Category: கவிதை

கவிதைகள் ஷாஅ கவிதைகள்

ஷாஅ கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

ரெண்டாம் மாடி முகப்பு வாசல்

திறக்கவும்

சிறுபொன் உரசி வானம்

சிலிர்க்கவும்

சரியாக இருந்தது

அதோ

ஆத்மாநாமின் காகம்

அந்த மலையும் தாண்டிப் பறக்கிறது

உச்சியில் எச்சமிட்டு

சூரியனைப்

பார்த்துக்

கா

***

கவிதைகள் கே.பாலமுருகன் கவிதைகள்

கவிதைகள் கே.பாலமுருகன் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

கிணற்றடி  கதைகள்

1

துரத்தப்பட்ட  இரவொன்றில்

தாத்தாவும்  பாட்டியும்

கிணற்றடியிலேயே  கிடந்தார்கள்.

சுவரிலிருந்த  நகக்கீறலகளில்

அவர்களை நுகரலாம்.

தகறக்குவளையில்  மிச்சமாகியிருந்த

நீரில் சப்தமின்றி மிதந்தன

அவர்களின் தனிமை.

யாருக்கும்  கேட்காதபடிக்கு

ஒளித்துவைக்கப்பட்ட நிசப்தத்தில்

பத்திரமாக பரவிக் கொண்டிருக்கின்றன

நேற்றிரவு கிணற்றடியில்

நிகழ்ந்த  தற்கொலையின் வாசனை.

2

நீர்வாளியிலிருந்த நீரின்

அலம்பல்கூட  ஓயவில்லை

கிணற்றின் உள்சுவரில்

ஒழுகிக் கொண்டிருந்தது

மரணம்.

3

முனியாண்டி  மாமா

தொழிலில்  தோல்வியுற்ற தருணமும்

கீழ்வீட்டு  மேனஜர் மகன்

மலாய்மொழி சோதனையில் தோல்வியுற்ற  தருணமும்

ஒரே நாளில் வந்திருக்கக்கூடாது.

ஆழ்க்கிணறு  நிழலில்

இருவரும்  ஒரே மாதிரி

தெரிந்தார்கள்.

4

மரணத்தின்

நீளம் 17 அடி

அகலம் 200 செண்டி மீட்டர்.

ஒரே ஒரு கயிற்று  வாளி.

 

***

கவிதைகள் சூரியதாஸ் கவிதைகள்

 

சூரியதாஸ் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

மரங்களைப்போல் நிழல்களும்

ஆழ வேர்விட்டுக் கிடக்கும் அடர்வனம்

ஆயிரம் விரல்களால் வேர்களை வேர்கள்

பின்னிக்  கிளர்ச்சியூட்ட

கிளைகள் குலுங்கிச் சிரிக்கும் பூக்களாய்

இலைநுனி முத்தங்களால்

கிறங்கிச் சொக்கிய மேகங்களில் சில

எங்கள் வயலில் வந்து விழும்

பெயர் தெரியா உயிரெல்லாம்

பெருவனத்தில்  சந்ததி பெருக்கும்

நெடுநாளாய்  வசித்துவந்த நிழலொன்று

வேரோடு காணாமல்  போயிருந்தது

வனத்தில்  ஒருநாள்

அதேநாள் அதேநேரம் அதேஆண்டில்

எங்கள் ஊரின்  மழையொன்றும்

காணாமல் போயிருந்தது

குஞ்சுகளைப் பறிகொடுத்துப்

புலம்பெயர்ந்த

புள்ளினத்தின் தகவல்-

கோடரியுடன்  ஒருவன் உள்நுழைந்தபோது

அமைச்சர்  ஒருவர்

மரம்நடு விழாவில்

வார்த்தைகளை நட்டுக் கொண்டிருந்ததாய்.

