Category: கவிதை

செலீனா ( அறிமுகப் படைப்பாளி ) கவிதைகள்

images (35)

ஒரு சொல்

ஒரு சொல்லால் மட்டும் தான் உன்னிடம்
என்னை வர வைக்க முடியும் என்பது
உனக்கு எப்படியோ தெரிந்திருந்தது.

முதல் சந்திப்பில்
ஒரு மஞ்சள் ரோஜா மலரின்
ஒவ்வொரு இதழ்களையும்
ஒரு சொல்லால்
நிறைத்துத் தந்தாய்.

ஒரு சொல்லால் தான்
நம் முதல் முத்தம் ஆகியிருந்தது.

ஒரு அந்தியில்
ஒரு சொல்லின் வழி தான்
நாம் ஆரத்தழுவியிருந்தோம்.

இருள் காட்டில்
ஒரு சொல்லின் வெளிச்சத்தில் தான்
வீடடைந்தோம் .

இப்படி ஒரு அத்தியாவசியத் தேவையாக
நமது எல்லாவற்றிலும்
ஒற்றை சொல்லையாவது
நிர்பந்திக்க வேண்டியிருக்கிறது.

சதா சொற்களாலே வடிவமைந்திருக்கிற
நம் உலகத்தின் சொற்கள்
ஒரு நிரம்பும் குவளையின்
குமிழிகளாய் மொத்தமாய்
மேலெழுகின்றன.

மகாகனம் பொருந்திய
உனது சொல்லும்
எனது சொல்லும்
நமது சொல்லாகியிருந்த போது
ஆதியிலிருந்த அந்த ஒரு சொல்
நம்மிடம் வந்து சேர்ந்திருந்தது.

அப்போது அந்த சொல்
மீண்டும் தேவனாகியிருந்தது.

***

புனித வெள்ளி

உன்னிடம் பேசி ஒரு வாரமாகிறது.
எனக்கு இப்போது அழைக்க முடியுமா??
அண்ணனும் அத்தாவும்
ஜும்மா தொழுகைக்கு சென்றிருக்கிறார்கள்.

ஒரே ஒரு மணி நேரம் மட்டும் தான்
எனக்கு தரப்பட்டிருக்கின்றது

எல்லா வெள்ளிக் கிழமைகளிலும்
இந்த ஒரு மணி நேரத்திற்கென சொல்லும் பொய்களுக்கு
கொஞ்சம் மன்னிப்பு
அல்லாஹ்விடமிருந்து தரப்படுகிறது என்றே நம்புகிறேன்.

வெள்ளிக் கிழமையின் மதிய தொழுகைகளில் தான்
பர்க்கத் அதிகம் இருக்கிறது என்கிறாள் அம்மா.

வெள்ளிக் கிழமைகளில் தான் உலகம் அழியும்
அந்நேரம் உலகின் எல்லா உயிர்களும்
கடவுளை நோக்கிப் பிரார்த்திக்க துவங்கும் என்று
ஒரு முறை குரான் வகுப்பில் சொன்னார்கள்.

இப்போது அழைக்க முடியமா?
எனக்கு ஒரே ஒரு மணி நேரம் தான் தரப்பட்டிருக்கின்றது.

***

வேறு யாருக்காகவோ நீ எழுதியதை
எனக்கென எழுதினாய் என்று தான் நினைத்தேன்.

ஒரு முறை ஒருத்திக்கு காதல் சொல்லி ஒரு கவிதையும்
இன்னொரு முறை தனிமையின் சிக்கலால்
ஒருவரின் கைகளை இறுகப் பிடிப்பது பற்றியும் எழுதியிருந்தாய்.

இரண்டிலுமே நான்
ஒரு நூலிழையைப் பின்னி
என்னைத் தொடர்பு படுத்திக் கொண்டேன்.

நீ காதலிக்கிற யாரகவோ
என்னை மாற்றிக் கொள்ள
எவ்வளவு பிரயாசப்படுகிறேன் நான்.

***

விஷ்ணுகுமார் கவிதைகள்

images (37)

போராளி…!!!

தினமும் பாத்திரம் கழுவ
தலைதிரும்பாத குழாயோடு
போரிடவேண்டியிருக்கிறது
மழையில் ராணுவ வீரனோ
செய்வதறியாது தவிக்கின்றான்
அவனுக்கு இந்த
இரண்டாம் அமர்வு சண்டையை
சீக்கிரம் முடித்துவிட்டு
கொஞ்சநேரம் மறைவான
இடத்திற்குப்போய் மூச்சுவாங்க
நடனமாடவேண்டும்போலிருக்கிறது

°°°
பாத்திரங்கள் இன்னும்
கழுவப்படாமலேயே கிடக்கின்றது
குழாய் திரும்பிப்பார்க்கும்வரை
கொஞ்சம் பொறுத்திருங்கள்
எப்போதும் யாரையோ
குறிவைப்பதுபோல
கைநீட்டிக்கொண்டிருக்கும்
பீரங்கியின் பைனாக்குலரில்
வீரர்கள் வரிசையாக கொஞ்சநேரத்தில்
சிதறிப்போக வாய்ப்பிருக்கும்
தன்வீட்டை குறிவைக்கின்றனர்
அச்சமயம் வெயிலில் அப்படியே
போட்டுவந்த பாத்திரங்கள் இங்கு
பைனாக்குலரில் கண்கூசச்செய்ய
மீண்டும் போர்க்கொடி அரக்கப்பறக்க ஏறத்தொடங்கியது
எதிரில் நிற்கும் பீரங்கியில்
ஒலித்துக்கொண்டிருந்த மெல்லடியான
பாடல் வேகமெடுக்கிறது

