மலையாள மொழி கவிஞர் வினய்சந்திரன் ( கட்டுரை ) – தி.இரா.மீனா

[ A+ ] /[ A- ]

maxresdefault (1)

“காட்டிற்கு நான் என்ன பெயரிடுவேன்?

காட்டிற்கு நான் என் பெயரிடுவேன் ”

தலைமுறைகளைக் கடந்த படைப்பாளராக மதிக்கப்படும் மலையாள மொழிக் கவிஞரான டி.வினய்சந்திரன் எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர் மலை யாள மொழி நவீன யுகத்துக்குள் காலடி எடுத்து வைத்த சூழலில் ஆழ் மனதை ஆதிக்கம் செய்கிற உணர்வுகளையும், அனுபவங்களையும் வாச கனுக்கு வெளிப்படுத்துகிற சக்தி வாய்ந்த ஓர் ஊடகமாக அவர் தன் கவிதை களை அறிமுகப்படுத்தினார்..அவை கருவும் ,விளக்க உத்திகளும் மரபும், நவீனத் தன்மையும் இணைந்ததாக வெளிப்பட்டன.நவீனப் போக்கை அவர் கையாண்டாலும் கவிதைகள் நாட்டுப்புறச் சாயலும், இசைச்சார்பும் கொண்டி ருந்தன. காடுகள்,ஏரிகள் இயற்கை என்று அவர் கவிதைகளில் இயற்கையின் ஆளுமை அதிகமாக வெளிப்பட்டது.

மலையாளப் பேராசிரியராக கேரள மாநிலத்தின் பல்வேறு அரசுக் கல்லூரி களில் பணியாற்றிய அவர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்.குடும்ப வாழ்க்கை அவருக்குப் பிடித்தமானதாக இல்லை. புத்தகங்களையும், கவிதைகளையும் பெரிதும் ரசித்த அவர் நட்பையும், நாடோடியாக பல இடங்களுக்குச் சென்று வருவதையும் வாழ்வின் உன்னதமாக நினைத்தார். கேரளாவில் எண்பதுகள் தொண்ணூறுகளில் கவிஞர்கள் கூடிக் கவியரங்கங்கள் போலக் கவிதைகள் படிப்பது மிகப் பரவலாக இருந்தது. சொல்லப் போனால் திருமணப் பந்தல்களி லும் கூட கவிதை வாசிப்புகளைக் கேட்கலாம். நாட்டுப்புறச் சாயலும், இசைச் சார்பும் கொண்டிருந்ததால் அவர் கவிதைகள் பரவலாக எல்லோரையும் கவர்ந்தன. புயல் போல அவர் கவிதைகள் அமைய வினய்சந்திரன் சுழல் காற்றாக இருந் தார் என்று அவருடைய நெருங்கிய நண்பர்கள் – மாணவர் களாக இருந்தவர்கள் குறிப்பிடுகின்றனர். நாடகம், கவிதை ,மொழிபெயர்ப்பு உரைநடை என்று பலதுறைகளில் பங்களித்திருந்தாலும் முதன்மையாக நின்றது கவிதைதான். வாய்மொழிப் பாரம்பரியம்,எழுத்து வடிவம் இரண்டும் ஒருங்கே வெளிப்படுவதான தன்மை இவர் கவிதைகளுக்கு இயல்பானதாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

