சண்முகம் சிவகுமார் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

images (3)

01.
வெறுமையின் முகம் துடைத்த சூரியப்பூ

மனத்தீயை
சுற்றியெடுத்தது
வண்ணாத்துப்பூச்சி வார்த்தை

வார்த்தையில்
இறைந்து கிடக்கும்
சோர்வின் பருக்கைகளை
உசுப்பி பறந்த
வண்ணாத்துப்பூச்சியின் முகத்தில்
வெளிச்சத்தின் விதை

விதையின்
கைநீட்டலில்
அகம் அதிர்ந்தது

அகமிழந்த வாழ்வின்
முகத்தில்
பூவின் மலர்வு தோன்றியது

இனி எல்லோருக்கும்
நம்பிக்கையோடு கொடுப்பேன்

வெறுமையின் முகம் துடைத்த
சூரியப்பூவான என்னை

02.
அறுவடை

என்னிடம் விதையொன்று இருந்தது
அதை
என் ஆர்வங்களில்
ஊற வைத்து
கனவுகளில் விதைத்துவிட்டேன்

முளைவிட்ட அரும்பு
தனக்கான உலகத்தில்
தலை ஆட்டியப்படி வளரத் தொடங்கியது

கிளைவிட்ட தாவரம்
பூத்தது
காய்த்தது
கனிந்தது

பறவைகள்
வண்ணாத்துப்பூச்சிகள்
அணில்கள்
பூச்சி புழுக்களின்
ஜீவனோடு என் மரம்

உள்ளுக்குள் விரிந்த உலகத்தை
யாருக்கும்
தெரியாமல் மறைத்து வைத்தேன்

நேற்று அந்த மரத்திலிருந்து
பிடுங்கி வந்த கனியொன்றை
எனது நண்பனுக்கு கொடுத்தேன்

அவனது கனவில்
ஆர்வமாய் விதை முளைப்பதாய்
அவன் கூறினான்

03.
பாத்திரம் நிரம்பி வழிகின்ற போது

வரிசையில்
மிகவும் பின் தள்ளப்பட்டோம்

பாத்திரம் நிரம்பி வழிகின்ற போது

எங்களுக்கான
மகிழ்ச்சியை விதைத்ததை மறந்துவிட்டோம்

பாத்திரம் நிரம்பி வழிகின்றபோது

யாருக்காகவோ அறுவடை செய்தும்
களைத்துவிட்டோம்

பாத்திரம் நிரம்பி வழிகின்றபோது

எங்கள் தூரிகையில்
நிகழும் புதுமையை தாரைவார்த்துவிட்டோம்

பாத்திரம் நிரம்பி வழிகின்றபோது
கனிமரங்களை கொண்டு வரும்
கடவுள்கள்
முன் வரிசையில் நின்று
உழைப்பின் ஜீவச்சாற்றைப் பெற்றனர்

பாத்திரம் நிரம்பி வழிகின்றபோது
வரிசையில்
நாங்கள்
மிகவும் பின்தள்ளப்பட்டோம்.

04.
வாள் போல் வளரும் சொற்கள்

எங்கள்
கவிதையெங்கும்
அனுமதியின்றி
அலைகின்றன
ஓநாய்கள்

கவிதையின் அழகியலை
நவீன உத்திகளை
தின்று தீர்க்கின்றன

வெறுமையான கவிதைக்குள்
பூரணம் அற்ற
எங்கள் முகம்
காண சகிக்காது கிடக்கிறது

தவறி கிடக்கும்
வார்தைகளில்
எழும்பிய புதுக்குரல்களை
நடு இரவொன்றில்
யாரும் எதிர்பாராவண்ணம்
ஓநாய்கள் வேட்டையாடின

பின்
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை
எங்கள் வார்த்தைகள் மனிதருக்கானது எனும்
ஞாபகம் வந்து தொலைக்கிறது

பல்லைக் காட்டி வரும்
அவைகளைக் கண்டு
எங்கள் கவிதையெங்கும்
சொற்கள்
வாள் போல் வளர்வது
வேட்டைக்காகவே

05.
என் கவிதை

திறந்த கண்களுடன்
என்னைத் தேடிக்கொண்டிருக்கிறது

அது
வட்டத்தை விட்டு
வெளியே பாதத்தை எடுத்து வைத்துள்ளது

புறாவுக்கு உள்ளது போன்ற
சிறகுகளை எனக்குத் தருகிறது

நெரிசல்களில் உடைந்து
மறைந்து கொண்டிருக்கும்
மலையின்
தேநீர் கோப்பையை
நம்பிக்கையால் ஆகர்சிக்கிறது

