Category: இதழ் 108

விருட்சம் 100 ஆவது இதழ் அறிமுக விழா

download-2

கருணாகரண் கவிதைகள் ( இலங்கை )

download-1

இதுவல்ல அந்த இடமெனச் சொல்லி விலகிச் சென்றவன்

தன்னுடைய சிறகுகளை இங்கேதான் வைத்தேன் என்றான்

இதோ உன் சிறகுள் என்றாளவள்

வானமில்லாதவனுக்குச் சிறகுகள் எதற்கென்று

விட்டுச்சென்றான் அவற்றை மீண்டும்.

மறுபடியும் வந்து இதுவல்ல அந்த இடமெனச் சொல்லி

சிறகுகளை இங்கேதான் விட்டுச்சென்றேன், என்றான்.

இதோ உன் சிறகுள் என்றாளவள்

வானமில்லாதவனுக்குச் சிறகுகள் எதற்கென்று
விட்டுச்சென்றான் அவற்றை மீண்டும்.

00

முக்காலத்தின் அத்தனை சிறகுகளையும் அள்ளி வைத்துக்கொண்டு

பறக்க முடியாமல் தத்தளிக்கும் பறவை

அதோ வானத்தில்

இதோ என்னருகில்

00

விமானத்தின் இரைச்சல் கேட்குமிவ்விரவில்

நான் தூங்கச் செல்கிறேன்

கண்ணயர

அதே விமானத்தில் பயணிக்கிறேன்

அதே தூக்கம் கண்களில் வந்தமர்கிறது

அதே விமானம் தூக்கத்தில் பறந்து கொண்டிருக்கிறது

இரவோ

என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

00

அரங்கம் நிரம்பிய பேரன்பு – சிவபிரசாத்.

download

கடந்த ஞாயிறு 09.10.2016 ஈரோட்டில் கவிஞர் மோகன ரங்கன் அவர்களுக்கு ஆத்மாநாம் அறக்கட்டளையின் “கவிஞர் ஆத்மாநாம் விருது” வழங்கும் விழா நடைபெற்றது. சேலத்திலிருந்து நானும் சீனிவாசன் என்ற நண்பரும் விழாவிற்கு சென்றிருந்தோம்.

ஈரோட்டில் இடையன்காட்டு வலசு என்ற இடத்திலிருந்த “காப்ஸ் உணவக அரங்கில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா பத்து மணிக்கு துவங்குவதாக அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தபடியே துவங்கியது. குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்த அந்த ஒழுங்கு எனக்கு பிடித்திருந்தது.

வேல்கண்ணன் வரவேற்புரையாற்றினார். “சென்ற முறை கவிஞர் இசைக்கு விருது கொடுத்த போது பலத்த எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை மோகன ரங்கனுக்கு விருது அறிவிக்கப்பட்டதும் எந்த எதிர்ப்பும் கிளர்ந்தெழவில்லை. முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக கவிதைப்புலத்தில் இயங்கும் மோகன ரங்கனுக்கான அங்கீகாரமாய் தான் இந்த மௌனத்தைப் பார்க்கிறேன்” என்றார்.

நடுவர் குழுவில் ஒருவரான கவிஞர் கலாப்ரியா அவர்கள் குழுவின் தேர்வு குறித்தும், மோகன ரங்கன் கவிதைகள் குறித்தும் “பெரிதினும் பெரிதான கவிதைகள்” என்ற தலைப்பில் பேசினார். நெடுவழித்தனிமை, தொடங்கி முடியாத வட்டங்கள், இடைத் தூரம் முதலான கவிதைகளை வாசித்து அவற்றைக்குறித்த தனது பார்வையையும் விரிவாக எடுத்துரைத்தார்.

கலாப்ரியாவை அன்றுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன் என்பதால் மிகுந்த சந்தோஷத்தோடு அவரது உரையைக் கேட்டேன். பின்னர் வாழ்த்துரை வழங்க கவிஞர் இசை அழைக்கப்பட்டார். “சென்ற முறை விருது வாங்கியக் காரணத்தால் இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

உண்மையில் என் மூத்த தலைமுறை கவிஞர்கள் இருக்கும் அவையில் பேச எனக்கு கூச்சமாக இருக்கிறது” என்றவர் கவிஞர் மோகன ரங்கன் பற்றி “முன்னுரை முனுசாமி எனும் புகழ்மாலை” என்ற தலைப்பில் அரங்கில் வெளியிடப்படும் விருது மலரில் எழுதியுள்ளேன்…வாசித்துக் கொள்ளுங்கள்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

கவிஞர் ராஜ சுந்தரமமும் வாழ்த்துரை வழங்கினார். மரியாதை நிமித்தமாக எதிர்பாராமல் அழைக்கப்பட்டதால் மோகன ரங்கன் கவிதைகள் பற்றி தன் நினைவுகளிலிருந்து பேசினார். சுருக்கமான உரை என்றாலும் உணர்வுப்பூர்வமாக இருந்தது.

பின்னர் எழுத்தாளர் பெருமாள் முருகன் தலைமையுரையாற்றினார். “விழாவிற்கு என்னை அழைத்த போது, நான் அதிகம் பேசமாட்டேன். ஆத்மாநாம்,மோகனரங்கன் கவிதைகள் சிலவற்றை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்வேன் என்றே சொல்லியிருந்தேன். ஆனால் மோகனரங்கனின் மீகாமம் தொகுப்பை மீண்டும் வாசித்த போது அதைப் பற்றி பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது” என்றார். “மோகன ரங்கன் மிகச் சிறிய கவிதைகளைத்தான் எழுதுகிறார் என்றாலும் அவை பேசும் விஷயங்கள் மிக ஆழமானவை. அவற்றில் மூன்று கவிதைகளை எடுத்துக் கொண்டு பேச நினைக்கிறேன்” என்றார்.

” பேய்தோந்த
பெருமழையில்
பிறன் மனை
முற்றத்தில்
தேங்குகிறது
செம்புலப்
பெயல் நீர்”.

என்ற கவிதை பற்றி பேசும் போது “செம்புலப் பெயல் நீர்” என்ற சங்க இலக்கியத்தில் புகழ்பெற்ற வரிகளை கவிஞர்கள் சி.மணி, மீரா போன்றவர்கள் தங்கள் கவிதையில் பயன்படுத்தியுள்ளனர். சங்கக்கவிதையின் அதே அர்த்தத்திலேயே தங்கள் கவிதையிலும் அவர்கள் எழுதியுள்ளனர்.ஆனால் மோகன ரங்கனோ அந்த வரிகளின் நேர் எதிரான அர்த்தம் தரும்படி தன் க

விதையில் பயன்படுத்துகிறார்.இது இவரது தனித்தன்மையைக் காட்டுகிறது என்றார். மேலும் இக்கவிதையில் ” பேய்தோந்த” என்ற வார்த்தையும், ” பிறன் மனை முற்றத்தில்” என்ற அடியும் காமம் சார்ந்த (எரோட்டிக்) கவிதையாக மாற்றுகிறது என்றார். பின்னர் விழாவின் மைய விஷயமான விருது வழங்குதல் நடைபெற்றது.

மலையாளக் கவிஞர் அனிதாதம்பி ரூ.25000/- மற்றும் பாராட்டுப் பத்திரத்தை கவிஞர் மோகன ரங்கனுக்கு வழங்கினார். விருது பெற்ற மோகன ரங்கன் கவிதைகள் பற்றிய சிறப்பு மலரையும் அனிதாதம்பி வெளியிட கிருஷ்ண பிரபு பெற்றுக் கொண்டார். பின் கவிஞர் அனிதாதம்பி சிறப்புரை ஆற்றினார். முதலில் ஆத்மாநாமின் கவிதை ஒன்றை வாசித்தவர் பின்னர் மலையாளம் மற்றும் தமிழ் கவிதைகளில் பெண்கவிஞர்களின் பங்கு குறித்து விரிவாகப் பேசினார்.

அவரது உரை முழுக்கவும் மலையாளத்தில் இருந்த போதும் அவர் பேசிய விதத்தில் எளிதாய் புரிந்தது. அரங்கத்திலிருந்த எல்லோரும் அமைதியாய் கேட்டார்கள். விழாவின் மகுடம் போல அவர் உரை அமைந்தது. தொடர்ந்து கவிஞர் சுகுமாரன் அனிதாதம்பியின் உரைவடிவத்தின் தமிழாக்கத்தை வாசித்தார். இதனால் புகைமூட்டம்போன்று புரியாதிருந்த கொஞ்சநஞ்ச விஷயங்களும் தெளிவாகியது.

பின்னர் பேசிய ஆத்மாநாமின் அண்ணன் என்.கே.ரகு நந்தனின் பேச்சு உணர்ச்சி வசப்பட்டதாய் இருந்தது. தன்னுடைய தம்பி இவ்வளவு பெரிய கவிஞன் என்பதை அவன் இறக்கும் வரை தான் உணரவேயில்லை , அந்த குற்றவுணர்வு இன்னும் உள்ளது என்றார். மேலும் தன் தம்பியின் பெயரில் விருது வழங்கும் அறக்கட்டளைக்கு தன் நன்றியையும், விருது பெறும் கவிஞருக்கு தன் வாழ்த்துக்களையும் கூறினார்.

முடிவாக ஏற்புரையாற்ற வந்த கவிஞர் மோகன ரங்கன் “இந்த நேரத்தில் என் கவிதைப் பற்றி பேசினால் தற்பெருமை பேசுவதாக அமையும் பேசாதிருந்தால் போலியான தன்னடக்கத்தோடு இருக்கும். இவை இரண்டையுமே நான் விரும்பவில்லை” என்றார். மேலும் விழாவிற்கு வந்த அனைவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்தார். பின்னர் கார்த்திகேயன் இராமானுஜனின் நன்றியுரையோடு விழா முடிந்தது.

ஈரோடு இலக்கிய சுற்றம் நண்பர்கள் -குறிப்பாக ஐயா தாமோதரன் சந்துரு, ஜெகதீசன் முதலானோர் விழாவிற்கான ஏற்பாட்டையும், சுவையான மதிய உணவையும் சிறப்பாக செய்திருந்தார்கள். விழா தொடங்கியதிலிருந்து முடியும்வரை புதிதாய் வந்து கொண்டிருந்தார்களே தவிர ஒருவரும் பாதியில் சென்றதாய் உணரவில்லை. அரங்கம் நிறைந்த பார்வையாளர்களைப் பார்த்த போது முப்பது வருடமாய் கவிதையை மட்டுமல்ல சக இலக்கிய நண்பர்களோடும் மோகன ரங்கன் கொண்ட நேசம் தெரிந்தது.

••••

கண்மணி அன்போடு ( கவிதைகள் ) / ப. மதியழகன்

download-6

1

உன்னை மறக்க முடியவில்லை
மதுவில் மிதக்கத்தான் முடிந்தது
இது வெறும் கட்டடம் தான்
நீ வந்து குடியிருந்தால் மாளிகை
கோடிகளில் புரளுகிறேன்
படுக்கையில் துணைக்கு யாருமின்றி
தவிக்கிறேன்
உனது பார்வையால்
இதயத்தில் பற்றிய காதல் தீ
கொளுந்துவிட்டு எரிகிறது
இன்னும் மனிதமிருகமாகத்தான்
அலைந்து கொண்டிருக்கிறேன்
நீ மெய் தீண்டினால் தேவனாவேன்
என்னைப் பற்றிய சிந்தனை சிறிதுமின்றி
உன்னுடைய ஞாபக அலைகளிலேயே
மிதந்து கொண்டிருக்கிறேன்
நீ கனவில் கூட
கதவடைக்கிறாய்
என் உண்மைக் காதலை
ஏன் ஏற்க மறுக்கிறாய்
என்னைத் தவிர்ப்பதிலேயே
குறியாய் இருக்கிறாய்
நான் இங்கு விரகதாபத்தால்
தவித்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை மறக்கத்தான்
கோப்பையில் மதுவை நிரப்புகிறேன்
இந்தப் பாழாய்ப் போன மனது
பழங்கதைகளை பேசித் திரிகிறது
பணத்துக்கு மயங்கும்
எத்தனையோ பெண்களை
நான் பார்த்திருக்கிறேன்
கறைபடியாத உன் இதயத்திடம்
நான் மீண்டும் மீண்டும் தோற்கிறேன்
நெஞ்சில் உந்தன் பிம்பத்தை
நான் பார்க்கிறேன்
தூக்கம் வராமல் இசைத்தட்டை
சுழலவிட்டு பாடல் கேட்கிறேன்
கண்ணில் விழுந்த தூசியைப்
போல் உறுத்துகிறது உனதழகு
உன் கவர்ச்சி வலையில்
சிக்கிய நான் சோககீதம்
இசைக்கிறேன்
களைத்துப் போய்விட்டேன்
ஓய்வு கொடு
என் சவப்பெட்டியை
மூடிய பிறகு
நீ அழு.

2

விலாசத்தை தொலைத்தவர்களெல்லாம்
உன்னிடம் வந்து தானே
ஆறுதலடைவார்கள்
காதலில் தோற்றவர்களெல்லாம்
உன் காலில் தானே
வந்து விழுவார்கள்
எனது ஆழ்மனதிலிருந்து
எழும்பும் ஞாபக அலைகள்
உன்னை நனைக்கவில்லையா
கண்ணிமைக்காமல் உன்னைப்
பார்க்கிறேன்
என் கனவுலகை நீ ஆள
வரம் கேட்கிறேன்
எனது இதயக் கோயிலில்
நீ வந்து குடியேற வேண்டும்
நான் தொடுத்த மாலையை
உன் மார்பில் சூட வேண்டும்
நீ என் கண்ணீரைத் துடைத்து
ஆறுதல் வார்த்தை கூறவில்லையென்றால்
என்றோ இறந்திருப்பேன்
எனது கல்லறை மேல்
முளைக்கும் புற்களுக்கு
எருவாய் இருந்திருப்பேன்
உனது நினைவுகளால் தினமும்
நித்திரையைத் தொலைக்கிறேன்
எனது படகில் தயங்காமல் ஏறு
காதல் தீவில் நாமிருவரும்
கைகோர்த்துத் திரியலாம்
கொஞ்சம் தாகமாக இருக்கிறது
தண்ணீர் கொடு
மரணம் எனக்கு முன்பு
உன்னை அழைத்தால்
உனது கல்லறையில்
எனக்கும் சிறிது இடம் கொடு
உனது அன்பு மழையில்
நனைவதற்கென்றே மீண்டும்
பிறவியெடுப்பேன்
நீ பரிசுத்தமானவள்
எனது கறை படிந்த நெஞ்சம் ஏனோ
உனையே நாடுகிறது
இதோ தேவாலய மணி ஒலிக்கிறது
காதல் புறாக்கள் வானில்
பறக்கிறது
என்னைத் தூங்கவிடு
எனது ஆன்மாவுக்கு ஓய்வு கொடு
நான் பிச்சையெடுக்கத் தெரியாத
ஏழையாய் இருக்கிறேன்
நீ உன் மனத்தைக்
கல்லாக்கிக் கொண்டு
எனக்கு சேவகம் புரிகிறாய்
நான் இறந்த பின்பு
எனதுடலை அவள்
மடியில் கிடத்துங்கள்
எனது காதல் தீயை
அவளின் கண்ணீர் மழை
அணைக்கட்டும்
என்னை அவளிடம்
தனியே விட்டுவிட்டு
கலைந்து செல்லுங்கள்
உயிர்த்தெழுதல் அன்றல்ல
இன்றும் நடைபெறலாம்.

3

விதிவலியது கண்மணி
இந்த உலகம் உருண்டையென்பது
நீ அறியாததா
தூரப் பறக்கும் பறவை கூட
அந்தி சாய்ந்தால்
கூட்டைத் தேடி வந்துவிடுகிறதே
ஞானம் வழங்கும் கலைவாணி நீ
சிரிப்பால் எத்தனை முறை
என்னை எரித்தாய் தெரியுமா
சக்தியிலிருந்து சிவம் பிரிந்திருப்பது
உலகம் அறியாதது
நினைவுப் பறவை
உன்னைச் சுற்றியே வட்டமிடுகிறது
தேவதையை மஞ்சத்துக்கு
அழைப்பது காற்றை
சிறைப்படுத்துவதற்கு ஒப்பாகுமா
எனது பணத்தின் மீது
உனக்கொரு கண் இருந்திருந்தால்
பிரியும் முடிவை எடுத்திருக்க
மாட்டாய்
அது தான்
அக்னிப்பிரவேசம் செய்யாமலேயே
உன்னை புனிதவதி ஆக்கியது
எனக்கு இன்னொரு தாயாய்
இருக்க உனக்கு விருப்பமில்லை
என்கிறாயே
மதுக்கிண்ணத்தை மறக்க வைத்து
எனக்கு மறுஜென்மம் கொடுத்தவளே
உன் நினைவுச் சிலுவையை
ஆயுள் முழுவதும்
சுமக்க வேண்டுமா நான்
நாடகத்தில் கூட
காதலர்களின் பிரிவை
ஏற்க முடியாமல் கண்ணீர்
விடுபவனாயிற்றே நான்
உன்னைப் போன்றவர்களால் தான்
காதலின் சின்னம்
கல்லறையாக உள்ளதா
என் கண்ணைப் பார்த்துச் சொல்
நான் வனவாசம் போகத்தான்
வேண்டுமா
காதல் அலைகள் நம்மில் ஒருவரை
மட்டும் இழுத்துச் செல்லும் என்று
நினைக்கிறாயா
பிரிவென்பது உடலுக்கு
மட்டுமானது மனதிற்கு இல்லையே
ஆதரவாய் பேசுவது
நீயாக இருந்தால் என் கைகள்
கோப்பையை நாடுமா
காதல் என்பது விஷம்
யார் முதலில் சாவோம்
சிநேகிதத்திற்கும், நேசத்திற்கும்
வித்தியாசம் தெரியாதவனா நான்
என் வாழ்க்கைக்கு
விளக்கேற்றி வைத்த நீ
இருளில் வாழலாமா
வழிதவறிய என்னை
அடைக்கலம் தந்து
காத்த உனக்கு நான்
ஏதாவது செய்ய வேண்டாமா
கண்ணிமைக்கும் நேரத்தில்
வாலிபம் தொலைந்துவிடும்
உன் நினைவுகள் சாகுமா
பெண்ணை வேட்டையாடியே
பழக்கப்பட்ட எனக்கு
நேசத்தை நீ தானே
கற்றுத் தந்தாய்
காதல் சரித்திரத்தில்
தோற்றவர்களே இடம்பெறுவதை
மாற்ற முடியாதா
அந்திம காலத்தில்
என் மரணத் தாகத்துக்கு
தண்ணீர் இடவாவது
நீ வருவாயா
நான் உனக்கு பூச்சூட
வந்தபோது
மறுதலித்த நீ இன்று
என் கல்லறையை முத்தமிட்டு
கண்ணீர் விடுகிறாயே
ஏன்?

4
உனது ஞாபகங்களில்
இன்னும் நான் வாழ்கிறேனல்லவா
அன்புக்கு மரணம் இல்லையென்று
நீ எப்போது அறிந்து கொள்வாய்
தோற்றவனின் டைரிக் குறிப்பை
நீ வாசிக்க விரும்புவாயா
சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி
இரையாகத்தான் வேண்டுமா
நகை செய்ய வேண்டுமென்றால்
நெருப்பிலே பொன்னை
உருக்க வேண்டுமல்லவா
உடலை எரித்த நெருப்பு
உன் நினைவை அழிக்கவில்லையல்லவா
மீட்டுபவன் மரித்ததற்கு
வீணையா காரணமாய் இருக்கு முடியும்
கல்லறையில் நான் பாடும் கீதம்
உன் காதில் விழவில்லையா
என் ஏட்டை ஏன் எடுத்தோமென்று
இறைவன் யோசிப்பானா
என் பாவக்கணக்குக்கு
பதில் சொல்ல வேண்டிய
நேரம் வருமா
இறந்த பின்பு நட்சத்திரமாக மின்ன
கொடுப்பினை வேண்டுமல்லவா
தேர் நிலைக்கு வருவது
வடம் பிடித்து இழுப்பவர்களால் தானே
ஆதிமுதற் கொண்டு
யாரைப் பிரிந்ததனால்
வானம் அழுகிறது
பரிதி வெளிச்சம் பாய்ச்சு
பூமியில் யாரைத் தேடுகிறது
கடவுள் இறங்கி வந்தாலும்
காதலுக்காக ஏங்கித்தான்
சாக வேண்டுமா
கூவி அழைக்கக் கூடிய
தூரம் இல்லைதான்
உன் மனஊஞ்சலை நான்
இங்கிருந்து ஆட்டமுடியாதா
வாடைக் காற்று
தேகத்தில் படும்போது
உடல் தாபத்தால் ஏங்காதா
வாழ்க்கையின் சாரமென்னவென்று
இங்கு வந்து சிந்தித்தேன்
உன் மனதில் வாழ்வதைவிட
வேறென்ன சாதித்தேன்
விதி பொம்மலாட்ட பொம்மையாய்
என்னை ஆக்கிவைத்து
வேடிக்கை காட்டியது
நூல் அறுந்த பின்னும்
என் வேதனை இன்னும் தீரவில்லை
இது சுதந்திரமா எனச்
சொல்லத் தெரியவில்லை
எண்ணச் சிறகை விரித்து
உன் மனவானில் பறப்பதை
என்ன சுகமென்று
வாய் திறந்து வெளிப்படுத்த
முடியவில்லை
கற்பனை ராஜ்ஜியத்தை
நான் கட்டிக் கொண்டிருக்கிறேன்
உனது ஓரவிழிப்பார்வைக்காக
நான் அரசமகுடத்தையே
துறக்கிறேன்
பித்தனாய் உலகைச் சுற்றித்
திரிகிறேன்
கடற்கரையில் என்னவளின்
காலடிச்சுவடை தேடியலைகிறேன்
என்னை எதிர்கொள்ள நேர்ந்தால்
சுதாரித்துக் கொள்
உன்னைக் கடந்து செல்லும் நான்
மனிதனல்ல கண்மணி
நான் இறந்த பிறகு
இந்தப் பூமியிலுள்ள ஆண்களெல்லாம்
நானாகவே இருக்கிறேன் கண்மணி
உன்னைத் தழுவும்
அந்த இரு கரங்களும்
என்குள்ளாகவே இருக்கும் கண்மணி
ரம்பை மேனகையின்பால்
உள்ளம் செல்லவில்லை
உன் வரவை எதிர்பார்த்து
விண்ணுலக கதவுகளை
நோக்கிக் கொண்டிருக்கிறேன் கண்மணி.