*

கவிதைகள் சுவாதி ச முகில் கவிதைகள்

கவிதை  சுவாதி ச முகில்  கவிதை

இச்சாதாரி

 

 

 

 

 

 

ரகசிய வனாந்திரங்களில் மண்டிய தாழம்புதர்கள்

மடலவிழ்க்கும் ஆளரவமற்ற பொழுதுகளில்

ஊர்ந்து வரத் துவங்குகிற அரவத்திற்குக்

கள்வத்திலூறிய பச்சைக் கண்கள்

தாழைக் கள்ளுண்ட பித்தேறி முறுக்கிய நெளியுடலமெங்கும்

முண்டிக் கிளம்பும் ப்ரக்ஞை பிணைச்சாரைக்கானது

 

பிணையலின் பேராவல் சுழன்றடிக்கும்

புலனைந்தின் ஊழிமூச்சில்

கொதியுலையின் கொந்தளிப்பு

 

உடுக்கள் சிதறுண்ட கருவிசும்பில் பரவும்

வெப்பத் தகிப்பில் பழுக்கக் காய்கிறது பௌர்ணமி

பற்றியெரிகிறது தாழங்காடு

 

கனிந்து கொண்டிருக்கும் ஏதேன் தோட்டத்துச் செங்காயில்

நஞ்சேற்றத் துவங்குகிறாள் இச்சாதாரி

 

**

கவிதை தீபச்செல்வன் கவிதை

தீபச்செல்வன்

 

 

 

அகதியின் பள்ளிக்கூடம்

அகதிமுகாமாக்கப்பட்ட பள்ளியின்
கதிரை மேசைகள் அள்ளியேற்றப்பட்ட
ஒருநாள் புத்தகங்கள் தொலைந்துபோயின
யாரும் திரும்பாத காலத்தில்
போர்க்களத்தில் நிற்கையில்
காயங்கள் மிகுந்த பள்ளியின் மணியை அசைத்திருப்பாயா?
நொந்த உள்ளத்தோடு கிழிந்த சீருடைகளுடன்
நான் அகதியான பொழுது
நிமிர்ந்திருந்த நம்; பள்ளியும் அகதியானது
ரொட்டிகளை பரிசளிக்கும் பசியாறும் கதைகளை
படித்த மரநிழலின் நினைவுகளை பொழியும்
சேலைகள் கட்டப்பட்ட
மரங்களாலான வீடுகளில்
என்னிடம் புத்தகங்கள் இருக்கவில்லை
அகதி முத்திரை குத்தப்பட்ட பள்ளிக்கு
உன்னைப்போலவே எந்தத் தோழர்களும் திரும்பவில்லை
யாரும் திரும்பாத வகுப்பறையில்
பாடல்கள் ஒலிக்கவேயில்லை
பேரீட்சைப் பழங்களில்லை
ஒட்டகங்களில்லை
எண்ணெய் கிணறுகளில்லை
சிறுவர்கள் சாகடிக்கப்படும் யுகத்தில்
ஒரு பாலஸ்தீனச் சிறுவனைப்போல
நான் ரொட்டிக்கு அலைந்தேன்
இறுதிவரை
கிழிந்த என் அகதிப் புத்தகப் பைகளுக்குள்
உனக்காக சில ரொட்டித் துண்டுகளிருந்தன.

***

 

கவிதைகள் கோசின்ரா கவிதைகள்

கோசின்ரா  கவிதைகள்

 

 

*

 

 

 

