கைவிடப்பட்ட ஒரு கதை ( சிறுகதை ) : ஜீ.முருகன்

[ A+ ] /[ A- ]

download (24)

‘நாயர் மெஸ்’ என்று ஒரு கதை எழுதி நண்பர் ஒருவருக்கு படிக்க அனுப்பியிருந்தேன். ‘கதை சரியாகவே வந்திருக்கிறது. ஆனால் உயிர்ப்பில்லாமல் இருக்கிறது’ என்றார். அவர் சொன்ன பிறகு எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அதனால் வழக்கம் போல அதை கிடப்பில் போட்டுவிட்டேன். இப்படித்தான் கதைக்களத்தின் தேர்வு நம்மை ஏமாற்றிவிடும். அதை எப்படி எழுதினாலும் பல்லிளித்துவிடும். ஆனால் ‘நாயர் மெஸ்’ கதையை எதற்காக எழுதினேன் என்பது முக்கியமாகப்பட்டது. அது பற்றி எழுதலாமே என ஒரு யோசனை. அதாவது கைவிடப்பட்டக் கதையைப் பற்றிய ஒரு கதையை. அப்படியே அக்கதையை சொல்லிவிடும் வாய்ப்பும் அமைந்துவிடுகிறதல்லவா.

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது நண்பர்களுடன் ஒரு மதுவிடுதியைத் தேடிப் போனாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊரில், அதுவும் மதுவிடுதிக்குச் சென்று குடிப்பது அதுதான் முதல் முறை. சிலருடைய வழி காட்டுதல் எங்களை பழைய நாயர் மெஸ்ஸுக்குத்தான் இட்டுச் சென்றது. அது டாஸ்மாக் பாராக மாற்றப்பட்டது அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. நண்பர்களுடன் அங்கிருந்து கிளம்பி வந்தப் பிறகும் நாயர் மெஸ் ஞாபகத்தில் வந்துகொண்டே இருந்தது. அது ஒரு டாஸ்மாக் பாராக மாறிப்போன இன்றைய நிலை ஏதோ ஒரு காவியத் தனமான வீழ்ச்சிப் போலவேத் தோன்றியது. அக்கதையை எழுதத் தூண்டியது அதுதான். அதன் காவிய நாயகியாக அன்னம்மா மாறினாள். அவள் நாயரோடு வாழ வந்ததும், நாயருக்குப் பின் நாயர் மெஸ்ஸின் உரிமையாளரானதும், அவளின் மரணமும் ஏனோ ஜெயலலிதாவின் வாழ்வோடு ஒப்புமை கொண்டு நின்றன. அப்போது அவர் மருத்துவமனையில் இருந்தார். இந்த ஒப்புமைகூட அக்கதையை எழுதியதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

கதையை எப்படித் தொடங்குவது என யோசிக்கையில், அன்னம்மா என்ற பேரழகிக்கு நகரத்தில் நிறைய காதலர்கள் இருக்கிறார்கள். அவளின் நினைவாக அவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் அன்னம் சைக்கிள் கடை, அன்னம் சலூன், அன்னம் மளிகை, அன்னம்மா பழக்கடை, அன்னம்மா உணவகம் என்பது போல பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

இவ்விதமான ஆரம்பம் கதையின் போக்கில் பொருத்தமில்லாமல் போனதால் நீக்க வேண்டியதாகிவிட்டது. மேலும் படர்க்கையில் சொன்னதால் கதையின் வசீகரம் குறைவது போலவும் இருந்தது.

பிறகு ஒரு காதல் காவியத்தின் தொடக்கம் போல முன்னிலையில் எழுதிப்பார்க்கப்பட்டது. அன்னம்மா இறந்த பிறகு அவளது சடலம் படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கிறது. அவளுடைய மரணம் அறிவிக்கப்படாததால் அவள் தனியாகவே படுத்திருக்கிறாள். அவளை அந்நிலையில் காணும் நாயரின் ஆவி ஆற்றாமையில் புலம்பந்தொடங்குகிறது.

நாயரின் ஆவி பேசுகிறது:

“நான் முதன் முதலில் பார்த்த அன்னம்மாதான் நீ என்றால் காலம்தான் எவ்வளவு கொடியது. உன் அழகிய முகத்தை வெளிறிப் போகச் செய்து, உதடுகளை ஊதா நிறமாக்கிய மரணம்தான் எவ்வளவு இரக்கமற்றது. உன்னை இந்த கதிக்கு ஆளாக்கிய அந்த சதிகாரர்களை நான் வணங்கிய அந்த ஐயப்ப சாமி தண்டிக்காமல் விட மாட்டர்.

நீ எப்போது என் வாழ்க்கையில் வந்தாயோ அப்போதே என் வீழ்ச்சியும் நாயர் மெஸ் வீழ்ச்சியும் தொடங்கி விட்டதென்று பாம்பே சலூன் சாத்தான் கதை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை உன் வரவு ஒரு வசந்தம், பெருமகிழ்ச்சியின் தொடக்கம்.”