°°°°°

மழைசமயம் போர்செய்வதுதான்
பாத்திரம் கழுவுவதுபோல எவ்வளவு
சித்ரவதையானது
கையில்எதையோ தூக்கிக்கொண்டு
கொட்டும் நீரில் எத்தனைவிதமான
பதுங்குக்குழிக்குள்தான் போய்வருவது

சிறிது நேரத்தில்
கரிப்பிடித்த-புகைமூட்டம்
பாத்திரம் முழுதும்
களம்முழுதுமாக பரவலாக
யார் எதிரில்போய் நிற்பது என்ற
குழப்பத்தில் போர் தற்காலிகமாக
நிறுத்திவைக்கப்பட
அப்பாடாஆஆஆ….

பீரங்கியில்
மீண்டும் பாடல் மெல்லடியாகிறது

°°°°

குழாயை இறுக்கி மூடிவிட்டு சில
நாட்களுக்குபின் பீரங்கியிலிருந்து
கழுவிய பாத்திரங்களோடு
இறங்குகிறாள்
என்னசெய்ய போர் நடக்கையில்
அதிகபட்ச குற்றமாக
கலந்துகொள்ளாமலிருக்கலாம்
ஆனால் கண்டுகொள்ளாமலிருக்க முடியாது

இதுவரை சேனலை மாற்றக்கூட
தெரிந்துகொள்ளாத அவள்
தன் சமயலறையிலிருந்து
எதிரியொருவன் மறைந்திருக்கும்
பதுங்குக்குழிபோலிருக்கும்
குப்பைத்தொட்டியில்
ஆப்பிளின் காம்பைக்கடித்துப் பார்த்து
கெட்டுப்போனதென வீசுகிறாள்
அவளுக்கென்ன தெரியும்
அதென்ன வெடிக்கவா போகிறது

•••

நாய்கள் ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன ( சில கவிதைகள் ) / சிபிச்செல்வன்

images (64)

நாய்கள் ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன
நள்ளிரவிற்கு மூச்சு முட்டுகிற பயம்
பாதையில் பயணம் பயந்துபோய் பாதியில் நிற்கிறது
ஒரு நாய் தெருவில் குரைத்தவுடன்
மற்ற தெருக்களிலிருந்து எதிர் குரல்களை கொடுக்கின்றன நாய்கள்
அதைப் பார்த்துக்கொண்டு ஒரு நாயும் சும்மாயில்லை
எதிர் குரலை எழுப்பியவாறே வாலை ஆட்டிக்கொண்டு ஆக்ரோஷமாக ஊளையிடுகின்றன
ஒரு நாய்கூட நட்புகுரலை எழுப்பவேயில்லையோ என யோசித்துக்கொண்டிருந்தவேளையில்
ஒரு நாயின் குரலை மற்ற நாய்களின் கூக்குரல் ஊளைகளில் மறைந்து திரிந்துகொண்டிருக்கின்றன
காற்றி
ல்
இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவனுக்கு பயம் தெளிந்து அந்த நாய்ஊளையில் இருக்கிற ஒழுங்கற்ற ஒழுங்கை ரஸித்துக்கொண்டிருந்த வேளையில் நள்ளிரவு ஊளைக்குப் பயந்து ஒண்டிக்கொண்டே நழுவிப் போய்க்கொண்டிருக்கிறது ஒரு சுடுகாட்டுப் பாதையில்

18 / 6 / 2017
நள்ளிரவு 12.30 மணி

••••

ஒரு நாயின் ஊளை இன்னொரு நாயைப் போல யில்லை
என் தெரு நாய் நன்றாக அழகாக ஊளையிடுகிறது
எதிர் தெரு நாய் அதைப் போலி செய்ய முயற்சித்தவாறே .ஊளையிடுகிறது
இதைப் பார்த்த மற்ற தெரு நாய்கள்
மற்றும்
ஊர் நாய்கள்
மேலும்
பக்கத்தூர் நாய்கள் ஊளையிடுகின்றன
அதைக் கேட்டு பிற நாய்களும் பகடிசெய்து ஊளையிடுகின்றன
மன்னிக்கவும் பிரதியெடுத்து ஊளையிடுகின்றன
நள்ளிரவு நாய்களுக்கு வேறு எதுவும் தெரியாது
ஊளையிடுவதைத் தவிர
ஆகவே
முதலில் மற்றும் முடிவில் ஒரு ஊளையை யிடுவோம்

•••

இந்த நாய்களுக்கு வேறு வேலையில்லை
ஆகவே
ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன

•••

இந்த நாய்களுக்கு வேறு எதுவும் தெரியாது
ஆகவே
ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன

•••

நீங்கள் அறிவீர்களா?
நாய்கள் ஊளையிடுவது
அதற்குள் சில ரகசியங்களை பரிமாறிக்கொள்ளவென
அறிய வேண்டுமானால்
ஒரு நாயைப் போல ஊளையிட கற்றுக்கொள்ளுங்கள்

••••

ஒரு குவளை நீர் அருந்தியபின்
கொஞ்சம் கூடவே சேர்த்து அருந்தினேன் நள்ளிரவின் இருளை
ஒருமுறை ஊளையிட்டுப் பார்த்துக்கொண்டேன்
இம்முறை மிகச் சரியாக நான் ஊளையிடுவதாக சொல்கிறார்கள் என்னை விரும்பாத நாய்கள்.

