Category: இதழ்113

சூர்யா வே.நி கவிதைகள்

images-14

1.முடிவிலா தேடல்

யாருமில்லாத நேரங்கள் கிடைத்தன
யாருமில்லாத இடங்கள் கிடைத்தன
யாருமில்லாத மனோநிலை கூட கிடைத்தன
யாருமில்லாத “நான்” கூட கிடைத்தது
ஆனால்
யாருமில்லாத பிறப்பு மட்டும்
கிடைக்கவே இல்லை
எங்கு தேடியும்
எவ்வளவு தேடியும்
இதுவரை
***
2.என்றுமிருக்கும் மீதி

புலம்பிகொண்டே இருக்கும்
நாக்கை அறுத்தாயிற்று
கிறுக்கிக்கொண்டே இருக்கும்
கையை வெட்டியாயிற்று
நடந்து கொண்டே இருக்கும்
காலை வெட்டியாயிற்று
துடித்துக்கொண்டே இருக்கும்
இதயத்தை பிளந்தாயிற்று
அமைதியாகவே இருக்கும் மீதியை
என்ன செய்வதென்றே தெரியவில்லை
***
3.பெருமிதமடையும் பாலம்

அந்த ஊருக்குள் செல்ல அந்த பாலமொன்றே வழி
பல நூற்றாண்டுகளாக எல்லோரும் அந்த பாலம் வழியே அவ்வூருக்கு போய்கொண்டிருந்தனர்
ஒழுக்க விதிகளனைத்தையும் கைவிட்ட ஊருக்குள் போக யாருக்கு தான் ஆசையிருக்காது
அவ்வூரில் வேசியர்களுடன் சல்லாபித்திருந்தவர்களும் சோமபானத்தை தண்னென பருகி களித்தவர்களும் தத்தம் அனுபவங்களை அப்பாலம் வழியே பேசிக்கொண்டே வெளியேறுவார்கள்
அதை கேட்கும்போதெல்லாம் அப்பாலம் கம்பீரம் கலந்த நாணத்துடன் தன் மீசையையும் சேலையையும் சரிசெய்துகொள்ளும் சிறு படபடப்புடன்
***
4.அந்நியமான செடி

தொடர்ந்து கவனித்து வருகிறேன்
அந்த செடியை மட்டும் ஆடுகள் உண்பதில்லை
ஆடுகள் அந்த செடிக்கு அருகிலிருக்கும் அத்தனை செடிகளையும் முழுமையாக தின்றுவிட்டன
சமூகத்தால் கைவிடப்பட்ட புரட்சியாளரை போல தனியாக நிற்கிறது அந்த செடி
இதனால் நேற்று ஒரே கவலையாக போயிற்றெனக்கு
இன்றும் தொடரக்கூடாதென விரைந்து போனேன்
குத்திய கத்தியை எடுப்பது போல மண்ணிலிருந்து அந்த செடியை பிடுங்கி அம்மாவிடம் இதை சமைத்து தரவும் என கேட்க போனேன்
அப்படியொரு சந்தோஷம்

***

அன்பாதவன் கவிதைகள் ( துபாய் )

download-27

1.மூன்று பெண்களுக்காக காத்திருப்பவனின் கவிதை

பசியத் தாவரங்களோடுப்
புசிக்கச் சிறந்த அதாவர வரிசை
பிரமாதமாய்ச் சமைத்தவன்
காத்திருக்கிறான் மூன்று பெண்களுக்காக…

நேத்திரங்களோ சாலையில் தவம் கிடக்க‌
காத்திருக்கிறான் மூன்று பெண்களுக்காக..

உக்ரக் கோடையில் கனிகள் வெம்ப‌
வாசம் தொலைத்து வாடத் தொடங்கின மலர்களுடன்
காத்திருக்கிறான் மூன்று பெண்களுக்காக…

இனிப்பு பெட்டியை நோக்கி எறும்புச் சரம்
ஆறிக்கொண்டிருக்கும் உணவுகளின் சுவை தேடி
ஊறும் கரப்பானைத் தூக்கி வீசி
காத்திருக்கிறான் மூன்று பெண்களுக்காக…

கண்ணாடித் திரை வழியாக காண்கையில்
தூ…ரத்தில் மூவர்..மலர்ந்தவன்
காத்திருக்கிறான் மூன்று பெண்களுக்காக…
ஏமாந்தவன் முகத்தில்
சலிப்பின்றி துப்பிக்கொண்டிருந்தது
மின் துகள் எச்சிலைத் தொலைக்காட்சி

சன்னலோரத்தில் வெயிலுக்கு ஒதுங்கி
இறகினைக் கோதிக்கொண்டிருந்த‌
புறாவினை வெறித்தபடி
காத்திருக்கிறான் மூன்று பெண்களுக்காக
வீட்டு வழியாக சென்ற வாகனங்களும்
அவனது வாசலை நிராகரித்த போதும்
காத்திருக்கிறான் மூன்று பெண்களுக்காக
மூன்று பெண்களுக்காக காத்திருந்தவன்
தயாரித்த உணவுகளை தாய் நாயொன்றுக்கும்
குட்டிகளுக்கும் அன்னமிட்டு
அலம்பி கவிழ்த்தப் போதில்

அழைத்தது வாசல் மணி!

கரப்பான்களோடோர் உரையாடல்

“உயிர்களிடத்து அன்பு வேண்டும்”
எம்மைக் கொல்ல மருந்தடிக்கும்
நீ அவனை ஆராதிப்பவன் தானா?

மனிதன் ஒருவனைக் கரப்பானாக்கி
காவியம் படைத்தவனும்
எம் எழுத்துக்காரன் தானே!

திரவியத்துக்காய் திரைகடல் தாண்டி வந்தவனே
அறிவாயா இஃதெம் தாய்மண் !

உண்மை தான்…உங்கள் கூட்டத்தைக் காண்கையில்
ஒரே உணர்வு….அருவருப்பு…

பாலைப் பறவைகளுக்கு நீர் வைக்கிறாய்!
புறாக்களுக்கும் உணவளிக்கிறாய்!
தெரு நாய் ஏழுக்கு செல்லப் பெயரிட்டு கொஞ்சுகிறாய்
எம்மினத்தை மட்டுமேன் அழிக்க யத்தனிக்கிறாய்?

புலிகளின் ஆரண்யத்தில் முயல்களும் வாழலாம் தானே?
பூச்சிகளுக்கும் உலகமிது தானே?
அன்பை பெயரில் கொண்ட
உன்னுள் ஏனிந்த வன்மம்?

பூச்சிகளின் தேசமுமிதுதான்..அறிவேன்!
அறிவாயா? பூச்சிக்கொல்லிகளும்
அனுமதிக்கப்பட்டி ருப்பதுமி ங்குதான்.

பூச்சிக்கொல்லி…
1984 ல் போபாலில் செத்துப்போனவை
பூச்சிகள் தாமோ?

சந்தைப் பொருளியலில் கொல்லப்பட்டவை/படுபவை
மனித விழுமியங்களே…

உம்மைப் போலவே எம்மினமும்
கொல்லப்பட்டதே குட்டித்தீவொன்றில்..

அது புரிந்து தான் மன்னித்தேனுன்னை
நன்றி சொல்ல முடியாத கனத்த மவுனத்தை
சிலுவையாய்ச் சுமக்கிறேன் கூடவே குற்ற உணர்வும்

பெருமிதத்தில் மிதக்காதே!
என்றாவதொரு நாள் பல்கிப் பெருகும்
எம்மினம்!

அனைத்துயிர்களும் அன்று சமமெனப்படும்!

••••

கடவுளுக்குக் கண்ணில்லை – ஒரியாமொழி சிறுகதை மூலம் : பிரதிப்தா குமார் மிஸ்ரா ஆங்கிலம் : லீலாவதி மொகாபத்ரா ,கே.கே. மொகாபத்ரா – தமிழில் : தி.இரா.மீனா

download-26

கடவுளுக்குக் கண்ணில்லை. ஆமாம்.இல்லைதான்.பரமஏழையான என்மீது அவன் காட்டும் வன்மத்தை வேறு எப்படிச் சொல்லமுடியும்? கடவுள் இப்படிச் சொல்லியிருப்பார்; சக்ரா! என்னைக் குறை சொல்லாதே! ரயில் நிற்கும் போது எல்லா கம்பார்ட்மென் டுகளுக்கும் நீ போகமுடியாததற்கு நான் என்ன செய் வேன்? ஆனால் என் பதில் இப்படியிருக்கும்:கடவுளே! நீ எப்படி இரண்டுமுகம் கொண்டவனாக இருக்கிறாய்?பரத்தை எடுத்துக்கொள்.அவனுக்கு ஒரு கண் ணில் பார்வை இருப்பதால் அவனால் முழு ரயிலுக்குள்ளும் போகமுடிகிறது .காலியான இடங்களுக்குப் போய் நேரத்தை விரயம் செய்யவேண்டிய அவசி யம் அவனுக் கில்லை. ஏன் என்னை முழுக் குருடனாகப் படைத்தாய்?பிச் சைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஜனங்கள் இருப்பதாக நினைத்துக் காலி யான சீட்டுகளுக்குப்போய் நிற்கும் நிலை எனக்கு. பரத் ஒருநாளைக்கு ஆறு ரூபாய் சம்பாதிக்கிறான்.எனக்கு இரண்டுரூபாய்தான் கிடைக்கிறது. ஆனாலும் நீ கடவுள் என்ற பெருமையை எடுத்துக் கொள்கிறாய்.இதுபோகஎந்தச்சண்டை வந்தாலும் அவனுக்கு நீ சாதகமாக இருக்கிறாய். போகட்டும். நான் பரத்தைப் போல கெட்டிக்காரனில்லை.ஒப்புக் கொள்கிறேன். அதனால்தான் எனக்குக் குறைவாய்க் கிடைக்கிறது. நியாயம்தான்.பத்து,பன்னிரண்டு வயதில் ஒரு சிறுவன் என்கையைப் பிடித்துக்கொண்டு எல்லாக் கம்பார்ட்மென்டுகளுக்கும் என்னைக் கூட்டிக்கொண்டுபோக நீ உதவவேண்டும் என்று நான் உன்னிடம் பிரார்த்தனை செய்துகொண்டேனே!அந்தச் சிறுவன் செய்ய வேண்டியதெல் லாம் என்னை அழைத்துக்கொண்டு போகவேண்டியதுதான்.நான் பேச்சில் கெட் டிக்காரன்“கனவான்களே! எஜமான்களே!இந்தக் குருடனுக்கு காசுகொடுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார் என்று சொல்வேன்.என் பிரார்த்தனை உன் காதில் விழுந்ததா? ஏன் விழவில்லை?

ரயில் ஸ்டேஷனில் நிற்கும்போது என்னை எல்லா கம்பார்ட்மென்டுகளுக்கும் அழைத்துச் செல்ல வழிகாட்டி யாருமில்லை.சரி. ஒப்புக்கொள்கிறேன்.இந்த பிளாட்பாரத்தை எடுத்துக் கொள்வோம்இங்கு பத்துத்தூண்கள் உள்ளன.”இதில் ஒரு தூணை எடுத்துககொண்டு நீ அங்கேயே இருக்க வேண்டும்.வேறெங்கே யாவது உன்னைப் பார்த்தேன் என்றால் இங்கிருந்து ஒரேயடியாக உன்னைத் துரத்திவிடுவேன்”என்று ஒரு போலீஸ்காரன் சொன்னான்.நான் போவதற்கு முன்னாலேயே நல்ல தூண்கள் இருக்குமிடத்தை எடுத்துக் கொண்டு விட்டார் கள்.தங்களுடைய கம்புகள், சாக்குகள், பாத்திரங்கள் ஆகியவற்றை அந்த இடத் தில் வைத்துத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டுவிட்டனர். கடைசித்தூண் தான் எனக்குக்கிடைத்தது.அதுவும் பரத் சொல்லித்தான் தெரிந்தது.நான் வந்த நாளன்றே அங்கு போகும்படி அவன்தான் சொன்னான். வந்தது முதல் அங்கு தானிருக்கிறேன்.அங்கு ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் கிடைக்கும். நேற்று பரத்துடன் பேசிக் கொண்டிருந்தேன்

.”பரத்! ஏன் எப்போதும் என் வருமானம் ஒரே மாதிரியாக இருக்கிறது?”

“உன் தூண் எதிரில் சரக்கு கம்பார்ட்மென்ட்தான் நிற்கும்.அதில் மனிதர்கள் இருக்கமாட்டார்கள்.அதனால் உனக்குக் காசுபோட யாருமில்லை.”

“இது நியாயமில்லை.எது நல்லஇடமென்று எனக்குத் தெரியாது.நான் குருடன். ஆனால் கடவுளுக்கு இரக்கமில்லை.நான் கேட்பது சிறிய உதவிதான் என்று அவனுக்குத் தெரியாதா?என் தூண் முன்பாக மனிதர்கள் இருக்கும் கம்பார்ட் மென்ட்டை நிற்கச் செய்வது அவர் வேலையல்லவா?” என்றான்.

இரவு முழுவதும் சக்ரா தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான். நல்ல தூக்க மில்லை.கோபமாக கடவுளோடு மோதிக்கொண்டிருந்தான்.எனக்குக் கை,கால், மூக்கு,காதுகள் என்றுஎல்லாவற்றையும் கொடுத்திருக்கிறாய்.ஏன் ஒரு ஜோடிக் கண்களை மட்டும் கொடுக்கவில்லை?ஏன் இந்த தண்டனை?

கடவுள் தன்னிடம் வரும்வரைக் காத்திருப்பது என்று சக்ரா முடிவு செய் தான்.கடவுளை முகர்ந்து கண்டுபிடிப்பதில் கஷ்டமில்லை.அவன் தூணுக்கு அருகே ஒரு முறை நல்லவாசனை வந்தது.அங்கிருப்பவரிடம் பேச தைரிய மில்லை. நல்லவேளை,பேசவில்லை. பொருட்களை விற்கும் ஒருவன்தான் விலை மலிவான சென்டைப் போட்டுக் கொண்டிருந்தான் என்று பரத் சொன் னான்.

கடவுள் தன்னைக் கடக்க மாட்டாரா? சிறுவன் ஒருவன் தன் கையைப் பிடித் துக்கொண்டு ரயில் கம்பார்ட்மென்டுகளுக்கு அழைத்துச் செல்லும் நாள் வரவே வராதா?அந்தச் சிறுவனுடன் டீல் வைத்துக் கொள்ளவும் தயாராக இருந்தான்.ஒரு நாளைக்குப் பத்து பைசாவும்,இரவு உணவாக ரொட்டியும் தரத் தயாராக இருந்தான். ஆனால் சிறுவன் கிடைக்க வேண்டுமே.

சக்ரா தன்னை மிக பலவீனமாக உணர்ந்தான். ஒவ்வொரு நாளும் மோசமா கக் கழிந்தது.இன்று மிகவும் மோசம்.எதுவும் கிடைக்கவில்லை.

அந்த நொண்டிப் பெண்மணி கூட வரவில்லை.தும்மிக் கொண்டும்,முனகிக் கொண்டும்,தவழ்வது போலவும் அவள் அங்கிருப்பாள்.நாற்றம் பொறுக்கமுடி யாவிட்டாலும் ஆறுதலாக இருக்கும்.நேற்றிரவு தங்களுக்குள் நடந்த பேச்சை நினைத்துப் பார்த்தான்.
“கோரமண்டல ரயில் வந்துவிட்டுப் போய்விட்டதா?”அவன் கேட்டான்.

“ஆமாம்”

“நீ இரவு என்ன சாப்பிட்டாய்?”

“மார்க்கெட் அருகேயுள்ள கடையில் வெந்த காய்களோடு இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டேன்.எல்லோரு ஏமாற்றுகிறார்கள்.”

அந்தப் பெண்மணி இதற்கு முன்பு ஒரு மோசமான சந்தில் வசித்து வந்தாள். அவளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்.சில சமயங்களில் ஒரு இரவு ஐந்நூறு ரூபாய் வரை கிடைத்தது. ஆனால அவளுக்கும் கஷ்டம் வந்தது.அவளைவிட அழகான, வயதுகுறைந்த பெண்கள் வந்ததால் அவள் தொழில் கெட்டது.எது வும் கிடைக்கவில்லையென்றாலும் போலீசுக்குக் கமிஷன் கண்டிப்பாகத் தர வேண்டியிருந்தது.

சக்ரா தும்மினான்.அப்போது அவனுக்குப் பழக்கமான நெடி வந்தது. சத்தமும் கேட்டது.அவள் வந்து தரையில் தன் சாக்கை விரித்திருக்கவேண்டும்.எப்படி அவள் அந்த இடதிற்கு நேரடியாக வரமுடியும்?அவள் ஏன் வேறிடம் பார்க்க்க் கூடாது?ஒவ்வொரு இரவும் அவள் ஏன் இங்குவரவேண்டும் இன்று அவள் முனகுவதும்,முக்குவதும் அதிகமாகக் கேட்டது.

“பெண்ணே! உடல் நலமில்லையா?”

“ஒன்றுமில்லை.அந்தக் கூலிக்காரன் என்னைக் காலியான சரக்கு கம்பார்ட் மென்டுக்கு இழுத்துக் கொண்டுபோனான். அவனிடமிருந்து தப்பி வரும்போது காலில் அடிபட்டுவிட்டது.”

“இப்படியான மனிதர்களிடமிருந்து நீ விலகியிருக்க வேண்டும்”

“விலகித்தானிருப்பேன்.ஏனோ இன்று இப்படியாகிவிட்டது.அவன் என்னை இழுத்தபோது மறுத்தேன். வயிற்றில் எட்டி உதைத்தான். மயக்கமாகி விழுந்து விட்டேன்.”

“வேறு யாரிடம் அவன் பலத்தைக்காட்ட முடியும்?என்னால் அவனைப் பார்க்க முடியாமலிருக்கலாம்.ஆனால் என் கையில் அவன் கிடைத்தால் எலும்பை முறித்து விடுவேன்”.

அவளுடைய மெல்லிய சிரிப்பு காற்றில் மறைந்தது.சக்ரா பின் வாங்கினான். இதில் என்ன வேடிக்கை?அவள் அவனைப் பார்த்துச் சிரிக்கிறாளா?

“இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே.எனக்குச் சரியாகி விட்டது .நீ போய்த் தூங்கு”

அவள் அருகே வந்துவிட்டாளா?இப்போதெல்லாம் அவள் அவனுக்கு அருகில் தானிருக்கிறாள்.இந்த பிளாட்பாரத்திற்கு வந்தபுதிதில் ஒரு கடைவாசலில்தான் படுத்திருந்தாள்.கடையில் ஏதோ திருட்டு நடந்தபோது போலீஸ் அவளைச் சந் தேகப்பட்டு அடித்தது.பிறகு தண்ணீர்டாங்க் அருகேயிருந்தாள்.அங்கும் சிக்கல். பிறகு கடைசியாக இந்தத் தூணுக்கு வந்தாள்.சக்ராவைப் பார்த்தாள்.அங்கிருந் தால் எந்தத்தொந்தரவும் வராதென்று நினைத்தாள்.அங்கேயே படுத்தாள்.இவ னுடைய மனைவியாகி விட்டாலென்ன என்று கூட யோசித்தாள்.தப்பித் தவ றிக்கூட அவன் அவளைத் தொட்டதில்லை.என்ன மனிதன் இவன்! ரயில் வரும்போது அவன் கையைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு கம்பார்ட் மென்ட்டாக அழைத்துச் செல்லலாம்.அவர்கள் வருமானம் ஜாஸ்தியாகும். ஒரு அறை கொண்ட குடிசை ஸ்டேஷனுக்கு அருகில் கட்டமுடியும்.அவள் அங்கு கீரை பயிரிடுவாள்.அவள் சக்ராவைத் திரும்பிப் பார்த்தாள். குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கியிருந்தான்.

மிகவும் பசியாக இருக்கும் போது சக்ரா நன்றாகத் தூங்கிவிடுவான்.சில சம யங்களில் போலீஸ் அவனைக் கடக்கும்போது இரண்டுதட்டு தட்டுவார்கள். அவன் இங்குமங்கும் உருள்வான்.கோடையில் இது பெரிய தொந்தரவில்லை. குளிர்காலத்தில்தான் தொல்லையாக இருக்கும்.

