Category: கவிதை

கவிதை ரமேஷ் வைத்யா கவிதை

கவிதைகள்

ரமேஷ் வைத்யா கவிதை

 

 

 

 

 

அரவங்கள் நழுவும் அநாதை வனத்தில்
உன் நினைவுகளைத் தொலைப்பேன்

சாத்தான் கோயிலின் ஸ்த‌ல‌ விருட்ச‌ த‌ள‌மெடுத்து
நெருப்பிட்டு சுவாசித்து ம‌திகுழ‌ம்பி உறைவேன்

என் உதிர‌த்தும் எனில்பாதி உத‌ர‌த்தும்
உதிர்ந்த‌ திர‌வியத்துக் குன்பெயரைச் சூட்டாம‌ல்
எப்போதும் வெறித்திருப்பேன்

அர‌விந்த ஹ்ருதயத்தில்
ஆலகால நெய்யூற்றி ஆகுதியாய்க் கொடுப்பேன் நான்

ஆள் கூட்டம் இடைநின்று
அரையாடை அசைய அதர்வண மந்திரத்தால்
அழிவினைகள் செய்திருப்பேன்

எந்த க்ஷணத்திலும் ஏதேனும் செய்து
உன்னை மறந்தபடியே
இருப்பேன் நான் அனவரதம்

*

கவிதைகள் இசை கவிதைகள்

 

இசை கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 க்ரிஷ்கெய்லிற்கு பந்து வீசுதல்

நான்  இந்த  ஆட்டத்திலேயே  இல்லை
சொல்லப்போனால்  ஒரு  பார்வையாளனாக  கூட  இல்லை
மைதானத்திற்குள்   தரதரவென  இழுத்துவரப்பட்டு
பந்துவீசுமாறு  பணிக்கப்பட்டிருக்கிறேன்
எதிரே  க்ரிஷ்கெய்ல்  நின்றுகொண்டிருக்கிறார்
அணித்தலைவர்  ஓடிவந்து
பந்து  அந்தரத்திலேயே  இடப்பக்கம்  சுழன்று
மறுபடியும்  வலப்பக்கம்  சுழன்று
விழுமாறு  வீசச்சொன்னார்
நான்  அவரது  முகத்தையே  பார்த்தேன்
அவர்  திரும்பி  ஓடிவிட்டார்
எதிரே  க்ரிஷ்கெய்ல்  நின்றுகொண்டிருக்கிறார்
அவரின்  சடாமுடி  ருத்ரதாண்டவனை  குறித்து  நிற்கிறது
அடேய்  சுடலையப்பா….
இந்த  பந்தை  வானத்திற்கு  அடி
திரும்பி  வரவே  வராத  படிக்கு  வானத்திற்கு  அடி.

*

***  சற்றே  பருத்த  தனமே  குலுங்க

      தலையலங்காரம்  புறப்பட்டேதே… 

அந்தப்பக்கம்  போக  வேண்டாம்

அங்குதான்  அம்பிகாவதி  அமர்ந்து

லாட்டரிச்சீட்டுகளை  உரசிக்கொண்டிருக்கிறான்

நூறுசீட்டிற்கு  ஒரு  சீட்டில்

கடைசி  எண்ணில்  கோடிகள்  தவறிவிடும்  அவனுக்கு

அப்போது  ஒரு  சிரி  சிரிப்பான்

அந்த  சிரிப்பில்  சிக்கி  செத்தவர்  அனேகம்

அந்தப்பக்கம்  போக  வேண்டாம்.

                                   

             

                           (*** அம்பிகாவதியைகொலைசெய்தபாடலில்முதல், கடைவரிகள் )

*

 

 

                              லூஸ்ஃகேருக்கு  மயங்குதல்

                                              அல்லது

                           காமம்  செப்பாது  கண்டது  மொழிதல்

நான்  எளியனில்  எளியன்.

லூஸ்ஃகேருக்கு  மயங்குபவன்.

மனம்  போன  போக்கில்  தான்  போகிறேன்.

மனம்  போகிறது

அதனால்   போகிறேன்.

லூஸ்ஃகேரில்  பரலூஸ்ஃகேர்  என்றொன்றில்லை.

என்  உடலொரு  கருவண்டுக்  கூட்டம்.

ஒவ்வொரு  லூஸ்ஃகேரின்  பின்னும்

ஒரு  வண்டு  பறக்கிறது.

எப்போதும்  என்  முன்னே  ஒரு  சுழித்தோடும்  காட்டாறு

காட்டாற்றைக்  கடக்க  உதவும்  ஆல்விழுதே

உன்னை  சிக்கெனப்  பற்றினேன்.

எனக்குத்  தெரியும்.

லூஸ்ஃகேரை  மயிரென்றெழுதி   கெக்கலித்த  ஓர்  அறிவிலி

கடைசியில்  அதிலேயே  தூக்கிட்டு  மாண்டகதை.

ஈரும்  பேனும்  நாறும்  இடமென  தவநெறி  முனிந்தால்,

லூஸ்ஃகேரின்  நுனியில்

தொங்கிச்  சொட்டும்  துளிநீரில்

இவ்வுலகு  உய்கிறது  என்பேன்.

                                  ( யாத்ராவிற்கு )

*

கவிதைகள் ராணிதிலக் கவிதைகள்

 

ராணிதிலக் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

திரும்பாத மலர்

 

மௌனமாக ஓடிக் கொண்டிருக்கும்

ஆற்றின் வேளையில்

யாரும்

இரண்டாம் முறை மூழ்கவேயில்லை

நான் மூழ்கினேன்

மிகத் தூரத்தில்

மிதந்து வரும் தாமரை மலரில்

சோபிதம் கொஞ்சம் குறைவு.

ஆற்றின் தேகத்திலிருந்து  பறித்த

அந்தத் தாமரையை

அந்தரத்தில் வீசினேன்.

அது

கிளைக்குத் திரும்பவே  இல்லை.

••

 

 

 

குப்பைகளின் அன்பு

 

எனக்கு அன்பு காட்டத்  தெரியவில்லை

மதியவேளையில்

யாருமற்ற சாலையின் மையத்தில்

சுட்டெரிக்கும்

வெய்யிலில்

வெப்பக் காற்றில் அலைந்தபடி

நிழல்தேடித் திரிகிறது

கசங்கிய ஒரு காகிதக் குப்பை

நான் அதைக் குனிந்து எடுத்து

சாலையோரத்தில் வாழும்

அதன்

வட்டவடிவ வீட்டில் சேர்த்தேன்

எல்லா குப்பைகளின்

முகத்திலும் ஒரே சந்தோசம்

அவை

அதைக் கட்டி அணைத்துக்கொள்கின்றன

எனக்கு அன்பு காட்ட  யாரும் இல்லை.

•••

 

 

 

 

 

காமம் மறைந்துவிடவில்லை

 

அந்தக் கிளையில்

மரத்தின் இலை மறைவில்

இரண்டு கிளிகள்

ஒன்றின் அலகை ஒன்றுடன்

உரசிக்கொண்ட

வேளை

என் காமம் பற்றிக் கொண்டது.

எவ்வளவு அசிங்கம்

ஒன்றின் அந்தரங்கத்தை

அந்தரங்கமாக ரசித்துக்கொண்டிருப்பது

நான் விலகி

அது முடியாமல் திரும்ப  பார்க்க

கிளிகள் அங்கில்லை

காமம் என்பது கிளைகளால்  ஆனது

காமம் என்பது இலைகளின் மறைவாலானது

காமம் என்பது அலகை உரசிக்கொள்வது

காமம் என்பது கிளிகள் பறந்துவிடுவது

அப்போது

தரையை நோக்கி விழுகிறது

ஒரு வேப்பம்பழம்

அது

பூமியால் மட்டுமே தாங்க  முடியாத

தித்

திப்பான வேப்பம்பழம்.

