ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டல் என்ற தேசமும் அதன் இளவரசர்களும் ( சிறுகதை ) / றாம் சந்தோஷ் ( அறிமுகப் படைப்பாளி )

[ A+ ] /[ A- ]

download (3)

முன் குறிப்பு: இக்கதையானது உண்மைச் சம்பவங்களையும், மனிதர்களையும் மையமிட்டு எழுதப்பட்டதாகும். எனினும் இக்கதை உண்மையானது இல்லை.

இக்கதை ஒரு தேச எல்லைக்குட்பட்ட எனினும், முத்தேசக் குணமுள்ள அதாவது, தத்தமது உடல்களையும், அவ்வுடல்களுக்கு உள்ளும், அவற்றிற்கு வெளியேயும் வாழ்ந்தலையும் மனங்களையும் ’ஆளும் மொழி’ இன்னதென அறியாமல் இயங்கும் மக்களின் பகுதியிலமைந்துள்ள, ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டல் என்று பலவாறாக அழைக்கப்படும் ஒரு தேசத்தில் வாழ்ந்து வந்த, பிறரை வாழவிடாமல் செய்த, தூக்கு மாட்டிக்கொண்ட இளவரசர்கள் பற்றியதாகும்.

***

இக்கதைப் பற்றிய முந்தைய பத்தி அல்லது அந்த அளவிலான ஒற்றை தொடரைப் படித்தவுடன் இக்கதை முழுவதும் இதே மாதிரியாக வளைத்து, நெளித்து எழுதப்பட்ட கோணல் எழுத்தாக இருக்கப்போகிறதோ என்று அச்சப்பட வேண்டாம். இருக்கிற ஒரு ‘கோ’மானின் கோணல் எழுத்தே போதும் என்கிற அலுப்பின் குரலில் நானும் பல நேரம் பேசியிருப்பதால் அவ்வாறினி இக்கதை வளைய, நெளிய எழுதப்படாது என்று உறுதியளிக்கிறேன். எனினும் அதையும் மீறி ஒருவேளை வளையும், நெளியும் அக்கோணல் எழுத்து இக்கதையுள் நுழைந்துவிட்டால் அளித்த உறுதியைத் திரும்ப பெற்றுக்கொள்கிறேன். இனி கதைமாந்தர்களுக்கு வருவோம்.

***

ஸ்டீபன் பெல்லி என்ற கணபதி, காளிதேவி, கற்பூரநாயகி, கணகவள்ளி ஆகியோரைப் பூஜிக்கும் கண்ணப்பதாசன் என்று அழைக்குமளவிலான, கண்களையே பிடிங்கி வைக்கும் அக்மார்க் இந்து / ஹிந்து, இந்தியன் / ஹிந்தியன், எனினும், ‘தி’கட்சிகளின் புண்ணியத்தால் இந்தி / ஹிந்தி கற்றுக்கொள்ளாதவன் என்பவனைப் பற்றி இக்கதையில் அடிக்கடி வரலாம். அன்றி, ஒருவேளை இந்த பத்தி மட்டுமே அவனைக் குறித்து இக்கதையில் வரும் கடைசி சொல்லலாகவும் இருக்கலாம். இதனையே இக்கதையின் தொடக்கமாக வைத்துக்கொண்டு முன்னகரலாம். என்றால், இக்கதையில் பெல்லி கதாபாத்திரமானது சொல்லப்பட்டதைப் போன்றே சொல்லியும், சொல்லப்படாமலும், சொன்னதைச் சொல்லவில்லை என்று பேசியும் அலையும் ஒரு மோசமானதும் மோசமில்லாதுமான கதைசொல்லியால் எழுதப்பட்டதாகும்.

***

இக்கதையில் முதலில் சொல்லப்பட வேண்டியவராக நான் நினைத்தது ‘மாண்புமிகு இளவரசர் முதலாம் ராஜா’ பற்றிய ஆகும். எனினும், இவ் முதலாம் ராஜாவின் கதையானதுத் தற்கொலையில் முடியவிருப்பதால் அவர்தம் கதையை இக்கதையின் முடிவில் வைப்பதா அல்லது தொடக்கத்தில் வைப்பதா என்ற கேள்வி என்னைத் துளைக்கிறது. என்றால், அத்தகைய துளைப்பிற்கான காரணம், “இதுபோன்ற துக்ககரமான சொல்லலைக் கதையின் தொடக்கத்தில் வைத்தாலோ அல்லது முடிவில் வைத்தாலோ வாசகர்களை / அவர்தம் மனங்களை அது பாதிக்கும் / வருத்தமடையச் செய்யும்” என்று என் நண்பன் சொன்னதுதான்.