காலையில் எழுந்தவுடன் “பெண்ணே !உனக்குச் சொந்தக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டான்.அது ஈஸ்ட் கோஸ்ட் ரயில் வரும் நேரம்.

“பாட்டி இருந்தாள். அவளும் செத்துப் போய்விட்டாள்.”

“வேறு யாரும்?”

“வேறு யாரு?”

“கணவன்?”

“என்னைப் போன்ற பெண்களுக்கு எப்படிக் கணவன் இருக்கமுடியும்?”

“நீ வேறுயாரையாவது ஏன் பார்க்கக் கூடாது?”

ரயில் வந்து நின்றது.பான்,பீடி, சிகரெட், வாழைப்பழம், டீ, குர்தா ரோடு ஸ்டேஷனா, முட்டை ,அவித்தமுட்டை.. என் மீது ஏறிக்கொண்டுதான் உன் சீட்டுக்குப் போக வேண்டுமா.. பின்கள்.. கல்தட்டுக்கள் கம்மி விலையில்..

நான்காவது பிளாட்பாரத்தில் அனறுகாலை ஒரு பெரியவர் இறந்து போய் விட்டார்.அவர் உடலைக் கேட்டு யாராவது வந்தார்களா அல்லது அவர் அனா தையா என்று அவன் அறியவிரும்பினான்.அவர் மனைவி வந்ததாகவும், கூலிக்காரர்கள் அவரை அடக்கம்செய்யப் பணம் தந்ததாகவும் சொந்த ஊருக் குப் போனதாகவும் சொன்னார்கள்.

“கொடுத்து வைத்தவர்.சொந்தமண்ணில் அடக்கம் செய்யப்படுவது என்பது எவ்வளவு புண்ணியம் தெரியுமா?எனக்கு என்ன நடக்குமென்று யாருக்குத் தெரியும்?பெண்ணே!நான் பிச்சுக்குளி என்ற கிராமத்திலிருந்து வந்தவன். பிறக் கும்போதே பார்வையில்லாமல் பிறந்தேன்.குருடன் சக்ரா என்றால் பிச்சுக் குளியில் எல்லோருக்கும் தெரியும்.சொந்தமண்ணில் அடக்கம் செய்யப்படக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.”

சில நாட்களில் ஓரளவு வருமானம் கிடைத்து விட்டால் சக்ரா வீடுகளுக்கு முன்னால் போய் நின்று பக்திப்பாடல்கள் பாடுவான்.அங்கு கிடைக்கும் காசை வைத்து ஒன்றிரண்டு இனிப்புகள் வாங்கிச் சாப்பிடுவான்.சில சமயங்களில் பொடியும் வாங்குவான்.அடிக்கடி சிறிய மீனின் விலையையும் கேட்பான். அவ னுக்கு மீன் என்றால் மிகவும்பிடிக்கும்.ஆனால் அவனால் தனக்கென்று ஒன்று கூட வாங்கிச் சாப்பிட முடிந்ததில்லை.ரத்தசோகை காரணமாக அவன் நிறம் இப்போது மஞ்சளாகி விட்டது.அந்த நொண்டிப் பெண்மணி தன்னருகில் படுக் கத் தொடங்கிய பிறகு அவன் வேறு எங்கும் போவதில்லை.அந்தக் கூலியோ அல்லது தரை சுத்தம்செய்பவனோ அவளை இழுத்துக் கொண்டு போய் விட் டால் என்ன செய்வது ..எவ்வளவு நேரமானாலும் கம்பைத் தரையில் தட்டிய படி அங்கு வந்துவிடுவான்.கொஞ்சம் தள்ளிப்படு என்று சொல்லும்போது அவனுக்குள் ஒரு மகிழ்ச்சியும்..

“ஏன் இன்று இவ்வளவு நேரம்?”

“உனக்கென்ன அதனால்?நீ வேறிடம் பார்த்துக்கொள். ஜனங்கள் நம்மைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.”

“கவலைப்படாதே . நான் வேறிடம் போய்விடுவேன்.உனக்கு என்னால் எந்தத் தொந்தரவுமில்லை என்றுதான் இத்தனை நாளாய் நினைத்திருந்தேன்.ஆனால் நான் இப்போது வேறிடம் பார்க்க வேண்டும்.”

“விளையாட்டுக்குத்தான் சொன்னேன்.இங்கேயே இரு.எப்போதும் இரு”

“நான் போய்விடுவேன் என்று நினைத்தாயா? நானும் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்.” இந்த மாதிரி யார் இருக்க முடியும்?

அவன் ஆச்சர்யப்பட்டான். அவள் என்னை விரும்புகிறாளா?அதனால்தான் போக விரும்பவில்லையா?அவள் காலில் குறையிருந்தால் என்ன?எல்லா கம்பார்ட்மென்டுக்களுக்கும் கையைப் பிடித்துக்கொண்டு என்னை அழைத்துச் செல்லமுடியும்.இரண்டுபேரும் சேர்ந்து பிச்சை எடுத்தால்ஓரளவு வருமானம் கிடைக்கும்.ஒரு டப்பாவில் அதைப் போட்டுவைக்கலாம்.அவள் விருப்பத்தைக் கேட்டால் கேலிசெய்து சிரிப்பாளோ?கேட்பதா,வேண்டாமா குழப்பமாக இருந் தது.அவனுக்கு இரண்டுகண்ணும் குருடில்லை.வலக்கண்ணில் எரிச்சல் எப் போதும்.இரத்தம் எப்போதாதாவது அந்தக் கண்ணிலிருந்து வரும்.

அந்தப் பெண்மணி நடுங்கிக்கொண்டே தூங்கிவிட்டாள்.மெல்லிய போர்வை. காலை மூடிக்கொள்ள நினைத்தால் தலைப்பகுதி வெளியே தெரிந்தது.சக்ரா தன் மூட்டையிலிருந்து சால்வையை எடுத்துப் போர்த்தி விட்டான்.குளிர் கொஞ்சம் குறையும்.

அவள் எழுந்து விட்டாள்.”விடிந்து விட்டதா?”

“விடிந்து விடவேண்டுமென்று உனக்கு ஆசையாயிருக்கிறதா?உனக்குத் தெரி யாது. காலையில்தான் நமக்கு பசி பத்துமடங்காக இருக்கும். மதியத்தில் குறைந்துவிடும்.
“தினமும் இரவில் ரொட்டிசாப்பிட்டு அலுத்துவிட்டது.கொஞ்சம் அரிசி வாங்கி அந்த வேப்பமரத்தடியில் நாம் ஏன் சமைத்துச் சாப்பிடக் கூடாது?”

“வேண்டாம்.இங்கு கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் எல்லோரும் இன்னும் அதிகமாக என்னைக் கேலி செய்வார்கள்.உனக்கு ஆசையாயிருந் தால் சமைத்துக் கொள்.எனக்கு ரொட்டியே போதும்.”

எனக்கும் போதும். ஒருத்தருக்காக யார் சமைப்பது?”

“சரி. இப்போது தூங்கு. காலையில் தண்ணீர் வரிசையில் நிற்க வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும்”

திரும்பிப் படுத்த சக்ராவுக்கு கடவுள் இன்னும் ஏன் பிரசன்னமாகவில்லை என்று தோன்றியது.சரக்கு ரயில் கம்பார்ட்மென்ட் தன் தூணுக்கு முன்னால் நிறுத்தப்படுவதைத் தொடரப்போகிறாரா?எந்தச் சிறுவனும் உதவிக்கு வராமல் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கிறாரோ?மறைவில் நின்று சக்ராவின் திசையைப் பார்க்கிறவர்களைத் தள்ளிக் கொண்டு போய்விடுகிறாரோ?யாருக் குத் தெரியும்?இப்படிச் சொல்லலாம்;இங்கேபார் !அந்தத் திசைக்குப் போகாதே! ஒரு புலி பாய்வதற்குத் தயாராகக் காத்துக்கொண்டிருக்கிறது. சக்ராவுக்கு கடவுளைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் விரட்டி விடுவான். எவ்வளவு இரக்கமற்றவன் அவன்!

அந்தப் பெண்மணியைத் தன்னோடு வாழும்படி கேட்கலாமா?அவர்கள் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.அவனுக்கு உடம்பு சரியில் லாத போது அவள் பார்த்துக் கொள்வாள்.சுடுதண்ணீர் வைத்துத் தந்து.. தலை பிடித்து..அவளுக்கு எது வந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான்.அவனுக்கு தலைவலியும் ,அவளுக்கு முதுகுவலியும் பொறுக்க முடியாமலிருக்கிறது. இருவரும் அருகருகே இருந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்யா விட்டால் என்ன பயன்?

“கவுண்டர் எண் ஐந்தில் யாருக்கோ அடிபட்டு ரத்தம் வந்ததாமே?”கேட்டான்.

“நம் கூட்டத்தில் ஒருவருக்காகத்தானிருக்க வேண்டும்.சீக்கிரம் தூங்கு..உன் சால்வையையை ஏன் எனக்குத் தந்தாய்?நாளையிலிருந்து நாமிருவரும் சேர்ந்து பிச்சை எடுப்போம்.நான் உன் கையைப் பிடித்துக் கொள்கிறேன்.”அவள் அவன் தலைமுடியைக் கோதினாள்.இன்னும் இரவு எவ்வளவு நேரமிருக்கி றது? அவன் யோசித்தான்.

மெட்ராஸ் மெயில் வந்து நின்றது.கூலிகள் இங்குமங்குமாக ஓடினர்.ஒரு வய தான போலீஸ்காரன் பிச்சைக்காரர் கும்பலில் யாராவது புதிதாக வந்திருக் கிறார்களா,மிரட்டிக் காசு வாங்கலாம் என்று வந்துகொண்டிருந்தான். வழக்க மான குரல்கள்..டீ.. சூடான டீ. முட்டை.. இந்த சீட்டை எடுத்துக் கொள்ள லாம்..இல்லை.இது என்னுடையது..என் கர்ச்சீப்பை முன்பே போட்டு வைத்திருந்தேன்.ரயில் சரியான நேரத்துக்கு வந்ததா ,,தாமதமா.கவலைப்பட வேண்டாம் .சரி செய்துகொள்ளலாம்..இப்படி…

இருட்டு கடுமையாகி அவர்கள் மீது விழுந்தது.சிறிதுநேர்த்தில் வெளிச்சம் வந்துவிடும். இறைச்சிக் கடையில் கறிவாங்கக் கூட்டம் கூடிவிடும். அவன் தூங்க முயற்சித்தான்.

அந்தப் பெண்மணி எழுந்த போது அவன் தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்து தலையை வாரிக் கொண்டாள்.நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள். சக்ரா எழுந்து கொள்வதற்கு முன்னால் மார்க்கெட்டுக்குப் போகவேண்டும். ரயில் வரும்போது சக்ராவின் கையைப் பிடித்துக்கொண்டு எல்லா கம்பார்ட் மென்டுகளுக்கும் போவதை இன்று ஆரம்பிக்க வேண்டும்.நொண்டியும்,குருட னும் சேர்ந்து பிச்சையெடுப்பதைப் பார்த்து ஜனங்கள் காசு தருவார்கள்.கடவு ளருளால் காசு அதிகமாகக்கிடைக்கும்.

சக்ரா எழுந்தபோது அந்தப் பெண்மணி அங்கில்லை. அவள் மூட்டை மட்டுமி ருந்தது.அவள் எங்கே போயிருப்பாள்?அவள் எப்போதும் தாமதமாகத்தான் எழுந்திருப்பாள்.அந்த கூலி இழுத்துக் கொண்டு போய்விட்டானோ? ஏதோ குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும்.ஒரு தடவை அவளை அடித்த போலீஸ்கா ரனைப் பார்த்து பயந்து ஓடிவிட்டாளோ?ஆனால் எதற்கு அவள் மூட்டையை இங்கே வைக்கவேண்டும்? என்ன திட்டம் ?

“அவள் ஓடிப்போயிருக்க வேண்டும்”பரத் சொன்னான்.ஒரு வேசியிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?ஒரு முறை தவறு செய்தவர்கள் தவறு செய்பவர்கள்தான்.

“இங்கே பார் !பரத். அவள் என்னிடம் இருக்க வேண்டுமென்று எந்தச் சட்டமு மில்லை. அவள் இங்கிருந்து போக விரும்பினால் அது அவள் விருப்பம்.நீ ஏன் அவள் மீது இவ்வளவு கோபப்படுகிறாய்?அவளுடன் நான் இருக்க விரும் பியதும்.சேர்ந்து பிச்சை எடுக்கநினைத்ததும் உண்மைதான். சில கனவுகள் கனவுகளாகதானிருக்கும். போகட்டும்.பரவாயில்லை.கொனார்க் எக்ஸ்பிரஸ் வரும் நேரமாகி விட்டதே?வா, போகலாம்.

அன்றுகாலை சக்ரா எந்த ரயிலையும் தவறவிடவில்லை .அவன் பிச்சை எடுக்கப் போனாலும் அந்தப் பெண்மணியின் நினைவு வந்து கொண்டேயி ருந்தது.அவள் ஏன் அப்படிப் போனாள்?ஏன் ஒரு வார்த்தை கூடச் சொல்லா மல் போனாள்? அவனோடு தங்கும்படி சொன்னபோது எவ்வளவு சந்தோஷப் பட்டாள்.இரவில் வந்து விடுவாளா?அவனருகே படுப்பாளா? அவளிடம் ஒரே ஒரு கேள்விதான் அவனுக்கு.போவதற்கு முன்னால் ஏன் அவனிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை?ஒரு வார்த்தை மட்டும் அவனுக்குப் போதுமே.

சாயங்காலம் பரத் தான் அந்த விஷயத்தைச் சொன்னான்.

“உனக்குத் தெரியுமா சக்ரா?அந்தப் பெண்மணி இன்று காலை தன் இரண்டு கால்களையும் இழந்து விட்டாளாம்.மார்க்கெட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது சிக்னல் அருகே ,அவள் மேல் ஒரு ரயில் ஏறிவிட்ட தாம்.கையில் ஒரு புதியபாத்திரம் வைத்திருந்தாளாம்.அது நொறுங்கிக் கிடந்த தாம்.தன் புடவையில் முடிச்சாக வைத்திருந்த அரிசி அப்படியே இருந்ததாம். தலையில் குங்குமம் அப்படியே இருந்ததாம்.அவளைப் பார்த்தவர்கள் சொன் னார்கள்”.

“ரயில் ஏறிவிட்டதா?”சக்ரா அதிர்ந்தான்.”இரண்டு கால்களும் போய்விட்டதா?. அவன் இப்போது எங்கே போவான்? எந்தத் திசையில்?அவன் நின்று கொண்டி ருந்த தரையைக் குச்சியால் சுழட்டியடித்தான்.அவன் குச்சி குட்டையாக இருப் பது போலத்தோன்றியது.”பரத்!என்னை அந்த இடத்திற்கு கூட்டிக் கொண்டு போகிறாயா?நான் அவளைப் பார்க்க விரும்புகிறேன்”.

“அந்த விபத்தைப் பார்த்த சில புத்தியுள்ள போலீஸ்காரர்கள் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய்விட்டனர் “அவன் சக்ராவைத் திரும்பிப் பார்த்தான்.”ஐயோ !உன் வலது கண்ணிலிருந்து ரத்தம் வருகிறது”கத்தினான்.

“கவலைப்படாதே பரத்!என் கண்ணைப் பற்றிக் கவலைப்படாதே. நான் யுதிஷ் டிரனில்லை.என் கண்ணிலிருந்து விழும் ஒரு சொட்டு ரத்தம் பூமியை பன்னிரண்டாண்டுகளுக்கு தரிசாக்கிவிடாது.என்னைப் போன்ற ஓராயிரம் குருடர்களின் ரத்தம் ஆறாக ஓடினாலும் ஒன்றுமே நடக்காது.கொஞ்சம் என்னைத் தனியாக இருக்கவிடுகிறாயா? நீ உன் இடத்திற்குப் போ. சிறிது நேரம் நான் நானாக இருக்கவிரும்புகிறேன்”.

—-

தமிழவனின் `நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்`(சிறுகதைகள்) / வெளி ரங்கராஜன்

4_5430

தமிழவன் இலக்கிய கோட்பாட்டாளராகவும்,புனைவு எழுத்தாளராக வும்,விமர்சகராகவும் பல்வேறு இலக்கிய உரையாடல்களை முன்னெடுப்பவராக கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறார். நவீன இலக்கியவாதிகளிடம் மரபு மற்றும் வரலாறு குறித்த புரிதலை யும் விவாதத்தையும் வலியுறுத்தும் அவர் நம்முடைய கல்விப்புலச் சூழலில் இலக்கியம் குறித்த பார்வையும்,அணுகுமுறையும் மேம்பட வேண்டும் என்றும் மொழியின் சாத்தியங்கள் குறித்த சமகால உணர்வு உருவாக வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் எழுப்புபவராக இருக்கிறார்.

அவருடைய புனைவு எழுத்துக்கள் வழக்கமான கதை சொல்லும் முறையிலிருந்து மாறுபட்டு மையமற்றதாகவும்,கதையற்ற கதைகளாகவும் உள்ளன.புனைதலின் நுட்பமான செயல்பாட்டின் மூலம் சாத்தியமாகாத வாழ்க்கை அனுபவங்களை உணர்வதற்கான சாத்தியங்களை அவை கொண்டதாக இருக்கின்றன.காலம்,நினைவு இவற்றால் விடுபட்டுப்போன கண்ணிகளை இணைத்துச் செல்வதற் கான சரடுகள் கொண்டிருக்கின்றன.சில நிகழ்வுகளை குறியீடுகளாக பயன்படுத்தி வெவ்வேறு நிலைகளுக்கு அலைக்கழிக்கும் உத்திகளை இவை முன்னெடுக்கின்றன.

பாரம்பரியம் குறித்த உரையாடல் இக்கதைகளில் முக்கியமானதாக இருக்கிறது.மூன்று தலைமுறைகளின் சரித்திர ஞாபகம் நம்மோடு முற்றுப்பெற்றுவிடும் அவலம் பேசப்படுகிறது.அவசரநிலை காலகட்டம்,இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகிய வரலாற்று சம்பவங்கள் உருவாக்கிய கலவர உணர்வுகள் நினைவுகூரப்படுகின்றன.முக்கிய மாக நம்முடைய கலாச்சார நிறுவனங்களின் மந்தமான வேலை எதிர்ப்பு மனோபாவமும்,உண்மையான ஈடுபாடுகளை நசுக்கும் தன்மையும் கண்டனத்துக்கு உள்ளாகின்றன.மரபை தொலைத்தது, மொழியின் மரணம்,புராதனத்தின் மாயம்,அழகின் மரண ஈர்ப்பு ஆகியவை தொடர்ந்து உணர்வலைகளை எழுப்பியபடி உள்ளன. தத்துவத்தையும்,அழகியலையும் பொருத்திப்பார்க்கும் எண்ணற்ற சரடுகள் இக்கதைகளில் ஊடுறுவிச்சென்றபடி உள்ளன.

இவை கதைகளாகவும்,வெவ்வேறு மனநிலைகளாகவும் உள்ளன. சந்திப்பு,பிரிவு,மரணம்,புராதனம்,புதிர்த்தன்மை ஆகிய பல்வேறு சரடுகளுக்குள் இவை பயணிக்கின்றன.ஸ்தூலமாகவும்,ஸ்தூல மற்றும் ஒரு நிச்சயமற்ற தன்மை வாழ்க்கையை வழிநடத்திச் செல்வது போல் உள்ளது.சாத்தியமாகாத வாழ்க்கையின் அனுபவங்களை ஒரு புதிய மொழிக் கட்டமைப்பில் சாத்தியப் படுத்தும் உத்தியாக இக்கதைசொல்லல் உள்ளது.அவ்வகையில் இவை அதிகமான சாத்தியங்கள் கொண்டவையாக இருக்கின்றன.

