Category: கட்டுரை

ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் – லதா ராமகிருஷ்ணன்

download (21)

வணக்கம். அமெரிக்க எழுத்தாளர் JACK LONDON எழுதிய A PIECE OF STEAK என்ற சிறுகதை (குறுநாவல் என்றும் சொல்லலாம்) என் மொழிபெயர்ப்பில் புதுப்புனல் வெளியீடாக விரைவில் பிரசுரமாக உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையை கவிஞர் வைதீஸ்வரன் கொடுத்து என்னை மொழிபெயர்க்கச் சொன்னார். மொழிபெயர்த்து முடித்து ஒரு சிற்றிதழாளரிடம் அனுப்பிவைத்தேன். அது வெளியாகவேயில்லை. அதற்குப் பின், வீடு மாற்றும்போது தொலைந்துவிட்டது என்று அந்த இதழின் ஆசிரியர்─உரிமையாளரிடமிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. என் மொழிபெயர்ப்புப் பகுதியை நகலெடுத்துவைக்கவில்லை. இப்போது மீண்டும் மொழிபெயர்த்து முடித்தேன். ஒருவகையில் இதுவும் நன்மைக்கே என்று தோன்றுகிறது.

குத்துச்சண்டைக் களத்தில் சாம்பியனாக விளங்கிய ஒருவர், அந்த நாட்கள் போய்விட்ட நிலையில், அந்த இளமை போய்விட்ட நிலையில், இன்று பந்தயத்தில் தோற்போம் என்று நிச்சயமாகத் தெரிந்தும் தோற்பவனுக்குக் கிடைக்கும் சிறு தொகைக்காக குத்துச்சண்டைப் பந்தயத்தில் கலந்துகொள்வார். பந்தயத்தின் போதும், அதற்கு முன்பும் பின்பும் அந்த குத்துச்சண்டை வீரரின் மனவோட்டத்தை பிரதிபலிக்கும் கதை இது. இதைப் படித்தபோதும், மொழிபெயர்த்தபோதும் எனக்குப் பிடிபடாத பல வாழ்க்கைத்தத்துவங்களை கதையிலிருந்து கவிஞர் வைதீஸ்வரன் அடையாளங்காட்டியபோது பிரமிப்பாக இருந்தது.

வரவிருக்கும் இந்தச் சிறு மொழிபெயர்ப்பு நூலுக்கு நான் எழுதியுள்ள சிறு ‘என்னுரை’ இது. வழக்கமாக ‘சொல்லவேண்டிய சில’ என்று தலைப்பிடுவது வழக்கம். ஒரு மொழிபெயர்ப் பாளரின் வாக்குமூலம் என்றும் இதைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

1980களில் அநாமிகா என்ற பெயரில் சிறுகதைகளும், ரிஷி என்ற பெயரில் கவிதைகளும், ல.ரா என்ற பெயரில் கட்டுரைகளும் எழுத ஆரம்பித்தவள் தற்செயலாகத்தான் மொழிபெயர்ப்பாளராக மாறினேன். நான் ஆங்கில இலக்கிய படித்திருந்ததும் இலக்கிய ரசனை கொஞ்சம் இருப்பதாக அடையாளங்காணப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் பணி செய்துவந்த அலுவலகத்தில் சமூகப் பிரக்ஞை மிக்க தொழிற்சங்கத்தினர் புதிதாகப் பணிக்கு சேருபவர்களில் சிந்திக்கத் தெரிந்தவர்களை, எழுத்தாற்றல் மிக்கவர்களை எல்லாம் எளிதில் அடையாளங்கண்டுவிடுவார்கள். அவர்களிடம் தாம் நம்பும் சித்தாந்தங்களி னூடாய் சமூகப் பிரக்ஞையை விதைக்கத் தொடங்குவார்கள். நட்பு பாராட்டுவார்கள். அதே சமயம், அவர்களுடைய சிந்தனைப்போக்கிலிருந்து சற்றே விலகி சிந்தித்தால் உடனே ‘அமெரிக்க அடிவருடி’ என்ற பட்டம் கிடைத்துவிடும்! அப்படி ஆத்மார்த்தமாகவே நம்புகிறார்களா, அல்லது ஆளை ஒடுக்கும் ஆயுதமாக அந்த அடைமொழியைப் பயன்படுத்து கிறார்களா என்பது இன்றுவரை தொடரும் கேள்வி. அதையெல்லாம் மீறி நட்பு பாராட்டு வதும் அக்கறை காட்டுவதும் இயல்பாக நடந்துகொண்டிருக்கும்.

1990களில் பாட்னாவில் பெண்களுக்காக நடத்தப்பட்ட மாநாட்டில் பார்வையாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மொழிபெயர்ப்பின் தேவையை உணரச்செய்த தருணங்களில் அதுவும் ஒன்று. பெண் முன்னேற்றத்திற்காகக் களப்பணியாற்றிவரும் எழுத்தறிவற்ற பெண்கள் தங்கள் அனுபவங்களை இந்தியிலும் தமிழிலும் மலையாளத்திலும் கன்னடத்திலும் எடுத்துச்சொல்ல அவற்றை சம்பந்தப்பட்ட பிராந்திய மொழிகளும் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்தவர்கள் அமர்வுகளின் இடைவேளைகளின் போது மொழிபெயர்த்து (முக்கியமாக சாராம்சத்தை எளிய மொழிவழக்கில்) மற்றவர்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். அங்குதான் மொழிபெயர்ப்பின் சமூகரீதியான பயனைப் புரிந்துகொள்ள முடிந்தது. (அத்தகைய மொழிபெயர்ப்புப் பணியே அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்வதாகச் சிலரிடம் செயல்படுவதையும் பின்னர் பலமுறை பார்க்க நேர்ந்திருக்கிறது.)

இலக்கியத்திலும் அப்படித்தான். நான் மதிக்கும் நட்பினர் தமிழில் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய எழுத்தாக்கங்களாக, புனைவு─–புனைவல்லாதது என இரண்டு பிரிவிலும் தருவதை அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் தமிழில் மொழிபெயர்த்துத் தர ஆரம்பித்தேன். எழுத்தாளர்கள் கோபிகிருஷ்ணனும் ஸஃபியும் ANTI-PSYCHIATRYஐப் பற்றி என்னிடம் கொடுத்த மொழிபெயர்ப்புப் பிரதிகளை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் மூலம்தான், அவர்கள் தந்த பிரதிகளின் மூலம்தான் உளவியல் சார்ந்த விஷயங்கள், அரசியலை நான் தெரிந்துகொண்டேன்.

அப்படித்தான், சில நண்பர்கள் மூலம் உலக இலக்கியப் படைப்புகள், போக்குகள் சிலவும் அறிமுகமாயின. அப்படி ஒருவர் மூலம் அறியக் கிடைத்த உலகத்தரமான படைப்பை இன்னொருவர் மொழிபெயர்க்கச் சொல்லும்போது அதை ஆர்வத்துடன் செய்திருக்கிறேன். ஆனால் அப்படிச் செய்தது முதலில் அந்தப் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய நட்பினருக்கு உவப்பாக இருப்பதில்லை என்பதை (சம்பந்தப்பட்ட படைப்பை, படைப்பாளியைப் பற்றி அவர்களால் எழுதப்படும் கட்டுரைகளில் என் மொழிபெயர்ப்பைப் பற்றி எந்தக் குறிப்பும் இருக்காது!) போகப்போகப் புரிந்துகொள்ள நேர்ந்திருக்கிறது.

ஒரு படைப்பாளியின் படைப்புவெளியை முழுவதும் வாசித்து அறிந்திருந்தால் மட்டுமே அந்தப் படைப்பாளியின் எழுத்தாக்கங்களை செம்மையாகமொழிபெயர்க்க முடியும் என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படும்போது, ‘அப்படியெனில் என்னிடம் ஏன் அந்த மொழிபெயர்ப்புப் பணியைத் தந்தார்கள், அந்த உலகத்தரமான படைப்பாளியை முழுவதுமாக நான் வாசித்திருப்பதான பாவனையை நான் கைக்கொள்ளவேண்டும், கைக்கொள்வேன் என்று எதிர்பார்த்தார்களா அல்லது என்னை sort of errand boy(or girl, to be more precise!) என்ற ரீதியில் மட்டுமே பணித்தார்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

சிலர் தாங்கள் அறிமுகப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த படைப்புகள், படைப்பாளிகள் மேல் அத்தனை உடைமையுணர்வோடு நடந்துகொள்வதையும் பார்த்திருக்கிறேன்.

வேறு சிலர் அந்நியமொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கப்படும்போது மட்டுமே மூலமொழிப் படைப்புக்கு நியாயம் செய்ய முடியும் என்று மேடைக்கு மேடை முழங்கக் கேட்டிருக்கிறேன். ஒருவகையில் அது உண்மையே என்றாலும் இன்னொரு வகையில் அதுவோர் reductionist theory ஆகச் செயல்படுவதையும் காணமுடிகிறது.

என்னளவில், மொழிபெயர்ப்பின் மூலம் நான் கற்றுக்கொள்கிறேன் என்பதே உண்மை. நான் மதிக்கும் சிலர் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டியதாக ஒரு பிரதியை என்னிடம் தரும்போது அப்படித் தருபவர்மேல் எனக்குள்ள நம்பிக்கை, அபிமானம் காரணமாக அந்தப் பணியை மேற்கொள்வது வழக்கம்.

சில பிரதிகளை மொழிபெயர்க்க மறுத்ததும் உண்டு. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண் ஒருத்தி அதில் ஆழ்மனதில் பரவசமடைகிறாள் என்பதாய் விரியும் ஒரு பிரதியை மொழிபெயர்த்துத்தரும்படி என்னிடம் கேட்கப்பட்டபோது அதைப் படிக்காமலேயே மறுத்திருக்கிறேன். ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாய் அமையும் வசைச்சொல், மாற்றுத்திறனாளியை மதிப்பழிக்கும் வசைச்சொல்லை அப்படியே மூலமொழியிலிருந்து மொழிபெயர்ப்பதை கூடுமானவரை தவிர்த்திருக்கிறேன். அது சரியா, தவறா என்ற கேள்வி மனதில் எழுந்துகொண்டேயிருந்தாலும்.

மொழிபெயர்ப்பாளர் சங்கத்தில் அங்கம் வகித்தபோது மொழிபெயர்ப்பின் அரசியல் குறித்து நிறைய விவரங்களை அறிந்துகொள்ள முடிந்தது. போலவே, அத்தகைய ‘அரசியல்’ அங்கும் நிலவியதையும் பார்க்கமுடிந்தது.

ஒரூமுறை தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்பட இயக்குனர் ஒருவர் இளம் நடிகை ஒருவர் மேடையில் ஆங்கிலத்தில் பேசியதற்கு மிகக் கடுமையாக அந்தப் பெண்ணைக் கண்டித்தார். ஆனால், அந்த மனிதர் எல்லா மேடைகளிலும் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசாமல் இருக்கவேமாட்டார். ஆங்கிலம் என்பதுகூட அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தந்திரமாக மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையையும் அதிலுள்ள அரசியலையும் (both literal and symbolic) நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய, கவனப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

நம்முடைய கண்ணோட்டங்கள், கோட்பாடுகளை கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் ‘பீச்சாங்கை வீச்சாக’ப் புறக்கணித்து, கேலியாகப் பார்த்து, எள்ளிநகையாடி ‘ஆனால், இவர்களின் உழைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்ற உத்தியோடு எனக்கு மொழிபெயர்ப்புப் பணிகளைத் தருபவர்களையும், என் மொழிபெயர்ப்புகளை வெளியிடக் கேட்பவர்களையும் உரிய நேரத்திலோ, அல்லது காலதாமதமாகவோ அடையாளங்கண்டு அவர்களுக்கு என் மொழிபெயர்ப்புகளைத் தர மறுத்திருக்கிறேன்.

சிறுபத்திரிகை ஒன்றில் மொழிபெயர்ப்புக்கென தரப்பட்ட பிரதிகளையெல்லாம் செய்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில் ஒருமுறை அதன் ஆசிரியர் முன்வைத்த கருத்து ஒன்றை மறுதலித்து நான் அனுப்பிய எதிர்வினை பிரசுரிக்கப் படவில்லை. (அதைப் பிரசுரித்து என் நிலைப்பாடு சரியில்லை என்று அம்பலப்படுத்தி யிருந்தால் அது வேறு விஷயம்.) மீண்டும் அதே கேள்வி எனக்குள் – Am I an errand boy?(or errand girl, to be more precise?) அதற்குப் பிறகு அதே சிற்றிதழ்க்காரர் சில பிரதிகளை மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டபோது “நான் உங்கள் எடுபிடியல்ல” என்று காட்டமாகக் கூறி காலத்திற்கும் அவருடைய விரோதியானேன். (அது குறித்து கவலை ஏதுமில்லை.)

கவிஞராக இருப்பதை விட, கதாசிரியராக இருப்பதை விட மொழிபெயர்ப்பாளராக இயங்குவதில் சீரான வருமானம் கிடைக்க வழியுண்டு என்று தெரிந்துகொள்ள நேர்ந்ததெல்லாம் சமீபகாலமாகத்தான். 2005இல் அரசுவேலையை விட்ட பிறகு, பணியிலிருந்தபோதே நிறைய விடுப்பு எடுத்திருந்ததால் முழு ஓய்வூதியம் கிடைக்காதுபோக, கிடைத்தது வீட்டுவாடகைக்கே போதாது என்ற உண்மையின் பின்னணியில் இலக்கியமல்லாத நிறைய பிரதிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வருமானமீட்டுவது தொடங்கியது. இலக்கு வாசகர்களையும், கையிலுள்ள பிரதியில் இலக்குவாசகர்களிடம் எதை முதன்மையாகக் கொண்டுசெல்லவேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டே நம் மொழிநடை அமையவேண்டும் (குறிப்பாக, புனைவல்லாத பிரதிகளை மொழிபெயர்ப்பதில்) என்பது புரிந்தது.

1980களின் பிற்பகுதியில் எழுத்தாளர் க.நா.சுவின் குறிப்பொன்றை குமுதம் இதழில் பார்த்து அவருடைய கையெழுத்துப்பிரதிகளை எழுதித்தருவதிலும், அவர் சொல்லச் சொல்ல எழுதுவதிலும் என்னாலான உதவிகளைச் செய்துதரும் ஆர்வத்துடன் அவரைப் போய்ப் பார்த்தேன். அப்போது மயிலையில் தங்கியிருந்ததால் முடிந்தபோதெல்லாம் இரவுப்பணி முடித்த கையோடு காலையில் அவருடைய வீட்டிற்கும் செல்வேன். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த புதினம் அவதூதரை தமிழில் மொழிபெயர்க்குமாறு என்னிடம் கொடுத்தபோது என் மொழித்திறனைப் பார்ப்பதற்காக அப்படிச் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். என் மொழிபெயர்ப்பை செம்மை செய்து தன் பெயரில் வெளியிட்டுக்கொள்ளப்போகிறார் என்றே நினைத்தேன். சரியாக மொழிபெயர்க்க வராத வார்த்தைகளை முடிந்த அளவு தமிழில் மொழிபெயர்த்து மூல வார்த்தைகளை அவற்றின் அருகிலேயே அடைப்புக்குறி களுக்குள் தந்தேன். ஆனால் அந்த மொழிபெயர்ப்பை என் பெயரிலேயே நான் தந்த மாதிரியே பிரசுரித்துவிட்டார் க.நா.சு. அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கில வார்த்தைகள் தரப்பட்டிருந்தது அரிசியில் நெல் நெரடுவதுபோல் இருப்பதாக திரு.கோவை ஞானி அவர்கள் குறிப்பிட்டது சரியே என்று உணர்ந்தேன். மேலும், இப்படி சரிவரத் தெரியாத வார்த்தைகளையும் அடைப்புக்குறிகளுக்குள் தருவதன் மூலம் மொத்த புத்தகமுமே இப்படித்தான் தோராயமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது போலும் என்ற எண்ணம் வாசக மனங்களில் ஏற்பட்டுவிடும். ’இனி நம் மொழிபெயர்ப்பை இறுதிவடிவமாகத்தான் எவரிடமும் தரவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

சிறந்த படைப்பு என்று நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டு மொழிபெயர்ப்புக்குத் தரப்பட்ட பிரதிகள் எனக்கு ஒரு வாசகராக ஏமாற்றமளித்த தருணங்களும் நிறையவே உண்டு. இருந்தும், முடித்துக்கொடுத்துவிடுவேன்.

ஒரு படைப்பின் மிகத் தரமான இரண்டு மொழிபெயர்ப்புகள் எதிரெதிர் அர்த்தங்களைத் தருவதாக அமையக்கூடுமென்பதை அன்னா அக்மதோவாவின் ஒரு கவிதைக்கான இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள் உணர்த்தின. அது குறித்து என் அன்னா அக்மதோவா கவிதை மொழிபெயர்ப்பு நூலில் எழுதியிருக்கிறேன்.

சில சமயம் ஒருவருக்கு ஒரு விஷயம் குறித்த ஆழ்ந்த அறிவு இருக்கும். அதை மொழிபெயர்ப்பதற்கான போதிய மொழிப்புலமை இருக்காது. எனக்கு சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து எதுவுமே தெரியாது. அம்மாதிரி சமயங்களில் மொழிபெயர்த்தவர் நான் என்று குறிப்பிடாமல் அந்தப் பிரதிகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்ததுண்டு. சிநேகத்திற்காகவும், சன்மானத்திற்காகவும்.

ஆனால், ஒரு சமயம் தன் பெயரைக் குறிப்பிட்டு ஒரு பதிப்பகம்(அந்தப் பெயரை மறந்துவிட்டேனே என்று பின்னர் பலமுறை வருந்தியிருக்கிறேன்) முனைவர் பட்ட ஆய்வேட்டை செய்துதரச் சொல்லி கேட்டபோது மேற்குறிப்பிட்ட மாதிரி மொழிபெயர்க்கச் சொல்வதாய் எண்ணினேன். அடுத்து, ஆய்வு சம்பந்தமான புத்தகங்களையெல்லா அனுப்பித்தருவதாக மறுமுனை கூறியபோதுதான் அந்த ஆய்வேட்டையே தயாரித்துத் தரச் சொல்கிறார்கள் என்பது புரிந்தது. அதிர்ந்துபோய், ’அது தவறல்லவா. இப்படி முனைவர் பட்டம் வாங்குகிறவர் மாணாக்கர்களுக்கு எப்படி சீரிய முறையில் பாடம் கற்பிக்க முடியும் என்று கேட்டதற்கு ‘இத்தகைய தார்மீக நியாயக் கேள்விகளையெல்லாம் கேட்கக்கூடாது” என்று எனக்கு அறிவுரை சொன்னார்கள்! அந்த வேலையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் எனக்கும் நஷ்டமில்லை, அவர்களுக்கும் நஷ்டமிருந்திருக்காது!

தமிழ்க்கலாச்சாரத்தை உலக அரங்கில் பீடமேற்றப்போவதாக சொல்லிக்கொள்ளும் வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவ்வப்போது தரும் அ-புனைவுப் பிரதிகளை ஆங்கிலத்தில் செய்துதருவேன். ஆரம்பத்தில் நான் கேட்கும் நியாயமான ஊதியத்தைத் தந்தவர் ஷார்ட்ஸ் அணிந்த தமிழ்ப்பெண்ணை மணந்துகொண்ட பிறகு நான் அதிகமாக சன்மானம் கேட்கிறேன் என்று தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். தமிழ்ப்பெண் ஷார்ட்ஸ் அணிவது பற்றி எனக்கு ஒன்றுமில்லை. ஆனால், தனக்குத் தெரிந்த அரைகுறை தமிழில் அந்தப் பெண் என் மொழிபெயர்ப்பைக் குதறுவது தாளமுடியாமல் போயிற்று. அதைவிட மோசம், ஒரு நாள் முழுக்க அவர்கள் வீட்டில் மொழிபெயர்த்தபடி, மொழிபெயர்ப்பதை கணினியில் தட்டச்சு செய்தபடி இருந்த என்னிடம் ‘தமிழ்க்கலாச்சாரக் காவல’ரான அந்தப் பெண் ஒரு வாய் தண்ணீர் வேண்டுமாவெனக் கேட்கவில்லை. பிறகொரு சமயம் மொழிபெயர்ப்புக்கு நான் கேட்பது அதிகம் என்று சொன்னபோது, ’என் வேலைக்கான ஊதியத்தை நான் தான் நிர்ணயம் செய்யவேண்டும், நீங்களல்ல, அந்நியநாட்டு நன்கொடைகள், மான்யத்தொகை எல்லாம் வாங்குவது போதாதென்று உங்களிடம் பயில வருபவர்களிடம் இத்தனை அதிகக் கட்டணத்தொகை வாங்குவது நியாயமா என்று என்னாலும் கேட்கமுடியும்” என்று கூறி என்றைக்குமாய் அவர்களிடமிருந்து விலகிக்கொண்டேன்.

ஒருமுறை இறக்குமதி செய்யப்பட்ட பிரம்மாண்டமான காரில் வந்திறங்கிய அரசியல் பிரமுகர் எனக்குப் பரிச்சயமான எழுத்தாளர் பரிந்துரைத்ததாகச் சொல்லி அவர்களுடைய கட்சிசார் கையேடு ஒன்றை ஆங்கிலத்தில் செய்துதரச் சொன்னபோது மரியாதை நிமித்தம் முதலில் செய்துகொடுத்து பின் ‘நான் அரசியல் கட்சிசார்ந்த மொழிபெயர்ப்புவேலைகளை தொடர்ச்சியாக செய்ய இயலாது’ என்று தெரிவித்துவிட்டேன். கோடியில் புரள்பவர்களிட மிருந்து எனக்கான மீதித்தொகை ரூ.2000 இன்றுவரை வந்தபாடில்லை.

இலக்கிய நண்பரொருவரின் பெயரைச் சொல்லி (அந்த நண்பருக்கு இந்த ஆசாமியைத் தெரியவே தெரியாது என்று பின்னர் தெரியவந்தது) குழந்தைகளுக்காகத் தான் எழுதிய கதைகளடங்கிய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ஒருவர். மொத்தம் ஆறாயிரம் ரூபாய் கேட்டு ரூ.3000 முன்பணமாகப் பெற்று மொழிபெயர்க்கத் தொடங்கினேன். வெகு சாதாரணமான கதைகள். ‘நகைச்சுவை என்ற பெயரில் ‘குழந்தை மூத்திரம் குடித்தது, பீயைத் தின்றது’ என்றெல்லாம் எழுதியிருக்கிறீர் களே, இது Hygiene senseக்கு எதிரானதல்லவா என்று அவரிடம் கேட்காமலிருக்க முடியவில்லை. ”எப்படி மாத்தினா நல்லாயிருக்கும்னு நினைக்கிறீர்களோ அப்படியே செய்யுங்கள் அம்மா” என்று சொன்னார். அப்படி வெகு சில மாற்றங்களை மட்டுமே செய்தேன். மின்னஞ்சலில் மொத்தக் கதைகளையும் மொழிபெயர்த்து அனுப்பிவைத்த பின் மீதி மூவாயிரத்தைக் கேட்டால் ‘உங்கள் மொழிபெயர்ப்பை என் பப்ளிஷர் பிரசுரிக்க மாட்டேனென்கிறார்” என்றார். நீங்கள் கேட்டீர்கள், நான் மொழிபெயர்த்துக்கொடுத்தேன். இதில் பப்ளிஷர் எங்கிருந்து வந்தார்?” என்று கேட்டதற்கு “நீங்க என்னம்மா என் கதைகளை மொத்தமா மாத்திப்பிட்டீங்களே” என்று மீதிப் பணத்தை தர மனமில்லாத தன் கயமையை மறைக்க நீதிமானாய் என்னைக் குற்றஞ்சாட்டினார்!

சக எழுத்தாளர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மருத்துவ நூல் ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொடுத்தேன். நான் கேட்ட தொகை ரூ 8000. மருத்துவர் ரூ 5000 தந்தார் என்று அந்த சக எழுத்தாளர் கூறியபோது அவர் யார் என் வேலைக்கான ஊதியத்தை நிர்ணயிக்க, ரூ.8000ற்கு அவர் ஒப்புக்கொண்டதால்தானே செய்தேன் என்று சொன்னபோது “நான் வேறுமாதிரி மொழிபெயர்த்திருப்பேன்” என்றவிதமாய் அந்த சக எழுத்தாளர் கூறக்கேட்டு திகைப்பாயிருந்தது. அந்த மருத்துவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது நீங்கள் நேரில் வந்து என்னோடு அமர்ந்து மொழிபெயர்ப்பில் திருத்தம் மேற்கொள்ளவில்லையே என்றார். ”நான் உங்கள் செயலாளரல்ல, மொழிபெயர்ப் பாளர்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியும், மொழிபெயர்த்தும் இருக்கும் திரு. பசுமைக்குமார் என்னை அழைத்துக்கொண்டுபோய் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் சேர்த்துவிட்டார். கடந்த எட்டுவருடங்களுக்கும் மேலாக வீட்டிலிருந்தபடியே அந்த நிறுவனத்திற்கு மொழிபெயர்ப்பு, பிழைபார்ப்பு, சுயமாய் குழந்தைக்கதைகள் எழுதுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுவந்தேன். உரிய ஊதியமும் மரியாதையும் கொடுத்து என்னை நடத்திய அந்த நிறுவனத்திற்கு என் நன்றி என்றும் உரியது. இப்போது அதிலிருந்தும் விலகிவிட்டேன். வீட்டிலிருந்தபடியே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட எண்ணம். பார்க்கலாம்.

