Category: அறிமுகப் படைப்பாளிகள்

கே.ஸ்டாலின் கவிதைகள்

images

#

அப்பாவை உணர்தல்.

மயங்கிச் சரியும் இவ்வந்தி
சிறுவனாக அப்பாவிற்கென
சிகரெட் வாங்கி வந்த
மாலையை நினைவூட்டுகிறது.
வெண்தாளில் சுற்றப்பட்ட
புகையிலைச் சுருள்களென
இன்றைய மதியம்
இம்மாலைக்குள் பொதிகிறது.
இன்னும் சற்று என்னை
நெருங்கி வருவீர்களெனில்
அன்றென் பிஞ்சு உள்ளங்கையின் வியர்வை
கசகசப்பில் ஊறிய புகையிலையின் கார நெடியை
நீங்கள் உணரக்கூடும்.
இதோ தலைக்கு மேலே
நகர்ந்து கொண்டிருக்கும்
இவ்வெண் மேகம்
அப்பாவின் தொண்டைவழி
பிரசவமானதாயிருக்கலாம்.
அப்பாவிற்கென சிகெரெட்டும்
மதுப்புட்டிகளும் வாங்கி வர
சபிக்கப்பட்ட சிறுவர்கள் வழியே
இன்றென் தந்தையை உணர்கிறேன்.

#

நித்தியமானவர்கள்
ஆறு ரன்களுக்காக
பந்தை மேலே தூக்கி பாண்ட்யா
வான் நோக்கும்
அச்சிறு கணத்தில்
தொலைக்காட்சியின் திரையில்
தோன்றி மறைவது
இளம் வயதில் பலா மரமொன்றில்
தூக்கிட்டு இறந்த
எங்கள் குழுவின் கஜேந்திரன்.

நேர் வகிடு முடிந்து
பின்னல் ஆரம்பிக்கும்
சரியான இடைவெளியில்
ஒற்றை ரோஜாவை சூடியிருக்கும்
முன் இருக்கை பெண்மணி
திரும்பி முகம் காட்டாதவரை
பிரசவத்தின்போது இறந்து போன
எனது அத்தையேதான்.

அந்த வங்கியின் பணம்செலுத்தும்
அறை முன்பு கை நுழைக்கும்
சிறிய கம்பி சட்டகத்தின் வழியே
அவ்வப்போது குனிந்து
வாடிக்கையாளர்களுக்கு
பதிலுரைக்கும் அந்த யுவதிக்கு
அச்சு அசல் சில்க் ஸ்மிதாவின் கண்கள்.

உறவினர் வீடுகளில்
தோசைக்கு ரசம் ஊற்றி
சாப்பிடும் அனைவருமே
பால் பேதமின்றி
விபத்தில் இறந்த
எனது சகோதரனே.

கூட்டத்தினிடையில்
“மாமோய்…நீ எங்க இருக்க”
என்ற அழைப்பொலியுடன்
அலறும் தொலைபேசிகளை எடுக்க
தலையில் சுமந்திருக்கும் செங்கற்களை
அப்படியே போட்டுவிட்டு
தொலைவிலிருக்கும்
சட்டைப்பையை நோக்கி ஓடி வருவது எங்கள் வீட்டில்
சித்தாளாயிருந்து
சென்ற மாதம் சிதையேறிய
முருகனேதான்.

இறந்தவர்கள் எல்லோரும்
இருந்து கொண்டேதான்
இருக்கிறார்கள்
எந்நேரமும் யார் வழியாகவேனும்
வெளிப்பட்டுவிடக்கூடிய
சாத்தியங்களுடன்.

•••
இந்நள்ளிரவில்
சோடியம் விளக்கொளியில்
தடித்த கம்பியொன்றை
சிறு சிறு கம்பிகளால்
இணைத்து
கட்டிக்கொண்டிருக்கிறான்
மேம்பாலத்தின்
கட்டிடத்தொழிலாளி.
பின்னாளில்
விழித்த இவனது இரவுகளை
நசுக்கி விரையும்
சொகுசுப் பேருந்தின்
நடு இருக்கையில்
இளையராஜாவின்
மென்னிசைக்கு
அன்னையின் மடியில்
ஆழ்ந்துறங்கும்
சிறு குழந்தையின்
மூடிய இமைகளில்
உறைந்திருக்கும்
இவனது இழந்த
இன்றைய உறக்கம்.

#

வாழ்வெனும் ஈசல்

மழைக்கால முன்னிரவின்
பேருந்து நிலைய காத்திருப்பில் காணக்கிடைத்தது
மின் விளக்குகளை சூழும்
ஈசல் கூட்டங்களை
பக்கத்தில் புகைத்துக் கொண்டிருப்பவன் பொருட்டில்லையென
பொரியுடன் தாத்தா என்றோ கலந்து கொடுத்த
வறுத்த ஈசலின் மணம்
நாசி நிறைத்தது
ஒற்றை தீப்பந்தத்தால் கவரப்பட்டு எங்களுக்கு உணவாகிப்போனதும்
இதோ இங்கே வாகனங்களின் முகப்பு விளக்கில் மோதி நசுங்கி
மரித்துக்கொண்டிருக்கும் ஈசலும் ஒரே ஈசல் அல்ல
மனம் இன்னமும் ஈசல் குழியில் புதையுண்டிருக்க
அதன் இறகினும் மெல்லிய
இதயம் கொண்டு நகர வாழ்வெனும் காததூரத்தை கடக்க எத்தனிக்கும்
நானும் ஒரே நானல்ல
என்பதைப்போல.

•••

ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் – லதா ராமகிருஷ்ணன்

download (21)

வணக்கம். அமெரிக்க எழுத்தாளர் JACK LONDON எழுதிய A PIECE OF STEAK என்ற சிறுகதை (குறுநாவல் என்றும் சொல்லலாம்) என் மொழிபெயர்ப்பில் புதுப்புனல் வெளியீடாக விரைவில் பிரசுரமாக உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையை கவிஞர் வைதீஸ்வரன் கொடுத்து என்னை மொழிபெயர்க்கச் சொன்னார். மொழிபெயர்த்து முடித்து ஒரு சிற்றிதழாளரிடம் அனுப்பிவைத்தேன். அது வெளியாகவேயில்லை. அதற்குப் பின், வீடு மாற்றும்போது தொலைந்துவிட்டது என்று அந்த இதழின் ஆசிரியர்─உரிமையாளரிடமிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. என் மொழிபெயர்ப்புப் பகுதியை நகலெடுத்துவைக்கவில்லை. இப்போது மீண்டும் மொழிபெயர்த்து முடித்தேன். ஒருவகையில் இதுவும் நன்மைக்கே என்று தோன்றுகிறது.

குத்துச்சண்டைக் களத்தில் சாம்பியனாக விளங்கிய ஒருவர், அந்த நாட்கள் போய்விட்ட நிலையில், அந்த இளமை போய்விட்ட நிலையில், இன்று பந்தயத்தில் தோற்போம் என்று நிச்சயமாகத் தெரிந்தும் தோற்பவனுக்குக் கிடைக்கும் சிறு தொகைக்காக குத்துச்சண்டைப் பந்தயத்தில் கலந்துகொள்வார். பந்தயத்தின் போதும், அதற்கு முன்பும் பின்பும் அந்த குத்துச்சண்டை வீரரின் மனவோட்டத்தை பிரதிபலிக்கும் கதை இது. இதைப் படித்தபோதும், மொழிபெயர்த்தபோதும் எனக்குப் பிடிபடாத பல வாழ்க்கைத்தத்துவங்களை கதையிலிருந்து கவிஞர் வைதீஸ்வரன் அடையாளங்காட்டியபோது பிரமிப்பாக இருந்தது.

வரவிருக்கும் இந்தச் சிறு மொழிபெயர்ப்பு நூலுக்கு நான் எழுதியுள்ள சிறு ‘என்னுரை’ இது. வழக்கமாக ‘சொல்லவேண்டிய சில’ என்று தலைப்பிடுவது வழக்கம். ஒரு மொழிபெயர்ப் பாளரின் வாக்குமூலம் என்றும் இதைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

1980களில் அநாமிகா என்ற பெயரில் சிறுகதைகளும், ரிஷி என்ற பெயரில் கவிதைகளும், ல.ரா என்ற பெயரில் கட்டுரைகளும் எழுத ஆரம்பித்தவள் தற்செயலாகத்தான் மொழிபெயர்ப்பாளராக மாறினேன். நான் ஆங்கில இலக்கிய படித்திருந்ததும் இலக்கிய ரசனை கொஞ்சம் இருப்பதாக அடையாளங்காணப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் பணி செய்துவந்த அலுவலகத்தில் சமூகப் பிரக்ஞை மிக்க தொழிற்சங்கத்தினர் புதிதாகப் பணிக்கு சேருபவர்களில் சிந்திக்கத் தெரிந்தவர்களை, எழுத்தாற்றல் மிக்கவர்களை எல்லாம் எளிதில் அடையாளங்கண்டுவிடுவார்கள். அவர்களிடம் தாம் நம்பும் சித்தாந்தங்களி னூடாய் சமூகப் பிரக்ஞையை விதைக்கத் தொடங்குவார்கள். நட்பு பாராட்டுவார்கள். அதே சமயம், அவர்களுடைய சிந்தனைப்போக்கிலிருந்து சற்றே விலகி சிந்தித்தால் உடனே ‘அமெரிக்க அடிவருடி’ என்ற பட்டம் கிடைத்துவிடும்! அப்படி ஆத்மார்த்தமாகவே நம்புகிறார்களா, அல்லது ஆளை ஒடுக்கும் ஆயுதமாக அந்த அடைமொழியைப் பயன்படுத்து கிறார்களா என்பது இன்றுவரை தொடரும் கேள்வி. அதையெல்லாம் மீறி நட்பு பாராட்டு வதும் அக்கறை காட்டுவதும் இயல்பாக நடந்துகொண்டிருக்கும்.

1990களில் பாட்னாவில் பெண்களுக்காக நடத்தப்பட்ட மாநாட்டில் பார்வையாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மொழிபெயர்ப்பின் தேவையை உணரச்செய்த தருணங்களில் அதுவும் ஒன்று. பெண் முன்னேற்றத்திற்காகக் களப்பணியாற்றிவரும் எழுத்தறிவற்ற பெண்கள் தங்கள் அனுபவங்களை இந்தியிலும் தமிழிலும் மலையாளத்திலும் கன்னடத்திலும் எடுத்துச்சொல்ல அவற்றை சம்பந்தப்பட்ட பிராந்திய மொழிகளும் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்தவர்கள் அமர்வுகளின் இடைவேளைகளின் போது மொழிபெயர்த்து (முக்கியமாக சாராம்சத்தை எளிய மொழிவழக்கில்) மற்றவர்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். அங்குதான் மொழிபெயர்ப்பின் சமூகரீதியான பயனைப் புரிந்துகொள்ள முடிந்தது. (அத்தகைய மொழிபெயர்ப்புப் பணியே அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்வதாகச் சிலரிடம் செயல்படுவதையும் பின்னர் பலமுறை பார்க்க நேர்ந்திருக்கிறது.)

இலக்கியத்திலும் அப்படித்தான். நான் மதிக்கும் நட்பினர் தமிழில் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய எழுத்தாக்கங்களாக, புனைவு─–புனைவல்லாதது என இரண்டு பிரிவிலும் தருவதை அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் தமிழில் மொழிபெயர்த்துத் தர ஆரம்பித்தேன். எழுத்தாளர்கள் கோபிகிருஷ்ணனும் ஸஃபியும் ANTI-PSYCHIATRYஐப் பற்றி என்னிடம் கொடுத்த மொழிபெயர்ப்புப் பிரதிகளை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் மூலம்தான், அவர்கள் தந்த பிரதிகளின் மூலம்தான் உளவியல் சார்ந்த விஷயங்கள், அரசியலை நான் தெரிந்துகொண்டேன்.

அப்படித்தான், சில நண்பர்கள் மூலம் உலக இலக்கியப் படைப்புகள், போக்குகள் சிலவும் அறிமுகமாயின. அப்படி ஒருவர் மூலம் அறியக் கிடைத்த உலகத்தரமான படைப்பை இன்னொருவர் மொழிபெயர்க்கச் சொல்லும்போது அதை ஆர்வத்துடன் செய்திருக்கிறேன். ஆனால் அப்படிச் செய்தது முதலில் அந்தப் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய நட்பினருக்கு உவப்பாக இருப்பதில்லை என்பதை (சம்பந்தப்பட்ட படைப்பை, படைப்பாளியைப் பற்றி அவர்களால் எழுதப்படும் கட்டுரைகளில் என் மொழிபெயர்ப்பைப் பற்றி எந்தக் குறிப்பும் இருக்காது!) போகப்போகப் புரிந்துகொள்ள நேர்ந்திருக்கிறது.

ஒரு படைப்பாளியின் படைப்புவெளியை முழுவதும் வாசித்து அறிந்திருந்தால் மட்டுமே அந்தப் படைப்பாளியின் எழுத்தாக்கங்களை செம்மையாகமொழிபெயர்க்க முடியும் என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படும்போது, ‘அப்படியெனில் என்னிடம் ஏன் அந்த மொழிபெயர்ப்புப் பணியைத் தந்தார்கள், அந்த உலகத்தரமான படைப்பாளியை முழுவதுமாக நான் வாசித்திருப்பதான பாவனையை நான் கைக்கொள்ளவேண்டும், கைக்கொள்வேன் என்று எதிர்பார்த்தார்களா அல்லது என்னை sort of errand boy(or girl, to be more precise!) என்ற ரீதியில் மட்டுமே பணித்தார்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

சிலர் தாங்கள் அறிமுகப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த படைப்புகள், படைப்பாளிகள் மேல் அத்தனை உடைமையுணர்வோடு நடந்துகொள்வதையும் பார்த்திருக்கிறேன்.

வேறு சிலர் அந்நியமொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கப்படும்போது மட்டுமே மூலமொழிப் படைப்புக்கு நியாயம் செய்ய முடியும் என்று மேடைக்கு மேடை முழங்கக் கேட்டிருக்கிறேன். ஒருவகையில் அது உண்மையே என்றாலும் இன்னொரு வகையில் அதுவோர் reductionist theory ஆகச் செயல்படுவதையும் காணமுடிகிறது.

என்னளவில், மொழிபெயர்ப்பின் மூலம் நான் கற்றுக்கொள்கிறேன் என்பதே உண்மை. நான் மதிக்கும் சிலர் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டியதாக ஒரு பிரதியை என்னிடம் தரும்போது அப்படித் தருபவர்மேல் எனக்குள்ள நம்பிக்கை, அபிமானம் காரணமாக அந்தப் பணியை மேற்கொள்வது வழக்கம்.

சில பிரதிகளை மொழிபெயர்க்க மறுத்ததும் உண்டு. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண் ஒருத்தி அதில் ஆழ்மனதில் பரவசமடைகிறாள் என்பதாய் விரியும் ஒரு பிரதியை மொழிபெயர்த்துத்தரும்படி என்னிடம் கேட்கப்பட்டபோது அதைப் படிக்காமலேயே மறுத்திருக்கிறேன். ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாய் அமையும் வசைச்சொல், மாற்றுத்திறனாளியை மதிப்பழிக்கும் வசைச்சொல்லை அப்படியே மூலமொழியிலிருந்து மொழிபெயர்ப்பதை கூடுமானவரை தவிர்த்திருக்கிறேன். அது சரியா, தவறா என்ற கேள்வி மனதில் எழுந்துகொண்டேயிருந்தாலும்.

மொழிபெயர்ப்பாளர் சங்கத்தில் அங்கம் வகித்தபோது மொழிபெயர்ப்பின் அரசியல் குறித்து நிறைய விவரங்களை அறிந்துகொள்ள முடிந்தது. போலவே, அத்தகைய ‘அரசியல்’ அங்கும் நிலவியதையும் பார்க்கமுடிந்தது.

ஒரூமுறை தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்பட இயக்குனர் ஒருவர் இளம் நடிகை ஒருவர் மேடையில் ஆங்கிலத்தில் பேசியதற்கு மிகக் கடுமையாக அந்தப் பெண்ணைக் கண்டித்தார். ஆனால், அந்த மனிதர் எல்லா மேடைகளிலும் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசாமல் இருக்கவேமாட்டார். ஆங்கிலம் என்பதுகூட அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தந்திரமாக மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையையும் அதிலுள்ள அரசியலையும் (both literal and symbolic) நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய, கவனப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

நம்முடைய கண்ணோட்டங்கள், கோட்பாடுகளை கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் ‘பீச்சாங்கை வீச்சாக’ப் புறக்கணித்து, கேலியாகப் பார்த்து, எள்ளிநகையாடி ‘ஆனால், இவர்களின் உழைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்ற உத்தியோடு எனக்கு மொழிபெயர்ப்புப் பணிகளைத் தருபவர்களையும், என் மொழிபெயர்ப்புகளை வெளியிடக் கேட்பவர்களையும் உரிய நேரத்திலோ, அல்லது காலதாமதமாகவோ அடையாளங்கண்டு அவர்களுக்கு என் மொழிபெயர்ப்புகளைத் தர மறுத்திருக்கிறேன்.

சிறுபத்திரிகை ஒன்றில் மொழிபெயர்ப்புக்கென தரப்பட்ட பிரதிகளையெல்லாம் செய்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில் ஒருமுறை அதன் ஆசிரியர் முன்வைத்த கருத்து ஒன்றை மறுதலித்து நான் அனுப்பிய எதிர்வினை பிரசுரிக்கப் படவில்லை. (அதைப் பிரசுரித்து என் நிலைப்பாடு சரியில்லை என்று அம்பலப்படுத்தி யிருந்தால் அது வேறு விஷயம்.) மீண்டும் அதே கேள்வி எனக்குள் – Am I an errand boy?(or errand girl, to be more precise?) அதற்குப் பிறகு அதே சிற்றிதழ்க்காரர் சில பிரதிகளை மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டபோது “நான் உங்கள் எடுபிடியல்ல” என்று காட்டமாகக் கூறி காலத்திற்கும் அவருடைய விரோதியானேன். (அது குறித்து கவலை ஏதுமில்லை.)

கவிஞராக இருப்பதை விட, கதாசிரியராக இருப்பதை விட மொழிபெயர்ப்பாளராக இயங்குவதில் சீரான வருமானம் கிடைக்க வழியுண்டு என்று தெரிந்துகொள்ள நேர்ந்ததெல்லாம் சமீபகாலமாகத்தான். 2005இல் அரசுவேலையை விட்ட பிறகு, பணியிலிருந்தபோதே நிறைய விடுப்பு எடுத்திருந்ததால் முழு ஓய்வூதியம் கிடைக்காதுபோக, கிடைத்தது வீட்டுவாடகைக்கே போதாது என்ற உண்மையின் பின்னணியில் இலக்கியமல்லாத நிறைய பிரதிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வருமானமீட்டுவது தொடங்கியது. இலக்கு வாசகர்களையும், கையிலுள்ள பிரதியில் இலக்குவாசகர்களிடம் எதை முதன்மையாகக் கொண்டுசெல்லவேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டே நம் மொழிநடை அமையவேண்டும் (குறிப்பாக, புனைவல்லாத பிரதிகளை மொழிபெயர்ப்பதில்) என்பது புரிந்தது.

1980களின் பிற்பகுதியில் எழுத்தாளர் க.நா.சுவின் குறிப்பொன்றை குமுதம் இதழில் பார்த்து அவருடைய கையெழுத்துப்பிரதிகளை எழுதித்தருவதிலும், அவர் சொல்லச் சொல்ல எழுதுவதிலும் என்னாலான உதவிகளைச் செய்துதரும் ஆர்வத்துடன் அவரைப் போய்ப் பார்த்தேன். அப்போது மயிலையில் தங்கியிருந்ததால் முடிந்தபோதெல்லாம் இரவுப்பணி முடித்த கையோடு காலையில் அவருடைய வீட்டிற்கும் செல்வேன். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த புதினம் அவதூதரை தமிழில் மொழிபெயர்க்குமாறு என்னிடம் கொடுத்தபோது என் மொழித்திறனைப் பார்ப்பதற்காக அப்படிச் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். என் மொழிபெயர்ப்பை செம்மை செய்து தன் பெயரில் வெளியிட்டுக்கொள்ளப்போகிறார் என்றே நினைத்தேன். சரியாக மொழிபெயர்க்க வராத வார்த்தைகளை முடிந்த அளவு தமிழில் மொழிபெயர்த்து மூல வார்த்தைகளை அவற்றின் அருகிலேயே அடைப்புக்குறி களுக்குள் தந்தேன். ஆனால் அந்த மொழிபெயர்ப்பை என் பெயரிலேயே நான் தந்த மாதிரியே பிரசுரித்துவிட்டார் க.நா.சு. அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கில வார்த்தைகள் தரப்பட்டிருந்தது அரிசியில் நெல் நெரடுவதுபோல் இருப்பதாக திரு.கோவை ஞானி அவர்கள் குறிப்பிட்டது சரியே என்று உணர்ந்தேன். மேலும், இப்படி சரிவரத் தெரியாத வார்த்தைகளையும் அடைப்புக்குறிகளுக்குள் தருவதன் மூலம் மொத்த புத்தகமுமே இப்படித்தான் தோராயமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது போலும் என்ற எண்ணம் வாசக மனங்களில் ஏற்பட்டுவிடும். ’இனி நம் மொழிபெயர்ப்பை இறுதிவடிவமாகத்தான் எவரிடமும் தரவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

சிறந்த படைப்பு என்று நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டு மொழிபெயர்ப்புக்குத் தரப்பட்ட பிரதிகள் எனக்கு ஒரு வாசகராக ஏமாற்றமளித்த தருணங்களும் நிறையவே உண்டு. இருந்தும், முடித்துக்கொடுத்துவிடுவேன்.

ஒரு படைப்பின் மிகத் தரமான இரண்டு மொழிபெயர்ப்புகள் எதிரெதிர் அர்த்தங்களைத் தருவதாக அமையக்கூடுமென்பதை அன்னா அக்மதோவாவின் ஒரு கவிதைக்கான இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள் உணர்த்தின. அது குறித்து என் அன்னா அக்மதோவா கவிதை மொழிபெயர்ப்பு நூலில் எழுதியிருக்கிறேன்.

சில சமயம் ஒருவருக்கு ஒரு விஷயம் குறித்த ஆழ்ந்த அறிவு இருக்கும். அதை மொழிபெயர்ப்பதற்கான போதிய மொழிப்புலமை இருக்காது. எனக்கு சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து எதுவுமே தெரியாது. அம்மாதிரி சமயங்களில் மொழிபெயர்த்தவர் நான் என்று குறிப்பிடாமல் அந்தப் பிரதிகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்ததுண்டு. சிநேகத்திற்காகவும், சன்மானத்திற்காகவும்.

ஆனால், ஒரு சமயம் தன் பெயரைக் குறிப்பிட்டு ஒரு பதிப்பகம்(அந்தப் பெயரை மறந்துவிட்டேனே என்று பின்னர் பலமுறை வருந்தியிருக்கிறேன்) முனைவர் பட்ட ஆய்வேட்டை செய்துதரச் சொல்லி கேட்டபோது மேற்குறிப்பிட்ட மாதிரி மொழிபெயர்க்கச் சொல்வதாய் எண்ணினேன். அடுத்து, ஆய்வு சம்பந்தமான புத்தகங்களையெல்லா அனுப்பித்தருவதாக மறுமுனை கூறியபோதுதான் அந்த ஆய்வேட்டையே தயாரித்துத் தரச் சொல்கிறார்கள் என்பது புரிந்தது. அதிர்ந்துபோய், ’அது தவறல்லவா. இப்படி முனைவர் பட்டம் வாங்குகிறவர் மாணாக்கர்களுக்கு எப்படி சீரிய முறையில் பாடம் கற்பிக்க முடியும் என்று கேட்டதற்கு ‘இத்தகைய தார்மீக நியாயக் கேள்விகளையெல்லாம் கேட்கக்கூடாது” என்று எனக்கு அறிவுரை சொன்னார்கள்! அந்த வேலையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் எனக்கும் நஷ்டமில்லை, அவர்களுக்கும் நஷ்டமிருந்திருக்காது!

