Category: ஞானக்கூத்தன் சிறப்பிதழ்

‘நாயினும் கடையேன்’ ( தியோடர் பாஸ்கரனின் ‘The Book of Indian Dogs’ நூல் வெளியீட்டு விழா ) / சின்னப்பயல்

download (74)

இன்று பெங்களூரில் மதியம் மூன்று மணிக்கு தொடங்கிய மழை நிற்காது பெய்து கொண்டேயிருந்தது. நிகழ்ச்சி மாலை 0630க்கு எனினும் அத்தனை மழையில் ட்ராஃபிக் தொநதரவில் போய்ச்சேரவே 0635 ஆகிவிட்டது. உள்ளே நுழையும் போது மிகச்சரியாக புத்தக வெளியீடு தொடங்கிவிட்டது. பெங்களூர் இன்டர்நேஷ்னல் சென்டரில் நடைபெற்ற திரு தியோடர் பாஸ்கரனின் ‘The Book of Indian Dogs’ நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். ராமச்சந்திர குகா வெளியிட்டார். பிறகு தியொடர் அவர்களின் பேச்சு. நாய்களில் இத்தனை வகைகளா?..என்னென்னவொ பெயர் சொல்லி அவைகளின் குணநலன்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

நிறைய சுவாரசியமான தகவல்கள். இந்தியாவில் போலீஸ் நாய்கள், ராணுவத்துக்கு பயன்படும் நாய்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படுவதாக தெரிவித்தார். இன்டியன் ப்ரீட்ஸ்களை தயார்ப்படுத்துவதில்லை. எகிப்து மற்றும் மொகஞ்சதாரோ காலங்களின் வரலாற்று குறிப்புகளை எடுத்து படங்களுடன் காட்டினார். நடுகற்கள் நாய்களைப்பற்றியும் குறிப்பிடுபவனாக இருப்பதையும் காண்பித்தார். நாய்க்கென கோவில் கட்டியிருப்பது,நாய்களை தம் பிள்ளைகள் போலப்பார்த்துக்கொள்வது என தொடர்ந்தும் பேசினார். வெள்ளைக்காரர்கள் எப்போதும் இன்டியன் ப்ரீட்ஸ் ஒரிஜினல்ஸ் என அழைக்கத் தவறுவதில்லை. பழங்காலத்திலேயே நாய்களை வளர்ப்பு மிருகங்களாக வீட்டில் வைத்து பாதுகாக்கும் முறை இருந்து வந்தது. அவற்றின் கழுத்தில் பட்டி இட்டு பெட் டாக்ஸ்- களாக அவற்றை வளர்த்ததும் தெரிய வருகிறது. இந்தியாவில் அவை இன்னமும் வேட்டையாடவும், பாதுகாப்புக்கெனவுமே அதிக அளவில் பயன்படுகிறது.

நமக்குத்தெரிந்ததெல்லாம் தெரு நாய்கள் தான். இரவில் நடக்கமுடியாதபடி ஊரையே ஆண்டுகொண்டிருப்பவை. கிரீஷ் கர்னாட் வந்திருந்தார். அமைதியாக அமர்ந்து நிகழ்வுகளை கவனித்துக்கொண்டிருந்தார். ராமச்சந்திர குகா தமிழராம்.( எனக்கு இப்பத்தான் தெரியும்) பரபரவென இருக்கிறார், ஒரு இடத்தில் நிலை கொள்ளாது :) புத்தகத்தில் இருந்து குறிப்புகள் எடுத்துக்காட்டி பேசினார். வீரப்பனைப்போல வடநாட்டில் ஒரு கொள்ளையன் இருந்ததாகவும் அவனது அடியாட்களை அவன் வளர்த்து வந்த நாய்களே பிடித்துக்கொடுத்ததாகவும் ஜிம் கார்பெட் புத்தகத்தில் இருக்கிறது, (இந்த சாட்சிகளை எங்கனம் ஒத்துக்கொள்ளாதிருப்பது என அடியாட்கள் சரணடைந்ததாகவும்.)

கொள்ளையனைப் பிடித்தாகிவிட்டது . அவனின் அடியாட்கள் தப்பித்து ஓடும்போது போலீஸ் சுட்டதில் ஒருவனுக்கு மூக்கை அறுத்துக்கொண்டு போயிற்று. இந்த இருவரும் வெளியூர் தப்பிச்செல்ல ரயில்வே ஸ்டேஷ்னில் காத்திருந்த போது அங்கு தேடுதல் வேட்டைக்கு மாறு வேடத்தில் வந்த கமிஷனர்,வாருங்க ரயில் வர இன்னமும் நேரமிருக்கிறது என்றழைத்துக்கொண்டு அவரை வீட்டுக்கு கூட்டிச்சென்றார் அங்கு அந்த கொள்ளைக்காரனின் நாய் இருந்தது இவர்களை பார்த்ததும் பழக்க தோஷத்தில் வாலாட்டிக்கொண்டு கால்களை நக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கெனவே காத்திருந்த அதிகாரி அவர்களைக்கைது செய்தார்.

download (75)
மேலும் கொள்ளைக்காரனை தூக்கிலிடும்போது கடைசி ஆசையாக தமது வளர்ப்பு நாயை யாரேனும் வளர்க்க வேணும் என்பதே. என்ற சுவாரசியமான தகவல்கள் பகிர்ந்து கொண்டார். வீரப்பன் நாயேதும் வளர்த்தானா என்றவரிடம் , அப்படி வளர்த்திருந்தால் சீக்கிரம் பிடிபட்டிருப்பான் என்றார் பாஸ்கரன்.

புத்தகத்தில் இருந்து சில துளிகள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் , பல இடங்களில் ‘நாயினும் கடையேன்’ என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார். இந்துமதக்கடவுள் பைரவர் நாயை தம் வாகனமாக கொண்டிருப்பதைப்பற்றி பேசும்போது அசுரனை அழித்தபோது அவன் உடலில் இருந்து சிந்திய ரத்தத்துளிகள் மீண்டும் பல்லாயிரம் அசுரர்களாக உருவெடுத்ததை அங்கிருந்த நாய் உவ்வொரு துளியையும் நக்கி இல்லாதாக்கியதை பாராட்டி தம் வாகனமாக ஆக்கிகொண்டதை குறிப்பிட்டார். நாய்களையும் , பசு மாடுகள் இன்னபிற வளர்ப்பு மிருகங்களை வீட்டினுள் வைத்து வளர்ப்பது தமிழரின் வழக்கம். இது தெரியாது ஜல்லிக்கட்டுக்கு தடை என அறிவிலித்தனமான விஷயங்களை எதிர்க்க தமிழ்நாடே போராட வேண்டியிருந்தது.

நிறைய ஆதாரங்களைக்காட்டி பேசினார் பாஸ்கரன். தெருவில் தனியே சுற்றிக் கொண்டிருப்பவைகளிலும் வகைகள் உள்ளன. சென்னையில் ஒரு முறை தெருநாய்களை சுட்டுத்தள்ளவேண்டும் என அரசு முடிவெடுத்தபோது அதை எதிர்த்து அனிமல் ரைட்ஸ் குழுவினர் போராட்டம் நடத்தினர், அங்கு வந்த அப்போதைய கமிஷ்னர் இதில் எத்தனை பேர் அந்த தெரு நாய்களை தத்தெடுக்கத்தயார் எனக்கேட்ட போது நான்கே பேர் கை தூக்கினர். பின்னர் கூட்டம் முடியும்போது அவர்களும் காணாது போயினர் என்ற போது அரங்கில் சிரிப்பலை. தெரு நாய்கள் என்ற பதத்தை அவர் பயன்படுத்தவேயில்லை. யாரும் சொந்தம் கொண்டாடாத நாய்கள் என்றே கூறுகிறார். (Owner less Dogs)

மேலும் நாய்களுக்கு ‘ரேபிஸ்’ வராது தடுக்க ஆண்டுதோறும் ஊசி போட வேண்டிய கட்டாயம் இருக்கிறது . அது ஒரு முறையில் சரியாகும் விடயமில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஊசி போடவேண்டும், அப்போது தான் தடுக்க இயலும்,எந்த அரசு செய்கிறது தெரு நாய்களின் கூட்டத்தை தடுக்க கருத்தடை செய்யலாம் என்ற யோசனையும் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் ஆடுகளை வேட்டையாடும் நாய்களைச்சுட ஹெலிகாப்டர்களில் செல்வார்கள் என்றார். அங்குள்ள கிராமத்தினர் அவை வேட்டை தான் ஆடுகின்றன. ஆடுகளைப்புணர அல்ல. அதனால் அவற்றை கொல்லுவது பாவம் என்று தடுத்துவிட்டனர்.

ராமச்சந்திர குகா பேசுகையில் தமிழனாக இருந்த போதும் இதுவரை தமிழில் எழுதவில்லை. எனக்கு தமிழ் எழுத வராது என்றவர், பாஸ்கரனை நோக்கி இவர் இருமொழியில் எழுதும் வல்லவர். இவரும் ஒரு ரேர் ப்ரீட் என்றார் :)

பாஸ்கரன் வேலை பார்த்தது போஸ்ட் ஆபீஸ் ஜெனரலாக. அவர் இருந்தவரையில் ரேர் ப்ரீட்ஸ் நாய்களின் தபால் தலைகள் கொண்டு வர பகீரத முயற்சி எடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. அவர் ஒய்வு பெற்றதும் பின்னர் கமிட்டியில் உள்ளவர்களின் சிபாரிசின் பேரில் அவை தற்போது கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். சில தபால் தலைகளின் புகைப்படங்களை காட்டினார்.

download (76)

பின்னர் பேச்சைக்கேட்க வந்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். வெளிநாட்டில் இருந்து ‘ஹஸ்கி’ நாய்கள் வாங்கி வந்திருப்பதாகவும் அவை இங்கு நிலைக்குமா என்ற கேள்விக்கு அவை எப்போதும் தம்மை இருக்கும் இடத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளும் திறனுள்ளவை என்றவர், லடாக் பகுதியில் உள்ள நாய்களை வளர்க்கவென இங்க்கு கொணர்ந்தபோது சென்னை மெரீனாவில் அத்தனை வெய்யிலில் தம்போக்கில் விளையாடிக்கொண்டு இருந்தன என்றார். இந்திய நாய்களை ஏன் உள்ளூர் காவல்/ராணுவப்பயன்பாட்டுக்கு ஏற்றுக்கொள்வதில்லை என்ற கேள்விக்கு அவற்றுக்கு பயிற்சி கொடுக்க யாரும் முன்வருவதில்லை. அலட்சியமும் ஒரு காரணம். 1972ல் ஒரு வழக்கில் உள்ளூர் கோம்பை வகை நாயை சாட்சியாக கொண்டு வந்து நிறுத்திய போது ‘நாட்டு நாயெல்லாம் சாட்சி சொல்லவந்துருச்சா’ என்று நீதிபதி கேலி பேசியதாக ஒரு செய்தி இருக்கிறது என்றார்.

- (chinnappayal@gmail.com)

அன்பின் புதுச் சத்தம் : ஷாஅ

download (42)

அன்பின் புதுச் சத்தம் 1

காதடைத்துப் பார்க்கிறது திசைகாட்டி

யாரோ நான்குபேர்

யாரோ ஒருவனை கட்டிவைத்து அடிக்கிறார்கள்

இன்னொரு யாளோ

மற்றொரு யாரையோ

ஒருகையால் அறைகிறார் பின்

மறுகையால் இருக்கையை கெட்டியாகப்

பிடித்துக்கொண்டே அழுகிறார்

வந்து இங்கே நில்

அந்தப் பக்கமும் போகலாம்

இந்தப் பக்கமும் நீ என்பதை

வாயில்லாத நான்

எப்படி சத்தமாய்ச் சொல்வது

மண்டையில் மீளாக்குழப்பம் திசைகாட்டிக்கு

சரியாக அந்நேரம் வழிப்

பலகைகளின்மேல்

குறுக்காகக் கடக்கும் வெண்பறவை

இடுகிறது ஒரு

சொத்

••••

அன்பின் புதுச் சத்தம் 2

தலை பற்றி எரியும் வெயில்

கானல் நீர் தெறிக்க

தேசீய்ய நெடுஞ்சாலை நுழைந்து கொண்டிருக்கிறது

ஆம்பல் நகரம் நோக்கி

விரைந்து செல்லும் பேருந்தின் உள்ளே

நடத்துனர்

ஓட்டுனர்

பயணியர் எல்லாருடன்

திருவள்ளுவரும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்

பாட்டும் நானே

பாவமும்

நானே

•••••••••••••••

( கவிஞர் ஞானக்கூத்தனுக்கு சமர்ப்பிக்கிறேன் : ஷாஅ )

உலகாயுதத்தின் ஞானக் கூத்து / குமாரநந்தன்

images (42)

கவிதை என்றால் அது தீவிரமானதாய் இருக்கவேண்டும். அது பூமியின் மீது நகர்ந்து செல்லும் மானுடக் கூட்டத்தின் வாழ்க்கை என்னும் பெரு நதியை தரிசிப்பதாய் இருக்க வேண்டும் என்கிற சிந்தனையை கலைத்துப் போடுகிறது ஞானக்கூத்தனின் கவிதை. உண்மையில் தீவிரம் என்பது எது? அது என்ன செய்கிறது என்று யோசிக்கவும் வைத்துவிடுகிறது.

அதேபோல உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்த, கனமான வார்த்தைப் பிரயோகங்களும் கவிதையில் கவனமாக தவிர்க்கப்படுகின்றன.

அவருக்கு அந்த விஷயங்கள் தெரியாது என்பதல்ல. ஒரு பேட்டியில் தான் பதினேழு வயதிலேயே தொல்காப்பியத்தை முழுமையாகப் படித்துவிட்டதாக சொல்கிறார். தவிர சமஸ்கிருத இலக்கியங்களில் அவருக்கு பாண்டித்யம் இருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது.

ஆனால், தத்துவார்த்தமான, ஆன்மீகமான விஷயங்களுக்கு சற்றும் குறையாத, கண்ணைக் கூசும்படி ஒளி வீசும் உலகாயத விஷயங்களைத் தான் எடுத்துக் கொள்கிறார். மற்ற நவீன கவிஞர்களுக்கு இந்த ஒளி எப்படி தெரியாமல் போனது என வியப்பாய் இருக்கிறது.