வினய்சந்திரனின் ’உபரிகுன்ன” நாவலுக்கு முன்னுரை எழுதும் போது விமர் சகராகிய கே.வி. அப்பன் “அந்த நாவலின் சிறந்த ஆளுமை என்பது அதன் கவிதை சார்ந்த பண்புதான்” என்கிறார்.முழுக் கவிஞராக மலையாள இலக் கியம் இவரைப் போற்றுவதற்குரிய முக்கிய காரணம் கவிதையைத் தவிர இவருக்கு வேறு வாழ்க்கை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்ததும் இறுதி வரை அப்படிச் செயல்பட்டதும்தான் என்று நெருங்கிய நண்பர்கள் குறிப் பிட்டுள்ளனர்.”கவிதை என்பது பகுப்பாய்விற்கு உட்பட்டதல்ல.அது கேட்க, பார்க்க,தொட,உணர, அனுபவிக்க, உள்வாங்கிக் கொள்ள வேண்டிய உணர் வாகும் “என்கிறார். இவருடைய கவிதைகளை ’இந்த வகை” என்று எந்த அடையாளத்திற்குள்ளும் கொண்டு வரமுடியாது. செறிவு, தொடர்களி லான கட்டமைப்பு, பன்முகத்தன்மை ஆகிய நிலைகள் இவர் கவிதைகளை மற்ற வர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகின்றன

இந்திய மொழிகளில் மட்டுமின்றி உலக மொழிகளிலும் அவர் விருப்பம் கொண்டிருந்ததை அவருடைய மொழி பெயர்ப்புகள் உறுதி செய்கின்றன. ஆசிய, ஐரோப்பிய ,ஆப்பிரிக்க,லத்தீன்,அமெரிக்க மொழிகளின் கவிதைகளை மலையாள மொழியில் மொழிபெயர்த்தவர். Seferis ,Rilke ,Lorca,Tomas Transt romer, Octavio Paz, Guiseppe Ungaretti, Pablo Neruda, Kalil jibron ஆகியவர் களின் படைப்புகளில் தான் ஈடுபாடு கொண்டிருந்ததோடு மட்டுமின்றி மாண வர்களிடமும் மொழிகள் கடந்த நிலையில் அந்த படைப்புக்களை படிக்கத் தூண்டியவர்.

கன்னட வசனங்கள்,தெலுங்கு மொழி திகம்பர கவிதைகள் ஆகியவற்றையும் மொழி பெயர்த்தவர்.உரைநடை,கதை, நாடகங்கள் என்று பல படைத்திருப் பினும் அவருக்கு மிக நெருங்கியதாக கவிதை மட்டுமிருந்தது. பயணம், சுற்றுச்சூழலியம்,சமுதாயச் செயல்பாடுகள் என்று எல்லாமும் கவிதை சார்ந்த தாக அமைந்தன.வாழ்க்கையைக் கவிதையாகப் பார்த்த மரபில் வந்தவர்.தன் கவிதைகள் விமர்சிக்கப்படும் போது உணர்ச்சிவசப்படுபவராக இருந்தார். அவருடைய ’தன்முனைப்பு’ மற்றவர்களுக்கு எரிச்சலூட்டினாலும் அதைப் பொருட்படுத்தவில்லை.” நூறு வருடங்களுக்குப் பிறகு படித்தாலும் படிப்பவர்க ளுக்கு நான் எதிர்கால மொழிக்கு உரியவனென்பது புரியும் “என்று குறிப்பிட் டுள்ளார்.பொதுவாக இதைப் படிக்கும் போது ’அகந்தை’என்பது போலத் தெரிந் தாலும் உலக வாழ்க்கையைத் தன் வாழ்க்கையாக வாழ்ந்த நிலையை அவர் கவிதைகளின் மூலமாக உணரமுடிகிறது.ஆண்,பெண் வேறுபாடில்லாத நிலை யில் உலகக் கவிஞர்களை ஏற்றவர்.

பயணத்தைப் பெரிதும் விரும்பினார். அவருடைய ’யாத்ராபாட்டு” அவர் அற்புதமான பயணியாக விளங்கியதைக் காட்டும். பயணத்தின் பல பரிமா னங்களைக் காட்டுவதான நூல் என்று மதிப்பிடப்படுகிறது.. தன் பயணக் கதைகளை நண்பர்களோடும்,மாணவர்களோடும் பகிர்ந்து கொண்டவர். தென்னிந்தியாவின் சித்தர் என்றும் அவரை அழைக்கின்றனர்.
மாறும் உணர்திறனுக்கேற்ப செவ்வியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம், இருத்தலியல் என்று தொடர்ந்த எழுத்து சமகாலச் சிறந்த கவிஞன் வரிசையில் வைக்கிறது.