அன்றி, அவ்வாறொரு தூக்கில் முடியும் அல்லது தொடங்கும் ஒரு கதையை வாசகன், ஏதேனும் நல்லகாரியத்திற்குப் போகும்போதோ அல்லது அவன் மனம் மகிழ்ச்சியை நாட விரும்பும் சமயத்திலோ படிக்க நேர்ந்தால் “அவன் என்னடா கத இது.. ச்சீ கருமம்.. என்று சொல்லலாம் அல்லது என்னடா இது அபசகுணம் என்று பழிக்கலாம்” என்று இன்னொரு நண்பன் (சிலர் இவனை நண்பி என்று அழைத்து கேலி செய்வர்.) சொன்னதும்தான்.

எனவே இத்துர்சொல்லலை நடுவில் வைத்துவிடலாம் என்று முடிவு செய்து இங்கு வைக்கிறேன். எனினும் இதுவே இக்கதையின் நடு எனப்படும் மையமாக இருக்கும் என்ற எந்தவிதமான உறுதியுமில்லாததால் கதை எழுதப்பட்டு முடிந்தவுடன் இச்சொல்லலை எங்கு வேண்டுமானாலும் நகர்த்திக்கொள்ளலாம் என்பது என் இப்போதைய முடிவு. இது இருக்கட்டும்.

***

இக்கதையில் மாண்புமிகு இளவரசர் முதலாம் ராஜாவைப் பற்றி கூறிய நிலையில், அவர் வாழ்ந்து மடிந்த அதே துறையில் அவருக்கு இளையவராய் வந்து சேர்ந்த மாண்புமிகு இளவரசர் இரண்டாம் ராஜா பற்றியும் கூறவேண்டியது கட்டாயமாகிறது. ஏனெனில் மாண்புமிகு இளவரசர் முதலாம் ராஜாவைப் போன்றே இவரும் தூக்கிமாட்டிக் கொண்டு சாக நினைத்தவராவார். எனினும், தூக்கு மாட்டிக்கொண்டு தன் முன்னவர் துடிதுடித்து மடிந்தார் என்ற தகவலைக் கேட்டு மனம் மாறியவராய் அதாவது, தூக்குமாட்டிக்கொள்ளும் தன் எண்ணத்திலிருந்து பின்வாங்கி, பிறகு மருந்து குடித்து மாண்டுபோனார் மாண்புமிகு இளவரசர் இரண்டாம் ராஜா. இனி இக்கதையில் வரும் குட்டி இளவரசர் என்பவர் குறித்து காணலாம்.

***

குட்டி இளவரசர் பொதுவாக ஆண்களின் கண்களுக்கு அதிகம் தெரியமாட்டார் என்ற செய்தி அவ்வாஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலில் அதிகம் பரவியிருந்தது. அன்றி, அவர் கண்களுக்குதான் ஆண்கள் தெரியமாட்டார்கள் என்ற செய்தியோ அவ்வாஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிருந்து ஒரு பர்லாங்கு தூரமிருந்த பெண்கள் என்பவர்கள் தங்கியிருந்த ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிலும் (முன்சொன்ன தகவலைவிடவும் வேகமாய்) பரவியிருந்தது.

***

குட்டி இளவரசர் தம் அந்தரப்புரத்து இளவரசிகளை விட்டுவிட்டு இந்த பக்கத்து தேசத்து ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலுக்கு வந்தபோது தம் இளவரசிகளுடனான உடல்புணர்ச்சியை இழந்து தவித்தார். எனினும் அவருடைய இந்த கொடும் இழப்பை ஈடுசெய்ய தொழில் நுட்பம் அவருக்கு உதவியது. என்றால், அவர் தமது அந்தரப்புரத்து இளவரசிகளை மனதால், வார்த்தைகளால், வாட்ஸ் அப் வீடியோக்களின் பார்த்தல்களால் புணந்தார்.