இந்த முறையும் உன் காதல்

என்னுடலை புதிதாக மொழிபெயர்த்து தருகிறது

ஒவ்வொரு மொழிபெயர்ப்பும்

புதிய மலைகளையும் சிகரங்களையும் கொண்டு வருகிறது

கண்களின் வெளிச்சம் சிகரத்திற்க்கு

இதுவரை போகாத தடங்களில்  அழைத்துச் செல்கிறது

தோழமையின் கரங்கள்

காதலின் கரங்களாக மாறும்கணம்

தன் மொழியையும் உதடுகளையும்  மாற்றிக்கொள்கிறது

அதன் உச்சரிப்புகள் புதிய  ராகததை இசைக்கின்றன

உடல் காதலின் நிலமாகும்போது

விரல்கள் புதிய விதைகளை  விதைக்கின்றன

அத்தனை விதைகளும் நொடியில்

மலர்களை மலரச்செய்கின்றன

உடல் நிலத்தில் ஈசல் நதிகள் மீன் களைப் போல் நீந்துகின்றன

அவைகள் மெல்ல எரிமலைகளை  எழுப்புகின்றன

உடல்கள்  நெருப்பின் ஆடையை அணிந்து கொள்கின்றன

சற்று நேரத்திற்கு பிறகு

உடல் மணல்வெளி போல கிடக்கிறது

அகவெளி நண்டுகள் வளைக்குள்ளிருந்து வெளிவருகின்றன

உடலிருந்து கீழே விழுந்த  நட்சத்திரங்களை பொறுக்குவதற்கு

 

*

 

 

நதியில் பிணமொன்று மிதந்து  செல்கிறது

மரங்கள் ஆர்ப்பரிக்கின்றன

கிளைகள் கைகளை நீட்டுகிறது

மாயாவியின் கைகளைப் போல் அது நீளமாகவில்லை

பறவைகள் பேசிக்கொள்கின்றன

அது பெண்ணின் பிணமென்று

அவள் இழுத்துக் கட்டிய சேலைக்குள்

ஒரு  குழந்தையின் சடலமும்

இருக்கிறதென்று சொல்லிச் செல்கிறது அலைகள்

வெளிச்சம் வடிந்துவிட்டது

பிணங்களைத் தேடித் யாரும் வரவில்லை

அல்லது வேறெங்காவது தேடிக்கொண்டிருக்கலாம்

நதிகள் பிணம் தூக்கிகளல்ல

கரையொதுக்கிவிட்டது தன்  மேலிருந்த உடல்களை

இருட்டின் புதர்களில் கிடக்கிறார்கள் தாயும் சேயும்

கரையேற்றத் தெரியாமல் தவிக்கிறது மின்மினிகள்

கருமேகங்கள் ஒன்று கூடின  மழையின் அஞ்சலி

ஆதரவற்று சாவதற்கு

நிறைய வழிகளை வைத்திருக்கிறது தேசம்

எல்லா அதிகாரங்களும்

சாவின் போர்வையை

சுலபமாக போர்த்தி விடுகிறது  ஏழைகளின் மீது

செய்தி வருகிறது தானியக்கிடங்கில் கிடக்கும்

இரண்டு லட்சம் டண் மூட்டைகளின்  மீது

விளையாடுகின்றன காளான்  பூஞ்சைகள்

எலிகள் மழை வெயில் காற்று

பிச்சையெடுக்க கற்றுக்  கொள்ளாமல்

குழந்தயை வெகுதூரம் கூட்டிச் சென்று

தற்கொலை செய்துக் கொள்கிறவளை எதுவும் கேட்கவில்லை

தானியக் கிடங்குகளோ அரசாங்கமோ வழிப்போக்கர்களோ.