கவிஞன் என்றால் அவன் எல்லாவற்றைப் பற்றியும் கவலைப்பட்டே தீர வேண்டும் என்கிறதும் இல்லை இவரிடம்.

பொதுவாக கவிதையில் பகடி என்பது உள்ளுக்குள் உக்கிரமானதாய் இருக்கும். ஒரு கோபம் அதன் அடியில் மறைந்திருக்கும். கவிதைகளில் விட, கதைகளில் இதை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். அப்படிச் செய்யும்போது, பகடி கோபத்தை சுமந்து வரும் ஒரு ஊடகமாய் மாறிவிடுகிறது. கவிதை எப்படி கவித்துவமான உணர்வுகளைச் சொல்லும் ஊடகமாக இருக்கிறதோ அப்படி.

ஆனால் இவருடையது பகடியாக மட்டுமே இருக்கிறது. அதன் கீழ் கோபம் விரக்தி உக்கிரம் போன்ற எந்த நிறங்களும் இல்லை. எனில் நமக்கு ஒரு கேள்வி இயற்கையாகவே தோன்றும். உள்ளுறையான விஷயங்கள் தேவை இல்லையா? உள்ளுறையாக விஷயங்கள் மட்டுமே தேவை. வேறு உணர்வுகள் மீது பகடி என்னும் இனிப்பைப் பூசி விழுங்க வைக்க எந்தத் தேவையும் இல்லை. எல்லாவற்றையும் அபத்தமாக்கிப் பார்ப்பதல்ல. அபத்தங்களை சுட்டிக் காட்டுவதுதான் முக்கியம்.

அபத்தமாகப் பார்ப்பதில் ஆன்மீகம் வந்துவிடும். தத்துவ விசாரம் வந்துவிடும் அதெல்லாம் வந்துவிடக் கூடாது என்பது நோக்கமல்ல. ஆனால் அது ஏன் வர வேண்டும்? வந்துதான் ஆக வேண்டுமா என்பதுதான் கேள்வி?

எனவே எல்லாம் அப்படியே இருக்கின்றன. விஷயங்களை அபத்தமாக மாற்ற முயற்சிக்கும் கவிஞனுக்கு அது ஒரு நிறத்தை தந்துவிடுகிறது. அது அவனுடைய நிறமாகவும் ஆகிவிடுகிறது. விஷயங்களில் உண்மையிலேயே இருக்கும் அபத்தம் கவிஞனுடையதாய் ஆகிவிடும்போது சிக்கலாகிவிடுகிறது. எனவே அதை தன்னுடைய விஷயமாக மாற்றாமல் அதன் அளவில் இருப்பதை மட்டும் சுட்டும்போது மட்டும்தான் கவனம் கவிஞனை விட்டுவிட்டு விஷயத்தின் பக்கம் திரும்புகிறது. ஞானக்கூத்தன் அதைத்தான் செய்தார்.

யோசனை

உனக்கென்ன தோன்றுது

கருத்துக்கு மாறாகப் போலீசார்கள்

கட்டிவைத்து கையெழுத்து வாங்கலாமா?

எனக்கென்ன தோன்றுது?

வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்

யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்

போச்சு.

இந்தக் கவிதை விஷயத்தை அதன் மையத்தில் சென்று தாக்குவதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு சராசரி மனிதன் சமூகத்தைப் பற்றி யோசிக்கும் அளவுக்குக்கூட ஒரு கவிஞனால் யோசிக்க முடியாது. அவனுக்கு அதைப் பற்றி கவிதை எழுத வேண்டும் அதுதான் அவனுக்கு முக்கியமான பிரச்னை

உதைவாங்கி அழும் குழந்தைக்கு கவிதை இப்படி முடிகிறது.

அவர்கள் அவர்கள்

பங்குக்கு

உதைகள் வாங்கும்

காலத்தில்

உனக்கு மட்டும்

கிடைத்தாற்போல்

சின்னக் கண்ணா

அலட்டாதே

சிலர் வாழ்க்கையின் இயல்பான விஷயங்களை துன்பங்களை பெருங்கதையாய் சொல்வதைப் பார்க்கும்போது, இந்தக் கவிதையை சொல்லத் தோன்றுகிறது. எல்லோருக்கும் அடிகள் விழும். அடிகளைப் பற்றி சொல்ல முயற்சிக்கும் போது, கவிஞர் இப்படி சொல்கிறார். சின்னக் கண்ணா அலட்டாதே.

மற்றவர்கள் துன்பத்தைப் பார். அதுவும் உன்னுடைய துன்பம் போன்றதுதான் என்று கவிதையின் அர்த்தம் கவிதைக்கு வெளியேயும் நீண்டு சென்று கொண்டே இருக்கிறது.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன் என்றால் அது கவிதை

ஆனால் இது அப்படியெல்லாம் புனைந்து சொல்ல விரும்பாத நவீன கவிதை

ஒரு ஏழையின் சிரிப்பில்

அவனது அப்பாவைப் பார்த்தேன்

அவரும் ஓர் ஏழைதான்

அவரது சிரிப்பில்

அவரது மனைவியைப் பார்த்தேன்

அவளும் ஓர் ஏழைதான்

இந்தக் கவிதை கடைசியில் இப்படி முடிகிறது.

காரில் இருப்பவன் சிரித்துச் சொல்கிறான்

அழகாய் இருக்கிறாய் நீ என்று

முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாள் அந்தப் பெண்

யாரைப் பார்த்தும்

அவள் சிரிக்கவில்லை

அப்படி ஒருவேளை சிரித்திருந்தால்

அந்தச் சிரிப்பில்

தெரியப்போவது

யாராய் இருக்கும் சொல்லுங்கள்.

சாதாரணமாய் இருந்துவிடுவது நல்லது. வரங்கள் பெறுவதில் பிரச்னைகள் உண்டு. அப்புறம் சாதாரணமாய் இருப்பதும் பிரச்னையாகிவிடும்.

யாரோ முனிவன் தவமிருந்தான்

வரங்கள் பெற்றான் அதன் முடிவில்

நீர்மேல் நடக்க தீப் பட்டால்

எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்

கொடுத்குத் தீயைச் சந்தனம் போல்

உடம்பில் பூசிச் சோதித்தான்.

மக்கள் அறிந்தார் கும்பிட்டார்.

மறுநாள் காலை நீராட

முனிவன் போனான் ஆற்றுக்கு

நீருக்குள்ளே கால்வைக்க

முடியாதவனாய் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு

காலைப் போட்டால் நடைபாதை

சிரித்துக் கொண்டு கண்ணெதிரே

ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா

கிரியை எல்லாம் போயிற்று

வேர்த்துப் போனான். அத் துளிகள்

உடம்பை பொத்து வரக் கண்டான்.

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்.

செத்துப் போன ஒரு நாளில்

தீயிலிட்டார். அது சற்றும்

வேகாதிருக்கக் கைவிட்டார்.

நீரின் மேலே நடப்பதற்கும்

தீயாலழியா திருப்பதற்கும்

வரங்கள் பெற்ற மாமுனிவன்

மக்கிப் போக நாளாச்சு

ஏதாவது ஒரு தத்துவத்தின் சாராம்சத்தை ஏற்றிவிடலாம் என்பது போல ஜாலம் காட்டும் இவர் கவிதைகளில் அப்படி முயற்சித்தால் அது நம்மைத் துரத்தியடித்துவிடும். வாழ்க்கைதான் அதன் தத்துவம்

இனி மழித்தலும்

சதைக் கழுவழும் இல்லை

உயர அடுக்கு கட்டையை

மூட்டு அதற்குத் தீயை

என்கிற சீன ஜென் கவி ஒருவரின் கவிதையை தமிழில் மொழி பெயர்த்த சி. மணி ஞானக் கூத்தனின் கவிதைகளுக்கு முக்கியத்துவம் தந்து தன்னுடைய நடை இதழில் வெளியிட்டது ஆழ்ந்த புரிதலை நம்மிடம் கோரி நிற்கிறது.

புதுக் கவிதைகள் இருண்மைப் பொருளைக் கொண்டிருந்தாலும் அவை பெரும்பாலும் இங்கிருந்துதான், இப்படித்தான் என்கிற ஒரு சரியான இடத்திலிருந்து துவங்குகிறது. ஆனால் இவரின் எதிரெதிர் உலகங்கள் கவிதை இப்படித் துவங்குகிறது.

கண்ணிமையாக் கால் தேயாத் தேவர் நாட்டில்

திரிசங்கை போக விடமாட்டேன் என்று

ஒரு முட்டாள் சொன்னது பேராபத்தாச்சு எனத் துவங்கிச் செல்லும் கவிதை

இப்படி முடிகிறது

அன்று முதல் பிரம்மாவும் விஸ்வாமித்ர

மாமுனியும் படைத்தவைகள் அடுத்தடுத்து

வாழ்ந்துவரல் வழக்காச்சு எடுத்துக்காட்டு

மயிலுக்கு வான்கோழி, புலிக்குப் பூனை

குதிரைக்குக் கழுதை குயிலுக்குக் காக்கை

கவிஞர்களுக் கெந்நாளும் பண்டிட் ஜீக்கள்.

இவரின் ஆரம்ப காலக் கவிதைகளில் நாட்டுப்புற இசைத் தன்மையை அதிகம் உணர முடிகிறது.

அதற்குக் காரணம் நவீனக் கவிதை என்பது அனைவ்ருக்கும் பொதுவானது என்கிற சிந்தனையாய் இருக்கலாம். எனவே, மரபுக் கவிதைக்கு இணையாக நவீனக் கவிதைக்கும் இருந்த மேட்டிமை தனத்தை களைத்து அதை மக்களுக்கு நடுவே புழங்க விடுவதுதான் அவருடைய நோக்கமாக இருக்கிறது.

இதனால், கவிதை தன்னுடைய புனிதத்தை ஒன்றும் இழந்துவிடுவதில்லை. உண்மையில் கவிதைக்கு அப்படி ஒரு புனிதத்தை கற்பிக்கத் தேவையும் இல்லை.

அவருடைய கவிதைகளில் புழங்கும் ஆன்மீகம் என்ன எனத் தேடி நாம் மெனக்கெடத் தேவை இல்லை. அப்படிச் செய்வது அவரைக் கண்டுபிடிக்க அவரிடமிருந்து முற்றிலும் எதிர் திசைக்கு செல்வதாய் ஆகிவிடும்.

உலகமும் உலகாயதமும்தான் அவருடைய ஆன்மீகம். மரணத்தைப் பார்த்து பதட்டப்படுவதோ, அது என்ன என ஆராய்வதோ அவருடைய வேலையல்ல.

மரம்பட்ட சாலைக்கென்னை

அனுப்புமுன்

பேரைக் கொஞ்சம்

சோதித்துப் பாருங்கள் சார்.

இதுதான் அவர் மரணத்தை எதிர் கொள்ளும் விதம். மரணத்தை அப்படியே ஏற்றுக் கொள்வது ஆன்மீகத்தில் தோய்ந்த மனதின் வெளிப்பாடு. இவரும் ஏற்றுக் கொள்கிறார் அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் பெயரை மட்டும் கொஞ்சம் சோதித்துப் பார்க்கச் சொல்லி கேட்டுக் கொள்கிறார். அதுவும் இறைவனே ஆதி பரம் பொருளே என்றெல்லாம் விளிப்பதில்லை. சார் என்றுதான் விளிக்கிறார்.

ஏன் சார் என்று விளிக்க வேண்டும். சார் என்பது அரசாங்க மொழி. அரசாங்கம் என்கிற ஒன்றை மனிதனுக்கு வழங்கியவனும் அரசு அதிகாரி போன்றவனாய்த்தான் இருக்கக் கூடும். தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே பேரைக் கொஞ்சம் சோதித்துப் பாருங்கள் சார் எனச் சொல்லி அவர் ஆன்மீகத்திலிருந்து முற்றிலும் வேறான பாதைக்குள் சென்றுவிடுகிறார்.

கடவுள் அவரது இருப்பு அவருடைய செயல்பாடுகள் என எதுவும் இருக்குமானால் அது இங்கிருக்கும் ஒரு அரசாங்கம் போலத்தான் இருக்கும் என்பதுதான் அவருடைய முடியாத நிலைப்பாடு.

விட்டுப்போன நரி

குதிரையாகாமல்

விட்டுப் போனதில் ஒருவன் சாமீ

குதிரையாகாமல் விட்டுப்

போனதில் ஒருவன் சாமீ

மேற்படி குரலைக் கேட்டார்

மாதொரு பாகர்.

குற்றம் ஏற்பட வியந்தார்

தேவி ஏளனம் செய்தாள் சற்று

வாதவூரடிகட்காக

நரிகளைத் தேர்ந்தபோது

நீதியோ என்னை மட்டும்

விலக்கிய செய்கை சாமீ

திருவருட் திட்டம்

பொய்த்ததற்கொரு

ஊளைச் சான்றாம்

நரி எதிர் உதித்துக் கீற்று

நிலாத் திகழ் ஈசர் சொன்னார்.

நரிகளைப் பரிகளாக்கும்

திருவிளையாடல்

முற்றும் விடுபட்ட பேரை நாங்கள்

கவனிக்க மாட்டோம் போய் வா

இந்த பூமியில் ஆன்மீகம் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தழைத்திருந்தது. ஆனால் அது குறிப்பிட்ட ஒரு சமூகம் விலக்கப்பட்டிருப்பதைக் கண்டும் அதற்கான குரலை எடுக்காமலேயே பல காலம் தந்திரமாய் இருந்திருக்கிறது. என்கிற அரசியல் இங்கு சட்டென முகத்தில் அறைகிறது. ஆன்மீகத்தின் முகத்தில் விழும் இந்த அறை சாதாரண அறை அல்ல.

இம்மாதிரியான கவிதைகள் ஏராளமானவர்களைக் களத்தில் குதிக்க வைக்கும் தன்மையைக் கொண்டிருந்தாலும், கவிதை என்பது உண்மையிலேயே என்ன என்னும் புரிதல் பொதுஜன சமூகத்திற்கு எட்டிவிடக்கூடிய நன்மையும் இருக்கிறது.

