Category: இதழ்115

மத்தியானத்தைப் பிளத்தல் மற்றும் சில கவிதைகள் / சிபிச்செல்வன்

unnamed

மத்தியானத்தைப் பிளத்தல்

ஐப்பசி மாதத்தில் முதல் வாரம்போலவேயில்லை
இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி
பாறையின்மீது நடந்தார்கள்
மேகத்தின் நிழல் எங்கேயும் பறக்கவில்லை
காகத்தின் கரைதலும் கேட்கவில்லை
ஒதுங்க வழியின்றி
மத்தியானம்
விழி பிதுங்கி நின்றது

ஒருவன் ஒரு கையில் சம்மட்டியை உருவியெடுத்தான்
இன்னொருவன் தன் அதிநவீன டிரில்லரை எடுத்து பாறையின் மீது வைத்து டர்டர்டர்டரெனப்
பிளந்தான்
அப்போது மத்தியானம்
இரண்டாகப் பிளந்து
துண்டு துண்டாக
சுடுவெயிலில் வீழ்ந்து துடித்தது

மத்தியானத்தைப் பிளந்த இளைஞர்கள் தங்கள் வெற்றியை எதிரிலிருந்த மதுக்கடையில் கொண்டாட
துண்டான ஒரு மத்தியானத்தை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பறந்தார்கள்.
இன்னொரு மத்தியானம்
தனியாக
தன்னந்தனியாக வெயிலில் கொதித்துக்கொண்டிருந்தது.

அப்போதுதான் புரிந்தது
ஒரு மத்தியானம் இன்னொரு மத்தியானம் போலில்லை

•••••••

நீலவானம் மற்றும் ,….

நீல நிறத்தில் ஒரு வானம் பார்த்தேன்
அது எங்கள் வானத்தின் நிறம் என நினைத்திருந்தேன்
கொஞ்ச நாட்களுக்குமுன் நான் பயணித்து சேர்ந்த ஊரில் கண்டேன் அதே வானம் இருந்தது
அந்த வானத்திலும் நீலம் இருந்தது
இன்னும் கொஞ்ச நாட்களுக்குப்பின் வேறோரு நாட்டிற்குப் போயிருந்தபோது பார்த்தேன்
அங்கே வானில் ஒரு நிலவும் இருந்தது
அப்போதும் வானில் நீலம் கொஞ்சம் பின்னணியில் இருப்பதையும் ஒளியில் கொஞ்சம் பிசிறடித்திருப்பதையும் கண்டேன்
ஆக
எல்லா வானங்களும் ஒன்று போலவே இருப்பதற்கு
நீலம் தான் காரணம் என ஒரு உண்மையைக் கண்டுபிடித்து அதை வானிலிருந்து கிள்ளியெடுத்து வீசிக்கொண்டிருக்கிறேன்
நீ
நான்
ஒன்றெல்லாம் நீலம்
•••

ஒரு சம்மட்டியை ஓங்கியடித்தேன்

ஒரு சம்மட்டியை ஓங்கியடித்தேன்
ஒரு பாறை பிளந்து நீர் ஊற்றாகப் பாய்கிறது

இன்னொரு சுத்தியலெடுத்து மெதுவாக அடித்தேன்
என் மண்டை பிளந்து பீறுகிறது இரத்தம்

ஒரு ஆணியெடுத்து அறைகிறேன்
என் ஒரேயொரு எதிரியின் மூளையில்
அங்கே எல்லாமே
வெறுமையாக சிரிக்கிறது

இப்போது சொல்லுங்கள்
ஆணியின் வலிமையை

••••••

உங்கள் சீட் பெல்ட்களைக் கவனமாக அணிந்துகொள்ளுங்கள்

அய்யா நீங்கள் முதலில் உங்கள் சீட் பெல்ட்டை அணிந்துகொள்ளுங்கள்

இந்த சாலை தங்க நாற்கர சாலை
தரை வழுக்கிக்கொண்டு பறக்கும்படியும்
சூரியன் சாலைகளில் கானல்நீரோடு விளையாடிக்கொண்டுமிருக்கிற நேரம்
ஏசியைக் கொஞ்சம் இதமாக இன்னும் கூட்டி வைக்கட்டுமா?

உங்களுக்குப் பிடித்த பாடலை இன்னும் கொஞ்சம் வால்யூம் வைக்கட்டுமா?
அல்லது உங்களுக்குப் பிடித்த சினிமாவை விடியோவில் போட்டு விடவா ?
பயணத்தின்போது அலுவலகத்தைக் கண்காணிக்க வேண்டுமானால் சொல்லுங்கள் இணையத்தை இயக்குகிறேன் அதில் மொத்த இந்திய கிளைகளின் கட்டுப்பாடுகளையும் நீங்கள் கண்காணிக்கலாம்.
பயணத்தின் அலுப்பில் கை கால்களை நீட்டி சற்றே ஓய்வெடுக்க இந்த சீட்டை சாய்த்து படுக்கையாக மாற்றி விடவா?

சாலையோர மோட்டல்களில் நிறுத்தி பழச்சாறு அருந்தவோ அல்லது தாகசாந்தி செய்து இளைப்பாறவோ செய்வதற்கு காரை சற்றே நிறுத்தட்டுமா?
உங்கள் சிறுநீர் உபாதையை இங்கே கழித்துக்கொள்ளலாம்

எப்போது பார்த்தாலும் ஏசியிலேயே நீங்கள் கழிப்பதால் கொஞ்சம் உங்கள் தோலின் மீது வெயில் படவேண்டும் என மருத்துவர் சொன்னதையும் நினைவூட்டுகிறேன் அய்யா!
அய்யா முதலில் காரில் ஏறி அமர்ந்ததும் உங்கள் சீட் பெல்ட்டைப் போட்டுக்கொள்ளுங்கள்
நூற்றுக்கும்மேலாக மைல்காட்டும் முள் துடித்தாலும் உங்களுக்கு உடல்குலுங்காமல் பயணத்தை செலுத்துவேன்

ஆறுவழி
நான்குவழி சாலைகளில் உங்களை பூப்போல கொண்டுபோய் சேர்ப்பேன்.
சாலைகள் அகலமாகவும் விசாலமாகவும் கனவுபோல மின்னுகின்றன அய்யா.
அவ்வப்போது சாலைகளில் வரிக்குதிரைகள் கடந்துபோய்க்கொண்டிருக்கின்றன
அவற்றைப்பற்றி நாமோ நம்மைப் பற்றி அவையோ கவலையில்லாமல் கடக்கிறோம்

ஆனால் பாருங்கள்
சாலையின் குறுக்கும் நெடுக்குமாக
இந்த நாய்கள் ஓடித் தொலைக்கின்றன
இவற்றை மோதாமல் இருப்பதற்கு பல லட்சங்கள் செலவளித்து வாங்கிய காரை நிறுத்தலாமா அய்யா?
உங்கள் மறுதலிப்பை உத்தரவாகக் கருதி அதனையேற்றி கடக்கிறேன்
இரத்தம் தெறித்த சாலையில் கடந்து செல்கின்றன பல கார்கள்

அய்யா தயவுசெய்து சீட் பெல்ட்டை கவனமாக அணிந்து கொள்ளுங்கள்
நமது கார் மிக வேகமாக மிகமிக வேகமாக சாலைகளில் பறக்கும் பல நூறுகுதிரைகளின் சக்தியைக் கொண்டவை
அவற்றின் சக்தியை உடனே குறைக்கமாட்டேன் அய்யா

சாலையை ஒரு சாதரண மனிதன் கடந்தாலே நிறுத்தமாட்டேன் அய்யா
மோதி சிதைத்துவிட்டு தெறிக்கிற ரத்தத்தை விட வேகமாக சாலைகளில் பயணிக்கலாம் அய்யா
தயவுசெய்து சீட் பெல்ட்டை கவனமாக அணிந்துகொள்ளுங்கள்

உங்கள் உயிர் நாய்களின் உயிரைவிட
சாதரண மனிதனின் உயிரைவிட மேலானது
ஆகையால் முதலில் உங்கள் சீட் பெல்ட்டை அணிந்துகொள்ளுங்கள்.

••••

இந்தக் கவிதைகள் ஜனவரி மாத அடவி இதழில் வெளிவந்தவை

நன்றி தில்லை முரளி

பச்சை இலைகள் (கென்யா தேசச் சிறுகதை) – க்றேஸ் ஒகொட் / தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

download (16)

அது ஒரு கனவு போல இருந்தது. பிறகு அந்த ஓசை படிப்படியாக அதிகரித்தது. நியாகர் போர்வையை அகற்றிவிட்டு காது கொடுத்துக் கேட்டான். ஆமாம். அவன் நினைத்தது சரி. கனத்த காலடிச் சப்தங்களும் குரல்களும் அருகாமையில் கேட்டன. தனது மனைவியை எழுப்புவதற்காக அவன் சுற்றி வரப் பார்த்தான். அவளைக் காணவில்லை. அவன் உடனடியாக எழுந்து கதவருகே சென்றான். கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. நியாமுந்தி எங்கே? அவள் இந்தளவு அமைதியாக அவளது குடிலுக்குச் சென்றது எவ்வாறு? அவன் திகைத்தான். ‘கதவுக்குத் தாழ்ப்பாளிட என்னை எழுப்பாது, அவளது குடிலுக்குச் சென்று விடுமாறு அவளிடம் கூறியது நானல்லவா? அவள் நாளை சந்திக்க வருவாள்.’

‘கள்ளன்… கள்ளன்… அங்கே… அங்கே’

கூச்சலிடும் சப்தம் இப்பொழுது முப்பது யார் அளவு அருகாமையில் கேட்டது. நியாகர் தனது கட்டுமஸ்தான உடலைச் சுற்றி போர்வையைப் போர்த்திக் கொண்டு, இருளிலேயே தடவித் தடவி வேலோடு தடியொன்றையும் எடுத்துக் கொண்டு தனது குடிலிலிருந்தும் வெளியே வந்தான்.

‘பிட்…பிட்… பிட்’ என்ற சத்தத்தோடு ஒரு குழு நுழைவாயிலைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. நுழைவாயிலைத் திறந்த அவன் வேலியோரத்தில் மறைந்து கொண்டான். குழுவை ஒரேயடியாகச் சந்திக்க நியாகர் விரும்பவில்லை. ஏனெனில், அக் குழு யாரோ பயங்கரமான ஒருவனைப் பின்னால் துரத்திக் கொண்டு வருவது நிச்சயம்.

மூன்று, நான்கு பேர் நுழைவாயிலைக் கடந்து ஓடிச் சென்றனர். தொடர்ந்து பெரிய கும்பலொன்றே அவர்களைத் தொடர்ந்தது. ஒளிந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்தவன் அவர்கள் பின்னால் ஓடிச் சென்றான்.

‘இந்தப் பொறுக்கி என்னோட ஆறு எருமைகளைத் திருடிட்டுப் போய்ட்டான்’ என எவரோ கூறுவது அவனுக்குக் கேட்டது.

‘கவலைப்படாதே.. அவங்க அதுக்கான விலை கொடுக்க வேண்டி வரும்’ என இன்னொரு குரல் பதிலளித்தது.

துரத்திச் செல்லும் குழுவை நெருங்க நியாகரால் முடிந்தது. தனது நுழைவாயிலைத் தாண்டிச் சென்ற மூன்று அல்லது நான்கு பேரும் மாட்டுத் திருடர்களென்பது அவனுக்குப் புரிந்தது. அவர்கள் வளைவொன்றில் திரும்பினர். முப்பது யாரளவு முன்னால் மூவர் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்கள் திருடர்களாக இருக்கக் கூடும்.

‘அவர்களைத் தப்பிக்க இடமளிக்கக் கூடாது’ என ஒருவன் கத்தினான்.

‘இல்லை..இடம் கொடுக்க மாட்டோம்’ என கும்பலும் ஒரே குரலில் கத்தியது. இரு சாராருக்கும் இடையிலிருந்த இடைவெளி குறைந்தது. பிறைச் சந்திரன் ஒளிந்து கொண்டதும் இருள் அரசாளத் துவங்கியது.

‘அவங்களை நோக்கி வேல்களை எறிஞ்சுடாதீங்க.. குறி தப்பிடுச்சுன்னா அவங்க அதை எங்களைத் தாக்கப் பயன்படுத்திக்குவாங்க’ என வயதான ஒருவர் கத்தினார்.

திருடர்கள் தவறான பாதையில் பிரவேசித்தனர். அதனால் அவர்களுக்கு மாஸாலா மக்களையும், மிரோகி மக்களையும் பிரிக்கும் ஒபோக் ஆற்றின் குறுக்கே இடப்பட்டிருக்கும் பாலத்துக்கான வழி தவறியது. வலப்பக்கம் திரும்பிய அவர்கள் கண்டது தண்ணீரையேயன்றி பாலத்தையல்ல. அவர்கள் நீரின் அருகாமை வரை சென்றிருந்தார்கள்.

‘அதோ அதோ’ துரத்தி வந்த கும்பலின் ஓசை எதிரொலித்தது. திருடர்கள் ஆற்றைக் கடந்து செல்ல பொருத்தமானதும், பாதுகாப்பானதுமான இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு முன்பே மக்கள் அவர்கள் மீது மொய்த்துக் கொள்ளத் துவங்கியிருந்தனர். தமது கைகளிலிருந்த கட்டைகளால் அவர்கள், திருடர்கள் கீழே விழும்வரை தாக்கினார்கள். அகப்பட்டுக் கொண்ட திருடர்களின் அலறல்களால் வானம் கூட அதிர்ந்தது. ஆனாலும் அக் கும்பல் அனுதாபம் காட்டவில்லை. இந்தக் கலவரத்துக்கிடையில் ஒரு திருடன், இடையிலிருந்த புதருக்குள்ளே புகுந்து காணாமல் போனான்.

‘துரத்து.. துரத்து’ என ஒருவன் கத்தினான். அவன் காணாமல்போன திசையை நோக்கி மூவர் மூச்சிறைத்தவாறு ஓடினர். அவர்கள் அடர்ந்த முற்புதரைக் கண்டதும் நின்று விட்டனர். பிறகு தமது கைகளிலிருந்த கட்டைகளால் புதர்களுக்கு அடித்தனர். எனினும் எந்தவொரு ஓசையும் கேட்கவில்லை. அவன் தப்பிச் சென்றிருந்தான்.

ஏனைய திருடர்களில் ஒருவன் தனது கையிலிருந்த கத்தியால் தன்னைத் துரத்தி வந்த ஒருவனின் தோளில் குத்தினான். கத்தி குத்தப்பட்டிருந்தவாறே அவன் கீழே சாய்ந்தான். இந்தக் கலவரத்துக்கிடையில் திருடன் சடுதியாக ஆற்றில் குதித்தான். அனைவரும் திகைத்துப் போய்ப் பார்த்திருக்க, அவன் கடும் முயற்சி செய்து நீந்தி அடுத்த கரைக்குச் சென்றிருந்தான்.

ஒமோரோவின் தோளில் குத்தப்பட்டிருந்த கத்தியை அப்புறப்படுத்திய நியாகர் இரத்தம் பெருக்கெடுப்பதைத் தடுப்பதற்காக அவனது காயத்தை தனது கைகளால் அழுத்தினான். இன்னும் நடுங்கிக் கொண்டிருந்த ஒமோரோ சிரமத்தோடு எழுந்து நியாகரின் உடலில் சாய்ந்து நின்று கொண்டான். வழிந்தோடும் இரத்தத்தின் காரணமாக ஒமோரோவின் பின்புறம் ஈரமாகிக் கொண்டிருந்தது.

மற்றுமொரு திருடன் முனகியபடி புற்தரையின் மீது விழுந்திருந்தான். ஏனைய இருவரும் தப்பிச் சென்றிருந்த காரணத்தால் எஞ்சியிருந்தவனுக்கு தக்க பாடத்தைப் புகட்ட வேண்டுமென எல்லோரும் தீர்மானித்தனர். அவர்கள், கீழே விழுந்திருந்த திருடனின் நெஞ்சிலும், தலையிலும் ஆழமாகத் தாக்கினர். முனகியபடி தனது கைகளையும் கால்களையும் விரித்து ஒன்று சேர்த்த திருடன் உயிரை விடத் தயாரானான்.

‘ஆஹ்… ஆஹ்… உங்க கையால எதிரியை சாக இடமளிக்க வேணாம். கள்ளனோட ஆவி எங்க ஊருக்கு வந்துடும். நாங்க சீக்கிரமா எங்க வீடுகளுக்குப் போயிடுவோம். அதுக்கப்புறம் கள்ளனோட உயிர் போகட்டும்’

ஒமோரோவின் எச்சரிக்கையை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் அக்கம்பக்கத்திலிருந்த மரங்களிலிருந்து பச்சை இலைகளைப் பறித்து வந்து காயமுற்றிருந்த திருடனை முழுமையாக மூடினர். அடுத்த நாள் காலையில் இனத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அழைத்து திருடனை ஆற்றங்கரையில் புதைத்து விடலாமெனத் தீர்மானித்தனர்.

கிராமத்தவர்கள் அமைதியாக வீடுகளை நோக்கிச் சென்றனர். ஒமோரோவின் தோளிலிருந்து இரத்தம் வழிவது நின்றிருக்கவில்லை. உதவுவதற்குத் தானாகவே முன் வந்த தனது நண்பர்கள் இருவரின் உதவியோடு கைத்தாங்கலாக அவன் நடந்து சென்றான். இன்னும் இருள் அடர்ந்திருந்தது. அவர்களது கண்கள் இப்போது இருட்டுக்குப் பழகியிருந்தன. அவர்கள் நியாகரின் வீட்டை நெருங்கினர். இன்னும் நுழைவாயில் கதவு திறந்தேயிருந்தது.