பாம்பே சலூன் சாத்தானை உங்களுக்குத் தெரியாது இல்லையா? இந்த இடத்தில் நான் யார், நாயர் மெஸ்ஸுக்கும் எனக்கும் என்ன உறவு, பாம்பே சலூன் சாத்தான் யார் என்பதை சுருக்கமாகத் தெளிவுபடுத்திவிடுவது நல்லது. இது கதையின் கதையாக இருந்தாலும் உங்களை குழப்பக் கூடாது இல்லையா?

அப்போது நான் மேல் நிலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். கணேசன் எனக்கு வகுப்பு தோழனாகவும் நண்பனாகவும் இருந்தான். இருவரும் “லைட் ஹவுஸ்” என அழக்கப்பட்ட பிரம்மச்சாரிகள் மட்டுமே தங்கும் ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களுக்கு டியூஷன் படித்துக்கொண்டிருந்தோம் என்பதால் இந்த ஏற்பாடு. வேறுவேறு கிராமத்தைச் சேர்ந்த நாங்கள் காலையில் சைக்கிளில் புறப்பட்டு டியூஷன் வந்துவிட்டு பள்ளிக்குச் செல்ல வேண்டும். இது சிரமமாக இருந்ததால் அறை எடுத்துத் தங்கும் யோசனையை கணேசன்தான் சொன்னான்.

கணேசனுக்கு குடும்ப நண்பராக இருந்த ராஜா சார் தான் விடுதி உரிமையாளரிடம் பேசி அறையைப் பிடித்துக் கொடுத்தது. மாடியில் இருந்த அறை ஒன்றில் தங்கி, தேசிய வங்கி ஒன்றில் காசாளராகப் பணியாற்றி வந்தார் அவர். நாயர் மெஸ்ஸில் கணக்குத் தொடங்குவதற்கு சிபாரிசு செய்ததும் அவர்தான். அந்த மெஸ்ஸின் நீண்ட கால வாடிக்கையாளராக அவர் இருந்தார். மெஸ் இயங்கி வந்த தெருவில்தான் எனது பள்ளியும் இருந்தது.

முன்னால் விஸ்தீரணமாக இடம் விட்டு (இப்போது யாருக்கும் இவ்வளவு தாராளம் வருவதில்லை) உள் ஒடுங்கிக் கட்டப்பட்டிருந்த ஒரு பழையப் பாணி மச்சுவீட்டுக்கு முன்புதான், ஒரு ஆஸ்பெட்டாஸ் கூரைக்குக் கீழே நாயர் மெஸ் செயல்பட்டு வந்தது. வலது முன்புறத்தில் வெளியே பார்த்தவாக்கில் டீக்கடை இருந்தது. இடது பக்கத்தில் கல்லா மேஜை. அதைக் கடந்தால் இடப்பக்கம் நடக்க இடம்விட்டு வலது பக்கம் வரிசையாக நான்கு சாப்பிடும் பென்ஞ்சுகள். சமையல் எல்லாம் வீட்டுக்குள்தான்.

download (25)

மெஸ்ஸில் முதன் முதலாக அன்னம்மாவைப் பார்த்த போது ராஜா சார் சொன்னது போல ஒரு காலத்தில் அவள் பேரழகியாக இருந்தாள் என்பதை நம்ப முடியவில்லை. நல்ல அலங்காரத்துடன், எடுப்பான வண்ணத்தில் சேலை உடுத்தி குடை பிடித்தபடி அவள் தெருவில் நடந்து சென்றால் எல்லோரும் வேடிக்கைப் பார்ப்பார்களாம். இப்போது “பெரிய” அழகியாக மாறிப்போயிருந்த அவளின் எந்தெந்தப் பகுதிகள் முன்னர் அவளை அழகியாகக் காட்டியது என்பதை யூகிக்க முடியவில்லை. அந்த இழப்பைச் சரி செய்வது போலவோ என்னவோ அவள் எப்போதும் அலங்கார ரூபினியாகக் காட்சி தருவாள். பெரும்பாலும் கல்லா மேஜைக்கு பின்னாலோ, சாப்பிடும் இடத்தையும் வீட்டையும் இணைத்த வாசலுக்கு அருகில் இருக்கும் மர நாற்காலியிலோதான் அவள் காணப்படுவாள். இரவு உணவின் போது மட்டும் அவள் மாயமாகிப்போவாள் (ஏன் என்ற மர்மம் பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது). அந்த உணவகத்தின் பெரும்பாலான வாடிக்கையாளர் அவள் நடப்பதைப் பார்த்திருக்கவே முடியாது. ஆனால் நான் சில சமயத்தில் அந்த “அன்னம்” நடப்பதைப் பார்த்திருக்கிறேன். அது அந்த முன்னாள் பேரழகியின் மீதான இயற்கையின் கேலி என்றே சொல்லும்படி இருக்கும்.

