ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெண் / சுரேஷ்குமார இந்திரஜித்

[ A+ ] /[ A- ]

download (17)

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவளைப் பார்த்தான், சிவசங்கரன். அவள்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அவள்தான் என்ற எண்ணம் ஏற்பட்டது. பேரிளம் பெண்ணாக, அப்பருவத்திற்குரிய அழகுடன் இருந்தாள். அவள் அருகே சென்று தயக்கத்துடன் “தப்பா நெனைச்சுக்காதீங்க.. நீங்க அமிர்தாதானே” என்றான், சிவசங்கரன். அவள் சற்று யோசித்துப் பின் “சந்திரசேகரன்தானே உங்கள் பெயர்” என்றாள். “இல்லை, சிவசங்கரன்” என்றான். தன் பெயரை அவள் மறந்திருந்தாள் என்பது, அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. சந்திரசேகரன் என்பது அவனுடைய நண்பனின் பெயர்.

சந்திரசேகரன் தற்போது உயிருடன் இல்லை. சிவசங்கரன் பணியில் சேர்ந்தபோது, சந்திரசேகரன் ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருந்தான். சந்திரசேகரனுக்கு நகரத்திலிருந்த, பெண்கள் தங்கிக் செல்லும், பெண்களை எப்போதும் வைத்திருக்கும் விடுதிகள் அனைத்தும் பழக்கம். அடிக்கடி போய் வந்து கொண்டிருப்பான். அவனுக்குத் திருமணமாகி ஒரு பையனும், பெண்ணும் இருந்தார்கள். சிவசங்கரனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை. சந்திரசேகரன்தான் சிவசங்கரனுக்கு, தங்கும் விடுதிகளில் இருக்கும் பெண்களிடம் தொடர்பு ஏற்படுத்தியிருந்தான். சந்திரசேகரனின் துணை இல்லாமல், சிவசங்கரன் தனியே சென்றதில்லை. பயம்தான் காரணம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஏதாவது ஒரு வழியில் அதிலிருந்து வெளியே வருவதில் சந்திரசேகரன் சமர்த்தன்.

இருவரும் ஒரு தங்கும் விடுதிக்குச் சென்றபோதுதான் அமிர்தா பழக்கமானாள். இரண்டு பேருக்குமே அவளைப் பிடித்துப் போனது. சந்திரசேகரனும், சிவசங்கரனும் கலந்துபேசி ஒரு முடிவு எடுத்தார்கள். அதன் பேரில் சந்திரசேகரன், புரோக்கரிடம் பேசினான். சிவசங்கரனும் கூட இருந்தான். இருவரும் ஒரு வீடு பிடித்து, அமிர்தாவை அதில் குடியிருத்துவது, இருவரும் அவர்களுக்கு வசதியான சமயத்தில் அவளிடம் வந்து தங்கிச்செல்வது, மாதாமாதம் ஒரு தொகையை அவருக்கும், புரோக்கருக்கும் கொடுத்துவிடுவது, இந்த ஒப்பந்தம் ஆறு மாத காலத்திற்கு இருக்கவேண்டியது. அந்த ஆறுமாத காலத்தில் அவள் வேறு யாருடனும் தொழில் செய்யக்கூடாது என்று பேசினார்கள். புரோக்கர், அமிர்தாவைக் கூட்டிவந்தான். அவளுக்கும் இந்த ஏற்பாடு, சம்மதமாக இருந்தது. கொடுக்கவேண்டிய தொகை தொடர்பாக சற்று இழுபறி ஏற்பட்டு, பிறகு முடிவானது.

குடும்பம் நடத்துவதற்குத் தேவையான பொருட்களை வாங்கி, வீடு பிடித்து, அவளைக் குடியமர்த்தினார்கள். அவர்களின் ஏற்பாடு பிரச்சினையில்லாமல் சென்று கொண்டிருந்தது. சந்திரசேகரன், அவளுக்கு மதுப்பழக்கம் ஏற்படுத்த எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தான். அவள் மறுத்துவிட்டாள். வீட்டில் மது அருந்தக்கூடாது என்ற கட்டுப்பாட்டையும் விதித்தாள். எனவே இருவரும் வெளியே குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார்கள். மற்றபடி அவர்களின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தாள். இன்பத்தை வழங்கினாள். நன்றாக சமைப்பாள். அய்யனார் கோயில் கறிச்சாப்பாடு என்ற பெயரில் கறிக்குழம்பு வைப்பாள். அந்தக் குழம்பு இருவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. வீட்டிற்கு வரும் நாளையும், நேரத்தையும், இருவரும் பகிர்ந்துகொண்டார்கள்.