மேலும், அவ்வாறு அவர் தொடர்ந்து புணர்ந்துகொண்டிருக்க கடைசியில் அவருக்கு நேரம் போதா நிலையே ஏற்பட்டது. அவ்வாறான நேரம் போதா நிலையை ஈடுசெய்ய வேண்டி குட்டி இளவரசரோ பக்கத்து நாளிலும், அதற்குப் பக்கத்து நாளிலும் நேரத்தைத் தொடர்ந்து கடன் வாங்குபவராய் மாறலானார். அவ்வாறு அவர் தொடர்ந்து நேரத்தைக் கடன்வாங்கத் தொடங்கியபோது, அவரை அவர்தம் குடிகளனைவரும் கடங்காரா என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.

அதுபோக, நம் குட்டி இளவரசரின் கண்களுக்கு ஆண்கள் தெரியமாட்டார்கள் என்பதால் அவருடன் தங்கியிருந்த ஆண்களை அவர் வெறும் உடலற்ற ஆன்மாக்களாகவே – ஆவிகளாகவே உணர்ந்தார். அன்றி, இதை தம் ஹாஸ்ய வரிப்பிற்குப் பயன்படுத்திக் கொள்ள விருப்பிய அவ்வான்மாக்கள் – ஆவிகள் செய்த காரியங்கள் சொல்லத்தக்கதாகாத எனினும் இங்கு சொல்லப்படவேண்டியவை ஆகும்.

அவர்கள் – அவ்வான்மாக்கள் – ஆவிகள் – திடீர் திடீர் என்று நாய்போல் குரைக்கவும், நரி போல் ஊளையிடவும், உடலுறவில் ஈடுபடும் பெண்களென ஹ்ம்… ஹ்ம்… என்று சப்தமிட்டவும் செய்தனர். அவ்வாறு அவர்கள் செய்யும் சப்தத்தால் அதிகம் மிரண்டு போன குட்டி இளவரசர் ஒருநாள், தான் படுத்துக்கொண்டிருந்த மஞ்சத்தின் மீதிருந்து ‘தொப்’பென்று விழுந்தார்.

அவ்வாறு அவர் விழுந்தது அவர் மஞ்சத்திற்குப் பக்கத்தில், கீழே தரையில் படுத்துக்கொண்டிருந்த ஆண் எனும் அவ்இளவரசரின் கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஆன்மா – ஆவியின் மீதாகும். அவ்வான்மாவோ இளவரசரின் கீழ் சராயைக் கீழே இழுத்து ஒதுக்கி அவர் ஆண்குறியைக் கீழே தள்ளியது. அவர் ஆண்குறியானது கீழே தள்ளப்பட அவருடலும் நிலைகுலைந்து கீழே தொம்மென்று விழுந்தது. இதனால் மிகவும் மருட்சியுற்ற குட்டி இளவரசர் தன் குறியைக் கீழேதள்ளி அதன் மூலம் தன்னுடலை கீழ் விழுவித்த, விழுவித்ததன் மூலம் தன் உடலின் கீழ்ப்பரப்பில் எதையோ மேல் தள்ளி கீழ் இழுக்கப் பார்த்த ஆன்மாக்கள் என்ற ஆவிகள் இருக்கும் அந்த அரண்மனையின் கீழடுக்கிலுள்ள, கிழக்கு திசைப் பார்த்த, கிழட்டு அறையின் கீழ்த்தரையில் இனியும் படுக்கக்கூடாது என்று முடிவெடுத்தவராய் கீழே பார்க்காமல் வான்நோக்கிபடி வழிநெடுக கிடுகிடுவென ஓட்டம் கண்டார்.

ஓட்டம் கண்டவர் ஓடிப்போனது அவர் வேண்டாமென ஒதுங்கிய அறைக்கு ஒரு பர்லாங்கு தூர இடைவெளியிலிருந்த ஒரு சிற்றறைக்கு ஆகும். அந்த சிற்றறைக்குச் சிலர் சின்னவீடென்ற பெயர் வைத்திருந்தனர்.

***

இக்கதையை எழுதிக்கொண்டிருக்கும் போதே படித்த அதாவது, கதையை முழுசாய் படிக்காத ஒருவர் பின்வருமாறு சொன்னார்: “இக்கதை கதைகளின் கதையாகும் என்று சிலரும், கதையாடல்களின் கதையாகும் என்று சிலரும் சொல்ல வாய்ப்பிருக்கிறது.”

