பின் காலனிய இலக்கியம்: ஒரு வாசிப்பு ஜிஃப்ரி ஹாஸன்

[ A+ ] /[ A- ]

images (18)

அதிகாரம் பல்வேறு தளங்களில், பல்வேறு வடிவங்களில் தொழிற்படும் யுகம் இது. இதனால் அதிகாரம் பற்றிய பல்வேறு மதிப்பீடுகள், சிந்தனைகள் முன்வைக்கப்படும் காலமாகவும் இது மாறியுள்ளது. அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் சிந்தனைகளோடு கடந்த நூற்றாண்டில் அறிமுகமாகி இருக்கும் பின்-நவீனத்துவம் சர்வதேச அளவில் புலமையாளர்களின் கவனத்தையீர்த்த ஒரு கோட்பாடாகவும் மாறியுள்ளது. அதிகாரம் தொழிற்படும் நுண்-தளங்களைக்கூட நுட்பமாகத் தோலுரித்துக் காட்டியதில் பின்-வீனத்துவத்தின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆயினும் இது விமர்சனபூர்வமாக அணுகப்பட வேண்டும் என்பதே எமது கணிப்பு.

பின்-காலனிய இலக்கியம் (Post-Colonial Literature) பின்-வீனத்துவத்தின் அதிகாரம் பற்றிய பார்வையின் பின்னணியிலேயே வைத்து விளக்கப்படுகிறது. மேற்கு தமது காலனித்துவத்தினூடாக மூன்றாம் உலக நாடுகள் மீது மிக மோசமான சுரண்டல் நடவடிக்கைகiளில் ஈடுபட்டதோடு மட்டுமன்றி அவர்களின் தனித்துவ சமூக, அரசியல், கலாசாரப் பாரம்பரியங்களைம், பெறுமானங்களைம் சிதைத்ததோடு மேற்கு தனது கலாசாரக் கூறுகளை மூன்றாம் உலகின் மது திணித்தததே காலனித்துவ யுகத்தின் வரலாறாகும்.

இந்தக் காலனித்துவ காலத்தில் தங்களின் இறந்த காலத்தைப் பறிகொடுத்த மூன்றாம் உலக மக்கள் அதனை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களின் இலக்கியங்களிலும் இம் முயற்சிகள் பிரிபலிக்கத் தொடங்கின.

மேற்கினால் தங்கள் மீது திணிக்கப்பட்ட அந்நிய சமூக, பொருளாதார, அரசியல் மாதிரிகளை மற்றும் பண்பாட்டு அம்சங்களை அற்குள் தொழிற்டும் அதிகாரத்தினை மூன்றாம் உலக எழுத்தாளர்கள் தமது படைப்புகள் மூலம் பெரிதும் கேள்விக்குட்படுத்தினர். அவர்கள் தங்கள் படைப்புகளில் காலனித்துவ கால அதிகார மையங்களின் செயற்பாடுகளை, அவ்வதிகார மையங்கள் மேற்கொண்ட பண்பாட்டு ஏகாதிபத்தியத்தை, அதன் அசிங்க முகத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் தங்களின் வரலாற்றுத் தொன்மங்களை, கலாசார அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்கின்றனர்.

சுருங்கக்கூறின், மேற்கின் காலனித்துவ கால அதிகாரங்களுக்கெதிரான எதிர்ப்புக் குரல்களாக அவர்களின் இலக்கியங்கள் வெளிப்படுகின்றன. மூன்றாம் உலகப்படைப்பாளிகளின் இத்தகைய எழுத்துக்கள் பின்-காலனிய இலக்கியமாக கொள்ளப்படுகிறது. காலனித்துவ ஏகாதிபத்தியத்துக்கெதிரான பண்பாட்டு வெடிகுண்டாக (Cultural Bomb) இவ்விலக்கியங்கள் பார்க்கப்பட்டன.

காலனியப் பேரரசுகளின் மிகமோசமான அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் அரசியல், பண்பாட்டு விடுதலையில் அக்கறை கொண்டுள்ள பின்-காலனிய இலக்கியத்தை அதிகாரத்துக்கெதிரான குரல் என்ற வகையில் பின்-நவீனத்துவ இலக்கியத்தின் ஒரு பகுதியாக பார்க்க முடியும்.