பகடி, அபத்தம் என எளிதாய் தோன்றினாலும் அது அவ்வளவு எளிமையானதும் அல்ல என்கிற விஷயம்தான் இந்தக் கவிதைகளின் உள்ளே ரத்தமாய் ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்காலத்திய நவீன கவிதைகளை போலி செய்வது எளிது. அதனால் தான் கவிதையில் இத்தனைக் குழப்பங்களும் மோதல்களும். ஆனால் ஞானக்கூத்தனை போலி செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அதில் ஒன்றும் இருக்காது. வெறும் கவிதை பொம்மைதான் இருக்கும்.

அவர் கண்களை வேண்டுமானால் கடன் வாங்கிக் கொள்ளலாம். அதன் மூலம் பார்க்கலாம். அதிலிருந்து நம்முடைய அசலான பார்வைக்கும் கவிதைக்கும் திரும்பிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு கவிஞரும் செய்ய வேண்டியது இதைத்தான் நம்மை ஆராய்பவர்களை அவர்களின் உள்ளுக்குள் நோக்கித் திருப்புவது. அவர்களுடைய அசலுக்குள் விழ வைப்பது.

•••••

ஞானக்கூத்தன் கவிதைகள் பேசு பொருள்கள் ( ஞானக்கூத்தன் சிறப்பிதழ் ) / சிபிச்செல்வன்

13892091_10207281217171538_7069169764844783860_n

ஞானக்கூத்தன் கவிதைகள் நடை இதழில் அறிமுகமானது. சி.மணி சேலத்திலிருந்து நடை சிற்றிதழைக் கொண்டு வந்தார். அந்த இதழில் அப்போது தீவிரமாக நவீன இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருந்த மூத்தவர்கள் தங்களது படைப்புகளோடு பங்கேற்றார்கள். ஞானக்கூத்தன் என்ற பெயரை நவீன இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தியது நடை சிற்றிதழ்.

சி.மணி அப்போது தன்னுடைய கவிதைகளில் கேலியும் கிண்டலும் பகடியும் எள்ளலும் துள்ளலுமான நடையில் எழுதினார். அவர் எழுத்து இதழில் அறிமுகமாகி பரவலான கவனத்தைப் பெற்றிருந்தார்.

புதுக்கவிதைகள் எழுத்து இதழில் இடம்பெற்று அது பரவலான கவனத்தையும் பெற்றுவருவதை மரபான கவிஞர்களுக்கு ஏற்றுக்கொளள இயலவில்லை. ஆகையால் மரபுக் கவிதைகள் எழுத தெரியாதவர்கள் அந்த இலக்கணத்திற்குள் எழுத தெரியாதவர்களே புதுக்கவிதை எழுதுகிறார்கள் என்ற ரீதியில் அவர்கள் கேலி செய்தார்கள்.

அதை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி அப்போது புதுக்கவிதை எழுதிய நான்கு பிதாமகன்களில் ஒருவரான சி.மணிக்கு இருந்தது. அவர் ஒரு ஆங்கில இலக்கிய மாணவர். பிறகு ஆங்கில இலக்கியம் கற்பிக்கிற பேராசிரியராக பணியேற்றார். ஆங்கில இலக்கியம் படிக்கிறவர் எப்படி தமிழ்கவிதை எழுத இயலும்? அவருக்கு எப்படி தமிழ் இலக்கணம் தெரியும் எனத் தனியாகவும் சரி , பொதுவாகவும் புதுக்கவிதை எழுதுபவர்களுக்கும் மரபுக் கவிஞர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பி வந்தார்கள்.

இவற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழல் அப்போது அவர்களுக்கு இருந்தது. இதனால் தங்களுக்கு மரபுக் கவிதைகளும் பரிச்சயமிருக்கிறது. இலக்கணத்திலும் செழுமையிருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தினாலும் சி.மணி தன் கவிதைகளை மரபு கவிதையின் வடிவத்திலும் புதுக்கவிதையின் கட்டற்ற சுதந்தரத்தையும் எடுத்துக்கொண்டார்.

இந்த காலகட்டத்தில் நவீன கவிதைகளை எழுத வந்த ஞானக்கூத்தனும் தன் முன்னோடியாக சி.மணியின் போக்கில் தன் கவிதைகளை எழுத தொடங்கினார். ஞானக்கூத்தனுக்கும் தமிழ் மரபுக் கவிதையில் நல்ல பரிச்சயமும் இலக்கணத்தில் நல்ல செழுமையான அறிவும் இருந்ததால் அவராலும் தன் கவிதைகளை மரபின் வடிவில் எழுத முடிந்தது.
இவை நடந்தது 60 களின் தொடக்கத்தில் என்ற காலப் பிரக்ஞையும் நமக்கு வேண்டும்.

அக்காலகாட்டத்தில் தமிழ்க்கவிதை எழுதுபவர்கள் அதிகமாக எழுதி வந்த ஒரே வடிவம் மரபுக் கவிதைகள் தான். அதனால் அந்த மரபான கவிஞர்கள்தான் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். அவர்களின் கூச்சலை எதிர்கொள்ள வேண்டிய தேவை சி.மணிக்கும் அவர்வழி வந்த ஞானக்கூத்தனுக்கும் இருந்தது என்பதையும் நாம் புரிந்துகொண்டால் அவருடைய

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதைப் பிறர்மேல் விடமாட்டேன்

என்ற கவிதை எழுத வேண்டிய தேவை எப்படி ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம்

பலரும் அவர் தீவிரமான திராவிட எதிர்ப்பாளர் என்பதாலேயே இப்படி எழுதினார் என இப்போது நினைக்கிறார்கள். இந்தக் கூற்றை நான் முற்றாக மறுக்கவில்லை. ஆனால் அதே சமயம் மரபுக் கவிஞர்களின் கூச்சலைதான் அவர் தவளைகளின் கூச்சல் என்கிறார்.

அவருடைய தொடக்க காலத்தில் சி.மணியின் எள்ளலை, பகடியை, வடிவத்தை , மரபின் செழுமையான வடிவத்தை என ஞானக்கூத்தன் வரித்துக்கொண்டிருந்தாலும் , விரைவில் தன்னுடைய கவிதை செயல்பாடுகளால் , தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

இந்த அடையாளத்தினால் அவருடைய செயல்பாடுகள் தீவிரமானதாக மாறியது.

ஞானக்கூத்தன் தன்னுடைய இறுதிக்காலம் வரையிலும் சுமார் 50 ஆண்டுகளாக கவிதை பற்றிதான் பேசிவந்தார். எழுதி வந்தார். அது கவிதையாக இருக்கும் அல்லது கவிதை பற்றிய கட்டுரையாக இருக்கும் அல்லது கவிதை பற்றிய பேச்சாக இருக்கும். அல்லது கவிதை பற்றிய அவர் வாசிப்பாக இருக்கும்.

இப்படிதான் முழுக்க முழுக்க கவிதைக்காகவே வாழ்ந்தார் என சொன்னால் அது நிச்சயம் மிகையான கூற்றல்ல என்பது அவரைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும்.
images (36)
பின்னாட்களில் அவர் சம்ஸ்கிருத கவிதை கோட்பாடான த்வனி கோட்பாட்டை தன்னுடைய கவிதை கோட்பாடாக சுவீகரித்துக்கொண்டு அதை நவீன தமிழ்க் கவிதை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதைப் பற்றிய விளக்கமான கட்டுரைகளை எழுதி வலு சேர்த்தார். தமிழ் நவீன இலக்கியத்திற்குத் தொடர்ச்சியாக அதைப்பற்றிய பேச்சுகளை, எழுத்துகளை உருவாக்கினார்.

அவருடைய கவிதைக்காக என்ற கட்டுரை நூலை விருட்சம் பதிப்பகம் 90களின் தொடக்க ஆண்டுகளில் வெளியிட்டது . அந்தப் புத்தகத்தில் பெரும்பாலான கட்டுரைகளில் இந்த த்வனி கோட்பாட்டை பற்றிதான் எழுதியிருந்தார்.த்வனி கோட்பாட்டின் இன்னொரு நுட்பமான விஷயமான வக்ரோத்தி என்பதையும் இங்கே அறிமுகப்படுத்தினார். ( இந்த த்வனி மற்றும் வக்ரோத்தி விஷயங்களை தெளிவாக அறிந்துகொள்ள ஞானக்கூத்தனின் கவிதைக்காக புத்தகத்தை வாசிக்க பரிந்துரைக்கிறேன் ).

அதே சமயம் நவீனகவிதை குறித்த டி.எஸ்.எலியட்டின் கோட்பாடுகளை பற்றிய அறிவோடும் புரிதலோடும் தன் நவீன கவிதைகளுக்கு அவற்றை அடிப்படையாகவும் கொண்டிருந்தார். இவற்றோடு தமிழ் மரபிலும் செழுமையான அறிவு பெற்றிருந்தார். செய்யுள் வடிவத்திற்கான இலக்கண அறிவும் பெற்றிருந்தார்.

இப்படி தமிழ்க்கவிதையின் இரண்டாயிர வருட பாரம்பர்ய கவிதைகளின் செழுமையையும் நவீனகவிதை பற்றிய டி.எஸ்.எலியட்டின் கோட்பாடுகளையும், சமஸ்கிருதத்தின் த்வனி கோட்பாட்டையும் தன் கவிதைகளுக்கும் தன் கவிதை பற்றிய கட்டுரைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டார். கூடவே உலக இலக்கியங்களின் அறிவையும் சமகால கவிஞர்களின் கவிதைகளில் பரிச்சயத்தையும் பெற்றிருந்தார்.

இவற்றிற்கு மேலும் செழுமையேற்றிக்கொள்ள இந்திய மொழிகளில் அப்போது எழுதிக்கொண்டிருந்த சமகால கவிஞர்களின் கவிதைகளையும் வாசித்து தன்னை ஒரு கவிதைக்கான மனிதராகவே மாற்றிக்கொண்டிருந்தார் ஞானக்கூத்தன்.

இன்னும் சொல்லப்போனால் பின்னாட்களில் அவர் அறிமுகம் எழுதிய இளைய கவிஞர்களின் கவிதைகளுக்கு மரபான கவிதைகளை அடையாளம் கண்டு அதை இந்த புதிய கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிட்டும் அதையும் இந்தப் புதுக்கவிஞர்களின் கவிதைகளோடு எப்படிப் பொருந்திப் போகிறது என்றும் விலாவாரியாக விளக்கமாக எழுதி வந்தார்.

அவர் வானம்பாடி கவிஞர்களின் கவிதைக் கோட்பாட்டிற்கு முற்றான எதிர்நிலையிலிருந்து தீவிரமாக இயங்கி வந்தார். அதாவது ஒரு கட்டம்வரை மரபுக் கவிஞர்களுக்காக பதில் சொல்லிவந்த நவீன கவிதை பாராம்பர்யம், இன்னொரு கால கட்டத்தில் வானம்பாடிகளின் கவிதை என்ற வடிவத்திற்கும் மனோபாவத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டயத்தையும் நெருக்கடியையும் சந்தித்து வந்தது. அவற்றை ஞானக்கூத்தன் தன் கவிதைகளின் போக்கினாலும் பேச்சினாலும் கட்டுரைகளாலும் மௌனத்தாலும் தொடர்ந்து எதிர்கொண்டு வந்தார். எந்த சூழலிலும் அவர் இதை விட்டுக்கொடுத்து இயங்கியதில்லை.

ஞானக்கூத்தனுக்கு நடை இதழ் நின்றுபோன பிறகு கசடதபற மற்றும் ழ போன்ற இதழ்களை உருவாக்கி தன் நண்பர்களோடு நவீன இலக்கிய செயல்பாடுகளால் இயங்கினார். இயக்கினார்.

ழ என்ற கவிதைக்கான ஒரு தீவிர இதழை தொடங்கினார். அதில் ஆத்மாநாம் ஆர்.ராஜகோபால் ( இவர் ஆங்கில பேராசிரியராக பிரசடன்சி கல்லூரியில் பணிபுரிந்தவர் ) ஆனந்த், தேவதச்சன் இப்படி ஒரு தீவிரமான கவிதை எழுதுகிற வட்டத்தை ழ இதழின்வழி உருவாக்கினார்.

இந்த ழ கவிதையேட்டில் அப்போது உலக இலக்கியத்தில் இருந்த கவிதைகளின் போக்குகளை அடையாளப்படுத்துகிற விதமாக சில மொழிபெயர்ப்பு கவிதைகளையும் வெளியிட்டிருந்தார்கள்.

ந.முத்துசாமியின் சிறுகதைகளும் நாடகங்களும் அப்போது எல்லா இலக்கிய இதழ்களிலும் வெளிவந்துகொண்டிருந்தன. ( ந.முத்துசாமி அவருடைய ஊர்க்காரர் மற்றும்அவருடைய பள்ளித்தோழர் ).நவீன ஓவியங்களையும் நவீன நாடகங்களையும் தமிழுக்கு கணிசமாக அறிமுகப்படுத்தியதிலும் ஞானக்கூத்தனுக்குப் பங்கிருக்கிறது.

எண்பதுகளின் கடைசி வருடங்களில் நண்பர் அழகியசிங்கர் விருட்சம் இதழைத் தொடர்ச்சியாகக் கொண்டுவந்த போதும், அவர் விருட்சம் பதிப்பகமாக கொண்டு வந்தபோதும், ஞானக்கூத்தன் தன் ஆதரவை அவருக்குக் கொடுத்து வந்தார். அவருடைய மீண்டும் அவர்கள் என்ற அதுவரை தொகுப்பாக வெளிவந்த ( 1994 ) கவிதைகளையும் , அதுவரை புத்தகமாக வெளிவராத கவிதைகளையும், மொத்தமாகத் தொகுத்து அழகியசிங்கர் ஒரு புத்தகமாக வெளியிட்டார்.

மேலும் ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி எழுதிய கட்டுரைகளை கவிதைக்காக என்ற புத்தகமாக தொகுத்து வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில்தான் த்வனிக் கோட்பாடு பற்றிய கட்டுரைகள் அதிகமாக இடம்பெற்றிருந்தது.கூடவே அவருடைய மரபுக் கவிதையின் செழுமையான அறிவைக் காட்டுகிற செய்யுள்களை நவீன அறிவோடு பார்க்கிற கட்டுரைகளும் இடம் பெற்றிருந்தன.