‘அங்க தண்ணி வையி, இந்த டேபிளுக்கு இலையப் போடு, சாம்பார் கேட்கறாங்க பாரு’ இப்படியான வாய்மொழி உத்தரவுகளும், பார்வையால் ஆன உத்தரவுகள் மட்டும் அவளிடமிருந்து வந்து கொண்டிருக்கும். அத்தோரணை காலத்தின் நிரந்தர உணவகம் ஒன்றின் நிரந்தர உரிமையாளரும், நிரந்தர நிர்வாகியும் அவள்தான் என்பது போல் இருக்கும். அவளுடைய அதிகாரக் குரல், நிகழ் காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் சென்று ஒலிக்கும்படி தொனிக்கும். அவளுடைய குரல் ஜெயலலிதாவின் போலவே இருந்ததுதான் ஆச்சர்யம்.

கல்லா மேஜைக்கு பின்னால் ராமன் நாயர் படமாகத் தொங்கிக்கொண்டிருந்தார். இருமுடி தரித்தக் கோலத்தில் தன்னால் உருவாக்கப்பட்ட மெஸ்ஸை மேற்பார்வைப் பார்த்துக்கொண்டிருப்பது போல அத்தோற்றம் இருக்கும். அந்த நகரத்துக்கு ஐயப்ப சாமியை அறிமுகப்படுத்தியவர் அவர்தானாம். புனிதப் பயணம் செல்பவர்களுக்கு கருப்பு உடை மாட்டி புரட்சி செய்தவர் அவர்தான். குருசாமியான அவருடைய தலைமையில் ராஜா சார் கூட ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வந்திருக்கிறாராம். பின்னர் அவர் ‘சக்தி’ தாசனாகி சிவப்புக்கு மாறிவிட்டார் என்பது வேறுகதை.

நாயர் மெஸ் என்றாலே அன்னம்மாதான் என்பது ஒரு மாயத் தோற்றம். அதன் வாடிக்கையாளர்கள் பலருக்கும் இப்படியான ஒரு எண்ணம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அன்னம்மாவின் உத்தரவுகளை வடிவமைப்பதும், அதை செயலாக்கம்செய்வதும் அவளுடைய தங்கை செல்விதான் என்று சொல்லப்பட்டது. இந்த இடத்தில் நீங்கள் செல்வி பாத்திரத்தோடு சசிகலாவை பொருத்திப் பார்ப்பீர்கள் என்பது தெரியும். ஆனால் அவ்வளவு பொருத்தம் வராது என்பதே உண்மை. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனால் துரத்தப்பட்ட அவளுக்கு அன்னம்மாதான் அடைக்களம் கொடுத்திருக்கிறாள். அவளுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் ராஜா சார் சொல்லியிருக்கிறார்.

சற்றே கறுத்த நிறம் என்றாலும் செல்வியும் ஒரு அழகிதான். அந்த மெஸ்ஸின் – கோழிக் குழம்பைவிட பெரிய வசீகரம் அவள்தான். மை பூசாத கண்களுடன் அவளைப் பார்ப்பது மிக அபூர்வம். அதனால் ‘மைக்கண்ணி’ என்றே பலராலும் அழைக்கப்பட்டாள். ஆண்களிடம் அவள் பேசும் விதம், காட்டும் புன்னகை, வெட்கம் எல்லாமே தனி ரகம். ஏற்கெனவே பெண் பித்தராக இருந்த ராஜா சாருக்கு அவள் மீது ஈர்ப்பு ஏற்பட்டதில் ஆச்சர்யமில்லை. அவரின் நண்பர்கள் என்பதாலேயே மெஸ்ஸில் எனக்கும் கணேசனுக்கும் தனி கவனிப்பு இருக்கும். மற்றவர்களுக்கு சிக்கன் சேர்வா கிடைத்தால் எங்களுக்கு சிக்கன் கிரேவி கிடைக்கும். சில நேரங்களில் சிக்கனும் அதில் இருக்கும். அவருக்கு முன்பாகவே நாங்கள் சென்றுவிட்டால் “உங்க சார் வர்லயா?” என்று விசாரிப்பாள். அவருடன் சென்று விட்டால் நாங்களும் அந்த காதல் அலைகளுக்குள் சிக்கிக்கொள்வோம்.

நாயர் மெஸ்ஸுக்கு எதிர் வரிசையில் சற்று தள்ளி “பாம்பே சலூன்” என்ற முடித்திருத்தகம் இருந்தது. வாய் பேசமுடியாத ஐந்து சகோதரர்களுக்குச் சொந்தமானது அது. நானும் கணேசனும் அந்த முடித்திருத்தகத்தின் வாடிக்கையாளர்களாக இருந்தோம். மேலும் மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு அங்கு போய் பேப்பர் படிப்பதுண்டு. எங்களுக்கு அந்த ஊமைச் சகோதரர்கள் வணக்கம் வைத்துச் சிரிப்பார்கள். “சாப்பிட்டாச்சா?” என ஜாடையில் விசாரிப்பார்கள். இந்த வரவேற்பு எங்களை மகிழ்விக்கும். அங்கு வரும் எல்லோருக்குமே அந்த வரவேற்பு கிடைக்கும் என்றாலும் அதில் குறைகாண முடியாது.

