ஆகி கவிதைகள் ( அறிமுகக் கவிஞர் )

[ A+ ] /[ A- ]

images (20)

புளூட்டோ கிரகமா

புளூட்டோ கிரகமல்ல கிரகமல்ல

கிரகமல்லவென்று உறுமிக்கொண்டு

மழைப் பெய்யும் தைமாத அந்திப் பொழுதுகளில்

எல்லா வாகனங்களின் முன்விளக்குகளும்

மழைநீரைத் தோட்டாக்களாய்ப் பொழிகின்றன

பொறுப்பாளர் வீசும் தானியங்கள் வேண்டி

வேம்பின் உச்சிக் கொம்பில் நிற்கும் தோகைவிரிக்கா

மயிற்பீலியிலிருந்து காகங்கள் புறப்படுகின்றன

தேசிய நெடுஞ்சாலையில் முடுக்கியைத் திருகுபர்கள்

எங்கிருந்தோ விரற்கணுக்களில் முளைத்தக் கசப்பெனும்

நச்சுப்பல்லிகளை அநிச்சையாக உதறிச் செல்கின்றனர்

பசியாறிய பின் மயில்காணாக் காகங்கள் கரைந்து

மயிற்பீலியைத் தேடிக் கலைந்து செல்கின்றன

தாலுக்கா அலுவலகத்தில் அதிகாலைப் பொழுதுகளில்

ஆதாரட்டையை வேண்டியும் வேண்டாமலும்

எல்லோரும் எப்போதும் நின்று கொண்டிருகின்றோம்

மயிற்பீலியைக் காணாது நச்சுப்பல்லிகளைக் கொத்திக் கொத்தி

நாவரண்டக் காகங்கள் சில மின்கம்பிகளில் துயில்கின்றன

புளூட்டோ கிரகமல்லவென்றும்

புளூட்டோவும் கிரகம்தானென்றும்

பலருக்குப் பின் வந்து வரிசையில் முன் நிற்கும் சிலருடன்

நின்று தாயும் வளரிளம் இஸ்மாயிலும் விவாதிக்கின்றனர்

ஆதாரமின்றி கிரகமென்றால் பிடித்து உள்ளே வைத்து…

அடப் பிடித்தால் பிடித்துக் கொள்ளட்டும்மா

தலைப்பிடப்படாதக் கவிதைகளின் கட்புலனாகாத் தலைப்பாக

காகங்கள் பல அனுமதிபெற்றும் பெறாமலும் வந்தமர்கின்றன

உள்வெளி

தூசிக்கு வீடு

வீட்டில் சன்னல்

கரிக்கு அடுப்பு

அடுப்பில் கறி

இலைக்கு எறும்பு

எறும்பில் இயக்கம்

கூண்டுக்கு இறகு

இறகில் ஒளி

எலும்புக்கு உடல்

உடலில் நிகழ்வு

வேலிக்கு வெளி

வெளியில் வெயில்

இமைக்கு கண்

கண்ணில் உணர்வு

தெரிவு

பெண்ணுக்கு சமையல் செய்யத் தெரியாதென்பதைப்

பெருமிதத்தோடு தெரிவிப்பவர் பையனுக்கு

காரோட்டத் தெரியாதென்பதையறியும்போது

நிச்சயம் பெருமிதமடையத்தான் செய்வார்

எல்லா நற்செய்திகளையும் ஒரே சமயத்தில்

தெரிவித்துத் தகவல் தீர்ந்துப் போய்விடாமலிருக்க

பையனுக்கு பைக்கோட்டவும் சம்பாதிக்கவும் தெரியாதென்பதைப்

பின்பொருநாள் சாவகாசமாகத் தெரிவித்துக் கொள்ளலாம்

பெண்ணுக்கு தேநீர் போடவும் சந்தையில் காய்கறி

பொறுக்கவும் தெரியாதென்பதையொத்த இன்னுமொருசில

தெரிவிக்கவேண்டிய நற்செய்திகள் நிச்சயம் அவரிடமிருக்கும்

தானியங்கும் ஊர்திகள் வரவிருக்கும்போது

தானியங்கும் உந்துவண்டிகள் வராமலிருக்குமா

தானியங்கும் அலுவலகங்களும் தானியங்கும்

சமையலறைகளும் வராமற்போய்விடுமா

ஒவ்வொருவருக்கும் இரு தெரிவுகள் தரப்படும்

நாட்கள் வந்து சென்ற பிறகு தரப்பட்டத் தெரிவுகள்

தெரிவுகளேயல்லவென தர்க்கம் புரியும் நாட்களில்

உடல்களினுள் தரவுநாளங்களில் தகவல் கசியும்

சிற்சில சுடக்குகளில் நீர்மநன்னெறியுடன்

ஐந்திணையும் விரிலியோவும் இன்னபிறவுமிணைந்து

செயற்கையுமியற்கையும் விரல்நுனியினுள் மயங்கி நின்று

என்னுள்ளிருப்பது வேறொன்றல்ல வேறொன்றல்லவென்று

பறைசாற்றிக்கொண்டு மின்னுடலும் மென்னுடலும்

அனுமதிக்கப்பட்டும்படாத கட்டற்ற அதிகாரத்தால்

சிதைக்கப்பட்டு மீள்சுழற்சிக்குட்படுத்தப்படும் நள்ளிரவுகளில்

மனிதம் கண் சுழற்றிச் சுழற்றி விரல் சொடுக்கிச் சொடுக்கி

மீநவீனத்துவமியற்றி குறியீடாக வழிந்தொழுகும்

…….

Comments are closed.