5
மருத்துவர்களின் கண்காணிப்பில்
இருக்க வேண்டியுள்ளது
ஆகாரத்தை கொஞ்சமாகவும்
மாத்திரைகளை அளவுக்கதிகமாகவும்
சாப்பிட்டு வருகிறேன்
உன் முகவரியை என்னிடமிருந்து
மறைத்துவிட்டாய்
நீ எங்கே இருந்தாலும்
என்னையே தான் நினைத்துக்
கொண்டிருப்பாய்
உறக்கமற்ற இரவுகள்
என்னை நரகத்தில் தள்ளுகிறது
வாழ்க்கை எல்லாவற்றையும்
என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டு
உன் நினைவுகளை மட்டுமே
என்னிடம் தந்திருக்கிறது
வெளிச்சம் வந்தால்
இருள் விலகிவிடுவது போல்
என் மனச்சுமையை
அகற்றினாய் நீ
பிரிவு மரணத்தை விடக்
கொடியது என
உணரவைத்து விட்டாய்
கல்லாகிப்போன உன் இதயத்திலிருந்து
என் மீது கருணை பிறக்குமா
இன்னொரு வசந்தகாலத்திற்காக
ஏங்கித் தவிக்கிறேன் நான்
உன் இதயப் பூக்களின் மணம்
இங்கு வரை வீசுகின்றதே
தன்னலமற்ற உனது தியாகத்தால்
தெய்வத்தை விட
உயர்ந்து நிற்கிறாய்
எல்லோரும் புறப்பட்ட இடத்திற்கே
திரும்பச் செல்ல வேண்டியவர்கள் தானே
காற்றின் திசையில்
சருகுகள் அலைக்கழிக்கப்படுவது
இயற்கைதானே
உதிரும் மலர்களுக்காக
இரங்கற்பா எழுதிக் கொண்டிருக்க
முடியுமா
அழிவற்ற காதலுக்குத்தான்
எத்தனைக் கண்கள்
மரங்கள் அடைக்கலம் தரவில்லையென்றால்
பறவைகள் எங்கே தஞ்சமடையும்
காதலர்களின் கண்ணீர்ப்
பெருக்கினால் தான் கடல்
உருவானதா
என் இதய நெருப்பு
மங்காமல் எரிவதற்கு
நீ வந்து எண்ணெய் ஊற்ற
மாட்டாயா
உனக்கு அஞ்சல் செய்ய வேண்டிய
கடிதங்கள் என்னிடம்
ஆயிரம் இருக்கின்றன
நித்திரைக்கடலில் மூழ்காத
மனிதர்கள் உண்டா
அன்பின் விதி ஏன்
இவ்வளவு கொடூரமாய் இருக்கிறது
பேயுறக்கத்திலிருந்து
மீண்டெழுந்தவர்கள் யாருமில்லை
அல்லவா
இயற்கையின் சட்டதிட்டங்களுக்கு
உட்படாமல் போனால்
மரணம் பரிசாக கிடைக்குமா
சபிக்கப்பட்ட ஆதாமின்
சந்ததிகள் தானே நாம்
இந்த பூலோகச் சிறையில்
எல்லோரும் மரணதண்டணைக்
கைதிகள் தானே
சொர்க்கத்திலிருந்து பொழியும் மழை
உன்னை நனைக்கட்டும்
இரவில் ஒளி கொடுப்பது
மெழுகுத்திரிகள் மட்டுமா
மின்மினிகள் இல்லையா
ஆக்குவது அழிப்பது தவிர
ஒரு இதயத்தில் காதலை
பிரவேசிக்கச் செய்ய
கடவுளால் முடியுமா
கண்மணி
கடவுளுக்கு விசுவாசமாக
இருக்க கவிஞர்களால்
ஒருபோதும் முடியாது.

6

உன் நினைவுகளை சாகடிக்க
மதுவால் என்னை கொஞ்சம்
கொஞ்சமாக சாகடித்துக்
கொள்கிறேன் கண்மணி
ஒரு சிறு பறவை உன் மனவானில்
வட்டமிட்டுக் கொண்டிருப்பதை
நீ அண்ணாந்து பார்த்ததில்லையா
காதல் அம்புகளால் காயம்பட்டவனுக்கு
எது மருந்து என்று உனக்குத்
தெரியாதா என்ன
என் வாழ்க்கையின் வசந்தகாலம்
உன்னோடு விடைபெற்றுப்
போய்விட்டது கண்மணி
எந்த இழப்பும் என்னைத்
தடுமாற வைத்ததில்லை கண்மணி
வேர் தானே மரத்தைத் தாங்குகிறது
இது உனக்கு தெரியாதா என்ன
உடைந்து போன கண்ணாடிச் சில்லுகள்
ஒவ்வொன்றிலும் சூரியன்
பிரதிபலிப்பதில்லையா
காதல் சிலுவையை என்றென்றும்
ஆண்கள் தானே சுமக்கின்றார்கள்
ஆதாம் அறிவுக் கனியை சுவைத்ததற்கு
நான் எப்படி காரணமாய் இருக்கமுடியும்
பிரிந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான்
இவ்வுளவு நாள் பழகினாயா
எனது மனக்குதிரை மரணப்பள்ளத்தாக்கை
நோக்கி வேகமெடுக்க ஆரம்பித்துவிட்டது கண்மணி
உன் நிழலைத் தொடக் கூட
எனக்கு அருகதையில்லை அல்லவா
கடலுடன் சங்கமித்த மழைத்துளிக்கு
முகவரி உண்டா
இந்த காதல் மாளிகை கல்லறையாகும்
என்று ஒருபோதும் நினைத்ததில்லை கண்மணி
உன் மேனியை வருடும்
காற்றில் என் சுவாசமும் கலந்துள்ளது
உன்னதமான தருணங்களை அசைபோட்டுக் கொண்டே
கல்லறையில் நிம்மதியாக உறங்கிக்
கொண்டிருப்பேன் கண்மணி
காதல் நாடகத்தில் உனது பாத்திரத்தை
வேறொருவர் ஏற்க மனம் இடம்கொடுக்க
மறுக்கிறது கண்மணி
துக்கத்துக்கு ஆறுதலளிக்க
என்னைத் தேடிவரமாட்டாயா கண்மணி

•••••••••

ப.மதியழகன்(P.MATHIYALAGAN)
115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்.
தமிழ்நாடு,
இந்தியா.
cell:9597332952, 9095584535
மின்னஞ்சல்:mathi2134@gmail.com
.

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திடம் புலம்பெயரா மக்கள் பேசும் ஆவணப்படம் / முருகபூபதி ( அவுஸ்திரேலியா )

download

download

(பார்த்தோம் சொல்கின்றோம் )

தங்கேஸ் பரம்சோதியின் அரிய ஆவண முயற்சி:

தெய்வங்கள் தூணிலுமிருக்கும் துரும்பிலும் இருக்கும் என்றுதான் எமது முன்னோர்கள் எமது பால்யகாலத்தில் சொல்லிவைத்தார்கள்.

அந்தத்தெய்வங்கள் கனவில் வந்தால் நாம்தான் வரம்கேட்போம் என நம்பியிருந்தேன். ஆனால், தெய்வங்கள் தங்களுக்கு வரம் கேட்குமா ? நாம் தூணிலும் துரும்பிலும் மாத்திரம் .இருந்தால் போதாது எங்களுக்கென்று கோயில்கள் கட்டு எனச்சொல்லும் தெய்வங்களும் எனக்காக பத்து முட்டை அடித்து என்பசி போக்கு என்று அம்மன்களும் கனவில் வந்து சொல்லும் கதைகளை கேட்கத்தொடங்கியிருக்கின்றோம்.

“கோயிலைக்கட்டு இந்துக்கள் மகிழ்ச்சி அடைவர். தேவாலயங்கள் கட்டு கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியடைவர், மசூதிகள் கட்டு இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியடைவர். பாடசாலைகளைக்கட்டு அனைவரும் மகிழ்ச்சியடைவர்” இவ்வாறு தமிழகத்தின் கர்மவீரர் காமராஜர் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னதாக அறிந்திருக்கின்றோம்.

எங்கள் இலங்கையில், ஒருவர் இப்படிச்சொன்னார்:

“கட்டினார் கட்டினார் கோயில்கள் கட்டினார், கட்டிய கோயில்களில் என்னதான் கண்டார்” இவ்வாறு சொன்னவர் ஒரு எழுத்தாளர். சிந்தனையாளர். சமூகச்செயற்பாட்டாளர். அவர் பிறந்து வாழ்ந்த ஊரில் ஒரு கண்ணகி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிதண்ணீர் அள்ளுவதற்கு மேல்சாதிக்காரர் அனுமதி தரவில்லை என்றபடியால் சாத்வீக முறையில் அந்தக்கோயில் முன்றலில் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்தார்.

மேல்சாதிமான்கள் பொலிஸிடம் சொல்லி அவரை அடித்து இழுத்துச்செல்லவைத்தனர். அவர் பொலிஸிடம் அடிவாங்கி சில மாதங்களில் அற்பாயுளில் மறைந்தார்.

இச்சம்பவம் 1974 ஆம் ஆண்டில் நடந்தது. இது நிகழ்ந்த ஊரின் பெயர் புங்குடுதீவு. அவ்வாறு மரணித்தவர் எமது மதிப்பிற்குரிய மூத்த படைப்பாளி மு. தளையசிங்கம்.

download
இது நிகழ்ந்து 42 வருடங்களாகிவிட்டன. இந்த நான்கு தசாப்த காலத்தில் புங்குடுதீவில் நேர்ந்துள்ள மாற்றங்களை, இன்றும் அதே சாதிப்பிடிப்புடன் அவரவர்களுக்கு கோயில்கள் கட்டுகின்றார்கள்.

அதேசமயம் இந்தக்கொடுமைகளை சகிக்காமல் நன்னீர் ஊற்றுக்களும் மரணித்துவிட்டன என்பதை துல்லியமாக பதிவுசெய்துள்ளது ஆவணப்படுத்தியிருக்கிறது ‘ புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்’ என்ற ஆவணப்படம்.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மேற்கொண்ட பணிகளைப்பற்றி நீண்ட தொடரே எழுதமுடியும். தமது தாயகத்தில் போர் முடிந்தபின்னர், இதுவரையில் இலட்சக்கணக்கானோர் சென்று திரும்பியுள்ளனர்.

தங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்று, ” இதுதான் எங்கள் ஊர், இவர்கள்தான் எமது உறவுகள், இங்குதான் நாம் பிறந்து வளர்ந்த வீடு இருக்கிறது” என்பதைக்காட்டி படங்களும் எடுத்து, தங்கள் முகநூல்களிலும் பதிவுசெய்துகொண்டிருக்கின்றனர்.

தங்கேஸ் பரம்சோதி என்ற இளைஞர் இங்கிலாந்தில் கிழக்கு இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தமது கலாநிதி பட்டப்படிப்பிற்கான மானிடவியல் கள ஆய்வுக்கற்கையை அடிப்படையாகக்கொண்டு புங்குடுதீவுக்குச்சென்று இந்த ஆவணப்படத்தை எடுத்துள்ளார்.

இதுவெறுமனே மானிடவியலை மாத்திரம் பேசவில்லை. சிதைந்துகொண்டிருக்கும் ஒரு அழகிய தீவின் தொன்மையை ஆத்மாவையும் பேசுகிறது.

தாயகத்தின் சொந்த நிலத்திற்கும் புகலிட மண்ணின் இரண்டக வாழ்வுக்கும் இடைப்பட்ட கானலையும் சித்திரிக்கிறது.

” இந்த மண் என் கால்களின் கீழுள்ள தூசிப்படலமல்ல

எனது உணர்வார்ந்த பிடிப்பின் தூர்ந்துபோகாத உயிர்த்தளம்”

என்ற வரிகளுடன் இந்த ஆவணப்படம் தொடங்குகிறது.

இந்த உள்ளத்துணர்வை எம்மிடம் விட்டுச்சென்றவர் கவிஞர் சு. வில்வரத்தினம். இவரும் புங்குடுதீவைச்சேர்ந்த சிந்தனையாளர். இவரும் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்து, திருகோணமலையில் மறைந்துவிட்டார்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட மு. தளையசிங்கத்துடன் இணைந்து சமூக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டவர்தான் கவிஞர் சு. வில்வரத்தினம்.

download-7
நீடித்த இனநெருக்கடியும் போர்ச்சூழலும் புங்குடுதீவில் வாழ்ந்த 20 ஆயிரம்பேருக்கு மேற்பட்டவர்களை விரட்டியபோது அவர்களில் ஒருவராக இடம்பெயர்ந்து, திருகோணமலைக்குச்சென்றார். இவ்வாறு உள்நாட்டுக்குள்ளேயே பல பிரதேசங்களுக்கும் அவ்வூர் மக்கள் சென்றனர். வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் பரதேசிகளாய் ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா என்று பறந்தனர்.

புங்குடுதீவில் 42 ஆண்டுகளுக்கு முன்னர், குடிநீருக்காக எங்கள் தளையசிங்கம் போராடி உயிர் நீத்த காலத்தில் பிறந்திருக்காத, தங்கேஸ் பரம்சோதி என்ற இளைஞர், அந்தத்தீவிலிருந்து புலம்பெயர்ந்து அந்நியம் சென்றவர்களின் பார்வைக்கும் சிந்தனைக்கும் எதிர்காலச்செயற்பாட்டுக்கும் வழங்கியிருக்கும் இந்த ஆவணப்படம் இலங்கை அரசை , வடமாகாண சபையை, எம்மவர்களின் மனச்சாட்சியை பிரசார வாடையே இன்றி கேள்விக்குட்படுத்துகின்றது.

இங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் பாரிய உள்ளுர் இடப்பெயர்வு, வெளிநாடு புலப்பெயர்வுகளினால் இந்தத்தீவின் நிலம் சார்ந்த பிரச்சினைகளை ஆவணமாக முன்னிறுத்தியிருக்கிறது.

இந்த ஆவணப்படத்தின் உள்ளடக்கத்தை இவ்வாறு சுருக்கமாகச்சொல்ல முடியும் என்ற பதிவையும் இதன் உறையில்(DVD Video Cover) காணமுடிகிறது.

ஆயுத யுத்தம் முடிவுற்றதொரு சூழலில் தாய்நாட்டுக்கு வெளியே சிதறிவாழும் உறவுகளை மீளிணைக்கும் ஒரு யுக்தியாகத் தமது சமுதாயக்கோயில்களை மீளக்கட்டுவிக்கின்ற புலம்பெயர்ந்து வாழும் ஊர்ப்பற்றுள்ள தமிழர்களினதும் உள்ளுரில் வாழும் அவர்களது உறவினர்களினதும் முயற்சிகள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நாளாந்த வாழ்வில் புங்குடுதீவில் வாழும் மக்கள் எதிர்கொள்கின்ற வாழ்விடம், தண்ணீர், விவசாயம், பாதுகாப்பு, சாதியம், மதம் முதலிய பல சிக்கலான பிரச்சினைகளையும் இந்தப்படம் வெளிக்கொண்டுவருகின்றது.

யாழ்ப்பாணம் குடாநாட்டின் தென்மேற்குத்திசையில் 28 கிலோ மீற்றர் தொலைவில் 11. 2 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத்தீவு முன்னோர் காலத்தில் பொன்விளையும் பூமியாகத்திகழ்ந்திருக்கிறது. பொன்குடுதீவு மருவி, பொங்குடுதீவாகி பின்னாளில் புங்குடுதீவாகியிருக்கிறது.

ஆனால், இங்கு வந்திறங்கிய போர்த்துக்கேயர், சப்த தீவுகள் என்றழைக்கப்படும் சில தீவுகளுக்கு மத்தியில் இது அமைந்திருப்பதனால் இதற்கு மிடில்பேர்க் (Middleburg) என்றே பெயர்சூட்டியிருக்கிறார்கள்.

இந்தத்தீவில் வாழ்ந்த சில ஆளுமைகள், படைப்பாளிகள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அந்தப்பதிவுகளில் இவ்வூரின் மகிமைகளை சொல்லியிருந்தாலும், இந்த மண்ணில் கால் பதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. ஆயினும் இந்த ஊரைக்கடந்து குறிக்கட்டுவான் சென்று அங்கிருந்து நயினாதீவுக்கு இரண்டு தடவைகள் சென்றிருக்கின்றேன்.

1983 இல் தென்னிலங்கையில் கலவரம் வந்த பின்னர் குழந்தைகளுடன் நயினாதீவுக்குச்சென்றிருந்தபோது, கோயில் கிணற்றடியில் இரண்டு இளம் யுவதிகளின் உரையாடல் என்னை துணுக்குறச்செய்தது.

ஒருத்தி மற்றவளிடம் கேட்கிறாள்,” தண்ணீர் அள்ளுவதற்கு உனது வீட்டருகிலேயே ஒரு கிணறு இருக்கிறதே…? ஏன் குடத்தை தூக்கிக்கொண்டு இவ்வளவு தூரம் வருகிறாய்..? ”

மற்ற யுவதியின் பதில்: ” அங்கே கண்ட கண்ட சாதியெல்லாம் தண்ணியள்ள வருகுது”

” என்னம்மா இப்படி சொல்றீங்களேயம்மா…?” என்று அன்றே அவர்களிடம் கேட்டேன்.

உடனே ஒருத்தி, ” ஊருக்குப்புதுசோ” என்று முறைத்துப்பார்த்தாள். அந்த முறைப்பு இன்னும் எனது கண்களிலிருந்து மறையவில்லை.

தங்கேஸ் பரம்சோதியின் இந்த ஆவணப்படத்தை பார்க்கின்றபோது அங்கு ஆன்ம ஈடேற்றத்திற்காக கோயில்கள் பல எழுந்தாலும் அவற்றின் அத்திவாரங்களுக்குள் ஆணவச்சாதி அகம்பாவம் புதையுண்டுபோகவில்லை என்பதை தெரிந்துகொள்ளமுடிகிறது.

அங்கு 1991 இல் அத்துமீறி நுழைந்த இராணுவத்திற்கு அவ்வூர் மற்றும் ஒரு சிங்கப்பூராக காட்சியளித்திருக்கிறது.

அழகான கல்வீடுகள், தோட்டம் துரவுகள், பசுமையான வயல்வெளிகள், கோயில்கள், கிராமத்தின் வனப்புகள் யாவும் ரம்மியமான காட்சிகளாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால் இன்று …?

ஊர் வெறிச்சோடியிருக்கிறது. வீடுகளில் மக்கள் இல்லை. புதர்க்காடுகள் செழிப்படைந்திருக்கின்றன. கிணறுகள் பாழடைந்துள்ளன. குட்டைகள் கழிவுப்பொருட்களின் தங்குமிடமாகிவிட்டன. ஆழ் கிணறுகளில் தூர் வாரப்படாதமையினால் நன்னீர் இல்லை.

இந்த ஆவணப்படத்தில் இந்த ஊரைச்சேர்ந்தவரும் சிறிது காலம் கனடாவில் வாழ்ந்துவிட்டு திரும்பி வந்திருப்பவருமான அருணாசலம் சண்முநாதன் , பேராசிரியர்கள் பாலசுந்தரம்பிள்ளை, குகபாலன் மற்றும் ஊர் பொதுமக்களும் உரையாற்றுகிறார்கள்.

புலம்பெயர் வாழ்வில் நினைவு மறதிநோயினால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை ஊருக்கு அழைத்துவந்தால் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கும் அருணாசலம் சண்முகநாதனுக்கு புங்குடுதீவில் கோயில்களில் மணியோசை கேட்கவில்லை. ஒரு கோயிலின் மணியை திருத்தி அடிக்கச்செய்திருக்கிறார். அதன் பின்னர், ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்று அவர் உணர்ச்சிகரமாக கண்ணீர் பனிக்கச்சொல்கிறார்.

புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கு தமது ஊரிலுள்ள கோயில்களில் மணியோசை கேட்கவேண்டும். அதற்காக இடிபாடுகளுடன் காட்சியளிக்கும் கோயில்களை திருத்தி அல்லது மாற்றங்கள் செய்து புனருத்தாரணம் செய்யவேண்டும். கும்பாபிஷேகம் நடத்தவேண்டும். அமைக்கும் மணி மண்டபங்களில் தங்கள் பெயர் பொறிக்கப்படவேண்டும் என்றெல்லாம் ஆசைவருகிறது.

இதேவேளை, ஊரில் இருப்பவர்களின் கனவுகளில் தெய்வங்கள் வருகிறார்கள். தத்தமக்கு கோயில்கள் எழுப்புமாறு வேறு சொல்கிறார்கள்.

இந்தத்தெய்வங்கள், பாடசாலைகளைக்கட்டு, நூல் நிலையங்களை உருவாக்கு, மருத்துவமனைகளை எழுப்பு என்று கனவில் வந்து சொல்ல மாட்டார்களா…?

இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்பொழுது, இந்த ஊருக்கு ஒரு பொலிஸ் நிலையத்தையாவது கட்டிக்கொடுங்கள் என்று இவ்வூர் மக்களிடம் வாக்குக்கேட்டு வரும் தமிழ் அரசியல்வாதிகளின் கனவில் வந்து அந்தத்தெய்வங்கள் சொல்ல மாட்டாதா..? என்ற ஏக்கம்தான் வருகிறது.

ஊரைச்சுற்றிப் பற்றைக்காடுகள். பாழடைந்த வீடுகள். சனநடமாற்றமில்லாத சூனியப்பிரதேசங்கள். இவைபோதும் குற்றச்செயல்களின் அதிகரிப்பிற்கு. அவ்வாறு நடந்த ஒரு சம்பவம்தான் வித்தியா என்ற ஒரு பாடசாலைச்சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை. அவள் வன்கொடுமைக்கு ஆளாகி கொலைசெய்யப்பட்ட இடமும் இதில் காண்பிக்கப்படுகிறது.

இது நிகழ்ந்து அடுத்த வருடம் மே மாதத்துடன் இரண்டு வருடங்களாகப்போகிறது. ஆனால், குற்றவாளிகள் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை.

எழுக தமிழ் எழுச்சிப்பேரணி போன்று பல பல பேரணிகள் நடந்துவிட்டன. நாடாளாவிய ரீதியிலும் ஒரு தமிழ்ச்சிறுமிக்காக மூவின மக்களும் வீதிக்கு வந்து அறப்போராட்டம் நடத்தினர்.

ஜனாதிபதியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். வீடும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

ஆனால் , அவ்வூர் மக்கள் இன்றும் தங்கள் பாதுகாப்பிற்கென்று ஒரு காவல் நிலையம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

வெளிநாட்டில் வதியும் உறவுகள் அனுப்பும் பணத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்கும் இம்மக்கள் அவதிப்படுகின்றனர்.

பாழடைந்த வீடுகளை திருத்தி, சீர்படுத்தி கழுவித்துடைத்து அங்கு தற்காலிக வாழ்வு வாழும் மக்களின் பிரதிநிதிகளும் குறிப்பாக பெண்களும் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

வெளிநாடு சென்றவர்கள், என்றாவது ஒருநாள் வந்து பார்த்துவிட்டு வீடியோ எடுக்கின்றனர், படம் எடுக்கின்றனர். பின்னர் தமது முகநூல்களில் பதிவேற்றுகின்றனர். திரும்பிச்செல்கின்றனர்.

பூர்வீகச்சொத்துக்களை அவற்றை பாதுகாத்து பேணிக்கொண்டிருப்பவர்களுக்கு விற்பதற்கும் மனம் இடம்கொடுப்பதில்லை.

வீடுகளைத்திருத்துவதை விடுத்து கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து பணம் வருகிறது.

ஒவ்வொரு வருடமும் சராசரி 20 கோடி ரூபா இந்தக்கோயில் கட்டுமானங்களுக்காக ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா முதலான தேசங்களிலிருந்து வருகிறது.

இது இவ்விதமிருக்க, சாதி அடிப்படையிலும் சிறிய கோயில்கள் பெரியகோயில்களாகின்றன.

இவ்வாறு எதிர்காலத்திலும் நிகழும் என்று தீர்க்கதரிசனமாக மு. தளையசிங்கம் சிந்தித்தமையால்தானோ அன்றே ” கட்டினார் கட்டினார் கோயில்கள் கட்டினார் கட்டிய கோயில்களில் என்னதான் கண்டார்” என்று பாடினாரோ.

இதில் வேடிக்கை என்னவென்றால், 1980 களில் இங்கு 85 சதவீதமான உயர்சாதியினர் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், இன்றோ அவர்களின் வீதம் பத்து சதவீதம்தான் என்கிறார் ஒரு ஊர்ப்பொதுமகன்.

வீடுவிட்டு வீடு மாறிச்சென்று வாழ்ந்துகொண்டிருக்கும் நிரந்தர வீடுகள் இல்லாதவர்கள், தாம் இதுவரையில் பல வீடுகளை கழுவிவிட்டோம் என்று பெருமூச்சுவிடுகின்றனர்.

அரசினாலும் புலம்பெயர்ந்து சென்றவர்களினாலும் கைவிடப்பட்ட கவனிப்பாரற்ற தீவாகியிருக்கும் இந்த ஊருக்குள் தென்னிலங்கை வாசிகளின் பிரவேசம் மௌனமாக நடந்துகொண்டிருப்பதையும் இந்த ஆவணப்படம் சுட்டிக்காட்டுகிறது.

” இப்படியே சென்றால், விரைவில் பக்கத்து வீட்டுக்காரரை ” எப்படி மாத்தயா சுகம்? ” என்று விசாரிக்கும் நிலைவரலாம் என்கிறார் ஒருவர்.

தென்னிலங்கை மக்களின் வழிபாட்டுத்தலம் நயினாதீவில் நாகவிகாரை என்ற பெயரில் இருக்கிறது. அங்கு செல்வதற்கான பாதை புங்குடுதீவில் பிறக்கிறது. போர் முடிந்த பின்னர் அங்கு அவர்கள் உல்லாசப்பயணிகளாக வந்து திரும்புகிறார்கள்.

அவர்களுக்காக தென்னிலங்கை பெரும்பான்மையினரால் கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படுகின்றன. அவர்கள் அங்கு வந்து பனையின் நுங்கு சுவைக்கிறார்கள். தாம் தங்கும் வீடுகளில் குடிநீர் தாங்கிகள் அமைக்கிறார்கள்.

இந்த மாற்றங்களை காட்சிப்படுத்தும்பொழுது பின்னணியில் ஒலிக்கிறது, ” டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கப்பாரு டிங்கிறி டிங்காலே” பாடலின் இசைக்கீற்று.

” Pungudutivu: A Disintegrating Island ” என்னும் இந்த ஆவணப்படத்தை தமது மானிடவியல் கலாநிதி பட்டப்படிப்பிற்கான சமூக ஆய்வாக தங்கேஸ் பரம்சோதி இயக்கித்தயாரித்திருந்தாலும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களையும் உள்நாட்டில் மக்களின் வாக்குகளுக்காக நம்பியிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளையும் சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர்களையும் சுயவிமர்சனத்திற்குள்ளாக்குகிறது.

தமிழ்த்தேசியம், நாடுகடந்த தமிழ் ஈழம் என்ற கனவுகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் கண்முன்னால், ஒரு அழகான தொன்மையான தமிழர் தீவு, சிதைந்துகொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் வாழுபவர்களினதும் அவர்கள் சந்ததிகளினதும் காட்சிப்பொருளாகத் திகழும் பூர்வீக மண்ணும் உறக்கத்தின்போது கனவுகளில் வரவேண்டும்.

புங்குடுதீவு போன்று இலங்கையில் கைவிடப்பட்டு அநாதைகளான பல கிராமங்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் அந்த அநாதை நிலங்களின் வாசனை ஆவணமாக்கப்படல் வேண்டும் என்பதையும் பார்வையாளர்களிடமும் ஊர்ப்பற்றுள்ளவர்களிடமும் செய்தியாக வலியுறுத்துகிறது இந்தப்படம்.

இந்த ஆவணப்படத்தை வடமாகாண சபைக்கும் சமர்பித்து, புங்குடுதீவு வாழ் புலம்பெயர் சமூகத்திடம் மட்டுமன்றி உலகெங்கும் சிதறி வாழும் ஈழத்தமிழர்களிடத்திலும் காட்சிப்படுத்தல் வேண்டும்.

சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதும்தான் படைப்பாளிகள், கலைஞர்கள், கல்வியியலார்களினதும் கடமை.
download-3
அந்தக்கடமையை நிறைவேற்றியிருக்கும் தங்கேஸ் பரம்சோதியின் இந்த அரிய முயற்சி பாராட்டுக்குரியது.

•••

letchumananm@gmail.com

••

நெஞ்சம் மறைப்பதில்லை ( சிறுகதை ) / தெய்வீகன் ( இலங்கை )

14088643_875162235922921_9196216476046424828_n

அரைகுறை கேவல்களும் பயனிலை அற்ற வாக்கியங்களும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிய ஒலிக்குமைவால் நிறைந்திருந்தது அந்த அறை. அன்று பயங்கரமான வித்தியாசத்தை உணர்ந்தாள் விதுஷா. அவள் பரவாயில்லை ரசித்தாள். ஆனால், கட்டில் பாவம். உணர்ச்சியற்ற மரம்தானே. அவளோடு சேர்ந்து அனுங்கியது

ஓருவாறு முத்தத்தின் முற்றுப்புள்ளியுடன் முடிந்ததாக சமிக்ஞைகளை பரிமாறிக்கொண்ட அந்த அகோர மணித்துளிகள் பரஸ்பரபர வெற்றியை அறிவித்துக்கொண்டு பரிபூரணமாகிக்கொண்டன. தற்போது மின் விசிறி மாத்திரம்தான் முழுமூச்சுடன் இயங்கிக்கொண்டிருந்தது. விக்கித்துப்போயிருந்த அறையின் பெருமூச்சுக்கள் அனைத்தும் ஜன்னல் கண்ணாடிகளில் படிந்து வடிந்துகொண்டிருந்தன.

சின்ன இடைவெளியில் படுத்திருந்த இருவரும் விட்டத்தைப்பார்த்துக்கொண்டிருந்தனர். மௌனத்தை முறித்துக்கொண்டு போர்வைக்குள்ளிருந்தவாறே தினேஷை நோக்கி திரும்பிய விதுஷா அவனது நெற்றி வேர்வையை துடைத்துவிட்டாள்.

“இண்டைக்கு என்னடா உனக்கு நடந்தது” – என்றாள்.

அவன் வெட்கப்படும் அழகை பார்க்கவேண்டும் என்பதும் அந்த கேள்வியின் நோக்கமாக இருந்தது. ஆனால், அவனோ பதிலொன்றும் பேசாமல் மெல்லிதாய் கண்களை மூடித்திறந்தான்.

தான் எதிர்பார்த்த ரியாக்ஷன் வராததால், தலையணையில் கையை ஊன்றி எழுந்து அவனது கன்னத்தில் மெலிதான ஒரு முத்தத்தை பதித்தாள். அதற்கும் எதுவுமே பேசாதபோதுதான், அவனுக்குள் ஏதோ ஒரு பிரச்சினை ஓடிக்கொணடிருப்பதை விதுஷா உணர்ந்தாள்.

போர்வையை விலக்கி எழுந்த தினேஷ் கட்டில் தலைமாட்டில் கிடந்த துவாயையும் எடுத்துக்கொண்டு நேரே ஷவருக்குள் போனான்.

அவ்வப்போது ஏதாவது ஒரு சின்னப்பிரச்சினைக்கு விம்முவதும் பின்னர் மூட் அவுட் ஆவதும் பிறகு ஆச்சரியப்பட வைக்குமளவுக்கு சரியாகுவதும் தினேஷின் வழக்கமான இயல்பு என்று விதுஷாவுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே, இது ஒன்றும் அவளுக்கு புதிதில்லை.

வீட்டுக்கு தெரியாமல் நான்கு வருடங்கள் கரப்புக்குள் மூடிய கோழிக்குஞ்சு போல காப்பாற்றி வருகின்ற காதல்;. சிட்னி பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக கொழும்பிலிருந்து வரும்போது ஆகாயத்திலேயே எழுதிக்கொண்ட இருதலைக்காதல்;. இருவரும் ஒரே பல்கலைக்கழகம் வேறு. சொல்லவா வேணும்.

தூரத்து சொந்தக்காரர் ஒருவர் சிட்னியில்தான் இருக்கிறார். அவருடைய வீட்டிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு போய்வரும்படி விதுஷாவின் அப்பா எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். ஆனால், தினேஷ் இருக்கும் இடமே தனக்கு சொர்க்கம் என்று அவன் வாடகைக்கு இருக்கும் பல்கலைக்கழக மாணவர் குடியிருப்பு தொகுதியிலேயே பெண்களுக்கான இடத்தில் தனி அறை எடுத்து இருந்துவிட்டாள் விதுஷா.

“அவிரிண்ட வீட்டில இருந்து அரைமணித்தியாலம் பஸ்ஸில தூங்கிப்பிடிச்சுக்கொண்டு ஒவ்வொரு நாளும் கம்பஸ_க்கு போய்வர என்னால ஏலாது அப்பா. இது கம்பஸ_க்கு உள்ளயே இருக்கிற போர்டிங் பிளேஸ். சேவ்டி கூட” – என்ற பதில் தகப்பனின் வாயை அடைத்துவிடுவதற்கு விதுஷாவுக்கு போதுமாக இருந்தது. மறுபுறத்தில் அவளது தங்கு தடையில்லாத காதலுக்கு அது எவ்வளவு ஈஸியாக இருந்தது என்பதைத்தான் கதையின் ஆரம்பத்திலேயே பார்த்தோமே.

உண்மையை சொல்லப்போனால் இவர்கள் இரண்டுபேரும் ஒரே அறையிலேயே தங்கியிருக்கலாம். இரண்டு அறைக்கு வாடகையை கொடுத்துக்கொண்டிருப்பதெல்லாம் சுத்த வேஸ்ட். எப்ப பார்த்தாலும் தினேஷ_டனேயே ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டு படுப்பதற்கு மட்டும்தான் விதுஷா தனது அறைக்குப்போவாள். பல சபலமான இரவுகளும் சில சரக்கடித்து இரவுகளும் அவ்வப்போது இருவரையும் ஒரே அறையில் தங்கவைத்துவிடுவதுண்டு.

ஆனால், இன்று அந்த சபலம் ஒரு பகல் பொழுதை குத்தகைக்கு எடுத்திருந்தது. இது விதுஷாவுக்குக்கூட விநோதமாகவே இருந்தது. ஒன்றாகிப்பழகி ஒரே மாதத்திலேயே சகலதையும் சரளமாக ஆரம்பித்துவிட்ட இருவரும் ஒருபோதும் பகல்பொழுதுகளில் இவ்வாறு முயங்கிக்கிடந்தது கிடையாது. இயல்பாகவே வெட்க சுபாவம் கொண்ட தினேஷ_க்கு இந்த சமாச்சாரங்களுக்கு எப்போதும் இரவுகளை சாணக்கியத்துடன் பயன்படுத்திக்கொள்வதுதான் விருப்பம். “காமத்தின் நிறம் கறுப்பு” என்று அவன் எப்பவோ போட்ட பேஸ்புக் ஸ்டேட்ஸிற்கு பலநூறு லைக்குள் விழுந்திருந்தன.

இன்று எல்லாமே விசித்திரமாக இருந்தது.

போர்வைக்குள் இருந்தபடி வெட்கத்தை ஒருபக்கம் தூக்கிப்போட்டுவிட்டு சற்றுமுன் நடந்த எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டிருந்தாள் விதுஷா. ஒரு அசுரத்தனமான வேகமும் வெறியும் இன்று தினேஷின் கண்களில் தெரிந்தன. அதில் வழமையாக தெரிகின்ற காதல் கொஞ்சம் குறைந்து கிடந்தது. அவனது ஒவ்வொரு பிடியிலும் ஒரு அராஜகம் தெரிந்தது. எந்தக்கணத்திலும் அவளுக்காக எதையும் செய்யாமல் எல்லாவற்றிலும் தனது ஆக்கிரமிப்பினை படரவிட்டிருந்த அவனது இயல்பு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.

விதுஷா பயங்கரமாக சுவைத்தாள். களித்தாள. திளைத்தாள். ஆனால், அந்த மாற்றம் ஏன் என்பதுதான் அவளது மண்டையை குடைந்துகொணடிருந்தது. பதில் சொல்லாமல் இவ்வளவு நேரம் எங்கே போய்விட்டான் என்று யோசனையை துண்டித்தபோதுதான் தினேஷ் குளித்து முடித்துக்கொண்டு வெளியே வந்தான்.

தலை துவட்டிய துவாயை ஜன்னல் ஓராமாக இருந்த நீண்ட மரக்கம்பத்தில் விரித்துப்போட்டு விட்டு –

“விதுஷா, உன்னட்ட ஒண்டு கேட்கவேணும்” – என்றான்;.

அவன் கேட்ட தொனி அவளுக்கு சாதாரணமாக தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல், அந்த கேள்வியில் இருவருக்கும் இடையிலான உறவின் கணிசமானளவு குறைந்திருந்ததையும் அவள் உணர்ந்தாள். ஒருவிதமான ஆணாதிக்கத்தொனியாகவே இருந்தது.

அதற்காக விதுஷா ஒன்றும் தனது உரிமையை விட்டுக்கொடுக்கவில்லை.

“என்னடா” – என்றாள்.

“நீ கம்பஸ_க்கு போகும்போது ப்ரா போடுறனியா” என்றான்.

முதல் கேள்வியில் தெரிந்த அதிகாரம் இந்த கேள்வியில் சற்று தணிந்திருந்தது. ஆனாலும் அவனின் முகத்தில் எந்த நக்கலோ நகைப்போ எதுவும் தெரியவில்லை. ஆகவே, அது ஒரு ஸீரியஸான கேள்வியாகத்தான் இருக்கவேண்டும் என்று விதுஷா புரிந்துகொண்டாள்.

“இப்ப வெக்கை காலம். நான் போடுறேல்ல. ஏன்” – என்றாள்.

ஒருவித வெறித்த பார்வையுடன் –

“இஞ்ச பார் எங்கட கிளாஸில வெள்ளக்காரர் மட்டும் எண்டா பரவாயில்லை. தமிழ் – இந்திய கூட்டங்களும் ரெண்டு மூண்டு படிக்குதுகள். அது உனக்கும் தெரியும். பிறகேன், இப்பிடி வகுப்புகளுக்கு வாறனி” – என்று கேட்டுக்கொண்டு கட்டில் பக்கமாக வந்து கால்மாட்டடியில் இருந்தான்.

விதுஷாவுக்கு அவனை பார்க்க முதல்தடவையாக ஒரு விநோதமான பிறவிபோல தெரிந்தது. ஆனாலும் துரிதமாக செயற்பட்டு ஒரு பதிலை எடுத்து அவனை நோக்கி எறிவது என்று முடிவெடுத்தாள். அதேவேளை, அந்த கேள்வியின் அர்த்தம் என்ன, பின்னணி என்ன என்றெல்லாம்கூட தனக்குள் விசாரணையை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தாள்.

தினேஷ_ம் விதுஷாவும் கலந்துகொள்ளும் சகல வகுப்புகளும் இலங்கை அல்லாத மாணவர்களை கொண்டவை. புள்ளிவிவரவியல் பாடத்தின் ரியூட்டோரியல் கிளாஸ_க்கு மட்டும்தான் அந்த நாதாரி வருவான். அவனது பெயர் ஆனந்தன். ‘அடம்’ என்று டீச்சரிடம் தனது பெயரை சொல்லும்போது அவனின் வாயிலேயே குத்தவேணும் போல இருக்கும் விதுஷாவுக்கு.

சுத்த பொம்பிளை பொறுக்கி. எப்ப கிளாஸ_க்கு வந்தாலும் யாராவது ஒரு பெட்டைக்கு பக்கத்தில் போய் இருப்பான். பக்கத்திலிருப்பவள் வெள்ளைக்காரி என்றால் வகுப்பு முழுவதும் அவளோடு சில்மிஷம் பண்ணிக்கொண்டே இருப்பான். விரல்களிலிருக்கும் மோதிரத்தை அல்லது கழுத்திலிருக்கும் சங்கிலியின் வரலாறு பற்றிப்பேசி அந்த சாட்டோடு கண்ட இடத்திலும் தொடுவான். அரைகுறை ஆங்கிலத்தில் அவன் போடும் அரட்டையை விளங்காமலேயே அந்த வெள்ளைக்கார பெட்டையள் சிரிக்கும். பிறகு சிணுங்கும். அதில் அவனுக்கு ஏதோ ஒரு அலாதி பிரியம். இந்த சில்மஷங்களினால் அவனது வலையில் விழுந்த ஓரிரு பெண்களை, தானிருக்கும் மாணவர் குடியிருப்பிலுள்ள அறைக்கு கூட்டிவந்துவிடுவான். சுருக்கமாக சென்னால், அந்த மாணவர் குடியிருப்பில் உள்ளவர்கள் எல்லோரும் அந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இருக்கிறார்கள். ஆனால், இவனோ அந்த குடியிருப்பில் இருப்பதற்காகத்தான் பல்கலைக்கழகத்திலேயே படிக்கிறான்.

