வரும்போது இருந்த வெயில். / வண்ணதாசன்.

[ A+ ] /[ A- ]

18157841_10213179660225259_5741567510453736258_n

இந்திரா கதவைத் திறக்கும் போது பெருமாள் மட்டும் இல்லை. அவளுடன் ஒரு பையனும் நின்றுகொண்டு இருந்தான். நாரத்தை இலையா எலுமிச்சையா என்று தெரியவில்லை, பெருமாள் தன் விரல்களுக்கு இடையில் வைத்து நசுக்கிக்கொண்டு இருந்தாள்.

அவர்கள் இரண்டு பேருக்கும் பின்னால் , அவர்களோடு சேர்ந்து வீட்டிற்குள் நுழைவதற்குத் தயாராக இருந்த வெயிலின் மேல் அந்த நசுங்கின வாசனை பூசப்பட்டிருந்தது. பெருமாள் அந்தப் பையனின் உச்சந்தலையில் கை வைத்து, ‘குடையை எடுத்துட்டு வந்திருக்கலாம். சொல்லச் சொல்ல வேண்டாம்னுட்டே. தீயா பொரிக்கி.’ என்று சொன்னாள். அந்தப் பையன் குனிந்துகொண்டே கலைந்த தலையைச் சரி செய்து வகிட்டில் கை வைத்து ஒதுக்கி நீவிவிட்டுக்கொண்டான். இந்திராவை அவன் பார்க்கவே இல்லை.

‘ரெண்டு பேரும் உள்ளே வாங்க, ஏன் வெளியிலேயே நீக்கீங்க?’ இந்திரா கூப்பிடும் போதும் பெருமாள் அந்த இலையை இப்போது சிறு குளிகையாக உருட்டி முகர்ந்துகொண்டு இருந்தாள். வெயில் அதன் பச்சைச் சாறு கசிய அவள் விரல்களுக்கு இடையில் இருந்தது.

‘அதைத் தூரப் போட்டுட்டு வா, பெருமாக்கா” இந்திரா சொன்னதும் பெருமாள் வெளியே போய் அதை உதறினாள். அந்தப் பையன் அப்படியே நின்றுகொண்டு இருந்தான். சாயம் போயிருந்த அவனுடைய நீல முழுக் கால்சட்டை கரண்டைக்கு மேல் இருந்தது. அவனைப் பொறுத்தவரை ஒரு புதிய சணல் சாக்கு போல அடித்துக்கொண்டிருந்த வெயிலின் வாடை ரொம்பப் பிடித்திருந்தது. வீட்டிற்குள் போக விருப்பம் இல்லாததற்கு அதுவும் ஒரு காரணம்.

பெருமாள் கையை மட்டுமல்ல, முகத்தையும் வெளியில் இருக்கிற குழாய்த் தண்ணீரில் கழுவி, வளைந்த சுட்டு விரலால் ஒரு சிறிய தகடாகத் தண்ணீரை வழித்து எடுத்தபடி,’ நான் சொன்னேன் லா இந்திராம்மா?’ என்றாள். அந்தப் பையன் இப்போது இந்திராவை ஒரு சிறிய பொழுது பார்த்துவிட்டுக் குனிந்துகொண்டான். இந்த இடத்தைவிட்டு அகன்றுவிடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

பெருமாள் அத்தை அவனிடம் எல்லாவற்றையும் சொல்லித்தான் கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். இன்றைக்கு அவனைக் கூட்டிக்கொண்டு வந்திருப்பது சும்மா தான். அந்த வீட்டில் இருக்கிற ஜன்னல் கதவுகளையும், ஒவ்வொரு அறையிலும் இரண்டு இரண்டாக ஓடிக் கொண்டு இருக்கிற விசிறிகளில் படிந்திருக்கும் தூசியையும் துடைத்துக் கொடுக்க வேண்டும். அவனுக்கு அதைப் பற்றி ஒன்றும் இல்லை என்றால் கீழே மூன்று, மச்சில் இரண்டு என்று இருக்கிற ‘பாத் ரூமை’யும் கழுவிக் கொடுக்கலாம். பெருமாள் அத்தை மிகுந்த சங்கடத்துடன் ‘பாத் ரூம்’ என்றுதான் சொன்னாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவனுக்குப் புரியாமல் இல்லை.

