிய தடை. மனிதன் கண்டுபிடித்ததிலேயே மோசமான கலை படப்பிடிப்பு நடத்துவது தான். ஒரே சத்தமாக, படப்பிடிப்பு கருவிகளுக்கு நடுவில், நம்முடைய கவனப்படுத்துதலை  சிதைத்து ஒரு நாளைக்கு காலை எட்டரை மணிக்குத் தொடங்கி, இரவு வரைத் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். கற்பனைத் திறன்கொண்ட எந்த கலைஞனும் இந்த மாதிரி சூழலில் வேலை செய்ய முன்வரமாட்டான். ஆனால் இயக்குனர் எதையும் தள்ளிப்போடாமல் செய்தேயாகவேண்டும்.

ஒரு நடிகர் இயக்குனர் சொல்லும் எல்லாவற்றையும் மறுத்தார் என்றால், மோசமான நடிப்பைத் தரப்போகிறார் எனபதைப் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் படப்பிடிப்பின் போது பல மாதங்களாக அந்த நடிகரின் தனித்த பார்வையாளராக இயக்குனரே  இருக்கிறார். அதனால் மோசமான நடிப்பு வெளிபட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் அந்த நடிகர் மட்டுமல்ல இயக்குனருக்கும்  அதில் பங்கு இருக்கும்.

கேள்வி : சில இயக்குனர்கள் நடிகர்களை ‘ரஷ்’ பார்க்க விடமாட்டார்கள் என கேள்விபட்டிருக்கிறோம். நீங்கள் எப்படி?

நான் சில  நடிகர்களை மட்டும் அனுமதிப்பேன். சில நடிகர்கள் நடித்த காட்சிகளைப்  பார்த்துவிட்டு ரொம்ப மோசமான மனநிலைக்கு சென்றுவிடுவார்கள். சொற்ப நடிகர்கள் தான் நடித்ததிலிருந்து எப்படி மேம்படுத்தலாம் என யோசிப்பார்கள். ஒரு நல்ல நடிகன் தான் நடித்து முடித்ததைக்  கொண்டு எந்த பாதிப்பையும் தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளமாட்டான். நான் என்னுடைய படப்பிடிப்பில் ரஷ்களை மதிய உறவு இடைவேளையின் போது தான் பார்ப்பேன். உண்மையிலேயே ஆர்வம் உள்ள நடிகர்களைத் தவிர மற்றவர்கள் அரைமணிநேரத்தை அந்த இடைவெளியின் போது வீணாக்க விரும்பமாட்டார்கள்.

கேள்வி : மூன்று மாதங்களாவது குறைந்தது நடிகர்களுடன் பணி செய்ய வேண்டுமென்கிற சூழலில் முதல் நாள் அவர்களை எப்படி உங்களது மனநிலைக்குள் கொண்டு வருவீர்கள்?

நாம் அவர்களின்  திறமையை மதிக்கிறோம் என்பதை வெளிப்படுத்திவிட்டாலே  போதுமானது. நீங்கள் அவரை உங்கள் படத்தில் நடிக்க அழைக்கும்போதே  மனதளவில் தயாராகிவிடுவர்கள். நம்மைப் பற்றி விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொள்வார்கள்.

 

கேள்வி : நீங்கள் நடிகர்களுடன் ஒத்திகை பார்த்துக் கொள்வீர்களா?

ஒத்திகைப் பார்ப்பது பயனுள்ளது தான். ஆனால் படப்பிடிப்புத் தளம் இல்லாமல் ஒத்திகைப் பார்ப்பது அத்தனை சரியாக இருக்காது என நினைக்கிறேன். துரதிருஷ்டவசமாக நமக்கு படப்பிடிப்புத் தளம் கடைசி நிமிடம் வரை கிடைப்பதில்லை. சில நடிகர்களுக்கு ஒத்திகைத் தேவைப்படும். நடிகர்கள் உணர்ச்சிகளைக் கொட்டும் கருவிகள். சிலர் எப்போதும் தயாராக இருப்பார்கள். சிலர் முதன்முறை காட்டும் உணர்சிகளைப் பின்பு எத்தனை முறை முயற்சி செய்தாலும் அவர்களால் திருப்பித் தர இயலாது.

கேள்வி : இந்த ‘டேக்’ஐ உபயோப்படுத்திக் கொள்ளலாம் என எப்படி முடிவு செய்கிறீர்கள்?

பல நேரங்களில் யோசிக்காமலேயே தெரிந்துபோய்விடும். ஆனால் டயலாக் பகுதிகளைப் பொறுத்தவரை திரும்பத் திரும்பப்பார்த்து  வெவ்வேறு ஷாட்களில் இருந்து எடுத்துக் கொள்வேன். இப்படித் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்து, அதை கவனித்து, நோட்ஸ் எடுத்துக் கொண்டு அதோடு போராடுவதில்  தான் எடிட்டிங்கில் நேரம் அதிகமாகிறது. இதே காட்சிரீதியான காட்சிகளில் இந்தப் பிரச்சனைக் குறைவு.

நான் இல்லாமல் ஒரு ‘ஷாட்’ கூட எடிட்டரைக் கட் செய்யவிடமாட்டேன். ஒவ்வொரு நொடியும் எடிட்டரோடு நான் இருப்பேன். ஒவ்வொரு ஃபிரேமையும் நான் தான் குறித்துக் கொடுப்பேன். நான் என்ன விரும்புகிறேனோ அதைத் தான் கொண்டுவருவேன். எழுதுவது, படம்பிடிப்பது, எடிட்டிங் இது மூன்றும் தான் திரைப்படம் எடுப்பதென்பது.

கேள்வி : புகைப்படக்கலைஞராக நீங்கள் இருந்திருக்கிறீர்கள்.. பிறகு எங்கு திரைப்பட எடிட்டிங் கற்றுக் கொண்டீர்கள்?

1950களில் ஐந்து வருடங்கள் புகைப்படக்கலைஞராக வேலைப்பார்த்தேன். பள்ளிப்படிப்பு முடிந்ததும் திரைப்படம் எடுக்க வேண்டுமென்கிற கிறுக்கு பிடித்துக் கொண்டது. இரண்டு ஆவணப்படங்களை அப்போது இயக்கினேன். என்னுடைய முதல் இரண்டு திரைப்படங்களுக்கும் நான் தான் இயக்குனர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், ஒலிப்பதிவாளர் எல்லாமே. அது விலைமதிக்கமுடியாத அனுபவம். திரைப்படத்தின் எல்லாத் துறைகளைப் பற்றிய அனுபவமும் கிடைத்தது அதில் தான். அப்போது எனக்கு வயது இருபத்தி ஒன்று தான்.

புகைப்படக்கலையில் எனக்கு இருந்த அனுபவம் தான் எனக்கு அப்போது கைகொடுத்தது. முதல் இரண்டு ஆவணப்படத்திற்கும் 35mm கையடக்க Eyemo கேமரா உபயோகித்தேன். இது கையாள்வதற்கு எளிதான கேமரா. முதன் முதலில் மிட்செல் கேமாராவை ‘FEAR and DESIRE’ படத்தில் கையாண்டேன். கேமரா கருவிகளை விற்கும் பிராட்வே கடைக்குப் போனேன். அதன் உரிமையாளர் பெர்ட் ஒரு சனிக்கிழமை காலை முழுவதும் , எப்படி ‘லோட்’ செய்ய வேண்டுமென்பதையும், கையாள வேண்டுமென்பதையும் சொல்லித் தந்தார்.

கேள்வி : தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டீர்கள். ஆனால் எப்படி நடிகர்களிடம் ஆரம்பகாலப் படங்களில் வேலை வாங்கினீர்கள்?

ஆரம்பக் காலகட்டங்களில் நான் சிறந்த நடிப்பை அவர்களிடம் இருந்து பெறவில்லை. முதல் இரண்டு படங்களான  ‘Fear and Desire’ மற்றும் ‘Killer’s Kiss’இரண்டு படங்களுமே சாதாரணப் படங்களுக்கும் கீழ் உள்ள திரைப்படங்கள் தான். ஆனால் அதில் கிடைத்த அனுபவம் தான் முக்கியமானது. கற்றுக்கொள்வதற்கு சிறந்த வழி வாய்ப்பு கிடைக்கும்போது செய்யத் தொடங்கிவிடுவது தான். Stanislavski-ன் புத்தகம் எனக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. அவர் எப்படி நடிகர்களைக் கையாள்வார் என்பதை அதன் மூலம் தெரிந்து கொண்டேன். அவரின் புத்தகங்களும், எனது தவறுகளிலிருந்து கிடைத்த வலிமிகுந்த பாடங்களுமே  இதுவரை எனக்கு அனுபவங்களாக இருக்கின்றன.

கேள்வி : திரைப்படங்கள் பற்றிய புத்தகங்கள் வாசித்திருக்கிறீர்களா?

ஐசன்ஸ்டீன்  எழுதிய புத்தகங்களை ஒரேடியாக வாசித்தேன். ஆனால் அப்போது  எனக்கு எதுவுமே புரியவில்லை. புடோவ்கினுடைய ‘Film Technique’புரிந்துகொள்வதற்கு ஏற்றதாக இருந்தது. எடிட்டிங் மற்ற கலைகளை விட எப்படி வேறுபட்டது என்பதை விளக்கமாக சொல்கிற புத்தகம் இது. புடோவ்கின் அந்தப் புத்தகத்தில் நிறைய உதாரணங்களோடு விளக்கி இருக்கிறார். சினிமா நுட்பங்களைக் கற்றுக் கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன்.

 

 

 

 

 

கௌதம சித்தார்த்தன் என்கிற மற்றவனின் கதை

 download (3)
கண்ணாடியுள்ளிருந்த தன்னைக்கண்டு கொண்ட பிரமிள், கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம் என்றான். போர்ஹே மற்றொரு போர்ஹேயைச் சந்தித்த அந்தக் காலாதீத்தின் மொக்கவிழ்வு, இருவரும் இருவேறுவிதமான காலவெளிகளிலும் நிலவெளிகளிலும் இருக்கும்போது அக்கணமாக அவிழ்ந்தது.
பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். லேபிரிந்த் என்னும் புதிர்வெளிச்சுழலின் மாய விளையாட்டு அது.
நிச்சலனமாய் தங்களுக்கு முன்னால் இருந்த நீர்ப்படுகையில் ஒரு போர்ஹே நாணயத்தை  வீசியெறிந்தபோது அது H2O  வில் பட்டு எம்பி எம்பி காலப்படுகையில் சலனங்களை ஏற்படுத்திய கணங்கள்தான், நான் கௌதம சித்தார்த்தனைச் சந்தித்தது.
அந்த நாணயம் அவன் அம்மாவிடம் போய்ச் சேர்ந்தது.
அவன் அரசுப்பள்ளியில் ஐந்தாம்வகுப்பு படிக்கும்போது, மதிய உணவுக்காக அவனது அம்மா கொடுத்தனுப்பிய முப்பது காசுகளாக மாறியது. அந்தக்காசில் இருபது காசுகளில் இரண்டு இட்லிகளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள பத்து காசில் இரண்டு காமிக்ஸ் புத்தகங்களை வாடகைக்கு எடுத்துப் படித்துக் கொண்டிருந்த கணத்தில்தான் முதலில் அவனைச் சந்தித்தாக நினைவு.
இரும்புக்கை மாயாவியின் மாயஉலகத்தில் சுற்றிக் கொண்டிருந்தான். சி.ஐ.டி.லாரன்ஸ் – டேவிட்டோடு சேர்ந்து அ.கொ.தீ.கழகத்தை அழித்தொழித்தான்.  பத்திரிகைகளில் வந்த படங்களை கத்திரித்து ஒட்டி, சுயமாக ‘படக்கதை’ ஒன்றை உருவாக்கி தனது சகாக்களிடையே சுற்றுக்கு விட்டபோது, இட்லி ஒன்றாகவும், காமிக்ஸ்கள் நான்காகவும் மாறிப் போயின.
அந்த காமிக்ஸில்தான் தீ வைத்தான் அவனது அண்ணன். ஆனால் அவனோ, மூலையில் கூட்டித் தள்ளியிருந்த அந்தச் சாம்பலைத் தண்ணீரில் கரைத்துக் குடித்தான். காக்கை கவிழ்த்த கமண்டலமாக அவனுக்குள் இறங்கிய அந்த நீர்ப்படுகையினுள்தான் போர்ஹேவின் நாணயம் சுழித்தோடியது. கல்வி தடைபட்டு எருமைமாடுகளை மேய்ச்சல் நிலத்துக்குப் பத்திக்கொண்டு நடக்க, அவனுக்குப் பின்னால் நீண்டு கிடந்த நிழலை வெட்டிவெட்டி வீசினான் அண்ணன்.
இடைநுழைந்த தமிழாசிரியர் கிருஷ்ணசாமி, அவனை அழைத்துச் சென்று கவுந்தப்பாடி நூலகத்தில் உறுப்பினராகச் சேர்த்து விட, கட்டணத்தொகை மூன்று ரூபாயாக மாறியது அந்நாணயம். “பள்ளியில் படித்துத்தான் பெரியாளாக வேண்டும் என்பதில்லை, இங்கே உள்ள புத்தகங்களைப்படி.. நீபெரிய ஆளாக வருவாய்..”
சரித்திரத்தின் நுண்ணரசியல் பக்கங்களை ஜனநாதக்கச்சிராயனும், வந்தியத்தேவனும், இளைய பல்லவனும் திறந்து காட்டினர். புரவிகளின் குளம்பொலிகள் தேய்ந்தபோது, வாராவாரம் குமுதத்தில் பறந்த ஹென்றி ஷாரியாரின் பட்டாம்பூச்சி ஒரே தாவாகத்தாவி சுஜாதாவிடம் கொண்டுவந்து சேர்த்தது.
சுஜாதாவும் அவனும் வெகுநாட்கள் கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். வசந்தின் பேச்சினூடே உதிர்த்த விஷயங்கள் போதையுடன் ஈர்த்ததில் புரிபடாதவைகளை நோக்கி நகரத்துவங்கினான்
நாகரிகத்தின் எவ்வித நிழல்களும் கவிழ்ந்திராத ஆலத்தூர் என்னும் அவனது கிராமத்தை விட்டு நகரத்துக்கு இழுத்தது ஈரோடு நடராஜா தியேட்டரின் ஆங்கிலப்படங்கள். (ஆபாசப் படங்கள் அல்ல; அதுவரை கேள்விப்பட்டிராத பின்புலமும் கதையம்சமும் கொண்ட புதிய உலகத்தைத் திறந்து காட்டிய ஹாலிவுட்படங்கள்)
இனம்புரியாத உத்வேகத்துடன் ஓடிக்களித்த கால்கள் ஒரு முக்கியமான மைல்கல்லை வந்தடைந்தன. அது தவமணி. அவனது ஆரம்பகால இலக்கிய வாழ்வின் முக்கியமான பாத்திரம். அவர் அவனுக்கு நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார்.
‘விடியல்’ என்றை பெயரில் கையெழுத்துப் பத்திரிகையைத் துவங்கினான். புரட்சி, சோஷலிஸ யதார்த்தவாதம், இலக்கியக்கூட்டங்கள், திரைப்படச்சங்கங்கள், சிறுபத்திரிகைகள்… என்றெல்லாம் சுழன்று கொண்டிருந்தான். வேட்டை நாயின் நாக்குத் தொங்கலோடு ஓயாது தேடி அலைந்து திரிந்ததில் அகப்பட்டதென்ன?
அந்தச் சுழற்சியைப் பிளந்து கொண்டு வந்தவர்தான் தேவிபாரதி. அவனது வாழ்வின் பெரும்பகுதியை அபகரித்துக் கொண்ட அவரோடு கினுகோனார் சந்தில் நின்றுகொண்டு, ஆல்பர்ட் காம்யூவோடும், தாஸ்தாவ்ஸ்கியோடும், ரஷ்ய இலக்கியகர்த்தாக்களோடும், கரிசல் காட்டுக்காரர்களோடும் பேசித்திரிந்தான். பேச்சு, விவாதம், எழுத்து என்று காலங்களற்று அவருடன் கிடந்தான்.
அப்படியும் நடக்குமா என்ன?
அவனைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்ட அந்நிகழ்வு கால.சுப்ரமணியம் என்னும் மகத்தான ஆளுமையால் நடந்தேறியது. அதுவரையிலான நவீனத் தமிழ் இலக்கியத்தை குறுக்குவெட்டாய்த் தாண்டிய வீச்சில் படைப்புக்கும் சிந்தனைக்குமான பரிமாணங்கள் வெட்டி வெட்டிப் பிரிகின்றன. முழுக்க முழுக்க உலகப்படைப்புகளை அவர் அறிமுகப்படுத்தியபோது அதுவரையிலான அவனது பிரபஞ்சம் நிலைகுலைந்து போனது. தாமஸ்மன் தலைகளை மாற்றிவைத்தான். ஷெகர்ஜாத் மரணத்தைத் தள்ளிப்போட்டாள். காஃப்கா கரப்பான் பூச்சியாக உருமாற்றினான். அலென்போவின் பூனையுடனும் போர்ஹேவின் புலியுடனும் பாழ்நிலத்தில் திரிந்தவனை பித்தனும் மௌனியும் பிரமிளும் மேல்நோக்கிய பயணத்தில் கை தூக்கினார்கள். சர்ரியலிஸமும், சிம்பலிஸமும், போஸ்ட்மாடர்னிஸமும், திராவிடியமும்,  திணைக்கோட்பாடுகளும், விளிம்புநிலையியமும் என்று தமிழும் சர்வதேசமும் பிணைந்து புதுவகையிலான பார்வைகளை அவனுக்குள் உருவேற்றின. காலாவும் அவனும் சர்வதேசப்படைப்புகளின் நுட்பங்களைப் பேசிப்பேசி மாய்ந்தார்கள்.
அப்பொழுது பற்றிக் கொண்டது பெருந்தீ. தமிழ் இலக்கியத்தை உலகத்தரத்துக்கு உயர்த்தவேண்டும் என்ற பெருநெருப்பு அவனுக்குள் மூண்டெழுந்தது. 1988 ல் ‘மூன்றாவது சிருஷ்டி’ யை வெளியிட்டபோது குற்றாலம் கவிதைப்பட்டறையில் சூறைக்காற்று சுழன்றடித்தது.
அதே சுழற்சியில் ‘உன்னதம்’ பத்திரிகை ஆரம்பித்து ‘புதுவகை எழுத்து’ என்கிற புதிய கோட்பாட்டை உருவாக்கியபோது விமர்சன, சிந்தனையாள, கோட்பாட்டு, துறை போகிய… திலகங்கள் அவனைக் கடித்துக்குதற ஆரம்பித்தார்கள். ரத்தம் சிந்தச்சிந்த சர்வதேச எழுத்துக்களையும் நுட்பங்களையும் தமிழுக்கு மாற்றிக்கொண்டேயிருந்தான்.
அப்பா, நாணயத்தைக் கொடுத்து மகாபாரதம் படிக்கச்சொன்னபோது, எழுந்தன பல்வேறு கேள்விகள். அவைகளுக்கு இன்னும் விடை சொல்லவில்லை கிருஷ்ண துவைபாயணன்.
இன்னும் என்னென்னவோ சொல்லலாம்;
முக்கியமாக, அவனது வாழ்வில் பாத்திரம் வகித்த இந்த மூன்று நபர்களைத் தவிறவும் இன்னொரு மிக மிக முக்கியமான பாத்திரம் இருக்கிறது. அவர்தான் அவனுக்குள் இருந்த தூய கலை மற்றும் படைப்பு மனோபாவத்தை முழுக்க முழுக்க அரசியலை நோக்கி மடைமாற்றி விட்டவர்; ‘உங்களுடைய கலை இலக்கியப் பார்வை இதுவரையிலான காலவெளியில் புத்தம் புதியது. ஆனால், அந்தப்பார்வையை அரசியலோடு இணைத்தால்தான் அது பூரணமடையும்’ – மைத்ரேயி.
இவ்வாறாக போர்ஹேவின் நாணயம் அவனுக்குள் லேபிரிந்தாய் சுழன்று கொண்டேயிருந்தது.
அந்த நாணயத்தை எடுத்து பின்னோக்கி வீசியெறிந்தேன். அது எல்லையற்ற பெருவெளியில் பட்டு எம்பி எம்பி எங்கோ போய் விழுந்தது. அது அவனது கைக்குப் போய்ச் சேர்ந்ததா? அல்லது போர்ஹேவின் கைக்கே போய்ச் சேர்ந்ததா? அல்லது இரட்டை (Doppelgänger) என்னும் உருவகத்தைக் கலையாக மாற்றிய தாஸ்தாவ்ஸ்கியிடமா? இரண்டாயிரமாண்டு தமிழ்மரபில் காலூன்றி ஆவேசமாய் எழுந்து நிற்கும் அடுத்த தலைமுறைப் படைப்பாளியிடமா?
எனில், முடிவற்ற காலவெளியில் போய்க்கொண்டேயிருக்கும் அஸ்வத்தாமாவின் அம்பு தானா அது?
நகைக்கிறது காலம்; உதிர்கின்றன அதன் செதில்கள்.
இந்தப் பக்கங்களை எழுதியவன் நானா அல்லது கௌதம சித்தார்த்தனா என்று தெரியவில்லை; ஜுலியோ கொர்த்தஸாரின் நாயகன் ஆக்ஸலோடில் என்னும் மீனாக மாறி ஆக்வேரியத்திற்குள் போனதும் ஆக்ஸலோடில் நாயகனாக மாறி வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் நான் அறிவேன். அப்படி ஏதாவது கூட நிகழ்ந்திருக்கலாம். அதனால்,
அவனது பெயரிலேயே கையெழுத்திடுகிறேன்.
ஆனால் வேறு ஒரு நிலப்பகுதியிலிருந்தும், வேறு ஒரு காலச்சுழியிலிருந்தும்…
கௌதமசித்தார்த்தன்
சென்னை
(25 வருடங்களுக்குப்பின் இரண்டாவது பதிப்பாக வெளிவரும் கௌதம சித்தார்த்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பான “மூன்றாவது சிருஷ்டி” நூலுக்காக எழுதப்பட்ட முன்னுரை.
எதிர் வெளியீடாக வரும் இந்நூல் புத்தகக்கண்காட்சியில் வெளியாக இருக்கிறது)