அவர் சொன்னதை நான் இங்கு முக்கியமாய் குறிப்பிடக் காரணம், சொன்னவர் வெறும் இலக்கிய ஆரூடம் சொல்பவர் மட்டுல்ல. மாறாய் இலக்கிய உலகில் முக்கியமானவராவார். அத்தகைய முக்கியமான ஒருவர் முக்கியமற்று சொன்னதை முக்கியத்துவம் வாய்ந்ததாக அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்வதுதான் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இலக்கிய நிகழ்வாக இருக்கமுடியும். அதனால் அத்தகையதொரு முக்கியத்துவம்வாய்ந்ததும் முக்கியத்துவமற்றதுமான ஒன்றே இங்கு கதைச் சம்பவமாகி உள்ளது என சொல்லிக்கொள்கிறேன்.

அன்றி, அத்தகைய முக்கியமானவர்களுடன் தனக்குத் தொடர்புள்ளதை அப்பொழுதிற்கப்பொழுதே முகநூலில் பதிதல் என்பதே ஒருவன் தன்னை இலக்கியவாதியாக நிருவிக்கொள்ளவதற்கான அடிப்படைத் தேவையாகும். அப்படியான ஒரு முகநூல் பதிதலைச் செய்யும் முன்பு அத்தகைய ஒரு முக்கியமானவரைப் பற்றிய கூடுதல் தகவல் ஒன்றை இக்கதையிலும் பதிந்துவிட்டு முன்னகரலாம். அவர் பற்றிய முக்கியமானதும் முக்கியமில்லாதுமான பதிவு:

என் நண்பர் அல்லாதவரும் பல கருத்தரங்குகளைத் தான் நடத்தும் கருத்தரங்குகளில் பங்கேற்று கட்டுரை படிக்கவருவோரிடமே காசுவாங்கி நடத்தியவருமானவர்தான் மேற்சொன்ன முக்கியமானவராவார். அவரை இங்கு நாமொரு கில்லாடி என்றுதான் பாராட்ட நினைக்கிறோம். எனினும், அவரை நெறுக்கமாக அறிந்த பலரும் அவரைச் சொல்லாடி – வாயாடி – கேடி என்றே அதிகம் புகழ்ந்துரைப்பர் (ஆனால் இதை அவர்முன்பு சொல்வதில்லை.) என்பதால், நாமும் அவர்தம் வழி சென்று அவரை பெரிதாய் புகழ்துரைப்போம்; போற்றுவோம். கேடியார் வாழ்க – அவர் போன்றவர் தம் புகழ் ஓங்குக!

கேடியார் அவ்வாறு கருத்தரங்குகள் நடத்திக் கிடைத்த மேல் வருமானத்தில் சில சின்ன வீடுகளைக் கட்டியுள்ளார் என்பது இங்கு கட்டாயம் சொல்லவேண்டிய தகவல் ஆகும். (எனினும், இதை ஒற்றை அர்த்தத்தில் மட்டுமே புரிந்துகொள்ள வேண்டும் என்பது இங்கு வைக்கப்படும் முக்கிய வேண்டுகிறோம்.) அதுபோல், எழுதிக்கொண்டிருக்கும் போதே இக்கதை பற்றி அவர் புகழ்ந்ததுமேகூட ஒரு கப் காபிக்காகத்தான் என்பது இங்கு கட்டாயம் சொல்லக்கூடாத தகவல் ஆகும். என்றாலும், அன்னார் புகழை நாம் ஆவணப்படுத்த வேண்டியுள்ளதால் சும்மா அதையும் சொல்லி வைப்போம். சுபம்.

இடைக்குறிப்பு 1: கதைக்கு இவரைப் பற்றிய ஆவணம் தேவையில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவரும் கதைமாந்தர்தான் என்பதைப் புரிந்துகொள்க.

***

முற்சொன்ன சிற்றறை அல்லது சின்னவீட்டு என்பதில் வாழ்ந்துவந்தவர்கள் முதன்மை இளவரசரும், அவரின் முக்கிய நண்பியுமாவர். அந்நண்பியைச் சிலர் நண்பன் என்று சொல்லி கிட்டல் செய்து வந்தனர் என்பதைத் தவிர்த்து அவளைப் பற்றி அதிகம் சொல்வதற்கில்லை. அன்றி, மாண்புமிகு முதன்மை இளவரசரே இங்கு முக்கியமாய் சொல்லப்படவேண்டிய முக்கியமானவரும் முக்கியமல்லாதவருமாவார் என்பதால் இனி அவர் குறித்து காண்போம்.