‘மத்த வீட்டு ஆட்கள் மாதிரி இல்லை இந்த வீட்டு ஐயாவும் அம்மாவும். நான் இந்த வீட்டில் பத்துப் பன்னிரண்டு வருஷமா வேலைக்கு நிக்கேன். உண்கிற சோத்துக்கும் உடுத்துகிற துணிக்கும் தரித்திரியமில்லாமல் இண்ணையத் தேதி வரைக்கும் கழிஞ்சுக்கிட்டு இருக்கு. அக்காங்கிற சொல்லுக்கு அடுத்த சொல் சொல்வார் கிடையாது. இங்கே நிக்கப் படாது, அங்கே உக்காரப்படாதுண்ணு ஒரு நாள்க் கூட சொன்னது இல்லை. நாமளும் உப்புக்கு உப்பா, உரைப்புக்கு உரைப்பா, அது அதுக்குத் தக்கன குனியுறதுக்குக் குனிஞ்சு, நிமிர்கிறதுக்கு நிமிந்து நடமாடிக்கிடுதோம். அதையும் சொல்லணும்’லா”.

இதை எல்லாம் இவனிடம் சொல்வது போல, பெருமாள் அத்தை இவனுடைய அம்மாவிடம்தான் சொல்லிக்கொண்டு இருந்தாள். அம்மாவின் முகத்தை இவன் பார்க்கவே இல்லை. அம்மா மூக்கை உறிஞ்சிக்கொள்வதையும் சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொள்வதையும் பார்த்துத்தான் அவன் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?. பெருமாள் அத்தை சொல்வதை அவளால் தாங்க முடியவில்லை. அப்புறம் எதற்கு, பெருமாள் அத்தை சொல்கிற ஒவ்வொன்றுக்கும் ‘அது சரி’, ‘அது சரி’ என்று சொல்லவேண்டும்.? எல்லாம்சரியாக இருப்பதற்கு ஏன் தொண்டை கம்ம வேண்டும்?

அம்மாவிடம் பெருமாள் அத்தை இதை எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கையில், இவனுக்கு சிமெண்டுத் தொட்டித் தண்ணீரில் விழுந்திருக்கிற வெயில் நெளிந்து தொந்தரவு செய்தது. எழுந்திருந்து போய், ஒரு செம்பில் தண்ணீரைக் கோதி, வாசல் சுவரில் தகர டப்பாவில் வைத்திருக்கிற டேபிள் ரோஸ் செடிகளுக்கு ஊற்றிவிட்டு வந்தான். எல்லா வாடகை வீட்டுச் சுவர்களிலும் அடர்ந்த கருஞ்சிவப்புப் பூக்களோடு இப்படிச் சில செடிகள் இருப்பதற்கு அவசியம் உண்டு என நினைத்தான். இக்கட்டான சமயங்களில் எழுந்துபோய் அதற்குத் தண்ணீர் வார்த்துவிட்டு, அந்த இடத்திலேயே அசையாமல் நின்று ஒரு சிகரெட் புகைத்துவிட்டு வரும் பழக்கம் உள்ள அப்பாவின் முகம், அப்போது அவனுக்கு மிக அருகில் தெரிந்தது.

download (26)

‘வா,உள்ளே வா’ என்று இந்திரா அவனுடைய தோளில் கையை வைத்துக் கூப்பிட்டாள். மணிக்கட்டுக்கு உள்ப்பக்கமாகக் கடிகாரம் கட்டியிருக்கும் முருகேஸ்வரி டீச்சர் தான் இப்படி அவனுடைய தோளில் கைவைத்து எப்போதும் பேசுவாள். ஜவஹர் ஸ்கூலை விட்டு அவனை அனுப்பவே மாட்டேன், டி.சி. கொடுக்கக் கூடாது என்று கட்டாயப் படுத்தி, பத்தாவது வரை அங்கேயே ‘ நீ எதைப் பத்தியும் கவலைப் படாமல் படி, உன் படிப்புக்கு நான் ஆச்சு’ என்று சொன்னது முருகேஸ்வரி டீச்சர்தான். இதை அப்பாவும் அம்மாவும் இருக்கும் போதுதான் வீட்டில் போய்ச் சொன்னான். அப்பா மறு நாளே, சாயுங்காலம் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்க்கூடத்துக்கு வந்து டீச்சரைக் கும்பிட்டார்.