லீனா மணிமேகலை கவிதைகள்

download (2)

 

ஒரு மாலைப்பொழுது 

அன்பு என்னோடு கஞ்சா அடித்தது

பரிவாக
மிகப் பரிவாக
நெஞ்சு நிறைய
புகையை நிரப்ப சொன்னது
கரிக்கிறதா எனக் கேட்டது
ஆமாம் என்றேன்
இல்லை என்று
பொய் செல்வதில் உனக்கென்ன
பிரச்சினை என்றது
எரியும் மணத்தில் யார் மணக்கிறார்கள்
அடுத்த கேள்வி
அவனா
மௌனம்
இவனா
மௌனம்
அவளா
மௌனம்
நான்
என்றேன்
அமர்ந்த கனலை ஊதி ஊதி பெருக்கிய
கணத்தில் கண் சிமிட்டி
விசுவாசத்தை கைவிடு என்றது
என் கையை வெட்டிவிட்டது போல இருந்தது.
காயும் நிலவின் குளிர்மையில் நடுங்கி கொண்டிருந்த
விரல்களில் இன்னும் நெருப்பு பொறிந்ததைப்
பார்த்து கண்ணீர்  வந்தது
தொடுதலில் தாக்குறுகிறேன், சத்தத்தை மின்னலா என்கிறேன், அசந்தர்ப்பத்தத்தை துயரம் என உழல்கிறேன், புன்முறுவலில் பெருமகிழ்ச்சியடைகிறேன், நண்பனை காதலிக்கிறேன், காதலனை கடவுளாக்குகிறேன், தோல்வியில் சாவைத் தழுவுகிறேன் 
இதென்ன 
துகளா, புகையா, நெருப்பா, ஆகாயமா, கண்ணீரா
தான் கஞ்சா என்றது அன்பு.
••
 
பாவனைகள் 
மதுக்கோப்பைக்கும் உதடுகளுக்கும்
இடையே விழுந்த கண்ணீர்த் துளியில்
அன்பை யாசித்து நிற்கும்
என் பிரதிமையை கண்டதாக
அவன் சத்தியம் செய்தான்.
அது என் கண்ணீரை மேலும் பெருக்கியது
 நான் எதுவும்  சொல்லாமலேயே
எல்லாம் விளங்குகிறது
என்ற அவனை அப்போதைக்கு பிடித்திருந்தது
அவன் கொண்டு வந்த கோப்பையால்
மதுவும்  தனக்கொரு துணையை தேடிக்கொண்டது
வாழ்க்கையின் போக்கில் போய்விடுவது நல்லது என்றான்
தலை நிமிர்ந்துப் பார்த்தால் தெரியும் காட்சிகளை
மட்டுமே நம்புவது சிறந்தது என்றும் சொன்னான்
என் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்ததற்காகவே
அவன் சொன்னவற்றை ஆமோதித்தேன்
உள்ளங்கை ரேகைகளின் சிக்கல்களை விடுவிப்பவன் போல
கைவிரல்கள் வருடியதும்
தொடுதலுக்கு பசித்த உடல்
தாய்ப்பறவையை தொலைத்த குஞ்சு போல கேவியது
கோப்பைகள் நிறைந்தன
அன்னியத்திற்கும் பரிச்சயத்திற்கும்
இடையே எத்தனை வண்ண விளக்குகள்
இரவின் சாலைகளில் அன்பு அம்மணமாக ஒடுகிறது
தட்டப்படுவது உங்கள் வீட்டுக்கதவாகவும் இருக்கலாம்
••

Blind Date 


Blind Date என்ற வார்த்தையை
கூகிள் மொழிபெயர்ப்பில் இட்டுப்பார்த்தேன்
குருட்டு தேதி என வந்தது
இக்கவிதைக்கு குருட்டு தேதி எனப் பெயரிடுகிறேன்
குருட்டு தேதி 

ஒரு அநாதியான நாளில்

முற்றிலும் புதியவனைத் தேர்ந்தெடுத்தேன்.
நேற்றோ. நாளையோ இல்லாத
இன்றானவன்.
அறிதல் இல்லாத அவன் தொடுதலில்
கேள்விகளும் இல்லை
பெயர், ஊர், வயது, முகவரி, படிப்பு, வேலை, சாதி,தந்தை பெயர்
பரிமாறிக்கொண்ட முத்தங்களில்
தகவல்கள் பொதிந்திருக்கவில்லை

கொள்தலின் கைவிடுதலின்

பதற்றங்கள் இல்லாத கலவி
அவனை வெறும்  ஆணாக்கி
என்னை வெறும்  பெண்ணாக்கி
இருவரையும் நனைக்கும்
மழையாய் பொழிந்தது
இறுதி மேகத்தை கலைக்க
வார்த்தைகள் அங்கிருக்கவில்லை

 

•••••

வேங்கை வேட்டை – பாவண்ணன்

download (5) 

1857 ஆம் ஆண்டு, இந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு கட்டம்.  அந்த ஆண்டில்தான் ஆங்கிலேயரின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்தும் ராணுவத்துறையில் ஆங்கில அரசாங்கம் அறிமுகப்படுத்திய நடைமுறைகளை வெறுத்தும் இந்தியச் சிப்பாய்களிடையே ஒரு பேரெழுச்சி உருவானது. அந்த எழுச்சி ஆட்சியில் இருப்பவர்களுக்கு அச்சத்தை ஊட்டியது. கிளர்ச்சியைத் தொடர்ந்து தில்லியைக் கைப்பற்றி, தன்னை அரசராக அறிவித்துக்கொண்டவர் நானா சாகிப். அவரை ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கி, தப்பித்து ஓடவைத்து, அவரைப்போன்ற கிளர்ச்சியாளர்களைக் கொன்றடக்கி எல்லாப் பகுதிகளையும் மீண்டும் தன் வசப்படுத்தும் வரையில் ஆங்கிலேயர்கள் ஓயவில்லை. அதற்குள் பல மாதங்கள் கடந்துவிட்டன. தில்லியிலிருந்து வெளியேறிவிட்டாலும் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபடி, நாடெங்கும் சுற்றியலைந்து, மீண்டுமொரு கிளர்ச்சிக்காக மக்களை அணிதிரட்டியபடி பல ஆண்டுகள் சுற்றியலைந்துகொண்டே இருந்தார் நானாசாகிப். அவருடைய மறைவு வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. இது வரலாறு. இந்த வரலாற்றுச் சம்பவத்தை மையக்கருவாக்கி, ஒரு பிரெஞ்சு எழுத்தாளர் ஒரு வரலாற்று நாவலாக பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார் என்னும் தகவல் புதுமையாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. அவர் பிரபல பிரெஞ்சு எழுத்தாளரான டூமாஸின் நண்பர் என்பது கூடுதலான தகவல்.

ஜூல்ஸ் வெர்ன் தேர்ந்த எழுத்தாளர் என்பதில் சந்தேகம் இல்லை. அவருடைய ஆளுமையைப் புரிந்துகொள்ள ‘Twenty thousand leagues under the sea’ என்கிற ஒரு நாவல் போதும். இன்றளவும் எல்லா உலக மொழிகளிலும் அதற்கு வாசகர்கள் இருக்கிறார்கள். அவர் இந்திய நாட்டுச் சம்பவமொன்றை மையக்கருவாகக் கொண்டு ஒரு நாவலைப் படைத்திருக்கும் செய்தியை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.  அவர் இக்கருவை எப்படி கையாண்டிருப்பார் என்கிற ஆர்வத்தால் இந்த நாவலை உடனடியாகப் படிக்கவைத்தது. மேலைநாட்டு நாவல்களுக்கே உரிய கட்டமைப்பில் படிக்க சுவாரஸ்யமான வகையில் ’நானா சாகிப்’ இருப்பதை முக்கியமான அம்சமாகக் குறிப்பிடுதல் வேண்டும். இந்திய நிலவமைப்பைப்பற்றியும் ஆற்றுப்படுகைகள்பற்றியும் மலைப்பகுதிகளைப்பற்றியும் சின்னச்சின்ன கிளைநதிகளைப்பற்றியுமான தகவல்களை பிழையே இல்லாமல் நாவலின் போக்கில் மிகவும் பொருத்தமான  இடத்தில் வெர்ன் கையாண்டிருக்கிறார்.

ஆங்கில அரசாங்கம் நானா சாகிபை விரட்டியடித்துவிட்டு தில்லியை தன் வசப்படுத்திக்கொண்ட கணத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. பிடிபடாமல் தப்பி ஓடி தலைமறைவாக இருக்கும் நானாசாகிபையும் அவர் சகோதரரையும் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு இரண்டாயிரம் பிரிட்டன் பவுண்டு பரிசாக அளிக்கப்படும் என்கிற அறிவிப்பு நாடெங்கும் சுவரொட்டியாக ஒட்டப்படுகிறது. அதுதான் முதல் அத்தியாயம். சுவரொட்டிச் செய்தியைப் படித்துவிட்டு மக்கள் தமக்குள் பேசிக்கொள்கிறார்கள். நானா சாகிபின் திறமையைப்பற்றியும் ஆங்கில ராணுவத்தின் திறமையைப்பற்றியும் மாறிமாறிப் பேசிக்கொள்கிறார்கள். பணத்துக்கு ஆசைப்பட்டு யாராவது காட்டிக் கொடுத்தாலும் கொடுக்கக்கூடும் என்கிற பேச்சும் அடிபடுகிறது. அடுத்த அத்தியாயத்தில் கர்னல் மன்றோ அறிமுகமாகிறான். நானா சாகிபைப் பிடித்துக் கொல்வதையே தன் இலட்சியமாக நினைப்பவன் அவன்.  தனிப்பட்ட வகையில் தன் மனைவியின்  மறைவுக்கு நானா சாகிப்தான் காரணம் என்பது அவன் எண்ணம். சிப்பாய்களின் எழுச்சியில் அகப்பட்டு தப்பிக்க முடியாமல் கான்பூருக்கு அருகில் அவள் கொல்லப்பட்டுவிடுகிறாள். அதனால் நானாசாகிபைப் பிடித்துக் கொன்றால்தான் தன் மனம் அமைதியடையும் என்பது அவன் நம்பிக்கை. அடுத்தடுத்த அத்தியாயங்களில் பின்னோக்கு உத்தியில் இந்தியப் போர்வீரர்களின் கிளர்ச்சிகள் விரிவாகப் பேசப்படுகின்றன. ஆங்கிலேய வீர்ர்களை இந்திய வீரர்கள் கொல்வதும் கைதிகளாகப் பிடித்து சிறைவைப்பதும் அந்தக் கிளர்ச்சிகளில் நானா சாகிபின் இடமும் வரையறுக்கப்படுகிறது.  பல மாதங்கள் இடைவிடாத போராட்டத்துக்குப் பிறகு கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டு தில்லி கைப்பற்றப்படுவதும், தப்பித்தோடிய கிளர்ச்சியாளர்களைப் பிடித்துக் கொல்வதற்காகச் சென்ற வீரர்கள் தேசத்தின் நான்கு திசைகளிலும் அலைந்து திரிந்துவிட்டு திரும்பி வருகிறார்கள்.

இந்த நாவலின் வடிவமும் எழுத்துமுறையும் மிகமுக்கியமானது. வெர்ன் இந்தியாவைப் பார்த்திருக்கக்கூடும். ஆனாலும் இந்திய மனம் இயங்கும் தன்மையைப்பற்றி தன்னால் சரியாகச் சொல்லமுடியுமா என்கிற தயக்கம் அவருக்கு இருந்திருக்கவேண்டும். அதனால் மிகவும் கவனமாக உணர்ச்சிமயமான காட்சிகள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார் வெர்ன். தனிப்பட்ட சோகங்களைப்பற்றியோ, இழப்புகளைப்பற்றியோ, ஆவேசங்களைப்பற்றியோ, முழக்கங்களைப்பற்றியோ எதையும் முன்னிறுத்தாமல் அழகாக விலகி நடக்கிறார் வெர்ன். மேலைநாட்டினருக்கு மிகவும் ஆர்வமூட்டக்கூடிய வேட்டைமீதான விருப்பத்தையும் பயணம்மீதான விருப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார். மொத்த நாவலையும் வேட்டையும் வேட்டைக்கான பயணமுமாக மாற்றிவிடுகிறார். ஒரு படைப்பாளியாக, என்னை இந்தத் தொழில்நுட்பம் மிகவும் கவர்கிறது. வேட்டைப்பயணத்துக்கு முன்பு இந்தியாவின் புறச்சூழல் எப்படி இருந்தது என விரித்துரைக்கும் விதமாக சில அத்தியாயங்கள் எழுதும்போது சிப்பாய்களின் எழுச்சியின் போக்கை தகவல்களாக இணைத்துக்காட்டியதோடு விட்டு விடுகிறார் வெர்ன். அடுத்து வேட்டைக்கான பயணம் தொடங்குகிறது. மனைவியை இழந்த துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் கர்னலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும்வகையில் இந்த வேட்டைப்பயணம் அமைந்திருக்கிறது. இந்தப் பயணத்துக்காகவே ஒரு புதிய வாகனத்தை வடிவமைக்கிறார்கள். அது தரையிலும் செல்லக்கூடியது. நீரிலும் செல்லக்கூடியது. ரயிலாகவும் ஊர்ந்து செல்லக்கூடியது.

காடுகள் வழியாகவும் இமயமலை அடிவாரம் வழியாகவும் நீளும் பயணத்தில் வேங்கையை வேட்டையாடுவது என்னும் நோக்கத்தோடு நானாசாகிப் என்னும் வேங்கையை வேட்டையாடுவதையும் ஒரு படிமமாக இணைத்துக்கொள்கிறார் வெர்ன். நாவலை வளர்த்துச் செல்ல இந்தப் படிமம் பெரிதும் உதவுகிறது. பயணம் முழுதும் நானா சாகிபைக் கொல்லும் வேகத்தோடும் வெறியோடும் இருக்கிறார் கர்னல். ஒரு கட்டத்தில் அவர் உயிரோடு இல்லையென்றும் கொல்லப்பட்டுவிட்டார் என்றும் பம்பாய் மாகாண ஆளுநர் வெளியிட்ட ஓர் அரசாங்க அறிவிப்பை அவர் படிக்க நேர்கிறது. அது அவர் மனநிலையைத் தளர்ச்சியடையச் செய்தாலும் பயணத்தைத் தொடர்கிறார். வேட்டையின்போது அவர்கள் குறிபார்த்துச் சுட்ட வேங்கை எப்படியோ தப்பிவிடுகிறது. ஆனால், அவர்கள் உள்ளூர வேட்டையாட நினைத்த நானாசாகிப் என்னும் வேங்கை கொல்லப்பட்டதாக செய்தி பரப்பப்படுகிறது.

சிறைபிடிக்கப்பட்ட ஆங்கிலேயப் பெண்கள் அடைத்துவைக்கப்பட்ட இடம் பீபிகர். ஆட்டை அறுத்துக் கொல்பவர்களை வாடகைக்கு அமர்த்தி, அவர்கள் மூலமாக அப்பெண்கள் கொல்லப்பட்டார்கள். சித்தரிப்பாக இல்லாமல் அதையும் ஒரு  தகவலாகவே வெர்ன் பயன்படுத்துகிறார். ஐந்து நண்பர்கள் பயணம் செய்யும் நவீன வாகனம் ஒரு கட்டத்தில் புயலில் சிக்கிக்கொள்கிறது. அதே சமயத்தில் வேறொரு புறத்தில் உருவாகிப் படர்ந்த காட்டுத்தீயிலும் சிக்கிக்கொள்கிறது. வாகனத்தைவிட்டு இறங்கிச் சென்ற இருவர் இன்னும் திரும்பவில்லை. அவர்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து இறுதிக்கணத்தில் தயக்கத்தோடு கிளம்புகிறது வாகனம். பாதை புரியாத அடர்ந்த  இருண்ட காட்டுக்குள் காலுடைந்த நண்பனை கைத்தாங்கலாகப் பிடித்தபடி தட்டுத்தடுமாறி நடந்த நண்பர்களும் கடைசிக்கணத்தில் ஒருவழியாக வந்து வாகனத்துக்குள் ஏறிவிடுகிறார்கள். காட்டுத் தீயின் வெளிச்சத்திலும் மின்னல் கீற்றுகளின் ஒளியிலும் வனவிலங்குகளின் நிழல்களை அவர்கள் காண்கிறார்கள். வாகனத்துக்குள் தாவி, உயிர் தப்பிக்க நினைத்த புலியொன்று காற்றின் சுழற்சியால் தடித்த கயிறுகளாகச் செயல்பட்ட மரக்கிளைகளில் சிக்கி கழுத்து நெரிபட உயிர்விடுகிறது. இவை அனைத்தும் கற்பனையால் கட்டியெழுப்பப்பட்ட புனைவுகள் என்றாலும் அவற்றை உணர்ச்சிமயமானதாக வெர்ன் சித்தரிக்கிறார். நாவலின் கட்டமைப்புக்குள் எது பொருந்தும் என்பதை அறிந்து செயல்பட்டிருக்கிறார் வெர்ன்.

நானா சாகிப்பைக் கொல்வதற்காக எடுக்கப்படும் முயற்சியைப்பற்றிய காட்சியை இறுதிக்காட்சியாக்கி நாவலை முடிக்கிறார் வெர்ன். புரட்சிக்குப் பிறகு, கூந்த் என்னும் பழங்குடி இனத்தவரின் ஆதரவில் அவர் தன் சகோதரரோடு தலைமறைவுவாழ்க்கை வாழ்ந்தபடி படைதிரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் நானாசாகிப். தற்செயலாக ஒரு பைத்தியக்காரிபோல அப்பகுதியில் தீப்பந்தத்துடன் திரியும் ஒரு பெண் ஒருநாள் நானாசாகிபை அடையாளம் கண்டுகொள்கிறாள். பெண் என்பதால் அவளை ஒரு பெரிய ஆபத்தாக நானாசாகிப் கருதவில்லை. ஆனால், அவள் கையாலேயே இறுதியில் நானாசாகிப் இறக்க நேர்ந்ததாக, ஒரு செய்தியை ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள். மாகாண கவர்னரும் அந்த மரணத்தை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டு, நானாசாகிப் விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

நாவலை வாசித்து முடித்தபின்னர் வெர்னின் எழுத்தாளுமையை மீண்டும்மீண்டும் அசைபோடுகிறது மனம். எழுத நினைக்கும் ஒரு படைப்பாளி, இந்த உலகில் எதைப்பற்றியும் எழுத நினைப்பது இயற்கை. எழுத நினைப்பதைப்பற்றிய முழு ஞானமும், எப்படி முன்வைப்பது என்கிற தேர்வுமுறையும் மிகமுக்கியம் என்னும் உண்மையை நானாசாகிப் நாவல் வாசிப்பு உணர்த்துகிறது. புனலாடும் மங்கையர்கள்முதல் பேய்கள் ஆடிக் களிக்கும் திருவாலங்காடுவரைக்கும் வேறுவேறு களங்களைப்பற்றி எழுதிய பழங்காலக் கவிஞர்களின் ஆளுமைகளை ஒருகணம் நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.

 

(நானா சாகிப் – சிப்பாய்க் கலகத்திற்குப் பின். பிரெஞ்சு நாவல். மூல ஆசிரியர் ஜூல்ஸ் வெர்ன். ஆங்கிலம் வழி தமிழாக்கம்: சின்னத்தம்பி முருகேசன். சந்தியா பதிப்பகம். சென்னை – 83. விலை. ரூ.160.)

அட்டக்கத்தி அரவிந்தசாமி (நிழலும் நிஜமும்) – (நினைவோடை) – வா.மு.கோமு

images (2) 
அட்டக்கத்தி அரவிந்தசாமிக்கு சொந்த ஊர் திருப்பூர். அவினாசி சாலையில் அனுப்பர்பாளையத்தில் அவர் அப்பா ஓடியோடி உழைத்துக் கட்டிய மாளிகையில் தன் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசிக்கிறார். சற்று குள்ளமான உருவம் அவருக்கு. பருத்த உடல்வாகு. எடுப்பான சிவந்த நிறம். பார்த்தவுடன் மனிதர்களை புரிந்து கொள்ளும் பக்குவம் அவருக்கு இருந்தாலும் அவரைப் புரிந்து ஒதுங்கி ஓடிப்போனவர்கள் ஏராளம். வசதி இருக்கிறது என்பதற்காக சிலர் இவரிடம் சிரித்துப் பேசி, இவரோடு பேசுவதாலேயே மகிழ்ச்சியோடு இருப்பதாக காட்டிக் கொள்வார்கள். அட்டக்கத்தி அரவிந்தசாமிக்கு உள்ளுக்குள் பெருமிதமும், கிளுகிளுப்பும் கூடிவிடும். அந்த சமயத்தில் ஆயிரம், ரெண்டாயிரம் என்று இவரிடம் போட்டுத் தள்ளிவிட்டுப் போய் விடுவார்கள்.