விதுஷாவுக்கு ஆரம்பத்திலிருந்தே இவனது போக்குகள் பிடிப்பதில்லை. சந்தித்த முதல்நாளே தினேஷின் கேர்ள் பிரண்ட் என்று தெரியாமல் விதுஷாவுக்கு சாதுவாக லைன் போட்டு பார்த்தான். ஆனால் அடுத்த நாளே, ‘நீங்கள் சிறிலங்கனா’ என்று தொடங்கி தினேஷ் அவனுடன் பயங்கர இறுக்கமாகி நட்புபாராட்ட தொடங்கியவுடன், விதுஷா யார் என்று விளங்கி தான் ஒரு படுபயங்கர யோக்கியவான் போல விதுஷாவிற்கு முன்னால் நல்லபிள்ளையாட்டம் ஆடத்தொடங்கிவி;ட்டான். அந்த நாடகம் அவனுக்கு சுத்தமாக பொருந்துவதில்லை. இருந்தாலும் பயங்கரமாக கஸ்டப்பட்டு நடிப்பான். அவன் விதுஷாவுடன் மாத்திரம்தான் கண்ணை பார்த்து பேசுவான். மற்ற பெண்களுடன் பேசும்போது கண்களை அவர்களுடைய மேடு பள்ளங்களை மேயவிட்டுவிட்டு செவிகளால் மாத்திரம் பேசிக்கொண்டிருப்பான். அதை பார்த்து யாராவது மிரளத்தொடங்கிவிட்டால் உடனே அவர்களின் கழுத்தில் உள்ள சங்கிலி அல்லது போட்டிருக்கும் மோதிரம் என்று ஏதாவது ஒன்றைப்பற்றி கதையை தொடங்கி பேச்சை திசை மாற்றிவிடுவான். “இதேபோல ஒரு சங்கிலியைத்தான் சிறிலங்காவிலுள்ள எனது அம்மாவுக்கு வாங்கி அனுப்ப திட்டமிட்டிருக்கிறேன்” – என்று கூறி, முதலில் மிரண்ட பெண்களை “ச்சீ இவனை போய் அப்படி நினைத்துவிட்டோமே” என்று கவலைப்பட வைத்துவிடுமளவுக்கு உடான்ஸ் விடுவான்;. “ஆனந்தன் என்று சொல்வதிலும் பார்க்க, இவனுக்கு நித்தியானந்தம் என்று பெயர் வச்சிருக்கவேணும்” – என்பாள் விதுஷா.

ஆனால், வகுப்பில் தங்களோடு படிக்கும் ஒரே ஒரு இலங்கையன் என்ற வகையில் தினேஷ் அவனுடன் மிகுந்த நெருக்கமாக பழகுவான். ஆனால், அவன் தினேஷ_டன் சிநேகிதம் வைத்திருப்பதே ஒவ்வொரு தடவையும் விதுஷாவை கண்ணாலே அளப்பதற்குத்தான் என்று எத்தனையோ தடவைகள் விதுஷா எடுத்துக்கூறினாலும் தினேஷ் ஒப்புக்கொள்ளமாட்டான்.

“அவன் மற்றப்பெட்டையளோட பழகிறத வச்சு உன்னையும் அப்பிடி பாக்கிறான் எண்டு நீ வெருளாத” – என்பதுதான் தினேஷின் வழக்கமான பதிலாக இருக்கும்.

இன்று அந்த நாய் தான் ப்ரா போடாதவரைக்கும் தன்னை நோட்டமிட்டு அதனை ஒரு சமூகப்பிரச்சினையாக தினேஷிடம் சொல்ல, அதை ஒரு மிகப்பெரிய தேசிய பிரச்சினையாக தினேஷ் வந்து தன்னிடம் கேட்பதை பார்க்கும்போது விதுஷாவுக்கு ஒரு பக்கம் சினமாகவும் மறுபுறம் இதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை என்ற எரிச்சலும் கூடவே வந்தது.

“என்ன அந்த ஆனந்தன் அறுவானா சொன்னவன்” – என்றாள் பயங்கர கடுப்புடன்.

“யார் சொல்லிறான் எண்டு பிரச்சினை இல்லை விதுஷா” என்று முடிக்கும் முன்னரே பொறுத்துக்கொள்ளமுடியாத ஆத்திரத்துடன் குறுக்கே புகுந்து –

“தினேஷ், நான் ப்ரா போடுறன், போடாமப்போறன். அது வேற பிரச்சினை. ஆனா, அதை இன்னொருத்தன் வந்து உன்னட்ட சொல்லுறான். அதைக்கேட்டுக்கொண்டு வந்து என்னட்ட கேக்குறியடா. உனக்கு வெக்கமா இல்லை” – என்றாள் விதுஷா. நெற்றியை சுருக்கிக்கொண்டு கோபத்தில் தெறித்த அவளுக்கு மீண்டும் வியர்க்கத்தொடங்கியது.

“இஞ்ச வா. அவன் இப்பிடி கேட்டுப்போட்டான் எண்டு அவனை நான் சும்மா விட்டுட்டு வரயில்லை. போட்டு மொங்கிப்போட்டுத்தான் வந்தனான்” – என்றான்.

“ஆ..”

“ஓம். நேற்று, வேலை முடிஞ்சு வரேக்க, கார் பார்க்கில பியர் அடிக்க கூப்பிட்டான் போனன். கொஞ்ச நேரத்தில நல்லா ஏறீட்டுது. உன்ர கதைய எடுத்து இப்பிடிச்சொல்ல தொடங்க எனக்கு விசர் கிளம்பீட்டுது. காரோட சேர்த்து வச்சு சாத்திப்போட்டன். பிறகு கம்பஸ் செக்குரிட்டி கார்ட் வந்துதான், ரெண்டு பேரையும் விலக்கு பிடிச்சு தனித்தனிய அனுப்பி வச்சவன்” – என்று சொல்லி முடித்தான் தினேஷ்.

இது ஏதோ சின்ன பிரச்சினை என்று பார்த்தால், நினைத்ததைவிட பெரிய பிரச்சினையாக நடந்திருக்கிறது என்று அப்போதுதான் விதுஷா விளங்கிக்கொண்டாள். ஆனந்தனுக்கு அடி விழுந்தது அவளுக்கு சாதுவாக ஒரு மகிழ்ச்சியை கொடுத்தாலும், ‘பிறகு ஏன் அவன் சொன்ன ப்ரா விஷயத்தை தூக்கிக்கொண்டு வந்து இவன் கேட்குறான்’ – என்று யோசிக்கும்போது அவளுக்கு மீண்டும் எரிச்சல் கிளம்பியது.

“ஆனந்தனோட உன்ர பிரச்சினைய பற்றி எனக்கு கவலையில்ல. அவனை பற்றி உனக்கு முதலே எத்தினையோ தரம் சொன்னனான். நீதான் அவனுக்கு பின்னால திரிஞ்சனி. உனக்கு இப்ப நான் ப்ரா போடாமலிருக்கிறதை பற்றி என்ன பிரச்சினை” – என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.

“விதுஷா, நீ ப்ரா போடாமல் வீட்டில நிக்குறது வேற. வெளியில போறது வேற நாலு பேர் உன்னை பிழையா பாக்குறதுக்கு ஏன் நீயே காரணமா இருக்கிறாய். இதை யாரும் சொன்னா என்ன, நான் சொன்னா என்ன. உனக்காகத்தானே சொல்லிறன்”

இதைக்கேட்டவுடன் விதுஷாவுக்கு காதுமடல்கள் கொதித்தது. தினேஷின் மனித உருவம் திடீரென பெருத்து பிரம்மாண்டமாகி தன்னை தின்ன வருவது போலக்கிடந்தது. உடனே பொரிந்து தள்ளக்கூடாது என்ற உச்சப்பொறுமையுடன் எழுந்தாள். ஜன்னலோரம் சென்று புகார் மறைந்துகொண்டிருக்கும் கண்ணாடிகளை மெதுவாக திறந்தாள். அதுவரை வெளியே காத்துக்கிடந்த காற்று மெதுவாக உள்ளே பாய்ந்து அவளது முகத்தை கழுவியது. அந்த குளிர்காற்றின் உபயத்தில் அவளது மனமும் கொஞ்சம் லேசாகியது.

கட்டில் பக்கமாக வந்து தினேஷின் முன்பாக இருந்தாள்.

“தினேஷ், நீ என்னை முழுசாக பார்த்தவன் எண்டதுக்காக, இந்த உடம்பை இப்படித்தான் எனக்க காட்டவேணும் இப்படித்தான் மற்றவனுக்கு காட்டவேணும் எண்டு நீ எனக்கு உத்தரவு போடுறது எனக்கு பிடிக்கேல்ல. எனக்கெண்டு ஒரு சில சௌகரியங்கள் இருக்கு. தேவைகள் இருக்கு. அதுபோல உனக்கும். அதுகளில நான் ஒருபோதும் தலையிட்டது கிடையாது. ஆனால், அதுக்காக நீ சொல்லிறத கேக்கமாட்டன் எண்டு சொல்லவரயில்ல”

“இல்லை, நான் என்ன சொல்ல வந்தனான் எண்டா விதுஷா…”

“விளங்குது தினேஷ். உனக்கு சொந்தமானதை நான் மற்ற ஆக்களுக்கு காட்டிக்கொண்டு திரியிறன் எண்டு நீ குழம்புறாய். நீ அனுபவிக்கிறத நீ மட்டுமே பார்க்கவேணும் எண்ட வரட்டு எண்ணம் உனக்கு. அது கொஞ்ச நேர்ததுக்கு முன்னாடி நல்லாவே தினேஷ். நீ மறைச்சாலும் அது காட்டிக்கொடுத்துட்டுது”

தினேஷ் நிலத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனை ஒருவித குற்ற உணர்ச்சிக்குள் தள்ளிவிட்டதை பார்க்க விதுஷாவுக்கு பாவமாக இருந்தது. மெதுவான குரலில் இப்பிடி சொன்னாள்.

“தினேஷ். நான் ஒருத்தருக்கு முன்னாலையும் உரிஞ்சு விட்டுட்டு போய் நிற்கயில்லை. ப்ரா எண்டுறது பொம்பிளையளிண்ட ஆடையில ஒரு அங்கம். அதை ஏன் நாங்கள் போடுறனாங்கள். போட்டால் எவ்வளவு அந்தரம், போடாட்டி எவ்வளவு வசதி எண்டடுறது எல்லாம் நீ ஒரு பொம்பிளையா இருந்தாத்தான் உனக்கு விளங்கப்படுத்தலாம். இதில உன்னை இருத்தி எத்தினை மணித்தியாலம் கதைச்சாலும் உனக்கு அது விளங்கப்போறதில்லை. என்னதான் நீ என்ர போய் பிரெண்ட் எண்டாலும் செர்டின் திங்கஸ் தனிமனித வசதிகள் சார்த்தது. அவரவர் உடல் தேவைகள் சார்ந்தது”

“அது விளங்குது விதுஷா. வெள்ளைக்காறியள் அப்பிடி திரியுறாளவ. ஐ டோன் கேயர். ஆனால், கம்பஸில எத்தினையோ சிறிலங்கன் தமிழ் பெடியள், அவங்களை விட இந்தியன் சீக்கி பெடியள் எல்லாம் இப்பிடி நீ திரியிறத நாறின மீன பூனை பார்க்கிற மாதிரி பார்த்துக்கொண்டு திரியிறாங்கள். நான் இல்லாத நேரம் உனக்கு பின்னால ஓல் ரெடி அப்பிடித்தான் அலையுறாங்கள். நான் கண்டிருக்கிறன்” – என்றான் தினேஷ்.

விதுஷாவுக்கு பெருத்த மார்பு. இடை சிறிது. ப்ரா அணியாவிட்டால் எதிரில் வருபவர்களின் பார்வையை நிர்மூலம் செய்துவிடும். அந்த பருத்த படைப்புக்கள் திமிறிக்கொண்டு வெறுமையாக கிடப்பதைப்போலவே அதிர்ச்சியூட்டுபவை. சிறுவயதிலிருந்தே அவளது வளர்ச்சியோடு போட்டிபோட்டு வளர்ந்த அவளது மார்புகள் அவளை தெரிந்த எல்லோரையும் வயது வித்தியாசம் இல்லாமல் சபலம் கொள்ள வைத்திருக்கிறது. அதனை ஒரு தடவையேனும் தொட்டுவிடவேண்டும் என்பதற்காக அவளுடன் படித்தவர்கள் படிப்பித்தவர்கள் எல்லோரும் போட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் சிலவேளைகளில் பரிதாபமாக ரசித்துவிட்டு, “சரி. உன் வறுமை அந்த நிலையிலிருக்கிறது” என்று வெறுப்புடன் கண்டும் காணாமல் விட்டுவிடுவாள்.

அதில் தினேஷ் காண்பிக்கும் கலாரசனையைக்கூட விதுஷா அடிக்கடி அவனிடம்கூறி அவன் வெட்கப்படுவதை பார்த்து ரசிப்பாள். கம்பஸில் இவளை கடந்துபோன பிறகும் திரும்பிப்பார்த்துக்கொண்டு தங்களது உதடுகளை பிசைந்துகொண்டு போகாத ஆபிரிக்க இளைஞர்களே இல்லை எனலாம். பெரிய மனது படைத்த இவள் மாத்திரம் எதையும் கண்டுகொள்ளாமல் அவர்களது அங்கலாய்ப்புக்களை இயற்ககையின் ஒருவித பிரள்வாக தனக்குள் தட்டிப்போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பாள்.

ஆனால், இதுபற்றி இவ்வளவு காலமும் தினேஷ் அவ்வப்போது குத்தலாக கூறியிருந்தாலும் இதுபோல சீரியஸாக ஒருநாளும் பேசியது கிடையாது. அதுவும், யாரோ ஒருத்தன் சபலப்படுவதற்காக இவளை ப்ரா அணியுமாறு தினேஷ் கூறியது விதுஷாவுக்கு பயங்கரமாக எரிச்சலூட்டியது.

“தினேஷ். திரும்பவும் சொல்லிறன். கம்பஸில போற வாறவனுக்கெல்லாம் கண்ணை குத்தாத மாதிரி என்னால உடுப்பு போட ஏலாது. அவங்களுக்கு கண்ணை குத்துதெண்ணடா அது அவங்கட பிரச்சினை. எனக்கு என்ர உடம்புக்கு எது வசதியாக இருக்குதோ அதைத்தான் நான் போடுவன். இது எனக்கான சுதந்திரம். இதில யாரும் தலையிடக்கூடாது. என்னை பார்க்கிறதால அவங்களுக்கு ஒரு மாதிரி கிடக்கு எண்டால் அவங்களை பார்க்கவேண்டாம் எண்டு சொல்லு”

வக்கிர கூட்டம் ஒன்றுக்கு வக்காலத்து வாங்குவது போல தினேஷ் தொடர்ந்து தன்னிடம் பேசியது விதுஷாவுக்கு கோபத்தையும் அழுகைகையும் ஒருங்கே கொண்டுவந்தது. குரல் தளுதளுக்க சொல்லிவிட்டு தலையணையை இழுத்து அதில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

இந்த மாதிரியான சப்ஜக்ட் பேசும்போது வழக்கமாக குறும்புத்தனமான சிக்கன சிணுங்கல்களால் நிறைந்திருக்கும் அந்த அறை அன்று அவ்வாறிருக்கவில்லை. ஒருவித மர்ம இருள் சூழ்ந்தது போலக்கிடந்தது.

குற்றஉணர்ச்சியோடு விதுஷாவுக்கு அருகில் போய் அவளை ஆலிங்கனம் செய்து “I am sorry” என்று சொல்லிக்கொண்டு விம்மி அடங்கிய அவள் உதரத்தில் அழுத்தி ஒரு முத்தமிட்டான். அப்போதும்கூட ப்ரா அணியாத அவள் மார்புதான் இருவரது நெருக்கத்தையும் தடுத்துக்கொண்டிருந்தது.

அந்த அணைப்பும் பிணைப்பும் அவளை அவனிடம் மீண்டும் இழப்பதற்கு போதுமானதாக இருந்தாலும் அவளுக்கு உள்ளேயிருந்த கோபமும் அதற்கான காரணமும் முற்றாக தணியவில்லை.

இம்முறை விதுஷாவின் ஆக்ரோஷம் தினேஷை முற்றிலுமாக ஆக்கிரமித்துக்கொண்டது.

ஒரு மணிநேரத்தின் பின்னர் எதுவுமே நடவாதவர்கள் போல இன்னொரு உலகத்தின் வழியாக எழுந்தார்கள். காமம் எவ்வளவு கலக்கலான மருந்து என்று இருவரும் மீண்டுமொருமுறை உணர்ந்துவிட்டது போலக்கிடந்தது. இருவரும் கலகலத்து பேசினார்கள். குளித்தார்கள். இழித்தார்கள். மீண்டும் அந்த அறை பூப்பூத்துக்கொண்டது.

ஆனால், அவனுக்கான அந்த புன்னகையை மீண்டும் முகத்தில் கொண்டுவருவதற்காகத்தான் அவள் முதலில் நடந்தவைகளை எல்லாவற்றையும் போலியாக மறைத்தாள் என்பது அவனுக்கு தெரியாது. விதுஷா மீண்டும் வழமைக்கு வந்துவிட்ட திருப்தியுடன் காணப்பட்டான் தினேஷ்.

அடுத்தநாள் கிளாஸிற்கு புறப்பட்டான். தான் வேலைக்கு போகவேண்டியிருந்ததால் வரவில்லை என்று விதுஷா முதல்நாளே கூறியிருந்ததால் தனியாகவே கம்பஸிற்கு நடந்தான். தனிமை என்பது எப்போதும் சிந்தனை பலூன்களுக்கு இலவசமாக கிடைக்கும் காற்று. அவை எப்பேற்பட்ட சின்ன பலூன்களையும் ஊதிப்பெருப்பித்துவிடும். விதுஷாவிடம் முதல்நாள் பேசிய விடயம் சுமூகமாக அடங்கிப்போனாலும் தினேஷின் மனசுக்குள் அது துருத்திக்கொண்டேயிருந்தது.

அதே யோசனையில் போய் கொண்டிருந்தவன் பாதையில் எதிர்ப்பட்ட பெண்களைக்கண்டு மிரண்டான். வழமைக்கு மாறாக ஒரு குற்றவாளியாக நடந்து கொண்டிருப்பதாக உணர்ந்தான்.

வழக்கமான பாதையால் சென்று வகுப்பறை உள்ள டிப்பார்ட்மென்ற் படிகளால் கீழே இறங்கினான். லீஸாவும் அதேவேகத்தில் படிகளால் இறங்கியவள் தற்செயலாக தினேஷை கண்டவுடன் –

“Hey Dinesh, where is Vithu” – என்று கேட்டுக்கொண்டு கிட்டத்தட்ட பதினாறு பற்களையும் காட்டினாள்.

தினேஷ_ம் விதுஷாவும் படிக்கும் அதே வகுப்புக்கு வருபவள் லிஸா. ஆஸ்திரேலிய நாட்டுக்காரி. பூனைக்கண்களும் மிருதுவான கேசமும் ஜொலிக்கும் அழகு. விதுஷாவுடன் நல்ல பழக்கம். விதுஷாவின் அட்வைஸினால் ஆனந்தனுக்கு மடங்க மறுத்த பெண்களில் லீஸாவும் ஒருத்தி.

“Hey, she has work today” என்று சொல்லிவிட்டு ஒரு கனத்த புன்னகையை உதிர்த்தான் தினேஷ்.

“Oh..ok” என்று முயல்குட்டி போல துள்ளிக்கொண்டு இவனுக்கு முன்பாகவே படிகளில் குடுகுடுவென்று இறங்கினாள்.

அப்போது தினேஷின் உள்ளிருந்த நாகம் எழுந்தது.

அவனது கட்டுப்பாட்டை மீறி பாய்ந்து சென்ற கண்கள் அவளது மார்புகளில் விழுந்தது. அவள் அவனைவிட நான்கு படிகள் முன்னே சென்றுவிட்ட காரணத்தால் மேலிருந்து பார்த்தபோது அவளது ப்ரா அணியாத பருத்த மார்புகள் தினேஷின் மீது போலியாக ஒட்டிக்கிடந்த சகல நல்லவன்களையும் கொன்று போட்டது. குடுகுடுவென அவள் இறங்கியபோது அதற்கேற்ப உள்ளே கட்டுப்பாடின்றி உதறிக்கொண்டிருந்த அந்த மார்புகள் தினேஷ் முதல்நாள் உடுத்திருந்த சமூக பிரக்ஞை கொண்ட கலகக்குரலோன் என்ற வேடத்தை உருவி அம்மணமாக்கியது. சுருக்கமாக சொன்னால், அவனுக்குள் ஆனந்தன் விஸ்வரூமாக பெருத்து நின்று “போடாங்…..” என்று நாக்கை கடித்துக்கொண்டு நின்று ஏதோ ஒரு துசண வார்த்தையால் பேசிவிட்டு காறித்துப்பினான்.