முதன்மை இளவரசரின் சொந்தப் பெயர் என்னவென்று தெரியாத அளவுக்கு அவருடைய பட்டப் பெயர்கள் அந்தப் பக்கத்து தேசத்து ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலில் பிரசித்தம். முதன்மை இளவரசர் காலைகளில் ஒருவிதமாகவும் அது சாயும் வேளைகளில் இன்னொருவிதமாகவும் இருக்கும் ஒரு வினோதமான மனிதர் என்று கூறுவதுண்டு. அப்படியான ஒருவரைப் பற்றி புரிந்துகொள்ள ஒரு சிறு உதாரணம்:

முதன்மை இளவரசர் தான் படுத்துறங்கும் போது ஒரு சிலையென மல்லாக்கப் படுத்தபடி குரல் கொடுத்துக்கொண்டிருப்பவராவார். அப்படியாக அவர் சிலையெனப் படுத்துக்கொண்டிருக்கும் போது அவரின் வலது கை வான் நோக்கியும் அல்லது மேல்நோக்கியும், இடது கை மண் நோக்கியும் அல்லது கீழ்நோக்கியும் இருக்கும். வலக்கையில் ஒரு கைஅருவாள் இருப்பதைப் போன்றும் இடக்கையில் ஒரு மணிச்சரடு இருப்பதைப் போன்றும் இருக்கும். அதுபோல், கால்கள் இரண்டும் ஒற்றென்றிராமல், ஒரு காலை மண்டியிட்ட வாகிலும், இன்னொரு காலை ஓடுவதற்குத் தயாராக உள்ளதைப் போன்று அதன் முட்டியை ஒரு இன்ச் முன்னோக்கியும் வைத்திருப்பார் முதன்மை இளவரசர்.

எனினும், அப்படியான ஒரு சிக்கலான சிலையை முதன்மை ராஜா தன் உடலில் செதுக்கிக்காட்ட எடுத்துக்கொள்வது வெறும் ஒரே ஒரு செகண்டுதான். என்றால், அத்தகையதொரு வேகத்துடன் பாயும் மாய மான் அவர்.

***

தான் ஒரு மாய மான் என்பதால் அடிக்கடி மாயமாகிப் போகும் குணமுடையவராக இருந்தார் முதன்மை இளவரசர். அவ்வாறு அவர் மாயமாகிப்போனபோது, அவர் தன் குடிகளின் மீது சொன்ன குற்றச்சாட்டு அந்த தேசத்து ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிலும், அதற்குப் பக்கத்து ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிலும் மிகப் பிரசித்தம். அப்படியாக அவர் என்னதான் சொன்னார் என்பதன் விளக்கம் பின்வருமாறு:

முதன்மை இளவரசர் தன் குடிகளுடன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றார். திடீரென அவ்நகர்வலத்தின் போது காணமல் போனார் முதன்மை இளவரசர். அப்போது அவரைத் தேடி அலைந்தவர்கள் அவரைக் காணவில்லையே என்று அலைந்து அலைந்து பின் அலுப்புற்றனர். எனினும், கடைசியில் அவர்களிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார் முதன்மை இளவரசர். அவ்வாறு வந்து சேர்ந்தவரிடம் அவர்கள், “எங்குபோய் தொலைந்தீர்கள்.. நீங்கள் காணவில்லையே என்று நாங்கள் எவ்வளவு தவிப்புற்றோம் தெரியுமா?” என்றனர். அதற்கு மறுமொழியாற்றிய முதன்மை இளவரசர், “என்ன நான் தொலைந்து போனேனா? நீங்கள் அனைவரும்தான் கூட்டாய் காணமல் போனீர்கள்!” என்றார். அதை கேட்டவுடன் அவர்தம் மந்திரி, மைத்துனர்கள் அனைவரும் திகைத்துப் போய்த் தின்ன எதையோ தங்கள் வாய்களில் தினித்ததுக் கொண்டவர்களைப்போல திறந்தவாயுடன் விட்டம் பார்த்து ஆச்சரியமுற்றனர். என்ன இருந்தாலும் முதன்மை இளவரசரின் மூளை முதன்மை இளவரசரின் மூளைதான்!

