Category: இதழ் 43

சிறுகதை – ‘கல்லா’த் தேவதையின் போர்வை. – எஸ் நஸீறுதீன்

images (25) 

 

 

 

 

 

 

  ஒரு கிழமையின் இரெண்டாம் பிரிப்பின்- இரண்டு நாள்களின்   காலையில் ஒன்று. ஆயிரமாயிரம் கரங்கள் போற்றி. சூரியனைக் காண்பதுவேதவிப்புக்குரிய கடும் பனிக்காலம். உடல் நடுங்கும் நடுக்கமும் போதாமல், தோளில் ஆடைகள் கனதி சுமக்கும் காலம். அவன் ஹீத்ரோ விமானநிலையத்துக்கு அருகில் இருந்த பெற்றோல் கடையில் ரில்லின் (கல்லா) முன், காலும், மூத்திரமும் கடுக்கக்கடுக்க நின்றிருந்தான். உண்மையாகவேகாலை ஆறுக்கு நடையைக் கட்ட வேண்டிய ஷிப்ட். இன்னும் பத்து நிமிடங்களில் மணி ஆறாகிவிடும்.  ‘ரில்லையும், கணக்கையும் முடிச்சிஎடுத்தபின் வீட்டுக்குப் போக, இன்றைக்கும் ஏழை அண்மிக்கப் போகிறது’.

நேற்று, வெள்ளியிரவு பத்துக்கு துவங்கிய ஷிப்ட். இரவில் பெரிய பரபரப்பிராது. நல்ல நேரமெடுத்து இனிப்பு வகைகளை, தீன் பண்டங்களை, மேலாகஅருந்தும் பானங்களைக் கண்டவுடன், அவாப்பட்டு வாங்குமாப்போல அவற்றின் போர்வைகள் கண்களில்பட அடுக்கி வைப்பது, பழையதேதியுள்ளதைக் களையெடுப்பது, கடையையும் கழுவி மீண்டும் காலையில் கால்பட விரித்து வைப்பது,,,என்று அனைத்தும் முடியக் கால்கள்கெஞ்சும்.

அதிகாலையில் ஐந்துக்கே அவனின் முன்னாக ஜனநாயக அணிநடை துவங்கிவிடும்.  எல்லா ஒபிசர்களும் (பெரும்பாலும் பெண்கள்),காரையும், அவர்களையும் கழுவி மணமிட்டு, கறுப்புப் போர்வை போர்த்திய வெள்ளையுடலின் வாசலான, மூத்தம்மாவின் சிவப்பு நாடாச் சிப்ட்வைத்த கொசுவப்பை போன்ற வாயில் கொண்டு வருகிற குட் மோர்னிங்கில் ஒன்றை  சுருக்குகள் அகற்றி, பளீரிடும் வெள்ளையாய் ஒளிவீசத்தந்துவிட்டு, ஆபீசர் லுக்கையும் முகத்தில் போட்டுக்கொண்டு,  வரிசையிட்டு வந்து போய்க் கொண்டே இருப்பார்கள். அசையாதபடி நிக்கத்துவங்கினால், கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கத் துவங்கிவிடும்.

நாலைந்து துளிகளாவதுபட்டு நாறப்போகிறது, உள்ளாடை. நாற்பது தாண்டினாலே கட்டுப்பாடுகள் துவங்கி விடுகிறது. ரசிச்சி ரசிச்சி எதையுமே சாப்பிடாத வாழ்வும் ஒரு வாழ்வா? உள்ளே போனது, வரவே வேணாம் என்றால் எப்படி?. நினைக்க நினைக்க, அடுத்து வேலைக்கு வரவேண்டியமொரோக்கோக்காரியின்மேல் எரிச்சல் எரிச்சலாக வந்தது. அவளிடம், நிறையத்தரம், ‘பத்து நிமிடங்களாவது முன்னராகவே வந்து, உனது ஷிப்ட்டைஆரம்பி’ எனக் கெஞ்சியும் கேட்டிருக்கிறான். அவளுக்கு  ஒவ்வொரு முறையும் சொல்வதற்கு ஏதாவது காரணம் இருந்துகொண்டே இருந்தது.

‘ நோர்த் கேற் ரவுண்டபோட்டில எக்சிடன்’

‘ ஓஹ், ஓஹ், வட்  டஅ டிரபிக்’

இப்படி எதுவும் இல்லையானால், இருக்கவே இருக்கிறான்- உலகத்திலேயே அவளுக்கு மட்டும்தான் பெரிய கிப்டாகக் கடவுள் கொடுத்த மாதிரியான -அவளின் அருமந்தக் கணவன்.

‘ அவரும் கூடவே எழும்பிட்டாரா, அப்படியே நேரம் போனதே தெரியல்ல; எல்லாம் முடிஞ்சி நேரத்தைப் பார்க்கன் ஆறேகால்.’

ஏண்டா, ஊட்ட இருந்து இங்குவர மெக்சிமமே நாலு நிமிசங்கள் போனாலும், வெளிக்கிட்டெடுக்க நாற்பது நிமிசங்கள் போதாதாடா?.

அவன் இப்போது காரணம் எதுவும் கேட்பதில்லை. அவளும் சொல்வதில்லை. இருவரும் ஆளையால் முகத்தெதிரே கண்டால், புன்னகைத்துக்கொண்டாலும் அணைந்தும் அணையாத தணலின் கடைசிக் கட்டம். கோபத்தைவிடக் கருணையே கொலைசெய்யும் மிகப்பெரிய ஆயுதம். அவன்,அவளால் நிறையத் தரம் கொல்லப்பட்டுக் கிடந்தான். புதிதாக வேலைக்குச் சேர்ந்ததும் முகம்பார்த்துச் சிரித்து, பின்னர் ஹலோ சொல்லி எடுக்கமூணுநாள்கள் போனதும், ஏற்கெனவே தெரிந்ததைத் தெரியாதது போலவே கேட்டான்:

‘‘நீங்க மொரோக்கோவா?’’

‘’ ஆம், நீ இலங்கையன் தானே. கொழும்புவா நீ’’

‘ம்ஹும், அவளுக்கு மட்டுதான் தெரியுமாக்கும். எங்களுக்கும் உலகப்படம் தெரியும்’. அவன் கேட்டான்;

‘’ஆம், மொரோக்கோ, ஆபிரிக்காவில்தானே இருக்கிறது?’’

‘‘மெக்கலை  நம்புகிற ஆளா நீ, அவனுகள் சொல்றதத்தான் புத்தி, ரசனை என்பாயா?’’.

இந்தாள், நாமெல்லாம் பிள்ளை பெற்றதன் பின் அவர்களுக்குச்  செய்யவேண்டிய தலையாய கடமை இதுவொன்றுதான் எனத் தலைமேல்தூக்கிவைத்திருக்கிற, வாழ்நாள் அத்தனையும் ஈடு வைத்தாவது பெற்றுக் கொடுக்க முனைகிற நவீன உலகக் கல்வி சமைத்த மூளையில் ஒன்று எனக் கேள்விப்பட்டிருந்தான். புத்தி, ரசனையெல்லாம் சொல்லியிருக்கிறாரா?. அவன், இதனைப்பற்றி அவளின் இப்பத்தையக் கணவனிடம் விளக்கம்கேட்கக் குறித்து வைத்துக் கொண்டான். அவன் எந்தக் கருமாந்திரமானதாகட்டும், வாசிக்கிறவன். கடைக்கு வருகிற இரண்டு, மூன்று என்பதாகவிற்பனைக்கு வருகிற நாலைந்து பத்திரிகைகளை வாசிக்கிறவன். இலங்கையிலிருந்து வந்தவனுக்கு ஹார்ட் அட்டக்கை உண்டுபண்ணும்விளையாட்டுச் சூரியனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஆனால், 99% சபயின் கடையில் விற்பனையாவது sun எனும் சூரியன்தான். அந்த வழிதப்பினவெள்ளாட்டிடம், ‘ ஏன், பார்ப்பதில்லை?’ எனக்கேட்டேன்.

‘இரெண்டாம் பக்கத்தில் முக்கிய செய்திகள் சிறு பத்தியாயிருக்கும், மீதி அவ்வளவும் அவாக்கு விருந்துதான். பெரிசைப் பாரு,தெரிஞ்சே பிடிச்சதுபோக, மறைவாப் பிடிச்சதும் இருக்கு. நெஞ்சுக்கு வம்பு தும்பு தாறன். கண்ணுக்குக் களிப்பு, சட்டுண்டு சட்டுண்டு சுய ஸ்கலிதம் அடியிற மாதிரி வாசிச்சஅத்தனையும் பகலுக்கே மறந்திடுவான். அடுத்தநாளே பெரிசிட வம்பும், இன்னொரு மார்பையும், தொடையையும் பேப்பர்ல தேடுறவங்கதான்,அவங்களுக்கும் தேவையானது’ என்றான். அவனுக்குத் தெரிந்திருக்கும். கேட்டதும், அவன் சொன்னான்:

‘ வெள்ளை நிறம் ஆட்சிக்குரிய இனம். ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி. அந்த உயர் நிலை இல்லாமைக்காக உள்ளூர அடிமை நிலையைஅவனாகவே உருவாக்கும்படி நவீனம் எதிலும் புகுத்து. மற்றயவரை, இதைப் பெறுதலே வாழ்வின் நோக்கமே என மாற்றி எடு. வெள்ளையினம் நீடூழிவாழ்ந்திடும். எங்ககளுக்கு நீயும் ஒரு கறுப்புத்தான். ஆனால், எனக்குக் கறுப்பு வைரம்.’

‘ இதார்ற கண்டுபிடிப்பு’

‘நீங்க்கண்டு நான் சொன்னாலே அது அசிங்கமாகிவிடாது’. நூற்றி ஐம்பது வருசங்கள் சூரியன் எழுவதானாலும், வீழ்வதானாலும் எம்மைக்கேட்டுத்தான் இயங்கும் என ஆள்பவர்களுக்குப் புத்திமட்டாயிருக்க முடியுமா?.

யாராவது என்னதான் சொன்னாலும் மிகப் பெரும் பேரழகியான அந்தக் கறுப்பி  நாலு மொழிகளை மட்டுமன்றி நானு சனங்களையும் தெரிந்தவளாயிருந்தாள். சாரியை உடுத்தபின்னும் முந்தானையைத் தூக்கி மாங்க்காப்படத்தைக் காட்டி, மயில்போலல்லவா எனக்காட்டுவதுபோல,அவள்ள உடம்புல இருக்கிற உடுப்பில ஒரு இஞ்சளவு தொடுறீங்கண்டாலே, உடம்பைத்தான் தொடுவதாகும். மாருல முன்பகுதி உட்டுத்துவங்கினாநடுத்தொடைவரை இறுக்கமோ இறுக்கம். இதில ஆருதான் போர்டர் பார்ப்பா?

‘நான் அழகு என்பது என்னாலேயே கொண்டாடப்படாட்டி எப்படி?’

உடனே சபி, ‘இப்படிக்கேட்டால் நானென்ன செய்வது?’ என்பான். எங்கு போனாலும் இந்தப்பெண்கள்( ஆ,,ஆ, ஓகே ஓகே  சில பெண்கள்), ‘காமாந்தரமாகப் பேசிக்கொண்டே காரியம் சாதிக்கலாம்’ என ஏன்தான் எல்லா ஆண்களையும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.கியூ மெல்ல மெல்ல முன்னாகி வந்தது. அவன் இடைக்கிடையே அவள் வருகிறாளா என்பதையும், முன்னே நிற்கிற ஆளையும் கவனித்தபடி சின்னநடுக்கம் காலில் எழ அவசரமாக இயங்கிக் கொண்டிருந்தான். சபி, கொஞ்சம் பொறு. இதோ வந்திடுவாள்.  ‘பூங் கதவே தாள் மூடாய்’

அவனின் முன்னே நுகர்வோரின் நீண்ட கியூ வரிசை கிடந்தது. இந்த வேலையில் உடம்பும் இயங்ணும், தலையையும் அங்கால இஞ்சால போகாமப்பார்த்துக்கணும். தப்பினா சம்பளத்தில பிடிச்சுக்குவான். ஆக, எட்டுமணித்தியாலங்கள் நிக்க நிக்க, சூடான தலையும் மெதுவாக் கீழிறங்கி வரும்.இன்னும் இறங்கித் தாண்ட முடியாத எல்லையைச் சூட்சுமமாக்கிய ஆண்டவரை, அல்லது எக்காலமும் ஆடவரைப் பெண்களில் ஆசை, இச்சை,காமம், தங்க முலாம் போட்ட காதல் எனும் தணல் (நீங்க விரும்பினா சொல்லுங்கோ, எதுவாயினும்) அதனிலே காலத்தை நகர்த்தும் ஆள்பவரே,,என்னையும், உம் நகர்விலிருந்து வருவது கெட்டதல்லாமல் ஆக்க, உமையன்றி யாரிடம் யான் வேண்டுவது? (.உங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்.) காத்தருள்வீர். ஆமீன், ஆமீன்.

பவுணு கொஞ்சம் கூடப் பார்க்கணும்ன்டா, இன்னும் கூட நேரங்கள் நின்று கீழிறக்கலாம். அதோ, அவன் அவளை ஏற்றிக்கொண்டு வந்துவிட்டான்.சபியின் காருக்கருகேதான் பார்க் பண்ணுகிறான். ஆக, அவள் இறங்குகிற பக்கத்துக்கு சபியின் கார் மறைப்பாகிவிடும். ஆனால், சி சி ரிவிக் கமராக்குமறைப்புகளின் புள்ளிகள்தான் இலக்கு. சபியின் முகத்தெதிரே தொங்கிய ரிவியின் முன்னே அனைத்தும் பதிவாகி ஓடிக்கொண்டிருந்தது.

கார் தரித்து நின்றதுமே முதலில் இறங்கி அவளின் பக்கமாக ஓடிவந்து அவனே கதவு திறந்தான். அந்த அழகு ஒயிலான, மொரோக்கோப் பேரழகிதனது இடது கையை அவன்புறமாகப் பிடித்துக்கொள்ள நீட்டியபடி  இறங்குகிறாள். ரில்லிலும், இடைக்கிடையே  அவர்களைப் பார்ப்பதுமாக அவன்.கவனம்,,கவனம் சபி, இது கணக்கல்ல. மீளவந்து தேட நாணயமிராது. காசுக்கூட்டல் வேலை.

அவள் முதலில் இடது காலைக் கீழே எடுத்து வைத்தாள். அவள் ஹை ஹீல்ஸ் போட்டு உந்திக்காட்ட வேண்டிய அவசியமே இல்லாதவள்.அத்தனை பெரிய மார்புகள் அவளுடையது. ஆனாலும், நீண்ட ஹீல்ஸ் கொண்ட பாதணி அணிந்திருந்தாள். அவன், அவளின் இடது கையைப் பிடித்துகீழிறங்க உதவி செய்தான். அவனின் கண்மணிக்கு கூதல் பட்டுவிடப் போகிறதென்று உடனேயே போர்வையை அணிவித்தான். அவள் அவனின்அன்பில் உருகி, கண்களில் நன்றிப்பிரவாகமும் காதலும் கொப்பளிக்க மலர்ந்த புன்னகை புரிந்தாள். ஆளையாள் நெருங்கினர். அவன் அவளைவிடஓரிரு  இஞ்சியாவது நீளத்தில் குறைந்தவன். தங்கள்  தலைகளை இன்னும் அருகாக்கினர். அப்போதும் அவனுக்கு அவளின் முகத்தை முகத்தால்எட்டமுடியாமல்,அவளின் மார்பு(கள்) குறுக்கே நின்று தடுத்தது. அவள் அவனை இறுக்கமாக இடுப்பருகே அணைத்து தன்புறமாக நெருக்கினாள்.இறைச்சிக்கடையில் முழு ஆட்டை உரித்து, முன் கால்களைக் கட்டிவைத்து, பின்கால்கள் முன்தெரியக் கொழுவ விட்டதுபோல அவன் அவளில்தொங்கினான். அவளின் மார்புக்கு மேலாக முகத்தை  நீட்டிக் கொண்டு வந்து,வந்,வ, இப்போது அவனால் அவளின் உதட்டைக் கௌவமுடிந்தது.அவனைச் சறுக்கி விழாதபடி அவள் இறுக்க, இருவரும் தங்கள் தங்களின் உதடுகளை மாறி மாறி சப்பக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘இத்தனைலேட்டா வந்தபின்னும், எனக்கு முன்னாலேயே, இது தேவையாடி உனக்கு?’

அவர்கள் இருவரின்  காதலும் இந்தக் கடையில்தான் ஆரம்பித்திருந்தது. அவளின் கணவனும் இங்கு பகல் ஷிப்ட் வேலை செய்தவன்தான்.உண்மையாகவே, ‘எங்க வேலை செய்தான் அவன்? அவளுக்குப் பின்னாலல்லவா தெரிஞ்சான்’ என ஆட்கள் சொல்வதைப்  பெரும்பகுதி சென்சார்செய்யப்படாமல் காட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் சபி. ‘என்ர அல்லாஹ்வே,என்ன, பாஸ்ர்ரா அது.?’. சபிட ஊரில அறுவாள், பெரியசிரிப்புமல்ல அது, யாரும் பார்த்துருவாங்க்களோ எனக் கண்சுழல நிமிசத்துக்குள்ள தோன்றி மறையும் ஒரு பயப் (ப் வேணாம். கொஞ்சம் கடினமானமாதிரித் தெரியுது, அவளல முத அங்கீகாரச் சிதறல் சபிக்கு) பய புன்முறுவலுக்கே  இரண்டு மாசங்களப் பறிச்செடுத்தவள். இஞ்ச வேலைக்குப் புதிசாவந்த அவனுக்கு, பக்கத்து ரில்லு, இந்த மொரோக்கோத் தேவதை. இரண்டு ரில்லையும் தட்டுற எட்டுலையும் சீனியரு அவள். அவனுக்கு ட்ரயினிங்குடுக்கா.

அது மூணு கிழமையிலேயே பத்தி எழும்பியிருக்கு. இருந்ததுகள்  எதையுமே படிச்சித் தெரிஞ்சிக்கிறதக் கிலாகிச்ச அடிமைங்க, அதாலதான், ‘அவங்களுக்குத்தான் வேலையில என்ன ஈடுபாடு’ என மயங்கிக் கிடந்தாங்க. ஆறு மாதத்க்கும் பொறகுதான், சபிக்கெல்லாம்  அவன் காட்டினபே,பே,,தெரியவருது. ஸ்ராப்புக்கு அவ இப்பவும் மிஸ், அவனுக்கு மட்டும் பேபி டார்லிங்காச்சு. இந்தக் கதையை வெளியே சொன்னால், ‘இங்கேதனக்குக் கிடைக்கவில்லையே என்கிற பரிதவிப்புத் தெரிகிறதே’ என யாரும் சொல்லிவிடக் கூடாதென்பதற்காக  மாற்றிப் பேசத் துவங்கினார்கள்..

‘என்ன, அப்பிடியாமா? எனக்கி அப்பவே கொஞ்சம் சந்தேகம்தான் மச்சான்’.

‘ எனக்கு இந்த வெள்ளையன் ரொம்ப டிஸ்ரப் பண்றான் மச்சான்’

‘ ஏன்’

‘இவர்கள் வழமைபோல திடமான ஆண்களை மட்டும் உறிஞ்சிக் கொள்கிறார்களோ  என்று நினைத்தேன்.’

ஆம், அவ்வளவு நெருக்கம் அவர்கள். சபி வாழ்வில் கண்ணாலே அப்படி ஒரு ஜோடி கண்டதில்லை. என்னமாகத் தாங்கினான், அவளை.முதலாவதாக  ரெஜிஸ்ரர் ஒபிசில் எழுத்து வேலை ஆனதுமே, அவளை தூக்கித் தாங்கிக் கொண்டவன், காருக்குள்தான் கொண்டு வந்து இறக்கினான்.உடனேயே இனியும் என்னால், எண்ணைக்கடையில் இறக்கிக் கொண்டிருக்க முடியாது என இப்போது ராக்சி ஓட்டுகிறான். ‘பயணச் செலவெல்லாம்(எம்.ஓ.ரி, ரோட்டுக்காசு, இன்சூரெஞ்சு,) இரண்டுல்லாம ஒண்டாச்சு. நினைச்சாத்தான் வேலை’ என்றான். இப்ப, கார்ர சீற்றுலயும், அவள்ளையும்தான்,அவன், எறக்கிறதும், ஏத்திக்கிறதும். அவன், பச்சையாக காமாந்தரமாப் பேசுவான். பச்சைச் சந்தர்ப்பவாதி: முதல்ல இந்தக் கடையில வேலைசெய்யக்க, ‘ இந்த ராக்சி ரைவர்ஸ் எல்லாமே முதலாளித்துவத்தின்ர எச்சம் மச்சான். அவனுக்காகவே வாகனமும், நேரமும் மிச்சப்படுத்துறதுமிட்டுமில்ல, சாமான்யன் வயித்திலையும் அடிக்கிறவங்க’ எனச் சொல்லிக் கொண்டிருந்தவன். எல்லாருமே நாக்கைப் புறட்றவங்களாத்தான் இருக்கு.அதுதான், உன்னக் கணக்கிலேயே எடுக்கல்லடா எனப் பொது இடத்திலும் இப்படி நாக்கைச்  சப்பச் செய்கிறது.

கடையின் வெளிக்கதவைத் திறந்ததும்தான் அவளில் திடீரென அவசரமும், கடமையுணர்வும் கொப்பளித்து எழுகிறது. கண்களால் இறைஞ்சல்,சத்தம் வராத உதட்டசைவு. ‘ வெரி, சொறி,,’. அவனும் புன்னகைத்தபடி, அவசரமாக வந்துவிடும்படி கண்களால் ஞாடை செய்தான். அவளுக்கு விளங்கிவிட்டது, ‘ சபிக்கு க்கடும் அவசரம்’. சட்டென்று ஸ்டோர் றூமுள் புகுந்து, சூ மாற்றி, மேல் உடுப்பெல்லாம் களைந்து, கடைசியாக ஒருமுறை முகமும்உதடும் சரிபார்த்து,,, ஆனால், வழமையைவிட  கொஞ்சம் விரைவாகவே சபியை வந்து சேர்ந்தாள். அவனின் அத்தனை உடல்வியர்வைநாற்றங்களையும் மீறி அருகே நறுமணம் கமழ்ந்தது. அழகிய தூண்டும் வாசனை கொண்ட ஜெஸ்மின். சபி, அடுத்த வாடிக்கையாளர் புதுசு என்றஉடனேயே, ‘இந்தா இதைக் கொஞ்சம் பார்த்துக்கொள்’ எனத் தன் பங்கையே தொடரச் சொல்லிவிட்டு தொங்கோட்டத்தில் கழிப்பிடம் போனான்.மூத்திரம் கழிந்த பின்னரும், கழிப்பிடப் போர்வையை மூடி அதன்மேல் கொஞ்ச நேரங்கள் இருந்தான். பின் சட்டென எழுந்தவன் மீளவும் மூச்சுப்பிடித்தான். அவள், அவளுக்குரிய  இரெண்டாம் ரில்லிடம் நகர்ந்தாள்.

பெண்கள் அழகானவர்கள். மிருதுவானவர்கள். தங்களை இன்னும் அழகி(வி)டத் தெரிந்தவர்கள். எந்த வேலையிலும் அவர்களின் அழகியலேமுன்னிற்கிறது. கடும் ஐசுஐசு என்றால்கூட, எந்த வேலையையும் அழகாகவே செய்தால்தான் அவர்களால் திருப்திகொள்ள முடிகிறது. ஆ,,,ஆ,அப்பாடா, வந்திட்டுது. அவள் கணக்கெழுத வேண்டிய ஒற்றைத்தாளை சப்தமெழுப்பாமல் கொஞ்சம் கொஞ்சமாக கிழித்,,,சே,  சப்தமெழாமல் கழற்றிக்கொண்டு வருவதிலேயே அந்த அழகு துவங்கிவிடும். அவளின் எழுத்துக்கள் மிக நேர்த்தியானவை. அவளுக்குரிய கணக்குப் பக்கத்தில் அவளின்பெயர், இன்றைய திகதி, ஷிப்ட் ஆரம்பித்த நேரம் (அது மறக்காமல் அவன் நைட் ஷிப்டானால் ஆறு என்றுதான் எழுதப்படும்.)எந்த அடித்தல்திருத்தலுமின்றி  மிக நேரமெடுத்து அழகாக எழுதுவாள்.