சட்டென்று சுய நினைவை வரழைத்துக்கொண்டு நேரே பார்த்தான். படிகளில் கவனமாக காலை பதித்துக்கொண்டு பின்னால் யாராவது தன்னை பார்க்கிறார்களா என்று பார்த்தான். தன்னைப்போல யாரும் பார்க்கிறார்களா என்றும் பார்த்தான். எவரும் இல்லை. அமைதியானான்.

முன்னே திரும்பியபோது “see you soon” என்று சொல்லிக்கொண்டு குடுகுடுவென்று ஓடினாள் லீஸா. இப்போது தினேஷின் பார்வை அவளது புட்டத்தில் பாய்ந்தது. ஆனால், முன்புபோல அல்லாமல் சட்டென தன்னை சுதாரித்துக்கொண்டான்.

அவனது அகக்கண்களின் முன்னால் விதுஷா வந்துநின்று சிறிதாக ஒரு மந்திர புன்னகையை உதிர்த்து மறைந்தாள்.

••

குறிப்பு

(National No Bra Day started back in 2011 and has become an annual social media campaign on every October 13. Its an initiative for breast cancer support and awareness)

ஆ.பா வின் கதை ( சிறுகதை ) / இலங்கை

14095899_879713812134430_3547870256259523700_n

மாயா the great ; and Nostalgic ஒரு சாபக்கேடு

குரூரம் என்பது இயற்கையின் அடிப்படை நியதி
-Sade-

பொய் உங்களுக்கு ஒரு கதகதப்பான ஆடை போல இருந்தாலும், நீங்கள் குளிர்காலத்தை ரசிக்க விரும்பினால் நிர்வாணமாய் இருப்பது அவசியமாகும். பாதுகாப்பாக இருத்தலும் ஒரு வகை ஒழுங்கீனமே, நீங்கள் சரியாக எந்த உண்மையையும் நேசிக்கவில்லை என்று அர்த்தம். எனக்கு பொய் சொல்லுவது பிடிக்காது அதற்காக உண்மையையும் எந்த நேரமும் சொல்லுவது சலிப்பை தரும், அதனால் நான் அதிகம் பேசாமல் இருந்து விடுவதை விரும்புகிறேன், நீங்கள் எப்போது ஒரு பொய்யை என் முன் இயல்பாக சொல்ல ஆரம்பிக்கின்றீர்களோ அப்போதே நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். ஆனால் நீங்கள் சொல்லும் பொய் எனக்கு இலகுவாக புரிந்துவிடும் எப்படி என்றா கேட்கிறீர்கள், எதை நாங்கள் சரியாக செய்கிறோம் என்று நினைத்தாலும் அதன் வழியிலே நாம் செலுத்தப்படுகிறோம் என்று அர்த்தம். எனக்கு இதுவரை பொய் சொல்லியவர்களில்்நீங்கள் எந்த ரகம் என்பதை உங்களுக்கும் எனக்குமிடையிலான உறவே தீர்மானிக்கும் என்றேன். சந்தர்ப்பம் சூழ்நிலை என்றாள், சந்தர்ப்பம் சூழ்நிலை பொய் சொல்ல வைத்துவிடும் என்றால் பொய்களுக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளை நாங்கள் உருவாக்கிகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
சரி வேறு விடயத்திற்குள் நுழைவோம்,

we live the real taste of love என்றேன் yes we are .. உனக்கு மூளை குழம்பித்தான் போய்விட்டது நான் மறுபடியும் கொஞ்சம் குழம்பியிருந்தேன், நான் அமரந்திருக்கும் கதிரை ஒரு முதிரை மரக்கதிரையா பிளைவூட்டா என சின்னிவிரற் பகுதியில் கொஞ்சம் துருத்திக்கொண்டிருந்த நகத்தால் ஆராய்ந்து கொண்டிருந்தேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் டொக்டர், முதலில் இந்த குளிசையை எடுத்துக்கொள்ளுங்கள் கொஞ்சம் தூக்கம் வரும் பிறகு பேசிக்கொள்ளலாம், மாலை பொழுதில் கொஞ்சம் நடந்து கொண்டே உங்களது கதைகளை கேட்கலாம் என்று நினைக்கிறேன், குளிசையை விழுங்கி எவ்வாறு தூக்கத்தை வரவைப்பது, சுத்த பைத்தியக்காரத்தனமாக இல்லையா? டொக்டர் அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள், அந்த வானொலியை எப் எம் இல் விடுங்கள், இனிய கானம் என்ற இளையராஜாப்பாடல்கள் ஒளிபரப்பாகும். ம்ம் ஆனாலும் குளிசையை
நிச்சயமாக டொக்டர் உங்கள் விருப்பத்துக்காக குளிசையை எடுத்துக்கொள்கிறேன், தூக்கத்திற்காக இளையராஜா அவ்வளவு தான்.
நீளமாக ஒரு கொட்டாவி பிறகு தூக்கம். வைத்தியசாலை முன் முற்றத்திலிருந்த கினிக்கோழிகள் கத்ததொடங்கிய பொழுது நான் நித்திரை விட்டு எழுந்தேன்.
நான் கட்டில் கால்கள் முறிந்து விட்டதாக கனவு கண்டேன் ‘கிறீச் கிறீச்’ டொக்டர் டொக்டர் இங்கு படக்கென்டு வாங்கோ, கனவில் கட்டில் கால்கள் முறிவது பற்றிய சத்தத்தை கேட்பது எவ்வகையான குறியீடு
‘கிறீச் கிறீச் ‘ டொக்டர் என்னை பைத்தியமென்பார்கள் கனவுக்கு பிறகும் அதே கட்டில் கால்கள் முறியும் சத்தம்.
இல்லை அது கினிக்கோழிகளின் சத்தம். அப்படியே கோவத்தில் மாயா பற்களை நறுநறுக்கும் போது கேட்கும் சத்தத்தின் சில டெசிபல்களே அதிகம்.
இந்த தேநீரைக் குடியுங்கள் இப்போது நேரம் நான்கை கடந்து விட்டது. நான் ஒரு அரை மணிநேரங்கள் அமைதியாக இருக்க விரும்புகிறேன் டொக்டர்,
அதன் பிறகு எதையும் பேச விரும்புகிறீர்களா? ஏதாவது பழைய ஞாபகங்களை மீள என்னிடம் சொல்ல ஆசைப்படுகிறீர்களா? இல்லை வெறும் அமைதியாக அமைதியாக மட்டும் இருக்க விரும்புகிறேன். மௌனம் ஒரு மொழியல்ல , நினைவுகள் ஒரு சாபக்கேடு
அது எவ்வாறு என்னை பிணைந்து வைத்திருக்கிறதோ. ம்ம் தேநீர் கொஞ்சம் கசப்பாகவே இருக்கிறது, அது எவ்வாறு பிணைந்து வைத்திருக்கிறதோ அதற்காக அது எங்களை தன்னுடன் வைத்திருக்க பிரியப்படுகிறது, நினைவுகளுடன் இருப்பவன் பைத்தியக்காரன், அவன் மௌனத்தின் ருசியைக் கண்டடைவதில்லை, இப்போது என்னைப்பாருங்கள் நான் அதிலிருந்து எவ்வளவு தூரம் விலகி வந்திருக்கிறேன்.

மாலை நான்கு ஐம்பதற்கு அந்த குறுகலான பாதையை அடைந்தோம். பச்சை நிற ஆடைகளை நீளமான கொடிகளில் தோய்த்து காயப்போட்டிருந்தார்கள் சில நீல நிற ஆடைகள் சில வைக்கோல் மஞ்சல் பழுப்பு நிற ஆடைகள். டொக்டர் இது ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியின் பிரம்மையை தருகிறது, பிரம்மை என்பதை விட அதுவே உண்மை எனக்கொள்ளலாம். இன்னொரு கொடியில் வெறும் சதுர துண்டாக்கப்பட்ட துணிகள் , அவை பெண்நோயாளர்களின் மாதவிலக்கு துணிகள் அது ஒவ்வொரு முறையும் சுத்தமாக்கப்பட்டு வழங்கப்படும் அதற்காக தனித்தனி ரோக்கன்கள் கூட இருக்கின்றன. ஆடைகளுக்கு பொருத்தமான கோர்ட் மற்றும் ரையைப்போல இது பெண் நோயாளிகளுக்கு பிரத்தியேகமானது. நிச்சயமாக டொக்டர் மாயா முதன் முதலாக அந்த நாட்களில் உள்ள சிரமம் பற்றி சொன்னபொழுதே அதை ஒரு மனைவிக்குரிய நிலையிலிருந்து சொல்லியிருந்தாள், அதை விட அப்படியானதொரு நாளில் ஒரு பிரிவு வந்தது என்று நினைக்கிறேன்.
அப்படியென்றால் அந்த பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்கிறீர்களா? இல்லை நிச்சயமாக இல்லை இது ஒரு தந்திரம் எப்படியென்றா கேட்கிறீர்கள் இந்த கணத்தினை மறப்பதற்கான தந்திரம் பழைய கதைகளை கூறிக்கொள்ளல்.
நீங்கள் அந்த பச்சை ஆடையை நாளை முதல் அணியவேண்டியிருக்கும்
அது எனக்கான பிரத்தியேக ஆடை என்றால் மட்டும் அணிந்து கொள்வதில் சிரம்மிருக்காது.
அது எப்படி இருக்க வேண்டும்
அதன் மார்புப்பகுதியில் நாளொன்றுக்கு ஒரு ரோஜா வீதம் கொழுவிக்கொள்ளவும், நாள் முழுவதும் அஅது வாடாமல் இருப்பதற்கு தண்ணீர் விடக்கூடியவசதிகளையும் நிச்சயம் கொண்டிருக்கவேண்டும்.
இது கொஞ்சம் சிரமமாக இருக்கும்,
ஆனாலும் டொக்டர் ஒரு உயிரின் மேலே இன்னொரு உயிரைப்படரவிடுதல் போன்ற கலையை இயற்கையே செய்கிறது, அது நான் சிறுவனாக இருந்த காலத்தில் அறிந்து இருக்கிறேன் எனது வீட்டின் பின் வளவிற்குள் பெரிய தென்னை நின்றது, அதை சுற்றி ஒரு ஆடையை போர்த்தியதைப்போல ஒரு கோவ்வை படர்ந்தது, அந்த தென்னை தனியாக நிற்பதை விரும்பவில்லை என்பதால் கொவ்வையை தன்னுடன் இணைத்துக்கொண்டது, பிறகு கொவ்வை சிறு சிறு புழுக்களை தன்னுடன் இணைத்துக்கொண்டது. அதன் பிறகு அந்த தென்னை மரத்தில் ஒரு கிளி அதன் பிறகு அந்தக்கிளியின் குஞ்சுகள் ,கொவ்வைக்காய்கள் திடீரென சிவப்பு நிறத்திற்கு மாறின, கொவ்வை காய்கள் கிளிகளால் பற்றிக்கொள்ளப்பட்டன, கொவ்வை இலைகளை புழுக்கள் அரித்தன, தென்னம்பூவின் வாசத்தில் தங்கியிருந்த வண்டுகள் தென்னையை அரித்தன பிறகு தென்னையும் கொவ்வையும் இல்லாமல் போனது. கிளிகள் வேட்டையாடப்பட்டன, புழுக்கள் கோடையில் வதங்கி இறந்தன, பிறகு வண்டுகளின் உடல் கோதுகள் எஞ்சின இவையெல்லாம் ஒரு இருபது வருடகாலத்தில் நடந்து போன விளைவுகள், தங்கியிருத்தலின் விளைவுகள் ஏதோவொருவகையில் அழிவை சார்ந்தன என்பதை நம்புகிறீர்களா? …
உங்களை இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்ததற்கான காரணத்தை அறியமுடியாதிருக்கிறேன், அது உண்மையாக கடினமானதாயிருக்கும் காரணம் நான் என்னை ஒரு நோயாளியாக உங்கள் முன் நிறுத்தி வைக்கப்போவதில்லை, அதற்காக நான் மிகப் பிரயத்தனம் மேற்கொண்டு நடிப்பேன்,
அந்த குறுகலான பாதை மெல்ல விரிவடைந்து அந்த குளக்கரையை அடைந்தது.
அவளின்ட குரல கேக்கோனும் போல இருக்கு ஆனா அவளோட பேசுறத கைவிட்டு பல மாதங்கள் ஓடிக்கடந்து விட்டன, டொக்டர் நான் கொஞ்சம் இந்த இடத்திலிருந்தே இந்த குளக்கரையை ரசிக்க விரும்புகிறேன்.
ஆனால் உங்களை என்னால் தனியே விட்டுப்போக முடியாது
அப்படி என்றால் அந்த கரையில் வளர்ந்திருக்கும் கற்றாளைச் செடியின் ஒரு கிளையை வெட்டி அருகில் வைத்துவிட்டு சென்று விடுங்கள், அல்லது கற்றாளை செடியையாவது ஒருவர் தனித்திருப்பதை தவிர்ப்பதற்காக இன்னொரு உயிரை பழிவாங்கும் அந்த பாவச்செயலை செய்து விடாதீர்கள் அதற்காக தான் கூறினேன், ஆகவே நான் திரும்பிவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் திரும்பிச்செல்லுங்கள்.
ஒரு புன்னகையுடன் நீங்கள் என்னை கடப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நான் பொய் சொல்லும் சந்தர்ப்பத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள அமைதியாக இருந்து விடவேண்டும் என்ற காரணத்தை சொல்லிக்கொண்டேன்,ஆனால் சிலவற்றை மறந்து போயிருப்பது இயலாதவொன்றாக இருக்கிறது, அதற்காக இயலாத காரியங்களை மற்றவர்களிடம் கூறி ஆறுதல் தேடும் நிகழ்வு சலிப்புத்தருவதாக இருப்பதால் அமைதியாக அவர்களை விலகி சில பழைய விடயங்களை நினைத்துக்கொள்வேன், மன்னித்து விடுங்கள் டொக்டர் என்று மனதிற்குள் கூறிக்கொண்டே அன்றைய தினத்தின் வேதனைகளில் உறைந்து போனேன். அந்த மலையின் மேற்தளத்தில் நின்று அலறினோம். நானும் நீயும் சிறுவர்களாக இருந்த காலத்தில் உண்மையாக சொன்னால் உனக்கு என்னை விட இரண்டு வயது அதிகம், அதிலும் நீ இயற்கையின் ஓட்டத்தை இரண்டு வருடங்கள் முன்னதாக கடந்திருக்கிறாய், இயற்கையின் ஓட்டத்தை மட்டுமல்ல உடலின் உற்பத்திகளையும் மனதின் உற்பத்திகளையும் சேர்த்தே. உடலின் உற்பத்தி காமம் ஆம் நிச்சயமாக, காமம் உடலியக்கம் சார்ந்தது என்று ஒரு முறை கூறினேன். அது எவ்வாறு அப்படி ஆசை ஏற்படும் போது மலையில் ஏறி அதன் உச்சத்திற்கு சென்று கூச்சலிட்டுப்பார் , அதன் தன்மையற்றிருக்கும். அன்றிலிருந்து பல தடவைகள் மலையின் உச்சிக்கு தனியே சென்று அலறியிருக்கிறேன். சில சமயம் கால்களில் முருகைக்கற் பாறைகள் கிளித்து, இரத்தம் சொட்டும் கால்களோடு உனது வீட்டின் கதவைத்தட்டுவேன். கால்களில் மருந்திட நெருங்குவாய் ஸ்பிரிட்டை கால்களில் ஊற்றிவிடுவாய் கால்கள் நெருப்பில் வதங்குவதைப்போல எரியும், குறி சற்றே எழும்பி சிறுநீர் துளித்துவிடும், பிறகு காற்று பட தியானத்தின் பின் உள்ள அதே மனநிலையில் இருப்பேன். மாயா உன்னை எனக்கு பிடிக்கும் ஒரு தடவை கட்டியணைத்து கொள்ளவா, கைகளை இறுக்கி பிடித்து மலையின் உச்சத்திற்கு கொண்டு சென்றாய் அந்த உச்சியில் நின்று அலறினோம். பிறகு கட்டியணைத்துக்கொண்டோம் எல்லாம் மாறியது. அதன் பிறகு நீண்ட நாட்களின் யோசனை என்னை முடக்கிப்போட்டிருந்தது. அதன் பிறகு நான் உன்னை சந்திப்பதை கைவிட்டேன், சிலநாட்களின் பின் உன்னைப்பார்க்க வந்தேன், உன்னை காணவில்லை அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபொழுது அவர்கள் நீ எங்கோ சென்றுவிட்டதாக சொன்னார்கள், ஓ மாயா
உனது வீட்டிற்குள் நுளைந்தேன், நீ முகம் பார்க்கும் பெரிய கண்ணாடி தூசிபடர்ந்து ஒரு மந்திர உலகுக்கு நுழையும் ரகசியப்பாதையாக காட்சி அதன் அதன் மேற்தளத்தில் கரப்பான் பூச்சி முட்டைக்கூடு ,பிறகு அந்த வெளிச்சம் வரும் ஓட்டைக்கல்லில் ஏதோ ஒரு கடிதம் எனது கண்ணை உறுத்த அதை மெல்ல பிரித்து அவதானிக்கிறேன் ஒரு ஓவியம் வரையப்பட்டிருந்தது ஒரு கொவ்வைச்செடியில் வளர்ந்த ரோஜா தேர்ந்தெடுக்கப்பட்ட வர்ணங்களை தேர்ந்தெடுத்து இருந்தாய் ஓரேஞ் மற்றும் சிவப்பு நிறங்களால் கொவ்வைப்பழம் மற்றும் ரோஜாவின் நிறம், பச்சை கறுப்பு பழுப்பு நிறங்களாலான இலைகள் மற்றும் கொடி அதியற்புதம். அதன் அடிப்பகுதியில் எனக்கு…..
ஒரு தொலைபேசி இலக்கம்
அதை அழுத்துகிறேன் ஹலோ ஹலோ , எந்த பதிலும் இல்லை , மலையின் உச்சத்திற்கு சென்று கத்திப்பார்க்கிறேன், சில பேப பர்களை வீதியிலோ வீட்டிலோ காண நேர்ந்தால் அதை எடுத்து கடித்து விழுங்குவதை பழக்கப்படுத்தினேன் அது ஒரு குணமாக மாறிப்போனது, அதன் பிறகு ஒரு சில விடயங்களே எனக்கு ஞாபகம் இருந்தது ஓம் நிச்சயமாக எனது அம்மாவின் பெயர் கூட சரியாக ஞாபகம் இல்லை.
அப்படி என்றால் உங்களது அப்பா அம்மா யாருடைய பெயரையும் நீங்கள் ஞாபகப்படுத்த முயற்சிக்கவில்லையா?
ஓ டொக்டர் வாருங்கள், இல்லை அதற்கான அவசியம் இல்லை எனது பெயரில் கூட சில பகுதிகளை மறந்து இருக்கிறேன், இது எனது பெயராக இருக்கலாம் என்ற யோசனை மாத்திரம் இருக்கிறது .நல்லது, அப்படி என்றால் பழையதை!
இல்லை நிச்சயமாக பழையதை ஞாபகப்படுத்தவில்லை டொக்டர்
சரி நாங்கள் புறப்படலாமா? நிச்சயமாக …

மிகையான கறுப்பு சாயம் நிரப்பப்பட்ட தேநீரை அன்று அதிகாலைடொக்டரும் நானும் அருந்தி முடித்தோம் . பிறகு வெளி போட்டிக்கோவில் நின்று அந்த முன் பகுதியை அவதானித்தேன் பெரிய தென்னை அதனை சுற்றிய கொவ்வைமரத்தின் பழங்கள் அஅவை சீமெந்து தரையில் விழுந்து சிதறி இரத்தத்தின் பிசுபிசுப்புடன் இருப்பதை உணர்ந்தேன். இது பிரம்மையா அல்லது உண்மையா, இருத்தலுக்கும் இல்லாமைக்கும் இடையிலான புனைதல் வாழ்க்கை அதன் அர்த்தம் தான் இதுவாக இருக்கிறதா? தெரியவில்லை
ஆக நீங்கள் இந்த வைத்திய சாலையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு சம்மதிக்கிறீர்களா ?
ஓம் டொக்டர்
சிகிச்சை என்பதை விட இந்த நிலையில் நான் இங்கிருந்து செல்வது நான் அனைத்து பழைய விடயங்களையும் இல்லாமல் செய்வது போலாகும் , நினைவுகளை தாங்குதல் ஒரு துரதிஷ்டம் அது எனக்கு வாய்த்திருக்கிறது
இல்லை
நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் அதற்கு முதல் இறுதியாக ஒரு முறை அவளிடம் பேசினால் தான் என்ன
நிச்சயமாக , தொலைபேசி இலக்கம் ஏதாவது
சைபர் ஏழு ஏழு …….
ர்ரூட் ர்டூட்
யார் நீங்கள்.
நான் நானே தான்
நீ நீ நீ இருக்கிறியா எங்க இருக்கிற ?

