Category: இதழ் 137

கைவிடப்பட்ட பிரதி / ( ஆலன் கின்ஸ்பெர்க்: ஹௌல் மற்றும் சில கவிதைகள் நூலுக்கான முன்னுரை)

download (19)

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இதனை இறக்கி வைக்கவும் முடியாமல், தூக்கி எறியவும் முடியாமல் சுமந்து அலைந்து கொண்டிருக்கிறேன். வலசை இதழுக்காக அவ்வப்பொழுது, உலகக் கவிதைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த சமயம். ஒரு பின்மதியப் பொழுதில், ஸ்ரீதர் ரங்கராஜ் அழைத்திருந்தார். வழக்கமாய் சந்திக்கும் மல்லிகை காபி பாருக்குச் சென்ற பொழுது, கவிஞர் ஸ்ரீசங்கரும் உடனிருந்தார். என்னைப் பார்த்ததும், இருவரும் கண்களால் பேசிக் கொண்டனர். “இவர் அதுக்கு சரிப்பட்டு வருவாரா?” என்பது போல ஸ்ரீசங்கர் கேட்க, ஸ்ரீதர் வழக்கமான மென்மையான புன்னகையோடு ”ஆம்” என்பது போல கண்களை மூடித் திறந்தார். அப்படித் தான் சரக்கு கைமாறியது. நானும் ஸ்ரீதரும் இணைந்து, ஆலன் கின்ஸ்பெர்க்கின் “ஹௌல்” நீள்கவிதையை மொழிபெயர்ப்பது என்று முடிவானது. அக்கவிதைக்கான மனநிலையை உணர்ந்து கொள்வதற்காக “ஹௌல்” குறுந்தகடையும் கொடுத்திருந்தனர்.

வீட்டுக்கு வந்து, படத்தைப் பார்த்துவிட்டு, பிரதியையும் ஒரு முறை வாசித்த பின், வழக்கமாய் செய்யும் ரிவர்ஸ் இன்ஜினியரிங் உத்தியின் மூலம், கவிதையின் பின்புலம், அரசியல், காலாகட்டம் பற்றி அறிய முற்பட்டேன். “ஹௌல்” துவங்கி, ஆலன் கின்ஸ்பெர்க் வழியாக “பீட் தலைமுறை” எழுத்தாளர்கள் ஒவ்வொருவர் பற்றிய சித்திரமும் அவர்களின் படைப்புலகமும் இணைய மேய்ச்சலில் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான, அமெரிக்க கலாச்சாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றின் பாதிப்பில் துவங்கிய இலக்கிய இயக்கமான “பீட் தலைமுறை” குறித்த சித்திரம் கிடைத்தது. 1950களில் அமெரிக்காவின் கலை இலக்கிய செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக மாற்றிய படைப்புகள் அவை. வழமையான நேரடி கதைக்கூற்று முறையை மாற்றியமைத்தல், மனோத்துவ தேடல், பொருள்முதல் வாதத்தை மறுதலித்தல், மாயத்தோற்றம் உண்டாக்கும் போதை, பாலியல் சுதந்திரம் மற்றும் தேடல் குறித்தான சோதனை முயற்சிகள் ஆகியன “பீட்” கலாச்சாரத்தின் மையப்புள்ளிகள் புலப்படத்துவங்கின. ஒரு சுற்று வந்து மீண்டும் “ஹௌலை” நெருங்கும் பொழுது, கொடுக்கப்பட்ட கெடுவான மூன்று மாதங்கள் முடிந்திருந்தன. ஒரு வரியும் மொழிபெயர்க்கத் துவங்கியிருக்கவில்லை.

படைப்பின் கனம் என்னை பலமாக அழுத்தத்துவங்கியிருந்தது. அது தந்த அலைக்கழிப்பு, அன்றாட வாழ்வை பாதிக்குமோ என்ற பயம் சூழ்ந்த பொழுது , கவிதையை மொழிபெயர்க்கும் பணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஸ்ரீதரை அழைத்தேன். பொதுவான உரையாடல்களுக்கு நடுவே ஸ்ரீதர் கூறிய நம்பிக்கை வார்த்தைகள் உற்சாகமளிக்க, சரி, முடிந்தவரைப் பார்க்கலாம் என்று எண்ணி, பணியைத் தொடரலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் ஒவ்வொரு முறை “ஹௌல்” கவிதைக்குள் நுழைய முயலும் போதும், ஆற்றாமையும் துயரும், விரக்தியான மனநிலையும், கையறுநிலையும் தானாக சூழ்ந்து கொள்ளும். ஒரு வழியாக “ஹௌல்” முதல் பாகம் பாதியளவும், இரண்டாம் பாகம் முழுமையும் முடித்திருந்தேன். மேலும் ஆறுமாதங்கள் சென்றிருந்தன. ஒரு கட்டத்தில், அக்கவிதையின் ஊடாகவே உழல்வது, விட்டேர்த்தியான மனநிலையிலேயே கொண்டு போய் நிறுத்தியது. மனதை சமநிலைப்படுத்த, இடையிடையே வேறு புத்தகங்களை வாசித்தாலும், இந்த அலைக்கழிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. இதிலிருந்து விடுபட மொழிபெயர்ப்பை நிறுத்திவிடுவது தான் சரி என்று மீண்டும் தோன்றியது.

எடுத்துக் கொண்ட வேலையைப் பாதியில் கைவிடுவது குறித்த தயக்கமிருந்தாலும், கவிதை ஏற்படுத்திய வாதை, அந்த மனநிலையில் இருந்து வெளியே வந்தால் போதும் என்ற நிலைக்குத் தள்ளியிருந்தது. காலம் கடந்து கொண்டே செல்வதைக் காரணம் காட்டி, மொழிபெயர்த்தது வரை ஸ்ரீதருக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு, அதிலிருந்து விலகிக் கொள்வதாய் அவரிடம் தெரிவித்தேன். அதே சமயத்தில், அவரும் அக்கவிதையை மொழிபெயர்க்கத் துவங்கி இருந்தார். என் மின்னஞ்சலைப் பார்த்துவிட்டு, மொழிபெயர்த்தவரை மிக நன்றாக வந்திருப்பதாகக் கூறி, தொடர்ந்து முயன்று முடித்துவிடும் படியும், காலக்கெடு பற்றி கவலைப்படாமல் தோன்றும் போது செய்யுமாறும், ஆனால் நிச்சயம் முடிக்க வேண்டும் என்றும் உற்சாகமூட்டினார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியச்சூழலில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் அக்கவிதையின் மொழிபெயர்ப்பு, நிச்சயம் ஒரு மிகப்பெரிய பதிவுகாக இருக்கும் என்றும் அவர் சொன்ன வார்த்தை புதுத் தெம்பைக் கொடுக்க, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். தொடர்ச்சியான அவரது உள்ளீடுகளோடு, நானே “ஹௌல்” கவிதையை முழுமையாக மொழிபெயர்க்கிறேன் என்று சொன்னதையும் ஸ்ரீதர் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்.

ஒருவழியாய், “ஹௌல்” மூன்று பாகங்களையும் முடித்த பிறகு, ஸ்ரீசங்கர் ஒருமுறை திருத்தங்கள் பார்த்து உதவினார். இதற்கிடையே கவிஞர் நேசமித்ரனிடம் அனுப்பி கருத்துக்களைக் கேட்டிருந்தேன். அவரது நுணுக்கமான பார்வை, பிரதியை இன்னும் செழுமையாக்கியது. இப்படியாக, “ஹௌல்” தமிழ் மொழியாக்கம் தயாராகி இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். நீள்கவிதையின் அளவு, சிற்றிதழ்களில் கொண்டு வருவதற்கு பெரியதாகவும், புத்தகமாக வெளியிடுவதற்கு சிறியதாவும் அமைந்தது. எனவே “ஹௌல்” உடன் சேர்த்து கின்ஸ்பெர்க்கின் வேறு சில முக்கிய கவிதைகளையும், அவரது புகழ்பெற்ற “பாரிஸ் ரிவ்யூ” நேர்காணலையும் இணைக்க முடிவு செய்து, அதற்கான தேடலைத் துவங்கினேன். கவிஞர் சமயவேல் அவர்கள் தந்த கின்ஸ்பெர்க் படைப்புகளின் தொகுப்பான “எஸென்ஸியல் கின்ஸ்பெர்க்” சரியான கவிதைகளை தேர்ந்தெடுக்க உதவியாய் இருந்தது.

”ஹௌல்” உடன், கடந்த இரண்டு வருடங்களாகச் சிறுகச் சிறுகக் கோர்த்த மற்ற கவிதைகளும், கின்ஸ்பெர்க் நேர்காணலும், ”ஹௌல்” பற்றிய கட்டுரையும் சேர்ந்து இன்று ஒரு தொகுப்பாகி இருக்கிறது. ஆக, இது இப்பொழுது, இப்படியாகத் தான் வெளியாக வேண்டும் என்று இருந்திருக்கிறது. ஆலன் கின்ஸ்பெர்க் கவிதைகளுக்கு, தமிழில் ஒரு ஆவணமாக இத்தொகுப்பு இருக்குமென்று நம்புகிறேன். இந்த நீண்ட பயணத்தில், எனது மொழிபெயர்ப்புக்கு பல நண்பர்கள் உறுதுணையாகவும், சரியான கருத்துக்களைக் கூறி வழிநடத்துபவர்களாகவும், உற்சாகமூட்டுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பெருந்தகையாளர்கள் ஸ்ரீதர் ரங்கராஜ், ஸ்ரீசங்கர், நேசமித்ரன், கார்த்திகைப்பாண்டியன், சமயவேல், எஸ்.அர்ஷியா, பாவண்ணன், சிபிச்செல்வன், போகன் சங்கர், வெய்யில், கௌதம சித்தார்த்தன், அருணாசலம், பரணிராஜன், நூல்வனம் மணிகண்டன் மற்றும் வாசிப்போர் களம் நண்பர்கள் ஆகியோருக்கும் எனது அன்பும், நன்றியும். இத்தொகுப்பை பதிப்பிக்கும் ”பாதரசம்” சரோலாமா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

•••

2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

download (11)

download (12)

2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2016 ஆண்டிற்கான “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன.

1996 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் விளக்கு விருது இவ்வாண்டிலிருந்து இருவருக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டு எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவரையும் எழுத்தாளர் அம்பை, கவிஞர் தமிழச்சி, கவிஞர் பெருந்தேவி ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளது.

ஒவ்வொன்றும் ரூ 75,000 மதிப்புள்ள இவ்விருதுகள் விரைவில் சென்னை அல்லது தமிழகத்தின் வேறொரு நகரில் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும். விழாவைப் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

ராஜ் கௌதமன்

விருதுநகரில் 1950ல் பிறந்து புதுச்சேரியின் காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தமிழ்த்துறைத் தலைவராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்சமயம் திருநெல்வேலியில் வசிக்கும் எழுத்தாளரும் பேராசிரியருமான ராஜ் கௌதமன் தமிழ் மற்றும் இந்திய நவீன இலக்கியத்திற்கும் ஆய்வுப் புலத்துக்கும் கிடைத்திருக்கும் அருங்கொடை என்றால் மிகையில்லை.

பிரதிகளை வெறும் மொழிவளப் பெட்டகமாகவோ காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவோ குறைத்து அணுகாமல் அவற்றில் சமூகப் பண்பாட்டு ஒழுங்குகளையும் ஒழுங்குகளின் வம்சாவழியியலையும் அடையாளப்படுத்திய முன்னோடி ராஜ் கௌதமன்.

ஆதிக்கக் கருத்தியலை மறுத்து “கலகப்பாங்கான தலித் பண்பாட்டைக் கட்டியெழுப்பவேண்டும்” என்று கூறும் ராஜ் கௌதமன் அத்தகையப் பண்பாடு ஒடுக்கப்பட்டிருப்பவரின் விடுதலைக்கும் மானுட சுதந்திரத்துக்கும் சகவாழ்வுக்கும் தேவையான அடித்தளம் என்பதைத்தன் ஆய்வெழுத்திலும் புனைவாக்கங்களிலும் தொடர்ந்து எடுத்துக்காட்டியிருக்கிறார்.

ராஜ் கௌதமனின் எழுத்துப் பரப்பு சங்ககாலம் தொட்டு நவீனகாலம் வரை பரந்து விரிந்திருப்பது. தமிழ்ச் சமூகம் உடைமைச் சமூகமாக மாறிய வகையில் சங்க இலக்கியத்தில் இயங்கும் பால் அரசியலையும் அறநெறி மதிப்பீடுகளின் கட்டமைப்பையும் அவர் நூல்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன.

ராஜ் கௌதமனின் சிந்தனைச் சட்டகம் இலக்கிய அழகியலைத் தாண்டி, சமூகப் பண்பாட்டுத் தளங்களின் பொருள்கோடலோடும் பொருண்மையான மனித இருப்பைக் குறித்த அக்கறையோடும் இயங்குவது. அயோத்திதாசரின் சிந்தனைகளை முன்வைத்துப் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளின் தமிழக, இந்திய வரலாற்றெழுதியலை ஆராய்ந்தவர். அயோத்திதாசரோடு கூடவே தமிழ் நவீன மனப்பரப்பின் உருவாக்கத்தில் இன்றியமையாத கண்ணியான இராமலிங்க வள்ளலாரை முன்வைத்துச் சமூகவரலாற்றை எழுதிப்பார்த்திருக்கிறார்.

வர்க்கம்,சாதி, பாலினம் என்ற மூன்று வகைகளிலும் ஒடுக்கப்படுபவர்களின் பார்வையிலிருந்து வரலாற்றை அணுக அவர் பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார். புதுமைப்பித்தன், அ. மாதவையா போன்றவர்களின் படைப்புகளைக் குறித்த ஆராய்ச்சியை அன்றைய காலகட்டம், எழுத்துச் சூழல் இவற்றின் தறுவாயில் இருத்தி நவீனத் திறனாய்வுப் புலத்தில் அவர் செய்திருக்கும் இடையீடு சிறப்பானது.

ஆராய்ச்சியாளராக மட்டுமின்றி புனைவெழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் ராஜ் கௌதமனின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. பதினேழு ஆராய்ச்சி நூல்களோடு சார்ல்ஸ் டார்வினின் The Origin of Species இல் தொடங்கி மேல் நாட்டுப் பெண்ணியக் கோட்பாட்டுச் சிந்தனைகள், இந்திய ஆராய்ச்சியாளர்களின் விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள் குறித்த ஆராய்ச்சிகள், எரிக்ஃப்ராமின் The Sane Society வரை செய்துள்ள அரிய மொழியாக்க நூல்கள், சுயசரிதைத் தொனியில் அமைந்த மூன்று நாவல்கள், சில சிறுகதைகள் எனத் தன் வெளிப்பாட்டுக் களத்தை அகலமாகவும் செறிவாகவும் அமைத்துக்கொண்டவர் ராஜ் கௌதமன்.

அத்துடன் “பிரக்ஞை”, “பரிமாணம்”, “படிகள்” போன்ற சிறு பத்திரிகைகளோடு செயல்பட்டவர். 1990-களின் தொடக்கத்தில் வெளிவந்த “நிறப்பிரிகை” இதழின் கருத்துவெளியைக் கட்டியமைத்ததில் பங்காற்றியவர்.
சமூக வரலாற்றெழுத்துக்கும் திறனாய்வுக்கும் நவீனத்துவத்துக்கும் அளப்பரிய பங்காற்றியிருக்கும் எழுத்தாளர் ராஜ் கௌதமனைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2016ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருதுக்குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் பேருவகையும் கொள்கின்றன.

சமயவேல்

கரிசல் பகுதியான வெம்பூரில் 1957ல் பிறந்த கவிஞர் சமயவேல் அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்று மதுரையில் வசிக்கிறார். ஆறு கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும், கட்டுரைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். “கவிதா இயக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள இன்று வரை, விழிப்பான அரசியல் மற்றும் தத்துவப் பிரக்ஞையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளேன்” என்று சொல்லும் கவிஞர் சமயவேல் எண்பதுகளின் பிற்பகுதியில் எழுத வந்தவர்.

‘போதனையாக மாறாத கவித்துவம்’ எனப் பிரமிளால் பாராட்டப்பட்டுப் பரவலான கவனம் பெற்ற ‘காற்றின் பாடல்’ எனும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு 1987ல் வெளியானது. இவர் தொடர்ச்சியாக கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்புப் பணி எனத் தமிழ் இலக்கியப் பரப்பில் இயங்கிவருபவர். இளைய தலைமுறைப் படைப்பாளிகளிலும் கவனம் குவித்து அவர்களது படைப்புகள் குறித்து சமயவேல் எழுதியிருக்கும் கட்டுரைகளின் சமீபத்தியத் தொகுப்பான “ஆண்பிரதியும் பெண் பிரதியும்” இவரது நுட்பமான ரசனை உணர்விற்குச் சான்று.

”கவிதைக்கும் அதை எழுதுகின்ற கவிஞனுக்கும் இடையில் முரண்பாடு இருக்கவே கூடாது” எனக் கூறும் சமயவேலின் கவிதைகள் எளிமையும் உண்மையும் கரிசல் மண்ணின் வேரோடு இயைந்த வெள்ளந்தித்தனமும் உலகமயாக்கலின் மாற்றத்தில் அருகிவரும் மனிதத்துவமும் நிறைந்தவை.

சமவேலின் கவிதா சக்தி வெம்பூர் கிராமத்தின் ‘வெளி’ தான். நுகர்வுக் கலாச்சாரத்தின் முதல் பலி உழவும் உழவனும் எனும் பெரும் துக்கத்தின் கையாலாகாத்தனத்துடன் மனிதத்துவத்தின் நீட்சி மீது நம்பிக்கை வைத்து இயங்குகின்ற பின்காலனியக் கவிஞனின் குரல் அவருடையது. இருள், மரணம், தனிமை இவற்றை வலிமையான படிமங்களாகக் கொண்டு உருக்கொள்ளும் இவரது கவிதைகள் தன் கரிசல் மண் சார்ந்து வேரூன்றி நிற்கும் அதே வேளையில் பிரபஞ்சத்தின் தொடர் கண்ணியாகப் பெருங்காதலுடன் தம்மைக் கலையின் வழியில் இணைத்துக் கொள்பவை. உரத்துப் பேசாத, ஆழ்மனத்தில் தைத்துத் தொடர்ச் சலனங்களை ஏற்படுத்துகின்ற கவிதை வகைமை அவருடையது.

”படைப்பு மனநிலைக்கான குழந்தைமையை மட்டுமே தக்க வைத்துக் கொண்டிருக்கிற” அபூர்வக் கலைஞனான சமயவேலின் கவிதைகள் தமிழ்க் கவிதைப் பரப்பில் தனித்ததொரு அடையாளத்துடன் அதன் செழுமைக்குச் செறிவான பங்களித்திருப்பவை. கரிசல் மண்ணின் தன்மைகளைத் தனது கவிதைகளின் அடிநாதமாய் வரித்துக்கொண்டு நவீன வாழ்வின் தீர்வுகளற்ற துயரத்தையும் அவநம்பிக்கையையும் நடுக்கமுடன், இயலாமையுடன், சன்னமான தீர்க்கமுடன் முன்வைக்கின்ற அவரது கவிதைத் தொகுப்புக்கள் தமிழ்க் கவிதை உலகிற்கு மிக முக்கியமான பங்களிப்புகள்.

2018ற்குள் “உலகக் கவிதையியலும், தமிழ்க் கவிதையியலும்” எனும் ஒப்பாய்வு நூலையும், ‘மெகா நாவல்’எனப்படுகின்ற ஒரு படைப்பையும் நிறைவேற்றுகின்ற முயற்சியுடனும், கனவுடனும் தமிழ்க் கவிதைப் பரப்பில் ஒரு ‘காற்று நதியைப்’ போலத் தொடர்ந்து இருபத்தியேழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றார். “காட்டில் எங்கோ ஒரு மூலையில்/ உயர்ந்த மரங்களின் அடியில்” அமைதியாகக் கிடக்கின்ற ஊருணியைப் போன்ற அவரது இருப்பையும் ஆழமான பங்களிப்பையும் கௌரவித்தும் மதிப்பளித்தும் 2016ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருதுக்குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் பேருவகையும் கொள்கின்றன.

••••

வெற்றிட வரலாறுகள் – ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள்

images (3)

(1)

யாருடைய வெற்றிடத்தையும் யாராலும் இட்டுநிரப்ப முடியாது.
ஒரு குழியாய், பள்ளமாய் அகழியாய் பள்ளத்தாக்காய்
அதலபாதாளமாய்
அந்த வெற்றிடம் அப்படியே இருக்கும்.
அவ்வப்போது பள்ளம் பள்ளத்தாக்காகவும்
குழி அகழியாகவும் வாய்ப்புகள் அதிகம்.
அங்கங்கே அவற்றின் விளிம்புகளில் இடற நேர்ந்து
கால்கட்டைவிரலில் குருதி கசியலாகும்.
குதிகாலில் குத்தும் கூர்கல்லாய்
தலைசுற்றி ஸ்தம்பித்து நிற்கும்படியாகும்.
குழிதானே தாண்டிக் கடந்துவிடலாம் என்று பார்த்தால்
பெரும்பள்ளமாய் வாய்பிளந்து விழுங்கித் தீர்க்கும்.
சுற்றுப்பாதையில் போகலாம் என்று எதிர்த்திசையில் திரும்பினால்
நமக்கு முன் நம் நிழலாய் அங்கே நீண்டிருக்கும்.
நீளும் அந்த வெற்றிடத்தை
நினைவுகளால் இட்டுநிரப்ப முயன்றால்
முன்பின் பார்த்திராத தன் விசுவரூபத்தைக் காட்டி
மூச்சுத்திணறச் செய்யும்.
என்றும் பள்ளத்தைப் புதைகுழியாக்கி நம்மை
யதில் தள்ளிவிடும்
வெற்றிடங்களினூடாய்
வாழ்ந்திருக்கிறோம்
நீளந்தாண்டப் பழகியவாறும்
நீள் இறக்கைகளுக்காகக் கடுந்தவமியற்றியவாறும்.

(2)

“தப்புத்தப்பாய் மொழிபெயர்க்கிறார்கள்” என்று
பொத்தாம்பொதுவாய் பழித்துக்கொண்டிருக்கிறார்
பெரும்படைப்பாளி ஆணொருத்தர்.

“ஒரு ……………..யும் பிடுங்க முடியாத இது என்று
சட்டத்தில் தொங்கப்போகிறதோ”வென
தனக்குப் பிடிக்காத தலைவரை
அத்தனை ஆங்காரமாய்
கரித்துக்கொட்டிக்கொண்டிருக்கிறாள்
பேரறிவுஜீவிப் பெண்ணொருத்தி.

இருவருக்குமிடையே
சமதூரத்திலான வெற்றிடத்தில்
வற்றாத ஜீவநதியாய் சுழித்தோடிக்கொண்டிருக்கும்
வாழ்வும் மானுட விழுமியங்களும்.

***

மலையை விட்டுச் செல்லுதல் (Leaving the Mountains) கொரியமொழி : கிம் சியாங் டாங் (KIM SEO`NG – DONG), தென்கொரியா ஆங்கிலம் : ஜான் எம். ஃப்ராங்க்ல் (John M Frankl) / தமிழில் ச. ஆறுமுகம்.

download (10)download (10)

எனது முதல் விழிப்புணர்வினை நினைவுகொள்கிறேன்.

ஆம். மலைகளின் நடுவே அந்த ஆழமான பள்ளத்தாக்கு என் நினைவுக்கு வருகிறது. அது இளவேனிற்காலம்; அடர்ந்து வளர்ந்திருந்த மரஞ்செடிகொடிகள் அனைத்துமே ஆழ்ந்த பச்சைநிறத்தை வாரிப் பூசிக்கொண்டிருந்தன. வியப்பின் ஆழப்பெருமூச்சு ஒன்றினை வெளிப்படுத்தி, என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில், பரந்த வானத்தைப் பயமுறுத்துவது போல் ஓங்கி வளர்ந்திருந்த அந்த ஓக் மரத்தின் அடிப்பாகத்தை என் இருகரங்களாலும் பற்றிக்கொண்டேன்.