•••

 

வயோதிகர்களை நாம் கடக்க முடிவதில்லை

கிருஷ்ணன் கோயிலைப் பல தடவை கடந்திருக்கிறேன்

அதன் எதிரில் இருக்கும்  முதியோர் இல்லத்தைப் பார்த்தபடி.

கோயில் வாசல்படியில் தலைவைத்து

தன்னை அழைத்துக் கொள்ளும்படி வேண்டுகிறாள் ஒருத்தி.

கடவுளிடம் மன்றாடும் தன்  தோழியைத் தேற்றமுடியாமல்

சாலையை வெறிக்கின்றனர் அவளின் தோழிகள்

நான் அவர்களைப் பார்க்கும்பொழுது

எனக்குள் ஒரு செடி அசைகிறது

அவர்களின் மரணத்தைக் கண்ணில்  பார்த்துவிடும்போது

எனக்குள் ஒரு மரம் வீழ்கிறது.

சட்டென்று

ஒரு மலர்

வாடி உதிரும் ஓசை கேட்கும்போது

அந்தக் கிழவி தன் கண்ணீரைத்  துடைக்கிறாள்.

அவர்களைப் பல தடவை கடக்கமுடிவதேயில்லை.

•••

கவிதை பெருமாள் முருகன் கவிதைகள்

பெருமாள் முருகன் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

எஜமானர்

 

அவரை

ஐந்து நாய்கள் பின்தொடர்கின்றன

திசை திரும்பாமல்  தொடரச்

சின்ன அதட்டல்

போதுமானதாயிருக்கிறது

ஐந்தும்

வெவ்வேறு இனம்

நிறம் பெயர்

 

அவர் பயன்படுத்துவது

ஒற்றைச் சொல்.

 மொழி

 

காக்கையின் மொழியில்

சில சொற்கள்தான்

எனக்குத் தெரியும்

கோவையாகப் பேச முடியாது

எனினும்

புரிய வைத்துவிடலாம்

 

என் மொழியில்

காக்கைக்கு

ஒரு சொல்லும் தெரியாது

என்முன் வந்து எப்போதும்

தன் மொழியிலேயே

கத்திக் கரைகிறது

 

காக்கை ஒருபோதும்

வருந்தியதாகத் தெரியவில்லை.

 

பார்வையாளர்கள்

 

பண்டிகை காலத்துத்  தெருக்களில்

நடக்க வாய்க்காத  வியாபாரிகள்

கடைக்குள்ளிருந்து

பார்க்கிறார்கள்.

தனக்குரியது

 

பிளாஸ்டிக் குழாயைப் பற்றி

மேலேறிச் செல்கிறது

சுவர்களின் மேல் ஓடுகிறது

சருகுகள் சரசரக்க

மொட்டை மாடியில் உலாத்துகிறது

தண்ணீர்த் தொட்டி மூடிமேல் நின்று

கீழுலகைக் காண்கிறது

 

ஆளரவம் கேட்டதும்

சட்டெனத் தாவிவிடும்

அணிலுக்குத் தெரியும்

தனக்குரியது

மரம் தானென.

இப்போது

 

நெருங்கிய

மரவேலியின் இடையே

முளைவிட்டு

அண்டி ஒளிந்து வளர்ந்தது

சிறுசெடி

வேலிக்கு மேலே

கிளை பரப்பிக் குடை விரித்து

நிற்கிறது.

நாகரிகம்

 

என் உயிர்நிலையை அடைந்துவிட்ட

சிற்றெறும்பு சொற்களால் கடிக்கிறது

மென்சதையில் ஒவ்வொரு சொல்லும்

முள்போல் இறங்குகின்றது

விரல் குவித்துப் பிடித்து

நசுக்கித் தேய்த்துக் காற்றில் ஊதிவிடக்

கை பரபரக்கிறது

எனினும்

பொதுவெளியில் ஒன்றும் செய்ய இயலவில்லை

தொடை இறுக்கி

வலி பொறுப்பதைத் தவிர.

•••

 

 

 

கட்டுரை அ.ராமசாமி முதல் சென்னைப் பயணம்

அ.ராமசாமி

 

 

 

 

 

முதல்

 

சென்னைப் பயணம்

திருச்சிக்கு வடக்கே சென்னையை நோக்கி முதன் பயணம் செய்த போது வயது 25. அதற்கு முன்பு தனியாகவும் நண்பர்களோடு கும்பலாகவும் பயணம் செய்த ஊர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் தான் இருந்தன. படிப்புக்காலச் சுற்றுலாப் பயணங்கள் எல்லாம் பேருந்தில் தான். பழனி, கோயம்புத்தூர், ஊட்டி எனப் பள்ளிப் படிப்பின்போது சென்ற பயணங்களில் எல்லாம் நாலுவரிசைக்கு ஓருத்தர் எனக் கணக்குப் போட்டு ஆசிரியர்களும் ஆசிரியைகளும் கண்கொத்திப் பாம்பாய்க் கவனித்துக் கொண்டிருப்பார்கள். கல்லூரியிலிருந்து தேக்கடி, போடி மெட்டு, கம்பம், வைகை அணையெனப் போனபோது பேராசிரியர்கள் வந்திருந்தார்கள். ஆனால் கண்டு கொள்ளவில்லை. நண்பர்கள் குழாமாகக் கொடைக்கானல், குற்றாலம் போன்ற இடங்களுக்கும் போனபோது சின்னச் சின்னக் கும்பல்கள் மட்டும்.

 

 

தமிழ்நாட்டிற்கு வெளியே திருவனந்தபுரம், கொல்லம் எனக் கேரளப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் பெங்களூர், மைசூர் போன்ற கர்நாடக நகரங்களுக்கும் கூடக் கல்விச் சுற்றுலாவாகப் போயிருக்கிறேன். அவையும் மொத்தமாகக் குத்தகை எடுத்துக் கொண்ட பேருந்துகள் தான். அந்தப் பயணங்களில் வகுப்புத் தோழிகளின் பார்வையிலிருந்து தப்பிப் போய் ஒருசிகரெட் பிடித்துவிட்டு வந்தால் கூட முகச் சுளிப்பிலிருந்து தப்ப முடியாது. 25 வயது வரை  செய்த பேருந்துப் பயணங்களின் மொத்தத் தூரத்தைக் கணக்கிட்டால் இந்தியாவை இரண்டு முறை சுற்றி வந்திருக்கலாம். அவ்வளவு பயணம் செய்த எனக்கு ஒரு ரயில் பயணம் வாய்க்கவில்லை என்பதை இப்போது நினைத்துக் கொண்டாலும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

 

 

ஆறு வயதில் ரயிலேறி ராமேஸ்வரம் போகும் வாய்ப்பைத் தவறவிட்ட கதை தனியாகச் சொல்ல வேண்டிய கதை. இப்போது சொல்வது சென்னைக்கு ரயிலேறிப் போன முதல் பயணம் பற்றி. முனைவர் பட்ட ஆய்வாளனாகச் சேர்ந்தவுடன் சென்னையில் உள்ள முக்கியமான நூலகங்களுக்குப் புத்தகங்களைத்  தேடிப்  போக வேண்டும் என்ற யோசனை இருந்தது. அந்தப் பயணத்தை முதல் ரயில் பயணமாக ஆக்கிக் கொள்ளும் திட்டமும் தீட்டினேன். அந்தத் திட்டத்திற்கு மாற்றுத் திட்டத்தை வழங்கிய நண்பர் லாரியில் பயணம் செய்யலாம் என்றார். பேருந்துக் கட்டணத்தில் பாதிதான் ஆகும். அத்தோடு நிம்மதியாகப் படுத்துக் கொண்டே போகலாம்; தெரிந்த லாரி டிரைவர் மூலம் ஒவ்வொரு முறையும் தான் அப்படித்தான் சென்னை சென்று வருகிறேன் என்று சொல்லி ஆசையும் காட்டினார். நண்பரின் தெரிந்த லாரி டிரைவரின் அழைப்புக்காகக் காத்திருந்த வேளையில் சென்னைக்கு ரயிலில் போக வேண்டிய நெருக்கடி வந்து விட்டது.ஆய்வு தொடர்பான பயணத்தை, நாடகம் தொடர்பான பயணம் முந்திக் கொண்டது.