அவள் பேனையைப் பிடித்திருப்பதே ஒரு அழகு என்று சொல்லலாம்தான்; ஆனால் விளையாட்டுத்தனம் தெரியும் அந்தப் பாவனை முறையைநீங்கள் விரும்புவீர்களோ தெரியாது. கோலிப் பந்தை சிமென்ட் தரையில் உருட்டுவதற்கு நாம் அதை எப்படிப் பிடித்திருப்போமோ அதுபோலத்தான்அவள் பிடித்து விளையாடுவது அல்லது, எழுதுவது. உண்மையாகவே, அமீர்கான் அவள்ல கை வழியா பார்த்திருந்தா,எழுத்துக்கள் நடனமாடுறதப்பார்த்திருக்கலாம். ஒவ்வொரு எழுத்தும், அதிலயும், aarifaa  எனும் ஏழு எழுத்தையும் கோரத்தெழுதி, இப்ப பேப்பரின் மேலாக கையொப்பமிட்டு, (கணக்குமுடிஞ்ச்சப்புறந்தான் கீழ) நிமிருவா. ஒன் யுவர் மார்க் கம்டி. ரில்லை ஓப்பன் பண்ணுவாள். இனிக்  கல்லாவுக்க கைய உட்டு உள்ள காசெல்லாம்வெளில கொட்டுவா. காசின் பெறுமதிப்படி இதையும் ரொம்ப அழகா ஒவ்வொரு தொகுதியை ஒவ்வொண்ணா எண்ண  ஆரம்பிப்பா. ஒரு பென்னி நூறுசேர்ந்தது மூணு தொகுதிகள். இரண்டு, ஐந்து, பத்து, இருபது, அம்பது, கடைசியாப் பவுன். பிறகு தாள்கள். ‘எழுபத்தைந்து ரூபாயும் சரியாயிற்றா, ‘ ஐம்,ஓகே’ என்றாள் படுபாவி, நேரம் ஆறு இருபத்தி ஐந்து. ஒன் யுவர் மார்க். ஹெஸ்ஸேற்.

சிபி, ‘ இந்த ரில்லு இப்போதைக்கு பாவனையில் இல்லை’ போர்டை மாற்றிவிட்டு, தன் பங்குக்கு விரைவாகக் கணக்கை முடிக்கத் துவங்கினான்.வேலையில் முக்கியம், காசு சரியா எனப் பார்ப்பது, இரவில் வந்த போன டெலிவரி குறிப்பேடு. கணக்குச் சரி. கணக்கின் பின்பக்கமும் விபரமெல்லாம்எழுதி, பாய் சொல்லி, ஒன் யுவர் மார்க் ஹெஸ்ஸேற். கோ..வெளியேற முனையும்போது,அவளின் அத்தனையையும்  மன்னித்து விடுமாப்போல,முகம் நிறைந்த வேண்டுதலும் புன் முறுவலுமாக அவள்,

‘சிபி, என்னோடக் கோபமில்லைதானே’.

‘ அழகான அதிலும் புன்னகைப் பெண்கள் பிழைபொறுக்கக் கேட்டால் நான்  கோபிப்பதேயில்லை.’ என்றான் சிபியும் சிரித்தபடி. அவள், ‘போடா,மடையா’ என்றாள் அதே மலர்வுடன்.

ஏழுக்கு ஐந்து நிமிடங்கள் இருந்தது. இங்கு கோடையில் யாரும் வெயிலில் இருக்கிறோம் என்கிற  நினைப்பையே வைத்திருக்கவாய்ப்பில்லை. கடும் வெயிலெரிக்கிறது என வானில உடுவானுகள்,அப்பவும் தண்ணில இறங்கிக் குளிக்கேலா. ஸ்லோவாத்தான் அதுக்கு சூடாகத்தெரியும்.  சூட்டை இறக்கவேணுமே என்றாலும் மேகமாயில்லாத நீராயிருந்தா இன்னும் மாசக்கணக்குல வெயில் எறிக்கணும். மண் போலுமோ, நீர்?.

வெளிக்கதவைத் திறந்த உடனேயே கருமாந்திரம் பிடிச்சகுளிர்  மொத்தமா எல்லாத்தையும் சுருட்டி வைச்சிட்டு அதை மட்டுமே  நினைப்பிலவைக்கச் சொல்லி ஆட்டத் துவங்கிடும். ‘இல்லாமைதான், உயர்தலுக்கு அத்திவாரமாயிருக்கணுமாக்கும்’.

காலை ஏழுக்கும் இருட்டுவெளி . ஆறுக்கே ஊரில் அதட்டும் தகப்பனும் சேர்ந்து தூங்கத் தோதான காலம். குளிரையும் வெயில்போல உடலில்போர்த்த முடியாத சுமையாய் மறுதலிக்கும் உடைகள். விறைக்கும் காதும், மொத்த தண்டின் உதறலும் உந்தியெழ தனது bmw காரை நோக்கி ஓடினான்சபி. காரின் கதவுள் சிரமப்பட்டு துளையின் இடம்தேடிச் சாவி நுழைத்தான். காரே மொத்த ஓரிஞ்சிக்கனத்தில் பனிபூசி, (குப்புறப் படுத்த குழந்தை, கால்மடித்துப் பின்காட்டும் போஸ் போலும் உறைந்த ஐஸ் சவால் விடும். ஆ,,ஆ, கதவுத் திறப்பி உடைந்து விடாமலும், சற்றே நீரின் இறுகிய பிணைப்பைஅறுக்குமாப்போலும் இடையான விசை கொண்டு, மெதுவா இழு,ஆ,ஆ, இப்ப கொஞ்சம் கனமா இழு,, அப்பாடா, நல்லகாலம் திறந்தது. முன்கண்ணாடிக்கு, பனி கொல்லியை அடித்தான். முன்னே மட்டும் பார்க்கலாம். அது போதும். கார்க் கீ நுழைத்து ஸ்ரார்ட் பண்ண, பிளேயரும் பாடஆரம்பித்தது.

‘சற்றடே சண்டே,

போட்டுத்தாக்கு,, போட்டுத் தாக்கு,,,’

சீய் சனியன் இந்தக் காலங்கார்த்தாலயேயா. சட்டென்று அதை அணைத்தான். காரை மெல்ல நகர்த்தி வீதிக்குக் கொண்டு வந்தான்.

அவளின் கணவன் இந்நேரம் காலையைத் தாண்டி, முதல் பகலைத் தொட்ட தூக்கத்தைத் தூங்கிக் கொண்டிருப்பான். அவனுக்கும், சபி போலவேஇரவின் முழிப்பினாலாய தொழில். இரவென்பதால் சபிக்கு சம்பளமும், அவனுக்கு கஸ்ரமர்சின் எண்ணிக்கையும் கூட. ‘இரவைத் தூங்கவேபடைத்தோம். அதில் பறக்கத் உண்டு.’ பறக்கத்தே, காசுதானானால்?,,. அவன், அதிகாலை ஐந்து மணிக்கே வீட்டுக்கு வேலை முடிந்து வந்துவிடுவதாகச்சொல்லியிருக்கிறான். கூடக் கொண்டுவருகிற பசும்பாலையும், உணவுப்பொதியையும் சூடாக்கியபடியே அவளை எழுப்பி விடுவதாகச்சொல்லியிருக்கிறான். அவன் இப்போது காரை வேகப்படுத்தினான்.

வீடு வந்து விட்டது. குசினியில் வெளிச்சம் தெரிந்தது. அதே நேரம், பாத்ரூமிலும் பல்ப் எரிகிறது. ‘நீ, வந்து கொட்டிக்கோ’. அப்படித்தான் சொன்னது,மேசையில் மூடிக்கிடந்த பொரிக்கப்பட்டிருந்த சமூசாக்கள். அதனருகே முனையில் ஆவியை அடக்கும் பேப்பரால் மூடப்பட்ட ரீ. பிஸ்கட். ‘அருகிருந்து தர மாட்டேன் போ’. ‘ ராதே உனக்குக் கோபம் ஆகாதடி, ராதே,,’. அவன், அனைத்தையும் உண்டு குடித்து, பல்பை அணைத்துவிட்டு மேலேவந்தான். ஆடை மாற்றினான். அவள், பாத்ரூம்விட்டு வெளியேற, துவாலையுடன் உள்ளானான். மீண்டும் அவன் கட்டிலுக்கு வந்தபோது, அவள்சுபஹு தொழுதுவிட்டு உடைமாற்ற ஆரம்பித்தாள். அவன் கட்டில் சட்டத்துக்கு தலையணையைச் சாய்த்துவைத்து அதில் முதுகு கொடுத்தவனாகசாய்ந்திருந்தான். அவள், அவன் சரியாக உட்கார்ந்த நிலைக்கு வந்ததுமே ஆறுதலான தொனியில்,

‘ என்ன இண்டைக்கும் கறுப்பி லேட்டா?’ எனக் கேட்டாள். அவன், ஆம், இல்லை என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்பதாக மழுப்பல்புன்னகை செய்தான். அவள் சட்டென்று, ‘ ம்ஹும், இது ஒண்ணுதான் குறை’ என்றாள். அதற்கு அவனிடம் இன்னமும் ஒரு பலத்த சிரிப்பு.

‘இஞ்ச்சப்பாருங்கோ, பசிச்சா பசியோடத் தூங்காம எழும்பிச் சாப்பிடுங்கோ. கறி இரெண்டும் பிரிஜ்ஜில வைச்சிருக்கன். பொரிச்சது பொட்டுள்ளஇருக்கு. ஆறு மணித்தியாலம்தானே, நல்லாத் தூங்கி எழும்புங்க. நான் வீட்ட வரக்க நீங்க இல்லண்டாக் கோபிப்பன்’

சபி, அவள் சொன்ன அத்தனைக்கும் வளர்ப்பு நாய் மாதிரித்  தலையாட்டியவனாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கட்டிலின் அருகே சிறியஸ்ரூலில் இருந்த கோப்பையில் கொட்டப்பட்டிருந்த கடலைகளை அவன் வாய் மென்று கொண்டிருந்தது.

அவள் இப்போது அவனுக்கு முதுகைக் காட்டியவளாக பிராவிற்கு மேலான சட்டையை மாட்டிக் கொண்டிருந்தாள். இரண்டு துண்டங்களாகபிளவுண்டிருந்த முதுகு இப்போது நீல நிறத்தில் இறுகிய சட்டை தாங்கி  நின்றது. அவளின் நீலச் சாரி போர்த்திய உடலின் சள்ளைப்பரப்பின்தோற்பட்டி உள்ளிருந்த அத்தனையும் வாங்கி முத்திரை செய்தது.  அது சிலவேளை பின்தொடரும் நிழழாகவாவது வீசும்  கண்ணெறிகாரணுகளால்பார்க்கப்படும் பகுதி. விரலை நடுவிலிருந்து நேராக்கி எடுத்தாள். முன்னுக்கு இறுகிய பகுதியில் எதை, எவ்வளவு சேர்த்துக் கொடுத்தாலும் சமப்படுத்திவிடும். அவளுக்கும் நன்கு தினவெடுத்த மார்பு(கள்) இருந்தது. அவள் அதன் மேலாக சாரியைச் சுத்த முனையும் போது, அவனால் பார்த்துக்கொண்டேஇருந்துவிட முடியவில்லை.

அவன், அதிகாலை உற்சாகமும் கிளம்பி எழ, கால்களைக் கீழே இறக்கினான். அவளைக் காமம் சுமந்த கண்களின் சுவாலைகளுடன் அருகாகிகான்.அவள் அவனைக் கண்ணாடியில் அவதானித்தபடி இருந்தாள். ‘ என்ன, இண்டைக்கும் சைத்தான் கிளம்பிட்டானா?’ என்றாள், அவனைப் பயந்தபடிபார்ப்பதாகப் பொய்யாய்ப் பாவனை பண்ணினாள். அவளின் கைகள் இரெண்டும் அவளின் முகத்துக்கு முன்னால் ‘என்னை விட்டு விடேன்’ என்பதாகக்கெஞ்சி நின்றதாயின், இதழின் கடையில், ஆசை சுமந்த முறுவல் தோன்றி மறைந்தது. அவன், சட்டென்று வலது விரல்களைப் பற்றியபடி அவளைத்தன்னருகே மெல்ல இழுத்தபடி அருகாகினான். அவள் அவனுள் வெட்கப்பட்ட படியாக அவனின் நெஞ்சில் முதுகு சேர்த்தாள். அவன்  அணைத்துக்கொள்ள இடம் வழங்கினாள். முதுகு திருப்பி எடுத்தான். உடல்கள் இரண்டும் உயர்ந்தெழும்பிய பாம்புகள் இரண்டு பிணைந்து ஒன்றாகும்போதில்எழும் மூச்சுக்கள் காற்றில் சுவாலை பரப்பின. கலந்துபட வெறிகொண்டன. அவனின் உதடுகளைப் பற்றி மிக ஆள நேரேமேடுத்து முத்தம்வழங்கினாள். வாங்கினாள். எதுவரை போகுமோ அதுவரைதான் போகலாம். உடலை உடைகள் கழற்றப் படாதபடி இருக்க,,இருக்க,,,ம்ஹும்இரு(க்)கா, அவளால் தாமும் சாய்ந்து விடுவோமோ என்று பயமெழுந்து விட்டது. நாலு கைகளும் இரு திசைக் காந்தங்களாகின. அவள் கெஞ்சத்துவங்கினாள்:

‘ ஐயோ இப்பவே ஏழரையாச்சு, போகப் பதினைந்து நிமிடம், இதுக்குள்ள இந்தக் குளிருக்க இன்னொரு குளியலா? ப்ளீஸ்,ப்ளீஸ்,,’

சபிக்கு  அவளின் அழகு இன்னும் கண்டடைய முடியாத ஒன்றாகவே இருந்தது. கருவாப்பட்டையின் மணமொத்த வாசனைகளையே அவள் அதிகம்பரப்புகிறவளாயிருந்தாள். மூக்குக்கு கறுவாவின் மணம் வேண்டுமானால், கொஞ்சமாக நாக்கும் வெந்துபட அரைக்கவும் வேண்டியிருந்தது.அரேபியர்களின் வருகை வாசனைத் திரவியங்கள் கொள்வனவு செய்யும் காலத்திலேயே துவங்கி, அந்தத் தடமே இல்லாத மாதிரி இன்றைய நாட்கள்ஆகி விட்டது. அவனுக்குச் சட்டென்று யாவும் வடிந்து போயிற்று.

மீளவும் கட்டிலுக்கு வந்தவன் பழையபடி முதுகு கொடுத்து உட்கார்ந்தான். கடலையைக் கைகளில் மொத்தமாக அள்ளி ஒவ்வொன்றாகக்கொறித்தான். இதுவரை தன்னால் அவதானிக்கப்படாமல் போய்விட்ட, படுக்கைக்கு முன்னிருந்த தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தான்.ம்,செய்திகள் வாசித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள், அதுதான் அவதானம் பெறவில்லை என நினைத்தான். அறிவிப்பாளன் உலகச் செய்தியின்இறுதிப் பகுதிக்கு வந்திருந்தான்.

‘ சிரியாவில் மைனஸ் 27 பாகையில் அகதி மக்கள் உறைந்தபடி மர(ண)மடைகின்றனர். (நாலு படங்கள் காட்டினார்கள்.) கின்னஸ் சாதனைக்காக இந்தபுது வருடப் பிறப்பை துபாய் சிறப்பாகக் கொண்டாடியதை ஆறு நிமிடமாச்சும் விவரணப் படமாகவே ஓட்டிக் காட்டினார்கள். அதன் பின் அடுத்த இறுதி,நகைச்சுவை அல்லது  ஆ அப்படியா என வாயப் பிளக்கட்டும் என்று இன்னொரு  கின்னஸ் போடுவது போல நினைத்திருக்க வேண்டும்.இல்லாவிட்டால், அறிவிப்பாளன், இத்தனை புன்னகை ஏந்தி அந்த இறுதிச் செய்தியைச் சொல்லியிருக்க மாட்டார். செய்தி, வேறொன்றுமில்லை,துபாயில் ஒரு பெண், எம் புருஷனுக்குச் சரியா எப்படிச் சோறு திங்கிறண்டு தெரியல்ல, எனக்கு பஸஹு (விவாக விடுதலை) வேண்டும்.’ எனக்கோர்ட் படியேறியுள்ளார்.

அவன் தொலைக்காட்சியிலிருந்த பார்வையை அவளின் புறமாக்கினான். அவள் கைப்பயுள் சாமான்களைத் திணிப்பதும் அவனைப் பார்ப்பதுமாகஇருந்தாள். அவன் கண்களைச் சுருக்கி, ‘ என்ன?’ எனக் கேட்டான். அவள்,

‘ என் மேல கோபமில்லையே?’ என்றாள். அவன் உரக்கச் சிரித்தான்.

‘ஆக்கிரமிக்கலாம். இருவருக்கும் அது பிடித்தமானது என்று தெரியும். அதுக்கு முதல்ல வேலை செய்ற இடத்தில நல்ல பேரெடுக்கணும்.இண்டைக்கும் பிந்துறது சரியில்ல, கோபம், இதுக்கெல்லாம் வருமா?,,’ அவள் பழிப்புக் காட்டினாள். ‘வரத்தானே போகிறாய்’.

மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்பினான். ‘காலை போஜனம்’ போய்க்கொண்டிருந்தது. மக்களுக்கு உற்சாக ரொனிக் கொடுக்க நினைத்து,கதாநாயகன், தனது தாயை தனக்கும் மேலாகப் பார்க்கும் மாண்பு பெற்ற, அதனையும்விட இரத்தத்தின் இரெத்தமாகக் கழகக் கண்மணிக்குக் கொட்டிக்கொட்டிக்கொடுத்தே கைசிவந்துபோன, துளிக் கூட ஒழுக்கம் கெடாத ஐடியல் ஹீரோ- அவளுக்கு மிகவும் பிடித்த எம். ஜி.ஆர் பாடிக்கொண்டிருந்தார்.

‘ உழைக்கும் மக்களே.

உருவாக்கும் மக்களே’,,,

அவன் சட்டென்று, ‘ உழைக்கப்போனா, எங்கய்யா உருவாக்குறது?’ என ஓடித்தெரிகிற அவரைக் கேட்டான். சபியின் மனைவி கொஞ்சப் பொழுது சிரிப்பாய்ச் சிரித்தாள். அவனுக்கு, எம். ஜி. ஆரையும் பிடிக்காது; நம்பியாரையும் பிடிக்காது. அவன், அவளிடம், ‘இரண்டு பேருக்குமே நாலுஅல்லக்கைகள் உயர்ச்சியோ தாழ்ச்சியோ சொல்லத் தேவைப்படுது இல்லையா? ரொம்பக் கொடுமையான கூட்டு அதுதான்டி. நம்மாள், பழகுறதோடயே பிரச்சினைப்பட்டுத்  தனியா நிண்டு புலம்புறதில இருக்குற சுகம் இருக்கே, அதுபோல இன்பம், இடம்பெயர்ந்தபின் ஊரைப்பேசுவதிலும் கிடைக்காததடி.?’, என்றான். அவள், ‘ம்ம்ம், தத்துவம், இது, வேலைக்காகாதே?. நம்பிட  நாலும் அடிவாங்கிக் கடைசியாத்தான் தலைவரும். எங்க ஆள் அப்படில்ல, எல்லாத்திலயும் அவங்கதான் முன்னுக்கு நிப்பாங்க, இதுங்க போற்றிப் பாடடி கண்ணேம்பாங்க, நல்லால்லியா அது. அதான் மனிசங்களும் உங்க ஆளத் தனியாவே உட்கார்த்தி வைச்சிட்டாங்களே.’

அவளுக்கு இது வெல்லாத விவாதம் என்பது தெரியும். அவள், அவனிடம், ‘கார் எப்படி, உறைஞ்சா கிடக்கு?’ எனக் கேட்டாள். அவன்,

‘இல்லை, டிஅய்சர் போட்டுக் கண்ணாடியை ஓகே பண்ணியிருக்கன். கார் ஸ்ரார்ட்லேயே இருக்கு. சூடாவே இருக்கும். மற்றத் திறப்ப வாசல்நிலையில வச்சிருக்கன். கவனம், பனி சறுக்காமப் போகணும், கவனம்.’ அந்த நேரமாப் பார்த்து, சந்தோசமாப் படுக்கைக்குப் போனவனை எம்.ஜி.ஆர்.உழைக்கக் கூப்பிட்டானதும், சமப்படுத்துறாங்களாம்ண்டு சோகமாத் தூங்கப் போனவர்களை, இவரு - அதான் சிவாஜிக்கு சித்தன் கோலம் காணாம,வாயில கடலையும் போட்டு பாட்டொன்டப் போட்டு எழுப்பினான் பாருங்க:.

ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.’.

அவள் அவனைக் கேட்காமலே தொலைக்காட்சியை நிறுத்தினாள். அவனை நெருங்கினாள். அவனின் முகத்தை இடதுபுறம் சரித்து, வலதுபுறக்கன்னத்தில் உதடு பதித்து அழுத்தமாக முத்தமிட்டாள். அவன், கைகளை உரசி, அன்பு செய்தான், விடைபெற்று அறையை விட்டும் வெளியாகும்போது,விளக்கை அணைத்துவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு போனாள். அவன், உடலைக் கட்டிலில் சரித்தெடுத்தான். தலையணைக்கு தலை வந்துசேர்ந்ததும், மடிந்துகிடந்த போர்வையை  தன்மேலாக்கி உடலை மூடிக் கொண்டான். இனி நெடுந்தூக்கம் வந்துவிடும்.

காற்றில் மிதந்த நாட்கள் – சிபிச்செல்வன்

sibi& bala

 

 

சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது கடந்த பதினைந்து வருடங்களாக எனக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது. அங்கே புத்தகங்களை வாங்க முடியும் என்பது மட்டுமே அதற்குக் காரணம் அல்ல. பல இலக்கிய நண்பர்களை அங்கே ஒரே சமயத்தில் சந்தித்து உரையாடலாம், அவர்களோடு சேர்ந்து போட்டோக்களை எடுத்துக்கொள்ளலாம் என்பதும் காரணங்கள். அதுவும் மலைகள் இணைய இதழைத் தொடங்கிய பிறகு , மலைகள் இதழுக்குப் பரவலான ஒரு கவனிப்பு கிடைத்த பிறகு, உலகின் பல பாகங்களிலிருந்தும் அதன் எழுத்தாளர்கள்,வாசகர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரைச் சென்னைப் புத்தகக்கண்காட்சியில் சந்தித்து உரையாடும் இடமாக அமைந்து விட்டதற்கு நான் நிச்சயம் நன்றி சொல்லியாக வேண்டும்.

இந்த வருடம் எனக்குப் புத்தகக் காட்சி டிசம்பர் 2013 கிறிஸ்துமஸ் நாளிலேயே தொடங்கி விட்டது.ஆம் மலைகள் பதிப்பக பணிகளைத் தீவிரமாகத்  தொடங்கிய நாளாது. உண்மையில் 2013 மார்ச்சிலேயே அதற்கான பணிகள் தொடங்கியிருந்தாலும் அது வேகமெடுத்தது கிறஸ்துமஸ் நாளுக்குப் பிறகுதான். சென்னைக்கு மலைகள் பதிப்பக பணிகளுக்காக நான் கிளம்பிய நாளிலிருந்து ஏறக்குறைய ஒரு மாதம் (புத்தக காட்சி நாட்களும் சேர்த்து ) நான் காற்றில் மிதந்த நாட்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. புத்தக உருவாக்கப் பணியில் திட்டமிடுதலாலும், அதை உருவாக்கப் பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டதாலும்  தினசரியும் அது என்ன கிழமை என்பதோ அல்லது அது என்ன தேதி என்பதோ எனக்கு நினைவிலிருந்து நழுவிப் போயிருந்தது என்றே சொல்லலாம்.  

முதலில் முரகாமியின் புத்தகத்தை மட்டும் கொண்டு வரவதாகதான் திட்டமிருந்தது. அதற்காக அந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தைக்கூட ஒரு 90 சதவீதத்திற்குத் தயாரித்து வைத்திருந்தோம். புத்தக லே அவுட் போட்டும் வைத்திருந்தோம். ஆனால் கடந்த 41 ஆவது மலைகள் இதழில் உலக சினிமா இயக்குநர்களின் நேர்காணல்கள் வரிசையில் தோழி தீபா ஸ்டான்லி குப்ரிக்கின் நேர்காணலைச் செய்திருந்தார். அந்த நேர்காணலுக்கு மலைகள் இதழில் கிடைத்த வரவேற்பு பிரமிப்புக்குரியதாக இருந்தது. ஒரு நாள் மாலை தோழி தீபா அழைத்து குப்ரிக்கின் நேர்காணலை மலைகள் இதழின் முகப்புத்தகப் பக்கத்தில் 89 பேர் லைக் போட்டிருக்கிறார்கள் என்ற தகவலைச் சொன்னார். அவர் சொல்லி ஒரு மணி நேரம் கழித்துதான் அதைப் பார்ப்பதற்கு கணிணிக்குள் நுழைந்து பார்த்தேன். அந்த ஒரு மணி நேரத்தில் 126 பேர் அதை விரும்பியிருந்தார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதற்கு முன் மஜித் மஜிதியின் நேர்காணலைத் தோழி தீபா மலைகள் இதழில் செய்திருந்த போது இதே போல ஒரு அங்கீகாரத்தை வாசித்து வழங்கியிருந்தார்கள். ஆனால் இந்த வேகத்திற்கான அல்லது இந்த பரவலுக்கும் பரபரப்பிற்கும் காரணம் என்னவெனத் தோழி தீபாவிற்கு போன் செய்து விசாரித்தேன். ஒளிப்பதிவாளர் செழியன் தன் முகப்புத்தகப் பக்கத்தில் மலைகள் இதழில் வெளியான குப்ரிக்கின் நேர்காணல் பக்கத்தை ஷேர் செய்திருந்ததால் அது வேகமாகப் பரவி சினிமா சம்பந்தமான நண்பர்கள் மத்தியில் பரவி அதை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற உண்மை புரிந்தது.