பின் காலனிய இலக்கியத்தை அடியொட்டி அறிமுகமாகிய பின் காலனிய கோட்பாடு 1970களில் உலகளவில் முக்கிய விவாதப் பொருளாக மாறியது. 1978 ல் வெளிவந்த எட்வொ்ட் ஸெய்தின் ‘Orientalism’ எனும் நூலே இக்கோட்பாட்டை விவாதப் பொருளாக மாற்றிய ஆரம்பப் பணியாக கருதப்படுகிறது. இக்கோட்பாடு பொதுவாக காலனித்துவத்திற்குட்பட்ட மக்களின் இலக்கியங்களில், தத்துவங்களில் காணப்பட்ட கோட்பாடுகளைத்தான் குறித்து நிற்கிறது. அதேநேரம் இது குடியேற்ற நாடுகளில் உருவான இலக்கியங்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பின்-காலனிய இலக்கியத்தை சரியாக வரையறுப்பதில் அறிவுஜீவிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. இந்த விவாதங்களில் பின்-காலனியக் கோட்பாடு அல்லது பின் காலனியவாதத்திற்கும் முக்கியபங்குள்ளதை வரலாற்றை உன்னிப்பாக வாசிக்கும் எவரும் கண்டுகொள்வர். பொதுவாக, சில அறிவுஜீவிகள் பின்-காலனிய இலக்கியம் பற்றிய விவாதங்களில் ஈடுபடுமபோது அவர்கள் பின்காலனிய வாதத்தை யைப்படுத்தியிருப்பது புலனாகிறது. இத்தகைய அறிவுஜீவிகளில் சிலர் ‘பின்-காலனிய இலக்கியம் என்பது காலனித்துவ ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த நாடுகளில் வாழுகின்ற மக்களால் அது குறித்து எழுதப்படும் இலக்கியங்களே ஆகும். சந்தேகமின்றி இப்பதம் குறிப்பது அதைத்தன்” எனும் வாதத்தை முன்வைக்கின்றனர்.

எனினும் இந்த வரையறை தன்னளவில் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக இன்னும் சில புலமையாளர்கள் கூறுகின்றனர். அவர்களின் பார்வையில், பின் காலனிய இலக்கியம் என்பது காலனியமயமாக்கத்திற்குப் (Colonization) பின்னர் எழுதப்பட்ட இலக்கியங்களைக் குறிப்பதாகக் கூறுகின்றனர்.

இன்னும் சிலர் சுதந்திரத்திற்குப் பின்னர் படைக்கப்பட்ட இலக்கியமாகக் கொள்கின்றனா்

இத்துறையில் உழைக்கின்ற சில புலமையாளா்களைத் தவிர எராளமானவா்கள் பின் -காலனிய இலக்கியத்தை மூன்றாவது சொல்லப்பட்ட அர்த்ததில்தான் விளங்கி வைத்துள்ளனா்.

அதேநேரம் பின் -காலனியக் கோட்பாடு அல்லது பின் -காலனிய வாதம், பின்-காலனிய இலக்கியத்தை பின்வருமாறு வரையறுக்கிறது ‘குடியேற்ற நாடுகளை அல்லது அதன் மக்களை முக்கிய பேசுபொருளாகக் கொண்டு குடியேற்ற நாடொன்றின் குடிமகனால் எமுதப்படும் இலக்கியங்களே பின் -காலனிய இலக்கியமாகும்”