‘விடிகாலையிலேயே வந்துட மறந்துடாதே. பொம்பளைங்க ஆற்றுக்குப் போறதுக்கு முன்னாடி நாங்க சம்பவம் நடந்த இடத்துக்குப் போயிடணும்.’

நியாகர் குடிலுக்குள்ளே சென்றான். ஏனையவர்கள் திரும்பிப் பார்க்காமல் முன்னே நடந்தனர். கிராமம் முழுவதும் அமைதியாக இருந்தது. பெண்கள் விழித்திருந்தனர். எனினும் அவர்கள் தமது கணவர்களோடு கதைக்கப் பயந்தனர். என்ன நடந்திருந்தாலும் காலை ஒன்பது மணியாகும்போது எப்படியும் தெரிய வந்துவிடுமென அவர்கள் அறிந்திருந்தனர். தமது கணவன்மார் பத்திரமாகத் திரும்பி வந்திருப்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டதன் பிறகு அவர்கள் உறங்கச் சென்றனர்.

தனது குடிலுக்குள் நுழைந்த நியாகர், தனது மருந்துப் பையைத் தேடிப் பார்த்தான். அது ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. மருந்துப் பையைத் திறந்தவன், மூங்கிலால் செய்யப்பட்ட பாத்திரமொன்றை உள்ளேயிருந்து எடுத்து அதைத் திறந்தான். அதற்குள்ளேயிருந்து சிறிதளவு சாம்பலைக் கையிலெடுத்து கொஞ்சமாக நாக்கில் தடவி எச்சிலோடு விழுங்கினான். சிறிதளவு சாம்பலை உள்ளங்கையில் கொட்டி எடுத்துச் சென்று நுழைவாயில் கதவினருகில் விசிறினான். பிறகு மூங்கில் பாத்திரத்தை மூடி மருந்துப் பையின் உள்ளே வைத்தான். இப்பொழுது அவனது மனது அமைதியடைந்திருந்தது.

கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்த நியாகர் தனது ஆடைகளை மாற்றிக் கொள்ளத் தயாரானான். எனினும் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டான். அதற்குப் பதிலாக வெற்று ஆகாயத்தை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இறுதியில் வெளியே செல்ல மனதைத் தயார்படுத்திக் கொண்டான். மெதுவாக கதவைத் திறந்த நியாகர் ஓசையெழுப்பாது அதைப் பூட்டினான். யாரும் அவனது சத்தத்தைக் கேட்கக் கூடாது. நுழைவாயில் கதவைப் பற்றிக் கவலைப்படாது அவன் முன்னே நடந்து சென்றான்.

‘நான் நுழைவாயில் கதவைப் பூட்டினேனா?’ எனக் குழப்பத்துக்குள்ளான அவன் திரும்பிப் பார்த்தான். ஆமாம். அவன் அதனைப் பூட்டியிருந்தான். அல்லது அவ்வாறு அவனுக்குத் தென்பட்டது.

இடைக்கிடையே கேட்கும் அபசகுனமான சப்தங்களைத் தவிர, இரவு அமைதியாகத்தான் இருந்தது. சூரியன் உதிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. புதிய நாளொன்று பிறக்கும் முன்பாக உண்டாகும் பளிச்சிடும் வெளிச்சத்தின் மெல்லிய அறிகுறிகள் கிழக்குத் திசையில் காணக் கூடியதாக இருந்தது.

‘அவனது பையில் நிறையப் பணமிருக்கும்’ என ஓசையெழுப்பாது சொல்லிக் கொண்டான். களவாடிச் செல்லும் மாடுகளை கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே விற்றுவிடுவார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். திருடனைப் பரிசோதிக்காதிருந்தது ஏனையவர்களின் முட்டாள்தனம். அவன் மீண்டும் காதைக் கூர்மையாக்கினான்.

‘யாராவது வருகிறார்களோ?’

‘இல்லை.’ அவனுக்குக் கேட்டிருந்தது அவனது காலடியோசையின் எதிரொலி.

‘சில நேரம் தப்பிச் சென்ற திருடர்கள் இருவரும் மீண்டும் இங்கே வரக் கூடும்’ அவன் பதறியவாறு சிந்தித்தான்.

‘இல்லை… அவர்கள் வர மாட்டார்கள். இங்கே சுற்றித் திரிய அவர்கள் என்ன வடிகட்டிய முட்டாள்களா?’

பச்சை இலைகளால் மூடப்பட்டிருந்த மேடு தென்பட்டது. அவனது முள்ளந்தண்டு சிலிர்ப்பதை உணர்ந்தான். தனது இதயத்தின் ஓசை நின்றிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவன் சற்று நின்றான். அவனது இதயம் இன்னும் வேகமாக அடித்தது. அவன் பதற்றமாக உணர்ந்தான். வேகமாக நடந்தான். அவனது காலடிச் சத்தத்தின் எதிரொலி அவனுக்குத் தொந்தரவாக இருந்தது.

கொலை நடந்த இடத்தை அண்மித்த நியாகருக்கு அனைத்தும் முன்பிருந்தது போலவே இருப்பதாகத் தோன்றியது. எந்தத் தீர்மானத்துக்கும் வர முடியாமல் அவன் ஒரு கணம் அங்கேயே நின்றான். எவரும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவன் எல்லாப் பக்கங்களையும் பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவருமே இல்லை. சடலத்தினருகே தன்னந் தனியனாக நின்று கொண்டிருப்பது அவன் மாத்திரம்தான். அவனுக்கு பயம் தோன்றியது. பிணமொன்றைத் தொந்தரவு செய்வது ஏன்? அவனது மனசாட்சி அவனிடம் கேட்டது.

‘பணத்தை வைத்து உனக்கு என்ன செய்ய வேண்டும்? உனக்கு மூன்று மனைவியரும், பன்னிரண்டு பிள்ளைகளும் இருக்கின்றார்கள். உனக்கு வேண்டியளவுக்கு உணவு இருக்கிறது. மாடுகள் இருக்கின்றன. அதற்கும் மேலதிகமாக உனக்கு என்ன வேண்டும்?’ என அவனது மனசாட்சி வினவியது. அவனது பயம் அதிகரித்தது. அவன் திரும்பிச் செல்ல நினைத்தான். எனினும் அதை விடவும் பலமானதொரு சக்தி அவனை முன்னால் தள்ளியது.

‘நீ இவ்வளவு தூரம் இப்படி வந்தது ஒரேயொரு காரணத்துக்காகத்தான். சடலம் உன் முன்னால் இருக்கிறது. உனது கையை அவனது பையில் இடுவது மாத்திரம்தான் நீ செய்ய வேண்டியிருக்கிறது. உடனே பணம் முழுவதும் உனது கையில். உனக்கு வேண்டியளவுக்கு செல்வம் இருக்கிறதென்று மனதை ஏமாற்றப் பார்க்காதே. உலகில் எந்த மனிதனுக்கும் அவனுக்குப் போதுமான அளவு செல்வம் அவனிடம் இல்லை’

நியாகர் சடலத்தின் அருகே குனிந்து அதனை மூடியிருந்த பச்சை இலைகளை அகற்றினான். பிணத்தின் மார்பு மீதிருந்த அதனது கை நியாகரின் கையில் பட்டது. அவன் இன்னும் வெதுவெதுப்பாகவே இருந்தான். நியாகரது முள்ளந்தண்டு சில்லிட்டதும் உடனே எழுந்து நின்றான்.

‘செத்துப் போனவனிடம் சூடு இருக்க வாய்ப்பில்லை’ எழுந்து நின்றபடி சிந்தித்தான். அந்த எண்ணத்தைப் புறந்தள்ளினான். ஒருவேளை அவனது இயலாமையின் காரணமாக பலவித எண்ணங்கள் மனதில் உதிக்கக் கூடும். அவன் மீண்டும் பிணத்தை நோக்கிக் குனிந்து அதனை மறுபக்கம் புரட்டிப் போட்டான். அவன் செத்துப் போயிருப்பது தெரிந்தது.

அவன் உடனடியாக சடலத்தின் சட்டைப் பையில் கையை நுழைத்தான். முதலாவது பைக்குள் கை நுழைந்தது. அதில் ஒன்றுமிருக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது பைக்குள் கை நுழைந்தது. அதுவும் வெறுமையாக இருந்தது. அவனது உள்ளத்திலிருந்த எதிர்பார்ப்புக்கள் சிதறிப் போயின. மாட்டுக் கொள்ளையர்கள் பணம் எடுத்துச் செல்வது சிறிய பொதியொன்றில் இட்டு, அதனை நூலினால் கட்டி, கழுத்தில் தொங்க விட்டபடிதான் என்பது அவனுக்கு நினைவு வந்தது. பிணத்தினை நோக்கிக் குனிந்தவன் அதன் கழுத்தைக் கண்டுகொண்டான். கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த நூலில் சிறிய பொதியொன்று தொங்க விடப்பட்டிருப்பது தென்பட்டது. வெற்றிப் புன்னகைகள் பல அவனது முகத்தில் தோன்றின. நூலை வெட்டுவதற்கு தனது கையில் கத்தியெதுவும் இல்லையாதலால், சிறிய பொதியை பிணத்தின் தலையினூடாகக் கழற்றியெடுக்கத் தீர்மானித்தான். நியாகர் பிணத்தின் தலையைத் தூக்க முயற்சிக்கும்போது சடுதியாக அவனது வலது கண்ணுக்கு வேகமாக ஒரு அடி விழுந்தது. சில யார் தூரம் வீசப்பட்டுப் போன நியாகர் மயங்கி விழுந்திருந்தான்.

சுய நினைவுக்கு வந்திருந்த திருடன் இன்னும் பலவீனமாகவே உணர்ந்தான். எனினும் காலத்தை வீணடிக்க முடியாது. இரண்டாவது தடவையாகவும் கடுமையாக முயற்சித்ததன் பிறகு, அவனால் எழுந்து நின்றுகொள்ள முடியுமாக இருந்தது. அவனது உடல் இரத்த வெள்ளத்தில் கிடந்திருந்ததைக் கண்டு கொண்டான். எனினும், இப்பொழுது அவனது மனம் தெளிவடைந்திருந்தது. அனைத்து பச்சை இலைகளையும் சேகரித்த அவன், அவற்றைக் கொண்டு நியாகரின் உடலை மூடினான். தப்பியோடிய சந்தர்ப்பத்தில் கண்டுபிடித்துக் கொள்ள முடியாதிருந்த பாலத்தைத் தேடிக் கண்டடைந்தவன் உடனடியாக அங்கிருந்து சென்றான். மாண்டவனின் ஆவி தன்னைப் பின் தொடரும் முன்பாக அவன் அங்கிருந்து தப்பிச் சென்று விட வேண்டும்.

சூரியோதயம் நெருங்கியிருந்தது. என்றாலும் மிகுவா நதியினருகே சென்ற அவனால் இரத்தக் கறை படிந்திருந்த தனது ஆடைகளைக் கழுவிக் கொள்ள முடியுமாக இருந்தது.

குலத் தலைவர் ஒலீலோ, சூரியோதயத்துக்கு முன்பாக மக்களை எழுப்புவதற்காக சாவு மேளத்தை அடிக்கச் செய்தார். ஒரு மணித்தியாலம் ஆவதற்குள்ளாக, குற்றங்கள் மற்றும் பொதுவான வழக்குகளுக்குத் தீர்ப்பளிக்கும் ஒபொக் மரத்தினருகே நூற்றுக்கணக்கான இனத்தவர்கள் ஒன்று கூடியிருந்தனர். ஒலீலோ மக்களை விளித்தார்.

‘கேளுங்கள் எனது மக்களே! நேற்றிரவு எமது கோத்திரத்தில் நிகழ்ந்த அனர்த்தம் பற்றி எல்லோரும் இப்பொழுது அறிந்திருப்பீர்கள். ஒமோகோவின் மாட்டுப் பட்டியில் புகுந்த கள்வர்கள் அவரது ஆறு உழவு மாடுகளைக் களவெடுத்துச் சென்றிருக்கிறார்கள்.’

‘ஓஹ்’ மக்கள் கூட்டம் தமது வியப்பைத் தெரிவித்தனர்.

‘அதற்குப் பதிலாக இரத்தம் சிந்த வேண்டி வந்தது. எம்மிடம் இப்பொழுது ஒரு சடலம் இருக்கிறது’ என ஒலீலோ உரையைத் தொடர்ந்தார்.

‘அப்படியா?’ ஒரு முதியவர் கேட்டார்.

‘ஆமாம். அப்படித்தான். இப்பொழுது நான் சொல்வதைக் கேளுங்கள். மனம் போன போக்கில் கொலை செய்வது எமது சட்டத்தில் தடுக்கப்பட்டிருந்த போதிலும் கூட, திருடர்களையும், ஒழுக்கம் தவறியவர்களையும் நாங்கள் தீயவர்களாகவே கருதி வந்திருக்கிறோம். அவ்வாறான ஒருவனைக் கொலை செய்தால், கொன்றவன் கொலைக் குற்றவாளி அல்ல. அவன் தனது சமூகத்தை தீங்குகளிலிருந்தும் காப்பாற்றியிருக்கிறான். அப்படிப்பட்ட பாவியொருவனைக் கொலை செய்தவனை, அவனது மனைவி, பிள்ளைகளோடு பத்திரமாகப் பார்த்துக் கொள்வது முழு சமூகத்தினதும் கடமையாகும். அது கட்டாயமானதுமாகும். அவ்வாறான ஒருவனைத் திரும்பவும் சமூகத்தில் சேர்த்துக் கொள்ள முன்பு அவனைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதுவும் உங்கள் எல்லோருக்குமே தெரியும்.
ஆனால் வெள்ளைக்காரர்களது சட்டம் இதை விடவும் மாறுபட்டது. அவர்களது சட்டத்தின் பிரகாரம், உங்களது மாடுகளைத் திருடியவன் கையும் களவுமாகப் பிடிபட்டாலும், உங்களது மனைவிமாரோடு கட்டிலில் படுத்திருக்கும் கள்ளப் புருஷன் கையும் களவுமாகப் பிடிபட்டாலும் அவனை நீங்கள் கொன்றால் நீங்களும் கொலைக் குற்றவாளி ஆகி விடுவீர்கள். அதனால் உங்களுக்கும் மரண தண்டனையே உரித்தாகும்.

எமது சட்டங்களை விட அவர்களது சட்டங்கள் உயர்வானவை என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நாங்கள் கவனமாக செயற்பட வேண்டும். எங்களுக்காக எமது மூதாதையர் இருக்கின்றார்கள். வெள்ளைக்காரர்களுக்கு அவ்வாறு யாரும் இல்லை. அதனால்தான் வெள்ளைக்காரர்கள் தங்களில் யாரேனும் செத்துப் போனால் வீட்டை விட்டு எங்கேயாவது தூரமாகக் கொண்டு போய் புதைத்து விடுவார்கள்.

நாங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது இதுதான். நாங்கள் ஒரு திருடனைக் கொலை செய்து விட்டோம் என்ற தகவலைத் தெரிவிப்பதற்காக எங்களில் முப்பது பேரை வெள்ளையர்களிடத்தில் அனுப்புவோம். ஊரார் எல்லோரும் ஒன்று சேர்ந்து திருடனைக் கொன்றதாக இக் குழு போய் வெள்ளைக்காரர்களிடம் கூற வேண்டும். எனது பேச்சுக்கு செவிமடுங்கள் பிள்ளைகளே! வெள்ளைக்காரர்களது தந்திரங்களை நடைமுறைப்படுத்த முடியுமாக இருப்பது, எமக்கிடையே பேதங்கள் இருந்தால் மாத்திரம்தான். நாங்கள் ஒன்றுபட்டிருந்தால் எங்களில் ஒருவரைக் கூட கொல்ல முடியாது.’

‘பெரியவர் சிறப்பாக உரையாற்றினார்’ என மக்கள் ஆரவாரித்தனர். முப்பது பேரைத் தேர்ந்தெடுத்த அவர்கள், அந் நபர்களை வெள்ளையரின் முகாமை நோக்கி அனுப்பி வைத்தனர்.

பெண்கள் உள்ளிட்ட எஞ்சியிருந்த அனைவரும் ஆற்றங்கரையில் பச்சை இலைகளால் மூடப்பட்டிருந்த சடலத்தின் அருகே சென்றனர். பிறகு அவர்கள் வெள்ளைக்காரர்களது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

நியாமுந்தி தனது சக்களத்தியை நெருங்கினாள்.

‘நியாகர் எங்கே? நான் கண்ணுல காணவேயில்ல’

நியாமுந்தியின் சக்களத்தி கூட்டத்திற்குள்ளே பார்வையைச் செலுத்திப் பார்த்து விட்டு பதிலளித்தாள்.

‘அவர் அந்த முப்பது பேரோடு போயிருப்பார்னு நினைக்கிறேன். அவர் விடிகாலையிலேயே வீட்டை விட்டுப் போயிருந்தார். நானும் விடிகாலையிலேயே எழுந்துட்டேன். அப்பவே கதவு திறந்திருந்துச்சு. அதுக்கு முன்னாலேயே அவர் வீட்டிலிருந்து புறப்பட்டிருக்கணும்’ என்றாள்.

ஆற்றங்கரை மேட்டிற்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் கால்வைத்த நியாமுந்தி, தனது பாதங்கள் இரண்டும் அதிகாலைப் பனித் துளிகளால் ஈரமாவதை உணர்ந்தாள். பாதையின் வளைவுகளில் புற்களும், செடிகளும் உயரமாக வளர்ந்திருந்தன. அவற்றில் படிந்திருந்த பனித் துளிகள் காலையை வரவேற்க அலங்கரித்திருப்பதைப் போன்றிருந்தன. தமது கணவன் எங்கே போயிருப்பான் என தனது மற்றுமொரு சக்களத்தியிடம் கேட்க வேண்டியிருந்தது. எனினும் அவளது முகத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லாததன் காரணத்தால், அவள் அமைதியாக இருக்கத் தீர்மானித்தாள்.

