குன்றிமணி மற்றும் சில கவிதைகள் / சிபிச்செல்வன்

[ A+ ] /[ A- ]

download (35)

குன்றிமணி

குன்றிமணி அது எங்கோ வேலியில்
காய்த்திருக்கிறது
ஒரு முட்செடியின்மீது பற்றிப் படர்ந்திருக்கும்
கொடியிலிருந்து காயைப் பறித்தேன்
நிறைய சிவப்பு
கொஞ்சம் கருப்பு
ஒரு துக்குணியூண்டு குன்றிமணியில் இரண்டு நிறமா
பிரமித்துக் கொண்டிருந்தபோது
கருப்பு நிறம்
முழு கருப்பாகவே தெரிந்தது
இன்னொரு பக்கத்திலிருந்து
அது முழுசாகவே சிவப்பு நிறத்தில் நிறைந்திருக்கிறது
சிவப்பிலிருந்து கருப்பைப் பார்க்க யாராலும் இயலவில்லை
மெள்ளக் கீறி கருப்பு நிறத்தினை ஊடுருவி
உள்ளே உள்ளே நுழைந்தேன்
வெள்ளையாக நீக்கமற நிறைந்திருக்கிறது
முழு குன்றிமணி
ஆக
ஒரு குன்றிமணிக்கு மூன்று நிறம்
நீங்கள் பார்க்காதபோது
அந்த மூன்றாவதை
எப்போதும்
மறைத்திருக்கின்றன சிவப்பும் கருப்பும்

********

என்றொரு ப ய ண ம்

தன்னாலே தொடங்கி விட்டது பயணம்
தொடங்கிய இடத்திலிருந்து
வெகுதொலைவாக சில சமயங்கள்
திட்டமிடாதவையாக மற்ற அனைத்து சமயங்கள்
போய்க்கொண்டிருக்கின்றன
பல மைல்கற்களில் அதுவரை இல்லாத மொழிகளில்
ஒருநோயின் பெயரை எழுதி வைத்திருக்கிறார்கள்
மைல்கற்களில் சிலசமயங்களில் பயணத்தின் வயதையும்
சிலநேரங்களில்
நோய்களின் அளவையும் எழுதி வைத்திருக்கிறார்கள்
போய்ச் சேரவேண்டிய தொலைவையும்
நேரத்தையும் ரகசியமாக வைத்திருப்பதால்
ஒரு திகிலான
ஒரு சவாலான
ஒரு நேரமின்மையில்
பரபரப்பாக பயணம் மேற்கொண்டிருக்கிறோம்
உங்கள் திசைகாட்டிகள் இங்கே வேலை செய்யாது
உங்கள் ஜிபிஎஸ் கருவிகள் இங்கே வேலை செய்யாது
உங்கள் பிரஷரை அளவிடுகிற கருவிகள்
மற்றும் உங்களின் இசிஜி கருவிகள்
மற்றும் உங்கள்
டிரட் மில்கள்
மேலும் உங்களின் அதிநவீன அறிவியல் கருவிகள்
துணைக்கு வருவதில்லை
பயணத்தில் உங்களோடு யாவரும் வருவார்கள் என
நீங்கள் உறுதியாக நம்பியவர்கள்
இப்போது கையசைத்து உங்களுக்கு விடை கொடுக்கிறார்கள்
உங்கள் பயணத்தின் எதிர்பாராத மைல்கல்லில்
எந்தப் பெயரும் எந்த நோயும் அல்லது எந்த உயிரும்
அங்கே பதியப்பட்டிருக்கவில்லை என்பதை
நீங்கள் அறியும் நொடியில்
அந்த மைல்கல்லில் இயற்கை என எழுதியிருக்கும்
அப்போது கண்கள் சொருகியிருக்கும்
எப்படிப் படிப்பீர்கள்
இயற்கையை

•••

நீலவான் வெண்மை

download (37)download (37)

எங்களூரில்தான் நீலவானம் இருக்கிறது என நினைத்திருந்தேன்
கடல் கடந்து பறந்து போனேன் ஒரு நிலம்
அங்கேயும் நீலத்தில்தான் இருந்தது வானம்
இன்னும் இன்னும் என நிறைய ஊர்களுக்கு
போகப்போக எல்லா ஊர்களிலும்
வானம் நீலத்தில்தான் விரிந்து கிடந்தது.
போகவேண்டும்
நீலமற்ற வானம் இல்லாத ஊருக்கு.
வானமேயில்லாத ஊருக்கும் ஒருநாள் போகவேண்டும்.
அதற்கு நிறத்தை நான் விரும்பிய வண்ணத்தில் ஏற்ற வேண்டும்
துளிப் பாலை வீசினால்
வானம் முழுக்க வெண்மையேறாதா
அத்தருணத்தில்
நான் போகிற எல்லா ஊர்களிலும்
வெண்மையான வானத்தில்
பறந்து பறந்து அலைகின்றன மேகங்கள்

*****

நன்றி

நான்காவது கோணம் இதழ்

Comments are closed.