அனைத்தும் நெடுங்காலமாக அப்படிக்கப்படியே இருந்துவருவதான உணர்வு. மலையின் மிக ஆழமான பள்ளத்தாக்கு, பாய்ந்தோடும் கானாறுகள், வண்ண வண்ணமாக, அனைத்து வண்ணங்களிலும் தலைவிரித்து, வேனில் சுமக்கும் மரஞ்செடிகொடிகள், எங்கெங்குமாகக் கேட்கும் வினோதப் பறவையொலிகள்,

மண்ணுலகத்திலிருந்து வேறு எவருமே இல்லை; ஆனாலும் என் இதயத்திற்குள் புத்தரைக் காணமுடியவில்லை. நிலைமையை இன்னும் கடினமாக்கிக் கதிரும் மறைந்துபோக, மீண்டுமொரு இரவு வந்தேவிட்டது; நாளின் அந்த நேரத்தைக் கழிப்பதில் எனக்குக் குறிப்பிட்டதொரு கடும் பிரச்னை இருந்தது. மலைக்கென்ன, அது என்றென்றைக்கும் அமைதிப்புன்னகை வீசும், ஆனால் எனக்குத் தெரியும், அங்கேயே நின்று, அலைந்துதிரியும் ஊசலாட்டத்திலேயே நான் மற்றுமொரு நாளினை வீணாக்கிவிட்டேன். என் இளமைப்பருவத்திலேயே, நான் ஒருநாள் திடீரெனப் போதிமனத்தின் அழகொளியைப் பெறுவேனெனச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்;

அதனாலேயே துறவியாவதற்காக மலைகளுக்குள் வந்துவிட்டேன். அதிலும் குறிப்பிட்ட இந்த நாளில், நான் எவ்வளவுதான் முயற்சியெடுத்து எவ்வளவு உயரம் ஏறினாலும் மலையின் உச்சி கண்ணுக்குத் தென்படவேயில்லை. அது தென்படாமலிருப்பது என்னை மேலும் மேலும் முயற்சியெடுத்து இன்னும் உயரத்திற்கு ஏறச் செய்யவேண்டியதுதான் நியாயமென்றாலும், மற்றுமொரு பகல்பொழுது வீணாகக் கழிந்ததில், என்னால் செய்யக்கூடியதெல்லாம் இம்மண்ணுலகப் பாவங்களால் கறைபடிந்த இந்த உடலத்தைக் கீழே சாய்க்க ஒரு இடத்தைத் தேடுவதுதான்.

நான் குந்தியமர்ந்து, நாடிக்குத் தாங்கலாகக் கால் மூட்டுகளைக் கொடுத்தேன். பின்பு நான் `குவான் சேயும் போசால்` (கருணை மிக்க போதிசத்துவரே) என அழைத்துப் பழக்க தோஷத்தில் அவரது புனிதப் பெயரை மீண்டுமொருமுறை உச்சரித்தேன். நான் முழுவதுமாக மனச்சோர்வுற்றிருந்தேன்.

நான் துறவியாக இல்லாதிருந்தால், சாதாரண மனிதன் ஒருவனைப் போல வண்ண ஆடைகளும் மழிக்கப்படாத நீண்ட தலைமுடியுமாக இருந்தால், என்னால் ஒரு சிகரெட் புகைக்கமுடியும் என்பதோடு அறியாமையைப் போல அதன் முனையிலிருந்து எழும் புகைச்சுருள்களில் என் துயரம்படிந்த மனத்தினை ஒரு கணமாவது ஆற்றிக்கொள்ளமுடியும்.

ஆனால், மீன், இறைச்சி, மது மற்றும் புகையிலையை பிளேக் நோயைப் போல விலக்கவேண்டிய புத்தத் துறவியாகிய நான், அங்கே அமைதியாக உட்கார்ந்து அனைத்து புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் பெயர்களை வெறுமனே உச்சரிப்பதில் தான் ஆறுதல் காணமுடியும்.

இருட்டில் அந்தப் பாதையில் ஊர்ந்தாவது சென்றுவிடத்தான் நான் தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்தேன். அந்த மலைத்தொடரில் எங்கேயோ ஓரிடத்தில் வசிப்பதாகச் சொல்லப்படுகிற மகா குரு ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தேன். அதற்காகவே மலையேறும் நான் அவரது தோற்றத்தைப் பற்றிச் சிறிது கேள்விப்பட்டிருக்கிறேன்.

முதல் பார்வைக்கே, அவரது தடந்தோள் உடலமைப்பு மற்றும் நிமிர்ந்த பெருநடைப் பாவனை காரணமாக, அவர் மலைகளில் தனித்து ஒதுங்கி வசிக்கும் காவித்துறவி போலன்றிப் பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட போர்ப்படையினை நடத்தும் தலைமைத்தளபதி போலவே பெரிதும் தோன்றுவார். அப்புறம், அவரது கண்கள் இருக்கவே இருக்கின்றன;

புலியினுடையதைப் போன்ற அவரது கண்களில் தெறிக்கும் நெருப்பொளியினை நோக்கும் எந்த மனிதனானாலும் சரி, தானாகவே தலைகுனிந்து வணங்குவான். அவரது இடியொலிக் குரலின் அதிர்வு சிங்கத்தின் முழக்கத்தை ஒத்து, கேட்பவரின் செவிப்பறையை, வெடிச்சத்தமாகத் துளைத்துக் கிழிக்கும்.

அவரது வயதினைப் பொறுத்தவரையில், சராசரி உலகினரின் கணக்குப்படி அவரது வயது 71. ஆனால், அவர் மிக இளமையிலிருந்தே அவரது முழு வாழ்க்கையினையும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து, பாவக்கறையற்ற அவரது மாமிச உடலினை புத்தர் மற்றும் லாவோஜியின் போதனைகளுக்கே அர்ப்பணித்துள்ளார். அவரது குருவின் போதனைகளின்படி மட்டுமே மனம் மற்றும் உடலினை இயக்குகிறார். இந்த 71 வயதிலுங்கூட அவர் அந்த போதனைகளிலிருந்து ஒரு மயிரளவு அகலம் கூட விலகியதேயில்லை.

யுக, யுகங்களுக்கும் அவரே உண்மையான ஒரு குருவாகத் திகழ்கிறார். அது மட்டுமல்ல. அவர் பெற்றிருக்கிற புத்தொளியறிவு எவ்வளவுக்கு மேம்பட்டதென்றால், இந்த உலகின் அனைத்து வழிமுறைகளும் எல்லையற்ற அண்டப்பெருவெளியின் அனைத்தியக்கக் கொள்கைவிதிகளும் – பிறரால் கணிக்கக்கூட முடியாத, எக்காலத்திற்கும், எல்லா இடம், பொருளுக்கும் பொருந்துவதும் பெரும் புதிர்களாகத் தோற்றமளிப்பவற்றையுங்கூட – அவர் அறிவார்.

ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால், மேன்மைக்குரியதும் அழகானதுமான அவரது பெயரினை ஒருவர் கேள்விப்படுவதென்பது எப்போதுமே வதந்தி வடிவத்திலேயேயிருக்கிறது. அவரது பேரழகுத் தோற்றத்தைக் கண்ணால் கண்டவரோ அல்லது பிரவாகமாய்ப் பொங்கிவரும் அவரது உரைகளைத் தம் காதால் கேட்டவர்களோ யாருமே இல்லை.

அதுபோலவே அவரது கருணைமிக்க வழிகாட்டுதலில் புத்தொளியறிவினைப் பெற்றவர்கள் எவருமேயில்லை. ஆனாலும், வினோதம் பாருங்கள், அவரது தோற்றம் குறித்த கதைகளும் அவரது போதனைகளும் மலைகளிலிருந்தும் இறங்கி, மக்களை வந்தடைந்துள்ளதுடன் மண்ணுலகின் பாவங்கள் நிறைந்த தெருக்களில் அவற்றை எல்லோராலும் கேட்கமுடிகிறது.

அவரது பெயர் `ஒற்றைவிரல்`. அவரொன்றும் அப்படிக் கூப்பிடுமாறு யாரிடமும் வேண்டிக்கொள்ளவில்லை; சொல்லப்போனால் யாராவது அவரிடம் `நல்வழி` பற்றிக் கேட்கும்போது எதுவும் சொல்லாமல் ஒற்றை விரலை உயர்த்திக் காட்டியதால்தான் அப்படியொரு பெயரைப் பெற்றார். போதாக்குறைக்கு, அவர் ஒரு விரலை வேறு இழந்திருந்தார். அதைப்பற்றி ஒரு கதைகூட இருக்கிறது.

அவர் ஒரு குருவின் வீட்டில் தங்கி, இளம் பயிற்சித் துறவியாகப் பணிவிடைகள் செய்திருந்த போது, வெளியே சென்றிருந்த அவரது குருவைச் சந்தித்து வணக்கம் செலுத்திச் செல்வதற்காக, அலைந்து திரியும் துறவி ஒருவர் வந்திருந்தார். துறவியை வரவேற்ற அவர், என்ன விஷயமாக அவர் வந்திருக்கிறாரென வினவினார். முதிய குருவின் அறிவுரைகளைக் கேட்பதற்காக வெகுதூரம் பயணித்து வந்திருப்பதாக, அவர் தெரிவித்தார்.

குரு எப்போது திரும்பிவருவாரென்று சரியாகச் சொல்வதற்கு எந்த வழியுமில்லையென துறவியிடம் அவர் கூறினார். நேரம் தவறிப் போனதற்கு ஏதோ காரணத்தை முனகிக்கொண்ட துறவி உதட்டைச் சுழித்து, சுச்சுச்சூவென இச்சுக் கொட்டியபோது, அவரது முகம் சோர்விலிருந்து துயரம்மிக்கதாக மாறியது. பயிற்சித்துறவி, விருந்துத் துறவியிடம் ஏன் மிகக் கவலையாகத் தோன்றுகிறீர்களெனக் கேட்க, வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு, குருவிடம் `நல்வழி` குறித்துக் கேட்க வந்ததாக, மிகுந்த துயரத்துடன், கூறினார். பயிற்சித்துறவி, பொங்கிவந்த சிரிப்பினை அடக்க மேற்கொண்ட கடினமுயற்சியில் குடற்காற்று ஒன்று அவர் அறியாமலே பறிந்து வெளியேறியது.

இந்த அலைந்து திரியும் துறவிகள் நாள் தவறாமல் வரிசையில் வந்து அதே கேள்வியைக் கேட்கவும், நாளும் அவரது குரு அமைதியே காத்து ஒற்றைவிரலை உயர்த்திக் காட்டுகிறார். `நல்வழி` குறித்த இந்தக் கேள்விக்கு நூறுமுறையென்றாலும் திடமுடன் பதில்சொல்லத் தேவையானதை பயிற்சித்துறவி அறிவார். அமைதியும் மாட்சிமையும் கொண்ட தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது வெளிப்படையாகவே தெரிய, பயிற்சித்துறவி அவர் பார்த்திருந்த புத்தர் சிலைகளின் பத்மாசனத்தில் கால்களை மடக்கி அமர்ந்து, துறவியிடம் `நல்வழி`

எதுவெனக் கேட்குமாறு கூறினார். துறவி வாயடைத்துப் போனாரென்றாலும் பயிற்சித்துறவியின் சீர்மைத்திறம் அவரை ஆட்கொண்டது. பற்பல முதுநிலைத்துறவியருக்கு ஒரு இளம் விறகுவெட்டியின் இசைக்குழலொலியில் ஏற்பட்ட திடீர் விழிப்புணர்வினை அல்லது மிருகங்களின் விளையாட்டினை லயித்துப் பார்த்திருக்கும்போது ஐயுறவுகளெல்லாம் அற்றுப்போனதை அவர் கேள்விப்பட்டிருக்கிறார்.

`நல்வழி`யைத் தேடி வெகுதூரம் பயணித்து வந்திருந்த அ
வர், பிறரொருவரின் வயதினை வைத்துத் தீர்ப்புகளை உருவாக்கக்கூடாது என்பதை நன்கு அறிவார். தனது முட்டாள்தனத்தை தனக்குத்தானே நொந்துகொண்ட அவர், அவரது காவியுடைகளை நேர்படுத்திச் சீராக்கிக்கொண்டு, இளம் பயிற்சித் துறவியை முதிய குருவாகவே பாவித்து, அவரது முகத்தை ஏறிட்டு நோக்கி, மும்முறை வணக்கத்தினைப் பவ்யமாகச் செலுத்தி,

`நல்வழி எது?` வெனப் பணிந்துகேட்டார். பத்மாசனத்தில் கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்திருந்த இளம் பயிற்சித்துறவி, வெறுமனே ஒற்றை விரலை உயர்த்திக்காட்ட, அந்த ஊசலாட்டத் துறவி குழப்பத்தில் ஆழ்ந்தாலும், அவருக்கு அங்கிருந்து புறப்படுவதைத் தவிர வேறு வழியில்லாமற்போனது.

முதிய குரு வந்து சிறிதுநேரத்திற்குள்ளாகவே, பயிற்சித்துறவி நிகழ்ந்த கதையை அவரிடம் ஒப்பித்தார். இரு கைகளையும் தட்டி, உரக்கச்சிரித்த குரு, பயிற்சித்துறவியின் முதுகினை மெல்லத் தட்டி, சிங்கக்குருளை ஒன்று என்னிடம் பயிற்சிபெறுவது எனக்குத் தெரியாமற்போயிற்றே, இதை நான் கற்பனையில் கூட நினைத்துப்பார்க்கவில்லையே, என்றார்.

அதைக்கேட்ட பயிற்சித்துறவி, நான் சரியாகச் செய்தேனாவெனக் கேட்க, குருவோ சிங்கங்கள் சிங்கத்தைத்தான் வாரிசாகப் பெறும், மானையல்ல, என்றார். ஆனால், அதன் பின்னர், ”நீ என் வித்தையைக் கற்றுக்கொண்டால், நான் பூவாவுக்கு என்ன செய்வே”னென முனகினார். நீங்கள் என்ன சொல்கிறீர்களென பயிற்சித்துறவி, குருவைக்கேட்க அதொன்றும் முக்கியமில்லையென்றதோடு, நான்தான் உன்னிடம் `நல்வழி` கேட்க வேண்டுமென்றார்.

நீங்கள் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கேளுங்களெனப் பயிற்சித்துறவி சொல்ல, குரு மும்முறை தலைவணங்கி, `நல்வழி` எதுவெனக் கேட்டார். உடனேயே பயிற்சித்துறவி கண்களை மூடி, ஒற்றைவிரலை உயர்த்திக்காட்டித் திடீரெனக் கையைப் பெரும் வலியுடன் பின்னுக்கிழுத்தார். குரு அவரது உள்ளங்கையில் மறைத்துவைத்திருந்த குறுங்கத்தியால் அந்த ஒற்றைவிரலை வெட்டியெடுத்திருந்தார்.

வலியில் கத்திக்கதறி, இரத்தம் ஒழுகும் கையை மறுகையால் பிடித்துக்கொண்டு, தர்ம கூடத்தைவிட்டு ஓடிய பயிற்சித்துறவி, குருவின் இடியோசைக்குரலைக் கேட்டதும், நின்று, தலையை மட்டும் திருப்ப, ஒற்றை விரலைத் தூக்கிக் காட்டியவாறு வீற்றிருந்த குருவைக் கண்டார். பயிற்சித்துறவி திடீரென, அங்கேயே சுற்றிச்சுற்றி ஆனந்த நடனமாடத் தொடங்கினார். அந்தக் கணத்தில் அவர் புத்தொளியறிவு பெற்றதாக, கதிர், நிலவு, வானம், விண்மீன், மலை, பூமி, கடலென அண்டப் பெருவெளி அனைத்துமே அந்த ஒற்றை விரலுக்குள் சுற்றியதைப் பயிற்சித்துறவி கண்டதாக, பிற்காலத்தில் கூறிக்கொண்டார்கள்.

கோவில்களிலும், மண்ணுலக வீதிகளிலும் நான் சுற்றியலைந்து, அந்த மகா குரு ஒற்றைவிரலை இழந்த கதையாக, இதைத் தான் கேள்விப்படமுடிந்தது. அதுவும் முழுக்க முழுக்க வதந்தியாக, எவ்வித நிரூபணமும் இல்லாமலிருந்ததால் தான், அவரை நான் நேரில் சந்திக்கத் துடித்தேன். அவரைப்பற்றி உறுதியான எந்த ஒரு தகவலும் இல்லாதநிலைதான், அவரைத் தேடுவதைத் தவிர்க்கமுடியாத ஒரு நிலைக்கு என்னை இட்டுச்சென்றதென்பதை நான் சொல்லித்தானாக வேண்டும். அதன் முடிவில்தான்,

குளிர்காலத் தியானக் கூட்டத்தொடர் நிறைவுபெற்ற உடனேயே, நான் அவரை நாடு முழுவதிலும் அலைந்து திரிந்து தேடத் தொடங்கினேன். மலைகளின் ஆழக்குகைகளிலும் சந்தைக் கூடங்களின் மழிப்பகங்களிலும் அவரைத் தேடினேன். வேசிகள் நிறைந்த விபச்சார விடுதிகளிலும், குண்டர்கள் நடத்திய சூதாட்டக் களங்களிலும், பரபரப்பாளர்கள் நிகழ்த்திய களியாட்டக் கூடங்களிலும் அடிமைகளிலும் அடிமைகள் உழன்ற தொழிற்பட்டறைகளிலும் நான் தேடியலைந்தேன். இம்மண்ணுலகத்தின் அருவருப்பு நிறைந்ததும், மட்டத்திலும் மட்டமானதுமான இருட்டுக் குகைகளுக்குள் எனது நற்பெயர், துறவியாடை மற்றும் தூய உடலினைக் கொண்டலைந்ததற்குக் காரணம்,

அந்த மகா குருவினைச் சந்தித்து `நல்வழி` யினைக் கற்றுக்கொள்ளும் தணிக்கமுடியாத எனது ஆவல்தான். ஆனால், அவர் எங்கு சென்றிருந்தாரென்றோ, எங்கே செல்லக்கூடுமென்றோ எந்தவொரு சிறு யூகத்திற்கும் வழியில்லாமல் செய்திருந்தார். இதோ இங்கிருக்கிறாரெனக் கேள்விப்பட்டு அங்கு செல்வதற்குள் அவரது ஆறு வளையக் கைத்தடியை எடுத்துக்கொண்டு அடையாளமற்ற எங்காவது சென்றுவிடுகிறார்.

இம்மண்ணுலகில் நெடுநாட்களாக, அவரைத் தேடியலைந்த நான், ஒருநாள் கடைசியாக, சிவப்பு அல்லது நீலத்தில் ஏதாவதொரு ஒளிவீசும் அரிக்கன் விளக்குகளுடன் வரிசை வரிசையாக விபச்சாரவீடுகள் அமைந்த தெருவுக்குள் வந்துவிட்டதை உணர்ந்தேன். அந்த வீடுகளின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வேசிகளும் அவர்களின் வாடிக்கையாளர்களும் உடற்பேரின்பத்தை மகிழ்ந்து அனுபவிக்கும் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன.

தொங்கிக்கொண்டிருந்த அரிக்கன் விளக்கு ஒன்றின் அடர் சிவப்பு வெளிச்சத்தின் நேர்கீழாக, வேசி ஒருத்தி தனிமையில் நின்றிருந்ததைக் கண்டேன். முடிந்த அளவு வேகத்தோடு அவளைக் கடந்துவிடத்தான், நான் முயன்றேன். ஆனால், அவள் என்னை அழைத்துவிட்டாள்.

”அடிகளே, இங்கு வாருங்கள்”.

அவள் அருகில் சென்றதும்தான், அம்மைத்தழும்புகள் நிறைந்த அவளது முகத்தையும் பன்றியைப் போல் சப்பையான மூக்கினையும் கண்டேன் – நான் அதுவரைப் பார்த்திருந்ததிலேயே மிகமிக அருவருப்பான ஒரு பெண் அவள்தான். அந்தக் கோரத் தோற்றத்தினால்தான் வாடிக்கையாளர் எவரும் கிடைக்காமல், இந்தப் பிந்திய இரவிலும் போவோர்வருவோரை அவள் தீனக்குரலில் வீணாக அழைப்பதாகவும் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

“நீங்கள் என்னிடமா பேசினீர்கள்?” என நான் கேட்டேன். அவளோ வாடிக்கை பற்றி நான் பேசாததாலோ, என்னவோ என் சட்டைக்கை ஒன்றினைப் பற்றிக்கொண்டாள்.

”என்ன செய்கிறாய்?’’ எனக்கேட்டுக்கொண்டே, அந்தக் கீழ்மகளின் கையைத் தட்டிவிடுவதற்காக எனது ஆடையைப் பிடித்து வெட்டியிழுத்தேன்.

அவள் என்னைப் பார்த்து அடித்தொண்டைக் குரலில், “நீ பார்க்கிற பார்வையிலேயே சொல்லிவிடுவேனே, பொம்பளைக்காகக் காய்ந்து கிடக்கிறவன் தானென்று, உனக்கு நான் ஏன், என் உடலை அர்ப்பணிப்பாகத் தரக்கூடாதென்றாள்.

நான் வாயடைத்துப்போனெனென்றாலும் சமாளித்து, நீங்கள் ஒரு வேசியாக இருக்கலாம்; ஆனால், அதற்காக இந்த உலகத்தைத் துறந்து, கண்டிப்பான புத்தமதப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் என்னைப் போன்ற துறவியிடம் நீங்கள் இப்படியாக நடந்துகொள்வது எந்த விதத்திலும் ஏற்கத் தக்கதில்லையென்றேன்.

எந்த வேசியும் அப்படிச்செய்யத் துணியாத ஒரு காரியமாக அவள் என்னைப்பார்த்து, இரண்டு கையையும் விரித்து, அய்யய்ய வென வலிப்புக் காட்டினாள்; . பின்னர், ஒற்றைக்கண்ணை அநேகமாக மூடுமளவுக்குச் சுழித்து, என்னைக் குத்திவிடுவது போல் ஒரு முட்டியை மடக்கிக் காட்டினாள். பின்னர் மீண்டும் அவளாகவே பேசினாள்.

“உனக்கு என்னதான் பிரச்சினை? நான் அசிங்கமாக இருக்கலாம், ஆனால் இங்கே சுற்றுவட்டத்தில் யாரானாலும் என்னைப் போல் குறைந்த தொகைக்கு, வரமாட்டார்கள். என்னோடு ஒருமுறை வந்துபார், மெய் மறக்கும் இன்பத்தில், உன் உடம்பு முழுவதும் அப்படியே உருகிப்போய்விடும்; நீ அப்படியே அழியாவுடல் தாவோயிசனைப் போல் நேரடியாக சொர்க்கத்துக்குப் போய்விடுவாய்.” என்றாள்.

”கருணை மிக்க போதிசத்துவரே!”

போதிசத்துவரை அழைத்த வாயாலேயே நான், அந்த வேசியைத் திட்டத் தொடங்கினேன். ஆனால், அவளோ மீண்டும் முன்பு போலவே பசப்புவார்த்தை பேசத்தொடங்கினாள்.

“கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு அதை இலவசமாகவே தருகிறேன். நான் எவ்வளவுதான் கீழ்த்தரமானவளாக இருந்தாலும், `கொடையளித்தல்` என்பதன் மிகச்சிறந்த வடிவத்தை நானுங்கூட அறிவேன். தாகத்திலிருப்பவருக்கு தண்ணீர் தருவதும், பசியோடிருப்பவருக்கு உணவளிப்பதும், நோயுற்றவருக்கு மருந்து கொடுப்பதும் சரியானதாக, இருக்கும்போது, பெண்ணுடலுக்காக ஏங்கித் தவிக்கும் ஒருவருக்கு என் உடலையளிப்பதற்குப் போய் நீங்கள் எதனால் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?” என்றாள்.