செம்பருத்திப் பூக்கள் மூங்கில் பட்டிகளுக்கு ஊடாக எட்டிப்பார்த்திருக்கிற முன் தாழ்வாரத்தில் அப்பா முருகேஸ்வரி டீச்சரைக் கும்பிட்ட தோற்றம் இன்னும் அப்படியே இருக்கிறது. அப்பா குரல் கலங்கியிருந்தது. யாரோ பிடித்து உலுப்பியது போல, அவருக்குள் நிரம்பியிருந்தவை எல்லாம் அப்போது உதிர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். அப்பாவின் இரண்டு கைகளின் முழங்கையும் மணிக்கட்டு வரை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடந்தது. உள்ளுக்குள் ஒரு மொக்கையோ பூவையோ வைத்திருக்கும் தினுசில் கூப்பியிருந்த கைகளுடன் அவர் டீச்சரைக் கும்பிட்டார். அடுத்த கணத்தில், டீச்சரின் கைகளைப் பற்றி, தன் நெற்றியில் வைத்துக்கொண்டார்.

‘ நல்லா இருங்க தாயி. எம் புள்ளை இனிமேல் கரையேறியிருவான்’ என்று சொல்லி, எடுத்த இடத்தில் வைப்பது போல், முருகேஸ்வரி டீச்சரின் கைகளை மெதுவாகத் தளரவிட்டார். டீச்சர் தன்னுடைய கைகளை அதற்கு அப்புறம் என்ன செய்வது என்று தெரியாமல், இயல்பில்லாமல் நெஞ்சோடு மடித்துக் கட்டுவதும் தளர்த்துவதுமாக இருந்தார்.

இந்திரா அவனை அப்படித் தோளில் கை வைத்துக் கூட்டி வருவதை பெருமாள் அத்தை பார்த்துக்கொண்டு நின்றாள். கால் சட்டையில் இருந்து ஒரு திரிபோலப் பிரிந்து தொங்கிய நூல் மேல் பாதத்தில் உரசி ஒரு வித அசௌகரியத்தை உண்டு பண்ணியது. குனிந்து அதைச் சுண்டியிழுத்து அத்துப் போடவேண்டும் போல இருந்தது அவனுக்கு.

பெருமாள் அத்தைக்கு என்ன தோன்றியதோ? இவனுக்குத் தாகமாக இருப்பதாகவும், பேசமுடியாத அளவுக்குத் தொண்டை உலர்ந்துவிட்டதாகவும் நினைத்து, உள்க் கட்டு வரை போய் ஒரு கண்ணாடி ஜாடியில் தண்ணீரும் அதைக் குடிப்பதற்கு ஒரு கண்ணாடி டம்ளரும் கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தாள். வெள்ளையும் நீலமுமாகக் கொடி போலச் சுருண்டு மேலேறிக் கொண்டிருந்த அந்தக் கண்ணாடி டம்ளரை அவனுக்குப் பிடித்திருந்தது. அப்படி மேலேறிய கொடிகள். அந்தக் கண்ணாடி டம்ளரின் விளிம்புகளுக்கும் வெளியே வளர்ந்து அந்த அறை முழுவதும் படர்ந்திருப்பது போல இருந்தது. குடித்தது போக, டம்ளரைப் பெருமாள் அத்தையிடம் நீட்டினான். இன்னும் ஒரு மடக்குக்கு மேல் மிச்சம் இருந்த தண்ணீரை, அண்ணாந்து பெருமாள் அத்தை குடித்துவிட்டுச் சிரித்தாள். இந்தச் சிரிப்புதான் அந்த டம்ளரின் படர்ந்திருந்த கருநீலக் கொடிகளில் காய்த்துத் தொங்கும் குலைகளாக இருக்கும். அப்படித்தான் அவனுக்குப் பட்டது. அவன் பெருமாள் அத்தையின் கழுத்துக்குக் கீழேயே பார்த்தபடி இருந்தான். பெருமாள் அத்தை தன் மேல் படர்ந்திருந்த கொடிகளை விலக்குவது போல, சேலைத் தலைப்பை அள்ளிப் போட்டுக்கொண்டாள்.