அவருடைய இருபது கவிதைத்தொகுப்புகளில் சில: வினய்சந்திரன் கவிதைகள் , நரகம் ஒரு பிரேம கவிதா எழுத்துன்னு பேரு அறியாத மரங்கள் வம்சகதா,சமஸ்தகேரளம் பிஓ,ஸௌம்யகாஸி, வீட்டிலுக்குள்ள வழி,உபரிகுன்னு
விருதுகள்: ஆசான் நினைவு விருது, செங்கம்புழா விருது, கேரள சாகித்ய அகாதெமி விருது,மஸ்கட் கேரளா மைய விருது.
அவருடைய “நரகம் ஒரு பிரேம கவிதை எழுதுன்னு ’என்ற படைப்பு என்று மிகச் சிறந்த்தாக மதிப்பிடப்படுகிறது.அவர் படைப்புகளுக்கான விமரிசனங்கள் உரைநடை கவிதையின் முன்னோடியாக அவரை நிலைநிறுத்தியது.

“காட்டிற்கு நான் என்ன பெயரிடுவேன்?

காட்டிற்கு நான் என் பெயரிடுவேன்.”

என்று ’காடு” என்ற கவிதையில் இடம் பெறும் வரிகள் சுருக்கமாக இவரை, இவர் கவிதையை, பரந்த உலகப் பார்வையைக் காட்டுகின்றன

இலைகள்

அவள் எனக்கு ஒரு மலர் தந்தாள்

அதை முத்தமிட்டு மனிதனானேன்

அவை எனக்கு நெருப்பைத் தந்தன

அதனால் கவிஞனானேன்

ஒரு மேகம் அறிவுரை சொன்னது எனக்கு

தலையிலிந்து கால்வரை

நரகத்திலிருந்து சொர்க்கம் வரை

எப்போதும் அலையும்படி.

இறுதியில்

புல்வெளியின் இலையொன்று

என்னை அழைத்தது

அழுகின்ற பூமியின்

மலர்கின்ற வானத்தின்

நெருக்கடியைப் பகிர்ந்து கொள்ள.

ஓவியங்கள்

காக்கைகளின் கரைவு

ஈர தலைமுடிகளின் மணம்

–இது வைகறை

பல பாதைகளும்

பார்வையற்ற சூரியனும்

-இது மதியம்.

தேயும் நிழலும்

அச்சுறுத்தும் ஈக்களும்

-இது அந்தி

முடிவற்ற இடுகாடு

இடையே மயக்கும் காற்று

-இது இரவு.

பலகையின் மேல்

வெளியே ஒரு

பிரிவின் கொந்தளிப்பு.

கீழ்ச் சட்டையோடும் முகத்திரையோடும்

என் கவிதை உறங்கப் போகிறது.

இந்தக் கடல் புதுநிலவு நாளில்

நிலவை அழைக்கிறது

என் கவிதை இன்னமும் உறங்குகிறது.

தீவிலிருந்து எழும் கணங்கள்

எல்லையற்ற பெருவெளியைக்

காணப்பறக்கிறது.

காற்று இறுக்கமாகிறது.

இன்னமும் மீட்டலின்றி மனதின் இழைகள்.

மனம் தூண்டிலில்பட்ட

மீன்போல அழுகிறது.

என் உறக்கமற்ற பாடலும்

நானும் காற்றின் தோளில்உட்கார்ந்து

வைகறை நட்சத்திரத்திற்காக

வானத்தை ஊடுருவும்போது

கடல் உறங்குகிறது.