புத்தரின் போதனைகளிலிருந்து இந்தத் துண்டு துணுக்குகளை இவள் எப்படித் தெரிந்துகொண்டாளென எனக்குத் தெரியாது. ஆனால், அவற்றை அவள் பேசியவிதம், அவளை அப்படியே அறைந்து நசுக்கிவிட வேண்டுமென என்னைத் தூண்டியது. என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவளிடம் மிகுந்த மரியாதையோடு பேசத் தொடங்கினேன். “ நீங்கள் சொல்வதில் முழுமையான உண்மையில்லையெனச் சொல்லிவிடமுடியாது தானென்றாலும், `நல்வழி` தேடும் பிக்கு ஒருவரிடம் உடலின்ப ஆசை பற்றிப் பேசுவது, முழுக்கமுழுக்கப் பண்பாடற்ற செயல்.” என்றேன்.

”நாக்கால் உதடுகளைத் தடவிக்கொள்ளும் ஒருவரிடம் நான் பசியைக் காண்பது போல், உன்னிடம் நான் காண்பது, ஒரு பாழடைந்த கோவிலின் அழிவுகளைத்தான். பத்து வருட வேசித்தொழிலில் எனக்கு மிஞ்சியது என் புழை விரிந்தகன்றதும், மனிதர்களை முகம் பார்த்தறியும் திறமையை நான் பெற்றதும்தான். நீ மட்டும் பொம்பளைப்பசியோடில்லையென்றால் இந்த இரவுநேரத்தில் வேசிவீடுகளைச் சுற்றிக்கொண்டிருக்கமாட்டாய்.” என்றாள்.

‘ஓ` நான்! – துறவி, அவனது மலையைவிட்டுக் கீழிறங்கினால் இப்படியான நிந்தனைக்குத்தான் ஆளாகவேண்டும். நான் மகாகுரு ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் நீங்கள் அறிந்தால் …”

”மகாகுரு என்றா சொன்னீர்கள்?”

“ஆமாம், அவரை உங்களுக்குத் தெரியுமா?”

“என்னைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நான் உடலை விற்பதனாலேயே உங்கள் மகாகுருவைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதென நினைக்கிறாயா?” அந்த வேசி எள்ளிநகைத்து, அவள் ஆடையைத் திரைத்து மேலேற்றிக்கொண்டே, இருட்டுக்குள் செல்லவிருந்தாள். இப்போது நான் அவள் கையைப்பற்றி இழுக்கவேண்டியதாயிற்று.

“நான் தவறு செய்துவிட்டேன், இல்லை, எனக்கு வேண்டியது அதுவல்ல …. அதாவது நான் சொல்லவருவது, என் மீது கோபப்படாதீர்கள் அல்லது வேறெப்படியும் குறைப்படாதீர்கள், ஆனால் …….., நல்லது, எனக்குத் தெரிய வேண்டியது, நான் சொல்கிற மனிதரைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா என்பதைத்தான். அதாவது அவரை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?”

திரைத்த ஆடையை அப்படியே கீழே இறக்கிவிட்டுச் சிரிக்கத் தொடங்கினாள். “ஆமாம், அவரைப் பார்த்திருக்கிறேன்தான். ஏன், நேற்று இரவுகூட அவர் இங்குதான் இருந்தார். இன்றைய இரவுக்கும் கூட மீண்டும் வருவாரென்றுதான் நினைக்கிறேன்.”

‘’நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அவரைப்போன்ற மனிதர் ஒருவர் இந்த மாதிரி ஆசைகளோடு ….. “ நான் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு, சட்டென்று என் கேள்வி முறையை மாற்றிக்கொண்டேன்.

“நீங்கள் சொல்வது உண்மையென்றால், தயவுசெய்து எனக்கு அவரைப்பற்றி எனக்குச் சொல்லுங்கள்.”

அவளது கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன; கடுமையான நடுக்கம்கொண்ட குரலில் பேசத் தொடங்கினாள். “அவர் அடிமட்ட மக்களின் நண்பர். இனியும் உயிர் வாழ்வது முடியாததென்றும் இந்த உலகம் தாங்கமுடியாத அளவுக்கு அருவருப்பானதென்றும் நாங்கள் உணர்கின்ற தருணங்களில் எப்போதுமே மிகச்சரியாக, அவர் வருகிறார்;

ஆனால் உங்களைப் போல பெரிய பெரிய சிக்கல்நிறைந்த வார்த்தைகளில் பேசியதேயில்லை. ஒருமுறை நான், சிபிலிஸ் பெண்குறிநோய் வந்து, படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூட முடியாமல் கிடந்தபோது, என் ஆடைகளை அவர்தான் அலசித் துவைத்துக் கொடுத்தார். அது மட்டுமல்ல. ஒருமுறை எனது தோழி சாம்-வெல் தெரியாத்தனமாக காவல்துறை காவலர் ஒருவரை, தொழிலுக்காகக் கையைப் பிடித்திழுக்கப்போய், காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்று, அவள் பின்புறம் முழுதும் இரத்தக்காடாகுமாறு அடித்துத் துவைத்துவிட்டார்கள்; அப்போதும், அவர்தான் வந்து அவளை மீட்டுவந்தார். அவரெல்லாம் …..”

முடிவேயில்லாமல், பேசிக்கொண்டேபோன அவள் ஒருகட்டத்தில் உணர்வற்றுப்போனதுபோல் உளறத்தொடங்கியதும், நான் அவள் கையைப் பிடித்து உலுக்கி நிறுத்தவேண்டியதாயிற்று. ”நீங்கள் உண்மையிலேயே அவரைப் பார்த்திருந்தால், அவர் எப்படியிருப்பாரென்று சொல்லுங்கள்.”

முன்பு போல் கண்களை மூடியவாறே அவள் பேசத் தொடங்கினாள். ‘அவர் நம் எல்லோரையும் போல்தான் இருக்கிறார். அவரது முகம் அழகற்றது. முடிச்சுமுடிச்சான அவரது கைகள் வெயிலில் கறுத்திருக்கும்.

ஆனால், அவர் நாங்கள் புரிந்துகொள்ளமுடியாத கடின வார்த்தைகளை ஒருபோதும் பேசியதேயில்லை.” பெருங்கஷ்டம். முட்டாள்தனமாக அவள் பேசியதிலிருந்து, எனக்கு நன்றாகப் புரிந்தது, அவள் புத்திகெட்டுப்போன ஒரு பைத்தியமென்று. ‘’ஓ, இது பெருங்கஷ்டம், நான் மகாகுருவைக் கண்டுபிடித்த மாதிரித்தான்,” என எனக்குள்ளாகவே முனகிப்பெருமூச்சுவிட்டுத் திரும்பத் தொடங்கினேன்.

ஆனால் அவள் மீண்டும் என் சட்டைக்கையைப் பற்றிக்கொண்டு, என்னைப் போகவிட மறுத்தாள். “என்ன தப்பாகிவிட்டது? நீ பணம் எதுவும் தரவேண்டாமென்று சொல்லிவிட்டேனே! நீ இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு, முகத்தை மறைத்து,

உன் பெயரைக் காப்பாற்றியிருக்கிறாய், போதும், வா, இரவை அனுபவித்துவிடுவோம்.” என்றாள். “என்னைப் போகவிடு! கீழ்த்தரப் பிறவி, விபச்சாரி, நீ, ஒரு புனிதத் துறவியின் ஆடைமீது கைவைக்கிற அளவுக்கு உனக்கு துணிச்சலா?” என்று உண்மையிலேயே கோபத்தில் பொங்கிய நான் கத்திக் கூச்சலிடத் தொடங்கினேன்.

ஆனால் அந்தக் காமப்பிசாசு என்னை விடாதது மட்டுமில்லாமல், அவளது ஒரு கையால் என் இடுப்பைச் சுற்றிப்பிடித்துக்கொண்டு, மறுகையால் என் தொடைகளுக்கிடையே வருடத் தொடங்கினாள். ‘இப்ப என்னை விடப்போகிறாயா, இல்லையா?. தேவடியா நீ, எவ்வளவு கொழுப்புடீ, உனக்கு ….? கருணைமிக்க போதிசத்துவரே. பயிற்சியை அவமதிப்பவர் எல்லாம் கடைசியில் இறந்து மதக்குற்றம் புரிந்தவர்களைப் போல நரகத்துக்குத் தான் போகவேண்டும்.” என் பலம் முழுவதையும் உபயோகித்து அவளை உதறித் தள்ள முயன்றதில், நான் மல்லாந்து விழ,

அழுக்குப் படிந்த என் உள்ளாடைகள் விலகித் தெரியக் கிடக்கவேண்டியதாயிற்று. உடனேயே எம்பிக்குதித்த அவள், என் கழுத்தில் கிடந்த பிரார்த்தனை மாலையைக் முரட்டுத்தனமாகப் பற்றிக்கொண்டு, உச்சக் குரலில் கத்தத் தொடங்கினாள். “நாய்க்குப் பிறந்தவனே, நீதான் இந்த உலகத்திலேயே பெரிய ஏமாற்றுப் பேர்வழி; நீ துறவி கிடையாது, திருடன்தான். என் நல்ல மனதுக்கு, பொம்பளைக்காகக் காய்ந்து கிடக்கிறானெனப் பார்த்தாலே தெரிகிற ஒரு துறவி என்று, நல்ல மனதோடு என் உடம்பை உனக்கு அர்ப்பணிக்கிறேனென்று சொன்னால், என்னைத் திட்டுவதோடில்லாமல் அடிக்கவுமா செய்கிறாய்.”

இந்தக் குழப்பத்தில், எல்லா வேசிகளும் வெறும் உள்ளாடைகளும் கையுமாக ஓடிவர, அவர்கள் பின்னாலேயே காற்சட்டைகளை, இடுப்பில் ஏற்றிக்கொண்டு ஓடிவந்த வாடிக்கையாளர்களும் என்னைப் பார்த்து ஹோவெனச் சிரித்தனர். மிகப்பெரிய அவமானத்தில் சிக்கிவிட்டதை உணர்ந்தாலும் வேறுவழி எதுவும் புரியாமல் புத்தர், போதிசத்துவர்களின் பெயரை

உச்சரித்துக்கொண்டிருந்தேன். இத்தனைக்கும் நடுவில், அந்தப் பழிகாரி மீண்டும் பலத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு என் மீதான தாக்குதலைத் தொடர்ந்தாள். “ நாய்க்குக் பொறந்த பயல் நீ; திருடன்களிலேயே மோசமான பெரிய திருடன் நீ, என்னை நரகத்துக்குப் போவாயென்கிறாய். இதுதாண்டா நரகம், இதைவிட மோசமான ஒரு நரகம் எங்கேயாவது இருக்குமென்றா நினைக்கிறாய். இப்ப நான் சொல்றண்டா, புத்தர் வழி என்று சொல்லிக்கொண்டு நடிக்கிற உன் நடை, உடை பாவனையால்,

ஒற்றை விரலைக்கூட உன்னால் அசைக்க முடியாது, அடுத்தவன் சாப்பாட்டைத் தாண்டா நீ திருடித் தின்கிறாய், நீ செத்து சொர்க்கம் போவாய், எங்கள் உடம்பையே வித்து, எங்கள் சாப்பாட்டை நாங்களே தேடிக்கொள்கிற நாங்கள் நரகத்துக்குப் போவோமா?” என் கழுத்து மாலை திடீரென அறுந்து மணிகளெல்லாம் சிதறி ஓடின. என் இதயம் வேகவேமாகத் துடித்துக்கொண்டிருந்தது; ஆனால், அவளோ அப்போதும் விடாமல் கத்திக்கொண்டிருந்தாள். “ஓஹோ, அது சரி. நாங்கள் அருவருப்பானவர்கள், கீழிலும் கீழானவர்கள்,

உடம்பை விற்கிற குற்றத்துக்காக, நரகத்துக்குப் போவோம், நல்ல வளர்ப்பும், புத்திசாலியுமான நீ சொர்க்கத்துக்குப் போய் அனுபவிக்கலாமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்,” நல்லவேளை, இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, புத்தரின் கருணையை முழுவதுமாகத் தெரிந்த அந்த வயதான பெண்ணுக்குத் தான் நன்றிசொல்ல வேண்டும். அவள் மட்டும் இல்லையென்றால் நான் தப்பி வந்திருக்கவே முடியாது, ஆனால், என்ன, ஒற்றை விரலை நான் கண்டுபிடிக்கமுடியாமல் போனதுடன், வேசி ஒருத்தியிடம் மிகப்பெரிய அவமானத்தைச் சுமக்க

வேண்டியதாயிற்றென்பதால், இனிமேலும் இந்த மண்ணுலகத்தில் நம்மால் அலைந்து திரிவது முடியாததென்று உணர்ந்தேன். ஆனாலும், அதுவுங்கூட, மகா குருவைத் தேடும் எனது ஆர்வத்தைக் கைவிடுவதற்குப் போதுமானதாக இல்லை. அதனால் இந்த மண்ணுலகில் காண்கிற அனைத்துக் கீழான மற்றும் கறைபடிந்த இடங்களிலெல்லாம் அவரைத் தேடும் எனது பெருமுயற்சியைத் தொடர்ந்தேன். ஒவ்வொன்றிலும், அந்த விபச்சார விடுதியில் எனக்கேற்பட்டது போன்ற அவமானத்தையும் ஏமாற்றத்தையுமே சந்தித்தேன்.

உலகின் மிக உன்னதமான `நல்வழி`யைத் தேடுகின்ற ஒரு துறவியாகிய நான், இந்த உலகத்தின் கடுமை நிறைந்த பாழிடங்களிலெல்லாம் நுழைந்து துன்பத்தை மேற்கொள்வதற்கான ஒரே காரணம், மகா குருவான ஒற்றை விரலைச் சந்தித்து `நல்வழி`ப் புத்தொளியறிவினைப் பெற்றேயாக வேண்டுமென்ற தணிக்கமுடியாத தாகத்தினால் தானென்பதைச் சொல்லியேயாகவேண்டும். ஆனால், மாண்புமிக்க அரசவைப் பெண்டிராலும், அரசு அதிகாரிகளாலும் கொடையளிக்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் நிறைந்துள்ள கோவில்களை விட்டுவிட்டு அவர் ஏன், உலகின் மிகவெறுக்கத்தக்க தீமை நிறைந்த இடங்களில் வாழ்வதைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரென்பதைத் தான் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

ஆம். உண்மையிலேயே இது என்னைப் புதிரில் ஆழ்த்துவதாக இருக்கிறது. ஆனால், அதுபோன்ற இடங்களில்தான் மக்கள் அவரைப் பார்த்ததாகக் கூறுகிறார்கள். ஆக, என் தேடுதலால், விபச்சார விடுதிகளின் வேசிகளிடமும், சூதாட்டக்கூடங்களின் குண்டர்களிடமும், களியாட்டக் கூடங்களின் எத்தர்களிடமும், இறுதியில், தொழிற்கூடங்களின் அடிமைகளிலும் அடிமைகளிடமும் மிகமிகக் கேவலமான அவமானங்களைச் சந்திக்கவேண்டியதாயிற்று.

அடிமைகள் அரசனுக்காக புதிய களியாட்ட மாளிகை ஒன்றினைக் கட்டிக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலரது கழுத்துகளில் மாடுகளைப் போல் நுகம் இருக்க,

வேறுசிலர் வீடுகள் அளவுக்குப் பெரிதாயிருந்த அரவை ஆலைகளை இயக்கிச் சுழற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் எல்லோருமே என் மீது காறித்துப்புவதாக வேலையை நிறுத்தினர். தலைமுறை, தலைமுறைகளாக, அவர்களின் மூதாதைகளும் அவர்களும் கடினமான உடலுழைப்பின் துன்பங்களிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியாக மரணம் மட்டுமே உள்ளதென்று அவர்களின் விதியைக் கூறிக் குறைப்பட்டனர். அதைக் கேட்டதும், அவர்கள் மீது கருணை மீதூர, அவர்களுக்காக புத்தரின் அறிவுமொழி ஒன்றினை ”கருணை மிக்க போதிசத்துவரே”

என அறிமுகம் செய்யத் தொடங்கினேன். இப்பிறவியில் நீங்கள் படும் கஷ்டங்களுக்கெல்லாம் இதற்கு முந்தைய பிறவியில் நீங்கள் செய்த பாவமே காரணம். அதனால் நீங்கள், உங்கள் கர்மவினைகள் அல்லாமல் வேறு யாரையும் அல்லது எதனையும் நிந்திப்பதற்கு எதுவுமில்லை. வெறுப்பும் சீற்றமும் பாவத்தின் விதைகள். அதனால், புத்தரிடம் மனமுருகிப் பிரார்த்தனைசெய்வதில் உங்களை அர்ப்பணித்துக்கொள்ளுங்கள்; உலகினை வீணாகச் சபிக்க வேண்டாம்……..”

இதைக் கேட்டார்களோ இல்லையோ எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு என்மீது காறித்துப்பத் தொடங்கியதோடு, காகங்களின் கூட்டமொன்று கத்துவது போல் என்னைப் பார்த்துப் பெருங் கூச்சலிட்டனர்.

“ சாப்பாடு, துணிமணி, தங்குமிடம் எதற்கும் கவலைப்படாமல் நல்வழியை மட்டும் தேடி, அல்லது மலக்குவியலையோ அல்லது வேறு ஏதோ ஒரு இழவினைத் தேடும் உன்னால் எங்கள் கஷ்டத்தின் அளவினைப் புரிந்து கொள்ளமுடியாதுதான். சாவின் விளிம்பில் நிற்பவர்களிடம், நியாயமிழந்து பசியில் தவிப்போரிடம், நியாயமிழந்து நோய்ப்பட்டோரிடம்,

நியாயமற்ற முறையில் சிறைக்குள் அகப்பட்டோரிடம் போய், அவர்களின் கஷ்டங்களுக்கெல்லாம் அவர்களின் செய்கைகளே காரணமென்றும் நடப்பினை ஏற்றுக்கொள்ளுமாறும் சொல்கிறாய். எதிர்காலத்தில் அவர்கள் சிறிது நல்ல இடத்தில் பிறக்க விரும்பினால், புத்தரைப் பிரார்த்திக்க வேண்டுமென்கிறாய்;

நீ தான் சரியான ஏமாற்றுப்பேர்வழி என்பது நன்றாகவே தெரிகிறது.” அவர்கள் அப்படியே என்னை விழுங்கிவிடுவது போல் பேசி, வெறித்து நோக்கியதில் எனக்குள் தோன்றியதென்னவென்றால் அவர்கள் கண்களில் வெளிறிய நீலநிற ஒளியொன்று வெளிப்படுவதோடு,

அவர்களின் கழுத்தின் பின்புறம் அந்தக் கனமான நுகங்களின் எடை மட்டும் இல்லாமலிருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள் என்பதுதான். எப்படிப்பார்த்தாலும், இந்த மண்ணுலகம் அறியாமை மற்றும் இரக்கமற்ற பிறவிகளால் நிறைந்திருப்பதோடு, உன்னதமான நல்வழியினைத் தேடுவதற்கு என்னைப் போன்ற ஒரு மனிதனுக்கு உகந்ததாக இல்லாமல் கீழானதாகவும் தீமை விளைவிப்பதாகவும் இருக்கிறது.

நான் எழுந்து நின்றதும், எனது உடம்பின் கனத்தால் என் கால் மூட்டுகள் முனகின. மனித மனத்தைப் பீடிக்கின்ற முடிவற்ற மாயத்தோற்றங்களும் வேதனைகளுமாக அவதிப்பட்ட நான் நெடுநேரம் குத்துக்காலிட்டே உட்கார்ந்திருந்ததில், என் கால்கள் தூக்கத்தில் ஆழ்ந்து, உணர்வினை மறந்து போக, மயக்கக் கிறக்கத்திலிருந்த என்னால் நினைக்கமுடிந்ததெல்லாம் எங்காவது விழுந்து உறங்கவேண்டுமென்பதுதான். விரைவிலேயே மையிருள் கவிந்து மிகச்சிறிய தூரம் கூட தெரியாமலாகியது. ஆழ வெடிப்புகள்,

குகைகள் மற்றும் பொந்துகள் ஒவ்வொன்றிலிருந்தும் உயிர்ப்பிராணிகளின் தனிமையும் பசியும் நிறைந்த குரல்கள் எழுந்து எங்கும் பரவ, நான் மகா குருவைக் கண்டுபிடிக்க்கப்போவதில்லையென்பது மட்டுமில்லாமல் இந்தக் காட்டிலேயே இறந்து அடர்ந்த மலைகளுக்குள் அலையும் ஆவியாகத் திரியப் போகிறேனென்று நினைத்தேன். அனைத்து போதிசத்துவர்களையும் நடுங்கும் குரலில் அழைத்து, எனது மூட்டையை இறுகக்கட்டி, என் காலணிக் கட்டைகளையும் அவிழ்த்து மீள இறுக்கிக் கட்டினேன். பின்னர், மரக்கிளைகளை ஒதுக்கித் தள்ளிக்கொண்டு, என் பாதையில் முன்னேசெல்லத் தொடங்கினேன்.

அங்கே நான், ஒரு பாதையைக் கண்டுபிடிப்பதற்காக விழுந்து எழுந்துகொண்டிருந்தாலும், உண்மையில் இலக்கு ஏதுமின்றித் தான் அலைந்துகொண்டிருந்த போதுதான், நேருக்கு நேராக, என் கண் முன்பாகவே, வெளிச்சத்தின் ஒளிமுனை ஒன்றினைக் கண்டேன். அந்த ஒளியின் அளவிலிருந்து, அது ஒரு வீடாகத்தானிருக்கவேண்டுமென்றும், இவ்வளவு ஆழ்ந்து அடர்ந்த மலைகளுக்குள் ஒரு வீடெனில், அது மகா குரு ஒற்றைவிரலுடையதாகத்தானிருக்குமென்றும் நான் நினைத்தேன். அவ்வளவுதான், நான் இடைவெளியே விடாமல் ஒரே ஓட்டமாக ஓடினேன்.

அது, தங்க வேட்டைக்காரர்களோ அல்லது ஜின்செங் கிழங்கு அகழ்வோரோ மலையில் தங்கியிருந்த காலத்தில் கட்டிய சிறுகுடிசை போலத் தோன்றியது. அதன் முன்பாக வெளிப்புறத்தில் ஊசியிலைத் தேவதாருப் பிசின் விளக்கின் வெளிறிய வெளிச்சத்தில் குந்தி அமர்ந்திருந்த வயதான கிழவன் ஒருவன் பரட்டைத் தலையிலிருந்து பேன் எடுத்து நகங்களுக்கிடையில் வைத்துக் குத்திக் கொண்டிருந்தான். அவனுடைய வற்றி உலர்ந்துபோன உடலையும், கிழிந்த ஆடைகளையும் பீளை நிறைந்து சுருங்கிப்போன கண்களையும் பார்க்கும் போதே, அவன்,

சமூகத்தால் துரத்தப்பட்ட ஒரு பிச்சைக்காரன் தானென்பது தெரிந்தது. மகாகுருவைச் சந்திக்கப்போகிறோமென நினைத்த நேரத்தில் இது மாதிரியான ஒரு பிண்டத்தைப் பார்ப்பது தாங்க வியலாததாயிருந்தது. தியானத்திற்காகப் படுக்கலாமென நினைத்தபோது, இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே, அந்த ஆளிடம் கேட்டுப் பார்க்கலாமேயென நினைத்தேன்.