2000 ஆம் ஆண்டுகளின் தொடக்க காலகட்டத்தில், நான் சென்னையில் காலச்சுவடு அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அவருடைய வீடு என் அலுவலகத்தின் அருகில் இருந்ததால் அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவர் எனக்கு இந்தியளவில் மற்றும் உலகளவில் இயங்கிக்கொண்டிருந்த கவிஞர்களின் பெயர்களையும் அவர்களுடைய கவிதைகளையும் பரிச்சயம் செய்து வைத்தார்.நவீன கவிதைகளின் கோட்பாடுகளையும் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல்களையும் சொன்னார்.

அதே சமயத்தில் மரபுக் கவிதைகளின் செழுமையையும், அவற்றை எப்படி வாசிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்தார் . அவருடைய இந்தத் தொடர்பினால் ஒரு கட்டத்தில் நான் தொல்காப்பியத்தை வாங்கி வந்து ஆழ்ந்து வாசிக்க தொடங்கினேன்.

என் கவிதை பற்றிய கட்டுரைகளை அவருடைய பாணியில் எழுதத் தொடங்கியிருந்தேன். குறுந்தொகையில் ஒரு பாட்டிற்கு நுண்மையான வாசிப்பையும் அதன் தற்போதைய புரிதல்பற்றியும் ஒரு கட்டுரையை அப்போது எழுத முடிந்தது என்றால் அது ஞானக்கூத்தனின் ஆகிருதியால் நடந்ததுதான்.

அவருக்கென ஒரு கவிதை சொல் முறையை ஏற்படுத்திக்கொண்டார். அவர் சி.மணியின் வடிவத்தை தொடக்க காலத்தில் தன் கவிதைகளில் எழுதி வந்திருந்தாலும் பின்னாட்களில் தனக்கென ஒரு வடிவத்தை எடுத்துக்கொண்டதை போலவே பிறகு ஞானக்கூத்தன் பாணியில் எழுத வந்தவர்களும் அவரின் பகடியை கேலியை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள்.அவருடைய கவிதைகளின் வீச்சை, மொழியை, வடிவத்தை, இப்படி கவிதையின் நுட்பமான விஷயங்களை ஸ்வீகரித்துக்கொள்ள இயலவில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஞானக்கூத்தனின் அடுத்த வாரிசுகளாக நினைத்துக்கொண்டிருக்கிற யாரும் அவரை மிஞ்சிவிடவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அவருக்கென ஒரு தனியிடம் கவிதை உலகில் இப்போது வரை ஏற்பட்டிருக்கிறது.போலிகளால் அந்த இடத்தை ஒருநாளும் அடைய முடியாது.

ஞானக்கூத்தன் கவிதைகளை எளிமையாக வாசகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கு காரணம் அவருடைய கவிதைகள் மனப்பாடமாக சொல்வதற்கும் வசதியாக இருப்பதும் ஒரு காரணம். மேலும் அக்கவிதைகள் எளிமையான வடிவத்தில் இருப்பதும் இன்னொரு காரணம். எளிமையாக இருக்கிறது என்றுதான் சொன்னேன். ஆனால் உண்மையில் அது எளிமைபோல இருக்கிற நுட்பமான கவிதைகள்.
images (42)
வாசகர்களை எளிமைபோல எளிதாக ஏமாற்றப் பார்க்கிற கவிதைகள் அவருடையவை. வாசிக்க வாசிக்க பொருள் விரிந்துகொண்டே போகிற தன்மையில் அமைந்தவை. அவருடைய எனக்கும் தமிழ்தான் மூச்சு கவிதை அப்போதைய தமிழ் அரசியலைப் பற்றிப் பேசிய கவிதை என்றாலும் அது இப்போதும் சமகாலத்திற்குப் பொருந்துகிற கவிதையாக இருக்கிறது.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்க் கவிதையின் மாறிவருகிற போக்குகளைக் கடந்து , அவை இப்போதும் நவீன வடிவத்தில் இருக்கிற கவிதைகளாக எழுதியமைதான் அவருடைய மேதைமைக்கு சான்று.

ஞானக்கூத்தன் கவிதைகளில்இடம்பெற்றிருக்கிற பெரும்பாலான கவிதைகளில் ஒரு நிகழ்காலம் உறைந்திருக்கும் . கவிதை வாசகன் அதை எந்த நிகழ்காலத்தில் வாசிக்க தொடங்கினாலும் அப்போதைய நிகழ்காலத்தின் அர்த்தங்கள் அக்கவிதைகளில் பரவி வாசகனின் அர்த்தத்திற்கு விரிந்து அனுபவங்களாகும்.அத் தன்மைகளோடு அக்கவிதைகள் படைக்கப் பெற்றிருக்கிறது என்பதால்தான் பல தசம ஆண்டுகளைக் கடந்தும் வாசிப்பிற்குத் தாக்குப் பிடித்துக்கொண்டிருக்கின்றன.

ஞானக்கூத்தன் கவிதைகள் நவீன தமிழ்க் கவிதைகளின் வரலாற்றில் அவருக்கு ஒரு இடத்தை தேடிக்கொடுத்திருக்கின்றன. அவை காலத்தினாலும் அழியாத பெரும் புகழை அவருக்குக் கொடுத்திருக்கின்றன. தமிழ்க்கவிதை வாழும் காலம்வரையில் ஞானக்கூத்தனும் தன் கவிதைகளில் வாழ்வார்.

••

மேலும் சில நினைவுகளை வாசிக்க

ஞானக்கூத்தன் சில நினைவுகள் ( அஞ்சலி ) / சிபிச்செல்வன்

http://malaigal.com/?p=8841

பழுத்த இலைக்கு அஞ்சலி : ஞானக்கூத்தன் (1938 – 2016) / பெஷாரா

images (41)

பெஷாராவின் டைரி –

அந்த மரம் நெடிதுயர்ந்து அகன்ற அடிப்பாகத்துடன் எண்ணற்ற கிளைகளுடன் ஒருங்கிணைந்தவாறு உயிர்த்துடிப்புடன் இயங்குகின்றது. இருப்பின் அசைவில் அவ்வப்போது பசுமையாகவே அது சில இலைகளை உதிர்க்கிறது. பலவற்றை பழுத்து உதிர்க்கின்றது. மெல்ல மெல்ல கீழிறங்கும் அவை ஒன்றன் பின் ஒன்றென, மரத்தின் அடிப்பாகத்தை தொட்டுத் தழுவிச் செல்லும் காலநதியில் விழுகின்றன.

இலேசாக புரண்டு மிதந்து செல்லும் அவற்றில் பல பெயர்கள். ந. பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, புதுமைப்பித்தன், மெளனி, க.நா.சு., சி.மணி, சார்வாகன்..இப்படி

ஓஹ், அந்த இளமையான பச்சை நிற இலைகள் ஆத்மாநாம், குவளைக்கண்ணன் என்றே விழுந்துவிட்டன

அடடே, சற்று முன் உதிர்ந்த பழுத்த இலை ஞானக்கூத்தனா!

இவை வாழ்க்கை என்னும் மரத்திலிருந்து உதிர்ந்தாலும் காலநதியின் ஓட்டத்துடன் முன்னேறிச் சென்றபடி உள்ளன. நீரில் மூழ்கி அழியாமல் தம் சுயம் இழக்காமல் ஒளிர்ந்தபடி தம்மை ஜீவ ஒளியுடன் ஐக்கியமாக்கிக் கொள்ளப் பயணப்படுகின்றன.

இப்போது மானுட உருவை மறைத்துக் கொண்ட திரு. ஞானக்கூத்தன் இங்கு குழுமியிருக்கும் அனைவர் இதயங்களிலும் கவிதை முகத்துடன் ஒளிர்கின்றார்.

நம் நினைவுகளும் மங்கும். நாமும் ஓர் நாள் மறைவோம்.

ஆயினும் ஞானக்கூத்தனின் கவிதை மொழி என்றும் எல்லாக் காலத்திலும் புதுப் பொலிவை சற்றும் இழக்காமல் பின்வரும் நம் சந்ததியினரின் கைகளில், மனங்களில் உயிர்ப்புடன் மிளிரும்.

1952-ல் பதினான்காவது வயதில் கவிதை எழுதத் துவங்கினார் அவர். நவீன கவிதையில் லயிப்புக் கொண்ட நாள் முதல் தனது கவனத்தை எத்தகு நிலையிலும் தவற விடாமல் முழு மூச்சுடன் புதுக் கவிதையின் தரத்தை உயர்த்துவதிலும் அது சற்றும் சிதையாமல் வளர வேண்டியும் இறுதி மூச்சுவரை தொடர்ந்து இருந்தார்.

எந்த அளவு கவிதைகளை நேசித்து வந்தார் என்பதை அவரின் கூற்றுகள் மூலமே நாம் உணரலாம்.

“இன்றும் எனக்கு கவிதையைத் தவிர வேறு அக்கறைகள் இல்லை. மனதில் கவிதை தோன்றிய நாளைப் போல் இனிய நாள் வாழ்க்கையில் வேறில்லை.”

”நாள்தோறும் கவிதைகளைப் பற்றி சிந்திக்காவிட்டால், எழுதாவிட்டால், படிக்காவிட்டால், என் ஆத்மா வாட்டம் காண்கிறது. இந்த வாட்டத்தை போக்கும் வழியாக நான் ஊட்டிக் கொள்ளும் இக்கவியமுதத்தை என் கவிதையை படிப்பவர்க்கும் நான் மறைமுகமாகத் தருகிறேன்.“

சூட்சுமங்கள் நிரம்பிய வித்தியாசமான கவிதைகளை எளிய முறையில் பன்முகத் தன்மையுடன் எழுதியுள்ளார் இவர்.

யாரோ ஒருத்தர் தலையிலே “ என்னும் தலைப்பில் ஒரு கவிதை:

நாங்கள் நாலு பேர் எலிகளைத் தின்றோம்

ஒரு காலத்தில்

நாங்களே எலிகளாய் போகலாமென்று
எலிகளாய் போனபின் நெல்களைத் தின்கிறோம்
ஒரு காலத்தில்

நாங்களே நெல்களாய் போகலாமென்று .

நெல்களாய் நாங்கள் ஆனதன் பின்பு

நாங்கள் நாலு பேர் மண்ணைத் தின்கிறோம்

ஒரு காலத்தில்

நாங்களே மண்ணாய்ப் போகலாமென்று

மரணத்தின் முடிவை மிகவும் எதார்த்தமாக “ அக்கினி “ என்னும் தலைப்பில் எடுத்துரைக்கிறார்.

தன்னை எவர் எவரோ
உண்ண அழைப்பது போல்

அக்கினியின் காதில்

விடாமல் ஒலிக்கிறதாம்.

தீயின் புனிதம் சிதையால் கெடாதென
வாய் மொழி ஒன்று கேட்டேன்.

வியர்த்துக் கொண்டே உண்மை

என்றேன்.

திரு. ஞானக்கூத்தனின் வாழ்க்கை முறையும் நவீன கவிதைகள் வாயிலாக அவர் நமக்கு அளித்திருக்கும் எளிதாக மொழியைக் கையாளும் லாவகமும் அரியதொரு பொக்கிஷம். இவற்றின் மூலம் நாம் உணர்வது ஒன்றுதான்.

பிறப்பதும் வளர்வதும்

வாழ்வதும் மறைவதும்

மீள்தலும்

இக்கணம் பற்று

விடுபடும் விநாடி

விடியலின் துவக்கம்.

யாருடைய வாழ்விலும் மரணம் முற்றுப் புள்ளி அல்ல.

31-7-2016.

அவர் சொன்னது தப்பில்லை என்றே தோன்றுகிறது.. ஞானக்கூத்தன் கவிமனச்சித்திரம் பற்றி — அமிர்தம் சூர்யா

images (34)

சூளைச்செங்கல் குவியலிலே

தனிக்கல் ஒன்று சரிகிறது..

கவிஞர் ஞானக்கூத்தன் எழுதிய இந்தவரி இப்போது அவரை சுட்டிக்காட்டுவதாகவே தெரிகிறது.தனிக்கல் ஒன்று சரிந்தது தான்.
ஆனால் அன்று இந்த இருவரியை அப்துல் ரகுமான் ..இனத்திலிருந்து பிரியும் துரோகத்தின் குறியீடு என்றார்.வெங்கட்சாமிநாதனோ இது வெறும் சித்தாளின் பார்வை என்றார்.பிந்தி வந்து கட்டுரை எழுதிய நான் அந்த தனிக்கல் சரிந்து நொறுங்கி மீண்டும் மண்ணாக தான்..என்று அர்த்தப்படுத்திக்கொ்ண்டேன்..இப்படியாக கவிதையின் அரசியலாலே இயங்கியவர் ஞானக்கூத்தன்.

ஞானக்கூத்தன்…சென்னைஇலக்கிய நண்பர்கள் அதிகம் அறிந்து இருந்த நவின கவிஞரின் பெயர்.அதிக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கவிஞரும் அவர்தான்.எனக்கு தெரிந்து பொதுவெளியில் அதிகம் பேசிய கவிஞரும் ஜெயமோகன் போல் அவ்வப்போது சர்ச்சையை எழுப்பி தன் கவிதையின் இருப்பை அதிர்விலேயே வைத்தவரும் அவரே

சர்ச்சையா அது என்ன என்று புதியவர்கள் கேட்கலாம்..இப்போது கூட அதை விவாதப் பொருளாக்கலாம்.

1) தலித் இலக்கியம் வெற்றி அடையாம போனதுக்கு அவர்களின் மொழியே காரணம்..வழக்கு மொழியில் இருந்து மொழியை செந்தரப்படுத்தலே மொழிக்கு நல்லது.

2)இந்த தேடல் சுயம் ஆன்மிகம் போன்ற சொற்கள் வாசகனை மிரள வைக்கும் யுக்தி.மனிதன் சாதாரணமானவன்.