*

என்னுடைய மதம்

என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறது

புலியைக் கண்டால் பயந்தொதுங்கி

மான்களைப் போல ஒடுவதற்கு

சிலரைக் கண்டால் தோள் துண்டினையெடுத்து

இடுப்பில் கட்டிக் கொள்வதற்கு

எப்படி முதுகை வளைக்க வேண்டுமென்பதற்கு

எவ்வளவு தூரம் கைகளை நீட்டிக் கொள்ளலாமென்பதற்கு

கேட்காமலே சுமைகளை சுமந்து

கூலியாக மாறிக் கொள்வதற்கு

மதம் எனக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறது

ஒளிந்திருந்து வேதங்களை கேட்கக்கூடாது  என்பதற்கு

இந்த பிறவியில் பிறந்ததற்கு

போன பிறவியின் பாவம்தான்  என நொந்துக் கொள்வதற்கு

கடவுளுக்கு நெருக்கமானவனெ  சொல்லித்தரவில்லை

நானும் அவனுடைய வாரிசுகளில்  ஒருவனெ அறிவிக்கவில்லை

ஒருமுறைகூட பேசாத கடவுளிடம்

கோபப்பட்டு என்ன நிகழ்ந்துவிடப்போகிறது

மதம் மனிதனை  விட ரொம்பவும்

இளவயதுக்காரன்தான்

வழிப்போக்கனைப் போல வந்த மதம்

கடவுளின் வீட்டுக்கு குத்தகை  காரனைப் போல நடந்துக்கொள்கிறது

மதம் இப்போது என்ன சொல்லிக் கொடுக்கிறது

அடுத்த சாதி பெண்களிடம்

காதல் கொள்ளாதேயென்று

அது கப் பஞ்சாயத்துகளை  உருவாக்குகிறது

மதம் தந்திரக்காரனாக மாறிவிட்டது

பழைய முகத்தின் மீது

புதிய முகமூடியை அனிந்துக்கொண்டது

என்னையும் கடவுளின் பிள்ளையென்கிறது

அதற்கு நிறைய நாக்குகளும் முகங்களும் முளைத்துவிட்டன

 

*

அவர் இறந்துவிட்டார்

அவர் இறப்பது இது முதல்  தடவையல்ல

இறப்பை யாரும் நம்பவில்லையென்பதால்

மீண்டும் மீண்டும் இறந்திருக்கிறார்

இப்பொழுது அவரை முழுவதும்  நம்பிவிட்டார்கள்

அதற்கு அடையாளமாக அவரை

அன்றைய செய்திதாள்களால் மூடியிருக்கிறார்கள்

சாவதற்கு சில மணி நேரம்  முன்புவரை

இருமிக்கொண்டிருந்தாராம்

அவருக்கென்று சொத்துக்கள்  ஏதுமில்லை

வாழ்ந்து வந்த நடைப்பாதை

நகராட்சிக்கு சொந்தமானது

அவர் மரணத்திற்கு அழ யாருமில்லை

தடவியல் நிபுணனுக்கு

எவ்வித சிரமும் கொடுக்காமல்  செத்துவிட்டார்

நெடு நாளாக பசி உருண்டைகளை விழுங்கியிருக்கிறார்

பசி மனிதனை கொல்லக்கூடிய மிருகம்தான்

திரைப்படப் சுவரொட்டிகள்தான்

படுக்கைவிரிப்புகளாக இருந்திருக்கிறது

அதை யாருக்கும் உயில் எழுதவில்லை

இறந்தபிறகு செய்திதாள் போர்வை கிடைத்திருக்கிறது

அவருக்காக அமரர் ஊர்தி வரப்போவதில்லை

மாநகராட்சி வண்டிக்காக காத்துக் கிடக்கிறார்

வைகுண்டஏகாதேசி தினத்தில் இறந்திருப்பதால்

சொர்க்கம் போவாரென பேசிக்கொண்டார்கள்

போனவாரத்தில் இறந்து கிடந்த நாயை

மாநகராட்சி வண்டிதான்  தூக்கிக்கொண்டு போனது

மாநகராட்சி வண்டிகளுக்கு ஏழைகளும் குப்பைதான்.