  தனது கல்லூரிக்  காலத்தில் பாக்கியராஜ்  ரசிகர் மன்றத் தலைவராக  தன்னை அறிவித்துக் கொண்ட  அட்டக்கத்தி அரவிந்தசாமி  இன்று வரை அவரின் பிறந்த  நாளுக்கு நகரம் முழுக்க  தன் நண்பர்களின் முகம்  பதித்த போஸ்டர்கள் ஒட்டி பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிப்பார். தவிர வருடம் தவறாமல் சென்னை சென்று தனது ஆஸ்தான டைரக்டருக்கு நேரில் வாழ்த்தை தெரிவிப்பார். அங்கும் இவரின் உருவம் பதித்த பேனர்கள் வேப்பைமரக் கிளைகளில் கட்டப்பட்டிருக்கும். ஒருவேளை பாக்கியராஜ் கட்சி துவங்கினால் திருப்பூர் தொகுதிக்கு எம்.எல்.ஏ சீட் இவருக்குத் தான் ஒதுக்குவார். வாழ்க்கையை எந்தவித தடுமாற்றமும் இன்றி ஓட்டிக் கொண்டிருக்கும் அட்டக்கத்தி அரவிந்தசாமி தனக்கு வயது நாற்பத்தியாறு என்பதால் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டுமென்றே சொல்வார்.

தமிழில் வரும் அத்தனை பத்திரிக்கைகளுக்கும் இவர் ஒரு தரமான வாசகர். குங்குமத்தில் சிறுகதைகள் வரவில்லை என்றால் ஆபீசுக்கு போன் போட்டு விடுவார். குங்குமத்தை சிறுவயதிலிருந்தே வாசித்து வருவதாகவும், அப்படி இருந்தது இப்படி இருந்தது என்று கூறி விசயத்திற்கு வந்து விடுவார். சிறுகதை போடுங்க சார். கதை இல்லாம பத்திரிக்கை என்னமோ மாதிரி இருக்கு, என்பார். இவர் ரச்சை பொறுக்காமலேயே குங்குமத்தில் சிறுகதிகள் போடத் துவங்கிவிட்டார்கள். இதே போல் தான் குமுதத்திற்கும். ஆனந்தவிகடனில் ஒரு வாரம் கதை வரவில்லை என்றால் தமிழ்நாடு முழுக்க எழுத்தாளர்களுக்கு தகவல் சொல்லி விடுவார். விகடன்ல சிறுகதையை நிறுத்திட்டாங்க!

எனக்குத் தெரிந்து பலர் தங்கள் வீட்டு செல்ப்பில் புத்தகங்களை வாங்கிக் குவித்து அழகாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அட்டக்கத்தி அரவிந்தசாமியும் அப்படியானவர் தான். சென்னை புத்தக கண்காட்சிக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று பத்தாயிரம் ரூபாயுக்கு புத்தகங்களை அள்ளி வருவார். அதில் பாலியல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அதிகம் இருக்கும். காலச்சுவட்டிலும் புத்தகம் எடுப்பார், நக்கீரன் ஸ்டாலிலும் புத்தகம் எடுப்பார். எதிர் வெளியீட்டிலும் எடுப்பார் கற்பகம் பதிப்பகத்திலும் எடுப்பார். இவரது பறந்துபட்ட ரசனை என்னை ஆச்சரியப்படுத்தும். இன்னும் ஒருவிசயம் தான் எனக்கு தெரியவில்லை. டெக்ஸ் வில்லர், இரும்புக்கை மாயாவி படிக்கிறாரா? என்று. ஏனெனில் அவைகளை நான் படிப்பேன்.

பத்திரிக்கை துறையிலும், சினிமா துறையிலும் தன்  தலைவனைப் போன்றே ஒரே  நேரத்தில் ஜெயிக்க வேண்டும்  என்கிற அவாவோடு திருப்பூர்  நகர வீதியில் தன் ஸ்கூட்டியில்  சுற்றிக் கொண்டிருக்கும்  அட்டக்கத்திக்கு திருப்பூரில்  எந்த எந்த சந்தில் பிரயாணிக்  கடைகள் இருக்கும் என்பது  தெரியும். எந்த நாட்களில், எந்த நேரத்தில், எந்தக் கடையில் பிரயாணி சிறப்பாக இருக்கும்? என்பதும் தெரியும். தவிர நண்பர்களிடம், பிரயாணின்னா நான் விரும்பிச் சாப்பிடுவேன்! என்றே சொல்வார்.

காதலுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்றும் மனித உயிர் உயிருடன் உள்ளவரை காதலும் இருக்கும் என்று சொல்லும் அட்டக்கத்தி அரவிந்தசாமிக்கு நகரின் மூலைகளில் காதலிகள் இருப்பதாக என்னிடம் கூறுவார். ஒரு காதலிக்கு மோதிரம் பரிசளித்ததாகவும், மற்றொரு காதலிக்கு செயின் பரிசளித்ததாகவும் கூறியவர் என் பையனுக்கு மிதியடிகள் வாங்கிப் பரிசளித்தார். காதல் கதைகளையும், பாலியல் கதைகளையும் மட்டுமே எல்லோரையும் போல ஆர்வமுடன் படித்து ருசிக்கும் அட்டக்கத்தி முதலாக என்னைத் தேடி வந்தது சாந்தாமணி நாவலை படித்தபிறகு தான்.

அவர் ரசித்துப் படித்ததற்கான இரண்டு விசயங்களும் அந்த நாவலில் இருந்தன. சாந்தாமணியை திரைக்கதையாக எழுதித் தரும்படி கேட்டுக் கொண்ட அட்டக்கத்தி பிரதி கைக்கு வந்த அடுத்த நாளே சூட்டிங் என்று நான்கு வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார். தமிழ் திரைப்பட ரசிகப்பெருமக்களுக்கு அவரது இயக்கத்தில் மாபெரும் அழியாக் காதல் காவியத்தைத் தர ஏன் தான் நாட்களை கடத்துகிறாரோ தெரியவில்லை. அவரிடம் கேட்டால் நல்ல தயாரிப்பாளரை பத்து வருடங்களாக எதிர் நோக்கி அவரது மாளிகையின் கதவு திறந்தே வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

மாங்குடி மைனர், மாடி வீட்டு மைனர் என்றெல்லாம் தான் திரையில் நான் பந்தா பரமசிவன்களை பார்த்து விட்டு வீடு திரும்பியிருக்கிறேன். நிஜ வாழ்வில் ஏகப்பட்ட கனவுகளை சுமந்து கொண்டு எந்தப் பாதையில் செல்வது என்றே தெரியாமல் தானும் குழம்பி, அடுத்தவரையும் குழப்பி, தன்னுடன் பழகுபவர்களையும் குழப்பி விட்டு தள்ளிப் போய் நின்று சிரித்து மகிழும் ஆற்றல் அட்டக்கத்தி அரவிந்தசாமிக்கு உண்டு.

அரவிந்தசாமி தன்  பெயருக்கும் முன்னால்  அட்டக்கத்தி என்ற அடைமொழியை  1997ல் வெளியான அவரது முதலும்  கடசியுமான சிறுகதைத் தொகுதியான,  “காதல் நிலவுகள்” புத்தகத்தின்  அட்டையில் போட்டுக் கொண்டதிலிருந்து  தமிழகமே, யார் இந்த அட்டக்கத்தி?  என்று இன்றுவரை கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இந்தப் புத்தகத்தை எத்தனை பிரதிகள் தான் அச்சிட்டோம்? என்று அறியாத அரவிந்தசாமி தன் கடைசிக்காலம் வரை ”காதல் நிலவுகள்” புத்தகப்பிரதியை புதிய புதிய நண்பர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பேன், எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபி ஒன்றினுள் பிரதிகள் ஒளிந்திருக்கின்றன, என்கிறார்

சமீபத்தில் அவரிடம் “காதல் நிலவுகள்” பிரதியை இலவயமாகப் பெற்றுக் கொண்ட நண்பர்கள் அவரிடம் அழமாட்டாத குறையாக பேசிய வார்த்தைகள் இது தான். “சார் சாமத்துல பன்னண்டு மணிக்கு தூங்க விடாம ரிங் உட்டுட்டே இருக்கீங்களே சார்.. சிரிக்காதீங்க, சாமத்துல உங்களுக்கு தூக்க்கம் வரலைன்னா எல்லோருமே அதே மாதிரிதான் தூங்காம கெடப்பாங்கன்னு நினைப்பா? போங்க சார்”

“அப்படி இல்லீங்க திலீபன் சும்மா கூப்பிட்டேன். எடுத்தீங்கன்னா என்னோட புத்தகத்தை வாசிச்சிட்டீங்களான்னு கெட்கலாம்னு தான். போனை எதுக்கு வச்சிருக்கீங்க? பேசத் தானே? பேச முடியலைன்னா சுவிட்ச் ஆப் பண்ணிடுங்க திலீபன்”

“உங்க புத்தகத்தை படிச்சாச்சான்னு கேக்கவா சாமத்துல போனு?”

“ஆமாங்க திலீபன்”

“லட்சுமி சரவணகுமாரோட  உப்பு நாய்கள், ஹெமிங்வேது  கடலும் கிழவனும் நான்  வாங்கி வெச்சு ஆறு மாசமா  படிக்காம கிடக்குதுங்க”

“அப்படி இல்லீங்க திலீபன், அவங்க உங்களை போனு போட்டு படிச்சாச்சான்னு கேக்க மாட்டாங்க. புரிஞ்சுதுங்களா? உங்களுக்கு என்னோட பிரதி குடுத்து ஒரு வாரம் ஆச்சு. அதான் கேட்டேன் படிச்சுட்டீங்களான்னு. அதுல மொத்தம் ஏழு கதைகள் இருக்குங்க திலீபன். ஏழு கதையையும் ஏழு இயக்குனர்கள் ஆளுக்கு ஒரு கதையை திரைப்படமா எடுத்து ஜெயிச்சுட்டாங்க திலீபன். காதல் நிலவுகள் கதையை சேரன் ஆட்டோகிராப்னு எடுத்து ஜெயிச்சுட்டாப்ல”

“சார் இப்படியெல்லாம்  சொன்னாலாச்சிம் இவன் படிச்சுடுவானோன்னு  பிட்டு ஓட்டாதீங்க சார்”

“பிட்டு இல்லீங்க திலீபன், நெஜம். இருங்க கூப்பிடறேன், பாக்கியராஜ் சார் லைன்ல வர்றாரு.. அப்புறம் கூப்பிடறேன்”

எழுத்தாளனாக ஒருவன் வாழ்க்கையை ஓட்டுவது தமிழில் சிரம்மான விசயம் தான். ஒதுங்கி ஓடிவிடலாம் என்றாலும் இந்த எழுத்தானது அவனை விடுவதே இல்லை. முன்னர் வாழ்ந்த எழுத்தாளர்களில் ஓரளவு குடும்பப் பின்னணி உள்ள எழுத்தாளர்களே மனநிறைவுடன் எழுதினார்கள். எழுத்தை மட்டுமே நம்பியான வாழ்வில் இன்னும் எத்தனை வருடம் போராடுவேன் என்று எனக்கே தெரியவில்லை. வாழ்க்கையை ஓரள்வேனும் ஓட்ட நிச்சயம் இந்த இலக்கிய எழுத்துகளால் முடியாத சமாச்சாரம் என்று தெரிந்து விட்டது.

கமர்சியல் எழுத்து எந்த அளவு காப்பாற்றும் என்பது நுழைந்து பார்த்தால் தான் தெரியும். எழுத்திற்கு வந்துவிட்ட பிறகு இதைத் தான் எழுதுவேன் அதை எழுத மாட்டேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. குறிப்பிட்ட வாசகர்களுக்கு பிடிக்கிறது என்பதற்காக சில விசயங்களை வலிந்து எழுத்தாளன் தன் எழுத்துகளில் திணித்துக் கொண்டும் இருக்க முடியாது. வாசகர்கள் நல்ல எழுத்து, கெட்ட எழுத்து என்ற ஒற்றை விமர்சனம் தான் பேசுவார்கள். இன்றுவரை என் வாசகர்களிடம் அடுத்தமுறை நல்லா பண்ணிடலாங்க! என்று தான் பேசுகிறேன்.

எழுத்தாளன் நல்ல அல்லது கெட்ட கேரக்டர்களை தேடி தெருவெங்கிலும் அலைய வேண்டியிருக்கிறது. மதுக்கடைகளில் எனக்கு அற்புதமான பல கேரக்டர்கள் பல கிடைத்திருக்கின்றன. அட்டக்கத்தி அரவிந்தசாமி மாதிரியான கேரக்டர்கள் தேடிவந்து பேசி என்னை ஆச்சரியப்படுத்துகின்றன.

கிடைக்காத புத்தகத்திற்காக தன் காரை எடுத்துக் கொண்டு தமிழக வீதிகளில் அலையும் அரவிந்தசாமிகளிடம் ஏன் இப்படி? என்று கேட்கும் எண்ணம் எனக்கு உண்டு. ஒரு எழுத்தாளர் எழுதிய எழுத்து பூராவும் ஒரே மாதிரி குதூகலமாக இருக்கும் என்று வீணே நம்பி இப்படி பயணிப்பது ஏன்? தஞ்சை பிரகாஷின் மீனின் சிறகுகள் வாசித்த அட்டக்கத்தி அரவிந்தசாமி என்னிடம் பலமுறை ஜெராக்ஸ் எடுத்துக்கறேன், புத்தகமா குடுங்க, ஜெராக்ஸை உங்களுக்கு தந்துடறேன்.. என்று நச்சி நச்சி வாங்கிப்போன புத்தகம் கரமுண்டார் வீடு. அப்படி நச்சி வாங்கிப்போன புத்தகத்தை படித்தீர்களா? ஜெராக்ஸ் எடுத்தீர்களா? என்றால்.. அது மீனின் சிறகுகள் அளவுக்கு இல்லீங்க. தஞ்சாவூரு தலித்தியம் பேசிட்டாரு. படிக்க முடியல. ஜெரக்ஸூ எடுக்கலீங்க, செல்ப்புல வச்சிட்டேன். நீங்க சொன்னீங்கன்னு கள்ளம் நாவலுக்கு வேலந்தாவளம் போயி ஓழலப்பதி அலைஞ்சு சாராஜ் வீட்டைக் கண்டு புடிச்சு பார்த்தேனுங்க. கார்ல கோவை கூட்டி வந்து ஜெராக்ஸ் எடுத்துட்டு பஸ்ல தாட்டி உடறேன்னு கூப்பிட்டேன். வரலைன்னுட்டாப்ல! உங்க நண்பர்னு சொன்னீங்க, என்ன இப்படி பண்ணீட்டாப்ல?”

என் நண்பர்கள் அனைவரும் என்னைப்போலவே சிரித்துப் பேசிக் கொண்டு வேலை வெட்டி இல்லாமல் சும்மா கிடப்பார்கள் என்று நினைத்துக் கொள்வதால் வரும் வினை இது. புத்தகங்களை உயிர் போல பாதுகாத்து வைக்கும் விசயம் எல்லாம் என்னிடம் இல்லை. என் அப்பாவின் சேகரிப்பு புத்தகங்களை ஆட்டோ வரவழைத்து 14 வருடம் முன்பா 1500 ரூவாயுக்கு எடைக்கு போட்டு நிம்மதியானேன். எழுத்து, கசடதபற, சிரித்திரன், தேன்மழை, தாமரை, செம்மலர் இவைகள் எடைக்குப் போனது நல்ல விசயம் தான். வீட்டை அடைத்துக் கொண்டு அவைகள் கிடக்கும். எந்த நாளும் அவைகளை புறட்டிப் பார்க்கவே போவதில்லை நான். கள்ளம் நாவலை வேறு எங்கோ சொல்லிப் பிடித்துவிட்டதாக அட்டக்கத்தி ரோசத்துடன் அறிவித்தார். கள்ளம் நாவலைப் படித்து என்ன புரிந்து கொண்டீர்கள் என்று இன்றுவரை நான் அவரிடம் கேட்கவில்லை. சினிமா நடிகைகளின் கதையை பாகம் பாகமாய் வாங்கி ஆர்வமாய் படிப்பவர் அவர். கள்ளம் நாலு பக்கம் கூட படித்திருக்க மாட்டார்.

சாராஜை சும்மா பார்த்துவிட்டு அரவிந்தசாமி வந்திருக்கலாம். ஆனால் தவறி விட்டார். தன் காதல் நிலவுகள் புத்தகத்தை அன்போடு கொடுத்து விட்டு வந்திருக்கிறார். சாராஜ் போன் மூன்றே நாளில் எனக்கு வந்து விட்டது. “யாருங்க அது அட்டக்கத்தி? உங்க பேரை சொல்லீட்டு வந்தாப்ல, புத்தகம் ஒன்னை கொடுத்துட்டு ஒரு மனுசன் என்ன வேலையில இருக்கான்ற நெனப்பு இல்லாம படிச்சாச்சா? படிச்சாச்சான்னு துன்பம் பண்றாப்ல? நானே ஆயிரத்தெட்டு பிரச்சனையில இருக்கேன். ஒரே முடிவா சொல்லிட்டன், இப்ப படிக்க நேரம் கிடையாது. அப்படி படிச்சா நானே உங்களை கூப்புடறேன்னு சொல்லிட்டேன். என் நெம்பரை அடுத்த ஆளுங்களுக்கு பார்த்து யோசனை பண்ணிக் குடுங்க”

இப்படியான அட்டக்கத்தி என் பையனை மருத்துவமனையில் திடீரென்ற அவசரத்தில் சேர்த்தியிருந்த போது ஒரு உதவி செய்தார். கூப்பிட்டுச் சொன்ன இரண்டு மணி நேரத்தில் என் கையில் பத்தாயிரம் கொண்டுவந்து கொடுத்தார். ஆப்ரேசன் முடிந்ததும் பணம் கேட்பார்களோ? பில் வந்து விடுமோ? என்ற அனுபவமின்மையால் பரபரப்பாய் பணம் ஏற்பாடு செய்தேன். “ஒரு வாரம் பத்து நாள்ல திருப்பிக் குடுத்துடுங்க” என்று சொல்லிவிட்டு அட்டக்கத்தி தன் ஸ்கூட்டியில் சென்று விட்டார். நான்காம் நாள் பையனை டிஸ்சார்ஜ் செய்கையில் அதே பணத்தை கூப்பிட்டுக் கொடுத்துவிட்டு நன்றி சொல்லி வந்தேன். பல வழிகளில் வாழ்க்கை தன்னை வாழ்ந்து பார்க்க மனிதர்களை அழைத்துக் கொண்டே இருக்கிறது.

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் அட்டக்கத்தி வீட்டு முன்பாக ஆட்டோ ஒன்று வந்து ஓய்ந்து நிற்கிறது. உள்ளிருந்து டைரக்டர் சக்திவேல் இறங்கி, ”வசந்த மாளிகை” என்கிற பெயர்ப்பலகையை புன்னகையோடு பார்க்கிறார். வீட்டினுள்ளிருந்து குழந்தைகளின் சப்தம் வெளியே கேட்கிறது. ஆட்டோவிற்கான தொகையை கொடுத்துவிட்டு சக்திவேல் வசந்தமாளிகையின் சுவற்றில் இருந்த டிங் டாங், டிங்டாங்கை அடிக்கிறார்.

முன்வாசல் கதவைத் திறந்து “கொட்டாவி” ஒன்றை போட்டபடியே அட்டக்கத்தி அரவிந்தசாமி வெளிவருகிறார். வந்திருப்பவர் யார்? என்று அவர் தூக்க கலக்க கண்களுக்கு தெரியவில்லை. பெரிய ஆள் என்றாலோ, தயாரிப்பாளர் என்றாலோ காரில் வந்திருப்பார். அட்ய்ஹுவும் இல்லை. வந்தவரே கையை நீட்டி “ஐ ஆம் சக்திவேல் ப்ரம் சென்னை” என்றார்.

சென்னையில் இருந்து வந்திருக்கிறார் என்றால் காதல் நிலவுகள் படித்து விட்டு வந்திருப்பாரோ? இல்லை அசிஸ்டெண்ட் இயக்குனரோ? ஒருவேளை பத்திரிக்கையிலிருந்தோ? குழப்பமாய் அவரை வீட்டினுள் அழைத்துச் சென்றார். “நீங்க?” என்றார் வாய்விட்டு!

“நான் அம்மை, கூடு, குழல் படங்களோட இயக்குனர் சக்திவேலுங்க. பத்திரிக்கை, டிவில நீங்க என்னை பார்க்கலையா?” என்றார் வந்தவர். இது போதுமே அட்டக்கத்திக்கு.

“சார் சொன்னாருங்க! இந்த மாதிரி என்னை பார்க்க வருவாப்லைன்னு. வாங்க இப்படி வாங்க.. பாருங்க இது தான் எங்க சமையல் ரூம். இங்க வாங்க சார், இது தான் எங்க வீட்டு பாத்ரூம். இது என்னோட ஹோம் தியேட்டர். இவிங்க ரெண்டு பேரும் என் பொண்ணுக. ஒருத்தி பேரு ப்ரீத்தி, இன்னொருத்தி பேரு கீர்த்தி. இவ சிக்ஸ்த் படிக்கிறா. அவ செவந்த் படிக்கிறா! குட்டிகளா! டைரக்டர் அங்க்கிளுக்கு வணக்கம் சொல்லுங்க! ஓடிப்போய் மம்மி கிட்ட ஃபில்டர் காபி எடுத்துட்டு மாடிக்கு என் ரூமுக்கு வரச்சொல்லிடுங்க! வாங்க சார் மாடிக்குப் போவோம். பார்த்து படியில ஏறி வாங்க. அங்க போய் உட்கார்ந்து பேசுவோம்” அவர் படிகளில் ஏற சக்திவேலும் பின்னால் ஏறினார். அந்த அறையில் செல்ப்பிலும், டேபிளிலும் புத்தகங்கள் குவிந்து கிடந்தன. கூடைச் சேரில் சக்திவேலை அமர்த்தினார் அட்டக்கத்தி. ஏசி சுவிட்ச்சை போட்டு விட்டார். அறை குளிரத் துவங்கியது.,

“ஏசி இல்லீன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாதுங்க சார். கார்லயும் ஏசி தான்” அவர் கேட்காமலேயே சொன்னார்.