தமிழ்க்கலாச்சாரத்தை உலக அரங்கில் பீடமேற்றப்போவதாக சொல்லிக்கொள்ளும் வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவ்வப்போது தரும் அ-புனைவுப் பிரதிகளை ஆங்கிலத்தில் செய்துதருவேன். ஆரம்பத்தில் நான் கேட்கும் நியாயமான ஊதியத்தைத் தந்தவர் ஷார்ட்ஸ் அணிந்த தமிழ்ப்பெண்ணை மணந்துகொண்ட பிறகு நான் அதிகமாக சன்மானம் கேட்கிறேன் என்று தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். தமிழ்ப்பெண் ஷார்ட்ஸ் அணிவது பற்றி எனக்கு ஒன்றுமில்லை. ஆனால், தனக்குத் தெரிந்த அரைகுறை தமிழில் அந்தப் பெண் என் மொழிபெயர்ப்பைக் குதறுவது தாளமுடியாமல் போயிற்று. அதைவிட மோசம், ஒரு நாள் முழுக்க அவர்கள் வீட்டில் மொழிபெயர்த்தபடி, மொழிபெயர்ப்பதை கணினியில் தட்டச்சு செய்தபடி இருந்த என்னிடம் ‘தமிழ்க்கலாச்சாரக் காவல’ரான அந்தப் பெண் ஒரு வாய் தண்ணீர் வேண்டுமாவெனக் கேட்கவில்லை. பிறகொரு சமயம் மொழிபெயர்ப்புக்கு நான் கேட்பது அதிகம் என்று சொன்னபோது, ’என் வேலைக்கான ஊதியத்தை நான் தான் நிர்ணயம் செய்யவேண்டும், நீங்களல்ல, அந்நியநாட்டு நன்கொடைகள், மான்யத்தொகை எல்லாம் வாங்குவது போதாதென்று உங்களிடம் பயில வருபவர்களிடம் இத்தனை அதிகக் கட்டணத்தொகை வாங்குவது நியாயமா என்று என்னாலும் கேட்கமுடியும்” என்று கூறி என்றைக்குமாய் அவர்களிடமிருந்து விலகிக்கொண்டேன்.

ஒருமுறை இறக்குமதி செய்யப்பட்ட பிரம்மாண்டமான காரில் வந்திறங்கிய அரசியல் பிரமுகர் எனக்குப் பரிச்சயமான எழுத்தாளர் பரிந்துரைத்ததாகச் சொல்லி அவர்களுடைய கட்சிசார் கையேடு ஒன்றை ஆங்கிலத்தில் செய்துதரச் சொன்னபோது மரியாதை நிமித்தம் முதலில் செய்துகொடுத்து பின் ‘நான் அரசியல் கட்சிசார்ந்த மொழிபெயர்ப்புவேலைகளை தொடர்ச்சியாக செய்ய இயலாது’ என்று தெரிவித்துவிட்டேன். கோடியில் புரள்பவர்களிட மிருந்து எனக்கான மீதித்தொகை ரூ.2000 இன்றுவரை வந்தபாடில்லை.

இலக்கிய நண்பரொருவரின் பெயரைச் சொல்லி (அந்த நண்பருக்கு இந்த ஆசாமியைத் தெரியவே தெரியாது என்று பின்னர் தெரியவந்தது) குழந்தைகளுக்காகத் தான் எழுதிய கதைகளடங்கிய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ஒருவர். மொத்தம் ஆறாயிரம் ரூபாய் கேட்டு ரூ.3000 முன்பணமாகப் பெற்று மொழிபெயர்க்கத் தொடங்கினேன். வெகு சாதாரணமான கதைகள். ‘நகைச்சுவை என்ற பெயரில் ‘குழந்தை மூத்திரம் குடித்தது, பீயைத் தின்றது’ என்றெல்லாம் எழுதியிருக்கிறீர் களே, இது Hygiene senseக்கு எதிரானதல்லவா என்று அவரிடம் கேட்காமலிருக்க முடியவில்லை. ”எப்படி மாத்தினா நல்லாயிருக்கும்னு நினைக்கிறீர்களோ அப்படியே செய்யுங்கள் அம்மா” என்று சொன்னார். அப்படி வெகு சில மாற்றங்களை மட்டுமே செய்தேன். மின்னஞ்சலில் மொத்தக் கதைகளையும் மொழிபெயர்த்து அனுப்பிவைத்த பின் மீதி மூவாயிரத்தைக் கேட்டால் ‘உங்கள் மொழிபெயர்ப்பை என் பப்ளிஷர் பிரசுரிக்க மாட்டேனென்கிறார்” என்றார். நீங்கள் கேட்டீர்கள், நான் மொழிபெயர்த்துக்கொடுத்தேன். இதில் பப்ளிஷர் எங்கிருந்து வந்தார்?” என்று கேட்டதற்கு “நீங்க என்னம்மா என் கதைகளை மொத்தமா மாத்திப்பிட்டீங்களே” என்று மீதிப் பணத்தை தர மனமில்லாத தன் கயமையை மறைக்க நீதிமானாய் என்னைக் குற்றஞ்சாட்டினார்!

சக எழுத்தாளர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மருத்துவ நூல் ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொடுத்தேன். நான் கேட்ட தொகை ரூ 8000. மருத்துவர் ரூ 5000 தந்தார் என்று அந்த சக எழுத்தாளர் கூறியபோது அவர் யார் என் வேலைக்கான ஊதியத்தை நிர்ணயிக்க, ரூ.8000ற்கு அவர் ஒப்புக்கொண்டதால்தானே செய்தேன் என்று சொன்னபோது “நான் வேறுமாதிரி மொழிபெயர்த்திருப்பேன்” என்றவிதமாய் அந்த சக எழுத்தாளர் கூறக்கேட்டு திகைப்பாயிருந்தது. அந்த மருத்துவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது நீங்கள் நேரில் வந்து என்னோடு அமர்ந்து மொழிபெயர்ப்பில் திருத்தம் மேற்கொள்ளவில்லையே என்றார். ”நான் உங்கள் செயலாளரல்ல, மொழிபெயர்ப் பாளர்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியும், மொழிபெயர்த்தும் இருக்கும் திரு. பசுமைக்குமார் என்னை அழைத்துக்கொண்டுபோய் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் சேர்த்துவிட்டார். கடந்த எட்டுவருடங்களுக்கும் மேலாக வீட்டிலிருந்தபடியே அந்த நிறுவனத்திற்கு மொழிபெயர்ப்பு, பிழைபார்ப்பு, சுயமாய் குழந்தைக்கதைகள் எழுதுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுவந்தேன். உரிய ஊதியமும் மரியாதையும் கொடுத்து என்னை நடத்திய அந்த நிறுவனத்திற்கு என் நன்றி என்றும் உரியது. இப்போது அதிலிருந்தும் விலகிவிட்டேன். வீட்டிலிருந்தபடியே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட எண்ணம். பார்க்கலாம்.

தமிழிலிருந்து ஆங்கிலத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் 20க்கு மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ள, நவீன தமிழ்க்கவிதைகளை மூன்று தொகுப்புகளாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள, சங்கப் பெண்கவிஞர்களின் கவிதைகளை, பாரதியாருடைய கவிதைகளின் பெரும்பகுதியை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள, சமூக-இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் ஏழெட்டுத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள, உலகப்புகழ் பெற்ற நூலான டாக்ரர் மணி பௌமிக்கின் THE CODE NAME GODஐ மிக நேர்த்தியாக தமிழில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனிடம். அவருடைய படைப்புகளை பிரதியெடுக்கும், கணினியில் தட்டச்சு செய்துதரும் பணியில் இயங்கிவருகிறேன். உரிய சன்மானமும் மரியாதையும் கிடைக்கிறது. ஒவ்வொரு சொல்லையும் பார்த்துப்பார்த்துச் செதுக்கி அயராது மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும், தன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குக் கிடைக்கும் சன்மானத்தை மூல ஆசிரியருக்கே தந்துவிடும், வலது கை தருவது இடது கைக்குத் தெரியாத அளவில் பலபேருக்கு பலவிதங்களில் உதவிவரும் டாக்டர். கே.எஸ்-இன் சமூகம் சார், இலக்கியம் சார், மொழி சார் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

வேறு சில நிறுவனங்களுக்கும் சிறுவர்களுக்கான புத்தகங்கள் எழுதிக்கொடுத்திருக்கிறேன்; மொழிபெயர்த்துக்கொடுத்திருக்கிறேன்,. குழந்தைகளுக்கு எழுதப்படும், மொழிபெயர்க்கப்படும் கதைகள், பிற எழுத்தாக்கங்களில் மொழிப்பிரயோகம் சார்ந்து, கருத்து சார்ந்து நிறைய மாற்றங்கள் தேவை என்பதை உணரமுடிந்தது. எடுத்துக்காட்டாக, எழுபது வயதான பணியாளரும் பெரும்பாலான சிறுவர் கதைகளில் ’அவன்’, ’நீ’ என்பதாக ஒருமையிலேயே குறிப்பிடப்படுகிறார். மாற்றுத்திறனாளிகள் நகைச்சுவைப்பொருளாக்கப்படுகிறார்கள், தலை யில் வலிக்க வலிக்கக் குட்டுதல், தடுக்கிவிழச் செய்தல் போன்ற வன்முறையார்ந்த செயல் களெல்லாம் வேடிக்கையான நிகழ்வுகளாக முன்வைக்கப்படுகின்றன.

எட்டு, பத்து வருடங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கிய மாணவிகளுக்கு மொழிபெயர்ப்புக்கான பட்டயப்படிப்பு வகுப்புகள் ஒரு வருடகாலம் எடுக்க நேர்ந்தது. சரளமாக ஆங்கிலத்தில் பேசவேண்டும், அதற்கு நான் உதவ வேண்டும் என்பதே அந்த மாணவிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், துறை ஆசிரியர்கள் அப்படிச் செய்தால் அது தங்கள் பணியை விமர்சனத்துக்குள்ளாக்கும் என்று கூறினர். நான் வைத்த தேர்வில் ஒரு மாணவி இருபது பக்கங்கள் விடைகள் அளித்திருந்தாள். அந்த அளவுக்கு அவளுக்கு பாடங்கள் புரிந்திருந்தன. ஆனால் ஒரு வாக்கியம் கூட விளங்கிக்கொள்ளக்கூடிய சரியான ஆங்கிலத்தில் அமையவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. நான் அப்பழுக்கற்ற ஆங்கிலப் புலியொன்றும் அல்ல. இருந்தும் மொழிபெயர்ப்போடு ஒவ்வொரு வகுப்பிலும் ஆரம்பத்தில் 20 நிமிடங்கள் போல் ஆங்கில மொழியைப் பேசுவதற்கும் அவர்களுக்கு என்னாலான அளவு கற்றுத்தந்தேன்.

அந்தக் கல்லூரியில் பணிபுரிந்த ஒரு வருடத்தில் மொழிபெயர்ப்பு தொடர்பான ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் படிக்கக் கிடைத்தன. வெளிநாட்டவர்களும், வட நாட்டவர்களும் எழுதியவை. அவற்றில் தரப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுகள்கூட நமக்குப் பிடிபடாம லிருக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த நூல்களில் விவாதிக்கப்பட்டிருந்த மொழிபெயர்ப்பு சார்ந்த பல கருத்தியல்கள், கோட்பாடுகள் மொழிபெயர்க்கும் சமயம் என் மனதிலும் ஏற்பட்டவையே. ஆனால், அவை மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளாக ஆவணப்படுத்தப் பட்டுள்ள விவரம் தெரிந்திருக்கவில்லை. மொழிபெயர்ப்பு வழிமுறைகள் ஒன்றிற்கு மேற்பட்டவைகள் இருப்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.

தமிழைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பாளர்களின் அணுகுமுறைகள், இயங்குமுறைகள் போன்றவற்றைப் பேசும் நூல்கள் வெகு சிலவே உள்ளன. எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர் அமர்ந்த்தாவின் முயற்சியில் தமிழில் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுவரும் சிலர் அது குறித்த தங்கள் அனுபவங்களைப் பற்றி எடுத்துரைக்கும் கட்டுரைகளடங்கிய தொகுப்புகள் இரண்டு – மொழிபெயர்ப்புக் கலை – இன்று, மொழிபெயர்ப்பு – தற்காலப் பார்வைகள் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) வெளியாகியுள்ளன. பூரணச்சந்திரன் அவர்களுடைய நூல் ஒன்று வெளியாகியுள்ளது. நானும் நான் சார்ந்துள்ள பார்வையற்றோர் நன்னல நிறுவனமான வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் நிறுவனத் தலைவர் அமரர் ஜெயராமன் (பார்வையிழப்பை மீறி கல்வி பயின்று பல வருடங்கள் தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்) அவர்களும் இணைந்து மொழிபெயர்த்த இணைய இதழ் மியூஸ் இந்தியாவின் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரைகளின் தமிழாக்கம் (மொழிபெயர்ப்பின் சவால்கள் – சந்தியா பதிப்பகம்). இன்னும் சில வெளிவந்திருக்கக்கூடும். எனில், இதுபோன்ற கட்டுரைத் தொகுப்புகள் இன்னும் பல வரவேண்டும்.

கோட்பாடுகளின் அடிப்படையில் மொழிபெயர்க்கவியலாது என்பதும் போகப்போகத் தெரிந்தது. ஒவ்வொரு பிரதிக்கேற்பவும் நம் மொழிபெயர்ப்பு அணுகுமுறை மாறுவதும் உண்டு. ஒரு பிரதியை மொழிபெயர்த்து முடிக்க கைவசமுள்ள கால அவகாசத்தைப் பொறுத்தும், ஒரு பிரதியை மொழிபெயர்ப்பதன் நோக்கம், மற்றும் இலக்குவாசகர்களைப் பொறுத்துகூட மாறும்.

புனைவிலக்கியங்களைப் பொறுத்தவரை, மூலப்பிரதியில் மொழிநடைக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தால், அல்லது மூலப்பிரதி ‘complex’ நடையில் எழுதப்பட்டிருந்தால் மொழிபெயர்ப்பில் அந்த நுட்பத்தைக் கொண்டுவர முயற்சி செய்வேன். பிரதியை ஒரேயடியாக எளிமைப்படுத்திவிடமாட்டேன். மேலும், சிலர் மூலப்பிரதி சாதாரணமான நடையில் எழுதப்பட்டிருக்க மொழிபெயர்ப்பில் அதை மேம்படுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பார்ப்பதும், அது மொழிபெயர்ப்பாளரின் பொறுப்பு என்பதாய் கோருவதும் உண்டு. என்னளவில், வட்டார வழக்குகள் அதிகமாக உள்ள பிரதியை மொழிபெயர்ப்பது மிக மிகக் கடினமானது. அதேபோல், உரையாடல்களையும், அவற்றிற்குரியதாக தமிழிலிருந்து எந்தப் பேச்சுவழக்கை அது மொழிபெயர்ப்பாளரின் வேலையல்ல. அதேபோல், உரையாடல்க ளையும் அவற்றிற்குரியதாக தமிழிலிருந்து எந்தப் பேச்சுவழக்கை எடுத்தாள்வதுஎன்று பிடிபடாமல் செந்தமிழிலேயே (வழக்கமாகக் கையாளும் வரிவடிவத் தமிழில்) மொழிபெயர்க்க நேர்கிறது.

ஒரு மொழிபெயர்ப்பாளராக மூல ஆசிரியரிடம் எனக்கு ஒருவித love-hate relationsip தான் நிலவும். மூலப்பிரதி மிக நன்றாக இருந்தால், அடப்பாவி மனுஷா (அல்லது மனுஷீ!) என்னமா எழுதியிருக்கிறார் – நம்மாலெல்லாம் இப்படி எழுத முடிவதேயில்லையே’ என்ற பொறாமை. அல்லது, சாதாரண எழுத்தாகப் புலப்பட்டால், ‘சே, வருமானத்திற்காக, அல்லது, நண்பர்கள் கேட்டுக் கொண்டார்களேயென்று இந்த ‘திராபை’ எழுத்தையெல்லாம் மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறதே’ என்ற எரிச்சல். அதேசமயம், மொழிபெயர்க்கும்போது மூலப்பிரதியிலிருந்து கொஞ்சம் விலகியே இயங்கவேண்டியிருக்கும். அதிலேயே அமிழ்ந்துவிட்டால் வேலை நடக்காது!

மூலப்பிரதியை மொழிபெயர்ப்பதில் மொழிபெயர்ப்பாளர் தன் விருப்பம்போல் liberty எடுத்துக்கொள்வது மிகவும் தவறு. அதேசமயம், சில இடங்களில் மொழிபெயர்ப்பாளர் தன் discretionஐ பயன்படுத்தவேண்டியதும் அவசியமாகிறது. மூலப்பிரதியில் ஒரு வரி தரும் உட்பொருளை அழுத்தமாக எடுத்துக்காட்ட மொழிபெயர்ப்பாளர் தனது மொழியாக்கத்தில் ஓரிரு வார்த்தைகளைக் கூடுதலாகச் சேர்க்கவேண்டிவரலாம். வாக்கிய அமைப்புகளை இலக்குமொழிக்கேற்ப மாற்றவேண்டிவரலாம். இதையெல்லாம் குற்றமாகப் பேசினால் எந்த மொழிபெயர்ப்பாளரும் இயங்கவே முடியாது. எடுத்துக்காட்டாக, இந்தக் கதையில் Youth will be served என்ற வரி முத்திரை வாசகமாக வரும். இதை ‘இளமைக்கே எல்லாம்’ என்று மொழிபெயர்த்திருக்கிறேன். இது சரியில்லை என்று இந்த வாசகத்திற்கான தங்கள் மொழிபெயர்ப்பை முன்வைப்பவர்கள் உண்டு. அத்தகையோரிடம் வாதாடிப் பயனில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் வார்த்தைத் தேர்வும், அவற்றை வரிசைப்படுத்தலும் தான் ஒரு மொழிபெயர்ப்பாளரின் தனி அடையாளம். அதில் அர்த்தப்பிழை இருந்தால் சுட்டிக்காட்டலாம்.. ஆனால் ‘நான் சொல்லும் வார்த்தைகளை, நான் சொல்லும் விதமாய் வரிசைப்படுத்தினால்தான் நீங்கள் நல்ல மொழிபெயர்ப்பாளர் என்று சிலர் கூறுவதைக் கேட்கநேரும்போது வேடிக்கையாகவுமிருக்கும்; வருத்தமாகவும் இருக்கும்.

பழமொழிகள், ஒரு மொழியில் புழங்கும் சொற்றொடர்கள் ஆகியவற்றை இன்னொரு மொழிக்குக் கொண்டுவரும்போது அவற்றின் உள்ளர்த்தம், குறிப்பைப் புரிந்துகொண்டு அவற்றையே சரியாக இலக்குமொழியில் தரவேண்டும் என்ற ஒரு பார்வையும், நம் மண்ணுக்குஏர்றதான பழமொழிகள், சொற்றொடர்களைப் பயன்படுத்தவேண்டும் என்றும் இருவேறு பார்வைகள் புழக்கத்திலிருக்கின்றன. உமர் கயாம் (ஆங்கில மொழிபெயர்ப்பில்) A Book Of Verse என்று சொல்லியிருந்ததை ‘கையில் கம்பன் கவியுண்டு’ என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் படித்தபோது, கம்பன் மீது அன்பும் மரியாதையும் இருந்தாலும், ‘எனக்குப் பிடித்த கவிதைத்தொகுப்பைத் தீர்மானிக்க இவர் யார்?’ என்று கோபம் வந்தது.

பிறமொழிப் படைப்புகளைத் தமிழில் கொண்டுவரும்போது, ’அதைத் தமிழ்ச்சூழல் மயமாக்கவேண்டும்’ என்றவொரு கருத்தும், ’அப்படிச் செய்யலாகாது, அந்தப் படைப்புகளில் புனைகதையம்சங்களோடு அந்நிய மண் சார்ந்த வாழ்வியல் விவரங்களையும் நாம் தெரிந்துகொள்கிறோம் – மொழிபெயர்ப்பைத் தமிழ்ச்சுழல்மயமாக்கினால் அது முடியாமலாகி விடும், அதற்கு நாம் தமிழில் எழுதப்பட்ட புனைவிலக்கியங்களைப் படித்தால் போதுமே’ என்ற பார்வையும் உண்டு.என்னைப் பொறுத்தவரை இந்தப் பார்வைபொருள்பொதிந்ததே. அதே சமயம், புனைவிலக்கியம் என்பதே பிரதானமாக மானுட வாழ்க்கைக்கூறுகளை- Unity in Diversity and Diversity in Unityஐ அடிக்கோடிட்டுக் காட்டுவன என்பதால், வெறும் அந்நிய மண் சார்ந்த விவரக்குறிப்புகள் நிரம்பியதாக மட்டும் ஒரு மொழியாக்கம் இலக்குமொழியில் அணுகப்படலாகாது; நின்றுவிடலாகாது. அதைத் தாண்டி, ‘வாழ்வோட்டம்’ இயல்பாக விரவியிருப்பதும் அவசியம்.

பிறமொழியிலான ஒரு புனைவிலக்கியத்தை அது முன்வைக்கும் வாழ்வீர்ப்பு காரணமாய் நான் (அல்லது என் நட்பினர்) தமிழில் மொழிபெயர்க்க விரும்பும்போது (மொழிபெயர்க்கும்படி என்னைக் கேட்டுக்கொள்ளும்போது) அந்தப் பிரதியில் சில பொருட்கள், தின்பண்டங்கள் அன்னபிற எனக்குத் தெரியாதவையாக இருந்தால், அவை பிரதியின் கதையோட்டத்திற்கு அத்தியாவசியமானதாய் அமைந்திருந்தால் அவற்றிற்கான சரியான தமிழ்வார்த்தையை பல்வேறு வழிகளில் கண்டுபிடிக்கப் பிரயத்தனப்பட்டு, அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சரியான தமிழ்ப்பதத்தைப் பயன்படுத்துவேன். அப்படியில் லாமல் வெறுமே வந்துபோகிறதென்றால் அத்தனை மெனக்கெட மாட்டேன். எடுத்துக் காட்டாக, மூலப்பிரதியில் ஒரு இனிப்புப் பண்டம் குறித்த பெயர் அல்லது குறிப்பு இடம்பெறுகிறதெனில், அதைத் தின்று கதாநாயகன் இறந்துபோகிறான் என்பதுபோல் அது கதைநகர்வுக்கு முக்கியக்காரணியாக இருந்தால் அது என்ன மாவில், என்ன எண்ணெய்யில் செய்யப்பட்ட தின்பண்டம், வெல்லத்தில் செய்யப்பட்டதா, சர்க்கரையில் செய்யப்பட்டதா என்றெல்லாம் பார்த்துப் பார்த்து மொழிபெயர்ப்பேன். கதாநாயகனும் அவனுடைய காதலியும் ஒரு சிற்றுண்டிசாலையில் அதை சாப்பிட்டுவிட்டுப் போவதாக போகிறபோக்கில் சொல்லப்பட்டிருந்தால், வெறுமே ‘ஒருவகை இனிப்புப்பண்டத்தைச் சாப்பிட்டார்கள்’ என்று எழுதிவிடுவேன். இந்த discretion ஒரு மொழிபெயர்ப்பாளருக்குத் தேவை என்று நினைக்கிறேன்.

என் மொழிபெயர்ப்பில் நம்பிக்கை வைத்து சிலர் தந்திருக்கும் ஐந்தாறு நூல்களை மொழிபெயர்த்து முடிக்கவேண்டும். பின், தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை மட்டுமே மேற்கொள்ளவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். இதில் வாழ்க்கைச்சூழல் சார், உரையாடல் சார் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் குறைவு என்று தோன்றுகிறது.

ஒரு மொழிபெயர்ப்பில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால், மூல ஆசிரியரை மதிப்பழிப்பதில் மொழிபெயர்ப்பாளருக்கு ஏதோ ஆதாயம் கிடைப்பதுபோல், மொழிபெயர்ப்பாளருக்கு உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது சரியில்லை. ஒருவருடைய மொழிபெயர்ப்பில் குறை காண்பதற்கு வாசகருக்கும் ஒரு தகுதி வேண்டும். அப்படியில்லாமல் சிலர் சகட்டுமேனிக்கு மொழிபெயர்ப்பாளர்களை மட்டந்தட்டுவதும், மதிப்பழிப்பதும் வருத்தமளிக்கிறது. இத்தகையோர், பெரும்பாலும், பெருந்தொகையை மான்யமாக, நன்கொடையாகப் பெற்று உலக இலக்கியங்களை மொழிபெயர்ப்பவர்கள், தங்களுடைய மொழிபெயர்ப்பே அப்பழுக்கற்றது என்று வலியுறுத்துபவர்கள், பெரிய பதவிகளில் இருக்கும் எழுத்தாளர்கள் – மொழிபெயர்ப்பாளர்கள், பிறர் கைகளால் மொழிபெயர்ப்பு செய்பவர்கள், போன்றவர்களிடம் ‘வேலை காட்டுவதில்லை. அவர்களுடைய மொழிபெயர்ப்பைத் தங்கள் திறனாய்வுக்குட்படுத்த முன்வருவதில்லை என்பதையும் பார்க்க முடிகிறது.