••
நூல் மதிப்புரை
புதுஎழுத்து வெளியீடு

உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் / பா.வெங்கடேசன்

download-39

download-40

பிரபஞ்சத்தின் மிகப்​பெரிய சாபம்தா​னே நா​மெல்லாம்?
மனிதனில்லாத பிரபஞ்சம் களங்கமற்றதல்லவா?’ – (இழப்பு)

முருகனு​டைய 50 க​தைக​ளைக் கட்ட​மைக்கும் ஒரு
உத்​தேசக்காரணிப் பட்டியல் கீழ்கண்டபடி:
1. புறா, குரங்கு, கிளி, பாம்பு, மான், எலி, பூ​னை, காண்டா மிருகம், புழு, ஆடு, கழு​தை, சிங்கம் மற்றும் சில்லரை யாக ஆங்காங்​கே சிறுசிறு பூச்சிகள், பற​வைகள் இதர. இ​வை இடம்​பெறாத அல்லது இடம்​பெற வாய்ப்பில்லாத க​தைகளில்​ வெள்ளம், புயல், சிறு​தெய்வக் ​கோவில்கள், அல்லது புராதனக் கடிகாரம், ஊஞ்சல், கிணறு ​போன்ற​வை. இ​வை நகரம் கிராமம் என்கிற குறியீட்டுப் பின்புல மெல்லாம் இல்லாமல் இரண்டிலுமே ​பொதுவாக முன்​ வைக்கப்படுகின்றன.

2. ​பெரும்பான்​மைக் க​தைகளில் நகரப் பின்புலம் (தன் ​பெரும்பாலான க​தைகள் கிராமத்​தை அடிப்ப​டையாகக் ​கொண்ட​வை என்று ​கல்குதி​ரை (26) நேர்காணலில் முருகன் ​சொல்கிறார். ஆனால் 50 க​தைகளில் 16 க​தைகள் மட்டுமே நேரடியாகக் கிராமத்தில் நடப்ப​வை. அதாவது கிராமம் சார்ந்த சூழ​லையும் அதற்​கே ​பொருந்தக்கூடிய க​தைக் களத்​தையும் ​கொண்ட​வை).

3. இந்தத் ​தொகுப்பில் மாய யதார்த்தக் க​தைகளும் தொல் க​தைகளும் அற்புதக் க​தைகளும் நீதிக்க​​தைகளும் இடம் ​பெற்றிருக்கின்றன.

4. முருகனின் க​தைப் ​பெண்கள் அதிகப் பாலியல் ​வேட்கை உ​டையவர்களாயும் அதன்​பொருட்டு வ​ரையறுக் கப்பட்ட உறவுக​ளை மீறிய ​தொடர்புகளில் ஈடுபடுகிறவர் களாயும் இருக்கிறார்கள். ஆண்களுக்கும் இந்த ​வேட்கை இருந்தாலும் அவர்கள் அ​தை ​வெளிப்படுத்தும் ​தைரியம் அற்றவர்களாயும் தயங்கி ​வெளி​​யேறி விடுகிறவர்களாயு மிருக்கிறார்கள்.

​மேற்கண்ட இந்த நான்கு காரணிக​ளையும் எந்தச் சிந்தனைச் சரடு இ​ணைத்து முருகனின் சிருஷ்டி பரமாக வெளிப்படுத்துகிறது என்கிற ​தேடல் அவரு​டைய க​​தை களைப் புரிந்து​கொள்ள ஓரளவு உதவி ​செய்யலாம்.

முதலில் முருகனு​டைய க​தைகளில் மனித ​மையப் பிரபஞ் சம் என்பது மனிதனல்லாத பிற உயிர்களின் இருப்பால் ​தொடர்ந்து ​கேள்விக்கு உட்படுத்தப்படுவதாயும் சில
க​தைகளில் (‘கு​ளோப்’, ‘மாயக்கிளிகள்’, ‘நாய்’) கேலி ​செய்யப்படுவதாயும் இருக்கிறது. சூழல் குறித்த அதீத கவனம் அல்லது கவ​லை க​தைகளின் நனவிலியில் அ​வை அ​னைத் தின் ​பொதுத் ​தொனியாக அவற்​றை இணைக்கும் வண்ணம் ஓடிக்​கொண்​டே இருக்கிறது. இவற்​றைத் தற்​செயலான க​தை நிகழ்வு என்​றோ மனித இயல்பின் உருவகங்களாக ப​ழைய நீதிக்க​தைகள் மீதான பார்​வையி​லோ அல்லது கிராமம் து நகரம் என்கிற இரு​மை வடிவத் திலோ அர்த்தப்படுத்திக்கொள்வ​தைக் காட்டிலும் அதிக மானதும் ஆழமானதுமான ​பொருள் கொடலை அ​வை வாசகரிடம் ​வேண்டி நிற்கின்றன. ஏ​னென்றால் இந்த விலங்குகள் யாவும் (‘கு​ளோப்’ மற்றும் ‘புத்தரின் தொப்பி’ தவிர்த்து, ஆனால் அவற்​றையும்கூட முழுதாகத் தவிர்க்க ​வேண்டிய தில்​லை. அவற்றில் அவ்விலங்குகளின் செயல் பாடுகள் அவற்றின் இயற்​கை​யை நியாயப்படுத்து வதாகவேதான் வெளிப்படுகின்றன) தமக்​கே உரிய இயல்பு​கெடாமல் பிரபஞ்சத்தில் தங்கள் இருப்பிற்கான நியாயத்​தை, உரி​மை​யை, நிலத்திலும் இலக்கியப் பிரதி களிலும் மனிதனின் ஆக்கிரமிப்பை முன்னிறுத்திச் சுட்டிக் காட்டுவனவாகவே ​வெளிப்படுகின்றன. இ​வை வாசகருக்கு நீதி ​மொழியாக எ​தையும் சொல்ல​வேண்டிய தில்லை. ஆனால் புறா என்பது மருந்தாயும், குரங்கு என்பது உபத்திரவமாயும், மான் என்பது விருந்தாயும், கிளி திருட்டுத்தனமாயும், பாம்பு ப​கையாயும், கழு​தை சுய இன்பத்திற்கான கருவி யாயும் மனிதனால் சுய அடையாளங்க​ள் அழிக்கப்படுவனவாக முருகனின்
க​தைகளில் முன் ​வைக்கப்படும்​போது வாசக மனம் அனிச்​சையாகவே பதற்றத்திற்குள்ளாகிறது.

ஒரு பிணம் தின்னும் புழுவிற்குக்கூட இந்தப் பிரபஞ்சத்தில் அது பிறந்து வளர்வதற்கான காரணமும் ​தே​வையும் உரி​மை யும் இயற்​கைச் சுழற்சியில் இருக்கிறதுதா​னே. எனில்
இ​வைகளற்ற க​தைகளில் அழி​வைக்​கொண்டு வரும் இயற்​கைச் சீற்றங்க​ளையும் ​கோபக்கார ​தெய்வங்க​ளையும் இயக்கம் நின்று​போன ப​ழைய ​பொருட்க​ளையும் முருகன் ​வைப்ப​தை எ​​தேச்​​சை நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடிவதில்​லை. இதன் இன்​னொரு பகுதியாக மனிதனால் அழிக்கப்பட்டுவரும் பிற உயிரினங்களின் ​வேறு வழியற்ற அத்துமீற​லை முருகனின் சில க​தைகள் (‘கு​ளோப்’, ‘குரங்குகளின் வருகை’, ‘மாயக்கிளிகள்’, ‘நாய்’, ‘காண்டா மிருகம்’, ‘புழு’, ‘சாம்பல் நிறத் தேவ​தை’ (ஒரு மனிதக் காதலியின் இடத்திற்குள் ஊடுறுவுகிறது), ‘புத்தரின் ​தொப்பி’, ‘கானகம் க​லையத் தொடங்கியது…’) படம் பிடிப்ப​தையும் கணக்கில் எடுத்துக்​கொள்ள​வேண்டும்.

download-37

முருகனின் க​தைகளில் விலங்குகள் ப​ற​வைகளின்
இருப்​பை இப்படிப் புரிந்து​கொள்வது மற்​றொரு காரணி யாகிய நகரச் சூழலின் இடத்​தை அர்த்தப்படுத்திக்​கொள்ள உதவும். ஏ​னென்றால் பிரபஞ்சத்தில் பிற உயிர்களின் இருப்பு மீதான முருகனின் க​தைத்துவ அக்க​றைதான் கிராமங்களின் இருப்புக் குறித்தான பிரக்​ஞையாக அடுத்தக் கட்டத்திற்கு வளர்கிறது. முருகனின் க​தைகள் கிராமத்துச் சூழ​லை யதார்த்தவாதக் க​தைப் பாணியில் ஒரு பு​கைப் படப் பிரதி​யைப்​போலச் சித்தரிக்கும் தன்மை ​கொண்ட​வையல்ல. அதில் தனக்கு விருப்ப​மோ ஈடுபாடோ நம்பிக்​கை​யோ இல்​லை என்று முருகனும் தன் ​நேர் காணலில் சொல்கிறார். அவர் தன் க​தைக் கிராமங்களை ஒரு வி​சேஷமான இடத்தில், நி​​லையில் ​வைக்கிறார். அதாவது அவரு​டைய ​பெரும்பாலான க​தைகளில் இடம் ​பெறும் நகரச் சூழலின் நனவிலிக்குள்​ளோ அல்லது ஞாபகங்களி​லோ அல்லது உணர்வி​லோ அவரு​டைய கிராமங்கள் உள்​பொதிந்து வைக்கப்படுகின்றன.

இதில் முக்கியமாக வாசகர் நி​னைவில் இருத்திக்​கொள்ள ​வேண்டி யது என்ன​வென்றால் இப்படி இன்​மையாக இடம்​பெறும் கிராமங்கள் முருகன் க​தைகளில் ஒருபோதும் நகரத்தின் இருப்புக்கு எதிர்வாக வைக்கப்படுவதில்​லை​யென்பதுதான் (‘இரண்டாவது மரணம்’ மற்றும் ‘வழித்து​ணை’ ஆகியவை அழகான இரு உதாரணங்கள்). அதாவது இந்தக் கிராமங்கள் நகரத்​தின் பா​ழ்த்தன்​மை​யை விமர்சிப்பதற் காக​வோ அல்லது தங்களு​டைய உன்ன தத்​தை விதந்​தோதிக் ​கொள்வதற்காக​வோ க​தைகளில் இடம் ​பெறுவ தில்​லை. ​சொல்லப்​போனால் கிராமம் என்பது ஒரு உன்னதமான நிலவெளி என்கிற பிர​மை​யெல்லாம் முருகனின் க​தைப் பிரக்​ஞையில் இல்லவும் இல்​லை.

அ​வை மனிதன் தவிர்த்த பிற உயிர்கள் க​தை ​வெளியில் தங்கள் இருப்​பை வாசகருக்கு நி​னைவுபடுத்தும், மற்றும் அதன்வழி​யே அதற்கான உரி​மை​யை ​மௌனமாகப் பிரகடனப் படுத்தும் அளவிற்​கே தங்க​ளை ​வெளிப் படுத்திக்கொள்கின்றன. அ​தேசமயத்தில் இ​வை நி​னைவு களிலும் உணர்வுகளிலும் மீளும் தருணங்களில் இதற்கு ஆட்படும் கதாபாத்திரங்கள் பதற்றத்திற்கு ஆளாகிறார்கள் என்கிற வ​கையில் அ​வை மனிதனால் அழிக்கப்படும் அந்தப் பிற உயிர்க​ளைப்​போல​வே ஒருவ​கையான தவிர்க்கவியலாத அத்துமீற​லை நிகழ்த்தும் பண்​பைக் கொண்டு விடுகின்றன. அதாவது ஆக்கிரமிப்பிற்​கெதிரான அத்துமீறல் எனலாம்.

காலனிய ஆதிக்கக் காலத்தில் மனித​னையும் அவனு​டைய விஞ்ஞான அறி​வையும் மட்டு​மே முன்னிறுத்திப் ​பேசிக்​கொண்டிருந்த யதார்த்தவாதக் க​தை ​சொல்லலால் விளிம்பு நி​லைக்குத் தள்ளப்பட்ட கீ​ழைத்​தேயங்களின் மரபான க​தை​ சொல்லல் பாணி​யை இருபதாம் நூற்றாண் டின் இறுதிக்கால் பகுதியில் மீட்​டெடுக்கத் ​தொடங்கிய வரலாறு நமக்குத் ​தெரியாததல்ல. இந்த மாற்றுக்க​தை​ சொல்லல் தன்னியல்பி​லே​யே மனித ​மையப் பிரபஞ்சத்​ தைக் கேள்விக்குள்ளாக்கும் திற​னை உள்ளடக்கிய​தென்ப தால் முருகனின் 50 க​தைகளில் 20 க​தைக​ள் யதார்த்தவாதப் ​பாணியிலும் மீதம் 30 க​தைகள் ​மாற்றுக் க​தைப் பாணி யிலும் இருப்பது ஆச்சரியத்​தை ஏற்படுத்துவதாக இருப்ப தில்​லை.

முருகனின் மாய யதார்த்தக் க​தை ​சொல்லல் பாணி என்பது​யோவாகு​மேரிஸ் ​ரோஸாவின் நதியின் மூன்றாம் கரை சிறுகதையால் பாதிக்கப்பட்டதைப்போல ஒரு விதமான க​தைத்துவக் குழப்பத்​தை அடிப்ப​டையாகக் கொண்டு இயங்குவது (‘இரண்டாவது மரணம்’, ‘ஆற்​றோடு ​போனவன்’, ‘சாயல்’, ‘சத்திரம்’). மேலும் இவரின் இந்த வகைக் கதைகள் ஒ​ரே மாதிரியான க​தைப் பின்ன​லையும் ​கொண்ட​வை. பிறபாணிக் க​தைக​ளைப் ​பொறுத்த
வ​ரை அதில் அ​வை எவ்வளவு தூரம் க​தையாக ​வெற்றி ​பெற்றிருக்கின்றன என்பது தனியாக விவாதிக்கப்பட ​வேண்டிய விஷயம். ஆனால் யதார்த்தவாதக் க​தை ​
சொல்லலினூ​​டே இவற்றின் இருப்பும் அவற்றினுள் மரபான க​தை வடிவப் பிரக்​ஞையின் ஊடுறுவலும்தான் ​மே​லே விவரித்த இரண்டு காரணிகளின் நீட்சியாக இந்தக் க​தைகளின் ​செய்தி என்று வாசகர் நிச்சயமாக எடுத்துக்​கொள்ள முடியும்.

கூர்ந்து கவனித்தால் ​நேரடியாகவும் ம​றைந்தும் பாலியல் ​வேட்​கையின் பல பரிணாமங்கள் விரவிக் கிடக்கும் முருகனின் க​தைகளில் அதன் அடிப்ப​டை என்று ​
சொல்லப்பட்டிருக்கிற காதல் என்கிற மனம் சார்ந்த வஸ்து இல்ல​வே இல்​லை என்ப​தை வாசகர்கள் ஆச்சரியத் துடன் கண்டுபிடிக்க முடியும். பாலியல் வேட்​கை​யை இயல்பூக்கம் என்றும் காத​லை மனித இனக்கலாசார வளர்ச்சியின் வி​ளை​பொருள் என்றும் ​வைத்துக்​கொண் டால் முன்ன​தை உடலுக்கும் பின்ன​தை மனதிற்கும் இ​ணை ​வைக்க முடியும். எனில் உட​லை இயற்​கையின் சிருஷ்டி என்றும் மன​தை சமூகத்தின் கண்டுபிடிப்பு என்றும் பொருள்​கொள்ள, முருகனின் க​தைகள் ஏன் இயல்பாக​வே காம வயப்படுமளவிற்குக் காதல் வயப் படுவதில்​லையென்பது விளங்கும். காமம், குறிப்பாகப் ​பெண்களின் காமம், இங்​கே பிரபஞ்சத்தில் மனித​னைத் தவிர்த்த ஏ​னைய உயிர்களின் இருப்பினு​டைய குறியீடா கவே க​தைகளின் ​போக்கில் வளர்ச்சியுறுகிறது. என​வே தான் காமம் மனித விதிகளுக்குள் அடங்காத இயற்​கை வழியில் தன்​னை ​வெளிப்படுத்திக்​கொள்ள வி​ழைகிறது.

முருகன் க​தைகளில் கணவன் ம​னைவிக்கி​டை​யேயான ஒழுங்க​மைக்கப்பட்ட காமம் ஒன்​றைத் தவிர்த்து (அப்படி அபூர்வமாக நிகழும் ஒ​ரே​யொரு இ​ணைவும் விபத்தில் அடிபட்டு அற்பாயுசில் போய்விடுகிறது (‘சாயல்’) மற்றபடி ஒருத​லைக்காமம், பலர்​மேல்காமம், சுயகாமம், கள்ளக் காமம், வி​லைக்காமம், காலம் கடந்த காமம் என மண விதிகளுக்கு அப்பாற்பட்டுச் சாத்தியமுள்ள அத்த​னை வ​கைகளுக்கும் மாதிரிகள் கி​டைக்கின்றன. ஆனால் கூர்ந்த அவதானிப்புள்ள வாசகனுக்கு இ​வை உண்​மையில் குறிப்பது காமத்​தை அல்ல (அல்லது இவற்றின் ​நோக்கம் இன்பம் துய்த்தல் அல்ல) என்பதும் மனம் என்கிற, அதிகாரத்தால் கட்டப்பட்ட அ​மைப்பானது உடல்​ மேல் (இ​தை மனம் என்கிற வஸ்து வளர்ச்சியுறாத, ​வெறும் உடல்களாக​வே அ​லையும் ஆறறிவிற்குக்
கு​றைந்த உயிர் கள் என்று எடுத்துக்கொள்ள ​வேண்டும்) நிகழ்த்தும் ஆக்கிரமிப்பின் மீதான கலகம் என்பதை புரிந்து​கொள்ள முடியும். புழக்க​டைக்காமம் ஏன் முருகன் க​தைகளில் ​பெரும்பாலும் ​பெண்களா​லே​யே நிகழ்த்தப் படுகின்றன என்ப​தையும் நாம் இவ்விதமான அணுகு மு​றையில் விளங்கிக்​கொள்ள வேண்டியிருக்கிறது.

மனித ​மையப் பிரபஞ்சத்தினுள் பிற உயிர்களின் இருப்பு, நகரத்திற்குள் கிராமத்தின் இருப்பு, யதார்த்தவாதப் ​பெரும் பிரதிப்பரப் பிற்குள் மரபான க​தை​ சொல்லலின் இருப்பு ஆகியவற்​றைப்​போல​வே ஆண்களின் உலகில் ​பெண்களின் இருப்பும் பௌதீக ரீதியாக விளிம்பு நி​லைக்கும் கருத்தி யல் ரீதியாகக் கற்ப​னை நி​லைக்கும் பிரதி ரீதியாக மாய யதார்த்தத்திற்கும் நகர்வதாக இருக்கிறது. மனிதக் குடியிருப்புகளுக்குள் மிருகங்களின் ஊடுறுவ​லை முருகன் என்னவிதமான மனநி​லையில் ​சொல்கிறா​ரோ அ​தே விதமான மனநி​லையில்தான் ‘இடம்’, ‘கிழத்தி’, உரு மாற்றம், மாயக்கிளிகள் முதலான க​தைகளின் ​பெண் பாத்திரங்க​ளையும் கையாள்கிறார். அ​தே சமயத்தில் இவள் மனித இருப்பின் இரக்கமின்​மையால் காடுகளுக் குள் துரத்தப்படும், ​கொ​லையுணப்படும், மருந்தாக்கப் படும், அனா​தையாக்கப்படும் உயிர்க​ளையும் நிலங்க​ளையும் பிரதிக​ளையும் ​போலன்றி மனதின் இருப்புக்குப் புகலிடம் தரும் அ​தே அறிவின் தந்திரத்​தைப் பயன்
படுத்தித் தன் உடலின் இருப்​பை வஞ்சகமாகத் தக்க ​வைத்துக்​கொள்கிறாள். இதனால்தான் ஊருக்குள் ஊடு றுவும் விலங்குக​ளைத் திரும்பக் காட்டிற்குள் மனிதனால் விரட்ட முடிவ​தைப்​போல, ஆணால் ​பெண்க​ளைத்திரும்ப அவர்களு​டைய ஸ்திதியில் நிறுத்தி​வைக்க முடிவதில்​லை.