“இப்பத்தான் எந்திருச்சிருப்பீங்க போல? மதியம் பன்னண்டு ஆச்சே”

“ஆமாங்க சார். நைட்டு ஒரு பத்திரிக்கை ஆசிரியரோட டிஸ்கசன்ல இருந்தேன். இறக்கைன்னு பத்திரிக்கையோட பேரு. மாத இதழா கொண்டு வர்றதா பேசிட்டு இருந்தோம். ஒவ்வொரு மாசமும் ஒம்பது எழுத்தாளர்களோட சிறுகதைகள் போடலாம்னு திட்டம். நீங்களும் எழுதுனீங்கன்னா நல்லா இருக்கும். நாலஞ்சு பிரயாணி கடைகள் விளம்பரம் பிடிக்கணும். கோபிகிட்ட டி.என். பாளையம்ங்ற ஊர்ல ஒரு பையன் டைப்செட் பண்ணி லே அவுட் பண்ண கிடைச்சிருக்கான். பி.கே.பி கதை தர்றதா ஒத்துக்கிட்டாரு. இப்படி ஓடிட்டு இருக்குதுங்க”

”புக்ஸ் நிறைய படிப்பீங்க போல?”

“ஆமாங்க சார். தி. ஜானகிராமன்ல இருந்து வா.மு.கோமு வரைக்கும் என்னோட நண்பர்கள் தான். என்னோட ஆல்பம் பாருங்க, ஒரு கை ஓசை வந்தாப்ல இருந்து நான் பாக்கியராஜ் சார் ரசிகன். நான் இன்னும் மன்றத் தலைவரா இருந்து அதை பார்த்துட்டு வர்றேன் சார். அவரு ஊட்டுக்கு எல்லாம் போயி சமையல்கட்டு வரைக்கும் போயிட்டு வருவேன். அவர் சன்னை வச்சு ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன் சார். இந்த ஸ்டில் பாருங்க! இது வந்து ஆர்.சி. சக்தியோட ஸ்டோரி டிஸ்கசன்ல இருந்தப்ப எடுத்தது. இது சார் வந்து என் தலையில விளையாட்டா கொட்டினப்ப எடுத்தது. பாரதிராஜா வேதம்புதிது எடுத்தப்ப கூடவே ஹெல்ப்புல்லா சூட்டிங் ஸ்பாட்டுல இருந்தப்ப எடுத்தது. ஏன் சார் ஆல்பத்தை மூடிட்டீங்க? முன்னூறு போட்டோஸ் இருக்குங்க”

“பழைய கதை பேசி  ஒன்னும் ஆவப் போறது இல்லீங்க  அட்டக்கத்தி”

“இதெல்லாம் பசுமையான நினைவுகள்ங்க. பழைய கதையின்னு சொல்லீட்டீங்களே! இன்னிக்கி வரைக்கும் சார் ஆபிஸ் முன்னாடி பிறந்த நாளுக்கு பேனர் கட்டுறேனுங்க”

“பேனர் கட்டுறது  நல்ல விசயம் தானுங்க.  என்ன பிஸ்னஸ் பண்ணுறீங்க/ விகடன்ல ஆறு மாசம் மாணவர்  திட்டத்துல வொர்க் பண்ணினதா  லால்குடியில பேசிக்கிட்டாங்க.  காதல் சந்தியா கிட்ட  உங்க ஜோடியா நடிக்க முடியுமான்னு  கேட்டிங்களாமே! படம் இல்லாம சும்மா இருக்கேன். போறதே போறீங்க கேட்டுப் பார்த்துட்டு வாங்கன்னு சொன்னாங்க என் கிட்ட”

“அப்பா திருப்பூர்ல சாயப்பட்டறை மூனு எடத்துல போட்டு பல வருசமா நடத்தீட்டு இருக்காருங்க சார். வீட்டுக்கு நான் ஒரே பையன். ப்ரியா நான் இருக்கப்ப அதை கவனிச்சுக்குவேன். இப்பத்தான் என்னோட காருக்கு கேஸ் கனெக்சன் மாட்டினேன் சார். ஆனைமலி பகுதில சூட்டிங் ஸ்பாட் பார்க்க போலாம்னு இருக்கேன். சந்தியா அழகான பொண்ணு சார். அருமையான கேரக்டர் இருக்குன்னு சொன்னேன். காலிசீட் தர்றதா சொல்லிட்டாங்க. தயாரிப்பாளர் ஒருத்தர் வந்தார் சார் தூத்துக்குடியில இருந்து. ஊட்டில என் செலவுல ரூம் போட்டு நாலு நாள் டிஸ்கசன் பண்ணினோம். வர்றேன்னு சொல்லிட்டு போனவரு ரெண்டு வருசமா வரலை. இப்ப ஒரு படம் வந்துச்சுங்கள்ள சாட்டையின்னு. அதுல இண்ட்ரவெல் வரைக்கும் என் கதை சார். சுட்டுட்டாங்க”

“கேஸ் போட வேண்டியது தான நீங்க. ஏன் விட்டீங்க?”

“இல்லீங்க சார் எவன் கோர்ட்டுக்கு அலையுறது? இப்பப் பாருங்க சாரோட படத்தையே கண்ணா லட்டு தின்ன ஆசையான்னு சுட்டுட்டாங்க! படத்தையே சுடுறாங்க. என் கதை எந்த மூலைக்கு சார். இதிப் பாருங்க. இது என்னோட முதல் சிறுகதை தொகுப்பு சார். வச்சிக்கங்க”

“வேண்டாங்க அட்டக்கத்தி. இதுகளைத்தான் சினிமாவா தியேட்டர்ல நான் பார்த்துட்டனே! நல்ல வாசிப்பாளர்களுக்கு கொடுங்க”

“அஞ்சு பிரதி வச்சுக்கங்க சார். உங்க அசிஸ்டெண்டுக கிட்ட குடுங்க. என் நெம்பரைக் குடுத்து பேசச் சொல்லுங்க”

“அடுத்த தொகுப்பு ஏன் இன்னும் நீங்க போடலை?”

“போடணுமுங்க சார். குமுதத்துல, பாக்யாவுல எல்லாம் ஒரே கதைய ரெண்டு வாட்டி குடுத்து வெளியிட்டிருக்கேன் சார். அதுக்கூட இதுகளையும் சேர்த்தி கெட்டி அட்டையில கனமா போடணும் கிழக்குல”

“ஏன் மேற்குல இருந்து போடக் கூடாதா? செண்டிமெண்ட்டா?”

“சார் கிழக்குங்றது  பதிப்பகம் சார்”

“ஓஹோ! சாரிங்க எனக்கு பெயரெல்லாம் தெரியாது. பிஸியாவே இருப்பீங்க போல இருக்கே”

”ஆமாங்க சார். என்னோட ரெண்டு பொண்ணுகளை வச்சு டபுள் ஏக்சன்ல ஒரு ஸ்டோரி டெவலப் பண்ணி இருக்கேன் சார். ஒரு பொண்ணு பணக்கார வீட்டுப் பொண்ணு. இன்னொன்னு குடிசையில வாழுது. இது பத்தி எழுத்தாளர்கள் கிட்ட சொல்லி டிஸ்கசனுக்கு என் வீட்டுக்கு வரச்சொல்வேன் சார். ஒரு எழுத்தாளரும் வர மாட்டீங்கறாங்க சார். எல்லாரும் பணப்பிரச்சனையை முதல்ல பேசுறாங்க. நான் ஜெயிச்சாத்தான சார் பணம் குடுக்க முடியும். ஜெயிக்கறக்கு முன்னால பணம் வேணும்னா எப்படிங்க சார்? பத்திரிக்கை ஆரம்பிக்கலாம்னா மாசச் சம்பளம் எவ்ளோ குடுப்பீங்க? அப்படிங்கறாங்க. சிங்கப்பூர் போலாம்னு பாஸ்போர் ரெடி பண்ணீட்டு இருக்கேன் சார்”

“ஸ்டோரி டிஸ்கசனுக்கா போறீங்க?”

“சுப்ப்ரபாரதிமணியன்  போறாராமா… கூடப் போறேன்”

“அவரு யாரு உங்க ரிலேட்டிவ்வா?”

“என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க? அவரு நாடறிஞ்ச எழுத்தாளருங்க. என் க்ளாஸ்மேட் சிலபேரு சிங்கப்பூர்ல பிஸ்னச் பண்ணீஇட்டு இருக்காங்க. அவங்க விகடன் ரேஞ்சுக்கு பத்திரிக்கை ஆரம்பிக்க திட்டம் வச்சிருக்காங்க. மெட்ராஸ்ல எனக்கு வீடு இருக்குதுங்க சார். அங்கயே ஆபிச் போட்டு பத்திரிக்கை ஆரம்பிக்கணும் சார். இவள் புதியவள், பாவையர் மலர், சூரியக்கதிர்ன்னு ஏகப்பட்ட பத்திரிக்கைகள் வருதுங்க சார்” என்று சக்திவேலுக்கு க்ளாஸ் எடுத்துக் கொண்டிருந்த போது, “மூக்குத்திப் பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா” என்று அவர் செல்போன் பாடியது.

“டச் ஸ்கிரீன் நோக்கியா போன் சார். நெட்டு நல்ல ஸ்பீடுன்னு சொல்லிக் குடுத்தாங்க இருவத்தி அஞ்சாயிரம் ரூவாய்க்கி. போன வீக்ல தான் வாங்கினேன் சார். செகண்ட் ஹேண்டுல ஒன்னு வாங்கி வா.மு. கோமுக்கு குடுக்கறேன்னு சொன்னேன். எட்டு ரூவா ரெடி பண்ணுங்கன்னு சொன்னேன். போனும் வேண்டாம் மண்ணும் வேண்டாமுன்னு சொல்லிட்டாப்ல. ”ஹலோ வணக்கம்! கார் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கேன் அப்புறம் கூப்பிடட்டுமா? சரிங்க” என்று கட் செய்தார் அரவிந்தசாமி.

“எழுத்தாளர்க எல்லோரும் ஏமாத்துறாங்க சார். 57 சினேகிதிகள் சினேகித்த புதினம்னு ஒரு நாவல் போட்டாப்ல எதிர் வெளியீட்டுல கோமு. திருப்பூர் புத்தக கண்காட்சில புக்கு வாங்கி பத்துப் பக்கம் படிச்சேன் சார். ஒரு சீன் வரலை. வா.மு.கோமுன்னா சீன் வரணும் சார். 57 பிள்ளைங்க காட்டுவாங்கன்னு வாங்கிட்டு வந்து பார்த்தா தலித்தியம் எழுதியிருக்காப்ல! யாருக்கு சார் வேணும் தலித்தியம்?”

“நீங்க மொட்டை மாடியில காதல் பண்ணுற கதை எழுதுறவரு தானே! ஆமா அரவிந்தசாமி நீங்க எப்புமே இப்படித்தானா? இல்ல அப்பப்பவா?”

“இருபது வருசத்துல நிறைய இழந்துட்டேன் சார். அதனால தான் இப்படி. என் வீட்டுப்பெயர்ல வசந்த மாளிகை பதிப்பகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் சார். வந்ததுல இருந்து உங்களை பேச விடாம நானே பேசிட்டு இருக்கேன் சாரி சார். திருப்பூர் மான்செஸ்டர் கடையில பிரயாணி நல்லா இருக்கும் சார். கிளம்புங்க. போய் சாப்டுட்டே பேசுவோம்” என்ற போது அவர் மனைவி காபி டம்ளருடன் அறைக்குள் வந்தார்.

“பிரயாணி பிரயாணின்னு உங்களுக்கு எந்த நேரமும் அதே தானா? எந்திரிங்க மொதல்ல மணி ஒன்னு ஆகப் போகுது இன்னும் என்ன தூக்கம்?”

“டைரக்டர் கிட்ட பேசிட்டு இருந்தேன்மா! பிரயாணி சாப்டுட்டு போலாம்னு அவர்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். கரைக்ட்டா தூக்கத்தை நீ வந்து கெடுத்துட்டே!” என்றவர் எழுந்து அமர்ந்தார்.

“சீக்கிரம் காபியை குடிச்சுட்டு வந்து சமையல்ல எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. வெங்காயம். மொளகா யார் நறுக்கித் தர்றது? மதியச் சாப்பாடு அப்புறம் மூனு மணி ஆயிடும்”

“கொஞ்சம் டயர்டா இருக்குதும்மா. நைட்டு ஸ்டோரி ஒன்னை டெவலப் பண்ணுறதுக்கு திங்க் பண்ணீட்டு லேட் ஆயிடுச்சு. என் கதை குமுதத்துல வந்தா நீ உன் ப்ரண்ட்ஸ் கிட்ட காட்டி சந்தோசப்படுவீல்ல! யாரோ கூப்பிடறாங்க போன்ல பேசிட்டு வந்துடறேன்”

“ஹலோ கோமுவா? தயாரிப்பாளரோட இருக்கேன். பேசிட்டு கூப்பிடறேன்” என்றவர் வைத்ததும் மறுபடியும் ஒரு போன். அவர் மனைவி நகருகிறார். யார் என்று பார்த்தார். அது திலீபன். மீண்டும் படுக்கையில் சாய்ந்தார்.

“ஹலோ திலீபன் எப்ப வர்றீங்க திருப்பூர்?”

“எதுக்குங்க சார்?”

“போச்சுடா! பத்திரிக்கை ஸ்டார்ட் பண்ணனுமுன்னு சொன்னன்ல”

“ஓ அதுவா சார். நான் சென்னை போறேன் சார்”

“அங்க எதுக்கு போறீங்க?”

“எங்கேயும் எப்போதும் சரவணன் சார் கிட்டப் போய் அசிஸ்டெண்டா சேர்ந்துக்கலாம்னு கிளம்பிட்டேன். அவர்கிட்ட பேசிட்டேன்”

“நானே படம் பண்ணலாம்னு இருக்கேன் திலீபன். அடுத்த மாசம் சூட்டிங். என்கிட்டயே அசிஸ்டெண்ட்டா சேர்ந்துக்கங்க”

“ஒரு இருபதாயிரம் என் அக்கெளண்டுல போட்டு விடுங்க சார். எங்கம்மா கிட்ட குடுத்துட்டு நாளைக்கே திருப்பூரு வந்துடறேன். இதுல எந்த மாற்றமும் இல்லைங்க தான”

“ஒரு நிமுசம் திலீபன் என் காதலியோட அம்மா இறந்துட்டாங்க. போய் காரியமெல்லாம் பார்த்துட்டு ஈவனிங் ஃப்ரியா கூப்பிடறேன்” போனை கட் செய்து விட்டு சுகமாய் படுத்தார்.

பாக்யா ஆபிஸ் மாடிப்படிகளில் என்னை ஏற்றிக்கொண்டு அட்டக்கத்தி அரவிந்தசாமி சென்றபோது இரவு மணி பதினொன்று. ஆறு மணிக்கு எக்ஸ்பிரஸ் பாத்ரூமில் நின்று இரண்டு கிங்பிசர் குடித்ததோடு சரி. போதை எட்டு மணிக்கே காணாமல் போயிருந்தது. அந்த நேரத்திலும் பாக்கியராஜ் ரசிகர்கள் பத்துப்பேர் அடுத்த நாள் பிறந்த நாள் கொண்டாடும் தங்கள் தலைவனை பார்க்கவும் பேனர் கட்டவும் வந்திருந்தார்கள். அந்தவார விகடன் என் கையில். அதில் என் கதை வந்திருந்தது. அதை அவரிடம் கொடுத்து படித்தபிஉன் கருத்து கேட்பது அட்டக்கத்தியின் பணி. நீண்ட காலமாய் பாக்யாவில் சேர்த்து விடறேன் சேர்ந்துக்கங்க சம்பளம் கமியாத்தான் கிடைக்கும், என்றே சொல்லி வந்தார். நான் மறுத்தே பேசி வந்திருக்கிறேன். என்னை போன்ற ஆட்கள் எந்த இடத்திலும் வேலை செய்ய தகுதி அற்றவர்கள்.. சங்கம் சேர்க்க முயற்சிப்பேன். கூலி உயர்வு கேட்பேன். பாத்ரூம் வசதி பள்ளிக் காலத்திலிருந்து கேட்பேன். போராட குழு சேர்த்துவேன். கேட்டை சீக்கிரம் சாத்துவேன்.

என்னை அழைத்து வருகையில் பாக்யா ஆபிஸ் செல்வதோ, அவரை பார்க்கச் செல்வதோ எந்த திட்டத்தையும் அட்டக்கத்தி சொல்லவே இல்லை. 2011 புத்தகச் சந்தைக்கு செல்வதாகவும் அவர் பர்ச்சேஸ் செய்த புத்தகங்களை சூட்கேசில் தூக்கி வரவும் நான் சென்றேன். திட்டத்தில் இப்படி ஒரு கோளாறு இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. அவரது ரூமுக்கு எதிரே கதவுக்கருகில் நின்று கொண்டோம். உள்ளே பாக்கியராஜ் குரல் அதிக சப்தமுடன் வெளியே கேட்டது. நகர்ப்புறங்களில் பதினொரு மணி என்றாலும் யாரும் தூங்குவதே இல்லை போல! கதவு திறக்கப்பட்டு இருவர் வெளியேற இருவரும் நுழைந்தோம்.

“யார்யா நீ?”  அட்டக்கத்தியைப் பார்த்து  பாக்யராஜ் கேட்கவும், அட்டக்கத்தி சார்! என்றார்.

“நீயா? தயாரிப்பாளர்கிட்ட பேசிட்டு இருக்கேன். கீழ போய் உங்க ஊர் முருகன் இருப்பான். அவனை நான் கூப்பிட்டேன்னு மேல வரச் சொல்லு. ஏப்பா புதுத் தம்பி நீயும் கூடப் போயிட்டு வா!” என்றார். இருவரும் படிகளில் இறங்கினோம்.

“என்னங்க இது?”

“இருக்கறது தான்  வாங்க”

எனக்கு பியர் இரண்டு வேண்டும் போல் இருந்தது. ஆனால் அதற்கு வழி இல்லை அங்கு அப்போது!

                                    •••

அற்ப விஷயங்கள் ரேமாண்ட கார்வர் தமிழில் க, மோகனரங்கன்

download-41
அன்று பகலில் விரைவாகவே  கால நிலை மாறி விட பனி  உருகி கலங்கிய நீராக  ஆகிக் கொண்டிருந்த்து, பின்புற  வாசலை ஒட்டி தோளுயரத்திற்கு அமைந்திருந்த சிறிய ஜன்னலின் மீதிருந்து அத்தண்ணீர் சிறு தாரைகளாக விழுந்து கொண்டிருந்த்து, வெளியே இருட்டிக் கொண்டிருந்தபோது தெருவில் கார்கள் விரைந்து கொண்டிருந்தன, உள்ளேயும் இருண்டுகொண்டு வந்த்து,

அவள் கதவருகே வந்தபோது, அவன் படுக்கையறையினுள் ஒரு  சிறிய கைப் பெட்டியில் ஆடைகளை அள்ளித் திணித்துக் கொண்டிருந்தான்,

‘நீ போகப்போறத நெனச்சு  நான் ரொம்ப,,,, ரொம்ப,,, சந்தோஷப்படறேன், கேட்டியா?“ என்றாள் அவள்,

அவன் கைப்பெட்டியில் தன்  பொருட்களை நிரப்பிக் கொண்டிருந்தான்,

“நாய்மகனே, நீ கௌம்பறத நெனச்சு  நான் ரொம்பவுமே சந்தோஷப்படறேன்“  அவள் அழத் தொடங்கினாள்,

“நீ என்ன நிமிந்து நேராக்கூட  பாக்க மாட்ட இல்லையா?“  அப்போதுதான் படுக்கை மீதிருந்த குழந்தையின் படத்தை கவனித்தவள் அதை எடுத்துக் கொண்டாள்,

அவன் அவளை ஏறிட்டுப் பார்க்கையில் தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள் திரும்பி, கூடத்துக்கு  செல்லுமுன் அவனை வெறித்தாள்,

“அதைத் திரும்பக் கொடுத்துவிடு“  என்றாள்,

உன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே போ என்றாள், அவன் பதிலெதுவும் சொல்லவில்லை, கைப்பெட்டியை மூடியவன் தன் மேலங்கியை அணிந்துகொண்டான், மின் விளக்கை அணைப்பதற்கு முன் படுக்கையறையை ஒரு முறை சுற்றி வர பார்த்தான்,  குழந்தையை அணைத்துப் பிடித்தபடி அவள் சிறிய சமையலறையின் வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

எனக்கு குழந்தை வேண்டும் என்றான்,

உனக்கு என்ன பைத்தியமா  பிடிச்சிருக்கு?