நான் மொழிபெயர்த்திருக்கும் படைப்புகளைப் பொறுத்தவரை, நானறிந்தவரையில் அவற்றின் தமிழ்வெளியீட்டுரிமையை இன்னும் யாரும் வாங்கவில்லை. எனவே, யார் வேண்டுமானாலும் அவற்றை மொழிபெயர்ப்பு செய்து வெளியிடலாம். அதேசமயம், அவர்கள் சரிபார்த்துக்கொள்ளவும், மேம்படுத்தவும் ஏற்கனவே ஒரு மொழிபெயர்ப்பு இருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இவ்வாறு ஒருவரின் மொழிபெயர்ப்புப் பிரதியை ஓராண்டுகாலம் கையில் வைத்திருந்து பின் அதை அடிப்படையாகக்கொண்டு வேறொருவர் மொழிபெயர்த்த அதே கதைகளை வெளியிட்ட கதைகளும் தெரிந்ததே. தனிநபர் integrity இல்லையென்றால் என்னவேண்டுமானாலும் அக்கிரமம் செய்து மனசாட்சி உறுத்தலில்லாமல் வாழமுடியும்.

சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக்-இல் நான் மொழிபெயர்த்த THE ROYAL GAME என்ற குறுநாவலின் மொழிபெயர்ப்பு குறித்து ஒருவர் கிசுகிசு பாணியில் மதிப்பழித்துப் பேசியிருந்தார். சதுரங்க விளையாட்டு குறித்த தனது ஆய்வின்(?) ஒரு பகுதியாக இலக்கியத்தில் அது குறித்து எழுதப்பட்டிருப்பதைத் தேடியபோது என்’சொதப்பலான’ மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்ததாகவும், சதுரங்க விளையாட்டின் அரிச்சுவடி கூட தெரியாதவர்கள் ஆங்கிலம் ஒரே காரணத்திற்காக இத்தகைய இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்க்க முற்படுவது அராஜகம் என்றவிதமாகவும் கருத்துரைத்திருந்தார். அவர் மேற்கோளாகக் காட்டியிருந்த பத்தி என் மொழிபெயர்ப்பே மோசமானது என்பதை உட்குறிப்பாகச் சுட்டுவதாக இருந்தது. ஆனால், அவர் மேற்கோள் காட்டியிருந்த ஆங்கில மொழிபெயர்ப்பும் நான் மொழிபெயர்க்க எடுத்துக்கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பும் வேறுவேறு. அதை நான் சுட்டிக்காட்டியபோது தன் தவறுக்காக வருத்தம் தெரிவிக்க மனமில்லாமல் ‘இந்த ஒரு சொற்றொடரை நீங்கள் சரியாக மொழிபெயர்த்திருக்கிறீர்களா என்பதைச் சொல்லுங்கள், பிறகு மேற்கொண்டு பேசலாமே” என்று (ஏதோ நான் அவருடைய அங்கீகாரத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பதைப்போல்) அவர் எழுதியிருந்ததைக் கண்டு what an abject insolence என்று எண்ணிக்கொண்டேன். மொழிபெயர்த்து பத்து வருடங்களுக்கு மேலான நிலையில் என் கையெழுத்து பிரதி கைவசமில்லாத நிலை. தவிர, இத்தகையோரை ‘ஊக்குவிக்கும்’ பெருந்தலைகளும் இங்கே உண்டு என்பதை நான் அறிந்தேயிருக்கிறேன்.

என்னுடைய மொழிபெயர்ப்பு அப்பழுக்கற்றது என்று நான் ஒருபோதும் பறையறிவித்துக் கொண்டதில்லை. ஏனெனில் அதில் உண்மையிருக்க வழியில்லை. He என்ற எளிய வார்த்தை அவனா, அவரா என்று திக்குமுக்காடவைக்கும் தருணங்களே அதிகம். சில வார்த்தைகளின் குறிப்பர்த்தம் தெரியாதுபோய்விடும். விபூதி அல்லது திருநீறு என்றே எனக்குத் தெரிந்திருந்த நிலையில் ஒருவர் நீறு என்று எழுதியிருந்ததை, அது அச்சுப்பிழை போலும் என்று நானாக எண்ணிக்கொண்டு நீரு என்பதாய் Water என்று மொழிபெயர்த்துவிட்டேன்!

ஒரு உலகத்தரமான இலக்கியப்படைப்பை மொழிபெயர்க்கும் உரிமையை வாங்கும் நிறுவனங்கள் அதன் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளையும் கொண்டுவர முன்வரலாம். அப்படிச் செய்தால் மொழிபெயர்ப்பு தொடர்பான தெளிவு, ஒப்புநோக்கல் வாசகருக்கு வாய்க்க வழியுண்டு.

உலகக்கவிதைகள் குறித்து உரையாற்ற நான் அழைக்கப்பட்டபோதெல்லாம் எனக்கு உலக இலக்கிய அறிவு கிடையாது என்று மறுத்தேயிருக்கிறேன். இல்லாததை இருப்பதாகச் சொல்வதும், அந்த ‘பாவ்லா’வையே சதாசர்வகாலமும் நடை உடை பாவனைகளில் தரித்துக்கொண்டிருப்பதும் மிகவும் கொடுமையான விஷயம்; அது எனக்கு அவசியமுமில்லை.

சிற்றிதழாளர் ஒருவரிடம் ஒருமுறை ‘உங்கள் பத்திரிகையில் நீங்கள் வெளியிடும் உலக இலக்கியங்களைத் தெரிவுசெய்வதில் யார் உங்களுக்கு உதவுகிறார்கள் என்று கேட்டபோது, ”எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று பழிக்கிறீர்களா” என்று கடுங்கோபத்துடன் கேட்டார். “எனக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால், உலக இலக்கியம் தெரியாதே” என்றேன். ஒரு பத்திரிகையை நல்ல முறையில் நடத்த உதவும் நண்பர்கள், சக இலக்கியவாதிகளை அடையாளங்காட்டுவதில் எதற்குத் தயக்கம் என்று இன்றளவும் எனக்கு விளங்கவில்லை.

மொழிபெயர்ப்பு ஒரு கூட்டுமுயற்சி என்று சிலர் சொல்லக் கேட்டதுண்டு. அதில் உண்மையும் இருக்கலாம். எனில், என்னளவில் மொழிபெயர்ப்பைத் தனியாகத்தான் செய்கிறேன். ஓரிரு வார்த்தைகளில் உதவிய ஒருவர் வேறொருவரிடம் ‘லதாவுக்கு நான் தான் முழுக்க முழுக்க மொழிபெயர்த்துக்கொடுத்தேன் என்று கூறியதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்!

மொழிபெயர்ப்புப் பிரதிகளுக்கு சீரிய முறையில் Editing தேவை என்று சிலர் சொல்வதிலும் உண்மை இருக்கலாம். அதேசமயம், அந்த ‘எடிட்டர்’ அதற்கான தகுதிவாய்ந்தவரா என்பதும் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படவேண்டியது. ஒருமுறை நான் மொழிபெயர்த்த பிரதியை (அந்த நூல் இன்னும் வெளிவரவில்லை) ‘எடிட்’ செய்தவர் ஒரு திருத்தமாய் ’ஓர்மை’ என்ற வார்த்தையை என் பிரதியில் இடம்பெறச் செய்திருந்தார். ஆனால், நான் அந்த சொல்லைப் பயன்படுத்தியதேயில்லை என் மொழிபெயர்ப்புகளில். அது என்னை என் மொழிபெயர்ப்பி லிருந்தே அந்நியமாக உணரச் செய்தது.

ஒவ்வொரு படைப்பையும் போதிய கால அவகாசம் எடுத்துக்கொண்டு (இரண்டு மூன்று வருடங்கள் அல்லது எட்டு பத்து வருடங்கள்) மொழிபெயர்க்கும்போது மட்டுமே மூலப்படைப்புக்கு நியாயம் செய்ய முடியும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுவதுண்டு. (நல்ல மொழிபெயர்ப்பு வரவேண்டும் என்ற அக்கறையோடும், ஒரு வித reductionist approach ஆகவும்). அத்தனை நேரமெடுத்துக்கொண்டு செய்யும் வசதிவாய்ப்புகள் எல்லா மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அமைவதில்லை. அந்த அளவு நேரமெடுத்துக்கொள்வதா லேயே ஒரு மொழிபெயர்ப்பு தரமானதாக அமைந்துவிடும் என்று உறுதியாகச் சொல்வதற்கு மில்லை. ஒவ்வொருவரின் வேலைசார் ஒழுங்குமுறையும், தேவைகளும் ஒவ்வொரு மாதிரி. சில சமயம் ஒரு வேகமும் உத்வேகமுமாய் ஒரேவீச்சில் செய்துமுடித்தால்தான் உண்டு என்ற நிலை ஏற்படும். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் ஒரு மொழிபெயர்ப்பாளரின் இருமொழிப் புலமையோடு அவருடைய தனிநபர் சார் integrityயும் சேர்ந்தே அவருடைய மொழிபெயர்ப்பின் தரத்தை உறுதிசெய்கிறது.

என்னுடைய தமிழ்மொழிபெயர்ப்புகளை மீள்பிரசுரம் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். பத்து பதினைந்து வருட இடைவெளியில் அவற்றை மீண்டும் வாசிக்கும்போது மொழிபெயர்ப்பு இன்னும் மேம்பட்டிருக்கலாமே என்று தோன்றுகிறது. அதற்காக, அவற்றின் மொழிபெயர்ப்பையோ, மொழிபெயர்ப்பு மேம்படுத்தல் பணியையோ மீண்டும் மேற்கொள்ளும் மனநிலையுமில்லை. ஆங்கிலத்தில் தமிழ்ப் படைப்புகளை மொழியாக்கம் செய்வதில் முனைப்பாக ஈடுபட விருப்பம். அதில் சூழல் சார், உரையாடல் சார் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. சமீபகாலமாக ஃபேஸ்புக் நட்பினரின் கவிதைகளை ஒரு வாசகராகத் தெரிவுசெய்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து என் முகநூல் பக்கத்தில் பதிவேற்றிவருகிறேன். நிறைவாக இருக்கிறது. இங்கும் ‘மூலப் பிரதியின் உயிரை மொழிபெயர்ப்பு கொண்டுவரவில்லை’ என்று ஒற்றை வரியில் கருத்துரைத்து (அந்த வரியையும் ஆங்கிலத்தில் தப்பும்தவறுமாக எழுதுபவர்களும் உண்டு!) மொழிபெயர்ப்பாளரை விட தம்மை பெரிதாகக் காண்பிக்கப் பிரயத்தனப்படுகிறவர்கள் உண்டுதான். ஆனால், ஒப்பீட்டளவில் அத்தகையோர் குறைவு என்று தோன்றுகிறது.

மொழிபெயர்ப்பாளர் மேல் குறைந்தபட்ச மரியாதையும், மொழிபெயர்ப்பு நன்றாக அமையவேண்டும் என்ற அக்கறையும் கொண்டு ஒரு மொழிபெயர்ப்பிலுள்ள குறைகளை அடையாளங்காட்டுபவரின் தொனி வேறு; மொழிபெயர்ப்பாளரை மட்டந்தட்டுவதே குறியாக குறைகளைச் சுட்டிக்காட்டுபவரின் தொனி வேறு. எனவே, இந்த இரண்டிற்குமான மொழிபெயர்ப்பாளரின் எதிர்வினையும் வேறாக இருப்பதே இயல்பு.

நான் மொழிபெயர்த்து புதுப்புனல் வெளியிட்ட ராஜ விளையாட்டு குறுநாவலில் சதுரங்க விளையாட்டு கதைப்போக்கோடு இரண்டறக் கலந்த அம்சமல்ல. ஆனால், A PIECE OF STEAK என்ற இக்கதையில் குத்துச்சண்டை கதையோட்டத்தோடு இரண்டறக் கலந்த அம்சம்.எனக்கு குத்துச்சண்டை பற்றி எதுவுமே தெரியாது. தொலைக்காட்சிப்பெட்டி வழியே அதைக் காணநேரும்போதெல்லாம் கண்ணைத் திருப்பிக்கொண்டு விடுவேன். ஆனாலும் இந்தக் கதையை மொழிபெயர்க்க விரும்பினேன். மொழிபெயர்த்தேன். குத்துச்சண்டை தொடர்பான என்னை நிறையவே தடுமாறவைத்தன. அவற்றையெல்லாம் தாண்டி, அல்லது, அவற்றினூடாக இந்தக் கதை நம் முன் விரிக்கும் வாழ்க்கையின் தான் அதற்குக் காரணம். குத்துச்சண்டை வீரர்களை நகமும் சதையுமான சக மனிதர்களாய் நம் கண்முன் நிறுத்தும் கதை இது.

இந்தக் கதையின் கதாநாயகன் குத்துச்சண்டைவீரன். குத்துச்சண்டைக்களத்தில் அவன் எப்படி இயங்குகிறான் என்பது இதில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவல்ல கதையின் அடிநாதம். குத்துச்சண்டை நகர்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக இந்தக் கதையைப் படிக்கவேண்டிய தேவையில்லை. அதற்கு எத்தனையோ அ-புனைவு நூல்கள் உள்ளன. எனக்கு குத்துச்சண்டை பற்றி எதுவுமே தெரியாது. ஆனாலும் இந்தக் கதையை என்னால் ரசித்துப் படிக்க முடிந்தது. இந்தக் கதை எனக்குப் பிடித்தது. எனக்குத் தெரியாத, நான் முரடனாக மட்டுமே பார்த்திருந்த குத்துச்சண்டைவீரர்களின் வாழ்வை, அதன் சோகங்களை, சிரமங்களை என்னால் இந்தப் புனைவிலக்கியத்திலிருந்து அறியமுடிந்தது. பல வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைதீஸ்வரன் இந்தக் கதையைப் பற்றி எடுத்துக்கூறி மொழிபெயர்க்கும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க இதை மொழிபெயர்த்தது எனக்கு மனநிறைவைத் தருகிறது. ஜாக் லண்டனின் பிற படைப்புகளை நான் படித்ததில்லை; குத்துச்சண்டை வீரர் யாரையேனும் சந்தித்து குத்துச்சண்டை குறித்த எல்லா விவரங்களையும் அறிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றவில்லை. அதைச் செய்ய முயலவில்லை.

‘A Piece of Steak கதை’ நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. Googleஇல் படிக்கக் கிடைக்கிறது. ஆங்கிலம் அறிந்தவர்கள் ஆங்கிலத்திலேயே படித்துக்கொள்வதே மேல். மொழிபெயர்ப்பில் குறைகாணவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஆங்கில மூலத்தை அருகில் வைத்துக்கொண்டு என் தமிழ் மொழிபெயர்ப்பை அலசியாராய முற்படும் அறிவுசாலிகளிடம் (பலநேரங்களில் இத்தகையோர் வேறு சில இலக்கியம்-மொழி சார் பெருந்தகைகளின் விசுவாசிகளாக இந்த ‘அகழ்வாராய்ச்சி’யனைய அலசல்பணியை மேற்கொள்வதும் நடக்கிறது.)

நான் வேண்டிக்கொள்வதெல்லாம் இதுதான்: இந்தக் கதையை நான் சரியாக மொழிபெயர்க்கவில்லை என்று தோன்றினால் யார் வேண்டுமானாலும் இதை இன்னும் திறம்பட மொழிபெயர்க்கலாம். இதுவரை யாரும் இந்தக் கதையி மொழிபெயர்பு உரிமையை வாங்கியதாகத் தெரியவில்லை. ஒரு பிரதிக்கு இரு மொழிபெயர்ப்புகள் இருப்பதில் தவறில்லை. அதன் மூலம் மொழிபெயர்ப்பு சார்ந்த ஒப்புநோக்கல், புதிய பார்வைகளைப் பெற வழிகிடைக்கும். அதே சமயம், ஏற்கெனவே மொழிபெயர்ப்பு பிரதி இருக்கும் மூலப்படைப்பின் இரண்டாம் மொழிபெயர்ப்பு முதல் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக்கொண்டு அதைவிட மேம்பட்டதாய் அமையும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் நாம் மறக்கலாகாது.

Stefan Zweigஇன் Amok என்ற குறுநாவலுக்கு என் தமிழ் மொழிபெயர்ப்பில் ஆட்கொள்ளப் பட்டவன் என்று தலைப்பிட்டேன். அதற்கான காரணங்களை நூலின் ‘சொல்லவேண்டிய சில’ பகுதியில் விளக்கியிருக்கிறேன். இதை தவறு என்றும் அத்துமீறல் என்றும் சொல்பவர்களிடம் என்ன சொல்வது? எதற்குச் சொல்வது என்ற ஆயாசமே மிஞ்சுகிறது.

A PIECE OF STEAK என்ற தலைப்பை ஒரேயொரு இறைச்சித்துண்டு என்று தமிழில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒரேயொரு என்பது தவறு என்று சிலர் வாதிடக்கூடும். குத்துச் சண்டைக்குப் போகுமுன் ஒரு இறைச்சித்துண்டு சாப்பிடக்கிடைத்தால் நன்றாயிருக்குமே என்று ஏங்கும் கதாநாயகனுக்கு அது கிடைக்காமல் போகும் மனவலியை அழுத்தமாக எடுத்துக்காட்ட ஒரேயொரு என்ற வார்த்தையே பொருத்தமானது என்று தோன்றியது. A PIECE OF STEAK என்பதில் மாட்டு இறைச்சியையும் குறிக்கும், வேறுவகை இறைச்சியையும் குறிக்கும்(எலும்புத்துண்டோடு இணைந்த தசை) என்று ஆங்கில அகராதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு இறைச்சித்துண்டு என்று தமிழ்ப்படுத்தினேன். ஒருவேளை குத்துச்சண்டை வீரர்கள் மாட்டிறைச்சியை சாப்பிட்டுத் தங்கள் உடல்வலுவை உறுதிப்படுத்திக்கொள்வது வழக்கமாக இருக்கலாம். எனக்குத் தெரியாது. இந்தக் கதையின் நாயகன் டாம் கிங் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன். முன்னாள் சாம்பியன் என்றால் என்னவென்று சொல்வது – அவரா, அவனா? முன்னாள் சாம்பியன்களுக்கு இப்போது என்ன வயதிருக்கும்? முப்பதுகளில் இருப்பார்களா? நாற்பதுகளில்? அல்லது ஐம்பதுகளில்? முன்னாள் சாம்பியன் என்பதால் ‘அவர்’ என்று குறிப்பிடுவது டாம் கிங்கை அதிக வயதானவராகக் காட்டிவிடுமோ? கதையின் நாயகனான அவர் மீது நாம் கொள்ளும் அன்பையும், அன்பின் வழியான உரிமையையும் மட்டுப்படுத்துவதாகிவிடுமோ? என்ற கேள்வி மொழிபெயர்ப்பை முடிக்கும் வரையில் தொடர்ந்துகொண்டேயிருந்தது.

இந்தச் சிறுகதை (பெரிய சிறுகதை!) மொழிபெயர்ப்பில் இன்னும் எத்தனையோ கேள்விகள், சந்தேகங்கள், சவால்களை எதிர்கொள்ளும்படியாயிற்று. என்னால் முடிந்தவரை – ஒரு வாசகர் நிலையில் என்னைப் பொருத்திப் பார்த்தும் –அவற்றை நேர்மையாய், நேர்த்தியாய் அணுகியிருக்கிறேன் என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.

வார்த்தைத் தேர்வுகளில்தான் ஒரு மொழிபெயர்ப்பாளரின் தனி அடையாளம் இருக்கிறது என்று தோன்றுகிறது. மொழிபெயர்ப்பை STANDARDIZE (ஒருபடித்தானதாக) ஆக்குவது அபத்தம், அசாத்தியம் என்று தோன்றுகிறது. அடுத்தடுத்து மொழிபெயர்க்க நேரும் ஒரே கவிதையின் இரண்டு மொழிபெயர்ப்புகள் ஒன்றாக இருப்பதில்லை. ஒரு சமயத்தில் ஒரு கவிதையை அல்லது சில வரிகளை ஒருவிதமாக மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும்போதே அவற்றின் வேறுவகையான மொழிபெயர்ப்புவடிவங்களும் மனதில் தோன்றியவண்ண மேயிருக்கும். மனசில்லா மனசோடு ஒரு மொழிபெயர்ப்பை மட்டும் வைத்துக்கொண்டு மனதிலோடும் மற்ற மொழிபெயர்ப்புகளைப் புறக்கணித்து முன்னேறியாகவேண்டும்.

விருதுக்கு அனுப்பலாகாது என்ற என் வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டு என் மொழிபெயர்ப்புகளை தொடர்ந்து வெளியிட்டுவரும் புதுப்புனல் பதிப்பக நிறுவனர்கள் ரவிச்சந்திரன் – சாந்திக்கு என் என்றுமான நன்றி உரித்தாகிறது.

மொழிபெயர்ப்புகளைப் படிக்க விரும்பும், முன்வரும் வாசகர்களுக்கு என் பணிவான வேண்டுகோள் இதுதான்: மூலமொழி தெரிந்தால் அதிலேயே படிப்பதே மேல். ஆங்கிலம் தெரிந்தால் ஆங்கிலத்திலேயே படிப்பதே மேல். அவ்வாறில்லாமல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு படைப்பை வாசிப்பவர்கள், மொழிபெயர்ப்பாளர்களிடம் குறைகாண்பதையே நோக்கமாகக் கொண்டு அதை அணுகவேண்டாம், அப்படி அணுகுபவர்களின் அடியொற்றி அந்தப் படைப்பை வாசிக்க முற்படாதீர்கள். இதன் மறுமுனையாக, மொழிதெரியாத வாசகர்கள் தானே என்ற அலட்சியத்தோடு மூலப்படைப்பை தன் மனம்போன போக்கில் ஒரு மொழிபெயர்ப்பாளர் கையாளக்கூடாது என்பதையும் குறிப்பிட வேண்டும். குறைந்தபட்ச நம்பிக்கையுடனாவது ஒரு மொழிபெயர்ப் பாளரை அணுகுங்கள். அதற்கு அவர் உரியவராக இருக்கவேண்டும் என்பதும் இங்கே உட்குறிப்பு.

ஒரு மொழிபெயர்ப்பாலருக்கு அவசியம் இருக்கவேண்டிய அடிப்படை integrityயோடு இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறேன். என் மொழிபெயர்ப்பு வாசகர்களுக்கு நிறைவைத் தந்தால் அதற்கு மூலப்படைப்பின் தரமும் ஆழமுமே காரணம். நிறைவான வாசிப்பனுபவத்தைத் தரவில்லையென்றால் அதற்குக் காரணம் மொழிபெயர்ப்பாளராகிய எனது போதாமையே என்று தெரிவித்துக்கொள்கிறேன். இது தன்னடக்கமல்ல என்றும் தெளிவுபடுத்திவிடுகிறேன்.

நன்றி

தோழமையுடன்

லதா ராமகிருஷ்ணன்

11.1.2018

அனாதியன் கவிதைகள் ( அறிமுகக் கவிஞர் )

images (7)

01 அதுவே இறுதியும் துயரும்……

கருந் தரை மிருதுவான காலங்களில்
அகாலத்திலிருந்து
நீண்டெழும் பலோப்பியன் குழாய்கள்
பெரிய மண்புழுக்களை
பிரசவிக்கும்

மயானத்தின் ஆறாத சுடுசாம்பலிலிருந்து
எழுதுந்துவருகிற
தீரா மோகனத்தின் நடனத்தில்
எந்த நூற்றாண்டின் ஏமாற்றம்
உருவேறும்

கத்தரிக்கப்பட்ட காட்டின்
பிரேதங்கள் உழுத்தவெளி
நரகத்தின் இரண்டாம்நிலைப்
பிரதியாய் விரிகையில்
தேகம் பொசுங்க
மண்புழுக்கள் நெளியும்

அங்கொரு காற்று இல்லை
அங்கொரு வாசம் இல்லை
அங்கொரு ஈரமில்லை
தேன்வதை மேகங்களின்
அப்பால் இருந்து எறியப்பட்ட
முகமூடி மனிதனின்
சுவாசப்பை
நிமிர்ந்திருக்கும்
எறிகணையொன்றில் விழுந்து
தொங்கும்

ஃபென்னேக்குகளின்
வாயில் ஒழுகும் மண்புழுக்களின்
இறுதி ஊனத்தில்
அகாலத்தின்
பலோப்பியன் குழாய்கள்
சூம்பிப்போகும்

அங்கொரு குமிழி வீட்டில்
கடந்தகாலக் கனவுகளோடு
உடல் சிறுத்த உருவொண்டு
கொதித்துக்கொண்டிருக்கும்
அதுவே இறுதியும்
துயரும்….

இது அமாந்தமல்ல.

நிழல் ..
காற்றின் இருகரை…
இருக்கையற்ற வெளிகள்……
எல்லாமும் கடந்து போகிற
உதிர்ந்த இலை,

எந்தவொரு பற்றுதலின்
தூய்மையை
கற்றுக்கொள்ளும்…?