***

சாஜை கே.வி. — வினய்சந்திரனோடு ஓர் உரையாடல்

கே : “வெகுநேரம் மௌனமாக இருக்கமுடியாத, தெய்வமாக்கப்பட்டுவிடும் உயர்நிலைக்கு அஞ்சிய காதலர்கள் அலைகளுடன் சரசமாடும் வகையில் கடற்கரைக்குத் திரும்பினாரகள் ” மேலே சொன்ன மேற்கோளுக்குச் சான்று போல உங்கள் சமகாலத்தவர்களிடையே தனித்துவம் உடையவராக இருக்கிறீர்கள்.இந்தமாதிரியான அணுகுமுறை “அனகம்”போன்ற கவிதைகளில் வெளிப்படுகிறது.டி.எச்.லாரன்ஸின்Lady Chatterly’sLover புத்தகத்தில் இதே மாதி ரியான ஒரு கருத்திருக்கிறது.புணர்ச்சிக்குப் பின்னேயான காதலியின் முகம் புத்தனின் முகம்போலச் சாந்தமாயிருந்தது என்று — காதலும், காமமும் இணைந்த ஆன்மீக நிலைக்குச் சிறிது விளக்கம் தரமுடியுமா?”

பதில்:மனிதன்புலன் சார்ந்தவன்.காமம் என்பது வாழ்க்கைக்கான விழா. எனினும்அது கவிதை என்பதன் உத்வேகத்திற்கு ஒருபடி மேலானது.ஒருவன் நிர்வாணம் அல்லது மோட்சம் என்பதை நோக்கிப் போகும்போது மற்றொரு வன் உருவாக்கத்தின் உச்சத்திற்குப் போகிறான்.கலைத் தேவதையான சரஸ் வதி தன் மடியிலிருக்க பிரமன் வேதத்திற்குட்படுகிறான்.எப்படியானாலும் நம் உண்மை அனுபவங்களிலிருந்து மாறுபட்டது சொற்களின் வெளிப்பாடு.

கே:உங்களின் பல கவிதைகள் அப்ரோடைட்,சாப்போ,மற்றும் கடல் ஆகியவற்றைக் குறிப்பாகக் காட்டுவதாகவேயுள்ளன.உங்கள் கவிதைகளில் இருந்து அப்ரோடைட் ஒரு போதும் விலகாது என்று சொல்லலாமா?

ப:கலைத்தெய்வத்தின் மனிதவடிவம்தான் சாபோ.அடக்க முடியாத அன்புடை யவள்.பழக்கவழக்கங்கள் அவளைத் தடுக்கமுடியாது.குந்தியை,சீதையை நம் மால் தழுவிக் கொள்ளமுடியாது.பூமி சிதைந்து,காட்டுத்தீ பரவி எல்லாம் முழுமையாகஅழிந்துவிடும்,அவர்கள் வியப்பின் உச்சக்கட்டம்.இயற்கைஆற்ற லின் விளைவும்,முடிவடையாத உள்உருமாற்றமும் ஆகியவை கவிதைக்கான இயக்கங்கள் ஞானத்தை நோக்கி என்னைச் செலுத்துவது அதுதான்.

கே:இயற்கையிலிருந்து நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சி ,பரவசம்,தெய்வீக இன்பம் ஆகியவை குறித்த கணங்கள் ?