இல்ல, எனக்கு குழந்தை வேண்டும், அவனுடைய பொருட்களை எடுத்துவர  நான் யாரையாவது அனுப்புவேன்,

நீ இந்த குழந்தைய தொடக்கூடாது  என்றாள்,

அந்தக் குழந்தை அழத் தொடங்க அவள் அதன் தலையைச் சுற்றிப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கினாள்,

“ஓ,,ஓ,,“ குழந்தையை சமாதானப்படுத்தினாள்,

அவன் அவளை நோக்கி வந்தான்,

“கடவுள் சத்தியமா பக்கத்துல  வராதே” சொன்னவள் சமையலறைக்குள்  ஒரு எட்டு பின்னகர்ந்தாள்,

எனக்குக் குழந்தை வேண்டும்,

இங்கிருந்து போயிடு,

அவள் திரும்பி அடுப்பிற்குப் பின்னால் இருந்த மூலையில் குழந்தையை  வைத்துக் கொள்ள முயன்றாள், ஆனால் அவன் வந்துவிட்டான், அடுப்பைத் தாண்டி குழந்தையை  இறுகப் பிடித்தான்,

பையனைத்  தந்து  விடு என்றான்,

விலகிப்போ, போயிடு அவள் அழுதாள்,

அந்தக் குழந்தை  முகம் சிவந்து கதறத் தொடங்கியது,

நடந்த தள்ளுமுள்ளுவில்  அவர்கள் அடுப்பின் பின்புறமாக மாட்டிவைத்திருந்த பூந்தொட்டியை கீழேத் தள்ளிவிட்டார்கள்,

அவன், அவளை சுவரோரம் நெருக்கித் தள்ளி அவளுடைய  பிடியைத் தளர்த்த முயன்றான், குழந்தையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு முழு பலத்தையும் பிரயோகித்துத் தள்ளினான்,

குழந்தையைக் கொடுத்துவிடு,

வேண்டாம், நீ பையனை  கஷ்டப்படுத்துகிறாய்,

நான் ஒன்றும் குழந்தையை  கஷ்டப்படுத்தல, என்றான்,

சமையலறை ஜன்னல் வழியே வெளிச்சம்  எதுவும் வரவில்லை, ஏறக்குறைய  முழுஇருட்டில் ஒரு கையால் மூடியிருந்த அவளது விரல்களை பிரிக்க முயன்றபடி மறு கையால், கத்திக் கொண்டிருந்த குழந்தையின் தோள்பட்டைக்கருகில் இறுகப் பிடித்தான்,

தன் விரல்கள் பலவந்தமாக  திறக்கப்படுவதை அவள் உணர்ந்தாள், குழந்தை அவளிடமிருந்து  பிடுங்கப் படுவதையும் உணர  முடிந்த்து,

வேண்டாம். அவள் கைகள் தளர்ந்து விழுந்தவுடன் அவள் கதறினாள்,

அவள் அதை, அக்குழந்தையை திரும்ப்ப் பெறவேண்டும், அவள் குழந்தையின் மற்றொரு தோளைப் பற்றி இழுக்க முயன்றாள், அவள் குழந்தையின் மணிக்கட்டை இறுக்கிப் பிடித்தபடி பின்பக்கமாய் சாய்ந்தாள்,

ஆனால் அவன் விட மறுத்தான், குழந்தை அவன் பிடியை விட்டு நழுவுவதை எண்ணி அதை முரட்டுத்தனமாக திரும்ப பிடித்து இழுத்தான்,

இவ்வாறாக இந்தப் பிரச்சினை  முடிவு செய்யப் பட்டது,

 

 

 

 

 

 

குழந்தைமையில் மிதக்கும் கவித்துவம்: ப.தியாகு கவிதைகள் – சமயவேல்

download (6)                                  

வெகு எதார்த்தமான உண்மையான காட்சியெனினும், ஒரு குறிப்பிட்ட காட்சியை ஏற்றுக் கொள்ள முடியாத படைப்பாளி, அந்தக் காட்சிக்குள்ளேயே பிறிதொரு எதார்த்தத்தைக் காட்சிப்படுத்த முனைகிறான். பார்த்ததில் பார்க்காததையும், கேட்டதில் கேட்காததையும் உணர வைப்பது கலையின் அடிப்படைச் செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதைக் கதைப் பரப்பில் தமிழில் கோணங்கி போன்ற படைப்பாளிகளால் மீயெதார்த்த, மாய எதார்த்த வழிகளில் சாதிக்க முடிந்தது. செவ்வியல் இசைக் கலைஞர்கள் இதை ஆதிகாலம் தொட்டே, இசையின் உட்புறம் வெகுதூரம் பல அண்டவெளிகள் தாண்டி, பயணம் செய்து ஸ்தூலமற்ற அதன் மூல நாதவிந்துக்களுடன் உரையாடுதல் அல்லது விளையாடுதல் மூலம் சாதிக்க முடிந்ததுடன் அவர்கள் எப்பொழுதுமே எதார்த்தமற்ற எதார்த்தத்தில் உலவுபவர்களாகவும், தங்கள் பயணத்தில், கேட்கிறவர்களையும் இணைத்துக் கொள்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள். கட்புலனில் தீ மூட்டும் வண்ணங்களில் மூச்சைவிடும் ஓவியர்களின் கோதுமை வயல்களுக்குள் முற்றாக உலவ முடிந்தவர்கள் ஒருவரும் இல்லை. ஆனால் கவிஞர்கள் இதை மிக எளிதாக, மொழியின் கட்டுமான அலகுகளில் ஒன்றான சொற்றொடர் இயலின் அடைப்படை இலக்கணத்திற்குள் ஊடுருவி, அதை அடியோடு புரட்டி,  சொல்லின் பின்புறம் உள்ள சொல்லின்மையை உணர்த்துவதின் மூலம் சாதிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் புதுமையுறும் மனிதம் போலவே, கவிஞர்களால் கவிதையை ஒவ்வொரு நாளும் புதுமைப்படுத்திக் கொண்டே வர முடிகிறது. ஒரு முழு வாக்கியத்தில் வினையை மாற்றாமல் எழுவாய் பயனிலை இரண்டையும் இடம் மாற்றுவதின் மூலம் மொத்தக் காட்சியே தலைகீழாய் மாறிவிடும் கற்பனாதிசயம் நிகழ்த்துபவனாகக் கவிஞன் இருக்கிறான். அவனது பிரத்யேகக் கற்பனை வெளிகளில் சொந்தமாய் உருவாக்கும் ஒருசில சொற்கள் அல்லது ஒரு சொற்றொடர் மூலமே பிறிதொரு எதார்த்தத்தைப் படைக்க முடிகிறது. இவர்கள் மொழியின் செல்லக் குழந்தைகள். மொழியை இவர்கள் ஏமாற்றுவதும், மொழி இவர்களை ஏமாற்றுவதும் கவிதையைச் செழிப்பாக்குவதுதான் விந்தை.

எழுவாய், பயனிலையை இடம் மாற்றும் உத்தியைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் ஒரு வரியாவது எழுதாத கவிஞர்கள் இருக்க முடியாது. ஆனால் இந்த உத்தி, எதார்த்தத்திற்குள்ளும் ஒரு எதார்த்தமாய், இயல்புக்குள்ளும் ஓர் இயல்பாய், ஒரு கவித்துவ அறத்தை வினைப்படுத்தும், பேராச்சர்யம் கொண்ட கவித்துவ மாயத்தை  எழுப்ப முடிகிற போது மட்டுமே கவிதையாகிறது. ஏனெனில் கவித்துவ அறம் என்பது பேரளவில் பிரபஞ்ச ஒழுங்குகளிலிருந்தும், சிற்றளவில் நுண்மையின் நுண்மையான அடிப்படை உயிர்த்துகள்களாலும் கட்டமைக்கப்படுகிறது. இன்னுமொரு எளிய தளத்தில் ஆள்பவன்-ஆளப்படுபவன், அடிக்கிறவன்-அடிபடுகிறவன் என்னும் சமூக எழுவாய் பயனிலை இலக்கணங்களை உடைத்தெறியும் அறமாகவும் இருக்கிறது. இன்னும் பற்பல தளங்களில், பல்லடுக்குகளில்,  அமைப்புகளின் அமைப்பாகவும், அதே விசையில் எல்லா அமைப்புகளின் எதிர் அமைப்பாகவும் கவிதை செயல்படுகிறது.

மிகுதியும் குழந்தைகள் உலகில் வாழும் ப.தியாகுவின் இக் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையே இந்த ரீதியிலான கவிதையாக அமைந்துவிட்டிருக்கிறது. முதல் பத்தியில் எறிவதற்காகக் குறிபார்த்து நிற்கும்  சிறுவன். ஆனால் அடுத்த பத்தி “ஒரேயொரு பாறை/ ஓணானின் வசம்” என்று  நம்மைத் திடுக்கிட வைக்கிறது. சிறுவர்கள் ஓணான்களை கல்லடித்துக் கொன்று, அதன்மேல் சிறுநீர் கழித்து விளையாடுவது இயல்புதானே என்பவர்கள் தான், வளர்ந்தபிறகு அணுசக்தியைப் பயன்படுத்துவதும் இயல்பு என்பார்கள். சாதியத்தை வெகு இயல்பு என்பார்கள். கலவரங்களை உண்டாக்கி அப்பாவிகளைத் தீ வைத்துக் கொளுத்துவதும் கற்பழிப்பதும் கூட இயல்பென்பார்கள். ஓணான்கள் பாறைகளைத் தூக்கி எறியும் அறத்தைக் கவிஞர்கள் மட்டுமே படைக்க முடியும்.

 

எப்போதும் ஏதேனும் ஒரு  பிம்பத்தை உள்ளடக்கிய கண்ணாடிகள் ஒருபோதும் உறங்குவதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடிகள் கூடி நிகழ்த்தும் பிம்பங்களின் கூத்தில் மயங்காத மனிதக் கண்கள் இருக்க முடியாது. ஆடி மாயை (optical illusion), காண் மாயை  (visual illusion) மற்றும்           மெய்மாயம் (virtual reality) போன்றவை சலனிக்கும்  மாயத்தருணங்கள் கவிஞனின் வட்டப்பாதையில் நுழையும்போது  கவிதையாக மாறுவது இயல்பாக இருக்கிறது. பிம்பங்களின் உலகில் நாள்முழுவதும் சஞ்சரிக்கும் இன்றைய இளம் கவிஞர்கள் இப்பரப்பில் நிறையவே எழுதும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இத்தகைய தருணங்கள் இத்தொகுப்பில்  சில அற்புதமான கவிதைகளாகி இருக்கின்றன.  அலமாரிக் கதவில்/பதிந்திருக்கும் கண்ணாடிக்குள்ளிருந்து/கைகள் நீட்டி அழைத்து வைக்கிறாள்/நேற்றுத்தான் நிஷித்/ பெயர் சூட்டியாகிவிட்ட/ ‘ கண்ணாடி அம்மா’  வருகிற 10வது கவிதையில் காண்மாயையோடு குழந்தைமையும் கலந்துவிடுகிறது. குழந்தைகளுக்குக் கண்ணாடியைக் காட்டக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவதில் பொருளில்லாமல் இல்லை. இந்த பிம்ப மாயக் குழப்பங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் குழந்தைகளுக்குக் கொஞ்சம் வளர்ந்தபிறகே கிட்டும். இன்னும் அவர்கள் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் ஏராளமான வினோதங்கள் காத்திருக்கின்றன. ஆனால் கவிஞன் எப்போதும் வளர விரும்பாத குழந்தையாக இருந்து எல்லாப் புரிதல்களிலிருந்தும் அதைத் தொடரும் பொறுப்புகளிலிருந்தும் தப்பிக்க விரும்புகிறான். 91வது கவிதையில் இருப்பது நாம் அடிக்கடி காண்கிற காட்சிதான். இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளில் குருவிகள் தங்களைத் தாங்களே கொத்திக் கொஞ்சும் காட்சிகளை எல்லோரும் பார்த்திருக்கிறோம். ஏற்கனவே இதை யாரோ எழுதியிருந்து படித்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் 92வது கவிதை முழுக்க, காண்-மாயை சார்ந்தது. இதுவும் ஒரு பழைய காண்படிமம் எனினும் ப.தியாகு, இக் கவிதையில் பச்சைப் பாம்பை சிறு கொடியாக அங்கீகரிப்பதின் மூலம் தற்கால இளைஞர்களின் அக உலகை வெளிப்படுத்திவிடுகிறார்.  இவர்கள் தர்க்கங்களின் பிளவுக்குள் சிக்கிக்கொள்ளாமல், மிக நுட்பமாகப், பார்த்ததைப் பார்த்ததாக ஏற்றுக் கொள்ளும் அக்கண நியமத்தை வரித்தவர்களாக இருக்கிறார்கள். 106வது கவிதையில், இருக்கும் ஒரே டீவியில் நிஷித்தும் ப.தியாகுவும் சோட்டா பீமையும் ஏலியன் அணி கிரிக்கட் ஆட்டத்தையும் ஏககாலத்தில் பார்க்கும் வினோதம் நிகழ்கிறது. டீவிக்குள் டீவியை, கவிஞன் எப்போதோ உருவாக்கிவிட்டான்.

 

மேலே வருகிற நிஷித் என்ற குட்டிப்பையன் மற்றும் ஜனு, இஸபெல்லா முதலிய குழந்தைகள் மூலமாக இத் தொகுப்பில் நிறையக் கவிதைகள் விளைந்திருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நிறைய இளம் கவிஞர்கள் திருமணம் ஆன கையோடு காணாமல் போவதை வருத்தமுடன் பார்த்து வருபவன் நான். எப்படியும் அவர்கள் மீண்டும் எழுத வந்துவிடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அவர்கள் தங்களது மீள்வருகையை  ‘நிஷித்’தைப் போன்ற குழந்தைகள் மூலம் நிகழ்த்திவிட முடியும். குழந்தைகள் ஒவ்வொன்றையும் வினோதமாய்ப் பார்த்துப் பார்த்து, தங்களது வளர்ச்சியின் ஒவ்வொரு அசைவையும் ஒலியெழுப்பி, ஒரு படைப்பெனவே நிகழ்த்தும் அதிசயங்களை பெற்றோர்கள் அவர்களது உடல் வழியாகவும் உயிர்வழியாகவும் அனுபவம் கொள்ளும் அற்புதக் கணங்கள் பல சமயங்களிலும் கவித்துவத் தருணங்களாகவே இருக்கின்றன. இந்த உலகம் புத்தம் புதுசாக நமக்கு மீண்டும் ஒருமுறை குழந்தைகள் வழியாகக் காணக்கிடைக்கிறது. வாழ்க்கை பற்றிய உங்கள் அடிப்படைக் கருத்துக்களை ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்தும் தருணமாகவும் இது அமையலாம். அப்படியே வாழ்வின் வழியாகவே சென்று மறைந்து விடாமல், மீண்டும் நம்மைப் படைப்பாளியாக நிலை நிறுத்தும் சக்தியை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டிய, வாழ்வின் ஒரு முக்கிய திருப்பமாகவும் இது அமையக்கூடும். ப.தியாகு இந்த வாய்ப்பை மிக அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

ப.தியாகுவின் கவிதைகளில் இரு முக்கியமான கிளைகள்  அசைவதைப் பார்க்கிறோம். ஒன்று குழந்தைகள் நிஷித் மற்றும் ஜனுவின் மூலமாகக் காணும் வினோத உலகம். இரண்டாவது, குழந்தைகள் நிரம்பிய வீட்டில் வாழ்தலின் போதம், மொழி அழகியலாகத் துளிர்க்கும் கிளை. முன்பகுதியில் நாம் பார்த்த ‘கண்ணாடி அம்மா’ கவிதை நிஷித்தின் வினோத உலகம் சார்ந்ததுதான். அதற்கு அடுத்த கவிதை “பள்ளி நிமித்தம் நிஷித்-ஐ பிரிதல்’ கொஞ்சம் பழைய வரிகளில் ஆகியிருந்தாலும் ‘பெயருக்குக் கூட/ பொம்மை வானமொன்று/ இருந்திருக்காது/சரிதானே பையா” என்னும் 4வது பத்தி காப்பாற்றிவிடுகிறது. ஆட்டுக்குட்டி-மேய்ப்பன், விரல்களில் படும் பட்டாம்பூச்சியின் வண்ணங்கள் போன்ற தேய்சொற்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ‘மான்மரம்’ என்னும் தலைப்பு உள்ள கவிதையில் கணத்துக்குக் கணம் தன்னிலையைப் புதுப்பித்துக் கொள்ளும் குழந்தைமையின்  படைப்பு அழகியல், மிக எளிமையாக ஆனால் அற்புதமாக வெளிப்படுகிறது. இச்சிறிய கவிதை மானில் தொடங்கி, இலையுதிர்காலம் கடந்து, தளிர்விட்டு  வசந்த காலத்தை அடைந்துவிடுகிறது வண்ணச்  சாக்கட்டிகளின் கோடுகளால். வாசிக்கும் மனம் நிரப்பும் கவிதை இது. “குமிழ்கள் அல்ல கிரகங்கள்” கவிதையில் முதல் பத்தியிலிருந்து  இரண்டாவது பத்திக்கு ஒரு கவித்துவ/தத்துவப் பாய்ச்சல் நிகழ்கிறது. சோப்புக் குமிழ்விடும் சிறுவனின் உலகத்திலிருந்து கவிதை “உடைந்து சிதறும் அவைகளில்/ நீங்கள் எதையும் பார்க்கலாம்/ பார்க்க முடியாமல் முற்றாக உங்களை/ நீங்கள் துண்டித்தும் கொள்ளலாம்.” என்று முடிகிறது. இதில் சிறப்பு என்பது ‘நீங்கள் துண்டித்தும் கொள்ளலாம்’ என்னும் ஆசுவாசம் தான். இதுதான் படிப்பவரையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும்  இன்றையக் கவிதையாகவும் இருக்கிறது. “கௌதம் ஆன சித்தார்த்” கவிதையில், விபத்துக்குள்ளான  நிழலுக்குக் களிம்பு தடவும் அபூர்வமான சித்தார்த்தைச் சந்திக்கிறோம். குழந்தைமையின் பித்தில் வெளிப்படும் உச்சபட்ச அழகியலை இக் கவிதை கண்டடைகிறது. சத்தியம், ஞானம் போன்ற சொற்களைத் தவிர்த்திருந்தால் இக்கவிதை, ஒரு அற்புதச் சிற்பமாகிவிட்டிருக்கும். “விடுபடலின் மந்திரம்” கவிதையில் நிஷித்தோடு நாமும் சேர்ந்து ‘நல்ல நல்ல ரொம்பது’ என்று கூறத் தோன்றுகிறது. ‘பாவம் தவளை’ என்று பாம்புக்கு வழி வரைய மறுத்து அடம் பிடிக்கும்  இஸபெல்லாவை நம் தோழியாக்கிவிடுகிறது “வழி” கவிதை. இறுதிக் கவிதையாக வரும் “பக்கவாட்டில்” மேலும் ஒரு சிறிய கவித்தெறிப்பு. “தாய் யானையின்/ நிழலிலேயே நடக்கின்றன/ குட்டி யானைகள்/ வனாந்திரத்தில் // மின் துண்டிப்பு // இப்போது/டி.வி.பெட்டியின் பக்கவாட்டில்/ பார்வையைச் சுழற்றுகிறான் நிஷித்.” இந்தக் கவிதையையும் அந்தக் காண்_மாயை வகைக் கவிதைகளோடு சேர்க்கலாம். ஆனால் நிஷித் மட்டுமே இப்படிப் பக்கவாட்டில் பார்வையைச் சுழற்ற முடியும்.  இக் கவிதை பார்த்தல், யானைகளைப் பார்த்தல், அதுவும் டி.வி.யில் பார்த்தல், பார்க்காமலே பார்த்தல்  என்று இன்னும் பல தளங்களில் நமது புரிதலின் எல்லைகளை விரிவுபடுத்தும் கவிதையாகவும் இருக்கிறது. “தந்தைமை” என்னும் கவிதை தந்தைக்கும் குட்டிமகளுக்குமான உறவில் இருக்கும் ஒருவிதப் புரியாமையை “என்னதான் கோருகிறது/ இரண்டு வயது மகளே/ உன்னிடமிருந்து/ எனதிந்த தந்தைமை” ஒரு கேள்வியாய் எழுப்புகிறது. நாம் உடனே ‘ஈடிபஸ் சிக்கல்’ என்று கூறிவிட்டு நகர்ந்துவிடலாம். ஆனால் இது இன்னும் கொஞ்சம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய சிக்கலாகவே தெரிகிறது. அன்பின் அல்லது காதலின் அல்லது உறவின் விதைகள் பலப்பல வடிவங்களாய்த் தளிர்க்கும் புள்ளிகளில், நமது பண்பாடு தானாக வெளிப்பட்டு மிக நுட்பமானதொரு எல்லைக்கோட்டை  நமக்குக் காண்பிக்கிறது. இன்றளவும் இதை வெகு இயற்கையாகவும் இயல்பாகவும் நாம் பின்பற்றி வருகிறோம்.