***

அடுத்து, இக்கதையை எப்படித் தொடர்வதென்பதை நினைத்தால் அது எனக்கு மலைப்பைய் வரவழைத்து விடுகிறது. அவனவன் காலை எழுந்து காலைக்கடன் முடித்தவுடன் கை வைத்தால் கட்டற்று கணக்கில்லாமல் எழுதுகிறான். சிலவனோ மாலை வந்ததும் மருந்து ஒரு குப்பி ஏன் (சில மொடா குடியன்கள்) குடத்தையும் கூட அசால்டாய் குடித்துவிட்டு கண்களை மூடியபடியே எழுதுகின்றான். இத்தனைக்கும் இவர்கள் எழுதுவது ஒன்றிரண்டு பக்கங்களோ ஒரு பத்து பக்கங்களோ ஒரு நூறு பக்கங்களோ அல்ல. மாறாய், தொட்டால் துவழாமல் அன்றைய நாளின் 24 மணி நேரமும் பத்தாமல் பக்கத்து நாளில் ஒரு மணிநேரத்தைக் கடன்வாங்கி ஆயிரம் இரண்டாயிரம் பக்கங்கள் எழுதும் கருமமே கண்ணான கடவுள்கள். ஆனால், நானோ இவர்களளவு எழுத யோக்கியமற்று ஒற்றைப்படை பக்கங்களுக்கே நாக்கு தள்ளி மல்லாகப்படுத்துவிடும் சைத்தானாவேன்.

***

நான் இப்படி என் முன்னோர்கள் பழிக்கும் சைத்தானாகிவிட்ட துக்க முடிவை என் மனம் செறித்துக்கொள்ள மறுக்கிறது. சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளலாமா நம் கதையில் வரும் ராஜாக்களைப் போல என்றும் தோன்றுகிறது. சரி தற்கொலை என்றால் முதலாம் இராஜாவைப் போல தூக்குமாட்டிக் கொண்டா அல்லது இரண்டாம் ராஜாவைப் போல மருந்து குடித்தா? அப்படி ஒருவேளை மருந்து குடிக்கலாம் என்று முடிவெடுத்தால், இரண்டாம் ராஜா குடித்ததைப் போன்றே விஷமருந்தை மட்டும் ராவாய் குடிப்பதா? அல்லது ‘உன் செய்யுளுலக முன்னவன் நான்தான்’ என்று என் முன்னே முகநூல்களில் வந்து நிற்பவர்கள் குடிக்கும் ‘அந்த’ மருந்துடன் மிக்ஸ் செய்து குடிப்பதா? அடச் ச்சீ! ஒரு நிமிடம் பொறுங்குள். இது என்ன கருமம் பிடித்த ஆலோசனை எனக்கு. இல்லை. இல்லை. இதை இது என்ன துரதிஷ்டம் பிடித்த ஆலோசனை எனக்கு என்று இலக்கிய நயம் மேலிட செல்லிவிட்டு இனி மீண்டும் முதன்மை இளவரசர் கதைக்கு வருவோம்.

இடைக்குறிப்பு 2: கதைக்கு இக்கதைசொல்லியின் கதை தேவை இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவரும் கதைமாந்தர்தான் என்பதைப் புரிந்துகொள்க.

***

முதன்மை இளவரசர் என்னதான் பல விஷயங்களில் மஸ்தான் என்றாலும், அந்த விஷயத்தில் அவர் ஒரு சுஸ்தான்* (சுஸ்து – சோர்வு, சோற்வுறக்கூடியவர்) என்று கூறுவாள் அவருடைய நண்பி. அவ்வாறு முதன்மை இளவரசரைப் பற்றி அவள் கடைசியாக குறை கூறியது நம் குட்டி இளவரசரிடம்தான். குட்டி இளவரசரிடம் நண்பி தன் குறையைக் கூறி முடிக்கும்போது, குட்டி இளவரசரும் அவளிடம் தனக்கு நேரவிருந்த கொடுமையைக் கூறினார்.

நண்பியோ தாங்கள் சொல்வது தனக்கு விளங்கவில்லை என்றும் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும் என்றாள் குட்டி இளவரசரிடம். அவரோ இதுதான் சாக்கு என, விளக்கினால் என்பதை விலக்கினால் என்பதாகப் புரிந்துகொண்டர் போல் நடித்து, அவள் ஆடைகளை விலக்கத் தொடங்கினார். அவர் அவள் ஆடைகளை விலக்க அவளுடம்பு அவருக்கு விளங்கத் தொடங்கியது.