பதில்:ஓ! ஒரு கருநாகத்தைப் பார்த்த தருணமாக இருக்கலாம்.அல்லது மிக நெருங்கியவர்களை இழந்தபோது ஏற்படும் வெறுமையாக இருக்கலாம் அது மழையில் முற்றிலும் நனைந்து நிர்வாணமாக இருப்பதைப் போன்றது. பரிகாரமென்னும் எண்ணெயை உடலில் பூசிக் கொண்டு செல்லும் புழுவின் யாத்திரை.வல்லூறுகளின் வானம்.வெளிறிய நிலாவைக் காட்டும் கடல். இமாலயத்தின் ஆழ்அமைதி.பெண்ணின் மார்பைத் தொடும் உணர்வைத் தரும் இனிய மணமுடைய மாங்கனிகள்.பனங்கள்ளின் இனிமை.அசோக மரத்தின் மென்மையான இலைகள். காட்டுத்தீயின் ஒன்றிய ஒலிநயமான கணங்கள். பால்வீதியின் ஆனந்தமாக எல்லா ஆறுகளும்,அமைதியான தண்ணீரும். மிகச் சிறியபூவும்,மிகப்பெரிய அருவியும் பனி மறைத்த நிலப்பிரதேசம். பாலை வனம்.கிழக்கும்,மேற்கும் ஒலியெழுப்பிப் பறக்கும் கிளியாகச் சூரியன். துவைக் கப் போடப்படும் வெள்ளை ஆடையாக முழுநிலா புதுநிலவின் மேல் தணி யாத தாகம். முன்னோர்களின் மந்திரம் சொல்லும் உதடுகளாக புற்களின் இருபக்க அலகுகள்.

கே.உங்கள் கவிதைகளில் வெளிப்படும் சோக நகைச்சுவையின் மூலம்?

பதில்:பறைச்சி பெற்ற பன்னிரு குலம் எங்களுடையது.[Twelve castes born of Parayi ] பாக்கனார்,சாட்டனார், நரநது— தேவி -காளிதேவி தன் தோற்றத்தைப் பார்த்து நகைப்பாள் எரிச்சல்-வெறுப்பு -உலோகதவாயம் –சிசிபஸ்- நம்மிடம் வியாசர் ,பாஸன், சாலிங்கர், குந்தேரா என்று. .இவர்களை ஆதரிக்கும் வகையில் Borges கதைகள் எல்லாம்.

கே:பயணத்தின் போது ஏற்பட்ட மறக்க முடியாத கணங்கள் ?

பதில்:ஒரு முறை ரயில் பயணத்தின்போது அந்த கம்பார்ட்மென்டில் என் னையும், ஒரு சிறு குழந்தையையும்,நட்சத்திர வானமும் தவிர எல்லோரும் தூங்கி விட்டனர்.இன்னொரு சமயம் பனாரசில் ஒரு படகோட்டியின் பெயர் தசரதன் என்று அயோத்திமன்னனின் பெயராக இருந்தது.உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் சூழ்ந்திருக்க மெக்சிகோவின் பிரமீடு உச்சியில் ’காடு’ என்ற கவிதையைப் படித்தேன்.சேக்ஸ்பியரின் வீட் டிற்கு முன்னால் ஈரேழ் வரிப்பா[Sonnet]படித்தேன்.காப்பாளர் மீண்டும் அதை சொல்லச்சொன்னார்.ஹெமிங்வேயின்வீட்டிற்கு முன்னால் போனபோது மழை தூறத் தொடங்கியது. அன்று அவர் பிறந்த நாள் என்பது நான் அறியாதது.

கே:உணர்ச்சி நிறைந்த கவிஞனுக்கும் ,வார்த்தைக்குமான நெருங்கிய உறவு?

பதில்:ஒவ்வொரு புதிய வார்த்தையும் என்னை மகிழ்ச்சிபடுத்துகிறது.அதன் மணம் என்னை படபடக்க வைக்கிறது.அதுதான் பூட்டும் சாவியும்.வாழ்க் கையின் நான்கு லட்சியமும் அதுதான்.அது நம் பூர்வவாழ்க்கையையும் தொடுகிறது.மூஞ்சுரு,மயில்,அன்னம்,கருடன்,காளை என்று தெய்வங்களுக்கு வாகனங்கள் போல எனக்கு வாகனம் கவிதைவார்த்தைகள்,சொற்களுக்கு என்று நிச்சயிக்கப்பட்டபிறகு ஒருவனின் உலகம் அமைதியில் பயணிப்பதா கிறது.வார்த்தை என்பது விதை.அது இடி.ஆழ்மனதின் அடுக்குதளம் அழிவி லிருந்து தொடங்கி மணவாழ்வின் உச்சம்வரை அது அழைத்துச் செல்கிறது.நானும் வார்த்தையும் ஒருசேர ஓய்வெடுக்கும் போதுகண்ணுக்குப் புலனாகாத ’பாவத்தின்’ முத்திரை தங்குகிறது.