 

 

இயல் இசை நாடக மன்றத்தை நோக்கித் தான் எனது முதல் ரயில் பயணம்; முதல் சென்னைப் பயணம். போகும் நேரம் சரியாக அமைந்து விட்டால் அதிகபட்சம் ஒருமணிநேரம் தான் இயல் இசை நாடக மன்றத்தில் இருக்க வேண்டும். உடனே திரும்பி விடலாம். மதியச் சாப்பாட்டுக்குப் பின் வைகை விரைவு வண்டியைப் பிடித்து அடுத்த நாள் இரவே மதுரை வந்து சேர்ந்து விடலாம். இயல் இசை நாடக மன்றத்தில் செய்ய வேண்டிய வேலை 25 பெயர்களைத் தட்டச்சு செய்து ஒரு கையெழுத்துப் போட்டுத் தர வேண்டும். அவ்வளவு தான். அந்தக் கையெழுத்து மொத்த நாடகக் குழுவும் ரயிலில் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்யப் பயன்படும்.

 

 

புதுடெல்லியிலிருந்து செயல்படும் மைய சங்கீத நாடக அகாடெமி தனது வேர்களைத் தேடும் அரங்கியல் திட்டத்தை 1983 இல் ஆரம்பித்தது. ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே மு.ராமசுவாமியின் இயக்கத்தில் துர்க்கிர அவலம் நாடகத்தைத் தமிழில் இயக்கி மேடையேற்ற நிஜநாடக இயக்கத்திற்கு வாய்ப்பைத் தந்தது. அகாடெமி. நாடகத்தயாரிப்புக்கென ரூ25000/- வழங்கிய தோடு பெங்களூரில் நடக்கும் நாடகவிழாவில் பங்கேற்க வருவதற்கான பயணப்படியையும், அங்கே தங்கியிருக்கும் நாட்களுக்கான உணவுச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தது. பயணப்படி முழுமையான படியாகத் தரப்படாமல்,  மாநில அரசின் கலைஞர்களுக்கான சலுகைக்கட்டணத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற குறிப்பையும் வழங்கியிருந்தது. சலுகைக்கட்டணம் பெற வேண்டும் என்றால் இயல் இசை நாடக மன்றத்தின் கலைஞர்கள் பட்டியலில் இடம் பெற்றாக வேண்டும்.

 

 

நாடகத்தின் ஒத்திகைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்யே உடை, மற்றும் அரங்கப் பொருட்கள் தயாரிக்கும் பணிகளை அவற்றிற்கான கலைஞர்கள் செய்து கொண்டிருந்தனர். துர்க்கிர அவலத்தில் நான் ஒரு நடிகன் என்றாலும் பின்னரங்க வேலைகளிலும் பங்குண்டு. குழு நிர்வாகப் பணி என்னுடையது. பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டிய பொறுப்பு அதில் மிக முக்கியம். அதற்கு முதலில் செய்ய வேண்டிய வேலை சென்னைக்குப் போய் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் நிஜநாடக இயக்கத்தை ஒரு நாடக் குழுவாகப் பதிவு செய்ய வேண்டும். அதன் நடிகர்களையும் பின்னரங்கப் பணியாளர்களையும் ’கலைஞர்கள்’ என்ற தகுதியில் சலுகைக்கட்டணத்தில் பயணம் செய்ய அனுமதிக்கும்படி ரயில்வே நிர்வாகத்திற்குச் சான்றொப்பக் கடிதம் பெற்றுத் தரவேண்டும். என்னோடு இணைந்து குழு நிர்வாகப் பணியில் ஈடுபட்டவர் ராஜன். யதார்த்தா திரைப்படக் கழகத்தினை மதுரையில் நீண்ட நாட்களாக நடத்தி வந்த நண்பர் சேஷாத்திரி ராஜன் இந்தியாவெங்கும் பயணம் செய்தவர். சென்னையெல்லாம் அவருக்கு ரொம்ப அத்துபடியான ஊர். அவருக்குப் பயணம் செய்ய முடியாதபடி உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. வேறு

வழியில்லாமல் நான் அந்தப் பொறுப்பை எடுக்க வேண்டியதாகி விட்டது.

 

 

சென்னைக்குப் போவதற்கான டிக்கெட் வாங்கிக் கையில் கொடுத்து விட்டார் மு.ராமசாமி. திரும்பி வருவதற்கு நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள். ”உடனே திரும்பலாம்; வேலை முடியவில்லை என்றால் அறை எடுத்துத் தங்கிக் கொள்ளலாம்.. ரயில் வேண்டாம் என்றால் பேருந்தில் வரலாம்” எனச் சொல்லிப்  பணத்தையும் கொடுத்து விட்டார். இயல் இசை நாடக மன்றத்தில் பொறுப்பில் இருப்பவர்களிடம் தொலைபேசியில் பேசி, மு.ராமசாமிக்குப் பதிலாக அ.ராமசாமி வருகிறார். காரியத்தை முடித்துக் கொடுங்கள் என்று சொல்லி உத்தரவாதத்தையும் வாங்கி விட்டதாகச் சொன்னார். போகும் வேலை எளிதாக முடிந்து விடும் என்பதால் தைரியமாகக் கிளம்பி விட்டேன்.

மதுரையில் பாண்டியனில் ஏறி உட்கார்ந்தால் சென்னை எழும்பூரில் இறங்கி விடலாம். இறங்கியும் விட்டேன். ஒன்றும் பிரச்சினை இல்லை. பிரச்சினைகள் அதற்குப் பிறகுதான் இருந்தன. சென்னையின் நகரப் பேருந்துகளின் வழித்தடங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அதுவரை லாட்ஜுகளில் தனியாக அறை எடுத்துத்  தங்கியதும் கிடையாது. சொந்தக்காரர்கள் என ஒருவரும் சென்னையில் இல்லை. நண்பர்கள் எனச் சென்னையில் பலர் இருந்தார்கள். ஆனால் அவர்களின் உதவியையெல்லாம் நாட வேண்டும் என்று தோன்றாததால் முகவரிகளை வாங்கிக் கொள்ளவில்லை. தொலைபேசி பற்றிய ஞானமெல்லாம் அப்போது இருந்ததில்லை.

 

 

சென்னை நகரத்தின் தரையை அதற்கு முன் எனது பாதங்கள் பார்த்ததில்லை என்றாலும், எனது கண்கள் பார்த்திருந்தன. பதினாலு மாடி கட்டிடம் நிற்கும் மௌண்ட் ரோடு , எழும்பூர், செண்ட்ரல் ரயில் நிலையங்கள், நேப்பியர் பாலம் தொடங்கிச் சிலைகளாக நீளும் கடற்கரைச் சாலை, அடையாறு பாலம் தாண்டி விரிந்து கிடக்கும் ஆலமரம், மாமல்லபுரம், விமான நிலையம் எனப் பலவற்றையும் கண்கள் நினைவுகளாகத் தேக்கி வைத்திருந்தன. எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறேன். கதாநாயகன் சென்னைக்கு வந்துவிட்டான் என்பதைச் சொல்ல அதில் ஒன்று தானே அடையாளம். இந்த அடையாளங்கள் எதுவும் எனது பயணத்தில் உதவாது என்பதால், இயல் இசை நாடகம் இருக்கும் இடத்திற்குச் செல்லும் பேருந்து வழித்தடங்களையும், பாதைகளையும் குறித்து வாங்கிக் கொண்டு தான் சென்னையில் வந்து இறங்கினேன். இறங்கும் போது காலை 06.30. உடனே அங்கிருந்து கிளம்பிப் போய் இயல் இசை நாடகம் கதவைத் தட்டி விட முடியாது. அரசாங்க அலுவலகங்கள் 10.00 மணி வாக்கில் தானே அசையத் தொடங்கும்.