‘’ஐயா, பெரியவரே, ஒற்றை விரல் என்ற பெயருள்ள மகா குரு ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” ஆனால், அந்தக் கிழவன், காது கேட்காதவர் போலப் பதில் எதுவும் சொல்லாமல் பேன் குத்துவதே கண்ணாக இருந்தான். அவன் பேன்களை நசுக்கும் போது, பட் பட்டென வெடித்த சப்தம் வித்தியாசமாக இருந்தது. ”எனக்கு நன்கு தெரிந்தவராகத் தான் இருப்பார். மிக உன்னதமான ஒரு மகா குருவைப் பற்றி, நீ என்னென்னவெல்லாம் தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?” இந்தக் கிழவனிடம் எதுவும் பேசக் கூடாதென்று தீர்மானித்துவிட்டேன். பின், பழக்கத்தினால், தியானத்திற்குப் படுக்கும் முன் புத்த சூத்திரம் ஒன்றை உச்சரிக்கத் தொடங்கினேன். ‘’சர்ஃப் சுரி மகாசுரி சுசுரி சபஹா ஒபங்கனேயேஏ

அன்விஜயேஷின்ஜிரியான்…..” ‘’வாயை மூடுறியா, நான் தூங்கவேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றால், மனசுக்குள்ளேயே செய்துகொள். சத்தமாகப் பிரார்த்தனை செய்து அடுத்தவன் அமைதியைக் கெடுக்கவேண்டுமென்று சட்டமா இருக்கிறது?’’ இதைக் கேட்டதும் நான் கண்களைத் திறந்தேன்; ஆனால், அந்தக் கிழவன் அதற்கு முன்பாகவே விளக்கை அணைத்துவிட்டான்; அவன் குறட்டையைத் தான் நான் கேட்க முடிந்தது. அந்தக் காலம் முழுவதுமாக மண்ணுலகில் அலைந்து முழுவதுமாகக் களைத்துப் போன நானும், குறிப்பாகப் பிந்திய அந்தக் காலைவேளை வரையில் கூடத் தூங்கியிருக்கிறேன்.

நான் கண்விழித்த போது வெயில் என் தலைக்கு மேலாகவே வந்திருந்தது. அந்தக் கிழவனை எங்கும் காணவில்லை. அரிசியும் பார்லியும் கலந்து அரைத்த மாவை என் மூட்டையிலிருந்து எடுத்துப் பசியை அடக்கிவிட்டு காலணிக்கட்டைகளை இறுகக் கட்டிக்கொண்டு, கனத்த இதயத்தோடு என் முன்னால் நீண்டுகிடந்த வரிசை வரிசையான மலைத் தொடர்களை ஏறிட்டு நோக்கிப் பெருமூச்செறிந்தேன்.

மற்றொரு நாளும் வந்து போய்விட்டது. இப்போது நான் எங்கே போகவேண்டும்? மகாகுருவைச் சந்திக்க எங்கு செல்லவேண்டும்? எனக்குத் தெரியவில்லை; ஆனால் நகர்ந்துகொண்டேயிருக்கவேண்டும். பெரும் பாறை ஒன்றினை நெஞ்சுக்குள் வைத்து அழுத்தியது போன்ற கனத்த இதயத்துடன் நான் வேகமெடுத்து நடக்கத் தொடங்கும்போது, திடீரென்று யாரோ என்னைக் கூப்பிடுவது போன்ற சப்தத்தைக் கேட்டேன்.

“ஓ, மாபெரும் ஆசிரியரே, மாபெரும் ஆசிரியரே,” நான் திசையை மாற்றவில்லை; ஆனாலும் என் தலை மட்டும் திரும்பிய போது அந்தக் கிழவன் அங்கிருந்தான். எதனாலேயோ, அவன் இனிமையாகவென்று கூடச் சொல்லலாம், புன்னகைத்தான். “ஆக, நீ ஒரு `உண்மையான மகா குரு`வைத் தேடிக்கொண்டிருக்கிறாய், ஹூம்? நான் வாயடைத்துப் போய் தலையை மட்டும் ஆட்டினேன். கிழவன் ஏளனமாக வெடித்துச் சிரித்தான். பின்னர் என்னைப் பரிதாபத்திற்குரிய ஜீவனைப் போலப் பார்த்து, என் தோளில் தட்டி, “ முட்டாளே! ஒரு உண்மையான மகா குருவைத் தேடுகிறேனென்று சொல்கிறாய், இல்லையா?” “அப்படித்தான்.” நானும் ஏளனமாகப் பதில் சொன்னதும் கிழவன் ஏமாற்றத்தில் நாக்கை `ப்ச்` கொட்டினான்.

பின்னர், அவன் நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான். “ உலகத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, உண்மையான மகா குரு ஒருவர் இங்கே மலையில் உட்கார்ந்துகொண்டு பேன் குத்திக்கொண்டிருப்பாரென்றா நீ நினைக்கிறாய்?’’ அந்தக் கணத்தில் என் நெஞ்சில் அழுத்திக்கொண்டிருந்த பாறாங்கல் அகன்றுவிட்டதை உணர்ந்தேன்.

அவ்வளவுதான், என்னைச் சுற்றியிருந்த எல்லாமே ஒளிபெற்று மிளிர்ந்தன. நான் மலையை விட்டுச் சென்றாகவேண்டும். அந்த வயது முதிர்ந்த பெரியவரின் வார்த்தைகளில் நான் திடீரென விழித்துக்கொண்டேன். `விழிப்புணர்வு` என்கிறேன், நான்;

ஆனால், அது, வெளிப்படையாகத் தெரிந்த ஏதோ ஒன்று, நான் மலையை விட்டுச் சென்றாக வேண்டுமென்பதுதான். கீழ்மட்டத்துக் கறைபடிந்த மண்ணுலகிற்கு இறங்கிச்சென்று இரத்தமும் சதையுமாக அல்லல்படுவோர் மத்தியில் வாழவேண்டும். புத்தொளியறிவான போதியறிவினைக் களங்கங்களிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாதென்றும் பரிசுத்த பூமியும் இந்த உலகமும் வெவ்வேறானதல்ல என்றும் புத்தர் சொன்னதே உண்மை. பிரச்சினைகள் மற்றும் ஆசைகளால் முடிவற்ற பரிணாம மாற்றங்களே நித்தியமான நமது உலகிலிருந்தும் நாம் விடுபடுவோமேயானால், பரிசுத்த பூமியை நாம் ஒருநாளும் அடையமுடியாது.

அந்தப் பாலியல் தொழிலாளி சொன்னதுபோல இந்த உலகில் உயிர்வாழ்வதற்காக, வயிற்றுப் பாட்டுக்காக, உடலை விற்கவேண்டியிருக்கிறதென்றால், உண்மையிலேயே இதுதானே நரகம்; இந்த நரகத்தில் தானே நான் வாழ்வினைக் கண்டுணரவேண்டும்.

நான் , மகா குருவைக் கண்டுபிடித்தேனோ இல்லையோ அல்லது, இந்த ஒளிமிக்க விழிப்புணர்வினை எனக்களித்த அந்த முதியவர் தான் நான் மூச்சைப் பிடித்துத் தேடிக்கொண்டிருந்த மகாகுருவின் புனித வெளிப்பாடோ என்பதெல்லாம் இப்போது பொருளற்றுப்போகின்றன. ஆனால், `விழிப்பு` என நான் கூறுவது உண்மையான அதுதானா என்பது இப்போதுங்கூட எனக்கு நிச்சயமில்லை.

படைப்பாளர் பற்றிய குறிப்பு : கிம் சியாங் டாங் கொரியாவில் 1947 – இல் பிறந்தவர். பத்தொன்பதாவது வயதில் துறவுகொண்டு பத்தாண்டுகள் புத்த மதப் பயிற்சி மேற்கொண்ட பின்னர், துறவினைவிட்டு வெளியேறி இலக்கியம் படைக்கத் தொடங்கினார்.

அவரது முதல் கதை 1975 இல் வெளியானது. இலக்கியப் படைப்புகளுக்காக, பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் படைத்துக்காட்டும் புத்தறிவுபெற்ற மனிதன் மலைகளில் வசிக்கும் துறவிகளையும் சராசரி மனிதர்களையும் அரவணைத்துச் செல்பவனாயிருக்கிறான்

http://www.ekoreajournal.net/issue/view_pop.htm?Idx=2816 .

•••••••

அப்போலோ ( சிறுகதை ) / சீமாமந்தா இங்கோசி அடிசி – தமிழில் – எஸ். சங்கரநாராயணன்

7cefcd151eaf3af5eeb5be038f940e032d8c3518_2880x1620

ரெண்டு வாரத்துக்கு ஒருதரம் இனுகுருவில் இருக்கிற அப்பாம்மாவைப் போய்ப் பார்த்துவருவதை ஒரு மகனின் கடமையாகவே செய்து வந்தேன். சின்ன அந்த ஃப்ளாட்டில் ஏகப்பட்ட சாமான்கள். மதியங்களில் அறைகளே இருட்டிக் கிடக்கும். பணி ஓய்வு என அவர்கள் ஆளே மாறிப் போனார்கள், படததைக் கீழே போட்டாப் போல.

இருவருக்கும் வயசு எண்பதைக் கடந்து தொண்ணூறை நெருங்குகிறது. மகோகனி மரத்தைப்போல நிறமும் ஆளே கட்டை குட்டையாகவும் இருப்பார்கள் அவர்கள். ரெண்டு பேருமே நடக்கையில் சிறிது கூன் போட்டார்கள். இத்தனை வருட தாம்பத்தியத்தில் அவர்கள் ரெண்டு பேரிடையே சாயல் ஒற்றுமை வந்திருந்தது.

அவர்கள் உதிரமும் உணர்வுகளும் சிந்தனையும், யாவுமே ஒன்றோடு மத்தது பின்னிப் பிணைந்து கலந்து குழைந்து கொண்டாப் போல. அவர்களின் வாடை கூட ஒரே மாதிரி, ஒருவித மென்தால் நெடி, தளிர்ப் பச்சையான விக்ஸ் வேபரப், இருவருமே மூக்கிலும், வலிக்கிற மூட்டுகளிலும் மாத்தி மாத்தி அவர்கள் பிரயோகித்தார்கள். நான் அவர்களைப் பார்க்கப் போகையில் அவர்கள், வராந்தாவில் அமர்ந்தபடி தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அல்லது கூடத்தில் பொதுக்கென்று உள்ளமுங்கும் சோபாவில் இருப்பார்கள், அனிமல் பிளானெட் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும்.

எல்லாத்தையும் புதுசாய்ப் பார்க்கிற எளிய ஆச்சர்யத்துடன் அவர்கள் இருந்தார்கள். சாதுர்யமான ஓநாய்கள் அவர்களை ஆச்சர்யப் படுத்தின. குரங்குகளின் புத்திசாலித்தனம் அவர்களைச் சிரிக்க வைத்தது. “இஃபுக்வா, பாத்தீங்களா இதை?” என அவர்கள் ஒருத்தர் மத்தவரிடம் காட்டிப் பேசிக் கொள்வதும் உண்டு.

நம்பவியலாத கட்டுக்கதைகளை அவற்றின் புதிர்த்தன்மை தாண்டி ரசிக்கிற பொறுமையும் இருந்தது அவர்களிடம். ஒருமுறை என் அம்மா சொன்ன ஒரு கதை. அபா என்கிற நாங்கள் முன்பு குடியிருந்த ஊரில், எங்க பக்கத்துவீட்டுக்கார நோயாளி ஒருத்தர், அவர் ஒரு வெட்டுக்கிளியை வாந்தி யெடுத்தாராம்.

உயிருள்ள, சதா சுழட்டி அடிச்சிட்டிருக்கிற பூச்சி. அவனோட கேடுகெட்ட பங்காளிங்க தான் யாரோ அவனுக்கு இப்பிடி ஒரு காரியம் பண்ணி விஷத்தை ஏத்தி விட்ருக்காங்க, என்பது அம்மாவின் விளக்கம்.

“ஆமாமா. எனக்குக் கூட யாரோ வெட்டுக்கிளி படம் ஒருக்கா அனுப்பி வெச்சிருந்தாங்க” என அப்பா ஒத்து ஊதினார். அவங்க ரெண்டு பேருமே ஒருத்தர் கதை சொன்னா மத்தவர் ஆமாம் போடுவது வழக்கம். இன்னொரு தரம், தலைவர் ஒகேகேயின் வீட்டு வேலைக்காரி, பதின்வயசுப் பெண் மர்மமான முறையில் மரித்தாள். ஊர் பூரா தலைவர்தான் அவளைக் கொன்னுட்டதாப் பேசிக்கிட்டாங்க. அவளது கல்லீரலை குபேர பூசைக்கு பலியா வெச்சிட்டதாவும் வதந்தி. இப்போ அம்மா, கூடச் சேர்த்துக்கிட்டாள். “எல்லாரும் சொல்றாங்க. அவ இதயத்தையும் எடுத்துப் பூசைல…”

இந்தக் கதைகளை யெல்லாம் ஒரு பதினைந்து வருசம் முன்னாடி இவங்களே கிண்டலடிச்சவங்கதான். எங்க அம்மா அரசியல் பாடத்தில் பேராசிரியர். “அபத்தம்” என அவள் வெடுக்கென மறுத்திருப்பாள். அப்பா, அவர் கல்வித்துறைப் பேராசிரியர். ஹ்ரும்.

ஒற்றை உருமலில் அதைப் பேசத் தகுதியான விஷயம் இல்லை என்று ஒதுக்கியிருப்பார். அந்தப் பழைய முகங்களையே அவர்கள் கழட்டிப் போட்டுவிட்டது எப்படின்னுதான் புரியவில்லை. இப்ப அவங்களும் மத்த நைஜீரியர்கள் போல, கோவில் தீர்த்தத் தண்ணியக் குடி, சர்க்கரை வியாதி போயிரும்ன்றா மாதிரிப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

என்றாலும் அவர்கள் என் அப்பா அம்மா என்கிற மரியாதை எனக்கு உண்டு. அவர்களின் கதைகளை அரைகுறையாய்க் கேட்டுக் கொண்டேன். வயசான காலம் என்பது புதுசாய், திரும்ப குழந்தையாய் ஆகிறாப் போல, அப்படியோர் வெள்ளந்தித்தனம் அது.

வருடங்கள் கடந்தாலும் அவர்கள் தன்னளவில் மெதுவாகவே வளர்ந்தாப் போல. என்னைப் பார்க்கிற ஜோரில் அவங்க முகமே விளக்கேற்றிக் கொள்ளும். நான் உள்ள நுழையறதும் நுழையாததுமா அவர்களின் கேள்வி, எப்ப ஒரு பேரனையோ பேத்தியோ நாங்க பாக்கறது? எப்ப ஒரு பொண்ணைக் கூட்டியாந்து எங்க முன்னாடி காட்டப் போற?… இதெல்லாம் கேட்க முன்னெல்லாம் கடுப்பாகும் எனக்கு. இப்ப அடக்கிக் கொள்கிறேன். ஞாயிறு மதிய வாக்கில் நான், அரிசிச்சோறும் கறியுமாய் மதிய உணவு முடித்துவிட்டு திரும்பப் புறப்படுவேன்.

ஒவ்வொரு தடவையும் இவங்க ரெண்டு பேரையும் தம்பதி சமேதரா நான் இப்பிடிப் பார்ப்பது இதுதான் ஒருவேளை கடேசித் தரம் என்கிறாப் போல நினைப்பு வரும். அடுத்த தபா நான் வரு முன்னாலேயே யாராவது ஒருத்தர், உடனே என்னைக் கிளம்பி வா, என்று போன் பேசலாம், என்று தோன்றும்.

ஹர்கோர்ட் கடற்கரை வரும்வரை அதே நினைப்பு என்னை ஒரு உம்மென்ற துக்கத்திலேயே இருத்தி வைக்கும். அட எனக்குன்னு ஒரு குடும்பம், என் அப்பாம்மாவோட சிநேகிதர்கள் சலிச்சிக்கிறா மாதிரி நானும் என் பிள்ளைங்களுக்கு பள்ளிக்கூட ஃபீஸ் கட்டச் சிரமப் பட்டால், அப்ப நான் இப்ப மாதிரி அடிக்கடி வந்து இவர்களைப் பார்த்துட்டுப் போக முடியுமா? கைக்கும் வாய்க்கும் சரியாய் இருக்கும். இப்படிப் பயணங்கள் குடும்பம்னு ஆயிட்டால் கட்டுப்படி ஆகாது போகும்.

ஒரு நவம்பர் மாதம் நான் வந்திருந்தபோது, அவர்கள் கிழக்குப் பிராந்தியத்தில் ஆயுதந் தரித்த கொள்ளையர்களின் அட்டகாசம் பற்றிப் பேசினார்கள். திருடர்களும் கிறிஸ்துமசுக்குத் தயாராக வேணாமா என்ன? ஒனிட்ஷாவில் ஒரு உஷார்ப்படை சில திருடர்களைப் பிடித்து விட்டார்கள்.

திருடனுகளுக்கு அடி உதை. அவர்களின் உடுப்புகளைக் கிழித்து விட்டார்கள். பழைய டயர் எல்லாம் எடுத்து வந்து அவர்களுக்கு மாலையாப் போட்டார்கள். வத்திப்பெட்டி கெண்டாங்க. பெட்ரோல் இருந்தா எடுத்தாங்க… அதுக்குள்ள போலிசு வந்திட்டது. போலிஸ் எல்லாரையும் கலைஞ்சு போகச் சொல்லி துப்பாக்கியால வானத்தில் சுட்டார்கள்.

திருடர்களை அவர்கள் விடுவித்து கூட்டிப் போனார்கள். அம்மா ஹா என சிறிது நிறுத்தினாள். இப்ப பார், எதாவது முத்தாய்ப்பா ஒரு விநோதக் கற்பனையை அம்மா கூட சேத்துச் சொல்லப் போகிறாள், என நான் காத்திருந்தேன். போலிஸ் ஸ்டேஷன் கிட்டத்ல போனாங்கல்லடா, அந்தத் திருடங்க சட்னு கழுகுகளா மாறி, பறந்து போயிட்டாங்கடா!

“தெரியுமா?”என அவள் தொடர்ந்தாள். “அந்தத் துப்பாக்கிக் கொள்ளைக்காரனுங்க இல்ல, அவங்கள்ல ஒருத்தன், அவந்தான் அவர்களின் தலைவனும்… யாருன்றே, ரஃபேலாக்கும். எந்த ரஃபேல்? ரொம்ப வர்ஷ முன்னாடி நம்ம வீட்ல வேலை பாத்திட்டிருந்தான் அவன். உனக்கு அவனை ஞாபயம் இருக்காது.”

நான் அம்மாவை வெறித்தேன். “ரஃபேலாம்மா?”

“அவன் இபப்பிடி மாறினதில் ஆச்சர்யம் ஒண்ணுமில்லை” எனறார் என் அப்பா. “ஆரம்பத்துலேர்ந்தே அவனுக்கு கஷ்ட காலம் தான்.”

அம்மா சொன்னாள். “ஒருவேளை உனக்கு அத்தனைக்கு ஞாபகம் இருக்காது. அப்ப வீட்டுவேலைக்குன்னு நிறையப் பிளளைகள் வந்தாங்க. அப்ப நீ ரொம்பச் சின்ன வயசு.”

ஆனா எனக்கு ஞாபகம் இருந்தது. ரஃபேலை நான் அறிவேன்.

*

ரஃபேல் எங்க வீட்டுக்கு வேலையாளா வந்தபோது சமூகத்தில் எதுவும் மாறிவிடவில்லை. அதாவது அவன் வந்த புதிது, அந்த வேளையைச் சொல்கிறேன். பக்கத்து கிராமத்தில் இருந்து வந்த எத்தனையோ பதின்வயசு விடலைப் பசங்களில் அவனும் ஒரு சாதாரணமான பிள்ளை.

இவனுக்கு முன்னாடி எங்களுடன் இருந்த ஒரு பையன், ஹைஜினஸ் அவன் பெயர், அம்மாவிடம் அவன் மரியாதையா நடந்துகொள்ளவில்லை என அவனைத் திருப்பி ஊருக்கே அனுப்பிவிட்டோம்.

ஹைஜினசுக்கு முன்னால் இருந்தவன் ஜான். அவனைத் திருப்பி நாங்கள் அனுப்பவில்லை, என்பதால் நினைவில் இருக்கிறது. கழுவி வைக்கையில் ஒரு தட்டை அவன் உடைத்துவிட்டான்.

என் அம்மா கோபப் படுவாள் என்று பயந்துகொண்டு மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு அம்மா வேலை முடிந்து வீடு திரும்புவதற்குள் ஓடி விட நினைத்தான் அவன். அம்மாவைப் பிடிக்காதவர்களைப் போலவே இந்த வேலைக்காரப் பையன்களும் ஒரு வேத்துமுகத்துடனேயே என்னை கவனித்தார்கள். தயவுசெஞ்சு வாங்க, வந்து சாப்பிடுங்க, என்பார்கள் என்னிடம். கூடவே, அப்பறம் அம்மா என்னைத் திட்டுவாங்க, என்பார்கள். அம்மா வேலையாட்களை எதாவது தொடர்ந்து திட்டிக்கொண்டே யிருப்பாள். அசமந்தம்.

லூசு. செவிடு. அவள் கை எப்பவும் அழைப்பு மணியின் சிவப்புப் பொத்தான் மேலேயே இருக்கும். மணிச் சத்தம் மொத்த வீட்டையுமே குடைஞ்சாப்போல இரைஞ்சிக்கிட்டே யிருக்கும். அதுவே அம்மா தன் குரலில் இரைகிறாப் போலத்தான் இருந்தது. அப்பாவுக்கு முட்டையை அப்படியே வதக்கணும்.

அம்மாவுக்கு வெங்காயம் சேத்துக்கணும். சட்னு நினைவுக்கு வர சிரமமாய் இருந்தது வேலையாட்களுக்கு. ருஷ்ய பொம்மைகளைத் தூசி தட்டியாச்சின்னா அதே அதே இடத்தில் வரிசை மாத்தாமல் அடுக்கறதில்லையா? இவனோட (என்’னுடைய) பள்ளிச் சீருடையை இப்பிடியா இஸ்திரி ஏனோ தானோன்னு போடறது?…

எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை நான். ரொம்ப தாமதித்துப் பிறந்த பிள்ளை அவர்களுக்கு. “நான் உண்டானப்போ, இது மெனோபாஸ் தானோன்னு இருந்தது எனக்கு” என்று அம்மா ஒருமுறை என்னிடமே சொல்லியிருந்தாள். அப்ப எனக்கு ஒரு எட்டு வயசு இருந்திருக்கலாம். அந்த வயசில் மெனோபாஸ், மாதவிடாய் நிற்றல், என்பது எனக்குத் தெரியாது. எங்கம்மா ஒரு சிடுமூஞ்சி. ஐயாவும் அதே ரகம் தான். யாரையும் சட்னு எடுத்தெறிஞ்சாப்ல பேசவும் காரியம் பண்ணவும் செய்து விடுவார்கள் ரெண்டு பேருமே.

இபாதன் பல்கலைக் கழகத்தில் அப்பா அம்மா ரெண்டு பேரும் பார்த்துக் கொண்டபோது ஒருத்தருக்கு ஒருத்தர் பிரியமாகி, அவர்கள் இருவர் வீட்டிலும் சம்மதம் இல்லாமல் கல்யாணம் முடித்துக் கொண்டார்கள்.

அவளும் அவரைப் போலவே படித்தவள் என்று அவருக்கு அவள் மேல் ஈர்ப்பு. அவளுக்கோ அவர் பசையுள்ள ஆசாமி என்று கிறக்கம். தாம்பத்தியத்தில் ரெணடு பேருக்கும் இறுக்கமான நெருக்கமான போட்டி.

யார் அதிகம் எழுதுகிறார்கள், பேட்மின்டன் ஆட்டத்தில் யார் செயிக்கிறார்கள், வாதத்தில் செயிப்பது நீயா நானா? மாலைகளில் ஒருத்தர் மத்தவருக்கு உரக்க பத்திரிகையோ, செய்தித்தாளோ, உட்கார்ந்து அல்ல, முற்றத்தில் நின்றபடி வாசித்துக் காட்டுவார்கள். நடந்தபடியே கூட அது நிகழும், என்னவோ புது யோசனையை மனசில் எட்டிப் போகிறாப் போன்ற தேடல் நடை!

மேதியஸ் ரோசே அவர்கள் இருவருக்குமே பிடித்தமான மதுபானம். அவர்கள் அமர்ந்திருக்கும் மேசையருகே தயாராக இருக்கும் அந்த அழகான போத்தல். குடித்துவிட்டு வைத்த தமளர்களில் அடியே இக்கிணி சிவப்புத் திவலை. என்னுடைய சின்ன வயசு பூராவுமே அவர்கள் கேட்டதுக்கு சட்டென பதில் சொல்ல நா புரளாத தயக்கத்துடனேயே நான் இருந்தேன்.