பற்றுதல் என்பது
உதறுதலின் இறுதி
நொடியில் முறுக்குற அறும்

திவலைகளின் குளிர்கால
இறுக்கத்தில்
பிரசன்னமாகும் பிணைப்பின்
நீடிப்பில்
சிலகாலம் புன்னகை..
பிரியத்தை கவியவிடும்

மெலீனா..!
இது அமாந்தமல்ல
துயரமொன்றின்
இறுதித் துளிகளில்
கட்டித்திருக்கிற
துரோகக் களி
நீறுபூத்த நெருப்பில்
அமிழும் கணங்களில்
ஆயுதமாகும்

வந்தமர்தலும்..,
வாழ்தலுக்கான வசந்தங்களைத்
திருடுதலும்,
இலைக்கு அவசியமன்று
இலைக்கு
நன்மை கோர்த்தலன்றி
பிறிதறியாக் குணம்

மெலீனா…!!!!
நிழல்
காற்றின் இருகரை
இருக்கையற்ற வெளிகள்
எல்லாமும் கடந்து போகிற
உதிர்ந்த இலை

***

24X7 பிணிமனை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதை

images (9)images (9)

அவர்களே சரி. அடுத்தவரெல்லாம் துக்கிரி.
அத்திரிபாச்சா கொழுக்கட்டை – அதுவுமாகும் கொள்ளிக்கட்டை.
மட்டையை Bat என்றால் மொழித்துரோகி யென்பார்
சிகரெட்டை சிகரெட் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
‘மு’வையும் ‘பி’யையும் முடிவுசெய்துகொண்டு
‘கி’ க்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.
குறுவாட்களாய் கூர்கற்களாய் குறிப்பிட்ட சில தேதிகள்
சிலருடைய ஜேபிகளில் சேகரமாகியபடியே.
அவரவருக்கு வசதியான Cut-off-date களிலிருந்து
ஆரம்பமாகின்றன முரண்வரலாறுகள்.
ஒரு முகத்தின் இருவிழிகள் ஒரே காட்சியைத்தான் காணுமென்று
உறுதியில்லை.
சகபெண் துகிலுரியப்படும்போதும் சமயங்களில்
வேறுபக்கம் பார்த்திருத்தல்
சீரிய சகோதரித்துவமாய் சிலர்.
முகநூலில் காறித்துப்பித்துப்பியே
யுகப்புரட்சி செய்குவம் என்பார் உளர்.
‘செய்க தவம் செய்க தவம்’ –
‘சே, சீக்குப்பிடித்த ஆன்மிகவாதியா பாரதியும்….?’
முழுவதும் படிக்காமலே முடிவுக்கு வரவும்.
அரைகுறை ஞானமே அறிவார்த்தம்.
அங்கங்கே குண்டுங்குழியுமாய் வீதி.
அடித்துநொறுக்கியது போக மீதி.
ஊர் பாதி பேர் பாதி
ஆள் பாதி ஆடை பாதி
அன்புவாதி அராஜகவாதி
அவதூறே ஆன்ற சேதி.
ஆவலாதி வாந்தி பேதி
அல்பகலாய் விரியத்திறந்திருக்கும்
அவசரகால மருத்துவமனையில்
இருப்பதறியாதிருந்துவரும் பெருவியாதிகள்
வையத்துளோரெலாம் வாழ்வாங்கு வாழ இப்படி
கைபோன போக்கில் கண்டதைக் கலந்து
கலர் கலராய் மருந்துருவாக்கி
நரம்பில்லா நாக்குப்பட்டையில் உருட்டி
வண்டி(டை) வண்டி(டை)யாய் வெளித்தள்ளியபடி…..

•••

ஞா.சத்தீஸ்வரன் கவிதைகள் ( அறிமுகப் படைப்பாளி )

images (2)

1.
கரிச்சான் சத்தங்கூட அத்துப்போன
கரிசக்காட்டின் செத்த மண்ணில்
வெள்ளாமையத்து
புதர்மண்டிக்கிடக்கும் சீமைக்கருவேலை
ஒரு அசப்பில் பரட்டப் புளியமரத்தையோ
கடனுக்கு அஞ்சித் தொங்கிய
தொத்த சம்சாரியையோ நினைவூட்டியபடி இருக்கலாம்
மிச்சமிருக்கும் உசுருகளை
நியாபகம் வைத்துக்கொள்ள
இனி எதுக்கும் ஏலாது
தோட்டந் தொரவு வித்து
விலாசமத்துப் போய்
ஏதோவொரு நகரத்து வீதியில்
நாறிக் கிடக்கலாம்
நம் பிள்ளைகளின் பொழப்பு.

2.
உறக்கப் பொழுதில்
வயோதிகத்தின் வால்பிடித்து
நோயெனும் சர்ப்பத்தில் பிரயாணிக்கும்
வழிப்போக்கனாய் புலம்பி
ஓட்டைக்கூரையில் ஒழுகும் தூத்தலாய் சலசலக்கிறது
ஒன்னுமத்த வாழ்க்கை.

3.
ஒனப்பத்துப் போன நிலத்தின்
வாழ்ந்து கெட்ட ஞாபகத்தில்
முங்கிக் கிடக்கும் சம்சாரியின் வறண்ட கண்கள்
கொடும்பசியுள்ள பறவையின் அசைவுகளை வெறித்தபடி இருக்கிறது
நிகாரிழக்கும் பொழுதில் நியாபகங்கள் பறவையாகி
பறக்கத் தெம்பற்று அந்தரத்தில் மிதக்கிறது
எளவெடுத்தக் காத்துக்கு றெக்கைகளைத் தந்துவிட்டு
திராணியற்றுத் திரளும்
புறக்கணிப்பின் ரணத்தில்
நெஞ்சு வெடித்துச் சாகிறது
சாவின் விளைச்சல்.
•••

அஸ்கபானின் சிறைக்கதவுகள் திறக்கப்படுகின்றன / நஸீஹா முகைதீன் ( இலங்கை )

  நஸீஹா முகைதீன் ( இலங்கை )

நஸீஹா முகைதீன் ( இலங்கை )

பெரியப்பா நேற்று இன்னேரத்திற்கு நிகழ்ந்தது மீண்டும் பிறப்பெடுத்தலோ இல்லை உங்களின் பெயரோ,கனவுகளோ அல்லது இன்னோரன்ன சமாச்சாரங்களின் உயிர்த்தெழுதலோ தெரியாது.ஏதோ ஆச்சரியமான நிகழ்ச்சி நடக்கவிருந்தது.பின்னர் நடந்தது.பிறந்த குழந்தையை உச்சிகாயும் முன் சுடச்சுட வீட்டிற்கு அழைத்து வரும் சம்பிரதாயம் போலவும் அது இருந்தது.

நேரம் இரவு பத்து இருபத்தைந்து இருக்கும்.உங்களை மத்தியானம் வாட்டிற்கு பார்க்க வந்ததால் உம்மா எதுவும் சமைக்கவில்லை.எப்படிச் சமைப்பது.குடும்பத்தின் விலாசமே ஆஸ்பத்திரியில் இருக்கும் போது எங்களுக்குச் சாப்பாடா வேண்டிக்கிடக்கிறது.டீ ஊத்தி நாலைந்து மெலிபன் பிஸ்கட்டுகளை தொட்டுத்தின்டு கை கழுவி விட்டு கட்டிலில் ஏறிக் குந்தினேன்.உம்மா மச்சியிடம் கொடுத்து ஆக்கியதில் மிஞ்சிக்கிடந்த சோற்றை பிசைந்து கொண்டிருந்தாள்.அவளுக்கு இந்த வாரம் முழுவதும் உடல் முடியாமல் போகிறது.மச்சினன் பாசம்.போதாக்குறைக்கு ஓடியாடி மாட்டுக்கன்று போல வேலை செய்கிறாள்.சமைப்பது,ஏனம் கழுவுவது பின்னே அவற்றை அடுக்குவது.நாங்கள் கலைத்துப்போட்டு விடுவோம்.எங்களுக்கு அத்தனை இலகு.அவள் பம்பரமாகச் சுழலுவாள்.மீண்டும் கழுவி அடுக்குவாள்.இஞ்சி,உள்ளி தட்டுவது மட்டும் அவளுக்குச் சிரமம்.இருந்தாலும் செய்வாள்.ஈரமான தரைக்கு சாக்கை விரித்து நிமிர்கையில் அடுத்த சாப்பாட்டு நேரம் வந்துவிடும்.

வாப்பாவின் டெலிபோன் அலறியது.நாங்கள் தயாராகி விட்டோம்.வைத்தியசாலையில் யாரையாவது வைத்து விட்டால் இரவுத்தொலைபேசி அழைப்புகளுக்கு மரியாதையும் கூடிவிடுகின்றது.நெஞ்செரிவும்,ஆர்வமும் ஒன்றையொன்று வீழ்த்தத் துடிக்கின்றன.அலைபோல நம்பிக்கை எழுவதும்,பின்னர் காணமல் போவதும்.கடைசியில் கதை முடிந்தது. வாப்பா “இன்னாலில்லாஹ்”என்றார்.

“என்ன மச்சான்”

சோத்துப் பீங்கானை தூக்கி வைத்தபடி சாவை உறுதிப்படுத்திக் கொண்டாள் உம்மா.பெரியவன் என்னயாம்,என்னயாம் என்கிறார்.அவன் திணறிப்போய்விட்டான்.காட்டிக்கொள்ளவில்லை.

“பெரியப்பா மௌத்தாகிட்டாங்களாம்”

தடுமாறிச் சொல்லி முடித்தேன்.

நீங்கள் அவசரக்காரர் போங்கள்.இனியென்ன இருக்கிறது.கண்ணீர் தாரைதாரையாக வழிகிறது.உம்மா தட்டத்தை வைத்து விட்டு முக்கியமானவர்களுக்குச் செய்தி சொல்ல ஓடுகிறாள்.கால்வலி என்று அலட்டும் ஒருத்தியை அங்கே காணமுடியாது.சிறு குமரியாக

,வாப்பாவைக் கலியாணம் முடித்தபோது நீங்கள் கண்ட சின்னப்பெண்ணாக ஓடுகிறாள்.

குழாயை அடித்து முகத்துக் கறைகளைக் கழுவிக்கொண்டேன்.வானத்தில் குளிர்ச்சி பொழிந்தாற் போல இருக்கிறது.

வீதியெல்லாம் பஞ்சையான இருட்டு.நானும்,உம்மாவும், சின்னத்தம்பியும் நடையை விட வாப்பா மோட்டார் சைக்கிள்,மூத்தவன் சைக்கிள்.உங்கள் வீட்டிற்கு வந்தோம். ஏற்கனவே உங்கள் மாமிமார்,மருமகள்,மச்சிமார்,முன் வீடு,பக்கத்து வீடு,அல்லசல்,நண்பர்கள் என வீடு நிறைந்திருந்தது.நான் சொன்னேனே.இது குழந்தையை வரவேற்கும் நிகழ்வு.நீங்கள் பிறந்தபோது சுற்றியிருந்த உங்கள் மாமி இருக்கிறார்.ராத்தாவும்,உம்மாவும் தூரத்திருந்து வர இருக்கிறார்கள்.உங்கள் மாமா கூட உயிர்போகும் போது கைகளைப் பிடித்தபடி பக்கத்தில்.பின்னே இதை நான் வேறென்ன சொல்வது.

ஒரு மணிக்கெல்லாம் உங்களைக் கொண்டு வந்துவிடுவார்களாம். காத்திருக்கிறோம்.உடல் எனும் கருவியின் மிக அற்புதமான தரிசனத்திற்காக பாயிலும்,நுழைவாயிலில் போடப்பட்ட கதிரைகளிலும்,உங்கள் அரிசிக்கடைப் படிக்கட்டிலுமாக இருக்கிறோம்.பெரியம்மா அழுது அழுது வெளிறிப் போய்விட்டாள்.இருக்காதா? எத்தனை பெரிய பரிசு நீங்கள்.அவள் குடும்பத்திற்கும்.இல்லாவிட்டால் மைனிமார்கள் அங்கேயும் இங்கேயும் உட்கார்ந்து கண்ணீர் சிந்துவார்களா…

பனி தொண்டையை அடைத்தது.எங்கிருந்து வந்ததோ வின் வின்னென்று தலையைப் புரட்டும் இந்தத் தலைவலி.ஞாபகம் வந்து விட்டது.பகல் பார்க்க வந்த போது உங்கள் நிலைமையைக் கண்டதும் ஆரம்பித்தது.ஊசியைப் போடும் போது பதறிக் கையைத் தூக்கினீர்கள்.தலை வியர்த்து வடிந்தது.அப்படியே மூத்தப்பாவின் சாயல்.சின்ன வயதில் தூங்கும் போது நீங்கள் பயத்தினால் வாப்பாவெனக் கூப்பாடு போடுகையில் “என்னடா மன, நான் இன்னாதானே படுக்கன்”எனக்கூறும் மூத்தப்பாவேதான்.யார் கண்டார்கள் மூத்தப்பா இருந்திருந்தால் உடம்பு தேறியிருக்கும்.

பதின்ம வயதின் ஆரம்பத்திலேயே உழைக்கத் தொடங்கி விட்டீர்களாமே.இறப்பு வரை மாய்ச்சல் படவில்லை இந்தக் கைகள்.வாப்பா கூட சொன்னாரே.எப்போதும் யாவாரத்தில் கவனமாயிருப்பீர்களென்று.வாப்பாவை ஒருநாள் முட்டை விற்க மட்டக்களப்புக்குப் போகும்போது கூட்டிச் சென்று கஞ்சி வாங்கிக் குடுத்தீர்களாமே.வாப்பா சொல்லும் போது ருசி ஏறுகிறது.எனக்குக்கூட அதே பித்து.படிப்பெல்லாம் சும்மா.வியாபாரமே மூச்சில் நிரம்பிக் கிடக்கிறது.நீங்களும் வாப்பாவும் ஒரே ரத்தம்.மறுகா எனக்கில்லாமல் போகுமா.நான் வாப்பாவின் பிள்ளை மட்டுமில்லையே.அதேயளவு மரியாதை வைத்திருக்கும் பெரியப்பாவின் பிள்ளையுமே.ஆஸ்பத்திரியில் அழத் தொடங்கியதும் பக்கத்திலிருந்து கிழவி மனிசி உன்ட வாப்பாவா மன என்று கேட்டேளே..

வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.எப்படியாச்சும் இன்டைக்கு உங்களைப் பார்த்திடனும்.நல்லநேரமாக வாய்ப்பும் கிடைத்தது.கடைசியாக தம்பியின் கல்யாணத்தில் கண்டது.மருதோண்டிக் கல்யாணத்தன்றும் உற்சாகமாய்த்தானே இருந்தீங்க.அதற்குள் எங்ஙனம் சட்டென்று முன்னும் பின்னுமில்லாத உடல் தளர்ச்சி ஒட்டிக்கொண்டு விட்டதோ தெரியவில்லை.பெண் வீட்டிலிருந்து திரும்பி வந்து உங்கள் வீட்டு விறாந்தையில் உம்மா,பெரியம்மா,நான் மற்றும் நெருங்கிய உறவுகள் அன்றைய நாளின் சாராம்சத்தை பேசிக்கொண்டிருந்த போது தம்பி வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உருளைக்கிழங்கு சிப் டின்னை கையில் திணிச்சீங்க.மூக்கில் ஏறிய இரண்டு சொட்டுக் கண்ணீரைத் தடுமலை உறிஞ்சுவது போல உறிஞ்சிக் கொண்டேன்.ஒன்டு தெரியிமா? உறவுகளுக்குள் உங்களின் மீதான என் அக்கறை நேற்று முளைத்ததில்லை.அது ரொம்ப காலத்திற்கு முந்தியது.நீங்களும் வாப்பாவும் ஒரே குடலில் கிடந்தவர்கள் தானே.அப்படியெண்டா ரெண்டு பேரும் எனக்கு ஒரே மாதிரித்தான்.ஓம்! ஒரே மாதிரித்தான்.

இத்தனை கொட்டித் தீர்க்கிறாளே என்று மனதில் ஒன்றும் நினைக்காதீர்கள். நான் பைத்தியக்காரி.என்னை வெளியில் அப்படித்தான் பேசிக் கொள்கிறார்.போகட்டும்.உங்களை அடிக்கடி வந்து பார்க்கவில்லை என்று நினைக்கிறீர்களா,இப்ப மட்டும் இரக்கம் பொத்துக்கொண்டு வந்து விட்டதோ என்று நினைக்கிறீர்களா.என்னமோ தெரியாது.எல்லாத்தையும் போட்டு அடக்கி அடக்கி எதை,எந்நேரம் வெளிக்காட்ட வேண்டுமென்ற இங்கிதம் தெரியாமல் போய்விட்டது.

“நீ ஊட்டுகுள்ளேயே கிடந்து சாகு” என்று நிறையப்பேர் கைது கழுவியாச்சு.ஆனாலும் தம்பி கல்யாணத்திற்கு வெட்டக்கிரங்கினது உங்களுக்காக.

மூத்தவனுக்கு நல்ல அதிஷ்டம்.வாட்டில் உங்களை நானாவும்,அவனுமாக கவனித்துக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.எனக்கெல்லாம் அத்தனை அவசரமாக சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.நாளையும் உங்களைப் பார்த்துக்கொள்ள போவதாக கூறினான்.நெஞ்செல்லாம் பூரிப்பாய் இருந்தது.

“பக்கத்துல நிண்டு கண்ணக்கசக்க வாணாம்னு சொல்லு.மௌத்தாக்கிடுவாங்க போலருக்கு.அந்த மனிசன்ட உசிர ஞாயன் கொள்ள நாளைக்குப் போட்டுட்டான்டா.டொக்டர் மாரும் ட்ரை பண்றாங்கானே.பெரியப்பாக்கு சுத்தி நடக்கிறதெல்லாம் கேக்குது.அவருக்கு விளங்குது”

நான் நியாயம் கூறிக்கொண்டிருந்தேன்.மறுகா என்ன! அங்கே அழுது வடியும் பாதிப்பேருக்கு உங்களை விட பத்துப்பதினைந்து வருடங்கள் அதிகமாயிருக்கும். உங்களுக்கு கிடந்து கழியிறதுக்கு என்ன.நீங்கள் அவ்வளவு சீக்கிரம் போக மாட்டீர்கள்.அடிக்கடி சீனி வருத்தம் வாட்டினாலும் நீங்கள் நீண்டகாலம் இருப்பீர்கள்.வருத்தம் வரும்,போகும்.அதையெல்லாம் பெரிசுபடுத்தக்கூடாது.

ஆஸ்பத்திரியிலிருந்து வெளியானதும் தம்பி பொண்டாட்டியையும்,உம்மாவையும் விட்டு விட்டு நடந்து வந்து விட்டேன்.மனசு அவ்வளவு நேர்த்தியாக இல்லை.முறிந்து கிடந்தது.அவர்கள் வரும்வரை வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தில் நின்றேன்.பெரிய யேசுவின் சிலை அங்கிருந்தது.அந்த இடத்தில் பரவிய அமைதியில் எனக்குத் தெம்பு வந்தது.எல்லா ஆலயங்களும் அமைதி தருபவை தானே.மௌனத்தை விட இன்பமான பிடிமானம் அங்கெல்லாம் இருக்கிறது.வீட்டுக்கு வந்து தொழுது முடித்துக் கையேந்தியபோது நீங்கள் திரும்பி வருவீர்கள் என்ற தைரியம் இருந்தது.பெரியப்பாவிற்கு பிரார்த்தனை செய்வது கூட மிதப்புத்தான்…

பன்னிரண்டு அரையிலிருந்து ஒன்றுக்குள் மையத்தைக் கொண்டு வந்தாயிற்று.மையத்தென்றா சொல்கிறேன்.பெரிய தவறு.பெரியப்பா வந்துட்டார்.நேரத்தை பார்க்கும் நிதானமில்லை.நீங்கள் வந்தால் ஒன்றாகி விட்டது.வெக்கை,கண்ணீரின் உப்புக்கரித்த கன்னம்,பசியின் கொடுமையுடன் தங்களை தரிசிக்க எட்டிப்பார்த்தோம்.இத்தனை பகுத்திரமாக அதுவும் பத்துப்பன்னிரண்டு பேர்.மகன்,தம்பி,மருமகன்,மச்சான், மச்சினன் என புடைசூழ இரும்புக்கட்டிலில் வைத்து தூக்கி வந்தார்கள்.ஆபத்தில் இருந்து மயிரிழையில் தப்பித்த ஆட்டுக்குட்டி ஈன்ற குட்டி போல பெறுமதியான உடலை இமைகொட்டாமல் பார்த்தோம்.இந்த யுகாந்திரங்கள் முடிந்தாலும் தீராத பார்வையது.எத்தனை பேருக்குச் சொந்த மாமாவின் அருகில் மரணிக்கக் கிடைக்கும்.எத்தனை பேருக்கு மகத்தான படை சூழ் மரணம் கிட்டும்.யுத்தத்தில் புதருக்குள் சுடப்பட்டு

மரணித்த ஆன்மாக்களும் உண்டு.இன்னாரென கண்டுபிடிக்க முடியாதபடி ஆயிரக்கணக்கில் மரணித்துச் சதை தெறித்த ஆன்மாக்களும் உண்டு.பிரியாவிடை சொல்லி,அதற்கு நேரமில்லாமலும்.இனத்தின் பெயரில் கொதிக்கும் தார்ப்பீப்பாயில் எறியப்பட்டு மரணித்தவர்களும் உண்டு.எல்லாமே இறப்பாகவே இருக்கையில் உங்களுக்கு மிகப்பெரும் செஞ்சழிப்பான இறப்பு.

இனி ஆரவாரத்துடன் உடலைக் கழுவும் நிகழ்வு நடைபெறுகிறது.வெள்ளைத்துணிகள் கேட்டு ஒரு கூட்டம்.புதுச் சவுக்காரமென்று ஒரு கூட்டம்,சொப்பின் பேக் கேட்டு ஒரு கூட்டம்.குரலெழுப்புவதும்,ஓய்வதுமாக. மகாராசா வந்தால் கூட இம் மனப்பூர்வமான வரவேற்பு கிடைக்குமோ என்னமோ.பெரியப்பா மகாராசாவை விட பெரிசு.

இந்த சிவப்புத்துணி தேடத்தான் பத்து நிமிசம் கரைந்து விட்டது.சிவப்புப் பாவடை அல்லது முந்தானை என அலுமாரியைப் போட்டுப் புரட்டி விட்டார்கள்.இனி நிறைய நிறைய சிவப்பு வாங்கிக்கனும்.அலுமாரியை நிறைத்தாலும் பரவாயில்லை.உங்களை காக்க வைக்கலாமா.குடும்பத்தின் பெரியவர்கள் எல்லோரும் இளசுகளை நன்றாக ஏசிக் கொண்டார்கள்.நீங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வர முந்தியல்லவா தயார்படுத்தியிருக்க வேண்டும்.

பெரியம்மாவை இத்தாவில் வைக்க வேலை நடந்தது.அவளுக்குப் பிரசர் குறைஞ்சி பெய்தென்டு பிரைவட் ஹொஸ்பிடல் போன இடத்தில் செய்தி கேள்வி பட்டிருக்கிறாள்.ஹாட் வேறு சுகமில்லையே.அந்த அடைத்த அறைக்குள் இப்போது கொண்டு போக வேண்டாம்.ஆண்கள் யாருமே இல்லை.கொஞ்சம் பொறுங்கள்.அடைத்த அறையில் இருப்பதே இத்தா என்றில்லையே என தம்பி பொண்டாட்டியைக் கடிந்து விட்டேன்.ஆனால் பெரியம்மாவாக எழுந்து நகைகளைக் கழற்றி அறைக்குள் போகப்போகிறேன் என்றதும் வாயைப் பொத்திக் கொண்டேன்.அது சரியல்லவா.பெரியப்பாவிற்குச் செய்யும் மரியாதை.அவளாகப் போகிறது தானே சுதந்திரம் கேட்டீங்களா…

எனக்குத் திரும்பவும் தலையை ஆட்டிக் கொண்டிருந்தது வலி.பிறந்ததிற்கு அனுபவித்தில்லாத ஏகவலி.ஒருவேளை கண்ணீரையும், மூக்கையும் சீறிச்சீறி மூளை வந்து விட்டதோ என்றிருந்தது.எப்படி ஜீரணிக்க முடியும்.குடும்பத்திற்கே அடையாளம்.வாப்பா என்ன செய்கிறார் என்றால் பெரியப்பாட றைஸ் மில்லில் கணக்கெழுதுகிறார் என்று சொல்லுவேன்.உங்கள் பேரைச் சொன்னாலே பாதிப்பேருக்கு புரிந்து போகும்.அப்போது தலையில் ஏறிக் கொள்ளும் மிடுக்கிற்கு அளவேயிருக்காது.இப்போதும் ஏறித்தானே கிடக்கிறது.நிரம்ப மனிதர்களைச் சம்பாதித்து வைத்திருக்கிறீர்களே.எங்கள் காலத்தில் மற்றவர்களை நினைக்கவோ கடைசி அஞ்சலி செலுத்துவோ எங்களுக்கெல்லாம் நேரம் இடங்கொடுக்குதோ தெரியாது. குடும்பமெல்லாம் இப்போது தனித்தனி பெரியப்பா.குடும்பத்திற்குள்ளும் தனித்தனி.முன்பெல்லாம் குடும்பமொன்றிருந்தது.இன்று அதற்குள்ளேயே பேசக்கூட நேரமில்லை.ஒன்றாகச் சாப்பிட,நாடகத்தை விறைத்தபடி பார்த்து கண்ணீர்விட எதற்காகவுமே.