••••
பின்னிரவு 1.29 மணி

••••

ஊளையிட்டுக்கொண்டே இந்த நள்ளிரவின் விளம்புவரை ஓடினேன்
பாதையின் முடிவில் ஒரு சுடுகாட்டில் கிடைத்தது
கொஞ்சம் எலும்புகளும் கொஞ்சம் சதைகளும்
கொறித்துக்கொண்டிருக்கிறேன் இந்த நள்ளிரவை
இடையிடையே ஊளையிட்டுக்கொண்டிருக்கிறேன்
நான் நாயென்பதை மறந்துவிடாமல் இருப்பதற்காக
•••
அதிகாலை 1.39 மணி
18 / 06 / 2017

••••

உனக்கு யாருமில்லை என்பதால் நானும்
எனக்கு யாருமில்லை என்பதால் நீயும்
ஒருவருக்கொருவர் துணையாக பேசிக்கொண்டிருக்கிற இந்த
நடு ஜாமத்தில்
ஓயாமல் காற்றில் அசைகிற நிழல்களைப் பார்த்து
ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன நாய்கள்

••••
பின்னிரவு மிகச் சரியாக 3 மணி

••••

இந்தப் பின்னிரவில் ஒரு தேநீரைத் தயாரிக்க தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறேன்
தூக்கம் கண்களில் எரிந்து கொதிக்கிறது
ஒரு தேநீரைக்கூட
ஒரு குவளையில் ஊற்றிக்கொண்டு குடிக்கத் தெரியாதவனென்று இந்தப் பின்னிரவு சிரிக்கிறது
அதைப் பார்த்து ஊளையிடுகின்றன
சில தெரு நாய்களும்
சில பெயரில்லாத நாய்களும்
அப்போதுதான் முதன்முதலாக ஒரு கோப்பை தேநீரை தயாரிக்க கற்றுக்கொண்டேன்
அத் தேநீரின் நிறம் இருளைப்போலவேயிருந்தது தற்செயலானதல்ல
அது அவ்வளவு கசப்பாக இருந்தது என்பது கொஞ்சம்கூட சர்க்கரை சேர்க்காத பொய்யைப் போலிருந்தது

இன்னும் விடியவில்லை
இன்னும் ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன நாய்கள்

••••

அதிகாலை 3.15 மணி

தோற்றம் மறைவு (கவிதைகள் ) / ப.மதியழகன்

download (26)

1

இந்த இரவு மிகவும்
துக்ககரமானது
அதிர்ஷ்டத்தின் கதவுகள்
என் வரையில் திறக்கப்படவில்லை
இலைகள் சருகுகளாகும் போது
காலடியில் மிதிபடத்தான் செய்கிறது
வேருக்கு எதிராக இலைகள் எங்கேயாவது
போராட முடியுமா
ஆயுள் முழுவதும்
உடலின் தேவைகளைத்தானே நாம்
பூர்த்தி செய்து வருகிறோம்
கடவுள் சென்ற பாதையில்
வேறு காலடிகள் காணப்படுவதில்லை
எனக்கு முன்னே உள்ள
பாதைகள் அடைக்கப்பட்டுவிட்டன
இருளின் கோரப்பிடியில்
நிற்கதியாய் நின்றுகொண்டிருக்கிறேன்
என்னை எதிர்ப்பவர்கள்
என் பலவீனத்தையறிய
இடங்கொடுத்துவிட்டேன்
வாழ்க்கைப் பந்தயத்தில்
ஜெயித்தவர்கள் கொண்டாடப்படுகின்றனர்
தோற்றவர்கள் முயற்சியைக் கைவிட்டு
விதியை நொந்து கொள்கின்றனர்
கனவான்கள் ஏழைகளிடம்
கருணை காட்டினால்
இன்று நான் கையேந்த நேர்ந்திருக்காது
மறதி என்ற ஒன்று இல்லாவிட்டால்
மனிதர்கள் தற்கொலை
செய்து கொள்வதைத் தவிர
வேறுவழி இல்லை
ஞானியர்கள் கூட
உடலைவிட்டுச் செல்ல
தயக்கம் காட்டுகின்றனர்
உலக சட்டதிட்டங்களால்
ஆன்மாவை சிறைப்படுத்த முடியாது
என்பதால் தான் நான்
இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.