பின் -காலனிய இலக்கியத்தை வரையறுப்பதில் இவ்வாறு பல்வேறு கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும பொதுவாக அது -காலனியத்தை அனுபவித்த சமூகங்களின் பிரச்சினைகளில் கவனஞ்செலுத்துகிறது. காலனியவாதிகள் தங்களின் நலன்களுக்கேற்ப காலனிய மக்களின் அறிவை எவ்வாறு வடிவமைத்திருந்தார்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கான துல்லியமான பதில்களாகவும் அவை அமைந்துள்ளன. காலனிய ஆட்சியைத் தொடந்து தேசிய அடையாளத்தை விருத்தி செய்வதில் அவை முனைப்புக் காட்டின. காலனித்துவ நாடுகளின் எழுத்தாளா்கள் தங்களின் பண்பாட்டு அடையாளச் சின்னங்களை காலனியாதிக்க சக்திகளிடமிருந்து மீளப்பெற முயற்சிக்கிறார்கள். ஜரேப்பியர்கள் உருவாக்கிய தங்களின் இனமேன்மை பற்றிய கற்பிதத்தை, கதையாடலை அவா்கள் கேள்விக்குட்படுத்துகின்றனர். அதேநேரம், பின்-காலனிய எழுத்தாளர்கள் பாரம்பரிய காலனியக் கருத்தாடல்களுடன் இடைவினை கொண்டும் செயலாற்றுகின்றனர். எனவே பின்-காலனிய இலக்கியத்தை நாம் இத்தகையதொரு பொதுவான அடையாளத்தக்குள் வைத்து நோக்குவது அது குறித்த வரையறைச் சிக்கல்களுக்கு அப்பால், நமக்குள் அது பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்த உதவும்.

பின்-காலனிய இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளாக சினுவா அச்சுபே, கூகி வாதியாங்கோ, மரியாமா பா, மிஷெல் கிளிஃப், அதொல் புகாட், நடின் கோர்டிமர், அஹ்மத் குருமா, ஹனிஃப் குறைஷி, ஜே.எம். கோட்ஸி, அனிதா தேசாய், சல்மான் ருஸ்தி, வி.எஸ்.நைபால், ஜமிகா கின்ஸைத், காப்ரியேல் கார்ஸியா மார்க்குவேஸ், பாரதி, முகார்ஜி, யேன் ரணசிங்க, கமலாதாஸ் சுரையய்யா, ஆர்.கே, நாராயணன், அருந்ததி ரோய் போன்றோர் அடையாளப்படுத்தப்பபடுகழன்றனர். தமிழிலும் பின்-காலனியப் படைப்பாளிகள் உள்ளனர். அது பற்றி விரிவாக பின்னர் ஒரு கட்டுரையில் பேசுவேன்.

அதேநேரம் பின்-காலனிய இலக்கியம் அதன் வரலாற்று இயங்கியல், கோட்பாட்டுருவாக்கம் போன்ற விடயங்களில் மாபெரும் பங்காற்றிய அறிவுஜீவியாக மறைந்த பேராசிரியர் எட்வெர்ட் செயித் விளங்குகிறார். இந்தவகையில் இவரது ‘Orientalism’ (கீழைத்தேய வாதம்) ‘Culture and Imperialsm’ (கலாசாரமும் ஏகாதிபத்தியமும்) போன்ற படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ‘Orientalism’ உலக சிந்தனை அரங்கில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்திய நூலாகும். கீழைத்தேயம் பற்றிய மேற்குலகின் தவறான கட்டமைப்புகளையும், வக்கிரமான பார்வைகளையும் ஸெயித் இதில் பேசியுள்ளார்.

மேற்குலக அறிவுஜீவிகளின் கவனத்தையீர்த்த ஒரு முக்கிய நூலாகவும் ‘Orientalism’ உள்ளது. இந்நூலில் எட்வெர்ட் ஸெயித் காலனியாதிக்கம் குறித்து முன்வைக்கும் கருத்துக்கள் பின்-காலனிய இலக்கியத்தை புரிந்துகொள்வதில் முக்கிய உசாத்துணையாக்க கொள்ள முடியும். ‘காலனியமயப்படுத்துவதென்பது தேவைகளை அடையாளப்படுத்துவதாகவே இருந்தது. இந்தத் தேவைகள் வியாபாரரீதியாகவோ, தகவல் தொடர்பு ரீதியாகவோ, மத, இராணுவ அல்லது பண்பாட்டுரீதியாகவோ இருக்கலாம்’ காலனித்துவம் பற்றி ஸெய்தின் இக்கூற்றிலுள்ள உண்மையை, நியாயத்தை பின்-காலனிய இலக்கியத்தைப் படிக்கும் எவரும் இலகுவில் கண்டுகொள்ள முடியும்.