*

புத்தகங்களில் எனக்கு ஆர்வம் இல்லை, என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. வாசிப்பு என்பது எங்க அப்பா அம்மாவுக்கு என்ன தந்ததோ அதை அது எனக்குத் தரவில்லை. வாசிப்பு பழக்கத்தால் அவர்கள் உணர்ச்சிவசப் பட்டார்கள். அல்லது காலத்தில் உறைந்து போனாப் போல தன்னை மறந்த நிலையில் அமிழ்ந்து கொண்டார்கள். நான் அவர்கள் பக்கமாக வருவதும் போவதுமே அவர்களுக்கு கவனப்படாது அப்போது. நான் வாசிப்பது என்பது அவர்களைத் திருப்திப்படுத்தத் தான்.

வாசிப்பதும் அந்த அளவுக்கே. சாப்பாட்டு நேரத்தில் திடீரென்று அவர்கள் எதும் கேட்டால் நான் பதில் தர வேண்டியிருந்தது. பிப் பத்தி நான் என்ன நினைக்கிறேன்? எசூலு செஞ்சது சரிதானா? அந்த சமயங்களில் எங்க வீட்டில் நானே அந்நியனாக சில சமயம் உணர நேர்ந்து விடுகிறது. என் படுக்கை யறையிலேயே நிறைய புத்தக அலமாரிகள். வாசிப்பறை மற்றும் வராந்தா அலமாரிகள் நிறைந்து மிஞ்சிய புத்தகங்கள் இங்கே தஞ்சம் புகுந்தன. என்னை அவை இன்னும் சம்பந்தம் இல்லாதவனாய் உணர வைத்தன. நான் இருக்க வேண்டிய இடம் இது அல்ல. என்னைப் பெத்தவர்களுக்கு நான் ஒரு புத்தகம் பற்றிப் பேசும்போது, அவர்கள் அது திருப்திப் படுத்தவில்லை. அவர்கள் அப்போது, நான் பேசும்போது என்னை அவர்கள் பார்த்த வெறித்த பார்வையில் என்னால் அதை உணர முடிந்தது.

அந்தப் புத்தகம் பத்தி நான் சொன்னதில் ஒண்ணும் பிழை இல்லை, அது எனக்குத் தெரியும். ஆனால் நான் அதைப் புரிந்துகொண்டது ரொம்ப எளிய அளவிலேயே. அவர்கள் அளவுக்கு திறனாயும் தரத்தில் அது இல்லை. அவர்களோடு மனமகிழ் மனறங்களுக்குப் போவது கொடுமை. பாட்மின்டன் ஆடப் போவது அலுப்பூட்டியது எனக்கு. அவர்கள் வைத்து விளையாடும் அந்த ஷட்டில்காக், அதுவே இன்னும் செய்து முடிக்கப்படாத பொருள் போல எனக்குத் தோன்றியது. அந்த விளையாட்டை அரைகுறையாக யோசித்திருக்கிறாப் போல.

எனக்கு ரொம்பப் பிடித்தது எது என்றால், குங் ஃபூ. ‘என்டர் தி டிராகன்’ எத்தனையோ வாட்டி நான் பார்த்திருக்கிறேன். அதன் அத்தனை வசனமும் எனக்குத் தெரியும். தூங்கி எழுந்தால் நான் புரூஸ் லீ-ன்னு ஆயிறணும், அப்பிடி ஓர் ஏக்கம் எனக்கு இருந்தது.

காற்றில் எத்தி உதைப்பேன் நான். எதிரில் கற்பனையான எதிரிகள், என் குடும்பத்தைப் பூரா கொலை செய்தவர்கள், அவர்களைப் பந்தாடுவேன். தரைக் கம்பளத்தை இழுத்துத் தரையில் தள்ளுவேன். தடித் தடியான ரெண்டு பெரிய புத்தகங்கள் மேல் ஏறி நிற்பேன். கெட்டி அட்டை போட்ட ‘பிளாக் பியூட்டி’ மற்றும் ‘வாட்டர் பேபிஸ்’ மாதிரி புத்தகங்கள் அவை. அங்கிருந்து கம்பளத்துக்குக் குனிந்து புரூஸ் லீ பாவனையாய் ஒரு ‘ஹாஆ!’ ஒருநாள் இந்தப் பயிற்சி விளையாட்டின் பாதியில் கதவுப்பக்ககம் ரஃபேலை, அவன் என்னை கவனிப்பதைப் பார்த்தேன்.

அவன் கடுப்பாவான் என எதிர்பார்த்தேன். அன்றைக்குக் காலையில் தான் அவன் என் படுக்கையைச் சரியாக்கி விட்டுப் போயிருந்தான். இப்ப மொத்த அறையுமே கன்னா பின்னான்னு கெடக்கு. அவன் ஆத்திரப்படுவதற்கு பதிலாக புன்னகை செய்தான். தன் மார்பைத் விரலால் தொட்டுக் கொண்டான். பிறகு அந்த விரலால் நாக்கைத் தொட்டான்… தன் ரத்தத்தை தானே சுவைக்கிறாப் போல. படத்தில் எனக்குப் பிடித்த காட்சி அது. ஆகாவென ரஃபேலைப் பரவசமாக நோக்கினேன். “நான் வேலை செஞ்ச ஒரு வீட்ல அந்தப் படத்தை நான் பாத்தேன்” என்றான் அவன். “இந்தா பாரு…”

அவன் சற்று அகட்டி நின்றான். அப்படியே நிமிர்ந்து ஒரு உதை. அவனது கால் நேரா நீட்டி நல்ல உயரத்தில். .மொத்த உடம்பும் விரைத்த நளினம். இது நடந்தபோது எனக்கு வயது பன்னிரண்டு. நானே இன்னொரு ஆளா மாறியதாக அதுவரை நான் உணர்ந்ததே இல்லை. இவன்? புரூஸ் லீயாகவே மாறியிருந்தான்.

*

வீட்டின் புழக்கடையில் ரஃபேலும் நானும் பயிற்சிகள் எடுத்தோம். புல்லுத்தரையில் துணிதுவைக்கிற கான்கிரீட் மேடையில் இருந்து துள்ளிப் புல்லுக்குப் பாய்வோம். வயிற்றை உள்ளமுக்கிக் கொள்ளும்படி சொல்லித் தந்தான் ரஃபேல். காலை நீட்டி வெரைப்பா வெச்சிக்கணும். விரல்கள் மடக்கி வெச்சிக்க. எப்பிடி மூச்செடுக்க, என்பதையும் சொன்னான்.

சாத்திய என் அறையில் தன்னிச்சையான என் இப்படி முயற்சிகள் பெரிதாய்ப் பலிதமாகவில்லை. இப்ப ரஃபேலுன் காற்றைக் கால்களால் ரெண்டு துண்டாய் வகிர்ந்தேன். இதுதாண்டா எத்து, என்று உணர்ந்தேன். கீழே மிருதுவாய்ப் புல், மேலே ஆகாயம். இந்தப் பரந்த வெளி, நான் ஆளுவேன் இதை. இதெல்லாம் கனவு இல்லப்பா! ஆ நானும் ஒரு நாள் கருப்பு பெல்ட் வாங்கிருவேன். சமையல் அறை சாளரத்துக்குப் புறத்தில் உயரமாய் ஒரு நீள எடுப்பு. ஆறு படிகள் உயரம் அது. அந்த உயரத்தில் இருந்து ஒரே துள்ளலாய் எகிறி… “ம்ஹும்” என்றான் ரஃபேல். “அது ரொம்ப உயரம் உனக்கு.”

வார இறுதி நாட்களில், எப்பவாவது என் அப்பா அம்மா நான் இல்லாமல் மனமகிழ் மன்றம் என்று கிளம்பிப் போய்விட்டால், நானும் ரஃபேலும் புரூஸ் லீயின் வீடியோக்கள் போட்டுப் பார்த்தோம்.

ரொம்ப அனுபவித்துப் பார்ப்பான் ரஃபேல். “பாரு! பாரு!” என்று சத்தம் போடுவான். அவன் கண்களில் அந்தப் படங்கள் எனக்குப் புது அனுபவம். லீயின் அதிரடி என நான் நினைத்திருந்த சில அசைவுகள், இப்போது மேலும் மகத்துவமாய்த் தெரிந்தன. “பாரு” என என்னை அவன் கவனப் படுத்திய போது. எதைப் பார்க்க வேண்டும், எப்படி அதைப் புரிந்து கொள்வது என அவனுக்குத் தெரிந்தது.

அவனுக்கு இயல்பாகவே எல்லாம் பிடிபட்டது. புரூஸ் லீ நன்சாகுவை வைத்துக்கொண்டு ஆடும் ஆட்டத்தைத் திரும்பத் திரும்பப்போட்டுப் பார்த்தான் ரஃபேல். (நன்சாகு – இரண்டு பிடிகளுக்குள் சங்கிலி அமைந்த விளையாட்டுக் கருவி.) எப்படி துல்லியமாய் இயக்குகிறான் புரூஸ் லீ என்பதை அவன் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே யிருந்தான்.

“எனக்கும் ஒரு நன்சாகு இருந்தா நல்லா யிருக்கும்” என்றேன் நான்.

“அதைவெச்சி விளையாடறது ஒண்ணும் சுலபம் இல்ல” என்றான் ரஃபேல் முக இறுக்கத்துடன். எனக்கு ஏன்டா அதுக்கு ஆசப்பட்டோம்னு ஆயிட்டது.

அதுக்குச் சில நாள் கழிந்து ஒருநாள் நான் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது ரஃபேல் “பாரு” என்று காட்டினான். கப்போர்டில் இருந்து எடுத்துக் காட்டினான். ஒரு நன்சாகு! வீட்டை சுத்தம் செய்யும் மாப், அதில் பிரித்தெடுத்த இரண்டு சிறு கட்டைகளைத் தேய்த்து சுத்தம் செய்திருந்தான்.

நடுவே சுருள் சுருளாய் கம்பி ஸ்பிரிங்குகள். ஒரு வாரமா வீட்டு வேலை முடிஞ்ச ஓய்வு சமயத்தில் இப்பிடி ஒண்ணொண்ணா தயார் செய்து தேத்தியிருப்பான் போல.

அதைவைத்து எப்பிடி விளையாட என்று அவன் செய்து காட்டினான். பார்க்க அசட்டுத்தனமாய் இருந்தது. புரூஸ் லீ, எங்க இவன் எங்க? அந்த நன்சாகியை வாங்கி நான் அதைவைத்து விளையாடிப் பார்த்தேன். நெஞ்சில் பளார்னு அறை வாங்கியதே கண்ட பலன். ரஃபேல் கடகடவென்று சிரிக்கிறான். “நீ பாட்டுக்கு எடுத்தேன் சுத்தினேன்னா வந்துருமா? அதைக் கையாள எவ்வளவோ பயிற்சி எடுத்துக்கணும்.”

பள்ளிக்கூடத்தில் இதே நினைப்புதான் எனக்கு. உள்ளங்கையில் அந்தக் கட்டைகளின் மிருதுவான் பிடிப்பு. பள்ளி முடிந்து, ரஃபேலுடன், அப்பதான் நான் வாழவே ஆரம்பிச்சாப் போல இருந்தது.

நானும் ரஃபேலும் இத்தனை நெருக்கமாகி விட்டதை என் அப்பா அம்மா கவனிக்கவில்லை. நான் இப்போது விளையாட வெளியே போகிறேன் என்பதை அவர்கள் கவனித்தார்கள். அந்நேரம் ரஃபேலும் வீட்டுக்கு வெளியே, அவன் தோட்டத்தில் களையெடுப்பானாய் இருக்கும். அல்லது தண்ணித் தொட்டியில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கலாம்.

ஒரு மதியப் போது. ரஃபேல் கோழியை உரித்து முடித்துவிட்டு, புல்வெளியில் நான் பயிற்சி யெடுக்கிறபோது இடைமறித்தான். “சண்டைபோடு” என்றான். எனக்கும் அவனுக்குமான சண்டை. அவனிடம் ஆயுதம் எதுவும் இல்லை. வெறுங் கையாய் இருந்தான்.

என்னிடம் அந்தப் புதிய ஆயுதம். என்னை அழுத்தமாய்ப் பின் தள்ளினான் அவன். என் ஆயுதம், அதன் ஒரு கட்டை அவன் கையில் மோதியது. ஆச்சர்யப் பட்டான். கூடவே அதை அவன் ரசிக்கவும் செய்தான். ஏ இவன் பரவால்லப்பா, என்கிற ரசனை அது. என்னால் அது முடியும் என அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.

மேலும் மேலும் என் ஆயுதத்தை அவனை நோக்கி நான் வீசினேன். ஆ ஆ என கேலியடித்தபடியே நழுவி அவன் ஒரு எத்து எடுத்தான். நேரம் போனதே தெரியவில்லை. கடைசியில் இருவருமே மூச்சிறைக்க இறைக்க சிரித்தபடி ஆசுவாசமானோம். இப்ப கூட எனக்கு அத்தனை துல்லியமாக நினைவு இருக்கிறது. எத்தனை குட்டை டவுசரில் இருந்தான் அவன். தொடையில் இருந்து அவனது சதைகள் எப்படி இறுகி வேர் போல கால்வரை விரவியது!

*

வார இறுதி நாட்கள் என்றால் மதிய உணவு என் பெற்றோருடன் தான். எதும் கேள்வின்னு விசாரிக்க அவர்கள் ஆரம்பிக்கு முன் நழுவி விட வேண்டும் என கிடுகிடுவென்று சாப்பிடுவேன் நான். இப்படியொரு சாப்பாட்டு வேளையில் ரஃபேல் சிறிய வெண் தட்டில் வேக வைத்த கருணைக் கிழங்கை இலைகளைக் கூடப் பரத்திப் பரிமாறினான். கூடவே பப்பாளி மற்றும் பைனாப்பிள் துண்டுகள்.

“கீரை சரியாவே மசியல” என்றாள் அம்மா. “ஏன்டா நாங்க என்ன குழை கடிக்கிற ஆடுகளா?” அவனை ஒரு பார்வை பார்த்தாள். “எணடா ஆச்சி உன் கண்ணுக்கு?”

நான் நிதானப்பட ஒரு நிமிடம் ஆயிற்று. அம்மாவின் வசை பாடுதல் பாணி இது அல்ல. “ஏண்டா உன் மூக்கு முன்னால எதாவது மறைச்சிட்டதா?”.. இப்படித்தான் கேட்பாள். ஆனால் ரஃபேலின் கண்கள் வெண்மை மாறி ஜிவுஜிவுத்துக் கிடந்தன. இயல்பான சிவப்பு அல்ல. வலி. கண்ணில் எதோ பூச்சி விழுந்துட்டதாக மெல்ல முணுமுணுத்தான் அவன்.

“அப்போலா மாதிரி யிருக்கு” என்றார் என் அப்பா.

அம்மா நாற்காலியைப் பின் தள்ளி கிட்டே வந்து அவனை சோதித்தாள். ”ஆமாம். போ உன் அறைக்கு, வெளியே வராதே.”

சாப்பாட்டுத் தட்டுகளை எடுக்கணுமே, என ரஃபேல் தயக்கம் காட்டினான்.

“போடா” என்றார் என் அப்பா. “எங்களுக்கும் அப்போலோ தொத்திக்காம…”

அவன் குழப்பத்துடன் மெல்ல மேசையை விலகிப் போனான். திரும்ப அவனை அம்மா கூப்பிட்டாள். “இதுக்கு முன்னாடி இது மாதிரி வந்திருக்கா உனக்கு?”

“இல்லிங்க மேடம்.”

“அப்போலோ தான். உன் கண்ணுக்கு மேலே போத்தினாப் போல தொத்துக் கிருமி சேர்ந்திருக்கு.” இக்போ மொழியின் வார்த்தைகளுக்கு நடுவே ‘தொத்து’ கடுமையானதாக விபரீதமானதாக ஒலித்தது. “உனக்கு மருந்து வாங்கித் தரோம். மூணு வேளை போட்டுக்க. அறையை விட்டு வெளியே வரவே வராதே. அது சரியாற வரை நீ சமையல் பக்கமே வர வேண்டாம்.” அம்மா என் பக்கம் திரும்பினாள். “ஒகென்வா. அவன் கிட்ட போயிறாதே. அப்போலோ சட்னு பரவும்.” அவளுடைய அந்த அதிகார த்வனியில் தெரிந்தது. நான் ஏன் அவன் கிட்டே போகப் போகிறேன், என அவள் நினைக்கிறாள்.

பிறகு என் பெற்றோர் நகரத்துக்குக் காரில் போய் ஒரு புட்டி கண் மருந்துத் துளிகள் வாங்கி வந்தார்கள். வேலைக்காரனுக்கென்று ஒதுக்குப் பறமான அறை. அங்கே போய் மருந்தை ரஃபேலிடம் கொடுத்துவிட்டு வேண்டா வெறுப்பாக வெளியே வந்தார், எதோ யுத்தத்துக்குப் புறப்பட்ட மாதிரி.

அன்று இராத்திரி நான் ஒபோலோ தெருவுக்குப் போய் எங்கள் இரவு உணவாக அகாரா வாங்கி வந்தேன். நாங்கள் திரும்ப வரும்போது, கதவை ரஃபேல் வந்து திறக்கவில்லை, என்பதே எனக்கு என்னவோ போலிருந்தது. கூடத்தின் திரைச்சீலைகளை இழுத்துவிட்டு, விளக்கைப் போடுவான் அவன். இன்றைக்கு அதுவுமில்லை. சமையல் அறையில் சத்தமே யில்லாமல் வீடே ஜீவனற்றுப் போய்க் கிடந்தது. அப்பாவும் அம்மாவும் தங்கள் நியதிகளில் மூழ்கி விட்டார்கள். நான் அவுட்ஹவுசுக்குப் போய் மெதுவாகக் கதவைத் தட்டினேன்.

கதவு லேசாய்த் திறந்தே இருந்தது. சுவரை ஒட்டிப் போட்டிருந்த கட்டிலில் ரஃபேல் மல்லாக்கக் கிடந்தான். நான் உள்ளே வந்தபோது திரும்பிப் பார்த்தான். அவன் முகத்தில் ஆச்சர்யம். எழுந்துகொள்கிறாப் போல முன்பக்கமாக வந்தான். அவன் அறைக்கு நான் இதுவரை வந்ததே இல்லை. வயர் தொங்கும் பல்ப் சிறிது காற்றில் ஆடியாடி சுவரில் மங்கலான நிழலாட்டம் கண்டது.

“என்ன விஷயம்?” என்று கேட்டான்.

“ஒண்ணில்ல. நீ எப்பிடி இருக்கேன்னு பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்.”

உடம்பைக் குலுக்கிக் கொண்டே திரும்பப் படுத்துக் கொண்டான். “எனக்கு எப்பிடி வந்தது இதுன்னு தெரியல்ல. ரொம்ப கிட்டத்தில் வராதே.”

ஆனால் நான் அவன் கிட்டே போனேன்.

“வேணாம்.”.

“ஏன்?”

அவன் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தான். “நான் உன்னைப் பார்க்க மாட்டேன்.”

ஒரு நெருப்புக் கோழியையே முழுக்கக் குடல் எடுக்கிறவன். ஒரு மூட்டை அரிசையைத் தனியே தூக்குகிறவன். ஆனால் கண் மருந்தைத் தானாகவே போட்டுக்கொள்ளத் திண்டாடினான். அதைப் பார்க்க முதலில் திகைப்பாயும் பிறகு வேடிக்கையாகவும் இருந்தது எனக்கு. நான் மெல்ல நகர்ந்தேன். அந்த அறையை ஒரு நோட்டம் விட்டேன். அந்த அறையில் எந்த சாமான் சாதனமும் இல்லாமல் வெறுமையாய் இருந்தது. சுவரை ஒட்டிப் போடப்பட்ட கட்டில். கரடுமுரடாய் ஒரு மேசை. மூலையில் ஒரு வெளிர் சாம்பல்நிற இரும்புப் பெட்டி. அவனது எல்லா சாமான்களையும் அதில் அவன் வைத்துக் கொள்வானாய் இருக்கும்.

“நான் மருந்து போட்டு விடறேண்டா.” புட்டியை எடுத்து மூடியைத் திருகினேன்.

“ச். வேணா. கிட்டே வராதே” என்றான் திரும்ப.

அதற்குள் நான் பக்கத்தில் வந்திருந்தேன். அவன் முன்னால் குனிந்தேன். மருந்துவிடத் திறந்த அவன் கண்ள் படபடத்தன.

“குங்ஃபுல மாதிரி மூச்செடுடா” என்றேன் நான்.

அவன் முகத்தைத் தொட்டேன். இடதுபக்க கீழ் இமையைக் கொஞ்சம் இறக்கிக் கொடுத்தேன். அவன் கண்ணுக்குள் மருந்தைச் சொட்டினேன். அடுத்த கண்ணை இன்னும் இறுக்கமாக மூடிக் கொண்டிருந்தான் அவன். இன்னும் அழுத்தமாய்த் திறக்க வேண்டியிருந்தது.

“ச். சாரிடா” என்றேன் என் கடுமைக்காக.

கண்ணைத் திறந்து என்னைப் பார்த்தான். அந்த முகத்தில் என்னவோர் அற்புதம். அதுவரை யாரும் பாராட்டி நான் அனுபவித்தது இல்லை. எங்க அறிவியல் வகுப்பு, மக்காச்சோளத் தண்டு ஒன்று வெளிச்சம் பார்க்கப் பசுமை ஒளிர வளர்கிற காட்சி, எனக்கு ஞாபகம் வந்தது. ரஃபேல் என் கையைப் பற்றிக்கொண்டான். நான் கிளம்பினேன்.

“நாளைக்கு பள்ளிக்கூடம் கிளம்பு முன்னால் வந்து பாக்கறேன்” என்றேன் நான்.

காலையில் நான் அவன் அறைக்குள் மெல்ல நுழைந்தேன். அவனுக்குக் கண் மருந்து சொட்டினேன். மெல்ல வெளியேறி அப்பாவின் காருக்குள் போய் அமர்ந்து கொண்டேன். பள்ளிக்கூடத்துக்கு இனி கார் என்னைக் கொண்டுவிடும்.

மூணு நாளில் அவன் அறை எனக்கு சகஜமாகி விட்டது. சாமான்கள் அடைக்காத எளிய அந்த அறை எனக்கு இன்முகம் காட்டினாப் போல. அவன் தாடைக்கும் கழுத்துக்கும் இடையில் சுருக்கங்கள் ஒரு புழு போலத் தெரிந்தது எனக்கு.

நாங்கள் அமர்ந்து ‘தி ஸ்நேக் இன் தி மங்க்கிஸ் ஷேடோ’ (குரங்கின் நிழலில் பாம்பு, புரூஸ் லீயின் திரைப்படம்.) பற்றிப் பேசினோம். அந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே பலமுறை பேசியிருக்கிறோம். முன்னால் பேசியதையே திரும்பவும் இப்போது பேசிக் கொண்டோம். அந்த அறையின் அமைதியில் எங்கள் பேச்சே ரகசியம் போல் ஒலித்தது. நாங்களும் அத்தனை மெதுவாய் கிசுகிசுத்துக் கொண்டிருந்தோம். ஒருவரின் கதகதப்பு இன்னொருவருக்குக் கிட்டும் நெருக்கம்.

அவன் எழுந்துகொண்டான். அந்தப் பாம்பு ஸ்டைல், அதைச் செய்து காட்டுகிற ஆர்வம். அதை பார்த்ததும் இருவருக்கும் கலகலப்பு. என் கையைப் பற்றிக் கொண்டான். பிறகு விடுவித்துக்கொண்டு என்னை விட்டு விலகினான்.

“அப்போலோ போயாச்சி” என்றான்.

அவன் கண்கள் தெளிவாய் இருந்தன. ச். அதுக்குள்ளவா, என்றிருந்தது. இனி அந்த அறைக்கு நான் வர வேலை இராது.