செழியனைத் தொடர்பு கொண்டபோது அவர் உற்சாகமூட்டும் விதமாகப் பேசினார். மஜித் மஜிதிக்கு கிடைத்த வரவேற்பைத் தாண்டிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தால் இந்த நேர்காணல்களை ஒரு புத்தகமாகக் கொண்டு வரலாம் போலிருக்கிறதே எனச் சொன்னேன். அந்தக் கருத்தை அவர் வலியுறுத்தி அப்படி ஒரு புத்தகம் கொண்டு வந்தால் அது நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் அதை உடனே செயல்படுத்தும்படியும் ஆர்வமூட்டினார்.

இந்த நிகழ்வுகள் நடந்து இரண்டு நாளில் மலைகள் இதழில் வெளியான குப்ரிக்

நேர்காணல் 200 லைக்குகளைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. இது மேலும் நம்பிக்கையூட்டியது. உடனே இந்த நேர்காணல்களைப் புத்தகமாக்கும் திட்டத்தை நண்பர் அய்யப்பன் மற்றும் அவருது மனைவி தீபாவுடன் உரையாடியதில் அதுவரை 12 பேருடைய நேர்காணல்கள்தான் வெளிவந்திருப்பதால் குறைந்தது 15 பேரின் நேர்காணல்களையாவது தொகுத்து வெளியிடலாம் என்று நண்பர் அய்யப்பன் சொல்ல அந்தக் கருத்தை படு உற்சாகமானதாக எடுத்துக்கொண்டு இரவு பகல் என உழைக்க தொடங்கினார் தோழி தீபா. கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் 3 பேரின் நேர்காணல்களை ஒழுங்கு செய்து அவற்றை மொழிபெயர்த்து, புத்தகம் கொண்டு வர மிகக்கடுமையாக உழைத்தார் தோழி தீபா. அவரின் இந்தப் பணி மேதைகளின் குரல்கள் புத்தகம் சிறப்பாக அமைந்ததற்கான காரணம் என்று சொல்ல வேண்டும்.

ஒரே நாளில் பலமுறை போனிலும் மெயிலிலும் தொடர்பு கொண்டு நேர்காணல்களின் வடிவங்களில் தொடர்ந்து மாற்றங்களையும் ஒழுங்குகளையும் செய்து புத்தக வடிவமைப்பிற்கான பணிகளை வேகமாக செய்யத் தொடங்கினார்.

தோழி தீபாவுன் இந்த ஆத்மார்த்தமான பணியும் அதற்கு உற்சாகமூட்டும் வகையில் நண்பர் அய்யப்பன் செயல்பட்டதும் மலைகள் பதிப்பகத்தின் இரண்டாவது புத்தகம் விரைவாக அதுவும் முரகாமியின் புத்தகத்தோடு சேர்த்தே கொண்டு வர உதவியது.

அட்டையின் வடிவமைப்பிலும் புத்தக லே அவுட்டிலும் நான்கு முழு நாட்கள் வேறு எந்தப் பணிகளையும் செய்யாமல் நண்பர் பஷீர்  செய்தார். அவர் மலைகள் பதிப்பகம் கொண்டு வருகிற புத்தகங்கள் நன்றாக வரவேண்டும் என்ற அக்கறையை விட பாவப்பட்ட , அப்பிராணியான சிபி ( இது அவரின் அபிப்பிராயம் ) ஏதோ கஷ்டப்பட்டு செய்கிற ஒரு காரியத்திற்கு  நம்மாலான உதவிகளைச் செய்யலாம் என்ற அர்த்தத்தில் உழைத்துக் கொண்டிருந்தார். ( இது உண்மை . ) இல்லையென்றால் அவரின் போக்கில்தான் அட்டை வடிவமைப்பார், வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பார். ஆனால் சிபி சொன்ன ஆலோசனைகளைக் கேட்டு வண்ணங்களையும் படங்களையும் போட்டு வடிவமைத்ததால் இது பஷீர் வடிவமைத்த அட்டை எனச் சொன்னாலும் யாரும் நம்ப முடியாத அளவிற்குத் தன்னுடைய ஈடுபாட்டால் அட்டைகளை வடிவமைத்துக் கொடுத்தார். அதாவது அவரின் வளமையான பாணியைக் கைவிட்டு மலைகள் பதிப்பக அட்டைகளைத் தயாரித்துக் கொடுத்தார் என்பது நிச்சயமாக அவர் சிபி என்ற நண்பரின் மேல் பரிதாபப்பட்டு நட்பு அடிப்படையில் கொடுத்த ஒத்துழைப்புதான் என்பதை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன்.  

இப்படிப் பல நண்பர்களின் ஒத்துழைப்புடன் மலைகள்  பதிப்பக பணிகள் பல்வேறு கட்டங்களைக் கடந்து புத்தக உருவாக்கப் பணிகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. புத்தகக் கண்காட்சிக்கான புத்தகங்களை எல்லா அச்சகங்களும் தொடங்கியிருந்ததால் மலைகள் பதிப்பக புத்தகப் பணிகள் அச்சிற்கு முன்பான பணிகள் நிறைவு பெற்றிருந்தாலும் அது அச்சிட்டு பைண்டிங் செய்து புத்தகக் காட்சிக்கு வருவதில் காலதாமத்தை ஏற்படுத்துவிதமான சூழல் இருந்ததை எப்படிக் கையாளுவது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தோம் நானும் நண்பர் பஷீரும். அட்டை அச்சிடுகிற பிரிண்ட் ஸ்பாலிட்டி அச்சக உரிமையாளர்கள் நண்பர் கிருஷ்ணகுமாரும் , கிருஷ்ணனும் எனக்கு கடந்த பதின்மூன்று வருடங்களாக அறிமுகமும் நட்பும் இருந்ததால் அவர்களைச் சந்தித்து மலைகள் பதிப்பகம் கொண்டு வருகிற புத்கங்களைப் பற்றி பேசியதும் புதுப்பதிப்பகத்திற்கு முன்னுரிமை கொடுத்து பணிகளைச் சிறப்பாகச் செய்து கொடுப்பதாகச்  சொன்னதோடு உடனே அட்டைகளை அச்சிட்டும் கொடுத்து விட்டார்கள்.


download

அட்டை அச்சிட்டு முடித்தால் போதுமா? அடுத்ததாக மணி ஆப்செட்டில் தொடர்பு கொண்டால் சண்முக சுந்தரம் ( உரிமையாளர் ) போனில் தொடர்பு கொள்ள முடியாக நிலைமை இருந்தது.  எப்படியோ அவரிடம் நான் மலைகள் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்க இருப்பதையும் அந்தப் புத்தகங்கள் மணி ஆப்செட்டில்தான் அச்சிட வேண்டும் என்பதையும் தரத்தில்  கொஞ்சம்கூட குறைத்து கொண்டு வர நான் நினைக்கவில்லை என்றும் சொன்னேன். மணி ஆப்செட் சண்முக சுந்தரம் புதிய பதிப்பகத்திற்கு ஆதரவினைக் கொடுத்தார். என்னை அவருக்கு ஏற்கனவே நன்றாக அறிமுகம் இருந்ததும் மலைகள் பதிப்பக புத்தகங்களை அச்சிட்டு கொடுக்க அவர் ஒப்புக்கொண்டதற்கான கூடுதல் காரணங்கள். இது தவிர இந்தப் புத்தகங்களை உருவாக்க கிட்டதட்ட பத்து நாட்கள் நண்பர் பஷீர் என்னோடு இருந்து வேறு எந்தப் புத்தக பணிகளையும் செய்யாமல் முழுமையாக மலைகள் பதிப்பக பணிகளையே செய்ய ஒத்துழைத்ததை வெறும் நன்றி என்ற வார்த்தைகளைச் சொன்னால் அது நிறைவு பெறுமா எனத் தெரியவில்லை.

புத்தகம் அச்சகத்திற்குப் போன பிறகு நான்கு நாட்கள் சென்னைக்கும் சேலத்திற்கும் அலைந்தேன். புத்தகக் காட்சி ஜனவரி 10 தேதி தொடங்கிவிட்டது. மலைகள் புத்தகங்கள் அச்சகத்தில் இருக்கிறது. மூத்த பதிப்பாள நண்பர்களிடம் மெல்ல மலைகள் பதிப்பகம் கொண்டு வர இருப்பதைச் சொன்னேன். புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டிய புத்தகங்களை உருவாக்கும் பணியில் இரண்டு மாதங்களாக அச்சகத்தில் வரிசைகட்டி நிற்கிற புத்தகங்களைப் பற்றி சொல்லி பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். ( கிட்டத்தட்ட மலைகள் பதிப்பக புத்தகங்கள் இரண்டும் புத்தகக் கண்காட்சி நிறைவுபெற்ற பிறகுதான் கிடைக்கும் என்ற ரீதியில்தான் இருந்தன ) இதனால் பரபரப்பும் பதட்டமும் எனக்கேற்பட்டன. ஆனால் எனக்கு வேறு வழியும் இருக்கவில்லை.

ஜனவரி 13 போகிப் பண்டிகையன்று புத்தகங்களைக் கொடுப்பதாக மணி ஆப்செட் சண்முக சுந்தரம் உறுதியளித்திருந்தார். அந்த நாளுக்காகக் காத்திருந்தேன். அவர் சொன்னதைப் போலவே தயாரித்துப் புத்தகங்களை ஒரு லாரியில் ஏற்றி புத்தகக் காட்சிக்கு அனுப்பி வைத்திருப்பதாகப் போனில் தகவல் சொன்னார். ஆனால் நேரில் புத்தகங்களைப் பார்க்கிற வரையில் அதை நான் முழுதாக  நம்பவில்லை. சொன்னபடி அதாவது எனக்கு வாக்குகொடுத்தபடி புத்தகங்கள் வந்திருந்தன. அவற்றைப் பிரித்து என் கைகளால் ஆசையால் தடவித் தடவிப் பார்த்தேன். அந்தக் கணத்தின் மகிழ்ச்சியை அந்தக் கணத்தின் சந்தோஷத்தை எழுத்தில் கொண்டு வரும் வல்லமை எனக்கில்லை. பல ஆண்டுக் கனவு அது. நான் ஒரு பதிப்பாளராக வேண்டும் என்பது , அது நிறைவேறிய தருணத்தை நான் எப்படி கொண்டாட வேண்டும். ஆனால் உண்மையும் காலமும் அவசரப்படுத்தியது. அப்போது மாலை 5 மணி. புத்தகங்களை உடனே கண்காட்சியில் கொடுக்க வேண்டிய பணியைத் தொடங்கினால்தான் பலருக்கும் போய்ச் சேரும்.

download (13)

•••

சென்னைப் புத்தகக் காட்சியில் சுமார் 10க்கும் மேற்பட்ட  என் நண்பர்கள் தங்கள் கடைகளை அமைத்திருந்தார்கள். அவர்களின் கடைகளைத் தேடித் தேடி ஒவ்வொரு கடையாக இரண்டு புத்தகங்களின் கட்டுகளைச் சுமந்தபடி நான் ஒருவனாகவே ஓடிக்கொண்டிருந்தேன். புத்தகங்களைப் பார்த்த மூத்த பதிப்பாள நண்பர்கள் அதன் அட்டைகளையும் வடிவமைப்பையும் பார்த்து பாரட்டுகளை வழங்கினார்கள். மலைகளின் நண்பர்களும், வாசகர்களும் இரண்டு புத்தகங்களைப் பற்றியும் பேசத் தொடங்கி விட்டார்கள்.

அன்று புத்தகக் காட்சி முடியும் போது சுமார் இரண்டு மணி நேரத்தில்  புதுப்புனல் ஸ்டாலில்   மட்டும் 20 புத்தகங்களை நண்பர்  அகநாழிகை பொன். வாசுவும் , துறையூர் சரவணணும் விற்றிருந்தார்கள். இந்தத் தகவல் எனக்குப் பெரும் நம்பிக்கையையும் தன்னெழுச்சியையும் ஊட்டியது.புத்ககக் காட்சியில் புதுப்புனல் (அகநாழிகை வாசு ) ,உயிர் எழுத்து, நாதன் ( பாதரசம் சரவணணும் அவருடைய தம்பிகளும்.  அவர்களுக்குத் தனித்தனியாக நன்றிகள் ),டிஸ்கவரி புக் பேலஸ்.சந்தியா, விருட்சம், பரிசல், அந்திமழை,பனுவல்,கயல்கவின்,புலம்,அகநி,புக்லேண்ட்ஸ் ஆகிய புத்தகக் கடைகளில் மலைகள் பதிப்பக புத்தகங்களை விற்பனைக்கு வாங்கிக்கொண்டு அதை அக்கறையோடு விற்றுக்கொடுத்தார்கள் . அவர்களுக்கும் நன்றிகள்.

 

அதன் பிறகு புத்தகக் கண்காட்சி நடைபெற்ற நாட்கள் ஒவ்வொன்றும் என்னை உற்சாகத்தில் காற்றில் மிதக்கிற ஒரு பறவையின் இறகைப் போன்ற பரவசத்தில் பறக்க வைத்தது.

மலைகள் பதிப்பகம் பதிப்பித்த இரண்டு புத்தகங்களும் முக்கியமானவை என்ற பேச்சை வாய்மொழியாகவும் முகப்புத்தக உரையாடல்கள் வழியாகவும் நண்பர்கள் பரப்பினார்கள். எழுத்தாள நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு வருடமாகவே. தொடர்ந்து புத்தகங்கள் கொண்டு வர உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் தன்னுடைய இணைய தளத்தில் சென்னைப் புத்தகக் காட்சியில் வாங்க வேண்டிய முக்கியமான 50 புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார் . அதில் 32 மற்றும் 33 வரிசையில் மலைகள் பதிப்பகத்தின் இரண்டு புத்தகங்களையும் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அதை அச்சிட்டு கண்காட்சியில் கொண்டு வந்து புத்தகங்களை வாங்கிச் சென்ற நண்பர்களையும் வாசகர்களையும் காண முடிந்தது. புத்தகம் வெளியான இரண்டாவது நாளில் தி இந்து ( தமிழ் ) நாளிதழில் சென்னைப் புத்தகக் காட்சி பற்றிய சிறப்புப் பக்கங்களில் கவனிக்கத் தக்க 5 புத்தகங்களின் வரிசையை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்டு எழுதி வந்த வரிசையில் மேதைகளின் குரல்கள் புத்தகத்தை வரிசைப் படுத்தியிருந்தார்கள். அதே நாளில் தினமணியில் மறுபதிப்புக் காண வேண்டிய புத்தகங்கள் என்ற இடத்தில் என் புகைப்படத்தைப் போட்டு நான் சொன்ன சேலம் பகடாலு நரசிம்ம நாயுடுவின் தட்சின் இந்திய சரித்திரம் மற்றும் விட்டல்ராவின் போக்கிடம் , நதிமூலம் நாவல்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுருந்தார்கள். மீண்டும் இரண்டு நாள் கழித்து தினமணியும், தினமலர் நாளிதழும் மலைகள் பதிப்பக புத்தகங்களை கவனப்படுத்தியிருந்தார்கள்.

இதற்கிடையே சென்னைப் புத்ககக் காட்சிக்கென தொடங்கியிருந்த முகப்புத்ககப் பக்கத்தில் மலைகள் வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களாக மலைகள் வெளியிட்ட புத்தகங்களைப் பற்றி சொல்லியிருந்தார்கள். கவிஞர் குட்டி ரேவதி தன் முகப் புத்தகத்த்தில் மலைகள் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். நண்பரும் கவிஞருமான சமயவேல் தொடர்ந்து முரகாமி பற்றியும் மலைகள் பதிப்பகம் வெளியிட்டுள்ள முரகாமியின் புத்தகம் பற்றியும் தன் முகப் புத்தகத்தில் எழுதியவாறிருந்தார். எழுத்தாளர் லட்சுமி சரவணணும் தன் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார். இப்படி பரவலான கவனிப்பு கிடைக்க தொடங்கியவுடன் புத்தகங்களின் விற்பனையில் வேகம் கூடியதைக் காண முடிந்தது. இவர்கள் தவிரவும் நண்பர்கள் எழுதியிருக்கலாம். ஆனால் அந்தச் சமயத்தில் என்னிடம் கணிணி இல்லாததால் என்ன நடந்தது என்பதை நான் கவனிக்க முடியாமல் போய்விட்டது. ஆகையால் விடுபடல் இருந்தால் நண்பர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம்.

வெளியூர்களிலிருந்து வந்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றவர்களையும் சந்தித்து உரையாட முடிந்தது. அவர்கள் மலைகள் பதிப்பக புத்தகங்களை வாங்கி விட்டோம் எனச் சொன்னதை நான் கனவில் நடந்ததைப் போலதான் உணர்ந்தேன். நண்பர் கருணாகரன் ( இலங்கை ) மூத்த படைப்பாளி யேசுராஜாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் ஒ எனக்கு சிபியைத் தெரியுமே என்று சொன்னதோடு அல்லாமல் மலைகள் பதிப்பக புத்தகங்களை வாங்கியிருப்பதையும் காட்டினார். எப்படி என்பதை மலைகள் இணைய இதழும் முகப்புத்தகமும் அதை சாத்தியப்படுத்தியருப்பதைச் சொன்னார். சுவிஸ்ஸிலிருந்து சயந்தன் வந்திருந்தார்.சேமீதரன்,தமிழ்க்கவி,தமிழ்நதி,தீபச்செல்வன்,நளாயினி போன்ற புலம்பெயர்ந்த படைப்பாளிகளையும் சந்திக்க முடிந்தது. இவர்கள் எல்லோருமே மலைகள் பதிப்பித்த புத்தகங்களை வாங்கிச்சென்றதைக் காண முடிந்தது.

1513294_614030858633987_246614726_n

தினசரி புத்தகக் காட்சியில் நண்பர் அய்யப்பனும் தோழி தீபாவும் என்னைச் சந்தித்து உற்சாகத்துடன் பிரபலங்களையும் சந்திக்க வைத்தார்கள். தோழி தீபாவின் புத்தகம் மலைகள் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்திருந்ததும் அது அவருக்கு ஒரு நல்ல கவனத்தைப் பெற்றுக்கொடுத்திருந்ததாலும் அவர் பரவசமானதொரு மனநிலையிலேயே இருந்தார். பதிப்பாளரும் படைப்பாளியும் ஒரு சேர மகிழும் தருணங்கள் தமிழ்ப்பதிப்புலகில் வெகு அபூர்வமானதாகவே இருந்து வருகிறது.

புத்தகக் காட்சி நிறைவினை அடைந்த நாளில் மலைகள் பதிப்பக புத்தகங்கள் விற்ற தொகையும் ,  விற்ற புத்தகங்களின் எண்ணிக்கையும் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.

இந்தத் தருணத்தில் நன்றிக்குரியவர்கள் பட்டியல் ஒன்றைப் போட்டால்தான் அது ஒரு மனநிறைவைத் தரும் என நினைக்கிறேன்.

காலச்சுவடு மற்றும் உலகத் தமிழ் இதழ்களில் பணி வாய்ப்பை வழங்கி எனக்கு அச்சு மற்றும் மின்னிதழ் ஊடகங்களில் அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் காலச்சுவடு கண்ணணுக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். அவர் வழங்கிய அந்த சென்னை வாழ்க்கைதான் என்னுள் ஏராளமான அனுபவங்களை ஏற்படுத்திக்கொடுத்தது. பதிப்பகம் மற்றும் விற்பனை துறையிலும் அனுபவங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு பல்துறை நண்பர்களையும் உருவாக்கிக்கொடுத்தற்கு நண்பர் காலச்சுவடு கண்ணன்தான் முழுக் காரணம். ஆகையால் அவருக்குதான் என் முதல் நன்றிகள்.

அப்போது எனக்கு இதழியல் துறையில் அனுபவங்களைக் கற்றுக்கொடுத்த என் ஆசிரியர் அரவிந்தனுக்கும் நன்றிகள்.

மலைகள் பதிப்பகம் தொடங்க தங்கள் உற்சாகமூட்டல்களை வழங்கிய சே.பிருந்தா,அல்லி வெங்கடாசலம்,தாமோதர் சந்துரு,செங்கதிர்,முத்தமிழ்விரும்பி,செல்வராஜ் ஜெகதீசன், கோபி சரபோஜி, மற்றும் கார்த்திக்பாலசுப்பிரமணியம், ஸ்ரீனிவாச ராமநுஜன், திருவேங்கடம்,ஆர்.வெங்கடேஷ் போன்ற நண்பர்களையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்.

மலைகள் பதிப்பக புத்தகங்கள் வெளிக் கொண்டு வர தீவரமாக ஆர்வமூட்டிய ஒளிப்பதிவாளர் செழியன், ஜெரால்டு மற்றும் பத்திரிகையாளர் நா.கதிர்வேலன் , ஆகியோருக்கும் நன்றிகள்.

மூத்த பதிப்பாள நண்பர்கள் தமிழினி வசந்தகுமார்,சந்தியா நடராஜன் மற்றும் சந்தியா சௌந்திர ராஜன், வ.உ.சி பதிப்பக இளைய பாரதி, கிழக்கு பதிப்பக பத்ரி, ஆகியோருக்கும் நன்றிகள்.

மலைகள் பதிப்பகத்தைப் பத்திரிகைகளில் கவனப்படுத்திய நண்பர்கள் சமஸ், அரவிந்தன்,ஆசை,கவிதா முரளிதரன்,ஷங்கர் ராமசுப்பிரமணியன், ஆதி வள்ளியப்பன், த.அரவிந்தன்,மலர் அமுதன்,ராஜா திருவேங்கடம்,கதிர்பாரதி,நக்கீரன்கோபால்,கோவி.லெனின்,ஆர்.வெங்கடேஷ் மற்றும் அமிர்தம் சூர்யா,நா.கதிர்வேலன்,கே,என்,சிவராமன் மற்றும் ஏராளமான பத்திரிகை நண்பர்களுக்கு நான் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.

சென்னைப் புத்தகக் காட்சியில் ஓவியர் மருதுவும் செழியனும் இயக்குநர் பாலாவுக்கு என்னையும் மலைகள் பதிப்பகத்தையும் மலைகள் இணைய இதழையும் அறிமுகப்படுத்தினார்கள்.ஆனால் பாலா என்னையும் என் மலைகள் இணைய இதழையும் ஏற்கனவே அறிவேன் எனச் சொல்லி புத்தகங்களை வாங்கிக்கொண்டார். அவர்களுக்கும் நன்றி. மலைகள் லோகோவை வரைந்து கொடுத்த ஒவியர் மருதுவிற்கு மீண்டும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் பி.சி,ஸ்ரீராம் கண்காட்சியில் வந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு போனதற்கு அவருக்கும் நன்றிகள்.

இந்த இரண்டு புத்தகங்களைப் பற்றி பேசியும் வாங்கியும்,வாங்கப் போகும், வாய்மொழியாக விளம்பரங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும் ஏராளமான வாசக நண்பர்களுக்கு எவ்வளவு நன்றிகளைச் சொன்னாலும் அது குறைவானதாகவே இருக்கும்.

இந்த இடத்தில் நான் நன்றி சொல்ல வேண்டியவர்களின் எண்ணிக்கை விரிந்துகொண்டே போகிறது என்பதையும் நான் மறக்காமல் சொல்ல வேண்டியவர்களின் பட்டியலும் வளர்ந்து கொண்டியிருப்பதும் மலைகள் வளர்ச்சியைக் காட்டுகிறது.

download (25)

இந்த வெற்றிக்குப் பின்னால் இவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இது தனிப்பட்ட ஒரு சிபிச்செல்வனால் நிகழ்ந்ததாக நான் நம்பவில்லை. எல்லாப் புகழும் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என எல்லாத் துறையினருக்கும் சேரும். மீண்டும் அனைவருக்கும் நன்றிகளைச் சொல்லி மலைகள் இணைய இதழும் மலைகள் பதிப்பகமும் வளர மேலும் உங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாடி பல கோடி நன்றிகளோடு …….