ஸெயித் சொல்வதைப்போல, மேற்கு தனது தேவைகளை அடைந்து கொள்வதற்கு மூன்றாம் உலகை என்னென்ன முறைகளிலெல்லாம் பயன்படுத்தியது என்பதை மட்டுமல்ல, மூன்றாம் உலகின் தேவைகளை, அந்த மக்களின் சொந்தப் பண்பாடுகளை, உணர்வுகளை எல்லாம் எவ்வாறு புறக்கணித்தது எனும் உண்மையைக்கூட பின்-காலனிய இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

பெரும்பாலும் பின்-காலனிய இலக்கியங்களில் நாவல் வடிவங்களே முதன்மையான இடத்தை வகிக்கின்றன. காலனித்துவ காலத்தின் நீண்ட கொடுமைகளை, சுரண்டல்களை அதிகமாக நாவல்கள் மூலமே வெளிப்படுத்த முடியும் என இவ்வெழுத்தாளர்கள் கருதியிருக்கக்கூடும். இதுவே பின்-காலனிய இலக்கியத்தில் நாவல்கள் முக்கிய இடத்தை வகிக்கக் காரணமாக இருக்க முடியும்.

பேராசிரியர் எட்வெர்ட் ஸெய்தின் மற்றொரு நூலான ‘Culture and Imperialism’ (கலாசாரமும் ஏகாதிபத்தியமும்) எனும் நூலில் கீழைத்தேய நாடுகள் மீது மேற்கு திணிக்கும் கலாசார அடக்குமுறை குறித்தும், இதில் நாவல்களின் பங்கு குறித்தும் பேசுகிறார். பின்-காலனிய இலக்கியத்திற்கான சிந்தனை ரீதியான பங்களிப்பாக இந்நூலைக் கருத முடியும். எனினும் எட்வெர்ட் ஸெய்தின் சிந்தனைகளை பின் காலனியவாதிகள் தவறான அர்த்தங்களில் பிரயோகித்து வருகிறார்கள் எனும் குரல்களும் இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இது குறித்து ஸெயிதே தனது நேர்காணலொன்றில் வருத்தப்பட்டுள்ளார்.

பின்-காலனிய இலக்கியங்கள் புவியியல் அடிப்படையில் மூன்று வேறுபட்ட பிராந்தியங்களிலுள்ள நாடுகளை களமாக கொண்டவை. ஆபிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க பிராந்தியங்களைச் சேரந்த நாடுகளே ஐரோப்பிய-மேற்கு ஆதிக்க சக்திகளின் காலனித்துவப் பசிக்கு இரையாகின. பின்-காலனிய இலக்கியங்களுள் ஆபிரிக்க இலக்கியத்துக்கு முக்கியமான இடம் வழங்கப்படுகிறது. காலனித்துவத்திற்குட்பட்ட ஆபிரிக்க மக்களின் தேசிய அடையாளத்தை, வாழ்வியலை, பண்பாட்டு அம்சங்களை அவை பிரதிபலிக்கின்றன. பின்-காலனிய ஆபிரிக்க இலக்கிய வரிசையில் சினுவா அச்சுபேயின் Things Fall Apart எனும் நாவல் முக்கியமானதாகும். இந்நாவல் தமிழில் “சிதைவுகள்” என மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருந்தது. 1930 ல் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நைஜிரியாவில் பிறந்த சினுவா அச்சுபே அபிரிக்க இலக்கிய வரிசையில் மட்டுமன்றி, பின்-காலனிய இலக்கிய படைப்பாளிகள் வரிசையிலும் முக்கிய இடத்தில் வைத்தப் பேசப்படுபவர்.

இவரது Things Fall Apart நாவல் பின்-காலனிய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க மிகச் சிறந்த படைப்புகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. Things Fall Apart ஆபிரிக்க மக்களின் சொந்தப் பண்பாடுகள், மரபுகள், நம்பிக்கைகள் அதனோடு கலந்த அவர்களின் இயல்பான வாழ்க்கை குறித்துப் பேசுகிறது. காலனித்துவ காலத்தில் மேற்கின் கெடுபிடிகளால் அந்த மக்களின் பண்பாட்டுத் தனித்துவங்கள் உட்பட அவர்களின் அனைத்து வாழ்வியல் அம்சங்களும் சின்னாபின்னப்படுத்தப்பட்டு விட்டன.