 

 

வேலை முடியவில்லை என்றால் அன்றிரவு தங்க வேண்டியதும் அவசியம் என்பதால் எழும்பூரில் ரயில்வே நிலையத்திற்கு எதிரில் இருந்த லாட்ஜ் ஒன்றில்  அறை எடுத்துக் கொண்டு குளித்து முடித்தேன். லாட்ஜிலிருந்து வெளியில் வந்து காலைச் சிற்றுண்டியை முடித்து இயல் இசை நாடக மன்றம் இருந்த அடையாறு பாலத்துக்குப் பக்கத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிப் பாதையை விசாரித்துக் கொண்டு போனேன். பாதையில் மனித நடமாட்டமே இல்லை. மரங்களில் இருந்து இலைகள் உதிர்ந்து கிடந்தன. சாலையில் கிடக்கும் சருகுகளும் குப்பைகளும் நீண்ட நாட்களாக அந்தத் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லையோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.  இயல் இசை நாடகமன்றத்தின் அலுவலகம் இந்தத் தெருவில் தான் இருக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. யாரிடமாவது விசாரிக்கலாம் என்றால் ஒருவரும் வருவதாகத் தெரியவில்லை.

 

 

திரும்பி வந்த பாதையிலேயே திரும்பி நடந்தபோது ’டீச்சர் குடை’யோடு ஒரு பெண் அந்தப் பாதையில் வருவது தெரிந்தது. நிறுத்தி விசாரித்து விட வேண்டும் என மனம் ஆசைப்பட்டது; கண்களும் அவளது கண்களைப் பார்த்தன; அவளும் பார்த்தாள். எதாவது கேட்டால் சொல்லலாம் என்பதுபோல இருந்தது அந்தப் பார்வை. ஆனால் நான் கேட்கவில்லை. எனது தவிப்பைக் கவனிக்காதவள் போலப் பாவனை செய்து கொண்டு கடந்து போனவளைப் பின் தொடர்ந்த போதும், நான் உன்னைக் கவனிக்கவில்லை என்பதாகவே பாவனை காட்டினாள். திருப்பத்தில் அவள் நின்று திரும்பினாள். அவள் திரும்பிய பக்கம் இருந்த அந்தப் பலகையில் தமிழ்நாடு இயல் இசை நாடகம் மன்றம் என்று எழுதப்பட்டிருந்தது.

 

 

காந்திகிராமத்தில் நடத்தப்பட்ட நாடகப்பட்டறையிலும், சென்னையில் பாதல் சர்க்காரைப் பயிற்சியாளராகக் கொண்ட பத்துநாள் பயிற்சி முகாமிலும் கலந்து கொண்ட மு.ராமசுவாமியின் முயற்சியால் தொடங்கப் பட்ட நிஜநாடக இயக்கம் கடந்து வந்த  ஐந்து வருடங்களில் 25 –க்கும் மேற்பட்ட குறுநாடகங்களை மதுரையில் உள்ள கல்வி நிலையங்களிலிலும் மதுரைக்குப் பக்கத்திலுள்ள கிராமங்களிலும் தெருநாடகங்களாக நிகழ்த்தியிருந்தது. அதுவரை தன்னை அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட நாடகக் குழுவாக ஆக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. நடைமுறை அரசியலோடும், அரசதிகாரங்களின் செயல்பாடுகளோடும் முரண்பட்ட மையங்களைக் கேள்விக்குரிய ஒன்றாக ஆக்கிக் கொண்டிருந்த  நிலையில் அரசாங்கத்தின் பதிவுக்குள் போவது ஒருவித சமரச நிலை என்ற எண்ணம் இழையோடிக் கொண்டிருந்ததால் இயல் இசை நாடக மன்றம் போன்ற அரசு நிறுவனங்களைத் தூரத்தில் வைத்திருந்தோம் என்பதை விடவும் எதிர்நிலைப்பாட்டில் இயங்கும் ஒன்றாகவே கருதி கொண்டிருந்தோம்.

 

 

துர்க்கிர அவலத்தை சங்கீத நாடக அகாடமிக்காகத் தயாரிப்பதற்கு முன்பு மதுரை நிஜநாடக இயக்கம் மேடையேற்றியிருந்த ஒரே மேடை நாடகம் ஞாநி எழுதிய பலூன்.மதுரையில் காவல் துறையினரால்  தாக்குதலுக்குள்ளான நீதிபதி தார்குண்டேவின் வழக்குச் செலவுகளுக்கான நிதி திரட்டும் பொருட்டு அந்நாடகம் மேடையேற்றம் செய்யப்பட்டது. மக்களின் உரிமைகளை அடிப்படை உரிமைகளை அரசு அமைப்பு காவு கொள்ளும் விதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நாடகம் அது.  அந்த நாடகத்தை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஏற்பாடு செய்த மேடையில் நிகழ்த்தி முடித்த போது ஒவ்வொருவரிடத்திலும் ஒரு விதமான பதற்றம் இருந்தது. ஞாநியின் பேச்சுக்குப் பிறகு மேடையேற்றப்பட்டதால் நாடகம் சுலபமாகப் பார்வையாளர்களுக்குள் புகுந்து கொண்டது. அந்நாடகத்தை மேடையேற்றி விட்டு இரவு உணவுக்குப் போகும் போது நாடகத்தின் நடிகர்களையும் மேடையேற்றத்தோடு தொடர்புடையவர்களையும் ரகசியப் பிரிவு போலீசார் பின் தொடர்வதாகச் சொல்லப் பட்டது. அதனால் எல்லாரும் வெறும் நடிகர்கள் மட்டும்தான் எனச் சொன்னால் போதும்; வேறுவிவரங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். எனது கையைப் பற்றிப் பாராட்டிப் பேசியவர்களிடம் கூட அ.ராமசாமியின் விவரங்களை மறைத்து நான் ஏற்றிருந்த கவி. சத்யன் பாத்திரமாகவே பேசிக் கொண்டிருந்தேன். மேடையிலிருந்து இறங்கிய பின்னும் பாத்திரத்தின் தன்னிலையைத் தொடர்ந்த அனுபவத்திற்குக் காரணம், என்னிடம் பேசியவர்களில் யாராவது உளவுப் பிரிவுப் போலீஸ்காரர் இருக்கக் கூடும் என்ற  அச்சம் தான். அப்படி யாராவது இந்தார்களா? என்பது இன்று வரை தெரியாது.