அங்கே அவன் ​பெரும் ​தோல்வி​யைச் சந்திக்க ​நேர்கிறது. முருகனின் க​தைகளில் ​பெண்கள் மிருக இச்சை​யோடு அதற்கான மிருகத்தனமும் பிடிபடும் சூழல் வரும்​போது மிருக பலமும் இயல்பூக்கமுள்ள தந்திரமும் மிருக உலகின் தார்மீக நியதியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இங்​கே கலாசாரக் கட்ட​மைப்புகளான அன்பு, காதல், விசுவாசம், ​நேர்​மை போன்ற அடி​மை உணர்வுகளுக்கு ஏது இடம். ண

( 2017 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஆதி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவர இருக்கும் ‘ஜீ.முருகன் சிறுகதைகள்’ தொகுப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரை. )

பிரபா வர்மா எனும் பிறவிக் கவிஞன் ஓர் அறிமுகம். / இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

download-14

இம்முறை தமிழில் ‘கல்யாண்ஜி’ என்கிற வண்ணதாசனுக்கு ‘ஒரு சிறு இசை’ எனும் சிறுகதைத் தொகுப்பிற்காகச் சாகித்ய அகடமி விருது கிடைத்துள்ளது. அதேபோல மலையாள மொழிக்கான சாகித்ய விருது ‘பிரபா வர்மா’ க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஷியாமமாதவம் எனும் கவிதைத் தொகுப்புக்கு (Anthology) இவ்விருது கிடைத்துள்ளது.

கவிஞர், விமர்சகர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், கல்வியியலாளர் என்று பன்முகம் கொண்டவர் வர்மா. கல்வியாளர்களால் இவர் ‘பிறவிக்கவிஞர்’ எனவும் கருதப்படவதுண்டு. இவரது படைப்புக்களின் உட்கூறுகளைப் பின்வருமாறு வகுக்கலாம்.
1. மரபையும், நவீனத்தையும் ஒருங்கே ஒன்றுசேர்த்துக் கிடைக்கும் கவிதையாக்கங்கள்.
2. சுயசிந்தனை (Original) மூலமாகக் கவிதைகளைத் திறம்பட எடுத்துரைக்கும் ஆளுமை.
3. ஆழமான காதலுணர்வுகளும், அளவுகடந்த கவித்துவ உருவமைப்புக்களும். (Poetic Images).
4. தத்துவ நுண்ணோக்கும், வாழ்வை வாழ்வதற்கான அடிப்படையான புரிதலும்.

பரந்ததூரம் உலாவரக்கூடிய இவரது பன்முக இலக்கிய ஆளுமையானது மலையாள மூத்த இலக்கியவாதிகளால் மதிப்புடன் நகர்த்தக்கூடிய ஒன்றாகவே இருந்துள்ளது எனவும் கூறலாம். அதனால் தான் சிறிய வயதில் திறமைக்கேற்ற விருதுகளையும், மதிப்புரைகளையும் பெற்றுள்ளார் எனக்கருதலாம். ஒன்பது கவிதைத் திரட்டுக்களையும், சமகால சமூக-அரசியல் வெளிகளை இலக்கியத்துடன் ஒப்பிட்டு நான்கு நூல்களையும், திறனாய்வுக்கட்டுரைகள் மூன்றும், ஊடகக் கற்கை மற்றும் பயணக்குறிப்புகள் தலா ஒன்றுமாக எழுதியுள்ளார். அத்துடன் இவரது கல்விசார்ந்த நூல்களும் பிரபலமானவை.

1975-1980 காலப்பகுதியில் கல்லூரி/பட்டப்படிப்புக் காலத்தில் மாணவர் அரசியலில் அதீத ஆர்வமுள்ளவராகவும் இருந்ததுடன், கவிஞராகப் பிரபலமாக முன்பு இந்திய மாணவர் ஒன்றியப் பிரதிநிதியாகவும் பதவிவகித்துள்ளார். இவையே பிற்காலத்தில் இவர் எழுதிய சமூக-அரசியல் விவாதங்களுக்கு அடிகோலியது எனலாம். “பாஸிசம் எதற்கு?” என்ற கல்விக்கட்டுரை நூல் இதற்குத் தக்க சான்றாகும்.

1990ம் ஆண்டில் வர்மாவின் “சூர்ப்பனகை” என்ற முதலாவது கவிதைத் தொகுப்பு வெளியாகியிருந்தது. இதன் தரம் கருதி வைலோப்பிள்ளி விருது தொகுப்புக்காக வழங்கப்பட்டது. இது பிரபல மலையாளக் கவிஞர் வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனன் நினைவாக வழங்கப்படுவதாகும். (மலையாளக் கவிதைகளை றொமான்டிக் சகாப்தத்திலிருந்து நவீன யுகத்துக்கு மாற்றிய கவிஞருள் மேனனும் ஒருவர்)
அத்துடன் ‘அங்கனம்’ எனும் விருதும் வர்மாவுக்கு அளிக்கப்பட்டது.

தனது 37வது வயதில் “அரக்கப்பூர்ணிமா” எனும் இரண்டாவது கவிதைத் திரட்டையும் வெளியிட்ட வர்மா, இத்தொகுப்பினூடாக விமர்சகர்களாலும், வாசகர்களாலும் பெருங்கவனத்துக்கு உள்ளாகினார். 1995 கேரள அரசின் சாகித்ய அகடமி விருதை இத்தொகுப்புக்காகப் பெற்றார். இவ்விருது கேரள எழுத்தாளர்களின் உன்னத படைப்பாக்கங்களுக்காக வழங்கப்படுவதாகும். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, பயணக்கட்டுரைகள் என்ற பகுப்பினடிப்படையில் விருது வழங்கப்படும். இதற்கு முன்பு இவ்விருதை விஜயலஷ்மி பெற்றார்.(பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவரின் மனைவி).
வர்மாவுக்குப் பின்பு ஆற்றூர் ரவிவர்மா 1996ல் தனது கவிதைகளுக்காக பெற்றிருந்தார்.

பிரபா வர்மாவின் சந்தன நாழி, ஆற்டம், கலாப்ரயாக, அவிச்சரிதம், அபரி கிரகம் முதலான பின்வந்த கவிதைநூல்கள் மலையாள வாசகர்களால் பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்டிருந்தது. மூன்று தசாப்தங்களாக பத்திரிகை, ஊடகத்துறையிலும் பணியாற்றி வருகிறார். ஆங்கிலம், மலையாளம் முதலான மொழிகளில் இவரெழுதிய கட்டுரைகள் பல இந்திய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. 2002-2010 வரை ஹைராளி மற்றும் பீப்பிள்(People) ஆகிய மலையாளத் தொலைக்காட்சிகளில் செய்தி இயக்குநராகப் பணியாற்றியுமுள்ளார். பல்வேறு உள்ளக, வெளியக கலந்தாய்வு மாநாடுகளில் பங்குபற்றியுள்ளார். டோகாவில் இடம்பெற்ற சர்வதேச சந்திப்பில் ‘வளர்ந்து வரும் மக்களாட்சிமுறை’ ( Emerging Democracies) எனும் தலைப்பில் இடம்பெற்ற வர்மாவின் கட்டுரை முக்கியத்தும் மிக்கது. 1996ல் கேரள அரசின் சிறந்த பத்திரிகையாளர் விருதும் பெற்றுள்ளார்.

திரைத்துறையில் இவரது பங்கு முக்கியமானது. பாடலாசிரியராக வெகுஜன மக்களிடம் சென்று சேர்ந்துள்ளார். சீலாபதி, சாயானம், ஸ்திதி, கலாபம், நகரவாது, கிராம பஞ்சாயத்து, வர்ஷ, ஹரீந்திரன் ஒரு நிஷ்க்களங்கன் முதலான படங்களுக்கு வரிகளை எழுதியிருந்தார். ஸ்திதி என்ற படத்திலுள்ள “ஒரு செம்பனீர் போல பூவிருந்து..” என்ற பாடலின் வரிகள் இன்றும் அனைவராலும் கேட்கப்படுவதுண்டு. அதிலுள்ள “நீல இரவின் ஏகாந்தவேளையில் உனது கண்களின் ஞாபகம் மாய்வதில்லை” (நீல ராவிலே ஏகாந்ததியிலே…) என்ற வரிகள் பாரட்டத்தக்கதாக அமைந்திருந்தது. சில பாடல்களுக்கு 2006 மற்றும் 2013ல் அரசு விருதும் கிடைத்துள்ளது.
மலேசியன் டயரிக்குறிப்புகள் (Diary Of Malaysia) என்ற பயணக் கட்டுரையும் இவரெழுதிய அனுபவக் குறிப்புகளாகும். தனது பயணத்தில் இடம்பெற்ற சுவாரசிய அம்சங்களையும், ரசனை அனுபவங்களைம் அதிலிணைத்துள்ளார்.

பல விருதுகளின் சொந்தக்காரராக இவருள்ளார். அசான் கவிதை விருது, செங்கம்புழா புரஸ்காரம், மூளூர் விருது, கடவநாடு விருது, வெண்ணிக்குளம் விருது, மார் கிரேகரியஸ் விருது, வெண்மணி விருது, கேரளவர்மா கவிதை விருது, அபுதாபி ஷக்தி விருது என முப்பதிற்கும் அதிகமான விருகளைப் பெற்றுள்ளார். அண்மையில் இவர் பெற்ற சாகித்ய விருது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது.

1. சாகித்ய அகடமி விருது- ஷியாமமாதவம் தொகுப்பு:

இந்த ஆண்டு மலையாள மொழிக்கான சாகித்ய விருதை பிரபா வர்மாவின் ஷியாம மாதவம் பெற்றது. 2013ல் இந்நூல் வயலார் இலக்கியவிருது மற்றும் மலையத்தூர் விருது ஆகியவற்றையும் பெற்றமை சிறப்பம்சமாகும். எம்.லீலாவதி, கவிஞர் ஆலங்கோடு லீலாகிருஷ்ணன், மற்றும் வி.சுகுமாரன் ஆகிய ஜூரிமார் தலைமையில் இந்நூல் விருதுக்குத் தேர்வாகியிருந்தது.
ஷியாமமாதவம் கவிதை வடிவான நாவலாகும். 15 அத்தியாயங்களாக அமைந்தது. வேடனின் அம்புபட்டு இறக்கும் தன்மையுள்ளவனாக கிருஷ்ணனது மனதும், அம்சங்களும் இக்கவிதைநூலில் சித்திரிக்கப்பட்டுள்ளது. வழக்கமான கிருஷ்ண கதைகள், நாம் கேள்விப்பட்ட கண்ணன் கதைகளினின்று மாறியே அமைந்துள்ளது எனலாம். உறையவைக்கக் கூடிய கதையமைப்பு, அழுத்தமான கதையை விட்டு எழுந்திருக்கமுடியாத உருவமைப்பு என மிகச் சிறப்பான முறையில் வர்மா இந்நூலைக் கட்டமைத்துள்ளார். பதின்ம அடுக்காக அமைந்த வரிகளிலிருந்து (Metric Patterns) விலகிய மலையாளத்தின் மரபார்ந்த கவிதைமுறையை (Chandas, Alankaaraa, Dandakaranya) மீளவும் தனது ஷியாமமாதவம் படைப்பினூகக் அடையாளம் காட்டியுள்ளார். இதன்மூலமாக நவீனத்துடன் இணைந்துள்ள பாரம்பரியத்தின் இணைபிரியாத அம்சங்களைத் தனது படைப்பினூடாக வெளிக்கொணர்ந்துள்ளார். அநேகமான விமர்சகர்கள் இலக்கியப் பெரும்படைப்பாக (Magnum Opus) உள்ளதென ஷியாமமாதவம் மீதான விமர்சனத்தை வழங்கிவருகின்றனர்.

2. பட்டத்துவிழா கருணாகரன் விருது.
1925-1988 வரை வாழ்ந்து வந்த கருணாகரன் என்ற சிறுகதை எழுத்தாளர் நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது. “பட்டத்துவிழா” என்பது அவரின் குடும்பப் பெயர். இந்த தசாப்தத்துக்கான சிறந்த இலக்கிய ஆளுமையாக பிரபா வர்மா தெரிவாகியுள்ளார். கூடவே தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வர்மாவின் ஷியாமமாதம் எனும் படைப்பு மலையாள இலக்கியவுலகில் வளம் சேர்த்தது விருதுக்குக் காரணமாகும். பெருமாள் முருகனுக்கு அவரது மாதொருபாகன் படைப்புக்கான பரிசாக இது அமைகின்றது.

1991-2001 வரை பிரபா வர்மா அவர்கள் கேரள முதல்வரின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றினார். 2008-2012 வரை அகில இந்திய சாகித்ய அகடமி குழுவிலும் அங்கத்தவராக இருந்துள்ளார். இதே காலப்பகுதியில் கேரள சாகித்ய குழுமத்திலும் உபதலைவராக இருந்து சிறந்த படைப்புக்களைப் பகுப்பாய்வு செய்து வந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இன் ஊடக ஆலோசகராகத் தற்சமயம் பணியாற்றி வருகிறார்.

கவிதைத்துறை, விமர்சனம்/திறனாய்வு, ஊடகத்துறை, சினிமாத்துறை, பயணக்குறிப்புகள் எனப் பலவற்றில் ஜொலித்து வருகின்றார் வர்மா.
அய்யப்பப் பணிக்கரின் பின்பு சிறந்த கல்வியியலாளராக இவரைக் கருதக்கூடிய வகையில் வர்மாவின் படைப்பம்சங்கள் பணிக்கருடன் ஒத்துப் போகின்றன என்றால் அது மிகையல்ல.
===

திரு.மஹ்ராஜின் மைதானம். ( சிறுகதை ) / லஷ்மி சரவணகுமார்.

shiva_dancing

“1528 ம் ஆண்டில் அஸ்டெக் மக்களின் பந்து விளையாட்டை ஐந்தாம் கார்லோஸ் மன்னன் முன்பு கோர்ட்டஸ் சமர்ப்பித்தபோது, அந்த விளையாட்டின் உள் அர்த்தம் அங்கிருந்த பார்வையாளர்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது.”
வால்ட்டர் க்ரிக்கன்பெர்க். ( the ancient culture of mexico.)

முன் குறிப்பு :

இந்தக் கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனையே. ஏதேனுமொரு தேச மக்களோடோ கார்ப்ரேட் கம்பெனிகளோடோ, அதிபர்களோடோ பொருந்திப்போயின் முழுக்க முழுக்க அது தற்செயலானதே…

ஆயிரம் கதவுகள் கொண்ட அந்தப்புரம் :

கோடை காலம் துவங்கியிருந்ததின் அடையாளமாய் மிகத் தாமதமான சூரிய அஸ்தமனத்தில் நீண்டு விரிந்திருந்த அந்தப் பனிமலை பொன்னிறத்தில் ஜொலித்தபடியிருக்க, இடுங்கிப் பனியடர்ந்த சாலையில் பூனைக்குட்டிகளைப் போல் சத்தமேயில்லாமல் புதிய porsh கார்கள் அரண்மனையை நோக்கி வந்துகொண்டிருந்தன. தூய நீர் சீறிப்பாயும் செயற்கை ஊற்றுகள் அன்றைய தினத்தின் புதிய விருந்தாளிகளை வரவேற்றபடி தலைவணங்கி மரியாதை செய்து கொண்டிருக்க, பணியாட்கள் கார்களின் கதவுகளைத் திறந்து பூர்ண மரியாதையுடன் தங்கள் விருந்தாளிகளை அழைத்துச் சென்றனர்.

பளபளக்கும் தரையும் சுவர்களும் நடப்பவர்களின் நிழல் விழாத சாதுர்யத்தோடு அமைக்கப்பட்ட விளக்குகளின் வெளிச்சமுமாய் அந்தக் கட்டிடம் தேசத்தின் பெருமைமிகு அடையாளமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. அழகிய நங்கைகள் தங்கள் உடல்கள் எப்போதும் வேறு உடல்களோடு பிணைய பழக்கப்பட்ட முன் தயாரிப்போடான சிரிப்புடன் ஆங்காங்கு நின்று வரவேற்றனர். டிஜிட்டல் திரையில் மஹ்ராஜின் சில ஆயிரம் புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்து சென்றபடியே இருந்ததை அவர்கள் காணத் தவறவில்லை.

முழுக்க ஆட்கள் புதையுமளவு இலகுவான குஷன் இருக்கையை காட்டிவிட்டு உதவியாளர்கள் ஒதுங்க, தாங்கள் அழைக்கப்படுவதற்காக காத்திருந்தபடி அமைதியாய் அவ்விடத்தை வெறித்தனர்.
எல்லா திசையிலிருந்தும் நுழைந்து வெளியேறும் வெவ்வேறு வாசல்களைக் கொண்ட அந்த கட்டிடத்தில் அவர்களுக்கு எதிரிலிந்த கதவைத் தவிர்த்து மற்ற கதவுகளனைத்தும் சாத்தியே வைக்கப்பட்டிருந்தன. ரகசியத்தின் எந்தக் கயிறையும் எவர் ஒருவரும் பற்றி தொடர்ந்து விடக்கூடாதென்கிற கவனத்தில் மஹ்ராஜின் ஆணையின் பேரில் செய்யப்பட்ட ஏற்பாடு அது.

தனது புதிய பிரேசிலிய காதலியுடன் அவர்களிருக்கும் வளாகத்தை நோக்கி வந்த மஹ்ராஜின் நடையில் அசாத்தியமான கம்பீரம். பிரமுகர்களுக்கான பிரத்யேக புன்னகை ஒன்றை அவர்களை நோக்கி அவர் உதிர்க்கையில் எதிரிலிருந்த கதவைத் திறந்தபடி ஒரு பெண் படபடவென அவரை சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு நகர்ந்தாள். அத்தனை அவசரத்திலும் மிக லாவகமாக புகைப்படத்தில் தன்னை இறுத்திக் கொண்ட மஹ்ராஜ் காதலியின் இடையோடு சேர்த்திருந்த கையை சரியாக விலக்கிவிட்டு அவர் மட்டும் பதியும்படி பார்த்துக்கொண்டார்.

விருந்தினர்கள் எழுந்து கொண்டு மரியாதை செய்த போது அவர்களை நோக்கி கையெடுத்துக் கும்பிடத் தவறவில்லை. எல்லோருக்கும் ஆச்சர்யம். மன்னரின் சிறப்பே அவர் பிரம்மச்சாரி என்பதுதான். ஆனால் இப்பொழுது விளைந்த சோளக்கதிரின் வனப்பையொத்த அந்த பிரேசிலிய யுவதி அவர்களின் கண்ணை உறுத்தினாள்… ஒரு புதிய கதவு திறக்கப்பட உரையாடலுக்கென்ற பிரத்யேக மேடையோடு இருந்த அரங்கம் அவர்களுக்காய் காத்திருந்தது. தனது காதலியை இறுக்கி முத்தமிட்டவர் “நான் வரும் வரை இங்கு காத்திருக்க வேண்டாம். அறையில் சென்று இரு.. முக்கியமாய்க் கதவைத் தாழிட மறந்துவிட வேண்டாமென” அவளை அனுப்பி வைத்தார்.

புன்னகையோடு அவரிடமிருந்து பிரிந்து சென்ற அந்த ஆச்சர்யமிக்க அழகியின் பின்புற அசைவுகளை விருந்தினர்களில் சிலர் கண்கள் சொருக பார்க்க, சத்தமாக செறுமியபடியே மஹ்ராஜ் அரங்கத்திற்குள் நுழைந்தார். அவ்வளவு நேரமும் அவர்களுக்கிருந்த சந்தேகத்துடனான கேள்வியைப் புரிந்து கொண்ட மஹ்ராஜ் “இப்பவும் நான் பிரம்மச்சாரிதான்… அப்டித்தான் இல்லையா?” என அவர்களையும் அங்கு உதவிக்காக இருந்த அவர்களின் பெண் அதிகாரிகளையும் பார்த்து சத்தமாக சிரிக்க அதை ஆமோதிக்கும் விதமாய் எல்லோரும் புன்னகைத்து தலையசைத்தனர்.
ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்திருக்கும் வியாபாரக் கோப்புகளை எடுத்து அவரிடம் தர, மஹ்ராஜின் உதவியாளர் ஒவ்வொன்றாய் எடுத்து முக்கியமானவற்றை வாசித்துக் காட்டினார்.

மஹ்ராஜோடு எல்லோரும் கவனமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க, டேபிளில் அருந்துவதற்காக கண்ணாடி தம்ளரில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறத் திரவத்தை விருந்தினர்களில் ஒருவர் கலவரத்துடன் பார்த்தார்.