*

பிரிதல் பழகிவிட்டது

முதல் பிரிவுக்கு கண்கலங்கியது போலில்லை

இரண்டாம் பிரிவும் மூன்றாம் பிரிவும்

பிரிவு எப்போதுமே தளர்ந்த  சூழல்களை இறுக்கி கட்டிவிடுகிறது

பிரிதலின் போது மெளனத்திற்கு சோகை பிடிக்கிறது

காலம் நம்மை பொம்மைகளாக்கிப்  பார்க்கிறது

உடல் கணத்துப் போகிறது

மனைவியை பிரியும் உடலும் குழந்தைகளை பிரியும் உடலும்

அப்பா அம்மாவை பிரியும் உடலும் வெவ்வேறானவை

வீட்டை பிரிவது வேறொரு வலி

பழகிய இடத்தை பிரிவது

சில மனிதர்களிடமிருந்து மரங்களிடமிருந்து

சில அறிமுகங்களிடமிருந்து

சில கட்டமைப்புகளிடமிருந்து மீண்டும் அந்நியமாகிறோமென்பதே

அதிகாலையில் நண்பகலில்  மாலையில் இரவில் நடு இரவில்

எல்லா நேரங்களிலும் பிரிந்திருக்கிறேன் வீட்டை

குழந்தைகள்  தூங்கும்போது பிரிந்திருக்கிறேன

சிறு குழந்தையாயிருக்கும்போது அழுதிருக்கிறார்கள்

இப்போது வளர்ந்துவிட்டார்கள்

பிரிதல் வாழ்வின் அங்கமென்று புரிந்துக் கொண்டார்கள்

யாருக்காக பிரிகிறோம்

கனவுகளும் பொறுப்புகளும்

கடமையும் இழுத்துச் செல்கின்றன

பயணங்களெங்கும் கூடவே  வரும்

வழியனுப்பும் முகங்களோடு

மனசின் உதடுகள் பேசிக்கொண்டிருக்கும்

நிகழ்காலத்தில் இரயில் வண்டி இழுத்துக்கொண்டு  போகும்பொது

எதிர்திசையில் இறந்தகாலத்திற்குள் போய்க் கொண்டிருப்பேன்

*

 

அவர் வீட்டிற்கு வெளியே

நடந்துக் கொண்டிருக்கிறார்

இன்னும் என் வீட்டை கண்டடையவில்லை

இதற்கு முன்பு இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்

சில நூற்றாண்டுகளாகத்தான் வரவில்லை

ஏதோ ஒரு சொல் வீட்டின் வழியில்

ஒரு மலையை உருவாக்கிவிட்டது

அந்த துருபிடித்த சொல்

காலத்தின் இடைவெளியில்  மேலும் இறுகியிருந்தது

சொற்களை துளைத்து சுரங்கப்பாதையை

அமைக்க முயல்கிறோம் முடியவில்லை

சொற்கள் நன்றாக வேர்பிடித்துவிட்டது

அது கடின பாறை போல வளர்ந்து விட்டது

இப்போது அந்த பாறையின் மீது

உட்கார்ந்துதான் பேசிக் கொண்டிருக்கிறோம்

பாறைகளை நகங்களால் சுரண்டிகொண்டு.

 

 

 

 

கவிதைகள் பத்மஜா நாராயணன் கவிதைகள்

பத்மஜா நாராயணன்

 

 

 

 

 

 

 

 

 

வரிகளிடைமறைகவி 

அவன் அனுப்பிய
வரிகளை படிக்கத் தொடங்கினேன்
எதாலோ ஏதோவோர்
உயிரைத் துரத்த
ஆயத்தம் கொண்டிருந்த
வரிகள்
அவ்வுயிரை அவை தொடும் நேரம்
ஒரு நல்ல கவிதையாக
மாறக்கூடிய சாத்தியங்கள் இருந்தது
அதுவரை அக்கவியின்
பச்சை நிழல்
அவ்வரிகளின் மேல்
படிந்து மினுங்கியது.
பச்சை தந்த மயக்கத்தில்
நல்ல கவிதையென
செய்தி அனுப்பி விட்டு
அமர்ந்த பின் தான் புலப்பட்டது
எல்லா வரிகளினூடே
அமர்ந்திருந்த
கவியின் உரு
அப்போது நிழல் கருப்பாய் மாறுவதை
தடுக்க முடியாமல்
திகைத்து நோக்குகையில்
கவியின் நிறம் உண்மையில்
சிவப்பாய் இருந்தது .