***

குட்டி இளவரசர் தனக்கு நேரவிருந்த கொடுமையை நண்பிக்கு விளக்கியபோது அல்லது நண்பிக்கு, விலக்கி விளக்கியபோது அவரின் மனபாரம் சற்றே குறைந்திருந்தது. அன்றி, அதைவிடவும் தான் விளக்கமுற்றதன் முடிவில் அல்லது தன் ஆடைகள் விலக்கமுற்று தான் விளக்கமுற்றதன் முடிவில் அவள் உடல்பாரம் சற்றுக்கும் மிகுதியாகவே குறைந்திருந்தது.

இருவர்தம் பாரமும் குறைய இவர்தம் கதை முடிய நேர்வது ஒரு சுப – மங்கல முடிவுதான். எனினும், மேற்சொன்ன இருவரை ஒருவராகப் பார்த்துவிட்டார் நண்பியின் முதன்மை நண்பர் அதாவது, நம் முதன்மை இளவரசர் என்பது இக்கதையின் முக்கியமானதும் முக்கியமல்லாததுமான திருப்பம் ஆகும்.

***

முதன்மை இளவரசர் தான் பார்த்த முக்கியமானதும் முக்கியமல்லாததுமான அந்த திருப்பத்தைத் திரும்பத் திரும்ப எல்லோரிடம் சென்று சொன்னது குட்டி இளவரசருக்கு வருத்தத்தையும், வருத்தத்தின் உச்சத்தையும் காட்டியது. இதனால் சற்றும் மனம் தளராத மாயமானானவர் கடைசில், தன் உடல் தளர்த்தி மாயமனார். இவர் இப்படி மாயமாகிப் போனது பற்றி ஏற்கனவே ஒருமுறை கூறப்பட்டது. மேலும், மங்கலம் கருதி அதன் மீளச் சொல்லுதல் இங்கு தவிர்க்கப்படுகிறது.

***

முதன்மை இளவரசரைப் பற்றி கூறும்போது மூன்றாம் நிலை இளவரசரைப் பற்றியும் கூறவேண்டுமென்பது இக்கதையில் தவிர்க்க முடியாததாகும். அவ்வாறு முதன்மை இளவரசரைப் பற்றி கூறியவுடன், இரண்டாம் நிலை இளவரசரைப் பற்றி கூறாமல் எதற்கு மூன்றாம் நிலை இளவரசர் பற்றி கூறுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். என்றால், ஏற்கனவே இரண்டாம் நிலை இளவரசரைப் பற்றி கூறியாகிவிட்டதென்பதும், அவர் மாய்ந்துபோக முழுமுதல் காரணமாக இருந்தவர்தான் முதன்மை இளவரசர் என்பதும் இங்கு சொல்லவேண்டியதும் சொல்லக்கூடாததுமான தகவல்களாகும். அதுபோல, குட்டி இளவரசரும் மூன்றாம் நிலை இளவரசரும்தான் இக்கதையின் ராஜாக்கள் ஆவார் என்பதும் இங்கு முக்கியமாய் சொல்லவேண்டியதும் அதிமுக்கியமாய் சொல்லக்கூடாததுமான தகவல் ஆகும். இது இருக்கட்டும்.

***

மூன்றாம் நிலை இளவரசர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத அளவுக்கு உடலுடையவர் அல்லது உடல் என்று அடையாளப் படுத்துமளவிலான கொஞ்சம் எலும்புகளையும் அதன் மேல் ஒரு பெரும் போர்வையென தோலைப் போர்த்தியவருமாவார். தன் உடலில் கொஞ்சம் சதையும் இருக்கிறதென்று சதா வாதித்திட்டுக் கொண்டிருப்பவரின் அங்கங்களுள் முக்கிய அடையாளம் அவர் தலைமுடி ஆகும். பிறரிலிருந்து வேறுபட்டு பாதி மழித்தும் மழிக்கமலுமான ஆர் ஸ்டைல் – ஹேர் ஸ்டைல் – ஓர்ஸ்டைல் என்ற ஒரு வடிவழகை தன் தலையழகாய் கொண்டிருந்தார் என்பது அவர் வாழ்ந்து வந்த ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிலும், அவ்வாஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிருந்து ஒரு பர்லாங்கு தூரமிருந்த பெண்கள் என்பவர்கள் தங்கியிருந்த ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிலும் பரவலாக்கம் பெற்றிருந்தது. இதுவொருகையில் பிறரை அவர்பால் பொறாமை கொள்ள வைத்திருந்தது. அன்றி, ஆர் ஸ்டைல் – ஹேர் ஸ்டைல் – ஓர்ஸ்டைல் மன்னன், ஒல்லிக்குச்சி மன்னன் என்று பலவாறாக அழைக்கப்படும் அவரைப் பார்த்து பிறர் பொறாமை படும் அல்லது பொறாமையே பொறாமைபடும் பண்பொன்று இங்கு குறிப்பிடத்தக்கது.