பிளாஸ்டிக் காகித மாலையுடன் பெரியார், அண்ணா இருவரின் புகைப்படங்கள் பெரிய அளவில் தொங்கும். பக்கத்திலேயே திமுக துண்டுடன், நடத்தர வயதுடைய ஒருவரின் புகைப்படம். முகச்சாயல் ஒத்துப் போனதால் அது அந்தச் சகோதர்களின் அப்பாவாகவோ மூத்த அண்ணனாகவோ கூட இருக்கலாம் எனத் தோன்றும். அந்த முடித்திருத்தகத்தின் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் அங்கு எப்போதும் காணப்படும் கிழவன். அது போன்ற முடித்திருத்தகங்களிலோ தேனீர் கடைகளிலோ வழக்கமாகக் காணப்படக்கூடிய ஆள்தான் அவன். தினசரிகளை படித்துக் கொண்டோ யாருடனாவது விவாதம் பண்ணிக்கொண்டோ இருப்பான். அவனுக்கு எண்பது வயதிருக்கும். கைத்தடி ஒன்றும் அவன் கூடவே இருக்கும். அழுக்கான ஒரு வேட்டியும் பழப்பு வண்ண சட்டையும்தான் அவனுடைய நிரந்தர உடை. அந்த சகோதர்களிடம் சைகை பாஷையில் பேசுவான். அந்த சகோதரர்களும் தங்களுக்குள் ‘சப்சப்’ என்ற உதட்டசைவிலும் கையசைவிலும் உரையாடிக்கொள்வார்கள். சிரிப்பை பரிமாறிக்கொள்வார்கள், சண்டையிட்டுக்கொள்வார்கள். அங்கு வந்துவிட்டால் வாடிக்கையாளர்களும் அவர்களுடன் அதே பாஷையில்தான் பேசவேண்டியிருக்கும். அந்தச் சூழல் நம்மை ஒரு வேற்று மொழிப் பிரதேசத்துக்குள் சென்றுவிட்ட ஒரு அந்நியன் போல உணரச் செய்துவிடும்.

கிழவன் ஒருநாள் என்னை அருகில் அழைத்துப் பேசினான். நான் பக்கத்தில் போய் உட்கார்ந்ததும், “அந்த கரகாட்டக்காரியோட ஓட்டல்லதான் சாப்பட்றியா தம்பி?” எனக் கேட்டான்.

இக்கேள்வி எனக்கு வியப்பாகவும், அத்தகவல் புதிதாகவும் இருந்தது. என் வியப்பை போக்கும் கடமை அவனுக்கு இருந்தது. அதில் அவன் அதிக ஆர்வமுடையவனாகவும் இருந்தான். என்னிடம் மட்டுமல்ல பலரிடமும் இந்தக் கதையைச் சொல்லி அவன் சந்தோஷமடைந்திருக்க வேண்டும்.

ராமன் நாயரும் அவனும் ஆரம்ப காலத்தில் நண்பர்களாக இருந்தவர்களாம். பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு டீக்கடையில்தான் நாயர் டீ மாஸ்டராக வந்து சேர்ந்திருக்கிறார். பின்னர் அந்த ராஜ வீதியில் வேறு ஒரு இடத்தில் தனியாகக் டீ கடை ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு இப்போது மெஸ் இருக்கும் வீட்டை நாயருக்காக கிழவன்தான் வாடகைக்குப் பிடித்துக்கொடுத்தானாம். இந்த வீட்டுக்கு எதிரே ஒரு கீற்றுக்கொட்டை போட்டு டீக்கடையையும் இட்லிக் கடையையும் ஆரம்பித்திருக்கிறார் நாயர். பின்னர் ஏறுமுகம்தான். அவருக்கு திருமணம் செய்து வைத்தது, இந்த வீட்டையே கிரயம் பேசி வாங்கிக் கொடுத்தது எல்லாமே அந்த கிழவன்தானாம். கருட சேவை திருவிழாவில் கரக்காட்டம் ஆட வந்தவள்தான் இந்த அன்னம்மா என்றான் கிழவன்.

“என்ன பேசினாளோ, என்ன சொக்குப்பொடி போட்டாளோ, இந்த மலையாளத்தான் அவ வலையில போய் விழுந்துட்டான்” என்றான் கிழவன்.

“உனக்கு பொண்டாட்டி, ரெண்டு கொழந்தைங்க இருக்காங்க. ஊர்ல நல்ல பேரு இருக்கு. இதையெல்லாம் கெடுத்துக்காதேன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அந்த ஆளு கேக்கல.” என்று வருத்தத்துடன் சொன்னான் கிழவன். இந்த விவகாரத்தால் அவர்களுடைய நட்பிலும் விரிசல் விழுந்துவிட்டதாம்.

அன்னம்மாவுக்கு தினமும் இரவில் சாராயமும், கோழிக் குழம்பும் வேண்டுமாம். இந்த படையலுடனேயே அன்னம்மாவை நாயர் ஆராதித்து வந்திருக்கிறார். பிறகு சைவ ஓட்டலாக இருந்த நாயர் மெஸ் அசைவத்துக்கு மாறிவிட்டதாம். இதனால் அது பல நல்ல வாடிக்கையாளர்களை இழந்து நாசமாகிவிட்டதாக கிழவன் வருத்தத்துடன் சொன்னான். குருசாமி அந்தஸ்தைத் துறந்து, அவளுடன் குடித்து, அதற்கு அடிமையாகி குடல் வெந்து செத்தாராம் நாயர். அவருடைய அழிவுக்கு முழு காரணமும் அந்த கரகாட்டக்காரிதான் என்றான் கிழவன். “இவளால அந்தாளுடைய குடும்பமே சீரழிஞ்சி போச்சி. மெஸ் இருக்கிற இந்த வீட்டையும் தன் பேருக்கு எழுதி வாங்கிக்கிட்டா. அந்த குடும்பமே இப்ப நடுத்தெருவுல நிக்குது” என்றான் வருத்தத்துடன்.