 

 

இடதுசாரித் தீவிரவாதம் பேசும் நபர்களின் தன்னிலைக்குள் அலையும் காவல்தலையின் சிக்கல் அது. நிஜநாடக இயக்கத்தில் செயல்பட்ட இளைஞர்களாகிய எங்களுக்குள் ஒருவித இடதுசாரித் தீவிரவாதமென்னும் கிளர்ச்சி மனோபாவம் இருந்தது உண்மை தான். அந்த மனோபாவத்தில் தான் நிஜநாடக இயக்கத்தின் தலைவராயிருந்த மு.ராமசாமிக்கு அளிக்கப்பட்ட ராஜா சர் முத்தையா செட்டியார் விருதையும், அதற்கான பணத்தையும் வாங்கக் கூடாது என்றெல்லாம் விவாதித்தோம். பெங்களூரில் இருந்து செயல்பட்ட படிகள் குழு “இலக்கு” அமைப்பை உருவாக்கிக் கூட்டங்கள் நடத்த முயன்றபோது அதில் பங்கேற்பதா? வேண்டாமா? எனப் பெரிய விவாதங்களையெல்லாம் செய்தோம். காரணம் படிகள் அமைப்பு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் எனவும், அவ்வகையான தொண்டு நிறுவனங்களுக்கும் கிறித்தவ அமைப்புகளுக்கும் உறவு இருக்கிறது எனவும், அதன் வழியாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யின் கை செயல்படுகிறது என்றெல்லாம் நம்பினோம். அந்த நம்பிக்கைகள் எல்லாம் எவ்வளவு தூரம் உண்மை அல்லது பொய் என்று அப்போதும் தெரியாது; இப்போதும் தெரியாது. ஆனால் மனதிற்குள் இதுவெல்லாம் ஓடிக் கொண்டே இருக்கும்.அதே மனநிலையில் தான் பலூன் நாடகத்தைத் திருநெல்வேலியில் மேடை ஏற்றினோம். அதற்கு ஏற்பாடு செய்தவர் மக்கள் சிவில் உரிமைக்கழக ஆதரவாளராக இருந்த வழக்கறிஞர் பாளை சண்முகம். வர்க்கப் போராட்டத்தை ஆயுதப் போராட்டத்தாலும் சாத்தியமாக்கலாம் என நம்பிய  அமைப்புகளோடு நட்பு கொண்டிருந்த பாளை சண்முகம் தான் பின்னர் கொடைக்கானலில் விதிகளை மீறிக் கட்டப் பட்ட பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் உரிமையாளர்களில் ஒருவராக அறியப்பட்டார். அதுவெல்லாம் தனியாகப் பேச வேண்டிய அரசியல் கதை. அந்தக் கதையைத் தள்ளி வைத்து விட்டுச் சென்னைக்குப் போய்த் திரும்பிய கதைக்கு வரலாம்.

 

 

தொலைபேசியில் பேசி எல்லா ஏற்பாடுகளையும் மு.ரா,. முடித்திருந்ததால் நான் போனவேலை அதிகம் சிரமம் தரவிலை. துர்க்கிர அவலத்தில் அரங்கிலும் பின்னரங்கிலும் செயல்படப் போகும் 25 பேரின் பெயர்களின் தட்டச்சு செய்ய வேண்டும். அதற்கென இருந்த அறைக்குள் போனேன். அங்கே எனக்கு முன்னால் “டீச்சர் குடை”யுடன் நடந்து வந்த பெண் இருந்தாள். இப்போது கொஞ்சம் தைரியமாகச் சிரித்துவிட்டுத் தாளை நீட்டினேன், வெளியில் இருக்கும் அதிகாரி அனுப்பியதாகச் சொன்னேன். என்னை உட்காரச் சொல்லி விட்டு டைப் ரைட்டரில் விரல்களை ஓடவிட்டவள் ஒவ்வொரு பெயரையும் வாசித்து உறுதி செய்து கொண்ட பின்பே அடிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு பெயரையும் என்னைப் பார்ப்பதாகவே  உச்சரிக்கிறாள் என நினைத்துக் கொண்டேன். 25 பெயர்களும் அச்சடிக்கப்பட்டபின் தாளை உருவி என்னிடம் தந்தாள்.”டீச்சர் குடை” டைப்பிஸ்டுகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது எப்படி எனக் கேட்க நினைத்தேன்; கேட்கவில்லை. அவள் தந்த தாளில் அதிகாரி கையெழுத்துப் போட்ட பின் முத்திரையைக் குத்திக் கொடுத்தார் அங்கிருந்த பணியாளர்.

வெளியில் வந்தவுடன்,மதியம் கிளம்பும் வைகை விரைவு வண்டியைப் பிடித்து விட்டால் இன்றிரவே மதுரை திரும்பி விடலாம் என்று மனம் நினைத்தது. கையில் வாங்கிய தாளை உறையில் போட்டுப் பைக்குள் வைத்துக் கொண்டு உடனடியாக எழும்பூர் திரும்பி விட்டேன். லாட்ஜுக்குப் போய் அறையைக் காலி செய்து விட்டு எழும்பூர் ரயில் நிறுத்தத்தின் முன்னால் இருந்த புகாரி ஹோட்டலுக்குள் நுழைந்து மாடியில் ஜன்னலோரம் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். ரயில் நிலையத்தைப் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதாகவே எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.  சாப்பிட்டதற்கான தொகையைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த போது தள்ளுவண்டியில் பத்திரிகைகளோடு வெற்றிலை பாக்கும் இருந்தன.

 

கறிக்குழம்பு சாப்பிட்ட பிறகு  வெற்றிலை பாக்குப் போடுவது நீண்ட நாள் பழக்கம்.  வெற்றியில் சுண்ணாம்பைத் தடவி, அதன் மீது பாக்குத்தூளை வைத்து மடித்துப் போட்டபின் கிடைக்கும் சின்ன மயக்கம் தரும் சுகம் கொஞ்சம் போதையானது

 

தள்ளு வண்டிக்காரரிடம் வெற்றிலை பாக்கு கேட்டேன். அவர் பீடாவாகத்தான் தர முடியும் என்று சொன்னதோடு , என்ன பீடா? ஜரிதா பீடாவா? என்று கேட்டிருக்கிறார். எனக்கு அது சாதாரண பீடாவா? என்று காதில் விழுந்தது. ஆமாம் என்று தலையை ஆட்டி வைக்க பீடாவைக் கொடுத்து விட்டு ஒரு ரூபாய் கேட்டார். வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்த கணத்திலேயே தலை கொஞ்சம் சுத்த ஆரம்பித்தது. பீடா விலையாக ஒரு ரூபாய் கேட்ட போது கொஞ்சம் உஷாராகி இருக்க வேண்டும். அது சாதாரண பீடா இல்லை என்று யோசித்திருக்க வேண்டும். ஒரு ரூபாயைக் கொடுத்து விட்டு வாயில் போட்டு மென்று விட்டேன். வியர்வை வாயில் தொடங்கி மூக்கு வழியாக முகம் முழுவதும் பரவியது மட்டுமே உணரும்படியாக இருந்தது.

 

 

அந்த இடத்திலேயே உட்கார்ந்து விட வேண்டும் என்று தோன்றியது. வைகை விரைவு ரெயிலுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்பதும் நினைவிலிருந்து மறையவில்லை.. இன்னும் ஒரு மணி நேரத்தில் ரயில் பிளாட்பாரத்துக்கு வந்து விடும். முண்டியடித்து இடம் பிடிக்க வேண்டும். வரிசை நீண்டு இருந்தது கண்ணுக்குத் தெரிந்தது. சாலையைக் கடந்து விட்டால் ரயில் நிலைய முகப்புக்குள் போய் வரிசையில் நின்று விடலாம். அங்கிருக்கும் மின்விசிறியில் வியர்வை குறைய வாய்ப்புண்டு. சாலையில் வண்டிகள் வருகின்றனவா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. குறுக்காக ஓடினேன். சாலையில் வந்த வாகன ஓட்டிகள் திட்டினார்கள். ஆனால் கடந்து விட்டேன். உள்ளே நுழைந்து வரிசையில் நின்று விட நினைத்த போது தலை கிறங்கி விட்டது. அதற்கு பிறகு என்ன நடந்தது எனக்குத் தெரியாது.

 

 

தெளிக்கப்பட்ட தண்ணீரின் உதவியால் கண்ணைத் திறந்த போது ரயில்வே சிப்பந்தியான அந்தப் பெண் நான் எடுத்த வாந்தியைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். புகாரி ஓட்டலில் சாப்பிட்ட கோழி பிரியாணி அப்படியே வெளியே வந்து விட்டது. வரிசையில் நின்றவர்கள் குடித்து விட்டு வாந்தி எடுத்ததாக நினைத்துத் திட்டியிருப்பார்கள். பையைத் திறந்து பார்த்தேன். இயல், இசை நாடக மன்றத்தில் வாங்கிய கடிதம் பத்திரமாக இருந்தது. ”என்னப்பா ஊருக்குப் புச்சா; பீடா போட்டுக்கினியாக்கும்; போ மூஞ்சக் கழுவிக்கினு போய் வரிசையில நின்னு டிக்கெட்டு வாங்கிக்கினு ஊரு போயிச் சேரு” ரயில்வே பணிப்பெண் சொன்னார்.