எடுத்து அருந்தாலாமா வேண்டாமாவென்கிற குழப்பத்தோடு கையைக் கொண்டு செல்ல “இருங்க உங்களுக்கு தாகசாந்திக்கு வேற இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல நாட்டு மக்கள் கிட்ட ”ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மக்கள்” ங்கற கருத்த வலியுறுத்தி தொலைக்காட்சி வழியா பேசப் போறேன். எல்லோரையும் ஒருங்கிணைக்கப் போறது இந்த புணித தீர்த்தம் தான். இத தொலைக்காட்சியில பாக்கப்போற மொத்த தேசத்துக்கும் இது கோமியம். கடவுளோட தீர்த்தம். இதை நான் அருந்தற மாதிரி ஒரு காட்சி திரைக்கதை ல இருக்கு. அதுக்கான செட் ப்ராப்பர்ட்டி இது.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே பணிப்பென் ஒருத்தி சுத்தமான பசும்பாலை இளஞ்சூட்டில் அருந்தத் தந்தாள்… தேச ஒற்றுமை மாட்டுக்கோமியத்தில் இருக்கிறதென்பதை நம்புகிற மக்களா இவர்கள் என்பதை வியப்போடு பார்த்த ஒருவர் ‘இன்று இரவிலிருந்தே இதையும் ஆன் லைனில் விற்கத் தயார் செய்ய வேண்டுமென முடிவு செய்து கொண்டார்.’

விருந்தினர்களில் ஒருவர் அவ்வப்போது அந்த அறையின் ஒரு மூலையில் ஆடை விலகின நிலையில் உணவு மேசையில் பதார்த்தங்களைப் பரிமாறிக் கொண்டிருந்த பெண்ணின் மார்புகளை திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டார். தற்செயலாக கண் திறந்த மஹ்ராஜ் ஏதோவொரு உள்ளுணர்வின் உந்துதலில் உணவை அலங்கரிக்கும் பெண்ணையும் அவளையே விழுங்கப் பார்க்கும் விருந்தினரையும் கவனித்தார்.

கையை உயர்த்தி கோப்பை வாசித்த அதிகாரியை நிறுத்தச் சொல்லிவிட்டு, திரும்பி அந்தப் பெண்ணைப் பார்க்க அதிகாரிகளில் ஒருவர் தனது புத்தம் புதிய பிஸ்டலால் அவளது பின்னந்தலையில் சுட்டார். கபாலம் சிதறி பரப்பி வைக்கப்பட்ட உணவு மேசையின் மீது ரத்தத் துளிகள் தெறிக்க, விருந்தினர்கள் யாவரும் அச்சத்துடன் இவன் வழக்கமான மஹ்ராஜ் இல்லை. அவர்களை விடவும் மூர்க்கமான பைத்தியக்காரன் என சப்தநாடியும் ஒடுங்கப் புரிந்து கொண்டனர். அதன் பிறகு கோப்புகளை வாசித்து முடிக்கும் வரையிலும் யாருடைய கவனமும் சிதறியிருக்கவில்லை. எல்லோருடைய கோப்புகளையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட மஹ்ராஜ் கண்ணாடி வழியே அரண்மனைக்கு வெளியே திரண்டு கிடந்த பனிச்சரிவுகளை ஏக்கத்துடன் பார்த்தார்.

அதிகாரிகள் அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்டு விருதினர்களின் காதில் கிசுகிசுக்க மஹ்ராஜோடு சேர்ந்து எல்லோருமாக பாதுகாப்போடு அரண்மனைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். எங்கும் நிறைந்து கிடக்கும் பனியை பார்த்த உற்சாகத்தில் கரடிக் குட்டியைப் போல் கால்களைத் தூக்க இயலாமல் ஓடிய மஹ்ராஜ் புனிக்குள் கைவிட்டு அதை பெரிய உருண்டையாக உருட்டினார். விருந்தினர்கள் அடுத்து என்னசெய்வதென்கிற விவரம் புரியாமல் பார்க்கும் பொழுதே அதிகாரிகள் அவர்களை மஹ்ராஜுக்கு உதவும்படி பார்வையால் பணித்தனர்.

எல்லோரும் தங்கள் பங்கிற்கு மஹ்ராஜைப் போலவே பெரிய பெரிய உருண்டைகளாய் உருட்டித் தர ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து மனித உருவாக்கினார். ஒவ்வொரு உருண்டைக்கும் அழகாக கண் மூக்கு வாய் எல்லாம் தன் கைப்பட மஹ்ராஜ் செதுக்கினார். அங்கு நிறைய பனி உருவங்கள் சேர்ந்தபின் ஒவ்வொரு உருவத்திற்குக் கீழும் தன் ஒவ்வொரு மாகாணத்தின் பெயரை எழுதி மையமாக அவர் அமர்ந்து கொண்டபோது மூச்சு வாங்கியது. குழந்தைத்தனமான இந்த வினோத விளையாட்டில் களைத்துப் போயிருந்த விருந்தினர்கள் அந்தப்புரத்தின் ஆகப்பெரிய ரகசியம் இதுதானோவென சந்தேகங் கொண்டனர். தன்னோடு கூடி விளையாடிய அவர்களின் பங்களிப்பை பாராட்டிய மஹ்ராஜ் தனது ராஜ்யத்தின் ஒவ்வொரு மாகாண பொம்மையிலும் விருந்தினர்களுக்கும் பங்கிருப்பதாக வாக்குறுதியளித்தார். அந்த சந்திப்பின் இறுதியின் சில புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படுமென வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட இருக்கும் புதிய திட்டங்களின் சாராம்சங்கள்.

1. குற்றங்களுக்காக தண்டிக்கப்படும் மனிதர்கள் முழுமையாக திருந்துவதில்லை என்கிற நிதர்சனத்தை பல்லாயிரம் குற்றங்களுக்குப் பிறகு ஆட்சியதிகாரத்திலிருக்கும் அவரைத் தவிர்த்து வேறு யாரால் புரிந்து கொள்ளமுடியும். அதனாலேயே அவர் குற்றங்களை மதிப்புடையதாக்கினார்.

2. பணம் வியாபாரத்திற்கும் வியாபாரிகளுக்குமானது, அது ஒரு தனிமனிதனிடம் தங்குவதை அரசாங்கம் முற்றாய் ஒழிக்கவே தேடித் தேடி வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. வழக்கு, விசாரணை போன்ற எல்லாம் ஒழிக்கப்பட்டு அந்த செலவீனங்கள் தடுக்கப்பட்டன. தண்டனையென்பதை இல்லாது செய்வதன் மூலம் சிறைச்சாலைகள் குறையக்கூடிய அனுகூலமுண்டு. குற்றத்தைப் பொறுத்து அபராதம் விதிக்கப்பட்டது.

3. அபராதத் தொகை செலுத்த கையில் பணமில்லாத பட்சத்தில் கடன் கொடுக்க உள்நாட்டு வெளிநாட்டு வங்கிகள் தங்களின் கடன் அட்டைகள் மூலம் எவ்வளவு பெரிய தொகையை வேண்டுமானாலும் தரத்தயாராகவே இருந்தார்கள்.

4. தேச பாதுகாப்பிற்காக புதிய வீரர்கள் அதிகளவில் தேவைப்படுவதால் எல்லைக்கு வரும் வீரர்களை உற்சாகப்படுத்தி புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

5. புதிய பணம் கொண்டு வரப்படும். ( பணத்தை அத்தனை எளிதில் எங்கும் மாற்ற முடியாதபடி அதில் ரகசிய சிப் பொறுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் நீங்கள் கழிவறைக்கு செல்லும் போது மறக்காமல் பணமிருக்கும் வாலட்டை எடுத்து வெளியே வைத்துவிட்டு செல்ல வேண்டும். இல்லாது போனால் உங்கள் கழிவறை ரகசியங்கள் அவ்வளவும் வங்கியில் பதிவாகும். —- பிற்பாடு திட்டம் அறிவிக்கப்பட்ட நடந்த சம்பவம் ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். ஒரு பெரிய ரயில் நிலையத்தின் கழிவறையில் இரண்டு இளைஞர்கள் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்று அவர்கள் பதுக்கியிருந்த பணத்தின் வழியாக வங்கியில் பதிவாகி பின்பு தேசமெங்கும் வைரலானது. …. மஹ்ராஹ் அதை பலமுறை ரசித்துப் பார்த்துவிட்டு பணத்தின் மதிப்பை குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய அந்த இளைஞர்களை நேரில் அழைத்துப் பாராட்டினார்.)

திரு.மஹ்ராஜ் இன்னும் களைத்துப்போகவில்லை

இந்த யுகத்தின் நீண்ட சாபங்களிலிருந்து தம் குடிமக்களை விடுவிக்கும் பெரும் போராட்டத்தை திரு.மஹ்ராஜ் அவர்கள் துவங்கி இன்று நூறாவது நாள். நளொன்றுக்கு நாற்பத்தைந்து விநாடிகள் மட்டுமே உறங்கி ஓய்வெடுக்கும் அவரின் கபாலமெங்கும் தினம் ஒரு ஜோடி கண்கள் புதிதாய் முளைத்தபடியே இருக்கின்றன. தீமை எத்தனை தொலைவிலிருந்தாலும் எந்த வடிவிலிருந்தாலும் கண்டுபிடித்து உடனடியாய் அவர் மூளைக்கு தகவல் அனுப்பும் அந்தக் கண்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரமாய் பெருகியதில் அவர் கபாலம் இப்பொழுது கண்களாலான சின்னதொரு சுழலும் கிரகமாகியிருக்கிறது.

தவணை முறையில் ஒவ்வொரு ஜோடி கண்ணும் நாற்பத்தைந்து நொடிகள் மாறி மாறி ஓய்வெடுத்துக் கொள்வதால் அவர் பெரும்பாலும் விழிப்போடே இருந்தார். மனித வடிவிலான அந்த சதைக் கடவுளின் மறைக்கப்பட்ட ஆடைகளுக்குள் நிண நீர் கட்டிய சூட்டுக்கட்டிகளும் அழுகி நாறும் நாள்பட்ட புண்களும் உண்டு. ரகசிய சேவகர்கள் அவற்றை அவருக்குத் தெரியாமல் அவ்வப்போது சரிசெய்து விடுகிறார்கள். எத்தனை வலி,வேதனை,துயரம் எல்லாம் கடந்தும் தம் குடிமக்கள் குறித்து சிந்திப்பதை அவர் நிறுத்தியிருக்கவில்லை. தன் சொற்கள் ஒவ்வொன்றிற்குமான ரகசிய ஆணைகளை யாருமறியாதபடி அதிகாரிகளின் வழி செயல்படுத்தியபடியே இருந்தார். எல்லாம் மாறும், அந்த ஆணைகளின் வழி தம் தேசத்தின் அசுத்தம் ஒழிந்து தூய்மையின் ஈரம் எங்கும் நிலைக்குமென்கிற அவரின் நம்பிக்கை ஒருபோதும் களைப்படையப் போவதில்லை.

வரலாற்றின் எல்லாத் துயரையும் புதுமையான போட்டிகளின் வழி துடைத்தெறிந்திட முடியுமென்கிற ஞானதோயம் சில தினங்களுக்கு முன் அவருக்கு வந்த தருணத்தில், தங்கத்தால் இழைக்கப்பட்ட தனிப்பெரும் விமானத்தின் கழிவறையில் அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் மேல் பறந்துகொண்டிருந்தார். தம் அதிகாரிகள் நெருங்கிய சகாக்கள் ஒருவருக்கும் தெரியாதபடி கடந்த பலவருடங்களாய் காத்து வரும் ரகசியங்களில் ஒன்று அவரின் காத்திரமான வெளிமூலம். தகுதியின் அடிப்படையிலான எந்தவிதமான உடல்பரிசோதனைகளும் அரசர்களுக்கில்லை.

அவர்களுக்கு எல்லாவற்றிலும் விதிவிலக்குண்டு. விதிவிலக்கின் ப்ரியத்திற்குரிய வாரிசுகள் அவர்கள். விமானங்களின் குறுகிய கழிவறையில் இருபுறங்களிலும் கைகளால் பற்றிக்கொள்வதன் மூலம் கிடைத்த வசதியில் பல காலத்திற்குப் பின் அவரால் முழுமையாக மலங்கழிக்க முடிந்தபோதுதான் இனி வாரத்தில் ஏழு நாட்களாவது விமான பயணம் மேற்கொள்ள வேண்டுமென உறுதியெடுத்துக்கொண்டார்.

இனி நிலம் யாருக்கும் சொந்தமில்லை.

கொஞ்சத்திலும் கொஞ்சமான தனது நிலத்தின் தானிய மணிகள் நீரின்றி வெய்யிலில் கருகிப்போவதை தூரத்திலிருந்து பார்த்தபடி நின்ற அவ்வூரின் கடைசி விவசாயி இடையறாது ஆங்காங்கே வேலிகட்டி ஏழெட்டு வர்ணங்களில் சுவர் எழுப்பப்பட்டிருக்கும் புதிய ஃப்ளாட்டுகளில் ஒன்றாக தன்னுடையதும் மாறிப்போகும் அவலநாடகம் வெகு விரைவில் நடக்குமென அச்சப்பட்டான். 4 G வசதிகளுக்காக வேண்டி நடப்பட்ட புதிய அலைபேசி கோபுரங்கள் கம்பீரமாய் வயல்வெளிகளின் வறண்ட நிலத்தின் மேல் அதிகரித்தபடியே இருக்கின்றன.

அந்த சமவெளியின் மொத்த நீர்வளத்தையும் சில நாட்களுக்கு முன் உருவான புதிய பன்னாட்டு நிறுவனம் தனது உடமையாக்கிக் கொண்டதால் நிலங்களில் வெடிப்பு கண்டு பாளம் பாளமாய்க் கிடந்தது. நிலத்தை நம்பி வாழும் ஒருவன் இறப்பதற்கு உகந்த வழி, தன் நிலத்தினாலேயே திண்ணப்பட்டுவிடுதல். எந்த இழப்புமில்லாமல் ஊதியம் தர பன்னாட்டு நிறுவனங்களிருக்கையில் இன்னும் நிலத்தை நம்பியிருக்கும் இந்தக் கடைசி விவசாயி பைத்தியக்காரனாக இருக்கக் கூடுமென்றே ஊர்க்காரர்கள் நம்பினர்.

உள்ளங்கையின் ரேகையளவிற்கே மிச்சமிருந்த நம்பிக்கையில் தேசிய வங்கியில் கடன் வாங்கச் சென்றவனுக்கு இன்முகத்துடன் காணப்பட்ட அதிகாரிகளைக் கண்டதில் ஆறுதல். சுவர்களெங்கும் கருணை மிக்க மஹ்ராஜின் புகைப்படம் பிரம்மாண்டமாய் வீற்றிருந்தன. கையெடுத்துக் கும்பிட்டவனிடம் ஆறுதலாய் பேசி பணத்தை தந்த அதிகாரிகள் அவனுக்கு வரவு செலவை எளிதாக்கும் விதமாக இனி கடன் அட்டைகளையும் பயன்படுத்தலாமென நம்பிக்கையளித்து அனுப்பி வைத்தனர். “புண்ணாக்கு மற்றும் உரக்கடைகளில் இந்த அட்டை செல்லுபடியாகுமா ஆகாதா என்னும் தீராத குழப்பத்துடன் வீட்டிற்கு வந்தவன் அன்றைய தினம் நிம்மதியாய் உறங்கினான். நிலத்தைப் போலவே ஒட்டி வதங்கிப்போயிருந்த அவன் வயிற்றுக்கு நீண்ட நாட்களுக்குப்பின் ஆரோக்கியமான ஆகாரம் இந்த கடன் வழியாக கிடைத்திருந்தது.

நிலத்தில் விதைத்தான், நிலத்தோடு விதைகளும் பொக்காகி மலடாகத் துவங்கியிருந்த அந்த காலத்தின் துவக்கத்தை பொய்நம்பிக்கைகளின் வழி கடக்க நினைத்தது எத்தனை முட்டாள்த்தனம் என்பதை மிகச் சிலநாட்களிலேயே அவன் புரிந்து கொண்ட போது அவ்வூரில் மழை பெய்து பல மாதங்களாகியிருந்தது. அவன் விதைகளையல்ல நம்பிக்கைகளையே விதைத்திருந்தான். அவை விளைவதுமில்லை, அழிவதுமில்லை.

நம்பிக்கைகளின் வேர்கள் மண்ணின் ஆழத்திற்குள் கிளைத்து நீண்டதே தவிர பயிராகவில்லை. வீட்டிற்கும் நிலத்திற்குமான இடைவெளியெங்கும் நடந்து நடந்து அவன் பாதம் அரையடிக்கும் அதிகமாய்த் தேய்ந்து போய்விட்டிருந்தது. விளைநிலம் என்பதையே மறந்து போன அந்தப் பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த விலங்குகள் கூட முற்றிலுமாய் அழிந்து போயின. தான் வளர்த்து வந்த இரண்டு மாடுகளுக்கு உணவளிக்க புற்களாவது வளராதாவென ஏக்கத்தோடு காத்திருந்தான். எரிந்து கருகிப்போன நிலத்தில் ஜீவிதத்திற்கான எந்த ஆதாரங்களையும் பெறும் சாத்தியமில்லை. பசியில் அந்த மாடுகள் கிறங்கிப்போய் பகல் இரவென தொடர்ந்து சில நாட்கள் ஓலமிட்டு பின் தானிருந்த சுவடே தெரியாமல் அவன் வீட்டிற்குப் பின்னால் இறந்து போயின. இருந்த கடைசி நம்பிக்கையும் பொய்த்துப்போன வேதனையில் அந்த விவசாயி தன் குடும்பத்தினரின் உதவியோடு அந்த மாடுகளை வண்டியில் கட்டி இழுத்து அவனிடமிருந்து கடைசி விடுதலைக்கு காத்திருந்த நிலத்திற்கு எடுத்துச் சென்றனர்.

நிலத்தின் மையமாய் ஆழக் குழிதோண்டி இரண்டு மாடுகளையும் புதைத்த போது காத்திரமான வெய்யிலின் காணல் நீர் அவர்களை நனைத்தது. துர்கனவின் சாட்சியமாய் நின்ற அந்த வயலின் பொசுங்கிய பயிர்களைக் காணச் சகிக்காமல் ஸர்ப்பங்கள் ஊர்ந்து விஷமேறிய காய்களைத் தேடி பொறுக்கினான். வீடும் குடும்பமும், குடும்பத்திலிருந்தவர்களின் பசியும் திரும்பிச் செல்லமுடியாதபடி அச்சுறுத்த வயலில் காய்களைத் தின்று தற்கொலை செய்துகொள்வதையே எல்லோரும் தேர்வாகக் கொண்டார்கள். கடனாளிக்கு இறப்பு அத்தனை எளிதானதல்ல, தம் குடிமக்களை பணத்தின் ஊற்றாய் மாற்றத் துவங்கியிருந்த மஹ்ராஜின் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களை கண்கானிக்கவென்றே நவீன வசதிகள் கொண்ட பறக்கும் கேமராக்களை எல்லா ஊர்களிலும் பொறுத்தியிருந்தார்கள். அவன் காய்களை பறிக்கும் போது அதிகாரிகளுக்கு எச்சரிக்கை மணியடிக்க, கடனாளியான அவன் மரணத்திற்கு முன்பாகவே மஹ்ராஜின் இந்தப் போட்டிக்கு இழுத்து வரப்பட்டான். வாழ்வோ சாவோ அதிகாரமே முடிவுசெய்ய வேண்டுமென்னும் எழுதப்படாத விதி அங்கிருந்தது. அவனது அத்தனை கடனும் முறைப்படி அவன் வாரிசு தாரர்களிடம் சேர, ஒரு பகுதி கடனுக்கு ஈடாக நிலம் அரசாங்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.

வாருங்கள் நாமொரு யுத்தநாடகத்தை வேடிக்கை பார்க்கலாம்.