*

ஒரு கனவு. ரஃபேலுடனும் புரூஸ் லீயுடனும் ஒரு களத்தில் நான். மோதலுக்காக. சுதாரிப்பு வந்தபோதும் கண்ணைத் திறக்க முடியவில்லை. கண்ணை பலவந்தமாய்த் திறக்க முயற்சி செய்தேன். கண்ணே வலித்தது. எரிச்சல் எடுத்தது. கண்ணை நான் சிமிட்டும் போதெல்லாம் பீளை வழிந்து புருவத்தில் படிந்தது. கண்ணுக்குள் யாரோ சுடு மணலைக் கொட்டினாப் போல உறுத்தல் வேறு. என் உடம்பில் எதோ உருகி வழிகிறாப் போலிருந்தது. உருகக் கூடாத எதோ ஒண்ணு.

அம்மா ரஃபேலிடம் ஆத்திரப் பட்டாள். “எதுக்குடா நி இந்த இழவையெல்லாம் எங்க வீட்டுக்குள்ள எடுத்திட்டு வந்தே? எதுக்கு?” அவனுக்கு வந்தது தான் என்னையும் பிடித்துக் கொண்டதாக அவளுக்கு. ரஃபேல் பதில் எதுவும் சொல்லவில்லை. அம்மா கோபத்தில் இரைகையில் அவன் பதில் பேசுவதில்லை. அம்மா மாடியில் படிக்கட்டின் முதல் படியில் நின்றிருந்தாள். ரஃபேல் கீழே இருந்தான்.

“அவன் அறையில் இருந்து இங்கவரை உனக்கு எப்பிடிடா அப்போலோ வந்தது?” அப்பா என்னிடம் கேட்டார்.

“ரஃபேல் கிட்டேர்ந்து இல்ல. பள்ளிக்கூடத்தில் யார் கிட்டேயாவது இருந்து வந்திருக்கலாம்…”

“யார் அது?” அம்மா இந்தக் கேள்வியைக் கேட்பாள் என நான் எதிர்பார்த்திருக்க வேண்டும். அந்நேரம் பார்த்து என் கூடப் படிக்கிற ஒரு பையன் பேரும் ஞாபகத்துக்கு வரவில்லை.

“யாருடா?” அம்மா திரும்பவும் கேட்டாள்.

“சிடி ஒபி” என்று ஒரு வழியாக முதலில் ஞாபகம் வந்த பேரைச் சொல்லிவிட்டேன். எனக்கு முன்வரிசைக்காரன். எப்பவும் அழுக்கு மூட்டை நாற்றம் அவனிடம் வரும்.

“தலை வலிக்குதாடா?” அம்மா கேட்டாள்.

“ம்.”

அப்பா போய் பனடோல் கொண்டு தந்தார். அம்மா டாக்டர் இக்போக்வேயை தொலைபேசியில் கூப்பிட்டாள். அப்பா அம்மா இருவருமே பரபரப்பாய் இருந்தார்கள். அவர்கள் வாசல் பக்கம் இருந்து என்னை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்பா கலக்கித் தந்த மிலோ நான் அருந்திக் கொண்டிருந்தேன்.

கடகடவென்று அதை நான் குடித்தேன். எனக்கு அசௌகரியம் என்றாலே அவர்கள் ஒரு கை வைத்த நாற்காலியை என் படுக்கை அருகே இழுத்துப் போட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்து விடுவார்கள். எனக்கு மலேரியா வந்த ஒவ்வொரு தடவையும் அதுதான் நடந்தது. கசப்பான நாவுடன் நான் முழித்துக் கொண்டால் சட்டென என்னை எட்டிப் பார்ப்பார்கள். அருகிலேயே அமர்ந்து எதாவது வாசித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை இந்தக் கவலையில் இருந்து விடுவிக்கவாவது நான் சீக்கிரம் தேறிவர விரும்புவேன், என்பது அவர்களுக்கு யோசனை.

டாக்டர் வந்தார். என் கண்ணில் டார்ச் அடித்துப் பார்த்தார். அவரிடமிருந்து அடர்த்தியான கோலோன் வாசனை வந்தது. அவர் கிளம்பிப் போன பிறகும் அந்த நெடி அறையில் இருந்ததை நான் உணர்ந்தேன். ஆல்கஹாலை ஒத்த அந்த நெடி அப்படியாய் நெடி அறையைச் சுத்திச் சுத்தி வரும். டாக்டர் போன பிறகு என் அப்பா அமமா என் படுக்கையருகே ஒரு ‘நோயாளி பலி பீடம்’ அமைத்தார்கள். துணி போர்த்தி ஒரு மேசையைக் கொண்டு வந்தார்கள். அதில் ஒரு போத்தல் ஆரஞ்சு லூகோசேட் பானம். ஒரு நீல டின் குளூகோஸ். ஒரு பிளாஸ்டிக் தாம்பாளத்தில் அப்போதே உரித்த ஆரஞ்சுச் சுளைகள். ஹப்பா, கை வெச்ச நாற்காலி கொண்டு வந்து வைக்கவில்லை.

ஆனால் அவர்கள் இருவரில் ஒருத்தர் அந்த வாரம் பூராவும் எனக்கு அப்போலோ சொஸ்தமாகும் வரை வீட்டில் இருந்தார்கள். என் கண்ணில் அம்மா அல்லது அப்பா யாராவது மாற்றி மாற்றி வேளைக்கு சொட்டு மருந்து விட்டார்கள். அம்மா பரவாயில்லை. அப்பாதான் மருந்தை கண்ணுக்கு வெளியே என் முகமெல்லாம் வழிய விட்டார். எனக்கு நானே அழகா மருந்தை விட்டுக்குவேன், என்பது அவர்கள் இருவருக்கும் தெரியாது. குப்பியை அவர்கள் கையில் உயர்த்தும் ஒவ்வொரு தரமும், எனக்கு முதல் முறை ரஃபேலுக்காக நான் குப்பியை எடுத்தது ஞாபகம் வரும். ஆகா எத்தனை மகிழ்ச்சியான தருண்ங்கள் அவை.

அறையின் திரைச்சீலைகளை இறக்கி என் அறையை எப்பவும் இருட்டாகவே வைத்திருந்தார்கள் என் அப்பா அம்மா. சும்மா படுத்தே கிடந்து வெறுத்து விட்டது எனக்கு. ரஃபேலைப் பார்க்க விருப்பமாய் இருந்தது. ஆனால் என் அம்மா அவனை என் அறைக்குள்ளேயே நுழையக் கூடாதுன்னு கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தாள்.

அவன் வந்து என் கண் வலி அதிகமாகவா போகுது? அவன் என்னைப் பார்க்க வரவேண்டும் என நான் விரும்பினேன். ஒரு படுக்கை விரிப்பை எடுக்கிறாப் போலவோ, குளியலறை வரை ஒரு வாளியுடனோ எதாவது பாவனையில் அவன் வருவான் என நான் எதிர்பார்த்தேன். அவன் வரவேயில்லை. ஏன்? வராததற்கு ஒரு சாரி கூட அவன் சொன்னானில்லை. அவன் குரல் கேட்கிறதா என்று நான் காதைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தேன். இங்கிருந்து சமையல் அறை ரொம்ப தூரம். அம்மாவிடம் அவன் பேசும்போது அவன் குரல் இன்னும் தணிந்தே விடும்.

கழிவறை போய் வரும் ஒரு சமயம் நான் மெல்ல கீழிறங்கி சமையல் கூடம் வரை நழுவிவிட முயன்றேன். ஆனால் கீழ்ப்படியில் அப்பா தோன்றினார்.

“கேது…” என்றார் அப்பா. “என்ன உனக்கு சரியாயிட்டதா?”

“குடிக்க… தண்ணி…”

“நான் எடுத்திட்டு வரேன். போ. படு பேசாம…”

*

ஒருவழியாக, அப்பா அம்மா ரெண்டு பேருமாக வெளியே இறங்கினார்கள். நான் அப்போது தூங்கிக் கொண்டிருந்தாலும், காலியான வீட்டின் அந்த அமைதியின் விநோதம் என்னை உசுப்பி விட்டிருந்தது. தடதடவென்று கீழே இறங்கி சமையலறைக்கு ஓடினேன். சமையலறையும் காலியாய்க் கிடந்தது. ஒருவேளை ரஃபேல் அவ்ட்ஹவுசில் இருக்கிறானா? பகலில் அவன் தன் அறைக்குப் போக அனுமதி இல்லை. இரா படுக்க மாத்திரம் தான் போவான். ஆனால் இப்ப என் அப்பா அம்மா வெளியே போயிட்டதால, போயிருக்கலாம்.

திறந்த வெளி முற்றம் வரை போனேன். அவனைப் பார்க்குமுன் அவன் குரலைக் கேட்டுவிட்டேன். தண்ணீர்த் தொட்டிக்கு அருகே அவன். காலால் மண்ணைப் பறித்தபடி ஜோசபினுடன் பேசிக் கொண்டிருந்தான். பேராசிரியர் நவோசுவின் வீட்டு உதவியாள் அவள். பேராசிரியர் சில சமயம் தன் பண்ணையில் இருந்து முட்டைகள் அவளிடம் எங்களுக்குத் தந்தனுப்புவார். துட்டு வாங்கிக் கொள்ள மாட்டார். ஜோசபின் முட்டை எதும் கொண்டு வந்திருக்கிறாளா? நல்ல உயரமா கொழுக் மொழுக் என இருப்பாள் அவள். யாரோ அவளைக் கை விட்டாப் போல இப்போது அவள் ரொம்ப தளர்வுடன் காணப்பட்டாள்.

அவளுடன் பார்க்கையில் ரஃபேல் அப்படி இல்லை. முன்குனிந்த அந்த நிலையில் அவன் கால்கள் பரபரவென்று இயங்கிக் கொண்டிருந்தன. லேசாய் அவனில் ஒரு வெட்கம் வந்திருந்தது. அவனுடன் அவள் சிறு குறும்புடன் உரையாடிக் கொண்டிருந்தாள். அவனுக்குள் ஊடுருவி அவன் மனசை அவளால் பார்க்க முடிந்தாப் போல எள்ளி நகையாடியபடி இருந்தாள் அவள். ஆனால் நான் நினைத்தது தவறு.

“ரஃபேல்?” என உரக்கக் கூப்பிட்டேன்.

அவன் திரும்பிப் பார்த்தான். “ஓ ஒகென்வா. நீ கீழ வரலாமா?”

என்னை ஒரு குழந்தை போல நினைத்து அவன் பேசினான். அந்த மங்கிய அவ்ட்ஹவுசில் நாங்க ஒண்ணா உட்கார்ந்து அரட்டை யடித்ததையே அவன் மறந்து போனாப் போலிருந்தது.

“பசிக்குது எனக்கு. சாப்பாடு கொண்டு வா…” என்றுதான் முதலில் சொல்ல வந்தது. ஆனால் நான் அப்படி கட்டளை இடுகையில் என் குரல் கீச்சிட்டு ஒலித்தது.

ஜோசபினுடைய முகம் ஒரு மாதிரி கோணி, பெரிய சிரிப்பாய்ப் பீரிடுகிறாப் போல மாறிப் போனது. ரஃபேல் அவளிடம் எதோ சொன்னான். என்ன சொன்னான் எனக்குக் கேட்கவில்லை. ஆனால் இது எதோ உள்குத்து என்று எனக்குப் பிடிபட்டது. என் அப்பா அம்மா அப்பதான் திரும்ப உள்ளே நுழைந்தார்கள். அதனால் ரஃபேலும் ஜோசபினும் பரபரப்பானார்கள். ஜோசபின் கிடுகிடுவென்று காம்பவுண்டுக்கு வெளியே போனாள். ரஃபேல் என்னிடம் வந்தான். அவன் சட்டை முன்பக்கம் அழுக்கு அப்பி பனை யெண்ணெயின் கசடுடனான கலக்கலாய்த் தெரிநதது. என் பெற்றோர் வந்திருக்காவிட்டால், அவன் தொட்டி பக்கத்திலேயே தான் இருந்திருப்பான். நான் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல.

“உனக்கு சாப்பிட என்ன கொண்டு வர?” என்று கேட்டான் அவன்.

“நீ என்னைப் பார்க்க வரவே இல்லியே?”

“உனக்கே தெரியுமே? மேடம் நான் உன்னாண்ட போகவே கூடாதுன்னு சொல்லிருக்காங்கள்ல?”

இவன் ஏன் எல்லாத்தையுமே இப்பிடி மொண்ணையா சாதரணமாப் பேசறான்? என்னையும் அம்மா என்ன சொன்னா, அவன் அறைக்கு நீ போகக் கூடாது, அதானே? ஆனாலும் நான், போயிப் பாக்கலே? தினசரி நான் அவனுக்குக் கண்ணுக்கு சொட்டுமருந்து விட்டேன்.

“எது எப்பிடியோ, நீதானே எனக்கு அப்போலோ தந்தே?” என்றேன் நான்.

“சாரி” என்கிறான், ஆனால் அவன் மனம் வேறெங்கோ.

அம்மாவின் குரல் கேட்டது. அவர்கள் திரும்பி வந்ததில் எனக்கு ஆத்திரம் வந்தது. ரஃபேலுடன் நான் அதிகம் இருக்க முடியாமல் ஆயிட்டது. என் கண்ணில் விரிசல் அதிகமானாப் போல.

“என்ன கொண்டு வர, வாழைப்பழமா, கருணைக் கிழங்கு சூப்பா?” ரொம்ப அனுசரணையாகவோ இதமாகவோ வெல்லாம் கேட்கவில்லை. இப்ப என்ன என்கிற அலட்சிய பாவனை அது. என் கண்களில் திரும்ப எரிச்சல் வந்திருந்தது. படியேறி கூட வந்தான். நான் அவனை விலகி நடந்தேன். சட்டன்று முற்றத்தின் மறுமுனைக்கு நகர்ந்தேன். காலடியில் ரப்பர் செருப்பு சிறிது மடங்கி, சமாளிக்க முடியாமல் நான் கிழே விழுந்தேன். கையிலும் முட்டியிலுமாக நான் விழுந்தேன். என்னுடைய உடம்பின் எடையே என்னை அதிர வைத்தது. அடக்க முடியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது. பிடிவாதப் பல்கடிப்புடன் அப்படியே நகராமல் கிடந்தேன்.

அப்பா அம்மா உள்ளே வந்தார்கள்.

“ஒகென்வா?” அப்பா கத்தினார்.

நிலத்தில் அப்படியே இருந்தேன். என் முட்டியில் ஒரு கல் குத்தி யிருந்தது. “ரஃபேல் என்னைத் தள்ளி விட்டுட்டான்…”

“என்னடா சொல்றே?” அவர்கள் ரெண்டு பேருமே ஒரே மாதிரி குரல் எடுத்தார்கள். ஆங்கிலத்தில். ”என்னது?”

காலம் அப்படியே உறைந்தது. அப்பா ரஃபேல் பக்கமாகத் திரும்புமுன், அம்மா ரஃபேலை ஒரு அறை விடப் பாயுமுன், உன் மூட்டை முடிச்செல்லாம் வாரிக்கிட்டு வெளிய போடா, என அம்மா அவனை விரட்டுமுன், நான்… நான் எதுவும் சொல்லி யிருக்கலாம். காலம் உறைந்திருந்தது. நான் அதை உடைத்திருக்கலாம். அட அவன் வேணுன்னு பண்ணவில்லை, என்று நான் சொல்லி யிருக்கலாம். நான் பொய் சொல்லியதை வாபஸ் பெற்றிருக்கலாம். இவன் ஏன் அப்பிடிப் பொய் சொன்னான் என என் அப்பா அம்மா என்னை அப்போது விநோதமாய்ப் பார்த்திருக்கவும் கூடும்.

.

என் இறப்பு பற்றிய நினைவுக்குறிப்பு / வைக்கம் முகமதுபஷீர் / தமிழில் : தி.இரா.மீனா

download (13)

இந்த அழகான பூமியில் எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த காலம் முழுமையும் கழிந்திருக்கிறது.எனக்கு மேலும் காலஅவகாசமில்லை. காலமிருப்பது,என்பது அல்லாவிற்கு—கடவுளுக்குத்தான்.அவன் காலத்திற்கு முடிவேயில்லை,அது முடிவற்றது ; காலம் முடிவற்றது.

இந்த நாள்வரை நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்போது,எப்போதும் காலைப் பொழுதாக இருக்காதபோதும் நான் காலத்திற்கு வணக்கம் சொல் கிறேன்;முடிவற்ற காலத்திலிருந்து எனக்கு மேலும் ஒரு நாளை நீட்டித்ததற்கு கடவுளே நன்றி.

இந்து மற்றும் இஸ்லாமிய சந்நியாசிகள்- சூபி ஆகியவர்களுடன் நான் கழித்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன.உண்மையைத் தேடி நான் அலைந்த நாட் கள் அவை.கடவுள் பற்றிய இணைச்சொற்களை நான் கணக்கிட்டுக் கொண் டிருந்தேன்.ஏறக்குறைய நிர்வாணத்தோடு உட்கார்ந்து தலைமுடியும் ,மீசையும் வளர இடையீடின்றி சிந்தனைகளால் சூழப்பட்டிருந்தேன்.பத்மாசனம் போட்டு “யோகாதண்டுவை” கையில் வைத்திருப்பதாக பாவித்தேன்.அனைத்து உலகச் சிந்தனைகளையும் நான் மனதில் இருத்தியிருந்தேன்.

என் தியானத்திலிருந்து மீளும்போது சூரியன்,சந்திரன்,விண்மீன்கள்,பால்வீதி,சூரிய மண்டலம், அண்டம் ஆகியவைகளுக்குக் கேட்கும்படியாக நான் “அஹம் பிரம்மாஸ்மி” என்று முணுமுணுக்கிறேன்.அது சூபிக்கள் சொல்லும் “அனல் ஹஃ” (Anal Haq) என்பது தான்.
என்னுடைய “அனர்ஹ நிமிஷம் “(Anargha Nimisham )தொகுதியில்“அனல் ஹஃ” பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.அன்று நான் இறக்கப் போகிறேன் என்று நினைத் தேன்,நான் இல்லாமல் போவேன் என்று நினைத்தேன்.இதுவரை யதார்த்தம் உன்னையும் ,என்னையும் கூறாகக் கொண்டிருந்தது ;ஆனால் இதற்குப் பிறகு நீ மட்டும்தான் யதார்த்தமாக இருப்பாய்.அந்தக் கணம்தான்“அனர்ஹ நிமிஷம்”, விலைமதிப்பற்ற கணம்
எனக்கு மரணம் பற்றிய பயமில்லை. அது உண்மை ;நான் மரணத்தை பயமு றுத்துகிறேன்,என்பதும் இணையான உண்மைதான்.மரணம் தவிர்க்கமுடியா தது; அது தன் பட்டியல்களுடன் வரட்டும்.

பிறந்தது முதல் நான் மரணத்துடன் உராய்ந்திருக்கிறேன்.ஒரு முறை கடுமை யான விஷமுடைய கட்டுவிரியன் என் வலதுகாலைச் சுற்றிச் சூழ்ந்திருந்தது. இன்னொரு சமயத்தில் நல்லபாம்பு என் இடதுகாலில் தவழ்ந்து கொண்டி ருந்தது.பெரும்பாலும் பல இரவுகளில் என்வீட்டில் நல்ல பாம்புகள் புகுந்தி ருக்கின்றன.கடைசி முறை அது மிக அணுக்கமாக வந்தது;நான் ஏறக்குறைய அதை மிதித்து விட்டேன்.

நான் இறந்து விட்டேன்.இதற்குப் பிறகு யாராவது என்னை நினவு வைத்தி ருக்க வேண்டுமா?யாரும் என்னை நினைவு வைத்திருக்கத் தேவையில்லை என்பதுதான் என் அபிப்பிராயம். ஏன் நினைவு வைத்துக் கொள்ளவேண்டும்? கடந்துபோன வருடங்களில் எண்ணிக்கையற்ற கோடிக்கணக்கான மக்கள், ஆண்,பெண்கள் இறந்திருக்கின்றனர்.யாராவது அவர்களை நினைவில் வைத்தி ருக்கிறார்களா?

என் புத்தகங்கள் எத்தனை காலம் வாழும்?ஒரு புதிய பூமி உருவாகலாம். கடந்த காலத்தவை எல்லாம் புதியவற்றில் கரைந்து எதுவுமின்றி மறைந்து போகலாம்.என்னுடையது என்று நான் சொல்லிக் கொள்ள என்ன இருக்கும்? என்னுடையது என்று சொல்லிக் கொள்ளும் ஓர் இம்மியளவான அறிவை யாவது நான் இந்த உலகத்திற்கு அளித்திருக்கிறேனா?கடிதங்கள்,சொற்கள், உணர்வுகள் – இவையெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி இருக் கிறவைதான்.

இரண்டு மூன்று முறைகள் என் எல்லைக்குட்பட்ட நிலையில் நான் தனியாக நின்று கொண்டு ,முழுநிலா மற்றும் எண்ணற்ற நட்சத்திரங்கள் உருவாக்கியி ருக்கும் அச்சமும் மதிப்புமான அழகை கவனித்திருக்கிறேன் அதை உள்ளடக் கத் தவறி, பயத்தில் அழுது ஒடியிருக்கிறேன்.அந்தப் பாலைவனத்தோடான முதல் சந்திப்பிலேயே நான் மரணித்திருக்க வேண்டும்..

அது அஜ்மர் அருகேயுள்ள ஏதோ ஓரிடம்.நடு மதியப்பொழுது .நான் நடந்து கொண்டிருந்த பாதை பாலைவனத்தின் விளிம்பு.முன்பு அந்தப் பகுதியின் பள்ளங்களில் பாதசாரிகளுக்கு தங்கள் வழியைக் கண்டுபிடிக்க உதவும் வகையில் செம்பாறைக்கற்கள் அடையாளமாக இருந்தன.

ஆனால் இப்போது பாலைவனக் காற்றின் வரட்சியால் மண்குவியல்கள் அந்தப் பாறைகளை மூடிவிட்டன.நான் வழி தவறிவிட்டேன்.உஷ்ணமும், தாகமும் பொறுக்க முடி யாதவையாக இருந்தன

நான் வலதுபுறத்தை நோக்கிப் போயிருக்க வேண்டும்;ஆனால் இடதுபக்கம் திரும்பிவிட்டேன்.இப்போது அந்தப் பாலைவனம் எல்லையற்று என்முன்னால் மிகுந்த வெம்மையோடு நீண்டிருந்தது.சூரியன் இரக்கமின்றி என் தலைமீது கொளுத்திக் கொண்டிருந்தது.திசையின்றி நான் நடந்து கொண்டிருந்தேன்.

பாதம் மண்ணில் புதைந்தது-அவை குளிர்வது போல இருந்தன.- சூரியனின் தகிப்பில் நான் எரிந்தேன் — பொறுக்க முடியாத தாகம். சோர்ந்து விழுந்தேன். ஆனால் நான் இப்போது ஒரு பெரிய கரிக்கட்டை துண்டுதான்.மையப் பகுதி யில் ,உள்ளே ஒரு சிறிய சிவப்பு ஒளிவட்டம். அல்லா ! அது என்ன?
அதுவும் கூட மறைந்தது.நான் நினைவிழந்தேன்.எவ்வளவு நேரம் அந்த உருக் கும் வெம்மையில் கிடந்தேன் என்று தெரியவில்லை.பலமணி நேரமாக இருக் கலாம். நாட்களாக இருக்கலாம்.

அங்கு இறந்துகிடந்தேன் என்று வைத்துக் கொள்ளலாம்.பலமணி நேரமாக இருக்கலாம். நாட்களாக இருக்கலாம்.எனக்குத் தெரியாது.

அதை நினைத்துப் பார்க்கும்போது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது. பூமி யில் வாழ்க்கை என்பது ஒரு பெரிய “வேடிக்கைதான் ”, கடவுளின் நாடகம்.