 

 

 

 

 

வரிகளிடைமறைகவி 

அவன் அனுப்பிய
வரிகளை படிக்கத் தொடங்கினேன்
எதாலோ ஏதோவோர்
உயிரைத் துரத்த
ஆயத்தம் கொண்டிருந்த
வரிகள்
அவ்வுயிரை அவை தொடும் நேரம்
ஒரு நல்ல கவிதையாக
மாறக்கூடிய சாத்தியங்கள் இருந்தது
அதுவரை அக்கவியின்
பச்சை நிழல்
அவ்வரிகளின் மேல்
படிந்து மினுங்கியது.
பச்சை தந்த மயக்கத்தில்
நல்ல கவிதையென
செய்தி அனுப்பி விட்டு
அமர்ந்த பின் தான் புலப்பட்டது
எல்லா வரிகளினூடே
அமர்ந்திருந்த
கவியின் உரு
அப்போது நிழல் கருப்பாய் மாறுவதை
தடுக்க முடியாமல்
திகைத்து நோக்குகையில்
கவியின் நிறம் உண்மையில்
சிவப்பாய் இருந்தது .

 

 

 

 

 

கவிதைகள் ரைட்டர் நட்சத்திரா கவிதைகள்

 

ரைட்டர் நட்சத்திரா கவிதைகள்

 

 

 

 

உன்

 

 

கவனிப்பின்றி
என் வழிபாதை
அடர் வனமாகிறது
நீ வரும் என் கனவுகளின்
கோப்பு நீட்சியாகிறது
ஆனால் என்னை கவனிக்க கூடாதென்று
திட்டமிட்டு
ஜாக்கிரதையாய்இருப்பதாக
உன் கண்
சமிக்ஞை செய்கிறது
நீ என்னிடம் தவறவிட்ட
உன் கைக்குட்டையை
நான் முத்தமிடுகிறேன்
நீ எங்கேயிருந்தோ என் ஸ்பரிசத்தை
அனுப்பவிக்கிறாய்
நான் வார்த்தைகளென
நீ உதறிவிடுகிறாய்
நீயோ எனக்கு
மொழியாகிறாய்

 

*

நிகழ்வுகள்
குளிர் கண்ணாடி
அணியும் கனவுகள்
அதிருப்தியாகவும்
திருப்தியாகவும்
விடிய வைக்கும்
காலையை
பிரியமானவளுக்கு
வளையல் தேடி
அலையும்
இருண்ட தெருக்களில்
நோய் எதுவும் மின்றி
அன்பானவர்களின்
கை பிணைப்பில்
கிடக்கும்
கமழும் அன்பிற்காக
விஷம் அருந்தி
நடு சாலையில்
கிடத்தும்
நான் மட்டும்
கனவுகளை
பின் தொடர்த்திருத்தால்
அன்பிற்கு ஏங்கி
பலவீனமாகிருப்பேன்

***

கவிதைகள் சின்னப்பயல் கவிதைகள்

 

கவிதைகள்  சின்னப்பயல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எரிதம்

க்றீச் என ஒலியெழுப்பும்

தகரக்கதவைத்திறந்து

முன் பாய்ந்த  கோழியை விலக்கி

காரை பெயர்ந்த படியேறி

தபால்காரன்  கொண்டு வரும்

செய்தியை விட

மின்னஞ்சல்  செய்தி

அத்தனை சுவாரசியமாக  இருப்பதில்லை

அது எனக்குரியதாகவே இருப்பினும்
உரிச்சொல்

எழுதி முடித்த  கவிதையைக்காட்டிலும்

அதற்கெனச்செலவழித்த  நேரங்களும்

அடித்துத்திருத்தியவையும்

கிடைக்காத சொற்களைத்தேடி

அவை கிட்டக்காத்திருந்ததும்

இருப்பினும் பரவாயில்லை என

உரிச்சொல்லுக்கு மாற்றென

இட்டு நிரப்பியவைகளும்

ரசிக்கும்படியே  இருக்கிறது

எனக்குள்.

