பூவிதழ் உமேஷ் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

12074886_793797267432431_3543079615050370159_n

நீர்த்தடத்தை இரத்தத்தில் வரைதல்

தாகத்தின் உச்சி நனைய கடைசி துளிகள் பருகி
கடைசி மீன் குஞ்சின் துடிதுடிப்பை
பார்த்தவாறு பறந்தது பறவை

புனலில் ஒவ்வொரு நாளும் ஓரிடத்தில்
படுத்த கூழாங்கற்கள்
நீர்மை தேடும் கொடுங்கனவில் இருந்தன

நீண்ட தாகமென படுத்திருந்த ஆறு
தன் கழுத்து உயர்த்தி பார்த்ததபடி லாரிகளில் சென்றது
லாரியின் சக்கரங்கள்
நீர்தடம் ஒன்றின் கடைசி கோட்டை
வரைந்தபடி சென்றன
நேர்மையான அலுவலரின் இரத்தத்தில்

கடைசியாக குளித்த நாளைப் பற்றி
காலி குடங்களில் கதைகள் நிரப்பினார்கள்

திருடுவதற்கு கூட
இல்லாத பொருளான தண்ணீர்
அவமானங்களை உருவாக்கும் பொருளானது

நான் கொல்லாத மீன்களின் கருவாட்டை
சுவைத்தபடி இருந்தேன்
தவளைகளின் பாட்டை
பாம்புகள் முணுமுணுத்தபடி
மணலற்ற ஆற்றினை வரைந்து சென்றன

•••••

ஓவியனின் காதல்

வானத்திற்கு ஒரு வாசல் வைத்து
ஓவியம் வரைந்தான்
பறவைகள் மட்டும் வந்து போகலாம் என்றான்
தன்னை பறவையாய் அலங்கரித்தவள்
உள்ளே சென்று மரக்கிளை ஒன்றை பரப்பினாள்
தன் நரம்புகளில் வேர் பாய்த்தபடி.

ஓவியனின் அன்பு நிறமற்ற கனியாக
இருப்பதை அறிந்து
உலகின் புதிய சொல் ஒன்றினால்
பறவைகளை அழைத்தாள்

புதிய நடனம் ஒன்றின் சாயலோடு
இரைக்கு பதிலாய் மேகத்தை கொத்திய ஈர அலகோடு பறந்து வந்தன

தன் முத்தத்தில் ஒரு தாழ்ப்பாள் செய்து
பறவைகளுக்கு பழக்கியபடி
சேலை தலைப்பில் பிரிந்த நூலின் நுனியில் இருந்த
பழைய காதல் கவிதையைப் படித்தாள்
மேகத்தின் ஆழத்தில் இருந்த
ஆதி மௌனம் சொல்லான நேரத்தில்

யாருக்கும் தெரியாமல் இறந்த ஓவியனை
சிறு துணுக்கு ஓவியங்களாய்
பறவைகள் சுமந்து சென்றன .

•••••

செடியில் பூத்தவள்

இன்னும் பூக்காத அந்த சிறிய செடியின்
இலைக்கோணத்தில்
தனது சிவப்புக்கல் மூக்குத்தியை
பூக்க செய்கிறாள் சிறுமி

கொஞ்சம் தூரத்தில் ஒருசில துளிகளோடு
நிற்க மனமின்றி நின்ற மழை
மண்வாசனையை அனுப்புகிறது

யார் சொல்லியோ வருகிற வண்ணத்துப்பூச்சி
தேன் குடித்ததாய் மயங்குகிறது

இனி எப்படி காய்ப்பதென
பதறுகிறது செடி

காற்று ஒரு ஆட்டிடையனை
சற்று மயக்கி தூங்கவைக்கிறது

ஆட்டு மந்தை ஓடுகிறது
எதிரியற்ற போர்க்களமென

பயமறியாத மறி ஒன்று செடிமீது
கோலையோடு புழுக்கை போட்டு விரைகிறது

செடி பச்சை நிற காய்களோடு
இன்னும் கொஞ்சம் வளர்ந்துவிட்டது
நாளை மறி மேய்ந்து கொள்ளட்டும் என்று

சிறுமி தன் மூக்குத்தியின் ஒளியை
சூரியனுக்கு கொடுத்தபடி நடக்கிறாள்

••••••••••••••

Comments are closed.