தமிழிலிருந்து ஆங்கிலத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் 20க்கு மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ள, நவீன தமிழ்க்கவிதைகளை மூன்று தொகுப்புகளாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள, சங்கப் பெண்கவிஞர்களின் கவிதைகளை, பாரதியாருடைய கவிதைகளின் பெரும்பகுதியை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள, சமூக-இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் ஏழெட்டுத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள, உலகப்புகழ் பெற்ற நூலான டாக்ரர் மணி பௌமிக்கின் THE CODE NAME GODஐ மிக நேர்த்தியாக தமிழில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனிடம். அவருடைய படைப்புகளை பிரதியெடுக்கும், கணினியில் தட்டச்சு செய்துதரும் பணியில் இயங்கிவருகிறேன். உரிய சன்மானமும் மரியாதையும் கிடைக்கிறது. ஒவ்வொரு சொல்லையும் பார்த்துப்பார்த்துச் செதுக்கி அயராது மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும், தன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குக் கிடைக்கும் சன்மானத்தை மூல ஆசிரியருக்கே தந்துவிடும், வலது கை தருவது இடது கைக்குத் தெரியாத அளவில் பலபேருக்கு பலவிதங்களில் உதவிவரும் டாக்டர். கே.எஸ்-இன் சமூகம் சார், இலக்கியம் சார், மொழி சார் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

வேறு சில நிறுவனங்களுக்கும் சிறுவர்களுக்கான புத்தகங்கள் எழுதிக்கொடுத்திருக்கிறேன்; மொழிபெயர்த்துக்கொடுத்திருக்கிறேன்,. குழந்தைகளுக்கு எழுதப்படும், மொழிபெயர்க்கப்படும் கதைகள், பிற எழுத்தாக்கங்களில் மொழிப்பிரயோகம் சார்ந்து, கருத்து சார்ந்து நிறைய மாற்றங்கள் தேவை என்பதை உணரமுடிந்தது. எடுத்துக்காட்டாக, எழுபது வயதான பணியாளரும் பெரும்பாலான சிறுவர் கதைகளில் ’அவன்’, ’நீ’ என்பதாக ஒருமையிலேயே குறிப்பிடப்படுகிறார். மாற்றுத்திறனாளிகள் நகைச்சுவைப்பொருளாக்கப்படுகிறார்கள், தலை யில் வலிக்க வலிக்கக் குட்டுதல், தடுக்கிவிழச் செய்தல் போன்ற வன்முறையார்ந்த செயல் களெல்லாம் வேடிக்கையான நிகழ்வுகளாக முன்வைக்கப்படுகின்றன.

எட்டு, பத்து வருடங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கிய மாணவிகளுக்கு மொழிபெயர்ப்புக்கான பட்டயப்படிப்பு வகுப்புகள் ஒரு வருடகாலம் எடுக்க நேர்ந்தது. சரளமாக ஆங்கிலத்தில் பேசவேண்டும், அதற்கு நான் உதவ வேண்டும் என்பதே அந்த மாணவிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், துறை ஆசிரியர்கள் அப்படிச் செய்தால் அது தங்கள் பணியை விமர்சனத்துக்குள்ளாக்கும் என்று கூறினர். நான் வைத்த தேர்வில் ஒரு மாணவி இருபது பக்கங்கள் விடைகள் அளித்திருந்தாள். அந்த அளவுக்கு அவளுக்கு பாடங்கள் புரிந்திருந்தன. ஆனால் ஒரு வாக்கியம் கூட விளங்கிக்கொள்ளக்கூடிய சரியான ஆங்கிலத்தில் அமையவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. நான் அப்பழுக்கற்ற ஆங்கிலப் புலியொன்றும் அல்ல. இருந்தும் மொழிபெயர்ப்போடு ஒவ்வொரு வகுப்பிலும் ஆரம்பத்தில் 20 நிமிடங்கள் போல் ஆங்கில மொழியைப் பேசுவதற்கும் அவர்களுக்கு என்னாலான அளவு கற்றுத்தந்தேன்.

அந்தக் கல்லூரியில் பணிபுரிந்த ஒரு வருடத்தில் மொழிபெயர்ப்பு தொடர்பான ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் படிக்கக் கிடைத்தன. வெளிநாட்டவர்களும், வட நாட்டவர்களும் எழுதியவை. அவற்றில் தரப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுகள்கூட நமக்குப் பிடிபடாம லிருக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த நூல்களில் விவாதிக்கப்பட்டிருந்த மொழிபெயர்ப்பு சார்ந்த பல கருத்தியல்கள், கோட்பாடுகள் மொழிபெயர்க்கும் சமயம் என் மனதிலும் ஏற்பட்டவையே. ஆனால், அவை மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளாக ஆவணப்படுத்தப் பட்டுள்ள விவரம் தெரிந்திருக்கவில்லை. மொழிபெயர்ப்பு வழிமுறைகள் ஒன்றிற்கு மேற்பட்டவைகள் இருப்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.

தமிழைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பாளர்களின் அணுகுமுறைகள், இயங்குமுறைகள் போன்றவற்றைப் பேசும் நூல்கள் வெகு சிலவே உள்ளன. எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர் அமர்ந்த்தாவின் முயற்சியில் தமிழில் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுவரும் சிலர் அது குறித்த தங்கள் அனுபவங்களைப் பற்றி எடுத்துரைக்கும் கட்டுரைகளடங்கிய தொகுப்புகள் இரண்டு – மொழிபெயர்ப்புக் கலை – இன்று, மொழிபெயர்ப்பு – தற்காலப் பார்வைகள் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) வெளியாகியுள்ளன. பூரணச்சந்திரன் அவர்களுடைய நூல் ஒன்று வெளியாகியுள்ளது. நானும் நான் சார்ந்துள்ள பார்வையற்றோர் நன்னல நிறுவனமான வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் நிறுவனத் தலைவர் அமரர் ஜெயராமன் (பார்வையிழப்பை மீறி கல்வி பயின்று பல வருடங்கள் தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்) அவர்களும் இணைந்து மொழிபெயர்த்த இணைய இதழ் மியூஸ் இந்தியாவின் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரைகளின் தமிழாக்கம் (மொழிபெயர்ப்பின் சவால்கள் – சந்தியா பதிப்பகம்). இன்னும் சில வெளிவந்திருக்கக்கூடும். எனில், இதுபோன்ற கட்டுரைத் தொகுப்புகள் இன்னும் பல வரவேண்டும்.

கோட்பாடுகளின் அடிப்படையில் மொழிபெயர்க்கவியலாது என்பதும் போகப்போகத் தெரிந்தது. ஒவ்வொரு பிரதிக்கேற்பவும் நம் மொழிபெயர்ப்பு அணுகுமுறை மாறுவதும் உண்டு. ஒரு பிரதியை மொழிபெயர்த்து முடிக்க கைவசமுள்ள கால அவகாசத்தைப் பொறுத்தும், ஒரு பிரதியை மொழிபெயர்ப்பதன் நோக்கம், மற்றும் இலக்குவாசகர்களைப் பொறுத்துகூட மாறும்.

புனைவிலக்கியங்களைப் பொறுத்தவரை, மூலப்பிரதியில் மொழிநடைக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தால், அல்லது மூலப்பிரதி ‘complex’ நடையில் எழுதப்பட்டிருந்தால் மொழிபெயர்ப்பில் அந்த நுட்பத்தைக் கொண்டுவர முயற்சி செய்வேன். பிரதியை ஒரேயடியாக எளிமைப்படுத்திவிடமாட்டேன். மேலும், சிலர் மூலப்பிரதி சாதாரணமான நடையில் எழுதப்பட்டிருக்க மொழிபெயர்ப்பில் அதை மேம்படுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பார்ப்பதும், அது மொழிபெயர்ப்பாளரின் பொறுப்பு என்பதாய் கோருவதும் உண்டு. என்னளவில், வட்டார வழக்குகள் அதிகமாக உள்ள பிரதியை மொழிபெயர்ப்பது மிக மிகக் கடினமானது. அதேபோல், உரையாடல்களையும், அவற்றிற்குரியதாக தமிழிலிருந்து எந்தப் பேச்சுவழக்கை அது மொழிபெயர்ப்பாளரின் வேலையல்ல. அதேபோல், உரையாடல்க ளையும் அவற்றிற்குரியதாக தமிழிலிருந்து எந்தப் பேச்சுவழக்கை எடுத்தாள்வதுஎன்று பிடிபடாமல் செந்தமிழிலேயே (வழக்கமாகக் கையாளும் வரிவடிவத் தமிழில்) மொழிபெயர்க்க நேர்கிறது.

ஒரு மொழிபெயர்ப்பாளராக மூல ஆசிரியரிடம் எனக்கு ஒருவித love-hate relationsip தான் நிலவும். மூலப்பிரதி மிக நன்றாக இருந்தால், அடப்பாவி மனுஷா (அல்லது மனுஷீ!) என்னமா எழுதியிருக்கிறார் – நம்மாலெல்லாம் இப்படி எழுத முடிவதேயில்லையே’ என்ற பொறாமை. அல்லது, சாதாரண எழுத்தாகப் புலப்பட்டால், ‘சே, வருமானத்திற்காக, அல்லது, நண்பர்கள் கேட்டுக் கொண்டார்களேயென்று இந்த ‘திராபை’ எழுத்தையெல்லாம் மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறதே’ என்ற எரிச்சல். அதேசமயம், மொழிபெயர்க்கும்போது மூலப்பிரதியிலிருந்து கொஞ்சம் விலகியே இயங்கவேண்டியிருக்கும். அதிலேயே அமிழ்ந்துவிட்டால் வேலை நடக்காது!

மூலப்பிரதியை மொழிபெயர்ப்பதில் மொழிபெயர்ப்பாளர் தன் விருப்பம்போல் liberty எடுத்துக்கொள்வது மிகவும் தவறு. அதேசமயம், சில இடங்களில் மொழிபெயர்ப்பாளர் தன் discretionஐ பயன்படுத்தவேண்டியதும் அவசியமாகிறது. மூலப்பிரதியில் ஒரு வரி தரும் உட்பொருளை அழுத்தமாக எடுத்துக்காட்ட மொழிபெயர்ப்பாளர் தனது மொழியாக்கத்தில் ஓரிரு வார்த்தைகளைக் கூடுதலாகச் சேர்க்கவேண்டிவரலாம். வாக்கிய அமைப்புகளை இலக்குமொழிக்கேற்ப மாற்றவேண்டிவரலாம். இதையெல்லாம் குற்றமாகப் பேசினால் எந்த மொழிபெயர்ப்பாளரும் இயங்கவே முடியாது. எடுத்துக்காட்டாக, இந்தக் கதையில் Youth will be served என்ற வரி முத்திரை வாசகமாக வரும். இதை ‘இளமைக்கே எல்லாம்’ என்று மொழிபெயர்த்திருக்கிறேன். இது சரியில்லை என்று இந்த வாசகத்திற்கான தங்கள் மொழிபெயர்ப்பை முன்வைப்பவர்கள் உண்டு. அத்தகையோரிடம் வாதாடிப் பயனில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் வார்த்தைத் தேர்வும், அவற்றை வரிசைப்படுத்தலும் தான் ஒரு மொழிபெயர்ப்பாளரின் தனி அடையாளம். அதில் அர்த்தப்பிழை இருந்தால் சுட்டிக்காட்டலாம்.. ஆனால் ‘நான் சொல்லும் வார்த்தைகளை, நான் சொல்லும் விதமாய் வரிசைப்படுத்தினால்தான் நீங்கள் நல்ல மொழிபெயர்ப்பாளர் என்று சிலர் கூறுவதைக் கேட்கநேரும்போது வேடிக்கையாகவுமிருக்கும்; வருத்தமாகவும் இருக்கும்.

பழமொழிகள், ஒரு மொழியில் புழங்கும் சொற்றொடர்கள் ஆகியவற்றை இன்னொரு மொழிக்குக் கொண்டுவரும்போது அவற்றின் உள்ளர்த்தம், குறிப்பைப் புரிந்துகொண்டு அவற்றையே சரியாக இலக்குமொழியில் தரவேண்டும் என்ற ஒரு பார்வையும், நம் மண்ணுக்குஏர்றதான பழமொழிகள், சொற்றொடர்களைப் பயன்படுத்தவேண்டும் என்றும் இருவேறு பார்வைகள் புழக்கத்திலிருக்கின்றன. உமர் கயாம் (ஆங்கில மொழிபெயர்ப்பில்) A Book Of Verse என்று சொல்லியிருந்ததை ‘கையில் கம்பன் கவியுண்டு’ என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் படித்தபோது, கம்பன் மீது அன்பும் மரியாதையும் இருந்தாலும், ‘எனக்குப் பிடித்த கவிதைத்தொகுப்பைத் தீர்மானிக்க இவர் யார்?’ என்று கோபம் வந்தது.

பிறமொழிப் படைப்புகளைத் தமிழில் கொண்டுவரும்போது, ’அதைத் தமிழ்ச்சூழல் மயமாக்கவேண்டும்’ என்றவொரு கருத்தும், ’அப்படிச் செய்யலாகாது, அந்தப் படைப்புகளில் புனைகதையம்சங்களோடு அந்நிய மண் சார்ந்த வாழ்வியல் விவரங்களையும் நாம் தெரிந்துகொள்கிறோம் – மொழிபெயர்ப்பைத் தமிழ்ச்சுழல்மயமாக்கினால் அது முடியாமலாகி விடும், அதற்கு நாம் தமிழில் எழுதப்பட்ட புனைவிலக்கியங்களைப் படித்தால் போதுமே’ என்ற பார்வையும் உண்டு.என்னைப் பொறுத்தவரை இந்தப் பார்வைபொருள்பொதிந்ததே. அதே சமயம், புனைவிலக்கியம் என்பதே பிரதானமாக மானுட வாழ்க்கைக்கூறுகளை- Unity in Diversity and Diversity in Unityஐ அடிக்கோடிட்டுக் காட்டுவன என்பதால், வெறும் அந்நிய மண் சார்ந்த விவரக்குறிப்புகள் நிரம்பியதாக மட்டும் ஒரு மொழியாக்கம் இலக்குமொழியில் அணுகப்படலாகாது; நின்றுவிடலாகாது. அதைத் தாண்டி, ‘வாழ்வோட்டம்’ இயல்பாக விரவியிருப்பதும் அவசியம்.

பிறமொழியிலான ஒரு புனைவிலக்கியத்தை அது முன்வைக்கும் வாழ்வீர்ப்பு காரணமாய் நான் (அல்லது என் நட்பினர்) தமிழில் மொழிபெயர்க்க விரும்பும்போது (மொழிபெயர்க்கும்படி என்னைக் கேட்டுக்கொள்ளும்போது) அந்தப் பிரதியில் சில பொருட்கள், தின்பண்டங்கள் அன்னபிற எனக்குத் தெரியாதவையாக இருந்தால், அவை பிரதியின் கதையோட்டத்திற்கு அத்தியாவசியமானதாய் அமைந்திருந்தால் அவற்றிற்கான சரியான தமிழ்வார்த்தையை பல்வேறு வழிகளில் கண்டுபிடிக்கப் பிரயத்தனப்பட்டு, அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சரியான தமிழ்ப்பதத்தைப் பயன்படுத்துவேன். அப்படியில் லாமல் வெறுமே வந்துபோகிறதென்றால் அத்தனை மெனக்கெட மாட்டேன். எடுத்துக் காட்டாக, மூலப்பிரதியில் ஒரு இனிப்புப் பண்டம் குறித்த பெயர் அல்லது குறிப்பு இடம்பெறுகிறதெனில், அதைத் தின்று கதாநாயகன் இறந்துபோகிறான் என்பதுபோல் அது கதைநகர்வுக்கு முக்கியக்காரணியாக இருந்தால் அது என்ன மாவில், என்ன எண்ணெய்யில் செய்யப்பட்ட தின்பண்டம், வெல்லத்தில் செய்யப்பட்டதா, சர்க்கரையில் செய்யப்பட்டதா என்றெல்லாம் பார்த்துப் பார்த்து மொழிபெயர்ப்பேன். கதாநாயகனும் அவனுடைய காதலியும் ஒரு சிற்றுண்டிசாலையில் அதை சாப்பிட்டுவிட்டுப் போவதாக போகிறபோக்கில் சொல்லப்பட்டிருந்தால், வெறுமே ‘ஒருவகை இனிப்புப்பண்டத்தைச் சாப்பிட்டார்கள்’ என்று எழுதிவிடுவேன். இந்த discretion ஒரு மொழிபெயர்ப்பாளருக்குத் தேவை என்று நினைக்கிறேன்.

என் மொழிபெயர்ப்பில் நம்பிக்கை வைத்து சிலர் தந்திருக்கும் ஐந்தாறு நூல்களை மொழிபெயர்த்து முடிக்கவேண்டும். பின், தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை மட்டுமே மேற்கொள்ளவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். இதில் வாழ்க்கைச்சூழல் சார், உரையாடல் சார் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் குறைவு என்று தோன்றுகிறது.

ஒரு மொழிபெயர்ப்பில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால், மூல ஆசிரியரை மதிப்பழிப்பதில் மொழிபெயர்ப்பாளருக்கு ஏதோ ஆதாயம் கிடைப்பதுபோல், மொழிபெயர்ப்பாளருக்கு உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது சரியில்லை. ஒருவருடைய மொழிபெயர்ப்பில் குறை காண்பதற்கு வாசகருக்கும் ஒரு தகுதி வேண்டும். அப்படியில்லாமல் சிலர் சகட்டுமேனிக்கு மொழிபெயர்ப்பாளர்களை மட்டந்தட்டுவதும், மதிப்பழிப்பதும் வருத்தமளிக்கிறது. இத்தகையோர், பெரும்பாலும், பெருந்தொகையை மான்யமாக, நன்கொடையாகப் பெற்று உலக இலக்கியங்களை மொழிபெயர்ப்பவர்கள், தங்களுடைய மொழிபெயர்ப்பே அப்பழுக்கற்றது என்று வலியுறுத்துபவர்கள், பெரிய பதவிகளில் இருக்கும் எழுத்தாளர்கள் – மொழிபெயர்ப்பாளர்கள், பிறர் கைகளால் மொழிபெயர்ப்பு செய்பவர்கள், போன்றவர்களிடம் ‘வேலை காட்டுவதில்லை. அவர்களுடைய மொழிபெயர்ப்பைத் தங்கள் திறனாய்வுக்குட்படுத்த முன்வருவதில்லை என்பதையும் பார்க்க முடிகிறது.

நான் மொழிபெயர்த்திருக்கும் படைப்புகளைப் பொறுத்தவரை, நானறிந்தவரையில் அவற்றின் தமிழ்வெளியீட்டுரிமையை இன்னும் யாரும் வாங்கவில்லை. எனவே, யார் வேண்டுமானாலும் அவற்றை மொழிபெயர்ப்பு செய்து வெளியிடலாம். அதேசமயம், அவர்கள் சரிபார்த்துக்கொள்ளவும், மேம்படுத்தவும் ஏற்கனவே ஒரு மொழிபெயர்ப்பு இருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இவ்வாறு ஒருவரின் மொழிபெயர்ப்புப் பிரதியை ஓராண்டுகாலம் கையில் வைத்திருந்து பின் அதை அடிப்படையாகக்கொண்டு வேறொருவர் மொழிபெயர்த்த அதே கதைகளை வெளியிட்ட கதைகளும் தெரிந்ததே. தனிநபர் integrity இல்லையென்றால் என்னவேண்டுமானாலும் அக்கிரமம் செய்து மனசாட்சி உறுத்தலில்லாமல் வாழமுடியும்.

சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக்-இல் நான் மொழிபெயர்த்த THE ROYAL GAME என்ற குறுநாவலின் மொழிபெயர்ப்பு குறித்து ஒருவர் கிசுகிசு பாணியில் மதிப்பழித்துப் பேசியிருந்தார். சதுரங்க விளையாட்டு குறித்த தனது ஆய்வின்(?) ஒரு பகுதியாக இலக்கியத்தில் அது குறித்து எழுதப்பட்டிருப்பதைத் தேடியபோது என்’சொதப்பலான’ மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்ததாகவும், சதுரங்க விளையாட்டின் அரிச்சுவடி கூட தெரியாதவர்கள் ஆங்கிலம் ஒரே காரணத்திற்காக இத்தகைய இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்க்க முற்படுவது அராஜகம் என்றவிதமாகவும் கருத்துரைத்திருந்தார். அவர் மேற்கோளாகக் காட்டியிருந்த பத்தி என் மொழிபெயர்ப்பே மோசமானது என்பதை உட்குறிப்பாகச் சுட்டுவதாக இருந்தது. ஆனால், அவர் மேற்கோள் காட்டியிருந்த ஆங்கில மொழிபெயர்ப்பும் நான் மொழிபெயர்க்க எடுத்துக்கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பும் வேறுவேறு. அதை நான் சுட்டிக்காட்டியபோது தன் தவறுக்காக வருத்தம் தெரிவிக்க மனமில்லாமல் ‘இந்த ஒரு சொற்றொடரை நீங்கள் சரியாக மொழிபெயர்த்திருக்கிறீர்களா என்பதைச் சொல்லுங்கள், பிறகு மேற்கொண்டு பேசலாமே” என்று (ஏதோ நான் அவருடைய அங்கீகாரத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பதைப்போல்) அவர் எழுதியிருந்ததைக் கண்டு what an abject insolence என்று எண்ணிக்கொண்டேன். மொழிபெயர்த்து பத்து வருடங்களுக்கு மேலான நிலையில் என் கையெழுத்து பிரதி கைவசமில்லாத நிலை. தவிர, இத்தகையோரை ‘ஊக்குவிக்கும்’ பெருந்தலைகளும் இங்கே உண்டு என்பதை நான் அறிந்தேயிருக்கிறேன்.

என்னுடைய மொழிபெயர்ப்பு அப்பழுக்கற்றது என்று நான் ஒருபோதும் பறையறிவித்துக் கொண்டதில்லை. ஏனெனில் அதில் உண்மையிருக்க வழியில்லை. He என்ற எளிய வார்த்தை அவனா, அவரா என்று திக்குமுக்காடவைக்கும் தருணங்களே அதிகம். சில வார்த்தைகளின் குறிப்பர்த்தம் தெரியாதுபோய்விடும். விபூதி அல்லது திருநீறு என்றே எனக்குத் தெரிந்திருந்த நிலையில் ஒருவர் நீறு என்று எழுதியிருந்ததை, அது அச்சுப்பிழை போலும் என்று நானாக எண்ணிக்கொண்டு நீரு என்பதாய் Water என்று மொழிபெயர்த்துவிட்டேன்!

ஒரு உலகத்தரமான இலக்கியப்படைப்பை மொழிபெயர்க்கும் உரிமையை வாங்கும் நிறுவனங்கள் அதன் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளையும் கொண்டுவர முன்வரலாம். அப்படிச் செய்தால் மொழிபெயர்ப்பு தொடர்பான தெளிவு, ஒப்புநோக்கல் வாசகருக்கு வாய்க்க வழியுண்டு.

உலகக்கவிதைகள் குறித்து உரையாற்ற நான் அழைக்கப்பட்டபோதெல்லாம் எனக்கு உலக இலக்கிய அறிவு கிடையாது என்று மறுத்தேயிருக்கிறேன். இல்லாததை இருப்பதாகச் சொல்வதும், அந்த ‘பாவ்லா’வையே சதாசர்வகாலமும் நடை உடை பாவனைகளில் தரித்துக்கொண்டிருப்பதும் மிகவும் கொடுமையான விஷயம்; அது எனக்கு அவசியமுமில்லை.

சிற்றிதழாளர் ஒருவரிடம் ஒருமுறை ‘உங்கள் பத்திரிகையில் நீங்கள் வெளியிடும் உலக இலக்கியங்களைத் தெரிவுசெய்வதில் யார் உங்களுக்கு உதவுகிறார்கள் என்று கேட்டபோது, ”எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று பழிக்கிறீர்களா” என்று கடுங்கோபத்துடன் கேட்டார். “எனக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால், உலக இலக்கியம் தெரியாதே” என்றேன். ஒரு பத்திரிகையை நல்ல முறையில் நடத்த உதவும் நண்பர்கள், சக இலக்கியவாதிகளை அடையாளங்காட்டுவதில் எதற்குத் தயக்கம் என்று இன்றளவும் எனக்கு விளங்கவில்லை.

மொழிபெயர்ப்பு ஒரு கூட்டுமுயற்சி என்று சிலர் சொல்லக் கேட்டதுண்டு. அதில் உண்மையும் இருக்கலாம். எனில், என்னளவில் மொழிபெயர்ப்பைத் தனியாகத்தான் செய்கிறேன். ஓரிரு வார்த்தைகளில் உதவிய ஒருவர் வேறொருவரிடம் ‘லதாவுக்கு நான் தான் முழுக்க முழுக்க மொழிபெயர்த்துக்கொடுத்தேன் என்று கூறியதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்!

மொழிபெயர்ப்புப் பிரதிகளுக்கு சீரிய முறையில் Editing தேவை என்று சிலர் சொல்வதிலும் உண்மை இருக்கலாம். அதேசமயம், அந்த ‘எடிட்டர்’ அதற்கான தகுதிவாய்ந்தவரா என்பதும் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படவேண்டியது. ஒருமுறை நான் மொழிபெயர்த்த பிரதியை (அந்த நூல் இன்னும் வெளிவரவில்லை) ‘எடிட்’ செய்தவர் ஒரு திருத்தமாய் ’ஓர்மை’ என்ற வார்த்தையை என் பிரதியில் இடம்பெறச் செய்திருந்தார். ஆனால், நான் அந்த சொல்லைப் பயன்படுத்தியதேயில்லை என் மொழிபெயர்ப்புகளில். அது என்னை என் மொழிபெயர்ப்பி லிருந்தே அந்நியமாக உணரச் செய்தது.

ஒவ்வொரு படைப்பையும் போதிய கால அவகாசம் எடுத்துக்கொண்டு (இரண்டு மூன்று வருடங்கள் அல்லது எட்டு பத்து வருடங்கள்) மொழிபெயர்க்கும்போது மட்டுமே மூலப்படைப்புக்கு நியாயம் செய்ய முடியும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுவதுண்டு. (நல்ல மொழிபெயர்ப்பு வரவேண்டும் என்ற அக்கறையோடும், ஒரு வித reductionist approach ஆகவும்). அத்தனை நேரமெடுத்துக்கொண்டு செய்யும் வசதிவாய்ப்புகள் எல்லா மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அமைவதில்லை. அந்த அளவு நேரமெடுத்துக்கொள்வதா லேயே ஒரு மொழிபெயர்ப்பு தரமானதாக அமைந்துவிடும் என்று உறுதியாகச் சொல்வதற்கு மில்லை. ஒவ்வொருவரின் வேலைசார் ஒழுங்குமுறையும், தேவைகளும் ஒவ்வொரு மாதிரி. சில சமயம் ஒரு வேகமும் உத்வேகமுமாய் ஒரேவீச்சில் செய்துமுடித்தால்தான் உண்டு என்ற நிலை ஏற்படும். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் ஒரு மொழிபெயர்ப்பாளரின் இருமொழிப் புலமையோடு அவருடைய தனிநபர் சார் integrityயும் சேர்ந்தே அவருடைய மொழிபெயர்ப்பின் தரத்தை உறுதிசெய்கிறது.