 

 

அவமானமாக இருந்தாலும் அந்தப் பெண் உண்மையைக் கண்டு பிடித்துச் சொன்னது கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது. எல்லோரும் குற்றவாளியைப் பார்க்கும் மனத்துடன் என்னைப் பார்க்கிறார்கள் என்று தோன்றியதால் திரும்பவும் வரிசையில் நிற்க மனம் வரவில்லை. எழும்பூர் ரயில் நிலையத்தின் கிழக்குப் பக்க மேம்பாலத்தின் ஓரத்தில் இருந்த திண்டில் உட்கார்ந்தபோது கடலிலிருந்து வந்த காற்று முகத்தின் வியர்வையத் துடைத்து விட்டது. வைகை விரைவு வண்டி கூச்சலுடன் கிளம்பிப் போய்விட்டது. சென்னைக்கு முதல் தடவையாக வந்து கடற்கரையைக் கூடப் பார்க்காமல் போக நினைத்தது சரியில்லை என்று தோன்றியது. ஒரு நாள் தங்கி விட்டு நாளை கிளம்பலாமா என்று மனம் நினைத்தபோது  லாட்ஜ் அறையைக் காலி செய்திருக்க வேண்டாம் என்று தோன்றியது. இப்போது திரும்பவும் போய்க் கேட்டாள் திரும்பவும் ஒருமுறை முன்பணம் தரவேண்டும்; வாடகை தர வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் காலி செய்து விட்டதாலேயே நான் வேற்று ஆளாக ஆகிவிடும் மாயம் எப்படி என்று தெரியவில்லை.

 

 

ரயில் நிலையத்திலிருந்து அண்ணாசமாதிக்குப் போகும் பேருந்தில் ஏறி கண்ணகி சிலைக்குப் பக்கத்தில் இறங்கினேன். விரிந்து கிடந்த கடலை நோக்கி நடந்த போது ஜரிதா பீடாவின் மஹாத்மியம் பற்றி நினைவுகள் வந்தன. ரஜினிகாந்த் ஜரிதா பீடா போடுவதால் நிலை தடுமாறி விடுகிறார் எனச் சினிமா கிசுகிசுக்களில் படித்தது மனதில் விரிந்தது. செருப்புக்குள் நுழையும் மணல் நடையின் வேகத்தைக் குறைத்தது. கடலின் அலையைத் தொட்டு விட்டுத் திரும்பி விடலாம் என்று தோன்றியது. கடலின் அருகில் போனபோது அலைகள் வந்து மோதியதால் உண்டான சரிவு தடுத்தது. பள்ளத்தில் காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்த போது இரண்டொரு முறை அலை வந்து போனது. இரவே கிளம்பி மதுரைக்குப் போவதா? தங்கி விட்டு நாளைக்குச் சென்னையின் அடையாளங்களான செண்ட்ரல் ரயில் நிலையம், மூர் மார்க்கெட், எல்.ஐ.சி. கட்டிடம் என ஒரு சுற்று வந்து விட்டுப் போவதா? என முடிவு செய்ய முடியவில்லை. திரும்பவும் எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய போது அரசு பேருந்து ஒன்று நின்றிருந்தது. பின்புறம் மதுரை என்ற பெயரை வாசித்தவுடன் ஏறி உட்கார்ந்து விட்டேன். எப்போதும் சென்னைக்குப் போனாலும் போன காரியம் முடிந்தவுடன் உடனே திரும்ப வேண்டும் என்ற நினைக்கும் முடிவு அன்று எடுத்தது தான் என நினைக்கிறேன். இப்போது சென்னைக்குப் போனாலும் சென்னை வெளியே தள்ளி விட்டுச் சிரிப்பதை நானே ரசிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன்.

 

 

***

கவிதை மகுடேசுவரன் கவிதைகள்

மகுடேசுவரன் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இரவில் காத்திருப்பவன்

 

காத்திருக்கிறான்

கையில் அடர்ந்து சிவந்த ரோஜா

கொண்டுவரவில்லை

 

பரிசளிக்க

ஏதாவது எடுத்தவரத்தான்

நினைத்திருந்தான்

இருவருக்குமிடையில் அந்தப் பரிசு

ஒரு பாவனையாக அமர்வதை

அவள் விரும்பவில்லை

 

இந்த இரவு

தன் முதல் பாதி முற்றி நீங்குகிறது

இரயில் நிலையத்தில்

சோம்பலின் கதிர்வீச்சு மெல்லப் பரவுகிறது

உருள் சக்கரச் சுமைவண்டிகள்

இதயத்தைக் கீறும் ஒலியுடன்

அவனைக் கடந்து போகின்றன.

 

மணித்துளிகள்

உயிரபாயத்தில் உள்ளவனின்

நரம்பில் இறங்கும் ரத்தத் துளிகளாகச்

சொட்டிக்கொண்டிருக்கின்றன.

 

அவளைத் தாங்கிவரும் அந்த வண்டி

இந்திரனின் தேராக இருக்கவேண்டும்.

 

அது அவன் நிற்கும் இடத்தில் நிற்பதுகூட

ஒரு பொருந்தாப் பிழையாக முடியக் கூடும்.

 

காத்திருப்பும்

அதன் பிறகு நேரும் சந்திப்பும்

உள்ள உலகம்

இன்னும் பெரிய நம்பிக்கைகளோடு வாழட்டும்.

 

ஏமாற்றத்தில் முடியாத காத்திருப்புகள் உள்ளவரை

எல்லாம் இனிமையாகத் தோற்றமளிக்கட்டும்.

 

இரவுக்கே உரிய

அத்தனை ரகசியங்களும்

அவனையும் அவளையும்

ஒரு பொருளாகக் கருதிச் சேர்த்துக்கொள்ளட்டும்.

 

 

 

 

 

 

***

இறக்கும் நகரம்

 

இந்த நகரம்

கொஞ்சம் கொஞ்சமாகக் காலியாகிக்கொண்டிருக்கிறது.

 

ஏற்கனவே குருவிகளும் கிளிகளும்

இடம்பெயர்ந்துவிட்ட நகரம்தான் இது.

 

மீதமிருந்தவை

பறவைகளற்ற பிராந்தியத்தில்

வாழப்பழகிய ஒரு கூட்டம்.

 

அந்தக் கூட்டம்

பறவைகளைப் பின் தொடர்ந்து பயணமாகிறது

 

எல்லாரும் அகன்று சென்றுவிட்ட பின்

இங்கே யார் இருப்பார்கள் ?

 

இந்த நிலத்தோடு வேர்பற்றியிருக்கும்

முதியவர் சிலர் இருக்கக்கூடும்.

அவர்களும்

விரைவில் இறக்கவிருப்பவர்கள்

 

செல்வந்தர்கள்

தம் பண்ணை வீட்டுக்குப் போகிறார்கள்

ஏழைகள்

தத்தம் பூர்வீக மண்ணைச் சென்றடைகிறார்கள்

 

இருக்கவும் முடியாத கிளம்பவும் தெரியாத

கூட்டம் ஒன்று இருக்கிறது எங்களைப் போல.

அதற்குதான் போக்கிடமில்லை.

 

போகுமிடம்

இதைவிட வளமான நிலமென்றில்லை.

ஆனாலும் ஏதோ தைரியத்தில்

கிளம்பிச் செல்கிறார்கள்.