 

இரண்டாவது கிளையான வாழ்தலின்  போதமும் கவித்துவ போதமும் பல கவிதைகளில் வெகு இயல்பாய் நிறைந்து கிடக்கின்றன. ப.தியாகுவின் இத் தொகுப்பின் எல்லாக் கவிதைகளின் நிலமும் அவரது வீடாகவே இருக்கிறது. குழந்தைகளும் நிறைவுகளும் கொண்ட இந்த வீட்டின் எல்லாக் காட்சிகளும், நிகழ்வுகளும், சலனங்களும் கவிதைகளாகிவிடுகின்றன. “சிமெண்ட் தரையில்/ கையளவு தேங்கிய/கடலின்/கரையோரத்திலிருந்து/ இழுத்துவிட்டேன்/ விரல் நுனி கொண்டு// வேகமாய் வெளியேறுகிறது ஒரு சிறு நதி” என்று கடலும் நதியும்கூட இவரது வீட்டுக்குள்ளேயே வந்துவிடுகிறன. “எலிக்குஞ்சுகளோடு எனக்கு குரோதமில்லை” கவிதையில் வீட்டுக்குள் வளையவரும் பூனையை விரட்டி ‘பிதுக்கிய பற்பசை நீளமே இருக்கும்’ எலிக்குஞ்சுகளைக் காப்பாற்றிவிடுகிறார். “இதற்குள்” என்ற கவிதையில் கண் திறந்தவுடனேயே ‘துறுதுறுவென்றிருக்கும்’ அப்பொழுதுதான் பிறந்த நாய்க்குட்டிகள் இவரது கனவுக்குள் நுழைந்து கவிதையாகிவிடுகின்றன. வெகு இயல்பாகவே மனிதன் மீன்களுக்குச் செய்யும் துரோகம் இரண்டு கவிதைகளில் பதிவு செய்யப்படுகிறது. “எனக்குள் அலையும் மீன்” கவிதையில் முழுமீனின் முள்ளை உள்ளங்கைக்குள் வைத்து மூடியவுடன் ‘அஃது உடலாகிறது/ எனக்குள் அலைந்து/ நானே/ மீனாகிறேன்.’ அழித்துப் படைக்கும் இந்தியக் கடவுளின் இடத்தை, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும்  கவிஞன் மிக எளிதாகக் கைப்பற்றி விடுகிறான். இக் கவிதையின் பின்புறத்தில் கவிஞனும் கடவுளும் பகடிக்குள்ளாவது பிறிதொரு வாசிப்பில் நிகழ்கிறது. இன்னொரு மீன் கவிதை: “ஒரு கை நீரள்ளி/ மேல் தெளிக்கிறாள்/ துணுக்குற்றது போல/ கொஞ்சமே அசைந்து கொடுக்கிறது/இன்னும் உயிரிருக்கும் மீன்// அதைத்தான்/ தேர்ந்தெடுக்க வேண்டும் நாம்.” இரக்கமற்ற உண்மையை நம் முகத்தில் வீசுகிறது இக் கவிதை. நானும் மீன் சாப்பிடுகிறவன்தான். போலிமை மிக்க இந்திய மனம் இங்கு பகடிக்குள்ளாகிறது.  “இன்னும் பருகவே இல்லை” கவிதையில் ‘தேயிலைப் பொட்டலத்தை விளையாட்டுப் போலவே மூழ்கடித்து மூழ்கடித்து கரைக்கும்’  இவர் தேநீர் பருகாமலே, பருகிய நிறைவடைந்துவிடுகிறார். கவிஞனுக்கு மட்டுமே கிட்டும் வாழ்தலின் போதம் இதுதான். “மறந்து விடுகிறேன்” கவிதையில் கண்ணாடித் தொட்டிக்குள் நீந்திக் கொண்டிருந்த மீன்கூட்டம் பறந்து கொண்டிருப்பதாகக் காண்பதும் இந்த போதத்தால்தான். அழகியலின் ஒரு பிரிவாய் இயங்கும்  கவித்துவ போதமும் வாழ்தலின் போதமும் ஒன்றுதான். இவை எல்லாவற்றின் ரகசியமும் ஒரு சிறிய கவிதைக்குள் அடங்கி இருக்கிறது. முதல் பத்தி: “சுருண்டு கழி போலிருப்பதின்/ இறுக்கம் குறைய/ அவிழ்ந்து வருகிறது/ என்/  மனமென்னும் குருத்து.” கவிதையின் அடுத்த பத்தியில்  “ஆசுவாசத்தின்/ ருசி பற்றி/ இலையானபின் எழுதுகிறேன்” என்கிறார். குருத்து விடுவதைப்போல ஆசுவாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர், இலையாகி, கவிதையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வார் என்று நம்புவோம். வாழ்த்துக்கள்.

சமயவேல்

03-11-2013.

 

 

 

 

 

 

 

 

கல்யாண்ஜி கவிதை

 

 

download (7)

நண்பா, நிறைய முறைகள் பார்த்திருக்கிறேன்

எந்த நேரத்திலும் நசுக்கப்படக்கூடிய ஒரு புழு என

நீ உன் வீட்டுக்குள் ஊர்ந்துசென்றுகொண்டிருப்பதை.

நண்பா, நம்பகமானவர்கள் சொல்லியிருக்கிறார்கள்

உடைந்த படுக்கையறைச் சுவரின் இடிபாடுகளுக்குள்

வால் நசுங்கிய கடுவன் பூனையாக

அசையா மீசை முடிகளுடன் நீ

வலிதாங்கிப் படுத்திருப்பதை.

நண்பா, உன்னிடம் ஒளித்துவைத்திருக்கிறேன்

ஒரே ஒரு முறை உன் மனைவி சொன்ன தகவல்களில்,

காட்டிய உலராத காயங்களில் இருந்த

உன்னுடைய இலக்கற்ற வேட்டையாடலை.

வன்மம் மிகுந்த தாக்குதலை.

நண்பா, நான் நுகர முடிகிறது

நீ கவனமாகப் பூட்டிப் பத்திரப்படுத்திக்கொள்ளும்

உன்னுடைய பிறன்மனையாளின் குறுஞ்செய்திகளில்

பொங்கிப் பீறிடும் காமத்தையும், நுண் காதலையும்.

நண்பா, மற்றவர்கள் கலைந்துசென்றுவிட்டார்கள்

மூன்றாம் நான்காம் குவளைகளுக்கு மேல்

நீ துவங்கி, நிறுத்தவே நிறுத்தாத துயர்ப்பாடல்களை

சருகுகளைப் போல உன்னைச் சுற்றி உதிரவிட்டு விட்டு.

நண்பா, தெரியும், இனிமேல்தான் நீ

தாங்கவியலா தனிமையில், புரிவின்மையின் கொடுந்தழலில்

துடித்துப் புரண்டு வாய்விட்டு அழுவாய் என.

உன்னை உன் வீட்டுவாசலில் சேர்த்துவிட்டுத் தான்

நான் செல்லவேண்டும்

என் முகத்தில் அறைந்து சாத்தப்பட்டிருக்கும்

ஒரு துருப்பிடித்த கதவுக்கு.

*

 

உறுத்து நோக்கல் (THE STARE – BY DORIS LESSING) ஆங்கிலம் : டோரிஸ் லெஸ்ஸிங் தமிழில் ச. ஆறுமுகம்

download (9)
(தனது 87 ம் வயதில் புனைவிலக்கியத்துக்காக 2007ம் ஆண்டில் நோபல் விருது பெற்ற டோரிஸ் மே லெஸ்ஸிங் இங்கிலாந்து நாட்டின் நாவலாசிரியர், கவிஞர், நாடகப் படைப்பாளர், தன்வரலாற்றாசிரியர், சிறுகதைப் புனைவாளராகக் கொண்டாடப்படுபவர். 1950ல் வெளியான `புல் பாடிக்கொண்டிருக்கிறது` நாவல் முதல் 2008ல் வெளியான `ஆல்ஃப்ரெட்டும் எமிலியும்` நாவல் உட்பட 28 நாவல்கள், நூற்றுக்கணக்கான கவிதைகள், நினைவுக்குறிப்புகள், சிறுகதைகள் படைத்தவர். மிகவும் முதிய வயதில் (87) நோபல் விருது பெற்றவர் இவரே. விருது வழங்கியபோது சுவீடிஷ் கழகம் இவரை ‘’ பிளவுபட்ட பண்பாட்டு நாகரீகத்தை ஐயுறவுக் கோட்பாட்டுடன் நெருப்புக்கண் கொண்டு தொலைநோக்குப் பார்வையில் பரிசீலனைக்கு உட்படுத்திப் பெண்ணின அனுபவங்களைக் காப்பியமாக்கியவர்’’ எனப் புகழ்ந்து குறிப்பிட்டது.

 டைம் இதழ் தயாரித்த 1945 முதல் 2008 ம் ஆண்டு வரையிலான மிகச் சிறந்த 50 பிரித்தானிய எழுத்தாளர்களின் பட்டியலில் டோரிஸ் லெஸ்ஸிங் ஐந்தாவதாக இடம் பிடித்துள்ளார். அவரது 94 ஆம் வயதில் கடந்த 17. 11. 2013 அன்று மறைந்தார். 1997ல் நியூயார்க்கரில் வெளியான அவரது The Stare என்ற சிறுகதையைத் தமிழில் வெளியிட்டு மலைகள் அவரது நினைவைப் போற்றுகிறது.)

 

 

‘’அவனையே பார்’’ என்கிறாள், ஹெலன்.

‘’நான் எதுவும் சொல்லாமல், அவனை விடாமல் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். சரி, அப்புறம், அவன் என்னதான் செய்வான்?’’ என்கிற மேரி, ஹெலனிடம் ஏதோ ஒன்று அல்லது பல ரகசியம் புதைந்திருப்பதாக நினைத்து அடிக்கடி செய்வதுபோல அவளை அண்ணாந்து நோக்குகிறாள்.

‘’அப்புறமென்ன, அவன் சரணாகதிதான்,’’ எனச்சொல்லிச் சிரிக்கிறாள், ஹெலன். அந்தச் சிரிப்பு எப்போதும் போல மேரியைச் சிறைப்பிடிக்கிறது. இம்முறை அது அவளுக்குள்ளேயே புகுந்து தாக்கியதுபோலிருக்கிறது. ஹெலன் வேறு ஏதோ ருசிகரமான ஒன்றை நினைவுகொள்வதைப்போலத் தோன்றுகிறது. ஏனென்றால், அவள் சிரித்துக்கொண்டேயிருக்கிறாள்.

ஹெலன், டாம் என்ற ஆங்கிலேயக் குடிமகனின் கிரேக்க மனைவி. நாக்சோஸ் நகரிலுள்ள உணவுவிடுதியில் பரிமாறும் பெண்ணாக, அவள் ஏதோ அவனுக்காகவும் அயல்நாட்டுப் பயணிகளுக்காகவும் பெருமளவில் தொண்டு செய்வதுபோலப் பரிசாரகப் பணி செய்துகொண்டிருந்தபோதுதான் அவன், அவளைப் பார்த்துக் காதல்கொண்டு, அவளைத் தன்னோடு இங்கிலாந்துக்கு வருமாறு செய்துவிட்டான். இங்கிலாந்து அவளுக்கு முழுதுமாக அயல்நாடென்று கூறிவிடமுடியாது. ஏனென்றால், காம்டென் நகரின் பரந்த கிரேக்க மற்றும் சைப்ரியாட் சமூகத்தில் அவளுக்கு உறவினர்கள் இருந்ததோடு, ஒரு கோடையில்  அவர்களைச் சந்திப்பதற்காக அவள் இங்கு வந்துமிருக்கிறாள். மேரி, திமித்ரியாஸின் ஆங்கிலேய மனைவி. அவள் ஒரு விடுமுறையின் போது ஆன்ட்ரோஸ் நகரிலுள்ள ஒரு சிற்றுண்டியகத்தில் தோழியுடன் கடலைப் பார்த்து வியந்து கொண்டிருந்தபோது, அங்கு பரிமாறும் பணியாளான திமித்ரியாஸ் அவள் மீது காதல்கொண்டான். அவனுக்கும் லண்டனில் உறவினர்கள் இருந்தனர். அவன் இப்போது அர்கோனாட்ஸ் என்ற கிரேக்க உணவுவிடுதியில் பரிமாறும் பணியாளாக இருக்கிறான். விரைவிலேயே அவனது சொந்த உணவகத்தைத் திறக்கவிருக்கிறான். அவன் அந்த உணவகத்திற்கு `திமித்ரீஸ்` எனப் பெயரிடுவான். ஏனென்றால், மேரி, அவனை திமித்ரி என்றுதான் அழைக்கிறாள். அவர்கள் இருவரும் ஹெலனின் டாமுக்குச் சொந்தமான மளிகைக்கடையின் மேல்தளத்திலுள்ள இரண்டு அறைகளில்தான் குடியிருக்கிறார்கள்.

அந்த இருபெண்களும் காலைநேரங்களில், நட்பாக அளவளாவிப் பேசுவது அல்லது ஏதாவது பொருட்கள் வாங்கக் கடைகளுக்குச் செல்வதெனச் சேர்ந்தேயிருக்கிறார்கள். இப்போது ஹெலனுக்கு ஒரு குழந்தையிருக்கிறது. அதனால், அவர்கள் கைக்குழந்தைத் தள்ளுவண்டியை ஏதாவது ஒரு நிழலில் நிறுத்திவிட்டு, அருகிலுள்ள பெஞ்சு ஒன்றில் அமர்வதற்காக பிரிம்ரோஸ் குன்றுக்குச் செல்கிறார்கள். அங்கே வேறு கிரேக்க மற்றும் சைப்ரியாட் இல்லத்தரசிகளும் வருகிறார்கள். சிலநேரங்களில் எல்லோருமாகச் சேர்ந்து அது, ஒரு பெண்கள் சமூகமாகமாகவே மாறிவிடுகிறது. ஆனால் அங்கே எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகச் சிறப்பான தோழிகளாக ஹெலனும் மேரியுமே கருதப்பட்டனர்.

சில மாலைகளில்  ஏதாவது ஒரு அருந்தகத்திலோ, சிற்றுண்டியகத்திலோ, அல்லது உணவுவிடுதியிலோ இந்த இரண்டு இணைகளுமாகச் சேர்ந்து நால்வராகிவிடுகிறார்கள். மேரி, வாழ்க்கையில் எப்போதுமே சரியான தேர்வினை மேற்கொண்டதாக, இதுபோன்ற மாலை நேரங்களில் தனக்குத் தானே மெச்சிப் பாராட்டிக் கொள்வதுண்டு. அதனால்தானே சலிப்புதரும் க்ரோய்டோனிலிருந்து இங்கே எளிதில் சிரிக்கிற, பாடத் தொடங்குகிற, மேஜைகளிலேயே கூட உடனடியாக நடனமாடி மாலையை மகிழ்ச்சியாக முடிக்கிற மனிதர்களோடு இருக்கமுடிகிறது. அதனால்தான் அவளுடைய அம்மா,அப்பா எவ்வளவோ சொல்லியும் அவள் கிரீசுக்குச் செல்லமுடியாதென திமித்ரியாஸிடம் மறுத்துச் சொல்லிவிட்டாள்.

இன்று மேரி வீட்டுக்குப் பரபரப்பும் பரவசமுமாகச் சென்று கண்ணாடி முன் அமர்ந்து ஆராய்கிறாள். அவள் அதுபோல அடிக்கடி செய்வதுண்டு. நன்கு உருண்டு, அழகாகச் சிவந்த கன்னம், கறுத்துச் சுருளும் கேசம், மிகச் சரியான இடங்களில் செல்வச் சிறுகுழிகளுமாக, அவள் அழகாக இருக்கிறாள். திமித்ரி, கூட அவளை ‘என் சின்னக் கறுப்புத் திராட்சையே’ என்றுதான் அழைக்கிறான். ஆனால், அவளது கண்கள் சாம்பல் நிறம். அவளுக்கு மட்டும் அந்தக் குளுமை தவழும் ஆங்கிலேயக் கண்கள் இல்லையென்றால், அவளை கிரேக்க இரத்தமென்றுதான் நம்பியிருப்பேனென அவன் சொல்கிறான். அவனுடைய கறுப்புக் கண்கள் எளிதில் கனன்று தீப்பிழம்பாகிப் பழிதீர்ப்பவை. நறுமணச் சிறு புட்டிகள், உதட்டுச் சாயக் குச்சிகள், கண்மைச் சிமிழ்களுக்கிடையே முன்கை மூட்டுகளை ஊன்றி முற்சாய்ந்து, பல்வேறு முக பாவனைத் தோற்றங்களில் மேரி முயன்று பார்த்தாள். அவள் புன்னகையற்ற, இமைமூடாத உறுத்து நோக்கும் பார்வையொன்றைப் பதிக்க, அது, அவளையே பயமுறுத்துவதாக இருக்கின்றது. அவள், ஹெலன் முகத்தின் உறுத்தும் பார்வையைக் காண்பதற்காகக் கண்களை மூடுகிறாள். ஆனால் தோல்வியடைகிறாள். ஏனென்றால் ஹெலன் சிரிக்கமட்டுமே செய்கிறாள். மேரி ஹெலனை நினைத்து வியக்கிறாள். அப்படிச் சொல்வது மிகமிகக் குறைத்து இலேசாக்கிச் சொல்வதுதான். ஒருநாள் திமித்ரி ஏதோ சொன்னானென்று, மேரி ஒரு நூலகத்துக்குச் சென்று `குழந்தைகளுக்கான கிரேக்க புராணங்கள்` என்ற புத்தகத்தில்,  ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஹெலன் என்ற ஒரு பேரழகி இருந்ததாகவும், அவளுக்காக ஆண்கள் ஒரு பெரிய யுத்தமே தொடங்கினார்களென்றும் படித்தாள். கிரீசில் பெற்றோர்கள் அவர்களின் சிறு பெண்குழந்தைகளை, சர்வ சாதாரணமாக பெற்றி, ஜோன் என்பதுபோல ஹெலன் என்றுதான் அழைக்கிறார்களாம். மேரிமாதா கடவுளின் அன்னையாயிற்றேயென ஹெலன், மேரிக்குச் சொன்னாள். ஆனால், மேரி, மதத்திற்குள்ளெல்லாம் புகுந்து உண்மையிலேயே அவ்வளவாகப் பார்ப்பதில்லையென்றாள்.

 அது சரி, ஹெலனின் அமைதியான கண்கொட்டாப் பார்வையென்கிற யோசனையை திமித்ரியாஸின் மீது பரிசோதித்துப் பார்க்கவேண்டுமென்று மேரிக்கு ஏன் தோன்றிற்று? அதுதான் பிரச்சினை. மேரிக்கு, வாழ்க்கைமீது மட்டுமல்லாமல், தன்மீதுமேகூட நிறைவற்ற, குடைந்துகொண்டிருக்கிற ஒரு அதிருப்தி. அது அவளது கணவனுக்கு எதிராக, ஒரு குற்றச்சாட்டு போல மாறுகிறது. அவள் இப்படி ஏன் நினைக்க வேண்டுமெனத் தனக்குத் தானே வினவிக்கொள்கிறாள். இருந்தாலும், தான் நினைப்பதையே சார்ந்திருப்பதென முடிவுசெய்கிறாள். திமித்ரிக்குத் திருப்தியில்லை. அவன் குடும்பத்தை உடனடியாகத் தொடங்கவேண்டுமென்கிறான். அதிலும் நண்பர்கள் டாமும் ஹெலனும் குழந்தையோடிருப்பதைப் பார்த்து, இப்போதே குழந்தை வேண்டுமென்கிறான். ஆனால், மேரியோ, ‘’ முடியாது, குழந்தைக்கு இப்போது என்ன அவசரம்? கொஞ்சம் பொறுக்கலாம்.’’ என்கிறாள். அவள் உண்மையிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறாளா? அதுவும் விரைவில். ஆனால், அவள், தன் அழகு பறிபோய்விடுமோவெனப் பயப்படுகிறாள். அவள் தினந்தோறும் கவனிக்கிற பெண்களுக்கு அப்படித்தானேயாகிறதென அவள் நினைக்கிறாள். அந்தப் பெண்களுக்குக் குழந்தை இருக்கிறது….. நல்லது, நான் அப்படியெல்லாம் இருக்கப்போவதில்லை. ஆனால், ஹெலன் அப்படியா ஆகியிருக்கிறாள்? இல்லைதானே! அவள் அச்சு அசலாக, அப்படியே இருக்கிறாளே! அந்தக் குழந்தை ஏதோ ஆகாயத்திலிருந்து வந்தது போல, யாரோ அவளை நோக்கித் தூக்கியெறிந்த பரிசினை அவள் `கேட்ச்` பிடித்துக்கொண்டது போல அல்லவா இருக்கிறது! மேரி மாத்திரை சாப்பிடுகிறாள். அதற்கு மட்டும் அவள் மறப்பதேயில்லை. ‘’ ஒருநாளைக்கு இதுகளையெல்லாம் தூக்கிக் குப்பைத் தொட்டிக்குள் எறிகிறேனா, இல்லையா, பார்!’’ என்கிற மாதிரி, திமித்ரி என்னென்னவோ சொல்கிறான். அந்த நேரங்களில் அவனுடைய குரல் கரகரத்து, முரட்டுத்தனமாகி எரித்துவிடுவதுபோல் கண்கள் கனலும் கணங்கள் அவளைத் திகிலடையச் செய்வதோடு முன்காலத்து நாட்களையும் நினைவூட்டுகிறது.

அவள் ஹெலனிடம், ‘’ டாம், இப்போதும் உன்னிடம் முன்னைப் போல, அப்படியே இருக்கிறாரா?’’ என்று கேட்கிறாள். ஹெலன் உடனேயே புரிந்துகொண்டு, களிமண்ணைக்கூட மேலானதென்றாக்கிவிடுகிற மேரியால் புரிந்துகொள்ளமுடியாத, மயக்குகின்ற வாழ்க்கை ரகசியம் ஏதோ ஒன்று அவளிடம் இருப்பதை ஒப்புக்கொள்வது போல, ஒரு சிரிப்புடன் ‘’ என்ன இருந்தாலும், அவர் ஒரு ஆங்கிலேயராயிற்றே, இல்லையா? நாங்கள் முதன்முதலில் தொடங்கியபோது எப்படியிருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறார்.’’ என்றாள். அவள் திறந்த மனதோடு மேரியிடம் சில கேள்விகளைக் கேட்க, அது சாமர்த்தியமற்ற செயலென  மேரி நினைத்துக் கொண்டிருக்கும்போது, ‘’ சில விஷயங்களை நீ புரிந்து கொள்வதில்லை, மேரி. கிரேக்கத்து ஆண்கள் காதல் விளையாட்டில்  உணர்ச்சிகளைக் கொட்டித் திக்குமுக்காடச் செய்பவர்கள். அவர்கள் தாராளமாக முத்தமழை பொழிவார்கள். அதோடு நிறையப் பரிசளிப்பவர்கள். ஆனால், திருமணமாகிவிட்டால், நீ அவர்களுக்கு வெறும் மனைவியாகிவிடுகிறாயே.’’ என்கிறாள், ஹெலன்.