3)பெண்ணை எப்போதும் பெண்ணாகவே பார்ப்பது தவறு.பொருளாகவும் பார்க்கலாம்

4) குழு மனப்பான்மை இலக்கியத்துக்கு ஆரோக்கியம் தான்

5)கவிதை எழுதுவதெல்லாம் இலக்கிய சேவை இல்லை.வா.மு.சே மாதிரி ஆட்கள் அப்படி நம்புறாங்க..

6)இந்திய கலாச்சாரம் என்பது இந்து கலாச்சாரம் தான்

இப்படி ஞானக்கூத்தனின் பிம்பம் அவர் கவிதையால் மட்டும் கட்டமைக்கப்படவில்லை..இப்படியான கருத்தியல்களாலும் தான்..எல்லாவற்றையும் சேர்த்தே நாம் பேசவேண்டும்( இந்த கருத்துக்கள் எல்லாம் 1996-ல் நான் நடத்திய அமிர்தம் இதழில் பேட்டியில் அவர் சொன்னது)

.நானும் நண்பர் தமிழ் மணவாளனும் அதிகமுறை சென்றுவந்த கவிஞரின் வீடும் ஞானகூத்தன் வீடே..அவர் வீட்டு தண்ணீரில் கொஞ்சம் பச்சைக் கற்பூரமும் கொஞ்சம் துளசியும் போட்டு தான் வைத்திருப்பார்கள்.அது கோயில் தீர்த்தம் போல் புதுசான ருசி..அந்த ருசி தண்ணீரில் மட்டுமல்ல கவிதையிலும் வாழ்வின் செயல்பாட்டிலும் இருந்தது எனலாம்,நான் சொல்லும் ருசியின் அர்த்தத்தை விளக்க வேண்டியது இல்லை.

நான்பலமுறை அவர் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறேன்.அது எனக்கு ஒரு குஷி.ஒருபோதும் தன் கருத்திலிருந்து அவர் பின் வாங்கியதே இல்லை.நானும் தான். அவர் கருத்தில் ஆணித்தரமாய் நின்றதுக்கு காரணம் நிச்சயம் உண்மைத்தரமும் ஒரு காரணம்தான்.ஆனால் உடனடியாக அது பார்ப்பினியமாக நமக்கு பிம்பம் காட்டும்.ஒரு கட்டத்தில் அவர் சொன்னது உண்மையாக அறிந்தாலும்நுண் அரசியலின் தேவை பொருட்டு நாமும் பின் வாங்கியது இல்லை.

ஒருமுறை தனிப்பேச்சின் போது நண்பர் தேவேந்திர பூபதி சொன்னார்..” கருத்தியலை தாண்டி அவர் ஒரு அசலான கவிஞன் என்பதை மறுக்கமுடியாது.இத்தனை வருடத்துக்குமாற்றத்துக்கு பின்பும் அவர் கவிதையால் தான் நிற்கிறார்.சிலரை போல் அவர் கவிதையை டெஸ்க் ஒர்க் போல் செய்யப்பவரல்ல சூர்யா” ”என்றார்.அது அத்தனை சத்தியமான உண்மை…காரணம் ஒரு பேட்டியில் .சினிமா அரசியல் துணை இல்லாமல் என் கவிதை எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதை ஒரு சவாலாகவே பார்க்கப்போகிறேன்´´ …அப்படியே பார்த்தார்.ஒரு கவிஞனாக ஜெயித்தார்.

ஹைக்கூ கவிதைகள் புற்றீசல் போல் பெருகிய காலகட்டம் ஒன்று இருந்தது.ஹைக்கூ கவிஞர்களுக்கு .கட்சி கொடி மட்டும் தான் இல்லை . அவர்களின் அலப்பரி சொல்லி மாளாதது. அடிப்படை தமிழ் அறிவு ,வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள் கூட ஒரே நாளில் ஒரு ஹைக்கூ கவிதை எழுதிவிட்டு கவிஞர்கள்என்ற அந்தஸ்தை அடைந்த காலகட்டத்தில்..ஞானக்கூத்தன் தான் “ தமிழ் பத்தாயத்தில் புகுந்த எலி ஹைக்கூ “ என்று சாடினார்.ஹைக்கூ கவிஞர்கள் பலர் என் நண்பர்களாக இருந்தனர்.அதே நேரம் ஞானக்கூத்தன் சொன்னதும் சரியெனப்பட்டது. ஞானக்கூத்தன் ,இன்னப்பிற புதியதாக தமிழ் மரபின் சாரம் அறியாமல் மேற்கத்திய போதையில் வந்த சில நவினகவிஞர்கள் போல் இல்லை. அவர் தமிழின்மரபுஇலக்கியத்தில் ஆழந்த புலமை கொண்டவர்.எனவே அவரை சட்டென யாரும் எதிர்க்க தயாராக இல்லை.நாமும் இதை அமைதியாக ரசித்தோம்.ஒரு ஹைக்கூ கவிஞர்களும் எதிர்வினையாற்றவில்லை

download (47)
”நான் என்னை அறிந்துக்கொள்ளவே கவிதை எழுதிப்பார்க்கிறேன் என் மன அமைப்பை அறியும் முறைமைகளுள் ஒன்று கவிதை எழுதுவது .என் கவிதை எழுப்பும் எதிர்வினைக்களுக்கெல்லாம் எல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது வேண்டுமானால் அதை இதழில் பிரசுரிக்காமல் இருக்கலாம் அவ்வளவே..மற்றபடி அது என் கவிதையே.’ அவர் என்று சொன்னது உண்மையே..பல கவிதைகளில் அவரின் ஆரிய மனம் வெளிப்பட்டதாகவே இருந்தது.சமீபத்தில் ஞானகூத்தன்மறைவுக்கு அஞ்சலி செலுத்த கரிகாலன் தேர்வு செய்த ஞானக்கூத்தன் கவிதை எது தெரியுமா?.

“தலைவரார்களேங்…
தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.
தொண்ணூறாம்வாட்டத்தில்பாசும்வாய்ப்பய்த்
தாந்தமைக்குமகிழ்கின்றேன். இன்றய்த்தீனம்
கண்ணீரில்பசித்தொய்ரில்மாக்களெல்லாம்
காலங்கும்காட்சியினெய்க்காண்கின்றோங்நாம்”
‘வண்ணாரப்பேட்டகிளசார்பில்மாலெ’
“வளமானதாமிழர்கள்வாடலாமா?
கண்ணாளாபோருக்குப்போய்வாயேன்ற
பொறநான்ற்றுத்தாயெய்நாம்மறந்திட்டோமா?
தாமிழர்கள்சொகவாழ்வாய்த்திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள்பிணாக்குவ்யல்காண்போமின்றே
நாமெல்லாம்வரிப்பொலிகள்பகைவர்பூனெய்
நாரிமதிபடைத்தோரைஒழிப்போம்வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங்நானின்னும்
யிருகூட்டம்பேசயிருப்பதால்
வொடய்பெறுகறேன்வணக்கொம்”
‘இன்னுமிருவர்பேசஇருக்கிறார்கள்
அமைதி… அமைதி…” —–இந்த கவிதை தான்.

– ஒரு புது பாய்ச்சலில் திராவிட அரசியல் தந்த வெளிச்சத்தில் முதல் அதிகார ருசியை அல்லது சுதந்திரத்தின் முதல் சுவாசத்தை ருசித்த ஒரு விளிம்பு நிலை தமிழனின் அல்லது திராவிடனின் முதல் மேடைப்பேச்சை எள்ளி நகையாடி கவிதை எழுதி தன் மன அமைப்பை அறிந்துக்கொண்டவர் …ஆனால் மற்றவர்களைப் போல் குழிப்பறிக்கும் முதுகில் குத்தும் மறைமுக சாதிப்பற்றில் செயல்படும் போக்கு அற்றவர் அவர் தம் செயலுக்கு சமரசம் அற்று பொறுப்பேற்ற அவர் நேர்மையான கவிஞர் தான்.மேலும் பிறர் சிலாகிக்கிற எந்த மேற்கத்திய கவிஞனுக்கும் ஞானக்கூத்தன் குறைவானவர் அல்ல.

.நவின கவிதைப் பரப்பில் பலரால் பாராட்டப்பட்ட பிரம்மராஜனால் மொழிபெயர்க்கப்பட்ட ஸ்ர் ரியலிச கவிஞர் வாஸ்கோ போப்போஎனும் செர்பிய நாட்டு கவிஞரின் கவிதை ஒன்றை பார்க்கலாம்.

யாரோ ஒருவன் யாரோ ஒருவனை

தனது தலையில் விதைக்கிறான்

விதை முளைவிட காத்திருக்கிறான்

விதை அவன் தலையை குடைந்து வெற்றிடமாக்குகிறது.

ஒரு எலி வளையாக மாற்றுகிறது அதை

எலிகள் தின்கின்றன் விதையை

அவை செத்து விழுகின்றன

காற்று வாழ வருகிறது அந்த வெற்று தலையில்

பிறகு மாறி மாறி வீசும் தென்றலை பிரசவிக்கிறது..

—இந்த கவிதைக்கு சற்றும் குறையாத ஒத்த அலைவரிசையில் இயங்கும் ஒரு கவிதையை ஞானகூத்தன் எழுதியுள்ளார்..அதுவும் யாரோ ஒருவரின் தலை தான்..இரண்டு கவிதைகளூம் வெளிவந்த ஆண்டு 1970 தான். இப்போது நம் ஞானக்கூத்தன் கவிதையை திறந்த மனதோடு வாசிப்போம்

யாரோ ஒருத்தர் தலையில்..என்ற தலைப்பிலானது இக்கவிதை..

நாங்கள் நாலுபேர் எலிகளைத் தின்றோம்

ஒருகாலத்தில்

நாங்களே எலிகளாய் போகலாமென்று

எலிகளாய் போன பின் நெல்களை தின்றோம்

நாங்களே நெல்களாய் போகலாமென்று

நெல்களாய் நாங்கள் ஆனபின்

நாங்கள் நாலு பேர் மண்ணைத் தின்றோம்

ஒருகாலத்தில்மண்ணாய் போகலாமென்று..,,,

—-தமிழ் இலக்கிய மரபில் முடியும் சொல்லை கொண்டு வரியை தொடங்கும் அந்தாதி மரபு நம் கவிதை மரபில் உண்டு..ஆனால் முடியும் கருத்தை கொண்டு வரியை தொடங்கும் அந்தாதி பாணியில் அதே நேரம் கனகச்சிதமா தத்துவ சுழலை இந்த கவிதையில் கட்டமைத்து இருப்பார்.எலிகளாக மாறுவதா..நெல்களாக மாறுவதா..மண்ணாக போவதா…எதுவாக மாற வேண்டும் என்பதை யாரோ ஒரு தலையில் தான் முடிவாகிறது.அல்லது யார் எதுவாக மாற முடிவு செய்தாலும் மண்ணாக போவதை யாரால் தடுக்கமுடியும் என்பதாகவும் பிம்பம் காட்டும் இக்கவிதை உலகளாவிய ஒத்த சிந்தனையோடு சமமான அலைவரிசையில் இயங்கிய கவிதை எனலாம்.

சாகித்ய அகாடமி நடத்திய கவிதை உரையாடல் ஒன்றில்..பாரதிக்கு பிறகு தமிழ்நாட்டின் மகாகவி யார் என்ற கேட்கப்பட்டதாம்.வந்திருந்த தமிழ் கவிகள் யாரும் யாரையும் முன் மொழியாமல் சவ அமைதி காத்தப்போது.. மகா கவிகளின் காலகட்டமும் தேவையும் முடிந்து விட்டது..தேவைப்பட்டால் பாரதிக்கு பிறகு ஞானக்கூத்தன் என்ற பெயரை சேர்த்துக்கொள்ளூங்கள் என்றாராம்..இதை ஒரு கூட்டத்தின் சந்திப்பின் போது என்னிடம் சொல்லி ..ஒருவரின் பெயரையும் ஒருவர் கூட முன் மொழியாத மோசமான சூழலைமுறியடிக்கவே நான் என் பேரை சொன்னேன் சூர்யா என்றார்..அப்போது கொஞ்சம் எரிச்சலாக இருந்தது..இப்போது நிலவும் குழு அரசியல் சாதி ஜமீன் மனோபாவத்தில் அவர் சொன்னது தப்பில்லை என்றே தோன்றுகிறது..

•••••••

அறிவின் நடனம் கவிதை: ஞானக்கூத்தன் நினைவஞ்சலி ( ஞானக்கூத்தன் சிறப்பிதழ் ) / ராஜன் குறை

images (29)

எனது வாலிப பருவத்தில் அவர் கவிதைகளால் நான் அடைந்த தாக்கத்தை நினைவில் ஏந்தியிருக்கிறேன், அதை பகிர விரும்புகிறேன் என்பதைத் தவிர எனக்கு ஞானக்கூத்தனுக்கு நினைவஞ்சலி எழுத தகுதிகள் ஏதும் கிடையாது. அவ்வப்போது தற்செயலாக கவிதைகளை வாசிப்பது, சில சமயம் அந்தரங்கமாக எதையாவது எழுதி வைத்துக்கொள்வது போன்றவை நிகழ்ந்தாலும் நான் கவிதையை குறித்து யோசிப்பது, கவி வரிகளை தியானிப்பது ஆகிய பயற்சிகளை 1988-ஆம் ஆண்டே நிறுத்தி விட்டேன். அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் கவிதை என்மீது கணிசமான தாக்கம் செலுத்தியது. அந்த பத்தாண்டுகளில் என்னை மிகவும் ஈர்த்த, என் மீது தாக்கம் செலுத்திய கவிஞர்களில் ஒருவர் ஞானக்கூத்தன். எண்பதுகளின் முற்பகுதியில் தமிழின் முக்கிய கவிஞர்கள் என்று ஞானக்கூத்தன், ஆத்மநாம், கலாப்ரியா, பிரமீள், பசுவய்யா என்று பட்டியலிட்டு இவர்களில் முதல் இடம் யாருக்கு, இரண்டாம் இடம் யாருக்கு என்று விவாதிக்கும் பழக்கம் எங்களில் சிலருக்கு இருந்தது. அது எங்கள் ரசனையை பகிர்ந்துகொள்ள நாங்கள் தேர்ந்தெடுத்த ஒரு வழிதானே தவிர இவர்களையெல்லாம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது என்பதுதான் முக்கியம்.