மேற்கு தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் அம்மக்களின் சிந்தனையை, அறிவை, நடவடிக்கைகளை தமக்கு சாதகமானதாக வடிவமைக்கிறது. இதனால் மேற்கத்தேய பெறுமானங்கள் அவர்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொள்கிறது. சுருங்கக்கூறின், அவர்கள் தமது சொந்த உலகத்திலிருந்தும், வாழ்விலிருந்தும் விரட்டப்பட்டு விட்டார்கள் போன்ற காலனித்துவ யுகத்தின் வரலாற்று யதாரத்தங்களை ஆச்சுபே ‘சிதைவுகள்’ மூலம் உலகுக்கு தெரிவிக்கிறார்.

அது தவிர சினுவா அச்சுபெ “No Longer at Ease’(1960) ‘Arrow of God’ (1964) ‘A man of The People(1966) (இந்நாவல் ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொ.வினால் “மக்களின் மனிதன்” என தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது), Anthills of the Savannah (1967) போன்ற நாவல்களையும் எழுதி இருப்பது நமது கவனிப்புக்குரியது.

பின்-காலனிய ஆபிரிக்க இலக்கியத்தின் மற்றுமொரு ஆளுமை கூகி வாதியாங்கோ. காலனிய ஆபிரிக்க மக்களின் மற்றும் நாடுகளின் இழப்புகளை, சோகங்களை உலகறியச் செய்ததில் இவரது பங்களிப்பு மகத்ததானதாகும். இவரது ‘Devil On the Cross’ (தமிழில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ என மொழிபெயர்க்கப்பட்டது) என்ற நாவல் ‘குரலற்ற ஆபிரிக்க மக்களின் குரலாக’ மதிப்பிடப்படுகிறது. கென்ய எழுத்தாளரான கூகியின் முதல் நாவலான ‘Weep Not Child’ 1964ல் வெளிவந்தது. (இந்நாவல் தேம்பி அழாதே பாப்பா என ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொவினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது). இதுவே ஒரு கிழக்காபிரிக்க எழுத்தாளனால் முதன்முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவலாகும். அவரது இரண்டாவது நாவலான ‘The River Between’ 1965 ல் வெளியானது. ஆயுத கிளர்ச்சியை பின்னணியாகக் கொண்ட இந்நாவல் கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்குமிடையிலான மகிழ்ச்சியற்ற அன்பைப் பற்றியும் விபரிக்கிறது.

சுதந்திரத்திற்குப் பிட்பட்ட ஆபிரிக்க அரசியல் சூழலும் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்ததில்லை. சுதந்திரத்தின் பின் நாட்டுப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட தலைவர்கள் காலப்போக்கில் மேற்கு நாடுகளின் கைபொம்மைகளாக மாறிப் போயினர். ஆபிரிக்க மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தவறிய அவர்கள், நாட்டு முன்னேற்றத்திலும் அக்கறை கொள்ளவில்லை. உள்ளுர் மக்களை விழிப்புணர்ச்சி அடையச் செய்ய முயற்சித்த படைப்பாளிகளும் மிக மோசமாக ஒடுக்கபட்டனர். இவர்களைக் கொண்டு சிறைகளும் நிரப்பப்பட்டன. சினுவா அச்சுபெ, கூகி வா தியாங்கோ, அஹ்மத் குரூமா போன்ற படைப்பாளிகள் இவ்வாறு பாதிக்கபட்டனர். இதனால் இவர்கள் வேறு நாடுகளில் தஞ்சம் புக வேண்டிய தேவையும் ஏற்பட்டது. 1977ல் கூகி எழுதிய ‘I will marry when I want’ (நான் விரும்பும் போது மணப்பேன்) எனும் நாடகம் ஒன்றுக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இச்சிறைவாச காலப்பகுதியில் அவருக்கு வழங்கப்பட்ட மலம் துடைக்கும் பேப்பரில் கிக்கியு மொழியில் அவர் எழுதிய நாவலே ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ எனக் குறிப்பிடப்படுகிறது.