வீட்டுக்குள் வருகிற புது ஆட்களிடம் நின்று பேச, ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். வெளிப்பக்கத்தில் இருந்து வருகிற வெளிச்சத்தில் இவர்கள் மூன்று பேருடைய நிழல்களும் தரையில் விழுந்து மேகமாகிக் கிடந்தன. கிருஷ்ணனும் ராதையும் ஊஞ்சலாடுகிற ஒரு படமிருந்த சுவர்ப்பக்கம் வந்ததும் மேற்கொண்டு நகராமல் நின்று, அந்த இடத்திலிருந்து பேசத் துவங்குவது உகந்தது என்று தீர்மானித்த முகத்துடன், ‘உம் பேரு என்ன ப்பா?’ என்று கேட்டாள். கேட்கும் போதே ,’எம் பேரு இந்திரா’ என்று சொல்லிச் சிரித்தாள், களக்காட்டு மாமா வீட்டில் யாரோ ஒருத்தருக்கு இதே மாதிரிச் சிரிப்பு உண்டு. குருவ மண் வாசனையை பக்கத்தில் நடமாடும் போது எல்லாம் உண்டாக்குகிற அந்த முகத்துக்கு இதே போல நெருக்கமான மஞ்சள் பற்கள் இருந்திருக்கிறது.

‘திரிகூடம்’ என்று சொன்னான். அவனால் இப்போது மறுபடியும் இந்திராவைப் பார்க்க முடிந்தது. இதுவரை முகமற்றவனாக இருந்தவனுக்கு, இந்தப் பெயரைச் சொல்லும் போது ஒரு சரியான அடையாளம் வந்துவிட்டது. பள்ளி ஆண்டு விழாப் பரிசளிப்புகளில் திரும்பத் திரும்ப மேடைக்கு அழைக்கப்படும் அந்தப் பெயரை, இந்த வீட்டு ஹாலில் அப்படி யாரோ உச்சரித்துக் கூப்பிடுகையில் ஒலிபெருக்கிக் கோளாறில் கொஞ்ச நேரம் உய்யென்று ஒரு விசில் சத்தம் மட்டும் வந்து, மறுபடியும் அவன் பெயர் சொல்லப்படுவது போல, அவனே மீண்டும் ‘திரிகூடம்’ என்றான்.

பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த பெருமாள் அத்தை, ‘வீட்டில ராஜன்’னு கூப்பிடுவாங்க. பள்ளிக்கூடத்தில ‘திரிகூடம்’ ‘என்று சிரித்தாள். அவளுக்குத் தானும் இந்திராவைப் போல, அந்த இடத்தில் அவன் தோளில் கையைப் போட்டபடி பிரியமாக ஏதாவது பேசவேண்டும் போல ஆசை உண்டாயிற்று. தான் நின்ற இடத்தை மாற்றி அவன் வலது தோளுக்குப் பக்கமாகப் போய் நின்று, ‘ அம்மா கேக்கதுக்குப் பதில் சொல்லு, ராஜன்’ என்றாள்.

‘திரிகூடம் ணா வெறும் திரிகூடமா? திரிகூட ராஜன், திரிகூட ராசப்பன் … அந்த மாதிரியா?’ – இந்திரா கேட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை. பெருமாள் அத்தை தான் இப்போதும் ‘ வெறும் திரிகூடம் தான் இந்திராம்மா.’ என்று சிரித்தாள். பெருமாள் அத்தை அப்படிச் சிரித்ததும் அவனுக்குப் பிடிக்கவில்லை. பெருமாள் அத்தை அவனுடைய அப்பாவிடமும் இப்படித்தான் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். அவன் பார்க்க, சமீபத்தில் அம்மா கூட அப்படிச் சிரித்துப் பேசிப் பார்த்தது கிடையாது.

இனிமேல் பெருமாள் அத்தையைப் பேச விடக்கூடாது, தானே பதில் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ‘நீ போய் பாத்திரம் எல்லாத்தையும் நனைச்சு வச்சிட்டு, துணியை சர்ஃப்ல முக்கி வச்சிட்டு வா பெருமாக்கா. நான் இவன் கூடக் கொஞ்சம் விசாரிச்சுக்கிடுதேன். நீ வந்த பிறகு என்ன ஏதுண்ணு விபரம் சொல்லிக்கிடலாம்’ என்று இந்திராவே சொல்லி அவளை அனுப்பிவைத்தது நல்லதாகப் போயிற்று.