‘நாங்க இங்க வர்றப்போ நமக்கு முன்னால குறுக்கிட்ட கறுப்புப் பூனையை எனக்கு சுத்தமாப் பிடிக்கல’ என நியாமுந்தி தனது சக்களத்தியிடம் கூறினாள்.

‘ஆமா.. அதிகாலைல பயணம் ஒண்ணு போகும்போது முதன்முதலா கறுப்புப் பூனையை முன்னால சந்திக்குறது கெட்ட சகுனம்தான்.’

அவர்களுக்கு லொறியொன்றின் ஓசை கேட்டது. தொலைவில் பார்த்த அவர்களுக்கு புழுதி மண்டலத்தோடு போலிஸ் லொறிகள் இரண்டு வருவதைக் காணக் கூடியதாக இருந்தது.

ஐரோப்பிய போலிஸ் அதிகாரியொருவரும், ஆப்பிரிக்க அதிகாரிகள் நால்வரும் லொறியிலிருந்து இறங்கினர். அவர்கள் லொறியின் பின் கதவைத் திறந்து விட்டனர். போலிஸிடம் சென்றிருந்த அவர்களது இனத்தவர்கள் முப்பது பேரும் அதிலிருந்து வெளியே இறங்கினர்.

‘ஊர்த் தலைவர் எங்கே?’ என வெள்ளைக்கார அதிகாரி கேட்டார். ஒலீலோ ஓரடி முன்னால் எடுத்து வைத்தார்.

‘என்னிடம் உண்மையைச் சொல்லுங்கள். என்ன நடந்தது? இந்த நபர்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. அவர்களை என்னிடம் ஏன் அனுப்பினீர்கள்?’

ஒலீலோ தனது மொழியில் தெளிவான உச்சரிப்போடும், மெதுவாகவும், அழுத்தமாகவும் அனைத்தையும் கூறினார். அவரது கருத்துக்கள் ஆபிரிக்க அதிகாரியொருவரால் மொழிபெயர்க்கப்பட்டது.

‘நாங்கள் நேற்றிரவு கள்வனொருவனைக் கொன்று விட்டதைத் தெரிவிக்க நான் அவர்களை உங்களிடம் அனுப்பினேன்.’

‘என்ன? நீ ஒருவனைக் கொலை செய்துவிட்டாய்?’ வெள்ளைக்காரன் ஒலீலோவை நெருங்கினான். ஏனைய போலிஸ்காரர்களும் அவனைப் பின்பற்றினர்.

‘நீ ஒருவனைக் கொலை செய்துவிட்டாய்?’ போலிஸ் அதிகாரி திரும்பவும் கேட்டான்.

‘இல்லை. நாங்கள் ஒரு கள்வனைத்தான் கொன்றோம்’ என ஒலீலோ தெளிவுபடுத்தினார்.

‘உங்களுக்குள்ளே நீங்கள் ஆளையாள் கொலை செய்து கொள்ளும் இந்தச் சம்பிரதாயத்தை நிறுத்தும்படி நான் உங்களிடம் எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்? நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி திருடன் தானெனத் தீர்ப்பளிக்கும்வரை யாரும் குற்றவாளியாக முடியாது. உங்களது ஆட்கள் எல்லோருமே செவிடர்கள்’ என வெள்ளைக்காரன் ஒலீலோவை நோக்கி தனது கையிலிருந்த தடியால் சுட்டிக் காட்டியபடி கர்ஜித்தான்.

‘இந்தத் தடவை சட்டத்தைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லித் தருகிறேன். யார் அவனைக் கொன்றது?’ என வெள்ளைக்காரன் கோபத்தோடு கத்தினான்.

‘நாங்கள் எல்லோரும்’ என ஒலீலோ கூட்டத்தை கையால் சுட்டிக் காட்டியவாறு கூறினார்.

‘விளையாடாதீர்கள். யார் அவனை முதலில் தாக்கியது?’

கூட்டம் பொறுமையை இழந்தது. அவர்கள் போலிஸார் ஐவரையும் நெருங்கினார்கள்.

‘நாங்கள் எல்லோரும் திருடனைத் தாக்கினோம். நீங்கள் எங்களைக் கைது செய்து அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் அதைச் செய்யலாம். ஆனால் இன்னும் லொறிகளைக் கொண்டு வர வேண்டியிருக்கும்’ என்றார்கள்.

‘செத்தவன் எங்கே?’ என வெள்ளைக்காரன் ஒலீலோவிடம் கேட்டான்.

‘இங்கேதான்’ பச்சை இலைகளால் மேடிட்டிருந்த இடத்தைக் காட்டிவாறு ஒலீலோ பதிலளித்தார்.

போலிஸார் பச்சை இலை மேட்டை நோக்கிச் சென்றனர். மக்களும் அதை நோக்கி நகர்ந்தனர். வெள்ளைக்காரர்கள் பிணத்தினைக் கொண்டு செல்ல முன்பு அதைப் பார்த்துக் கொள்வது அவர்களுக்கு அவசியமாக இருந்தது.

இந்தப் பிரதேசத்தில் இதற்கும் முன்பு ஒரு கொலை நடந்த சந்தர்ப்பத்தில், போலிஸ் அதிகாரிகள் சடலத்தை ‘கிஸுமு’ எனும் இடத்துக்குக் கொண்டு சென்றிருந்தனர். அங்கு அதை வெட்டித் தைத்தனர். பிறகுதான் சடலத்தைத் திருப்பித் தந்திருந்தனர்.

‘இதோ உங்களுடைய ஆள். கொண்டு போய்ப் புதை’ என்றார்கள். இவ்வாறான சடலங்களின் பித்தத்தை அகற்றி போலிஸ் நாய்களுக்கு உணவாகக் கொடுப்பதாக சிலர் கூறினர். அப்போதுதான் அந்த நோய்களுக்கு இலகுவாக குற்றவாளிகளைப் பிடிக்க இயலுமாக இருக்குமாம். அநேகமானவர்கள் அவ்வாறான கதைகளை நம்பினர். இந்தச் சடலமும் போலிஸால் கொண்டு செல்லப்படக் கூடும்.

சடலத்தை மூடியிருந்த பச்சை இலைகளை அகற்றுமாறு ஐரோப்பிய போலிஸ் அதிகாரி, ஏனைய அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார். சற்றுத் தயங்கிய அவர்கள் பிறகு அதற்கு உடன்பட்டனர்.

தனக்கு முன்னாலிருந்த உடலைக் கண்ட ஒலீலோவால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. அவர் தனது மக்களையும் போலிஸாரையும் பார்த்தார்.

அவன் நல்ல நிலையிலிருக்கிறானா? திருடன் எங்கே? அவர் இரண்டாவது தடவையாகவும் அந்த உடலைப் பார்த்தார். அவர் மாயைக்குள் அகப்பட்டிருக்கவில்லை. அது அவரது ஒன்றுவிட்ட சகோதரனான நியாகருடைய உடல்தான். அந்தச் சடலத்தின் வலது கண்ணில் மரக் குச்சியொன்று ஆழமாகக் குத்தப்பட்டிருந்தது.

நியாமுந்தி கூட்டத்திலிருந்து விலகி சடலத்தினருகே ஓடிச் சென்றாள். அவள் தனது கணவனின் உடலைக் கட்டிக் கொண்டு அலறினாள். பிறகு கூட்டத்தைப் பார்த்துக் கத்தினாள்.

‘நீங்க கொன்ன கள்ளனெங்கே? எங்கே அவன்?’
குழப்பம் அதிகரித்தது. கூட்டம் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்தது. பெண்கள் ஒப்பாரி வைக்கத் துவங்கினர். முன் தினமிரவு திருடனைத் துரத்திச் சென்றவர்கள் ஒவ்வொருவரையும் சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டனர். அவர்களைப் பொறுத்தவரையில் நியாகர் திரும்பி வந்தது உறுதி. அதை சத்தியம் செய்து கூற முடியும். பிறகு ஒலீலோ தனது கண்ணீர் வழிந்தோடும் முகத்தை மறைக்க முயற்சிக்காது, தனது மக்களை அழைத்தார்.

‘எனது மக்களே, பாவப்பட்ட கரமொன்று எங்களை நோக்கி நீண்டிருக்கிறது. அந்தக் கரத்துக்கு எமது சமூகத்தை அழிப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டாதிருக்கட்டும்! நியாகர் செத்துப் போய்விட்டான். ஆனால் அவனது ஆத்மா எங்களுடனேயே இருக்கிறது.’

நியாமுந்தி, ஊர்த் தலைவர் ஒலீலோவின் ஆறுதல் வார்த்தைகளால் சமாதானப்படவில்லை. திருடர்களுடன் உண்டான கலகத்தின் பிறகு நியாகர் திரும்பி வந்ததை ஆட்கள் சத்தியம் செய்து கூறியபோதும் அவள் அதை நம்பவில்லை. பிரேத பரிசோதனைக்காக கிஸுமுக்குக் கொண்டு செல்ல சடலத்தை லொறியில் ஏற்றிய சந்தர்ப்பத்தில் அவள் போலிஸ்காரர்களுடனும் முரண்பட்டாள். அவளது கணவனின் மரணம் குறித்து உடனடியாக கிராமம் முழுவதும் விரிவான விசாரணையொன்றை நடத்துவதாக வாக்குறுதியளித்து அவளை போலிஸார் ஆறுதல்படுத்தினர். எனினும் நியாமுந்தி தலையசைத்து மறுத்தபடி கதைத்தாள்.

‘அவரை என்கிட்ட உயிரோடு ஒப்படைக்கிறோம்னு உங்களால சொல்ல முடியும்னா நான் உங்க பேச்சைக் கேட்கிறேன்’ என்றாள்.

நியாமுந்தி தனது ஆடையைக் கிழித்துக் கொண்டாள். ஒப்பாரி வைத்தபடி நகரும் மக்களின் பின்னால் கதறியழுதபடியும் ஒப்பாரி வைத்தபடியும் நடந்தாள். அவளது இரு கரங்களும் தலைக்கு மேலால் உயர்ந்திருந்தன.

எனது நேசன்
ஓஷிங்கின் மகன்
ஒமோலோவின் புதல்வன்
மழை பெய்து கொண்டிருக்கிறது
ஆமாம் மழை பெய்து கொண்டிருக்கிறது

இரவுகள் இனி அந்தகாரம் மிக்கதாகும்
இரவுகள் இனி நீண்டதும் குளிரானதுமாகும்
ஓஹ் எனது தாயின் மருமகனே
மன்னிக்கும் இதயம் என்னிடமில்லை
தயை காட்டும் இதயமும் என்னிடமில்லை

ஒப்பாரி வைக்கும் இவர்கள் அனைவருமே
ஏமாற்றுகிறார்கள் என்னை
ஆமாம் ஏமாற்றுகிறார்கள் என்னை
சூரியன் கவிழ்ந்து இருள் சூழும்போது
இவர்கள் என்னை
தனியே விட்டுச் சென்று விடுவார்கள்

குளிரிரவில்

பெண்கள் எல்லோரும் தமது

கணவன்மாரின் அரவணைப்புக்குள்ளிருப்பர்

ஆனால் ஒரேயொரு பெண்ணும்

அவர்களிடையேயில்லை

ஒரு பெண் கூட இல்லை

அவளது கணவனை

இரவில் என்னிடம் அனுப்ப

ஐயோ எனது நேசனே

ஒஷிங்கின் மகனே

எனது தாயின் மருமகனே.

•••••••••••

எழுத்தாளர் பற்றிய குறிப்பு

க்றேஸ் ஒகொட் (Grace Ogot)

கென்ய வரலாற்றில் முதன்முறையாக ஆங்கிலத்தில் தொகுப்பை வெளியிட்ட பெண் எழுத்தாளராக அறியப்படும் க்றேஸ் ஒகொட், 1930 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி, கென்யாவில் பிறந்தவர். இவர் எழுத்தாளர், ஊடகவியலாளர், மருத்துவத் தாதி, அரசியல்வாதி, தானாதிபதி என பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்தவர்.

கென்யாவில் ஆரம்ப மற்றும் உயர் கல்வியைப் பூர்த்தி செய்த இவர் 1949-1953 காலப் பகுதியில் உகண்டா வைத்தியசாலையில் மருத்துவத் தாதியாக பயிற்சி பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்ட்.தோமஸ் வைத்தியசாலையில் தாய் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவத் தாதியாகப் பணியாற்றினார். தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு நாட்டுக்குத் திரும்பிய இவர் மருத்துவத் தாதியாகவும், பல்கலைக்கழக மாணவ சுகாதார சேவையிலும் கடமையாற்றினார்.

இப் பணிகளினூடே BBC சர்வதேச சேவையில் ஆவண எழுத்தாளராகவும், அறிவிப்பாளராகவும் கடமையாற்றியிருக்கிறார். அத்தோடு ஏர் இந்தியா நிறுவனத்துக்கான கிழக்கு ஆபிரிக்காவின் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றியிருக்கிறார்.

1975 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கென்யாவுக்கான கட்டளைத் தூதுவராகக் கடமையாற்றிய இவர், 1976 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் கென்யாவுக்கான கட்டளைத் தூதுவர் குழுவில் ஒருவராகவும் இருந்திருக்கிறார். அத்தோடு அதே ஆண்டில் கென்யா எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவிப்பதில் பெரிதும் பாடுபட்டார். 1983 ஆம் ஆண்டு, பாராளுமன்றத்தில் ஒரேயொரு பெண்ணாகவும், முதல் பெண் உதவி அமைச்சராகவும் அங்கம்வகித்த பெருமை இவரைச் சேர்கிறது.

தனது 29 ஆம் வயதில் வரலாற்றுப் பேராசிரியர் பெத்வெல் அலான் ஒகொட்டைத் திருமணம் செய்த இவர் நான்கு பிள்ளைகளின் தாயாவார். தனது தந்தையும், பாட்டியும் தனக்கு மரபுக் கதைகளைச் சொல்லித் தந்ததாகவும், அவையே தன்னை பிற்காலத்தில் ஒரு எழுத்தாளராக மாற்றியது என்பதாகவும் குறிப்பிட்டிருக்கும் இவர், கதைகளை எழுதுவதிலும், வாய் மூலமாக பண்டைய மரபுக் கதைகளை சொல்லித் தந்து ஊக்கமளிப்பதிலும் தனது கணவர் பெரிதும் உதவினார் எனவும் தெரிவித்திருக்கிறார். இவர் 2015.03.18 அன்று தனது 85 ஆவது வயதில் நைரோபியில் காலமானார்.

தற்பொழுது ஆவணப்படுத்தப்பட்டுள்ள இவரது தொகுப்புக்களில் சில

Aloo kod Apul-Apul (1981) in Luo.
Ber wat (1981) in Luo.
The Graduate, Nairobi: Uzima Press, 1980.
The Island of Tears (short stories), Nairobi: Uzima Press, 1980.
Land Without Thunder; short stories, Nairobi: East African Publishing House, 1968.
Miaha (in Luo), 1983; translated as The Strange Bride by Okoth Okombo (1989)
The Other Woman: selected short stories, Nairobi: Transafrica, 1976.
The Promised Land: a novel, Nairobi: East African Publishing House, 1966.
The Strange Bride translated from Dholuo (originally published as Miaha, 1983) by Okoth Okombo, Nairobi: Heinemann Kenya, 1989

••••

பிரியாத உன் கண்ணீரின் உப்பு ))(( ஈழக்கவி கவிதைகள்

images (3)

பிரியாத உன் கண்ணீரின் உப்பு

உன் கண்ணீரின் உப்பு
உணர்வுகளை உடைத்தது
இதயம் சமுத்திரக்குவளை
மனம் அலை
கரையில் நம்கனவின் நுரை
நினைவும் நானும்
நடுக்கடலில்
கப்பலே இல்லா நீ
இனி எப்படி….
என்றாவது ஒரு நாள்
நீ சமைக்க எடுத்த மீன்
அழுதால்
அந்த கண்ணீரை
தொட்டுப் பார்
பிரிந்த என்னுயிரில்
உன் கண்ணீரின் உப்பு
பிரியாமல் இருப்பதை

•••
21012017 இரவு 10.00 மணிக்கு

மனசில் தேன்

என் வண்ணத்துப்பூச்சிகளின்
வனத்திற்கு வந்துவிட்டேன்
உணர்வுக்கிளைகளில் அதிஅற்புத மலர்கள்
ஆ… நிம்மதித் தேன் மனசில்
நீ மட்டும் வா
என் இறகுகளை எடுத்துக்கொண்டு

19012017 பகல் 4.00 மணிக்கு

உயிரில் உன் கலப்பு
இரவெல்லாம் உன் நினைவு
உணர்வெல்லாம் உன் துடிப்பு
உயிரில் உன் கலப்பு
காலை
மழையாக நீ
நனைவது நான்

21012017 காலை 8.00 மணிக்கு

பிரிதல்

நெய்தலுக்கான உரி
பிரிதல் என்றான அன்று
அவள் கதறி அழுதாள்
கண்ணீர் கடலானது
தலைவன்
அலையாகிப் போனான்
இனி ஏது நிம்மதி

••
18012017 பகல் 1.00 மணிக்கு

•••

ஆதிசுவர் உடைத்தல்

தைப் பனியாய்
சுயம்
மனக்குளத்தில்

உணர்வுகளின் கழுத்தில்
இரத்தம் உறிஞ்சும்
குளிர் பிசாசு

நீ நீராக
மௌனித்திருத்தல் தகுமா

ஓடு
ஆதிசுவர் உடைத்து

சேர்
பெருங்கடலை

வெயில் கயிறேறி
வானத்தை நிரப்பு

வா
மழையாக

செழிக்கட்டும்
சுயம்
••

14012017 இரவு 10.00 மணிக்கு

முதழகு

அழகு
என் தாய் எனக்கழகு
நான் பார்த்த முதழகு
பிரபஞ்சத்தின் மொத்த அழகும்
அதுவே
ஆக எல்லாப் பெண்ணும் அழகு
ஏவாளின் அழகே
ஆதமின் விழியை திறந்தது
ஏவாளின் ஆப்பிள் அழகு
தவறு செய்ததா
அந்த தவறு தானே
உலகத்திற்கு மனிதத்தைத் தந்தது
31122016 பகல் 1.15 மணிக்கு

- ஈழக்கவி

எண்ணெய் பூட்டு ( சிறுகதை ) / சாளை பஷீர்

download (20)

கெட்ட கனவொன்றை கண்ட பதட்டத்தில் முஹல்லா பள்ளியில் தொழ வைக்கும் ஆலிமிடம் போய் விளக்கம் கேட்டான் அன்வர் . தொழுகை முடிந்து எல்லாரும் போன பின்னர் அவனை தன் அறைக்கு கூப்பிட்டு தொண்டையைக் கனைத்தவராக விளக்கம் சொல்லத் தொடங்கினார் ஆலிம். .