மிகச்சுத்தமாக நீரில் நனைத்து துணிகளால் ஈரத்தையும் ஒத்தி எடுத்தாயிற்று.பயபத்திரமாக செய்தார்கள்.கூட்டத்திற்கே மகத்துமான பக்தி.மனிதர்களுக்குள் ஒளிந்து போயிருக்கும் அன்பெனும் பக்தி.எதிர்பாராத கோணங்களில் படைக்கப்படும் இதற்கு உடலோடு,மனமோ,பணமோ,நிறமோ தேவைப்படாது.மரணித்த உடல்களுக்கேயென்றது ஊற்றெடுக்கிறது.பிரத்தியேகமானது.

அதற்குள் மண்டகத்தில் இருந்த பொருட்களையெல்லாம் வெளியேற்றி படு சுத்தமாக நிலத்தைத் துடைத்துக் கூட்டி விட்டோம்.மின் விளக்குகள் மிளிர்கின்றன.குழந்தைகளின் சப்தங்களில் சங்கேதங்கள் உண்டாகின்றன.வெள்ளைத் துணி உடுத்தி தூக்கி வந்து பெரியப்பாவின் கட்டிலை போட்டாயிற்று.மேற்குப் பக்கமாக காலைக்காட்டி வைப்பது முறை.வைத்தாயிற்று.

முன் கட்டம் முடிந்து விட்டது.யாவருக்கும் திருப்தி.சிரட்டைகளில் நெருப்பேற்றி தணலில் சாம்பிராணி போட ஆயத்தமானார்கள்.கூடவே தரமான இள ரோசாக்களின் வாசத்தைத் தரும் மணக்குச்சிகள்.ராத்தாவின் வீட்டில் வந்தவர்களுக்கு தேயிலை ஊற்ற ஆயத்தமானார்கள்.உங்களருகேயிருந்து அழகான ராகத்தில் குர்ஆனை வாசிக்கத் தொடங்கினார்கள்.நெஞ்செல்லாம் கரைந்த நொடிகள்.மற்றப் பக்கத்தில் பெண்களெல்லாம் கண்ணீரில் உங்களை பாசம் பாராட்ட,உங்கள் மாமா உங்களோடேயே கிடக்கும் மாமா சொற்களால் பாசாம் பாராட்டுகிறார்.ஒன்பதே காலுக்கெல்லாம் சீவன் விடை பெற்றது என்று சொல்லும் போது எங்களுக்கெல்லாம் எப்படி இருக்கிறது தெரியுமா…

சுற்றி வளைத்து ஆ வென்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்.பிரசர் கூடியிருந்தால் தங்களைக் காப்பாத்தியிருக்கலாம் எனும் போது எங்களைச் துக்கப்படுத்தனுமென்டே இதை சொல்றீங்க மாமா என அவரைக் கடிந்து கொள்ளத் தோன்றுகிறது.நாங்கள் காலையிலிருந்து வாட்டை மறித்துக்கொண்டு அதை ஏறவிடாமல் பார்த்துக் கொண்டோமே.இனி வாட்டில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்களைப் பார்க்க குடும்பத்து வயசாளிகளை அனுதிக்க விடக்கூடாது போல தெரிகிறது.

இருப்பினும் குடும்பமே ஒரு வரப்பிரசாதம்.ஒவ்வருத்தராக தலையைத்தடவி குனிந்து ஓலமிடும் போது நாடகமாகத் தோன்றவில்லையே.சின்னக்குழந்தையில் உங்களைச் சீராட்டியவர்கள் அந்த வயசாளிகள்.அவர்களோடு ஒருங்கிணைவதும் சுகமாக இருக்கிறது.பாசத்தின் அடர்த்தி குறைவதில்லையே.அது மாறி மாறிப் பயணிக்கிறது.உம்மா ஏசினால் வாப்பா மீது.வாப்பா முறைத்தால் உம்மா மீது.மூத்தவன் முணங்கிக் கொண்டால் இளையவன் மீது.மாமி அவசரத்துக்கு இல்லையெனில் சாச்சி மீது,மச்சி மீது,மச்சான் மீது.பிறகு மறுபடியும் வாப்பாவில்,உம்மாவின்..மூத்தவனின் தலையசைப்பில் மாமியின் சொட்டுக் கவலையில்,அதைக் களைவதில்.இப்படி நீண்டுகொண்டேயிருந்தது.

நேரம் ஒன்று நாற்பத்தைந்து.வீதியெல்லாம் இருண்மையில் ஓய்ந்து கிடந்தாலும் உங்கள் வீட்டில் ஒளி வெள்ளம் பரவியிருந்தது.பெரிதாக வெளிச்சம் தரும் லைட்டுகள் இல்லையென்றாலும் சுற்றிக் கிடந்த கருமையில் வீடு இலங்கத் தொடங்கியது.இரவுக்காட்டில் ஒரு பகல்.எனக்குக் கொஞ்சம் தூங்க வேண்டும் பெரியப்பா.காலையில் முகமும் உடலும் தெம்பாயிருக்க வேண்டும்.

உம்மாவும்,நானும்,சின்னவனும் வந்து விட்டோம்.வழியில் எனக்கு வாப்படம்மா சொன்னதெல்லாம் நினைவு வருகிறது.

“அவரு இளம் வயசிலயே போய் உழைக்கத் தொடங்கிட்டாரு.வாப்பாட கஷ்டத்த ஏத்துகிட்டாரு மன”

கிட்டத்தட்ட ஆறேழு வருசங்களுக்கு முன் சொன்னதெல்லாம் இந்த நாளுக்காகவா பெரியப்பா.எப்படியான தொடர்புகள்.திக்குத்திசை தெரியவில்லை.வலுவிழந்த கால்களால் கெந்திக் கெந்தி நடந்து வந்து சேர்ந்தோம் .கைலேஞ்சியைப் பிழிந்து காயப்போட்டேன்.எனக்கொன்றும்,உம்மாவுக்கொன்றுமாக இரண்டு பாயைப் போட்டேன்.உம்மா ஒடுங்கிப் போய்விட்டாள்.நானென்ன?வெளியிலே என்னைத் தைரியசாலி என்கிறார்கள்.அடங்காப்பிடாரி என்கிறார்கள்.ஆனால் நீங்களென்ற பிறகு எனக்கெல்லாமே முடிந்து போன கதை…

இருக்கிற சொந்தங்களெல்லாம் கொண்டாட்டம்,நல்லநாளுக்கு என்று ஒதுக்கினால் எல்லா நாட்களுக்குமான சொந்தம் நீங்கள்.மூத்த மகன் என வாப்பாடம்மா வாய் நிறைத்துச் சொல்லுவார்களே.எத்தனை காலமாக கண் தெரியாத மூத்தப்பாவையும்,முதிர்ந்துபோன வாப்படம்மாவையும் கவனமாக பார்த்துக் கொண்டீர்கள்.அடுத்த சந்ததிகளான எங்களுக்குப் பெரிய வழிகாட்டல்.

தூங்க வந்தேனே தவிர விழிகளை மூடிக்கொள்ள மிகச்சிரமமாக இருந்தது.ஆ ஊ என்று இரவெல்லாம் அணத்த வேண்டும் போல உடல் வலித்தது.

தூக்கத்திற்கும்,விழிப்பிற்குமிடையே உருண்டு புரள்வது கொடூரமானது.ஐந்து நிமிடம் கண்ணயர்வதும்,ஏதோ சிக்கிக்கொண்டது போல திணறி விழிப்பதுமான ஒழுங்கில் இரவைக் கடந்தேன்.

பருவமறிந்து குடும்பத்தில் நான்கைந்து மையத்துகளைப் பார்த்தாலும் நீங்கள் மட்டும் உச்சாணிக் கொம்பில் இருக்கிறீர்களே.சீனி வருத்தம்னா சும்மாவா பெய்த்து.நா வறண்டு போகும்.அடிக்கடி தலையை சுத்திக் கொண்டு வரும்.நல்ல நாளில் கூட ஒன்னும் மனசு நிறஞ்சி சாப்புடேலாது.சரிதான் என்றாகிலும் சீனி வருத்தக்காரன் சாதனை செஞ்சான்னு பேப்பர்ல வரும் போது நீங்க மட்டும் ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்ளனும்னு இருந்திச்சு.சோறு சிந்துற இடத்துல தானே காக்கா பறக்கும் னு சொல்றதப்போல சுத்திக் கூட்டாளிமாரு.டின் பால் டீ,மீன் பாலாண்டி,கஞ்சி,அலிவா,வட்டிலப்பம்னு எதுல குறை.நிறஞ்ச செல்வமுன்னு சொல்றப்போல வாழ்க்கை.அஞ்சாறு வருசத்துக்கு முந்தியொரு சனிக்கிழமை கடற்கரைக்குப் போறதுக்குன்னு மீன் பாலாண்டி போட்டெடுக்க காத்து,மழை னு வந்துட்டு.உடனே நாலு துண்ட வீட்டுக்கு அனுப்பினீங்க.இன்னும் தொண்டக்குழியத் தாண்டல.என்ன நாக்கு உங்களுக்கு.நீங்கள் எட்டடி என்றால் அது பதினெட்டடி.

நுளம்பு வேறு உடலை பிய்த்து எடுக்க இரண்டு சித்திரனெல்லா நுளம்பு விரட்டி மணக்குச்சிகளைக் கொழுத்தினேன்.உங்கள் வீட்டு வாசம்.அங்கிருந்து தானே தொடக்கம்.மூத்தப்பாவிலிருந்து இப்போது நீங்கள்,பிறகு நாங்கள்,எங்கள் பரம்பரை..ஏன் பூனை கடித்த முன்வீட்டுக் கோழி வரை.அங்கேதானே எங்கள் செல்வம் இருக்கிறது.தாய் நிலமும் அங்கு பரவிக்கிடக்கும் அரிசி வாசமும் தானே சோறு போட்டது.

வீடெங்கிலும் அரிசி வாசமும்,உமிப் படலமும் நுகர நெரும்போதெல்லாம் தலைப் புரட்டிப்போடும்.பெரிய தொட்டிகளில் நெல் அவிக்கும் போது கூட பெரியப்பாவின் வாசனை.களத்தில் பரவியிருக்கும் நெல் சாப்பிட வரும் புறாவில் வரும் வாசம்.அது அரிசி வாசத்தை விட கொஞ்சம் மேலானது.பச்சரிசி,உடைஞ்சரிசி,பாதியரிசி,வெள்ளைக்குருனல்.ஒவ்வொன்றும் தனித்தனி வாசம்.சிவப்பரிசிச் சோறு இதை விட ஒருபடி அதிகம். எல்லாம் பெரியப்பாவின் வாசம்.

ஐந்து,ஐந்தரைக்கெல்லாம் அடிச்சிப்பிடிச்சு எழும்பி உம்மா தேயிலை வைத்தாள்.சிறுங்குடலை கொன்று தின்றது பெருங்குடல்.இரண்டு வாய்த் தேயிலையில் தொண்டையை நனைத்து விட்டு திரும்பவும் நானும்,உம்மாவும்,சின்னவனும் நடையைக் கட்டினோம்.பழைய சீலையில் பெரிதாக கிழித்த நீலக்கலர் துண்டை கைக்குள் திணித்துக் கொண்டேன்.பெரிய துண்டெடுத்தது உபகாரம் என பின்னர் பெருமூச்சு விட்டேனில்லையா…

பள்ளிவாசலில் அறிவித்தார்கள்.வீதியில் இரண்டு பேர் நின்று அரிசிக்கடை ஜமால் மௌத்தாகிட்டாராமே என்கிறார்கள்.அதற்கு வெகுளித்தனமான தோற்றமுடைய மற்ற மனிதர் கிட்டத்தட்ட ஆறு முறை உங்கள் பெயரை அழுத்தக்கேட்டபடி நின்றார்.அவரு தான் என்று சப்தமாகச் சொல்லத்தோன்றிற்று.எங்கே ஜீவனிருக்கிறது.நேற்றோடு சகலதும் அடங்கி நாரங்களில் எல்லாம் புதைந்து அழுகியதே. அந்த ஆறுதடவை மனிதர்கூட அதையே சொன்னார்.

“போன கிழமை பாத்தனே நல்லாருந்தாரே”…

ஓம்.நல்லா இருந்தார்.நல்லா இருந்திருக்கனும்.தன்னுடைய வருத்தமெல்லாம் சுகப்படுமென பச்சை இலை கணக்காக.பிழைப்பவன் சாகக்கிடப்பான்.சாகக்கிடந்தவன் பிழைப்பவனாக காட்டிக்கொள்வான் என்பார்கள்.இருந்தும் ஆஸ்பத்திரி பார்வைக்குப்பிறகு எந்த சந்தேகமும் இல்லை.உறுதியான முடிவாயிற்று.

உங்கள் வீடு திரும்பும் சந்தியில் வைத்து இன்னொரு பெண்ணும் இணைந்து கொண்டார்.முன் வீட்டு வாசல் ஆண்களால் நிரம்பிக் கிடந்தது.ராத்தாவின் வீட்டுக் கதவால் நுழைந்தோம்.கண்ணீர் வருகிறதே.ராத்தா வீட்டுக்குசினிக்குள் அழுகையும்,கலைந்த தலையுமாக வந்தவர்களுக்கு காலைத் தேநீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.தம்பிமார், மச்சான்மார்,நானாமாரெல்லாம் பாவம். விடிய விடிய கண் விழித்துக் கிடக்கின்றனர்.கடுந்தேயிலைக் குடித்து சூட்டை உடலுக்கு குடுத்தால் நன்றாகவே மற்றக் காரியங்களைச் செய்து முடிக்கலாம்.

பெண்கள் ஒரு பக்கமும் ஆண்கள் ஒரு பக்கமுமாக உங்களைப் பார்க்க முந்தியடிக்கின்றனர்.வாப்பா வாப்படம்மாவை எங்க கொண்டு வருவது என்றிருக்கிறார். சொந்தங்களுக்குள் என்ன சிரமம். மனிசிக்கு கண் விளப்பமில்லை.யாரையும் கண்டால் மதிக்கமாட்டார்.பெற்ற குழந்தைகள், பேரக்குழத்தைகள் என நாங்கள் அவருக்கு வேற்று மனிசர்கள் ஆனோம்.இப்பயும் கூட இறந்தது அவர் மகன் என முதுமைக்கு விளங்கப்போவதில்லை.முதுமை தன்பாட்டிற்கு இயங்கிக்கொண்டிருக்கும்.இருந்தாலும் யாரோ என்றாவது வாப்பம்மா ரெண்டு சொட்டுக் கண்ணீர் விடட்டுமே.சினிமாக்களிலில்லாத மிகச் சோகமான இக்காட்சி நூற்றாண்டிற்கே நிகழ்கிறது.இரண்டு வாரம் கழித்து போனபோதும் நீங்கள் அவரைப் பார்க்க வரவில்லை என்கிறார்.எங்களுக்கெல்லாம் வெடவெடத்துப் போகிறது.காத்திருக்கட்டுமே..

வீட்டிற்கு உள்ளே போனதும் குசினிக்குள் அடைபட்டுக்கொண்டேனே.மூச்சு விடக்கூட இடமில்லாத நெரிசல்.வியர்வை உச்சியிலிருந்து பாதங்களைக் கழுவிச் சென்றது.பக்கத்தில் நின்றவளின் செல்போன் வேறு சத்தமாக அலறத் தொடங்கியது.மனசுக்குள்ளே திட்டினாலும் வெளியில் சொல்லத் திரணியுமில்லை.சிந்தை தெளிவுமில்லை.அவளுக்கு முகத்திற்கு தெரிந்தவர் என்றால் எனக்கு பெரியப்பா வா.என் பெரியப்பாவிற்கில்லாவிட்டாலும் ஏதோ ஆறப்போகும் ஜீவனுக்கென்றாவது துளி மரியாதை இல்லையா..கிடக்கட்டும்.

எப்படியோ முட்டித்தள்ளிக்கொண்டாவது கடைசியாக தள்ளி நின்றாவது கண்டு விட வேண்டும்.நெஞ்சு துடிக்கிறது.கண்ணெல்லாம் நனைந்து மூக்குத்துடைத்த துண்டாலேயே கண்ணையும் துடைக்க வேண்டியதானது.வேறு வழியில்லை.வாழ்க்கையே அட்ஜெஸ்மண்டாயிருக்கும் போது இவை எம்மாத்திரம். இன்னுமே பதினைந்து நிமசத்திலிருந்து பெரியப்பா இல்லாமல் அட்ஜெஸ்ட் செய்யப்போகிறோம்.மறப்பதும்,பண்பு மறைவதும் வரும்,போகும்.பெரியப்பா போவதற்கு இரண்டு மாதம் முந்தி குடும்பத்தில் ஆண்வாரிசு.ஒன்று போகும்,ஒன்று வரும்.அதுவல்லவா பிரபஞ்சத்தின் விதி.

ஆண்கள் பார்த்து முடிய பெண்கள் குமிகிறார்கள்.இறுதி மரியாதை என்பது சதவீதப் பொறுத்தம்.கை கட்டிக்கொண்டு பதிபக்குவமாக,பகுத்திரமாக முகத்தை தரிசித்து வழியனுப்புகிறார்கள்.எனக்கு அருகே போக வேண்டாம்.கொஞ்சம் பயம்.உண்மையில் நீங்கள் மரணத்தீர்களா என்றே எனக்கு தெளிவாகவில்லை.

நீங்கள் வாங்கித்தந்த பூப்போட்ட சட்டை ஞாபகமிருக்கிறது.பெருநாளன்று சட்டையைப் போட்டுக்கொண்டு ஒழுங்கையை வலம் வந்ததும்,எங்கள் செட்டுகளுக்குள் பெருமையடித்ததும்,கையால் இரண்டு பக்கமும் பிடித்து விரித்தபடி…..

சின்னத்தம்பியை புறாக்கூட்டை வைத்து நக்கலடித்தது ஞாபகமிருக்கிறது.அவனுக்கு முட்டிக் கொண்டிருக்கும் வயிற்றை,அவனுக்கு தேவைப்படும் டெஸ்ட் பார்சலை..

நான் இந்த மரணத்திற்கு தயாராகவில்லை.என் மனம் மரணத்தை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை.உண்மையில் போதுமானதாக இருந்தாலும் எனக்குத் தெரியவும் இல்லை.

என்னைப்போல மற்றவர்களினுடைய ஞாபகங்கள்.தன்னோட அப்பாட சவப்பெட்டி செய்யக் காசு கொடுத்தார்.படிக்கக் காசு கொடுத்தார்.எத்தனையோ..

பெரியம்மாவைக் கைத்தாங்கலாக பிடித்து வந்து காண்பிக்கிறார்கள்.இதுவரைக்கும் பெரியம்மாவிற்கும்,பெரியப்பாவிற்கும் இடையிலே இல்லாத புது நேசம் விலாசிக்கிறது.கிடைப்பதற்கு அரிதான நேசமது.அவர்கள் முதல் சந்திப்பில் கூட இத்தனை உயிர்ப்பு இருந்திருக்காது.உருகி அழுகிறாள்.மற்றெல்லாரின் உணர்வுகளையும் விட பெரிதான விஸ்தீரணம்.

பெரியம்மா போனபின் நெஞ்சழுத்தி பெரியப்பாவைப் பார்க்கிறேன்.மிகக் கடைசியான ஒன்று.காற்றில் உயிர் அலைப்புற்ற களைப்பில் ஒரு பூனைக்குட்டி உறங்குவது போல இலேசாக தூக்கம்.இலகுவில் வாய்க்காது.கொடுத்துக் கெட்ட கைகள் ஓய்வைத் தேடி விட்டன.ஏதாவது சொல்லியிருக்கலாம்.உம்மாவிடம் அடிக்கடி புலம்புவதைப் போல பெரியப்பா நான் உங்கள உழைக்கிற காலத்துல நல்லாப் பாத்துக்குவன்! இதையாவது,அல்லாவிட்டால் இதை விடப் பெரிய நன்றியாவது.ஒன்றுமே வேண்டாம் .இந்த நிசப்தம் நன்றாயிருக்கிறது.இந்த மயக்கத்திலே கைகள் நடுங்குவதும்,பரிதவிப்பதும் விடுதலையாகிறது.நீங்கள் இருந்த கதிரை,அரிசிக்கடை,சாய்கதிரை எல்லாமே சுயமெனும் சிறையிலிருந்து விடுதலை பெற்று பெரியப்பா கதிரை,பெரியப்பா கடை என முத்திரையாகும்.கதவுகள் திறக்கட்டும்.

டோனியும் அதேபோலவே.

எனக்கு எட்டொன்பது வயதிருக்கும்.எங்கள் வீட்டில் டீவியில்லை. இலங்கை,இந்திய கிரிக்கிட் மெச்.முதல் முதலில் பெரியப்பா வீட்டு டீவியிலேயே டோனியை பார்த்தேன்.டோனியின் ஆரம்ப கட்டமாயிருக்கலாம்.நீளமான முடியுடன் சின்னப்பையன்.தோனி அடிப்பான் என்றீர்கள்.பின்னாட்களில் பெரியப்பாவின் டோனியில் மிகப்பெரிய ஈடுபாடே ஏற்பட்டு விட்டது.கதவுகள் திறக்கட்டும்.

எட்டுக்கெல்லாம் தூக்கி விட்டார்கள்.நடுமுதுகில் வலி குத்தி நிற்கிறது.கத்தரிக்காய் பூத்து விட்டது.பெரியப்பா! இனி உங்கள் பாதங்கள் இந்த வீட்டை ஒருபோதும் தொடப்போவதில்லை.அதன் பிறகு பெரிதாக ஒன்றும் ஞாபகமில்லை.எல்லாம் மறந்து போய்விட்டது.வந்தவர்களுக்கும், ஞாபகங்களை மீட்போருக்குமாக பாய் விரிக்கிறார்கள்.எனக்கு ஒன்னும் வேணாம் என்று உம்மாவிடம் சொல்லிவிட்டு தனியே வீட்டுக்கு வந்து விட்டேன்.காலம் ஒழுகி சிறு பைக்குள் ஸ்தம்பித்து நிற்கிறது.கிணற்றில் ஏறி உட்கார்ந்தபடி கைகளைத் தட்டித்தட்டி ஸ்கூலில் சொல்லித்தந்த பாடலை சத்தமாக பாடத் தோன்றுகிறது.ஸ்கூல் காலமென்றால் பெரியப்பா திரும்பி வந்து விடுவீர்களே.

நான் எதற்காக மண்ணுக்கு வந்தேன்.நீங்கள் ஏன் வந்தீர்கள்.உங்களுக்கு முந்தியவர்கள் ஏன் வந்தார்கள்.எல்லாவற்றிற்கும் வெவ்வேறு பதில் இருந்தாலும் நோக்கம் ஒன்றாகத்தான் இருக்கும்.

இனியும் உம்மாவின் முந்தானைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கலாமா.இந்த உள்ளடக்கம் போதும்.வெளியே வந்திருந்தால் இன்னும் பேசியிருக்கலாம்.நெல் ஊற வைப்பதை, அரிசி தீட்டுவதை,சாக்குத்தைப்பதை குறைஞ்சது எதிரான அரசியலை.எவ்வளவு இருந்திருக்கிறது.டின்பால் டீ போட்டுக் குடுத்திருக்கலாம்.ஒன்றாக கலந்து சாப்பிட்டு,ஏனம் கழுவி,காலை நீட்டி ஆறிக் கொண்டிருக்கலாம்.இனியாவது அம்பட்டும் கலக்கத்தானே வேணும்..

ஒரு வகையில் நீங்கள் மரணத்தை வெல்பவர்கள்.அ,ஆ எனும் முதல் வரி, நடுவரி,கடைசிவரியை சுலுவாக தொட்டுவிட்டீர்களே.நல்ல மௌத்து என பேசிக்கொள்கிறார்கள்.எனக்கெல்லாம் கழுத்துவரை பயம்.சாவு எப்படி வருமோ.நல்லாச் சிரிப்பேன்.சிலவேளைகளில் அது உள்ளுக்குள்ளே உறைந்து சுருட்டி விடுகிறது.விபத்தால்,தூக்குத்தண்டையால்,விச ஊசியால்,ஒரு முழம் கயிற்றால்,துப்பாக்கியால் கரண்ட் சொக் அடித்து,செய்யாத தப்பிற்காக கழுத்து வெட்டப்பட்டு…யாராயிருந்தாலும் உயிர் முக்கியமில்லையா.அதைவிட வலிக்காத மரணம்.