உங்களிடம் முக்கிய வங்கிகளின் கடனட்டை இருக்கிறதா? ஒருமுறைக்கு பலமுறை பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் போட்டியை விளையாடுபவர்களுக்கு மட்டுமல்ல பார்ப்பவர்களுக்கும் நிபந்தனைகளுண்டு. தூய காவி நிற ஆடை அணிபவர்களுக்கு மட்டுமே அனுமதி. எந்தவிதமான பணப்பரிமாற்றமும் இங்கு கிடையாது. நீங்கள் உங்கள் அனுமதி சீட்டு உட்பட எல்லா செலவுகளுக்கும் வங்கி அட்டைகளையே பயன்படுத்த வேண்டும். கேளிக்கையின் பொருட்டு நீங்கள் வாங்கும் இந்த அனுமதிச்சீட்டிற்கு இந்த விளையாட்டின் மகத்துவத்தைக் கருத்தில் கொண்டு நூறுசதவிகித வரிவிதிப்பு உண்டு. அதன்படி நீங்கள் எவ்வளவு விலை கொடுத்து அனுமதிச்சீட்டு வாங்குகிறீர்களோ அதே அளவிற்கு வரியும் கட்ட வேண்டும். மைதானத்திற்குள் நுழைந்த பின்னர் உங்கள் எண் குறிப்பிடப்பட்ட போட்டி நடக்கிறவரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

பின் மணி ஒலித்தபிறகே உள்ளே செல்ல வேண்டும். போட்டி துவங்குவதற்கு முன்பாக நமது கீதம் ஒலிக்கப்படும். அப்பொழுது எழுந்து நிற்பதோடு சேர்ந்து பாட வேண்டும். ஒவ்வொருவரின் இருக்கைக்கு மேலும் ரகசிய கேமரா உண்டென்பதால் உங்களின் நடவடிக்கைகள் கண்கானிக்கப்பட்டபடியே இருக்கும். நீங்கள் கூட்டத்தோடு இணைந்து பாடத் தவறுகிற பட்சத்தில் உங்களின் மீதான தண்டனைக்கு ஈடாக அபராதத் தொகை வசூலிக்கப்படும். போட்டியை கண்டுகளிக்கும் போது நீங்கள் கைதட்டலாம், போட்டியாளர்களின் மீது நீங்கள் கொண்டு வந்திருக்கும் தண்ணீர் பாட்டில்களை எறியலாம் ஆனால் சிரிக்க கூடாது. இவை எல்லாவற்றிற்கும் சம்மதமென்றால் கீழே உள்ள மூன்று பிரிவுகளில் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் அட்டையைத் தேய்க்கவும்.

எங்களது சேவையை பயன்படுத்தியதற்கு நன்றி.

1. எலைட் - 50000 ரூ
2. டிவைன் - 25,000 ரூ
3. காமன் - 10,000 ரூ

உங்களுக்கான அழைப்பு வரும் வரை காத்திருக்கவும்.

மைதானத்தில் வேடிக்கை பார்க்க வருகிறவர்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் தான், கடன் வசூலிப்பிற்கு ஏற்ற வலிய மிருகங்களையே அவர்கள் தேடினார்கள். மிருக உணர்ச்சி கொண்ட மனிதர்களையல்ல, எல்லா மனிதர்களுக்குள்ளும் மிருக உணர்ச்சி கொஞ்சத்திலும் கொஞ்சமாய் காலகாலத்திற்கும் தேங்கிக் கிடக்கிறதுதான். ஆனால் இந்த வியாபாரத்திற்குத் தேவை வன்மங் கொண்ட காட்டு மிருகங்களே… இதனாலேயே போட்டியில் வெற்றி பெறுகிறவரை விலைக்கு வாங்க கடும் போட்டி நிலவுகிறது. போட்டியின் இடைவெளியில் எவ்வளவு நேரம் சண்டை நீடிக்கும் என்பது குறித்த சூதாட்டமும் உண்டு. ஆக இந்தப் போட்டியால் நன்மை விளைந்தது மஹ்ராஜிற்கு மட்டுமல்ல, அவரது முதலாளிகளுக்கும் தான்.

ஒவ்வொரு போட்டி முடிந்ததும் துவங்கும் அடுத்த போட்டிக்கான இடைவெளியில் மஹ்ராஜின் ஆத்மார்த்த ப்ரியத்திற்குரிய கடவுளுக்கான வழிபாடு துவங்கும். முன்பு மஹ்ராஜ் எளிய மனிதனாய் சோமபானம் விற்றுக்கொண்டிருந்த நாளில் அவருக்கு முகங்கள் வரையப்பட்டதில்லை. நாலுக்கு நாலு இஞ்ச் அளவுள்ள சப்பட்டை முகம் அவருக்கு. எப்போதும் வன்மத்தையும் பொய்களையும் மறைத்து அடக்கின இடுங்கிய கண்கள். அதில் ஒளியின் தீட்சண்யத்தின் எந்த அடையாளங்களையும் நாம் காணவியலாது, அதிகபட்சம் நமக்குக் கிடைக்கக் கூடியதெல்லாம் சூன்யத்தின் சின்னதொரு இருள் வெளிதான். என்றாவது ஒருநாள் தன் சித்திரத்தை இவ்வுலகம் பயன்படுத்தக் கூடுமென்கிற முன்னெச்சரிக்கையில் அவர் தனக்கான பிரத்யேக வடிவமைப்பாளரிடம் தனது ஆத்மார்த்த கடவுளையும் தன்னையும் இணைத்து வரையச் சொன்னார்.

முதலில் வரைந்த படங்களில் கடவுள் தனியாகவும், மஹ்ராஜ் தனியாகவுமிருந்தனர். ஹாலிவுட் படங்களில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் மூலமாய் உருவாக்கப்பட்ட ஹல்க், ஸ்பைடர் மேன் வடிவிலான மஹ்ராஜின் மேலை நாட்டு உருவம் அவருக்கு சாகசத்திற்குரிய ஒன்றாய் பிடித்துப் போயிருந்தாலும் ஒரு தேசத்தின் மன்னனுக்கு அது அழகல்ல என கவனமாய் மறுத்தவர், கடவுளின் முகத்தில் தன்னைப் பொறுத்திக்கொள்வதில் உறுதியாய் இருந்தார். பின் கீழே கொடுக்கப்பட்ட வகையில் அவரின் சித்திரம் உருவாக்கப்பட்டது.

முன்பு மக்கள் கடவுளை வணங்கினர். இப்பொழுது கடவுளின் வடிவிலிருக்கும் மஹ்ராஜை வணங்கினர். எல்லா நம்பிக்கைகளும் இப்படி உருவாக்கப்படுகிறவைதான். அவற்றில் சில புழுக்களின் பிசுபிசுப்பான தசைகளைப் போல் தற்காலிகமானவை, இன்னும் சில காட்டு மிருகங்களின் இறுகிய தோல் போல் நிரந்தரமானவை.

இதோ புதிய போட்டியாளர்கள் வந்துவிட்டார்கள்.

வெள்ளி நிறத்திலான அந்த ராட்சத வாகனம் உக்ரமான வெயிலில் ஜொலித்தபடி மைதானத்தின் முன்னால் வந்து நின்றது. தேசத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து இழுத்துவரப்பட்டிருந்த அவ்வளவு பேரும் முதுகெலும்பு நிலத்தில் வளைய துன்புறுத்தப்பட்டு இறக்கிவிடப்பட்டனர். கால்களிலில் சங்கிலிகள் அழுத்தியதால் கசிந்த குருதியின் ஈரம் இன்னும் வற்றியிருக்கவில்லை. ஜீவிதத்தின் நித்திய தருணங்கள் எல்லாம் முடிந்து போன அவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்காக. வலிமையானதொரு தேசம் உருவாக வலிமையான அரசன் மட்டும் போதாது, அவரிலும் வலிமையான குடிமக்கள் வேண்டும். மன உறுதிமிக்க குடிமகன்களை உருவாக்கும் நூதன விளையாட்டை திரு.மஹ்ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகத்தான் கண்டுபிடித்திருந்தார். மரண ஓலங்களின் இரைச்சல் காற்றில் கூர் ஊசிகளாய் கலந்துவிட்டிருந்ததில் அவ்வெளியில் சவக்களை நிரந்தரமாய்த் தங்கிவிட்டிருந்தது. முதலில் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் எளிதாக துவங்கப்பட்ட அந்த மைதானத்தின் விஸ்தாரம் இன்று ஒரு முழு மாநகரை ஆக்ரமிக்கும் அளவிற்கு விரிந்துள்ளதற்கு விளையாட்டின் மீது மஹ்ராஜ் கொண்டிருந்த அதீத விருப்பமே காரணம். மார்புக் கவசங்கள், பட்டிகள், ஹெல்மட்டுகள் எல்லாம் சரியாய்ப் பொருந்தி வர ஒரு போட்டியாளனுக்கு நல்ல தேக லஷ்ணம் வேண்டும்.

ஒவ்வொரு ஆட்டக்காரனுக்கும் விதிக்கப்பட்ட நேர அளவு ஐந்து நிமிடங்கள். போட்டி மிக எளிமையானது. மான்புமிகு மஹ்ராஜின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட திப்புவின் இயந்திரப்புலியுடன் சண்டையிட வேண்டும். அந்தப் புலி பத்து யானைகள் சேர்ந்த பிரம்மாண்ட உருவம். அதை இயக்குவதற்கான பொத்தான் அழுத்தப்பட்டதும் அது உறுமுவது போன்ற கொடூர சத்தமும் அதன் வேகத்திற்கேற்ற மாதிரியான இசையும் சேர்ந்து மைதானம் முழுக்க எதிரொலிக்கும்.

போட்டியாளன் சமாளிக்க வேண்டியது புலியை மட்டுமல்ல, இந்த சத்தத்தையும் தான். பார்வையாளர்கள், விருந்தினர்கள் யாரையும் இந்த சத்தம் தொந்தரவு செய்துவிடாதபடி பிரம்மாண்டமான கண்ணாடி வேலி போடப்பட்டிருந்தது. இவ்வளவையும் மீறி உடல் காயங்களுடன் தப்பிக்கிறவர்களின் அதுநாள் வரையிலுமான கடன் முழுமையாக விலக்கப்பட்டு மன்னரிடம் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

கொல்லப்படுகிறவர்களின் உடல்கள் தேசத்தில் பாதுகாக்கப்படும் விலங்குகளுக்கும் தலை மைதானத்தை அலங்கரிப்பதற்கும் எடுத்துக் கொள்ளப்படும்.

இறந்தவர்களின் மண்டை ஓடுகளால் அலங்கரிக்கப்பட்ட திரு.மஹ்ராஜின் சிம்மாசனம் மொத்த மைதானத்தையும் கழுகுப்பார்வையில் பார்க்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. கண்கள் பிடுங்கப்பட்ட மண்டை ஓட்டின் குழிகளில் நிகழ்காலத்தின் சூன்யம் அடர்ந்து நிரம்பியிருந்தது. அந்த நகரின் மீது மனித இரைச்சியின் ருசிக்குப் பழகிய பறவைகள் பெருங்கூட்டமாய் எப்போதும் சுற்றியலைந்தபடியே இருந்ததால் வானவெளியின் தரிசனம் கிடைப்பதே அபூர்வம். பறவைகளை ஊடுருவி வரும் வெய்யிலின் காத்திரத்திற்கு நடுவில் எப்போதாவது சிலர் அங்கு வானத்தைக் காணக்கூடும்.

ஒவ்வொரு நாளும் விடிவதற்குள் பாதாள உலகத்திற்கான பயணத்திற்கு அன்றைய தினம் யாரெல்லாம் என்பதை காவல் வீரர்கள் பிரித்து வைத்திருப்பார்கள். அவர்கள் ஜன்னலின் வழியே தங்களின் கடைசி சூரிய உதயத்தை காண அனுமதிக்கப்படுவது அவர்களுக்கு மஹ்ராஜ் தரும் அன்புப் பரிசு. வானத்துப் பிரதேசங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு அன்றைய தினம் வரவிருக்கும் யாரோ ஒரு பார்வையாளன் வழி தான் காப்பாற்றப்படலாமென அபிலாஷை அடியாழத்திற்குள் இருக்கும். மரித்தவர்களின் உலகத்தினூடாகப் பயணப்பட்டு புதிய மனித இனம் ஒன்றை உருவாக்குவதற்காக எலும்புகளைப் பொறுக்கி சேகரிக்கும் அரசு அதிகாரிகள் இந்த போட்டியாளர்களின் ஒளியற்ற கண்களை விரும்புவதில்லை. கொல்லப்பட்டவர்களின் எலும்புகள் புதிய தேசத்தின் உருவாக்கத்திற்காக அந்த பெரிய மைதானத்தினடியில் உறங்கிக் கொண்டிருந்தன.

ஒப்பனை அறையில் யுத்தத்திற்கு தயாராய் இருப்பவன் :

இப்போது அவன் கைகள் சுதந்திரமாய் இருக்கின்றன. முகம் துயர்மிகு நடனமொன்றிற்கான அதீத ஒப்பனையில் மலர்ச்சியாய் இருந்தும் இருதயம் இயல்பை விடவும் தீவிரமாய் துடித்துக் கொண்டிருந்தது. இவனுக்கு முந்தைய மனிதனின் யுத்தம் இன்னும் சில நிமிடங்களில் முடிவடையலாம் என்பதற்கான அறிகுறிகளை மைதானத்திலிருந்து வரும் பெருந்திரளான மக்களின் கரவொலிகள் உணர்த்தியபடி இருந்தன. இதுவரையிலுமான அவன் வாழ்வின் முடிவாக இந்நாள் இருக்கலாம், ஆனாலும் எப்போதும் வரும் சூரியனைப் போல் அதன் மாசற்ற ஒளிக்கதிர்களைப் போல் வரலாறு இவனுக்கான அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள அனேக காரணங்களை இவன் விட்டுச் செல்லமுடியும். எதிர்ப்புணர்வென்பது தன்மானத்தின் உதிரத்துளிகளில் இருந்து துளிர்க்கிறது.

எத்தனை முறை வெட்டினாலும் மீண்டு வரும் அந்த உணர்ச்சியால் பின்னப்பட்ட இவன் இன்றைய அந்தியில் கொல்லப்படலாம். ஆனாலும் மீண்டும் பிறப்பதற்காகவே இறக்க வந்திருக்கிறான். சுட்டெரிக்கும் அக்னியை ஒத்த வெயிலில் கொஞ்சம் கொஞ்சமாய்த் துரத்தப்பட்டு உடலின் நீராதாரம் அவ்வளவையும் சூரியன் உறிஞ்சிய பிறகு தோன்றும் கிலியை, பீதியை, அருவருப்பை அத்தனை எளிதில் விவரிக்க முடியாதுதான். ஏதோவொரு இருளார்ந்த மன உலைவு வாழ்விற்கும் சாவிற்குமான அந்த சிறிய இடைவெளியிலும் அவனை நிம்மதியற்றவனாய்ச் செய்திருந்தது.

சில காலங்களுக்கு முன்பு வரையிலும் இதைவிடவும் கடுமையான வெயிலில் தன் நிலத்தில் வியர்வையும் குருதியும் கசிய விதைத்து அறுவடை செய்த அந்த விவசாயி தன் சொந்த ஊர், உறவுகள் எல்லாவற்றிலிருந்தும் துண்டிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்தான். அவன் முன்னால் இரண்டு தேர்வுகளிருந்தன. போட்டியில் தோற்று கொலை செய்யப்படுவது, அல்லது வென்று தன்னைப் போல் புதிய அடிமைகளை மஹ்ராஜிற்கு உருவாக்கிக் கொடுப்பது. இதற்கு முன் ஒருபோதும் மனிதர்களோடோ, மிருகங்களோடோ சண்டைக்கு பழகாத அவன் பல காலமாய் பசியோடு மூர்க்கமாய் போராடியவன்.

அந்த நம்பிக்கை மட்டுமே இருப்பின் தீர்க்கமான வெளிச்சத்தை அவனுக்குள் நிறைத்திருந்தது… இரும்பு ஹெல்மட்டால் முகத்தை மறைத்திருந்த வீரனொருவன் “நீங்கள் போட்டிக்குத் தயார்தானே?” ஒருமுறை நினைவுபடுத்த தளர்ந்த உடலைத் திருப்பி இவன் ஆமென்றான்.

60 இஞ்ச் கர்வ் தொலைக்காட்சியில் மஹ்ராஜின் பழைய சொற்பொழிவொன்று அந்த சின்னஞ்சிறிய அறைக்குள் ஓடத்துவங்க, வேட்டைப்புலியின் ரணமேறிய கண்களோடு அவன் மெதுகாக சத்தத்தைக் கூட்டினான்.

“ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மக்கள்…. என் கனவெல்லாம் இதெல்லாம். தீமை எந்த வடிவிலென்றாலும் அதை முற்றிலுமாக இரும்புக்கரம் ஒன்று ஒடுக்குவேன். என் அன்பான குடிமக்களே நான் உங்களுக்கு சத்தியம் செய்து தந்த அந்த கனவு தேசம் இன்னும் மூன்று மாதங்களில் நிஜமாகும்… “BURN ME ALIVE, IF I AM WRONG. BURN ME ALIVE IF I AM WRONG… BURN ME ALIVE IF I AM WRONG….” அவரது குரல் ஆவேசமாய் அந்த அறைக்குள் எதிரொலிக்க அதற்கும் மேல் கேட்க பொறுமையின்றி எரிச்சலுற்றவனாய் இவன் அவசரமாக தொலைக்காட்சியை அணைத்தான். மூன்று மாதங்களும் முடிந்தபிறகு சூன்யம் துப்பிப் போட்டிருக்கும் இந்த நசுங்கிய தேசத்தின் மஹ்ராஜ் முன்னைவிடவும் கர்வத்தோடே இருக்கிறார். தான் வாக்கு தந்தபடி ஒரு தூய தேசம் வெகு விரைவில் சாத்தியமாகுமென இப்போதும் அவர் சில இரவுகளில் உரையாற்றத் தவறுவதில்லை.

திப்புவின் புலியோடு யுத்தம் தொடங்கியது.

தாழப் பறந்து வரும் பறவைகள் மைதானத்தில் சிந்தியிருந்த கொல்லப்பட்டவனின் குருதியையும் சதைகளையும் கொத்திச் செல்கின்றன. நிலமெங்கும் குருதி வாடை. தனக்கு முன்னாலிருந்த கதவு திறக்கப்பட்ட போது அவ்வளவு நேரமிருந்த பதட்டங்கள் அவ்வளவும் விலகி சூரிய உதயத்தைக் காணத் தயாராகும் மலர்களைப் போல் அந்த மைதானத்தில் நடக்கத் துவங்கினான். வதங்கி மெலிந்த அந்த உடலை மைதானத்தில் வேடிக்கை பார்த்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவருக்குக் கூட பிடிக்கவில்லை.

புத்தம் புதிய கவசங்கள் இரும்பு ஹெல்மட் என தன் மீது கிடக்கும் பாதுகாப்பு வளையங்களின் எடையே அவனுக்கு தொந்தரவாய்ப்பட சிரமத்தோடு ஹெல்மட்டை கழற்றி மைதானத்தின் இன்னொரு எல்லையில் சலனமே இல்லாமல் நின்றிருந்த இயந்திரப் புலியை நோக்கி எறிந்தான்… “ஹோ”வென பார்வையாளர் எழுப்பிய கரவொலியின் போது அவ்வளவு நேரமும் தனது சிம்மாசனத்தில் குட்டித் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த மஹ்ராஜ் அவசரமாக கண்விழித்து தான் விமானத்தில் பயணிக்கிற அச்ச உணர்வில் சீட் பெல்ட்டைத் தேடினார்.

கேமராக்கள் எதுவும் படம் பிடிப்பதற்கு முன்பாக அவரது மந்திரிகளில் ஒருவர் குனிந்து “ஐயா தாங்கள் தங்களின் ப்ரியத்திற்குரிய மைதானத்தில் தான் இருக்கிறீர்கள். அச்சப்படாமல் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.” என இயல்பாக்கினார். மஹ்ராஜிற்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் இன்னொரு புதிய போட்டியை காணும் ஆர்வத்தோடு நிமிர்ந்து சரியாக உட்கார்ந்து கொண்டார்.

சற்று நேரத்திற்கு முன்பு உண்ட நெய் கலந்த பருப்பு சாதம் மெதுவாக இளகி நாற்றமெடுக்கும் குசுவாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்க குசுவை வெளியேற்றும் பொருட்டு இடதும் வலதுமாய் அசைந்து இரண்டு புறங்களிலும் உடலை நகர்த்தி காற்றை வெளியேற்றினார்.