இறைத்தூதர்களுக்கு பிறகு மனிதனுக்கு இறைவனின் புறத்திலிருந்து ஏதேனும் செய்தி வர வேண்டுமென்றால் அது கனவின் வடிவத்தில்தான் வரும். கனவிலும் மூன்று வகை உண்டு.

குடலுக்கும் கனவிற்கும் தொடர்பு உண்டு. வயிற்றுக்கோளாறு இருந்தால் தாறுமாறாக கனவு வரும், இது குறித்து அஞ்ச வேண்டியதில்லை. நல்ல கனவு இறைவனின் புறத்திலிருந்து வரக்கூடியது. இதில் உள்ள நற்செய்தியை மிக நெருக்கமானவர்களிடம் பகிர்ந்தால் போதும். எல்லோரிடமும் சொல்லக்கூடாது. பொறாமைக்காரன் கெட்ட எண்ணக்காரன் உனக்கு கிடைக்கவிருக்கும் நலவுகளைப் பற்றி புழுங்குவான்.

கெட்ட கனவு வந்தால் அது ஷைத்தான் புறத்திலிருந்தும் வரலாம் அல்லது உனக்கு நேரவிருக்கும் கெட்ட நிகழ்வுகளைப்பற்றிய எச்சரிக்கையாகவும் இருக்கலாம். அந்த மாதிரி கனவைக்காணும்போது அது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது. ஏதாவது தவறான விளக்கம் சொல்ல அதையே மனது பற்றிக் கொண்டு விடும். பிறகு எல்லா செயல்களிலும் தேவையற்ற அச்சமும் குழப்பமும் ஏற்படும்..

கெட்ட கனவை காணும்போது எல்லாம் வல்ல இறைவனிடம் பாதுகாப்புத்தேடி விட்டு . தர்மம் கொடுங்கள். கனவை நனவாக்குபவனும் நனவை கனவாக்குபவனும் அந்த மெய்ப்பொருளல்லவா?. அழி றப்பர் அழிக்கிற மாதிரி தர்மம் கெட்ட நஸீபை அழித்து விடும்… ”

ஒரே மூச்சில் சொல்லி முடித்தவர் அருகில் உள்ள ஃப்ளாஸ்கில் இருந்து பிளைன் டீயை அன்வருக்கும் தனக்கும் ஊற்றி விட்டு , “ குடிங்க தம்பி “ ஏந்தம்பி ! நாம தூங்கும்போது நம்ம ஆன்மா மே வானத்துக்கு போகும்பா. அப்படி போற போக்குல நெறய விஷயங்கள பாக்கும் . அதான் தம்பி கனவுல நேரடியா அப்டியே பளிச்சுனு தெரியுது. செல சமயம் கோட்ட கிழிச்சி போட்டு மறைமுகமா சிக்னல் காட்டீரும். நாமதான் அதப் புரிஞ்சிக்கிடனும் “ என்றார்.

“““““““`

பழுப்பு நிறத்தில் முக்கி புரட்டப்பட்ட ஆழ்ந்த இருள் . சாலையின் ஓரத்தில் நகராட்சியின் ஆழ்ந்த பச்சை நிற குப்பைத் தொட்டிக்கருகில் மினி லாரி ஒன்று நின்றிருந்தது. பச்சையும் மஞ்சளும் பழுத்ததும் பழுக்காததுமான மாங்காய் குவியல் அதற்குள் நிறைந்திருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு ஓட்டுனர் கேபினுக்குள் நன்கு தூங்குகின்றார்.

குப்பைத் தொட்டியைத் தாண்டிய முடுக்கிலிருந்து இரண்டு பேர் மெல்ல வெளியே வந்தனர்.. ஒருவன் சென்று லாரி கேபினுக்குள் எட்டிப்பார்த்து டிரைவர் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டான். தலையை ஆட்டி இவன் சைகை காட்டிய பின்னர் இரண்டு பேரும் பதுங்கிச் சென்று வண்டிக்குள் கையை விட்டு அந்த காய்களை வேர்க்க விறு விறுக்க அள்ளி அள்ளி பொறுக்கி மூட்டை கட்டுகின்றனர். பதட்டத்தில் சில காய்கள் மேலும் கீழுமாக சிதறுகின்றன. மேலும் சில காய்கள் வண்டிக்கடியில் உருண்டு ஓடி ஒளித்துக் கொள்கின்றன.

அப்போது திடீரென எங்கிருந்தோ ஒரு வாய் மட்டும் வட்ட வடிவில் திறந்தபடி தனியாக அந்தரத்தில் எந்த ஒட்டுமில்லாமல் மிதந்து வருகின்றது. நீல நிறம் பூசிய .மேலடுக்கும் கீழடுக்குமாக சம அளவில் நீண்ட தாடையில் இரண்டு அங்குல நீளத்திற்கு கூரிய இரும்பு பற்கள்.

குனிந்து மாங்காய் மூடைகளை கட்டிக்கொண்டிருந்த திருடனின் நெஞ்சில் போய் கடும் வேகத்தில் “ தொம் “ என ஓசையெழுப்பி அந்த வாய் முட்டுகின்றது.

அதன் கூரிய பல் நெஞ்சுக்குழிக்குள் போய் செருகுகின்றது. ஆப்பிள் பழத்தைக்குடைவது போல் அவனது நெஞ்சை குடைந்துக் கொண்டே செல்கின்றது வாய் . அதன் இரு ஓரத்திலிருந்தும் சதை துருவல் வழிந்து விழுந்து தரையில் சிறு மேடு ஒன்று உருவானது .

இறுதியில் அவனின் முதுகில் வழியாக வெளியேறும் அந்த வாயின் ஓரத்தில் ரத்தம் பட்டையாக ஒட்டியிருக்கின்றது. .

குதறப்பட்டு கிடக்கின்றான் திருடன். அவனின் தலைக்கு மேல் நான்கு பக்கமும் முழு வேகத்தில் கிறு கிறுவென சுற்றிய அந்த வாய் உதடுகளை குவித்து சீழ்க்கை அடிக்கின்றது . காதை வளைந்து துளைக்கும் ஒலி. பின்னர் மெல்ல வண்ணத்துளிகளாய் சிதறி படர்ந்து அந்தரத்தில் அந்த வாய் கரைந்து உதிர்ந்து விடுகின்றது. சன்னலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அன்வர் உடம்பு குளிர்ந்து தரையில் அமர்ந்துவிட்டான். காற்றில் தெறித்த ரத்த துளிகள் தலை கழுத்து முகம் என அவனின் உடல் முழுக்க அப்பிக் கொண்டிருந்தது .

கட்டிலுக்கு கீழே உள்ள பெட்டியின் மீது வைத்திருந்த செல் போன் அலாரம் கலகலத்தது.

03:45 க்கு ஒன்று 4:00 மணிக்கு ஒன்று என இரண்டு அலாரம் வைத்திருந்த அன்வர் முதல் அலாரம் அடித்த அடியில் தூக்கத்திலிருந்தும் கனவிலிருந்தும் ஒரே நேரத்தில் கலைந்து எழுந்தான்.

. அவனது உடலின் ஒரு பக்கம் வேர்த்திருந்தது. தலையிலிருந்து கால் வரை நடுங்கியது. முகத்தையும் தலை முடியையும் இரண்டு விரல்களாலும் கோதி ரத்த வாடை அடிக்கின்றதா என முகர்ந்து பார்த்தான். விளக்கை போட்டு கண்ணாடி முன் நின்று உற்றுப் பார்த்தான். அந்த வாயிலிருந்து பீறிட்ட சீழ்க்கை ஒலி செவிப்பறைக்குள் அலையலையாய் அதிர்ந்து அதிர்ந்து கொண்டிருந்தது. காதின் குழிக்கு கீழே வலித்தது.

ஆலிம் சொன்னது நினைவிற்கு வர கைசேர்த்து “ எண்ட றப்பே இது பொய்யாப்போயிடுனுமே இந்த கெட்ட கனவுலேந்து என்ன காப்பாத்து யா அல்லாஹ் “ என துஆக்கேட்டான்.

——

“ காலய்லதான் பூட்டிட்டு போனேன். சனியன் தொறந்து தொலைய மாட்டங்குதுமா.. “ என எரிச்சலில் பூட்டை இழுத்து மீண்டும் முடுக்கு பக்க கதவில் சட்டென அடித்தாள் முர்ஷிதா.

பின்னால் நின்ற மூத்த மகள் கறீமா “அடி உம்மா நீ ஒருத்தி அத போட்டு அடிச்சு என்னவாப்போவுது பழசாயிட்டதுனால சிக்கியிருக்கும் .தேங்கா எண்ண போட்டு ஊற விட்டா சரியாயிடும்…. “

போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு விட்டு வீட்டின் பின்பக்கமாக போய் அங்குள்ள கதவைத்திறந்து நேராக அடுப்பங்கரைக்குள் போனாள் முர்ஷிதா .

அடுப்பங்கரையில் எண்ணெய் பிசுக்கு பிடித்த அலமாரி தட்டில் வெங்காய கூடைக்கு பின்னால் தேங்காய் எண்ணெய் குப்பி சரிந்து கிடந்தது. குப்பியை எடுக்கும்போது கறுத்த பல்லி ஒன்று வெடுக்கென்று பக்கவாட்டு சுவர் மேல் பாய்ந்து ஓடி ட்யூப் லைட்டு ஃப்ரேமிற்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டது.

சனியன் இத மொத தொலச்சுக்கட்டணும். எல்லா எடத்தலயும் வால ஆட்டிட்டு இருக்குது என்றவள் பூட்டின் வாயில் எண்ணெயை ஊற்றினாள்.

எண்ணெயில் பூட்டு இரண்டு நாட்களாக ஊறிக் கொண்டிருந்தது.. மூன்றாம் நாளும் முர்ஷிதா திறக்க முயன்றும் பூட்டு அதே முரட்டுத்தனத்துடன் அசைந்து கொடுக்கவில்லை.

ஞாயிற்றுக் கிழமை , பிள்ளையார் சதுர்த்தி என தொடர்ந்து லீவாக இருந்ததால் கொல்லாசாரியையும் கூப்பிட வழியில்லை. ஐந்தாவது நாளாகவும் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

“““

முக்கால் பாகம் தேய்ந்தழிந்த நிலையில் இரவு இன்னமும் மிச்சமிருக்க முர்ஷிதாவின் காலின் கட்டை விரலில் ஏதோ மெலிதாக சீப்பின் பற்களால் வைத்து வருடுவது போலிருந்தது. சட்டென போர்வையை தூக்கிப் போட்டு விட்டு காலை உதறினாள். கரப்பான் பூச்சி ஒன்று “ சொத் “ என தரையில் விழுந்து .ஃபிரிஜ்ஜின் பின்பக்கம் ஓடி மறைந்தது.

…சனியன்… என முணு முணுத்தபடியே தூக்கம் கலைந்த எரிச்சலில் சிறுநீர் கழிக்க கழிவறை கதவை திறந்தவள் அப்படியே நின்று விட்டாள். ஓடையில் “ கடக் கடக் “ என என இரட்டிப்பு ஒலி கேட்டது. பாச்சான் ஓடிட்டு இப்ப அடுப்பங்கரயில எலி தொல்ல . நாளய்க்கி எலிக்கூடு வய்க்கணும் என நினைத்தபடியே கழிவறை போய் விட்டு திரும்பியவளுக்கு … கடக்.. கடக்…. என்ற ஓசை பலமாக தொடர்ந்து கேட்டது. எலி கடித்தால் இவ்வளவு ஸ்ட்ராங்காக கேட்காதே… என குழம்பினாள்.

மின்விசிறியை நிறுத்தி விட்டு ட வடிவில் படுத்து கிடந்த மூத்தவன் ஸாஜிதை தாண்டி மெதுவாக முடுக்கு கதவு பக்கம் நின்று காதை தாழ்த்தினாள். தன் வீட்டு கதவில் உள்ள பூட்டை திருப்பி அசைக்கும் ஒலிதான் அது என்பது உறுதியாயிற்று. அத்துடன் கிசு கிசுப்புக்குரல்களும் தெளிவாக கேட்டன. முர்ஷிதாவிற்கு சட்டென அடிவயிறு கலங்கி முகம் முழுக்க வியர்த்தது .

கணவன் அன்வரின் தில்லிக்கு போய் ஒரு வாரந்தான் ஆகியிருந்தது. அவனின் இல்லாமை இன்னும் அவளுக்கு கலக்கத்தை கூட்டியது. தலை பிடரி என வியர்த்து பொங்கி முதுகு வழியாக வியர்வை தாரை போல ஓடியது. அலமாரி ஓரம் போர்த்திக் கிடந்த திருமண வயதை எட்டிய மகளைப் பார்த்தவுடன் மனம் விறைத்தது . “ பயப்படப்படாது.. “ என முர்ஷிதா தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள்.

“ ஒழிஞ்சிருவானுவோ சந்தேகமேயில்ல இது கள்ளனுவதான் என வாய்க்குள் முணுமுணுத்தவள் அடுத்த தெருவிலிருக்கும் காக்காவைக்கூப்பிட செல் போனை எடுத்தாள். அதில் மணி 2:58 என காட்டியவுடன் இந்த நேரத்தில் அவசரப்பட்டு அவர் தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என நினைத்தாள்.

.முடுக்கு கதவிற்கும் வீட்டிற்கும் இடையில் உள் ஓடைக்கதவு ஒன்று இருந்தது. அது கனமுள்ள வலுவான மரக்கதவுதான். அந்த கதவை கோத்ரெஜ் லாக்கைப் போட்டுதான் பூட்டி வைத்திருந்தாள். அத்துடன் முடுக்கு கதவின் வெளிப்பூட்டு சிக்கிக் கொண்ட படியால் உள்பக்கம் இரும்பு அடிதண்டா பட்டை போட்டு பூட்டியிருந்தாள்

கள்ளன் அவ்வளவு எளிதாக வீட்டிற்குள் வர முடியாது என்ற இந்த இரட்டை கதவுகளின் தைரியத்தில் சற்றே தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். உள் ஓடையின் மேல்முனையில் உள்ள கிராதியின் கீழ் ஓட்டை வழியாக எட்டிப்பார்த்தாள். தெரு விளக்கின் உதவியால் வெளி முடுக்கின் கடைசி எல்லையில் உள்ள வீட்டின் படி வரை தெளிவாக தெரிந்தது.

அவள் வீட்டின் முடுக்கு கதவருகே மா நிறத்தில் நெட்டையாக ஒருத்தனும் அடுப்பங்கரையின் சன்னல் அருகே கறுப்பாக குள்ளமாக இன்னொருவனும் நின்றுக்கொண்டிருந்தனர்.

மஞ்சள்பை ஒன்றிலிருந்து மாறி மாறி சாவிகளைப் போட்டு பூட்டை நோகாமல் குள்ளன் லாவகமாக உலுக்கிக் கொண்டிருந்தான். திறந்திருந்த அடுப்பங்கரையின் சன்னல் கிராதியின் கம்பிக்குள் கயிறைப்போட நெட்டையன் லேசாக எம்பி முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் வீசிய ஒவ்வொரு முறையும் கயிறானது சன்னல் கம்பியில் மோதி மோதி அடிபட்ட பாம்பு போல தரையில் விழுந்துக் கொண்டிருந்தது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த முர்ஷிதா கையில் வைத்திருந்த போனில் காக்காவை அழைத்தாள். நாட் ரீச்சபிள் என அந்த நேரத்திலும் அழகிய குரலில் கடமை பேசியது கைபேசி. வியர்வையின் மொத்த துளிகள் செல் போன் திரையில் விழுந்து எண்களை உருப்பெருக்கிக் காட்டின. பக்கத்து வீட்டு எண்ணை தேடும்போது கை நடுங்கியது .தொடை இரண்டும் தனியாக கிடு கிடுத்தது. தப்பு தப்பாக பெயர்களும் எண்களும் வந்தன.

…ர்ர்ர்ர்.. என அடித்தொண்டை உறுமல் ஒன்று முடுக்கில் கேட்டது. வவ்வ் என்று தெறித்து அவள் காதில் விழுந்த ஓசையில் நடுங்கி முர்ஷிதா சுவரில் சாய்ந்து விட்டாள். தலை சுற்றத் தொடங்கியது. பீரோ, நகை , வயதுக்கு வந்த மகள் என வண்ண வண்ணமாக பல காட்சிகள் கலந்து பளீரென்ற வெளிச்சத்தில் மூடிய கண்களுக்குள் குவிந்து வழிந்தன. மூச்சுத்திணறி வயிற்றை புரட்டி வாந்தி தொண்டைக்குழி வரை எவ்வியது. மிகவும் சிரமப்பட்டு வாயைப் பொத்திக் கொண்டவளின் இமைகளுக்குள்ளும் தலைக்குள்ளும் கண் போய் செருகிக் கொண்டது.