ஓம் வாழ்தல் என்றது எவ்வளவு சிக்கலானது இருப்பா இல்லாமையா என்ற சிக்கலினூடே அந்த பதிலை அவளிடம் சொன்னேன்
ஓம் இருக்கிறன்
Iii I just alive

ஆதி.பா

கோட்பாடு ரீதியாக ஒரு புத்தகத்தை அணுகுவது எப்படி? ( நீங்களும் படிக்கலாம் வரிசை ) / அழகியசிங்கர்

images-1

download

எம் டி முத்துக்குமாரசாமி எழுதியுள்ள நிலவொளி எனும் இரசசிய துணை என்ற கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும் என்ற புத்தகத்தைப் படித்தேன். முன்னுரையில் இலக்கியம் பெரும்பாலும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களையே வாசக அனுபவமாக்குகிறது என இலக்கியப் பிரதி பற்றி எனக்கொரு கருத்து உண்டு என்று குறிப்பிடுகிறார் எம்எடிஎம். இதை கடந்த முப்பது வருட இலக்கியக் கோட்பாட்டு வாசிப்புகளிலிருந்து அவர் அணுக்கமாகப் பெற்ற பார்வையாகும் என்கிறார். இதைச் சாதாரண வாசகனே அவன் படிப்பனுவத்திலிருந்து உணர முடியாதா?

இத் தொகுப்பில் உள்ள கட்டுரை ஒன்றில் சுப்பிரமணிய பாரதியார் மகா கவியே என்பதை நிரூபிக்கிறார் எம் டி எம். இக் கருத்தை ஜெயமோகனுக்கு பதிலாக தெரிவிக்கிறார். அப்படி சொல்லும்போது பாரதியார் கவிதைகளில் பிரஞ்ஞையின் கரை உடையும் தருணங்கள் வாசக அனுபவமாக எளிதில் வசப்படுகின்றன என்கிறார். பாரதியார் குறித்து அவர் கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

மொழியியல், இலக்கிய விமர்சனம், மனோதத்துவம், பெண்ணியம் ஆகிய சிந்தனைகளை முற்றிலும் புதியதாக மாற்றுகிறார் ஜøலியோ கிறிஸ்தவா. மேலும், பெண்ணிய எழுத்தைப் பற்றி குறிப்பிடும்போது உடலுறுப்புகளை எழுதுவது உடல் உந்துதல்களை எழுதுவது ஆகாது என்கிறார் கிறிஸ்தவா. மனிதனுக்கும் மொழிக்குமான எல்லா உறவுகளிலும் தன்னிலை மற்றவையின் ஊடாட்டம் நிகழ்வதைக் கவிதையை முன்னிறுத்தி துல்லியமாக எடுத்துரைக்கிறார் கிறிஸ்தவா. கிருஸ்தவாவைப் பற்றி விவரித்துக்கொண்டே போகிறார் எம்டிஎம். படிக்க படிக்க புதிய சிந்தனையை உருவாக்குகிறது. கிறிஸ்தவா புத்தகங்களைத் தேடிப் படிக்கத் தூண்டுகிறது.

‘கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு,’ என்ற கட்டுரையில் பிரம்மராஜனின் கவிதைகளைத் தொடர்ந்து பயில்வதால் கிடைக்கும் வாசக அக லயம் அபூர்வமானது என்று குறிப்பிடுகிறார்.

புனைவுகளாலும் எதிர் புனைவுகளாலும் மட்டுமே ஆளப்பட்ட ஈழத்துத் தமிழ்ப் போர்ச் சூழலும் போருக்குப் பின் வாய்த்த சூழலும் றியாஸ் குராணாவுக்கு பிரமிளின் கவிதையில் உள்ள இறகை விடுத்து பறவையைக் கவனிக்கும் ஆற்றலைத் தந்துள்ளது.

இது அதிகம் பாவிக்கப்பட்ட பறவை

இன்னும் பழுதடைந்துவிடாமல் என்று கவிதை போகிறது.

பொதுவாக புனைகதையாளர்களையும் தத்துவாதிகளையும் சரித்தர ஆசிரியர்களையும் அரசியல்வாதிகளையும் விட கவிஞர்களையும் அவர்களின் கவிக் குரல்களையும் நம்பலாம் என்கிறார் முத்துக்குமாரசுவாமி. இந்தக் கருத்துக்கு நானும் உடன் படுகிறேன்.

காலவழுவமைதி, சினிமாச்சோழர், மஹ்ஹான் காந்தி மஹ்ஹான், ஆகஸ்ட் 15 போன்ற ஞானக்கூத்தன் கவிதைகள் நுட்பமாக நவீனமான எதிர்ப்புக் கவிதையின் வடிவத்தைக் கட்டமைத்தவை என்கிறார். பிரமிளின் அரசியல் பிரக்ஞை விழிப்பு கண்டது 1980 களில்தான் என்கிறார்.

எம்டிஎம் குறிப்பிட்ட சில கருத்துக்களை மேலும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

- நகுலனில் நான் – நீ உரையாடல் களன் பெரும்பாலும் சமத்துவமுடையதாக இருக்கிறது.

- ஆத்மநாம் கவிதை தன்னிருப்பை முழுமையாக நிராகரிக்கிற தன்மை கொண்டது.

- சி மணி கவிதையில் வெளியே செல்லமுடியாமல் மாட்டிக்கொள்ளும் தன்னிலையை அவதானிக்கிறது.

பசுவய்யாவின் கவிதையிலோ நீ என்ற பிறன்மை முழுமையான கொடூரமாகி, நரகமாகிவிடுவதால் அதை எதிர்த்துப் போராடி தன்னை நிலை நிறுத்துகிறது என்கிறார் எம்டிஎம். உதாரணமாக சவால் என்ற பசுவய்யாவின் கவிதையைக் குறிப்பிடுகிறார்.

போர்ஹெசின் கவிதைகளை முன் வைத்து எம்டிஎம் கூறுபவை : ‘மனம் தன் போக்கில் அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே போர்ஹெஸ்ஸின் கவிதைகள் நினைவுக்கு வந்தன .’

படிக்கும்போது வெகு சாதாரணமாகத் தோன்றக்கூடிய போர்ஹெஸ்ஸின் கவிதைகள் அனுபவம் – அகம் – வரலாறு – பிரபஞ்சம் என்ற தொடர்பை வெளிப்டுத்தி மொழி போதாதிருப்பதைப் பல இடங்களில் சுய சுட்டுதலாகக் கொண்டிருக்கின்றன. இதற்கு உதாரணமாக பல கவிதைகளைக் குறிப்பிடுகிறார்

போர்ஹெசின் கவிதைகளை கடந்த 25 வருடங்களாக வாசிக்கிறவர் எம்டிஎம். மற்ற கவிஞர்களின் கவிதைளை விட அதிகமாக வாசித்திருப்பது போர்ஹெயின் கவிதைகள் என்கிறார். எம்டிஎம் போர்ஹெயின் கவிதைகளை பற்றி குறிப்பிடும்போது, அவருடைய தந்தையைப் பற்றி ஒரு குறிப்பும் கொடுக்கிறார். அவர் தந்தைக்கு ப்ரெனிங்க் என்ற கவிஞரின் கவிதைகள் பிடிக்குமாம். போர்ஹெஸ÷க்குப் பிடித்த கவிஞர்களில் ப்ரௌனிங்கும் டென்னிசனும் உண்டு உற்சாகமாகக் கூறி அப்பாவின் ரகசிய வாசிப்பு உலகத்தைத் திறந்து வைக்கிறார் எம்டிஎம்.

மௌனிக்கும் போர்ஹெஸ÷க்கும் உள்ள பல ஒற்றுமைகளைப் பற்றி யாரும் எழுதியிருக்கிறார்களா என்பதை தேடிப் பார்க்கிறார் எம்டிஎம். தன் அடையாளம், பிறன்மை என்பதன் விளையாட்டைத் தன் கலையின் மையமான சரடாக மௌனியிடமும், போர்ஹெஸடமும் காண்பதாக குறிப்பிடுகிறார். நான் மௌனியை மட்டும் படித்திருக்கிறேன். போர்ஹேûஸ அவ்வளவாய் படித்ததில்லை. ஆதனால் எம்டிஎம் இந்தக் கட்டுரையைப் படித்தப்பிறகு போர்ஹெஸ் எழுதிய எழுத்துக்களையும் படிக்க விரும்புகிறேன். எம்டிஎம்மின் இந்தக் கருத்து எவ்வளவு தூரம் உண்மையானது என்று அறியவும் விரும்புகிறேன்.

அதேபோல் நவீன கவிதைகள் என்பது தான் – பிறன்மை என்பற்றிற்கிடையேயான உரையாடலே என்றொரு இலக்கிய கோட்பாடு பிரசித்தம் என்கிறார்.

தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே தன் அகம் நோக்கிப் பேசுகின்ற கவித்துவக் குரல் பாரதியால் கட்டமைக்கப்படுகின்றது என்கிறார். பாரதியார் கவிதைகள் இன்னும் நவீன வடிவமாக இருக்கின்றன என்று பல உதாரணங்கள் மூலம் நிரூபிக்கிறார்.

‘இரசனை விமர்சனம் என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அரசியலை அப்படியே இலக்கியத்திற்குள் கொண்டு வருகிய விமர்சன முறையாகும்’ என்று சாடுகிறாரர் எம்டிஎம். இதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி என்று விவரமாக சொல்ல வேண்டும். பெரும்பாலோர் ரசனையின் அடிப்படையில்தான் விமர்சனம் செய்வார்கள். இன்றைய தமிழ் சூழலில் யாரும் ஒரு புத்தகத்தைப் படிக்கவே தயாராக இல்லை. அப்படிப் படித்தாலும் அது குறித்து எதுவும் எழுதத் தயாராய் இல்லை. அப்படியொரு சூழலில் முதலில் விமர்சனம் செய்வதை தமிழில் ரசனை மூலமாக ஆரம்பித்து வைத்தவர் க நா சு. எளிதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்கிற முறையும் இதுதான். ஆனால் எம் டி எம் இப்படி சொல்கிறார் : அவர் சார்ந்து இருக்கிற விமர்சன முறை பின்னை காலனிய, பின் நவீனத்துவ முறை என்கிறார். இந்த மாற்று விமர்சன முறையை கையாளுபவர்கள் பலர் ஒரே மாதிரியாக இதை அணுகுவதாக எனக்குத் தெரியவில்லை.

காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் என்ற கட்டுரையில், தமிழில் சுந்தர ராமசாமிக்குக் காப்ஃகாவின் படைப்புகளின் பெரிய பிரமிப்பு இருப்பதாக குறிப்பிடுகிறார்.

ஏனெனில் தந்தையுடனான மகனின் உறவு என்பது பௌதிக தந்தையுடனான உறவு மட்டுமல்ல. அது மரபு, அரசு, குரு, அதிகார பீடம், விதி, தேசம், சட்டம் ஆகியவற்றோடு ஒருவன் கொள்கிற உறவின் தன்மையையும் சொல்லக்கூடியது என்கிறார்.

கோபோ அபேயை ஜப்பானிய இலக்கியத்தில் காஃப்கா, பெக்கெட், ஐயனஸ்கோ ஆகிய எழுத்தாளர்களோடு ஒப்பிடப்பட்டு விவாதிக்கப்படுபவர் என்கிறார்.

சூஃபி இசையைப் பற்றி குறிப்பிடும்போது ராஜஸ்தானின் புகழ் பெற்ற, மறைந்த நாட்டுப்புறவியல் அறிஞர் பதம்பூஷண் கோமல் கோத்தாரியைப் பற்றி விவரிக்கிறார். அவருடன் சூஃபி இசையைச் சேகரிக்க பலமுறை பாலைவன கிராமங்களில் அலைந்த அனுபவத்தை படிக்க படிக்க நாமும் அந்த அனுபவத்தை உணர்வதுபோல் உணரச் செய்கிறார.

ஒரு கதையைப்போல் சில கட்டுரைகளை எம்டிஎம் விவரித்துக் கொண்டு போகிறார். அதில் ஒன்று உஸ்தாத் பில்மிலலாஹ் கான் என்ற கட்டுரை. பத்ரி என்ற நண்பர் மூலம் உஸ்தாத்தைப் பார்த்துப் பேசுகிற நிகழ்ச்சியை விவரிக்கும்போது அக்கட்டுரை படிப்பவரையும் பரவசப்படுத்தத் தவறவில்லை.

ஒரு ராகத்தை ஒரு உணர்வை உணர்ச்சியை இந்துஸ்தானி இசைக் கலைஞன் அடையாளம் காண்கிறான். அந்த உணர்வின் எல்லைகளைப் பரிசோதிக்கிறான். அதன் நுட்பங்களை வடிவாக்குகிறான், சக மனிதனிடம் பகிர்ந்து கொள்கிறான் அவனுக்கும் அந்த உணர்வும் தேடலும் அர்த்தமாகிறதா என்று கவனித்துக் கவனித்து மேலே போகிறான். என்று எம்டிஎம் விவிரித்துக்கொண்டே போகும்போது, வேற ஒரு பார்வையில் இந்துஸ்தான் இசையை ரசிக்க வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.

அஞ்சலி என்ற தலைப்பில் பாடகர் ப்ரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பற்றி குறிப்பிடுகிறார். புதிய பார்வையில் எழுதிய எம்டிஎம்மின் கதையான பத்மநாபனின் கூடு குறித்து ஒன்றை குறிப்பிடுகிறார். அந்தக் கதை பிரசுரமான தினத்தில்தான் ஸ்ரீனிவாஸ டிரைவ் இன்னில் சந்திக்கிறார். மூளை வளர்ச்சி குன்றிய ஒருவன் பிரமாதமான பாடல் வரிகளை சொல்வது பற்றிய கதை அது. எங்கே உன் கதாபாத்திரம் சொல்லும் நல்ல வரி ஒன்றைச் சொல் பார்க்கலாம் என்கிறார் ஸ்ரீனிவாஸ் எம்டிஎம்மைப் பார்த்து. என் ஆத்மாவைக் கரைத்து உன் விழிகளுக்கு அஞ்சன மை தீட்டவா? என்ற வரியை வாசித்துக் காட்டுகிறார் எம்டிஎம். ஸ்ரீனிவாஸ் புன்னகைத்தபடி அந்த வரியை மெதுவாக வாசித்துக் காட்டினாராம். பத்மநாபனின் கூடு கதைப் பிரதி கிடைக்குமென்றால் அதை ஸ்ரீனிவாஸற்கு மனப்பூர்வமாக சமர்ப்பணம் செய்வதாக உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார் எம்டிஎம். இத் தொகுதியில் இரண்டு தலயாத்திரைகள் பற்றியும், பாகேஸ்ரீராகம் பற்றியும், எம்டிஎம்மின் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும் சுவாரசியமாக சொல்லிக்கொண்டே போகிறார்.

இப்புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டு விதமாக நான் உணர்கிறேன். ஒன்று எம்டிஎம்மின் தனிப்பட்ட வாழ்வியல் அனுபவம். இந்தப் பகுதியை அவர் பல சிறு கதைகளாகவோ நீண்ட நாவலாகவோ எழுதியிருக்கலாம். ஆனால் அவர் சுய சரிதமாக எழுதி உள்ளார். இன்னொரு பகுதியில் அவர் பல புத்தகங்களைப் படித்த அனுபவத்தையும், பல எழுத்தாளர்கள் பற்றிய கூற்றையும் விவரித்துக்கொண்டு போகிறார். கோட்பாட்டு முறையில் இப்புத்தகத்தை அணுக எனக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லோரும் விரும்பி வாசிக்கக் கூடிய புத்தகம் இது என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

*

download

நிலவொளி எனும் இரகசிய துணை – கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும் – எம் டி முத்துக்குமாரசாமி – பக்கங்கள் : 263 – பதிப்பு : 2014 – விலை : ரூ.200 – வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம்
திருச்சி மாவட்டம், தொலைபேசி : 0432 273444

***

எழுதித்தீராப்பக்கங்கள் / பொ.கருணாகரமூர்த்தி. ( பெர்லின். )

62265

நான் இப்போது செல்வத்துடன் கடுங்கோபத்தில் இருக்கிறேன். ‘காலம்’ தொடக்க காலமுதல் அவருடன் பழக்கம் இருந்தும் அவரது எழுத்துமீது எனக்குப்பரிச்சயம் இருக்கவில்லை. மறவன் எழுதினாற்றானே? இப்போது அவரே ஒரு நினைவோடையை அகழ்ந்திருக்கிறார் அலைகள் அங்கதத்துடன் எம்பி விழுகின்றன என்று முகநூல் மற்றும் வலைத்தளங்கள் மூலம் தெரிந்துகொண்டதும் ’எனக்கொரு பிரதி உடனே அனுப்பும்’படி நானே வாய்விட்டுக்கேட்டும், அவர் இன்னும் அனுப்பிவைக்காததில் என் ‘ரௌத்ரம்’ அதிகமாகியதில் அதைத்தணிவிக்கும் பியருக்கான செலவும் எனக்கு அதிகரித்துள்ளது. சில விஷயங்களை அடக்கமுடியாது, விபரிக்கத்தேவையில்லை. அதேபோல் நான் ஒரு புத்தகத்தை வாசித்தாகவேண்டும் என்று தீர்மானித்தால் சீனாவரைபோயாகிலும் அதைக் கொள்ளையடித்து வரத்தயங்கமாட்டேன். ஆனால் அதுக்கெல்லாம் அவசியமில்லாமல் அண்மையில் பெர்லினுக்கு வந்திருந்த ஓவியர் கிருஷ்ணராஜா எனக்கொரு பிரதியைக் கொண்டுவந்து தந்தார்.

எழுதுபவர்களும் சமையற்கலைஞர்களைப்போலத்தான், அவ்வப்போது சுவையைக்கூட்டுவதற்காக உப்பு மிளகு உள்ளி, ஏலம், கராம்பு, பெருங்காயமன்ன வெஞ்சனங்களைக் கூட்டியும் குறைத்தும் கலப்பது இயல்புதானே? செல்வத்தைப்போலவே நானும் அவர் புலம்பெயர நேர்ந்த காலத்திலேயே புலம்பெயர்ந்திருந்தேனாகையால் அந்நிய நாடொன்றில் புலம்பெயர்ந்ததோ, ஒருகூரைதேடியலைந்ததோ வேலைதேடியலைந்த நிகழ்வுகளோ, எனக்கு அதிகம் ஆச்சரியமூட்டவில்லை.

புதினத்தின் ஆரம்பத்தில் இவர் என்ன Steering ஐ ‘சேறிங்’ என்கிறார், Ballantine ஐ ‘வலண்டைன்’ என்கிறார், என்று எனக்கும் யோசனையாகத்தான் இருந்தது. ஜெர்மனியிலும் Reichelt என்றொரு பல்பொருள் அங்காடியிருக்கிறது. அதைச் சரியான ஜெர்மன் உச்சரிப்பில் ‘றைக்செல்ட்’ என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் வந்தகாலம் தொட்டு நம்மவர் சொல்லுவது Richard என்றுதான். அப்படிச் சொன்னாற்றான் நம்மவருக்குப்புரியும். அப்படியே லண்டனிலும் Lewisham என்றொரு இடமுண்டு. எம்மவர் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொருமாதிரி உச்சரிப்பர். அதிகமானோர் சொல்வது லூசியம். நல்ல பசியிலிருந்தீர்களாயின் அது உங்களுக்குச் ‘சூசியம்’ என்றுங்கேட்கும். அதையேதான் செல்வமும் செய்திருக்கிறார், இயல்பாகவுள்ளது.

செல்வம் தன்அனுபவங்களை எல்லாம் மீட்கையில் அவரோடு உட்கார்ந்து கேட்டால் எப்படி விபரிப்பாரோ அப்படியான உயிர்மொழி அது. புதினத்தின் ஆரம்ப அத்தியாயங்களில் தன் புலம்பெயர்வையும், இறுதி அத்தியாயத்தில் குடும்பத்துடன் அரைமனதுடன் கனடாவுக்குப் புலம்பெயரும் நிகழ்வையும் சொல்லுமவர் இடைப்பட்ட அத்தியாயங்களில அவரது பாரீஸ் வாழ்வனுபங்களையும் அங்கு அவர் சந்திக்கவும், சேர்ந்துவாழவும் நேர்ந்த மனிதர்களைப்பற்றியும் அவர்தம் வாழ்வையும் குணவியல்புகளையும் பழக்கவழக்கங்கள்பற்றியும் அங்கதநடையுடன் எங்கெங்கு உப்பு, உறைப்பு, தித்திப்பு சேர்க்கவேண்டுமோ சேர்த்துச்சுவைபடச் சமைத்திருக்கிறார். எழுதுபவர்கள் நிஜத்தில் வெள்ளந்திகள் அல்ல. அவர்தம் எழுத்தில் எதை எங்கே சேர்க்கவேண்டும், எதையெங்கே தவிர்க்கவேண்டும் எனும் ரசவாதத்தைத் தெரிந்தே வைத்திருப்பார்கள். அவ்வகையில் செல்வமும் சிறந்த ரசவாதியே.

பாரீஸ் வாழ்வனுபவத்தைச் சொல்லும் அவரது நினைவுகள் தாயகத்துக்கும் சென்று சென்று மீள்கிறது. வலியவே வந்து பனையோலையால் வீடுவேந்துதரும் வியேந்தம்மான், வளவுப்பனையில் கள்ளுக்கட்டி ஆசையோடு வார்த்துத்தரும் கார்த்தியேசு அப்பு, கார்த்தியேசு அப்புவைச் சிறுவன் செல்வம் வியப்போடு கேட்கிறார்: “ அப்பு…………… பனைமரத்திலிருந்து மேலே வானத்தைப் பார்க்கும்போது என்ன தெரியும் ”.