கே: Larca மற்றும் Paz டன் உங்கள் நெருக்கம்?

பதில்:லார்காவுக்கு என்னைப் போல வாழ்வும் சாவும் Gipsy-Ballad தான். ஹோமரிலிருந்து ரில்கே வரை இணைக்கிற ஒரு நூல்.ஒவ்வொரு அங்கம் எழுதுவதும் காளைச் சண்டைதான். Paz நம்முடைய சகபயணி. விரிவான நம் வரலாற்று மார்க்கத்தை பகுப்பாய்வு செய்தவர்.ஸ்பெயின் மற்றும் Aztecs இரண் டின் பாரம்பரியமும்,நவீனத்துவமும் கலந்த கலவை .தென் அமெரிக்காவைச் சேர்ந்த Cezer Vallejo என்னை மிகவும் கவர்ந்த கவிஞர்.

கே:மலையாளத்தில் உங்களைக் கவர்ந்த கவிஞர்கள்?

நிரனது ராமதாசன்,எழுத்தச்சன்,சிவி,ஆசான்,உன்னிவாரியர் இவர்கள் ஒரு வகை.எனது முன்னோடிகளில் எடப்பள்ளி என்னை மிகவும் கவர்ந்தவர். ராம்ராஜபஹதூர் நவீன செவ்வியலில் அடங்குபவர். இது சாத்தியமற்ற சாத் தியம்.கோடையின் வானம்பாடியாக இருந்தவர் எடப்பள்ளி.

கே:முதுமையின் தாக்குதலும்,தவிர்க்க முடியாத மரணமும் குறித்து?

பதில்:சிறுவயதில் இருந்த போது என் கவிதைகள் ’மரணம்’என்ற கருவை இயல்பாகக் கொண்டிருந்தன தீர்க்கதரிசிகள்,தத்துவவாதிகள்,கவிஞர்கள் போல நானும் அதில் ஆழ்ந்திருந்தேன்.சில காலம் அதுபற்றி ஆராய்ச்சி செய்தேன். மரணம் பற்றி எனக்கு பயமில்லை. நரைமுடியும், மங்கும் பார்வையும் என்னைச் சிரிக்க வைக்கும் .எனினும் சுற்றியுள்ள புறக்கணிக்கப்பட்ட முதிய வர்களைப் பார்க்கும் போது நடுக்கம் வருகிறது.ஆனால் கவிதை என்று வரும் போது நான் ’மார்க்கண்டேயன் ’போலத்தான். இறந்த கணவன் சத்யவானை மீட்டுக் கொண்டு வந்த சாவித்ரி நான்.ஒரு வகையில் யுலிஸசின் இரண்டாவது ஒடிசி போலத்தான்.

கே:கவிஞனாக எப்படி உங்களை மதிப்பிட்கிறீர்கள்?நவீனத்துவமாகவாகவா?

பதில்:ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு என்னைப் படியுங்கள்.நான் எதிர்காலத்தின் கவிஞன் என்பதை உணர்வீர்கள்..பாஸ்ட் ஃபுட் போன்றதான இன்றைய இலக்கியப் போக்கை யார் விரும்புகிறார்கள்? மலையாள மொழி இருக்கும் வரை,என் வாசகன் / வாசகி அவன் மண்ணையும் ,மரபையும் என் கவிதைகளிலிருந்து மீண்டும் கண்டறிவார்கள்.

தி.இரா.மீனா

*****

நன்றி :Kavya Bharathi Indian Literature in English and Translation, American College , Madurai.

Indian Literature –Sahitya Academy Feb 2013

Comments are closed.