“““““““““““““““““““““““““““

டம்… டம் என கதவின் மீது விழுந்த பலத்த அறைகளின் அதிர்வில் முர்ஷிதாவின் அரை மயக்க நிலை கலைந்தது. மீண்டும் இரவின் நினைவுகள் பட்டென அவளை கவ்விப்பிடிக்க கிராதியின் வழியாக வீட்டினுள் பதிந்திருந்த இளம் வெயில் கீற்றைப் பார்த்தவுடன் கொஞ்சம் தைரியப்பட்டாள்.

ஒரு வழியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டு எழுந்தவள் தட்டிக்கதவை திறந்தாள்

பக்கத்து வீட்டு ஹலீமாதான் நின்றிருந்தாள். இரவு உடுத்த பாவாடையும் சரியாக போடாத தாவாணியுமாக வந்த ஹலீமாவின் வீடு முர்ஷிதாவின் வீட்டிற்கு வலது புறமாக இருக்கின்றது.

மச்சி ! கதவத்தொறவேன் என்றவுடன் ஏதாவது மவுத் செய்திதான் வருகிறது போல… என நினைத்தவாறே முர்ஷிதா, ஹலீமாவை சிறு பதட்டத்துடன் ஏறிட்டுப்பார்த்து விட்டு கதவைத் திறந்து அவளை உள்ளே வரச்சொன்னாள் .

ஒங்க வீட்டு பூட்ட ராத்திரி கள்ளன் ஒடக்க பாத்தீக்கிறானே தெரியுமா

ஆமாடி தோழீ என்றபடியே முர்ஷிதா அழத் தொடங்கினாள். அவளை தோழில் சாய்த்தபடியே ஆசுவாசப்படுத்திய ஹலீமா மீதிக்கதைகளை சொன்னாள்.

எதுத்த வூட்டு இப்றாஹீம் இருக்கிறானே அதான் கதீஜாட மாப்பிள்ள.

ஆமா .. சொல்லு

அவன் மதுரய்க்கு போய்ட்டு ராத்திரி இரண்டர மணி கிட்ட அவன் வூட்டுக்கு வந்திருப்பாம் போல . பெட் ரூமில கடுமையான வெக்கையினால தூக்கம் வரலேனு சொல்லி ஜான்சுல படுத்தீக்கிறான்.

ஒரு மூணு மூணே கால் மணி இருக்கும்போல. கடுமயா நாய் கொறச்சீக்குது. இவன் ஜன்னல் வழியா எட்டிப்பாத்தீக்கிறான். நம்ம முடுக்குல நிண்டு கொலச்ச நாய் ஒங்கூட்டு சொவத்துல துள்ளி துள்ளி பறாண்டீக்குது.

என்னடா வித்தியாசமா இருக்குதேண்டு இப்றாஹீம் நல்லா உத்து பாத்தீக்கீரான். ஒங்க ஊட்டு முடுக்கு கதவுட பூட்ட ஒத்தன் அப்டியும் இப்படியுமா திருப்புறானாம். இன்னொருத்தன் ஒங்க வீட்டு அடுப்பங்கள ஜன்னல்ல துள்ளி கயிற போட்டு அத மறுபக்கம் இழுத்து சுருக்கு போட்டு அந்த கயித்த புடிச்சிக்கிட்டு ஜன்னல்ல ஏறிட்டானாம்.

அந்த நேரம்பாத்து நாய் அவன்ட வேட்டிய இழுத்தீக்குது. இவன் தடுமாறி நாய் மேல விழுந்துட்டான். வலி தாங்காத நாய் இரண்டு முன்னங்கால்களயும் அவன் முகத்துல தூக்கி பதிச்சு வச்சி கடிச்சு குதறி நகத்தால அவன் மொகம் முழுச பறண்டீட்டு போல . யம்மா யய்யா என மூஞ்ச பொத்திக்கிட்டே கத்தீக்கிறான்.

ஒடனே பூட்டுல கை வைச்சுக்கிட்ட இருந்த அடுத்த கள்ளன் தலை தெறிக்க கொறச்சுக்கிட்டிருந்த நாய சூ சூ என வெரட்ட அது பயந்து போய் உழுந்து கெடந்த கள்ளன் மேல அப்பிக்கிட்டு கடூரமா ஊள உட்டிச்சாம். . நிண்டுக்கிட்டிருந்த கள்ளனுக்கு கையுங்காலும் பதறி ரோட்ல கெடந்த ஒரு கல்ல எடுத்து நாய் மேல் வெறியோடு எறிஞ்சான். நாய் உஷாரா டக்குனு தலய திருப்பீட்டு.

எறஞ்ச கல் நேரா உழுந்து கெடந்த கள்ளன் மூஞ்சில போய் உழ அவன் இன்னுங்கொஞ்சம் வாள் வாள்னு கண்ண பொத்திக்கீட்டு கத்த ஆரம்பிச்சிட்டான்.

கீழ உழுந்த கிடந்த கள்ளன பிடிச்சு தூக்கி பர பரண்டு அவன் கைய பிடிச்சி இழுத்துட்டு தொலய்வுல நிப்பாட்டி வச்சிருந்த ஆட்டோவுல உக்கார வச்சு தட்டு தடுமாறி ஓடிப்போயிட்டானாம்.

அடியா நாசமாப்போவானுவோ ஆட்டோவுலயுள்ள வந்தீக்கீறானுவோ. திட்டம் போட்டு ஊட்ல உள்ளத அள்ளிக்கீட்டு போற கெட்ட நிய்யத்துலய்லோ வந்தீக்கீறானுவோ என புலம்பினாள். முர்ஷிதா.

அடி நீ ஒருத்தி. கொஞ்சம் நில்லு, நாஞ்சொல்லி முடிச்சிரட்டும் என்ற ஹலீமாவின் மார்பு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மீதி கதையை சொல்லிமுடித்தாள்.

கேட்டீயா றோட்டு லைட்டு வெளிச்சத்துல அடிபட்ட கள்ளண்ட மொகத்த பாத்திருக்குறான் இப்றாஹீம். சாயத்தண்ணில முக்குன மாதிரி மோற ஃபுல்லா ஒரே ரெத்தம். அவனுவளுக்கு பொறத்தாலயே நாயும் கொறச்சுக்கிட்டே ஓடிக்கீது.

நாய்டயும் கள்ளன்டயும் கொளறுவலய்ல எனக்கு முழிப்பு வந்து முடுக்கு லைட்டு போட்டு தொறந்து பாக்கும்போது எதுத்த வூட்டு இப்றாஹீம் அவ்ளோ கதயயும் சொல்றான்.

நல்லா வெளிச்சம் வந்த பொறவு முடுக்குல போய் பாக்குறன். உருண்டயா ஒன்னு கெடந்துதுடீ. உவ்வே என அடி வயிற்றிலிருந்து குமட்டியவளின் முகச்சுளிப்பில் முர்ஷிதாவிற்குள் இன்னும் கலவரம் மூண்டது.

என்னடி அது ?

நீயே வந்து பாரேன் என முடுக்கின் பக்கம் முர்ஷிதாவை தர தரவென இழுத்து சென்றாள் ஹலீமா.

முர்ஷிதாவின் அடுப்பங்கரை ஜன்னலுக்கு கீழே அது கிடந்தது.

கண்ணாடியில் செய்த மாதிரி கறுப்பும் வெள்ளையுமாக முறைத்துக்கொண்டிருந்த உருண்டை ஒன்று கிடந்தது. அதன் ஒரு பகுதி மண்ணோடு மண்ணாக நசுங்கி ரத்தத்தில் தேய்ந்திருந்தது. தப்பி ஓடிய திருடனின் கண்.

அடித்து புரண்டு வீட்டிற்குள் சென்று பாத்ரூமில் ஓங்கரித்தாள். குமட்டல் அடங்க அரை மணி நேரமாயிற்று.

உம்மாக்காரியின் அலம்பல்களில் உறக்கம் கலைந்த மகள் கறீமா கண்களில் பீளை ஒட்டியிருக்க மலங்க மலங்க விழித்தாள். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் உறங்கி கழிக்கும் அவளின் மந்த மூளைக்கு மெல்ல விவரம் புரிந்தது.

முதல் வேளையாக வாப்பா அன்வருக்கு போனில் விலாவாரியாக அவள் விவரித்தாள்.

—–

நாம கண்ட கனவுல கள்ளன்ட நெஞ்ச நாயிட வாய் கொதர்ற மாதிரில வந்திச்சி. இப்ப எப்படி கண்ண கொதறிச்சி. கனவு சரியா ? நிகழ்வு சரியா ? ஒரு வேளை முர்ஷிதா ஏதும் கனவு கண்டிருப்பாளா ? கனவு முந்தியா ? நடந்தது முந்தியா ? இல்ல ஆலிம்சா நம்பள கொழப்பறதுக்காக ஏதும் ஒதி கீதி வச்சி மனப்பெறளிய உண்டாக்குறாரா ?

மூளை குழம்பியவனாக சட்டையையும் செருப்பையும் அரைகுறையாக போட்டுக் கொண்டே பள்ளிவாசலுக்கு சென்றான் அன்வர்.

ஆலிமின் அறைக்கதவை தட்டினான். பதிலில்லை. பக்கவாட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். நான்கைந்து சிரட்டைகளை சேர்த்து தேய்த்தாற்போல குறட்டை ஒலி அறையின் சுவர்களில் மோதி மோதி விழுந்து கொண்டிருந்தது. அவர் கை பனியனும் லுங்கியுமாக பாயில் சாய்ந்து தொப்பையின் அடிப்பாகம் மட்டும் வெண்மையாக எட்டிப்பார்த்து கொண்டிருக்க தூக்கத்தில் ஆழத்தில் இருந்தார்.

——-

சொல் விளக்கம் :

முஹல்லா = பள்ளிவாசலின் அண்மையில் உள்ள குடியிருப்பு

ஆலிம் = மத அறிஞர்

றப்பு = ரட்சகன் ,( இறைவனின் இன்னொரு குணப்பெயர் )

துஆ = பிரார்த்தனை

பாச்சான் = கரப்பான்

முடுக்கு = சந்து

ஓடை = வீட்டின் உள் சந்து

ஜான்ஸ் = முன்னறை , lounge என்பதன் திரிபு

கொளறுதல் = குளறுதல்

நிய்யத் = எண்ணம்

பெறளி = புரளி , குழப்பம்

வாப்பா = தந்தை

உம்மா= தாய்

காக்கா = அண்ணன்

•••

‘லஜ்ஜா கௌரி’ வழிபாடும், தொன்மையும். / அரவக்கோன்

download (14)

பெண் தெய்வத்தைத் தாய் என்று வணங்கும் முறையை மிகப்பழங் காலத்திலேயே பின்பற்றப்பட்ட வழிபாட்டு முறையாகக் காணலாம். பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்த் தோற்றத்துக்கும் காரணமான அவளை வழிபடுவது என்பது அப்போதே தோன்றிவிட்டது. மிகவிரிந்த கால, பரப்பு வெளியில் பிந்தையப் பழம் கற்காலம் தொட்டே உருவ வழிபாடு, அதை மறுக்கும் அருவ வழிபாடு என்னும் இருவித வழிகளிலும் அவற்றின் எதிரெதிர் தனிப் பண்புகளை தெளிவாக வெளிப்படுத்தும் நடைமுறைகள் முன்நிறுத்தப் படுவதைக் காணலாம்.

இந்தப் புடைப்புச் சிலைகளின் கருப்பொருளும், அதன் முக்கியத்துவமும், அவற்றுக்குப் பெயரிடுதலும், அதன் வழிபாட்டுத்தன்மையும் மற்றவற்றினின்று வேறுபடுபவை. அத்துடன் அதன் தோற்றம் சார்ந்த விவரம், அதன் வழிபாட்டு வளர்ச்சி ஆகியவை பற்றின புரிதல் என்பது இன்னும் முழுமை அடையவில்லை. மற்ற பெண் தெய்வங்களுக்கு ஆலயங்களில் கருவறை, சுற்று வழி, மேல் கோபுரம் போன்றவை அமைந்துள்ளன. அவ்வித போற்றப்படும் மைய இடம் இந்தப்பெண் கடவுளுக்குக் கொடுக்கப்படவில்லை. அன்றியும் எழுத்து வடிவில் அவளது உருவ அமைப்பு, அதற்கான விளக்கம் போன்றவை ஏதும் தெளிவாக இல்லை. மாறுபட்ட வடிவங்கொண்ட இந்தப் பெண்தெய்வத்தின் சிலைகள் கி.மு.வின் இறுதியிலிருந்து கி.பி. 12/13ஆம் நூற்றாண்டு இறுதி வரை காணப்படுகின்றன. பொதுவாக அடிப்படை மாற்றம் இல்லாத வடிவம் கொண்ட அவை சிறுசிறு மாற்றங்களுடன் இந்தியாவின் பல்வேறு நிலப் பகுதிகளில் காணப்படினும், மராட்டிய, கர்நாடக மாநிலங்களில் எண்ணிக்கையில் மிகுந்து உள்ளன. பல நூற்றாண்டு வழிபாட்டு முறையின் அறுபடாத தொடர்ச்சியாக இது நமக்குத் தெரியவருகிறது. மக்களிடையே அதற்கு இருந்த பரவலான போற்றுதலையும் அறியமுடிகிறது.

மனிதன் மற்ற பெண் தெய்வங்களை உருவமைத்ததற்கும் ‘லஜ்ஜா கௌரி’ என்னும் பெண்கடவுளை உருவமைத்தற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. பெரும்பாலும் தலை இல்லாமல் காணப்படும் இப்பெண் உருவம் தனது இரு கால்களையும் மடித்து அகற்றி பிறப்புறுப்பை முன்னிலைப்படுத்தும் விதமாக தரையில் உடலை அழுத்தி, குத்திட்டு அமர்ந்திருக்கிறது. முழங் கைகளை முழங்கால்களின் மேல் ஊன்றி, இருகைகளிளும் மலர்ந்த தாமரை மலரை ஏந்தியபடி மேல்நோக்கி உயர்ந்திருக்கின்றன. மார்பகங்கள் பெரிதாகவுள்ள அவ்வுருவம் அம்மணமாக உள்ளது. தலை இருக்கவேண்டிய இடத்தில் அளவில் பெரிய மலர்ந்த தாமரை பொருத்தப்பட்டுள்ளது. அது ஆராய்ச்சியாளரை புருவம் உயர்த்தி சிந்திக்க வைத்தது. ஏனெனில், இவ்வித வடிவம் அமைந்த கடவுள் சிலை வழிபாட்டு முறை வழக்கில் உள்ளதல்ல.

மஹேஞ்சதாரோவில் கிட்டிய ஹரப்பா முத்திரையில் காணப்படும் பெண் கடவுள், 1400-1000 கி.மு வில் இனாம்காவின் (Inamgaivn-deccan) பகுதியில் கிடைத்த தலையற்ற பெண் உடல்மட்டுமே கொண்ட சிலைகள் இத்துடன் ஒப்புநோக்கத் தக்கன.

download (15)
‘அதிதி’ (Adithi) என்று குறிப்பிடப்படும் பெண் தெய்வம் லஜ்ஜா கௌரி, ஆத்ய சக்தி, மாதங்கி, ரேணுகா, போன்ற வேறு பெயர்களாலும் வழிபடப்படும் பெண்கடவுள். மதவரலாற்று வல்லுனர் என்.என்.பட்டாச்சார்யா (N.N.Batta-charyya) ஹரப்பா அகழ்வாராய்ச்சியில் தமக்குக் கிட்டிய அமர்ந்த நிலையில் கால்கள் பிரித்து உயரத் தூக்கியதும், தலை கவிழ்ந்ததுமான தோற்றத்தில் உள்ள உருவத்தின் கருப்பையிலிருந்து யோனிவழியாக வெளிப்படும் ஒரு செடியுடன் கூடிய முத்திரை ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். “இது அதிதி/லஜ்ஜா கௌரி உருவங்களின் முன்வடிவமாக இருக்க வாய்ப்புண்டு. வேதகாலத்துக்கு முற்பட்ட இந்தியாவில் உலகில் தோன்றும் அனைத்து இயங்கு சக்திகளுக்கும், உயிரினங்களுக்கும் காரணமான ஒரு பெண்தெய்வத்தை ‘தாய்’ என்று வழிபடும் வழக்கம் இருந்தது. பின்னர், வேதகாலத்தில் அந்தத் தாய் அனைத்துக் கடவுளரின் தாய் என்னும் போற்றுதலுடன் ‘அதிதி’ என்று அழைக்கப்பட்டாள்.

“ அதிதிதான் பெருவெளி,

அதிதிதான் காற்று,

அனைத்துக்கடவுளரும் அவள்தான்,

தாயும் தந்தையும் மகனுமானவள் அதிதி,

இனி தோன்றவிருக்கும் அனைத்தும் அதிதிதான்”

என்னும் ரிக்வேதச் செய்யுள் மூலம் (ரிக்வேதம்01.89.19) இதுபற்றி நாம் அறிய முடிகிறது. அதிதி வழிபாடுதான் மிகப்பழைமையான தாய்க்கடவுள் வழிபாடு, அதன் வடிவம் பற்றின விவரம் அப்போதே தெளிவற்றதாக ஆகிவிட்டிருந்தது.”