என்னுடைய தமிழ்மொழிபெயர்ப்புகளை மீள்பிரசுரம் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். பத்து பதினைந்து வருட இடைவெளியில் அவற்றை மீண்டும் வாசிக்கும்போது மொழிபெயர்ப்பு இன்னும் மேம்பட்டிருக்கலாமே என்று தோன்றுகிறது. அதற்காக, அவற்றின் மொழிபெயர்ப்பையோ, மொழிபெயர்ப்பு மேம்படுத்தல் பணியையோ மீண்டும் மேற்கொள்ளும் மனநிலையுமில்லை. ஆங்கிலத்தில் தமிழ்ப் படைப்புகளை மொழியாக்கம் செய்வதில் முனைப்பாக ஈடுபட விருப்பம். அதில் சூழல் சார், உரையாடல் சார் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. சமீபகாலமாக ஃபேஸ்புக் நட்பினரின் கவிதைகளை ஒரு வாசகராகத் தெரிவுசெய்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து என் முகநூல் பக்கத்தில் பதிவேற்றிவருகிறேன். நிறைவாக இருக்கிறது. இங்கும் ‘மூலப் பிரதியின் உயிரை மொழிபெயர்ப்பு கொண்டுவரவில்லை’ என்று ஒற்றை வரியில் கருத்துரைத்து (அந்த வரியையும் ஆங்கிலத்தில் தப்பும்தவறுமாக எழுதுபவர்களும் உண்டு!) மொழிபெயர்ப்பாளரை விட தம்மை பெரிதாகக் காண்பிக்கப் பிரயத்தனப்படுகிறவர்கள் உண்டுதான். ஆனால், ஒப்பீட்டளவில் அத்தகையோர் குறைவு என்று தோன்றுகிறது.

மொழிபெயர்ப்பாளர் மேல் குறைந்தபட்ச மரியாதையும், மொழிபெயர்ப்பு நன்றாக அமையவேண்டும் என்ற அக்கறையும் கொண்டு ஒரு மொழிபெயர்ப்பிலுள்ள குறைகளை அடையாளங்காட்டுபவரின் தொனி வேறு; மொழிபெயர்ப்பாளரை மட்டந்தட்டுவதே குறியாக குறைகளைச் சுட்டிக்காட்டுபவரின் தொனி வேறு. எனவே, இந்த இரண்டிற்குமான மொழிபெயர்ப்பாளரின் எதிர்வினையும் வேறாக இருப்பதே இயல்பு.

நான் மொழிபெயர்த்து புதுப்புனல் வெளியிட்ட ராஜ விளையாட்டு குறுநாவலில் சதுரங்க விளையாட்டு கதைப்போக்கோடு இரண்டறக் கலந்த அம்சமல்ல. ஆனால், A PIECE OF STEAK என்ற இக்கதையில் குத்துச்சண்டை கதையோட்டத்தோடு இரண்டறக் கலந்த அம்சம்.எனக்கு குத்துச்சண்டை பற்றி எதுவுமே தெரியாது. தொலைக்காட்சிப்பெட்டி வழியே அதைக் காணநேரும்போதெல்லாம் கண்ணைத் திருப்பிக்கொண்டு விடுவேன். ஆனாலும் இந்தக் கதையை மொழிபெயர்க்க விரும்பினேன். மொழிபெயர்த்தேன். குத்துச்சண்டை தொடர்பான என்னை நிறையவே தடுமாறவைத்தன. அவற்றையெல்லாம் தாண்டி, அல்லது, அவற்றினூடாக இந்தக் கதை நம் முன் விரிக்கும் வாழ்க்கையின் தான் அதற்குக் காரணம். குத்துச்சண்டை வீரர்களை நகமும் சதையுமான சக மனிதர்களாய் நம் கண்முன் நிறுத்தும் கதை இது.

இந்தக் கதையின் கதாநாயகன் குத்துச்சண்டைவீரன். குத்துச்சண்டைக்களத்தில் அவன் எப்படி இயங்குகிறான் என்பது இதில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவல்ல கதையின் அடிநாதம். குத்துச்சண்டை நகர்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக இந்தக் கதையைப் படிக்கவேண்டிய தேவையில்லை. அதற்கு எத்தனையோ அ-புனைவு நூல்கள் உள்ளன. எனக்கு குத்துச்சண்டை பற்றி எதுவுமே தெரியாது. ஆனாலும் இந்தக் கதையை என்னால் ரசித்துப் படிக்க முடிந்தது. இந்தக் கதை எனக்குப் பிடித்தது. எனக்குத் தெரியாத, நான் முரடனாக மட்டுமே பார்த்திருந்த குத்துச்சண்டைவீரர்களின் வாழ்வை, அதன் சோகங்களை, சிரமங்களை என்னால் இந்தப் புனைவிலக்கியத்திலிருந்து அறியமுடிந்தது. பல வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைதீஸ்வரன் இந்தக் கதையைப் பற்றி எடுத்துக்கூறி மொழிபெயர்க்கும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க இதை மொழிபெயர்த்தது எனக்கு மனநிறைவைத் தருகிறது. ஜாக் லண்டனின் பிற படைப்புகளை நான் படித்ததில்லை; குத்துச்சண்டை வீரர் யாரையேனும் சந்தித்து குத்துச்சண்டை குறித்த எல்லா விவரங்களையும் அறிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றவில்லை. அதைச் செய்ய முயலவில்லை.

‘A Piece of Steak கதை’ நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. Googleஇல் படிக்கக் கிடைக்கிறது. ஆங்கிலம் அறிந்தவர்கள் ஆங்கிலத்திலேயே படித்துக்கொள்வதே மேல். மொழிபெயர்ப்பில் குறைகாணவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஆங்கில மூலத்தை அருகில் வைத்துக்கொண்டு என் தமிழ் மொழிபெயர்ப்பை அலசியாராய முற்படும் அறிவுசாலிகளிடம் (பலநேரங்களில் இத்தகையோர் வேறு சில இலக்கியம்-மொழி சார் பெருந்தகைகளின் விசுவாசிகளாக இந்த ‘அகழ்வாராய்ச்சி’யனைய அலசல்பணியை மேற்கொள்வதும் நடக்கிறது.)

நான் வேண்டிக்கொள்வதெல்லாம் இதுதான்: இந்தக் கதையை நான் சரியாக மொழிபெயர்க்கவில்லை என்று தோன்றினால் யார் வேண்டுமானாலும் இதை இன்னும் திறம்பட மொழிபெயர்க்கலாம். இதுவரை யாரும் இந்தக் கதையி மொழிபெயர்பு உரிமையை வாங்கியதாகத் தெரியவில்லை. ஒரு பிரதிக்கு இரு மொழிபெயர்ப்புகள் இருப்பதில் தவறில்லை. அதன் மூலம் மொழிபெயர்ப்பு சார்ந்த ஒப்புநோக்கல், புதிய பார்வைகளைப் பெற வழிகிடைக்கும். அதே சமயம், ஏற்கெனவே மொழிபெயர்ப்பு பிரதி இருக்கும் மூலப்படைப்பின் இரண்டாம் மொழிபெயர்ப்பு முதல் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக்கொண்டு அதைவிட மேம்பட்டதாய் அமையும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் நாம் மறக்கலாகாது.

Stefan Zweigஇன் Amok என்ற குறுநாவலுக்கு என் தமிழ் மொழிபெயர்ப்பில் ஆட்கொள்ளப் பட்டவன் என்று தலைப்பிட்டேன். அதற்கான காரணங்களை நூலின் ‘சொல்லவேண்டிய சில’ பகுதியில் விளக்கியிருக்கிறேன். இதை தவறு என்றும் அத்துமீறல் என்றும் சொல்பவர்களிடம் என்ன சொல்வது? எதற்குச் சொல்வது என்ற ஆயாசமே மிஞ்சுகிறது.

A PIECE OF STEAK என்ற தலைப்பை ஒரேயொரு இறைச்சித்துண்டு என்று தமிழில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒரேயொரு என்பது தவறு என்று சிலர் வாதிடக்கூடும். குத்துச் சண்டைக்குப் போகுமுன் ஒரு இறைச்சித்துண்டு சாப்பிடக்கிடைத்தால் நன்றாயிருக்குமே என்று ஏங்கும் கதாநாயகனுக்கு அது கிடைக்காமல் போகும் மனவலியை அழுத்தமாக எடுத்துக்காட்ட ஒரேயொரு என்ற வார்த்தையே பொருத்தமானது என்று தோன்றியது. A PIECE OF STEAK என்பதில் மாட்டு இறைச்சியையும் குறிக்கும், வேறுவகை இறைச்சியையும் குறிக்கும்(எலும்புத்துண்டோடு இணைந்த தசை) என்று ஆங்கில அகராதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு இறைச்சித்துண்டு என்று தமிழ்ப்படுத்தினேன். ஒருவேளை குத்துச்சண்டை வீரர்கள் மாட்டிறைச்சியை சாப்பிட்டுத் தங்கள் உடல்வலுவை உறுதிப்படுத்திக்கொள்வது வழக்கமாக இருக்கலாம். எனக்குத் தெரியாது. இந்தக் கதையின் நாயகன் டாம் கிங் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன். முன்னாள் சாம்பியன் என்றால் என்னவென்று சொல்வது – அவரா, அவனா? முன்னாள் சாம்பியன்களுக்கு இப்போது என்ன வயதிருக்கும்? முப்பதுகளில் இருப்பார்களா? நாற்பதுகளில்? அல்லது ஐம்பதுகளில்? முன்னாள் சாம்பியன் என்பதால் ‘அவர்’ என்று குறிப்பிடுவது டாம் கிங்கை அதிக வயதானவராகக் காட்டிவிடுமோ? கதையின் நாயகனான அவர் மீது நாம் கொள்ளும் அன்பையும், அன்பின் வழியான உரிமையையும் மட்டுப்படுத்துவதாகிவிடுமோ? என்ற கேள்வி மொழிபெயர்ப்பை முடிக்கும் வரையில் தொடர்ந்துகொண்டேயிருந்தது.

இந்தச் சிறுகதை (பெரிய சிறுகதை!) மொழிபெயர்ப்பில் இன்னும் எத்தனையோ கேள்விகள், சந்தேகங்கள், சவால்களை எதிர்கொள்ளும்படியாயிற்று. என்னால் முடிந்தவரை – ஒரு வாசகர் நிலையில் என்னைப் பொருத்திப் பார்த்தும் –அவற்றை நேர்மையாய், நேர்த்தியாய் அணுகியிருக்கிறேன் என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.

வார்த்தைத் தேர்வுகளில்தான் ஒரு மொழிபெயர்ப்பாளரின் தனி அடையாளம் இருக்கிறது என்று தோன்றுகிறது. மொழிபெயர்ப்பை STANDARDIZE (ஒருபடித்தானதாக) ஆக்குவது அபத்தம், அசாத்தியம் என்று தோன்றுகிறது. அடுத்தடுத்து மொழிபெயர்க்க நேரும் ஒரே கவிதையின் இரண்டு மொழிபெயர்ப்புகள் ஒன்றாக இருப்பதில்லை. ஒரு சமயத்தில் ஒரு கவிதையை அல்லது சில வரிகளை ஒருவிதமாக மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும்போதே அவற்றின் வேறுவகையான மொழிபெயர்ப்புவடிவங்களும் மனதில் தோன்றியவண்ண மேயிருக்கும். மனசில்லா மனசோடு ஒரு மொழிபெயர்ப்பை மட்டும் வைத்துக்கொண்டு மனதிலோடும் மற்ற மொழிபெயர்ப்புகளைப் புறக்கணித்து முன்னேறியாகவேண்டும்.

விருதுக்கு அனுப்பலாகாது என்ற என் வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டு என் மொழிபெயர்ப்புகளை தொடர்ந்து வெளியிட்டுவரும் புதுப்புனல் பதிப்பக நிறுவனர்கள் ரவிச்சந்திரன் – சாந்திக்கு என் என்றுமான நன்றி உரித்தாகிறது.

மொழிபெயர்ப்புகளைப் படிக்க விரும்பும், முன்வரும் வாசகர்களுக்கு என் பணிவான வேண்டுகோள் இதுதான்: மூலமொழி தெரிந்தால் அதிலேயே படிப்பதே மேல். ஆங்கிலம் தெரிந்தால் ஆங்கிலத்திலேயே படிப்பதே மேல். அவ்வாறில்லாமல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு படைப்பை வாசிப்பவர்கள், மொழிபெயர்ப்பாளர்களிடம் குறைகாண்பதையே நோக்கமாகக் கொண்டு அதை அணுகவேண்டாம், அப்படி அணுகுபவர்களின் அடியொற்றி அந்தப் படைப்பை வாசிக்க முற்படாதீர்கள். இதன் மறுமுனையாக, மொழிதெரியாத வாசகர்கள் தானே என்ற அலட்சியத்தோடு மூலப்படைப்பை தன் மனம்போன போக்கில் ஒரு மொழிபெயர்ப்பாளர் கையாளக்கூடாது என்பதையும் குறிப்பிட வேண்டும். குறைந்தபட்ச நம்பிக்கையுடனாவது ஒரு மொழிபெயர்ப் பாளரை அணுகுங்கள். அதற்கு அவர் உரியவராக இருக்கவேண்டும் என்பதும் இங்கே உட்குறிப்பு.

ஒரு மொழிபெயர்ப்பாலருக்கு அவசியம் இருக்கவேண்டிய அடிப்படை integrityயோடு இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறேன். என் மொழிபெயர்ப்பு வாசகர்களுக்கு நிறைவைத் தந்தால் அதற்கு மூலப்படைப்பின் தரமும் ஆழமுமே காரணம். நிறைவான வாசிப்பனுபவத்தைத் தரவில்லையென்றால் அதற்குக் காரணம் மொழிபெயர்ப்பாளராகிய எனது போதாமையே என்று தெரிவித்துக்கொள்கிறேன். இது தன்னடக்கமல்ல என்றும் தெளிவுபடுத்திவிடுகிறேன்.

நன்றி

தோழமையுடன்

லதா ராமகிருஷ்ணன்

11.1.2018

நம் பயணிப்பும் பலமூட்டும்… / ந.பெரியசாமி

images (7)

புத்தாண்டு துவக்கத்தின் 6-ம் நாளில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகிலுள்ள ஏர்வாடி எனும் கிராமத்தில் மணல்வீடு இலக்கிய வட்டத்தோடு களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் இணைந்து மக்கள் கலை இலக்கிய விழாவை நிகழ்த்தினர். விழாவில் என்.டி.ராஜ்குமார், நக்கீரன், அழகியபெரியவன், எம்.ஏ.சுசீலா, ஓவியர் ஷாராஜ், சௌந்திர சுகன் இதழுக்கும் ஆளுமைகளின் பெயரால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மற்றும் அப்பகுதியில் வாழும் 35க்கும் மேற்பட்ட கூத்துக் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பரிசோதனை, தொக்கம் எனும் சிறு சஞ்சிகைகளும், சி.மணியின் எழுத்தும் நடையும் எனும் கட்டுரை தொகுப்பும், லைலா எக்ஸ் அவர்களின் பிரதியின் நிர்வாணம் எனும் சிறுகதை தொகுப்பும் வெளியிடப்பட்டன. விழாவில் இலக்கிய ஆளுமைகளும், எழுதிக்கொண்டிருக்கும் இளைஞர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தோல்பாவை கூத்து, பொம்மலாட்டம், தெருக்கூத்து என விடிய விடிய விருந்து…

ஒன்றை கண்டுகொள்ளாது விடுவதென்பது அதை நாமும் சேர்ந்தே அழிப்பதற்கு சமமானது. எல்லாம் போச்சு போச்சு என புலம்பிக்கொண்டிருக்காது, அதற்கு உயிர் கொடுக்கும் வகையில் முன்னெடுக்கும் செயல்பாடுகளே அவசியமானவை.அப்படியான முன்னெடுப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தபடிதான் இருக்கின்றது என்பது ஆறுதலே.

கலைகள் நம் வாழ்வின் ஆதாரம். கெட்டித்துப்போன மனங்களை இளக வைக்கும் தன்மை கொண்டது. இத்தகைய கலைகளை நிகழ்த்தும் கலைஞர்கள் ஒன்றும் தேவதூதர்கள் அல்ல. அன்றாடம் கூலிவேலை பார்க்கும் சாமான்யர்களே. அப்படியானவர்களை கௌரவிக்கும் பொறுட்டு விடாப்பிடியாக தொடர்ந்து நடத்திவரும் அமைப்பினர் சோர்வுகொள்ளாதிருக்க பார்வையாளர்களாகவாவது இருக்க நம் காலடிகள் தொடர்ந்து பயணிக்கட்டும்.

•••••••

கைவிடப்பட்ட பிரதி / ( ஆலன் கின்ஸ்பெர்க்: ஹௌல் மற்றும் சில கவிதைகள் நூலுக்கான முன்னுரை)

download (19)

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இதனை இறக்கி வைக்கவும் முடியாமல், தூக்கி எறியவும் முடியாமல் சுமந்து அலைந்து கொண்டிருக்கிறேன். வலசை இதழுக்காக அவ்வப்பொழுது, உலகக் கவிதைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த சமயம். ஒரு பின்மதியப் பொழுதில், ஸ்ரீதர் ரங்கராஜ் அழைத்திருந்தார். வழக்கமாய் சந்திக்கும் மல்லிகை காபி பாருக்குச் சென்ற பொழுது, கவிஞர் ஸ்ரீசங்கரும் உடனிருந்தார். என்னைப் பார்த்ததும், இருவரும் கண்களால் பேசிக் கொண்டனர். “இவர் அதுக்கு சரிப்பட்டு வருவாரா?” என்பது போல ஸ்ரீசங்கர் கேட்க, ஸ்ரீதர் வழக்கமான மென்மையான புன்னகையோடு ”ஆம்” என்பது போல கண்களை மூடித் திறந்தார். அப்படித் தான் சரக்கு கைமாறியது. நானும் ஸ்ரீதரும் இணைந்து, ஆலன் கின்ஸ்பெர்க்கின் “ஹௌல்” நீள்கவிதையை மொழிபெயர்ப்பது என்று முடிவானது. அக்கவிதைக்கான மனநிலையை உணர்ந்து கொள்வதற்காக “ஹௌல்” குறுந்தகடையும் கொடுத்திருந்தனர்.

வீட்டுக்கு வந்து, படத்தைப் பார்த்துவிட்டு, பிரதியையும் ஒரு முறை வாசித்த பின், வழக்கமாய் செய்யும் ரிவர்ஸ் இன்ஜினியரிங் உத்தியின் மூலம், கவிதையின் பின்புலம், அரசியல், காலாகட்டம் பற்றி அறிய முற்பட்டேன். “ஹௌல்” துவங்கி, ஆலன் கின்ஸ்பெர்க் வழியாக “பீட் தலைமுறை” எழுத்தாளர்கள் ஒவ்வொருவர் பற்றிய சித்திரமும் அவர்களின் படைப்புலகமும் இணைய மேய்ச்சலில் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான, அமெரிக்க கலாச்சாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றின் பாதிப்பில் துவங்கிய இலக்கிய இயக்கமான “பீட் தலைமுறை” குறித்த சித்திரம் கிடைத்தது. 1950களில் அமெரிக்காவின் கலை இலக்கிய செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக மாற்றிய படைப்புகள் அவை. வழமையான நேரடி கதைக்கூற்று முறையை மாற்றியமைத்தல், மனோத்துவ தேடல், பொருள்முதல் வாதத்தை மறுதலித்தல், மாயத்தோற்றம் உண்டாக்கும் போதை, பாலியல் சுதந்திரம் மற்றும் தேடல் குறித்தான சோதனை முயற்சிகள் ஆகியன “பீட்” கலாச்சாரத்தின் மையப்புள்ளிகள் புலப்படத்துவங்கின. ஒரு சுற்று வந்து மீண்டும் “ஹௌலை” நெருங்கும் பொழுது, கொடுக்கப்பட்ட கெடுவான மூன்று மாதங்கள் முடிந்திருந்தன. ஒரு வரியும் மொழிபெயர்க்கத் துவங்கியிருக்கவில்லை.

படைப்பின் கனம் என்னை பலமாக அழுத்தத்துவங்கியிருந்தது. அது தந்த அலைக்கழிப்பு, அன்றாட வாழ்வை பாதிக்குமோ என்ற பயம் சூழ்ந்த பொழுது , கவிதையை மொழிபெயர்க்கும் பணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஸ்ரீதரை அழைத்தேன். பொதுவான உரையாடல்களுக்கு நடுவே ஸ்ரீதர் கூறிய நம்பிக்கை வார்த்தைகள் உற்சாகமளிக்க, சரி, முடிந்தவரைப் பார்க்கலாம் என்று எண்ணி, பணியைத் தொடரலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் ஒவ்வொரு முறை “ஹௌல்” கவிதைக்குள் நுழைய முயலும் போதும், ஆற்றாமையும் துயரும், விரக்தியான மனநிலையும், கையறுநிலையும் தானாக சூழ்ந்து கொள்ளும். ஒரு வழியாக “ஹௌல்” முதல் பாகம் பாதியளவும், இரண்டாம் பாகம் முழுமையும் முடித்திருந்தேன். மேலும் ஆறுமாதங்கள் சென்றிருந்தன. ஒரு கட்டத்தில், அக்கவிதையின் ஊடாகவே உழல்வது, விட்டேர்த்தியான மனநிலையிலேயே கொண்டு போய் நிறுத்தியது. மனதை சமநிலைப்படுத்த, இடையிடையே வேறு புத்தகங்களை வாசித்தாலும், இந்த அலைக்கழிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. இதிலிருந்து விடுபட மொழிபெயர்ப்பை நிறுத்திவிடுவது தான் சரி என்று மீண்டும் தோன்றியது.

எடுத்துக் கொண்ட வேலையைப் பாதியில் கைவிடுவது குறித்த தயக்கமிருந்தாலும், கவிதை ஏற்படுத்திய வாதை, அந்த மனநிலையில் இருந்து வெளியே வந்தால் போதும் என்ற நிலைக்குத் தள்ளியிருந்தது. காலம் கடந்து கொண்டே செல்வதைக் காரணம் காட்டி, மொழிபெயர்த்தது வரை ஸ்ரீதருக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு, அதிலிருந்து விலகிக் கொள்வதாய் அவரிடம் தெரிவித்தேன். அதே சமயத்தில், அவரும் அக்கவிதையை மொழிபெயர்க்கத் துவங்கி இருந்தார். என் மின்னஞ்சலைப் பார்த்துவிட்டு, மொழிபெயர்த்தவரை மிக நன்றாக வந்திருப்பதாகக் கூறி, தொடர்ந்து முயன்று முடித்துவிடும் படியும், காலக்கெடு பற்றி கவலைப்படாமல் தோன்றும் போது செய்யுமாறும், ஆனால் நிச்சயம் முடிக்க வேண்டும் என்றும் உற்சாகமூட்டினார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியச்சூழலில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் அக்கவிதையின் மொழிபெயர்ப்பு, நிச்சயம் ஒரு மிகப்பெரிய பதிவுகாக இருக்கும் என்றும் அவர் சொன்ன வார்த்தை புதுத் தெம்பைக் கொடுக்க, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். தொடர்ச்சியான அவரது உள்ளீடுகளோடு, நானே “ஹௌல்” கவிதையை முழுமையாக மொழிபெயர்க்கிறேன் என்று சொன்னதையும் ஸ்ரீதர் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்.

ஒருவழியாய், “ஹௌல்” மூன்று பாகங்களையும் முடித்த பிறகு, ஸ்ரீசங்கர் ஒருமுறை திருத்தங்கள் பார்த்து உதவினார். இதற்கிடையே கவிஞர் நேசமித்ரனிடம் அனுப்பி கருத்துக்களைக் கேட்டிருந்தேன். அவரது நுணுக்கமான பார்வை, பிரதியை இன்னும் செழுமையாக்கியது. இப்படியாக, “ஹௌல்” தமிழ் மொழியாக்கம் தயாராகி இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். நீள்கவிதையின் அளவு, சிற்றிதழ்களில் கொண்டு வருவதற்கு பெரியதாகவும், புத்தகமாக வெளியிடுவதற்கு சிறியதாவும் அமைந்தது. எனவே “ஹௌல்” உடன் சேர்த்து கின்ஸ்பெர்க்கின் வேறு சில முக்கிய கவிதைகளையும், அவரது புகழ்பெற்ற “பாரிஸ் ரிவ்யூ” நேர்காணலையும் இணைக்க முடிவு செய்து, அதற்கான தேடலைத் துவங்கினேன். கவிஞர் சமயவேல் அவர்கள் தந்த கின்ஸ்பெர்க் படைப்புகளின் தொகுப்பான “எஸென்ஸியல் கின்ஸ்பெர்க்” சரியான கவிதைகளை தேர்ந்தெடுக்க உதவியாய் இருந்தது.

”ஹௌல்” உடன், கடந்த இரண்டு வருடங்களாகச் சிறுகச் சிறுகக் கோர்த்த மற்ற கவிதைகளும், கின்ஸ்பெர்க் நேர்காணலும், ”ஹௌல்” பற்றிய கட்டுரையும் சேர்ந்து இன்று ஒரு தொகுப்பாகி இருக்கிறது. ஆக, இது இப்பொழுது, இப்படியாகத் தான் வெளியாக வேண்டும் என்று இருந்திருக்கிறது. ஆலன் கின்ஸ்பெர்க் கவிதைகளுக்கு, தமிழில் ஒரு ஆவணமாக இத்தொகுப்பு இருக்குமென்று நம்புகிறேன். இந்த நீண்ட பயணத்தில், எனது மொழிபெயர்ப்புக்கு பல நண்பர்கள் உறுதுணையாகவும், சரியான கருத்துக்களைக் கூறி வழிநடத்துபவர்களாகவும், உற்சாகமூட்டுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பெருந்தகையாளர்கள் ஸ்ரீதர் ரங்கராஜ், ஸ்ரீசங்கர், நேசமித்ரன், கார்த்திகைப்பாண்டியன், சமயவேல், எஸ்.அர்ஷியா, பாவண்ணன், சிபிச்செல்வன், போகன் சங்கர், வெய்யில், கௌதம சித்தார்த்தன், அருணாசலம், பரணிராஜன், நூல்வனம் மணிகண்டன் மற்றும் வாசிப்போர் களம் நண்பர்கள் ஆகியோருக்கும் எனது அன்பும், நன்றியும். இத்தொகுப்பை பதிப்பிக்கும் ”பாதரசம்” சரோலாமா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

•••

இரண்டாவது ஆண் – ஹேமா ( சிங்கப்பூர் )

images

“நாம போன மாசம் படத்துக்குப் போனது எப்படியோ ஐரினுக்குத் தெரிஞ்சிருக்கு. வீட்டில ஒரே பிரச்சனை”
சரயுவின் மனதில் என்றோ விழுந்திருந்த அச்சப் புள்ளி, மடமடவென அசுரத்தனமாய் வளர்ந்து குரல்வளையைப் பிடிக்கத் துவங்கியது. மார்ட்டினின் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த வார்த்தைகள் தம் அர்த்தத்தை இழந்து, அவளின் மேல் பட்டு நாற்திசைகளிலும் தெறித்தபடியிருந்தன. அவற்றின் சாரம் மட்டும் அவளது மூளைக்குள் மெல்ல சொட்டிச் சென்று, உறைந்து போயிருந்த அதை உசுப்ப முயற்சித்தது.