காதுபோறளவு பேச்சு,கொடி பிடிப்பாங்க,அசட்டு தைரியம்,பெருநாள் கொண்டாட்டம்,கல்யாணம்,சீதனம்,டொக்டர் மாப்பிள்ளை,மாடி வீடு..இவையெல்லாம் கென்சர்,டயபடிக்ஸ் பயத்தில் ஓரத்தில் நிற்கும்.பிறகு மீண்டும் சொத்துக்கள் தலைதூக்க மறுபடியும் முதுமை வந்தழிக்கும்.

ஒவ்வருத்தராக கலைந்து விட்டார்கள்.நேசத்தைக் கொப்பளித்து விளாவிய நினைவுகள்.அவரவர்க்கு அவரவர் வயிறு முக்கியமில்லையா.பெரியம்மா அதிகமான டிசைன் போட்ட புது அபாயாக்களை உம்மாவை எடுத்துக்கொள்ளச் சொல்கிறாள்.இது பச்சப்பிழையல்லவா.பெரியம்மா நல்லது உடுத்திக்கொள்வதைத்தானே நீங்கள் விரும்புவீர்கள்.அவள் கன்னத்தில் அரும்பும் மேகங்கள் கண்ணில் முடியச் சிரிக்கும் போது எப்படியிருக்கும்.அவளை அப்படியே இருக்க விடட்டுமே.சொல்றது கூடுமில்லையா.பழைய நிலைக்கு மாறுவோமே.மெல்ல மெல்ல துக்கங்கள் ஆறிவிட்டாலும் உங்கள் பொருட்டான சுவாலை எரியும்.முன்னயதை விட முன்னில்லாத பிரகாசத்துடன் எங்கள் பிள்ளைகள்,அவர்கள் பிள்ளைகளுக்குள்ளும் எரியும்.

நீங்கள் இருந்தவரை இந்த பூமியின் வாசம் வேறானது.இப்போது இன்னொரு வகையில் மணக்கிறது.நீங்கள் இருந்தவரை,நீங்கள் இல்லாமல். எங்களுக்கு நிகழ்ச்சி நிரல்களில் மாற்றம் செய்யவேண்டியுள்ளது.விதியை கோவிச்சிக்கலாமா.எத்தனை கனவுகளோ அத்தனையும் செக்கனுக்கும் குறைந்த நேரத்தில் முடிந்து போய்விட்டது.

ஏதாவது விசித்திரம் உருவாகியிருக்கலாம்.யார் கண்டார்கள்.உங்கள் மருக்கப்பிள்ளை சொன்னது போல இன்னொரு ஐந்தாண்டு காலம் நீடித்திருக்கலாம்.எல்லாம் கண் குளிரக்கண்டு புதுப்பேரனை மாரிலும் தோளிலுமாகப் போட்டு,நன்றி சொல்லி வயிறு குளிர்ந்து,வாசல் வரை பூரிப்புடன் முழுதும் செய்திருந்தேன் என்ற கொண்டாட்டத்தில் ..

ஆறு வயதிருக்கும்.பெரியப்பா வீட்டு மேசையில் கிடக்கும் கல்குலேட்டர் வெயிலிலே வேலை செய்யுமென்பதால் வெளியே கொண்டு வந்து சூரியனுக்குக் காட்டியபடி அடித்துப் பார்ப்பேன்.நம்பர்கள் தேய்ந்து போயிருந்தாலும் பெரியப்பா கடகடவென்று சரியாகத்தானே அடிப்பீர்கள்.நான் மடச்சி.ஒன்று,இரண்டு என எண்ணிப்பார்த்து முதலாமாண்டு ஸ்கூல் கூட்டல் கணக்கினைச் செய்து பார்ப்பேன்.இப்போது கல்குலேட்டரும் இல்லை.பெரியப்பாவுமில்லை.

ஒவ்வருத்தருக்கும் ஒவ்வொரு பெரியப்பாமார்.ஒன்றுக்கொன்று வித்தியாசம்.சிலருக்கு பெரியப்பாமார்களே இருப்பதில்லை.எனக்கு நீங்கள் பெரியப்பாவாகவேண்டுமென்றே பிறந்திருக்கிறீர்கள்.அது மற்றெல்லாப் பெரியப்பாக்காளிலும் இல்லாத ஒன்று.உயிரிகள் படைக்கப்படாத உலகம் பிறந்த நொடியில் உண்டான அமைதியில் உறைந்தது.இம்ரானின் புதல்வியின் உதடுகள் மனிச குமாரனை ஏந்தியபோது பரவிய புனிதத்தில் கலந்தது.ஏன் இனி நீங்கள் கூட அந்த இடத்தை எட்ட முடியாது.

•••••

நம் பயணிப்பும் பலமூட்டும்… / ந.பெரியசாமி

images (7)

புத்தாண்டு துவக்கத்தின் 6-ம் நாளில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகிலுள்ள ஏர்வாடி எனும் கிராமத்தில் மணல்வீடு இலக்கிய வட்டத்தோடு களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் இணைந்து மக்கள் கலை இலக்கிய விழாவை நிகழ்த்தினர். விழாவில் என்.டி.ராஜ்குமார், நக்கீரன், அழகியபெரியவன், எம்.ஏ.சுசீலா, ஓவியர் ஷாராஜ், சௌந்திர சுகன் இதழுக்கும் ஆளுமைகளின் பெயரால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மற்றும் அப்பகுதியில் வாழும் 35க்கும் மேற்பட்ட கூத்துக் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பரிசோதனை, தொக்கம் எனும் சிறு சஞ்சிகைகளும், சி.மணியின் எழுத்தும் நடையும் எனும் கட்டுரை தொகுப்பும், லைலா எக்ஸ் அவர்களின் பிரதியின் நிர்வாணம் எனும் சிறுகதை தொகுப்பும் வெளியிடப்பட்டன. விழாவில் இலக்கிய ஆளுமைகளும், எழுதிக்கொண்டிருக்கும் இளைஞர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தோல்பாவை கூத்து, பொம்மலாட்டம், தெருக்கூத்து என விடிய விடிய விருந்து…

ஒன்றை கண்டுகொள்ளாது விடுவதென்பது அதை நாமும் சேர்ந்தே அழிப்பதற்கு சமமானது. எல்லாம் போச்சு போச்சு என புலம்பிக்கொண்டிருக்காது, அதற்கு உயிர் கொடுக்கும் வகையில் முன்னெடுக்கும் செயல்பாடுகளே அவசியமானவை.அப்படியான முன்னெடுப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தபடிதான் இருக்கின்றது என்பது ஆறுதலே.

கலைகள் நம் வாழ்வின் ஆதாரம். கெட்டித்துப்போன மனங்களை இளக வைக்கும் தன்மை கொண்டது. இத்தகைய கலைகளை நிகழ்த்தும் கலைஞர்கள் ஒன்றும் தேவதூதர்கள் அல்ல. அன்றாடம் கூலிவேலை பார்க்கும் சாமான்யர்களே. அப்படியானவர்களை கௌரவிக்கும் பொறுட்டு விடாப்பிடியாக தொடர்ந்து நடத்திவரும் அமைப்பினர் சோர்வுகொள்ளாதிருக்க பார்வையாளர்களாகவாவது இருக்க நம் காலடிகள் தொடர்ந்து பயணிக்கட்டும்.

•••••••

ஆகி கவிதைகள்

26219448_1582774938478372_6503505523730096653_n26219448_1582774938478372_6503505523730096653_nநிதர்சனங்கள்

சாயங்கால வேளையில்
செவ்வாய்க்கிழமையென்று ஞாபகம்
தெற்கு வாசல்வழி சென்று
பொற்றாமரைக்குளத்தை நோக்கி
திரும்பிப்பாராது நின்றால்
சிக்கற்பாட்டின் உன்னதமான
மீனாட்சி அம்மன் கோயிலின்
புனிதசப்தத்தைக் கண்ணுறலாம்
அங்கிருந்து கூப்பிடு தூரத்திலுள்ள
எளிமைப்பாட்டின் உன்னதமான
புனித ஜார்ஜ் தேவாலயத்தில்
அமர்ந்துவிட்டு திரும்புகையில்
திரும்பிப்பாராது சற்று நின்றால்
புனிதநிசப்தத்தைக் கண்ணுறலாம்
அவற்றை கண்ணுற்று அவதானிக்கலாம்
இல்லாத பாதைகளில்
செல்லாத பாதைகளில் செல்வதுபோல்
செல்லத் துணிந்தால்
இதொன்றுமில்லையென்று இப்போது உறைக்கின்றது
செல்ல எத்தனித்தால்
துணிந்து செல்ல எத்தனித்தால்
எத்தனித்து சென்றால்
இன்னும் நிரம்ப காணக் கிடைப்பது நிதர்சனம்

ஊடாடல்

மார்சின் குடியரசுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்போர்
மார்சுக்குப் போகவில்லையா என்கின்றனர்
ஒற்றைக்கால்களில் நிற்கும் யார் இவர்கள்
நான் மென்றுகொண்டிருக்கிறேன்
வேறொருவனைக் கேளுங்கள்
எதையெல்லாமோ செரித்துக்கொண்டு
நிதானத்திற்கேயுள்ள அவசரத்தோடு
யாரோ எனக்கு வைத்தப் பொறியை
கொக்கியில் தொங்கவிடப்பட்ட அலமாரியையும்
கொக்கியுட்பட அனைத்தையும் கொறித்துக்கொண்டு
யாரெல்லாமோ வைத்தப் பொறிகளைத் தகர்த்து
பொறிவிட்டுப் பொறி பாய்ந்து
நானே வேறொருவனாக
எனக்குச் செதுக்கிய பொறியினுள் புகுந்து
தட்டுத்தடுமாறி
முடிவுகளின் இடைவெளிகளில்
முகர்ந்து
வியர்த்து விருவிருத்து
நுகர்ந்து
பல அடிகள் அகத்தினுள் வைத்து
ஊர்ந்து
இருந்தும் இல்லாமலும்
ஒலிகளின் அமைதிகளுக்கிடையில்
இருந்துமில்லாமலும்
சில அடிகள் புறத்தே வைத்து
இருந்தும் நகர்ந்தும்
இருந்துமாகியும்

கற்பைக் கண்டடைதல்

அதையோர் பத்தாண்டுக்கு முன் நீங்கள் இழந்தீர்கள் என்று வைத்துக்கொண்டால்
நிச்சயமாக உங்கள் குழந்தையிடம் நீங்களதனைக் கண்ணுறலாம்

அதையோர் பத்தரையாண்டுக்கு முன் நீங்கள் இழந்தீர்கள் என்று வைத்துக்கொண்டால்
ஒருவேளை உங்கள் குழந்தையிடம் நீங்களதனைக் கண்ணுறலாம்

அதாவது நீங்கள் உறையணிந்தவர் உள்ளிழுத்தவர் அல்லது கொடுத்துவைத்தவர்
இன்னும் என்னென்ன அதெல்லாம் இல்லை என்று வைத்துக்கொள்ளலாம் என்றால்

அதை இரு பத்தாண்டுகளுக்கு முன் நீங்கள் இழந்தீர்கள் என்று வைத்துக்கொண்டால்
ஒஞ்சோலிய பாத்துட்டுப் போய்யா போன்ற வசைகளை நீங்கள் கேட்கவிருப்பதனைத் தவிர்க்கலாம்

அதை மாதங்களுக்கு முன் நீங்கள் இழந்தீர்கள் என்று வைத்துக்கொண்டால்
உங்கள் துணைவியின் வயிற்றினுள் நீங்களதனைக் கண்ணுறலாம்

அதாவது அதனை இழந்ததை நீங்கள் இவ்வளவு விரைவில் நினைவுகூர்ந்து
அக் கண்டடைதலின் பெருஞ்சிக்கலை உணர்வீர்களானால்

நகைப்பிற்கிடங்கொடாத இருப்பிடம்

தன்னைக்கண்டு நகைப்பதுபோல்
தோற்றமளித்த மானுடரை
விசித்திர இருப்பில் இரும்பாய்
சமைந்த அகங்களில் வசிக்கும்
சூர்ப்பனகைகள் வேட்கையாடி
சித்திரவதைத்து வதைத்து
வதைந்து வதைத்து இரையாக்கி
அனைவரையும் திரித்து
குடலால் பின்னலிட்டு
நகையாக சூடிக்கொண்டனர்
சூர்ப்பனகைகளைக் கண்டு
இவர்கள் நகைத்தார்களா
சூர்ப்பனகைகளை உறுத்திய
நகைப்பொரு தோற்றப்புதிரியா
என்பதை பலகோணங்களில்
சிந்தித்த சித்தார்த்தர்
சூர்ப்பனகையின் இலங்கையை
சுமைதாங்காது தனது
வலங்கையிலிருந்து
இடங்கைகைக்கும்
பின்னர் இடங்கையிலிருந்து
வலங்கைக்கும் துல்லியமாக
மர்மந்துலங்கா புன்னகையுடன்
இலகுவாக நகர்த்திக்கொண்டார்
தனது வெறுமையான உலோகச்சட்டையில்
செந்நிற வியர்வை சுரந்து துவாரங்களில்
நச்சுப்புகை கசிந்து காலனெனும்
காலயந்திரத்துமுக்கி
விறைத்துறைந்து நின்றான்
தீவில் காணுந்திசையெங்கும்
தலையில்லாப் பனைமரங்கள்
பனைமரப் பொந்துகளின்
சிதிலமடைந்த கூடுகளினூடாக
தன்மானந்தேடும் மானுடர்
மேலும் பலர் கழுத்தில்
குற்றுயிரான நகைகளுடன்
தேடுவதறியாது நகர்ந்து
அழுகின்றாற்போல் நகைத்தனர்

மாதுவகம்

மருந்தகத்தில் ஆணுரையையும் சுகாதாரப்பட்டையையும்
மறைத்து செய்தித்தாளில் பொதிந்துக் தருகின்றாற்போல்
போரிலி நிலத்தில் மனிதவுடலைப் பொதிந்துத்தந்த
நாட்கள் இன்னும் அவள் நினைவினின்று அகலவில்லை
இப்போதைக்கு அவளை விட்டகலப் போவதுமில்லை

அவளகத்தில் முதலாளியாய் வாடிக்கையாளருக்கு
கண்ணீரைக் குடுவையிலிறக்கி பருகத் தருகின்றாள்
கரிக்கும் கண்ணீரைப் பருகுமொருவன் மயக்கம் தெளிந்து
நிதானமாக பேச்சரவத்தை மீறி உரக்கக் கூவுகின்றான்
மேலிடத்து உத்தரவின்றியும் கொன்றுக் குவித்திருப்பேன்

சட்டென்று அரவமற்றுப்போன நொடிகளைக் கிளித்துக்கொண்டு
வெடித்துக் கிளம்பிற்று காதைக்கிளிக்கும் பயங்கரச் சிரிப்பரவம்
மேலிடமாம் உத்தரவாம் கொன்றிறுப்பானாம் குவித்திருப்பானாம்
எல்லாம் செய்துவிட்டன்றோ பருகுகின்றோம் முந்திரிக்கொட்டை
தொண்டையில் இறங்குவதற்குள் என்னவெல்லாம் பிதற்றுகின்றான்

வழமையான வாடிக்கையாளனொருவன் ஆளரவத்தை
துடுப்பிட்டுக் கடந்து அமர்ந்திருப்பவள் முன்னின்று சொல்கின்றான்
நீ பரிமாறும் கண்ணீரில் கரிப்பும் உவர்ப்பும் முன்னைப்போலில்லை
இவ்வாறிவன் கூறுவதிது முதன்முறையன்று இவன் வருகையும்
முன்னைக்கிப்போது அதிகரித்துள்ளதன்றி குறைந்தபாடில்லை

இன்றைக்கு இவ்வளவே என்றவள் செவ்வொளி குமிழ்களை
சிமிட்டச் செய்தறிவிக்கவும் செவிவழி உட்புகுந்தோர் அவளின்
செவிகள் சார்த்தியிருக்க நாசிவழி முயற்சித்து அதுவும்
சார்த்தியிருக்க இன்றைக்கு வசமாக மாட்டிக்கொண்டோமென்று
அவளின் கண்கள் அவர்களில் பதிந்திருக்க வாய்வழி வெளியேறினர்

அருணா சுப்ரமணியன் 2 கவிதைகள்

images (4)

1. மௌனங்கள்

கேள்விகள் அனைத்தும்

பதிலை பெறுவதில்லை

சில பதில்கள்

கேள்விகள் இல்லாமலே

தரப்படுகின்றன..

சில கேள்விகள்

எவ்வாறு கேட்கப்படினும்

பதில்கள் கிடைப்பதில்லை ..

-

பதில் தரமுடியா

கேள்விகளுக்கு எல்லாம்

மௌனமே பதிலாகின்றன..

அதற்காக மௌனத்தை

பதிலாகப் பெறும்

கேள்விகள் எல்லாம்

பதிலற்ற கேள்விகள்

என்று கொள்வதற்கில்லை..

-

சில மௌனங்கள்

பதிலாகவும்

சில மௌனங்கள்

பதிலுக்கு

பதிலாகவும்

சில மௌனங்கள்

கேள்விகளாவும்

உருப்பெறுகின்றன ….

2. மௌனம்

மொழி குறை

பொழுதுகளில்

மௌனம்

மொழியாகிறது …

விடைகள்

இன்மையால்

மற்றுமின்றி

விடைகளின்

விளைவினாலும்

சில வினாக்களுக்கு

மௌனங்களே

விடையாகின்றன..

மொழி நிறை

பொழுதுகளிலும்

மௌனம்

மொழியாகிறது..

•••

இந்த நகரத்தில் நகுலன் என்ற பெயரில் யாருமில்லை ( சிறுகதை ) / ஆத்மார்த்தி

download (18)

அவனை நீங்கள் பல இடங்களில் சந்தித்திருக்கலாம்.மற்றுமொரு சாதாரணமான முகத்தோற்றம் கொண்டவன்.பலருள் ஒருவன்.அவனது குடும்பத்தார் சற்று வசதியானவர்கள்.அவன் தான் கடைக்குட்டி என்பதால் சிறுவயதில் இருந்தே அக்காள் அண்ணன் என எல்லோருடைய செல்லமும் அவனுக்குக் கிடைத்துவந்தது.அவனுடைய மாமா அவர்கள் வசித்த பகுதியின் ந்யூஸ்பேப்பர் ஏஜண்ட்.அதனால் அவர்கள் வீட்டில் எப்போதும் மாத வார பத்திரிகைகள் ரக வித்யாசம் இல்லாமல் தீபாவளி மலர்கள் என புத்தகங்கள் அதிகதிகம் கைக்குக் கிடைக்க வாய்த்தது.மற்றவர்கள் இயல்பாகத் தத்தமது விருப்ப சாலைகளில் சென்றபின்னரும் அவன் மாத்திரம் காகிதப்பித்து குன்றாதவனாகவே இருந்தான்.

தன் புத்தகங்களை மிகவும் காதலிக்கிறவனாகவே அவன் அறியப்பட்டு வந்தான்.நிறைய நிறைய புத்தகங்கள் கொண்ட ஒரு பெரிய அறை முழுவதும் புத்தகங்கள் நிரம்பி இருக்கிற தன்னுடைய அறையை அவன் மிகவும் விரும்பினான்.அவன் எப்போதும் இருக்கும் அறை அது.அட்டாச்டு பாத்ரூம் கொண்ட அவ்வளவு பெரிய வாசிப்பறை வசிப்பதற்கும் போதுமானதாக இருந்தது அவனுக்கு.

இலக்கியத்தை நேசிப்பதற்காக எல்லா திசைகளிலும் சென்று வருபவனாக இருந்தான்.தமிழ் நாட்டின் பல ஊர்களில் நடக்கிற புத்தகத் திருவிழாக்களில் கலந்து கொள்வான்.தொடர்ந்து இலக்கிய விழாக்களுக்குச் செல்வான்.சிற்றிலக்கியத்தில் நிலவுகிற குழு மனப்பான்மை குழு அரசியல் இவற்றுக்கெல்லாம் சற்றும் தொடர்பற்ற வேறொரு உலகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜீவராசி அவன்.மனிதர்களிடமிருந்து அன்னியப்படுவதற்கு அவன் தேர்வு செய்த வழி தான் அவனுடைய புத்தகங்கள்.அடையாளமற்றவர்களை அவன் புறக்கணித்துக் கொண்டே அவர்களுள் ஒருவனாகத் தானும் இருப்பதை அவன் விரும்பினான்.அடையாளம் கொண்ட யாரையும் அவன் பொருட்படுத்துவதில் பாரபட்சம் காட்டியதில்லை.

வினோதங்கள் என்பது என்ன.?அரிய எல்லோரிடமும் காணப்படாத என்றும் சொல்லலாம் அல்லவா?அவனுடைய வினோதங்கள் புத்தகங்களை ஒட்டியே தொடங்கின.சிறு வயதிலிருந்தே நிறைய புத்தகங்களை சேகரித்து வருபவன்.அவன் வாசித்த புத்தகங்கள் நிறைய.வாசிக்காதவை இன்னும் நிறைய என்பதும் இருவேறு நிசங்கள்.இந்த புத்தகங்கள் பற்றிய அபிப்ராயங்களை அவன் ஒருபோதும் மறைத்துக் கொண்டதோ பிறழ்ந்து மொழிந்ததோ இல்லை.அவனது சேகரத்தில் அவன் வாசித்த புத்தகங்களை யாராவது வாங்கிச் சென்றுவிட்டுத் திரும்பத் தராவிட்டால் சண்டையே போடுவான்.அவற்றைத் திரும்பப் பெறுவதில் கறாரும் கண்டிப்பும் காட்டுவான்.அதே அவன் வாசிக்காத புத்தகங்களை எடுத்துச் சென்று திருப்பா விட்டால் மெல்லிய அணுகுமுறையே கடைப்பிடிப்பான்.இந்த முரண் பற்றிக் கேட்டதற்கு

“நான் வாசிக்காத புத்தகங்களை அவன் வாசிச்சுட்டான்ல..?அப்பவே என்னை விட அவற்றின் மீதான உரிமை அவனுக்கு அதிகரிச்சிடுதுன்னு நம்புறேன்” என்பான்.தந்திரங்கள் அற்ற நேர்வழிச் சாலைகள் அவனுடையவை.தான் படிக்காத புத்தகத்தை படிக்கவில்லை என்று தான் சொல்வான்.ஒரு சொல்லைக் கூடப் பிறழ்ந்து சொல்லாதவன்.

தனக்குப் பிரியமான எழுத்து யாருடையதாக இருந்தாலும் சரி அதை எழுதியவனைத் தேடிச் சென்று ஒரு சொல் ஒரு வாக்கியம் ஒரு வர்ணனை என என்னென்ன எவ்வெந்த விதத்தில் தன்னை வசீகரித்தது என்பதை பெரும் கொண்டாட்டமாகவே முன்வைப்பான்.அவனது குரலும் உடல்மொழியும் அவன் பேசத் தேர்வெடுக்கிற வாக்கியங்களின் மென்மையும் எல்லோருக்கும் உகந்தவனாகவே அவனை ஆக்கி இருந்தது.அவனிடம் பெரும் பரிச்சயம் ஏதும் இல்லாதவர்கள் கூட அவன் பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டு அவன் பற்றிய நல்லசில அபிப்ராயங்கள் உருவாக்கப்படும் போதெல்லாம் அவற்றை உடைக்காமல் ஆமோதித்தார்கள்.

முகத்திற்கு நேராக விமர்சிப்பவன் என்றது அவனது கூடுதல் தகுதியாயிற்று.தமிழின் சமகால எழுத்தாளர்கள் அவனது வாசகானுபவம் பற்றிக் குறிப்பிடுவதும் சான்றளிப்பதும் அடுத்தடுத்து நதி நகர்ந்தோடுகிற நில்லாப் பாதையின் நெளிவுகளைப் போல எல்லாரையும் சந்தித்து உரையாடுகிற அளவளாவுகிற பாக்கியத்தை அவன் தேடியும் தேடாமலும் தந்துகொண்டே இருந்தது.

கம்பீரமாகச் சொல்வதானால் ஒரு சொல்லைக் கூட எழுதாத அவன் வெறும் வாசகனாகவே எழுத்தாளர்களுக்குக் குறைவில்லாத புகழைப் பெற்றிருந்தான்.அவனை இலக்கியப் பரப்பின் மாச்சர்ய முடுக்குகள் எதுவும் நிறுத்தி விடவில்லை.கேள்வி கேட்கவும் இல்லை.சில அபூர்வங்கள் பொதுமைகள் கடந்து மிளிரும் அல்லவா அப்படித் தன் காலத்தின் பொது ஒளிர்தல் அவனுக்கு வாய்த்தது.