கி.பி.6-12 நூற்றாண்டுகளுக்கிடையில் அதிதி/லஜ்ஜா கௌரி வழிபாட்டு வழக்கம் பெருமளவில் மக்களிடையில் உலாவத் தொடங்கியது. இந்தியாவின் மத்திய நிலப்பகுதிகளில் அது வேகமாக வளர்ந்தது. அத்தெய்வத்தின் உருவங்கள் இல்ல வழிபாட்டு இடத்தில் வைக்கும் விதத்தில் அளவில் சிறிய சுடுமண் புடைப்புச் சிற்பமாகவும் அளவில் பெரியதாக (ஒரு பெண்ணின் உண்மையான உருவ அளவில்) ஆலயங்களின் சுற்றுப்புற கற்சுவர்களிலும் இடம்பெற்றன. ஆனால், 13ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு அதை வழிபடும் வழக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு வீழ்ச்சிகாணத் தொடங்கியது. இதற்கு வரலாற்று அறிஞர்கள் இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர். ஒன்று, இஸ்லாம் கிருஸ்துவம் ஆகிய மதக் கொள்கைகளை இங்கு பரப்பிய முஸ்லீம், ஆங்கில ஆட்சிக் காலத்தில் இந்த வழிபாட்டு முறை அவர்களுக்கு அதிர்ச்சியையும் அறுவெறுப்பையும் ஏற்படுத்தியதால் இந்தச் சிலைகளை உடைத்து அப்புறப் படுத்தினர். மற்றொன்று, அப்போது ‘சாக்தம்’ என்னும் பெண்தெய்வ தாந்திரிக வழிபாட்டு முறை மக்களைப் பெருமளவு ஈர்த்தது. அது தன் வளர்ச்சியில் இந்த வழிபாட்டு முறையைத் தன்னுள் இழுத்துக்கொண்டு விட்டது.

லஜ்ஜா கௌரி சிலை வடிவமைக்கப்பட்டுள்ள விதம் சற்று அதிர்ச்சி தருவதாகவே உள்ளது. அவள் கால்களை மடித்து, பிறப்புறுப்பு விரிந்து தோன்றும் விதமாக அமர்ந்த நிலையில், தாமரை மலர்களை ஏந்திய இரு கரங்களையும் மடக்கி முழங்கால்களின் மீது ஊன்றிக் காணப்படுகிறாள். அவள் வயிறு நிறைசூலியின் வயிறாகவும் காணப்படுகிறது. சில இடங்களில் அவளது தலையற்ற உடல் ஒரு நீர் நிரம்பிய குடம்போலவும் அமைந்துள்ளது. (பூர்ணகும்பம்) தலை இருக்க வேண்டிய கழுத்தில் பெரும்பாலும் மலர்ந்த தாமரை வடிவமைக்கப் பட்டுள்ளது. தாமரைமலர் உயிர்களின் தோற்றத்தையும், தாவரங்களின் செழிப்பையும் குறிக்கும் சின்னம். இந்நாளில் நம்மிடையே உள்ள செல்வம், குழந்தைப்பேறு போன்றவற்றை நல்கும் லக்ஷ்மியின் உருவமும், நீர் நிறைந்த குடமும், மலர்ந்த தாமரையும் கொண்டதாகவே உள்ளது. வடமொழியில் அவளுக்கு ‘சாக்காம்பரி’ (shAkkAmbari) என்னும் பெயரும் உண்டு. அதற்கு, ‘தாவரங்களை ஆடையாகக் கொண்டவள்’ என்பது பொருள். ‘பத்ம ஆனன’ என்பது மற்றொரு பெயர். அதற்கு, ‘தாமரை மலரை முகமாகக் கொண்டவள்’ என்று பொருள். பெண் என்பவளின் உருவத்தோற்றம் எழில், நளினம், ஒயில், கவர்ச்சி போன்றவற்றின் ஒருங்கிணைப்பாக ஒருபுறம் இருப்பினும் அவளது இன்னொரு பகுதி உண்மை நிலை சார்ந்ததாக இருக்கிறது. இந்தச் சிலையைச் சுற்றிலும் காணப்படும் விநாயகர், சிவலிங்கம், திரிசூலம், நந்தி, நாகம், வழிபடும் பெண் போன்ற அமைப்பு இது பார்வதியின் இன்னொரு வடிவம் என்பதை உறுதி செய்கிறது.

பேராசிரியர் வி.ஹெச்.ஸோனாவானே (Professor V.H.Sonawane) குஜராத் மாநிலத்தில் கிட்டிய இத்தெய்வத்தின் உருவங்கள் பற்றின விவரங்களை பற்றிக் கூறுவதைக் இப்போது காண்போம். (இது அவர் “லலிதகலா அகாதமி” வெளியீடான ‘லலித் கலா’ என்னும் 1988 நவம்பர் இதழில் “Some Remarkable Sclptures Of LajjA Gauri From Gujarat” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவம்)

அவர் பற்றின சிறுகுறிப்பு

(Eminent archaeologist Professor V.H. Sonawane has received the Dr V. S .Wakankar national award instituted by the Baba Saheb Apte Smarak Samiti, Delhi for his outstanding contribution in the field of rock art.

Sonawane has carried out the task undertaken by late Dr. Wakankar to discover the vestige of India’s lost civilization.A former professor and director of field archaeology at M S University’s Department of Archaeology and Ancient History, Sonawane has received the award including a cash prize and a citation.

This is the second consecutive national award that professor Sonawane has bagged after he was conferred the V. S. Wakankar award from the Indian Archaeological Society, New Delhi in May 2011.

Padma Sri Dr. Wakankar was eminent archaeologist known for his discovery of painted rock shelters at Bhimbetka in Madhya Pradesh in 1957. In his memory this award has been established.)

“லஜ்ஜா கௌரி வழிபாடு பற்றி முன்னரே ஆராய்ச்சி செய்த ஸ்டெல்லா க்ராம்ரிஷ் (Stella Kramrisch), ஹெச்.டி.சங்காலியா (H.D.Sankalia), ஜே.எம்.திவாரி (J.M.Thiwari) போன்ற ஆராய்ச்சியாளர்களால் இதன் வடிவம் சார்ந்த ஒரு தெளிவான கருத்தை முன் வைக்க முடியவில்லை. அவர்கள் அதை ‘அதிதி/ உத்தானபாத’(கால்களை உயர்த்தூகியவள்) (adhithi/uththAnapAdhA) என்றும், ‘நிர்வாணப் பெண் கடவுள்’ அல்லது ‘வெட்கம் கெட்ட பெண்’ என்றும் குறிப்பிட்டார்கள். ஆனால், இவை இக்கடவுளின் தோற்றம் பற்றின விளக்கங்களாக இல்லை. 1978 இல் ஆர்.சி.தெரெ (R.C.Dhere) எழுதிய “லஜ்ஜா கௌரி” (மராட்டி மொழி) என்னும் நூலில் தெளிவான, ஏற்கக்கூடிய விதத்தில் பெயர்க் காரணம், அதன் உருவத் தோற்றம் சார்ந்த விளக்கம், இலக்கியச் சான்றுகள், இடப்பெயர், தொல்பொருள் ஆராய்ச்சி சார்ந்த ஆதாரங்களின் உறவு ஆகியவை விளக்கப்பட்டன. நாட்டுப்புற வாழ்க்கையில் ஊடோடும் வழிபாட்டு விவரங்கள், அதன் முக்கியத்துவம் ஆகியவனவும் அடையாளப் படுத்தப்பட்டன. ‘லஜ்ஜா கௌரி’ என்னும் பெயர் வரக் காரணமான கதையையும் அவர் தமது நூலில் குறிப்பிடுகிறார்.

சிவனுடன் பார்வதி தனித்து நெருக்கமாக இருக்கும்போது வாயிற் காப்போனின் வருகையால் அவமானமடைந்த பார்வதியின் தலை உடலின் உள்ளே அழுந்தி விடுவதாகவும் அந்த இடத்தில் ஒரு தாமரை மலர் தோன்றுவதாகவும் செவிவழிக்கதை ஒன்று உண்டு. ‘லஜ்ஜா கௌரி’ என்னும் பெயரமையக் காரணமான இன்னொரு கதையும் உண்டு. ‘ரேணுகா’ என்பவள் ஒரு அரசனின் மகள். ‘ஜமதக்னி’ என்னும் முனிவரின் மனைவியாகி நான்கு பிள்ளைகளைப் பெறுகிறாள். கணவனின் கோபத்தால் மகன் பரசுராமனின் கோடலி அவளது சிரத்தை உடலிலிருந்து பிரிக்கிறது. ரேணுகாவை காப்பாற்ற முயன்ற ஒரு தாழ்ந்த ஜாதிப் பெண்ணும் அப்போது அவ்விதமே கொல்லப் படுகிறாள். என்றாலும், தான் இறக்க விரும்பாமல் தன் தலை இருந்த இடத்தில் ஒரு மலர்ந்த தாமரையை தோன்றச் செய்து தெய்வ நிலை பெறுகிறாள். அவள் ‘மாதங்கி’ என்றும் அழைக்கப் படுகிறாள். ஒரு பெண் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களை அவள் மீறுவதால் ஜாதி ஒதுக்குதல் செய்யப் படுகிறாள்..

நான் இக்கட்டுரையை எழுதுவதன் அடிப்படை நோக்கம், வரலாற்று வல்லுனர்களின் கவனத்துக்கு இதுவரை பார்வைப்படுத்தப்படாத, காண்போரின் ஆர்வத்தைத்தூண்டும், கல்பரப்பில் படைக்கப்பட்ட ஐந்து புடைப்புச் சிலைகள் பற்றின விவரங்களைக் கூறுவதுதான். இவை எம்.எஸ். பரொடா பல்கலைக்கழக (Maharaja Sayajirao University-Baroda) ‘பழங்கால வரலாறு, தொல்பொருள் ஆராய்ச்சிப்’ பிரிவின் பாதுகாப்பில் உள்ளவை.

இந்த ஐந்து சிலைகளும் தெற்கு ராஜஸ்தான் தன்கர்பூர் பகுதியில் பாறை பிளவுகளுக்கு இடையில் இருந்திருக்க வாய்ப்புண்டு. கட்டுமான செதுக்கல்களுடன் காணப் படும் ஒரு சிலை தவிர மற்றவை நான்கும் சிறிய, கையில் எடுத்துச் செல்லும் அளவில் பெண்டிரின் தனிப்பட்ட வழிபாட்டுக்கானதாக உள்ளன.

(அவை பற்றின விவரங்கள் இரண்டினை மட்டும் இங்கு தருகிறேன். ஆர்)

01- பஞ்சன்மால் தாலுக்காவில் உள்ள கோத்ரா நகரின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள தார்சங் (Tarsang) என்னும் கிராமத்தில் கிடைத்த கல்பரப்பு சிற்பம். 8.5×8.5×1.5 செ.மீ அளவுகளைத் தோராயமாகக் கொண்டது. இதன் வலப்புற மூலைப்பகுதி முக்கோணவடிவில் உடைந்து காணப்படுகிறது கல்பரப்பிலிருந்து குறைந்த அளவில் புடைப்பாக அமைந்துள்ள இதன் வடிவம் நன்கு தெளிவான விதமாகக் காணப்படுகிறது. அமர்ந்த நிலையில் கால்களை மடக்கி, துடைகளை விரித்து, இருகைகளையும் மடித்து முழந்தாளில் ஊன்றி, வான்நோக்கி உயர்த்தியவாறு அமைந்துள்ளது. உடைந்த இரு கைகளிலும் தாமரை மலர்கள் இருந்திருக்கலாம் என்பதைக் கணிக்க முடிகிறது. இது ‘லஜ்ஜா கௌரி’ உருவ அமைப்பை ஒத்ததாகவே உள்ளது. ஆனால் இது நிர்வாணமாக அமையப்படவில்லை. உடலில் உடை இருப்பதற்கான அடையாளமாக மடித்த இடது தொடையில் துணியின் மடிப்புகள் கோடுகளாக உள்ளது தெரிகின்றது. காதுகளில் தொங்கும் வளையங்கள், இடையில் காணப்படும் மேகலை, கழுத்தை ஒட்டி இருக்கும் ஒற்றை மாலை, கைகளில் அடுக்கிய வளையல்கள் போன்ற எளிய அணிகலன்களுடன் அமைந்த சிலையின் முகத்தின் பின்புறம் ஒரு ஒளிவட்டமும் காணப்படுகிறது. இடதுபுறம் மேல்பகுதியில் உள்ள நுனி வெளிப்புறமாக வளைந்த திரிசூலம், அதன் அடிப்புறம் காணப்படும் இரு பாதங்கள் (திருவடிகள்), போன்றவை இதை மற்ற சிலைகளின் அமைப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அவ்வண்ணமே, வலப்புறத்தில் உயர்த்திய கையினை ஒட்டிக் காணப்படும் சிவலிங்கம் பூணுலுடன் அமைந்துள்ளது. உடைந்துபோன பகுதியில் முழந்தாளிட்டு, கைகூப்பித் தொழும் பெண் உருவம் இருந்திருக்கக் கூடும் என்னும் அனுமானத்தைக் கொடுக்கிறது.

2- ராஜ்கோட் தாலுக்காவில் உள்ள் ‘உப்லதா’ (Uplata) என்னும் சிற்றூரின் தென் புறத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் ‘தங்க்’ (Dhank). அங்கு முஞ்சேஸ்வரி ஆலயக்கிணற்றில் இறங்கும் படிகளுக்கு இடையில் கிணற்றுச் சுவரில் காணப்படுகிறது இந்தச்சிலை. முன்னரே விவரித்த விதமாகப் படைக்கப்பட்ட இது உயரிய கலைவேலைப்பாடுகள் கொண்டதாக உள்ளது. சிலையின் இரு கைகளிலும் மலர்ந்த தாமரைப்பூக்கள் காணப்படுகின்றன. ஆலய வெளிச்சுவர்களில் காணப்படும் பிறைபோன்ற அமைப்பில் இது அமையப் பெற்றுள்ளது. சிற்பியின் படைப்புத் திறமை நன்கு வெளிப் படுகிறது. சிலை புடைப்புவகை சார்ந்ததுதான். சிகை அமைப்பும் அணி கலன்களும் நமக்கு இது குப்தர் காலத்து சிலை/ஓவியப் பாணியைச் சார்ந்தது என்பது விளங்குகிறது.

பதக்கத்துடன் கூடிய நீண்ட, வயிறுவரை தொங்கும் ஒற்றை சரச் சங்கிலி, தோள் வளையம், இடையில் அமைந்த வளையங்கள் கோர்த்த இருவரிசை மேகலை, காதுகளில் தொங்கும் பெரு வளையம், தடித்த வளையல் (கங்கணம்), ஆகிய அணிகலன்களின் தெளிவான அமைப்பு இச்சிலையின் சிறப்பைக் கூட்டுகிறது. இடது மேற்புறம் பீடத்தின் மேல் அமைந்துள்ள விநாயகரும், கீழ்ப்புறம் மண்டியிட்டு வழிபடும் பெண் உருவமும் நமக்கு அப்போதைய வழிபாட்டு முறைபற்றின புதிய செய்திகளைக் கூறுகிறன. வலப்புறம் சிதைந்து பின்னர் சீர்செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. அங்கு மேற்புறத்தில் சிவ லிங்கத்தையும், கீழ்ப்புறத்தில் நந்தியையும் சிற்பி பழம் வழக்கில் உள்ளவாறு வடிவமைத்திருக்கக்கூடும். அமர்ந்த சிலையின் பீடத்தில் தாமரை இலைகளின் வரிசை செதுக்கப்பட்டுள்லது. மேற்புறம் சைத்திய தோற்ற செதுக்கல் கொண்டதாக உள்ளது. இந்த சிலை, இதுபோன்று உள்ள தங்க் கிராமத்திலேயே கிட்டிய மற்றொரு ‘லஜ்ஜா கௌரி’ சிலை அமைப்புடன் பெரிதும் ஒத்துப்போகிறது. இரண்டுமே ஏழாம் நூற்றாண்டு காலத்தைச் சார்ந்தவையாக அறியப் படுகிறன.”

பிள்ளைப்பேறு இல்லாத பெண்களால் மகவு வேண்டித் தொழப் படுகிறாள் லஜ்ஜா கௌரி. கையில் அடங்கும்படியான சிறிய கற்பரப்பிலோ சுடுமண் பரப்பிலோ வடிக்கப்பட்ட அவளது உருவம் இல்லங்களில் பெண்களின் வழிபடும் இடத்தில் இடம் பெறுகிறது. வெண்ணெயில் குங்குமத்தை சேர்த்துக் குழைத்து சிலையின் யோனியின் மீது பூசி வழிபடுவது வழிபாட்டு முறையின் மைய நிகழ்வு. இந்தச் சிலை அமைந்துள்ள விதத்தில் அங்கு ஆணுக்கு இடமில்லை என்பதும், முற்றிலும் பெண்களால் மட்டுமே தொழப்பட்ட தெய்வம் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. பிள்ளைப்பேறு வேண்டி மட்டும் அன்றி, மழையின்மையால் தோன்றும் வரட்சி நீங்கவும், பயிர்கள் செழிக்கவும் கூட மக்கள் இவளை வணங்கினர். அவளது உருவச் சிலைகள் பெரும்பாலும் நீர்ச்சுனை, அருவி, கிணறு போன்ற நீர் சார்ந்த பகுதிகளிலேயே அமையப் பெற்றுள்ளன. இன்றளவும் வழிபடும் முறை மாற்றமில்லாமல் பரவலாக மக்களிடையே உள்ளது. ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் பகுதிகளில் இத்தெய்வத்தை எல்லம்மா, ரேணுகா, மாதங்கி, ஜோகுலாம்பா, நக்னபந்தனா, போன்ற பல்வேறு பெயர்களால் வழிபடுகிறார்கள். இன்றும் இந்தியாவில் பல ஊர்களில் இந்த தெய்வத்துக்கு ஆலயங்கள் உள்ளன. பெண்டிர் மட்டுமே தொழுவதற்கு அனுமதிக்கப் படுகின்றனர். கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தாராசுரம் ஆலயச் சுற்றுச் சுவரிலும் இந்தச் சிலையைக் காணலாம். என்றபோதும், தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதியில் இந்த வழிபாட்டுமுறை என்பது அரிதாகவே இருந்திருக்க வேண்டும்.