2

ஆன்மாவின் பாடல்களை
யாராவது கேட்க நேர்ந்தால்
அவர்களால் அழுகையை
அடக்க முடியாது
அடியாழத்திலிருந்து கிளம்பும்
அந்த ராகம் உயிர்களின் மேல்
அன்பைப் பொழிகிறது
உதடுகளிலிருந்து வெளிப்படும்
வார்த்தைகள் உச்சரித்தவுடன்
மரித்து விடுகின்றன
சூரியன் உதித்த உடனே
ரோஜா இதழில் படிந்துள்ள
பனித்துளி விடைபெற்றுச் சென்றுவிடும்
இந்த உலகம் அமைதியை
தொலைத்து விட்டது
சத்தமற்ற சில நொடிகளைக்கூட
மனிதனால் சகித்துக் கொண்டிருக்கமுடியாது
மற்றவர்கள் வழிவிடுவார்கள்
என எதிர்பார்த்தால் நாம்
காத்துக்கொண்டிருக்கத்தான் வேண்டும்
கல்லறைத் தோட்டத்தில்
காலங்களின் சமாதி
இருந்ததே தவிர
அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின்
பெயர்கள் பொறிக்கப்படவில்லை
கடல் நடுவில் என்
எண்ணப்படகு அலையில்
சிக்கித் தவிக்கிறது
காதலில் வீழ்ந்த என்னை
மண்மகள் முத்தமிட்டுச்
சொன்னாள் காதலின் பாதை
மரணத்தில் முடிகிறதென்று
அதலபாதாளத்தில் வீழ்ந்து
கொண்டிருந்த நான்
மரக்கிளையைப் பற்றினேன்
கடவுளை நம்பி கைப்பிடியைத்
தளர்த்தினேன் என் கபாலம் சிதறியது
அவ்வோசை கடவுளுக்கும் கேட்டிருக்கும்.

3

கடவுளுக்கு விசுவாசமாக இருக்கிறோம்
என்று சொல்லிக் கொள்பவர்கள்
நான்கு பேர் நம்ப வேண்டும்
என்பதற்காகவே இப்படி
நடிக்கிறார்கள்
கடவுளின் பெயரால்
வெகுஜனத்தை சுலபமாக
அடிமைப்படுத்தலாம் என்று
அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது
கடவுளுக்கு முன்னால்
கொசுவைவிட மனிதன்
மேலானவனா அப்படி நினைத்தால்
அவன் கடவுளே அல்ல
கண்ணுக்குப் புலப்படாத
சட்டமொன்று இம்மண்ணில்
இயங்கிக் கொண்டிருக்கிறது
சாக்ரடீஸுக்கு விஷமும்
இயேசுவுக்கு சிலுவையும் தந்தது
அந்த விதிதான்
மரத்தில் பல கிளைகள்
இருப்பதைப் போன்றது தான்
தெய்வச் சிலைகள்
ஆதாரம் வேரில் இருக்கிறது
என்பதை அறியாதவர்களா நாம்
கொடிய சிந்தனை
செயல்படுத்தாவிட்டாலும் கூட
அதுவொரு பாப காரியமே
வாழ்க்கையின் நிழலை நாம்
கவனிக்கத் தவறிவிடுகிறோம்
பேய்கள் தன்னைக் கண்டு
அஞ்சுபவனிடத்தில் தான்
ஆட்டம் காட்டுகிறது
அழிவுசக்திகளுக்கு எதிராக
கடவுள் உனக்குத் துணை
நிற்க மாட்டார்
பிரபஞ்ச அதிபதிக்கு மனிதன்
ஒரு பொருட்டேயில்லை
அரசனா ஆண்டியா
பூமியில் அவன் வாழ்க்கை எப்படிபட்டது
என்ற கோப்புகளை இறைவன்
படித்துப் பார்ப்பதே இல்லை
பரிசோதனை எலிகள்
எப்போது வேண்டுமானாலும்
மரணத்தை எதிர்கொள்ள
தயாராய் இருக்க வேண்டும்
ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த இவ்வுலகத்தில்
சமரசத்தை கொண்டுவரும்
மரணச் சட்டம் புனிதமானதாக
கொண்டாடப்பட வேண்டும்.