“அன்றையிலிருந்து நம்ம என்ன செய்யறோம்ன்னு கவனிக்க ஆரம்பிச்சிருக்கா!”

இனி வார நாட்களின் மாலையில் மார்ட்டினின் ஷூக்கள் அவளது வீட்டு வாசலில் இருக்காது.

“நேத்து அவங்க அம்மாவும் ஊரிலிருந்து வந்துட்டாங்க. ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு. . .”

எதிர்வரும் முன்னிரவுப் பொழுதுகளில் கிரண் பேசுவதற்கு ஆளின்றி தனித்து அமர்ந்திருப்பான்.

“நைட்டும் வீட்டில சாப்பிடல. காலையில கூட . . .”
இனி மேல் வரப்போகும் சனிக்கிழமைகளில் கிரணும் அவளும் மட்டுமே ஸ்னோ பௌலிங்கிற்கோ, கருடா மாலுக்கோ செல்வார்கள்.

அப்படி தாங்கள் வாழ்ந்த, மார்ட்டினின் வருகைக்கு முந்தைய காலங்கள், அர்த்தம் பொதிந்திருந்தும் சுவாரஸ்யமற்றுப் போன ஈஸ்ட்மென் கலர் படமாய் அவளது மனதின் பின்னணியில். . .

காலம் விடுவிடுவென இருபத்தாறு மாதங்கள் பின்நழுவ, இவளது குழுவில் வேலை செய்யப் போகிறவன் என்று மேலாளர் நீல சட்டை அணிந்திருந்த மார்ட்டினை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சரயுவின் பிரத்தியேக உணர்வுகளைத் தீண்டக் கூடிய எந்த அடையாளமும் இன்றி கைகுலுக்கி புன்னகைத்தான் அவன்.
“ஐ நீட் யுவர் ஹெல்ப் இன் திஸ் ப்ராஜக்ட். கவலைப் படாதீங்க, இந்த வேலை பழகற வரைக்கும் தான், ரொம்ப படுத்த மாட்டேன்!”

சரயுவைச் சட்டென இரண்டு விஷயங்களில் அவன் கவர்ந்தான். ஐ.டியில் வேலை செய்பவர்கள், பிற தமிழர்களிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று அவன் வைத்திராத கொள்கையில், வெளிப்படையாக உதவிக் கேட்டதில். அவளுக்கு அவன் மீது முதல் ஈர்ப்பு விழுந்த புள்ளியும் அதுவாய் தான் இருக்க வேண்டும்.

முதல் மாத சம்பள தினத்தன்று இருவரும் காப்பி டேவிற்குச் சென்றார்கள். அவனுடைய அமெரிக்க கனவு, இருவரின் கல்லூரி நாட்கள், நம்பிக்கைகள் என்று பயணித்த பேச்சினூடாக, அலுவல் நிமித்தமாகவன்றி கடைசியாக ஒரு ஆணுடன் இப்படி தனியாக அமர்ந்து, பிறரைப் பற்றிய கவலையின்றி பேசி, ரசித்துச் சாப்பிட்டது எப்பொழுது என்று யோசித்தாள் சரயு.

“ஆறரைக்கே வேலை முடிஞ்சுடிச்சி இல்லை! வீட்டுக்கு வர ஏன் இவ்வளவு நேரம்?”

“நைட் எட்டரை மணிக்கு அவன் ஏன் உனக்கு போன் பண்ணறான்?”

அன்று, மார்ட்டின் இரண்டு வயது ரேச்சலுக்கு தகப்பன் என்பதை அறிந்தாள் சரயு. தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டிருந்த சம்பிரதாய வேலியைத் தளர்த்தி, தனக்கு ஏழு வயது கிரண் இருப்பதைச் சொன்னவள், விவாகரத்து ஆகிவிட்டதைச் சொல்லாமல் தவிர்த்தாள். அதன் பின்னர் வந்த தினங்களின் உணவு இடைவேளைகளை இருவரும் அவர்களுடையதாக்கிக் கொண்டார்கள். மார்ட்டினுடனான பேச்சினூடாக வளர்ந்த தோழமையின் மூலம், தன் மனதின் பதின்ம வயது சாளரங்கள் திறந்து கொள்வதை சரயு உணர்ந்தாள்.

அன்று மதியம் சாப்பிட்டு முடித்ததன் எச்சமாய், சரயுவின் கேபினில் நின்றபடி, அன்று நடந்து கொண்டிருந்த கிரிக்கெட்டைப் பற்றிய தன் வருத்தங்களை மார்ட்டின் பகிர்ந்து கொண்டிருந்தான். அவனை இடைவெட்டியது சரயுவுக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு.

“மேடம், வீ ஆர் காலிங் ஃப்ரம் கிட்ஸ் க்ளோபல் ஸ்கூல், ஐ ஏம் கிரண்ஸ் மேக்த்ஸ் டீச்சர் ஹியர்”

“ஓக்கே. . .”

“லஞ்ச் ப்ரேக் முடிஞ்சு முதல் பீரியட், திடீர்ன்னு கிரண் வாந்தி எடுத்தான். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி ஸிக் ரூமுக்கு அழைச்சுகிட்டு போகும் போதே மயங்கி விழுந்திட்டான்”

“இப்ப எப்படி இருக்கான், ஸார், ப்ளீஸ் யாராவது டாக்டரைக் கூப்பிட்டு ஏதாவது பண்ணுங்க. நான் உடனே கிளம்பி வரேன்!”

“இப்ப ஹாஸ்பிடலுக்கு தான் மேடம் போயிட்டிருக்கோம். நீங்க நேரா மராத்தாஹள்ளியில இருக்க ரெயின்போ ஹாஸ்பிடலுக்கு வந்திடுங்க! வந்து இதே நம்பருக்குக் கூப்பிடுங்க! நான் அவன் கூட தான் இருப்பேன்”
பீறிட்டெழுந்த கண்ணீரை அடக்க பிரயச்சித்தம் செய்தபடி திரையில் தெரிந்த சிவப்பு பொத்தானை அழுத்த முயன்றாள் சரயு. கைநடுக்கத்தில் இரண்டு முறை தவறி பின்னர் அழைப்பே தன்னைத் துண்டித்துக் கொண்டது. மீண்டும் மீண்டும் கீழே நழுவிய கைப்பையை எடுக்க முயற்சித்தபடி, மார்ட்டினிடம் சுருக்கமாக நடந்ததைச் சொன்னாள்.

சட்டெனச் சூழலைத் தன் கையில் எடுத்துக் கொண்டான் மார்ட்டின். சரயுவைச் சற்று நேரம் அமரச் சொன்ன அவன், ஏஸியின் தகடுகளை அவளை நோக்கித் திருப்பினான். பின்னர் வெளியே சென்று மேலாளரிடம் சரயுவுடன் தனக்கும் சேர்த்து விடுமுறை சொல்லி விட்டு, ஸ்கூட்டி பக்கமாய் சென்ற அவளைத் தடுத்து தன் பைக்கை எடுத்தான். முக்கியப் பணியை பிறர் தோள்களில் சுமத்திவிட்டு தன் கவலைக்குள் மட்டுமே அமிழ்ந்து கிடப்பது கூட வரம் தான் என்பதை மருத்துவமனையை நோக்கிய அப்பயணத்தில் உணர்ந்தாள் சரயு.

பச்சைப் போர்வைக்குள் கண்களை மூடித் துவண்டிருந்த கிரணைப் பார்த்த நொடியில் சுற்றிலுமிருந்த பொருட்கள் மொத்தமும் சரயுவின் பார்வையிலிருந்து மறைந்து போயின. அவளது கால்கள் தம் கனத்தை இழந்து துவளத் துவங்கியது.

“ஏம்மா, நீ சின்ன பிள்ளையைத் தனியா வச்சி எப்படி பார்த்துப்ப? திடீர்ன்னு உடம்பு சரியில்லைன்னா என்ன பண்ணுவ? நாங்க கிளம்பி வர ஆறு மணிநேரமாவது ஆகும்! குழந்தை நாள் முழுக்க டே கேர்ல இருந்தா ஏங்கிப் போயிடுவான்”

ஏதோவொரு குற்றவுணர்வு அவளைப் பற்றிக் கொள்ள, கிரணின் படுக்கைக்கு அருகில் மண்டியிட்டு, அவனது கன்னத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

மார்ட்டின் மொத்த மருத்துவச் சம்பிரதாயங்களையும் கவனித்துக் கொண்டான். கிளம்பும் போது, பிஸ்கட்டுகளையும் பழச்சாறையும் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவளது ஸ்கூட்டியின் சாவியையும், வீட்டு விலாசத்தையும் வாங்கிச் சென்றான்.

இனி பயப்படவேண்டியது இல்லை என்று மருத்துவமனையில் கூறியதும், அன்றிரவே மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினாள் சரயு.

இரவு கிரண் படுக்கையில் சலனமின்றி படுத்திருக்கும் நேரமெல்லாம், அவன் மயங்கியிருக்கக் கூடும் என்று அவளுக்குப் பயமாக இருந்தது. தன் வாழ்வின் ஒரே பிடிப்பாக இருக்கும் அவனை இழந்துவிடுவோமென்ற அச்சம் அவளைக் கண்ணயர விடவில்லை.

“சம்பளம் அவ்வளவு இல்லாட்டியும் பரவாயில்லை! இங்கேயே பக்கத்தில எங்காவது வேலையைப் பார்த்துக்கக் கூடாதா! ரங்கநாதன் பையன் விப்ரோவில் டீம் லீடரா இருக்கான். அவன்ட்ட பேசி பார்க்கட்டுமா?”

“கூட வந்து இருக்கலாம்ன்னா, உடம்பு முன்ன மாதிரி இல்லை! இங்க பழகின இடம். சட்டுன்னு டாக்டரப் பார்க்க வசதியா இருக்கும்! அம்மாவை வேணும்னா கூப்பிட்டுட்டு போறியா!”

“நான் போயிட்டா அப்புறம் நீங்க? ஏற்கனவே சுகர் தொண்டை வரைக்கும் நிற்குது!”
வார்த்தைகள் இரவு முழுவதும் அவளைத் துரத்தியபடி இருந்தன.

மறுநாள் மார்ட்டின் காமிக்ஸ் புத்தகமும் ஆப்பிளும் வாங்கிக் கொண்டு அவர்களின் வீட்டுக்கு வந்தான். அவனைப் பார்த்ததும் சரயுவிற்கு, தான் சாதாரணமாய் அணிந்திருந்த நைட்டியைப் பற்றிய பிரஞ்ஜை எழுந்தது. அதைப் புறந்தள்ளி புன்னகையுடன் ஸ்கூட்டி சாவியை வாங்கி ஆணியில் மாட்டிவிட்டு, சமையலறைக்குள் சென்றாள் சரயு.

“உங்களுக்கும் காமிக்ஸ் பிடிக்குமா, அங்கிள்?”

“உன் வயசில இதைத் தான் படிப்பேன்!”

“இப்ப அம்மா மாதிரி பெரிய புக்ஸ் படிப்பீங்களா? அதோ, அதெல்லாம் அம்மா புக்ஸ் தான். நானும் பெரிய புக்ஸ் படிப்பேன், ஆனா இங்லீஷ் புக்ஸ் மட்டும் தான்.”
சரயுவின் வைத்திருந்த டான் ப்ரௌன், சில்வியா வுல்ஃப், பொன்னியின் செல்வன், புதுமைப்பித்தன்களை வியப்புடன் அளைந்த படி,

“சரயு, கொஞ்ச நாள் போனா நீங்க வேலையை விட்டுட்டு ஒரு நூலகம் வச்சிடலாம்!” என்றான் மார்ட்டின்.
“விட்டா, சந்தோஷமா அந்த வேலையைச் செய்வேன்! ஆனா பணம் தேவைப் படுதே!”

வெங்காயம் வதங்கும் வாசனைக்கு நடுவிலிருந்து குரல் வந்தது.

ஒவ்வொரு புத்தகத்திலும், அதை வாங்கி வந்த தேதியையும், இடத்தையும் குறித்து வைத்திருந்தாள் சரயு. ஹிப்னாடிஸம் பற்றிய புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, காமிக்ஸை ஆர்வத்தோடு புரட்டிக் கொண்டிருந்த கிரணுக்கு அருகில் அமர்ந்தான் மார்ட்டின்.

“கிரண், புக்கை இவ்வளவு கிட்ட வச்சி படிச்சா சீக்கிரம் கண்ணாடி போட வேண்டி வரும்”

“நீங்களும் அதனால தான் கண்ணாடி போட்டிருக்கீங்களா, அங்கிள்”

“அந்த படத்தில இருக்கறது நீயா?”

தொலைக்காட்சியின் மீது வைக்கப்பட்டிருந்த அதன் அருகில் சென்று பார்த்த போது அதிலிருந்த சரயு ஒல்லியாக, இன்னும் இளமையாக இருந்தாள்.

“ஆமாம், அது என்னோட தேர்ட் பர்த்டேல எடுத்தது. பக்கத்துல இருக்கறது என்னோட மெட்ராஸ் தாத்தா, கேக்கை ஊட்டி விடுறது எங்க பாட்டி”

சரயுவின் கணவன் அந்தப் புகைப்படத்தில் இல்லை, அந்தக் கூடத்திலிருந்த மற்ற புகைப்படங்களிலும் கூட.

சரயு சூடான கிச்சடியைத் தட்டுகளில் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் வைத்தாள். பொதுவாய் ரவைப் பண்டங்கள் அவனுக்கு உவப்பாய் இருந்ததில்லை. ஆனால் அன்று ருசித்துச் சாப்பிட்டான். அதன் பிறகு நேரம் கிடைக்கும் அவர்கள் வீட்டுக்கு வந்து செல்லத் துவங்கினான் மார்ட்டின்.

கிரணுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவன் நெருக்கமாய்ப் பழகிய ஆண்கள் என்று யாருமில்லை. தனது தந்தையைக் கூடப் புகைப்படம் மூலமாக மட்டுமே அறிந்திருந்தான்.

எல்.கே.ஜி சேர்ந்த புதிதில், உடன் படிக்கும் மாணவர்களின் தந்தையர் எப்போதாவது பள்ளிக்கு வரும் போது, தங்கள் மகனை வாரி அணைத்துக் கொள்வதைக் கண்டிருக்கிறான். தன்னையும் ஒரு ஆண் அதே போல தூக்கிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அந்த மாணவனின் இடத்தில் தான் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வான்.

அம்மாவுடன், நண்பர்களின் பிறந்த நாள் விழாக்களுக்குச் செல்லும் சமயம் அங்கிருக்கும் ஆண்களுடன் நேரம் செலவிடுவதை அவன் மிகவும் விரும்பினான். முரட்டுத் துணியால் ஆன அவர்களது காற்சட்டையைக் கைகளால் தடவிப்பார்க்க அவனுக்கு மிகவும் பிடிக்கும். தங்கள் அருகில் வந்து கால்களை உரசியபடி நிற்கும் அவனது ஸ்பரிசத்தை உணர்ந்து, பெரும்பாலானவர்கள் அவனை மடியில் அமர வைத்துக் கொள்வார்கள். மடியில் உட்காரவைத்த ஆணின் மணத்தை ஆழ்ந்து உள்ளிழுத்து, தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பான் கிரண். அங்கு அமர்ந்திருக்கும் வரைத் தன்னை மிகவும் கம்பீரமானவனாய் உணர்வான்.

எல்லா நேரமும் இப்படி அமைந்து விடுவதில்லை. சிலர் அருகில் நிற்கும் அவனை அலட்சியப் படுத்தி கைத்தொலைப்பேசியில் இருப்பார்கள். அது வரை தன் அப்பாவைப் பற்றிய நினைவே இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, இவன் அவர்களின் மடி மீது உட்கார்ந்திருக்கும் போது தான், தந்தையைப் பற்றி நினைத்துக் கொள்ளும்.

பாசம் புரண்டோட வந்து கால்களைக் கட்டிக் கொண்டு, இவனை இறக்கி விட்டே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கும். பெரும்பாலான ஆண்கள் இதற்கு மசிந்து, அவனை இறக்கி விட்டுவிடுவார்கள். தான் இறக்கப் பட்டதை விடச் சற்று முன்னர் தானிருந்த இடத்தைப் பிடித்திருக்கும் குழந்தைகளைப் பார்க்கும் போது அவனுக்குக் கோபமாய் வரும். அதை வெளிப்படுத்த வழியின்றி, கண்கள் கலங்க நிற்கும் அவனைச் சரயு இழுத்து அணைத்துக் கொள்வாள். கொஞ்சம் கொஞ்சமாய் இப்படிப்பட்ட நிகழ்வுகள் பழகிப் போய், ஆண்களுடன் பழகும் விருப்பத்தைக் குறைத்துக் கொண்டிருந்தான் கிரண்.

இப்போது தன்னுடன் அமர்ந்து கிரிக்கெட் பற்றியும், ஸ்டார் வார்ஸ் பற்றியும் பேசும் மார்ட்டினைப் பார்க்கும் போது ஆழப் புதைந்து கிடந்த ஆசைகள் மேலெழும்பத் தொடங்கின. சனிக்கிழமைகளில் தனக்கு இணையாக கிரிகெட் விளையாடும் மார்ட்டினை கிரணுக்கு மிகவும் பிடித்துப் போனது. பைக்கில் அவனுக்குப் பின்னால் அமர்ந்து காற்றில் தலைமுடி பறக்க ஐஸ்க்ரீம் கார்னர் செல்லும் நேரங்களை அவன் மிகவும் விரும்பினான். அந்தச் சமயத்தில் தான், ஆறு வருடங்களுக்கு முன்னர் நடந்த தனது விவாகரத்தைப் பற்றியும், முன்னாள் கணவன் வேறு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வசிப்பதைப் பற்றியும் மார்ட்டினிடம் சொன்னாள் சரயு.

இரண்டாம் பிரசவத்திற்காக ஐரின் நாகர்கோவிலுக்குச் சென்றிருந்த நாட்களில், யாருமற்ற வீட்டிற்குப் போகப் பிடிக்காமல் கிரணைப் பார்க்கத் தினமும் வரத் துவங்கினான் மார்ட்டின். வேலையிலிருந்து திரும்பியதும் சரயு, சமையலறைக்குள் உணவு தயாரிக்கச் செல்வாள். மார்ட்டின் கிரணுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவன் செய்யும் வீட்டுப் பாடத்தை மேற்பார்வையிடுவான்.

சமையல் முடிந்ததும் மூன்று பேரும், அன்றைய நிகழ்வுகளை அலசியபடி ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவார்கள். பின்னர் மொட்டை மாடியில், கிரணை விளையாட விட்டு, சற்று நேரம் சரயுவும் மார்ட்டினும் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒன்பது மணி வாக்கில் தன் வீட்டிற்கு மார்ட்டின் கிளம்பும் போது, கிரணுக்கு அவனை வழியனுப்பவே மனம் வராது.

எப்பொழுதாவது கிரண் சீக்கிரம் உறங்கிவிடும் நாட்களில், சரயுவுடன் மொட்டை மாடி நிலவொளியில் அமர்ந்து பேசும் நேரங்களை மார்ட்டின் மிகவும் விரும்பினான். சரயுவிற்கும் தன் தனிமையை விரட்ட, அந்தத் தோழமை தேவையாக இருந்தது. தனக்கும் கூட இப்படி மனம் விட்டு பேசக் கூடிய நட்பு அமையுமென்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. சில நாட்களில் கிரண் உறங்குவதற்காகக் காத்திருக்கத் தொடங்கினார்கள் இருவரும். இப்படியான ஒரு நாளின் தனிமையில் மார்ட்டினின் மனம் தன்னுள் இருந்த ஏக்கத்தைக் காதலாக சரயுவிடம் வெளிப்படுத்திக் கொண்டது.

அந்தக் கணம், சர்ரென சரயுவின் வயிற்றிலிருந்து முட்டியெழும்பிய வார்த்தைகள் அவளது தொண்டையிலேயே தடுக்கி விழுந்தன. மெல்ல நகர்ந்து எதிரே இருந்த கைப்பிடிச் சுவருக்கு அருகே சென்று தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றாள் அவள். சில்லென்று இறங்கிய பனியை அப்பொழுதுதான் உணர்ந்தது போல அவளது உடல் சிலிர்த்தது. தெருவிளக்கொளியில், இரண்டு மாடிகளுக்குக் கீழே, வாகனங்கள் அவளின் கவனத்தில் பதியாமல் நகர்ந்தன. அவளது மௌனத்தின் நீட்சியில் சங்கடமுற்ற மார்ட்டின்,

“சரயு, மனசில தோன்றியதை வச்சிருக்க முடியலை! பட்டுன்னு சொல்லிட்டேன். உங்களுக்குப் பிடிக்கலைன்னா நாம இதே போல நண்பர்களாகவே இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினான். தெரு முனையில் அப்பியிருந்த இருளுக்குள் அவனது வாகனம் மறைந்த பின்னரும் சரயுவின் உடலுள் ஏற்பட்டிருந்த மெல்லிய நடுக்கம் மறையவில்லை.

அன்றிரவு முழுவதும் மீண்டும் மீண்டும் அந்நிகழ்வு சரயுவின் மனதில் விரிந்து அவளைத் தொந்தரவு செய்தது. வீட்டில் மனைவி, குழந்தை என்று அழகாய் ஒரு குடும்பம், நல்ல வேலை, இப்போது தன்னுடைய மன உணர்வுகளுக்குத் தீனி போட மற்றொரு கைநிறைய சம்பாதிக்கும் பெண். அதாவது அவன் செலவு செய்ய வேண்டியிராத, தேவைப்பட்டால் பணத்தைக் கடனாகவோ அன்பளிப்பாகவோ தந்து உதவக் கூடிய பெண். மார்ட்டின் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான் என்று சரயுவிற்குத் தோன்றியது தான் ஒப்புக் கொண்டால் பயன்படுத்திவிட்டு, வேண்டாம் என்னும் போது தூக்கி எறிந்துவிடலாம். எவ்வளவு சுலபமாய் சொல்லிவிட்டான்! அவளுள் சினம் மூண்டெழுந்தபடி இருந்தது.

மறுநாள் வேலையிடத்தில் அவளுக்கு மார்ட்டினைப் பார்க்கவேப் பிடிக்கவில்லை. மனதில் ஒட்டியிருந்த முந்தைய தினத்தின் துணுக்குகளுடன், உறக்கமின்மை தந்த எரிச்சலும் அவன் மீதே குவிந்தது. மார்ட்டினும் அவளை வெறுப்பேற்றுவது போல, அவளிடம் பேசவோ மன்னிப்பு கேட்கவோ முயற்சிக்காமல், தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். அந்த வாரம் முடிக்கப்பட வேண்டி அவசியத்துடன் கணினிக்குள் காத்திருந்த பணியில் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை. மொத்தமும் சேர்ந்து தலையில் இடிக்க, மதியத்திற்கு மேல் அவளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

மேலாளரைச் சந்தித்து விடுப்பெடுத்துக் கொண்டு, அப்படியே தன்னை வேறு குழுவிற்கு மாற்றிவிடும் படி விண்ணப்பித்தாள்.

“இன்னிக்கு மார்ட்டின் அங்கிள் வரலையாம்மா”
“இல்லை, கிரண். அவங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகுதில்ல, அதனால் இனிமே வரமாட்டாங்க!”
கிரண் அதற்கு மேல் அவளை எதுவும் கேட்கவில்லை.

அன்றைய முன்னிரவு மிகவும் மோசமானதாய் இருந்தது. தன் வேலைக்குள் புதைந்து கிடந்த இரண்டு பேரைச் சட்டை செய்யாமல், தொலைக்காட்சியின் குரல் அமானுஷ்யமாய் வீட்டைச் சுற்றி வந்தபடியிருந்தது. மார்ட்டின் வருகைக்கு முன்னால் அவர்களுக்குள் இருந்த சகஜ தன்மை எங்கோ போய் ஒளிந்து கொண்டது. அச்சமூட்டும் படியாய் இருந்த அந்தச் சூழல் சிலநாட்களில் சரியாகிப் போகும் என்று சமாதானப் படுத்திக் கொண்டாள் சரயு.

நினைத்தது போல இரண்டு நாட்களில் அவ்வீடு மார்ட்டினின் இல்லாமைக்குப் பழகிக் கொண்டது. கிரண் எதுவுமே கேட்காமல் தன்னைப் பள்ளி வேலைகளுக்குளோ, புத்தகங்களுக்குள்ளோ மூழ்கடித்துக் கொண்டான். சரயுவும் வீட்டின் ஒவ்வொரு மூலையையும் இழுத்துப் போட்டுச் சுத்தப் படுத்துவதில் முனைந்தாள், மார்ட்டின் எந்தவொரு மாற்றத்தையும் தன் வாழ்வில் கொண்டுவரவில்லை என்பதைத் தனக்குத் தானே நிரூபித்துக் கொள்வதைப் போல.

தொடர்ந்து வந்த மாலைகளில் மனச்சோர்வு அவளைப் பற்றத் துவங்கியது. விவாகரத்து செய்த கணவன் மொத்த கறைகளையும் இவள் பக்கம் தள்ளி, முதல் திருமண சம்பவத்தைச் சுத்தமாய் துடைத்தெறிந்து விட்டு, வேறுமணம் செய்து கொண்டு நிம்மதியாய் இருக்கிறான். என்றோ ஒரு நாள் திரும்பி வந்து மகனே என்றால் கிரணும் அவனைக் கட்டிக் கொள்ளக்கூடும்.

இவளால் அப்படியொன்றை நினைத்துப் பார்க்கவே முடியாது. இன்னொரு மணம் செய்து கொண்டாலும், முதல் திருமணம் அருவருக்கத்தக்கத் தழும்பாய் அவளது வாழ்வில் பின் தொடரவே செய்யும். இரண்டாம் கணவன் என்ற பதத்திற்குள் நுழையும் பக்குவம் இந்திய ஆண்களுக்கு வரவே வராது என்று அவளுக்குத் தோன்றியது. இத்தகைய எண்ணங்கள் வெளிப்படுவதற்கு வழியின்றி மண்டைக்குள்ளேயே சுற்றி குடைச்சலைக் கொடுத்தன. தன்னிரக்கத்திற்குள் விழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. இடையிடையே மார்ட்டினின் நினைவுகள் வேறு.

எந்த பிடிப்புமற்று நாட்கள் நகர்வதைக் காண அவளுக்குப் பயமாய் இருந்தது. அப்படியொரு கணத்தில் தான், சரயுவிற்குத் தானும் அவனைக் காதலிக்கிறோமோ என்ற சந்தேகம் ஏற்பட்டத் துவங்கியது. அடுத்த நொடி, சரசரவென குற்றவுணர்ச்சி உடலெங்கும் பாம்பாய் ஊரத் துவங்கியது.

