நிகானோர் பார்ரா கவிதைகள் / தமிழில்: ராஜேஷ் சுப்ரமணியன்

[ A+ ] /[ A- ]

peluca4

•••••

1914 ம் ஆண்டு சிலி (சிலே -Chile ) நாட்டில் பிறந்த நிகானோர் பார்ரா , ஸ்பானிய மொழியின் மிக முக்கியக் கவிஞர். பல முறை நோபல் இலக்கியப் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கவி ஆளுமை.

அவரது ” கவிதைகளும் எதிர்க்கவிதைகளும் ” (Poems & Antipoems ), ஸ்பானிய மொழியின் மிக முக்கியமான கவிதைத் தொகுப்பாகக் கருதப்படுகிறது. தன்னை, “எதிர்க்கவிஞன் ” என்று பிரகடனப்படுத்திக்கொண்டவர். எளிமையான வார்த்தைகளுடன், நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் புற உலகப் பொருட்களையும் கொண்டு, அபார வீச்சுடன் வெளிப்படுபவை அவரது கவிதைகள். கேலியையும், நகைச்சுவையையும், நையாண்டியையும் ஆயுதங்களாகக் கொண்டு சமூகத்தையும், மதிப்பீடுகளையும் கேள்விக்கு உட்படுத்துபவை அவரது கவிதைகள்.

•••••

.
அகேசியா மலர்கள்

பல வருடங்கள் முன்பு
அகேசியா மலர்கள் பூத்துக் குலுங்கிய
ஒரு தெரு வழியே உலவி வரும்பொழுது
அனைத்து விஷயங்களையும்
அறிந்து வைத்திருக்கும்
ஒரு நண்பனிடமிருந்து தெரிந்துக்கொண்டேன்
உனக்கு அப்போதுதான்
திருமணம் ஆகி முடிந்திருந்த விஷயத்தை.
அவனிடம் சொன்னேன்
எனக்கு அது சம்பந்தம் இல்லாத விஷயமென்று.
நான் உன்னை எப்போதும்
காதலித்தது இல்லை.
என்னை விட நன்றாக உனக்கு அதுத் தெரியும்.
இருப்பினும் நம்புவாயா?
ஒவ்வொரு முறை அகேசியாக்கள்
பூத்து மலரும்போதும் ,
வேறொருவரை நீ மணந்துக்கொண்டாய் என்ற
இதயம் பிளக்கும் செய்தியைக் கொண்டு
மிக அருகாமையிலிருந்து
அகேசியாக்கள் என்னைத் தாக்கியபோது
அடைந்த அதே உணர்வை.

(English translation by: David Unger)
*******

_________

என்னுடையப் பிணமும் நானும்
ஒருவரை ஒருவர் மிக நன்றாகப்
புரிந்துக்கொள்கிறோம்
என்னுடையப் பிணம் என்னைக் கேட்கிறது:
” நீ கடவுளை நம்புகிறாயா ?”
உளமகிழ்வுடன் நான் சொல்கிறேன், “இல்லை “.
என்னுடையப் பிணம் கேட்கிறது:
“அரசாங்கத்தை நீ நம்புகிறாயா ?”
சுத்தியலையும் அரிவாளையும் பதிலாகத் தருகிறேன்.
என்னுடையப் பிணம் கேட்கிறது:
” காவல்துறையை நீ நம்புகிறாயா ? ”
அதன் முகத்தில் ஒரு குத்து விடுகிறேன்
என்னுடைய பதிலாக.
தன்னுடைய சவப்பெட்டியிலிருந்து
அது எழுந்துக்கொள்கிறது
கையோடு கை கோர்த்தவாறு
நாங்கள் செல்கிறோம்
திருக்கோயில் பலிப்பீடத்திற்கு.

(English translation by: Liz Werner)
*****

_______

நான் சொன்ன எல்லாவற்றையும்
திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.
கடைசி விருப்பத்தைத் தெரிவிக்கும்
வாய்ப்பு எனக்குக் கிடைக்க வேண்டும்.
பெருந்தன்மைக் கொண்ட வாசகரே,
இந்தப் புத்தகத்தை எரித்துவிடுங்கள்.
நான் சொல்ல விரும்பியது எல்லாம்
அது மட்டும் அல்ல.
அது உதிரத்தால் எழுதப்பட்டது என்றபோதும்
நான் சொல்ல விரும்பியது அது அல்ல.
என்னைவிட அதிக சோகம் கொண்டவர்
யாருமிருக்க இயலாது.
என்னுடைய நிழலாலேயே
நான் தோற்கடிக்கப்பட்டேன்.
என்னுடைய வார்த்தைகள் என்னைப்
பழிக்குப் பழி வாங்கின.
மன்னித்து விடுங்கள் வாசகரே,நல்வாசகரே ,
வெதுவெதுப்பான ஒரு அரவணைப்புடன்
உங்களை விட்டு செல்ல முடியாதெனில்,
வலிந்து வரவழைக்கப்பட்ட
ஒரு சோகப் புன்னகையுடன்
உங்களை விட்டு நீங்குகிறேன்.
ஒரு வேளை நான் அவ்வளவுதான் போலும்
ஆனால் என் கடைசி வார்த்தையைக் கேளுங்கள்
நான் சொன்ன எல்லாவற்றையும்
திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்
உலகிலேயே மிக அதிகக் கசப்புடன்
நான் சொன்ன எல்லாவற்றையும்
திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்

(English translation by: Miller Williams)

********

________

உங்கள் மூளைகளைக்
கசக்கிக்கொள்ளாதீர்கள்
இந்தக்காலத்தில் கவிதைகளை
யாரும் படிப்பதில்லை.
அவை நன்றாக இருக்கின்றனவா
இல்லையா என்பது
ஒரு பொருட்டே இல்லை.

(English translation by: Liz Werner)

*******

______

பார்ரா * சிரிக்கிறான்
நரகத் தண்டனை விதிக்கப்பட்டவன் போல.
ஆனால், கவிஞர்கள் எப்போது
சிரிக்காமல் இருந்திருக்கிறார்கள் ?
தான் சிரித்துக்கொண்டிருக்கும் விஷயத்தை
அவன் வெளிப்பட அறிவிக்கவாவது
செய்கிறானே.

அவர்கள் வருடங்களைக் கடத்துகிறார்கள்
வருடங்களைக் கடத்துகிறார்கள்
அவர்கள் கடத்துவதுப்
போலத் தோன்றவாவது செய்கிறார்கள்.
அனுமானம் எதுவும் இல்லை:
அவர்கள் கடத்துவதுப் போலவே
அனைத்தும் கடந்து செல்கின்றன.

அவன் இப்போது அழ ஆரம்பிக்கிறான்
தான் ஒரு எதிர்க்கவிஞன் என்பதை மறந்து.:
(* பார்ரா – நிகானோர் பார்ரா)
(English translation: Liz Werner)

*******

விடுமுறைப் பயிற்சிப்பாடம்

ஒரு செய்யுள் இயற்றுக :
கீழ்வரும் ஐந்து சீர்களைக் கொண்ட வரியுடன் தொடங்கி,
” உனக்கு முன்னரே இறந்து விட விரும்புகிறேன் ”
கீழ்வரும் அடியுடன் முடியும்படி :
“முதலாவதாக நீ இறந்துவிட வேண்டுமென்றே விரும்புகிறேன் ”

(English translation by: Liz Werner)

******

parra-2_1

Comments are closed.