அவரின் முதுகிலிருந்த மண்டை ஓடுகள் நாற்றத்தைப் பொறுக்கமாட்டாமல் தடுமாறிக் கதறின. வார்த்தைகள் வெளியே கேட்டுவிடாதபடி “அய்யோ கொல்றானே, கொல்றானே..” என அவற்றில் சில மண்டை ஓடுகள் புலம்ப, திரும்பி அத்தனை எலும்புகளில் பேசத் துவங்கியிருக்கும் அந்த தீய சக்தியை ஆத்திரத்துடன் தேடினார். எந்த பாவனைகளையும் வெளிப்படுத்தாமல் எலும்புகள் எல்லாம் மெளனமாய் இருந்தது.

தடயம் கிடைக்காமல் திரும்பி மைதானத்தைப் பார்த்த பொழுது தலையில் ஹெல்மெட் அணியாமல் ஒருவன் அவரை நோக்கி மண்டியிட்டிருப்பதைப் பார்த்தார். வளரத் துவங்கியிருக்கும் சிறிய வேப்பமரத்தைப் போல் சத்தில்லாமல் கிடந்த அந்த மனிதன் ஓர் முன்னாள் விவசாயி என்பதை அதிகாரி அவரின் காதிற்குள் சொன்னார். ’அதுதான் இத்தனை கர்வமா?’ என நினைத்தபடி தலையாட்டிக் கொண்டவர் புலியை இயக்கச் சொல்லி சைகை செய்தார்.

அந்த மனிதன் அப்பொழுதும் அதே நிலையிலேயே கிடந்தான். சூரியனின் அஸ்தமனத்திற்கு இன்னும் சில நிமிடங்களே மிச்சமிருந்த வேளையில் பல்வேறு கார்ப்பரேட்டுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட அந்த இயந்திரப் புலி முதலில் காதை செவிடாக்கும்படி அலறியது. கண்ணாடி வேலியிலும் சில நொடிகல் அந்த அலறலின் அதிர்வை பார்வையாளர்கள் உணர்ந்திருந்தாலும் பசியின் காரணமாய் எப்பொழுது கேட்கும் திறன் குறைந்து போயிருந்த அந்த மனிதன் புலியின் உறுமலை பொருட்படுத்தாமலே இருந்தான்.

எந்த எதிர்வினைகளுமில்லாமல் தன் முன் கிடக்கும் சதைப்பிண்டத்தை சந்தேகத்தோடு பார்த்து சுற்றி சுற்றி வந்தது புலி. முழங்கால் போட்டிருந்த நிலையிலேயே தலையை உயர்த்தி புலியைப் பார்த்தவனின் கண்களில் பல நூற்றாண்டுகளாய் துரோகிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட வன்மத்தின் ரேகைகள் வரி வரியாய் ஓடின.

ப்ரோகிராம் செய்யப்பட்ட அதன் பிரம்மாண்ட உடல் முழு விசுவரூபமெடுக்க ஆகாயத்தைத் தொடும் உயரத்தில் வளர்ந்து நின்றது. முப்பது விநாடிகளுக்குள் அவன் கொல்லப்படுவதற்கான ப்ரோகிராம் கம்ப்யூட்டரின் மூலம் உறுதி செய்யப்பட்டதும் தனது வழக்கமான உடல் அசைவுகளோடு ஆவேசமாய் அவனை நோக்கி முன்னேறியது. அத்தனை பெரிய உருவத்திடமிருந்து லாவகமாக விலகித் தப்பிய அந்த மனிதன் புலியின் பழக்கப்பட்ட ப்ரோக்ராம் அசைவுகளுக்குள் அடங்காத பூச்சியை இங்கும் அங்குமாய் தாவினான். வழக்கமாக மனிதர்கள் இத்தனை சாதுர்யமாய் அவனிடமிருந்து தப்பிப்பதில்லை.

சிந்திக்கும் திராணிய்ற்ற புலி முப்பது நொடிகளுக்கான தனது அசைவுகளிலேயே தொடர்ந்து முன்னேற அதனிடமிருந்து தப்பி அதன் பின் பகுதிக்கு வந்திருந்த மனிதன் அதன் செயற்கை வாலைப் பற்றி மூன்றே தாவுதலில் அகன்ற அதன் முதுகில் ஏறிக்கொண்டான். புலியை இயக்கிக் கொண்டிருந்தவனுக்கு இன்னும் அனேக நேரமிருந்ததால் அவசரமாய் அவன் புலிக்கு அடுத்த அசைவுகளுக்கான உத்தரவுகளை கம்யூட்டரில் மாற்றினான். இப்பொழுது வெயிலில் பளபளக்கும் பிரம்மாண்டமான புலியின் முதுகில் ஏறியிருந்த அந்த ஏழை மனிதர் தன் ஆத்மார்த்தமான நிலமும் ப்ரியத்திற்குரிய மாடுகளும் கொல்லப்பட்ட ஆத்திரத்தில் அதன் உடலில் வெவ்வேறு இடத்தில் மூர்க்கமாய் மிதித்தான்.

பல காலமாய் உழுவதற்கு நிலத்தை மிதித்து வலுவேறிப் போயிருந்த அவன் கால்களில் மிதிபட்டு புலியின் உடலில் இணைக்கப்பட்டிருந்த வயர்கள் அறுந்து தொங்கின. அந்த பிரம்மாண்ட புலி கம்ப்யூட்டரிலிந்து வந்த எந்த உத்தரவுகளையும் எடுத்துக் கொள்ள முடியாமல் தேமேவென ஒரே இடத்தில் அப்படியே நிற்க, இனி இந்த இயந்திரம் தன்னை ஒன்னும் செய்யப்போவதில்லை என்கிற கர்வத்தில் அந்த மனிதன் அதன் உடல் பகுதிகளை ஆத்திரம் தீர பிய்த்துப் போட்டான். புலியை உருவாக்க ஸ்பான்சர் செய்திருந்த கார்ப்ரேட் கம்பெனிகளின் ஆளுயர பேனர்கள் அதன் உடலில் இருந்து பிய்த்து எறியப்பட, எல்லாம் இப்பொழுது மைதானமெங்கும் பறந்தது.

அவ்வளவு நேரமும் ஆராவரத்தோடு பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர் கூட்டம் இந்த புதிய மனிதனின் மூர்க்கத்தைக் கண்டு அச்சமுற்றது. இத்தனை கால தங்களின் உழைப்பிற்குப் பிறகும் நிலத்தை நம்பி வாழ்ந்த ஒரு மனிதனுக்குள் இந்த வலிமை எப்படி சாத்தியமென அவர்களுக்கு குழப்பம்? பிய்த்தெறியப்பட்ட புலியின் இயந்திர உடல் மைதானத்தில் பரிதாபமாய்க் கிடக்க முன்னைப் போலவே அதே பணிவோடு அவன் மஹ்ராஜின் முன்னால் குனிந்து நின்றான். அவன் சாதாரண வெற்றியாளனல்ல என்பதைப் புரிந்து கொண்ட மஹ்ராஜ் தமது நிறுவனங்களுக்கு புதிய பாதுகாவல் கிடைத்துவிட்டான் பூரிப்பு கொண்டார். உற்சாகமாக எழுந்து அவர் கைதட்ட விருப்பமே இல்லாமல் பார்வையாளர் கூட்டமும் எழுந்து கைதட்டியது.

புலியோடு போரிட்டு வென்ற அந்த மாவீரனின் தலைமையில் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு படை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் உத்தரவிட்ட அந்த நாளில் தான் புதிய தேசம் பிறந்தது. அதிகாரம் செய்ய பழக்கப்பட்டவர்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய பழக்கப்பட்டவர்களென்கிற இரண்டு விதமான மனிதர்கள் மட்டுமே இனி இங்கிருப்பார்கள். யுத்தத்தை வென்ற மனிதன் மீண்டும் ஒப்பனை அறைக்குத் திரும்பியபோது அவனுக்கான புதிய உடைகள் காத்திருந்தன.

அவனை எப்படியாவது தங்கள் நிறுவனத்திற்கு உடமையாக்கிக் கொள்ள மைதானத்திற்கு வெளியே பெரும் போட்டி நடந்து கொண்டிருக்க, அதிகாரிகள் அந்த மனிதனிடம் வந்து “இன்று இரவு நீங்கள் மரியாதைக்குரிய நமது மஹ்ராஜூடன் உணவருந்த அழைக்கட்டிருக்கிறீர்கள் என்று சொல்ல அவன் ஆமோதித்து தலையசைத்தான். சிலர் அவனை “கமாண்டர்” என்றழைக்க எல்லோருக்கும் பொதுவாக புன்னகைத்துவிட்டு அவன் தன் புதிய உடையுடனும் அதிகாரத்துடனும் அந்த அறையிலிருந்து வெளியேறினான். நீண்ட வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் வாகனத்தின் கதவுகள் திறக்கப்பட நாசூக்காக அதில் ஏறிக்கொண்டான்.

மைதானத்தின் வாசலை நோக்கி கார் மெதுவாக நகர நிறுவனங்களின் தரகர்கள் அந்த வாகனத்தைத் தொடர்ந்து ஓடிவந்தனர். காரின் ஜன்னலை இறக்கி அவர்களை நோக்கி கையசைத்த வேலையில் தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றிய மரியாதைக்குரிய மஹ்ராஜ் உற்சாகமாக தனது உரையை இப்படித் துவக்கினார்……

வலிமையான ஒரு புதிய தேசம் பிறந்தது.

வலிமையான ஒரு புதிய தேசம் பிறந்தது.

வலிமையான ஒரு புதிய தேசம் பிறந்தது.

ராகவபிரியன் கவிதைகள்

images-16

உயிர் உடலுட் புகும் அதிர்வுகள்

அவனிலிருந்து பிரிகின்ற உயிரின் பிரதியொன்று
அவ்வப்போது அர்ச்சனைத் தட்டொன்று
காசு கொடுத்து வாங்கிச் செல்கிறது…
அதிலொரு தேங்காயும் இருகனிந்த பழங்களும்
குங்குமமும் சூடமும் வாடிய பூக்களும்
நீதிமன்ற கூண்டுக் குற்றவாளியென நெளிந்தபடியிருந்தன..
அவனுக்கான வரிசை நீண்டுகிடக்கிறது..
பணம் எடுக்க நின்றகால்கள் வலியுணரும் வேளை..
இயந்திர வாயில் சிக்குண்ட தாளென படபடத்து..
உயிர் அங்கே வேண்டல் வரிசை பாற்பட்டது..
பூமிதித்த போதவன் துன்பத்தீமிதிக்க கற்றவன்..
தீச்சட்டி சுமந்தவன் வாழ்வுச் சுமைசுமந்த சுகத்தவன்..
தரிசன வரிசை பொறுமை கற்றால்
பண வரிசை இனிமையுறும்…ஓம்..ஓம்…ஓம்…
தட்டுக் கனிந்த பழம் பசிவரிசை வழி
வயிருட்செல்ல..
தேங்காய் தலையில் உடைக்கும் தேர்ந்த
பூசாரி புயலாடிப் புறப்பட்டார்..
சூடம் காட்டி குங்குமம் அப்பிய தேங்காய்
தலையில் உடைக்கப்படு…ம்…டும்..டும்…
பிரிந்த உயிர் உடலுட்புகும் அதிர்வுணர்ந்தான் …
இனி ஒற்றைத்தாள் தடையுடைத்து வெளிவரும்..
தத்தத் தரிகிட தத் தரிகிட..தாம்….ஆம்….

பாதை பாம்பு

அவன் பாதைகளைக் கடக்க பிரயத்தனமாகிறான்..
அவனுக்கான ஒற்றையடிப் பாதையில்
ஊர்ந்து செல்லும் எறும்புகளின் பின்னே
ஆக கடைசியில் இணைந்து கொள்கிறான்..
அவனே பாதையாகவும் படுத்துவிடுகிறான்.
அவன் மீதான எறும்புகளும் வரிசையில் தான்
அணிவகுக்கின்றன..
அவனுக்கான மலைபாதையைக் கடக்க எத்தனிக்கிறான்.
உருண்ட பாறைகளின் உடைகற்கள் அடைக்கப்பட்ட
அதில் உள்ளங்கால் கிழிபட்ட ரத்தத்தடம் பதிக்கிறான்
மலைப்பாம்பின் வால்பிடித்தபடி..
அவனே மலைப்பாதையுமாகிறான்..
அப்பாதைப் பாம்பின் நெளிவுகளில் சுருண்டுகிடக்கிறான்..
வழுக்கும் வால் அசைவுகளில் அடிபட்டு
அடிவாரம் வரை அழுகிறான்..
அவன் இருப்புப் பாதையின் இரும்பாகிறான்..
இருப்புப் பாதை நெடுகிலும் குவித்த சரளைக்கற்கள்
முதுகு குத்தும் பஞ்சுமெத்தைப் பயணம் காண்கிறான்..
பயண நெடுகிலும் விழுந்து சிதறும் நரகல் பூச்சில்
நாற்றமெடுக்க நடை மறந்து போகிறான்..
அவனின் பாதைகளை அவனன்றி இனி யார் கடப்பார்கள்..?

உயரக் கோபுரம் எதுவென..

வரலாற்றுக் கோவிலுக்கான
அடியுள்மனை ஆழக் குழிக்குள்
ஒரு கவிதை புதைக்கப்படுகிறது..
கவிஞனும்..
அதன் மீதான
கட்டுமானப் புனிதப்பணிக்கான
கவிதைக் கற்களை
கொத்திக் கொண்டிருக்கிறான்
கவிக்கொத்தன்..
அடிமன ஆழத்திலிருந்து..
அவன் புதையுண்டிருந்த
அடிமனக் குழியிலிருந்து
மீண்டெழுந்த கலைவேளையில்..
அவனின் உளி எழுதத்தொடங்கியது..
கருவறை மீதான கோபுரமா
நுழை வாயிற் கோபுரமா
எது உயர்ந்திருக்க வேண்டுமென
உளியிடம் கேட்கிறான்..
அந்தச் சிந்தனா இடைவெளியில்
மார்புபருத்த சங்கப் பெண்டிரும்
நிர்வாண பொம்மைகளும்
சிற்பங்களாகி தூண்களில் அமர்கின்றனர்..
கருவறைச் சிசுமிதக்கும் கவிநீரில்
அவனின் கடவுள் மிதக்கப் போகும்
உள்ளறையின் மீதே உயர்விருக்கவேண்டும்..
அகரமிட்டுப் புறப்படுகிறது விகாரம்..
சாரம் அமைத்து கவிசிசு உந்தி உயர
அவனும் கவிதையும்
கோபுரமாய் உயரும்
உயிர்பிறப்புப் பொழுதில்…
அவனின் உளி எழுத்தில்
ஆகம விதி மீறப்பட்டதாய்
வரலாற்று கோவில் கவிதை
கிழித்து உடைத்தெறியப் படுகிறது…
அவனின் பெண் சிற்பங்கள்
கள்ளிப் பால் அருந்தி
மண்ணில் புதைகின்றன..
மனம் உடைந்த உளிமுனையை
தடவியபடியே நிற்கும்
கவிதைகொஞ்சும்
கவி[யி]ன்சிலையொன்றை வரலாறு
செதுக்கிக் கொண்டிருக்கிறது…
விதிகளை மீறி…

வெள்ளையாய் நான்

எனது மேசையின் மீது
உன் அழகின் அகல் வெளிச்சம்..
என்னை வெள்ளைக் காகிதமாக்கி
வெளிச்சத்துள் கிடத்துகிறேன்..
எதையும் எழுதமுடியுமெனினும்
வெள்ளையாய் இருப்பது நான்..
வெளிச்சம் மங்கத்தொடங்கும் போதில்
எழுத முடியாத எழுத்துக்கள்
வாசிப்பின் விளிம்பில் ததும்பும்..
வாசிக்கப் போகும் வெளிச்சம்
மனதுள் மொழியற்று வசீகரமாய் விழிக்கும்…
ததும்பி வழியும் வெளிச்சமும் வெள்ளையும்
வெற்றுக் காகிதமாவதற்குள்
வாசிக்கப்படவேண்டும்..
இல்லையேல் கசக்கி
குப்பைக்குள் வீசப்படலாம்..
மேசையிலிருந்து வெளிச்சமும் காகிதமும்
மெல்ல நகர்ந்து விளிம்பு நெருங்கி
விழப்போகும்
அவ்வொரு நொடி மேசையை
அசைக்கத்தொடங்கும்..
அதை நடனம் என்றும் மெளனம் என்றும்
வேறெந்தப் பெயரதென்றும்
எழுதிப்பார்க்க
வெளிச்சமும் வெள்ளையும் வேண்டும்..

••••

நோயர் ஊர்தி ஓட்டுநன் / பாலகுமார் விஜயராமன்

download-13

காலை பணிக்கு வந்து, உடைமாற்றி, வாகனத்தை உயிர்ப்பித்து மீண்டும் மற்றொரு நாளுக்கான ஜீவமரண விளையாட்டுக்கு ஆயத்தமானபடி காத்திருப்பதில் ஆரம்பிக்கிறது அன்றைய நாளுக்கான ஓட்டம். அழைப்பு வந்ததும், இடத்தையும் வழித்தடத்தையும் குறித்து வைத்துக் கொண்டு, உயிரையும் உடலையும் சேர்த்தள்ளிக் கொண்டு வரும் போராட்டம் துவங்கி விடுகிறது. தாமதிக்கும் ஒவ்வொரும் நொடியும் பாசக்கயிற்றின் நீளம் அதிரிகத்துக் கொண்டே வருகிறதென்ற உணர்வு இன்னும் பதற்றத்தைக் கொடுத்து ஆக்ஸிலேட்டரை அழுத்தச் சொல்கிறது. இத்தனை ஆண்டுகளாய் இயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஊர்தியின் எச்சரிக்கையொலி காதில் நிரந்தரமாகத் தங்கி விட்டது போலவே தோன்றினாலும் ஒவ்வொரு முறை வாகனத்தை இயக்கத் துவங்கும் போதும் பணியின் முதல் நாளுக்குண்டான படபடப்பும் பிரார்த்தனைகளும் அனிச்சையாக பற்றிக் கொள்கிறது. எப்போதும் சூழ்ந்திருக்கும் நெருக்கடி நிலையில் இருதயம் பன்மடங்கு வேகத்தில் துடிப்பதை நன்றாக உணர முடியும்.

புதிதாக மணமுடித்த இளம் தம்பதியினர், இரு சக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு செல்கின்றனர். செல்லும் வழியின் எதிர்புறம் பூக்கடை தென்பட வண்டியை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மனைவிக்கு பூ வாங்க சாலையைக் கடக்கிறான் கணவன், எதிர்புறம் கணவனை நோக்கி வரும் லாரியைப் பார்க்கும் மனைவி, பதட்டத்தில் கத்தியபடி இரண்டடி முன்னால் விரைய, இந்த பக்கமிருந்து வரும் பேருந்தை கவனிக்கத் தவறுகிறாள். ஒரு காதோடு சேர்த்து ஒருபக்க முகத்தில் அடித்து ரோட்டுக்கு வெளியே தூக்கிப் போட்டுவிட்டு விரைகிறது பேருந்து. ரோட்டை கடந்து விட்ட கணவன், திரும்பிப் பார்த்து நிலைகுலைகிறான். மனைவியை மடியிலேந்தி கதறுகிறான். நெடுஞ்சாலை வண்டிகள் ஏதும் நிற்காமல் பறந்து கொண்டே இருக்கின்றன. முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் இருக்கும் நிலையிலும், பைத்தியமாய் பதறிக் கொண்டிருக்கும் கணவனுக்கு ஆறுதல் சொல்கிறாள், செல்லிலிருந்து 108 ஐ அழைக்க வைக்கிறாள். வாகனம் வந்து ஏறியதும் தன் மடியில் வைத்து கைகள் நடுங்கியபடி அவள் தலையைத் தாங்கிக் கொண்டு வரும் கணவனை பார்வையால் தேற்றிக் கொண்டிருக்கிறாள் அந்த இளம்பெண். அவளது கண் காது மூக்கு வாய் என்று நீக்கமற வழிந்து கொண்டிருக்கிறது உதிரம்.