தன் எண்ணங்கள் செல்லும் திசையைப் பார்த்து, திகைத்துப் போனாள் சரயு. திருமணமாகி இரண்டாம் குழந்தைக்கு தகப்பனாகப் போகும் ஒருவனைத் தான் எப்படி விரும்ப முடியும்? அப்படி விரும்புவதாகவே வைத்துக் கொண்டாலும் இதற்கு எதிர்காலம்? இது சூழலின் காரணமாய் ஏற்பட்ட ஈர்ப்பாய் தான் இருக்க முடியும் என்று தனக்குள் சத்தமாய்ச் சொல்லிக் கொண்டாள் சரயு.

கல்லூரி காலங்களில் பேருந்து நிலையம் வரை தொடர்ந்து வந்த பிரபு மீது, இயற்பியல் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் மீது இது போன்ற ஈர்ப்புகள் அவளுக்குத் தோன்றியிருக்கின்றன. சில வருடங்கள் கழித்து அவற்றை நினைத்துப் பார்த்து அவளால் புன்னகைக்கவும் முடிந்திருக்கிறது. மார்ட்டினின் மீது தற்போது ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியும் அப்படி சீக்கிரம் வடிந்து போய்விடும் என்று நினைத்தாள் அவள். அதைத் தாண்டி யோசிக்க அவளுக்குத் தைரியம் இருக்கவில்லை. ஆனால் மார்ட்டினை நினைவுகளில் இருந்து நீக்குவது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.

வாரயிறுதியில் மகனை அழைத்துக் கொண்டு சினிமாவிற்கோ, கோவிலுக்கோ சென்றாள். ஆனாலும் இழப்பு அவளைப் பின் தொடர்ந்தபடி இருந்தது. கிரண் எதையும் பெரிதாய் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை, இருந்தும், அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த ஒரு சலுகையைத் தான் வெட்டிவிட்டோமோ என்ற குற்றவுணர்வு அவளுள் தோன்றத் துவங்கியது. அப்படித் தோன்றிய கணமே, தன் மனம் மார்ட்டினுடன் மறுபடியும் பேசுவதற்கு வழி தேடுவதை உணர்ந்து அதிர்ந்தாள். தார்மீகமாய் யோசிக்கும் மூளைக்கு எதிராகத் தன் மனம் செயல்படத் துவங்கிவிட்டதை அறிந்து தன் மீதே அவளுக்குப் பயம் வரத் துவங்கியது. அவளது மனம் மூளையிடமிருந்து பிரிந்து விவாதம் செய்யத் துவங்கியது.

‘மார்ட்டினை விரும்புகிறாய் அதை ஒப்புக்கொள்’

‘அவன் திருமணமானவன், இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன்…’

‘அதனால் என்ன, அவனிடம் காசை எதிர்பார்த்தா பழகுகிறாய்? அவனுடைய துணையை மட்டும் தானே!’

‘அது எப்படி நிரந்தரமான துணையாகும்? என்று இருந்தாலும் அவன் தன் குடும்பத்திற்குத் தானே முதலில் சொந்தமாகிறான்?’

‘இருக்கட்டுமே, மீதமிருக்கும் நேரத்தை
உன்னுடனும் கிரணுடனும் செலவு செய்கிறான், அதற்கு மேல் நீயும் எதிர்பார்க்காதே!’

‘சரி, நான் இதற்கு ஒப்புக் கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளலாம், இது அவனது மனைவிக்குத் தெரிந்தால்…’

‘அது அளவிற்கு மீறிச் செல்லும் போது தான். நீங்கள் ஏன் அப்படி செய்யப் போகிறீர்கள்.’

‘சரி, என்றோ ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டால்?’

‘அப்போது வெட்டிக் கொள்!’

‘பழகிய பின் வலி அதிகம் இருக்குமே’

‘இப்பொழுது மட்டும் என்ன? இந்த வலியைக் கொஞ்ச நாட்களுக்குத் தள்ளிப் போடுகிறாய், அவ்வளவு தான்!’

‘சரி இது அவன் மனைவிக்குச் செய்யும் துரோகம் இல்லையா?’

‘நீ காசு பணத்தை அவனிடமிருந்து எடுத்துக் கொண்டால், அல்லது அவனை அழைத்துக் கொண்டு ஓடிப் போனால் அது துரோகம்’

அன்றிரவு படுத்த போது, அவளது மனம் தெளிந்திருந்தது. மார்ட்டினைத் தான் காதலிக்கிறோம் என்பதைத் தயக்கமின்றி முழுதாய் ஒப்புக் கொண்டாள். ஆனால் அதில் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள, அவள் தனக்குள் சில வரையறைகளை அமைத்துக் கொண்டாள்.

மார்ட்டினின் காதலை ஏற்றுக் கொள்ளும் போது அவனுடன் சேர்த்து ஐரினையும் மனதில் ஏற்றுக் கொள்ள வெண்டும். மார்ட்டினின் பணத்தை எந்த நேரத்திலும் தொடக்கூடாது, அவனுடைய விடுமுறை நாட்களை அநாவசியமாக பறித்துக் கொள்ளக்கூடாது. அவனுடனான பழக்கத்தால் ஐரினுக்கு எந்த பாதிப்புமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அவளிடமிருந்து மூளை தனியே பிரிந்து கேள்விகள் கேட்கத் துவங்கியது

‘சரி! என்றாவது ஒரு நாள் ஐரினுக்குத் தெரிந்தால், உன்னால் சமாளிக்க முடியுமா? அப்போது பிரியத் தானே வேண்டும்?’

‘என்ன இப்போது இருப்பது போல இருப்பேன், அவ்வளவு தானே?’

எப்போதோ நடக்கக் கூடிய ஒன்றுக்காகப் பயந்து, கிடைக்கும் கொஞ்சம் வாய்ப்பைத் தவறவிட அவள் மனம் தயாராய் இல்லை.

அதன் பிறகும் மார்ட்டினுடன் கிரண் செஸ் விளையாடும் போது, அவர்கள் சேர்ந்து அமர்ந்து படம் பார்க்கும் போது, இந்தப் பயம் தோன்றியபடி இருந்தது. அது தோன்றும் நொடியே கிள்ளி தூக்கி எறிந்துவிடத் தானாகவே அவளது மனம் பழகிக் கொண்டது.

மார்ட்டினுடன் பேசிக் கொண்டிருக்கும் போது நடுவில் ஐரினையும் குழந்தையையும் பற்றி வலிந்து பேசினாள் சரயு. அப்படிப் பேசுவதன் மூலம், தன் வரையறைகளை நினைவுபடுத்திக் கொள்வதாகவும், தன்னை அவன் குடும்பத்துடன் இணைத்துக் கொள்வதாகவும் அவள் நினைத்தாள். ஆனால் இரவின் தனிமையில் தனக்குக் கிடைக்காத ஒரு வாழ்க்கை, இதுவரை நேரில் பார்த்தறியா ஐரினுக்குக் கிடைத்ததை எண்ணிப் புழுங்கிய மனதை எதுவும் செய்ய முடியவில்லை.

ஐரின் குழந்தையுடன் வீட்டிற்கு வந்த பின்னர் அவளுடன் நட்பாகிவிட முயற்சி செய்தாள் சரயு. குழந்தையைப் பார்க்க, பொம்மைகளையும், கேக்குகளையும் வாங்கிக் கொண்டு மார்ட்டினின் வீட்டிற்கு மாதம் இருமுறையாவது செல்லத் தொடங்கினாள். ஆனால் இவள் நினைத்தது போல, எதையும் எடுத்தெறிந்து பேசும் ஐரினுடன் நட்பாவது சுலபமான காரியமாக இருக்கவில்லை. இவளது வரவைக் கூட அவள் விரும்பவில்லை என்பதைச் சீக்கிரமே உணர்ந்து போவதை நிறுத்துக் கொண்டாள்.

இன்று அவளுடன் பேச வேண்டும் என்று மார்ட்டின் தகவல் அனுப்பிய போது கூட அவனைவிட்டுப் பிரிய நேரும் என்று சரயு யோசித்திருக்கவில்லை.
“சத்தியம் செஞ்சா கூட அவ நம்ப மாட்டேங்கறா”
இந்நிகழ்விற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல, சரயுவிற்குப் பின்னால் இருந்த சுவரைப் பார்த்தபடி சொல்லிக் கொண்டிருந்தான் மார்ட்டின். இனி தன்னுடைய உணர்வுகள் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல என்று சரயுவுக்கு தோன்றியது.

“இன்னிக்கு வேலைக்கு வரதில கூட அவளுக்கு விருப்பமில்லை!”

அவளின் வாழ்வில் நுழைந்த இரண்டாவது ஆண், இலகுவாய் நழுவி தன் வளைக்குள் சென்று ஒளிந்து கொள்ள முயல்வதை அவளால் உணர முடிந்தது.
“நான் வேலையை மாத்திகிட்டு சென்னைக்குப் போயிடலாம்னு பார்க்கறேன். வேற என்ன செய்ய!”
‘என்னைப் பத்தி, கிரணைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா?’ என்று அவன் கால்களைப் பிடிக்கத் தயாரான மனதை, வலுக்கட்டாயமாய் இழுத்து நிறுத்தி,

“ஆல் தி பெஸ்ட்!” என்றாள் சரயு.

மார்ட்டினின் உருவம், சரயுவின் நெற்றியில் அனுபவச் சுருக்கத்தை ஏற்றிவிட்டு விலகிச் செல்லத் துவங்கியது.

•••

மனுநீதிச் சோழனும், கெளசல்யாவின் நீதியுணர்வும் ஆன்மா ( நெளிக்கோடுகளும், அசையாப் புள்ளிகளும் – 3 ) – பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்

கௌசல்யா சங்கர்

கௌசல்யா சங்கர்

ஒரு “கலாச்சாரக்” குற்றமான சாதிக்கலப்புத் திருமணத்தின் விளைவாக நிகழ்த்தப்பட்ட கொலை எனும் சட்ட ரீதியான குற்றத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்று நம்முள் குடிகொண்டிருக்கும் நீதியைக் குறித்த கருத்துக்களை வெளிக் கொணர்ந்திருக்கிறது.

கொலையுண்டது, ஒரு பெண் அவளது சுய விருப்பால் தேர்ந்தெடுத்துக் கொண்ட கணவன், தீர்ப்பில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது அவளுடைய தந்தை. சட்டத்தின் மொழியில் கொல்லப்பட்டவர், கொலை செய்தவர் என்று மட்டுமே பிரித்துச் சொல்லப்படும் இவ்விருவரும் ஒரு பெண்ணின் மீது அளவற்ற அதிகாரம் செலுத்தத் தக்கவர்கள் என்று சமூகத்தால் அனுமதிக்கப்பட்டவர்கள்.

அப்பெண் அவளுடைய தந்தையின் விருப்பத்திற்கு எதிராக வேறொரு ஆணை அதுவும் படிநிலையில் தன்னுடைய சாதிக்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் ஒரு சாதியைச் சேர்ந்த ஆணைத் தேர்ந்தது கொலை செய்யப்படத்தக்க ஒரு மீறலாகப் பார்த்த அவளுடைய தந்தை, அவர்கள் இழைத்த குற்றத்திற்கு தண்டனையை வழங்கிவிட்டார். நீதியமைப்பின் கண்களில் வராமல் இத்“தண்டனை” வழங்கப்பட்டிருந்தால் அவளுடைய தந்தை, மகளின் கணவனைக் கொன்ற குற்றவுணர்வின் கனம் சிறிதளவு கூட தன் மீது ஏற்றாமல், மகிழ்ந்திருப்பார்.

ஆனால் சாதி ஒழுங்கைக் குலைத்ததனால் எழுந்த தனிப்பட்ட அவமானத்திற்குப் பதிலடியாக, பொதுவாக ஒரு கொலையின் பின்னணியிலுள்ள மறைமுகச் செய்தியை சமூகத்திற்கு உரக்கச் சொல்லும் விதமாக, பகல் வெளிச்சத்தில் அவருடைய தீர்ப்பை ஒரு கொலையின் மூலமாக எழுதினார். கலாச்சாரக் குற்றத்திற்கான அந்தத் தண்டனை ஒரு Spectacle. வழங்கப்பட்ட இந்தத் தண்டனையை எண்ணி மகிழ்ந்த தனிப்பட்ட குடும்பங்களும், திரண்டிருக்கும் ஒரு சில சமூக அமைப்புகளும் இருந்திருக்கும்.

கலாச்சாரத்தின் அடிப்படையில் குற்றத்திற்காக வழங்கப்பட்ட ஒரு தண்டனை, சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றமாகிறது. அதற்கான தீர்ப்பு வெளியான தருணத்தில் இத்தீர்ப்பில் வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான தூக்கு, பெரும்பாலான தனிப்பட்ட குடும்பங்களுக்கும், ஒரு சில சமூக அமைப்புகளுக்கும் அதிர்ச்சியூட்டியிருக்கும்.

இத்தீர்ப்பில் வேறு எவரையும் விட, கொல்லப்பட்டவரின் மனைவியான கெளசல்யா ஒரு தனிச்சிறப்பான கவனத்தைப் பெறுகிறார். நீதிக்கான போராட்டத்தில் கொல்லப்பட்டவரின் சார்பாக நின்ற அப்பெண், அவளுடைய தந்தைக்கு எதிராக நின்றவள் மட்டுமல்ல சாதி அமைப்பிற்கு எதிராகவும் நின்றிருக்கிறாள். இதில் அவளுடைய தந்தை சாதி அமைப்பின் ஒரு பிரதிநிதிதான். இந்தத் தெளிவே தீர்ப்பை வரவேற்ற அப்பெண்ணிடமிருக்கிறது. இப்படி ஒரு நிலை அதாவது தன்னுடைய கணவன் கொல்லப்பட்டு, அவளுடைய தந்தைக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நெருக்கடி வருமென்று அவளுடைய திருமணத்திற்கு முன்பே ஏதாவதொரு வழியில் எதிர்காலம் காட்டப்பட்டிருந்தால் அவள் நிச்சயமாக காதலையே துறந்திருப்பாள். ஆனால் இன்றோ நிகழ்வுகள் அனைத்துமே ஒரு சமூகத்தின் பார்வைக்கும், சிந்தனைக்கும் வழங்கப்பட்டவை.

தீர்ப்பை ஒரு கொலைக்கு வழங்கப்பட்ட தண்டனை என்பதையும் கடந்து சாதி ஆணவத்திற்குக் கிடைத்த ஓர் அடி என்று பார்க்கும் தனிப்பட்டவர்களும், சமூக அமைப்புகளும் இருக்கின்றன. இத்தீர்ப்பால் சாதி ஆணவக் கொலைகள் குறையும் என்றால் அது அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு மட்டுமே. இருப்பினும் இந்தத் தீர்ப்பு நீதியுணர்வின் பால் வழங்கபட்டது மட்டுமல்ல, ஒரு ஜனநாயக அமைப்பில் தனிமனிதர் ஒருவருக்கு இருக்கும் விருப்பத் தேர்வெனும் அடிப்படை உரிமைக்கான ஆதரவும் கூட.

ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் எழுந்த குரல்களில் மிக முக்கியமானது ஒரு பெண்ணைப் பெற்று வளர்த்த தந்தைக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை அப்பெண்ணே வரவேற்பதா என்பதே.

நீதி குறித்த சிந்தனைகளை நமக்குக் கட்டியமைத்த தொன்மங்களில் இரண்டை இங்கே ஆராயலாம். ஒன்று கொல்லப்பட்ட பசுவிற்காக தன்னுடைய மகனை தேர்க்காலில் ஏற்றிக் கொன்ற மனுநீதிச் சோழன். இன்னொன்று தன்னுடைய மகனை கர்த்தரின் மீதிருக்கும் பக்தியைக் காட்டுவதற்காக கொலை செய்யத் துணிந்த ஆப்ரகாமினுடையது.

download (16)
அதிகபட்ச நீதியென்பதற்கு உதாரணமாகச் சொல்லப்படும் மனுநீதிச் சோழனின் கதையைக் கேட்கும் ஒருவரும், மரண தண்டனை வழங்கப்பட்ட மனுநீதிச் சோழனுடைய மகனின் மரணத்திற்காக வருத்தப்பட மாட்டார்கள். நீதி கேட்டது பசு என்பதனால் கூட அத்தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம். கொல்லப்பட்டது ஒரு பன்றியின் குட்டியாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என இப்போது ஊகிப்பது பதிலற்ற ஒன்று. ஆனால் நாம் அக்கதையில் காப்பாற்றப்பட்ட நீதியை எண்ணியும், நீதி வழுவாது தீர்ப்பளித்த மனுநீதிச் சோழன் எனும் தந்தையைக் குறித்து பெருமிதமும் அடைகிறோம்.

ஆபிரகாம் அவனுடைய மகனை பலியிடத் துணிகிறார். இறுதியில் அவன் கழுத்து வெட்டப்படுவதிலிருந்து தவிர்க்கப்பட்டாலும் அதன் பிறகு ஆபிரகாமிற்கு குற்ற உணர்வோ, அவனுடைய மகனிற்கு தன்னுடைய தந்தையே அவனைக் கொல்லத் துணிந்தது தண்டனைக்கு உரியதென்ற கேள்வியோ எழுவதில்லை. குழந்தைகளைப் பலியிடும் உரிமையை இயற்கையாகவே பெற்றோர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதனையே இக்கதை சொல்கிறது. எண்ணற்ற பெண் சிசுக் கொலைகளைச் செய்த பெற்றோர்களை நம்மால் நீதியுணர்வால் அணுக முடியாது. கலாச்சாரப் பின்புலத்தில்தான் அணுகுகின்றோம். ஆகையால் அவர்கள் பிள்ளைகளுக்கு எதிராகச் செய்யும் குற்றங்களுக்கு இயற்கையாகவே ஒரு நிரந்தர தண்டனை விலக்கைப் பெற்று விடுகிறார்கள்.

இதன் நீட்சியாகவே பாப்புலர் தளத்தில் தங்கப்பதக்கம் திரைப்படத்தின் கதாபாத்திரமான செளத்ரி, அவருடைய மகன் கதாபாத்திரத்தைக் கொன்றதை நம்மால் கேள்வி கேட்காமல் வர முடிகிறது. செளத்ரி வெறும் தந்தையாக மட்டுமல்ல நீதிக்காகப் போராடுகிற ஒரு போலீஸ்காரரும் கூட. அவர் நீதியைத் தான் காக்க வேண்டியிருக்கிறது.

கெளசல்யாவை எடுத்துக் கொள்வோம், தூக்கு தண்டனை வழங்கப்பட்டது அவளுடைய தந்தையாக இருந்தாலும் அவள் இத்தீர்ப்பை நீதியின் பொருட்டு வரவேற்றிருக்கிறாள் என்பதே இதன் முக்கியத்துவமும், மேற்சொன்ன தொன்மங்களுக்கு ஒரு தலைகீழ் நிகராகவும் இருக்கிறது.

மனுநீதிச் சோழன் கன்றுக்குட்டியின் பொருட்டு தன்னுடைய மகனைக் கொன்றதை நீதியுணர்விற்கான உதாரணமாகச் சொல்லிப் பழகிவிட்ட நமக்கு, இன்னொரு தந்தையின் மகனும், தன்னுடைய கணவனுமான ஒரு மனிதன் கொல்லப்பட்டதற்கான தீர்ப்பில் நீதி உணர்வைக் கண்ட ஒரு மகளை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?.

••••

முகங்கள்- ஆட்டையாம்பட்டியும் பம்பாய் டைலரும். / சரவண கணேசன் ( ஆட்டையாம்பட்டி )

ஆட்டையாம்பட்டி முருக்கு

ஆட்டையாம்பட்டி முருக்கு

ஞாயிறு மாலை நானும் என் மகளும் வீட்டிலிருந்து ஒரு சிறு நடைபயிற்சிக்கு சென்ற போது ஆட்டையாம்பட்டி தின சந்தைக்கு திரும்பும் வளைவில் இருந்த முதலியார் சமூக நந்தவன கரும்பலகையில் எழுதியிருந்த செய்தி என்னை திடுக்கிட வைத்தது.

பம்பாய் டைலர் ராஜு 11.11.2017 அன்று இயற்கை எய்தினார். அந்நாரின் இறுதிச் சடங்கு ஞாயிறு 12.11.2017 அவரது இல்லத்தில் நடைபெறும்.

எனக்கு திருமணமான புதிதில் ஆடிப்பண்டிகைக்கு மனைவியின் ஜாக்கெட் தைப்பதற்தாக நானும் மனைவியும் டைலர் வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது அவர் வீட்டில் இல்லை. அவர் மனைவி எங்களை வரவேற்ற போது அந்த வீடு எனக்கு அன்னியமாகப் படவில்லை. வாடகை வீடு. பத்துக்கு பத்து அறை. இரண்டு தையல் இயந்திரங்கள். இரண்டாகப் பிரிக்க வைத்திருந்த ஒரு இரும்ப அலமாரியில் பெண்களின் துணிகள் தைப்பதற்காக காத்திருந்தது. சிறிய கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியில் பழைய தமிழ்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது. மதியம் வைத்திருந்த கறிக் குழம்பின் மணத்தோடு ஒன்று இரண்டு தட்டு முட்டு சாமான்கள். பார்த்துக்கொண்டிருக்கும் போதே மிதிவண்டியை வாசலில் நிறுத்துகிற சத்தம். தொடர்ந்து ஒல்லியான தேகத்துடன் வெள்ளை வேட்டி சட்டையில் ஒருவர் நுழைந்தார்.

வாம்மா பொண்ணு.. கல்யாணம் நல்லா முடிஞ்சுதா.. வாங்க தம்பி என எனைப் பார்த்து வணங்கினார். மனைவியைப் பார்த்து ஏம்மா மாப்பிள்ளைக்கு ஏதாவது பலகாரம் காப்பி குடுத்தியா.. இதோ என கிளம்பிப் போனாள் அவர் மனைவி.

பிழைப்புக்காக வெளியூர் சென்று பெரும்பாலும் வெறும் கையுடன் சொந்த ஊர் திரும்பி வாழ்க்கையை ஆரம்பிப்பவர்களின் வருத்தமான முகமாக காட்சி அளித்தது அவர் முகம். நான் கோவைத் தமிழில் மிகுந்த மரியாதையுடன் பேசியது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது அவர் நடவடிக்கையில் காண முடிந்தது. கம்பத்து கடை பக்கோடா மற்றும் காப்பியுடன் முடிந்தது எங்களது சந்திப்பு.

இரண்டாவது முறை அவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தது சென்னையிலிருந்து ஒரு பெண்மணி தைப்பதற்;காக 20 ஜாக்கெட் துணியோடு வந்திருந்தார். அண்ணா சென்னையில் பலரிடம் தைத்துப் பார்த்துவிட்டேன். திருப்தி தரவில்லை. ஒரு லேடி டைலர் அளவெடுத்து தைத்தார்¸ ஆனால் நீங்கள் தைப்பதைப்போல ஜாக்கெட்டின் முன் ஸ்டார் அமைப்பு கச்சிதமாக வரவில்லை எனச் சொன்னார். அவர் முகத்தில் உதட்டோரம் வந்த புன்னகையின் கம்பீரம் தெரிந்தது. ஆனால் அன்று என் மனைவிக்கான ஜாக்கெட் ரெடியாகவில்லை. தம்பி அடுத்த வாரம் தைத்து விடுவதாக பொண்ணுகிட்டே சொல்லுங்க என்றார். அவர் மனைவி உடல் நலமில்லாமல் கட்டிலில் படுத்திருந்தார்.

ஏன் மனைவிக்கு அவருக்கும் ஏதோ பிணக்கு நேர்ந்திருக்க வேண்டும். அவள் அவரிடன் கொடுத்த துணிகளை வாங்கி வந்திருந்தாள். ஒரு நாள் காலை நான் நடைப்பயிற்சிக்கு சென்று வந்து கொண்டிருந்த போது ஒரு சைக்கிள் என்னருகே வந்தது. டைலர் அதிலிருந்து இறங்கிய தம்பி பாப்பா போன வாரம் வந்து எங்கிட்டே கொடுத்த துணியை திருப்பி வாங்கிட்டா. கொஞ்சம் சத்தம் போட்டாப்பல. எம் பொண்ணு மாதிரி.. அவளுக்கு முதல் ஜாக்கெட்டிலிருந்து நான் தான் தைக்கிறேன். கொஞ்சம் முடியலையப்பா.. கவலையுடன் சைக்கிள் ஏறிப் போனார்.

சேலம் சுகவனேஸ்வர் கோயில் அருகில் நம்பர் ஒன் ஆக இருக்கும் டைலர் ஒருவரை சந்தித்து¸ பம்பாய் டைலர் தைத்த ஒரு ஜாக்கெட்டைக் காட்டி இது போல தைத்து தரமுடியுமா என்றேன். அவர் அந்தத் துணியில் இருந்த இரட்டைத்தையல் கொண்ட அமைப்பை பார்த்துவிட்டு சார் இதெல்லாம் பொம்பளைங்க தைக்கிற ஜாக்கெட்.

இல்லை இது ஒரு ஆண் டைலர் தைத்தது தான்.

என்ன சார் இவ்வளவு வருசமா ஜாக்கெட் தை;க்கிறேன் எனக்கு தெரியாதா.. காலையிலே பொய் சொல்ல வந்துட்டாங்க.. சார் இது மாதிரியெல்லாம் எங்களால் தைக்க முடியாது. இந்த கட்டிங் ஸ்டைல் அளவு எடுத்து தைச்ச மாதிரி இருக்கு. என்னால் முடியாது. துணியை திரும்பிக் கொடுத்துவிட்டார்.

உடன் வந்த என் மனைவி சிரித்தாள். பம்பாய் டைலர் மாதிரி ஒரு சிறந்த தையற் கலைஞனை காண முடியாது. ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு சரியாகப் பொருந்துகிற மேலாடையை அவரால் தைக்க முடியும். அவர் அதிகமாக பேசுவது ஏம் பாப்பா கம்மாங்கட்டைய கொஞ்சம் அட்சஸ்ட் செய்தால் சரியா வந்திரும் ஜாக்கெட் என்பார். நானும் சேலத்தில் ஒன்று இரண்டு டைலரிடம் கொடுத்துப் பார்த்தேன் மனைவிக்கு சரியாக அமையவில்லை.