கோடையில் மேரி ஆண்ட்ராசிலிருந்தபோது, திமித்ரியாஸ் மலர்கள், நறுமண சோப்புகள், சாக்லேட்டுகளைக் கொண்டுவந்து குவித்தான். அதோடு அவள் அழகாயிருப்பதாகச் சொன்னான். அவளைப்போல வேறு எந்த ஒன்றையும் அவன் கண்டதேயில்லையென்றான். அவளை நிலவொளியில் முத்தமிட்டான்; அதிலும் ஒரு இரவில் அவள் கைகளை முத்தங்களாலேயே மூடி நிறைத்தது மட்டுமல்லால் கொதிக்கின்ற கண்ணீராலும் கழுவினான். அதுவே அவள் வாழ்க்கையில் நிகழ்ந்த அல்லது நிகழவிருக்கிற எல்லாவற்றையும்விட அற்புதமானதென அப்போதே மேரிக்குத் தெரிந்தது. அதுதான் இப்படியாகிவிட்டதேயென அவள் அமைதியைக் குலைத்தது. திமித்ரியாஸ் அப்போது எப்படி, என்னவாக இருந்தான்? அவன் இப்படியாவானென யார் கண்டது – என்றே அவள் உள்ளுக்குள் மறுகினாள். அவன் தூங்கும் போது, அவனைப் பார்த்துக்கொண்டே, இது ஏன் இப்படியானதென நினைத்தாள். ஆனாலும், மூன்று வருடங்களுக்கு முன் அந்தக் கோடையில் அவன் எப்படி நடந்துகொண்டானென்று அடிக்கடி நினைப்பாள். இப்போது அவன் எந்த ஒரு ஆங்கிலேயனையும் போல, டாமைப் போல, விவேகமானவனாகிவிட்டான். டாம் ஹெலனை முன்புபோல் காதலிக்கவில்லையென மேரி நினைத்து விடாமலிருப்பதற்காகவே, டாம் படுக்கை விளையாட்டை மிகவும் விரும்புவது அதிர்ஷ்டமானதென ஹெலன் சொல்லிச் சிரித்தாலும், அவளும் டாமை நினைத்துப் பெருமூச்சு கொள்வதாகவே மேரி நினைத்தாள்.

இது எல்லோருக்கும்  நடக்கிற கதைதானே என நினைத்த மேரி, ஹெலன் ஏன் டாமின் காதலை ஒப்புக்கொண்டாளென வியந்தாள். அவன் நன்றாக, எல்லாம் சரியாக இருக்கிறான்; பார்வைக்கும் மோசமான தோற்றமில்லை. அவன் என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறான் என்கிறாள், ஹெலன். ஆனால், நிச்சயமாக அவளும் ஏதோ ஒரு கட்டத்தில் டாம் சலிப்பூட்டுவதாக நினைத்திருப்பாள்?

ஆனால், திமித்ரி இப்போதும் மேரியைக் காதலிக்கிறானா?

அன்று இரவு, அவன் படுக்கையில் அவளை நோக்கி உருண்டு திரும்பியபோது, அவள், ‘’ இல்லை, நான் அதை விரும்பும் நிலையில் இல்லை.’’ என ஹெலன்  கேலி, கிண்டலாகப் பேசுவது போன்ற குரலில் முயற்சித்துச் சொன்னாள். ஆனால், அவள் அதில் வெற்றி பெறவில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். அவள் அதற்கு முன்பு, எப்போதுமே ` வேண்டாம் ` எனச் சொன்னதில்லை; அவள் படுக்கை விளையாட்டை விரும்பவும் செய்தாள். அவள் என்னவோ மணவிலக்கு கேட்டுவிட்டது போல, அவன் ஆச்சரியப்பட்டுப்போனான். உனக்கு என்னவாகி விட்டதென அவன் கேட்டான். அவன் என்ன கேட்டிருக்கவேண்டுமென்றால், ‘’ நான் என்ன தவறு செய்தேன்?’’ என்றுதான்.  அவன் ஒருவேளை அப்படிக் கேட்டிருந்தாலுங்கூட அதற்கு என்ன பதில்சொல்வதென அவள் தெரிந்திருக்க வில்லையென்றாலும் அவன் அப்படித்தான் கேட்டிருக்க வேண்டும். அவள் அவனுக்கு முதுகைக் காட்டித் திரும்பிப் படுத்துக்கொண்டாள். அப்படிச் செய்வது அவளை எந்தளவுக்குத் துன்புறுத்துமோ அதே அளவுக்கு அவனையும் துன்பங்கொள்ளச்செய்யுமெனத் தெரிந்தும் அவள் அப்படித்தான் செய்தாள். அவளது தோள்களின் மீது அவனது குழம்பிப்போன, காயம்பட்ட பார்வையை அவளால் உணரமுடிந்தது. அவன் எதையோ முணுமுணுத்தான்; அது அவள் காதுகளில் விழவில்லையென்பதே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவனும் அவளைப் போலவே விழித்துக்கொண்டுதான் படுத்திருந்தான்; ஆனால் இருவருமே தூங்குவது போன்ற நடிப்பிலிருந்தனர்.

அடுத்த நாள் காலையில் அவன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு அவளை நோக்கிக் குற்றம் சுமத்தும் பார்வைக்கணைகளை வீசிக் கொண்டேயிருந்தான். அது நிகழ்ந்த அன்று சனிக்கிழமை. அன்று இரவு இரண்டு இணைகளுமாக ஒரு அருந்தகத் தோட்டத்துக்குச் சென்று மது அருந்தினர். பின்னர், அவர்கள், திமித்ரி பரிமாறும் பணியாளாகப் பணிபுரிகிற விடுதிக்கே இரவு உணவுக்குச் சென்றனர். ஆனால், அன்று அவனுக்கு இரவு ஓய்வு. குடும்பச் செலவுக்குத் தேவைப்படும் சிறிய அளவு பணத்துக்காகச் சில வேளைகளில் அந்த விடுதியில் பரிமாறுபவர்களாகப் பெண்கள் பணிபுரிந்தனர். எல்லோருக்கும் அவர்களைத் தெரிந்திருந்தது. அவர்கள் கையசைத்தனர்; அல்லது வாழ்த்துச் சொல்லினர்; அல்லது அருகில் வந்து தள்ளுவண்டியில் தூங்கும் குழந்தையைப் பார்த்து முகமலர்ந்து, மெச்சிப் புகழ்ந்து பாராட்டினர். டாமின் தோளில் ஹெலன் எப்படித் தோய்ந்து, தொங்குகிறாளெனப் பார்த்துக் கொண்டிருந்த மேரி, அவர்கள் இருவரும் வீடுபோய்ச் சேர்ந்த நிமிடத்திலேயே காதல்விளையாட்டைத் தொடங்கிவிடுவார்களென நினைத்தாள்.

திமித்ரியாசும்  மேரியும் வீட்டுக்குச் சென்றதும் அவன், ‘’இன்று இரவுக்கு நீ அதை விரும்பாத நிலையில் இருக்கமாட்டாயென நினைக்கிறேன்.’’ என்றான். அந்தக் கிண்டலை அவன் விகாரமான வசையாகச் சொல்லவே, ‘’ இருப்பேன் அல்லது இருக்கமாட்டேன்’’ என அவள் அலட்டிக்கொள்ள வசதியாக அமைந்தது. ஆனாலும், படுக்கைக்கு வந்ததுமே அவள் தனக்குத்தானே ஏதும் குற்றம்சொல்லிப் புலம்ப முயற்சிக்காதபடி அவன், அவள் மீது பாய்ந்தான். ஆனால், அவள் அதை விரும்பாத உணர்வில் இருப்பதாகச் சொல்வதனால் பயனொன்றுமில்லையென இருவருக்குமே நன்கு தெரிந்திருந்தும் அவள் அதைத்தான் சொன்னாள். பிற்பாடு அவன், ‘’ எனக்கு எப்போதுதான் குழந்தை பெற்றுத் தரப்போகிறாய்?’’ எனக் கேட்கும்போது அவள் எப்போதுமே பயப்படுவதும் உணர்ச்சிவசப்படுவதுமாகிய ஒரு காரியத்தை, அவன் செய்துகொண்டிருந்தான்: அவள் கைகளிலிருந்த திருமண மோதிரத்தை, அவன் எங்கே கழற்றியெறிந்துவிடுவானோ என அவள் பயப்படுகின்ற அளவுக்குத் திருகித் திருகிச் சுழற்றிக்கொண்டிருந்தான். இதற்கு முன்பு ஒருபோதும் அவன் இந்த அளவுக்குப் பொறுமையிழக்கின்ற மாதிரி அவள் நடந்துகொண்டதில்லையென்று அவளுக்குத் தெரிந்திருந்த போதிலும் ‘’பார்க்கலாம்.’’ என்றுதான் அவள் பதில் சொன்னாள். அடுத்த கணம், தான் வன்புணர்வுக்கு ஆளாகிக் கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருந்ததை அவள் கண்டாள். அதற்கு வேறு வார்த்தை அல்லது மாற்று ஏதும் இல்லை. அவள் அண்மையில் பாலுறவுகளிலிருந்தும் நழுவிச் சென்றிருந்ததால், அந்தப் புணர்வில் சிலிர்த்து முழுதுமாக உருகிக் கரைந்துபோயிருந்ததை அறியாமல், அவள் காதில் ‘’ பொட்டை நாயே, எனக்குக் குழந்தை வேண்டும். இப்போதே! பத்தாண்டுக்குப் பிறகல்ல!’’ என்று மட்டும் அவன் கரகரக்காமலிருந்திருந்தால்,  ‘’ சரி,   ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்’’ என எளிதில்  கூறியிருப்பாள்.

அடுத்த நாள் காலை உணவின்போது அவள் ஒரு  வார்த்தைகூடப் பேசவில்லை. அவனும் அதைக் கவனிக்கவில்லை. அவன் அவனுடைய டோஸ்ட், பழப்பாகு மற்றும் காப்பியில் கண்ணாக இருந்தான். பதினோரு மணி வரையிலும் அவன் விடுதிக்குச் செல்ல வேண்டியதில்லை. இதுதான் அந்த நாளின் அவர்களுக்கான மிகச் சிறந்த நேரம்; அவன் பணிக்குச் செல்வதற்கு முந்தைய மணிப் பொழுது. அவர்கள் பேசுவார்கள்; அப்படிப் பேசாமலிருந்தாலும் செய்தித்தாள் வாசிப்பார்கள்; சில நேரங்களில் மீண்டும் படுக்கைக்குச் செல்வார்கள். குழந்தை பிறந்தபிறகு காலை நேரங்கள் மீண்டும் இதுபோல இருக்கப்போவதில்லை. இதை அவள் அவனிடம் கூற, அவன் சொன்னான், ‘’ சரி. அதனாலென்ன?’’ அவன் இப்படிச் சொன்னது, அவன் அவளைக் காதலிக்கவில்லையென நினைக்கச் செய்தது. காலை உணவு முடியும் வரைக்கும் அவன் அவளது மவுனத்தை உணரவில்லை என்பதல்ல இதன் பொருள். அவன் தலையைத் தூக்கி அவளைக் கடுமையாக நீண்டநேரம் நோக்கியபோது, அவள் பதிலுக்குத் திருப்பி இதமற்று நோக்கினாள். பின்னர், அவள் அதை அப்படியே, முன்பு கண்ணாடியில் பழகியதுபோல இமைக்காமல் அவனை உறுத்துவதைப் போல் நோக்குவதைத் தொடர்ந்தாள். ‘’என்ன இழவு?’’ என்று அவன் கேட்டான். ‘’ என்ன…..?’’ அவள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவன் முன்னே அமர்ந்து அப்படியே அவனை உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அது அவனை வெறிகொள்ளச் செய்ததைக்  கண்டு, உள்ளுக்குள் பரவசம் கொண்டு சிலிர்த்தாள். அவள் எதை நினைத்து என்ன செய்து கொண்டிருக்கிறாளென அவன் வியந்து, குற்றம் சொல்லிக் கேட்டதற்கும் அவள் ஒரு வார்த்தைகூடப் பதில் சொல்லாதபோது, அவன் ‘’ பொட்ட நாயே!’’ எனக் கத்திவிட்டு வேலைக்குப் போய்ச் சேர்ந்தான்.

ஒரு அருந்தகத்தின்  வெளியில், இதமான வெயிலில், தள்ளுவண்டிக் குழந்தை நடுவிலிருக்க, மேரி, ஹெலனோடு சென்று அமர்ந்தாள். உண்மையில் நானொன்றும் குழந்தை பற்றிப் பெரிதாக எண்ணவில்லையென அவள் நினைத்துக்கொண்டாள். மாத்திரை சாப்பிடுவதை விட்டுவிடப்போகிறேன்; என்னதான் ஆகிறதென்று பார்த்துவிடலாமே! ஆனால், இதை திமித்ரிக்குச் சொல்லப் போவதில்லை. குழந்தைக்காக என்று சொல்லி, நான் ஒன்றும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை.

‘’நீங்கள் எவ்வளவு நேரத்துக்கு அப்படியிருப்பீர்கள்? ‘’ அவள் மிக இயல்பாகத் தெரியவேண்டுமென முயற்சித்துக் கேட்டாள். ஆனால், ஹெலன் உடனேயே புரிந்துகொண்டு, ‘’ ஓ, அது ரொம்ப நேரத்துக்கில்லை – எவ்வளவு நேரம் என்னால் முடியுமென்று பார்ப்பேன். ஏனென்றால் நான் விட்டுக்கொடுக்க விரும்புவேன். அதனால் அதனைத் தொடர்வதில்லை.’’

எல்லாவற்றையும்  ஹெலன் எப்படி, இப்படி மிக எளிமையானதாக எடுத்துக் கொள்கிறாள்? எதுவானாலும் ஒன்றுமேயில்லையென்பதுபோல் ஏதோ ஒரு வேடிக்கைப் பேச்சு போலப் பேசுகிறாள். எனக்கு ஏன் அப்படி எளிய ஒன்றாகத் தெரியவில்லை? மேரி அமைதியாக, ஹெலனின் நீண்டு மெலிந்த இளம்பழுப்புநிறக் கால்கள், மெலிந்த இளம்பழுப்புக் கைகள், அந்தக் கறுப்பு உடை அவள் மீது பொருந்தும் அழகு, தோள்களில் தளர்வாகத் தொங்கிப் பளபளக்கும் கறுப்புக் கேசம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே கனக்கும் இதயத்தோடு எண்ணிப்பார்க்கிறாள். அந்த உடை என்மீதென்றால் ஒரு குப்பலாகத் தெரியும் …. குழந்தை சிணுங்கத் தொடங்கியது. ஹெலன், எந்தச் சிக்கலுமில்லாமல், குழந்தையைத் தூக்கி, அணைத்து இயல்பான பார்வையில் ஏதோ ஒரு கிரேக்க மழலைப் பாட்டினை அவளுடைய ஆழ்ந்த கவர்ச்சிக்குரலில் பாடுகிறாள். குழந்தை அழுகையை நிறுத்தியது. அதன் மென்மையான சிறிய தலை மேரியின் அருகில் ஒருசில அங்குல தூரத்திற்குள்ளேயே இருந்தது. மென்மையும் இனிமையும் இதயத்துக்கு நெருக்கமுமான குழந்தை மணம், அவளை அழவேண்டும்போலச் செய்தது. ‘’ஓ, இல்லை, நான் அழக்கூடாது, ஓ, இல்லை’’ யென அவள் நினைக்க – ஹெலன் மிக இயல்பாக, அணைத்திருந்த குழந்தையை அவளிடம் நீட்டி, ‘’ நான் கழிவறைக்குச் செல்கிறேன்.’’ என்றதோடு,  கறுப்பு லினன் அவளைச் சுற்றி அசைய ஓரடி கூட எடுத்து வைத்துவிட்டாள்.

எங்கள் குழந்தைக்கு, திமித்ரி கிரேக்கப் பாடல்களைப் பாடுவானென எண்ணுகிறேனென மேரி நினைத்துப்பார்த்தாள். ஹெலனும் திமித்ரியாசும் `கிரீக்`கில் பேசிக்கொள்ளும்போது மேரி கவனித்திருக்கிறாள். கபாப், தரமசால், ரெட்சினா போன்றவற்றையல்ல அவள் பேசுவது, அவையெல்லாம் இங்கே, லண்டனிலேயே கிடைக்கின்றன; ஆனால், அந்த ஆழ்நீலக் கடல் மீதான வெயில், வெதுவெதுப்பான பாறைகள், ஆலிவ் மரங்கள், பாடல்கள்! அந்த இரண்டு கிரேக்கர்களும் பேசிக்கொள்ளும்போது, டாமும் மேரியும் – இருவருக்குமே ஒரு சில கிரீக் வார்த்தைகளைத் தவிர வேறு ஏதும் புரியாது – அவர்கள் இருவரும் மணம் செய்துகொண்டிருக்கும் இந்த இருநபர்களும் சிலவேளைகளில் அவர்களுக்கும் அந்நியர்களோவெனச் சிறு புன்னகையைப் பரிமாறிக் கொள்வார்கள்.

வழக்கம்போலத்  தாமதமாக, திமித்ரியாஸ் நடுஇரவும்  தாண்டி வீட்டுக்கு வந்தபோது, மேரி அவனிடம் பேசவில்லை. ஆனால் படுக்கையில் உட்கார்ந்து, அவன் அறைக்குள் தட்டுத்தடுமாறி, திட்டிக்கொண்டே அவனது உடைகளைக் கழற்றியெறிந்து, பின்னர் படுக்கையில் விழுந்து அவளுக்கு முதுகைக்காட்டித் திரும்பிப் படுக்கும்வரை அவனையே உறுத்துப் பார்த்தாள். பின்னாலிருந்து அவனை இரண்டு கைகளாலும் சுற்றி வளைத்து, எப்போதும் அவன் விரும்பிச் செய்யச்சொல்கிறபடி, அவன் காதைக் கரம்பிப் பின் முத்தமிட்டு, அவன் கழுத்தைக் கௌவிக் கடிக்க விரும்பினாள். முதல்முறையாக அவள் அப்படிச் செய்தபோது, அது ஒரு வேலியைத் தாண்டி இருட்டுக்குள் குதிப்பதாக இருந்தது. அது ஏனென்றால், அதுவரையிலும் இல்லாத ஒரு செயலாக – அவள் எப்போதுமே `சரி` என்று சொல்பவளாக இருக்கவே விரும்பினாள் -  அவளாக முன்முயற்சி யெடுத்திருந்தாள். ஆனால், அதன் தொடர்ச்சியாக ஒரு புயல்வேகப் புணர்ச்சி நடந்தேறியது. ஆனால், அது எப்போதுமே அப்படித்தான் நடக்குமென்பதில்லை:  ஒருமுறை, எல்லாவற்றுக்கும் நான் `ஆமாம்` போடுவேனென்று நீ நினைத்துக் கொள்ளும்படி நான் விட்டுவிடப் போவதில்லை, என்றான், அவன். அது குத்தல் பேச்சு என அவள் நினைத்தாள். அவன் ஒரு கரடுமுரடான, சண்டைப் பேர்வழியென நீங்கள் நினைக்கலாம்; ஆனால், அதையே எளிதில் உணர்ச்சிவசப்படுகிற, தொட்டாற்சிணுங்குகிற அவனுடைய மென்னயப் போக்கு என அவள் கண்டு, வியக்கவும் செய்தாள். சாதாரணமான ஒரு அணைப்பினை, தழுவிக் கொள்ளுதலை எதிர்பார்க்கிற அவள், பாலுறவுக்கு ஆசைப்படுகிறாளோவென அவன் நினைத்துவிடக்கூடாதென அவள் வெட்கப்படவோ அச்சங்கொள்ளவோ செய்யலாமென அவனுக்குத் தோன்றியதால், அவளாகவே ஒரு முடிவுக்கு வரட்டுமென அவன் அசையாதிருந்தான்.  ஹெலனின் சிறுசிறு தொடுகைகள் மற்றும் வருடல்கள், டாமின் முகத்தில் வியப்பு மற்றும்  ஆர்வம் விளைவிப்பதை மேரி கண்டிருக்கிறாள். அதையே – ஹெலனைப் பார்த்திராவிட்டால் அப்படியான ஒன்றைப்பற்றி அவள் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டாள் – திமித்ரியிடம் முயற்சிக்க நினைத்தாள், அவ்வளவுதான். இப்போது அவள் திமித்ரியின் அருகில் விறைப்புடன் படுத்திருக்கையில், ஒருநாள் இரவு கணவனைச் சுற்றிக் கைகளைப் போட்டுக்கொண்டு காலைவரையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது; அடுத்தநாள் இரவிலோ அவனைக் கைகளால் தொடக்கூட முடியாமல்போகிறது; பிறகெங்கே முத்தமிடுவதும், கவ்விக்கடிப்பதுமென நினைக்கிறாள்.

இரவு முழுவதற்கும் அமைதியாகவே இருந்தாள்; அடுத்த நாள் காலை வரையிலும்கூட அவள் தூங்கவேயில்லை. காலை உணவின்போதும் அமைதியாக இருந்தாள். ஆனால், இப்போது அவள் பயந்திருந்தாள். அவள், அமைதியாகக் கண்கொட்டாமல் அவனையே பார்த்திருக்க, அவள் விழிகளைப் பார்ப்பதைத் தவிர்த்த அவன் சிலமுறை அவளை நோக்கியபோது, அவன் கண்களில் அச்சம், கோபத்தோடு என்னவென்று புரியாத வியப்புமிருந்தது. ஆனால், அவளின் அதிருப்தி கண்டு வெருண்டுபோன அவனையே குற்றம் சொல்வதுபோல்,  அவன் மீது மட்டுமல்லாமல் எதிலுமே திருப்தியில்லாத அவள் நிலை, ஒவ்வொரு நிமிடமும் அவன் பயத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. அவளது செய்கை அதற்கு அப்படி எரியூட்டிக்கொண்டிருந்தது. அவன் இன்னும் நல்லதாகச் சீர்கொள்ள வேண்டும்.    அவள் கைகளில் முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்து, வருத்தம் சொல்லியிருக்கவேண்டும்.

அன்று இரவு அவன் உணவகத்திலிருந்து வந்தபோது, தூங்கிவிட்டது போலக் மிகக்கவனமாகக்  காட்டிக்கொண்டாள். தூங்கும்போது ஒருவேளை அவன் முத்தமிடலாம் – அவள் தூங்கும்போது, பலமுறை அப்படிச் செய்பவன்தான் – அவள் அவனைக் கைகளால் சுற்றிக்கட்டித் தன்னிடம் இழுத்துக்கொள்வாள். ஆனால்,  அன்று அவன் முத்தமிடவேயில்லை.