நாயர் இறந்த பிறகு அவருடைய மனைவியும் மகனும் அந்த வீட்டின் மீது வழக்குப் போட்டிருக்கிறார்களாம். கிழவன்தான் அவர்களுக்கு உதவியிருக்கிறான். “இப்ப இந்த கரகாட்டக்காரிக்கு நான் பரம விரோதியாயிட்டேன்” என்றான் கிழவன்.

பிறகு ராஜா சாரிடம் இது குறித்துக் கேட்ட போது, “உங்களுக்கு இதையெல்லாம் அந்த கிழட்டு ராஸ்கேல்தானே சொன்னான்?” எனக் கேட்டார். பிறகு இந்த விஷயம் செல்வி வழியாக அன்னம்மா காதுக்குச் சென்றதா அல்லது கிழவனைப் பற்றி வேறு யாராவது அவளிடம் போட்டுக்கொடுத்தார்களாத் தெரியவில்லை, அன்னம்மா அந்த முடித்திருத்தகத்துக்குப் போய் விளக்குமாறால் கிழவனை சாத்தினாளாம், கணேசன் சொன்னான். “அய்யோ என்னக் கொல்றாளே, என்னக் கொல்கிறாளே, யாராவது காப்பாத்துங்களேன்” என தெருவே கேட்கும்படி அலரினானாம் கிழவன்.

இத்தெளிவு போதும் என நினைக்கிறேன். இப்போது நாயரின் ஆவி தன் புலம்பலைத் தொடர்கிறது:

“அன்னம்மா உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அது கருடசேவைத் திருவிழாவின் இரண்டாவது நாள். நடு இரவைத் தாண்டிய நேரம். வாணவேடிக்கையும் சுவாமி ஊர்வலம் நடந்துகொண்டிருந்தன. தெருக்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. சாப்பாடு முடிந்து போனதால் மற்றவர்கள் தூங்கச் சென்றுவிட நான் டீக் கடையை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அப்போது மெஸ் வாசலில் நீ வந்து விழுகிறாய். கரகாட்டக்காரிகள் உடுத்தும் உடை அலங்காரத்தோடும் அலங்கோலமாகவும் நீ கிடந்தாய். நீ அளவுக்கு அதிகமாக குடித்திருந்தாய். பலரும் உன்னை வேடிக்கைப் பார்த்தபடிச் சென்றார்கள். திருவிழாக் கொண்டாட்டத்தில் இளைஞர்களுக்கு இதுவும் கேளிக்கையாகிக்கொண்டிருந்தது. பெண்கள் கூட வெட்கத்துடன் உன்னைக் கடந்து செல்கின்றனர். இக்காட்சியை என்னால் பார்த்துக்கொண்டிக்கு முடியவில்லை. உன்னை இழுத்துச் சென்று வேறு இடத்தில் படுக்க வைத்துவிடலாம் என முடிவுக்கு வருகிறேன். அருகில் வந்து சிறிது நேரம் யோசனையுடன் நிற்கிறேன். அங்குப் பரவியிருந்த அலங்கார விளக்கொளியில் உன் முகம் வசீகரமாகத் தோன்றுகிறது. குழந்தைமையும் பெண்மையும் கலந்த உன் முகத்தை யாரால் புறக்கணித்துவிட முடியும்?

உனது கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டு வந்து மெஸ்ஸின் உள்ளே போடுகிறேன். வாசலை சாத்தினேன். பொழுது விடியும்வரை நீ தரையிலேயே படுத்திருந்தாய். முதல் ஆளாக வந்து பார்த்த டீ மாஸ்டர் ராமசாமிக்கு அதிர்ச்சி. இதெல்லாம் என்ன என்பது போல என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திலேயே நீயும் எழுந்துவிட்டாய். தூக்கத்திலிருந்து எழுந்து ஒரு குழந்தையைப் போல திகைப்புடன் சுற்றும்முற்றும் பார்க்கிறாய். உன்னை வீட்டின் பின்பக்கம் அழைத்துச் சென்று குளியல் அறையைக் காட்டும்படி ராமசாமியிடம் சொல்கிறேன். நீ சங்கோஜத்துடனும் மன்னிப்புக் கோரும் தோரணையுடன் அவனுக்குப் பின்னால் போகிறாய். நீ அங்கிருந்துத் திரும்பி வரவேற்பறை வழியாக வந்த போது எதிரில் வந்து நிற்கிறேன். உன்னுடையப் பெயரைக் கேட்கிறேன். வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே சொல்கிறாய் ‘அன்னம்மா’. சுவரில் சாய்ந்து நின்று கொள்கிறாய்.