அந்த வருட தீபாவளிக்கு முன்பாக டைலருக்கு இனிப்பு காரம் வாங்கிக் கொண்டு அவரை இல்லத்தில் சந்தித்தேன். இந்த முறை வாடகை வீட்டை மாத்தியிருந்தார். கூடுதலாக மெத்தை தைக்கும் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தார். அந்த அக்காவின் உடல் நிலையும் மோசமாக இருந்தது. இனிப்பை பெற்றுக் கொண்ட அந்த அக்கா ஏண்ணா.. இப்பெல்லாம் பாப்பா கட்டியிருக்கிற கோயமுத்தூர் புடவை நல்லாயிருக்கு..இந்த தீபாவளிக்கு எனக்கொன்னு வாங்கித்தாங்க என்றார். மிகுந்த சந்தோசமாக இருந்தது. அடுத்த முறை கோவையில் வாங்கிய அவர் சொன்ன வண்ணப்புடவை ஒன்றை பரிசாக தந்தோம். அதன் பிறகு என் மனைவியும் டைலரும் சமாதானம் ஆனார்கள். அடுத்தடுத்து துணி தைப்பதற்காக சென்ற போது அவரிடம் சில முறை நீண்ட நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் பெற்றோர்களுடன் சேலத்தில் வசித்துவந்த அவர் சின்னச் சின்ன வேலைகளை செய்து வந்திருக்கிறார். எதிலும் நீதி நேர்மை என உரிமையைப் பெறுவதற்காக சண்;டைக்கு செல்லும் தன் மகன் போக்கிரி ஆகிவிடுவானோ எனப் பயந்த பெற்றோர் திருமணம் செய்திருந்த அவரை வேலைக்காக பம்பாய்க்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பம்பாய் சென்ற அவர் மனதுக்கு பிடிக்காத வேலை செய்ய பிடிக்காமல் பாலிவுட் துணை நடிகைகளுக்கு ஜாக்கெட் தைப்பவரிடம் உதவியாளராக 15 வருடங்களுக்கு மேலாக வேலை பாத்திருக்கிறார். சம்பாதித்ததை எல்லாம் தன் அன்பு மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்திருக்கிறார். சேமிப்பு இல்லாத வெள்ளேந்தியான வாழ்க்கை. பிறகு பம்பாயில் வாழப்பிடிக்காமல் ஆட்டையாம்பட்டி வந்து டைலர் தொழிலை ஆரம்பிக்க அவருடன் ஒட்டிக்கொண்டது பம்பாய் டைலர்.

மனைவியின் உடல் நலம் கெட கெட அவரின் மனம் உடைந்து கவனம் மாறியது. முன்னைப் போல் அவரால் உட்கார்ந்து தைக்க முடியவில்லை. மருந்துகள் வாங்கும் பொருட்டு தைப்பதற்கு முன்பாகவே கூலியை வாங்க ஆரம்பித்தார். ஆனால் குறித்த நேரத்தில் தைக்க முடியவில்லை. தீபாவளிக்கு கொடுத்த துணியை பொங்கலுக்கு கூட தர முடியவில்லை. ஆனால் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கான சட்டை டிராயரை உடனே தைத்து தருவதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். குழந்தைகள் இல்லை. மனைவியே உலகம் என வாழ்ந்தவருக்கு மனைவி மரணத்ததை நோக்கி பயணிப்பதைக் கண்டு மிகுந்த கவலை அடைந்தார். வெண்ணந்தூர் அரசு மருத்துவமனை வைத்தியம். பெரும்பாலும் இலவம் பஞ்சு மெத்தை அடைக்கும் வேலை. தையல் இயந்திரங்கள் பழுது பார்க்கும் வேலை என எளிதாக பணம் சாம்பாரிக்கும் வேலைக்கு ஓடினார்.

மனைவியின் உடல் நலம் மிகவும் மோசமாக ஒரு நாள் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்பூலன்சில் எடுத்துச் சென்றார். ஒரு நாள் முழுக்க படுக்கை தராமல் வரண்டாவில் கீழேயே போட்டு வைத்திருந்திருக்கிறார்கள். கோபமடைந்த டைலர் கூட்டமாக இருந்த நோயாளிகளைத் தாண்டி தலைமை மருத்துவரைப் பார்த்து சத்தமாக நியாயம் கேட்டிருக்கிறார். சிங்கமாக கர்ஜித்த அவரது குரல் அவரின் இளமைக் காலத்து நண்பர்களை திரட்டிக் கொடுத்திருக்கிறது. மனைவிக்கு சரியான சிகிச்சை கிடைத்து வீடு திரும்பினார். ஆனால் கொஞ்ச நாள் கூட வாழவில்லை. மனைவி மரணம் அடைந்தார்.

தம்பி புண்ணியம் செஞ்சவ முன்னாடி போயிட்டா. விரக்தியில் பேசினார். அவரைப் போல் மனைவியை நேசித்தவரைப் பார்க்க முடியாது. அன்னியோன்யமான தம்பதிகள். மாரியம்மன் கோவிலுக்கு முன் இருந்த சிற்றுண்டிச் சாலையில் இட்லி அவரின் பெரும்பாலான உணவாக இருந்தது. ஒரு முறை வீட்டிலிருந்து பிரியாணி கொடுத்தோம். மகிந்தார். அதற்க்குப்பிறகு என் மனைவிக்கு சில ஜாக்கெட் தெய்த்துக் கொடுத்தார். வீடு தேடி வந்து துணியை வாங்கிக் கொண்டு பேசிச் செல்வார். தனியாக கவலையுடன் இருப்பவனை மதுக்கடை போல அணைத்துக்கொள்வார் யாருமில்லை. மதுக்கடைக்கு வாடிக்கையாளர் ஆனார். துணி தைக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்து போனார்கள்.

ஓவியர் ஐPவா இரண்டாவது முறை ஆட்டையாம்பட்டிக்கு வந்த போது டைலரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் மெத்தை தைக்கும் சென்று விட்டாக சொன்னார்கள். பம்பாய் குறித்து 20 வருட அனுபவமும் நிறைய தகவல்களும் அவரிடம் இருந்தது. வர்தா பாய் வரதராஜ் முதலியார் ஆட்களுடன் வேலையை செய்திருக்கிறார். எப்போது சென்றாலும் வயிறு நிறைய உணவும் கைநிறைய பணமும் தருவார் என பம்பாய் நாயகனைப் பற்றி கூறியிருக்கிறார். ஆட்டையாம்பட்டி மாமுண்டியை சேர்ந்த ஒருவர் கூட பம்பாயில் சிறப்பாக வாழ்கிறார் எனச் சொல்லியிருக்கிறார்.

டைலரின் வாடிக்கையாளர் பெரியவர் முன்னாள் சொசைட்டி செயலாளரை கேட்ட போது.. சார் 15 நாளா உடம்பு சரியில்லாம இருந்தான். நான் கூட போய் பார்த்தேன். தொண்டை¸ உணவுக் குழாய்¸ வயிறு எல்லாம் ஒரே எரிச்சலா இருக்குன்னான். ஓவரா பீடி குடிப்பாப்பல. அவ்வளவுதாண்ணா இனி தையல் வேலை பார்க்க முடியாதுன்னு சன்னமா பேசினான். அப்புறம் செத்துப் போயிட்டான்னு சேதி வந்திச்சு. அருமையான டைலர் சார். எனக்கு சட்டை தைக்க குடுத்த ஓரே நாளு உடனே தைச்சு குடுத்துருவான். என்ன கொஞ்சம் லொல்லு பேசுவான். ஜாக்கெட் அருமையான தைப்பான் சார். இனி ஆட்டையாம்பட்டி பொம்பளைக்கு ஜாக்கெட் தைக்க நல்ல டைலர் இல்லை.

அவர் லொல்லு என்று சொன்னது டைலரிடம் இருந்த உரிமைக்காக போராடும் போர்க்குணம் தான். தையல் கலைஞன் என்றாலும் அவர் உரிமையை ஒரு நாளும் விட்டுக் கொடுக்கமாட்டார். தைக்க முடியலை இப்ப என்னாங்குறே வேண்டாம்னா இந்தா துணி எடுத்துப்போங்க. .பல் இளிக்கும் வேலை ஒரு நாளும் அவரிடம் இல்லை. பொது இடங்களில் சாதரண மனிதர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் நபராகவே வாழ்ந்தார்.

நியாய விலைக்கடைக்கு ஒட்டிய ஒரு சிறு சந்தில் அவர் வீட்டு வாசலில் சைக்கிள் இருந்தால் அவர் உள்ளே தைத்துக்கொண்டு இருப்பார். இன்று சைக்கிள் இருக்கிறது அவர் இல்லை. பம்பாய் டைலர் ராஜூவின் மரணச் செய்தியை ஒரு நாள் முன்பு பார்த்திருந்தால் தம்பி என அன்போடு அழைத்தவரின் முகத்தை கடைசியாக ஓரு முறை பார்த்திருக்கலாம். அடித்தட்டு மக்களின் உரிமைக்காக தைரியமாக குரல் கொடுத்த ஒரு தையல் கலைஞரை ஆட்டையாம்பட்டி இழந்திருக்கிறது.

••••

சங்கத்தின் நீட்சியான புனைவு. / கவிஞர் செந்தி

download (6)

மதுரையில் புனைவு பதிப்பகம் துவக்க விழாவும் மூன்று நூல்களுக்கான விமர்சனமும் நடைபெற்றது. துவக்கவுரையாற்றிய கவிஞர் சமயவேல் “பைத்திய மனநிலையில் இருப்பவன் கவிஞன், கவிஞனொருவன் பதிப்பகம் துவங்கலாமா? என்கிற கேள்வி எழுகிறது. தமிழில் ஒரு பதிப்பகம் தொடங்கி நடத்துவது சிக்கலானது. ஆனால் அதில் உள்ள மகிழ்ச்சி அலாதியானது என்றார்.

புனைவு பதிப்பகத்தின் முதல் வெளியீடும் அ.ரோஸ்லினின் நான்காவது கவிதைத் தொகுப்பான “கண்டறியாது பூக்கும் மலரை” சக்தி ஜோதி பெற்றுக் கொள்ள மீனாட்சி சொக்கன் வெளியிட்டது அபூர்வ நிகழ்வு.

“அகவுலகின் விரிவுகளை நிறங்களால், சுவைகளால், மனங்களால், சிறகுகளால், பறவைகளால் நிறைத்து தன்னை நிலமெனும் ஆதாரங்களாய் நிறைக்கும் கவிதைகளால் நிறைந்த தொகுப்பு இது. நிலமின்றி அகமேது. கண்டறியாது பூக்கும் மலரின்றி அகமேது” என்றார் நூலினை வெளியிட்ட மீனாட்சி சொக்கன்.

சக்தி ஜோதியின் உரை அபாரமானது. ஆண் படைப்பு, பெண் படைப்பு எனத் தொடங்கி, அக புற உணர்வுகளின் மீதான அவரது சொற்பயணம் நூதனமானதும் கூட.

ஏற்புரையில் அ.ரோஸ்லினின் “பெண்ணுக்கு எனக்கு கிடைத்த சிறுவெளியில் தன களிப்பு, துயரம், சிநேகத்தைப் பாடிச்செல்லும் சிற்றிலையாக எனது கவிதைகளை முன்வைக்கிறேன். காடறியாத என் சிநேகம் முள்ளின் மீதேறி வேதனை ஏற்கிறது. ஆண் மீதான பெண்ணின் சிறு அதிகாரத்தைப் பரப்பவும் கவிதைத்தனம், நெகிழ்ந்த சொற்களால் பிரியம் காட்டவும், கடுஞ்சொல்லில், தோய்த்தெடுக்கப்படுதலும் எனது கவிதை குறித்த விமர்சனம் ஓர் பெண் எழுத்துக்கு மிக அந்நியமானதே. பெண் என்பவளின் சுருங்கிய புழுங்கு வெளியில் பெண்ணெழுத்து எனும் தனித்துவமிக்க பேரோடையில் ஆணினது இருப்பே மிக அணுக்கமாகவும் சலசலத்தும் ஓடுகிறது. அதைத் தாண்டிய நீட்சிகளே புறவெளி பற்றிய பார்வையை இன்னும் நெருக்கமாக்கும். அச்குழல்களே எழுத்தின் தளத்தையும் தீர்மானிக்கும்” என்றார்.

சூரர்பதியின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து பேசிய தமிழ்ப்பித்தன், “நிகழ்கால இருப்பிற்கும், இருப்பின்மைக்குமான இடைவெளிக்குள் அரூபமாகும் காலத்தின் மீது நிலை கொள்ளும் மாய நிலைக்காட்சியின் உயிர்த்துடிப்பை மொழியாக்க முயலும் உணர்வின் தவிப்பே சூரர்பதியின் கவிதை மனமாக உள்ளது. இது தனது காட்சி கோணத்தை விஸ்தரித்து செல்வதும், விஸ்தரிப்பிலிருந்து ஒரு புள்ளி பார்வைக்கு கோணத்தில் கரைப்பதுமாக அவரது உள்வெளி புனைவிற்கும், அப்புனைவிற்குமாக சர்ப்ப பின்னாலமிட்டு வாழ்வின் தரிசனத்தை காண விளைகிறது. ஒரு இலை நரம்பினை நீவும் விரல்களுக்குள் ஊடுபாயும் ஆணிவேரின் வாசம் போல் சூரர்பதியின் கவிமனம் தனிமையாக்கப் பட்டத்தின் பெரும் வதையிலிருந்து தன்னை மீட்க அன்பின் கரம் அகல விரிக்கிறது. மழையை மியூசியத்திலிருந்து வெளியேற்றும் சூரர்பதியைக் கொண்டாடலாம்” என்றார். மிக மென்மையாக ஏற்புரை வழங்கினார் சூரர்பதி.

சுரேஷ்குமார் இந்திரஜித்தின் “இடப்பக்க மூக்குத்தி” கதைத் தொகுப்பை முன் வைத்துப் பேசிய மதுரையின் கவிதை அடையாளமான கவிஞர் ந.ஜயபாஸ்கரன். “மனித அகத்தில் முரண்பட்ட விஷயங்கள் அருகருகே அமர்ந்திருப்பதையும், அவற்றின் இயக்கத்தில் தற்செயலின் சூதாட்டம் பெரும்பங்கு வகிப்பதையும், அதிபுனைவு, யதார்த்தம் என்ற இரண்டு தளங்களிலும் நுட்பமாக பதிவு செய்து வருபவர் சுரேஷ்குமார் இந்திரஜித்.

கதையற்ற கதையிலிருந்து கதையை நோக்கி அடர்ந்த வனத்திலிருந்து புல்வெளியை நோக்கி பயணப்படுகிறார் அவர் என்பதற்கு சமீபத்திய சாட்சி “இடப்பக்க மூக்குத்தி” தொகுதி.

“குறைச்சல் மூலமே வெற்றி கண்டவர்” என்று கு.ப.ராவைப் பற்றி சிட்டி செய்திருக்கும் மதிப்பீடு சுரேஷ்குமாருக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.

உணர்ச்சி அதிகம் கலக்காத சிறிய சொற்கள், சிறிய தொடர்கள், சிறு அசைவுகள் இவற்றின் மூலம் ஒரு அகவுலகத்தை சிருஷ்டிக்க அவரால் முடிகிறது.

இந்த தொகுதியின் சிறந்த கதையான “இடப்பக்க மூக்குத்தி” ஒரு புதிரான ஒளியை தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது.

யதார்த்தமும், புனைவும் சரியான விகிதத்தில் கலந்துள்ள இந்தக் கதை, புதிர் புதிராகவே இறுதிவரை எஞ்சிவிடும் அதிசயத்தையும் உணர்த்துகிறது.

ஆண்களின் ரகசிய வேட்க்கையின் குறியீடான “இடப்பக்க மூக்குத்தி”, விரித்த கூந்தளைப் போல ஒரு சமூகத்தின் கூட்டு நளவிலி மனத்தின் குறியீடு என்றே தோன்றுகிறது.

இந்த குறியீட்டை கதைக்குள் நுட்பமாக பதிந்து வைத்திருக்கிறார் சுரேஷ்குமார்.

இந்த தொகுப்பின் மற்ற கதைகள் அந்த அளவுக்கு எழும்பி வரவில்லை என்று குறிப்பிட்டார்.

நன்றியுடன் ஏற்புரையைத் தொடங்கிய சுரேஷ்குமார் இந்திரஜித் தனது படைப்புகளின் நுட்பம் குறித்து அழகான விவரணையைக் கொடுத்தார். புதியவர்களுக்கான வழிகாட்டி வார்த்தைகள் அவை.

மரணம் சூழ் அவஸ்தையும், மரணம் மூலமாகவோ அல்லது மரணத்தைத் தாண்டியோ கிடைக்கும் மீட்சியையும் சுற்றிப் பின்னப்பட்ட கதைகளைக் கொண்ட தொகுப்பான போகன் சங்கரின் “கிருஷ்ணன் ஆயிரம் நாமங்கள்” குறித்த கவிஞர் நேசமித்ரனின் உரை வழக்கமான அவரது கச்சிதத்துடன் அமைந்தது. வலியைக் கொண்டாடும் கதை மரபின் ஆதியிலிருந்து இன்று வரையிலான எழுத்துக்களையும் சுட்டிக் காட்டியது காத்திரமானது.

தனது நெகிழ்வான ஏற்புரையில் போகன் சங்கர் “தான் வலியச் சென்று அவலத்தைக் கொண்டாடுவதில்லை, தான் தினம் தினம் எதிர்கொள்ளும் அவலப்பொதியின் ஒரு சிறு துண்டை மட்டுமே தன் எழுத்தில் கடத்தி சிறு ஆசுவாசம் கொள்வதாகும்” என்றார்.

நிகழ்ச்சியை கவிஞர் செந்தி தொகுத்து வழங்கினார்.

அரசியல் பகடையாட்டம் ஷான் எழுதிய “வெட்டாட்டம் ” நாவல் குறித்த வாசிப்பனுபவம் / பாலகுமார் விஜயராமன்

vettattam__74734_std

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவை நாட்டை ஆட்கொண்டபின், பிறந்த இளைஞர்கள் சமூகத்தை எப்படிப் பார்க்கின்றனர், அறவிழுமியங்களுக்கும், எளிய வாழ்வுமுறைக்கும் அவர்கள் கொடுக்கும் மதிப்பு என்ன? எதையும் மேம்போக்காக பார்த்து, உணர்ந்து, பழகி, அனுபவித்து வாழும் இன்றைய தலைமுறை இளைஞன் ஒருவனுக்கு, எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் அரசியல் பதவியும், அதில் வேண்டாவெறுப்பாக ஒட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவனது செயல்பாடுகள், பின் பிழைத்திருத்தல் பொருட்டு அவன் மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள், சதிகளுக்கு எதிரான அவனது பதில் தாக்குதல் என்று ஷான் எழுதிய வெட்டாட்டம் நாவலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நாவலை, இரண்டே அமர்வுகளில் வாசித்து முடிக்க முடிந்தது. சுவாரஸ்யத்திற்கும், விறுவிறுப்பிற்கும் குறைவில்லாத படைப்பு. சென்னை பெருவெள்ளம், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, தலைவர் கைதுக்காக மாணவிகளோடு சென்ற பேருந்து எரிப்பு, மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் முன்னாள் முதல்வர், வெளியே காட்டப்படும் பழைய சிசிடிவி ஃபுட்டேஜ் என்று சமகால அரசியல் நிகழ்வுகளோடு, பனாமா பேப்பர்ஸ், ஹவாலா, பிட்காயின், ப்ரூட்ஃபோர்ஸ் அட்டாக், ஃபிஷ்ஷிங் என்ற உலகலாவிய தொழில்நுட்பம் சார்ந்த சைஃபர் கிரைம் தகிடுதத்தங்களை புனைவில் கலந்து, ஒரு கச்சிதமான அரசியல் திரில்லரைக் கொடுத்திருக்கிறார்.

அசாதாரணமான சூழ்நிலையில், திடீரென முதல்வர் பதவியில் அமர நேரும் இன்றைய தலைமுறையின் பிரதிநிதி இளைஞன், தனது சம்யோசித புத்தி, தொழில்நுட்பத் திறன், தனக்குப் பழக்கமான நெர்வொர்க் ஆகியவற்றின் மூலமாக எப்படி தனது பதவியைத் தக்க வைக்கிறான் என்பதை பரபரப்புடன் சொல்கிறது “வெட்டாட்டம்”. அரசியல் காய்நகர்த்தல்கள், படிநிலை அரசியல் போன்ற வழமையான அரசியல் விளையாட்டுகள் தெரியாததே அவனது பலம். தன் மனதுக்கு சரியென்று பட்டதை, துரிதமாக முடிவெடுக்கிறான், அதனைத் துணிந்து செயல்படுத்தவும் செய்கிறான். பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால், தைரியமான காரியங்களை யாருக்கும் பயப்படாமல் செய்கிறான். விளைவு, குறுகிய காலத்தில் மக்களிடம் நன்மதிப்பைப் பெறுகிறான். அவனது தந்தை மூலமாகவே தனது பதவிக்கு ஆபத்து வரும் போது, தன் தொழில்நுட்ப அறிவு கொண்டு, வழக்கமான அரசியல் காய்நகர்த்தல்களையும் அவன் செய்யத் தவறுவதில்லை.

நாவல் முழுக்க, பெரிதாக லாஜிக் மீறல்கள் முதல் வாசிப்பில் தென்படவில்லை. தொழில்நுட்ப விஷயங்களை கண்கட்டு வித்தையாக சொல்லாமல், எளிமையான வார்த்தைகளில் விவரித்திருப்பது சிறப்பு. வேகமான வாசிப்பு அனுபவத்திற்கேற்ற பரபரப்பான எழுத்து நடை, சமகாலத்தில் நாம் அறிந்த அரசியல் நிகழ்வுகளை உறுத்தலின்றி புனைவுக்குள் செருகியது ஆகியவை நன்றாக வந்திருக்கின்றன.

வருணின், ரெயின்போ ரிசார்ட் வீடியோவை, விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான விளம்பரம் என்று மாற்றுவது, ஆளில்லா சிறிய ரக பறக்கும் இயந்திரத்தை ஜி.பி.எஸ் மூலம் ஒரு வாகனத்தோடு இணைத்து பறக்க வைப்பது, ப்ளூடூத் மூல்மாக விர்சுவல் லாகின் ஆவது, சென்சார்கள் பயன்பாடு, ப்ராக்ஸி என்று புதிய உத்திகள் மூலமாக கதையை முன்னகர்த்திச் சென்றது சுவாரஸ்யம் என்றால், மகேந்திரனின் எபிஸோட் முழுமையுமே அதரப் பழசான கிளிஷே. அதுவும் அவரின் முன்னாள் காதலி, சுப்ரமணியின் மனைவியாவது, சுப்ரமணி வினோதனாவது எல்லாம் மிக எளிதாக யூகிக்க முடிந்த கதை. அதே போல, வருண் – அருண், கயல்விழி – பூங்கொடி, அனந்தராமன் – சந்தானராமன் என்ற பெயர்க்குழப்பங்கள் நாவல் முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

இவை எல்லாம் சிறு பிழைகள் தான். நல்ல வாசிப்பனுபவத்திற்கு இவை பெரிய தடையாக இருக்கவில்லை என்றாலும், கொஞ்சம் கவனித்திருந்தால், இவற்றை தவிர்த்து இருந்திருக்கலாம்.
செய்திகளாக நாம் கடந்து வந்த பல நிகழ்வுகளை, நினைவில் வைத்து அதை புனைவின் தளத்தில், சரியான இடத்தில் பொருத்துவது என்பது ஒரு கலை. அதை ஷான் தனது ஒருமுகச் சிந்தனையின் மூலமாக, கச்சிதமானதொரு படைப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். கலை, வாசிப்பவனை கிளர்த்தெழச் செய்து, சமுதாயத்தின் இழிநிலைகளை கேள்வி கேட்கச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் சரி தான். ஆனால் சமகாலத்தை உள்ளது உள்ளபடி பதிவு செய்கின்ற ஆவணமாக இருக்கின்ற படைப்புகளும் காலத்தின் குரலைப் பேசவே செய்கின்றன.

அந்தவகையில், எடுத்துக் கொண்ட சட்டவரைவுக்குள், புனைவையும், அரசியல் நிகழ்வுகளையும் (விமர்சனங்களை அல்ல), தொழில்நுட்பத்தையும் சரிவிகிதத்தில் கலந்து கட்டி விளையாடியிருக்கிறார். உணர்வெழுச்சியின் வழியாக, நுட்பமான விவரணைகளோடு, வாசிப்பவனை குற்றவுணர்ச்சிக்கோ அல்லது மிகை உணர்வுக்கோ ஆளாக்காமல், சுவாரஸ்யமாக வாசித்துச் செல்லக்கூடிய வகையில், “செய்யப்பட்ட” நாவல் தான் வெட்டாட்டம். ஆனால் அந்த செய்முறையில் நேர்த்தியும், ஒழுங்கும், அபத்தமின்மையும் நிறைந்திருக்கிறது
ஒரு வேளை, சுவாரஸ்யமாக இருப்பது இலக்கியத்தில் தீட்டு என்ற தூய்மைவாதத்தைப் பாதுகாக்கப் போராட்டம் நடக்குமென்ன்றால், “வெட்டாட்டம்” இலக்கியம் இல்லை என்று சொல்லிவிட்டுப் போகட்டும். என்ன கெட்டு விடப்போகிறது?
நல்ல பொழுதுபோக்குத் தரத்துடன் கூடிய சுவாரஸ்யமான நாவல். வாழ்த்துக்கள், ஷான் மற்றும் யாவரும் பதிப்பகம்.

******

வெட்டாட்டம் – நாவல்
ஷான்
யாவரும்.காம் வெளியீடு
விலை: ரூ. 240

ஔவை – கவிஞர் சக்திஜோதி

download (12)

“முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்…”
இங்கே எந்தப்பெண்ணும் தனித்து நடக்கத் தேவையில்லை. காதலினாலோ பிரிவுத்துயராலோ தவிக்கும்போது, தோல்வியினாலோ ஏமாற்றத்தினாலோ துணிவை இழக்கும்போது, அவநம்பிக்கையினாலோ பதற்றத்தினாலோ தடுமாறும்போது அவளுக்குப் பற்றிக்கொள்ள ஒரு வலிமையான கரம் உண்டு. அது, இரண்டாயிரம் வருடப் பழமையான சொற்களை தன் தோலின் சுருக்கங்களில் சேமித்து வைத்திருக்கும் ஒளவையின் கை தான்.
___

சங்கப் பெண்பாற் புலவர்களின் அறுதியான எண்ணிக்கைக் குறித்து அறிஞர்களிடையே மாறுபட்டக்கருத்துகள் இருப்பினும், அப்புலவர்களில் தலையாயவர் ஔவைதான் என்பதை அவர்கள் அனைவருமே ஒன்றுபட ஒப்புக்கொள்கிறார்கள். வேறெந்த பெண்பாற்புலவரைக் காட்டிலும் கூடுதல் எண்ணிகையில் ( 59 ) பாடல்கள் எழுதியவர் என்பதால் மட்டும் கிட்டியதில்லை அவருக்கு இப்பெருமை.