4

துயரநீர்ச்சுழலில் எனது வாழ்க்கைப்படகு
அகப்பட்டுக் கொண்டது
இந்த உலகில் பிரவேசித்த
ஒவ்வொருவரும் பிறரைப் பார்த்து
தாமும் மாம்சத்தை திருப்திபடுத்தவே
கற்றுக் கொள்கிறார்கள்
போகத்தில் திளைக்கும் மக்கள்
கடைத்தேற்ற வந்த உத்தமர்களின்
அழைப்புக்கு செவி கொடுப்பதில்லை
இருண்டகாலங்களில் மாபெரும்
வெளிச்சத்தை நோக்கி நாம்
முன்னேற வேண்டும் என்ற
நோக்கம் அவர்களுக்கு இருக்காது
துக்க ஆறு ஒருபோதும்
மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கிற்கு நம்மை
அழைத்துச் செல்லாது
அன்பெனும் ஓடையில்
நீந்திப் பாருங்கள்
துக்கத்தின் புதல்வர்கள்
இரட்சிக்கப்படுவார்கள்
வாழ்க்கைப் பாதையில்
எந்த மரணக்கிணற்றில்
தடுக்கி விழுவோம் என
யாருக்கும் தெரியாது
நரகத்தில் வீழ்ந்துபடுவோம் என்று
தெரிந்தும் போகத்தின் பாதையையே
தேர்ந்தெடுக்கிறது மனிதமனம்
வாலிபத்தில் நெறிமுறைகளைப்
பின்பற்றாமல் வயோதிகத்தில்
வானத்தைப் பார்த்து கதறுவதால்
பயனொன்றுமில்லை
துயரக் கடலில் நீந்துவோருக்கு
மரணமே விடுதலையை
பரிசளிக்கும்
உடல் நோய்களின் கூடாரம்
வியாதி ஒன்றே ஞானத்தைப்
பரிசளிக்கும்
சிலந்தி வலையில் சிக்கிய
பூச்சிகள் கடவுளிடம்
பாரத்தைப் போட்டு
முயற்சியைக் கைவிடுமா
காரிருள் பாதையில்
துணிந்து நடப்பவனுக்கு
விமோசனம் மிக அருகில்
இருக்கின்றது
வாழ்நாளில் ஆணிகளைநிறைய
சேகரித்துக் கொள்
நீ விருப்பப்பட்டாலும்
சவப்பெட்டியிலிருந்து
வெளியே வரமுடியாதபடி.

குற்றம் ( கவிதைகள் ) அறிமுகப் படைப்பாளி – அ. விஜயபாரதி

download (39)

குற்றம்

நான் நீரூற்றியிராத
ஒருமரத்தின்
நிழலில் சற்று இளைப்பாற
அதன் கனியொன்ற சுவைக்க
அது சமைக்கும் பிராண வாயுவை சுவாசிக்க
குற்றவுணர்ச்சி பிடுங்கித்தின்றுவிடும்
ஆயுளுக்கும் என் இதயத்தை.

நம்பிக்கை

நம்பிக்கொண்டிருக்கிறேன்
இரவில் மினுங்கும் விண்மீன்கள்தான்
பகலில் பறந்துவந்து தேனெடுக்கிறதென
பூக்களில்.

சுதந்திரம்

மொட்டை மாடியில் உலரும்போது
இருக்கும் சுதந்திரம்
வீட்டுக்குள் இருப்பதில்லை
பெண்களின் உள்ளாடைகளுக்கு.

••••

E-mail: bharathi8783@gmail.com

மேற்கே நடந்தேன் ( கவிதைகள் ) / சின்னப்பயல் ( பெங்களூர் )

images (28)

பாலையை நடந்தே கடந்த முகமது
கந்தனிடம் மயிலைக்கேட்டிருக்கலாம்
சிலுவையுடன் பல கல் தொலைதூரத்தை
தோளில் சுமந்தே கடந்த ஏசு
அதே கந்தனிடம் தொற்றிக்கொள்ள
வேண்டியிருக்கலாம்

***

உன்
நிர்வாணத்தைப்
பார்க்கத்தூண்டும்
ஆடை

***

மலையில்
வளைந்து நெளிந்து
செல்கிறது பாதை
யாரைத்தேடி ?

***

காகம் அடைகாத்த
குயில் நீ
குயில் அடைகாத்த
காகம் நான்

***

மேற்கே நடந்தேன் இடித்தான் ஒரு கம்யூனிஸ்ட்
தெற்கே நடந்தேன் இடித்தான் ஒரு ஆர் எஸ் எஸ்
வடக்கே நடந்தேன் இடித்தான் ஒரு காங்கிரஸ்
கிழக்கே நடந்தேன் இடித்தான் ஒரு வஹாபி
குறுக்கே நடந்தேன் இடித்தான் ஒரு மாவோயிஸ்ட்
எம்பிக் குதித்தேன் இடித்தான் ஒரு பிஜேபி
சும்மா இருந்தேன் இடித்தான் ஒரு திராவிடன்

***

கிளிகள்
பேசத்தொடங்கியதும்
கூண்டுகளில்
அடைபட்டன

***

இன்மையை எழுதுகிறேன்

அதில்

இருக்கிறாய்

***

குடையை
மடக்கி வைத்துவிட்டு
மழையில் நடக்கலாம்
கொஞ்சம் குடையும்
நனையட்டும்

***

- சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

குமாரநந்தன் கவிதைகள்

download (49)

நாற்ற மலர் பொக்கே

என் மீதான உங்கள் அன்பை

திரும்பப்பெற்றுக்கொண்டீர்கள்

அப்போது நான் குடித்திருந்தேனா?

தவறாக எதுவும் பேசினேனா?

முட்டாள்தனமாக உளறினேனா?

மன்னிக்க வேண்டும்

நான் தீயவற்றையெல்லாம்

புதைத்து வைத்திருந்தேன்

கிளர்ச்சியூட்டும் சம்பவங்களின் மழையில்

அவை துளிர்த்துவிட்டன

அதன் இலைகள் கசக்கின்றன

அதன் மலர்கள் நாற்றமடிக்கின்றன.

ஆனால் அவை அத்தனை வசீகரமாய் இருக்கின்றன

நாறும் மலர்களை தொகுத்து

பொக்கே செய்து வைத்திருந்தேன்.