அலங்கோலமான, தெளிவற்ற, யூகிக்க மட்டுமே முடிந்த உன் வாழ்வின் பின்னணியிலிருந்து சோகமும் தனிமையும் கொண்ட ஒரு முகம் எனக்கு முன் மலர்ந்துத் தோன்றுகிறது. உன்னுடைய சீரழிந்த வாழ்க்கை குறித்து எந்தக் கேள்விகளையும் நான் எழுப்பவே இல்லை. அதுவே என்னை கடந்து போகாமல் உன்னைத் தயங்கி நிற்கச் செய்ததோ என்னவோ.

நான் கேட்கிறேன், “எப்ப ஊருக்கு?”

நீ சொல்கிறாய், “மதியமே கிளம்பனும். எங்க ஊருக்கு பக்கத்துல இன்னிக்கு இராத்திரி திருவிழாவில எங்க ஆட்டம் இருக்கு.”

“இந்த ஊருக்கு எப்ப திரும்ப வருவே?”

நீ என்னைக் வியப்புடன் பார்க்கிறாய். என் கேள்விக்குப் பின்னால் உள்ள அர்த்தம் உன்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.

நீ கேட்டாய், “நீங்க அய்யரா?”

நான் சொன்னேன், “இல்லே மலையாளி, நாயர். ஏன் கேக்கிற?”

நீ யோசனையுடனும் சங்கடத்துடனும் என்னைப் பார்க்கிறாய்.

நான் சொல்கிறேன், “உனக்கு விரும்பம்ன்னா எப்ப வேணா வரலாம்”

யோசிப்பதற்கு நான் கொடுத்த இடைவெளி என் பைத்தியக்காரத்தனத்தை புரிந்துகொள்ள உனக்கு உதவியிருக்க வேண்டும். நீ வேடிக்கையாகக் கேட்கிறாய், “எனக்கு தினமும் சாராயம் குடிச்சாத்தான் தூக்கம் வரும். வாங்கிக்கொடுப்பிங்களா?”

இந்த வடிவத்திலான கதை சொல்லலையும் இடையில் நிறுத்த வேண்டியதாகிவிட்டது. காரணம் இதில் கதை சொல்லியின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. எல்லை வகுக்கப்பட்டுவிடுகிறது. அன்னம்மாவின் மீது அளவற்ற பித்து கொண்ட ஒருவன், தன் வாழ்க்கையையே அழித்துக்கொண்ட ஒருவன் கதையைச் சொன்னால் அது ஒரு காதல் கதையாகவே முடிந்து போகும் ஆபத்தும் உண்டு. அந்த ரொமாண்டிஸ காலமெல்லாம் எப்போதோ காலாவதியாகிவிட்டதால், நானே தன்னிலையில் கதை சொல்வதென முடிவு செய்கிறேன். அதன் தொடக்கம் இப்படி இருந்தது:

அன்னம்மாவின் மரணம் ஒரு அபத்த காவியம். அதை இவ்விதம் உணர்த்தவே சீக்கிரம் சென்று சேர்ந்தாளோ என்னவோ. வாழ்ந்த காலத்தில் அவளின் திறமை, சாதுர்யம், தைரியம் பலரால் சிலாகிக்கப்பட்டது. ஆனால் அவள் மீது பிரகாச ஒளி எதுவும் படிந்திருந்ததாகத் தெரியவில்லை. ஒரு குடும்பத்தையே சிதைத்த பாவம் பலரது வார்த்தைகளாகவும் சாபமாவும் மாறி அவளைச் சுற்றி சுழன்று கொண்டிருந்தது. ராமன் நாயர் என்ற மதிப்பு மிக்க மனிதரை தரம் தாழ்த்தி சுடுகாட்டுக்கு அனுப்பி வைத்த புண்ணியவதியாகவும் அவள் பார்க்கப்பட்டாள். குடிக்கு அடிமையான, ஒழுக்கம்கெட்ட பெண்ணாகவும் அவள் அறியப்பட்டாள். பிறகு அவளுடைய மரணம் எப்படி முக்கிய நிகழ்வானது, இழப்பானது?