வி.கே.என். ஒரு முறை மரணம் பற்றி என்னிடம் கேட்டார்.” கடைசி நிமிடம் வரை அவர் கடத்துகிறார்” என்றேன்.
வைக்கம் முகமதுபஷீர் இறந்துவிட்டார்.செய்தி வருகிறது.ஏன் அவர் இறந் தார்?எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்.அவ்வளவுதான்.

பாருங்கள், இப்போது நான் இறந்துவிட்டேன்.என் இறப்பிற்குத் தகுந்த கார ணங்கள் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.முடிவற்ற நேரம் எனக்கு இல்லை என்று நான் சொல்லவில்லையா?

நான் அனைவரையும் வணங்குகிறேன்.மாமரத்தையும் வணங்குகிறேன்; பூமியின் எல்லா படைப்புகளையும். அண்டமே—நான் ஏதாவது உனக்குத் தீங்கிழைத்திருந்தால் என்னை மன்னித்துவிடு. எல்லோரும் என்னை மன்னியுங்கள்.
—-

நன்றி : Malayalam Literary Survey April –Sep 1994 Kerala Sahitya Academy

ஒரு மனிதன் / வைக்கம் முகமது பஷீர் / ஆங்கிலம் : வி.அப்துல்லா தமிழில் : தி.இரா.மீனா

download (14)

உங்களுக்கென்று குறிப்பிட்ட எந்தத் திட்டமுமில்லை. வீட்டிலிருந்து வெகு தொலைவில் நீங்கள் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களிடம் பணமில்லை; உங்களுக்கு வட்டார மொழி தெரியாது.ஆங்கிலமும் ,இந்தியும் உங்களால் பேசமுடியும்.ஆனால் மிகச் சிலருக்கு மட்டும்தான் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று தெரியும்.இது உங்களைச் சங்கடமான நிலையிலாழ்த்தும்; பல சாகசங்களை நீங்கள் செய்ய நேரலாம்.

நீங்கள் அபாயகரமான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறீர்கள்.ஓர் அந்நியர் உங்க ளைக் காப்பாற்றுகிறார்.சில சமயங்களில் பல வருடங்கள் கடந்த பிறகும் உங்களுக்கு அந்த மனிதரைப் பற்றிய ஞாபகம் வந்து,அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம்.

நீங்கள் அல்ல, நான் அந்த மனிதனை ஞாபகம் வைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம்.

எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நான் இப்போது சொல்கிறேன்.மனிதர்களைப் பற்றி எனக்கு ஒரு பொதுவான கருத்துண்டு.இதில் நானும் அடக்கம்.நல்ல மனிதர்கள்,திருடர்கள், நோயாளிகள், முட்டாள்கள் என்று என்னைச் சுற்றிப் பலர் இருக்கலாம்.—ஒருவர் எச்சரிக்கையாக வாழவேண்டும்.உலகத்தில் நல்ல வர்களைவிடத் தீயவர்கள் அதிகமிருக்கிறார்கள்.வேதனைக்குப் பின்னர்தான் இதை உணர்கிறோம்.

மிக வேடிக்கையான சம்பவம் ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன்.

அது மலைப் பள்ளத்தாகில் உள்ள ஒரு பெரிய நகரம்.வீட்டிலிருந்து ஆயிரத் தைந்நூறு மைல் தொலைவிலுள்ளது;அங்கு வசிப்பவர்களுக்கு இரக்கம் என்ற குணம் பற்றி அறிமுகமில்லை.அவர்கள் கொடூரமானவர்கள்.அங்கு தினமும் கொலை,திருட்டு,பிக்-பாக்கெட் என்று சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும். அவர்கள் தொழில்சார்ந்த சிப்பாய்கள். சிலர் வட்டிக்குப் பணம் கொடுப்பவர் கள்.பலர் வங்கிகள்,மில், மற்றும் பெரிய நகர நிறுவனங்களில் காவல்காரர் களாகப் பணிபுரிபவர்கள்.அவர்களுக்குப் பணம் என்பது மிகப் பெரிய விஷயம். பணத்திற்காக எதையும்-கொலையும் செய்யத் தயங்காதவர்கள்.

அந்த நகரத்தின் ஓர் அசுத்தமான தெருவில் மிகச் சிறிய அறையில் நான் தங்கியிருந்தேன்.புலம் பெயர்ந்த் சில தொழிலாளர்களுக்கு நான் ஆங்கிலம் கற்றுத்தரும் பணியிலிருந்தேன்.ஒன்பது மணியிலிருந்து இரவு பதினொரு மணி வரை என் வேலை.முகவரிகளை ஆங்கிலத்தில் எழுதுவதை நான் கற்றுத் தந்தேன்.ஆங்கிலத்தில் முகவரி எழுதக் கற்றுக் கொள்வதென்பது அங்கு உயர்ந்த கல்வியாக மதிப்பிடப்பட்டது.தபால் அலுவலகத்தில் முகவரி எழுதுபவர்களை நீங்கள் பார்க்க வேண்டும்.முகவரி எழுதுவதற்காக ஓரணா விலிருந்து நான்கணா வரை அவர்களுக்குக் கிடைக்கும்.

என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நான் மனிதர்களுக்கு முகவரி எழுதும் திறமையைக் கற்றுக் கொடுத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நாட்களில் நான் நாள் முழுவதும் தூங்கிவிட்டு மாலையில் நான்கு மணிவாக்கில் எழுந்திருப்பேன்.இது என் காலை தேநீர் அல்லது மதிய சாப்பாட்டுச் செலவை தவிர்ப்பதற்காகத்தான்.

ஒரு நாள் வழக்கம் போல நான் நான்குமணிக்கு எழுந்தேன்.என் கடன்களை முடித்து விட்டு சாப்பாடு சாப்பிடுவதற்காக வெளியே வந்தேன்.நான் சூட் அணிந்திருந்தேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.என் கோட் பாக்கெட்டில் பர்ஸ் இருந்தது.அதில் என் வாழ்க்கை சேமிப்பான பதினான்கு ரூபாயிருந்தது.

கூட்டமாக இருந்த ஒரு ஹோட்டலுக்குப் போனேன்.சப்பாத்திகள் மற்றும் இறைச்சி கறி வகையிலடங்கும் முழு சாப்பாடு சாப்பிட்டேன். தேநீரும் குடித்தேன்.பதினோரு அணா என்று பில் வந்தது.
அதைக் கொடுப்பதற்காக கோட் பாக்கெட்டில் கை விட்டேன்.நான் சாப்பிட் டிருந்த சாப்பாடு முழுவதும் செரித்து விட்ட நிலையில் எனக்கு வியர்வை பெருக்கெடுத்தது !என் பர்ஸைக் காணோம்

“யாரோ என் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்துவிட்டார்கள்”என்று சொன் னேன்.

அது மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் ஹோட்டல்.முதலாளி தன்னைச் சுற்றி யுள்ளவர்களுக்குக் கேட்கும்படி உரக்கச் சிரித்தார்.என் கோட்டின் மேல் பகுதி யைப் பிடித்துக் கொண்டு என்னைக் குலுக்கியபடி”இந்தப் பாச்சாவெல்லாம் இங்கே பலிக்காது !பணத்தைக் கீழே வைத்துவிட்டு நட.. அல்லது கண்ணைத் தோண்டிவிடுவேன்” என்றார்.

நான் என்னைச் சுற்றியிருந்த மனிதர்களைப் பார்த்தேன்.ஒரு முகம் கூட அன் பானதாயில்லை.பசி வெறியிலான ஓநாய்ப் பார்வை அவர்கள் கண்களில் தெரிந்தது.கண்களைத் தோண்டியெடுத்து விடுவேன் ,என்று அவர் சொன்ன தைச் செய்தும் விடலாம் !

“என் கோட் இங்கிருக்கட்டும்;நான் போய் பணம் எடுத்துக் கொண்டு வருகி றேன்” என்றேன்.

முதலாளி மீண்டும் சிரித்தார்.

அவர் என் கோட்டைக் கழற்றச் சொன்னார்.

நான் கழற்றினேன்.

என் சட்டையைக் கழற்றச் சொன்னார்.

நான் சட்டையைக் கழற்றினேன்.

என் இரண்டு ஷூக்களையும் கழற்றச் சொன்னார்.

நான் இரண்டையும் கழட்டினேன்.

கடைசியில் என் டிரவுசர்களை அவிழ்க்கச் சொன்னார்.

என்னை நிர்வாணமாக்கி ,கண்ணைத் தோண்டிவிட்டு அனுப்பி விடுவது அவர் திட்டம் போலும்!

“உள்ளே எதுவுமில்லை “என்றேன்.

எல்லோரும் சிரித்தார்கள்.

“எனக்குச் சந்தேகம் ; அடியில் நீ ஏதாவது வைத்திருப்பாய் “ என்றார்.

“அடியில் ஏதாவது வைத்திருக்க
வேண்டும் ” என்று அவர் சொன்னதைச் திருப்பிச் சொன்னவர்கள் ஐம்பதுபேர் இருக்கலாம்.

என் கைகள் அசையமறுத்தன. கூட்டத்தில் கண்களின்றி ஒரு மனிதன் நிர்வா ணமாக நிற்பதை கற்பனையில் என்னால் பார்க்கமுடிந்தது. வாழ்க்கை அப்ப டித்தான்
முடியப்போகிறது.அப்படி முடியட்டும்..

இதைப்பற்றியெல்லாம்.. எனக்குக் கவலையில்லை…கடவுளே..சொல்வதற்கு எனக்கு எதுவுமில்லை. எல்லாம் முடிந்துவிடும்…எல்லோரின் திருப்திக்கேற்றபடி எல்லாம் முடிந்து விடும்….
என் டிரவுசர் பட்டன்களை ஒவ்வொன்றாகக் கழற்றத் தொடங்கினேன் .

அப் போது ” நிறுத்துங்கள்.நான் பணம் தருகிறேன்! ” என்று ஒரு குரல்கேட்டது.

அந்தக் குரல் வந்ததிசையை எல்லோரும் பார்த்தார்கள்.
வெள்ளை டிரவுசரும்,சிவப்பு தலைப்பாகையும் அணிந்த ஆறடி உயரமுள்ள ஒரு மனிதர் நின்றிருந்தார்.

நல்லநிறத்துடன், நீலக் கண்களும் ,மீசையுமாக..
இந்தப் பகுதியில் நீலக் கண்கள் மிகச் சாதாரணமானவை.” எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமென்று சொன்னீர்கள் “என்று முதலாளியிடம் கேட்டார்.

“பதினோரு அணாக்கள்”

அவர் அந்தத் தொகையைக்கொடுத்தார்.”உடையை அணிந்து கொள்ளுங்கள்” என்று என்னைத் திரும்பிப் பார்த்துச் சொன்னார்.

நான் அணிந்துகொண்டேன்.

“என்னுடன் வாருங்கள்”என்னை அழைத்தார். நான் கூடப் போனேன்.என் நன்றியைச் சொல்ல வார்த்தைகள் உண்டா?”

நீங்கள் பெரிய உதவி செய்தி ருக்கிறீர்கள். இந்த மாதிரியான அற்புதமான மனிதரை பார்த்ததில்லை”

அவர் சிரித்தார்.

“உங்கள் பெயர் என்ன?” அவர் கேட்டார்.நான் என் பெயரையும் ,எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதையும் சொன்னேன்.

அவருடைய பெயரை நான் கேட்டேன்.”எனக்குப் பெயரில்லை” என்றார்.

“அப்படியானால் உங்கள் பெயர் “இரக்கம் “ என்பதாக இருக்கவேண்டும்” என்றேன்.

அவர் அதற்குச் சிரிக்கவில்லை.நாங்கள் ஓர் ஆளரவமற்ற பாலத்திற்குச் செல்லும் வரையில் அவர் நடந்து கொண்டிருந்தார்.

தன்னைச் சுற்றிப் பார்த்தார்.அங்கு யாருமில்லை.”நான் சொல்வதை கவனி யுங்கள். திரும்பிப் பார்க்காமல் இங்கிருந்து நீங்கள் போய்விட வேண்டும். என்னைப் பார்த்தீர்களா என்று யாராவது கேட்டால் நீங்கள் இல்லை என்று சொல்ல வேண்டும்”

எனக்குப் புரிந்தது.

தனது வெவ்வேறு பைகளிலிருந்து அவர் ஐந்து பர்ஸுகளை எடுத்தார் .ஐந்தில் ஒன்று என்னுடையது.

“இதில் எது உஙளுடையது?”

என் பர்ஸை சுட்டிக் காட்டினேன்.

“திறந்து பாருங்கள்”

நான் திறந்து பார்த்தேன்.பணம் சரியாக இருந்தது.நான் என் கோட் பாக்கெட் டில் வைத்துக் கொண்டேன்.

“நீங்கள் போகலாம். கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்” என்றார்.

“கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்! ”நான் திருப்பிச் சொன்னேன்.

தழல் ( சிறுகதை ) / ஸிந்துஜா

download (12)

“எத்தனை மணிக்கு கிளம்பணும்?” என்று சத்யபாமா ராமநாதனிடம் காபியைக் கொடுத்து விட்டுக் கேட்டாள்.
ராமநாதன் அப்போதுதான் அலுவலகத்திலிருந்து திரும்பியிருந்தான்.

எம்.ஜி. ரோடிலிருந்து கோத்தனூர் வருவதற்குள் அவன் வயது ஐந்து வருஷம் அதிகமாகி விடுகிறது. அப்பா! என்ன ட்ராஃபிக் . கார் ஓட்டும் போது உயிர் போய் உயிர் வருகிறது. வீட்டுக்கு வந்தால் தலையைச் சாய்க்க மாட்டோமா என்று இருக்கிறது. ஆனால் இன்று பார்ட்டிக்குப் போக வேண்டும். பிறந்த நாள் பார்ட்டி. அவனது சிநேகிதன் பாலாவின் மனைவி நித்யாவிற்கு இன்று பிறந்த நாள். நல்ல வேளை. வெளியே காரை எடுத்துக் கொண்டு அலைய வேண்டியதில்லை. அவன் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸிலேயே பாலாவின் வீடும் இருக்கிறது.
“ஏழரைக்குன்னு சொன்னான். இன்னிக்கி ராக்கூத்துதான் போ” என்றான் ராமநாதன்.

“ஆமா. குடிக்கறதுல ஒண்ணும் குறைச்சலில்லே. என்னவோ பிடிக்காத மாதிரி ஒரு அலுப்பு குரல். செய்யறதெல்லாம் செஞ்சுட்டு இந்த டிராமா வேறயாக்கும்!” என்று சத்யா அவனைக் கிண்டலுடன் பார்த்தாள். பிறகு “இன்னிக்கி நித்யாவோட முப்பத்தி ரெண்டாவது பிறந்தநாளாம்” என்றாள்..

“முப்பத்தி ரெண்டா? அவளைப் பாத்தா முப்பத்தி ரெண்டு வயசான மாதிரி தெரியலையே!” என்றான் ராம்.
“எப்படி தெரியறது? இருபது? இருபத்தஞ்சு?” என்று அவனைக் கடிந்து கொள்ளுவது போல் பார்த்தாள் சத்யா.
“இல்லை. நாற்பது” என்று கண்களைச் சிமிட்டினான் ராமநாதன்.

சத்யா வாய் விட்டுச் சிரித்தாள். இந்தப் பெண்களை ஏமாற்றுவது மிகவும் எளிது. ஒரு சிறிய பூகம்பத்தைத் தவிர்த்தாகி விட்டது.

“சத்யா என்ன கிஃப்ட் வாங்கி வச்சிருக்கே?”

“போன மாசம் டி மார்ட் போயிருந்தப்போ ஒரு கடையில் வச்சிருந்த கைப்பை ஒண்ணு அவளுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நேத்தி போய் அதை வாங்கிண்டு வந்தேன்.”
“வாட்ஸ் த டாமேஜ்? ரெண்டாயிரமா? நாலாயிரமா?”
“ரெண்டரை” என்றாள் சத்யபாமா.

“இப்படி கிஃப்ட் கொடுத்தே நான் போண்டி ஆயிடுவேன் போல இருக்கே?” என்றான் ராமநாதன்.
“உங்களுக்கு வரச்சே எப்படி இருக்கு? உங்க போன பர்த்டேக்கு பாலா மூவாயிரம் ரூபாய்க்கு பெர்ஃப்யூம் வாங்கித் தரலே?”

“அவன் கூட ஞாபகம் வச்சிண்டு இருக்க மாட்டான். நீ இருக்கியே …!” என்று எழுந்தான். “நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று பாத்ரூம் பக்கம் நகர்ந்து சென்றான்.

ராமநாதன் குளித்து விட்டு வெளியே வரும் போது சத்யா கிளம்பத் தயாராக இருந்தாள். லேசான தலை வாரல், அதை விட லேசாக மையிட்ட கண்கள், பளிச்சென்று நெற்றியில் சிறிய சாந்துப் பொட்டு என்று மிகையற்ற அலங்காரமும், ஒரு காட்டன் புடவையை உடலில் சுற்றிக் கொண்டிருந்த எளிமையும் அவள் வயதைக் குறைத்து
விட்டன. போதாதற்கு வாய் நிறைய மகிழ்ச்சியை இறைக்கும் புன்னகை வேறு.

“உன் கூட வரணுமான்னு இருக்கு” என்றான் ராமநாதன்.
“சரி. வர வாண்டாம்.”

“உன் பக்கத்தில நின்னா யார் இந்த ஓல்ட் மேன்னு எல்லாரும் பார்ட்டில கேப்பா” என்றான் சிரித்தபடி.
“போதும் இந்த டிராமா எல்லாம். நீங்க மார்க்கண்டேயன்தான் எப்பவுமே. இப்ப திருப்தியா?”
“பொண்ணரசி எப்போ பாட்டியாத்துலேர்ந்து வரப் போறாளாம்?” என்று கேட்டபடி ராமநாதன் கிளம்புவதற்குத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டான்

“ஓ நீங்க அதை இன்னும் கவனிக்கலையா? பார்ட்டிக்கு பூர்ணிமா வந்தே ஆகணும். சின்னக் குழந்தைகளை வச்சு ஒரு புரோகிராம் இருக்குன்னு நித்யா நச்சரிச்சுட்டா. அதனால அம்மா இன்னிக்கு மத்தியானம் பூர்ணிமாவை இங்கே கொண்டு வந்து விட்டுட்டு போனா. உடனே
அந்த குட்டி ராட்சஸி நித்யா ஆத்துக்கு ஓடிப் போயாச்சு” என்றாள் சத்யா. .

“குட் . பொட்டுண்டு இல்லாம வீடே வெறிச்சின்னு இருந்தது இவ்வளவு நாளா” என்றான் ராம்.

“இதுக்கே இப்படி சொல்றேளே. நித்யா எவ்வளவு பாவம்?” என்றாள்

சத்யா வருத்தமான குரலில்.
பாலா நித்யா தம்பதிக்கு இன்னும் ஒரு வாரிசு பிறக்கவில்லை.

நித்யாவுக்கு குழந்தைகள் என்றால் அப்படி ஒரு பிரியம். சத்யா ராமநாதன் இருவரும் வேலைக்குப் போகிறவர்களாக இருந்ததால்
பூர்ணிமா மத்தியானம் ஸ்கூலில் இருந்து வந்ததும் அவளைத் தன்
வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் விடுவாள் நித்யா.
“சீக்கிரம் ஒருகுழந்தை அவளுக்குப் பிறந்து விட்டால் நன்றாக இருக்கும்” என்றான் ராம்.

அவர்கள் பாலாவின் வீட்டுக்குக் கிளம்பினார்கள்.

“நித்யா எல்லாம் ரெடியா இருக்கா?” என்று பாலா கேட்டான்.

நித்யா தலையை அசைத்தபடி நெற்றிப் பொட்டைச் சரி செய்து கொண்டாள்.

“இந்தப் புடவைல நீ ரொம்ப அழகா இருக்கே” என்றான்.அவன்.

“நல்லிதான் உங்களுக்கு பொண்டாட்டியா வர லாயக்கு” என்று சிரித்தாள் நித்யா.

“இன்னிக்கு பார்ட்டிக்கு சிவசு மட்டும்தான் வருவான்” என்றான் பாலா.

“ஏன் ஜெயாவுக்கு என்ன ஆச்சு?”

“அவளுக்கு நாளைக்கு டிபார்ட்மென்ட் பரிட்சையாம்.அதனால வரமாட்டான்னு சாயந்திரம் சொன்னான். அதை சொல்றப்போ என்ன குஷிங்கறே அவனுக்கு” என்றான் பாலா.

“அப்ப இன்னிக்கு பில்ஸ்னர் இன்னும் ரெண்டு க்ரேட் ஜாஸ்தி வாங்கி போட வேண்டியிருக்கும்” என்று சிரித்தாள் நித்யா.

“அது கரெக்ட்தான். அவ வராததை செலிபிரேட் பண்ணி நானும் நாலு பெக் எக்ஸ்ட்ரா…”

“உதை வாங்கணுமா?” என்று சிரித்தாள் நித்யா.

அதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த ராம் ” ஏன் நீ தினமும் கொடுக்கறதை உன் பிறந்த நாள் அன்னிக்கும் அவனுக்கு குடுக்கணுமா?” என்று கேட்டான்.

“ஓ நீ வேற சப்போர்ட்டுக்கு வந்தாச்சா?” என்று கேட்டபடி நித்யா அவனிடம் ஜெயா வராததைப் பற்றிச் சொன்னாள்.
“நல்லதா போச்சு. சிவசு ஒரு பெக் போடறதுக்குள்ள பத்து வாட்டி எட்டி எட்டி பார்த்துண்டே இருப்பா. போன தடவை அவ அப்படி செஞ்சப்ப ஜோசப் பார்த்தான். அவனால தங்க முடியல. ‘ஆண்ட்டி நீங்களும் ஒரு ஸிப் டேஸ்ட் பண்ணிப் பாருங்க’ன்னான். அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்துடுத்து. முறைச்சு பாத்துட்டு போயிட்டா” என்றான் ராம்.

அடுத்த அறையிலிருந்து ஒரே கூச்சலாக வந்து கொண்டிருந்தது. குழந்தைகளின் ஆரவாரம்
“இன்னிக்கு பார்ட்டி குழந்தைகளுக்குன்னு நித்யா சொல்லிட்டா” என்றான் பாலா.
.
“விளையாட்டு சாமான்களை வச்சுண்டு விளையாடுங்கடா பசங்களா என்று எல்லா நண்டுகளையும் போட்டு உள்ளே தள்ளி விட்டிருக்கேன்” என்றாள் நித்யா சத்யாவிடம்.
“பாத்துக்க யாராவது?”

“குமுதக்காவை போட்ருக்கேன்” என்றாள் நித்யா. குமுதக்கா அவள் வீட்டின் சமையல்காரி.

“குட். நன்னா பாத்துப்பா அவ” என்றாள் சத்யா.

பாலா “ஆமாம்.சமையலைவிட நன்னா” என்றான்.

“கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி” என்று சத்யா அவனைத் திட்டினாள்.

அப்போது வாசலில் சப்தம் கேட்டது. சுரேந்தரும் பூஜாவும் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

“ஆயியே பாயிஸாப். ஆயியே பஹன்ஜி” என்று பாலா அவர்களை வரவேற்றான்.

“சுரேந்தர், நீ கவலைப் படாமல் உள்ளே வா. இதற்கு மேல் இவனுக்கு ஹிந்தி வராது” என்று ராம் உறுதி கூறினான்.

“ரெண்டு மாதத்துக்கு அப்புறம் இன்னிக்குதான் சாயங்காலத்தைப் பார்க்கறேன்” என்றான் சுரேந்தர்.

அவன்ஒரு பிரபல தனியார் வங்கியில் அதிகாரியாக இருந்தான்.

“வேலைக்கு சேந்ததிலேர்ந்து வேலையே பாக்காத ஆட்களை இந்த ரெண்டு மாசத்தில பிழிஞ்சு எடுத்து வேலை பாக்க வச்சது மோடியோட பெரிய அச்சீவ்மெண்டுதான்” என்று பாலா சிரித்தான்.

சுரேந்தர் பொய்க் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தான்.