காப்பற்றப்படவேண்டிய
மலையின்
மகிழ்ச்சியின் மீது
ஒளியால் பிரகாசிக்கிறது

நூற்றாண்டு ஏமாற்றங்களால்
பிடிபடாத
பவித்திரத்தை வெளிக்காட்டுகிறது

இப்படி
ஒளித்துவிட முடியாத
அழகான கவிதைகள்
என்னைத் தேடிக் கொண்டிருக்கின்றன
நானும்…

06.
கவிதையில் மாற்றம் செய்து கொண்டிரும்பவர்கள்

என் கவிதையில்
உன் கடவுள்
என்ன செய்து கொண்டிருக்கிறார்

உன் கடவுள்
என் கவிதையில்
என்னச் செய்தாரோ
அதைச் செய்துகொண்டிருக்கிறார்

என் கடவுளும்
உன் கடவுளும்
கவிதையில்
என்ன செய்து கொண்டிருக்கின்றனர்

அவர்களை மறந்துவிடாதிருக்கும் படி
கவிதைக்குள்ளிருந்து
ஜீவனை கொள்ளையிட்டுக் கொண்டிருக்கின்றனர்;

பின்
நீயும் நானும்
கொலை புரிந்து கொண்டாம்;
கடவுளில் பெயரில்

07
பூனை மற்றும் குருதியெழும் விதையும்

விதையின் வெடிப்பில்
எழும்
குருதியின் சூட்டில்
ஒளி மிக
மலரும் வார்த்தை
நகரும் தனிமையை
பூனையாக்கிவிட்டது

பூனை
இருட்டை ஓவியமாக கீறி
வெளியெங்கும் வைத்தது

ஏமாறும் எலிகள் வரும்வரை
இருட்டை நக்கியப்படி அமர்ந்திருந்தது

விதையின் வெடிப்பில்
எழுந்த குருதியின் வாசம்
பூனையின் வேட்கையை பெருக்கியது

அதீத உடல் கொண்ட பூனை
உலகை எலியாக்கி
சப்பித் தின்றுவிட்டு
இருளின் ஓவியத்தை வரைந்து கொண்டேயிருக்கிறது

08
அச்சாகிய சொற்களுக்கு பின்

யதார்த்தத்தை நோக்கி
மிகுந்த நம்பிக்கையோடு
ஓடி வந்த நண்பர்களே
பின்
எம்மிலிருந்து விடுவிக்கப்பட்டவைகளை
நிரம்பும்
மொழியற்று
வேறுவேறு
இழைகளுக்கு
முகத்தை நீட்டுகின்றோம்

உழைப்பின் வரலாற்றை
முழுவதும் விழுங்கிய
பாம்பின்
கரிய வயிற்றுக்குள்
நண்பர்களே
நாம் சிக்கிக் கொண்டோம்

பாம்பின் மொழியிலேயே
பேசவும் பழகினோம்
இப்படி
பிளவுண்டது மொழி

எம் அடையாளத்தை
இழந்தோம்
அவரவர் இழிவை
வரிசையாகச் சென்று
அச்சாக்கும் சொற்களுக்குப் பின்
இன்றும்
வழிந்துகொண்டிருக்கிறது;
நண்பர்களே நமது
இரத்தமும்
சதையும்
வார்த்தைகளும்

09.
இளவரசரின் வரவேற்பில் காணாமல் போன கவிதை

நான் எழுத நினைத்தேன்
அவசியமான அர்த்தங்களை
அதிகாரத்திற்கு புரியும்படி
ஒரு கவிதை

முதலில்
என் முகத்தை
கையில் ஏந்தி
தோற்றப் பொழிவை கூட்ட
மகாராணியின் பேசியல்
ஒன்றை செய்தேன்

என் நாக்கை
நன்றாக வலித்து
உச்சரிப்புகளில்
“சார்ல்ஸ்” சாயலை கூட்டினேன்

என் மூளையை
எடுத்து
குளிர் சாதனப் பெட்டியில்
வைத்தேன்

ஆம்
எழுத தொடங்கினேன்
இளவரசரின் சப்பாத்துக்களில்
தூசி படியவில்லை என
நான் தான்
நவீன கவிஞன்

10.
சுதந்திரம்

காத்திருக்கத் தொடங்கினர்
தாள்களில்
வரையப்பட்ட மரங்களில்
பழுத்து விழும்
கனிகளை
எடுத்துச் சென்று
தம் குழந்தைகளின்
பசியாற

………………………………….

Comments are closed.