புத்தகங்களை நேசிப்பதும் எழுத்தாளனை நேசிப்பதும் இரண்டுமே அருகமைந்த தீவுகள் என்பான்.இதிலிருந்து அதற்கு மாறிக் கொண்டே இருப்பது தவறல்ல என்பது அவன் வாதம்.

சுஜாதா இறந்த போது மூன்று தினங்கள் பட்டினி கிடந்தான்.தன்னை எதாவது ஒரு வழியில் தண்டித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான்.சுஜாதாவின் மரணத்தைத் தாங்க முடியாமல் தள்ளாடியவன் பெருங்குரலில் பொருளற்ற கூச்சல்களை நேர்த்தினான்.வீட்டார் அவனருகே செல்லவே பயந்தார்கள்.என்றாலும் சுஜாதாவின் எழுத்து மீது அவன் கொண்டிருந்த ப்ரேமை யாரும் அறியாததல்ல.

முருகேசபாண்டியன் ஒரு முறை நீங்க சுஜாதாவைக் கடக்கலியா இன்னும்..? எனக் கேட்ட போது இவன் சொன்னான்.திரும்பத் திரும்ப கொடைக்கானல் போறதுக்கு காரணங்கள் இருக்குதில்ல..அந்த மாதிரி சுஜாதாவின் எழுத்துகளுக்குள் திரும்பத் திரும்ப வந்து போறது தப்பில்லன்னு நினைக்கிறேன் ஸார்..மேலும் ஒரு மெஷர் மெண்டை இன்னொண்ணால அளக்கிறது வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன் என்றான்.அவர் அவன் பதிலை ரசிக்கவே செய்தார்.

சுஜாதா இறந்த மூன்று தினங்கள் உக்கிரமாய்க் கழிந்தன.தன் கட்டிலில் அவரது எல்லா புத்தகங்களையும் அடுத்தடுத்து அடுக்கி வைத்து அவற்றையே பார்த்தபடி அமர்ந்துகிடந்தான்.எப்போதெனத் தெரியாமல் உறங்கினான்.எப்படி எழுத்தாளனின் குடும்பம் அவன் இறப்பை சொந்தங்கொண்டாடி மெல்ல மெல்லத் தன் இயல்புக்குத் திரும்புமோ அப்படித் தான் அவனும் தன் நிசத்துக்கு மெல்லத் திரும்பி வந்தான்.சுஜாதாவின் மரணத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாத அவன் மெல்ல அது குறித்த தன் புரிதலை உணர்ந்தான்.அப்புறமும் எங்காவது சுஜாதாவின் மரணம் பற்றிய பேச்சு வந்தால் அந்த இடத்தைக் கடந்து விடுவான்.

அவனுடைய கல்லூரி நண்பன் அஸ்வத்தாமன் அவனுக்கு சரியான சகாவா இருந்தான்.இரண்டு பேரும் வெவ்வேறு கண்களால் எதையும் பார்க்க விழைந்தார்கள்.அவரவர் சொற்களால் முரண்பட்டுக் கொண்டார்கள்.பல சுற்றுக்களை உடைய சதுரங்க ஆட்டங்களைப் போல அவர்களது விஷயதானம் அமைந்தது.இரண்டு பேருடைய போதாமை அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.அஸ்வத்தாமன் அவனைத் தேடி வந்து விட்டால் போதும் நேரம் செல்வதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.சில தினங்கள் எதுவும் பேசிக்கொள்ளாமல் ஆளுக்கொரு புத்தகத்தை மௌனமாய்ப் புரட்டி விட்டுக் கடப்பதும் உண்டு.

ஏழாம் உலகம் வாசித்து முடித்த அடுத்த ஒரு சில நாட்கள் அவன் யாரோடும் எதுவும் பேச முற்படவில்லை.உண்மையில் அதை ஒரு நாவல் என்றெல்லாம் அவனால் கடக்க முடியவில்லை.அதற்கு முன்பே அவன் ஜெயமோகனின் தீவிர வாசகன் அடிக்கடி அவரோடு தொடர்புகொள்ள ப்ரியப்படுவான்.அவ்வப்போது அவரும் அவனோடு உரையாடுவார்.மதுரையை கடந்து செல்லும் போதெல்லாம் அவனால் இயன்ற அளவு அவரை சந்திப்பது அவன் வழக்கம்.அல்லது இருவரும் வேறு சந்தர்ப்பங்களில் ஒரே ஊரில் இருக்க நேர்ந்தால் அவரை சந்திப்பான்.நேரம் செல்வது தெரியாமல் ஜெமோவோடு அவன் உரையாடுவான்.வேறு சிலபலர் அவரோடு இருக்கும் பட்சத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கூட இருந்து கவனித்தபடி இருப்பான்.ஜெயமோகனுடன் விவாதிப்பதை தன் டைரியில் குறித்துக் கொள்வது அவனது பழக்கங்களில் ஒன்று.

எஸ்.ராமகிருஷ்ணனோடும் அவனுக்குப் பரிச்சயம் இருந்தது.அவரை எப்போதாவது சந்திப்பான்.தன் ஆதர்சங்கள் யாரையும் ஃபோனில் அழைப்பது தவிர்க்க முடியாத பட்சத்தில் தான் செய்வான்.உரையாடல் என்பது முகம் பார்த்துத் தான் நிகழவேண்டும் என்பது அவன் நம்பகம்.

அஸ்வத்தாமன் அவனிடம் கேட்டான் உனக்குள்ள ஜெமோவும் எஸ்.ராவும் எந்தெந்த விதங்களில் ஊடுபாவா இருக்கிறாங்க..?என்றான்.உண்மையில் இந்தக் கேள்வியை நெடு நாள் இடைவெளிக்குப் பிற்பாடு சந்திக்க நேர்கிற நண்பன் ஒருவனை ஆரத் தழுவிக் கொள்கிறாற் போல உணர்ந்தான்.ஒரு சிறு பொழுது எதுவும் பேசாமல் இருந்தான்.அவனுக்குள் ஆரவாரங்கள் எல்லாம் குறைந்த பிற்பாடு எடுத்த படத்தை எடிட் செய்வதற்காக ஓட்டிப் பார்க்கிற இயக்குனரைப் போல இந்தக் கேள்வியைத் தனக்குள் ஓட்டிப் பார்த்தான்.

“அஸ்வா….ரஜினி கமல் ரெண்டு பேர்ல ஒருத்தரை ரசிக்கிறது மாதிரி பிடிச்சிக்கிறது இல்லை வாசிப்புன்றது.இன்னாரைப் பிடிக்கும் இன்னாரைப் பிடிக்காதுன்னு ஒதுக்குறது மேலோட்டமான அணுகல்னு நான் நினைக்கிறேன்.எடுத்தாலும் தள்ளினாலும் காரணங்கள் அவசியம்.எனக்கு ஜெமோவோட புனைவுகள் அவரோட கதையுலகம் ரொம்ப பற்றுதலை ஏற்படுத்துது.அவர் கிட்டயே சொல்றேன் அவர் நிஜங்களின் புற உலகம் மீது வைக்கிற மதிப்பீடுகளை நான் ஜஸ்ட் அறிஞ்சுக்கிறேனே தவிர அவை எல்லாவற்றையும் என்னால எனக்குன்னு எடுத்துக்கிட முடியலை.

அவர் கதைகள்ல எனக்கு ரொம்ப பிடித்தமானவரா இருக்கார்.அதே அளவு பிடித்தம் எஸ்.ரா தன் ஞாபகத்தை எழுதுறப்பல்லாம் எனக்குள்ள பெருக்கெடுக்குது.இந்த ரெண்டு பேரையும் நான் ஒப்பிடலை.என் ப்ரியத்தோட லைப்ரரியில யாரெல்லாம் இருக்காங்க யாரெல்லாம் இல்லைன்ற வெளிப்படையான லிஸ்டைப் போலவே யாரெல்லாம் எதுக்காக இடம்பெறுகிறாங்கன்றதும் வெளிப்படையான காரணங்கள் தான்.”

அஸ்வத்தாமன் இவனையே உற்றுப் பார்த்துக்கிட்டே அடுத்ததா ஒரு கேள்வி கேட்டான்.

உன் ப்ரியத்தோட லைப்ரரில சாருவுக்கு இடமுண்டா..?
சாரு இல்லாமயா..?தேகம் எனக்கு ரொம்பப் பிடிச்ச நாவல்.என்ன ஒண்ணு நான் சாருவை நெருங்கமாட்டேன்.நெருங்க மாட்டேன்னு சொல்றதை விட நெருங்கினதில்லைன்னு தான் சொல்ல முடியும்.

இன்னொண்ணு விஸ்வா…ஒரு எழுத்தாளன் தன் பிரதி ஒன்றின் மூலமா நம்ம உலகத்துக்குள்ள வந்துட்டான்னா பிசிகல் வேர்ல்ட்ல அவனுக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லைன்னு ஒரு போதும் சொல்ல முடியாது.;அவனும் நம்மோடு சேர்ந்து ஆடுற உள்ளே வெளியே ஆட்டம் சுவாரசியமானது.இதுல இன்னொரு வசீகரம் என்னன்னா எழுதினவன் நம்மளைத் துரத்தும் போது அவன் கிட்டேருந்து தப்பிக்கறதுக்காக நாம அவனை நோக்கியே ஓட நேர்றது தான்.சில சமயங்கள்ல அவனே நம்மளை காப்பாத்தவும் செய்வான்.”

உண்மையில ஞாபகத்தை விடாப்பிடியா வச்சிட்டிருக்கிறது சரியில்லை தானே..?

அஸ்வா காலத்தை வச்சிக்க முடியாதவன் தான் ஞாபகத்தை விடாமப் பிடிச்சிட்டிருக்கான்.எழுதுறவனும் வாசிக்கிறவனும் ஒருங்கிணையிற புள்ளி இதான்னு நம்புறேன்.காலத்தை ஞாபகமா மாத்திக்கிறதுல ஒரு உசிதமான வழிதான் அதை எழுதுறது.ஞாபகங்களைத் தேடித் தேடி வாசிக்கிறதுங்குறதும் எழுதுறதுக்கு அருகாமையில இருக்கிற இன்னொண்ணு தான் அஸ்வா….ஞாபகம்ன்றது என்ன..?காலத்தோட அரூபம்.கடந்து போயிட்ட ரயில் மறுபடி வரும்னு காத்திட்டிருக்கிற பித்து.அங்கே உண்மைகள் சற்றே திருத்தி அமைக்கப் பட்டிருக்கும்.முழு பொய்கள் அல்ல ஞாபகங்கள்.

ஆனாலும் ஆங்காங்கே உண்மையோட நீர்த்த வடிவம்னு சொல்லலாம்.ஞாபகம்குறது நமக்குத் தேவைப்படுது.பல இடங்கள்ல நினைச்சுக்குறதுக்கு.சில இடங்கள்ல மறந்து ஒழிக்கிறதுக்கு.பட் மெல்ல உயரத்திலேருந்து கீழே வீழ்றாப்ல குறைஞ்சி சிறுத்து காணாமற் போறது தான் அதோட வடிவம்.இது மனுஷன் தன்னைக் கட்டிப்போடுறதுக்காகத் தானே ஏற்பாடு செய்துக்குற கயிறு மாதிரி.விஷயம் அதோட கனம் என்னன்னு அவன் பாக்கவே மாட்டான்.மாறா அதோட வண்ணம் என்னவாயிருக்கணும்குறதுல ரொம்பப் பிடிவாதமா இருப்பான்.இதுல விதிவிலக்கா இருக்கிறவங்க புண்ணியம் செய்தவங்க.”
விதிவிலக்குகள் பெரும்பாலும் தங்களோட ஞாபகங்களை இழந்தவங்க தானே?அவங்களுக்கு வெறுமனே ஞாபகங்கள் மட்டுமா இழப்பாகுது?அதுவரைக்குமான ஒட்டுமொத்த அறிதல் முழுவதும் அறியாமையாய்டுது இல்லையா?என்றான்.

அவனுக்குத் தன் மீது எந்த உணர்தலுமே வருவதில்லை.பயம் தொடங்கிப் பற்றுதல் வரைக்கும் எதுவுமே இல்லாமல் எப்போதும் துண்டிக்கப் பட்டவனாகவே இருந்து கொண்டிருந்தான்.தான் அப்படி இருப்பது குறித்து அவனுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.எப்போதாவது மனம் வறண்டு எதுவுமற்றுத் ததும்பும் அப்போது மாத்திரம் எதுவும் செய்யாமல் அப்படியே உறைந்த படி தன் அறையின் விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விட்டு மின்விசிறியையும் நிறுத்தியவனாய் அப்படியே அமர்ந்திருப்பான்.கூடியமட்டும் ரகசியங்களுக்கு அப்பாற்பட்டவனாகவோ எதிர்மனோபாவம் கொண்டவனாகவோ தான் தன்னை வைத்துக்கொள்வான்.

ரம்யா அவனது காதலி.அவர்களுக்குள் காதலும் கொஞ்சம் கொஞ்சம் உடலைக் கொடுத்து உடலைப் பெற்றுக்கொள்ளும் ஆட்டமும் இருந்தது.இதெதையும்
அவர்கள் குழப்பிக் கொள்ளவில்லை.நமக்குள் எதுவும் இல்லை.எல்லாமே இருக்கிறது செக்ஸ் நமது கூட்டு தேவை.அப்படி இல்லாத பட்சத்தில் நாம் அதைக் கைவிடுவோம் அல்லது நிர்வகிப்போம்.இந்தக் கணம் நிஜம்.இதன் நீ நான் நிஜம்.நாம் அப்டின்ற பேர்ல எந்த வன்முறைப் பற்றுதலும் வேண்டாம்”

ரம்யா இவனுக்கு ஒரு வாசகக் கூட்டத்தில் அறிமுகம் ஆனவள்.முதல் கடிதத்திற்கான இவனது பதினேழு பக்க பதிலை வாசித்து முடித்த போது நீ எப்போ எழுத்தாளனா ஆவே..?ஐ மீன் எப்போ இது மாதிரி பெர்ஸனல் ரைட்டிங்லேருந்து வெளில வந்து எதாச்சும் எழுதுவே..?’

எழுத்தாளன் அப்டின்றவன் யாரு..?அவன் தனக்காக எதும் எழுதிக்கிறானா..?அவனது பெர்ஸனல் அக்ஸஸ் ஆகும் போது அதுவும் அவனது படைப்பிலக்கியத்தோட வரிசையில் நிறுத்தப்படுவது வரமா சாபமா.?அவன் தெரிஞ்சே பிறருக்காக சமர்ப்பிக்கிற லட்சலட்சோப வார்த்தைகளுக்கு நடுவில் அவன் எதும் மாஜிக் செய்றானா.?அப்டி செய்தா அதைக் கண்டுபிடிக்க முடியுமா..?அப்படி கண்டுபிடிக்காட்டி அவன் திருப்தி ஆகுறானா..?தனக்கே தனக்குன்னு அவன் வச்சிக்க விரும்புற ரகசியத்தைப் பல துண்டுகளா கிழிச்சித் தன் படைப்பின் வழியெங்கும் அவன் படர்த்துறானா..?அவன் சம்மதமில்லாம அவன் செய்ற மந்திரவேலைகளை நம்மால உணரமுடியுமா.?இனம்பிரிக்க முடியுமா என்ன.?”

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக அவன் முகத்தையே பார்க்க

ஒரு எழுத்தாளன் தனக்குன்னு தேவைப்படுறதை தான் எழுதிடாம வேற யாராச்சும் எழுதுறாங்களா அப்டின்னு அட்லீஸ்ட் எழுத முயல்கிறார்களா அப்டின்னு ஒளிஞ்சு நின்னு பார்க்குறவனா இருக்கானோன்னு தோணுது.இந்த மீளமுடியாத ஆட்டம் தான் ஒரு எழுத்துக்காரனை விடாப்பிடியா உற்சாகமா வச்சிட்டிருக்குன்னு தோணுது சோ நான் அடுத்தவங்களுக்காக எழுதணும்னு தொடங்குனா ஒருவேளை பிரகாசிக்கலாம்.அல்லது வெற்றுக் காற்றா கலைஞ்சும் போய்டலாம்.ஹூ நோஸ் ..?”

ரம்யா அவன் பேசி முடித்ததும் அவனது புறங்கையில் முத்தமிட்டு எனக்கு நீ பேசுனது முழுக்க உடன்பாடா இருக்கு.பட் உன் வாழ்க்கைல வேற எதாவது நடந்தாலொழிய நீ அப்படியே அசையாம இருக்கிற ஒரு ஓவியத்தோட பகுதியா மாறிட்டிருக்கியோன்னு தோணுது”ந்னா.அதை அவன் மறுக்கலை.

ஒரு ப்ரியமான கூடலுக்கு அப்புறம் அதை இரட்டிக்கிறதுக்கான வழி அடுத்த கூடுகையை ஒத்திப் போடுறது தான் அப்டின்னு அவன் அடிக்கடி சொல்வான்.எதிர்பாராத விதமா அவனுடைய வாழ்க்கை ஒரு கட்டத்துல தேங்கி நின்னிச்சி.அவனோட மாமா பய்யன் பரத் ஃபலூச்சின்ற பேர்ல ஃபேஸ்புக்ல இருப்பான் அவன் திடீர்னு ஒரு நாள் இவனைத் தேடி வந்தான்.ஹே டாம் இட் யூ ஆர் சச் ஏன் ஆண்டிக் ப்ராடக்ட் யூ நோ..இன்னாய்யா இது இத்தினி கம்ப்யூட்டர் படிச்சிட்டு இப்பிடி குப்ளாஸ் பண்ணிட்டிருக்கே..?

அதென்ன குப்ளாஸ் என்று கேட்டதற்கு அதிர அதிர சிரித்தவன் ஜஸ்ட் கிட்டிங்.கெட் மீ யுவர் ரெஸ்யூமே…நான் உனக்கு ஒரு ப்ரம்மாதமான இண்டர்வ்யூ ஏற்பாடு பண்றேன்.நீ மாத்திரம் செலக்ட் ஆனேன்னு வய்யி…ஃபூர்……என்று பலவித சப்தங்களோடு தன் வலது கரத்தால் விமானம் போலக் கொனஷ்டை செய்து காண்பித்தான்.இவன் நம்பிக்கையே இல்லாமல் தான் ரெஸ்யூமே அனுப்பினான்.அடுத்தடுத்த லெவல்களை பூர்த்தி செய்து விட்டு ஃபைனல் ஃபோன் இண்டர்வ்யூவிலும் அதகளம் செய்ததன் பலன் அவனுக்கு வேலை கிடைத்து விட்டது.

அதுவும் வருட சம்பளம் இருபத்தி நாலு லட்ச ரூபாய்கள்.அவன் வாழ்க்கையின் அத்தனை காஸ்ட்லி செயல்பாடுகளுக்கும் அவனுக்குத் தேவை பணம்.பணம் இல்லை என்றில்லை.இருப்பது போதாது.,மேலும் ராஜகுடும்பத்தில் பிறந்தவன் என்பதை விட ராஜா என்பது தான் சுருக்கசுகம் இல்லையா பின்னே அவன் கிளம்புவதா வேண்டாமா என்று பலதடவை யோசித்தான்.அவனது குடும்பம் கூட்டம் சமூகம் தேசம் அவன் காதலியான ரம்யா என எல்லாருமே நீ போயே ஆகணும் அமெரிக்காவுக்கு என்று ஓரணியில் திரண்டது.

ஒரு வீட்டில் ஒரு இசைக்கருவி எதோ ஒன்று ஒரு வயலின் அல்லது வீணை அல்லது கிடார் இருக்கிறது என்றால் அதை வாசிக்கத் தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் என இருவேறு பண்டங்களாகத் தான் அது பார்க்கப் படும்.அதைத் தொடுவதில் இருந்து புழங்குவது வரைக்கும் ஏன் நகர்த்துவது தூசி தட்டும் போது கூட ஒரு கலையின் மீதான அறியாமைக்குப் பின்னதான அச்சத்தோடு தான் அது கையாளப்படும்.

இசைக்கருவிகளுக்குச் சொன்ன அத்தனையும் புத்தகங்களுக்கும் பொருந்தும்.எத்தனைக்கெத்தனை புத்தகங்கள் இருக்கிறதோ அந்த வீட்டின் மனிதர்கள் புத்தகவிரும்பிகளாகவும் அதை வெறுமையாக அணுகுபவர்களாகவும் இரண்டாய் வகுபட்ட வண்ணம் இருப்பார்கள்.உள்ளே வரக் கூடிய யாரையும் அதே போலத் தான் பரீட்சிப்பார்கள்.ஒரு ஆடி உடைந்த கண் கண்ணாடியை அணிந்தவனுடைய எல்லாச் சித்திரங்களுமே பாதித் துல்லியத்துடன் இருக்குமல்லவா அப்படித் தான் அவர்களது அணுகுதல் இருக்கும்.

நல்ல வேளையாக அவன் வீட்டில் யாருமே அப்படி அவனது புத்தக சேர்மானத்தை வெறுக்கவும் இல்லை அன்னியப்படவும் இல்லை.அவனது அக்கா அவன் விரும்புகிற சில புத்தகங்களைத் தான் செல்லுகிற நகரங்களின் நடைபாதைக் கடைகளில் தேடுவாள்.அவனது அண்ணி அவன் சேகரித்திருக்கும் மாபெரிய எண்ணிக்கையிலான நூல்களை மெல்ல இனம் பிரித்து வகைப்படுத்தி அடுக்கி அவற்றைப் பட்டியலிட்டு நல்ல முறையில் அவைகளைப் பராமரிக்கிறதற்கான பெரிய சேவையைப் போகிற போக்கில் செய்து காண்பித்தாள்.அவர்கள் வீட்டு நாய்க்குட்டி கூட தரையில் புத்தகம் எதாவது கிடந்தால் அப்படிக் கிடக்க வாய்ப்பில்லை கிடந்தால் அதனைப் பொறுப்போடு கவ்விக் கொண்டு போய் உள் அறைக்குள் போட்டு விட்டு வந்து தான் மறுபடி நாயாக மாறும்.

இப்படியானவனுக்கு மோண்டானா என்ற அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வடமேற்கு ஓரத்துப் பிரதேசம் ஒன்றில் வேலை கிடைத்திருப்பதாகச் சொன்ன அந்தக் காகிதத்தையே வெறித்தபடி பல மணி நேரங்களாக அமர்ந்திருந்தான்.அவன் வாழ்க்கையின் முக்கியமான கறுப்பு வெள்ளைக் காலகட்டத்தில் தான் நிற்பது அவனுக்குத் தெரிந்தது.இதனை வேண்டாம் என்று ஒதுக்கிய பிற்பாடு என்ன நடக்கும்..?எதுவும் நடக்காது.அதாவது எளிதாக அவன் தன் அதே பழைய உலகத்துக்குள் சென்று கொள்ள வேண்டியது தான்.மற்ற குடும்பங்கள் என்றால் விளக்குமாற்றால் அடித்து விரட்டி விடுவார்கள்.நிச்சயமாக அது தான் நடக்கும்.இவன் வீட்டில் அது எதுவும் நடக்காது.டேய் தம்பி இன்னிக்கு மோகன்லால் படம் ரிலீஸ் ஆயிருக்கே ஐநாக்ஸ்ல நீ போலியா என்று அக்கறையாய்க் கேட்டு கரன்ஸி தந்து அனுப்பி வைக்கும்.அதான் பிரச்சினையே என்னை அடியேன் திட்டேன் வழக்கமான ஒரு மலர் போல என்னை எடுத்து முகர்ந்து பார்த்து வீதியில் வீசுங்களேன்.

ஏன் இப்படிக் கொண்டாடிக் கொண்டாடி என் ஆயுட்காலத்தை மரத்துப் போகச் செய்கிறீர்கள்.யாருடைய பாவனை நான் என்றே தெரியாமல் தள்ளாடுகிறேனே..என்னை அழுகிக் காலத்தோடு கரைந்து போக அனுமதியுங்களேன்.நான் மறுபடி வந்து கொள்கிறேன்.அல்லது சந்தோஷமாக வராமற் போகிறேன்.எஞ்சாது திரும்பாது என்ன தான் நடக்கிறது என்று பார்ப்பதை விடவா வேறொரு சுவாரசியமான கதை இருந்து விடப் போகிறது..?இவர்களது அன்புக்காகவாவது இவர்களிடமிருந்து அன்னியப்பட்டு வெகுதூரம் சென்று திரும்பவேண்டும் என்றொரு வெறிமாதிரி அவன் மனதில் ஊறியது.டாமிட் திரும்பி வர்றதுக்காகவாவது தொலையறேன் நான் என்று தனக்குள் கூச்சலிட்டுக் கொண்டான்.