தானும் உட்கார்ந்துகொண்டு இவனையும் நாற்காலி ஒன்றில் உட்காரச் சொன்ன இந்திராம்மா, ‘வசதியா இருக்கா? இல்லை இப்படிக் கீழே உட்கார்ந்துக்கிடுவமா?’ என்று இவன் பதில் சொல்வதற்கு முன்பே, எழுந்துவந்து தரையில் உட்கார்ந்துகொண்டாள். ஒவ்வொரு கட்டாக, எந்தக் கதவும் மூடப்படாமல் திறந்து கிடக்க இப்படித் தரையில் உட்கார்ந்தது திரிகூடத்திற்குப் பிடித்திருந்தது. நின்றுகொண்டு இருந்ததை விட, உட்கார்ந்ததும் இந்த வீடு வேறொரு வீடாக மாறிவிட்டதாகக் கூடத் தோன்றியது. அம்மா பெரும்பாலும் மத்தியானத்தில் படுத்துத் தூங்குகிற அடுக்களைத் தரையின் சிமெண்ட் சொரசொரப்பு அவன் விரல்களுக்குத் தெரியும். திரும்பத் திரும்ப வழவழப்பான இந்த ஹாலின் தரையை அவன் தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அப்படிப் படுத்திருக்கும் போது எல்லாம் அம்மா அழுதுகொண்டும் இருந்திருக்கிறாள்.

திரிகூடம் இந்திராவின் கண்களைப் பார்த்துக் கொண்டான். சற்று ஒடுங்கியவையாக அவை இருந்தன. சிரிப்பு, அழுகை என்று அதற்கென்று பிரத்யேகமாக எதுவும் வைத்திருக்கவில்லை. கண்ணாடி அணிகிறவர்கள் கண்ணாடியைக் கழற்றி வைத்திருக்கும் நேரத்துக் கண்கள் போல சோர்வும் ஆதுரமும் படிந்தவை. அவனுடைய அப்பாவைப் பெற்ற ஆச்சியின் கண்கள் அப்படித்தான் இருக்கும்.

‘எங்க அப்பாச்சி முகம் மாதிரி இருக்கு, உங்களுக்கு” எடுத்த எடுப்பில் அவனுக்கு இதை எப்படி இந்திராவிடம் சொல்லத் தோன்றியது என்று தெரியவில்லை. அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறதே என்று எல்லாம் சொல்கிற அமைதியான ஒரு சிரிப்பு இந்திராவிடம்.

’உங்க ஆச்சி பேரு என்ன? ‘ என்ற கேள்வி திரிகூடத்திற்கு மிகுந்த உற்சாகம் கொடுத்தது. அவளுடைய பெயரைச் சொல்வதன் மூலமே அவளுடைய முழுச் சித்திரத்தை வரைந்துவிட முடியும் என்று தோன்றிற்று. யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைவாக நிறுத்திவைத்திருந்த தேரை ஒற்றை ஆளாக இழுத்து வருகிற மாதிரி சொன்னான், ‘ஆச்சி பேரு மந்திரம். சீட்டுக் கம்பேனி மகராச பிள்ளை கேள்விப்பட்டு இருக்கேளா? அது எங்க அப்பாத் தாத்தா ல்லா!’

இந்திராவுக்கு அவளைச் சுற்றிய உலகம் அப்படியே ஒரு பனிக்கட்டியாக உறைந்துவிட்டது. ஆனால் பளிங்கு மாதிரி எல்லாம் தெரிகிறது. சீட்டுக் கம்பெனி நொடித்துப் போனது. மந்திரத்துப் பெரியம்மை வீட்டு வெள்ளிப் பாக்குவெட்டி பழைய விலைக்கு வந்தது, எம்.டி.ட்டி 2992 வண்டிச் சாவியைப் பிடுங்கிக்கொண்டு மகராசப் பெரியப்பாவை தச்சநல்லூர் ரயில்வே கேட் பக்கம் இறக்கிவிட்டுவிட்டுப் போனது எல்லாம் இடது கையின் குழிவில் ஐஸ்கட்டியை வைத்து, எலுமிச்சம் பழம் பிழிகிற கட்டையால் அடித்துப் பொடியாக்குகிற மாதிரிச் சிதறின. வைரம் நொறுங்கி வைரம் மினுங்கி வைரம் கரைந்தது.

’ சேது ராமன், மத்தியார்ஜுனன், அன்ன ராஜு எல்லாம்….?’ இந்திரா திரிகூடம் முகத்தைப் பார்த்துக்கொண்டு கேட்கும் போது, இந்த அறை, அடுத்த அறை, மொத்தமாக இந்த வீடு முழுவதுமே கனவு போல உருகியோடிக் கொண்டிருந்தது அவளைச் சுற்றிலும்.

