நாய்கள் ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன ( சில கவிதைகள் ) / சிபிச்செல்வன்

[ A+ ] /[ A- ]

images (64)

நாய்கள் ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன
நள்ளிரவிற்கு மூச்சு முட்டுகிற பயம்
பாதையில் பயணம் பயந்துபோய் பாதியில் நிற்கிறது
ஒரு நாய் தெருவில் குரைத்தவுடன்
மற்ற தெருக்களிலிருந்து எதிர் குரல்களை கொடுக்கின்றன நாய்கள்
அதைப் பார்த்துக்கொண்டு ஒரு நாயும் சும்மாயில்லை
எதிர் குரலை எழுப்பியவாறே வாலை ஆட்டிக்கொண்டு ஆக்ரோஷமாக ஊளையிடுகின்றன
ஒரு நாய்கூட நட்புகுரலை எழுப்பவேயில்லையோ என யோசித்துக்கொண்டிருந்தவேளையில்
ஒரு நாயின் குரலை மற்ற நாய்களின் கூக்குரல் ஊளைகளில் மறைந்து திரிந்துகொண்டிருக்கின்றன
காற்றி
ல்
இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவனுக்கு பயம் தெளிந்து அந்த நாய்ஊளையில் இருக்கிற ஒழுங்கற்ற ஒழுங்கை ரஸித்துக்கொண்டிருந்த வேளையில் நள்ளிரவு ஊளைக்குப் பயந்து ஒண்டிக்கொண்டே நழுவிப் போய்க்கொண்டிருக்கிறது ஒரு சுடுகாட்டுப் பாதையில்

18 / 6 / 2017
நள்ளிரவு 12.30 மணி

••••

ஒரு நாயின் ஊளை இன்னொரு நாயைப் போல யில்லை
என் தெரு நாய் நன்றாக அழகாக ஊளையிடுகிறது
எதிர் தெரு நாய் அதைப் போலி செய்ய முயற்சித்தவாறே .ஊளையிடுகிறது
இதைப் பார்த்த மற்ற தெரு நாய்கள்
மற்றும்
ஊர் நாய்கள்
மேலும்
பக்கத்தூர் நாய்கள் ஊளையிடுகின்றன
அதைக் கேட்டு பிற நாய்களும் பகடிசெய்து ஊளையிடுகின்றன
மன்னிக்கவும் பிரதியெடுத்து ஊளையிடுகின்றன
நள்ளிரவு நாய்களுக்கு வேறு எதுவும் தெரியாது
ஊளையிடுவதைத் தவிர
ஆகவே
முதலில் மற்றும் முடிவில் ஒரு ஊளையை யிடுவோம்

•••

இந்த நாய்களுக்கு வேறு வேலையில்லை
ஆகவே
ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன

•••

இந்த நாய்களுக்கு வேறு எதுவும் தெரியாது
ஆகவே
ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன

•••

நீங்கள் அறிவீர்களா?
நாய்கள் ஊளையிடுவது
அதற்குள் சில ரகசியங்களை பரிமாறிக்கொள்ளவென
அறிய வேண்டுமானால்
ஒரு நாயைப் போல ஊளையிட கற்றுக்கொள்ளுங்கள்

••••

ஒரு குவளை நீர் அருந்தியபின்
கொஞ்சம் கூடவே சேர்த்து அருந்தினேன் நள்ளிரவின் இருளை
ஒருமுறை ஊளையிட்டுப் பார்த்துக்கொண்டேன்
இம்முறை மிகச் சரியாக நான் ஊளையிடுவதாக சொல்கிறார்கள் என்னை விரும்பாத நாய்கள்.

••••
பின்னிரவு 1.29 மணி

••••

ஊளையிட்டுக்கொண்டே இந்த நள்ளிரவின் விளம்புவரை ஓடினேன்
பாதையின் முடிவில் ஒரு சுடுகாட்டில் கிடைத்தது
கொஞ்சம் எலும்புகளும் கொஞ்சம் சதைகளும்
கொறித்துக்கொண்டிருக்கிறேன் இந்த நள்ளிரவை
இடையிடையே ஊளையிட்டுக்கொண்டிருக்கிறேன்
நான் நாயென்பதை மறந்துவிடாமல் இருப்பதற்காக
•••
அதிகாலை 1.39 மணி
18 / 06 / 2017

••••

உனக்கு யாருமில்லை என்பதால் நானும்
எனக்கு யாருமில்லை என்பதால் நீயும்
ஒருவருக்கொருவர் துணையாக பேசிக்கொண்டிருக்கிற இந்த
நடு ஜாமத்தில்
ஓயாமல் காற்றில் அசைகிற நிழல்களைப் பார்த்து
ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன நாய்கள்

••••
பின்னிரவு மிகச் சரியாக 3 மணி

••••

இந்தப் பின்னிரவில் ஒரு தேநீரைத் தயாரிக்க தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறேன்
தூக்கம் கண்களில் எரிந்து கொதிக்கிறது
ஒரு தேநீரைக்கூட
ஒரு குவளையில் ஊற்றிக்கொண்டு குடிக்கத் தெரியாதவனென்று இந்தப் பின்னிரவு சிரிக்கிறது
அதைப் பார்த்து ஊளையிடுகின்றன
சில தெரு நாய்களும்
சில பெயரில்லாத நாய்களும்
அப்போதுதான் முதன்முதலாக ஒரு கோப்பை தேநீரை தயாரிக்க கற்றுக்கொண்டேன்
அத் தேநீரின் நிறம் இருளைப்போலவேயிருந்தது தற்செயலானதல்ல
அது அவ்வளவு கசப்பாக இருந்தது என்பது கொஞ்சம்கூட சர்க்கரை சேர்க்காத பொய்யைப் போலிருந்தது

இன்னும் விடியவில்லை
இன்னும் ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன நாய்கள்

••••

அதிகாலை 3.15 மணி

Comments are closed.