மறுநாள் காலை உணவின்போது, அங்கே உட்கார்ந்திருந்த அவளது வெறிக்கும் முகம் ஒரு ரேடாரின் வட்டவடிவ அலைவாங்கியைப் போல  அறை முழுதும் அவன் பின்னாலேயே செல்வதை அவளால் உணர முடிந்தது. ஆனாலும், அவன் அவள் மீது பார்வையைத் திருப்பவேயில்லை. அவன் முட்டாள்தனமாக நடந்துகொள்வதாக அவள் நினைத்தாள். என் முகத்தில் ஒரு புன்சிரிப்பு இல்லையென்பதற்காக, நான் பேசவில்லை யென்பதற்காகவா இப்படி? – ஆனால், நான் உள்ளுக்குள் அப்படியேதானே இருக்கிறேன், இல்லையா, என்ன? அதற்கிடையில் அவன் தடுமாறி எது எதையோ கீழே விழத் தள்ளினான்.  அவள் ஏதோ ஒரு சாபத்தை அவன் மீது ஏவிவிட்டதைப்போல அவன் தோன்றினான். அவன் காப்பியைக் குடிக்காமலே வீட்டைவிட்டுச் சரேலென வெளியேறினான். மறுநாள் காலையில் அவன் விழிக்கும் முன்பாகவே அவள் விழித்து, அது எந்தமுறையில் நடக்குமென்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாளோ, அப்படி அது நடக்கவிடாமல், படுக்கையை விட்டும் நழுவவிருக்கும்போது, அவன் படுக்கையிலிருந்தும் எழுந்து நிமிர்ந்து உட்கார, அவள் அந்த அன்னத்தூவி மெத்தையின் ஓரத்தில் அமர்ந்த அவனையே நோக்கி வெறிக்குமாறு தன்முகத்தை நேர்செய்து கொண்டிருந்தாள். அவன் ஏதோ திகில் கனவு கண்டதுபோல் கூச்சலிட்டுப் பின் தேம்பத் தொடங்கினான், ‘’ நீ ஒரு குரூரமான பெண், மேரி. நீ ஒரு கொடூரமான, மிகக் கடுமையான பெண்.’’ அன்று இரவில் அவன் பெருமூச்சும் முனகலுமாகப் புரண்டுகொண்டிருந்தவன், திடீரென கிரீக் மொழியில் கத்தினான். அது ஏதோ சாபமிடுவதுபோலத் தோன்றியது. அவள் பயந்துவிட்டாள். அவன் அவளைக் கொன்றுவிடுவான். இல்லை, அப்படி அவள் நினைத்தாள். பின்னர், இல்லை, அவளொன்றும் மன நடுக்கத்தின் அருகில்கூட இல்லை. ஆனால் `இதற்கு நான் முடிவு கட்டுவேன்` எனத் தீர்மானித்தாள். அதுவே போதுமானது. ஆனால், அதை அவளால் நிறுத்த முடியவில்லை. எதற்கும் மசியாத, குற்றம் சுமத்தும் வெறித்த பார்வை அவள் முகத்தில் ஒட்டிக்கொண்டது. சரி, நான் நல்லதை நினைத்துத்தானே இப்படித் தொடங்கினேன், அப்புறமென்ன? என அவள் நினைத்தாள்.

நாட்கள் கடந்தன. ஒருநாள் மாலை நான்குபேரும் ஒன்றாக இருக்கும்போது,  திமித்ரியை, தான் பொருட்படுத்தாமலிருப்பதையும், அவன் அவள் பார்வையைத் தவிர்க்க, என்னென்ன முடியுமோ அத்தனையையும் செய்து கொண்டிருப்பதையும் யாரும் கவனிக்கமாட்டார்களென மேரி நினைத்தாள். ஆனால், எல்லாவற்றையும் ஹெலன் கண்டுகொண்டாள்.

அடுத்த நாள் மேரி, ‘’ எவ்வளவு நாட்கள்தான்  நீங்கள் அதைத் தொடர்ந்து  செய்வீர்கள்?’’   என ஹெலனிடம் கேட்டாள்.

‘’ ஒரு பகற்பொழுதுக்கும் மேலாக நான் ஒரு போதும் அதைத் தொடர்வதில்லை. நல்லது, நான் அவரை நேசிக்கிறேனில்லையா?’’ பிடி கொடுக்காமல் பேசித் தவிர்க்க முயற்சிப்பது போல அவள் குரல் ஒலித்தது.

மேரி அந்தச் சிகிச்சையைத் தொடங்கி, இப்போது  மூன்று வாரங்களாகி விட்டன. அவள் கலவரப்பட்டுப் போனாள்; வெளியே எங்கும் செல்வதில்லை; ஆனால், உட்கார்ந்து அழுதுகொண்டேயிருந்தாள். பின்னர் அமைதியாக உட்கார்ந்து வெறித்துக்கொண்டிருந்தாள்; திமித்ரியைப் பார்த்து அல்ல; அவன் எங்கே அங்கிருக்கிறான்? சுவரைப்பார்த்துத்தான் வெறித்துக்கொண்டிருந்தாள். என்ன நடக்கிறதென்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அது பயங்கரமாக இருந்தது. அவள் கணவனை இழந்துவிட்டாளா? அவன் மிகவும் பின்னிரவு ஆகாமல் வீட்டுக்கு வருவதில்லை. ஏனென்றால்  பொழுதுக்கும் குடித்துக் கொண்டேயிருந்தான். அவன் வீட்டுக்குள் சுழன்று தடுமாறியபோது அவள்மீது வசைமாரி பொழிந்துகொண்டிருந்தான் – கிரீக்கில். பின்னர் ஒரு நாள் இரவில் வீட்டுக்கு வரவேயில்லை.

‘’ உனக்கும் திமித்ரிக்கும் என்னதான் நடக்கிறது?’’ தெருவில் பார்த்த  மேரியிடம் கேட்டான், டாம். ‘’ உங்களுக்குள் என்ன சண்டையா?’’

‘’ அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே.’’ எனப் புன்னகையோடு மேரி  சொன்னாள். ஆனால் உள்ளுக்குள், அவள் வாழ்க்கை பொடிப்பொடியாகச்  சிதறிப் பாழாகிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

அன்று இரவு படுக்கையில் அவளது குடிமயக்கக் கணவன் மீது கைகளைச் சுற்றிப் பின்பக்கமாக ஒன்றி அணைத்து, முகர்ந்து சொன்னாள், ‘’ வா, திமித்ரி, சண்டை வேண்டாம்.’’ ‘’ எங்கேயாவது, நரகத்தில் போய்விழு,  சனியனே!’’ என்று அவன் கத்திச் சத்தமாகத் தேம்பித்தேம்பி அழுதான். அதுவே அவளை வெறுப்புகொள்ளச் செய்தது. பின்னர் திடீரென்று அப்படியே விழுந்து உறங்கிப்போனான். காலையில் அவள் படுக்கையிலிருந்தும் முன்னமே எழுந்து காலைக்கான உணவைத் தயாரித்து மேஜையில் வைத்தாள். அவன் குளியலறையிலிருந்தே வெளியே செல்லுவதற்கான உடையணிந்து வந்தான். அவன் தலை தெரிந்த உடனேயே, வாசலிலேயே மறித்து, ‘’ உனக்காக அற்புதமான உணவு தயாரித்திருக்கிறேன்’’ என்றாள்.

அதைக் கேட்டதும்  அவன் சிரித்தான், ஆனால், அது  குரைப்பதைப் போலிருந்தது. அவளைப் பார்த்து ஒருவிரலைக் கிண்டலாக அசைத்து, ‘’ அட,  பேசுகிறாயே! உனக்குத்தான் என்னைக் கண்டதும் வார்த்தைகளெல்லாம் எங்கேயோ போய் முடங்கிக்கொள்ளுமே, வாயை மூடு, நான் எதையும் கேட்கத் தயாரில்லை.’’ என்றான். அத்தோடு வெளியேறினான்.

ஹெலனைத் தேடிப் போனாள், மேரி. இல்லத்தரசிகளும் குழந்தைகளுமாகக் குழுமியிருந்தவர்களின் நடுவில் குழந்தையும் கையுமாக அவள் அமர்ந்திருந்தாள். அவர்கள் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். குழந்தைகள் குதியும் கும்மாளமுமாக மெல்லோட்டமோடிக்கொண்டிருந்தார்கள். அது ஹெலன் தானா? அவளுக்கென்ன உடம்பு சரியில்லையா? அல்லது வேறெதுவுமா? அவள் மெலிந்திருப்பதாகத் தோன்றினாள். பாலூட்டுகிற மார்பு மொத்தையாக, ஏன், அசிங்கமாகக்கூடத்தான் தெரிகிறது. ஹெலனைப் பார்த்தபடி நின்று அவள் நினைத்துக்கொண்டிருக்க, ஆனால், உண்மையில் ஹெலன் அப்படியொன்றும் தெரியவில்லை. இப்போதெல்லாம் திமித்ரி வீங்கிச் சிவந்த குடிகார முகத்துடன் அசிங்கமாகப் பருத்துவிட்ட மனிதனாகத் தெரிவதாக ஹெலன் நினைத்தாள். மேரி அந்தக் கூட்டத்தோடு சேர்வதற்காகச் சென்றாள். ஆனால், ஹெலன் பெஞ்சில் அவளுக்கு இடம் கொடுக்கச் சிறிதும் நகராமலிருப்பதைக் கண்டாள். மேரி நெருக்கித் தள்ளி இடம் பிடித்தாள். தீர்மானமாக அவளிருந்ததைக் கண்ட பெண்கள், ஒவ்வொருவராக அவர்களின் கைக்குழந்தைத் தள்ளுவண்டி மற்றும் தள்ளு நாற்காலிகளைத் தள்ளிக்கொண்டு அகன்று சென்றனர்.

இப்போது மேரி, அவளின் முழுக்கதையையும்  ஹெலனுக்குச் சொன்னாள். அவள் ஒரு பைத்தியக்காரியைப் போலப் பேசுவதை அவளே உணர்ந்தாள். ஹெலன் கைக்குழந்தைத் தொட்டில் வண்டியை முன்தள்ளுவதும் பின்னுக்கிழுப்பதுமாக அசைத்துக்கொண்டிருந்தாள். அவள் அதை ஒருபக்கமாகத் தள்ளிவிட்டு மேலும் கீழுமாகத் தூக்கி ஆட்டுவதும், பின் தன்னை நோக்கிப் பின்னிழுத்து நீண்ட நேரச் சிந்தனைக் கணங்களுக்கு ஆட்டிஅசைப்பதும், பின் மறுபடியும் முன்னுக்குத் தள்ளுவதுமாக இருந்தாள். அது மேரிக்கு அந்தக் கைக்குழந்தைத் தள்ளு வண்டியும் அவள் கதையைக் கேட்பதிலும் முடிவுசொல்வதிலும் பங்குவகிப்பதாகத் தோன்றியது.

‘’ நீ, மூன்று வாரங்கள் அப்படியே செய்திருக்கிறாய்?’’ கடைசியாக ஹெலன் சொன்னாள். அவள் அதை அழுத்தந்திருத்தமாக உச்சரித்த விதம், அவள் ஒரு உச்சபட்ச வெறுப்பினைக் கட்டுப்படுத்திக்கொண்டிருப்பதாக மேரிக்கு உணர்த்தியது. அவள் முகம் மிகக் கடுமையாகியிருந்தது. அவள் இனிமேலும் மேரியின் சிறந்த தோழியாக இருக்கப் போவதில்லை. ‘’ மூன்று வாரங்கள்,’’ தலையை ஆட்டித் திடமாக மொழிந்தாள், ஹெலன். ‘’ திமித்ரியாஸ் நோய்ப்பட்டிருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.’’

‘’அவர் நோய்ப்பட்டிருக்கிறாரா  என்ன?

‘’ உனக்கே அது தெரியவில்லையா?’’ எனச் சொன்னது நிச்சயமாக வேறு, ஹெலன்தான். இவள் புதியதொரு ஹெலன். அவள் முகம் இறுகி இருண்டு, அழகாகவே இல்லை. அவர்கள் ஒரு உணவு விடுதிக்கு வெளியே வர்ணம் பூசவேண்டிய, ஒரு அழகற்ற பெஞ்ச் மீது அமர்ந்திருந்தனர். அங்கே வாசலின் இருபுறமும் சிறிய இடைவெளிகளில் அழகுக்கு வளர்க்கப்படும் சிறுமரங்கள் இருந்தாலும் அவை மனத்தை ஈர்ப்பதாக இல்லை. மரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டியிருந்தது. அவை தூசி படிந்து தோன்றின.

‘’ வேலைசெய்ய முடியாதபடி நேற்று திமித்ரியாஸ் அளவுக்கதிகமாகக் குடித்திருந்ததாக டாம் சொன்னார். அவர் கவனமாக இல்லையென்றால் வேலையை இழக்க வேண்டியிருக்கும்.’’

‘’ ஆனால், நீதானே அந்த ஐடியா  கொடுத்தாய் ‘’ என்ற வார்த்தைகள்  தொண்டை வரைக்கும் வந்துவிட்டாலும்  மேரியின் வாயை விட்டு வெளிவரவில்லை. அதுவே அவளுடைய நிரந்தர நிலையாகிவிடுமோ என்ற கலவரத்தின் பிடிக்குள் இருந்த அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் – `அவள் சொன்னதை நான் ஏன் அப்படியே எடுத்துக்கொண்டு அதே வழியில் செய்து பார்த்தேன்?`

‘’ முடிந்த அளவுக்கு இன்னும் நன்கு முயற்சிசெய். எப்படியாவது அவனைச் சரிக்கட்டப் பார்’’ என அழுத்தமாக உச்சரித்த ஹெலன், பெஞ்சிலிருந்து குழந்தையுடன் எழுந்து, மேரியைப் பார்த்து ஒரு சிரிப்புகூடச் சிரிக்காமல், சரி, நாளைக்குப் பார்க்கலாமென்று ஒரு ஒப்புக்குக்கூடச் சொல்லாமல் போய்விட்டாள்.

`நான் ஹெலனையுங்கூட இழந்துவிட்டே`னென  மேரி நினைத்தாள். திமித்ரி வேலை செய்த விடுதியின் வெளிப்பக்கம் போய் அமரலாமெனச் சென்றாள். பிற்பகலில் அவனுக்கு ஒரு மணிநேரம் இடைவேளை உண்டு. அவன் வெளியே வந்ததும் அவனை நோக்கி ஓடி அவன் கையைப் பிடித்துக்கொண்டு, ‘’ வருந்துகிறேன், திமித்ரி, நான், வருந்துகிறேன்.’’ என்றாள். அவள் அழ, அழ, அவன் திரும்பிக்கொண்டு, ‘’ ஓஹோ, வருத்தம் சொல்லிவிட்டாய். அவ்வளவு தானா, இவ்வளவும் எதனால் வந்தது? நான் என்ன கேட்டுவிட்டேன், ஒரு குழந்தை, இதற்குப்போய்.., ஆனாலும், நீ ரொம்ப, ரொம்ப மோசமான பெண், மேரி.’’ என்றான். அவசரமாக ஏறிட்ட அவனது ஒரு பார்வையிலேயே, அவனது பயத்தை, அவளது முகத்தில் அந்த வெறிக்கின்ற, இறுகிய கோபப் பார்வை எங்கே மீண்டும் தோன்றிவிடுமோவென அவன் அச்சம் கொண்டதை அவள் பார்த்திருக்க முடியும். அவளிடமிருந்தும் கையை விடுவித்துக் கொள்ள அவன் பின்னிழுத்தான். ஆனால், அவள், அவன் கையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘’ திமித்ரி, திமித்ரி, திமித்ரி.’’ எனக் கெஞ்சிக் கெஞ்சித் திக்கினாள். அவன் பாதி திரும்பிய நிலையில், பக்கப் பார்வையாகத் துடிக்கும் கண்களால் அவளை நோக்கினாலும் அவனைத் துயர்ப்படுத்தும்   அவளது கண்களை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தான். அவன் அவளை முழுவதுமாக என்றென்றைக்கும் வெறுத்துவிடுவானென அவள் நினைத்து, ‘’ வா, திமித்ரி, வீட்டுக்குப் போகலாம், ப்ளீஸ், ’’ என அழைத்தாள். இருவரும் நடைமேடையில் நெருக்கமாக நின்றுகொண்டிருந்தனர். அந்த வழியே வந்தவர்கள் அவர்களைக் கண்டு ஒதுங்கி, விரைந்து அகன்றனர்.   இப்போது அவள் ஆருயிர் வாழ்க்கைக்காக அவன் தோள்களில் தொற்றித்  தொங்கிக் கொண்டிருந்தாள். ஆம். வாழ்க்கையை, அவள் அப்படித்தான் உணர்ந்தாள். ஏனென்றால் இப்போது எல்லாமே பறிபோவதாக இருந்தது. அவள் சத்தமாகத் தேம்பி அழுதாள். அவனோ கொதித்துச் சிவந்து பரிதாபமாக நின்றான்.

வீடு கூப்பிடு தூரத்தில், ஒருசில நிமிட இடைவெளியில்தான் இருந்தது. அவள் நெருக்கத்தில், அவன் தள்ளாடிச் சென்றான். அவள் அவனை இறுக்கிப் பிடித்திருந்தாள். விட்டால், ஓடிவிடுவானென்பது மட்டுமில்லை; மீண்டும் அவனைப் பார்க்க முடியாமலாகிவிடலாம்.

வீட்டில் அவனைப் படுக்கையறைக்கு இழுக்க அவள் முயற்சித்தாள். ஆனால், அவனோ மேஜை மீது, தலைக்கு முட்டுக்கொடுத்துக் கைகளில் தாங்கியபடி உட்கார்ந்துவிட்டான்.

‘’இப்போது என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்?’’ எனக் கேட்டான், அவன். ‘’சரி. இப்போது உடலுறவு கொண்டால் அத்தோடு எல்லாம் சரியாகி விடுமா?.’’

‘’ மாத்திரை சாப்பிடுவதை  நான் நிறுத்திவிட்டேன், திமித்ரி.’’

‘’ ஆக, நீ மாத்திரையை நிறுத்திவிட்டாய்.’’

‘’ வா, திமித்ரி, கெஞ்சிக் கேட்கிறேன், வா, படுக்கைக்குப் போகலாம்.’’

‘’ குழந்தைக்கு என்ன வழி?’’

அவனை இழுப்பதற்காக, அவள், அவன் கையைப் பற்றினாள். கூடவே  அவனோடு கடைசியாகப் படுக்கையில் எப்போது பேசினோமென்றும் நினைத்துக்கொண்டிருந்தாள். அவள் இழுத்த இழுப்புக்கு, அவன் இணங்கிப் படுக்கைக்கு அவளோடு தள்ளாடிச் சென்றான். அவன் அவ்வப்போது அசிங்கமாக, வேதனைமிக்க தேம்பல் ஒலிகளோடு அழுதுகொண்டிருந்தான். அவள் அவனை உடைத்து நொறுக்கியிருந்தாள். சிறிதளவுகூட வெற்றியின் சிலிர்ப்பு அல்லது அவர்களது பாலுறவு விளையாட்டுகளின் மகிழ்வெச்சம் போன்ற எதனையும் அவள் உணரவில்லை. உள்ளுக்குள்ளாகவே, ‘’ அவன் சரியாகி விடுவான். எல்லாவற்றையும் மறந்துவிடுவான். நாங்கள் முன்பிருந்த மாதிரியே மகிழ்ச்சியாகிவிடுவோம்.’’ என்று அவள் பிதற்றிக்கொண்டிருந்தாள். முன்னர், வாழ்க்கை அற்புதமான ஒன்றாக இருந்ததென  இப்போது அவளுக்குத் தோன்றியது. ஆனால், அந்த மகிழ்ச்சியை அவள் ஏன் தூக்கி யெறிந்தாளென்பதை இப்போதும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இதற்கிடையில், அவர்கள் காதலில் ஈடுபடுவார்களா அல்லது பாலுறவு கொள்வார்களா என்ற ஒரு கேள்வி அங்கு எழவேயில்லை. ஏனென்றால், வலுவற்று, வாடித் துவண்டு, சுருங்கிப்போன, சிறிய தசைத் துண்டு ஒன்றைத்தான் அவள் கையில் பிடித்திருந்தாள். இதைப்போன்ற எந்த ஒன்றும் எப்போதும் நிகழ்ந்ததேயில்லை.

‘’ இனிமேல் மீண்டும் அப்படிச் செய்யாதே,’’ என அவன் கடுமையாகப் புதியதான ஒரு துன்பக் குரலில் சொன்னான். ‘’ இனிமேலும் அப்படிச் செய்யாதே. இப்போது சொல்கிறேன் கேளு, திரும்பவும் நீ அப்படிச் செய்தால், உன்னைக் கொன்றுவிடுவேன். ஒரேயடியாக வெளியே போய்விடுவேன். வீட்டுக்கு வரவே மாட்டேன். அதுதான் சொல்கிறேன், அதை மீண்டும் செய்துவிடாதே.’’

அவன் படுக்கையில் விழுந்தான்; ஆனால் முதுகைத் திருப்பிக் கொள்ளாமல் மல்லார்ந்துதான் படுத்திருந்தான். அவள், அவளாகவே, அவன் கைகளுக்குள் முடிந்த அளவு நெருக்கமாகத் தன்னை நுழைத்துக்கொண்டாள். ‘’ ஓ, திமித்ரி, வருந்துகிறேன்.’’ அவள் நெடுநேரம் அழுதுகொண்டிருந்தாள்; ஆனாலும் அவளை மன்னிக்கும் விதமாக அவன் சொன்னபடியே, இனிமேல் நடக்கப்போவதாகத் தீர்மானித்தாள். அதனாலேயே அப்போதைக்குக் கொஞ்சம் பரவாயில்லாதது போலும் உணர்ந்தாள். அவள் தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள் : ’’ நாங்கள், ஒன்றிரண்டு நாட்களில் இது எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். எல்லாமே முன்னர்ப் போலவே சரியாகிவிடும்.’’ ****

http://www.newyorker.com/archive/1997/07/07/1997_07_07_066_TNY_CARDS_000378428?currentPage=all