ஞானக்கூத்தன் என்ற பெயர் தாங்கிய நபரை பிற்காலத்தில் நான் சென்னையில் ஒரு சில கூட்டங்களில் நேரில் சந்தித்ததை பற்றி பொதுவில் பகிர்ந்துகொள்ள முக்கியமான செய்திகள் எதுவுமில்லை. சில கருத்து மாறுபாடுகள், சில புன்னகைகள், முகமன்கள் அவ்வளவுதான். செல்லப்பா மறைந்தபோது விருட்சம் அழகசியங்கர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஞானக்கூத்தன், முத்துசாமி ஆகியோர் பேசியது மனதிற்கு அனுக்கமாக இருந்தது. எனக்குள் இருந்த ஞானக்கூத்தன் என்ற பிம்பத்தை பற்றி அவரிடம் சொல்ல வாய்ப்பு இருக்கவில்லை. ஒருவரை நேரில் பாராட்டுவது கூச்சமளிக்கும் செயலாகவே இருந்து தொலைக்கிறது. விமர்சிக்க, மறுத்து பேசவேண்டுமென்றால் எங்கிருந்தோ ஒரு துணிச்சல் வந்துவிடுகிறது. ஏனெனில் இரண்டாவது விஷயம் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்தாலும் தன்னளவிலேயே உளப்பூர்வமானது என்று நிறுவிக்கொள்கிறது. பாராட்டு நிரூபணம் கேட்டு பலவீனமாக நிற்கிறது. உளப்பூர்வமான வார்த்தைகள் சம்பிரதாயமாக ஒலித்துவிடுமோ என்ற அச்சம் பிடித்தாட்டுகிறது.

ஒருவரது நினைவாஞ்சலி குறிப்பில் அவரைப்பற்றி எழுதாமல் தன்னைப்பற்றிய அதிகம் எழுதுபவனை நீங்கள் அருவருக்கலாம். ஆனால் என்னை தெரிந்துகொள்ளாமல் என்னுள் பதிவான ஞானக்கூத்தனையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது. அது ஒரு அந்தரங்க உறவு. அதன் சில அம்சங்களைத்தான் இங்கே நான் சொல்ல முடியும் என்பதால் நீங்கள் என்னைப்பற்றிய சில தகவல்களையும் படிக்கத்தான் வேண்டும்.

ஆங்கில இலக்கியம் இளங்கலை படிப்பு படிக்கும்போது ஆங்கில கவிதைகள் பல என்னை மிகவும் ஆகர்ஷித்து என் மனதில் இடம்பிடித்தன. அதில் இறுதியாக டி.எஸ்.எலியட்டின் Waste Land பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. படித்து முடித்தவுடன் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்துவிட்டேன். என் ரசனைகளையும். ஆர்வங்களையும் எப்படி மேற்கொண்டு வளர்த்துக்கொள்வது, என் கலாசார தத்துவ தேடல்களுக்கு யார் துணையாக இருப்பார்கள் என்று ஒராண்டுக்காலம் ஒன்றுமே புரியவில்லை. திருச்சியில் பணி, ஸ்ரீரங்கத்தில் வாசம். அங்கே குடியிருந்த என் கல்லூரி சமஸ்கிருத பேராசிரியர்தான் என் உசாத்துணை. அவரிடம் சிலவகையான ரசனைகளை பகிர்ந்துகொள்ள முடிந்ததே தவிர, எலியட் ஏற்படுத்தியிருந்த அதிர்வுகளை தொடர முடியவில்லை. ஓராண்டு இப்படி தனிமையில் தவித்த பிறகு 1982 கோடை பெரும் வசந்தமாக வாழ்வில் வந்தது. நினைவெல்லாம் நித்யா படம் வெளியாகி “பனி விழும் மலர்வனம், உன் பார்வை ஒரு வரம்” பாடல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த வைரம் காஃபி ஹவுஸில் அதன் உரிமையாளர் ஜீவி என்ற ஜீ.விஜயகுமார் ஒரு நாள் “மானுடம்” என்ற சிற்றிதழை கொடுத்தார். அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அதில் எழுதுபவர்களை சந்திக்க வேண்டுமென்ற போது அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு வெளியே நாங்கள் சந்திப்போம், வாருங்கள் என்றார். இப்படியாக தில்லைவெளிக்கு சென்ற நந்தனாக ஜோதியில் கலந்தேன். திருச்சி வாசகர் அரங்கமென்ற அந்த நண்பர் குழுவில் ஒருவரான ஜம்புநாதனின் சிறுவயது மகள் நான் பணிபுரிந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் காலை பிரேயர் முடிந்த பிறகு, பெண்ணை பள்ளியில் கொண்டுவந்து விட்ட ஜம்புநாதனின் மனைவி அவர் தரச்சொன்னதாக ஒரு பைண்டு செய்யபட்ட புத்தகத்தை கொடுத்தார். கசடதபற என்ற சிற்றிதழின் முதல் பன்னிரண்டு இதழ்கள் அவை. புத்தகங்கள் மனிதரை மாற்றும் என்று சொல்வார்கள். அந்த பன்னிரண்டு இதழ்கள் என்னை மாற்றவில்லை; உருவாக்கின என்றுதான் சொல்லவேண்டும். அந்த உருவாக்கத்தில் ஞானக்கூத்தன் கவிதைகளுக்கு கணிசமான பங்கிருந்தது என்றும் சொல்ல வேண்டும்.

கசடதபற முதல் இதழின் முதற்பக்கத்தின் இடது பக்க காற்பக்கத்தில் வெளியாகி இருந்த “தமிழை எங்கே நிறுத்தலாம்?” என்ற கவிதை செய்த ரசவாதம் அளப்பரியது. “வாசன் மகனுக்கென்றால் மட்டும் அச்சுப்பொறிகள் அடிக்குமோ?/ முத்துசாமி போன்றவர் சொன்னால் மாட்டேனென்று மறுக்குமோ??’ என்று தொடங்கும் அந்த கவிதை. ஒரு போர் பிரகடனம் போல் ஈர்த்த அந்த கவிதை என்னை அறியாமலேயே ஒரு கலாசாரப் போரில் ஈடுபடும் வீரனாக என்னைப்பற்றிய மனப் பிம்பத்தை அளித்தது. மேற்கொண்டு நினைவிலிருந்தே கூறுகிறேன். “காசு படைத்தவர் எங்கெல்லாமோ தமிழைக் கொண்டு நிறுத்தினார்/ அகத்தால் புறத்தால், குறளால் சிலம்பால் கண்ணைக் கண்ணைக் கட்டினார்//” ”குகையில் இருந்த தமிழைக்கண்டு குமுதம் கட்டிக்கொண்டதும் சுப்ரதீபக் கவிஞர் எல்லாம் வஜனம் எழுதிக்களிக்கிறார்” என்றெல்லாம் தொடரும் அந்த கவிதை “வித்தை தெரிந்த எழுத்துக்கலைஞர் விலகி நிற்கக் கூடாது/ வித்தை தெரிந்தவர்க்கு இன்று வேலை இருக்குது பலவாக” என்று கூறி “நம் கையிலும் இரண்டு காசுகள் உண்டு/ இனி தமிழை எங்கே நிறுத்தலாம்?” என்று கேட்டு முடியும். இது சிறுபத்திரிகைகள் முன்வைத்த நவீனத்துவ பார்வை கொண்ட படைப்பு இயக்கத்திற்கான ஒரு மானிஃபெஸ்டோ கவிதை என்று சொல்லலாம்.

இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்த மூன்று ஆண்டுகளிலும், இலக்கியமா படிக்கிறாய்? ஐயோ வேலையே கிடைக்காதே என்ற பேச்சை கேட்காத நாளே கிடையாது எனலாம். பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் கூட என்ன படிக்கிறாய் என்று கேட்டு, அக்கறையாய் வருத்தப்படுவார். அன்றைய நாளில் அறிவியல் பாடங்களுக்கு வெளியே பி.காம் அக்கெளண்டன்ஸி எல்லாம் படிப்பதுதான் பிழைக்கும் வழி. இலக்கியம் என்றால் ஏதோ துக்க செய்தி கேட்டாற்போல முகத்தை வைத்துக்கொள்வார்கள். இலக்கியத்தை மிகுந்த ஆர்வத்துடனும், மனமலர்ச்சியுடனும் ரசித்து படித்துக்கொண்டிருந்த எனக்கு பெரிய அளவில் சமூக ஒவ்வாமை ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. அந்த பின்னணியில் “நம் கையிலும் இரண்டு காசுகள் உண்டு; இனி தமிழை எங்கே நிறுத்தலாம்?” என்ற கேள்வி பெரிய விழுமியங்களுக்காக இணைந்து போராட வேண்டும் என்ற மனநிலையையும், அப்படி செய்யக்கூடிய ஒரு சமூக வெளி சிறுபத்திரிகை தளத்தில் இருக்கிறது என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.

கசடதபற-வில் வெளியான ஐந்து ஞானக்கூத்தன் கவிதைகள் எனக்கு அவரை ஆகச்சிறந்த கவிஞர் என்று அவ்வப்போது எண்ணத் தலைப்படக் காரணமாக இருந்தன. எல்லாமே ஏதோ ஒரு வகையில் விழுமியங்களின் சிதைவு, அவற்றை கைக்கொள்ள முடியாத நிலை, பொய்மை நிறைந்த சமூகம் ஆகியவற்றை சுட்டுவதாகவும் அதே சமயம் எளிமையாகவும், படிக்கும்போது சப்த ரீதியாக ஒரு லயத்தை ஏற்படுத்தவதாகவும் இருந்த்தால் பெரிதும் வசீகரிக்கப்பட்டேன். அந்த ஐந்து கவிதைகளில் முதலாவது “தமிழை எங்கே நிறுத்தலாம்?” இரண்டாவது “தேரோட்டம்”. எண்பதுகளில் அதன் வரிகளை சுலோகம் போல தினமும் என் மனம் உச்சரித்துக்கொண்டே இருக்கும். “காடே கோழி வைச்சு கணக்கா கள்ளும் வைச்சு சூரன் சாமி கிட்ட வரம் கேட்டு வாரீகளா/ யாரோ வடம் பிடிச்சு ஐயன் தேரு நின்னுடுச்சு/” என்று தொடங்கும் கவிதை “தெருவோடும் தூரமின்னும் வடமோடிப் போகலியே/ வடமோடும் தூரமின்னும் தேரோடிப் போகலையே/ காலோயும் அந்தியிலே, கண் தோற்றம் மாறையிலே/ யாரோ வடம் பிடிச்சு ஐயன் தேரு நின்னுடுச்சு” என்று முடியும். இந்த கவிதையை ஒரு குறும்படமாக எடுக்க வேண்டும் என்பது பலநாள் கனவு. எனக்குள், என் மன ஆழத்தில் ஆளரவமற்ற பிரதேசத்தில் பெரும்காற்றில் புழுதி மணல் வீசியடிக்க அந்த வடம் நீண்டு கிடக்கிறது. அதன் முனையிலிருந்து ஒரு புறம் அடிவானத்தை நோக்கி நீண்டு செல்லும் தெருவும், அதன் மற்றொரு முனையில் நிற்கும் பெரியதொரு தேரும், பின்னால் அடிவானத்தில் மறையும் சூரியனும் பதிந்திருக்கிறது.

அதற்கு அடுத்து என்னை பெரிதும் ஈர்த்தது ‘அன்று வேறு கிழமை”. நாய் எதன் குறியீடு, பாடை எதனை குறிக்கிறது, ஏன் அந்த பிணம் தூக்கிகள் நாயை எட்டி உதைக்கிறார்கள் என்று நிறைய யோசிக்கலாம் என்றாலும் அதன் தலைப்பின் புதிர் தனித்துவமானது. “அன்று வேறு கிழமை” என்றால் என்ன? ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தரும்பூதம் திங்கட்கிழமை காதைப்பிடித்து இழுக்கும் என்பதால் கிழமைகள் ஒரு சுழற்சியாக வாரங்களாகத்தான் இருக்கின்றன. அன்று வேறு கிழமை என்றால் எதிலிருந்து வேறுபட்ட கிழமை? அல்லது கிழமை என்னும் சுழற்சியில் வேறுபாடே கிடையாதா? அல்லது கிழமையின் சுழற்சிக்குள் சிக்காது வேறுபாடும், வித்தியாசமும் பயணிக்கின்றனவா? இப்படியெல்லாம் தொடர்ந்து சிந்திக்க மிகவும் உவப்பாக இருக்கும்.

”மஹ்ஹான் காந்தீ மஹ்ஹான்” பேச்சாளர்களை கேலி செய்யும் அவரது கவிதைகளில் ஒன்றுதான் என்றாலும் எந்த விழுமியமும் மீண்டும் மீண்டும் கூறப்படும்போது தேய்ந்துபோவதை வலியுறுத்துவதாகவே புரிந்து கொண்டேன். இறுதியாக “அம்மாவின் பொய்கள்”. ”வளர்ந்தவர்களான பொய்களை சொல்லும் பொறுப்பு அரசாங்கத்தினுடையது என கருதினாயா?” என்ற வரி சுயத்தை கட்டமைப்பதில் குடும்பத்திலிருந்து அரசிற்கு நீளும் பொறுப்புகளை சுட்டிக்காட்டியது மனதில் தைத்தது. யாராவது என் வயது ஒத்தவர்கள், என்னைவிட இளையவர்கள் அகப்பட்டால் அவர்களிடம் இந்த கவிதைகளை குறித்து வியாக்கியானங்கள் செய்து மகிழும் பழக்கமும் இருந்தது.

திருச்சி வாசகர் அரங்கத்தை வழிநடத்திய பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் என் ரசனைகளுக்கும், விமர்சனப் பார்வைக்கும் பெரும் வளம் சேர்த்தவர். அந்த நாளில் அவர் சொல்வதை எல்லாம் மறுத்தும் எதிர்வாதம் செய்தும் பழகிய நான் உட்பட்ட பலரும் பிற்காலத்தில் அவரை ஆசான் என்று உணர்ந்தது பெரியதொரு சுவாரசியம். அவருக்கு ஞானக்கூத்தன் மேல் பெரியதொரு ஈடுபாடு. அவர் கட்டுரைகளை தொகுத்து சென்று ஆண்டு வெளியிட்டோம். அதற்கான ஒரு index எனப்படும் பொருள் சுட்டு அட்டவணை தயாரிக்கும் பணியினை மேற்கொண்ட போது அவர் மீண்டும், மீண்டும் ஞானக்கூத்தனை வியந்து எழுதியிருப்பதை படித்து ரசிக்க முடிந்தது. “சூளைச்செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது” என்ற படிமம் ஆல்பர்ட்டிற்கு மிகவும் பிடித்த வரிகளில் ஒன்று.