சிவசங்கரனைப் பொறுத்தவரை தன்னைப் பண்புள்ளவன் என்றும் அறிவாளி என்றும், சந்திரசேகரனைப் பண்பற்றவன் என்றும் முட்டாள் என்றும் நினைத்திருந்தான், அமிர்தாவிற்கும் தன்னைத்தான் பிடித்திருந்தது என்று நினைத்திருந்தான். ஆறுமாத ஒப்பந்த காலத்திற்குப் பின், புரோக்கர் அவளை, பெங்களுருக்குக் கூட்டிச்சென்றுவிட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் அவளை, சிவசங்கரன் சந்திக்கிறான். ‘என்னை நினைவிருக்கிறதா’ என்றான். ‘உங்களை மறக்கமுடியுமா… பெயரைத்தான் மாற்றிச் சொல்லிவிட்டேன். உங்க பிராண்டு நல்லா இருக்காரா’ என்று கேட்டாள்.

சந்திரசேகரன் பணியில் இருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும், அவனுடைய வேலையை அரசாங்கத்தில், அவனுடைய மனைவிக்குக் கொடுத்திருப்பதாகவும் கூறினான். அவள், அவனை நினைவு கூர்ந்தவளாக சிந்தனைவயப்பட்டு, பின் வருத்தப்பட்டாள். ‘ஓவரா தண்ணி அடிப்பாரு எங்கிட்டேயும் அத்து மீறுவாரு.. நான் விடமாட்டேன். அப்புறம் பணிஞ்சு போவாரு’ என்றார்.

அவள், சிவசங்கரனைப் பற்றி விசாரித்தாள். திருமணமாகி இரண்டு பையன்கள் இருப்பதாகவும், மனைவி வங்கியில் வேலை பார்ப்பதாகவும் கூறினான். பிறகு அவளைப் பற்றி விசாரித்தான்.

“அந்த புரோக்கர் நல்லவன்தான் மனுசங்க எப்ப மாறுவாங்கன்னு கண்டுபிடிக்கவே முடியாது. திடீர்னு மாறிட்டான். எல்லாம் பணம்தான். என்னை இன்னொருத்தவனுக்கு வித்துட்டு ரூபாய் வாங்கிட்டுப் போயிட்டான். அவன் மகா கெட்டவன்.. என்னை அடிமை மாதிரி நடத்தினான்.. கஸ்டமருங்களும் நெறையப்பேர் வந்தாங்க.. ஒருநாள் இருபத்தைஞ்சு பேரு வந்தாங்கன்னா பாத்துக்குங்க.. நாம எப்படி சந்தோஷமா இருந்தோம். அங்கே ஒரே நரகம்… கஸ்டமருங்களும் லோகிளாஸ்காரங்களா வருவாங்க.. எனக்குப் பணமும் சரியாக கொடுக்கமாட்டான்.. நான் எங்க அம்மாவுக்கும் பாட்டிக்கும் எப்படி பணம் அனுப்புவேன். அவுங்க ரெண்டு பேரும் என்னை நம்பி இருக்கறவங்க… நல்லவேளையா எனக்கு பிள்ளைப்பேறு இல்லாமப் போச்சு. உங்க ரெண்டு பேரு கூட இருந்தப்ப புள்ளைப் பெத்துக்கலாம்னு ஆசை வந்துச்சு… டாக்டரைப் போயி பார்த்தேன். அவரு எனக்குக் குழந்தைப்பேறு இல்லைன்னு சொல்லிட்டாரு… இல்லைன்னா, உங்க ரெண்டு பேருக்கும், யாருன்னு தெரியாது. ஒரு மகனோ மகளோ இருந்திருக்கும். அந்த புரோக்கரு, அவன் சொன்னதை கேக்கலைன்னா, கன்னா பின்னான்னு அடிக்க ஆரம்பிச்சிருவான். இந்தா பாருங்க கன்னத்துலே அடிச்சதுலே ஒரு பல் விழுந்துருச்சு. இடையிலே பாட்டி செத்துப்போச்சு.. லெட்டரு அந்த புரோக்கர் அட்ரசுக்குத்தான் வரும். அவன் அதைப் பிரிச்சுப் பாத்துட்டுத்தான் எங்கிட்டே கொடுப்பான். வீட்டுக்கு பணம் அனுப்பறப்ப, கூட வருவான்…