தேன்  கூடு

விட்டெறிந்த கல்  பட்டு வலித்தபோதிலும்

தேன் கூடு தேனே சொரிவதுபோல

உன் கண் அம்பு  பட்டு

என் நெஞ்சு கிழிந்த போதும்

அது காதலை மட்டுமே  பொழிகிறது

ஞமலி

வால் சுருண்ட  வெண்டைக்காய்கள்

தம் வால் நிமிர்த்த  இயலாத

ஞமலிகள் போலக்கிடக்கின்றன
கடல்

சூரியனுக்காவது  கடல் உண்டு

சென்று மூழ்கி விடுவான்

எனக்கு ?
மரம்

வேர்களைக்கீழ் பரப்பி

நிலத்தடி நீரை

உறிஞ்சக்காத்திருந்த மரம்

தம் இலைகளை மேலே பரப்பி

மேகங்களிலிருந்து

மழையையும் உறிஞ்ச

எத்தனிக்கிறது

***

கவிதைகள் ராமலக்ஷ்மி கவிதைகள்

ராமலக்ஷ்மி  கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

அவள் 

 

நிறைய மன்னிப்புகள் தேவையாக இருந்தன

குறிப்பாக அவளிடமிருந்து

 

அவளுள் இருந்தார்கள்

மகள் தாய் மனைவி தங்கை தோழி

அத்தனை பேரும்

 

மிகப் பெரிய குற்றங்களையோ

மறக்க முடியாத துரோகங்களையோ

எவருக்கும் செய்துவிடவில்லை

 

சில தற்செயலாக நிகழ்ந்தவை

பல காலகாலமாக எல்லோரும் செய்தவை

அவசர உலகில் நிதானித்து திட்டமிட்டு

வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை

 

நிறைய நோகச் செய்திருக்கிறேன்

அது குறித்துக்

கவலையும் கொள்ளாதிருந்திருக்கிறேன்

இப்போது

மன்னிப்புகள் வேண்டியிருக்கின்றன..

மன அமைதிக்காக

 

காலம் கடந்து விட்டது

எதையும் சரிசெய்ய இயலாத புள்ளியில்

கசிந்துருகி நிற்கும் எனக்குக்

காட்டப்படுகிற கருணையில்

உயிர்களிடத்தான அன்பு தெரிகிறது

நான் யாசிக்கிற மன்னிப்பு

மறுக்கப்படுகிறது

 

கையில் அள்ளி வீசும் நீராக

அலைக்கழித்த என்னை

ஆழ்கடலின் பேரமைதியுடன்

அச்சுறுத்துகிறாள் இன்று.

***

 

 

1.

 

பேரன்பு

 

தனித்த முதுமையொன்று

நிறைந்த வாழ்வு தந்து

பிரிந்த துணையை நினைந்து

நடுங்கும் விரல்களால்

காலச் சங்கலியின்

ஒவ்வொரு கணுவினையும்

கவனமாக எண்ணியபடிப்

பின்னோக்கிப் பயணித்துக்

கொண்டிருந்தது.

 

அண்டவெளியில் அழுத்தத்துடன்

மையம் கொண்ட புயலும்

ஆர்ப்பரிக்க எத்தனித்த

ஆழிப் பேரலையும்

கனிவுடன் காத்தன மெளனம்

தம்மால் அறுந்து விடக் கூடாது

சங்கலியின் இழை என்று.

 

ஒவ்வொரு கணுவின் ஸ்பரிசமும்

தந்த நினைவுகளால்

தழும்பிய விழிகளில்

ஒளிர்ந்த பேரன்பு கண்டு..

ஓர் கணம்

நின்று

சுழன்றன கோள்கள்.

***

———————————

2.

 

ஒருசொல்

 

நினைவின் விளிம்பில்

தளும்பி நின்றாலும்

முழுதாக முகங்காட்ட மறுத்துக்

கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது

அந்த சொல்

 

பல ஒலிகளில் நீளங்களில்

விதவிதமான அழகுச் சொற்கள்

விரித்த வலையில் வந்து விழுந்தாலும்

எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை

 

பள்ளிக்கூட வாசலில்

சீருடைச் சிட்டுகளோடு கலந்துவிடும்

சின்னஞ்சிறு மகளைத்

தேடிக் களைக்கும் கண்களை விடச்

சோர்ந்து விட்டிருந்தது மூளை

நாட்கணக்கில் கசக்கப்பட்டதில்

 