03/02/2014

•••

புத்தகங்கள் கிடைக்குமிடம்

மலைகள் பதிப்பகம்

119 முதல் மாடி

கடலுர் மெயின் ரோடு

அம்மாப்பேட்டை

சேலம் 636 003

செல் எண் . 892 555 44 67

malaigalpublications@gmail.com

sibichelvan@gmail.com

      

 

 

சிறுகதை – பிறகு பார்க்கவே இல்லை – அரவிந்தன்

 

 

download (26)

 

 

 

 

 

இந்தக் கதையைப் படிப்பதற்கு முன் 2007இல் நான் எழுதிய உருமாற்றம் என்னும் கதையைப் படிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் அதற்கான இணைப்பையும் இங்கே கொடுத்திருக்கிறேன். உருமாற்றம் தீராநதியில் வந்தது.

உருமாற்றம்: http://aravindanwritings.blogspot.in/

 

அவரை அதன் பிறகு பார்க்க முடியாமலேயே போகும் என ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அழகும் வீரியமுமாய்ச் சுடர் விட்டுப் பிரகாசித்த ஒளி தன் சோபை இழந்து மங்கி நெருப்பின் சிறு தீற்றலை மட்டும் தக்கவைத்துக்கொண்டிருக்கும் நிலையைக் காணச் சகியாத என் ஆழ்மனம் போட்ட திட்டமாக இருக்கலாம். ஆனால் புற்று நோயைச் சுமந்துகொண்டு அவர் தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட பிறகும் பார்க்க முடியாமல் தடுத்தது எது? துளியும் வெறுப்போ கசப்போ இல்லாத ஆழ்ந்த வருத்தத்திற்கு இத்தனை வலிமை உண்டா? அன்றாட வாழ்வின் பிடுங்கல்களில் நாம் தவறவிடும் அரிய அனுபவங்களிலும் செய்யத் தவறும் கடமைகளிலும் ஒன்றா இது? இப்படியெல்லாம் புறக் காரணங்களைச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியுமா?

அவருடைய பெண்ணுக்குக் கல்யாணம். குழந்தையாக இருக்கும்போது அவளைப் பார்த்திருக்கிறேன். 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பார்க்கிறேன். தந்தையை நினைவுபடுத்தும் அழகிய முகம். இளம் வயதிலேயே மன முதிர்ச்சி வெளிப்படும் அமைதியான தோற்றம். இதமான நடத்தை, பணிவு, அறிவின் தீட்சண்யம், கூர்ந்து கவனிக்கும் காதுகள், அளவான பேச்சு. எனக்குத் தொண்டை அடைத்தது. இந்த முகம் எனக்கு மிகவும் அறிமுகமானது. இந்தப் பார்வை, இதே புன்னகை. 23 ஆண்டுகளுக்கு முன்பு இளமாலைப் பொழுது ஒன்றில் நண்பர்களுடன் சென்று பார்த்து வியந்த அதே முகம். காலம் அசையாமல் நின்றது. மனம் நழுவியது. உதடுகள் சொற்களை உதிர்த்துக்கொண்டிருந்தன. அந்தப் பெண்ணின் பார்வையில் மாற்றம் தெரிந்தது. நான் சுதாரித்துக்கொண்டு நிகழ்கணத்துக்கு வந்தேன்.

திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கையில் எதிர்பாராத சம்பவம் எதிர்பார்த்தபடியே நடந்துவிட்டது. அவர் மிகவும் எதிர்பார்த்திருந்த இந்தத் திருமணம் தள்ளிப்போவது அவரது விருப்பத்துக்கு விரோதமானதாக இருக்கும் என்பதால் திருமணத்தைத் திட்டமிட்டிபடி நடத்த இரு வீட்டாரும் முடிவுசெய்து விட்டார்கள். அவருடைய மனைவி என்னுடைய முகவரியைத் தேடிக்கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டு உடனே அவர் முகவரியைப் பெற்றுப் பார்க்கச் சென்றுவிட்டேன். கேயார் இறந்தபோது நான் ஊரில் இல்லை. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் இதே ஊரில்தான் இருந்தார். உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். முதலில் தனியாகச் செல்ல வேண்டும். பிறகு மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.

அந்தச் சந்திப்பைப் பற்றிப் பலவாறாகக் கற்பனை செய்துவைத்திருந்தேன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துச் சலிக்கச் சலிக்கப் பேசிக்கொண்டிருந்த நாட்கள் மன அரங்கில் உயிர்பெற்றன. இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நான் செய்த பயணங்களை அவரிடம் சொல்லவே ஒரு நாள் போதாது. அவர் முற்றில் எதிர்பாராத ஒரு இடத்தில் இன்று நான் இரப்பதை அவர் எப்படி எடுத்துக்கொள்வார் என்ற கேள்வி என்னுள் எழுந்தபடி இருந்தது. அரசியலில் அவரது நிலைப்பாட்டுக்கு நேர் எதிர்த் திசையில் அல்லது நெருங்க முடியாத தொலைவில் நான் நிற்கிறேன். இதை அவர் எப்படிப் பார்ப்பார்? ஒருவேளை அவரும் மாறியிருப்பாரா? மாறவில்லை எனில் என்னோடு விவாதிப்பாரா? வாதம் செய்து பிறரை மாற்றுவதில் நம்பிக்கை கொண்டவர் அல்ல அவர். என்னுடைய மாற்றத்தின் காரணிகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தியிருப்பார். சில கேள்விகளை மட்டும் கேட்டிருப்பார்.

தத்துவங்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்த சமயம் அது. படித்ததை வைத்து என் எண்ணங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். தத்துவங்களுக்கிடையேயான சிக்கலான முரண்பாடுகளை அழகாக நீவிவிடுவார். குழம்பிய பாதைகள் தெளிவடையத் தொடங்கும். படித்த வரிகளின் மேல் புதிய வெளிச்சம் பாயும். புதிய நோக்கின் பரவசத்தில் நான் ஆழ்ந்திருக்கும்போது முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து அவர் சொல் என்னைக் கலைக்கும்.

தத்துவங்களைப் படிப்பதுடன் அந்தத் தத்துவ நூல்களை எழுதிய ஆசிரியர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் படி. அவர்கள் வந்து சேர்ந்த இடத்திற்கு அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்பதை அவை உனக்குக் கற்றுத்தரும். இந்தத் தத்துவங்களை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்கும் வாய்ப்பை இவை உனக்குத் தரும்.

வாழ்க்கை வரலாறுகள் மீது அதிக ஆர்வம் எனக்கு இருந்ததில்லை. அவர் சொன்னதை உடனே ஏற்றுக்கொள்வதில் எனக்கு மனத்தடை இருந்தது. நான் எதுவும் பேசவில்லை. இப்போது நான் அவரைச் சந்தித்திருந்தால் நான் எங்கே இருக்கிறேன் என்பதை விட எப்படி அங்கே வந்தேன் என்பதில்தான் அவர் கவனம் குவிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அவர் கேட்பதாக அனுமானித்துக்கொண்டு அந்தக் கேள்விகளை எனக்குள் நான் பலமுறை எழுப்பிக்கொண்டிருக்கிறேன். படித்த சில நூல்கள், சந்தித்த சில நபர்கள், உரையாடல்கள், அனுபவங்கள் நாட்டு நடப்புகள், அவை சார்ந்த பல தரப்பட்ட செய்திகள், அலசல்கள், விவாதங்கள் எனப் பல சலனங்கள மன வெளியில் அசையத் தொடங்கின. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நுணுகி நுணுகி ஆராய்ந்ததில் என் கேள்விகளினூடான பயணம் ஒரு புள்ளியில் குவிமையம் கொண்டது.

கேயார் ஒருமுறை ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்கள் நூலைக் கொடுத்தார். என் அணுகுமுறையைப் பெருமளவில் அந்த நூல் மாற்றியது நினைவிருக்கிறது. முடிவுகளை முன்வைத்தோ, தரப்புகளை வலியுறுத்தியோ வாதிடும் பழக்கத்திலிருந்து விடபட்டுக் கேள்விகளினூடான பயணமே உண்மையை நோக்கி இட்டுச் செல்லும் என்பதை உணர்ததிய நூல் அது. உண்மையின் மீது ஏற்றப்பட்டுள்ள பாவனைகள், படிமங்கள் சுயநலம் சார்ந்த கற்பனைகள், எதிர்பார்ப்புகளின் சுமைகள், ஆசைகளின் சுமைகள் ஆகியவற்றை ஊடுருவிச் செல்லக் கேள்விகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுத்தந்த நூல் அது. பார்க்கப் போனால் கேயாரின் அணுகுமுறையும் அதுதான். அந்த அணுகுமுறை கூர்மையும் வலிமையும் பெற்றுவந்ததன் விளைவாகவே என்னுள் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது புரிந்தது.

உன் மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று கேயார் கேட்டிருந்தால் அதன் தொடக்கப் புள்ளி நீங்கள்தான் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் பாதையும் என் பாதையும் இன்று வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அந்த மாற்றத்திற்கு விதை போட்டது நீங்கள்தான் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இந்த வாக்கியம் தந்த பரவசத்தில் சில கணங்கள் மிதந்துகொண்டிருந்தேன்.

ஆனால் இந்தப் பரவசம்கூட என் நேரத்தை அவருக்காக ஒதுக்க உதவவில்லை. பெரும் நெருக்கடியில் உழன்ற நாட்கள். லெளகீக வாழ்வைத் தாண்டிய திட்டங்களையும் கனவுகளையும் அரித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை. நாளை நாளை எனத் திட்டங்கள் பின்வாங்கிக்கொண்டிருந்த காலம் அது. விரைவில் விரைவில் என மனம் அரற்றிக்கொண்டிருந்தது. ஆனால் முயற்சிகள் முனைப்புக்கொள்ளவில்லை. உண்மையிலேயே நினைத்திருந்தால் நடந்த்திருக்கக்கூடிய சந்திப்புதான் அது என்பது என் ஆழ் மனத்துக்குப் புரிந்தே இருந்தது. எப்படியும் சந்தித்துவிட வேண்டும் என்ற வேட்கையும் சந்திப்பைத் தள்ளிப்போடும் தயக்கமும் ஒருசேர எனக்குள் இயங்கிக்கொண்டிருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். உடல் நிலை சரியில்லாதவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும் என்றால் அதைத் தள்ளிப்போடவே கூடாது என்பதை மிகக் கொடூரமான அனுபவங்களின் வாயிலாகத் தெரிந்துகொண்டிருந்த நிலையிலும் இந்த ஊசலாட்டத்தை வெல்ல முடியவில்லை. மாறுபட்ட இந்த சக்திகள் இருபுறமும் அழுத்தியதில் என் செயலாக்கமும் அசைவின்றி நின்றுவிட்டதா?

ஏதோ ஒரு புள்ளியில் தயக்கம் உடைபட்டு அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம். அவரோடு பேசியிருக்கலாம். என் தற்போதைய மாற்றத்திற்கு மட்டுமல்ல, என் வாழ்வின் பல விஷயங்களுக்கும் நீங்களே காரணம் என்ற நன்றியைச் செலுத்தியிருக்கலாம். பெரும் துயரத்துக்கு நடுவில் சிறு ஆறுதலை அவருக்கு இந்தச் சொற்கள் தந்திருக்கலாம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அந்த வாய்ப்பு நிரந்தரமாக என்னை விட்டு நழுவிவிட்டது. அந்தக் குற்ற உணர்விலிருந்து நான் தப்பவே முடியாது.

அப்பாவுடன் பொது விஷயங்கள், அரசியல் பற்றியெல்லாம் பேசுவாயா என்று கேட்டேன். சிறு புன்னகையுடன் தலையாட்டினாள். நான் மணிக்கணக்கில், நாட்கணக்கில் பேசியிருக்கிறேன் என்றேன். ஆச்சரியத்தில் அவள் கண்கள் விரிந்தன. பல விஷயங்களை அவரிடமிருந்ததுதான் கற்றுக்கொண்டேன் என்றேன். அந்தப் பெண்ணின் முகத்தில் அவள் தந்தையின் முகம் தோன்றி மறைந்தது. கடைசி மூச்சுவரை மறக்க முடியாத முகம் அல்லவா அது. கேயாரின் மனைவியின் கண்கள் பனித்தன. நான் பேச்சை மாற்றினேன்.

தயக்கத்தை உடைத்துப் போயிருந்தாலும் கேயாரிடம் பேசியிருக்க முடியாது என்பதை அவர் இறந்து பல மாதங்கள் கழிந்த பிறகே அறிந்துகொண்டேன். கேயாரின் கடைசி மாதங்களில் அவரை அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வந்த கிருஷ்ணாவைச் சந்தித்தேன். கேயார் எப்படி இருந்தார், பழையபடி பேசினாரா என்று கேட்டேன். ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவரால் உட்காரவோ பேசவோ முடியவில்லை. கண்களை மூடிப் படுத்துக்கொள்வார். நான்தான் பேசிக்கொண்டிருப்பேன். பத்து நிமிடங்களுக்குப் பிறகு என்னாலும் பேச முடியாது. அவர் நிலைமை அப்படி இருந்தது என்றார் கிருஷ்ணா.

என்னால் அந்தக் கேயாரைக் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை. தொண்டை அடைத்தது. மனம் வெறுமையானது. நீங்கள் போகும்போது என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே என்றேன். கிருஷ்ணா இதுபோன்ற கேள்விக்கெல்லாம் அசர மாட்டார். உன்னையே ரெண்டு வருஷம் கழித்து இப்போதுதான் பார்க்கிறேன் என்றார். அவர் அடையாறில் இருந்தது உனக்கு தெரியாதா என்று கேட்டார். உன் அண்ணன் சொல்லவில்லையா என்றார். நான் பேசாமல் இருந்தேன். நான் கேயாரைப் பார்க்காமல் இருந்ததற்கு நான் மட்டும்தான் காரணம் என்பது எனக்குத் தெரியும். கிருஷ்ணாவை மேலும் பேசவிட்டால் என் குற்ற உணர்வைக் குத்திக் கிளறிப் பெரிதாக்கிவிடுவார். அவரது தர்க்கத்துக்கு முன் பாவனைகளோ உணர்ச்சிகளோ உயிரிழந்துவிடும். நான் பேசாமல் இருந்தேன்.

போக வேண்டும் என்று நினைத்தபோது பேச முடியாது என்ற சாத்தியத்தை நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. புற்றுநோய் வந்த யாரையும் நான் பார்த்ததில்லை. 15 ஆண்டுக் கதையை விஸ்தாரமாகப் பேசக்கூடிய எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்ட முட்டாள்தனத்தைப் பின்னாளில் உணர்ந்தேன். இப்படி இருக்கிறார் என்று தெரிந்திருந்தால் கண்டிப்பாகப் போய்ப் பார்த்திருப்பேன் என்று நினைத்துக்கொண்டேன். இதுவும் குற்ற உணர்விலிருந்து தப்பிப்பதற்காக மனம் போடும் நாடகம் என்பது புரிய வெகுநேரம் ஆகவில்லை. கேயார் போன்ற ஒருவர், பல ஆண்டுக்காலம் வெளியூரில் இருந்தவர் இப்போது உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்றால் அவரைப் பார்ப்பதற்கு வேறு எந்தக் காரணமும் தேவையில்லை. அவரோடு நெருங்கிப் பழகாதவர்கள்கூட இந்தச் சமயத்தில் அவரைப் பார்த்துவிட்டு வந்திருப்பார்கள். வேறு யாரைவிடவும் அவருக்கு நெருக்கமானவனாக என்னைக் கற்பித்துக்கொண்ட நான் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதைத் தவிர்த்திருக்கக் கூடாது எந்த நியாயமும் இதில் இல்லை.

மனதில் சுய வெறுப்பும் விமர்சனமும் பொங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆழ் மனதின் சலனங்கள் ஒப்பீட்டளவில் அமைதியாகவே இருந்ததை உணர முடிந்தது. அணுகிப் பார்க்கையில் அந்தச் சலனங்களின் தோற்றங்கள் முற்றிலும் புதிய முகம் காட்டின. அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் மட்டும்தான் காரணமா? அவரைப் பார்ப்பதற்கு எனக்கு ஏற்பட்ட தயக்கத்துக்கும் அவருடனான என் நெருக்கத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? அவர் ஊரை விட்டுப் போவதற்கு முன் அவர் ஆளுமையில் ஏற்பட்ட சறுக்கல்களுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா? ஆழமான நெருக்கம், ஆழமான ஏமாற்றம் ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் ஒரே விதமான வலிமையுடன் உயிர்ப்புடன் இருந்ததுதான் தயக்கத்துக்குக் காரணமா?

அச்சிடப்பட்ட நூலின் பிழைகளை ஆற்றாமையுடன் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் இந்தக் கேள்விகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இனி இந்தக் கேள்விகள்தான் மிச்சம். கேள்விகளினூடே உண்மையை உணரும் பயணம்கூட இவ்விஷயத்தில் சாத்தியமில்லை. சுடருடன் பிரகாசித்த திரியை மங்கிய தணலாகவோ கருகலின் எச்சமாகவோ பார்க்க விரும்பவில்லையா நான்? புற்றுநோய்தான் அவருக்கு வந்த பெரிய அபாயமா? யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கண் காணத இடத்திற்குக் கிளம்பிச் சென்று 15 ஆண்டுகள் அஞ்ஞாத வாசம் புரிய வைத்த காரணி எது? அந்தக் காரணிக்கும் அவருடனான என் உறவின் ரசாயனத்துக்கும் தொடர்பு இல்லையா? முதுகெலும்பு வளையாமல், மடித்த கால்கள் நெளியாமல் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவரைத் தலைகுனிய வைத்த காரணி எது? இரண்டு மணிநேரமே தூங்கினாலும் ஒளி குன்றாத முகத்துடன் விடியலை வரவேற்ற முகம் தன்னை ஒளித்துக்கொள்ளத் தூண்டிய காரணி எது?

அவருடய முகம் மிகவும் சுருங்கி, சுண்டியிருந்தது என்று கிருஷ்ணா கூறியது நினைவுக்கு வருகிறது. அந்த முகத்தை என்னால் பார்த்திருக்கவே முடியாது. இறுதிச் சடங்கு நடந்தபோது நான் 100 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்ததும் ஒரு விதத்தில் நல்லதுதான் எனத் தோன்றியது.

கிளம்பும்போது அந்தப் பெண் வாசல்வரை வந்து வழியனுப்பினாள். அப்பாவின் பண்பு. வாசலில் நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திருமணத்திற்குப் பிறகு எங்கே வாசம் என்று கேட்டேன். அமெரிக்கா என்று பதில் வந்தது. மீண்டும் அந்தப் புன்னகை. உன்னைப் பார்க்கும்போது உன் அப்பாவைப் பார்ப்பதுபோல் இருக்கிறது என்றேன்.

கேயார் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். 23 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே முகம். அதே புன்னகை.

 

 

பின் ஜனநாயகத்துவம் (POST DEMOCRACTISM) எச்.முஜீப் ரஹ்மான்

download (27)
1992 ல் கம்யூனிசம் முடிவுக்கு வந்த போது வரலாற்றின் முடிவு என்று பூசியோமோவும், அண்மையில் மறைந்த செக்கொஸ்லவேக்கிய சிந்தனையாளர் வக்லாவ் ஹவெல் கம்யூனிசத்தின் வீழ்ச்சியோடு நவீன நாகரிகம் முழுவதுமாக முடிவுக்கு வந்து விட்டது என்ற சொல்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்களில் முதன்மையானது இதுதான்: நவீன நாகரிகத்தின் அடிப்படை நம்பிக்கை, அறிவியலால் உண்மையை அறிய முடியும் என்பதும் அப்படி நாம் அறிவியலைக் கொண்டு அறியும் உண்மை முழுமையானதாகவும் அதைக் கொண்டு உலகில் அனைத்தையும் நம்மால் கட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்ய முடியும் என்பதும்தான். இதன் உச்சம் கம்யூனிச சிந்தனை- ரஷ்யாவின் வீழ்ச்சி,  அறிவியல் என்னும் ஒற்றை உண்மையின் குடைக்குள் உலகைக் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையின் தோல்வியை நவீனத்துவத்தின் முடிவாய் ஹவெல் கருதுகிறார்- இனி அரசியல் “நடைமுறை அறமாக இருக்கும் (morality in practice)’ என்று சொல்கிறார் அவர்.எனினும் கம்யூனிசத்தின் வீழ்ச்சியை நான் நவீனத்துவத்தின் வீழ்ச்சியாகவே கருதுகிறேன்.சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம் போன்ற சொல்லாடல்கள் நீர்த்து போய்யுள்ளது.நவீனத்துவத்தின் மாபெரும் கண்டுபிடிப்பான மக்களாட்சித்துவம் இன்றைய சூழலில் தோல்வியில் முடிந்துவிட்ட்தாகவே நான் கருதுகிறேன்.முந்தைய மக்களாட்சித்துவம் நவீன வடிவமாக பாராளுமன்ற ஜனநாயகமாக இருந்த்து.

பாராளுமன்ற ஜனநாயகத்துவத்தை கேள்விக்குட்படுத்திக்கொண்டு பின் ஜனநாயகத்துவம் என்ற கோட்பாடை நான் முன்மொழிகிறேன்.மக்களால்,மக்களுக்கு,மக்களே தேர்ந்தெடுக்கும் வாக்கு அடிப்படையிலான தேர்தல் முறை பணத்தால் தோல்வியை கண்டிருக்கிறது.வாக்கினை பணத்தால் வாங்குவது ஜனநாயகத்தின் அடிப்படைக்கு எதிரான ஒன்றாகும்.ஜனநாயகத்தின் அடித்தளத்தில் இருக்கிற அடித்தட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவது ஜனநாயகத்தின் குணாதிசயமாகும்.இந்தியாவின் வெகுஜனத்துவ கோட்பாடுகளான பெரியாரியம்,அம்பேத்காரியம் உள்ளிட்ட பிராந்திய த்த்துவங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தை எதிர்கின்றன.பாராளுமன்ற ஜனநாயகத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றே சொல்லப்பட்ட்து.ஆனால் 65 வருட்த்துக்கு மேலாக பாராளுமன்ற ஜனநாயகம் இந்த விமர்சன்ங்களை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்துள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லமுடியும்.

மிக முக்கியமாக இந்துத்துவ சக்திகளால் பெரும்பான்மைவாதம் என்ற செயல்பாட்டுருவாக்கம் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாகவே திகழ்கிறது.பாப்ரி மஜ்ஜித் இடிப்பு பாராளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக ஆக்கியதும் ஒரு சார்பினர்களின் இருப்பு கேள்விக்குரியதாக மாறியதினாலும் பின் ஜனநாயகத்துவம் என்ற கோட்பாட்டின் முக்கியத்துவம் சூழலுக்குந்த்தாக இருக்கிறது.மேலும் நீதிமன்றத்தின் பாப்ரிமஜ்ஜித் குறித்த தீர்ப்பு ஜனநாயகத்து எதிரான ஒன்றாகவே இருக்கிறது.சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மும்பை,குஜராத் மற்றும் பல கலவரங்களால் உருவானது.இது சிறுபான்மையினருக்கு எதிராக அமைந்த்தோடு அல்லாமல் உண்மையான ஜனநாயகவாதிகள் அனைவரையும் ஜனநாயகத்தின் மீது அதிருப்தி நிலவுமாறு அமைந்த்து.ஆக சிறுபான்மையினர் வாழ உகந்த நிலை உருவாக்கப்படவேண்டும் என்பதே பின் ஜனநாயகத்துவத்தின் முக்கிய நிலைபாடாக இருக்கிறது.

வாக்கு அரசியலின் காலம் முடிந்து விட்ட்து.இதனால் எந்த பலனும் ஏற்படபோவதில்லை.வாக்கு அரசியல் ஜனநாயக கேலிக்கூத்தாக அமைந்துவிட்ட்தால் வாக்குசீட்டு அரசியல் மாற்றியமைக்கப்படவேண்டும்.தேர்தலுக்கு பலகோடி செலவு செய்து வாக்கை விலைக்கு வாங்குவதால் அதன் நோக்கம் சிதைந்துவிட்ட்து.மேலும் பெரும்பான்மைவாதம் என்ற வாக்கு அரசியல் ஜனநாயகத்துக்கு விரோதமானதாகவே இருக்கிறது.பின் ஜனநாயகத்துவம் இந்தியாவில் 3000 சமூகங்கள் இருக்கிறதென்றால் அனைத்து சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அரசியல்,பொருளாதாரம்,சமூகவியல் என்று அளிக்க கோருகிறது.இன்று சமூக வலைதளங்கள் அனைத்து மக்களுக்குமான கருத்து சுதந்திரத்தை முன்னெடுத்து செல்கையில் அரசியல் கட்சித்தலைவர்கள் இதை தடைசெய்யவேண்டும் என்று சொல்வது ஜனநாயகத்தின் தோல்விக்கு மற்றொரு சான்றாகும்.அது போல அடித்தளமக்களின் கருத்துசுதந்திரம் பாராளுமன்ற ஜனநாயகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.