மாறாக அவருடைய பாடல்கள் அவற்றின் உணர்ச்சித் தீவிரத்தாலும், உள்ளார்ந்த அறச்சீற்றத்தினாலும், மொழிச் சிறப்பினாலும் தனித்துத் தெரிபவை. பெரும்பாலான சங்கப்புலவர்களைப் போலவே ஔவையின் வாழ்க்கை குறித்தும் யூகத்தால் அடையப்பெற்றவை தவிர்த்து உறுதிப்படுத்தப்பட்டத் தகவல்கள் ஏதும் நம்மிடம் கிடையாது.
சங்கக்கவிதைகளை எழுதியவர் ஒருவர், இடைக்காலத்தில் நீதி நூல்களைப் பாடியவர் இன்னொருவர், தனிப்பாடல்களைப் பாடிய மற்றொருவர் என மூன்று ஔவையார்கள் வரலாற்றில் இருந்ததாக ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

இதற்கும் கூடுதலாக ஔவை என்ற பெயரில் புலவர்கள் இருந்திருக்கக் கூடுமென இன்னும் சிலர் குறிப்பிடுகிறார்கள். இதற்கும் மேற்சென்று ஒவ்வொரு காலகட்டத்திலும் சுயேட்சையாகவும் வீரியத்துடனும் எழுதக்கூடிய ஒவ்வொரு பெண்ணையுமே ஔவை என்றழைக்கும் மரபு இருந்திருக்கலாம் என்றும் கருதுபவர் உண்டு.
பெண்ணின் அடிமன உணர்வுகளை அவற்றின் உள்ளார்ந்த தீவிரத்தோடு பேசும் ஒளவையின் வரிகள் அவர் காலத்துக்கு முன், பின்னாக எழுதிய உலகப் பெண்கவிஞர்கள் பலரின் பாடல்களோடும் ஒப்புநோக்கத்தக்கவை. தொன்மையான மொழிகளான கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சீனம், பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகியவற்றில் எழுதியுள்ள சில பெண்கவிஞர்கள் தம்காலத்தைக் கடந்தும் நிலைத்திருக்கிறார்கள்.

இவர்களது கவிதைகளை ஒப்பிட்டு ஆராய்வதன்வழி சங்கப்பாடல்களின் சிறப்பை இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ள முடியும்.
சாப்போ, கி.மு.ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கப் பெண்கவிஞர். கிரேக்கத்தின் ஞானிகள் எழுவரில் ஒருவராகக் கருதப்பட்டவர். வாழும் காலத்திலேயே புகழ்பெற்றவர். நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்ததால் லெஸ்போஸ் தீவிலிருந்து சிசிலி தீவிற்கு நாடுகடத்தப்பட்டவர்.

காதலின் உணர்ச்சித் தவிப்பை மிகவும் வெளிப்படையாகப் பாடியவர். இவரது காலத்திற்குப் பிறகு பிறமொழிகளில் எழுதிய பெண்கவிஞர்கள் பலரையும் இவரோடு ஒப்பிட்டுப் பேசுவது வழமையாயிற்று. அவ்விதத்தில் சீனாவின் லிகின்சாவ் ( கி.பி. 11 ), ஸ்பெயினின் வல்லாடா (கி.பி. 11) போன்ற கவிஞர்கள் சாப்போவோடு இணைவைத்துப் பேசப்படுகிறார்கள். ஔவையை சாப்போவின் கவிதைகளோடும் மற்ற உலகப்பெண் கவிஞர்களோடும் ஒப்பிட்டு அறிஞர் பெ.சு. மணி நூல் எழுதியுள்ளார்.

இடரினும், தளரினும் சாப்போ “அப்ரோதிதே” எனும் காதல் தெய்வத்தையே நாடுவாள். தன்னுடைய எவ்விதமான துயரத்தையும் “அப்ரோதிதே, என் தேவதையே, தலைவியே, என் உள்ளத்தைக் கொடுந்துயரிலும், சித்தரவதையிலும் உடைத்துவிடாதே.“ என்றழைத்து முறையிட்டுக் கவிதைகள் புனைந்திருப்பாள். தான் விரும்புகிறவரின் மனதில் தன்மேல் காதல் உருவாகவேண்டுமென அப்ரோதிதேவை சாப்போ வேண்டுதல் செய்வாள். இதனை சங்கமரபின் வெறியாட்டு நிகழ்வோடு ஒப்பிடுவர். காலத்தை வென்று நிற்கும் சாப்போவின் பாடல்களில் ஒன்றைத் தவிர மற்றவை முழுமையாகக் கிடைக்கவில்லை.

2000 வரிகளுக்கு மேல் இருக்கவேண்டிய தொகுப்பில் 666 வரிகளே கிடைத்துள்ளன. அவளுடன் நட்பிலிருந்த அனக்டோரியா என்கிற பெண்கவிஞர் திருமணம் செய்துகொண்டு பிரிந்து சென்றுவிடுவாள். அவளுக்காக சாப்போ பாடிய பாடல்,
“இந்த உலகில் நிறைவெய்த ஒருவராலும் முடியாது,
ஒருகாலத்தில் நாம் பகிர்ந்து கொண்டதை
இன்னமும் பகிர விரும்புவதாக இருப்பதே
காதலை மறப்பதைவிட மேலானது.“ என்கிறாள்.

இதுபோன்ற ஒரு பால் காதல், எதிர் பால் காதல் என அமைந்திருக்கும் பல பாடல்கள் வழியாக வேட்கை மிகுதலின் துன்பத்தைப் பாடியவராக சாப்போவை அடையாளப்படுத்துகிறார்கள். சாப்போவின் பாடல்கள் கிரேக்கத்தின் திருமண விழாக்களில் பாடுவது சிறப்பெனவும் கருதப்பட்டது.

டெலிசில்லா, பிராக்ஸில்லா. எரின்னா, டெகியாவின் எனிட்டி, நோஸிஸ், கொரின்னா போன்றவர்கள் சாப்போ காலத்தைச் சேர்ந்த பெண் கவிஞர்கள். கிரேக்கப் பண்பாட்டில் கலைக்காக ஒன்பது தெய்வங்கள் இருந்தன. “பொதுவாக கிரேக்கர்கள் கவிதையிலேயே வாழ்ந்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது” என அறிஞர் வெ.சாமிநாத சர்மா குறிப்பிடுகிறார்.

ரோம் நாட்டினை அகஸ்டஸ் ஆட்சி செய்த காலத்தில் இலத்தீன் மொழியில் கலைகள் வளர்ச்சியடைந்ததாகக் குறிப்புகள் உள்ளன. ‘எலிஜி’ என்கிற இரங்கற்பா வகைப்பாடல்கள் அறிமுகமாகின. யாப்பமைதியுடன் இசை லயத்துடன் அவை பாடப்பட்டன. போர், அரசியல், காதல், வாழ்க்கையின் பொதுவான இன்ப துன்பங்கள், நட்பு, இறப்பு, ஆகியவை பாடுபொருளாக இருந்தன. சல்பிசியா என்கிற பெண்கவிஞர் தனது காதலன் செரிந்தஸ்’காக பாடியவை மூலமாக கவனம் பெற்றிருப்பவர்.

ஹீப்ரு மொழியில் கி.மு.1150 இல் தெபோரா என்பவர் முன்னோடி பெண்கவிஞர். யூத இனத்திற்காக செயல்பட்டவராக வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார். நியாயாதிபதிகள் ஐந்தாவது அதிகாரத்தில் 31 பாடல்கள் இவர் பாடியவை. இவை மத உணர்வும், வீர எழுச்சியும், தேசப்பற்றும், பகைவர் ஒழிப்பும், அமைதியான ஆட்சிக்கான விருப்பமும் கொண்டவை. பெண்ணின் வஞ்சினம் எவ்வளவு ஆற்றலுடையது என்பதைச் சொல்பவை இவரது பாடல்கள்.

போர்க்களத்தில் குதிரைகளின் வீரத்தை வர்ணிக்கும் தெபோராவின் பாடல்,
“அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலிலே, பலவான்களின் பாய்ச்சலிலே பிளந்து போயின.“ இதனையொத்த ஒளவையின் புறநானூற்று பாடல் ஒன்றின் காட்சி,
“மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந்தார் கெடப் பறித்தலின்
களன் உழந்து அசைஇய மறுகுரும் பிளவே.. “

தெபோராவைத் தவிர மிரியாம் என்கிற பெண் கவிஞரும் உண்டு. இவர்கள் இருவருமே யூதர்களின் வரலாற்றில் தீர்க்கதரிசிகளாகக் குறிப்பிடப்படுகிறார்கள்.

சீனாவின் பழமையான கவிதைகள் பெரும்பாலும் தொகை நூல் வகைப்பட்டவை. பண்டைய சீனாவில் பெண்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. என்றபோதிலும் லிகிங் சாவ், பான் சியூ, சாயின் போன்றவர்கள் சீன இலக்கியத்தில் அறியப்பட்டவர்களாக இருக்கிறார்கள். காதல், புறக்கணிப்பின் வலி, ஏக்கம், சமூக உறவுகளினால் ஏற்படும் சிக்கல் போன்றவை இவர்களது பாடுபொருளாக இருந்தன.

சமஸ்கிருத மொழி வரலாற்றில் கேலா, முத்கலானி, சுலபா, த்ரிதவ்ரதா, ஸ்துருதவதி, மைத்ரேயி, கார்க்கி, போன்ற வேதகால பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், ஆண்களுக்கு நிகராக சபையில் வாதிடும் திறன் பெற்றவர்களாகவும் குறிப்பிடப்படுகிறார்கள். மேலும் அக்காலகட்டத்தின் பெண்கள் சிலரின் பாடல்கள் ரிக் வேதத்திலும், அதர்வ வேதத்திலும் உள்ளன. ஆனால் இவர்கள் மானுடப்பிறவிகளா அல்லது கற்பனையில் முகிழ்த்தவர்களா என்பதைக் கணிக்க முடியவில்லை. ‘ஆர்ஷானுக்ரமணி’ என்னும் நூல் வேதகாலத்தில் 20 பெண் கவிஞர்களை குறிப்பிடுகிறது. பிரஹத்தேவதா’ என்னும் நூல் 27 பேர் என்கிறது. அறிஞர் ராதா குமுத முகர்ஜி, சாமவேதத்திலும் பெண்களின் கவிதைகள் இருப்பதாக கூடுதலாக நான்குபேரைக் குறிப்பிடுகிறார்.

இவர்களின் கவிதைகளை, கவிதைகளாக ஏற்றுக்கொள்ள முடியாதபடிக்கு மதச்சடங்குகளின் குறிப்புக்கள் தடை செய்வதாக அறிஞர் ஏ.ஏ. மெக்டனால்ட் கூறுகிறார்.
அபாலா, அத்தி முனிவரின் மகள் இவர். தன்னுடைய உடலின் குறைபாட்டினை நீக்கும்படியாக இந்திரனை நோக்கி ஏழு பாடல்கள் பாடியுள்ளார். கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் குரலாக இவரது பாடல் உள்ளது. பாடலில் தந்தையின் தனிச்சொத்துரிமைப் பற்றியும் குறிப்பிடுவதால் ஆணைச் சார்ந்து வாழ்கிற நிலையில் பெண்கள் இருந்ததை மறைபொருளாக உணர்த்துகிறது.
“என் தந்தையிடம் விளையாத களர் நிலமுண்டு
என்னுடலில் நோயினால் முளைக்காத ரோமமுண்டு
என்னுடைய தந்தையின் தலையிலும் வழுக்கையுண்டு
இவற்றை முளைக்கச் செய்வாயாக. “

கோஷா, காக்கிவான் என்னும் அரசனின் மகள். தொழுநோயினால் கணவனால் கைவிடப்பட்டவள். இவளது பதினான்கு பாடல்களும் வாழ்க்கையின் இன்ப துன்பம், ஏமாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கி அஸ்வினி தேவர்களை நோக்கிப் பாடப்பட்டது.

“அஷ்வினி தேவர்களே
தந்தையின் வீட்டில் வாடிய அபாலாவிற்கு
அவளுடைய கணவனைத் திருப்பியளித்தீர்களே” என வானுலக இரட்டையர்கள் மற்றும் மருத்துவக் கடவுளான அஸ்வினி தேவர்களை விதந்தோதி, தானும் கணவனோடு சேர்ந்து வாழும் விருப்பத்தை முன் வைக்கிறார். அபாலா, கோஷா இருவருமே தங்கள் சரும நோய்தீரக் கவிதை பாடி, கணவனைச் சேர்ந்திருக்கிறார்கள் என்று இவர்களின் பாடல்கள் குறிப்புணர்த்துகின்றன.

லோப முத்ரை, அகத்திய முனிவரின் மனைவி. கணவன் தன்னிடம் நோக்கு இன்றி, புலனடக்கி, இல்லற வாழ்வின் இன்பம் நாடாமல் தன்னிடமிருந்து ஒதுங்குவதைக் கண்டு காதல் தெய்வமான ரதியிடம் முறையிட்டுப் பாடுகிறார்.

“நான் பலபல ஆண்டுகளாக
இரவும் பகலும் வைகறைகளிலும்
உடலை வருத்திப் பணிவிடை செய்து வருகிறேன்
முதுமை இப்போது என் மேனியழகைக் குலைத்து விட்டது
இந்நிலையிலும் நீங்கள் ஏன் அருளவில்லை
வேதம் பயின்று, ஜபம் செய்து பிரம்மச்சரியத்தில் நிலைத்த என்னை
இந்த இளவேனிற் பருவத்தில் காமன் வென்றான்
கட்டுப்பாடு குலையாமல் மூச்சை அடக்கி
பெருவல்லமை பெற்ற என்னை
ஆவலுற்ற மங்கையாக நீ நுகர்வாயாக” லோப முத்ரையின் இந்தக்கவிதை வரிகள் வெள்ளிவீதியின் “பசலை யுணீஇயர் வேண்டும், திதலை யல்குல் என் மாமைக் கவினே“ என்கிற பாடலை நினைவூட்டுகிறது.

இந்திராணி, கணவனின் முழுமையான அன்பை, தான் மட்டுமே அனுபவிக்க விரும்புகிறாள். ஆனால் வேறு பெண்களும் பங்குபோட்டுக்கொள்கிற சூழலைத் தாங்க முடியாமல் பாடியவை,
“அவள் பெயரைச் சொல்லக்கூடக் கூசுகிறது
என்னை அவர்களைவிட்டு தள்ளிவை
ஆவினைக் கண்டதும் கன்று எப்படித் துள்ளி வருமோ,
பள்ளம் நோக்கி நீர் எப்படி இறங்குமோ
அதைப்போல என் கணவன் என்னை நோக்கி வரவேண்டும்
அதற்காக அவனை விரும்புகிற மற்ற பெண்களைப் பலவீனமாக்கு”

தன் கணவனை வேறு பெண்ணோடு பங்கிட்டுக் கொள்ளவியலாமல் தவிக்கிற பெண் குரல் உலகம் முழுக்க பல்வேறு ஆக்கங்களிலும் வெளிப்படுகிறது. இந்திராணியின் மற்றுமொரு பாடலில் கணவனோடு நட்பிலிருக்கும் நண்பனைக் கண்டுகூட பொறாமைப்படுவதாக எழுதியிருக்கிறாள்.

சிரத்தா என்கிற பிரம்மவாதினி, வேள்வி, கொடை ஆகியவைபற்றி பாடியுள்ளார். “அன்றாடம் தன் அழகிய கதிர் மாலையை அணிந்துகொண்டு புதிய ஒளியுடன் சூரியன் வருகிறான்.“ இவ்வரிகள் “வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்” என்கிற ஔவையின் அகப்பாடலை நினைவூட்டுகிறது.

கணவனின் அன்பைப் பெறுவது, இளமை அழகு சிருங்காரம் ஆகியவற்றை வெளிப்படுத்துவது, சடங்குகள் மந்திரங்களுடன் கூடிய திருமண நிகழ்ச்சிகள், பிள்ளைகள் பேரன்களுடன் மகிழ்ந்திருக்கும் குடும்ப வாழ்வு, தாய்மையின் குணநலன்கள், பிள்ளைகளுக்கான ஆற்றலை வேண்டுதல், வேதாந்த தத்துவ விசாரணை, ஆகியவற்றை வேதகால பெண்களின் கவிதைகள் முதன்மைப்படுத்துபவை. மேலும் தவமும் கடமையும் காதலோடு இணைவதை வலியுறுத்துபவை.

கி.மு. 535 .- கி.மு. 485க்கும் இடைப்பட்ட காலத்தில் பௌத்தம் செல்வாக்குடன் திகழ்ந்தது. அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட பிக்குகளின் பாடல்கள் பெரும்பாலும் பெண்களை இச்சையைத் தூண்டுபவர்களாகக் கருதி அவர்களைப் பழித்துரைக்கும் போக்கினைக் கொண்டவை. சில பாடல்கள் சிருங்காரம் பற்றியும், வேறுசில பாசத்தின் அடையாளம் எனவும் பெண்களைச் சொல்பவை.

அதேசமயத்தில் தேரிகாதா என்றழைக்கப்படுகிற பௌத்த சமயப்பிக்குணிகளில் 73 பேர்வரை கவிதைகள் எழுதியிருக்கக்கூடுமென கி.மு. 80 இல் ரைஸ் டேவிட்ஸ் என்பவர் அறுதியிட்டுக் கூறுகிறார். இவர்களது மொழி வழக்கொழிந்த பழமையான சொற்களையும் பாலி மொழியின் சொற்களையும் கொண்டவை. இயற்கை வர்ணனையும் ஆன்ம அனுபவமும் பாடப்பட்டுள்ளன.

இந்த உலகம் துன்பமயமானது, இதற்கு ஒரே மாற்று நிர்வாண மோட்சமே என்பதை ஆதாரமாகக் கொண்டவை. தங்களது பலவீனங்களை ஒப்புக்கொண்டு, அவற்றிலிருந்து மீளத் துடிக்கிற கவிதைகளை சியாமா, உத்தரா, வட்டேசி போன்ற தேரிகளிடம் காணலாம். சிம்ஹா என்கிற தேரி புலன்களை அடக்க இயலாமல் தற்கொலைக்கு முயன்ற கவிதை உள்ளது. பரத்தையாக வாழ்ந்து தேரியானவர்கள் உண்டு.

இவர்கள் தங்களின் பழைய வாழ்வுக்கு யாரையும் குறை சொல்லாமல் தங்களையே நொந்து கொள்கிறார்கள். இளமை, அழகு, நிலையாமை பற்றியும் பாடப்பட்டுள்ளது. புத்த தேரா, தேரிக்களை ஒப்பிடும்போது ஐரோப்பிய கிறிஸ்தவ துறவிகளின் படைப்புகள் ஆற்றலில் குறைந்தவை என்பதாக விண்டர் நீட்ஸ் என்கிற ஜெர்மானிய அறிஞர் கூறியுள்ளார்.

தெரிகாதாக்கள் சிலரது ஆக்கங்கள்,
“பரிதாபத்திற்குரிய பெண்ணே, பெண்ணாய் பிறப்பதே பாவம், மனைவி துக்கம், மகப்பேறு துக்கம், கர்ப்பத்தில் வளரும் குழந்தை துக்கம், எண்ணற்ற ஜென்மங்களாக இந்த துன்பங்களைச் சுமந்து வருகிறாய், புத்தனின் அஷ்டாங்க மார்க்கத்தை நாடினேன், மரணத்தை வெல்லும் அமுதம் பருகினேன். நான் கிருஷா கௌதமி சொல்கிறேன், கேள்.”= (கிருஷா கெளதமி)

“நான் விடுபட்டுவிட்டேன், நல்லகாலமாக நான் விடுபட்டுவிட்டேன், உரல், உலக்கை, கணவன் இம்மூன்றிலிருந்தும் விடுபட்டேன், வாழ்க்கைத் தளைகள் அறுபட்டன, பிறப்பு இறப்பிலிருந்து விடுபட்டேன். இப்போது மகாமுக்தி கிடைத்துவிட்டது”- (மூட்டா)

“அடுப்பின்மேல் வைக்கப்பட்ட பாத்திரத்தில் வறுக்கப்பட்ட உலர்ந்த காயைப் போல புலன் ஆசைகள் தீர்ந்துவிட்டன“ (பெயர் தெரியவில்லை) போன்றவை தேரிகாதாக்களின் படைப்புகளுக்கு உதாரணங்கள்.

‘காதா ஸப்தசதீ’ என்னும் தொகுப்பு, பிராகிருத மொழியின் தொன்மையான கவிதை நூல். முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஹாலா என்ற சாதவகான வம்ச அரசனால் தொகுக்கப்பட்டதாக கே.ஏ. நீலகண்ட சாஸ்திரிகள் கருதுகிறார். அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனுலச்சி, ரேகா, ரோஹா, ரேவா, நாதா, பாத்தாவாஹி, ப்ரஹதா, மாதவி, சசிப்பிரபா, சரஸ்வதி, பேஜ்ஜா ஆகிய பெண் கவிஞர்களின் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. தலைவன் தலைவி இன்ப நுகர்வு, தலைவன் வசிக்கும் இடத்தினை நினைத்து உவப்படைவது போன்ற காரணங்களினால் சங்க அகப்பாடல்களைப்போல இவை அடையாளப்படுத்தப்பட்டாலும், முதல், கரு பொருட்கள் இல்லை. துறை பிரிவினையும், உரிப்பொருளும் மட்டுமே உள்ளன.

வானத்தில் முகில்கள் தோன்றுவதைப் பார்த்து தலைவன் திரும்பி வரவில்லையே எனத் தவிக்கும் தலைவிக்கு, தோழி சொல்வதாக அமைந்த பாடல், “பொறுத்திரு, அதோ மையிருட்டாக மலைமீது தெரிவது காட்டுத் தீயினால் எழுந்த புகையே. அது கார் அன்று. அவன் வருவேன் என்றுரைத்த பருவமும் இதுவன்று”. (- பத்தாவஹீ )

இதுபோல எண்ணற்ற சங்கப்பாடல்கள் முதற்பொருள், கருப்பொருள் துணையுடன் இந்த உணர்வின் கனத்தை அதிகமாக்கிக் காட்டும் வண்ணம் அமைந்துள்ளன.

தலைவனை தன்வசமாக வைத்திருக்கும் தலைவி ஒருத்தி, மற்ற பெண்களுக்கு தன்னைப்போல உரிமையில்லை என்பதாகக் கூறுவது,
“சிணுங்கி நான் அவனைத் தட்டிவிடுகிறேன், அவ்வாறு செய்த என்னுடைய கை நோகுமென்று கருதி, தன் வாயினால் ஊதி, தடவித் தருகிறான். மறுகையினால் அப்போது அவனை அணைத்துக்கொள்கிறேன்.“ (- பிரஹதா )

முதுகூற்றனார் எழுதிய நற்றிணைப் பாடலொன்று,
“என் கைகொண்டு தன்கண் ஒற்றியும்
தன் கைக்கொண்டு என் நல்நுதல் நீவியும்
அன்னைபோல இனிய கூறியும்.. “ என்கிறது.

தலைவன் தவறு செய்திருக்கிறான், அவனோடு ஊடல் கொள்ளச் சொல்கிற தோழிக்கு தலைவி கூறுவது, “என் இனியன் எப்படியிருந்தாலும் இருக்கட்டும், அவன் மீது நான் காதல் கொண்டிருக்கிறேன், அவன் ஆட்டிவைத்தபடி நானிருப்பேன். நெடுமரத்தைத்தானே பசுங்கொடி தாங்கிப் படரவேண்டும்?“
( -சசிப்ரபா)

அள்ளூர் நன்முல்லையின் பாடல்கள் பெரும்பாலும் தலைவன் தவறிழைத்தபோதும் அவனை விட்டுக்கொடுக்காமல் பேசுபவை.

இவ்வாறாக, உலகம் முழுக்க ஒரு காலத்தில் அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள், தவமுனிவர்களின் மனைவிமார்கள், சமயக்கொள்கைகளைப் பரப்புபவர்களென உலகப்பெண் கவிஞர்களின் செயல்பாடுகள் இருந்தன. அக்கட்டத்தில் தமிழில் கிட்டதட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களில், கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தி, பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, பாரிமகளிர் ஆகியோர் தவிர மற்ற அனைவருமே எளிய குடிகளைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். உலக பெண்கவிதைகள் பலவும் சமயம் சார்ந்தும் காதல் உணர்ச்சிகள் வெளிப்படுத்தும் விதமாகவும் இருந்த காலத்தில், சங்கப்பெண்களின் பாடல்கள் பெரும்பாலும் எளிய குடிகளின் வாழ்க்கையை பிரதிபலிப்பதுபோல அமைந்திருந்தன. தலைவன் தலைவி வகைப்பட்டதாக அவை உருவாகின என்றாலும் பாடலின் காட்சிகளை முதற்பொருள், கருப்பொருள் ஆகியவை வலுப்படுத்தின. மேலும் இவற்றின் துணையுடன் பாடல்களை அணுகும்போது அன்றைய சமூக இயக்கத்தினைக் கூடுதலாக உள்ளுணர உதவுகின்றன.

புறப்பாடலில் தலைவனாகக் குறிப்பிடப்படுகிற சிற்றரசர்கள்தான் அகப்பாடல்களின் தலைவர்களாக இருந்திருக்கக்கூடும் என்கிற புரிதல் தவறானது. அகப்பாடல்களில் பங்கெடுக்கிற தலைவன், தலைவி ஒரு நாட்டின் அரச அதிகாரத்தில் இருப்பவர்களாக கருத வேண்டியதில்லை. யாரெல்லாம் காதல் வயப்பட்டவர்களாக இருக்கிறார்களோ அவர்களே அகப்பாடல்களின் தலைவனும் தலைவியுமாவார்கள். எளிய மனிதர்களை தலைவனாகவும் தலைவியாகவும் உயர்வுபடுத்துவது காதல் உணர்வுதான் என்கிற வகையில் அகச்சித்திரங்களை அணுகும்பொழுது விரிகிற காட்சியில் அக்கால மாந்தர்களைக் குறித்த புதிய புரிதல்கள் நிகழும்.

ஔவை, தன்னிலையின் மிகு உணர்ச்சியை வெளிப்படுத்துகிற பெண். காதலாகினும், காமமாகினும், போர் நெறிமுறைகளிலும், அரசை எதிர்க்கும் துணிவு நிலையிலும், சமூகத்திற்கான விழுமியங்களைக் கற்பிப்பதிலும் தனக்கேயுரிய தனித்துவமான சொற்களோடு நிற்பவள். பொருட்செறிவோடும், தொனிச் சிறப்பும் கூடுதலாக அமையப்பெற்ற ஒளவையின் கவிதைகளுக்கு உலக அளவிலும் தனி இடம் இருப்பதை அவருடைய பாடல்களின் மூலம் அறியமுடிகிறது.