அப்பு சொன்னார்: “மேல வானம் முழுக்கச் செம்மனசுகளும், பேய்களுந்தான்…….. நெடுகலும் சண்டைபிடிச்சுக்கொண்டு நிப்பினம்”

மொழிதெரியாமல் இடறுப்பட்டுக்கொண்டிருக்கும் செல்வத்துக்கு செல்வராசா எனும் நண்பனின் காதலுக்குத்துணைசெய்ய வேண்டி மொழிபெயர்ப்பும் செய்ய நேருகிறது. செல்வத்தின் மொழிபெயர்ப்பில் நண்பனின் விருப்பம் முழுவதையும் அவன் காதலியால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ‘ஒரு சேங்கு…….. இன்னொரு சேங்கனைக் கூட்டிவந்திருக்கிறான் என்றுதான் நினைத்துக்கொண்டு போயிருப்பாள்’ என்கிறார். ஏறக்குறைய மறந்தேபோயிருந்த இந்தச் ‘சேங்கன்’ என்ற சொல்லை நான் பலகாலத்தின் பின் கேட்கையில் ஏதோ கனவில் கேட்டதைப்போல் இருந்தது. ஹான்ட்சம் செல்வராசாவை அவ் அழகி தன்வீட்டுக்கு வருமாறும் அழைக்கிறாள். அவளுக்கு பரிசளிக்க ஒரு வைன்போத்தலையும் வாங்கிக்கொண்டு போகுது செல்வராசா. அங்கே போனதும் ஏற்கெனவே அவளுக்கொரு பிள்ளை இருப்பது தெரியவர அதிர்ச்சியடைந்து கொண்டுபோன வைனையும் அவளுக்குகொடுக்காமல் எடுத்துக்கொண்டு ‘சுத்தபத்தமாக’வே திரும்பிவருகுது சேங்கு செல்வராசா.

ஜெர்மனியைவிடவும் பாரீஸில் வீட்டுக்கஷ்டம் மிகஅதிகமாக இருந்தது. ஒரே அறையில் ஒரே கழிப்பறையுடன் எப்படி 8—–10 இளைஞர்கள் அல்லாடினார்கள், குமைந்தார்கள் என்பதைச் செல்வத்தின் வார்த்தைகளில் படிக்கையில் மனது கனக்கிறது.

புதினத்தின் ஏறக்குறைய ஒவ்வொரு அத்தியாயத்திலும் பெண்கள் வருகிறார்கள். இளைஞன் செல்வம் அப்பருவத்துக்கான தலைக்கடமையாக அவர்களை நன்றாகவே கவனித்து வைத்திருக்கிறார். ‘பொன்மலர் என்பவள் ஊரிலேயே அதிரவைக்கும் பேரழகியாம். ‘அந்த ‘ஸ்டைல் குமரி’ கோவிலுக்கு போகும்போது ஒருநடையோடுபோய், வேறொருவித நடையில் திரும்பிவருவாள்’ என்று நுணுக்கமாகச்சொல்பவர். அவள் அப்படி நடக்கையில் குதிக்கும் அவள் கேசத்தைப் பார்ப்பதற்காகவே நாலைந்து இளைஞர்கள் அவள் பின்னால் வருவார்களாம். அழகிகளுக்கு அதுவும் அவர்கள் அழகு வயசுப்பயல்களை அலைக்கிறது என்பது தெரிந்துவிட்டால் இப்படியான அட்டகாசங்கள் அழிச்சாட்டியங்கள் பலவற்றைப் பண்ணித்தொலைப்பார்கள்.

ஒரு பெண்ணியவாதியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது இந்நாவல்பற்றிய கதை வந்தது. ‘நல்லநாவல்தான் ஆனால் ஆசிரியன் அத்தியாயத்துக்கு அத்தியாயம் பெண்ணுடல்மீது ஆக்கிரமிப்பு செய்வது ஏற்கமுடியாதது’ என்றார். ஈழத்து இலக்கியவாதிகள் பலரின் வெறுப்பைத் தன் குயுக்தியான கருத்துக்களால் சம்பாதித்துக் கொண்டிருக்கும் இலக்கியர் ஒரு நூலுக்கான முன்னுரையில் ஒரு பழையகதையொன்றைக் குறிப்பிட்டிருப்பார்.

ஒரு தேசத்தின் அரசி தன் அரண்மனையில் திருடிய இளைஞன் ஒருவனை யானையால் மிதித்துக்கொல்லும்படி ஆணையிட்டிருப்பாராம். கொலைத்தண்டனையை நிறைவேற்றும் நாள் அவனது உடலைத் தலைமட்டும் வெளியே தெரியும்படிவிட்டு மண்ணில் புதைத்துவிட்டுக் கொலையானைக்காகக் காத்திருக்கையில் அவ்விளைஞனோ இடியிடித்துச் சிரிப்பானாம். ஆச்சரியத்தில் அரசியார் “ அடே……..ஏன்டா சிரிக்கிறே……….. காரணத்தைச் சொல்லிவிட்டுச்சிரி ” என்று அதட்டவும், “ பாருங்க அரசியாரே………. இன்னும் 5 நிமிஷத்தில உங்கள் யானைகள் என் தலையை நசுக்கிவிடப்போகின்றன, இருந்தும் விலகும் உங்கள் தாவணியைப்பார்த்து பாழாகப்போகும் இந்த உடம்பு கிளுகிளுக்குதே” என்றானாம்.

வேலைதேடி அலைந்துதிரிந்த செல்வத்துக்கு கடைசியாக தரையை ‘மொப்’ பண்ணும் வேலையொன்று ’தாட்சூணின்’ உதவியால் கிடைத்துவிடுகிறது. சொன்ன வேலையைச் சரியானபடி புரிந்துகொண்டு செய்ய மொழியறிவு ‘மக்கர்’ செய்கிறது. அந்தவேலை அடுத்தநொடியில் போய்விடுமோ, அடுத்தநாள் போய்விடுமோ, இல்லை நிலைக்குமோ என்பதற்கு எதுவித உத்தரவாதமுமில்லை, ஆனாலும் இவருக்கு வேலைகளைப் பணிக்க சிக்கென்று சீருடையில் வரும் வெள்ளை மேலாளரின் அழகு செல்வத்தைப்போட்டு அலைக்கின்றது. இவரது பெயர் பொறித்த சுட்டியை இவரது சேர்ட்டில் அவள் குத்திவிடுகையில் அவளது கண்கள் மிக அணுக்கத்தில் வர, அவளது கேசம் இவரது தோளில் விழுந்துபுரண்டு மயிலிறகாற்போலும் தடவுகிறதாம். மனதில் அவள் அழகு ஆக்கிரமிக்க ஒவ்வொரு அறையாக ‘மொப்’ பண்ணிக்கொண்டு வருகையில் மீண்டும் முதலாவதாக ‘மொப்’ பண்ணிய அறைவந்துவிட ‘ஓஹோ………… நான் பணிசெய்யும் விமானநிலையத்தின் இத்தளம் வட்டவடிவானது’ என்பதையும் கண்டுபிடித்துவிடுகிறார் செல்வம்.

என்றைக்குமே ஆணுக்கு பெண்தான் அதிசயமாகவும் ஆசைப்படவைப்பவளாகவும் ஆக்கிரகிப்பவளாகவும் இருக்கிறாள். இது இயற்கை நியதி. செல்வம் தன்னைக்குழப்பிய, தொந்தரவு செய்த பெண்களைப்பற்றி எழுதியிருப்பதை ஒரு குறையாக என்னால் காணமுடியவில்லை.

அழகி பொன்மலரின் பெற்றோர் பணிநிமித்தம் கொழும்பிலிருக்கிறார்கள். பாட்டி விக்டோரியாவுடன் வாழ நேரும் அவளின் தம்பிகளில் ஒருவனுக்கு தோசையில் அலாதி பிரியம். பாட்டியோ அவிப்பது இலேசென்று தினமும் பிட்டைத்தான் அவித்துக்கொடுக்கிறார். கடுப்பாகிப்போன அவன் ஒரு ஞாயிற்றுக்கிழமை பாட்டியின் தோழிகள் தேவாலயத்தால் திரும்பும்வேளை பார்த்து வீட்டின் வாசலில் ஒரு பலகையில் எழுதிவைக்கிறான்.

‘விக்டோரியாவுக்கு தோசை சுடத்தெரியாது’

செல்வத்தின் பாரீஸ் வாழ்வின் ஆரம்பத்தில் தனது மைத்துனர் ஒருவரின் அறையில் 9 அறைவாசிகளுடன் வாழுகின்றார். புதினத்தின் பின் அத்தியாயங்களில் செல்வம் தனக்கான ஒரு அறையில் வாழ்கிறார். செல்வம் புதிய அறைக்கு மாறுகிறாரா இல்லை மைத்துனர்தான் அறையைச் செல்வத்துக்குக் கொடுத்துவிட்டு ஏதும் பிறதேசத்துக்குச் சென்றுவிடுகிறாரா என்பது சொல்லப்படவில்லை.

ஆரம்பத்தில் செல்வத்தின் மைத்துனரின் அறையில் அவர்கூட வாழ்ந்தவர்களில் ’தாட்சூண்’ முக்கியமானவர். ’தாட்சூண்’ ஓரளவு வசதியான குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் பாரீஸ் நோக்கிவந்தவர்.

‘தாசன்’ என்பது அவர் இயற்பெயர், பணியிடத்தில் அவனது முதலாளியால் ‘தாட்சூண்’ என்று அழைக்கப்பட அவ்விளைஞன் தமிழர்கள் வட்டத்திலும் ‘தாட்சூண்’ என்றே ஆகிவிடுகிறான். செல்வத்தின் மைத்துனரின் அறையில் 9வது ஆளாகத்தங்கியிருக்கும் அவன் ஆரம்பத்தில் புதிதாக வந்தவர்களை விஸாவுக்குக்கூட்டிப்போக, மற்றவர்களுக்காக கடைகண்ணிக்குபோய்வர, சமையலுக்கெல்லாம் ஒத்தாசையாக இருக்கிறான். எப்போவாவது ஒருநாளைக்கே பல்லைத்தேய்க்கும் அவன் , இவர்கள் எங்காவது வெளியே போவோம் எனக்கேட்டால், ஈரக்கையால் முகத்தைத்துடைத்துவிட்டு போட்டிருந்த சட்டையைக் கழற்றி உதறித்திரும்பவும் போட்டுக்கொண்டு கிளம்பிவிடுவான்.

செல்வத்தின் கூட்டுக்களில் ஒருவருக்கு விஸாவில் அட்டிரஸ் மாற்றவேண்டியேற்பட்டது. அன்று அவனைத் தாட்சூணுக்குக்கூடப் போகமுடியவில்லை. மெட்றோ பிளானைப்பார்த்து தானே தனித்துச்செல்ல முடிவெடுக்கும் செல்வம் குறித்த மெட்றோவில் போயிறங்கிக்கொண்டு யாரையோ விசாரிக்கவும் அவர் கிறைம் பொலீஸில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுகிறார், விஷயமறியாமல் அங்கே காத்திருக்கையில் கறுப்பு இளைஞன் ஒருவனைப்பிடித்துவந்து அங்கே பொலிஸார் மொத்துவதைக்கண்டதும் தான் தவறான இடத்துக்கு வந்ததை உணர்ந்துகொண்டு வேறொருவரிடம் அட்டிரஸைக்காட்டிக் கேட்கிறார். அவரோ இவர்களைச் சுற்றுத்தடமொன்றால் நடத்திக்கூட்டிவந்து இவர்களின் வீட்டிலேயே விட்டுவிடுகிறார்.

தனக்கிருந்த விமானநிலையத்தில் ‘மொப்’பண்ணும் வேலையைத் தன் செல்வாக்கினால் செல்வத்துக்கு எடுத்துக்கொடுக்கும் ‘தாட்சூண்’ ஒருநாள் இறந்தும் போய்விடுவான், அவன் இறந்த சேதியே பாரிஸ்தமிழ் வட்டகைக்கே ஆறு மாசத்தின்பின்தான் தெரிய வருகிறது. ‘தாட்சூண்’ கொஞ்சக்காலத்தால் இறந்துவிடுவதை செல்வம் முதல் அத்தியாயங்களிலேயே சொல்லிவிடுகின்றார். இப்புதினம் தனித்தனிகட்டுரைகளாக ‘தாய்வீடு’ பத்திரிகைக்காக எழுதப்பட்டதால் இது நேர்ந்திருக்கலாம்.

செல்வம் எமக்கு அறிமுகஞ்செய்யும் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.

இலங்கையில் 1983 இல் வெடித்த இனக்கலவரத்தை பாரிஸிலுள்ள சிங்களவர்களுக்கு அடித்தால்தான் தணிக்கலாமென்று சிங்களவர்களைத் தேடியலையும் பேர்வழிகள், தண்ணிப்பார்ட்டியொன்றில் கலட்டிப்பையன் ஒருவனுக்கு அடையான்கள் (அல்ஜீரியாக்காரர்கள்) எப்போதோ அடித்ததைக் கேள்விப்பட்டுவிட்டு உணர்ச்சிவசப்பட்டு கோட்டுக்குள் வைன்போத்தல் ஒன்றை ஒளித்துகொண்டுபோய் வீடு திரும்புகையில் மெற்றோவில் எதிர்ப்பட்ட அடையானின் தலையைப் போத்தலால் அடித்து உடைக்கும் மறவன்கள்.

விஸாத்தொலைந்துபோனால் ஃப்றெஞ்ச் ‘ஊத்தைப்பெண்கள்’ மூலம் திரும்பவும் எடுத்துக்கொடுக்கும் ’செல்வாக்கு’ள்ளவரும், இரத்தினக்கற்கள் வியாபாரம் செய்வதாகச் சொல்லிக்கொண்டு எப்போதும் கோட்டும் சூட்டுமாகத்திரியும் ‘மாஸ்டர்’ எனப்படும் ஒருவரை மரியாதையின் நிமித்தம் தன் அறைக்கு விஜயம்செய்யும்படி அழைப்பார் செல்வம். ‘நேரம்கிடைக்கும்போது ஒருநாளைக்கு வருகிறேன்’ என மெத்தனமாகச் சொல்லிவிடும் அவர் சிலநாட்கழித்து ஒருநாள் தானாகவே ‘ நான் இப்போ அங்கே வருகிறேன்’ எனப்போன் பண்ணுவார். வந்தவரைக் கனத்துடன் இரண்டுநாட்களுக்கு உயர்ரகத்தீர்த்தமளித்து உபசரிக்கின்றார்கள். இடம்கண்டுகொண்ட மாஸ்டருக்கோ திரும்பிப்போகும் உத்தேசம் இல்லை. பிறகுதான் அவரைத்தூள் கேஸொன்றில் பொலிஸ் தேடிக்கொண்டிருக்கும் விஷயம் அறையோருக்குத் தெரியவருகிறது.

பெர்லினிலும் எம் ஆரம்பகாலத்தில் மொழிதெரியாமல் இடக்குப்பட்ட நம்மவருக்கு விஸா எடுத்துக்கொடுக்க, சமூக உதவிகள் அலுவலகத்தில் வெட்டிப்பேச, மருத்துவமனைகளுக்கு இட்டுச்செல்ல, சோர்ந்த நேரத்தில் புத்துணர்ச்சியளித்தலன்ன ஊழியங்களுக்குப் பல ‘ஊத்தைப்பெண்கள்’ இருந்தார்கள். சமூக உதவிப்பணம் கிடைத்தானதும் அவர்தம் சம்பாவனையாய் அவர்களை ஒரு போத்தல் விஸ்கியால் நனைத்துவிட்டாற்போதும்.

வேலைதேடி மத்தியகிழக்கு நாடொன்றுக்கு வந்து அதே எஜமானர்களுடன் ஃபிரான்ஸுக்கு வந்துசேர்ந்த துணிச்சலான ஒரு தமிழ்ப்பெண், ஒரு இக்கட்டில் அவர்களைவிட்டு அமுதன் எனும் மலையகத்தோழரின் உதவியுடன் வெளியேறி வேறுவழியின்றி இதே ஒன்பதுபேர்கள் அறையில் ஒரு சிலநாட்கள் தங்கநேருகின்றது. அவளும் அறையின் தோழர்கள் எல்லோருடனும் விகற்பமின்றி நல்லவிதமாகப் புழகுகிறாள். தங்க அனுமதித்ததுக்குப் பிரதியுபகாரமாக அறையை ஒழுங்குபடுத்துகிறாள், சுத்தம் செய்கிறாள், அவர்களுக்குச் சமைத்துக் கொடுக்கிறாள், அவளின் வருகையால் அந்த அறையே புதுக்கோலம் கொள்கிறது. எல்லோருடனும் பிரியமாக இருந்துவிட்டு புழங்கிவிட்டுக் ‘கண்ணம்மா’ ஒரு நாள் லண்டனுக்குச் சென்றுவிடுகிறாள். அவள் சென்றதும் பரியந்தம் மிக்க உறவொன்றைப் பிரிந்ததைப்போலும் அங்கே ஒரு பெரிய வெற்றிடம் ஒன்றை அறையின் பிரமச்சாரிகள் அனைவரும் உணர்கிறார்கள். அவ்வுணர்வை மனுஷ்யபுத்திரனும் ஒருகவிதையில் அற்புதமாகச்சொல்வார். – வந்தாள் இருந்தாள் பேசினாள் சென்றாள்- அறையில் பொருட்கள் எல்லாம் முன்னர் இருந்த மாதிரியே இருக்கின்றன- ஆனாலும் ஒரு வெற்றிடம்- என்பதாக. தோழர்களில் யார் யார்ரெல்லாம் பிரமச்சாரிகள் என்று அவள் செல்வத்திடம் விசாரித்துமிருந்தாள். பிரமச்சாரிகளில் யாராவது ஒருத்தன் அவளை மணந்திருக்கலாம், காலங்கடந்தபின்னரே ‘வரங்கொடுக்கும் தேவதைகள் வந்தபோது தூங்கினேன் – வந்தபோது தூங்கிவிட்டுக் காலமெல்லாம் ஏங்கினேன்’ என்கிற மேத்தாவின் கவிதையைச் சொல்லிச்சொல்லி மறுகி அங்கலாய்க்கின்றனர்.

செல்வத்தின் திருமணநிகழ்வின் பார்ட்டிக்கு வந்திருந்த குகன் என்பவர் துணிச்சல்மிகுந்த பெண்ணான மலர்விழியுடன் தோளில்கைபோட்டு “ஒருவர்மீது ஒருவர் சாய்ந்து ஓடம்போலே ஆடலாம்” எனும் எம்.ஜி.ஆரின் படப்பாடலுக்கு வீடியோக்காரர் சொன்னபடி ஸ்டெப்போட்டு ஆடிவிட அக்காணொளிநாடா ஊருக்கும்போனதுமட்டுமல்லாமல் போதாததுக்கு உள்ளூர் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட, அதன்விளைவாக குகனுக்கு ஊரில் பேசி முற்றாகியிருந்த சம்பந்தம் நின்றுபோகிறது.

இதுபோன்று புதினம் முழுவதும் செல்வம் காட்டும் வேடிக்கையும், இரக்கத்தையும்கோரும் பாத்திரங்களும் மனத்திலிருந்து அழிக்கமுடியாதவர்களகி விடுகிறார்கள். 99% சதவீதமும் வாழ்ந்த வாழும் பாத்திரங்களைக் கொண்டு இயங்கும் இந்நினைவோடையில் புனைவு, அபுனைவுகளின் வீதம் என்ன என்பதைச் செல்வம் மட்டுமே அறிவார். ஆனாலும் இது புதினமா, புனைவா, அபுனைவா என்பது நமக்கு ஒரு பிரச்சனை அல்ல. இது ஒரு ரசனைக்குரிய ஒரு பதிவு தமிழுக்கு இலாபமாகக் கிடைத்திருக்கு என்கிற வகையில் மகிழ்ச்சியே.

ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒவ்வொரு ஓவியங்களைச் சேர்த்திருப்பதும் ஒரு வித்தியாசமான முயற்சிதான், எனினும் திரும்பத்திரும்ப Eifel Tower ஐ முதன்மைப்படுத்தும் முழுப்பக்க ஓவியங்களில் ஒன்றைமட்டும் விட்டு மற்ற ஆறையும் தவிர்த்திருக்கலாம். எதிர்மறையாகவும் ஒன்றிரண்டைச் சொல்லத்தானே வேணும்?

இப்படியொரு அதிசயத்தைச் செல்வம் விளைத்துவிட்டு ஆர்ப்பரிப்பின்றி வடலியடைப்பின் ஆமைபோல அமைதியாக மண்டிக்கொண்டிருப்பதற்கும் நூலின் பிரதியை எனக்கு அனுப்பிவைக்காத மெத்தனத்துக்காகவும் இனிமேலென்றாலும் ஆளைக்கண்டவிடத்தில் ‘கெம்பாமல்’ மட்டும் விடேன்.

•••

பொ.கருணாகரமூர்த்தி. 07.08.2016 பெர்லின்.