‘எங்க அப்பா தான் சேது’ என்று சொல்கிறவனின் கையை இந்திரா எட்டிப் பிடித்துக்கொண்டாள். மந்திரத்துப் பெரியம்மை வீட்டு வேப்பமரக் காற்றில் கலைந்த சிகையை அவளால் லேசில் ஒதுக்கிவிட முடியவில்லை. மந்திரத்துப் பெரியம்மை வீட்டுக் கொலு பொம்மைகள் செந்தாமரை நிறத்தில் அவளுக்கு முன்னால் நிரம்பிக்கொண்டே போயின. மூக்கு, முகவாய் எதிலும் ஒரு ரோம இழை கூடக் கோரை இல்லை. சரஸ்வதி, லட்சுமி சிரிப்பு எல்லாம் அப்படியே உதட்டோரத்துப் புள்ளியோடு மிதந்தன. வாசலில் மந்திரத்துப் பெரியம்மை கல்யாணத்துக்குக் கட்டின மணமேடை அப்படியே சச்சதுரமாகக் கிடந்தது. இந்திரா அதைச் சுற்றிச் சுற்றிச் சீட்டிப் பாவாடையோடு ஓடிக்கொண்டு இருந்தாள். மகராசப் பெரியப்பா போட்டிருக்கிற அத்தரும் ஜவ்வாதும் ஒரு நீராவி போலப் படர்ந்துகொண்டிருந்தது.

images (7)

‘சேதுவோட பிள்ளையா நீ?’ இந்திரா வாய்விட்டுக் கேட்கவில்லை. ஆனால் திரிகூடத்தின் இரண்டு கையையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டாள். தன் உதடுகளில் ஒவ்வொரு கையாக வைத்து முத்திக்கொண்டாள். நெஞ்சில் வைத்துக் கொண்டாள். அவளுடைய கை சுடுகிறதா தன்னுடைய கை சுடுகிறதா என்று திரிகூடத்திற்குத் தெரியவில்லை. ஒரு கையை மெதுவாக உருவிக் கொண்டான். இன்னொரு கையைப் பிடித்திருந்த இந்திராவின் கை அப்படியே அவளுடைய சம்மணமிட்ட இடது முழங்கால் சேலை மடிப்பில் கிடந்தது.

‘மத்திச் சித்தப்பா செத்துப் போச்சு’ என்று திரிகூடம் சொன்னதும், இந்திரா அவனுடைய கையை நழுவவிட்டுவிட்டு, ‘ஐயோ’ என்று வாயைப் பொத்திக்கொண்டாள். இதுவரை இல்லாத ஒரு தீர்க்கமான முகம் அப்போது வந்திருந்த இந்திரா, ‘நானும் அவனும்தாம் ஒண்ணாப் படிச்சோம். ஆனால் சேதுதான் எப்போ பார்த்தாலும் எங்கூடச் சண்டை இழுத்துக்கிட்டே இருப்பான்.’ என்று சிரித்தாள். ‘அவன்கிட்டே எவ்வளவு அடி பட்டிருக்கிறேன் தெரியுமா?’ என்று மேலும் சிரித்தாள். ‘சீட்டு, கேரம் எல்லாத்திலேயும் சேது ரொம்பக் கள்ள ஆட்டை விளையாடுவான்’. இந்திராவுக்குச் சிரித்துச் சிரித்து இப்போது அழுகை வந்திருந்தது.

திரிகூடம் இந்திரா முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுடைய அப்பாவை சேது, சேது என்றும் அவன் அவன் என்றும் சொல்லிக்கொண்டு அடுக்கடுக்காகச் சிரிக்கிற இந்திராவின் முகம் அடைந்துகொண்டே போன ஒரு பிரகாசத்தில் அவனுடைய உடம்பு சொடுக்கியது. முதலில் ஒரு சந்தோஷம் போல இருந்து, தாங்க முடியாக துக்கத்தை உண்டாக்கத் துவங்குவதை உணர்ந்தான். அவனுக்கு அவனுடைய அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

‘பெருமாள் அத்தை உள்ளே ஜோலியா இருக்காங்களா? அவங்க கிட்டே சொல்லீருங்க’ திரிகூடம் இந்திராவிடம் சொல்லிக்கொண்டே எழுந்திருந்தான்.

வரும்போது இருந்த வெயில் இன்னும் அப்படியே இருந்தது. கொஞ்சம் கூடத் தணியவே இல்லை.

‘%

****

Comments are closed.