பிரிவாற்றாமையை சித்தரிக்கும் எத்தனையோ சங்கக்கவிதைகள் இருக்கின்றன. ஆயினும் பெண்ணின் அக உணர்வை அத்துணை துல்லியமாகவும் அவ்வளவு உணர்ச்சித் தீவிரத்துடனும் வெளிப்படுத்தும் பிறிதொரு பெண்குரல் இல்லையென்பதை ஒளவையின் சில பாடல்கள் நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. தலைவன் பொருள்வயின் பிரிந்து சென்றிருக்கிறான். தனித்திருக்கும் தலைவியின் தவிப்பைச் சொல்கிற குறுந்தொகைப்பாடல்,

“முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.”

“சுழன்று வருகின்ற தென்றல் காற்று காமநோயைத் தந்து என்னை வருத்துகிறது. எனக்கு வருத்தத்தை தரும் இந்த நோயை உணர்ந்து கொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் இவ்வூர் மக்களை நினைத்து எங்காவது முட்டிக் கொள்வேனா, கோல் கொண்டு தாக்குவேனா, அல்லது, ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து ஆ” ஓ” என்று உரத்துக் கத்துவேனா, என்ன நான் செய்வது என்பதை அறியாமலிருக்கிறேன்” என்கிறாள் தலைவி.

தலைவன் தலைவி களவில் இணைந்திருக்கிறார்கள். அன்னை அதனைக் கண்டுபிடித்து விடுகிறாள். இனி தலைவி வெளியே வருவதற்கும் வாய்ப்பில்லை. தலைவனையும் பார்க்க இயலாது. உடனடியாக தலைவியை மணம் செய்துகொள்ளவேண்டிய சூழலில் தலைவன் இருக்கிறான். அவ்விதமாக நிகழவில்லையெனில் தலைவி தன்னுடைய வீட்டிலேயே அடைந்து கிடந்தது முதுமையை அடைய வேண்டியதுதான் என தோழி தலைவனிடம் சொல்வது போல அமைந்துள்ள நற்றிணைப் பாடல்,
“………
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன, எம்
இள நலம் இற்கடை ஒழியச்
சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே.”

“தந்தை பல்வேறு நாடுகளுக்குக் காற்றில் செலுத்தித் திரும்பிய வேலைப்பாடுடைய நாவாய்க் கப்பலைத் துறையில் நிறுத்தி வைத்திருக்குமளவு வளம் மிகுந்தவன். தலைவியின் இளமையோ, நுரைத்துப் பொங்கும் கள்ளுச்சாடி போன்று மயங்க வைக்கக் கூடியது. என்றபோதும் தந்தையின் வளமை காரணமாகக்கூட தலைவி வேறு ஒருவரை மணம் செய்துகொள்ளாமல் இல்லத்துப் புழக்கடையில் முதிர்ந்து கிடக்கப் போகிறாள்” என்று விரைந்துவந்து மணமுடிக்கும்படியாக தலைவனுக்கு தோழி அறிவுறுத்துகிறாள்.

அதியமான் ஒருமுறை பரிசில் வழங்கக் காலம் தாழ்த்தியபோது, தான் அவமதிக்கப்பட்டதாகக் கருதிய ஒளவை வாயிற்காப்போனிடம் கூறுவதாக அமைந்த புறநானூற்றுப் பாடல்,
“….
தன்அறி யலன்கொல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே… “

“பரிசிலர்களுக்கு எப்போதும் அடைக்காத வாயிலை உடையவனே! தலைவனாகிய அதியன் தன்னுடைய தரம் அறியமாட்டானா?

இல்லை என்னுடைய தரத்தை அறியமாட்டானா? அறிவும், புகழும் உடையவர்கள் மாய்ந்தால் இந்த உலகம் வறுமைப்படுவதில்லையே! ஆதலால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம். எங்கள் இசைக்கலங்கள் கொண்ட பைகளைக் கட்டிக்கொண்டோம். மரத்தை வெட்டுகிற தச்சர்கள், தாம்பெற்ற சிறுவர்களோடும் தம் மழுவோடும் காட்டிற்குச் சென்றால் அங்குள்ள மரங்கள் எவ்வாறு அவர்களுக்கு வேண்டுமாறு பயன்படுமோ அவ்வாறு எத்திசை சென்றாலும் அத்திசையில் சோறு கிடைக்குமென” வாயிற் காப்போனிடம் ஔவையார் கூறுகிறார். தன்னுடைய புலமையை மதிப்பதன் வெளிப்பாடு இவ்வரிகள். தன்னுடைய தகுதியை அறிந்து அதியமான் நடந்துகொள்ளும் அளவிற்கு அவனுக்கும் தகுதி இருப்பதாகக் கருதுகிறார். தச்சன் ஒருவன் காட்டிற்குச் சென்றால் அவனுடைய விருப்பத்திற்கு அங்குள்ள மரங்கள் உதவுவதுபோல அதியமானும் நடந்துகொள்ள வேண்டுமெனச் சொல்கிறார்.

போரின் விளைவுகளை எடுத்துச் சொல்லி மூளவிருக்கும் போர்ச்சூழலைத் தடுத்துவிட சில பாடல்களில் ஔவை முயன்றிருப்பதை அறியமுடிகிறது. தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான் தன்னுடைய படைவலிமையைக் குறித்து செருக்குற்று, அதியமானோடு போர் தொடுக்க நினைத்திருக்கிறான். இச்சூழலில் ஔவை தூதாகச் செல்கிறாள். அவனைப் புகழ்வது போலவும் அதியமானின் படைகளைப் பழிப்பதுபோலவும் பேசி அதியமானின் வீரத்தை எடுத்தியம்புவார்.

“இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து….”,
“செல்வம் இருந்தால் மற்றவர்களுக்கு உணவளித்து, அதன்பிறகே தான் உண்ணுவதும், செல்வம் குறைந்தால் தன்னுடைய உணவைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும் பண்புடைய, வறிய சுற்றத்தார்களின் தலைவனாகிய பெருமைக்குரிய என் வேந்தன் அதியமானின் கூர்மையான வேல்கள், பகைவரைக் குத்தியதால் பக்கமும் நுனியும் முரிந்து கொல்லர்களின் உலைக்களத்தில் எந்நாளும் உள்ளன. ஆனால், உன் படைக்கருவிகளான இவை, மயில் தோகை அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, வலிய திரண்ட பிடிகளை உடையதாய் நெய் பூசப்பட்டு, அழகு செய்யபட்டு காவல் மிக்க பெரிய இடத்தில் உள்ளன” என்று சொல்வதன் வழியாக போர் முயற்சியைக் கைவிடச் செய்கிறார்.

தகடூர் போர்க்களத்தில் அதியமான் நெடுமான் அஞ்சியின் இறப்பு பெருஞ்சேரல் இரும்பொறை என்கிற சேரமன்னனால் நிகழ்ந்திருக்கிறது. அவ்வாறு இறந்துபோனவனுக்கு நடுகல் நாட்டி மயிற்பீலி சூட்டி, நாரினால் வடிக்கப் பட்ட உயர்ந்த மதுவினை கலங்களில் எடுத்து அதன்மீது பெய்கின்றவர்களிடம் அதியமானின் பெருமைகளைச் சொல்வதாக
கையறு நிலையில் ஔவை பாடிய ஒரு பாடல் அவர்களுடைய நட்புக்கு அடையாளம்.

“சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே”
“சிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து, நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்தபடி அவனும் உண்பான்; சிறிதளவு சோறாக இருந்தாலும் அதை மிகப் பலரோடும் பகிர்ந்து உண்பான். பெருமளவு சோறு இருந்தால், அதையும் மிகப் பலரோடு கலந்து உண்பான். எலும்போடு கூடிய தசை கிடைத்தால் அதை எமக்கு அளிப்பான். அம்புடன் வேல் தைக்கும் போர்க்களமானால் தானே சென்று நிற்பான். நறுமணமுள்ள தன் கையால் புலால் மணக்கும் என் தலையை அன்போடு தடவுவான்.

இவையெல்லாம் இன்று இல்லாமல் போயின. அவன் மார்பைத் துளைத்த வேல், பெரிய பாணர் கூட்டத்தினரின் அகன்ற பாத்திரங்களை ஊடுருவிச் சென்று, இரப்போர் கைகளையும் துளைத்து, அவனால் பாதுகாக்கப்படும் சுற்றத்தாரின் துன்பம் மிகுந்த கண்களில் ஒளியை மங்கச் செய்திருக்கிறது.” என்று தன்னிரக்கத்துடன் பாடியிருப்பார்.
பூமிக்கும் மனிதர்க்கும் உள்ள தொடர்பு நல்லமுறையில் இருக்க வேண்டுமென்பது இன்றைய காலத்தின் அவசரத் தேவையாக முன்வைக்கப்படுகிறது. இதனை தனிமனிதச் செயல்பாட்டின் அடிப்படையிலே நிலமானது பலன் தரக்கூடியதாக அமைந்திருக்குமென ஔவை எழுதியுள்ளார்.
“நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!”

“நிலமே! நீ நாடாகவோ, காடாகவோ, பள்ளமான இடமாகவோ அல்லது மேடான இடமாகவோ எப்படி இருந்தாலும், அங்கு வாழும் ஆடவர் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய். நீ வாழ்க!“ என்கிறார். இப்பாடலில் நாடு என்பது மருத நிலம், காடு என்பது முல்லை நிலம், மேடு என்பது குறிஞ்சி நிலம், பள்ளம் என்பது நெய்தல் நிலம். ஆக, நால்வகை நிலங்களையும் குறிப்பிடுகிறார். பூமியின் இயல்பினைப் புரிந்துகொண்ட அதனோடு இணைந்து வாழ்பவருக்கு அது நல்ல பலனையே தருமெனக் கூறுகிறார்.
சங்ககாலத்திற்குப் பிறகு பெண்களின் எழுத்து என்பது அவர்களை நேரடியாகச் சொல்லக்கூடியதாக உருவாகவில்லை.

எளிய மொழியும், வெளிப்படைத் தன்மையும் இல்லவே இல்லையென்று சொல்லலாம். பக்தி இலக்கியங்களில் தன்னுணர்வை வெளிப்படுத்துவதாக அறிகிற ஆண்டாளும், காரைகாலம்மையும்கூட காதலை கடவுளிடம் சேர்த்துவிட்டனர். பின்னாட்களில் ஆவுடையாக்களும் ஞானமார்க்கத்தைப் பாடுபவராகவே இருந்தார். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உரைநடையில் சில பெண்கள் தங்களை அடையாளப்படுத்த முனைந்தனர். அதன்பின்பு எழுபதுகளில் கவிதைகளிலும் பெண்கள் தங்கள் பங்களிப்பைச் செய்யத் தொடங்கினர். தொண்ணூறுகளுக்குப் பிறகு உருவான பெண் எழுத்துக்கள் ஆளுமையுடன் தங்களை அடையாளப்படுத்தின. கடந்த பத்து ஆண்டுகளில் கவிதைகளில் பெண்களின் செயல்பாடானது கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

இன்றைய சூழலில் ஒரு பெண் எதற்காக எழுதுகிறாள். எதைப்பற்றியெல்லாம் எழுதுகிறாள் என்கிற கேள்விகளுக்குள் நுழைவதற்கு முன்பாக அடிப்படைக் கல்விக்கு பெண்கள் போராடிய காலத்தையும் நினைவுகொள்ள வேண்டியுள்ளது. இன்றைக்கு, பெண்களுக்கு கல்வி என்பது பெரும்பான்மையும் கிடைத்திருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், விரும்பிய பாடத்தை படிப்பதில் சிரமங்கள் ஏராளம். இன்றைய கல்விமுறையும், வேலைவாய்ப்புக்கான புதிய சட்டதிட்டங்களும் பெண்களின் கல்வியை கூடுதலாக சிக்கலாக்கும் விதமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரியான சூழலில்தான் அதிக எண்ணிக்கையில் பெண்கவிஞர்கள் உருவாகிக் கொண்டும் இருக்கிறார்கள்.

நவீனதொழில்நுட்பம் பெண்களின் வாழ்க்கைமுறையை பலவிதங்களில் மாற்றி அமைத்திருந்தாலும், பெண்களுடைய புழங்குவெளியானது குடும்பம், அலுவலகம் என்கிற அளவில்தான் இருக்கிறது. ஆனால் பெண்கள் சந்திக்கக்கூடிய உடல் ரீதியான சிக்கல்களும், உளவியல் ரீதியான இடர்பாடுகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அகம்சார்ந்த ஏக்கங்களும் விருப்பங்களும் எந்தக் காலத்திலும் ஒன்றுபோலவே இருக்கின்றன என்பதை சமீபத்திய பெண் எழுத்துக்கள் உணர்த்துகின்றன. உண்மையில் பெண்களின் புறஉலகம்கூட அகம் சார்ந்ததுதான் பெரும்பாலும் வெளிப்படுகிறது.
சங்ககாலத்தின் ஒளவை, விறலி மரபைச் சார்ந்தவராகக் கருதப்படுகிறார். அம்மரபின்படி கல்வியும் கேள்வியும் இயல்பாகவே அவருக்குக் கிடைத்திருக்கக்கூடும்.

அதை அவர் தன் புலமையால் செழுமைப்படுத்திக் கொண்டு மன்னர்களின் அவையில் ஆண்களுக்கு நிகராக செல்வாக்குடன் திகழ்ந்திருக்கிறார். ஆனால் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் வெகுவாக முன்னேறியிருக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பெண்கள் பலவிதங்களில் தங்களுடைய உரிமைக்காக உரக்க குரல் கொடுக்க வேண்டியதாகவே இருக்கிறது. அவ்வாறு தங்களது அடையாளத்தை சுயத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டி எழுத்தை தனது துறையாகத் தேர்ந்தெடுத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு தருணத்தில் தன்னை ஒளவையோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதென்பது தவிர்க்க முடியாதது என்றே எண்ணுகிறேன். அவ்வகையில் கவிஞர் சுகிர்த ராணியின் “ஒளவையின் காமம்” என்ற கவிதையை முக்கியமாகக் குறிப்பிடலாம்.

“ஒளியின் தடயம் முழுவதும் கரைந்திருக்கும்
அக்காட்டின் கொடிய பாதையை / நானும் அவளும் கடக்கிறோம்
இறகின் மென்மை கொண்டு / என் கையைப் பற்றியிருக்கிறாள்
தொலைவில், முற்றிய வேங்கையின் நிழலில் உறங்கும்
வாயகன்ற பெண்புலியின் குட்டிகள் / எம்மை உற்றுப் பார்க்கின்றன
போர்க்களத்தில் வீசப்படும் ஈட்டியின்
ஓசையெனக் கடந்து போகிறது ஒரு நெடுந்தேர்
அதைச் செலுத்துபவன் / மெலிந்த தலைவியின் கடும்பசலையை
முன்பு கண்டவனாக இருக்கக்கூடும்
இடப்புறத் திருப்பத்தில் காற்றிலசையும்
சிறுநெல்லி மரத்தின் குவிந்தகனிகளைப் பார்த்தவள்
குறுநகை புரிகிறாள் / நினைவிலாடியவன் அதியனோ
காலில் இடறுகிறது ஒரு மணி
தலைவனின் முதுவிரகம் முற்றுணர்ந்து
விரைந்த பரியின் கழுத்திலிருந்து / அறுந்து விழுந்திருக்கலாம்
முன் எப்போதும் கேட்டிராத / அதி இசையுடன் அவள் பாடுகிறாள்
கானகம் முழுவதும் சுற்றிச் சுழல்கிறது
விருப்பமும் இசைவும் குழைந்த பாடல்
காட்டிலிருந்து துயருடன் வெளியேறுகையில்
என் உள்ளங்கைக்குள் திணிக்கிறாள்
தகிக்கிறது ஒளவையின் காமம்.”

இன்றைக்கும்கூட, காதல் செய்தவன் காலத்தே வந்து திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனக் காத்திருக்கும் பெண்கள் இருக்கிறார்கள். குடும்பத்திற்காக பொருள்தேடி பிரிந்து சென்றவனுக்காகக் காத்திருக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். தனக்குப் பிரியமானவன் பிறிதொரு பெண்ணிடத்தே விருப்பம் கொண்டுவிடக் கூடாது எனக் கலங்குகிற பெண்கள் இருக்கிறார்கள். தன்னை விட்டு வேறொரு பெண்ணை நாடி தன்னுடைய கணவன் செல்வதை அறிந்து கொள்கையில், அதனைத் தாங்கவியலாமல் தற்கொலை செய்து கொள்கிற பெண்கள் இருக்கிறார்கள்.

குடும்பத்தின் கடமைகளை மறுத்து, வீட்டைவிட்டு ஓடிய கணவனுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றிக்கொண்டு பல பெண்கள் இருக்கிறார்கள். பல்வேறு புறக்காரணிகளுக்காக வெளியே சென்றிருக்கும் ஆணுக்காகக் காத்திருக்கிறார்கள். நாட்டின் எல்லையில் காவல் இருப்பவனுக்காக வீட்டில் காத்திருக்கிற பெண்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற பெண்களின் காத்திருப்பானது ஒரு கணம், ஒரு நாள், ஒரு வருடம் அல்லது வாழ்நாள் முழுவதும் என எவ்விதமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தன்னுடைய ஆணுக்காக ஒரு பெண் இன்றைக்கும் காத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் இங்கே எந்தப்பெண்ணும் தனித்து நடக்கத் தேவையில்லை. காதலினாலோ பிரிவுத்துயராலோ தவிக்கும்போது, தோல்வியினாலோ ஏமாற்றத்தினாலோ துணிவை இழக்கும்போது, அவநம்பிக்கையினாலோ பதற்றத்தினாலோ தடுமாறும்போது அவளுக்குப் பற்றிக்கொள்ள ஒரு வலிமையான கரம் உண்டு. அது, இரண்டாயிரம் வருடப் பழமையான சொற்களை தன் தோலின் சுருக்கங்களில் சேமித்து வைத்திருக்கும் ஒளவையின் கை தான்.
___

பெரும் நாவலாசிரியன் எழுதிய சின்னஞ்சிறு கதை. / பொ. கருணாகரமூர்த்தி ( பெர்லின் )

Hemingway

Hemingway

பெரும் நாவலாசிரியன் எழுதிய சின்னஞ்சிறு கதை.

*

Hemingway அமெரிக்காவின் Illinos இல் Oak Park எனும் இடத்தில் ஜனித்தார்.
அங்கேயே உயர்பாடசாலைப் படிப்பை முடித்துக்கொண்டவர் பல்கலைகழகங்கள் எதிலும் சேர்ந்து படித்ததாகத்தெரியவில்லை. அங்கேயே The Kansas City Star எனும் பத்திரிகையில் பணிசெய்தார்,
பின் அமெரிக்காவைவிட்டு பாரீஸூக்கு வந்தவர் பாரீஸிருந்துகொண்டு அமெரிக்கப்பத்திரிகைகளின் வெளிநாட்டுச்செய்தி சேகரிப்பாளராகப் பணியாற்றினார். அப்போதுதான் முதலாம் உலகப்போர் ஆரம்பிக்கவும் இத்தாலியப்போர்முனையில் தன்னார்வத்தில் சேர்ந்து அம்புலன்ஸ் சாரதியாகப்பணியாற்றினார். போரின்போது அடுத்தடுத்து பலத்த காயமடைந்தார்.

அவ் அனுபவங்களின் விளைச்சலே 1940 இல் A Farewell to Arms, To Who the Bell Tolls ஆகிய நாவல்களைப்படைக்க முடிந்தது.
1921 இல் தன் 22 வது வயதில் Hardley Richardson என்கிறவரைத் திருமணம் செய்துகொண்டார்.
Hemingway க்கு The Old Man and the Sea என்ற நாவலுக்காக அவருக்கு 1954 இல் நோபல் பரிசு கிடைத்தது.
தன் வாழ்நாளில் மேலும் 4 தடவைகள் திருமணம் செய்துகொண்ட Hemingwayக்கு மணவாழ்க்கையும் இனிக்கவில்லை.
1961ம் ஆண்டு Ketchum எனும் இடத்தில் ஒரு ஹொட்டலில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துபோகிறார்.

On the Quai at Smyrna

Hemingway எனும் அற்புத கதை மாந்தன் எழுதியவற்றுள் எல்லாம் மிகச்சிறிய கதை இதுதான். ஒண்ணரைப்பக்கங்கள் மாத்திரம். ஒரு நாவலில் தரக்கூடிய உணர்வுகளையும், மனவெழுச்சியையும் ஒரு சிறுகதைக்குள்கூட தன்னால் பொதித்துவிடமுடியுமென்பதை இப்படைப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார். முதல் வாசிப்பில் சத்தியமாய் எனக்கொன்றும் புரியவில்லை. அவ்வளவுக்குத் தெளிவாகக் குழப்பிவிடுவார் வாசகனை.

On the Quai at Smyrna என்பது கதையின் தலைப்பு. தலைப்பில் வரும் Quai எனும் வார்த்தை Quay ஆகத்தனிருக்கும் என்பது என் அனுமானம். தேடியதில் இறங்குதுறையையும் நீர்நிலைக்கு அண்மித்தாக அல்லது தொடர்ந்து செல்லும் பாதையையோ மேடையையோ சுட்டும் அப்பிரெஞ்சுவார்த்தை மத்தியகாலத்தில்தான் ஆங்கிலத்துக்கு வந்ததும் தெரியவந்தது. முதலாம் உலகமகா யுத்தகாலத்தில் பெரும்பகுதி கிரேக்கத்தின் முற்றுகைக்குட் பட்டிருந்த நகரமும் அது. கிரேக்கத்தை விரட்ட அமெரிக்கப்படைகளுடன் இணைந்திருக்கிறது துருக்கி. இந்த விபரங்கள் எதுவும் கதைக்குள் தராமல் வாசகனை மேலும் குழப்பிவிடுகிறார் Hemingway.
Snows of Kilimanjaro எனும் தொகுப்பில் வந்த இக்கதையை அடுத்துவந்த கதைகளைப் படித்தபோதுதான் கதையின் பகைப்புலத்தையும் காலத்தையும் புரிந்துகொள்ளமுடிந்தது. கதைசொல்லி ஒரு கடற்படை அதிகாரி.

அவர்களின் கப்பல் Smyrna Quai யில் தரித்து நிற்கும்போது இவருக்கு அடுத்தபடியிலுள்ள ஒரு அதிகாரி ‘சிப்பாய் ஒருவன் தன்னை அடிக்கடி கேலி பண்ணி அவமதிப்பதாக’ முறையிடுகின்றான். இவர் அச்சிப்பாயை அழைக்கிறார், பார்த்தால் அவனோ இயல்பிலேயே மிகவும் பணிவுள்ளவனும், இலேசில் வம்புதும்புகளுக்கும் போகாத ஒருவன். ‘விசாரித்ததில் அச்சிப்பாயோ அந்த அதிகாரியுடன் தான் இதுவரை பேசியதே இல்லை’ என்கிறான். ஆனாலும் இவர் அவனுக்கு “நீ கப்பல் புறப்படும்நாள் மாலைவரை கப்பலால் இறங்கவேகூடாது” என்று தண்டனை வழங்குகிறார்.(By Cancelling his shore-leave)
Smyrna வில் கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக்களும், விமானத்தாக்குதல்களும் தொடர்கின்றன. ஏராளம் துருக்கிப் பெண்கள் தமது இறந்துபோன குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். சில பெண்கள் அந்த இறங்குதுறையில் ஒதுக்கான இடங்களில் தம் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறர்கள். எங்கும் மரணத்தைப் பார்த்து மரத்துப்போயிருந்த கதைசொல்லிக்கு பிறந்த சிசுக்களை பெண்கள் எடுத்துவருவதைப் பார்ப்பது பரவசம் தருகிறது. இந்த Smyrna நகரம்தான் இப்போது Izmir என அழைக்கப்படுகிறது.ஏதோ ஆடுகளைப் பிடிப்பதற்காகத்தான் படையெடுத்தவர்களைப்போல Smyrna வின் ஆடுகளையெல்லாம் கிரேக்கர்கள் பிடித்துச் சாப்பிடுகிறார்கள். அவ்வேளை கிரேக்கர்களுக்கும், அமெரிக்ககூட்டுப்படைக்குமிடையே ஏதோ ஒரு ஒப்பந்தம் செய்யப்பட ஆக்கிரமித்திருக்கும் கிரேக்கர்கள் Smyrna வைவிட்டு வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம். கிரேக்கர்கள் அருமையானவர்கள்.

தாம் பிடித்துவைத்திருந்த ஆடுகளின் கால்களை எல்லாம் அடித்துமுறித்துக் Smyrna குடாக்கடலுக்குள் வீசிவிட்டுச் செல்கிறார்கள். இறுதிவரியிலும் கிரேக்கர்கள் மிகவும் நல்லவர்கள் என்றுதான் முடித்திருப்பார் Hemingway.
[The Greeks were Nice Chaps too.]
கதையை வசித்து முடித்த பின்னாலும் எனக்கு குழப்பமாயிருந்தது. இக்கதையின் மூலம் Hemingway வாசகனுக்கு தரமுனையும் செய்திதான் என்ன? அவர் காட்டிய காட்சிகள் அனைத்தையும் கூட்டிச்சித்திரமாக்கிப் பார்த்தபோதுதான் இந்த ஒண்ணரைப்பக்கக் கதைக்குள் எத்தனைவிதமான மனிதர்களையும் மனதைத்தைக்கக்கூடிய சம்பவங்களையும் சொல்லிவிடுகிறார் என்கிற பிரமிப்பு ஏற்பட்டது.

அப்பாவி ஒருவனைக் குற்றஞ்சாட்டும் அதிகாரி.
அவனுக்கு தன் மனம் விரும்பாமலே தண்டனை அளிக்க வேண்டிய நிலையிலிருக்கும் கதைசொல்லி.
குற்றமேதுமிழைக்காமலே தண்டனை பெறும் சிப்பாய்.
அரசின்/கட்டளை அதிகாரிகளின் ஆணைக்காகவே குழந்தைகளையும் பெண்களையும் இன்னபிற உயிர்களையும் குடிக்கும் எறிகணைகளை ஏவவேண்டிய கட்டாயத்திலிருக்கும் சிப்பாய்கள்.
இறந்த குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அலையும் தாய்மார்கள்.
கிரேக்கர்களால் கால்கள் ஒடித்துக்குற்றுயிராக வீசப்பட்டுத்துடிக்கும் ஆடுகள்.
துன்பம் மனிதர்கள்மேலும் ஆடுகள்மேலும் சமமாகவே பிரவகிக்கின்றது.
தமிழர்களாகப் பிறந்ததுக்காவே துன்பங்களை அனுபவிக்கும் எம் உறவுகள்தான் மனக்கண்ணில் நிழலாடினார்கள்.
*