ஒய் யூ பீபில் செலெப்ரேட்டிங் மீ..?

ரம்யா அவனுக்கு மிக உன்னதமான பிரிவாற்று முத்தம் ஒன்றை வழங்கினாள்.ஒரே முத்தமல்லவா இந்த உலகத்தில் எல்லோராலும் பிரதி எடுக்கப் பட்டுக்கொண்டே இருக்கிறது..?உண்மை என்று எதுவுமற்று இருப்பதால் தானே முத்தம் எனும் பொய்க்கு அத்தனை மதிப்பு..?நன்றாகத் தெரியும் எல்லா முத்தமும் வெறும் ஸ்கோர் மாத்திரமே..வெறும் ஞாபகம் நாற்றம் எண்ணிக்கை.இதைத் தவிர்த்து எதுவுமே இல்லை.மல்லிகைப் பூச்செண்டால் மாறனைக் கட்டி வைக்கும் சாகசம்.ஓடுவதாவது ஒரே இடத்தில் கட்டுண்டு கிடப்பதற்குக் காரணம் அதற்குப் பின்னதான நீட்டிக்கப்பட்ட காமம் தவிர அன்பாவது காதலாவது ஹம்பக்.அவனுக்குத் தலை வலித்தது.

அனுமதிக்கப்பட்ட பாரம் மிக அளவானதாகவே ஒரு வாழ்க்கையை தண்டனைக்குப் பரிசென்ற பேரில் தந்திருப்பது தெரிந்த போது தான் முதன் முதலாக அவன் மோண்டானா செல்வதை ரத்து செய்யலாமா என்று நிசமாகவே யோசித்தான்.அதற்கு முன்பு வரை வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் இரண்டு பேர்களாக அவனே வசதியாய்ப் பிரிந்து கொண்டு தன்னையே வென்று தோற்று விளையாடிக் கொண்டிருந்தான்.இது அப்படி அல்ல.நிசம்.அடுத்த ஆயிரத்துச் சொச்ச நாட்களுக்கு அவன் மோண்டானாவில் இருந்தாக வேண்டும்.இந்தியா என்று அவன் அதுகாறும் விளையாடித் திரிந்து அலைந்த அத்தனை தெருக்களுக்கும் ஊர்களுக்கும் ஏன் அவனுக்குச் சொந்தப் ப்ரபஞ்சத்துக்கே ஒரே ஒரு பெயர் தான்.இந்தியா.இனி அவன் இருப்பது மோண்டானா அதாவது மலையூர் என்றால் சிரிப்பீர்கள்.அது தான் பெயர்.மோண்டானா என்றால் அது தான் அர்த்தம்.

அங்கே இருப்பதெல்லாம் ஒரு துவாரத்தின் உட்புறத் துகளளவு கூடப் பிரச்சினை இல்லை அவனுக்கு.அவன் பிரச்சினை புத்தகங்கள்.அவனால் புத்தகங்கள் நிரம்பாத வேறொரு அறையை வாழ்விடமாகக் கற்பனையே செய்ய முடியாது.டாமிட் ஐ வில் ஃபக் யூ என்று கண்ணாடியில் எழுதி வைத்திருப்பான்.யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று கேட்ட போது அப்பாவிடம் சொன்னான்.சுயத்தைப் புணர முடியாதுப்பா…சொல்லிக்கறது ஒரு ஆறுதல்.யார் பார்த்தாலும் என்ன.?அவங்கவங்க ரூபம் அவங்கவங்க சாபம் சரிதானே..?அவன் அப்பா சிரித்துக் கொண்டே போய்விட்டார்.
நல்ல அன்பான அப்பா.சின்ன வயதில் பய்யன் கேட்கிறானே என்று பொறுமையாக காலாக்னி ருத்ர உபநிஷத் திரிபுர உபநிஷத் எல்லாம் எளிமையாக விளக்கிச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.இவனை எதுக்கு சாமியாராக்கப் பாக்குறீங்க என்று அம்மா கூட பயந்தாள்.சட்டென்று அடுத்த வெகேஷனுக்கு பாப் ம்யூசிக் படிக்கப் போனான்.அப்பா சொன்னார்.நீ தடுத்திருந்தா தான் இவன் காணாமப் போயிருப்பான்.உள்ளே இழுக்குதா திகட்டுதான்னு பார்க்குறது தான் நம்ம வேலை..தடுக்கிறதில்லை.”

தொடர்ந்து புத்தகங்கள் இல்லாத ஒரு அறையைக் கற்பனை செய்து பார்க்க முடியாம அப்படியே உறைந்தபடி இருந்தவன் மெல்ல அதிலிருந்து வெளிப்பட்டான்.முதல் முறையாக ஒரு ஒற்றை முடிவை அவன் சப்தமாக அறிவித்தான்.யெஸ்.ஐம் கோயிங் டு மோண்டானா..ஐம் லீவிங்.யெஸ்ஸ்ஸ்…

தன் ஆதர்ச எழுத்தாளர்கள் சிலரிடமாவது ஒரு ஆசீர்வாதம் மாதிரி இந்த தன்னோட இடம்பெயர்தலை தெரியப்படுத்த விரும்பினான்.ஜெமோ அவனை மிகவும் உற்சாகமாக வழியனுப்பினார்.எஸ்.ராமகிருஷ்ணன் அவனுக்குத் தன் கையெழுத்திட்ட உறுபசி பிரதியைத் தந்தார்.அவன் தன் சேகரிப்பில் இருந்ததை ரம்யாவிடம் தந்துவிட்டுத் திரும்பக் கேட்க ஆரம்பிக்கும் போது தான் அவர்களுக்குள் ப்ரியத்தின் நடுக்கம் நிரம்பிய முதல் உரையாடல் நீண்ட தூரம் சாத்தியமாயிற்று.லவ் சிம்பலாகவே உறுபசி நாவலை அவன் அதன் பின் ரம்யாவிடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை.

மனுஷ்யபுத்திரனைப் பார்க்கப் போன போது அவர் வெளியே சென்றுவிட்டுத் திரும்ப வந்து கொண்டிருப்பதாக செல்பேசியில் தெரிவித்தார்.இவன் அவரது அலுவலக அறையில் அமர்ந்து தன் கிண்டிலில் எதோவொரு புத்தகத்தில் ஆழ்ந்தான்.

பெரும் புன்னகையோடு அவனை வரவேற்றவர் உற்சாகத்தோடு அவனை வழியனுப்பினார்.அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்ட அவன் இதை அடிக்கடி கவர் பிக்சரா வைப்பேன் ஸார் என்றான்.அவர் அவனிடம் நீங்களும் ஒரு கவிஞரா மாற வேண்டிய சமயம் வந்திடுச்சி என சிரித்தார்.

சும்மா ஓட்டாதீங்க ஸார் என்றதற்கு இல்லைங்க நான் சீரியஸா சொல்றேன்.உங்களை மாதிரி ஆளுக்கு வந்திட்டு அவ்ளோ பெரிய லோன்லினெஸ் அதும் வருஷக்கணக்கா வரும் போது என்ன பண்ணுவீங்க..?அதும் வேற லாங்குவேஜ் வேற கல்ச்சர் உள்ள கண்டிரில..?பாருங்க உங்களை அந்த லோன்லினெஸ் வந்திட்டு எப்படி எழுதவைக்குதுன்னு…”

தெர்ல ஸார் என்றபடி கூச்சத்தோடு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினான்.

ஒரு ப்ரியத்தின் பட்டியலைத் தயாரித்தான்.தன் வாழ்வின் தவிர்க்க முடியாத ஆதர்ச எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது புத்தகங்கள் என அந்தப் பட்டியலில் எத்தனையோ டெலீஷன்களுக்குப் பிறகு எண்பத்து மூன்று புத்தகங்கள் இடம்பெற்றன.அதாவது வெயிட் அதாவது எடை என்ற ஒரே ஒரு நோக்கில் எல்லாரது பட்டியல்களில் இருந்தும் சின்ன எடை குறைந்த புத்தகங்களை மாத்திரம் பட்டியலுக்குள் இடம் தந்தபடி அந்தப் பட்டியலின் புத்தகங்களோடு இன்னபிற வாழ்வாதார வஸ்துக்களுடன் மோண்டானா பறந்தான்.பெரிய அலகுள்ள பறவையின் குஞ்சுகள் என்று பொருள்படக் கூடிய க்ரோவ் என்ற மொழி பேசக்கூடிய ஒருவன் அவன் பெயர் மோஸி தான் அவனுடைய வீட்டின் உரிமையாளன்.அவன் நினைத்ததை விட வேறு மாதிரியான ஒரு வாழ்விடமாக மோண்டானா இருந்தது.அவனது அலுவலகம் நடந்து செல்லக் கூடிய தூரத்தில் இருந்தது.பனி பொழியும் காலங்களில் வொர்க் அட் ஹோம் என்ற பேரில் சோம்பேறிகளின் சொர்க்கவாசல் திறந்தளிக்கப் பட்டது.

மெல்ல அவன் அமெரிக்க வெம்மைக்கும் குளிருக்கும் தன்னைப் பொருத்திக் கொண்டான்.பத்துப் பதினைந்து தினங்களுக்கு அப்புறம் தான் தன் புத்தகப் பையைத் திறக்க வேண்டும் என்று முன்பே தீர்மானம் செய்தது தான்.ஆமாம் பின்னே அதாகப் போகிற பொழுது போகட்டும்.மெல்லக் கரங்கள் நடுங்கும் போது புத்தகத்தைத் தழுவினால் ஆயிற்று.

அந்த வாரத்தின் இறுதி 3 தினங்கள் விடுமுறை என்றறிந்த போது மோஸி அவனை ஊர் சுற்றிப் பார்க்க அழைத்துப் போனான்.அந்த ஊரின் பிரபலமான டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் சென்று தனக்குத் தேவையான சில பலவற்றை வாங்கிக் கொண்டு திரும்பும் போது இந்த வாழ்க்கை வேறு வண்ணம் என்றாலும் சற்றே ரசிக்கத் தொடங்கினாற் போலத் தோற்றமளித்தது அதே உற்சாகத்தோடு தன் அறைக்குத் திரும்பி மதியம் நெடு நேரம் உறங்கினான்.எழுந்தவன் சாக்லேட் பானத்தைப் பருகிக் கொண்டே சற்று நேரம் எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதாசன் இணையரின் பாடல்களைக் கேட்டான்.மெல்ல புத்தகப் பையைத் திறந்து எல்லா புத்தகங்களையும் நாவல் கதை கட்டுரை கவிதை என பிரித்து அடுக்கினான்.

கிண்டிலில் ஈ புக்ஸ் ஆக ஆங்கில நூல்களைப் படிப்பானே தவிர தமிழைத் தன் கரத்தில் காகிதமாய் ஏந்தினால் தான் தகும் அவனுக்கு.ஒரு போதும் கணிணியிலாவது கிண்டிலிலாவது வாசிப்பதை விரும்பவே மாட்டான்.
சம்பத்தின் இடைவெளி தஞ்சை பிரகாஷின் கரமுண்டார் வூடு எஸ்.ராவின் உறுபசி சாருநிவேதிதாவின் தேகம் பாவண்ணனின் பொம்மைக்காரி முருகேசபாண்டியனின் ஒப்பனைகளில் ஒளிர்ந்திடும் தமிழகம் ஜெமோவின் இரவு யுவன் சந்திரசேகரின் கானல் நதி மனுஷ்யபுத்திரனின் நீராலானது வண்ணதாசனின் அன்னியமற்ற நதி கலாப்ரியாவின் எல்லாம் கலந்த காற்று விக்கிரமாதித்யனின் ஆதி ரவிசுப்ரமணியனின் ஒப்பனை முகங்கள் பாம்பாட்டிச் சித்தனின் இஸ்ரேலியம் குட்டிரேவதியின் பூனையைப் போல அலையும் வெளிச்சம் அசோகமித்திரனின் மானசரோவர் தேவதச்சனின் இரண்டு சூரியன் என எல்லாவற்றையும் காகித வரிசைப்படி அடுக்கிக் கொண்டே வந்தவன் ஒரே ஒரு புத்தகம் முன்பாக சிவப்பு பேனாவின் டிக் மார்க் இல்லாததைக் கண்டு குழப்பமுற்றான்.என்னதிது ஒரு தடவைக்கு பலமுறை சரி பார்த்தோமே..எந்த புத்தகம் எடுத்து வரவில்லை எனப் பார்த்தான் ஏழாவது நூலாக நகுலன் கவிதைகள் என்று இருந்தது.அதாவது நகுலன் கவிதைகள் நூலை எடுத்து இந்தப் பைக்குள் வைக்கவே இல்லை.வைத்திருந்தால் அதன் அருகாமையில் சிவப்பு டிக் இருந்திருக்கும்.ஆக நகுலன் அவனோடு வரவில்லை.அவன் நகுலனை இந்தியாவிலேயே விட்டு விட்டு மோண்டானா வந்திருக்கிறான்.

யாருமற்ற
இடத்தில்
என்ன
நடந்துகொண்டிருக்கிறது..?
எல்லாம்

இந்தக் கவிதையை ராஜசேகர் பெரிதும் சிலாகிப்பான்.இவனுக்குக் கண்கள் ஏனோ நீர் முத்துக் கட்டியது.ஒரே ஒரு புத்தகம்.சொல்லப் போனால் கிண்டிலில் அதனை உட்படுத்துவது ஆகப்பெரிய காரணமில்லை.அதே போல இன்றைக்கு அனுப்பச் சொன்னால் எக்ஸ்பிரஸ் குரியரில் ஒரே வாரத்தில் வந்து சேர்ந்து விடப் போகிறது என்றாலும் அதெப்படி நான் நகுலனை மறந்தேன் என்று தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கினான்.என்னவோ தனக்குள் இருக்கிற பேய்மை தான் தனக்கும் நகுலனுக்கும் இடையிலான சொல்லிலடங்காத உறவின் இறுக்கத்தை கெடுப்பதற்கென்றே இப்படி ஒரு சதியை யதார்த்தம் போல உருவாக்கியது என்று நம்பினான்.அதெப்படி மறக்கும் என்று தனக்குள் சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டான்.அத்தனை புத்தகங்களையும் எடுப்பதும் விசிறி எறிவதும் எடுத்து அடுக்குவதும் ஆத்திரத்தில் கலைப்பதுமாக என்ன செய்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்வது என்று தெரியாமல் தள்ளாடினான்.

அன்றிலிருந்தே அந்த மோண்டானா என்ற ஊரை தன்னால் ஆன அளவுக்கு வெறுக்கத் தலைப்பட்டான்.ஒரு கட்டத்தில் தன்னால் எந்த விதத்திலும் மோண்டானாவை வெறுக்க முடியாமற் போவதை அறிந்துகொண்டான்.

அதற்கான பின்னணியைப் பற்றிக் கொண்டே அதன் இருள் ஆழத்துக்குப் பயணப்பட்டவன் தன்னைத் தானே நொந்துகொண்டான்.எந்த விதமான பிடிமானமும் இல்லாத போது ஒரு அன்னியத்தை வெறுப்பதற்கு முன் அதைக் கொஞ்சமாவது விரும்பியிருக்க வேண்டும் என்பது புரிந்தது.இனி விருப்பும் வெறுப்புமற்ற சமான வெற்றிடத்தில் இருந்தபடி மிச்சமிருக்கும் ஒப்பந்த காலத்தை முழுவதுமாகக் கழித்து விட்டு இந்தியா திரும்புவதன் மூலமாகவே தனக்கு வேண்டிய விடுபடுதல் கிடைக்க முடியும் என்பது புரிந்து அமைதியானான்.

வித்யுதா என்ற பேரிலான பார்ஸி ஒருத்தியும் மக்மல் லோதா என்ற பேரிலான ராஜஸ்தானியும் அவனது நிறுவனத்தில் கிடைத்த இந்திய சினேகங்களானார்கள்.எந்த விதத்திலும் சுவாரசியமற்ற பேணுதலைக் கொண்டு நகர்த்தினானே தவிர ஒரு இன்ச் கூட உறவின் இறுக்கத்தை நேர்த்தவே இல்லை.அவர்களும் மெல்ல அவனிடமிருந்து விலகிப் போனார்கள்.

அவனால் வாசிக்க முடியவில்லை.பாடல் கேட்கலாம் என்று ஆரம்பித்தால் இரண்டாவது பாட்டுக்குத் தலை வலித்தது.ஃபேஸ்புக்கைத் திறந்தாலே அதன் வித்யாசமற்ற வரவேற்பு அவனுக்கு எரிச்சல் ஊட்டியது.சொந்த ஊரில் இருந்தபோது எப்படி இருந்ததோ அதே போல மறுபடி இருப்பதாக அது பொய் சொல்லிற்று.அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை.ப்யூட்டி ஸ்பாக்கள் தொடங்கி ரெஸ்டாரெண்டுகள் வரைக்கும் அவனது தனிமையை அதிகரித்துத் தந்தனவே ஒழியக் குறைக்கவில்லை.எழுதலாம் என்று ஆரம்பித்தால் எங்கே தற்கொலைக் கடிதமாக அது வளர்ந்து விடுமோ என்று அச்சமாயிருந்தது.

கனவில் தன் வாசகங்களைப் பற்றிக் கொண்டு நகுலன் வரத் தொடங்கினார்.அவரது முகபாவங்கள் மிகவும் கோபத்தில் இருப்பவராகக் காட்டின என்றபோதும் அவனது கனவு யாராலோ ம்யூட் செய்யப்பட்டிருந்தாற் போல் நிசப்தமாக இருந்தது.அதன் உரையாடல்களை என்றில்லை இலை நகர்கிற ஒலியைக் கூட அவனால் கேட்க இயலவில்லை.மாறாக அவன் நகுலனிடம் தான் நினைக்கிறவற்றைப் பெருங்குரலில் பேச ஆரம்பித்தான்.அவனது குரலும் ஒலியற்ற நிசப்தப் பிண்டமாகவே கனவெங்கும் படர்வதைக் கண்டு வெறுப்பில் ஆழ்ந்தான்.தன் கனவின் திசையையாவது அதன் உள்ளடக்கத்தையாவது மாற்றிவிட இயலாதா என்று பல தினங்கள் உறங்காமலே வெகு நேரம் இருக்க ஆரம்பித்தான்.

நகுலன் சமீபத்திய கனவுகளில் மிகவும் ஆக்ரோஷமாக தோன்றினார்..எது அசல் எது நகல் என்றறிய முடியாத இரவின் தனிமைகளில் பாதி உறக்கத்தில் இந்திய நடுமைய மதிய நேரம் அது ரம்யா அவனைக் காதலும் தேடலுமாய் அழைக்கும் சந்தர்ப்பங்களில் திடீரென்று வாட்ஸ் அப் காலின் காணொளி மறைந்து போய் நகுலன் மிகக் கோபமான முகபாவத்தோடு வேறேங்கேயோ பார்க்கும் சித்திரம் வந்து அப்படியே இறுகி நிலைத்தது கண்டு வெருண்டு எழுந்து கொண்டான்.

அந்த நகரத்தில் நகுலன் என்ற பேரில் யாராவது இருக்கிறார்களா என்று ஒரு கேள்வி அவனுக்குள் தோன்றியது.அசரீரி போல எதுவுமில்லை.ஷண நேரத்தின் கீற்றுத் தனத்தோடு முழுக் கேள்வியும் அவனுக்குள் படரவே அந்த இரவின் மிச்ச நேரமெல்லாம் அந்தக் கேள்விக்கான விடையறிதலைப் பற்றிய யோசனையிலேயே கழியலாயிற்று.

.மோண்டானா அமெரிக்க பிரதேசங்களிலேயே சொற்பமான ஆசியர்கள் வசிக்கிற நகரம் என்ற முதல் தகவலே அவனை எரிச்சலூட்டியது.என்றாலும் தன் விடுமுறை தினங்கள் எல்லாம் வீதி வீதியாக மக்கள் கூடுகிற இடங்களுக்கெல்லாம் செல்ல ஆரம்பித்தான்.ஒரு தமிழ்ப்பெயரை விசாரிப்பதன் கடினமே எளிதுமாய் மாறிற்று.குறைந்த பட்சம் ஒரு தென் இந்திய முகத்தையாவது கண்டாலொழிய தன் கேள்வியை யாரிடமும் கேட்க வேண்டி இருக்காது.

அப்படியான இந்திய முகங்களை அறிய தேட சந்திக்க விசாரிக்க அவன் பெரும் அலைதல்களை நிகழ்த்தினான்.சற்றும் சமரசம் செய்து கொள்ளாமல் அந்த நகரத்தின் அத்தனை கடைத்தெருக்கள் தேவாலயங்கள் மக்கள் கூடும் சந்தைகள் வணிக வீதி தொடங்கி இடுகாடு வரைக்கும் எல்லா இடங்களையும் சென்று பார்த்தான்.எத்தனை முறை தோற்றாலும் எல்லா முறைகளுமே தான் தேடிய படி நகரும் போது எதிரே ஒருவரேனும் நகுலன் என்ற பேரில் எதிர்ப்பட்டு விடுவார் என்ற எதிர்பார்ப்புடனேயே அவன் அலைந்தான்.அப்படி எதிர்ப்பட்டால் நிகழ்த்த வேண்டிய புன்னகையைக் கூட சில பல முறைகள் தனக்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்தான்.
அந்த நகரத்தின் எல்லா சாலைகளையும் எல்லா மனிதமுகங்களையும் அலசிவிடுவது என்பதே ஒரு பெரிய கயிற்றைப் போல அவனைக் கட்டி இருந்தது.

வெள்ளைக்காரர்களில் சில முதியவர்களைக் கடக்கும் போது நகுலனின் சாயலில் ஓரிருவர் இருப்பதைப் போலத் தோன்றும்.தன் நம்பகத்தின் அபத்தத்தைக் காற்றால் வெட்டியபடி கடந்து செல்வான்.சில பொழுதுகளில் நகுலனின் அதே முகம் கொண்ட ஒருவரைத் தேடுவது கூட எளிதானதாக இருக்குமோ என்று தன் மனதினுள் எழுந்த குரலின் சாய்ஸை அவன் ஷட் அப் என்று அதட்டினான்.

அவனது ஒப்பந்த காலம் முழுவதும் ஒரு ஏஜன்சியின் ரகசிய உளவாளியைப் போல் வெகு தீவிரமாக ரகசியமாக கைவிடாத பற்றுடன் அந்தக் கேள்வியைத் தன் ஒரே லட்சியமாகக் கொண்டபடி அவன் அலைந்து கொண்டிருந்தான்.கிடைக்கவில்லை என்பதோ கிடைக்காது என்பதோ கிடைப்பது மிகவும் அபூர்வம் என்பதெல்லாமும் அறிவின் விளைதல்களாக மனம் கண்டடைகிற முன் ஒளிர்தல்கள் தானே..?அவன் குழந்தைப் பிடிவாதத்தோடு அலைந்தான்.தான் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பதைத் தன்னால் ஆன அளவு உறுதி செய்து கொண்டான்.

விடிந்தால் கிளம்பி லாஸ் ஏஞ்சலஸ் செல்லும் விமானத்தில் ஏற வேண்டியது அங்கு சென்ற பிறகு மூன்று மணி நேரத்தில் இந்தியா கிளம்பும் சர்வதேச விமானத்தில் ஏறினால் மறுபடி தன் உலகத்தின் எல்லாக் கதவுகளையும் திறந்துகொள்ளப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் எல்லா உடைமைகளையும் பேக் செய்து கொண்டு டாக்ஸியில் ஏறி அமர்ந்தான்.

விமான நிலையத்தின் டெர்மினலுக்கு சற்று முன்பாகவே இறங்கிக் கொண்டவன் இருபுறங்களிலும் பார்த்தபடியே அவனுக்குத் தேவையான நுழைவாயிலில் நுழைந்து டிக்கட் இத்யாதிகளை சரிபார்த்துவிட்டு உடைமைகளை செக் இன் செய்தான்.விமானத்தின் உட்புறம் தனக்கான ஸீட்டில் அமர்ந்தவன் கண்களை மூடிக் கொண்டான்.கொஞ்ச நேரம் ஹெட் ஸெட்டில் பாடல்களைக் கேட்டபடி இருந்தான்.மறுபடி கண்களைத் திறந்த போது விமானம் கிளம்புகிற முகாந்திரத்தில் அசைந்துகொண்டிருந்தது.

இவனுக்கு வலப்புறம் வந்தமர்ந்தவன் இந்தியமுகத்தைப் பார்த்ததும் இருவருமே புன்னகைத்தார்கள்.அந்த மனிதன் தன் பெயரைச் சொல்ல இவனும் பதிலுக்குச் சொன்னான்.சன்னலோரம் வெளியே பார்க்க விமானம் கிளம்புவதற்கான ஓட்டத்தில் இருந்தது.அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.குட்பை மோண்டானா.இந்த நகரத்தில் நகுலன் என்ற பெயரில் யாருமில்லை.