பின் -காலனிய இலக்கியத்தில் ஆபிரிக்க இலக்கியங்களின் இருப்பே பரந்துபட்டதாக உள்ளது. இத்தகைய காலனிய பின் -காலனிய வரலாற்றுப் பதிவுகள் ஆபிரிக்க இலக்கியத்தில் நாவல்கள் நாடகங்களில் மட்டுமல்ல கவிதைகளில் கூட இடம்பெறுகின்றன ஆயினும் ஆபிரிக்க -பின் -காலனிய கவிதைகள் குறித்துப் பேசுவது எம்மை இன்னும் பரந்த ஆய்வுக்கே இட்டுசெல்லும் எனவே அது தனியாகப் பேசப்பட வேண்டிய விசயமாகிறது

பின் -காலனிய இலக்கியங்களுள் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களும் கவனப்படுத்தப்படுகின்றன. காலனித்துவ காலத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது புரியப்பட்ட கொடுமைகளை, சுரண்டல்களை மிக அழகாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் தமது படைப்புகளில் சித்தரித்துள்ளனர். லத்தீன் அமெரிக்காவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களுள் ஒருவரான டேவின் பஞ்சமியன் எட்வர்ட் கலியனோ தனது (இலத்தீன் அமெரிக்காவின் வெளித்தெரியும் வெடிப்புகள்: ஒரு கண்டத்தின் மீதான ஐந்து நூற்றாண்டு கால சூறையாடல்) எனும் நூலில் லத்தீன் அமெரிக்காவின் காலனித்துவ கால வரலாற்றை பதிவு செய்துள்ளார். பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் இதுவரை சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

லத்தீன் அமெரிக்க பின்-காலனிய எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளுக்கும் தற்போது இத்தகையை இலக்கிய முக்கியத்துவம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் மெஜிகல் ரியலிசமாகப் புனையப்பட்ட லத்தீன் அமெரிக்க இலக்கியங்களிலிருந்து பின்-காலனிய லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் ஓரளவு வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. காலனித்துவகாலத்தில் ல.அமெரி்ககாவில் நிலவிய அரசியல் சூழலே ல.அமெரிக்க இலக்கியங்களை யதார்த்தத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்கும் மாயா-யதார்த்த வாத இலக்கியங்களாக மாற்றின. எனவே புற யதார்த்தத்திலிருந்து விடுபட்டு புனைவின் மாயவெளியில் அலையும் லத்தீன் அமெரிக்க மெஜிகல் ரியலிசத்திற்கு ஒரு வரலாற்று நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

பின்-னாலனிய இலக்கியங்களில் ஆசிய இலக்கியங்களும் உலகின் கவனத்தைப் பெற்றுள்ளன. பின்-காலனிய ஆசியப்படைப்பாளிகளின் வரிசையில் வி.எஸ். நைபால், ஆர்.கே. நாராயணன், குஸைனி, அருந்ததி ரோய், சல்மான் ருஷ்தி மற்றும் பலர் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். எனினும் இந்த பின் காலனிய ஆசிய எழுத்தாளர்ளில் சிலரது படைப்புகள் காலனித்துவ ஆட்சியின் நல்ல பக்கங்களைப் பேசி அவற்றை நியாயப்படுத்த முனைவதாக எட்வெர்ட் செய்த் குறிப்பிடுகிறார்.

பொதுவாக நோக்குமிடத்து பின்-காலனிய இலக்கியங்கள் மேற்கின் அதிகாரங்களை, நடவடிக்கைகளை, அதன் அதிகார சிந்தனைகளை முற்றாக எதிர்த்து நிற்பவையாக மேலெழுகின்றன. தங்களது மக்களின் உண்மைகளை, வலிகளை, அந்த அதிகாரத்திடம் சொல்ல முனைகின்றன. மேற்குலக முதலாளித்துவத்தின் சுரண்டல்களின் காலத்துயரை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கின்றன. ஒரு கலாசார ஆயுதமாக, எதிர்ப்புக் குரல்களாக அவை பார்க்கப்படுகின்றன. அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்ட மக்களின் கூட்டுத்துயரை உலக அரங்கில் உரத்துப் பேசிக்கொ்டிருக்கின்றன

••••

Comments are closed.