ஒழுங்கு, சகிப்புத் தன்மை ஒத்துப்போவது போன்றவை ஜனநாயகத்தின் அடிப்படை தேவைகளாகும். ஜனநாயகத்தில், மாறுதல்கள் கூடிப் பேசுவதாலும், கோரிக்கைகள் மூலமாகவுந்தான் நிறைவேற்றப் படுகின்றனவே தவிர, வன்முறைச் செயல்கள் மூலமாக அல்ல.ஜனநாயகத்தின் பொருள் சகிப்புத் தன்மை என்பதாகும். நம்மோடு ஒத்துப் போகிறவர்களிடம் நாம் காட்டுகிற சகிப்புத் தன்மை அல்ல! நம்மோடு மாறுபடுகிற – அபிப்பிராய பேதம் கொள்கிறவர்களுடன், நாம் காட்டுகிற சகிப்பபுத் தன்மை: – அதற்குப் பெயர்தான் ஜனநாயகம் என்பது.ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால், அதற்குப் பின்னணியாக மக்களின் நல்லெண்ணமும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டும்.

பாராளுமன்ற ஜனநாயக த்த்துவத்தின் மீது இயங்கி வரும் ஒரு அரசு நிச்சயம் ஒரு எதிர்க் கட்சி தேவை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தட்டிக் கேட்க ஆளில்லாத தனிமனிதன் எதேச்சாதிகாரி ஆகிவிடவதைப் போல – கண்டிக்க பலமான எதிர்க் கட்சி இல்லாத சர்க்க்காரும் சர்வாதிகாரித்தனம் பெற்று விடுகிறது.சாதாரண மனிதனின் தேவையை எந்த அரசாங்கமும் புறக்கணிக்க முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படைத் த்ததுவமே இந்தத் தேவையின் மீதுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது.சுதந்திரமும் ஜனநாயகமும் இன்று மரணப் படுக்கையில் கிடக்கின்றன. அவற்றின் பாதுகாவலர்கள் என்று சொல்லப் படுபவர்களாலேயே அவை மேலும பயங்கரமாகப பழி வாங்கப்படுகின்றன.இல்லாமையும், ஏழ்மையும், உயர்வும் தாழ்வும் இருக்கும் நாட்டில் எந்த விதமான ஜனநாயகம் நீண்ட நாள் பிழைத்திருக்க முடியாது.

ஜனநாயகத்தைப் பற்றி  ஆயிரம் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் சமுதாயத்தின் ஒழுங்கு – அதன் முக்கிய நோக்கம் என்பது நிச்சயம். எந்த அளவுக்கு ஒருசமுதாயத்தில் நிர்ப்பந்தமின்றி ஒழுங்கு முறை தானாக உருவாகிறதோ, அந்த அளவுக்கு அங்கே ஜனநாயகம் வளர்ச்சி பெறுகிறது மற்ற எல்லா வழிகளையும்விட ஜனநாயகம் ஒன்றுதான் மனித குலத்தை ஆளக்கூடிய மிக உயர்ந்த மார்க்கம் ஆகும்.வன்முறைச் செயல்களின் வாழ்வு முடிந்து விட்டதென்றோ, அடியோடு அழிந்து விடுமென்றோ சொல்வதற்கில்லை. என்றுமில்லா வேகத்தோடும், வலிவோடும் அது இன்று தலைவிரித்தாடுகிறது அது அழிக்கப்படவில்லை என்றால், உலகை அது அழித்துவிடும் என்பது நிச்சயம்.

ஜனநாயகம் என்ற சொல், இன்னும் வேறு எதையாவது குறிக்கிறது என்றால், அது குறிப்பது சமத்துவம் என்பதேயாகும். சமத்துவம் – எல்லாரும் வாக்குரிமை பெற்றிருப்பதிலே அல்ல – சமூக பொருளாதார அமைப்பில் எல்லாரும் பெற்றிருக்க ஏற்றத் தாழ்வற்ற நிலை – அதுதான் ஜனநாயகம் குறிக்கும் சமத்துவம் ஆகும்.வெறுப்பும் – பகையும், வன்முறைச் செயல்களுமே இன்றை நம் பலக்குறைவுக்குக் காரணமாகிவிட்டன. வன்முறைச் செயல்களைப் பின்பற்றுவகிறவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்க முடியாது.சுதந்திர ஜனநாயக நாடுகளால்தான் உலகில் சுதந்திரமும் ஜனநாயகமும் தழைக்கக உதவ முடியும்.சமத்துவம் இன்றேல் சுதந்திரமும், ஜனநாயகமும் அர்த்தமற்றவை ஆகிவிடும், சமத்துவமும், மூல பொருள்களின் உற்பத்ததி ஸ்தானமும் தனியுடமையாய் இருக்கும் வரை நிலைபெறச் செய்ய முடியாத்தாகி விடும்.

படை வலிமையும், சமாதானத்தையும்தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டிருப்பர்களை, பணிவோடும் நட்புரிமையோடும் அணுகி, சண்டையை அடியோடு தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், கொஞ்ச நாட்களுக்குத் தள்ளிப் போடச் செய்யவாவது நமது வலிமையை நாம் பூரணமாக உபயோகித்தோமானால், இந்த இடைக்காலத்திலாவது ஒருவருக்கொருவர் கூட்டுறவோடு நெருங்கி வாழ்வதை உலகம் அறிந்து கொள்ள அது உதவி செய்யக்கூடும்.ஜனநாயகத்தின்உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.
ஒரு சமூக அமைப்பில் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டுமென்றால், அங்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த முரண்நிலையின்றி ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. அதாவது இதில் ஏதோ ஒன்றின்றி ஒன்று இருக்கமுடியாது. இதுவே சமூகத்துக்கு எதிரானதாகவும், தனிமனிதனுக்கு சார்பானதாகவும் மாறிவிடுகின்றது. அதாவது அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் என்ற கோரிக்கையும் இருக்காது. இது இயல்பில் இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்களைக் கூட இல்லாததாக்கிவிடும். இது ஒரு விசித்திரமான, ஆனால் நிர்வாணமான உண்மை. இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்கள் இருக்கும் வரை, ஜனநாயக மறுப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஜனநாயகத்தின் முரணற்ற உள்ளடக்கம் இதுதான். இன்றைய சமூக அமைப்பு நீடிக்கும் வரை, ஜனநாயகத்தை மறுப்பவன் இருக்க வேண்டும். அதேபோல் ஜனநாயகத்தை கோருபவன் இருக்க வேண்டும். இன்று உலகெங்கும் அனைத்து மனிதர்களுக்கும் ஜனநாயகம் வழங்கிய சமூக அமைப்பு எதுவுமே கிடையாது. ஜனநாயகத்தை இழந்தவனும், அதை மறுப்பவனைக் கொண்டதுமான ஜனநாயக உலகம் தான், இந்த சமூக அமைப்புகள். இந்த நாடாளுமன்றங்கள் அனைத்தும் இதை பாதுகாப்பதில் தான் உயிர் வாழ்கின்றது.
இதுவே மிகவும் உன்னதமான சமூக அமைப்பாக, ஜனநாயகமாக காட்டப்பட்டு போற்றப்படுகின்றது. ஆனால் மக்களுக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு அமைப்பாக, அதன் உள்ளடகத்திலேயே அது உள்ளது. அதாவது மறுக்கப்படுகின்ற ஒரு அமைப்பாகத் தான், ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் என்ற அடிப்படையிலும் சரி, சமூகத்தில் உள்ள எந்தக் கூறும் சரி, மறுப்பதும் அதை கோருவதையும் அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பையே உயர்வானதாக காட்டுகின்றனர். இதற்கு பெயர் ஜனநாயகம். இதை நிலைநாட்டும் உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர்.
இந்த ஜனநாயகம் என்பது தீர்மானமெடுக்கும் மக்களின் அதிகாரத்தையே மறுதலிக்கின்றது. மாறாக மக்கள் வாக்கு போடுவதையே ஜனநாயகமாக காட்டப்படுகின்றது. இதையே மக்களின் சொந்த தேர்வாக காட்டப்படுகின்றது. ஆனால் இந்த தேர்வு எப்படியானதாக இருந்த போதும், மக்கள் தாம் விரும்பும் ஒரு அமைப்பை இந்த ஜனநாயகம் வழங்குவதில்லை. மாறாக அவர்களை அடக்கியாளும் ஒன்றையே ஜனநாயகம் வழங்குகின்றது. இங்கு மக்கள் வாக்களிப்பது என்பது கூட ஒரு சடங்காக, அதன் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது. வாக்கு போட்ட தேர்வை திருப்பிப் பெற முடியாத ஒன்றாகிவிடுகின்றது. தேர்வே அர்த்தமற்ற ஒன்றாகிறது. இது சொந்த அடிமைத்தனத்தையே அடிப்படையாக கொண்டதாக மாறிவிடுகின்றது.நாடாளுமன்ற ஜனநாயகம் உலக அளவில் தோல்வியை தழுவியிருக்கிறது.ஆனால் ஜனநாயகத்தில் மாற்று ஜனநாயகம் இருப்பதற்க்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.எனவே பின் ஜனநாயகத்துவம் பேசுவதற்க்கான சூழலும் சாத்தியம் இப்போது தான் அமைந்திருக்கிறது.எனவே இது குறித்து விவாதிக்கவேண்டுவது ஜனநாயகத்தில் நம்பிக்கையுடையவர்களின் கடமையாகும்.

நாளை என் மரணமென்றால்? – த.எலிசபெத் இலங்கை

 images (14)
தீயென்பதால் நா சுடுவதில்லை
நாளையென் மரணத்தை இன்றே
உணர்வதில் தவறுமில்லை
இந்நொடி இல்லையென்றாலும்
காலந்தாழ்த்திய ஓர் நொடியில்
இது நிகழ்ந்தேயாக வேண்டும்
கண்மூடி அத்தருணத்தில் என்
நினைவுகளை சங்கமிக்கின்றேன்
அலறல்களும் அழுகுரல்களுமாய்
எனதில்லம் ஓலமிடும்
அற்பாயுளில் போய்விட்டதாய்
ஆதங்கப்படும் அனைவரிலும் என
தன்னையின் கதறல்களென்
நெஞ்சத்தைப் பிழிகின்ற்து
இத்தனை வருடங்களில்
எனைதாங்கிய தந்தை
வேதனையை விழுங்கமுடியாதவராய்
விம்மியழும் காட்சி ஐயகோ…
சங்கறுந்துவிழு மளவுக்கென்
சகோதரர்களின் வீறிட்ட அழுகை
அன்பென்ற ஆச்சரியத்தை
ஆழமாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது
ஊரிலுள்ளவர் குழுமியிருக்க‌
உறவினர்கள் கலங்கிநிற்க‌
எனை பிடிக்காத சிலர்கூட‌
கன்னத்தில் கரம்வைத்ததும்
இப்போதுதான்
‘பாவம் நல்ல பிள்ளை’
இறுதியில் எல்லாருக்குமான‌
மரண சான்றிதழ் எனக்கும்
கிடைக்கலாம்…
பழகிய உறவுகள்
நெருங்கிய சொந்தங்கள்
அறிந்த பந்தங்கள்
தெரிந்த நட்புக்களென‌
எல்லாரும் கலந்துகொள்ளலாம்
இறுதுயூர்வலத்தில்
வாய்வழிச் செய்தியறிந்து
அநுதாபங்கள் சில‌
வந்துவிழலாம்
ஆச்சரிய செய்தியாய் முகநூலில்
நட்புக்களின் கண்ணீர்துளிகள்
கவிதை வடிக்கலாம்
இதயம் நெகிழும் இறுதியூர்வலத்தில்
இளகாத நெஞ்சம் ஒன்றில்லாதிருக்கலாம்  ஆனால்
எனதிதயமறியா ஓர்நெஞ்சம் மட்டும்
இச்செய்தியறியாமலிருக்கலாம்
கதறல்களோடு கல்லறையாக்கப்பட்ட‌
எனதுடலம்
மலர் வளையங்களினால்
அலங்கரிக்கப்படும்
சாஸ்திர சம்பிரதாயங்கள்
சமய வழிபாடுகளுடன் என்
பூலோக வாழ்வின் பூரணமும்
ஆறடி நிலத்துக்குள் நிரப்பப்படும்
ஆறாத சோகங்களுடன்
நிறைவேறிய என்
வாழ்வியல் யாத்திரையுள்
முடிந்துபோனது எல்லாமே
நினைவுகளோடூ திரும்பிப்பாராமல்
திரும்பி போகுமுறவுகள்
நாற்பதாவது நாளை நினைவுகொள்வார்கள்
நிஜங்களுக்குள் தொலைந்துபோகும்
நிமிடங்கள்  நிஜமாயென்
ஞாபக சுவடுகளை தொலைத்துக்கொண்டிருக்கும்
•••

சிறுகதை – யயகிரகணம் – கார்த்திக் பாலசுப்பிரமணியன்

images (12)

 

 

 

 

 

செம்மண் தரையில் சிந்திய நீரைப்போல பசி வயிரெங்கும் மெல்லப் பரவிப் படர்ந்தது. வயிறை நிரப்பிவிட்டால் மனதுக்குச் சிறகு முளைத்துவிடுகிறது. சிறகு முளைத்து மட்டுமென்ன பயன்? கூண்டை விட்டு வெளியேறி உயரப் பறந்து வானைத் தொட்டாலாவது பரவாயில்லை. முட்டி முட்டி மோதி கூண்டுக்குள்ளேயே சிறைப்பட்டு ரணமாகிறது. அதற்காகவே வயிறைக் காயப்போட்டேன். காலியான வயிறு எப்போதும் கனவுகளை அனுமதிப்பதில்லை.

 

கைகள் நிறையப் பைகளையும், கண்கள் நிறையத் தூக்கத்தையும் எதிர்ப்படும் ஒவ்வொருவரும் ஏந்தி வந்தனர். ஆட்களை இறக்கிவிட்டும், ஏற்றிக் கொண்டும் பேருந்துகள் வருவதும் போவதுமாய் இருந்தன. இதுவே எங்கள் ஊர்ப்பக்கமாயிருந்தால், இப்படியொரு பின்னிரவில் பொதுவாக ஆளரவம் அடங்கிப் போயிருக்கும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அதற்கான அறிகுறியே தென்படவில்லை. திருமணம், எழவு, வரவு, செலவு, மருத்துவம், காதல், கவிதை, காமம் என பிரயாணத்திற்கான தாத்பரியம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருக்கக்கூடும். யாரறிவார்?

 

இந்தப் பேருந்து நிலையத்தில், என்னைப் போல யாரேனும் ஒருவன் தன் அடங்காக் காமத்தையும், ஆறாத் தோல்வியையும் பசியால் மட்டுப்படுத்தி அமர்ந்திருப்பானா? இருக்கக்கூடும்.

 

வானம் சூல் கொண்டு நிறைந்திருந்தது. ஒரு நட்சத்திரம் கூட கண்ணில் படவில்லை. வீசும் காற்றில் குளிர் மெல்ல ஏறியிருந்தது. நான் உட்கார்ந்திருந்த திண்டுக்கு அருகே பேருந்துகளின் நடத்துனர்கள் தத்தம் வருகையைப் பதிந்து கொண்டிருந்தனர். அதற்குப் பின்னாலிருந்த விளக்குக் கம்பத்திற்கு அருகே பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள். ஜிகு ஜிகுவென மின்னும் கண்ணாடிச் சேலை. முகம் முழுக்க ஒப்பனை. அவளின் பெரிய கண்களில் கண்-மை நிறைந்து வழிந்தது. வாடாத மல்லிகைப் பூ. யாரையோத் தேடும் பாவனையில் இடம் வலம் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

காலையில் அம்மா, மதுரைவரை சென்று, போன வாரம் பார்த்த பெண்ணின் அண்ணனை ஒரு தடவை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு வருமாறு கூறிய பொழுதே எனக்குத் தெரியும் இப்படித்தான் நடக்கும் என்று. சொன்னால் மட்டும் கேட்கவா போகிறாள். அடுத்த இரண்டு நாட்கள் அழுது அடம்பிடிப்பாள். மூன்றாவது நாள் எப்படியும் நான் போக வேண்டியது வரும். அதுவரை காத்திருப்பானேன். அதனால் சரியென்று சொல்லிக் கிளம்பினேன்.

 

மதுரையில் ‘தங்கரீகல்’ தியேட்டருக்கு எதிரே இருந்த கடைத்தெருவில் சிறியதொரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறார். பெயர் ஆறுமுகம். தேடிக் கண்டடைவது ஒன்றும் அத்தனை கடினமாக இருக்கவில்லை. மதிய உணவை முடித்துவிட்டு ஊரிலிருந்து கிளம்பி, அந்தக் கடைத்தெருவை அடையும் பொழுது மணி மாலை ஐந்தாகியிருந்தது. வானத்தைச் சாம்பல் நிற மேகங்கள் தழுவிப் போயின.

 

அருகில் இருந்த டீக்கடை ஒன்றில் ஒரு டீயைக் குடித்துக் கொண்டே, எப்படி ஆரம்பிப்பது என்று என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். கடை அடைத்திருந்தால் என்ன செய்வது? கடை திறந்திருந்து அவர் அங்கில்லாது போனால் என்ன செய்யலாம்? கடையும் திறந்திருந்து, அவருமிருந்து, ஒரு வேளை என்னை அவருக்கு அடையாளம் தெரியாவிட்டால்? இப்படி அத்தனை எதிர்மறைகளுக்கும் என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்.

 

அவர், எனக்கு அவ்வளவுச் சிரமம் எல்லாம் வைக்கவில்லை. கடையில் தளம் தெரியாதவாறு தரையெங்கும் கோரைப்பாய் விரிக்கப்பட்டிருந்த்து. கடை மொத்தமே இருபதுக்கு இருபதடிதான் இருக்கும். அதில் ஒரு ஓரத்தில் மரத்தாலான மூன்றடி உயரமுள்ள மரப்பீரோ இருந்தது. பீரோவை ஒட்டி ஒரு சின்ன சாய்வு மேசை போட்டு உட்கார்ந்திருந்தார் ஆறுமுகம். திருநீறு, முன்வழுக்கை முழுவதும் நிறைந்திருந்தது. இருபுருவங்களுக்கிடைய மிகக்கச்சிதமாய் ஒரு வட்டப் பொட்டு. கழுத்தில் மெல்லிய துளசி மாலை. அப்போதுதான் குளித்துமுடித்து வந்து உட்கார்ந்திருந்தது போல கசங்கலோ களைப்போயின்றி இருந்தார்.

 

பயணத்தில் கலைந்து போயிருந்த முடியைக்கூட வாராமல், முகத்தையும் கழுவாமல் நான் போய் நின்றேன்.

 

“வணக்கம். என் பேர் சந்திரன். ராஜபாளையத்துல இருந்து வர்றேன். போனவாரம் கூட மீனாட்சியம்மன் கோவில்ல பொண்ணு பாக்க வந்திருந்தோமே..”

 

“அடடடே.. நல்லா ஞாபகம் இருக்கு தம்பி. வாங்க. உட்காருங்க. டீ, காபி என்ன சாப்டுறீங்க? “

 

“இல்ல ஒண்ணும் வேணாங்க… இப்போ வர்ற வழியிலதான் டீ குடிச்சுட்டு வர்றேன்.”

 

“அப்படியெல்லாம் (ச்)சொல்லக்கூடாது. டேய் தம்பி.. ஓடிப்போயி மயிலண்ணன் கடையில போயி மூணு டீ வாங்கியா.. வேடிக்க பாக்காம (ச்)சட்டுன்னு வந்துசேரணும்” என்று கடையிலிருந்த பையனை ஏவிவிட்டு என்னிடம் “சொல்லுங்க தம்பி. வீட்டுல எல்லாரும் செளக்கியம்தானே“ என்றார்.

 

“எல்லாரும் நல்லாயிருக்காங்க. போன வாரம் கோவில்ல வச்சே எங்களுக்குப் பொண்ணப் பிடிச்சுருக்குன்னு சொல்லிட்டுப் போயிட்டோம். நீங்க போயி இரண்டு நாள்ல கலந்து பேசிட்டு சொல்றோம்ன்னு சொன்னீங்க. ஒரு வாரமாச்சு. தகவலொண்ணுமில்ல. அதான் அம்மா நேர்ல போயி ஒரு வார்த்த கேட்டுட்டு வரச் சொன்னா.“

 

“நல்லது தம்பி. நாங்களே உங்க வீட்டுக்கு ஒரு போன் பண்ணிச் சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தோம். அப்படியிப்படி கொஞ்சம் பிஸியாப் போயிடுச்சி.. தம்பி, தப்பா நினைக்க வேண்டாம். பொண்ணு மேல படிக்கணும் ஆசப்படுதா.. இத்தன வருசமா அவ முகம் கோண நாங்க எதுவும் செஞ்சதில்ல. படிக்கணும்மிட்டு ஆசப்படுத புள்ளயப் போயி கூரப் புடவயக் கட்ட வைக்க வேணாமுன்னு பாக்கோம். நாலெழுத்து நல்லாப் படிச்சுப்பிட்டா பின்னாடி அவ பிள்ளகுட்டிகளுக்கு பிரச்சனயில்ல பாருங்க. என்ன நான் சொல்றது. அதுனால இப்போதைக்கு அவ கல்யாணத்த இரண்டு வருசம் தள்ளிப் போடலாமுன்னு நினைக்கிறோம். அவளுக்கு இன்னும் வயசிருக்குல. இப்பதான கழுத இருபது கழிஞ்சு இருபதொண்ணே பொறக்குது. அதான் நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்க வேண்டாம். “

 

“ஓ.. சரிங்க. பரவாயில்ல. நான் அம்மாக்கிட்ட எடுத்துச் சொல்லிக்கிறேன். அப்ப நான் வரேன்”

 

“இருங்க தம்பி.. இப்போ டீ வந்துடும். இருந்து, குடிச்சுட்டுப் போங்க”

 

“பரவாயில்லங்க. வர்றேன்“ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து கிளம்பினேன். எங்கே போக வேண்டும் என்ற எந்தக் குறிக்கோளும் இல்லாமல் கால் போன பாதையில் போனேன்.

 

முப்பத்து நான்கு வயதிலும், பெண் பார்க்க கோவில் கோவிலாகச் சுற்றித் தேய்ந்த கால்கள் இழுத்துப் போன பாதையெல்லாம் போய்க் கொண்டிருந்தேன். மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை. யோசித்துச் சொல்கிறோம். ஜாதகம் பொருந்தவில்லை. படிப்பு போதவில்லை. வேலை நிலையானதாயில்லை என்று தட்டிக் கழிப்பதற்கு உண்டான அத்தனை காரணங்களையும் இதுவரையில் கேட்டாகிவிட்டது.

 

முதலில் என்னவோ மிக நாசூக்காகத்தான் ஆரம்பித்தார் ஆறுமுகம். எதிர்பார்த்ததுதான் என்பதால் எனக்குப் பெரிதாக அதிர்ச்சியொன்றுமில்லை. நானே நேரில் வந்தது உண்மையில் அவருக்குத்தான் சங்கடத்தைத் தந்திருக்கும். ஆனால் அந்தக் கடைசி வார்த்தையில், பெண்ணுக்கும் எனக்கும் பதிமூன்று வயதுகள் வித்தியாசம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். இல்லாதது ஒன்றையும் சொல்லவில்லைதான்.  ஆனால் உண்மையை உள்ளபடி ஏற்றுக்கொள்வதுதான் அத்தனை சுலபமாயிருப்பதில்லை. இதோ, போன பிப்ரவரியுடன் முப்பத்து நான்கு வயது நிறைவுற்றது. இத்தனை வயதிலும் கல்யாணம் நடைபெறாதிருப்பது என் குற்றம் மட்டுமா? நானா இந்த நட்சத்திரத்தில் பிறக்க வேண்டுமென்று வரம் வாங்கி வந்து உதித்தேன்? என் அப்பா குடியும் கூத்தியாளுமாய் இருப்பதற்கு நானா பொறுப்பு? இல்லை என் தங்கை வேறு ஜாதிப் பையனை காதலித்து மணந்தது என் குற்றமா? இல்லை அந்த சுஜாதாவைக் காதலித்ததுதான் என் தவறா?