அவளுக்குப் பின் நாயர் மெஸ் என்னவாகும் என்ற கேள்வியை பலரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சந்தேகமில்லாமல் அது மிகையான எதிர்வினைதான். அது வாடிக்கையாளர்களின் உடனடி ஆதங்கம்தானே தவிர அவர்களின் சிந்தனையிலிருந்து முளைத்தக் கேள்வியாக இல்லை. அந்த நகரத்தில் அப்போது இயங்கி வந்த எவ்வளவோ உணவகங்களில் ஒன்றுதான் நாயர் மெஸ். அதற்கென்று சில வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். அதற்கு மேல் அதற்கு பெரிய முக்கியத்துவம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அங்கே பரிமாறப்பட்ட இட்லிக்கோ, பூரிக்கோ, பரோட்டாவுக்கோ, சிக்கன் குழம்புக்கோ எந்தத் தனித் தன்மையும் இருந்த்தாகத் தெரியவில்லை. அதே போலத்தான் அன்னம்மாவும். அது ஒரு நிகழ்வு. நாயர் மெஸ் தொடர்ந்து இயங்கி வந்திருக்கலாம் இல்லாமல் போயிருக்கலாம், அன்னம்மா என்ற ஒரு ஜீவன் அங்கு வாழ்ந்திருக்கலாம், அப்படி ஒரு வரவு அதற்கு நிகழாமல் போயிருக்கலாம். இந்த கதையில் இடம்பெறுகிறது என்பதற்கு மேல் இப்போது அதற்கெல்லாம் என்ன பெரிய முக்கியத்துவம் இருக்கிறது? கணக்கு வைத்து மூன்று வேளை உணவை அங்கு சாப்பிட்டு வந்தோம் என்பதற்கு மேல் அதற்கும் எங்களுக்கும் என்ன உறவு? செல்வியுடனான தொடர்பு காரணமாக ராஜா சாருக்கு ஒருவேளை அது முக்கியமானதாக இருந்திருக்கலாம். அவர் மூலம் அன்னம்மா குறித்த சில ரகசியங்கள் எங்களுக்குத் தெரிய வந்ததென்னவோ உண்மைதான். அதானாலேயே பிணைப்பின் இறுக்கம் கூடி விடுமா என்ன?

கிழவன் சொன்னதை ஒரு நாள் ராஜா சார் உறுதிப்படுத்தினார். தினமும் கால் பாட்டில் பிராந்தி சாப்பிட்டால்தான் அன்னம்மாவுக்குத் தூக்கம் வரும் என்றார். டீ மாஸ்டர் ராமசாமிதான் அவளுக்கு வாங்கி வந்து கொடுப்பாராம். “அந்த ஆளு டீ மட்டுமா போட்றான்…”என அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

நாயர் காலத்திலேயே வேலைக்குச் சேர்ந்தவர் ராமசாமி. நாயர் இறந்த பிறகு அன்னம்மாவின் தீவிர விசுவாசியாகவே மாறிவிட்டிருந்தார். செல்விகூட அவருக்கு அடுத்த நிலைதான் எனத் தோன்றும். அன்னம்மாவின் விசுவாசிகளில் இன்னொருவன் சங்கர். நாயர் மெஸ்ஸுக்காகவே பிறப்பெடுத்து வந்தவன் அவன். ராஜா சாரிடம் அவன் அதிக மரியாதைக் காட்டுவான். ஆனால் எரிச்சலான ஒரு எதிர்வினைதான் அவரிடம் வெளிப்படும். அவன் எப்போதும் செல்வியோடே இருக்கிறானே என்ற பொறாமையாக இருக்கலாம்.

மெஸ் கட்டடத்தின் மீதான வழக்கில் தீர்ப்புத் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதாகப் பேசப்பட்டது. அதன் பரபரப்பு நாயர் மெஸ் ஆட்களிடமும் காணப்பட்டது. அன்னம்மாவிடம் தனது விசுவாசத்தை காட்டும் வகையில் ராமசாமி திருப்பதிக்குப் போய் வெங்கடேஷ்பெருமாளை தரிசித்துவிட்டு மொட்டை போட்டுக்கொண்டு வந்தார்.

எதிர்பார்த்தது போலவே வழக்கில் அன்னம்மா ஜெயித்து விட்டாள். இதனால் ஆத்திரமடைந்த நாயர் மகன், அன்னம்மாவை கொல்லாமல் விடமாட்டேன் என நீதிமன்ற வளாகத்திலேயே சபதம் போட்டுவிட்டுச் சென்றானாம். நாயரின் மனைவி மண்ணை வாரித் தூவி “நீ நாசமாத்தான் போவ” என சாபமிட்டபடியே சென்றாளாம்.

இந்த இடத்தில் இந்த வழக்கோடு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஒப்பிட வேண்டாம். அப்படி எழுதும் யோசனையும் எனக்கில்லை. அப்படி எழுதினால் கதை அளவுக்கு அதிகமான அபத்த நாடகமாக போய்விடும் ஆபத்து இருந்தது. நிஜ வாழ்க்கையில், வரலாற்றில் இது போல ஆயிரம் அபத்தங்கள் அரங்கேறிக்கொண்டுதானே இருக்கின்றன. அதை எல்லாம் கதையாக்கினால் கதை சீக்கிரத்திலயே அழுகிப்போய்விடுமல்லவா.

இனி கதையின் போக்கு எப்படி அமைந்தது என்று பார்ப்போம். கதைச்சொல்லி கதையைத் தொடர்கிறார்:

எங்களுக்குப் பொதுத் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மாதம் இருக்கும் போதுதான் ஒரு நாள் காலை ராஜா சார் வந்து ரகசியமாகச் சொன்னார் அன்னம்மா இறந்துவிட்டாள் என்று. அளவுக்கு அதிகமான போதை அவளைக் கொன்றுவிட்டதாகச் சொன்னார். நடு இரவைத் தாண்டி அவளுடைய மரணம் நிகழ்ந்திருந்தது.

images (6)