 

அவர்கள் மனம்மாறித் திரும்பிவரும்போது

இந்நகரம் முகங்கொடுக்காது.

நகரத்தால் கைவிடப்படுவதைவிடக் கொடிது

வேறில்லை.

 

இந்நகரம் ஒரு பட்டமரம்போல்

செத்துக்கொண்டிருக்கிறது.

அதன் மரணவாயில் பால்துளிகளைச் சொரியவேனும்

நாங்கள் இருப்போம்.

***

கவிதை பைசால் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

வானத்தை எழுதுவதில் உள்ள சிரமம்

 

ஆயிரம் தாள்களை இணைத்து

அதில் வானம் என்றெழுதி

ஒரு கவிதையினூடாக வானத்தை சற்று அசைத்து

இடமாற்றம் செய்ய முயலுகிறேன்.

வானத்தை எழுதுவதில் உள்ள சிரமம் அதிகரிக்கிறது

 

இதில் ஒரு சிறப்பு இருக்கிறது

என்னவென்றால்

வானம் தாள்களில் தங்கிவிடும்போது

நட்சத்திரங்கள் தோன்றி மறைவது,

நட்சத்திரங்களை தொடுவதற்கு கைகளை நீட்டிக் கொண்டு சென்றால்

வானத்திற்குள் தலைகீழாக நான் விழுந்துவிடுவது,

இருட்டியிருக்கும் மழை மேகத்திற்குள்

விவசாயிகள் சுற்றித்திரிவது.

 

இன்று பகல் மழை பெய்யாதிருக்க

இருட்டிய மேகங்களை தாள்களின் வேறொரு மூலையில்

கொண்டுபோய் வைத்து எழுதிவிடுகிறேன்

தாள்களில் குறித்த மூலையில் குறித்த நேரத்தில்

அடை மழை பெய்யத் தொடங்கியது.

 

சில நிமிடங்களின் பின்

மழை மேகம் தாள்களின் எல்லா இடத்திலும் தாவி விட்டது

வெய்யிலைக் கொண்டுபோய் எழுத கொஞ்சமும் இடமில்லை.

தாள்கள் முழுவதும் ஈரமாகின

‘வானம் கரைந்து ஊத்துண்ணுது’ என்று

கவிதையின் கடைசி வரியை வாசித்துக்கொண்டு செல்கிறான்

எனக்குள் இருந்த வாசகன்

 

*

தேனீர் இடைவேளை 

 

தேனீர் இடைவேளை

அலுவலகத்தை விட்டு வெளியே வருகிறேன்

வழமையாக என்னுடன் தேனீர்க் கடைவரை

நடந்து வரும் அவளும் இன்று வேலைக்கு வரவில்லை.

இருந்தாலும்

என்னுடன் அவள் நிழல் வீதியைக் கடக்கிறது.

 

எனக்கு முன்னரே

அவள் தேனீர்க் கோப்பையை நெருங்கிவிட்டாள்.

இங்கு நீங்கள் நிழலை அவள் என்று வாசியுங்கள்.

 

தேனீரிலிருந்து பறக்கும் ஆவியுடன் உலவும் பேய்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றாள்

கடைக்காரன் என் கவிதையை ஒரு நாளும் வாசிக்கவில்லை

அவளைப் பற்றி என்னிடம் விசாரிக்கின்றான்.

 

நான் அவளைக் காதலிக்கவில்லை

என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்பவள்

என்று பதில் கூறிவிட்டுத் திரும்பும் போது

என் நிழலை மிதித்துக்கொண்டு போகிறது

ஒரு பெரிய லொறி.

 

,

 

புத்தகப் பைககுள் மரங்களைக் கொண்டுபோனவன்

 

என் மகன்

பாடசாலைப் புத்தகத்திற்குள் ஒழித்துவைத்த கவிதையில்

பெரிய வேர் ஊன்றிய மரங்கள் இருக்கின்றன.

 

காற்று பலமாக வீசத் தொடங்கியது

என் மகன் படிக்கும் முன்பள்ளிப் பாடசாலையை நோக்கி

வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறேன்.

காற்று மரங்களை வீழ்த்திவிடுமோ என்ற பயம்

எனக்குள் அதிகரிக்கின்றது.

 

ஜன்னல் சீலை

படபடவென அடிக்கின்றது.

கதவடியில் விரித்துவைத்திருந்த குடை

குத்திக்கரணம் போடுகின்றது.

 

கவிதையை என் மகன் வாசிக்கின்றான் என்பது

அவன் ஆசிரியைக்குத் தெரியாது.

 

நான் வகுப்பறைக்குள் நுழைகின்றேன்

என்னைக் கண்டு

மகன் கவிதை வாசிப்பதை நிறுத்திவிடுகின்றான்

கவிதையில் இருந்த மரங்கள்

ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டன

அவசர அவசரமாக

ஜன்னல் சீலையை சரி செய்கின்றது

குடை இழுகிப்போய் மேசை அருகே நிற்கின்றது

அங்கிருந்த மின்விசிறியை பார்த்துக்கொண்டிருக்கின்றாள் அவள்

 

 

 

 

 

 

புதிய படைப்பாளி – கவி – கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சட்டென உடைந்து விடுகிறது
ஏதோவொரு காதல்
ஏதோவொரு நட்பு
ஏதோவொரு ரகசியம்
ஏதோவொரு இறப்பு
ஏதோ சில
சிலவாகிய பல

எவ்வித சமரசமும் இல்லாமல்
கிளையிலிருந்து வீழும் இலை போல்
வானிலிருந்து நழுவும் நட்சத்திரம் போல்
உயர எறிந்த பந்து கீழே விழுவது போல்
காற்றடைந்த குமிழி போல்
இன்னும் போல பல

புதிதாய் முளைவிடும் இலை
காலம் வெளித்தள்ளிய நட்சத்திரம்
பிடித்து இழுத்த விசையுறு பந்து
வெற்றிடம் உருவாக்கும் குமிழ்
மற்றுமொரு காதல்
வெறுப்புமிழ்ந்த நட்பு
விவரித்துவிட வேண்டிய ரகசியம்
வேறொருவருக்கான உயிர்

ஏதேனும் தேவைப்படுகிறது தான்
நிரப்பி விடவும், விட்டு விடுதலையாகவும்..

 

ஒற்றைநிலை

 

 

புறந்தள்ளலின் ஒவ்வொரு

முடிவும் உன் ஸ்பரிசங்களில்

சமனப்படுத்திக்கொண்டதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.

 

நமக்கான மாற்றங்கள்

ஒவ்வொரு ஊடலிலும் மிகமிகப்

பெரிதாய் மறைக்கப்பட்டதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.

 

பிணைக்கப்பட்டதற்காய்

பிணைந்திருந்து, சங்கிலி

அறுபடக்காத்திருந்து பிரிந்ததாகவே

நினைக்கத்தோன்றுகிறது.

 

ஒவ்வொரு வார்த்தையின் இறுதியும்

முடிக்கப்படாமல் கடந்ததிலேயே

ஏதோ ஒன்று உன்னிடமிருந்து முடிக்கப்பட்டதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.

 

 

வெற்றிடக்குமிழினுள் அடைப்பட்டிருந்த

காற்றாகவே நீ இருந்ததாய்

எனக்கு காண்பித்து சென்றாய் என்பதாகவே

நினைக்கத்தோன்றுகிறது.

 

எனவே தான் உன் ஒதுக்கத்தின் முன்

ஒதுங்குதலுமாய்,புறக்கணிப்புக்குமுன்

புறக்கணித்தலுமாய் முன்னேறிக்கொண்டு

விரைந்து விடுகிறேன்.

 

சமனற்ற நிலையாகவே

தோன்றவில்லை நீ ஒதுக்கி சென்றபோதும்,

உன் தீர்க்க முடியா காதல்

தீர்ந்த புள்ளியாகவே என் ஒற்றை நிலை.