 

*  *  * *  *

 

சுஜாதாவை முதன் முதலாக கலைமன்ற படிப்பகத்தில் வைத்துதான் பார்த்தேன். பொதுவாக புத்தகத்தை பதிந்து வீட்டுக்கு எடுத்து வந்து படிப்பதே வழக்கம். அங்கு வரும் சிற்றிதழ்களை எடுத்து வந்து வாசிக்க இயலாது. வேண்டுமானால் பழைய இதழ்களை நூலகரிடம் கேட்டு எடுத்துக் கொள்ளலாம்.

 

அப்படி அங்கிருந்து வாசித்துக்கொண்டிருந்த ஒரு நாளில்தான் அந்தப் பெண்ணை பார்த்தேன். முதன் முதலாக நான் பார்த்த பொழுதே சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகளை’ வாசித்துக் கொண்டிருந்தாள். நல்ல இலக்கியப் பரிச்சயம் இல்லாமல் ஜே ஜே சில குறிப்புகளை போகிற போக்கில் வாசிக்கவியலாது என்பதென் அனுமானம். அதுவரையில் அங்கு வந்து சென்ற பெண்கள் பலரும் பாலகுமாரன், ஜெயகாந்தன், சில நேரங்களில் அரிதாக ஓரிருவர் தி.ஜா ஆகியோரை வாசித்துப் பார்த்துத்தான் பழக்கம்.

 

அந்தப் பெண்ணை பேரழகி என்றெல்லாம் வர்ணித்துவிட முடியாது. ஆனால் ஒரு முறை பார்த்ததும் திரும்பி ஒரு முறை பார்க்க வைக்கும் லட்சணம் அவளிடம் இருந்தது. லேசான சுருண்ட கேசம். அளவான நாசி. சிரித்தால் ஒரு பக்கம் மட்டும் விழும் கன்னக் குழி. நூல் பிடித்து நட்டாற் போன்ற பல் வரிசை. பாலீஷ் செய்த கோதுமை நிறம். ஒரு நாளில் கிடைத்த சில நிமிடங்களில் என்னால் அவதானிக்க இயன்றது இவ்வளவுதான்.

 

அப்பெண்ணை அடுத்த முறை பார்த்த பொழுது ஆதவனின் ‘காகித மலர்கள்’ புத்தகத்தை எடுத்துப் பதிந்து கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் அவளது லைப்ரரி கார்டில் அவளது பெயரைப் பார்த்தேன்.

 

அன்று, அவளது சைக்கிள் எனது சைக்கிளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. இருபதைந்து வருடங்களில் முதன் முறையாக ஒரு பெண்ணுடன் பேச வேண்டும், பழக வேண்டும் என்று பேராவல் வந்தது அவளிடம் மட்டும்தான்.

 

“என்னங்க நீங்க சு.ரா, ஆதவன் எல்லாம் படிப்பீங்களா?”

 

“ஏன் நான் அவங்களையெல்லாம் படிக்கக் கூடாதா?” அவள் தன் லேடி ப்ர்ட் சைக்கிள் ஸ்டாண்டை தன் வலதுகாலால் மெல்லத்தள்ளி சைக்கிளை லாவகமாக வெளியே எடுத்தாள்.

 

“ஐய்யோ நான் அப்படிச் சொல்ல வர்லீங்க”

 

“பின்ன எப்படி?“ சைக்கிளில் ஏறிச் செல்லாமல் மெதுவாக உருட்டிக் கொண்டே வந்தாள். வார்த்தைகளில் சின்னதாய் ஒரு எள்ளல் தெரித்தது.

 

“நம்ம ஊர்ல அதுவும் நமக்குப் பக்கத்துல யாரோ ஒருத்தர் நமக்குப் பிடிச்ச எழுத்தாளர்களைப் படிக்கிறாங்கன்னா உள்ளுக்குள்ள குட்டியா ஒரு சந்தோஷம் எட்டிப் பாக்கும்ல. அதாங்க இது. அந்த ஆர்வத்துலதான் கேட்டேன்.” மெயின் ரோட்டுக்கு வந்ததும் யாரேனும் எங்களைக் கவனிக்கிறார்களா என்று அங்கும் இங்கும் நோட்டம் விட்டுக்கொண்டே வந்தேன். அப்படியான எந்தவித தடுமாற்றமோ முன்பின் தெரியாத ஒரு ஆடவனிடம் பேசும் பொழுது எழும் இயல்பான பதற்றமோ எதுவும் அவளிடம் இல்லை. தினம் உடன் செல்லும் வகுப்புத் தோழி ஒருத்தியுடன் பேசும் பாவனையில் என்னுடன் பேசிக் கொண்டே வந்தாள்.

 

“ஓ சரி.. சரி.. இவங்கள மட்டுமில்ல இன்னும் நிறைய படிப்பேன்“ என்று கூறிச் சிரித்து இரு கண்களையும் ஒரு நொடி, ஒரே ஒரு நொடி ஒருசேர மூடித்திறந்தாள். அப்போது இரண்டு கருப்பு வெள்ளைப் பட்டாம்பூச்சிகள் அவள் கண்களிலும், பல வண்ண வண்ணப் பட்டாம்பூச்சிகள் என் வயிற்றிலும் பறந்தன.

 

அதன் பிறகு அவளிடம் பேசுவதற்காகவும், அப்போது பெருமையடித்துக் கொள்ளவும் அதிகமாக வாசிக்க ஆரம்பித்தேன். முயற்சி பொய்க்கவில்லை. இலக்கியம் பேசிப் பேசியே இருவரும் நண்பர்களானோம்.

 

எனக்கு இது போன்ற புத்தகங்களையும், சிறு பத்திரிக்கைகளையும், இலக்கிய உலகத்தையும் அறிமுகப்படுத்திய எனது பள்ளிக்கால நண்பன் பாலாவே ஒவ்வொரு முறையும் அவன் வரும் பொழுதெல்லாம் நான் நூலகத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டுத்தான் போனான்.

 

ஒரு முறை அவன் வீட்டுக்கு வந்திருந்த பொழுது நான் ஆத்மாநாமின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். காதில் வந்து மெல்லமாய்க் கேட்டான் “ யாருடா மாமா அந்தப் பொண்ணு?”

 

“யாரு? எந்தப் பொண்ணு? நீ எப்போ பாத்த?”

 

“நான் யாரையும் பாத்தேன்னு சொல்லவேயில்லையே. சும்மாத்தான் கேட்டேன். நீதான் உளறிட்ட. இப்போ சொல்லு”

 

அவனிடம் இதுவரையில் எதையும் மறைத்ததில்லை. பள்ளியில் படிக்கும் நாட்களில்,  தினம்தினம் நான் கொண்டு போகும் பழையதுக்குத் தொட்டுக் கொள்ள வெஞ்சனம் கொடுத்த நாளிலிருந்து ஏற்பட்ட நட்பு. ஜே ஜே சில குறிப்புகளிலிருந்து எல்லாவற்றையும் அவனிடம் சொன்னேன். அவனுக்கும் அவளைத் தெரிந்திருந்தது. என்னைப் போலவே அவளை சிலமுறை கலைமன்ற நூலகத்திலும், ஒரு முறை சொக்கர் கோவிலிலும் பார்த்திருக்கிறான். அவன்தான் அடிக்கடி என்னிடம் பிடித்திருந்தால் நேராக்ச் சொல்லிவிடு. காலம் தாழ்த்த வேண்டாம் என்று அறிவுறுத்தியபடி இருந்தான்.

 

அவள் கண்களிலும் காதலை உணர்ந்த ஒரு நாளில், அவளிடம் என் காதல் கடிதத்தை நீட்டினேன். பெரிய அதிர்ச்சியேதும் காட்டாமல் நிலக்கடலைப் பொட்டலத்தை பிரித்து வாசிக்கும் ஒரு சாவதானத்துடன், என்னை நிற்க வைத்துக் கொண்டே வாசிக்கத் தொடங்கினாள்.

 

கடிதத்தை மடித்து அவள் எடுத்து வந்த புத்தகம் ஒன்றில் சொருகிக் கொண்டாள். பின்னர் என் கண்களைப் பார்த்து, “உன் கண்கள் ரொம்ப அழகு” என்று சொல்லிவிட்டு அவளின் லேடி பர்டில் ஏறிப் பறந்தாள்.

 

எனக்குத்தான் கால்கள் பூமிக்கு வர வாரக்கணக்கானது. அதன்பின் நூலகத்தில் புத்தகங்களைத் தவிர வேறு எல்லாவற்றையும் வாசித்தோம். கருங்குளம், மடவார் வளாகம், அய்யனார் கோவில் பாதை என்று தேடித் தினம் காதல் வளர்த்தோம்.

 

இதற்கிடையில் அம்மா ஒரு நாள், “ டேய் மனோ, நம்ம பாலாவோட அப்பா அம்மா ரெண்டு பேரும் பழனிக்கு பாத யாத்திர போறாகளாம். சந்தைக்குப் போற வழியிலதான் பாத்தேன். பாலாவ மதியச் சாப்பாட்டுக்கு இங்க வரச்சொல்லு. அவனுக்குப் பிடிச்ச வெந்தய்க் கொழம்பும், பருப்பும் செஞ்சு வைக்கிறேன்“ என்றாள். நேற்றிரவு பதினோரு மணி வரை பாலாவுடன்தான் சுற்றிக் கொண்டிருந்தேன். பரதேசிப்பயல், பாதயாத்திரை பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை.

 

புதிதாக வருபவர்களுக்கு அவன் வீட்டைக் கண்டுபிடிப்பது என்பது நிச்சயம் ஒரு குட்டி சாகஸப் பயணத்தைப் போல்தான் இருக்கும். அத்தனை சந்துகளைச் சுற்றிச் சுற்றி வர வேண்டும். பொதுவாக அவன் வீட்டைச் சுற்றி, பகல் நேரங்களில்கூட ஆள் நடமாட்டம் அதிகமின்றி, வெறிச்சோடிப் போய் இருக்கும். பெரும்பாலான வீடுகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்து பஞ்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிடுவார்கள். சில வீடுகளில் சிறுவர்களும் கூட. காலை ஆறு மணிக்குச் சென்றால், சாயுங்காலம் ஆறேழு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள்.

 

அவன் வீடு வெளியே பூட்டிக் கிடந்தது. ஆனால் வீட்டு வராண்டாவில் அவனது செருப்பு இருந்தது. அதன் அருகே மற்றும் ஒரு ஜோடி பெண் செருப்பும் இருந்தது. தலையை உதறிவிட்டு, கண்களைக் கசக்கியவாறு மீண்டும் பார்த்தேன். நான் அடிக்கடி பார்க்கும் செருப்பு. ஆம், அது சுஜாதாவின் செருப்புதான். மனம் என்னும் கிறுக்கன் அந்த ஒற்றை நிமிடத்தில் ஓராயிரம் முடிச்சுக்களை அவிழ்த்தான்.

 

இப்போது அவன் வீட்டு காலிங் பெல்லை விடாமல் பைத்தியம் பிடித்தவன் போல் அழுத்தினேன். ஐந்து நிமிடங்களுக்கு எந்தச் சலனமுமில்லை. இருந்தாலும் நான் காலிங் பெல்லை அழுத்துவதை நிறுத்தவேயில்லை. கொஞ்ச நேரத்தில் கைலியும் துண்டுமாக அவனே வந்து வீட்டைத் திறந்தான். அவன் கண்கள் அத்தனை உண்மையையும் சொன்னது. அவனின் உடல் மொழியில் பதற்றம் தொனித்தது.

 

“அவளை வெளியே வரச் சொல்லு”

 

“யார்டா.. அம்மாவும் அப்பாவும் பழனிக்குப் போயிருக்காங்கடா” என்றவாறே ஷூவிற்குள் கிடந்த சாவியை எடுத்து கதவு கிரிலைத் திறந்தான். அவன் கைகள் வழக்கத்திற்கு மாறாக நடுங்கின. வார்த்தைகளிலும் கோர்வையே இல்லை. பேச்சே சற்று குழறியது போலிருந்தது.

 

“அசிங்கமாயிடும்.. அவள வெளிய வரச் சொல்லு” என்று வாசற்படியிலிருந்தே கத்தினேன்.

 

நான் கத்தியது கேட்டிருக்க வேண்டும். “துப்பட்டாவை இரு கைகளாலும் மாறி மாறி இழுத்துவிட்டுக்கொண்டு தரையைப் வெறித்தப்படி அவள் வந்து நின்றாள்”.

 

வெளியில் கிடந்த அந்தச் செருப்பை எடுத்து, இருவரையும் மாறி மாறி என் ஆத்திரம் தீர அடித்தேன். ஆத்திரம் தீரும் முன்னரே அற்பச் செருப்பு அறுந்துவிட்டது. அந்தக் கெட்ட வார்த்தையால் அவளைத் திட்டி, அவள் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு வெளியே நடந்தேன்.

 

அன்றுதான் அவர்கள் இருவரையும் நான் கடைசியாகப் பார்த்தது.

 

*  *  *  *  *

எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யக் கூடிய நிலையில் இருந்தது வானம். பெய்யனெச் சொன்னவுடன் பெய்வதற்கு வானமுண்டு. ஆனால் சொல்வதற்கு யாருண்டு?

 

நான் செல்ல வேண்டிய பேருந்து வந்துவிட்டது. ஆனால் எனக்குத்தான் ஏறிப் போக மனமேயில்லை. போய் மட்டும் என்ன சாதிக்கப் போகிறேன். அதுவரையில் அங்கு நின்று கொண்டிருந்த பேருந்து நடத்துனர்களும் கலைந்து போயினர். பசியில் தலை கனத்துப் பாரமாகியது.

 

அருகிலிருந்த பெட்டிக்கடையில் இரண்டு பச்சைப்பழங்கள் வாங்கி உண்டேன். அந்தக் கடையையே மூடியவாறு அனைத்து வார, மாத இதழ்களும் வரிசைகட்டித் தொங்கவிடப் பட்டிருந்தன. அவற்றில் சில மஞ்சள் பத்திரிக்கைகளும் அடக்கம். அதிலிரண்டை வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

 

இதை நான் யோசித்துக் கொண்டிருக்கையில், எனக்கு அந்த ஜிகுஜிகு சேலை கட்டிய பெண் நினைவுக்கு வந்தாள். திரும்பிப் பார்த்தேன். இப்போதும், அவள் அந்தக் கடைக்கு அருகிலிருந்த கம்பத்திற்கு மறுபக்கம்தான் நின்று கொண்டிருந்தாள். வளைவு நெளிவுகளுடன், சற்றே சதைப்பிடிப்பு கொண்ட திரட்சியான தேக அமைப்பு அவளுக்கு. இந்த முறை நான் அவளைப் பார்த்ததை, அவள் கவனித்துவிட்டாள்.

 

அடுத்த முறை எங்கள் கண்கள் சந்தித்துக் கொண்ட பொழுது, அவள் தன் வலது கையால் வைத்திருந்த மல்லிகைப்பூவை மெதுவாக வருடிக் கொண்டே, மிக மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தாள். அது எனக்கான சமிஞ்ஞை. வாழைப்பழத் தோலை தூக்கி எறிந்துவிட்டு அவளருகே சென்றேன்.

 

“எவ்வளோ?”

 

அவள் ஒரு போன் நம்பரைக் கொடுத்து அதற்கு அழைக்குமாறு கூறிவிட்டு மெதுவாக அங்கிருந்து நகன்றாள்.

 

அவள் கொடுத்த நம்பருக்கு அழைத்ததும், அடையாளங்களைக் கேட்டுக் கொண்டு, நான் இருக்கும் இடத்திற்கு ஐந்து நிமிடத்தில் அவனே வருவதாகச் சொன்னான். வரவும் செய்தான். எண்ணெயே காட்டாத முடி. ஒட்டிப் போன முகம். ஒடிசலான தேகம். சின்னப் பையனாகத்தான் இருந்தான். இருபதுக்கு மேல வயதை மதிப்பிட முடியாது.

 

“ஆயிர ரூபா சார். ரூம், போய்வர ஆட்டோ எல்லாம் எங்க பொறுப்பு. உனக்கு ஓ.கே.வா?”

 

“சரி“ தீர்மானமாக இருந்தேன்.

 

பேருந்து நிலையத்துக்கு வெளியே நிற்பதாக, ஒரு ஆட்டோ நம்பரைச் சொல்லி, அதில் அவள் காத்திருப்பதாகவும் அங்கே சென்று ஆட்டோவில் ஏறிக்கொள்ளும்மாறு கூறினான். இதையெல்லாம் கூறுவதற்கு முன்பே என்னிடமிருந்து ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டான்.

 

அவன் சொன்னபடியே ஆட்டோ அங்கிருந்தது. அவளும் இருந்தாள். எதையும் பேசாமல் நான் ஏறி ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டேன். அவள் மறு ஓரத்தில் அமர்ந்திருந்தாள். இதயம் ஆனமட்டும் வேகமாக அடித்துக் கொண்டது. ஆட்டோ கிளம்பி, பேருந்து நிலையத்திற்கு வலப்பக்கமாக எங்கோ சென்றது. அதுவரையில் எனக்குப் பாதை தெரிந்தது. அதன் பின் சந்து பொந்துகளாக நுழைந்து சென்றது.

 

பொட்டல் வெளியான ஒரு இடத்தில் ஆட்டோ நின்றது. சுற்றிலும் கட்டிடம் ஏதேம் தென்படவில்லை. அதிலிருந்து இரு நூறு மீட்டர் தொலைவில் பிரதான சாலை இருந்தது. ஆட்டோவிலிருந்து இறங்கியதும், அந்த டிரைவர், “ஏ கல்பனா, சீக்கிரம் முடிச்சுட்டு ஒரு கொரல் கொடுப்பா” என்று சொல்லி சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டே ஆட்டோவை விட்டு வெளியேறி பிரதான சாலையைப் பார்த்து நடக்கத் தொடங்கினான்.

 

எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. பின்னர் சுதாரித்து, அவனை நிறுத்தி, “என்னது இங்கயே வா? என்ன விளையாடுறியா? ஆயிரம் ரூபா வாங்கும் போது ரூமுக்கும் சேத்துன்னு வாங்கிட்டு இப்போ இங்கேயேன்னு சொல்ற”

 

“சார்.. எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல சார். கொடுத்தவய்ண்ட போயி கேளுங்க. எனக்கே இது பயங்கர ரிஸ்க்கு. போலீஸ் எதாவது மடக்குனாய்ங்கனா ஆர்.சி. புடுங்கி வச்சுட்டு படுத்திடுவாய்ங்க. போங்க சார். இருட்டுல ஒண்ணும் தெரியாது. “

 

எனக்கு உச்சி மண்டையில் சுளீரென்று வலித்தது. ஏமாற்றமும் கோபமும் பொங்கிக் கொண்டு வந்தது. இவனிடமோ இவளிடமோ கோபப்பட்டும் ஆவப்போவது ஒன்றுமில்லை. இந்தக் கையாலாகத நிலை இன்னும் எரிச்சலையேத் தந்தது. அப்போது வெட்டிய மின்னலில் கண்கள் கூசியன.

 

அவள் என் முதுகுக்கு பின் நின்று, மெல்லிய குரலில் “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோயா.. மிஞ்சி மிஞ்சிப் போனா பத்து நிமிஷம்.. இதுக்குப் போயி..”. சட்டென்று முதுக்குப்பின் நின்றவளைத் திரும்பி முறைத்தேன். அப்படியே அடங்கி நிசப்தமானாள்.

 

“ஆட்டோவ எடு. பஸ் ஸ்டாண்ட்டுக்கு விடு”

 

“யோசிச்சுதான் சொல்றியா?”

 

“வண்டிய எடுடா” கத்தினேன்.

 

அவள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதே அருவருப்பாய் இருந்தது. என்னுடைய இயலாமை இன்னும் படுத்தியது. வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே அமைதியாக வந்தேன். வேறேன்ன செய்ய முடியும் என்னால்? எல்லாவற்றிலும்.

 

பேருந்து நிலையத்துக்கு வெளியே சற்றுத் தள்ளியே ஆட்டோவை நிறுத்தினான். அதிலிருந்து இறங்க முற்பட்ட என்னை இடைமறித்து அவள், “கோபப்படும் போது கூட உன் கண்ணு ரொம்ப அழகுய்யா“ என்றாள்.

 

“போடித் தேவடியா”

 

திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன். வானத்தைக் கிழித்துக் கொண்டு மழை கொட்டத் தொடங்கியது.

 

 

அலையுடன் எனது வாழ்க்கை ( ஸ்பானிஷ் ) : ஆக்டேவியா பாஸ் (மெக்சிகோ) ஆங்கிலம் : எலியட் வீன்பெர்கர் (Eliot Weinberger ) – தமிழில் ச. ஆறுமுகம்.

download (31)
(1990ல் இலக்கியத்துக்கான  நோபல் விருது பெற்ற ஆக்டேவியா  பாஸ் மெக்சிகோ நகரில் 31. 03. 1914ல் பிறந்தார். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். 

மெக்சிகன் அயல்நாட்டுப் பணியில் 1946ல் சேர்ந்த ஆக்டேவியா  பாஸ் 1962 முதல் 1968 வரை இந்தியாவுக்கான மெக்சிகன் தூதராகப் பணியாற்றினார். 1968 கோடைகால ஒலிம்பிக்கின் போது மெக்சிகோ நகரில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை எதிர்த்துத் தன் பணியை இராஜினாமா செய்தார். அதன்பின் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் காம்பிரிட்ஜ், ஹார்வர்டு உள்ளிட்ட பல புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் இலத்தீன் அமெரிக்க இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

அவரது பத்தொன்பதாவது  வயதிலேயே `காட்டுநிலா` என்ற கவிதைத் தொகுதியை 1933ல் வெளியிட்டார். அடுத்த 65 ஆண்டுகளுக்கு எண்ணற்ற கவிதைத் தொகுதிகள், கட்டுரைகள் படைத்தார்.

தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள ` My Life with Wave ` ஒரு சிறுகதை என்ற போதிலும் இதனை உரைநடைக் கவிதை என்றும்  சில திறனாய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். இப்படைப்பில் ஆக்டேவியா பாஸ் அலையை ஒரு காதலிக்கும் பெண்ணாக உருவகப்படுத்தி, பெண்மையை இயற்கை, பேரன்பு,  மற்றும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளோடு இணைக்கிறார். கதைசொல்லியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு, சிறையிலடைக்கும் நீதிமன்ற `அதிகாரிகளை`ப் பதிவுசெய்வதன் மூலம் மனித உரிமை மற்றும் அடக்குமுறை  மீதான விசாரணையும் மேற்கொள்கிறார். )

.

 

நான் அந்தக் கடலை விட்டு மேலேறியபோது, அலைப்பெண்  ஒருத்தி பிறர்  எல்லோரையும்  முந்திக்கொண்டு ஓடிவந்தாள். அவள் உயரமாக, ஆனால் எடை குறைவாக,  மென்மை மிக்கிருந்தாள். அவளது மிதக்கும் ஆடைகளைப் பற்றிக்கொண்டு பலர் ஆரவாரித்தாலும்  அவள் என் கையோடு கோர்த்துத் தொங்கிக்கொண்டு முன்புறமாக எம்பிக் குதித்தாள்.  நான் எதுவும் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை; தோழிகள் மத்தியில் அவள் அவமானப்படுவது எனக்குத் துன்பமாயிருக்குமே! அதுமட்டுமல்ல, அங்கிருந்த பெரியவர்களின் கொள்ளிக் கண்கள் வேறு என்னைக் கட்டுப்படுத்திவிட்டன. நாங்கள் நகருக்குள் வந்த போது, அதுவரையிலும் கடலைவிட்டு வெளியே வந்தேயிருக்காத, அவளது கற்பனையில் விரிந்திருக்கும் நகரவாழ்க்கை இயலாத ஒன்றென்பதை விளக்கமாகச் சொன்னேன். அவள் என்னைக் கடுமையாக நோக்கினாள்: ‘’ உங்கள் முடிவு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது. நீங்கள் அதிலிருந்தும் பின்வாங்க முடியாது.’’ நான் இனிமையாக, கடுமையாக, கேலியாக என எல்லா வகையிலும் முயன்று பார்த்துவிட்டேன். அவளோ, அழுது, அரற்றி, அணைத்துப் பயமுறுத்தினாள். கடைசியில் நான் மன்னிப்பு கோரவேண்டியதாயிற்று.