குறிப்பு-

(இதுபற்றிய ஆங்கில மொழி நூல் “Forms of God Lajja Gauri in Indian Art” ஆசிரியை- Carol Radcliffe Bolon. இன்னும் தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர் கூகுல் வலைத் தளத்தில் Lajja Gauri என்று தட்டச்சு செய்து காணலாம்.)

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்றுமுகம் / கோவை தங்கவேல்

பதினைந்தாயிரம் பேர் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று தெரியாமலே யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து வெளிவந்த விஷக்காற்றினால் உயிரை விட்டனர். லட்சக்கணக்கான பேர் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டனர். மூளை வளர்ச்சி குன்றியும், கண் போயும், இன்னும் சொல்ல முடியாத நோய்களுக்கெல்லாம் ஆட்பட்டு இன்றும் நோயின் பிடியில் சிக்கி உயிரோடு வேதனைப்பட்டு வருகின்றனர். ஆலையின் அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவத்தின் முதல் குற்றவாளி ஆண்டர்சன். மற்ற குற்றவாளிகள் இந்த ஆலையின் நிர்வாகத்திலிருந்தவர்களும், டெக்னீஷியன்களும். இந்த வழக்கு முதல் குற்றவாளி இல்லாமலே நடந்து கொண்டிருந்தது.

இந்தியாவையே உலுக்கிய இந்தப் படுபயங்கர கொலைகளுக்கான தீர்ப்பு இருபத்து ஆறு ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட போது, இத்தீர்ப்பினைப் பற்றி வட மாநில மீடியாக்களில் சூடான விவாதங்கள் நடத்தப்பட்டன. தீர்ப்பு வெளியான அன்று ஆண்டர்சன் உயிரோடு இருந்தார். அவர் எங்கிருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று டிவிக்கள் கண்டுபிடித்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அவரை கைது செய்யக்கூட இந்திய அரசால் முடியவில்லை. இதே ஒரு சாதாரணன் என்றால் சட்டமும் சட்டத்தின் காவலர்களும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.

இந்த தீர்ப்பை கூர்ந்து அவதானிக்கும் போது நெஞ்சை உலுக்கும் சில உண்மைகள் நிர்வாணமாக வெளிப்படுகின்றன. இந்த உண்மைகள் சாதாரண மக்களிடையே இந்தியா ஒரு ஜனநாயக நாடா என்ற கேள்விக்குறி எழுவதில் வியப்பேதும் இல்லை. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்ற மாயையினால் ஆளும் அதிகார வர்க்கமும் அதற்கு துணையாக இருக்கும் கோடீஸ்வரர்களும் எவ்வாறெல்லாம் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் அப்பட்டமாகத் தெரியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் இந்தியப் பிரஜைகள் என்று சட்ட மேதை அம்பேத்கார் எழுதிச் சென்றார். ஒரு நீதிபதி நில மோசடியில் சிக்குகின்றார். அரசு புறம்போக்கு நிலத்தை தன் பதவியை வைத்து கபளீகரம் செய்கிறார். பொதுமக்களை அந்த நிலத்திற்குள் வர விடாமல் தடுக்கிறார். மீடியாக்களில் இந்த விஷயம் வெளிப்பட்ட பிறகு அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்கின்றது. விசாரணை செய்து அந்த நீதிபதி ஆக்கிரமிப்பு செய்துள்ள விஷயம் பற்றி அறிக்கை அளிக்கின்றது. ஆனால் சட்டத்தை அமுல் படுத்தி வரும் உச்ச நீதிமன்றம் சர்ச்சையில் சிக்கியவரை வேறு ஊருக்கு மாறுதல் செய்கிறது. சர்ச்சையில் சிக்கியவர் பணி நாள் முடிவடையும் வரை நீதிபதியாகத்தான் இருந்து ஓய்வு பெறுகிறார்.

அரசு நிலத்தை தன் அதிகாரத்தால் கபளீகரம் செய்யும் நீதிபதியைத் தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா? சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இந்த நீதிபதி தண்டிக்கப்பட கூடியவர் என்றால் அது ஏன் இன்னும் செய்யப்படவில்லை? இந்திய நீதிபதிகள் தங்களைச் சட்டத்திற்கும் மேலானவர்களாக, கடவுளாக கருதிக் கொள்கிறார்கள் என்பதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதும் இதற்கு முன்பு நடந்த சில சம்பவங்கள் மூலமாக தெரிய வருகிறது. அதாவது நீதிபதிகள் விஷயத்தில் அவர்கள் கொலைக் குற்றமே செய்தாலும் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பது மற்றொரு உண்மை என்பதை இவ்விடத்தில் புரிந்து கொள்க.

1976ல் ஜஸ்டிஸ் கே. வீராச்சாமி மேல் சிபிஐயினால் பதிவு செய்யப்பட்ட கரப்ஷன் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலே 108 எம்பிக்கள் ஒன்று சேர்ந்து திரு ஜஸ்டிஸ். கே.வீராச்சாமியின் மருமகன் திரு ஜஸ்டிஸ் ராமசாமி மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக நடவடிக்கை எடுக்க கையெழுத்திட்ட சம்பவங்களையும் பத்திரிக்கைகள் வாயிலாக நாம் அறியலாம். இந்திய நீதிபதிகள் சில பேர் மீது இருக்கும் வழக்குகளை மெயில் டுடே என்ற பத்திரிக்கை 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம்தேதி அன்று கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. கட்டுரையினை இந்த இணைப்பில் படிக்கலாம்.

download (12)

ஒரு நீதிபதி இரு நீதிபகள் என்று இல்லை. ஊழல் வழக்கிலும் மற்ற வழக்குகளிலும் எண்ணற்ற இந்திய நீதிபதிகள் சிக்கினார்கள். இது பற்றிய கட்டுரைகள் பல பல பத்திரிக்கைகளில் வெளி வந்தன. ஆனால் சட்டத்தினால் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஓய்வு பெற்று இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஓய்வூதியம் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது போன்ற குற்றச்செயல்களில் சாதாரணன் ஈடுபட்டால் அதே சட்டத்தின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஏன் முதலில் நீதிபதிகளைப் பற்றி எழுதுகிறேன் என்றால் சட்டங்களை அமுல் படுத்துவதும், சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதும் நீதி மன்றங்கள்தான். ஆனால் நீதிமன்றத்தின் தலைவர்களான நீதிபதிகளாலே சட்டங்கள் மீறப்படுவது என்பது சட்டத்திற்கே சட்டம் எதிரியாக இருப்பது போன்றது. ஜனநாயக நாடான இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்வதில் சிறு துளி உண்மை இருக்கிறதா என்றால் நம்புவது கடினம். அடுத்து மற்றொரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

அடுத்து யூனியன் கார்பைடு ஆலையின் அதிபர் ஆண்டர்சன், ஆலையின் அலட்சியத்தால் நடந்த விபத்திற்குப் பிறகு அரசு செலவிலே, அரசு விமானத்திலே, முதலமைச்சரின் ஆலோசனையின் படி, காவல்துறையினரின் பாதுகாப்போடு அவரது சொந்த நாட்டிற்கு எந்தவித இடையூறும் இன்றி அனுப்பி வைக்கப்படுகிறார். அவர் இந்தியாவில் இருந்தால் சட்ட ஒழுங்கு அமைதிக்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று காரணம் சொன்னார் அன்றைய மாநில முதலமைச்சர் திரு.அர்ஜூன் சிங். ஒருவரால் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால் அவரைக் கைது செய்வார்கள் என்று படித்திருக்கிறோம். ஆனால் ஆண்டர்சன் விசயத்தில் நடந்த சம்பவம் அவரைப் பாதுகாக்க மட்டுமே என்பது தான் உண்மை. பதினைந்தாயிரம் இந்திய மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், கொலைக்குக் காரணமானவரை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் துணிந்திருக்கிறார். இவரை நம்பி ஓட்டுப் போட்ட மக்களின் நம்பிக்கைக்கு இவர் செய்திருக்கும் துரோகம் என்னவிதமானது என்று யோசித்துப் பாருங்கள். அதுவும் ஒரு ஓட்டுக் கூட போடாத மாபெரும் கோடீஸ்வரனைப் பாதுகாக்க துணிந்த முதலமைச்சர் ஏழைகள் கொல்லப்பட்டது குறிந்து சிறு வருத்தமும் இன்றி செயல்பட்டதை எண்ணினால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மறு முகம் பற்றிய நிர்வாணமான உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

தீர்ப்பு வெளியிட்ட நாளன்று அமெரிக்காவில் வசதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வரும் ஆண்டர்சனை, நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை சிபிஐயினால் கைது செய்ய முடியவில்லை. அவர் இருக்கும் இடத்தையும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டது. அதன் பிறகு அவரை இந்தியா கொண்டு வர முயற்சிக்கப்படும் என்று சொல்கிறார்கள் ஆட்சியாளார்கள். ஆனால் சமீபத்தில் ஆண்டர்சன் இறந்தே போய் விட்டார். ஆண்டர்சனின் அலட்சிய நிர்வாகத்தால் கொல்லப்பட்டவர்கள் ஏழைகள். ஒன்றுமறியாத அப்பாவிகள். அவர்கள் செய்தது ஒன்றே ஒன்றுதான். இந்தியாவில் பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம். ஏழைகள் சொல் அம்பலம் ஏறாது என்ற பழமொழிக்கு ஏற்ப நீதிமன்றமும் 26 ஆண்டுகள் கழித்து வழங்கிய தீர்ப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையின்மையும், ஆளும் அதிகார வர்க்கத்தினரின் பாசம் எந்தப்பக்கமாக இருக்கிறது என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

பதினைந்தாயிரம் உயிரைப் பறிக்க காரணமாயிருந்தவர்களை, ஜாமீனில் செல்லக்கூடிய வகையில் தீர்ப்பு வழங்கி இருப்பது வழக்கையே இல்லாமல் ஆக்கும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். இருபத்தைந்தாயிரம் ரூபாய் ஜாமீன் தொகை செலுத்தி குற்றவாளிகள் அனைவரும் விடுதலையாகி விட்டார்கள். இது தான் ஏழைகள் சம்பந்தப்பட்ட வழக்கின் நிலைமை.

மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 150 பேர். சட்டம் இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொண்டது? வழக்கு விசாரணையை ஒரே வருடத்தில் முடித்து தீர்ப்பும் வழங்கி விட்டது. ஏனென்றால் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள். தாக்கப்பட்டது இந்தியக் கோடீஸ்வரரின் ஹோட்டல். அதனால் வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விடட்து. யூனியன் கார்பைடு ஆலையினால் கொல்லப்பட்டவர்கள் ஏழைகள். ஏழைகள் கொல்லப்பட்டதற்கு தீர்ப்பு 26 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கின் தீர்ப்போ நகைப்புக்கிடமான ஒன்றாகும்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இரண்டு வழக்குகளிலும் தீர்ப்பு வெளியிடப்பட்ட நாட்கள் ஏன் வேறுபட்டதாக இருக்க வேண்டும்? நீதிபதிகளை சட்டம் ஒன்றும் செய்யாது. பணக்காரர்களை சட்டம் ஒன்றும் செய்யாது. அரசியல்வாதிகளை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அதிகாரவர்க்கத்தினரை சட்டம் தீண்டிக்கூட பார்க்க முடியாது என்றால் பின்னர் ஏன் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று சொல்கின்றார்கள்? ஏழைகளைக் கட்டுப்படுத்தவும், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கவும் தான் சட்டம். ஏழைகள் சட்டத்தை மீறக்கூடாது என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள். இப்போது சொல்லுங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமமானதா? சட்டத்திற்கு வேறு முகங்களும் இருக்கின்றன. மீண்டும் இங்கு ஒரு எழுத்தாளரின் எழுத்தை மேற்கோள் காட்டி பத்தியை முடிக்கிறேன். ”ஏழைகள் அதிகாரவர்க்கத்தினரின் இரக்கத்தின் பால் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்”.

ஏ.நஸ்புள்ளாஹ் கவிதை ( இலங்கை )

images (1)

இருட்டின் ருசி.

எனதுடல் கனவை
அணியத் துவங்குகிறது.
அது இரவு முடியவே
முடியாதோ என்கிறது போல்
நீண்டு செல்கிற நேரம்.

கைபிடியளவு கனவை
வளர்த்தெடுக்கிறேன்
தலையணையின் தூரத்திலிருந்து
அது அறையின் இருள் முழுவதுமாய்
என்னைப் பிரதியெடுக்கிறது.

எனினும்
கனவில்தான் நானே வாழ்கிறேனா
என்று சந்தேகம் இருக்கிறது.
இருட்டின் ருசி
விழித்திருக்கும் இரவு
இன்னும் மீதமிருக்கிறது.

இரவு எப்போதும்
இருப்தைப் போல் அல்ல
புதிய பக்கங்கள்
பேச்சுக்கு ஆள் கிடைத்ததைப் போல்
கனவு இடையறாது
வளர்ந்து வருகிறது.

விழிப்பு தட்டிவிட்டது
ஆனாலும்
இந்த விழிப்பு நிலையும்
ஒரு கனவு போல் வளரத் தொடங்குகிறது.

_

இரண்டு கவிதைகள் – இரண்டு படங்கள் : / ஷாஅ கவிதைகள்

download (6)

(எழுதிப் பல மாதங்கள் கழித்து கண்ணில் படும் படங்களில் நிறைந்த கவிதைகள்)

ஒரு பிடி தானியம்

பறந்து பறந்து அமர்கின்றன

புறாக்கள்

அங்கொன்றும் இங்கொன்றுமாக

விரைவாகச் செல்கிறது

கையுலகிலிருந்து

அலகின் உலகுக்கு

ஒவ்வொரு தானியமும்

நாலாத்திசையும்

மணிகள் தெறிக்கும் உலகங்களின்

பயண காலத்தில்

தன் நெற்றிக்கோட்டைத் தானே தாண்டுகிறார்

ஒரு பிடி திறந்து

தினம் தினம் முதி

யிவர்

பிறந்து

Child Sand Childhood Beach Summer Holiday


மினுக்

என்னா அது மின்னுதே அங்கு

என்னை அழைச்சிட்டுப் போ

சின்னச் சிப்பி ஒன்று மல்லாந்து கிடக்கிறது

மணல் படிந்திருக்கும் அதில் துளிநீர்

இதைக் கடல் என நான் கொள்ளவா

அலகளில்லையே,

விரல் நுனியில் சிமிட்டியதும்

சுண்டியெழுந்து

போய் உள்ளே விழுந்தது சிப்பி

போகுது போகுது விரிஞ்சிக்கிட்டே போகுது

கொள்ளலையே எங் கடல்

இருகை விரிஞ்சும் ஹையா

இங்க பாரு அலை, இங்க பாரு அலை

ல்லாமே மினுக் மினுக்

(சிறார்க்கும் போன்றோர்க்கும்)

•••

ஒளவையின் இலவம் பஞ்சு அறிவியல் முனைவர். ஆர். / சுரேஷ் கன்செப்ஷன் பல்கலைக்கழகம், சிலி

download (5)

நம் மனம் அல்லது உடலானது, அதிக உழைப்பின் நிமித்தம் சோர்வடையும் பச்சத்தில் உறக்கம் நம்மை தானாக தழுவுகிறது. இத்தருனத்தில், நாம் உடலளவில் எந்த வேலையையும் செய்வதில்லை. இருப்பினும், உறக்கத்தின் பொழுது, பல மிகமுக்கிய உடற்செயல்கள் நம் உடலில் நிகழ்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆம், ஞபகத்திறனை ஒருங்கினைத்து நம்முள் சேர்த்து வைப்பதில் உறக்கம் முக்கிய பங்கு வகிக்கிறதாம். அதாவது, பகல் பொழுதில் நாம் பார்க்கும், கற்கும், உணரும், பலவற்றை, உறங்கும் பொழுது நம் உடல் தகவல்களாக தொகுத்து, வகுத்து நம் மூலையில் பதிவேற்றம் செய்கிறதாம். அளவான உறக்கம் நம்முடைய கல்வி மற்றும் ஞாபகத்திறனை சிறப்பாக்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், தசை வளர்ச்சிக்கும், திசுக்கள் சீரமைப்பிற்கும், முக்கியமான ஹார்மோன்கள் உருவாக்கப்படுவதற்கும் போதுமான கால அளவு உறக்கம் மிகமிக இன்றியமையாதது. வாழ்வின் அங்கமான, இச்செயலை எப்படி செய்ய வேண்டும்? எல்லவற்றையும் வகுத்து சென்றுள்ள நம் முன்னோர்கள் இதற்கு வழிமுறை சொல்லாமல் இருப்பாரோ? வாருங்கள் பார்ப்போம்.

எப்படி உறங்க வேண்டும்? என்பதை பின்வருமாறு சொல்லியிருக்கிறார் நம் ஒளவை பாட்டி.