நீங்கள் இன்முகத்துடன் அதை

வாங்கிக் கொண்டீர்கள்

நாற்றமென்றாலும் அழகு என்றீர்கள்

தோளை அணைத்து விடை கொடுத்தீர்கள்

பின் என்றென்றுமாக உங்கள்

அன்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டீர்கள்

•••

கடலாடிகள்

கடல் அலைகளில் சிறுவர்கள்

விளையாண்டுகொண்டிருந்தார்கள்

நான் கடலின் முழுப்பரப்பையும்

அதன் ஆழத்தையும் கவனிக்கும்படி அவர்களிடம் சொன்னேன்

அவர்கள் அதற்குக் கப்பல் வேண்டும்

எங்களிடம் வசதி இல்லை என்றார்கள்

வெறும் கண்களால் உடலால்

நீங்கள் அதை உணர வேண்டும் என்றேன்.

நாங்கள் தொலந்து விடுவோம் என்றார்கள்

அலை உங்கள் ஒதுக்கித் தள்ளுகிறது என்றேன்

கடல் எங்கள் காலை நனைக்க ஓடி வருகிறது என்றார்கள்

அலை மட்டும் கடல் அல்ல என்றேன்

அலை இல்லாமல் கடல் இல்லை என்றார்கள்

அவர்கள் கடலாடிகள்

•••

தைலமிடப்பட்ட ஆன்மா

ஒரு நகரத்தை விலைக்கு வாங்கினீர்கள்

அதன் ஒரு மூலையில்

ஒரு லார்வாவைப் போல கூடு கட்டினீர்கள்

என்றாவது ஒருநாள்

பட்டாம்பூச்சியாகிவிட திட்டமிட்டீர்கள்

உங்களுக்குள் இருந்த ஆன்மாவை

தைலமிட்டு பதப்படுத்தினீர்கள்

புழுக்கமான மதியப் பொழுதுகளில்

அதைக் காட்சிப்படுத்தி

குளிர்ந்த மாலை நேரத்தைப் பெற்றீர்கள்.

நகரத்தில் மழையும் வெய்யிலும் அடித்தபோது

உங்களிடமிருந்து வானவில் தோன்றியது.

அதன் வண்ணங்கள் ஏழாயிரமாய் இருந்தன

நீங்கள் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தீர்கள்

ஆனால் உங்கள் அதிசயிக்கத் தக்க ஆன்மாவை

விற்கவும் முடியவில்லை இலவசமாயும் தரமுடியவில்லை

தூக்கி எரியவும் முடியவில்லை வைத்திருக்கவும் முடியவில்லை

அழவும் முடியவில்லை சிரிக்கவும் முடியவில்லை

பிறகுதான் நீங்கள் மிகவும் வேடிக்கையானவராய் மாறினீர்கள்

••••••••••••••••••••••

வெள்ளிக்கிழவி ( அறிமுகப் படைப்பாளி கவிதைகள் / ஆகி

download (28)