பள்ளிக்குச் செல்வதாய் சொல்லிவிட்டு நகரத்தைத் தாண்டியிருக்கும் குன்றிற்கு நண்பர்களுடன் விளையாடச் செல்கிறான் பத்து வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன். வீட்டிலிருந்தும் பள்ளியிலிருந்தும் சம்பந்தமில்லாத மற்றொரு திசையில் தொலைவில் இருக்கிறது குன்று. நண்பர்களுடன் விளையாடிக் கொண்டே குன்றின் பாதி உயரத்திற்கு ஏறி விடுகிறான். விளையாட்டின் உற்சாகத்தில் ஒரு பாறையிலிருந்து கால் தவறி கீழே விழுகிறான். தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து பயந்து போன மற்ற சிறுவர்கள், மயக்கத்தில் கிடக்கும் அவனை விட்டுவிட்டு ஓடி விடுகின்றனர். சற்று நேரத்தில் எதேச்சையாக அங்கே வரும் சில இளைஞர்கள் 108 ஐ அழைக்கிறார்கள். முதலுதவி செய்து வாகனத்தின் ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்து செல்ல, சுயநினைவின்றிக் கிடக்கின்றான் சிறுவன். தலையணை முழுக்க இரத்தம் பரவிக் கொண்டே வருகிறது.

தான் பெண் பார்க்கச் செல்லும் முதல் பெண்னையே மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என உறுதியாய் இருக்கும் இளைஞன். ஒரே மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து பார்த்து விட வேண்டும் என பற்பல ஃபோட்டோக்களை அலசி, கடைசியில் ஒரு பெண்ணை பார்க்க தாய், மகன் இருவரும் டூவீலரில் பெண் வீட்டிற்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் தவறான பாதையில் வந்த நான்கு சக்கர வாகனம் நேருக்கு நேராய் மோத, இரண்டு பேரும் மொத்தமாய் உருக்குலைந்து கிடக்கின்றனர். அக்கம் பக்கத்திலிருந்து ஓடி வந்தவர்கள் ஆம்புலன்சை அழைக்கின்றனர். இருவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு விரையும் போது, இவர்கள் வரவிற்காக காத்திருக்கும் பெண் வீட்டார் தொடர்ந்து செல்லில் அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். இரத்தப்பிசுபிசுப்போடு செல் பாக்கெட்டில் அடிக்க, அவர்களின் பல்ஸ் இறங்கிக் கொண்டே இருக்கிறது.

மில்லில் ஆறு மணி ஷிப்ட் முடிந்து, வீடு வந்தவர் கை கால்களை கழுவி விட்டு சாப்பிட உட்காருகிறார். லேசாக மூச்சுக் குத்து போல வலியெடுக்கவே பிறகு சாப்பிட்டுக் கொள்வதாய் சொல்லி விட்டு தெருமுனையில் இருக்கும் பெட்டிக் கடைக்கு நடந்து செல்கிறார். சுமார் ஐந்து நிமிடம் பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர், அங்கேயே மேசையிலிருந்து மயங்கிச் சரிகிறார். அருகிலிருப்பவர்கள் முகத்தில் சோடா அடித்துப் பார்த்தும் நினைவு திரும்பாததால், வீட்டிற்குத் தகவல் சொல்லி விட்டு, 108ஐ அழைக்கிறார்கள். வாகனம் விரைந்து வந்து அவசர சிகிச்சை செய்து மருத்துவமனைக்கு செல்லும் போதே, தொண்டையிலிருந்து வாய் வழியாக ஒரு மாதிரி இழுத்து மூச்சுவிட முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறார்.

பதைபதைப்பான தருணங்களினூடாகவே நிதானத்தையும் இழக்காமல், வேகத்தையும் மட்டுப்படுத்தாமல் துரித கதியில் விலைமதிக்கமுடியாத் மணித்துளிகளை மிச்சப்படுத்தி மருத்துவமனைக்குள் கொண்டுவருவதற்குள் ஓட்டுநனுடன் சேந்து நோயர் ஊர்தியும் பதறியடித்து விரைந்து செல்லும். இப்படி, எத்தனையோ தருணங்கள், எத்தனையோ உயிர்கள். சூழ்நிலைகளும், மனிதர்களும் மாறுபட்டாலும் ஒரு வாழ்வு தன்னைத் தக்கவைத்துக் கொள்ள எத்தனிக்கும் உயிர்ப்போராட்டதின் வலி எப்போதும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. வாகனம் ரீங்காரமிட்டு அலறிச்செல்லும் பாதி வழியில் தலை திருப்பி உள் சாளரம் வழி காண நேரும் கணநேர காட்சியில் பரிச்சயமில்லாத ஓர் உயிரின் ஊசலாட்டம் ஒழுங்குமுறையின்றி வாகனம் முழுமைக்கும் அலைந்து ஆடிக்கொண்டிருக்கும். அங்கே கவிந்திருக்கும் ஓலக்குரல்களின் அதிர்வொலி சுற்று வெளியெங்கும் நிரம்பியிருக்கும். நோயர் ஊர்திக்கென தனி விலக்குரிமை வழக்கப்பட்டிருந்தும், பயிற்சியின் போதெல்லாம் மனனம் செய்த அடிப்படை விதிகளை ஒப்புவித்த பின்னரும் கூட சாலைகள் அகன்று வழிவிட மறுப்பவையே அன்றாடம் நிகழும். நகரும் வாகனவோட்டத்தை செங்குத்தாய் பிளந்து சமிக்ஞைகளைப் புறந்தள்ளி விரைந்து செல்வது பிழைத்தெஞ்சி நிற்பதற்கான கடைசி கட்ட முயற்சி. ஒருவழியாய், மருத்துவமனை அடைந்து ஊர்தியின் பின்கதவைத் திறந்து உயிரையும் உடலையும் இணைத்து இறுகக் கட்டி ஸ்ரெட்சருக்கு தாரை வார்க்கும் தருணங்களில் பள்ளிப்பருவத்தின் தேர்வுக்கு முந்தைய நிமிடங்கள் நிழலாடிச் செல்வதை இத்தனை வருடங்களாகியும் தவிர்க்க முடியவில்லை.

வழமையான பரபரப்புகள் நிறைந்த மற்றுமொரு பணிநாள் நிறைவு பெறுகிறது. வாகனத்தை ஷெட்டில் நிறுத்துமுன், அந்நாள் முழுக்க உள்ளே வாகனத்தில் சேர்ந்திருக்கும் பிணியையும், வலியையும், உதிரத்தையும் கழுவித் துடைத்து தூர எறிந்து விட்டு அடுத்த நாளிற்கான புதிய ஓட்டத்திற்கான ஆயத்தங்களை செய்து விட்டு வெளியேற வேண்டும். ஒத்திசைவில் இயங்கிக் கொண்டிருந்த ஓட்டுநனும் ஊர்தியும் அந்த இரவுக்காய் பிரியும் தருணத்தில் தான் இயல்பு நிலை திரும்பி சோர்வும், தனிமையும் ஆட்கொள்ளும். பணியறைக்குச் சென்று வெள்ளுடுப்பைக் கலைந்து விட்டு திரும்பி வந்து இருசக்கர வாகனத்தை முடுக்கி வீட்டுக்கு விரையத் துவங்கும் வேளை, கூடடையச் செல்ல வேண்டிய தூரம் மலைப்பை அதிகரிக்கும். தூக்கத்திற்காய் இரைஞ்சும் கண்களுக்கு ஒளிநிரப்பும் ஆற்றல் சாலையோர நடைபாதைக் கடையின் ஆவி பறக்கும் தேநீரில் ஒளிந்து கிடக்கும். அவ்வொளியை லாவகமாய் மீட்டெடுத்து, நடுநிசியில் ஆளரவற்ற சாலைகளில் எதிர் காற்றினூடே வீடு சேர மேற்கொள்ளும் பதினாறு கிலோமீட்டர் நெடுஞ்சாலைப் பயணம் அன்றைய சுமைகள் ஒவ்வொன்றையும் மெதுவாய் கட்டவிழ்த்து காற்றில் பறக்கச் செய்கிறது. இரவில் வீடு வந்து சேரும் போது மனமானது மௌனமான, பரிசுத்தமான, சலனமற்றதாய் மாறியிருக்கிறது. எதிர்பாராமையை எதிர்நோக்கியிருக்கும் மற்றுமொரு அதிகாலை விடியும் வரை செத்துக்கிடக்கலாம் போலத் தோன்றுகிறது.

***

கடிதம் ( Letter ) ஆங்கிலம் – ஈவ்லின் கான்லான், அயர்லாந்து Evelyn Conlon – தமிழில் ச. ஆறுமுகம்.

download-10

ஈவ்லின் கான்லான்

ஈவ்லின் கான்லான்: ஐரிஷ் நாவல்கள் மற்றும் சிறுகதை படைப்பாளரான இவர் டப்ளினில் வசிக்கிறார். நான்கு நாவல்களும் மூன்று சிறுகதைத் தொகுதிகளும் வெளியாகியுள்ளன. இவரது கதைகள் இத்தாலி, பிரெஞ்சு மற்றும் தமிழிலும் வெளியாகியுள்ளதாக http://evelynconlon.com/ வலைப்பக்கத்தில் குறிப்பு உள்ளது.

ஐரிஷ் பெண்மணியான ஹானரபிள் வயலெட் கிப்சன், அவரது ஐம்பதாவது வயதில் ஏப்ரல் 7, 1926 அன்று ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சுட்டுவிட்டு, தன்னையும் சுட்டுக் கொண்டார். ஆனால் இருவரும் பிழைத்துக்கொண்டனர். மனநோயர் பட்டம் கட்டப்பட்ட வயலெட் இங்கிலாந்தில் நார்த்தாம்ப்டன் மனநோயர் காப்பகத்தில் மீதி வாழ்க்கையைக் கழித்து, 2, மே, 1956 இல் இறந்து போனார். அவரது இறுதி ஊர்வலத்தில் காப்பகத்தினர் மட்டுமே இருந்தனர். வேறு எவருமே கலந்துகொள்ளவில்லையென்ற செய்தியினை `முசோலினியைச் சுட்ட பெண் என்ற வாழ்க்கை வரலாற்று நூலில் ஃபிரான்சஸ் ஸடோனார் சான்டர்ஸ் பதிவு செய்துள்ளார். வயலெட் மட்டும் முசோலினியைச் சுட்டுக் கொல்லும் முயற்சியில் வெற்றிபெற்றிருந்தால் ஐரோப்பாவின் வரலாற்றை, ஏன் உலக வரலாற்றையே மாற்றியவராகப் புகழ்பெற்றிருப்பார். இது தொடர்பான நிகழ்வுகள் அடிப்படையில் புனைகதையாக ஈவ்லின் படைத்துள்ள `கடிதம்` என்ற கதை தற்போது தமிழாக்கம் செய்யப்படுகிறது.

_____________________________________________________________________________________

அன்புள்ள உனக்கு,

நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேனே, தற்போது, கடந்த முப்பது ஆண்டுகளாக நார்த்தாம்ப்டன் மனநோயர் காப்பகத்துக்குள் வலுக்கட்டாயமாக அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நான், தோட்டக்காரர் மூலமாக, இதனை எழுதுகிறேன் இது, 1950 இன் முற்பகுதி தானே, ஆம், 1927 லிருந்து நான் இங்கிருக்கிறேன். என்னை முசோலினியைச் சுட்டுக்கொன்ற ஐரிஷ் பெண் எனச் சொல்கிறார்கள்; ஏனென்றால், அது, நான்தான். அதே செயலுக்காக, ஆயிரக்கணக்கில், மேலும் ஆயிரமாயிரமாக, எத்தனையோ பேர் மரணத்தைச் சந்திக்க அனுப்பப்பட்டிருந்தாலும், அதை நிறைவேற்றிய நான் ஒரு பைத்தியமென்று இப்போதும் சொல்கிறார்கள். தொடக்கத்திலேயே அந்தச் சரியான செயலைச் செய்து முடித்ததே எனக்குப் பெருஞ்சுமையாக அமைந்திருக்கிறது.

தொடக்கத்தின் அருகிருந்தே நான் தொடங்குகிறேனே, ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதற்கோ அல்லது மேற்கொள்ளாமலிருக்கவோ, நமது தொடக்கத்தின் எந்தத் துளிக்கூறுகள் நம்மைத் தூண்டின என்பதை அறிவது கடினமென்றபோதிலும், பெரும்பான்மை மக்கள் விஷயத்தில் எப்படியோ, அப்படியே, எந்தத் துளிக்கூறுகள் நம்மை, வெளியில் தெரிகிற பரந்த உலகத்தின் ஒரு பகுதியாக்குகின்றனவோ, பெரும்பாலும் அதே கூறுகள் தாம் உடன்பிறப்புகளை அவர்களுக்குள் ஒன்றுசேர வைப்பதும் அவர்களின் சிறுமதிக் கூடாரத்துக்குள் பின்வாங்கச் செய்வதும்

நான் ஒன்பது வயதாக இருந்தபோது, என் தந்தை அயர்லாந்தின் அதிபராக்கப்பட்டார். அதைப்பற்றிய பேச்சுக்கள் அனைத்தையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். வண்டிகள் இழுபடும் கடகடப்பொலி, இரவிலும் கூட குதிரைகள் வெளியே இழுக்கப்படும் முடிவில்லாத சப்தங்களும் என் நினைவிலெழுகின்றன. அப்போது வீட்டில் பையன்கள் தாம் அதிக முக்கியத்துவம் பெற்றார்கள் என்பதோடு நாங்கள் செய்ததைவிடவும்கூடக் குறைவாகவே சிறுமிகளிடம் எதிர்பார்க்கப்பட்டதென, ஆனால் ஏகப்பட்ட ஆடை அணிகளுடன் அழகுபடுத்தப்பட்டதாக நினைக்கிறேன்; நானொன்றும் தேவைக்கதிகமான முக்கியத்துவத்தை அதற்கு அளிக்கவில்லையென்றாலும், வேறெதுவும் செய்யத் தோன்றாமல் அதன் போக்கிலேயே போனேன். வீட்டிலேயே நாங்கள் பள்ளிப் பாடங்களைக் கற்றோம். என் அண்ணன், தம்பிகள் போரில், தேவைப்பட்டால் ஆங்கிலம் பேசப்படாத பகுதியிலும்கூட, சண்டையிடுவதற்காக அவர்களுக்காகவே கற்றுக்கொடுக்கப்பட்ட மொழிகளைக் குறிப்பாக நான் விரும்பினேன். பௌலான்-சர்-மெர் நகரில் தங்கியிருந்த காலம் முழுவதும் பட்டைதீட்டப்பட்ட என்னுடைய பிரெஞ்சு இப்போதும் மேலானதாக இருக்க, என்னுடைய இத்தாலியனோ, அது ஒரு காதலாகவே இருக்கிறது. இப்போதும், இத்தாலியர்களே மிகச் சிறந்த கவிதைகளைக் கொண்டிருக்கிறார்கள். வேறு சில புத்தகங்களும் இருப்பதை நான் கண்டுபிடிக்கும் வரையில் – அவற்றில் சில வில்லீயிடம் கிடைத்தவை – எதைப்படிக்கச் சொன்னார்களோ, அதையே நாங்கள் படித்தோம். வில்லீ, ஹார்ரி, எல்சீ, எட்வர்டு, விக்டர், ஃபிரான்சஸ், கான்ஸ்டன்ஸ் என்ற என்னுடைய ஏழு உடன்பிறப்புக்களில், இப்போது மூன்று பேர் மீது மட்டுமே உண்மையிலேயே எனக்கு அக்கறை என்பதையும் அது இப்போது மிக மோசமாகாமலுள்ளது என்பதையும் நான் உங்களிடம் சொல்லித்தானாக வேண்டும். நான் அக்கறை கொண்ட மூவரில் இரண்டு பேர் இப்போது இறந்துவிட்டனர்.

என்னுடைய வளர்ப்பு விவரத்துக்குத் திரும்பவும் வருவதென்றால், என்னுடைய வாசிப்புக்கு அப்பாலும், என்னால் முடிகின்ற அளவுக்குச் சிறப்பாகவே, அநேகமாகப் பொருத்தமாகவே செய்தேன். பெண்கள் வாக்களிப்பு குறித்த உரையாடலை, எப்போதாவது – அதுபற்றிய குறிப்புகளை நான் வாசித்த சிலவேளைகளில் – நான் தொடங்குவதுதான்; அது ஒருவேளை எப்போதாவது நிகழ்வுக்கு வந்தால், அதனை எப்படிச் செயல்படுத்த வேண்டுமென்பதை எங்களுக்குச் சொல்கின்ற விருப்பம் அவருக்குள் தோன்றுவதை என் தந்தை அறிந்திருந்தார்தான். நான் அதைப்பற்றிக் குறிப்பிட்ட போதெல்லாம், தூக்கிவாரிப் போட்டது மாதிரியாக என்னைப் பார்ப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். `நடந்ததெல்லாம் போதும்` எனச் சொல்லும்போதும், அவர், அதே பார்வையைப் பார்த்தார். அந்த வார்த்தைகளில் நான் கடுமையை உணர்ந்தேன். அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின் அந்த நாள் வந்தபோது, நான் எனது சகோதரியிடம் ஒருமுறையாவது மார்க்கச்சையினை அணியாமலிருக்குமாறு கூறியது என் நினைவுக்கு வருகிறது. “ எதோ, சுவர்க்கத்தின் புண்ணியத்தில் வாக்களிக்கப் போகிறோம்` என அவளிடம் நான் கூறிய போது, வழக்கமாக அப்பா எப்படிப் பார்ப்பாரோ, அதே போன்று அவளும் என்னைப் பார்த்தாள்.

ரோம் நகரத்தின் அழகுக்கு மாறாக, அதன் ஓவியங்கள், காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டு, நீலவானம் நோக்கிப் பென்சில் போல ஒல்லியாக எழுந்தோங்கும் மரங்கள், தாராளமாகப் பரந்து விரிந்த நிழற்சாலைகள், ஒளிமிகுந்த கதிர் மறையும் காட்சிகளுக்கெல்லாம் மாறாகச் சீழ்பிடித்த அவலமொன்று அந்த மனிதன் முசோலினி மற்றும் அவனது தொண்டர்களினால் பெருங்கேட்டு நச்சாகிக்கொண்டிருந்தது. அவன் ஆட்சி அதிகாரத்தைத் தன்னகங்காரப் பிடிக்குள் அழுத்தி, இத்தாலியை அழித்துக்கொண்டிருந்தான். வரைபடத்தை அதன் முழு அளவுக்கு விரித்துப பிரச்சினைகளை அதன் அடிவேர் வரை ஆராய்ந்த எங்களைப் போன்றவர்களால் அதைத் தெரிந்துகொள்ளமுடிந்தது. கண்முன் தெரிகிற கொடுங்கோலன் மற்றும் அவனது தொண்டர்களின் செய்கைகள், வன்முறைகளாகவும் பெருந்தீமையாகவும் மாறவே, நான் செயலில் இறங்கத் தீர்மானித்தேன். சில நேரங்களில் அறிவார்ந்த தேர்வான செயலில் இறங்குவதொன்றைத் தவிர வேறெதுவும் செய்வதற்கில்லையெனத் தெரிந்துகொள்ளப் போதுமான ஒரு வயதில் நான் அப்போதிருந்தேன். என்னுடைய விதியையும் முசோலினியின் விதியையும் நேருக்கு நேராக, ஒரே மூச்சுக் காற்றில் நிறுத்துவதற்காக என்னை நானே தயார்படுத்திக்கொண்டேன்.

நான் முசோலினியைச் சுட்டுக்கொன்றபோது, என் வயது ஐம்பது; அதைச் செய்வதற்கு அது ஒரு நல்ல வயது என்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான், என் குடும்பத்தை நிலைகுலையச் செய்ய உண்மையிலேயே விரும்பியிருக்கவில்லையானாலும், என் குடும்பத்தை மகிழ்ச்சியில் வைத்திருக்கவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக, நான் அதைச் செய்யாமலுமிருக்க முடியாது.

ஒப்பம், வயலெட் கிப்சன்.

Source:

http://www.theletterspage.ac.uk/documents/archive/individual-letters-archive/evelyn-conlon-letter.pdf