இலவம் பஞ்சில் துயில் (ஆத்திச்சூடி, உயிர்மெய் வருக்கம், 26)

இதன் விளக்கம் பின்வருமாறு. ‘இலவம் பஞ்சு‘ எனும் ஒருவகை இயற்கை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையில் உறங்க வேண்டும். உறங்குவதற்கு கோரை பாய், கயிற்று கட்டில் உள்ளிட்ட எத்தனையோ முறை இருந்த பொழுதும், இலவம் பஞ்சு படுக்கையில் உறங்க சொன்னதர்கு காரணம் என்ன? பருத்தி இழைகளும் மிருதுவானவைகளே! ஆயினும், பருத்தியை சொல்லாமல், இலவம் பஞ்சை குறிப்பிட்டு சொன்னதர்க்கு காரணம் என்ன? சொன்னது ஒளவை ஆயிற்றே! காரணம் இல்லாமல் இருக்குமா? வாருங்கள், இன்றைய அறிவியல் உலகம் இலவம் பஞ்சு பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

இலவம் பஞ்சானது, ‘இலவு‘ எனும் வெப்ப மண்டலத்துக்குறிய மரத்திலிருந்து கிடைக்கும் பொருளாகும். இலவு மரம் காய்த்தாலும், கணிக்காது. காரணம், காய் நெற்றாகி (முதிர்ந்து காய்ந்த காய்) இலவம் பஞ்சினை தந்துவிடும். இது, மென்மை (பருத்தியை விட), வழுக்கும் தன்மை, சுருங்கா தன்மை, உயிரி சிதைவு அடைதல், மிகக்குறைந்த ஒவ்வாதன்மை மற்றும் குறைந்த எடை (பருத்தியை விட சுமார் எட்டு மடங்கு குறைந்தது) உள்ளிட்ட பல சாதகமான பண்புகளை பெற்றிருக்கிறது. இப்பஞ்சினால் செய்யப்பட்ட தலையணிகள் மற்றும் மெத்தைகளின் பயன்களை ஒவ்வென்றாக பார்க்கலாம்.

இயற்கையாக வலரும் இலவு மரத்திலிருந்து கிடைக்கும் இலவம் பஞ்சினை எடுத்து நேரடியாக தலையணைகளோ அல்லது படுக்கை மெத்தைகளையோ செய்ய முடியும். செயற்கை பஞ்சு இழைகளை போல், எந்தவித வேதிமாற்றத்திற்கும், இலவம் பஞ்சினை உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. செயற்கை பஞ்சுகளை காட்டிலும், இயற்கையான இலவம் பஞ்சு நம் உடலுக்கு நல்லது தானே?

அடுத்து இலவம் பஞ்சின் மருத்துவ குணத்தை பற்றி குறிப்பிட வேண்டும். இப்பஞ்சானது அதிக அளவு செல்லுலோஸ், பென்டோஸ் மற்றும் லிகினின் எனும் வேதிபொருட்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லிகினின் எனும் வேதிபொருளால், பூச்சிகள், இலவம் பஞ்சினை அண்டுவதில்லையாம். மெழுகு தன்மை கொண்ட பொருளின் நிமித்தம், இலவம் பஞ்சு நீர் ஒட்டா தன்மையை பெற்றிருக்கிறது. இதனால், பூஞ்சைகளும் இலவம் பஞ்சினை தாக்குவதில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும், அழுக்குகளும் இவற்றுடன் ஒட்டுவதில்லை. ஒருவேளை அழுக்கு படிந்தாலும், அவற்றை எளிதில் துடைத்து விடலாம். தவிர, இலவம் பஞ்சு எதிர் நுண்ணுயிர் (பாக்டீரியா) பண்பினை பெற்றிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, தீங்கிழைக்கும் பாக்டீரியாங்களை கொல்லும் திறனை இலவம் பஞ்சு பெற்றிருக்கிறது. இதனால், பாக்டீரியாங்கள் எதுவும், இவற்றில் வளருவதில்லை. எனவே, நமக்கு நோய் வராமல் தடுப்பதுடன், ஒரு சில உடல் உபாதைகளான, தலைவலி, கழுத்துவலி, தசைபிடித்தம், மன அழுத்தம் உள்ளிட்டவைகளும் குணமாவதாக கூறப்படுகிறது. எனவே, இலவம் பஞ்சினாலான படுக்கையானது, மருத்துவ ரீதியிலும் மிக சிறந்தது.

இலவம் பஞ்சின் மிருதுவான தன்மையும் நமக்கு நன்மையே! பொதுவாக, நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு நேர்த்தியான தூக்கம் அவசியம். அதாவது, உறங்கும் பொழுது, தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு உள்ளிட்ட உடற் பாகங்கள் சமதளத்தில் இருப்பது அவசியம். இலவம் பஞ்சு படுக்கையில் இது சாத்தியம் என்கின்றனர் அறிஞர்கள். இலவம் பஞ்சு மிகவும் மிருதுவாக இருப்பதால், உறங்கும் நிலைகளில், நமது உடலுக்கு தகுந்த பாதுகாப்பை தருவதால், நேர்த்தியான உறக்கத்தை நம்மால் பெறமுடிகிறது.

இலவம் பஞ்சு இழைகள், உள்ளீடற்ற அமைப்பை (உதாரணம்: குழாய்கள்) பெற்றுள்ளன. இதன் காரணமாக, இது ஒலியை நன்கு உறிஞ்சும் தன்மை கொண்டவையாக விளங்குகின்றன.

இலவம் பஞ்சு படுக்கைகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். நீர் ஒட்டா தன்மையால், இலவம் பஞ்சு படுக்கைகளை நீரில் துவைத்து சூரிய ஒளியில் உளர்த்தி கொள்வதும் எளிது.

குறிப்பாக, கோடைகாலத்தில் இலவம் பஞ்சு படுக்கைகளையே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள். காரணம், இலவம் பஞ்சு உடல் சூட்டை உறிஞ்சிக் கொள்கிறது. இதனால், உஷ்ண நோய்கள் தடுக்கப்படுகின்றன.

இயற்கையாக கிடைக்கும் பொருள் என்பதால், இறுதியில் இலவம் பஞ்சினை சூழ்நிலையில் வெளியேற்றினாலும், எந்தவித சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

மேற்கண்ட நன்மைகளால், இலவம் பஞ்சினாலான படுக்கைகளை பயன்படுத்தும்படி அறிவுருத்துகிறது இன்றய நவீன அறிவியல் உலகம்.

சரி, இலவம் பஞ்சை காட்டிலும், பருத்தி இழைகள், படுக்கைகள் செய்வதற்கு ஏற்றதா? என்ன சொல்கிறது அறிவியல்? பார்ப்போம்.

ஏற்கனவே, பார்த்தார் போல், பருத்தியைவிட, மிக்குறைந்த எடை, மற்றும் மிருதுவானது இலவம் பஞ்சு. இலவம் பஞ்சு போன்றே, பருத்தியும், உயிரி சிதைவு அடையும் என்றாலும், நீர் உறிஞ்சும் பண்பின் காரணமாக, பருத்தியினாலான படுக்கைகள் எளிதில் அழுக்காகும் வாய்ப்பு உண்டு. மேலும், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாங்கள் உள்ளிட்ட தீங்கிழைக்கும் காரணிகள், எளிதில் தாக்கும் நிலையும் உண்டாகிறது. இதனால், பருத்தியினாலான படுக்கைகளை அடிக்கடி துவைத்தல் வேண்டும். எனவே, இலவம் பஞ்சை காட்டிலும் பருத்தியின் (படுக்கை பொருளாக) பயன்பாட்டு காலம் குறைவு. இக்காரணங்களால், பருத்தியை காட்டிலும், இலவம் பஞ்சே படுக்கைகள் செய்வதற்கு ஏற்றதாக சொல்லப்படுகிறது.

ஆத்திச்சூடி இயற்றிய ஒளவை சோழர் காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அதாவது, பன்னிரெண்டாம் நூற்றாண்டை குறிக்கிறது. இன்றைய அறிவியல் உலகம் ஆராய்ந்து அறிவிப்பதை, நவீன அறிவியல் வளர்ச்சி அடையாத அக்காலத்திலேயே, ஒளவை பாட்டி, இதனை உணர்ந்து நமக்கு அறிவுறுத்தியிருப்பது வியக்க தக்கதாக உள்ளது.

•••

கோ யுன் கவிதைகள் / மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில்: டைஜியின் சகோதரர் அந்தோணி / தமிழில்: சமயவேல். .

download (3)

சமீபத்தில் ‘என்ன? 108 ஜென் கவிதைகள்” என்ற புத்தகம் கண்ணில்பட்டது. கோ யுன் என்னும் கொரியக் கவிஞரின் அத் தொகுப்புக்கு ஆலன் கின்ஸ்பர்க் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார் என்ற குறிப்பையும் படித்தவுடன் நூலை வாங்கினேன். ஜப்பானின் காலனியாக கொரியா இருந்த 1933ல் பிறந்தவர் கோ யுன். பள்ளிகளில் கொரிய மொழி கற்பிப்பது தடை செய்யப்பட்டு இருந்ததால் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு வேலைக்காரரிடம் கொரிய மொழியைப் பயின்றிருக்கிறார். கொரியா விடுதலை அடைந்தபோது அவரது பள்ளி வகுப்பில், கொரிய மொழி படிக்கவும் எழுதவும் தெரிந்த ஒரே மாணவராக கோ யுன் இருந்திருக்கிறார்.

1949ல், கொரியக் கவிஞர் ஹன் ஹா-வுன்னின் கவிதைத் தொகுப்பு தற்செயலாக சாலையோரம் கிடைக்கிறது. அந்தக் கவிதைகளைப் படிப்பதிலும் அழுவதிலும் ஒரு முழு இரவும் கழிகிறது. தொழு நோயாளிக் கவிஞர் ஹன் ஹா-வுன்னால் ஆழமாகப் பாதிக்கப்பட்ட கோ யுன், ஒரு கவிஞனாவதென முடிவு செய்கிறார். கிடைக்கிற வேலைகளை செய்து கொண்டு அலைகிறார். கொரிய மொழி கற்பிக்கும் வேலை கிடைக்கிறது. ஆனால் 1950-53 யுத்தம் அவரது வழ்வையே மாற்றுகிறது. கொரியப் படை கம்யூனிஸ்டுகளைத் தோற்கடித்தவுடன் கட்டவிழ்க்கப்படும் வன்முறையில் இவரது குடும்பத்தினர், நண்பர்கள் என பலரும் கொல்லப்படுகிறார்கள். கோ யுன்னுக்கு பிணங்களைத் தூக்கிவரும் வேலை கிடைக்கிறது. முதுகில் பிணங்களை சுமக்கிறார். பித்துப் பிடித்தவராக மலைகளிலும் காடுகளிலும் அலைகிறார். பிறகு ஒரு எழுத்தராக அமெரிக்கக் கடற்படையில் சேர்கிறார். அந்த சமயத்தில் ஹைய்க்கோ என்னும் துறவியைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்கிறார். தனது 19வது வயதில், 1952ல், ஹைய்க்கோவின் வழிகாட்டுதலில் ஒரு முழுத்துறவி ஆகிறார். சங்க்சாங்க் என்னும் புத்தப் பெயரும் பெறுகிறார். ஓராண்டுக்குப் பிறகு குரு ஹைய்க்கோ ஒரு காதலில் விழுந்து சன்னியாசத்தைக் கைவிடுகிறார். சீடர் கோ யுன், பெரும் அதிர்ச்சி அடைந்து தற்கொலைக்கு முயல்கிறார்.

பிறகு ஒரு வருடம் துறவியாக பிச்சையெடுத்து அலைகிறார். ஹையோபோங்க் என்னும் துறவியிடம் ஞானதீட்சை பெற்று அவரது மடத்தில் இணைகிறார். குருவின் “எல்லாவற்றிலும் மூடனாக இரு. ஒன்றுமின்மை தான் உனது மூச்சு, உனது குசு, உனது தந்தை” என்று போதிக்கப்படுகிறார். “ சொற்களிடமிருந்து விடுதலை பெற்று நான் பறக்கத் தொடங்கினேன். மீண்டும் மொழியை சந்தித்த போது எல்லாம் புதிதாக இருந்தது” என எழுதுகிறார்.

கொரியா ஒரு கவிதைகளின் தேசம். கொரிய இளைஞர்கள் கவிஞனாக வேண்டும் என்று கனவு காண்பார்களாம். கொரிய வரலாறு முழுவதும் கவிஞர்களால் ஆனது. கோ யுன் ‘பௌத்த செய்தித்தாளி’ன் ஆசிரியரான போது செய்தித்தாளின் காலியிடங்களை கவிதைகளால் நிரப்புவாராம். ஜப்பானின் ஆதிக்கத்தில் கொரியா இருந்தபோது ஷீனம் அடைந்த புத்த மதத்தை மீட்டெடுக்கப் பாடுபட்டார். 1959ல் ஹயின்சா மடத்தை அடைகிறார். பிறகு ஏற்பட்ட அரசியல் ஆட்சிக் குழப்பங்களால் மடத்தைவிட்டு வெளியேறுகிறார். 1963ல் பொதுவாழ்வுக்குத் திரும்புகிறார். 1970 வரை பித்துப் பிடித்தவராக எங்கெங்கோ அலைகிறார். ஆனால் 1970ல் ஒரு நாளிதழில் ஒரு தொழிலாளி தீக்குளித்த செய்தியை வாசித்து ஏற்பட்ட ஒரு தெளிவுக்குப் பிறகு, ஒரு பத்தாண்டுகளில், 1980க்குள் ஒரு பெரிய அரசியல் போராளியாக மாறுகிறார். பௌத்த அமைப்புகளை விட்டு வெளியேறிய போதும் ஜென் அவருடனேயே இருந்தது. சுமார் 150 புத்தகங்கள் வரை எழுதியிருக்கும் இவர், 1983ல் திருமணம் செய்து கொண்டு அன்சியாங்கில் வசித்து வருகிறார். 2007லிருந்து சியோல் தேசிய பல்கலைகழகத்தில் வருகைதரு இலக்கியப் பேராசிரியராக இருந்து வருகிறார். இவரது ஏராளமான கவிதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. தொகுப்புகள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.

டக்ளமகான் பாலைவனம்

நான் ஏன் டக்ளமகான் பாலைவனத்திற்குப் போகிறேன்

அங்கிருக்கிறது ஏதுமற்ற வெறுமை

நான் ஏன் டக்ளமகான் பாலைவனத்திற்குப் போகிறேன்

எழுபத்தைந்து வயதில், எல்லா சொற்களையும் விட்டுவிட்டு: கதறல்

அங்கிருக்கும் ஏதுமற்ற வெறுமையின்.

நான் ஏன் டக்ளமகான் பாலைவனத்திற்குப் போகிறேன்

இனிமேலும் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது

இந்த உலகின் அல்லது என்னின்

பேராசை

அங்கே, டக்ளமகான் பாலைவனத்தில்

ஒரு ஆயிரம் வருட கபாலத்தின் மௌனம்.

••

கதைகள்

அங்கே கதைகள் இருக்கின்றன
அங்கே கதைகள் கூறும் மனிதர்கள் இருக்கிறார்கள்

மற்றம் அவைகளைக் கேட்கும் மனிதர்களும்.

அறை நிறைந்திருக்கிறது

கதைகளின் சுவாசத்தால்

அது போதும்

மைனஸ் 40ல் குளிர்காலம் எட்டு மாதங்கள்

ஒரு தாய்ப்பால் மறந்த குழந்தை உறைகிறது சாவில்

துக்கிப்பவர்களும் வெகுநாள் இருப்பதில்லை.

விரைவில் அங்கு கதைகள் இருந்தன

பிரார்த்தனைகளுக்கும் கூடுதல் பிரார்த்தனைகளுக்கும் நடுவில்

ஒரு சாப்பாட்டுக்கும் அடுத்ததற்கும் நடுவில்
அங்கே கதைகள் இருந்தன

இந்த வகையான நிலையே பூரணமான நிலை.

••

அடிவானம்

கீழைக் கடலின் மேல் அடிவானத்தைப் பார்த்தபடி நான் நிற்கிறேன்

ஆயிரத்து எழுநூறு கோவன்-விடுகதைகள்

என்ன ஆயின?

அலைகளின் சப்தம்

அலைகளின் சப்தம்

உங்களிடம் விளையாடியபடி அவைகளை வெளியே எறிந்துவிட்டேன்.

•••

கடும் பயிற்சி

ஏன், நீ ஒரு மணலான உணவை சமைக்கிறாய்

யாரதை சாப்பிடப் போகிறார்கள்?

வெளியே வயல்களில் தானியக் கதிர்கள் முதிர்ந்திருக்கின்றன

ஏன், குருவிகளைக் காட்டிலும் நீ குறைந்தவளா !

உஹ்! ஊச்!

தூரத்து விளக்குகள்

இரவில் பயணிக்கையில்

தூரத்து விளக்குகள் என் பலமாய் இருந்தன.

அவைகளால் மட்டுமே

அவைகளால் மட்டுமே

எனது நேற்று இன்று மற்றும் நாளையும் கூட.

வழி கேட்டல்

புத்தம் என்றால் என்ன என்று கேட்கும் மரமண்டைகளே

பதிலாக இப்பொழுது வாழ்கிற ஒவ்வொரு உயிரையும் பற்றி கேளுங்கள்

உயிர்த்திருக்கும் பொருட்கள் எல்லாவற்றையும் பற்றி கேளுங்கள்

நீங்கள் பசித்திருக்கும் பொது

உணவைப் பற்றிக் கேளுங்கள்.

வழியைப் பற்றி நிலவொளியிடம் கேளுங்கள்.

எலுமிச்சை மரங்கள் பூத்திருக்கும் ஒரு துறைமுகத்தைக் கண்டுபிடியுங்கள்

அங்கே எலுமிச்சை மரங்கள் பூத்திருக்கின்றன

துறைமுகத்தில் குடிப்பதற்கான இடங்கள் பற்றிக் கேளுங்கள்

கேளுங்கள் கேளுங்கள் கேட்பதற்கு எதுவும் மிஞ்சியிருக்காத வரை.

••••

download (4)