மறந்து விடத் தீர்மானித்தேன்

மறந்து விட்டதாய்

சொல்லியும் கொண்டேன்

 

அப்படியும் எங்கிருந்தாவது

எட்டிப் பார்த்துப்

பாதிமுகம் காட்டிப் பைத்தியமாக்கியது

பல வாரங்கள் ஆட்டிப் படைத்தது

 

‘உனக்கும் எனக்குமிடையே

இனி ஒன்றுமேயில்லை

குறுக்கிடாதே என் வழியில்’

கோபித்துக் கொண்டேன்

 

என்ன நினைத்ததோ

காட்சிதந்தது மறுநாளே

தோட்டத்து மண்ணில்

வானத்து நட்சத்திரங்களாக

உதிர்ந்து கிடந்த

எண்ணற்றப் பவள மல்லிகளில்

ஒன்றாக.

 

விடிவெள்ளியாய்ப் பிரகாசித்ததனை

நொடியில் அடையாளங்கண்டு

சிலிர்ப்புடன் கையில் ஏந்தி

ஓடிச்சென்று பொருத்தினேன்..

அந்த ஒரு சொல்லே

உயிர்நாடியென நான்

கைவிரித்து விட்டதால்

மரிக்கக் கிடந்த கவிதையில்

 

எழுந்து அமர்ந்தது கவிதை.

குலுக்கிக் கொண்டோம்

நானும் சொல்லும் கைகளை.

 

——————————————————————

3.

 

இறக்கைகள் 

 

நாம் பறந்தபடி நாட்கள் பறப்பதாக

அடிக்கடி சொல்லிக் கொள்கிறோம்.

 

பறந்த நாட்கள் ஒன்றன்மேல் ஒன்றாக

அடுக்கிக் கொண்டே வரப்படுகின்றன

மாதங்களாகவும் வருடங்களாகவும்.

 

அவற்றின் இடுக்குகளில் மாட்டிக் கொண்டு

சோபையிழந்து சிரிக்கின்றன

அர்த்தமற்றப் பெருமிதங்களும்

கொண்டாடிய சம்பவங்களும்

உயர்வாய் நினைத்த சேகரிப்புகளும்.

 

எதையோ தேடப்போனபோது

அகப்பட்டன

அனுபவப் பாடங்களும்

தொடர்பறுந்த நட்புகளும்

தவறவிட்டப் பல

அற்புதத் தருணங்களும்.

 

இறக்கைகளைக் கழற்றி விட்டு

நடக்கத் தொடங்கிய என் கைகளை

ஒரு குழந்தையின் குதூகலத்துடன்

பற்றிக் கொண்டு

தளிர்நடை போடுகிறது காலம்.

***

 

—————————————-

4.

 

இலைகள்பழுக்காதஉலகம்

 

கைபிடித்துக் கதைபேசி நடந்த நாட்களும்

பாசத்தால் நனைந்த நிகழ்வுகளும்

நெஞ்சோடு இருந்தாலும்

நிழற்படங்களாலேயே

நினைவில் பொருத்திப் பார்த்தத்

தந்தையின் முகத்தைக்

கண்டேன் கனவில் நேற்று.

 

கம்பீரத் தோற்றம்

அதே கணீர் சிரிப்பு.

 

தேடுகின்றன அவர் கண்கள்

தான் விட்டுச் சென்ற

எட்டு வயதுச் சிறுமியை.

 

ஏற்றுக்கொள்ள இயலவில்லை

மகளென்று

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

நரையோடும் சிகையோடு

அவரினும்

அதிக வயதாகி நின்றிருந்த என்னை..

 

மறையாத சூரியனின் வெளிச்சத்தில்

தேயாத முழுநிலவைக் காண முடிகிற

தான் வாழும் உலகில்

வாடாத மலர்களையும்

பழுக்காத இலைகளையுமே

பார்த்துப் பழகிவிட்டவருக்கு.

***