வெள்ளிக்கிழவி

எதற்கெடுத்தாலும் தொன தொனவெனும்

வெள்ளிக் கிழவர் எடுத்ததெற்கெல்லாம்

எரிந்து விழும் ஞாயிற்றுக் கிழவியிடம்

இத்தனைக் காலம் சொல்லாத

அதை இனியும் தாங்க மாட்டாது

சொல்லியே விட்டார்

தனக்கும் வெள்ளிக்கிழவிக்கும்

துளிகூட சம்பந்தமில்லையென

போட்டுடைத்தே விட்டார்

அதது அப்படியப்படி யிருக்க

ஞாயிற்றுக் கிழவர் விழிக்கும் போது

எப்போதும் நிகழ்வதில்லை யெனினும்

அவ் வெளி அவ்வப் போது பிறழ்ந்து

கடந்த வெள்ளிக் கிழவியிடம்

விழுந்து விட நேர்கிறது

நிறப்புதிரி

பல்வர்ணனை ஏதோ ஓர்வர்ணன்

என்று முன்னிறுத்தினால்

தனக்குள் ஆட்சேபிப்பான்

பத்தொன்பதாம் நூற்றாண்டின்

நரம்புகளினூடாக அவனை

அவர்கள் கண்ணுறுகையில்

தெளிவில்லாத் தோலை

முழுமையில் அவதானிக்க

எந்திரமலையின் தோளிலும் தலையிலும்

ஆதியுடல் கால்பதிக்கும்

சீமைக்கருவேலத்தின்

முட்களில் சிக்குண்டுத்

துடித்துப் பரிதவிக்கும் துண்டுப் பிரசுரம்

இதுகாறும் அறியப்பட்ட

இதுகாறும் அறியப்படாத

இனங்களின் இழைநயங்கள்

மக்கட்கணிப்புப் பட்டியலில் இடம்பெறாத

பல்வர்ணனின் மேற்தோலில்

குடிகொண்டுள்ளது என்றறிவிக்கும்

பல்வர்ணனை பல்வர்ணன்

என்று முன்னிறுத்தினால்

முனகலுடன் ஆட்சேபிப்பான்

முழுதாகத் தோற்றமளித்ததால்

தெளிவாக அவதானித்ததான

முடிவை அவர்கள் எட்டுகையில்

சிட்டுக்குருவிக்கானக் காத்திருப்பு

கிராமதேவதையை

முடிவிலியின் அண்டையில்

கொண்டுபோய் நிறுத்தும்

முற்றுப் புள்ளிகள்

நேர் கோடானவனை

நெளிய வைத்து

கேள்விக் குறியாக்கியபின்

வியப்புக் குறியுமாக்கிய

முற்றுப் புள்ளியானவள்

நேர் கோடானவளாகி

நெளிய வைக்கப்பட்டு

கேள்விக் குறியுமாக்கப்பட்டு

வியப்புக் குறியுமாக்கப்பட்டபின்

முற்றுப் புள்ளியானவர்

மெல்லிய நேர்கோடாகி

கேள்விக் குறியுமாகி

விறைத்த வியப்புக்குறியுமாகி

முற்றாப் புள்ளியுமாயினர்

அந்நியபாஷை

பரபரா பரலபரிப லபரபலப

பராப ரபஷிபரப இவரிப

ரிபரிப சிபஷிபசிவ

ச்சைபரிப ரபசிப

அவலிப ரபரிப

லபலப ரபலப

இவரபரமராம

ச்சைரபரப சுப

ரமரம ஓகமரிப

லபரபசுப ஷிபஷிப

ஓம்அடச்சை ஓரிபஷிப

லபரிபரபரப ஆசீரபஷிபசுப

ஒப்பிக்க வேண்டிய

அந்நிய பாடம்

ஒப்பித்தாயிற்று

துண்டிப்பு

காற்றடிக்கிறது

கட லெங்கே

மேகமிடிக்கிறது

நில மெங்கே

வானமினிக்கிறது

வன மெங்கே

இன்மையே

உந் தென்

உயிருட லெங்கே

என வினவின

துண்டிக்கப்

பட்டவனின்

விடுவிக்கப் பட்ட

அந்தரத்து

நினைவுகள்

•••••••

சித்தாந்தங்களின் குகை / சூர்யா

download (21)

1.சித்தாந்தங்களின் குகை

இத்தனை நாள் அக்குகையினுள் பதுங்கி கிடந்தேன்
பெருநிழலை தந்த குகை பிரம்மாண்ட சலிப்பை தரத் தொடங்கியபோது
குகையை விட்டு வெளியேற ஓர் அடி எடுத்து வைத்தேன்
வரலாற்றின் விரல்கள் என்னை இறுக பிடித்து பின்னே இழுத்தன
குகையை விட்டு வெளியேற மற்றொரு அடியை எடுத்து வைத்தேன்
அடையாள அட்டைகளின் சிம்பொனிகள் என் காதுகளை இறுக பிடித்து பின்னே இழுத்தன
குகையை விட்டு வெளியேற மற்றொரு சக்திவாய்ந்த அடியை எடுத்து வைத்தேன்
அறத்தின் வியர்வை வாடை என் நாசிகளை இறுக பிடித்து பின்னே இழுத்தது
குகையை விட்டு வெளியேற இன்னொரு அடியை எடுத்து வைத்தேன்
அதிகாரத்தின் பற்கள் என் நாக்கினை இறுக கவ்வி பின்னே இழுத்தன
குகையை விட்டு வெளியேற மற்றொரு அடியை எடுத்து வைத்தேன்
மொழியின் கண்கள் என் பார்வையை கவர்ந்து பின்னே இழுத்தன
கடைசியாக கடைசியாக என் மற்றுமொரு அடியை எடுத்து வைத்தபோது
சித்தாந்தங்களின் குகைகளை விட்டு வெளியே வந்திருந்தேன்
யாவும் உன்னத அழகியலோடு இயங்கத் தொடங்கியது

**

2.அரூபினி

அவளுடைய ஓசையிலி பாடலை
உங்கள் செவிகளின் செவிகள் வழியே தான் கேட்க முடியும்
அவளுடைய அரூப சொரூபத்தை
உங்கள் விழிகளின் விழிகள்
வழியே தான் பார்க்க முடியும்
அவளுடைய நீலப்பரிமளத்தை உங்கள் நாசிகளின் நாசிகள்
வழியே தான் முகரமுடியும்
அவளுடைய கலவர முலைகளை உங்கள் வாய்களின் வாய்
வழியே தான் சுவைக்கமுடியும்
இப்படியும் ஒரு பெண்ணா யென சிந்திக்கிறீர்களா
சிந்தனைகள் தேவையில்லை
அறிவுக்கோ அவசியமில்லை
ஒருவேளை போற்றி போற்றி யென வெட்டவெளியில் நின்று
உரக்க சொல்வீர்கள் யெனில்
அப்பெண்ணின் அதரங்கள்
உங்கள் அதரங்களின் மீது துயில் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது

**

3.விளக்கங்களுக்கு எதிரான மனநிலையின் குறிப்புகள்

- ஜீவன்-சூர்யா

1
ஒரு மரம்
எப்படி இருக்கிறதென ஏன் உங்களிடம் விளக்க வேண்டும்
அதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது இப்போது
அதை விளக்காவிடில் அது மரமாக இல்லாமல் போய்விடுமா என்ன
அது ஒரு மரம் அவ்வளவு தான்