சிக்கல்கள் அடுத்த நாளிலேயே ஆரம்பமாகின. நடத்துநர், பயணிகள், காவலர்கள் கண்களில் படாமல், நாங்கள் எப்படி ரயிலில்  ஏற முடியும்? அலைகளை ரயிலில் கொண்டுசெல்வது தொடர்பாக, விதிகளில் நிச்சயமாக எதுவும் சொல்லப்படவில்லைதான்; ஆனால், அதுவே எங்கள் நடத்தை எப்படிக் கடுமையானதாகக் கருதப்படுமென்பதற்கான குறிப்புமாக உள்ளதே! நீண்ட யோசனைக்குப் பின் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே நிலையத்துக்குச் சென்று, ரயிலில் எனது இருக்கையில் அமர்ந்து யார் கண்ணிலும் படாமல் பயணிகள் குடிநீர்த் தொட்டியைத் திறந்து காலியாக்கிப் பின் மிகுந்த கவனத்தோடு என் தோழியை அதற்குள் ஒளித்துவைத்தேன்.

முதல் சம்பவம், என்  பக்கத்து இருக்கைத் தம்பதிகளின்  குழந்தைகள் அடங்காத தாகத்தைச்  சத்தமாகத் தெரிவித்ததில்  தொடங்கியது. நான் அவர்களைத் தடுத்து மிட்டாய்கள், லெமனேடுகள் தருவதாக ஆசைகாட்டினேன். அவர்கள் ஒப்புக்கொள்ளும் தருணத்தில், தாகமெடுத்த மற்றொரு பெண் குடிநீர்த்தொட்டியை நோக்கி எழுந்தாள். நான் அவளையும் அழைத்துச் சரிக்கட்ட நினைத்தேன். ஆனால், அவளுடனிருந்த கூட்டாளியின் முறைப்பு என்னைத் தடுத்துவிட்டது. அவள் ஒரு காகிதத் தம்ளரை எடுத்துக்கொண்டு குடிநீர்த் தொட்டிக்குச் சென்று குழாயைத் திருகித் திறந்தாள். என் தோழிக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடுவில் நான் தாவிப் புகுவதற்குள் அவளது தம்ளரில் பாதி நிறைந்துவிட்டது. அந்தப் பெண் என்னை வியப்புடன் நோக்கினாள். நான் மன்னிக்குமாறு முனகிக் கொண்டிருக்கும்போதே, குழந்தைகளில் ஒன்று குழாயை மறுபடியும் திறந்துவிட்டது. நான் அதை ஆவேசமாகத் திருகி அடைத்தேன். அந்தப் பெண் தம்ளரை இதழ்களுக்குக் கொண்டுசென்றாள்:

‘’ ஆ, இந்தத் தண்ணீர் உப்பாக இருக்கிறது.’’

அந்தப் பையனும்  அதையே தான் எதிரொலித்தான். பல பயணிகள் எழுந்தார்கள். அந்தக் கணவன் நடத்துநரை அழைத்தான் :

‘’ இந்த மனிதன் தண்ணீரில் உப்பைப் போட்டுவிட்டான்.’’

நடத்துநர், ஆய்வாளரை அழைத்தார்:

‘’ அப்படியானால், நீதான் தண்ணீரில் எதையோ  ஊற்றியிருக்கிறாய்?’’

காவல் ஆய்வாளர், அவர் பங்குக்கு, காப்டனை  அழைத்தார்:

‘’ ஆக, நீதான் குடிநீரை நஞ்சாக்கியவன்?’’

காப்டன் மூன்று ஏஜெண்டுகளை அழைத்தார். பயணிகளின் நெருப்புப்பார்வை மற்றும் ரகசியக் குசுகுசுப்புகளுக்கு மத்தியில், ஏஜெண்டுகள் என்னை ஒரு காலிப்பெட்டிக்கு அழைத்துச் சென்றனர். அடுத்த நிலையத்தில் அவர்கள் என்னை உந்தித் தள்ளிக் கீழே இறக்கிச் சிறைக்கு இழுத்துச் சென்றனர். நீண்ட விசாரணைகள் தவிரப் பல நாட்களாக யாருமே என்னிடம் பேசவில்லை. நான் என்னுடைய கதையை விவரமாகச் சொன்னபோது, ஜெயிலர்கூட நம்பவில்லை. அந்த ஜெயிலர் உதட்டைப் பிதுக்கித் தலையை அசைத்துச் சொன்னார்: ‘’ இது கொடுங்குற்றம். உண்மையிலேயே கடுமையானது. பாவம், குழந்தைகளைப் போய்க் கொல்லப் பார்த்திருக்கிறாயே?’’.

ஒருவழியாக, ஏதோ  ஒருநாளில் அவர்கள் என்னை  நீதித்துறை நடுவர் முன் நிறுத்தினார்கள். ‘’ உன் வழக்கு ரொம்பக் கஷ்டம்.’’ என  மறுபடியும் மறுபடியும் முனகிய அவர்,    ‘’  உன்னைத் தண்டனை நீதிபதிக்கு அனுப்புகிறேன்.’’ என்றார்.

ஒரு வருடம் கழிந்தது. கடைசியாக அவர்கள் என்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பு கூறினார்கள்.   யாருக்கும் பாதிப்பு இல்லாததால், தண்டனை குறைவாக இருந்தது. ஒரு சில நாட்களிலேயே என் விடுதலை நாள் வந்தது.

சிறைத் தலைவர் என்னை அவரது அறைக்குள்  அழைத்தார்:

‘’ நல்லது. இப்போது நீ விடுதலையாகிவிட்டாய். உனக்கு நல்லகாலம். நல்லகாலமாக இருந்ததால்தான் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால், மறுபடியும் இப்படிச் செய்துவிடாதே. ஏனென்றால், அடுத்த முறை இவ்வளவு குறுகிய தண்டனையாக இருக்காது.’’

எல்லோரும் என்னை  வெறுப்புற்று நோக்கியது  போலவே அவரும் கடுமையாக என்னைப்  பார்த்தார்.

அன்று பிற்பகலிலேயே, நான் ரயிலைப் பிடித்து பல மணி நேரம் எரிச்சல் மிகுந்த  பயணத்துக்குப் பின் மெக்சிகோ நகருக்கு வந்து, ஒரு வாடகைக்  காரில் வீட்டுக்குச் சென்று சேர்ந்தேன். என் அடுக்கக வாயிலில் சிரிப்பும் பாட்டும் கேட்டது. என் இதயத்தில் ஒரு வலியை உணர்ந்தேன். அது எப்படியிருந்தது தெரியுமா? வியப்பு நம்மைக் கடித்து முத்தமிடுகையில் வியப்பலையின் சவுக்கடியொன்று நம் இதயத்தின் குறுக்காக விழுமே அதுபோல இருந்தது: அங்கே என் தோழி, எப்போதும்போலப் பாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தாள்.

‘’ எப்படித் திரும்பவும் இங்கே வந்தாய்?’’

‘’ மிக எளிதாக: ரயிலில். நான் வெறும் உப்புத் தண்ணீர் தானென்று தெரிந்ததும் யாரோ ஒருவர் என்னைத் தூக்கி இஞ்சினுக்குள் ஊற்றினார். அது உயிரைக் கொல்கிற ஒரு பயணம்: ‘’மிகச் சீக்கிரத்திலேயே நான் வெண்ணிற ஆவியாகினாலும், கண்மூடித் திறப்பதற்குள் ஒரு அழகிய மழையில்  இஞ்சின் மேலாகவே விழுந்தேன். நான் மிகவும் மெலிந்துதான் போனேன். எண்ணற்ற துளிகளை இழந்துவிட்டேன்.’’

அவளின் பொலிவு, என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.  இருண்ட மூலைகளும் தூசு படிந்த நாற்காலி மேஜைகளுமான என் வீடு வெளிச்சமும் காற்றும் நிறைந்து தழுவல் ஒலிகளும் மரகதப் பச்சை மற்றும் நீலப் பிரதிபலிப்புகளும் எண்ணற்ற மகிழ்ச்சி தளும்பும் எதிரொளிப்புகளும் எதிரொலிகளும் நிறைந்தது.  ஒரு அலைக்குள் தான் எத்தனை அலைகள்! அந்த அலை ஒரு கடற்கரையை, அல்லது ஒரு பாறையை, அல்லது கடலுக்குள் நீளும் அணைக்கரையை, அல்லது ஒரு மார்பினை, ஒரு நெற்றியை எப்படியாக நுரைக் கிரீடம் சூட்டி ஜ்வலிக்கச் செய்துவிடுகிறது! கவனிப்பாரற்ற மூலைகள், தூசும் தும்பும் குப்பையும் நிறைந்த முழுமோசமான மூலைகளையுங்கூட அவளின் மென்கரங்கள் தீண்டின. எல்லாமே சிரிக்கத் தொடங்கின; எல்லா இடங்களிலும் வெண்பற்கள் ஒளிர்ந்தன. எனது பழைய அறைகளுக்குள் மகிழ்ச்சியோடு நுழைந்த வெயில், இதர வீடுகளை, மாவட்டத்தை, நகரத்தை ஏன் தேசத்தையே விட்டுவிட்டு என் வீட்டுக்குள்ளேயே மணிக்கணக்காகத் தங்கிவிட்டது. அது மட்டுமல்ல, சிலநாட்களில், ஒலியடங்கும் கடிய பின்னிரவுகளில், வெட்கங்கெட்ட விண்மீன்கள் கூரை இடுக்குகள் வழியே என் வீட்டுக்குள் கண் நுழைத்தன.

காதல், அது எப்போதும்  ஊற்றெடுக்கும் ஒரு படைப்பு  விளையாட்டாகவே இருந்தது.   எல்லாமே கடற்கரையாக, பொன்மணற் பரப்பாக,  மென்விரிப்புகளின் படுக்கையாகப்  புத்தம் புதிதாகின. நான் அவளைத் தழுவியணைத்தபோது, அவள் பெருமையில் பூரித்து, மென்தண்டுப் பாப்லாராக நம்பமுடியாத அளவுக்கு  உயரமானாள். உடனேயே அவளின் மென்மை, வெண்ணிறத் தூவிகள் பொழியும் நீரூற்றாகப் பொங்கிப் பூத்துப் புன்னகைத் துகள்களாகி, அதன் வெண்மை என் தலை உச்சியிலிருந்து உடல் முழுதும் பரந்து வழிந்து, என்னையே மூடி மறைத்தது. அல்லது அவள் என் முன்பாகவே தொடுவானம் போல முடிவற்றுப் பரந்து நீண்டு, நானும் ஒரு தொடுவானமாக மாறி அசைவற்று அமைதியாகும்வரையில் விரிந்தாள். அது, இசை அல்லது ஏதோ சில மாபெரும் இதழ்களின் வளைவு நெளிவுகள் கவிந்து என்னை முழுமையாக மூடியதாக இருந்தது. அவளது அணுக்கம், வந்து வந்து நனைக்கும் தழுவல்களாக, முனகல்களாக, முத்தங்களாக இருந்தது. அவளின் ஆழங்களுக்குள் அமிழ்ந்ததும் என் காலுறைகள் ஈரம்சொட்டுமளவுக்கு வியர்த்துவிட்டேன்; ஆனால், கண்மூடித்திறப்பதற்குள், நான் மீண்டும் மேற்பரப்பில், கிறுகிறுப்பின் உச்சத்தில், அந்தரத்தில் தொங்கும் கல்லைப் போலக் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் கண்டுகொண்டேன். என்றாலும் நான் ஈரமேயற்ற மென்பரப்பினுள் சுகமாகப் புதைந்திருக்கும் ஒரு இறகு போல உணர்ந்தேன். அந்த ஆழங்களுக்குள் உறங்குவதற்கு, சிரிப்பின் ஒலியை  உறிஞ்சிக்கொள்ளும் ஆயிரமாயிரம் தாக்குதல்களில், ஆயிரமாயிரம் இன்பக் கசையடிகளின் தாக்குதலில் விழிப்பதற்கு, ஈடு இணை எதுவுமில்லை.

ஆனால், அவளின் நடு ஆழத்தை, மையத்தை நான் ஒரு போதும் அடைந்ததில்லை. வலியின் வேதனையை, மரணத்தின் நிர்வாணத்தை நான் தொட்டதேயில்லை.  மனித இனந்தானெனப் பெண்மையை அடையாளப்படுத்துகிற, தொட்டதும் துடித்துப் போகிற, அந்த இரகசியப் புலம், அனைத்து உள் மதகுகளும் அசைச் சுழிப்புகளும்,  பின்னர் பெருமயக்கத்தில் ஆழ்த்தும் விரைப்பு நீட்சியும் பிணைக்கப்பட்டுள்ள அந்த மின் குமிழ்ப் பொத்தான், அலைகளுக்குள், ஒருவேளை,  இல்லாமலிருக்கலாம். அவளின்  உணர்வுமையம், எல்லாப் பெண்களையும் போலவே சிறுவட்ட அலைகளாக, என்ன, அவை பொதுமைய வட்டங்களாக இல்லாமல் பிறழ் மையங்கொண்டவையாகப் பரந்தது. ஒவ்வொருமுறையும் அது இன்னும் அகன்று பிற பால்வெளிகளைத் தொடும் வரையில் விரிவதாக இருந்தது. அவளைக் காதலிப்பது   வாய்ப்பேயில்லாத தொடுகைகளுக்கும் நீட்சியுற்று, நாம் எதிர்பார்த்தேயிராத நெடுந்தொலை விண்மீன்களுடன் அதிர்வதாக இருந்தது. ஆனால், அவளது மையம் … இல்லை, அவளுக்கு மையமென்ற ஒன்று இல்லை, சுழற்காற்றுப் போல வெற்றிடமே கொண்ட அது என்னை உள்ளிழுத்து மூச்சுத் திணற வைத்தது.

அருகருகாக நீட்டிப்பற்றிக்  கட்டிப்பிடித்து, நாங்கள்  ரகசிய முணுமுணுப்புகளை, புன்னகைகளை, நம்பிக்கைகளைப் பரிமாறிக்கொண்டோம். அவள் என் மார்பில் சுருண்டு விழுந்து, பின் முணுமுணுப்புகளின் பசுமையென விரிந்தாள். அவள் ஒரு சிப்பியாகச் சிறு நத்தைக்கூடாக என் காதுகளில் பாடல்களை இசைத்தாள். அவள் என் பாதங்களைக் கட்டிக்கொள்ளும் ஒரு சிற்றுயிராக, ஒளிவு மறைவற்று அனைத்தையும் தெளியக்காட்டும் சலனமற்ற தடாகமாக மாறிப் பணிந்து கிடந்தாள். அவளின் சிந்தனைகள் அனைத்தையும் நான், பார்வையிலேயே  தெரிந்துகொள்ளும் வகையில் அவ்வளவு தெள்ளத்தெளிந்திருந்தாள். சில குறிப்பிட்ட இரவுகளில் அவள் மேனி முழுதும் ஒளிப்புள்ளிகள் மினுங்க, அவளைத் தழுவுவதோ அக்னியைப் பச்சை குத்திய ஒரு துண்டு இரவினைத் தழுவுவதாக இருந்தது. அவளும் மேனி கறுத்துக் கசப்பாக மாறினாள். எதிர்பார்க்காத நேரங்களில் அவள் கர்ச்சித்து, முனகி, நெளிந்தாள். அவளின் வேதனைக் குரல் பக்கத்து வீட்டுக்காரர்களை எழுப்பியது. அவளது குரல் கேட்ட கடற்காற்று என் வீட்டின் வாசற்கதவைப் பிராண்டி, வீட்டுக் கூரை மீது கொந்தளித்துக் கூச்சலிட்டது. கருமேகங்கள் சூழ்ந்த நாட்கள் அவளின் எரிச்சலைக் கிளப்பின. அவள் பாத்திர பண்டங்களை உடைத்து, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினாள். என்னை அவமானங்களாலும் பச்சை மற்றும் கரிய நுரைகளாலும் மூழ்கடித்தாள். அவள் அழுது அரற்றி, உமிழ்ந்து, தீது நடக்குமென மொழிந்து சாபமிட்டாள். நிலவு, விண்மீன்கள், கோள்கள், வேற்றுலக  ஒளிக் கிரணங்களின் பாதிப்பில் அவள் மனப்போக்கு மாறுவதாக, அவளது தோற்றத்தில் அற்புத அழகு உருவாகுவதாக நான் நினைக்க, அதுவோ பேரலையைப் போல் ஆபத்து விளைப்பதாக இருந்தது.

அவள் தனிமையைத்  தவிர்க்க ஏங்கித் தவித்தாள். வீடு முழுவதும் நத்தைகளும் சிப்பிகளும் சங்குகளும், அவள் கோபத்தில் மூழ்கடித்த சிறு துடுப்புப் படகுகளும் (என் தலைக்குள்ளிருந்து வெளிவந்த பிம்பங்களின் சுமையேற்றப்பட்டு, அவளது சீற்றத்தில் அல்லது பெருமகிழ்ச்சிச் சுழற்காற்றுகளால் மூழ்கடிக்கப்பட்டனவும், பிறவும்  சேர்ந்து) நிறைந்தன. அந்த நேரங்களில் தாம் எத்தனையெத்தனை சிறு மணிக்குவியல்கள் காணாமற் போயின!  ஆனால், எனது படகுகளும் நத்தைகளின் மவுனப் பாடல்களும் அவளுக்குப் போதுமானவையாக இல்லை. அதனால், நான் வீட்டுக்குள்ளேயே ஒரு மீன் கூட்டத்தைப் பராமரிக்கவேண்டியதாயிற்று. அந்த மீன்கள் என் தோழிக்குள் நீச்சலடித்து அவள் மார்பகங்களை வருடி, அவள் கால்களுக்கிடையே உறங்கி, வண்ணங்களின் மினுமினுப்பால் அவளது கூந்தலை அழகுபடுத்தியதை நான் பொறாமைக் கண்கொண்டுதான் நோக்கினேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அந்த மீன்களில்  குறிப்பான ஒருசில, எதிர்ப்பும்  மூர்க்கமும் நிறைந்தனவாக, நிலைகுத்தும் பெரிய கண்களும் இரத்த தாகமுள்ள கோரமான வாயும் கொண்டு மீன்கூட்டத்தின்  சிறு புலிகளாக இருந்தன. என்  தோழிக்கு என்ன பிறழ்வோ தெரியவில்லை, நான் அலட்சியப்படுத்த விரும்பிய  அந்தக் கோரமீன்களுக்கு, வெட்கமற்று முதனிலை வழங்கிய அவள் அவற்றோடு விளையாடுவதில் மகிழ்ச்சியும்  கொண்டாள். அந்தப் பயங்கரப் பிறவிகளோடு அவள் நெடுநேரங்களைச் செலவிட்டாள். அதை எவ்வளவு நாட்கள்தாம் பொறுத்துக் கொள்வது!  ஒருநாள் கதவைத் திறந்துகொண்டு அவற்றின் மீது பாய்ந்தேன். அவை துடித்து, என் கைகளிலிருந்தும் அசுர வேகத்தில் வழுக்கிக்கொண்டோடின. அவள் சிரித்து, நான் அரை மூர்ச்சையில் வீழும் வரை என்னைத் தாக்கினாள். நான் மூழ்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். நான் நீலம்பாய்ந்து, மரணிக்கும் தருவாயில் அவள் என்னைக் கரையில்  வீசியெறிந்து கிடத்தி, உனக்கு எதுவுமே புரியவில்லையென்று சொல்லிக்கொண்டே என்னை முத்தமிடத் தொடங்கினாள். நான் மிகவும் சோர்வாக, சக்தியனைத்தும் இழந்துவிட்டதாக, மீண்டெழமுடியாத அவமானத்துக்குள்ளானதாகவும்  உணர்ந்த அதே நேரத்தில் அவளின் ஆலிங்கனக் களியாட்டம் என் இமைகளை மூடச் செய்தது. அவளது குரல் அப்படியானதொரு இனிமை பாய்ந்ததாக இருந்தது. அவள் என்னிடம் நீரில் மூழ்கியவர்களின் இனிமையான மரணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். மெல்லத் தன்னுணர்வுக்குத் திரும்பியதும் நான் மிகவும் பயந்து போனேன்; அவளை வெறுக்கத் தொடங்கினேன்.

என் சொந்த விஷயங்கள்  அனைத்தையும் அப்படிக்கப்படியே விட்டுவிட்டிருந்தேன்.   இப்போது எனது நண்பர்களைச் சென்று பார்க்கத் தொடங்கிப் பழைய மற்றும் மனத்துக்கினிய உறவுகளைப் புதுப்பிக்கத் தொடங்கினேன். என்னுடைய நீண்டநாள் பெண்தோழி ஒருத்தியைச் சந்தித்தேன். ரகசியத்தைப் பாதுகாப்பதாகச் சத்தியம் வாங்கிக்கொண்டு அவளிடம் அலையுடனான என் வாழ்க்கையைப் பற்றிக் கூறினேன், ஆபத்திலிருந்து ஒரு ஆணை மீட்கும் வாய்ப்பைவிட வேறெதுவும் பெண்களை அவ்வளவாக ஈர்த்துவிடுவதில்லை. என் மீட்பர் அவளது திறமையை முழுமையாகப் பயன்படுத்தினாளென்ற போதிலும், குறிப்பிட்ட ஒருசில ஆன்மாக்கள் மற்றும் உடல்களுக்கு மட்டுமே அதிபதியான ஒரு பெண்ணால், எப்போதுமே தன்னை மாற்றிக்கொள்ளும் – இடைவிடாத உருமாற்றங்களுக்குள்ளாகவே தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் என் தோழியின் முன்னால் என்ன செய்துவிடமுடியும்!

குளிர்காலம் வந்தது. வானம் சாம்பல் நிறத்துக்கு மாறியது. நகரத்தை மூடுபனி கவ்வியது. பனித்துளிகள் உறைந்து இடைவிடாத் தூறலாக வீழ்ந்தன. என் தோழி ஒவ்வொரு இரவும் அழுதாள். பகலில், அவள் தனிமைப்பட்டு, மூலையில் முடங்கி முனகும் ஒரு வயதான கிழவியைப் போல, ஒற்றைச் சொல்லைத் திக்கித்திக்கி முணுமுணுத்து அமைதியாகப் படுத்திருக்கும் தீய வஞ்சனையெனக்  கிடந்தாள். அவள் குளிர்ந்து போனாள். அவளோடு படுத்துறங்குவதோ இரவு முழுதும் நடுங்குவதாக, உதிரம், எலும்பு பின்னர் சிந்தனை என எல்லாமே மெல்ல மெல்ல உறைந்து போவதாக இருந்தது. அவள் அமைதியற்றவளாக, ஆழம் மிக்கவளாக, துளைக்க முடியாதவளாக மாறிப்போனாள். நான் அடிக்கடி அவளைத் தனிமையில் விட்டுவிட்டு வெளியேறினேன். நான் வீட்டுக்குத் திரும்பும் நேரம் ஒவ்வொரு முறையும் அதிகரித்து நீண்டது. அவள் அவளுடைய மூலையில் சத்தமாக ஊளையிட்டு அவளின் எஃகுப் பற்கள் மற்றும் துருப்பிடித்த நாக்கால் சுவர்களைப் பிராண்டிக் கரம்பினாள். அவள் இரவுகளைத் துயரப் புலம்பலிலும் , என்னைக் குறைசொல்லித் திட்டுவதிலுமாகக் கடத்தினாள். வெப்பம் மிகுந்த கடற்கரைகளின் வெயில் மற்றும் வெப்பத்தாக்கலில் உணர்விழப்பெனத் திகில் கனவுகள் கண்டாள். அவள் துருவப் பகுதியில் ஒரு மாபெரும் பனித்திட்டாக மாறி, மாதங்கள் அளவுக்கு நீண்ட இரவுகளில் வானத்தில் கறுத்த மேகங்களின் கீழ் மிதந்து செல்வதாகவும் கனவு கண்டாள். அவள் என்னை அவமதித்துத் திட்டிச் சாபமிட்டாள்; பின்னர் சிரித்தாள். வீடு முழுவதையும் ஆவியாலும் பயங்கரச் சிரிப்பாலும் நிரப்பினாள். அவள் கண்மண் தெரியாத, எதையும் சிந்திக்காத, புயல்வேக ஆழங்களின் அரக்கர்களை நினைவு கொண்டு பெயர் சொல்லிப் புலம்பினாள். அவளுக்குள் மின்சாரம் பாய, தொட்ட எல்லாவற்றையும் தீய்த்துக் கருக்கினாள். அமிலமாகி அவளை உரசிய எல்லாவற்றையும் கரைத்து உள்ளிழுத்தாள். அவளது இனிய தழுவல்கள் சுருக்குக் கயிறுகளாகி என் கழுத்தை இறுக்கின. அவளது உடல் பச்சைநிற ரப்பராக மீண்டும் மீண்டுமாக விளாசுகிற இரக்கமற்ற சாட்டையானது. நான் தப்பி ஓடினேன். அந்தப் பயங்கரமான மீன்கள் அவற்றின் கோரப் புன்னகையுடன் சிரித்தன.