கசடதபற தொகுப்பினை தொடர்ந்து மற்றொரு பேரதிர்ஷ்டமாக “பிரக்ஞை” முதல் பத்து இதழ்கள் தொகுப்பும் கிடைத்தது. அதிலும் ஞானக்கூத்தன் கவிதைகள் இருந்தன. என்னை பெரிதும் அலைக்கழித்த, தொடர்ந்து சிந்திக்க தூண்டிய அவருடைய ஒரு கவிதை அந்த பிரக்ஞை இதழ்களில்தான் கிடைத்தது. அதற்கு எதுவும் தலைப்பு இருக்கவில்லை. மிக அபூர்வமான ஒரு கவிதை அது.

அந்த இரண்டு இதழ் தொகுப்புகளையும் திருப்பத் தரவே மனமில்லாமல் வெகுநாட்கள் வைத்திருந்தேன். ஆனால் கடைசியாக தரவேண்டித்தான் வந்தது. அதற்கு முன்னால் ஒரு லெட்ஜெர் போன்ற நோட்டுப்புத்தகத்தில் இரண்டு தொகுப்பிலுமிருந்த கவிதைகளை மட்டும் பிரதி எடுத்துக்கொண்டுதான் கொடுத்தேன். இன்று வரை அந்த நோட்டுப்புத்தகம் என்னிடம் பத்திரமாக இருப்பது எதையுமே பத்திரப்படுத்த முயற்சிக்காத எனக்கு பெரிய வியப்புதான். அந்த நோட்டுப்புத்தகத்திலிருந்து அந்த கவிதையை கீழே கொடுத்துவிட்டு இந்த அஞ்சலிக் குறிப்பை முடிக்கிறேன். என்றாவது ஒரு நாள் கவிதைகளை பற்றி விரிவாக விமர்சனம் செய்யும் காலமும் மனநிலையும் வாய்த்தால் ஞானக்கூத்தனின் இந்தக் கவிதையை பற்றியும், பிற கவிதைகளைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டும். அப்படியெல்லாம் யாரும் எழுதாவிட்டாலும் இந்த கவிதைகள் தன் போக்கில் ஒரு ரகசிய பயணத்தை தமிழ் கலாசார வெளியில் நிகழ்த்துக்கொண்டுதான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு,

எனக்கு கொஞ்சம் சோற்றைப் போடேன்

என்றான் ஒருவன்

இல்லை என்றேன் அவன் சொன்னான்

என்னை இன்று உண்பித்தால்

உனக்கு சிலநாள் நான் உழைப்பேன்

ஒன்றும் வேண்டாம் போ என்றேன்

இன்னும் சொன்னான். என்னைப்பார்

கண்டதுண்டா நீ முன்பு

என்னைப்போல் சப்பட்டை

யான மனிதன்

நானும் பார்த்தேன் அதுசரிதான்

எனக்குக் கொஞ்சம் சோற்றைப்போடு

பலவிதமாகப் பயன்படுவேன்

கதவில்லாத உன் குளியலறைக்கு

மறைப்புபோல நான் இருப்பேன்

வேண்டுமானால் என்னைக்கிடத்திப்

பொருள்கள் உலர்த்தலாம் நடுப்பகலில்

அதுவும் இல்லை பெருங்காற்று

வீசும் மாலைக் காலங்களில்

உடம்பின் நடுவே பொத்தலிட்டுக்

காற்றாடியாய்ச் சுற்றலாம் நீ

என்றான் அந்த சப்பட்டை

உள்ளே சென்றேன் வரும் வரைக்கும்

இருக்கச்சொன்னேன் நொடிப்பொழுதில்

சோற்றைக் கொணர்ந்தேன் ஒரு கையில்

மாலைக் காற்றின் நினைப்போடு

சுயத்திற்குள் மற்றமையை உருவகித்து நடக்கும் ஒரு உரையாடலாக இதனைக்கொண்டால், மற்றமையை தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய மானுட அதிகார விழைவு உபரியானது என்பது மட்டுமல்ல பிரச்சினை; அந்த உபரியான விழைவின் இன்னொரு பகுதிதான் அழகியல், ஆன்மீகம் எல்லாம். எந்த பயன்பாடும் தராத ஒரு தூண்டுதலை மாலைக்காற்றில் காற்றாடி சுற்றும் நினைவு தருகிறது. ”என் உடம்பின் நடுவில் பொத்தலிட்டு…” எத்தனையோ சந்தர்ப்பங்களில் ஆதிக்க சக்திகளின் வன்முறை பற்றி யோசிக்கும்போது இந்த வரிகள் என் மனதில் தோன்றியுள்ளன. எப்படிப்பட்ட சிக்கல் மனிதம். அந்த சிக்கலை முரண்களின் தொகுப்பை எவ்வளவு சுலபமாக நிகழ்த்திக்காட்டிவிடுகிறது கவிதை. தத்துவார்த்தமாக, தர்க்கமாக எவ்வளவோ அலசி ஆராய்ந்து எழுதலாம். அதெல்லாம் அறிவின் தொலைதூர நடைப்பயணம், மலையேற்றம். அறிவின் நடனம் கவிதை.

நாங்கள் சாட்சிகளாய்ப் பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறோம் ( ஞானக்கூத்தன் சிறப்பிதழ் ) / ப்ரஸன்னா ராமஸ்வாமி

download (46)

கவிஞரின் இறுதிச் சடங்கு நடந்த நேரம் நான் ஒரு தொலைக்காட்சிப் படப் பிடிப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயம். நான் மடும் சம்பந்தப் பட்டதல்ல அது. சானலின் ஒரு ஸ்டூடியோவும் வேலை செய்பவர்களும் நேரம் கொடுத்திருந்தார்கள்.

நேரில் போக இயலாதது வேதனையாக இருந்தது.
அவரது கவிதைகளை அறிந்ததும்
அந்த திருவல்லிக் கேணு மாடியில் கூட்டங்களில் கலந்து கொண்டு தமிழ் எழுத்தாளர்களை நேரில் பரிச்சயப் பட்டதும் ஒரெகாலம்தான், 80களில்.

தமிழ்ப் புலத்தின் ஆக முக்கியமான
அரசியல், கலாசார அசைவுகளையும்
மாறுதல்களையும் சீரழிவையும் மாபெரும் இயக்கமாகத் தோன்றி, சறுக்கி முறிவுற்ற சமூக அவலத்தையும்
கைப்புச் சுவை மித்க்க ஒரு செறிவான கோட்டோவியம் போல
அவரளவு கவித்துவத்தோடும்
ஆழமாகவும்
அங்கதம் தைக்க
இங்கு எழுதியவர் யார்?

மரபின் தொடர்ச்சியாக எனினும் நவீனத்தின் தெளிவான குரலாக
வெளிப்பட்ட அவரது கவிதைகள் குறித்து விவரமாக எழுத இருக்கிறேன், விரைவில்.

இப்பொழுதில்,

இன்று வேறு கிழமை

எனினும்

“இதுதான் எங்கள் மூச்சு, இதைப் பிறர் மேல்தான் சீறுவோம்”

என்றே நாடுமுழுவதும் நகர்கின்றன நாட்கள்…

நாங்கள் சாட்சிகளாய்ப் பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும்
இருக்கிறோம்
நீங்கள் கிளம்பி விட்டீர்கள்

அஞ்சலி

திருமங்கையாழ்வார் பிறந்த ஊரில் சென்று பார்த்தபோது எந்த முன்னறிவுப்புமின்றி, மனம் அலையடித்து, அவர் பிறந்ததும் அங்கே என்னும் நினைவு மேலெழும்பியது, இருபதாண்டுகளுக்கு முன்பு. அதன் பொருத்தப்பாடு சரிதான்.

•••••

கூத்தனின் கூத்துக்கள் / ஸிந்துஜா

images (40)

ஞானக் கூத்தனின் கவிதை உலகம் கவிதையின் உண்மையான அழகை- எளிமையைத் – தன்னுள் கொண்டிருக்கிறது. பாரதியின்
கவிதை அன்றும் இன்றும் என்றும் நிலைத்து நிற்பதற்கு இந்த எளிமைதான் முக்கிய காரணமாக இருந்து வந்திருக்கிறது. பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் ” எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன் தனது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான் ” என்று பாரதி கூறியதை ஞானக் கூத்தனின் பெரும்பான்மையான கவிதைகள் உறுதிப் படுத்தி அவரை ஒரு சிறந்த கவிஞராகக் காண்பிக்கின்றன .

ஞானக் கூத்தன் தன்னுடைய முதல் கவிதையை எப்போது எழுதினார் ? அவருடைய வலைப் பூவில் காலவாரியாக வரிசைப் படுத்தப் பட்டிருக்கும் பட்டியலில் முதல் கவிதையாக ” யோசனை ” யும் ஆண்டு 1965 என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால் இக் கவிதை நடையின் ஐந்தாவது இதழில் ( 1969 ) வந்தது. ஆனால் நடையின் முதல் இதழில் இருந்து நடை நின்று போகும் வரை ஞானக் கூத்தனின் கவிதைகள் பிரசுரம் பெற்றன.

எப்போதும் ஞானக் கூத்தனின் கவிதைகள் வாசிப்பவனைத் திருப்பிப் பார்க்கச் செய்த வண்ணம்தான் இருந்திருக்கின்றன . திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்லுவனவாகவும் கூட. தமிழை வைத்து அரசியல் (அரசியலை வைத்துத் தமிழும் என்று கூட ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதோ என்ற மயக்கம் ஒரு காலத்தில் தோற்றம் தந்தது ) அரசியல்வாதிகள் இருவரும் பிழைப்பு நடத்திய தருணத்தில்

எனக்கும் தமிழ்தான் உயிர்மூச்சு
ஆனால்
பிறர் மேல் அதை விடமாட்டேன்

என்ற குரல் ஏற்படுத்திய கலவரத்தையும், திக்பிரமையையும் யாரால் மறக்க முடியும் ? இதழில் புன்னகையை வரவழைக்கும்
கவிதை என்கிற நிலையைத் தாண்டி இக் கவிதை ” கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தான்தோன்றி
மொழி எங்களது ” என்கிற மேடைப் பேச்சுக்களின் உள்ளீடற்ற இரைச்சல்களைப் பார்த்துக் கேள்வி கேட்டது .

” எழுத்து” வில் எழுதினாலும், ஞானக் கூத்தனை சி.சு. செல்லப்பா அவ்வளவாக உற்சாகப்படுத்தவில்லை என்று ஒரு செய்தி பரவலாக இருந்தது. ஆனால் தனது ” கவிதைக்காக ” என்னும் நூலில் 1960 தொடக்கத்தில் சி.சு.செல்லப்பாவைச் சந்தித்ததும் அவருடன் பேசும் போது ” அவர் கவிதை பற்றிக் கூறிய கருத்துக்களையெல்லாம்நான் வன்மையாக மறுத்துப் பேசினேன். அவரும் நான் அவரைப் பார்த்த போதெல்லாம் புதுப் புதுக் கருத்துக்களை சொல்லி வந்தார். என்னை விட அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மூத்தவர் என்று எண்ணும் போது என்னிடம் அவர் விவாதித்தது வியப்பாக இருக்கிறது….ஏதாவது சொன்னால் ” அது சர்த்தான்னா ” என்று சொல்லி விடுவார் ” என்றும் எழுதுகிறார்.

அதே எழுத்துவில் அன்றைய பிரதான கவிகளில் ஒருவராக இருந்த சி.மணியின் அரவணைப்பு ஞானக் கூத்தனுக்கு இருந்தது. ஞானக் கூத்தனை உற்சாகப் படுத்திய முக்கிய ஆளுமைகளில் சி.மணியும் ஒருவர் பழந் தமிழ் இலக்கியப் பரிச்சயமும் , ஆழ்ந்த இலக்கண அறிவும் கொண்டவர்கள் இருவரும் . எள்ளல் கவிதைகளை எழுதியதில் அவர் ஞானக் கூத்தனின் முன்னோடியாக இருந்தார். சி. மணியின் ” கல்விக்கு நன்றி ” என்னும் கவிதை இப்படிப் போகிறது :

அவனைப் பள்ளியில் சேர்க்கும் மட்டும்
ஓயாமல்கேள்வி கேட்பான்.
பதில் தர நான் தவிப்பேன்

அவனைப் பள்ளியில் சேர்த்த பின்னால் .
ஓய்ந்தால் கேள்வி கேட்கிறேன்
பதில்தர அவன் தவிக்கிறான்.

அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் ஞானக் கூத்தனின் வாயில் விழுந்து படாதபாடு படுகிறார்கள் ‘ பரிசில் வாழ்க்கை ‘ யில் “பேச்சாளர் வெளியூரில் போய்ப் பேசுவதற்கு முன்பேயே அவர் ” மனதில் கையொலிகள் கேட்டு விடுகின்றன “. ” வரப் பார்க்கும் மணியார்டர், மாலை, துண்டு “அவரை அகநானூறிலிருந்து அடிதடியில் வரை பரிமாறிக் கொள்ள வைக்கிறது !

காலவழுவமைதி’யில் அரசியல்வியாதியான பேச்சாளன் மக்களை ” மாக்களே(ங்) என்று அவர்கள் அறிவின் செழுமையை நன்கு உணர்ந்தவனாகக் கூப்பிடுகிறான் ! அவன் பேசும் குப்பத்துத் தமிழில் புறநானுற்றுத் தாய் வீரம் சொட்டச் சொட்ட வெளியே வருகிறாள் .அவன் தமிழ்ப் புலியாய் இருந்தாலும், எதிரிப் பூனைகளை ஒடுக்க மற்றவர்களையும் துணைக்கு அழைக்கிறான்.

இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக அவன் சொல்லப் போகிறான் என்று பார்த்தால் “பொதுமாக்களெங் , இன்னும் இரு கூட்டம் பேசவிருப்பதால் வொடய் பெருகறேன் வணக்கொம் ” என்று கிளம்பி விடுகிறான்.
இன்னொரு கவிதையான ‘சினிமாச் சோழரி’ல்

தகர்த்திடுக மாற்றரசர் கோட்டைவீரத்
தமிழர்படை பகைக்குடலை மாலையாக்க
குகைப்புலிகள் சினந்தெழுந்து வகுத்த வியூகம்
குலத்தமிழர் அணியென்றே ஊதுசங்கு.

என்று சோழர் குலத்து திலகம் (?) வீர வசனம் பேசிவிட்டு , அந்தக் களைப்பில் சிகரெட் பிடிக்கிறார். ‘ ஷூ ட்டிங் முடிந்தால் வேறென்ன செய்வார் ? ” என்று குறும்புடன் வினவுகிறது கவிதை.

இந்தக் குறும்பு , அரசாங்கத் கட்டிலில் தூக்கம் போட்ட முதல் மனிதன் என்று மோசிகீரனாரைக் கூப்பிட்டுச் சொல்லுகிறது. வணக்கத்துக்குரிய விநாயகக் கடவுளை ‘ வேறெந்தத் தெய்வம் வணங்கியபின் ஒப்புக் கொள்ளும் நாம் உடைக்க ?’ என்று
கிண்டல் அடிக்கிறது. சைக்கிள் கமலத்தைப் பார்த்து ‘சைக்கிளை ஒருமுறை என்மேல் விட்டாள் மற்றபடிக்குத் தெருவில்
விட்டாள் ‘ என்று சொல்லிச் சிரிக்க வைக்கிறது.

வெங்காயம் கி.மு. ஐந்தாயிரத்தில்கண்டு பிடிக்கப்பட்டது. கவிஞர் கூறுவது போல முதன் முதலாக அதன் விளைச்சல் கண்டு பிடிக்கப்பட்டது மத்திய ஆசியாவில். அதே மத்திய ஆசியாவிலிருந்துதான் ஆரியர்களும் வந்தார்கள் என்று சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதனால்தான் வெங்காயம் குடுமியைப் பார்த்து விடமாட்டேன் என்கிறதா ? இந்த வெங்காயம் ‘ பற்பல விண்ணும் மண்ணும் ‘ பார்த்திருக்கிறது. உண்மைதான் .

ஆனால் அப்படியும் அது குடுமியை ஏன் விட மாட்டேன் என்கிறது ? என்பது கவிஞரின் ஆச்சரியம் . அல்லது ஆச்சரியம் போல் அதைத் தொனிக்க விட்ட அவரது சாமர்த்தியம் ! இது, இந்தத் தொடர்பு எப்படி விடும் ? ஒரு கட்டத்தில் இங்கு வெங்காயத்தின் உயிர் , அதன் வாழ்வு, அதன் இருப்பு குடுமியைப் பிடித்துத் தொங்கியது உண்மையான நிலவரம் அன்றி வேறென்ன ? பெரியார் விரும்பும் வெங்காயம் , பெரியார் விரும்பாத குடுமியைக் கெட்டியாகப் பிடித்திருப்பது யாங்ஙனம் ? சுவாரஸ்யமான கேள்விதான். பதில் பாதி அரசியலும்,பாதி சமூகமும் விழைந்தெடுத்த நிகழ்வுகளில் இருக்கிறது !

ஞானக் கூத்தனின் மற்றொரு முக்கியமான கவிதை ” அன்று வேறு கிழமை ” .”. நிழலுக்காகப் பாடையின் கீழ் பதுங்கிப் போச்சு நாயொன்று” என்று கவிஞர் கவிதையை ஆரம்பிக்கிறார். நாய் ஏன் அந்தப் பாடையின் கீழ் போகிறது ? தெருவில் வேறெங்கும் அதற்கு நிழல் கிடைக்கவில்லையா ? பாடையில் படுக்க வைக்கப் பட்டிருப்பவன் நாயை வளர்த்தவனா ? அவன் போகும் போது, வழக்கம் போல் அது அவன் கூடப் போகிறதா ? அல்லது அதன் நன்றி உணர்ச்சி அதனை அவன் கூட இழுத்துச் செல்கிறதா ? பாடையைத் தூக்கிச் செல்லும் நால்வரும் ஒருவர் மாற்றி ஒருவர் அந்த நாயை உதைத்து வெளியேற்றப் பார்க்கிறார்கள் அந்த நால்வர் யார் ? இறந்தவனின் பங்காளிகளா ? அவர்களுக்கு நாய் மீது ஏன் கோபம் ? என்ன கோபம் ? நாயின் நன்றி உணர்ச்சியை அவர்களால் பொறுத்துக்க கொள்ள முடியாதபடி அவர்கள் இறநதவனுக்கு நன்றியில்லாமல் போய்விட்டவர்களா ? ஒரே நேரத்தில் நால்வரும் கூடி எதிர்ப்புத் தெரிவிக்கும் அளவுக்கு கோபம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

செத்தவனின் மீது காட்ட முடியாததை நாயின் மேல் காட்டப் போக , பாடை கீழே விழுந்து விடுகிறது. சாதாரணமாக பாடையைத் தூக்கிச் செல்லுபவர்கள், மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் அக் காரியத்தைச் செய்வார்கள். உயிருடன் இருக்கும் போது பெறாத மரியாதையைக் கூடப் பிணம் பெற்றுத் தந்து விடும். ஆனால் இங்கே அவர்கள் பாடை கீழே விழுந்தாலும் பரவாயில்லை என்று நாயை உதைக்கப் போகிறார்கள். வன்மங்களுக்கு முன்பு வேஷங்கள் கலைந்து விடுகின்றன . அவர்களின் செயல்கள் அவர்களையே வெட்கித்துத் தலை குனிய வைக்கின்ற அளவுக்கு வீரியம் பெற்றவை .

இல்லாவிட்டால் ” ஓட்டம் பிடித்துப் பாடையைத் தூக்க வேண்டிய ” அவசியம் இருந்திருக்காது அவர்களுக்கு ஆனால் இவ்வளவு வெஞ்சினம், எவர் மீது எறியப்பட்டதோ அவர் மறுபடியும் சற்றும் துணுக்குறாமல் தனது காரியத்தைச் செய்து கொண்டு போகிறார் – தூக்கப் பட்ட அதே பாடையின் கீழ் பதுங்கிப் போச்சு நாய் மீண்டும் !
அன்று வேறு கிழமை என்பது சனிக் கிழமைக்குப் பதில் ஞாயிற்றுக் கிழமை என்றோ செவ்வாய்க்கு கிழமைக்குப் பதில் புதன் கிழமையன்றோ அர்த்தம் செய்து கொள்வதற்குப் பதிலாக அதை நான் Its a different day என்று அர்த்தம் செய்து கொள்ள விரும்புகிறேன். அந்த வேறொரு கிழமையில் நன்றியின்மையின் இருளுக்கு எதிராக வெளி வரும் நன்றியின் பிரகாசம் அந்த வேறொரு கிழமையைக் கொண்டாடச் சொல்லுகிறது கவிஞனை.

இன்னொரு கவிதையான “நாய் ” 1969ல் எழுதப்பட்டு நடையில் பிரசுரம் ஆனது:

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன .
ஊர்துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன.
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன.
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின.
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக் காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும் ?

இக் கவிதை எழுதப் பட்டு சில வருஷங்கள் கழித்து எழுந்த சாவி-இந்திரா பார்த்தசாரதி விவகாரங்களையும், இன்று டி எம்.கிருஷ்ணா – மெகஸேஸே விஷயத்தில் நடக்கும் கலவரங்களையும் உற்று நோக்கும் ஒருவர் ஞானக் கூத்தனின் கவிதையில் தெரிய வரும் மனித இயல்புகள் பற்றிய கவிஞனின் ஆழ்ந்த புரிதலைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. காலம் கடந்து நிற்கும் படைப்பின் உட்கூறுகள் என்பவை இவையன்றி வேறென்ன ?

•••

ஞானக்கூத்தன் அபத்தக்கவிதைகள் ( ஞானக்கூத்தன் சிறப்பிதழ் ) / சென்னிமலை தண்டபாணி

download (43)

கவிஞர் ஞானக்கூத்தன் மறைந்த செய்தி ஆழ்ந்த வருத்தத்திற்குரியது. தமிழில் ஒருவாறு வேறுபட்ட குரலில் அங்கதக் கவிதைகள் எழுதியவர். திராவிட இயக்கங்களின் மீது தீராத காழ்ப்புணர்வு கொண்டவர் என்பது பரவலாக அறியப்பட்டது. அது இப்போது தேவை இல்லை. ஆனால் மரபு தழுவிப் புதுக்கவிதையை முன்னெடுத்தவர்களில் அவரும் ஒருவர். கிண்டலும் கேலியுமாக அவர் எழுதிய கவிதைகள் கவிதைத் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது உண்மை. வானம்பாடிக்கவிஞர் கங்கை கொண்டான் தன் “சில நைலான் கனவுகள் எரிகின்றன” என்ற கவிதையில்

”எனது குழந்தைக்கு
நீ பாட்டியாகும் போதாவது
அம்மா!
அன்புக்குரிய அப்பாவி அம்மா!
அவனுக்கு
உன் கதைகளேதும் சொல்லாதே..
வாரியணைத்து
வாழ்த்துக்கள் சொல்லிநீ
வாழ்ந்ததைச் சொல்லு!
வாழ்க்கையைச் சொல்லு!
உனது கதைகளும்
எனது கனவுகளோடு
எரிந்து மடியட்டும்.”

என்று எழுதியிருப்பார். வாழ்வின் அச்சு அசலான தன்மையை மிக அழகாக வடித்திருப்பார். ஞானக்கூத்தன் இதை வேறு தளத்தில் வைத்து
“அம்மாவின் பொய்கள் கவிதையில்

”தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப்பொய்யை நிறுத்தலாமா?
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?” என்று வாழ்வின் தன்மையை இலகுவாக எடுத்துக் கொண்டு பாடியிருப்பார். வரலாற்றில் களங்கமாக நிற்கும் கீழ்வெண்மணி நிகழ்வை

“மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின.

புகையொடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்.

குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்.
இரவிலே பொசுக்கப் பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க.”

என்று மரபோட்டத்தோடு எழுதுகிற போது கவிஞனுக்குள்ள மனித நேயத்தைப் பளிச்செனப் பதிவுசெய்து விடுகிறார். கவிதையில் அங்கதத்தை மிக இயல்பாகக் கொண்டுவந்தவர் ஞானக்கூத்தன் என்பதற்கு

“மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும் நீ.

சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக்கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்.

ஆனால் உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு.

அரசாங்கக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல்மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்.”

என்று எழுதுகிற பொழுது வாய்விட்டுச் சிரிக்கத்தான் தோன்றும் எவருக்கும்.இந்தக் கவிதையின் தலைப்பு “தோழர் மோசிகீரனா்” அதேபோல் ஸ்ரீலஸ்ரீ என்ற கவிதையில்

“நீரின் மேலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு”

என்று மிகச் சாதாரணமாக எடைபோட்டுப் பாடுகிறார்.

“வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்
வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு
காரத்தில் பேசத்துப் பாக்கிச் சூடு
கல்பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை
நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு
நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப் பார்த்த
தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு
தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்?“ என்ற அவரது பரிசில் வாழ்க்கை இன்றைக்கும் நடப்பில் உள்ளதாகவே இருக்கிறது.

“கனவிலும் மனிதன் போலத்
தோன்றினால் மனிதன் தானா?”

என்று அதிரவைத்தவர் ஞானக்கூத்தன்.

“அவர்கள் அவர்கள்
பங்குக்கு
உதைகள் வாங்கும்
காலத்தில்
உனக்கு மட்டும்
கிடைத்தாற்போல்
சின்னக் கண்ணா
அலட்டாதே” என்று போகிற போக்கில் பாடுவதுபோல் எழுதிச் செல்கிறார்.

அதே நேரத்தில்

“எல்லா மொழிகளும் நன்று
கோவிக்காதீர் நண்பரே
தமிழும் அவற்றில் ஒன்று” என்றும்

“எனக்கும்
தமிழ்தான் மூச்சு.ஆனால்
அதைப்பிறர்மேல் விடமாட்டேன்”

என்றும் எழுதுகிற பொழுது அதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை இன்றைக்குத் தமிழுக்குக் கிடைத்திருக்கிற நிலை காட்டிக் கொடுக்கிறது. ஏதோ இயக்கத்தை மறுதலிக்கிறேன் பேர்வழி என்று தாய்மொழியை நக்கல் அடித்துக் கொண்டிருந்ததன் விளைவு எங்கே கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஞானக்கூத்தனின் கவிதைகள் கொஞ்சம் அங்கதம் மிக்கவையாக,அரசியல் வெற்று நையாண்டித்தனமிக்கதாக, சில சமயங்களில் உள்ளார்ந்த பூடகம் சார்ந்தவையாக அமைந்துள்ளவையாக உள்ளன என்பதும் நம் நினைவுக்கு வருகிறது.“ஞானக்கூத்தன் கவிதைகள்“ அபத்தக்கவிதைகள் என்று கூறப்படும் விமர்சனங்கள் ஒருபுறம் கிடக்கட்டும். தொடர்ந்து தன் வழியில் எழுதிக் கொண்டேயிருந்திருக்கிறார் அதற்காக எவர்மீதும் தனி்ப்பட்ட பகைமை பாராட்டியதாகத் தெரியவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் புதுக்கவிதையை மக்கள் மத்தியில் கொண்டுசென்ற வானம்பாடிக்கவிஞர்களை “தமிழ்வாத்தியார்கள்” என்று ஏளனம் செய்து கொண்டிருந்த நிலையையும் மறக்க முடியாது. அவர் வழியில் அவர் எழுதிச் சென்றிருக்கிறார். தன்னுடைய திசையில் தான் பறந்த கவிப்பறவைக்கு மனமார்ந்த அஞ்சலிகள்.

••••