தையல் பிரிந்த கதைகள் / இந்தியில் –/ அம்ரிதா ப்ரீதம் / தமிழில் – நாணற்காடன்

images-4

எனது சிரிப்பு அவளது சிரிப்போடு முடிச்சு போட்டுக்கொண்டாலும் கூட, நானும், கேதகியும் ஒருவரையொருவர் அறிந்துகொண்டதில்லை. எனது வீட்டுக்கு முன்னாலிருக்கும் வேப்பமரத்தையும், வேல மரத்தையும் சூழ்ந்துகொண்டு ஒரு அணை இருக்கிறது. அணைக்கு ஒரு பக்கம் பசுமை நிறைந்தும், கடலை வயல்களும் இருக்கின்றன. இந்த வயல்களின் இடது பக்கம் ஒரு அரசுக் கல்லூரியின் பெரிய தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தின் ஒரு மூலையில் கேதகியின் குடிசை இருக்கிறது. தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுவதற்காக அங்கங்கே நீர் நிரம்பிய வாய்க்கால்கள் இருக்கின்றன. ஒரு வாய்க்கால் கேதகியின் குடிசைக்கு முன்னால் இருக்கிறது. அதன் கரையில் உட்கார்ந்திருக்கும் கேதகியைத் தான் நான் தினமும் பார்த்து வந்தேன். சட்டியையோ, தாம்பாளத்தையோ கழுவிக்கொண்டிருப்பாள் அல்லது உள்ளங்கையில் நீரள்ளி வெள்ளிக் கைவளையல்கள் அணிந்திருக்கும் கைகளைக் கழுவிக்கொண்டிருப்பாள். வெள்ளி கைவளையல்கள் போல வயது அவளது உடலில் மொத்த மொத்தமான சுருக்கங்களை வழங்கியிருக்கிறது. ஆனால், கருத்த நிறத்திலிருந்தாலும் கூட அத்துணை அழகாயிருந்தாள். அவளது பெரிய பெரிய சுருக்கங்களைப் பார்க்கும்போது வயது அவளுக்குக் கொடுத்த அழகு இது என்று தோன்றியது எனக்கு. அதனால்த் தானோ என்னவோ அவளது உதட்டில் ஒட்டியிருக்கும் சிரிப்பு விசித்திரமான பூரணத்துவத்தைப் பெற்றிருக்கிறது. இன்றைய மக்கள் அனைவரின் முகத்திலிருந்தும் தொலைந்துபோன விசித்திர புன்னகை அது. தினமும் அவளைப் பார்ப்பேன். பார்க்கும்போதெல்லாம் தன் தடித்த, கருத்த உதடுகளில் எப்படி இப்படியொரு பூரணத்துவத்தைத் தேக்கிவைத்திருக்கிறாள் என யோசிப்பேன். நான் அவளைப் பார்த்துச் சிரிப்பேன். அவள் என்னைப் பார்த்துச் சிரிப்பாள். அவளது முகம் தோட்டத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான பூக்களில் ஒரு பூப்போல் எனக்குத் தெரியும். எனக்குப் பல பூக்களின் பெயர் தெரியாது. ஆனால், அவள் பெயரை நான் தசையாலான பூ என்று வைத்திருந்தேன். தசைப்பூ.

ஒரு முறை முழுமையாக மூன்று நாட்கள் அவளது தோட்டத்துப் பக்கம் போக முடியாமலாகிவிட்டது எனக்கு. நான்காவது நாள் நான் போன போது, மூன்று நாட்களில்லை, மூன்று வருடங்கள் பிரிந்திருந்தவளைப்போல என்னைப் பார்த்தாள்.

“என்னாச்சு பொண்ணு. இவ்வளவு நாளா ஏன் வரல?” என்றாள்.

”குளிர் ரொம்பவும் அதிகமா இருந்தது அம்மா. படுக்கைய விட்டு எழுந்திருக்கவே இல்லை.”

“உண்மையாவே குளிர் ரொம்ப அதிகம்தான் உங்க ஊர்ல.”

“உங்க ஊர் எது அம்மா?”

“இப்போதைக்கு இந்தக் குடிசை இருக்கிற இந்த ஊர் தான் என் ஊர்.”

“அது சரிதான் அம்மா. ஆனாலும், சொந்த ஊர்னு ஒன்னு இருக்குமே?”

“இப்ப அந்த மண்ணோட உறவு எதுவும் இல்ல பொண்ணு. இப்போதைக்கு இதோ இந்த கார்த்திக் தான் என் ஊரோட மண்ணு, என் ஊரோட வானம்.”

“இந்த கார்த்திக் தான்” என்றவாறு குடிசையருகே அமர்ந்திருந்த தன் கணவனைப் பார்த்தாள். முதுமையின் காரணமாக கூன் விழுந்த ஒரு மனிதர் தரையிலமர்ந்து குச்சிகளையும், கயிறுகளையும் பரப்பிவைத்து பாய் நெய்துகொண்டிருந்தார். அந்தப் பக்கமிருந்த பூஞ்சாடிகளில் மலர்கிற பூக்களை பனியிலிருந்து காக்க இந்தப் பாய்களைப் போர்த்த வேண்டும் போல.

கேதகி சின்ன வாக்கியத்தில் பெரிய விசயத்தைப் பேசிவிட்டாள். மிகப் பெரிய உண்மைகளுக்கு அதிக விஸ்தீரணம் தேவையில்லை போல. ஒரு பெண்ணுக்காக ஒரு பூமியையும், ஒரு வானத்தையும் செய்து கொடுத்த அந்த மனிதரை வியப்போடு பார்க்கத் தொடங்கினேன்.

” என்ன பார்க்கற பொண்ணு? இது என்னோட நிறமற்ற கடிதம்.”

“ தபால் தலை ஒட்டாத கடிதம்.”

“ தபால் தலை ஒட்டாவிட்டால் அது நிறமற்ற கடிதம் ஆகிவிடுகிறது”

“ ஆமாம் அம்மா. தபால் தலை ஒட்டப்படாத கடிதம்.”

“ அதை வாங்குபவர்கள் இரண்டு மடங்கு விலை தர வேண்டும்.”

“ ஆமாம் அம்மா. தபால் தலை ஒட்டாத கடிதத்தை வாங்கும்போது இரண்டு மடங்கு விலை தர வேண்டியிருக்கும்”

” இந்தக் கடித்தத்தை நான் இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கினேன். உடலை ஒரு விலையாகவும், மனத்தை ஒரு விலையாகவும் கொடுத்து இருக்கிறேன். ”

நான் கேதகியின் முகத்தைப் பார்த்தேன். கேதகியின் எளிய, கருத்த முகத்தில் ஆழ்ந்த வாழ்க்கைத் தத்துவம் புகைந்து கொண்டிருந்தது.

” கடிதம் எழுதப்படும்போது எங்கள் ஊரின் பெரியவர்களும், வயதானவர்களும் அதன் மேல் முத்திரை குத்திவிடுகிறார்கள்.”

“ உங்களுடைய இந்தக் கடிதத்தின் மீது முத்திரை குத்திவிட்டார்களா என்ன?”

“ குத்தினாலென்ன.. குத்தாவிட்டாலென்ன? என்னுடைய கடிதம் இது. எடுத்துக்கொண்டேன். இந்த கார்த்தி என்ற கடிதத்தின் மீது கேதகி என்று என் பெயர் தான் எழுதப்பட்டிருந்தது. “

” உங்க பெயர் கேதகியா? எவ்வளவு அழகான பெயர்.. அம்மா.. நீங்க பெரிய துணிச்சல்காரி தான்.”

“ நான் சிங்க வம்சத்தைச் சேர்ந்தவள்.”

“ எந்த சிங்க வம்சம் அம்மா?”

“ காடுகளில் சிங்கங்கள் இருக்கிறதல்லவா, அவையெல்லாம் எனக்கு சொந்தபந்தம். இப்பவும் கூட காட்டில் எதாச்சும் சிங்கம் செத்துவிட்டால் நாங்கள் பதிமூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிப்போம். எங்க வம்சத்து ஆண்கள் மொட்டையடித்துக்கொள்வார்கள். மண்சட்டி உடைத்து செத்துப்போன சிங்கத்தின் பேரில் அரிசி பருப்பு படையிலிடுவோம். ”

“ அட… அப்படியா அம்மா?”

“ நான் ச்சக்மக் பகுதியைச் சேர்ந்தவள். அதன் காலடியில் கபில் நதி ஓடுகிறது”

“ கபில் நதியா?”

“ கங்கை நதியின் பெயரைக் கேள்விப்பட்டு இருக்கிறாயில்லயா?”

“ கங்கை நதியா?”

“ புனித கங்கை நதி. தெரியும் தானே?”

“ ம்.. தெரியும்.”

” ஆனால், கபில் கங்கையை விட புனிதமான நதி. ஆண்டுக்கு ஒருமுறை கங்கை நதி கருப்பு பசுவாக மாறி கபில் நதியில் வந்து குளித்துவிட்டுப் போகும் என்று சொல்வார்கள்.”

“ ச்சக்மக் பகுதி எங்க இருக்கு அம்மா?”

“ கரஞ்சியாவுக்கு பக்கத்தில்”

“ எந்த கரஞ்சியா?”

“ நீ நர்மதை நதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“ ஆமாம். தெரியும்.”

“ நர்மதையும், சோன் நதியும் கூட அருகில் இருக்கின்றன.”

“ அந்த நதிகளும் புனித நதிகள் தானே?”

“ கபில் நதி போல் புனிதமானவையில்லை. ஒரு முறை இந்த பூமியின் வயல்களெல்லாம் காய்ந்து போய்விட்டன. வேறு வழியின்றி மக்களும் அழியத்தொடங்கினர். அவர்களின் துக்கத்தைப் பார்த்த பிரம்மன் அழுதார். அவரின் இரண்டு கண்ணீர்த் துளிகள் பூமியில் விழுந்தன. அந்தக் கண்ணீர்த் துளிகள் விழுந்த இடத்திலிருந்து இந்த நர்மதை நதியும், சோன் நதியும் ஓடத் தொடங்கின. இப்போது அவற்றிலிருந்து தான் வயல்களுக்குத் தண்ணீர் கிடைக்கிறது.

” கபில் நதியிலிருந்து?”

“அதிலிருந்து மனிதனின் ஆன்மாவுக்குத் தண்ணீர் கிடைக்கிறது. நான் கபில் நதி நீரில் குளித்துவிட்டு, கார்த்திக்கை என் கணவனாக ஏற்றுக்கொண்டேன்.”

” அப்போது உங்களுக்கு என்ன வயசு இருக்கும் அம்மா?”

“ பதினாறு வயசு இருக்கும்.”

“ உங்க அப்பா அம்மா கார்த்திக்கை உங்களுடைய கணவராக ஏன் ஏற்றுக்கொள்ளல?”

“ ஏன்னா, கார்த்திக்குக்கு ஏற்கெனவே முதல்லயே கல்யாணம் ஆகியிருந்தது. அவருடைய மனைவி என்னுடைய தோழி. ரொம்பவும் நல்ல பெண். அவங்களுக்கு ச்சுந்தரு-முந்தரு என இரண்டு மகன்கள் பிறந்தனர். ரெண்டு பேரும் ஒரே நாளில் பிறந்தனர். எங்க ஊர் நாட்டாமையோ ”இந்தப் பெண் நல்லவளில்லை” என சொல்லத் தொடங்கிவிட்டார். இவள் ஒரே நாளில் தன் கணவனோடும், காதலனோடும் உறவுகொண்டிருக்கிறாள். அதனால்த்தான் ஒரே நாளில் இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன.”

“ அந்த அபலை மீது இவ்வளவு பெரிய குற்றம் சுமத்தப்பட்டதா?”

“ ஆனால், நாட்டாமையின் பேச்சை யார் தட்டுவார்கள்? கிராமத் தலைவனோ ரோபி பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்றான். அவள் பெயர் ரோபி. வேறு வழி தெரியாத ரோபி அழுதழுது பாதியாக உருகிப்போனாள். “

“ அப்பறம் ? “

“ அதன்பிறகு ரோபியின் ஒரு மகன் செத்துப் போனான். நாட்டாமையோ, ‘பாவத்துக்குப் பிறந்த குழந்தை செத்துவிட்டது’ என்று சொன்னான்.

“ அப்புறம்? “

“ ரோபி ஒரு நாள் இன்னொரு குழந்தையைத் தொட்டிலில் போட்டு விட்டு, கொஞ்ச தூரம் தள்ளிப்போய் சிறுகூடையில் இலுப்பைப் பூ பறித்து சேகரித்துக்கொண்டிருந்தாள். பக்கத்துப் புதரிலிருந்து ஒரு மான் ஓடி வந்தது. மானுக்குப் பின்னால் வேட்டை நாய் ஓடிவந்தது. வேட்டை நாய் தொட்டிலுக்கு அருகே போனதும் மானை விட்டுவிட்டு தொட்டிலில் கிடந்த குழந்தையைக் கடித்துவிட்டது.”

“ அடப்பாவமே…ரோபி…”

“ அப்போது அந்த நாட்டாமை என்ன சொன்னான் தெரியுமா? ‘பாவத்துக்குப் பிறந்த குழந்தை மானின் வயிற்றுக்குப் போய்விட்டது. இப்போது மான் இன்னொரு குழந்தையையும் தின்பதற்கு தொட்டிலருகே ஓடிவந்துவிட்டது’ என்றான்.

” ஆனால், குழந்தையை மான் எதுவும் செய்யவில்லையே. அந்த வேட்டை நாய் தானே கொன்றது?”

“ நாட்டாமையின் பேச்சை யாரும் புரிந்துகொள்ள முடியாது பொண்ணு. அவன்.’ முதலில் பாவ ஆன்மா மானுக்குள் இருந்தது. இப்போது அது வேட்டை நாயிடம் வந்து விட்டது.’ நாட்டாமைகள் பேசிப்பேசியே சாகடிப்பார்கள். அங்கே வசித்துவந்த நந்தா என்பவன் ஒருமுறை வேட்டைக்குப் போயிருந்தான். அவனது அம்பு மான்களைத் தீண்டவில்லை. நாட்டாமையோ, ‘ நந்தா போன பிறகு அவன் மனைவி வேறொடு மோசமான ஆணுடன் தூங்கியிருப்பாள். அதனால்த்தான் அவனது அம்பு குறி தப்பிப்போனது’ என்றான். நந்தா வீட்டுக்கு வந்ததும் தன் மனைவியை அம்பால் குத்திக் கொன்றுவிட்டான். “

“ ஐயோ “

“ கார்த்திக்கும் தன் மனைவியை கொன்றுவிட வேண்டும் கொல்லாவிட்டால் அந்தப் பாவ ஆன்மா அவள் வயிற்றில் மீண்டும் பிறக்கும். அதன் முகத்தைப் பார்த்தால் கிராமத்தின் வயல்களெல்லாம் கருகிப்போய்விடும்” என நாட்டாமை சொன்னான்.

“ அப்புறம் “

“ கார்த்திக் தன் மனைவியைக் கொல்ல ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், நாட்டாமையும், ஊர் மக்களும் கோபம் கொண்டனர்.”

“ கிராம மக்கள் கோபம் கொண்டு என்ன செய்தனர்?”

“ மக்கள் நாட்டாமையிடம் மிகவும் பயந்தனர். நாட்டாமை ஏதாச்சும் சூனியம் செய்துவிட்டால் ஊரிலிருக்கும் எல்லா விலங்குகளும் செத்துவிடுமே என்று யோசித்தனர். அதனால் அவர்கள் கார்த்திக்கு ஹுக்கா, தண்ணீர் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். ”

” தன் மனைவியைக் கொன்றுவிட்டு அவன் எப்படி தப்ப முடியும் என்று யாருமே யோசிக்கவில்லையா?”

“ ஏன், அவனுக்கு என்ன ஆகிவிடும்”

“ அவனை போலீஸ் பிடிக்காதா?”

“ போலீசால் பிடிக்க முடியாது. கிராமத்துக்காரர்கள் சாட்சி சொன்னால் தானே போலீசால் பிடிக்க முடியும்? யாரையாவது கொல்வது சரியென்று நினைத்துவிட்டால் போலீசிடம் சொல்ல மாட்டார்கள் அந்த கிராமத்துக்காரர்கள்”

“ அப்புறம் என்ன ஆச்சு ?”

“ வேறு வழி தெரியாமல் துக்கத்திலிருந்த ரோபி இலுப்பை மரத்தில் தூக்கு மாட்டி செத்துவிட்டாள்.”

“ ஐயோ… ரோபி.”

“ எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்தார்கள் கிராமத்துக்காரர்கள். ஆனால், எதுவும் முடியவில்லை என எனக்குத் தோன்றியது. ஏனெனில், கார்த்திக் அந்த நாட்டாமையைக் கொன்றுவிட வேண்டுமென மனத்தில் முடிவெடுத்திருந்தார்,. அந்த நாட்டாமை செத்துவிட்டால் செத்தபிறகு ராக்‌ஷசனாக ஆகிவிடுவான் என எனக்குத் தெரியும்.”

“ அவன் வாழும்போதே ராக்‌ஷசன் தானே?”

“ ராக்‌ஷசர்கள் என்ன ஆவார்கள் தெரியுமா?”

“ என்ன ஆவார்கள்?”

“ உலகில் யாரிடமும் அன்பு செலுத்தாத மனிதர்கள் செத்தபிறகு தன் ஊரின் மரங்களில் ராக்‌ஷசர்களாக வசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அவர்கள் கருப்பு உருவம் கொண்டவராக மாறிவிடுவர். இரவுகளில் அவர்களது நெஞ்சிலிருந்து நெருப்பு வரும். இரவெல்லாம் ஊர்ப்பெண்களை பயமுறுத்துவார்கள். “

“அப்புறம்?”

“ நான் அவன் செத்துப்போவதை விரும்பவில்லை. ஒருவேளை கார்த்திக் அவனைக் கொன்றுவிட்டால் ஊர்மக்கள் கார்த்திக்கை அம்புகளால் குத்திக் கொன்றுவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். “

“ அப்புறம்?”

“ நான் கார்த்திக்கை கபில் நதியில் நிற்க வைத்து நான் உன் மனைவியாகப் போகிறேன் என சத்தியம் செய்தேன். நாம் இந்த ஊரை விட்டு ஓடிப் போய்விடலாம். அங்கேயேயிருந்தால் கார்த்திக் என்றாவது ஒருநாள் அவனைக் கொன்றுவிடுவார் என்று எனக்குத் தெரியும். அவனைக் கொன்றுவிட்டால் மக்கள் கார்த்திக்கைக் கொன்றுவிடுவார்கள்”

“ கார்த்திக்கைக் காப்பாற்றுவதற்காக உங்கள் ஊரைவிட்டுவிட்டு வந்துவிட்டீர்கள். அப்படித்தானே?”

” இலுப்பை முளைக்காத மண் நரகமாகிவிடும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்ன செய்தேன் தெரியுமா? அந்த ஊரை விட்டு வராமலிருந்திருந்தால் கார்த்திக் உயிரோடு இருந்திருக்க மாட்டார். கார்த்திக் செத்திருந்தால் அந்த மண் எனக்கு நரகத்துக்குச் சமம்தான். ஊர் ஊராக அவரோடு சுற்றி வந்தேன். எங்களின் ரோபியும் எங்களிடம் திரும்பி வந்தாள்.”

“ ரோபி திரும்பி வந்தாளா? எப்படி?”

“ நாங்கள் எங்கள் மகளுக்கு ரோபி என்று தான் பெயர் வைத்தோம். கபில் நதியில் சத்தியம் செய்தபோது என் மனத்தில் ஒன்று தோன்றியது. என் வயிற்றில் பெண் குழந்தை பிறந்தால் அவளுக்கு ரோபி என்று தான் பெயர் வைக்க வேண்டுமென தோன்றியது. ரோபி மீது எந்தக் குற்றமும் இல்லை என்பது எனக்குத் தெரியும். எங்கள் மகளுக்கு ரோபி என பெயர் வைத்தபோது கார்த்திக் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.”

“ இப்ப ரோபி ரொம்பவே பெரியவள் ஆகியிருப்பாளே?”

“ அட பொண்ணே… இப்ப ரோபியோட ரெண்டு பசங்களுமே வளர்ந்து விட்டார்கள். பெரியவனுக்கு எட்டு வயசு. சின்னவனுக்கு ஆறு வயசு. இங்க ஒரு தோட்டக்காரனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம். நாங்கள் அந்த ரெண்டு பசங்களுக்கும் ச்சுந்துரு-முந்துரு என பெயர் வைத்திருக்கிறோம்.”

” அட…….ரோபியோட குழந்தைங்க பெயர் தானே…”

“ ஆமா…. அதே பெயர் தான். அவர்கள் பாவத்திற்குப் பிறந்த குழந்தைகள் இல்லை என்பது எனக்குத் தெரியும்”

“ நான் வெகு நேரம் கேதகியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு நாட்டாமை தன் கருணையற்ற கைகளால் தையலைப் பிரித்த கதை தான் கார்த்திக்கின் கதை. கேதகி தன் மனத்தின் பட்டு நூலால் தையல் பிரிந்த கார்த்திக்கின் கதையை மறுபடி தைத்துவிட்டாள். இது ஒரு கதைக்கான விசயம் தான். ஆனால், எனக்கும் தெரியாமல், உங்களுக்கும் தெரியாமல் உலகம் முழுக்கவும் நாட்டாமைகளால் தினம் தினம் தையல் பிரிக்கப்படுகிற கதைகள் எத்தனையெத்தனையோ?”

•••