மலைகளில், உயரமான பைன் மற்றும் செங்குத்துப் பாறைகளின் நடுவில் விடுதலைச்  சிந்தனை போன்ற குளிர்ந்த  மென்காற்றைச் சுவாசித்தேன். அந்த மாதத்தின் முடிவில், நான் திரும்பி வந்தேன். ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். புகைபோக்கியின் பளிங்குக்கல்லையும் மீறிப் பரந்திருந்த கடுமையான குளிரில் அவிந்துபோன கணப்பின் அருகில் பனிச் சிற்பம் ஒன்று கிடப்பதைக் கண்டேன். அவளின் சோர்வுற்ற அழகினைக் கண்டு நானொன்றும் உணர்ச்சிவசப்பட்டு விடவில்லை. கித்தான் கோணி ஒன்றுக்குள் அவளைப் போட்டுக் கட்டி, தூங்கும் அவளைத் தோளில் சுமந்து தெருக்களைக் கடந்தேன். புறநகர் விடுதி ஒன்றில் பணிபுரிந்த மேசைப்பணியாளான என் நண்பனிடம் விற்றுவிட்டேன். அவன் உடனடியாக அவளைச் சிதைக்கத் தொடங்கினான்; சிறுசிறு துண்டுகளாக்கிப் புட்டிகளைக் குளிரவைக்கும் வாளிக்குள் கவனமாக அடுக்கினான்.

•••

 

எனது மரணப் படுக்கையறைக் காட்சிகள் – தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்

download (28)
‘விழித்துக் கொண்டிருக்கும் வெளிச்சத்திற்குத் துணையாக  

ஓரிரவை எனது வெற்றுக் காகிதங்களில்

எழுதிக் கொண்டிருந்தேன்.
எனது கண்களிரண்டும் என் படுக்கையைத் துறந்து
எனது எழுத்துகளுக்கு ஒத்தாசைப் புரிந்து கொண்டிருந்தன.

எனது விரல்களை உரசிருந்த அந்த எழுதுகோல்
தனது வருத்தத்தை எனது விரல்களிலும்,
காகிதத்திலும் அடையாளப்படுத்தி இருந்தது.
எமது எழுத்துகளுக்கு நான் இப்போது
சொந்தமாக முடியாது என்று நினைத்து
என் எண்ணங்களை அதனிடமிருந்து

அவிழ்த்துக் கொண்டேன்.
இப்பொழுது நான் எனது எழுத்தின்

ஓய்விலிருந்து  விடுப்பட்டுக் கொண்டேன்.
எனது பணியை எனது எழுதுகோலே

தீர்மானிக்கட்டும் என்று இருந்து விட்டேன்.
நான் எனது படுக்கையை

என் கண்களிரண்டோடுச் சேர்த்து அனைத்துக் கொண்டேன்.
என் எண்ணமெல்லாம் அந்த எழுதுகோலையே

சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் ஒரு அழுகுரல் கேட்டது
அந்த அழுகுரலைக் கவனித்தப்படியே
நான் என் எண்ணத்தை எனது காதுகளில் வைத்தேன்.
அந்த அழுகைச் சத்தம் எங்கிருந்து வருகிறது?
என்னவிதமான வேதனையை அந்த அழுகை
கொப்பளித்துக் கொண்டிருக்கிறது?
என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையில்
அழுகைச் சத்தம் நின்று போனதாகத் தெரிந்தது.
அதன் பிறகு எனது காதுகளிலிருந்த
எண்ணத்தை விடுவித்துக் கொண்டேன்.

 

இப்போது எனது கண்களுக்கு விழிப்பை வர வழைத்து
எனது மேசையைக் கவனித்தப்படி இருக்கின்றேன்.
அந்த எழுது கோலும், எனது வெற்று காகிதங்களும்
மும்முரமாக எதையோ எழுதி விட்டு உறங்கிக் கொண்டிருந்தது.
அன்புடன்
குறிஞ்சி மைந்தன்
தில்லி.
கைபேசி: 9566689083,

09717768782
இ – மெயில்: kurinjimaindhan19@gmail.com

“முரண் எதிர் …” – சிறுகதை – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

         
images (15)
      நகருக்கு  வெளியே  எங்காவது  கொஞ்சம் தள்ளி குடியிருந்திருக்கலாம். தனித்தனி வீடுகள் அமைத்துள்ள அமைதியான நல்ல ஏரியாவச்சேனு இங்க குடி வந்தது தப்பாகிப்போய் விட்டதோ ….என்ற எண்ணம் அடிக்கடி வர ஆரம்பித்து விட்டது. இப்போதெல்லாம்.

                நெருக்கமாக அமையப்பட்ட  லைன் வீடுகள் கொண்ட குடியிருப்பு  பகுதிதான் ரஹமத்துக்கு  எப்போதும் பிடித்தமான  ஏரியா. “நல்ல அன்பான மனுஷங்க  இங்கதான் இருப்பாங்க …’’ என்பது அவளோட நம்பிக்கை. எந்நேரமும் கசகசனு ஆட்கள் வருவதும் போவதுமாக ஒரே இரைச்சலும் ,  அமைதியின்மையுமாக இருக்கும் இம்மாதிரியான குடியிருப்பு பகுதிகள் ஏனோ எனக்கு பிடிக்காமல் போனது. நெருக்கடி மிகுந்த இந்த மாதிரியான சூழல் ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். நான் பிறந்து வளர்ந்ததே இந்த மாதிரியான ஒரு பகுதியில்தான். இருந்தும் எப்போதும் கூச்சலும் ,ஆராவாரமுமாய் இருக்கும்  இந்த இடம் பிடிக்காமல் போனதற்கு பிரத்யேக காரணம் ஏதும் இல்லைதான். அமைதியான சூழலை மனம் விரும்ப ஆரம்பித்து விட்டதே பிரதான காரணம்.

லைன் வீடுகள் கொண்ட குடியிருப்பில்  எந்நேரமும் யாரோ ஒருவர்  நம்மை கண்காணித்துக்கொண்டே   இருப்பதாக  எழும் பிரம்மையை  தவிர்க்க முடியாது. யாருக்கும்  தெரியாமல் எதுவும் செய்து  விட முடியாது. மத்தி மீன்  வந்து விட்டால்,அன்று முழுக்க வீதியே நாறும். திடீர்னு இரண்டு வீட்டுக்கு காரணமே இல்லாமல் சண்டை நடக்கும்.அடித்துக்கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகு எதுக்கு அடித்துக்கொண்டார்கள் என்றே தெரியாதபடிக்கு கூடிக் களிப்பார்கள். யாருக்குமே தெரியாது என்று வீட்டுக்குள் செய்யும் சில செயல்கள் எதிர் வீட்டுக்கோ , பக்கத்து வீட்டுக்கோ எப்படியோ தெரிந்து கடைசியில் வீதியே அதைப்பற்றிப்பேசும்! எதையும்மூடி மறைக்க முடியாது. ஒரு பிரைவசியே இருக்காது. ரஹமத்திடம் சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டாள். “ இதாங்க ஜாலி ….நாலு மனுஷங்க  கூட எப்பவும் சந்தோஷமாப் பேசுறதுக்கு இங்கதாங்க முடியும். நீங்க சொல்லுற தனித்தனியா வீடிருக்குற பக்கம் எந்நேரமும் வீடுங்க அடச்சே கெடக்குங்க…” என்பாள்.

ஒரு முறை  ‘தப்லீக் ஜமாஅத்’ ஆட்கள் மூன்று பேர் வீதிக்குள் வருவதை பார்த்துவிட்டேன். வீடு ஜூட் ……ஓடி ஒளிந்தேன் அறைக்குள். இந்த தப்லீக் ஆட்களைக் கண்டுவிட்டால் ஓடி ஒளியும் போக்கு மொகல்லா தோறும் நடக்கும் ஒரு சடங்கு. தொழுகையாளிகளே அவர்களைக் கண்டு  விட்டால் ஓடிவிடுவார்கள் ! ஒரு பத்து நிமிடம் அவர்கள் சொல்லும் பயானை நின்று கேட்க யாருக்கும் பொறுமையும் இல்லை அல்லது விருப்பமும் இல்லை.

‘’ பாய் இல்லீங்களா….?” அவர்களின் குரல் அறைக்குள் எனக்கு தெளிவாகக்கேட்டது.

‘’ அவர் வெளியில போயிருக்காங்க ….” என்னவளின் பொய் எனக்கு சிரிப்பை வரச்செய்தது என்றாலும், நாங்கள் அவர்களை ஏமாற்றவில்லை. இறைவனைத்தான் ஏமாற்றுகிறோம்…என்ற எண்ணம் சங்கடத்தையும் ,ஒரு வித அச்சத்தையும் கொடுத்தது. இனி இப்படிச்செய்யக்கூடாது என்று நினைப்பதோடு சரி. மறுக்கவும் இது தொடரத்தான் செய்கிறது.

இரவு  இஷா தொழுகை நிறைவேற்றி  வரும்போது “ என்ன பாய் …தப்லீக் கோஷ்டி என்ன  சொன்னாங்க ..?” என்று கிண்டலாகக் கேட்டார் கடைசி வீட்டு ஷாஜகான். நான் பதில் எதுவும் சொல்லாமல் மாலுப்பலாக சிரித்தேன். வேறு என்ன செய்வது..? அவர்கள் வரும் போது வீதியில் ஒருவரும் இல்லை. இருந்தும் இவர் எங்கிருந்தோ என்னை கண்காணித்திருக்கிறார். அல்லது வேறு யாராவது சொல்லியிருக்கலாம். இப்படித்தான் மும்தாஜ் , இக்பாலுக்கு முத்தம் கொடுத்தது விவகாரம் வீதியில் அலைந்து கொண்டே  இருந்தது ரொம்ப நாட்களாக. சில நாட்கள் வெளியே தலை காட்டாமலே இருந்தாள் மும்தாஜ். இக்பால் வேறு யாருமல்ல , மும்தாஜின் கணவன். நெருக்கமான குடியிருப்புகளில் இது போன்றவைகளை தடுக்கவே முடியாது. எல்லா வீட்டுச் சுவர்களுக்கும் கண்,காது இருக்கிறது .எந்த விஷயதையும் மறைக்கவே முடியாது .! எப்படியும் வெளிப்பட்டு ரகசியங்கள் எல்லாம் வீதி முழுக்க உலாவி பள்ளி முக்கு வரை எதிரொலிக்கும் . மற்றவன் ரகசியத்தை வெளிப்படுத்த அலைந்து கொண்டே இருக்கிறார்கள் ஒவ்வொருவனும் . வேறு வழியில்லாமல் சகித்துக்கொண்டாகாணும் எல்லாவற்றையும்.

இதிலிருந்தெல்லாம்  கொஞ்சம்விடுபட்டு தனி  வீடுகள் அமைந்த குடியிருப்பு  பகுதியில் அமைதியாக இருக்கும் ஆசையில்தான் சாலை வசதி , சாக்கடை வசதி , தண்ணீர் பிரச்சனைகளற்ற இதுபோன்ற பகுதிகளில் வீட்டு மனைகள் தொலை தூரமாக இருந்தாலும் ஜோராக வியாபாரமாகிக் கொண்டிருக்கின்றன. எல்லாம் நவீனமயமான இன்றைய சூழலில் மனிதன் தனிமை படுத்தப்பட்டு தனித்தனி தீவுகளாக்கப்படுகிறான். “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை…” எல்லாம் கலாவதியாகிப்போன சங்கதியாகிவிட்டது .

புதுக்கலானி  குடியிருப்பு பகுதியை  நிர்வாகிப்பது அப்பகுதி ஜமாஅத்தார்கள்தான் என்பதாலும் , மிக அமைதியான   சூழல் நிரம்பியிருந்தபடியாலும் இந்த இடத்தை உடனடியாக கிரையம் செய்தோம்.எல்லா மனைகளிலும் பொதுக் குழாய் அமைக்கப்பட்டிருந்தது. வீடு கட்டும்போது முன் கூட்டியே ஜமாத்தாருக்கு தெரிவித்து ஆயிரம் ரூபாய் கட்டினால்தான் குழாய் இணைப்பு தருவார்கள் என்பது போன்ற நிபந்தனைகள் எல்லாம் யாரும் எங்களுக்கு சொல்லவில்லை. நாங்கள் பாட்டுக்கு வீட்டு வேலையை ஆரம்பித்துவிட்டோம். அஸ்திவாரத்துக்கான கான்கிரீட் போடும்போதுதான் விவரம் தெரிய வந்தது. உடனே பணம் கட்டினேன்.ஆனால் பிளம்பர் கிடைக்கவில்லை.  வேலைக்கு ஆட்களும் வந்துவிட்டார்கள். தண்ணீர் வேண்டுமே என்ன  செய்வது. எதிர் வீட்டில் போர்வெல் போட்டிருக்கிறார்கள் கேட்டுப்பாருங்கள் என்றார் அப்பகுதி வாசி  ஒருவர். எப்போதும் கதவு மூடியபடியேதான் இருக்கும் அந்த எதிர் வீடு -  யாரும் இல்லாத வீடு போல..! தயங்கியவாறு கேட்டைத்திறந்து ,மெல்ல கதவைத் தட்டினேன். காலிங்பெல் ஸிவிட்சைத் தேடினேன்.கண்ணுக்குத்தெரியாத  இடத்தில் இருந்தது. சின்னதாக அழுத்தினேன். மறுபடியும் முயன்றேன். யாரும் இல்லை போல என்று நான் திரும்பும் பொது மெல்ல கதவு திறந்தது. அறுபது வயது மனிதரின் தலை மட்டும் எட்டிப்பார்க்க ,சலாம் சொன்னேன். தலை ஆடியது. விவரம் சொன்னேன். கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, “போர்ல தண்ணீயே இல்ல”என்றார். பிறகு என்ன நினைத்துக்கொண்டாரோ “ சரி பாக்குறே…” என்று கதவை சாத்திக்கொண்டார். வேலை ஆட்கள் புலம்ப ஆரம்பித்தார்கள். ஒரு டிரம் தண்ணீர் தர 12 மணியானது. வெறுத்துப்போய் விட்டது. ஒவ்வொரு டிரம்முக்கும் நாள் முழுக்க கெஞ்சவேண்டியிருந்தது-பல்லைக்காட்டியவாறு. மிக அவமானமாக இருந்தது. ச்சை ..! இப்படியுமா ஆட்கள் இருப்பார்கள். இங்குள்ளவர்களின் சுபாவம் இந்த ஒரு ஆள் மூலமே தெரிந்து போனது.

மறு நாள்  காலை 11 மணியாகியும் எதிர்  வீடு திறக்கப்படவே இல்லை.  தண்ணீர் கேட்க கதவை தட்டியாகணும். தயக்கமாக இருந்தது. இருந்து போய் தட்டினேன். பல முறை தாடியும் கதவு திறக்கபட்டவில்லை. தண்ணீர்  இல்லாததால் இரண்டு நாட்கள் வேலை நடைபெறவில்லை. குழாய் இணைப்பு போட்ட பிறகுதான் மறுபடி வேலையை தொடர முடிந்தது. எதிர் வீட்டு அமீதுவைப்பற்றி காலனி ஆட்கள் சொன்ன பிறகுதான் அவரின் குண  நலன் தெரிய வந்தது. அவர் தொழுகைக்குப்  போகும்போது வழியில் பார்த்து நூறு ரூபாயை நீட்டினேன். “ எதுக்குங்க..?” என்றார்.                            “ அன்னிக்கு தண்ணீ குடுதீங்களே அதுக்கு ..” என்றேன்.                          “ பரவால்லே ..” என்றார். “ இல்லே மோட்டார் எல்லாம் போட்டீங்க …கரண்டு சார்ஜ் ஆயிருக்குமெல்ல..?” என்றவாறு மறுபடி நீட்ட வாங்கிக்கொண்டார் மனுஷன். அதன் பிறகு வழியில் பார்த்தால் மட்டும் சிரித்துக்கொள்வேன்.

நாங்கள்  இங்கு குடி வந்த புதிதில்  பொதுக்குழாய் மோட்டார்  ரிப்பேர் ஆகிவிட மூன்று  நாட்களுக்கு தண்ணீர் வரவில்லை.தொட்டி  கட்டியிருந்தவர்களுக்கு   பிரச்சனை இல்லை. இதில்  நாங்களும் தப்பித்துக்கொண்டோம்.  வாடகைக்கு குடியிருப்பவர்கள்  அண்டாவிலும் , , பக்கெட்டுகளிலும் தண்ணீர் பிடித்துப் புழங்குபவர்கள் பாடு படு திண்டாட்டமானது. எல்லோரும் எதிர் வீட்டுக்கு குடங்களுடன் படையெடுக்க , “ மோட்டார் ரிப்பேர் “ என்று மனுஷன் கறாராக சொல்லிவிட்டார். மொகல்லா வாசிகள் கெஞ்சிக்கூத்தாடத குறை. ஜமாஅத் நிர்வாகம் வந்து சொல்லிய பிறகு வேண்டா வெறுப்பாக ஆளுக்கு இரண்டு குடம் உப்புத் தண்ணீர் கொடுத்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் “ அண்டை வீட்டாருடன் இணக்கமாக இருங்கள். அன்பை பேணுங்கள் ..” என்று வாரந்தோறும் வகுப்பு எடுக்கும் ஒரு அமைப்பின் முக்கிய பொறுப்பாளர் இவர் என்பதுதான்.

அந்த அமைப்பைச்  சேர்ந்தவர்கள் அடிக்கடி  இவர் வீட்டுக்கு வருவார்கள். வாசலிலேயே நின்று பேசி  விட்டுச் சென்று விடுவார்கள்.ஒரு  நாள் கூட வீட்டினுள்  அழைத்து நான் பார்த்ததே  இல்லை.

இப்பிடிக்கூட  நம்மாளுங்க இருக்கங்களே  என்று ரகமத்திடம் சொல்லி  நான் சங்கடப்பட “ நீங்கதானே  இந்த மாதிரி ஏரியாவுல  குடி வரணும்னு ரொம்ப  ஆசப்பட்டீங்க…..” என்று நக்கலாக சிரிப்பு காட்டினாள்.

எதிர் வீட்டு  அமீது மட்டுமல்ல , இங்கு நிறையப்பேரின் நடவடிக்கையும் இப்படியாக யாருடனும் ஒரு ஒட்டுதல், அன்னியோனியம்   இல்லாமல்தான் இருந்தது. புதுக்கலானி மனிதர்களின் போக்கு எங்களுக்கு பிடிக்கவும் இல்லை- பிடிபடவும் இல்லை.

இங்குள்ளவர்கள்  எல்லாம் வேளை தவறாத தொழுகையாளிகளாக  இருந்ததுதான்  இதில் மிகப் பெரிய ஆச்சிரியம்.

ஒரு பொருள்  வெள்ளையாக இருப்பதோடு  , கருப்பாகவும் இருக்கமுடியுமா…..? என்பதாக எனக்குள் சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது.

***

இலைகள் பழுக்காத உலகம் – ராமலக்ஷ்மி கவிதைகள்

download (29)
இலைகள் பழுக்காத உலகம் – ராமலக்ஷ்மி கவிதைத் தொகுப்பு
தொகுப்பிலிருந்து சில கவிதைகள்:
1.
இருப்பு 
ஓவியக் கண்காட்சிக் கூடத்தின் ஒரு சுவரில்
பிள்ளையார் விதம் விதமான
கோணங்களில் அருள் பாலித்தார்
தன்னலமற்று உலகை இரட்சிப்பதாகப்
பசுவைக் கொண்டாடும் படங்களால்
நிரம்பியிருந்தன இன்னொரு சுவர்
போட்டிகள் நிறைந்த உலகின்
ஆக்ரோஷங்களை வெளிப்படுத்தின
சேவல் சண்டைக் காட்சிகள்
கொல்கத்தா வீதிக் காட்சிகளால்
சோகம் அப்பி நின்றிருந்தது
சன்னல்கள் அற்ற இடதுசுவர்
உயிரைக் குழைத்திழைத்த
ஓவியங்களைப் பிரியும் துயர்
இலாபக் கணக்குகளால் ஆற்றப் பட்டன
கையிலிருந்த மோதகத்தைச் சத்தமின்றி
பிள்ளையாரின் காலடித்தட்டில் வைத்து விட்டு
எதிர்சுவற்றுச் சந்தைக் காட்சியில்
சாலையில் உருண்டு கிடந்த தக்காளியை
சுவைக்கச் சென்றிருந்த மூஞ்சுறு
சேவல்களுக்கு அஞ்சி உத்திரத்தின் வழி
திரும்பிக் கொண்டிருக்கையில்
வானத்துச் சூரியன் மேற்கே சரிந்து விழ
விற்காத படங்களுடன் வெளியேறினர் ஓவியர்.
இருண்ட காலிக் கூடத்தின் சுவர்களெங்கும்
ஓடிஓடித் தேடிக் கொண்டேயிருந்தது
பிள்ளையாரை மூஞ்சுறு.
*
2.
முகமூடிகள்
உடைந்து போன பொம்மையைக்
கையில் வைத்தபடி விசும்பிக் கொண்டிருந்த
குழந்தையைச் சுற்றி
இறைந்து கிடக்கும்
விளையாட்டுச் சாமான்களைப் போலக்
கலைந்து கிடந்தது வீடு
கழற்றி எறியப்பட்ட முகமூடிகளால்
கலங்கி நின்ற மனதை
ஆற்றுப்படுத்த வந்த ஆத்ம பந்தங்கள்
தேற்ற மறந்து கழற்றத் தொடங்கின-
ஆத்திரமாய் தத்தமது முகமூடிகளை
குவிந்த முகமூடிகளுக்குள்
அமுங்கி மூச்சுத் திணறி
மீட்கக் கோரி வெளி நீண்ட கையை
ஆதுரமாய் பற்றித் தூக்கிவிட்ட
மகானுபாவர்,
”வருத்தம் விடு!
மனிதருக்காகவே
படைக்கப்பட்டவைதாம் இவை.
சேர்ந்து கிடப்பதில்
இன்னும் சிறப்பானதாய்த்
தேர்ந்தெடுத்து அணிந்துகொள்ள
கிடைத்த வாய்ப்பாகப் பார்”
உபதேசித்தார்
நழுவத் தொடங்கிய தன் முகமூடியைக்
கெட்டியாகப் பிடித்தபடி.
*
3.
தவிப்பு
அழகுச் சிப்பியொன்றைக்
கரையில் ஒதுக்கிய அலை
மெல்லத் தழுவிச் சென்ற
மணல் தளம் பளிங்கு போல.
அதில் தன்
சின்னஞ்சிறு கால்கள் பதித்துச்
சிப்பியைக் கைப்பற்றியக் குழந்தை
குதூகலமாய்க் குதித்தோடி
மணிகள் பல ஆன பின்னும்
பதிந்த பாதச் சுவடை
அழித்திட மனமின்றி
அழிந்திடுமோ எனப் பதறி
அலைக்கழிந்து கொண்டிருந்தது
பொழிந்த பால்நிலவில்
கலக்கத்துடன் கடல்!
*
4. சூதாட்டம்
கருப்பு வெள்ளைக் கட்டங்களில்
மனிதர்கள்
சிப்பாயாக
குதிரை வீரனாக
மதகுருவாக
யானை மேல் தளபதியாக
உயர்வு தாழ்வுகள்
வசதி வாய்ப்புகளுக்கேற்ப.
அதிக சக்தி கொண்டவர்
ஆளும் அரசியாக
அரியணைக் குடும்பமே
கட்டிக் காக்கப்பட வேண்டிய
ராஜாதி ராஜவாக.
விதியை எதிர்த்து
விதிமுறைக்கு உட்பட்டே
நகர வேண்டிய களத்தில்
சீறவும் சீவவும்
தாராளமாக அனுமதி.
பயந்து பதுங்கவும்
ஒதுங்கி வழிவிடவும்
உண்டு அனுமதி என்றாலும்
பலவீனங்கள் பலங்களால்
பந்தாடப்படும்
பலகைக்கு உள்ளேயேதான்
போராட்டம்.
கொய்து
எல்லைக்கு அப்பால் எறியப்படும்
நொடி வரையிலும்
துரத்திக் கொண்டேயிருக்கிறது
காலம்.
*
5.
நிசப்தத்தின் சப்தம்
பச்சிளம் புதுத்தளிரின்
நுனிப்பொட்டில் சொட்டும் மழைத்துளிஇடவலமாய் மிக நளினமாய்
அசைந்து மிதந்து தரைசேரும் சருகுஅணில் குஞ்சின் மழலை
காற்றின் ஊதல் கிளைகளின் ஆடல்இயற்கையின்
ஒவ்வொரு அதிர்விலும் அசைவிலும்
எழும்பும் ஓசைகளை

தவறவிடாத இதயங்களுக்கு மட்டுமே..
கேட்கத் தொடங்கிடும் ஓர்நாள்
பிரபஞ்சத்தின் நிசப்தம்.
*
 
இலைகள் பழுக்காத உலகம்
பக்கங்கள்:96 விலை: ரூ 80
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்