மெஸ்ஸின் முன் வாசலைப் பூட்டியிருந்தார்கள். பின்பக்கமாக உள்தள்ளியிருந்த வீட்டின் பின்வாசலை திறந்து வைத்து அடுத்தத் தெரு வழியாக சங்கரும் ராமசாமியும் வெளியே போய் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கென அவசரமான சில வேலைகள் இருந்தன. செல்வி வீட்டிலேயே இருந்தாள். அவள் சில உத்தரவுகளை அவர்களுக்கு அளித்துக்கொண்டிருந்தாள். ராஜா சாரின் ஆலோசனையின் பேரில் அன்னம்மாவின் மரணச் செய்தியை மாலையில் சொல்வதென முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்குள் குளிர்பதனப் பெட்டி முதலான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட வேண்டும். முக்கியமாக அன்னம்மாவுக்கு வரவேண்டிய பெரிய அளவிலான தொகையை இரண்டு பேரிடம் வாங்கிவிடவேண்டும் என்பதே அவர்களின் திட்டம். இல்லையென்றால் அது வராமலேயே போய்விடுமோ என்ற அச்சம். அன்னம்மாவின் மரணச் செய்தி தள்ளிப்போனது அதனால்தான்.

அன்று மாலை அன்னம்மாவின் மரணம் ஊருக்குத் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் மதியம் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. நாயரின் கல்லறைக்குப் பக்கத்திலேயே அன்னம்மா புதைக்கப்பட்டவில்லை, எரிக்கப்பட்டாள்.

பலரும் எதிர்பார்த்தபடியே அன்னம்மா இறந்து ஒரு மாத காலத்துக்குள் சம்பவங்கள் நடக்கத் தொடங்கின. எங்களை ஆச்சர்யப்படுத்திய விஷயம், செல்வி மீது காவல் நிலையத்தில் ராமசாமி புகார் கொடுத்தார் என்பதுதான். அன்னம்மா அதிக குடிபோதையில் இறக்கவில்லை. சொத்துக்கு ஆசைப்பட்டு செல்விதான் பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து அன்னம்மாவைக் கொன்றுவிட்டாள். அதனால் தான் அவசரஅவசரமாக சடலத்தை கொண்டு போய் எரித்துவிட்டார்கள் என்று.

ராஜா சாரின் ஆலோசனையின் பேரில் செல்வி ஒரு புகார் கொடுத்தாள். அதில், ஏற்கெனவே திருமணமான என்னை ராமசாமி திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார். இரவில் படுக்கைக்கு அழைத்துத் தொல்லைத் தருகிறார். சம்மதிக்கவில்லை என்றால் கொலை சேய்துவிடுவதாக மிரட்டுகிறார். அவரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு வேண்டும் என புகாரில் சொல்லியிருக்கிறாள்.

இதனால் ராமசாமி நிலைகுலைந்து போனார். ராஜா சாரிடம் வந்து, அந்த மெஸ்ஸை நம்பியே கல்யாணம் கூட பண்ணிக்கொள்ளாமல் வாழ்க்கையை வீணடித்துவிட்டதாகவும் தனக்கு ஒரு தொகையைப் பெற்றுத்தந்தால் இந்த ஊரைவிட்டேப் போய்விடுவதாகவும் கண்ணிர்விட்டு கெஞ்சினார். அதன்படி ஒரு தொகையை தர செல்வி சம்மதிக்க பிரச்சினை முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் செல்வியும் சங்கருமே அந்த மெஸ்ஸை நிர்வகித்து வந்தாகவும் அன்னம்மாவின் ஒரே வாரிசு செல்வி என்பதால் அந்த சொத்து செல்விக்கே சென்றுவிட்டதாகவும் கணேசன்தான் எனக்குச் சொன்னான். சென்னை வந்த பிறகு அவனுடையத் தொடர்பும் அறுந்துவிட்டது.

டாஸ்மாக் பாராக மாறிப்போன அந்த நாயர் மெஸ்ஸில் போடப்பட்டிருந்த மேஜைக்கு எதிரே உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்த போது ஒரு கற்பனைத் தோன்றியது. அதையே கதையின் முடிவாகவும் வைத்திருந்தேன். அது இப்படி அமைந்திருந்தது:

குடிகாரர்களெல்லாம் கிளம்பிப் போனப் பிறகு நாயரின் ஆவியும் அன்னம்மாவின் ஆவியும் ஒரு மேஜைக்கு எதிரெ உட்கார்ந்து குடித்துக்கொண்டிருக்கின்றன. பழைய நினைவுகளை அசைப் போட்டு மகிழ்கின்றன. சில பொழுது நாயர் மெஸ்ஸின் இன்றைய நிலையை எண்ணி கண்ணீர் விட்டு அழுகின்றன. புகை மண்டலம் ஒன்று எழுந்து பாரை நிறைக்க அது ஒரு கனவுப் பிரதேசமாக மாறிவிடுகிறது. சினிமாவில் எம்ஜியாரும் ஜெயலலிதாவும் நடனமாடுவது போல அங்கே நாயரும் அன்னம்மாவும் பளப்பளப்பான ஆடைகளை அணிந்து ஓடிப் பிடித்து ஆடத் தொடங்குகின்றனர்.

0

Comments are closed.