ஒரு தடவை போலீஸ் எங்களை சுத்தி வளைச்சுருச்சு.. போலிசுக்காரங்க விபச்சாரத்தை ஒழிக்கவா வந்தாங்க… புரோக்கருங்க சரியா காசு கொடுக்கலை. எங்களை மட்டுமில்லை நெறையப் பேரைப் பிடிச்சாங்க… போலிசுக்காரன் ஒருத்தன் சந்தடி சாக்குலே என் கூட உறவு வைச்சுக்கிட்டான்… ஜெயில்லே போட்டாங்க… கோர்ட்டுக்கு அலைஞ்சேன்… ஜாமீன் எடுக்கக்கூட ஆளில்லை. அந்த புரோக்கர் ஜாமின்ல போனவன் ஆக்ஸிடெண்ட்லே செத்துப் போயிட்டான். எனக்கு நல்ல காலம். ஆனா எனக்கு அந்த ஊர்லே யாரையும் தெரியாது. ஜெயில்லேருந்து வந்த பின்னாலே அந்த இன்ஸ்பெக்டர், நாங்க திரும்பவும் தொழில் பண்ணுவோம்னு சொல்லி என்னையும் வேறு சிலரையும் புடிச்சு, உக்கார வைச்சு, ஒரு பார்பரை வரச்சொல்லி எங்களையெல்லாம் மொட்டை அடிச்சான். உங்களுக்குத் தெரியும் எனக்கு எவ்வளவு நீளமான கூந்தல்னு.. அவனுகளுக்குத் தெரியுது. கூந்தல்தான் அழகுன்னு. கூந்தலை எடுத்துட்டோம்னா கஸ்டமருங்க வரமாட்டாங்கன்னு.. மொட்டைத்தலையோட கண்ணாடியிலே பாக்கறப்ப தற்கொலை பண்ணிக்கிட்டு சாகலாம் போல இருந்துச்சு.. அவ்வளவு அசிங்கமா இருந்தேன். ஜெயில்லே இருந்தப்ப எங்க அம்மா என்னாச்சுன்னே தெரியலே.. அப்பறம்தான் தெரிஞ்சுக்கிட்டேன் அதுவும் செத்துப்போச்சுன்னு.. அது முகத்தைக் கூட பாக்கக் கொடுத்து வைக்கலை…

வேண்டுதலுக்கு மொட்டை அடிச்சிருக்கேன்னு சொல்லி ஒரு கடைலே வேலை பாத்தேன். சேரியிலே குடியிருந்தேன். காலப்போக்கிலே முடி வளந்துருச்சு.. அந்தக் கடைக்கு வழக்கமா ஒரு கஸ்டமரு வருவாரு.. அவருக்கு நான் வேலை பாக்கறவிதம் பிடிச்சுப்போச்சு.. அவரு பணக்காரரு, கார்லேதான் வருவாரு, அவரே ஓட்டிக்கிட்டு வருவாரு.. ஒருநாள் என்னைப் பத்தி விசாரிச்சாரு.. நான் பழைய கதையெல்லாம் சொல்லலை. தனி ஆளா இருக்கேன்னும் எனக்கு வேற யாரும் இல்லைன்னும் சொன்னேன். ஒரு லீவு நாள்லே என்னை ஒரு ரெஸ்டாரெண்ட்டுக்கு வரச்சொன்னாரு.. எதுக்குன்னு தெரியாம நானும் போனேன். ஏ.சி.ரூம்ல உக்காந்தோம். அவர் நேரடியாகவே விஷயத்துக்கு வந்துட்டாரு.. என்னை சின்னவீடா வைச்சுக்கனும்னு அவர் ஆசைப்படறதை சொன்னாரு.. எனக்கு அவ்வளவு சந்தோஷம்.. இந்த மாதிரி வாழ்க்கை கிடைக்கிறதுக்கு நான் எவ்வளவு கொடுத்து வைச்சிருக்கனும். தனிவீடு, வசதிகள் எல்லாம் பண்ணிக் கொடுப்பதாச் சொன்னாரு.. எனக்கு மெடிக்கல் டெஸ்ட்டுக்கு ஏற்பாடு பண்றதா சொன்னார். எனக்கு பயம் வந்துருச்சு.. உடம்புலே ஏதாவது கோளாறு இருக்குமோன்னு.. அவரே ஏற்பாடு பண்ணினார். நல்லவேளையா கோளாறா ஒன்னும் இல்லை. கல்யாணம்னு பண்ணலே.. பாக்கறவங்களுக்கு வித்தியாசமா தெரியக்கூடாதுங்கிறதுக்காக, அவரே ஏற்பாடு பண்ணி தாலிச்செயின் வாங்கிக் கொடுத்து என்னைப் போட்டுக்கச் சொன்னார். எட்டுப் பவுன் செயின்.. பாருங்க வாழ்க்கை எப்படி மாறுதுன்னு.. அவரோட சொந்த வாழ்க்கையைப் பத்தி நான் எதுவுமே கேக்கலை. அவரும் சொன்னதில்லை. ஒரு நாள் உடம்பு சரியில்லாமப் போச்சுன்னு போன் பண்ணினார். அப்புறம் ஏதோ ஆப்பரேஷன்னாரு.. ஒரு மாசம் ஆகும்.. நீ ஒன்னுக்கும் கவலைப்படாதே உடம்பைப் பாத்துக்க என் மனைவி ஒரு ஹிஸ்டிரியா கேஸ். என்னைப் பாக்க முயற்சிக்க வேண்டாம்னு சொன்னார்…