அப்போது வாசலிலிருந்து “ஹாய்!” என்று குரல் கேட்டது.
“சிவசு கமின்” என்று பாலா கூப்பிட்டான்.

ஒல்லியாக உயரமாக அரைக்கால் டிராயரும் டி ஷர்ட்டும் அணிந்த இளைஞன் சிரித்தபடி வந்தான் அவர்களைப் பார்த்துக் கையசைத்தபடி.

“போன வாரம் கார்த்தாலே நீ லன்ச் பாக்ஸ் சீட்டுக் கட்டு டின்னர் பெட் ஷீட்டு போர்வை தலகாணி போன் சார்ஜர்னு எல்லாத்தையும் கட்டி எடுத்துண்டு போயிண்டிருந்தையே” என்று கேட்டான் ராம்.

“அதே ஏன் கேக்கற? பேங்க்ல போயி ஐநூறு ரூபா ஆயிரம் ரூபா நோட்டை மாத்தறதுக்கு கியூல நிக்கப் போனேன்” என்றான் சிவசு.

மற்றவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சுரேந்தர் “நேத்திக்கு ஆபிஸ்ல ஒருத்தன் என் ரூமுக்குள்ளே வந்தான். ‘சார் நான் என் மனைவி பேர்ல பேங்க்ல அஞ்சு லட்சம் டிபாசிட் போட்டால் போதுமா இல்லே அதுக்கு மேலே போடணுமான்னு கேட்டான் .எதுக்கய்யான்னு கேட்டேன். இல்ல இன்கம்டாக்ஸ்ல அவளை கூட்டிக்கிட்டு போகத்தான்றான்.”

நித்யா சீரியஸாக “ஜோக்ஸ் அபார்ட் இந்த பணமதிப்புக் குறைவு வேண்டுமானால் கொஞ்ச நாளைக்கு சிரமங்களை தரலாம். ஆனால் எதிர்காலத்துக்கு இது சரியான முறையில் நடைமுறைப் படுத்தப் பட்டால் நம்மைப் போன்ற சாதாரண ஜனங்களுக்கு உபயோக
மாகத்தான் இருக்கப் போகிறது என்று எனக்குத் தோன்றுகிறது” என்றாள் ஆங்கிலத்தில்.

சிவசு பலமாகக் கை தட்டினான். “வெல் செட். பிரதமர் ஆபிஸ்லேர்ந்து கேக்கற மாதிரி இருக்கு. கங்கிராட்ஸ் நித்யா” என்றவன் “ஆனா நீ என்ன சாதாரண ஜனம்னு கூப்பிட்டதுதான் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலே” என்றான்.

“எனக்கும் அது மனத்தாங்கல்தான்” என்று ராம் சொன்னான். தொடர்ந்து ” பாலா என் துக்கத்தை குறைக்க ஒரு பாட்டில ஓப்பன் பண்ணு” என்றான்.

அப்போது வாசலிலிருந்து ஒரு சிறுவன் ஓடி வந்தான்.
“ஐயோ கழுத்தறுப்பு வந்துட்டானே” என்றான் சிவசு.
வரும் போதே வாசலில் வைத்திருந்த பூச்சட்டிகளைக் காலால் உதைத்துக் கொண்டே வந்தான். ஒரு சட்டி பலம் தாளாது சரிந்து விழுந்தது.

“காலை ஓடிச்சு கைல குடுத்தாதான் புத்தி வரும் நாய்க்கு” என்று சிவசு கோபத்துடன் எழுந்தான்.

“ஏன் குழந்தையைப் போட்டு திட்டறே?” என்ற நித்யா சிறுவனைப் பார்த்து “வாடா குட்டி சிவசு” என்று இரண்டு கைகளையும் விரித்து அவனைக் கூப்பிட்டாள்.

அவன் அதைச் சட்டை செய்யாது சத்யா அருகில் சென்று “பூர்ணி எங்க?” என்று கேட்டான்.

“ஓ உன் கேர்ள் ஃப்ரெண்ட பாக்க ஓடி வந்தியா சதீஷ் ” என்று நித்யா சிரித்தாள்.

“அவ ஒண்ணும் ஃப்ரெண்ட் இல்ல” என்றான் சதீஷ் விறைப்பாக.

“பின்ன?” என்று சத்யா கேட்டாள்.

“எனிமி. என்னோட எனிமி” என்றான் சதீஷ்.

“சீ நாயே” என்று திட்டினான் சிவசு.

“ஏண்டா செல்லம் அப்பிடி சொல்றே ” என்று சத்யா சிறுவனிடம் கேட்டாள்.

“சாயங்காலம் நான் அவகிட்ட கொஞ்சூண்டு கிட்கேட் கேட்டேன்.எனக்கு குடுக்காம அவளே எல்லாத்தையும் சாப்பிட்டுட்டா. ஐ ஹேட் ஹர்” என்றான்.

“அவ்வளவுதானா? நான் ஃபாரின் சாக்லேட் வச்சிருக்கேன். வயலட் கலர்ல, ரோஸ் கலர்ல. உனக்கு வேணுமா?” என்று நித்யா கேட்டாள்.

சதீஷ் கண்களை அகல விரித்துக் கொண்டு தலையைப் பலமாக ஆட்டினான். “இப்பவே குடுப்பியா?” என்று கேட்டான்.

“கொடுக்கறேன். ஆனா நீ பூர்ணி உன்னோட ஃப்ரெண்ட்னு சொல்லணும்.

“அவ எப்பவுமே எனக்கு ஃப்ரெண்டுதான்” என்றான் அவன்.
“அட காவாலிப் பயலே!” என்றான் சிவசு.

எல்லோரும் சிரித்தார்கள்.

“உள்ளே போகலாம் வா” என்று அவனை இழுத்துக் கொண்டு சத்யாவும் நித்யாவும் உள்ளே சென்றார்கள்.

“ஜெயாவும் வந்திருக்கலாம்” என்றான் பாலா.

“நான் கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கறது உனக்கு பிடிக்கலேங்கறே” என்றான் சிவசு.

பாலா அவன் தோளைத் தன் கையால் அழுத்தினான்
அப்போது குழந்தைகளை விளையாடுவதற்கு முன்னேயே அனுப்பி விட்ட தாய்மார்கள் கும்பலாக வந்தார்கள்.அவர்களுக்கு முன்னால் ஒரே பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் வந்தன.

சத்தம் கேட்டு நித்யா உள்ளேயிருந்து வெளியே வந்தாள்.
“நித்யா யூ ஆர் லுக்கிங் ப்ரெட்டி”என்று மிஸஸ் ரோஸி பாராட்டினாள்.

“இன்னிக்கு எல்லா பொய்களும் அனுமதிக்கப்படும்” என்றான் பாலா

ரோஸி அவனைப் பார்வையால் துச்சமாக எறிந்தபடி நித்யாவின் கைகளைக் குலுக்கி “ஹேப்பி பர்த் டே” என்றாள்.

“தாங்க்ஸ்” என்று நித்யா புன்னகை செய்தாள். “டோன்ட் டேக் ஹிம் சீரியஸ்லி.”

“ஆமாம். ரொம்ப பொறாமை பிடிச்ச ஜன்மம்” என்று பாலாவைப் பார்த்துச் சிரித்தாள் ரோஸி.

பெண்கள் அனைவரும் குழந்தைகள் இருந்த அறைக்குச் சென்றார்கள். ஆண்கள் ஹாலில் இருந்து எழுந்து பக்கவாட்டில் இருந்த ‘பா’ரை நோக்கிச் சென்றார்கள்.

குழந்தைகள் அறையில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாக இருந்தது. குறைந்தது பதினைந்து பேராவது இருக்கக் கூடும். ஆனால் சப்தம் என்னவோ இருநூறு பேர் இருப்பது போல் எழுந்து வந்தது.
நித்யா வெவ்வேறு வயதுக் குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்களையும் புத்தகங்களையும் பரப்பி வைத்திருந்தாள். அவர்கள் சாப்பிடுவதற்கு என்று வைத்திருந்த தட்டுக்களில் இருந்தவை பாதி
தரையில் கிடந்தன. சுரேந்தரின் பெண் குழந்தை தரையில் படுத்துத் தூங்கி விட்டது.அறைக்குள் வந்த தத்தம் பெற்றோரைப்பார்த்த தருணத்தில் ‘அம்மா’ என்று புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொள்ள குழந்தைகள் ஓடி வந்தன. ஒரு மூலையில் சிவசுவின் பிள்ளை சதீஷ் ரோஸியின் பையன் மைக்கேலின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.

“டேய் வாலு, விடுடா அவனை” என்று குமுதக்கா அவனிடம் ஓடினாள்.

“என்னோட சாக்லேட் கவர குடுக்கச் சொல்லு”என்றான் சதீஷ்.

“இல்ல அது என்னுது” என்றான் மைக்கேல்.

குமுதக்கா மைக்கேலை சதீஷின் பிடியிலிருந்து விடுவித்தாள். சதீஷ் சண்டையில் மைக்கேலின் கையைப் பிராண்டியிருந்ததில் வரி வரியாய் சிவப்புக் கோடுக்கள் தெரிந்தன.

“ராட்சஸனா இருக்கியேடா ” என்று குமுதக்கா கையை ஓங்கினாள்.

சதீஷ் கொஞ்சம் கூட நகராமல் அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்ன கலாட்டா?”என்று கேட்டுக் கொண்டே நித்யா அங்கே வந்தாள்.

“பாருங்கம்மா. சண்டை போட்டு இந்த பிள்ளை கையில ரத்தம் வர மாதிரி பிராண்டி இருக்கான்” என்று மைக்கேலின் கையைக் காட்டினாள் குமுதக்கா.

“சதீஷ் ஏண்டா இப்படி பண்ணினே?” என்று குரலை உயர்த்திக் கேட்டாள்.

“என்னோட சாக்லேட் பேப்பர வச்சுண்டு தர மாட்டேன்னான்.
அதுக்குதான் அவனை கிள்ளினேன்” என்றான் சதீஷ்.

“உங்க அப்பாவைக் கூப்பிட்டாதான் நீ வழிக்கு வருவே” என்றாள் நித்யா.

இவ்வளவு நேரம் இருந்த திமிர்ச்சியும் முறைப்பும் சட்டென்று அடங்கி குறுகி நின்றான் சதீஷ்.

.”மைக்கேல்ட்ட ஸாரி சொல்லு” என்றாள் நித்யா.
அவன் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.

“உங்க அப்பாகிட்ட..” என்று நித்யா ஆரம்பித்ததும் “போய் சொல்லிக்கோ. இனிமே உங்க வீட்டுக்கு நா வரமாட்டேன்” என்று கத்தியபடி ஓடினான்.

ஓடும் போது வலது பக்கம் இருந்த கட்டிலில் மோதி நிலை தடுமாறினான். சாய்ந்து கட்டிலை ஒட்டியிருந்த டீபாயின் மீது விழுந்தான். டீபாயின் மேல் வைத்திருந்த ஷான்டெலியர் விளக்கு பலத்த சப்தத்துடன் கீழே விழுந்தது.

“ஐயையோ!” என்று பதறியபடி நித்யா ஓடினாள்.

அதற்குள் கீழே விழுந்த சதீஷ் எழுந்து நின்று விட்டான்.அவனுக்கு அடி எதுவும் படவில்லை என்று தெரிந்தது. நித்யா விளக்கருகே சென்றாள். அது திருத்த முடியாத அளவுக்கு நடுவில் இரண்டாகப் பிளந்திருந்தது. சுற்றி வர கண்ணாடித் துகள்கள் இறைந்து கிடந்தன. அந்த ஷான்டெலியர் விளக்கு அவளுடைய பாட்டி ஜெய்ப்பூரில் வாங்கி வைத்திருந்தது. பின்னர் அது அவளுடைய அம்மாவிடம் இருந்து விட்டு அவள் கைக்கு வந்திருந்தது. ஒன்பது பிரகாசமான விளக்குகளை ஏந்தி நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செம்பும் வெள்ளியும் கொண்டு செய்யப்பட்டிருந்த அழகிய விளக்கு.

அதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேலையாட்களை வைத்து கீழிறக்கி துடைத்து மெருகேற்றிய பின் ஹாலில் கொண்டு வந்து மாட்டுவாள். நேற்றுக் கீழிறக்கியது இப்போது சேதமடைந்து விட்டது.

நித்யாவால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சதீஷ் கையைக் கட்டிக் கொண்டு நின்றது அவள் கோபத்தை இன்னும் அதிகரித்தது.அவனைப் பிடித்து இழுத்து ‘பளாரெ’ன்று கன்னத்தில் அறைந்தாள். “எப்பப் பாரு சண்டை! திமிர் பிடிச்ச ராஸ்கல். இப்போ உடைஞ்சு போச்சே யார்ரா வந்து குடுப்பா?” என்று காதைத் திருகினாள். சதீஷின் கன்னமும் காதும் சிவந்து விட்டன. அழுது கொண்டே வெளியில் ஓடினான்.

சத்தம் கேட்டு கூட்டம் கூ டி விட்டது. ‘பாரி’ல் இருந்த ஆண்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். உடைந்த விளக்கைப் பார்த்து பாலா திகைத்து நின்று விட்டான். அவன் அருகே நின்ற சிவசுவிடம் சதீஷினால்தான் இந்தக் களேபரம் எல்லாம் என்று யாரோ சொன்னார்கள்..

நித்யாவின் கண்கள்கலங்கி விட்டன. சிவசு அவள் பக்கத்தில் வந்து “நித்யா ஐம் வெரி ஸாரி நித்யா” என்று இறைஞ்சினான். அவன் எதோ குற்றம் செய்து விட்டது போல் குறுகி நின்றான். ராமநாதன் சிவசுவின் அருகில் வந்து தோளைப் பிடித்து இழுத்துக் கொண்டு சற்று நகர்ந்து போனான். மிக விலை உயர்ந்த பழங்காலப் பொருள் என்றும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் சதீஷ் ரொம்பப் பொல்லாதவன் என்றும் பலர் முணுமுணுத்தவாறே அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
பாலா குமுதம்மாவைக் கூப்பிட்டு குழந்தைகள் அனைவரையும் கண்ணாடித் தூள்கள் எதுவும் படாதபடி ஜாக்கிரதையாக அந்த
அறையை விட்டு வெளியே கூப்பிட்டுக் கொண்டு போகச்
சொன்னான். நித்யா சிலை மாதிரி இருந்த இடத்தைவிட்டு நகராமல் நின்றாள்.

வெளியே இருந்த பெண்கள் குழந்தைகளுக்கு தின்பண்டங்
களையும் ஜூஸ்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
கடையை கட்டி அனுப்பி விட்டால் போதும் போல இருந்தது தாய்மார்களுக்கு.

பத்து நிமிஷம் கழிந்திருக்கும்..வாசலிலிருந்து சத்தம் கேட்டது. எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். ஜெயா இரைந்து கொண்டே ஆவேசமாக வந்தாள்.

“எங்கே அவ அந்த நித்யா?” என்று கத்தினாள். அவள் கையில் சதீஷ் சிறைப்பட்டிருந்தான்.

சிவசு “ஜெயா, என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு இப்பிடி பைத்தியம் மாதிரி கத்திண்டு வரே ?’ என்று அவளருகே சென்றான்.
அவள் அவனை எரித்து விடுவது போலப் பார்த்தாள்.
“ஏய் நித்யா எங்கேடி ஒளிஞ்சிண்டு இருக்கே? என் குழந்தையை போட்டுஅடிச்சு கொன்னுட்டு?” என்று வெறி பிடித்தவள் போலக் கூச்சலிட்டாள்.

பாலாவுக்கு கோபம் தலைக்கேறியது. அவன் வாயைத் திறக்கும் முன் நித்யா அறையிலிருந்து வெளியே வந்தாள்.
அவளை பார்த்ததும் ஜெயா “நீ வேணும்னா பெரிய பணக்காரியா இருக்கலாம். என் பிள்ளையை போட்டு அடிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு? நாங்க என்ன நாதியத்து கிடக்கமா? பாரு குழந்தையை.கன்னமும் காதும் எப்படி செவந்திருக்குன்னு? கொஞ்சம் தவறி உன் அடி பட்டிருந்தா செவிடாயிருப்பான் .நீ யாரு அவன் மேலே கை வைக்க?” என்று திட்டினாள்.

“ஏய் ஜெயா நடந்தது என்னன்னு தெரியாம நீ கண்டபடி பேசாதே” என்று அவளை சிவசு அடக்க முயன்றான்.
“என்ன நடந்தா என்ன? இவ யாரு என் பிள்ளை மேல கை வக்கிறதுக்கு? முன்ன பின்ன பெத்திருந்தா தெரியும். மலட்டு முண்டம்” என்றாள் ஜெயா.

எல்லோரும் திடுக்கிட்டு அவளைப் பார்த்தார்கள். சிவசு அவள் மீது பாய்ந்து அவள் வாயை ஓங்கிக் குத்தினான். ரத்தம் அவள் வாயிலிருந்து கொப்புளித்தது. வலி பொறுக்க முடியாமல் அவள் ‘ஓ’வென்று கத்தினாள். பாலா விரைந்து சென்று சிவசுவைத் தடுத்துக் கட்டிக் கொண்டான்.

இவ்வளவு நேரமாக சந்திரனின் குளிர்ச்சியையும்,அருவியின் இரைச்சலையும் பூக்களின் மலர்ச்சியையும் தென்றலின் இனிமையையும் நட்சத்திரங்களின் மௌனத்தையும் கொண்டிருந்த சூழலை பெரும் தீயொன்று கிளம்பி கபளீகரம் செய்வது போல் ராமநாதனுக்குத் தோன்றிற்று. தீக் கங்குகளின் ஜுவாலையிலிருந்து தப்பித்து ஓடி விட முடியாதா என்று வியர்த்தான். .

வாயை ஒரு கையால் மூடிக் கொண்டு நித்யா உள்ளே ஓடினாள். அன்று அதற்குப் பிறகு அவளை யாரும் பார்க்கவில்லை.

•••

இலங்கை-ரோஷான் ஏ.ஜிப்ரி கவிதைகள்..

download (10)

துயரில் மூழ்குதல்.

வேலை தேடுவதை
வேலையாய் செய்து கொண்டிருந்த
எனது
மழை நாளொன்றின்
மத்தியானம்
நகரம்
நரகமாய் இருந்தது

நீராடை கட்டி
அழுகிய குப்பைகள்
அலைந்து திரிந்த
அவ்வழியிலுள்ள
பேரூந்து தரிப்பிடத்தின்
பின்புறம்
அனாதரவாக அவ்வழகி
சொந்தங்களை சுயத்தை
இன்னும் எதையெல்லாம்
இந்த பேரூந்து நிறுத்தத்தில் தவறவிட்டு
தவிக்கின்றாளோ?

என் பங்குக்கு
சில..சில்லறைகளை நீட்டுகிறேன்
அவள் கண்டு கொள்ளாதவளாய்
கரைகின்றாள்

எதை இழந்திருப்பாள்
என்பதைவிட
எதை இழக்கவில்லை
என்ற கேள்விதான்
எழுந்து நின்றது என் முன்

குடை மட்டுமே கையிலுள்ள
என்னால்
அங்கு பெருக்கெடுத்த
கடல்கள் இரண்டை கடக்க முடியாமல்
மூழ்கிக் கொண்டிருக்கின்றேன்!

000

இரவை விலைக்கு வாங்குவது

தனி இரவு மாத்திரம்
தேவைப்படுகிறது
யாரிடம் இருக்கிறதென்று
கொஞ்சம் விசாரிக்க வேண்டும்
ஒழிந்து கொள்ள இரவுதான்
வசதியான இடமும்கூட..

பசியுடன் இருக்கும்
ஏழையின் இரவுகள்
விடிவதில்லை
அது தேவையுமில்லை.

காதலர்களின் இரவை வாங்குவதென்றால் ஒரு நிலவையும் வாங்க வேண்டிய தேவை ஏற்படுகிறது

எல்லா குற்றங்களுக்கும்
பெறமதியானதாய்
வாய்த்து விடுகிறது
திருடனின் கனவில்
வரும் இரவு!

நான் ஏன் அரசியல்வாதியாய்
இருக்கக்கூடாது என்ற முடிவுக்கு
வரும்போது
நிராகரிக்கப்பட்ட வேட்பாளனாய்
முடிகிறது அக்கனவு!

***

சே.தண்டபாணி தென்றல் கவிதைகள்

images (1)

1.நெற்பரப்பில் நின்றிருக்கும் பறவைகளின்
காலடித்தடங்களை
எண்ணிச் செல்கின்றன
பறக்கும் பறவைகளின்
நிழல்கள்

2.சூப்பரும் சுமாரும்

சூப்பராக இருப்பவர்களைப்பற்றி
சுமாராக பேசிக் கொள்கிறார்கள்
சூப்பருக்கும் ஒருபடி கீழிருப்பவர்கள்

சுமாராக உள்ளவர்களைப்பற்றி
சூப்பராக பிரஸ்தாபித்துக் கொள்கிறார்கள்
சுமாருக்கும் ஒருபடி மேலிருப்பவர்கள்

சூப்பராக இருக்கும் ஆட்டுத்தலை
சுவைக்கும்போது சுமாராகத்தான் இருக்கிறது

சுமாராக இருக்கும் ஆட்டுக்கால்
சூப்பரான சூப்பாக இருக்கிறது

சூப்பர்சுமாரான உங்களுக்கும்
சுமார்சூப்பரான எனக்கும்
எதுவும் கிடைக்கவில்லை
என்பதுதான் சற்றே வருத்தம்

3.இல்லாளுக்கு இருந்தது

நேற்று வாங்கிவந்த தக்காளி
மீண்டும் காய்த்ததாய் தகவல்
வந்தது
முட்டைக்கோசும்
காலிபிளவரும்
கூட குட்டி ஈனுவது எனக்குத்தெரிந்ததுதான்
வெங்காயம் மட்டும் மிச்சமிருக்க வாய்ப்பில்லை
காய்ந்த மிளகாய்கள்
உன் இதழ்களைக் காப்பியடித்திருப்பதால்
சற்று யோசித்திருப்பாய்
வயலில்
விளைந்ததை வாணலியில் விளைய வைத்த உனக்காகவே
மீதமிருக்கிறது
அறுவடையில் முற்றிய தீவல்

4.நேற்று வந்த
கொசு வீரர்களை
நேற்று போய்
இன்று வா
சொல்லத் தைரியமில்லை
பறந்து
பறந்து குத்தினார்கள்
சேனாதிபதியாய்
மின்சாரம் புசித்த
ஆள் அவுட்
மூஞ்சியைத் திருப்பிக் கொண்டது
பற்றவைத்தால் சர்ப்பமாகும்
கொசுவர்த்தி
தூறலில் நனைந்தது
மேலும் சொன்ன பேச்சு
கேட்கவில்லை
என்பதற்காகச் சுரம் கண்டது
இறுதியில்
இரத்தத்தை தன் வயிறில்
நிரப்பிவிட்டு சென்றவைகளிடம்
ஒரேயொரு கேள்வி
கேட்க நினைத்தேன்
அனைத்தும்
முழந்தாழிட்டு தற்கொலை
செய்து கொண்டது
அப்படியெனில்
கேட்டிருந்தால்?

5.கழிவுநீர் வழித்தடத்திற்கு
அருகிலிருக்கும் புதரில்தான்
அவளின் மானம் போனது
கூடவே உயிரும்
தகவல் சொன்ன
காக்கிகளை காந்திகள்
கைநீட்டி ஆறுதல்
கூறினார்கள்
பத்திரிக்கைகளின் புனைவுகளில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய
ரைன்மேன்
கம்பியும் கையுமாக பிடிபட்டார்
கிடத்தப்பட்ட உடலை
மேலும் சுருக்குபோட்டு
இறுக்கும் பணியில்
மும்முரமாக…
மலர்வளையங்களும் கொண்டுவந்த வெள்ளாடையர்களுக்கும்
அவளின் ஆடைகளைந்த அதே கைகள்
தற்போது வணக்கம் வைத்துக்கொண்டிருக்கிறது
புதருக்கு சற்றுத் தள்ளி
புன்னகைபொங்க
பேனரில்

•••