2
ஏன் அனைத்திடமிருந்தும்
அர்த்தத்தை எதிர்பார்க்கிறீர்கள்
சற்று அர்த்தத்தை மறந்து வாழ்ந்தால் தான் என்ன
மாற்றங்கள் வருகிறது போகிறது
ஏன் மாற்றங்களை அறிவித்துக்கொண்டு கணத்தை வீணாக்குகிறீர்கள்
உங்களைத் தான் கேட்கிறேன்

3
அது ஒரு உதிர்ந்த இலை அவ்வளவு தான்
அந்த இலை விளக்கங்கள் இல்லாதபோது அழகாகத் தான் இருந்தது
நீங்கள் விளக்க தொடங்கியபோது தான் அந்த இலை தன் உன்னதத்தை இழந்திருந்தது
விளக்கமளித்து விளக்கமளித்து சலிக்கவில்லையா உங்களுக்கு
எதையும் விளக்க உதவாத மொழியை எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம் ?

*******

குறிப்பு:
இதில் இடம்பெறும் மூன்றாவது கவிதை நானும் எனது நண்பரான ஜீவனும் இணைந்து எழுதியது.

றாம் சந்தோஷ் கவிதை ( அறிமுகக் கவிஞர் )

images (18)

திணை: நீட்
துறை: தேர்வெழுதவந்து எரிச்சலுற்றுத் திரும்புதல்

இந்நூற்றாண்டிலும் நெய்யிட்டு,
வகுடெடுத்தனுப்பும் தம் தாய்களுக்கு
டாடா பகன்றுவிட்டு செலுத்துகின்றனர் பைக்-ஐ.
காலையின் ஒரு தேர்வுக்கு வைகறை புறப்பாடு
நன்நிமித்தம்தானா என்பது தாய்களுக்கு
ஒரு கேள்வியாகவே மீந்திருந்தது.

தலைவி தன் கடமையாற்ற
தேர்வுவறையின் முன்போய் சலாம் இட்டபோது
அதுபோதாது, உன் உயரம் ஆகாது,
கொஞ்சம் மண்டியிடேன் என்று கட்டளை இடப்பட்டது.
தலைவி தன் கடமையாற்றுவதில்
சற்றும் சளைக்காதவள் என்பதால்
அவள் வளையத் தலையைக் கொடுக்க
கொடுத்த தலையின் மயிர்ப் பரப்பில்
பிரேதப் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தேறியது.

மயிர்ப்பரப்பில் சோதனை செய்ய என்ன மயிர் இருக்கிறது
என்று தலைவிக்குப் பலமுறை கேள்வி வந்தது
அவள் வந்த கேள்விகளை டேக்-டைவர்ஷன் போர்டு காண்பித்து
திரும்பவும் தொண்டைக்குள்ளேயே திருப்பி அனுப்பிவிட்டாள்.
ஆகையால், அவள் தேசதுரோகி இல்லை என்பது நிறுவப்பட்டு தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டாள்.
அவள் எழுதி முடித்துவிட்டு எழுத்து வந்தபோது
தம் எஜமான நாய்களைப் பார்த்து
கொஞ்சம் எச்சிலை மெல்லத் துப்பி
தன் எரிச்சலை வேகமாய் ஆற்றுப்படுத்தினாள்.
அதற்கும்மேல் தன்னால் என்னதான் முடியும்
என்று நொந்தும் கொண்டாள்.

இஃதோர் புறமிருக்க -
அதன் எதிர்ப் புறம்,

தலைவனின் கைச்சட்டை கிழித்தெறிய
அவனோ கொஞ்சமும் புறமுதுகிடாது
தன் காற்சட்டைக் கிழித்தெறிந்தாலும்
தனக்கோர் களங்கமுமில்லை என நினைத்துக்கொண்டான்.
அவன் தன் அம்மணத்திற்கு அருகில் சென்றபோது
அதைக் கொஞ்சம் பார்த்துத் தொலைத்தாள் தலைவி;
அவளொடு இன்னொரு கிழவியும் அதையே.

தலைவன் தன் கடமையாற்றவா அல்லது காதலுறவா என்று
பலமுறை நினைத்துக்கொண்டான். அவனுக்கு,
ஏதோ கருமம் எழுதிவிட்டுபோகலாம்
என்ற பழக்க உணர்வு தலைவனின் உடலில் படர்ந்து படர்ந்தது.
அவன் நாயொன்று மல்லாக்க ரோட்டில் புரள்வதுபோல்
மூளையைப் பைத்தியமாய் புரட்டப் புரட்டினான்.

புரட்டப் புரட்டியவன் அதை முடித்துவிட்டு புறப்படும் வேகத்தில்
இமைகளை வில்களாக்கிப் பார்வையை வேக எய்தினான்
அவை தலைவி தாங்கியிருந்த டேக்-டைவர்ஷன் போர்டைப் பார்த்து
திரும்பி வந்து அவனையே தாக்கின
அதனால் தலைவன் தன்னையே காதலுற்றான்
தலைவியோ உசாராக மீந்துபட்டாள்.

•••