திடீர்னு ஒரு நாள், ஒரு கார் வந்து வாசல்லே நின்னுச்சு.. செவப்பா ஒரு பையன் காரைவிட்டு இறங்கி வந்து பெல்லை அடிக்கிறான். எனக்கு ஜன்னல் வழியே தெரியுது. நான் கதவைத் திறக்கிறேன். உங்க ஹஸ்பண்டோட முதல் மனைவியோட மகன் நான். அப்பா ஆஸ்பத்திரியிலே இருக்காரு உங்களை கூட்டிக்கிட்டு வரச்சொன்னாருன்னு சொன்னான். தங்கமான பையன். நான் பதறியடிச்சு வீட்டை பூட்டிட்டு அவன்கூட கார்லே போனேன். ஆஸ்பத்திரியிலே அவரைப் பாத்தேன். ரொம்ப மெலிஞ்சு போயிருந்தாரு.. என்னைப் பாத்ததும் அவருக்கு கண்லே தண்ணி வந்துருச்சு. நான் பொழைக்கமாட்டேன்னு டாக்டர் மறைமுகமாக சொல்லிட்டாருன்னு அழுதார். நானும் அழுதேன். இவன் என் பையன். பேரு ஆனந்தகுமார். இவன் உன்னைக் கவனிச்சுக்குவான். கவலைப்படாதே. உன் வாழ்க்கை முழுக்க இவன் கவனிச்சுக்குவான்னு சொன்னாரு.. பிறகு என்னை வீட்டுக்குப் போகச் சொன்னாரு..

கொஞ்சநாள்லே அந்தப் பையன் ஆனந்தகுமார் போன் பண்ணி அவர் செத்துப் போயிட்டதைச் சொன்னான். வீட்டுக்கு வரச்சொன்னான். நானும் போயி அவரு செத்த உடம்பைப் பாத்தேன். சிலநாள் கழிச்சு அந்தப் பையன் வீட்டுக்கு வந்தான். எனக்கு செலவுக்குப் பணம் கொடுத்தான். எனக்கு ஒரு பிஸினஸ் ஏற்படுத்திக் கொடுப்பதாகச் சொன்னான். அதேமாதிரி ஒரு பிஸினஸ் ஏற்படுத்திக் கொடுத்தான். இப்ப நான் பத்துப் பேருக்கு சம்பளம் கொடுக்கிறேன். ஆனந்தகுமார் அப்பப்ப வந்து பாத்துக்கறான். பிஸினஸையும் பாத்துக்கறான். நல்லவிதமாக ஓடிக்கிட்டு இருக்கு வாழ்க்கை.. வந்த பாதையை நெனைச்சுப்பாத்தா ஒரு நாவலே எழுதலாம். எவ்வளவு திருப்பம் எவ்வளவு புதிர் இந்த வாழ்க்கை… வாங்க நம்ம காருக்கிட்டே போவோம்” என்று எழுந்து நடந்தான். சிவசங்கரனும் உடன் சென்றான்.

download (18)

பெரியகார் நின்றிருந்தது. காரில் ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. டிரைவர் இருந்தான். பின் ஸீட்டில் ஒரு பெண் ஆங்கிலப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தது. காரின் அருகே சென்றதும் அமிர்தா நின்று சிவசங்கரனைப் பார்த்தாள்.

‘என் மனசு கேக்கலை… அந்தப் பெண்ணை பாத்துக்குங்க’ என்றாள். அவன், அந்தப் பெண்ணைப் பார்த்தான். அந்தப் பெண் அவனைப் பார்த்துவிட்டு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள். அமிர்தாவின் முகம் மாறியது. உடல் இறுக்கம் கொண்டது.

சிவசங்கரன் ‘என்ன? என்றான். அமிர்தா, மெதுவான குரலில் ‘அந்தப்பெண், உங்க ரெண்டு பேருலே. ஒருத்தரோட பெண்.. எனக்கு குழந்தைப்பேறு இல்லைன்னு நான் சொன்னது பொய். இந்த பெண்ணை வளக்க நான் பட்ட கஷ்டத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்வளவு கஷ்டம் ரொம்ப நன்றி.. வரட்டா…” என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறி டிரைவருக்குப் பக்கத்து ஸீட்டில் உட்கார்ந்தாள். கதவைச் சத்தத்துடன் சாத்தினாள். டிரைவரைப் பார்த்து காரை ஓட்டச்சொன்னாள். கார் நகர்ந்தது. சிவசங்கரன் ஓடிக்கொண்டிருந்த காரைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

****

Comments are closed.