 

 

 

***

 

 

யாருமேயில்லாத இரவுக்குள்

பெரும்பாலும் என்னைத்தொலைத்து

விடுவதே வாடிக்கையாயிற்று என் கனவுகளுக்கு.

 

மீசையை நீட்டிக்கொண்டு

நாவால் உதடுவருடிக்கொண்டிருக்கும் பூனையோ

கிளைமீது தனித்திருந்து நதி நீரில்

நெளிந்து செல்லும் மீனைக்கவ்விப்பறக்கும்

மீன்கொத்தியோ,

 

நெடுமலையின் உச்சியிலிருந்து

தலைக்கீழாய் விழுந்துவிடவோ,

இருட்டறையில் பாம்படம்

அணிந்த பாட்டிகளின் அருகில்

மணப்பெண்ணாகவோ,

 

அறைமுழுதும் சிதறிக்கிடக்கும்

சந்தனத்திலும், பூக்களிலும்

பிரண்டுசெல்வதாகவோ,

இறந்துப்போன அம்மாவின்

சேலைப்பற்றி கதைசொல்வதாகவோ

பழுத்தோலைகளின் நடுவே மணல்கீறும்

சிறுமியாகவோ

 

ஒரு கனவும் வருவதேயில்லை

கனவுகளில் தொலைபவருக்கு

கனவுகள் வராமல்தான் இருக்குமோ.

 

 

****

 

 

 

கவிதை – மயூரா ரத்தினசாமி கவிதைகள்

மயூரா ரத்தினசாமி கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

ஒவ்வொரு இரவிலும் அவன் பூஜ்யங்களை சுமந்து வீடு திரும்புகிறான். பூஜ்யங்கள் சக்கர வடிவிலும், காலில் பிணைக்கப்பட்ட இரும்புகுண்டு வடிவிலும், சிலவேளை சோப்புநுரைக்குமிழ் வடிவிலும் இருந்தாலும் வீடு எல்லாவற்றையும் பூஜ்யம் என்றே சொல்கிறது. பூஜ்யங்களை ஒருவரும் களவுகொள்ள விரும்பாததால் அவற்றை அவன் வீட்டு வாசலிலேயே விட்டுவிட்டு நுழைகிறான். சக்கர பூஜ்யங்கள் குழந்தைகளின் பெருவிருப்பமான விளையாட்டுப் பொருளாகவுள்ளது. பூஜ்யங்களால் தொடுக்கப்பட்ட சங்கிலியில் அவனை கட்டிப்போட முனைகிறது வீடு. ஒவ்வொருநாளும் வீடுதிரும்புதல் கட்டாயமாவென யோசித்தகாலையில் பூஜ்யங்களின்றி குழந்தைகள் விசனப்பட நேரிடுமென்று அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்டான். பூஜ்யங்களுக்கு முன் நிலைநாட்டி நிமிர்வதற்கு அவனுக்கு சின்னஞ்சிறிய தீக்குச்சி வடிவில் ஒரே ஓர் எண் கிடைத்தால் போதும். அவன் தேடிக்கொண்டிருக்கிறான்.

——

புவியீர்ப்பு விசையை செயலிழக்கச் செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. படிப்படியாக மக்கள் பீதியடையாதபடிக்கு மெல்லமெல்ல அமுல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. முதல் நாள் அனைவரும் எடை குறைந்திருப்பதாக உணர்ந்தார்கள். உடல் இலகுவாக இருப்பதாகவும் உடலைச்சுமந்து  திரியவேண்டியதில்லையெனவும் வயிறு பெருத்த ஆசாமிகள் சொல்லிக்கொண்டனர். உடல் இலகுவாக இருப்பது ஆரோக்கியத்தின் அறிகுறியென்று ஒருவர் எழுதிய கட்டுரை பரவலாக வாசிக்கப்பட்டது. அரசாங்கம் அவரை இதுபோல் இன்னும்பல எழுதும்படி கேட்டுக்கொண்டதில் அதிகாரிகள் அவரிடம் மரியாதை கொண்டனர்.

மக்கள் நிலத்திலிருந்து இரண்டடி மேலே மிதக்கின்றனர். எப்போதும் மிதப்புதான்; கூடவே அவர்கள் கழித்த மலமும் மூத்திரமும்.  மிதப்பது ஆரம்பத்தில் சுகமாக இருக்கிறது. தேசம் மிதக்கிறது. யாரும் நிலத்தில் இல்லை. நிலத்தில் வசிக்காத மக்களுக்கு நிலமெதற்கு? ஒப்பந்தத்தின்படி மண் அகற்றப்பட்டது; மலைகள் அகற்றப்பட்டன; நதிகள் நிரவப்பட்டது. ஒப்பந்தம் வெற்றிபெற்றதாக உச்சிமாநாட்டுச் செய்தி கூறியது.

—-

ஒரு எல்.ஐ.சி. ஏஜென்ட் கவிதை எழுதுகிறான்

வேறொரு கவிஞன் எல்.ஐ.சி ஏஜென்ட்டாக இருக்கிறான்

சினிமா பாடலாசிரியன் கவிதை எழுதுகிறான்

வேறொரு கவிஞன் சினிமா பாடல் எழுதுகிறான்.

மட்டுமொரு கவிஞன் எண்ணைக்கடையில் வேலையிலிருக்கிறான்.

கவிஞர்கள் வேறுவேறு வேலை பார்க்கிறார்கள், சும்மாயுமிருக்கிறார்கள்

வேறுவேலைக்காரர்கள் கவிதை எழுதுவதில்லை.

—-

கவிதைகள் – வித்யாஷங்கர் கவிதைகள்

 

வித்யாஷங்கர் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

மரணத்தை நோக்கி

விருப்பு வெறுப்பு அற்று

காலம் என்னை இட்டு செல்கிறது

என் உடல் மீதான அக்கறை

குறைந்துகொண்டே வருகிறது

ஐந்துவயதுவரை குடித்த

தாய்ப்பால் பலம்

தாக்கு பிடிக்க வைக்கிறது

மூளை கொதிக்கும் அளவுக்கு

ஓயாத யோசனைகள்

எப்போதும் பற்றி படரும்

பதற்றம்

எதற்கும் லாயக்கு அற்றவன்

சுட்டி கடக்கும் நாட்கள்

மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ

சோறும் துணியும் தவிர

எதையும் சேர்த்து வைக்காத வருத்தம்

எவரோடும் எப்போதும்

பகைத்துவிடும் சுபாவம்

உங்களுக்கு வாழ்வதற்கான

பிடிமானம் ஏராளம் இருக்கலாம்

தினம் தினமும்

யாரோ எழதி வைத்த

நாடக பாத்திரமாய்

இயங்கி முடிக்கிறேன்

ஒப்பனையற்று

 

எனக்கில்லை

இலக்கு எதுவும்

 

**

 

தோணி மலை

 

ஏலம் கிராம்பு வாழை பலா

எல்லாம் இருக்கும்

மலையின் பச்சை

வேறு வேறு விதமானவை

ஓடி முடிந்த

அருவியின் ஈரம்

சில்லிப்பாய்

தேங்கி கிடக்கும்

பாறைகளிடையே முகம் பார்க்க

பாறைகளில் வேர் பிடித்து

பூக்கும் சிறு செடிகள்

வேதம் சொல்லும்

வண்ணமயமாய் பூத்து கிடக்கும்

மலை பூக்களுக்கு இல்லை

வாசம்

மலை வளம் காணவும்

மனசு வேண்டும்

ரசனை மிக்கவனை

மலை வணங்க செய்யும்

கும்பிட்டு வாழ்தல்

பலர் கும்பிடவாழ்தல்

கோடி பெறும்

*

இப்போதெல்லாம்

தவறாமல் பட்டுவிடுகிறது

யாரோ ஒருவரின் மறைவுக்கான

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

**