அது, மூன்றாம் நிலை இளவரசர் படுத்த அடுத்த நொடி பரலோகம் போனவர் போல் தினந்தினம் தற்காலிமாகமாய் தன் உடலின் தொடர்பை நிலவுலகுடன் துண்டித்தபடி தூங்குவார் என்பதாகும்.

அத்தகையவர் காலை வந்தவுடன் தன் கால்களை அசைத்து நிலவுலகம் மீள்பவரான அவரின் இடி விழுந்தாலும் எழாத எழிலுறக்கத்தைப் பார்த்து எரிச்சலுற்றனர் சிலர். அந்தச் சிலர், முன்றாம் நிலை இளவரசர் தன் உள்ளாடைகள் அணிந்துகொண்டு உறக்கிக் கொண்டிருக்குபோது எச்சில் துப்பும் இரண்டுறுப்புகளில் கீழுள்ளதான ஓர் உறுப்பில் ஒரு துண்டை எடுத்து அதைச் சுருட்டி வைத்துத் துவைத்தனர். அப்படியாக அவர்கள் அதிரத் துவைத்தும் அவரோ அசைந்தாரில்லை. அதாவது, அவர் துள்ளி எழவில்லை என்றால்கூட பரவாயில்லை; குறைந்தபட்சம் மெல்லகூட எழவில்லையே என்ற மனவருத்தத்தால் அவர்கள் மனமுடைந்து போயினர்; மேலும், இதனால் பாதிப்புற்று அந்நாளுக்கு மறுநாள் அம்மறுநாளின் உச்சி மதியம் வரும்வரை மயக்கம்போட்டு விழுந்தனர்.

அப்படியான தூக்கமிழக்கா தூய மன்னனின் பாதி நாள் நில உலகத் துண்டிப்பை சிதைப்பது எப்படி என்று பலரும் சதி செய்துவந்த வேளையில், அந்த வேலையை ஒரு ரதி வந்து செய்யலானார். அந்த ரதி வெறும் ரதி இல்லை. சுரஸ்வதி.

சுரஸ்வதி கடாச்சியம் பெற்றவராய் ஒருநாள் ராவு தொடங்கி மறுநாள் ராத்திரி ஆகும்வரை விடாமல் எதையேனும் வாசித்து வாசித்து வாட்டம் காணத்தொடங்கினார் மூன்றாம் நிலை இளவரசர். அன்றி, அவருக்குத் தானும் ஒரு எழுத்தாளனாகி வாசகர்களை வாட்டலாம் என்ற ஆசை மனதிலும் அது உறங்கும் உடலிலும் தோன்றியது. இதற்குத்தான் யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று புரிந்துகொண்டிருந்தார் மூன்றாம் நிலை இளவரசர்.

மேலும், அவ்வாறு தோன்றிய ஒரு ஆசையினடிப்படையில் எழுதத் தொடங்கிய மூன்றாம் நிலை இளவரசர், அதன் தொடக்கத்திலேயே துவண்டுபோய் மாண்டுபோக நினைத்து மருந்தும் குடித்தார். இது ஏற்கனவே இக்கதையில் சொல்லப்பட்டது என்பதாலும், மங்கலம் கருதி அதன் மீளச் சொல்லுதல் இங்கு தவிர்க்கப்படுகிறது என்று கூறி முடிப்போம். சுபம். மங்கலம்.

பின்குறிப்பு: இக்கதை சுபச்சொல்லுடன் முடியும் மங்கல கதையே ஆதலால் எங்களை இக்கதை துன்பிக்கச் செய்கிறது என்று துளைக்காதீர்கள்.

•••••

Comments are closed.